Archive for the ‘திரு வேங்கடம் உடையான்’ Category

ஸ்ரீ திருவேங்கட திருமலை வைபவம் —

March 11, 2022

திருமாலையே பாடிய ஆழ்வார்கள் பதினொருவரில் தொண்டரடிப் பொடியாழ்வார் தவிர பத்து ஆழ்வார்கள் பாடிய
திவ்யதேசம் திருவேங்கடம் எனப்பெறும் திருப்பதி திருமலைக் கோயிலாகும்.
திவ்ய பிரபந்த பாசுரங்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தைத் திருவரங்கமும் ( 274 பாசுரங்கள்)
இரண்டாம் இடத்தை (203) பெற்ற திவ்ய தேசம் திருவேங்கடமலையும் ஆகும்.

பெரியாழ்வார் ஏழும், ஆண்டாள் பதினாறும், குலசேகர ஆழ்வார் பதினொன்றும், திருமழிசையாழ்வார் பதினைந்தும்,
திருப்பாணாழ்வார் இரண்டும், திருமங்கை ஆழ்வார் அறுபத்து இரண்டும்,
பொய்கை ஆழ்வார் பத்தும், பூதத்தாழ்வார் ஒன்பதும், பேயாழ்வார் பத்தொன்பதும், நம்மாழ்வார் ஐம்பத்து இரண்டும் என
இருநூற்று மூன்று பாசுரப்பதிகங்கள் திருவேங்கட மாமலை உறை வேங்கடநாதனைப் புகழ்ந்துரைக்கின்றன.

பாம்பணையின் மேல் பள்ளி கொண்ட கோலத்தில் திருமால் திகழும் திருக்கோயிலாக திருவெஃகா எனப்பெறும்
காஞ்சிபுர நகரத்துக் கோயிலை பெரும் பாணாற்றுப் படையும், பரிபாடல் மதுரைக்கு அருகில் உள்ள
திருமாலிருஞ் சோலையில் நின்ற வண்ணம் திகழும் நெடியோனின் கோலத்தை விவரிக்கின்றன.

சிலப்பதிகாரம் எனும் அருந்தமிழ் நூலில் இளங்கோவடிகள் காடுகாண் காதையில் பாம்புப்படுக்கையில் பள்ளி கொண்டவாறு
திருமால் திகழும் இடமாகக் காவிரி நடுவண் உள்ள திருவரங்கத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அதே நூலில் கடலாடுகாதையில் வேங்கடமலை பற்றி கூறும் அடிகளார் வேன்றி காதையில் தமிழ் நாட்டு எல்லைகளைக்
குறிக்குமிடத்து வேங்கடமலையையும் குமரிக்கடலையும் பின்வருமாறு சுட்டியுள்ளார்.
‘‘நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்’’ என்பது அவர் வாக்கு.

இங்கு நெடியோன் என்பது திருவேங்கடவனையும், தொடியோள் என்பது கன்னியாகுமரி பகவதியையும் சுட்டுவதாகும்.
எனவே நெடியோனாகிய திருமாலுக்கு வேங்கடமலையில் கோயில் திகழ்ந்து என்பது சிலப்பதிகாரத்தின் கூற்றாகும்.
கடந்த 150 ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் பல சமயச் சார்புடையவர்களால் இருவேறு கருத்துக்கள் தொடர்ந்து கூறப்பெற்று வந்துள்ளன.

திருமலைத்திருப்பதி கோயில் கருவறையில் நின்ற கோலத்தில் திகழும் மூலஸ்தானத்து திருமேனி கொற்றவையாகிய
தேவியின் திருவடிவம் என்று ஒரு சாரரும், இல்லை அத்திருமேனி குறிஞ்சிக் கடவுளாகிய முருகப் பெருமானின் திருவடிவமே
என்று தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகின்றனர்.

இவர்களின் மாறுபட்ட கருத்துக்களுக்கெல்லாம் உரிய பதிலாக கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டிலேயே இளங்கோ அடிகள்
தம் சிலப்பதிகாரக் காப்பியத்தின் காடுகாண் காதையில் பாடலடிகள் வாயிலாகக் கூறியுள்ளார்.

‘‘வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங்கு ஓங்கிய இடை நிலைத்தானத்து மின்னுக்கொடி உடுத்து விளங்குவில் பூண்டு நல்நிறமேகம் நின்றது போலப்
பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும் தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி நளங்கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம்பூ வாடையில் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்’’என்பதே
அவர் விவரிக்கும் திருவேங்கடவனின் திருக்கோலமாகும்.

பண்டு இளங்கோ அடிகள் காலத்தில் திருப்பதி திருமலைமேல் இருந்த திருக்கோயிலின் மூலஸ்தானத்தில்
திருமால் வில்லினைத் தரித்தவாறு மேகம் போன்ற கறுப்பு வண்ணத்தில் பகைவரை அழிக்கக் கூடிய சக்கரத்தையும்,
பால் போன்ற அவருடைய திருக்கைகளில் இடமும் வலமும் ஏந்தியவாறு அழகுடைய மணி ஆரத்தை மார்பிலே தரித்தும்
பொன்னாலாகிய பூ ஆடையைப் பூண்டும் சிவந்த தாமரை போன்ற திருக்கண்களுடன் நின்ற கோலத்தில் காட்சி நல்குகிறார் என்று கூறியுள்ளார்.

சிலப்பதிகாரமே திருப்பதி திருமலைத்தெய்வம் நின்ற கோலத்திருமால் தான் என்று சான்று பகரும்போது,
தேவியின் வடிவம் என்றும், முருகன் வடிவம் என்றும் கூறுவது தேவையற்ற சர்ச்சைகளாகும்.

தமிழ் நாட்டுப் பண்பாட்டுக் கூறுகளை தெளிவுற விளக்கமாக எடுத்துரைக்கும் நூலான அகநானூற்றின் 213 ஆம் பாடல்,
‘‘வினை நவில் யானை விறற் போர்த்தொண்டையர் இனமழை தவிழும் ஏற்றரு நெடுங்கோட்டு ஓங்கு வெள் அருவி வேங்கடம்’’எனக்கூறி
திருவேங்கடமலை தொண்டைமான் மன்னர்களுக்கு உரிய மலை என்பதைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது.

குறுந்தொகையின் 260 ஆம் பாடலும் தொண்டைமான் மன்னர்களின் மலையே வேங்கடம் என உரைக்கின்றது.
வேங்கட கோட்டத்து மன்னன் புல்லி என்பானின் வேங்கடமலையின் சிறப்புக்களை அகநானூற்றின் எட்டுப் பாடல்கள், தெளிவுற உரைக்கின்றன.
அப்பெருமகன் களவர் குலத்தோன்றல் என்பதையும், தொண்டைமான் எனப்பட்டம் புனைந்த அவன் மரபினரே பிற்காலத்தில்
காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தனர் என்பதையும் சங்கத்தமிழ் நூல்கள் எடுத்துரைக்கின்றன.

10ஆம் நூற்றாண்டில் கி.பி, 952ல் பராந்தகச் சோழனின் ஆட்சியில் தொண்டை மண்டலம் வியத்தகு முறையில் வளர்ந்ததால்,
நிறைய பொன்னாபரணங்களை அளித்தான். சைவர்களும், வைஷ்ணவர்களும் திருமாலின் திருவடியைப் போற்றினர்.

பெரும்பான்மையான தஞ்சைச் சோழர்கள் சைவர்களாக இருந்தாலும் திருமலைக்குச் சொத்துக்களை அளித்தபடி இருந்தனர்.
11 ஆம் நூற்றாண்டில், தென்பகுதியில் சோழர்களின் ஆட்சிக் காலம் பொற்காலமாகத் திகழ்ந்தமையால் பெற்ற
ராஜராஜ சோழனின் காணிக்கைகளோடு சோழ அரசி ‘அம்மார்’ என்ற மாதரசி 57 கழஞ்சுப் பொன்னை திருமலை ஆலயத்திற்கு அளித்தாள்.

கி.பி. 1016ல் சோழப் பேரரசில் வாழ்ந்தத பிராமணர் ஒருவர் 26 கழஞ்சு பொன் அளித்தார் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது.
13 ஆம் நூற்றாண்டில் யாதவ, சாளுவ, காகதீய, ஹொய்சாள மன்னர்கள் இத்திருக்கோயிலைப் போற்றி நிலங்களும் பொருட்களும் கொடுத்தனர்.
கி.பி. 1130ல் ஸ்ரீ ராமனுஜர் திருப்பதி ஆலயத்தின் நிர்வாகம், வழிபாடு முதலியவற்றைச் சீர்படுத்தி ‘ஜீயர் களை’ நியமித்து
ஆலயத்தின் நிர்வாகத்தை அவர்களிடம் ஒப்படைத்தார்.

1356ல் விஜய நகர மன்னரான சாளுவமங்கதேவர் ஆட்சிக் காலத்தில் திரும்பவும் திருக்கோயிலுக்குப் பொன் வேய்தல் திருப்பணி நிகழ்ந்தது.
விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு திருமலைத் தெய்வம் குலதெய்வமானபடியால் பொருள் வளம் பெருகத் தொடங்கிற்று.
இரண்டாம் ‘ஹரிஹரர்’ 1404ல் ஸ்ரீ வேங்கடேஸ்வராய நமஹ என்ற மந்திரத்தினைப் பதிக்கச் செய்த நாணயத்தினை வெளியிட்டார்.

—————-

அஞ்சனாத்ரி த்ரேதா யுகத்தில் –
வால்மீகி ராமாயணம் திருவேங்கடம் குறிப்பு உண்டே

————

செக்கர் மா -திருவாசிரியம் போல்

———-

கம்பர் -கம்பத்தில் இருந்து வந்த நரஸிம்ஹர் பெயர்
ஆச்சார்யர்கள் -ஸ்ரீ வைஷ்ணவர்
தொங்கல் பாசுரம் -கம்பர் -மூன்று
திருவெழு கூற்று இருக்கை -சிறிய திருமடல் -பெரிய திருமடல்
சடகோபர் அந்தாதி சாதித்து

திரு மறையோர் வாழும் திருவேங்கடம் -கம்பர்
அநந்தாழ்வான் இருந்தமையைக் காட்டி
ஆக இவர் பராசர பட்டர் சிஷ்யர்
புலியும் யானையும் சேர்ந்து வாழும் திருமலை
புகு மதத்தால் -தேன் விண்ட மலரால் வாழ்த்தும் திருவேங்கடம்
வேங்கை -முயல் என்று சந்திரன் மேல் -மதியின் ஒண் முயலைப் பாய்ந்து -ஆழ்வார் பாசுரம் போல் கம்பர்
மோக்ஷம் அடைவார் திருமலையில் தேடாதீர் -சுக்ரீவன்
கிட்டே கூடப் போகாதீர் –
திருமலை -சர்வாதிகாரம்
திருவேங்கமுடையான் -அதிகிருதா அதிகாரம்
அவனை விட பெருமை என்பதால் -திரு மலையையே பாடினார் கம்பர்
மலையே திரு உடம்பு -ஆழ்வார்
மலை ஒன்றுமே தொழ வினைகள் போமே
ஆச்சார்யர் கோஷ்ட்டியில் கேட்ட அர்த்தங்கள் கம்பர் அருளிச் செய்கிறார்

—————-

ஆராத்தி ஏழை செல்வம்
காணே -உள் கண் கட் கண் -ஞானம்
விகடே-தாப த்ரயம் போக்க திரு மலைக்கு வா
தடங்கல் -திருமலைக்கு வந்தால் திருப்பம் உண்டாகும்
க்ரீம் கச்ச
ஸ்ரீ பீடஸ்ய
ஸ்ரீ நிவாஸன் -மஹா லஷ்மிக்கு பீடம் இவன்
அகலகில்லேன் இறையும்
சத்வம் நிறைந்த அடியார்களுடன் நாடி வா
உரியவனாய் ஆவாய்
பரன் சென்று சேர் மலை ஒன்றையுமே தொழ வினைகள் அனைத்துமே போகுமே
வேதத்தால் மங்களா ஸாஸனம்
பஞ்சாயுதம்
ஐந்து மொன்றும் அஷ்ட குண சாம்யம்
ஐம்பூதங்கள் சரீரம் பிறப்பு அடைய மாட்டான்

————–

சமயம் கடந்த, தமிழ்ச் செல்வரான இளங்கோவடிகள்! (3rd CE)
வேங்கடம் என்னும் மலையையும் பாடுகிறார்

= சமயம் கடந்து, தமிழைத் தமிழாய் அணுகி!
= துதிப் பாட்டாய் இல்லாது, இயற்கையும் தமிழுமாய்!
= வேங்கட மலை மேல் நிற்பது யார்? அதையும் சொல்லிடறாரு இளங்கோவடிகள்!

சிலப்பதிகாரம் காட்டும் – வேங்கட மலையில் இருப்பது யார்?

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை-
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து,
மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல

பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!

நூல்: சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம் – காடு காண் காதை (lines 41-51)
கவிஞர்: இளங்கோ அடிகள்

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை

நீர் பெருகி அருவிகள் பாயும் வேங்கட மலை!
அந்த ஓங்கிய மலை உச்சியிலே மலைப் பாதையில் நடந்து செல்லும் போது,
ஆங்காங்கே சில்லென்று சிற்றருவிகள்!

விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து

கதிரவனும் திங்களும் மாறி மாறிக் காயும் மலை உச்சி!
ஆங்கே, இரண்டு பக்கத்து மலைக்கும் இடையே…

மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல

கோடி = புதுத் துணி
பூவுக்கே வழியில்லாமல் இருந்த இறைவனுக்கு, வைரக் கிரீடம்-தங்கத் தட்டு போன்ற Capitalistic வித்தைகள்;
ஆனா, ஆழ்வார்களின் வேங்கடவன் Business வேங்கடவன் அல்லன்; குறையொன்றுமில்லாக் குன்றத்து விளக்கன்;

கோடி = திருமணக் கூறைப் பட்டு; அதை உடுத்தி,
தோளிலே வில்லேந்தி…
நல்ல கருப்பான மேகம்..
மழை பொழியத் தயாராய் நிற்பது போல், மலை மேல்

பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி

* பகை அஞ்சும் ஆழி = (சக்கரம்)
* பால் வண்ணச் = (சங்கு)
தன் தாமரைக் கையிலே ஏந்தி = யாரு சங்கு-சக்கரம் ஏந்தி இருப்பா?
அவனே அவன்! = வேங்கட மலை மேல் நிற்பவன்!

நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய

அழகான ஆரம் – அதை மார்பிலே பூண்டு..
பொற்பூ ஆடையில், பொலியத் தோன்றும்
(இன்னிக்கும் பூ-ஆடை = பூலங்கி சேவை உண்டு; ஒவ்வொரு வியாழக் கிழமையும் “பூலங்கி தரிசனமுலு“;
பூவால் நெய்த ஆடை = பொலம் பூ ஆடையில் பொலியத் தோன்றிய -ன்னு அன்றே காட்டும் இளங்கோ)

செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!

செங் கண், நெடியோன்! = சங்கத் தமிழ்க் கடவுள்! முல்லை நிலத் தொன்மம்;
திருமால் என்னும் அவன் = அவனே, வேங்கட மலையில் நின்ற வண்ணமே!

ஒரு பக்கம் கதிரவன் – மறு பக்கம் நிலவு! நடுவால கருமேகமாம்
அதே போல்…
ஒரு பக்கம் ஆழி(சக்கரம்) – மறு பக்கம் வெண் சங்கு! நடுவால கருத்த மாயோன்
உவமை காட்டும் இளங்கோ அடிகளின் தமிழ்ச் சுவை, சொல் அடர்த்திச் சுவை!

——–

இளங்கோ மட்டுமல்லாது, முற்பட்ட எட்டுத் தொகையிலும்.. “வேங்கட மலை மேல் திருமால்”!

பருவம் வாய்த்தலின் இருவிசும்பு அணிந்த,
இருவேறு மண்டிலத்து இலக்கம் போல,
நேமியும் வளையும் ஏந்திய கையாற்,
கருவி மின்ன விரி இலங்கும் பொலம்பூண்,
அருவி உருவின் ஆரமொடு அணிந்த, நின் திருவரை அகலம்!

வேங்கடத்தின் மேல் நிற்பது = நேமியும் வளையும்-சக்கரமும் சங்கும்..
ஏந்திய கையான் என்றே காட்டும் தமிழ்த் தகைமை!

மாயோன் என்ற முல்லை நில நடுகல்…
பிற் சங்க காலத்தில் “பெருந்தெய்வம்” ஆகி விட்டாலும்…,

அந்த ஆயர்க் குடி வழக்கங்களே இன்னிக்கும் கைக்கொள்ளும் தொன்மம்!
அந்தணர்களுக்கு முதல் தரிசனம் இல்லை;
இன்றளவும்… ஆயர்-கோனாரே, கதவம் திறப்பித்து, முதல் காட்சி காணும் முன்னுரிமை!

வேங்கடேஸ்வரன், பாலாஜி போன்ற வடமொழிப் பெயர்களால், இன்று சூழ்ந்து நின்று Capital Clout ஆக்கி விட்டாலும்…
திருவேங்கடமுடையான், திருமலை-அப்பன், முல்லையின் மாயோன்,
மலை குனிய நின்றான், மாயோன் மேயக் காடுறைக் கடவுள்… என்பதே சங்கத் தமிழும்,
ஆழ்வார்களும், “ஆசையால் பராவி” அழைத்த தமிழ்த் திருப்பெயர்கள்!

* சமயம் சாராச் செந்தமிழ்ச் செல்வர் இளங்கோ காட்டும்… வேங்கடவன் – இவனே!
* எட்டுத் தொகைச் சங்கத் தமிழும் காட்டும்… வேங்கடவன் – இவனே!
* இவனே – அவன் எவனே

———–

திருமகளை திருமார்பில் தரித்த திருமால் உறையும் பதி என்பதால், இதற்கு ‘திருப்பதி’ என்ற பெயர் வந்தது.

கிருஷ்ண அவதாரத்தில், பகவான் தன்னுடைய திருக்கரங்களால் கோவர்த்தன மலையைத் தாங்கினார்.
தன்னை ஏந்திய கிருஷ்ணனை, தான் தாங்க வேண்டும் என விரும்பியதாம் கோவர்த்தன மலை.
அதன்படி இந்த கலியுகத்தில் திருப்பதி ஏழுமலையானை திருவேங்கட மலையாய் இருந்து தாங்கி நிற்பதாக புராணங்கள் சொல்கின்றன.
வேங்கடாத்ரி,
சேஷாத்ரி,
வேதாத்ரி,
கருடாத்ரி,
விருஷபாத்ரி,
அஞ்சனாத்ரி,
ஆனந்தாத்ரி எனும் ஏழு சிகரங்களுடன் வேங்கடமுடையானைத் தாங்கி நிற்கிறது, வேங்கட மலை.

வேங்கட மலை:
வேம் என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’.
பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர்.
இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

சேஷ மலை:
பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார்.
இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.

வேதமலை
வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.

கருட மலை:
இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார்.
அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.

விருஷப மலை:
விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான்.
அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.

அஞ்சன மலை:
ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள்.
அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிறது.

ஆனந்த மலை:
ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார்.
இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர்.
இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.

ஒருமுறை பூமாதேவியைப் பாயாகச் சுருட்டி பாதாளத்தில் அடைத்து வைத்தான் இரண்யாட்சன் என்னும் அசுரன்.
திருமால் பூமாதேவியைக் காக்கும் பொருட்டு வராகமாக அவதரித்தார்.
பின்பு இரண்யாட்சனுடன் போரிட்டு அவனைக் கொன்று பூமாதேவியை மீட்டார்.
பூமித்தாயை தன் மடியில் தாங்கி வராக மூர்த்தியாய் தேவர்களுக்கு காட்சிக்கொடுத்தார்.
அப்போது பிரம்மதேவன் திருமாலை வேண்டி, ‘வராக மூர்த்தியாகியத் தாங்கள், கலியுக மக்களைக் காக்கும் பொருட்டு
திருவேங்கடத்தின் சேஷாத்ரி சிகரத்தில் எழுந்தருளவேண்டும்’ என்றார்.
அதன்படி வராகமூர்த்தி திருமலை எனும் திருவேங்கடத்தில் எழுந்தருளினார்.

திருவேங்கடம் என்பதற்கு இருவகை பொருளுண்டு.
ஒன்று தன்னை அண்டியவர்களுடைய பாவங்களை எரித்துவிடுதல்
மற்றொன்று தன்னை அண்டியவர்களுக்கு அழிவில்லாத ஐஸ்வரியங்களைத் தருதல் .
சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இத்தலத்தை திருவேங்கடம் என்றே குறிக்கின்றன.
திருமலையை மேல்திருப்பதி என்றும் அழைக்கிறார்கள்.
திருமகளை திருமார்பில் தரித்த திருமால் உறையும் பதி என்பதால், இதற்கு ‘திருப்பதி’ என்ற பெயர் வந்தது.

————–

இளங்கோ -சேர மன்னனின் தம்பி இளவல் என்பர்
கோவலன் -கோபாலன் என்பதின் மருவு
இளங்கோ வுடன் எவ்வாறு நடந்தனையோ
ஜைனர் வைஷ்ணவர் சம்பந்தம் உண்டே
புத்தர் சைவர் சம்பந்தமும் உண்டே
ஜைனர் வழிபாட்டில் ஆச்சார்ய சம்பாவனை ராமானுஜருக்கு உண்டாம்
ஜைனர்கள் வழிபாட்டு ஸ்தலங்களில் கீழ் உள்ள ஸ்லோகம் கல்வெட்டுக்களில் உண்டே

பாஷண்ட ஸாகர மஹா படபா முகாக்நி
ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ
ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ—-ஐந்தாம் ஸ்லோகம்–

படபா என்பது ஒரு பெண் குதிரையின் பெயராகும்.
அது கடலுக்கு அடியில் தனது முகத்தில் எப்போதும் நெருப்புடன் உள்ளதாகும்.
ப்ரளய காலத்தின் போது கடலிலிருந்து வெளி வந்து உலகை அழிக்கும் என்பது புராணங்கள் கூறுவதாகும்.

பாஷண்டர்கள் என்ற கடலுக்கு இப்படிப்பட்ட படபா அக்னி போன்று எம்பெருமானார் உள்ளார்.

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தனது தலையில் வைத்தபடி நின்று நீச மதங்களை அழித்தார்.

ஸ்ரீமந் நாராயணன் அமர்ந்துள்ள பரமபதம் செல்லும் வழியைக் காட்டினார்.

இப்படிப்பட்ட எம்பெருமானாருக்குப் பல்லாண்டு, யதிகளின் தலைவருக்குப் பல்லாண்டு.

1-பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி –
பாஷண்டர்களாகிற கடலின்
கொந்தளிப்பை யடக்கும்
விஷயத்தில்

2-பாடபாக்நி போன்றவரும் –
அவர்களுடைய பொங்குதலை அடக்கி ஒழித்தவர்
படபா –என்று பெண் குதிரைக்கு பெயர்
கடலின் இடையிலே ஒரு பெண் குதிரை இருப்பதையும்
அதன் முகத்திலே நெருப்பு ஒரு காலும் அவியாது இருப்பதையும்
மழை நீர் முதலியவற்றால் கடல் பொங்காத படி
அதிகமாய் வரும் நீரை அது உறிஞ்சி நிற்பதாகவும்
அதுவே பிரளய காலத்துக் கடலில் நின்றும் வெளிப்பட்டு
உலகங்களை எரித்து அளிப்பதாகவும்
புராணங்கள் கூறும் –

3-ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ –
ஸ்ரீ ரங்க நாதனுடைய
திருவடித் தாமரைகளிலே
பரம பக்தி யுக்தரும் –

4-ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ-
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள
திரு மா மணி மண்டபத்தைச் சேரும்
வழியைத் தந்து அருள்பவரும் –

5-ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ –
யதிகளுள் மிகச் சிறந்தவருமான
எம்பெருமானார்
சர்வ உத்கர்ஷ சாலியாக விளங்கா நின்றார்

தென்னரங்கன் கழல் சென்னி வைத்து
நீசச் சமயங்களை நீக்கி
அடியார்க்கு உஜ்ஜீவன உபாயம் காட்டி
அருளா நின்ற எம்பெருமானார்
சகல வைபவங்களும் பொலிய வாழ்ந்து அருளா நின்றார் என்றது ஆயிற்று –

—————

கோவில் வரலாறு : தொண்டைமான் எனும் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன்
முதன் முதலாக கோவில், பிரகாரம் கட்டி தினசரி வழிபாட்டிற்கு வழிசெய்தான் எனக் கூறப்படுகிறது.
அவனைத் தொடர்ந்து பல சோழ மன்னர்கள் பல சேவைகளை செய்துள்ளனர்.
ஆனால் இன்றுள்ள வளங்களில் பெரும்பாலானவை விஜயநகர பேரரசுக் காலத்தில் வந்தவை.
கிருஷ்ணதேவராயர் இக்கோவிலுக்கு பலவசதிகளை செய்து கொடுத்து எக்கச்சக்கமான தங்க வைர ஆபரணங்களையும் பரிசளித்தார்.

1843லிருந்து 1933 வரை ஆங்கிலேய ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் கோவில் நிர்வாகம்
ஹதிராம்ஜி மடத்தை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது.
1932-ல் மதராஸ் அரசு பொறுப்பேற்றதுடன் தனி தேவஸ்தானம் அமைத்து பொறுப்பை அதன் வசமளித்தது.
1933-ல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் உதயமானது.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அலர் மேல் மங்கா சமேத ஸ்ரீ திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கடத்தந்தாதி –81-100-

February 21, 2022

வந்தித்து இருக்கு மறை போற்றும் வேங்கட வாண மலர்
உந்தித் திருக் குங்குமம் அணி மார்ப உள் வஞ்சனையும்
புந்தித் திருக்கும் வெகுளியும் காமமும் பொய்யும் விட்டுச்
சிந்தித் திருக்குமது எக்காலம் யான் உன் திருவடியே –81-

(இ – ள்.) இருக்கு மறை – ருக்முதலிய வேதங்கள்,
வந்தித்து போற்று – வணங்கித் துதிக்கப்பெற்ற,
வேங்கட வாண – திருவேங்கடமலையில் வாழ்பவனே!
மலர் உந்தி திரு குங்குமம் அணி மார்ப – திருநாபித்தாமரைமலரையும் திருமகளோடு குங்குமச்சாந்தை யணிந்த திருமார்பையு முடையவனே! –
யான் -, உள் வஞ்சனையும் – மனத்திலடங்கிய வஞ்சனைகளையும்,
புந்தி திருக்கும் – அறிவின் மாறுபாட்டையும்,
வெகுளியும் – கோபத்தையும்,
காமமும் – சிற்றின்பவிருப்பத்தையும்.
பொய்யும் – பொய்யையும்,
விட்டு – ஒழித்து.
உன் திரு அடி சிந்தித்திருக்குமது – உனது திருவடிகளைத் தியானித்திருப்பது,
எ காலம் – எப்பொழுதோ? (எ – று.)

————-

திருவடி வைக்கப் புடவி பற்றாது அண்டம் சென்னி முட்டும்
கருவடிவைக் கலந்து ஆற்றா எண் திக்கும் கடல் மண் கொள்வான்
பொரு வடிவைக் கனல் ஆழிப் பிரான் புனல் ஆழி கட்டப்
பெரு வடிவைக் கண்ட அப்பன் எவ்வாறு அடி பேர்ப்பதுவே –82-

(இ – ள்.) பொரு – போர்செய்கின்ற,
வடி – (பலவகைப்படைக்கலங்களில்) தேர்ந்தெடுத்த,
வை – கூர்மையான,
கனல் ஆழி – அக்கினியைச்சொரிகிற சக்கராயுதத்தையுடைய,
பிரான் – தலைவனும்,
ஆழி கட்ட – சமுத்திரத்தை அணைகட்டிக் கடப்பதற்காக,
புனல் பெரு வடிவை கண்ட – (அக்கடலின்) நீர்மிக்கவற்றுதலை அடையும்படி செய்த,
அப்பன் – ஸ்வாமியுமான திருவேங்கடமுடையான், (திரிவிக்கிரமாவதாரங்கொண்ட காலத்து),
திருஅடி வைக்க புடவி பற்றாது – (அப்பெருமான் தனது) ஒரு திருவடியை வைப்பதற்கே பூமிமுழுவதும் இடம்போதா தாயிற்று;
சென்னி அண்டம் முட்டும் – (அப்பெருமானது) திருமுடியோ அண்டகோளத்தின் மேன் முகட்டைத் தாக்கியது;
எண் திக்கும் கரு வடிவை கலந்து ஆற்றா – எட்டுத்திக்குக்களும் (அவனது) கருநிறமான திருமேனி பொருந்துதற்கு இடம்போதாவாயின;
(இங்ஙனம் பெருவடிவனான அத்திருமால்), கடல் மண் கொள்வான் – கடல்சூழ்ந்த நிலவுலகத்தில் (மூன்றடியிடம்) அளந்துகொள்வதற்காக,
அடி பேர்ப்பது – திருவடிகளை எடுத்துவைப்பது, எ ஆறு – எப்படியோ?

அளத்தலாவது ஒருவன் நின்றவிடமொழிய மற்றோரிடத்தில் மாறிக் காலிடுத லாதலால், அங்ஙனம் அடிமாறியிட
வொண்ணாதபடி நிலவுலகமுழுவதும் ஓரடிக்குள்ளே யடங்குமாறு பெருவடிவுடையவன் மூன்றடி நிலத்தை அளந்து
கொள்ளுதற்கு இடம் ஏது? எனத் திரிவிக்கிரமாவதாரஞ்செய்த திருமாலினது வடிவத்தின் பெருமையை வியந்து கூறியவாறாம்;
பெருமையணி. திருமால் வஞ்சனையால் மாவலியை மூன்றடிநிலம்வேண்டி அதுகொடுக்க அவன் இசைந்தவுடன்
உலகங்களை அளந்துகொண்டன னென்று ஒரு சாரார் கூறும் ஆக்ஷேபத்துக்கு ஒருசமாதானம் இதில் தோன்றும்;
சரீரம் இயல்பிலே வளருந்தன்மையதாதலால், முந்தியவடிவையேகொண்டு அளந்தில னென்று குறைகூறுதல் அடா தென்க.
கலந்து = கலக்க; எச்சத்திரிபு. கொள்வான் – எச்சம். ஈற்றடியில், வடிவு – வடிதல்; தொழிற்பெயர்.

————-

பேர் ஆனைக் கோட்டினைப் பேர்த்தானை வேங்கடம் பேணும் துழாய்த்
தாரானை போதானைத் தந்தானை எந்தையை சாடு இறப் பாய்ந்து
ஊர் ஆனை மேய்த்து புள் ஊர்ந்தானை பஞ்சவர்க்கு உய்த்து நின்ற
தேரானை நான் மறை தேர்ந்தானை தேரும் நும் தீது அறுமே –83-

(இ – ள்.) பேர் – பெரிய, ஆனை – (குவலயாபீடமென்னும்) யானையினது,
கோட்டினை – தந்தங்களை,
பேர்த்தானை – பெயர்த்துஎடுத்தவனும், –
வேங்கடம் பேணும் – திருவேங்கடமலையை விரும்பித் தங்குமிடமாகக் கொண்ட,
துழாய் தாரானை – திருத்துழாய்மாலையையுடையவனும், –
போதனை தந்தானை – பிரமனைப் படைத்தவனும், –
எந்தையை – எமது தலைவனும், –
சாடு இற பாய்ந்து – சகடாசுரன் முறியும்படி தாவியுதைத்து,
ஊர் ஆனை மேய்த்து – ஊரிலுள்ள பசுக்களை மேய்த்து,
புள் ஊர்ந்தானை – கருடப்பறவையை வாகனமாகக்கொண்டு ஏறிநடத்தியவனும், –
பஞ்சவர்க்கு – பஞ்சபாண்டவரில் ஒருவனான அருச்சுனனுக்கு,
உய்த்து நின்ற – செலுத்திநின்ற,
தேரானை – தேரையுடையவனும், –
நால் மறை தேர்ந்தானை – நான்கு வேதங்களாலும் ஆராயப்பட்டவனுமான திருமாலை,
தேரும் – (முழுமுதற்கடவுளாக) அறிந்து தியானித்துத் துதியுங்கள்; (அங்ஙனஞ் செய்தால்),
நும் தீது அறும் – உங்கள் துன்பங்களெல்லாம் நீங்கும்; (எ – று.)

ஊர் – இங்குத் திருவாய்ப்பாடி. பஞ்சவர்க்கு உய்த்துநின்ற தேரான் – அருச்சுனனுக்குச் சாரதியாய்நின்று தேரோட்டியவன்.
பஞ்சவர் – ஐவர்; இது, ஐந்து என்னும் பொருள்தரும் பஞ்ச என்ற வடமொழியெண்ணுப்பெயரடியாப் பிறந்த பெயர்;
இங்கே, பாண்டவர்க்கு, தொகைக்குறிப்பு. இப்பொதுப் பெயர், சிறப்புப்பொருளின் மேலதாய்,
இங்கு அருச்சுனனைக் குறித்தது. ‘தேறும்’ என்பதும் பாடம்.

இச்செய்யுளின் அடிகளில், பேரானை, பேர்த்தானை, தாரானை, தந்தானை, ஊரானை, ஊர்ந்தானை,
தேரானை தேர்ந்தானை என்பவை எதிர்மறையும் உடன்பாடுமாய் ஒன்றுக்கொன்று மாறுபடுவதாக மேல்நோக்கில்தோன்றி,
பொருளையுணருமிடத்து வேறுவகையாப்பொருள்பட்டு மாறுபாடின்றிமுடிதலால், முரண்விளைந்தழிவணி;
வடநூலார் விரோதாபாஸாலங்காரமென்பர். இது, சொல்லால்வந்த முரண்தொடை;
“சொல்லினும் பொருளினும் முரணுதல் முரணே” என்றது காண்க.
அழகரந்தாதியின் 83 – ஆஞ்செய்யுளும் இத்தன்மையதாம்; அது வருமாறு :-
“தொலைந்தானை யோதுந் தொலையானை யன்னை சொல்லான் மகுடங்,
கலைந்தானை ஞானக் கலையானை யாய்ச்சி கலைத்தொட்டிலோ,
டலைந்தானைப் பாலினலையானை வாணன்கையற்றுவிழ,
மலைந்தானைச் சோலைமலையானை வாழ்த்தென் மட நெஞ்சமே.”
“மாத்துளவத், தாரானை வேட்கை யெலாந் தந்தானை மும்மதமும், வாரானை யன்றழைக்க வந்தானைக் –
காரான, மெய்யானை யன்பருக்கு மெய்த்தானைக் கண்கைகால், செய்யானை வேலையணைசெய்தானை –
வையமெலாம், பெற்றானைக்காணப்பெறாதானைக் கன்மழைக்குக், கற்றானைக்காத்ததொரு கல்லானை –
யற்றார்க்கு, வாய்ந்தானைச் செம்பவளவாயானை மாமுடியப், பாய்ந்தானை யாடரவப்பாயானை” என்ற
திருநறையூர் நம்பிமேகவிடு தூதினடிகளையுங் காண்க.

————–

அறுகு ஊடு கங்கை தரித்தான் அயன் அழைத்தாலும் இச்சை
அறு கூடு மால் அடியார் அடிக்கே அப்பன் வேங்கடவன்
மறுகு ஊடு மாதர் ஏறி பூண் எறிக்கும் மதில் அரங்கன்
மறு கூடு நம்மை மருவாமல் வாழ்விப்பன் மா மனமே –84-

(இ – ள்.) மா மனமே – சிறந்த (எனது) மனமே! –
அறுகு ஊடு கங்கை தரித்தான் – (முடியிற்சூடிய) அறுகம்புற்களினிடையே கங்காநதியைத் தரித்தவனான சிவனும்,
அயன் – பிரமனும்,
அழைத்தாலும் – (வலியவந்து உன்னைத் தம்மிடத்துக்கு) அழைத்தாலும்,
இச்சை அறு – (அவர்கள்பக்கல்) விருப்பங்கொள்ளாதொழிவாய்:
மால் அடியார் அடிக்கே கூடு – திருமாலினது அடியார்களின்திருவடிகளிலேயே சேர்வாய்: (அங்ஙனஞ் சேர்ந்தால்), –
ஊடு மாதர் எறி பூண் மறுகு எறிக்கும் மதில் அரங்கன் – (தம்கணவரோடு) பிணங்கிய மகளிர் கழற்றியெறிந்த
ஆபரணங்கள் (எடுப்பவரில்லாமல்) வீதிகளிலே (கிடந்து) ஒளிவீசப்பெற்றதும் மதிள்கள் சூழ்ந்ததுமான ஸ்ரீரங்கத்தை யுடையவ னாகிய,
அப்பன் வேங்கடவன் – ஸ்வாமியான திருவேங்கட முடையான்,
மறு கூடு மருவாமல் நம்மை வாழ்விப்பன் – (இவ்வுடம்புநீங்கிய பின்) மற்றோருடம்பிற்சேராதபடி நம்மை வாழச்செய்வன்
(மீண்டும் பிறப்பில்லாதபடி நமக்கு முத்திதந்து அதில் நம்மை அழிவின்றிப் பேரின்பநுகர்ந்து வாழ்ந்திருக்கச்செய்வன்); (எ – று.)

சிவபிரான் பிரியங்கொண்டு சூடுபவற்றில் அறுகம்புல்லும் ஒன்றாதலால், “அறுகூடு தரித்தான்” என்றார்;
சிவபூசைக்கு உரிய பத்திரபுஷ்பாதிகளில் அறுகம்புல்லும் ஒன்றாதல் காண்க.
இச்சா என்ற வடசொல், இச்சையென விகாரப்பட்டது. அடிக்கு – உருபுமயக்கம்.
ஊடலாவது – இன்பநிலையில் அவ்வின்பத்தை மிகுவிக்குமாறு ஆடவர்மீது மகளிர் கோபித்தல்; இது, பிரணயகலக மெனப்படும்.
செல்வம் நிரம்பிய மகளிர் அங்ஙனம் கோபங் கொள்ளுகின்றபொழுது தாம் அணிந்துள்ள ஆபரணங்களைக் கழற்றித்
தெருவில் எறிதலையும், அனைவரும் செல்வவான்களாதலால் அங்ஙனம் பிறர்கழித் தெறிந்தவற்றை எவரும்
விரும்பியெடுத்துக் கொள்ளாராக அவை அங்கங்கேயே கிடந்து விளங்குதலையும்,
“கொல்லுலைவேற்கணல்லார் கொழுநரோடூடி நீத்த,
வில்லுமிழ்கலன்கள்யாவும் மிளிர்சுடரெறிக்குமாற்றால்,
எல்லியும் பகலுந் தோன்றா திமையவருலகமேய்க்கும்,
மல்லன் மாவிந்தமென்னும் வளநகர்” என்ற நைடதத்துங் காண்க.
ஊடுமாதர் – வினைத்தொகை. பூணப்படுவது பூண் எனக்காரணக்குறி.
“செம்பொன் மதிலேழுடுத்த திருவரங்கப் பெருங்கோயில்” என்றபடி ஏழுமதில்கள் சூழப்பெற்ற தாதலால்,
அச்சிறப்புத் தோன்ற, “மதிலரங்கம்” என்றார்.
பறவைதங்குதற்கு இடமாகிற கூடு போல உயிர்தங்குமிட மாதலால், உடல், ‘கூடு’ எனப்பட்டது; உவமையாகு பெயர்;
“கூடுவிட்டிங், காவிதான்போயினபின்பு” என்ற ஒளவையார்பாடலையுங் காண்க.
பந்தமோக்ஷங்களுக்கு மனம் காரணமாதலால், ‘மாமனம்’ எனப்பட்டது;
இனி, மனத்தைத் தம்வசப்படுத்துதற் பொருட்டு அதனை ‘மாமனமே’ எனக் கொண்டாடி விளித்தன ரெனினுமாம். மூன்றாமடி – வீறுகோளணி.

தேவதாந்தரபஜநம் பந்தத்துக்கே காரணமாதலால், அவ்வழியிற்செல்வதைவிட்டு மோக்ஷத்தை யடையுமாறு
பாகவதபஜநஞ் செய்வா யென்று தம்மனத்துக்கு அறிவுறுத்தினார்.

இச்செய்யுளில் முன்னிரண்டடிகளிலும், பின்னிரண்டடிகளிலும் தனித்தனி யமகம் காண்க; மேல் 98 – ஆஞ் செய்யுளும் இது.

—–

மாமன் அங்காந்த வல் வாய்ப் புள்ளை ஏவமடித்து பித்தன்
நா மனம் காந்த அன்று ஓட எய்தான் நறும் பூங்கொடிக்குத்
தாமன் அம் காந்தன் திருவேங்கடத்து எந்தை தாள்களில் என்
தீ மனம் காந்தம் கவர் ஊசி போல் என்று சேர்வதுவே –85-

(இ – ள்.) மாமன் – மாமனான கம்சன்,
அங்காந்த வல் வாய் புள்ளை ஏவ – திறந்த வலியவாயையுடைய பறவையை (பகாசுரனை) அனுப்ப,
மடித்து -(அதனைக்) கொன்று,
பித்தன் நா மன் அம் காந்த அன்று ஓட எய்தோன் – சிவன் (தனது) நாவிற்பொருந்திய நீர் வற்றுமாறு அக்காலத்தில்
(பாணாசுரயுத்தத்தில்) ஓடும்படி அம்பெய்தவனும்,
நறும் பூ கொடிக்கு தாமன் அம் காந்தன் – பரிமளமுள்ள தாமரைமலரில் வாழ்கின்ற கொடிபோன்ற பெண்ணுக்கு
(திருமகளுக்கு) இருப்பிடமானவனும் அழகிய கணவனுமான,
திருவேங்கடத்து எந்தை – திருவேங்கடமலையிலெழுந்தருளியிருக்கிற எம்பெருமானுடைய,
தாள்களில் – திருவடிகளில்,
என் தீ மனம் – எனது கொடியமனமானது,
காந்தம் கவர் ஊசிபோல் சேர்வது – காந்தத்தினாற் கவரப்பட்ட ஊசிபோலச் சேர்ந்துபற்றுவது,
என்று – எப்பொழுதோ? (எ – று.)

மாமன் – இங்கே, தாயுடன்பிறந்தவன். மன் அம் – வினைத்தொகை. நாமன்அம் காந்த – நாஉலர.
கொடி – உவமையாகுபெயர். பூங்கொடி – மலர்க்கொடிபோன்றவ ளெனினுமாம்.
திருமகளைத் திருமார்பில் வைத்துள்ளதனால், “நறும்பூங்கொடிக்குத்தாமன்” எனப்பட்டான்.
ஊசி – ஸூசீ என்ற வடசொல்லின் விகாரம். எந்தைதாள்களில் என்தீமனம் காந்தங்கவரூசி போற்சேர்வது –
“இரும்பைக் காந்த மிழுக்கின்ற வாறெனைத், திரும்பிப் பார்க்கவொட்டாமல்” திருவடிக், கரும்பைத்தந்து” என்பர் பிறரும்.
காந்தம். இரும்பைக் கவர்ந்து இழுத்தல், வெளிப்படை.

—————

சேரும் மறுக்கமும் நோயும் மரணமும் தீ வினையின்
வேரும் அறுக்க விரும்பி நிற்பீர் வட வேங்கடத்தே
வாரும் மறுக்க அறியான் எவரையும் வாழ அருள்
கூரும் மறுக் கமலை அணி மார்பன் கைக் கோதண்டனே –86–

(இ – ள்.) சேரும் – (கருமகதியால் வந்து) அடைகின்ற,
மறுக்கமும் – மனக்குழப்பங்களையும்,
நோயும் – வியாதிகளையும்,
மரணமும் – மரணத்தையும்,
தீவினையின் வேரும் – கொடியகருமத்தின்மூலத்தையும்,
அறுக்க – ஒழிப்பதற்கு,
விரும்பி நிற்பீர் – விருப்பங்கொண்டு நிற்பவர்களே! (நீங்கள்),
வடவேங்கடத்தே வாரும் – வடக்கின்கணுள்ள திருவேங்கடமலையினிடத்தே வாருங்கள்: (அங்கு எழுந்தருளியிருக்கிற),
மறு கமலை அணி மார்பன் – (ஸ்ரீவத்ஸமென்னும்) மறுவையும் இலக்குமியையுங் கொண்ட (வலத்திரு) மார்பை யுடையவனும்,
கை கோதண்டன் – கையில் வில்லை யுடையவனுமான திருமால்,
எவரையும் மறுக்க அறியான் – (தன்னைச் சரணமடைந்தவர்) எத்தன்மையராயினும் அவரை விலக்க அறியான்:
(எவரையும்) வாழ அருள்கூரும் – தனது அடியவரனைவரையும் இனிதுவாழுமாறு கருணைபுரிவன்: (எ – று.)

அடியார்களின் பிழைகளைப் பாராட்டாது பொறுத்து ஆட்கொண்டருளுதற்குப் புருஷகாரமாகிற திருமகள்
எப்பொழுதும் விட்டுப்பிரியாமல் உடனிருக்கப்பெற்றவ னாதலால் அனைவரையும் மறாது அருள்செய்வ னென்பது தோன்ற,
‘மறுக்கவறியான் எவரையும் வாழ அருள்கூரும் கமலையணி மார்பன்’ என்றார்.
இடையிலுள்ள ‘எவரையும்’ என்றதை மத்திமதீபமாகக் கொண்டு, முன்நின்ற ‘மறுக்கவறியான்’ என்றதனோடும்,
பின்நிற்கும் ‘வாழவருள்கூரும்’ என்பதனோடுங் கூட்டுக. மறுக்கம் – தொழிற்பெயர்.

————

கோதண்டத்தான் நந்தன் வாள் கதை நேமியன் கோல வட
வேதண்டத்தான் அத்தன் இன் இசையான் மண்ணும் விண்ணும் உய்ய
மூதண்டத் தானத்து அவதரித்தான் எனில் முத்தி வினைத்
தீது அண்டத்தான் அத்தனு எடுத்தான் எனில் தீ நரகே –87-

(இ – ள்.) கோதண்டத்தான் – வில்லையுடையவனும்,
நத்தன் – சங்கத்தையுடையவனும்,
வாள்கதைநேமியன் – வாளையும் கதையையும் சக்கரத்தையுமுடையவனும்,
கோலம் வட வேதண்டத்தான் – அழகிய வடமலையான திருவேங்கடத்தை இடமாகவுடையவனும்,
அத்தன் – (எல்லாவுயிர்கட்குந்) தலைவனும்,
இன் இசையான் – இனிமையான வேய்ங்குழலினிசையையுடையவனுமான திருமால்,
மண்ணும் விண்ணும் உய்ய – நிலவுலகத்திலுள்ள மனிதர்முதலியோரும் மேலுலகத்திலுள்ள தேவர்முதலியோரும் துன்பந்தவிர்ந்து வாழ்தற்காக,
மூது அண்டம் தானத்து – பழமையான அண்டத்துக்கு உட்பட்ட இடங்களில்,
அவதரித்தான் – திருவவதாரஞ்செய்தான்,
எனில் – என்று (மெய்ம்மையுணர்ந்து) கூறினால்,
முத்தி – பரமபதங் கிடைக்கும்; (அத்திருமால்),
வினை தீது அண்ட – ஊழ்வினையின்தீமை வந்து தொடர,
தான் அ தனு எடுத்தான் – தான் அந்தந்தத்தேகத்தை யெடுத்துப் பிறந்தான்,
எனில் – என்று (உண்மையுணராது) கூறினால்
தீ நரகே – கொடியநரகமே நேரும்: (எ – று.)

ஜீவாத்மாக்கள் தேவ திர்யங் மநுஷ்ய ஸ்தாவர ரூபங்களாய்ப் பிறப்பது போலக் கருமவசத்தினா லன்றி,
பரமாத்மா உபேந்திர மத்ஸ்ய கூர்மாதி அவதாரங்கள்செய்வது துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலநத்தின்பொருட்டும்
தருமத்தை நிலைநிறுத்துதற்பொருட்டும் அப்பெருமான்கொண்ட இச்சையினாலேயே யாகு மென்ற இவ்வுண்மையை உணர்தல்,
அவதாரரஹஸ்யஜ்ஞாந மெனப்படும். இந்தஞானத்தையுடையராய்ப் பகவதவதாரங்களை அவனது சங்கல்பத்தினாலாயவை
யென்றுகொண்டு அப்பெருமானது அருள் ஆற்றல் அடியவர்க்கெளிமை முதலிய திருக்கல்யாணகுணங்களில் ஈடுபட்டுத்
துதிப்பவர் முத்தியையடைவர்:
அங்ஙனமன்றி, அவ்வவதாரங்களைக் கருமவசத்தாலாயவையென்றுகொண்டு இகழ்பவர் நரகமடைவர் என்பது, கருத்து.
“தராதலத்து, மீனவதாரமுதலானவை வினையின்றி யிச்சை, யானவதாரறிவா ரவரே முத்தராமவரே” என்பர் அழகரந்தாதியிலும்.

திருமால் பஞ்சாயுதங்களை யுடைமையை ‘கோதண்டத்தான் நத்தன்வாள் கதை நேமியன்’ என்று குறித்தார்.
வேதண்டம் – மலை. இன்இசையான் – கேட்டற்கு இனிய புகழையுடையவ னெனினுமாம். மண், விண் – இடவாகுபெயர்.

————

நரகம் அடங்கலும் சென்று எய்த்த பாவிக்கு நாரியர் மேல்
விரகம் அடங்க மெய்ஞ்ஞானம் வெளி செய வீடு பெற
உரகம் மடங்க நடித்த பொற்றாள் இன்று என் உச்சி வைப்பாய்
வரகமடம் கயல் ஆனாய் வடமலை மாதவனே –88–

(இ – ள்.) வரம் கமடம் கயல் ஆனாய் – சிறந்த ஆமையும் மீனுமாய்த் திருவவதரித்தவனே!
வடமலை மாதவனே – திருவேங்கடமலையி லெழுந்தருளியிருக்கிற திருமாலே! –
நரகம் அடங்கலும் சென்று எய்த்த பாவிக்கு – (இதுவரையிலும் பலபிறப்புக்கள்பிறந்து பலதீவினைகளைச்செய்து) நரகங்களனைத்திலும் போய் வருந்திய பாவியான எனக்கு, நாரியர்மேல் விரகம் அடங்க – மகளிர்விஷயமாக உண்டாகின்ற ஆசைநோய் தணியவும்,
மெய் ஞானம் வெளி செய – தத்துவஞானம் தோன்றவும்,
வீடு பெற – பரமபதம் கிடைக்கவும்,
உரகம் மடங்க நடித்த பொன் தாள் இன்று என் உச்சி வைப்பாய் – (காளியனென்னும்) பாம்பு தலைமடங்கும்படி
(அதன்முடியின்மேலேறி) நடனஞ்செய்த (நினது) அழகியதிருவடிகளை இப்பொழுதே எனது சிரசின்மேல் வைத்தருள்வாய்: (எ – று.)

அடங்கலும் என்றது, எஞ்சாமை குறித்தது, எய்த்தல் – இளைத்தல், மெலிதல். பாவிக்கு – தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி.
பாபீ, நாரீ, விரஹம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. பாவி – தீவினைசெய்தவன்.
மெய்ஞ்ஞானம் – பிறப்புவீடுகளையும் அவற்றின்காரணங்களையும் பரமாத்மஜீவாத்மஸ்வரூபங்களையும்
விபரீதஐயங்களாலன்றி உண்மையால் உணர்தல்.
உரகம் என்ற வடசொல் – மார்பினால் (ஊர்ந்து) செல்வதென்று பொருள்படும்.
பொன் தாள் – பொன்னினாலாகிய கழலென்னும் அணியை அணிந்த திருவடி யெனினுமாம்:
இப்பொருளில், பொன் – கருவியாகுபெயர். வர கமடம் – வடமொழித்தொடர்.

கண்ணன் காளியனுடைய முடியின்மே லேறி, ஐந்துதலைகளையுடைய அந்நாகம் எந்தெந்தப் படத்தைத் தூக்குகின்றதோ
அந்தந்தப்படத்தைத் துவைத்து அழுத்திநின்று அப்பாம்பின்வலிமையை அடக்கி அதனை மூர்ச்சையடையச்செய்கையில்,
பலவகைநடனத்திறங்களைச் செய்துகாட் டியமை தோன்ற, ‘உரகமடங்க நடித்த பொற்றாள்’ என்றார்.
அத்தன்மையை, ‘ஸ்வாமி, நர்த்தநமுறையில் வட்டமாய்ச்சுற்றுவது முதலான பிராந்தி கதிகளினாலும்,
ஒரு பக்கத்திலிருந்து மற்றொருபக்கத்துக்குப் போவது முதலிய ரேசககதிகளினாலும்,
பாதத்தை முன் நீட்டிவைப்பதாகிய தண்ட பாதகதியினாலும், அந்தச்சர்ப்பராசன் நசுங்கி மிகுந்த உதிரத்தையுங் கக்கினான்’ என்ற
விஷ்ணுபுராணவாக்கியத்தால் நன்கு அறிக.
“கானகமாமடுவிற் காளியனுச்சியிலே, தூயநடம்பயிலுஞ் சுந்தர,”
“காளியன்பொய்கை கலங்கப்பாய்ந்திட்டவன், நீண்டமுடியைந்திலு நின்று நடஞ்செய்து” என்ற
பெரியாழ்வாரருளிச்செயல்களையுங் காண்க.

முன்னொருகாலத்திற் பிரமதேவன் கண்துயில்கையில், சோமகனென்னும்அசுரன் வேதங்களையெல்லாங் கவர்ந்துகொண்டு
கடலினுள் மறைந்து செல்ல, பிரமன்முதலிய தேவர்களின் வேண்டுகோளினால் திருமால் ஒரு பெருமீனாகத்திருவவதரித்துக்
கடலினுட்புக்கு அவ்வசுரனைத் தேடிப் பிடித்துக் கொன்று, அவன்கவர்ந்துசென்ற வேதங்களை மீட்டுக் கொணர்ந்து கொடுத்தன னென்றும்;
திருப்பாற்கடல் கடைந்தபொழுது மத்தாகிய மந்தரகிரி கடலினுள்ளே சென்று அழுந்திவிடாதபடி திருமால் மகா கூர்ம ரூபத்தைத்
தரித்து அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தா னென்றும் கூறப்படுகின்ற வரலாறுகள்பற்றி,
‘வரகமடங் கயலானாய்’ என்றார். வர என்று தனியே எடுத்து, சிறந்தவனே யென்று கொள்ளினுமாம்; வரன் என்பதன் விளி.

————

மாதிரம் காதல் மனை வாழ்க்கை என்று எண்ணி வான் பொருட்டு
மாதிரம் காதம் பல உழல்வீர் இன்னும் மைந்தன் என்று ஓர்
மாது இரங்காத படி வணங்கீர் அரிமா வொடு கைம்
மா திரங்காது அமர் செய்கின்ற சேட மலையினையே –89-

(இ – ள்.) காதல் மனை வாழ்க்கை – விருப்பத்துக்குஇடமான மனையாளோடுகூடி இல்லத்துவாழ்தலை,
மா திரம் என்று எண்ணி – மிக்கநிலையுள்ளதென்று நினைத்து, (அந்தஇல்லறவாழ்வுக்கு உபயோகமாக,)
வான் பொருட்கு – மிக்க செல்வத்தை ஈட்டுதற்பொருட்டு,
மாதிரம் – திக்குக்கள்தோறும்,
பல காதம் வளைவீர் – அநேககாததூரம் சுற்றியலைபவர்களே! –
இன்னும் மைந்தன் என்று ஓர் மாது இரங்காதபடி – இன்னமும் (உங்களைப்) புத்திரனென்று ஒருபெண் அன்புசெய்யாதபடி
(இனியாயினும் பிறப்பற்று முத்திபெறுமாறு),
அரிமாவொடு கைம்மா திரங்காது அமர் செய்கின்ற சேடமலையனை வணங்கீர் – சிங்கங்களோடு யானைகள் பின்வாங்காமற்
போர் செய்யப்பெற்ற சேஷகிரியெனப்படுகிற திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானை வணங்குங்கள்; (எ – று.)

மீண்டும் பிறப்பில்லாதபடி யென்ற பொருளை ‘இன்னும்மைந்தனென்று ஓர்மாது இரங்காதபடி’ என்று
வேறுவகையாற் கூறினது, பிறிதினவிற்சியணி.
‘அரிமாவொடு கைம்மா திரங்காது அமர்செய்கின்ற’ என்றது, மலைவளங் கூறியவாறாம்.
கஜேந்திராழ்வானைப் பாதுகாத்தவனும் நரசிங்காவதாரஞ்செய்தவனுமான திருவேங்கட முடையானைச் சார்ந்து
அவனதருள் பெற்ற யானைக ளாதலால், சிங்கத்துக்கு அஞ்சுகின் றனவில்லை யென்க.

மஹாஸ்திரம், சேஷன் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. வான் – உரிச்சொல். வணங்கீர் – ஏவற்பன்மை.

————–

மலையின் அரக்கர் உடன்று எழுந்தார் என்று மா மறை நூல்
கலையினர் அக்கருடன் இந்திராதியர் காட்ட செய்யும்
கொலையினர் அக்கருடன் ஏறும் வேங்கடக் குன்றர் என்றால்
உலையின் அரக்கு அருள் தந்திலர் ஏனும் என் உள் அவர்க்கே –90-

(இ – ள்.) மா மறை நூல் கலையினர் அக்கர் உடன் – சிறந்தவேதசாஸ்திரங்களாகிய கல்வியில் தேர்ந்த பிரமதேவரும்
எலும்புமாலையைத்தரித்தவரான சிவபிரானு மாகிய இருமூர்த்திகளுடன்,
இந்திர ஆதியர் – இந்திரன் முதலிய தேவர்கள்,
மலையின் அரக்கர் உடன்று எழுந்தார் என்று காட்ட – “மலைகள்போல இராக்கதர்கள் உக்கிரங்கொண்டு ஓங்கினார்கள்” என்று சொல்லி முறையிட,
செய்யும் கொலையினர் – செய்த (அவ்விராக்கத) வதத்தையுடையவரான,
அ கருடன் ஏறும் வேங்கடம் குன்றர் – அந்தக்கருடனாகிய வாகனத்தின்மேல் ஏறியருள்கிற திருவேங்கடமலையை யுடையவர்,
என்றால் – என்றுசொன்னால்,
அருள் தந்திலர் ஏனும் என் உள் அவர்க்கு உலையின் அரக்கு – (அவர் என்பக்கல்) கருணைபுரியாராயினும்
அவர் விஷயத்தில் என்மனம் உலைக்களத்திலிட்ட அரக்காம் (நெகிழ்ந்துஉருகும்).

பகவத்விஷயத்தில் தமக்குஉள்ள பக்திமிகுதியா லாகும் நெஞ்சுருக்கத்தை இதில் வெளியிட்டார்.
எம்பெருமான் அருள்புரிந்தாலும் புரியாவிட்டாலும் அவன்திறத்தில் அன்புசெலுத்துதல் முமுக்ஷுக்களுக்கு
(முத்தி பெறவிரும்புவார்க்கு)க் கடமையாதல் காண்க.
இச்செய்யுளை, விரகவேதனையுற்ற தலைவியின் கூற்றாகவுங் கொள்ளலாம்.
அரக்கரெழுந்தாரென்று பிரமருத்திரருடன் இந்திராதியர் காட்ட –
“விதியொடு முனிவரும் விண்ணுளோர்களும், மதிவளர்சடைமுடிமழுவலாளனும்,
அதிசயமுட னுவந்தய லிருந்துழிக், தொள்வேலரக்கர்தங் கொடுமை கூறினார்” என்ற கம்பராமாயணங் களுக்கு –
தன்மையிற் இராவணன் முதலியோர். பிரமன் திருமாலினிடம் வேதசா என்ற வடசொற்கள் பிறர்க்கு வெளியிட்டதனால்,
அவனை, ‘மாமறைநூற்கலையினர்’ என்றார். அக்கர் – ருத்திராக்ஷமாலையையுடையவ ரெனினுமாம்.
கலையினர், அக்கர் – உயர்வுப்பன்மை. இனி, மா மறை நூல் கலையினர் அக்கருடன் என்பதற்கு –
சிறந்த வேதசாஸ்திரங்களில் வல்லவர்களான முனிவர்களும், யக்ஷர்களுமாகிய இவர்களோடு என்று உரைத்தலுமொன்று;
அவ்வுரைக்கு, யக்ஷ ரென்ற வடசொல் அக்கரெனச் சிதைந்த தென்க;
யசோதை = அசோதைஎன்பதுபோல. யக்ஷர் – பதினெட்டுத்தேவ கணங்களுள் ஒருசாரார். யக்ஷராஜனான குபேரனுக்கு
இராவணன் பகைவனானதனால், அரக்கரெழுச்சியை முறையிடுதற்கு இயக்கரும் உரியவராவர்.

“அக் கருடன்” எனச் சுட்டினது, பிரசித்தி பற்றி: அழகிய கருட னெனினுமாம். கருடன் – பக்ஷிராஜன்;
இவனுக்கு, வைஷ்ணவசம்பிரதாயத்தில் ‘பெரிய திருவடி’ என்று பெயர் வழங்கும்.

————-

தோழி தலைமகனை ஏதம் கூறி இரவு வரல் விலக்கல் –

உள்ளம் அஞ்சாய்வலியாய் வலியார்க்கும் உபாயம் வல்லாய்
கள்ளம் அஞ்சு ஆயுதம் கை வரும் ஆயினும் கங்கு லினில்
வெள்ள மஞ்சு ஆர் பொழில் வேங்கடக் குன்றினில் வீழ் அருவிப்
பள்ளம் அம்சாரல் வழி வரில் வாடும் இப்பாவையுமே –91–

(இ – ள்.) (நீ), உள்ளம் அஞ்சாய் – (எதற்கும்) மனம் அஞ்சுகின்றாயில்லை;
வலியாய் – வலிமையையுடையாய்;
வலியார்க்கும் உபாயம் வல்லாய் – வல்லமையுடையவர்க்கும் உபாயங்கற்பிக்கும்படி உபாயம்வல்லை;
கள்ளம் – களவும்,
அஞ்சு ஆயுதம் – பஞ்சாயுதங்களும்,
கைவரும் – (உனக்குப்) பழக்கமாயுள்ளன;
ஆயினும் -, கங்குலினில் – இரவிலே,
வெள்ளம் மஞ்சு ஆர் பொழில் வேங்கடம் குன்றினில் – வெள்ளமாகப் பொழிகின்ற மேகங்கள் தங்குகிற சோலைகளையுடைய திருவேங்கடமலையில்,
வீழ் அருவி பள்ளம் – விழுகிற அருவிப்பெருக்கையுடைய பள்ளங்களோடு கூடிய,
அம்சாரல் வழி – அழகிய மலைப்பக்கத்து வழியாக,
வரில் – (நீ) வந்தால்,
இ பாவையும் வாடும் – (நினதுவரவை மகிழ்ச்சியோடு எதிர்ப்பார்ப்பவளான) இப் பெண்ணும் வருந்துவள்; (எ – று.)

இயற்கைப்புணர்ச்சிபெற்ற தலைமகன் பின்பு தலைமகளினது தோழியி னுதவியைக்கொண்டு தலைமகளைப்
பகலிலும் இரவிலும் களவுநெறியில் ஏகாந்தத்திலே சந்தித்தல் இயல்பு; அது, பகற்குறி இரவுக்குறி எனப்படும்.
தலைமகனது வேண்டுகோளின்படி ஒருநாள் இரவிற் குறிப்பிட்டதொரு சோலையினிடத்தே
அத்தலைமகனையுந் தலைமகளையுஞ் சந்திக்கச்செய்த தோழி, பின்பும் அக்களவொழுக்கத்தையே வேண்டிய தலைமகனுக்கு,
அவன் வரும்நெறியின் அருமையையும், அது கருதித் தாங்கள் அஞ்சுதலையுங்குறித்து
“நீ எந்த இடத்திலும் எந்தப்பொழுதிலும் அஞ்சாது வரக்கூடிய தேகபலம் மநோபலம் தந்திரம் வஞ்சனை படைக்கலத்
தேர்ச்சி இவற்றையுடையாயாயினும், நின்வரவு எங்கட்குத் துன்பமாகத் தோன்றுதலால்,
இனி இவ்விருளிடை நீ இங்ஙனம் வரற்பாலையல்லை’ என்று கூறி விலக்குதல், இச்செய்யுளிற் குறித்த அகப்பொருள் துறையாம்;
இது, ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவியின்பாற்படும்; (ஆறு – வழி, கிளவி – பேச்சு:)
தலைவன் வரும் வழி மிகவும் இன்னாது, நீருடையது, கல்லுடையது, முள்ளுடையது, ஏற்றிழிவுடையது,
கள்ளர் புலி கரடி யானை பாம்பு முதலிய கொடிய பிராணிகளை யுடையது என்று கவலுங் கவற்சியாற் சொல்லுவ தென்க.
இதில், மெய்ப்பாடு – அச்சம். இதன் பயன் – வெளிப்படையாகவந்து மணஞ்செய்துகொள்ளுதலை வற்புறுத்துதல்.
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்ற ஐவகைநிலங்களுள் மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சியா மென்பதும்,
“புணர்தல் நறுங்குறிஞ்சி” என்றபடி புணர்ச்சி குறிஞ்சித்திணைக்குஉரிய பொரு ளென்பதும்,
“குறிஞ்சி, கூதிர் யாம மென்மனார் புலவர்” என்ற படி பெரும்பொழுதினுட் சரத்காலமும் சிறுபொழுதினுள்
நள்ளிரவும் குறிஞ்சிக்கு உரிய கால மென்பதும் அறியத்தக்கன.
“துறைமதியாம லிக்கான்யாறுநீந்திச் சுரங்கடத்தல்,
நிறைமதியாளர்க் கொழுக்கமன்றால் நெடு மாலரங்கத்,
திறைமதியாவருமாராவமிர்தன்ன விந்தநுதற்,
குறைமதியாள் பொருட்டாற் கங்குல்வார லெங்கொற்றவனே” என்ற திருவரங்கக்கலம் பகச்செய்யுளையுங் காண்க.

சாரல் – மலையைச் சார்ந்தது; மலைப்பக்கம்: தொழிலாகு பெயர் ‘இப்பாவை’ என்றது, தலைமகளை;
உம்மையால், தோழி தான்வாடுதலையும் உணர்த்தினாளாம்.

அஞ்சாமை, வலிமை, தந்திரம், மாயை, ஐம்படை இவற்றையுடைமையால் எவ்வகைச்செயலையுஞ் செய்ய
வல்லவனான சர்வேசுவரன், இருள்போலப் பொருள்களை உள்ளபடி எளிதிற் காணவொண்ணாது மறைப்பதான
மாயையின் பிரசாரத்தையுடைய இந்த இருள்தருமாஞாலத்திலே ஐயங்கார் வாழும்பொழுது
அவரது நெஞ்சென்னும் உட்கண்ணுக்கு ஒரோசமயத்து இலக்காகி மறைய, நிரந்தராநுபவத்திலே பிரியமுடையரான ஐயங்கார்,
அவ்வளவிலே திருப்திப்படாததோடு, பொங்கும்பரிவுடைய பெரியாழ்வார்போல, எம்பெருமானுடைய ஸர்வசக்தித்வம் முதலிய
திவ்வியகுணங்களைக் கருதுதற்குமுன்னே எதிர்ப்பட்ட சௌந்தர்ய சௌகுமார்யங்களில் ஈடுபட்டு,
‘காலாதீதமான வைகுண்டத்திலேயிருக்கின்ற இவ்வரும்பொருள் காலம் நடையாடப்பெற்ற இவ்வுலகத்தில்வந்து
புலனாதலால் இதற்கு என்ன தீங்குவருமோ?’ என்று அதிகமானபயசங்கை கொண்டவராக,
அந்த அதிசங்கையை ஐயங்காரது அன்பர்கள் எம்பெருமான் பக்கல்விண்ணப்பஞ்செய்து, இனி இவர்க்கு
இவ்வகைக்கலக்கமுண்டாகாதபடி இவரைக் காலாதீதமான வைகுண்டத்திற் சேர்த்துக்கொள்ளவேண்டு மென்று
விண்ணப்பஞ்செய்தல், இதற்கு உள்ளுறைபொருள். விவரம் கேட்டுணர்க.
இரணியன் இராவணன் முதலியோர் எவ்வளவோ சாமர்த்தியமாக வேண்டிப்பெற்ற வரங்களெல்லாம் ஒவ்வொருவகையால்
ஒதுங்கும்படி சூழ்ச்சி செய்து அவர்களையழித்தமையும். துரியோதனன் முதலியோர் செய்த அளவிறந்தசூழ்ச்சிகட் கெல்லாம்
மேம்பட்ட சூழ்ச்சிசெய்து அவர்களைத்தொலைத்தமையும் பற்றி, ‘வலியார்க்கு முபாயம் வல்லாய்’ என்றார்.

————–

பாவை இரங்கும் அசோதைக்கு முத்து பதுமச் செல்விக்கு
ஏவை இரண்டு அன்ன கண்மணி நீலம் இடு சரணப்
பூவை இரந்தவர்க்கு இன்ப வளம் புல் அசுரர்க்கு என்றும்
மா வையிரம் திரு வேங்கடத்து ஓங்கும் மரகதமே –92–

(இ – ள்.) திருவேங்கடத்து ஓங்கும் மரகதம் – திருவேங்கடமலையின் மீது உயர்ந்துதோன்றுகின்ற மரகதரத்தினம்போல
விளங்குந் திருமேனி நிறத்தையும் ஒளியையுமுடைய பரம்பொருளானது, –
பாவை இரங்கும் அசோதைக்கு – சித்திரப்பிரதிமைகளும் (இவ்வகையழகு எமக்கு இல்லையே யென்று) இரங்கும்படியான (கட்டழகுடைய) யசோதைக்கு,
முத்து – (அருமையால்) முத்துப்போலும்;
பதுமம் செல்விக்கு – தாமரைமலரில் வீற்றிருக்கின்ற செல்வத்தலைவியான திருமகளுக்கு,
இரண்டு ஏவை அன்ன கண்மணி நீலம் – (அருமையால்) இரண்டு அம்புகளைப்போன்ற கண்களிலுள்ள கருவிழிபோலும்;
இரு சரணம் பூவை இரந்தவர்க்கு – உபயதிருவடித்தா மரைமலர்களைப் பிரார்த்தித்தவர்கட்கு,
இன்ப வளம் – பேரின்பப் பெருக்காம்;
புல் அசுரர்க்கு – இழிகுணமுடைய அசுரர்கட்கு,
என்றும் – எப்பொழுதும்,
மா வையிரம் – பெரும்பகையாம்; (எ – று.)

திருவேங்கடத்துஓங்கும் மரகதரத்தினமொன்றே யசோதைத்தாய்க்கு முத்தாகவும், பெரியபிராட்டிக்கு நீலமணியாகவும்,
அடியார்க்குப் பவளமாகவும், அசுரர்க்கு வைரமாகவும் ஆகின்றது எனச் சொற்போக்கில்
ஒருவகை வியப்புத் தோன்றக் கூறியது, பலபடப்புனைவணி. இதில் பஞ்சரத்தினங்களின்பெயர் அமைந்திருப்பது காண்க.
யசோதை – கண்ணனை வளர்த்த தாய்; நந்தகோபன் மனைவி.
அருமைக்குழந்தையாகிய கண்ணன் அவளால் “முத்து” என்று பாராட்டப்படுதல்பற்றி, “யசோதைக்கு முத்து” என்றார்.
அம்பைக்குறிக்கும் ஓரெழுத்தொருமொழியாகிய “ஏ” என்ற பெயர்ச்சொல், “ஐ” என்று இரண்டனுருபை யேற்கும்போது
“ஏமுனிவ்விருமையும்” என்றபடி வகரவுடம்படுமெய்பெற்று ‘ஏவை’ எனநின்றது.
மணிநீலம் = நீலமணி: கருமணி, கருவிழி. இதுவும், அருமைபாராட்டப்படுதற்கு உவமம்.
‘இன்ப வளம்’ எனவே, பேரின்ப மென்றாம்; வளம் – சிறப்பு. அஸுரர் என்ற வடசொல் – தேவர்கட்கு எதிரானவரென்றும் (சுரர் – தேவர்),
பாற்கடலினின்று உண்டான சுரையைப் பானஞ்செய்யாதவரென்றும் (சுரை – மது),
பகைவருயிரைக் கவர்பவரென்றும் (அஸு – உயிர்) காரணப்பொருள்படும்.
மா வைரம் – தவறாது அழிப்பவ னென்றபடி. வைரம்என்பது வையிரம் எனப்போலிவிகாரம்பெற்றது, திரிபுநயத்தின்பொருட்டு.
மரகதம் – பச்சையிரத்தினம்; நிறமும் ஒளியும்பற்றி, ‘மரகதம்’ என்றார்: மரகதம்போன்ற எம்பெருமானை மரகத மென்றது, உவமையாகுபெயர்.

————–

மரகதத்தைக் கடைந்து ஒப்பித்தது ஒத்தன வாழ்த்தினர் தம்
நரகதத்தைத் தள்ளி வைகுந்தம் நல்கின நப்பின்னை ஆம்
விரகதத்தைக்கு விடை ஏழ் தழுவின வேங்கடவன்
குரகதத்தைப் பிளந்தான் தோள்கள் ஆகிய குன்றங்களே –93-

(இ – ள்.) குரகதத்தை பிளந்தான் – குதிரைவடிவாய்வந்த (கேசியென்னும்) அசுரனை வாய்பிளந்தழித்தவனான,
வேங்கடவன் – திருவேங்கடமுடையானுடைய,
தோள்கள் ஆகிய – புயங்களாகிய,
குன்றங்கள் – மலைகள் (மலைகள் போன்ற தோள்களானவை), –
மரகதத்தை கடைந்து ஒப்பித்தது ஒத்தன – மரகதமென்னும் பச்சையிரத்தினத்தைக் கடைந்து ஒப்பனைசெய்தாற் போன்றன;
வாழ்த்தினர்தம் – (தம்மை) வாழ்த்திய மெய்யடியார்களுடைய,
நரக தத்தை – நரகத்துன்பங்களை,
தள்ளி – ஒழித்து,
வைகுந்தம் நல்கின – (அவர்கட்குப்) பரமபதத்தைக் கொடுத்தன;
நப்பின்னை ஆம் – நப்பின்னைப்பிராட்டியாகிய,
விரக தத்தைக்கு – ஆசைநோயால் தவிக்கப்பட்டவளான பெண்ணை மணஞ்செய்தற்பொருட்டு,
விடை ஏழ் தழுவின – ஏழுஎருதுகளைத் தழுவி வலியடக்கின; (எ – று.)

இது, புயவகுப்பு.

நிறமும், ஒளியும், திரண்டுருண்டு நெய்ப்புடைமையும்பற்றி, ‘மரகதத் தைக்கடைந் தொப்பித்த தொத்தன’ என்றார்.
பின்னையென்பது – அவள் பெயர்; ந – சிறப்புப்பொருளுணர்த்துவதோர் இடைச்சொல் (உபசர்க்கம்):
நச்செள்ளை, நப்பாலத்தன், நக்கீரன் என்றாற்போல; நம்பின்னையென்பதன் விகாரமுமாம்.
நற்பின்னை யென்பாரு முளர்.
விரஹதப்தா, வ்ருஷம் என்ற வடசொற்கள் – விரகதத்தை, விடை என்று விகாரப்பட்டன. விரகம் – காதல் நோயையுடைய,
தத்தைக்கு – கிளிபோன்ற (இன்மொழிபேசுகின்ற) பெண்ணுக்கு என்று உரைப்பாரு முளர்.
கண்ணன் நப்பின்னைப் பிராட்டியைத் திருமணஞ்செய்து கொள்ளுதற்காக, அவள்தந்தை கந்யாசுல்கமாகக்குறித்தபடி
யாவர்க்கும் அடங்காத அசுராவேசம் பெற்ற ஏழெருதுகளையும் ஏழு திருவுருக்கொண்டுசென்று வலியடக்கித் தழுவினதற்கு
முன்னமே கண்ணபிரான்பக்கல் காதல்கொண்டிருந்தமை தோன்ற, ‘நப்பின்னையாம் விரக தத்தைக்கு விடையேழ்தழுவின’ என்றார்.

குர கதம் என்ற வடசொல், (ஒற்றைக்) குளம்புகளாற் செல்வதென்று பொருள்படும்.
பருத்தவடிவமும் வலிமையும் படைக்கலங்களால் அழித்தற்கருமையும்பற்றி, தோள்கள் குன்றங்க ளெனப்பட்டன.
குன்றங்கள் என்ற உபமானப்பொருள், ஒத்தலும் வைகுந்தநல்குதலும் விடையேழ் தழுவுதலுமாகிய செய்கையிற்
பயன்படும்பொருட்டு உபமேயமாகிய தோள்களினுருவத்தைக் கொள்ளத் திரிதலால், ‘தோள்களாகிய குன்றங்கள்’ என்றது. திரிபணி;
உருவக மன்று. குன்றங்கள் என்ற ஈற்றில் நின்ற சொல், முன்னுள்ள ஒத்தன நல்கின தழுவின என்ற முற்றுக்களோடு முடிந்தது, கடைநிலைத்தீவகம்.

————-

குன்றுகள் அத்தனையும் கடல் தூராக் குவித்து இலங்கை
சென்று களத்து அனைவோரையும் மாய்த்து திருச் சரத்தால்
அன்று களத்தனை அட்டானை அப்பனை ஆய் மகள் தோள்
துன்று களத்தனை ஏத்த வல்லார்க்கு இல்லை துன்பங்களே –94-

(இ – ள்.) குன்றுகள் அத்தனையும் – மலைகளையெல்லாம்
கடல் தூர குவித்து – கடல்தூர்ந்திடும்படி (வாநரங்களைக்கொண்டுகொணர்ந்து) ஒருங்கு சேர்த்து (அணைகட்டி),
இலங்கை சென்று – (அதன்வழியாகப்) போய் இலங்காபுரியைச் சார்ந்து,
களத்து அனைவோரையும் மாய்த்து – போர்க்களத்தில் அரக்கர்களெல்லாரையுங் கொன்று,
திரு சரத்தால் – சிறந்த அம்பினால் (பிரமாஸ்திரத்தால்),
அன்று – அந்நாளில்,
களத்தனை (கள்ளத்தனை) – வஞ்சகனான இராவணனை,
அட்டானை – கொன்றவனும்,
ஆய் மகள் தோள்துன்று களத்தனை – இடைச்சாதிமகளான நப்பின்னையினது கைகளால் தழுவப்பட்ட கழுத்தையுடையவனுமான,
அப்பனை – திருவேங்கடமுடையானை,
ஏத்த வல்லார்க்கு – துதிக்கவல்லவர்கட்கு,
துன்பங்கள் இல்லை – எவ்வகைத்துன்பமும் உளவாகா; (எ – று.)

அனைவர் அனைவோர் எனச் சிறுபான்மை ஈற்றயல்அகரம் ஓகாரமாயிற்று. இராவணன் சீதையை வஞ்சனையாற்
கவர்ந்துசென்றதனால், ‘கள்ளத்தன்’ எனப்பட்டான். களத்தன் – தொகுத்தல்விகாரம். ஆய் – சாதிப்பெயர்.
தோள் – இங்கே, கை; சீவகசிந்தாமணியில், “தோளுற்றொர் தெய்வந்துணையாய்” என்றவிடத்திற் போல.
நான்காமடியில், களம் – வடசொல்.

————-

துன்பம் களையும் சனனம் களையும் தொலைவு அறு பேர்
இன்பம் களையும் கதி களையும் தரும் எங்கள் அப்பன்
தன்பங்கு அளையும் படி மூவரை வைத்து தாரணியும்
பின்பு அங்கு அளையும் இழுதும் உண்டானுடைப் பேர் பலவே –95–

(இ – ள்.) மூவரை – (பிரமன் சிவன் இலக்குமி என்ற) மூன்றுபேரை,
தன் பங்கு அளையும்படி – தனது திருமேனியின் பாகங்களிலே பொருந்தும்படி, வைத்து-,
தாரணியும் – (கற்பாந்தகாலத்திலே) பூமியையும்,
பின்பு – பிறகு (கிருஷ்ணாவதாரத்திலே),
அங்கு – அவ்விடத்தில் (திருவாய்ப்பாடியில்),
அளையும் இழுதும் – தயிரையும் நெய்யையும்,
உண்டான் – அமுதுசெய்தவனான,
எங்கள் அப்பனுடை – எமது திருவேங்கட முடையானுடைய,
பேர் பல – பல திருநாமங்கள், –
துன்பம் களையும் – (தம்மைச் சொன்னவர்களுடைய) கிலேசங்களையொழிக்கும்;
சனனம் களையும் – பிறப்பை வேரோடு அழிக்கும்;
தொலைவு அறு பேர் இன்பங்களையும் கதிகளையும் தரும் – முடிவில்லாத பேரின்பங்களையும் சிறந்தபதவிகளையும் தரும்; (எ – று.)

இது, திருநாம மகிமை.
“குலந்தருஞ் செல்வந்தந்திடு அடியார்படுதுய ராயினவெல்லாம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெரு நிலமளிக்கும்,
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்றதாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான்கண்டுகொண்டேன் நாராயணாவென்னுநாமம்” என்ற பெரியதிருமொழியையுங் காண்க.
ஸ்ரீமந்நாராயணன் தனதுதிருமேனியில் திருநாபியிலே பிரமனையும், வலப்பக்கத்திலே சிவனையும்,
திருமார்பிலே திருமகளையும் வைத்திருத்தலை, ‘தன்பங்களையும்படி மூவரை வைத்து’ எனக்குறித்தார்;
“பிறைதங்குசடையானை வலத்தேவைத்துப் பிரமனைத்தன் னுந்தியிலே தோற்றுவித்துக்,
கறைதங்குவேற்றடங்கண்திருவை மார்பிற் கலந்தவன்”,
“ஏறனைப் பூவனைப் பூமகள்தன்னை, வேறின்றிவிண்தொழத் தன்னுள்வைத்து”,
“திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ், ஒருவிடமும் எந்தைபெருமாற்கு அரன்”,
“ஏறாளு மிறையோனுந் திசைமுகனுந் திருமகளுங், கூறாளுந் தனியுடம்பன்”,
“சிவனொடு பிரமன் வண்திருமடந்தை சேர் திருவாசகம்”,
“மலர்மகள் நின் ஆகத்தாள் – செய்ய, மறையான் நின்உந்தியான் மாமதிள்மூன்றெய்த, இறையான் நின்ஆகத்திறை” என்ற
ஆழ்வார்களருளிச்செயல் பல காண்க.
மூவர் – தொகைக்குறிப்பு. தொலைவறு பேரின்பம் – “அந்தமில் பேரின்பம்.” ‘உண்டானடிப்பேர்பல’ என்ற பாடத்துக்கு,
எம்பெருமானுடைய திருவடிகளின் திருநாமங்கள் பல வென்க; அடி – தொன்றுதொட்டுவருகிற எனினுமாம்.

—————

தலைவனைப் பிரிந்த தலைவி கடலை நோக்கி இரங்கிக் கூறல் –

பல குவளைக்குள் சில கஞ்சம் போலும் படிவ அப்பன்
நலகு அளைக்கு முன் உண்டான் நின் மாட்டும் நணுகிலனோ
உலகு வளைக்கும் கடலே நின் கண் முத்து உகுத்து இரங்கி
இலகு வளைக் குலம் சிந்தி துஞ்சாய் இன்று இரா முற்றுமே –96-

(இ – ள்.) உலகு வளைக்கும் கடலே – உலகத்தைச்சூழ்ந்திருக்கிற கடலே! –
நின் கண் முத்து உகுத்து – உனதுகண்களினின்று முத்துப்போன்ற நீர்த்துளிகளைச்சொரிந்து (உன்னிடத்தினின்று முத்துக்களைச் சிந்தி).
இரங்கி – புலம்பி (ஒலித்து),
இலகு வளை குலம் சிந்தி – விளங்குகின்ற கைவளைகளின் வரிசையைக் கீழேசிந்தி (விளங்குகிற சங்குகளின் கூட்டத்தை வெளியேசிதறி),
இன்று இரா முற்றும் – இன்றை யிராப்பொழுது முழுவதும்,
துஞ்சாய் – தூங்குகின்றாயில்லை (அமைதிகொண்டிருக்கின்றாயில்லை); (ஆதலால்),
பல குவளைக்குள் சில கஞ்சம் போலும் படிவம் அப்பன் – பலநீலோற்பலமலர்களின் இடையிடையே சிலசெந்தாமரைமலர்கள்
(பூத்தன) போன்ற திருமேனியையுடைய ஸ்வாமியான,
அளைக்கு முன் நல கு உண்டான் -(கிருஷ்ணாவதாரத்தில்) வெண்ணெயையுண்பதற்குமுன்னே (கற்பாந்தகாலத்திலே)
நல்லபூமியை விழுங்கியவனுமான தலைவன்,
நின்மாட்டும் நணுகிலனோ – (என்னிடத்திற்போலவே) உன்னிடத்திலும் வந்துசேர்ந்திலனோ?

