அவதாரிகை –
இதில்-நாள் இடப் பெற்று-வழித் துணையோடு போக ஒருப்படுகிற ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
சரீர அவசானத்தில் பேறு-என்று-ஸ்ரீ சர்வேஸ்வரன் நாள் இட்டுக் கொடுக்கையாலே-போக்கிலே ஒருப்பட்டு
நெடும் காலம் முகம் பழகின சரீரத்தை விட்டு
ஹ்ருதய குகையில் நின்றும் வழி கண்டு மூர்த்தன்ய நாடியாலே சிர கபாலத்தை பேதித்துக் கொண்டு
ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தாலே-ஸ்ரீ பரம பதத்தே ஏறப் போம் இடத்தில்
கேட்ட போதே துளங்க வேண்டும்படியான யாம்ய மார்க்கத்திலே பட்ட இளைப்பு எல்லாம் ஆறும்படி
தன் கடாஷாம்ருத வ்ருஷ்டிகளாலே குளிர வழிய வார்த்து யம படருடைய சரவண கடுகமான கடும் சொற்களை
கேட்ட யுள் வெதுப்பு ஆறும்படி செவிக்கினிய செம் சொற்களாலே செந்தளிப்பித்தும்
உக்ரமான யம தர்சனத்தால் வந்த வெக் காயம் ஆறும்படி
தன்னுடைய சௌம்ய வர்ஷத்தை நிரந்தரம்-வர்ஷித்துக் கொண்டு வழியில் உண்டான இடையூறுகளையும்
திவ்ய ஆயுதங்களாலே இரு துண்டமாக விட்டு
நயாமி பரமாங்கதம் -என்கிற படியே-ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோள்களிலே வைத்துக் கொண்டு
ஆதி வாஹகரைக் காட்டாமல்
தானே கொண்டு போய்-ஸ்ரீ திரு நாட்டிலே விடுகைக்கு
வேடன் -வேடுவிச்சி -பஷி -குரங்கு -பிசாசம் -சராசரம்-18 நாடன் பெரும் கூட்டம் – முதலானாரை வருத்தம் அறக் கொண்டு போய்
ஸ்ரீ வைகுந்தத்து ஏற்றி அருளின-காளமேகமான ஸ்ரீ அரங்கத்து உறையும் இன் துணைவனை ஒழிய-வேறு ஒருவரும் இல்லை என்று
ஸ்ரீ காளமேகத்தை வழித் துணையாகப் பற்றுகிற-தாள தாமரையில் அர்த்தத்தை
தாள் அடைந்தோர் தங்கட்கு -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –
————————————————–
தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம்
காளமேகத்தைக் கதியாக்கி -மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும் மாறன் என
ஏதம் உள்ளது எல்லாம் கெடும்—91-
————————————————————-
வியாக்யானம்–
தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம் காளமேகத்தைக் கதியாக்கி –
சரணமாகும் தனதாள் அடைந்தார்கட்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -என்று
தன் திருவடிகளை உபாயமாக அடைந்தவர்களுக்கு தானே மார்க்க பந்துவாம் –
ஆதி வாஹிகர் கையிலும் காட்டிக் கொடாதே
துன்னு குழல் கரு நிறத்தன் என் துணையே -என்கிறபடியே
சுரி குழல் கமல கட்கனிவாய் காளமேகத்தை அன்றி மற்று ஒன்றிலம் கதியே -என்ற-ஸ்ரீ காளமேகம் தானே
நயாமியில் படியே -நடத்தும் –
தாள் அடைந்தோர் -என்கிற இதில் – தாமும் அந்தர்பூதர் – இறே –
காளமேகத்தை கதியாக்கி –
சாம்சாரிக தாபம் எல்லாம் ஆறும்படி-சௌந்த்ர்ய அம்ருத வர்ஷியான ஸ்ரீ காளமேகத்தை
வழிக்கு ரஷகமான கதி ஆக்கி –
அதாவது –
அவன் நிழல் தடம் அன்றி அறியோமே -என்றும்
அண்ட மூ வுலகு அளந்தவன் -என்றும்
கூத்தன் கோவலன் திரு மோஹூர் ஆத்தன் தாமரை அடி அன்றி மற்றிலம் அரணே -என்றும்
தயரதன் பெற்ற மரகத மணித் தடம் -என்றும்
மணித்தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய் அணிக்கொள்
நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும் துணிக்கும் வல்லரட்டன் -என்றும்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் -என்றும் –
இப்படி வழிக்கு வேண்டும்-நிழல் தடங்கள் முதலானவை எல்லாம்-தானே யானவன் -என்கை –
அக்ரத ப்ரய யௌ ராம -என்று அவர் முன்னே போக –
மன்னன் இராமன் வைதேவி என்று உரைக்கும் அன்ன நடைய அணங்கு
அவர் தோள் நிழலை அண்டை கொண்டு நடந்தால் போலே-நடக்கப் பாரிக்கிறார் இறே-
மீளுதலாம் ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும் மாறன் –
குடி மன்னுமின் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் -என்னும்படி
மீளுதல் ஆகிற தோஷம் இன்றிக்கே-ந ச புனராவர்த்ததே -என்றும்
புணை கொடுக்கிலும் போக ஒட்டாரே -என்றும்
மீளாப் பொருவரிய விண்ணாடு -என்றும்
மீட்சி இல்லா நாடு -என்றும் சொல்லப்படுகிற-பரம வ்யோம சப்த வாச்யமான -பரமபதத்திலே
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணுமே -என்றும்
எழுந்து அருள மனனம் பண்ணுகிற மோஷ லஷ்மியை உடைய
மாறன் -என
ஸ்ரீ ஆழ்வார் -என்று அனுசந்திக்க –
கேதம் உள்ளது எல்லாம் கெடும் –
மனக்கேதம் சாரா -என்னும்படி-துக்கம் என்று பேர் பெற்றவை எல்லாம் நசிக்கும் –
பிராப்ய லாப துக்கம் எல்லாம்-நிவ்ருத்தமாம்-
———————————————————————————-
அவதாரிகை
இதில் – ஸ்ரீ பரமபதத்தில் செய்யும் அடிமையை ஸ்ரீ திருவனந்த புரத்திலே செய்யப் பாரிக்கிற ஸ்ரீ ஆழ்வார்
ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
குறைவற ஸ்ரீ பரம பதத்தினில் போனால்- வானிளவரசான வைகுந்த குட்டனுக்குச் செய்யக் கடவ
வழு விலா அடிமைகளை-நித்ய சூரிகளில் தலைவரான ஸ்ரீ சேனாதிபதி ஆழ்வான் எடுத்துக் கை நீட்டும்படி
நிரதிசய போக்யமான ஸ்ரீ திருவனந்த புரத்திலே ஸ்ரீ திருவனந்த ஆழ்வான் மேலே
பள்ளி கொண்டு அருளுகிற பரம பிராப்ய பூதரான ஸ்ரீ பத்ம நாபப் பெருமாள் திருவடிகளிலே
அனுகூல ஜனங்களும் தாமுமாய் போய் அடிமை செய்ய வேண்டும் என்று மநோ ரதிக்கிற
கெடும் இடரில் அர்த்தத்தை-கெடும் இடர் வைகுந்தத்தை -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை-
——————————————————–
கெடுமிடர் வைகுந்தத்தைக் கிட்டினால் போல்
தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில்
கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் மாறன் உயர்
விண் தனில் உள்ளோர் வியப்பவே—-92-
கெடும் இடர் வைகுந்தம் -துக்க ரஹிதமான பரம பதம் -வினைகள் போக்கி தானே -அங்கே போக முடியும் –
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை பற்றி இடர் கெடும் சொல்ல வேண்டாமே –
அதனால் பலன் சொல்லாமல்- பாசுரம் சொல்லவே இடர் கெடுமே –
