ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் மங்கள ஸ்லோகங்கள்
ஸ்ரீ மதாலி ஸ்ரீ நகரீ நாதாய கலிவைரிணே
சதுஷ்கவி ப்ரதானாய பரகாலாய மங்களம்
பத்மா நியுக்த குமதவல்யா ப்ரிய சிகர்ஷயா
ஆராதித விஷ்ணு பக்தாய பரகாலாய மங்களம்
கருணாகர காஞ்சீச ஸூ கந்த புரா நாதத
நிவ்ருத்த ராஜபாதாய பரகாலாய மங்களம்
சர்வஸ்வே விநியுக்தே அபி ராஜோஸ்ர்த் தைஸ் சோரிதைரபி
பூஜி தாஸ்யுத பக்தாய பரகாலாய மங்களம்
ரங்கேச ஸும்ய ஜாமாத்ரு சகலார்த்தாப ஹாரிணே
தத் பக்த பூஜ நார்த்தம் து பரகாலாய மங்களம்
பக்தாராதன ஸூ ப்ரீதாத் ரங்க தாம்ந க்ருபாகராத்
ப்ராப்த அஷ்டாக்ஷர மந்த்ராய பரகாலாய மங்களம்
ஸுவர்ண பாஹ்ய பிம்பேண ரங்கினோ கோபுராதிகம்
ஷட் கைங்கர்யம் க்ருதவதே பரகாலாய மங்களம்
ரங்காதி திவ்ய தேசான் ஷாட் ப்ரபந்தைர் மநோரமை
பக்த்யா ஸ்து தவதே பூயாத் பரகாலாய மங்களம் –
————————–
வாடி முன் வீழ் பொருட்க்கு மால் அருளால் மந்திரத்தின்
பீடு பொருள் கண்டு கலியன் தொண்டீர் நாடும் எந்தை
சீர் குடந்தை என் அமுதம் தாயில் ஏற்றம் செய் சொல்லைச்
சேர உயிர் வாலிய தாம் -1-
வாலிமை -வெளுப்பு-சத்வ குணத்தால் – பெருமை
தாயில் ஏற்றம் -குலம் தரும் இத்யாதிக்கு உப லக்ஷணம்
அமுதம் தாயில் ஏற்றம் செய் சொல் என்பது திரு மந்த்ரத்துக்கும் மங்கையர் கோன் சொல்லுக்குமாகவுமாம் –
———————————-
வால் இமயம் வானோர் வணங்கவும் பத்தர் தம்
பால் அகலத் துன்பம் இன்பம் மிகவும் மால் சேர்
பிரீதி அடை நெஞ்சே என்னும் கலியன் நம் பால்
அருவினை அகற்றும் முற்றும் —
வால் -வெண்மை –
——————————————
முற்ற மெய்யின் பொய் நாசமான பாசத்தின் புன்மை
உற்ற மால் ஏற்றத்தோடு உரைத்து மூப்பு -முற்று முன்
மந்த்ரம் ஈந்தோன் சேர் வதரி வணங்கு என்னு நீலன்
சிந்தையான் ஆனான் என்னும் -3-
மந்த்ரம் ஈந்தோன் -நர நாராயணனாய் சிங்காமை விரித்தவன் –
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே -4-9-2-நீலன் சிந்தையுள் எப்பொழுதும் உள்ள ஸ்ரீ வராஹாவதாரம் -ஏனம் என்றவாறு –
———————————
ஏனமானான் உய்ய நர நாராயணனாய் எட்டு எழுத்தின்
ஞானம் ஈந்து கங்கை வதரி யுள்ளானவனை
நெஞ்சை வணங்க பரகாலன் தான் பணிக்கும்
செஞ்சொல் நாம் உய்யும் கலை–4-
ஞானப் பிரான் உலகை இடந்து – நர நாராயணனாய் சிங்காமை விரித்தவனும் ஞானம் அளித்து -தர்மி ஐக்கியம்
விரோதி நிரசனத்வம் -ஆஸ்ரித ரக்ஷணத்வம் -கங்கை கங்கை வாசகம் என்று கங்கையின் பெருமை பாட்டுக்கள் தோறும் உள்ள பதிகம்
————————————————-
கலைப் பெருமான் அன்பர் பண்டம் கொண்டு உகப்பான்
அலைப்பான் நண்ணாரை அரன் தன் -தலை இடர்
நீக்குவான் சேர் சாளக்கிராமம் அடை என்று உரை செய்
வாக்கு இரு வினைக்கு வாள்–5-
கலைப்பெருமான் ஒலி மிக்க பாடலை யுண்டு
இருவினை -மாளாத பெரிய -புண்ய பாபங்கள் என்றுமாம் –
———————————————
வாணுதலார் பேணி இரந்தார்க்கு ஈயாமல் பிறர்க்குக்
கோணை செய் தீ நெறியால் சேர் பயனை –
நாணி நடுங்கி நைமிசாரண்யத்து எந்தையை மா முன்
அடைந்தான் சரண் நீலன் அங்கு –6-
மா முன் -பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு
கோணை –தீங்கு–
—————————————————
அங்கம் இரணியனை ஆளரியாக் கீண்டான் சேர்
சிங்க வேள் குன்றம் செலவரிதென் -பொங்கும்
பிரிவால் பரகாலன் பா பயிலும் பத்தர்க்கு
உரிய நறவுடைக் கொங்கு -7-
வேள் –ஆசை -அபிநிவேசத்துடன் பொருந்தி உள்ள குன்றம்
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா-எளிதில் யாரும் அங்கு சென்று எம்பெருமானுக்கு
தீங்கு இளைக்க முடியாது என்று பொங்கும் பிரிவால் அருளிச் செய்த பதிகம்
கொங்குடை நறவு -வாசனையுடைய தேன்–
——————————————————
கொங்கை பூ மகள் வேங்கடத்து எட்டு எழுத்து உரைப்பார்
பொங்க மாற்றார் மங்க கரந்து எங்கும் உளன் -தங்கியுளன்
தன்நெஞ்சை அ ங்கடைய சொல்லும் கலியன் நம்
தஞ்சமாம் நல் தந்தை தாய் -8-
காரார் வரைக் கொங்கை –தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும் என்னும் இவையே முலையா -என்பதற்கு ஏற்ப
திரு வேங்கடம் பூ -நில மகள் கொங்கையாகக் கொள்ளப்பட்டது –
மலராள் தனத்துள்ளான் போலே வேங்கடத்து தங்கி உளன் –
——————————————————–
தாய் தந்தை வேறுளர் என்றும் இன்பம் துன்பம் என்றும்
ஈயாது இரங்கா முன் தண்மை கூறி-ஆய நிலை
தேர்ந்து ஆட்செய மா முன் வேங்கடவன் தாளடையும்
சீர்க் கலியன் நந்தமக்குக் கண் -9-
முன் தண்மை –முன்னிருந்த புல்லிய தண்மை
முன் தன்மை-என்றாலும் ஒக்கும் -முன்னிருந்த ஸ்வ பாவம் என்றவாறு
ஆய நிலை தேர்ந்து –தனக்குற்ற நிலையை ஆராய்ந்து -ஆய பதார்த்த கைங்கர்ய பிரார்த்தனை –
அப்பதத்தை ஆராய்ந்து நேர்ந்து என்றவாறு
கைங்கர்ய ஸ்ரீ யுடைய கலியன்
————————————————-
கண்ணுலகுக்குக் கண்ணனாய் அடியார் கைப்பொருள்
நண்ணி நண்ணார் நலியும் வேங்கடத்து -அண்ணல் -அன்பு
தான் மிகத் தான் தனது நீங்க வேண்டும் நீலன் உள்ளம்
தான் புகுந்தான் அருள் செய்வான் -10-
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பன் மண்ணோர் விண்ணோர்க்கு என்றும் கண்ணாவான் –
கண் உலகுக்கு -சஷூர் தேவானாம் உதமர்த்யாநாம் -சுருதி
அன்னவனே கண்ணனாய் -ஆஸ்ரிதர் ஸ்பர்ச வெண்ணெய் உகந்து அடைந்தான் -கைப்பொருள் நண்ணி
வேங்கடத்து அண்ணல் –திருவேங்கட மா மலை மேய பெருமான் –
தான் தனது நீங்க வேண்டும் நீலன் -யானே என் தனதே என்ற நிலை மாறி யானே நீ என்னுடைமையும் நீயே -என்ற நிலை எய்த
அருள் செய்வான் -வான் விகுதி பெற்ற வினை எச்சம் -செய்வதற்காக
எந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் -என் நெஞ்சினுள்ளானே –என் மனம் குடி கொண்டு இருந்தாய் –
———————————————–
வானவர் தம் சிந்தை போல் வேங்கடவன் தனக்கு
ஆன தொண்டு செய்ய சாராமல் மற்ற -ஈன மதம்
தான் இசைந்த நெஞ்சமதைக் கொண்டாடும் ஆலி நாடன்
தான் இசைந்த பா நந்தம் காசு -11-
பாஹ்ய மதங்கள் -ஈன மதம் -இவற்றைச் சாராமல் நித்ய ஸூரிகள் போலே
கைங்கர்யம் செய்பவர் விண்ணுளாரிலும் சீரியர்களே
———————————————
காசினியின் நன்மை உன்னும் மா போல் தொண்டரை
நேசிக்கும் வானோர் வாக்குக்கு எட்டான்–ஈசன்
இனியன் இன்னார் தூதன் என எவ்வுளூரில் நின்றான்
எனும் நீலன் நாமம் நவில் -12-
பாண்டவர் தூதன் -ஆஸ்ரித பக்ஷபாதி – பரதந்த்ரன் –குணத்தைப் பிரகாசிப்பிக்கும் நாமம் பெற்ற பின்பே
திரு எவ்வுளூரிலே தான் தரித்து நின்றான் –
அவன் திருநாமம் பேசும் நீலன் நாமங்களை நாம் நவில்வோம்
நீலன் நாமம் –குறையால் பிரான் -ஆலி நாடன் -மங்கை வேந்தன் -மங்கையர் கோன்-
கலியன் -பரகாலன் -கலைப்பெருமாள் -வாட் கலியன் -வேல் கலியன் -கலி கன்றி-நாலு கவிப் பெருமாள் –
அருள் மாரி-திரு மங்கை மன்னன் -இரும் தமிழ் நூல் புலவன் -முதலிய திரு நாமங்களுக்கும் உப லக்ஷணம் –
—————————————————————————
வில் நுதல் அண்டர் கரிக்கு சார்வு பற்றாய் நீக்கியவர்
அல்லல் கிடந்தது இருந்து நின்று புள்ளூர் -செல்வனாம்
ஓர் அஞ்சுவை அமுதைக் கண்டான் கலிகன்றி
சீர் அல்லிக் கேணியுள் அன்று–13-
சார்வு -ரக்ஷகத்வம் /பற்று -சரண்யத்வம்/ஓர் -அத்விதீயம் -ஓர்தல் -என்றுமாம் -/
புள்ளூர் செல்வன் -கஜேந்திர வரத்தான் நித்ய சேவை /
கோயில் திருமலை பெருமாள் கோயில் -ஒரே திவ்யதேச சேவையால் வந்த சீர்மை –
எம்பெருமானாராக அவதரித்த சீர்மையும் உண்டே –
கண்ணனும் ராமனும் குடும்ப ஸஹித சேவையால் வந்த சீர்மையும் உண்டே
அஞ்சுவை அமுதம் -மன்னாதன் கிடந்து-தெள்ளிய சிங்கர் இருந்தும் -பார்த்த சாரதி நின்றும் –
புள்ளூர் செல்வன் வரதன் -மனத்துக்கு இணையான நின்றும் –
கலிகன்றி கண்ட அஞ்சுவை அமுதம் அன்றோ இவர்கள் –
வில் நுதல் -திரௌபதி /அண்டர் தேவர் இடையர் -இருவர் இடர் தீர்த்தமை பாசுரங்களில் உண்டே –
——————————————————
அன்றி தொண்டர் துன்பம் தவிர்த்து ஆய் பூ மங்கையொடு
நின்ற நீர் வண்ணன் மலை நீர் அடைமின் -வன் சேறாம்
வேறு மதத்துள் வீழாது என்னும் நீலன் வினையைப்
பாறு பாறாக்கும் பான்மை பார் -14-
அன்றி -சீறி
பாஹ்ய குத்ருஷ்டிகள் -சேறு
பாறு பாராக்குதல் -பொடியாக்கி –பண்டை வல்வினை பற்றி அருளினான் போலே –
——————————————
பாரமாய தூறு பாற்றிப் பத்தர்க்கு எளியனாம்
பார மல்லை ஞானத்து ஒளி யுருவை ஆறு பேறாக்
கொள்ள கள்ள நூல் தள்ளச் சொல் நீலன் சொல் வல்லார்
அள்ளல் அருவினை நண்ணார் -15-
ஞானத்து ஒளி யுருவன் -ஏனத்துருவாய் நிலமங்கை எழில் கொண்டவன் அன்றோ
அள்ளல் -கள்ள நூலே அள்ளல் -/ அள்ளல் நரகம் என்றுமாம் -விடியா வெந்நரகம் சம்சாரம்
ஆறு பேறு-உபாய உபேயம் தவ தத்வம் நது குணவ்-ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம்
பார மல்லை -புகழையுடைய மல்லை -தேசாந்திர தேகாந்தர காலாந்தரம் இல்லாமல்
இங்கேயே இப்பொழுதே இத்தேகத்துடனே -சேவை அன்றோ
தூறு பற்றி -குதிரையோட்டி-போலே பெயர்ச் சொல்லாகவுமாம் –
பக்தர் வினைகளை போக்குவதே ஸ்வ பாவமாகக் கொண்டவன் அன்றோ-
—————————————————————-
நண்ணாமல் மால் அடியார் அல்லாரை சீர் மல்லையான்
தொண்டர் தம் தொண்டரையே ஆறு பேறாய் -திண்ணிதா
எண்ணு நீலன் தொண்டர் எல்லைத் தானாய்ச் சொல் இன் தமிழை
எண்ண மதி திவளும் -16-
தொண்டரை அடையாவிடிலும் தொண்டர் அல்லாரோடு கூடாமையே முக்கியம்
அடியாரையே ஆறு பேறாகக் கொள்வதே நம பத தாத்பர்ய அர்த்தம்
வாய்த்த திரு மந்திரத்தின் மத்திமம் பாதத்தின் எல்லையான பொருளை நாம் எண்ண
நம்முடைய சேஷத்வ பாரதந்தர்யங்களாம் ஸ்வரூபம் -நன்கு பிரகாசிக்கும் –
மதி திவளும் -புத்தி சுடர் விட்டுப் பிரகாசிக்கும்
சீர் -திரு மல்லைக்கும் -மல்லையானிலும் மல்லை தொண்டரிலும் -மல்லையான் தொண்டர் தம் தொண்டரிலும் அந்வயிக்கும் –
———————————————————————
திவளும் இடவெந்தையின் சீலத்தால் எழிலால்
துவள அவன் தன் நினைவே -நவை நீங்க
பாங்கு எனத் தாய்ச் சொல்லாய்ப் பரகாலன் பேசுகின்ற
தீம் தமிழில் நெஞ்சே திரி -17-
அவன் தன் நினைவே -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்று ஒரு கால் சொன்னால் போல்
ஒன்பதில் கால் சொல்லியமைக்குச் சேரும்
நாவை -துன்பம் / தீம் -இனிய /
தாய் சொல்லாய் துணிவையும் மகள் சொல்லாய் பதற்றமும் பதிகத்தில் உண்டே –
திரி -ஆழ்வாருடைய ஈரச் சொற்களில் அவகாஹித்து -சுழன்று சுழன்று கால ஷேபம்-
———————————————————————–
திரித்து எழில் பூண் மேன்மை படை அட்டபுயன்
எரித்த சுடர் உட்கண்ணால் கண்டு -பரிவால்
உரு வெளிப்பாடா உரையாடல் நிகழ்ந்தது என்று
உரை செய் நீலன் சொல்லே சொல் -18-
அட்டபுயன் -அட்டபுய அகரத்தில் உள்ளான் ஒருவன் -அட்ட புயகரத்தான்
அவனது அழகு ஆபரணம் பரத்வம் ஆயுதங்கள் -திரிகள் -எரித்த சுடர்
இந்த அருளிச் செயலே சொல் மற்றவை சொல் அல்ல – இவற்றையே சொல் என்றுமாம்
பரிவால் எரித்த சுடர்
பரிவால் வெளிப்பாடா உரையாடல் நிகழ்ந்தது என்றுமாம் –
பரிவு -ஆர்வம் -அன்பு -ஆர்வமே நெய்யாக போலே –
——————————————–
சொல் சொல்லும் காரணன் முத்தர் பத்தர்க்கு ஈடாக
நல்ல கொடுத்து அல்ல கெடுப்பான் உறையும் பல்லவர் கோன்
வந்திக்கும் கச்சி விண்ணகர் சொல் அருள் மாரி
இந்த பாருய் வான் பொழி மஞ்சாம் -19-
கச்சி விண்ணகர் -பரமேஸ்வர விண்ணகரம்
பாருய் வான் -வான் விகுதி பெற்ற வினை எச்சம் -உய்வதற்காக என்றவாறு
அருள் மாரி என்பதால் பொழி மஞ்சாம்-ஆன்மா உயர்கதி பெற்று விளங்க அன்றோ இவருடைய அருளிச் செயல்கள்-
————————————–
மஞ்சு சேர் தீயோம்பி பலன் வேளாது நற்குணமே
விஞ்சு செஞ்சொல் வேதியர் வாழ் கோவலூருள்-விஞ்சு வலி
நீர்மை வினை நீக்கு மாலிக் கண்டு கொண்டேன் என்று நீலன்
நேர்ந்த சொல் நீக்கும் நெஞ்சு இருள் -20-
நெஞ்சு இருள் -அஞ்ஞான அந்தகாரம்
கோவலூர் –திவ்ய தேச திரு நாமமே நீர்மையை சொல்லும்பொழுது
உள்ளே உறையும் பெருமானின் நீர்மை வாய்க்கு எட்டுமோ –
—————————————————————-
இரு நிலம் இடந்து இரும் துன்பம் தொண்டர் அண்டர்க்கு
உருத்து ஆல்மேல் சேர் அடியார் மெய்யன் -பொருந்தும்
அயிந்தை சீர் உட்பொருள் உடன் சொல் கலியன்
செயரில் பா நாம் உண்னும் ஊண்–21-
உருத்து -கோபித்து -அதனால் அழித்து-/செயிர் -குற்றம் /செயரில் -குற்றம் அற்ற /
கமல நன் மலர்த் தேறல் அருந்தி இன்னிசை முயன்று எழும் அளிகுலம் பொதுளி அம் பொழில் சூடி
செருந்தி நாண் மலர் சென்று அணைந்து உழி தரு —
தேனேமலரும் திருப்பாதத்தை தேறல் அருந்தி அவன் புகழ் பாடி பின்னர்
பரமபத நாதனின் -பத்தே பரமே மத்வ உத்ஸா -பாத மலர் நறவு அருந்தச் செல்வர்
அளிகுலம் -வண்டு–ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றவாறு–
———————————————
ஊன் ஒறுத்து உண்ணாது நீர் நெருப்பு ஊடு நின்று
வானடைய நீர் வருந்த வேண்டா நம் -கோனமரும்
சித்திர கூடம் சேர் என்னும் கலியன் தாள் அடையும்
பத்தர்க்கு இங்கு இல்லை வாடல் –22-
மூவாயிரம் மறையாளர் நாளும் வணங்கும் –தில்லை மூவாயிரம் நாங்கை நாலாயிரம் –
———————————————-
வாட வேழம் மல்லர் அரவம் மருதம் மால் விடை
பாடு அழித்துப் பிள்ளை பிள்ளைக்கு அளித்தது -ஈடா நாம்
எண்ணிய செய்யும் சித்திர கூடத்தான் என் நீலன்
ஒண் கழல்கள் உன்னும் ஒருங்கு -23-
பிள்ளை-அவன் பிள்ளை ப்ரஹ்லாதன் /பின்னை -நப்பின்னைப்பிராட்டி
மருதம் -அசுராவேச நள கூபரன் -மணிக்ரீவன் –காமம் க்ரோதாதி இரட்டைகள்
உன்னும் -உள்ளுதல் -நினைத்தால் -/ ஒருங்கு முழுவதும் /
மால் விடை ஏறு ஏழும்-காமம் க்ரோதம் -லோபம் -மோஹம்–மதம் –மாத்சர்யம் -அஸூயை /
வருவான் -என்று ஒன்பதில் கால் பதிகத்தில் அருளிச் செய்தது -வீதியில் எழுந்து அருளும் போது
மங்களா சாசனம் செய்தமை தோற்றும் –
——————————————————————
ஒருவன் அயன் வாலி வாணன் இந்திரன் பொன்னன்
அரன் பெருக்கெடுத்து மலர் மங்கைக்கு -அருளுமா
போல் அருள் சீராம விண்ணகர் உள்ளான் என்னும்
வேல் கலியன் ஏத்தும் உவந்து -24-
ஒருவன் -அத்விதீயன் /
ப்ரஹ்மாவின் செருக்கை அளிக்க உரோமசர் முனிவர் விருத்தாந்தம் -வாணன் –
கற்பகாக்காவை சத்யா பாமை பிராட்டிக்கு -இவ்வாறு அஹங்காரங்கள் அழித்து
குரு மா மணிப் பூணாய்ப் பூணுதற்கு வேடிக்கை கொண்ண்டு திவ்யதேசங்களில் உகந்து எழுந்து அருளி –
வேல் கலியன் -ஞான சம்பந்தர் செருக்கு அழித்தமை –
————————————————————-
வந்து வுவந்து சிந்தை புகும் ஆலியம்மானைத் தன்னின்
சிந்தை நீங்க ஒட்டாது தொல்லடிமை -முந்துறக்
கொள்ள அறப் பதறிக் கோரும் கலியனை
உள்ளி ஏத்தும் மலர்த்தூய்–25-
தன்னின் சிந்தை -சிந்தைக்கு இனியான் அன்றோ
வந்து வந்து -சமயம் பார்த்து என்றுமாம்
உள்ளி ஏத்தும் மலர்த்தூய் -உள்ளுதல் நினைத்தல் மானஸ வியாபாரம் -ஏத்துதல் -வாக்கின் செயல் –
மலர்தூவுதல் காயிக வியாபாரம்-முக்கரணங்களும் ஒருப்பட நின்று கைங்கர்யம் –
பதற்றம் -தலைவி கார்யம் -பேற்றுக்கு த்வரிக்கையும் வேண்டுமே –
—————————————
தூவி சேர் தும்பி ஆலியான் பால் தூது விட்டு
நோவை உரைத்து அது ஆறாத் தானே யன் நோவை
உரை செய் பரகாலன் ஒப்பில் அருளால் நம்
கரையில் வினை கொள் கள்வன் -26-
கங்குகரை இல்லாப் பாவங்களை நம்முடைய இசைவு பாராது கொள்பவர் ஆழ்வார் –
தூவி -இறகுகள் –ஞானம் அனுஷ்டானங்கள் –
கள்வன் கொல்-பிராட்டி திண்ணம் அல்லவே இவர்கள் புகுவது –
திண்ணம் திருக்கோளூர் புகும் பராங்குச நாயகி போலே அல்லவே
————————————————-
கள்ளக் குறளன் நெஞ்சுள் செல்லும் தோற்றத்தை
உள்ளத்துள் தேற்றமாக்க ஓர்ந்ததனை தெள்ளி தாத்தான்
ஆலி யம்மானுக்கு அற்ற தன்மை யுரை ஆலி நாடன்
ஞாலத்து நந்தா விளக்கு -27-
கள்ளக் குறளனாய் திரு வாமநவதாரமும் திருவாலி அம்மானும் தர்மி ஐக்யத்தால் ஒருவரே
தாய் மனம் நின்று இரங்கத் தனியே பெருமாள் துணையா புனலாலி புகுந்தாள்-பல சுருதி பாசுரத்தால்
அவனுக்கே அற்றுத் தீர்ந்தமை விவஷிதம்
அர்ச்சாவதார சேவையால் இந்த லோகத்தில் ஆழ்வார் நந்தா விளக்காக நம்முடைய
அஞ்ஞான அந்தகாரங்களை அடியோடு நீக்கி அருளுகிறார் –
—————————————————–
நந்தா இன்பம் நம்ப உம்பர் களிறு காத்து
வந்த பேய் அரக்கர் மாய்த்து ஆய்ச்சியர் -தம் துகில் கொள்
பின்னை மணாளன் மணி மாடக் கோயில் அடைமின்
என்னு நீலன் காக்கும் சலம் -28-
வானோர் -குறையாத இன்பம் எமக்கு அருளாய் -என்று வந்து இறைஞ்சுவர்
சலம் -கபடமான எண்ணம்
நம்பும் -ஆசைப்படும்
வணங்கு என் மனனே என்றாலும் பரோபதேசமாக கொள்வது நன்று –
—————————————
சலத்தால் நிலம் கொண்டான் எண்ணி நைவார் காப்பு
உலகுய்க்கும் நான்கை வைகுந்தன் -நலத்தால்
அசித்தும் அடையும் ஆனந்தம் என்னும் நீலன்
கசிந்து அருள் செய் நம் திரு -29-
சலத்தால்-மூவடி நீரொடும் கொண்டதால் ஜலம் என்றும்-கபடம் என்றுமாம்
காப்பு -நைந்து உள் கரைந்து உருகும் அடியார்க்கு அரணாய் நின்று ரக்ஷிக்குமவன்
நம் திரு -ஆழ்வாரே நம் செல்வம் என்றவாறு –
——————————————————
திருமால் அடியார் அடைய தடை தீர்த்து
வரு துயர் வீழ்த்துத் தாள் அடைய -அரிமேய
விண்ணகர் மேவி யுகந்துள்ளான் என்னும் கலியன்
பண்ணில் நெஞ்சே போக்கு போது–30-
பண்–பாட்டு -ராகம் -இசையோடு கூடிய ஒலி மிக்க பாடல்-
——————————————–
போதமர் மா வானவர் வேட்ப வழங்கித் தான்
கோது அற்று எங்கும் கரந்து பாருண்டு ஆல் மீது துயில்
நான்கை தேர்வானார் தொகையான் நல்கும் அருள் என்னு நீலன்
பால் மனமே செய் சேவகம் -31-
போதமர் மா -அலர்மேல் மங்கை
கரந்து -நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் -எல்லாப் பொருளும் தன்னுள் நின்றாலும்
கோது அற்று உறைவது -வியாப்ய கத தோஷம் தட்டாமல்
————————————-
கம்பத்தின் தோன்றல் அயன் அரனைத் தோற்றுவித்து
உம்பர் இடர் நீக்க அவர் எதிர் அம்பு கோக்க
வென்று அளிக்கும் வண் புருடோத்தமனைக் கூறு நீலன்
பன்னு தமிழ் நம் பேரணி -32-
பேரணி -ஆழ்வார் ஸ்ரீ ஸூக் திகளே நமக்கு சிறந்த ஆபரணம் –
————————————————
பேரணி சீர் பால் கார் அமுதம் தேன் பான்மையான்
பேர் அறிவன் இன்பன் மாறில் மாலை -சீர் மறையோர்
செம்பொன் செய் கோயிலுள் மாவோடு கண்டுய்ந்த நீலன்
நம் பிறவியாம் வினைக்கு மாற்று -33-
நாங்கை நன்னடுவுள் உள்ள திவ்ய தேசம்
பேர் அணி சீர் -அணி அணியாகத் திரண்ட கல்யாண குணங்கள்
அவை தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதமுமாய் தித்திக்கும் பான்மை -தன்மை அன்றோ
பேர் அறிவன்-சர்வஞ்ஞன்
மாறில் மால் -அவிகாராய ஸூத்தாய-சதைக ரூப ரூபாய
மாறில் ஒப்பில்லாத அத்விதீயன் என்றுமாம்
கண்டு உய்ந்தமை ஒவ் ஒரு பாட்டிலும் இறுதியில் உண்டே –
————————————————
மாற்றில் இடர் மாற்றி அடியர்க்கு மாகம் மா நிலம்
போற்ற அளித்துத் தடையாவும் பற்றி ஆட்கொள்
வான் தெற்றி யம்பலத்தான் என்றுரை மங்கையர் கோன்
தான் போக்கும் நம் பவத்தூறு -34-
மாகம் -பரமாகாசம் / மா நிலம் -வையம் //இட ஆகுபெயர் -அங்குள்ளாரை சொன்னபடி -/
————————————————
தூம்புகை மா துயர் தீர்த்துத் தொண்டர் காமுற்ற
சோம்பாது ஈந்து யாரையும் யாவையும் ஓம்புமவன்
நங்கை மணிக்கூடத்தான் என்னும் நீலன்
யாம் இன்பம் சேர தா வளம் -35-
தூம்புகை மா துயர் -தூம்பு துளை-தூம்பு காய் மா -விலங்கு -ஆனை-
ஸ்ரீ கஜேந்த்ரனுடைய பெரிய துயர் -யானையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்-
—————————————————
தா வளந்து தான் உழலும் ஊன் குரம்பை தான் ஒழிய
காவல் தானும் பிறரும் அன்று என்று காவளம்
பாடி கண்ணன் பாதம் அடையும் பரகாலன் பாதம்
நாடி நீர் நீங்கும் இடுக்கண் –36-
தாவளந்து –தாவி அளந்து -தட்டித்திரிந்து -பல் யோனிகள் தோறும் புகுந்து ஆக்கையில் ஆப்புண்டு தடுமாறும் உயிர்
பெருமாள் திருவடி அடையும் ஆழ்வார் திருவடி அடைவதே நமக்கு கர்த்தவ்யம் –
———————————————
கண் நா நாட்டார் புகழ் அன்பார் வேதியர் வாழும்
கண் அழிவில் வண் திரு வெள்ளக் குளத்து அண்ணனைப்
பேற்றுக்கு ஆக்கை நீக்க மா முன் சரண் அடையும்
நால் கவியார் சேர்க்க வளம் –37-
கண்ணார் புகழ் -நாவார் புகழ் -நாட்டார் புகழ் -என்று அந்வயிக்கலாம்
கண் –எண் சாண் உடம்புக்கும் தலை பிரதானம் -அதற்கு கண் பிரதானம் -கண் ஞானத்தையும் குறிக்கும்
கண் இடம் -தாம் இருக்கும் இடம் புகழ் பாடும்படி யுள்ளதாய் இருத்தல் –
கண் அழிவில் -திண்ணமாக
வண்மை-திவ்ய தேசத்துக்கும் பெருமாளுக்கும் அன்வயம் –
நால் கவியார் -சதுஷ்கவி ப்ரதானாய பரகாலாய மங்களம் –
ஆசுகவி -சித்திர கவி-மதுர கவி -விஸ்தர கவி –
—————————————————-
கவளக் களிறு அரக்கர் பேய் தம் உயிரைக்
கவர்ந்தான் மறை நால் தொடர் பவன் பார்த்தன்
பள்ளி காயா வண்ணனைக் கூடாமை கூறு நீலன்
நள்ள நலம் நல்கும் நுமக்கு –38-
மறை நால் -நான்மறை என்று மாற்றிப் பொருள் –
நான் மறைகள் தேடியோடும் செல்வன் -நான்மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் –
வேத பாராயண கோஷ்ட்டி பின் தொடருவதையும் -வேதங்கள் அவனை சொல்லி முடிக்காமையும் குறிக்கும்
காயா வண்ணன் -காமரு சீர் குவளை மேகமென்ன மேனி -வேலையன்ன கோல மேனி வண்ணன்
பார்த்தன் பள்ளிப் பெருமாளைக் கூடாமையால் வந்த துன்பத்தை கூறும் ஆழ்வாரை –
நள்ளி -அணுகி -வாழ்பவர் நல் வாழ்வைப் பெறுவர் என்றபடி–
—————————————–
நும் அடியோமுக்கு நும்மைக் காட்டாது அடியேனை
நும் அடியாரோடு ஒப்ப எண்ணுதிர் என நம் கலியன்
இந்தளூரானுக்கு இயம்பினான் தன இன்னாமையைத்
தன்னிலை மாறாதவனாய் -39-
தன்னிலை மாறாதவனாய் –தானான தன்மையில் ஊடுகிறார் –
பக்தானாம் தவம் ப்ரகாஸஸே-என்றதின் எதிர்த்தட்டாய் இருந்தமையால் –
தம்முடைய மார்த்தவத்தையும் வெளியிட்டு அருளுகிறார் இந்த பதிகத்தில்
எம்பெருமானைப் போல் அல்லாமல் நமக்காக எப்பொழுதும் சேவை என்பதால் நம் கலியன்
தூது விடுவதும் அணுகரிப்பதும் ஊடுவதும் அர்ச்சாவதார பெருமாள் இடம் தானே நம் கலியனுக்கு –
——————————————–
ஆய்ச்சியர் அன்பர் கைப்பொருளை உகக்கும் தான் சேரா
சேர்க்கும் அழிய மாருதி தொண்டர் இடர் தீர்க்கும்
திரு வெள்ளியங்குடியான் வாழ்த்தும் கலியன்
திரு மொழி ஏத்தும் அறிந்து -40-
அகடிதகடநா சமர்த்தன் -ஆலிலை -நரஸிம்ஹம்-போன்று
பரத்வத்தை அழிய மாறி ஸ்தாவர திர்யக் மனுஷ்ய யோனிகளில் திருவவதாரம்
—————————————–
அறிவது அரியான் அடியார் தேவிமார் உய்யத்தான்
கிறி செய்வான் தேர்வார்க்கு அமுதில் அறிவினியன்
புள்ளம் பூதங்குடியான் என்னும் பரகாலன்
உள்ளூர் உம்பர் தாம் -41-
கோலா வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்டதும்
அழகைக் காட்டி தன்பால் ஆழ்வாராதிகளின் ஆதரம் பெறுக வைப்பதும் போன்ற கிறிகள்
அறிவினியன்-அறிவதற்கே இனியவன் -அறிந்த பின்பு கண்டு அனுபவிக்க இனியவன் –
அவனைப் பற்றிய அறிவே இனிக்குமே
உம்பர் -நித்ய ஸூரி கள் என்றவாறு-
———————————————-
தாம் அறியாத் தன்னுள் புகுமவன் தன் பெருமை
தான் அரியான் தொண்டர்க்கு அறியுமாறு தான் அருளும்
கூடலூரான் ஊர் எழிலுடன் சொல் கலியனைக்
கூடி வானில் விளங்கும் வென்று -42
யாதோ வாசோ நிவர்த்தந்தே என்ற வேதம் போல் அன்றிக்கே-எம்பெருமானுடைய கல்யாண குணங்களை
அருளிச் செய்வதில் விளாக்குலை கொள்வதால்
தன் பெருமை தான் அறியா விடிலும் தன் அடியார் அறியும்படி அருளுபவன் அன்றோ –
வானில் சென்று விளங்கும் -என்றும் வானை விட வாழ்ச்சி இங்கு என்றும் கொள்ளலாம் –
————————————————-
வென்று விளங்கு வினை வீயச் செய் மாலடிக்கே
என்றும் அன்பால் ஏவல் இசைந்து ஆட்செய்ய ஓன்று நீலன்
வெள்ளறையானை வேண்டும் பாடலை உள்ளத்துள்
உள்ள உகந்து நெஞ்சே உந்து -43-
ஓன்று நீலன் -ஒருமைப்பாட்டை -இசைந்த நீலன் ஏவ மற்றமரர் ஆட் செய்வார்-என்கிறபடியே
பெருமான் சோதி வாய் திறந்து பணித்தபடியே ஆட் செய்தல் உற்றதாகும் –
———————————————
உந்தி அயன் ஓங்குவித்து வையமாக்கிக் காத்து அழித்து
எங்கும் கரந்து உறையும் மாயமுடை எந்தை தன்மை
தன் நன்மைக்கு என்று எண்ணித் தென்னரங்கம் பாடு நீலன்
சொல் மறவாமல் வாய் வெருவு -44-
மாயம் -ஆச்சர்யம் -மித்யை பொய் அன்று –
எந்தை தன்மை -எம்பெருமானுக்கு நமக்கும் உள்ள ஒழிக்க ஒழியாத சம்பந்தம் அறிவதற்கு மேல் ஒரு ஸூஹ்ருதம் உண்டோ
பெருமாள் அடியார்க்கு அருள் செய்தமை தனது நன்மைக்கு என்று யார் ஒருவன் எண்ணுகிறானோ
அவனே உண்மையான உத்தம ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் உடையவன் –
——————————————–
வெருவித் தான் தன்னது தன்பால் அரங்கன் அன்பை
இருத்த ஆட் செய்யா கூடாத்தன்னின் வருத்தம் போம்
ஆறு அறியாது ஆற்றாமைத் தாய்க் கூற்றாய் நீலனுரை
கூறல் வாய்க்குற்ற வகை -45-
அரங்கன் அன்பைத் தன்பால் இருத்த ஆறு அறியாமலும்
தன்னின் ஆட் செய்யா வருத்தம் போம் ஆறு அறியாமலும்
தன்னின் கூடா வருத்தம் போம் ஆறு அறியாமலும் -என்று அன்வயம் –
—————————————————-
கை கழிந்த அன்பர் முன் கை கட்டித் தான் நின்றும்
கையர் நலிந்தும் வையம் நலம் எண் ஐயன்
அரங்கனைக் கைக்கனியாய்க் காண் கலியன் பாதம்
பரவ வினைப் பாறிடுமே பண்டு -46-
கை கழிந்த அன்பார் -மிக்க பெரும் சீர் தொண்டர் என்றபடி -பரத்வம் வந்தேறி அன்றோ அரங்கனுக்கு
கையர் -கயவர்
வையம் நலம் எண் -உறங்குவான் போலே யோகு செய்யும் -வ்யூஹ ஸுஹார்த்தம் –
——————————————
பண்டைய காரணன் அண்டர் அல்லல் விண்டு ஒழித்து
தொண்டர்க்காய்த் தான் தரணியில் திண்ணம் அண்டர் கோன்
வந்து இருக்கும் கோயில் எண்ணித் தான் உய்க்கும் நீலன் தாள்
வந்தியாதார் தாம் ஏழையர் -47-
காரணன் -காரணம் ஸ்து த்யேய-
தரணி -உலகம் -திண்ணம் வந்திருக்கும் -சம்சாரம் வேரோடு கிழங்கு அறுத்தால் அன்றி பேரேன்-என்று இருக்கும் சீர் –
—————————–
ஏழைமை சூழ் பிறப்பு கூற்றத்து இழிவு ஒழிய
வாழ்வாம் ஆட் செய்வு அவன் சிந்தையதாய் -ஆழியான்
ஆராமம் சூழ் அரங்கன் ஆடகத்தான் ஆறாய்ச் சேர்
சீரார் நீலன் தொழும் என் கை -48-
சரணாகதிக்கு அபேக்ஷித்தமான ஐந்து அங்கங்களையும் அருளிச் செய்து சரண் அடைகிறார் அரங்கன் திருவடிகளில் –
அடக்கம் -பொன் -உலகம் அளந்த பொன்னடியாகையாலே-
ஆழியான் -கம்பீர ஸ்வ பாவன்-ஆழி நீர் வண்ணன் -கருமை நிறமுடையவன் –
——————————————-
கை கூப்புவார் கூப்பாதார் இறை தாமாய் நினைவார்
ஐயன் அசோதை நப்பின்னைக்கு பொய்யிலானாம்
பேரான் உள்ளம் புகுந்த வாழ்த்தி உயு நீலன்
பேரே தீர்க்கும் நந்தம் தீது -49-
—————————————
தீதறத் தொண்டர் துயர் தீர்த்து அவர்க்கு மீளுதலாம்
ஏதமில் வான் ஈந்து கரந்து எங்கும் உறை ஏதமில்லா
நந்தி புர விண்ணகரான் நண்ண நீலன் தானுரை செய்
செந்தேன் பருகு வண்டாய் –50-
ஏதமில் வான் -ஸ்ரீ வைகுண்டம் -கைவல்யத்தில் வ்யாவ்ருத்தி
நீலன் உரை செந்தேன் பருகு வண்டாய் தேனிலும் இனிதான திருமொழி –
————————————–
வண்டாம் தெய்வத்தாளில் விஞ்சு விருப்பம் மிக்க
வண்டார் குழலார் பால் தான் வெறுப்பும் கொண்டமையை
விண்ணகரானுக்குச் செஞ்சொல்லால் கலியன் செய்
விண்ணப்பம் பொற்பே பொறு –51-
பொற்பு -அழகு / பொறு -தாங்கு /
எம்பெருமான் பால் ஆதாரஅதிசயமும் பிராக்ருத பதார்த்தங்களில் வெறுப்பும் வளர
ஓவுதல் இல்லாமல் ஆழ்வார் அருளிச் செயல்களை மனனம் செய்ய நெஞ்சை இரக்கிறார் –
—————————————–
பொறுக்க ஓணாச் சுற்றம் பொருள் புலன்கள் தம்மைத்
துறந்து விண்ணாட்டுச் சீர் நீலன் பெற மா முன்
ஆர்த்தனாய் விண்ணகரான் சீர்த்தாள் சரண் அடைந்தான்
சீர்த்தாள் சேர் மற்ற துறந்து -52-
பொறுக்க ஓணா–சுற்றம் பொருள் புலன்கள் மூன்றிலும் அன்வயம்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஓணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர் அறுத்துத் தின்றிட -7-7-1-
———————————————-
துறக்க அரிய சிற்றின்பம் தேவல்லாரை
இறையா நினைதல் இகந்து -மறவாமல்
விண்ணகரான் எண்ணும் தனக்கு விண் வேண்டும் நீலன்
திண்ணமதா நம் களை கண் –53-
———————————————
கண்டால் பொருள் இன்பம் கொண்டாடி அற்ற காலை
கண்ட பேசி ஏசுவாராய்க் கை விட்டு தண்ணறையூர்
பற்றாத் தொழு நெஞ்சே என்னு பரகாலன் சொல்
கற்றார்க்கு இல்லை கலக்கம் -54-
அற்ற காலை –பொருள் இல்லாத போது –
———————————————-
கலங்கச் செய் துன்பம் தீர்த்து அண்டர் மா தொண்டர்
துலங்கச் செய் நம்பி நறையூர் கலங்கா வான்
ஒக்கும் எனும் மங்கை வேந்தன் பாதம் நமக்கு அளிக்கும்
இக்கரையாம் அம்பரம் -55-
இக்கரை ஏறி இளைத்து இருந்தேனே –பெரியாழ்வார் -5-3-7-இக்கரை எனப்படும் வானாடு-அம்பரம் -பரமபதம் –
திவ்ய தேசமே பரமபதத்தில் உத்தேச்யம் –
சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாத தன்மை தேவபிரான் அறியும் –திருவாய் -7-10-10-
————————————————
அம்பரம் தீ தானாய் அவை விழுங்கி ஆயன் அரி
அம்மீனாயத் தோன்று நம்பி சேர் நறையூர் அம்பணி செய்
செம்பியன் சீர் ஊர் எழிலுடன் செப்பும் சீர்க் கலியன்
செம் கழல் சேர்ந்து வான் ஆளும் –56-
செஞ்சுடரும் நிலனும் பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெறுக்கிப் புகப்
பொன் மிடறு அத்தனை போது அங்காந்தவன் –10-6-1-
வான் ஆளும் -ஆண்மின்கள் வானகம் -திருவாய் -10-9-6-
கலி wயனுடைய செம் கழல் சேர்வது வான் ஆள்வதற்கு ஒப்பாகும்
வான் செம் கழல் சேர்ந்து ஆளும் -உபய விபூதி -இங்கே இருந்து கிட்டும்-
——————————————————————–
ஆளுமவன் தான் தனக்காட் செய்யும் அறிவு அருளி
ஆளறக் கொள் நம்பி புகழ் பேறாய்த் தான் -ஆள் கொள்வான்
நன்னறையூர் நின்றான் அங்காட் செய்து உயும் என்றான்
மங்கையர் மன்னன் எம்மான் -57-
புகல்-ரக்ஷகன் /பேறு-பெரும் பலன் புருஷார்த்தம் /
சேஷிக்கு உகந்த அடிமை செய்வதே உய்வதற்கு ஆறும் பேறுமாகும்–
—————————————————
மானமுடை வானவர் தொண்டர்க்கு வாசியற
தான் அழிய மாறி அருள் நம்பியிடம் நான் உகந்த
மாற்ற வூரான் பான்மை நீலன் கண்டான் நறையூரில்
உற்ற திருவாம் பெடையோடு-58-
திருவேங்கடம் திருவாலி திருநாவாய் திரு மெய்யம் திருகி குடந்தை திரு நறையூரில் கண்டதாக அருளிச் செய்கிறார்
நரசிம்மம் கண்ணன் இராமன் தன்மைகளையும் கண்டார் –
உற்ற திரு -பகவான் நாராயண அபிமத அனுரூப ஸ்வரூப ரூபம் –
நமக்கு உற்ற திரு என்றுமாம் –
——————————————–
பெடையாம் பூ மங்கையோடு பத்தர் தம் பண்டம்
அடைந்து உகந்து அண்டர் தொண்டர் தம் இடையூறு
நீக்கு நிறையூர் நம்பி தாள் சரணாய் நீலன் தான்
நோக்கும் புகலாய்க் கிடந்து -59-
புகலாய்க் கிடந்து -ஒரே சொல்லாக்க கொண்டு ரக்ஷகனாகக் கொண்டு என்றபடி
சரணாய் நோக்கும் -சரணாகதி அடைகிறார் என்றவாறு
உலகம் உண்ட பெறுவான் போலே இந்த பதிகத்தில் பாசுரம் தோறும் எம்பெருமான் அடியிணை உண்டே –
பூ மங்கை -மலர்மகள் மண் மகள் இருவரையும் குறிக்கும்
பெடையாம் பூ மங்கையோடு -பூ மங்கையாம் பெடையோடு என்று மாற்றி பொருள் –
——————————————–
கிடந்த பவ்வன் நாமமுடன் நம்பி நறையூரான்
இடர் கடிவான் விண் மண் இரண்டும் கடவன் ஈசன்
மாதவன் மாயன் காரணன் சீலன் என் நீலன்
வேத சாரம் சொல் கறவை -60-
கிடந்த பவ்வன்-ஷீராப்தி நாதன்
நாமமுடன் நம்பி நறையூரான் -திருமந்த்ரார்த்தத்தை பொருளுடன் அடைவே விவரிக்கிறார்
இடர் கடிவான் -விரோதி நிரசன சீலன்
விண் மண் இரண்டும் கடவன் -உபய விபூதி நாதன் -ப்ராப்தியை யுடையவன்
ஈசன் –நியமிப்பதை ஸ்வ பாவமாக யுடையவன்
மாதவன்–திருமால் –
மாயன்–ஆச்சர்ய சேஷிடிதங்களை யுடையவன் –
காரணன்–காரணம்ஸ்து த்யேயா –
சீலன்–ஸுசீல்யன்
என் நீலன் -என்று நாராயண நாமார்த்தை அருளிச் செய்யும் கலியன்
வேத சாரம்–ஆரண சாரம்
சொல் கறவை -ஆழ்வார் பசு -ஆச்சார்யர் ஸ்தானம் –
————————————–
கறவையாய் நம்பியைத் தான் மற்ற ஊர் சீரோடு
மறவாது அழைத்துச் சிறையாம் பிறவி அற
தாய் கரும்பு வள்ளல் கதியாய்க் கலியன் காண்
மாயன் ஆனான் புள் ஏனம் -61-
தாய் நினைந்த கன்றே ஓக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து -7-3-2-கறவை எம்பெருமானே –
தாயாய் உலகு அளித்தும் -கரும்பின் சுவை போலே போக்யனாயும் அபேக்ஷிதங்கள் அருளும் வள்ளலாயும்-
அடையும் கதியாகவும் –
ஆக உபாய உபேயமாக இருக்கும் தன்மையைக் காட்டிக் கொடுத்து அருளுகிறான்
புள் ஏனம் ஆனான் -அன்னமாய் அருமறை பயந்து –
வென்று சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள்ளெயிற்று ஒள்ளெரித்தறு கண் பன்றியாய்
யன்று பார்மகள் பயலை தீர்த்தவனாய் -இவ்வாறு பல பல திருவவதாரங்கள் மூலம் உபகரித்து அருளுபவர்
இவற்றைக்காட்டக் கண்ட கலியன் தானே நமக்கு இவை எல்லாம் –
—————————————
புள் ஏனம் ஆம் நம்பி நெஞ்சுட் புகுந்தானைத்
தள்ளேன் வையத்து வான் இன்பம் விட மெய் உள்ளத்தோடு
சிந்தையால் எய்தி இன்புற்றேன் என் சீர்க் கலியன்
சிந்திப்பார்க்கு இல்லை சினம் -62-
விட மெய் -விடத்தக்க உடல் -நஞ்சாகிய உடல் என்றுமாம்
என் சீர்க் கலியன் -என்று அருளிச் செய்யும் ஆழ்வார் –
—————————————-
சினத்துச் செரு நீர் செற்றான் உட் புகுந்து
நனி நீங்கா தீது தீர் நம்பிக்கு மனம் செயல்
வாக்கற்றுக் கைம்மாறிலாமை சொல் வாட் கலியன்
வாக்கால் மலரும் உட் கண் -63-
என் கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் -என்பதால் நீங்காமை சொல்லி
கண் இணைகள் க்ளிப்பைக் களித்தேன் -அன்பனை அன்று ஆதரியேன் -என் மனம் தாழ்ந்து நில்லாது
என் மனம் சிந்தை செய்யாது -பண்பலை யான்றிப் பாடல் செய்யேன் –
எம் அண்ணல் வண்ணமே அன்றி என் வாய் யுரையாதே –
மனம் செயல் வாக்கு எம்பெருமானுக்கே அற்றுத்தீர்ந்தமையை அருளிச் செய்தார் –
என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு என்றும்
என் மனத்தே இருக்கும் புகழ் என்றும் கைம்மாறு இல்லாமையையும் அருளிச் செய்தார் –
———————————————————-
கண் காண் விபவவித்தாம் பாற் கடல் பள்ளியானை
எண்ணும் விண்ணில் பொலி சீர் சேறையான்-தொண்டரை நீங்காது
அவர்க்கு ஆளாய் இன்பம் முப்புலன் எய்திற்று உரை செய்
காதல் நீலன் நம் தந்தை -64-
காதல் நீலன் -அன்பர்பால் ஆராத காதல் யுடைமையை தானே திருச்சேறை பதிகத்தில் அருளிச் செய்தார்
நீலன் நம் காதல் தந்தை என்று கொண்டு-ஆழ்வார் நம் பால் ஆராத அன்பால்
நன்மை செய்யும் தஞ்சமாகிய தந்தை அன்றோ ஆழ்வார்
இங்குள்ள அடியார் விண்ணுளாரிலும் சீரியர் என்பதால் தன் மேலாராக அருளிச் செய்து
மத்திய பர்வ நிஷ்ட அக்ரேஸராக விளங்குகிறார்
பாற் கடல் பள்ளியான் விபவ வித்தாம் -வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்து அன்றோ –
———————————————
தந்து கனவில் கலவி ஆல் துயில் தானாம்
அந்நிலை காட்டி ஐம்புலன் கொண்டு வந்து புகும்
மாடு அழுந்தூரானைப் பகரும் கலியன் ஒலி
பாடல் உண்பார் ஒப்பார் சிங்கம் -65-
மாடு -பக்கம் -செல்வம் -பொன்-அனைய அழுந்தூரான்
ஆழ்வார் பாடல் -பரசமயப் பஞ்சுக் கனலின் பொறி –ஒலி மிக்க பாடலை யுண்டு –வலி மிக்க சீயம் –
————————————————
சிங்கம் விண்டார்க்கு அன்பன் தொண்டர்க்கு காப்பவன்
பொங்கு வித்தாய் மூவர் வாக்கு எட்டான் பூ நங்கை சேர்
ஆராவமுதை அழுந்தைக் கண்டு இன்புறும்
சீரார் நீலன் நம் திரு -66-
விண்டார் -அடியார்களுக்கு சத்ருக்கள் -/காக்கும் இயல்பினன் கண்ணபிரான் /
பொங்கும் வித்து -த்ரிவித காரணன்
மூவர் வாக்கு எட்டான் -இந்திரன் அயன் அரன்-வாக்கு எட்டான்-
யானும் ஏத்தி ஏழு உலகும் முற்றும் ஏத்தி பின்னையும் தானும் ஏத்திலும் தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும்-
———————————
திரு வழுந்தூரான் நெடியான் நல் துணையான் தூயன்
திருவன் நிறைவறிவன் என்று திருத்த ஐவர்
செய் துயரை வேறு புகலின்றி கலிகன்றி சேர்ந்தான்
உய்ய தாளாம் செங்கமலம் -67-
ஐவர் -ஐந்து புலன்கள்
நெடியான் -தேவராய நிற்கும் அத்தேவும் அத்தேவரில் மூவராய் நிற்கும் முது புணர்ப்பும்
அம்மூவரில் முதல்வனாக நிற்கும் நெடியான் -மனிசர்க்குத் தேவர் போலெ தேவர்க்கும் தேவனான தேவாதி தேவன்
நிறைவறிவன் -சர்வஞ்ஞன் –
———————————————-
செங்கண் பொன்னன் கஞ்சன் மல்லர் இலங்கையன்
மங்க மறை இந்திரன் வெள்ளம் பூ மங்கை
அளிக்கும் அழுந்தூர் அமரர் கோ அடைந்து உய்யும் என்
கலியன் கெடுக்கும் கள்ளம் -68-
—————————
கள்ள மதம் கொள்ளாச் சல சயனத்தார் தாள் நீர்
கொள்ளும் என்றும் பெண்டிர் நிரயம் தான் வெள்கி யவை
நீங்க பேறாச் சேர்ந்தான் பரகாலன் நெஞ்சே சொல்
பாங்காய் அவன் பெருமை -69-
——————————————-
பெருமான் இனியன் அழகன் தேவன் துப்பன்
திருத்தன் சேராச் சேர்ப்பன் நாதன் -விருத்தம் எனக்
கண்ணமங்கை கண்டு கலியன் சொல் அமுதப்பா
உண்ண பிறப்புக்கு நச்சிலை -70 –
தேவன் -விளங்கு சுடர்ச் சோதி/திருத்தன்-திருப்தன்-அவாப்த ஸமஸ்த காமன்
விருத்தம் -விருத்த விபூதி நாதன்-
வானவர் தன நாயகன் -மூத்தவன் –
ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையவன்
———————————–
சிலை முதலா ஐந்து பூணாச் சீராகும் சேர் பல்
கலன் கலியன் கண்டு பிரியா நிலை எய்திக்
கண்ணபுரத்தான் பால் அவா மிகுதல் தான் கூறும்
தண் தமிழ் கற்பார் தெள்ளியார் -71-
ஐந்து பூண் — ஆழி சங்கு தண்டு வாள் வில் -பஞ்சாயுதங்கள் –
திவ்யாயுதங்கள் அநுகூலருக்கு திவ்ய ஆபரணங்கள் ஆகுமே
ஆக்கம் -திரு மார்பி -திரு மேனிக்கு உப லக்ஷணம்
ஒரு காலும் பிரிகின்றலேன் என்கின்றாளால் -தாய் வார்த்தையால் –
தெள்ளியார் -தெளிந்த ஞானத்தர்–
———————————
தெள்ளிதாத் தான் கண்ணபுரம் உள்ள வெம்மை நீங்க தொழில்
உள்ள அணுக்கரித்தல் ஆறு பேறாய் கொள்வது என
இன்னாமை கூறும் இரும் தமிழ் நூல் புலவன்
தன் தாள் வானாம் இக்கரை -72-
உள்ள வெம்மை -உள்ளத்தில் தோன்றும் ஆற்றாமை
நீர் மலி வையத்து நீடு நிற்பார்கள் -பல சுருதி -அங்கே தெள்ளியார் அனுபவம் இல்லையே –
——————————————-
கரை வளை மாமை இழந்தேன் கணபுரத்தான் தன்
கரையில் செயல் எண்ணி என்று உரை செய்
பரகாலன் தான் தனது விட்டமை கூறும்
வரந்தமிழால் வாய்க்குமோ விண்-73-
கரை வளை -சப்திக்கின்ற வளை /
கரையில் செயல் /-எல்லையில்லாத சேஷ்டிதங்கள் /
வரையெடுத்து -கரி வெருவ மருப்பு ஓசித்து-விடைகள் அடர்த்து -மதி கோள் விடுத்து
புனர் மருதம் இற நடந்து/ தாய் எடுத்த சிறு கோளுக்கு உழைத்து ஓடி / தயிர் வெண்ணெய் உண்டு /
இரணியனை அணி யுகிரால் முரண் அழித்து / உண்டு உமிழ்ந்து போன்றவை
/ வரந்தமிழ் -சிறந்த தமிழ்
கலை வளை -அஹம் மம க்ருதிகள்
———————————–
விண்டு ஒழியத் தன் வாட்டம் கண்ணபுரத்தான் துளவம்
வண்டான தொண்டரை வசமத்து கொண்டூத
வேண்டி உய்யும் விரகு கூறும் பரகாலன்
வேண்டினார்க்குத் தஞ்சமாம் தந்தை –74–
அடியாரை வண்டாக /
பிராகிருத தந்தையிலும் விருத்தி தஞ்சமாகிய தந்தை -ஆத்மாவின் உஜ்ஜீவனத்துக்கு –
———————————
தன் தன்மையில் மீதி வேய் ஆ மணி தென்றல் இருள்
அன்றில் அந்தி செய்ய நலிவு ஒன்றில்
ஒருவனாய்த் தான் நீலனாய் ஆய்ச்சியர் தம் அல்லல் உற்ற
உரைப்பது எவ்வாறு தொண்டீர் -75-
வேய் -மூங்கில் ஆகுபெயர் புல்லாங்குழலைக் குறிக்கும்
உற்ற -உற்றாமையின் கடைக்குறை -ஆழ்வார் ஒருவரே சாயங்காலப் பொழுதில்
ஆய்ச்சியர் அனைவரும் அனுபவித்த அல்லலை அடைந்தமை காட்டும் –
அவ்வாறு நலிவுற்ற ஆழ்வார் பிரிவாற்றாமையை தாம் கூற வாய் திறக்க வலி உண்டோ
ஆழ்வாருடைய அவா மண் திணி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிது அன்றோ –
——————————————
தொண்டர்க்கு வேண்டிற்றுச் செய்யும் கணபுரத்தான்
நண்ணார் ஒழிப்பானை ஆறாக நண்ணவும்
நண்ணா நம் மேல் வினை என்றுத் தேற்றியும் கூறும்
அண்ணலை போற்றும் வியந்து -76-
வியந்து -விருப்புற்று /
வருந்தாது இரு மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா என்றும்
மாலாய் மனமே யாரும் துயரில் வருந்தாது இரு நீ -என்றும் தேற்றிய
ஆழ்வாரை விருப்பமுடன் போற்றுவதும் மேல் ஒரு நன்மை இல்லை –
———————————————–
வியன் ஞாலத்தில் மல்கு சீரால் நாள் வானில்
நயமுடைக் கண்ணபுரம் பேறாக உயவடைக்
கூறு நீலன் சித்ர கவி தேரும் அடியார் தாம்
ஏறுவர் ஏதுமின்றி வான் –77-
நாதனும் நித்ய முக்தர்களும் இங்கே ஆசையுடன் உக்காந்து வந்து நித்யவாஸம் இருப்பதால்
இத்தையே உபாயமாகக் கொண்டு உஜ்ஜீவிக்க ஆழ்வார் உபதேசித்து அருளுகிறார்
கூற்று எழுத்துக்களைக் கொண்டே அருளிச் செய்த பதிகம் -சித்ரா கவித்துவம் பொலிய உள்ளது
நல் வான் -கைவல்யத்தில் வ்யாவ்ருத்தி –
——————————————-
வான் மண் உய்வான் தான் அவதாரம் பத்து செய்யும்
வானவனைக் கண்ணபுரத்துள் கலியன் கோனாகக்
கண்டு கொண்டேன் என்னும் சொல் உய்வார் கருத்தினில்
திண்ணமதாம் ஞானக்கை -78-
ஆழ்வாருடைய ஈரச் சொற்களே உய்ய நினைப்பார்க்கு நிச்சயமான ஞானக்கை –
—————————————
கைம்முதல் இன்றித் தன்னுள்ளத்து உற்றானாய் நோக்கி
வெம் நரகை நீக்க மிக்கானாய்க் கணபுரம் நிற்பார்க்கு
அல்லால் பிறர்க்கு இன்மை தான் பகரும் சீர்க் கலியன்
சொல் தேன் பருகு வண்டாய் -79-
நிர்ஹேதுகமாக -உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்ற முதல்வன்
உற்றான் -ஒழிக்க ஒழியாத நவவித சம்பந்தம் உண்டே
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -அநந்யார்ஹத்வம் –
—————————————–
வண்டாம் தெய்வத் கண்ணபுரத்தான் பற்று ஆறு பேறாக்
கொண்டு ஏத்தி வேற்று இறை தேறுவாரை அண்டாதே
மந்திரத்தின் உட்பொருள் சொன்னான் கலியன் தான் தொண்டர்
தொண்டன் என மாலாம் வங்கர்க்கு -80-
தெய்வ வண்டு-எம்பெருமான் –
மாலாம் வங்கர்க்கு -வங்கமாம் மாலுக்கு -வங்கம்-கப்பல்
மால் -கருமை பெருமை மையல்
வைகுந்தம் என்பதோர் தோனி பெறாது உழல்கின்றேன்
மந்திரத்தின் உட்பொருள் -உற்றதும் உன்னடியார்க்கு அடிமை –
—————————————–
வங்கக் கடல் துயின்று இங்குப் பிறந்து தொண்டர் தாம்
பொங்காத் துயர் அகற்றி ஏதலரை மங்குவித்து
கண்ணங்குடியுள் நின்றான் புகலாய் என்னு நீலன்
பொன்னடியே நம் தமக்குப் பொன்-81-
பொங்க -நன்றாக வாழும்படி-
——————————————-
பொன்னுரு சங்காழி பல் பூண் நாகை அழகியாரின்
எண் கடந்த மேன்மை எழில் சிறப்புட் கண் கண்டும்
ஆட் செய்யா ஆற்றாமை நாயகியாய்ச் சொல் கலியன்
தாள் சேர்க்கும் சீர் வான் தன்னை -82-
சிறப்புட் கண்–சிறப்பு உட் கண்
பொன்னுரு -அழகிய -ஹிரண்ய வர்ணை அலர்மேல் மங்கை உறை மார்பன் அன்றோ –
ஹிரண்மயவபு -உபநிஷத் –
—————————————–
தன்னளவில் நைந்து நொந்து தன்னிலைக்கு அல்ல செய்து
பின்னும் தொழுது தான் புல்லாணி சென்று சேர
எண்ணியமை கூறி இன்னாமை உணர்த்தும் ஆலி நாடன்
பண் எண்ண வானோர்க்கு ஆவார் -83-
அக்ருத்ய க்ருத்யம் -ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால்
ஒளி மா மலர் பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாதலின் –
பண் -ராகம் -குன்றா இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை –
செவிக்கினிய செஞ்சொல் கேட்டு வானவர் ஆரார் அன்றோ –
—————————————————
காவாமை தந்த உள் மெய் நோய் கூற புட் தூதும்
ஆவார் சொல் கேளாமை ஆழி மதி -ஓவாத
இன்னாமையும் கலியன் புல்லாணி மால் குரை சொல்
உன்ன உள்ளம் தவளமாம் -84-
எந்நிறம் பண்டு பண்டு போல் ஒக்கும் -11-1-9-பண்டே போல் இருந்தால்
உள்ளத்து நோய்க்கோ உடல் நோய்க்கோ வருந்த வேண்டியது இல்லையே-
தளம் -வெண்மை -சத்வகுணம் -சமதர்மம் உண்டானால் ஆச்சார்யன் கை புகுரும் –
திரு மந்த்ரம் ஈஸ்வரன் கை புகுவார்கள்
வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே -என்றபடி ப்ராப்ய பூமியும் காய் புகுருமே –
———————————————–
தவத்தை வேள் சேமணி வேய் தென்றல் அன்றில் வாடை
அவற்றுடன் வேலை திங்கள் செய் நவை தீரும்
உற்றார் குறுங்குடிக்கு உய்த்தால் என்று உணர்த்து நீலன்
முற்ற வகற்றும் நம் மயக்கு -85-
மயக்கு -சம்சயம் -அஞ்ஞானம் -விபர்யயம் விஸ்ம்ருதி ஆகியவற்றுக்கும் உப லக்ஷணம்
தவத்தை -பிரபத்தியை -தன்மையை தெள்ளிதாக ஆழ்வார் அருளிச் செய்கிறார் –
——————————————
அக்காணி அன்பர்க்கு அகற்ற குறுங்குடியுள்
முக்காலம் முன்னிற்கும் நம்பியை தக்க தொண்டர்
தம்முடன் சென்று தொழ எண்ணும் கலிகன்றி
நம் நலம் நல்கும் தந்தை –86-
நலம் -பக்திக்கும் நல்ல வாழ்வுக்கும்
அக்கு ஆணி -எலும்பாலாகிய சரீரம் -என்பு தூண் நாட்டி
அக்காணி கழித்து –பெரிய திருமொழி -5-2-3-
தீ நீர் வண்ண மா மலர் கொண்டு தூ நீர் பரவித் தொழுமின் எழுமின் தொண்டீர்காள் -என்றும்
நாறார் இண்டை நாண் மலர் கொண்டு ஆரா வன்போடு எம்பெருமானூர் அடைமின்கள் -என்றும்
நின்ற வினையும் துயரும் கெட சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள் -என்றும்
அருளிச் செய்கிறார் அன்றோ இப்பதிகத்தில்
முக்காலம் முன் நிற்கும் -எப்பொழுதும் நமக்கு முன்னே வந்து திவ்ய தேசம் உகந்து
நித்ய வாசம் செய்வதே நமக்கு அருளுவதற்காகவே –
———————————————————–
தந்தை கிளை தன் நிலைக்கு ஆகா இன்பம் மெய்யாம் நோய்
நஞ்சு செல்வம் கள்ளச் சமயமவை தஞ்சம் அன்று
என்று கலியன் நெஞ்சை வல்ல வாழ் வல்லையாய்ச் சொல்லு
என்ற பாடல் கற்றிடவே முந்து -87-
நஞ்சு செல்வம் -நஞ்சு போன்ற செல்வம் -நஞ்சாகிய செல்வம் –
மெய்யாம் நோய் –நோய் எல்லாம் பெய்ததோர் ஆக்கை -அன்றோ
————————————————–
முந்துற ஆசை முற்ற விட்டு பற்றாய்த் தான் எவர்க்கும்
சிந்தித்தந்து துயர் சிந்துவிக்கும் எந்தை சேர்
மாலிரும் சோலை வணங்கு என்னும் மங்கை வேந்தன்
மால் ஆக்கும் மூவர் முதல் -88-
மங்கை வேந்தன் மால் -ஆழ்வார் பால் நமது பக்தியும் -நம்பால் ஆழ்வாருடைய வ்யாமோஹமும் –
————————————————–
மூவர் முதல்வன் பார் ஆக்கி உண்டும் காத்து அளந்தும்
யாவரும் வேண்டிற்று நல்கும் சோலை மலை மேயவனைக்
கூடுவனோ என்று சங்கித்துத் தெளிந்த சீராலி
நாடன் எங்கள் எம் இறை –89-
கூடுவனோ –ஒன்பது பாசுரங்களில் கொல்-என்று சங்கை –
பல சுருதி பாட்டில் ஆடல் பறைவையனை அணியாயிழை காணும் என்று -சங்கை நீங்கி
நிச்சயமாக கூடுவாள் –
ஆழ்வார் நம்முடைய கடவுள் –
—————————————————–
எங்கள் இமையோர் ஈசன் தொண்டர் எண்ணும் வண்ணத்தன்
அங்கம் அரர்க்கு உகந்து நல்கு சீலன் இங்கு அயனில்
மிக்கார் வாழ் கோட்டியூரான் என்று உரை செய் மங்கை வேந்தன்
உக்க வினை தீர்க்கும் ஒருவர் -90-
உக்க -பொடிப்பொடியாக
எண்ணும் வண்ணத்தன் -பாலின் நீர்மை இத்யாதி –
அவ்வாறான ஸ்வபாவம் யுடையவன் என்றுமாம்
தன் நிறத்தையும் ஸ்வ பாவத்தையும் அடியார் எண்ணப்படியே மாற்றி அருளுபவர்
ஆஸ்ரிதரை தன்னை அழிய மாறியும், நோக்குபவன் –
———————————————————–
ஒருத்தி வேட்டகம் புகு முன் உற்றார் சொல்வாள் போல்
திருப்பதிகள் வான் சேர் முன் கண்டு அரும் தேன் பொன்
ஆரமித்து ஆறு பேறு எம்பிரான் என்னும் கலியன்
கார் எனக் காட்டும் இரக்கம் -91-
இப்பதிகத்தில் -27-திவ்ய தேச மங்களா சாசனம் –
அரும் தேன்–சர்வ ரஸ/ பொன் -அழகும் செல்வமும் -அச்சோ ஒருவர் அழகிய வா -வைத்த மா நிதி –
————————————————
இரக்கமில் அரக்கன் சொல் கொள்ளாமல் சீதை
சிறை வைத்தும் வாயு மைந்தன் ஆற்றல் முறைப் பெண்டிர்
சேது பந்தம் பாரா பட்டான் எனத்தான் பொங்கத்தம்
ஓதும் கலியனை ஏத்து –92-
வாயு மைந்தன் ஆற்றல் பாரா -முறைப்பெண்டிர் பாரா -சேது பந்தம் பாரா -என்று அன்வயம் –
———————————————–
ஏத்து ராமன் தம்பி சுக்கிரீவன் அங்கதன் அனுமன்
கூத்தாய் குலமணி தூரமாடும் தோற்ற
அரக்கராக நீலன் இராமன் செயல் சொல் செஞ்சொல்
பொருந்தும் நம் சந்த மலர் -93-
சந்தமலர் –சந்தஸ் -ஒலி மிக்க பாடல்-அழகு வாசனை என்றும் பொருள்கள் உண்டே- கருத்து மிக்கு என்றுமாம் –
————————————————–
சந்தமலர் சேர் ஆகத்தான் கண் முன் தீம்பு செய்யும்
நந்தன் செய் வித்தகன் கண்ணனை சந்தியில் வா
அம்மம் உண்ண என்று அசோதையாய்க் கூவும் ஆலி நாடன்
செம்மலர்த்தாள் நம் சென்னிப் பூ -94-
ஆக்கம் -திரு மார்பு -ஸ்ரீ வைஜயந்தி வனமாலை திகழும்
செம்மலர்த்தாள் -செவ்வி -ஆர்ஜவம்
ஆர்ஜவமாவது -என் சென்னிக்கு உன் கமலமன்ன குரை கழல் என்றவன் தாளிணையை விட
ஆழ்வார் தம்முடைய தாளிணை -ருஜுத்வம் – மிக்கது -மோக்ஷ ஏக ஹேதுவாகையாலே –
——————————————————
பூங்குருந்து ஓசித்து சாடு உதைத்துப் பேய் நஞ்சுண்டு
தூங்குறி வெண்ணெய் கொல் தாமோதரனாம் ஆங்கு அவனை
ஆய்ச்சியாய்ச் சப்பாணி கொட்ட கூறும் ஆலி நாடன் தன்
வாய்ந்த தாள் நம் பற்று எங்கணும் -95-
இங்கும் அங்கும் நமக்கு பொருந்திய பற்று சரண் ஆழ்வார் திருவடிகளே –
சப்பாணி -ஸஹ பாணி -ஒரு கையேடு ஒரு கையைச் சேர்த்து ஒலி எழுப்புதல் –
———————————————
எங்கும் எவர்க்கும் மிக்கான் ஈசன் மிடுக்கு உடையான்
இங்கு அன்பார் பால் வேண்டற்பாடுடையான் அங்கு ஆய்ச்சி
கட்ட நீர்மையால் கட்டுண்டான் என் கலியன் நாம்
கட்கண்ணால் கான் பெருமான் -96-
மிடுக்கு -நித்ய சம்சாரிகளையும் நித்ய ஸூரி பரிஷத்தில் நிற்க வைக்கும் ஆற்றல்-
—————————————
மான வேறு ஏழ் செற்று காளியன் சகடம் பாய்ந்து உம்பர்
கோன் உண்டி கொண்டு வெண்ணெய்த் தான் விழுங்கும் கோன் செயல்
ஆய்ச்சியர் அசோதை பேச்சாய் நீலன் செய் சொல்
ஆய்வார்க்குத் துன்பம் புகாது -97-
மானம் -பெருமை -வழியிலும் உருவிலும் கோபத்திலும் பெரிதான
ஆழ்வாருடைய இன்னிசை மாலைகள் ஆராய்ந்து கற்பவர்க்கு இம்மையே இடர் இல்லை –
இறந்தால் தங்குமூர் அண்டமே கண்டு கொண்மின் -எனவே எங்கும் இன்பமேயாம் –
————————————————
காதலால் கண்ணன் புறம்பு கூடித் தான் முன் குறித்த
போது மறித்தான் எனத்தான் ஆயர் மாதராய்
ஊடி ஆற்றாமை சொல் குறையல் பிரான் பாடல்
பாடியாட ஒப்பர் ஓடும் புள் -98-
ஆழ்வார் அருளிச் செயல்களை–மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை -3-5-படியே
பாடி ஆடுவார் பெரிய திருவடிக்கு ஒப்பாவாரே–கைங்கர்ய நிரதராவாரே –
வேதாத்மா -தம்முள் எம்பெருமானைக் கொண்டுள்ளது போலே அடியார் தம் மனத்தில்
எம்பெருமான் எழுந்து அருளி இருப்பான் என்னவுமாம் –
ஓடும் புள்ளேறி–திருவாய் -1-8-1-
——————-
புள்ளூர்தி ஆற்றல் எழில் சீர் மிடுக்கால் ஓர் பொருளாய்
உள்ளத்து ஓராமைப் பழ மொழியால் உள்ளி மால்
பால் அன்பு மிக்கது உரைத்துத் தான் அருள் வேண்டும்
நீலன் நம் திண்ணம் திரு -99-
புள்ளூர்தி-எழுவாய் –
பிள்ளை தன் கையில் கிண்ணம் ஓக்க
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா
அங்கையில் வட்டம்
தொண்டர் கைத்தண்டு
பெரு வழி நாவல் கனியிலும் எளியன்
எருக்கு இலைக்காக எழுமறி வோச்சல் கோழி வெண் முட்டைக்கு என் செய்வது குறுந்தடி
கவுள் கொண்ட நீராம்
ஆரழல் ஓம்பும் அந்தணன் தோட்டம் -போன்ற பழ மொழிகள்
—————————————–
திருமாலைத் தன்னுடன் கூட்டித் துன்பம் நீக்க
பரகாலன் கண்ட புட்கள் தம்மை இரந்து தான்
இன்னாமை நாயகியாய்க் கூறும் எழில் தமிழின்
இன்பமது என்றும் குன்றாது -100-
நாயகியாய் –தலைவி பாசுரமாக
செம்போத்து காக்கை குயில் கிளி கோழி இவற்றுடன் பல்லியையும் கண்டு
அவை செய்யும் நிமித்தங்களால் எம்பெருமானுடன் சேர்க்க வழி காண -மகள் பாசுரமாக –
ஆற்றாமையை வெளியிடுகிறார்
தொண்டீர் பாடுமினே -என்று இரட்டித்து -சிறு பாட்டாயும் போக்யமாகவும்
எங்கும் எப்பொழுதும் என்றும் குன்றாமல் இருப்பதில் வியப்பில்லையே –
——————————————————–
குன்றால் ஆ காத்துக் குவலயம் நோக்கும் அம்மான்
தென்றல் தொடக்கமானவை நலிகை என்று எண்ணி
ஆற்றாமைத் தான் விளைத்தான் என்னும் ஆலி நாடன் சொல்
பாற்றும் நமது பாவக் குன்று -101-
புயலுற வரை மழை பொழி தர மணி நிரை மயலுற வரை குடை எடுய்யா நெடியவர்
குவலயம் -உலகம் / நோக்கும் ஜகத் ரக்ஷண சிந்தை /
சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே என்று அன்றோ பல சுருதி –
———————————————————–
குன்றாமல் சேராதார்க்கு இன்னல் செய் வேய் மணி
அன்றில் ஆழி வாடையால் ஆற்றாது சென்று மாலைக்
காணத் தான் முற்படும் நால் கவியார் தானிணையைப்
பேணி நிலையாக மன்னும் -102-
தாளிணையை நிலையாகப் பேணி மன்னும் என்னவுமாம் -மன்னுதல் பொருந்துதல்
——————————————
மன்னு சீர் மால் தொண்டர் அன்றிச் செல்லாமை காட்ட நீலன்
தன் பதற்றம் ஆற்றாமை மால் திறத்து சென்று அமைக்கும்
வாசிகத் தொண்டுக்கு மகிழ்ந்தான் மலர்ப்பாதம்
வாசியின்றி நம் நிலையிடம் -103-
———————————–
நிலை அழியத் தான் மாறித் தொண்டரை நோக்கும்
தலைவன் தோ ற்றங்கள் எண்ணி பொலிவு எய்திக்
கூடுமின் மால் என்று கூறும் ஆலி நாடன் ஞாலத்தார்
கூடும் எளியனாம் எம்மான் -104-
தோற்றம் -விபவ அவதாரங்கள்
நிலை அழிதல்-பரத்வமான நிலையில் இருந்து மீன் ஆமை வராஹம் அன்னம் குப்ஜா மரம் போன்ற அவதாரங்கள் –
————————————
மான மேன்மை பேசி நீர்மை ஏசி இரண்டு சீரும்
ஆன தொண்டர்க்கு என்று அங்கு உகந்து எண்ணி ஊனமற
மால் உள்ளத்து உள்ளான் என்னும் கலியன் தாளிணை
பால் செய்யும் நீர் பத்திமை -105-
மான பெருமை -ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் அனைத்திலும் பெருமையை யுடையவன் அன்றோ
கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உளன் கண்டாய் -வியக்தமாக அருளிச் செய்கிறார்
பத்திமை -ஒரே சொல் பக்தி -பக்தி மை -பத்தி சித்தாஞ்சனம் என்றுமாம் –
————————————————–
மைப்படி மாயன் காப்பு ஈசன் உற்றான் என்றுமற்ற
தேவு என்பார் உண்டு உமிழப் பட்டாராய் கை விட்டு
ஆதியானை ஏத்தும் எனும் ஆலி நாடன் அந்தமிழை
ஓதி சேரும் மால் நீள் ஆகத்து -106-
மைப்படி -அஞ்சன மா மணி வண்ணன் -முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே
உற்றான் -பிராப்தி யுடையவன் -பிதா ரக்ஷகச் சேஷீ பார்த்தா –இத்யாதி
நீள் ஆகம் –வரைபுரை திரு மார்பு -மணி மிகு மார்பிலே குரு மா மணியாய் அணையும் வஸ்து –
————————————————-
நீள் நகர் மாற்கு உற்ற காரணத்தால் புறம்பர் நீர்
நாண் இன்றி ஆட்பட்டு வீழாதே பேணி அடி
யார்க்கு இனியன் தொண்டு பூண்டு வாழும் எனும் ஆலி நாடன்
ஆர்ந்த நம் தீ வினைக்கு மாற்று -107-
தாழ்ச்சி மாற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி
நச்சு நல் மா மருந்தும் ஆழ்வார் –
——————————————
மாற்ற வேண்டும் தம் பிறவிக்கு அஞ்சி ஒண்ணாது தன்னால்
மாற்ற மால் வல்லான் என்று அவன் அருளை பேற்றுக்கா
நாடும் ஆலி நாடன் தாள் நாடி என் தன் நெஞ்சமே
கூடி வாழ் நையாது வாடாது -108-
தாள் நாடி கூடி வாழ் -கொக்கு வாயும் படு கண்ணியும் போலே நமது சென்னி
ஆழ்வார் திருவடித் தாமரைகளில் சேரப் பெறுவதே வாழ்ச்சியாகும்
நையாது வாடாது கூடி வாழ்வோம்
—————————————————————-
வாடி முன் வீழ் பொருட்க்கு மால் அருளால் மந்திரத்தின்
பீடு பொருள் கண்டு கலியன் தொண்டீர் நாடும் எந்தை
சீர் குடந்தை என் அமுதம் தாயில் ஏற்றம் செய் சொல்லைச்
சேர உயிர் வாலிய தாம் -1-
—–
மால் நீர்மைக்கு எல்லை உகந்த ஊர் நூற்று எட்டு
சால நண்ணி யுள்ள கணக்கு இனிதாய் ஆலி நாடன்
செய்யும் திரு மொழி நூற்று எட்டும் ஓதிடுவார்
எய்துவர் வைகுந்தம் ஏய்ந்து–
————————–
ஸ்ரீ பெரிய திருமொழி நூற்றந்தாதி–ஸ்ரீ திரு கே பக்ஷிராஜன்-
ஸ்ரீ நம்மாழ்வார் ஆழ்வார்களில் பிரதானமானவர்.
திருமால் என்னும் உயிரான கருத்தின் விளக்கத்திற்கு வாய்த்த உடலாக இருப்பவர்.
அவருடைய நான்கு பிரபந்தங்கள் திருவிருத்தம், பெரிய திருவந்தாதி, திருவாசிரியம், திருவாய்மொழி என்பன.
இந்த நான்கும் அவர் மூலம் வெளிப்பட்ட நான்கு திராவிட வேதங்கள், தமிழ் மறைகள் என்பது ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம் கூறும் கருத்து.
இதில் முக்கியமானது திருவாய்மொழி ஆயிரம் பாட்டுகள்.
இவருடைய திவ்ய பிரபந்தங்கள் உடல் என்றால் அந்த உடலுக்கு உறுப்புகளாக நின்று பொருள் விளங்க உதவும் நூல்கள்
திருமங்கையாழ்வார் என்னும் கலியன் அவர்களது ஆறு நூல்களாகும்.
பெரிய திருமொழி, திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல், திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் என்பன.
மற்றைய ஆழ்வார்களின் நூல்களும் இவ்வாறு உறுப்புகள் என்ற நிலையில் கொள்ளப்படும்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழியை நாம் எடுத்துக்கொண்டால், அதில் ஆயிரம் பாட்டுகளும் பத்து பத்துகளாகவும்,
ஒவ்வொரு பத்துக்கும் பத்து திருவாய்மொழிகளாகவும், ஒவ்வொரு திருவாய்மொழிக்கும் பத்து பாசுரங்களாகவும் பகுக்கப்பட்டிருக்கின்றன.
அது மட்டுமின்றி ஒவ்வொரு பாசுரமும் முன்பின் பாசுரத்திற்கு அந்தாதி என்னும் தொடையில் அமைந்துள்ளது.
முதல் பாசுரமும் கடைசி, அதாவது பத்தாம்பத்து பத்தாம் திருவாய்மொழியின் பத்தாவது பாசுரமும் அந்தாதியாக அமைந்துள்ளன.
அதாவது, உயர்வற என்று ஆரம்பித்து திருவாய்மொழி உயர்வே என்று முடிகிறது.
இதற்கு ஒவ்வொரு திருவாய்மொழிக்கும் அதன் சாரமான பொருளை உள் பொதிந்து ஒவ்வொரு வெண்பாவாக
அப்படி நூறு வெண்பாக்கள் பாடியிருக்கிறார் பெரிய ஜீயர் என்று வைணவ உலகம் குலவும் ஸ்ரீ மணவாள மாமுனிகள்.
திருவாய்மொழி எப்படி அமைந்திருக்கிறது? அந்தாதியாகவன்றோ?
அப்படியே நூறு வெண்பாக்களும் அந்தாதித் தொடையில் அமையுமாறு பாடியுள்ளார் மாமுனிகள்.
முதல் வெண்பாவின் முதல் சொல் உயர்வில் ஆரம்பித்து நூறாவது வெண்பாவின் ஈற்றுச் சொல் உயர்வு என்று முடியவேண்டும்.
ஒவ்வொரு வெண்பாவிலும் மாறன் பெயர் வரவேண்டும். மையக்கருத்து இடம் பெற வேண்டும்.
அந்தத் திருவாய்மொழிக்கான முக்கியமான விளக்கக் குறிப்பும் உள்ளே பெய்திருக்க வேண்டும்.
ஈடு போன்ற பெரும் விளக்க உரைகளோடு உயிரான கருத்தில் நன்கு பொருந்துவதாய் அமைந்திருக்க வேண்டும்.
இத்தனை அம்சங்களும் பூர்ணமாய் நிறைய திருவாய்மொழி நூற்றந்தாதியை இயற்றியுள்ளார் ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள்.
இதைச் சுருக்கமாக வெண்பாவில் ஈடு என்று சொல்லிவிடலாம். அவ்வண்ணம் நன்கு சிறப்புற அமைந்த துணை நூல் இதுவாகும்.
இந்தத் திருவாய்மொழி நூற்றந்தாதிக்கு பிள்ளைலோகம் ஜீயர் என்பவருடைய அருமையான வியாக்கியானம் இருக்கிறது.
வெண்பாக்களும், வியாக்கியானமும் சேர்ந்து பெருங்கடலுக்குள் சிறு கடல் என்னும் ஆழமும் விரிவும் கொண்டு இலகுபவை.
பல நூற்றாண்டுகளாக வைணவத்தில் வரியடைவே கற்கப்படும் பனுவல் பயிற்சியான காலக்ஷேபம் என்னும் முறையில்
கற்கப்படும் நூலாகவும் இருந்து வருவது திருவாய்மொழி நூற்றந்தாதி.
வழிவழியாகப் பல வித்வான்களும், பக்தர்களும் திருவாய்மொழிக்கு இப்படி ஓர் அற்புதமான வெண்பாவில்
அந்தாதி அமைந்தது போல திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிக்கும் அமைந்திருந்தால்
நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்ததுண்டு.
அவ்வண்ணம் ஒரு முறை ஸ்ரீராமானுஜனில் ஸ்ரீ உ வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர்
அவ்வாறு பெரிய திருமொழிக்கு ஒரு நூற்றந்தாதி அமையாது போனதைக் குறித்து
வருத்தம் தெரிவித்ததைப் படித்தார் ஒரு தமிழறியும் பெருமாள்.
அவர்தான் திருக்குருகூர் வரி பாடிய திரு கே பக்ஷிராஜன், வழக்குரைஞர் அவர்கள். வைணவத்தில் ஆழங்கால் பட்டவர்.
அருமையான தமிழ்ப் புலமையும் இருக்கிறது. கூடவே திருமாலின் தண்ணருள், அடியாரின் ஆசி. கேட்க வேண்டுமா?
அற்புதமாகப் பாடியிருக்கிறார் திருமொழி நூற்றந்தாதி என்று. 16-11-1969ல் பரகாலன் பைந்தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது.
மொத்தம் இருபது பக்கங்கள். பெற்றவர்கள் எல்லாம் பெருநிதியம் பெற்றார்கள்தாம்.!
திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியை ஆயிரம் பாட்டுகளாகப் பாடியிருந்தாலும் அவற்றை அந்தாதியாக அமைத்துப் பாடவில்லை.
ஆனால் பத்து பாசுரங்கள் ஒரு திருமொழி, பத்து திருமொழிகள் ஒரு பத்து அது போல் பத்து பத்துகள் என்று அமைப்புகள்.
ஒவ்வொரு திருமொழிக்கும் ஒரு வெண்பா என்று திரு பக்ஷிராஜன் ஸ்வாமி அந்தாதியாகவே பாடியிருக்கிறார்.
மாறன் செந்தமிழ் மாநாடு போன்று பரகாலன் பைந்தமிழ் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்து
அதற்கு திரு பக்ஷிராஜன் அவர்களை ஏதாவது எழுத்துப் பங்கு அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
திரு N S கிருஷ்ணன் என்பாரின் தூண்டுதல் இவருக்கு உற்சாகத்தை மூட்டியிருக்கிறது.
முன்னுரையில் எழுதுகிறார் –
“திருமங்கை மன்னன் கிருபையையும், ஸ்ரீமணவாள மாமுனி திருவருளையும் அவலம்பித்து,
ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான அவதாரிகைகளையும் ஒவ்வொரு திருமொழிப் பருப் பொருளையும் பொதுவாக நோக்கி
அப்பொருளின் சாயையிலே வெண்பாவாக எழுத முற்பட்டேன்”
கடவுள் வாழ்த்திலேயே நல்ல நறுந்தமிழுக்கு அச்சாரம் போட்டுவிடுகிறார் திரு பக்ஷியார்.
மாலை வழி மறித்தே மந்திரங்கொள் வாட் கலியன்
கோலத் திரு மொழியால் கூறு பொருள் – ஞாலத்தார்க்
கந்தாதி யில் சுருக்கி ஆக்க முயல் பணியைச்
சிந்தாதே காத்திடுமத் தேவு.
மாறன் எனுமங்கி மற்றை யவன் அங்கமாக்
கூறும் குறையலூர்க் கொற்றவனாம் – வீறுடைய
நீலன் இருவரது நீள் பதங்கள் சூடுகின்றேன்
கோல வணியாகக் கொண்டு.
பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வாரின் முதல் திருமொழி ஆரம்பிக்கிறது.
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்
உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
திருமொழி அந்தாதி பேசுகிறது –
வாடி வருந்துமுயிர் வாழ்வு பெறற் கேற்றவழி
ஏடுடைய எட்டெழுத்தே ஏத்துமென – நீடுலகத்
தின்பிலே நைந்த கலியன் இசை மொழிகள்
அன்புடனே தாமொழிந்த வால்.
அடுத்த திருமொழி ஆரம்பம்
வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட
வரி சிலை வளைவித்து அன்று
ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற
இருந்த நல் இமயத்துள்
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை
அகடு உற முகடு ஏறி
பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்
பிரிதி சென்று அடை நெஞ்சே
திருமொழி நூற்றந்தாதி பேசுகிறது –
வாலி மதனழித்த வல் வில்லி நம் வாழ்வு
கோலிப் பிரிதியிலே கூடினான் – கோல நெஞ்சே
கிட்டி வணங்கென்றே கலியன் கிளத்தினான்
முட்டி வரு பேரார்வ முற்று.
அடுத்த திருமொழி தொடக்கம்
முற்ற மூத்து கோல் துணையா முன் அடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே
திருமொழி நூற்றந்தாதி –
முற்ற மூத்து மொய் குழலார் முன்னின் றிகழாமுன்
பற்றிடுமின் தொண்டீர் பதரியுறை – நற்றவன் தன்
தாளை யவன் ஆயிரம் பேர் சாற்றி எனும் கலியன்
மீள வுரை தந்தே நமக்கு
இவ்வாறு போகிறது திருமொழி நூற்றந்தாதி.
ஏனமாய் மண்ணேந்தும் எம்மான் வதரியெனும்
தேனமரும் ஆச்சிரமம் சேர்ந்துள்ளான் – ஊனில்
நலி நெஞ்சே நாளும் தொழு தெழுகென்றே சொல்
கலியனுரை வேதக் கலை.
கலையொடுதீ ஏந்தியவன் சாபம் கழல
அலைகுருதி அன்போ டளித்தான் – நிலவிடுசீர்ச்
சாளக் கிராமமே சாருமெனும் நீலனெனும்
வாளுழவன் சொல் வினைக்கு வாள்.
__________________
வாணிலவு மாதர் நகை தப்பி நிமி வனத்தே
சேணுயர் வான் சேவடியே சேர்தி யெனப் – பேணு நெஞ்சை
மங்கையர்கோன் சொன்ன மறைபேணின் நம்மைவினை
அங்கணுகா மாநிலத்தங் கண்.
__________________
அங்க ணரியாய் அவுணனுடல் கீண்டானைச்
சிங்கவேள் குன்றதனில் சேவித்தே – பொங்குமுளத்
தொள்வாள் கலியன் உரை தேர்ந்து நஞ்சென்னி
கொள்வமவன் பாதமலர்க் கொங்கு
__________________
கொங்கலரும் சோலைக் குளிர்வேங் கடமலையே
இங்கடைவாய் நெஞ்சென் றிதமுரைத்து – மங்கையர்கோன்
செஞ்சொலால் சொன்ன திருமொழியே நந்தமக்குத்
தஞ்சமவன் நங்களுக்குத் தாய்.
__________________
தாய்தந்தை மக்களொடு தாரமெனும் நோய்தவிர்ந்தேன்
வேயுயரும் வேங்கடமே மேவினேன் – மாயா
புவியிலெனை ஆட்கொள் எனப்புகன்ற நீலன்
கவிநமக்கு வாழ்வருளும் கண்
__________________
கண்ணார் கடலை அடைத்தானை வேங்கடத்தே
நண்ணி இடர் களைந்து நல்கெனவே – பண்ணால்
வணங்கியே வேண்டிடுமொள் வாட் கலியன் சொல்லால்
வணங்குவர் ஏறிடுவர் வான்.
———————————–
ஈயத்தால் ஆகாதோ இரும்பினால் ஆகாதோ
பூயத்தால் மிக்கதொரு பூதத்தால் ஆகாதோ
நேயத்தே பித்தளை நற் செம்புகளால் ஆகாதோ
மாயப் பொன் வேணுமோ மதித்து உன்னைப் பேணுகைக்கே
—————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு கே பக்ஷிராஜன்- திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் சம்பத் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –