Archive for the ‘திரு மாலை’ Category

திரு மாலை-20-பாயு நீர் அரங்கம் தன்னுள்-பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

December 5, 2013

இவ் விஷயத்தில் ப்ராவண்யத்தை தவிர்த்து
எங்களைப் போலே தேக யாத்ரா பரராய் வர்த்திக்கவே தரிக்கலாம் -என்ன
கண் வளர்ந்து அருளுகிற அழகைக் கண்டு வைத்து
இஸ் ஸ்மர்த்தி யடங்க எங்களுக்கு -என்னும்படியான ஸ்வரூப ஞானம் உடைய எங்களுக்கு
அஹம் மம -என்கிற உங்களைப் போலே
அகல விரகு உண்டோ –
என்கிறார் –

———————————————————————————————————————————————————–

பாயு நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்பும் மரகத வுருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவர் இதழ் பவள வாயும்
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே–

————————————————————————————————————————————————————

பாயு நீர் அரங்கம் –
அடைத்தேற்ற வேண்டாத படி நீருக்குப் பள்ள நாலியான கோயில் –
இது உப லஷானம் –
பாவனமாயும் பிரசன்னமாயும் உள்ள பதார்த்தங்களுக்கு
பள்ள மடையாய் இ றே கோயில் இருப்பது –
ரமணீயம் ப்ரஸன்நாம்பு சந் மநுஷ்ய நோயதா –
நீருக்கு சாத்விகர் நிதர்சனமாய் இ றே இருப்பது –

தன்னுள் பாம்பணைப் –
அந் நீர் உறுத்தாமைக்கு படுத்த படுக்கையாய் யாய்த்து திரு வநந்த ஆழ்வான் –
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து -என்னக் கடவது இ றே

பள்ளி கொண்ட மாயனார் –
கண்வளர்ந்து அருளும் போதை அழகு ஆச்சர்யமாய்த்து இருப்பது –
சமயா போதிதச் ஸ்ரீ மான் ஸூ க ஸூ ப்த பரந்தப-என்னக் கடவது இ றே –
நிற்றல் இருத்தல் செய்தார் ஆகிலும் அகலலாம் கிடீர்
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் -என்றும்
ஆனையில் கிடந்த கிடக்கை கண்டிடப் பெற்றிலேன் -என்றும்
என்றும் சொல்லக் கடவது இ றே –
ஆனையில் கிடக்கை -ஆனை போல் கிடக்கை –

திரு நன் மார்பும்
பிராட்டியாலே லஷணமான மார்பும்
பிராட்டியினுடைய செம்பஞ்சின் சுவடுகளும்
கழித்த மாலைகளுமாய் கிடக்கும் யாய்த்து –
பிராட்டி -அகலகில்லேன் இறையும்-என்று -பிரிய மாட்டாத வை லஷண்யத்தை உடைய  மார்வு -என்னவுமாம்
மரகத வுருவும்-
கண்டார் கண் குளிரும்படி நீர் வெள்ளத்தை திறந்து விட்டாப் போலே யாய்த்து வடிவு இருப்பது

தோளும்-
கீழ் இலவை போலே
இடு சிவப்பு-ஆரோபிதாகாரம் -என்றபடி – இல்லாத தோளும்
அவ் வெள்ளத்திலே அழுந்துவார்க்கு தெப்பம் போலே
இருக்கிற திருத் தோளும் –

தூய தாமரைக் கண்களும்-\
பிராட்டியோடு ஹிரண்யா திகளோடு வாசி அற
குளிர நோக்குகிற திருக் கண்களும் –
நோக்குத் தூய்மை யாவது –
நிர்ஹேதுகமாக கடாஷிக்கை –
ஸூ ஹ்ர்தம் சர்வ பூதானாம் -என்கிறபடியே –
அனுகூல பிரதி கூல விபாக ரஹீதமாய்த்து சௌஹார்த்தம் இருப்பது –
தேவாநாம் தாநவா நாஞ்ச சாமான்ய மதி தைவதம் -என்கிறபடியே
சம்பந்தம் ஒத்ததாய்த்து இருப்பது –
இப்படி இருக்க சில பதார்த்தங்களுக்கு கடாஷம் அநர்த்த ஹேது வாகிறது -பிரகிருதி தோஷத்தாலே –
சர்வ அனுகூலமான தென்றல் ஆனது ஒரு பதார்த்ததில் வந்தால் சொஷகம் ஆகாது நின்றது இ றே –
மென்மை குளிர்த்தி நாற்றம் இவற்றுக்கு தாமரை ஒரு போலியாம் இத்தனை -போக்கி
அகவாயில் தண்ணளிக்கு த்ர்ஷ்டாந்தம் ஆக மாட்டாதே

துவர் இதழ் பவள வாயும் –
சிறந்த திரு அதரத்தையும்
பவளம் போலே இருந்துள்ள தந்த பந்தியையும் உடைய வாயும் –
அவாக்ய அநாதர -என்கிற காம்பீர்யம் குலைந்து –
கிட்டினாரை சாந்தவ வாதனம் பண்ணுகிற திருப் பவளமும் –
ஸ்வ அபராதத்தை அனுசந்தித்து கிட்டி அஞ்சினவர்கள் உடைய அபராதத்துக்கு
நேர்த்தரவு கொடுக்க ஸ்மிதம் பண்ணும் திருப் பவளமும் -என்கை –

ஆய சீர் முடியும்-
பண்டே யாய்ச் சீர்மையை உடைத்தான முடியும் –
சித்தமாய் ஐஸ்வர்ய ஸூசகமான திரு அபிஷேகமும் –

இத்தனையாலுமாக அவயவ சோபை சொல்லிற்று –

தேசும் –
இத்தால் சமுதாய சோபையை சொல்லுகிறது –

அடியரோர்க்கு அகலலாமே –
இஸ் சமர்த்தியைக் கண்டால் ஸ்வரூப ஞானம் உடையார்க்கு அகலப் போமோ
இதற்குப் புறம்பாய் -அஹம் மம -நான் என்னது -என்று
இருப்பார்க்கு அன்றோ அகலல் ஆவது –

ஆமே -என்றது
எதிரிகளுக்கும் அகலப் போகாது என்ன வேண்டும் படியாய் இ றே
அர்த்தத்தின் மெய்ப்பாடு இருப்பது-

————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திரு மாலை-19-குட திசை முடியை வைத்து–பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

December 5, 2013

சஷூர் யாதி அவயவங்களுக்கு பிறக்கிற
விக்ர்திகள் அன்றிக்கே
தத் ஆஸ்ரயமாய்  அவயவியான சரீரம் தானே
கட்டழியா நின்றது
என்கிறார்

————————————————————————————————————————————-

குட திசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி
வட திசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கிக்
கடல் நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே

———————————————————————————————————————————————–

இவரை உருக்கின பரிகரம்தான் இருக்கிறபடி –
பூமியை சிருஷ்டித்தது –
புண்ய பாப மிஸ்ரங்களாயும்-பாப பிரசுரங்களையும் –
மனுஷ்ய திர்யக் ஸ்தாவரங்களாயும் இருந்துள்ள பதார்த்தங்கள் வர்திக்கைக்காக என்றும் –
ஆகாசத்தை சிருஷ்டித்து புண்ய யோநிகளான தேவதைகள் வர்திக்கைக்காக என்றும் நினைத்து இருப்பார் –
நடுவில் திக்குகளுக்கு ஒரு விநியோகம் இல்லை
இது வ்யர்த்த ஸ்ருஷ்டியோ என்று இருப்பர்-
இப்போது அங்கன் அன்று –
இதுவும் ஸ பிரயோஜனம் என்னும் இடமும் கண்டார்
சேதன சிருஷ்டி -முமுஷூ ஸ்ர்ஷையானால் போலேயும்
சேதனர் வர்திக்கைக்கு லோக ஸ்ர்ஷ்டி யானால் போலேயும்
திக்குகளை ஸ்ருஷ்டித்ததும் சேதனர்கு ருசி ஜனகமான
ருசி வ்யாபாரார்த்த மாகக் கண்டதாகாதே -என்று இருக்கிறார்-

குட திசை முடியை வைத்து-
மேலைத் திக்குக்கு ஸ்வ பிரயோஜனமாம் படி
உபய விபூதிக்கு சூடின -திரு அபிஷேகத்தை உடையதான திரு முடியை வைத்து –
முடியானே -என்கிறபடியே
சேஷத்வத்தை அனுசந்தித்து
அத் திக்கு வாழும்படி இ றே திரு முடியை வைத்தது –

குண திசை பாதம் நீட்டி –
மூ உலகும் தொழுது ஏத்தும் சீரடியான் -என்கிறபடியே
சகல லோகங்களும் வாழ்வதற்கு இழி துறையான திருவடிகளை
கீழைத் திக்கு வாழும்படியாக நீட்டி
நீட்டி -என்றது
என்னளவும் நீட்டின திருவடிகள் என்கை –
துர்யோ ஸ்தானம் இங்கனே வாழ்ந்து போனால் அர்ஜுனன் இருப்பு வாழச் சொல்ல வேண்டா இ றே
ஆளவந்தார் திருவடி தொழ எழுந்து அருளினால்
துர்யோதன ஸ்தானம் என்று திருமுடிப் பக்கத்தில் ஒரு பிரதேசத்தில் ஒரு நாளும்
எழுந்து அருளி அறியார் –
திரு வாசலக்கு கிழக்கு எழுந்து அருளி இராத பிரதேசம் இல்லை -என்று பட்டர் அருளிச் செய்வர் –

வட திசை பின்பு காட்டி –
வடக்கு திக்கு ஆர்ய பூமி யாகையாலே
சம்ச்க்ர்தம் மாதரம் உளதாய்
ஆழ்வார்கள் ஈரச் சொல் நடையாடாத தேசம் ஆகையால்
அத் திக்கித் திருத்தும் பொழுது
பின் அழகு எல்லாம் வேண்டும் -என்று இருந்தார் –
பூர்வாங்காததிகா பராங்க கலஹம் -என்னக் கடவது இ றே
இதுக்கு முன்புத்தை திக்குகளை கடாஷித்தது
அவ்வவோ தேசங்களின் வெறுமை தீருகைக்காக
இது தம் குறை தீருகைக்காக –
அவை கர்பா கார்யம் –
இது தன செல்லாமையாலே யாய்த்து –
அன்போடு தென் திசை நோக்கிப் பள்ளி கொள்ளும் -என்னக் கடவது இ றே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு வன்னியம் அறுத்து
ராஜ்யத்தை கொடுத்து
அவன் சம்ர்த்தியைப் பார்த்துக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற படி யாய்த்து –
மாதா பிரஜைகளுக்கு முலை கொடுத்து அவற்றின் முக மலர்த்தி
காண்கைக்கு பாங்காகச் சீயுமா போலே
செல்வ விபீடணற்கு நல்லானை -என்னக் கடவது இ றே-

விபீடணன் புகுருமாகில் நானும் என் பரிகரமும் விடை கொள்ளும் இத்தனை
என்று மகராஜர் சொல்ல
அன்று ஈன்ற கன்றின் பக்கல் வாத்சல்யத்தாலே முன்னனைக் கன்றை கொம்பிலும் குழம்பிலும் கொள்ளும் ஸூ ரபி யைப் போலே
ஸ பரிகரமான உம்மை விட வேண்டும் அளவிலும் விபீஷணை விடோம் -என்றார் – இ றே
அந்த மகா ராஜர் தமக்கு ஒரு நலிவு வரப் புக்க அளவிலே
கிம் கார்யம் சீதயா மம -என்றார் இ றே –

கடல் நிறக் கடவுள் –
நித்ய சூரிகளுக்கு நித்ய காங்ஷிதமான வடிவை உடைய பர தேவதை கிடீர்
ஒரு சம்சாரியைக் குறித்து சாபேஷமாய்க் கிடக்கிறது –
கடல் போலே கண்டார்க்கு ஸ்ரமஹரமாய்த்து வடிவு இருப்பது –
கடல் வர்ணத்துக்கு போலியாம் இத்தனை போக்கி
அப்ராக்ருத வஸ்துவுக்கு ஒப்பாக மாட்டாது இ றே –

எந்தை –
அவ்வடிவைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன் –
பழம் கிணறு கண் வாருகிறது என் –
பிரகிருதி வச்யனாய் தாழ்வுக்கு எல்லையான என் அளவும் வர அன்றோ வெள்ளம் கோத்தது –
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதிக்கே -என்னக் கடவது இ றே –

அரவணைத் துயிலுமா கண்டு –
வி லஷணமான ரத்னத்தை வி லஷணமான தகட்டிலே அழுத்தினால் போலே
திரு வநந்த ஆழ்வான் மேலே சாய்ந்த பின் யாய்த்து
இவ்வஸ்து மஹார்க்கம் யாய்த்து –

உடல் எனக்கு உருகுமாலோ –
திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற படியைக் கண்டு
சேதனன் உருகை அன்றிக்கே ஜடமான சரீரம் உருகா நின்றது

பகவத் ஸ்வரூப திரோதா நகரீம் -என்கிறபடியே
திரோதாயகமான சரீரம் கட்டழியா நின்றது –
தேஹையோ கத்வா ஸோபி -என்கிறபடியே ஞான சங்கோ சகமான சரீரம்
அனுபவ ஜனித ஹர்ஷத்தாலே அழிகிறது இ றே –

கூடப் புக்க சம்சாரிகள் எங்களுக்கு உடல் உருக காண்கிறிலோமே என்ன

எனக்கு உருகுமாலோ –
என்கிறார் –

ஆலோ –
என்று ஆற்றுப் பெருக்கிலே அருகு கரைகள் உடைந்தால் நோக்குகிறவர்கள்
கை விட்டு கடக்க நின்று கூப்பிடுமா போலே கூப்பிடுகிறார் 0

என் செய்கேன் உலகத்தீரே –
பெரிய பெருமாள் அழகை கண் வைத்து குறி அழியாதே புறப்படுகிற சம்சாரிகளைப் பார்த்து
உங்களைப் போல் தரித்து இருக்கைக்கு ஒரு விரகு சொல்ல வல்லி கோளே -என்கிறார்
தம்மோடு சஜாதீயராய் இருக்கிற ஆழ்வார்களைக் கேட்கி
என் செய்கேன் பெருமாளே –
என்று அவர் தம்மை கேட்கில்
தம் எளிமை அறிவித்ததாய்-அத்தாலே எதிர்தலை அழிந்தது ஆகாதே என்று
அவர் மேணானித்து இருக்கக் காணும் யாய்த்து பலம் –
இவ் விஷயத்தைக் கண்டு வைத்து குறி அழியாதே இருக்கிற சம்சாரிகளைப் பார்த்து உங்கள் அருகு வாராத பரிஹாரத்திலே
எனக்கும் ஒரு சிறாங்கை இட வல்லி கோளே -என்கிறார் –

——————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திரு மாலை-18—இனித் திரைத் திவலை மோத -பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

December 5, 2013

கண்களினுடைய களிப்புக்கு போக்கு வீடான
ஆனந்தாஸ்ருக்கள் பிரவஹிக்கையாலே
குட்யாதி வ்யவதானம் போலே
அநுபாவ்ய விஷயத்தை மறையாது நின்றது -என்று வெறுக்கிறார் –

——————————————————————————————————————————————————————

இனித் திரைத்  திவலை மோத வெறியும் தண் பரவை மீதே
தனிக்கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்
கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்
பனியரும் புதிருமாலோ வேன்செய்கேன் பாவியேனே

—————————————————————————————————————————————————————-

இனித் திரைத் திவலை மோத –
ஒண் சங்கதை வாள் ஆழியான் -என்ற இடம் போலே இவ்விடமும்
ஒரு கடைக் குறைத்தலாய் இருக்கிறது யாய்த்து –
இனிதாக திரைகளில் உண்டான திவலையானது ஸ்பர்சிக்க –
மலை போலே சில பெரும் திரைகள் வந்து முறிந்து சிறு திவலையாய்
துடை குத்தி உறக்குவாரைப் போலே
திரு மேனியைப் ஸ்பர்சியா நிற்கும் –
அவை அங்குத்தைக்கு அனுகூலமாக ஸ்பர்சியா நிற்கச் செய்தேயும்
இதுவும் பொறாத திரு மேனியின் சௌகுமார்யத்தை அனுசந்திக்கையாலே
மோத -என்கிறார் யாய்த்து இவர் –
அரக்கர் கோனைச் செற்ற சேவகனார் -என்று
ஆஸ்ரயண வேளையிலே சக்தியை அருளிச் செய்தார் –
இப்போது போக வேலை யாகையாலே சௌகுமார்யத்தை அனுசந்திக்கிறார் இ றே –

எறியும் தண் பரவை மீதே –
திரைக் கிளர்த்தியை உடைத்தாய்
ஸ்ரமஹரமாய் இருந்துள்ள
சமுத்ரத்தில் சாய்ந்து அருளுமா போலே
கண் வளர்ந்து அருளுகிறவன் -என்னுதல் –
அன்றிக்கே –
பரப்பாலும் ஜல சம்ருத்தியாலும்
இது தன்னையே சமுத்ரமாக சொல்லிற்று ஆகவுமாம்
தனிக்கிடந்து-
நினைவு அறிந்து பரிமாறுவார் ஒரு நாடாக உடையவன் கிடீர்
இங்கே வந்து தனியே கண் வளர்ந்து அருளுகிறான் –
இப்படி கண் வளர்ந்து அருளா நிற்க
ஒரு கார்யம் அற்று அந்ய பரராய் திரியா நின்றார்கள் இ றே சுகமே சம்சாரிகள் –
தனியேன் வாழ் முதலே -என்பான் ஒரு தனியேனைக் கிட்டுமோ என்னும் நசையிலே இ றே
தனியே வந்து கண் வளர்ந்து அருளுகிறது –

அதற்கு உடலாகச் செய்யும் கார்யம் தான் எது என்னில்
அரசு செய்யும்-
அரசு செய்கை யாவது -வன்னியம் அறுக்கை
வன்னியம் -ஆகிறது -அஹம் -என்று இருக்கை –
அத்தை அறுக்கை -யாகிறது -நம -என்னப் பண்ணிக் கொள்ளுகை
நம இத்ய வவாதின -என்கிறபடியே
நித்யசூரிகள் உடைய யாத்ரையே இங்கு உள்ளார்க்கும் யாத்ரையாம் படி பண்ணிக் கொள்ளுகை –

இவ்வன்னியம் அறுக்கைக்கு பரிகரம் எது என்னில்
தாமரைக் கண்ணன்-
கையிலே பிரம்மாஸ்திரம் இருக்க வெல்ல ஒண்ணாத இடம் இல்லை இ றே –
அங்கு உள்ளாரை வென்ற பரிகரத்தைக் கொண்டாய்த்து இங்கு உள்ளாரையும் வென்றது
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலை மகனை -என்னக் கடவது இ றே –
அவர்களுக்கு போக உபகரணமான இத்தைக் கொண்டு கிடீர்
இவர்களுடைய விரோதியைப் போக்குவது –

இப் ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு அகப்பாட்டார் யார் என்னில் –
எம்மான் –
நான் தோற்று என்னை எழுதிக் கொடுத்தேன் –
சம்சாரிகளுக்கும் இவ்வருகான என்னைத் தோற்பித்த
கண்களுக்கு
இனி வெல்ல ஒண்ணாத நிலம் உண்டோ –
கனி இருந்தனைய செவ்வாய்க்
அக் கண்ணாலே நிர்மமர் ஆனார்க்கு அனுபாவ்யமானவிஷயம் இருக்கிறபடி –
கண்ட போதே நுகரலாம் கனி போலே யாய்த்து திரு அதரத்தில் போக்யதை இருப்பது –
இருந்து -என்றது
அச் செவ்வி என்றும் ஒக்க ஏக ரூபமாய் இருக்கிறபடி –
சதைக ரூபரூபாய -என்னக் கடவது இ றே

கண்ணனைக்-
பெரிய பெருமாளைத் திருவடி தொழுதால்
அவதாரத்துக்கு பிற்பாடர்க்கு உதவுவதற்காக கிருஷ்ணனாய் வந்து
கண் வளர்ந்து அருளுகிறான் -என்று ஸ்மரிக்கலாம் படி யாய்த்து இருப்பது –
யசோதைப் பிராட்டி பிள்ளை மனம் கன்றாமல் தீம்பிலே கை வளரும் படி
வளர்ந்த மொசு மொசுப்பு எல்லாம் தோற்றி இருக்கும் பெரிய
பெருமாளைக் கண்டால் -என்றும்
வசிஷ்டாதி களாலே ஸூசிஷிதராய் வார்ந்து வடிந்த விநயம் எல்லாம்
தோற்றும்படியான சக்கரவர்த்தி திருமகனை ஸ்மரிக்கலாம் படி இருக்கும்
நம்பெருமாளைக் கண்டால் -என்றும் பட்டர் அருளிச் செய்வர் –
கண்ட கண்கள் –
அநாதி காலம் இழந்த இழவு தீர காணப் பெற்ற கண்கள் –
பனியரும் புதிருமாலோ-
கண்டு அனுபவிக்கப் பெற்ற ப்ரீதியாலே
ஆனந்தஸ்ரு ப்ரவஹியா நின்றது –
அனுபவ ஜனித ஹர்ஷம் அடியாக வந்தது ஆகையாலே அதி சீதளமாய்
வறுத்த பயிறு முளைக்கும் படி இருக்கும் என்கை –
விரஹம் அடியாக வந்ததாகில் இ றே உஷ்ணமாய் இருப்பது –
ஆஹ்லாத சீத நேத்ராம்பு -என்னக் கடவது இ றே –

என்செய்கேன் பாவியேனே-
கண்ண நீர் அருவிகள் போலே மறைக்கையாலே -என் செய்கேன் -என்கிறார்
பெறுவர்தற்கு அரிய விஷயத்தை கண்டு அனுபவிக்க பெற்று இருக்க
இதற்கு இடைச் சுவர் உண்டாவதே –
என் செய்கேன் பாவியேன் -என்கிறார் –
ஆலோ -என்றது விஷய அதிசய ஸூ சகம்
அத்தலையில் வை லஷண்யத்தை அளவு படுத்த ஒண்ணாது
அனுபவ ஜனித ஹர்ஷத்தை அளவு படுத்தப் போகிறது இல்லை -என் செய்கேன் பாவியேன் -என்கிறார் –
கண்ணா நீர் ஊற்று மாறாத படி வெள்ளமாய் செல்லுகையாலே இத்தை மாற்றி ஒருக்கால் கண்டதாய் விடப் போகிறது இல்லை –
இவ்விஷயத்தை அநாதி காலம் பாபத்தாலே அனுபவிக்கப் பெற்றிலேன் –
இன்று கண்ண நீர் மறைக்க அனுபவிக்கப் பெற்றிலேன்
என் கார்யம் வெள்ளக்கேடும் வறட்டு கேடுமாய் யாய்த்து -என்கிறார் –
அங்கன் இன்றிக்கே
இப்போது இழவு உண்டாய் -பாவியேன் -என்கிறார் அல்லர்
பாட்டிக்கேட்டு ஈடுபட்டு பாவியேன் என்பாரைப் போலே
பாவியேன் என்கிறார் என்றும் சொல்வார்கள்

——————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திரு மாலை-17–விரும்பி நின்று ஏத்த மாட்டேன் –பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

December 5, 2013

கீழ் ஆதரம் பெருகின படி சொல்லிற்று
இதில் அகவாயில் ஆதரம் விளைந்து
புறவே கட்டு அழியாமல் இருக்கை அன்றிக்கே
சஷூராதி கரணங்களும் தன்னைக் கண்டு சேதன சமாதியாலே களிக்கும் படி பண்ணினான் –
என்கிறார் –

————————————————————————————————————————————————————————

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி யொன்று இல்லை
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த வரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணினை களிக்குமாறே –

———————————————————————————————————————————————————————–

விரும்பி நின்று ஏத்த மாட்டேன்-
மனோ வாக் காயங்கள் உடைய பூர்வ வருத்தத்தை அருளிச் செய்கிறார் .
விஷயம் விலஷணம் ஆனால் -அத்ய ஆதரத்தோடு வியவசிதனாய் நின்று
ஸ்தோத்ரம் பண்ண வேணும் இ றே-
அது செய்ய மாட்டிற்று இலேன் –
சோஹம் ஸ்துதௌ நச சாமர்த்யவான் -என்னுமா போலே
பகவத் விஷயத்தை பேச வென்றால்
வாக் இந்த்ரியதுக்கு சக்தி இல்லை
வ்யதிரிக்த விஷயங்களை பேச வென்றால் ஆதரம் உண்டாய் சக்தியும் உண்டாய் இருக்கும் –

வாக் வியாபாரம் புறம்பே யானாலும் -காயிக வியாபாரங்களில்
நம் பக்கல் பண்ணிற்றது ஏதும் உண்டோ என்ன –
விதியிலேன்-
விதிர்வித் -என்கிறபடியே காயிக வியாபாரத்தைச் சொல்லுகிறது –
உன்னை உத்தேசித்து உன் பக்கல் அனுகூலமாக இதுக்கு முன்பு கையால் ஒன்றும் செய்திலேன் –
சாஜிஹ்வா யாஹரிம் ஸ் தௌ தி -என்கிறவதுவும்
யௌதத் பூஜா கரௌ கரௌ -என்கிறவதுவும் –

புறம்பே தப்பிற்றாகிலும் -நெஞ்சாலே தான் நினைத்தாரோ -வென்ன –
மதி யொன்று இல்லை –
உன் வாசி அறியாது ஒழிந்தால்
நீ ஒருவன் உண்டு என்ற அறிவும் கூட இல்லை –
உன்னை ஒழிந்த சகல பதார்த்தங்களின் உடைய ஸ்வரூப ஸ்வபாவங்களை
உள்ளபடி அறிய ஷமனாய் இருப்பன் –
உன் அளவில் வந்தால் உன் சத்பாவத்திலும் ஞானம் இல்லை –
அசத் ப்ரஹ்மேதி வேத சேத் அசந்நேவ ச பவதி -என்னக் கடவது இ றே–வித்யா ந்யாசில் புனை புணம்-

இப்படி மநோ வாக் காயங்களாலே
அன்யதாவாகக் கார்யம் கொண்டீர் ஆகில்
பிரதானமான மனசை மேலே திருத்திக் கொள்ளுகிறோம் என்ன –

இரும்பு போல் வலிய நெஞ்சம்-
தேவரீருக்கு திருத்திக் கொள்ளுகைக்கு யோக்யதை இல்லை –
இரும்பாகில் அக்நியாலே நிமிர்த்துக் கொள்ளலாம்
இது ஒருபடியாலும் திருத்த ஒண்ணாது -என்கை

இதுக்கு முன்பு -பூர்வ அவஸ்தையில் தாம் நின்ற நிலையை அருளிச் செய்தாராய்
இதுக்கு மேலே -அத்தலையில் பிரபாபம் சொல்கிறார் –
இறை இறை உருகும் வண்ணம் –
இவ்வன்மையோடே முடிந்து போகாதபடி இப்போது என் மனசை சிதிலமாம்படி பண்ணினான் –
கடின ஸ்தலத்திலே வர்ஷித்தால் காடிண்யம் அடங்க நெகிழ்ச்சிக்கு உறுப்பாமாம் போலே
விஷயாந்த்தரத்தாலே மனஸ் ஸூ அதி கடினமானாலும்
சிதிலமாம் படி வயிர உருக்காய் இ றே பகவத் பிரபாவம் இருப்பது –

சுரும்பமர் சோலை சூழ்ந்த வரங்க மா கோயில் கொண்ட
உருக்கின விஷயம் தான் இருக்கிறபடி –
வாண்ண்டுகள் பொருந்தி விட மாட்டாத சோலை –
பரிமளம் படித்தாப் போலே தன்னிலே பிறந்தது என்னும்படி யாய்த்து
வண்டுகள் படிந்து கிடக்கும்படி –
மாறி மாறி வி றே அது கால் வாங்குவது –
மது மாறுவது செவ்வி மாரில் இ றே
ஆக நித்ய வசந்தமான சோலை -என்கை –
சோலையின் போக்யதை புரளி என்னும்பை யாய்த்து ஊரில் போக்யதை இருப்பது –
பரமபத்தோபாதி ஸ்லாக்கியமான கோயிலாக கொண்டான்-

கரும்பினைக் –
கரும்பு -என்றது கை தொட்டால் பிசகு நாறாதே இருக்கும் போக்யமான வஸ்துவை –
பிரப்தமுமாய்
சுலபமுமாய்
இருக்கச் செய்தேயும்
போக்யதை யாய்த்து மிக்கு இருப்பது –
கன்னல் -என்னாது ஒழிந்தது -பாக விசேஷத்தால் ஆக்கனாய் வந்த சாரஸ்யம் அல்ல –
சத்தா பிரயுக்தமான சாரஸ்யம் என்கைக்காக –
ரசோவைச-என்னக் கடவது இ றே –

கண்டு கொண்டு
நிதி எடுத்துக் கொண்டு -என்னுமா போலே
கண்ணாலே பருகும் கரும்பாய்த்து இது –
லோச நாப்யாம் பிபந்நிவ-

என் கண்ணினை களிக்குமாறே –
நரஹாவகமான விஷயங்களைக் கண்டு களித்துப் போந்த
என் கண்கள் கிடீர்
இவ் விஷயத்தைக் கண்டு களிக்கின்றன

இணை –
களிப்புக்கு ஒன்றுக்கு ஓன்று ஒப்பாம் இத்தனை போக்கி வேறு
உபமானம் இல்லை-
முக்தர் சதா தர்சனம் பண்ணிக் களிக்கும் களிப்பும்
இக் கண்ணாலே இப்படி களிக்கிற இதுக்கு சத்ர்சம் அன்று –
கரணாதிபனான என்னை ஒழிய -தானே களியா நின்றன –
இந்த்ரியங்கள் ஞான பிரசரத்வாரம் என்கிற அந்நிலை குலைந்து
சேதன சமாதியாலே தானே களியா நின்றன –
ராமம் மே அநுகதா தர்ஷ்டி –
கர்த்தாவை ஒழியவே கரணங்களுக்கே
அந்வய வ்யதிரேகங்களிலே சோக ஹர்ஷங்கள் உண்டாம்படி இ றே விஷய ஸ்வபாவம் இருப்பது –

——————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திரு மாலை-16-சூதனாய்க் கள்வனாகி–பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

December 4, 2013

பிராப்யமும் பிராபகமும்
தானே என்னும் இடத்தில் சம்சயத்தை அறுத்துத் தந்தாப் போலே
தத் அனந்தர பாவியான ஆதாரத்தை தன பக்கலிலே
அனுகுணமாகப் பெருகும் படி பண்ணினான்
என்கிறார்-

——————————————————————————————————————————————-

சூதனாய்க் கள்வனாகித் தூர்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன பால்
ஆதரம் பெருக வைத்தான் அழகனூர் அரங்கம் அன்றே

———————————————————————————————————————————————-

சூதனாய்க் கள்வனாகித் –
தம்முடைய பூர்வ வர்த்தம் அருளிச் செய்கிறார் –
சூதாவது -பஸ்யதோஹரத்வம்
களவாவது -பர த்ரவ்யத்தை என்னது என்று இருக்கை –
பிரமாண விஷயமான பரத்வத்தை இல்லை என்கை –
இனி காஷ்ட அபஹாரம் பண்ணினவனுக்கும்
ரத்ன அபஹாரம் பண்ணினவனுக்கும்
அபஹாரம் ஒத்து இருக்கும்
த்ரவ்ய வைஷம்யத்தாலே தோஷமும் நெடு பட்டு இருக்கும்
சண்டாள த்ரவ்யத்தை அபஹரித்தார்க்கும்
வசிஷ்ட த்ரவ்யத்தை அபஹரித்தார்க்கும்
த்ரவ்யம் ஒன்றானாலும் ஸ்வ வான்களுடைய வைஷம்யத்தாலே தோஷமும் நெடு பட்டு இருக்கும்-
இத் த்ரவ்யம் ஸ்ரீ கௌஸ்துபம் போலே ஈஸ்வரனுக்கு
ஸ்ப்ருஹ ணீ யமான ஆத்மத்ரவ்யம்
உடையவனும் சர்வேஸ்வரன் ஆகையாலே தோஷத்துக்கு அவதி இல்லை என்கை –
ஆக களவாகிறது -ஈஸ்வர சேஷமான ஆத்மவஸ்துவை
என்னது என்று இருக்கை –
சூ தாவது பச்யஹோரத்வம் –
அதாவது சத்வர்த்தனாய் இருப்பன் ஒருவன் பர சேஷமாய்க் கொண்டு
ஆத்மஸ்வரூபம் உண்டு -சேஷியான ஈஸ்வரனும் உண்டு –
தர்ம அதர்மங்கள் உண்டு என்று அறிதல் –
இவை எல்லாம் பொய் காண் என்று அவனை விப்ரலம்பித்து
தன படி யாக்கிக் கொள்ளுகை –
அகவாயில் நினைவு இது வானால் -பின்னை இதுக்கு
வர்த்தகராய் இருப்பார் உடன் சஹாவாசம் பண்ணுவது
தூர்தரோடு இசைந்த காலம் –
பிராப்தமான சர்வேஸ்வரனை விட்டு
அப்ராப்த விஷயங்களிலே அதி பிரவணர் உடன் பொருந்தி போந்த காலம் –
இப்படி இருந்த காலத்தை ஸ்மரிக்கையும் கூட அசஹ்யமாய்
இருக்கிறது ஆய்த்து இவர்க்கு –
இப்படி அனர்த்தப் பட்டு போந்த காலத்துக்கு தொகை இல்லை கிடீர் –
ஆத்மாவுக்கு நிலை நின்ற ஸ்வரூபம் ஸ்ரீ வைஷ்ணவ சஹாவாசமேயாய் இருக்க
அனர்த்த ஹேதுவான ஸ்வ பாவத்தை உடைய வர்களோடு
காலத்தை போக்குவதே
பாகவத சஹவாசம் பகவத் விஷயத்தோடு மூட்டி விடுமோபாதி
விபரீதர் உடைய சகவாசம் விஷய பிராவண்யதுடன் மூட்டி விடும் இ றே –

மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
ஸ்திரீகள் உடைய
கயல் போலே முக்தமாய் இருந்துள்ள கண்ணாகிற வலையிலே அகப்பட்டு
கால் வாங்க மாட்டாத என்னை –
ஜாதி மாத்ரமே பற்றாசாக மேல் விழும் அது ஒழிய
ஜன்ம வருத்தங்களாதி அறியான் –
கண்ணின் உடைய ஆகர்ஷகத்வமே அறியும் அத்தனை –
அகவை மயிர்க்கத்தியாய் -இவனை ஒழிய தங்களுக்கு செல்லாமை
தோற்றும்படி யாய்த்து பார்ப்பது –
கண் என்று பேரால் -வலையின் கார்யமே யாய்த்து பலிப்பது –
இது தானும் மணி வலை இ றே
கண்ணுக்குளே மணியும் உண்டு இ றே
அத்தைப் பற்றி வலை என்கிறது –
புறம்பு கால் ஒண்ணாதபடி கண்ணைக் காட்டி
தான் கிட்டாதே அகல நிற்கும்

அதுக்கடி கிட்டினவன் அபிநிவேசத்தொடே போக உபகரணங்களைக் கொண்டு இழிந்த இவன்
தனக்கு ச்நாநீயம் கொண்டு புறப்பட வேண்டும்படி இவன் தண்மை இருப்பது –
இவன் தான் அவிவிவேகி ஆகையாலே அகவை ஆராய மாட்டாதே
வாய்கரையிலே அழுந்தி நோவு படா நிற்கும் –
வலையுள் பட்டு அழுந்துவேனை –
மீண்டு கால் வாங்க ஒண்ணாது
அது தன்னில் அனுபாவ்யம் ஓன்று இல்லை
கிடந்தது உழைக்கும் இத்தனை
விஷய பிராவணயத்தால் சித்தித்தது கிலேசமேயாய்விட்டது –
இவ் விஷயங்களில் அகப்பட்டு கால் வாங்க மாட்டாதே
நோவு படுகிற படியைக் கண்டு
பெரிய பெருமாள் -ஆழ்வீர் நீர் நினைத்து இருப்பது என் –
ஆசைப்பட்டு இருப்பது என் -என்ன
இப்படி என்னை நோவு படுத்தின கண்ணை ஒரு தார்மிகன் கொண்டு வந்து காட்டுமாகில் இ றே என்று
கண் அழகியாரை உகப்பேன் -என்ன
கண்ணின் வாசி அறிந்தார் -என்று
திருத் திரையை விலக்கி திரு முகத்தை காட்டினான் –
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற த்ண் தாமரைக் கண்களைக் காட்டி அருளி
ஆழ்வீர் நீர் ஆசைப்பட்ட கண் உடையார் இங்கே காணும் இங்கே போரீர் என்ன
இவை சில கண்கள் இருந்த படி என் -என்று
தாம் முன்பு அனுபவித்த கண்களைக் காட்டில்
விலஷணமுமாய்
பிராப்தமுமாய் –
இருக்கையாலே இவர் உடைய நெஞ்சு விஷயாந்தரங்களில் நின்றும் மீண்டது –
ராம கமல பத்ராஷ ஸ் சர்வ சத்வ மநோஹர
ரூப தாஷிண்ய சம்பன்ன ஸூ தோ ஜனகாத்மஜே —
புந்தியுள் புகுந்து –
இவ்வளவிலே விலக்குகைக்கு பரிகரம் இல்லாதபடி
நினைக்கு வாய்த்தலையைப் பற்றினான் –
நாம் புகும் இடத்தில் இவர்க்கு விலக்காமை உண்டாய் இருந்தது
இதுவே பற்றாசாக இவர் திரு உள்ளத்திலே வந்து புகுந்தான் -என்றுமாம் –

புகுந்து செய்தது என் என்னில் –
தன பால் ஆதரம் பெருக வைத்த-
அப்ராப்த விஷயத்திலே பண்ணிப் போந்த ஆதரம் தன பக்கலிலே
யாம்படியாய்ப் பண்ணினான் –
பாழிலே பாய்கிற நீரை பயிரிலே வெட்டி விட்டாப் போலே
ஆதாரத்தை ஸ் பிரயோஜனம் ஆக்கினான் –
பெருக –
அதனில் பெரிய -என்னுமா போலே
அனுபாவ்யனான தன அளவு அன்றிக்கே
பெருகும்படியாக வைத்த
இதுக்கடியாக தன தலையில் ஒன்றும் காணாமையாலே
ஈதொரு தண்ணீர் பந்தல் வைத்தனை கிடீர் -என்கிறார் –

இப்படி ஆதரத்தை கரை புரளப் பண்ணின பரிகரம் ஏது என்னில்

அழகன் –
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி –என்னக் கடவது இ றே
பக்தி வர்த்தகமான கர்ம ஞானத்திலே நிற்கிறது ஆய்த்து
இவர்க்கு வடிவு அழகு
இவருக்கு சம்சயத்தை அறுக்கையும்
ஆதரத்தை பெருக்குகைக்கும்
சாமக்ரி ஒன்றே என்றது ஆய்த்து –
அழகன்
அழகையே நிரூபகமாக உடையவன் –

ஊர் அரங்கம் அன்றே
இவர் திரு உள்ளத்திலே புகுருகைக்கு
அவசர பிரதீஷனாய் இருந்தவனூர் கோயில் -என்கிறார்
பரமபதம் கலவிருக்கை என்னும்படி நித்ய வாசம் பண்ணுகிற தேசம் –
ருசி பிறந்த போது புக்கு அனுபவிக்கலாம் தேசம் இ றே இது –

—————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திரு மாலை-15-மெய்யர்க்கே மெய்யன் ஆகும் -பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

December 4, 2013

முதல் மூன்று பாட்டாலே -ஸுவ லாபத்தைப் பேசி –
அனந்தரம் –
பதினொரு பாட்டாலே -பரோபதேசம் பண்ணி –
அது தன்னை சம்சாரிகள் ச்வீகரியாமையால்
அவர்கள் பக்கல் நின்றும் கால் வாங்கினாராய் நின்றார் -கீழ் –
இவர்களிலே
அந்ய தமனாய் இருந்துள்ள என்னை -பரோபதேசம் பண்ண வல்லனாம்படி
ஸ்வ விஷயத்திலே -சம்சய நிவ்ருத்தி முதலாக –
பரம பக்தி பர்யந்தமாக பிறப்பிப்பதே -என்று
பெரிய பெருமாள் தமக்கு நிர்ஹெதுகமாகப் பண்ணின
மகா உபகாரத்தை –
மேல் பத்துப் பாட்டாலே -அருளிச் செய்கிறார் –
இது இ றே க்ருதஞ்ஞர் உடைய ஸ்வ பாவம் இருக்கிற படி –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -என்னா நிற்பார்கள் இ றே –
இப்பாட்டில் –
அத்வேஷம் பிறந்த அளவில் தன படிகளை எல்லாம் காட்டிக் கொடுக்கும் என்றும்
தானும் ஒருவன் உளன் என்று அறிந்த அளவில் சம்சய நிவ்ருத்தியைப் பண்ணி வைக்கும் என்றும்
இவ்வர்த்தத்தை எனக்கு அத்வேஷம் பிறந்த அளவிலே
காட்டித் தர அனுபவிக்கப் பெற்றேன் -என்கிறார் –

—————————————————————————————————————————————————–

மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதியிலா வென்னைப் போலே
பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடி உடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னர்
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கம் அன்றே

—————————————————————————————————————————————————-

மெய்யர்க்கே மெய்யன் ஆகும் –
இங்கு மெய் -என்று சொல்கிறது பொய் தவிர்ந்த மாத்ரமான அத்வேஷத்தை யாய்த்து –
இவன் பக்கல் உள்ளது அத்வேஷம் ஆனாலும்
அவன் இவன் பக்கல் இருக்கும் படி என் -என்னில் –
மெய்யன் ஆகும் –
மெய்யான பரிமாற்றம் உடையார் திறத்தில் இருக்கக் கடவ படிகளை
கொண்டு இவன் பக்கலிலே இருக்கும் –
அதாகிறது
தன் படிகளை அடங்க இவனுக்கு காட்டிக் கொடுக்கும் –
இரண்டு இடத்திலும் சப்தம் ஒத்து இருக்க
இது அர்த்தம் ஆகிற படி எங்கனே என்னில் –
குண பிரகரணம் ஆகையாலும்
சமஸ்த கல்யாண குணாத்மகனுக்கு இது ஒரு ஏற்றமாக
சொல்ல ஒண்ணாமை யாலும்
இம் மாத்ரமே பற்றாசாக ரஷிக்கைக்கு அடியான
ஸ்வா பாவிக சம்பந்தம் உண்டாகையாலும் –
அவாப்த சமஸ்த காமன் ஆகையாலே இதற்கு மேல் வேண்டாதபடி நிரபேஷனாய் இருக்கையாலும் –
இது தான் சம்சாரிகள் சிலருக்கு சம்பாவிதம் ஆகையாலும்
ஈஸ்வரனுக்கு குற்றம் அல்லாமையாலும்
சப்தத்தை நெருக்கியே அர்த்தம் சொல்லுகிறோம் –
இங்கனம் கண் அழிவற்ற மெய்யனே பரிமாறுவார்
நித்ய சூரிகளே யாகையாலும்
அந்த மெய் சம்சாரிகள் பக்கல் சம்பாவியாமை யாலும்
இனித் தான் சம்சாரிகள் பக்கல் உள்ளது ஒன்றாலே பேறாக வேண்டி இருக்கையாலும்
மித்ர பாவேன சம்ப்ராப்தம் -என்கிற தர்மிக்ராஹக ப்ரமாணத்தோடு செருகையாலும்
இதுவே அர்த்தமாக வேணும் –
இந்த அத்வேஷத்தை -சாதனம் ஆக்க ஒண்ணாது இ றே -சேதனன் ஆகையாலே –
இந்த ருசி ஸ்வரூப அந்தர்பூதம் ஆகையாலும்
அனுபவ வேளையில் உள்ளது ஒன்றாகையாலும்
சாதனம் ஆக மாட்டாது

பொய்யர்க்கே பொய்யனாகும்-
மெய் என்று பேரிடலவதொரு பொய்
இவ்வாஸ்ரய்த்தில் இனி உண்டாக மாட்டாது என்று தோற்றினால்
பின்னை கண்ண நீரோடு யாய்த்து கால் வாங்குவது
சர்ப்ப தஷ்டனை நெற்றியைக் கொத்திப் பார்த்தால் பசை இல்லை யாகில் மிர்த்யன் என்று மீளுமா போலே
இவன் பக்கல் ஜீவன ஹேது இல்லை என்று
ஈடுபாட்டோடு யாய்த்து மீளுவது
மெய்யர்க்கே -என்ற அவதாரணத்தாலே -அத்வேஷ மாத்ரத்தையே சொல்லுகிறது –
பொய்யர்க்கே -என்கிற அவதாரணம் -மெய்க்கு பிரசங்கம் இல்லாத பொய்யரைச் சொல்லுகிறது
மெய் என்று சொல்கிறது சத்தியத்தை
சத்யம் என்கிறது பகவத் விஷயம் பற்றின அறிவை

பொய் -என்று சொல்கிறது -பகவத் வ்யதிரிக்தமான பதார்த்தங்களை விஷயீ கரித்த ஜ்ஞானத்தை
மெய்யர்க்கே மெய்யனாய் பொய்யர்க்கு பொய்யனாய்-போந்தமை எங்கே கண்டோம் என்னில்
என்னைப் போலே-

நான் நெடுநாள் தன பக்கல் வைமுக்யம் பண்ணிப் போந்த இடத்தில்
என்னைக் கிட்ட மாட்டாதே நின்றான்
எனக்கு அத்வேஷம் பிறந்த அளவிலே

மேல் விழுந்து விஷயீ கரித்தான்-
இவை இரண்டும் என் பக்கலிலே கண்டேன் –
விதியிலா வென்னை –
அவனுடைய சீலம் இதுவாய் இருக்க -விஷயாந்தரபிரவணனாய்
பகவத் விஷய விமூகனாய்ப் போந்த பாக்ய ஹீனன் என்று
முன்பு இழந்த இழவுக்கு வெறுக்கிறார் –
பழுதே பல பகலும் போயின -என்று
பெற்ற பேற்றில் காட்டில் இழந்த இழவே மேல் படி இ றே
இவ்விஷயத்தில் கை வந்தார் படி இருப்பது
நிந்திதஸ் ஸ்வ ஸேல்லோகே ச்வாத்மாப்யேனம் விகர்ஹதே -என்னக் கடவது இ றே –

இப்படி மெய் என்று பேரிடலாவது பொய்யைக் கொண்டு
விஷயீ கரிக்கிறவன் தான் ஆள் இல்லாதவான் ஒருவனோ வென்னில் –
புட் கொடி யுடைய கோமான் –
மெய்யான பரிமாற்றத்தை உடையார் அநேகர் உடைய படிகளை
ஒருவன் செய்ய வல்லனாம்படி சமைந்தார் அநேகரை உடையான்
ஒருவன் ஆய்த்து
கொடி -என்றது -தாச விதான வாஹனம் -உப லஷணம்
நிவாச சய்யா -என்னக் கடவது இ றே

கோமான் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி ஆகையாலே -மேணானிப்பை
உடையவனாய் இருக்குமவன் –
சம்பன்னராய் இருக்குமவர்களே யாகிலும் -தன லோபத்தாலே
ஒரு காசு விழுந்த இடத்தே போய்த் தேடா நிற்பார்கள் ஆய்த்து –
தம் தாம் வஸ்துவை விட மாட்டாமையாலே

உய்யப்போம் உணர்வினார்கட்கு –
கீழ் பொய்யிலே வ்யவஸ்திராய் நின்ற நிலையில் நின்றும்
கால் வாங்கி நாம் உஜ்ஜீவிக்கும் பிரகாரம்
ஏதோ வென்று வெளிச் சிறப்பை உடையவர்களுக்கு –
ஈது ஒழிய முடியப்போம் உணர்வு உண்டு போலே காணும் –
புத்தி நாசாத் ப்ரணச்யதி -என்னக் கடவது இ றே –
உய்யப் போம் உணர்வு ஆகிறது –
யாதார்சிகமாக விளைந்ததொரு ஸூ க்ர்தம் அடியாக
நாமார்
நாம் நின்ற நிலை ஏது
மேல் நமக்குப் போக்கடி ஏது -என்றும் பிறக்கும் உணர்வு –

ஒருவன் என்று உணர்ந்த பின்னை –
ஈஸ்வரனும் ஒருவன் உளன் என்ற அறிவு பிறந்த பின்பு –
கேவல தேகமே யன்று உள்ளது –
தேகாதி ரிக்தமாய் இருப்பதொரு ஆத்மா வுண்டு –
அவனுக்கு ஸ்வாமியாய் இருப்பான் ஒரு ஈஸ்வரனும் உண்டு -என்னும் அறிவுடையார்க்கு
பஞ்ச விம்சகன் ஆத்மா -என்றால் இசைவார் உண்டு
ஷட் விம்சகன் ஈஸ்வரன் என்றால் இசைவார் இல்லை இ றே –

ஐயப் பாடு அறுத்துத் தோன்றும் –
ஈஸ்வர சத்பாவத்தை இசையாத நாள் இ றே இவனுக்கு சம்சயம் உள்ளது
தானே பிராப்யன் என்னும் இடத்திலும்
தானே விரோதியைப் போக்கும் என்னும் இடத்திலும்
உண்டான சம்சயங்களை தானே அறுத்து கொண்டு வந்து தோற்றும் –

இவனுக்கு சம்சய நிவ்ருத்தி பண்ணுவது எத்தாலே -என்னில் –
அழகன் –
சிஷ்யச் தேஹம் சாதிமாம் த்வம் பிரபன்னம் -என்று
அர்ஜுனனுக்கு உபதேசத்தாலே சம்சயம் அறுத்தான் இத்தனை –
அவ்வளவு அல்லாதார்க்கு அழகாலே சம்சயத்தை அறுத்து கொண்டு வந்து –

தோன்றும் –
பிரகாசிக்கும்
திருமேனி யடிகளுக்கு -என்றும் –
கண்டவாற்றால் உலகே தனது என்று நின்றான் -என்றும் –
சொல்லுகிறபடியே கண்ட போதே சர்வாதிக வஸ்து என்று
நிர்ணயிக்கலாம் படி இ றே திரு வடிவு தான் இருப்பது –

ஊர் அரங்கம் அன்றே –
இவ் வழகு ஓர் தேச விசேஷத்திலே போனால் அன்றோ லபிக்கல் ஆவது என்ன
அது வேண்டா –
சம்சாரத்துக்கு உள்ளே கோயிலிலே அனுபவிக்க அமையும் -என்கிறார் –
பரமபதம் கலவிருக்கையாக இருக்க
நத்தம் கோயில் என்னும்படி யாய்த்து
கோயிலில் நித்ய சந்நிதி இருப்பது –

——————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திரு மாலை-14-வண்டினம் முரலும் சோலை -பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

December 3, 2013

பிறர் முகம் பார்த்து சொல்லியும்
தம்மிலே சொல்லியும்
இப்படி ஹிதம் சொன்ன இடத்திலும் அவர்கள் விமுகர் ஆகையாலே அவர்களை வெறுத்து
அவர்களோட்டை சகவாசத்தாலே வந்த கிலேசம் தீர
கர்ப்பூர நிகரத்தை வாயிலே இடுவாரைப் போலே கோயிலை அனுபவித்து
இப்படி தங்களுக்கு செல்ல பிராப்தமாய் இருக்க இத்தை அநாதரிப்பதே என்று
அவர்களை உபேஷா வசனத்தைப் பண்ணி இவர்
பரோபதேச சாந்நிவர்த்தகர் ஆகிறார் –
இது ஸ்வ அனுபவமாய் இருக்க பரோபதேசமாகத் தலைக் கட்டுகிறது
சத்துக்கள் அனுபவ ஜ்ஞானம் பிறர்க்கு கர்த்தவ்யமாக கடவது இ றே-

———————————————————————————————————————————————

வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே

—————————————————————————————————————————————————–

வண்டினம் முரலும் சோலை –
கிண்ணகத்தில் இழிவார் திரளாக இழியுமா போலே
மது வெள்ளத்தால் வண்டுகள் திரள் திரளாக வாய்த்து இழிவது –
கழுத்தே கட்டளையாக மது பானத்தைப் பண்ணி
புக்க த்ரவ்யம் இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலும்
தான் வாய் விட மாட்டாமையாலும்
ஆளத்தி வையா நிற்கும் ஆயத்து –
முக்தர் திரள் திரளாக பகவத் அனுபவம் பண்ணி
போக்குவீடாக சாமகானம் பண்ணிக் களிக்குமா போலே
இவ் ஊரில் திர்யக்குகளும் கழித்து வர்த்திக்கும் -என்கை –

மயிலினம் ஆலும் சோலை –
வண்டுகள் உடைய த்வநியைக் கேட்டும்
சோலையின் பசுமையையும் கண்டும்
வர்ஷாவில் மேகங்களாக நினைத்து
இனம் இனமாக மயில்கள் ஆனவை
சசமபிரமநர்த்தனம் பண்ணா நிற்கும் –
ஆலுதல் -ஆடுதலும் -களித்தலும்

கொண்டல் மீது அணவும் சோலை-
இவற்றின் உடைய ஆலிப்பையும்
சோலைப் பசுமையும் கண்டு மேகங்கள் ஆனவை
சமுத்ரமாக கொண்டு படியா நிற்கும்
அன்றிக்கே
மேக பதத்து அளவும் செல்ல திருச் சோலை தான்
ஓங்கி இருந்தபடியைச் சொல்லிற்றாகவுமாம் –
இவ் ஊரில் பொழிலும் -மயல் மிகு பொழிலாய் இருக்கிறபடி –
திருமலையில் பொழிலின் இருட்சியாலே புக்க விடமும்
புறப்பட்ட விடமும் தெரியாது ,
இவ் ஊரில் வஸ்துவை வஸ்வந்தரமாக பிரமிப்பிக்கும் –

குயிலினம் கூவும் சோலை –
கீழ் சொன்னவற்றின் வியாபாரம் இன்றிக்கே
குயில் இனங்கள் ஆனவை இருந்த இடத்திலே இருந்து
தம் தாம் இருந்த பிரதேசத்திலே குளிர்த்தியாலே அன்யோன்யம் அழையா நின்றன –

அண்டர் கோன் அமரும் சோலை –
வண்டு மயில் கொண்டல் குயில் -இவற்றோபாதி இவனும்
சோலை பரப்பையும் போக்யதையும் கண்டு
விட மாட்டாதே கிடக்கிறான் ஆயத்து –
ரஷ்ய பூதரான சம்சாரிகளுக்கு ப்ராப்யமானவோ பாதி
ரஷகனான சர்வேஸ்வரனுக்கும்
பிராப்யமாகக் காணும் இத் தேசம் இருப்பது –

அண்டர் கோன் –
அண்டாந்த வர்த்திகளை நிர்வஹிக்கைக்காக -என்னுதல்
பர வியூக விபவ ஸ்தானங்களை விஸ்மரித்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம் -என்னுதல் –

சோலை அணி திருவரங்கம் –
சோலையை ஆபரணமாக உடைத்தான கோயில் -என்னுதல் -சம்சாரத்துக்கு ஆபரணமான கோயில் -என்னுதல்

திருவரங்கம் என்னா மிண்டர்-
அவன் தங்களுக்காக வந்து கண் வளரா நிற்க –
அவன் இருந்த தேசத்தை வாயாலே சொல்லவும் கூட மாட்டாத மூர்க்கர் –
மூர்க்கர் -ஆகிறார் -விழுக்காடு அறியாதவர்கள்
அதாகிறது
நரக வாசம் கர்ப்ப வாசம் -முதலானவை பிடரியைப் பிடித்துக் கொண்டு நிற்க
கேவலம் தேக போஷண பரராய் இருக்குமவர்கள் –

பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே
திருவரங்கம் என்ன மாட்டாத மூர்க்கராய் இருப்பார் ஜீவிக்கிறது வழி அல்லா வழியே அபஹரித்து ஜீவிக்கிறார்கள் -இத்தனை –
அத்தை விலக்கி நாய்க்கு இடும்கோள்
தங்களை உத்தேசித்து வந்து கண் வளர்ந்து அருளுகிற அந்த உபகாரத்தை அறியாத க்ர்தக்னர்
ஜீவிக்கிற ஜீவனத்தை விலக்கி
ஒரு நாள் ஒரு பிடி சோறு இட்டவன் வாசலைப் பற்றிக் கிடக்கும் அத்தனை க்ர்தஞ்ஞமான
நாய்க்கு இடும் கோள்-
இது தான் –
யோ சாதுப்யோர்த்தமாதாய சாதுப்ய ஸ்சம்ப்ரயச்சதி –
என்னும் நிர்வாஹகரைக் குறித்து இ றே சொல்லிற்று –

————————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திரு மாலை-13-எறியு நீர் வெறி கொள் வேலை -பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

December 3, 2013

சம்சாரிகளை நோக்கி ஹிதம் சொல்லுகை தான்
அவர்களுக்கு அசஹ்யமாம் அளவானவாறே
இவர்கள் துஷ்ப்ரக்ருதிகள் என்று பாராதே துர்க்கதியைப் பார்த்து
ஸ்வ கதமாக இவர்கள் ஸ்வரூபம் பகவத் அர்த்தமாய் இருக்கிற படியை
அறிந்து இலர்களே ஆகிலும்
ஓர் உபாதியால் அன்றியே வாயால் திருவரங்கம் -என்பார்கள் ஆகில்
சம்சாரம் கரம்பெழுந்து போம் ஆகாதே -என்கிறார் –

——————————————————————————————————————————————————–

எறியு நீர் வெறி கொள் வேலை மா நிலத்து உயிர்கள் எல்லாம்
வெறி கொள் பூம் துளவ மாலை விண்ணவர் கோனை ஏத்த
அறிவிலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில்
பொறியில் வாழும் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே –

————————————————————————————————————————————————–

எறியு நீர் வெறி கொள் வேலை மா நிலத்து உயிர்கள் எல்லாம்-
எறியா நின்று இருந்துள்ள நீரை உடைத்தாய்
அசாதாரணமான கந்தத்தையும் உடைத்தான கடல் சூழப்பட்ட மகா பிரித்வியில் உள்ள
சேதன வர்க்கம் அடங்கலும்
எறியும் நீர் -என்கிறது
த்ரிபாத் விபூதியில் அசங்குசிதமாக இருக்கைக்கு யோக்யரான சேதனர் –
வெள்ளத்திடைப்பட்ட நரி இனம் போலே -என்கிறபடியே
ஷூபிதமான நீர் வெள்ளத்து உள்ளே இருக்கிற சங்கோசம் தோற்றுகைக்காக-
வெறி கொள் வேலை -என்கிறது –
சாத்தின திருத் துழாயின் பரிமளத்தை அனுபவிக்கைக்கு யோக்யரனா சேதனர்
சமுத்திரத்தின் உடைய துர்கந்ததுக்கு இலக்காய் இருக்கிற
அநர்த்தம் தோற்றுகைகாக
மா நிலம் –
பஞ்சாசாத் கோடி விச்தீர்ணையான ப்ர்த்வி
உயிர் கள் –
தேக சம்பந்தம் அற்றால்
ஸ்ரீ கௌஸ்துபம் போலே ஈஸ்வரனுக்கு பிரிய விஷயமான வஸ்து கிடீர் என்க –
எல்லாம் –
ஸ்வாதந்த்ர்யத்தையே முடிய நடத்தக் கடவரான தேவ
வர்க்கத்தோடு
அவர்களுக்கு குடி மக்களான மனுஷ்ய வர்க்கத்தோடு
வாசி அற சகல சேதனரும்

வெறி கொள் பூம் துளவ மாலை விண்ணவர் கோனை ஏத்த –
பரிமளத்தையும் -செவ்வியையும் உடைத்தான
திருத் துழாய் மாலையாலே
அலங்கர்த்யனாய் இருக்கும் இருப்புக்கு தோற்று நித்ய சூரிகள்
ஏத்துமா போலே
இவர்களையும் ஏத்த வாய்த்து கண்டது –
ஸ்ர்ஷ்டத்வம் வனவாசாயா -என்று இளைய பெருமாளைப் போலே
சம்சாரிகளையும் முதலிலே ஸ்ர்ஷ்டித்தது தன்னை அனுபவிக்கைக்காக வாய்த்து –

இது ஜ்ஞானப் பிரதானர் பெரும் பேறாய் இருந்தது –
அத்தனை அறிவில்லாத சூத்திர சம்சாரிகளுக்கு கிட்டுமோ
என்னும் சங்கையில் மேல் சொல்லுகிறது –
அறிவிலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில்
மனுஷ்ய ஜன்மத்திலே பிறந்து வைத்து
அறிவின்றிக்கே இருந்தார்களே யாகிலும்
திருவரங்க பிராவண்யம் வேண்டா
உக்தி மாத்ரமே அமையும் –
ஆகில் –
என்றது -பாப பிரசுரர்க்கு இது தானும் சித்தியாது -என்கை

பொறியில் வாழும் நரகம்-
இந்த்ரியங்களுக்கு குடி மக்களாய் வர்த்திக்கிற லீலா விபூதி –
எல்லா அவஸ்தையிலும் தப்பாத படி தன கக்களிலே
அகப்படுத்திக் கொள்ள வற்று ஆகையாலே
பொறி -என்று இந்த்ரியங்களை சொல்லுகிறது
நரகம் –
அவிவிவேகிகளுக்கு நரகம் யமனுடைய தண்டல்
அறிவுடையார்க்கு நரகம் –சம்சாரம்
நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் -என்னக் கடவது இ றே

எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே –
லீலா விபூதி கட்டடங்க தரிசாய்ப் போம் இ றே –

————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திரு மாலை-12-நமனும் முற்கலனும் பேச -பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

December 3, 2013

வாயாலே திரு நாமத்தைச் சொல்ல சொன்னீர் –
எங்கள் பாபத்தாலே பஹூ ஜல்பம் பண்ண ஷமர் ஆகா நின்றோம் –
திரு நாமம் சொல்ல சக்தர் ஆகிறிலோம் -என்ன
ஆகில் சரவண மாத்ரத்திலே திரு நாமம் உத்தாரகம் -என்று
உத்கலோபாக்யான முகத்தாலே சொல்லி
இப்படிப் பட்ட பிரபாபத்தை உடையவனூர்கோயில் -என்று
உஜ்ஜீவிக்கலாய் இருக்க
துக்க பாவிகள் ஆவதே -என்று இவர்கள் அனர்த்தத்தை பொறுக்க மாட்டு கிறிலேன் –
என்கிறார் –

————————————————————————————————————————————————–

நமனும்  முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க
நரகமே சுவர்க்கமாகும் நாமங்கள் உடைய நம்பி
அவனதுஊர் அரங்கம் என்னா அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்
கவலையுள் படுகின்றார் என்று அதனுக்கே கவர்கின்றேனே

—————————————————————————————————————————————

நமனும் முற்கலனும் பேச –
பண்டு முத்கலன் என்பான் ஒருவன் பாப பிரசுரனாய்
வர்த்திக்கிற நாளிலே -தேனுவை தானம் பண்ணுகிற சமயத்தில்
க்ர்ஷ்ணாய -என்று கொடுத்தான்
பின்பு அவனுடைய மரண தசையிலே யம படர் வந்து நெருக்கி யமன் பக்கலிலே கொண்டு செல்ல
யமன் தான் இவனை எதிர் கொண்டு சம்பாவிக்க
உன்னுடைய படர் என்னை நெருக்கிக் கொண்டு வர
நீ சம்பாவியா நின்றாய்
இதுக்கு ஹேது என் -என்ன –
உன்னுடைய பிரபாவம் அவர்கள் அறிந்திலர்
நீயும் அறிந்திலை –
ஒருக்கால் திரு நாமத்தைச் சொன்னாய் காண் -என்று அத்தை பிரசம்சிக்க –
இங்கனே -பிரசக்த அனுபிரசக்தமான -இத்தை -நரக அனுபவம் பண்ணுகிறவர்கள் கேட்ட அனந்தரம்
அவ்விடம் தானே பிராப்ய பூமியாய்த்து என்று
சொல்லிப் போருவது கதை உண்டு -அத்தை இங்கே சொல்லுகிறது –
நமனும் முத்கலனும் பேச –
உத்கல பகவான் சத்காரத்துக்கு ஹேது என்
யமன் முன்பே திருநாமம் சொன்னாய் காண் என்று சொன்ன இவ்வளவே யாய்த்து பிறந்தது –
யமன் தனக்கு பாவனமாக திரு நாமத்தைச் சொப்ன்னானும் அல்லன்
உத்கல பகவான் கேட்க அவனுக்கு உபதேசித்தானும் அல்லன் –
நாரகிகளை தன கை சலிக்க நலிந்து இவற்றுக்கு இனி போக்கடி இது என்று சொன்னானும் அல்லன் –
திரு நாமம் சொன்னான் ஒருவன்

கிந்த்வ்யா நார்ச்சிதோ தேவ கேசவ க்லேச நாசன -என்று
அவர்களை க்ரஹித்து சொன்னானும் அல்லன் –
நரகம் புக்கான் என்று தன பதத்துக்கு ஹானி வருகிறதோ என்று சொன்னான்-இத்தனை

நரகில் நின்றார்கள் கேட்க –
பாபம் பண்ணுகிற சமயத்திலே அனுதபித்து
மீண்டு பிராயச் சித்தம்பண்ணும் சமயத்தில் கேட்டாருமஅல்லர் –
பாபத்தின் உடைய பல அனுபவம் பண்ணுகிற சமயத்திலே யாய்த்து கேட்டது
அப்போது தானும் சமித்து பாணியாய் கேட்டாரும் அல்லர்
பிராசங்கிகமாக திரு நாமம் செவிப்பட்டது இத்தனை –
பாபம் பண்ணுகிற வேளையில் பிராசங்கிகமாகவும் ஒருவர் திரு நாமம் சொல்லுவார் இல்லையோ
அப்போது கேளாது ஒழிவான் என் என்னில்
அப்போது விஷய பிராவண்யத்தால் வந்த செருக்காலே செவிப் படாது
இப்போது துக்க அனுபவம் பண்ணுகிற அளவாய்
ஆரோ நல்வார்த்தை சொல்லுவார் என்னும் நசையாகையாலே செவிப்படுமே-
நரகமே சுவர்க்கமாகும் –
அந்த நரகம் தானே போக பூமியோடு ஒத்தது
மாறி நினைப்பிடும் இத்தனையே வேண்டுவது –
விபீண விதேயம் ஹி லங்கைச்வர்யம் இதம் கிர்தம் -என்கிறபடியே
ராவண சம்பந்தத்தாலே துஷ்ப்ரக்ர்திகளுக்கு ஸ்தானமான
இலங்கையை சாத்விகர்க்கு ஸ்தானம் ஆக்கிக் கொடுத்தாப் போலே –

இப்படி நரகம் தானே ஸ்வர்க்கம் ஆம்படி பண்ணுகிறான் நாமியோ -வென்னில் –
நாமங்கள்-
திரு நாம பிரபாவத்தாலே வந்தது ஆயத்து –
நாமங்கள் உடைய நம்பி –
இத் திரு நாமங்களை உடையவன் ஆகையாலே
புஷ்கலனாய் இருக்குமவன்
எல்லா நன்மைக்கும் தன்னைப் பற்றி பெற வேண்டி இருக்கும் அவனுக்கும்
ஏற்றத்தைப் பண்ணிக் கொடுக்க வற்றாய் யாய்த்து
திரு நாமம் இருப்பது –
தேவோ நாம சஹஸ்ரவான் -என்றும்
பேர் ஆயிரம் கொண்டதோர் பீடு உடையன் -என்றும் சொல்லக் கடவது இ றே –
நாரணன் தம்மன்னை நரகம் புகாள் –
நாராயண சப்த மாதரம் -என்னும் சொல்லக் கடவது இ றே –
அவனதுஊர் அரங்கம் என்னாது –
இப்படி பூரணன் ஆனவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
கோயில் என்னும் இவ்வளவு கிடீர் இவனுக்கு நேர்த்தி
நேர்த்தி அல்பமாய்
பலம் கனத்து இருக்கச் செய்தேயும்
இத்தைச் சொல்ல ஒட்டாத பாபத்தின் கனம் இருந்தபடி என் –
இப்படி திரு நாமம் சொல்வார் அருகு இருக்க லாகாது என்பாரும் –
அவர்களை நாட்டில் நின்றும் போகத் துரத்துவாரும்
திருநாமம் சொன்னதுவே ஹேதுவாக ஹிம்சிப்பாருமாய் இ றே
சம்சாரம் தான் இருப்பது –
ஒருவனுடைய அந்திம தசையிலே திரு மந்த்ரத்தை உபதேசித்து
இத்தை சொல்லாய் -என்ன -அவனும் –
ஆமாகில் சொல்லப் பார்க்கிறேன் -என்ற இத்தை
அநேகம் உருச் சொல்லி
அது தன்னைச் சொல்லாதே செத்துப் போனான்
இரண்டும் அஷரம் ஒத்து இருக்கச் செய்தேயும்
சொல்ல ஒட்டிற்றில்லை இறே பாப் பலம் —

அயர்த்து வீழ்ந்து –
வகுத்தவன் திரு நாமத்தை விஸ்மரித்து
விஷய ப்ரவணராய்க் கொண்டு -தலை கீழாக விழுந்து
மறந்தேன் உன்னை முன்னம் -என்றும்
யன் முஹூர்த்தம் ஷணம் வாபி -என்றும் -சொல்லக் கடவது இ றே –

அளிய மாந்தர்-
திருநாமம் சொல்லுகைக்கு யோக்யமான நாக்கு படைத்த
அருமந்த மனுஷ்யர் –
தாம் உளரே -என்கிற பாட்டையும்
ணா வாயில் உண்டே -என்கிற பாட்டையும்
சொல்லிக் கொள்வது –

கவலையுள் படுகின்றார் என்று –
துக்ககத்தே யகப்படுவதே -என்று –

அதனுக்கே கவர்கின்றேனே –
அதனுக்கே கிலேசப்படா நின்றேன் -என்கிறார்
சுக ரூபமான திரு நாம ஸ்பர்சத்தாலே
ஆநந்த நிர்பரராய் இருக்கைக்கு யோக்யமானவர்கள்
துக்க பாவிகள் ஆவதே -என்று இ றே இவர் கிலேசப்படுவது –
அவதாரணத்தாலே-
எனக்கு கரைதல்
எனக்கும் பிறர்க்கும் கரைதல்
செய்ய ஒண்ணாதபடி -சம்சாரிகள் துக்கம் எனக்கு ஆற்றப் போகிறது இல்லை -என்கிறார்
கவலை -துன்பம்

———————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திரு மாலை-11-ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து -பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

December 2, 2013

இப்படி சௌலப்ய காஷ்டையை சொல்லா நிற்கச் செய்தேயும்
அவிக்ர்தராய் இருக்கிற சம்சாரிகளைக் குறித்து
நான் ஆஸ்ரய ணீ யனாகச் சொன்ன சக்கரவர்த்தி திருமகன்
பிறபாடர்க்கு உதவுகைக்காக கண் வளர்ந்து அருளா நிற்க
பாஹ்ய ஹானியாலே -திரு நாமத்தைச் சொல்லி
பிழைக்க மாட்டாதே காலத்தை வ்யர்த்தமே போக்குகிறி கோளே
என்று இன்னாதாகிறார்-

——————————————————————————————————————————————-

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச்
செருவிலே யரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா
கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே

——————————————————————————————————————————————–

ஒரு வில்லால் –
கைக்கு எட்டிற்று ஒரு வில்லாலே யாய்த்து கடலை அடைத்தது
அதுக்கடி என் என்னில் –
சமுத்ரத்தை அர்த்தித்து வழி வேண்டிக் கிடந்த இடத்தில்
வந்து முகம் காட்டிற்று இல்லை –
சாபமாநய சௌமித்ரே -என்கிறபடியே
கொண்டு வா தக்கானை என்று கையிலே வில்லை வாங்கி
அவ்வில்லு எதிரிகள் பக்கல் தண்ணளி பண்ணினாலும்
பண்ணாத ஆசி விஷோபமான அம்புகளை விட்டார் –

ஓங்கு முந்நீர் –
கடலின் உடைய ஸ்வாபாவிக வேஷத்தை சொல்லுகிறது அன்று –
கையும் வில்லுமாக கண்ட வீர உறைப்பைக் கண்டு
கீழ் மண் கொண்டு மேல் மண் எறிந்து
கொந்தளித்த படியைச் சொல்கிறது –
இது தான் ஆர்த்திக்கு இரங்கும் அது அன்றே
அம்புக்கு இரங்கும் அது இ றே-
உபாத்யாயன் கையிலே கசைகண்டு சிறு பிரஜைகள் காலிலே விழுமா போலே
திருவடிகளில் அளவும் வந்து வெள்ளம் கோத்தது ஆய்த்து –
சமுத்ரச்ய தத க்ருத்தோராமோ ரக்தாந்த லோசன -எண்ணக் கடவது இ றே –

அடைத்து –
நாலிரண்டு அம்பு விட்டவாறே முகம் காட்டி முதுகு எடுத்து கொடுத்தவாறே
அதன் மேலே யாய்த்து ஆணை காட்டிற்று –
ஆகையால் கல்லால் அன்று அடைத்தது -வில்லால் என்கை-
இங்கன் அன்றாகில் விட்ட விட்ட மலைகள் எல்லாம் ஆழ்ந்து போய் அடைத்ததாய் தலைக் கட்டாது –

உலகங்கள் உய்யச் –
பாதாளம் பூமி அந்தரிஷ ஸ்வர்க்கம் –இவ் உலகங்கள் உய்ய –
ராவணன் உடைய பாஹூ பலத்தாலே இவ் உலகங்கள்
எல்லாம் அழிந்து இ றே கிடந்தது –
நயஷ்டவ்யம் நதாதவ்யம் நபோக்தவ்யம் கதஞ்சன -என்று
யஞ்ஞாதிகளையும் விலக்கியும்
அம்பாளே இந்த்ராதிகளை ஜெயித்தும்
பஹூ முகமாக நலிந்தான் –
இவனை அழித்த பின்பு யாய்த்து லோகங்கள் ஜீவித்தது –
அன்றிக்கே –
சே துந்த்ர்ஷ்ட்வா சமுத்ரச்ய -என்கிறபடியே
அசுத்தரானவர்களும் அத்தை தர்சித்து சுத்தராம்படி அடைத்து
என்று கீழே யோஜிக்க்கவுமாம் –

செருவிலே –
மாயாம்ர்கத்தைக் காட்டி ராஜ புத்ரர்களை அகற்றி
திறந்து கிடந்த வாசலிலே நாய் புகுருமா போலே
தனி இருப்பிலே வந்து பிரித்த கோழைப் பையலைப் போலே
அன்றியே
பத்தும் பத்தாக யுத்தத்திலே –

யரக்கர் கோனைச் –
நான் ராஜச ராஜன் என்று தன பரிகரத்தைப் பார்த்து அபிமானித்து இருந்த வனை
தானே அதிக்கிரமம் பண்ணும் அளவு அன்றியே
துர் வர்க்கத்துக்கு அடைய ஒதுங்க நிழலாய் இருந்தவனை –

செற்ற –
அவன் கண் முகப்பே பரிகர பூதரை அழித்து
பிரஜைகளை அழித்து
தன் தலை தரையிலே புரள கண்ணாலே காண்பார் இல்லையாம் படி இருக்க
தானே காணும்படி ஒரோ தலையாக அறுத்து இ றே அழியச் செய்தது –
கச்சா நுஜா நாமி –

நம் சேவகனார் –
ஈச்வரத்தாலே -சேவகனார் -என்கிறார் அல்லர் -சேவக வாசி யாலே –
அதாகிறது -கை இலக்கைக்கு சேவிக்கும் அவன் -என்கை –
அதாகிறது ஓர் அஞ்சலிக்கும் தான் உள்ளதனையும்

இவனை சேவிக்கும் -என்கை –
தாய்த்தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் இ றே
அநந்ய கதியான நம் விரோதி வர்க்கத்தை
பிறாட்டியோடே சம்ச்லேஷ விரோதியைப் போக்கினால் போலே
போக்கும் ஆண் பிள்ளை -என்னுதல் –
எல்லார்க்கும் தஞ்சமான பிராட்டிக்கு உதவுகையாலே நமக்கு உதவினான் என்று
எல்லார்க்கும் சொல்லலாம் படி இருக்கையாலே -நம் சேவகனார் -என்னுதல் –
நஞ்சீயர் இப்பாட்டைக் கேட்டவன்று தம்மிலே அனுசந்திதுப் போகா நிற்க
ஒரு சேவகனும் ஸ்திரீயும் விவாதம் பண்ணின அளவிலே
அவனுக்கு இவள் சொன்ன வார்த்தையை கேட்டு
வித்தரான வார்த்தையை அனுசந்திக்கிறது
அதாகிறது
பிணங்கின அளவிலே உன்னால் என் செய்யலாம்
ஏழைக்கும் பேதைக்கும் அன்றோ -சாமந்தனார் -ராஜா -பத்திரம் காட்டிற்று என்றால் –

பட்டரை ஆஸ்ரயித்த சோழ சிகாமணி பல்லவ ராயர்க்கு
ராம லஷ்மண குப்தாஸா – என்கிற ஸ்லோகத்தை அருளிச் செய்து
கடல்கரையில் வெளியை நினைத்து இருக்கும் என்றத்தை அனுசந்திப்பது
அத்தைக் கூடக் கேட்ட நஞ்சீயரும்-பிள்ளை விழுப்பரையரும்-
நம்பி ஸ்ரீ கோவர்த்தன தாசருமாக இதுக்குச் சேர்ந்து இருந்தது என்று
இலை துணை மற்று என்நெஞ்சே – என்கிற பாட்டை அனுசந்தித்தார்கள்
ஆக
அநந்ய கைதிகளான நமக்குத் தஞ்சம் சக்கரவர்த்தி திருமகன் -என்கை

சேவகனார் மருவிய பெரிய கோயில் –
ராவண வதம் பண்ணி வினையற்ற பின்பும்
அவதாரத்தில் பிற்பாடர்க்கு உதவுகைக்காக வாய்த்து கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறது –
ரேபாந்தமாகச் சொல்லிற்று பூஜ்ய வாசி யன்று
சேவகத்தில் உறைப்பைச் சொல்லிற்று

மருவிய –
திரு உள்ளம் பொருந்தி நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
பர வியூகங்களில் காட்டில் கோயிலில் பொருத்தம் சொல்லுகிறது

பெரிய கோயில்
கோயிலில் பரப்பை நினைக்கிறது அன்று
ராஜா இன்ன இடத்தில் இருந்து நினைப்பிட்டான் என்றால்
பின்னை அவன் தன்னாலும் மாற்ற
நினைப்பிட ஒண்ணாத தேச கௌரவத்தைப் பற்றி சொல்கிறது
அதாகிறது
சம்சாரிகள் கார்யம் வீடு அறுக்கை இ றே
தேசோயம் சர்வ காமதுக் -என்றும்
விஷ்ணோர் ஆயதனம் யயௌ-என்றும் -சொல்லக் கடவது இ றே –
மதிள் திருவரங்கம்-
கண் வளர்ந்து அருளுகிறவருடைய சௌகுமார்யத்தைக் கண்டு
அஞ்ச வேண்டாதபடி மதிளை உடைத்தாய் இருக்கை –
இவ் வஸ்துவின் சீர்மை அறிந்து இருக்கும் திரு மங்கை ஆழ்வார் போல்வார் இட்ட மதிள் இ றே

என்னா-
உடம்பு நோவ வேண்டா
ஒரு உக்தி மாத்ரமே அமையும்
அவருடைய குண செஷ்டிதங்களைப் பற்றின திரு நாமம் வேண்டா
தேச ஸ்பர்சியான திரு நாமமே அமையும் –
கருவிலே திரு விலாதீர்-
ஸூ கரமாய் இருக்க நீங்கள் அநாதரிக்கிறது-
கர்ப்பத்திலும் பகவத் கடாஷம் இல்லாமை இ றே –
ஜாயமானம் ஹி புருஷம் யம்பச்யேன் மது சூதன -என்கிறபடியே-

கர்ப்ப வாச சமயத்திலே தய நீயதையைக் கண்டு குளிர நோக்குவது ஒரு நோக்கு உண்டு –
அது இவனது பகவத் பிராவண்யம் ஆகிற சம்பத்துக்கு அடி –
அதுவும் பெறாதவர்கள் ஆகாதே -நீங்கள் -என்கிறார்
கருவரங்கத்துத் கிடந்தாய் கை தொழுதேன் கண்டேன் -என்றும்
கரு கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் -என்றும் சொல்லக் கடவது இ றே-

காலத்தைக் கழிக்கின்றீரே –
விசித்ரா தேக சம்பத்தி ரீச்வராய நிவேதிதம் -என்று
பகவத் சமாஸ்ரயணாதிக்கு கண்ட காலத்தை வ்யர்த்தமே போக்குகிறிகோளே –
கால க்ரித பரிணாமம் இல்லாத தேசத்தில் நின்றும் இங்கே வந்து கிடக்க
நீங்கள் காலத்தை வ்யவர்த்தமே போக்குவதே –
நித்ய சூரிகள் நித்ய அனுபவம் பண்ணா நிற்க
அத்தை விட்டு உங்கள் அவசரம் பார்த்து கிடக்க
நீங்கள் காலத்தை வ்யர்த்தமே போக்குவதே
நித்ய சூரிகள் அனுபவம் உங்களுக்கும் வேண்டும் என்று
அது சாத்மிக்கைக்காக
இங்கே சிரமம் செய்கைக்கு வந்து கிடக்க
நீங்கள் அந்ய பரராய் திரிகிறிகோளே -என்கிறார் —

——————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .