ஸ்ரீ திருவாய் மொழி -வானின் மீது ஏற்றி அருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக்கூத்தனையே –
குளப்படியில் தேங்கினால் குருவி குடித்துப் போம்
வீர நாராயண புரத்து ஏரியில் தேங்கினால் நாடு விளையும்
பெரிய பெருமாள் ஆகிற பெரும் கடலிலே –
ஆழ்வார் ஆகிற காளமேகம் படிந்து பருகிய தத் கல்யாண குண அம்ருதம்
எம்பெருமானார் ஆகிய பொய்கையிலே தேங்கி
ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகள் வழியே புறப்பட்டு ஸம்ஸாரி சேதனராகிற பயிரை நோக்கிப் பாய்ந்து ரக்ஷிக்கிறது
———-
திருவருள் மால் சேனை முதலி சடகோபன் நாதமுனி
சீர் உய்யக்கொண்டார் மணக்கால் நம்பி சென்றாம் ஆளவந்தார்
குரு மாலாதரர் குருகைப் பிரார்க்கு அன்பாம் எதிராசர்
கோவிந்தர் கூரேசர் பட்டர் வேதாந்த முனி
இரு கண்ணர்க்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடு அளித்தற்கு
ஏய்ந்த மாதவர் பற்ப நாபர் இவர் அருளாளர் திருவடி
ஊன்றிய தேவப்பெருமாள் கைக்கொண்டு அருளும்
திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே –மா முனிகள் அருளிச் செய்த பகவத் விஷய தனியன் –
நம்பிள்ளை -ஈயுண்ணி மாதவர் -அவரது திருக்குமாரர் பத்மநாபர் –
அருளாளப்பெருமாள் திருவடி ஊன்றிய நாலூர்ப்பிள்ளை
அவர் திருகுமாரர் தேவராஜர் என்னும் நாலூராச்சான் பிள்ளை
அவரது சிஷ்யர் திருவாய் மொழிப்பிள்ளை மூலம் மா முனிகள் இடம் வந்த சேர்ந்ததே –
———-
அர்த்த பஞ்சகமே திருவாய் மொழிக்கு வாக்யார்த்தம் என்று ஸ்ரீ வங்கி புரத்து நம்பி பணிப்பாராம்
உயர்வற -திண்ணன் வீடு – அணைவது – ஒன்றும் தேவு -பர ஸ்வரூபம்
பயிலும் சுடர் ஒளி -ஏறாளும் இறையோன் -கண்கள் சிவந்து -கரு மாணிக்க மலை -ஜீவ ஸ்வரூபம்
நோற்ற நோன்பிலேன் -ஆராவமுது – மாநேய் நோக்கு -பிறந்தவாறும் -உபாய ஸ்வரூபம்
எம்மா வீடு -ஒழிவில் காலம் -நெடுமாற்கு அடிமை -வேய் மரு தோளிணை -புருஷார்த்த ஸ்வரூபம்
வீடுமின் முற்றவும் -சொன்னால் விரோதம் -ஒரு நாயகம் -கொண்ட பெண்டீர் -விரோதி ஸ்வரூபம்
————
கலவியில் அந்யாபதேசம் -கரு மாணிக்க மலை -வேய் மரு தோளிணை
பிரிவில் அந்யாபதேசம் -அஞ்சிறைய மடநாராய் போல்வன
தீர்க்க சரணாகதி இதுவே
முதல் மூன்று பத்துக்கள் உத்தரார்த்தம்
மேல் மூன்று பூர்வார்த்தம்
மேல் மூன்றில் உபாயத்துக்கு வேண்டிய குணங்களையும் -சம்சாரத்தில் தமக்கு நசை அற்றபடியையும்
அவனுக்கும் நமக்குமுள்ள நிருபாதிக சம்பந்தத்தையும் அருளிச் செய்கிறார்
கடைப் பத்தாலே தாம் பிரார்த்தித்த படியே பேறு பெற்றமையை அருளிச் செய்கிறார்
———
எம்மா வீடே -தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே -தேவரீருக்கே யாம்படியாக –
அத்யந்த பாரதந்தர்யத்துக்கு அனுகுணமான கைங்கர்யமே
சர்வ பிரபந்த பிரதானம்
கடிகைத் தடம் குன்றின் மேல் விளங்கும் அக்காரக்கனியின் ப்ராதான்யம் ஸித்தம் -என்பர் ஆத்தான் ஜீயர் அரும்பதத்தில் –
வேதாந்த விசாரம் ப்ரஹ்ம ஸூத்ரங்கள்
ரஹஸ்ய த்ரய விசாரம் திருவாய் மொழி
பரத்வம் போலே வேதம்
அவதாரங்கள் போலே இதிஹாஸ புராணங்கள்
அர்ச்சாவதாரம் போலே திருவாய் மொழி –
தான் தோன்றி வேதம் போல் அன்றி இவர் பக்கலிலே பிறந்து ஸர்வாதிகாரம் ஆனது
வண் புகழ் நாரணன் என்று உபக்ரமித்து வாழ் புகழ் நாரணன் என்று உப ஸம்ஹாரம் –
எம்பெருமானார் உகந்த திருவாய் மொழி -இன்னுயிர்ச் சேவல் -9-5-
ஆளவந்தார் உகந்த திருவாய் மொழி -அறுக்கும் வினை -9-8-
ஆழ்வார் பலம் பெற்றது -ஆழி எழ -7-4-
ஆழ்வார் பலம் இழந்தது -கற்பார் இராமன் -7-5–
அவனது ஆர்த்தி தீர பிரார்த்தனை -ஆராவமுதே -5-8-
தனது ஆர்த்தி தீர பிரார்த்தனை -பண்டை நாளாலே -9-2-
மடல் -மாசறு சோதி -5-3-
ஊடல் -மின்னிடை -6-2-
காலைப்பூசல் -மல்லிகை கமழ் -9-9-
மாலைப்பூசல் -வேய் மரு தோளிணை -10-3-
பாகவதர்கள் சேஷிகள் -பயிலும் சுடர் ஒளி -3-7-
பாகவதர்கள் போக்யர் -நெடுமாற்கு அடிமை -8-10-
பன்னிரு நாமப்பாட்டு -கேசவன் தமர் -2-7-
திருவாழி ஆழ்வானை அடிக்கடி வாய் வெருவிய சதகம் -வைகல் பூங்கழி-6-1-
திருவடிகளை அடிக்கடி வாய் வெருவிய சதகம் -உலகம் உண்ட -6-1-
திருத்துழாயை அடிக்கடி வாய் வெருவிய சதகம் -பாலனாய் -4-2-
வடமதுரையை அடிக்கடி வாய் வெருவிய சதகம் -கொண்ட பெண்டிர் -9-1-
ஸ்ரீ பூமி நீளை களை அடிக்கடி வாய் வெருவிய சதகம் -அறுக்கும் வினை -9-8-
நான்கு பாதங்களிலும் ஏற்கும் -3-9-11-
நான்கு பாதங்களிலும் திருவடி -4-9-11-
–
நான்கு பாதங்களிலும் தீர்த்த -7-10-11-
நான்கு பாதங்களிலும் நேர் பட்ட -8-9-11-
நான்கு பாதங்களிலும் சூழ்ந்த -10-10-10-
நான்கு பாதங்களிலும் அவா -10-10-11-
——————-
முதல் தூது அஞ்சிறைய மட நாராய் -1-4- வ்யூஹத்தில் -அபராத ஸஹத்வம் பற்றாசாக
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் அடலாழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி -1-4-10-
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கே -1-4-7-
தேவரீர் பொறை வயிறு நிறைய எங்களால் குற்றம் செய்யப் போமோ
என் பிழை அநாதி காலம் ஆர்ஜிதமானாலும் தேவரீர் க்ஷமைக்கு எவ்வளவு போரும்
இரண்டாம் தூது விபவத்தில் -ஆர்த்த ரக்ஷணம் பற்றாசாகத் தூது -வைகல் பூங்கழி-6-1-
மாறில் போர் அரக்கன் மதில் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின் -6-1-10-
புணர்த்த பூம் தண் துழாய் முடி நம்பெருமானைக் கண்டு புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே -6-1-5-
ஆர்த்த ரக்ஷணத்துக்கு திரு அபிஷேகத்தில் வளையம் -தனி மாலை இட்டு இருப்பானே
மூன்றாம் தூது பரத்வத்திலே-ஸாரஸ்யம்-அடியார்கள் உடன் ஏக ரஸ்யம் – பற்றாசாகத் தூது -பொன்னுலகு ஆளீரோ -6-8-
வானவர் கோனைக் கண்டு -6-8-4-
விண்ணவர் கோனைக் கண்டு -6-8-9-
முன் உலகங்கள் எல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன் என் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே -6-8-1-
ஏஹி பஸ்ய சரீராணி என்னுமா போலே வடிவைக் காட்டுகிறாள்
நமக்குப் பணி குறையை அறிவிக்கையை -மேல் உள்ளது எல்லாம் அவன் பணியே
இப்பதிகத்திலே எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே -6-8-5-என்று அந்தர்யாமியைச் சொல்லும்
இவளைச் சித்த அபஹாரம் பண்ணித் தனிமைப் படுத்திய இது உமக்குத் தக்கதோ என்று கேட்பதே
நான்காம் தூது -அர்ச்சையிலே -சவுந்தர்யம் பற்றாசாக -எங்கானல் -9–7-
தக்கிலமே கேளீர்கள் –செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனிவாய் அக்கமலத்து இலை போலும் திருமேனி அடிகளுக்கே -9-7-3-
தமரோடு அங்கு உறைவார்க்கு -9-7-2-
அவர் அழகை நினைப்பூட்டவே திரு மூழிகே களத்தார் வாராது இருப்பாரோ
நான்கு தூது பதிகங்களில் பிராட்டி சம்பந்தம் உண்டே
—-
முதல் பத்தில் பரத்வம் -பரபரன் -1-1-8-
இரண்டாம் பத்தில் -காரணத்வம் -எப்பொருட்க்கும் ஆதி -2-1-1-
மூன்றாம் பத்தில் -வியாபகத்வம் -முழுதியன்றாய் -3-1-8-
நான்காம் பத்தில் -நியந்த்ருத்வம் -மறுகலில் ஈசன் -4-1-10-
ஐந்தாம் பத்தில் -காருணிகத்வம்-அருள் செய் -5-1-9-
ஆறாம் பத்தில் -சரண்யத்வம் -வன் சரண் -6-3-7-
ஏழாம் பத்தில் -சக்தித்வம் -பெரு மாயனே -7-1-1-
எட்டாம் பத்தில் ஸத்ய காமத்வம் -தேவி மாராவார் -8-1-1-
ஒன்பதாம் பத்து -ஆபத் சகத்வம் -முற்றவும் யுண்ட பிரான் -9-1-1-
பத்தாம் பத்தில் -ஆர்த்தி ஹரத்வம் -காளமேகம் -10-1-1-
இந்தப் பத்து அர்த்தங்களும் கங்குலும் பகலும் -7-2 திருவாய் மொழியிலே காணலாம்
———–
அயர்வரும் அமரர்கள் அதிபதி எவன் அவன் இவருக்கு மயர்வற மதிநலம் அருளினன்
மறவாமைக்காக என்னுள் மன்னினான்
நெஞ்சமே நல்லை நல்லை -மலராள் மணவாளனைத் துஞ்சும் போதும் தொடர் -என்றபடி
திருக் கல்யாண குணங்களை தம்முடைய திரு உள்ளத்தோடே அனுபவித்தார்
தனி இருந்து அனுபவிக்க மாட்டாமையாலே சம்சாரிகளைத் திருத்த வீடுமின் முற்றவும் தொடங்கி
த்யாஜ்யமான ஸம்ஸார தோஷத்தையும்
உபாதேயமான பகவத் குணங்களையும்
அவனைப் பஜிக்க வேண்டிய பிரகாரத்தையும்
வண் புகழ் நாரணன் -என்று பற்றுக்கோடான திரு மந்த்ரத்தையும் உபதேசித்து
எளிவரும் இயல்பினன் என்று அவனது ஸுலப்யத்தையும்
அபராத ஸஹத்வத்தையும்
ஸுசீல்யத்தையும்
புரிவதுவும் புகை பூவே என்று ஆராதனைக்கு எளியவனானமையும்
தூய அமுதைப் பருகிப் பருகி ஆஸ்ரயணம் போக்யம் என்பதையும்
நீர் புரை வண்ணன் என்று ஆர்ஜவ குணத்தையும்
என்னுடைச் சூழல் உளானே –உச்சியில் உளானே -என்று சாத்மிக்க ஸாத்மிக்க போக ப்ரதத்வத்தையும்
எண்ணிலும் வரும் என்று பரமபக்தனுக்கு முகம் காட்டுவது போல் முகம் காட்டும் சாம்யத்தையும் காட்டி அருளி
அவனைத் தொழுதால் வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே என்றும்
பக்தி பண்ணத் தொடங்கும் போதே
அங்கொடு உடனே வினை மாளும் -என்று பஜன விரோதிகள் அனைத்தும் தொலையும் என்று அறிவித்து
ஆனபின்பு -அம்பகவன் வணக்குடைத் தவ நெறி வழி நின்று
நும் இரு பசை அறுத்து
தேவதாந்த்ர பஜனம் தவிர்ந்து
அவன் விஷயமான ஞானத்தைக் கொண்டு
நன்று என நலம் செய்து
அநந்ய ப்ரயோஜனராய் பக்தியைப் பண்ணுங்கோள் என்று
ஸம்ஸாரிகளுக்கு அகவிருளைப் போக்கி ஞான பக்தியை உபதேசித்து பகவத் பஜனத்திலே மூட்டுகிறார் முதல் பத்திலே –
————
வேர் முதல் முத்தாய் -ஸர்வ காரண பூதன் ஆழ்வாருக்கு அறியாதன அறிவித்து அருள
அந்த ஞான பலமான மோக்ஷத்தை -அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று
ஆசைப்பட்டுப் பெறாமையாலே
வாடி வாடும் இவ்வாணுதலே -என்றபடி அவசன்னராக
அது தீரும் படி சிக்கெனைப் புகுந்தான் -என்றபடி வந்து ஸம்ஸ்லேஷித்துப் ப்ரீதன் ஆனான் –
அந்த ப்ரீதி ஆழ்வார் உடம் மட்டும் இன்றி இவர் ஸம்பந்த சம்பந்திகள் அளவும் வெள்ளம் இட்டு
அந்தப் ப்ரீதியாலே இவன் ஆழ்வாருக்கு மோக்ஷத்தைப் கொடுக்கப் புக
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்று எம்மா வீட்டில் ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணினார்
அதன் பிறகு கீழ்ச் சொன்ன பரத்வத்தை விளக்க
ஸ்ரீ யபதித்தவ
சேஷ ஸாயித்வ
புண்டரீகாக்ஷத்வ
மோக்ஷ ப்ரதத்வாதி
லக்ஷணங்களை வெளியிட்டு
கள்வா என்ற வசனத்தையும்
தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் சேர்ந்த பூந்தாமம் சிவன் முடி மேல் -என்றபடி காட்சியையும் தர்சிப்பித்து
ஆஸ்ரியர்க்கு ருசி பிறக்கைக்க
த்யாஜ்யமான ஸம்ஸாரிக துக்கம் என்ன
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர் -என்றபடி ப்ராப்யமான மோக்ஷத்தின் ஆனந்தம் என்ன –
ஸம்ஸாரிக நிவ்ருத்தி பூர்வகமாக மோக்ஷ ப்ராப்திக்கு உறுப்பான ஸாதனத்தினுடைய ரஸம் என்ன
இவற்றை முன்னிட்டு ஸ குண ப்ரஹ்ம உபாஸனத்தை விதித்து
சூது என்று களவும் சூதும் செய்யாதே -என்று அதற்கு அங்கமான நிஷித்த அனுஷ்டான தியாகமும்
மாலிருஞ்சோலை சார்வதும் சதிரே -என்றபடி ஷேத்ர வாஸம் முதலானவையும் செய்ய வேணும் என்று
அருளிச் செய்கிறார் இரண்டாம் பத்தில் –
————
ஏழ்ச்சிக் கேடின்றி எங்கனும் நிறைந்த எந்தாய் -என்றும்
யாவையும் எவரும் தானாய் -என்றபடி
கார்ய வர்க்கங்களான சேதன அசேதனங்களையும் வியாபித்து
வியாப்ய கத தோஷம் தட்டாமல்
கீழே ஆழ்வார் நிஷ்கர்ஷித்த மோக்ஷத்துக்குப் பலனாக
தன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹ அனுபவத்தை
முடிச் சோதியாய் -திருவாய் மொழியிலே இவர் தாம் பெற்றவராக செய்து அருளிய அளவிலே
இவரும் -நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடுயிரே -என்றபடி தரித்து
அதனால் உண்டான உகப்பின் மிகுதியாலே
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா யடிமை செய்ய வேண்டும் நாம் -என்றபடி ஆவல் கிளர்ந்து
அதுக்குத் தகுதியாக -புகழு நல் ஒருவனிலே -காட்டிக் கொடுத்த விபூதி விஸ்தாரத்தைப் பேசி அத்தாலே
எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பரந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் என் சொல்லீர் -என்றபடி
கரை புரண்ட ப்ரேமம் யுடையராய்
அந்தப்பிரமம் எம்பெருமான் அளவிலே அடங்காமல்
தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே -என்றபடி
பாகவத சேஷத்து அளவும் சென்று
அந்த பாகவதருக்கு நிரூபகம் பகவானுடைய வை லக்ஷண்யம் ஆகையால்
அத்தை முடியானே பதிகத்திலே
நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே
வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம் நாயகனே
கைகளால் ஆரத் தொழுது உன்னை
கண்களால் காண வரும் கொல்
என்றபடி ஒவ்வொரு கரணமும் மற்றவற்றின் செயலை விரும்பும் படி பெரு விடாய் படைத்தவராய்
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் -என்று
தம்முடைய வை லக்ஷண்யத்தை வெளியிட்டு அருளி –
எம்பெருமானை அனுபவிக்க
யான் இறையேனும் இடர் இலேனே -தளர்விலேனே -என்று இடையூறு இன்றிக்கே
அபரிமித ஆனந்தத்தை யுடையவராய்
ஸம்ஸாரிகள் அவன் பரத்வத்தைக் கண்டு அஞ்சி பின் வாங்காமல் மேல் விழுந்து ஆஸ்ரயிக்கும் படி
நெஞ்சினால் நினைப்பான் எவன் அவனாகும் நீள் கடல் வண்ணனே -என்று
அர்ச்சாவதார ஸுலப்யத்தை உபதேசித்து
அர்ச்சிராதி கதியாலே திரு நாட்டை பெறுமிக்குவனான எம்பெருமான்
தன்னை ஒரு சொல் சொல்லுவார் யாரோ என்று காலத்தை என்று எதிர் நோக்கினவனாய் நிற்க
அவனை விட்டுப் புறம்பே
ஒரு சொல்லுக்கும் பாத்தம் போராதே சிறு மானிடரைக் கவி பாடுவதால் என்ன பயன்
அத்தாலே ஸ்வரூபம் பெற்றிலீர் கோள் -அபிமதம் பெற்றிலீர் கோள்
ஸர்வ அபேக்ஷிதங்களையும் தருமவன் -தன்னுடன் சாம்யாபத்தியைத் தருமவன் -அவனைக்
கவி பாடி வாய் படைத்த பிரயோஜனம் பெறுவீர் என்று
பகவத் விஷயத்திலே வாக்கு சபலமாம் படி அடிமை செய்வது உரியது என்று உபதேசித்து
அவர்களையும் தம்மைப் போலவே கைங்கர்ய பரராம் படி செய்து அருள்கிறார்
மூன்றாம் பத்திலே
———-
கீழே முழுதுமாய் முழுதியன்றாய் -என்று எம்பெருமானுடைய வியாபகத்வம் -ஆகாஸ வியாப்தி போல் அன்றிக்கே
வீற்று இருந்து ஏழு உலகம் தனிக்கோல் செல்ல -என்றபடி நியமித்து போவதாலே -இப்படி ஸர்வ நியாந்தாவாய் இருக்கிறவன்
ஆழ்வார் தனது விஷயத்திலே கைங்கர்யங்களிலே பாரித்தது போலே
பாலனாய் ஏழு உலகு உண்டு -என்றபடி வேறே தேச வேறே கால அபதானங்களையும் அந்த அந்த தேச காலங்களில் போலவே அனுபவிக்கப் பாரித்து
அப்படியே இவருக்கு சமகாலமாக்கி அனுபவிப்பித்து இவர் இழவைத் தீர்த்து இவருடைய த்ரி கரண வியாபாரங்களையும் போக்யமாகக் கொள்ள
ஆழ்வார் அந்த ப்ரணயித்வ குணத்திலே தோற்று விரஹ அவஸ்தையிலே
பேய்ச்சி முலை சுவைத்தார்க்கு என் பெண் கொடி ஏறிய பித்தே -என்று
போலியான பொருள்களையும் ஸம்பந்த பொருள்களையும் அவனாகவே கருதும்படி பித்தேறி
ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக் கண்ட சதிர் கண்டு -என்றபடி
திரு நாட்டின் அனுபவத்தையும் ஆசைப்பட்டுக் கூப்பிட
அவ்விருப்பையே ப்ரத்யக்ஷமாகக் காட்டி அனுபவிப்பிக்க
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே -என்றபடி அனுபவித்து
இப்படி முக்த உலகத்தை மாநஸமாகப் பெற்று
உன்னித்து மற்ற ஒரு தெய்வம் தொழாள்-என்றபடி தேவதாந்தர விரக்தியை யுடையராய்
ஐங்கருவி கண்ட இன்பம் ஒழிந்தேன் என்றும்
சற்று இன்பம் ஒழிந்தேன் -என்றும்
ஐஸ்வர்ய கைவல்ய அல்ப அஸ்த்ரத்வாதி தோஷங்களையும்
ஆடு கள் இறைச்சி போன்ற நிஷித்த பதார்த்தங்களாலே ஷூத்ர தெய்வ பஜன தாழ்வினையும்
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே -என்பவற்றை வெளியிட்டு அருளி
ஸர்வேஸ்வரனே ரக்ஷகன் என்றும் இவர்கள் ரஷ்ய வர்க்கங்கள் என்றும்
கண்டும் தெளிய கில்லீர்
பிரகிருதி சம்பந்தம் நீக்க -நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வதே உறுவது என்று
அவனை ஆஸ்ரயித்துத் தப்பப் பாருங்கோள்
அவன் திருவடிகளிலே கைங்கர்யமே சீரிய புருஷார்த்தம் என்று
உபதேசித்து பகவத் ஸமாஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நான்காம் பத்திலே
———–
பரத்வம் -காரணத்வம் -வியாபகத்வம் -நியந்த்ருத்வம் -குணங்களால் ஏற்றம் உடைய ஸர்வேஸ்வரன்
ஆ ஆ என்று அருள் செய்து
தானே இன்னருள் செய்து -என்றபடி கிருபா ப்ரவாஹம் உடையவன்
அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யான் ஆர்
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்
என்றபடி அவன் எங்கே
நித்ய சம்சாரிகளுக்கும் இவ்வருகில் உள்ள அடியேன் எங்கே
நைச்யம் பாவித்து அகல நினைத்தாரையும் தனது பக்கலிலே சேர்த்துக் கொள்ளும் படியான
கிருபா வெள்ளம் உடையவன்
ஆழ்வாருக்கு கீழ் பிறந்த வைராக்யம் பலனாக
பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த-என்னும் படி
பக்தியும் பாகவத சமாகத்தையும் யுடைய ஆழ்வார்
தம்மையும் தம்மால் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களையும் காண வந்த
நித்ய ஸூரிகளையும் ஸ்வேத தீப வாசிகளான சித்தர்களையும் கண்டு
பொலிக பொலிக பொலிக என்று மங்களா ஸாஸனம் பண்ணி
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் என்றபடி தேடிப்பிடித்து
நிறுத்தினான் தெய்வங்களான அத்தெய்வ நாயகன் தானே -என்றபடி
தேவர்களும் அவனை ஆஸ்ரயித்தே தம் தாம் பதவி பெற்றார்கள்
நீங்களும் ஆஸ்ரயிக்கப் பெற்றால்
கலியும் கெடும் கண்டு கொண்மின்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே என்றபடி
பாகவத உத்தமர் களை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள்
என்று உபதேசித்துத் திருத்தி
கண்ணுக்கு இனியன கண்டீர் தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்றபடி
பாகவத ஸமூஹம் காண இனிதாம்படியான ஞானம் உடையோருக்கு
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் -என்றபடி
ப்ராப்ய த்வரைக்கு அடியான பக்தியை உபதேசிக்கிறார் ஐந்தாம் பத்தில் –
———-
கீழ் பத்தில் பேசின பரம கிருபையினாலே
வானவர் வானவர் கோனொடும்
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
போது அறிந்து வானரங்கள் என்கிறபடி
நித்ய ஸூரிகள் -ஸம்ஸாரிகள் -ப்ரயோஜன பரர் -அநந்ய ப்ரயோஜனர் -திர்யக்குகள் வாசி இன்றி
ஸர்வ சமாஸ்ரயணீயனாய்
மெய்யமர் காதல் சொல்லி -பக்தி பாரவசஸ்யத்தாலே அநந்ய கைதியான ஆழ்வாருக்கு
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -என்று காட்டிக்கொடுக்கப் பெற்றவர்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் என்று நாடொறும் ஏக சிந்தையனாய்
விச்சேதம் இல்லாத வியவசாயத்தை வைகல் பூங்கழிவாயில் தூது அனுப்பி அறிவித்தார்
அவன் சிறிது விளம்பிக்கவே ப்ரணய ரோஷம் தலை எடுத்து
அழித்தாய் உன் திருவடியால் என்று அவன் பரிகரித்தவாறே அவனுடைய சாமர்த்தியத்தை அனுசந்தித்தார்
பிறந்த வாற்றிலே பண்ணின பிரபத்தி பலித்து நண்ணி நான் வணங்கப் பெற்றேன் -என்று
குரவை ஆய்ச்சியரில் பலித்த வாறே பிரபத்தி பண்ணுவதாகக் கோலினார்
பிதரம் மாதரம் தாரான் படியே
சிறு மான் இவள் நம்மைக் கை வலிந்து என்றபடி தாமாகவே கை விட்டும்
இழந்தது சங்கே என்றபடி தாமாகவே போகக் கண்டும்
இன்று எனக்கு உதவா நின்ற -என்று உபேக்ஷித்து அகன்று போயும்
நெய்யமர் இன்னடிசில் நீச்சல் பாலோடு மேவீரோ என்று ததீயாருக்குப் போக்யமாக ஸமர்ப்பித்தும்
பாவியேனை பல நீ காட்டிப் படுப்பாயோ என்று
த்யாஜ்ய அம்சங்களை ஸவாசனமாக விட்டார்
விட்டதை எல்லாம் பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள் யாவையும் திருமால் நாமங்களே என்கிறபடி
தமக்குப் பற்றுகிற விஷயமாகவே நினைத்து
சாலப்பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ
கூவிக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்று ஆர்த்தியுடன்
குறளாய் அகல் ஞாலம் கொண்ட -சர்வ ஸூ லபமான திருவடிகளை திருமலையில் கண்டு
த்வயத்தில் பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா என்று சரணம் புகுந்தார்
பத்துடை அடியவர் தொடங்கி அஞ்சாம் பத்து அளவும் உபதேசித்த ஸாத்ய உபாய பக்தி யோகத்தில் அசக்தருக்கு
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே என்று
தம்முடைய பிரபத்தி -ஸித்த உபாய -நிஷ்டையை பிரகாசிப்பித்தார் ஆறாம் பத்திலே –
——–
மாயா வாமனனே -விசித்ர சக்தி யுக்தனான ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளை
அந்தோ அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையுமே -என்றபடி பிரபத்தி பண்ணின தம்மை
விஷயங்களில் மூட்டித் தன் பக்கலிலே சேராதபடி ஸம்ஸாரத்திலேயே வைக்கக் கண்டு
உண்ணிலாவிய ஐவரால் குமை தீற்றி என்னை யுன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலிவான்
இன்னம் எண்ணுகின்றாய் -என்று வருந்திக் கூப்பிட்டு
தம் தசை தாமே பேசமாட்டாமல் இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் என்றபடி தளர்ந்து
தோழிமீர்காள் அன்னை யர்காள் என்னைத் தேற்ற வேண்டாம் -என்று நெஞ்சு பறியுண்டவராக இருக்க
ஆழி எழ -யில் தனது விஜயங்களைக் காட்டித் தரிப்பிக்க
அந்தத் தயாரிப்பும் கற்பார் இராமனிலே
இப்படி நிருபாதிக கிருபாவாளனாய் -ஸர்வ ஸூ லபனாய் இருந்தும் ஸம்ஸாரிகள் இழந்து போகிறார்களே என்று
பழைய ஆர்த்தியே தலையெடுத்து
பற்ப நாபாவோ பற்ப பாதா ஓ தாமரைக் கண்ணா ஓ தனியேன் தனி ஆளாவோ என்று
அவனது அவயவங்கள் மானஸ அனுபவமாய் நலிய
உபாய பூதனான உனக்கோ ஞான சக்திகளிலே குறை இல்லை
எனக்கோ ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வ ஆர்த்திகளிலே குறை இல்லை
இப்படி இருக்க ஸம்ஸாரத்திலே இன்னம் வைத்து இருக்க ஹேது என் என்று மடி பிடித்துக் கேட்க
நமக்கும் நம்முடையாருக்கும் இன்பமாகத் திருவாய் மொழி பாடுவிக்க வைத்தோம் காண் என்ன
வியாசாதிகள் முதல் ஆழ்வார்கள் போல்வார் இருக்க தம்மைக் கொண்டு பாடுவித்த இந்த உதவிக்கு கைம்மாறு காணாமல்
என் சொல்லி நிற்பேனோ –
திருவாறன் விளையிலே மிதுனத்திலே பெரிய ஓலக்கத்திலே திருவாய் மொழி கேட்பித்து
அடிமை செய்வது தவிர வேறே கைம்மாறு இல்லை என்று
திட அத்யாவஸ்யத்தை உடையவராய் இருக்க
எம்பெருமான் பரமபதம் தரப் பாரிப்பவராக இவரது அத்யாவசாயத்தை சோதிக்க
திருவாறன் விளை யுறை தீர்த்தனுக்கு அற்ற பின் -சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லா
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலம்
உள்ளித் தொழுமின் தொண்டீர் -என்று
திருவாறன் விளையே ப்ராப்யம்
அங்கு எழுந்து அருளி நிற்கிறவன் உபாயம் என்று
தாம் அறுதியிட்ட உபாய உபேயங்களை தமது உகப்பாலே வெளியிட்டு அருளுகிறார் ஏழாம் பத்திலே –
————
கீழ்ப் பத்திலே பேசின ஸர்வ சக்தி யோகத்தாலே
நல்ல கோட்பாட்டு உலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்து -என்றபடி
நித்யமாகக் கல்பிக்கப்பட்ட போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை யுடையவன் ஆகையாலே
ஸத்ய காமனான ஸர்வேஸ்வரன் ஆழ்வாரைத் தரிப்பிக்க நினைத்தான் –எதற்காக என்னில்
ஆழ்வார் கீழே கிடைத்த வாசிக அடிமையும் மறந்து
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி
பகவத் குணத்திலும் ஸ்வரூபத்திலும் அதிசங்கை பண்ணி
அவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவு ஒன்றும் சங்கிப்பேன் வினையேன் –
அவன் ஆஸ்ரித பரதந்த்ரன் என்பதிலே அதி சங்கை
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்
சிறந்த நின் தன்மை அது விது வுது என்ற அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் என்று
ஸகல பதார்த்தங்களையும் பிரகாரமாக உடையவன் என்பதிலும் அதி சங்கை
ஸம்ஸாரங்களை அனுசந்தித்து
நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் -என்று ஸம்ஸார தோஷங்களை அனுசந்தித்து அஞ்சினார்
இந்தக் கலக்கமும்
அதி சங்கையையும்
அச்சத்தையும் –
தீர்க்கும்படி தரிப்பிக்க நினைத்த எம்பெருமான்
தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத் தந்த -என்று முன்பு செய்து போந்த
உபகாரத்தை நினைப்பூட்டினான்
ஆழ்வார் அத்தாலே க்ருதஞ்ஞராய்
பேர் உதவிக் கைம்மாறா தோள்களை ஆரத்தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் -என்றபடி
ஆத்ம சமர்ப்பணம் பண்ணினார்
அத்தாலே எம்பெருமானும் பெறாப் பேறு பெற்றவராய் இவருக்கு உண்டான ஆத்ம குணங்களால்
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க்கண்கள் ஆயிரத்தாய் -என்றபடி மிகவும் மகிழ்ந்தவனாய்
ஒருக்கடுத்து உள்ளே யுறையும் பிரான் கண்டீர் -என்று ஆழ்வார் திரு உள்ளத்திலே இருந்து அனுபவிப்பித்து
மூன்று தத்துக்குப் பிழைத்த இவர்
வள வேழ் உலகு -பொரு மா நீள் படை -அந்தாமத்து அன்பு -மூன்றிலும் நைச்ய அனுசந்தானம் -தத்து -கண்டம்
இனி ஆழ்வார் அகலாமைக்காக
ஞான ஆனந்த மயம்
அநந்யார்ஹம்
ததீய சேஷத்வம் அளவும் செல்லும் பாரதந்தர்ய ஸ்வரூபம்
போன்ற ஆத்ம லக்ஷண்யத்தைப் பிரகாசிப்பித்தான்
அதனால் யாதாத்ம்ய ஸ்வரூபம் அறிந்த ஆழ்வார்
ப்ராப்யம்-திவ்ய தேசம் ஒன்றும் பிராபகம்-ஸர்வேஸ்வரன் ஒன்றாய் -இரு கரையராக இல்லாமல்
ப்ராப்யமாகச் சொன்ன திவ்ய தேசமே ப்ராபகமும் என்று
நண்ணு திருக்கடித்தான நகரே -இடர் கெட உள்ளத்துக் கொள்மின் என்று காட்டி
அவர்களை பிராப்ய விஷயம் ஒன்றிலேயே ஊன்றச் செய்து அருளுகிறார் எட்டாம் பத்தில் –
——-
அவாப்த ஸமஸ்த காமனாகையாலே ஒன்றையுமே அபேக்ஷிக்காலால்
அகல் ஞாலம் படைத்து இடந்தான் அவனே அஃது உண்டு உமிழ்ந்தால்
ஆலிலை மேலால் அமர்ந்தான்
இவ்வாறு ஸர்வவித ரக்ஷகனான ஸர்வேஸ்வரன்
கீழே ஆழ்வாருக்கு பிரகாசிப்பித்த ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்ய ஞான பலமான
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யத்தை அனுபவிக்கையில் உண்டான த்வரை
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
கனிவாய் சிவப்ப நீ காண வாராய்
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை கொடு வினையேனும் பிடிக்க
நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே
பிராட்டிக்கு பத்து மாதங்கள்
பரதாழ்வானுக்கு பதினான்கு வருஷங்கள்
கோபிமாருக்கு ஒரு மாலைப்பொழுது வரை
உள்ள வியஸனங்கள் அனைத்தும் ஆழ்வாருக்கு ஒரு நொடிப்பொழுதில் உண்டான த்வரைக்கு ஈடாக எம்பெருமான்
நாளை வதுவை மணம் என்று நாளிட்டு -என்று நாச்சியாருக்கு நாள் இட்டால் போலே
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்று சரீர அவசானத்திலே பேறு தப்பாது என்று அறுதியிட்டுக் கொடுக்க
ஹ்ருஷ்டராய் -இன்னும் தமது உபதேசத்தால் திருந்தாதவரை பரம காருண்யத்தாலே
கொண்ட பெண்டீர் மக்கள் உற்றார் -ஆபாச பந்துக்களை விட்டு அவனையே ஸர்வவித பரம பந்து
ரக்ஷகன் -உபாயம் -ப்ராப்யன் -போக்யன் -என்று நிரூபித்து உபதேசித்து
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் என்று ஸித்த உபாயத்தை உபதேசித்தும்
இந்த மஹா விச்வாஸம் பிறக்கைக்கு ஈடாக
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
தேனை வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் என்று
அங்க ஸஹிதமான பக்தியை உபதேசித்தும்
அதுக்கு சக்தர் அல்லார்க்கு
சரணமாகும் தனது தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
என்று ஸூ கரமாய் ஸர்வாதிகாரமாய் உள்ள பிரபத்தியை வெளியிட்டும்
அதிகார அனுகுணமாக ஸர்வ உபாயங்களையும் வெளியிட்டு அருளுகிறார் ஒன்பதாம் பத்தில் –
————
ஆபத் ஸகனானவன் ஆஸ்ரிதருடைய ஆபத் ரக்ஷண அர்த்தமாக திவ்ய மங்கள விக்ரஹத்தோடே தோன்றி
துன்பத்தைப் போக்கும் இயல்பினன் –
கீழே நாள் இட்டுக் கொடுத்ததின் பலமாக அர்ச்சிராதி கதியாலே பரமபதத்துக்கு ஏறப் போகையாலே
திரு மோகூர்-ஆத்தன் -பதினெட்டு நாடான் -வழித்துணையாகப் பற்றி
மீள்கின்றது இல்லை பிறவித்துயர் கடிந்தோம் -என்று இனி பேற்றிலே தடையில்லை என்று நிச்சயித்து
எல்லா அர்த்த விசேஷங்களை வெளியிட வேண்டும்படியான தசை வந்தவாறே
பிரதம பாத்திரமான தமது திரு உள்ளத்துக்கு
பணி நெஞ்சே நாளும் பரம பரம் பரனை
வாழி மனமே கைவிடேல் -என்றும்
நெஞ்சு போன்ற ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடும் கூத்தே
எண்ணுமின் எந்தை நாமம்
பேசுமின் கூசமின்றி
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண அனந்த புர நகர் புகுதும் இன்றே
என்று கர்தவ்ய
ஸ்மர்தவ்ய
வக்தவ்ய
த்ரஷ்டவ்ய
வஸ்தவ்யாதிகளை -வெளியிட்டு
முதல் பத்தில் பிணக்கற அறு வகை என்கிற பாசுரத்தில் உபக்ரமித்த பக்தி யோகத்தை
சார்வே தவ நெறியோடே உப ஸம்ஹரித்து
ஸம்ஸாரிகளுக்கு
தாள்வாய் மலரிட்டு நாள் வாய் நாடீரே
சுனை நன் மலரிட்டு நினைமின் நெடியானே -என்கிறபடியே ஸூ கரமாக ஆஸ்ரயணீயத்தை உபதேசித்து
அனுபவ கைங்கர்யங்களிலே தமக்குத் தோள் தீண்டியரானவர்களை
செஞ்சொல் கவிகாள் என்று விளித்து
உயர் காத்திடகு ஆட் செய்மின் -என்று
அவனுடைய சீல குண ஆழங்காலிலே அகப்படாமல் இருக்க உபதேசித்தும்
தம் திருமேனியிலுக்கே அதி வ்யாமோஹம் பண்ணும் அவனுக்கும்
பொங்கைம் புலனும் பொறி ஐந்தும் கரும இந்திரியம் ஐம் பூதம் இங்கு இவ்வுயிர் ஏய் ப்ரக்ருதி மானாங்கார மனங்களான
உம் மா மாயை மங்க ஒட்டு -மங்க இசை -என்று சரீர தோஷங்களை உணர்த்தி
பின்னை தமக்குப் பரதந்த்ரனாய் தம்மைப் பரமபதம் கொண்டு போகும் ஆதரத்துடன் உள்ள அவனை நோக்கி
இன்று என்னைப் பொருளாக்கி -பாசுரத்தால்
அவனை மடி பிடித்து புறம்பே போக விட்டதுக்கு ஹேது என்ன என்று கேட்க
அவன் இந்திரிய வஸ்த்யதை போன்ற காரணங்களை சொல்ல
அனைத்தும் தமது அதீனமே என்று அறிந்தவன் ஆகையால் இவருக்கு போக்கடி சொல்லுகை அரிது என்று உணர்ந்து
அர்ச்சிராதி கதி என்ன
ஆதி வாஹிக ஸத்காரம் என்ன
திவ்ய தேச பிராப்தி என்ன
அங்குள்ளார் உடைய பஹு மானம் என்ன
ஆனந்தமய ஆஸ்தானத்திலே இருப்பு என்ன
பகவச் சரணாரவிந்த பிராப்தி என்ன
இவ்வளவும் காட்டிக் கொடுக்கக் கண்டு
அது மானஸ அனுபவ மாத்ரமாய் -பாஹ்ய கரண யோக்யம் இல்லாமையாலே
திருவாணை நின்னாணை கண்டாய் -என்று தடுக்க
உம்முடைய ஸ்வரூபத்தோடே விருத்தம் அன்றோ காணும் என்ன
அதுக்கு ஆழ்வார்
நேசம் செய்து உன்னோடே என்னை உயிர் வேறு அன்றி ஒன்றாகவே கூசம் செய்யாது கொண்டாய் என்று தொடங்கி
முதல் தனி வித்தேயோ -பாசுரம் அளவாக எம்பெருமானான் வாய் திறவ ஒண்ணாத படி பல கோடிகளைச் சொல்லி
தாம் இட்ட ஆணை பெறா ஆணை அன்று என்று நிரூபித்தார்
இவ்வளவும் பேசுகைக்குக் காரணம்
அதனில் பெரிய என் அவா -என்னும்படி தத்வத்த்ரயத்தையும் விளாக்குலை கொள்ளும் படி ஆழ்வாரது பரமபக்தியே
அதுவும் மிக அல்பம் என்னலாம் படி அன்றோ அவனது அபி நிவேசம்
இப்படி கரைபுரண்ட அபி நிவேசத்தோடே வந்து தம்முடைய சகல தாபங்களையும் போக்கி அருளினபடியை
யாவரும் அறியும்படி வெளியிட்டு அருளுகிறார் பத்தாம் பத்தில் –
————
எம்பெருமானோ மதுர வாறு
அவனைப் பற்றிய ஞானமும் அமுத வாறு
அதைப் பெட்ரா ஆழ்வார் அந்தணர் தம் அமுது
அமுதிலும் ஆற்ற இனியனான ஆராவமுதனின்
தேனே மலரும் திருப்பாதத்தைத் தலையிலே அணியும் ஆசைப்பட்ட ஆசையோ
ஆர் உயிர் உருகி யுக்க நேரிய காதல் அன்பிலீன் தேறல் அமுத வெள்ளம்
அங்கனம் ஆசைப்பட்டு அனுபவித்த அனுபவம் உள்ளடங்காமல் சொல்லாய் வெளி வந்த அருளிச் செயலும்
அமுது ஒழுகுகின்ற தமிழான தொண்டர்க்கு அமுது -பக்த அம்ருதம்
அத்தைக் கொண்டு அவனது சீர் அமுதக்கடலில் அமிழ்ந்து இருப்பதே
அம்ருத சாகர அந்தர் நிமஞ்சனம்
—————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே ஸ்ரீவத்ஸாங்க தாஸன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–