ஸ்ரீ முதலியாண்டான்
முமுஷுவாய் -ப்ரபன்னனாய் இருக்கும் அவனுக்கு இருக்கும் நாளைக்கு
கால ஷேபம் பண்ணும் பிரகாரம் இருக்கும்படி எங்கனே என்று
ஸ்ரீ உடையவர் திருவடிகளிலே விண்ணப்பம் செய்ய
குரு பரம்பரா பூர்வகமாக த்வயத்தை அனுசந்தானம் பண்ணுவான்
உபய விபூதி நாதனாய் ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரனும் நாச்சிமாரும் நித்ய ஸூரிகளும் கூட
எழுந்து அருளி இருக்கும் பீட கட்டணமாய் இருக்கும் த்வயம் –
பெரிய பெருமாள் திருவடிகளைப் பார்த்தவாறே -பொது நின்ற பொன்னம் கழல் -என்கிறபடியே
சர்வாத்மாக்களுக்கும் சாதாரணமாய் இருக்கும் –
பெரிய பெருமாளை அபய ஹஸ்தராய் பார்த்தவாறே அநந்ய சரண்யராய் இருக்கிற
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கே அசாதாரணமாய் இருக்கும் –
பெரிய பெருமாள் திரு முக மண்டலத்தைப் பார்த்தவாறே நித்ய ஸூரிகளுக்கும் சாதாரணமாய் இருக்கும் –
ப்ராப்ய பரமான திரு மந்த்ரத்தைப் பெரிய பெருமாள் திருவடிகளிலே அநு சந்தானம் பண்ணுவான் –
ப்ராபகமான சரம ஸ்லோகத்தைப்பெரிய பெருமாள் அபய ஹஸ்தத்திலே அநு சந்தானம் பண்ணுவான் –
இரண்டும் கூடி போக ரூபமான த்வயத்தைப் பெரிய பெருமாள் திரு முக மண்டலத்திலே அநு சந்தானம் பண்ணுவான் –
மத்ஸ்யத்தின் வடிவு எல்லாம் ஜல மயமாய் இருக்குமா போலே இவள் அவன் ஸ்வரூபாதிகளுக்கு
நிரூபக பூதை யாகையாலே அவையாவும் எல்லாம் ஸ்ரீ மயமாய் இருக்கும் –
ஸ்ரீஞ்ஸேவாயாம் என்கிற தாது அர்த்த ப்ரகாசமாய் -புருஷகார ஸ்வரூபமான ஸ்ரீ என்கிற திரு நாமத்தைப்
பெரிய பெருமாள் திரு நன் மார்பில் ப்ராப்ய பரமான திரு மந்த்ரத்தைப் பெரிய பெருமாள் திருவடிகளிலே அநு சந்தானம் பண்ணுவான் –
ப்ராபகமான சரம ஸ்லோகத்தைப் பெரிய பெருமாள் அபய ஹஸ்தத்திலே அநு சந்தானம் பண்ணுவான் –
இரண்டும் கூடி போக ரூபமான த்வயத்தைப் பெரிய பெருமாள் திரு முக மண்டலத்திலே அநு சந்தானம் பண்ணுவான் –
மந் -என்று இப்புருஷகாரம் நித்யம் என்று அநு சந்தானம் பண்ணுவான் –
நாராயண என்று ஆஸ்ரயண சவ்கர்ய ஆபாதகங்களான வாத்சல்யாதி குணங்களையும் ஆஸ்ரய கார்ய ஆபாதகங்களான
ஞான சக்த்யாதி குணங்களையும் உடையவன் என்று அநு சந்தானம் பண்ணுவான்
சரணவ் என்று பெரிய பெருமாள் திருவடிகளை அநு சந்தானம் பண்ணுவான்
சரணம் என்று சரண்யரான பெரிய பெருமாள் அபய ஹஸ்தத்திலே அநு சந்தானம் பண்ணுவான்
ப்ரபத்யே என்று ப்ராப்தாவான தன்னுடைய ஸ்வரூப அநு ரூப ஸ்வீ காரம் என்று அநு சந்தானம் பண்ணுவான்
ஸ்ரீ மதே நாராயணாய என்கிற பதங்களை ஸ்வாமிநியையாய் அவனுக்கு வல்லபையாய் -ப்ராப்யையாய் –
கைங்கர்ய வர்த்தகையாய் -பகவன் முகோலாஸ ஜநகையாய் -தத் ப்ரீதி அனுபவ ஏக யாத்ரையாய் இருக்கிற
பெரிய பிராட்டியாரோடே சேஷத்வ கார்யமான கைங்கர்ய பிரதிசம்பந்தியாய் இருக்கும்
அவனுடைய தாரகத்வ வியாபகத்வ நியந்த்ருத்வ ஸ்வரூபம் என்ன
ஸ்வரூப குணங்களான ஞான பலாதிகள் என்ன
அதில் நின்றும் எழுந்த வாத்சல்யாதிகள் என்ன
திவ்ய ஆத்ம தத் தத் ஸ்வரூப குண ப்ரகாசகமான பஞ்ச உபநிஷண் மய விக்ரஹங்கள் என்ன
விக்ரஹ குணங்களான ஸுந்தர்ய ஸுகுமார்யாதிகள் என்ன
ஆஸ்ரித விரோதி விஷயமான ஸுர்யாதிகள் என்ன
திவ்ய மங்கள விக்ரஹ ப்ரகாசகமான திவ்ய ஆபரணங்கள் என்ன
தத் அனுபவ விரோதி நிவர்த்தகமான திவ்ய ஆயுதங்கள் என்ன
அவற்றுக்கு அநு ரூபமான ஸ்ரீ வைகுண்டத்தில் -திவ்ய நகரியிலே -திவ்ய மண்டபத்திலே –
மற்றை திவ்ய மஹிஷிகளோடு திவ்ய பரிச்சத்தங்களாலே சேவிக்க
ஸ்வாமித்வ ப்ரகாசகமாக எழுந்து அருளி இருக்கிற இருப்பில் அநு சந்தானம் பண்ணுவான்
ஆய என்று
அவன் சரண்யன் ஆகையாலும் -சேஷி யாகையாலும் -இவன் அடி சூடும் அரசாகையாலும் -சேஷம் யாகையாலும்
ஸர்வவித சேஷ விருத்திகளையும் பண்ணப் பெறுவேனாக வேணும் என்று அநு சந்தானம் பண்ணுவான்
நம
த்வய அக்ஷரஸ்து பவேன் மிருத்யு -என்றும்