———————————————————–
வியாக்யானம்–
கெடுமிடர் வைகுந்தத்தைக் –
கைங்கர்ய சித்தியாலே நிவ்ருத்த துக்கராம்படி பண்ண வற்றான ஸ்ரீ வைகுண்டத்தை –
அன்றிக்கே –
துக்க ரஹிதமான ஸ்ரீ வைகுண்டத்தை என்னுதல்-
கிட்டினால் போல் – அத்தை பிராபித்து அடிமை செய்யப் பெற்றால் போலே
தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் –
ஏபிஸ் ச சசிவை -இத்யாதியாலே ஸ்ரீ பரத ஆழ்வான் பாரித்தால் போலே
தடமுடை அனந்த புரம் தன்னில்-படமுடை அரவில் பள்ளி பயின்ற ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்ய அபேஷித்தார்-
அதாவது –
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே -என்றும்
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து கொண்டு-ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே -என்றும்
அமரராய் திரிகின்றார்கட்கு -என்று தொடங்கி-நாமும் போய் நணுக வேணும் -என்றும்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ-நமர்கள் உள்ளீர் -என்றும் –
தாமும்-தம் திரு உள்ளத்தோடு ஒத்த ஸ்ரீ வைஷ்ணவர்களும் கூட அடிமை செய்த மநோ ரதித்த -என்கை –
படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் -மாறன் உயர் விண் தனில் உள்ளோர் வியப்பவே –
சர்வோத்தரமான பரம ஆகாசத்திலுள்ளராய்-ஸ்ரீ கோயில் கொள் தெய்வங்களான
ஸ்ரீ திருவடி-ஸ்ரீ திருவனந்த ஆழ்வான்-ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் தொடக்கமானவர்கள் –
நாம் தெளி விசும்பு திரு நாட்டில் இருந்து செய்யும் அடிமையை
இவர் – இருள் தரும் மா ஞ்லாலத்தில் இருந்து பாரிப்பதே -என்று விஸ்மயப்ப்படும்படி
ஸ்ரீ சேஷசாயியாய்-ஸ்ரீ யபதியான-ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சர்வ வித கைங்கர்யங்களையும்
செய்ய வாதரித்தார் ஸ்ரீ ஆழ்வார் – இவரும் ஒருவரே -என்று இவருக்கு ஈடுபாடாய் இருக்கிறது-
அங்கே செய்வதை விட இங்கே பாரிப்பது மேல் -ருசி வந்தால் தானே கிட்டும் –
———————————————
அவதாரிகை –
இதில் – யதா மநோ ரதம் பெறாமல் சம்சாரத்திலேயே ஸ்ரீ சர்வேஸ்வரன் வைக்க எண்ணினான் என்று சங்கிக்க
அவன் தெளிவித்த படியை அருளிச் செய்கிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
தம் மநோ ரத அனுகுணமாக அப்போதே அத்தேசத்திலே புக்கு அடிமை செய்யப் பெறாமையாலே-கலங்கி
பழைய படி நமக்கு சம்சாரத்தில் இருப்பே சேஷித்து விடுகிறதோ -என்று
பிரகிருதி சம்பந்த்தத்தின் கொடுமை ஸ்ரீ ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யம்
முதலான ஹேதுக்களால் தமக்கு பிறந்த அதிசங்கையை ஒரு படுக்கையிலே கூட இருக்கச் செய்தே
பண்டு பசு மயக்கப் போகிற ப்ரபாத காலம் வந்து
அக் காலத்துக்கு அடைத்த குயில் மயில் முதலானவற்றின் பாடல் ஆடல் முதலான
அடையாளங்களையும் காண்கையாலே
அவற்றையே கொண்டு ஸ்ரீ கிருஷ்ணன் பசு மேய்க்கப் போனான் -என்று அதி சங்கை பண்ணி
நோவு படுகிற இடைப் பெண்கள் பேச்சாலே அருளிச் செய்கிற-வேய் மரு தோளிணை யில் அர்த்தத்தை
வேய் மரு தோள் இந்த்ரிரை கோன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –
——————————————-
வேய் மரு தோள் இந்திரை கோன் மேவுகின்ற தேசத்தை
தான் மருவாத் தன்மையினால் தன்னை யின்னம் பூமியிலே
வைக்கும் எனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த
தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு –93-
———————————————-
வியாக்யானம்–
வேய் மரு தோள் இந்திரை கோன் மேவுகின்ற தேசத்தை –
வேய் போலும் எழில் தோளி பொருட்டா -பெருமாள் திருமொழி –என்னும்படி
அணைக்கைக்கு பணை போல் இருக்கிற தோளை யுடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன் –
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் -என்று ஸ்ரீ அனந்த சாயியாய்-
திரு மாற்கு அரவு -என்கிறபடி இருவருமாய்ச் சேர்த்தியாய் இருக்கிற தேசத்தை –
மாதவா என்ன -என்றார் இறே-
தான் மருவாத் தன்மையினால் –
நாமும் போய் நணுக வேணும் -என்னும் அபி நிவேசத்தை யுடைய தாம்
போய் புகப் பெறாத படியாலே –
தன்னை யின்னம் பூமியிலே வைக்கும் எனச் சங்கித்து –
நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் -என்று
தம்மை ஸ்வா தந்த்ர்யாதிகளாலே சம்சாரத்திலே இட்டு வைக்குமோ என்று சங்கித்துப் போர –
அதாவது –
இவர் உடைய ரஷண சிந்தை பண்ணிக் கொண்டு சௌஹார்த்த யுக்தன் ஆனவனும்
என் கை கழியேல் -என்னும்படி -பொருந்தி
பிரத்யஷ சாமானாகாரம் போலே இவர் கையிலே இருக்க-அத்தசையிலே
ஸ்வ ரஷணத்திலே கை வாங்கி இருக்குமவர்கள்-விஷயத்திலே ரஷணத்திலே அவன் மண்டி
அங்கே விச்லேஷிக்கும் காலத்தையும்
அவன் கை கழிந்தால்-சப்தாதிகள் பாதகமாகிற படியையும்
கால தைர்க்க்யா சஹதையையும்
ஆஸ்ரித ரஷணத்தில் அந்ய பரதையாலே அந்த ராயங்கள் புகும் படியையும்
அவனுக்கு அறிகிற பிரகாரத்தை-
வேய் மரு தோளிணை -என்று தொடங்கி -ஆ மருவின நிரை மேய்க்க நீ போக்கு-ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ -என்றும்
தகவிலை தகவிலை இனி யுன்னை நீ பிரிவை யாமால் வீவ-நின் பசு நிரை மேய்க்கை போக்கு -என்றும்
வீவ நின் பசு நிரை மேய்க்கை போக்கு-சாவது இவ்வாய் குலத்து ஆய்ச்சியோமாய் பிறந்த வித் தொழுத்தையோம் தனிமை தானே -என்றும்
நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பித் துறந்து-எம்மை விட்டவை மேய்க்கப் போதி -என்றும்
பிணியவிழ் மல்லிகை வாடை தூவப் பெரு மத மாலையும் வந்தின்றாலோ -என்றும்
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு -என்றும்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள்-தலைப்பெய்யில் யவம் கொல் ஆங்கே -என்றும்
அசுரர்கள் தலைப் பெய்யில்அவம் கொல் ஆங்கு என்று ஆழும்-என் ஆர் உயிர் பிரான் பின் போகல் நீ உகக்கும் நல்லவரோடு உழி தராயே -என்றும்