இதற்குத் துறைவிவரம், கீழ் 19 – ஆஞ்செய்யுட்குக் கூறியதுகொண்டு உணர்க. அது, தோழிகூற்று; இது, தலைவிகூற்று.
இது, கடலைநோக்கித் தன்னோடொப்பத் துன்பமுறுவதாகக்கருதிக் கூறியது.
இங்ஙனம் தலைவி சொல்லுதலின் பயன் – தலைமகன் கேட்பின், விரைவில் வெளிப்படையாக மணம்புரிந்து கொள்வன்;
தோழி கேட்பின், தலைவனுக்குச் சொல்லி விரைவில் மணம்புரிந்துகொள்ளச்செய்வள்; யாரும் கேளாராயின், தலைவிதானே சொல்லி ஆறினளாம்.
‘நின்மாட்டும்நணுகிலனோ’ என்பதற்கு – (இத்தலைவியிடத்திற் போலவே) உன்னிடத்திலும் வந்து சேர்ந்திலனோ? என்று பொருள்
கொண்டு, இதனையும் தோழிகூற்றென்றலுமாம். இதுவும், செம்மொழிச்சிலேடையுவமையணி கொண்டது.
‘நின்கண் முத்துகுத்து’ என்றது முதலிய தொடர்கள் இருபொருள்பட்டமை காண்க.
தலைவி வளையல்களைச் சிந்துதல், பிரிவாற்றாமைத்துயரால் உடல் மிகமெலிந்தது பற்றி.

பல குவளைமலர்கள் – எம்பெருமானது நீலநிறமுள்ள திருமேனிக்கும்,
அவற்றிடையே சிலசெந்தாமரைமலர்கள் – வாய் கண் கை உந்தி பதம் ஆகிய திருவவயவங்கட்கும் உவமை.
குவலயம் என்ற வடசொல், குவளை என விகாரப்பட்டது. கஞ்ஜம் – வடசொல்: நீரில் தோன்றுவதென்று பொருள்படும்:
கம் – நீர். நல – நல்ல என்பதன் தொகுத்தல். கு – வடசொல். நின்மாட்டும், உம் – இறந்தது தழுவிய எச்சம்.
முத்து – நீர்த்துளியைக் குறிக்கும்போது, உவமையாகுபெயர்.

எம்பெருமானது பிரிவை யாற்றாமல் வருந்துகின்ற ஐயங்கார் தமக்கு உள்ள கலக்கத்தால் தம் கண்ணெதிர்ப்படுகிற
பொருள்களையெல்லாம் தம்மைப்போலவே எம்பெருமானது பிரிவினால் வருந்துகின்றனவாகக்கொண்டு,
கடலைநோக்கி ‘நீயும் நான்பட்டது படுகின்றனையோ?’ என்று வினவுதல், இதற்கு உள்ளுறைபொருள்.
தம்மைப்போலவே பிறரையும் பாவித்தல், பெரியோரியல்பு. இவர்க்கு, வளைக்குலம் சிந்துதல் – அடிமைக்கு அறிகுறியான
ஆத்மகுணங்கள் குலையப்பெறுதல்; பாரதந்திரியம்நீங்கி ஸ்வாதந்திரியம் மிகுதல். மற்றவை, முன்கூறியவாற்றால் விளங்கும்.

“காமுற்ற கையறவோ டெல்லே யிராப்பகல்,
நீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்,
தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த,
யாமுற்றதுற்றாயோ வாழிகனைகடலே” என்ற திருவாய்மொழிப்பாசுரத்தைப் பின்பற்றியது, இது.
“வாயினிரங்கினை யாரமெறிந்தனை வால்வளை சிந்தினை தண்,
பாயலையுந்தினை மாலை யடைந்தனை பாரிலுறங்கிலையால்,
கோயிலரங்கனை மாகனகந்திகழ் கோகனகம்பொலியும்,
ஆயிழைநண்பனை நீயும்விரும்பினையாகு நெடுங்கடலே” என்றார் திருவரங்கக்கலம்பகத்தும்.
இவை, பிரிவுக்காலத்திற் கடலைநோக்கிப் பெண்பால் இரங்கியன.
(இங்ஙனமே ஆண்பால் இரங்குதலை,
“போவாய் வருவாய் புரண்டுவிழுந் திரங்கி
நாவாய் குழற நடுங்குறுவாய் –
தீவாய், அரவகற்றுமென்போல வார்கலியே மாதை,
யிரவகற்றி வந்தாய்கொ லின்று” என நளவெண்பாவிற் காண்க.)

———–

நீட்டித்து வந்த தலைவனொடு தலைவி ஊடிப் பேசுதல் –

முற்றிலை பந்தை கழங்கை கொண்டு ஓடினை முன்னும் பின்னும்
அற்றிலை தீமை அவை பொறுத்தோம் தொல்லை ஆலின் இளங்
கற்றிலை மேல் துயில் வேங்கடவா இன்று உன் கால் மலரால்
சிற்றிலைத் தீர்த்ததற்குப் பெரு வீட்டினைச் செய்தருளே –97-

(இ – ள்.) தொல்லை – முற்காலத்தில் (பிரளயகாலத்தில்),
ஆலின் இளங்கன்று இலைமேல் – இளமையான ஆலங்கன்றினது இளந்தளிரின்மேல்,
துயில் – பள்ளிகொண்டு யோகநித்திரை செய்த,
வேங்கடவா – திருவேங்கடமுடையானே! –
முன்னும் – முன்னமும், (நீ எம்முடைய),
முற்றிலை – சிறுமுறத்தையும்,
பந்தை – பந்தையும்,
கழங்கை – (ஆடுதற்குஉரிய) கழற்காய்களையும்,
கொண்டு ஓடினை – எடுத்துக்கொண்டு ஓடினாய்;
பின்னும் தீமை அற்றிலை – பின்பும் (எம்பக்கல்) தீங்குசெய்தலை ஒழிந்தாயில்லை;
அவை பொறுத்தோம் – அப்பொல்லாங்குகளையெல்லாம் யாம் பொறுத்திட்டோம்;
இன்று – இப்பொழுது,
உன் கால் மலரால் – உனது திருவடித்தாமரையினால்,
சிற்றிலை தீர்த்ததற்கு – (யாம் மணல்கொண்டு விளையாட்டாக அமைத்த) சிறுவீட்டைச் சிதைத்ததற்கு ஈடாக,
பெரு வீட்டினை செய்தருள் – பெரியதொரு வீட்டை (எமக்கு)க் கட்டிக்கொடுப்பாய்; (எ – று.)

இன்றியமையாததொரு காரியத்தினிமித்தம் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் மீண்டுவருவதாகக் குறித்த பருவத்தில்
வாரானாய்க் காரிய வசத்தாற் சிறிதுநீட்டிக்க, அதற்குள்ளே தலைவி ‘தலைவன்வாராதது, என்னை உபேக்ஷித்து
என்னினும் அழகுசிறந்த வேறுபலமகளிர்பக்கல் உறவுகொண்டதனாலாம்’ என்று எண்ணிப் பிணங்கி
‘இனி அவன் வந்தாலும் நாம் முகங் கொடுப்பதில்லை’ என்று நிச்சயித்துத் தனது தோழியரையும்
தான்வளர்த்த கிளி பூவை முதலிய பேசும்பறவைகளையும் தன்வழிபடுத்திவைத்துக்கொண்டு ஓரிடத்திலே அவர்களோடு
விளையாடுகிற வியாஜத்தாற் பராமுகமாயிருக்க, பின்பு மிக்க அன்போடு வெகுவிரைவாக மீண்டுவந்த தலைவன்,
பிரணயகோபத்தால் அணுகவொண்ணாதபடி யிருக்கின்ற இவளிருப்பைக் கண்டு வருந்திச் சிந்தித்து அருகிற்சென்று
தோழியர்மூலமாக இவளுடைய ஊடலைத் தீர்க்கக் கருதி நோக்கியவிடத்து,

அவர்களும் தலைவியின்கோட் பாட்டின்படி தங்களில் ஒருமித்து அவனை அநாதரித்து முகம்மாறி மிக்க கோபங்காட்ட,
அவ்வாயிலைப் பெறானாய்க் கிளி பூவை முதலியவற்றைக் கொண்டு ஊடல் தணிக்கப்பார்த்து அவையும் தலைவியின்
சங்கேதப்படி தன்னை உபேக்ஷித்ததனால் அவ்வாயிலையும்பெறாது மிகவருத்தமுற்று, அசேதநமாகையால்
தன்னை உபேக்ஷித்துப்போகமாட்டாமல் அங்குக்கிடந்த இவளுடைய விளையாட்டுக்கருவிகளான
முற்றிலையும் பந்தையும் கழங்கையும் எடுத்து அவற்றைத் தன்உடம்பின்மேற்படவைத்துத் தழுவியும் அன்போடு நோக்கியும்
கண்களில் ஒற்றியும் தலைமேல் வைத்துக்கொண்டு தான் ஒருவாறு ஆறித் தனதுகாதலையும் தலைவிக்குப் புலப்படுத்த,

அச்செயல்களை யெல்லாம் அவள் வேறுசில மகளிரைப் பிரிந்த ஆற்றாமையால் இவன்செய் கின்றன வெனக்கொண்டு
சீற்றங்காட்டி உறவறப்பேச, முதலில் தலைவி நோக்கையும்பெறாதிருந்த அத்தலைவன்,
முகம்பார்த்து அவ்வளவு வார்த்தை பேசப்பெற்றதையே தாரகமாகக்கொண்டு, அவ்வார்த்தைகட்கு ஏற்றவிடை கள்
சொல்லுகிறவியாஜத்தாற் பேச்சுவளர்த்திக்கொண்டே மேன்மேல்நெருங்கிக் கிளிபூவைகளோடுகொஞ்சிப்பேசுதல்,
அருகிற்கிடந்த அவளது விளையாட்டு மரப்பாவையை யெடுத்தல், அவள்கையிலுள்ள பாவையைத் தொட்டுப் பறித்தல்,
அங்குநில்லாமல் தோழியருடன் அப்பாற்செல்லப்புக்க அவளைக் கைகளால் வழிமறித்துத்தடுத்தல் முதலியன செய்து
அவளை ஊடல்தணிக்க முயன்றவிடத்தும்

அவள் சினந்தணியாள்போன்று தனது உள்ளக்காதலைப் புலனாகாதபடி மறைத்துக்கொண்டு அவனைப் புறக்கணித்துத்
தோழியரோடு மணலிற் சிற்றிலிழைத்து விளையாடாநிற்க, இவளது கடைக்கண் பார்வையை ஏதேனும்
ஒருவிதத்தாற்பெற்றுத் தான் உய்யலாமென்று பார்த்து அவன் இவளமைத்தசிற்றிலைத் தன்கால்களாற்சிதைக்க,

அப்பொழுது அவனுடைய முகத்தைப் பார்த்து அவனது கண்ணழகு முதலியவற்றால் நெஞ்சுருகி நிலைகலங்கியவளவிலும்
அவள் முந்தின புலவியின் தொடர்ச்சியாற் சிறிது ஊடல்காட்டிப் பேசியது, இது. திருவாய்மொழியில் ஊடற் பாசுரமான
“மின்னிடை மடவார்கள்” என்ற திருப்பதிகம் முழுவதும் இச்செய்யுட்கு மூலமாம்.

“பின்னும் அற்றிலை தீமை” என்றது – கிளிபூவைகளோடு கொஞ்சிப் பேசுதல், மரப்பாவையையெடுத்தல்,
கையிற்பாவைபறித்தல், வழிமறித்தல் முதலியவற்றைக் குறித்தது. “பொறுத்தோம்” என்றதை,
உயர்வுபற்றிவந்த தனித்தன்மைப்பன்மை யென்றாவது, தோழியரையுங் கூட்டிச்சொன்ன உளப்பாட்டுத் தன்மைப்பன்மை யென்றாவது கொள்க.
“ஆலினிலைமேல் துயில் வேங்கடவா” என்றது, பிரமன் முதலிய சகலதேவர்களு முட்பட யாவும் அழிந்துபோகின்ற
கல்பாந்தகாலத்திலே ஸ்ரீமகாவிஷ்ணு அண்டங்களை யெல்லாம் தன்வயிற்றில்வைத்து அடக்கிக்கொண்டு
சிறுகுழந்தை வடிவமாய்ப் பிரளயப்பெருங்கடலிலே ஆதிசேஷனது அம்சமானதோர் ஆலிலையின்மீது பள்ளிகொண்டு
அறிதுயில்செய்தருள்கின்றன னென்ற வரலாறு பற்றி. இங்கு இதுகூறி விளித்தது,
நினது செயற்கரியனசெய்யுந்திறம் விசித்திர மென்றவாறாம். “பெருவீட்டினைச் செய்தருள்” என்றது,
இனி என்னைப் பிரியாது என்னுடன் என்றுங் கூடியிருந்து சிறந்த இல்வாழ்க்கையின்பத்தைத் தந்தருள்வாயென்று
வேண்டுகிற குறிப்பாதலால், இது, ஊடல்தணிகிறநிலைமையில் நிகழ்ந்த பேச்சென்க.

அற்றிலை – முன்னிலை யொருமை யெதிர்மறை யிறந்தகாலமுற்று; அறு – பகுதி. தொல்லை –
தொன்மை; ‘ஐ’ விகுதிபெற்ற பண்புப்பெயர்; இது, பண்பாகுபெயராய், பழையநாளைக் குறித்தது.
கன்று + இலை = கற்றிலை; மென்றொடர், வேற்றுமையில் வன்றொடராயிற்று. ‘நன்று’ என்றது,
இங்கு, மரத்தின் இளமைப்பெயர்; இளமரம். பிரளயப்பெருங்கடலிற் புதிதாகத்தோன்றியதோ ராலமரத்தின்
இளமையானஇலை யென்பார், “ஆலினிளங்கற்றிலை” என்றார். சிறுமை + இல் = சிற்றில்;
பண்புப்பெயர் ஈறுபோய்த் தன்னொற்றுஇரட்டிற்று: இல் – வீடு.

தியானநிலையிலே ஐயங்காரது அகக்கண்ணுக்குப்புலனாகிமறைந்த எம்பெருமான் மீளவும்வந்து தோன்றானாக,
இவர் தம்மினும்விலக்ஷணரான வேறு பல அடியார்கள்பக்கல் அன்பினால் தம்மை உபேக்ஷித்தனனென்று கொண்டு கலங்கி,
அக்கலக்கமிகுதியால் ‘இனி அவன்தானேவந்தாலும், மீளவும்பிரிந்து வருத்துவனாதலால்,
யாம் கண்ணெடுத்துப்பார்ப்பதில்லை’ என்று பிரணயரோஷங் கொண்டிருக்கிறநிலையில்,

அடியவரைக்கைவிடாத இயல்புடையனான அப்பெருமான் மீளவும்வந்து அவர்க்குவந்தேறியாயுள்ள பராமுகத்தன்மையைப் போக்கி
அவரை அபிமுகராக்கிக்கொள்ளப் பலவகையால் முயன்றபோது, அவர் தமதுமுந்தினமநஸ்தாபந் தோன்ற
அப்பெருமானைநோக்கிப் பேசும் வார்த்தை, இதற்கு உள்ளுறைபொருள்.

“முற்றில்” என்றது, கொள்வன தவிர்வன ஆய்ந்துணரவல்ல விவேகத்தை. “பந்து” என்றது, சரீரத்தை;
ஸத்வகுணம் ரஜோகுணம் தமோகுணம் என்கிற மூன்று குணங்களோடு விசித்திரமான கர்மமாகிய கயிறு
கொண்டு கட்டி எம்பெருமான் அந்த ராத்மாவாயிருந்து செலுத்த விழுந்தும் எழுந்தும் சுழன்றும் உழன்றும் சமய
பேதத்தால் விரும்பவும் வெறுக்கவும் படுவதான உடம்பு, செந்நூல் வெண்ணூல் கருநூல்கொண்டு புனையப்பட்டு
உரியவர் விளையாட்டாகச்செலுத்த விழுந்துஎழுந்து சுழன்றுஉழன்று கூடியநிலையில் விரும்பவும் கூடாத நிலையில்
வெறுக்கவும் படுவதான பந்தென்னத் தகும். “கழங்கு” என்றது,

ஐம்பொறிகளை: ஐம்புலநுகர்தற்கருவியான பஞ்சேந்திரியங்கள், சிறுகி அஞ்சாயிருக்கிற விளையாட்டுக்கருவியான கழங்குக ளெனப்பட்டன.
இவற்றை முன்பு அவன் கொண்டு ஓடியதாவது – இவருடைய விவேகம் முதலியவற்றை முன்னமே அவன் இவர்வசமின்றித்
தன்வசப்படுத்திக் கொண்டமை. மற்றும் இவருடைய ஐம்புலன் முதலியவற்றையும் அவன் வலியத் தன்வசப்படுத்திக்
கொண்டதை “பின்னும்அற்றிலை தீமை” என்று குறித்தார்.

இடையிலே அவன் உபேக்ஷித்துவிட்டதாக இவர் கருதிக் கொண்ட வெறுப்பினால், அந்நன்மையையே “தீமை” என்றார்.
‘அவைபொறுத்தோம்’ என்றது, நீசெய்கின்ற செயல்கட்கெல்லாம் இலக்காம்படி யாம் பரதந்திரமாயிருந்தோ மென்றபடி;
பன்மை, தனித்தன்மைப்பன்மை யென்றாவது, அன்பர்களைக் கூட்டிச்சொன்ன தென்றாவது கொள்ளத்தக்கது.
‘தொல்லையாலி னிளங்கற்றிலைமேல்துயில் வேங்கடவா’ என்றது, லோகரக்ஷணத்தில் ஜாக்கி ரதையுள்ளவனே யென்றபடி.
‘இல்’ ஆவது, போகாநுபவத்திற்கு உரிய இடம். ‘சிற்றில்’ என்றது, சிற்றின்பநுகர்ச்சிக்கு உரிய பிரபஞ்சவாழ்க்கையை.
உனது திருவடிஸ்பரிசத்தால் எனது இவ்வுடல்வாழ்விலாசையை யொழித்த தற்கு ஈடாக மீண்டும் இவ்வகை
நிலையிலாவாழ்க்கையைத் தராமல் பெருவீடான பரமபதத்தைத்தந் தருள்க வென்பது,

இறுதிவாக்கியத்தின் கருத்து. இடையீடுள்ள நினது அநுபவமாயின் எமக்கு வேண்டா:
நிரந்தராநுபவம் தந்தருள்வதானால் தந்தருள் என்ற போக்கு அமைய “பெருவீட்டினைச்செய்தருள்” என்றதனால்,
இது மநஸ்தாபந்தீர்கிறநிலையில் நிகழ்ந்த பேச்சென்க. இங்குக் குறிப்பாகக்காட்டிய ஸ்வாபதேசார்த்தங்களின் விவரணம்,
ஸ்ரீவைஷ்ணவசம்பிரதாயம்வல்லார்வாய்க் கேட்டு உணரத்தக்கது.

————-

அரும்பாதகன் பொய்யன் காமுகன் கள்வன் அருள் சிறிதும்
அரும்பாத கல் நெஞ்சன் ஆறாச் சினத்தான் அவாவில் நின்றும்
திரும்பாத கன்மத்தன் ஆனேற்கு சேடச் சிலம்பு அமர்ந்து அ
திரும் பாத கஞ்சம் தரில் அது காண் உன் திருவருளே –98–

(இ – ள்.) அரும் பாதகன் – (போக்குதற்கு) அரிய பாவங்களையுடையவனும்,
பொய்யன் – பொய்பேசுபவனும்,
காமுகன் – சிற்றின்பவிருப்பமுடையவனும்,
கள்வன் – களவுசெய்பவனும்,
அருள் சிறிதும் அரும்பாத கல் நெஞ்சன் – கருணையென்பதுசிறிதேனுந்தோன்றப்பெறாத கல்லைப்போன்ற கடின சித்தமுடையவனும்,
ஆறா சினத்தன் – தணியாக்கோபமுள்ளவனும்,
அவாவினின்றும் திரும்பாத கன்மத்தன் – ஆசையினின்று மீளாத கருமத்தை யுடையவனும்,
ஆனேற்கு – ஆகிய எனக்கு,
சேடன் சிலம்பு அமர்ந்து அதிரும் பாத கஞ்சம் தரில் – திருவேங்கடமலையி லெழுந்தருளிப் பாததண்டைகள்) ஒலிக்கப்பெற்ற
(நினது) திருவடித்தாமரைமலர்களைக் கொடுத்தால்,
அதுகாண் உன் திரு அருள் – அதுவன்றோ உனது மேலானகருணையாம்; (எ – று.) – காண் – தேற்றம்.

தீக்குணந் தீச்செயல்கட்கெல்லாங் கொள்கலமான என்னை உன் திருவடிக்கு ஆளாக்கிக் கொள்ளுதலே நினது
திருவருட்குச் சிறப்பு என்பதாம். “அரும்பாதகன்” என்றது முதலாகத் தமதுதாழ்வை எடுத்துரைத்தார்.
எம்பெருமானுக்கு இயல்பில் அடிமையாகவுள்ள தமதுஆத்மாவை அங்ஙனம் எண்ணாது ஸ்வதந்திரமென்று எண்ணுதல்
அவனுக்கு உரியபொரு ளைக் களவுசெய்த தாகுதலால், அங்ஙனம் அகங்காரமுடையே னென்பார், தம்மை “கள்வன்” என்றார்;
“பண்டேயுன்தொண்டாம் பழவுயிரை யென்ன தென்று, கொண்டேனைக் கள்வனென்று” என்னும்
நூற்றெட்டுத்திருப் பதியந்தாதியையும் காண்க.
“அவாவென்ப வெல்லாவுயிர்க்குமெஞ்ஞான்றுந், தவா அப்பிறப்பீனும்வித்து” என்றபடி அவா கர்மத்துக்கு மூலகாரணமாதலால்,
‘அவாவினின்றுந் திரும்பாத கன்மம்’ எனப்பட்டது.
சிலம்பு – மலை. அணியப்பட்ட ஆபரணத்தின் அதிர்ச்சியை அணியும்உறுப்பான திருவடியின் மே லேற்றிச் சொன்னது,
இடத்துநிகழ்பொருளின்தொழிலை இடத்தின் மேற் சார்த்திக்கூறிய உபசாரவழக்கு.

காமுகன் – காமமுடையவன். சேஷன் என்ற பெயர் – (பிரளயகாலத்திலும் அழியாது) சேஷித்திருப்பவனென்று காரணப்பொருள்படும்;
சேஷித்தல் – மிச்சப்படுதல். ஈற்றடியில், ‘திருப்பாதகஞ்சம்’ என்பது மெலித்தல் விகாரம் பெற்றுவந்த தெனக்கொண்டு,
சேஷகிரியில் நின்ற திருவடித்தாம ரைமலர்கள் என்று உரைகொள்ளுதலும் உண்டு.

————

திருமந்திரம் இல்லை சங்கு ஆழி இல்லை திரு மண் இல்லை
தருமம் திரம் ஒன்றும் செய்து அறியீர் செம்பொன் தானவனை
மருமம் திரங்கப் பிளந்தான் வடமலை வாரம் செல்லீர்
கருமம் திரண்டதை எத்தால் களையக் கருதுதிரே –99–

(இ – ள்.) (பேதைச்சனங்களே! உங்கள்பக்கல்),
திரு மந்திரம் இல்லை – பெரியதிருமந்திரமெனப்படுகிற திருவஷ்டாக்ஷரமகாமந்திரம் இல்லை;
சங்கு ஆழி இல்லை – சங்கசக்கரமுத்திரை இல்லை;
திருமண் இல்லை – திரு மண்காப்பும் இல்லை;
தருமம் திரம் ஒன்றும் செய்து அறியீர் – (எம்பெருமானைச்சரணமடைதலாகியசரணாகதி) தருமத்தை நிலையாகச்சிறிதும் செய்து பயின்றீரில்லை;
செம் பொன் தானவனை – சிவந்த பொன்னின்நிறமுள்ள இரணியாசுரனை,
மருமம் திரங்க – மார்பு வருந்த,
பிளந்தான் – (நரசிங்க மூர்த்தியாய்ப்) பிளந்திட்டவனான எம்பெருமானுடைய,
வட மலை வாரம் – திருவேங்கடமலையின் அடிவாரத்திலேனும்,
செல்லீர் – சென்றீரில்லை; (இத்தன்மையரானநீங்கள்),
கருமம் திரண்டதை எத்தால் களைய கருதுதிர் – (உங்கள்) ஊழ்வினை தொகுதிப்பட்டுள்ளதை எவ்வாற்றால் நீக்க நினைக்கிறீர்கள்?

இங்ஙனம் இரங்கிக் கூறியதனால், இனியேனும் நீங்கள் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணமாய் உஜ்ஜீவநோபாயமாகிற
திருமந்த்ரோபதேசத்தையும், தப்தசங்க சக்ரமுத்திரை தரிக்கப்பெறுதலாகிய திருவிலச்சினையையும்,
கேசவாதி துவாதசநாமங்களை முறையேசொல்லிஉடம்பிற்பன்னிரண்டிடத்தில் திருமணிடுதலாகிய ஊர்த்வபுண்டரத்தையும்
நல்ல ஆசிரியரது அருளாற் பெற்று, பிரபத்திமார்க்கத்தி லிழிந்து, துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலந சீலனான
எம்பெருமானுடைய திவ்வியதேசத்தைச் சார்ந்து, ஊழ்வினையொழித்து வாழ்வீர்க ளென்று அவைஷ்ணவர்கட்குக் குறிப்பித்தபடியாம்.

சங்காழி, திருமண், திருமந்திரம் என்பது முறையாயினும், தலைமைபற்றித் திருமந்திரத்தை முதலில் வைத்து,
மந்திரோபதேசத்திற்கு அங்கமாகின்ற தாபத்தையும் புண்டரத்தையும் அதன்பின் நிறுத்தினார்.
பஞ்சஸம்ஸ்காரங்களில் தாபம் புண்டரம் மந்திரம் என்ற மூன்றைக் கூறினது, நாமம் யாகம் என்ற மற்றையிரண்டற்கும் உபலக்ஷணம்;
(நாமம் – அடிமைப்பெயரிடப்பெறுதல். யாகம் – திருவாராதநக்கிகரமம் அருளப்பெறுதல்.)

“எல்லாத்தருமங்களையும் பற்றறவிட்டு என்னையொருவனைச் சரணமாக அடை, நான் உன்னை எல்லாத்
தீவினைகளினின்றும் விடுவிப்பேன், வருந்தாதே” என்றது ஸ்ரீகீதையிற் கண்ணன் அருளிய முடிவுரையாதல்கொண்டு,
தருமம்என்பதற்கு – சரணாகதியென்று உரைக்கப்பட்டது.
செம்பொற்றானவன் – செம்பொன்னின் பெயரையுடைய அசுர னெனினுமாம்; பொன் என்ற தென்மொழியும்,
ஹிரண்யம்என்ற வடமொழியும் பரியாயநாமமாதல் காண்க. பிறப்பு அநாதி யாய்வருதலின் உயிரால் அளவின்றியீட்டப்பட்ட
வினைகளின் பயன்கள் மலைபோலப் பெருந்தொகுதியாகக் குவிந்துள்ளதனால், “கருமந் திரண்டது’ என்றார்.
எது என்ற வினாப்பெயர் “ஆல்” என்ற மூன்றனுருபை யேற்கும்போது இடையிலே தகரவொற்றுவிரிந்து, எத்தால் என நின்றது.
கருதுதிர் என்ற முன்னிலைமுற்று, நிகழ்காலத்தில் வந்தது.

————

கருமலையும் மருந்தும் கண்ணும் ஆவியும் காப்பும் அவன்
தரும் அலை உந்திய பேரின்ப வெள்ளமும் தாய் தந்தையும்
வருமலையும் திருப்பாலாழியும் திரு வைகுந்தமும்
திரு மலையும் உடையான் எனக்கு ஈந்த திருவடியே –100-

(இ – ள்.) வரு மலையும் – பொருந்திய திருக்கடல்மல்லை யென்கிற ஸ்தலத்தையும்,
திரு பால் ஆழியும் – திருப்பாற்கடலையும்,
திரு வைகுந்தமும் – பரமபதத்தையும்,
திருமலையும் – திருவேங்கடமலையையும்,
உடையான் – (தனக்குத் தங்குமிடமாக) உடையவனான எம்பெருமான்,
எனக்கு ஈந்த – அடியேனுக்கு அருளிய,
திரு அடி – சீர்பாதங்கள், – (அடியேனுக்கு), –
கரு மலையும் மருந்தும் – பிறவிநோயையொழிக்கிற மருந்தும், கண்ணும் -,
ஆவியும் – உயிரும்,
காப்பும் – பாதுகாவலும்,
அவன் தரும் அலை உந்திய பேர் இன்ப வெள்ளமும் – அவன் (பரமபதத்தில்) தந்தருளும் அலைகளை யெறிகிற பேராநந்தப்பெருக்கும்,
தாய் தந்தையும் – தாய்தந்தையருமாம்; (எ – று.)

கரு மலையும் மருந்து – “மருந்தாங் கருவல்லிக்கு” என்பர் நூற்றெட்டுத்திருப்பதியந்தாதியிலும்.
திருவடியை ‘மருந்து’ என்றதற்கு ஏற்ப, பிறவியை “நோய்” என்னாததனால், ஏகதேசவுருவகவணி.
இன்றியமையாதனவாய் அருமைபாராட்டப்படுதல்பற்றி ‘கண்’ என்றும், அங்ஙனம் தாரகமாதல் பற்றி ‘உயிர்’ என்றுங் கூறப்பட்டன.
காப்பு – ரக்ஷகம். வெள்ளமென்றதற்கு ஏற்ப ‘அலையுந்திய’ என்ற அடைமொழி கொடுத்தது,
பேரின்பத்தின்மிகுதியை யுணர்த்தும்; இது, சஞ்சலத்தையொழித்த என்றும் பொருள்படும்.
அன்புடன் ஆவனசெய்தலில், தாயும் தந்தையுமா மென்க. இச்செய்யுள் – பலபடப்புனைவணி.
மூன்றாமடியில், மல்லை யென்பது ‘மலை’ எனத் தொகுத்தல்விகாரப்பட்டது.
திருக்கடன்மல்லை – தொண்டைநாட்டுத்திருப்பதிகளி லொன்று. வரும் அலையும் என்று எடுத்து,
இரண்டுபெயரெச்சங்களையும் திருப்பாற்கடலுக்கு அடைமொழியாக்குதலு மொன்று. வரும் அலை – பிரளயப்பெருங்கடல் எனினுமாம்.

———-

தற்சிறப்புப் பாசுரம் –

மட்டளை தண்டலை சூழ் வடவேங்கட வாணனுக்குத்
தொட்டளை யுண்ட பிரானுக்கு அன்பாம் பட்டர் தூய பொற்றாள்
உள் தளை யுண்ட மணவாள தாசன் உகந்து உரைத்த
கட்டளை சேர் திரு அந்தாதி நூறு கலித் துறையே –

(இ – ள்.) பட்டர் – பட்டரென்ற ஆசாரியருடைய,
தூ பொன் தானுள் பரிசுத்தமான அழகிய திருவடிகளிலே, தளை யுண்ட – பக்தியினாலாயே சம்பந்தம்பெற்ற,
மணவாளதாசன் – அழகியமணவாளதாசன்,
உகந்து உரைத்த – விரும்பிப் பாடிய,
திரு அந்தாதி – சிறந்த அந்தாதிப்பிரபந்தவடிவமான,
நூறு கட்டளை சேர் கலித்துறை – நூறு கட்டளைக்கலித்துறைச் செய்யுள்களும், –
அளை தொட்டு உண்ட பிரானுக்கு – வெண்ணெயைக் கையினா லெடுத்து அமுதுசெய்த பிரபுவான,
மட்டு அளை தண்டலை சூழ் வடவேங்கட வாணனுக்கு – வாசனை நிறைந்த சோலைகள் சூழ்ந்த வடக்கின் கணுள்ள
திருவேங்கடமலையில் வாழ்கிற எம்பெருமானுக்கு,
அன்பு ஆம் . பிரியமாம்; (எ – று.)

பட்டர் தூயபொற்றாளுள்தளையுண்ட – பட்டரது அந்தரங்கசிஷ்யரான என்றபடி. பட்டர் – கூரத்தாழ்வானுடைய குமாரர்,
எம்பாருடைய சிஷ்யர்: பண்டிதர்க்கு வழங்குகிற பட்ட ரென்ற பெயர், இவர்க்குச் சிறப்பாக வழங்கும்;
இவர், ஸ்ரீபாஷ்யகாரரால் நாமகரணஞ்செய்தருளப்பெற்றவர்.
கட்டளைசேர்கலித்துறை – கலிப்பாவின் இனம் மூன்றனுள் ஒன்றான கலித்துறையினும் வேறுபட்டுவருவது;
அதன் இலக்கணம் – “முதற்சீர்நான்கும் வெண்டளைபிழையாக், கடையொருசீரும் விளங்காயாகி, நேர்பதினாறே நிரைபதினேழென்,
றோதினர் கலித்துறை யோரடிக் கெழுத்தே” எனக் காண்க.
மட்டு – தேனுமாம். தாள் உள் தளையுண்ட – தாளினிடத்து மனப் பிணிப்புப் பொருந்திய எனினுமாம்.

இச்செய்யுள், நூலாசிரியர் தாமே தம்மைப் பிறன்போலும் பாயிரங் கூறியது.
(பிரயோகவிவேகநூலார் ‘இது, தன்னைப் பிறன்போலும் நாந்தி கூறுகின்றது,’ வடநூலார் தாமே பதி+மும் உரையுஞ் செய்வார்’,
‘இனிச் சம்பந்தர் சடகோபர் முதலாயினாரும் திவாகரரும் பதினெண்கீழ்க்கணக்குச் செய்தாரும் முன்னாகப்
பின்னாகப் பதிகங்கூறுவதுங் காண்க’ என்றவை கருதத்தக்கன.) இது, தற்சிறப்புப்பாயிர மெனப்படும்.

திருவேங்கடத்தந்தாதி முற்றிற்று.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கடத்தந்தாதி –61-80-

February 21, 2022

பண்டை இருக்கும் அறியாப் பரம பதத்து அடியார்
அண்டை இருக்கும் படி வைக்கும் அப்பனை அண்டத்துக்கும்
தண் தையிருக்கும் மலர்ந்த செவ்வாயனை தாள் வணங்கா
மண்டை யிருக்கும் விடுமோ சனன மரணமுமே –61-

(இ – ள்.) பண்டை இருக்கும் அறியா – பழமையான வேதங்களும் முழுதும் அறியமாட்டாத,
பரம பதத்து – (தனது உலகமாகிய) ஸ்ரீவைகுண்ட த்தில்,
அடியார் அண்டை இருக்கும்படி – (நித்தியமுக்தர்களாகிய) அடியார்களின் அருகில் இருக்கும்படி,
வைக்கும் – (தன்னைச்சரணமடைந்தவர்களை) வைத்தருள்கின்ற,
அப்பனை – திருவேங்கடமுடையானும்,
அண்டத்துக்கும் தண் தயிருக்கும் மலர்ந்த செவ் வாயனை – (பிரளயகாலத்தில்) உலகங்களை விழுங்குதற்கும்
(கிருஷ்ணாவதாரத்திலே) குளிர்ச்சியான தயிரை யுண்ணுதற்கும் திறந்த சிவந்த திருவாய்மலரை யுடையவனுமான எம்பெருமானை,
தாள் வணங்கா – திருவடிதொழாத,
மண்டையிருக்கும் – தலையையுடைய வர்களாகிய உங்களுக்கும்,
சனனம் மரணமும் விடுமோ – பிறப்பும் இறப்பும் நீங்குமோ? (நீங்கா என்றபடி); (எ – று.)

வேதம் ஒருகாலத்தில் தோன்றியதன்றி நித்தியமாதலால், “பண்டையிருக்கு” எனப்பட்டது.
பண்டு – பழமைகுறிக்கும் இடைச்சொல். பண்டை – ஐயீற்றுடைக் குற்றுகரம். உம் – உயர்வுசிறப்பு.
தயிர் – தையிர் என இடைப்போலிபெற்றது, திரிபுநயத்தின்பொருட்டு. “மலர்ந்த” என்ற வினையின் ஆற்றலால், வாய், மல ரெனப்பட்டது.
மண்டையிர் – முன்னிலைப்பன்மைக் குறிப்பு வினையாலணையும் பெயர்; இர் – விகுதி;
அப்பெயரின்மேல், உ – சாரியை, கு – நான்கனுருபு; உம் – இழிவுசிறப்பு.
“கோளில்பொறியிற் குணமிலவே யெண்குணத்தான், தாளை வணங்காத் தலை” என்றபடி இறைவனது திருவடிகளை
வணங்காத தலை பயன்படாதாதலின், அதனது இழிவு தோன்ற, தலையோட்டைக்குறிக்கிற, ‘பண்டை’ என்ற சொல்லாற் குறித்தார்.
ஓ – எதிர்மறை. பரம பதம் – (எல்லாப்பதவிகளினும்) மேலான ஸ்தாநம்; வடமொழித்தொடர்.

———–

மரணம் கடக் குஞ்சரம் நீங்க வாழ்வித்து வல் அரக்கர்
முரண் அங்கு அடக்கும் சர வேங்கடவ கண் மூடி அந்தக்
கரணம் கடக்கும் சரமத்து நீ தருகைக்கு எனக்கு உன்
சரணம் கடக்கும் சரண் வேறு இல்லை தந்து தாங்கிக் கொள்ளே –62-

(இ – ள்.) கடம் குஞ்சரம் – மதத்தையுடைய யானை,
மரணம் நீங்க – (முதலையினால்) இறத்தலை யொழியும்படி,
வாழ்வித்து – (அக்கஜேந்திராழ்வானை) உயிர்வாழச்செய்து,
வல் அரக்கர் முரண் அங்கு அடக்கும் – வலிய இராக்கதர்களுடையபலத்தை அக்காலத்தில் (ஸ்ரீராமாவதாரத்தில்) அடக்கிவிட்ட,
சர – அம்புகளையுடையவனே!
வேங்கடவ – திருவேங்கடமுடையானே! –
கண் மூடி – கண்கள் இருண்டு,
அந்தக்கரணம் கடக்கும் – மனம் அழியும்படியான,
சரமத்து – (எனது) அந்திமதசையில்,
நீ எனக்கு தருகைக்கு – நீ எனக்கு அளித்தற்கு,
உன்சரணம் கடக்கும் சரண் வேறு இலை – உனது திருவடியன்றி வேறுரக்ஷகம் இல்லை;
தந்து தாங்கிக்கொள் – (அதனை) அளித்து (என்னை) ஏற்றுக்கொள்; (எ – று.)

அங்கு – அவ்விடத்தி லெனினுமாம். அந்த:கரணம் – வடசொல்; அகத்துஉறுப்பு. சரமம், சரணம் – வடசொற்கள்.
சரண் – சரணமென்ற வட சொல்லின் விகாரம். எனக்கு உன்சரணங்கடக்குஞ் சரண் வேறு இலை –
“உன் சரணல்லாற் சரணில்லை” என்றார் குலசேகராழ்வாரும்.

————-

தாங்கு அடல் ஆழி வளை தண்டு வாள் வில்லில் தானவரை
ஈங்கு அட வீசி குறித்து அடித்து துணித்து எய்து வெல்லும்
பூங்கடல் வண்ணன் நிலை கிடை வந்தது போக்கு இடுப்பு
வேங்கடம் வேலை அயோத்தி வெங்கானகம் விண்ணுலகே –63–

(இ – ள்.) தாங்கு – (தனதுதிருக்கைகளில்) ஏந்திய,
அடல் – வலிமை யையுடைய,
ஆழி – சக்கரமும்,
வளை – சங்கமும்,
தண்டு – கதையும்,
வாள் – வாளும்,
வில்லின் – வில்லும் ஆகிய பஞ்சாயுதத்தால், (முறையே),
தானவரை – அசுரர்களை,
ஈங்கு – இவ்வுலகத்தில்,
அட – அழிக்குமாறு,
வீசி – சுழற்றிவீசியும்,
குறித்து – ஊதிமுழக்கியும்,
அடித்து – அடித்தும்,
துணித்து – அறுத்தும்,
எய்து – அம்பெய்தும்,
வெல்லும் – சயிக்குந்தன்மையனான,
பூ கடல் வண்ணன் – அழகிய கடல்போன்ற திருநிறமுடைய திருமால்,
நிலை – நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருக்கிற இடமும்,
கிடை – பள்ளிகொள்கிற இடமும்,
வந்தது – வந்துதிருவவதரித்த இடமும்,
போக்கு – நடந்துசென்ற இடமும்,
இருப்பு – வீற்றிருக்கின்ற இடமும், (முறையே),
வேங்கடம் – திருவேங்கடமலையும்,
வேலை – திருப்பாற்கடலும்,
அயோத்தி – அயோத்யாபுரியும்,
வெம் கானகம் – வெவ்விய காடும்,
விண் உலகு – பரமபதமுமாம்.

ஆழியின்வீசி, வளையிற்குறித்து, தண்டின் அடித்து, வாளின் துணித்து, வில்லின்எய்து என முதலடியோடு இரண்டாமடியும்;
நிலைவேங்கடம், கிடைவேலை, வந்தது அயோத்தி, போக்குக்கானகம். இருப்புவிண்ணுலகு என மூன்றாமடியோடு நான்காமடியும்
முறைநிரனிறைப்பொருள்கோளாதல் காண்க. இச்செய்யுளில், முன்னிரண்டடியும், பின்னிரண்டடியும் – தனித்தனி கிரமாலங்காரம்;
(மேல் 80 – ஆஞ் செய்யுளில் நான்கடிகளிலுந் தொடர்ந்து வருகிற கிரமாலங்காரத்தோடு இதற்குள்ள வேறுபாட்டை உணர்க.)
வந்தது – இராமனாய்த் திருவவதரித்தது. இராமவதாரத்திற் பதினான்கு வருடம் வனவாசஞ்சென்றதும்,
கிருஷ்ணாவதாரத்திற் கன்றுகாலிகளைமேய் த்தற்பொருட்டு வனத்திற்சென்றதும், “போக்கு வெங்கானகம்” என்றதற்கு விஷயம்.

தண்டு – தண்டமென்ற வடசொல்லின் விகாரம். பூங்கடல்வண்ணன் – தாமரைமலர் பூக்கப்பெற்றதொரு
வடிவமுடையானுமாம்; “அம்பரந்தாமரை பூத்தலர்ந்தன்ன வவயவர்” என்றாற் போல.
கிடை – கிடக்கும்இடம் – அயோத்யா என்ற வடசொல் – (பகைவராற்) போர்செய்து வெல்லமுடியாத தென்று காரணப்பொருள்படும்.

—————

உலகம் தர உந்தி பூத்திலையேல் சுடர் ஓர் இரண்டும்
இலகு அந்தரமும் புவியும் எங்கே அயன் ஈசன் எங்கே
பலகந்தரமும் உணவும் எங்கே பல் உயிர்கள் எங்கே
திலகம் தரணிக்கு என நின்ற வேங்கடச் சீதரனே –64-

(இ – ள்.) தரணிக்கு திலகம் என நின்ற – பூமிக்குத் திலகம்போல அழகுசெய்துநின்ற,
வேங்கடம் – திருவேங்கடமலையிலெழுந்தருளியிருக்கிற,
சீதரனே – திருமாலே! – (நீ),
உலகம் தர – உலகங்களைப் படைக்க,
உந்தி பூத்திலை ஏல் – திருநாபித்தாமரை மலர்ந்திராயாயின், –
சுடர் ஓர் இரண்டும் – (சூரியசந்திரராகிய) இருசுடர்களும்,
இலகு அந்தரமும் – அவைவிளங்கு மிடமான ஆகாயமும்,
புவியும் – பூமியும்,
எங்கே – எவ்விடத்தே தோன்றும்?
அயன் ஈசன் எங்கே – பிரமனும் சிவனும் எவ்விடத்தே தோன்றுவர்?
பல கந்தரமும் உணவும் எங்கே – பலமேகங்களும் (அவற்றாலாகிற) உணவுகளும் எவ்விடத்தே தோன்றும்?
பல் உயிர்கள் எங்கே – பலவகைப்பிராணி வர்க்கங்கள் எங்கே தோன்றும்? (எ – று.)
சராசரப்பொருள்கள்யாவும் உளவாகா என்பதாம்.

“உண்டிறக்கும்புவ னங்களை மீளவுமிழ்ந்திலையேற், பண்டிறக்கும்பதுமத்தோன்புரந்தரன்பைந் தழல்போற்,
கண்டிறக்குஞ்சங்கரன் முதலோர்களைக் கண்டவரார், திண்டி றக்குஞ்சரஞ்சேர் சோலைமாமலைச் சீதரனே” என்ற
அழகரந்தாதிச் செய்யுளோடு இச்செய்யுளை ஒப்பிடுக.
“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத், துப்பாயதூஉ மழை” என்றபடி பிராணிகளின் பசி தாகங்களை
நீக்கும் உணவுக்கெல்லாம் மேகம் ஏதுவாதலால், அக்காரணகாரியமுறைப்படி ‘கந்தரமுமுணவும்’ என்றார்.
ஈற்றடி = “திலதமுலகுக்காய்நின்ற திருவேங்கடத் தெம்பெருமானே” என்ற திருவாய்மொழியடியை அடியொற்றியது;
“ஸ்த்ரீகளுக்குப் பூரணமான ஆபரணம்போலே யாய்த்து, பூமிக்குத் திருமலை’ என்று அங்கு வியாக்கியானமிட்டனர் நம்பிள்ளை.
திலகம் – நெற்றிப்பொ ட்டு; அது நெற்றிக்கு அழகுசெய்வதுபோல, பூமிக்கு அழகுசெய்வது திரு வேங்கட மென்க.

உலகம் – லோக மென்ற வடசொல்லின் விகாரம்; (இதனைத் தமிழ் மொழியேயா மென்பர், ஆசிரியர் நச்சினார்க்கினியர்.)
அந்தரம், புவி, தரணீ, ஸ்ரீதரன் – வடசொற்கள். தரணி – (பொருள்களைத்) தரிப்பது. ஸ்ரீதரன் – திருமகளை (மார்பில்) தரிப்பவன்.

————-

சீவார் கழலை இரண்டையும் செப்பு என்று தீங்கு உளவி
னாவார்கழலைப் பயில் செங்கையார் நலம் பேணும் ஐவர்
ஆவார் கழல் ஐ இரண்டாம் அவத்தையின் அன்று எனக்கு உன்
பூவார் கழலை அருள் அப்பனே அண்ட பூரணனே –65-

(இ – ள்.) அப்பனே – திருவேங்கடமுடையானே!
அண்ட பூரணனே – அண்டமுழுவதிலும் வியாபித்து நிறைந்திருப்பவனே! –
கழலை பயில் செம் கையார் – கழற்சிக்காயையாடுகிற சிவந்த கைகளையுடையவர்களான மகளிரது,
சீ வார் கழலை இரண்டையும் – சீஒழுகுகின்ற கழலைக்கட்டியாகிய தன மிரண்டையும்,
செப்பு என்று – கிண்ணங்களென்று புனைந்துரைத்து,
தீங்கு உள வினாவார் – (அவர்களிடத்து) உள்ளனவான தீமைகளை விசாரித்தறி யாதவர்களாய்,
நலம் பேணும் – (அவர்களுடைய) இன்பத்தை விரும்புகிற,
ஐவர்ஆவார் – பஞ்சேந்திரியங்கள்,
கழல் – (தம்தமதுஆற்றல்) ஒழியப்பெறுகிற,
ஐ இரண்டு ஆம் அவத்தையின் அன்று – பத்தாம்அவத்தையாகிய மரணம் நேர்கிற அந்நாளில்,
எனக்கு – உன் பூ ஆர் கழலை – உனது தாமரை மலர்போன்ற திருவடிகளை,
அருள் – தந்தருள்; (எ – று.)

“ஈச்சிறகன்னதோர் தோலறினும் வேண்டுமே, காக்கை கடிவதோர் கோல்” என்ப வாதலால்,
மார்பில் திரண்டெழுந்து பால்பெருகுந்தனங்களை அருவருப்புத்தோன்ற ‘சீ வார் கழலை யிரண்டு’ என்றார்;
(“சிலந்திபோலக் கிளைத்துமுன்னெழுந்து, திரண்டுவிம்மிச் சீப்பாய்ந்தேறி, யுகிராற்கீற வுலர்ந் துள்ளுருகி,
நகுவார்க்கிடமாய் நான்றுவற்றும், முலையைப் பார்த்து முளரி மொட்டென்றுங், குலையுங் காமக்குருடர்” என்றார் பிறரும்.)
உள – பலவின் பாற்பெயர். வினாவார் – எதிர்மறைப்பலர்பால்முற்றெச்சம்; வினாவல் – உசாவுதல்.
இனி, தீங்கு உள வினாவார் என்பதற்க – தீமைவிளைக்கின்ற சொற்களையுடையவரென்று உரைத்து,
மகளிர்க்கு அடைமொழியாக்குதலு மொன்று.
இனாஎன்று எடுத்தால் பரிகாசவார்த்தையென்றும், இன்னா என்பதன் தொகுத்த லெனக்கொண்டால்
இனியவையல்லாத செயல் களென்றும் பொருள்படுமாதலால், அவற்றையுடையவரெனினுமாம்.
தீம் குளம் வினாவார் என்று பிரித்து இனிமையான வெல்லம்போன்ற சொற்களையுடையவரென்றும்,
தீங்கு உளவின் ஆவார் என்று பிரித்துக் கொடியவஞ்சனையிற் பொருந்துபவ ரென்றும் உரைக்கவும்படும்.
“தீங்குழலினாவார்” என்ற பாடத்துக்கு – தீம் – இனிமையான, குழலின் – புள்ளாங்குழலி னிசைபோன்ற,
நாவார் – நாவினாற்பேசுஞ்சொற்களையுடையவர் என்று பொருள் காண்க.
கழல் என்ற கொடியின் பெயர் – அதன்காய்க்கு முதலாகுபெயர். ‘கழலைப் பயில்செங்கையார்’ என்றது –
கவலையின்றி விளையாடுபவ ரென்றும், தம் விளையாட்டினால் ஆடவரை வசீகரிப்பவரென்றும் கூறியவாறாம்.

“ஐவராவார்” என்றவிடத்து, “ஆவார்” என்றது – முதல்வேற்றுமைச் சொல்லு ருபாய் நின்றது.
நினைவு பேச்சு இரங்கல் வெய்துயிர்த்தல் வெதுப்பு துய்ப்பனதெவிட்டல் அழுங்கல் மொழிபலபிதற்றல் மிகுமயக்கு
இறப்பு என்ற மந்மதபாணாவஸ்தை பத்தில் ஈற்றதாதல் கொண்டு, இறத்தல் ‘ஐயிரண்டாமவத்தை’ எனப்பட்டது.
மன்மதாவஸ்தை பத்து – காட்சி அவா சிந்தனை அயர்ச்சி அரற்றல் நாணொழிதல் திகைத்தல் மோகம் மூர்ச்சை இறந்துபடுதல்
எனக் கூறவும்படும். ஐயிரண்டு – பண்புத்தொகை. அவத்தை – அவஸ்தா என்ற வடசொல்லின் விகாரம்.
அண்டபூர்ணன் – வடமொழித்தொடர்.

பூவார்கழல் என்றவிடத்து, ‘ஆர்’ என்றது – உவமவாசகமாய் நின்றது; ஆர்தல் – பொருந்துதல்:
இனி, ‘பூவார்கழல்’ என்ற தொடர் – (அடியார்கள் அருச்சித்துஇட்ட) மலர்களால் எப்பொழுதும் நிறைந்துள்ள
திருவடிக ளென்றும் பொருள்படும்:
‘வானவர்வானவர்கோனொடுஞ், சிந்துபூமகிழுந் திருவேங்கடம்” என்றபடி பரமபதத்திலுள்ளார் பூமாரிசொரியு மிட மாதலாற்
புஷ்பமண்டபமெனப்படுகிற திருமலையில் எழுந்தருளியுள்ள எம்பெருமானது திருவடிகள்,
அப்பரமபதவாசிகள் அர்ச்சிக்கின்ற அப்ராக்ருத புஷ்பங்களும், தேவர்கள் அர்ச்சிக்கின்ற கற்பகமலர்களும்,
முனிவர்கள் அர்ச்சிக்கின்ற கோட்டுப்பூ முதலியனவும், தொண்டைமான்சக்கரவர்த்தி அர்ச்சித்த ஸ்வர்ணபுஷ்பங்களும்,
குரவைநம்பி அர்ச்சித்த மண்பூவும் பொருந்தப்பெறு தலால், “பூவார்கழல்” என்று சிறப்பாக வழங்கப்படும்;
“தேவாசுரர்கள் முனிக்கணங்கள் விரும்புந் திருவேங்கடத்தானே,
பூவார்கழல்க ளருவினை யேன் பொருந்துமாறு புணராயே” என்ற திருவாய்மொழியையும்,
“வேங்கடமே….. பூவார்கழலார்பொருப்பு” என்ற திருவேங்கடமாலையையும், இந்நூலின் 70 – ஆஞ் செய்யுளையுங் காண்க.

————–

பூரணன் ஆரணன் பொன்னுலகு ஆளி புராரி கொடி
வாரணன் ஆர் அணன் வாழ்த்தும் பிரான் வட வேங்கடத்துக்
காரணன் ஆர் அணங்கு அனா இறைவி கணவன் மண் ஏழ்
பாரணன் நாரணன் என்பார்க்கு நீங்கும் பழுது அவமே –66-

(இ – ள்.) பூரணன் – எங்கும் நிறைந்தவன்:
ஆரணன் – பிரமனும்,
பொன் உலகு ஆளி – பொன்மயமான சுவர்க்கலோகத்தை அரசாள்பவனான இந்திரனும்,
புர அரி – திரிபுரசங்காரஞ்செய்தவனான சிவனும்,
கொடி வாரணன் – துவசத்திற் கோழிவடிவையுடையவனான சுப்பிரமணியனும்,
ஆர் அணன் – (அவனுக்குப்) பொருந்திய தமையனான விநாயகனும்,
வாழ்த்தும் – பல்லாண்டு பாடித் துதிக்கிற,
பிரான் – பிரபு:
வட வேங்கடத்து – வடக்கின்கணுள்ள திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற,
காரணன் – (அனைத்துக்குங்) காரணமானவன்:
ஆனா – (தன்னை) விட்டுநீங்காத,
இறைவி தலைவியாகிய,
ஆர் அணங்கு – அருமையான திருமகளுக்கு, கணவன் -;
மண் ஏழ் பாரணன் – ஏழுவகையுலகங்களையும் உண்டவன்:
நாரணன் – நாராயணன்:
என்பார்க்கு – என்று (எம்பெருமானுடைய குணஞ்செயல்களையும் மகிமையையும் திருநாமத்தையுங்) கருதிச் சொல்பவர்க்கு,
பழுது அவம் நீங்கும் – (அவர்கள் முன்புசெய்த) தீவினைகளெல்லாம் பயன் தராதனவாய் ஒழியும்; (எ – று.)

ஆரணம் – வேதம்; அதனை ஓதுபவன் – ஆரணன். ஆளி, இ – கருத் தாப்பொருள்விகுதி. புராரி – புர + அரி;
தீர்க்கசந்திபெற்ற வடமொழித் தொடர்: திரிபுரத்துக்குச் சத்துரு. கொடிவாரணன் – கோழிக்கொடியோன்;
“கொடிக்கோழிகொண்டான்” என்றார் நம்மாழ்வாரும். ஆர் அணன் – வினைத்தொகை; அணன் – அண்ணன்: தொகுத்தல்.
காரணன் – ஆதிமூலப்பொருள். அணங்கு – மகளிரிற் சிறந்தவள், தெய்வப்பெண். ஆனாமை – நீங்காமை.
“அகலகில்லேனிறையுமென்று அலர்மேன்மங்கையுறை மார்பா,….. திருவேங்கடத்தானே” என்றபடி
திருமகள் திருமாலை ஒரு பொழுதும்விட்டுப்பிரியாமையால், “ஆனாவிறைவி” எனப்பட்டாள்.
இறைவி – தேவி. மண்ஏழ் – பூலோகம் புவர்லோகம் ஸுவர்லோகம் மகர்லோகம் ஜநலோகம் தபோலோகம் சத்தியலோகம்
என்ற மேலேழுலகங்களும், அதலம் விதலம் ஸுதலம் தராதலம் ரஸாதலம் மகாதலம் பாதாலம் என்ற கீழேழுலகங்களும் ஆகிய ஈரேழுலகங்கள்;
மண் என்ற பூமியின்பெயர், இங்கு உலகமென்ற மாத்திரமாய் நின்றது: சிறப்புப்பெயர், பொதுப்பொருளின் மேலது.
பழுது – எழுவாய். ‘ஆரணங்காணாவிறைவி’ என்று பாடமோதி, வேதங்களும் கண்டறியமாட்டாத திருமக ளென்பாரு முளர்.

————–

பழுத்தெட்டி பொன்ற நடுச் செல்வர் பின் சென்று பல் செருக்கால்
கொழுத்து எள் தினை அளவு எண்ணம் அற்றீர் குவடு ஏறி மந்தி
கழுத்து எட்டி அண்டர் பதி நோக்கும் வேங்கடக் காவலனை
எழுத்து எட்டினால் எண்ணி ஏத்தீர் பரகதி ஏறுவதற்கே –67–

(இ – ள்.) பழுத்த எட்டி போன்ற – பழுத்தஎட்டிமரம்போன்ற (பிறர்க் குப்பயன்படாத),
நடு செல்வர் பின் – (பரம்பரையாக அமைந்த செல்வ மன்றி) இடையிலே வந்த செல்வத்தை யுடையவர்களின் பின்னே,
சென்று – தொடர்ந்து சென்றும்,
பல் செருக்கால் கொழுத்து – பலவகைச் செருக்குக் களினாற் கொழுத்தவர்களாகியும்,
எள் தினை அளவு எண்ணம் அற்றீர் – எள்ளளவு தினையளவேனும் (கடவுளைப்பற்றின) சிந்தனை யில்லாதவர்களே!-
(இனியாயினும் நீங்கள் பழுதே பலபகலும்போக்காமல்),
பர கதி ஏறுதற்கு – (எல்லாவுலகங்கட்கும்) மேலுள்ளதான பரமபதத்தில் ஏறிச்சென்று சேர்தற் பொருட்டு, –
மந்தி குவடு ஏறி கழுத்து எட்டி அண்டர் பதி நோக்கும் வேங் கடம் காவலனை – பெண்குரங்குகள் சிகரத்திலேறிக் கழுத்தைத்
தூக்கி மேலுள்ள தேவலோகத்தை எட்டிப்பார்க்கப்பெற்ற திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற ஸ்வாமியை,
எழுத்து எட்டினால் எண்ணி ஏத்தீர் – அஷ்டா க்ஷரமகாமந்திரத்தைக்கொண்டு தியானித்துத் துதியுங்கள்; (எ – று.)

பழுத்தஎட்டியென்பது பழுத்தெட்டி யெனப் பெயரெச்சவீறு தொ குத்தல்விகார மடைந்தது.
தொன்றுதொட்டு வறியராயிருந்து இடையே செல்வங்கிடைக்கப்பெற்றவர் அச்செல்வத்தினருமையைக்கருதிப்
பிறர்க்கு உதவாது லோபிகளாயிருத்தலும், “அற்பன் பணம்படைத்தால் அர்த்தராத் திரியிற் குடைபிடிப்பான்” என்றபடி
பிறரைமதியாத இறுமாப்புடையரா யிருத்தலும் பெரும்பான்மை யாதலால், அந்நடுச்செல்வரை எடுத்துக்கூறி னார்.
பிறர்க்குஉதவாமைபற்றி, அவர்க்கு, பழுத்தஎட்டி உவமைகூறப்பட்டது;
(“ஈயாதபுல்ல ரிருந்தென் னபோயென்ன எட்டிமரம், காயாதிருந்தென்ன காய்த்துப் பலனென்ன” என்பர் பிறரும்.)
செல்வர்பின்செல்லுதல், தாம் அவராற் செல்வம் பெறலாமென்னும் நசையினால். எள் தினை என்ற தானி யங்கள்,
சிறுமைக்கு அளவையாக எடுத்துக்காட்டப்பட்டன. குவடு – மரக் கிளையுமாம்.
மந்தி – குரங்கின் பெண்மைப்பெயர்; ஆண்மைப்பெயர் – கடுவன்.
‘குவடேறி மந்தி கழுத்தெட்டி யண்டர்பதி நோக்கும் வேங்கடம்’ என்றது, மலையின் உயர்வை விளக்குந் தொடர்புயர்வுநவிற்சியணி.
இவ் வருணனை கூறியது, அங்குச்சேர்கிற அனைத்துயிரும் உயர்கதியைப்பெறு மென்ற குறிப்பு.
எழுத்துஎட்டு – எட்டுஎழுத்துக்களையுடைய பெரியதிருமந்திரம். எழுத்தெட்டினா வெண்ணியேத்தீர் பரகதியேறுதற்கே –
“எட்டெழுத்து மோதுவார்கள் வல்லர் வானமாளவே” என்பது பெரியார்பாசுரம்.

————–

ஏறு கடாவுவர் அன்னம் கடாவுவர் ஈர் இரு கோட்டு
உறு கடா மழை ஓங்கல் கடாவுவர் -ஓடு அருவி
ஆறு கடாத அமுது எனப் பாய அரிகமுகம்
தாறுகள் தாவும் வட வேங்கடவரைத் தாழ்ந்தவரே –68-

(இ – ள்.) ஓடு அருவி ஆறு – நதிகளாக விரைந்து செல்லுகின்ற நீரருவிகள்,
கடாத அமுது என – கடுக்காத (இன்சுவையுடைய) அமிருதம் போல,
பாய – பாய்ந்துவர, (அவற்றிற்கு அஞ்சி),
அரி – குரங்குகள்,
கமுகம் தாறுகள் தாவும் – பாக்கு மரக்குலைகளின் மேல் தாவியேறப்பெற்ற,
வடவேங்கட வரை – வடக்கின் கணுள்ள திருவேங்கடமலையி லெழுந்தருளியிருக்கிற பெருமானை,
தாழ்ந்தவர் – வணங்கினவர்கள், –
ஏறு கடாவுவர் – ருஷபத்தை வாகனமாகக்கொண்டு ஏறிநடத்துவர்;
அன்னம் கடாவுவர் – அன்னப்பறவையை வாகனமாகக்கொண்டு ஏறிநடத்துவர்;
ஈர் இரு கோடு – நான்கு தந்தங்களையுடையதும்,
ஊறு கடாம் மழை – மேன்மேற்சுரக்கின்ற மதநீர்ப்பெருக்கையுடையதுமான,
ஓங்கல் – மலைபோன்ற (ஐராவத) யானையை,
கடாவுவர் – ஏறிநடத்துவர்; (எ – று.)

திருவேங்கடமுடையானை வணங்கினவர் அதன்பயனாக மறுமையில் ருத்திரபதவி பிரமபதவி இந்திரபதவிகளை யடைவ ரென்பதாம்.
ருத்திர பதவி முதலியவற்றை யடைவ ரென்ற பொருளை “ஏறுகடாவுவர்” என்பது முதலியசொற்களாற் குறித்தது,
பிறிதினவிற்சியணியின் பாற்படும். ருஷபம் சிவனுக்கும், அன்னப்பறவை பிரமனுக்கும், ஐராவதயானை இந்திரனுக்கும் வாகனமாம்.
“ஊறுகடாமழை யோங்கல” எனவே யானையென்றும், “ஈரிரு கோட்டுஓங்கல்” எனவே ஐராவதயானை யென்றும் ஆயிற்று.
ஐராவதம், இரு புறத்தும் இரட்டைத்தந்த முடையது.

ஏறு – பசுவின் ஆண்மைப்பெயர். அன்னம் – ஹம்ஸ மென்ற வடசொல் லின் சிதைவு.
ஈரிருகோடு – பண்புத்தொகைப்பன்மொழித்தொடர். கடாம் – கடமென்பதன் விகாரம்.
ஓங்கல் – உயர்ச்சி; மலைக்குத் தொழிலாகுபெயர்: அல் – கருத்தாப்பொருள்விகுதி யென்றுங் கொள்ளலாம்;
யானைக்கு உவமை யாகுபெயர். கடாத – இன்னாச்சுவை பயவாத; கடு – பகுதி.
தாபந்தவிர்த் துக் களிப்பையளிக்கும் மலையென்று பின்னிரண்டடிகளால் விளங்கும்.

—————-

தாழ்ந்த அருக்கம் தரு ஒக்குமோ பல தாரகையும்
சூழ்ந்த அருக்கன் சுடர் ஒக்குமோ தொல் அரக்கர் என்று
வாழ்ந்த வருக்கம் களைந்தான் வடமலை மால் அடிக்கீழ்
வீழ்ந்தவருக்கு அன்பருக்கு ஒப்பரோ அண்டர் மெய்த்தவரே –69-

(இ – ள்.) தாழ்ந்த – இழிவான,
அருக்கம் – எருக்கஞ்செடியானது,
தரு ஒக்குமோ – பெரிய மரத்துக்கு ஒப்பாகுமோ?
பல தாரகையும் – பல நக்ஷத்திரங்களும்,
சூழ்ந்த அருக்கன்சுடர் ஒக்குமோ – சுற்றிலும் பரவுகின்ற சூரியனது ஒளிக்கு ஒப்பாகுமோ? (ஒப்பாகா: அவைபோல),
அண்டர் – தேவர்களும்,
மெய்தவர் – உண்மையான தவத்தையுடைய முனிவர்களும், –
தொல் அரக்கர் என்று வாழ்ந்த வருக்கம் களைந்தான் – பழமையான இராக் கதர்க ளென்று பிரசித்திபெற்று
வாழ்ந்த கூட்டங்களையெல்லாம் வேரோடழித்தவனான,
வட மலை மால் – திருவேங்கடத்துறைவானது,
அடிக்கீழ் – திருவடிகளில்,
வீழ்ந்தவருக்கு – வீழ்ந்துவணங்கின அடியார்கட்கு,
அன்பருக்கு – அன்பு பூண்டொழுகுபவர்க்கு,
ஒப்பரோ – ஒப்பாவரோ? (ஆகார் என்றபடி); (எ – று.)

பாகவதர்க்கு அடிமை பூண்பவர் தேவரிஷிகணங்களினும் மேம்பட்டவ ரென அவர்கள்மகிமையை எடுத்துக்கூறியவாறாம்.
முதலிரண்டுவாக்கியங் கள் – உபமானம்; மூன்றாவதுவாக்கியம் – உபமேயம்: உபமான உபமேயவாக் கியங்களினிடையில்
உவமவுருபுகொடாமற் கூறினமையால், எடுத்துக்காட் டுவமையணி.

அர்க்கம், தரு, தாரகா, அர்க்கன், வர்க்கம் – வடசொற்கள். ஓகாரங் கள் – எதிர்மறை. மெய்த் தவம் – பழுதுபடாத தவம்;
கூடாவொழுக்கமொழிந்த தவம். அண்டம் – வானம், மேலுலகம்; அதிலுள்ளவர், அண்டர் சூழ்ந்த – திரண்டனவாயினும் எனினுமாம்.

————-

மெய்த்தவம் போர் உக வெஞ்சொல் இராமன் வில் வாங்கி வளைத்து
உய்ந்த அம் போர் உகம் நாலும் செய்தோர் உயர் வேங்கடத்து
வைத்த அம் போருகப் பூ ஆர் கழலை மறை மனு நூல்
பொய்த்த வம்போர் உகவார் காமம் வேட்டுப் புரளுவரே –70-

(இ – ள்.) மெய் தவம் – உண்மையாகச்செய்த தவம்,
போர் – யுத்தத்தில் உக – பழுதுபட்டொழியுமாறு,
வெம் சொல் இராமன் வில் வாங்கி வளைத்து உய்த்த அம்போர் – கடுஞ்சொற்களைப்பேசிவந்த பரசுராமனுடைய
வில்லை (அவன்கையினின்று தம்கையில்) வாங்கி வளைத்து எய்த அம்பையுடைய வரும்,
உகம் நாலும் செய்தோர் – நான்குயுகங்களையுஞ் செய்தவருமான திருமால்,
உயர் வேங்கடத்து வைத்த – உயர்ந்த திருவேங்கட மலையில் வைத்துநின்ற,
அம்போருகம் பூ ஆர் கழலை – தாமரைமலர்போன்ற திருவடிகளை,
மறை மனு நூல் பொய்த்த வம்போர் – வேதங்களையும் மநுதர்மசாஸ்திரத்தையும் பொய்யென்று கூறுகிற வம்புப் பேச்சையுடையவர்கள்,
உகவார் – விரும்பாதவர்களாய்,
காமம் வேட்டு புரளுவர் – சிற்றின்பத்தை விரும்பிப் புரண்டுவருந்துவர்; (எ – று.) – ஈற்றுஏகாரம் – கழிவிரக்கம்: அந்தோ! என்றபடி.

சீதாகலியாணத்தின்பின் தசரதசக்கரவர்த்தி திருக்குமாரர்களுடனே மிதிலையினின்று அயோத்திக்கு மீண்டுவருகையில்,
பரசுராமன் வலியச்செ ன்று எதிர்த்து ‘முன்பு ஹரிஹரயுத்தத்தில் இற்றுப்போன சிவதநுசை முறித்த திறத்தை அறிந்தோம்!
அதுபற்றிச் செருக்கடையவேண்டா: இந்த ஸ்ரீ மகாவிஷ்ணுதநுசை வளை, பார்ப்போம்’ என்று அலட்சியமாகச்
சொல்லித் தான் கையிற்கொணர்ந்த ஒருவில்லைத் தசரதராமன்கையிற் கொடுக்க,
அப் பெருமான் உடனே அதனைவாங்கி எளிதில்வளைத்து நாணேற்றி அம்புதொ டுத்து ‘இந்தப்பாணத்துக்கு இலக்கு என்?’ என்று வினாவ,
பரசுராமன் அதற்கு இலக்காகத் தனது தபோபலம் முழுவதையுங் கொடுக்க, அவன்
க்ஷத்திரியவம்சத்தைக் கருவறுத்தவனாயிருந்தாலும் வேதவித்தும் தவவிரதம் பூண்டவனுமா யிருத்தல்பற்றி
அவனைக் கொல்லாமல் அவனதுதவத்தைக் கவர்ந்தமாத்திரத்தோடு ஸ்ரீராமன் விட்டருளின னென்ற வரலாறு, இங்கு முதல்விசேஷணத்திற் குறிக்கப்பட்டது.

“என்வில்வலிகண்டுபோ வென் றெதிர்வந்தான், தன்வில்லினோடுந் தவத்தை யெதிர்வாங்கி” என்றார் பெரி யாழ்வாரும்.
விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஆறாமவதாரமான பரசுராமனும் ஏழாமவதாரமான தசரதராமனும் ஒருவரோடொருவர் பொருதலும்,
அவர்களில் ஒருவர்மற்றொருவரைவெல்லுதலும் பொருந்துமோ? எனின், –
துஷ்டர்களாய்க் கொழுத்துத்திரிந்த அரசர்களைக் கொல்லுதற்பொருட்டுப் பரசுராமனிடத்தில் ஆவேசித்திருந்த
விஷ்ணுசக்தி அக்காரியம் முடிந்த பின்பு அவ்விஷ்ணுவின் அவதாரமான தசரதராமனாற் கவர்ந்துகொள்ளப் பட்ட தாதலிற் பொருந்து மென்க.
இதனால், ஆவேசாவதாரத்தினும் அம் சரவதாரத்துக்கு உள்ள ஏற்றம் விளங்கும்.
வெஞ்சொல் – “இற்றோடியசிலையின்றிற மறிவென் னினியா னுன்,
பொற்றோள்வலிநிலை சோதனைபுரி வா னசையுடையேன்,
செற்றோடிய திரடோளுறு தினவுஞ் சிறிதுடை யேன்,
மற்றோர் பொருளிலை யிங்கிதென்வரவென்றன னுரவோன்” என்றது முதலாகக் காண்க.
“வெஞ்சொலிராமன்” எனவே, பரசுராமனாவன்; தசரதராமன் பிறர் கடுஞ்சொற்கூறினாலும் தான் கடுஞ்சொற்கூறுதலின்றி
எப் பொழுதும் இன்சொல்லே பேசுபவ னென்பது பிரசித்தம்: (வால்மீகிராமா யணம், அயோத்தியாகாண்டம், 1 – 10.)
பரசுராமன், பிறப்பிலேயே கோப மூர்த்தியாதலால், வெஞ்சொல்லுக்கு உரியன்.

யுகம் நான்கு – கிருதயுதம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்பன. காலம் நித்தியமாயிருக்கவும்.
‘உகநாலுஞ் செய்தோர்’ என்றது, காலத்துக்குநியாமகன் கடவு ளென்ற கருத்துப்பற்றி;
அன்றியும், காலத்தின்அளவு பகவானது சிருஷ்டிக்கு உட்பட்ட சூரியசந்திராதியரால் நிகழ்தலுங்காண்க.
உய்த்த அம்போர் = அம்புய்த்தோர். உகம் – யுகமென்ற வடசொல்லின் விகாரம்.
நான்கு என்பது, ஈற்றுஉயிர்மெய்கெட்டு னகரமெய் லகரமாய் நால் என நின்றது.
அம்போருஹம் என்ற வடசொல் – நீரிற்பிறப்பதென்று காரணப்பொருள்பெறும்; அம்பஸ் – ஜலம்.
மனுநூல் – மநுவென்னும்அரசனாற் செய்யப்பட்ட அறநூல். வம்போர் – வம்பர்; நேரில்லார்.

—————

புரண்டு உதிக்கும் உடற்கே இதம் செய் பொருள் ஆக்கையின் நால்
இரண்டு திக்கும் தடுமாறும் நெஞ்சே இனி எய்துவம் வா
திரண்டு திக்கும் அரன் வேள் அயனார் முதல் தேவர் எல்லாம்
சரண் துதிக்கும் படி மேல் நின்ற வேங்கடத் தாமத்தையே –71-

(இ – ள்.) புரண்டு உதிக்கும் – நிலைநில்லாது மாறிமாறித்தோன்றுந் தன்மையுள்ள,
உடற்கே – உடம்புக்கே,
இதம் செய் – நன்மையைச் செய்கிற,
பொருள் – செல்வத்தை,
ஆக்கையின் – சம்பாதித்தற்காகு,
நால் இரண்டு திக்கும் தடுமாறும் – எட்டுத் திசைகளிலும் திரிந்துஉழலுகின்ற,
நெஞ்சே – (எனது) மனமே! – இனி – –
திக்கும் அரன் – (நெற்றிக்கண்ணின் நெருப்பினால்) எரிக்குந்தன்மையுள்ள சிவனும்,
வேள் – சுப்பிரமணியனும்,
அயனார் – பிரமதேவரும்,
முதல் – முதலிய,
தேவர் எல்லாம் – தேவர்களெல்லாரும்,
திரண்டு – ஒருங்குகூடி,
சரண் துதிக்கும்படி – (தனது) திருவடிகளைத் தோத்திரஞ்செய்யும்படி,
வேங்கடம் மேல் நின்ற – திருவேங்கடமலையின் மேல் நின்றதிருக்கோலமாக எழுந்தருளியிருக்கிற,
தாமத்தை – ஒளிவடிவமுள்ள கடவுளை, எய்துவம் – அடைவோம்: வா -; (எ – று.)

புரண்டு உதித்தல் – இறப்பதும் மீண்டும் பிறப்பது மாதல். யாக்கை நிலையாமையை விளக்குவார், “புரண்டுஉதிக்கும் உடல்” என்றார்.
எய்துதல் – இடைவிடாது நினைத்தல்; (“மாணடி சேர்ந்தார்” என்றவிடத்தில், “சேர்தல்” போல.)
மனத்தை வசப்படுத்தினா லன்றி நன்முயற்சி இனிது நிறைவேறா தாதலால், அதனை முன்னிலைப்படுத்தி அறிவுறுத்துகிறார்.
திரண்டு துதிக்கும்படி என இயையும். தீக்கும் என்பது, திக்கும் எனக் குறுக்கலென்னுஞ் செய்யுள்விகாரமடைந்தது;
(“திருத்தார் நன்றென்றேன் தியேன்” என்றதில் “தீயேன்” என்பது ‘தியேன்’ என்றும்,
“பரிதியொ டணிமதிபனி வரைதிசைநில, மெரிதியொ டெனவினவியல்வினர் செலவினர்” என்றவிடத்து
“தீ” என்பது “தி” என்றுங் குறுகினமை காண்க.
( அரன் வேள் அயனார் முதல் தேவர்எல்லாம் சரண் துதிக்கும்படி மேல்நின்ற வேங்கடத்தாமம் –
“நீலார்கண்டத்தம்மானும் நிறைநான்முகனு மிந்திரனுஞ், சேலேய் கண்ணார்பலர் சூழ விரும்புந் திருவேங்கடத்தானே”,
“நிகரி லமரர் முனிக்கண ங்கள் விரும்புந் திருவேங்கடத்தானே” என்பன திருவாய்மொழி.

————–

பிரிவாற்றாத தலைவி தோழியரை நோக்கி இரங்கிக் கூறுதல் –

தாம் மத்து அளை வெண்ணெய்உண்ட அந்நாள் இடைத் தாயார் பிணி
தாமத் தளை உவந்தார் வேங்கடாதிபர் தாமரைப் பூந்
தாமத்தளை அணியும் மணி மார்பில் நல் தண் அம் துழாய்த்
தாமத்து அளைவது என்றோ மடவீர் என் தட முலையே –72-

(இ – ள்.) மடவீர் – மடமையையுடையவர்களே! –
மத்து அளை வெண்ணெய் – மத்துக்கொண்டு கடைந்தெடுக்கப்பட்ட வெண்ணெயை,
தாம் உண்ட – தாம் (களவுசெய்து) விழுங்கிய,
அ நாளிடை – அந்த நாளிலே (கிருஷ்ணாவதாரஞ்செய்துவளர்ந்த இளம்பருவத்திலே),
தாயர்பிணி – வளர்த்த தாயாரான யசோதைப்பிராட்டி கட்டின,
தாமம் தளை – கயிற்றினாலாகிய கட்டை,
உவந்தார் – விரும்பி யேற்றுக்கொண்டவரான,
வேங்கட அதிபர் – திருவேங்கடமுடையானுடைய,
தாமரை பூ தாமத்தளை மணியோடு அணி மார்பில் – தாமரைமலரை இடமாகவுடையளான திருமகளையும்
(கௌஸ்துப மென்னும்) இரத்தினத்தையும் அணிந்த திருமார்பில் (தரித்த),
நல் தண் அம் துழாய் தாமத்து – சிறந்த குளிர்ந்த அழகிய திருத்துழாய்மாலையில்,
என் தட முலை அளைவது – எனது பெரிய தனங்கள் பொருந்துவது, என்றோ – எந்நாளோ? (எ – று.)

தலைவனைப்பிரிந்த தலைவி, இனித் தலைவனது சேர்க்கை நேர்வது எக்காலமோ வென்று இரங்கிக் கூறினள்.

கண்ணன் இளம்பிராயத்தில் திருவாய்ப்பாடியிலுள்ள ஆயர்மனைகளிற் சென்று அவர்களுடைய
பால் தயிர் வெண்ணெய் முதலியவற்றைக் களவு செய்து உண்டமையை ஆய்ச்சியர் சொல்ல அறிந்த யசோதை
அக் குற்றத்துக்கு ஒரு தண்டனையாகக் கண்ணனை வயிற்றிற் கயிற்றினாற்கட்டி உரலோடு பிணித்துவைத்தனள்
என்ற வரலாறு, முதல்விசேஷணத்திற் குறிக்கப்பட்டது.
“பத்துடையடியவர்க்கெளியவன் பிறர்களுக்கரியவித்தகன்” என்றபடி தேவாதிதேவனான சர்வேசுவரன் திருவருளினால்
இங்ஙனம் எளிமைபூண்டு கட்டுப்பட்டதாகிய சௌலப்யகுணாதிசயத்தில் ஈடுபட்டு “தளையுவந்தார்” என்றார்.
அப்பொழுது முதலில் யசோதை கட்டத்தொடங்கிய கயிறு சிறிதளவுபோதாதாம்படி கண்ணன் இடைபருத்துக்காட்டி,
அது கண்டு அத்தாய் இடையர்வீடுகளிலுள்ள தாம்புகளையெல்லாங் கொணர்ந்துசேர்த்து ஒன்றாக
முடிந்து கட்டப்புகுந்தோறும் அதுவும் போதாதாம்படி அத்திருமகன் வளர்ந்துவந்து, பின்பு அவள் கை
சலித்து மெய்வேர்த்துக் கண்பிசைந்து வருந்தக் கண்டு உடல்சிறுத்துக் கட்டுண்டனன் என்ற விவரமும்,
“உவந்தார்” என்றதனாற் குறிக்கப்படும்.

தாயர் – உயர்வுப்பன்மை. நாள் இடைத்தாயர் என்றும் பிரிக்கலாம். திருமால் திருமகளை வலத் திருமார்பிலும்,
கௌஸ்துபமென்னுந் திவ்வியரத் தினத்தை இடத்திருமார்பிலுந் தரித்துள்ளான்.
மடமை – மகளிர்க்குச் சிறந்த பேதைமை யென்னுங் குணம்;
அது, நாணம் முதலிய மற்றைப்பெண் குணங்கட்கும் உபலக்ஷணம்: இளமையுமாம்.

எம்பெருமானது பிரிவை யாற்றாத ஐயங்கார், “எனதுபக்தி அப்பெருமா னோடுசேர்ந்து இனிமையை நுகர்தற்குப்
பாங்காவது எக்காலமோ” என்று, தம்பக்கல் பரிவுள்ள அன்பர்களை நோக்கிக் கூறுதல், இதற்கு உள்ளுறை பொருள்.
அந்யாபசேத்தில் “முலை” என்றது, ஸ்வாபதேசத்தில் பக்தியாம். மகளிருறுப்பாய்ச்சிறக்கின்ற இது,
அடியார்க்கு இலக்கணமாய்ச் சிறக்கின்ற அதனைக் குறிப்பிக்கும்.
தலைவனைச் சேர்ந்து அனுபவித்தற்கு உபகரணமாதல் இரண்டுக்கும் உண்டு.
“தடமுலை” என்றது, பக்குவமாய் முதிர்ந்த பக்தி யென்றவாறு: பரமபக்தி யென்க. ஸ்வாபதேசத்தில்,
துழாய் – இனிமை. விஸ்தாரம் ஆய்ந்து உணர்க.

இது, யமகச்செய்யுள்.

———–

தடவிகடத் தலை வேழ முன் நின்றன சாடு உதைத்துப்
படவிகள் தத்து அலை ஈர் எழ் அளந்தன பூந்திரு வோடு
அடவி கடத்தலை வேட்டன -வேங்கடத்து அப்பன் புள்ளைக்
கடவி கடத்தலை நெய் உண்ட மாதவன் கால் மலரே –73-

(இ – ள்.) புள்ளை கடவி – (கருடப்) பறவையை வாகனமாகக் கொண்டு ஏறி நடத்துபவனும்,
கடத்தலை – குடத்தில் வைத்திருந்த,
நெய் – நெய்யை,
உண்ட – அமுது செய்த,
மாதவன் – மதுகுலத்துத் தோன்றியவனுமான,
வேங்கடத்து அப்பன் – திருவேங்கடமுடையானுடைய,
கால் மலர் – தாமரை மலர் போன்ற திருவடிகள், –
தட – பெரிய,
விகடம் தலை – (கும்ப ஸ்தலங்களையுடைமையால் மேடுபள்ளங்கொண்டு) மாறுபாடுற்ற தலையை யுடைய,
வேழம் முன் – (கஜேந்திராழ்வானாகிய) யானையின் முன்னிலையில்,
நின்றன – சென்று நின்றன;
சரடு உதைத்து – சகடாசுரனை உதைத்துத் தள்ளி,
தத்து அலை புடவிகள் ஈர் எழ் அளந்தன – பாய்ந்து வருகின்ற அலைகளை யுடைய கடல் சூழ்ந்த பூமி முதலிய உலகங்கள் பதினான்கையும் அளந்தன;
பூ திருவோடு – தாமரை மலரில் வாழ்கின்ற திருமகளின் அவதாரமான சீதாபிராட்டியுடனே,
அடவி கடத்தலை வேட்டன – வனத்தைக்கடப்பதை விரும்பி நடந்தன; (எ – று.)

இது, இந்நூலின் முதற்செய்யுள் போன்ற பாதவகுப்பு.

பூலோகத்தையளந்ததில் அதன்கீழுலகங்களேழும், மேலுலகத்தையள ந்ததில் புவர்லோகம்முதலிய ஆறும் அடங்குதலால்,
“புடவிகளீரேழளந்தன” என்றார்.
திருமால் இராமனாகத் திருவவதரித்துபோது திருமகள் சீதையாகவும்,
அப்பெருமான் கண்ணனாகத் திருவவதரித்தபோது அப்பிராட்டி ருக்மிணியாகவும் அவதரித்தன ளென்று புராணங் கூறுதலால்,
“பூந்திரு” என்றது – ஜாநகியைக் குறித்தது. தாய் தந்தையர்சொற் காத்தற்பொருட்டு வனவாசஞ் செய்தலே யன்றித்
தண்டகாரணியங்கடந்து இராவணவதத்தின் பொருட்டு இலங்கைக்குச் செல்லவேண்டுமென்னும் உத்தேசமும் இராமபிரானுக்கு இருத்தலால்,
“அடவிகடத்தலை வேட்டன” என்றார்; பெருமானது விருப்பத்தை அவனதுதிருவடியின்மே லேற்றிக் கூறினது, உபசாரவழக்கு.

சாடு – சகடமென்பதன் விகாரம். “தத்தஅலை” என்பது – வினைத்தொகையன்மொழியாய், கடலின்மேல் நின்றது.
கடவி, இ – கருத்தாப்பொருள்விகுதி: சங்கேந்தி, உலகாளி, குடமாடி என்ற பெயர்களிற் போல. கடம் – வடசொல்; தலை – ஏழனுருபு.

————–

கானகம் உண்டு அதில் போம் என்னின் நீங்கிக் கடும் பிணி காள்
தேன் அக முண்டகத் தாள் வேங்கடேசனை சென்று இரக்கும்
போனாக முண்ட வெண் நீற்றான் அயனொடும் பூமியொடும்
வானகம் உண்ட பெருமானை இன்று என் மனம் உண்டதே –74-

(இ – ள்.) சென்று இரக்கும் போனகம் – (பலவிடங்களிலுஞ்) சென்று யாசித்துப் பெறும் பிச்சை யுணவைக் கொள்கிற,
முண்டம் – (பிரம) கபாலத்தையேந்திய,
வெள் நீற்றான் – வெண்ணிறமாகிய விபூதியைத் தரித்தவனான சிவனும்,
அயனொடும் – பிரமனும் ஆகிய இருமூர்த்திகளோடும்,
பூமியொடும் வானகம் – நிலவுலகத்தையும் மேலுலகங்களையும் (ஆகிய அனைத்தையும்),
உண்ட – (பிரளயகாலத்தில்) உட்கொண்டருளிய,
பெருமானை – பெருமையை யுடையவனான,
தேன் அகம் முண்டகம் தாள் வேங்கட ஈசனை – தேனைத் தனது அகத்தேயுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளையுடைய திருவேங்கடமுடையானை,
இன்று – இப்பொழுது,
என் மனம் உண்டது – எனது மனம் உட்கொண்டது; (ஆதலால்),
கடும் பிணிகாள் – கொடியநோய்களே! (நீங்கள்),
என்னின் நீங்கி – என்னை விட்டு நீங்கி,
கானகம் உண்டு அதில் போம் – காடு உளது அதிற் செல்லுங்கள்; (எ – று.)

இச்செய்யுள், கீழ் 6 – ஆஞ்செய்யுள்போலவே வியாதிகளை முன்னிலைப் படுத்திக்கூறியது.
இதனை, “ஒங்காரவட்டத்து மாசுணப்பாயி லுலோகமுண்ட,
பூங்கார் விழிக்குப் புலப்பட்டதா லெப்பொழுதுமென்னை,
நீங்காதிடர்செயுந்தீவினைகா ளினிநின்று நின்று,
தேங்காது நீரு மக்கானிடத்தே சென்றுசேர்மின்களே” என்ற திருவரங்கத்துமாலைச் செய்யுளோடு ஒப்பிடுக.
எம்பெருமான் எல்லாநோய்க்கும் மருந்தாவ னென்பது போதரும்.
‘நீற்றானயனொடும் பூமியொடும் வானகமுண்ட பெருமானை மனமுண்டது’ என்ற விடத்துச்
சிறிய ஆதாரத்திற் பெரிய ஆதேயம் அடங்கியதாகச் சொன்னது,பெருமையணியின் பாற்படும்;

“சூழ்ந்ததனிற்பெரிய பரநன்மலர்ச்சோதீயோ,…… சூழ்ந்ததனிற்பெரியவென்னவா” என்பது நம்மாழ்வார் பாசுரம்.
“கானகமுண் டதிற்போம்” என்ற முன்வாக்கியத்தை “பெருமானையென்மனமுண்டது” என்ற பின்வாக்கியம் சாதித்து நிற்பது,
தொடர்நிலைச்செய்யுட்குறியணி.
நீங்கி அதிற்போம் என்ற விடத்து, “கானகமுண்டு” என்ற வாக்கியம் இடைப்பிறவரலாய் நின்றது. அகம் – உள்ளிடம்.

————-

மனம் தலை வாக்கு உற எண்ணி வணங்கி வழுத்தும் தொண்டர்
இனம் தலைப் பெய்தனன் ஈது அன்றியே இமையோரும் எங்கள்
தனம் தலைவா எனும் வேங்கடவாண தடம் கடலுள்
நனந்தலை நாகணையாய் அறியேன் அன்பும் ஞானமுமே –75–

(இ – ள்.) இமையோரும் – தேவர்களும்,
‘எங்கள் தனம் – எங்கட்குச் செல்வம்போன்றவனே!
(எங்கள்) தலைவா – எங்கள் தலைவனே!’
எனும் – என்று துதிக்கப்பெற்ற,
வேங்கட வாண – திருவேங்கடமுடையானே!
தட கடலுள் – பெரிய (திருப்பாற்)கடலில்,
நனந் தலை நாக அணையாய் – பரந்த இடமுள்ள ஆதிசேஷனாகிய சயனத்தை யுடையவனே! –
மனம் தலை வாக்கு – மனமும் தலையும் வாக்கும் ஆகிய திரிகரணங்களாலும்,
உற – தகுதியாக, (முறையே),
எண்ணி வணங்கி வழுத்தும் – (உன்னைத்) தியானித்து நமஸ்கரித்துத் துதிக்கின்ற,
தொண்டர் – (உனது) அடியார்களுடைய,
இனம் – கூட்டத்தோடு,
தலைப்பெய்தனன் – சேர்ந்தேன்;
ஈது அன்றியே – இதுவே யல்லாமல்,
அன்பும் ஞானமும் அறியேன் – ஞானபக்திகளின் தன்மையை (அடியேன்) அறிகிறேனில்லை; (எ – று.)

அன்புஞானங்களை அறியேனாயினும், அவற்றையறிந்து திரிகரணத்தாலும் நின்னைவழிபடுகிற
மெய்யடியார்களோடு சேர்ந்தேனாதலால், அச்சம்பந்தத்தையே வியாஜமாகக்கொண்டு என்னைக் காத்தருளவேண்டு மென்பதாம்.
முதலடியில் மனத்தினால் எண்ணி, தலையினால் வணங்கி, வாக்கினால் வழுத்தும் என முறையே சென்று இயைதல்,
முறைநிரனிறைப்பொருள்கோள். உற – மனம் முதலியவற்றைப் பெற்றதன் பயன்சித்திக்க என்றபடி.
தலைப்பெய்தல் – ஒரு சொல்; இதில், தலைஎன்பது – தமிழுபசர்க்கம்: பெயர்க்கும் வினைக்கும் முன் அடையாய் நின்று
பொருள் தராதும் அப்பெயர்வினைப் பொருளை வேறுபடுத்தியும் வரும் இடைச்சொல் வடமொழியில் உபசர்க்கமெனப்படும்;
கைகூடல், தலைப்பிரிதல், கண்தீர்தல், மேற்கொள்ளல், பரிமாறல், பாதுகாத்தல் என்றவற்றில் –
கை, தலை, கண், மேல், பரி, பாது என்பன தமிழுபசர்க்கமாம். ஈது – சுட்டு நீண்டது. ஈதன்றியே, ஏ – பிரிநிலை.

இமையோர் – கண்இமையாதவர்; எதிர்மறை வினையாலணையும்பெயர். எதிர்மறை ஆகாரம் புணர்ந்துகெட்டது.
விகுதிமுதல்ஆகாரம் ஓகாரமாயிற்று. இமையோர் – ஞானசங்கோசமில்லாத நித்தியசூரிகளுமாம். உம் – உயர்வுசிறப்பு.
அதனால், பிறர்துதித்தல் தானே பெறப்படும். தனம் – அண்மைவிளியாதலின், இயல்பு.
ஆபத்துக்காலத்தில் உதவுதல்பற்றியும், விருப்பத்துக்கிடமாதல்பற்றியும், “எங்கள்தனம்” என்றார்.

“கறங்காழி நாலெட்டிலக்கமியோசனை கட்செவியின், பிறங்காக மும்மையிலக்க மியோசனை பேருலகி,
லிறங்காழிமேகமெனவேயரங்கத்திலெந்தையதி, லுறங்காகநீளமைந்தைம்பதினாயிரமோசனையே” என்பது நூல்துணிபாதலால்,
“தடங்கடலுள் நனந்தலைநாகணையாய்” என்றார்.
ஆசிரியர் நச்சினார்க்கினியர் பத்துப்பாட்டுள் முல்லைப்பாட்டில் “நனந்தலை யுலகம்” என்றதற்கு
“அகலத்தை இடத்தேயுடைய உலகம்” என்றும், மதுரைக்காஞ்சியில் “நாளங்காடிநனந்தலை” என்றதற்கு
“அகற்சியையுடைத்தாகிய இடத்தினையுடைய நாட்காலத்துக்கடை” என்றும் உரைத்தமை உணர்க.
தொல்காப்பியத்து “நனவேகளனும் அகலமுஞ் செய்யும்” என்ற உரிச்சொல்லியற்சூத்திரத்தால்,
நனவென்னும் உரிச்சொல் அகலமென்னும் பொருளை யுணர்த்துதல் காண்க.
நாகவணை என்பது நாகணை யெனத் தொகுத்தல்விகாரப்பட்டது;
“நஞ்சுபதி கொண்ட வளநாகணை” எனச் சீவக சிந்தாமணியிலும்,
“நச்சுநாகணைக் கிடந்த நாதன்” எனத் திருச்சந்தவிருத்தத்திலும்,
“நாராயணாவோ மணிவண்ணா நாகணையாய்” எனச் சிறியதிருமடலிலுங் காண்க.
காரியகாரணமுறைபற்றி, ‘அன்புஞானமும்’ என்றார்.
மநோ வாக் காயமென்ற முறைபிறழக் கூறினார், செய்யுளாதலின்: யமகநயத்தின்பொருட்டென்க.
மெய்யென்னுமிடத்துத் தலையைக் கூறினது, உத்தம அங்கமாதலின்.

———-

ஞானக் கண் தா கனவு ஒக்கும் பவம் துடை நஞ்சு இருக்கும்
தானக் கண்டா கனற்சோதி என்று ஏத்தும் வன் தாலமுடன்
வானக் கண் தா கன வண்ணா என்று ஒது ஒலி வந்து அடையா
ஈனக் கண்டா கனற்கு ஈந்தான் பர கதி என் அப்பனே –76-

(இ – ள்.) “நஞ்சு இருக்கும் – விஷம் தங்குகின்ற,
தானம் – இடமாகிய,
கண்டா – கழுத்தையுடையவனே!
கனல் சோதி – அனற்பிழம்பின் வடிவமானவனே!
ஞானம் கண் தா – (எனக்கு) ஞானமாகிய கண்ணைக் கொடு;
கனவு ஒக்கும் பவம் துடை – கனாத்தோற்றத்துக்குஒப்பான பிறப்பை (எனக்கு) ஒழித்தருள்வாய்,”
என்று – என்றுசொல்லி,
ஏத்து – (சிவபிரானைத்) துதிக்கிற,
வல் தாலமுடன் – வலிய நாவினுடன் (கூடி),
வானக்கண் தாகனம் வண்ணா என்று ஓது ஒலி வந்து அடையா – “வானத்தில் தாவிச் செல்லுகிற மேகம் போன்ற
நிறத்தையுடையவனே!” என்று (திருமாலைத்) துதித்துச்சொல்லும் ஓசை தன் (செவிகளில்) வந்துநுழையப் பெறாத,
ஈனம் கண்டாகனற்கு – இழிவையுடைய கண்டாகர்ணனென்னும் பூதகணநாதனுக்கும்,
என் அப்பன் – எனது தலைவனான திருவேங்கடமுடையான்,
பரகதி ஈந்தான் – பரமபதத்தைத் தந்தருளினன்; (எ – று.)தாலமுடன் அடையா என்று இயையும்.

“எந்தைவானவர்க்கும், வணங்கரியா னன்றிக் காப்பாரில்லாமை விண்மண்ணறியும்,
வணங் கரியானவர் வாணன் கண்டாகனன் மார்க்கண்டனே” என்றபடி
ஸ்ரீமந்நாராயணனே பரம்பொருளென்று சாதித்தற்குச் சாக்ஷியாகிற திவ்வியசரித்திரங்களுள் முதலிற்
சிவபக்தியோடு விஷ்ணுத்வேஷமும் மேலிட்டிருந்த கண்டாகர்ணன் பின்புசிவனால் முத்திபெறமாட்டாது
கண்ணபிரானாற் பெற்றனனென்ற வரலாறு சிறத்தலால், அதனை இங்கு எடுத்துக்காட்டினர்,
‘திருமாலினிடத்து இத்துணைக்காலமாக மனப்பதிவில்லாது பெரும்பாதகராய் மாறுபாடுகொண்டிருந்த நாம் இப்பொழுது
அப்பிரானைச் சரண்புக்கால் அவன் காப்பனோ? காவானோ?’ என்று ஐயுறுவாரது சந்தேகத்தைப் போக்கக் கூறியதாக
இச்செய்யுட்குச் சங்கதி காணலாம்.
(“பாதகக்கண்டா கன்னனெனுமியக்கன் பத்தியற் றுன்பெரும்புகழைக்கேளோமென்று,
காதிரண்டிற் சத்தமிகு மணியைக் கட்டிக் கணப்பொழுதுமோயாம லசைத்திருக்கத்,
தீதுநினைந்தானென்றுன்மனத்தெண்ணாமற் சிந்தையினான் மறவாமல் தியானித்தானென்று,
ஏதமற வவனுக்குமவன் தம்பிக்கு மிரங்கி முத்தியளித்தனையே யெம்பிரானே” என்றார் பின்னோரும்.)

தத்துவப்பொருள்களை உள்ளபடிகாணுதற்குக் கருவியாதலால், ஞானம் ‘கண்’ எனப்பட்டது.
காண்பது கண் எனக் காரணக்குறி. ‘கனவொக்கும் பவம்’ என்றது, சொப்பனத்திலே காணப்பட்ட பொருள் போலப்
பிரபஞ்சவாழ்க்கை சிறிதும் நிலைபேறின்றி அழியுந்தன்மையதாதலால்;
“கண்டகனாவின் பொருள்போல யாவும்பொய்” என்பது திருவரங்கத்தந்தாதி.
பிறப்பை ஒழித்தருளுதலாவது – இனிப் பிறவியில்லாதபடி மீளாவுலகமாகிய முத்தியை யளித்தல்.

திருப்பாற்கடல்கடைகையில் அதனினின்று எழுந்ததோர் அதிபயங்கரமான பெருவிஷத்தைக் கண்டமாத்திரத்தில்
அதன்கொடுமையைப் பொறுக்கமாட்டாமல் அஞ்சியோடிச் சரணமடைந்த தேவர்களின் வேண்டுகோளினால்
அவ்விஷத்தைச் சிவபிரான் அமுதுசெய்து கண்டத்தில் நிறுத்தி அனைவரையும் பாதுகாத்தருளின னென்றும்,
தாம்தாம் கடவுளென்னுங் கருத்துக்கொண்டு ஒருவர்க்கொருவர் பகைமைபூண்டு போர்தொடங்கிய
பிரமவிஷ்ணுக்களின் மாறுபாட்டை யொழித்தற்பொருட்டுப் பரமசிவன் அவ்விருவர்க்கும் நடுவில்
ஒரு பெரிய சோதிமலைவடிவமாய்த் தோன்றி நின்றனனென்றும் சைவபுராணங்களிற் கூறப்படுகிற வரலாறுகளை
யுட்கொண்டு சைவர்கள் சிவனைத் துதிக்கிற மரபின்படி மகாசைவனாயிருந்த கண்டாகர்ணன்
“நஞ்சிருக்குந்தானக்கண்டா, கனற்சோதி” என்று ஏத்தினனென்றார்.
“கனச்சோதி” என்ற பாடமும் – திரண்ட சோதிவடிவானவனே யெனப் பொருள்படும்.
“விஷகண்டா! தழல்வண்ணா!” என்று கடுஞ்சொற்களால் துதிப்பவன் “முகில்வண்ணா! என்ற செவிக்கினிய
சொல்லைக் கேட்கவும் மாட்டாத வனாயின னெனக் கண்டாகர்ணனது இழிபை விளக்கியவாறு;
இங்கு “காணிலும்முருப்பொலார் செவிக்கினாதகீர்த்தியார்,
பேணிலும்வரந்தரமிடுக்கிலாத தேவரை,
யாணமென்றடைந்துவாழுமாதர் காளெம்மாதிபாற்,
பேணிநும்பிறப்பெனும் பிணக்கறுக்ககிற்றிரே” என்ற திருச்சந்தவிருத்தம் கருதத்தக்கது.

தாடையைக்குறிக்கிற “தாலு” என்ற வடசொல், தமிழில் நாவென்ற பொருளில் வருதலை “தமிழிலே தாலை நாட்டி” எனக்
கம்பராமாயணச் சிறப்புப்பாயிரத்திலுங் காண்க. தாலம், அம் – சாரியை, தா கனம் – வினைத்தொகை;
கீழ் 11 – ஆஞ்செய்யுளின் ஈற்றடியில் “தாமரை” என்றது போல, “வானக்கண் தா” என்றது, மேகத்துக்கு அடைமொழி;
மேகவண்ணனுக்கு அடைமொழியாகக் கொண்டால், உலகளந்த வரலாற்றைக் குறிக்கும்.

———–

என் அப்பன் ஆகத்துப் பொன் நூலன் வேங்கடத்து எந்தை துயில்
மன் அப்பன் நாகத்துக்கு அஞ்சல் என்றான் பல் மணி சிதறி
மின்னப் பல் நாகத்துப் பாய்ந்தான் கதை அன்றி வெவ்வினைகள்
துன்னப் பல் நா கத்துப் பொய்ந்நூல் புகா என் துளைச் செவிக்கே –77–

(இ – ள்.) என் அப்பன் – எனது ஸ்வாமியும்,
ஆகத்து பொன் நூலன் – திருமார்பிலே பொன்னினாலாகிய பூணூலைத் தரித்தவனும்,
துயில் மன் அப்பன் – சயனித்துத் துயில் பொருந்துதற் கிடமாகிற கடலையுடையவனும்,
நாகத்துக்கு அஞ்சல் என்றான் – (“ஆதிமூலமே” என்ற) யானைக்கு ‘அஞ்சாதே’ என்று சொல்லி அபயமளித்து (அதனை)ப் பாதுகாத்தவனும்,
பல்மணி சிதறி மின்ன – (பல முடிகளிலுமுள்ள) பலமாணிக்கங்கள் தெறித்து மின்னல்போல விளங்கும்படி,
பல் நாகத்து பாய்ந்தான் – பற்களையுடைய (காளியனென்னும்) பாம்பின்மீது வலியப்பாய்ந்திட்டவனுமான,
வேங்கடத்து எந்தை – திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுடைய,
கதை அன்றி – திவ்வியசரித்திரங்கள் என்காதுகளிற் செல்லுமேயல்லாமல், –
வெவ்வினைகள் துன்ன – கொடிய தீவினைகள் நெருங்க,
பல் நாகத்து – (பரசமயத்தாரது) பலநாக்குக்கள் கத்துதலையுடைய,
பொய் நூல் – பொய்யான சமயநூல்களின் பொருள்கள்,
என் துளை செவிக்கு புகா – எனது செவித்தொளைகளில் நுழையா; ( எ – று.)

“மறந்தும் புறந்தொழா மாந்தர்” என்றபடி தேவதாந்தரங்களிடத்தில் தமக்கு உள்ள உபேக்ஷையையும்,
பரதேவதையினிடத்தில் தமக்குஉள்ள அபேக்ஷையையும் இங்ஙனங் கூறி வெளியிட்டார்.

“ஆகத்துப் பொன்நூலன்” என்பது – திருமார்பிலே பொன்னையும் (திருமகளையும்) பூணூலையும் உடையவனென்றும் பொருள்படும்.
உபவீதத்தைப்போலவே பெரியபிராட்டியையும் எப்பொழுதும் நீங்காது தரிப்பவனென்க.
துயில் மன் அப்பன் – அப்பில் துயில் மன்னுபவன்; அப்பு – ஜலம்; இங்கு, பிரளயப்பெருங்கடல்; அப் – வடசொல்.
நாகத்தின் விஷப்பற்கள், காளி காளாத்திரி யமன் யமதூதி எனப் பெயர்பெறும்.

கத்து – முதனிலைத்தொழிற்பெயர்; இரண்டாம் வேற்றுமையுருபும்பயனுமுடன் தொக்கதொகை;
கத்துகிற என வினைத்தொகையாகக் கொண்டால், கத்துப்பொய்ந்நூல் என வருமொழிமுதல்வலிமிகாது,
துளைச்செவிக்கு – உருபுமயக்கம்.
“கேட்பினுங் கேளாத்தகையவே கேள்வியாற், றோட்கப்படாத செவி” என்றபடி நூற்கேள்வி யில்லாதசெவி
செவிட்டுச் செவியாதலால், அங்ஙனமன்றிப் பெரியோரிடத்து நுண்ணியபொருளைக் கேட்ட செவியென்பார், “துளைச்செவி” என்றார்.

———–

நாரை விடு தூது

செவித்தலை வன்னியன் சூடு உண்ட வேய் இசை தீப்பதும் யான்
தவித்து அலை வன்மயலும் தமர் காப்பும் தமிழ்க் கலியன்
கவித்தலைவன் திரு வேங்கடத்தான் முன் கழறுமின் பொன்
குவித்து அலை வந்து உந்து கோனேரி வாழும் குருகினமே –78-

(இ – ள்.) அலை – அலைகள்,
பொன் குவித்து வந்து உந்து – பொன்னைக் கொழித்துக்கொண்டுவந்து (கரைகளில்) மோதப்பெற்ற
கோனேரி – கோனேரியில்,
வாழும் – வாழ்கிற,
குருகு இனமே – நாரைகளின் கூட்டங்களே! –
வன்னியின் சூடுண்ட வேய் இசை – நெருப்பிற் சுடப்பட்ட மூங்கிலினாலாகிற புள்ளாங்குழலின் இசைப்பாட்டு,
செவித்தலை தீப்பதும் – (எனது) காதுகளினிடத்தைச் சுடுவதையும்,
யான் தவித்து அலைவல் மயலும் – யான் விரகதாபங்கொண்டு வருந்துகிற வலிய (எனது) மோகத்தையும்,
தமர் காப்பும் (பாங்கியர் செவிலியர் முதலிய) உற்றார் (சைத்யோபசாரஞ்செய்து என்னைப்) பாதுகாக்கும் வகையையும்,
தமிழ் கலியன் கவி தலைவன் திருவேங்கடத்தான் முன் கழறுமின் – தமிழ்ப்பாஷையில் தேர்ந்த திருமங்கை யாழ்வார் பாடிய
பாட்டுக்களுக்குத் தலைவனான திருவேங்கடமுடையானது முன்னிலையிற் (சென்று) சொல்லுங்கள்; (எ – று.)

தலைவனைப் பிரிந்த தலைவி அப்பிரிவாற்றாது வருந்தும்போது, அங்ஙனம் இரங்குமிடம் நெய்தல்நில மாதலால்,
திருவேங்கடமலையின் மீதுள்ள கோனேரியெனப்படுகிற ஸ்வாமிபுஷ்கரிணியில் வாழ்கிற குருகென்னும்
நீர்வாழ்பறவைகள் அந்நெய்தனிலத்துக்கழிக்கரையில் இரைதேடுதற்குவர அவற்றைநோக்கி
“எனது நிலைமைகளை எனது தலைவனான திருவேங்கடமுடையான் பக்கல் சொல்லுதற்கு
நீங்கள் எனக்குத் தூதாகவேண்டும்” என வேண்டுகிறாள்.

கூடினநிலையில் இன்பஞ்செய்யும் பொருள்கள்யாவும் பிரிந்தநிலையில் துன்பஞ்செய்தல் இயல்பாதலால்,
வேய்ங்குழலின் இனியசங்கீதம் தன் செவிகளைச் சுடுகிறதென்றாள்.
இடையர் மாலைப்பொழுதிற் பசுக்களை ஊர்க்கு ஓட்டிவரும்போது ஊதுகிற வேய்ங்குழலின்இசை அம்மாலைப்
பொழுதுக்குச்சூசகமாய்க் காமோத்தீபகமாகிப் பிரிந்தாரைவருத்து மென்பதை உணர்க;
“தீங்குழலீரூமாலோ” என்பது நம்மாழ்வார்பாசுரம்.
‘வன்னியிற் சூடுண்ட’ என்றது, வேய்க்கு அடைமொழி; பதப்படுதற்காக மூங்கிலை நெருப்பிற் காய்ச்சுதல் இயல்பு.
வேயிசைக்கு அடைமொழியாக்கொண்டு, நெருப்புப்போலச்சுடுதல் கொண்ட வேய்ங்குழலிசை யெனினுமாம்.
மயல் – ஆசை நோயாலாகிய மயக்கம். தோழியர்முதலியோர் செய்யுஞ் சீதோபசாரங்கள் விரகதாபத்தைத் தணிக்க
மாட்டாமையையு முட்படச் சொல்லுங்க ளென்பாள், “தமர்காப்புங் கழறுமின்” என்றாள்.

கோனேரி – கோன்ஏரி; ஸ்வாமி புஷ்கரிணி: திருவேங்கடமலையின்மேல் திருக்கோயிலுக்கு அருகிலுள்ள பிரதாநமான திவ்வியதீர்த்தம் இது.
திருவேங்கடமுடையானுக்கு அருகில் வாழ்கின்ற வாதலால் அவன் சந்நிதியிற் சொல்லுதற்கு உரியனவா மென்று உட்கொண்டு,
“திருவேங்கடத்தான்முன் கழறுமின் கோனேரிவாழுங்குருகினமே” என்றாள்.
‘கோனேரிவாழுங் குருகினமே’ என விளித்ததனால், அப்பறவைகள்போலத் தானும் திருவேங்கடமுடையான் கருணைக்கு
இலக்காகி அவனருகில் கோனேரிதீரத்தில் வாழ்தலை வேண்டினாளாம்.

ஐயங்காரது ஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெருமான் மறைந்த வளவிலே, அவனது நிரந்தராநுபவத்தைப் பெற
விரும்பிய ஐயங்கார் தமது நிலைமையை அப்பெருமான் சந்நிதியில் விண்ணப்பஞ்செய்யும்படி
ஆசாரியர்களைப் பிரார்த்தித்தல், இதற்கு உள்ளுறைபொருள்.
வெண்ணிறமுடையனவாய் இரண்டு இறகுகளுடன்கூடி எங்குங் கவலையற்றுத்திரிந்து தம்மையே யன்றித்
தமது பரிவாரத்தையும் பாதுகாப்பனவாய்க் கருமமேகண்ணாயிருந்து உத்தேசித்தகாரியத்தைச் சமயம் வாய்க்கும்போது
தவறாதுசெய்து முடித்துக்கொள்வனவான நாரைகளை, சுத்தசத்துவகுணமுடைமையால் உள்ளும்புறமும்
ஒக்க நிர்மலஸ்வபாவராய் ஞானம் ஒழுக்கம் என்ற இரண்டு சாதனங்களுடன் கூடித் திவ்விய தேசங்களிலெல்லாம்
கவலை யற்றுயாத்திரை செய்பவராய்த் தம்மையேயன்றித் தம்மையடுத்தவர்களையும் பாதுகாப்பவராய்க் காரியமே
கருத்தாயிருந்து அதனை உரியகாலத்தில் தவறாதுசெய்து முடிக்கவல்ல ஆசாரிய ரென்னத்தகும்.

“செவித்தலை வன்னியிற்சூடுண்ட வேயிசைதீப்பது” என்றது, பிரபத்தி மார்க்கத்தில் நிற்கிற தமக்குப்
பிரபஞ்ச விஷயங்கள் வெறுப்பைவிளைத்தலைக் கூறியவாறாம்.
“யான்தவித்தலை வன்மயல்” என்றது, தாம் அடைந்திருக்கிற மோகாந்தகாரத்தை உணர்த்தும்.
“தமர்காப்பு” என்றது, பரிவுடையாரும் ஞானிகளுமான அன்பர்கள் தம்மை ஆதரித்தலை.
“கோனேரிவாழுங் குருகினம்” – எம்பெருமானது திருக்கலியாணகுணங்களில் மூழ்கி ஆனந்தமடைகிற ஆசாரியரென்றபடி.
பாகவதர்கள் ஸ்வாமி புஷ்கரிணியில் நீராட்டஞ்செய்து களிப்பவராதலாலும்,
அவர்களை “கோனேரிவாழுங் குருகினம்” என்னலாம்.
இதனால், திருமலைவாஸத்தில் ஐயங்கார்க்குஉள்ள அபேக்ஷை குறிப்பிக்கப்பட்டதாம்;
பெருமாள்திருமொழியில் “வேங்கடத்துக், கோனேரிவாழுங் குருகாய்ப் பிறப்பேனே” என்றதும்,
அதன் வியாக்கியானத்தில் “வர்த்திக்குமென்கிற விடத்துக்கு வேறே வாசகசப்தங்கள் உண்டாயிருக்கச்செய்தே
“வாழும்” என்கிற சப்தத்தை இட்டபடியாலே, அங்குத்தைவாஸந்தானே போகரூபமாயிருக்கு மென்கை’ என்றதும் அறியத்தக்கவை. விரிப்பிற் பெருகும்.

திருவேங்கடமுடையான் திருமங்கையாழ்வாரது பாடல் பெற்றவனாதலால், “கலியன்கவித்தலைவன்” என்றார்.
நான்குவேதங்கட்கு ஆறுஅங்கங்கள்போல, நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு பிரபந்தங்கட்கு ஆறு அங்கங்களாகத்
திருமங்கையாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய பெரியதிருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்,
திருவெழுகூற்றிருக்கை, சிறியதிருமடல், பெரியதிருமடல் என்ற ஆறு திவ்வியப்பிரபந்தங்களுள்
திருக்குடந்தையின் விஷயமான திருவெழுகூற்றிருக்கையொன்றிலன்றி மற்றை ஐந்திலும் திருவேங்கடமுடையான் பாடப்பட்டுள்ளதனால்,
“கலியன்கவித்தலைவன் திருவேங்கடத்தான்” என்றல் தகும்.

“என்னாவிலின்கவி யானொருவர்க்குங் கொடுக்கிலேன்,
தென்னாதெனாவென்று வண்டுமுரல் திருவேங்கடத்து,
என்னானையென்னப்ப னெம்பெருமானுளனாகவே” என நம்மாழ்வார் தமது திவ்யப்பிரபந்தங்களின் தலைவன்
திருவேங்கடமுடையானே யென அறுதியிட்டுள்ளதனால், அவற்றின் அங்கங்களான கலியனது திவ்வியப்பிரபந்தங்கட்கும்
திருவேங்கடமுடையானே தலைவனென்னலா மென்பர் ஒருசாரார்.
கலியன் – மிடுக்குடையவன். சோழமண்டலத்தில் திருமங்கையென்னும்நாட்டிற் சோழராசனுக்குச் சேனைத்தலைமைபூணும்
பரம்பரையில் தோன்றி நீலனென்னும்பெயருடையராய்ப் படைக்கலத்தேர்ச்சி பெற்று அவ்வரசனுக்குச் சேனாபதியாகிப்
பகைவென்று அம்மன்னன்கட்டளைப்படி மங்கைநாட்டுக்கு அரசராகிய இவர்,
குமுதவல்லியென்னுங் கட்டழகியை மணஞ்செய்துகொள்ளுதற்பொருட்டு அவள்சொற்படி நாள்தோறும்
ஆயிரத்தெட்டு ஸ்ரீவைஷ்ணவர்களை அமுதுசெய்வித்து வருகையில், கைப்பொருள் முழுதும் செலவாய்விட்டதனால்,
வழிபறித்தாகிலும் பொருள்தேடிப் பாகவத ததீயாராதநத்தைத் தடையறநடத்தத்துணிந்து வழிச்செல்வோரைக்
கொள்ளையடித்துவரும்போது, ஸ்ரீமந்நாராயணன் இவரை ஆட்கொள்ளக்கருதித் தாம் ஒருபிராமணவேடங்கொண்டு
பல அணிகலங்களைப் பூண்டு மணவாளக்கோலமாய் மனைவியுடனே இவரெதிரில் எழுந்தருள,
இவர் கண்டு களித்து ஆயுதபாணியாய்ப் பரிவாரத்துடன்சென்று அவர்களைவளைந்து வஸ்திராபரணங்களையெல்லாம் அபகரிக்கையில்,
அம்மணமகன் காலிலணிந்துள்ள மோதிரமொன்றைக் கழற்றமுடியாமையால் அதனையும் விடாமற் பற்களாலே கடித்துவாங்க
அம்மிடுக்கை நோக்கி எம்பெருமான் இவர்க்கு “கலியன்” என்றுபெயர் கூறினான்.
பின்இவர் பறித்த பொருள்களையெல்லாம் சுமையாகக்கட்டிவைத்து எடுக்கத்தொடங்குகையில்,
அப்பொருட்குவை இடம்விட்டுப்பெயராதிருக்க, கண்டு அதிசயித்து அவ்வந்தணனைநோக்கி
“நீ என்ன மந்திரவாதம் பண்ணினாய்? சொல்” என்று விடாது தொடர்ந்து நெருக்க,
அப்பொழுது அந்த அழகிய மணவாளன் “அம்மந்திரத்தை உமக்குச் சொல்லுகிறோம் வாரும்” என்று
இவரை அருகில் அழைத்து அஷ்டாக்ஷரமகாமந்திரத்தை இவர்செவியில் உபதேசித்தருளி உடனே
கருடாரூடனாய்த் திருமகளோடு இவர்முன் சேவைசாதிக்க,
அத்திருவுருவத்தைத் தரிசித்ததனாலும், முன்பு காலாழிவாங்கியபொழுது பகவானுடைய திருவடியில் வாய்வைத்ததனாலும்,
இவர் அஜ்ஞாநம் ஒழிந்து தத்துவஞானம் பெற்றுக் கவிபாடவல்லராகிச் சிறந்த ஆறுபிரபந்தங்களைப் பாடினர்.
இவர் “நாலுகவிப்பெருமாள்” என்ற பிருது பெறும்படி தமிழ்வல்ல ராதலால், “தமிழ்க்கலியன்” எனப்பட்டனர்.
கலியனது தமிழ்க்கவி யென்று இயைப்பினுமாம்.

————–

குருகூரர் அங்க மறைத் தமிழ் மாலை குலாவும் தெய்வ
முருகு ஊர் அரங்கர் வட வேங்கடவர் முன் நாள் இலங்கை
வரு கூரர் அங்கம் துணித்தார் சரணங்கள் வல்வினைகட்கு
இரு கூர் அரங்கள் கண்டீர் உயிர்காள் சென்று இரவுமினே –79-

(இ – ள்.) உயிர்காள் – பிராணிகளே! –
அங்கம் – (திருமங்கையாழ்வார் அருளிச்செய்த ஆறுபிரபந்தங்களாகிய ஆறு) அங்கங்களையுடைய,
குருகூரர் மறை தமிழ் மாலை – நம்மாழ்வார் அருளிச்செய்த நான்குதமிழ்வேதமாகியபாமாலைகளில்,
குலாவும் – பொருந்திய,
தெய்வம் முருகு – தெய்வத்தன்மையுள்ள நறுமணம்,
ஊர் – வீசப் பெற்ற,
அரங்கர் – ஸ்ரீரங்கநாதரும்,
முன்நாள் இலங்கை வரு கூரர் அங்கம் துணித்தார் – முற்காலத்திலே இலங்காபுரியில் வந்துசேர்ந்த கொடியவர்களான இராக்கதர்களுடைய உடம்புகளைச் சேதித்தவருமான, வடவேங்கடவர் – வடதிருவேங்கடமுடையானது,
சரணங்கள் – திருவடிகள்,
வல் வினைகட்கு இரு கூர் அரங்கள் கண்டீர் – வலியஇருவினைகளையும் அறுத்தற்கு இரண்டு கூரிய வாள்விசேடங்களாம்;
சென்று இரவுமின் – (எம்பெருமான் பக்கல்)சென்று (உங்கள்வினைகளை அறுக்குமாறு அத்திருவடிகளைப்) பிரார்த்தியுங்கள்; (எ – று.) – கண்டீர் – தேற்றம்.

நம்மாழ்வாரது பாடல்களைப் பெற்றவ ரென்பது, முதல்விசேடணத்தினால் தேர்ந்தபொருள்.
பிரபந்தங்களை “தமிழ்மாலை” என்றதற்குஏற்ப, அவற்றின் சம்பந்தம் பெற்று விளங்குதலை முருகூர்தலாகக் குறித்தார்;
ஊர்தல் – பரத்தல். சிக்ஷை வியாகரணம் சந்தஸ் நிருக்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்ற ஆறுசாஸ்திரங்களும்
நான்கு வேதங்கட்கு அங்கமாதல்போல, நம்மாழ்வாரது நான்குபிரபந்தங்கட்குத் திருமங்கையாழ்வாரது ஆறுபிரபந்தங்களும் அங்கமென்க.
“முன்னா ளிலங்கைவரு கூரரங்கந் துணித்தார்” என்றது – இராமாவதாரத்தில் இராவணன் முதலியராக்ஷசர்களை அழித்ததையேயன்றி,
அதற்குமுன்பு இலங்கையில் வாழ்ந்த மாலிமுதலிய பூர்விகராக்ஷசர்களைத் திருமாலின்வடிவமான உபேந்திரமூர்த்தி அழித்திட்டதையுங் குறிக்கும்.
இருதிறத்தரக்கர்களும் இலங்கையிற்பிறந்தவரன்றி அங்குக்குடியேறினவ ராதலால், ‘இலங்கைவருகூரர்’ எனப்பட்டனர்.
கூரர் – க்ரூரர் என்ற வடசொல்லின் விகாரம். அரம் – இரும்பு முதலிய வலியபொருள்களை அராவி
யழிக்குந்தன்மையுள்ள ஒருவகைவாள்.
இங்கு எம்பெருமான் திருவடிகள் கொடிய கருமங்களையொழிப்பனவாதலால், “வல்வினைகட்கு இருகூரரங்கள்” எனப்பட்டன;
உருவகவிசேடம். சரண் நங்கள் என்று பிரித்தும் பொருள் கொள்ளலாம்.

————–

இரணிய நாட்டன் இரணியன் ஈர் ஐந் தலையன் கஞ்சன்
முரணிய கோட்டின் நகத்தின் சரத்தின் முன் தாளின் துஞ்சத்
தரணியில் குத்தி இடந்து எய்து உதைத்தவன் சர்ப்ப வெற்பன்
அரணிய கேழல் அரி ராகவன் கண்ணன் ஆகி வந்தே –80-

(இ – ள்.) சர்ப்ப வெற்பன் – சேஷகிரியென்று ஒருபெயர் பெற்ற திருவேங்கடமலை யிலெழுந்தருளி யிருப்பவனான திருமால், –
அரணிய – அரண்போல அடுத்தவர்களைக் காக்குந்தன்மையுள்ள,
கேழல் – வராகமூர்த்தியும்,
அரி – சிங்கப்பிரானும்,
ராகவன் – ஸ்ரீராமனும்,
கண்ணன் – கிருஷ்ணனும், ஆகி வந்து -, – (முறையே), –
இரணியநாட்டன் – ஹிரண்யாக்ஷனும்,
இரணியன் – ஹிரண்யனும்,
ஈரைந்தலையன் – பத்துத்தலைகளையுடையவனான இராவணனும்,
கஞ்சன் – கம்ஸனும், –
முரணிய – வலிமையுள்ள,
கோட்டின் – கொம்பினாலும்,
நகத்தின் – நகங்களினாலும்,
சரத்தின் – அம்புகளாலும்,
முன் தாளின் – முந்திநீட்டிய காலினாலும்,
துஞ்ச – இறக்கும்படி, -(அவர்களை) தரணியில் – பூமியிலே,
குத்தி – குத்தியும்,
இடந்து – பிளந்தும்,
எய்து – தொடுத்தும்,
உதைத்தவன் – உதைத்தவனாவன்; (எ – று.)

கேழலாகி வந்து இரணிய நாட்டன் துஞ்சக் கோட்டினாற் குத்தியவன், அரியாகி வந்து இரணியன் துஞ்ச நகத்தினால் இடந்தவன்,
ராகவனாகி வந்து ஈரைந்தலையன் துஞ்சச் சரத்தினால் எய்தவன், கண்ணனாகி வந்து கஞ்சன் துஞ்ச முன்தாளினால் உதைத்தவன்
என நான்கடிகளிலும் முறையே இயைந்து பொருள்படுதலால், நிரனிறையணி.

ஹிரண்யாக்ஷன் என்ற பெயர் – பொன்னிறமான கண்களையுடையவனென்று பொருள்படுதலால்,
அதன் பரியாயநாமமாக “இரணியநாட்டன்” என்றார்; நாட்டம் – கண்; நாடுதற்கருவி.
ராகவன் – சூரியகுலத்துப் பிரசித்திபெற்ற ரகுவென்னும் அரசனது மரபில் தோன்றியவன்; தத்திதாந்தநாமம்.
ஆகிவந்து – இங்ஙனம் திருவவதரித்து என்றபடி. “சரத்தின்” என்றவிடத்து, “கரத்தின்” என்றும் பாடமுண்டு;
அப்பொழுது, கரத்தின் – கைகளால், எய்து – அம்புதொடுத்து என்க. அரண் – கோட்டை, மதிள், காவல். அரண்ய என்ற வடசொல்,
அரணிய என்று விகாரப்பட்ட தெனக்கொண்டு, காட்டிலே (சஞ்சரிக்குந்தன்மையுள்ள) என்று உரைத்தலு மொன்று.
சரண்ய என்ற வடசொல் அரணிய என்று விகாரப்பட்டுவந்த தெனக்கொண்டால், ரக்ஷகமான என்று பொருள்படும்.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கடத்தந்தாதி –41-60-

February 21, 2022

கருத்து ஆதரிக்கும் அடியேனைத் தள்ளக் கருதிக் கொலோ
திருத்தாது அரிக்கும் ஐவர்க்கு இரை ஆக்கினை செண்பகத்தின்
மருத்தாது அரிக்கும் அருவி அறா வட வேங்கடத்துள்
ஒருத்தா தரிக்கும் படி எங்கனே இனி உன்னை விட்டே –41-

(இ – ள்.) செண்பகத்தின் – சண்பகமலர்களினுடைய,
மரு – வாசனை யுள்ள,
தாது – மகரந்தப்பொடிகளை,
அரிக்கும் – அரித்துக்கொண்டுவருகிற,
அருவி – நீரருவிகள்,
அறா – எந்நாளும்இடைவிடாது பெருகப்பெற்ற,
வட வேங்கடத்துள் – வடக்கின்க ணுள்ள திருவேங்கடமலையில் எழுந்தருளி யிருக்கின்ற,
ஒருத்தா – ஒப்பற்றகடவுளே! –
கருத்து ஆதரிக்கும் – மனத்தில் (உன்னையே) விரும்புகின்ற,
அடியேனை – தாசனான என்னை,
தள்ள – (உன் பக்கல் சேர்த்துக்கொள்ளாது) தள்ளிவிட,
கருதிக்கொல்ஓ – எண்ணியோ,
திருத்தாது – (ஆட்கொண்டு) சீர்திருத்தாமல்,
அரிக்கும் ஐவர்க்கு இரை ஆக்கினை – கெடுக்கின்ற பஞ்சேந்திரியங்களுக்கு (என்னை) உணவாக்கிவிட்டாய்;
இனி உன்னை விட்டு தரிக்கும்படி எங்ஙனே – இனி (நான்) உன்னையின்றி உய்யும்வகை எவ்வாறோ? (எ – று.)

இங்ஙனம் தனது அநந்யகதித்வத்தை (அதாவது – திருவேங்கடமுடை யானையன்றி வேறொருரக்ஷகனை யின்றிருப்பதை) வெளியிட்டார்.
“செண்பகத்தின்மருத்தா தரிக்குமருவியறா” என்றது, மலைவளத்தை யுணர்த்தும். கருதிக்கொலோ, கொல் – அசை.
இரையாக்கினை – இலக்காக்கினை யென்ற படி. சம்பகமென்றவடசொல்லின்விகாரமான சண்பக மென்பது,
மோனைத் தொடையின்பொருட்டு, செண்பகம் என்று விகாரப்பட்டது. இந்த மரத்தின்பெயர் – இங்குப் பூவுக்கு முதலாகுபெயர். ஒருத்தன் – ஏகமூர்த்தி.

————-

உன்னைக் கரிய மிடற்றன் அயன் முதல் உம்பர் எல்லாம்
பொன்னைக் கரி ஒத்த போதும் ஒவ்வார் புகழ்க் கோசலை ஆம்
அன்னைக்கு அரிய முத்தே அப்பனே உன்னை அன்றி பின்னை
முன்னைக் கரி அளித்தாய்க்கு உவமான மொழி இல்லையே –42-

(இ – ள்.) புகழ் – கீர்த்தியையுடைய,
கோசலை ஆம் – கௌசல்யையாகிய,
அன்னைக்கு – தாய்க்கு,
அரிய முத்தே – அருமையான முத்துப்போன்ற குமாரனே!
அப்பனே – திருவேங்கடமுடையானே! –
கரி பொன்னை ஒத்த போதும் – கரியானது பொன்னை யொத்தபோதிலும்,
கரிய மிடற்றன் அயன் முதல் உம்பர் எல்லாம் உன்னை ஒவ்வார் – நீலகண்டனான சிவன் பிரமன்
முதலிய தேவர்களனைவரும் உன்னை யொக்கமாட்டார்கள்; (ஆதலால்), –
முன்னை கரி அளித்தாய்க்கு – முன்பு கஜேந்திராழ்வானைப் பாதுகாத்தவனான உனக்கு,
உன்னை அன்றி பின்னை உவமானம் மொழி இல்லை – உன்னையே உபமானமாகக் கூறுவதன்றி
வேறோர்உபமானங் கூறும்வகை இல்லை; (எ – று.) – ஈற்றுஏகாரம் – தேற்றம்.

“தன்னொப்பா ரில்லப்பன்”,
“ஒத்தாரை மிக்காரை யிலையாய மாமாயா”,
“ஈடுமெடுப்புமிலீசன்” என்ற திருவாய்மொழியையும்,
“தனக்குவமை யில்லாதான்” என்ற திருக்குறளையுங் காண்க.
கரியமிடற்றன் – நஞ்சுண்ட தனாற் கறுத்த கழுத்தையுடையவன். உம்பர்என்ற மேலிடத்தின்பெயர் – அங்குள்ள தேவர்க்கு இடவாகுபெயராம்;
இதில், உகரச்சுட்டு – மேலிடத்தைக் குறித்தது: இதன் எதிர்மொழி – இம்பர் (இவ்விடம்), அம்பர் என்பன.
புகழ் – “என்னநோன்பு நோற்றாள்கொலோ இவனைப் பெற்ற வயிறுடை யாள்,”
“செம்மலைப் பயந்த நற்றாய் செய்தவ முடையள்” என்றபடி நற்குணநற்செய்கைகளிற் சிறந்த புருஷோத்தமனான
இராமபிரானைப் பெற்ற தனா லாகிய கீர்த்தி. கோசலை – கௌஸல்யா என்ற வடசொல்லின் விகாரம்;
கோசலதேசத்தரசனது மக ளென்பது பொருள்: தத்திதாந்தநாமம். கோசலம் – உத்தரகோசலம் தக்ஷிணகோசலம் என இரண்டு பிரிவுள்ளது;
அவற்றில் தக்ஷிணகோசலத்தரசன் மகள் இவள்: (தசரதன், உத்தரகோசலத்து அரசாண்டவன்.)
முத்துப்போ லருமையான மகனை “முத்து” என்றது, உவமையாகுபெயர். உபசாரவழக்கு;
தெளிவுக்கும் நீர்மைக்கும் குளிர்ச்சிக்கும் முத்து உவமைகூறப்படும்:
மேலும் (92-ஆங் கவியில்) “பாவையிரங்கு மசோதைக்கு முத்து” என்பர். “பின்” என்ற இடைச்சொல் – வேறு என்ற பொருளில் வந்தது.
முன் – காலமுன். இவற்றில், ஐ – சாரியை. பின்னை முன்னை என்ற மாறுபட்ட சொற்கள் தொடர்ந்து வந்தது, தொடைமுரணின்பாற்படும்.

————–

இல்லைக் கண்டீர் இன்பம் துன்பம் கண்டீர் கண்ட ஏந்திழையார்
சொல்லை கண்டு ஈர் அமுது என்னும் தொண்டீர் தொல் அசுரன் நிறம்
கல் ஐக் கண்டீரவத்தை திரு வேங்கடவக் காவலனை
மல்லைக் கண் தீர் தரத் தேய்த்தானை வாழ்த்துமின் வாழுகைக்கே –43-

(இ – ள்.) கண்ட – கண்ணுக்கு இலக்காகிய,
ஏந்து இழையார் – தரித்த ஆபரணங்களையுடைய மகளிரது,
சொல்லை – சொற்களை,
கண்டு ஈர் அமுது என்னும் – (இனிமையினாற்) கற்கண்டு என்றும் குளிர்ந்த அமிருதம் என்றும் சொல்லுகிற,
தொண்டீர் – (அவர்கட்குத்) தொண்டுபூண்டொழுகுபவர்களே! –
இன்பம் இல்லை கண்டீர் – (அவ்வாறுஒழுகுதலில் உண்மையான) இன்பம்இல்லை யென்று அறிவீர்கள்;
துன்பம் கண்டீர் – பலவகைத்துன்பமே உண் டென்றும் அறிவீர்கள்;
வாழுகைக்கு – (இனி நீங்கள்) பேரின்பவாழ்வு பெறுகைக்காக, –
தொல் – பழமையான,
அசுரன் – இரணியாசுரனுடைய,
நிறம் – மார்பை,
கல் – கீண்ட,
ஐ கண்டீரவத்தை – அழகிய சிங்கமூர்த்தியா னவனும்,
மல்லை – மல்லர்களை,
கண் தீர்தர தேய்த்தானை – கண்கெடும்படி சிதைத்தவனுமான,
திருவேங்கடம் காவலனை – திருவேங்கடமுடையானை, வாழ்த்துமின் – பல்லாண்டுபாடித் துதியுங்கள்; (எ – று.)

முதலடியில் இரண்டிடத்து உள்ள “கண்டீர்” என்ற சொல் – தேற்றமு முணர்த்திற்று. கண்ட – பார்த்த.
ஏந்து இழையார் – செய்கையழகினால் மேனிமினுக்குபவர் என்றபடி.
“தொல்லசுரன்” என்றது, நெடுங்காலமாக அழிக்கப்படாது கொழுத்துச் செருக்கித்திரிந்த தேவசத்துரு என்றவாறு.
கல் ஐக்கண்டீரவம் – வினைத்தொகை; கல்லுதல் – இடத்தல். கண்டீரவம் என்ற வடசொல் – மிடற்றில்தொனியுடைய தென்று பொருள்படும்;
கண்டம் – கழுத்து, ரவம் – ஓசை. திருவேங்கடக்காவலன் – திருவேங்கடமலைக்குத் தலைவன்,
காவலன் – அரசன்; இது, கா வலன் என்று பிரிந்து காத்த லில்வல்லவ னென்றும்,
காவல் அன் என்று பிரிந்து காத்தற்றொழிலையுடை யவ னென்றும், பொருள்படும்.
மல் – மற்போர்; ஆயுதங்கொண்டன்றித் தேகபலங்கொண்டு செய்யும் போர்: அதனையுடையவர்க்கு ஆகுபெயர்.
கண் தீர்தர என்பதற்கு – கண்ணோட்டமில்லாம லென்று பொருள்கொள் ளினுமாம்.
இனி, கை கால் தலை என்பனபோல, கண்என்பதை உபசர்க்க மென்றலும் ஒன்று.

————-

கைத்தனு மோடுஇசை வெற்பு எனக் காண வெவ்வாணன் என்னும்
மத்தன் நுமோடு இகல் செய்வன் என்றே வந்துவை உறு வேல்
அத்தனும் மோடியும் அங்கியும் ஓட என் அப்பனுக்குப்
பித்தனும் ஓடினன் அங்கத்துத் தான் என்றும் பெண்ணன் என்றே –44-

(இ – ள்.) கை தனு – கையிலேந்திய வில்லானது,
மோடு இசை வெற்பு என காண – உயர்ச்சி பொருந்திய மலைபோலத் தோன்ற,
வெவ் வா ணன் என்னும் மத்தன் – கொடிய பாணாசுரனென்கின்ற உன்மத்தன்,
உமோடு இகல் செய்வன் என்றே வந்து – “உம்முடனே போர்செய்வேன்” என்று வீரவாதங்கூறிக்கொண்டே (கண்ணபிரானுடன் போர்க்கு) வந்த போது, –
என் அப்பனுக்கு – எம்பிரானாகிய அத்திருவேங்கடமுடையானுக்கு முன்,
வை உறு வேல் அத்தனும் – கூர்மைமிக்க வேலாயுதத்தை யேந்திய கையையுடையவனான முருகக்கடவுளும்,
மோடியும் – துர்க்கையும்,
அங்கியும் – அக்கினியும்,
ஓட – தோற்றுஓட,
பித்தனும் – பித்தனாகிய சிவனும்,
அங்கத்து தான் என்றும் பெண்ணன் என்று ஓடினன் – உடம்பில் தான் எப்பொழுதும் பெண்ணையுடையவ னென்றுசொல்லிக்கொண்டு ஓடி னான்; (எ – று.)

“மோடி யோட வங்கி வெப்பு மங்கியோட வைங்கரன், முடுகியோட முருகனோட முக்கணீசன் மக்களைத்,
தேடியோட வாணனாயிரம்புயங்கள் குருதிநீர், சிந்தியோட நேமி தொட்ட திருவரங்கராசரே” என்றார் திருவ ரங்கக்கலம்பகத்திலும்.

“பெண்ணென்றாற் பேயு மிரங்கும்” ஆதலின், எதிர்த்துப் பொருகின்ற கண்ணபிரான் தன்னையழியாமல் உயிரோடு விட்டிடுமாறு
அப்பெருமானுக்கு இரக்கமுண்டாதற்பொருட்டுச் சிவபிரான் “அங்கத்துத் தான் பெண்ணன்” என்று சொல்லிக் கொண்டு ஓடின னென்க.
“அங்கத்துத் தான் என்றும் பெண்ணன்” என்ற தொடரில் – உடம்பில் (ஒருபாதி) தான் எப்போதும் பெண்வடிவையுடையவனான
நபும்ஸக னென்ற பொருளும் தொனிக்கும்: ஒருசார் ஆணுறுப்பும் ஒருசார் பெண்ணுறுப்பும் விரவி ஒருவகையாயினும்
நிரம்பாமல் நிற்றல் பேட்டின்இலக்கணமாதல் காண்க; தான் ஆண்மை நிரம்பாதவ னென்று தெரிவித்துக்கொண்டு ஓடினனென்பது போதரும்.
முருகன் வேற்படையிற் சிறந்தவனாய் வேலனென்று ஒருபெயர் பெறுதலால், “வையுறுவேல் அத்தன்” எனப்பட்டான்;
இவன், சிவபிரானது இளையகுமாரன்: (மூத்தவன் – விநாயகன்.) துர்க்கை – பார்வதியின் அம்சமானவள்.
“உம்மோடு” என்ற முன்னிலைப்பன்மை, கண்ணபிரானுடன் சென்ற பலராமன் பிரத்யும்நன் முதலாயினாரை உளப்படுத்தியது.

மத்தன் – கொழுத்தவன்: புலன்வேறுபட்டவன்; வடசொல். வந்து = வர: எச்சத்திரிபு;
“சொல்திரியினும் பொருள்திரியா வினைக்குறை” என்பது நன்னூல்.
அத்தம் – கை; ஹஸ்த மென்ற வடசொல்லின் விகாரம்; அதனை யுடையவன்,
அத்தன், பித்தன் – மதிமயங்கியவன்; செய்வன தவிர்வன அறியாதவன்; தமோகுணதேவதை. உம் – இறந்ததுதழுவியது.

————–

பெண் ஆக்கு விக்கச் சிலை மேல் ஒருதுகள் பெய்த பொற்றாள்
அண்ணாக்கு விக்கல் எழும் போது எனக்கு அருள்வாய் பழிப்பு
நண்ணாக் குவிக்கச்சு இள முலைப் பூ மகள் நாயகனே
எண் ஆக குவிக்கக் குழல் ஊதும் வேங்கடத்து என் கண்ணனே –45-

(இ – ள்.) பழிப்பு நண்ணா – யாதொருநிந்தனையும் அடையாத,
குவிகச்சு இள முலை பூ மகள் – குவிதலையுடையனவும் கச்சணிந்தனவும் என்றும் இளமை மாறாதனவுமான
தனங்களையுடையவளும் செந்தாமரைமலரில் வாழ்பவளுமாகிய திருமகளுக்கு,
நாயகனே – கணவனே!
எண் ஆ குவிக்க – பேரெண்ணையுடைய (மிகப்பலவான) பசுக்களை ஒருங்குசேர்த்தற்பொருட்டு,
குழல் ஊதும் – புள்ளாங்குழலை ஊதியருளிய,
வேங்கடத்து என் கண்ணனே – திருவேங்கடமலையில்எழுந்தருளியிருக்கிற எனதுகண்ணபிரானே! –
பெண் ஆக்குவிக்க சிலை மேல் ஒரு துகள் பெய்த பொன் தாள் – (ஒருகல்லை அகல்யையென்னும்) பெண்ணாகச் செய்விக்குமாறு
அக்கல்லின்மேல் ஒருதூளியை யிட்ட (நினது) அழகிய திருவடிகளை,
அண்ணாக்கு விக்கல் எழும்போது எனக்கு அருள்வாய் – உள்நாக்கிலிருந்து விக்குள் உண்டாகும் போது (அந்திமகாலத்தில்) அடியேனுக்குத் தந்தருள்வாய்; (எ – று.)

“திருவடியே வீடாயிருக்கும்” என்ற கோட்பாடுபற்றி, “தாள் எனக்கு அருள்வாய்” என்றன ரென்க.
நினதுதிருவடியை என்மீது வைத்தருள்வா யென்றும், என்னை நினதுதிருவடியிற் சேர்த்தருள்வா யென்றுங் கொள்ளலாம். முதலடியினால்,
மிகவலிய கல்லையும் மிகமெல்லிய பெண்ணாக்கவல்ல தெனத் திருவடியின் சிறப்பை விளக்கினார்.

பலவிடங்களிற் பரவிமேய்கின்ற பசுக்கூட்டங்களை ஒருங்குசேர்த்தற் பொருட்டும் அவற்றை மகிழ்வித்தற்பொருட்டும்
கண்ணன் வேய்ங்குழலூதி னமை, பிரசித்தம்.
“பூவிற்குத் தாமரையே” என்றபடி எல்லாமலர்களிலும் தாமரை சிறத்தலால், அது வாளா “பூ” எனப்பட்டது;
“பூவெனப்படுவது பொறிவாழ்பூவே” என்றார் பிறகும்: (பொறி – இலக்குமி.) இரட்டுறமொழித லென்னும் உத்தியால்,
பூமகள் என்பதற்கு – பூமிதேவியென்றும் பொருள் கொள்ளலாம்; (“வாயுமனைவியர் பூமங்கையர்” என்பர் நூற்றெட்டுத்திருப் பதியந்தாதியிலும்:)
இப்பொருளில், பூ – வடசொல். குவி – முதனிலைத்தொ ழிற்பெயர்; இரண்டாம்வேற்றுமையுருபும்பயனுந்தொக்கதொகை;
குவிகிற என்று பொருளுரைத்து, வினைத்தொகை யென்ன லாகாது;
வினைத்தொகையில் “குவிக்கச்சு” என வருமொழிமுதல்வலி மிகா தாதலின். கச்சு – கஞ்சுக மென்ற வடசொல்லின் சிதைவு.
எண் – தொகை; இங்குப் பெருந்தொகை. இனி, எண் – நன்குமதிக்கத்தக்க, ஆ – பசுக்க ளெனினுமாம்.

—————

கண் நனையேன் நெஞ்சு உருகேன் நவைகொண்டு என் கண்ணும் நெஞ்சும்
புண் அணையேன் கல் அணையேன் என்றாலும் பொற் பூங்கமலத்
தண் அனையே நல்ல சார்வாக வேங்கடம் சார்ந்து மணி
வண்ணனையே அடைந்தேற்கு இல்லையோ தொல்லை வைகுந்தமே –46-

(இ – ள்.) கண் நனையேன் – (பக்திமிகுதியாலாகிற ஆநந்தக் கண்ணீரினாற்) கண்கள் நனையப்பெறுகிறேனில்லை;
நெஞ்சு உருகேன் – மனமுருகப் பெறுகிறேனில்லை;
அவை கொண்டு – அக்கண் நனையாமையையும் நெஞ்சுருகாமையையுங் கொண்டு,
என் கண்ணும் நெஞ்சும் புண் அனையேன் கல் அனையேன் – எனது கண்ணும் மனமும் (முறையே) புண்களுக்கு
ஒப்பானவ னாயினேன் கல்லுக்கு ஒப்பானவனாயினேன்;
என்றாலும் – இங்ஙனம் ஆனாலும். –
பொன் பூ கமலம் தண் அனையே நல்ல சார்வு ஆக – அழகிய செந் தாமரைப்பூவில்வீற்றிருக்கின்ற தண்ணளியையுடைய
தாயான பெரியபிராட் டியாரையே நல்லதுணையாகக் கொண்டு,
வேங்கடம் சார்ந்து மணி வண்ணனையே அடைந்தேற்கு – திருவேங்கடமலையை யடைந்து (அங்குஎழுந்தருளியிருக்கிற)
நீலமணிபோலுந் திருநிறமுடையவனான எம்பெருமானையே சரண்புக்கவனாகிய எனக்கு,
தொல்லை வைகுந்தம் இல்லையோ – அநாதியான பரமபதம் கிடையாமற்போகுமோ? (போகாது: நிச்சயமாய்க் கிடைக்கும் என்றபடி); (எ – று.)

பக்திவசப்படுதலாலாகும்மெய்ப்பாடுகளிற் குறைவுற்றிருந்தாலும், பிரா ட்டிபுருஷகாரமாகப் பெருமாள்பக்கல் சரண்புக்கது
பழுதுபடாது பரகதிபெறுவிக்கு மென்பதாம்.
கண்ணும் நெஞ்சும் புண்ணனையேன் கல்லனை யேன்” என்ற தொடர் – கண் புண் அனையேன், நெஞ்சு கல்அனையேன்
என முறையே சென்றுஇயைதலால், முறைநிரனிறைப்பொருள்கோள்.
பகவத் விஷயத்தில் ஈடுபட்டு ஆநந்தபாஷ்பம்பெறாதஊனக்கண்களின் இழிவுதோ ன்ற அவற்றை “புண்” என்றும்,
அவ்விஷயத்தில் இளகாத மனத்தை “கல்” என்றுங் கூறினார். நவைகொண்டு என்று பதம்பிரித்து,
(கண்நனையாமையும் நெஞ்சு உருகாமையுமாகிய) குற்றங்களைக் கொண்டு என்றலு மொன்று.
மூன்றாமடியில், அனை – அன்னையென்பதன் தொகுத்தல். நல்ல சார்வு – பரகதிக்கு உற்றதுணை.

—————

வைகுந்தம் ஆய விழி மாதர் வேட்கையை மாற்றி என்னை
வைக்கும் தம் ஆய வினை நீக்கிய முத்தர் மாட்டு இருத்தி
வை குந்தம் மாய ஒசித்தாய் வட திரு வேங்கடவா
வைகுண்ட மாயவனே மாசு இலாத என் மா மணியே –47-

(இ – ள்.) குந்தம் மாய ஒசித்தாய் – குருந்தமாம் அழியும்படி முறித்திட்டவனே!
வட திருவேங்கடவா – வடக்கின்கணுள்ள திருவேங்கடமலையில் எழுந்தருளியிருப்பவனே!
வைகுந்தம் மாயவனே – ஸ்ரீவைகுண்டத்துக்குத் தலைவனான திருமாலே!
மாசு இலாத – குற்றமில்லாத,
என் மா மணியே – எனது தலைவனான சிறந்த மாணிக்கம்போன்றவனே! –
வை குந்தம் ஆய விழி மாதர் வேட்கையை மாற்றி – கூரிய வேற்படை போன்ற கண்களையுடைய மகளிர்
பக்கல் (உண்டாகிற) ஆசையை (எனக்கு) ஒழித்து,
என்னை -, வைகும் தம் ஆயம் வினை நீக்கிய முத்தர்மாட்டு இருத்திவை – தங்கிய தமது தொகுதியான
கருமத்தைப் போக்கிய முக்தர்களில் ஒருவனாக இருக்கச்செய்துவைத்தருள்வாய்; (எ – று.)

குந்தம் – வடசொல், ஆய – உவமஉருபு; இத்தெரிநிலைப்பெயரெச்சத்தில் ய் – இறந்தகாலஇடைநிலை.
முக்தர் – முத்திபெற்றவர்; வடசொல். மாணிக்கம் – ஒளிக்கும், பெறற்கருமைக்கும் உவமை.
என்மாமணியே – “என்தன்மாணிக்கமே” என்பது திருவிருத்தம்.

—————–

பிரிவாற்றாகத தலைவியின் துயர் கண்ட செவிலித்தாய் இரங்கல் –

மணி ஆழி வண்ணன் உகந்தாரைத் தன் வடிவு ஆக்கும் என்றே
துணி ஆழிய மறை சொல்லும் தொண்டீர் அது தோன்றக் கண்டோம்
பணி யாழின் மென்மொழி மாலாகி பள்ளி கொள்ளாமல் சங்கோடு
அணி ஆழி நீங்கி நின்றாள் வேங்கடேசனை ஆதரித்தே –48-

(இ – ள்.) தொண்டீர் – அன்பர்களே! –
“மணி ஆழி வண்ணன் – நீல மணியும் கடலும் போன்ற திருநிறமுடையவனான திருமால்,
உகந்தாரை – தன்னை விரும்பினவர்களை,
தன் வடிவு ஆக்கும் – தன்னைப் போன்ற வடிவமுடையவராகச் செய்துவிடுவான்,’ என்றே -.
துணி ஆழிய மறை சொல்லும் – (பொருள்களைத்) துணிந்துகூறுவதும் ஆழ்ந்தபொருளுள்ளது மான வேதம் சொல்லும்;
அது தோன்ற கண்டோம் – அத்தன்மை இங்குக் கட்புலனாகத் தெரியப் பார்த்தோம்; (எங்ஙனமெனின், –)
பணி யாழின் மெல் மொழி – நுனிவளைந்த வீணையின் இசைபோன்ற மென்மையான சொற்களை யுடைய இப்பெண், –
வேங்கடேசனை ஆதரித்து – திருவேங்கடமுடையானான அத்திருமாலை விரும்பி, (அவனைப்போலவே),
மால் ஆகி பள்ளி கொள்ளாமல் சங்கோடு அணி ஆழி நீங்கி நின்றாள் – ; (எ – று.)

திருமால் தன்னையுகந்தவரைத் தன்வடிவாக்குதலாவது –
தனது அன்பர்க்குத் தான் முத்திநிலையில்தந்தருள்கிற ஸாலோக்யம் ஸாமீப்யம் ஸாரூப்யம் ஸாயுஜ்யம் என்ற நான்கு நிலைமைகளில்
ஸாரூப்யநிலையினால் அவர்களைத் தன்வடிவுபோன்ற வடிவமுடையவராகச் செய்தல்.
(ஸாலோக்யம் – கடவுளின் உலகத்தில் வாழ்தல். ஸாமீப்யம் – கடவுளினருகில் வாழ்தல்.
ஸாரூப்யம் – கடவுளின் உருவம்போன்ற உருவத்தைப் பெறுதல்.
ஸாயுஜ்யம் – கடவுளோடு ஒன்றிவாழ்தல்.)

தலைமகளுக்கு – மாலாகுதல் – ஆசைமயக்கமுடையவளாதல்;
பள்ளிகொள்ளாமை – விரகவேதனையால் எப்பொழுதும்படுக்கை கொள்ளாமை;
சங்கோடு அணிஆழி நீங்கிநிற்றல் – (பிரிவுத்துயரால் உடல் மெலிந்தமைபற்றிக் கைகளிலணிந்த) சங்கவளைகளும்
விரலிலணிந்த மோதிரமும் கழன்றுவிழப்பெறுதல்.
திருவேங்கடமுடையானுக்கு – மாலாகுதல் – திருமாலென்னும்பெயருடையனாதல்;
பள்ளிகொள்ளாமல் நிற்றல் – சயனத்திருக்கோலமாகவன்றி நின்றதிருக்கோலமாய் எழுந்தருளியிருத்தல்;
சங்கோடு அணி ஆழி நீங்கியமை – தனதுசங்கசக்கரங்களைத் தொண்டைமான் சக்கரவர்த்திக்குக் கொடுத்துவிட்டதனாற்
சிலகாலம் திருக்கைகளில் திருவாழி திருச்சங்கு இன்றியிருந்தமை;

முன்னொருகாலத்தில் திருவேங்கடமுடையான் தன்மெய்த்தொண்டனான தொண்டைமான் சக்கரவர்த்திக்கு அரியபகைவர்களை
வெல்லுதற்பொருட்டுத் தனது சங்கசக்கரங்களைத் தந்தருளி அதற்கு அடையாளமாகப் பின்பு அவனது வேண்டுகோளால்
அவற்றை அங்கு விக்கிரகரூபத்தில் வெளிப்படையாகக்கைக் கொள்ளாதிருந்தன னென்பதும்;
ஸ்ரீபாஷ்யகாரர் சிஷ்யர்களுடன் திவ்வியதேசயாத்திரையிலே திருமலைக்கு எழுந்தருளினவளவில், அங்குச் சைவர்கள்
திருவேங்கடமுடையானைத் தங்கள்தெய்வமென்று வழக்குப்பேச, உடையவரும்,
‘சூலடமருகங்களையும் ஸ்ரீசங்கசக்கரங்களையும் எம்பெருமான் திருமுன்னர் வைப்பது; அவைகளில் அப்பெருமான்
எவற்றைத் தரித்தருள்கின்றனனோ, அதுகொண்டு அவனை இன்னகடவுளென்று நிச்சயித்துக்கொள்வது’ என்று அருளிச்செய்ய,
அந்த இராமாநுசன்வார்த்தைக்கு அனைவரும் சம்மதித்து அங்ஙனமே செய்ய, ஸ்ரீநிவாஸன் இளையாழ்வார் திருவுள்ளத்தின்படி
திருவாழிதிருச்சங்கு தரித்தபடியைக் கண்டு எல்லாரும் ஆனந்தித்துத் திருவேங்கடமுடையானைத் திருமாலென்றே நிச்சயித்தன ரென்பதும்,
இங்கு அறியத்தக்க கதைகள்.

திருமாலுக்கும் தலைமகளுக்கும் உவமைகாட்டுதற்குப் பொதுத்தன்மையாய் வந்த
“மாலாகிப் பள்ளிகொள்ளாமற் சங்கோடணியாழி நீங்கி நின்றாள்” என்ற தொடர்,
இங்ஙனம் இருபொருள்பட்டுச் சிலேடைக்கு உபகாரமாகநின்றதனால்,
இது, சிலேடைபற்றிவந்த உவமையணியின் பாற்படும்; செம்மொழிச்சிலேடை.

தொண்டீர்என்றது, தலைவியின் தோழியரை விளித்தது. மறைசொல்லும் அதுதோன்றக் கண்டோம் –
பிரதியக்ஷம் அநுமானம் உபமானம் ஆகமம் என்ற பிரமாணங்களில் ஆகமப்பிரமாணத்திற்கண்ட விஷயத்தைப் பிரதியக்ஷத்திற்கண்டோ மென்றபடி.
(பிரளயத்தில் உலகத்தை) அழிப்பதுஎன்பது பற்றியாவது, ஆழ்ந்துள்ளது என்பது பற்றியாவது ஆழியென்று கடலுக்குப் பெயர்வந்ததென்க.
துணிதல் – பொருள்களின்நிலைமையை ஐயந்திரிபற உள்ளபடி சித்தாந்தஞ்செய்து வெளியிடுதல். ஆழிய – இறந்தகாலப்பெயரெச்சம்;
இதில், “இன்” என்ற இடைநிலை ஈறுதொக்கது.
(சிலசாதியார்க்கும் பெண்பாலார்க்கும் ஓதுவிக்கவும் ஓதவும் கேட்கவும் ஆகாதென்று) மறுக்கப்படுதலாலும்,
(எளிதில் உணரலாகாதபடி) மறைந்த ஆழ்பொருளுடைமையாலும், மறையென்று வேதத்திற்குக் காரணக்குறி.
பணியாழின்மென்மொழி – அவ்வகைமொழியையுடைய பெண்ணுக்கு அடையடுத்த சினையாகுபெயர்;
இப்பெயரை அன்மொழித்தொகையென்றல் பொருந்தாது;
“ஐந்தொகைமொழிமேற் பிறதொக லன்மொழி” என்றல் இலக்கணமாதலும், யாழின்என்பது ஐந்தாம்வேற்றுமைவிரியாதலுங் காண்க.
யாழ் – அதன்இசைக்கு முதலாகு பெயர். பணி – யாழ்க்கு அடைமொழி. பணி – பணிவுள்ள என்று உரைத்து,
அதனை மொழிக்கு அடைமொழியாக்குதலு மொன்று. சங்கு – சங்கவளைக்குக் கருவியாகுபெயர். ஆழி – வட்டவடிவமுடையது.
வேங்கடேசன் – வேங்கட + ஈசன்; குணசந்திபெற்ற வடமொழித்தொடர்; “அஆமுன்இஈவரின் இரண்டுங் கெட ஓர் ஏகாரம் தோன்றும்:
” திருவேங்கடமலைக்குத் தலைவனென்பது பொருள். ஆதரித்து – ஆதரமென்ற பெயர்ச்சொல்லின் மேற்பிறந்த இறந்தகாலவினையெச்சம்.

எம்பெருமானை நிரந்தராநுபவம்பண்ணவேண்டு மென்று அபேக்ஷை கொண்டு அவ்வவா உடனே நிறைவேறப்பெறாமையால்
வருந்துகிற ஐயங்காரது நிலைமையை நோக்கிய ஞானிகள், அன்பர்களைநோக்கி, இவர்க்கு இத் தன்மைகள்
எம்பெருமான் அநுக்கிரகித்த ஸாரூப்யபதவியினால் நேர்ந்தன போலுமென்று உரைத்தல், இதற்கு உள்ளுறைபொருள்.
பணியாழின்மென்மொழி – விநயத்தோடுபேசும் செவிக்குஇனிய செஞ்சொற்களை யுடையவர்.
மாலாகுதல் – வியாமோகங்கொள்ளுதல். பள்ளிகொள்ளாமை – கவலையற்றிராமை.
சங்கோடணியாழி நீங்குதல் – பரதந்திரமாயிருத்தல் முதலிய ஆத்மாலங்காரமான குணங்கள் நிலைகுலையப்பெறுதல். விவரம் உணர்ந்து கொள்க.

————–

ஆதரிக்க பட்ட வாள் நுதல் மங்கையர் அங்கை மலர்
மீ தரிக்கப் பட்ட நின் அடியே வெள் அருவி செம்பொன்
போது அரிக்கப் பட்டம் சூழ் வேங்கட வெற்ப போர் அரக்கர்
தீது அரிக்க பட்ட கானகத்தூடு அன்று சென்றதுவே –49-

(இ – ள்.) வெள் அருவி – வெண்ணிறமான நீரருவிகள்,
செம் பொன் – சிவந்த பொன்னையும்,
போது – மலர்களையும்,
அரிக்க – அரித்துக்கொண்டுவர,
பட்டம் சூழ் – நீர்நிலைகள் சூழப்பெற்ற,
வேங்கட வெற்ப – திருவேங்கடமலையையுடையவனே! –
பட்டம் வாள் நுதல் – பொற்பட்டத்தையணிந்தபிரகாசமான நெற்றியையுடைய,
மங்கையர் – பட்டத்து மனைவியர்,
ஆதரிக்க – அன்புசெய்யவும்,
அம் கை மலர் மீ தரிக்க – அழகிய தாமரைமலர்போன்ற தங்கள்கைகளின்மீது தாங்கவும்,
பட்ட – பெற்ற,
நின் அடியே – உனது திருவடியே, –
அன்று – அந்நாளில் (இராமாவதாரத்தில்),
போர் அரக்கர் தீது அரிக்க – போர்செய்யவல்ல (இராவணன்முதலிய) இராக்கதர்களா லாகிய தீங்கை யழிப்பதற்கு,
பட்ட கானகத்தூடு சென்றது – உலர்ந்த காட்டிற் சென்றது! (எ – று.) – ஈற்று ஏகாரம் – இரக்கம்.

பட்டமகிஷிகளால் அன்போடு கைம்மலர்மீதுகொண்டு வருடப்படுனவான நினதுதிருவடிகள் துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனஞ்செய்தற்
பொருட்டுக் கொடியவனவாசஞ்செய்தனவே! என்று இரங்கிக்கூறியவாறாம்.
பட்டமங்கையர் என்றது, ஸ்ரீவைகுண்டத்திலும் திருப்பாற்கடலிலும் ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி வீரலக்ஷ்மி விஜயலக்ஷ்மி
முதலிய தேவிமாரையும், இராமாவதாரத்திற் சீதாபிராட்டியையும்,
கிருஷ்ணாவதாரத்தில் ருக்மிணி ஸத்யபாமை ஜாம்பவதி ஸத்யை மித்ரவிந்தை சுசீலை ரோகிணி லக்ஷணை என்ற
எட்டுப்பட்ட மகிஷிகளையும் குறிக்கும். பட்டகானகம் – நிழலில்லாதபடி மரங்கள் பட்டுப்போகப்பெற்ற கொடுஞ்சுரம்.

வாள் – ஒளியையுணர்த்துகையில், உரிச்சொல். ‘வெள்ளருவி செம்பொன்’ – முரண்தொடை.
அரக்கர் – ரக்ஷஸ் என்ற வடசொல்லின் சிதைவு. அடியென்பது – சாதியொருமையாதலால், சென்றது என்ற ஒருமை முற்றைக்கொண்டது.

————

கிள்ளை விடு தூது –

சென்ற வனத்து அத்தை மைந்தரை வாழ்வித்து தீய மன்னர்
பொன்ற அனத்தத்தைச் செய்த பிரான் புகழ் வேங்கடத்துள்
நின்றவன் அத்தத்துஜ ஆயுதன் பாதத்துஎன் நேசம் எல்லாம்
ஒன்ற வனத்தத்தை காள் உரையீர் அறம் உண்டு உமக்கே –50-

(இ – ள்.) வனம் தத்தைகாள் – அழகிய கிளிகளே! –
சென்ற வனத்து – (பன்னிரண்டுவருஷம்) வனவாசஞ்சென்ற காட்டினிடத்து,
அத்தை மைந்தரை வாழ்வித்து – தனது அத்தையான குந்தியின் புத்திரர்களாகிய பாண்டவர்களை (த் தீங்கின்றி) வாழச்செய்து,
(பின்பு), தீய மன்னர் பொன்ற அனத்தத்தை செய்த – கொடிய (துரியோதனன்முதலிய) அரசர்கள் அழியு மாறு (அவர்கட்குக்) கேட்டை விளைத்த,
பிரான் – பிரபுவும்,
அத்தத்து ஐ ஆயுதன் – திருக்கைகளில் ஐந்துஆயுதங்களை யுடையவனுமான,
புகழ் வேங்கடத்துள் நின்றவன் – கீர்த்தியையுடைய திருவேங்கடமலையில் நின்றதிருக் கோலமாக எழுந்தருளியிருக்கிற எனதுதலைவனுடைய,
பாதத்து – திருவடிகளில்,
என் நேசம் எல்லாம் – எனதுஅன்புமுழுவதையும்,
ஒன்ற உரையீர் – பொருந்தச் சொல்லுங்கள்:
உமக்கு அறம் உண்டு – உங்கட்குப் புண்ணிய முண்டு; (எ – று.)

தலைவனைப்பிரிந்த தலைவி, இங்ஙனஞ்சொல்லி, தலைவனிடத்துக் கிளிகளைத் தூதுசெல்லவேண்டுகிறாள்.
“இயம்புகின்றகாலத்து எகினம் மயில்கிள்ளை, பயம்பெறு மேகம் பூவை பாங்கி –
நயந்தகுயில், பேதைநெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரைந்துமே, தூதுரைத்து வாங்குந் தொடை” என்ற இரத்தினச் சுருக்கத்தால்,
தூதிற்கு உரியவை இன்னவை யெனக் காண்க.
பிரிந்த தலைவன் வந்திடுவனென்று ஆறியிருக்கவொண்ணாதே அதன்வரவுக்கு விரைந்து ஆள்விடும்படியாயிற்று, ஆற்றாமைமிகுதி.

“கானகமருங்கில் மேவலன் பணியாற் கடும்பசியுடன் வருங் கடவுண்,
மானவமுனிவன் தாபமுஞ் சாபவருத்தமு முறாவகை யொழித்தாய்” என்ற படி பாண்டவர் வனவாசஞ்செய்கையில்
துரியோதனன் துர்வாசமுனிவனைக் கொண்டு அவர்கட்குச் சாபம்பெறுவித்து அவர்களை அழிக்கமுயன்றபோது
அதற்குக் கண்ணபிரான் தக்கபரிகாரஞ்செய்து அவர்களைச் சாபம்பெறாத படி பாதுகாத்தது முதலிய வரலாறுகள்பற்றி
“சென்றவனத்து அத்தை மைந்தரை வாழ்வித்து” எனப்பட்டது. அவ்வரலாறு வருமாறு: –

“சாபத்தாலும் சாபமொழி தன்னால்வளருந் தவத்தாலும், கோபத்தாலும் பேர்படைத்த கொடிய” துர்வாசமுனிவன்
பாண்டவர் வனவாசகாலத்தில் ஒருநாள் பல முனிவர்களோடும் துரியோதனனரண்மனைக்குச்சென்று அறுசுவையமைந்த
அருவிருந்துண்டு மகிழ்ந்து “உனக்குவேண்டும்வரம் வேண்டுக” என்ன, அவன் செல்வச்செருக்கினாலும் பாண்டவர்களை
இம்முனிவர்சாபத்துக்கு உட்படுத்த வேண்டு மென்னுங் கருத்தினாலும் “இன்றைக்கு எமது மனையில் அமுது செய் ததுபோலவே
நாளைக்குப் பாண்டவர்பக்கல்சென்று அமுதுசெய்யவேண்டு வதே எனக்குத்தரும் வரம்” என்ன,
அங்ஙனமே அம்முனிவன் அநேகமுனி வர்களோடு அடுத்தநாள் மத்தியான மானபொழுது பாண்டவர் இருந்த
ஆச்சிரமத்துக்கு வந்துசேர்ந்து “இன்றைக்குஎங்கட்குநல்லுணவு இடவேண்டும்” என்றுசொல்ல,
அதற்குமுன்னமே பலமுனிவர்களோடும் வேண்டியவாறு உண்டு சூரியனருளின அக்ஷயபாண்டத்தைக் கழுவிக் கவிழ்த்துவிட்ட
பாண்டவர்கள் அம்முனிவர்களை நீராடிவரச் சொல்லியனுப்பிவிட்டு “இதற்கு என் செய்வது!” என்று மனங்கலங்கித்
திரௌபதியுந்தாமுமாகக் கிருஷ்ணனைத் தியானிக்க,

அப்பெருமான் உடனே அங்குஎழுந்தருளிப் பாண்டத்தைக் கொணரச் சொல்லி அதிலுள்ளதொரு சோற்றுப்பருக்கையைத்
தான்உண்டமாத் திரத்தில், அம்முனிவர்யாவரும் வயிறுநிரம்பிப் பசிதணிந்து தெவிட்டித்தேக் கெறிந்து மிகமகிழ்ந்து
பாண்டவர்க்கு ஆசீர்வாதஞ்செய்து போயினர் என்பதாம்.

மற்றும், அமித்திரனென்னும் முனிவனுக்கென்றே பழுக்கின்றதொரு நெல்லிப்பழத்தை வனவாசகாலத்தில் திரௌபதியின்
விருப்பத்தின்படி அருச்சுனன் அம்பெய்து கொய்து அவட்குக் கொடுக்க, அதுகண்ட அங்குள்ளார் பலரும்
“இதனை அம்முனிவன்காணில் அவன்சாபத்தால் உங்கள்கதி என்னாகுமோ!” என்று இரங்கிச்சொல்ல,
அதுகேட்டு அஞ்சிய பஞ்சபாண்டவரும் திரௌபதியும் “இதற்கு என்செய்வது?” என்று பலவாறு ஆலோசித்து
அதற்குப் பரிகாரம் வேறொன்றுங் காணாது கண்ணபிரானைத் தியானிக்க,

உடனே அங்குஎழுந்தருளி நிகழ்ந்தசெய்திசொல்லக்கேட்ட அப் பெருமான்
“நீவிர் அறுவரும் நும்நும்மனத்தினுட்கொண்ட கோட்பாட்டை உரைப்பீராயின், இக்கனி மீண்டும்
அம்மரக்கிளையிற் போய் ஒட்டிக்கொள்ளும்” என்று அருளிச்செய்தபடி தருமன்முதலியஅறுவரும் தம்தம்கருத்து நிகழ்ச்சியை
உண்மையாகச்சொல்ல, ஸ்ரீகிருஷ்ணபகவானது சங்கல்பத் தின்படியே அப்பழம் அம்மரக்கொம்பிற் சென்று சேர்ந்து பழையபடி யிருக்க,
பாண்டவர் அபாயத்தினின்று நீங்கின ரென்ற வரலாறு முதலியன வும் இங்குப் பொருந்தும்.

தீயமன்னர் பொன்ற அனத்தத்தைச் செய்தது – மகாபாரதயுத்தத்திற் கண்ணன் பாண்டவர்க்குப் பலவாறு உதவி அவர்களைக்
கொண்டு துரியோதனாதி துஷ்டராசர்களைத் தொலைத்தமை.
வேங்கடத்துக்குப் புகழ் – “எப்பூதலமும் இறைஞ்சித் திசைநோக்கி மெய்ப்பூசனை புரி”யப்படுந் திறம்.
“ஆழி வளை வாள் தண்டு வில்” என்ற திருமாலின் பஞ்சாயுதங்களுள் சக்கரம் சுதர்சநமென்றும், சங்கம் பாஞ்சஜந்யமென்றும்,
கதை கௌமோதகியென்றும், வாள் நந்தகமென்றும், வில் சார்ங்கமென்றும் பெயர்பெறும்.
“குலமகட்குத் தெய்வங் கொழுநனே” என்றபடி உயர்குலத்திற்பிறந்தவளான தான் தனதுதலைமகனையே தெய்வமாகக் கொண்டு
அவனது திருவடிகளிற் பக்திசெய்யுந்திறந் தோன்ற, ‘ஐயாயுதன்பாதத்து’ என்றாள்.
ஒன்ற உரையீர் – சமயமறிந்து தக்கபடி சொல்லியுணர்த்துங்கள் என்றவாறு.

எல்லாம் என்பது, இங்குப் பொருட்பன்மை குறியாது எஞ்சாமை குறித்தது. பிரான் – உபகாரகன்.

ஐயங்கார் தமது ஆற்றாமையை ஆசாரிய மூலமாக எம்பெருமானுக்குத் தெரிவித்துத் தமது துயரந்தணியக்கருதி
அவர்களைத் தமக்குப்புருஷகாரமா கும்படி வேண்டுதல், இதற்கு உள்ளுறைபொருள்.
ஸ்வாபதேசத்தில் “தூது என்பது, கடகமான ஆசார்யவிஷயத்தை” என்றனர் ஆன்றோர்.
பிரிந்த தலைவிதலைவரைச் சேர்த்தற்குத் தூதர்போலப் பிரிந்துநின்ற ஜீவாத்மபர மாத்மாக்களைச் சேர்த்தற்கு
ஆசாரியர் உரியவராதல் காண்க. தம்மையாத ரிப்பவர்பக்கல் அன்புடைமையாலும் அன்பர்கட்கு எளிமையினாலும்
எடுப்பார் கைப்பிள்ளையாகிச் செவிக்கினிய செஞ்சொற்களைக் கொஞ்சிப்பேசுந் தன்மையராய் எம்பெருமானது
பசுஞ்சாமநிறத்தை ஸாரூப்யத்தாற்பெறும் ஆசாரியரைக் கிளியென்னத்தகும். பறவைகட்கு இரண்டு இறகுகள்போல,
ஆசாரியர்க்கு ஞானமும் அநுட்டானமும் உயர்கதிச்செலவுக்கு உறுதுணை யென்க. விவரம் நோக்கிக்கொள்க.

———————

தலைவி செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல்

உண்ட மருந்து கைக்கும் அன்னை மீர் மதன் ஓர் ஐந்து அம்பும்
கொண்டு அமர் உந்து கைக்கும் குறு காமுனம் கொவ்வைச் செவ்வாய்
அண்டம் அருந்து கைக்கும் திறந்தான் அப்பன் போல் பரியும்
எண் தமரும் துகைக்கும் பொடி காப்பு இடும் இன்று எனக்கே –51-

(இ – ள்.) அன்னைமீர் – தாய்மார்களே! –
உண்டமருந்து – உண்ணப்படு கிற அமிருதமும்,
கைக்கும் – (எனக்குக்) கசக்கும்:
மதனும் – மன்மதனும்,
ஓர் ஐந்து அம்பும் கொண்டு – (தனது) ஒப்பற்ற ஐந்துஅம்புகளையுங் கொண்டு,
அமர் உந்துகைக்கு குறுகா முனம் – போர்செய்வதற்கு வந்துநெருங்குதற்குமுன்பு, –
இன்று – இப்பொழுதே, – எனக்கு – , –
கொவ்வை செவ் வாய் – கோவைப்பழம்போன்ற சிவந்த வாயை,
அண்டம் அருந்துகைக்கும் திறந்தான் – (கிருஷ்ணாவதாரத்தில் வெண்ணெய்முதலியன உண்ணுதற்கே யன்றிக் கற்பாந்தகாலத்தில்)
அண்டகோளங்களை விழுங்குதற்காகவும் திறந்தவனான,
அப்பன் போல் – திருவேங்கடமுடையான் போலவே,
பரியும் – (உயிர்கள்பக்கல்) அன்புகொள்ளுகின்ற,
எண் தமரும் – மதிக்கத்தக்க அடியார்கள்,
துகைக்கும் – மிதிக்கின்ற,
பொடி – திருவடிப்புழுதியை,
காப்பு இடும் – காப்பாக இடுங்கள்; (எ – று.)

குறுகாமுனம் இடும் என இயையும். இரண்டாமடியில் ‘உந்துகைக்கும்’ என்ற உம்மை, எடுத்து முதலடியில் “மதன்” என்பதனோடு கூட்டப்பட்டது.
நான்காமடியில் “தமரும்” என்ற உம்மை – அசைநிலை.

திருவேங்கடமுடையானாகிய தலைவனைக் களவொழுக்கத்தாற் கூடிப் பிரிந்த தலைவி அப்பிரிவாற்றாமையாற் பலவாறு நோவுபட,
அத்துயரமாத் திரத்தையேகண்ட செவிலித்தாயர் அந்நோயின்காரணமும் அதற்குப்பரிகா ரமும்,
இன்ன வென்று உணராது வேறுபலவகையாக ஆராய்ந்து பரிகாரஞ் செய்யத்தொடங்கியபோது,
நோயொன்றும் மருந்தொன்று மாதலாலே அந்நோய் தீராது வளர, அதனையாற்றமாட்டாத அத்தலைவி நாணந்துறந்து
தானே தனது நோயையும் நோயின் காரணத்தையும் அந்நோய்தீர்க்கும் மருந்தையும் அம்மருந்தைப் பிரயோகிக்கும் விதத்தையும் உணர்த்துதல்,
இச்செய்யுளிற் கூறிய விஷயம்.

இங்ஙனம் களவை வெளிப்படுத்துதலின் காரணம், தன்கருத்தைச் செவிலித்தாயர்மூலமாக நற்றாய்க்கும்
அவள்மூல மாகத் தந்தைக்கும் மற்றும்பெரியோர்க்குந் தெரிவித்துத் தன்னை அவனுக்கே விரைவில் வெளிப்படையாக
மணஞ்செய்துவைக்கும்படி செய்து கொள்ளும் விருப்பம்.
(“வாராயினமுலையாளிவள் வானோர்தலைமகனாஞ்,
சீராயின தெய்வநன்னோயிது தெய்வத்தண்ணந்துழாய்த்,
தாராயினுந் தழையாயினுந் தண்கொம்பதாயினுங் கீழ்,
வேராயினும் நின்றமண்ணுயினுங் கொண்டு வீசுமினே” என்றபடி)
தலைவனோடு நேரிலாவது இடையிட்டாவது சம்பந்தம் பெற்ற பொருள் இந்நோய்க்குப் பரிகாரமா மென்பாள்
அப்பன் போற் பரியுந் தமர் துகைக்கும் பொடி காப்பிடும்” என்றாள்.
அன்றியும், தன்னைப் போலவே தலைவன்பக்கல் அன்புகொண்டவர்களுடைய சம்பந்தம் தனது நோய்க்குப் பரிகார மென்றுகருதி
இங்ஙனங் கூறினாளுமாம்;
(“தணியும் பொழுதில்லைநீரணங்காடுதிரனனைமீர், பிணியுமொழிகின்றதில்லை பெருகு மிதுவல்லால்,
மணியிலணிநிறமாயன், தமரடிநீறுகொண், டணியமுயலின் மற்றில்லைகண்டீ ரிவ்வணங்குக்கே” என்ற திருவாய்மொழிப் பாசுரத்தையும்,
அதன்வியாக்கியாநங்களில்
“அழகுக்கு ஈடுபட்ட இவளுக்குப் பரிஹாரம், அத்துறையிலகப்பட்டாருடைய அநுபந்தமே யென்றபடி,”
“சௌந்தர்ய சீலாதிகளிலேயாய்த்து இவள் மோகித்தது: நீங்களும், சௌந்தர்யசீலாதிக ளிலே தோற்றிருக்கும்
ஸ்ரீவைஷ்ணவர்களுடைய பாதரேணுவைக்கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள்; பொடிபடத் தீரும்” என்ற வாக்கியங்களையுங் காண்க.

மன்மதனம்பு ஐந்து – தாமரைமலர், மாமலர், அசோகமலர், முல்லை மலர், நீலோற்பலமலர் என்பன.
இவற்றின் பெயர் – முறையே உந்மத்தம், மதநம், சம்மோகம், சந்தாபம், வசீகரணம் எனப்படும்.
இவை செய்யும் அவத்தை – முறையே சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரணம் என்பன.
அவையாவன – சுப்பிரயோகம் – சொல்லும், நினைவும்;
விப் பிரயோகம் – வெய்துயிர்த்திரங்கல்;
சோகம் – வெதுப்பும், துய்ப்பன தெவிட்டலும்;
மோகம் – அழுங்கலும், மொழிபலபிதற்றலும்; மரணம் – அயர்ப்பும், மயக்கமும்.
“நினைக்கும்அரவிந்தம் நீள்பசலைமாம்பூ, அனைத்துணவு நீக்கும்அசோகு –
வனத்திலுறு, முல்லைகிடைகாட்டும் மாதே முழுநீலம், கொல்லும் மதனம்பின்குணம்” என்ற இரத்தினச் சுருக்கத்தையுங் காண்க.
இவற்றில் மூன்றாவதான அசோகமலரின் அவத்தையாகிய துய்ப்பனதெ விட்டல், “உண்ட மருந்து கைக்கும்” என வெளியிடப்பட்டது.
“மதன் ஐந்தம்புங்கொண்டு அமர்உந்துகைக்குக் குறுகாமுனம்” என்றது, பிரிந்தாரைக் கொல்லும் ஐந்தாம் அம்பான
நீலோற்பலமலரு முட்பட எல்லா அம்புகளையும் மன்மதன் பிரயோகித்தற்குமுன்பு என்றபடி;
அவன் மரணவேதனைப் படுத்திக் கொல்லாதமுன் என்றவாறு. “கொவ்வைச் செவ் வாய்” என்றது, வாயழகில் ஈடுபாடு.

‘மருந்து என்றவிடத்து உயர்வுசிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. மதன் – மதநன் என்ற வடசொல்லின் விகாரம்;
அது, (பிராணிகளைக்காதலாற்) களிக்கச் செய்பவனென்று பொருள்படும்: “மந்மதன்” என்பதன் முதற் குறையுமாம்.
கொவ்வை என்ற கொடியின் பெயர், அதன் பழத்துக்கு முதலாகுபெயர். அண்டமருந்துகைக்கும் என்ற உம்மை – எச்சப்பொருளது.
காப்பு – காத்தல்; ரக்ஷக மென்ற பொருளில், தொழிலாகுபெயர்.

எம்பெருமான் ஒருகால்வந்துகாட்சிகொடுத்து மறைய, பின்பு பிரிவாற்றாதுவருந்துகிற ஐயங்கார், தம்பக்கல்பரிவுடைய ஞானிகளை நோக்கி, (“நாதனைநரசிங்கனைநவின்றேத்துவார்க ளுழக்கிய, பாததூளி படுதலா லிவ்வுலகம் பாக்கியஞ்செய்ததே,”
“தொண்டரடிப்பொடி, யாடநாம்பெறிற்கங்கை நீர்குடைந்தாடும்வேட்கை யென்னாவதே”,
“தொண்டர்சேவடிச் செழுஞ்சேறு என்சென்னிக் கணிவனே” என்றபடி)
அதிபரிசுத்திகரமான பாகவதபாததூளியைக் கொணர்ந்து என்மேல்இட்டு என்னை ரக்ஷிக்கப் பாருங்கள்
என்று பிரார்த்தித்தல், இதற்கு உள்ளுறைபொருள்.

ஆராவமுதான எம்பெருமான்பக்கல் ஈடுபட்டு
“உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாங், கண்ண னெம்பெருமான் என்று” கருதி யிருப்பவர்க்குத்
தேவாமிருதத்தினினிமையும் ஒருபொருளாகத்தோன்றா தாதலால், “உண்ட மருந்து கைக்கும்” என்றன ரென்க.
(“தாயொக்குமன்பின்” என்றபடி) தம்பக்கல் பேரன்புடைமையும், தம்மைக் கொண்டு செலுத்த வல்ல திறமுடைமையும்பற்றி,
ஞானிகள் “தாயரே!” என விளிக்கப்பட்டனர். மதன் ஓரைந்தம்புங் கொண்டு அமருந்துகைக்குக் குறுகாமுனம் –
பேரின்பமயனான சர்வேசுவரன் மறைந்தசமயம்பார்த்துக் காமதேவன் வந்துபுகுந்து என் மனத்தைச் சிற்றின்பவழியிற்
செலுத்தாதமுன்பு என்க. ஜீவகாருண்யத்தில் பகவானும் பாகவதருமே ஒருவர்க்கொருவர் ஒப்பானா லுண்டன்றி
வேறுஒப்புமை காணப்பெறாமையால், “அப்பன்போற் பரியு மெண் தமர்’ எனப்பட்டனர். பகவானிடத்துப்போலவே
பாகவதரிடத்தும் ஐயங்கார்க்கு உள்ள பரமபக்தி இங்கு வெளியாகின்றது.

————

எனக்குப் பணியப் பணி ஒரு கால் இரு காலும் நல்க
உனக்குப் பணி இங்கு இருவேம் பணியில் என் ஓர் பணியும்
நினக்குப் பணி வித்துக் கொண்டு உம் பணி நீ பணித்திலை என்
தனக்குப் பணி வெற்பின் மீது ஓங்கி நின்ற தனிச் சுடரே –52-

(இ – ள்.) பணி வெற்பின்மீது ஓங்கி நின்ற – சேஷகிரியெனப்படுகிற திருவேங்கடமலையின்மேல் உயர்ந்து நின்றதிருக்கோலமாய் எழுந்தருளி யிருக்கிற,
தனி சுடரே – ஒப்பற்ற ஒளிவடிவமானவனே! –
ஒரு கால் பணிய எனக்கு பணி – (தலைவனான உன்னை) ஒருதரம் வணங்குதல் (அடியவனான) எனக்கு உரிய தொழில்;
இரு காலும் நல்க உனக்கு பணி – (அடியவனான எனக்கு உனது) இரண்டு திருவடிகளையுங் கொடுத்தல் (தலைவனான) உனக்கு உரிய தொழில்:
இங்கு இருவேம் பணியில் – இவ்வாறுகுறித்த நம்இருவரது வேலைகளில்,
என் ஓர் பணியும் நினக்கு பணிவித்துக்கொண்டு – (ஒருகால் பணிதலாகிய) எனதுதொழிலைமாத்திரம் (உனக்கு நீ) செய்வித்துக்கொண்டு,
உன் பணி என் தனக்கு நீ பணித்திலை – (இருகாலையும்நல்குதலாகிய) உனதுதொழிலை எனக்கு நீ செய்கின்றாயில்லை; (எ – று.)

யான் உன்னை ஒருகால்சரணமடைந்தே னாதலால், நீ எனக்கு முத்தி தந்தருளவேண்டும் என்பதாம்.
பரமபதநாதனதுகட்டளையின்படி அவனுக்குப் பலவகைக்கைங்கரியங்களைச் செய்யும் ஆதிசேஷனே அப்பெருமான்
இனிஎழுந்தருளியிருத்தற்கு மலைவடிவமானதனாலும், மேருமலையினிட மிருந்து ஆதிசேஷனுடனே வாயுவினாற்
கொணரப்பட்ட மலை யாதலாலும், திருவேங்கடத்துக்கு ‘சேஷகிரி’ என்ற பெயர் வாய்த்தது;
‘பணிவெற்பு’ என்றது, அதன்பரியாயநாமமாக நின்றது. சூரியன் சந்திரன் அக்கினி முதலிய சோதிகளெல்லாவற்றினும்
மேம்பட்ட சோதி யென்பார், ‘தனிச்சுடரே’ என்றார்; அகவிருளொழிக்கும்ஆதித்த னென்க. சுடர்என்றது,
நித்தியமாய் ஸ்வயம்பிரகாசமான ஞானத்தைக் குணமாகவும் சொரூபமாகவும் உடையவ னென்றபடி.

எனக்கு, உனக்கு என்ற நான்கனுருபுகள் – தகுதிப்பொருளன. பணிய, நல்க என்ற செயவெனெச்சங்கள் – தொழிற்பெயர்த்தன்மைப்பட்டு
‘பணி’ என்ற பெயர்ப்பயனிலைக்கு எழுவாயாய்நின்றன; ஒருகால், இருகால்’ என்ற விடத்து முரண்தொடை காண்க.
இருவேம் – தன்மைப்பன்மைக்குறிப்புவினை யாலணையும்பெயர்; முன்னிலையை உளப்படுத்திய தன்மைப்பன்மை.
(‘ஒரு கால்பணிய’ எனத் தென்கலைசம்பிரதாயமே உரைக்கப்பட்ட தென்பர்.)
பணிஎன்ற சொல் ஒரேபொருளிற் பலமுறைவந்தது, சொற்பொருட்பின் வருநிலையணி; பணியப்பணி,
ஒருகாலிருகாலும் என வந்தமை – பிராசமெ ன்னுஞ் சொல்லணி: இவ்விரண்டுஞ் சேர்ந்துவந்தது, சேர்வையணி.

————-

தலைவியின் பிரிவாற்றாமை கண்ட செவிலி இரங்கல் –

தனித் தொண்டை மா நிலத்தே புரிவார்க்கு அருள் தாள் உடையாய்
தொனித் தொண்டைமான் நெடுவாய் பிறந்தாய் துங்க வேங்கடவா
முனித் தொண்டை மான் கையில் சங்கு ஆழி நல்கி என் மூரல் செவ்வாய்க்
கனித் தொண்டை மான் கையில் சங்கு ஆழி கோடல் கருமம் அன்றே –53-

(இ – ள்.) மால் நிலத்தே – பெரிய நிலவுலகத்திலே,
தனி தொண்டை புரிவார்க்கு – ஒப்பற்ற அடிமைத்தொழிலைச் செய்யும் மெய்யடியார்கட்கு,
அருள் – தந்தருளுகிற,
தாள் உடையாய் – திருவடியை (பரமபதத்தை) யுடையவனே! –
தொனி தொண்டை மான் – கனைக்கின்ற குரலையுடைய தொண்டையையுடைய குதிரையினது,
நெடு வாய் – பெரிய வாயை,
பிளந்தாய் – பிளந்தவனே!
துங்கம் வேங்கடவா – உயர்ந்த திருவேங்கடமலையில் எழுந்த ருளியிருப்பவனே! – (நீ),
முனி தொண்டைமான் கையில் சங்கு ஆழி நல்கி – ராஜரிஷியான தொண்டைமான்சக்கரவர்த்தியின் கையிலே (நினது)
சங்காழிகளை (சங்கசக்கரங்களை)க் கொடுத்தருளி,
என் மூரல் செவ் வாய் கனி தொண்டை மான் கையில் சங்கு ஆழி கோடல் – புன்சிரிப்புள்ள சிவந்த வாயாகிய
தொண்டைப் பழத்தையுடைய மான்போன்றவளான என்மகளது கைகளிலுள்ள சங்குஆழிகளை
(சங்குவளையல்களையும் மோதிரங்களையும்) கவர்ந்துகொள்ளுதல்,
கருமம் அன்று – செய்தக்கசெயலன்று; (எ – று.)

இப்பாட்டுக்குத் துறைவிவரணம், கீழ் 15 – ஆஞ் செய்யுட்குக் கூறிய வாறே கொள்க.
பின்னிரண்டடியிற்கூறிய விஷயம், கீழ் 46 – ஆஞ் செய்யுளில் “சங்கோடணியாழி நீங்கி” என்றதற்கு கூறிய உரைகளால் விளங்கும்.
தொண்டைமான்சக்கரவர்த்தி க்ஷத்திரியசாதியா னாயினும் தவவொ “க்கத்திற்சிறந்து முனிவரையொக்கும்பெருமைவாய்ந்து
திருவேங்கடமு டையான்பக்கல் பக்திமேலிட்டு அப்பெருமானை எப்பொழுதுஞ்சேவித்துக் கொண்டு திருமலையிலேயே
வாசஞ்செய்திருத்தலை யுணர்ந்த பகையரசர்கள் அவனதுநாட்டைக் கைக்கொள்ள, தொண்டைமான் அதனைத்
திருவேங்கடமுடையான்சந்நிதியில் விண்ணப்பஞ்செய்து வணங்கிநிற்க,
பெரு மான் தனது திவ்வியாயுதங்களாகிய சங்சசக்கரங்களைக் கொடுத்து ‘இவற்றைக்கொண்டு, நீ,
பகையரசரைத் தவறாது வென்றிடுக’ என்று சொல்லியருள, தொண்டைமான் அங்ஙனமே பகைவென்று அரசு பெற்றன னென்ற வரலாற்றை,
வேங்கடாசலமாகாத்மியத்திற் பரக்கக் காண்க.

தலைவனது பிரிவு தலைவிக்கு மெலிவைவிளைத்து அவள்கையினின்று வளைகளும் விரல்களினின்று மோதிரங்களும்
கழன்று விழும்படிசெய்தலை அத்தலைவன்மேலேற்றி, “என்மான்கையிற் சங்காழிகோடல் கருமமன்று” என்றாள்:
(“கைப் பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரிநீர், செய்ப்புரளவோடுந் திருவரங்கச்செல்வனார்” என்பது நாச்சியார்திருமொழி.)
ஒருவரிடத்துப் பொருளைக்கொடுத்தால் மீண்டும் அப்பொருளை அவரிடத்தினின்றே வாங்க வேண்டியதாயிருக்க
அப்பொருளை வேறொருவரிடத்தில் வாங்குகின்றா யெனத் தொடர்பின்மையணி தோன்றக் கூறியவாறு. ஈற்றுஏகாரம் – தேற்றத்தோடு இரக்கம்.

தொனி – த்வநி யென்ற வடசொல்லின் விகாரம். தொண்டை – மிடறு. தொண்டைமான் – தொண்டைநாட்டரசன்.
மூரல் – பற்களுமாம். கனித் தொண்டை – கோவைப்பழம். மான் – அதுபோன்ற பெண்ணுக்கு உவமையாகு பெயர்; பார்வையில் உவமம்.

எம்பெருமானது பிரிவை யாற்றாது வருந்துகிற ஐயங்காரது நிலைமைக ளைக் கண்ட பரிவுடையறிவுடையாளர்,
அப்பெருமானைநோக்கி “நினக்கு ஆபரணகோடியிற்சேர்கிற ஆயுதங்களை நின்பக்கல் மெய்யன்பு
செய்தவ னுக்கு அருள்பவனான நீ இவரது ஆத்மாலங்காரமான பாரதந்திரியம் முதலிய குணங்களை நிலைகுலையச் செய்தல் நீதியன்று”
என்று அவனுக்கு இவர் பக்கல் இரக்கமுண்டாகுமாறு விண்ணப்பஞ்செய்தல், இதற்கு உள்ளுறை பொருள்;
பெருக்கம் ஆய்ந்துஉணர்க. முதல் விளி – சிஷ்டபரிபாலநஞ் செய்தலையும், இரண்டாம் விளி – துஷ்டநிக்கிரகஞ்செய்தலையும் விளக்கும்.

“களிகொண்டெமக்கருள் வேங்கடவா வெதிகட்கரசன்,
அளிகொண் டளித்த வளையாழி வாங்கினை யற்புதமா,
நளிகொண்டபூங்குழற்பெண்ணர சாயினநங்கை செங்கை,
ஒளிகொண்டவால்வளையாழி கைக்கொள்வ துசித மன்றே” என்ற திருவேங்கடக்கலம்பகச்செய்யுள், இதனை ஒருசார் அடி யொற்றியது.

———

பிரிவாற்றாத தலைவி பிறை கண்டு வருந்துதல்

கரு மாதவா இருந்து ஆவன செய்து என் கருத்து இருளைப்
பொரும் ஆதவா விருந்தா வனத்தாய் பொற் சவரி என்னும்
ஒரு மாது அவா விருந்தா வனக்கா உயர் வேங்கடத்து எம்
பெருமா தவா இரும் தாவு அனல் ஏயும் பிறைக் கொழுந்தே –54-

(இ – ள்.) கரு மாதவா – கரிய திருநிறமுள்ள மாதவனென்னுந் திருநா மத்தையுடையவனே!
என் கருத்து இருந்து – எனது மனத்தில் வந்து வீற்றிருந்து,
ஆவன செய்து – (எனக்கு) ஆகவேண்டிய நன்மைகளைச் செய்து,
இருளை பொரும் – அகவிருளாகிய அஜ்ஞாநத்தை மோதியொழித்தற்கு உரிய,
ஆதவா – சூரியனாயுள்ளவனே!
விருந்தாவனத்தாய் – பிருந்தாவனத்தில் விளையாடினவனே!
பொன் சவரி என்னும் – உத்தமகுணமுள்ள சபரியென்கிற,
ஒரு மாது – ஒருபெண்ணுக்கு,
அவா விருந்தா – விரும்பப்பட்ட விருந்தினனானவனே!
வனம் கா உயர் – அழகிய சோலைகள் உயர்ந்திருக்கப் பெற்ற,
வேங்கடத்து – திருவேங்கடமலையி லெழுந்தருளியிருக்கிற,
எம்பெருமா – எமது தலைவனே! –
பிறை கொழுந்து – இளம்பிறையானது, –
தவா – கெடாத,
இரு – பெரிய,
தாவு – தாவியெரிகின்ற,
அனல் – நெருப்பை,
ஏயும் – ஒத்துச்சுடுகின்றது; (எ – று.)

இயற்கைப்புணர்ச்சி முதலியவகைகளால் தலைவியைக் களவிற்கூடி நின்ற தலைவன் அங்குப் பழியெழுந்ததென்று
தோழியால் விலக்கப்பட்ட பின்னர் அப்பழியடங்கச் சிலநாள் ஒருவழிப்பிரிந்துறைதல், ஒருவழித்தண த்த லெனப்படும்.
அங்ஙனம் பிரிந்துறைகின்ற சமயத்தில் அப்பிரிவையாற்றாதுவருந்துகிற தலைவிக்கு
“காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலரு மிந்நோய்” என்றபடி கலவிக்கு உரிய காலத்தின் தொடக்கமான
மாலையிலே விரகவேதனை வளர, அப்பொழுது விளங்கிய இளம்பிறையும் பிரிந்தார்க்குத் துயர்க்கேதுவான
பொருள்களு ளொன்றாதலால் இவளை இன்னும் அதிகமாக வேதனைப்படுத்த,
அத்தாபத்தை யாற்றாத அத்தலைவி தனது நினைப்புமிகுதியால் தலைவனை எதிரில்நிற்கின்றவாறு போலப்பாவித்து,
அங்ஙனம் உருவெளித்தோற்றத்திலே வெளிப்பட்ட அத்தலைவனை முன்னிலைப்படுத்தி இரங்கிக் கூறியது, இது.

ஒருவழித்தணந்து வந்த தலைவன் சிறைப் புறமாக அதனையுணர்ந்த தோழி அவனை முன்னிலையாக்கிக்கூறிய தென்று
இதற்குத் துறைகொள்ளுதலு மொன்று. மற்றும், இது, சந்திரோபாலம்பநத்தின் பாற்படும்; அதாவது –
விரகநோய்கொண்டதலைவி சந்திரனை நிந்தித்தல், கூடினாரை மகிழ்விக்குந் தன்மையதான பிறை பிரிந்து
நிற்கிறஎன்னை இங்ஙனம் தவித்திடாதபடி விரைந்துவந்து வரைந்தருள்வாய் என்பது, குறிப்பு.

விருந்தாவனம் என்பது – கண்ணன் அவதரித்த வடமதுரைக்குச் சிறிது தூரத்தில் யமுநாநதிதீரத்திலுள்ள இடம்.
கண்ணன்வளர்ந்தஇடமான கோகுல மெனப்படுகிற திருவாய்ப்பாடியிலுள்ள நந்தகோபர்முதலான ஆயர்கள்,
அங்குப் பூதனைவந்துஇறந்தது. சகடுமாறிவீழ்ந்தது இரட்டைமருதமரம் முறிந்தது முதலியவற்றை உற்பாதங்களெனக்கொண்டு
அஞ்சி மஹாவநமெ னப்படுகிற அவ்விடத்தை விட்டுக் கன்றுகாலிமுதலிய எல்லாப்பொருள்க ளோடும்
பிருந்தாவனத்திற் சென்று குடியேறினர். நெருஞ்சிற்காடாய்க் கிடந்தஅந்தப்பிருந்தாவனம், கிருஷ்ணபகவான் குளிர்ந்த
திருவுள்ளத்தோடு அநுக்கிரகித்ததனால், பசுக்கள்முதலானவை விருத்தியடைதற்குஏற்ப மிகச் செழிப்புற்றது.
பின்பு அங்கு நெடுநாள் கண்ணன் கன்றுகளையும் பசுக்களையும் மேய்த்தல் முதலிய பலதிருவிளையாடல்கள்
செய்துகொண்டுவளர்ந் தனனாதலால், “விருந்தாவனத்தாய்” என்று விளிக்கப்பட்டனன்.
விருந்தாவனம் – ப்ருந்தாவந மென்ற வடசொல்லின் விகாரம்; நெருஞ்சிக்கா டென்பது பொருள்.

சவரி – ரிசியமூககிரியில் மதங்காச்சிரமத்தில் மதங்கமுனிவரது சிஷ்யர்களுக்கு உபசாரஞ்செய்துகொண்டு
வசித்துவந்த துறவறம்பூண்ட ஒருதவப் பெண்.
க்ஷத்திரியஜாதிஸ்திரீயினிடம் வைசியசாதிபுருஷனுக்குப் பிறந்த பிரதி லோமசாதியார், சபர மெனப்படுவர்; இச்சாதியாரது தொழில் –
தேன்கொ ணர்ந்துவிற்றல். சபரனென்பதன் பெண்பால் – சபரீ; அவ்வடசொல், சவரி யென்று விகாரப்பட்டது.
யோகப்பயிற்சியுள்ள அச்சபரி, தான்வசிக்கும் மதங்காச்சிரமத்துக்கு இராமலக்ஷ்மணர் எழுந்தருளுஞ்செய்தியை
முன்னமே அறிந்து எதிர்நோக்கி, அவ்வனத்திலுள்ள நல்லகனிகளைச் சேர்த்துவைத் துக்கொண்டிருந்து,
அவர்கள் அவ்வாச்சிரமத்துக்கு எழுந்தருளியவுடன் அப்பழங்களை அவர்கட்குச் சமர்ப்பித்து உபசரித்து,
இராமபிரானருளால் தனதுபிறப்பை யொழித்து நற்கதியடைந்தன ளென்பது, இராமாயணவரலாறு;
அதுபற்றி, “பொற்சவரி யென்னும் ஒருமாது அவாவிருந்தா” என்றார்.

ஆவன – பெயர். கருதுவது கருத்து எனக் காரணக்குறி. விருந்தன் = விருந்தினன்.
விருந்து – புதுமை; பண்புப்பெயர்: புதியனாய்வருபவன், விருந்தன்; “இன்” சாரியை பெறாது நின்றது.
அது ஈறுகெட்டு ஈற்றயல்நீண்டு விளியேற்று ‘விருந்தா’ என்று ஆயிற்று. கா – காக்கப்படுவது என்பது
பற்றிச் சோலைக்கு வந்த காரணக்குறி. தவா என்ற ஈறுகெட்ட எதிர்மறைப்பெய ரெச்சத்தில், தபுஎன்பதன் மரூஉவான தவு – பகுதி.
இருந் தா வனல் – இருமையென்ற பண்புப்பெயர் ஈறுபோய் இனமெலி மிக்கது. தாவனல் – வினைத்தொகை.
ஏயும் – உவமவாசகம். பிறப்பது பிறை யெனக் காரணக் குறி; ஐ – கருத்தாப்பொருள்விகுதி:
பிற என்ற பகுதியின் ஈற்றுஅகரம் தொக்கது. “கொழுந்து” என்றது, இளமைகுறித்தது.

பேறுகிடைக்குந் தருணத்தில் மகிழ்ச்சிசெய்வதான ஞானவிளக்கம் உரியகாலத்திற் பேறுகிடையாமையாலே நலிவுசெய்ய,
ஐயங்கார் தாம் அடைந்த தாபத்தை எம்பெருமானைக்குறித்து விண்ணப்பஞ்செய்தல், இதற்கு உள்ளுறைபொருள்.
இத்தளர்ச்சிநீங்க விரைவில் உன்பக்கல் என்னைச் சேர்த்துக்கொள்ளவேண்டுமென்பது, குறிப்பு.
பிறைக்கொழுந்து என்றது – ஸ்வாபதேசத்தில், ஞானோதயத்தையாம். பிறவும் நோக்கிக்கொள்க.

———–

பிறை மாலையால் ஒரு பேதை நைந்தாள் அந்த பேதைக்கு நின்
நறை மாலை தா என்று மானிடம் பாடிய நா வலர்காள்
நிறை மாலை அற்று கவி மாலையால்நினையீர் திரு வெள்
ளறை மாலை வேங்கடத்தே உறை மாலை அரங்கனையே –55-

(இ – ள்.) “பிறை மாலையால் – பிறைச்சந்திரனது தோற்றத்தையுடைய மாலைப்பொழுதினால்,
ஒரு பேதை நைந்தாள் – (உன்பக்கல் காதல்நோய் கொண்ட) ஒருபெண் மெலிவுற்றாள்:
அந்த பேதைக்கு – அப்பெண்ணுக்கு,
நின் நறை மாலை தா – உன்னுடைய வாசனையுள்ள பூமாலையைக் கொடு,” என்று –
மானிடம் பாடிய – (அகப்பொருட்டுறையமைத்து) மனிதர்களின் மேற் கவிபாடிய,
நாவலர்காள் – புலவர்களே! – (நீங்கள்),
நிறை மாலை அற்று – (இங்ஙனம் உங்கள்மனத்தில்) நிறைந்த மயக்கத்தை நீங்கி,
கவி மாலையால் – பாமாலை கொண்டு,
திருவெள்ளறை மாலை அரங்கனை வேங்கடத்தே உறை மாலையே நினையீர் – திருவெள்ளறைலி லெழுந்தருளியிருக்கிற பெரியோனும்
ஸ்ரீரங்கநாதனும் ஆகிய திருவேங்கடமலையிலெழுந்தருளியிருக்கிற எம்பெருமானையே கருதிப் பாடுவீராக; (எ – று.)

பகவத்குணாநுபவத்திலாசையுடைய ஐயங்கார், லௌகிகரைப்பார்த்து, “நரஸ்துதிபண்ணினால் என்னபயன் உண்டாகும்?
வேண்டியபயன்களை வே ண்டியவாறே பெறும்படி, என்னோடொப்ப எம்பெருமானை ஸ்தோத்ரம்பண் ணுங்கள்” என்று
இதோபதேசஞ் செய்கின்றார்.
“சொன்னாவில்வாழ் புலவீர் சோறுகூறைக்காக மன்னாதமானிடரை வாழ்த்துதலால் –
என்னாகும், என்னுடனேமாதவனை யேத்தும்” என்ற அருளிச்செயலையுங் காண்க.
“கவி பாடலாகாது” என்ற நிஷேதசாஸ்திரத்துக்கு இலக்கு அஸத்விஷயத்திலாதலும்,
‘கவிபாடுதல் புகழ்முதலியபலவற்றைப் பயக்கும்’ என்ற விதிசாஸ்தி ரத்துக்கு இலக்கு ஸத்விஷயத்திலாதலுமாகிய வேறுபாடு காணத்தக்கது.

கவி தனக்குப் பிரபுவின்பக்கல் உள்ள அன்பை, ஒரு தலைவி அத்தலை மகனிடத்துக் காதல்கொண்டு வருந்த
“அவள்வருத்தத்தை யாற்றுமாறு நின்தோளிற் சாத்திய மாலையை நீ அவட்குக்கொடு’ என்று தூதுசென்ற வித்தகர்
பேசுங் கிளவித்துறைவகையாற் பாடி வெளியிடும் இயல்பைக் குறிப்பிட்டு முதலிரண்டடியில் விளித்தார்.
பிறைமாலையால் – மாலைப்பிறையால் என மொழிமாற்றினுமாம். பேதை – பேதைமையுடைய பெண்ணுக்குப் பண்பாகுபெயர்.
நறை – தேனுமாம். மாநுஷரென்ற வடசொல்லின் விகாரமான மானிடரென்பது –
(காசியபமுனிவனது மனைவியருள்) மநுவென்பவளதுமரபினரான மனிதரையுணர்த்தும்; தத்திதாந்தநாமம்.
இங்கு “மானிடம்” என்றது, சாதிவாசகமாய் நின்றது; மனிதர்களிலும் உயர்ந்தவர் தாழ்ந்தவ ரெனப் பகுத்து
உணராது கண்டவரையெல்லாம் ஒருநிகராகப்பாடுபவ ரென்பது போதரும்:
அன்றியும், இழிப்புப்பற்றி அஃறிணையாகக்கூறின ரென்றுங் கொள்க;
(திருவாய்மொழியில் “வளனாமதிக்கு மிம்மானிடத்தைக் கவி பாடியென்” என்றவிடத்து,
நம்பிள்ளை ‘மநுஷ்யரென்றுசொல்லவும் பாத்தங்காண்கிறிலர் காணும்! அசேதநங்களைச் சொல்லும்படியிலே சொல்லுகிறார்.
தன்னை மெய்யாக அறியாதவன் அசித்பிராய னிறே’ என்று வியாக்கியாந மிட்டமையுங் காண்க.)
நாவலர் – கவிபாடுதல்முதலிய நாவின்வல்ல மையை யுடையவர். மால் – மயக்கம். கவிமாலை – பிரபந்தம். நினையீர் = பாடீர்;
காரணம், காரியமாக உபசரிக்கப்பட்டது. திருவெள்ளறை – சோழநாட்டுத் திருப்பதிகளில் ஒன்று.

————

அரங்கம் குடந்தை குருகூர் குறுங்குடி அட்டபுய
கரம் கண்ண மங்கை நறையூர் கடல் மலை கச்சி கண்ண
புரம் கண்டியூர் தஞ்சை மாலிருஞ்சோலை புல்லாணி மெய்யம்
தரங்கம் பரமபதம் வேங்கடேசற்குத் தானங்களே –56-

(இ – ள்.) அரங்கம் குடந்தை குருகூர் குறுங்குடி அட்டபுயகரம் கண்ண மங்கை நறையூர் கடன்மல்லை
கச்சி கண்ணபுரம் கண்டியூர் தஞ்சை மாலி ருஞ்சோலை புல்லாணி மெய்யம் தரங்கம் (திருப்பாற்கடல்)
பரமபதம் (ஸ்ரீவைகுண்டம்)என்பன, திருவேங்கடமுடையானுக்கு உரியதலங்களாம்.

“ஈரிருபதாஞ்சோழம் ஈரொன்பதாம் பாண்டி, ஓர்பதின்மூன்றா மலை நாடு ஓரிரண்டாஞ் – சீர்நடுநாடு,
ஆறோடீரெட்டுதொண்டை அவ்வடநா டாறி ரண்டு, கூறுதிருநா டொன்றாக் கொள்” என்று வகுக்கப்பட்ட
நூற்றெட்டுத் திருமால் திருப்பதிகளுட் சோழநாட்டுத் திருப்பதிகள் நாற்பதிற் சேர்ந்தவை –
திருவரங்கம் திருக்குடந்தை திருக்கண்ணமங்கை திருநறையூர் திருக்கண்ணபுரம் திருக்கண்டியூர் திருத்தஞ்சை என்பன.
பாண்டியநாட்டுத் திருப்பதிகள் பதினெட்டிற் சேர்ந்தவை – திருக்குருகூர் திருக்குறுங்குடி திருமா லிருஞ்சோலைமலை திருப்புல்லாணி திருமெய்யம் என்பன. தொண்டைநாட்டுத்திருப்பதிகள் இருபத்திரண்டிற் சேர்ந்தவை – திருவட்டபுயகரம் திருக்கடன்மல்லை திருக்கச்சி என்பன.
வடநாட்டுத்திருப்பதிகள்பன் னிரண்டிற் சேர்ந்தது – திருப்பாற்கடல். திருநாடு – பரமபதம்.
இச்செய்யுளில் அரங்கம்முதற் பரமபதம்ஈறாகப் பதினேழுதிவ்வியதேசங்களின் பெயரை அடைமொழியில்லாதபடி
அடக்கிவைத்திருக்கின்ற அழகு அறியத்தக்கது. வேங்கடேசன், ஸ்தாநம் – வடசொற்கள்.

————-

தான அல் நாக மருப்பு ஒசித்தானுக்கு தான் உகந்தது
ஆன வல் நாக முடியில் நின்றானுக்கு தாள் வணங்காத்
தானவன் ஆகம் இடந்தானுக்கு ஆள் என்று தனை எண்ணா
தான் அவனாக நினைந்திருப்பாற்கு என்றும் தான் அவனே –57-

(இ – ள்.) தானம் – மதத்தையுடைய,
அல் – இருள்போன்ற – (கருநிறமுள்ள),
நாகம் – (குவலயாபீடமென்ற) யானையின்,
மருப்பு – தந்தங்களை,
ஒசித்தானுக்கு – ஒடித்தவனும்,
தான் உகந்தது ஆன – தான் விரும்பிய இடமான,
வல் நாகம் – வலிய திருவேங்கடமலையினது,
முடியில் – சிகரத்தில்,
நின்றானுக்கு – நின்றதிருக்கோலமாக எழுந்தருளியவனும்,
தாள் வணங்கா – (தனது) திருவடிகளை வணங்காத (தானே தெய்வமென்று செருக்கிய),
தானவன் – அசுரனான இரணியனது,
ஆகம் – மார்பை,
இடந் தானுக்கு – பிளந்தவனுமான எம்பெருமானுக்கு,
ஆள் என்று – அடிமையென்று,
தன்னை எண்ணா – தன்னைநினையாமல்,
தான் அவன் ஆக நினைந்திருப்பாற்கு – (ஜீவாத்மாவாகிய) தானே அப்பரமாத்மாவாக நினைத்திருக்கிற விபரீதஞானிக்கு,
என்றும் தான் அவனே – எப்பொழுதும் அப்பெருமான் பயன்படாதவனேயாவன்; (எ – று.) –
அவன் – பயனின்மை; அங்ஙனமாகுபவன், அவன்: ஏ – தேற்றம்.

சித் அசித் ஈசுவரன் என்ற தத்துவம்மூன்றில் சித்எனப்படுகிற ஜீவாத்மாவுக்கு ஈசுவரனெனப்படுகிற பரமாத்மா
நியாமகனும் தாரகனுமாய்த் தலைவனாதலும், அப்பரமாத்மாவுக்கு ஜீவாத்மா நியாம்யமும் தார்யமுமாய் அடிமையாதலும்
முதலிய மிக்கவேறுபாடுகள் சாஸ்திரப்பிரசித்தமாக இருக்க, அவற்றையெல்லாம்கருதித் தன்னை
எம்பெருமானுக்கு ஆளென்று எண்ணாமல், “உண்மையாகவுள்ள பரமாத்மாவாகிய பொருளொன்றே மாயையாற்
பிரபஞ்சமாகக் காணப்படுகின்றதே யன்றி ஜீவாத்மாவென்றுஒரு பொரு ளில்லை” என்று துணிந்துகூறும் அத்வைதி,
“ஜீவாத்மாவென்னும் நான் அப்பரமாத்மா” என்னும் பாவனை யுடைய னாதலால்,
“ஆளென்று தன் னையெண்ணாத் தானவனாக நினைந்திருப்பான்” எனப்பட்டான்.
அங்ஙனம் ஜீவாத்மபரமாத்மசொரூபங்களைப் பகுத்துணர்ந்து சர்வேசுவரனுக்கு ஆட் படாதவனுக்கு
அப்பெருமான் அருள்புரியா னென்பது, “என்றும் தான் அவனே” என்பதனால் விளக்கப்பட்டது.
சர்வேசுவரனது திருவடிகளை வணங்காமல் தானே சர்வேசுவர னென்று சொன்ன இரணியனை அப்பெ ருமான் நிக்கிரகித்ததும்,
சர்வேசுவரனுக்கு அடிமையென்று தன்னை யெண் ணிய இரணியபுத்திரனானபிரகலாதனை அப்பெருமான் அநுக்கிரகித்ததும் பிரசித்தம்;
ஆகவே, “தாள்வணங்காத் தானவனாக மிடந்தானுக்கு” என்ற விசேஷ்யம் இங்கு ஓர் அபிப்பிராயத்தோடு கூறப்பட்ட தாகுதலால்,
கருத் துடையடைகொளியணி. தான் அவனாக நினைந்திருக்கின்ற ஜீவாத்மாவுக் குப் பரமாத்மா அந்நினைப்பிற்கு
ஏற்பத் தான் அவனேயாவன்என ஒருசமத் காரந்தோன்றக் கூறினார்; “அவன்” என்பதை இருவகைப்பொருள்படவைத்த நயம், இங்குக் கருதத்தக்கது:
(இதனை, “கழல்வளையைத் தாமுங் கழல்வளையே யாக்கினரே” என்றாற்போலக் கொள்க.)
இது – பிரிநிலைநவிற்சியணி யின்பாற்படும்; பெயர்ச்சொற்களுக்கு உறுப்பாற்றலால் வேறொரு பொருளைத் தந்துரைத்தல்,
இதன் இலக்கணம். அவனாக – எம்பெருமான்போல ஸ்வதந்திரனாக என்றுங் கொள்க.

நாகம – யானையென்ற பொருளில், நகத்தில்வாழ்வ தென்று காரணப் பொருள்படும்: நகம் – மலை.
திருவேங்கடம் எம்பெருமானது திருவுள்ளத்துக்கு மற்றையெல்லாத் திவ்விய தேசங்களினும் மிகப்
பாங்கான வாஸஸ்தாந மாதலால், “உகந்ததான நாகம்” எனப்பட்டது;
அங்ஙனஞ் சிறப்புடையதாதல், புராணங்களினாலும் விளங்கும். “நாகமுடியினின்றானுக்கு” என்பதற்கு –
காளியனென்னும் பாம்பினது தலையின்மேல்நின்று நடனஞ்செய்தவனுக்கு என்று பொருள்கூறுதல் பொருந்தாது;
அங்ஙனங்கொள்ளின், இவ்வகைப்பிரபந்தத்திற் செய்யுள்தோறும் பிரபந்தத்தலைவன்பெயரையேனும்
அவனது ஊர்ப்பெயரையேனுங் கூறும் மரபு இச்செய்யுளில் தவறிய தாய்விடும்;
“உகந்ததான” என்ற அடைமொழியின் உரிமையையும் உய்த்துணர்க. தானவனென்பது, அசுரனென்றமாத்திரமாய் நின்றது;
இரணியன் காசியபமுனிவர் மனைவியருள் திதியென்பவளது மகனாதலின்.

இது, யமகச்செய்யுள்.

————–

தானவர் ஆகம் தடிவார் வடமலைத் தண் அம் துழாய்
ஞான வராகர் தரும் அண்டம் யாவையும் நண்ணி அவர்
கால் நவராக விரல் தோறும் அத்திக் கனியின் வைகும்
வானவர் ஆக இருப்பார் அவற்றுள் மசகங்களே –58-

(இ – ள்.) தானவர் – அசுரர்களுடைய,
ஆகம் – உடம்பை,
தடிவார் – துணிப்பவரான,
வட மலை தண் அம் துழாய் ஞானம் வராகர் – திருவேங் கடமலையில்எழுந்தருளியிருக்கிற குளிர்ந்த அழகிய
திருத்துழாய்மாலையை யுடைய ஞானவராகமூர்த்தியான எம்பெருமான்,
தரும் – படைத்த,
அண்டம் யாவையும் – அண்டகோளங்களெல்லாம், –
அவர் கால் நவ ராக விரல்தோறும் – அவருடைய திருவடிகளின் புதிய செந்நிறமாகத்தோன்றுகின்ற விரல்கள்தோறும்,
அத்தி கனியின் – அத்திப்பழங்கள் (அம்மரத்தில் ஒட்டிக்கிடத்தல்) போல,
நண்ணி வைகும் – பொருந்தித் தங்கும்;
வானவர் ஆக இருப்பார் – (அவ்வண்டங்களில்) தேவர்களாக விளங்குபவர்கள், –
அவற்றுள் மசகங்களே – அவ்வத்திப்பழங்களில் மொய்த்துக்கிடக்கின்ற கொசுகுகள் போல்வர்; (எ – று.)

“ஆழிப்பிரானடிக்கீ “ற்பவித்தழியும், பரவையில்மொக்குளைப்போற் பலகோடி பகிரண்டமே” என்றதனாலும்,
அண்டகோளங்கள் எம்பெருமான்திருவடியில் தோன்றுவனவாதல் அறிக.
பிரளயப்பெருங்கடலில்மூழ்கி யிருந்த பூமியை மேலேயெடுக்கநினைத்துத் திருமால் பன்றிவடிவுகொண் டருளிக் கோட்டு
நுனியாற் பூமியையெடுத்துவந்து பூமிதேவியை இடுப்பில் ஏந்திக்கொண்டு அவட்கு ஞானோபதேசஞ்செய்கிற வியாஜத்தால்
தத்துவப் பொருள்களை உலகத்துக்குஉணர்த்தியருளியதனால், “ஞானவராகர்” எனப் பட்டனர்.

தாநவர் என்ற வடமொழிப்பெயர் – (காசியபமுனிவரது மனைவியருள்) தநுவென்பவளது சந்ததியா ரென்று பொருள்படும்;
தத்திதாந்தநாமம். ஜ்ஞாநவராஹர், நவராகம், மசகம் – வடசொற்கள். கனியின், இன் – ஐந்தனுருபு, ஒப்பு – உவமையணி.

இதனால், எம்பெருமானது விராட்ஸ்வரூபத்தின் பெருமையையும், மற்றைத்தேவர்களின் சிறுமையையும் உணர்த்தினார்.
நால்வகைத்தோற்றத்து எழுவகைப்பிறப்பினுட் சிறந்த தேவர்களை மசகங்க ளென்றதனால், மற்றையுயிர்களின் இழிவு தானே விளங்கும்.

—————

பாங்கி வெறி விளக்கிச் செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல்

மசகம் தரம் என்னல் ஆய நிலையா உடல் வாழ் உயிரை
அசகம் தர வல்லதோ அன்னைமீர் அண்டம் உண்டு உமிழ்வா
ரிசசுந்தர வண்ணர் வேங்கட வாணர் இலங்கையர் கோன்
தெகந்தரம் அறுத்தார் திருப் பேர் சொல்லும் தீங்கு அறவே –59-

(இ – ள்.) அன்னைமீர் – தாய்மார்களே! –
மசகம் தரம் என்னல் ஆய் – கொசுவுக்குச்சமான மென்று சொல்லத்தக்கதாய்,
நிலையா – நிலையில்லாத தாகிற,
உடல் – உடம்பில்,
வாழ் – (விதிவசத்திற்குஏற்ப) வாழ்கிற, உயிரை -,
அச கம் தர வல்லதோ – ஆட்டின்தலையானது கொடுக்கவல்லதோ? (அன்று என்றபடி); (இனி நீங்கள்),
தீங்கு அற – (இத்தலைவிக்கு நேர்ந்துள்ள) துன்பம் ஒழியுமாறு, –
அண்டம் உண்டு உமிழ் வாரிச கந்தர வண்ணர் – அண்ட கோளங்களை (ப்பிரளயகாலத்திலே) வயிற்றினுட்கொண்டு,
(பிரளயம்நீங்கினவாறே) வெளிப்படுத்தியவரும் தாமரை பூத்ததொரு மேகம் போன்ற வடிவமுடையவரும்,
இலங்கையர்கோன் தெச கந்தரம் அறுத்தார் – இலங்காபுரி யில்வாழ்ந்த இராக்கதர்க்கு அரசனாகிய இராவணனது பத்துத்தலைகளையும் துணித்திட்டவருமான,
வேங்கட வாணர் – திருவேங்கடத்துறைவாரது,
திரு பேர் – திருநாமங்களை,
சொல்லும் – சொல்லுங்கள்; (எ – று.) – தீங்கறச் சொல்லும் என இயையும்.

களவொழுக்கத்தால் தலைமகளைக்கூடிய தலைமகன் பின்பு அவளை வெளிப்படையாக மணஞ்செய்துகொள்ளும்பொருட்டுப்
பொருள்தேடிவருதற்காக அவளைப் பிரிந்துசெல்ல, அந்நிலையிற் பிரிவாற்றாது மிகவருந்திய தலைமகளைச் செவிலித்
தாய்மார் எதிர்ப்பட்டு அவளது வடிவுவேறுபாட்டை நோக்கி இவள் இங்ஙனம் மெலிதற்குக்காரணம் என்னோ?’ என்று
கவலையுற்றுக் கட்டுவிச்சியைக் குறிகேட்க,
அவளும் தன் மரபின்படி ஆராய்ந்து ‘இவளுக்கு’முருகக்கடவுள் ஆவேசித்ததொழியப் பிறிதொன்றுமில்லை’ என்றுகூற,
அது கேட்ட செவிலித்தாயர் உடனே தலைமகள்பக்கல் தமக்குள்ள அன்பின்மிகுதியால் ஏதேனும் ஒரு தெய்வத்தை வழி
பட்டாகிலும் இவளை உயிர்த்திருக்கப் பெறில் அதுவே நமக்கு ஆத்மலாப மென்றெண்ணி வழியல்லாவழியிலே யிழிந்து
அதற்குப் பரிஹாரமாக வேலனெனப்படுகிற வெறியாட்டாளனை யழைப்பித்து அவனைக்கொண்டு ஆவேசம் ஆடுவித்து
ஆடுபலியிடுதல், கள்ளிறைத்தல், இறைச்சிதூவல், கருஞ்சோறுசெஞ்சோறுவைத்தல் முதலிய காரியங்களை இடைவிடாது
ஒன்றன் மேலொன்றாகச் செய்யத்தொடங்க நோயொன்றும் மருந்தொன்று மாதலால் தான்காதலித்த புருஷோத்தம னான
தலைமகனது தகுதிக்கு ஏலாத அச்செயல்களை நோக்கித் தலைமகள் மேன்மேல் மிகவருந்த,
அவளது துன்பத்தின் மெய்க்காரணத்தை யறிந்த தோழி அச்சமயத்திற் செவிலியரை நோக்கிச் சிலகூறி
வெறிவிலக்கித் தலைவியினது துன்பத்தின் உண்மைக்காரணத்தை யுணர்த்துகின்ற துறை, இது.
இதன் மெய்ப்பாடு, பெருமிதத்தைச்சார்ந்தநகை, பயன் – அறத்தொடுநிற்றல்.

ஆடுபலிகொடுத்தல், இவளுடம்பினின்று உயிர்நீங்காதபடிசெய்து மரண வேதனைப்படுகிற இவளைப்
பிழைப்பிக்கமாட்டாது என்ற பொருளை “உடல் வாழுயிரை அச கம் தரவல்லதோ’ என்றாள்;
தான் கரையேறாதவன் பிறரைக் கரையேற்றமாட்டாமைபோல, தான் கழுத்தறுப்புண்டு இறக்கின்ற ஆடு
இவளுயிரைப் பிழைப்பிக்கமாட்டா தென்க:
“வீழ்வார்க்கு வீழ்வார் துணை” என்றபடி இறக்கிற ஓர்உயிரோ மற்றோர் இறக்கிற உயிரைக் காத்தற்குத் துணையாகும்! என்றாள்.
க்ஷுத்ரதேவதையின் ஆவேசத்தால் வரும் நோய்க்குப் பரிஹாரமாகிற, இவ்விழிப்பொருள் பரம்பொருளிலீடு பாட்டினால்
வந்த நோய்க்குப் பரிஹரமாகா தென்றவாறு.
அற்பப்பிராணியான மசகத்தை உவமை கூறினது, யாக்கைநிலையில்லாமையை விளக்குதற்கு.
அன்னை மீர் – உண்மைக்காரணமுரைக்கப்படுதற்கு உரிமையையும் இவளியல்பிற்கு ஏற்றபடி நன்மைசெய்யும்
வாற்சலியத்தையும் உடையவர்களேயென்றபடி. லோகஸம்ரக்ஷணத்தில் எம்பெருமானுக்கு உள்ள ஆதரத்தையும்,
அற்புதசக்தியையும் குறித்தற்கு, ‘அண்டமுண்டுமிழ் வேங்கடவாணர் இலங்கையர் கோன்தெசகந்தரமறுத்தார்’ என்றார்.
‘வாரிச கந்தர வண்ணர்’ என்றது, தலைவனது திருமேனியழகில் ஈடுபாடு.
அத்தன்மையானவரது திருநாமத்தைச் சொல்லு மென்றது, உலகமுழுவதுக்கும்வந்த நோயைப் பரிஹரித்தவனது
பெயர் தானே இவள்நோயைப்பரிகரித்தற்குத் தக்கதென்றபடி.
நம்மாழ்வார் திருவாய்மொழியில் வெறிவிலக்குத்திருப்பதிகத்தில்
“மருந்தாகுமெ ன்றங்கோர் மாயவலவைசொற்கொண்டு நீர்,
கருஞ்சோறும் மற்றைச்செஞ்சோறும் களனிழைத் தென்பயன்,
ஒழுங்காகவேயுலகேழும் விழுங்கியுமிழ்ந் திட்ட, பெருந்தேவன்பேர் சொல்லகிற்கில் இவளைப்பெறுதிரே’ என்று அருளிச்செய்தமை அறிக.
இந்நோய்தீர்த்தற்குத் தலைவனது திருநாமம் தக்கமந்திரமென்க. அம்மந்திரமாகிய மருந்தை இவள் செவியின்
வழியாகச் செலுத்துங்க ளென்றாள்.
திருமாலாகிய தலைமகனால் நேர்ந்த நோய்க்கு அவனது நாமசங்கீர்த்தனமொழிய வேறுபரிகார மில்லை யென்றாள்.

“வாநிசகந்தரவண்ணர்’ என்பதற்கு – கீழ் 11 – ஆஞ் செய்யுளில்
“அம்பரந்தாமரைபூத்தலர்ந்தன்னவவயவர்” என்றதற்கு உரைத்தாங்கு உரைக்க.
அஜகம், வாரிஜகந்தரவர்ணர், தசகந்தரம் என்ற வடமொழித்தொடர்கள் விகாரப்பட்டன.
வாரிஜம் – நீரில்தோன்றுவது: தாமரைக்குக் காரண விடுகுறி: மலர்க்கு முதலாகுபெயர்.
கந்தரம் என்பது – மேகமென்ற பொருளில் நீரைஉட்கொண்ட தென்றும்,
கழுத்தென்றபொருளில் தலையைத்தரி ப்ப தென்றும் காரணப்பொருள்பெறும்: கம் – நீர், தலை. ஒ – எதிர்மறை.
வேங்கடவாணர் – திருவேங்கடமலையில் வாழ்பவர். வாழ்நர்என்பது, வாணர் என மருவிற்று.
தெசகந்தர மென முதலில் எகரம் பெற்றது, மோனைத் தொடையின் பொருட்டு.

எம்பெருமானது சேர்க்கையைப் பெறாமல் வருந்துகின்ற ஐயங்காரது துயரத்தைக்கண்ட ஞானிகள், அவர் பக்கல்
வைத்தபரிவா லுண்டான கலக்கத்தால், எம்பெருமான் உபாயாந்தரங்களால்அடையத்தக்கவனல்ல னென்பதை மறந்து,
தேவதாந்தரபஜநத்தாலாவது இவரது ஆற்றாமையைத் தணிப்பிக்கலாமோவென்று தொடங்கியநிலையில்,
ஐயங்காரதுதன்மையை அறிந்த அன்பர்கள் விலக்கிக்கூறும் வார்த்தை, இதற்கு உள்ளுறைப்பொருள்.
ஞானிகள் தாம் அங்ஙனம் வழியல்லாவழியிலே இழிவார்களோ வென்னில், – ஐயங்கார்பக்கல் தாம்கொண்ட பரிவின்
மிகுதி தம்மைக் கலங்கப்பண்ணு கையால், அமார்க்கங்களாலேயாகிலும் பரிஹரிக்கப்போமோ வென்று முயன்றன ரென்க;
(இதனை, “அயோத்தியாபுரியிலுள்ள சனங்களெல்லாரும் இராமனுடையக்ஷேமத்தின் பொருட்டு எல்லாத்
தேவர்களையும் வணங்கினர்’ என்றதனோடு ஒப்பிடுக.)
“அன்னைமீர்’ என்று விளித்ததனால், முதியரானநீர் இளையரானஎமது வார்த்தையை உபேக்ஷிக்கலாகாதென்று குறிப்பித்தபடி.
“அண்டமுண்டுமிழ்…. திருப்பேர்சொல்லும்’ – காக்குங்கடவுளின்நாமோச் சாரணமே துயரனைத்தையுந் தீர்க்கு மென்றதாம். பிறவுங் கண்டுகொள்க.

—————-

தீங்கு அடமால் அத்தி முன் நின்று காலிப்பின் சென்ற கொண்டல்
வேங்கடமால் கழலே விரும்பார் விலை மாதர் மல
ஆம் கடம் மால் செய மாலாய் அவர் எச்சில் ஆகம் நச்சி
தாங்கள் தமால் அழிவார் இருந்தாலும் சவப் பண்டமே –60-

(இ – ள்.) தீங்கு அட – (முதலையினாலாகிய) தீமையை அழிக்குமாறு,
மால் அத்தி முன் நின்று – (கஜேந்திராழ்வானாகிய) பெரியயானையின் எதிரிலே வந்துநின்று,
காலி பின் சென்ற – (கிருஷ்ணாவதாரத்தில்) பசுக்களை மேய்த்தற்பொருட்டு அவற்றின்பின்னேபோன,
கொண்டல் – நீர்கொண்ட காளமேகம்போன்றவனான,
வேங்கடம் மால் – திருவேங்கடமலையி லெழுந் தருளியிருக்கின்ற திருமாலினது,
கழலே – திருவடிகளையே,
விரும்பார் – விரும்பாதவர்களாய், –
விலை மாதர் – வேசையருடைய,
மலம் ஆம் கடம் – அசுத்தம்நிறைந்த பாண்டம் போன்ற உடம்பு,
மால் செய – மயக்கத்தைச் செய்ய,
மால் ஆய் – (அவர்கள்பக்கல்) மோகங்கொண்டு,
அவர் எச்சில்ஆகம் நச்சி – அவர்களுடைய எச்சிலாகிய உடம்பை விரும்பி,
தாங்கள் தமால்அழிவார் – தாங்கள் தங்கள் குணக்கேட்டினாலேயே அழிபவர்கள், –
இருந்தாலும் – (இறவாமல் உலகத்தில்) உயிர்வாழ்ந்திருந்தாலும்,
சவம் பண்டமே – பிணமாகிய பொருளே யாவர்; (எ – று.)

பகவத்விஷயத்தில் ஈடுபடாது விஷயாந்தரத்தில் ஈடுபட்டவர்களுடைய சன்மம் வீண் என்பதாம்.
மனிதசன்மமெடுத்ததன்பயனான நற்கதிப் பேற்றை அவர்கள் அடையாமையால், அவர்களுயிர்வாழ்க்கை பழுதெனப் பட்டது.
விலைமாதர் – விலைகொடுப்பவர்யாவர்க்கும் தம்நலத்தை விற்கும் பொதுமகளிர்.
மலம் ஆம் கடம் மால் செய மாலாய் அவராகம் நச்சி –
“ஊறியுவர்த்தக்கவொன்பதுவாய்ப்புலனுங், கோதிக்குழம்பலைக்குங்கும்பத் தைப் – பேதை,
பெருந்தோளி பெய்வளா யென்னும் மீப்போர்த்த, கருந் தோலாற் கண்விளக்கப்பட்டு” என்ற நாலடியாரைக் காண்க.
எச்சிலாவது – உண்டு எஞ்சியது; (எஞ்சு – பகுதி, இல் – பெயர்விகுதி, வலித்தல் – விகாரம்.)
விலைமாதருடம்பு, பலரும்விரும்பி நுகர்ந்துவிட்ட தாதலால், ‘எச்சிலாகம்’ எனப்பட்டது.
“நன்னிலைக்கட் டன்னை நிறுப்பானுந் தன்னை, நிலைகலக்கிக் கீழிடுவானும் –
நிலையினும், மேன்மே லுயர்த்து நிறுப்பானும் தன்னைத், தலையாகச் செய்வானும் தான்” என்றபடி
தம்தம் உயர்வுதாழ்வுகட்கு அவரவரு டையசெயலே காரண மாதலால், ‘தாங்கள் தமால்அழிவார்’ என்றார்.
கொண்டல் – எம்பெருமானுக்கு, நிறத்தினாலன்றி, குளிர்ச்சி கைம்மாறுகருதாது கருணைமழைபொழிதல்
தாபந்தீர்த்தல் முதலிய குணங்களாலும் உவமை.

அத்தி – ஹஸ்தீயென்ற வடசொல்லின் விகாரம்; ஹஸ்தம் – கை: இங்கே, துதிக்கை;
அதனையுடையது ஹஸ்தீ எனக் காரணக்குறி. முதலடியில், “முன்நின்று பின்சென்ற” என்றவிடத்து முரண்தொடை காண்க.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கடத்தந்தாதி –21-40-

February 21, 2022

இருபது மந்தரத் தோளும் இலங்கைக்கு இறைவன் சென்னி
ஒருபதும் அந்தரத்தே அறுத்தோன் அப்பன் உந்தி முன் நாள்
தருபதுமம் தர வந்தன நான்முகன் தான் முதலா
வருபதுமம் தரம் ஒத்த பல் சீவனும் வையமுமே –21-

(இ – ள்.) இலங்கைக்கு இறைவன் – இலங்காபுரிக்கு அரசனான இராவணனுடைய,
இருபது மந்தரம் தோளும் – மந்தரமலைபோன்ற இருபது தோள்களையும்,
சென்னி ஒருபதும் – பத்துத்தலைகளையும்,
அந்தரத்தே அறுத்தோன் – ஆகாயத்தே அறுத்திட்டவனான,
அப்பன் – திருவேங்கடமுடையானுடைய,
உந்தி முன் நாள் தரு பதுமம் – திருநாபி ஆதிகாலத்திற்பூத்த தாமரைமலர்,
தர – படைக்க, –
நான்முகன் தான் முதல் ஆ வரு – பிரமன் முதலாக வருகின்ற,
பதுமம் தரம் ஒத்த – பதுமமென்னுந் தொகையளவினவான,
பல் சீவனும் – பலபிராணிவர்க்கங்களும்,
வையமும் – உலகங்களும்,
வந்தன – தோன்றின; (எ – று.)

“ஒருநாலுமுகத்தவனோ டுலகீன்றா யென்பரதுன், திருநாபிமலர்ந்ததல் லால் திருவுளத்தி லுணராயால்” என்றார்
திருவரங்கக்கலம்பகத்தும்.
குலபர்வதங்களிலொன்றாய்ப் பாற்கடலைக்கடைந்த மலையாகிய மந்தரம், போரிற் பகைவர்சேனைக்கடல்கலக்கவல்ல
வலிய பெரியதோள்களுக்கு உவமை கூறப்பட்டது.
இறைவன் – இறைமையென்றபண்பினடியாப் பிறந்த பெயர்; வ் – பெயரிடைநிலை.
இராவணனது தோள்களும் தலைகளும் ஆகாயத்தை யளாவிவளர்ந்துள்ளன வாதலால், அவற்றை “அந்தரத்தேயறுத்தோன்” என்றார்.
“அந்தரத்தே யறுத்தோன்” என்பதற்கு – (உடம்பினின்று) வேறுபடும்படி அறுத்திட்டவ னென்றும்,
(போரின்) இடையிலே அறுத்திட்டவ னென்றும் பொருள்கொள்ளலாம்; அந்தரம் – ஆகாயம்,
வேறுபாடு, இடை. பத்மம், ஜீவன் – வடசொற்கள். நான்முகன் – நான்குதிசையையும் நோக்கிய நான்குமுக முடையவன்.
தான் – அசை. பதுமமென்பது – ஒரு பெருந்தொகை; அது, கோடியினாற் பெருக்கிய கோடி. ஒன்று, பத்து, நூறு, ஆயிரம்,
பதினாயிரம், நூறாயிரம் (லக்ஷம்), பத்துலக்ஷம், நூறுலக்ஷம் (கோடி), பத்துக்கோடி, நூறுகோடி, ஆயிரங்கோடி, பதினாயிரங்கோடி,
லக்ஷங்கோடி, பத்துலக்ஷங்கோடி, நூறுலக்ஷங்கோடி என முறையே எண்வகுப்புக் காண்க:
இங்ஙனம் ஒன்றுமுதற் பதினைந்தாவதுதானமான நூறுலக்ஷங்கோடியே பதுமமென வழங்கும்; (100000000000000).
கோடாகோடி யெனவும் படும். இங்குப் பதுமமென்றது, பெருந்தொகை யென்றவாறாம். வையம் – (பொருள்களை) வைக்கும் இடம்.

———–

வையம் அடங்கலும் ஓர் துகள் வாரி ஒருதிவலை
செய்ய மடங்கல் சிறு பொறி மாருதம் சிற்றுயிர்ப்பு
துய்ய மடங்கல் இல் ஆகாயம் தான் விரல் தோன்றும் வெளி
வெய்ய மடங்கல் வடிவான வேங்கட வேதியற்கே –22-

(இ – ள்.) வெய்ய மடங்கல் வடிவு ஆன – பயங்கரமான நரசிங்கவடிவ மாகிய,
வேங்கட வேதியற்கு – திருவேங்கடமலையில் எழுந்தருளியிருப்பவனும் வேதங்களினால் எடுத்துரைக்கப்படுபவனுமான எம்பெருமானுக்கு, –
(ஐம்பெரும்பூதங்களில்), வையம் அடங்கலும் – பூமிமுழுவதும்,
ஓர் துகள் – ஒருதூசியாம்:
வாரி – ஜலம்முழுவதும்,
ஒரு திவலை – ஒரு நீர்த்துளியாம்;
செய்ய மடங்கல் – செந்நிறமான அக்கினிமுழுவதும்,
சிறு பொறி – சிறிய ஓர் அனற்பொறியாம்;
மாருதம் – காற்றுமுழுவதும்,
சிறு உயிர்ப்பு – சிறிய ஒருமூச்சாம்;
துய்ய மடங்கல் இல் ஆகாயம் தான் – சுத்தமானதும் மடங்குதலில்லாது பரந்ததுமான ஆகாயம் முழுவதும்,
விரல் தோன்றும் வெளி – விரல்களினிடையே தோன்றுகின்ற சிறிய வெளியிடமாம்; (எ – று.)

இரணியனைச் சங்கரித்தற்பொருட்டு நரசிங்கவடிவங்கொண்ட திருமால் விசுவரூபமாய்வளர்ந்த வடிவத்தின்
பெருமையை யெடுத்துக்கூறுவார், அப்பெருவடிவுக்கு முன் பஞ்சமகாபூதங்கள் மிகச்சிறுபொருளாகத் தோன்றுதலை விளக்கினார்.
மற்றநான்குபூதங்களும் தன்னுள் ஒடுங்கப்பெற்றுநிற்கும் பெருமைதோன்ற,
ஆகாயத்திற்கு “மடங்கலில்” என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. தான் – அசை. வாரி, மாருதம், ஆகாசம் – வடசொற்கள்.
மடங்கல் – (பிடரிமயிர்) மடங்குதலையுடைய தென ஆண்சிங்கத்துக்குக் காரணக்குறி; தொழிலாகுபெயரென்றாவது,
அல் – கருத்தாப் பொருள்விகுதியென்றாவது இலக்கணங் காண்க. வேதியன் – வேதவேத்யன், வேதப்ரதிபாத்யன்.
“அடங்கலும்” என்பதை எல்லாப்பூதங்கட்கும் எடுத்துக் கூட்டுக. துய்ய என்ற குறிப்புப்பெயரெச்சத்தில்,
தூய்மையென்ற பண்புப்பகுதியின் ஈறு போய் முதல்நெடில் குறுகிற்று.

இச்செய்யுளில், பஞ்சபூதங்களும் முறைபிறழாமற் சொல்லப்பட்டது, அரதனமாலையணி;
வடநூலார் ரத்நாவளியலங்கார மென்பர்: சொல்லும் பொருள்களை முறைவழுவாதுவரச்சொல்லுதல், இதன் இலக்கணம்.

———–

வேதா வடம் அலை வெங்காலன் கையில் விடுவித்து என்னை
மாதா வடம் அலை கொங்கை உண்ணாது அருள் -மண் அளந்த
பாதா வடம் அலை மேல் துயின்றாய் கடற் பார் மகட்கு
நாதா வட மலையாய் அலர் மேல் மங்கை நாயகனே –23-

(இ – ள்.) மண் அளந்த பாதா – பூமியை யளந்த திருவடியை யுடைய வனே!
அலைமேல் வடம் துயின்றாய் – பிரளயப்பெருங்கடலில் ஆலிலை யின்மீது பள்ளிகொண்டு யோகநித்திரைசெய்பவனே!
கடல் பார் மகட்கு நாதா – கடல்சூழ்ந்த நிலவுலகத்தின் அதிதேவதையான பூமிப்பிராட்டிக்குத் தலைவனே!
வட மலையாய் – வடக்கிலுள்ள திருவேங்கடமலையில் எழுந் தருளியிருப்பவனே!
அலர்மேல் மங்கை நாயகனே – அலர்மேல்மங்கைப் பிராட்டிக்குக் கணவனே! – என்னை -,
வேதா வடம் அலை வெம் காலன் கையில் விடுவித்து – பிரமனும் பாசத்தாற்கட்டிவருத்துகிற கொடிய யமனும் என்கிற
இவர்களது கைகளினின்று விடுதல்பண்ணி,
மாதா வடம் அலைகொ ங்கை உண்ணாது – (யான் இனி) ஒருதாயினது ஆரங்கள்புரளப்பெற்ற தனங் களின் பாலை உண்ணாதபடி,
அருள் – கருணைசெய்வாய்; (எ – று.)

படைத்தற்கடவுளான பிரமனது கைவசத்தினின்று விடுவித்தலாவது – பிறப்புத்துன்பமில்லாதபடி செய்தல். பிராணிகளை
யழிப்பவனான யமனது கைவசத்தினின்று விடுவித்தலாவது – மரணவேதனையும் நரகத்துன்பமுமில் லாதபடி செய்தல்.
மாதாகொங்கை யுண்ணாதருளுதலாவது – மீளவும் பிறப் பில்லாதபடி செய்தல். எனக்கு ஜநந மரணதுக்கங்களைப் போக்கி
யான் மீண்டும் ஒருபிறப்பெடுக்கவேண்டாதபடி எனதுகருமங்களையெல்லாந் தொலைத்து மீளாவுலகமாகியமுத்தியை
எனக்குத்தந்தருளவேண்டு மென்ற பொருளை இங்ஙனம் வேறுவகையாற்கூறினது, பிறிதினவிற்சியணி.
வேதாஎன்றவட மொழிப்பெயர் – விதித்தற்கடவுளென்றும், காலன் என்ற வடமொழிப்பெயர் –
(பிராணிகளின்) ஆயுட்காலத்தைக் கணக்கிடுபவ னென்றும் காரணப் பொருள்படும்.
வடம் – கயிற்றுவடிவமான யமனாயுதம். வடம் மலை என்றும் பதம்பிரிக்கலாம்: மலைதல் – பொருதல்.
கையில் – இல் – ஐந்தனுருபு, நீக்கம். வடம் – மணிவடம். அலர்மேல்மங்கை என்றது, திருவேங்கடமுடையானது தேவியாரின் திருநாமம்;
“அகலகில்லேனிரையுமென் றலர்மேன் மங்கை யுறைமார்பா,…… திருவேங்கடத்தானே” என்ற திருவாய்மொழியைக் காண்க:
தாமரைமலரின்மேல் வாழ்கின்றவ ளென்பது பொருள்; பத்மாவதீ என்ற வடமொழித்திருநாமமும் இப்பொருள்படுவதே.
“பார்மகட்கு நாதா” என்பதற்கு – பூமிதேவியின் பெண்ணான (பூமியினின்று தோன்றியவளான)
சீதாபிராட்டிக்குக் கொழுநனே யென்றும் உரைக்கலாம்.

———-

நாயகராத் திரியும் சில தேவர்க்கு நாண் இலை கொல்
தூய கராத்திரி மூலம் எனாமுனம் துத்திப் பணிப்
பாயக ராத்திரி மேனி அம்மான் பைம்பொன் வேங்கடவன்
தீய கராத்திரி சக்கரத்தால் கொன்ற சீர் கண்டுமே –24-

(இ – ள்.) தூய கராத்திரி – பரிசுத்தமான யானை,
மூலம் எனா முனம் – ஆதிமூலமேயென்றுகூப்பிடுதற்குமுன்னமே (கூப்பிட்டவுடனே வெகுவிரைவில் என்றபடி),
துத்தி பணி பாயகம் ராத்திரி மேனி அம்மான் பைம் பொன் வேங்கடவன் – புள்ளிகளையுடைய படமுள்ள ஆதிசேஷனாகிய சயநத்தையும் இருள்போலுங் கரியதிருமேனியையுமுடைய தலைவனும் பசும் பொன்விளையுந்திருவேங்கடமலையில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமான்,
தீய கரா – (அந்தயானையைக்கௌவியிருந்த) கொடிய முதலையை,
திரி சக்கரத்தால் கொன்ற – சுழற்றிவிட்ட சக்கராயுதத்தினாற் கொன்ற,
சீர் – சிறப்பை,
கண்டும் – பார்த்திருந்தும், –
நாயகர் ஆ திரியும் சில தேவர்க்கு நாண் இலைகொல் – கடவுளரென்று திரிகின்ற வேறுசில தேவர்களுக்கு வெட்கமில்லையோ? (எ – று.)

திருமாலே பரம்பொரு ளென்ற உண்மையை இங்ஙனங் காரணங் காட்டி வெளியிட்டார்.
கஜேந்திராழ்வான் இன்னதெய்வமென்று பெயர் குறியாது “ஆதிமூலமே!” என்று பொதுப்படக் கூப்பிட்டபொழுது
திருமாலல்லாத பிறதேவரெல்லாரும் தாம்தாம் அச்சொல்லுக்குப் பொருளல்ல ரென்று கருதி யொழிய,
அதற்குஉரிய அத்திருமால்தானே வந்து அருள் செய்தமை கருதத்தக்கது;

“அழைத்தது செவியிற்கேட்டும் அயனரனாதியாயோர்,
புழைக்கைவெங்கரிமுன் காப்பப் புகுந்தில ராதியாகித்,
தழைத்த காரணனேயென்ற தனிப்பெயர்ப்பொருள் யாமல்லோம்,
இழைத்தகாரியம் யாமாவோ மென்செய்துமாலின் றென்றார்” என்ற ஸ்ரீபாகவதத்தையுங் காண்க.

“கானேந்துதாமரைவாவியுளானை கராவினயர்ந்து,
ஊனேந்திமூலமெ ன்றோதியநாட்சென்றுதவுகையால்,
தேனேந்து சோலையரங்கனல்லால் தெய்வமில்லையென்றே,
மானேந்துகையன் மழுவேந்தினா னிந்தமாநிலத்தே”,

“மத்தக் கரியைக் கராப்பற்றிநின்றதொர் வாவியுள்ளே,
சித்தந்தெளிந்து முறையிடும்போது செழுந்துளவக்,
கொத்துக்கிளர்முடிக் கோவிந்தவென் றதுகூப்பிட்டதோ,
செத்துக்கிடந்தனவோ கெடுவீ ருங்கள்தெய்வங்களே”,

“வெங்கண்வேழமூலமென்ன வந்த துங்கள்தேவனோ” என்று இவ்வாசிரியர் பிறவிடங்களிற் கூறியவை இங்கு ஒப்புநோக்கத்தக்கன.

மூலமென்றவுடனே கொன்றவென விரைவுகுறித்தற்பொருளில் ‘மூலமெனாமுனம் கொன்ற’ எனக் காரணத்தின்
முன் காரியம் நிகழ்ந்ததாகக் கூறினது, மிகையுயர்வுநவிற்சியணி.
ஆக, இல்லை, என்னா, முன்னம் என்பன – ஆ. இலை, எனா, முனம் என்று தொகுத்தல்விகார மடைந்தன.
பரம்பொருளுணர்ச்சி கைகூடப் பெற்றதனால், ‘தூயகராத்திரி’ என்று சிறப்பித்துக் கூறினார்.
கராத்திரி – தீர்க்கசந்திபெற்ற வடமொழித்தொடர்; கரஅத்ரி என்றுபிரிந்து, துதிக்கையையுடையமலை யென்றுபொருள்படும்:
எனவே, யானையாயிற்று; ‘கைம்மலை’ என்பது, இப்பொருள்கொண்ட தமிழ்ப் பெயர்; பிறகுறிப்பு.
பணம் – படம்; அதனையுடையது பணீ என வடமொ ழிக்காரணக்குறி; இது ஈயீறு இகரமாய்ப் பணியென நின்றது.
பாய் அகம் – பாயின்இடம். ராத்ரி, க்ராஹம், சக்ரம், ஸ்ரீ என்ற வடசொற்கள் விகாரப் பட்டன. ராத்திரிமேனி –
“இருளன்னமாமேனி” ராத்திரி இருளுக்குக் காலவாகுபெயர். அம்மான் – அந்த மகான்.
பொன் குறிஞ்சி நிலத்துக் கருப் பொருள்களுள் ஒன்றாதலின், ‘பைம்பொன்வேங்கடம்’ எனப்பட்டது;
“பொன்னும்மணியும் பொலிந்தோங்கிப் பார்மகட்கு, மின்னுமணிமுடியாம் வேங்கடமே” என்றார் திருவேங்கடமாலையிலும்,
தீய கரா – கொண்டது விடாத மூர்க்ககுணமுடைய முதலை. கண்டும், உம் – உயர்வுசிறப்பு.

———-

கண்டவன் அந்தரம் கால் எரி நீர் வையம் காத்து அவை மீண்டு
உண்டவன் அம் தரங்கத்து உறைவான் உயர் தந்தை தமர்
விண்டவன் அந்த மேலவன் வேங்கடமால் அடிமை
கொண்ட அனந்தரத்து உம்பர் நினைக்கவும் கூற்று அஞ்சுமே –25–

(இ – ள்.) அந்தரம் – ஆகாயம்,
கால் – காற்று,
எரி – நெருப்பு,
நீர் – ஜலம்,
வையம் – பூமி,
(என்ற ஐம்பெரும்பூதங்களையும்),
கண்டவன் – படைத்தவனும்,
அவை – அவற்றை,
காத்து, பாதுகாத்து,
மீண்டு – பின்பு (கற்பாந்தகாலத்தில்),
உண்டவன் – உட்கொண்டு தன்வயிற்றில் வைத்தருளியவனும்,
அம் தரங்கத்து உறைவான் – அழகிய (திருப்பாற்) கடலிற் பள்ளி கொண்டிருப்பவனும்,
உயர் தந்தை தமர் விண்டவன் – சிறந்த தந்தையும்மற்றையுறவினரும் இல்லாதவனும்,
அந்தரம் மேலவன் – பரமபதத்தி லெ “ந்தருளியிருப்பவனும், (ஆகிய),
வேங்கடம் மால் – திருவேங்கடமலையில் வாழ்கின்ற திருமாலுக்கு,
அடிமை கொண்ட அனந்தரத்து – (நீங்கள்) அடிமை செய்தலை மேற்கொண்டபின்பு,
உம் பேர் நினைக்கவும் கூற்று அஞ்சும் – உங்கள்பெயரை நினைத்தற்கும் யமன் அஞ்சுவான்; (எ – று.) – ஈற்றுஏகாரம் – தேற்றம்.

அனைவரையும் அஞ்சுவிப்பவனான யமன் திருமாலடியார்க்கு அஞ்சுவன்: ஆதலால், நீங்கள் எம்பெருமானுக்கு அடிமை
பூண்டு உய்யக்கடவீர் என்று உலகத்தார்க்கு உபதேசித்தபடியாம்.
“நரகந்தரம்புவி யிம்மூன்றி டத்துநனிமருவு, நரகந்தரங்கித்து வெங்காலற்கஞ்சுவர் நாயகவா,
நரகந்தரம் புட்பிட ரே றரங்கர் நல்லாய்க்குலத்தி,ந ரகந்தரங்கமுற்றா ரடியார்க்கு நமனஞ்சுமே” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்.
அடியார்கள் பிறவுயிர் கள்போலக் கருமபந்தமுடையவரல்ல ராகுதலால், கர்மிகளைத் தண்டிப்பவனான யமனுக்கு அஞ்சாராக,
அவர்களைக் குறித்து அவன் அஞ்சுவ னென்க. திருமாலடியார்க்கு யமன் அஞ்சுதலை
“திறம்பேன்மின் கண்டீர் திருவடி தன்னாமம், மறந்தும் புறந்தொழா மாந்த – ரிறைஞ்சியுஞ்,
சாதுவராய்ப் போதுமின்க ளென்றான் நமனுந் தன், தூதுவரைக் கூவிச்செவிக்கு” என்ற அருளிச்செயலினாலும் அறிக.

“ஒருகாலத்தில், பாசத்தைக் கையிலெடுத்துக் கொண்டு பிராணிகளைக் கொண்டுவரும்படி புறப்பட்ட தன்சேவகனை
யமதருமராசனானவன் அந்தரங்கத்தில் அழைத்து “ஓ படனே! நீ உன்தொழிலை நடத்திவருகையில்
ஸ்ரீமதுசூதநனை ஆசிரயித்தவரைத் தொடாதே, விட்டுவிடு; நான் மற்றவர்கட்குப்பிரபுவேயல்லது வைஷ்ணவர்கட்குப்பிரபு வல்லேன்……
“கமலநயன! வாசுதேவ! விஷ்ணுவே! தரணிதர! அத்சுத! சங்கசக்ரபாணி! நீ அடியேங்களுக்குச் சரணமாகவேண்டும்” என்று
எவர்கள் சொல்லிக்கொண்டேயிருப்பார்களோ, அப்படிப்பட்டமகா பரிசுத்தபுருஷரை ஓபடனே! நீ கண்ணெடுத்துப்பாராமல் தூர ஓடிப்போ;
விகார நாசாதிகளில்லாமல் சத்தியஞாநாநந்தமயனாய்ப் பிரகாசிக்கின்ற அந்த எம் பெருமான் எவனுடைய
இருதயகமலத்தில் வாசஞ்செய்துகொண் டிருப்பனோ, அந்தமகாபுருஷனுடைய கடாக்ஷம் பிரஸரிக்கு மிடங்களிலெல்லாம்
நீ செல்லத்தக்கவனல்லை: நானும் செல்லத்தக்கவனல்லேன்; பதறிச்சென் றால், அவ்வெம்பெருமானுடைய திருவாழியின்
தேஜோவிசேஷத்தினாலே பதராக்கப்படுவோம்; அந்தமகாபுருஷன் ஸ்ரீவைகுண்ட திவ்வியலோகத்துக்கு எழுந்தருளத்தக்கவன்”
என்று கூறினன்” என்ற வரலாற்றை ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் யமகிங்கரசம்வாதரூபமான வைஷ்ணவப்பிரபாவத்திற் பரக்கக் காணலாம

படைத்தல் காத்தல் ஒடுக்குதல் என்னும்முத்தொழிலையுஞ் செய்தருள் பவன் திருமாலே யென்பதை,
“கண்டவன்… காத்து அவை மீண்டு உண்டவன்” என்று விளக்கினார்.
கண்டவன்என்பது – செய்தவனென்னும் பொருளதாதலை, “முற்பகற் கண்டான் பிறன்கேடு” என்றவிடத்துங் காண்க;
உண்டாக்கிப் பார்த்தவ னென்க. அந்தரங் கா லெரி நீர் வையம் என்ற ஐம்பூதமுறைமை, உற்பத்திக்கிரமம்பற்றியது;
ஆகாயத்திலிருந்து வாயுவும், வாயுவிலிருந்து அக்கினியும், அக்கினியிலிருந்து ஜலமும், ஜலத்திலிருந்து பூமியும் உண்டானதாக வேதம் ஓதும்.
அந்தரங்கத்து உறைவான் என்று எடுத்து, (அடியார்களுடைய) உள்ளத்தில் வாழ்பவனெனினும் அமையும்.
சீவகசிந்தாமணியில் “உயர்தந்தை” என்றவிடத்து ஆசிரியர் நச்சினார்க்கினியர்
“பிள்ளை யுயர்ச்சிமிகுதிக்குக் காரணமான தந்தை” என உரைத்துள்ளார். தமது – கிளைப் பெயர்.
பரமாத்மாவாகிய எம்பெருமான் துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலநத்தின்பொருட்டுத் தனது இச்சையினால் இராமகிருஷ்ணாதி
அவதாரங்கள் கொள்ளும்போதன்றி இயல்பிலே ஜீவாத்மாக்கள்போலக் கருமவசத்தாலாகும் பிறப்பையும்
தந்தை தாய் மக்கள் தம்பி தமையன் முதலிய சுற்றத்தவரையு முடையவனல்ல னென்பது, “தந்தை தமர் விண்டவன்” என்பதன் கருத்து.

“உயரத்தமமர்விண்டவன்” என்ற பாடத்துக்கு – உயர் அத்தம் – சிறந்த அர்த்தத்தை (பரமார்த்தமாகிய ஞானப்பொரு ளடங்கிய கீதையை),
அமர் – பாரதயுத்தத்தில், விண்டவன் – (அருச்சுனனுக்குத்) திருவாய்மலர்ந்தருளிய வன் என்று பொருள் காண்க.
அதன்விவரம்: மகாபாரதயுத்தத்தில் முதல் நாட்போர்த்தொடக்கத்தில் எதிர்வந்துநின்ற வீரர்களெல்லாரும் பாட்டனும்
அண்ணன்தம்பிமாரும் மாமனும் உறவினரும் கல்விபயிற்றிய ஆசாரியரும் மனங்கலந்தநண்பரு மாகவே யிருக்கக் கண்டு
“உற்றாரையெல்லாம் உடன்கொன்று அரசாளப், பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம்” என்றுஎண்ணிப் போர்
புரியேனென்று காண்டீவம்கைந்நெகிழத் தேர்த்தட்டின்மீதே திகைத்துநின்ற அருச்சுனனுக்குக் கண்ணன் தத்துவோபதேசஞ் செய்து
தனது விசுவரூபத்தைக்காட்டி அவனது மயக்கத்தை ஓட்டி அவனைப் போர்புரியுமாறு உடன்படுத்தினன் என்பதாம்.
அப்பொழுது உபதேசித்த தத்துவப்பொருளே, ஸ்ரீபகவத்கீதையென வழங்கப்படுகின்ற நூலாம்.
அர்த்தம், ஸமரம் என்ற வடசொற்கள் – அத்தம், அமர் என்று விகாரப்பட்டன.

நம் தரம் மேலவன் என்று பதம்பிரித்து, ஜீவாத்மாக்களாகிய நம்முடைய தகுதிக்கெல்லாம் மேம்பட்ட
நிலைமையுடைவனென்று உரைத்தலுமொன்று. மால் அடிமைகொண்ட அநந்தரத்து என்பது,
திருமால் ஆட் கொண்டபின்பு என்றும் பொருள்படும். கூற்று – (பிராணிகளின் உடலையும் உயிரையும் வெவ்வேறு)
கூறாக்குந் தேவன். கூற்று அஞ்சும் – செய்யுமென்முற்று – ஆண்பாலுக்கு வந்தது.

————

அஞ்சு அக்கர வட மூலத்தன் போதன் அறிவு அரிய
செஞ்சக்கர வட வேங்கட நாதனை -தேசத்துள்ளீர்
நெஞ்சக் கரவடம் நீக்கி இன்றே தொழும் நீள் மறலி
துஞ்சக் கரவடம் வீசும் அக்காலம் தொழற்கு அரிதே –26-

(இ – ள்.) தேசத்து உள்ளீர் – நாட்டிலுள்ளவர்களே! –
அஞ்சு அக்கரம் வடம் மூலத்தன் – பஞ்சாக்ஷரமந்திரத்துக்குஉரியவனும் ஆலமரத்தினடியில்வீற்றிருந்தவனுமான சிவபிரானும்,
போதன் – பிரமதேவனும்,
அறிவு அரிய – அறிதற்கு அரியவனான,
செம் சக்கரம் வட வேங்கடம் நாதனை – சிவந்தசக்கராயுதத்தையேந்திய வடதிருவேங்கடமுடையானை,
நெஞ்சம் கரவடம் நீக்கி இன்றேதொழும் – மனத்திலுள்ளவஞ்சனையைஒழித்து இப்பொழுதே (நீங்கள்) வணங்குங்கள்; (ஏனென்றால்,-)
நீள் மறலி – பெரியவடிவமுடைய யமன்,
துஞ்ச – (நீங்கள்) இறக்கும்படி,
கரம் வடம் வீசும் அ காலம் – தன்கையிற் கொண்ட பாசாயுதத்தை (உங்கள்மேல்) வீசும் அந்தஅந்திமகாலத்தில்,
தொழற்கு அரிது – வணங்குதற்கு இயலாது; (எ – று.) – ஈற்றுஏகாரம் – தேற்றம்.

“ஒற்றைவிடையனும் நான்முகனும் உன்னையறியாப் பெருமையோனே,”
“பெண்ணுலாஞ்சடையினானும் பிரமனு முன்னைக்காண்பா, னெண்ணிலாவூரியூழிதவஞ்செய்தார்வெள்கிநிற்ப” என்ற
ஆழ்வார்களருளிச்செயல்களைப் பின்பற்றி “வடமூலத்தன் போத னறிவரிய நாதன்” என்றும்,
“எய்ப்பென்னைவந்துநலியும்போ தங்கேது நானுன்னை நினைக்கமாட்டேன், அப்போதைக் கிப்போதே சொல்லிவைத்தேன்”
என்ற ஆழ்வாரருளிச்செயலைப் பின்பற்றி
“இன்றேதொழும் மறலிவடம்வீசுமக்காலம் தொழற்கரிது” என்றும் கூறினார்.
முன்னொருகாலத்திற் சிவபிரான் தக்ஷிணாமூர்த்தியென் னுங்குருவடிவமாய்க் கைலாசகிரியில் தென்சிகரத்திலே
கல்லாலமரத்தின் கீழ்வீற்றிருந்து பிரமபுத்திரரான ஸநகர் ஸநந்தநர் ஸநத்குமாரர் ஸநத்ஸுஜாதர் என்ற முனிவர்
நால்வர்க்கும் ஞானோபதேசஞ்செய்தன னாதலால், “வடமூலத்தன்” எனப்பட்டான்;
“ஆலநிழற்கீ ழறநெறியை நால்வர்க்கு, மேலையுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன் –
ஞால, மளந்தானை யாழிக்கிட ந்தானை யால்மேல், வளர்ந்தானைத் தான்வணங்குமாறு,”
“ஆலமரநீழலற நால்வர்க்கன்றுரைத்த, ஆலமமர்கண்டத்தரன்” என்றார் பெரியாரும்.
இங்குக் கூறிய நால்வர் – அகஸ்த்ய புலஸ்த்ய தக்ஷ மார்க்கண்டேய ரென்றலுமுண்டு.

அக்ஷரம், வடமூலம், சக்ரம், தேசம், கரம், காலம் – வடசொற்கள். கரவடம் – கபடம். மறல் – கொடுமை: அதனையுடையவன்,
மறலி; இ – பெயர்விகுதி. துஞ்சுதல் – தூங்குதல். இறத்தலைத் துஞ்சுதலென்பது, மங்கல வழக்கு;
மீளஎழுந்திராத பெருந்தூக்க மென்க. தொழற்குஅரிது என்ற விடத்து, நான்கனுருபு – கருத்தாப்பொருளில் வந்தது.

————-

தொழும் பால் அமரர் தொழும் வேங்கடவன் சுடர் நயனக்
கொழும் பாலனை ஒரு கூறு உடையான் நந்த கோபன் இல்லத்து
அழும் பாலன் ஆகிய காலத்து பேய்ச்சி அருத்து நஞ்சைச்
செழும் பால் அமுது என்று உவந்தாற்கு என் பாடல் சிறக்கும் அன்றே –27–

(இ – ள்.) சுடர் நயனம் கொழும் பாலனை – நெருப்புக்கண்ணைக் கொழுமையுள்ள நெற்றியி லுடையனான சிவபிரானை,
ஒரு கூறு உடையான் – (தனது திருமேனியில்) ஒரு பாகத்திலே (வலப்பக்கத்திலே) கொண்டவனும்,
நந்தகோபன் இல்லத்து – நந்தகோபனுடைய திருமாளிகையில்
அழும் பாலன் ஆகிய காலத்து – அழுகின்ற குழந்தையாய்த் தான் வளர்ந்தகாலத்தில்,
பேய்ச்சி அருத்து – பேய்மகளாகிய பூதனை ஊட்டிய,
நஞ்சை – விஷத்தை,
செழும் பால் அமுது என்று உவந்தான் – செழித்த பா லாகியஉண வென்று விரும்பி யுட்கொண்டவனுமான,
தொழும்பால் அமரர் தொழும் வேங்கடவற்கு – அடிமைத்தன்மையால் தேவர்கள் வணங்கப்பெற்ற திருவேங்கடமலையின் தலைவனுக்கு, –
என் பாடல் சிறக்கும் அன்றே – என்னுடைய கவியும் சிறந்ததாகுமன்றோ? (எ – று.) –
அன்றே – தேற்றம்.

தமோகுணதேவதையாகையால் உக்கிரமூர்த்தியான விஷகண்டனைத் தனது திருமேனியில் ஒருபக்கத்திலே ஏற்றுக்
கொண்டருளியவனும், வஞ்ச னையிற்சிறந்தபூதனை உண்பித்த விஷத்தை அமுதுபோல உட்கொண்டவனு மாகிய திருமால்,
அவ்வாறே, யான்பாடும் இழிவானசெய்யுள்களையும் குற்றம் பாராது இனியனவாக அங்கீகரிப்பன் என்பதாம்.
சுடர்நயனக் கொழும்பால னையொரு கூறுடையான், பேய்ச்சியருத்துநஞ்சைச் செழும்பாலமுதென்றுவந்தான் என்ற விசேஷணங்கள்
ஒருகருத்தை யுட்கொண்டன வாதலால், கருத்துடையடைமொழியணி. “உவந்தாற்கு” என்பதி லுள்ள நான்கனுருபு,
பிரித்து “வேங்கடவன்” என்பதனோடு கூட்டப்பட்டது. சுடர்நயனக் கொழும்பாலனை யொருகூறுடையான் –
“வலத்தனன் திரிபுரமெரித்தவன்”,
“பிறைதங்குசடையானை வலத்தேவைத்து” என்றார் ஆழ்வார்களும்.
அமரர் – “அயர்வறுமமரர்களதிபதி” என்ற திருவாய்மொழியிற் போல நித்தியசூரிக ளெனினுமாம்.

இச்செய்யுள், எம்பெருமானது திருவருட்சிறப்பைக் கூறு முகத்தால் அவையடக்கங் கூறியவாறாம்.

நயனம், பாலம், பாலன் – வடசொற்கள். பாலமுது – இருபெயரொட் டுப்பண்புத்தொகை; ஒருபொருட்பன்மொழியுமாம்.
அழும்பாலன் – சிறுகுழந்தை யென்றபடி; இன்னகாரணமென்று உணரவொண்ணாதபடியும் எளிதிற்
சமாதானப்படுத்தமுடியாதபடியும் அழுதல், சிறுகுழந்தையினியல்பு.

————

சிறக்கும் பதம் தருவார் திருவேங்கடச் செல்வர் செய்ய
நிறக்கும் பதம் தொழுது உய்ய எண்ணீர் -நெறியில் பிழைத்து
மறக்கும் பதந்தியும் சேலும் அசுணமும் வண்டினமும்
பறக்கும் பதங்கமும் போல் ஐவரால் கெடும் பாதகரே –28–

(இ – ள்.) மறம் கும்பம் தந்தியும் – கோபகுணத்தையும் மஸ்தகத்தையு முடைய யானையும்,
சேலும் – மீனும்,
அசுணமும் – அசுணமென்ற பறவையும்,
வண்டு இனமும் – வண்டுவகைகளும்,
பறக்கும் பதங்கமும் – பறக்கின்ற விட்டிற்பறவையும்,
போல் -, நெறியின் பிழைத்து – நன்னெறியினின் றுதவறி,
ஐவரால் கெடும் – பஞ்சேந்திரியங்களால் அழிந்துபோகின்ற,
பாதகரே – தீவினையுடையவர்களே! – (நீங்கள்),
சிறக்கும் பதம் தருவார் – (எல்லாப்பதவிகளினுஞ்) சிறந்த பரமபதத்தைத் (தம்அடியார்க்குத்) தந்தருள் பவரும்,
திருவேங்கடம் செல்வர் – திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக் கின்றவரும் எல்லாச்செல்வங்கட்கும் உரியதலைவருமான எம்பெருமானுடைய,
செய்ய நிறக்கும் பதம் – சிவந்த நிறமமைந்த திருவடிகளை,
தொழுது – வணங்கி,
உய்ய – ஈடேறுமாறு,
எண்ணீர் – நினையுங்கள்; (எ – று.)

ஐம்பொறிகட்கு உரியசப்த ஸ்பர்ச ரஸரூப கந்தமென்னும் ஐம்புலன்க ளிலாசையாற் கெடுதற்கு,
யானை முதலிய ஐந்து பிராணிகள் உவமைகூறப்பட்டன. அதன் விவரம் –
யானை பரிசத்தால் அழியும்: எங்ஙனமெனின், – யானை பிடிக்கும்வேடச்சாதியர் யானைக்காட்டிற்சென்று அங்கு
ஒருபெரும்பள்ளம் பறித்து அதன்இப்புறத்தில் தாம்பழக்கியபெண்யானையை நிறுத்திவைக்க,
அப்புறத்திலுள்ள ஆண்யானை அதனோடுசேரும் விருப்பத்தால் ஓடிவருகையில் அப்படுகுழியில்வீழ்ந்து மேலேறமாட்டாது அகப்பட்டுக்கொள்ள,
அதனை அவ்வெயினர்கள் பின்பு தந்திரமாக விலங்கிட்டு மேலேற்றித் தம் வசப்படுத்திக்கொள்வர்;
இது, மெய்யென்னும் பொறிக்குஉரிய ஊற்றின்பத்திலாசையால் அழிந்தது.

மீன் ரசத்தால் அழியும்; எங்ஙனமெனின், –
செம்படவர் மீன்பிடித்தற்பொருட்டு நீர்நிலையிலிட்டதூண்டிலில் வைத்துள்ள தசையை யுண்ணவேண்டுமென்னும்
அவாவினால் மீன்விரைந்துவந்து அதில் வாய்வைத்து, அத்தூண்டில்முள் தன்வாயில்மாட்டிக் கொள்ளுதலால் மீள மாட்டாதாக,
அதனை வலைஞர் எடுத்துப் பறியிற்போகட்டுக்கொள்வர்;
இது, வாய்என்னும் பொறிக்கு உரிய சுவையின்பத்தி லாசையால் அழிந்தது.

அசுணம் சப்தத்தால் அழியும்; எங்ஙனமெனின், –
இசையறிவிலங்காகிய அசுணமென்னுங் குறிஞ்சிநிலப்பறவையைப் பிடிக்கக்கருதிய அந்நிலத்துமக்கள் செழுமையுள்ள
மலைச்சாரலிலே நிலாவிளங்கும் மாலைப்பொழுதில் வேய்ங்குழல்முதலியவற்றால் இனியஇசைபாட,
அச்சங்கீதத்தைக்கேட்டு ஆனந்தமடையவிரும்பி அப்பறவைகள் அருகில்வந்து அவ்வின்னிசையைச் செவியிலேற்றுப்
பரவசப்பட்டிருக்கிறசமயத்தில் அக்கொலையாளர் பறைகொட்ட அக்கொடியஓசையைக்கேட்டவுடன் அப்பறவைகள் இறந்துபடும்.
அவற்றை அவர் எடுத்துச்செல்வர்; இது, செவியென்னும்பொறிக்கு உரிய ஓசையின்பத்தி லாசையால் அழிந்தது.

வண்டு கந்தத்தால் அழியும்; எங்ஙனமெனின், –
வண்டுகள் மலர்களின் நறுமணத்தை அவாவித் தாமரைமுதலிய பெருமலர்களினிடையே புக்கிருக்கும்போது அவை குவிந்துகொள்ள,
அங்கு அகப்பட்டு வருந்தும்; அன்றியும், சண்பகமலரின் நறுமணத்தையும் அதன்நறுந்தேனையும் நுகரும் அவாவினால்
அதனை அணுகிமொய்த்து அதன் உஷ்ணம் தாக்கப் பொறாது இறந்துபடும்;
மற்றும், நறுமணவிருப்பினால் தேனிலேமொய்த்து அதனை மிகுதியாகஉண்டு மயங்கி மீளமாட்டாது சிக்கியழிதலும் உண்டு;
இது, மூக்கு என்னும் பொறிக்கு உரிய நாற்றவின் பத்திலாசையால் அழிந்தது.

விட்டில் ரூபத்தால் அழியும்; எங்ஙனமெனின், –
விட்டிற்பறவை விளக்கொளியைக் கண்டவுடனே அதனிடத்து அவாவோடு ஓடிவந்து விழுந்து இறக்கும்;
இது, கண்ணென்னும் பொறிக்கு உரிய ஒளியி லாசையால் அழிந்தது. ஐம்புல நுகர்ச்சியில் ஒவ்வொன்றால் அழிகின்ற
யானை முதலிய ஐந்து பிராணிகளையும், ஐம்புலன்களையும் ஒருங்கு நுகரத்தொடங்கி அழிகின்ற பாவிகட்கு உவமைகூறினார்.
“மணியிசைக்காவந்திடுமாச் செவியான்மாயும் மகிழ்புணர்ச்சிக்காகஇபம் மண்ணிற்சிக்கும்,
கணில்விளக்கைக்கண்டு விட்டில் வீழ்ந்து பொன்றும் கடுந்தூண்டிற்கவ்வி மச்சம் வாயான்மாளும்,
அணுகி யளி நாசியிற் செண்பகமோந்தெய்க்கும் ஐம்பொறியுமுடைய நா னலைந்திடாமல்,
இணையிலுபதேசத்தால் திருத்திக்காக்கைக்கு எழிற்குருவா யுதித்தனையே யெம் பிரானே,”
“அழுக்குடைப்புலன்வழி யிழுக்கத்தினொழுகி, வளைவாய்த் தூண்டிலினுள் ளிரைவிழுங்கும்,
பன்மீன்போலவும், மின்னுறுவிளக்கத்து விட்டில்போலவு, மாசையாம்பரிசத்தி யானைபோலவு,
மோசையின்விளிந்த புள்ளுப்போலவும், வீசியமணத்தின் வண்டுபோலவு, முறுவதுணராச் செறுவுழிச் சேர்ந்தனை” என்பவை இங்குக் காணத்தக்கன.

அசுணமென்பது ஒருவகைமிருக மென்றும், அது மானில் ஒருவகை யென்றும், அது வேடர்கள்பாடும்இனிய இசையைக்கேட்டு
ஆனந்தமடையவிரும்பி அருகில் ஓடிவந்து அவ்வின்னிசையைச் செவியிலேற்றுப் பரவசப்பட்டுநிற்கையில்
அவர்களாற் கவர்ந்து கொள்ளப்பட்டு அழியு மென்றுங் கூறுதலு முண்டு.

பதம், கும்பதந்தீ, பதங்கம், பாதகம் – வடசொற்கள். செல்வர் – இம்மை மறுமைவீடுகளில் அனுபவிக்கப்படுஞ்
செல்வங்கட்கெல்லாம் உரியதலைவர். திருவேங்கடச்செல்வர் செய்யநிறக்கும்பதம் தொழுது நெறியிற்பிழைத்து
(சந்மார்க்கத்தில் வாழ்ந்து) உய்ய எண்ணீர்: (அவர் உங்கட்குச்) சிறக்கும்பதந்தருவார் என்றுகூட்டிப் பொருள் கொள்ளினுமாம்.
பிழைத்துஎன்ற விடத்து “பிறழ்ந்து” என்றும் பாடமுண்டு.
“யானை, யறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்” என்றபடி தீராக்கோபமுடைய தாதலால், “மறம்” அதற்கு அடைமொழியாக்கப்பட்டது.
கும்பம் – யானைத்தலையிற் குடங்கவிழ்த்தாற் போலுள்ள உறுப்பு. தந்தமுடையது தந்தீ எனக் காரணக்குறி.

———-

பாதம் அரா உறை பாதளத் தூடு பகிரண்டத்துப்
போது அமர் ஆயிரம் பொன் முடி ஓங்கப் பொலிந்து நின்ற
நீதமர் ஆனவருக்கு எவ்வாறு -வேங்கடம் நின்றருளும்
நாத மராமரம் எய்தாய் முன் கோவல் நடந்ததுவே –29-

(இ – ள்.) வேங்கடம் நின்று அருளும் நாத – திருவேங்கடமலையில் நின்ற திருக்கோலமாக எழுந்தருளியிருந்து
(எல்லாவுயிர்கட்கும்) அருள்புரிகின்ற தலைவனே!
மராமரம் எய்தாய் – ஏழு மராமரங்களை அம்பெய்து துளைத்தவனே! –
பாதம் – திருவடிகள்,
அரா உறை பாதாளத்தூடு – பாம்புகள் வசிக்கின்ற பாதாளலோகத்திலும்,
போது அமர் ஆயிரம் பொன் முடி – (சூட்டிய) மலர்கள் பொருந்திய அழகிய ஆயிரந்திருமுடிகள்,
பகிர் அண்டத்து – இவ்வண்டகோளத்தின் மேன்முகட்டுக்கு வெளியிலும்,
ஓங்க – வளர்ந்துதோன்ற,
பொலிந்து நின்றாய் – (விசுவரூபத்தில்) விளங்கிநின்றவனான, நீ -,
முன் – முற்காலத்தில்,
தமர் ஆனவர்க்கு – நினது அடியார்களான முதலாழ்வார்கட்குக் காட்சிகொடுத்தற்பொருட்டு,
கோவல் நடந்தது – திருக்கோவலூரில் (அவர்களிருந்தவிடத்துக்கு) நடந்துசென்றது, எ ஆறு – எங்ஙனமோ? (எ – று.)

இச்செய்யுளின்கருத்து 82-ஆஞ் செய்யுளின் கருத்தோடு ஒப்பிடுக.
(“அன்றையிலும் வையமகன்றதோ வல்லவென்று, குன்றெடுத்து நீதிருத்திக் கொண்டாயோ – என்றும்,
அடைந்தாரைக் காக்கு மகளங்கா துங்கா, நடந்தாயே காலாறடி” என்பதும் இதுபோன்ற கருத்துக் கொண்டதே.)
இச் செய்யுளில் ஆதாரமாகிய கோவலூரினும் ஆதேயமாகிய திருமாலுக்குப் பெருமை கூறியிருப்பது, பெருமையணியின்பாற்படும்:
உலகுநிறைய உயர்ந்தோங்கினவன் உலகின் ஒருபகுதியில் நடந்தா னென்று குறித்திருப்பது, முரண்விளைந்தழிவணி;
இது திருமாலின் சொல்லொணாமகிமையைவிளக்கும்.

திருக்கோவலூர் – நடுநாட்டிலுள்ள திருமால்திருப்பதியிரண்டில் ஒன்றும்,
தென்பெண்ணையாற்றின் தென்கரையிலுள்ளதுமான ஒருதிவ்வியதேசம்.

பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் என்ற முதலாழ்வார் மூவரும், ஓடித்திரியும் யோகிகளாய், செஞ்சொற்கவிகளுமாகி,
தம்மில் ஒருவரையொருவர் அறியாமல் தனித்தனியே பலவிடத்தும் சஞ்சரித்து வருகையில், ஒருநாள்
சூரியாஸ்தமனமானபின் பொய்கையாழ்வார் திருக்கோவலூரையடைந்து அங்கு மிருகண்டுமுனிவரது திருமாளிகையிற் சென்று
அதனது இடைகழியிற் சயனித்துக்கொண்டிருந்தார்.
பின்னர் பூதத் தாழ்வாரும் அவ்விடத்திலே சென்று சேர, பொய்கையாழ்வார் “இவ்விடம் ஒருவர் படுக்கலாம்: இருவர் இருக்கலாம்” என்று
சொன்னபின், அவ்வாறே அவ்விருவரும் அங்கு இருந்தனர்.
அதன்பிறகு பேயாழ்வாரும் அவ்விடத்தை அடைந்திட, முன்னையரிருவரும்
“இவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்” என்றுகூற, அங்ஙனமே அம்மூவரும்
அவ்விடத்திலே நின்றுகொண்டு எம்பெருமானுடைய திருக்கலியாணகுணங்களை ஒருவரோடொருவர்
சொல்லிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் மகிழ்ந்திருந்தனர். அவர்களை ஆட்கொண்டு அவர்களால் உலகத்தை உய்விக்கவேண்டு
மென்று நினைத்து அம்மூவரையும் ஓரிடத்திற் சேர்த்த திரிவிக்கிரம மூர்த்தி, அவர்களை அநுக்கிரகிக்கும்பொருட்டு
அப்பொழுது பேரிருளையும் பெருமழையையும் உண்டாக்கித் தான் சென்று அவர்களுடன் நின்று பெரு வடிவுகொண்டு
பொறுக்க வொண்ணாத அதிக நெருக்கத்தைச் செய்தருளினான்.
அவர்கள் “முன்இல்லாத நெருக்கம் இப்பொழுது உண்டானது என்னோ? பிறர் எவரேனும் இந்தஇடைகழியிற் புகுந்தவர் உண்டோ?” என்று
சங்கிக்கையில், பொய்கையாழ்வார் பூமியாகிய தகழியில் கடல்நீரை நெய்யாகக்கொண்டு சூரியனை விளக்காக ஏற்ற,
பூதத்தாழ்வார் அன்பாகியதகழியில் ஆர்வத்தை நெய்யாகவும் சிந்தையைத் திரியாகவுங் கொண்டு ஞான தீபத்தை ஏற்ற,
இவ்விரண்டன் ஒளியாலும் இருள் அற்றதனால், பேயாழ்வார் பெருமானைத் தாம் கண்டமை கூறியவளவிலே,
மூவரும் எம்பெருமானுடைய சொரூபத்தைக் கண்ணாரக்கண்டு சேவித்து அனுபவித்து ஆனந்தமடைந்து,
அப்பெருங்களிப்பு உள்ளடங்காமையால் அதனைப் பிரபந்தமுகமாக வெளியிட்டு உலகத்தாரைவாழ்விக்கக்கருதி,
பொய்கையாழ்வார் “வையந் தகளியா” என்று தொடங்கி முதல் திருவந்தாதியைப் பாடியருள,
பூதத்தாழ்வார் “அன்பே தகளியா” என்று தொடங்கி இரண்டாந் திருவந் தாதியை அருளிச்செய்ய,
பேயாழ்வார் “திருக்கண்டேன்” என்று தொடங்கி மூன்றாந்திருவந்தாதியைத் திருவாய்மலர்ந்தருளினார் என்பது
இங்கு அறிய வேண்டிய வரலாறு.
பாதம், பாதாளம், பஹிரண்டம் – வடசொற்கள். ஆயிரமென்றது, எண்ணிறந்த பலவென்றமாத்திரமாய் நின்றது.

———-

நடைக்கு அலங்கார மடவார் விழிக்கு நகைக்கு செவ்வாய்க்கு
இடைக்கு அலங்கு ஆர முலைக்கு இச்சையான இவன் என்று என்னை
படைக்கலம் காணத் துரந்தே நமன் தமர் பற்றும் அன்றைக்கு
அடைக்கலம் காண் அப்பனே அலர் மேல் மங்கை அங்கத்தனே –30-

(இ – ள்.) அப்பனே – ஸ்வாமீ!
அலர்மேல் மங்கை அங்கத்தனே – அலர்மேன்மங்கைப்பிராட்டியைத் திருமேனியில் (திருமார்பில்) உடையவனே! –
அலங்காரம் மடவார் – (இயற்கையும் செயற்கையுமான) அழகுகளையுடைய இளமங்கையரது,
நடைக்கு – நடையழகுக்கும்,
விழிக்கு – கண்ணழகுக்கும்,
நகைக்கு – புன்சிரிப்பினழகுக்கும்,
செம் வாய்க்கு – சிவந்த வாயினழகுக்கும்,
இடைக்கு – இடையினழகுக்கும்,
அலங்கு ஆரம் முலைக்கு – புரளுகின்ற ஆரங்களை யணிந்த தனங்களி னழகுக்கும்,
இச்சை ஆன – விரும்பியீடுபட்ட,
இவன் -, என்று -,
எண்ணி – (என்னை) நினைத்து,
நமன் தமர் – யமதூதர்கள்,
படைக்கலம் – ஆயுதங்களை,
காண – (யான்) கண்டு அஞ்சும்படி,
துரந்து – (என்மீது) செலுத்தி (பிரயோகித்து),
பற்றும் – (என்னைப்) பிடித்துக்கொண்டுபோகும்,
அன்றைக்கு – அந்த அந்திமகாலத்தில் என்னைப்பாதுகாத்தற்பொருட்டு,
அடைக்கலம் காண் – (நான் இன்றைக்கே உனக்கு) அடைக்கலப்பொருளாகிறேன்காண்; (எ – று.) – காண் – தேற்றம்.

“வம்புலாங்கூந்தல்மனைவியைத் துறந்து பிறர்பொருள் தார மென்றி வற்றை,
நம்பினா ரிறந்தால் நமன்தமர்பற்றி யெற்றிவைத் தெரியெழுகின்ற,
செம்பினாலியன்றபாவையைப் பாவீ தழுவென மொழிவதற்கஞ்சி,
நம்பனே வந் துன்திருவடி யடைந்தேன்”,
“வஞ்சவுருவி னமன்றமர்கள் வலிந்து நலிந்தென்னைப் பற்றும்போது,
அஞ்சலமென் றென்னைக் காக்கவேண்டும்” என்ற அருளிச்செயல்களை அடியொற்றி இதுகூறினார்.
அடைக்கலம் – பாதுகாக்கப்படுதற்கு உரியதாகும் பொருள். எனக்கு நீ அடைக்கல மென்றுங் கொள்ளலாம்;
அப்பொழுது, அடைக்கல மென்பது – சரணமடையப்படு பொருள்: அதாவது – ரக்ஷக னென்ற பொருளை யுணர்த்தும்.

அலங்காரம், ஹாரம், இச்சா, அங்கம் – வடசொற்கள். மடவார் – மடமையையுடையவர்: மடமை – இளமை;
மாதர்க்கு அணிகலமான பேதைமையென்னுங் குணமுமாம். ஆரம் – பொன் மணிகளாலாகிய மார்பின்மாலை.
படைக்கலம் – போர்க்கருவி. நமன் – யமன் என்ற வடசொல்லின் சிதைவு.

————–

அங்கம் அலைக்கும் வினையால் அலமரவோ உனக்கும்
அம் கமலைக்கும் அடிமைப் பட்டேன் அரவு ஆனபரி
அங்க மலைக் குடையாய் அக்கராவுடன் அன்று அமர் செய்
அங்க மலைக்கு முன் நின்றருள் வேங்கடத்து அற்புதனே –31-

(இ – ள்.) அரவு ஆன – ஆதிசேஷனாகிய,
பரியங்க – கட்டிலையுடையவனே!
மலை குடையாய் – கோவர்த்தன மலையைக் குடையாகக் கொண்டு பிடித்தவனே!
அ கராவுடன் – அந்த முதலையுடனே,
அன்று – அக்காலத்தில்,
அமர் செய் – போர்செய்த,
அங்கம் மலைக்கு – அவயவங்களையுடைய மலைபோன்றதான யானைக்கு,
முன் – எதிரில்,
நின்று – சென்று நின்று,
அருள் – (அதனைப்) பாதுகாத்தருளிய,
வேங்கடத்து அற்புதனே – திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கின்ற ஆச்சரியகரமான குணஞ்செயல்களை யுடையவனே! –
அங்கம் அலைக்கும் வினையால் அலமரவோ – உடம்பை வருத்துகிற தீவினையினால் வருந்துதற்காகவோ,
உனக்கும் அம் கமலைக்கும் அடிமைப்பட்டேன் – உனக்கும் (உனது மனைவியான) அழகிய திருமகளுக்கும் அடிமைப்பட்டேன், (யான்)? (எ – று.)

கருணாநிதியான உனக்கும் புருஷகாரபூதையான பெரியபிராட்டிக்கும் யான் அடிமைப்பட்டபின்னரும் வினையினால்
வருந்துதல் ஏலா தாதலால், அங்ஙனம் வருந்தாதபடி எனக்கு அருள்புரியவேண்டு மென்பதாம்.

கமலை – கமலா என்ற வடசொல் ஆவீறுஐயாயிற்று; தாமரைமலரில் வாழ்பவள். பர்யங்கம் – வடசொல்; படுக்கை.
அக் கரா – தேவலனென் னும்முனிவனது சாபம்பெற்ற ஹூஹூஎன்ற கந்தருவனாகிய முதலை
அங்கமலை – துதிக்கை முதலிய உறுப்புக்களையுடைய மலை; எனவே, யானையாயிற்று.
இனி, அமர் செய் அங்கு – போர்செய்த அவ்விடத்தில் (நீர்நிலையில்), அ மலைக்கு – அந்த மலைபோன்ற யானைக்கு
என்று உரைகூறுதலு மொன்று; இப்பொருளுக்கு, அம்மலையென்பது அமலை யெனத் தொக்க தென்க.
முன் – இடமுன். அத்புதன் – வடசொல்.

இரண்டாமடியினிறுதியில் பரியங்கம் என்ற ஒருசொல்லைப் பரி அங்கம் என்றுபிரித்துப் பிரயோகித்தது, யமக நயத்தின்பொருட்டு.
(அதற்கு அறிகுறியாக மூலத்தில் இரண்டாமடியீற்றில் (-) இக்குறி இடப்பட்டது.) இங்ஙனம் சொல்லணிக்காகப் பிரித்துக்
காட்டியிருந்தாலும் பொருள்நோக் கும்பொழுது பரியங்க வென்று சேர்த்துப் படித்துக்கொள்க.
பர்யங்கம் என்ற வடசொல் பகுபதமாதலும், அது பிரிக்குமிடத்துப் பரி அங்கம் என்று பிரிதலுங் காண்க.

———-

அற்ப ரதத்து மடவார் கல்வியும் ஆங்கு அவர்கள்
நல் பரதத்து நடித்தலும் பாடலும் நச்சி நிற்பார்
நிற்ப ரத்தத்துக் கதிர் தோயும் வேங்கடம் நின்றருளும்
சிற் பரதத்துவன் தாள் அடைந்தேன் முத்தி சித்திக்கவே –32-

(இ – ள்.) அற்ப ரதத்து – சிற்றின்பத்தையேயுடைய,
மடவார் – இள மகளிரது,
கலவியும் – சேர்க்கையையும்,
அவர்கள் – அவ்விளமங்கையர்,
நல்பரதத்து நடிப்பதும் – நல்ல பரதசாஸ்திரமுறைப்படி நர்த்தநஞ்செய்வதையும்,
பாடலும் – (அவர்கள்) பாடுகின்ற இசைப்பாட்டையும்,
நச்சி நிற்பார் – விரும்பிநிற்கின்ற பேதையர்,
நிற்ப – நிற்க, (நான் அவர்களோடுசேராமல்),-
முத்தி சித்திக்க – பரமபதம் (எனக்கு) வாய்க்கும்படி, –
ரதத்து கதிர் தோயும் வேங்கடம் நின்று அருளும் சித் பர தத்துவன் தாள் அடைந்தேன் -தேரின் மேல்வருகிற சூரியன்
தவழப்பெற்ற திருவேங்கடமலையில் நின்றதிருக் கோலமாய் எழுந்தருளியிருந்து கருணைசெய்கிற ஞானமயமான
பரதத்வப் பொருளாகிய திருமாலினது திருவடிகளைச் சரணமடைந்தேன்; (எ – று.)

“நூலினேரிடையார்திறத்தே நிற்கும், ஞாலந்தன்னொடுங் கூடுவதில் லையான்,
ஆலியா வழையா வரங்கா வென்று, மாலெழுந்தொழிந்தே னென் றன்மாலுக்கே” என்றபடி,
விஷயாந்தரப்ரவணரோடு சேர்ந்து கெடாமல் பகவத்விஷயத்தில் ஈடுபட்டு வாழ்வுபெறுபவனானே னென்பதாம்.

அல்பரஸம், பரதம், ரதம், சித்பரதத்வம், முக்தி – வடசொற்கள். பாவம் ரஸம் தாளம் என்ற மூன்றையு முடைமைபற்றி,
இம்மூன்றுசொற்களின் முதலெழுத்துக்குறிப்புக்கள் தொடர்ந்து பரத மென்று நாட்டியத்திற்குப் பெயராயிற் றென்பர்.
சீவகசிந்தாமணியில் “ராசமாபுரி”, “ரவிகுலதிலகன்” என்றவை போல,
இங்கு ‘ரதம்’ என்பது, “ரவ்விற்கு” அம்முதலா முக்குறிலும்,….. மொழிமுதலாகிமுன்வருமே” என்றபடி
முதலில் இகரம்பெ றாது நின்றது. முக்தி – பற்றுக்களை விட்டு அடையுமிடம்; வீடு என்ற தமிழ்ப் பெயரும் இப்பொருள் கொண்டதே.
கலவி – கலத்தல்; ‘வி’ விகுதி பெற்ற தொழிற்பெயர். பாடல் – சங்கீதம். ரதத்துக் கதிர் – ஒற்றைத்தனியாழித் தேரையுடைய சூரியன்.
“கதிர்தோயும் வேங்கடம்” என்றது, மலையின் உயர்வை விளக்குந் தொடர்புயர்வுநவிற்சியணி.
பரதத்வன் – எல்லாப் பொருளுக்கும் மேம்பட்ட மெய்ம்மைப்பொருளாயுள்ளவன்.
சித்பரதத்வன் – உணர்ச்சியுடையதாதலால் “சித்” எனப்படுகிற ஜீவாத்மாவென்னுந் தத்வத்தைக் காட்டிலும்
மேம்பட்ட பரமாத்மதத்வமாயுள்ளவன் என்றுமாம். ஆங்கு – அசை.

———–

சித்திக்கு வித்து அதுவோ இதுவோ என்று தேடி பொய்ந்நூல்
கத்திக் குவித்த பல் புத்தகத்தீர் கட்டுரைக்க வம்மின்
அத்திக்கு இத்தனையும் உண்ட வேங்கடத்து அச்சுதனே
முத்திக்கு வித்தகன் என்றே சுருதி முறையிடுமே -33-

(இ – ள்.) சித்திக்கு வித்து – வீடுபேற்றிற்கு மூலம்.
அதுவோ – அப் பொருளோ,
இதுவோ – இப்பொருளோ,
என்று தேடி – என்று ஆராயத் தொடங்கி,
பொய் நூல் கத்தி – பொய்யான பரசமயநூல்களைத் தொண்டை நோகக் கதறிப்படித்து,
குவித்த – தொகுத்த,
பல் புத்தகத்தீர் – பல புத்தகங்களையுடையவர்களே! –
கட்டுஉரைக்க வம்மின் – (மோக்ஷசாதநமான பரம்பொருள் இன்னதென்ற உண்மைப்பொருளை யான்) உறுதியாகச் சொல்ல (அதுகேட்டு) உய்யவாருங்கள்: –
“அத்தி கு இத்தனையும் உண்ட – கடல் சூழ்ந்த உலகமுழுவதையும் (பிரளயகாலத்தில்) உட்கொண்டருளிய,
வேங் கடத்து அச்சுதனே – திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கின்ற திருமாலே,
முத்திக்கு வித்தகன் – வீடுபேற்றுக்குச்சாதநமான ஞானசொரூபி,
“என்றே -, சுருதி முறையிடும் – வேதங்கள் பலமுறை வற்புறுத்திக்கூறி முழங்குகின்றன; (எ – று.)

“பரந்ததெய்வமும் பல்லுலகும் படைத் தன்றுடனேவிழுங்கிக்,
கரந்து மிழ்ந்து கடந்திடந்தது கண்டுந் தெளியகில்லீர்,
சிரங்களாலமரர்வணங்குந் திருக்குருகூரதனுட்,
பரன்திறமன்றிப் பல்லுலகீர் தெய்வம்மற்றில்லை பேசுமினே” என்றாற்போன்ற பாசுரங்களின் வாய்பாட்டைக் கொண்டது, இச்செய்யுள்.
“கத்தி” என்ற வினையின் ஆற்றலாலும், பொய்ந்நூல்களை யோதிய தெல்லாம் வீ ணென்பது விளங்கும்.
கட்டுரைக்க வம்மின் என்பதற்கு – நுமக்கு வல்லமையுண்டானால் எம்மோடு வாதஞ்செய்ய வாருங்க ளென்று சொற்போர்க்குப்
பிறரை வலியஅறைகூவியழைக்கின்றதாக வுரைத்தலு மொன்று;
இங்ஙனம் அழைத்தற்குக் காரணம், தாம் தவறாது பரமதநிரஸ நம்பண்ணி ஸ்வமதஸ்தாபநஞ்செய்து வாதப்போரில்
வெல்லலா மென்னுந் துணி வென்க. பிரளயகாலத்தில் எல்லாத் தெய்வங்களையும் வயிற்றில் வைத்துப் பாதுகாத்த
தேவாதிதேவ னென்பது தோன்ற, “அத்திக்குவித்தனை யும்முண்ட வேங்கடத்தச்சுதன்” என்றார்;
இது, முத்திக்குவித்தகனாதற்கு உரியவ னென்ற கருத்தை விளக்குதலால், கருத்துடையடைமொழியணி.
சரணமடைந்தவர்களைக் கைவிடாதவ னென்றும் அழிவில்லாதவ னென்றும் பொருள்படுகிற
“அச்யுதன்” என்ற திருநாமத்தாற் குறித்ததும் இச்சந் தர்ப்பத்திற்கு ஏற்கும்.

ஸித்தி, புஸ்தகம், அப்தி, அச்யுதன், ச்ருதி என்ற வடசொற்கள் விகா ரப்பட்டன.
அப்திஎன்பது – நீர்தங்குமிட மென்றும் (அப் – நீர்), ச்ருதி என் பது – (எழுதாக்கிளவியாய்க் குருசிஷ்யக்கிரமத்திலே கர்ணபரம்பரையாகக்)
கேள்வியில் வழங்குவ தென்றும் காரணப்பொருள் பெறும். கு – வடசொல். வித்து – விதை; இங்குக் காரண மென்றபடி.
இத்தனையும் – இவ்வளவும். இத்தனையும்முண்ட, மகரவொற்று – விரித்தல்.

————

முறையிடத் தேசம் இலங்கை செற்றான் முது வேங்கடத்துள்
இறை இடத்தே சங்கு உடையான் இனி என்னை ஆண்டிலனேல்
தறை இடத்தே உழல எல்லாப் பிறவி தமக்கும் அளவு
உறை இடத் தேய்ந்திடும் இவ்வந்தி வானத்து உடுக்குலமே –34-

(இ – ள்.) தேசம் முறையிட – உலகத்தவர்பலரும் குறைகூறிவேண்ட,
இலங்கை செற்றான் – இலங்கையிலுள்ள அரக்கர்களை அழித்தவனும்,
இடத்தே சங்கு உடையான் – இடக்கையிலே சங்கத்தை யுடையவனுமாகிய,
முது வேங்கடத்துள் இறை – பழமையான திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற பெருமான்,
இனி என்னை ஆண்டிலன் ஏல் – அவனை நான் சரணமடைந்தபின்பும் என்னை ஆட்கொள்ளாது விடுவனானால், –
தறையிடத்தே உழல் எல்லாப் பிறவிதமக்கும் – நிலவுலகத்திலே யான் மாறிமாறிப்பிறந்து திரியும் பலவகைப்பட்ட பிறப்புக்களுக்கெல்லாம்,
அளவு உறை இட – உறையிட்டுத் தொகைசெய்தற்கு,
இ அந்தி வானத்து உடு குலம் தேய்ந்திடும் – மாலைப்பொழுதிலே வானத்தில்விளங்குகின்ற இந்த நக்ஷத்திரக்கூட்ட மெல்லாம் (போதாது) குறைந்திடும்; (எ – று.)

இறைவன் என்னை ஆட்கொள்ளாவிட்டால், இன்னமும் அளவிறந்த பலசன்மங்களெடுத்து உழன்றுவருந்துவே னென்றபடி.
உறையிடுதலாவது – பொருள்களைக் கணக்கிடும்போது ஞாபகத்தின்பொருட்டு ஒவ்வொருபெ ருந்தொகைக்கு
ஒன்றாக இடுவதோர் இலக்கக்குறிப்பு.
இந்த நக்ஷத்திரங்க ளின்தொகை எனதுபிறவிகளின் தொகைக்கு உறையிடவும் போதாதென்று அப்பிறப்புக்களின்
வரம்பின்மையை விளக்கியவாறாம்.
“இராமன்கை, யம்பினுதவும் படைத்தலைவரவரை நோக்கி னிவ்வரக்கர்,
வம்பின்முலையா யுறையிடவும் போதார் கணக்குவரம்புண்டோ” என்ற கம்பராமாயணமும்,
“அன்றுபட்டவர்க் குறையிடப் போதுமோ வநேகநாளினும் பட்டார்” என்ற வில்லிபுத்தூரார் பாரதமும் இங்கு நோக்கத்தக்கவை.

தேசம் – இலங்கை – இடவாகுபெயர்கள். இறை – இறைவன்; பண் பாகுபெயர். “இனி” எதிர்காலங்குறிப்பதோர் இடைச்சொல்.
தரா என்ற வடசொல்லின் விகாரமான தரையென்பது இங்கு எதுகைநோக்கித் தறை யென்று விகாரப்பட்டது.
தறையிடத்து ஏய் உழல் என்று பதம் பிரித்து, மண்ணுலகத்திற் பொருந்தியுழலுதற்கு இடமான என்று உரைத்தலு மொன்று.

————-

உடுக்கும் உடைக்கும் உணவுக்குமே உழல்வீர் இன் நீர்
எடுக்கும் முடைக்குரம்பைக்கு என் செய்வீர் இழிமும் மதமும்
மிடுக்கும் உடைக்குஞ்சரம் தொட்ட வேங்கட வெற்பர் அண்ட
அடுக்கும் உடைக்கும் அவர்க்கு ஆட்படுமின் அனைவருமே -35-

(இ – ள்.) உடுக்கும் உடைக்கும் உணவுக்குமே உழல்வீர் – உடுத்துக் கொள்ளும் ஆடையையும் உண்ணும் உணவையும் தேடிப்பெறுதற்காகவே அலைகின்றவர்களே! –
இனி நீர் எடுக்கும் – இனிமேலும் நீங்கள் எடுக்கவே ண்டிய,
முடை குரம்பைக்கு – முடைநாற்றத்தையுடைய உடம்புகளை (பிறப்புக்களை) யொழிப்பதற்கு,
என் செய்வீர் – என்ன உபாயஞ் செய்வீர் கள்?
இழி மும் மதமும் – ஒழுகுகின்ற மூன்றுவகைமதஜலங்களையும்,
மிடுக் கும் – வலிமையையும்,
உடை – உடைய,
குஞ்சரம் – யானையை (கஜேந்தி ராழ்வானை),
தொட்ட – (தாம் அதற்கு அபயப்ரதாநஞ்செய்தற்கு அறிகுறி யாகத் தமதுதிருக்கையை அதன் தலைமேல்வைத்துத்) தொட்டருளிய,
வேங்கட வெற்பர் – திருவேங்கடமலையை யுடையவரும்,
அண்டம் அடுக்கும் உடைக்கும் அவர் – அண்டகோளங்களின் வரிசைகளையெல்லாம் (சங்கார காலத்தில்) அழிக்கின்றவருமான எம்பெருமானுடைய,
அடி – திருவடிகளை,
அனைவரும் காண்மின் – நீங்களெல்லாரும் தரிசியுங்கள்; (எ – று.)

தரிசித்தால் இனிப் பிறவியெடாது முத்திபெற்று உய்வீ ரென்பது, குறிப்பு. உடை – உடுக்கப்படுவது. முடை – புலால்நாற்றம்.
குரம்பை – சிறு குடிசை; உயிர் சிலநாள்தங்குஞ் சிறுகுடிசை போலுதலால், உடல், குரம்பை யெனப்பட்டது: உவமையாகுபெயர்.
“ஊனிடைச்சுவர்வைத்து என்பு தூண்நாட்டி உரோமம்வேய்ந்து ஒன்பதுவாசல், தானுடைக்குரம்பை” என்றார் திருமங்கையாழ்வாரும்.
மும்மதம் – கன்னமிரண்டும் குறியொன்றுமாகிய மூன்றிடத்தினின்றும் பெருகுவன;
கர்ணமதம் கபோலமதம் பீஜமதம் என்றலும் உண்டு. குஞ்சரந் தொட்ட வேங்கடவெற்பர் –
“ஆடியசிரசின் மீதில் அரிமலர்க்கையை வைத்து,
வாடினை துயரமெய்தி மனமொருமித்து நம்மை,
நாடினை யினியோர்நாளு நாசமேவாராதென்று,
நீடியவுடலைக்கையால் தடவின னெடியமாலும்” என்னுஞ் கஜேந்திரமோக்ஷமும் காண்க.
காண்மின் அனைவரும் என்றது, முன்னிலையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி; காண்மின் அனைவிரும் என்பது, வழாநிலையாம்.

————-

வரும் மஞ்சு ஆனவன் ஒருவனையே உன்னி வாழ்ந்தும் தொண்டீர்
கருமம் சனனம் களைந்து உய்ய வேண்டில் கருதிற்று எல்லாம்
தரும் அஞ்சன வெற்பன் தாள் தாமரையைச் சது முகத்தோன்
திரு மஞ்சனம் செய் புனல் காணும் ஈசன் சிரம் வைத்தே –36-

(இ – ள்.) தொண்டீர் – அடியார்களே! –
கருமம் சனனம் களைந்து உய்ய வேண்டில் – ஊழ்வினையினாலாகிற பிறப்புக்களை (நீங்கள்) ஒழித்து
(மீளாவுலகமாகிய முத்திபெற்று) வாழவேண்டுவீராயின்,
வரு மஞ்சு அனவன் ஒருவனையே உன்னி வாழ்த்தும் – (மழைபொழிய) வருகிற நீர்கொண்ட காளமேகத்தைப்
போன்றவனான ஒப்பற்ற திருமாலையே தியானித்துத் துதியுங்கள்:
கருதிற்று எல்லாம் தரும் – (அடியார்கள்) நினைத்த பொருள் களையெல்லாம் (அவர்கட்குக்) கொடுத்தருள்கிற,
அஞ்சன வெற்பன் – திரு வேங்கடமுடையானாகிய அந்த ஸ்ரீமந்நாராயணனுடைய,
தாள் தாமரையை – தாமரைமலர்போன்ற திருவடியை,
சதுமுகத்தோன் – நான்குமுகங்களை யுடையவனான பிரமன்,
திருமஞ்சனம் செய் – திருமஞ்சனஞ்செய்த,
புனல் காணும் – தீர்த்தமன்றோ,
ஈசன் சிரம் வைத்தது – சிவபிரான் தலையில் தரித்தது? (எ – று.)

திருமால் உலகமளந்தகாலத்தில் மேலே சத்தியலோகத்துச்சென்ற அப்பிரானது திருவடியைப் பிரமன் தன் கைக்
கமண்டலதீர்த்தத்தாற் கழுவி விளக்க, அந்தஸ்ரீபாததீர்த்தமாகப்பெருகிய கங்காநதியைச் சிவபிரான் தனது
முடியிலேற்றுக்கொண்டு பின்பு பூமியில்விட்டன னென்பது, இங்கு அறியவேண்டியகதை.
(“குறைகொண்டு நான்முகன் குண்டிகை நீர்பெய்து, மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்திக் –
கறைகொண்ட, கண்டத்தான் சென்னிமே லேறக் கழுவினான், அண்டத்தான் சேவடியையாங்கு,”
“சதுமுகன்கையிற் சதுப்புயன்றாளிற் சங்கரன் சடையினிற் றங்கிக்,
கதிர்முகமணி கொண்டிழிபுனற்கங்கை” என்ற ஆழ்வார்களருளிச் செயல்களையும்,
“அண்ட கோளகைப்புறத்ததா யகில மன் றளந்த, புண்டரீக மென் பதத்திடைப் பிறந்து பூமகனார்,
கொண்ட தீர்த்தமா யரன்கொளப் பகிரதன்கொணர, மண்டலத்துவந்தடைந்த திம்மாநதிமைந்த” என்ற கம்பராமாயணத்தையும்,
“உலகந்தாய வுயரடிநின்றிழிந்து, அலரின்மேலவ னங்கைதவழ்ந்து பொற், றிலகவாணுதல்பங்கன்றிரள்சடை,
சுலவிவீழ்ந்தது தூநதி யிங்ஙனே” என்ற பாகவதத்தையுங் காண்க.)
“திரிமூர்த்திகளில் ஒருமூர்த்தி திருவடியைநீட்ட, மற்றொருமூர்த்தி அங்கு ஸ்ரீபாததீர்த்தம் சேர்க்க,
வேறொரு மூர்த்தி அத்திருவடித்தீர்த்தத்தைச் சிரமேற்கொண்டு புனிதனாயினன்: இவர்களிற் பெரியோன் யாவன்?
நீங்களே ஆராய்ந்தறிந்து சொல்லுங்கள்” என்று உலகத்தாரைநோக்கி உரைத்துப் பரம்பொருள் இன்னதென்று காரண
பூர்வமாக அறுதியிடுகின்ற கருத்து அமைய,
“அஞ்சனவெற்பன் றாட் டாமரையைச் சதுமுகத்தோன் திருமஞ்சனஞ்செய்புனல்காணும் ஈசன்சிரம் வைத்ததே” என்றார்.
(“தன்றாதை யவர் தாமரைத்தாள்விளக்கும் அலையாறு சூடும்,”
“செங்கண்மால்கழல்மஞ்சனம் விழுந் தொட்டி சங்கரன் தலைகளே”,
“மங்கைபாகன் சடையில் வைத்த கங்கை யார் பதத்து நீர்” என இவ்வாசிரியர் பிறவிடங்களிற் கூறியனவுங் காண்க.
“கேசவனார் சேடகிரிமா யர்க் கைந்துமுகத், தீச னதிபத்த னிதுசரதம் –
நேசமிகச், சங்கங்கை யேந்துமவர் தாட்புனலென்றே தினமு, மங்கங்கை சென்னிவைத்தானால்” என்ற திருவேங்கடக்கலம்பகச்செய்யுள்,
இதனை அடியொற்றியது போலும்.)

தம்நெஞ்சார எம்பெருமானுக்கு அடிமைப்படாத உயிர்களும் இயல்பில் அப்பெருமானுக்கு அடிமையே யாதலால்,
“தொண்டீர்” என்று விளித்தார். அனவன் – அன்னவன் என்பதன் தொகுத்தல். ஒருவன் – அத்விதீயன்.
கர்மம், ஜநநம், சதுர்முகம், மஜ்ஜநம், சிரஸ் என்ற வடசொற்கள் விகாரப் பட்டன.
கருதிற்று – ஒன்றன்பா லிறந்தகால வினையாலணையும்பெயர்; சாதியொருமை. கருதிற்று எல்லாம் – ஒருமைப்பன்மைமயக்கம்.
காணும் என்ற ஏவற்பன்மை முற்று, தேற்றப்பொருள்பட நின்றது. புனல்காண் நும்ஈசன் சிரம்வைத்தது என்று பிரித்து உரைத்து,
தொண்டீர் என்பதற்கு – சிவனடியார்களே யென்று பொருள்கொள்வாரு முளர்.

————

சிரம் தடிவான் இவனோ என்று அயன் வெய்ய தீய சொல்ல
கரம் தடிவான் தலை கவ்வ பித்து ஏறலின் கண்ணுதலான்
இரந்து அடி வீழ துயர் தீர்த்த வேங்கடத்து எந்தை கண்டீர்
புரந்து அடியேனைத் தன் பொன் அடிக்கீழ் வைக்கும் புண்ணியனே –37-

(இ – ள்.) “சிரம் தடிவான் இவனோ – (எனது) தலையைக் கொய்பவன் இவனோ?” என்று -,
அயன் – பிரமன், வெய்ய தீய சொல்ல – கொடிய தீச்சொற்களைக் கூறி யிகழ,
கரம் – (சிவபிரானது) கை,
தடி வான் தலை கவ்வ – தசையையுடைய பெரிய (பிரமனது) தலையைக் கொய்திட (அதுபற்றி),
பித்து ஏறலின் – பைத்தியங்கொண்டதனால்,
கண் நுதலோன் – நெருப்புக் கண்ணை நெற்றியிலுடையனான அச்சிவபிரான்,
இரந்து அடி வீழ – பிச்சையேற்றுவந்து திருவடிகளில் விழுந்து வணங்க,
துயர் தீர்த்த – (அவனது) துன்பத்தைப் போக்கியருளிய,
வேங்கடத்து எந்தை கண்டீர் – திருவேங்கட மலையில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானன்றோ,
அடியேனை – தாசனான என்னை,
புரந்து – பாதுகாத்து,
தன் பொன் அடி கீழ் வைக்கும் -தன்னுடைய அழகிய திருவடியில் வைத்தருளும்,
புண்ணியன் – பரிசுத்த மூர்த்தியாவான்; (எ – று.)

ஒருகாலத்திலே, பரமசிவன் தன்னைப்போலவே பிரமனும் ஐந்துதலை யுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குதற்கு
இடமாயிருக்கின்ற தென்றுகருதி, அவனது சிரமொன்றைக் கிள்ளியெடுத்துவிட,
அக்கபாலம் அப்படியே சிவன்கையில் ஒட்டிக்கொள்ளுதலும், அவன் “இதற்கு என் செய்வது?” என்று கவலைப்பட,
தேவர்களும் முனிவர்களும் “இப்பாவந்தொ லையப் பிச்சையெடுக்க வேண்டும்:
என்றைக்குக் கபாலம் நிறையுமோ, அன்றைக்கே இது கையை விட்டு அகலும்” என்று உரைக்க,
சிவபிரான் பலகாலம் பலதலங்களிலுஞ் சென்று பிச்சையேற்றுக்கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக,
பின்பு ஒருநாள் பதரிகாச்சிரமத்தையடைந்து அங்குஎழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி இரந்தபோது,
அப்பெருமான் “அக்ஷயம்” என்று பிக்ஷையிட, உடனே அது நிறைந்து கையை விட்டு அகன்றது என்ற வரலாறு, இங்கு அறியத்தக்கது.

இவ்வரலாற்று முகத்தால், எம்பெருமானுடைய பரத்வத்தை வெளியிட்டு அப்படிப்பட்ட ஸர்வேச்வரனே யான்வழிபடுங்கடவு ளென்றார்.
(“பிண்டியார்மண் டையேந்திப் பிறர்மனைதிரிதந்துண்ணு, முண்டியான்சாபந்தீர்த்த வொருவனூர்,…..,
மண்டினாருய்யலல்லால் மற்றையார்க்குய்யலாமே” என்பது, திருமங்கையாழ்வார் பாசுரம்.
“அஞ்சக்கரத் தலைக்கங்கைய னேற்றலு மஞ்சிறைய,
அஞ்சக் கரத்தலைக் குண்டிகையான் மண்டை யங்கைவிட்டே,
அஞ்சக் கரத்தலைச் செய்து பித்தேக வரு ளரங்கன்,
அஞ்சக்கரத்தலைவன் றாளலான் மற்றரணில்லையே” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்.
“வையத்தார் வானத்தார் மழுவாளிக் கன்றளித்த, ஐயத்தாற் சிறிதையந் தவிர்ந்தாரு முளரையா” எனக் கம்பர்கூறியதுங் காண்க)
பிரமன்தலையைச் சிவன் கொய்யவந்தபோது பிரமன் அவனை இகழ்ந்துபேசியதை முதலடியில் விளக்கினார்.

அஜன் என்ற வடசொல் – திருமாலிடத்தினின்று தோன்றியவ னென்று பொருள்படும்; அ – திருமால்.
தீய – பலவின்பாற் குறிப்புவினையாலணையும் பெயர். கண்டீர் என்ற முன்னிலைப்பன்மை யிறந்தகாலமுற்று,
இடைச் சொல்தன்மைப்பட்டுத் தேற்றப்பொரு ளுணர்த்தும்.
தடிதல் – துணித்தல். தடி – தசை. எந்தை – எமது சுவாமி. அடிக்கீழ், கீழ் – ஏழனுருபு.

————-

புண்ணியம் காமம் பொருள் வீடு பூதலத்தோர்க்கு அளிப்பான்
எண்ணி அம் காமன் திருத்தாதை நிற்கும் இடம் என்பரால்
நண்ணி அங்கு ஆம் அன்பரைக் கலங்காத் திரு நாட்டு இருத்தி
மண் இயங்காமல் பிறப்பு அறுத்து ஆளும் வடமலையே –38-

(இ – ள்.) நண்ணி – விரும்பி,
அங்கு – அவ்விடத்து (தன்னிடத்து),
ஆம் – வந்துசேர்கின்ற,
அன்பரை – பக்தர்களை,
கலங்கா திருநாடு இருத்தி – (எக்காலத்தும்) நிலைகலங்குதலில்லாத சிறந்த இடமாகிய பரமபதத்திலேஇருக்கவைத்து,
மண் இயங்காமல் – (மீண்டும்) நிலவுலகத்தில்உழலாதபடி,
பிறப்பு அறுத்து – (அவர்களுடைய) பிறப்பை யொழித்து,
ஆளும் – (அவர்களை) ஆட்கொள்ளுகின்ற,
வட மலை – வடக்கின்கண்உள்ள திருமலையாகிய திருவேங்கடத்தை, –
அம்காமன் திரு தாதை – அழகியமன்மதனது சிறந்த தந்தையான திருமால்,
புண்ணியம் காமம் பொருள் வீடு – அறம் இன்பம் பொருள் வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களையும்,
பூதலத்தோர்க்கு அளிப்பான் – நிலவுலகத்தில்வாழ்கிற சனங்கட்குக் கொடுத்தருள,
எண்ணி – நினைத்து,
நிற்கும் – எழுந்தருளிநிற்கிற, இடம் -,
என்பர் – என்றுசொல்வர், (ஆன்றோர்); (எ – று.) –
ஆல் – ஈற்றசை; (செய்யுளிறுதியில் நிற்பதேயன்றிச் செய்யுளடியினிறுதியிலும் பயனிலையினீற்றிலும் நிற்கிற
இடைச்சொல்லும் பொருள்தராதாயின் ஈற்றசை யெனப்படும்.)

இச்செய்யுள் – இடம் அல்லது பதி என்னுந் துறையின்பாற் படும்.

திருவேங்கடத்தையடைந்து எம்பெருமானைச்சேவித்தவர் தாம்வேண்டியபடி இம்மைமறுமைகளில் அறம் பொருளின்பங்களைப்
பெறுதலன்றிப் பின்பு கருமமொழியப் பிறப்பற்று மீளாவுலகமாகிய முத்தியையும் பெற்று வாழ்வ ரென்பது கருத்து;
“திருவேங்கடம் நங்கட்குச், சமன்கொள்வீடு தருந் தடங்குன்றமே,”
“குன்றமேந்திக் குளிர்மழைகாத்தவ, னன்றுஞால மளந்தபிரான் பரன்,
சென்றுசேர்திருவேங்கடமாமலை, யொன்றுமே தொழ நம்வினையோயுமே” என்ற அருளிச்செயல் இங்குக் கருதத்தக்கது.

சதுர்வித புருஷார்த்தங்களைத் தருமம் அர்த்தம் காமம் மோக்ஷம் என முறைப்படுத்தி நிறுத்துவது மரபாயினும்,
இங்குச் செய்யுள்நோக்கி முறை பிறழ வைத்தார்; அன்றியும், அறம்போலவே இன்பமும் பொருளின் பயனாதலால்,
சாதநமான பொருளைச் சாத்தியமான அறம் இன்பம் என்பவற்றின்பின் வைத்தன ரென்று காரணங்காணலாம்.
கண்ணபிரானது மனைவியும் திருமகளின் திருவவதாரமுமான ருக்மிணிப்பிராட்டியினிடம் மன்மதன் பிரத்யும்நனென்னுங்
குமாரனாகத் தோன்றியதுபற்றி, திருமால் “காமன்தாதை” எனப்படுவன்.
காமன் – (எல்லாவுயிர்கட்கும்) சிற்றின்பவிரு ப்பத்தை விளைப்பவன்; (யாவராலுங்) காமிக்கப்படும் (விரும்பப்படும்) கட் டழகுடையவன்.
இங்கு “காமன்திருத்தாதை” என்றது, காமனுக்குநியாமகன் என்றபடி,
“சிறுகாவயிலா நிவயோ திரியா குறுகா நெடுகா குணம்வேறுபடா,
உறுகால்கிளர்பூதமெலா முகினும், மறுகாநெறி” என்றபடி பரமபதம் என்றும் ஒருதன்மைத்தாயிருத்தல் தோன்ற
“கலங்காத் திருநாடு” எனப் பட்டது;
“கலங்காப் பெருநகரம்” என்றார் பேயாழ்வாரும்; புக்கவர் கலக்கம் ஒழியப்பெறுகிற திருநா டெனினுமாம்.
கலங்கா – ஈறுகெட்ட எதிர்மறை ப்பெயரெச்சம்; ஈறுகெட்ட எதிர்மறைவினையெச்சமாகக் கொண்டு,
கலங்கா (மல்) – கலங்காதபடி திருநாட்டிலிருத்தி யென்று உரைப்பாரு முளர்.

“என்பர்” என்ற முற்றுக்கு ஏற்றபடி தோன்றா எழுவாய் வருவிக்கப்பட் டது. செய்யுளாதலின்,
“அங்கு” எனச் சுட்டுப்பெயர் “வடமலை” என்ற இயற் பெயர்க்கு முன் வந்தது. இயங்குதல – உலாவுதல்.

—————-

வடம் அலை அப்பன்னகம் சேர்ந்தவன் இடை மங்கை கொங்கை
வடம் அலையப் பன் அரும் போகம் துய்த்தவன் மாயன் கண்ணன்
வடமலை அப்பன் அடி போற்றி ஐவர் மயக்கு கர
வடம் அலையப் பன்னிரு நாமம் நாவின் மலக்குவனே –39-

(இ – ள்.) வடம் – (பிரளயப்பெருங்கடலில்) ஆலிலையிலும்,
அலை அ பன்னகம் – (திருப்பாற்) கடலில் (ஆதிசேஷனாகிய) அந்தப்பாம்பினிடத்தி லும்,
சேர்ந்தவன் – படுத்துக்கண்வளர்ந்தவனும்,
இடை மங்கை கொங்கை வடம் அலைய – இடையர்சாதிப்பெண்ணான நப்பின்னைப்பிராட்டியினது தனங்களில் அணிந்த ஆரங்கள் அசையும்படி,
பன் அரும் போகம் துய்த்தவன் – சொல்வதற்குஅரிய (அளவிறந்த) இன்பத்தை யனுபவித்தவனும்,
மாயன் – அற்புதசக்தியுள்ளவனும்,
கண்ணன் – கிருஷ்ணாவதாரஞ்செய்தவனு மான,
வடமலை அப்பன் – திருவேங்கடமுடையானது,
அருள் – திருவருளை,
போற்றி – துதித்து, –
ஐவர் மயக்கு கரவடம் அலைய – பஞ்சேந்திரியங்கள் (மனத்தை) மயங்கச்செய்கிற வஞ்சனை ஒழியுமாறு,
பன்னிரு நாமம் – (அப் பெருமானுடைய) பன்னிரண்டு திருப்பெயர்களையும்,
நாவின் மலக்குவன் – நாவினால் விடாமற்சொல்வேன், (யான்); (எ – று.)

துவாதசநாமம் – கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதநன், திரிவிக்கிரமன், வாமநன்,
ஸ்ரீதரன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் என்பன.
நாவின் மலக்குதல் – நாவினால் இடை விடாது உச்சரித்து அடிப்படுத்துதல்; பயிற்றுதல்.
“அலை” என்பதை மத்தி யமதீபமாக “வடம்” என்பதனோடுங் கூட்டுக. அப் பன்னகம், அகரச்சுட்டு – பிரசித்தியைக் காட்டும்.
பந்நகம் என்ற வடசொல் – பத் ந கம் என்றுபிரிந்து, கால்களால் நடவாதது என்று காரணப்பொருள்படும்.
இடை – சாதிப்பெயர். பன் – பன்னுதற்கு; முதனிலைத்தொழிற்பெயர்: நான்காம்வேற்றுமைத்தொகை.
போகம், நாமம் – வடசொற்கள். அலைய – நிலைகுலைய.

இது,யமகச்செய்யுள்.

———

மலங்கத் தனத்தை உழன்று ஈட்டி மங்கையர் மார்பில் வடம்
அலங்கத் தனத்தை அணைய நிற்பீர் அப்பன் வேங்கடத்துள்
இலங்கு அத்தன் அத்தை மகன் தேரில் நின்று எதிர் ஏற்ற மன்னர்
கலங்க தன் நத்தைக் குறித்தானைப் போற்றக் கருதுமினே –40-

(இ – ள்.) மலங்க – மனங்கலங்க,
தனத்தை – செல்வத்தை, உழன்று ஈட்டி – (பலவிடத்தும்) அலைந்து சேர்த்து,
மங்கையர் மார்பில் வடம் அலங்க – இளமகளிரது மார்பிலணிந்துள்ள ஆரங்கள் புரளும்படி,
தனத்தை அணைய – (அவர்களது) கொங்கையைத் தழுவ,
நிற்பீர் – முயன்று நிற்பவர்களே! –
அப்பன் – ஸ்வாமியும்,
வேங்கடத்துள் இலங்கு அத்தன் . திருவேங்கடமலையில் எழுந்தருளிவிளங்குகின்ற தலைவனும்,
அத்தை மகன் தேரில் நின்று – அத்தைமுறையான குந்தியின் குமாரனாகிய அருச்சுனனது தேரில் (பாகனாய்) நின்று,
எதிர் ஏற்ற மன்னர் கலங்க தன் நத்தை குறித்தானை -எதிரிற் பகைத்து வந்துநின்ற அரசர்கள் நடுங்கும்படி
தனது (பாஞ்சசந்ய மென்னுஞ்) சங்கத்தை ஊதிமுழக்கினவனுமான எம்பெருமானை,
மேவ – சரணமடைய,
கருதுமின் – நினையுங்கள்; (எ – று.)
என்று உலகத்தார்க்கு இதோபதேசஞ் செய்தபடியாம்.

கண்ணபிரானது தந்தையான வசுதேவனுக்கு உடன்பிறந்தவ ளாதலால், குந்தி, கண்ணனுக்கு அத்தையாவள்,
அருச்சுனனது வேண்டுகோளின்படி கண்ணன் திருவருளால் மகாபாரதயுத்தத்தில் அவனுக்குத் தேரூர்ந்து
பார்த்தசாரதி யென்று பெயர்பெற்றமை, பிரசித்தம்.
அப்பொழுது கண்ணன் தனதுசங்கி னொலியாற் பகைவரை அஞ்சுவித்து அழித்தனன்;
“தருணவாணிருபர் மயங்கிவீழ்தர வெண்சங்கமு முழக்கி” என்பது பாரதம்.
ஈட்டுதல் சம்பாதித்துத்தொகுத்தல்.

இச்செய்யுளின் முன்னிரண்டடி – யமகம்; பின்னிரண்டடி – திரிபு.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கடத்தந்தாதி –1-20-

February 21, 2022

“திரு” என்னும் பலபொருளொருசொல் – வடமொழியிலே “ஸ்ரீ” என் பதுபோல, தமிழிலே தேவர்கள் அடியார்கள்
ஞானநூல்கள் மந்திரங்கள் புண்ணிய ஸ்தலங்கள் புண்ணியதீர்த்தங்கள் முதலிய மேன்மையையுடைய
பலபொருள்கட்கும் விசேஷணபதமாகி, அவற்றிற்குமுன்னே மகிமைப் பொருளைக் காட்டிநிற்கும்;
ஸ்ரீமகாவிஷ்ணு ஸ்ரீபக்திசாரர் ஸ்ரீராமாயணம் ஸ்ரீஅஷ்டாக்ஷரம் ஸ்ரீரங்கம் ஸ்ரீகைரவிணி ஸ்ரீபாதம் எனவும்,
திருமால் திருமழிசைப்பிரான் திருவாய்மொழி திருவெட்டெழுத்து திருவரங்கம் திரு வல்லிக்கேணி திருவடி எனவும் வழங்குமாற்றால் அறிக.
இது, வேங்கடத் துக்கு அடைமொழி; அந்தாதிக்கு அடைமொழியாகவுமாம்.

வேங்கடம் என்பது – திருமாலின் திவ்வியதேசங்கள் நூற்றெட்டனுள் ஒன்றும், வடநாட்டுத்திருப்பதிகள் பன்னிரண்டனுள் முதலதும்,
“கோயில் திருமலை பெருமாள்கோயில்” என்று சிறப்பாக எடுத்துக்கூறப்படுகிற மூன்று தலங்களுள் இடையது மாகிய தலம்.
தன்னையடைந்தவர்களுடைய பாவ மனைத்தையும் ஒழிப்பதனால், “வேங்கடம்” எனப் பெயர்பெற்றது; வடசொல்.
வேம் – பாவம், கடம் – எரித்தல் எனப் பொருள் காண்க.
(இதனை “அத்திருமலைக்குச் சீரார் வேங்கடாசல மெனும்பேர்,
வைத்தன ரதுவேதென்னில் வேமெனவழங்கெழுத்தே,
கொத்துறுபவத்தைக் கூறும் கடவெனக்கூ றிரண்டாஞ்,
சுத்தவக்கரங் கொளுத்தப்படு மெனச் சொல்வர் மேலோர்”,
“வெங்கொடும்பவங்களெல்லாம் வெந்திடச்செய்வதால் நல், மங்கலம் பொருந் துஞ் சீர்வேங்கடமலையான தென்று”
என்னும் புராணச் செய்யுள்களாலும் அறிக.)

ஸ்ரீசைலத்தின் மேற்கிலுள்ள நந்தனபுர மென்னும் ஊரில் புரந்தரனென்னும் பிராமணோத்தமனது குமாரனாகிய
மாதவ னென்பவன் தன்மனைவியாகிய சந்திரரேகையென்பவளோடு பூஞ்சோலை யிற்சென்று விளையாடிக்கொண்டிருக்கையில்
மாலினியென்பாளொரு சண்டாளகன்னிகையின் கட்டழகைக் கண்டு காமுற்று அவளோடு சேர்ந்து மனையாளைத்துறந்து
அப்புலைமங்கையுடனேசென்று புலால்நுகர்ந்தும் கட் குடித்தும் கைப்பொருள்முழுவதையும் இழந்து பின்பு
வழிபறித்தல் உயிர்க் கொலை முதலிய கொடுந்தொழில்புரிந்து பொருள்சேர்த்து அவட்குக்கொ டுத்துவந்து முடிவில்
வறியவனாகிப் பலநோய்களையும்அடைந்து அவளால் அகற்றப்பட்டவனாய்ப் பலபாவமுந்தொடரப் பித்தன்போல அலைந்து திரிந்து
இத்திருமலையை அடைந்த மாத்திரத்தில் தனது தீவினையெல்லாம் சாம்ப லாகப் பெற்று முன்னைய
பிரமதேஜசைப்பொருந்தி நல்லறிவுகொண்டு திரு மாலைச்சேவித்து வழிபட்டுப் பரமபதமடைந்தன னாதலால்
இதற்கு “வேங் கடாசலம்” என்னும் பெயர் நிகழ்ந்தது என்று வடமொழியில்
ப்ரஹ்மாண்ட புராணத்திலும் பவிஷ்யோத்தர புராணத்திலும் கூறப்படுதல் காண்க.

அன்றி, “வேம் என்பது – அழிவின்மை, கடம் என்பது – ஐசுவரியம்; அழிவில்லாத ஐசுவரியங்களைத் (தன்னையடைந்தார்க்குத்)
தருதலால் வேங்கட மெனப் பெயர்கொண்டது” என்று வராகபுராணத்திற் சொல்லப்பட்ட வாறும்உணர்க.
திருஎன்பதற்கு – மேன்மையான என்று பொருள்கொண்டால் திரு வேங்கடம்என்ற தொடர் பண்புத்தொகையும்,
மேன்மையையுடைய என்று பொருள்கொண்டால் இரண்டாம்வேற்றுமை யுருபும்பயனுமுடன் தொக்க தொகையுமாம்.

வேங்கடத்தந்தாதி என்ற தொடர் – வேங்கடத்தினது சம்பந்தமான அந்தாதி யென்று விரித்து வேங்கடத்தின்விஷயமாக
அந்தா தித்தொடையாற்பாடப்பட்ட தொருநூலென்று பொருள்கொண்டு ஆறாம் வேற்றுமைத்தொகையாகவும்,
வேங்கடத்தைப்பற்றிய அந்தாதியென்று விரித்துப் பொருள்கொண்டு இரண்டாம்வேற்றுமையுருபும்
பொருளுந்தொக்க தொகையாகவும் உரைக்கத்தக்கது.
வேங்கடத்தந்தாதி யென்ற தொடரில் அத்துச்சாரியையின் முதல் அகரம் மவ்வீறுஒற்றழிந்துநின்ற அகரத்தின்முன் கெட்டது.
அத்துச்சாரியையின் ஈற்றுஉகரம் உயிர்வர ஓடிற்று.

அந்தாதி – அந்தத்தை ஆதியாக வுடையது: அன்மொழித்தொகை; வடமொழித்தொடர், தீர்க்கசந்தி:
அந்த ஆதி எனப் பிரிக்க. அந்தாதியாவது – முன்நின்றசெய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும் அசையாயினும்
சீராயினும் அடியாயினும் அடுத்துவருஞ்செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது;
இங்ஙனம் பாடும் நூலினது ஈற்றுச்செய்யுளின் அந்தமே முதற் செய்யுளின் ஆதியாக அமையவைத்தல், மண்டலித்த லெனப்படும்.
இது, தொண்ணூற்றாறுவகைப் பிரபந்தங்களுள் ஒன்றாம். பதிற்றந்தாதி நூற்றந்தாதி என்ற வகைகளில் இந்நூல் நூற்றந்தாதியாம்.
அதாவது – நூறுவெண் பாவினாலேனும் நூறுகட்டளைக்கலித்துறையினாலேனும் அந்தாதித்தொடையாற் கூறுவது.
இந்நூல், அந்தாதித்தொடையா லமைந்த நூறு கட்டளைக் கலித்துறைகளையுடையது.
சொற்றொடர்நிலைச்செய்யுள், பொருட்டொடர் நிலைச்செய்யுள் என்ற வகையில் இது சொற்றொடர்நிலை;
“செய்யுளந்தாதி சொற்றொடர்நிலையே” என்றார் தண்டியலங்காரத்தும்.

எனவே, திருவேங்கடத்தைப்பற்றிப் பாடியதொரு பிரபந்த மென்பது பொருள்;
திருவேங்கடத்தில் எழுந்தருளி யிருக்கின்றவரும் ஸ்ரீநிவாஸன் என்று வடமொழியிலும் அலர்மேல் மங்கையுறைமார்பன்
என்று தென் மொழியிலும் திருநாமங் கூறப்படுபவருமான எம்பெருமானைக் குறித்துப் பாடியதொரு நூலென்பது கருத்து.

ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுளியலில் “விருந்தேதானும், புது வதுகிளந்த யாப்பின்மேற்றே” என்பதனால்,
“விருந்துதானும் பழங்கதை மேலதன்றிப் புதிதாகத்தாம் வேண்டியவாற்றால் தொடுக்கப்படுந் தொடர் நிலைமேலது” என்று
கூறினமையின், இந்நூல், அங்ஙனங்கூறிய விருந்தாம் என்று உணர்க.
அச்சூத்திரவுரையில் அந்தாதியும் கலம்பகமும் முதலாயின உதாரணங் காட்டப்பட்டுள்ளவாறுங் காண்க.
இனி, இதனைச் சிறுகாப்பியத்துள் அடக்குவர் பிற்காலத்தார். இப்பிரபந்தம், தோத்திரரூபமானது.

இந்நூலிலுள்ள கலித்துறைகள் யாவும் பெரும்பாலும் திரிபு என்னுஞ் சொல்லணியையும்,
சிறுபான்மை யமகம் என்னுஞ் சொல்லணியையும் உடையன. திரிபாவது – ஒவ்வோரடியிலும் முதலெழுத்து மாத்திரம் வேறுபட்டிருக்க,
இரண்டுமுதலிய பலஎழுத்துக்கள் ஒன்றிநின்று பொருள்வேறு படுவது; இதனையும் யமகவகையில் அடக்குவர் ஒருசாரார்.
யமகமாவது – பலஅடிகளிலாயினும் ஓரடியிற் பலஇடங்களிலாயினும் வந்த எழுத்துத்தொ டர்களே மீண்டும்வந்து பொருள்வேறுபடுவது;
இது, தமிழில் மடக்குஎனப் படும். இந்நூற்செய்யுள்களிற் சிறுபான்மை காணப்படுகிற யமகங்கள், பல அடிகளில் வந்தவை.

———-

சிறப்பு பாசுரம் -தனியன் -அபியுக்தர் அருளியது என்பர் –

இக்கரை யந்திரத்துத் பட்ட தென்ன இருவினையுள்
புக்கரை மா நொடியும் தரியாது உழல் புண் பிறப்பாம்
எக்கரை நீக்கிப் படித்தாரை அந்த இரு விரசைக்கு
அக்கரை சேர்க்கும் மணவாள தாசன் அருங்கவியே –

(இதன்பொருள்.) மணவாளதாசன் – அழகியமணவாளதாசரது,
அருங் கவி – அருமையான பாடல்களானவை, –
படித்தாரை – (தம்மை) ஓதினவர்களை, –
இக்கு – கரும்பானது,
அரை யந்திரத்துள் பட்டது என்ன -(தன்னுள் அகப்பட்ட பொருளை) நசுக்குகின்ற ஆலையென்னும்
யந்திரத்தி னுள்ளே அகப்பட்டுக் கொண்டாற்போல,
இரு வினையுள் புக்கு – (நல்வினை தீவினைகளாகிய) இருவகை வினைகளினுள்ளே (ஆன்மா) அகப்பட்டுக்கொண்டு,
அரை மா நொடியும் தரியாது – அரைமாநொடி யென்னுஞ் சிறிதளவு பொழுதேனுங் கவலையற்று நிற்காமல்,
உழல் – அலைந்துதிரிதற்கு இடமாகிற,
புல் பிறப்பு ஆம் – இழிவான பிறப்புக்களாகிய,
எக்கரை – மணல்மேட்டை,
நீக்கி – கடக்கச்செய்து, –
அந்த இரு விரசைக்கு அக்கரை சேர்க்கும் – அந்தப் பெரிய விரஜாநதிக்கு அக்கரையிலுள்ள பரமபதத்திற் சேர்த்துவிடும்; (என்றவாது)

மணவாளதாசனருங்கவி, படித்தாரை, புன்பிறப்பாம் எக்கரை நீக்கி விரசைக்கு அக்கரை சேர்க்கும் என அந்வயங் காண்க.
அழகிய மணவாள தாசரால் இயற்றப்பட்ட திருவேங்கடத்தந்தாதிச் செய்யுள்களைப் படித்தவர்கள் ஒழித்தற்கு அரிய
பிறப்பை யொழித்துப் பிரகிருதிசம்பந்தமற்று விரஜாநதியில் நீராடிப் பரமபதஞ் சேர்வரென இந்நூற்பயன் கூறு முகத்தால்,
இந்நூலின் சிறப்பையும், இந்நூலாசிரியரது தெய்வப்புலமையையும் தெரிவித்தவாறாம்.
அநந்த கோடிபிரமாண்டங்களடங்கிய மூலப்பிரகிருதிக்கு அப்புறத்தே விரஜாநதிக்கு அப்பால் ஸ்ரீமந்நாராயண னெழுந்தருளியிருக்கும்
பரமபதம் உள்ள தாதலால், “அந்த இருவிரசைக்கு அக்கரைசேர்க்கும்” எனப்பட்டது.
“இக்கரை …….. உழல்” என்றது, பிறப்புக்கு அடைமொழி.
உயிர் இருவினையுள் அகப்பட்டுத் தன்வசமின்றிப் பரவசமாய் வீடுபெறாது வருந்துதற்கு, கரும்பு ஆலையிலகப்பட்டு
நொருங்கிச்சிதைதலை உவமைகூறினார்.
நல்வினையும் பிறத்தற்குஏதுவாதலால் அதனையுஞ்சேர்த்து “இருவினை யுட்புக்கு” என்றார்;
“இருள்சே ரிருவினையுஞ் சேரா இறைவன், பொருள்சேர் புகழ்புரிந்தார்மாட்டு” என்றார் திருவள்ளுவனாரும்.
தேவசன்மம் நல் வினைப்பயனாற் பெரிதும் இன்பநுகருமாறு நேர்வதாயினும் அத்தேவர்க ளும் நல்வினைமுடிந்தவளவிலே
அவ்வுடம்புஒழிய மீளவும் இவ்வுலகத்திற் கருமவசத்திற்குஏற்ப வேறுபிறவிகொள்பவராதலும்,
உயிரைப்பந்தப்படுத் துவதில் பொன்விலங்கும் இருப்புவிலங்கும் போலப் புண்ணியசன்மமும் பாவசன்மமும் சமமேயாதலும்,
எல்லாக்கருமங்களையும் முற்றும்ஒழித்தவர் களே சிற்றின்பத்துக்கும் பெருந்துன்பத்துக்குமே இடமான
எழுவகைப் பிறப்புக்களிலும் புகுதாமற் பேரின்பத்துக்கேஇடமான மீளாவுலகமாகிய முத்தியிற் சேர்ந்து
மீளவும்பிறத்தலிலராவ ரென்பதும் உணர்க.

மா என்பது – எண்ணலளவைகளில் ஒன்று; அது, இருபதில் ஒன்று அதிற்பாதி, அரைமா.
நொடி – மனிதர் இயல்பாக ஒருமுறை கைந்நொடி த்தற்கு வேண்டும் பொழுது; ஒருமாத்திரைப்பொழுது; உம் – இழிவுசிறப்பு.
பிறப்புக் கடத்தற்கு அரிதென்பது தோன்ற, அதற்கு மணல்மேடு உவமை கூறப்பட்டது. எக்கர் = எக்கல்: ஈற்றுப்போலி.
யந்திரம் யமன் யதியது யஜ்ஞம் யஜுர் என்ற வடசொற்கள் –
தமிழில் எந்திரம் எமன் எதி எது எச்சம் எசுர் என்று விகாரப்பட்டுவருதல்போல, யக்ஷர் என்ற வடசொல் எக்கர் என்று
விகாரப்பட்ட தெனக்கொண்டு, “புன்பிறப்பாம்எக்கரை நீக்கி” என்பதற்கு – இழிந்தபிறப்புக்களாகிய யக்ஷர்களை (பூதகணங்களை)
விலக்கி யென்று பொருளுரைத்தலு மொன்று. தன்னில்மூழ்குபவர் ரஜோகுணம் தீரப்பெறு மிட மாதலால், விரஜா என்று பெயர்.
இக்ஷு, யந்த்ரம், விரஜா என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. கவி – வடசொல்;
பாடுபவனது பெயராகிய இது, இலக்கணையாய், அவனாற்பாடப்பட்ட பாடல்களின்மேல் நிற்கும்;
கர்த்தாவாகுபெயர். என்ன – உவமவுருபு. இருவினை – இரண்டு + வினை. இருவிரசை – இருமை + விரசை:
இருமையென்ற பண்பு, பெருமையின்மே லது.
“இக்கரையந்திரத்துட் பட்டதென்ன விருவினையுட்புக் கரைமாநொ டியுந்தரியா துழல்” என்றது, உவமையணி.
“புன்பிறப்பாம் எக்கரை நீக்கி” என்றது உருவகவணி. படித்தாரை எக்கரை நீக்கி – இரண்டுசெயப்படு பொருள் வந்த வினை.
அந்த என்ற சேய்மைச்சுட்டு – பிரசித்தியையும், மேன்மையையுங் குறிக்கும். அக்கரை – அந்தக்கரை: (எதிர்மொழி – இக்கரை.)

ஒருபெயரின் ஒரு பகுதியைக்கொண்டு அப்பெயர்முழுவதையுங் குறி ப்பதொரு மரபுபற்றி,
அழகியமணவாளதாசரை “மணவாளதாசன்” என்றார். “மணவாளதாசனருங்கவி” என்றவிடத்துத் தொக்குநின்ற ஆறனுருபு –
செய்யுட்கிழமைப்பொருளில் வந்தது; “கபிலரகவல்”, “கம்பராமாயணம்” என்ற விடங்களிற் போல:
(வேங்கடத்தந்தாதி என்றவிடத்துத் தொக்கு நின்ற ஆறனுருபின்பொருளோடு இப்பொருளுக்கு உள்ளவேறுபாடு கருதத் தக்கது;
அங்கு ஆறனுருபு – விஷயமாக வுடைமையாகிய சம்பந்தப்பொரு ளில் வந்தது: “விஷ்ணுபுராணம்”, “விநாயகரகவல்” என்றவற்றிற்போல.)

இக்கவி – அபியுக்தரி லொருவர் செய்ததென்பர். இது, வைஷ்ணவ சம்பிரதாயத்தில் தனியன் எனப்படும்.
(நூலினுள்அடங்காது தனியே பாயிரமாய் நிற்றல்பற்றியது, அப்பெயர்; “அன்” விகுதி – உயர்வுப்பொருளது.)

—————–

காப்பு காத்தல்; அது, இங்கு, காக்கின்ற கடவுளின் விஷயமான வணக்கத்தைக் குறிக்கும்:
ஆகவே, கவி தமக்குநேரிடத்தக்க இடையூறுகளை நீக்கித் தமது எண்ணத்தை முடிக்கவல்ல தலைமைப் பொருளின்
விஷயமாகச் செய்யுந் தோத்திர மென்பது கருத்து. இக்காப்புச்செய்யுள்,
ஆழ்வார்கள் பன்னிருவருட் பிரதானரான நம்மாழ்வாரைப் பற்றியது. ஸ்ரீவைஷ்ணவ சமயத்தவரான இந்நூலாசிரியராற் கூறப்பட்ட
இக்காப்புச்செய்யுள், விஷ்ணு பக்தர்களிற்சிறந்த ஆழ்வாரைக்குறித்ததாதலால், வழிபடுகடவுள்வணக்க மாம்.
தம்தமது மதத்துக்கு உரிய கடவுளை வணங்குதலேயன்றி அக்கடவுளின் அடியார்களை வணங்குதலும்
வழிபடுகடவுள்வணக்கத்தின் பாற்படுமென அறிக. அவ்வாழ்வாரால் வெளியிடப்பட்ட திவ்வியப்பிரபந்தங்களின்
சொற்பொருட்கருத்துக்களமைய அம்முதனூலுக்கு வழி நூல்போலச் செய் யப்படுவது இப்பிரபந்த மென்பதுபற்றி,
இந்நூலின் இக்காப்புச்செய்யுளை ஏற்புடைக்கடவுள்வணக்க மென்று அரிதிற்கொள்ளவும் அமையும்.

காப்பு –

நல்ல அந்தாதி திரு வேங்கடவற்கு நான் விளம்பச்
சொல் அவம் தாதின் வழு பொருள் சோர்வு அறச் சொல் வித்தருள்
பல்ல வந்தாதிசை வண்டார் குருகைப் பர சமயம்
செல்ல வந்து ஆதி மறைத் தமிழால் செய்த வித்தகனே –

(இ – ள்.) பல்லவம் – (சோலைகளிலுள்ள மரங்களின்) தளிர்களிலும்,
தாது – பூந்துகளிலும்,
இசை வண்டு ஆர் – (நறுமணத்தையுட்கொள்ளும் பொருட்டு) இசைபாடுகிற வண்டுகள் மொய்க்கப்பெற்ற,
குருகை – திருக்குரு கூரென்னுந்திருப்பதியிலே,
பர சமயம் வெல்ல வந்து – (ஸ்ரீவைஷ்ணவ மதமல்லாத) அயல்மதங்களை வெல்லுமாறு திருவவதரித்து,
ஆதி மறை தமி ழால் செய்த – பழமையான வடமொழிவேதங்களைத் தமிழ்ப்பாஷையினால் (திவ்வியப்பிரபந்தங்களாகச்) செய்தருளிய,
வித்தகனே – ஞானசொரூபியா யுள்ளவனே! –
நல்ல அந்தாதி – நல்ல அந்தாதியென்னும் பிரபந்தத்தை,
திருவேங்கடவற்கு – திருவேங்கடமுடையான்விஷயமாக,
நான் விளம்ப – நான் பாடுமாறு,
சொல் அவம் – சொற்குற்றங்களும்,
தாதின் வழு – வினைப் பகுதிகளின்குற்றங்களும்,
பொருள் சோர்வு – பொருட்குற்றங்களும்,
அற – சிறிதுமில்லாதபடி,
சொல்வித்து அருள் – சொல்வித்தருள்வாய்; (எ – று.)

சொற்குற்றம் பொருட்குற்ற மின்றிக் கவிபாடுமாறு எனக்கு நல்ல கவநசக்தியை அருள்புரிக வென்று பிரார்த்தித்தார்.
“என்னாவிலின்கவி யா னொருவர்க்குங் கொடுக்கிலேன்,
தென்னாதெனாவென்று வண்டுமுரல் திருவேங்கடத்து,
என்னானை யென்னப்ப னெம்பெருமா னுளனாகவே” என்று நம்மாழ்வார் அறுதியிட்டு ஆதிமறை தமிழாற் செய்த வித்தக ராதலால்,
தாம் திருவேங்கடமுடையான் விஷயமாகத் தமிழ்நூல்செய்தற்கு அவ்வாழ்வாரருளை வேண்டின ரென்க.

குருகை – பாண்டிநாட்டுத் திருமால்திருப்பதி பதினெட்டில் ஒன்று. ‘பல்லவந்தாதிசைவண்டார’ என்ற அடைமொழி,
ஆழ்வாரது திருவவதார ஸ்தலமான அத்திருக்குருகூரினது வளத்தை விளக்கும். தாது – பூந்தாது, மகரந்தப்பொடி.
ஆழ்வார் தமதுபிரபந்தங்களிற்கூறிய தத்துவார்த்தங்க ளைக்கொண்டு பிறமதங்களாகிய யானைகளைச் செருக்கடக்கி
அவற்றிற்குத் தாம் மாவெட்டியென்னுங்கருவிபோன் றவராய்ப் பராங்குசரென்று ஒரு திருநாமம்பெறுதல் தோன்ற
‘பரசமயம்வெல்ல வந்து’ என்றும், வேதம் அபௌருஷேயமும் நித்யமுமாய்ச் செய்யாமொழி யெனப்படுகிற சிறப்புத் தோன்ற
‘ஆதிமறை’ என்றும், ஆழ்வார் இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்ற நான்குவேதங்களின் சாரார்த்தங்கள் முறையே
அமையத் திருவிருத்தம் திருவாசிரியம் திருவாய்மொழி பெரிய திருவந்தாதி என்ற நான்குதிவ்வி யப்பிரபந்தங்களைத்
திருவாய்மலர்ந்தருளி உலகத்தைஉய்வித்தமை தோன்ற ‘மறை தமிழாற்செய்த’ என்றும்,
ஆழ்வார் அஜ்ஞாநத்துக்குக்காரணமான சடமென்னும்வாயுவை ஒறுத்துஓட்டிச் சடகோபரென்று பெயர்பெற்றுப் பிறந்தபொழுதே
தொடங்கித் தத்துவஞானவிளக்கம் என்றுங்குறைவற விளங்கப்பெற்ற ஞானக்கனி யாதல் தோன்ற ‘வித்தகனே’ என்றும் கூறினார்.
பின்பு ‘தாதின்வழு’ என்று முதனிலைக்குற்றங்களைத்தனியே எடுத்துக் கூறுதலால், முன்பு ‘சொல்லவம்’ என்றது,
அவையொழிந்த மற்றைச் சொற்குற்றங்களின்மேல் நிற்கும். தாது – வினைப்பகுதியைக்குறிக்கும்போது, வடசொல்.
விண்டுவின், சம்புவின், இந்துவின் என்றாற்போல வடமொழிக் குற்றியலுகரம் உயிர்வரக் கெடாது தாதுவின் என வரற்பாலது,
இங்குத் திரிபுநயம்நோக்கி, உயிர்வரினுக்குறள்மெய்விட்டோடி ‘தாதின்’ என நின்றது.
பல்லவம், பரசமயம், ஆதி – வடசொற்கள். விளம்புதல் – சொல்லுதல். ஆர்தல் – தங்குதல். ஆர் குருகை – வினைத்தொகை.

————

திருவேங்கடத்து நிலை பெற்று நின்றன சிற்றன்னையால்
தரு வேம்கடத்துத் தரை மேல் நடந்தன தாழ் பிறப்பின்
உருவேங்கள் தத்துக்கு உளத்தே இருந்தன உற்று அழைக்க
வருவேம் கடத்தும்பி அஞ்சல் என்று ஓடின மால் கழலே –1-

(இ – ள்.) கடம் – மதத்தையுடைய,
தும்பி – யானையாகிய கஜேந்திராழ்வான்,
உற்று – (முதலையினாற் பற்றப்பட்டுத்) துன்பமுற்று,
அழைக்க – (ஆதிமூலமே யென்று) கூப்பிட, (அதனைத் துன்பந்தீர்த்துப் பாதுகாத்தற் பொருட்டு),
வருவேம் அஞ்சல் என்று ஓடின – ‘(யாம் இதோ) வருகிறோம் (நீ) அஞ்சவேண்டா’ என்று (அபயவார்த்தை) சொல்லிக்கொண்டு
(தனது இருப்பிடமான ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அவ்யானையினிடத்துக்கு) விரைந்து சென்ற,
மால் – திருமாலினது,
கழல் – திருவடிகள், –
திருவேங்கடத்து – திருவேங்கடமலையில்,
நிலை பெற்று நின்றன – நிலையாக நின்றுள்ளன;
சிறுஅன்னையால் – சிறியதாயாகிய கைகேயியின் கட்டளையால்,
தரு வேம் கடத்து தரைமேல் நடந்தன – மரங்கள் வேகப்பெற்ற கடுஞ்சுரத்து நிலத்தின் மேல் நடந்துசென்றன;
தாழ் பிறப்பின் உருவேங்கள் – இழிந்தபிறப்பின் வடிவத்தையுடைய எங்களது,
தத்துக்கு – ஆபத்தை நீக்குதற்பொருட்டு
உளத்தே இருந்தன – (எங்கள்) மனத்திலே வந்து எழுந்தருளியிருந்தன; (எ – று.) – ஏ – ஈற்றசை.

இது, பாதவகுப்பு என்னும் பிரபந்தத்துறைகூறியவாறாம்: இந்நூலின் 73 – ஆஞ் செய்யுளும் காண்க.
பாதவகுப்பு – பிரபந்தத் தலைவனது திரு வடிகளின் சிறப்புக்களைக் கூறுவது;
(இங்ஙனமே புயவகுப்பும் உண்டு. அது, பிரபந்தநாயகனது தோள்களின் சிறப்பைக் கூறுவது; இந்நூலின் 93 – ஆஞ் செய்யுளை நோக்குக.)
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தா, ரிறைவனடி சேராதார்” என்றபடி சரணமடைகிற உயிர்கட்கெல்லாம்
உஜ்ஜீவநகரமா யிருப்பது திருமாலின் திருவடி யாதலால், நூலின்தொடக்கத்தில் அதன் ஏற்றத்தை எடுத்துக்கூறின ரென்க.

திருவேங்கடத்தில் எம்பெருமான் நின்றதிருக்கோலமாக எழுந்தருளி யிருத்தலால், “திருவேங்கடத்து நிலைபெற்றுநின்றன” என்றார்.
சீதாகல்யாண த்தின்பிறகு தசரதசக்ரவர்த்தி இராமபிரானுக்குப் பட்டாபிஷேகஞ் செய்ய யத்தனிக்கையில்,
மந்தரைசூழ்ச்சியால் மனங்கலக்கப்பட்ட கைகேயி தன் கொழுநரான தசரதரை நோக்கி முன்பு அவர்தனக்குக்
கொடுத்திருந்த இரண்டுவரங்களுக்குப் பயனாகத் தன்மகனான பரதனுக்குப் பட்டங்கட்டவும் கௌசல்யைமகனான
இராமனைப் பதினான்குவருஷம் வனஞ்செலுத்தவும் வேண்டுமென்றுசொல்லி வற்புறுத்த, அதுகேட்டு
வருந்தின தசரதர் சத்திய வாதியாதலால், முன்பு அவட்குவரங் கொடுத்திருந்த சொல்லைத் தவறமாட்டாமலும்,
இராமன்பக்கல் தமக்கு உள்ளமிக்க அன்பினால் அவ்வரத்தை நிறைவேற்று மாறு அவனைவனத்துக்குச் செல்லச்
சொல்லவும் மாட்டாமலும் கலங்கி வாய் திறவாதிருக்கிறசமயத்தில், கைகேயி இராமனை வரவழைத்து
“பிள்ளாய்! உங்கள்தந்தை பரதனுக்கு நாடுகொடுத்துப் பதினான்குவருடம் உன்னைக் காடேறப்போகச்சொல்லுகிறார்” என்றுசொல்ல,

அச்சொல்லைத் தலைமேற்கொண்டு அந்தமாற்றாந்தாயின் வார்த்தையையும், அவட்குத்தனது தந்தைகொடுத்திருந்த
வரங்களையும் தவறாது நிறைவேற்றி மாத்ருபித்ருவாக்யபரிபாலநஞ் செய்தலினிமித்தம் இராமபிரான் இலக்குமணனோடும் சீதையோடும்
அயோத்தியைவிட்டுநீங்கி நடந்துவனவாசஞ்சென்றன னென்றவரலாறு பற்றி, “சிற்றன்னையால் தருவேங் கடத்துத் தரைமேல் நடந்தன” என்றார்;

“தொத்தலர்பூஞ்சுரிகுழற் கைகேசிசொல்லால் தொன்னகரந்துறந்து துறைக்கங்கைதன்னைப்,
பத்தியுடைக்குகன்கடத்த வனம்போய்ப்புக்கு,”
“கூற்றுத் தாய்சொல்லக் கொடியவனம்போன, சீற்றமிலாதான்” என்றார் ஆழ்வார்களும்.
இராமபிரான் திருமாலின் திருவவதார மாதலால், அப்பெருமானது செய்கை இங்குத் திருமாலின்செய்கையாக
ஒற்றுமைநயம்பற்றிக் கூறப்பட்டது; இதனை, இதுபோல வருமிடங்கட்கெல்லாங் கொள்க.
பரத்வம் வியூகம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சை என்ற ஐந்தும் எம்பெருமானது ஐவகை நிலைகளாம்.
அவற்றில், இங்கு “திருவேங்கடத்து நிலைபெற்று நின்றன” என்றது, அர்ச்சாவதாரத்தை; அதாவது – விக்கிரகரூபத்தில் ஆவிர்ப்பவித்தல்.
“சிற்றன்னையால் தருவேங்கடத்துத் தரைமேல் நடந்தன” என்றது, விபவத்தை; அது, ராமகிருஷ்ணாதி அவதாரங்கள்.
“தாழ் பிறப்பினுருவேங்கள் தத்துக்கு உளத்தேயிருந்தன” என்றது, அந்தர்யாமித் வத்தை;
அது – சராசரப்பொருள்களெல்லாவற்றினுள்ளும் எள்ளினுள் எண்ணெய்போல மறைந்துவசித்தலையும், அடியார்கள்மனத்தில் வீற்றிருத்தலையும் குறிக்கும். “உற்றழைக்கவருவேங்கடத்தும்பி யஞ்சலென்றோடின மால் கழல்” என்றது, பரத்வத்தோடு சௌலப்யத்தையுங் காட்டும்;
பரத்வமாவது – பரமபதத்தில் எழுந்தருளியிருக்கும் நிலை: சௌலப்யம் – அடியவர்க்கு எளியனதால்,
வியூகம் மேல்வருமிடத்துக் காண்க; அது, திருப்பாற்கடலில் எழுந்தருளியிருக்கும் நிலை.

“தரு வேம்” என்ற அடைமொழி, காட்டின் கொடுமையை விளக்கும். தரு – வடசொல்.
வேம் – வேகும் என்ற செய்யுமெனெச்சத்து ஈற்று உயிர் மெய் சென்றது. தரை – தரா என்ற வடசொல்லின் விகாரம்.
ரூபமென்ற வடமொழி, உரு வெனச் சிதைந்தது. தாழ்பிறப்பின் உருவேங்கள் – இழிவான பிறப்புக்களிற் பிறத்தலையுடைய நாங்கள் என்றபடி,
உருவேம் – உரு என்ற பெயர்ச்சொல்லின்மேற் பிறந்த தன்மைப்பன்மைக் குறிப்புவினையா லணையும்பெயர்; கள் – விகுதிமேல்விகுதி.
தன்னைப்போன்ற அடியார்களை யுங் கூட்டிக்கொண்டு உளப்பாட்டுத் தன்மைப்பன்மையாக “தாழ்பிறப்பினு ருவேங்கள்” என்றார்.
தத்துக்கு என்ற நான்கனுருபு – பகைப்பொருளது: “துன்பத்திற்கி யாரே துணையாவார்” என்றவிடத்துப் போல.
“மலர்மிசை யேகினான்” என்றபடி அன்பால் நினைபவரது உள்ளக்கமலத்தின் கண் எம் பெருமான் அவர் நினைந்த
வடிவோடு விரைந்து சென்று சேர்தலால், “உளத் தேயிருந்தன” என்றார். உற்று – துன்புற்று; உறு என்ற பகுதியின் சம்பந்த முள்ள
ஊறு இடையூறு என்ற சொற்களை நோக்குக. வருவேம் – தனித்தன் மைப்பன்மை. கடம் – வடசொல்; இந்த யானைக்கன்னத்தின்பெயர்,
அதனி னின்றுவழியும் மதநீர்க்கு இடவாகுபெயராம். தும்பி என்பதை இயல்பாக வந்த அண்மைவிளியாகவுங் கொள்ளலாம்.
அஞ்சல் – எதிர்மறையொருமை யேவல். ஓடின – பெயரெச்சம், மாலுக்கு அடைமொழி.
இதனைப் பலவின் பால்முற்றாகக்கொண்டு உரைத்தலும் ஒன்று;
இங்ஙனங்கொள்ளுமிடத்து, “வருவேம் கடத்தும்பி யஞ்சல்” என்றதைக் கழலின் வார்த்தையாக் கூறுதல், உபசாரவழக்காம்.
மால் – பெருமை, அடியார்கள்பக்கல் அன்பு, திரு மகளிடத்துக் காதல், மாயை, கருநிறம் இவற்றையுடையவன்.
“கழல்” – பால்பகா அஃறிணைப்பெய ராதலால், ‘நின்றன’ முதலிய பலவின்பால்முற் றுக்களைக்கொண்டன.
ஒரு விலங்கினாலே மற்றொருவிலங்கிற்கு நேர்ந்த துன்பத்தைத் தான் இருந்தவிடத்தி லிருந்தே தீர்ப்பது
ஸர்வசக்தனான எம்பெருமானுக்கு மிகவும் எளிதாயினும் அப்பெருமான் அங்ஙனஞ்செய்யா மல் தனதுபேரருளினால்
அரைகுலையத் தலைகுலைய மடுக்கரைக்கே வந்துஉதவின மகாகுணத்தில் ஈடுபட்டு,
‘உற்றழைக்க வருவேம் கடத்தும்பி அஞ்சலென்றோடின மால்கழல்’ என்றார்.
உற்றழைக்க வருவேங்கடத் தும்பி யஞ்சலென்றோடின மால் – “முன் தவித்து ஆனை வாவென வந்தான்” என்பர் அழகரந்தாதியிலும்.

நின்றன, நடந்தன, இருந்தன, ஓடின என்ற மாறுபட்ட சொற்கள் நான்கையும் நான்கடிகளிலும் நிறுத்தினது,
முரண்தொடை யென்னும் செய்யுளிலக்கணத்தின்பாற்படும்.
நிற்றல் முதலிய செயல்களை இடவேறு பாட்டினாலும் காலவேறுபாட்டினாலும் ‘மால்கழல்’ என்ற ஒருபொருளுக்கே
ஏற்றி யுரைத்தது முரண்விளைந்தழிவணியாதலும்,
‘மால்கழல்’ என்பது ஈற்றில்நின்று ‘நின்றன’ ‘நடந்தன’ ‘இருந்தன’ என்னுஞ் சொற்களோடு இயைதல்
கடைநிலை விளக்காதலும் அறியத்தக்கவை.
எல்லாநூல்களும் மங்கலமொழி முதல்வகுத்துக்கூறவேண்டுவது மரபாதலால், “திரு” என்று தொடங்கினார்.
கீழ்க் காப்புச்செய்யுளை “நல்ல” என்று தொடங்கினதும் இதன்பாற்படும்.

—————

மாலை மதிக்குஞ்சி – ஈசனும் போதனும் வாசவனும்
நூலை மதிக்கும் முனிவரும்-தேவரும் நோக்கி அந்தி
காலை மதிக்குள் வைத்து– ஏத்தும் திருமலை கைம்மலையால்
வேலை மதிக்கும் பெருமான் உறை திரு வேங்கடமே –2-

(இ – ள்.) மாலை – அந்திமாலைப்பொழுதில் விளங்குகின்ற,
மதி – பிறைச் சந்திரனைத் தரித்த,
குஞ்சி – தலைமயிர்முடியையுடைய,
ஈசனும் – சிவபிரானும்,
போதனும் – பிரமதேவனும்,
வாசவனும் – தேவேந்திரனும்,
நூலை மதிக்கும் முனிவரும் – சாஸ்திரங்களை ஆராய்ந்தறிகிற முனிவர்களும்,
தேவரும் – தேவர்களும்,
அந்தி – மாலைப்பொழுதிலும்,
காலை – காலைப்பொழுதிலும்,
நோக்கி – தரிசித்து,
மதிக்குள் வைத்து – தமது அறிவில் வைத்து (மனத்திற்கொண்டு தியானித்து),
ஏத்தும் – துதிக்கப்பெற்ற,
திரு மலை – சிறந்த மலை, (எதுவென்றால்-,)
கை மலையால் வேலை மதிக்கும் பெருமான் உறை திருவேங்கடமே – (தனது) கைகளாகிய மலைகளைக்கொண்டு
திருப்பாற்கடலைக் கடைந்த திருமால் எழுந்தருளியிருக்கிற திருவேங்கடமலையேயாம்; (எ – று.)

இச்செய்யுள், ஊர் அல்லது பதி எனப்படுகிற பிரபந்தத்துறை அமை யக் கூறியது;
“இன்னசிறப்புடையது பிரபந்தத்தலைவனதுவாழிடம்” என்ற வாய்பாடுபொருந்தக் கூறுதல், இதன்இலக்கணமாம்.
திருவேங்கடமுடையான் தேவாதிதேவனான திருமாலாதலால், மற்றைத் தேவர் முனிவர் முதலியயாவரும்
அவனெழுந்தருளியிருக்கிற அவ்விடத்தைச் சந்தியாகாலமிரண்டிலும் தரிசித்துத் தியானித்துத் துதித்து வழிபடுவரென்க.
இங்ஙனஞ்சிறப்புடைய மலையாதல்பற்றித் திருமலையென்று தென்மொழியிலும்,
ஸ்ரீசைல மென்றுவடமொழியிலும் திருவேங்கடத்துக்குச் சிறப்பாகப்பெயர்வழங்கும்.

மாலைமதி யெனவே பிறையாயிற்று; கொன்றைமாலையையும் சந்தி ரனையுந் தரித்த சடைமுடி யென்று உரைப்பாரு முளர்:
மாலைபோல மதி யையணிந்த முடி யெனினுமாம். சந்திரன் தக்ஷமுனிவனது புத்திரிகளாகிய அசுவிநிமுதலிய
இருபத்தேழு நக்ஷத்திரங்களையும் மணஞ்செய்துகொண்டு அவர்களுள் உரோகிணியென்பவளிடத்து மிகவுங்காதல்கூர்ந்து
அவளுடனே எப்பொழுதுங் கூடிவாழ்ந்திருக்க, மற்றைமகளிரின் வருத்தத்தை நோக்கி முனிவன்
அவனை “க்ஷயமடைவாயாக” என்று சபிக்க, அச்சாபத்தாற் சந்திரன் பதினைந்துகலைகளுங்குறைந்து
மற்றைக்கலையொன்றையும் இழப்பதற்கு முன்னம் சிவபிரானைச் சரணமடைய,
அப்பெருமான் அருள் கூர்ந்து அவ்வொற்றைக்கலையைத் தன்தலையிலணிந்து மீண்டும் கலைகள் வளர்ந்துவரும்படி
அநுக்கிரகித்தன னென்ற வரலாறுபற்றி, “மாலைமதிக் குஞ்சியீசன்” என்றார்.
திருப்பாற்கடல் கடைகையில் அதனினின்று உண்டான பலபொருள்களுடனே விஷமும் சந்திரனும் தோன்ற,
திருமால் அவற்றில் விஷத்தைச் சிவபிரானுக்குக் கொடுத்து உண்ணச்சொல்லி அதனால் அப்பிரானுக்கு
வெப்பமுண்டாகாமல் தணிந்திருக்கும்பொருட்டு உடனே சந்திரனையுங்கொடுக்க, அதனை அப்பெருமான்
சிரமேற்கொண்டனனென்றும் வரலாறு கூறப்படும்.

மதி – (பலராலும் நன்கு) மதிக்கப்படுவ தெனப் பொருள்படுங் கார ணக்குறி. குஞ்சி – ஆண்மயிர்.
(குடுமி சிகை பங்கி என்பனவும் இது, ஐம்பால் ஓதி கூந்தல் கோதை என்பன, பெண்பால்மயிரின்பெயர்.)
ஈசன், வாஸவன், தேவர், மதி (அறிவு), வேலா – வடசொற்கள். ஈசன் – ஐசுவரிய முடையவன்.
போது – பூ; இங்குச் சிறப்பாய்த் தாமரைமலரைக் குறித்தது. திருமாலினது நாபித்தாமரைமலரில் தோன்றியதனால்,
பிரமனுக்குப் போதன் என்று பெயர். போதம் – அறிவு; வடசொல்; அதனையுடையவன் போதனென்று
காரணப்பெயராக உரைத்தலு மொன்று. வாஸவன் என்ற பெயர் – அஷ்டவசுக்களுக்குத் தலைவனென்றும்,
ஐசுவரியமுடையவனென்றும் காரணப்பொருள்படும்; வசு – தேவர்களில்ஒருபகுப்பினரும், செல்வமுமாம்.
தேவர் – விண்ணுலகத்தில் வாழ்பவர். அந்தி – ஸந்த்யா என்ற வடசொல்லின் சிதைவு.
காலைச்சந்திக்கும் மாலைச்சந்திக்கும் பொதுவான இது, இங்குச் சிறப்பாய் மாலைச்சந்தியின்மேல் நின்றது.

(கைம்மலையால் வேலைமதிக்கும் பெருமான் – “தானவ ரும்பருள்ளாய், ஈருருநின்று கடைந்தது” என்ற
திருவரங்கத்துமாலையையும், “தாமரைக் கைந்நோவ, ஆழிகடைந்து” என்ற கம்பராமாயணத்தையுங் காண்க.)
வேலை மதித்த வரலாற்றால், தன்சிரமம் பாராமல் தன்னைச் சரணமடைந்தாரைப் பரிபாலிக்கும் பகவான துகருணை வெளியாம்.
கைம்மலை யென்பதை முன் பின்னாகத்தொக்க உவமைத்தொகை யெனக்கொண்டு, கைம்மலையால் என்பதற்கு –
மலைகள்போன்ற கைகள்கொண்டுஎன்று கருத்துக்காண்க;
தனது கைவசப்படுத்தின மந்தரகிரியால் என்று பொருள் கொள்ளுதலும் அமையும்.
பெருமான் – பெருமையையுடையவன்; மான் – பெயர்விகுதி. ஈற்றுஏகாரம்.

பிரிநிலை; அதனால், இத்திருப்பதி எம்பெருமானது திருவுள்ளத்துக்கு மற்றை யெல்லாத் திவ்வியதேசங்களினும்
மிகப்பாங்கான வாஸஸ்தாநமென் னுங்கருத்து அமையும்: அங்ஙனஞ்சிறப்புடையதாதல், புராணங்களினாலும் விளங்கும்.

————-

வேங்கட மாலை அவியா மதி விளக்கு ஏற்றி அங்கம்
ஆம்கடம் ஆலயம் ஆக்கி வைத்தோம் அவன் சேவடிக்கே
தீங்கு அட மாலைக் கவி புனைந்தோம் இதின் சீரியதே
யாம் கட மால்ஐயி ராவதம் ஏறி இருக்குமதே –3-

(இ – ள்.) அங்கம் ஆம்கடம் ஆலையம் ஆக்கி – உறுப்புக்களையுடையதான (எமது) உடம்பைத் திருக்கோயிலாக அமைத்து,
அவியா மதிவிளக்கு ஏற்றி கெடாத அறிவாகிய திருவிளக்கை (அங்கு) ஏற்றி,
வேங்கடம் மாலை வைத்தோம். திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற திருமாலை
(அவ்வுடம்பினுள் அந்தக்கரணமாகிற மனமாகிய கர்ப்பகிருகத்தில்) எழுந்தருளப்பண்ணி வைத்தோம்;
தீங்கு அட – (எமது) பிறவித் துன்பங்களை (அப்பெருமான்) அழிக்குமாறு,
அவன் சேஅடிக்கே கவி மாலை புனைந்தோம் – அப்பரமனுடைய செவ்விய திருவடிகளிலே பாமாலையாகிய பூமாலையைத் தொடுத்துச்சாத்தினோம்; யாம் -,
கடம் மால் ஐயிராவதம் ஏறி இருக்கும் அது – மதமயக்கத்தையுடைய ஐராவதமென்னுந் தேவலோகத்து
அரசயானையின் மேல் (தேவராசனாய்) ஏறி வீற்றிருக்கப் பெறுவோமாயின் அதுவும்,
இதின் சீரியதே – இதைக்காட்டிலும் சிறந்ததாமோ? (ஆகாது என்றபடி); (எ – று.) – ஏ – ஈற்றசை.

பேரின்பத்துக்கு இடமாகுமாறு எம்பெருமானை மனத்திற்கொண்டு தியானித்து அறிவுமுழுதையும் அவன்பக்கலிலே
செலுத்தி அவனதுசொரூ பத்தையுணர்ந்து அவன்மேற்பாமாலைபாடி இங்ஙனம் எல்லாக்கரணங்களாலும்
அவனை வழிபடுதலினும், சிற்றின்பத்துக்கேஇடமான தேவேந்திரபதவி சிறிதும்சிறவாது என்பதாம்.
“இதின் சீரியதே” என்பதற்கு – இதுபோலச் சிறந்ததாகாதென்றும் பொருள்கொள்ளலாம்.
“இன்” என்ற ஐந்தனுருபு – முந்தின உரைக்கு உறழ்பொருவென்னும்எல்லைப்பொருளதும்,
இவ்வுரைக்கு உவமப்பொருவென்னும் ஒப்புப்பொருளதுமாம்.
இங்ஙனங்கூறியதனால், பகவத்கைங்கரியத்தில் இவ்வாசிரியர்க்கு அன்புமிக்கிருத்தல் நன்குவிளங்கும்.

“அன்பேதகளியா ஆர்வமேநெய்யாக, இன்புருகுசிந்தை யிடுதிரியா – நன்புருகி, ஞானச்சுடர்விளக்கேற்றினேன் நாரணற்கு”,
“மார்வமென்ப தோர் கோயிலமைத்து மாதவனென்னுந் தெய்வத்தை நாட்டி”,
“புனையுங் கண்ணி யனதுடைய வாசகஞ்செய்மாலையே,ழுழுசெய்யசுடராழியானடிக்கே சூட்டினேன் சொன்மாலை” என்ற
ஆழ்வார்க ளருளிச்செயல்களை அடி யொற்றி,
“அங்கமாங்கடமாலையமாக்கி அவியாமதிவிளக்கேற்றி வேங்கடமா லைவைத்தோம், அவன்சேவடிக்கே மாலைக்கவிபுனைந்தோம்” என்றார்.

காற்றினால் அவியுந் தன்மையதாய்ப் புறவிருளையே யொழிக்கின்ற சாதாரண விளக்கினும் எவ்வாற்றாலும் நிலை
குலையாது அகவிருளையொழிக்கிற ஞானமாகிய சுடர்விளக்கிற்கு உள்ள விசேடந் தோன்ற, “அவியாமதிவிளக்கு” எனப் பட்டது;
வேற்றுமையணி. அங்கமாங்கடமாலயமாக்கி – முகம் கை கால் முதலிய அவயவங்களோடுகூடிய உடம்பைக்
கோபுரம் மதில் வாயில் முத லிய உறுப்புக்களோடுகூடிய கோயிலாகவும்,
அவ்வுடம்பின் அகத்துறுப்பாகிய மனத்தை அக்கோயிலினுள்ளே எம்பெருமானை யெழுந்தருளப் பண்ணுமிடமாகவுங் கருதுக.
முதல்மூன்றடிகள், உருவகவணியின்பாற்படும்.

விளக்கு – (பொருள்களை) விளங்கச்செய்வது என்று பொருள்படுங் காரணக்குறி.
அங்கம், கடம், ஆலயம், மாலா, ஐராவதம் – வடசொற்கள். கடம் – பானை; பலவகைப் பண்டங்கள் நிறைந்ததொரு
கொள்கலம் போலுதலால், கடம்என்பது – உடம்புக்கு உவமையாகுபெயராக வழங்கும்.
ஆலையம், ஐயிராவதம் என்ற போலிகள், திரிபுநயம்பற்றியன. ஐராவதம் – இந்திரனது வெள்ளையானை; நான்கு தந்தங்களையுடையது.
வைத்தோம், புனைந்தோம், யாம் – தனித்தன்மைப்பன்மைகள். சேவடி – செம்மை + அடி. திருவடி சிவந்திருத்தல், உத்தமவிலக்கணம்.
சீரியதே, ஏ – எதிர்மறை. மால் -மயக்கம்.

————

இருக்கு ஆரணம் சொல்லும் எப்பொருள் இன்பமும் எப்பொருட்கும்
கருக் காரணமும் நல் தாயும் நல் தந்தையும் கஞ்சச் செல்வப்
பெருக்கு ஆர் அணங்கின் தலைவனும் ஆதிப் பெருந் தெய்வமும்
மருக்கு ஆர் அணவும் பொழில் வட வேங்கட மாயவனே –4-

(இ – ள்.) இருக்கு ஆரணம் சொல்லும் – ருக் முதலிய வேதங்களாற் சொல்லப்படுகின்ற,
எ பொருள் இன்பமும் – எல்லாவகைப் பொருள்களும் எல்லாவகையானந்தங்களும்,
எ பொருட்கும் கரு காரணமும் – எவ்வகைப் பொருள்களுக்கும் உற்பத்திகாரணமும்,
நல் தாயும் – நல்ல தாயும்,
நல் தந்தையும் – நல்ல தந்தையும்,
கஞ்சம் செல்வம்பெருக்கு ஆர் அணங்கின் தலைவனும் – செந்தாமரைமலரில் வீற்றிருப்பவளும் ஐசுவரியசமிருத்தி நிரம்பிய வளுமான திருமகளின் கணவனும்,
ஆதி பெரு தெய்வமும் – (எல்லாத்தெய்வங்கட்கும்) முதன்மையான பெருமையையுடைய தெய்வமும், (ஆகிய அனைத்தும்),
மரு கார் அணவும் பொழில் வட வேங்கடம் மாயவனே – வாசனையை யுடையனவும் மேகமண்டலத்தை
யளாவுவனவு மான சோலைகளை யுடைய வடக்கின்கண்உள்ள திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற திருமாலேயாம்; (எ – று.)

நான்குவேதங்களுள் இருக்குவேதம் முதல தாகையால், அதனைத் தலைமையாக எடுத்து “இருக்காரணம்” என்றார்.
“மெய்ப்பொருளின்பமும்” என்ற பாடத்துக்கு – உண்மைப் பொருளாகிய ஆநந்தஸ்வரூபமு மென்று பொருள்காண்க.
“எப்பொருள்” என்பதில், எகரவினா – எஞ்சாமைப்பொருளது; உம்மை – முற்றும்மை.
நற்றாய் – “தாயொக்கு மன்பின்” என்றபடி மக்களிடத்து அன்பிற்சிறந்த தாய். நற்றந்தை – “உயர்மிக்க தந்தை,”
“சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே” என்றபடி பிள்ளையின் உயர்ச்சி மிகுதிக்குக்காரணமான தந்தை.
தம்மக்கட்கு ஆவன வெல்லாவற்றையும் அன்போடு செய்துமுடித்து மகிழ்கிற தாய்தந்தையர்போல,
எம்பெருமான் தன் அடியார்க்கு ஆவனவெல்லாம் அன்போடுசெய்து மகிழ்வனென்க.
திருமழிசைப்பிரான் “அத்தனாகி யன்னையாகி” என்றாற்போல, “நற்றாயு நற்றந்தையும் மாயவனே” என்றார்.
“ஹிதமேப்ரவர்த்திப்பிக்கும் பிதாவுமாய், ப்ரிய மேப்ரவர்த்திப்பிக்கும் மாதாவுமாய்,
பிதாசெய்யும்உபகாரத்தை மாதாசெய் யமாட்டாள்; மாதாசெய்யும் உபகாரத்தைப் பிதா செய்யமாட்டான்:
இரண்டு வகைப்பட்ட உபகாரத்தையும் அவன்தானே செய்யவல்லனாயிருக்கை;
“ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதாச மாதவ:” என்றும்,
“உலகுக்கோர் முந்தைத்தாய்தந்தை” என்றும் சொல்லக்கடவதிறே” என்ற வியாக்கியாந வாக்கியங்கள் இங்கு நோக்கத்தக்கன.
இது, ஸர்வவித பந்துவுமாயி ருத்தற்கு உபலக்ஷணம்; “எம்பிரானெந்தை யென்னுடைச்சுற்றம்” என்றார் திருமங்கையாழ்வார்.

ருக், கர்பம், கஞ்ஜம், தைவம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. ஆரணம், காரணம், ஆதி – வடசொற்கள்.
கஞ்சம் – நீரில் தோன்றுவது: கம் – நீர். காரணவும்பொழில் – சோலையின்உயர்வைவிளக்குந் தொடர்புயர்வு நவிற்சியணி.
“வடவேங்கடம்” என்றது, இயற்கைவிளக்கவந்த அடைமொழி புணர்ந்தது; அடைமொழி இடம்விலக்கவந்ததன்று.
வேங்கடம் தமிழ்நாட் டிற்கு வடவெல்லையென்பதுதோன்ற “வடவேங்கடம்” என்றதாகவுங்கொள்ளலாம்.
மாயவன் – மாயையை யுடையவன்; மாயையாவது – செய்தற்கு அரியனசெய்யுந் திறம்:
பிரபஞ்சகாரணமான மூலப்பிரகிருதியுமாம்; ஆச்ச ரியகரமான குணங்களுஞ் செயல்களு மென்னலுமாம்.

———-

மாயவன் கண்ணன் மணி வண்ணன் கேசவன் மண்ணும் விண்ணும்
தாயவன் கண் நன் கமலமொப்பான் சரத்தால் இலங்கைத்
தீயவன் கண்ணன் சிரம் அறுத்தான் திரு வேங்கடத்துத்
தூயவன் கண் அன் புடையார்க்கு வைகுந்தம் தூரமன்றே –5-

(இ – ள்.) மாயவன் – மாயையையுடையவனும்,
கண்ணன் – கிருஷ்ணாவதாரஞ்செய்தவனும்,
மணி வண்ணன் – நீலமணிபோன்ற நிறமுள்ளவனும்,
கேசவன் – கேசவனென்னுந் திருநாமமுடையவனும்,
மண்ணும் விண்ணும் தாயவன் – நிலவுலகத்தையும் மேலுலகத்தையும் அளந்தவனும்,
கண் நல் கமலம் ஒப்பான் – கண்கள் நல்லசெந்தாமரைமலர்போ லிருக்கப்பெற்றவ னும்,
இலங்கை தீய வன்கண்ணன் சிரம் சரத்தால் அறுத்தான் – இலங்கா புரியில் வாழ்ந்த கொடிய தறுகண்மை யுடையவனான
இராவணனது தலைகளைத் தனதுஅம்பினால் துணித்திட்டவனுமாகிய,
திருவேங்கடத்து தூயவன் கண் – திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற பரிசுத்தமூர்த்தியான எம்பெருமான் பக்கல்,
அன்பு உடையார்க்கு – பக்திப்பேரன்பை யுடையவர்க ளான பாகவதர்களுக்கு,
வைகுந்தம் – முத்தியுலகமாகிய ஸ்ரீவைகுண்டமெ னப்படுகிற பரமபதம்,
தூரம் அன்று – சேய்மையிலுள்ளதன்று (மிக்கசமீபத் திலுள்ள தென்றபடி); (எ – று.) – ஈற்று ஏகாரம் – தேற்றம்.

திருவேங்கடமுடையானிடம் பக்திசெய்தொழுகுவார்க்கு மிகஎளிதில் தவறாது முத்தி சித்திக்கு மென்பதாம்.
“மாயவன்” முதலியன – ஒருபொ ருளின்மேல்வந்த பலபெயர்கள். கண்ணன் – க்ருஷ்ணன் என்ற வடசொல்லின் சிதைவு;
அப்பெயர் – கருநிறமுடைய னென்றும், (யாவர்மனத்தையும்) இழுப்பவ னென்றும், (எல்லாவற்றையுஞ்) செய்பவ னென்றும்,
மற்றுஞ் சிலவகையாகவும் பொருள்படும்.
மணிஎன்பது – நவமணிகட்கும் பொதுப் பெயராகவும், நீலமணிக்குச் சிறப்புப்பெயராகவும் வழங்கும்.
வர்ணம் என்ற வடசொல், வண்ண மெனச் சிதைந்தது.
கேசவன் என்ற திருநாமத்துக்கு – பிரமனையும் சிவனையும் தன்அங்கத்திற் கொண்டவ னென்றும் (க – பிரமன், ஈச – சிவன்),
கேசியென்னும் அசுரனைக் கொன்றவ னென்றும் , மயிர்முடி யழகுடையவ னென்றும் (கேசம் – மயிர்) பொருள்கொள்ளலாம்.
மண்ணும் விண்ணுந் தாவியது, திரிவிக்கிரமாவதாரத்தில்.
இவ்வரலாற்றால், கொடிய வரை யடக்குதற்கு வேண்டிய தந்திரம் வல்லவ னென்றவாறு.

கண் நன்கமலமொப்பான் – புண்டரீகாக்ஷன். நன் கமலம் – நீர்வளம் மிக்க தடாகத்தில் அன்றுஅலர்ந்த செழித்த செந்தாமரைமலர்.
இலங்கை யரசனாய் நல்லோர்க்கெல்லாம் பொல்லாங்குசெய்துவந்த இராவணனைத் திருமால் இராமாவதாரத்தில்
தலைதுணிந்துஅழித்திட்டமை, பிரசித்தம்.
தாயவன் – தா – பகுதி; இதுவே தாவு என உகரம்பெற்று வழங்குவது: ய் – இடைநிலை, அ – சாரியை.
வன்கண்மை – எதற்கும் தான்அஞ்சாமை; அனைவரையுந் தான் அஞ்சுவித்தல்: கண்ணோட்டமில்லாத கொடுந்தன்மை.
லங்கா, சிரஸ், வைகுண்டம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. இலங்கை – கடல்சூழ்ந்த தீவு. தூரம் – வடசொல்.

————-

தூர இரும்புண் தரிக்கும் இக்காயத்தைச் சூழ் பிணிகாள்
நேர் அவிரும் புண்டரர்க்கு அருள்வான் நெடு வேங்கடத்தான்
ஈர இரும்புண்ட ரீகப் பொற் பாதங்கள் என் உயிரைத்
தீர இரும்பு உண்ட நீர் ஆக்குமாறு உள்ளம் சேர்ந்தனவே –6-

(இ – ள்.) நேர் அவிரும் புண்டரர்க்கு அருள்வான் – (குறுக்காகவன்றி) நேர்மையாக விளங்குகிற
திருமண்காப்பையுடையவர்களான ஸ்ரீவைஷ்ண வர்களுக்கு அருள்செய்பவனாகிய,
நெடு வேங்கடத்தான் – நெடிய திருவேங் கடமலையிலெழுந்தருளியிருக்கிற எம்பெருமானுடைய,
ஈரம் இரும் புண்டரீகம் பொன் பாதங்கள் – குளிர்ச்சியான பெரிய செந்தாமரைமலர்போன்ற பொலிவுபெற்ற திருவடிகள், –
என் உயிரை – எனது உயிரை,
தீர – முழுவதும்,
இரும்பு உண்ட நீர் ஆக்கும் ஆறு – (காய்ந்த) இரும்பு உட்கொண்ட நீர் போலாக்கும்படி (தம்மிடத்து லயப்படுத்தும்படி),
உள்ளம் சேர்ந்தன – என் மனத்திற் சேர்ந்துவிட்டன; (ஆதலால்),
புண் தரிக்கும் இ காயத்தை சூழ்பிணிகாள் – மாமிசத்தைக்கொண்ட (எனது) இந்த உடம்பைச் சூழ்ந்துள்ள நோய்களே!
தூரம் இரும் – (நீங்கள் என்உடலைவிட்டுத்) தூரத்திற் போய்ப் பிழையுங்கள்; (எ – று.)

நான் இடைவிடாது எம்பெருமானது திருவடிகளைத் தியானஞ்செய் யத்தொடங்கிக் கருமமனைத்துந் தொலையுமாறு
அவனது கருணைக்கு இலக்காகிவிட்டே னாதலால் இனி என்னைக் கருமத்தினால்வருவனவான வியாதிகளால் ஒன்றும்
நலிவுசெய்யமுடியாது என்ற துணிவுகொண்டு, நோய்களை விளித்து, நீங்கள் விரைந்தோடிப்போங்க ளென்று அச்சுறுத்திப்பேசுகிறார். “நெய்க்குடத்தைப்பற்றியேறுமெறும்புகள்போல் நிரந்தெங்கும்,
கைக்கொண்டுநிற்கின்ற நோய்காள் காலம்பெறவுய்யப்போமின்,
மெய்க்கொண்டுவந்து புகுந்து வேதப்பிரானார் கிடந்தார்,
பைக்ங்கொண்டபாம் பணையோடும் பண்டன்று பட்டினங்காப்பே” என்பது முதலாகக்கூறும் ஆழ்வாரருளிச்செயலை அடியொற்றியது, இச்செய்யுள்;
“வ்யாதிகளைப் பார்த்து, “பண்டைதேகமும் ஆத்மாவும் என்றிருக்கவேண்டா: அவன் உகந்தருளினநிலங்களிற் பண்ணும்
விருப்பத்தையெல்லாம் என்தேகத்திலும் ஆத்மாவிலும் பண்ணிக்கொடு வந்துபுகுந்தான்;
நீங்கள் உஜ்ஜீவிக்கவேண்டியிருந்தீராகில், போகப்பாருங்கோள்” என்கிறார்” என்ற வியாக்கியாநவாக்கியம் இங்குங் கொள்ளத்தக்கது.
இந்நூலின் 74 – ஆஞ் செய்யுளும் இப்பொருளுடையதே.

புண்டரம் – நெற்றிக்குறி. நேர் அவிரும் புண்டரம் – திர்யக்புண்டர மாகவன்றி ஊர்த்துவபுண்டரமாக மேல்நோக்கி யிடுந் திருமண்;
அதனை யுடையவர், ஸ்ரீவைஷ்ணவர்: “நீறுசெவ்வேயிடக்காணில் நெடுமாலடியா ரென்றோடும்” என்பது காண்க.
இனி, “நேரவிரும்புண்டரற்கு அருள்வான்” என்று பாடங்கொண்டு, அதற்கு –
(குறுக்காக வடிவம்அமையப்பெற்றிருத்த லால் திர்யக்என்று கூறப்படுகிற விலங்கின்சாதிக்கு உரிய
குணஞ்செயல்க ளைக் கொள்ளாது ராமலக்ஷ்மணரிடத்தும் சீதையினிடத்தும்) நேர்மையான குணஞ்செயல்களோடு ஒழுகிய
கழுகாகிய சடாயுவுக்கு அருள்செய்தவ னென்று உரைத்தலும் ஒன்று;
புண்டரமென்பது கழுகென்னும் பொருளில் வருதலை
“வரும்புண்டரம் வாளியின் மார்புருவிப், பெரும்புண்திறவாவகை பேருதிநீ,
இரும்புண்டநிர்மீள்கினு மென்னுழையிற், கரும்புண்டசொல்மீள்கிலள் காணுதியால்” எனக் கம்பராமாயணத்திலுங் காண்க:
“இருந்தபுண் டரமே கங்கம் எருவையே பவணையோடு, கருஞ்சிறை யுவண மைந்துங் கழுகென்ப சகுந்தமும் போ” என்ற நிகண்டும் நோக்கத்தக்கது.

விலங்கினமாகிய கழுகுசாதியில் தோன்றிய சடாயுவை “புண்டரன்” என உயர்திணையாகக்கூறுதல் ஒக்குகமோவெனின், –
உயர்திணை அஃறிணை யென்ற பகுப்பிற்குக் காரணம் முறையே அறிவின் நிறைவும் குறைவுமே யாதலால்,
அவ்வறிவிற்குறைவின்றி ஐம்பொறியறிவோடு பகுத்தறிவையுங் கொண்டு மனிதர்போலவே தொழில்திறமமைந்த
அருணபுத்திரனான தெய்வக்கழுகை உயர்திணையின் பாற்படுத்துதல் ஒக்குமென்க;
வாநரசாதி யாகிய அநுமான் வாலி சுக்கிரீவன் முதலியோரையும், கரடியாகிய ஜாம்பவானையும்,
பறவையரசான கருடனையுங் உயர்திணையாகவழங்குதல் காண்க.
“புண்டரர்க்கு” என்ற பாடத்துக்கும் உயர்வுப்பன்மையாக இப்பொருள்கொள்ளலாம்;
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் சடாயு “பெரியவுடையார்” என்று மேம்படுத்தி வழங்கப்படுவர்.

புண்டரீகமென்பது வெண்டாமரையின் பெய ரென வடமொழி நிக ண்டுகளிற் கூறப்பட்டிருப்பினும் அது இங்குத் திருமாலின்
திருவடிகட்கு உவமையாகவந்ததனால், செந்தாமரையை யுணர்த்திற்று.
திருவடிக்குத்தாம ரைமல ருவமை – செம்மை மென்மை யழகுகட்கு என்க.
பழுக்கக்காய்ச்சிய இரும்பில் நீரைவார்த்தால் அந்நீர் அவ்விரும்பிற்சென்று லயப்பட்டு மீண்டும் வெளிப்படாது;
இது மீளாமைக்கு உவமைகூறப்படுதலை, மேற்காட்டிய “வரும்புண்டரம்” என்ற கம்பராமாயணச்செய்யுளின் பின்னிரண்டடிகளி லுங் காண்க;
காய்ந்தஇரும்பு அக்காய்ச்சல்தீர நீரை முற்றும் உட்கொள்ளுதல்போல, எம்பெருமான்திருவடிகள் என்உயிரைத்
தம்மிடத்துலயப்படுத்திக்கொள்ளுமாறு அன்போடு என்மனத்திற் சேர்ந்திட்டன வென்ற இது,
“போரவிட்டிட் டென்னை நீ புறம்போக்கலுற்றாற் பின்னை யான்,
ஆரைக் கொண் டெத்தை யந்தோ எனதென்பதென் யானென்பதென்,
தீரவிரும் புண்டநீரதுபோல வென்னாருயிரை,
யாரப்பருக வெனக்காராவமுதானாயே” என்ற திருவாய்மொழிப்பாசுரத்தை அடியொற்றியது.

தூரஇரும் என்பது, “தூற்றாதே தூரவிடல்” என்றாற்போல நின்றது. இரும் – “உம்” விகுதி பெற்ற ஏவற்பன்மைமுற்று.
“புண்தரிக்கும்” என்ற அடைமொழி, காயத்தின்அசுத்தியை விளக்கும். காயம், புண்டரம், பாதம் – வடசொற்கள்.
அருள்வான் என்பதில், வகரவிடைநிலை – காலமுணர்த்தாது தன்மையுணர்த்திற்று. நெடுமை – உயர்ச்சி.

———–

சேர்ந்து கவிக்கும் முடி கவித்தாய் சிறியேன் இதயம்
சார்ந்து உகவிக்கும் வரம் அளித்தாய் கொண்டல் தண்டலை மேல்
ஊர்ந்து கவிக்கும் வடமலையாய் பஞ்சு ஒழுக்கிய பால்
வார்ந்து உகவிக்கும் பொழுதில் அஞ்சேல் என்று வந்து அருளே –7-

(இ – ள்.) சேர்ந்து – (கிட்கிந்தைநகரத்தைச்) சார்ந்து (அல்லது அடுத்து நண்புபூண்டு),
கவிக்கும் – குரங்கினமான சுக்கிரீவனுக்கும்,
முடி கவித்தாய் – மகுடாபிஷேகஞ் செய்தவனே!
சிறியேன் இதயம் சார்ந்து – (அறி வொழுக்கங்களிற்) சிறியவனான எனது மனத்திற் சேர்ந்துநின்று,
உகவிக்கும் வரம் அளித்தாய் – மகிழ்விக்கின்ற வரங்களை (எனக்கு)க் கொடுத்தருள் பவனே!
கொண்டல் தண்டலைமேல் ஊர்ந்து கவிக்கும் – மேகங்கள் சோ லைகளின்மேல் தவழ்ந்து கவிந்துகொள்ளப்பெற்ற,
வட மலையாய் – வடக்கிலுள்ள திருவேங்கடமலையில் எழுந்தருளியிருப்பவனே! –
பஞ்சு ஒழுக்கிய பால் வார்ந்து உக – பஞ்சைப் பாலில்நனைத்து அதுகொண்டுபிழிந்து ஒழுக விட்ட பாலும்
(கண்டம்அடைத்ததனால் உள்ளேயிறங்கிச்செல்லமாட்டாது கடைவாயினின்று) வழிந்துபெருக,
விக்கும் பொழுதில் – விக்கலெடுக்கின்ற அந்திமதசை (எனக்கு) நேரும்பொழுதில்,
அஞ்சேல் என்று வந்து அருள் – “அஞ்சாதே” என்று (அபயவார்த்தை) சொல்லிக்கொண்டு (என்முன்) எழுந்தருளி (எனக்கு) நற்கதியருள்வாய்; (எ – று.)

“எனைக்கைக்கொள் உடல், கைக்குஞ்சரமதசையி லஞ்சேலென்றென் கண்முன்வந்தே,.
“பொறியைந்தழியுமக்கால, லத் திரங்கா யரங்கா வடியே னுன்னடைக்கலமே” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்.
“எய்ப்பென்னை வந்துநலியும்போ தங்கேது நானுன்னை நினைக்கமாட்டேன்,
அப்போ தைக்கிப்போதேசொல்லிவைத்தே னரங்கத்தரவணைப்பள்ளியானே,”
“சாமிடத்தென்னைக் குறிக்கொள்கண்டாய் சங்கொடு சக்கரமேந்தினானே” என்ற பெரியாழ்வார்திருமொழி இதற்கு மூலம்.
பஞ்சுஒழுக்கியபால் வார்ந்துஉக – “பாலுண்கடைவாய்படுமுன்னே” என்றார் பட்டணத்துப்பிள்ளையும்;
இதனை “வாயிலட்டிய கஞ்சியும் மீண்டே, கடைவழி வார” என்ற பெரியாழ்வாரருளிச்செயலோடுஒப்பிடுக.
விக்கும் பொழுதில் – “நாச்செற்று விக்குள்மேல்வாராமுன்” என்றார் திருவள்ளுவரும்.

கவி – கபி யென்ற வடசொல்லின் விகாரம். கவிக்கும் என்ற உம்மை – இழிவுசிறப்பு; எதிரதுதழுவியஎச்சமாகக்கொண்டு,
பின்பு விபீக்ஷணனுக்கு இலங்கையில்முடிசூட்டியதையும் அமைத்துக்கொள்ளலாம்.
சேர்ந்து கவிக்கும் முடி கவித்தாய் என்பதிலுள்ள சொல்நயங் காண்க;
“கவித்தானைமன் னற்கு நட்பாய் முடிகவித்தான்” என்பர் அழகரந்தாதியிலும்.
கவிக்கும் முடி, மகரவொற்று – விரித்தல்விகாரம். இதயம் – ஹ்ருதயம் என்ற வடசொல்லின் சிதைவு.
உகவித்தல் – உகத்தல் என்பதன் பிறவினை; வி – பிறவினைவிகுதி.
இரண்டாமடியில், கவிக்கும் என்று பதம்பிரித்து, நின்மேற் கவிசொல்லுகைக்கும் வரங்கொடுத்தா யென்று உரைப்பாரு முளர்.
கொண்டல் – நீர்கொண்டமேகம்; தொழிலாகுபெயர். தண்டலையென்பது – தண்தலை என்று பிரிந்து,
குளிர்ச்சியான இடத்தையுடையது என்று பொருள்படும்; பண்புத்தொகையன்மொழி. கவித்தல் – மூடுதல்.

———–

வந்திக்க வந்தனை கொள் என்று கந்தனும் மாதவரும்
சிந்திக்க வந்தனை வேங்கட நாத பல் சீவன் தின்னும்
உந்திக் கவந்தனைச் செற்றாய் உனக்கு உரித்தாய் பின்னும்
புந்திக்கு அவம் தனிச் செய்து ஐவர் வேட்கையொரும் என்னையோ –8-

(இ – ள்.) “வந்திக்க – (அடியோம்) வணங்க,
வந்தனை கொள் – அவ் வணக்கத்தை அங்கீகரிப்பாய்”,
என்று – என்று பிரார்த்தித்து,
கந்தனும் – முருகக்கடவுளும்,
மாதவரும் – பெருந்தவமுடையவரான முனிவர்களும்,
சிந்திக்க. தியானிக்க,
வந்தனை – (அவர்கட்குப்) பிரதியக்ஷமாக வந்துதோன் றினாய்;
வேங்கடம் நாத – திருவேங்கடமலைக்குத் தலைவனே!
பல் சீவன் தின்னும் உந்தி – பலபிராணிகளையும்தின்கிற வயிற்றையுடைய,
கவந்தனை – கவந்தனென்னும் அரக்கனை,
செற்றாய் – கொன்றவனே!
உனக்கு உரித்து ஆய பின்னும் – (எனதுஉயிர்) உனக்குஉரியதானபின்பும்,
ஐவர் வேட்கை – பஞ்சஇந்திரியங்களின்சம்பந்தமான ஆசை,
புந்திக்கு அவம்தனை செய்து – (எனது) அறிவுக்கு அபாயத்தைச்செய்து,
என்னை பொரும் – என்னைத்தாக்கி வருத்தும்: (இது என்ன அநீதி! என்றபடி); (எ – று.) – ஈற்றுஏகாரம் – இரக்கத்தைக் காட்டும்.

என்னை என்பதற்கு – என்ன தகுதியின்மை யென்று பொருள்கொண்டு,
பொரும் என்பதற்கு “என்னை” என்ற செயப்படுபொருள் வருவித்தலு மொன்று.
யான் உனக்கு அடிமைப்பட்டபின்பும் என்அறிவைக்கெடுத்து என்னை ஐம்பொறியாசை நலியலாமோ?
நலியாதபடி அருள்செய்யவேண்டும் என்பது குறிப்பு;
“உண்டுகேட்டுற்றுமோந்துப்பார்க்கு மைவர்க்கே, தொண்டு படலாமோ வுன்தொண்டனேன்” என்பர் நூற்றெட்டுத்திருப்பதியந்தாதியிலும்.
மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐம்பொறிகளை “ஐவர்” என உயர்திணையாக்கூறியது,
இழிப்புப்பற்றிய திணைவழுவமைதி;
தொல்காப்பியவுரையில் நச்சினார்க்கினியர் “தாம்வந்தார் தொண்டனார்” என்பது,
உயர்சொல் குறிப்புநிலையின் இழிபு விளக்கிற்று” என்றது, இங்கு உணரத்தக்கது.
ஐவர்வேட்கை – ஐம்பொறிகளின்வழியாகச் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும்
ஐம்புலன்களையும் வேண்டியபடியெல்லாம் அனுபவிக்கவிரும்பும் ஆசை.

கவந்தன் – தநுவென்னும் யக்ஷனது மகன்; இவன் – ஸ்தூலசிரஸ் என்னும் முனிவனது சாபத்தால் அரக்கனாகிப்
பிரமனருளால் தீர்க்காயுள்பெற் றுத் தேவேந்திரனோடுஎதிர்த்து அவனது வச்சிராயுதத்தாற் புடைபட்டுத்
தனதுதலை வயிற்றிலழுந்தியமைபற்றிக் கவந்தம்போலுந் தோற்றமுடைய னானதனால், இப்பெயர் பெற்றான்.
கபந்தமென்ற வடசொல்லுக்கு – தலையற்றதும் தொழிலுடன் கூடியதுமான உடலென்பது பொருள்.

வந்தநா, ஸ்கந்தன், நாதன், ஜீவன் – வடசொற்கள். புந்தி – புத்தியென்ற வடசொல்லின் மெலித்தல்விகாரம்.
கொள்ளுதல் – ஏற்றுக்கொள்ளுதல். உந்தி – நாபி; வயிற்றுக்கு இலக்கணை.
உனக்கு உரித்தாயபின்னும், உம் – உயர்வுசிறப்பு. அவம் – தீங்கு; அதன்மேல், தன் – சாரியை, ஐ – இரண்ட னுருபு.

————–

தலைவனைப் பிரிந்து மாலை பொழுதுக்கும் அன்றில் பறவைக்கும் வருந்தும் தலைவிக்கு ஆற்றாது தோழி இரங்கல்

பொரு தரங்கத்தும் வடத்தும் அனந்தபுரத்தும் அன்பர்
கருது அரங்கத்தும் துயில் வேங்கடவ கண் பார்த்தருள்வாய்
நிருதர் அங்கத்து நிறம் போல் வரும் அந்தி நேரத்து அன்றில்
ஒரு தரம் கத்தும் பொழுதும் பொறாள் என் ஒரு வல்லியே –9-

(இ – ள்.) பொரு தரங்கத்தும் – மோதுகின்ற அலைகளையுடைய திருப் பாற்கடலிலும்,
வடத்தும் – ஆலிலையிலும்,
அனந்தபுரத்தும் – திருவனந்தபுர மென்னுந் திவ்வியதேசத்திலும்,
அன்பர் கருது அரங்கத்தும் – அடியார்கள் தியானிக்கின்ற திருவரங்கமென்னுந் திருப்பதியிலும்,
துயில் – பள்ளி கொண்டு யோகநித்திரை செய்தருள்கின்ற,
வேங்கடவ – திருவேங்கடமுடையானே! –
நிருதர் அங்கத்து நிறம் போல் வரும் – இராக்கதர்களுடையஉடம் பின்நிறம்போல (இருண்டு கறுத்துப் பயங்கரமாய்) வருகிற,
அந்தி நேரத்து – அந்தி மாலைப்பொழுதில்,
அன்றில் ஒரு தரம் கத்தும் பொழுதும் – அன்றிற்பறவை ஒருதரம்கத்துகிற பொழுதளவேனும்,
என் ஒரு வல்லி பொறாள் – என்னுடைய தனித்த பூங்கொடிபோன்ற இம்மங்கை சகிக்கமாட்டாள்;
(ஆதலால்), கண்பார்த்துஅருள்வாய் – (இவள்பக்கல்) கடாக்ஷம்வைத்து அருள்செய்வாயாக; (எ – று.)

கீழ் எட்டுப்பாசுரங்களில் திருவேங்கடமுடையானுடைய பலவகைப் பிரபாவங்களைக் கூறி அப்பெருமானது திவ்விய
சௌந்தரியத்தில் ஈடுபட்டு அவனது உத்தமபுருஷத்தன்மையைக் கருதியதனாலே,
அப்பொழுதே அவ னைக்கிட்டவேண்டும்படியான ஆசை யுண்டாய், அங்ஙனம் அவனைக்கிட்டப் பெறாமையாலே,
ஐயங்கார் ஆற்றாமைமீதூர்ந்து தளர்ந்தார்; அத்தளர்ச்சியாலே தாமானதன்மை குலைந்து ஆண்பெண்ணாம்படியான
நிலைமை தோன்றி ஒருபிராட்டிநிலையை யடைந்தார்; ஆண் பெண்ணாதல் கூடுமோ வெனில், –
“கண்ணிற் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினாய்,”
“வாராக வாமனனே யரங்கா வட்டநேமிவலவா ராகவா உன்வடிவு கண்டால் மன்மதனும் மடவாராக ஆதரஞ்செய்வன்” என்ப வாதலாலே, இதுகூடும்:

தண்டகாரணியவாசிகளான முனிவர்கள் இராமபிரானதுசௌ ந்தரியாதிசயத்தில் ஈடுபட்டுத் தாம் பெண்தன்மையைப்
பெறவிரும்பி மற்றொருபிறப்பில் ஆயர்மங்கையராய்க் கண்ணனைக் கூடின ரென்ற ஐதிகியமும் உணர்க.
“கண்ணனுக்கே யாமது காமம் அறம்பொருள்வீ டிதற்கென் றுரைத்தான்,
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண்மிசையே” என்பதன் பொருளும் அறியற்பாலது.
(“பெண்டிரும் ஆண்மைவெஃகிப் பேதறு முலையினாள்,”
“வாண்மதர்மழைக்கணோக்கி ……… ஆண்விருப்புற்று நின்றார் அவ்வளைத்தோளினாரே” எனப் பெண் ஆணாகும் இடமும் உண்டு.)
அங்ஙனம் ஆண் பெண்ணாகிலும் சாதாரணப்பெண்மையையேயன்றி எம் பெருமானுக்கு உரியவளாகும் ஒருபிராட்டியின்
நிலைமையை அடையுமாறு எங்ஙனமெனில், – பரமாத்மாவினது தலைமையும், ஜீவாத்மாவினது அடிமையும்,
ஜீவாத்மா பரமாத்மாவுக்கே உரியதாயிருக்கையும், புருஷோத்தம னாகிய எம்பெருமானது பேராண்மைக்கு முன் உலகமுழுவதும் பெண்தன்மையதாதலும், ஜீவாத்மாவினதுஸ்வாதந்திரியமின்மையும், பாரதந்திரியமும், தாம் எம்பெருமானது சேர்க்கையால் இன்பத்தையும் பிரிவினால் துன்பத்தையும் அடைதலும்,
அவனையே தாம் கரணங்களெல்லாவற்றாலும் அனுபவித்து ஆனந்தித்தலும் முதலிய காரணங்களால்,
தம்மைப் பிராட்டிமா ரோ டொக்கச் சொல்லத் தட்டில்லை.
தோழிநிலைமையும் தாயார்நிலைமையும் முதலியன ஆகிறபடி எங்ஙனேயென்னில், –
தாம் விரும்பிய பொருளின் வரம்பின்மையால் அங்ஙனமாகு மென்க.

தோத்திரப்பிரபந்தங்களில் அகப்பொருட் கிளவித்துறைகளை இடையிடையே கூறுதல் கவிசமயமாதலை இலக்கியங்கள்கொண்டு உணர்க.
சிருங்காரரசப்பிரதானமான அகப்பொருட்கிளவித்துறைகளை ஞானநூலாகிய தோத்திரப்பிரபந்தங்களிற்கூறுதற்குக் காரணம்,
கடுத்தின்னாதானைக் கட்டி பூசிக் கடுத்தின்பிப்பார் போல, சிற்றின்பங்கூறும்வகையாற் பேரின்பத்தைக் காட்டி நாட்டுதல் என்பர்.
இங்ஙனம் வெளிப்படைப்பொருளால் அந்யாபதேசமாகக்கூறுகிற சிற்றின்பத்துறைச்செய்யுள்கட்கெல்லாம்
ஸ்வாப தேசமாகப் பேரின்பத்தின்பாற்படுத்தும் உள்ளுறைபொருள் உண்டென்பதையும் உணர்க.
அன்றியும், இங்குக்கூறியது, உலகவாழ்கைச் சிற்றின்பமன்று:
“நான்கினுங் கண்ணனுக்கே ஆமது காமம்” என்றபடி எம்பெருமானைச் சேரவேண்டுமென்று அவன்பக்கலிலே
யுண்டாகின்ற அபேக்ஷையையே கூறியது.
“கோவிந்தா எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் உன்தன்னோடு, உற்றோமேயாவோம் உனக்கே நாமாட்செய்வோம்,
மற்றை நங்காமங்கள் மாற்று” என்றபடி லோகநாயகனுடைய சேர்க்கையை அபேக்ஷிக்கின்ற பேரின்பக்காதல்
வேதாந்தநிர்ணயத்தின்படி அன்புசெலுத்தவேண்டிய இடத்தில் அன்புசெலுத்திய தாதலால், சிற்றின்பக்காதல்போலன்றி,
சகலபாபநிவ்ருத்திக்கும் வீடுபேற்றுக்குமே காரணமாம். கண்ணபிரான்பக்கற்கொண்ட காமத்தால்
கோபஸ்திரீகள் முத்திபெற்றன ரென்று புராணங்கூறுதலுங் காண்க.

ஓர்உத்தமபுருஷன் பரிவாரத்துடன் வேட்டையாடுதற்குப் புறப்பட்டு வனத்துக்குச் சென்றவனாய்,
ஓர் உத்தமகன்னிகையும் தோழியருடன் பூக்கொய்து விளையாடுதற்கென்று பூஞ்சோலையிற் சேர்ந்தவளவிலே,
ஒவ்வொரு வியாஜத்தால், தோழியர் பிரிய அக்கன்னிகை அங்குத் தனித்துநின்ற சமயத்திலே,
ஒவ்வொரு வியாஜத்தாற் பரிவாரங்கள் பிரியத் தனிப்பட்டவனாய் அப்புருஷன் அங்குவந்துசேர,
இருவரும் ஊழ்வினைவசத்தால் இங்ஙனம் தற்செயலாய் ஓரிடத்திலே சந்தித்து ஒருவரையொருவர் கண்டு காதல் கொண்டு
காந்தருவவிவாகக்கிரமத்தாற் கூடி உடனே பிரிய, பின்பு மற்றுஞ்சில களவுப்புணர்ச்சிக்குஉரிய வகைகளால்
அத்தலைமகனது கூட்டுறவைப் பெற்று, பிறகு பிரிந்து, அப்பிரிந்தநிலையிலே பிரிவுத்துயரையாற்றாமல்
விரகதாபத்தால் வருந்துகிற தலைமகளது தளர்ச்சியைக் கண்ட தோழி தானும் தளர்ந்து பாவனையால்
தலைமகனை எதிரிற்கொண்டு முன்னிலைப்படுத்தித் தன்னிலேயுரைத்தது,
இது. அன்றி, தோழி தலைமகனை எதிர்ப்பட்டுத் தலைமகளது ஆற்றாமையை அவனுக்குக்கூறியுணர்த்துவ தெனினுமாம்.
இதனை, மாலைப்பொழுதுகண்டு இரங்கிய செவிலித்தாயின் வார்த்தையாக உரைத்தலும் ஒன்று.

அன்றிலென்பது, ஒருபறவை. அது, எப்பொழுதும் ஆணும்பெண்ணும் இணைபிரியாது நிற்கும்.
கணப்பொழுது ஒன்றை ஒன்று விட்டுப்பிரிந்தாலும் அத்துயரத்தைப்பொறாமல் ஒன்றையொன்று இரண்டு மூன்றுதரம் கத்திக்கூவி
அதன்பின்பும் தன்துணையைக் கூடாவிடின் உடனே இறந்துபடும். இதனை வடநூலார் க்ரௌஞ்சம் என்பர்.
எப்பொழுதும் இணையாகவுள்ள அந்த அன்றிற்பறவையும், அது இருட்பொழுதிற் பார்வைகுறைந்து துணையையிழந்து
நலிந்து எழுந்து பறந்து வருந்துதலும், ஆணும்பெண்ணுமான அன்றில் இணைபிரியாமல் நெருங்கி ஒன்றோடொன்று
வாயலகைக் கோத்துக்கொண்டு உறங்கும்பொழுது அவ்வுறக்கத்திலே வாயலகு தன்னில்நெகிழ்ந்தவளவிலே
துயிலுணர்ந்து அப்பிரிவைப்பொறாமல் மெலிந்து பெருந்தொனியாகக்கத்துகிற மிகஇரங்கத்தக்க சிறுகுரலும்
காமோத்தீபகமாய்ப் பிரிவாற்றாமைத்துயரை வளர்த்துப் பிரிந்தகாமுகரை வருத்து மென்றல், கவிமரபு.
மாலைப்பொழுது கலவிக்குஉரிய காலமான இரவின் தொடக்கமாதலால், அதுவும் பிரிந்தார்க்குத் துயர்க்கு ஏதுவாம்.

கவலையின்றிப் பலவிடத்தும் இனிதுகண்ணுறங்குகிற நீ இவ்விளமகள் துயில்பெறாது வருந்துதலை மாற்றவேண்டாவோ? என்ற
குறிப்புத் தோன்ற “பொருதரங்கத்தும் வடத்தும் அனந்தபுரத்தும் அன்பர்கருதரங்கத்தும் துயில் வேங்கடவ கண்பார்த்தருள்வாய்” என்றாள்.
கண்பார்த்தருளல் – கண்ணோட்டங் கொண்டு மீளவும்வந்து இவளை வெளிப்படையாக மணஞ்செய்து கொள்ளுதல்.
“ஒரு” என்றது – தனிமையையும், “வல்லி” என்றது – துயர் பொறுக்கமாட்டாத மெல்லியலா ளென்பதையுங் காட்டும்.
ஆலிலையிற்கண் வளர்தல், பிரளயப்பெருங்கடலில். திருவனந்தபுரம் – மலைநாட்டுத் திருப்பதி பதின்மூன்றில் ஒன்று.
அரங்கம் – சோழநாட்டுத் திருப்பதிநாற்பதில் ஒன்று; நூற்றெட்டுத் திவ்வியதேசங்களுள் தலைமைபூண்டது.

தரங்கம், வடம், அநந்தபுரம், ரங்கம், அங்கம், வல்லீ – வடசொற்கள். நிருதர் – நைருதரென்ற வடசொல்லின் விகாரம்;
நிருருதியென்ற தென் மேற்குத்திக்குப்பாலகனது மரபின ரென்பது பொருள்.
“பொரு தரங்கம்” என்பதை அடையடுத்த சினையாகுபெய ரென்றாவது, வினைத்தொகையன் மொழி யென்றாவது கொள்க.
வடம் என்ற ஆலமரத்தின் பெயர் – அதன் இலைக்கு முதலாகு பெயர்.
அரங்கு என்ற சொல்லுக்கு உள்ளிடமென்று ஒரு பொரு ளுள்ளதனால், “அன்பர்கருதரங்கத்து” என்பதற்கு –
மெய்யன்புடைய ரான அடியார்கள் தியானிக்கின்ற மனத்திலும் என்றும் பொருள் கொள்ளலாம்.
நான்காமடியில், உம் – இழிவுசிறப்பு. வல்லி – கொடி; பெண்ணுக்கு உவமையாகுபெயர்:
மெல்லியதாய் ஒல்கியொசியும் வடிவில் உவமம். “கண்பார்த்தருளாய்” என்பதும் பாடம்.

திருவேங்கடமுடையான் ஒருகால் ஐயங்காரது ஞானக்கண்ணுக்கு இலக்கானபொழுதே அவனைக்கிட்டி
முத்தியின்பமனுபவிக்கும்படியான ஆசை கொண்ட அவரை அப்பெருமான் அப்பொழுதே சேர்த்துக்கொள்ளாது மறைய,
அதனாலுண்டான துயரத்தால் ஐயங்கார் லௌகிகபதார்த்தங்களைக் குறித்து வருந்த,
அதுகண்ட அன்பர்கள் அவருடைய அத்தன்மையை எம்பெருமான்பக்கல் விண்ணப்பஞ்செய்து,
இனி இவரை வருந்தாதபடி விரைவிற்சேர்த்துக்கொள்ளவேண்டு மென்று பிரார்த்தித்தல், இதற்கு உள்ளுறைபொருள்; விவரம் கேட்டு உணர்க.

———–

தலைவனைப் பிரிந்த தலைவி கடலோடு புலம்புதல் –

ஒரு மாது அவனி ஒரு மாது செல்வி உடன் உறைய
வரும் ஆ தவனின் மகுடம் வில் வீச வடமலை மேல்
கரு மாதவன் கண்ணன் நின் பால் திரு நெடும் கண் வளர்க்கைக்கு
அருமா தவம் என்ன செய்தாய் பணி எனக்கு அம்புதியே –10-

(இ – ள்.) அம்புதியே – கடலே! –
ஒரு மாது அவனி – ஒருமனைவியான பூதேவியும்,
ஒருமாது செல்வி – மற்றொருமனைவியான ஸ்ரீதேவியும்,
உடன் உறைய – (தன்னைவிட்டுப்பிரியாது எப்பொழுதும்) தன்னுடன் இருக்கவும்,
வரும் ஆதவனின் மகுடம் வில் வீச – உதயமாகிவருகின்ற சூரியன் போலக் கிரீடமானது ஒளியைவீசவும்,
வடமலைமேல் கரு மாதவன் கண்ணன் – வடக்கின்கணுள்ள திருவேங்கடமலையின் மீது வாழ்கிற
கரியதிருமேனியையுடைய மாதவனென்றும் கிருஷ்ணனென்றுந் திருநாமங்களையுடைய திருமால்,
நின்பால் திரு நெடுங் கண் வளர்கைக்கு – உன்னிடத்திலே அழகிய நீண்ட திருக்கண்களை மூடி நித்திரைசெய்தற்காக,
அரு மா தவம் என்ன செய்தாய் – (நீ) அரிய பெரிய எவ்வகைத்தவத்தைச் செய்தாய்? எனக்கு பணி – எனக்குச் சொல்வாய்; (எ – று.)

“போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி, ஆக்கஞ்சேரூடல் அணி மருதம் –
நோக்குங்கால், இல்லிருக்கை முல்லை இரங்கல் நறுநெய்தல், சொல்லிருக்கு மைம்பால்தொகை” என்றபடி
இரங்கல் நெய்தல் நிலத்துக்கு உரியதாதலாலும், அந்நெய்தனிலந்தான் கடலும் கடல்சார்ந்தஇடமு மாதலாலும்,
அந்நிலத்திலே தலைமகனைப் பிரிந்து வருந்துகின்ற தலைமகள் அருகிலுள்ள கடலை முன்னிலைப்படுத்தி,
“திருமால் எப்பொழுதும் உன்னிடத்திலே பொருந்தி இனிதுகண்துயிலுமாறு நீ என்ன தவஞ்செய்தாய்? சொல்” என்று இரங்கிக்கூறின ளென்க.
நீ அதனைச்சொல்லினையாயின், அவனோடு ஒரோசமயத்துக் கூட்டுறவுபெற்றுப்பின்பு பிரிந்து வருந்துகின்ற யானும்
அவ்வகைத்தவத்தைச்செய்து அப்பெருமான் என்றும் என்னைவிட்டுப்பிரியாது என்பக்கல் இனிதுகண்துயிலும்படி பெறுவே னென்பது, குறிப்பு.

“மாலுங்கருங்கடலே யென்னோற்றாய் வையகமுண், டாலினிலைத்துயின்ற வாழியான் –
கோலக், கருமேனிச்செங்கண்மால் கண்படையு ளென்றுந், திருமேனி நீ தீண்டப்பெற்று” என்ற ஆழ்வாரருளிச்செயலை அடியொற்றியது இது.
தலைமகனோடுகூடியுறைகின்ற தலைவியரைக் கண்டு பொறாமை கொள்ளுதல், தலைவனைப் பிரிந்துறைகின்ற தலைவியரியல்பு:
அக்குறிப்பு இப்பாட்டில் “ஒருமாதவனி யொருமாதுசெல்வி யுடனுறைய” என்ற வார்த்தையில் தோன்றுதல் காண்க;
ஸ்ரீதேவியும் பூதேவியும் போலத் தானும் எம் பெருமானுக்குஉரிய ஒருபிராட்டிநிலையைப் பெறுமாறு
வேண்டின ளென்பதும் அவ்வார்த்தையிற் புலனாம்.
“உவர்க்குங்கருங்கடல்நீருள்ளான்” என்னும்படி திருமால் கடல்கள்தோறுங் கண்வளர்ந்தருளு மென்று ஒரு
பிரமாணசித்தியுண்டாகையாலே, திருப்பாற்கடலையேயன்றி இக்கருங்கடலையே இங்ஙனம் வினாவின ளென்க.
“வருமாதவனின் மகுடம் வில்வீச” என்றது, திருமுடியும் கிரீடமும் சேர்ந்த சேர்த்தியா லாகிய செயற்கையழகில் தலைவி ஈடுபட்டதைக் காட்டும்.

உறைய, வீசக் கண்வளர்கைக்கு என்று இயையும். உறைய, வீச – வினைச் செவ்வெண்.
மாது – விரும்பப்படும் அழகுடைய பெண். அவநி, ஆதபன், மகுடம், மாதவன், மஹாதபஸ், அம்புதி – வடசொற்கள்.
அவநி – (அரசராற்)பாதுகாக்கப்படுவது; அவநம் – ரக்ஷணம். செல்வி – எல்லாச்செல்வங்கட்கும் உரியவள், திருமகள்.
ஆதபன் – நன்றாகத் தபிப்பவன். மா தவன் – ஸ்ரீய: பதி; மா – இலக்குமிக்கு, தவன் – கணவன்;
இத்திருநாமம் – (சந்திரவம்சத்தில்) மதுவென்றஅரசனது மரபில் (கண்ணனாகத்) திருவவதரித்தவ னென்றும் பொருள்படும்;
அப்பொழுது, தத்திதாந்தநாமம்; மது – யதுவின் மூத்த குமாரன். அம்புதி – நீர்தங்குமிடம்; அம்பு – நீர்.
கண்ண னென்ற திருநாமத்துக்கு – கண்ணழகுடையவ னென்றும், கண்ணோட்டமுடையவ னென்றும் பொருள்கொள்ளலாம்.
பணி – வினைப்பகுதிதானே ஏவலொருமையாய் நின்றது.
இச்செய்யுளின் பின்னிரண்டடிகளில் முதலைந்தெழுத்துக்கள் ஒத்துவந்தது, யமகவகையின்பாற்படும். முன்னிரண்டடி – திரிபு.

எம்பெருமான் ஐயங்கார்க்கு ஒருகால் காட்சிதந்து மறைய, அப்பெருமானது இடைவிடாச்சேர்க்கையை விரும்பிய ஐயங்கார்
அங்ஙனம் அவனது நிரந்தரஸம்ச்லேஷத்தைப் பெற்றுநின்ற ஆழ்ந்தகருத்துடைய மகான்களை நோக்கி
“நீங்கள் நிரந்தராநுபவம்பெற்றவகையை எனக்குக் கூறுவீராக” என்று வேண்டுதல், இதற்கு உள்ளுறைபொருள்; விவரம் உய்த்து உணர்க.

———–

அம்பரம் தாமரை பூத்து அலர்ந்தன்ன அவயவரை
அம்பரந்தாமரை அஞ்சன வெற்பரை ஆடகம் ஆம்
அம்பரம் தாம் அரை சூழ்ந்தாரை வாழ்த்திலர் ஐம்புலன் ஆம்
அம்பரம் தாம் மரை போல் திரிவாரை அகல் நெஞ்சமே –11-

(இ – ள்.) அம்பரம் – கடலினிடத்து,
தாமரை பூத்து அலர்ந்து அன்ன – செந்தாமரைமலர்கள் தோன்றி மலர்ந்தாற் போன்ற,
அவயவரை – திருமே னியுறுப்புக்களை யுடையவரும்,
அம் பரந்தாமரை – அழகிய பரமபதத்துக்கு உரியவரும்,
ஆடகம் ஆம் அம்பரம் தாம் அரை சூழ்ந்தாரை – பொன்மயமான ஆடையை (பீதாம்பரத்தை)த் தாம் இடையில் உடுத்துள்ளவருமாகிய,
அஞ்சனவெற்பரை – திருவேங்கடமுடையானை,
வாழ்த்திலர் – துதியாதவர்களாய்,
ஐம்புலன் ஆம் அம்பரம் – ஐம்புலன்களாகிய வெட்டவெளியிலே,
தா மரை போல் திரிவாரை – தாவுகின்ற மான்கள் போலத் துள்ளியோடித் திரிபவர்க

பேரின்பத்துக்குஉரிய பகவத்விஷயத்திற் செல்லாமல் சிற்றின்பத்துக்கு உரிய விஷயாந்தரங்களிலே வரம்பின்றி ஓடி
உழன்று அலைகின்ற பேதையரோடு கூட்டுறவுகொள்ளலாகாதென்று தம்மனத்துக்கு அறிவுறுத்துகிற வகையாற்
பிறர்க்கு உணர்த்துகின்றா ரென்க.
கடல் – கரிய திருமேனிக்கும், அதில் தோன்றி மலர்ந்த செந்தாமரைமலர்கள் – கண் கை கால் முகம் வாய் உந்தி என்ற
அவயவங்கட்கும் உவமையாகுதலால், “அம்பரந் தாமரை பூத்தலர்ந்தன்ன அவயவர்” என்றார்.
அம்பரம் – மேகம் எனினுமாம்; “கருமுகில் தாமரைக்காடு பூத்து” என்றார் கம்பரும்.

பரந்தாமர் என்ற பெயர் எல்லாப்பதவிகட்கும்மேலான இடத்தையுடையவ ரென்றும்,
எல்லாவொளிகளினுஞ்சிறந்த ஒளியையுடையவ ரென்றும் பொருள்படும்; தாமம் – இடமும், ஒளியும்.
கேசரியென்னும் வாநரசிரேஷ்டனது மனைவியாகிய அஞ்சநாதேவி திருவேங்கடமலையை அடைந்து பலகாலம் தவம்புரிந்து
அநுமானாகிய புத்திரனைப் பெற்றதனால், இம்மலை, அஞ்சநாசலமென்று ஒரு பெயர்பெற்ற தெனப் புராணங்கள் கூறுகின்றன.
ஆடகமாம் அம்பரம் – பொற்பட்டாடை. மூன்றாமடியில், தாம் – அசை. சூழ்தல் – சுற்றிலும்தரித்தல்.
எம்பெருமானை வாழ்த்துதல் மிக்கஅன்பின்செயலாதலை, பெரியாழ்வார் பல்லாண்டுபாடியதுகொண்டும் உணர்க.

“அம்பரம் கூறையும் கடலும் ஆகாயமும்” என்ற திவாகரம், இங்கு உணரத்தக்கது. தாமரை – தாமரஸ மென்ற வடசொல்லின் விகாரம்.
அவயவம், பரந்தாமர், ஹாடகம், அம்பரம் – வடசொற்கள்.
அவயவரை, தாமரை, வெற்பரை, சூழ்ந்தாரை என்பன – ஒருபொருளின் மேல்வந்த பலபெயர்கள்.
விசேஷணம் விசேஷ்யம் என்ற இரண்டிலும் வேற்றுமையுருபு விரித்தது,
வடமொழிநடை. அஞ்சனவெற்பர் – விசேஷ்யம்; மற்றவை – விசேஷணங்கள்.
அரை என்ற எண்ணலளவுப்பெயர் – உடம்பின் நடுவிலுள்ள உறுப்புக்கு ஆகுபெயராம்.
வாழ்த்திலர் – எதிர்மறைப்பலர்பால் முற்றெச்சம்.
ஐம்புலவின்பங்களினாசைக்கு எல்லையில்லை யென்பது தோன்ற, “ஐம்புலனாமம்பரம்” என்றார்.
தா மரை – வினைத்தொகை; தாம் மரை யென்று பிரித்து, தாம் என்பதைத் தாவும் என்ற செய்யுமெனெச்சத்து
ஈற்று உயிர்மெய்சென்றதாகவுங் கொள்ளலாம்.
ஐம்புலன் – ஐம்புலங்களாலாகிற, நாமம் – அச்சம், பரந்து – மிகப்பெற்று, ஆ – ஐயோ! மரைபோல் திரிவாரை என்று பொருள்கூறுதல்,
க்லிஷ்டகற்பனை (நலிந்துபொருள் கொள்ளுதல்) என்னுங் குற்றத்தின்பாற் படுமென விடுக்க.

இச்செய்யுளில் நான்கடிகளிலும் முதலெழுத்துக்கள் சில ஒன்றிநின்று வெவ்வேறுபொருள்விளைத்தல்,
இடையிட்டுவந்த முதல் முற்றுமடக்கு எனப்படும் யமகமாம்;
மேல் – 20, 31, 39, 47, 57, 72, 89 ஆஞ் செய்யுள்களிலும் இது காண்க.
செய்யுளடிகளினிறுதியில் சந்தி அநித்தியமென்பது இலக்கணநூலார்துணி பாதலின், நின்ற அடியின் ஈற்றோடு வருமடியின்
முதல் சேருமிடத்துப் புணர்ச்சி கொள்ளப்பட்டிலது, யமகவமைப்பின் பொருட்டு; இதனை, இங்ஙனம் வரு மிடங்கட்கெல்லாங் கொள்க.

———–

தலைவி தோழியர்க்கு அறத்தொடு நிற்றல்

நெஞ்சு உகந்தத்தை உமக்கு உரைத்தேன் இற்றை நீடு இரவு ஓன்று
அஞ்சு உகம் தத்தை விளைக்கும் என் ஆசை அது ஆம் இதழ் சொல்
கிஞ்சுகம் தத்தை அனையீர் இங்கு என்னைக் கெடாது விடும்
விஞ்சு கந்தத்தை விளைக்கும் துழாய் அண்ணல் வேங்கடத்தே –12-

(இ – ள்.) இதழ் – வாயிதழும்,
சொல் – சொல்லும், (முறையே),
கிஞ்சுகம் – முருக்கமலரையும்,
தத்தை – கிளிகொஞ்சிப்பேசும் பேச்சையும்,
அனையீர் – ஒத்திருக்கப்பெற்றவர்களே! –
நெஞ்சு உகந்தத்தை – (என்) மனம் விரும்பியதை,
உமக்கு உரைத்தேன் – உங்கட்குச் சொல்லுகின்றேன்:-
இற்றை நீடு இரவு ஒன்று – இன்றைத்தினத்து நீண்ட இராத்திரி யொன்றுமே,
அஞ்சு உகம் – ஐந்துயுகமாக வளர்ந்து,
தத்தை விளைக்கும் – துன்பத்தை மிகுவிக்கின்றது;
அது என் ஆசை ஆம் – அது யான்கொண்ட காதலின் காரியமாம்;
இங்கு என்னை கெடாது – (இனி நீங்கள்) என்னை இங்கேயே (வைத்திருந்து) கெடுத்திடாமல்,
விஞ்சு கந்தத்தை விளைக்கும் துழாய் அண்ணல் வேங்கடத்தேவிடும் – மிக்க நறுமணத்தைவீசுகின்ற திருத்துழாய்
மாலையைத் தரித்த தலைவனுடைய திருவேங்கடமலையினிடத்தே (என்னைக் கொண்டுபோய்ச்) சேர்த்திடுங்கள்; (எ – று.)

தலைமகனைக் களவொழுக்கத்தாற் கூடிப் பிரிந்த தலைமகள் அப்பிரிவுத் துயரை ஆற்றியடக்கும் வல்லமையிலளாகித்
தனது நிலைமையை அன்புடைத் தோழியர்க்கு வெளிப்படையாகவுரைத்து
“இனி நான் பிழைத்திருக்கவேண்டில், என்னை நீங்கள் அத்தலைவன் முன்னிலையிற் கொண்டுபோய்ச்சேர்த்திடுங்கள்” என்று
வேண்டுகின்றாளென்க.
என்மனத்திலுள்ளதை என்மனத்தோடொத்த உயிர்ப்பாங்கியரான உங்கட்குமாத்திரமே அந்தரங்கமாகச் சொல்லுகின்றேன்;
என்பக்கல் அன்பிலரான பிறர் அறியவேண்டா என்பது, “நெஞ்சுகந்தத்தை யுமக்குரைத்தேன்” என்றதன் குறிப்பு.
“ஊழிபல வோரிரவாயிற்றோவென்னும்,”
“ஊழியிற்பெரிதால்நாழிகையென்னும்ஒண்சுடர்துயின்றதாலென்னும்”,
“இது ஓர் கங்கு லாயிரமூழிகளே” என்றபடி கூடியநிலையில் ஒருகணமாகக்கழிகிற இரவு பிரிந்தநிலையில்
அநேக யுககாலமாக நீட்டித்துத்தோன்றுகின்றமைபற்றி, “நீடிரவொன்று அஞ்சுகம்தத்தை விளைக்கும்” என்றாள்.

“இற்றைநீடிரவு” என்றதனால், தலைவனைப்பிரிந்து அப்பிரிவுத்துயரையாற்றாமல் பகலினும் இரவில்மிகவருந்தி
அரிதிற்சிலநாள் கழித்த தலைவி அவ்வருத்தம் நாளுக்குநாள் மிகுதலால் இரவும் ஒருநாளைக்கொருநாள்
மிகநீட்டித்ததாகத் தோன்றக் கண்டு, முன்பு ஒரு நாளாயும் ஒரு மாதமாயும் ஒரு வருடமாயும் ஒரு யுகமாயும்
படிப்படியாகவளர்ந்து தோன்றிவருத்தி வந்த இரவு இன்றைக்குப் பலயுகங்களாகத் தோன்றிவருத்துகின்றது
என்று ஒருநாளிரவிற் கூறினளாம். தன்விருப்பத்தை நிறைவேற்றுதற்பொருட்டுத் தோழியரைக் கொண்டாடியழைப்பவளாய்,
“இதழ்சொல் கிஞ்சுகந் தத்தை யனையீர்” என்று புனைந்துரைத்து விளித்தாள்.
தான் இனி ஒருபொழுதேனும் இங்குஇருந்து பிழைக்கும் வகையிலளானமை தோன்ற, “இங்குஎன்னைக் கெடாது” என்றாள்.

தலைவன் தானாகவருமளவும் பார்த்து ஆறியிருக்கின்ற இயல்பை இழந்து அவனுள்ளவிடத்தேசென்று
அவன்முகத்தைக் கண்டு பிழைக்கலாமென்றும், அவன்கண்ணெதிரிற்சென்றுநின்றால் அவன்கண்ணோட்டத்தைப்
பெறலா மென்றுங் கருதி விரைவில் அங்குச்செல்லவிரும்பிய தலைவி, தனக்குக் கால்நடைதாராதபடி
வலியழிவுமிக்கதனால் தான் அங்குச்சென்று சேரமாட்டாது, தன்கண்வட்டத்திலேநின்று தன்நிலையை நோக்கிக்
கால்நடைதளராததோழியரைத் தன்னை அங்குக்கொண்டுபோய் விடுமாறு வேண்டினள்;
நீங்கள் என்குறிப்பறிந்து என்துயர்தீர்த்திலிராயினும் நான் வெளிப்படையாச்சொல்லுகிறேன், அதன்படியாயினுஞ் செய்யுங்க ளென்றாள்.
“மதுரைப்புறத் தென்னையுய்த்திடுமின்,”
“ஆணையால் நீரென்னைக்காக்கவேண்டி லாய்ப்படிக்கேயென்னையுய்த்திடுமின்” என்பவை முதலாகிய அருளிச்செயல்களைக் காண்க.

உகந்தது என்ற வினையாலணையும் பெயர், இரண்டனுருபையேற்கையில் இடையிலே தகரவொற்று விரிந்து
உகந்தத்தை யென்று நின்றது. அஞ்சு = ஐந்து; முழுப்போலி. தத்து – துன்பம். கெடாது – இங்குப் பிறவினை; இழவாமல் எனினுமாம்.
கிம்சுகம் என்ற பலாச மரத்தின்பெயர் – அதன்பூவுக்கும், தத்தை என்ற கிளியின் பெயர் – அதன்மொழிக்கும் முதலாகுபெயராம்.
பலாசமலர் – உதட்டுக்குச் செம்மை மென்மை அழகுகளிலும், கிளிமொழி – சொல்லுக்கு இனிமையிலும் உவமம்.
இதழ் சொல் கிஞ்சுகம் தத்தை அனையீர் என்றது, இதழ் கிஞ்சுகத்தையும், சொல் தத்தையையும் அனையீர் என
முறையே சென்று இயைதலால், முறைநிரனிறைப்பொருள்கோள்.

எம்பெருமானை இடையீடின்றிச் சேரப் பெறாத நிலையில் காலவிளம்பம் பொறுக்கமாட்டாமையாற் காலம்நீட்டித்ததாகத் தோன்ற
வருந்துகிற ஐயங்கார் தமதுஅன்பர்களைநோக்கி “இனி யான் எம்பெருமானது நிரந்தராநுபவம் பெற்று உய்யுமாறு
என்னை நீங்கள் அவனுகந்தருளின திருப்பதியிற் கொண்டுபோய்ச் சேர்த்திடுங்கள்” என்று வேண்டுதல்,
இதற்கு உள்ளுறை பொருள்; விவரம் கண்டுகொள்க.

————–

வேங்கடத்து ஆரையும் ஈடேற்ற நின்றருள் வித்தகரைத்
தீங்கு அடத் தாரைப் புனைந்து ஏத்திலீர் சிறியீர் பிறவி
தாம் கடத்தாரை கடத்தும் என்று ஏத்துதிர் தாழ் கயத்துள்
ஆம் கடத்தாரை விலங்கும் அன்றோ சொல்லிற்று ஐயம் அற்றே –13-

(இ – ள்.) சிறியீர் – (அறிவொழுக்கங்களிற்) சிறியவர்களே! –
ஆரையும் ஈடேற்ற – எல்லாரையும் (பிறவிப்பெருங்கடலினின்று) கரையேற்றிப் பாதுகாத்தற்பொருட்டு,
வேங்கடத்து நின்றருள் – திருவேங்கடமலையில் நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருக்கின்ற,
வித்தகரை – ஞானசொரூபியான எம்பெருமானை,
தீங்கு அட தாரை புனைந்து ஏத்திலீர் – (உங்கள்) பிறவித் துன்பங்களை (அவன்) அழிக்குமாறு
(அவனுக்குப் பிரியமான திருத்துழாய் முதலிய) மாலைகளைச் சாத்தித் துதிக்கின்றீரில்லை; (மற்று),
பிறவி தாம் கடத்தாரை – (தங்கள்) பிறவியைத் தாங்கள் விலக்கிக்கொள்ள மாட்டாத சிறுதெய்வங்களை,
கடத்தும் என்று ஏத்துதிர் – (எங்களைத் துன்பத்தினின்று) ஈடேற்றுவீராக” என்றுசொல்லிப் பிரார்த்தித்துத் துதிக்கிறீர்கள்;
தாழ் கயத்துள் ஆம் – ஆழ்ந்த தடாகத்திலே (முதலைவாயில்) அகப்பட்டுக் கொண்ட,
கடம் தாரை விலங்கும் அன்றோ – மதநீர்ப்பெருக்கையுடைய மிருகசாதியாகிய யானையுமல்லவோ,
ஐயம் அற்று சொல்லிற்று – சந்தேகந்தீர்ந்து (ஸ்ரீமந்நாராயணனை ஆதிமூலமே யென்று கூப்பிட்டு) உண்மைப் பொருளை யுணர்த்திற்று; (எ – று.)

தேவதாந்தரங்களை வழிபடுதலை விட்டுப் பரதேவதையை வழிபட்டுக் கஜேந்திராழ்வான்போலத் துயர்தீர்ந்து முத்திபெறுவீ ரென்றபடி.
ஸ்ரீமகா விஷ்ணுவே பிரஹ்மருத்ரேந்த்ராதி தேவர்கட்கெல்லாம் முதற்பெருந்தேவ னென்ற மறைபொருள்,
அப்பெருமானைக் கஜேந்திராழ்வான் மற்றையபெ யர்களாற்குறியாமல் ஆதிமூலமேயென்று குறித்து விளித்ததனால்
இனிது வெளியாயிற்று என்பது, இறுதிவாக்கியத்தின் கருத்து.
“தான் மூலமென்பது அறிவித்திடான், அக்கரவு அம்புவிமேல் வேழமே வெளியாக்கியதே” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்.
பகுத்தறிவிற்குறைவுள்ள இயல்பின தான ஐயறிவுயிராகிய விலங்குக்கு இருந்த விவேகந்தானும் ஆறறி
வுயிராய்ப் பகுத்தறிவுநிரம்புதற்கு உரியரான உங்கட்கு இல்லையாயிற்றே யென்று ஏசுவார், “சிறியீர்” என்று விளித்தார்.
யாற்றுநீர்ப்பெருக்கு முதலியவற்றைத் தான் கடக்கமாட்டாதவன் பிறரை அதுகடத்துவது உண்டோ?
தமது பிறவித் துன்பத்தை விலக்கிக்கொள்ள மாட்டாத தேவதாந்தரங்களை நீங்கள் உங்கள் துன்பத்தையொழித்துப்
பிறவிக்கடல் கடத்துமாறு வேண்டுதல் பேதைமையன்றோ? வீழ்வார்க்கு வீழ்வார் துணையாவரோ? என்று உறுத்திக் கூறுவார்,
“பிறவிதாங்கடத்தாரைக் கடத்துமென் றேத்துதிர்” என்றார்.
“வந்தவினை தீர்க்க வகையறியார் வேளூரர், எந்தவினை தீர்ப்பா ரிவர்” என்பர் பிறரும்.
(“இறைவ னிவனென வறியா திதரதேவ ரிணையடியைப் பணிந்துதிரி யேழையீர் நா,
னறைவ னிதுதிட மாதிமூலமேயென்று அஞ்சிறு கண்மதயானை யழைத்தபோ தஞ்,
சிறைவனசத்திருமுகப் புள்ளூர்ந்து வந்து செகமறியும்படியளித்த தேவதேவன்,
நறைவனவஞ்சனகிரிமாலல்ல னோகாண் நாடியவற்றொழுது கதிநண்ணுவீரே” என்ற திருவேங்கடக்கலம் பகமுங் காண்க.

வேங்கடத்து நின்றருள் என்றும், கயத்துளாம்விலங்கு என்றும், இயையும். தாரா – வடசொல்.

————–

ஐயா துவந்தனை நாயேனை அஞ்சன வெற்ப என்றும்
கையாது உவந்தனை நின்னை அல்லால் கண்ணுதல் முதலோர்
பொய்யாது வந்து அனையார் முகம் காட்டினும் போற்றி உரை
செய்யாது வந்தனை பண்ணாது வாக்கும் என் சென்னியுமே –14-

(இ – ள்.) ஐயா – ஐயனே!
அஞ்சன வெற்ப – அஞ்சநாத்ரி என்னும் ஒருபெயரையுடைய திருவேங்கடத்தி லெழுந்தருளியிருக்கின்றவனே!
துவந் தனை – இருவினைத்தொடர்புடையேனாகிய,
நாயேனை – நாய்போற்கடைப் பட்டவனான என்னை,
என்றும் கையாது – எக்காலத்தும் வெறுத்திடாத படி,
உவந்தனை – மகிழ்ந்து அடியவனாக அங்கீகரித்தாய்;
நின்னை அல்லால் – (இங்ஙனம் அடியேனை ஆட்கொண்டருளிய தேவாதிதேவனான) உன்னை(த் துதித்தலும் வணங்குதலும்) அல்லாமல், –
கண்நுதல் முதலோர் – சிவன்முதலிய தேவர்கள்,
பொய்யாது வந்து – மெய்யாகவே (என்முன்) வந்து பிரதிய க்ஷமாகி
அனையார் முகம் காட்டினும் – அவர்களுடைய முகத்தை வலியக் காட்டினாலும்,
என் வாக்கும் சென்னியும் போற்றி உரை செய்யாது வந்தனை பண்ணாது – எனது வாயும் தலையும் (முறையே அவர்களைத்)
துதித்து உரைத்தல் செய்யாது வணங்காது; (எ – று.)

“மறந்தும்புறந்தொழாமாந்தர்” என்றபடி தேவதாந்தரபஜநஞ் செய் யாமையில் தமக்குஉள்ள உறுதியை வெளியிட்டார்.
அனையார் முகங்காட் டினும் என்பதற்கு – பெற்றதாயார்(போல அன்பொழுகும் இனிய) முகத்தைக் காட்டினாலும்
என்று உரைத்தலும் உண்டு: அனையார் = அன்னையார்.
போற்றி யுரை செய்யாது வந்தனை பண்ணாது வாக்கும் சென்னியும் என்பது, போற்றியுரை செய்யாது வாக்கு,
வந்தனை பண்ணாது சென்னி என முறையே சென்று இயைதலால், முறைநிரனிறைப்பொருள்கோள்.
“வாக்கு மென் சென்னியும்” என்றவிடத்து இடைநின்ற “என்” என்றது முன்நின்ற “வாக்கு” என்றதனோடும்,
பின்நின்ற “சென்னி” என்பதனோடும் சென்று இயைதல், மத்திமதீபம் (இடைநிலைவிளக்கு).
மனம் மொழி மெய் என்னுந் திரி கரணங்களுள் மொழிமெய்கள் தேவதாந்தர வழிபாடு செய்யாமையைக் கூறவே,
அவற்றின்தொழிற்குக் காரணமான மனம் அவர்களைக்கருதா தென் பதும் பெறப்படும்;
“உலகமுண்ட, திருக்கந்தரத்தனை யல்லா தெண்ணே னொருதெய்வத்தையே” என்பர் அழகரந்தாதியில்.
ஐயா -ஆர்யன் என்ற வடசொல் பிராகிருதபாஷையில் அய்யன்என்று விகாரப்பட்டுத் தமிழிற் போலிவகையால்
ஐய னென்று வழங்கி ஈறுகெட்டு ஈற்றயல் நீண்டு விளி யேற்றது. த்வந்த்வம் என்ற வடமொழி, துவந்த மென்று விகாரப்பட்டது;
(தொந்தமெனச்சிதைந்தும் வழங்கும்;) இரட்டையென்பது,பொருள்; இங்கு இருவினையின்மேல் நின்றது:
அதனையுடையவன், துவந்தன்; அதன்மேல் ஐ – இரண்டனுருபு. கண்ணுதல் – நெருப்புக் கண்ணை நெற்றி யிலுடையவன்;
வேற்றுமைத்தொகை யன்மொழி. அனையார் என்பது அவர் என்று பொருள்படும்போது,
அகரச்சுட்டு – பகுதி;ன் ஐ – சாரியைகள், ஆர் – பலர் பால்விகுதி. முகங்காட்டினும் என்ற உம்மையால்,
முகங்காட்டாதபோது வழிபடுதலின்மை தெற்றென விளங்கும். செய்யாது, பண்ணாது – எதிர்மறை யொன்றன்பால்முற்றுக்கள்.
வாக் – வடசொல். “நின்னையல்லால்” என்பது, “போற்றியுரைசெய்யாது,” “வந்தனைபண்ணாது” என்பவற்றோடு இயையும்.

————-

தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை கண்ட செவிலித்தாய் இரங்கல்

சென்னியில் அங்கை குவிக்கும் உயிர்க்கும் திகைக்கும் நின்னை
உன்னி இலங்கு ஐயில் கண் உறங்காள் உயர் வீடணனை
மன்னி இலங்கையில் வாழ்க என்ற வேங்கட வாண மற்று ஓர்
கன்னி இலம் கைக்கில் நின் பேர் கருணைக் கடல் அல்லவே –15-

(இ – ள்.) உயர் – (அறிவொழுக்கங்களினால்) உயர்ந்த,
வீடணனை – வீபீஷணனை,
மன்னி இலங்கையில் வாழ்க என்ற – “நிலைபெற்று இலங்கா புரியில் அரசனாய் வாழ்வாயாக” என்று சொல்லி முடி சூட்டி அநுக்கிரகித்த,
வேங்கட வாண – திருவேங்கடமலையில் வாழ்பவனே! – (உன்னைக் கூடிப் பிரிந்த இந்த எமது மகள்),
நின்னை உன்னி சென்னியில் அம் கை குவிக்கும் – (தான் வேண்டியதைப்பெறுதற்காக) உன்னைக் குறித்துத்
தன் தலையின் மேல் அழகிய கைகளைக் கூப்பி வைத்துத் தொழுவாள்;
உயிர்க்கும் – (தன்னுடைய துயரம் பொறுக்க மாட்டாமையால்) பெருமூச்சுவிடுவாள்;
திகைக்கும் – (பரிகார மொன்றும் பெறாமையால்) மோகித்துக்கிடப்பாள்;
(நின்னை உன்னி) – உன்னையே சிந்தித்தலால்,
இலங்கு ஐயில் கண் உறங்காள் – பிரகாசிக்கின்ற வேலாயுதம்போன்ற கண்களை மூடித் துயில்கொள்ளாள்;
மற்று ஓர் கன்னி இலம் – (நாங்கள் இவளையன்றி) வேறொருபெண்ணை உடையோமல்லோம்; (ஆதலால்),
கைக்கின் நின் பேர் கருணைக்கடல் அல்ல – (எங்கள் ஏக புத்திரியான இவள் பக்கல் இரங்கி இவளை அங்கீகரியாமல் நீ)
வெறுத்து விடுவை யானால் நினதுபெயர் தயாசிந்து என்பது தகுதியுடையதாகாது; (எ – று.) – ஈற்றுஏகாரம் – தேற்றம்

தலைமகனோடு கூடிப்பிரிந்த தலைமகள் பிரிவாற்றாமையாற்படுகிற பல வகைத் துன்பங்களையுங் கண்டு
ஆற்றமாட்டாளான செவிலித்தாய் தன்ஆற் றாமைமிகுதியால் அத்தலைமகனை எதிரில்நிற்கின்றவாறுபோலப் பாவித்து
அவனைவிளித்து அவன்முன்னிலையிலே இவளுடைய நிலைமைகளையெல்லாஞ் சொல்லி
இவள்பக்கல் இரங்கவேண்டுமென்று வேண்டிய பாசுரம்,இது. இதனை நற்றாயிரங்கலென்றலு முண்டு
நம்மாழ்வார் திருவாய்மொழியில் “கங்குலும்பகலும்” என்றதொடக்கத்துத் திருப்பதிகத்தில்
“கங்குலும்பகலுங் கண்டுயிலறியாள்”,
“இவள்திறத்து என்செய்கின்றாயே”,
“வெவ்வுயிர்த்து யிர்த்துருகும்”,
“சிந்திக்குந் திசைக்குந் தேறுங் கைகூப்பும்” என்று அருளிச்செய்தமை காண்க.

ரஜோகுண தமோகுணங்களால் மிக்குத் தீயனவே செய்யுங்கொடிய அரக்கர்கோஷ்டியில் ஒருவனாயிருந்தும்
சத்வகுணமேமிக்கு நல்லனவேசெய்யுமியல்பினனான விபீஷணனது ஞானசீலங்களின் மேன்மை தோன்ற, “உயர் வீடணன்” என்றார்.
இராமபிரான் இராவணாதியரை அழித்தற்பொருட்டுப் பெரியவாநரசேனையைச் சித்தப்படுத்திக்கொண்டு புறப்பட்டுக்
கடற்கரைசேர்ந்தவளவில், இராவணன் தம்பியான விபீஷணன் தான்சொன்ன நல்லறிவைக் கொள்ளாத தமையனை விட்டு
வந்து இராமபிரானைச் சரணமடைய, அப்பெருமாள் அவனுக்கு அபயமளித்து அப்பொழுதே அவனை இலங்கைக்கு
அரச னென முடிசூட்டி அவனால் இலங்கையின் நிலைமையையறிந்து அவனுடனே கடல்கடந்து இலங்கைச்
சார்ந்து அங்குப் பெரும்போர்புரிந்து இராவணனைச் சேனையோடும் புத்திரமித்திராதிய ரோடும் கொன்று,
முன் சொன்னபடி விபீஷணனை இலங்கையரசனாக்கிச் சீதையை மீட்டுக்கொண்டு மீண்டன னென்ற வரலாறுபற்றி,
“வீடணனை மன்னியிலங்கையில்வாழ்கென்ற வேங்கடவாண” என்றாள்.
இவ்விளியினால், பகைவர்கோட்டியிற்சேர்ந்த வலிய ஓர் ஆண்மகனை நின்னைச் சரணமடைந் தவனென்ற
மாத்திரம்பற்றி ஆட்கொண்டு வாழ்வளித்த நீ உனது உறவைப் பெற்று உன்னையன்றி வேறுகதியிலளாகிய
மெல்லியலாளான இப்பெண் மகள் பக்கல் இரக்கங்கொண்டு இவளைப் பரிபாலிக்க வேண்டாவோ? என்ற குறிப்புத் தோன்றும்.
நினது கருணைக்கடல் என்ற பெயர் பொருளுள்ளதாம்படி இவளிடத்துக் கண்ணோட்டஞ் செய்தருளுதல்
கடமை யென்பாள் “கைக்கின் நின்பேர் கருணைக்கடலல்லவே” என்றாள்.

அங்கை – அகங்கையுமாம்; “அகமுனர்ச்செவிகைவரி னிடையன கெடும்” என்பது விதி.
குவிக்கும், உயிர்க்கும், திகைக்கும் – செய்யுமென்முற் றுக்கள் பெண்பாலுக்கு வந்தன. திகைத்தல் – அறிவழிதல்.
“நின்னையுன்னி” என்பது, மத்திமதீபமாகக்கொண்டு முன்னும் பின்னுங் கூட்டப்பட்டது.
ஐயில் = அயில்; திரிபுநயத்தின்பொருட்டுவந்த முதற்போலி. அயிற்கண் – உவமத்தொகை.
மகளிர் கண்ணுக்கு வேல்உவமை, கூரியவடிவிலும் ஆடவர்க்கு நோய்செய்தலிலு மென்க.
“கண்ணுறங்காது” என்ற பாடத்துக்கு – இவளுடைய கண்கள் உறங்காவென்க; சாதியொருமை.
விபீஷணன், கந்யா, கருணா என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
விபீஷணன் என்ற பெயர் – (பகைவர்க்கு) மிகவும்பயங்கர னென்றும் நல்லோர்க்குச் சாந்த மூர்த்தியாய்ப்
பயங்கரனாகாதவ னென்றும் காரணப்பொருள் படும். வாண, பேர் – வாழ்ந, பெயர் என்பவற்றின் மரூஉ.
இன்மை – இல்லாமை யெனக் கொண்டால் செயப்படுபொருள்குன்றியவினையும்;
உடையதாகாமை யெனக்கொண்டால் செயப்படுபொருள்குன்றாதவினையுமாம்;
“கன்னியிலம்” என்ற விடத்து, இன்மை – செயப்படுபொருள் குன்றாததாய்நின்றது. அல்ல என்ற எதிர்மறைப்பலவின்பால்முற்று,
(வேறு இல்லை உண்டு என்பன போல) இருதிணைனயம்பால் மூவிடத்துக்கும் பொதுப்பட
வழங்குதலை இலக் கியங்களிற் காண்க; இது, புதியனபுகுதல்.

எம்பெருமானது பூர்ணாநுபவத்தைப் பெறாதபோது பலவாறு வருந்துகிற ஐயங்காரது நிலைமைகளை
அவர்பக்கல்அன் புடையரான அறிவுடையாளர் அப்பெருமானது சந்நிதியில் விண்ணப்பஞ்செய்து,
இவர்பக்கல்திருவருள் புரிகவென்று பிரார்த்தித்தல், இதற்கு உள்ளுறைபொருள்.
“அயிற்கண்உறங் காள்” என்றது, அவரது கூரியஞானம் சங்கோசமடையாத தன்மையைக் குறிக்கும்.
“உயர்வீடணனை மன்னியிலங்கையில் வாழ்கென்றவேங்கடவாண” என்றது,
எம்பெருமானது சரணாகதரக்ஷணத்வத்தில் ஈடுபாட்டினால். இந்த ஐயங்கார்போல ஆத்ம ஸ்வரூப பூர்த்தியுடைய
அடியாரைப் பெறுதலரிதென் பார், “மற்றோர்கன்னி யிலம்” என்றாரென்க. விவரம் சம்பிரதாயம்வல்லார் வாய்க் கேட்டுஉணர்க.

————–

கடமா மலையின் மருப்பு ஒசித்தாற்கு கவி நடத்தத்
தடம் ஆம் அலைவற்ற வாளி தொட்டாற்கு என் தனி நெஞ்சமே
வடமா மலையும் திருப் பாற் கடலும் வைகுந்தமும் போல்
இடம் ஆம் அலைவு அற்று நின்றும் கிடந்தும் இருப்பதற்கே –16-

(இ – ள்.) கடம் – மதத்தையுடைய,
மா – பெரிய,
மலையின் – மலைபோன்ற (குவலயாபீடமென்னும்) யானையினது,
மருப்பு – தந்தங்களை,
ஒசித்தாய்க்கு – ஒடித்திட்டவனும், –
கவி நடத்த – வாநரசேனைகளை நடத்தியழைத்துக்கொண்டு (இலங்கைக்குச்) செல்லுதற்பொருட்டு,
தடம் ஆம் அலைவற்ற – பெரிதான கடல் வற்றுமாறு,
வாளி தொட்டாய்க்கு – ஆக்நேயாஸ் திரத்தைப் பிரயோகித்தவனுமான உனக்கு, –
வட மா மலையும் திருப்பாற் கடலும் வைகுந்தமும் போல் – வடக்கின்கணுள்ள சிறந்த திருமலையான
திருவேங்கடமலையும் திருப்பாற்கடலும் ஸ்ரீவைகுண்டமும் (நிற்றற்கும் கிடத்தற்கும் இருத்தற்கும் தனித்தனிஇடமாதல்) போல, –
என் தனி நெஞ்சமே – எனது மனமொன்றுதானே,
அலைவு அற்று நின்றும் கிடந்தும் இருப்பதற்கு இடம் ஆம் – ஸ்திரமாக நின்ற திருக்கோலமாக
எழுந்தருளியிருத்தல் சமநத்திருக்கோலமாக எழுந்தருளியிருத்தல் வீற்றிருந்த திருக்கோலமாக
எழுந்தருளியிருத்தல் என்ற மூன்றுக்கும் ஒருங்கேஉரிய இடமாம்; (எ – று.)

நின்றதிருக்கோலமாகவும் கிடந்ததிருக்கோலமாகவும்வீற்றிருந்த திரு க்கோலமாகவும் எம்பெருமானை அடியேன்
அன்போடு தியானித்தல்பற்றி அப்பெருமான் நான்நினைத்தபடியெல்லாம் எனது மனத்தில் வந்து
எழுந்த ருளியிருக்கின்றன னென்பது தோன்ற, இங்ஙனங் கூறினார்.
(“நிற்பதும் மொர்வெற்பகத் திருப்பு விண் கிடப்பதும், நற்பெருந்திரைக்கடலுள் நானி லாதமுன்னெலாம்,
அற்புதன் னனந்தசயன னாதிபூதன் மாதவன், நிற்பதும் மிருப்பதுங் கிடப்பதும் மென்னெஞ்சுளே,”
“கல்லுங் கனைகடலும் வைகுந்தவானாடும், புல்லென்றொழிந்தனகொ லேபாவம் –
வெல்ல, நெடி யான் நிறங்கரியான் உள்புகுந்துநீங்கான், அடியேன துள்ளத்தகம்” என்ற
ஆழ்வார்களருளிச் செயல்களை அடியொற்றியது, இது.

“அத்திருப்பதிகளைக் காற்கடைக்கொண்டு அவ்விடங்களில் நின்றும் இருந்தும் கிடந்தும் செய்தருளின நன்மை
யெல்லாம் என்நெஞ்சிலேஆய்த்து. நிஹீநாக்ரேஸரனான என்னை விஷயீகரித்தவாறே திருமலையில்
நிலையும் மாறி என்நெஞ்சிலே நின்றருளினான்; தன் திருவடிகளில் போக்யதையை எனக்கு அறிவித்த பின்பு
பரமபதத்திலிருப்பைமாறிஎன்நெஞ்சிலேபோகஸ்தாநமாயிருந்தான்; ……
திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளினபடியைக்காட்டி என்னுடைய ஸாம்ஸாரிகமானதாபத்தைத்தீர்த்தபின்பு
திருப்பாற்கடலிற்கிடையை மாறி என் நெஞ்சிலே கண்வளர்ந்தருளித் தன்விடாய்தீர்ந்தான்;
இப்படி என்பக் கல்பண்ணினவியாமோகம் என்னால்மறக்கலாயிருக்கிறதில்லை யென்கிறார்” என்ற
வியாக்கியாநவாக்கியங்கள் இவ்விடத்துக்கும் பொருந்தும்.

“பருப்பதம் தாம்மன்னிநிற்பது பாற்கடல் பள்ளிகொள்வது,
இருப்பது அந்தா மம் பண்டு இப்போதெலாம் இளஞாயிறன்ன,
உருப்பதம்தாமதர்க்கீயாம லன்பர்க்குதவழகர்,
திருப்பதம் தாமரைபோல்வார் உகப்பது என்சிந்தனை யே” என்ற அழகரந்தாதிச் செய்யுளோடு இதனை ஒப்பிடுக.)
திருவேங்கட த்திலே நின்றதிருக்கோலமாகவும், திருப்பாற்கடலிலே கிடந்ததிருக்கோல மாகவும்,
வைகுந்தத்திலே வீற்றிருந்ததிருக்கோலமாகவும் எம்பெருமான் எழுந்தருளியிருத்தலை முறையே சென்று இயைந்து குறித்தலால், பின்னி ரண்டடி – முறைநிரனிறைப்பொருள்கோளின்பாற்படும்.

தனிநெஞ்சம் – ஒப்பற்ற மனமெனினுமாம்: திருவேங்கடம்முதலிய மூன்று திவ்வியதேசங்கள் போல
நிற்றல் கிடத்தல் இருத்தல் என்ற மூன்றில் ஒவ்வொன்றற்கே உரியதாதலன்றி நெஞ்சம் அம்மூன்றற்கும் தான்
ஒன்றே உரியதாதல்பற்றி “தனிநெஞ்சம்” என்று சிறப்பித்துக்கூறியதாகக் கொள்க; இது வேற்றுமையணியின்பாற்படும்.
மூன்றாமடியில், மா – அழகுமாம். கடம்மாமலை – மதசலத்தையுடைய பெரியமலை; எனவே, யானையாயிற்று.
இங்கு, மலையென்பதை உவமையாகுபெய ரென்னலாம்.
வலியபெரியவடிவிலும், மதவருவிசொரிதலிலும் யானைக்கு மலை உவமை. அலை – கடலுக்குச் சினையாகுபெயர்.

————

இருப்பது அனந்தனில் எண்ணில் இல் வைகுந்தத்து என்பர் வெள்ளிப்
பருப்பதன் அம் தண் மலரோன் அறிகிலர் பார் அளந்த
திருப்பதன் நந்தன் மதலை நிற்கும் திரு வேங்கடம் என்
பொருப்பு அது அனந்தல் தவிர்ந்து உயிர்காள் தொழப் போதுமினே –17-

(இ – ள்.) உயிர்காள் – சேதநர்களே! –
“இருப்பது – (எம்பெருமான் தனது தலைமை தோன்ற) அரசுவீற்றிருக்கின்றது,
எண்ணல் இல் வைகுந்தத்து – (இன்னதன்மையதென்று) சிந்தித்தற்கும் இயலாத ஸ்ரீவைகுண்டத்தில்,
அனந்தனில் – ஆதிசேஷனாகிய திவ்வியசிங்காதனத்தின்மீது,”
என்பர் – என்றுசொல்வர் (மெய்யுணர்ந்த ஆன்றோர்);
(அத்திருக்கோலத்தை), வெள்ளி பருப்பதன் – வெள்ளிமலையாகிய கைலாசத்தி லிருப்பவனான சிவனும்,
அம் தண் மலரோன் – அழகிய குளிர்ந்த (அத்திருமாலின் நாபித்) தாமரை மலரில் தோன்றியவனான பிரமனும்,
அறிகிலர் – கண்டறியுந் தர முடை யாரல்லர்; (அதுநிற்க): –
பார் அளந்த திரு பதன் – உலகங்களை அளந்த திருவடிகளை யுடையவனும்,
நந்தன் மதலை – நந்தகோபன் வளர்த்தகுமாரனுமான திருமால்,
நிற்கும் – (யாவரையும் ஈடேற்றுதற்கு அடியவர்க்கெளியனாய்) நின்ற திருக்கோலமாக எழுந்தருளியிருக்குமிடமான,
திருவேங்கடம் என் பொருப்பு அது – திருவேங்கடமென்ற மலையை,
அனந்தல் தவிர்ந்து தொழ – சோம்பலொழிந்து வணங்குதற்கு, போதுமின் – வாருங்கள்; (எ – று.)

திருப்பதியாத்திரைசென்று திருவேங்கடமுடையானைச்சேவித்து வாழ்வுபெறுதற்கு அனைவரையும் உடனழைக்கிறார்;
தம்மைப்போலவே உல கத்தாரும் உய்யவேண்டு மென்னும் பரசமிருத்தி யுடையவராதலால்.
“சென்றாற்குடையாம் இருந்தாற் சிங்காதனமாம், நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும்,
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும், அணையாந் திருமாற்கு அரவு” என்றபடி
ஆதிசேஷன் திருமாலுக்குப் பலவகைக் கைங்கரியங்கள் புரிதலால், “இருப்ப தனந்தனில்” எனப்பட்டது;
“தண் அநந்தசிங்காதன” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்.
மீளாவுலகமாகிய பரமபதம் சிந்தையும் மொழியுஞ் செல்லா நிலைமைத் தாதலின், “எண்ணலில் வைகுந்தம்” எனப்பட்டது;
“முந்தமறையினின்றல்லாதெத்தேவர்க்கு முன்னவரிது,
அந்தமிலது அரங்கன்மேவு வைகுந்தமானதுவே” என்றார் திருவரங்கத்துமாலையிலும்.
திரிமூர்த்திகளில் மற்றையிருமூர்த்தியரும் அறி கில ரெனவே, பிறர்அறியாமை சொல்லவேண்டாதாயிற்று;
“பத்துடை யடியவர்க் கெளியவன் பிறர்களுக் கரிய வித்தகன்” என்பதுங் காண்க.

நந்தன் – கண்ணனை வளர்த்த தந்தை. வசுதேவனும் தேவகியும் கம்ச னாற் சிறையிலிருத்தப்பட்டு வடமதுரையில்
தளைபூண்டிருக்கையில், திரு மால் தேவகியினிடம் எட்டாவது கருப்பத்திற் கண்ணனாய் அவதரிக்க,
அக்குழந்தையைக் கம்சன் கொல்லக்கூடு மென்ற அச்சத்தால் தாய்தந்தையர் அத்தெய்வக்குழவியின்
அநுமதி பெற்று அந்தச்சிசுவை அதுபிறந்தநடுராத் திரியிலேயே திருவாய்ப்பாடியிலுள்ள இடையர்க்கெல்லாந்
தலைவனான நந்தகோபனது திருமாளிகையிலே இரகசியமாகக் கொண்டுசேர்த்துவிட்டு,
அங்கு அப்பொழுது அவன்மனைவியான யசோதைக்கு மாயையின் அம்சமாய்ப் பிறந்திருந்த தொரு
பெண்குழந்தையை எடுத்துக்கொண்டுவந்துவிட, அதுமுதற் கம்சனைக் கொல்லுகிறவரையிற்
கண்ணபிரான் அக்கோ குலத்திலேயே நந்தகோபன்குமரனாய் யசோதைவளர்க்க வளர்ந்தருளின னென்று உணர்க.

அநந்தன் என்ற வடசொல் – ந அந்த என்று பிரிந்து, பிரளயத்திலும் அழிவில்லாதவ னென்று காரணப்பொருள்படும்.
பருப்பதம் – பர்வதமென்ற வடசொல்லின் சிதைவு. பொருப்பது என்பதில், “அது” என்பது – பகுதிப் பொருள்விகுதி.

————–

போதார் அவிந்த வரையும் புகா அண்ட புற்புதத்தின்
மீது ஆர இந்த வினை தீர்க்க வேண்டும் -மண் விண்ணுக்கு எல்லாம்
ஆதார இந்தளம் தேன் பாடும் வேங்கடத்து அப்ப நின் பொற்
பாதார விந்தம் அல்லால் அடியேற்கு ஒரு பற்று இல்லையே –18-

(இ – ள்.) விண் மண்ணுக்கு எல்லாம் ஆதார – விண்ணுலகத்துக்கும் மண்ணுலகத்துக்கும் மற்றெல்லாவுலகங்கட்கும் ஆதாரமாயுள்ளவனே!
தேன் இந்தளம் பாடும் வேங்கடத்து அப்ப – வண்டுகள் இந்தளமென்னும் பண்ணைப்பாடுதற்கிடமான
(சோலைகள்சூழ்ந்த) திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற சுவாமீ! –
நின் பொன் பாத அரவிந்தம் அல்லால் – உனது பொலிவுபெற்ற திருவடித்தாமரைமலரே யன்றி,
அடியேற்கு ஒரு பற்று இல்லை – தாசனான எனக்கு வேறொருபற்றுக்கோடு இல்லை;
போதார் அவிந்த வரையும் புகா – பிரமர்கள் அழியுமளவும் ஒடுங்குதலில்லாத (பிரமன்அழியும்போது உடனழியும் இயல்பினவான),
அண்ட புற்புதத்தின் – நீர்க்குமிழிகள் போன்ற அண்டகோளங்களுக்கு,
மீது – மேலேயுள்ளதான பரமபதத்தில்,
ஆர – (யான்சென்று) சேருமாறு,
இந்தவினை தீர்க்கவேண்டும் – (என்னால் ஈட்டப்பட்ட) இக்கருமங்களையெல்லாம் (நீயே) ஒழித்தருளவேண்டும்.

“போதார்” என்பதற்கு, கீழ் 2 – ஆம்பாட்டில் “போதன்” என்றதற்குக் கூறிய காரணப்பொருளைக் கொள்க.
அண்டங்கள் அநந்த மென்றும், அவை ஒவ்வொன்றற்கும் ஒவ்வொருபிரமனுள னென்றும்,
அவையெல்லாம் ஆதியிற் பிரமனுடன் தோன்றி அந்தத்திற் பிரமனுடனே யொடுங்கு மென்றும்,
இப்படிப்பட்ட அநந்தகோடி பிரமாண்டங்க ளடங்கிய மூலப்பிரகிருதிக்கு மேலுள்ளது எம்பெருமான்
எழுந்தருளியிருக்கின்ற முத்தியுலகமாகிய பரம பத மென்றும் உணர்க.
“பிரமர்வாழண்டங்கள்மீதாம் பரனார்” என்றார் திருவேங்கடமாலையிலும்.
அண்டங்கள் நீரிற்குமிழிபோலத் தோன்றியழியும் இயல்பின வாதலால், “அண்ட புற்புதம்” எனப்பட்டன;
(“ஆழிப்பிரா னடிக்கீழுற்பவித்தழியும், பரவையின்மொக்குளைப்போற் பலகோடிபகிரணடமே” என்ற திருவரங்கத்தந்தாதியையும்,
“வாரித்தலமுங் குலபூதரங்க ளும் வானு முள்ளே,
பாரித்துவைத்த வில்வண்டங்கள்யாவும் படைக்கமுன்னாள்,
வேரிப்பசுந்தண்டுழாயரங்கேசர் விபூதியிலே,
மூரிப்புனலிற் குமிழிகள்போல முளைத்தனவே” என்ற திருவரங்கத்துமாலையையுங் காண்க.)
“புற்புதம்” என்பதற்கு ஏற்ப, “புகா” எனப்பட்டது; தான் தோன்றிய விடத்திலேயே புக்கு ஒடுங்குதல் நீர்க்குமிழியின் இயல்பாதல் காண்க.
“நிலமிசை நீடுவாழ்வார்” என்றாற்போல, “அண்டபுற்புதத்தின் மீதுஆர” என்றார்.
அழியு மியல்பினவான எல்லாவுலகங்கட்கும் மேலாயது அழியாவியல்பினதான வீட்டுலக மென்க.
விந்தம் வினை என்று பதம்பிரித்து, விந்தியமலைபோன்ற வினைத்தொகுதி யெனினுமாம்.

எல்லாவுலகங்கட்குங் கீழே எம்பெருமான் ஆதிகூர்மரூபியாயிருந்து கொண்டு அவற்றையெல்லாம் தாங்குதலும்,
பிரளயகாலத்தில் அனைத்துல கத்தையும் அப்பெருமான் வயிற்றில்வைத்திருந்து பாதுகாத்தலும்,
பகவானது திவ்வியசக்தியின் உதவியினாலன்றி யாதொருபொருளும் எங்கும்நிலை பெறாமையும் பற்றி,
“விண்மண்ணுக்கெல்லாம் ஆதார” என்றார்;
“தலமேழுக்கு மாதாரா” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும். ஸ்வாமீ என்று வடமொழியிலும்,
அப்பன் என்று தென்மொழியிலும் திருவேங்கடமுடையா னுக்குத் திருநாமம் வழங்கும்.
பற்று – புகலிடம், கதி, ரக்ஷகம். அண்டபுத் புதம், பாதாரவிந்தம் – முன்பின்னாகத் தொக்க உவமைத்தொகை; வட மொழித்தொடர்.

———–

தலைவனைப் பிரிந்த தலைவியின் வருத்தம் கண்டு ஆற்றாத தோழி சந்த்ரனை நோக்கி இரங்கி கூறல் –

பற்றி இராமல் கலை போய் வெளுத்து உடல் பாதி இரா
வற்றி இராப்பகல் நின் கண் பனி மல்கி மாசு அடைந்து
நிற்றி இராக மொழிச்சியைப் போல் நெடு வேங்கடத்துள்
வெற்றி இராமனை வேட்டாய் கொல் நீயும் சொல் வெண் மதியே –19-

(இ – ள்.) வெள் மதியே – வெண்ணிறமான சந்திரனே! –
பற்றி இராமல் – (ஓரிடத்திலே) நிலைத்துத்தங்கியிராமல் (எங்கும்உழன்றுகொண்டு),
கலை போய் – ஒளிமழுங்கப்பெற்று அல்லது உடல்மெலிதலால் ஆடைசோரப்பெற்று (கலைகள் குறைந்து நீங்கப்பெற்று),
வெளுத்து – நிறம்வெளுத்து,
உடல் பாதி இரா வற்றி – வடிவம் (முன்பு இருந்தவளவிற்) பாதியும் இராதபடி தேயப்பெற்று,
இரா பகல் – இரவிலும் பகலிலும்,
நின் கண் பனி மல்கி – உனதுகண்கள் நீர்நிரம்பப்பெற்று (உன்னிடத்துப் பனிநிரம்பப்பெற்று),
மாசு அடைந்து – (நீராடாது தரையிற்புரளுதலால் உடம்பில்) தூசிபடியப் பெற்று (களங்கமுற்று),
இராகம் மொழிச்சியை போல் நிற்றி – இசைப் பாட்டுப்போ லினிய சொற்களையுடையவளான இத்தலைமகளைப் போன்று நிற்கிறாய்:
(அவள்போலவே), நீயும் -, நெடு வேங்கடத்துள் வெற்றி இராமனை வேட்டாய் கொல் – உயர்ந்த திருவேங்கடமலையில்
எழுந்தருளியிருக்கிற சயத்தையுடைய இராமனாய் அவதரித்தவனான திருமாலை விரும்பினையோ?
சொல் – சொல்வாய்; (எ – று.)

“நைவாயவெம்மேபோல் நாண்மதியே நீ யிந்நாள், மைவானிருளகற்றாய் மாழாந்து தேம்புதியால்,
ஐவாயரவணைமே லாழிப்பெருமானார், மெய் வாசகங்கேட் டுன்மெய்ந்நீர்மைதோற்றாயே” என்ற திருவாய்மொழியைத் தழுவியது இது.
அது, தலைவிகூற்று; இது, அவ்வாறே தோழிகூற்றாக நிகழ்ந்தது. இத்துறை, தன்னுட்கையாறெய்திடுகிளவி யெனப்படும்;
அதாவது – தமக்குநேர்ந்த துன்பத்தைத் தம்ஆற்றாமையாற் பிறிதொன்றன்மேலிட்டுச் சொல்லுஞ் சொல்.
இது தலைவி தோழி என்னும் இருவர்க்கும் உரியதென்பதை, இறையனாரகப்பொருளுரைகொண்டும் உணர்க.
(ஆயின், தம்முட் கையாறெய்திடுகிளவி யென்று பன்மையாற்சொல்லாது
தன்னுட்கையா றெய்திடுகிளவியென ஒருமையாற்சொல்லியது எற்றிற்கோ வெனின், –
தோழி தலைமகள் என இருவரையும் வேறுபடுத்திக்கருதாது ஒருவராகக் கருதற்பொருட்டாக ஒருமையாற்புணர்த்தா ரென்க.)
இங்ஙனஞ்சொல்லுதலின் பயன், களவுப்புணர்ச்சியொழுக்கத்திலேநின்று சிறைப்புறத்தானாகிய தலைமகன் கேட்டு
விரைவில் வெளிப்படையாகவந்து இத்தலைமகளை மணஞ்செய்து கூடுபவனதால், தோழிக்குத் தலைவி
பக்கலுள்ள பேரன்பினால் அவள் தலைவனைப்பிரிந்துவருந்துகின்றபொழுது கட்புலனாகும்
பொருளெல் லாம் அவள்போலவேவருந்துகின்றனவாகத் தோன்றுதலால்,
சந்திரனை நோக்கி “நீயும் வேட்கைநோயால் ஈடுபடுகின்றனையோ?” என்றாள்.

இச்செய்யுளில் சிலேடையுவமையணி காண்க; அதாவது – சொற் பொதுமைகாரணமாக வரும் ஒப்புமை.
உபமானமாகிய தலைவிக்கு –
பற்றியிராமை – விரகதாபத்தால் ஓரிடத்து நிலைகொள்ளாமை;
கலைபோதல் – ஒளிகுறைதல்; அல்லது, உடல்மெலிய ஆடைசோர்தல்; வெளுத்தல் – மேனி நிறம்மாறுதல்;
உடல்பாதியிராவற்றுதல் – உடம்புமெலிதல்: இராப்பகல் கண் பனிமல்குதல் – அல்லும்பகலும் அநவரதமும் கண்ணீர்பெருகப் புலம்புதல்;
மா சடைதல் – பிரிந்தகாலத்தில் உடல்மாசு தீர நீராடுதலின்றித்தரையிற் புரளுதலால் உடம்பில் தூசிபடிந்திருத்தல்.
உபமேயமாகிய சந்திரனுக்கு –
பற்றியிராமை – ஒருபொழுதேனும் அசைவற்று ஓரிடத்துநில்லாமல் வானவீதியில் எப்பொழுதுஞ் சஞ்சரித்தல்;
கலைபோதல் – கிருஷ்ணபக்ஷத்தில் நாளடைவிலே கலைகுறைதல்; (கலை – சந்திரன்பங்கு.)
வெளுத்தல் – இயற்கை நிறம்; உடல்பாதியிராவற்றுதல் – கிருஷ்ணபக்ஷத்தில் தேய்தலால்;
இராப்பகல் கண் பனி மல்குதல் – எப்பொழுதும் பனிபோலக்குளிர்ந்தகிரணங் களைத் தன்னிடத்திலே யுடையவனாதல்.
சந்திரனுக்கு வடமொழியில் “ஹிமகரன்” என ஒருபெயர்வழங்குதலுங் காண்க. மாசுஅடைதல் – களங்கமுடைமை.
இது, செம்மொழிச்சிலேடை; சொற்கள் வெவ்வேறுவகையாகப் பிரியாது ஒருவகையாகவே பிரிந்து இருபொருள்பட்டதனால்.

முதலடியிறுதியில், இரா என்பது – இராமல் என்பதன் விகாரம்: ஈறு கெட்ட எதிர்மறைவினையெச்சம்.
பாதி – பகுதி யென்பதன் மரூஉ. ராகம்,
ராமன் – வடசொற்கள். மொழிச்சி – பெண்பாற் பெயர். ராமன் என்ற திருநாமம் – தனது திருமேனியழகினாலும்
நற்குணநற்செய்கைகளாலும் யா வரையும் தன்பக்கல் மனங்களித்திருக்கச்செய்பவ னென்று காரணப்பொ ருள்படும்.
“ஆடவர் பெண்மையை யவாவுந் தோளினாய்” என்றபடி இராம மூர்த்தி சௌந்தரியாதி கலியாண குண கண
பரிபூர்ணனான உத்தமநாயகனாதலால், அவனை யெடுத்துக்கூறினாள்.

எம்பெருமானோடுபூர்ணாநுபவத்தைப்பெறாமையால் ஐயங்கார் வருந்தி ஒருநிலைகொள்ளாது ஒளிகுறைய நிறம்மாறி
உடல்மெலிந்து இரவும்பகலும் கண்ணீர்பெருகக் கீழ்விழுந்துபுரண்டு மாசுபடிய நின்ற நிலையைக் கண்ட அன்பர்கள்
அவர்பக்கல் தமக்குஉள்ள அன்புமிகுதியால் தம்கண்ணெதிர்ப் படுகின்ற பொருள்களையெல்லாம்
எம்பெருமானைப்பிரிந்துவருந்துகின்றன வாகக்கொண்டு சந்திரனைநோக்கி
“நீயும் இவர்போலப் பகவத்விச்லேஷத் தால் நோவுபடுகின்றனையோ?” என்று வினவுகின்றன ரென
இதற்கு உள்ளுறைபொருள் காண்க; விவரம் தானே விளங்கும்.

————–

மதி ஆதவன் கதிர் மின்மினி போல் ஒளிர் வைகுந்தம் தா
மதியாது அவன் தர வாழ்ந்திருப்பீர் வட வேங்கடவன்
மதியாத வன் கடத்துள் தயிர் வாய் வைத்த மாயப் பிரான்
மதியாதவன் உரம் கீண்டான் கழல் சென்னி வைத்திருமே –20-

(இ – ள்.) கடத்துள் – குடத்தில் வைத்திருந்த,
மதியாத வல் தயிர் – கடையாத கட்டித்தயிரை,
வாய்வைத்த – (கிருஷ்ணாவதாரத்திற்களவுசெய்து) உண்டருளிய,
மாயம் பிரான் – மாயையையுடைய பெருமானும்,
மதியாதவன் உரம் கீண்டான் – (தன்னை) மதியாதவனான இரணியாசுரனுடைய மார்பை (க் கைந்நகத்தால்) இடந்தவனுமான,
வட வேங்கடவன் – வடக்கின்கணுள்ள திருவேங்கடமலையை யுடையானது,
கழல் – திருவடிகளில்,
சென்னி வைத்திரும் – தலையைவைத்து வணங்குங்கள்; (அங்ஙனம் வணங்குவீராயின் அதன்பயனாக), –
மதி ஆதவன் கதிர் மின்மினி போல் ஒளிர் வைகுந்தம் – சந்திரன் சூரியன்என்ற இருசுடர்களின் ஒளியும்
(தனதுபேரொளியின்முன்) மின்மினிப்பூச்சிபோலாகும்படி (திவ்வியதேஜோமயமாய்) விளங்குகின்ற ஸ்ரீவைகுண்டத்தை,
தாமதியாது அவன்தர – காலதாமசஞ்செய்யாமல் அப்பெருமான் (உங்கட்குக்) கொடுத்தருள,
வாழ்ந்துஇருப்பீர் – (பெற்று நீங்கள் அங்கு என்றும்) நிலையாக வாழ்வீர்கள்; (எ – று.)

“சரணமாகுந் தனதா ளடைந்தார்க்கெல்லாம், மரணமானால் வைகுந்தங்கொடுக்கும் பிரான்” என்ப வாதலால்,
“தாமதியாது தர” என்பதற்கு – இப்பிறப்பின்முடிவிலேகொடுக்க என்று பொருள்கொள்க.
மின்மினி . இருளில்மின்னுவதொரு பறக்கும்பூச்சி. வன்மையைக்கடத்துக்கும் அடைமொழி யாக்கலாம்.
“அவன்” என்ற சுட்டுப்பெயர் “வடவேங்கடவன்” என்ற இயற்பெயரின் முன் வந்தது, செய்யுளாதலின்;
“செய்யுட்கு ஏற்புழி” என்பர் நன்னூலாரும்.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கட மாலை –81-100-

February 20, 2022

நாரியர் தம் கூந்தலினும் நாலும் அருவியினும்
வேரினறும் சாந்து ஒழுகும் வேங்கடமே -பாரினுளார்
அற்ப சுவர்க்கத்தார் அறிவு அரியார் முன் மேய்த்த
நல்பக வர்க்கத்தார் நாடு –81-

(இ – ள்.) நாரியர்தம் கூந்தலினும் – மாதர்களுடைய கூந்தலினின்றும்,
வேரி நறு சாந்து ஒழுகும் – வாசனையையுடைய நல்லமயிர்ச்சாந்து ஒழுகப்பெற்ற:
நாலும் அருவியினும் – கீழ்நோக்கி வருகின்ற நீரருவிகளிலும்,
வேரின் அறும் சாந்து ஒழுகும் – வேரோடும்அற்ற சந்தனமரங்கள் அடித்துக்கொண்டு ஓடிவரப்பெற்ற:
வேங்கடமே -,-
பாரின் உளார் – பூமியி லுள்ளவர்களாலும்,
அற்ப சுவர்க்கத்தார் – இழிவாகிய சுவர்க்கலோகத்தி லுள்ளவர்களாலும்,
அறிவு அரியார் – அறியமுடியாதவரும்,
முன் – முன்பு (கிருஷ்ணாவதாரத்தில்), மேய்த்த -,
நல் பசு வர்க்கத்தார் – நல்லபசுக்களின் தொகுதியையுடையவருமான திருமாலினது,
நாடு – திவ்வியதேசம்; (எ – று.)

“வேரினறுஞ்சாந்து” என்ற தொடரின் முதற்பொருளில் சிறப்பு னக ரத்தைப் பொதுநகரமாக அமைத்துக்கொள்ளவேண்டும்;
பொது நகரமும் சிறப்புனகரமும் ஒலிவடிவில் அபேதமாயிருத்தல்பற்றி, இவ்வாறு புணர்த்தினார்.
இங்ஙனமே வரும் மற்றைப்பாடல்களும் காண்க. மயிர்ச்சாந்து – மயிரிற் பூசப்படும் வாசனைக்கலவை; வாசனைத் தைலமுமாம்.
நாலும் என்ற எதிர்காலப் பெயரெச்சத்தில், நால் – வினைப்பகுதி. மலையருவி வெள்ளத்தின் விசையால் அங்குள்ள
சந்தனம் முதலிய மரங்கள் வேரோடு அறுத்துத் தள்ளப்பட்டு வருதல் இயல்பு .
பாரினுளார் – மனிதர். சுவர்க்கத்தார் – தேவர். சிற்றின்பத்தையே யுடையதான சுவர்க்கம் நிரதிசயப்
பேரின்பத்தையுடைய பரம பதத்தை நோக்க எளிமைப்படுதலால், “அற்பம்” எனப்பட்டது.
அல்ப ஸ்வர்க்கம், பசுவர்க்கம் – வடசொற்றொடர்கள். கண்ணன் திருவாய்ப்பாடியில் வளர்ந்தபொழுது
தான் வளர்கிற குலத்திற்கு ஏற்ப ஆநிரை மேய்த்தமை பிரசித்தம்.

————-

மாதரார் கண்ணும் மலைச் சாரலும் காமர்
வேத மாற்கம் செறியும் வேங்கடமே -பாதம் ஆம்
போதைப் படத்து வைத்தார் போர் வளைய மாற்றரசர்
வாதைப் படத்து வைத்தார் வாழ்வு –82-

(இ – ள்.) மாதரார் கண்ணும் – மகளிர்களுடைய கண்களும்,
காமர் வேதம் மாற்கம் செறியும் – காமநூல்வழியைப் பொருந்தப்பெற்ற:
மலை சாரலும் – மலைப்பக்கங்களும்,
காமர் வே தமால் கம் செறியும் – அழகிய மூங்கில்கள் தமது உருவத்தால் வானத்தை நெருங்கப்பெற்ற:
வேங்கடமே -,-
பாதம் ஆம் போதை – (தமது) திருவடிகளாகிய தாமரைமலர்களை,
படத்து வைத்தார் – (காளியனென்னும் பாம்பின்) படத்தில் ஊன்றவைத்தவரும்,
போர் – யுத்தத்தில்,
மாறு அரசர் வளைய – பகையரசர்கள் வளைந்து கொள்ள,(அவர்களை),
வாதை பட துவைத்தார் – துன்பப்படுமாறு அழித்தவருமான திருமால்,
வாழ்வு – எழுந்தருளியிருக்குமிடம்; (எ – று.)

“மாதர் காதல்” என்ற தொல்காப்பிய உரியியற் சூத்திரத்தால் மாதர் என்பது – ஆசையென்னும்பொருளை
யுணர்த்தும் உரிச்சொல்லாதல் அறிக. மாதரார் – விரும்பப்படும் அழகுடையார். காமர் – காமன்; மன்மதன்: உயர் வுப்பன்மை:
அவனுடைய வேதமென்றது, காமசாஸ்திரத்தை. மாதர்கண்கள் காமவேதமார்க்கம் செறிதலாவது – பார்வையழகால் ஆடவரைக்
காம வசப்படுத்துதல். மார்க்கம் என்ற வடசொல், சிலேடைநயம்நோக்கி மாற்கம் என விகாரப்பட்டது.
தமால் – தம்மால்; தொகுத்தல். கம் – வடசொல்.

பாதமாம் போது – உருவகம். திருவடிக்குத் தாமரையுவமை, செம்மை மென்மை அழகுகளில்.ழுபாதத்தைப்படத்துவைத்தார்” என்றது,
காளியன் முடியில் தமதுதிருவடிபதிந்த தழும்பு என்றும்நிலையாக இருக்கும்படி அழுந்த வைத்தவரென்ற பொருளை விளக்கும்;
“ஓ சர்ப்பராசனே! நீ கருடனுக்குப் பயப்படவேண்டாம்; உன் சிரசில் என் திருவடி பொறித்த வடு இருத்தலைக் கண்டு
உன்னை அவன் ஒன்றும் செய்யமாட்டான்” என்று கண்ணன் காளியனுக்கு வரமளித்தமை காண்க.
இந்நூலின் முதற்செய்யுளில் “பையரவின் சூட்டிற் சிரமபதநாட்டினான்” என்றதிலும் இக்கருத்து அமைந்துளது.
“போர்” என்றது – பாரதயுத்தம் முதலியவற்றையும், “மாற்றரசர்” என்றது – துரியோதனாதியர் முதலியோரையுங் குறிக்கும்.
“போர்விளைய” என்ற பாடத்துக்கு – போர் உண்டாக என்க. மாற்றரசர் – மாறுபாட்டையுடைய அரசர்.
பாதா என்ற வடமொழி, வாதையென விகாரப்பட்டது.

——————

எத்திக்கும் காம்பும் எயினரும் ஆரத்தினையே
வித்திக் கதிர் விளைக்கும் வேங்கடமே –தித்திக்கும்
காரி மாறன் பாவார் காதலித்தார் தம் பிறவி
வாரி மாறு அன்பு ஆவார் வாழ்வு –83-

(இ – ள்.) எ திக்கும் – (அம்மலையின்) எல்லாப்பக்கங்களிலும், –
காம்பும் – மூங்கில்களும்,
ஆரத்தினையே வித்தி கதிர் விளைக்கும் – முத்துக்களையே உண்டாக்கி ஒளியைவீசப்பெற்ற:
எயினரும் – வேடர்களும்,
ஆர தினையே வித்தி கதிர் விளைக்கும் – மிகுதியாகத் தினையையே விதைத்துக் கதிர்களை விளையச்செய்தற் கிடமான:
வேங்கடமே -,-
தித்திக்கும் – இனிமையான,
காரி மாறன் பாவார் – காரியென்பவரது திருக்குமாரரான நம்மாழ்வாருடைய பாசுரத்தைப் பெற்றவரும்,
காதலித்தார்தம் – (தம்மை) விரும்பின அடியார்களுடைய,
பிறவி வாரி – பிறப்பாகிய கடல்,
மாறு – நீங்குதற்குக் காரணமான,
அன்பு ஆவார் – அருளின் மயமாகுபவருமான திருமால்,
வாழ்வு – எழுந்தருளியிருக்குமிடம்; (எ – று.)

“எத்திக்கும்” என்பதை, சிலேடைப்பொருளிரண்டுக்குங் கூட்டுக. சிறந்த சாதி மூங்கில் முற்றினபொழுது
அதன் கணுக்கள் வெடிக்க அவற்றினின்று நல்லமுத்துப் பிறக்குமென்றல், கவிமரபு.
(முத்துப்பிறக்கு மிடங்கள்இன்னவையென்பதை, “தந்தி வராகமருப் பிப்பி பூகந் தழைகதலி, நந்து சலஞ்சல மீன்றலை
கொக்கு நளின மின்னார், கந்தரஞ் சாலி கழை கன்னலா வின்பல் கட்செவி கார்,
இந்து வுடும்பு கரா முத்தமீனு மிருபதுமே” என்பதனால் அறிக.)
ஆரம் – ஹாரம் என்ற வடசொல்லின் விகாரம். தினை – ஒருவகைத்தானியம். ஏ – இசைநிறை.
தினைவித்திக் கதிர்விளைத்தல் – தினைப் பயிரிடுதல்.

பாண்டிய நாட்டில் தாமிரபர்ணி நதிதீரத்தி லுள்ள திருக்குருகூரிலே வேளாள வருணத்தவரான திருவழுதி வளநாட ரென்பவரது
சந்ததியில் காரியென்பவர்க்கு உடைய நங்கையாரது திருவயிற்றிலே அவதரித்தவ ராத லால், நம்மாழ்வார், “காரிமாறன்” எனப்பட்டனர்.
இவர் பிறந்தபொழுதே தொடங்கி அழுதல் பால்குடித்தல் முதலிய லோகவியாபாரம் ஒன்றுமின்றி உலகநடைக்கு மாறாக இருந்ததனால்,
இவர்க்கு மாற னென்று திருநாம மாயிற்று. வலிய வினைகளுக்கு மாறாக இருத்தலாலும், பாண்டிய நாட்டில் தலைமையாகத்
தோன்றியதனாலும் வந்த பெய ரென்றலும் உண்டு;
மாறன்பா – திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, திருவாய் மொழி என்னும் நான்கு திவ்வியப்பிரபந்தங்கள்.
காதலித்தார் – காதலென்னும் பெயரினடியாகப் பிறந்த தெரிநிலை வினையாலணையும் பெயர். வாரி – வடசொல்:
நீர்; கடலுக்கு இலக்கணை. காரணகாரியத் தொடர்ச்சியாய் எல்லைகாண வொண்ணாது மாறிமாறி வருதலாலும்,
அச்சந்தருதலாலும், கடத்தற் கரிதாதலாலும், பிறப்பு, கடலெனப்பட்டது. மாறு என்ற வினைத்தொகை, இங்குக் காரியப்பொருளில் வந்தது.

————–

பார் ஓடு கான்யாரும் பல் களிறும் நந்தவனம்
வேரோடலைத் தீர்க்கும் வேங்கடமே –கார் ஓதம்
சுட்ட கருவில் படையார் தொண்டரை மீண்டு ஏழு வகைப்
பட்ட கருவில் படையார் பற்று –84-

(இ – ள்.) பார் ஓடு கான் யாறும் – (அம்மலையினின்று) பூமியைநோக்கி ஓடிவருகிற காட்டாறுகளும்,
நம் தவனம் வேர் ஓடலை தீர்க்கும் – நமது தாகம் நிலைத்திருத்தலை நீக்கப்பெற்ற:
பல் களிறும் – பல மதயானைகளும்,
நந்தவனம் வேரோடு அலைத்து ஈர்க்கும் – பூந்தோட்டத்திலுள்ள மரங்களை வேருடன் அசைத்து இழுக்கப்பெற்ற:
வேங்கடமே -,-
கார் ஓதம் சுட்ட – கரு நிறமான கடலை வெதும்பச்செய்த,
கரு வில் படையார் – பெரிய வில்லாகிய ஆயுதத்தை யுடையவரும்,
தொண்டரை – (தமது) அடியார்களை,
மீண்டு – மறுபடி –
ஏழு வகை பட்ட கருவில் படையார் – ஏழுவகைப்பட்ட பிறப்பில் தோன்றச் செய்யாதவரு மான திருமால்,
பற்று – விரும்பி யெழுந்தருளி யிருக்குமிடம்; (எ – று.)

ஓடு – வினைத்தொகை. தவனம் – தபநமென்ற வடசொல்லின் விகாரம். நந்தவனம் – ஆனந்தத்தை விளைக்குஞ் சோலை.
காட்டாறுகள், வனம் நந்த – காடுகள் வளர. வேர் ஓடலை தீர்க்கும் – (அருகில் வருவாரது உடம்பில்)
வேர்வையோடுதலை (த் தனது தண்மையால்) ஒழிக்கப்பெற்ற என்று உரைத்தலும் ஒன்று.
வனம் நந்த – காடுகள் அழிய எனினுமாம். நந்தல் – அழிதலும், வளர்தலும். வேர்ஓடலைத்தீர்க்கும் – சிரமஹரமாயிருக்கும் என்றபடி.
இனி, காட்டாறுகள் பூந்தோட்டம் வேரூன்றுதலை யொழிக்கு மென்றும், யானைகள் நந்தவனமென்னும்
இந்திரனது பூஞ்சோலையை வேருடன் அசைத்து இழுக்கு மென்றும் உரைத்தலுமாம்;
இவ்வுரைக்கு, நந்தநவன மென்பது நந்தவனமென விகாரப்பட்ட தென்க.

விற்படை – இருபெய ரொட்டுப் பண்புத்தொகை. இராமனது வில், கோதண்ட மெனப்படும்.
அடியார்கட்கு மீளவும் பிறப்பில்லாதபடி கருமமொழித்து முத்தியளிப்பவரென்பது கருத்து.
கரு – கர்ப்பமென்னும் வட சொல்லின் சிதைவு.
எழுவகைப்பிறப்பு – தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பன.
படையார் என்பது – மூன்றாமடியில் படையென்னும் பெயரின்மேற் பிறந்த உடன்பாட்டுக் குறிப்புவினையா லணையும்பெயரும்,
நான்காமடியில் படையென்னும் வினைப்பகுதியின்மேற் பிறந்த எதிர்மறைத் தெரிநிலை வினையாலணையும் பெயருமாம்.

—————

நன்காமர் வண்டினமும் நல்வாய் மதகரியும்
மென்காமர முழக்கும் வேங்கடமே -புன்காமம்
ஏவார் கழலார் எனது உளத்தில் என் தலைவை
பூ ஆர் கழலார் பொருப்பு –85-

(இ – ள்.) காமர் நல் வண்டு இனமும் – அழகிய சிறந்த சாதி வண்டுக ளின் கூட்டமும்,
மெல் காமரம் முழக்கும் – இனிமையான இசையை வாய் விட்டுப் பாடப்பெற்ற:
நால்வாய் மதம் கரியும் – தொங்குகிற வாயையுடைய மதயானைகளும்,
மெல் கா மரம் உழக்கும் – அழகிய சோலைகளிலுள்ள மரங்களைப் பெயர்த்து அசைக்கப்பெற்ற:
வேங்கடமே -,-
புல் காமம் ஏவார் – (தமது அடியார்களை) இழிவான காமவழியிற் செல்ல விடாதவரும்,
எனது உளத்தில் கழலார் – (அடியவனான) என்னுடைய மனத்தினின்று நீங்காத வரும்,
என் தலை வை பூ ஆர் கழலார் – அடியேனுடைய தலையின்மேல் வைத்த தாமரைமலர் போன்ற திருவடிகளை யுடையவருமான திருமாலினது,
பொருப்பு – திருமலை; (எ – று.)

நல்வண்டு – நல்ல மணத்தே செல்லும் வண்டு. மென்மை – செவிக்கு இனிமை. காமரம் – பண்.
முழக்கும் – முழங்கு மென்பதன் பிறவினை. நால்வாய் – வினைத்தொகை: நான்றவாய், நால்கிற வாய், நாலும் வாய் என விரியும்;
நால் – வினைப்பகுதி: நாலுதல் – தொங்குதல். கரம் – கை; இங்கே துதிக்கை: அதனையுடையது கரீ என வடமொழிக் காரணக்குறி.
அது, கரியென ஈயீறு இகரமாய் நின்றது. இதற்கு – கருமையுடையதெனத் தமிழ் வகையாற் காரணப்பொருள் கூறலாகாது,
வடசொல்லாதலின். மென்மை – கண்ணுக்கு இனிமை; குளிர்ச்சியுமாம். கா – பாதுகாத்தற்கு உரியது.
உழக்கும், உழக்கு – பகுதி; உழக்குதல் – கலக்குதல், வருத்தல்;
இதனை உழ என்னும் தன்வினைப்பகுதி “கு” என்னும் விகுதி பெற்ற பிறவினை யென்னலாம்.

புல்காமம் ஏவார் – தமது அடியார்களை இழிந்த சிற்றின்ப வழியிற் செல்ல விடாமல் உயர்ந்த பேரின்பநெறியிற் செலுத்துபவ ரென்க.
மேவார் எனப் பதம் பிரித்து உரைத்தல் மோனைத்தொடைக்குப் பொருந்தாது. “மலர் மிசையேகினான்” என்றபடி
அன்பால் நினைவாரது உள்ளக்கமலத்திற் கடவுள் அவர் நினைந்த வடிவத்தோடு சென்று வீற்றிருத்தலால்,
‘கழலா ரென துளத்தில்’ என்றார். ‘பூவார்கழல்’ என்பது – திருவேங்கட முடையானது திருவடிக்குச் சிறப்பாக வழங்கும்.
கழலார் என்பது – மூன்றாமடியில் கழல் என்னும் வினைப்பகுதியின்மேற் பிறந்த எதிர்மறைத் தெரிநிலை
வினையா லணையும் பெயரும், நான்காமடியில் கழல் என்ற பெயரின்மேற் பிறந்த உடன்பாட்டுக் குறிப்பு வினையாலணையும் பெயருமாம்.

————-

பாம்பும் குளிர் சந்தின் பக்கத்தில் நிற்கின்ற
வேம்பும் மருத்துவக்கும் வேங்கடமே காம்புகரம்
ஆனவரை நன்குடையார் ஆளாய்த் தொழுது ஏத்தும்
மானவரை நன்கு உடையார் வாழ்வு -86-

(இ – ள்.) பாம்பும் – பாம்புகளும்,
மருத்து உவக்கும் – காற்றை விரும்பி உணவாகக் கொள்ளப்பெற்ற:
குளிர்சந்தின் பக்கத்தில் நிற்கின்ற வேம்பும் – குளிர்ந்த சந்தனமரங்களின் அருகிலே நிற்கின்ற வேப்பமரங்களும்,
மரு துவக்கும்- (அவற்றின் சேர்க்கையால்) நறுமணம் வீசத்தொடங் கப்பெற்ற:
வேங்கடமே -,-
கரம் காம்பு ஆன – தமது கையையே காம்பாகக் கொண்ட,
வரை நல் குடையார் – கோவர்த்தந கிரியாகிய நல்ல குடை யையுடையவரும்,
ஆள் ஆய் தொழுது ஏத்தும் மானவரை நன்கு உடையார் – (தமக்குத்) தொண்டராய் வணங்கித் துதிக்கின்ற
மனிதர்களை மிகுதி யாகவுடையவருமான திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)

பாம்பு வாதாசந மாதலால், ‘மருத்துஉவக்கும்’ என்றார்; அது இம்மலையி னின்று வீசுகின்ற நறுமணமுள்ள
குளிர்ந்தகாற்றை நல்லுணவாக விரும்பி யேற்று உட்கொள்ளு மென்க.
சந்தின்பக்கத்தில் நிற்கின்ற வேம்பும் மருத்துவக்கும் – “சந்தனத்தைச் சார் தருவும் தக்கமணங் கமழு” மென்க.
துவக்கும், துவக்கு – பகுதி; துவக்குதல் – தொடங்குதல்.

‘காம்புகரமான வரை நன்குடையார்’ –
“செப்பாடுடைய திருமாலவன் தன்செந்தாமரைக்கைவிர லைந்தினையுங்,
கப்பாகமடுத்து மணிநெடுந்தோள் காம்பாகக்கொடுத்துக் கவித்த மலை,…… கோவர்த்தனமென்னுங் கொற்றக் குடையே” என்ற
பெரியாழ்வார்திருமொழியை அறிக.
நன்குடை – எத்தனை மழைக்குஞ் சலியாத குடை; மிகப்பல ஆயர்களையும் ஆக்களையும் வருந்தாத படி பாதுகாத்த குடை;
பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் எட்டிமேயலாம் படி புல்முதலிய உணவுகளைக் கொடுத்த குடை.
மாநவர் – காசியபமுனிவனது மனைவியருள் மநுவென்பவளது மரபில் தோன்றியவர்; வடமொழித் தத்திதாந்தநாமம்.

————–

சாரும் அருவிதவழ் சாரலும் செஞ்சனத்தின்
வேரும் அரவம் அறா வேங்கடமே -நேரும்
மதுகையிடவர்க் கறுத்தார் மா மலரோன் சாபம்
மதுகை இடவர்க்கு அறுத்தார் வாழ்வு –87-

(இ – ள்.) சாரும் அருவி தவழ் சாரலும் – பொருந்திய நீரருவிகள் பெருகப்பெற்ற மலைப்பக்கங்களும்,
அரவம் அறா – ஓசை நீங்காதிருக்கப் பெற்ற:
செம் சந்தனத்தின் வேரும் – செந்நிறமான சந்தனமரங்களின் வேரும்,
அரவம் அறா – பாம்புகள் நீங்காதிருக்கப்பெற்ற:
வேங்கடமே -,-
நேரும் – எதிர்த்த,
மது கையிடவர் – மது கைடபன் என்னும் அசுரர்களை,
கறுத்தார் – கோபித்து அழித்தவரும்,
மா மலரோன் சாபம் – சிறந்த (திரு நாபித்) தாமரைமலரில் தோன்றிய பிரமனது சாபத்தை,
மதுகை இடவர்க்கு அறுத்தார் – வலிமையுள்ள ருஷபத்தையுடையவராகிய சிவபிரானுக்கு நீக்கினவருமான திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)

அரவம் – ஒலியென்னும் பொருளில், ரவம் என்ற வட சொல்லின்விகாரம், மதுகைடப ரென்பவர், ஆதிசிருஷ்டிகாலத்தில் தோன்றினவர்.
மகா பலசாலிகளான இவ்வசுரரிருவரும் செருக்கிக் கடலில் இழிந்து திருமாலை யெதிர்த்துப் பெரும்போர்புரிய,
இவர்களை அப்பெருமான் துடையால் இடுக்கிக் கீழேதள்ளிக் கால்களால் மிதித்துத் துவைத்து வதைத்தனனென வரலாறு உணர்க.

மதுகைடபர் என்ற வடமொழித்தொடர், யமகநயத்திற்காக மதுகையி டவரென விகாரப்பட்டது.
இத்தொடர், உயர்திணையும்மைத்தொகையாத லால், பன்மைவிகுதிபெற்றது.
மதுகைடவர்க்கறுத்தார் – உயர்திணைப் பெயரின்முன் வலிமிக்கது, இரண்டாம்வேற்றுமைத்தொகை யாதலால்; “இயல்பின் விகாரம்.
” கரு என்ற பண்படி கறுஎன விகாரப்பட்டு வினைத்தன்மை யடையும்போது கோபித்தலென்னும் பொருளையும் உணர்த்துதலை
“கறுப்பும் சிவப்பும் வெகுளிப்பொருள” என்ற தொல்காப்பியத்தால் அறிக.

மலரோன்சாபம் இடவர்க்கு அறுத்தார் – பிரமனிட்டசாபத்தாற் கையை விட்டு நீங்காமல் ஒட்டிக்கொண்ட பிரமக
பாலத்தை யேந்திச் சிவபிரான் உலகமெங்கும் அலைந்து இரத்தலைத் திருமால் தவிர்த்தருளினன்.
(திருக் கண்டியூரில் எழுந்தருளியிருக்கின்ற திருமாலின் திருநாமம், “அரன்சாபந்தீர் த்த பெருமாள்” என வழங்கும்.
“பிண்டியார் மண்டையேந்திப் பிறர்மனை திரிதந்துண்ணு, முண்டியான் சாபந்தீர்த்த வொருவன்” என்றார் திருமங்கை யாழ்வாரும்.)
சாபம் மதுகை – சாப வலிமையை, இடவர்க்கு அறுத்தார் என்றலும் ஒன்று.
இனி, மலரோன்சாபமது – அந்தப்பிரமனது சாபத்தை, இடவர்க்கு – சிவனுக்கு, கை – கையினின்று,
அறுத்தார் – தவிர்த்தவர் என்று உரைப்பாருமுளர். “மாமரையோன்” என்றும், “மாமறையோன்” என்றும் பாடங்க ளுண்டு.
சாபம் – வடசொல். ருஷபம் என்ற வடசொல், இடப மென விகாரப்பட்டது; அதனையுடையவர், இடவ ரென்க.

————-

மண் மட்டுத் தாழ் சுனையும் வட்டச் சிலா தளமும்
விண் மட்டுத் தாமரை சேர் வேங்கடமே எண் மட்டுப்
பாதம் உன்னி நைந்தார் பரம பதம் சேர்க என்று
போதமுன் நினைந்தார் பொருப்பு –88-

(இ – ள்.) மண் மட்டு தாழ் சுனையும் – தரையளவும் ஆழ்ந்துள்ள சுனைகளும்,
விள் – மலர்ந்த,
மட்டு – தேனையுடைய,
தாமரை – தாமரைமலர்,
சேர் – பொருந்தப்பெற்ற:
வட்டம் சிலாதலமும் – வட்டவடிவமான கல்லினிடமும்,
விண்மட்டு – மேலுலகத்தினளவும்,
தாம் – தாவுகிற,
மரை – மான்,
சேர் – பொருந்தப்பெற்ற:
வேங்கடமே -,-
பாதம் – (தமது) திருவடியை,
எள் மட்டு உன்னி – எள்ளளவேனும் தியானித்து,
நைந்தார் – மனமுருகினவர்கள்,
பரமபதம் சேர்க – பரமபதம் அடையக்கடவர், என்று -,
போதம் – தமது அறிவினால் (தமது திருவுள்ளத்தில்),
முன் – முன்பு (அநாதிகாலமாக),
நினைந்தார் – எண்ணியருளிய திருமாலினது, பொருப்பு –
திருமலை; (எ – று.)

விள் – வினைத்தொகை. வட்டச்சிலாதலம் மரை சேர் – “வண்மைதிகழ் வெண்பளிங்கு வட்டத்திற் கண்டுயில் மான்” என்றார். 50 – ஆஞ் செய்யுளிலும்.
சிலாதலம் – வடமொழித்தொடர். தாம் – தாவும் என்னுஞ் செய்யுமெ னெச்சத்து ஈற்றுயிர்மெய் சென்றது.
எள் – மிக்க சிறுமைக்கு எடுத்துக் காட்டிய அளவை “காண விரும்பினர்மேல் நான் மடங்காம் ஆர்வத்தார்” என்றபடி
அடியவரது பக்தியினளவினும் பலமடங்கு அதிகமான பரமகாரு ணியத்தையுடைய கடவுளாதலால்,
தமது திருவடியை எள்ளளவேனும் சிந்தித்து உருகியவர் பரமபதஞ்சேர்வாராக வென்று திருவுள்ளம்பற்றும் இயல்பினரென்க.
முன்னியென்றும் பதம்பிரித்து உரைக்கலாம். “பாதமுன்னி நைந்தார்,” “போதமுன்னினைந்தார்” என்றவிடத்து
நகரவேறுபாடு திரிபு நயத்தின்பொருட்டுக் கொள்ளப்பட்டிலது. பரமபதம் – சிறந்தஇடம். போத எனப் பதம்பிரித்து, மிகுதியாக என்றலும் ஒன்று.
முன் – அவர் எண்ணுவதற்கு முன்னமே யென்றுமாம். போத முன் – அவர்கள் வருவதற்கு முன் என்றுமாம்.

————-

போதா இரு சுடரும் போதுதற்கும் ஓதுதற்கும்
வேதா வினால் முடியா வேங்கடமே -மாதாவின்
வீங்கு தனத்துக்கு இனியான் விம்மி அழாது ஆட்கொண்டான்
தாங்கு தன் நத்துக்கு இனியான் சார்பு –89-

(இ – ள்.) போதா – (கற்பகாலமளவும்) அழியாத,
இரு சுடரும் – சூரிய சந்திரர் இருவரும்,
போதுதற்கும் – (ஆகாயவீதியிலே) செல்லுவதற்கும்,
வே தாவினால் முடியா – மூங்கில்கள் அளாவி வளர்தலால் இயலாத:
ஓதுதற்கும் – (தனது மகிமையைச்) சொல்லுவதற்கும்,
வேதாவினால் முடியா (நான்கு முகமுடைய) பிரமனாலும் நிறைவேறாத:
வேங்கடமே -,-
மாதாவின் – தாயினது,
வீங்கு தனத்துக்கு – பருத்த தனங்களை யுண்ணுதற்பொருட்டு,
இனி யான் விம்மி அழாது – இனிமேல் நான் ஏங்கி யழாதபடி,
ஆள்கொண்டான் – (என்னை) அடிமைகொண்டவனும்,
தாங்கு தன் நத்துக்கு இனியான் – கையி லேந்தியுள்ள தனது (பாஞ்சஜந்ய மென்னுஞ்) சங்கத்துக்கு இனியவனுமான திருமால்,
சார்பு – சார்ந்திருக்குமிடம்; (எ – று.)

போதா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்: போது – பகுதி.
இதற்கு – (அல்லும் பகலும் அநவரதமும் சஞ்சாரம்) ஒழியாத என்று உரைப்பினுமாம். சுடர் – ஒளி, சோதி.
தாவினால் – தாவு என்ற முதனிலைத் தொழிற் பெயரின் மூன்றாம்வேற்றுமை விரி; இன் – சாரியை;
இதனை எதிர்கால வினையெச்சமாகக் கொள்ளின் சிறவாது. முடிதல் – இயலுதலும், முற்றுதலும், வேதா, மாதா – வடசொற்கள்.

இனி எனக்குப் பிறப்பில்லாதபடி அடிமைகொண்டவ னென்பது, மூன்றாமடியின் கருத்து.
“வீங்கு தனம்” என்றது, வெறுப்பைக் காட்டும். நந்து என்பது நத்துஎன மென்றொடர் வன்றொடராயிற்று.
“நத்துக்கு இனியான்” என்றது, அதனை எப்பொழுதும் கைவிடாமையும், வேண்டும்பொழு தெல்லாம் வாய்
வைத்துக் கொள்ளுதலும் முதலியன பற்றி. இச்சிறப்பை வெளியிட்டு ஆண்டாள்
“சந்திரமண்டலம்போல் தாமோதரன் கையில், அந் தரமொன்றின்றி யேறி யவன்செவியில்,
மந்திரங்கொள்வாயே போலும் வலம்புரியே, இந்திரனு முன்னோடு செல்வத்துக்கேலானே” என்றும்,
“உன் னோ டுடனே யொருகடலில் வாழ்வாரை, இன்னாரினையாரென் றெண்ணு வாரில்லைகாண்,
மன்னாகிநின்ற மதுசூதன்வாயமுதம், பன்னாளு முண்கின் றாய் பாஞ்சசன்னியமே” என்றும்,
“உண்பதுசொல்லி லுலகளந்தான் வாயமுதம், கண்படைகொள்ளிற் கடல்வண்ணன் கைத்தலத்தே,
பெண்படையா ருன்மேற் பெரும்பூசல் சாற்றுகின்றார், பண்பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே” என்றும்,
“பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனோடும், வாய்ந்த பெருஞ் சுற்றமாக்கிழுக் கூறியமை காண்க.
இனி, தாங்கு தனத்துக்கு இனியான் என்று எடுத்து, கைகளில் நிரம்பக்கொண்டு செலுத்திய காணிக்கைப் பொருளுக்கு
இனியவனென்று உரைப்பினும் அமையும்;
அடியார்கள் பிரார்த்தனையாகக் கொடுக்கும் பொருளைக் கைம்மாறாகப் பெற்றுக்கொண்டு
அவர்கட்கு வேண்டும் பயனை யளித்தல், திருவேங்கட முடையானது சங்கல்பம்.

—————

பேய்க்கும் ஒரு பேய் போன்று பித்து ஆயத் திரிவோர்க்கும்
வேய்க்கும் அணி முத்து வரும் வேங்கடமே -வாய்க்கு அமுது ஊர்
வண்மைப் பேர் ஆயிரம் தான் மன்னினான் மாவலி பால்
தண்மைப் பேராய் இரந்தான் சார்பு –90-

(இ – ள்.) பேய்க்கும் ஒரு பேய் போன்று பித்து ஆய் திரிவோர்க்கும் – பேயின் கண்ணுக்கும் ஒருபேய்போலத் தோன்றுமாறு
பெரும் பைத்தியங் கொண்டு திரிகிறவர்களுக்கும்,
அணி முத்தி வரும் – (அங்குவந்த மாத்திரத் தால்) அழகியமோக்ஷம் சித்திக்கும்படியான:
வேய்க்கும் – மூங்கில்களிலும்,
மணி முத்து இவரும் – அழகிய முத்துக்கள் மிகுதியாகத் தோன்றப்பெற்ற:
வேங்கடமே -,-
வாய்க்கு அமுது ஊர் – (உச்சரிப்பவருடைய) வாய்க்கு அமிருதம்போன்ற இனிமை சுரக்கிற,
வண்மை பேர் ஆயிரம் – வளமான ஆயிரந்திருநாமங்கள்,
மன்னினான் – பொருந்தியவனும்,
மாவலிபால் – மகாபலியி னிடத்து,
தண்மை பேய் ஆய் இரந்தான் – எளியவனாய் (மூன்று அடிநிலத்தை) யாசித்தவனுமான திருமால்,
சார்பு – சாருமிடம்; (எ – று.) – தான் – அசை.

பேய்க்குமொருபேய்போன்று – பெரும்பேய்போல என்றபடி. அங்ங னம் பித்தாய்த் திரிவோர்க்கும் வேங்கடமலைக்கு வந்த
மாத்திரத்தில் முத்தி சித்தித்தலை, இந்நூலுரைத் தொடக்கத்திற் காட்டிய மாதவனென்னும் அந்தணனது வரலாற்றினாலும் அறிக.
இனி, “பேயரே யெனக்கு யாவரும் யானு மோர், பேயனே எவர்க்கும் இதுபேசியென்,
ஆயனே யரங்காவென் றழைக்கின்றேன், பேயனாயொழிந்தே னெம்பிரானுக்கே”,
“அரங்கனுக் கடியார்களாகி யவருக்கே, பித்தராமவர் பித்தரல்லர்கள் மற்றையார் முற்றும்பித்தரே” என்றபடி
பேயாழ்வார்போன்று உலகநடையிற் கலவாமல் பகவத்பாகவத விஷயங்களிற் பக்திப்பித்துக்கொண்டு திரிகின்ற
அடியார்களுக்கு முக்தி கைவருவதற்கு இடமான என்று உரைப்பினும் அமையும்.
முக்தி என்ற வடசொல் – பற்றுக்களைவிட்டு அடையு மிடமெனப் பொருள் படும்.
வேய்க்கு என்பதில் நான்கனுருபு ஏழனுருபின் பொருளில் வந்தது, உருபுமயக்கம்.

பேர்க்கு வண்மை – உச்சரித்தமாத்திரத்தில் அருவினைதொலைத்து நற்பயன்பலவும் அளிக்குந்திறம்;
அதனை, “குலந்தரும் செல்வந்தந்திடும் அடி யார்படு துயராயினவெல்லாம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அரு ளொடு பெருநிலமளிக்கும்,
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்றதாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னு நாமம்” என்று திருமங்கையாழ்வார் வெளியிட்டுள்ளார்.
பேர்ஆயிரம் – ஸஹஸ்ரநாமம். மாவலி – வடசொற்சிதைவு, தண்மைப்பேராய் – யாசகனாய், எளிய வாமநனாய்.

————–

வாழ்க்கை மனை நீத்தவரும் வாளரியும் மாதங்க
வேட்கை மறந்திகழும் வேங்கடமே –தோள் கை விழ
மா கவந்தனைக் கவிழ்த்தார் வாழ் இலங்கைப் பாதகரை
லோக வந்தனைக்கு அழித்தார் ஊர் –91-

(இ – ள்.) மனை வாழ்க்கை நீத்தவரும் – இல்லறவாழ்வைத் துறந்த முனிவர்களும்,
மாது அங்கம் வேள் கைமறந்து இகழும் – மாதர்களின்உடம் பினிடத்துக் காதலை முற்றும் ஒழித்து அதனை இகழப்பெற்ற:
வாள் அரியும் – கொடியசிங்கங்களும்,
மாதங்கவேட்கை மறம் திகழும் – யானையைக் கொல்ல வேண்டுமென்னும் விருப்பத்தோடு வீரம் விளங்கப்பெற்ற:
வேங்கடமே -,-
மா கவந்தனை – பெரிய கபந்தனென்னும் அரக்கனை,
தோள் கை விழ கழித்தார் – தோள்களோடு கூடிய கைகள் அற்று விழும்படி வெட்டித் தள்ளின வரும்,
இலங்கை வாழ் பாதகரை – இலங்காபுரியில் வாழ்ந்த பாவிகளானராவணன் முதலியோரை,
லோகவந்தனைக்கு அழித்தார் – உலகத்தார் தம்மை வழிபட்டதற்கு இரங்கிக் கொன்றவருமான திருமாலினது,
ஊர் – திருப்பதி.(எ – று)

மாது அங்க வேள் கைமறந்து இகழும் – பெண்ணாசையை அறக்கை விட்ட என்றபடி.
மா தங்கம் வேள் கைமறந்து இகழும் எனக்கொண்டு மிக்க பொன்னாசையை அறத்தொலைத்த வென உரைப்பினுமாம்.
கைமறந்து என்பதில், கை என்பது – தனியே பொருளொன்றுமுணர்த்தாமல் வினைக்குமுன் வந்த தமிழுபசர்க்கம்;
கைவிடுதல், கைகூடுதல் என்பவற்றிலும் இது. வாள் அரி – ஒளியையுடைய சிங்கமுமாம். ஹரி – வடசொல்;
யானை முதலிய விலங்குகளை அரிப்பது: அரித்தல் – அழித்தல்.
மாதங்கம் என்ற வடசொல் – யானையைக் குறிக்கும்போது மதங்க முனிவரிடத்தினின்று ஆதியில் உண்டானதெனக் காரணப்பொருள்படும்.

கவந்தன் – தநுஎன்னும் யக்ஷனதுமகன்; இவன் ஸ்தூலசிரஸ்என்னும் முனிவரது சாபத்தால் அரக்கனாகிப்
பிரமனருளால் தீர்க்காயுசு பெற்றுத் தேவேந்திரனோடு எதிர்த்து அவனது வச்சிராயுதத்தாற் புடைபட்டுத்
தனது தலை வயிற்றில் அழுந்தியமைபற்றிக் கவந்தம் போலத் தோற்ற முடையனா யிருந்ததனால், இப்பெயர் பெற்றான்.
கபந்தம் என்ற வடசொல்லுக்கு – தலை யற்றதும் தொழிலுடன் கூடியதுமான உடலென்பது பொருள்.
“உலக மென்பது உயர்ந்தோர் மாட்டே” என்பதற்கு ஏற்ப, இங்கே “லோகவந்தனைக்கு” என்பதற்கு –
தண்டகாரணியவாசிகளான மகாமுனிவர்களுடைய வேண்டுகோளினாலென்க. வந்தனைக்கு – உருபுமயக்கம்.

————-

கூட்டு தவத்தரும் கோளரிகளின் தொகையும்
வேட்டு வரம் பொழியும் வேங்கடமே –மோட்டு மதத்
தந்திக்கு அமலத்தார் தாம் பெறூ உம் வீடு அளித்தார்
உந்திக் கமலத்தார் ஊர் –92-

(இ – ள்.) கூட்டு தவத்தவரும் – மேன்மேற் செய்துசேர்த்த தவத்தை யுடைய முனிவர்களும்,
(அப்பெருந்தவத்தின் சித்தியால்),
வேட்டு வரம் பொழியும் – விரும்பி (அன்புடனே) (தம்மிடம் வேண்டுவார் வேண்டிய வரங்களை மிகுதியாகக்கொடுத்தற்கிடமான:
கோள் அரிகளின் தொகையும் – வலிமையுள்ள சிங்கங்களின் தொகுதியும்,
வேட்டுவர் அம்பு ஒழியும் – வேடர்கள் எய்கிற பாணங்கள் (தம்மேற்படாதபடி தந்திரமாக அவற்றிற்கு) விலகப் பெற்ற:
வேங்கடமே -,-
மோடு மதம் தந்திக்கு – உயர்ச்சியையுடைய மத யானைக்கு,
அமலத்தார்தாம் பெறூஉம் வீடு அளித்தார் – நிர்மலரான ஞானிகள் பெறுதற்கு உரிய முத்தியைக் கொடுத்தருளியவரும்,
உந்தி கமலத்தார் – திருநாபித்தாமரையையுடையவருமான திருமாலினது,
ஊர் – திருப்பதி.

கூட்டு – பிறவினை வினைத்தொகை. வேட்டுவர் – வேடுஎன்னுந் தொழிலையுடையார்;
வேடு – மிருகபக்ஷிகளைப் பிடித்துவருத்துதல். வேட்டுவரம்பு ஒழியும் – வேடர்களுடைய அம்புகள் பட்டதனால் அழியப்பெற்ற எனினுமாம்.
தந்தீ என்ற வடசொல் – தந்தத்தை யுடைய தென்று காரணப்பொருள்படும்.
அமலத்தார் – காமம் வெகுளி மயக்க மென்னும் மலங்க ளில்லாதவர்; மலம் – குற்றம். தாம் – அசை.
பெறூஉம் – செய்யுளோ சைகுன்றாதவிடத்தில் இன்னிசைதருதற்பொருட்டுக் குறில் நெடிலாய் நீண்டு அளபெடுத்தது.

————-

வஞ்சம் மடித்திருப்பார் வாக்கும் கலைக்கோடும்
விஞ்ச மடித்திருக்கு ஆர் வேங்கடமே –கஞ்சப்
பிரமா நந்த தான் பிரபஞ்சம் மாய்த்த
பரமா நந்தத்தான் பதி –93-

(இ – ள்.) வஞ்சம் மடித்து இருப்பார் வாக்கும் – வஞ்சனையையொழித் திருக்கின்ற அந்தணர்களுடைய வாயும்,
விஞ்ச – மிகுதியாக,
மடித்த இருக்கு ஆர் – மடித்து மடித்துச் சொல்லப்படுகின்ற வேதங்கள் நிரம்பப்பெற்ற:
கலை கோடும் – கலைமான்கொம்பும்,
விஞ்ச – மிகுதியாக,
மடி திருக்கு ஆர் – வளைவோடுகூடிய முறுக்குப் பொருந்தப்பெற்ற:
வேங்கடமே -,-
கஞ்சம் பிரமா நந்த – (தனது நாபித்) தாமரைமலரில் தோன்றிய பிரமனும் அழிய,
தான் -,
பிரபஞ்சம் மாய்த்த – (கல்பாந்தகாலத்தில்) உலகங்களை அழித்த,
பரம ஆநந்தத்தான் – எல்லா ஆனந்தங்களிலும் மேலான பேரானந்தத்தை யுடையவனான திருமாலினது,
பதி – ஊர்; (எ – று.)

வஞ்சம் அடித்து என்றும் பதம் பிரிக்கலாம்; அடித்தல் – ஒழித்தல். வாக் – வடசொல்.
மடித்த இருக்கு என்பது, மடித்திருக்கு எனப் பெயரெச்ச வீறு தொக்கது; வேட்டகம், புக்ககம், வந்துழி என்றவற்றிற் போல.
க்ரமம், ஜடை, கநம் முதலிய சிலவகைகளால் வேதச்சொற்கள் மடித்து மடித்துச் சொல்லப்படுதலால், “மடித்திருக்கு” எனப்பட்டது.
ருக் என்ற வடமொழி, இருக்கு என விகாரப்பட்டது;
இது, நான்குவேதங்களில் ஒன்றற்குப் பெய ராதலேயன்றி எல்லாவேதங்களுக்கும் பொதுப்பெயராகவும் வழங்கும்.
கஞ்சம் என்ற வடசொல் – நீரில் தோன்றியதென்று காரணப் பொருள்படும்; தாமரைக்குக் காரணவிடுகுறி.
ப்ரஹ்மா, ப்ரபஞ்சம், பரமாநந்தம் – வட சொற்கள். பரமாநந்தம் – தீர்க்கசந்தி பெற்றது.
பரமாநந்தத்தான் – பரம பதத்து நிரதிசய இன்பத்தைத் தனது அடியார்க்குத் தருபவன்.

————-

சேல் அஞ்சும் கண் மடவார் தேம் குழலும் கோங்கினமும்
மேலஞ்சு வர்க்கம் ஆர் வேங்கடமே -கோலம் சேர்
மாரில் அலங்கு அரத்தார் மற்றும் பல பூண் அணிந்த
காரில் அலங்காரத்தார் காப்பு –94-

(இ – ள்.) சேல் அஞ்சும் கண் – சேல் மீன்கள் (ஒப்புமைக்கு முன் நிற்கமாட்டாமல்) அஞ்சி விலகத்தக்க கண்களையுடைய,
மடவார் – மாதர் களின்,
தேம் குழலும் – நறுமணமுள்ள கூந்தலும்,
மேல் அஞ்சு வர்க்கம் ஆர் – மேன்மையான ஐந்துவகை பொருந்தப்பெற்ற:
கோங்கு இனமும் – கோங்குமரங்களின் தொகுதியும்,
மேல் அம் சுவர்க்கம் ஆர் – (மிக்கஉயர்ச்சி யால்) மேலேயுள்ள அழகிய சுவர்க்கலோகத்தை அளாவப்பெற்ற:
வேங்கடமே -,-
கோலம் சேர் மாரில் அலங்கு ஆரத்தார் – அழகு பொருந்திய திருமார்பில் அசைகின்ற ஆரங்களை யுடையவரும்,
மற்றும் பல் பூண் அணிந்த – (அவ்வாரம் மாத்திரமே யன்றி) மற்றும் பல ஆபரணங்களைத் தரித்த,
காரில் அலங்காரத்தார் – காளமேகம் போன்ற அழகுடையவரு மான திருமால்,
காப்பு – (உயிர்களைப்) பாதுகாக்கு மிடம்; (எ – று.)

சேலஞ்சுங்கண் – பிறழ்ச்சியிலும் அழகிலும் சேலைவென்றகண். மடவார் – மடமையை யுடையவர்;
மடமை – இளமை, அல்லது மகளிர்க்கு உரியதான பேதைமைக்குணம்.
அஞ்சு வர்க்கம் – முடி, குழல், கொண்டை, பனிச்சை, சுருள் என்னும் மயிர் முடியின் வகைகள்:
மயிரை உச்சியில் முடித்தல், முடி. சுருட்டி முடித்தல், குழல், மயிரை முடிந்துவிடுதல், கொண்டை. பின்னி விடுதல்,
பனிச்சை, பின்னே செருகல், சுருள், வர்க்கம், ஸ்வர்க்கம், ஹாரம், அலங்காரம் – வடசொற்கள்.
அலங்கு ஆரம் – வினைத்தொகை. ஆரம் – பொன் மணி மலர்களா லாகிய மாலை.
திருமாலின் திருமேனிக்குக் காளமேகம் நிறத்தில் உவமம்.

—————

கொய்யும் மலர்ச்சோலைக் கொக்கும் பிணி யாளர்
மெய்யும் வடுத்த விரும் வேங்கடமே -நையும்
சனனாந் தகனார் தலையிலி தோள் சாய்த்த
சினநாந் தகனார் சிலம்பு –95-

(இ – ள்.) கொய்யும் மலர் சோலை கொக்கும் – பறித்தற்கு உரிய மலர்களையுடைய சோலையிலுள்ள மாமரமும்,
வடுத்து அவிரும் – பிஞ்சுவிட்டு விளங்கப்பெற்ற:
பிணியாளர் மெய்யும் – நோயாளிகளுடைய உடம்பும்,
வடு தவிரும் – (அங்கு வந்தமாத்திரத்தால்) உடற்குற்றமாகிய அந்நோய் நீங்கப் பெற்ற:
வேங்கடமே -,-
நையும் சனன அந்தகனார் – (உயிர்கள்) வருந்துதற்குக் காரணமான பிறப்பை (அடியார்க்கு) ஒழிப்பவரும்,
தலை இலி தோள் சாய்த்த – கபந்தனுடைய தோள்களை வெட்டித்தள்ளின,
சினன் – கோபத்தையுடைய,
நாந்தகனார் – நந்தகமென்னும் வாட்படையையுடையவருமான திருமாலினது,
சிலம்பு – திருமலை; (எ – று.)

மாமரத்தை “கொக்கு” என்பது – துளுவநாட்டார் வழங்குங் திசைச் சொல். வடுத்தல் – இளங்காய் அரும்பல்.
நையும்என்ற பெயரெச்சம் – காரியப் பொருளது. ஜநநாந்தகன் – பிறப்புக்கு யமனாகவுள்ளவன்;
பிறப்பையொழித்து முத்தி யருள்பவ னென்றபடி; தீர்க்கசந்திபெற்ற வடமொழித்தொடர்.
தலையிலி – தலையில்லாதவன்; தலை வெளித்தெரியாது வயிற்றினுள் அடங்கியமைபற்றி, கவந்தன் தலையிலி யெனப்பட்டான்.
சினன் – சினம் என்பதன் இறுதிப்போலி. நந்தகமென்ற வடசொல், நாந்தகமென விகாரப்பட்டது.
பிணியாளர் மெய் வடுத்தவிர்தல் –
“பித்து மல டூமை முடம் பேய் குருடு கூன் செவிடு, மெய்த்துயர் நோய் தீர்த்தருளும் வேங்கடமே” என முன்னர்க் கூறப்பட்டது.

————

நேர்க்க வலை நோயினரும் நீடு சிலை வேடுவரும்
வேர்க்க வலை மூலம் கல் வேங்கடமே –கார்க்கடல் மேல்
தாண்டும் காலத்து இறப்பார் தம்மை விழுங்கி கனி வாய்
மீண்டும் காலத் திறப்பார் வெற்பு –96-

(இ – ள்.) நேர் கவலை நோயினரும் – மிகுதியான கவலையைத் தருகிற நோயையுடையவர்களும், (அந்நோய் நீங்குதற்பொருட்டு),
வேர்க்க – (பக்தி மிகுதியால் தம் உடல்) வியர்வையடைய,
அலை மூலம் கல் – திருப்பாற்கடலிற் பள்ளிகொண்டருளுகிற ஆதிமூலப்பொருளைத் துதிக்கப்பெற்ற:
நீடு சிலை வேடுவரும் – நீண்ட வில்லையுடைய வேடர்களும்,
வேர் கவலை மூலம் கல் – வேரோடு கவலைக் கிழங்கைத் தோண்டப்பெற்ற:
வேங்கடமே -,-
கார் கடல் – கருநிறமுடையதான கடல்,
மேல் தாண்டும் – பொங்கி மெலெழுந்து பரவுகிற,
காலத்து – பிரளயகாலத்தில்,
இறப்பார்தம்மை விழுங்கி – இறக்கிற உயிர்களையெல்லாம் உட்கொண்டு தமது திருவயிற்றினுள் வைத்து,
மீண்டும் கால – (பிரளயம் நீங்கியபொழுது) மீளவும் (அவற்றை) வெளிப்படுத்துமாறு,
கனி வாய் திறப்பார் – கொவ்வைப்பழம்போற் சிவந்த (தமது) திருவாயைத் திறந்தருள்பவரான திருமாலினது,
வெற்பு – திருமலை; (எ – று.)

கவலை – கவற்சி; கிலேசம்; ‘ஐ’ விகுதி பெற்ற தொழிற்பெயர். வேர்த்தல் – பக்திமிகுதியாலாகும் மெய்ப்பாடு.
அலை – கடலுக்குச் சினையாகுபெயர். மூலம் – முதற்பொருள். கற்றல் – திருநாமங்களை இடைவிடாமல் உருவிட்டு ஜபித்தல்.
குறிஞ்சிநிலக் கருப்பொருளாகிய கவலையென்னுங் கொடியின்கிழங்கு, அந்நிலத்துமாக்கட்கு உணவாவதற்கு உரியது.
இறப்பார் என்ற உயர்திணை, அஃறிணைக்கும் உபலக்ஷணம். கால – செயவெனெச்சம்.

————-

தண் தாமரைச் சுனையில் சாதகமும் வேடுவரும்
விண்டாரை நாடும் வேங்கடமே –தொண்டு ஆக்கி
ஏவத் தனக்கு உடையார் என்னை முன் நாள் எடுத்த
கோவத்தனக் குடையார் குன்று –97-

(இ – ள்.) தண் தாமரை சுனையில் – குளிர்ந்த தாமரையை யுடைய சுனையில் வாழ்கின்ற,
சாதகமும் – சாதகமென்னும் பறவையும்,
விண் தாரை நாடுகின்ற – மேகத்தின் மழைத்தாரையை விரும்பி உணவாகக்கொள்ளப் பெற்ற:
வேடுவரும் – வேடர்களும்,
விண்டாரை நாடுகின்ற – (உடற்கொழுப் பினாற் போர் செய்தற்குப்) பகைத்தவரைத் தேடப்பெற்ற;
வேங்கடமே -,-
தொண்டு ஆக்கி ஏவ – தாசனாக்கி அடிமைகொள்ளுமாறு,
என்னை தனக்கு உடையார் – என்னைத் தமக்கு உடைமையாக்கிக்கொண்டவரும்,
முன் நாள் எடுத்த கோவர்த்தனம் குடையார் – முன்னாளில் (கிருஷ்ணாவதாரத்தில்) எடுத்துப் பிடித்த
கோவர்த்தநமலையாகிய குடையையுடையவருமான திரு மாலினது,
குன்று – திருமலை; (எ – று.)

மேகத்தினின்று தரையில் விழுந்த நீர் சாதகப்புள்ளுக்கு விஷமாகுத லால், அப்பறவை அந்நீரை உட்கொள்ளாது
மேகத்தினின் றுவிழும் மழைத்தாரையை நாவில் ஏற்றுப்பருகும்.
விண்டார் – இறந்தகாலவினையாலணையும் பெயர்; விள் – பகுதி; விள்ளுதல் – மனம் மாறுபடுதல்.
தனக்கு உடையார் – ஒருமைப் பன்மை மயக்கம். ஏவ – குற்றேவல் செய்யுமாறு கட்டளையிட,
கோவர்த்தநம் என்ற வடமொழிப் பெயர் – பசுக்களை வளர்ப்ப தென்று பொருள்படும்.
எடுத்த கோவத்தனக் குடையார் – கோவர்த்தநகிரியைக் குடையாக எடுத்துப் பிடித்தவர்.

————-

வாழ் அரியும் சந்தனம் தோய் மாருதமும் தாக்குதலால்
வேழ மருப்புகுதும் வேங்கடமே –நீழல் அமர்
பஞ்சவடி காட்டினான் பார் அளப்பான் போல் எவர்க்கும்
கஞ்ச அடி காட்டினான் காப்பு –98-

(இ – ள்.) வாழ் அரியும் – (வலிமைகொண்டு) வாழ்கின்ற சிங்கங்களும்,
தாக்குதலால் – மோதியடித்தலால்,
வேழம் மருப்பு உகுதும் – யானைகளின் தந்தம்சிந்தப்பெற்ற:
சந்தனம்தோய்மாருதமும் – சந்தனமரத்தின் மேற்பட்டு வருகிற காற்றும்,
தாக்குதலால் – மேற்படுதலால்,
வேழம் மரு புகுதும் – மூங்கில்களும் நறுமணம் பொருந்தப்பெற்ற:
வேங்கடமே -,-
நீழல் அமர் – நிழல் பொருந்திய,
பஞ்சவடி காட்டினான் – பஞ்சவடியென்னுங் காட்டிடத்தில் வசித்தவனும்,
பார் அளப்பான் போல் – உலகங்களை அளப்பவன்போல,
எவர்க்கும் – எல்லோர்க்கும்,
கஞ்சம் அடி – தாமரைமலர்போன்ற திருவடியை,
காட்டினான் – காட்சிதந்தருளியவனு மான திருமால்,
காப்பு – (உயிர்களைப்) பாதுகாக்குமிடம்; (எ – று.)

“சந்தனந்தோய்மாருதந் தாக்குதலால் வேழம்மருப்புகுதும்” என்றதை 86 – ஆம் பாட்டில்
“குளிர்சந்தின் பக்கத்தில் நிற்கின்ற வேம்பும் மருத்துவவக்கும்” என்பதனோடு ஒப்பிடுக. மாருதம் – வடசொல்.
உகுதும், புகுதும் என்றவற்றில், து – சாரியை. பஞ்சவடீ – ஐந்து ஆலமரங்களின் தொகுதி;
அதனையுடைய இடத்துக்கு ஆகுபெயர்: இது, தண்டகாரணியத்தில் அகண்ட கோதாவரிக் கரையில்
நாசிகாதிரியம்பகத்துக்குச் சமீபத்தி லுள்ளது. இராமபிரான் வனவாசஞ்செய்கையில் அகஸ்தியமுனிவர் சொன்னபடி
இவ் விடத்தில் நெடுநாள்வசித்தனன். பஞ்சவடிக்காட்டினான் என வரற்பாலது, திரிபுநயம் நோக்கிக் ககரவொற்றுத் தொக்கது.
காட்டினான் என்பது – மூன்றாமடியில் காடுஎன்ற பெயரின்மேற் பிறந்த குறிப்பு வினையாலணையும் பெயரும்,
நான்காமடியில் காட்டு என்ற பிறவினைப் பகுதியின்மேற் பிறந்த இறந்தகாலத் தெரிநிலை வினையாலணையும் பெயருமாம்.

————

எவ்விடமும் ஆறு தோய்ந்து எல்லாரும் பல் பாம்பும்
வெவ்விடரின் நீங்கி எழும் வேங்கடமே –தெவ்விடை ஏழ்
அட்டவன் நாகத்து அணையான் ஆதி மறை நூல் மார்க்கம்
விட்டவன் ஆகத்து அணையான் வெற்பு –99-

(இ – ள்.) எல்லோரும் -, எ இடமும் – (அம்மலையில்) பலவிடத்தும் உள்ள,
ஆறு – நதிகளில்,
தோய்ந்து – முழுகி. (அம்மாத்திரத்தால்,)
வெம் இடரின் நீங்கி எழும் – கொடிய (பிறவித்) துன்பத்தினின்று நீங்கி எழப்பெற்ற:
பல் பாம்பும் – பலபாம்புகளும்,
வெம் விடரின் நீங்கி எழும் – வெவ்வியமலை வெடிப்புக்களினின்று புறப்பட்டு மேலெழுந்து வரப்பெற்ற:
வேங்கடமே -,-
தெவ் விடை ஏழ் அட்டவன் – பகைமையையுடைய ஏ” எருதுகளை வலியழித்து வென்றவனும்,
நாகத்து அணையான் – ஆதிசேக்ஷனாகிய சயநத்தை யுடையவனும்,
ஆதி மறை நூல் மார்க்கம் விட்டவன் ஆகத்து அணையான் – பழமையான வேதசாஸ்திரங்களிற்கூறிய நன்னெறியை
விலகினவனுடைய மனத்திற் சேராதவனுமாகிய திருமாலினது,
வெற்பு – திருமலை; (எ – று.)

“ஆறு தோய்ந்து இடரின் நீங்கி யெழும்” எனவே, அங்குள்ள ஆறுகள் தம்மிடத்து ஒருகால் மூழ்கினவளவிலே
வினைத்துன்பங்களை யெல்லாம் தீர்க்கும் மகிமையுடையனவென்று விளங்கும்.
வெவ் – வெம்மையென்ற பண் புப்பெயர் ஈறுபோய் முன்நின்ற மகரமெய் வகரமாயிற்று.
எல்லோர் – எல்லார் என்பதன் ரகர வீற்றயல் ஆகாரம் ஓவாயிற்று. தெவ் – பகைமையுணர்த்தும் உரிச்சொல்;
“தெவ்வுப் பகையாகும்” என்பது, தொல்காப்பியம்.

விடையே ழடர்த்த விவரம்: – கண்ணன் நப்பின்னைப் பிராட்டியைத் திருமணஞ் செய்துகொள்ளுதற்காக,
அவளது தந்தை கந்யாசுல்கமாகக் குறித்தபடி, யாவர்க்கும் அடங்காத அசுராவிஷ்டமான ஏழெருதுகளையும்
ஏழுதிருவுருவக்கொண்டு சென்று வலியடக்கித்தழுவின னென்பதாம். விடை – வ்ருஷம் என்ற வடசொல்லின் சிதைவு.
நாகம் என்ற வடசொல் – கால்க ளால் நடவாத தென்றும், மலைகளில் அல்லது மரங்களில் வாழ்வ தென்றும் காரணப்பொருள் படும்.
வேத சாஸ்திரங்களிற் கூறியபடி நடவாதவரை உபேட்சித்தல், திருமாலின் இயல்பு.
அணையான் என்பது – மூன்றாமடியில் அணைஎன்னும் பெயரின்மேற் பிறந்த உடன்பாட்டுக்குறிப்பு
வினையாலணை யும்பெயரும், நான்காமடியில் அணைஎன்னும் வினைப்பகுதியின்மேற் பிறந்த
எதிர்மறைத் தெரிநிலை வினையாலணையும் பெயருமாம்.

———-

பாடும் மதுகரமும் பச்சைத் தழைக் குடிலின்
வேடும் மணம் மருவும் வேங்கடமே -நீடு
மகராலயம் கடந்தார் வாழ் வாசு தேவர்க்கு
மகர் ஆலயங்கள் தந்தார் வாழ்வு –100-

(இ – ள்.) பாடும் மதுகரமும் – இசைபாடுவதுபோல ஒலிக்கின்றவண்டு களும்,
மணம் மருவும் – (மலர்களின்) நறுமணம் பொருந்தப்பெற்ற:
பச்சை தழை குடிலின் – பசுமையான தழைகளால் அமைக்கப்பட்ட குடிசைகளில்,
வேடும் – வேடர்களும்,
மணம் மருவும் – கலியாணம் செய்யப்பெற்ற:
வேங்கடமே -,-
நீடு – நீண்ட,
மகராலயம் – கடலை,
கடந்தார் – தாண்டியவரும்,
வாழ் வசுதேவர்க்கு மகர் – வாழ்வையுடைய வசுதேவர்க்குப் புதல்வரானவரும்,
ஆலயங்கள் தந்தார் – கோயில்களைத் தந்தருளியவருமான திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)

மதுகரம் – வடசொல்; தேனைச் சேர்ப்ப தென்று காரணப்பொருள்படும். பச்சை – ஐவிகுதிபெற்ற பண்புப்பெயர்:
பசு என்ற பண்படி தன்னொற்று இரட்டிற்று. வேடு – சாதிப்பெயர். வேடர்கள் குடிசைகளில் அடிக்கடி மணம் நிகழ்கின்றன வென்க.
மகராலயம் என்ற வடசொல் – மகர ஆலயம் என்று பிரிந்து, மகரங்களுக்கு இடமான தென்று பொருள்படும்;
மகரம் – சுறாமீன். கடல் கடந்தது, இராமாவதாரத்தில் இலங்கைக்குச் செல்லுதற்பொருட்டு.
வசுதேவர் – கண்ணனைப்பெற்ற தந்தை. மகர் – மகன் என்பதன் உயர்வுப்பன்மை.
ஆலயங்கள்தந்தார் – பலவிடங்களிற் கோயில் கொண்டு எழுந்தருளியிருந்து சேதநர்க்குச் சேவைசாதிப்பவர்.

————-

நாந்திச் செய்யுள் –

ஆதி திருவேங்கடம் என்று ஆயிரம் பேரான் இடம் என்று
ஓதிய வெண்பா ஒரு நூறும் -கோதில்
குணவாள பட்டர் இரு கோகனைத் தாள் சேர்
மணவாள தாசன் தன் வாக்கு —

(இ – ள்.) ஆதி திருவேங்கடம் என்று – சிறப்புள்ள திருவேங்கடமென் றும்,
ஆயிரம் பேரான் இடம் என்று – ஆயிரந்திருநாமங்களை யுடையவனான திருமாலினது இடமென்றும்,
ஓதிய – சொன்ன,
வெண்பா ஒரு நூறும் – நூறு வெண்பாக்களும், –
கோது இல் – குற்றமில்லாத,
குணம் ஆள – நற்குணங்களை யுடையவரான,
பட்டர் – பராசரபட்ட ரென்னும் ஆசாரிய ருடைய,
இரு கோகனகம் தாள் – தாமரைமலர்போன்ற இரண்டு திருவடிகளை,
சேர் – சரணமாக அடைந்த,
மணவாளதாசன்தன் – அழகியமணவாள தாசனுடைய,
வாக்கு – வாய்மொழியாம்; (எ – று.)

“ஆதிதிருவேங்கடம்” என்றது – இந்நூற் செய்யுள்களின் முன்னிரண் டடியின் வாய்பாட்டையும்,
“ஆயிரம்பேரா னிடம்” என்றது – பின்னிரண் டடியின் வாய்பாட்டையுங் குறிக்கும்.
குணவாளர் + பட்டர் = குணவாள பட்டர்; உயர்திணைப் பெயரீறு கெட்டது.
கோகநதம் என்ற வடசொல் – சக்கரவாகப் பறவைகள் தன்னிடம் விளையாடப் பெறுவ தென்று காரணப் பொருள்படும்;
கோகம் – சக்கரவாகம். தாசன்றன், தன் – சாரியை.

இச்செய்யுள், நூலாசிரியர் தாமே தம்மைப்பிறன்போலும் பதிகங்கூறியது; பிரயோகவிவேகநூலார்,
“இது, தன்னைப் பிறன்போலும் நாந்தி கூறுகின்றது”,
“வடநூலார் தாமே பதிகமும் உரையும் செய்வார்,”
“இனிச் சம்பந்தர் சடகோபர் முதலாயினாரும் திவாகரரும் பதினெண்கீழ்க்கணக்குச் செய்தாரும்
முன்னாகப் பின்னாகப் பதிகங்கூறுவதும் காண்க” என்றவை காண்க.

————–

திருவேங்கடமாலை முற்றிற்று.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கட மாலை –61-80-

February 20, 2022

நன் முலை போல் வெண் நகையார் நாயகர் மேல் வைத்த நெஞ்சும்
மென் முலையும் கற்பூரம் சேர் வேங்கடமே -முன் மலைந்து
தோற்ற மாரீசனார் தோற்றி மாயம் புரிய
சீற்றம் ஆர் ஈசனார் சேர்வு –61-

(இ – ள்.) நல் முலை போல் வெள் நகையார் – அழகிய முல்லையரும்பு போன்ற வெண்மையான பற்களையுடைய மகளிர்,
நாயகர்மேல் வைத்த – தம் தம் கணவரிடத்திற் செலுத்திய,
நெஞ்சும் – மனமும்,
கற்பு உரம் சேர் – பதி விரதா தருமத்தின் வலிமை பொருந்தப்பெற்ற:
மெல் முலையும் – (அம்மகளிருடைய) மென்மையானதனங்களும்,
கற்புரம் சேர் – பச்சைக்கற்பூரம் பூசப் பெற்ற:
வேங்கடமே -,-
முன் மலைந்து தோற்ற மாரீசனார் – முன்பு எதிர்த்துத் தோற்றோடின மாரீசன்,
தோற்றி மாயம் புரிய – மீண்டும்வந்து மாயை செய்ய,
சீற்றம் ஆர் – (அவனிடத்துக்) கோபங்கொண்ட,
ஈசனார் – (எல்லா வற்றுக்குந்) தலைவரான திருமால்,
சேர்வு – சேர்ந்திருக்கு மிடம்; (எ – று.)

எதுகைநயம்நோக்கி, முல்லை யென்பது, “முலை” என இடைக்குறை விகார மடைந்தது;
(“முலையணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ” எனக் கலித்தொகையிலும்,
“முலையேயணிந்த முகிழ்நகையீர்” என மதுரைக்கலம்பகத்திலும்,
“அம்முலைக் கொடியா ரலர்தூற்றவே” எனத் திரு வேங்கடக் கலம்பகத்திலும்,
“பயிற்சியும் வனமுலைப்பாலே” என அழகர் கலம்பகத்திலும் காண்க.)
முல்லை – அதன் அரும்புக்கு முதலாகுபெயர். பல்லுக்கு முல்லையரும்பு உவமை – அழகிய வடிவிற்கும், வெண்மைக்குமாம்;
நாயகர் – தற்சம வடசொல். கற்பாவது – கணவனைத் தெய்வமெனக் கொண்டு ஒழுகும் ஒழுக்கம்.
திருக்குறளில் “கற்பென்னுந் திண்மை” என்றாற் போல, “கற்பு உரம்” என்றார். உரம் – கலங்காத நிலைமை.
கர்ப்பூரமென்ற வடசொல், கற்புரமென விகாரப்பட்டது. திருவேங்கடத்தில்வாழும் மாதர்களது உள்ளும் புறமும் ஒத்துள்ளன
வெனச் சொல்லொப்புமையாற் சமத் காரந்தோன்றக் கூறியவாறு காண்க.

மாரீசன் – தாடகையின் மகனும், சுபாகுவின் உடன் பிறந்தவனும், மாயையில் மிக வல்லவனுமான ஓர்அரக்கன்.
இராவணனுக்கு மாமன்முறை பூண்டவன்; விசுவாமித்திரமுனிவர் தமது யாகத்தைப் பாதுகாத்தற்பொருட்டு
ஸ்ரீராமலக்ஷ்மணர்களை அழைத்துச்செல்லும் வழியிடையே தாடகை வந்து எதிர்த்து இராமனாற் கொல்லப்பட்டு இறந்தபின்,
மாரீசன் சுபாகுவி னுடனும் மற்றும்பல அரக்கருடனும் வந்து விசுவாமித்திரருடைய வேள்வியை அழிக்கத் தொடங்கியபொழுது,
இராமபிரான் அம்புகளால் அரக்கரைக் கொன்று ஓர் அஸ்திரத்தாற் சுபாகுவை வதைத்து
மற்றோர் அஸ்திரத்தால் மாரீசனைக் கடலிலே தள்ளிவிட்டார். இங்ஙனம் தப்பிப்பிழைத்த இவன் சிலகாலங்கழித்து,
இராமன் தண்டகாரணியம் புகுந்தபொழுது பழைய வைரத்தால் வேறு இரண்டு அரக்கருடனே மான்வேடம்பூண்டு
இராமனைத் தன் கொம்புகளால் முட்டிக் கொல்லக் கருதி நெருங்குகையில் இராமன் எய்த அம்புகளால் உடன்வந்த அரக்கர் இறக்க,
இவன்மாத்திரம் தப்பியோடி உய்ந்து இலங்கைசேர்ந்தனன். இவ்வாறு ஒருமுறைக்கு இருமுறை எதிர்த்துத் தோற்றுத் தப்பிப்
பிழைத்தமைபற்றி, “முன்மலைந்துதோற்ற மாரீசனார்” என்றார். “ஆர்” விகுதி – மாயையில் அவனுக்குஉள்ள சிறப்பை நோக்கினது.
பின்பு சீதையைக் கவர்ந்துசெல்லக் கருதிய இராவணனது தூண்டுதலால் மாரீசன் மாயையாற் பொன்மானுருவங் கொண்டு
தண்டகாரணியத்திற் பஞ்சவடியிலே சீதையின் எதிரிற் சென்று உலாவுகையில், அப்பிராட்டியின் வேண்டுகோளின்படி
அதனைப் பிடித்தற்குத் தொடர்ந்து சென்ற இராமபிரான் நெடுந்தூரம் ஓட்டங்காட்டிய அம்மானை மாயமானென்று
அறிந்த வளவிலே அதன்மேல் அம்பெய்து வீழ்த்தினனென்ற வரலாறு இங்குக்குறிக்கப்பட்டது.
கொன்ற என்ற பொருளில். “சீற்றம் ஆர்” என்றது – காரியத்தைக் காரணமாக உபசரித்தவாறு.
மாயம் – மாயா என்ற வடசொல்லின் விகாரம். ஈசன் – வடசொல்: ஐசுவரியமுடையவன்.
“தோற்றமாயம்புரிய” என்று பாடமோதி, மாரீசன் -, ஆர் தோற்றம் – பொருந்திய தோற்றத்தையுடைய,
மாயம் – மாயையை, புரிய – செய்ய என்று உரைத்தலும் ஒன்று; மெய்த்தோற்றம்போன்ற பொய்த்தோற்றத்தைக் கொள்ள; என்க.

————

கூறும் கிளி மொழியார் கொங்கை என்றும் கண் என்றும்
வீறு மருப்பிணை சேர் வேங்கடமே -நாறும்
துளவ மலர்க் கண்ணியார் தொண்டாய்த் தமக்கு அன்பு
உள அமலர்க்கு அண்ணியார் ஊர் –62-

(இ – ள்.) கூறும் கிளிமொழியார் கொங்கை என்று – (கொஞ்சிப்) பேசு கின்ற கிளியின் சொற்போன்ற இன்சொற்களையுடைய மகளிரது தனங்க ளென்று,
வீறு – பெருமையுற்ற,
மருப்பு இணையும் – இரட்டையான யானைத் தந்தங்களும்:
கண் என்று – (அவர்களுடைய) கண்களின் நோக்க மென்று,
வீறு மரு – சிறப்புப்பொருந்திய,
பிணையும் – பெண்மானும்.
சேர் – பொருந்திய,
வேங்கடமே -,-
நாறும் துளவம் மலர் கண்ணியார் – பரிமளம் வீசுகின்ற திருத்துழாய் மலர்களாலாகிய மாலையை யுடையவரும்,
தொண்டு ஆய் – (தமக்கு) அடிமையாகி,
தமக்கு அன்பு உள – தம்பக்கல் பக்தியுள்ள,
அமலர்க்கு – குற்றமற்ற அடியார்களுக்கு,
அண்ணியார் – சமீபிக்கின்றவரு மாகிய திருமாலினது,
ஊர் – வாசஸ்தாநம்; (எ – று.)

“கொங்கை யென்று வீறு மருப்பிணை” என்பதற்கு – கொங்கையாகிய யானைத்தந்த மென்றும்,
“கண்ணென்று வீறுமருப்பிணை” என்பதற்கு – கண் பார்வையாகிய பெண்மான் பார்வை யென்றும் உருவகமாகக் கருத்துக் கொள்க;
அன்றி, கொங்கைபோன்று யானைத் தந்தமும், கண்போன்று பெண்மான்விழியும் பொருந்திய என,
எதிர்நிலையுவமையாகக் கருத்துக் கொள்ளினுமாம்.
கிளி – அதன்சொல்லுக்கும், பிணை – அதன் நோக்கத்துக் கும் முதலாகுபெயர். மரு – மருவு என்பதன் விகாரம்.
பிணை – பெண்மைப் பெயர். துளவம் – துளஸீ என்ற வடசொல்லின் சிதைவு. திருத்துழாய் மலர் மாலை, திருமாலுக்கு உரியது.
துளவமலர்க்கண்ணி – துளவினாலும் மலர் களினாலுமாகிய மாலையுமாம்.
“தமக்கு” என்பதை மத்திமதீபமாக “தொண்டாய்” என்பதனோடுங் கூட்டுக.
உள = உள்ள: தொகுத்தல். ந + மலம் + அர் – அமலர்; பரிசுத்தர்; வடமொழிச்சந்தி.
அண்ணியார் – அண்என்னும் வினைப் பகுதியினடியாப் பிறந்த இறந்தகாலவினையாலணையும்பெயர்:
“இன்” என்ற இடைநிலை ஈறுதொக்கது. அன்போடு தமக்குத் தொண்டுபூண்ட தூயோரது உள்ளத்தில் உவந்து
வந்தெழுந்தருளி யிருத்தலுமன்றி, அவர்கட்குக் கட்புலனாய் அருகில் தோன்றி நின்று ஆவனசெய்தலு முடையரென்பது,
“தொண்டாய்த் தமக்கன்புள வமலர்க் கண்ணியார்” என்பதன் கருத்து.

————–

மாதர் அம் பொன் மேனி வடிவும் அவர் குறங்கும்
மீது அரம்பையைப் பழிக்கும் வேங்கடமே -பூதம் ஐந்தின்
பம்பர மாகாயத்தார் பாடினால் வீடு அருளும்
நம் பர மா காயத்தர் நாடு –63-

(இ – ள்.) மாதர் – மகளிரது,
அம் பொன் மேனி வடிவும் – அழகிய பொன்னிறமான உடம்பின் தோற்றமும்,
மீது அரம்பையை பழிக்கும் – மேலுலகத்திலுள்ள ரம்பை யென்னுந் தேவமாதை இழிவு படுத்தப்பெற்ற:
அவர் குறங்கும் – அம்மகளிரது தொடையும்,
மீது அரம்பையை பழிக்கும் – மேன்மையுள்ள (செழித்த) வாழைத்தண்டை வெல்லப்பெற்ற:
வேங்கடமே -,-
பூதம் ஐந்தின் – பஞ்சபூதங்களினாலாகிய,
பம்பரம் – சுழல்கிற பம்பரம் போல விரைவில் நிலைமாறுவதான,
மா காயத்தார் – பெரிய உடம்பையுடைய சனங்கள்,
பாடினால் – துதித்தால்,
வீடு அருளும் – (அவர்கட்கு) முத்தியை அளிக்கின்ற,
நம் பரம ஆகாயத்தார் – நமது தலைவரும் பரமாகாசமெனப்படுகின்ற பரமபதத்தை யுடையவருமான திருமாலினது,
நாடு – ஊர்; (எ – று.)

திருவேங்கடமலையில் வாழும் மகளிர் அரம்பை யென்னும் தேவமாதினும் மேம்பட்ட வடிவழகையும்,
வாழைமரத்தண்டினும் அழகிதாகத்திரண்டு உருண்டு நெய்ப்பமைந்த தொடையையும் உடைய ரென்றவாறு.
மாதர் – விரும்பப்படும் அழகுடையோர். அரம்பை யென்பது – இருபொருளிலும் ரம்பா என்ற வடசொல்லின் விகாரம்.
பழிக்கும் என்பது – உவமையுருபுமாம். பூதம் ஐந்து – நிலம், நீர், தீ, காற்று, வானம்.
காயம், பரமாகாசம் – வடசொற்கள். மாகாயம் – ஸ்தூலசரீரம். வீடு – (பற்றுக்களை) விட்டு
அடையு மிடம்; இச்சொல் – “முக்தி” என்னும் வடசொல்லின் பொருள் கொண்டது. பரமாகாசம் – சிறந்த வெளியிடம்.

———-

கோள் கரவு கற்ற விழிக் கோதையர்கள் பொற்றாளும்
வேள் கரமும் அம்பஞ்சு ஆர் வேங்கடமே -நீள் கரனார்
தூடணனார் முத்தலையார் துஞ்ச எய்து துஞ்சாரைக்
கூடு அணனார் முத்து அலையார் குன்று –64-

(இ – ள்.) ) கோள் – (ஆடவரை) வருத்துந்தன்மையையும்,
கரவு – (அவர்கள் மனத்தை) வஞ்சனையாகக் கவருந் தன்மையையும்,
கற்ற – பயின்ற,
விழி – கண்களையுடைய,
கோதையர்கள் – மகளிரது,
பொன் தாளும் – அழகியபாதமும்,
அம் பஞ்சு ஆர் – அழகிய செம்பஞ்சுக்குழம்பு ஊட்டப்பெற்ற:
வேள்கரமும் – மன்மதனது கையும்,
அம்பு அஞ்சு ஆர் – பஞ்சபாணங்கள் பொருந்தப்பெற்ற:
வேங்கடமே -,-
நீள் – பெரிய,
கரனார் – கரனும்,
தூடணனார் – தூஷணனும்,
முத்தலையார் – திரிசிரசும்,
துஞ்ச – இறக்கும்படி,
எய்து – அம்பு செலுத்தி,
துஞ்சாரை கூடு – உறங்காதவரான இலக்குமணனைச் சேர்ந்த,
அணனார் – தமையனாராகவுள்ளவரும்,
முத்து அலையார் – முத்துக்களையுடைய கடலிற்பள்ளிகொள்ளுகின்ற வருமானதிருமாலினது,
குன்று – மலை; (எ – று.)

கோள் கரவு – உம்மைத்தொகை. கரவு – காத்தல்; தொழிற்பெயர். கோதையர் – மாலைபோல் மென்மையான தன்மையுடையார்;
கோதை – மாலை; கள் – விகுதிமேல்விகுதி. கரம் – வடசொல்.
“கண் களவுகொள்ளுஞ் சிறுநோக்கம்,”
“யான் நோக்குங் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால், தான்நோக்கி மெல்லநகும்” என்றபடி
காதலன் தன்னைநோக்கும்பொழுது தான் எதிர்நோக்காது நாணித் தலைவணங்கி நிலத்தை நோக்கியும்,
அவன் தன்னை நோக்காத பொழுது தான் அவனை உற்றுநோக்கியும் வருகிற விழி யென்பார், “கரவு கற்ற விழி” என்றார்.
அதற்குக் கோள் கற்றலாவது – காதற்குறிப்பை வெளிப்படுத்துகின்ற நோக்கினாலும்,
பொதுநோக்கின் அழகினாலும் ஆடவர்க்கு வேட்கை நோயை விளைத்தல்.

வடிவின்பருமையோடு தொழிலின்மிகுதியும் உடைமை தோன்ற, “நீள்கரன்” என்றார்.
கரனார், தூடணனார், முத்தலையார் என்ற உயர்வுப்பன்மைகள், அவர்களுடைய வலிமைத்திறத்தை விளக்கும்.
கரனென்ற வடசொல் – கொடியவனென்றும், தூஷண னென்ற வடசொல் – எப்பொழுதும் பிறரைத் தூஷிப்பவ னென்றும் பொருள்படும்.
முத்தலையார் – மூன்று தலைகளை யுடையவனென்று பொருள்படும்; த்ரிசிரஸ் என்ற வடசொல்லின் பொருள் கொண்டது.

கரன் – இராவணனுக்குத் தாய்வழி யுறவில் தம்பிமுறையில் நிற்கின்ற ஓர் அரக்கன்;
தண்டகாரணியத்திலே சூர்ப்பணகை வசிப்பதற்கென்று குறித்த ஜநஸ்தாந மென்னு மிடத்தில் அவட்குப் பாதுகாவலாக
இராவணனால் நியமித்து வைக்கப்பட்ட பெரிய அரக்கர்சேனைக்கு முதல் தலைவன்.
இலக்குமணனால் மூக்கறுக்கப்பட்டவுடனே இராமலக்குமணரிடம் கறுக்கொண்டு சென்ற சூர்ப்பணகை,
கரன்காலில் விழுந்துமுறையிட, அதுகேட்டு அவன் பெருங்கோபங்கொண்டு, மிகப்பெரியசேனையோடும்
அறுபது லட்சம் படைவீரர்களோடும் சேனைத்தலைவர் பதினால்வரோடும் தூஷணன் திரிசிரஸ் என்னும்
முக்கிய சேனாதிபதிகளோடும் புறப்பட்டு வந்து போர் தொடங்குகையில், இராமன் லக்ஷ்மணனைச் சீதைக்குக் காவலாகப்
பர்ண சாலையில் நிறுத்தித் தான் தனியேசென்று எதிர்த்துப் பெரும்போர் செய்து அவ்வரக்கரையெல்லாம் துணித்து
வெற்றிகொண்டு மீண்டு பர்ணசாலையிற் காவல்செய்துநின்ற இலக்குமணனைச் சார்ந்தனனென்ற வரலாறு, இங்கே குறிக்கப்பட்டது.

இறக்க என்ற பொருளில் “துஞ்ச” என்றல் – மங்கலவழக்கு; மீளவும் எழுந்திராத பெருந்தூக்கங் கொள்ள வென்க.
இராமன் வனவாசஞ்செய்த பதினான்கு வருடத்திலும் இலக்குமணன் தூங்காது அல்லும் பகலும் அநவரதமும்
இராமனுக்கும் சீதைக்கும் பாதுகாவலாய் விழித்தபடியேயிருந்தன னாதலால், அவனுக்கு “துஞ்சார்” என ஒருபெயர் கூறினார்.
அணனார் = அண்ணனார்: தொகுத்தல். துஞ்சார் – இளையபெருமாள். அண்ணனார் – பெருமாள்.
திருப்பாற்கடலிலும் பிரளயப் பெருங்கடலிலும் திருமால் பள்ளிகொள்ளுதல்பற்றி, “அலையார்” என்றார்.
அலை – கடலுக்குச் சினையாகு பெயர். முத்து – முக்தா என்ற வடசொல்லின் விகாரம்; (சிப்பியினின்று) விடுபட்ட தெனப் பொருள்படும்.

————

கொங்கைக் கோடு ஏறிக் குலுக்கும் அரியும் கரியும்
வேங்கைக் கோடாதரிக்கும் வேங்கடமே -பூங்கைக்குள்
மெய்த்தவளைச் சங்கு எடுத்தார் மேகலை விட்டு அங்கை தலை
வைத்தவள் அச்சம் கெடுத்தார் வாழ்வு –65-

(இ – ள்.) கோங்கை – கோங்குமரத்தை,
கோடு ஏறி குலுக்கும் – கிளைகளின் மேலேறி மிகஅசைக்கின்ற,
அரியும் – குரங்கும்,
வேங்கை கோடு ஆதரிக்கும் – (அங்கிருந்து அருகிலுள்ள) வேங்கைமரத்தின்கிளையை விரும்பித் தாவிப் பிடிக்கப்பெற்ற:
கரியும் – யானைகளும்,
வேங்கைக்கு ஓடாது அரிக்கும் – புலிகளுக்கு அஞ்சியோடாமல் (எதிர்த்துநின்றுபொருது அவற்றை) அழிக்கப்பெற்ற:
வேங்கடமே -,-
பூ கைக்குள் – அழகிய திருக்கையினிடத்து,
மெய் தவளம் சங்கு எடுத்தார் – உருவம் வெண்மையான சங்கத்தை ஏந்தியவரும்,
மேகலை விட்டு அம் கை தலை வைத்தவள் அச்சம் கெடுத்தார் – தனது ஆடையைப் பற்றுதலை விட்டு அழகியகைகளைத்
தன்தலைமேல் வைத்துக் கூப்பி வணங்கினவளான திரௌபதியினது பயத்தைப் போக்கியவருமான திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)

மரக்கிளைகளிலேறிக் குலுக்குதலும், ஒருமரத்திலிருந்து மற்றொருமரத் தை விரும்பித்தாவுதலும், குரங்கினியல்பு.
கோங்கைக்குலுக்குமென இயையும். ஹரி, கரீ என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
ஹரி – (பிறர்கைப் பொருளைக்) கவர்வதெனக் காரணப்பொருள்படும்.
கரம் – கை; இங்கே, துதிக்கை; அதனையுடையது கரீ எனக் காண்க.
கரி என்பதற்கு – கருமையுடையதெனத் தமிழ்வகையாற் காரணப்பொருள்கூறுதல். பொருந்தாது, வடசொல்லாதலின்.
வேங்கை – ஓர்மரமும், புலியும். வேங்கடமலையிலுள்ள யானைகள் புலிகட்கு அஞ்சியோடாது எதிர்நின்று பொருது
அவற்றை அழிப்பனவென அவற்றின்கொழுமையை விளக்கியவாறு. அரித்தல் – ஹரித்தல்.

தவளம் – வடசொல். துரியோதனன் சொன்னபடி துச்சாதனன் திரௌபதியைச் சபையிற் கொணர்ந்து
துகிலுரியத் தொடங்கியபோது அவள் கைகளால் தனது ஆடையை இறுகப்பற்றிக்கொண்டே எம்பெருமானைக்
கூவியழைத்தபொழுது, அப்பெருமான் அருள்செய்யாது தாழ்த்து நின்று பின்பு துச்சாதனன் வலியஇழுக்கையில்
ஆடையினின்று கைந்நெகிழ அவள் இருகைகளையும் தலைமேல்வைத்துக் கூப்பி வணங்கித் துதித்த வுடனே
எம்பெருமான் அவளுடைய ஆடை மேன்மேல் வளருமாறு அருள் செய்து மானங்காத்தன னாதலால்,
“மேகலைவிட் டங்கை தலைவைத்தவ ளச் சங்கெடுத்தார்” என்றார்.
எம்பெருமானைச் சரணமடைவார்க்கு ஸ்வாதந்தி ரியம் சிறிதும் இருக்கக்கூடாதென்பதும்,
தன் முயற்சி உள்ளவளவும் பெருமான் கருணைபுரியா னென்பதும், இங்கு விளங்கும்.
மேகலை – எட்டுக் கோவை இடையணியுமாம்.

———-

மாவில் குயிலும் மயிலும் ஒளி செய்ய
மேவிப் புயல் தவழும் வேங்கடமே -ஆவிக்குள்
ஆன அருள் தந்து அடுத்தார் ஆன் நிரைக்காகக் குன்று ஏந்தி
வானவருடம் தடுத்தார் வாழ்வு –66-

(இ – ள்.) மாவில் – மாமரத்தில்,
குயிலும் – குயில்களும்,
ஒளி செய்ய – ஒளித்துக் கொள்ளும்படியும்: (அங்கு),
மயிலும் – மயில்களும்,
ஒளி செய்ய – பிரகாசமடையும்படியும்:
மேவி – பொருந்தி,
புயல் – மேகம்,
தவழும் – சஞ்சரிக்கப்பெற்ற,
வேங்கடமே -,-
ஆன அருள் தந்து – பொருந்தின கருணையைச் செய்து,
ஆவிக்குள் அடுத்தார் – (எனது) உயிரினுள் சேர்ந்தவரும்,
ஆன் நிரைக்கு ஆ – பசுக்கூட்டங்களைக் காக்கும்பொருட்டு,
குன்று ஏந்தி – (கோவர்த்தன) கிரியை எடுத்துக் குடையாகப் பிடித்து,
வான வருடம் தடுத்தார் – மேகங்களின் மழையை (ஆநிரையின் மேலும் ஆயர்களின் மேலும் விழாமல்) தடுத்தவருமான திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)

வசந்தகாலத்திற் களிப்புக்கொண்டு இனிதாகக் கூவி விளங்குந்தன்மை யனவான குயில்கள் மேகங்களின்
வருகையைக் கண்டு கொண்டாட்ட மொழிந்து வருந்திப் பதுங்குதலும்,
மயில்கள் மேகங்களின் வருகையைக் கண்டவுடனே மகிழ்ச்சியடைந்து கூத்தாடிக்கொண்டு விளங்குதலும் இயல்பாதலால்,
“குயிலும் மயிலும் ஒளிசெய்யப் புயல் மேவித்தவழும்” என்றார்.
ஒன்றுக்குஒன்று எதிரான தன்மையுடைய குயிலும் மயிலும் புயல்வருகையில் ஒருநிகரான தன்மையை
அடைகின்றன வென்று “ஒளிசெய்ய” என்ற சொல்லின் ஒற்றுமையாற் சமத்காரந்தோன்றக் கூறியவாறு. “மாவில்” என்றதனால்,
இவ்விரண்டுக்கும் மாமரம் தங்குமிடமாதல் அறிக. ஒளி – மறை

தலும், விளக்கமும்: முந்தினபொருளில் முதனிலைத் தொழிற்பெயர். பிந்தின பொருளில் பண்பு உணர்த்தும் பெயர்.
செய்ய என்ற வினையெச்சம் – இங்குக் காரியப்பொருளதாதலால், எதிர்காலம்.
ஆவிக்குள் – எல்லாவுயிர் களினுள்ளும் என்றுமாம்; என்றது, அந்தரியாமித்துவங் கூறியவாறாம்.
ஆவி – மனமுமாம். வான் என்ற ஆகாயத்தின் பெயர் – இடவாகுபெயராய், மேகத்தைக் குறிக்கும்;
அம் – சாரியை. வருடம் – வர்ஷமென்ற வடசொல் லின் விகாரம்.

————

கானொடு அருவி கனகமும் முத்தும் தள்ளி
மீனோ வெனக் கொழிக்கும் வேங்கடமே -வானோர்கள்
மேகன் அயன் அம் கொண்டு ஆர் வேணி அரன் காண்பு அரியார்
காக நயனம் கொண்டார் காப்பு –67-

(இ – ள்.) கான் ஓடு அருவி – காடுகளின்வழியாக ஓடிவருகின்ற நீர்ப் பெருக்குக்கள்,
கனகமும் முத்தும் தள்ளி – பொன்னையும் முத்தையும் அலைத்தெறிந்து,
மீனோ என கொழிக்கும் – நக்ஷத்திரங்களோவென்று (காண்கின்றவர்கள்) சொல்லும்படி (பக்கங்களில்) ஒதுக்கப்பெற்ற:
(அவ்வருவிகள்), மீ நோவு எனக்கு ஒழிக்கும் – மிகுதியான (பிறவித்) துன்பத்தை எனக்குப்போக்குதற்கு இடமான:
வேங்கடமே -,-
வானோர்கள் – மேலுலகில் வசிப்பவர்களான தேவர்களும்,
மேகன் – மேகத்தை வாகனமாகவுடையவனான இந்திரனும்,
அயன் – பிரமனும்,
அம் கொண்டு ஆர் வேணி அரன் – நீரை (கங்கா நதியின் வெள்ளத்தைத்) தரித்துப் பொருந்திய (கபர்த்தமென்னும்) சடை முடியையுடைய சிவபிரானும்,
காண்பு அரியார் – காணவொண்ணாதவரும்,
காகன் நயனம்கொண்டார் – காகாசுரனுடைய கண்ணைப் பறித்தவருமான திருமால்,
காப்பு – (எழுந்தருளிநின்று உயிர்களைப்) பாதுகாக்குமிடம்; (எ – று.)

மீன் ஓ என கொழிக்கும் என்பதற்கு – மீன்கள் ஓவென்று அலறித்துள் ளும்படி கொழிக்குமென்று உரைப்பாரு முளர்.
மலையருவிகள் அங்கு உண்டாகிற பொன்னையும் முத்துக்களையும் தள்ளிக் கொழித்து வருதல் இயல்பு.
கான் – காநக மென்ற வடசொல்லின் விகாரம். கநகம் – வடசொல். திரு வேங்கடமலையி லுள்ள அருவிகளின்
வடிவமான பாபவிநாசம் ஆகாசகங்கை முதலிய புண்ணியதீர்த்தங்கள் தம்மிடம் நீராடுகின்றவர்களுடைய
பிறவித் துன்பங்களையெல்லாம் போக்கவல்ல மகிமையுடையன வாதலால், “அருவி மீநோவு எனக்கு ஒழிக்கும்” என்றார்.
பொதுநகரத்துக்கும் சிறப்புனகரத்துக்கும் வரிவடிவில் மிக்கவேறுபாடு இருப்பினும் ஒலிவடிவில் மிக்கவேறுபாடு இல்லாமையால்,
சிலேடை யமகம் திரிபு இவற்றில் நகரனகரங்களை அபேதமாகக் கொண்டு அமைத்தல் மரபாதல்பற்றி, “மீனோவென்” எனப்பட்டது.
மேகம், அஜன், வேணீ, ஹரன்காகன், நயநம் – வடசொற்கள். அஜன் – அ – திருமாலினின்று, ஜன் – தோன்றினவன்;
ஹரன் – சங்காரக்கடவுள். அங்கு ஒள்தார்வேணி எனப்பிரித்து, ஒள்தார் என்பதற்கு – பிரகாசமான (கொன்றை) மாலையைத்
தரித்த என்றுஉரைத்து, அங்கு என்பதை அசையாகக் கொள்ளுதலும் ஒன்று.

“சித்திரகூடத்திருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட, அத்திரமே கொண் டெறிய வனைத்துலகுந் திரிந்தோடி,
வித்தகனே யிராமாவோ நின்னபய மென்றழைப்ப, அத்திரமே யதன் கண்ணை யறுத்தது மோரடையாளம்” என்ற
பெரியாழ்வார் திருமொழி – நான்காமடிக்கு மேற்கோள்.

————-

கண்டு அடைந்த வானவரும் காந்தள் குல மலரும்
விண்ட விர்ந்து நிற்கின்ற வேங்கடமே -தொண்டருக்கு
வைகுந்தம் நாட்டான் மருவு உருவம் ஈந்து வைக்கும்
வைகுந்த நாட்டான் வரை –68-

(இ – ள்.) கண்டு – (அத்திருமலையின் அழகைக்) கண்டு,
அடைந்த – (அதனிடத்தில்) வந்துசேர்ந்த,
வானவரும் – தேவர்களும்,
விண் தவிர்ந்து நிற்கின்ற – (மிகவும் இனிமையான அவ்விடத்தை விட்டுச்செல்ல மனமில்லாமையால்) தேவலோகத்தை நீங்கி
நிற்றற்குக் காரணமான
குலம் காந்தள்மலரும் – சிறந்தசாதிக் காந்தட்செடிகளின் மலர்களும்,
விண்டு அவிர்ந்து நிற்கின்ற – இதழ்விரிந்து மலர்ந்து விளங்கி நிற்றற்கு இடமான:
வேங்கடமே -,-
தொண்டருக்கு – தன் அடியார்களுக்கு,
வை குந்தம் நாட்டான் – கூரியசூலா யுதத்தை (யமன்) நாட்டாதபடி (அருள்) செய்பவனும்,
மருவு உருவம் ஈந்து – பொருந்திய தனது உருவத்தை (அவ்வடியார்கட்கு)க் கொடுத்து,
வைக்கும் வைகுந்தம் நாட்டான் – (அவர்களை) ஸ்ரீவைகுண்டமென்னுந் தனது தேசத்தில் நிலையாக வைப்பவனுமான திருமாலினது,
வரை – திருமலை; (எ – று.)

“கண்டுஅடைந்த வானவரும் விண்தவிர்ந்து நிற்கின்ற” என்றதனால், புண்ணிய லோகமாய்ச் சுகானுபவத்துக்கே யுரிய
தேவலோகத்தினும் திரு வேங்கடம் மிக இனிய வாசஸ்தாநமாகு மென்பதனோடு தேவர்கட்குப் புகலிட மாகுமது வென்பதும் விளங்கும்.
காந்தள்மலரைக் கூறினது, மற்றைக் குறிஞ்சி நிலத்து மலர்களுக்கெல்லாம் உபலக்ஷணம்.
குலம் – கூட்டமுமாம். விண்டு – வாய்விண்டு; விள் – பகுதி.

தன்அடியார்செய்த தீயகருமங்களையெல்லாம் தீர்த்தருளுதலால் அவர்கட்கு யமதண்டளை யில்லாதபடி செய்பவனென்பது,
“தொண்டருக்கு வை குந்தநாட்டான்” என்பதன் கருத்து. யமனுக்கும் அந்தராத்மாவாய் நின்று தொழில் செய்பவன் திருமாலேயாதலால்,
அவனதுதொழிலைத் திருமாலின் மேலேற்றிக் கூறினார்.
“வையே கூர்மை” என்ற தொல்காப்பியஉரியியற் சூத்திரத்தால், வை என்பது – கூர்மை யுணர்த்துகையில், உரிச்சொல்லென அறிக.
குந்தம் – வடசொல்: வேல், ஈட்டி, சூலம். நாட்டான் – நாட்டு என்னும் வினைப்பகுதியின்மேற் பிறந்த
எதிர்மறைத் தெரிநிலைவினையாலணையும் பெயர். எம்பெருமான் தனதுவடிவம்போன்ற வடிவத்தைத் தன் அடியார்கட்குக்
கொடுத்தலாகிய ஸாரூப்யநிலை “மருவுருவமீந்து” என்றதனாலும்,
தான்வசிக்கிற உலகத்தைத் தன்அடியார்கட்கு வாசஸ்தானமாகத் தருதலாகிய ஸாலோக
நிலை “வைக்கும் வைகுந்தநாட்டான்” என்றதனாலும் கூறப்பட்டன.
வைக்கும் வைகுந்த நாட்டான் – வைகுந்தநாட்டில் வைப்பவன் என விகுதி பிரித்துக் கூட்டுக.
நாட்டான் – நாடு என்ற இடப்பெயரின் மேற் பிறந்த உடன்பாட்டுக் குறிப்பு வினையாலணையும்பெயர்.

“மருவுருவமீந்துவைக்கும்” என்றவிடத்து “மருதினிடையே தவழும்” என்றும் பாடமுண்டு;
அதற்கு – மருதமரங்களின் நடுவிலே தவழ்ந்து சென்ற என்று பொருள்; இது, நாட்டானுக்கு அடைமொழி.

————-

வாழ் அம புலியினொடு வான் ஊர் தினகரனும்
வேழங்களும் வலம் செய் வேங்கடமே -ஊழின் கண்
சற்று ஆயினும் இனியான் சாராவகை அருளும்
நல்தாயினும் இனியான் நாடு –69-

(இ – ள்.) வாழ் – (கற்பகாலமளவும் அழிவின்றி) வாழ்கின்ற,
அம் புலியினொடு – சந்திரனுடனே,
வான் ஊர் தினகரனும் – ஆகாயத்திற் சஞ் சரிக்கின்ற சூரியனும்,
வலம் செய் – பிரதக்ஷிணஞ் செய்யப்பெற்ற:
வேழங் களும் – யானைகளும்,
வலம் செய் – வலிமை கொள்ளப்பெற்ற:
வேங்கடமே -,-
இனி – இனிமேல்,
யான் -, ஊழின்கண் – கருமவசத்திலே,
சற்று ஆயினும் சாரா வகை – சிறிதும் பொருந்தாதபடி,
அருளும் – (எனக்குக்) கருணைசெய்த,
நல் தாயினும் இனியான் – நல்ல தாயைக்காட்டிலும் இனிய வனான திருமாலினது,
நாடு – திவ்வியதேசம்; (எ – று.)

நாள்தோறும் கிழக்கில் உதித்து மேற்கில் அஸ்தமித்துவருகின்ற சந்திர சூரியர்களின் சஞ்சாரம்,
பூமியில் உயர்ந்து தோன்றுகிற திருவேங்கடமலை யைப் பிரதக்ஷிணஞ் செய்தல் போலத் தோன்றுதலாலும்,
தேவாதிதேவனான திருமால் எழுந்தருளியிருக்கிற திருவேங்கடமலையைச் சந்திரசூரியாதி தேவர்கள்
எப்பொழுதும் பிரதக்ஷிணஞ் செய்தல் மரபாதலாலும், “அம்புலியினொடு தினகரனும் வலஞ்செய்” என்றார்.
வலஞ்செய்தல் – வலப்புறத்தாற் சுற்றிவருதல்.
“வாழ்”, “வானூர்” என்ற அடைமொழிகள் – அம்புலி, தினகரன் என்ற இருவர்க்கும் பொருந்தும்.
திநகரன் என்ற வடசொல் – பகலைச் செய்பவ னென்று பொருள்படும். குறிஞ்சிநிலத்துப் பெருவிலங்காகிய யானைகள்
அம்மலையின் வளத்தால் மிக்ககொழுமைகொண்டு ஒன்றோடொன்று பொருதும் பிறவற்றோடு பொருதும்
தம்வலிமையையும் வெற்றியையுங் காட்டுதல் தோன்ற, “வேழங்களும் வலஞ்செய்” என்றனரென்க.
வலம் – பலமென்ற வடசொல்லின் விகாரம்.

ஊழாவது – இருவினைப்பயன் செய்த உயிரையே சென்று அடைதற்கு ஏதுவாகிய நியதி.
எனது கருமங்களை யெல்லாம் ஒழித்து எனக்கு முத்தியையருளும் பேரன்புடைய கடவுளென்பது, பிற்பாதியின் கருத்து.
சற்று, இனி – இடைச்சொற்கள். நல்தாய் – பெற்றதாய்.
தான்பெற்ற குழந்தைகட்கு ஆவனவெல்லாம் செய்யும் இயல்பு தோன்ற, “நல்தாய்” என்றார்.

———–

நாட்கமலப் பூஞ்சுனைக்கும் சாயகங்கள் கொய் துதிரி
வேட்கும் வடிவு இல்லா வேங்கடமே வாட் கலியன்
நா வியப்பு ஆம் பாட்டினர் நச்சு மடுவைக் கலக்கித்
தாவி அப்பாம்பு ஆட்டினார் சார்பு –70-

(இ – ள்.) தாள் – நாளத்தோடு கூடிய,
கமலம் – தாமரையையுடைய,
பூ – அழகிய,
சுனைக்கும் – சுனைகளுக்கும்,
வடிவு இல்லா – நீர்குறைதல் இல்லாத:
சாயகங்கள் கொய்து திரி வேட்கும் – (தனக்குஅம்புகளாகிற) மலர்களைப் பறித்துக்கொண்டு திரிகிற மன்மதனுக்கும்,
வடிவு இல்லா – உருவம் இல்லாத:
வேங்கடமே -,-
வாள் – வாட்படையை ஏந்திய,
கலியன் – திரு மங்கையாழ்வாருடைய,
நா – நாவினின்றுவருகிற,
வியப்பு ஆம் பாட்டினார் – அதிசயிக்கத்தக்க பாடல்களையுடையவரும்,
தாவி – குதித்து,
நஞ்சு மடுவை கலக்கி – விஷத்தையுடைய மடுவைக் கலங்கச்செய்து,
அ பாம்பு ஆட்டினார் – அந்த(க் காளியனென்னும்) பாம்பை ஆட்டினவருமான திருமால்,
சார்பு – சார்ந்திருக்கு மிடம்; (எ – று.)

சுனை – நீரூற்றுள்ள மலைக்குளம். அதற்கு வடிவுஇல்லையென வேங்கடத்தின் நீர்வளச்சிறப்பை உணர்த்தியவாறாம்.
வடிவு – வடிதல்; ‘வு’ விகுதி பெற்ற தொழிற்பெயர்.
சிவபிரானது நெற்றிக்கண்ணின் நெருப்புக்கு இரையாய் அங்கம் இழந்து அநங்கனான மன்மதன்,
தனக்கு அம்புகளாகின்ற தா மரைமலர் அசோகமலர் மாமலர் முல்லைமலர் நீலோற்பலமலர் என்பன
அம்மலையிற் செழித்திருத்தலால் அவற்றைப் பறித்தெடுத்துக் கொள்ளுதற் பொருட்டு அங்குத் திரிகின்றன னென்பார்
“சாயகங்கள்கொய்துதிரி வேட்கும் வடிவில்லா” என்றார்.
கொய்து என்ற வினையினால், “சாயகங்கள்” என்றது, மலர்களென விளங்கும். கமலம், ஸாயகம் – வடசொற்கள்.

திவ்யமான பாசுரங்களைத் திருமங்கையாழ்வார்பாடும்படி அருள்செய் தவர் திருமாலாதலாலும்,
திருவேங்கடமுடையான் திருமங்கையாழ்வாரது பாடல் பெற்றவ ராதலாலும், “கலியன் நாவியப்பாம் பாட்டினார்” என்றார்.
சோழமண்டலத்தில் திருமங்கையென்னும் நாட்டில் சோழராசனுக்குச்சேனை த்தலைமைபூணும்பரம்பரையில் தோன்றி
நீலனென்னும் இயற்பெயர் பெற்ற இவர், தம்குடிக்கு ஏற்ப இளமையிலேயே படைக்கலத் தேர்ச்சிபெற்று
அவ் வரசனுக்குச் சேனாதிபதியாய் அமர்ந்து வலக்கையில் வாளையும் இடக்கையில் கேடகத்தையும் ஏந்திச்சென்று
பகைவரோடு பொருதுவென்று பரகாலனெ ன்றுபெயர்பெற்ற பராக்கிரமம் தோன்ற, “வாட்கலியன்” என்றார்.

“மாயோ னைவாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்”,
“தென்னரங்கன்றன்னை வழிபறித்தவாளன்”