மமேதி த்வய அஷரோ ம்ருத்யு -என்றும்
யானே என் தனதே என்று இருந்தேன் -என்றும் சொல்லப்படுகிற ம என்ற ஷஷ்ட் யந்தமான பதத்தை
த்ரயக்ஷரம் ப்ரஹ்மண பதம் -என்றும்
நமமேதிச ஸாஸ்வதம் -என்றும்
யானே நீ என்னுடைமையும் நீயே -என்றும் -சொல்லுகிற நகாரார்த்த பலத்தாலே ஷஷ்ட் யந்தமான பதத்தை நிஷேதித்து
தனக்கே யாக -என்கிறபடி அத்தலையில் நினைவே நினைவால் படி
கீழ்ச் சொன்ன சகல சேஷ விருத்திகளையும் கொண்டு அருள வேணும் என்று
பெரிய பெருமாள் திரு முகத்தைப் பார்த்து அநு சந்தானம் பண்ணுவான் என்று அருளிச் செய்தார் –
————
ஸ்ரீ அம்மங்கி அம்மாளுக்கு ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த வார்த்தை –
ஸ்ரீ அம்மங்கி அம்மாள் ஸ்ரீ உடையவருக்குத் தீர்க்க பிரணாமமாக தண்டம் ஸமர்ப்பித்து –
அடியேன் திருக்கண்ண புரம் சேவித்து விடை கொள்ளுகிறேன் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ உடையவர் அஞ்சு வார்த்தைகள் அருளிச் செய்தார் –
அவை எவை என்னில் –
அக்னி ஜ்வாலையை அணுகாதே
அசுசியை மிதியாதே
அற நஞ்சு தின்னாதே
அபலர்களைக் கூடாதே
ஆர்த்தரோடே கூடி அணுகி வர்த்தித்து வாரும் -என்று அருளிச் செய்தார் –
அக்னி ஜ்வாலை-யாவது -சைவ மாயா வாதிகள் -அவர்களைக் கண்டால்
அக்னியையும் சர்ப்பத்தையும் கண்டால் போலே கண்டு விலகி வாரும் என்று அருளிச் செய்தார்
அசுசி யாவது -சரீர தத் பரரான ஸம்ஸாரிகள் -அவர்களைக் கண்டால்
காஷ்ட லோஷ்டாதிகளைக் கண்டால் போலே கண்டு விலகி வாரும் என்று அருளிச் செய்தார்
அற நஞ்சு ஆவது –
ரூப நாமங்களை உடையராய் அந்யோன்ய பரராய் ப்ரயோஜனாந்தர பரராய் மயக்கப் பட்டவர்கள்
அவர்களைக் கண்டால்
கற்பூரத்தையும் எலுமிச்சம் பழத்தையும் கண்டால் போலே கண்டு விலகி வாரும் என்று அருளிச் செய்தார்
அபலர்கள் ஆவது –
அருளிச் செயலில் வாசனை பண்ணி ஸ்வரூப சிஷை இல்லாதவர்கள் -அவர்களைக் கண்டால்
காம ரசம் அறியாத கன்னிகைகளைக் கண்டால் போலே கண்டு விலகி வாரும் என்று அருளிச் செய்தார்
ஆர்த்தர் ஆகிறார் -பூர்ண அதிகாரிகள் -அவர்களைக் கண்டால்
தென்றல் நிலாவைக் கண்டால் போலவும்
சந்தன குஸூம தாம்பூலாதிகளைக் கண்டால் போலவும்
பசியன் சோற்றைக் கண்டால் போலவும் கண்டு சேர்ந்து அணுகி வர்த்தித்து வாரும் -என்று அருளிச் செய்தார் –
————————
ஸ்ரீ சின்னி அம்மாள் ரஹஸ்யம்
ஸ்ரீ சேற்றுத் தாமரை கயத்தில் ஸ்ரீ ஜீயர் நீராடா நிற்க
ஸ்ரீ சின்னி அம்மாள் வந்து தண்டம் சமர்ப்பிக்க
பெண்ணே உங்கள் தேசம் எது நித்ய வாசம் எது
நாடு எது என்ன -திருவழுதி வள நாடு என்ன
வூர் எது என்ன -திருக் குருகூர் என்ன
வீடு எது என்ன -பண்டுடையான் வீடு என்ன
குலம் எது என்ன -அச்சுத குலம் என்ன
வேதம் எது என்ன -திராவிட வேதம் என்ன
கோத்ரம் எது என்ன -பராங்குச கோத்ரம் என்ன
ஸூத்ரம் எது என்ன -ராமானுஜ ஸூத்ரம் என்ன –
காரிகை எது என்ன -பர கால காரிகை என்ன –
குடி எது என்ன அஞ்சும் குடி என்ன
பந்துக்கள் ஆர் என்ன -ஆத்ம பந்துக்கள் என்ன
உறவார் ஆர் என்ன -ஓட்ட உணர்ந்தவர் என்ன
உற்றார் ஆர் என்ன -உற்றதும் உன் அடியார் என்ன
தகப்பனார் ஆர் என்ன -தைவ நாயகன் என்ன
தாயார் ஆர் என்ன -ஸ்ரீ வர மங்கை என்ன
புக்கிடம் எவ்விடம் என்ன -வான மா மலை என்ன
பார்த்தா யார் என்ன -வர மங்கை மா முனிவன் என்ன
மாமனார் யார் என்ன -காந்தோ பயந்த்ரர் என்ன
உத்யோகம் எது என்ன பாகவத கைங்கர்யம் என்ன
அத்தால் பிரயோஜனம் எது என்ன -அதுவே பிரயோஜனம் என்ன
அதிகாரம் எது என்ன -சர்வாதிகாரம் என்ன
நிஷ்டை எது என்ன பஞ்சம உபாய நிஷ்டை என்ன
உபாயம் எது என்ன -சரம உபாயம் என்ன
அபிமானம் எது என்ன -பாகவத அபிமானம் என்ன
பிரார்த்தனை எது என்ன -கைங்கர்ய பிரார்த்தனை என்றாள்
அந்த அம்மையாருடைய அத்யாவசாயத்துக்கு வான மா மலை ஜீயர் திரு உள்ளம் உகந்து
பரமபதம் ப்ரசாதித்து அருளினார் –
————–
ஸ்ரீ எம்பார் அருளிச் செய்த ஸ்ரீ திருக்குருகூர் ரத்னம்
திரு நாம தாரி- மந்த்ர சம்பந்தி-முத்ர தாரி என்கிறவன் ப்ரக்ருதி ருசியை ஒழிய ஸ்வரூப ருசியை அறியான் –
ஆகையால் ரூப நாமங்கள் ஆகிறது போராது –
ஸச் சிஷ்ய ஸதாசார்ய ஸம்பந்தமும் -ஜீவாத்மா பரமாத்மா சம்பந்தமும் சேர திரு மந்த்ரத்திலே தன்னை உள்ளபடி அறிய வேண்டும் –
சரம ஸ்லோகத்தாலே எம்பெருமானே உபாயம் என்று தெளிய வேண்டும் –
த்வயத்தாலே உபாய உபேய நிஷ்டனாய் -த்வய அனுசந்தான பரனாய் -நிர்ப் பரனாய் -நிர் விகாரனாய் –
ஸ்ரீ மன் நாராயணன் திருவடிகளில் பண்ணும் நித்ய கைங்கர்யம் அறிய வேண்டும்
இப்படி இன்றிக்கே அசித்தாலே பாவித்து நான் அறிகிறேன் என்கிறவன் அறியான் –
அவனுடைய ஸஹ வாசமும் அந்நிய சேஷத்வ சமம்
ஆகையால் ஸ்வரூப நாசமாம்
அங்கன் அன்றிக்கே -ஸ்வரூபவானாய் -புருஷகார பூதனான ஆச்சர்யன் அறிவிக்க –
தத்வ த்ரய சிஷை உடையவன் ஆகில் அவனோட்டை ஸஹ வாஸமே ஸ்வரூப உஜ்ஜீவனமாம் –
இப்படி இன்றிக்கே உபாயாந்தர பரனாய் ஆகையால் இறே கூழாள் ஆகிறது –
தானும் பிறரும் தஞ்சம் அன்று இருக்கும் அகிஞ்சனன் அன்றோ -நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா என்கிற படியே
அநந்தாவை வேதா -வேதங்களுக்கு அதிகாரியாய் -தேகம் இட்ட வழக்கன்றிக்கே -தேசிகர் இட்ட வழக்கன்றிக்கே
தேஹ அனுபந்திகளான பதார்த்தங்கள் இட்ட வழக்கன்றிக்கே
ஸ்வரூபம் இட்ட வழக்கான போது அன்றோ அவன் திரு உள்ளம் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவன் ஆவது –
பூர்வ தசை பரித்யாஜ்யம் -உத்தர தசை பரிக்ராஹ்யம் என்கிறபடியே
ஆத்ம சாஷாத்கார ஞானம் உடையவனாய் -இப்படிப் பிடித்தார் பிடித்தாரைப் பற்றித் திருவடிகளில் பண்ணும்
அனவரத நித்ய கல்யாண போக சர்வரஸ ஸர்வ கந்தனானவனை ஸதா பஸ்யந்தி பண்ணுகை அன்றோ ஸ்வரூப லாபம் –
இப்படி ஞானமும் விரக்தியும் சாந்தியும் உடையனாய் இருக்கும் ஒரு ப்ரபன்னன் அபிமானத்திலே ஒதுங்கி வர்த்திக்கை –
அப்போது அன்றோ தன் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான ப்ரீதியும் ஸ்வயம் ப்ரகாஸமும்
திரு மண்ணும் ஸ்ரீ சூர்ணமும் தீர்த்தப் ப்ரஸாதமும் உடையனாய் வாழல் ஆவது –
அப்போது அன்றோ சரீரம் அர்த்தம் பிராணாஞ்ச ஸத் குருப்யோ நிவேதயேத் என்று பிரமாணம் சொல்லுகையை அறிகை –
இத்தை அறிகை யன்றோ தன் உஜ்ஜீவனம் அறிகை
இது தர்சன அர்த்தம் உள்ளபடி அறிகை
இது ஸ்வரூப சோதனை -அதிகாரிக்கு அறிய வேண்டுவது –
அவ் வதிகாரி தீர்த்த பிரசாதமும் ஸ்வரூப உஜ்ஜீவனம்
அவன் தீர்த்த ப்ரஸாதம் உடையவன் ஆகையால் வருகிற ஞானம் எல்லாம் அடைவிலே வந்து நிறைந்தது –
வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்கிறவன் அன்றோ அதிகாரி –
இப்படி இன்றிக்கே சகல வேத ஸாஸ்த்ரங்களாலும் சகல ப்ரமாணங்களாலும் சொல்லுகிறது என்று சப்தத்தால் அறிய ஒண்ணாது
சதாசார்ய கடாக்ஷத்தாலே அனுபவ சித்தி தன்னைக் கொடுத்து ரஷித்த போது இவை இத்தனையும் பிரமாணம் –
தர்சன வார்த்தை சொன்னான் என்றும் -தர்சன ப்ரபாவங்கள் போம் என்றும் ரூப நாமங்களைக் கொண்டு
தன் ப்ரேமத்தாலே செய்யுமாகில் அவன் தீர்த்த ப்ரஸாதம் ஆத்ம நாசனமாகும் –
பெருக்கு ஆற்றில் இழிவான் ஒருவன் துறை அறியாதே இழிந்தான் ஆகில் தன் கார்யம் அடியும் –
அதிகாரியோடே இழிந்தால் அன்றோ அக்கரைப்படல் ஆவது -அக்கரை யாவது -விரஜைக் கரை
அப்போது அன்றோ நித்யனாய் -நித்ய அனுபவம் பண்ணி -நித்யர் உடன் ஒரு கோவையாய்க் கலக்கல் ஆவது –
இது பெரிய பிராட்டியாருக்குப் பெரிய பெருமாள் அருளிச் செய்த த்வய அர்த்த அனுசந்தானம் –
ஆச்சார்ய பரம்பரா ப்ராப்தமாக வந்தது என்று அஸ்மத் ஆச்சார்யர் யுக்தம் –
இது ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம்
——–
ஸ்ரீ சரம ரஹஸ்ய த்ரயம்
முமுஷுவான சேதனனுக்கு மோக்ஷத்திலே இச்சை உண்டாம் போது ரஹஸ்ய த்ரயம் அறிய வேணும் –
ரஹஸ்ய த்ரயம் ஆவது -திரு மந்த்ரமும் த்வயமும் சரம ஸ்லோகமும்
இவற்றுக்குப் ப்ரகரணம் என்றும் பிரயோஜனம் என்றும் இரண்டாய் இருக்கும் –
இதில் ப்ரகரணம் அறிகை யாவது ரஹஸ்ய த்ரயத்தில் உண்டான அர்த்த விசேஷங்களை பதங்கள் தோறும் ச க்ரமமாக அறிகை –
பிரயோஜனம் அறிகை யாவது -தாத்பர்யம் அறிகை
திரு மந்த்ரத்துக்கு நாராயண பதமும்
த்வயத்துக்கு சரண பதமும்
சரம ஸ்லோகத்துக்கு ஏக பதமும் தாத்பர்யமாய் இருக்கும் –
இந்த பத த்ரயங்களிலும் உண்டான பரமார்த்தம் யதார்த்தமாக அறிய வேணும்
திருமந்திரத்தில் நார பதத்தில் சேதன அசேதனங்களுடைய எல்லாம் சொல்லிற்றே யாகிலும்
நார பதத்துக்கு அவன் விக்ரஹத்திலே ஊற்றமாய் இருக்கும்
விக்ரஹம் தான் இரண்டு விதமாய் இருக்கும் -அதாவது சேதனம் என்றும் அசேதனம் என்றும்
சேதனம் என்கிறது நம்மாழ்வாரை
அசேதனம் என்கிறது பரத்வாதிகளிலே அவன் பரிக்ரஹித்த திவ்ய மங்கள தேஹங்களை
அதுக்கும் இதுக்கும் நெடு வாசி உண்டு –
இது நினைவிலே எழுந்து இருந்து விநியோகப்படும்
அதுக்கு இவன் தான் அறிந்து யத்னிக்க வேண்டும்
அங்கு போக வேளையாய் ஆனந்தம் சரீரம் -அறிவார் உயிரானாய் –
நார பதத்தாலே ஸர்வேஸ்வரனுக்குத் திரு மேனியாக அனுசந்தித்து
அயன பதத்தாலே ஆழ்வாரை ஸர்வேஸ்வரனுக்கு உயிராக அனுசந்திக்கை –
அங்கனம் அன்றியே
என்னது உன்னதாவி என்றும் –
ஞாநீத் வாத்மைவ மே மதம் என்றும் -இவரை அவனுக்கு உயிராக அனுசந்திக்கை
அங்கனமும் அன்றிக்கே
ஸர்வேஸ்வரேஸ்வரன் நினைவாலே ஸம்பந்தம் அறிகை யாவது –
சரீராத்மா சம்பந்தம் போலே ஆழ்வாருக்கும் நமக்கும் உண்டான ஸம்பந்தம் என்று அறிகை
த்வயத்துக்குத் தாத்பர்யம் சரணவ் -பதத்தாலே
ஆழ்வாரை ஸர்வேஸ்வரேஸ்வரனுக்குத் திருவடிகளாகவே அனுசந்தித்து
திருவடிகளை உபாயமாகப் பற்றும் போது ஆழ்வாரையே உபாயமாக அனுசந்தித்துப் பற்ற வேணும் –
சரம ஸ்லோகத்தாலே மாம் என்று தன்னைத் தொட்டுக் காட்டி –
ஏகம் – என்று
திருக் கையும் ஞான முத்திரையாக ஆச்சார்ய பதத்தை ஏறிட்டுக் கொண்டு இருக்கிற
என்னை ஒருவனையுமே உபாயமாகப் பற்று என்று விதிக்கையாலே
ஆழ்வார் ஒருவரையும் உபாயமாகப் பற்ற வேணும் –
ஆழ்வாரைப் பற்றும் போது அவர் திருவடிகளைக் பற்ற வேண்டுகையாலே
எம்பெருமானார் திருவடிகளோட்டை சம்பந்தமே இவ்வாத்மாவுக்கு உஜ்ஜீவனம் –
இதற்குப் பிரமாணம் -கண்ணி நுண் சிறுத் தாம்பும் -ராமானுச நூற்று அந்தாதியும் –
இவ்வர்த்தம் அறியாதவனுக்கு யாவதாத்ம பாவியாக சம்சாரம் அநு வர்த்திக்கும்
இவ்வர்த்த நிஷ்டரான அதிகாரிகளுக்கு ஆழ்வார் ப்ரபத்தியும் உடையவர் ப்ரபத்தியும் நித்ய அநு சந்தேயமாகக் கடவது
இவ்வர்த்தம் ப்ரசாதித்த ஆச்சார்யன் திருவடிகளே உபாயமாகக் கடவன் –
——————
ஸ்ரீ திரு நகரிப்பிள்ளை ரஹஸ்யம்
ஸ்ரீ பிள்ளை செண்டு அலங்கார தாஸர் -ஸ்ரீ திரு நகரிப் பிள்ளை ஸ்ரீ பாதத்திலே நெடு நாள் அபேக்ஷித்து
ஒரு பத்த சேதனன் முமுஷுவாய் முக்தனாம் போது
ஸ்வரூப ஆவேச வியாப்தியை ஸதாவாக உள்ளவர்களுடைய அபிமானமும் –
பகவத் பாகவத ஆச்சார்ய அபிமான நிஷ்டர் விஷயங்களில் மானஸ கைங்கர்ய அனுசந்தானமும்
கூட வேணும் என்று பல நாளும் அருளிச் செய்யா நின்றது –
அடியேனுக்கு அவை கூடும்படி எங்கனேயோ அறிகின்றிலேன் -என்று விண்ணப்பம் செய்ய
ஆகில் இவ்வர்த்தத்தை ஒருவருக்கும் சொல்லாதே கொள்ளும் என்று தம்முடைய
ஸ்ரீ பாதத்தளித்த தொட்டு ஆணை இடுவித்துக் கொண்டு அங்கீ கரித்து
பூர்வாச்சார்யர்கள் தங்களுக்குத் தஞ்சமாக அனுசந்தித்தும்
தங்களைப் பற்றினவர்களுக்குக் குஹ்ய தமமாக உபதேசித்தும் போரும் அர்த்த விசேஷங்கள் உண்டு
அவை எவை என்னில் –
வஸ்து நிர்தேசமும்
உபாய நிர்தேசமும்
உபேய நிர்தேசமும்
இவை இவை தன்னை நிர்தேசிக்கும் போது பிரமாணம் கொண்டே நிர்தேசிக்க வேண்டுகையாலே
இவ்வர்த்த விசேஷங்களுக்கு நிர்ணாயக பிரமாணம் தன்னை பிரதமத்திலே நிர்ணயித்துக் கொள்ள வேணும் இறே -அதாவது –
அபவ்ருஷேயமாய் –நித்ய -நிர்தோஷமாய் -அகில பிராமண உத்க்ருஷ்டமான வேதத்துக்கு ஸங்க்ரஹமான திரு மந்த்ரத்திலும்
அதனுடைய விவரணமான ரஹஸ்ய த்வயத்திலும் உண்டான அர்த்த விசேஷங்களை ப்ரதிபாதியா நின்ற உள்ள
ஆழ்வார்கள் அருளிச் செய்த திராவிட வேதத்துக்கு கருத்து அறிவிக்கும் ஆச்சார்யர்கள்
தங்களுக்குத் தஞ்சமாக நினைத்து இருக்குமதாய் ரஹஸ்ய த்ரயத்திலும் அர்த்தமாக மறைத்து உபதேசிக்கக் கடவ
அர்த்த விசேஷங்களை சாப்தமாக ப்ரதிபாதிக்கையாலே
இவ்வர்த்த விசேஷங்களுக்கு நிர்ணாயகமான பிரமாணம் -கண்ணி நுண் சிறுத்தாம்பாய் -இருக்கும் –
இனி வஸ்து நிர்த் தேசமாவது
இந்த பிராமண ப்ரதிபாத்யரான நம்மாழ்வாருடைய ஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்து இவரே நமக்குத் தாரகர்
என்று ஸ்ரீ மதுர கவிகள் போல் அறுதி இடுகை
அது செய்யும் இடத்தில் இதுக்குப் பிரமாணம் மூல மந்த்ரம் ஆகையாலும்
வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -என்று தாமே அருளிச் செய்கையாலும்
திரு மந்த்ரம் கொண்டே அறுதி இட வேணும் –
அது நாராயணாய என்று சொல்லா நிற்க இறே -அவ்வர்த்த அனுசந்தானம் பண்ணுகிற இவரும் தேவு மற்று அறியேன் என்றதும்
திரு மங்கை ஆழ்வாரும் -நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றது உன் அடியார்க்கு அடிமை -என்றதும்
இவர்கள் இப்படி சொல்லுகைக்கு அடி ஸர்வேஸ்வரனுடைய நாராயணத்வ பூர்த்தி உள்ளபடி அறிந்து பற்றின ஊற்றம் இறே
அல்லது நாராயணாய என்று மந்த்ர சரீரத்திலே வியக்தமாய்ச் சொல்லா நிற்க –
தேவு மற்று அறியேன் -என்பது
அடியார்க்கு அடிமை என்பதாக ஒண்ணாது இறே
இத்தனையும் அறிய வேண்டுவது உஜ்ஜீவன அம்சத்துக்கு நாராயணத்வ பூர்த்தி யாவது தான் ஏது என்னில் –
நாராயண பதம் -நார பதத்தாலே பகவத் வ்யதிரிக்த ஸமஸ்த பதார்த்தங்களையும்
அயன பதத்தாலே தத் ஆஸ்ரயமான பகவத் ஸ்வரூபத்தையும் ப்ரதிபாதியா நின்று கொண்டு
யோக ரூடி நியாயத்தாலும் சாதாரணமாயும் அசாதாரணமாயும் இருக்கும் –
இதிலே வஸ்து நிர்த்தேசம் பண்ணும் போது சாதாரணத்துக்கும் அசாதாரணத்துக்கும் வாஸி அறிய வேண்டும் –
சாதாரணமானது –
விதி சிவாதிகளான அதிகாரி ஜீவர்களை அதிஷ்டித்துக் கொண்டு அஹங்கார யுக்த ஜீவர்களுக்கு
அந்தராத்மாவாய் நின்று கொண்டு அவர்களைச் சொல்லும் வாசகத்தாலே தன்னைச் சொல்லலாம் படி நிற்கும் நிலை –
அதாகிறது -நான்முகனே முக்கண் அப்பா -என்று சம்போதிக்கலாம் படியாய் இருக்கை –
இனி அசாதாரணம் ஆவது –
அப்ராக்ருதமாய் ஸுத்த ஸத்வமாய் இச்சா க்ருஹீத மான திவ்ய விக்ரஹத்தோடே கூடி இருக்கும் இருப்பு –
இவ்விரண்டிலும் நாராயணத்வ பூர்த்தி இல்லை –
இனி சாதாரண பரமான விதி ஸிவாதி வியக்திகள் போலே அஹங்கார யுக்தமாய் இருத்தல் –
அசாதாரண திவ்ய விக்ரஹம் போலே நினைவு அறியாது இருத்தல் செய்கை அன்றிக்கே
தனக்கே யாக -என்கிற அத்யந்த பாரதந்தர்யத்தாலே –
உந்தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் -என்றும்
நினைவு அறிந்து பரிமாற்ற வல்ல வியக்தி பாரதந்தர்யத்தாலும் அசாதாரண திவ்ய விக்ரஹத்திலும்
அவன் உகந்த அந்தரங்க சரீரம் ஆழ்வாராய் இருக்கும் –
ஈஸ்வர ஸ்வரூபம் தான் பரத்வம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சாவதார ஆச்சார்யத்வம் என்று ஆறு பிரகாரத்தோடே கூடி இருக்கும் –
அதில் பரத்வாதிகள் ஐந்திலும் தத்வ த்ரயத்தினுடைய வைச்சித்யம் இல்லாமையால் நாராயணத்வ பூர்த்தி இல்லை –
இனி ஆச்சார்யத்வம் என்கிற மதுரகவி ஆழங்கால் பட்ட இதிலே யாய்த்து நாராயணத்வம் பூர்ணம் ஆவது
கேவலம் ப்ராக்ருதமான திவ்ய விக்ரஹத்தோடே இங்கேயே கூடி இருக்கையாலே
தத்வ த்ரயங்கள் மூன்றும் ஒன்றோடு ஓன்று கூடி இருக்கிற இது அன்றோ பூர்ணம் –
அங்கனம் அன்றிக்கே ஆழ்வாரையும் அவரது திரு மேனியையும் இரண்டையும் தனக்கு விக்ரஹமாய்க் கொண்டு
அவருடைய அஹந்தை தன்னுடைய அஹந்தையில் அந்தர்பூதமாய் இருக்கிற இருப்பு இறே
தானும் தானாய் ஒழிந்தானே தானே யான் என்பானா தானே யாகி நிறைந்தானே என்றபடி தத்வத்ரய விசிஷ்டமாய் அன்றோ
சகல ஜகத்தும் இருப்பது என்னில் அங்கனம் சொல்ல ஒண்ணாது –
வியவஸ்திதமாய் இருக்கையாலே பிராட்டிமார் எல்லாம் ஒத்து இருக்கச் செய்தே பெரிய பிராட்டியார் அவன் ஸ்வரூபாதிகளுக்கு
நிரூபக பூதையாய் -பிரதான மஹிஷியாய் திருவின் நிழல் போல் யாம்படி
அல்லாதவர்கள் தனக்கு சாயா பரதந்த்ரராம் படி வியாவ்ருத்தியாய் இருக்கிறாப் போலே இதுவும் இவ்விஷயத்துக்கே வியவஸ்திதம்
மற்றை ஆழ்வார்கள் இவருக்கு விஷய பூதர் –
இது முடியானேயிலே -ஸூ ஸ்பஷ்டம்
இவ்வாழ்வாருக்கும் இத்தனை பிரகாரம் உண்டு -நாச்சிமாரோடு ஸர்வதா சாத்ருஸ்யம் உண்டு –
பின்னை கொல் -இத்யாதிப்படியே ஆழ்வாருக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள பிரகார சம்பந்த ஐக்யத்தை
யதா தர்சனம் பண்ணினால் யாய்த்து -தேவு மற்று அறியேன் -என்று இருப்பது –
ஆக இப்படி ஆழ்வாருக்கும் ஈஸ்வரனுக்கு உள்ள சம்பந்தத்தை யதா தர்சனம் பண்ணி -தேவு மற்று அறியேன் -என்று
இருக்கும் அதிகாரிக்கும் எம்பெருமானது கிருபை பள்ள மடை யாவது –
ஆழ்வாரைப் பற்ற அவர் திருவடிகளைப் பின்பற்ற வேண்டுமே -மேவினேன் அவன் பொன்னடி – என்று
மதுரகவிகள் ஆழ்வாரை விட்டு எம்பெருமானாரை ஊன்றுகைக்கு அடி –
தத் தர்மி ஐக்யத்தாலே ஏக விஷயம் ஆகையாலும் -ப்ரயோஜன அம்சத்தில் நிற்க வேண்டுகையாலும் –
பாவின் இன்னிசை பாடித் திரிவேன்
கரிய கோலத் திரு உருக் காண்பன்
எண்டிசையும் அறிய இயம்புகேன் -என்று பாரித்த படியே
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரு அரங்கத்து அம்மானுக்கே காவல் செய்து –
ஆழ்வார் கிருபையையே ஸூ ப்ரஸித்தம் ஆக்குவதாக அவதரித்த படி இறே
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பல் கலையோர் தாம் மன்ன வந்த ராமாநுசன் இறே
பகவத் கிருபையையும் ஆழ்வார் கிருபையையும் சீர் தூக்கிப் பார்த்தால் –
பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே–என்று ஆழ்வார் கிருபை விஞ்சின் இருக்குமா போலே –
ஆழ்வார் கிருபையையும் இவருடைய கிருபையையும் தனித்தனியே விகல்ப்பித்தால்
உன் அருள் அன்றி –புகல் ஓன்று இல்லை -என்னும்படியான கிருபா வைபவத்தாலும்-
சேதனருடைய துர்கதியைக் கண்டு -சர்வ அவஸ்தைகளிலும் கை விட மாட்டாதே -தம்மை அழிய மாறியும்
உபதேசித்து அருளும் வாமனன் சீலன் ராமாநுசன் உபய விபூதியும் இவர் இட்ட வழக்காக பெரிய பெருமாள்
ப்ரசாதித்து அருள உடையவர் என்று நிரூபகம் ஆகையாலும்
ஆழ்வார் திருவடிகளில் சம்பந்தம் உணர்ந்தவர்களுக்கு அல்லாரும்
எம்பெருமானாரே தங்களுக்குத் தஞ்சகமாக நினைத்து இருப்பார்கள் –
இது தான் ஈஸ்வர சம்பந்தம் போலே பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கை அன்றிக்கே
மோக்ஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் –
ஆகை இறே -ஞானப்பிரானை அல்லால் இல்லை என்றும்
திருக்குருகூர் அதனை யுளம் கொள் ஞானத்து வைமின் -என்றும் தாமே அருளிச் செய்தது –
ஆச்சார்ய பதம் என்று ஓன்று உண்டு -அது உள்ளது எம்பெருமானாருக்கே –
எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று ஆய்த்து வடுக நம்பி உபதேசித்து அருளுவது –
எம்பெருமானாருக்கே என்றது ஆழ்வார் திருவடிகளில் உள்ள ஐக்யத்தாலே –
அவர் தமக்கு அடி ஏது என்னில் கீழ்ச சொன்ன நாராயணத்வ பூர்த்தியாலே –
இவ்வாறு உள்ள சரம பர்வ நிஷ்டனுக்கு உபாயம் ஆச்சார்யர் பண்ணிய ப்ரபத்தியே யாகுமே –
இவனுக்குத் தனியே சரண வரணம் பண்ணத் தேவையில்லை -பண்ணினான் ஆகில் சம்பந்தம் குலையும் –
கரணம் தானே தனக்கு ரக்ஷண சிந்தை பண்ணாதே –
அநாதி காலம் ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு
ஆச்சார்ய அபிமானம் ஒழிய கதி இல்லையே –
ஸ்வ அபிமானமாவது -கரணவத் பரதந்த்ரனாய் -ஒருவன் அபிமானத்திலே அந்தர்பூதனாய் இருக்கக் கடவ இவன் –
தன்னை ப்ருதக் ஸ்திதி பண்ணி தனக்கு என்று ஒரு புருஷார்த்தம் உண்டாகவும் நினைத்து
தத் பிராப்தி யுபாயம் ஈஸ்வரனே என்று இருக்கை
ஆச்சார்ய அபிமானம் ஒழிய கதி இல்லை என்று இருக்கை யாவது –
தன் பேற்றுக்குத் தான் ஒரு பிரபத்தி பண்ணுகை அன்றிக்கே அவன் பண்ணின ப்ரபத்தியே
தனக்கு உபாயமாகக் கொண்டு தன்னை அவனுக்குக் கரணமாகவே அநு சந்திக்கை –
தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டுமே
கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரே வெல்லும் மற்றவரைச் சாத்தியிருப்பார் தவம் –
நாத முனிம் விலோக ப்ரஸீதம் –
புருஷார்த்த நிர்த்தேசமாவது
ஆச்சார்ய முகோலாஸ ஹேதுவான கைங்கர்யமே புருஷார்த்தம்
திரி தந்தாகிலும்
ஆழ்வார் எம்பெருமானார் பாக்கள் உத்தாரகத்வ பிரதிபத்தி பண்ணி -இவ்வர்த்தம் உபதேசித்து அருளிய
ஆச்சார்யர் எம்பெருமானாருக்கே கரணவத் பரதந்த்ரர் ஆகையால் அந்த ஐக்யத்தாலும்
ஒரு காலத்துக்கு ஒரு சேதனன் முகேன நின்று சேதனனுக்கு அஞ்ஞாத ஞாபனம் பண்ணி அங்கீகரித்து அருளுவான் என்கிற உபதேசத்தாலும்
அவ்வோ வியக்தி விசேஷங்கள் தான் ஞான அனுஷ்டான பரி பூர்த்தியாலே இதர விஸஜாதீயமாகத் தோற்றுகையாளலும்
எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தத்தை யுணர்த்தின அளவிலே கேவல யுபகார பிரதிபத்தியே அன்றிக்கே
யுத்தாரகர் என்று அனுசந்திக்கக் குறையில்லை –
ப்ரபந்ந காயத்ரி ஜபித்து
திருவாய் மொழி வேதம் அத்யயனம் பண்ணி
உபதேச ரத்னமாலை ரஹஸ்யங்கள் அப்யஸிக்க வேணும் –
1-ஈஸ்வரன் அளவில் உத்தாரகத்வ பிரதிபத்தியும்
2-ஆச்சார்யர் அளவிலிலே உபகாரத்வ பிரதிபத்தியும்
3-ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவிலே உத்தேச்ய பிரதிபத்தியும்
4-உபாயத்து அளவிலே அத்யாவசிய பிரதிபத்தியும்
5-உபேயத்து அளவில் த்வரா பிரதிபத்தியும்
6-சரீர அளவிலே விரோதி பிரதிபத்தியும்
7-சரீர சம்பந்திகள் அளவில் பிரிவாகிற பிரதிபத்தியும்
8-சம்சாரிகள் அளவில் த்ருணவத் பிரதிபத்தியும்
9-ஐஸ்வர்யத்து அளவில் அக்னிவத் பிரதிபத்தியும்
10-விஷயாந்தரங்கள் பக்கல் இடி வத் பிரதிபத்தியும்
ஆக இப்பத்து பிரதிபத்தியும் இவ்வதிகாரிக்கு அவஸ்யம் ஞாதவ்யமாகக் கடவது –
1-ஈஸ்வரன் அளவில் உத்தாரகத்வ பிரதிபத்தி யாவது
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன்
என்னுடைய வாழ் நாள்
ஆவியை அரங்க மாலை
எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு -என்கை
2-ஆச்சார்யர் அளவிலிலே உபகாரத்வ பிரதிபத்தி யாவது –
என்னைத் தீ மனம் கெடுத்தாய்
மருவித் தொழும் மனமே தந்தாய்
தேவு மற்று அறியேன் -என்று இருக்கை
3-ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவிலே உத்தேச்ய பிரதிபத்தி யாவது
சீதரனையே தொழுவார்
பயிலும் திரு உடையார்
எம் தொழு குலம் தாங்களே -என்று இருக்கை –
4-உபாயத்து அளவிலே அத்யாவசிய பிரதிபத்தி யாவது
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -இத்யாதிப்படியே இருக்கை –
5-உபேயத்து அளவில் த்வரா பிரதிபத்தி யாவது
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே
வானுலகம் தெளிந்தே என்று எய்வது
களிப்பும் கவர்வும் அற்று–அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ –
ஒழி வில் காலம் எல்லாம் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்று இருக்கை –
6-சரீர அளவிலே விரோதி பிரதிபத்தி யாவது
பாம்போடு ஒரு கூறையில் பயின்றால் போல்
பொல்லா ஆக்கை
ஆக்கை விடும் பொழுது எண்ணே
மங்க ஒட்டு -என்று இருக்கை
7-சரீர சம்பந்திகள் அளவில் பிரிவாகிற பிரதிபத்தி யாவது –
தாயே தந்தையே -இத்யாதி
கொண்ட பெண்டிர் இத்யாதி
என்று இவை பேணேன் என்று இருக்கை
8-சம்சாரிகள் அளவில் த்ருணவத் பிரதிபத்தி யாவது
மிண்டர் இவர் என்று இருக்கை
9-ஐஸ்வர்யத்து அளவில் அக்னிவத் பிரதிபத்தி யாவது
ஆண்டவரே மாண்டு ஒழிந்தார்
செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் -என்று இருக்கை –
10-விஷயாந்தரங்கள் பக்கல் இடி வத் பிரதிபத்தி யாவது புலன் ஐந்து மேயும் பொறி ஐந்தும் நீங்கி
மென் முலையார் தடம் தோள் புணர் இன்பத்து வெள்ளத்து ஆழ்ந்தேன்
ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்
கூறை சோறு இவை தா வென்று குமைத்துப் போகார் -என்று இருக்கை –
1-ஈஸ்வரன் அளவில் உத்தாரகத்வ பிரதிபத்தியை – உயர்வற உயர் நலம் தொடக்கமான இவற்றாலும்
2-ஆச்சார்யர் அளவிலிலே உபகாரத்வ பிரதிபத்தியை தூது நாலிலும்
3-ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவிலே உத்தேச்ய பிரதிபத்தியை பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை -யாலும்
4-உபாயத்து அளவிலே அத்யாவசிய பிரதிபத்தியை நோற்ற நாலிலும்
5-உபேயத்து அளவில் த்வரா பிரதிபத்தியை முடியானே -பா மறு மூ வுலகு மாயக்கூத்தன் தொடங்கி முனியே நான்முகன் முக்கண் அப்பா இவற்றாலும்
6-சரீர அளவிலே விரோதி பிரதிபத்தியை முந்நீர் ஞாலம் தொடக்கமான வற்றாலும்
7-சரீர சம்பந்திகள் அளவில் பிரிவாகிற பிரதிபத்தியை கொண்ட பெண்டிரிலே அபாந்தவாதிகளாகச் சுற்றிச் சாற்றி யதாலும்
8-சம்சாரிகள் அளவில் த்ருணவத் பிரதிபத்தியை நண்ணாதார் முறுவலிப்ப -இத்யாதியாலும்
9-ஐஸ்வர்யத்து அளவில் அக்னிவத் பிரதிபத்தியை ஒரு நாயகத்தாலும்
10-விஷயாந்தரங்கள் பக்கல் இடி வத் பிரதிபத்தியை உண்ணிலா விலும்
பிரதம ஆச்சார்யரான நம்மாழ்வார் அருளிச் செய்து அருளினார்
ஆக இப்பத்தும் ஓர் அதிகாரிக்கு அவசியம் ஞாதவ்யம் என்றதாயிற்று –
———–
ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த ஆத்ம விவாஹம்
ஸ்ரீ யபதியாகிற காள மேகம்
க்ருபா ப்ரவாஹம் பொழிய
நிலத்திலே முளை போலே ஜீவாத்மா முளைத்து
ஆச்சார்யர் சங்கமம் கிட்டி
ஞானம் முளைத்துப் பெருகி
ருசி வளர்த்துக் கொண்டு போந்து
விவேகம் ஆகிற பக்குவம் பிறந்து
பரம சேஷிகள் ஆகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளைச் சேர்த்து
எம்பெருமான் ஆகிற வரன் கையிலே
ஸ்வரூப ஞானம் என்னும் தாரை வார்த்துக் கொடுத்து
அவனும் சேஷத்வம் ஆகிற மந்த்ர வாஸஸ்ஸை யுடுத்தி
சேஷ விருத்தியாகிற மங்கள ஸூத்ரத்தையும் கட்டி
ரூப நாமங்கள் ஆகிற ஆபரணங்களையும் சூட்டி
கையைப் பிடித்துக் கொண்டு போந்து
அத்யவசாயம் என்கிற ஆஸனத்திலே இருத்தி
வியாபக ஞானம் என்கிற அக்னியை வளர்த்து
இதர உபாய தியாகம் என்கிற சமித்துக்களை இட்டு
ஸித்த உபாய ஸ்வீ காரம் என்கிற பிரதான ஆஹுதியைப் பண்ணி
ஸாஸ்த்ரங்கள் ஆகிற பொறியைச் சிதறி
சம்பந்த ஞானம் என்கிற பூர்ண ஆஹுதியாலே பிராப்தி பிரதிபந்தகங்களை நிவர்த்தமாக்கி
நிர்ப் பரத்வ அனுசந்தானம் பண்ணுகிற சதாச்சார்யர்கள் ஆகிற பந்துக்கள் முன் நிற்க
மாதா பிதாக்கள் இருவரும் சேர இருந்து
ஆழ்வார்கள் ஈரச் சொற்களால் வாத்சல்ய யுக்தனானவன் அணைத்துக் கொண்டு
ப்ரீதி வெள்ளம் ஆகிற படுக்கையில் கொண்டு போய்
விஷய வைலக்ஷண்யங்கள் ஆகிய போக போக்யங்களோடே சகல வித கைங்கர்யங்கள் ஆகிய அனுபவத்தில் மூட்டி
ஆனந்தம் ஆகிற பெருக்காற்றோடு ஆழங்கால் பட்டு
நம என்பது
போற்றி என்பது
ஜிதந்தே என்பது
பல்லாண்டு என்பது ஆகா நிற்கும் –
ஆத்ம விவாஹம் சம்பூர்ணம் –
————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .