ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற பகுதி
இருபத்தி ஐந்து முதல் முப்பதினான்கு வரை பத்து பாசுரங்கள் –
இவ்வளவு நன்மைகள் பெருமாள் செய்தும், ஆழ்வார், தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்றும்,
எல்லா கெட்ட குணங்களும் உள்ளனவே என்றும் சொல்லி, பெருமாளிடம் இருந்து விலகப் பார்க்கிறார்.
—————-
(‘மெய்யெற்கே மெய்யனாகும்’-15-)–26 தத்துவங்களில் உயரிய தத்துவமான பரமாத்மாவில் உள்ள
சந்தேகங்களை திருஅரங்கன் ஆழ்வாருக்கு தீர்த்து வைத்தான்.
(“சூதனாய் கள்வனாய்“-16-)–ஆழ்வாரின் நெஞ்சில் வந்து புகுந்து அவனிடத்தில் அன்பு வெள்ளம் பெருக வைத்தான்.
தனது கடினமான நெஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து, ஒரு யோக்கியதையும் இல்லாத தனக்கு
அவனது சேவையையும் அருளையும் கொடுத்தான்
(விரும்பி நின்று) பல காலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து அவனை தரிசிக்க வைத்து
கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்தான்
(‘இனித்திரை திவலை மோத “)நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து,
அதைக் கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்தான்.
(குடதிசை முடியை வைத்து‘) திருவரங்கனின் திரு அவயவங்களின் அழகும், அவைகளால் வந்த தேஜஸும்,
அடியவர்களுக்காகவே என்று ஆழ்வாரை மகிழ செய்தான்.
(“பாயும் நீர் அரங்கம் தன்னுள்“) திருவரங்கனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாமல் போனதால் இத்தனை காலம்
பகவத் அனுபவத்தை இழந்ததை சொல்லி ஆழ்வாரை கலங்க வைத்தான்.
(“பணிவினால் மனம் அது ஒன்றி“) வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களைக் கொண்டே
நாம் திருவரங்கனின் பெருமைகளை எளிதாக பேசமுடியும் என்றும்,
நாம் சிரமப்பட்டு புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து சொல்ல வேண்டியதில்லை என்றும் ஆழ்வாரை பாட வைத்தான்.
(பேசிற்றே பேசல் அல்லால்) சயனத் திருக்கோலத்தின் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து அதனை மறந்து
ஆழ்வாரை வாழ முடியாதபடிச் செய்தது.
(கங்கையில் புனிதமாய) சராணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று
ஆழ்வாரை உணரச்செய்து அவரை, சராணாகதிக்கு எம்பெருமான் தயார் செய்தான்.
(வெள்ளநீர் பரந்து பாயும்) இதுவரை, எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3),
தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14),
மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற
முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்தோம்.
இனி, தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை, எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று
ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட நான்காவது பகுதி.
இதனை நம் சம்பிரதாயத்தில் நைச்சானுசந்தானம் என்று கூறுவார்கள்.
மோக்ஷம்
எல்லா ஜீவாத்மாக்களுக்கும் தம் தம் கர்மாக்களை ஒழித்து பரமாத்மாவை அடைவதையே குறிக்கோளாக் கொண்டு
தினமும் ஓடிக்கொண்டு இருக்கின்றன. இறைவனை அடைவதே முக்தி என்றும் மோட்சம் என்றும் கூறுகிறோம்.
அதை அடைவதற்கு சிலவழிகள் பற்றி சுருக்கமாக,
கர்ம யோகம் (தவம் போன்ற நடவடிக்கைகள், சாஸ்திரம் நமக்கு விதிக்கும் கடமைகள்)
ஞான யோகம் (அறிவு மூலம் பரமாத்மாவை பற்றி மேலும் மேலும் தெரிந்து கொள்வது)
பக்தி யோகம் (பரமாத்மாவின் மேல் தூய்மையான அன்பு செலுத்துதல் )
இவற்றில் எதன் மூலமும் மோக்ஷம் அடையலாம் என்று கண்ணன் பகவத் கீதையில் சொன்ன
மூன்று ஸ்லோகங்களை இப்பொழுது காண்போம்.
முதலில், ஜனகன் முதலானோர் கர்மயோகத்தின் மூலம் மோக்ஷம் அடைந்தான் என்று கூறுகிறார் (3.20).
கர்மயோகத்தைவிட அதில் உள்ள ஞான பாகமே முக்கியம் என்றும்,
எல்லா கர்மங்களும், எல்லா சாதனங்களும் ஞானத்திலேயே முடிவு பெறுவதாக கண்ணன் சொல்கிறார். (4.33).
ஒரு பயனையும் எதிர்பாராத பக்தியினாலேயே தன்னை உண்மையாக அறியவும், பார்க்கவும், உட்புகவும் முடியும்
என்று கண்ணன் கூறுகிறார். (11.54).
இப்படி, மூன்று யோகங்களும் தனித்தனியே மோக்ஷத்தை அளிக்க வல்லன என்பதே ஆகும்.
மேலும் மூன்று யோகங்களில் ஒவ்வொன்றிலும் மற்ற இரண்டும் கலந்தே உள்ளன என்றும்
இந்த மூன்று யோகங்களிலும் ஒன்று பிரதானமான சாதனமாகவும்,
மற்ற இரண்டும் ஆதரவு சாதனங்களாவும் இருக்கும் என்றும் நம் ஆச்சார்யர்கள் கூறுவர்.
அப்படி இரண்டினை ஆதரவாக கொண்டு கொண்டு மூன்றாவதை சாதனமாக்கி மோக்ஷத்தை
அடைந்தவர்களுக்கு உதாரணங்களை பார்ப்போம்.
ஜனகர், ஞான யோகத்தையும், பக்தி யோகத்தையும் கொண்டு கர்ம யோகத்தை சாதனமாக்கி சாதித்தவர்.
ஜடபரதர், கர்ம யோகத்தையும், பக்தி யோகத்தையும் ஆதாரமாகக் கொண்டு ஞான யோகத்தை சாதனமாகக் கொண்டவர்.
பிரஹ்லாதன், கர்ம, ஞான யோகங்களை ஆதாரமாகக் கொண்டு பக்தி யோகத்தின் மூலம் மோக்ஷம் அடைந்தவர்.
இப்படி இந்த மூன்று யோகங்களுமே தனித்தனியாக மோக்ஷம் அளிக்க வல்லன.
கர்ம யோகம் மூலம் தொடங்கிய சில காலத்திலே ஞான யோகம் ஏற்படக் கூடியது.
ஞான யோகம் தொடங்கியவுடன் உணர்வது பரபக்தி.
கர்மயோகம் செய்வதால் உண்டாகும் பலன்கள் என்றும் வீணாவதில்லை.
அதாவது, ஒரு ஜீவாத்மா, கர்ம யோகம் செய்து, அது முடிவதற்கு முன்பே மரணம் அடைந்து விட்டால்,
அந்த கர்மயோகத்தின் பலன்கள், அந்த ஜீவாத்மாவை அதன் அடுத்த பிறவியில் வந்து அடையும்.
பொதுவாக, கர்ம, ஞான யோகங்கள் தொடங்கிய பின்னர் ஒரு ஜீவாத்மா பக்தி யோகம் அடைவது என்பது சாத்தியமாகிறது.
பக்தி யோகம் நமக்கு பிறக்காமல் இருப்பதற்கு தடையாக உள்ள விரோதிகள் நாம் செய்த பாவங்களே ஆகும்.
பற்பல பிறவிகளில் நாம் செய்த கர்ம, ஞான யோகங்கள், நம் பாவங்களை நீக்கி, நம்மை,
கண்ணனிடம் பக்தி உடையவர்கள் ஆக்கி, நாம் பக்தி யோகம் செய்ய உதவுகின்றன என்று நம் சாஸ்திர நூல்கள் தெரிவிக்கின்றன.
நாம், நான்கு யுகங்கள் உள்ளன என்றும்,
அவை கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம் என்றும் பார்த்து உள்ளோம்.
கர்ம, ஞான, பக்தி யோகங்களை பின்பற்ற வேண்டிய திறமைகளும், அவகாசமும், ஆயுளும், சூழ்நிலைகளும்
முதல் மூன்று யுகங்களுக்கு அதிகம் என்றும், கலியுகத்தில் அது கடினம் என்றும் சொல்வதை கேட்டு இருக்கிறோம்.
அதனால், நமக்காகவே, சரணாகதி என்ற மோக்ஷம் செல்லும் வழி உள்ளது என்பதையும் நாம் இங்கு நினைவில் கொள்ளலாம்.
அவன் மூலம், அவனை மட்டுமே அடைவது என்பது சரணாகதி என்று சுருக்கமாக கொள்ளலாம்.
அவன் திருவடிகளே சரணம் என்று வேறு எந்த வித உபாயமும் இன்றி அவனை அடைவது;
அப்படி அவனை அடைந்தபின், அவனை தவிர வேறு எதுவும் அவனிடம் வேண்டுவதில்லை என்பதே இதன் உட்கருத்து.
இவ்வாறு வேண்டுபவர்களை பகவத்லாபார்த்தி என்று கூறுவார்கள்.
இவ்வுலக இன்பங்களை வேண்டுபவர்கள் ஐஸ்வர்யார்த்தி என்றும்,
இவ்வுலக இன்பத்தைத்தாண்டி, பரமாத்மாவிடம் செல்லாமல் கைவல்யம் என்ற விருப்பத்தை வேண்டுபவர்கள் கைவல்யார்த்தி.
மோக்ஷம் என்பதை விரும்பாமல், கைவல்யம் என்பதை விரும்பும் சில ஜீவாத்மாக்கள் உள்ளன என்று நாம் பார்த்து உள்ளோம்.
அப்படி கைவல்யத்தை வேண்டுபவர்களுக்கு இந்த மூன்று யோகங்களுமே தனித்தனியே சாதனமாக கூடும் என்று
ஆளவந்தார் என்ற ஆச்சார்யர் அருளிச்செய்து உள்ளார்.
பரமாத்மா கைவல்யார்த்திகளுக்கும் அவனை வந்து அடைய, இறுதிவரை அந்த ஜீவாத்மாவிற்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்கிறார்.
தன்னுடைய இறுதி மூச்சின் போது, ஒரு கைவல்யார்த்திக்கு பரமாத்மாவை அனுபவிக்க வேண்டும் என்ற நினைப்பு ஏற்பட்டால்,
பரமாத்மா அந்த கைவல்யார்த்திக்கு மோக்ஷத்தை அளித்து விடுவார்.
இத்தனையும் அருளி செய்தவர் ஆளவந்தார் என்ற ஆச்சார்யர்.
வராக சரமச் ஸ்லோகத்தில் “நல்ல நிலையில் மனதும் உடலும் இருக்கும் போது (இளமைக்காலத்தில்) என்னை
ஒரு கணமேனும் மகாவிச்வாசத்துடன் ஒருவன் நினைப்பானாகில், அவன் வயதாகி உடல் தளர்ந்து மரக்கட்டையைப் போல்
ஸ்மரணை இன்றி கிடக்கும்போது நான் அவனைப்பற்றி நினைக்கிறேன்” என்று சொல்வதில்
இருந்து எந்த வழியில் சென்றாலும் இறுதி மூச்சின் போது அவனை நினைக்கவேண்டும் என்றும்,
நாமாக நினைக்கலாம், அல்லது அவன் நமக்காக நினைக்கிறான் என்றும் கொள்ளலாம்.
இனி, தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை, எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று
ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட நான்காவது பகுதி.
இந்த பகுதியில் ஆழ்வார் நாத்திகம் பேசுவதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால்,
ஆழ்வார் ஒரு நிலையை கடந்து மற்றொரு உயர்ந்த நிலையை பற்றி நமக்கு சொல்கிறார் என்றே எடுத்துகொள்ள வேண்டும்.
உதாரணமாக, ஆழ்வார் கர்ம, ஞான பக்தி யோகங்கள் தன்னிடம் இல்லை என்றும்,
முக்கரணங்களால் தான் அர்ச்சித்தது இல்லை என்றும் சொல்வது
எம்பெருமான் எல்லாம் தெரிந்தவர், எல்லாம் வல்லவர், எல்லாம் அவன் செயல், சர்வ சுதந்திரமாக செயல்படுபவர் என்றும்
எல்லாவற்றையும் முழுவதுமாக மனதில் கொண்டு, தான் அவனின் அடிமை என்றும்,
தன்னால் ஒன்றும் தனியாக இயங்க முடியாது என்றும், தன் முயற்சியால் ஒன்றும் நடக்கக்கூடாது என்றும்,
அவனே தனக்கு எல்லாம் அருள வேண்டும் என்ற ஒரு உயர்ந்த நிலையை மனதில் கொண்டு
இந்த பகுதியில் உள்ள 10 பாசுரங்களை பாடுகிறார் என்று கொள்ள வேண்டும். ,
————————-
அதில் உள்ள முதல் பாசுரத்தை, திருமாலையின் 25வது பாடலில் (குளித்து மூன்று அனலை)
ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை,
திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும்
சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட கர்ம, ஞான, பக்தி யோகங்கள் இல்லை என்றால்,
மற்றவர்கள் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரியபெருமாள் கேட்க,
அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த பாசுரம் போதெல்லாம் போது கொண்டு ( 26).
மனிதர்கள் செய்யக்கூடிய எந்த நற்செயல்களையும் ஆழ்வார் செய்யா விட்டாலும்,
பரமபதத்தில், அனந்தாழ்வான், கருடன், விஷ்வக்சேனர் மூலம் ஏற்றுக்கொள்ளும் சேவைகளை,
விலங்குகளைக்கொண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பி, எம்பெருமான் ராமனாக அவதரித்த காலத்தில்,
குரங்குகளும், அணில்களும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல்,
ஆழ்வாரும் ஏதாவது செய்யலாமே என்று பெரியபெருமாள் வினவ,
அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுப்பது போல் அமைந்துள்ள உள்ள பாசுரம் குரங்குகள் மலையை நூக்க (27).
குளித்து மூன்று அனலை (25) பாசுரத்தில் மனம், வாய் மற்றும் கை போன்றவைகளைக் கொண்டு
சிந்தித்து, பாடி, மலர்களை தூவி, என்ற மூன்று விதமான செயல்களையும் சேர்ந்து செய்து இருக்கிறீர்களா
என்று எம்பெருமான் கேட்டதாகவும்,
அடுத்த பாசுரமான, போதெல்லாம் போது கொண்டு(26) பாடலில், வாயினால் பாடி என்பதை மட்டும் தனியாக கேட்டதாகவும்,
அடுத்த பாசுரமான குரங்குகள் மலையை நூக்க (27) பாடலில், கை கால் போன்றவற்றைக் கொண்டு
சேவை செய்து இருக்கிறீர்களா என்றும்,
உம்பரால் அறியலாக (28) பாடலில், மனதினால் சிந்தித்து இருக்கிறீர்களா என்பதை தனியாக கேட்பதாகவும் கொள்ளலாம்.
————-
குளித்து மூன்று அனலை ஓம்பும், குறிகொள் அந்தணமை தன்னை,
ஒளித்திட்டேன் என் கண் இல்லை, நின் கணும் பத்தன் அல்லேன்,
களிப்பது என் கொண்டு நம்பீ, கடல் வண்ணா, கதறுகின்றேன்,
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய், அரங்க மா நகருளானே (திருமாலை 25)
ஆழ்வார், பிராம்மணன் என்ற குலத்தில் பிறந்திருந்தும்,
அது கர்மயோகம் செய்வதற்கு தரும் தகுதிகளை தான் இழந்துவிட்டதாகவும்,
தனக்கு ஆத்ம ஞானம் இல்லை என்றும்,
தான் பரமாத்மாவிடம் உண்மையான பக்தி உடையவன் இல்லை என்றும்
அதனால், தான் மகிழ்வதற்கு ஒரு காரணமும் இல்லையே என்று கதறுகிறார்.
அரங்கன் தனக்குத் தகுதி முதல் தொடங்கி எல்லாவற்றையும் அருள வேண்டும் என்று இந்த பாசுரத்தில் வேண்டுகிறார்.
இதற்கு முன் உள்ள பத்து பாசுரங்களில் எம்பெருமான் தனக்கு செய்த பேருதவிகளை சொன்னார்.
சென்ற பாசுரத்தில், தனக்குள்ள பக்தி கள்ளத் தனமானது என்றார்.
இந்த உடலோடு சம்பந்தம் நீங்கி, பரமபதம் அடைந்து நித்யமும் அவனை அனுபவிக்க தனக்கு ஒரு சாதனமும் இல்லை,
அதனால் இந்த பகவத்விஷயத்தை இழந்து விடுவோமோ என்று ஆழ்வார் தவிக்கிறார்.
இதைக் கண்ட பெரியபெருமாள், பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர் இவர்கள் பின்பற்ற வேண்டிய
கர்ம, ஞான பக்தி வழிமுறைகள் சாஸ்திரங்களில் உள்ளன என்றும்,
மற்றவர்கள், விலங்குகள் எல்லாவற்றிக்கும் வழிமுறைகளான சரணாகதி, திருநாம சங்கீர்த்தனம்
போன்றவைகளும் உள்ளனவே என்றும் ஆழ்வாரிடம் கூறுகிறார்.
இந்த உபாயங்களை பின்பற்ற தனக்கு தகுதி தொடங்கி ஒன்றும் இல்லை என்றும்
தம்மிடம் கர்ம, ஞான பக்தி யோகங்களில் எதுவும் இல்லை என்றும் இந்த பாடலில் ஆழ்வார் கூறுகிறார்.
இதற்கு முன் பாசுரங்களில் தனக்கு பக்தி மற்றும் ஞானம் இருப்பதாக ஆழ்வார் சொன்னது,
எம்பெருமானை இந்த உலகில் அவனை அனுபவிக்க அவன் அருளியவையே தவிர,
அவை பரமபதம் சென்று அவனை அனுபவிக்கவல்ல சாதனம் அல்ல என்றும் கூறுகிறார்.
குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை
குளித்து-ப்ராஹ்மணனாக பிறந்தவன் மூன்று விதமான குளியல் செய்யவேண்டும் என்றும் ,
மூன்று அக்னிகளை வளர்க்க வேண்டும், என்றும் வேதசாஸ்திரங்கள் சொல்லும் எதையும் பிறந்த நாளில் இருந்து
தாம் செய்ததில்லை என்று ஆழ்வார் கூறுகிறார்.
மூன்று விதமான குளியல் என்பது, தினமும் மூன்று வேளைகளில் செய்யும் ஸ்னானம்,
கிரஹண காலங்களில் செய்யும் ஸ்னானம்,
மற்றும் பிராயச்சித்தம் செய்யும் முன் செய்ய வேண்டிய ஸ்னானம் ஆகும்.
இந்த மூன்று விதமான ஸ்னானங்களில் ஒன்றை செய்து மற்றதை செய்யாமல் இருக்க முடியாது.
இவை அனைத்தும் பலவித கர்மங்களை செய்வதற்கான தகுதியை கொடுக்கும். (கர்ம யோகத்திற்கான தகுதி).
ஆழ்வார் சாஸ்திரங்கள் சொல்லும் கர்மங்களை பின்பற்றுவது ஒருபுறம் இருக்க அவைகளுக்கு உண்டான தகுதியை கொடுக்கும்
குளிப்பது போன்ற செயல்களை பின்பற்றுவதே ஒரு அரியதான செயலாக உள்ளது என்கிறார்.
ஸ்னானம் போன்று உயரிய சொற்களை சொல்வதற்கும் தகுதி இல்லை என்பதை தெரிவிக்கவே
ஸ்னானம் என்று சொல்லாமல் குளித்து என்று ஆழ்வார் சொல்கிறார்.
மூன்று அனலை ஓம்பும்
சாஸ்திரம் மூன்று அக்னிகளை ஆராதிக்க வேண்டும் என்று சொல்கின்றது.
இங்கும் ஆழ்வார் அக்னி என்ற உயர்ந்த வார்த்தையை கூறாமல், அனல் என்ற சாதாரணமான வார்த்தையை கையாள்கிறார்.
இப்படி ஆழ்வார் அனல், குளித்து என்று சாதாரண நடைமுறை வார்தைகளை சொல்வது,
அவர் தூய்மையான வார்த்தைகள் கூட அறிந்தவர் அல்லர் என்பதை எம்பெருமானுக்கு தெரிவிக்கவே ஆகும்.
ஒரு அனலை ஆராதிப்பதே அரிது ஏனெனில், போதும் என்ற நிலை எதற்கு கிடையாதோ அதற்கு அனல் என்று அர்த்தம்.
அதாவது எவ்வளவு ஆராதித்தாலும் போதாது, மேலும் மேலும் ஆராதிக்க வேண்டும் என்ற தன்மை உள்ள
ஒரு அனலை ஆராதிப்பதே அரிது என்று ஆழ்வார் சொல்கிறார்.
அதுவும் மூன்று அனல்களை ஒரு அந்தணன் ஆராதிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்வதை பின்பற்றுவது
மிக கடினம் என்பது ஆழ்வார் வார்த்தைகளால் தெரிகிறது. குழந்தைக்கு சோறும் நீரும் கட்டிக்கொண்டு
செல்லும் தாயை போல் அந்தணன் அனலை ஆராதிக்க உமியும் சமித்தும் (தீயில் இட குச்சிகள்)
சுமந்து கொண்டு எப்பொழுதும் திரிய வேண்டி உள்ளது என்கிறார்.
குறிகொள் அந்தணமை
உச்சரிக்கும் மந்திரத்தின் பலன் கிடைக்க மிகவும் ஜாக்கிரதையாக செயல் படுத்தவேண்டியது
அந்தண்மை என்ற ப்ராஹ்மண்யம். இதில்
மந்திரங்களை உச்சரிப்பதில் தவறு செய்வது,
மந்திரங்களை சொல்லும்போது செய்யும் செயல்களில் தவறு செய்வது,
பயன்படுத்தும் பொருள்களில் அளவு மற்றும் குணத்தில் உள்ள குறை,
செய்ய வேண்டிய காலத்தில் உண்டான மாற்றத்தினால் ஏற்படும் குறை,
ஆராதிக்கப்படும் தேவதையை மாற்றுவதால் உண்டான குறை
என்று ஏதாவது ஒன்றில் குறை ஏற்பட்டாலும் மந்திரத்தின் பலன் கிடைக்காமல் போகும்.
இது அஞ்சலி செய்தால் மன்னிப்பது போன்று எளிமையான ஒன்று அல்ல என்பதால்
இதனை பின்பற்றுவதும் ஆழ்வாருக்கு சிரமம் என்று அவர் கூறுவது தெரியவரும்.
தன்னை ஒளித்திட்டேன்
அப்படிப்பட்ட ப்ராஹ்மண்யம் தன்னிடம் இல்லை என்பதை ஒளித்திட்டேன் என்று கூறும் ஆழ்வார்,
இவரால் அந்த சமூகத்தில் உள்ள மற்றவர்க்கும் அவப்பெயர் உண்டாகும்படி தான் இருப்பதாகவும் கூறுகிறார்.
இதனால் ஆழ்வார் பெரியபெருமாளுக்கு தெரிவிக்கும் விஷயம் , கர்மயோகத்திற்கு தகுதியான ப்ராஹ்மண்யமே தன்னிடம் இல்லை,
அதனால் கர்மயோகம் என்பது தன்னிடம் ஏற்பட வழியே இல்லை என்பதே ஆகும்.
என் கண் இல்லை
கர்ம யோகம் ஏற்பட வழி இல்லை என்றால், ஞான யோகத்திற்கு முயற்சி செய்யலாமே என்று
பரமாத்மா -பெரியபெருமாள் ஆழ்வாரிடம் வினவிய போது, ஞான யோகத்திற்கு தகுதியான, தன்னை (ஜீவாத்மா / ஆத்மாவை)
பற்றிய உண்மையான அறிவு தன்னிடம் இல்லை என்பதை என்கண் இல்லை என்று ஆழ்வார் கூறுகிறார்.
தன்னிடம் ஞான யோகத்திற்கு தகுதி இல்லை என்பதால், தன்னிடம் ஞான யோகத்திற்கான வழியும் இல்லை என்று ஆழ்வார் கூறுகிறார்.
கர்மயோகம் இல்லை என்ற போதே அதனால் ஏற்படக்கூடிய ஞான யோகம் கிடையாது என்று ஆகிவிட்ட பிறகும்
ஆழ்வார் ஏன் மீண்டும் தனியாக ஞான யோகம் ‘என்கண் இல்லை‘ என்று சொல்ல வேண்டும் என்று
கேட்டுக் கொண்டு அதற்கான விளக்கத்தை உரையாசிரியர் கூறுகிறார்.
சென்ற பிறவியில் கர்மயோகம் செய்து அதனால் ஏற்படக்கூடிய ஞானயோகம் பிறப்பதற்கு முன்னால்
மரணம் ஏற்பட்டு அதனால் அடுத்த பிறவியின் ஆரம்பத்திலேயே ஞானயோகம் ஏற்பட்டு இருக்கலாம்
என்ற ஒரு சாத்திய கூற்றினையையும் ஆழ்வார் மறுக்கிறார்.
நின் கணும் பத்தன் அல்லேன்
கர்மயோகம், மற்றும் ஞானயோகம் இவற்றிற்கு தகுதி இல்லை என்றால் பக்தியோகம் செய்வது தானே
என்று பெரியபெருமாள் கேட்டபோது அதற்கு தகுதியான பரமாத்மாவின் மேல் அன்பு தனக்கு சிறிது கூட இல்லை
என்பதை நின் கணும் பக்தன் இல்லை என்று சொல்லி பக்தியோகத்திற்கும் வழி இல்லை என்று கூறுகிறார்.
முன்பு போல், கர்மயோகம் மற்றும் ஞான யோகம் இவை இரண்டும் இல்லை என்றால் அவற்றினால் ஏற்படும்
பக்தியோகம் இல்லை என்று தனியாக சொல்ல வேண்டுமோ எனில்,
பற்பல பிறவிகளில் கர்ம, ஞான யோகங்களை செய்தவர்களுக்கு, பக்தியோக ஆரம்ப விரோதிகளான
பாவங்கள் நீங்கப்பட்டு கண்ணனிடம் பக்தி உடையவர்கள் ஆவார்கள் என்று
நம் சாஸ்திர நூல்கள் தெரிவிக்கின்றன என்பதை முன்பு பார்த்தோம். ஆழ்வார் அதுவும் தனக்கு இல்லை என்கிறார்.
இந்த மூன்று யோகங்களுமே தனித்தனியாக மோக்ஷம் அளிக்க வல்லனவாகையால்,
ஆழ்வார் இந்த மூன்றுக்கும் தேவையான தகுதிகளே தன்னிடம் இல்லை என்பதை தனி தனியாக கூறி உள்ளார்.
மற்றவர்கள் கர்ம, ஞான பக்தி யோகங்கள் பற்றி
“குளித்து மூன்று அனலை ஓம்பும், குறிகொள் அந்தணமை தன்னை, ஒளித்திட்டேன் என் கண் இல்லை,
நின் கணும் பத்தன் அல்லேன் ” என்ற இந்த முதல் இரண்டு வரிகளால் தொண்டரடிப்பொடி ஆழ்வார்
தனக்கு கர்ம, ஞான பக்தி மார்க்கங்களில் ஒரு சிறிது தொடர்பும் இல்லை என்று கூறுகிறார்.
இனி மற்ற ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
சுவாமி நம்மாழ்வார், “நோற்ற நோன்பிலேன், நுண்ணறிவிலேன் ” (திருவாய்மொழி 5.7.1) என்பது
கர்மயோகமும், ஞான யோகமும் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாக தெரிகிறது.
“கறவைகள் பின் சென்று” என்ற திருப்பாவை (28) பாசுரத்தில் ஆண்டாள்
“அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம்” என்று சொல்வதை,
‘அறிவு இல்லாத”, “அறிவு ஒன்று இல்லாத ” மற்றும் “அறிவு ஒன்றும் இல்லாத” என்ற பிரித்து
கர்ம,ஞான மற்றும் பக்தி மார்க்கங்கள் ஒன்றும் தனக்கு இல்லை என்பதை சுருக்கமாக சொல்லி உள்ளார்.
ஆளவந்தார் என்ற ஆச்சாரியார் தன்னுடைய ஸ்தோத்திர ரத்தினம் என்ற நூலில் (22) ஸ்லோகத்தில்
‘ந தர்ம நிஷ்டோஸ்மி, நசாத்மவேதி, ந பக்திமான்” என்று சொல்வதின் மூலம்
‘கர்மயோகத்தில் நிலை நின்றவன் இல்லேன், ஆத்ம ஞானமும் உடையவன் இல்லேன்,
உன்னுடைய திருவடித்தாமரைகளில் சிறிதும் பக்தி உடையவன் இல்லேன்’ என்று சொல்லி,
ஒரு சாதனமும் இல்லை, உன்னுடைய திருவடித் தாமரைகளே சாதனம் என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.
சரணாகதிக்கு தன்னிடம் ஒரு சாதனமும் இல்லை என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொன்னது போலவே
தன்னிடம் கைமுதல் ஒன்றும் இல்லை அல்லது ஆகிஞ்சன்யம் என்ற வைஷ்ணவ தத்துவத்தை விளக்குகிறார்.
களிப்பது என் கொண்டு
சரணாகதிக்கு தன்னிடம் ஒரு சாதனமும் இல்லை என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொன்னதற்கு பெரியபெருமாள்,
அறிவாளிகள் செய்வதுபோல், ஒரு சாதனமும் இல்லை என்ற வெறுமையை, ஆகிஞ்சன்யத்தை, சொல்வதும் மிகவும் அரிது,
அப்படி ஆழ்வார் சொன்னபடியால், தம்மை அடைவதில் ஒன்றும் குறை இல்லையே என்று சொன்னார்.
அதற்கு ஆழ்வார், தன்னிடம் கர்ம, ஞான பக்தி யோகங்கள், இல்லையே என்ற வருத்தமும் இல்லை,
கீதையில் (18.66) ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ ‘ என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவனையே பற்றும்படி
சொன்னதற்கும் தன்னிடம் உள்ள ஆகிஞ்சன்யமும் ஒரு அனுதாபமும் இல்லாத ஒன்றாக இருப்பதால்,
தான் எதை கொண்டு ஆனந்தப்படுவது என்று கலங்குகிறார்.
நம்பீ
அப்படியானால் ஆழ்வாரை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை என்று பெரியபெருமாள் உரைத்தபோது,
ஆழ்வார், தன்னிடம் ஒன்றும் இல்லை என்றாலும், அவனிடம் எல்லா கல்யாண குணங்களும் இருக்கின்றன என்றும்
அவற்றைக்கொண்டு தனக்கு பேற்றை அருளலாமே என்று ஆழ்வார் வேண்டுகிறார்.
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்குலத்தில் என்று சொன்ன பிறகு,
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா என்று ஆண்டாள் திருப்பாவை (28) பாசுரத்தில் சொன்னாற்போல்,
எம்பெருமானின் குண பூர்த்தியை, நம்பீ என்று தன்னுடைய வெறுமையை சொன்னபின் தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்கிறார்.
கடல்வண்ணா
அவனுடைய உயர்ந்த, சீலம் போன்ற குணநலன்கள் தேவையில்லை என்றும்
அவனுடைய வடிவழகே தனக்கு பரமபதம் அளிக்க போதும் என்பதை கடல்வண்ணா என்பதால் ஆழ்வார் தெரிவிக்கின்றார்.
கம்பராமாயணம் யுத்த காண்டம், (6718) பாடலில்,
“கருணையங்கடல் கிடந்தனன் கருங்கடல் நோக்கி ” என்று சொல்லி, ஒரு கடலோடு மற்றொரு கடல் போட்டி போட்டு
சாய்ந்தாற்போல் பெரியபெருமாள் சயனித்து இருப்பது என்கிறார்.
ஐயப்பாடு அறுத்து தோன்றும் அழகன், (15), என்றும்
ஆதரம் பெருக வைத்த அழகன் (16) என்றும் பாடிய ஆழ்வார் தனக்கு சரணாகதி அளிக்கும் பெரிய பெருமாளுக்கு
வடிவழகும் குணங்களும் குறைவின்றி இருப்பதால் தான் இழக்க வேண்டியது இல்லை என்பதை சொல்வதாக பொருள்.
கதறுகின்றேன்
ஆழ்வார் இந்த கதறுகின்றேன் என்பதன் மூலம் பல கருத்துக்களைத் தெரிவிக்கின்றார்
தன்னிடம் கர்ம ஞான பக்தி மார்கங்களுக்கு தேவையான தகுதிகள் இல்லாது இருப்பதும்,
பெரியபெருமாளுக்கு குணங்களும், வடிவழகும் நிறைந்து இருப்பது தெரிந்தும்,
கர்ம ஞான பக்தி யோகங்களில் நின்றவர்கள் தங்களுக்கு பலன் கிடைக்காத போது
கதறுகின்ற மாதிரி கேட்பவர்கள் காதுகளுக்கு கர்ணகொடூரமாக சப்தம் செய்வதாகவும்,
சிறிய பக்தி செய்பவர்களுக்குக்கூட கருணை காட்டும் எம்பெருமான் ஆழ்வாருக்கு கருணை காட்ட வில்லையே என்று
பெரியபெருமாளுக்கு அவப்பெயர் அல்லது தாழ்வு வருமாறு செய்து விட்டதாகவும்,
தான் எம்பெருமானுக்கு பல்லாண்டு மட்டுமே பாடி இருக்க வேண்டும் என்றும் பல கருத்துக்களை
இந்த கதறுகின்றேன் என்பதன் மூலம் தெரிவிக்கின்றார்.
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய்
ஆழ்வார் பெரியபெருமாளிடம், தனக்கு அவரிடம் அனுதாபம் முதல் எல்லாம் பிறக்க அருள் செய்யவேண்டும் என்பதை
‘அளித்து‘ என்பதால் தெரிவிக்கின்றார்.
அதற்கான கருணை அவனிடம் இருப்பதால் அவன் அருள் பொழிய வேண்டும் என்று ஆழ்வார் வேண்டுகிறார்.
அரங்க மா நகருளானே
தான் ஏன் ஆழ்வாருக்கு, தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் என்று பெரியபெருமாள் கேட்டதற்கு,
குறையற்றவர்களை மட்டும் அருள்வது என்று இருந்தால் அவன் பரமபதத்தில், முக்தர்களையும் நித்யர்களையும்
அருள் செய்து கொண்டு அங்கேயே இருந்து இருக்கலாம்,
திருவரங்கத்திற்கு வந்து சயனித்து இருக்கும் கிடையழகையும், சீல குணங்களையும் காட்டுவது,
தன் போன்றவர்களுக்கு அருள் பாலிக்கவே என்று சொல்லி, ஆழ்வார் இந்த பாசுரத்தை நிறைவு செய்கிறார்.
———-
ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை,
திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் கேட்டு கொண்டதைப் பார்த்தோம்.
ப்ராமண, க்ஷத்ரிய, வைஸ்யர்களுக்கான கர்ம, ஞான, பக்தி யோகங்கள் இல்லை என்றால்,
மற்றவர்கள் செய்யக் கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரிய பெருமாள் கேட்க,
அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த பாசுரம்.
பூக்களைக் கொண்டு அவனை அலங்கரிப்பது, வாக்கினால் அவனுடைய ஸ்தோத்திரங்களைச் சொல்வது,
மனதினால் அவனை நினைப்பது என்று இந்த பாடலில் சொல்வது மூன்றும்,
எம்பெருமான் கேட்ட அர்ச்சனை, துதி ஆகும்.
போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன்,
தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்,
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே,
ஏதிலேன் அரங்கற்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே. திருமாலை 26
எல்லாக் காலங்களிலும் பூக்களை கொண்டு, அவனுடைய அழகிய திருவடிகளில் சமர்பிக்க சக்தி அற்று இருப்பதாகவும்,
குற்றமற்ற வார்த்தைகளைக் கொண்டு அவனின் நற்குணங்களை சொல்ல முடியாதவனாக இருப்பதாகவும்,
உண்மையான காதலினால் அவன் மீது வரும் அன்பை தன் நெஞ்சத்தில் சேர்க்கவில்லை என்றும் ஆழ்வார் சொல்லி,
தன்னுடைய ஒரு அவயத்தாலும் (உறுப்பினாலும்) திருவரங்கனை அனுபவிக்கவில்லை என்பதால்,
தான் ஏன் பிறந்தேன் என்று கதறுகிறார்.
இங்கு பூதத்தாழ்வார் பாடிய
“போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு, ஆங்கலர்ந்த,
போதரிந்து கொண்டேத்தும் போது,உள்ளம் – போது,
மணிவேங்கடவன் மலரடிக்கே செல்ல,
அணிவேங்கடவன் பேர் ஆய்ந்து. (இரண்டாம் திருவந்தாதி 72) பாசுரத்தை நினைவில் கொள்ளலாம்.
திருமலையில் உள்ள குரங்குகள், திருவேங்கடமுடையானுக்கு அதிகாலையில். முக்கரணங்களாலும் சேவை செய்கின்றன என்றும்
பூக்களை பறித்து சமர்பிக்கின்றன என்றும் ஆழ்வார் பாடுகிறார். பேர் ஆய்ந்து என்பது வாயினால் திருநாமங்களை சொல்வது.
ஏத்தும் போது,உள்ளம் என்பது மனத்தினால் ஸ்தோத்திரம் செய்வதை சொல்வது.
போது அரிந்து கொண்டு என்பது பூக்களை கைகளால் பறித்துக்கொண்டு வருவதை சொல்வது.
போதெல்லாம் போது கொண்டு
எல்லா காலத்திலும் சிவந்த பூக்களைக் கொண்டு பொன் போன்ற அவனுடைய திருவடிகளை அலங்கரிப்பதே சரியான ஒன்று,
அப்படி செய்வதில் தனக்கு ஊற்றம் இல்லை என்றும் அதற்கான சக்தியும் இல்லை என்று ஆழ்வார் சொல்கிறார்.
அவனைத் தவிர மற்ற விஷயங்களில் சக்தியும் ஊக்கமும் உள்ளன என்று கூறுவதாக கொள்ளலாம்.
முன்பு சொன்னது போல் விஷ்ணு தர்மத்தில், எந்த நாக்கு விஷ்ணுவின் பெயரை சொல்கிறதோ அதுவே நாக்கு
எந்த உடல் விஷ்ணுவைப் பணிகிறதோ அதுவே உடல், மற்றதெல்லாம் வீண் என்று சொன்னதை நினைவில் கொள்ளலாம்.
இந்த சொற்தொடரில்,
முதல் போது, என்பது காலத்தையும்,
இரண்டாவது போது என்பது பூக்களையும் குறிக்கின்றது.
போதெல்லாம் உன் பொன்னடி புனைய மாட்டேன்
எல்லா காலத்திலும் செய்ய முடியவில்லை, எப்போதாவது ஓரிரு முறை செய்ய முடியும் என்ற கருத்து இல்லை.
எந்த காலத்திலும் (ஒரு முறை கூட) அர்ச்சிக்க முடியாதவனாக, சக்தி இல்லாவதவனாக உள்ளேன் என்றே
ஆழ்வார் சொல்வதாக உரையாசிரியர் கூறுகிறார்.
ஹரி என்று இரண்டு எழுத்துகளை ஒரு முறை சொன்னாலே மோக்ஷம் செல்ல வேண்டிய அனைத்துக் காரியங்கள்
செய்யப்பட்டன என்று விஷ்ணு தர்மத்தில் (70.84) சொல்லப்பட்டது.
கோவிந்தா என்று ஒருமுறை நினைத்தால், நூற்றுக்கணக்கானப் பிறவிகளில் செய்த பாவக்கூட்டத்தை
நெருப்பு பஞ்சுமூட்டையை எரிப்பது போல் எரித்து விடுகிறான்.
ஒரு தடவை சரணம் அடைந்தவன் பொருட்டும், அவனுக்கு அடியேன் ஆகிறேன் என்று சொல்பவன் பொருட்டும்
அவர்களுக்கு முழுவதும் அபயமளிக்கிறேன் என்றும் அதுவே தன்னுடைய விரதம் எனறும்
இராமபிரான்(இராமாயணம், யுத்த காண்டம், 18-33) சொன்னதை நினைவில் கொள்ளவேண்டும்.
இப்படி, ஒரு காலத்தில்-ஒரு முறை அவனிடம் ஈடுபாடு கொண்டாலே, பலன் கொடுக்கவல்ல பெருமை உடையவன் அவன்.
அப்படிப்பட்டவனை ஒரு காலத்திலும் அர்ச்சிக்க சக்தி இல்லாவதன் ஆகிவிட்டேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.
பூக்களைக் கொண்டு சேவை செய்தவர்கள்
எம்பெருமானுக்கு பூக்களைக் கொண்டு செய்கின்ற சேவை, அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, ஏனென்றால்
விஷ்ணு அலங்காரப்ரியன், சிவன் அபிஷேகப்ரியன். கைங்கர்யத்தில் தவறு நிகழ வாய்ப்பு மிக குறைவாக உள்ளது.
அதனை செய்வது எளிதாகிறது. நம் சம்பிரதாயத்தில், இந்த கைங்கர்யத்தைப் பலர் செய்து உள்ளனர்.
பெரியாழ்வார், ஸ்ரீவில்லிபுத்தூரில் நந்தவனம் அமைத்து மலர்கள் பயிரிட்டு அவற்றை கொண்டு
வடபத்ரசாயிக்கு தொண்டு செய்து வந்தார் என்பது வரலாறு.
அதே நந்தவனத்தில் தான் ஆண்டாளையும் கண்டெடுத்து தன் மகளாக வளர்த்து வந்தார்.
பெரியாழ்வார் ‘ஆனிரை மேய்க்க‘ என்று யசோதை நிலையில் இருந்து எம்பெருமானுக்கு பலவிதமான
மலர்களை சூட்டி அழகு பார்த்ததை, பெரியாழ்வார் திருமொழியில் (2.7) அனுபவித்து பாடி உள்ளார்.
ஆண்டாள், திருமாலுக்கு பூமாலையோடு பாமாலையும் சூட்டி, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று ஆனாள்.
தூமலர் தூவித் தொழுது, நாவினால் பாடி, மனதினால் சிந்திக்க (திருப்பாவை 5) என்பதால்,
எம்பெருமானை முக்கரணங்களால் அர்ச்சிக்க வேண்டும் என்பதை எளிதாக எடுத்து சொன்னவர்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து கைங்கரியம் செய்து வந்தார் என்பதும்,
திருமங்கையாழ்வார் கோவிலுக்கு திருமதில் கட்டும்போது இந்த நந்தவனத்தை விட்டு
அதற்கு ஒரு தடையும் வராமல் காட்டினார் என்பதும் வரலாறு.
கண்ணன், கம்சனை அழிப்பதற்கு முன், மாலாக்காரன் என்ற அடியவன் கண்ணனுக்கு சிறந்த பூ மாலைகளை சூட்டி
அழகு பார்த்து அனுப்பி வைத்தான் என்பது பாகவதத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
ஸ்வாமி ராமானுஜரின் எண்ணத்திற்கு ஏற்ப திருமலையில் நந்தவனம் உருவாக்கி, அங்கே பூக்கும் பூக்களைக் கொண்டு
ஏழுமலையானுக்கு பல ஆண்டுகள் புஷ்ப கைங்கர்யம் செய்தவர் அனந்தாழ்வான் என்னும் ஆச்சாரியர்.
அவர் உபயோகித்த கடப்பாரை இன்றும், திருமலையில் காட்சிக்கு உள்ளது.
நம்மாழ்வார் புஷ்ப கைங்கர்யத்தைப் பற்றி பாடிய ‘மாலை நண்ணி தொழுது எழுமினோ‘ என்று பாடிய
திருக்கண்ணபுர பாசுரங்களையும் (9.10) இங்கே நினைவில் கொள்ளலாம்.
காலை மாலை கமல மலர் இட்டு என்றும்,
கள் அவிழும் மலர் இட்டு என்றும்,
விண்டு வாடா மலர் இட்டு என்றும்,
தேனை (உடைய) வாடா மலர் இட்டு என்றும், பாடியதை நாமும் அனுபவிக்கலாம்.
தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன்
இப்படி உடம்பினால் செய்யும் கைங்கர்யங்கள் செய்யாமல், மற்ற உலக விஷயங்களில் ஈடுபட்டாலும்,
குற்றமற்ற வாக்கினைக் கொண்டு எம்பெருமானின் திவ்ய குணங்களை சொல்வதே போதுமானது என்று
பெரியபெருமாள் சொல்லிய போது, ஆழ்வார் தன்னுடய வார்த்தைகள் குற்றமற்றவைகளாக இருந்த போதிலும்,
அவை அழகானவைகளாக இருந்த போதிலும், எம்பெருமானுடைய திருக்குணங்களை பேச இயலாதவனாக
இருக்கிறேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.
ஆழ்வார் விஷ்ணு தர்மத்தில் கூறியபடி எம்பெருமானை பற்றி பேச வேண்டிய நாக்கு,
மற்ற விஷயங்களை பேசும் போது நறுக்கு தெரித்தாற்போல் உள்ளது என்றும்
எம்பெருமான் விஷயத்தில் அதனால் இயலவில்லை என்றும் கூறுகிறார்.
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன்
உடம்பினாலும் வாக்கினாலும் சேவை செய்ய முடியாவிட்டாலும், நெஞ்சத்தைக் கொண்டு எம்பெருமானிடம்
அன்பு செல்லுத்தலாமே, என்று பெரியபெருமாள் வினவிய போது,
ஆழ்வார், இந்த விஷயத்தில், காதலால் வரும் அன்பு வரவில்லை என்று கூறுகிறார்.
விஷயங்கள் சேரும் போது, காமம் வருகிறது என்றும், காமத்தினால் கோபம் வருகிறது என்றும்
பகவத் கீதை (2.62) சொன்னபடி,
ஆழ்வார் தான் இதுவரை அனுபவித்த காதலும் உண்மையானது அல்ல என்றும்,
அவர்களின் பொருள்களை கவர்வதற்கே அப்படி செய்ததாகவும் சொல்கிறார்.
இங்கு உரையாசிரியர், ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னத்தின் -62வது ஸ்லோகத்தை எடுத்து கொள்கிறார்.
அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||
நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன்,
தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன்,
நிலை இல்லாத மனதை உடையவன்,
பொறாமையின் பிறப்பிடம்,
எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன்,
கைவிட வேண்டிய கர்வத்தை உடையவன்,
காமத்துக்கு வசப்பட்டவன்,
ஏமாற்றுபவன்,
க்ரூரமான செயல்களில் ஈடு பட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கி யுள்ளவன்.
நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக் கடலின் கரையை அடைந்து
உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்? என்று கூறுகிறார்.
அடுத்து, விஷ்ணு புராணத்தில் (3.7.30) இருந்து,
எவன் ஒருவன் கெட்டபுத்தியுடன், தன் உயிர் நண்பனுக்கும், சொந்தங்களுக்கும், மனைவிக்கும், பிள்ளைகளுக்கும்,
தாய் தந்தையருக்கும், வேலைக்காரர்களுக்கும் கெடுதல் நினைத்து, அவர்களின் செல்வங்களை கவர நினைக்கிறானோ
அவன் தன்னுடைய பக்தன் இல்லை என்று எம்பெருமான் சொல்வது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
அது தன்னாலே, ஏதிலேன்
மனம், வாக்கு, உடல் என்ற இந்த முக்கரணங்களாலும் அவனிடம் ஈடுபாடு கொண்டு பயன் பெரும் பெரியவர்கள்
போல் இல்லாமல் தன்னால், ஒரு கரணத்தால் கூட ஈடுபாடு கொள்ள முடியாதவானாக,
ஓன்றும் இல்லாதவனாக, இருப்பதாக ஆழ்வார் கூறுகிறார்.
ஏதிலேன் அரங்கற்கு
இங்கு மறுபடியும், ஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்னத்தின் 18 வது பாடலை எடுத்துக் கொண்டு
எம்பெருமான் எப்படி தன்னுடைய முக்கரணங்களால் அடியவர்கள் இடத்தில உண்மையாக உள்ளான் என்பதற்கு மேற்கோள் காட்டுகிறார்.
ஶ்லோகம் 18 –
ஆளவந்தார் இதில் “இப்படிப்பட்ட உபய விபூதி நாதனை நாம் எப்படி அணுகுவது?” என்ற தயக்கத்தைப் போக்க,
அவனுடைய அடியார்கள் ஈடுபடும் பன்னிரண்டு குணங்களை அருளிச் செய்கிறார்.
முன்பு பகவானின் ஸர்வேஶ்வரத்வத்தை அருளிய ஆளவந்தார்,
இப்பொழுது அவனுடைய பேசத் தகுந்த குணங்களை அருளிச் செய்கிறார்.
வஶீ வதாந்யோ குணவாந் ருஜுஶ் ஶுசிர்
ம்ருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் ஸம: |
க்ருதீ க்ருதஜ்ஞஸ்த்வமஸி ஸ்வபாவதஸ்
ஸமஸ்த கல்யாண குணாம்ருதோததி:||
இயற்கையாகவே எம்பெருமான் எல்லா கல்யாண குணங்களின் கடலாக இருப்பவன் என்பதை,
கீழ்கண்டவாறு ஒரு பட்டியல் இடுகிறார்.
நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன்.
உன் குணங்களாவன
1) உன் அடியார்களுக்கு வசப்பட்டவன்
2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌஶீல்யத்தை உடையவன்
4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரிசுத்தியை உடையவன்
6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
8) இனிமையானவன்
9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார் இந்த பாசுரத்தில் சொல்வது, இப்படி கஷ்டப்பட்டு சாஸ்திரங்களை படித்து தெரிய வேண்டாதபடி,
நேரடியாகவே சுலபமாக தெரிந்துகொள்ள சயன திருக்கோலத்தில், பள்ளி கொண்டுள்ள திருவரங்கன் இருக்கிறான் என்கிறார்.
இப்படிப்பட்ட பெரிய பெருமாளுக்கு ஒரு கரணத்தினால் கூட அர்ச்சனம் ஏதும் செய்யாமல்,
ஒன்றும் இல்லாதவன் ஆகிவிட்டேன் என்று புலம்புகிறார்.
எல்லே
எம்பெருமான் தன்னை அவனிடம் சேர்க்காததற்கு தன்னுடைய எந்த ஒரு குற்றமும் காரணம் இல்லை என்றும்,
தான் செய்த பாவங்களே காரணம் என்றும் இந்த ஒரு ‘எல்லே‘ என்ற வார்த்தையினால் ஆழ்வார் கூறுகிறார்.
ஆழ்வார், தான் அருகில் இல்லாததாலோ, தான் தகாதவராய் இருப்பதாலோ,
தான் எம்பெருமானிடம் உள்ளவற்றை குறைகளாகப் பார்ப்பதாலோ, எம்பெருமானை இழக்கவில்லை என்றும்,
தன்னுடைய பாவங்களால் தான் இழந்தோம் என்றும் சொல்கிறார்.
எம்பெருமான், குற்றத்தை பாராமல் அதையே குணமாக கொள்ளும் இனியவன் என்பதையே காரணமாகச் சொல்கிறார்.
மேலும், எம்பெருமான் மிக விரும்பும் கௌஸ்துபமணி போல் உள்ள இந்த ஆத்மா வீணானதே என்று வருந்துகிறார்.
பெரியதிருமொழி (3.7.6), “அரங்கத்து உறையும் இன் துணைவன் ” என்ற பாசுரம் மேற்கோளாக சொல்லப்படுகிறது.
அப்படிப்பட்ட இனிமையான துணைவனை விட்டு வெகுதூரம் போய்விட்டேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.
பால் மருந்தாகவும், அதுவே அனுபவிக்க கூடிய ஒரு பொருளுமாக இருப்பது போல் அழகுடன் கூடிய,
மோக்ஷத்தை அளிக்கவல்ல எம்பெருமானை இழந்தோமே என்று கதறுகிறார்.
என் செய்வான் தோன்றினேனே
விஷ்ணு தத்வத்தில் சொன்னபடி, எம்பெருமான் தமக்கு அளித்த கை, உடல், மனம் போன்றவற்றை
அவருக்குப் பயன் படுத்தாமல், வீணடித்த தாம் ஏன் தான் பிறந்தோமோ என்பதை, ஆழ்வார் தோன்றினோமோ என்று கூறுகிறார்.
தீய கோள்கள் வானில் வருவதை, தோன்றின என்று கூறுவது வழக்கம்.
அதுபோல், தான் பிறந்ததும், தீய கோள் போல், பிறருக்கு நன்மை செய்யாமல், தீயவை புரியவே என்று
ஆழ்வார் தான் பிறந்ததும் தீங்கு விளைவிப்பதாகி விட்டதே என்று கூறி இந்த பாடலை முடிக்கிறார்.
————
ஆழ்வார் தன்னுடைய வர்ணாசிரம தர்மத்திற்கு தகுந்த, கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான
தகுதி கூட இல்லை, என்று இந்த பகுதியின் முதல் பாடலிலும்,
இரண்டாம் பாடலில், தான் எந்த மனிதன் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்வதில்லை என்றும்
இப்போது மூன்றாம் பாடலில் குரங்குகள், அணில்கள் போன்ற மிருகங்கள் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும்,
நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல, ஆழ்வார் எதுவும் செய்தது இல்லை என்று நைச்சானுசந்தானத்தை தொடர்கிறார்.
குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடி,
தரங்கநீர் அடைக்கல் உற்ற சலம் இலா அணிலம் போலேன்,
மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்,
அரங்கனார்க்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே திருமாலை 27
வானர வீரர்கள், இராம கைங்கர்யத்தில் ஈடுபடவேண்டும் என்ற காரணத்தினால்,
மலைகளை தள்ளிக் கொண்டு வருவது போலவும், தண்ணீரிலே மூழ்கி, பின்னர் கரையில் உள்ள மணலில் புரண்டு ஓடி,
அலைகளுடன் பொங்கும்படியான கடலை, தூர்ப்பதில் ஈடுபட்ட கபடம் அற்ற அணில்களைப் போலவும்,
தான் இல்லை என்றும்,
மரங்களைப் போல் கடினமான மனதை உடையவனாய், வஞ்சனையில் ஈடுபட்டுள்ளவனாய்
எல்லாவித கைங்கர்யங்களுக்கும் தகுதி வாய்ந்த, பெருமை உடைய, தான் திருவரங்கனுக்கு
நெஞ்சார அடிமை செய்யாமல், அனர்த்தப்பட்டு நிற்கிறேன் என்று ஆழ்வார் பாடுகிறார்.
சென்ற இரண்டு பாசுரங்களில் சொல்லியது போல், மனிதர்கள் செய்யக்கூடிய எந்த நற் செயல்களையும்
ஆழ்வார் செய்யா விட்டாலும், பரமபதத்தில், அனந்தாழ்வான், கருடன், விஷ்வக்சேனர் மூலம் ஏற்றுக்கொள்ளும் சேவைகளை,
விலங்குகளைக் கொண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பி, எம்பெருமான் ராமனாக அவதரித்த காலத்தில்,
குரங்குகளும், அணில்களும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல்,
ஆழ்வாரும் ஏதாவது செய்யலாமே என்று பெரிய பெருமாள் வினவ,
அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுப்பது போல் அமைந்துள்ள உள்ள பாசுரம்.
குரங்குகள் மலையை நூக்க
குரங்குகள் என்று பன்மையில் சொல்லி, மலை என்று ஒருமையில் சொன்னது,
எண்ணிக்கையில் குரங்குகள் அதிகம் என்றும், மலைகள் குறைவாகவும் இருப்பது என்றும்
ஒரு மலையை பல குரங்குகள் தள்ளிக் கொண்டு வருகின்றன என்றும் தெரிகிறது.
ஒவ்வொரு வானர வீரரும் ஒரு மலையை ஒரு சிறு கல் போல் தூக்கும் சக்தி உடையவர் என்றாலும்,
மலைகள் குறைவாக இருப்பதால் இராம கைங்கர்யம் செய்யும் ஆசையால் பல குரங்குகள் ஒரு மலையை தொட்டு வருகின்றன
என்று உரை ஆசிரியர் கூறுகிறார்.
மேலும், விலங்குகளுக்கு இத்தகைய சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை வருமா என்று கேட்டுக் கொண்டு,
சேவையை ஏற்றுக் கொள்ளும் ஸ்வாமியான ஸ்ரீ ராமபிரான், பொருத்தமான ஸ்வாமி ஆனதாலும்,
அவர் வில்லும் கையுமாக நிற்கும் நிலையைக் கண்டவுடன், ஞானம் உள்ளவர், இல்லாதவர் என்ற வித்யாசம் இல்லாமல்
சிறு துரும்பு போன்றவைகளும் கூட கைங்கர்யம் செய்யும் என்று சொல்கிறார்.
மலையை நூக்க
மலையை கடலில் போட என்று சொல்லாமல், நூக்க என்ற சொல்லால், மலையை தள்ளிக் கொண்டு வருவது என்று சொல்வது,
முதலில் வரும் மலையை தள்ளிக்கொண்டு வரும் வானரக் கூட்டத்தில் இருந்து அடுத்த வானரக் கூட்டம் மலையை பெற்றுக் கொண்டு
அப்படியே அடுத்து வரும் வானரக் கூட்டத்திற்கு கொடுக்க, இப்படி மலையை யாரும் தூக்காமல் கை மாறி மாறி,
கடலில் தள்ளி விட்டன என்று கருத்து.
குளித்து
இராமாயணம், யுத்தகாண்டத்தில் (5.9) இராமர், சீதையை நினைத்து தன் உடல் மிகவும் கொதித்து உள்ளதாகவும்,
தான் அப்படியே சமுத்திரத்தில் சிறிது நேரம் இருந்தால், அந்த ஜுவலிக்கின்ற காமாக்னியானது
ஜலத்தில் கூட கஷ்டப்பட்டே தகிக்கும் என்றும், நீரெல்லாம் வற்றி விடும் என்றும் கூறுகிறார்.
எம்பெருமான் சீதா பிராட்டியின் பிரிவால் வாடுவதை பார்த்த வானர வீரர்கள் எல்லோரும் ராம கைங்கர்யத்தில் ஈடுபட்டு,
மிகவும் வேகமாக கடலில் அணைக்கட்டுவதை காட்டுகிறது என்று உரையாசிரியர் சொல்கிறார்.
குளித்து …. அணிலம் போலேன்
இங்கு ஆழ்வார் முதலில் அணிலின் பார்வையில் இருந்து ஒரு சில கருத்துக்களைச் சொல்கிறார்.
குரங்குகள் மலைகளை தள்ளிக்கொண்டு போவதை பார்த்து, எம்பெருமான் பிராட்டியை சீக்கிரம் அடைய வேண்டும்
என்ற எண்ணத்திற்கு, அந்த வேகம் போதாது என்று எண்ணின.
மலைகளை கடலில் வெறுமே போட்டுவிட்டால், பாலம் கட்டி முடியாது, அவைகளை பூச வேண்டும், ஒரு குரங்கும் அதை செய்யவில்லை;
மலைகளை பூச மணல் வேண்டும், அதையும் மலைகளுக்கு நடுவே போட வேண்டும், அவற்றை இந்த குரங்குகள் செய்ய வில்லை.
அதனால், அணில்கள் கடலில் மூழ்கி, கரையில் புரண்டு தன்னுடைய உடல்களில் மணலை ஒட்டி
மீண்டும் கடலில் உள்ள அந்த மலைகளுக்கு இடையே மீண்டும் கடலில் குளித்தன.
(குளித்து)
இவ்வாறு அணில்கள் கடலில் உள்ள மலைகளை பூசுவதாக நினைத்தன.
இப்படி அடிக்கடி கடலில் முழுவதால் அந்த தண்ணீரை கடலில் இருந்து எடுத்து கொண்டு போக முடியும்,
அதனால் கடல் தண்ணீரும் சீக்கிரத்தில் வற்றி விடும் என்று அணை கட்டும் இராம கைங்கர்யத்தில் அணில்கள் ஈடுபட்டன.
இவை எவ்வளவு சிறியவை, இதனால் அணை கட்டி முடிக்க முடியாது என்று எல்லாம் அணில் நினைக்காமல்,
இராம கைங்கர்யத்தில் ஈடுபடுவதிலேயே குறியாக இருந்தன.
குரங்குகளால் பூச முடியாமல் போன, ராம காரியத்தை, நம்மால் செய்ய முடிகிறதே என்ற கர்வத்துடன்
அணில்கள் ஓடி ஓடி சேவை புரிந்தன என்பதை ஆழ்வார் ‘தாம்‘ என்ற வார்த்தையால் சொல்கிறார்.
தாம் என்பதற்கு
சிறிய மேனி என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
தண்ணீரில் இவ்வாறு மணலை உதிர்த்து விட்டு, மீண்டும் குளித்து, பின் அதிக மணலை தன்னுடைய உடம்பில்
ஓட்டும் என்ற தவறான நம்பிகையால், கடற்கரையில் வெகு தூரம் சென்று உருண்டு,
பிரண்டு மீண்டும் கடலுக்கு சென்றன.
(புரண்டிட்டோடி )
அப்பொழுது அதனை கவனித்த வானரங்கள் ஏன் இவ்வளவு வேகம் என்று கேட்டதற்கு,
இராமபிரான் துக்கமாக உள்ளார், மத்திய உணவு இலங்கையின் வடக்கு வாசலில் தான்,
அதற்குத்தான் இந்த வேகம் என்று சொல்லி, வானரங்களுக்கு வேகம் போதவில்லையே என்று குறைபட்டுக் கொண்டன.
இராம காரியத்தில் உள்ள விருப்பத்தால், தம்மால் இந்த காரியத்தை செய்து முடிக்க முடியமா என்று யோசிக்காமல்,
அணில்கள் அந்த சேவையை தொடர்ந்தன.
அலைகளால் பொங்குகின்ற கடலை அடைப்பதற்கு இந்த சிறிய அணில்கள் முயற்சி செய்தன.
(தரங்க நீரை அடைக்கல்)
தாங்கள் தான் மேஸ்திரிகள் போல் இருந்து கடலை அடைகின்றோம் என்றும்,
தங்களுக்கு உதவியாக வானரங்கள் மலையை கொண்டு கடலில் கொட்டுகின்றன என்றும் அணில்கள் நினைக்க தொடங்கின.
(உற்ற)
அணில்கள் இந்த காரியத்தை கைங்கர்யமாக செய்கின்றவே தவிர, ஒரு பலனையும் எதிர்பார்க்கவில்லை
(சலம் இலா அணிலம் )
அணில்கள் செய்யும் காரியங்கள் சிறிதளவும் கடலை அடைக்க உதவி இல்லாமல் இருக்கும் போது
அது எப்படி எம்பெருமான் கைங்கர்யமாக கருதப்படுகிறது என்றால்,
அவைகளின் எண்ணத்தில் உள்ள சுத்தத் தன்மையே போதுமானது என்று ஆழ்வார் சொல்கிறார்.
எண்ணம், எம்பெருமான் விரைவில் கடலைகடந்து இலங்காபுரியை அடையவேண்டும் என்பதே.
சலமிலா என்பதை, சலனம் என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொண்டு,
ஆழ்வார், மனிதர்கள் போல், சாஸ்திரங்களால் வசப்படாமல், கைங்கர்யம் செய்ய கை கால்கள் கூட இல்லாமல்,
குளித்து, ஓடி, புரண்டு, என்று பல செயல்கள் செய்யும் இந்த தாழ்ந்த விலங்குகளிடம் உள்ள
நல்ல எண்ணங்கள் கூட தன்னிடம் இல்லை என்பதை, சென்ற பாசுரத்தாலும் (குளித்து மூன்று) இந்த பாசுரத்தாலும் சொல்கிறார்.
எல்லா விருப்பங்களும், என்றும் நிறைவேற பெற்று இருக்கும், எம்பெருமானுக்கு ஜீவாத்மாக்களிடம் இருந்து
எதிர்பார்ப்பது இந்த நல்ல எண்ணம் ஒன்றைத்தான். பூர்ணனான எம்பெருமானுக்கு பூர்ணமில்லாத
ஜீவாத்மாக்களால் ஒன்றும் செய்து விட முடியாது தான்.
அதற்காக அற்ப ஞானமும், அற்ப சக்தியும் உள்ள தான் என்ன செய்ய முடியும் என்று ஒதுங்குவது
பாக்கியம் இல்லாதவன் செய்வது.
பூர்ணனான எம்பெருமானுக்கு ஒரு சிறிது காரியம் செய்தாலும், மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்வான் என்று
எந்த பிரதிபலனையும் கருதாமல் அவனுக்கு தொண்டு செய்பவர் ஒரு சிலரே.
அப்படி செய்யும் அணிலுக்கு உள்ள ஈடுபாடு தனக்கு இல்லையே என்று ஆழ்வார் தெரிவிக்கின்றார்.
அணை கட்டியதை பற்றிய சில பாசுரங்கள் :
கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்,
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செறுக்களத்து,
மலை கொண்டலை நீரணைகட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன்,
தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்கிராமம் அடை நெஞ்சே. (திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி 1.5.1)
மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்து,
கொல்லை விலங்கு பணிசெய்யக் கொடியோன் இலங்கை புகலுற்று,
தொல்லை மரங்கள் புகப்பெய்து துவலை நிமிர்ந்து வானணவ,
கல்லால் கடலை அடைத்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே. திருமங்கையாழ்வார், (பெரிய திருமொழி, 8.6.4)
மலையதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவனே ! (குலசேகர ஆழ்வார், பெருமாள் திருமொழி, 8.8)
குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து குலைகட்டி மறு
கரையை அதனால் ஏறி எரி நெடு வேல் அர்க்கரோடு இலங்கை வேந்தன்
இன்னுயிர் கொண்டவன் தம்பிக்கு அரசும் ஈந்து (குலசேகர ஆழ்வார், பெருமாள் திருமொழி 10.7)
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அனைத்து உலகங்கள் உய்ய,
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் ( தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாலை 11)
மரங்கள்போல் வலிய நெஞ்சம்
இரும்பு போல் வலிய நெஞ்சம் என்று 17 வது பாசுரத்தில் பாடிய ஆழ்வார்,
இங்கு மரங்கள் போல் வலிய நெஞ்சம் என்று பாடுகிறார்.
இரும்பினை தீயில் இட்டு தனக்கு வேண்டிய வடிவத்திற்கு மாற்ற முடியும்,
ஆனால் மரத்தினை தீயில் இட்டால் சாம்பல் ஆகிவிடும் என்று காரணத்தால் ஆழ்வார் தனது நெஞ்சினை மரத்திற்கு ஒப்பிடுகிறார்.
சலமிலா மரங்கள் போல் என்று ஒரு அர்த்தமும் சொல்லப்படுகிறது.
மரத்தை ஆயுதத்தால் அசைத்து விடலாம் என்றும்,
ஆழ்வார் தன் நெஞ்சம் அதை விட வலியது, எதனாலும் அசைக்க முடியாது என்று கொள்ளலாம்.
வஞ்சனேன்
இப்படி கடினமான நெஞ்சம் இருக்கும் போது, பார்க்கிறவர்கள் இவன் நெஞ்சம் எம்பெருமானை நினைத்து
இப்படி உருகுகிறதே என்று நினைக்கும்படி நடிக்க வல்லவனாக தான் இருப்பதாக ஆழ்வார் சொல்கிறார்.
உலகில் உள்ள மற்ற விஷயங்களில் ஈடுபாடு கொண்டு, எம்பெருமானிடத்தில் கொஞ்சமும் ஈடுபாடு இல்லாமல்,
ஆனால் பார்ப்பவர்கள் இவனைப்போல் உண்டோ என்று மயங்கும்படி உட்கருத்தை மறைத்து வாழ்கிறேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.
இறை இறை உருகும் வண்ணம் என்று 17வது பாசுரத்தில் சொன்னது இப்படி வேஷம் போட்டது என்று ஆழ்வார் சொல்கிறார்.
நெஞ்சு தன்னால்
அணில்கள் தங்களுடைய நல்லெண்ணத்தாலே கைங்கர்யம் செய்தது போல், அவர் கொடுத்த நெஞ்சத்தை வைத்து,
அருகே இருக்கும் அவரிடம் கொஞ்சமாவது ஈடுபாடு கொண்டு இருக்கலாம் என்று ஆழ்வார் இங்கே சொல்கிறார்.
அரகங்கனார்க்கு ஆட்செய்யாதே
ஆட்செய்தல் என்றால் அது முழுமையாக பரிபூர்ணமாக செய்வதாகும், மேலே சொன்னது போல், கொஞ்சம் ஈடுபாடு இருந்தால்,
அது ஆட்செய்தல் என்று ஆகாது.
அணில்களின் நல்ல எண்ணத்தையே கைங்கர்யமாக திருவுள்ளம் கொள்ளும் எம்பெருமானைக் கருத்தில் கொண்டால்
அவன் அந்த கொஞ்சத்தையே முழுமையாகக் கொள்வான் என்று ஆழ்வார் சொல்கிறார்.
அளியத்தேன்
இராமாயணத்தில் (அயோத்யா காண்டம் 31-25), சீதையும், இராமனும் மலை சரிவுகளில்
ரம்யமாக பயணம் செய்யும் போதும் மற்றும், அவர்கள் உறங்கும் போதும், முழித்துக்கொண்டு இருக்கும் போதும்
அவர்களுக்குத் தேவையான எல்லாவித சேவைகளையும் செய்வேன் சென்று லக்ஷ்மணன் கூறியது போல்,
ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வடிவில்லா அடிமை செய்ய வேண்டியதற்காக பிறந்த ஆத்மா அல்லவோ,
என்று ஆழ்வார் தன்னுடைய ஆத்மாவை எண்ணி அது வீணாகிவிட்டதே என்று கவலைப் படுகிறார்.
அயர்க்கின்றேனே
இப்படி தன்னுடைய ஆத்மா வீணாகி விட்டதே என்பதற்கான காரணம், தான் எம்பெருமானை மறந்ததுதான் என்றும்,
தகுதி இல்லாதால் அல்ல என்றும் சொல்கிறார்.
திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் (6.2.2),
மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதியின் மனத்தால், இறந்தேன் சொல்வதை இங்கே மேற்கோள் காட்டப்படுகிறது.
——–
உம்பரால் அறியலாகா ஒளியுளார் ஆனைக்காகி,
செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார்,
நம் பரமாயது உண்டே நாய்களோம் சிறுமை ஓரா,
எம்பிராற்கு ஆட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே.– திருமாலை –28
பிரம்மா போன்ற தேவர்களால் கூட, இப்படிப்பட்டது என்று அளவிட்டு அறியமுடியாதபடி,
தேஜோ மயமான பரம பதத்தில் உள்ள எம்பெருமான், கஜேந்திரன் என்ற யானைக்காக,
சிவந்த மாமிசத்தைச் சாப்பிட்டு வாழும்படியான முதலை மேல், கோபித்துக் கொண்டு வந்து அருளினான்.
இப்படி தம் அடியவர்களைக் காக்கும் பொருட்டு அவன் இருக்கையில், நம்மை காப்பாற்றிக்கொள்ள நமக்கு என்ன பாரம் ?
நாய் போல் இருக்கும் நம்மிடத்தில் உள்ள குறைகளை கருத்தில் கொள்ளாமல், இருக்கும் நம்பெருமானுக்கு தொண்டு செய்யாமல்,
எதற்காக தான் பிறந்தேன் என்று ஆழ்வார் வருந்தும் பாடல்.
குரங்குகள், அணில்கள் சிறு கைங்கர்யங்கள் செய்த போது, அவைகளிடம் இருந்த நல்ல எண்ணம் கூட தங்களிடம் இல்லையாகில்,
கஜேந்திர ஆழ்வான் என்ற யானை பொய்கையில் இறங்கிய போது, அதன் காலை, முதலை பிடித்துக்கொண்டதால்,
தளர்வுற்று, எம்பெருமானை தன்னை காப்பாற்றுபவனாக நினைத்தது போல் தாங்கள் நினைத்தது உண்டா என்று
எம்பெருமான் கேட்டதற்கு சென்ற பாசுரங்களில் சொல்லியது போல், இங்கும் அது தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்கிறார்.
திருமாலையில் ஒரு சில பாசுரங்களில் திருவரங்கன் திருநாமம் நேரடியாக வருவது இல்லை,
அது போல் அமைந்த ஒரு பாசுரம் இது.
ஆழ்வார், கஜேந்திர மோக்ஷம் என்ற இந்த நிகழ்வை கீழ்கண்டவாறு பிரித்துப் பார்த்து
எம்பெருமானின் பெருமையை விளக்குகிறார்.
உதவி செய்த எம்பெருமான் எப்படிப்பட்டவர்
உயர்ந்த பரமபதத்தில் இருப்பவர்; யாராலும் அறிய முடியாதவர்;
எவருக்கும் உதவி செய்தே ஆக வேண்டும் என்ற எந்த நிர்பந்தம் எதுவும் இல்லாதவர்.
நித்ய ஸூரிகளால் ஆராதிக்கப்பட்டு வருபவர்
உதவி பெற்ற கஜேந்திரன் என்ற யானைக்கும், உதவி செய்தவருக்கும் உள்ள சம்பந்தம்
ஸ்ரீதேவி தாயாருக்கோ, பூமி பிராட்டிக்கோ, அனந்தாழ்வாருக்கோ, விஷ்வக்ஸேனருக்கோ, கருடனுக்கோ இருக்கும்
சம்பந்தம் போல் இந்த யானைக்கு எம்பெருமானிடம் எந்தவிதமான நேரடி சம்பந்தமும் கிடையாது
உதவி பெற்றவரின் எதிரியின் (முதலையின்) பலம் -திறமை
இராவணன், ஹிரண்யகசிபு, சிசுபாலன் போன்ற பலமான எதிரி இல்லை, முதலையை வெறும் நீர்ப்புழு என்கிறார்.
உதவி செய்த எம்பெருமான் இந்த தருணத்தில் எப்படி இருந்தார்
எப்பொழுதும் சாந்தமாக இருக்கும் எம்பெருமான், கோபத்தை தன் மேல் ஏற்றிக் கொண்டு வந்தார்
உதவி எங்கே செய்யப்பட்டது
பரமபதத்தில் இருந்து, அதாவது இருந்த இடத்தில இருந்தே சக்கரத்தாழ்வாரை அனுப்பி உதவி செய்து இருக்கலாம்;
ஆனால், எம்பெருமான் மடுக்கரைக்கு நேரடியாகச் சென்று உதவி செய்து உள்ளார்.
உதவி ஏன் அப்படி, அப்பொழுது செய்யப்பட்டது
எம்பெருமானிடம் தனக்கு உள்ள சம்பந்தத்தை ஒப்புக்கொள்ளும் தன்மை உடைய,
தன்னை தன்னால் காத்துக்கொள்ள முடியாது என்ற உண்மையை உணர்ந்த,
ஆபத்தில் அல்லது அபாயத்தில் உள்ள தம் அடியவர்களை காப்பதில் உள்ள அவசரம், அன்பு,
அவர்களுக்கு காட்டும் பாரபட்சம், அவர்களுக்கு தரிசனம் கொடுப்பதில் உள்ள பிரியம்.
இந்த கஜேந்திர மோக்ஷத்தைப் பற்றி மற்ற ஆழ்வார்கள் பாடல்கள் சிலவற்றை இங்கே காணலாம்.
உம்பரால் அறியலாகா ஒளியுளார்
உம்பர் என்று சொன்னது சத்திய லோகம் முதலிய மேல் உலகங்களில் வாழும் பிரம்மன் போன்ற தேவர்களை குறிக்கும்.
அறியலாகா என்பது
மிகுந்த ஞானம் பெற்ற பிரம்மன் சிவன் போன்றவர்களும் அறிய முடியாதது என்று சொல்கிறது.
பகவத் கீதை (16.14), ‘நானே ஈஸ்வரன், நானே எல்லா போகத்தையும் அடைபவன், இயற்கையாகவே சித்தனாக இருப்பவன்,
இயற்கையிலேயே பலவான் ஆகவும், சுகத்தை அனுபவிப்பவனாகவும் இருப்பவன் நானே” என்று சொல்கிறபடி,
தானே ஈஸ்வரன் என்ற நினைப்பிலுள்ள பிரம்மன், சிவன் போன்றவர்களும் அடைய முடியாததாக மட்டும் இல்லாமல்,
அறிய முடியாததாகவும் உள்ளது பரமபதம் என்று உரையாசிரியர் சொல்கிறார்.
அதற்கு அவர்கள் தங்களுக்கு அதிகமான ஞானம் இருந்தாலும், தங்களால் செய்ய முடியாது எதுவும் இல்லை என்ற
ஆணவத்துடன் இருக்கிறார்கள் என்பதும்,
ஆணவத்துடன் உள்ளவர்களுக்கு பரமபதம் இடம் இல்லை என்பதுமே காரணம் என்றும் உரையாசிரியர் சொல்கிறார்.
அடுத்து விஷ்ணு புராணம் 1.9.55ல்
பிரம்மா, தேவர்களாலும், முனிவர்களாலும், சங்கரனாலும், தன்னாலும்
யாதொன்றை அறிய முடியாத இருக்குமோ அதுவே பரமேஸ்வரனான விஷ்ணுவின் பரமபதம்
என்று சொல்வது எடுத்துக் காட்டப்படுகிறது.
ஒளியுளார் என்று சொன்னதில்
உள்ள ஒளி என்பது பரமபதத்தையும் ஒளியுளார் என்பது அங்கு நித்யவாஸம் செய்யும் எம்பெருமானை குறிக்கும்.
சந்தோபநிஷத் (3.13.7)ல், பரமபதத்தில், எம்பெருமானால் படைக்கப்பட்டவை மற்றும் அவரின் படைப்புகளால் படைக்கப்பட்டவை
என்ற எல்லாவற்றிக்கும் மேலாக உள்ளதும், தனக்கு மேற்பட்டது ஒன்று இல்லாததுமான இடத்தில் இருந்து ஒளிவிடும் பரஞ்சோதி என்றது,
ஒளி என்ற சொல்லுக்கு மேற்கோளாக சொல்லப்படுகிறது.
மஹாபாரதத்தில் ஆரண்ய-வன பர்வத்தில், (136.18.23),
மஹாத்மாவான அந்த விஷ்ணுவின் இடம், சூர்யன், அக்னி இவைகளில் ஒளியை விட மிக அதிகமானதும்,
அந்த ஒளியின் தேஜஸால், தேவர்களும், அசுரர்களும் கூட அதைக் காண முடியாததாக உள்ளது என்றும்,
அங்கு போனால் மறுபடி இந்த உலகிற்கு திரும்புவதில்லை என்றும் சொல்கிறது.
ஒளியுளார் , என்றது
மூன்றாம் திருவந்தாதியில் (51) சொன்ன கலங்காப் பெருநகரம் என்று சொல்லப்பட்ட பரமபதத்தில்,
நித்ய ஸூரிகளை அனுபவித்துக்கொண்டு இருப்பவன், சம்சாரத்தில், துன்புற்று இருக்கின்ற
ஒரு அடியானை காப்பாற்றுவதற்காக வந்தார்.
ஆனைக்காகி
இப்படி எல்லை இல்லாத மேன்மை உடையவர், அரைகுலைய, தலைகுலைய (அவசரமாக) காரியம் செய்ய வந்தது,
பிராட்டி, திருவடி, திருவனந்தாழ்வான், போன்ற உயர்ந்தவர்களுக்காகவோ என்று பார்த்தால்,
அது இல்லை என்றும், ஒரு விலங்கிற்காக இப்பாட்டு பட்டார் என்கிறார்.
உதவின எம்பெருமானின் உயர்வையும், துன்புற்ற யானையின் தாழ்வையும் ஒப்பிட்டால்,
மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் தெரியும் என்பது கருத்து.
ஒரு அடியானை காப்பாற்ற வேண்டும் என்றால், எம்பெருமான் தன்னுடைய மேன்மையையோ,
அடியானின் தாழ்ச்சியையோ பார்ப்பது இல்லை.
அவர்களுடைய ஆபத்தையும், அவர்களுக்கு தன்னிடம் உள்ள ஒழிக்க முடியாத சம்பந்தத்தையும் மட்டுமே
பார்க்கிறான் என்பது இந்த கஜேந்திர வரலாற்றில் இருந்து தெரிய வரும்.
செம்புலால் உண்டு வாழும் முதலை மேல்
அடியவரின் தாழ்ச்சியைப் பார்க்காவிட்டாலும், அவன் எதிரியையாவது யார் என்று பார்த்தால்,
அது தன்னை விட தாழ்வான மீன்களை உணவாக கொண்டு
‘வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல ‘ (திருவாய்மொழி 4.5.1) என்கிறபடி,
எல்லா உலகங்களையும் ஆழ்கின்ற எம்பெருமானை போல தனக்கு நிறைவு வந்துவிட்டதாக நினைக்கும்
ஒரு நீர்ப்புழுவை எதிர்த்து அல்லவோ வந்தார் என்கிறார்.
விஷ்ணுபுராணம் (1.9.35)ல் பிரம்மன் சொல்வதாவது,
தேவர்களுக்கு துன்பம் வந்தபோது, மேலானவர்களுக்கும் கீழானவர்களுக்கும் என்று எல்லோருக்கும் ஈஸ்வரனாகவும்,
அசுரர்களுக்கு சத்ருவாகவும் இருக்கும் எம்பெருமான் விஷ்ணுவை சரண் அடையுங்கள் என்பதாகும்.
பிரம்மன் தனக்கும் மற்ற தேவர்களுக்கும் அசுரர்களாலும் அரக்கர்களாலும் துன்பம் வரும் போது,
அந்த துன்பங்களைப் போக்க வேறு புகல் இடம் இல்லாமல், எம்பெருமானை சரண் அடைந்தபோது,
அவர், ஹிரண்யகசிபு, இராவணன் போன்ற வலிமை மிகுந்த அரக்கர்களோடு போரிட்டு அவர்களை
அழியச்செய்தான் என்றால் அதில் ஆச்சர்யம் இல்லை.
ஒரு ஆனை கூப்பிட்டதால், ஒரு முதலைமேல் கோபம் கொண்டு மிகத் தாழ்மையான அதனை ஒரு எதிரியாக
கருதிக் கொண்டு அவசரமாக ஓடி வந்தது ஆச்சரியமே என்று உரை ஆசிரியர் சொல்கிறார்.
சீறி
எம்பெருமான் எப்போதும் சாந்தமானவர்.
இதை தன் விஷயமாக இருந்தால் எம்பெருமான் சாந்தம் உடையவராக இருப்பர்
என்று இராமாயணம், அயோத்தியா காண்டம், 1-10ல் சொல்லப் படுகிறது.
ராமாயணம், ஆரண்ய காண்டம், (34-24)ல்,
இராமன், அரக்கர்களைக் கொல்வதற்காக கடும் கோபத்தை வரவழைத்துக் கொண்டார் என்றும்,
அப்படி கோபம் கொண்டவர், பிரளயத்தில் வரும் கோபாக்னியைப் போல் காண வொண்ணாதவராக இருந்தார் என்றும் சொல்கிறது.
தன் இயல்பான சாந்தியை மாற்றிக்கொண்டு, தன்னிடம் இல்லாத கோபத்தை வரவழைத்துக் கொள்ளவேண்டும்.
பிறகு, இராமாயணம் யுத்த காண்டத்தில், (59-136)ல்
இராவணனால் காயப்படுத்தப்பட்ட வானரர்களில் சிறந்தவரான ஹநுமானை பார்த்தபோது,
இராமன் கோபத்திற்கு வசப்பட்டான் என்று கூறுகிறது.
அதாவது
அடியார்களிடத்தில் யாராவது அபசாரத்தைக் கண்டால்,
எம்பெருமான் கோபத்திற்கு வசப்பட்டு விடுவான் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
அப்படி கோபத்திற்கு வசப்படும் போது, எதிரி எவ்வளவு தாழ்ந்தவன் என்பதை பார்க்க முடியாது என்பது
உண்மை என்பதால் இதில் ஆச்சர்யம் இல்லை என்று உரையாசிரியர் தெரிவிக்கிறார்.
கொடியவாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஒன்று உண்டு என்று திருமங்கையாழ்வார்
தன் பெரிய திருமொழியில் (5.8.3) சொன்ன இந்த பெருங்குணத்தை தங்களுக்கு தஞ்சமாக கொண்டார்கள்.
வந்தார்
இருந்த இடத்தில இருந்து சங்கல்பத்தால் எதிரியை அழிக்கக்கூடிய சக்தியை பெற்ற எம்பெருமான்
அவசரம் அவசரமாக மடுக்கரைக்கு ஓடி வந்தது, ஆச்சர்யமே என்று ஆழ்வார் சொல்கிறார்.
உலகத்தை அழிப்பதாக இருந்தால், இருந்த இடத்தில இருந்து சங்கல்பித்து அழிக்கலாம்,
ஆனால் அடியவர் ஒருவரின் துயரை துடைக்க, தான் நேரடியாக வந்து தன் கையாலேயே அழிக்காத போது,
அவன் சீற்றம் – கோபம் தணியாது என்பது கருத்து.
அன்றைக்கு யானைக்கு ஓடி வந்து உதவியது தனக்கே உதவியது போல் ஆழ்வாருக்கு இருந்தது.
முதலையின் வாயில் தானே அகப்பட்டது போல், திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி 5.8.3ல்
கொடியவாய் விலங்கு, என்று சொன்னதும் இன்னொரு மேற்கோள் ஆகும்.
திருமங்கை ஆழ்வாருக்கு வலிக்காவிட்டால், அவர் கொடிய வாய் விலங்கு என்று பாடி இருக்க மாட்டார்.
அதே போல் தான் தொண்டரடிபொடி ஆழ்வாரும் எம்பெருமான் யானைக்கு உதவியது தனக்கே உதவியது போல் பாடி உள்ளார்.
அதாவது
அடியார்களில் ஒருவருக்கு உதவியது தமக்கு உதவியது போல் என்று எண்ணிக் கொள்ளாவிட்டால்
அது வைஷ்ணவம் ஆகாது என்பது இதில் இருந்து வரும் கருத்து.
எம்பெருமான் ஆற்றங்கரைக்கு வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை, இருந்தாலும் அவன் வந்தான்.
அதேபோல், அவனிடம் சரண் அடைந்தவர்க்கு துயரம் என்றால் நிச்சயம் வருவான்.
நம் பரமாயது உண்டே
மேலே சொன்னவை, எம்பெருமானுக்கு அடியார்களிடத்தில் எப்பொழுதும் அதீத பிரியமும், கருணையும் இருப்பதும்
அவன் அவர்களுக்காக ஒரு தலை பட்சமாகவும் நடப்பான் என்பதும் புரியும்.
அப்படி நம்மை காப்பாற்ற அவன் இருக்கும்போது நாம் ஏன் நம்மை காத்துக் கொள்ள வேண்டும் என்று ஆழ்வார் கேட்பதாக
இந்த தலைப்பில் உள்ள வார்த்தைகள் அமைந்துள்ளன.
மேலும் உரையாசிரியர், எம்பெருமானின் சிறப்பை கீழ்கண்டவாறு எடுத்து சொல்கிறார்.
எம்பெருமான் தன்னுடைய மேன்மையை பார்ப்பவனாகவோ
அடியார்களின் சிறுமையைப் பார்ப்பவனாகவோ
நம்முடைய பாவங்களின் அதிகமான அளவைக் கண்டு, இன்னும் கொஞ்சம் துன்பத்தை அனுபவிக்கட்டும் என்று
கால தாமதம் செய்வதனாகவோ இருந்தால் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும்
அவன் அப்படி இல்லை என்றும் கூறுவது தான் இந்த ‘நம் பரமாயது உண்டே“.
நாய்களோம்
ஆழ்வார் நம்முடைய தாழ்வான நிலையை பார்க்கையில், கஜேந்திரன் என்ற அந்த யானை மிக உயர்ந்த இடத்தில,
அதாவது, சனகர் போன்ற ரிஷிகள் ஸ்தானத்தில் வைக்கும்படி அல்லவோ இருக்கிறது என்கிறார்.
திறந்து கிடைக்கும் வீட்டில் நுழைந்தாலும் விரட்டி அடிக்கும் நாயின் நிலையில் நாம் இருக்கிறோம் என்கிறார்.
நாயின் உரிமையாளன் தொட்டாலும் உடனே குளித்து தன்னை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று
நினைக்கும் அளவில், நாம், நாயை போன்ற தாழ்வை உடைய நீசர்கள் என்பது கருத்து.
சிறுமை ஓரா எம்பிராற்கு
நாம் எவ்வளவு தாழ்வான நிலையில் இருந்தாலும் நம்முடைய தாழ்ச்சியை பார்க்க கண் இல்லாதவன் என்று
எம்பெருமானை ஆழ்வார் கூறுகிறார்.
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் அவிஞ்ஞாதா சஹஸ்ராம்ஸு என்ற இரண்டு திருநாமங்கள் வருகின்றன.
அவைகளுக்கு அர்த்தம் சொல்லும் போது,
அடியார்களின் குற்றங்களை காண முடியாத அவிஞ்ஞாதாவாக இருக்கிறான் என்றும்
குணங்களை ஆயிரம் மடங்காக்கி எடுத்து கொள்ளும் சஹஸ்ராம்ஸுவாக இருக்கிறான் என்றும் சொல்வார்கள்.
இதையே சற்று மாற்றி அடியார்களின் குற்றங்களை காண முடியாத அவிஞ்ஞாதாவாக இருக்கிறான் என்றும்
அந்த குற்றங்களையே குணங்களாக மாற்றி, அதையும் ஆயிரம் மடங்காக்கி எடுத்து கொள்ளும்
சஹஸ்ராம்ஸுவாக இருக்கிறான் என்றும் சொல்வதுண்டு.
எல்லாம் அறிந்தவன் என்று அறியப்படும் எம்பெருமானை எதற்காக தோஷங்களை அறியாதவன் என்று
ஆழ்வார் சொல்கிறார் என்று கேட்டு கொண்டு,
முண்டகோபநிஷத் (1-1-10) சொல்வதை முதலில் சொல்லி உரையாசிரியர் கீழ்கண்ட விளக்கம் தருகிறார்.
எந்த பரம புருஷன் எல்லா பொருள்களுடைய ஸ்வரூபத்தையும், குணத்தையும் (ஸ்வாபம்) அறிகிறானோ,
எவனுடைய சங்கல்பம் ஞானமயமாக இருக்கிறாதோ என்று சொல்வதன் மூலம்,
பரம்பொருள் எல்லாவற்றையும் அறிகிறான் என்பதே முண்டகோபநிஷத் 1.1.10ல் சொல்லப்பட்டது.
எம்பெருமான் அடியவர்களின் தோஷங்களை கண்டு கொண்டு, அவற்றை பொறுத்து உதவி செய்வபனாக
தன்னை நினையாமல், தோஷங்களை காண கண்ணிட்டு அவற்றை பாராமலோ,
அவற்றை நன்மைகளாக – குணமாகக் கொண்டோ அருள் பாலிக்கிறான் என்று பொருள்.
எம்பிராற்கு
எம்பிராற்கு என்பதை தனியாக எடுத்துக் கொண்டு விளக்கத்தை காண்போம்.
இப்படி நம் குற்றத்தை கண்டுகொள்ளாமல், ஆபத்தையே காரணமாகக் கொண்டு நம்மை காப்பது என்று
நமக்காக வகுத்த எம்பெருமான் என்பதை எம்பிராற்கு என்று சொல்கிறார்.
எம் என்பது தன் ஸ்வரூபத்திற்கு தகுந்த ஸ்வாமியாக இருப்பதையும்,
பிராற்கு என்பது உதவி செய்பவன் என்றும் கொள்ளலாம்.
ஆட் செய்யாதே
இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு தொண்டு செய்வது அல்லவோ தகுந்தது.
நம்முடைய காரியத்தை எம்பெருமான் தன்னுடைய பொறுப்பாக ஏற்றுக்கொண்ட பின்னர்,
நாம் நம்முடைய சரீரம், உடம்பின் உறுப்புகள் (இந்திரியங்கள்) நமக்கு என்று விதிக்கப்பட்ட பகவத் கைங்கர்யத்திற்கு
உட்படுத்துவது அல்லவோ தகுந்த செயல். அப்படி செய்யாமல், இருக்கிறேனே என்று ஆழ்வார் வருந்துகிறார்.
என் செய்வான் தோன்றினேனே
இங்கு, ஆழ்வார், பயனற்ற பிறப்பை உடையவன் ஆனேன் என்று சொல்கிறார்.
பிறவி எடுத்த பயன் எம்பெருமானுக்கு தொண்டு செய்வதே, ஆனால், தான் அதை செய்யாமல்,
தன்னுடைய பிறப்பு வீணானதே என்று சொல்கிறார்.
இதற்கு மேற்கோளாக,
“லக்ஷ்மணன் வனவாசத்திற்கே பிறந்தவன் என்றும், இராமனுக்கு சேவை செய்யவே பிறந்தவன்” என்றும்,
லட்சுமணனுக்கு சுமித்ராதேவி சொன்ன வார்த்தைகள் (இராமாயணம் அயோத்திய காண்டம் 40.5) சொல்லப்படுகின்றன.
அதே போல் (இராமாயணம் அயோத்திய காண்டம் 31.25) லக்ஷ்மணன் இராமனிடம்
“தேவரீர் உறங்கும் போதும், விழித்திருக்கும் போதும் தங்களுக்கு எல்லாவிதமான தொண்டுகளும் செய்வேன்” என்று
சொன்னவற்றை ஆழ்வார் நினைவு படுத்தி, அப்படி லக்ஷ்மணனைப்போல் எம்பெருமானுக்கு சேவை செய்ய
ஆசை கொண்டு இருந்தால் பிறந்தேன் என்று சொல்லலாம்.
தம்முடைய பிறப்பு உயிர் இல்லாத, அறிவு இல்லாத ஜடபொருட்கள் போல் ஆனதால், தோன்றினேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.
முன் பாடலில் சொன்ன மாதிரி, தீய கோள்கள் வானில் வருவதை, தோன்றின என்று கூறுவது வழக்கம்,
அதுபோல், தான் பிறந்ததும், தீய கோள் போல், எம்பெருமானுக்கு சேவை செய்யாமல்
வீணாகி விட்டதே என்று கூறி இந்த பாடலை முடிக்கிறார்.
———–
பாசுரம் 29
ஊரிலேன் காணி யில்லை உறவு மற்றொருவர் இல்லை,
பாரில் நின் பாத மூலம் பற்று இலேன் பரம மூர்த்தி,
காரொளி வண்ணனே (என்) கண்ணனே கதறுகின்றேன்,
ஆர் உளர் களை கண் அம்மா அரங்கமா நகரு ளானே. (29)
ஆனைக்கு துன்பம் வந்தபோது, அது தனக்கு உதவுவதற்காக எம்பெருமானைப் பற்றி நினைத்த நினைப்பு ஆழ்வாருக்கு இல்லையாகில்,
எம்பெருமான் உகந்து அருளின திவ்யதேசங்களுடன் சம்பந்தங்களாவது உண்டா என்று எம்பெருமான் வினவ,
அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுக்கும் பாசுரம்.
சாளக்ராமம், அயோத்தி, திருவரங்கம் போன்ற திவ்யதேசங்களில் பிறப்பு, திருப்பல்லாண்டு பாடுதல் போன்ற
கைங்கர்யம் செய்யும் காணியாட்சி இருந்தால், எம்பெருமான் அவர்களை ரக்ஷித்தே தீர்வான் என்று இருப்பதால்,
அது போல் உண்டா என்று எம்பெருமான் கேட்க,
அவை இல்லை என்று ஆழ்வார் இந்த பாடலில் மறுக்கிறார்.
எம்பெருமான் நித்ய வாஸம் செய்யும் திருத்தலங்களில் பிறக்கவோ, வாசம் செய்யவோ இல்லை;
அவைகளில் கைங்கர்யம் செய்யும் பாக்கியமும் தனக்கு இல்லை; அந்த திவ்யதேசங்களில் உறவுக்காரர்கள் இல்லை;
வேறு எவரையும் தெரியாது; இந்த பூமியில், புகல் அற்றவர்களுக்கு தஞ்சமான எம்பெருமானின் திருவடிகளையும் சரணாகதியாக பற்றவில்லை;
எல்லோருக்கும் தலைவனானவனே, கார்மேகம் போன்ற நிறம் உடையவனே, எனது கண்ணனே, உன்னை கதறி கூப்பிடுகிறேன்,
உன்னைத் தவிர வேறு யார் என்னுடைய குறையை தீர்க்க உள்ளார் என்பது பாடலின் பதவுரை ஆகும்.
ஊரிலேன்
இங்கு ஊர் என்று குறிப்பிடுவது, சாதாரண ஊர் இல்லை; சாளக்ராமம், அயோத்தி, திருவரங்கம் போன்ற
எம்பெருமான் நித்யவாஸம் செய்யும் திவ்யதேசங்கள் ஆகும்.
இதற்கு பின் வரும் வார்த்தைகளில் ஆழ்வார் சொல்லும் காரணமே இது சாதாரணமான ஊர் இல்லை என்பதை தெரிவிக்கும்.
ஆழ்வார் தான் பிறந்த மற்றும் வசிக்கும் ஊர் மோக்ஷ உபாயம் தருவதாக இல்லை என்று சொல்கிறார்.
எல்லா ஊர்களும் மோக்ஷம் தரும் என்றால் எல்லா மக்களும் மோக்ஷம் அடைவார்கள்.
அதற்கு எந்த விதமான ஆதாரங்களும் (பிரமாணங்கள்) இல்லை.
ஆனால் திவ்யதேசங்களுக்கு அந்த சிறப்பு உள்ளது என்பது,
வால்மீகி இராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில், (1.20) இராமபிரானிடத்தில் “நாங்கள் உங்கள் பிரதேசத்தில் வசிப்பவர்கள்
என்பதால் உங்களால் பாதுகாக்கப்படுவதற்கு நாங்கள் தகுதியானவர்கள். நீங்கள் நகரத்தில் வாழ்ந்தாலும் சரி, காட்டில் வாழ்ந்தாலும் சரி,
நீங்கள் மக்களுக்கு எஜமானன், எங்கள் அரசன்” என்று தண்டகாரண்ய முனிவர்கள் சொல்வது.
உத்திர காண்டத்தில், (109.22) அயோத்தியில், ஒரு உயிரும் காணப்படவில்லை, எல்லா உயிர்களும் இராமனை பின் தொடர்ந்தனர்
என்று குறிப்பிடப்பட்டு உள்ளதும் இது போலவே;
கருட புராணம், 11 ஸ்லோகத்தில், இந்த தேசம், மிக புனிதமானதாகவும், மனிதர்களை நற்கதிக்கு அழைத்து சொல்வதாகவும்
அவர்களுடைய எல்லா இஷ்டங்களையும் நிறைவேற்றி தருவதாகவும் உள்ளது என்று கூறுவதும்
எம்பெருமான் நித்யவாஸம் செய்யும் திவ்யதேசங்கள் மோக்ஷ உபாயம் என்று நிரூபிக்கின்றன.
மேலும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாடலான கற்பார் ராமபிரானை அல்லால் என்ற பதிகத்தில், முதல் (7.5.1) பாசுரத்தில்,
“புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே, நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும், நற்பாலுக்கு உய்த்தனன்” என்று
சொல்லி அயோத்தியில் வாழும் அத்தனை ஜீவராசிகளையும் வைகுந்தத்திற்கு அழைத்து சென்றதாக சொல்கிறது.
அதே போல், குலசேகராழ்வார் தனது பெருமாள் திருமொழியில், (10.10) “அன்று சராசரங்களை வைகுந்தத் தேற்றி” என்று
ராமபிரான் அயோத்தியில் உள்ள அனைத்தையும் வைகுந்தத்திற்கு அழைத்து சென்றதை பாடி உள்ளார்.
ஆக, திவ்யதேச வாசம் மோக்ஷம் கொடுக்கும் என்பது திண்ணம். ஆகையால் இங்கு ஊர் என்று சொன்னது திவ்யதேசமே.
காணி யில்லை
திவ்யதேசங்களில் பிறக்கவில்லை என்றாலும் அங்கு பல்லாண்டு பாடுதல், நந்தவனம் கட்டி, திருமாலை தொடுத்து
எம்பெருமானுக்கு சமர்ப்பித்தல் போன்ற கைங்கர்யங்கள் செய்வதற்காக உரிமை நிலமாக, காணியாட்சி நிலங்கள் பெற்றதுண்டோ;
தானமாகவோ அல்லது சொந்தமாக வாங்கியோ சில சிறு நிலங்கள் திவ்ய தேசங்களில் உள்ளனவோ;
அதன் பொருட்டு திவ்யதேசம் சென்று எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்தது உண்டோ என்று
திவ்யதேச சம்பந்தம் பற்றி எம்பெருமான் வினவ
அதற்கும் தன்னை உய்விக்க வழி இல்லை என்ற கருத்தில், காணி இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.
உறவு மற்றொருவர் இல்லை
ஊரும் இல்லை, காணியும் இல்லை என்றால், உறவு மனிதர்களாவது ஒரு திவ்யதேசத்தில் இருக்கிறார்களா
அல்லது திவ்யதேசத்தில் உள்ளவர்களுடன் மந்திரம் சொல்லி கொடுத்தல் அல்லது கேட்டு கொள்ளுதல் அல்லது
பெண் கொடுத்தல், பெண் கொள்ளுதல் மூலம் உண்டான தொடர்போ இருந்தால்,
அது கொண்டு எம்பெருமான் ஆழ்வாரை ரக்ஷிக்கலாம் என்று சொல்ல, ஆழ்வார் அவைகளும் இல்லை என்கிறார்.
உறவு இல்லை என்பதால், நெருங்கிய உறவினர்கள் இல்லை என்றும், மற்றொருவர் இல்லை என்பதால்,
தூரத்து உறவினர்களோ, நண்பர்களோ, பார்த்து பேசிய நபர்களோ திவ்யதேசங்களில் தமக்கு இல்லை என்று ஆழ்வார் சொல்கிறார்.
பாரில்
அப்படியானால் எங்கு வசிக்கிறீர்கள் என்று எம்பெருமான் கேட்க, எல்லையற்ற துன்பங்கள் கொடுக்கும்,
ஒருவர் உண்ணும் உணவை எழுவர் பறித்துக் கொள்ளும் கொடுமையுடன், ஒருவர் உடையை எழுவர் கவர்ந்து
கொள்ளும் இந்த பூமியில் வசிக்கிறேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.
மூன்றாம் திருவந்தாதியில்(51), பரமபதத்தை பேய்ஆழ்வார், கலங்கா பெருநகர் என்று வர்ணிக்கிறார்.
காமம், க்ரோதம் போன்ற கலக்கங்கள் இல்லாத பெரு நகரம் என்றும் அங்கு கவலையே இல்லாமல் இருக்கலாம் என்றும்
அவர் பரமபதத்தைப் பற்றிச் சொல்கிறார்.
ஆக பரமபதத்தை தவிர அத்தனை இடங்களும், மனிதர்களை கலங்கும்படி செய்யும் ஊர் ஆகும் என்பது ஆழ்வார் சொல்லும் கருத்து.
நின் பாத மூலம் பற்று இலேன்
வேறு கதி அற்றவர்களுக்கும் துணையாய் இருக்கும் எம்பெருமானின் திருவடிகளுக்கும் தனக்கும்
எவ்வகையிலும் தொடர்பு இல்லை என்கிறார்.
இங்கே உரையாசிரியர் ராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் (38-33) இருந்து காகாசுரன் சரித்திரம் சொல்லப் படுகிறது.
காகாசுரன் தந்தையாலும், தாயாலும், மஹரிஷிகளாலும் தேவர்களாலும் கைவிடப்பட்ட போது, மூன்று உலகங்களையும் சுற்றி திரிந்து
பிறகு ராமபிரானையே சரண் அடைந்தான். அபச்சாரம் செய்து பிரம்மாஸ்திரத்திற்கு இலக்கான காகாசுரனுக்கும்
சரணாகதி அளித்த எம்பெருமானின் திருவடிகளுக்கு ஆகாதவன் ஆகிவிட்டதாக ஆழ்வார் சொல்கிறார்.
இப்படி எல்லா வழிகளிலும் நன்மை இல்லாத வகையில் ஆழ்வார் இருப்பதால், எம்பெருமானின் திருவுள்ளமும் அவரை
பெறும் பேற்றை ஆழ்வார் இழந்து விட்டதாக நினைக்க அதற்கு பதில் கூறும் வகையில் அடுத்த பதம் உள்ளது.
பரமமூர்த்தி
ஆழ்வார் தன்னை ரக்ஷித்துக் கொள்ள தன்னிடம் ஒரு உபாயமும் இல்லை என்று சொல்லி, ஆனால் எம்பெருமானிடம்
ஏராளமாக உபாயங்கள் இருக்கிறன என்றும் கூறுகிறார்.
பரம என்றால், அனைவரிலும் உயர்ந்தவராக உள்ளவர் என்று பொருள். மூர்த்தி என்றால் விக்ரஹம்.
அனைவர்க்கும் ஸ்வாமியாக (தலைவராக) எம்பெருமானே உள்ளார் என்று கூறி, அவனுக்கு அடியவனான ஆழ்வாரை ரக்ஷித்தால் தானே,
அவன் அனைவரையும் காக்கும் பரமமூர்த்தி என்று அறியப்படுவார் என்றும், மேலும், அடியவர்களை ஏற்றுக் கொள்ளா விட்டால்,
அவனுடைய தலைமை மாண்புக்கு ஒரு குறை வந்து விடுமோ என்ற கேள்வியையும்
எம்பெருமான் முன் ஆழ்வார் வைப்பதாக உரை ஆசிரியர் சொல்கிறார்.
அதற்கு எம்பெருமான் அடியவர்களும் தாங்கள் எம்பெருமானுக்கு சேவை செய்ய வேண்டியவர்கள் என்பதை
உணர வேண்டாமா என்று பதில் உரைக்க,
ஆழ்வார், அடியவர்கள் தாங்கள் எம்பெருமானுக்கு அடிமை என்பதை மறந்து இருந்த காலத்திலும்,
பிரளய காலத்தில் ஒரு பொருளாக இவர்களை தன்னுள் அடக்கி வைத்து இருந்ததையும் யாராலும் மாற்ற முடியாது என்றதாலும்,
எம்பெருமான், இவர்களிடம் தான் அறிந்த உறவு முறை காரணமாக இவர்களை திருத்தி இவர்களுடன் உள்ள உறவு முறையை
உணர வைப்பான் என்ற கருத்தை முன் வைக்கின்றார்.
காரொளி வண்ணனே
எம்பெருமான் ஆழ்வாரின் வார்த்தைகளை கேட்டு, அவரிடமே அவர் சித்தி பெற என்ன வழி என்று எம்பெருமான் திருவுள்ளமாக,
அதற்கு ஆழ்வார் எம்பெருமானின் அழகே வழி என்கிறார்.
திருமாலை 16ம் பாசுரத்தில், ‘ஆதரம் பெருக வைத்த அழகன்‘ சொன்னபடி முதலில் ஒரு அடியவனுக்கு ஆர்வத்தை உண்டாக்கி,
ஆர்வம் பிறந்த பின் அவனை அடைய வழியாகவும் இருப்பது அவன் அழகு என்கிறார்.
அந்த வடிவழகு அவனிடம் இருக்கும் போது தான் கைங்கர்யசித்தி பெற குறையில்லை என்கிறார்.
கண்ணனே
அப்படிப்பட்ட அழகு எட்டா கனியாக பரமபதத்தில் இருக்காமல், ஆழ்வார் போன்ற அடியவர்களுக்காக பல அவதாரங்கள் எடுத்து,
தன்னுடைய எளிமை, நீர்மை போன்ற நற்குணங்களை காட்டிக்கொண்டு இருக்கும் பரம மூர்த்தி என்று ஆழ்வார் கூறுகிறார்.
காரொளி வண்ணன் ஆகையால், அடியவர்களுக்கு ஆர்வம் தொடங்குவது முதலாக,
உபாயம் வரை எல்லாமாக இருக்கும் எளிய கண்ணன் என்கிறார்.
மேலும், ஆழ்வார் எம்பெருமானை தங்களுடைய ஸ்வரூபத்திற்கு தகுந்தவராகவும் உள்ளார் என்று கூறி,
எளிமை நீர்மை போன்ற கல்யாண குணங்களுடன், வடிவழகும் சேர்ந்து இருப்பதால் ஆழ்வாரின் கைங்கர்ய சித்திக்கு
ஒரு குறையும் இல்லை என்கிறார்.
என் கண்ணனே என்றும் ஒரு பாடம் உண்டு. இரண்டிற்கும் அர்த்தத்தில் பெரிய வேறுபாடு இல்லை.
கதறுகின்றேன்
எம்பெருமானுடைய இந்த பெருமைகளை எண்ணி பக்தி முதலிய மற்ற சாதனங்களை பின்பற்றியவர்கள் அவர்களுக்கு
பலன் கிடைக்க தாமதம் ஆகும் போது எப்படி கதறி எம்பெருமானை கூப்பிடுவார்களோ
அது போல் தானும் கதறி கூப்பிடுவதாக ஆழ்வார் கூறுகிறார்.
ஆர் உளர் களைகண்
ஆழ்வார், தாம் இப்படி கதறி கூப்பிடும்போது, எம்பெருமான் ரக்ஷிக்காமல் காலம் தாழ்த்துவது,
வேறு யாராவது ஆழ்வாரை ரக்ஷிப்பார் என்று எம்பெருமான் நினைப்பதாலா, ஒன்றும் இல்லாத ஆழ்வார் தான்
தன்னை ரக்ஷித்துக்கொள்ள முடியுமா, தன்னிடம் ஒன்றும் இல்லை என்பதை தன்னைவிட அறிந்தவர் யாரும் இல்லாதபோது,
அவர்கள் தாம் வந்து ஆழ்வாரை காப்பாற்ற முடியாமா என்று பலவாறாக ஆழ்வார் கேட்பது ஆர் உளர் களைகண் என்பதில் விளக்கப்படுகிறது.
அம்மா
எம்பெருமானின் உடமைப் பொருள் அழிந்தால் அது அவருக்குத் தானே நஷ்டம் என்று ஆழ்வார் கலங்கி,அம்மா என்கிறார்.
அரங்கமா நகர் உளானே
உடையவனாக எம்பெருமான் தனக்கு அருகில் இல்லாமல் இருந்தாலாவது தான் கதறி அழாமல் இருக்கலாம்,
ஆனால் அவன் அருகிலேயே, இந்த பூவுலகத்தில் எம்பெருமானை பெற வேண்டும் என்ற ஆசையோடு
யாராவது வருவார்களா என்று திருவரங்கத்தில் (கோவிலில்) காத்துகொண்டு இருக்கும் போது,
தான் எப்படி கதறி அழாமல் இருக்க முடியும் என்று ஆழ்வார் வினவுகிறார்.
————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்