உகக்கும் நல்லவரோடு -என்று தொடங்கி-அவத்தங்கள் விளையும் என் சொல் கொள்- என்றும்
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள்- திவத்திலும்-பசு நிரை மேய்ப்பு உவத்தி -என்றும்
இப்படி பஹூ முகமாக சங்கிக்க-
மால் தெளிவிக்கத் தெளிந்த –
அதாவது –
அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார் ஆனவனும் –என்றும்
முஹூர்த்தம் அபி ஜீவாவ -என்னும்படி
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லாதே -என்றும்
அவனோடு பிரிவதற்கு இரங்கும்படியான இவர்கள் பிரேம ஸ்வ பாவத்தைக் கண்டு
செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு -என்னும்படி சவிலாத ஸ்மிதம் பண்ணி
அணி மிகு தாமரைக் கையாலே அஞ்சேல் என்று ஆச்வசிபபித்து
உம்முடைய அபேஷித்ததின் படியே செய்கிறோம் என்று அதி சங்கையைத் தீர்த்தான் ஆயிற்று
அதாவது
பசு நிரை மேய்ப்பு ஒழிகை -அத்தைப் பற்ற -தாமோதரன் -என்றார்–
மால் தெளிவிக்க தெளிந்த –
ஸ்ரீ கிருஷ்ணன் தெளிவிக்கத் தெளிந்த-கலங்கினவனை தேற்றுமவன் இறே
தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு –
சங்கா ஹேது இன்றிக்கே-கூட இருக்கச் செய்தே சங்கிக்க சர்வஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரன் சமாதானம் பண்ண
சமாஹிதராய்
அத்தாலே தமக்கு சத்ருசரான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் அநந்ய கதிகளான எங்களுக்கு அபாஸ்ரயம்-
—————————————
அவதாரிகை –
இதில்
அடியில் உபதேசித்த பக்தி-ஸ்வசாத்தியமான பலத்தோடே தலைக் கட்டினபடியை அருளிச் செய்த
திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
கீழ்-ஸ்ரீ காளமேகத்தை வழித் துணையாக-
ஸ்ரீ தாள தாமரையிலே பற்றி போக்கிலே ஒருப்பட்டவர் ஆகையாலே-
ஸ்ரீ உயர்வற உயர் நலத்தில்-அயர்வறும் அமரர்கள் அதிபதியாக அறுதி இட்ட ஸ்ரீ பரத்வமே பரம பிராப்யமாகையாகவே
அந்த பிராப்ய வேஷத்தையும்-
பிராப்ய பலமான கைங்கர்யத்தையும்- ஸ்ரீ கெடும் இடரிலே அனுசந்தித்து-
அந்த பிராப்ய வேஷத்தை பெறுகைக்கு உபாயமாக-
ஸ்ரீ வீடுமின் முற்றத்திலும்—ஸ்ரீ பத்துடை அடியவரிலும் தொடங்கின-பக்தியானது ஸ்வ சாத்தியத்தோடே பொருந்தின படியை சொல்லி
தமக்கு உபாயமாக
முதல் ஸ்ரீ திருவாய் மொழியில் சொன்ன பிரபத்தியையும்-சொல்லித் தலைக் கட்டுகிற
ஸ்ரீ சார்வே தவ நெறியில் அர்த்தத்தை–சார்வாகவே அடியில் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் என்கை –
————————————————-
சார்வாகவே யடியில் தானுரைத்த பத்தி தான்
சீரார் பலத்துடனே சேர்ந்ததனை -சோராமல்
கண்டுரைத்த மாறன் கழல் இணையே நாடோறும்
கண்டு உகக்கும் என்னுடைய கண் –94-
—————————————————–
வியாக்யானம்–
சார்வாகவே யடியில் தானுரைத்த பத்தி தான் –
ஸ்ரீ வீடுமின் முற்றத்திலும் ஸ்ரீ பத்துடை அடியவரிலும் பரோபதேச ரூபேண எல்லாருக்கும் அபாஸ்ரயமாக அருளிச் செய்த
பிரபத்தி யோடு விகல்பிக்கலாம் படியான பக்தி யானது தான்
சரண்ய -என்றத்தை- சர்வ லோக சரண்யாய -என்றும்-
பாதயோஸ் சரணான் வேஷீ நிபபாத -என்றும்
சாஷாத் பலத்தோடே தலைக் கட்டினால் போலே –
இவரும் –
உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்மினே -என்றும்
எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே -என்றும்
உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும்-உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே -என்றும்
பத்துடை அடியவர்க்கு எளியவன் -என்றும்
அம்பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று -என்றும்
நன்றென நலம் செய்வது -என்றும்
இப்படி அருளிச் செய்த பக்தி மார்க்கம் ஆனது-சாத்தியமான பலத்தோடே பொருந்தின படியையும்
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -என்றும்
அருளினான் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே -என்றும்
வண் புகழ் நாரணன் திண் கழல் சேர் -என்றும்
நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி -என்றும்
அடியே தொடங்கி அருளிச் செய்து போருகிற-பிரபத்தி-ஸ்வ சாத்தியத்தோடு-பொருந்தினப டியையும் –
பண்டே பரமன் பனித்த பணி வகையே-
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே-விண்டே ஒழிந்த வினை யாய வெல்லாம் -என்றும்-அருளிச் செய்து
மற்றும்
பக்தி-பிரபக்திக்கு-உக்தமான வற்றையும்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன் -என்றும்
திரு மெய் யுறைகின்ற செங்கண் மால் -என்றும்
மடப்பின்னை தன கேள்வன் தாள் கண்டு கொண்டு -என்றும்
தலை மேல் புனைந்தேனே -என்றும்
நச்சப்படும் நமக்கு -என்றும்
வரை எடுத்தான் பாதங்கள் வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய் -என்றும்-அருளிச் செய்தார் இறே-
ஏவம் விதமான வர்த்தங்களை –
சோராமல் கண்டுரைத்த மாறன் –
இவ் வர்த்தமானது வ்யர்த்தமே-நழுவிப் போகாமே-இஸ் ஸூஷ்ம அர்த்தத்தை தர்சிப்பித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –
கழல் இணையே நாடோறும் –
இப்படி-சூஷ்ம அர்த்த தர்சியான ஸ்ரீ ஆழ்வார்-சேர்த்தி அழகை யுடைய திருவடிகளையே –
கண்டு உகக்கும் –
சேவித்து-ஹ்ருஷ்டமாம் –
என்னுடைய கண் –
மே திருஷ்டி -என்னும்படியான-என் கண்கள் –
ஸ்ரீ தாமோதரன் தாள் யுடைய-ஸ்தானத்திலே-இவர்க்கு-ஸ்ரீ மாறன் தாள்-ஆயிற்று –
——————————————————————
அவதாரிகை –
இதில் பக்திமான்கள் பரிமாற்றத்தை சுருங்க அருளிச் செய்த படியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் அது எங்கனே என்னில்
ஸ்ரீ ஈஸ்வரன் தம்மை ஸ்ரீ பரம பதத்திலே கொடு போகையிலே த்வரிக்கிற படியை கண்டு
இவர்களுக்கு இது ஓன்று குறை பட்டு கிடக்க ஒண்ணாது என்று பார்த்து
தம்முடைய பரம கிருபையாலே
ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பற்றுகையாலும் இவர்களுக்கு ஸூக்ரஹமாக வேணும் என்று பாசுரப் பரப்பு அறச் சுருக்கத்திலே
பக்திமான்கள் பரிமாற்றம் இருக்கும் படியை சம்சாரிகளுக்கு உபதேசித்து பரோபதேசத்தை நிகமிக்கிற
கண்ணன் கழலிணையில் அர்த்தத்தை-கண்ணன் அடி இணையாலே
அருளிச் செய்கிறார் -என்கை –
————————————————————
கண்ணன் அடி இணையில் காதல் உறுவார் செயலை
திண்ணமுறவே சுருங்கச் செப்பியே -மண்ணவர்க்குத்
தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன்
ஆன புகழ் சேர் தன்னருள்–95-
————————————————————-
வியாக்யானம்–
கண்ணன் அடி இணையில்-
ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளிலே
காதல் உறுவார் செயலை –
பக்தி உக்தராய் இருப்பார்-க்ருத்யத்தை –
திண்ணமுறவே –
த்ருடமாகவே-அதிலே-ஊன்றும்படி-
சுருங்கச் செப்பியே –
சங்க்ரஹமாக அருளிச் செய்து
யே -ஈற்றசை –
மண்ணவர்க்குத் –
பிருத்வியில் யுண்டான-சர்வாத்மாக்களுக்கும் –
தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன் –
ஸ்ரீ பிராட்டி-விதித-சுந்தர 21-25- -இத்யாதி யாலே பரோபதேசத்தை முடித்தால் போலே
கீழே உபதேசித்துக் கொடு போந்த-பரோபதேசத்தை பரி சமாப்தி பண்ணி அருளினார்-பெரு மதிப்பரான ஸ்ரீ ஆழ்வார் –
ஸ்ரீ பகவத் பிரபாவம் ஸ்ரீ சீதை பிராட்டி சொல்லி நிகமிக்க பிராட்டி பாகவத பிரபாவம் சொல்லி இவர் நிகமிக்கிறார் –
ஆன புகழ் சேர் தன்னருள் –
ஸ்லாக்கியமான யசஸ் உடன் கூடின-தம்முடைய பரம கிருபையாலே-பரோபதேசத்தை தலைக் கட்டி அருளினார் –
நின் கண் வேட்க்கை எழுவிப்பன் -பிராட்டி ஆழ்வார் உடைய ஒரே க்ருத்யம்
ஆன புகழ்
உலகத்தார் புகழும் புகழ்
தன்னருள்
அருள் கொண்டாடும்படியான அருள்-
கண்ணன் அடி இணையில்
காதல் உறுவார் செயலை-சுருங்கச் செப்புகை யாவது –
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்-எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -என்றும்
நாரணன் எம்மான் -என்றும்
கோள் வாய் அரவணையான் தாள் வாய் மலரிட்டு-நாள்வாய் நாடீரே -என்றும்
நாடீர் நாடோறும் வாடா மலர் கொண்டு-பாடீர் அவன் நாமம் -என்றும்
மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்-பேயார் முலை யுண்ட வாயான் மாதவனே -என்றும்
மாதவன் என்று என்றே ஓத வல்லீரேல் -என்றும்
பேரார் ஓதுவார் ஆரார் அமரரே -என்றும்
சுனை நன் மலரிட்டு நினைமின் நெடியானே -என்றும்
இப்படி-எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தை சப்தார்த்தங்களை சுருக்கி- ஸ்ரீ மாதவன் -என்று த்வயமாக்கி-
கரண த்ரய பிரயோஜன வ்ருத்தி சம்சாரிகளுக்கு கையோலை செய்து கொடுத்தபடி -என்கை-
—————————————————————
அவதாரிகை –
இதில் ஸ்ரீ பரம பதத்தில் கொடு போகையில்-த்வரிக்கும் இடத்திலும் விதி பரதந்த்ரனாய் செய்கிறபடியை
பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
இப்படி பரோபதேசம் தலைக் கட்டின பின்பு தம்மை அவன் ஸ்ரீ திரு நாட்டிலே கொடு போகிக்கு த்வரிக்கும் படியையும்
கொடு போகும் இடத்தில் தாம் நியமித்தபடி கொடு போக வேணும் என்று தமக்கு அவன் பரதந்த்ரனாய் நிற்கிறபடியையும்
தாம் பெற்ற பேற்றின் கனத்தையும் -தம்முடைய திரு உள்ளத்துக்குச் சொல்லி-இனியராய் பேசுகிற
அருள் பெறுவாரில் அர்த்தத்தை-அனுவதித்து அருளிச் செய்கிறார் அருளால் அடியில் -தொடங்கி -என்கை –
—————————————————————————
அருளால் அடியில் எடுத்த மால் அன்பால்
இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து -இரு விசும்பில்
இத்துடன் கொண்டேக இசைவு பார்த்தே யிருந்த
சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் —96-
த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் -அடுத்த பதிகார்த்தம் –
பிரணவ பாரதந்தர்யம் -மோக்ஷ தானத்தில் -ஆஸ்ரித பாரதந்தர்யம் -இதில் –
————————————————————————–
வியாக்யானம்–
அருளால் அடியில் எடுத்த மால் –
கரண களேபரைர்க் கடயிதும் தயமா நாம நா -என்றும்
அந்நாள் நீ தந்த ஆக்கை -என்றும்-அடியிலே எடுத்த படியால் –
அன்றிக்கே
மயர்வற மதிநலம் அருளினான் -என்று-கேவல நிர்ஹேதுக கிருபையாலே
அஜஞாநாவஹமான சம்சாரத்தில் நின்றும் அடியிலே எடுத்த சர்வேஸ்வரன்-என்றாதல்
அதுவும் அன்றிக்கே
மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன் -என்னும்படி
அயோக்யா அனுசந்தானத்தாலே-அகன்று-முடியாத படி எடுத்த-என்றாகவுமாம் —
அன்பால் இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து –
அந்தாமத்து அன்பு செய்யும் அன்பாலே-
இருள் தரும் மா ஞாலத்தில் ‘ஜன்மம் ஆகையாலே-இருளார்ந்த தம் உடம்பை இச்சித்து
ஜ்ஞானப் பிரசுரமான-தம் தேஹத்தை-வாஞ்சித்து
அன்றிக்கே –
இருளார்ந்து தம்முடம்பை இச்சித்து -ராகாந்தனாய்
நெய்யூண் மருந்தோ மாயோனே -என்று
இவன் ஸ்ரீ திருவாய்ப் பாடியிலே வெண்ணெயை-ஆதரித்தால் போலே
ஜ்ஞான பரிமளம் விஞ்சின-சரம சரீரம் ஆகையாலே இவர் திரு மேனியை அவன் ஆதரிக்கப் புக்கான்-என்றாகவுமாம்-
இரு விசும்பில் –
பெரிய வானிலே
இத்துடன் கொண்டேக –
இவர் அஜஞாநாவஹம்-என்று அநாதரிக்கிற-இச் சரீரத்துடனே கொண்டு போக
இசைவு பார்த்தே யிருந்த சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் –
விதி பரதந்த்ரனாய்-
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா –இத்யாதிப் படியே
ஸ்ரீ பிராட்டி திரு உள்ளக் கருத்தைப் பின் சென்று செய்தாப் போலே
இவர் அனுமதி பார்த்து இருந்தவனுடைய-சுத்தியை சொல்லும் ஸ்ரீ ஆழ்வார் உடைய-ஸ்ராவ்யமான சப்தங்கள்-
அதாவது –
என் நெஞ்சத்து உள்ளிருந்து -என்றும்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் -என்றும்
என் நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ்வதுவே -என்றும்
இகழ்வின்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே -என்றும்
நங்கள் குன்றம் கை விடான் -திருமால் இரும் சோலை கை விடாதவன் போல் இவர் திருமேனியையும் கை விடான் -என்றும்-
இப்படி இவர் திரு உள்ளத்தை விரும்பி –
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -என்றும்
இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே -என்றும்
இவர் தம் தேஹத்தை ஒழிய கொடு போக வேணும்-என்றபடியே
பரதந்த்ரனாய் நின்ற குணசுத்தியைப் பேசினபடி-என்கை –
விதி வகையே நடத்துமவனே உபதேச சத்பாத்ரம் என்ற-பாத்ர ஸூத்தி இறே-கரை ஏற்றுமவனுக்கு நாலாறும் உபதேசித்தார் –
இசைவு பார்த்தே இருந்த சுத்தி என்று -அவ்விருத்தாந்தத்தை பேசினபடி-என்றுமாம்-
————————————————
அவதாரிகை –
இதில்-அவன் தேக சபலனாய்-ஆதரிக்க-இவர் -விரோதியான சரீரத்தை விடுவி -என்று
விடுவித்துக் கொண்டமை பேசின பாசுரத்தை அனுவதித்து-அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தம்மோடு வந்து கலந்து-தமக்கு பரதந்த்ரனாய் தம் திரு மேனியிலே அத்ய அபி நிவிஷ்டனாய்
திரு மேனியோடே தம்மை ஸ்ரீ திரு நாட்டில் கொடு போக வேணும் என்று
அவன் தம் திருமேனியில் மிகவும் பண்ணுகிற சாபலத்தைக் கண்டு
நம் பக்கல் ஆதர அதிசயத்தால் அன்றோ-இவன் நம் உடம்பை ஆதரிக்கிறது என்று பார்த்து
இதன் தோஷம் அறியாமல்-ராகாந்தனாய் இருக்கிற இவனுக்கு
இதன் தோஷத்தை யுணர்த்தவே இத்தை தவிரும் என்று நினைத்து-இதன் தோஷங்களை அவனுக்கு அறிவிக்க
அபிமத விஷயத்தில் அழுக்கு உகப்பாரைப் போலே
அது தானே அவனுக்கு மேல் விழுகைக்கு உடலாக-எனக்கு இது மிகவும் அநபிமதமாய் இருக்கும்
ஆன பின்பு இத்தைக் கழிக்க வேணும் -என்று
இவர் அவன் திருவடிகளிலே தலையை மடுத்து சரணம் புக
இவர் விதி வகை பார்க்குமவன் ஆகையாலே
இவர்க்கு அநபிமதம் ஆகில்-வருந்தியும் நாம் இத்தை கழித்து கொடுக்கக் கடவோம்-என்று தலை துலுக்க
நம் சொலவைப் பரிபாலிப்பதே
இது ஒரு சீலம் இருந்தபடி என் –என்று தலை துலுக்குகிற-
செஞ்சொல் கவிகாள் லில் அர்த்தத்தை
செஞ்சொல் பரன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –
———————————————————–
செஞ்சொல் பரன் தனது சீராரும் மேனி தனில்
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் -விஞ்சுதலைக்
கண்டவனைக் காற்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட
திண் திறல் மாறன் நம் திரு—97-
———————————————————–
வியாக்யானம்–
செஞ்சொல் பரன் –
செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகன் -என்கிறபடியே
செவ்விய சொல்லால் ஆன இத் திருவாய் மொழியால்-பிரதிபாதிக்கப் படுகிற
சர்வ ஸ்மாத் பரனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –
இது தான் செவிக்கு இனிய செஞ்சொல் இறே –
தனது சீராரும் மேனி தனில் –
தனிச் சிறையில் விளப்புற்று
அஸ்நாதையாய் இருந்த பிராட்டி வடிவைக் காண-ஆசைப் பட்டால் போலே
பிறவி அஞ்சிறையிலே
ஜ்ஞான பக்த்யாதிகள் விஞ்சி இருக்கிற-விக்ரஹத்திலே –
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் -விஞ்சுதலைக் கண்டு –
அதாவது
வஞ்சக் கள்வன் ஆகையாலே
நெஞ்சும் உயிரும் அவை உண்டு-தானே யாகி நிறைந்தான் -என்றும்
என்னை முற்றும் உயிர் உண்டே -என்றும்
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய வாக்கை யதனுள் புக்கு -என்றும்
என்கொல் அம்மான் திருவருள்கள் நன்கு என் உடலம் கை விடான் -என்றும்
திருமால் இரும் சோலை மலையே -என்று தொடங்கி-ஒரு மா நொடியும் பிரியான் -என்றும்
இப்படி இவர் திரு மேனியை மேல் விழுந்து-அத்யாதரம் பண்ணுகிற படியைக் கண்டு-
உடலும் உயிரும் மங்க வொட்டு -என்றும்
பொங்கு ஐம்புலனும் என்று தொடங்கி –மானாங்கார மனங்கள் மங்க வொட்டு -என்றும்
இதன் தோஷ தர்சன பூர்வகமாக
அவனைக் கால் கட்டி-தம் கால் கட்டை விடுவித்துக் கொண்டபடி –
கை விடுவித்துக் கொண்ட –
கை விடுவித்துக் கொள்ளுகை யாவது -அவன் காலைக் கட்டி
கை விடுவித்துக் கொண்டார்-என்றபடி –
கை விடுவித்துக் கொண்ட -திண் திறல் மாறன் –
சர்வ சக்தி-சரீரத்துடன் கொடு போக வேணும் என்று-கர க்ரஹணம் பண்ண
இவர்
சரண க்ரஹணம் பண்ணி-விடுவித்துக் கொண்ட த்ருடமான சக்தியை யுடைய-ஆழ்வார் –
நம் திரு –
சம்பச்ச சாத்விக ஜனச்ய -என்னும்படி
ஸ்ரீ ஆழ்வாரான ஸ்ரீ மாறன்-நம்முடைய சம்பத்து –
———————————————————
அவதாரிகை –
இதில்-இப்போது ஆதரிக்கிற தேவர்-அநாதி அநாதர ஹேது சொல்லும் என்று-மடி பிடித்துக் கேட்க
அவன் அதுக்கு ஒன்றும் சொல்லாமல்
நிருத்தனனான படியை அருளிச் செய்கிற ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை அனுவதித்து-அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
முதலிலே
அத்வேஷத்தைப் பிறப்பித்து-ஆபிமுக்யத்தை யுண்டாக்கி-ஆஸ்ரயண ருசியை விளைத்து
தானே யுபாயமாய்-தன் திருவடிகளிலே பிரேமத்தையும்-பரம பக்தி பர்யந்தமாக முற்றுவித்து
தன்னால் அல்லாது செல்லாதபடி பண்ணி
நாம் சொன்னபடியே செய்வானாக சமைந்து
நம்மை இவன் இப்படி தலையாலே-சுமவா நின்றதுக்கு அடி ஏது என்று அவனைக் கேட்க –
அவன் நிருத்தரனாய்-கவிழ் தலை இட்டு நிற்க
நிர்ஹேதுகமாகாதே -என்று ப்ரீதராய்
தம்மை அவன் அங்கீ கரித்த படியையும்
அங்கீகார ஹேதுவானவன் கிருபாதி குணங்களையும்-அனுசந்தித்து
இது ஒரு நிர்ஹேதுக விஷயீகாரம் இருந்தபடியே-என்று வித்தராகிற
திரு மால் இரும் சோலை மலை யில் அர்த்தத்தை
திருமால் தம்பால் -இத்யாதியாலே-அருளிச் செய்கிறார் -என்கை-
—————————————————-
திருமால் தன்பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு
அரு மாயத்து அன்று அகல்விப்பான் என் -பெருமால் நீ
இன்று என்பால் செய்வான் என் என்ன இடருற்று நின்றான்
துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து —98-
————————————————–
வியாக்யானம்–
திருமால் தன்பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு –
அதிகம் புரவா சாச்சம் மன்யே தவச தர்சநாத் -என்னும்படி-ஸ்ரீ யபதியானவன்
தம் விஷயத்தில்-அத்யாதாரம் பண்ணுகிற படியைக் கண்டு –
அதாவது
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றும்
இன்று வந்து பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றும்
திருப் பேரான் அடி சேர்வது எனக்கு எளிதாயினவாறே -என்றும்
தெளிதாகிய தேண் விசும்பு தருவானே -என்றும்
வானே தருவான் எனக்காய் என்னோடு ஒட்டி
யூனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் -என்றும்
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றும்
உண்டு களித்தேற்கு -என்று தொடங்கி-கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலான் -என்றும்
கருத்தின் கண் பெரியன் -என்றும்
திண்ணம் என் மனத்து புகுந்தான் செறிந்து இன்றே -என்றும்
இப்படி-மேல் மேல் என-அத்யாதாரத்தை பண்ணின படி என்கை –
ஏவம் வித நிர்ஹேதுக வ்யாமோஹத்தை தர்சித்து
அரு மாயத்து அன்று அகல்விப்பான் என் -பெருமால் நீ இன்று என்பால் செய்வான் என் என்ன-
அன்று-அநாதி காலம்-துரத்யயமான பிரக்ருதியிலே இட்டு வைத்து அகற்றி விடுவான் என் –
இன்று நிர்ஹேதுகமாக-நிரவதிக வ்யாமோஹத்தை
சர்வஞ்ஞனாய் சர்வசக்தனாய் நிரஸ்த சமஸ்த ஹேயனான நீ
அஞ்ஞனாய் அசக்தனாய் ஹேய சம்சர்க்க அர்ஹனாய் இருக்கிற என் விஷயத்தில்
இப்படிச் செய்வான் என் என்று கேட்க
இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான் அன்று என்னைப் புறம போகப் புணர்த்தது என் செய்வான்
குன்றன்ன திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரா ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேன் –
என்றத்தை கடாஷித்து அருளிச் செய்தபடி —
இப்படி அநாதி அநாதர ஹேது சொல் என்று மடியைப் பிடித்து கேட்க
அவனும் சில ஹேது பரம்பரைகளை இவர் உத்தரத்துக்கு பிரத்யுத்தரமாக சொல்லிக் கொடு போர
இவர் தம் நா வீருடைமையாலே அவனை நிருத்தனாம்படி பண்ண –
இடருற்று நின்றான் –
இப்படி இவர் அருளிச் செய்ய மேல் போக்கடி காணாமல்
தரைக் கீறி கவிழ தலை இட்டு ஸ்தப்தனாய் நின்றான்
இடராவது-அதிகோக்தி சொல்ல முடியாத ஆகுலம் –
துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து –
இது நிர்ஹேதுகமாகாதே -என்று அவன் விஷயீ காரத்திலே விக்ருதராய்
அத்தாலே வந்த சம்ருத்தமான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வாரை –
அந்த யசஸ் ஸோபாதியாகத் தானும் சூழ்ந்து -இடருற்று நின்றான்
ஸ்ரீ சர்வஞ்ஞனும் நிருத்தனாய் நிற்பதே -என்று இவருக்கு ஈடுபாடாய் இருக்கிறது –
————————————————
அவதாரிகை –
இதில் ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்க சத்காரத்தை அடையக் காட்ட அனுபவித்து அருளிச் செய்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில் –
இவரை அமர்ந்த நிலமான ஸ்ரீ பரம பதத்திலே கொடு போய் வைத்து இவரும் தானுமாக அனுபவிப்பதாக ஸ்ரீ சர்வேஸ்வரன் விசாரித்து
இவருக்கு ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தையும்-அங்கு உள்ளார் பண்ணும் சத்கார விசேஷங்களையும்
ஸ்ரீ பரமபத பிராப்தியையும் அங்கு உள்ளார் வந்து எதிர் கொண்டு சத்கரிக்கும் கட்டளைகளையும்
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் இவருக்கு கண்டு அனுபவிக்கலாம்படி
பர ஜ்ஞான தசையை பிறப்பித்துக் காட்டிக் கொடுக்க
இவரும் கட்டடங்க கண்டு அனுபவித்து
தாம் பெற்ற பேற்றை அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற சூழ் விசும்பு அணி முகிலில் அர்த்தத்தை
சூழ்ந்து நின்ற மால் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை-
———————————————–
சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து -வாழ்ந்து அங்கு
அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான்
முடி மகிழ் சேர் ஞான முனி –99-
————————————————-
வியாக்யானம்–
சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட –
கீழ் இவரைச் சூழ்ந்து கொண்டு நிவ்ருத்தனாய் நின்ற ஸ்ரீ சர்வேஸ்வரன்
ஏஷா சாத்ருச்யதே -இத்யாதி படியே- ஸ்ரீ பரம ஆகாசத்திலே தேஜக்ரச்சாச்வதே மதே -என்று
பூர்வ மார்க்கமான ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தைக் காட்ட
அமந்திர ஜோஸ்த்வ கோஷம் போலே ஏறப் பெறுகிற எழுச்சியை ஸூசிப்பிக்கிற
மேக சமுத்திர பேரீ கீத காஹள சங்கா சீச்துதி-கோலாஹலம்-செவிப்படும் படியையும் –
அலங்கார விகிம்க்ருதச்னாம் காரயமாச வேசமான -என்கிறபடியே-அங்குள்ள ஆதிவாஹிக சத்கார க்ரமத்தையும்
மேல் ஸ்ரீ நித்ய சூரிகள் பிரத்யுக்தராய் சத்கரிக்கும் க்ரமத்தையும்
த்வாராத்ய ஷரர்சத்கரிக்கும் க்ரமத்தையும் திவ்ய அப்சரஸ் சத்கார க்ரமத்தையும்
ஸ்ரீ சர்வேஸ்வரனும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் ஆதரிக்கும் படியையும்
திவ்ய சூரி பரிஷத்தில் இருந்து ஆனந்த நிர்பரராய் அனுபவிக்கும் படியையும்
தொல்லை வழி காட்ட -என்ற அதிலே இவ்வளவும் அனுவர்த்தித்த படி –
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து —
அதிலே ஆழம் கால் பட்டு-அவன் காட்டின எல்லாவற்றையும் கட்டடங்க அனுபவித்து
அதாவது –
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின-ஆழ் கடல் அலை திரை கை எடுத்து ஆடின-என்றும்
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்-பூரண பொற் குடம் பூரித்த உயர் விண்ணில் -என்றும்
தொழுதனர் உலகர்கள் -என்று தொடங்கி வழி இது வைகுந்ததற்கு என்று வந்து எதிர் எதிர் -என்றும்
எதிர் எதிர் இமையவர் என்று தொடங்கி-மது விரி துழாய் முடி மாதவன் தமர்கே-என்றும்
மாதவன் தமர் என்று வாசலில் வானவர் -என்று தொடங்கி-வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே -என்றும்
வேள்வியுள் மடுத்தலும் -என்று தொடங்கி -வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் -என்றும்
மடந்தையர் வாழ்த்தலும் -என்று தொடங்கி -குடந்தையன் கோவலன் குடி குடி யார்க்கே -என்றும்
குடியடியார் -என்று தொடங்கி-வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே -என்றும்
வைகுந்தம் புகுதலும் -என்று தொடங்கி-வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -என்றும்
விதிவகை -என்று தொடங்கி -மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே -என்றும்
வந்தவர் எதிர் கொள்ள மா மணி –பேரின்பத் தடியரோடு இருந்தமை -என்றும்
இப்படி-முழுவதும் அனுபவித்த படி -என்கை –
அனுபவித்து வாழ்ந்து –
இவ் வனுபவத்தை அடைவே அனுபவித்து க்ருதார்த்தராய் –
அங்கு அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான் –
ஸ்ரீ பரம பதத்திலே ஆனந்த மயமான ஸ்ரீ திரு மா மணி மண்டபத்திலே
ஸ்ரீ அனந்த ஸ்ரீ கருட ஸ்ரீ விஷ்வக் சேனர் பிரமுகராய் உள்ள-அடியரோடு
ஆனந்த நிர்பரராய் இருந்த பிரகாரத்தை அருளிச் செய்தார்
முடி மகிழ் சேர் ஞான முனி –
முடியுடை வானவரோடே கூடுகையாலே-முடியை யுடையராய் பிரபந்தம் தலைக் கட்டுகையாலே
ஸ்ரீ ஆழ்வாரும்-அளக பந்தத்திலே வகுள பந்தத்தை யுடையராய் தலைக் கட்டின படியை அருளிச் செய்கிறார் –
அவன் – மது விரி துழாய் மாதவன் –
இவர் -முடி மகிழ் சேர் ஞான முனி-பர ஜ்ஞானத்தை உடைய பராங்குச முனியானவர் –
அடியருடனே இருந்த வாற்றை யுரை செய்தான் –
சூழ் விசும்பு அணி முகில் தொடங்கி-அடியரோடு இருந்தமை என்னும் அளவும் அருளிச் செய்தார் –
எல்லாரும் விஸ்வசித்து உஜ்ஜீவிக்கைக்காக –
————————————————————————
அவதாரிகை –
இதில் – ஸ்ரீ பரம பத்தியாலே-பர ப்ராப்தியான படியை பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழ் சூழ் விசும்பு அணி முகிலிலே ஸ்ரீ பரம பதத்திலே புக்கு நிரதிசய ஆனந்த உக்தராய்
நித்ய சூரிகள் திரளிலே இருக்கிறாராக-தம்மை அனுசந்தித்த இது
ஜ்ஞான அனுசந்தானம் மாத்ரமாய் பாஹ்ய சம்ச்லேஷ யோக்கியம் அல்லாமையாலே
மேரு சிகரத்திலே ஸூ கோத்ரமாக இருந்தவன்
பேர் ஆழமான பள்ளத்திலே தலை கீழாக தள்ளுண்டு-விழுந்து நோவு படுமா போலே
அனந்த கிலேச பாஜனமான சம்சாரத்தில்-தாம் இருக்கிற படியைக் கண்டு
ஸ்ரீ ஈஸ்வரனுக்கு
பண்டு போலே ஒரு குணாவிஷ்காராதிகளால் பரிஹரிக்க ஒண்ணாத படி ஆற்றாமை தலை எடுத்து
ஒரு தூத ப்ரேஷாணாதிகளால் இட்டு நீட்டுகையும் இன்றிக்கே
தாமே அவன் முகத்தைப் பார்த்து
தம்மால் இது பரிஹரித்துக் கொள்ளப் போகாது இருக்கிறபடியும்
சாதநாந்தரங்களை அனுஷ்டித்தாலும் அவன் கை பார்த்து இருக்க வேண்டி இருக்கும் படியையும் சொல்லிக் கொண்டு
ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆணை இட்டு-தடுத்தும்-வளைத்தும் அவனைப் பெற வேண்டும்படியான பரம பக்தி தலை எடுத்து
நிர்க்குணர் உடைய ஹிருதயங்களும் கூட இரங்கும் படியாகவும்
அவனுக்கும் தம் கார்யம் செய்து அல்லது ஸ்ரீ திரு நாட்டிலே குடி இருப்பு அரிதாம்படியாகவும்
பெரும் மிடறு செய்து கூப்பிட்டு பெரிய ஆர்த்தியோடே திருவடிகளிலே சரணம் புக
ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோளிலே ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூட இவர் அபேஷித்த படியே ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து தோற்றி
கால் கட்டான பிரகிருதி சம்பந்தத்தையும் அறுத்து
ஸ்ரீ பரம பதத்திலே கொடு போய் நித்ய சூரிகளோடே ஒரு கோவை யாக்கி-நித்ய கைங்கர்யம் கொண்டருள-
அத்தாலே-தாம் நிரஸ்த பிரதிபந்தகராய் பிராப்த சமஸ்த மநோ ரதரான படியை-சொல்லித் தலைக் கட்டுகிற
முனிய நான் முகனே யில் அர்த்தத்தை
முனி மாறன் இத்யாதியாலே அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் -என்கை –
————————————————-
முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி
தனியாகி நின்று தளர்ந்து -நனியாம்
பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து –100-
————————————————-
வியாக்யானம்–
முனி மாறன்
ஸ்ரீ சர்வேஸ்வரன் -முனியே -என்னும்படி சதவஸ்தமான சம்ஹ்ருதி சமயத்தில் சர்வ சேதன ரஷணத்திலே
த்யாநாந்தஸ்தனாய் இருக்குமா போலே
இவரும்
நித்ய சம்சாரிகளாய் சம்சாரித்து
அசித் ப்ராயரான ஆத்மாக்கள் விஷயத்திலும் ரஷண சிந்தை பண்ணிப் போருகையாலே முனி -என்கிறது –
அன்றிக்கே –
பகவத் விஷயத்தில்-எண்ணா தனகள் எண்ணும் நல் முனிவர்-என்னுதல் –
அன்றிக்கே
பிரக்ருததுக்குச் சேர-ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்தில்-பரம பக்தி பர்யந்தமாக
நிரந்த சிந்தா உக்தராய் இருக்குமவர் -என்னுதல் –
இப்படி மனன சீலராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் —
முன்புரை செய் முற்றின்பம் நீங்கி –
அதாவது
களிதாகி சிந்தையனாய் களிக்கின்றேன் -என்றும்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே -என்றும்
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை-மேலைத் தொண்டு களித்து அந்தி தொழும் சொல்லும் பெற்றேன் -என்றும்
கண்ணுள் நின்று அகலான் -என்றும்
உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் -என்றும்
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில்-பேரின்பத்து அடியரோடு இருந்தமை -என்றும்
இப்படி
முன்பு பேற்றை பெற்றதாக அருளிச் செய்த சமஸ்த ஆனந்தமும் நிரஸ்தமாய்ப் போய்
அது எல்லாம் மானச அனுபவ மாத்ரமாய்-பிரத்யஷ சாஷாத் காரத்திலே அபேஷை யுடையவராய்
அத்தை அப்போதே பெறாமல்
மீளவும் அஜஞாநாவஹமான சம்சாரத்த்லே இருக்கக் கண்டு
பூர்வத்தில் ஆனந்தமும் அபூர்வமாம்படி கழிந்தது -என்கை –
தனியாகி நின்று தளர்ந்து –
அந்தமில் பேர் இன்பத்து அடியாரான-ஸூரி சங்கங்கள் உடனே இருந்தும்
ஸ்வப்ன கல்பமாய் பழைய சம்சாரத்தில் தனிமையே சேஷித்து
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ திரு அயோத்யையிலே ராவாணந்தகரான ஸ்ரீ பெருமாளை
பரமனும் தம்பி சத்ருக்னனும் இலக்குமனோடு மைதிலியும் -என்னும்படி சேர்த்தியாய் இருந்து அனுபவித்து
பின்பு பிரிந்து
காந்தார மத்யே விஜகே விஸ்ருஷ்டா பாலேவ கன்யா விலலாப சீதா -என்னும்படி
தனியே நின்று கூப்பிட்டாப் போலே
தனியேன் ஆர் உயிரே -என்று
தனியாகா நின்று தளர்ந்து மிகவும் அவசாதத்தை உடையவராய் தரைப்பட்டு-
அதாவது –
கனிவாய்த் தாமரை கட்கரு மாணிக்கமே –மாயம் செய்யேல் என்னை -என்றும்
மாயம் செய்யேல் என்று தொடக்கி –திரு வாணை நின் ஆணை-கண்டாய் –கூ விக் கொள்ளை வந்து அந்தோ -என்றும்
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின் அல்லால் அறிகின்றிலேன் நான் -என்றும்
உம்பர் பரம் தண் பாழேயோ–என்னைப் போற விட்டிட்டாயே -என்றும்
எனக்கு ஆரா வமுதானாயே -என்றும்
எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன்னுயிரை மனக்காராமை மன்னி யுன்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய் -என்றும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ-உன்னைப் பெற்று இனி போக்குவேனோ -என்றும்
முதல் தனி உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான் -என்றும்
இப்படி ஆற்றாமையாலே-அவசன்னராய்க் கூப்பிட்டு -என்கை –
நனியாம் பரம பக்தியால் நைந்து —
அதனில் பெரிய அவா -என்னும்படி
தத்வ த்ரயங்களிலும் பெரியதாய்-முடிந்த அவாவான பரம பக்தியாலே-பரிபக்வராய் –
நனி -பெருமை
அன்றிக்கே
பரம பக்தியால் அலைந்து -என்ற பாடமான போது
அவா வாகிற அமுத வெள்ளமான-ஆனந்த சாகரத்திலே மக்னராய் -அலைந்து -என்றுமாம் –
பங்கயத்தாள் கோனை –
அந்த பரம பக்திக்கு விஷயமான-ஸ்ரீயபதியை –
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ –
உன்னைப் பற்றி இனி போக்குவேனோ -என்று அருளிச் செய்தவனை
உத்தர வாக்யத்தில் கைங்கர்ய பிரதி சம்பந்தியான ஸ்ரீயபதியை –
ஒருமையுற்று
வீடு திருத்தி -என்றும்
விண்ணுலகம் தருவானே விரைகின்றான் -என்றும்
வானே தருவான் எனக்காய் என்னுள்ளே ஒட்டி -என்றும்
த்வரிக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் திரு உள்ளத்தோடு சேரும்படி
இவர் திரு உள்ளமும் த்வரித்து -ஒரு தளைத்து -என்னுதல்-
அன்றிக்கே
பர பக்தி
பர ஞான
பரம பக்தி
உக்தராய்-பேற்றுக்குத் த்வரித்து
அவாவாலே கூப்பிட்டுப் போந்த இவர் திரு உள்ளமும் –
முதித பரிஷச்வஜே -என்னும்படி
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்று
இவர் அபி நிவேசம் தீரும்படி சம்ஸ்லேஷிக்கையாலே
அவா அற்று வீடு பெற்ற பிரகாரத்தை-ஆகவுமாம்-
பங்கயத்தாள் கோனை –ஒருமை யுற்று –உயர்ந்து -சேர்ந்தான் –
அதாவது
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -என்கிற-இழவு தீர
ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனை-ஒரு தலைத்த பரமபக்தி உக்தராய்
அத்தால்
நித்ய சூரிகள் ஆச்சார்யத்தை-இங்கே யுடையராய்
பிரத்யஷ சாஷாத்காரமாம் படி கிட்டி-இருவருமான சேர்த்தியிலே
அடிமை செய்வார் திரு மாலுக்கே -என்னும்படி –
அடிமை செய்யப் பெற்றார் –
அங்கே
பரதமாரோப்ய முதித பரிஷச்வஜே -என்று-இவரைப் பெற்று ஹ்ருஷ்டனாக
இவரும்
அத்தலையில்-முகோல்லாசத்தைப் பெற்று -அனுபவித்து-ஹ்ருஷ்டரானார் –
அத்தை யாயிற்று-ஒருமை யுற்றுச் சேர்ந்தான் -என்கிறது –
இத்தால்
அவா அற்று
வீடு பெற்ற
குருகூர் சடகபன் –
என்றத்தை நினைக்கிறது-
சாஷாத் கரித்த பரம பிராப்திக்கு தலை மிசையாய் வந்து-தாள்களைப் பூண்டு-போகாமல் தடுத்து
திரு வாணை இட்டு-கூசம் செய்யாதே-செய்திப் பிழை யற்று
கொம்பற்ற கதி கேடு போர விட்ட பெரும் பழி-புறம்பு போனால் வரும் இழவு உண்டிட்ட முற்றீம்பு
அன்பு வளர்ந்த அடி யுரம்-உயிர் உறவு முதல் அளவு துரக் கைகளாலே
பெறா வாணை அல்லவாக்கின-பேரவா-குளப்படியாம்படி-கடல் போன்ற ஆதாரத்தோடு சூழ்ந்து
தாபங்களை ஹரித்தமையை-வெளியிடுகிறார் பத்தாம் பத்தில் -என்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிச் செய்தார் –
கண்டு களிப்பளவும் -பரஞ்ஞான கர்ப்ப பரபக்தி
இருந்தமை -என்றது பூர்ண பரஞ்ஞானம்
முடிந்த அவா என்றது பரமபக்தி
இவை
ஞான
தர்சன
பிராப்தி
அவஸ்தைகள் -என்று
இந்த பரபக்தியாதி பேதத்தையும் அருளிச் செய்தார் —
ஏவம்விதமான
பரமபக்தியாலே-பரிபக்வராய்-பலத்தோடு சேர்ந்தார் -என்கிற
ஸ்ரீ திருவாய்மொழியில் அர்த்தத்தை-இப்பிரபந்தத்தில்-இப்பாட்டாலே சேகரித்து அருளினார் ஆயிற்று —
————————————————————————————
உயர்வே பரன்படியை யுள்ளதேல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு
—————————————————————————–
மாறன் -1/2/3/4/5/6/7/8/9/10/11/12/13/14/
சடகோபன் –15
மாறன் –16/17/18/19/20/21/
குருகையர் கோன் -22
மாறன் –23/24/25/26/27/28
குருகூர் மன்-29
மாறன் -30/31-
குருகூரில் வந்து உதித்த கோ -32
மாறன் -33/34/35/36
குருகூர் ஏறு -37
மாறன் -38/39
மொய்ம் மகிழோன் -40
மாறன் -41/42/43/44/45/46/47/48/49/50
காரிமாறன் -51
குருகையர் கோன் -52
மாறன் -53
பராங்குசன் -54
மாறன் -55/56/57/58
காரிமாறன்-59
மாறன் -60/61/62
சடகோபர் -63
மாறன் -64/65
அண்ணல் -66
மாறன் -67/68/69/70/71/72/73/74
சடகோபன் -75
மாறன் -76
சடகோபர் -77
காரிமாறன் -78
மாறன் -79/80/81/82/83/84/85/
மாறன் -86/87/88/89/90/91/92/93/94/95/96/97/98
ஞான முனி -99
முநி மாறன் -100-
மாறன் -1/2/3/4/5/6/7/8/9/10/11/12/13/14/-16/17/18/19/20/21/—-23/24/25/26/27/28–30/31—33/34/35/36–
-38/39—41/42/43/44/45/46/47/48/49/50–53–55/56/57/58—60/61/62–64/65–67/68/69/70/71/72/73/74–76-
–79/80/81/82/83/84/85/ -86/87/88/89/90/91/92/93/94/95/96/97/98
சடகோபன் –15–75
குருகையர் கோன் -22–52
குருகூர் மன்-29
குருகூரில் வந்து உதித்த கோ -32
குருகூர் ஏறு -37
மொய்ம் மகிழோன் -40
காரிமாறன் -51–59-78
பராங்குசன் -54
சடகோபர் -63–77
அண்ணல் -66
ஞான முனி -99
முநி மாறன் -100
—————————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-