Archive for the ‘திரு பல்லாண்டு’ Category

திருப்பல்லாண்டு -12-பல்லாண்டு என்று பவித்ரனைப் பரமேட்டியை–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

April 6, 2013

அவதாரிகை –

நிகமத்தில் –
இப்பிரபந்தத்தை அதிகரித்தாருக்கு பலம் சொல்லுகிறதாய் –
பிரேம பரவசராய்க் கொண்டு மங்களா சாசனம் பண்ணுகிறார் –
அநந்ய பிரயோஜனருக்கும் தம்மோ பாதி பகவத் ப்ரத்யாசத்தி உண்டாகையாலே அவர்களை அழைத்தார் –
ஐஸ்வர்ய கைவல்யங்களைப் பற்றி ஆச்ரயித்தவர்களும் -பகவத் பிரபவத்தாலே
மங்களா சாசனத்துக்கு ஆளாவார்கள் என்று அவர்களையும் அழைத்தார் –
அவ்வளவும் இல்லாத சம்சாரிகளும் தம்முடைய பாசுரத்தில் இழியவே
யாவதாத்மபாவி மங்களா சாசன அர்ஹர் ஆவார்கள் என்று இப்பிரபந்தத்தின்
வைபவத்தை அருளிச் செய்கிறார் –

பல்லாண்டு என்று பவித்ரனைப் பரமேட்டியைச் சார்ங்கம் என்னும்
வில்லாண்டான் தன்னை வில்லி புத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணா என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே –12

பரமேட்டியை -பரம பதத்தை கலவி இருக்கையாக உடையனாய்
நல்லாண்டு -சொல்லுகைக்கு ஏகாந்த காலம் என்று நினைத்து
பரமத்மானை -சேதன அசேதனங்களை சரீரமாக உடையவனை-

வியாக்யானம்

பவித்ரனை –
ஒரு உபாதியால் அன்றிக்கே -ஸ்வ ஸூத்தனானவனை –
சாஸ்வதம் ஸிவம் -என்னக் கடவது இ றே -இத்தால் அசுத்தி பதார்த்த
சம்யோகத்தாலே தத்கத தோஷ ரசம் ஸ்பர்ஷ்டனாகையும் –
ஸ்வ சம்பந்தத்தாலே அசுத்தன் சுத்தன் ஆகையும் ஆகிற -பரம பாவநத்வம் சொல்லுகிறது
அதாகிறது
சேதன அசேதனங்களில் வ்யாபித்தாலும் தத்கத தோஷம் ஸ்பர்சியாது ஒழிகையும்
நிர்ஹேதுகமாக நித்ய சம்சாரியை நித்ய சூரிகளோடே ஒரு கோவை ஆக்குகையும்
பரமேட்டியை –
பரமே ஸ்தானேஸ்தனன் ஆனவனை –

சார்ங்கம் என்னும் இத்யாதி –
இது மகிஷீ பூஷண ஆயுத பரி ஜனங்களுக்கும் உப லஷணம் –
அங்குள்ளாரை இட்டு தன்னை நிரூபிக்க வேண்டும்படி இ றே அவர்களுக்கு தன்னோடு உண்டான ப்ரத்யாசக்தி
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை –
சார்ங்கம் என்னும் வில் ஒன்றே ஆய்த்து அதுக்கு ப்ரசித்தி –
மத்த கஜத்தை யாளுமவன் என்னுமா போலே அத்தை ஆளுமவன் என்றது ஆய்த்து –
ஆலிகந்தமிவா காண மவஷ்டப்ய மஹத்தநு -என்னக் கடவது இ றே
இத்தால் -மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -என்கிற இடத்தில் பவித்ரதையை நினைத்து-பரமேட்டியை இத்யாதியாலே இரண்டாம் பாட்டில் சொன்ன நித்ய விபூதி யோகத்தை சொல்லுகிறது

வில்லிபுத்தூர் விட்டு சித்தன் – பல்லாண்டு -என்று விரும்பிய சொல் –
இப்போது பகவத் ப்ராப்தி காமர் -பிரயோஜனாந்த பரர் -என்று அடைவடைவே வந்து
நின்றார் இல்லை இ றே -அவ்வவருடைய பாசுரங்களாலே தாமே அருளிச் செய்தார் என்னும் இடம் தோற்றுகிறது இ றே-தம்முடைய வார்த்தையாக தாமே தலைக் கட்டுகையாலே -அவர்கள் பாசுரமாக அங்குச் சொல்லிற்று –
பிரயோஜனாந்த பரர்க்கும் பகவத் ப்ரசாதத்தாலே மங்களா சாசனம் பண்ணுகைக்கு
யோக்யதை உண்டு என்னும் இவ் வர்த்தத்தின் உடைய ஸ்தைர்யத்துக்காகவும்
மங்களா சாசனத்தில் தமக்கு உண்டான ஆதர அதிசயம் தோற்றுகைகாகவும்
வில்லிபுத்தூர் விட்டு சித்தன் –
அவ் ஊரில் பிறப்பாலே  ஆய்த்து பகவத் ப்ரயாசத்தி –
பகவத் ப்ரயாசத்தியிலே ஆய்த்து மங்களா சாசன யோக்யமான பிரேம அதிசயம் –
விட்டு சித்தன் -என்கிற திருநாமம் உண்டாய்த்து
ஆழ்வார் விடிலும் தாம் விட மாட்டாத தன் பேறாக இவர் திரு உள்ளத்தே
நித்யவாசம் பண்ணின படியாலே
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன் -என்னக் கடவது இ றே

நல்லாண்டு என்று
இப்பாசுரம் சொல்லுகைக்கு ஏகாந்தமான காலத்தை கொண்டாடி –
அத்யமே சபலம் ஜன்ம -என்னக் கடவது இ றே
கண்டதடைய மமேதம் என்று போந்த அநாதி காலம் போல் அன்றிக்கே
பகவத் ச்ம்ர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணக் கடதாம் படி வந்ததொரு காலம்
சேதனனுக்கு ஸூ துர்லபம் இ றே
நவின்று உரைப்பார்
நவிலுகை -பயிலுகை -இடைவிடாதே உரைக்கை
நமோ நாராயணா என்று
அநாதி காலம் மமேதம் என்றதை தவிருகையும்
ததேவம் -யென்கையும்
இத்தால் மங்களா சாசனத்துக்கு யோக்யதை சொல்லுகிறது
பல்லாண்டும் –
காலம் எல்லாம்
யாவதாத்மபாவி -என்கிறது –
கால க்ர்த பரிணாமம் இல்லாத தேசத்திலே ஆண்டை இட்டுச் சொல்லுகிறது –
அந்த பரிணாமம் உள்ள தேசத்திலே வர்த்திகிறவர் ஆகையாலே
பரமாத்மனை –
தனக்கு மேல் இன்றிக்கே –
தன்னை ஒழிந்தார் அடங்க ஸ்வ ஆதீநமாம் படி இருக்கிறவனை
இத்தால்-அமங்களங்களுக்கு -அவகாசம் இன்றிக்கே இருக்கையாலே ஒருவனுடைய மங்களா சாசனத்தால்-ஓர் ஏற்றம் உண்டாக வேண்டாதே இருக்குமவனை –
சூழ்ந்து இருந்து ஏத்துவர்-நம புரஸ்தாத தப்ருஷ்ட தஸ்தேத மோஸ் தூதே -என்கிற படியே முன்பே நில்லா-முறுவலை அனுபவித்து அதிலே ஈடுபடும் -பின்பே நில்லா பின்பும்-பிறகு வாளி யாவது -தண்டிகை கொம்பு போலே வளைந்து திரு பிடரியிலே
தொங்குகிற அசாதாராண ஆபரண விசேஷம் -பிறகு வாளி யுமான
அழகை அனுபவித்து அதிலே ஈடுபடும் -இப்படி சுழி யாறு படா நிற்கச் செய்தே கால்
வாங்க ஒண்ணாத வடிவு அழகு -அதி சங்கையை விளைத்து மங்களா சாசனத்தில் மூட்டும் என்கை-
பவித்ரனை -பரமேட்டியை -சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை -வில்லிபுத்தூர் விட்டு சித்தன் -பல்லாண்டு என்று விரும்பிய சொல் -நல்லாண்டு என்று
நவின்று உரைப்பார் -நமோ நாராயணா என்று பரமாத்மனைச் சூழ்ந்து
இருந்து பல்லாண்டும் பல்லாண்டு -ஏத்துவர் –என்று அந்வயம்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பல்லாண்டு -11-அல் வழக்கு ஒன்றும் இல்லா –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

April 6, 2013

அவதாரிகை –அண்டக்குலத்தில் ஆஹூதராய் -நெய்யிடை -என்கிற பாட்டில் சங்கதரான-ஐஸ்வர்யார்த்திகள் பாசுரத்தாலே திருப்பல்லாண்டு பாடுகிறார் –

அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் அபிமான துங்கன்
செல்வனைப் போலே திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல் வகையாலும் பவித்ரனே உனக்குப் பல்லாண்டு கூறுவனே –11-

வியாக்யானம்-

அல் வழக்கு ஒன்றும் இல்லா
வழக்கு அல்லாதவை அநேகம் இ றே
1-தேகத்தில் ஆத்மபுத்தி பண்ணுகை வழக்கு அல்ல
2-ப்ரக்ருதே பரமான ஆத்மவஸ்துவை ஸ்வ தந்த்ரன் என்று அனுசந்திகை வழக்கு அல்ல -3தேவதாந்த்ரங்களில் பரத்வ புத்தி பண்ணுகை வழக்கு அல்ல –
4-பகவத் பஜனத்துக்கு பலம் பிரயோஜனான்தரம் என்று இருக்கை வழக்கு அல்ல –
5-அநந்ய பிரயோஜனம் ஆனாலும் உபாயாந்தர சாதனம் என்று இருக்கை வழக்கு அல்ல -6-பகவத் அனுபவத்தை -மமேதம் -என்று இருக்ககை வழக்கு அல்ல –
இனி –வழக்கு -ஆவது –
சேஷிக்கு மங்களா சாசனம் பண்ணுகை என்று இ றே இவர் இருப்பது
அணி கோட்டியூர் கோன்
இவை -ஒன்றும் இன்றிக்கே -அத்தலைக்கு மங்களா சாசனம் பண்ணும் அது ஒன்றே வழக்கு -என்று ஆய்த்து அவ் ஊரில் உள்ளார் இருப்பது –
இதுக்கடி இவர் என்று தங்களுக்கு நிர்வாஹராக வாய்த்து நினைத்து இருப்பது
அணி -என்று ஆபரணமாய் -சம்சாரத்துக்கு ஆபரணமான ஊர் என்கை

அபிமான துங்கன்
அபிமானம் சேஷத்வ விரோதியாய் இருக்க அத்தால் மிக்கு இருப்பார் என் என்னில் –
கர்மத்தால் வந்த துர்மானம் ஆய்த்து த்யாஜ்யம் -தாசோஹம் -என்கிற வைஷ்ணவ அபிமானம் உபாதேயம்
ஆகையாலே அத்தாலே பூரணராய் இருப்பர் என்கிறது -அதாவது
உகந்து அருளின நிலங்களில் உண்டான குறைவு நிறைவுகளும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய தேக யாத்ரையில் குறைவு நிறைவுகளும்
தம்மதமாய இருக்கை
செல்வன் -என்று
ஸ்வரூப ப்ராப்தமான ஐஸ்வர்யத்தாலே குறைவற்றவர் என்கை -அதாவது
ஞான பக்தி வைராக்யங்களால் குறை வற்றவர் யென்கையும்
லஷ்மணோ லஷ்மி சம்பன்ந -என்கிறபடி அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருக்கையும்
உபமான சேஷாணாம் ஸாதூநாம் -என்கிறபடியே சாத்விகருக்கு உபமான பூமியாய் இருக்குமவர்
இவரை திருஷ்டாந்தம் ஆக்கிக் கொண்டு -பழ வடியேன் -என்று முன்பு ஐஸ்வர்யார்த்தியாய்
இன்று ஸ்வரூப ஞானம் பிறந்தவன் சொல்லுகை அநுப பன்னம் அன்றோ  என்னில்
கர்மத்தால் வந்த அஹங்காரம் போனால் தாஸ்யம் சர்வ ஆத்மாக்களுக்கும் சத்தா
ப்ரயுக்தம் ஆகையாலே சொல்லுகிறார்கள்
அதவா –
நை சர்க்கிகமான ஞானம் உடையாருக்கும் இன்று ஆஸ்ரயிக்கும் இவனுக்கும் வாசி வையாதே
விஷயீ கரிக்கும் ஈஸ்வர அபிப்ராயத்தாலே சொல்லவுமாம்

திருமாலே –
இவ்வாத்ம வஸ்து ஒரு மிதுன சேஷம் -என்று சேஷத்வ பிரதி சம்பந்தியை சொல்லுகிறார்கள்
இத்தால்
மாதா பித்ர் சேஷத்வமும் -தேவதாந்தர சேஷத்வமும் கர்ம உபாதிகம் என்கை
அதவா
தேவரீருக்கு பிராட்டி நிரூபக பூதையாய் இருக்கிறாப் போலே எங்களுக்கும் தாஸ்யம்
நிரூபகம் என்கிறார்கள் -என்றுமாம்
நானும் –
பிரயோஜனாந்தர பரதையாலே அநாதி காலம் அன்யார்ஹனாய் போந்த நானும் –
சேஷி பக்கல் பிரயோஜனாந்தரத்தை அபேஷிக்கை யாவது -பதிவ்ரதை பர்த்தாவின் பக்கலிலே
வ்யபிசாரத்தை அபேஷித்தவோபாதி இ றே
உனக்குப் பழ வடியேன் –
உனக்கு சேஷித்வம் அநாதி யானவோபாதி எனக்கும் சேஷத்வம் அநாதி என்கை
உனக்கு –
பிரயோஜனாந்தரத்தை அபேஷித்து திருவடிகளில் கிட்டினதுவே ஹேதுவாக அநந்ய
பிரயோஜநன் ஆக்க வல்ல உனக்கு

இந்த ஸ்வரூப ஞானம் எவ் வழியாலே பிறந்தது என்னில்
சகல வேதாந்த தாத்பர்யமான மந்திர ரஹச்யத்தாலே பிறந்தது என்கிறார் மேல்
நல் வகையால் நமோ நாராயணா -என்று
நாராயணனுக்கே உரியேன் -எனக்கு உரியேன் அல்லேன் -என்கை
நல் வகையால்-முன்பு அர்த்த விதுரமாக -ஜப ஹோமாதி முகத்தாலே பிறந்த அந்வயம் அடையத்-தீ வகை என்று இருக்கிறார்கள் -இது தான் சர்வார்த்த சாத்தலாம் இ றே –
நமோ நாராயணா யேதி மந்த்ரஸ் சர்வார்த்த சாதகா -என்னக் கடவது இ றே
நாமம் பல பரவி –
இவர் இவர்களை அழைக்கிற போது -அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லி -என்றார் இ றே -அத்தை இ றே இவர்களும் சொல்லுகிறது
பரவி –
அக்ரமமாகச் சொல்லி –
சாதனமான போது இ றே க்ரம அபேஷை உள்ளது –
முன்பு -மமேதம் -என்று இருந்தவர்களுக்கு -மங்களா சாசன யோக்யராம் படி
புகுர நிற்கைக்கு இசைவே வேண்டுவது –
பல் வகையாலும் பவித்ரனே –
பிரயோஜனாந்தர பரரான அசுத்தியைப் போக்கி –
அதுக்கடியான அஹங்கார மமகாரங்கள் ஆகிற அசுத்தியைப் போக்கி –
சேஷத்வம் தன்னிலும் -மாதா பித்ர் சேஷத்வம் என்ன இவ்வோ அசுத்தியைப் போக்கிப்
புகுர நிறுத்தினவனே –
உன்னைப் பல்லாண்டு கூறுவனே –
சௌந்தர்யாதி குண யுக்தனான உன்னை மங்களா சாசனம் பண்ணுகிறேன்
ஏக வசனத்தாலே
கீழ் சொன்ன புருஷார்த்திகள் மூவர் முகத்தாலும் தாமே திருப்பல்லாண்டு பாடுகிறார்
என்னும் இடம் தோற்றுகிறது
ஐஸ்வர்யார்த்தி சங்கதன் ஆகிற அளவிலும் ஏக வசனம் ஆகையாலே இங்கும்
அதுவே யாகிறது என்னவுமாம் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பல்லாண்டு -10-எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம்–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

April 5, 2013

அவதாரிகை –

கீழில் பாட்டில் புகுந்த அநந்ய பிரயோஜனர் தேக யாத்ரையிலும் தங்கள் பாரதந்த்ர்யமே
ஸ்வரூபமாய் இருக்கிற ஏற்றத்தை சொல் லிக் கொண்டு புகுந்தார்கள் –
இதில் -பிரயோஜநாந்த பரர் புகுருகிரார்கள் ஆகையாலே -தங்கள் பக்கல் அங்கன்
இருப்பதோர் ஏற்றம் காண விரகு இல்லாமையாலே -பகவத் பிரபாவத்தால்
தங்களுக்கு பிறந்த ஏற்றத்தை சொல்லிக் கொண்டு வந்து புகுருகிரார்கள் –
ஐஸ்வர்யார்த்தியும் சங்கதனாகிற போது -சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர்
ஆக்க வல்ல -என்று பகவத்ப்ரபாவத்தை சொல்லிக் கொண்டு வந்து இ றே புகுந்தது –
அவன் தான் நான் அபேஷித்த சூத்திர புருஷார்த்தத்தை தந்து வைத்து -என்னை சுத்த
ஸ்வபாவன் ஆக்கினான் -என்று ஆச்சர்யப் பட்டான் –
கைவல்யார்திகள் தங்கள் ஷூ த்ர புருஷார்த்த சம்பந்தம் யாவதாத்மபாவி விநாசகரம்
ஆகையாலே ஆஸ்ரயண வேளையில் மீட்ட ஆச்சர்யத்தைக் கொண்டாடுகிறார்கள் –

எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுத்து பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடு பெற்று உய்ந்தது காண்
செந்நாள்த்  தோற்றி திருமதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே வுன்னைப் பல்லாண்டு கூறுவனே –10-

அடியோங்கள் அடிக்குடில் -வீடு பெற்று -தாஸ பூதரான நாங்களும் –
எங்கள் க்ரஹங்களில் உள்ள புத்ர பௌத்ராதிகளும் -அஹங்காரமான ஐஸ்வர்ய
கைவல்யங்களையும் -விடப் பெற்று-

வியாக்யானம் –

எந்நாள்-
அந்நாள் -என்ன அமைந்து இருக்க –எந்நாள் -என்கிறது வகுத்த சேஷி பக்கலிலே ஷூத்ர-புருஷார்த்தத்தை அபேஷித்த காலமாய் இருக்கச் செய்தேயும் -ஸூப்ரபாதாச மேநிஸா –
என்கிறபடி மங்களா சாசனம் பண்ணுகைக்கு யோக்யமாம் படி புகுற நிறுத்தின
திவசம் -என்று அந்நாளைக் கொண்டாடுகிறார்கள் –
பகவத் பிரபாவம் தான் விஷயீ கரித்த திவசத்தையும் கொண்டாடும்படியாய் இருக்கும் இ றே
அவதாரத்தில் ஏற்றம் சொல்லுகிற அளவில் தஜ் ஜன்ம திவசம் என்று அந்நாளும்
கொண்டாடப் பட்டது இ றே
பிரயோஜனாந்தரத்தை அபேஷித்து வந்தவன் -அது ஒழிந்து -அநந்ய பிரயோஜனன்
ஆகைக்கு அடி என் என்னில்
எம்பெருமான் –
ஷூத்ர பிரயோஜநத்தை அபேஷித்து நிருபாதிக சேஷியான உன் பக்கலிலே
வருகையாலே ஸ்வரூப பராப்தமாய் வந்த சேஷத்வமே பலித்து விட்டது –
வகுத்த சேஷி யானாலும் -அபேஷிதங்களை ஒழிய புருஷார்த்தங்களைக்
கொடுக்கும் போது -அர்த்தி பக்கலிலே ஒரு கைம்முதல் வேண்டாவோ என்னில் –
உன் தனக்கு அடியோம் என்று எழுத்து பட்ட –
அடியோம் என்கிற அர்த்தத்துக்கு வாசகமான சப்தத்தில் எங்களுக்கு அந்வயம் உண்டு
நெஞ்சில் இன்றிக்கே இருக்கிலும் வாயில் உண்டான மாத்ரம் கொண்டு தர வல்ல சக்தி
உண்டு இ றே உனக்கு-

ஒமித்யே காஷரம் ப்ரஹ்ம வ்ராஹரன் மாம் அநுஸ்மரன் -என்னக் கடவது இ றே
அதவா
யாரேனும் பக்கலிலே ஏதேனும் ஒன்றை சொல்ல வேண்டி செல்லிலும் -நமஸ்
சப்த ப்ரயோகம் பண்ணக் கடவதாய் இ றே இருப்பது -அதுவும் ஆத்ம யாதாம்ய வாசகம்
இ றே -அதுவே எங்கள் பக்கல் கைம்முதல் என்கிறார்கள் –
எம்பெருமான் -என்கிற ப்ராப்தி யாலும் –
உன் தனக்கு -என்கிற சக்தியாலும் –
எழுத்துப் பட்ட -என்கிற சப்த மாத்ரத்தாலும்-பலிக்கக் கண்டோம் என்கிறார்கள் –
பட்ட -என்கிற இது –முத்துப்பட்ட -என்கிறாப் போலே
வாழாட் பட்டு -என்கிற -இடத்தில் அர்த்தத்தின் உடைய துர்லப்த்வம் சொல்லிற்று-வாசக சப்தத்தின் உடைய துர்லப்த்வம் சொல்லுகிறது இங்கு
அஹங்கார க்ரச்தமான சம்சாரத்துக்கு உள்ளே தாஸ்ய பிரகாசம் அலாப்யலாபம் ஆனால் போலே
பஹூ ஜல்பம் பண்ணிப் போகிற வாயிலே நமஸ் சப்தம் உண்டாக அல்பய லாபம் இ றே
அந்நாள் –
எம்பெருமான் உன் தனக்கு அடியோம் என்று எழுத்துப் பட்ட நாள் -எந்நாள் -அந்நாள்
என்று அந்வயம் –அந்நாளே -என்கிற அவதாரணத்தாலே -அது ஒழிய எங்கள் பக்கல்
ஆநுகூல்ய லேசமும் இல்லை என்று கருத்து
அத்தால் பெற்றது என் என்ன –
தாங்கள் பெற்ற பிரயோஜன பரம்பரைகளை சொல்லுகிறார்கள் –
அடியோங்கள் இத்யாதி –
அடியோங்களாக பெற்றோம் –
குடிலும் அடிக்குடிலாக பெற்றது –
வீட்டை லபிக்கப் பெற்றோம் –
உஜ்ஜீவிகப் பெற்றோம் –
அடியோங்கள் -என்கிறார்கள்
அஹங்கார க்ரச்தராய் -தத் அநுகூலமான ஷூத்ர புருஷார்த்தத்தை அபேஷித்து உன்
திருவடிகளில் வந்து ஒதுங்கின நாங்கள் -அது போய் -தாஸ்ய ஏக ரசராகப் பெற்றோம் –
அடிக்குடில் –
குடில் -என்று க்ரஹம் -அத்தாலே க்ரஹச்தரான புத்ர பௌத்ராதிகளும் அடியாராகப் பெற்றோம்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் -என்னக் கடவது இ றே
எழுத்துப் பட்டது தங்கள் அளவில் ஆகில் புத்ர பௌத்ராதிகள் அளவில் ஸ்வரூப ஞானம் பிறந்தபடி
என் என்னில் -முத்துப்பட்ட துறையை காவலிடுமவன் -அசல் துறையையும் காவல் இடுமா போலே
சம்பந்தி சம்பந்திகள் அளவும் அஹங்கார மமகாரங்கள் புகுராத படி விஷயீ கரித்தான் –என்கை
இவர்கள் சங்கதர் ஆகிற பாட்டிலும் –குடி குடி ஆட் செய்கின்றோம் -என்றார்கள் இ றே
சேஷி சந்நிதியிலே சேஷ பூதர் க்ரஹத்தை -குடில் வளைக்க -என்று சொல்லக் கடவது இ றே
வீடு பெற்று –
வீட்டை லபித்து -அதாகிறது
அஹங்கார மமகார கார்யமான ஐஸ்வர்ய கைவல்யங்கள் ஆகிற த்யாஜ்யங்களை
விடப் பெற்று -ப்ராப்ய சித்தியோபாதி த்யாக சித்தியும் ப்ராப்ய அந்தர்கதம் இ றே
உய்ந்தது காண்
தாஸ்யம் என்றும் – உஜ்ஜீவனம் -என்று பர்யாயம் போலே காணும்
உய்ந்தது காண் -என்று அறியாதரை அறிவிப்பாரைப்  போலே சொல்லுகிற இதுக்கு கருத்து என் என்னில் –
உபகரித்து விஸ்மரித்து போவது நீ –
நீ பண்ணின உபகாரம் நாங்கள் உபதேசிக்க கேளாய் என்கிறார்கள்

செந்நாள் -இத்யாதி
பிரயோஜனாந்தரங்களைக் கை விட்டு அநந்ய பிரயோஜனர் ஆனிகோள் ஆகில் இனி க்ர்த்த்யம் என் என்னில் –
உனக்கு மங்களா சாசனம் பண்ணுகையே க்ர்த்த்யம் என்கிறார்கள் -விஷயம் ஏது -என்ன –
செம் நாள்
அவதாரத்துக்கு ஏகாந்தமான நாள் ஆகையாலே அழகிய நாள் என்கிறார்கள்
தோற்றி –
அதீந்த்ரியமான விக்ரஹத்தை சகல மனுஜ நயன விஷய தாங்கத-என்கிறபடியே
உகவாதார் கண்ணுக்கும் விஷயமாம் படி தோற்றுவித்து
திரு மதுரையுள் –
அது தானும் நிர்ப்பயமான அயோத்யையில் இன்றிக்கே சத்ருவான கம்சன் வர்த்திக்கிற ஊரிலே –
சிலை குனித்து
அவ் ஊரில் தங்க ஒண்ணாமையாலே திருவாய்ப்பாடியிலே போய் மறைய வளருகிற நீ
மறித்தும் அவ் ஊரிலே புகுந்து கம்சனுடைய ஆயுத சாலையிலே புக்கு -வில்லை முறித்து
பூசலை விளைத்தாய் -அநுகூலர் அடைய -என் வருகிறதோ -என்று வயிறு பிடிக்கவேண்டும் படியான
தசையிலே கம்சனுக்கு மறம் பிறக்கும்படி சிலுகு படுத்துவதே

ஐந்தலை இத்யாதி –
அது கிடக்க -நிர்ப்பயமாய் வர்த்திக்கிற காலத்திலே பிறந்த ப்ரமாதமே போராதோ வயிறு-எரிகைக்கு என்கிறார்கள் –
ஐந்தலைய பைந்நாகத் தலை பாய்ந்தவனே –
கடிக்கைக்கு ஐஞ்சு வாயை உடைத்தாய் -க்ரோதத்தாலே விஸ்த்ர்தமான பணத்தை உடைத்தான
சர்ப்பாச்யத்திலே யன்றோ புக்கது -ஏக தாது விநா ராமம் க்ருஷ்ணோ ப்ருந்தாவனம் ய யௌ
என்று தலையன் ஒரு நாள் பேர நிற்க -பாம்பின் வாயிலே புகும் படி இ றே தீம்பு –
கிருஷ்ண அவதாரம் என்றால் ஆழ்வார்கள் எல்லாரும் ஒக்க பரிவராய் இருப்பர்கள்
இதுக்கு அடி என் -என்று ஜீயர் பட்டரை கேட்க –
ராமாவதாரத்தில் பிள்ளைகள் -தாங்கள் மிடுக்கராய் -குணாதிகருமாய் –
பிதா சம்ப ராந்தகனுமாய்
மந்த்ரிகள் வசிஷ்டாதிக்களுமாய்
ஊர் அயோதயையுமாய்
காலம் நல்ல காலமுமாய்
இருக்கையாலே அங்குத்தைக்கு ஒரு பயமும் இல்லை –
இங்கு
பிறந்தவிடம் சத்ரு  க்ர்ஹமாய்
கம்சன் இடம் பார்த்து நலியும் துஷ்ப்ரக்ர்திகளை வரக் காட்டும் கரூரனுமாய்
தமப்பன் இடையனுமாய்
ஊர் இடைச்சேரியுமாய்
பிள்ளைகள் தாங்கள் தீம்பருமாய்
காலம் கலி காலத்தோடு தோள் தீண்டியாய்
இருக்கையாலே என் வருகிறதோ என்று பரிகைக்கு ஆழ்வார்கள் அல்லது இல்லை காணும்
என்று அருளிச் செய்தார் –
உன்னைப் பல்லாண்டு கூறுதுமே –உன்னை கூறுதுமே -என்கிற ஸ்வரத்துக்கு கிருஷ்ண அவதாரம் பரிகை என்று காட்டி அருளுகிறார்
இப்படிப்பட்ட உன்னை அனுசந்தித்தால் மங்களா சாசனம் ஒழிய தரிக்க விரகு உண்டோ என்கிறார்கள்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பல்லாண்டு -9-உடுத்துக் களைந்த நின் பீதகவாடை–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

April 5, 2013

அவதாரிகை

வாழாளிலே அழைத்து –எந்தை தந்தை யிலே -கூடின -அநந்ய பிரயோஜனர்
பாசுரத்தாலே -அவர்களோடே கூடி -திருப்பல்லாண்டு பாடுகிறார் -இதில் –

உடுத்துக் களைந்த நின் பீதகவாடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய் முடி சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திரு விழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே –9

 

வியாக்யானம் –

உடுத்து
திருவரையில் ஸூ சங்கதமாக சாத்துகையாலும் -திருவரையிலே முசுகையாலும் –
தத் சம்பந்தம் தோற்றும்படி ஒற்று மஞ்சளாலும் மாளிகை சாந்தாலும் சிஹ்நிததாம்படி உடுத்து –
இவை இத்தனையும் ப்ரார்த்தநீயமாம்படி இருப்பார் சிலர் நாங்கள் –
சேஷிக்கு மங்களாவஹம ஆகையும் -தத் சம்பந்தங்கள் தோற்றின சிஹ்னங்களை
உடைத்தாகையும் -சேஷ பூதனுக்கு ஸ்ம்ர்தி விஷயமாக கொண்டு சர்வ காலமும்
ப்ரிய கரமாய் இ றே இருப்பது
களைந்த
ஆசன பேதத்திலே கழித்தால் பொகடும் ஸ்தலம் தங்கள் தலையாம்படி இருக்கை –
இதுவும் சேஷ பூதனுக்கு ப்ரார்தநீயம் இ றே

உடுத்த நின் பீதக வாடை-களைந்த நின் பீதகவாடை-என்னாமல் – உடுத்துக் களைந்த நின் பீதகவாடை -மஞ்சளும் செங்கழுநீரும் கலந்த –இங்கன் ப்ரார்த்த நீயமாக வேண்டுகிறதுக்கு ஹேது சொல்லுகிறது மேல்
நின் பீதக வாடை –
வகுத்த சேஷியது யாகையாலே -சாத்தும் திருப் பரிவட்டம் அடைய திரு பீதாம்பரத்தின் உடைய-ஆவேச அவதாரம் ஆகை –நின் பீதக வாடை –
ஸ்ரக் வஸ்த்ராபரணைர் யுக்தம் ஸ்வ அநுரூபைரநூபமை -என்று சேதன கோடியிலே இ றே-திருப் பீதாம்பரத்தை சொல்லுகிறது
உடுத்து
இது இ றே அநந்ய பிரயோஜனருக்கு ஆபரணம்
அங்கன் அன்றியே -பக்தாநாம்-என்று இருக்குமவன் ஆகையாலே இது தான் சேஷி
அளவிலே வந்தவாறே பிரதிபத்தி வேறு பட்டு இருக்கும் -ராஜாக்களுக்கு இரட்டை பிடித்து-கொடுக்குமவர்கள் -வாக்காக பிடித்து -தங்கள் அரையிலே உடுத்திருந்து யோக்யமாம்படி-பண்ணிக் கொடுப்பார்கள் -அதுவாய்த்து இவனுக்கு நினைவு

கலத்ததுண்டு –
அமுது செய்து கை வாங்கின தளிகை மாற்றினால் பிரசாதம் போஜ்யம்
த்வதீயபுக் தோஜ்ஜித சேஷ போஜிநா -என்னக் கடவது இ றே -ப்ரசாதமே தாரகமாய் இருப்பார் சிலர் நாங்கள் –
குரோர் உச்சிஷ்டம் புஞ்ஜீத -என்று விதி ப்ரேரிரதராய் கொண்டு பிரதிபத்தி பண்ணுவர்கள்
ஸ்வரூப ஜ்ஞானம் இல்லாதவர் -ஸ்வரூப ஜ்ஞானம் உடையார் தத்  ஸித்தி யர்தமாக
பிரதிபத்தி பண்ணுவர்கள் -பகவத் ப்ரேம யுகதர் ஸ்வயம் பிரயோஜனம் என்று இருப்பர்கள் –
இச் சேஷத்வ காஷ்டையான ததீயர் உடைய பிரசாதம் -தருவரேல் -என்கிறபடியே
அதி க்ர்தாதிகாரமாய் இருக்கும் -சர்வ சாதாரணனது ஆகையாலே பிரயோஜனாந்த பரனுக்கும்-போக்யமாய் இ றே பகவத் பிரசாதம் இருப்பது

தொடுத்த இத்யாதி –
திருத் துழாய் பறிக்கும் போதும் -தொடுக்கும் போதும் -அவன் சாத்தி அருளப் புகுகிறான் –
என்னும் ஆதரத்தாலே சம்ச்க்ர்தமாய் சாத்திக் கழித்தால் சூடுமது எங்களுக்கு உத்தேச்யம் –
சுவடர் பூ சூடும் போது புழுகிலே தோய்த்து சூடுமா போலே -தத் ஸ்பர்சத்தாலே விலஷணமாய்
இருக்கும் என்கை -அவன் தானும் சிலர் -சூடிக் கொடுத்த மாலையின் சுவடு அறியுமவன்
ஆகையாலே சூடிக் கொடுக்கிறான் இ றே
இத் தொண்டர்களோம்
இப்படிப்பட்ட அடியார்கள் இ றே நாங்கள் –
எமக்கு என்று உடுத்தல் ஜீவித்தல் சூடுதல் செய்யுமவர்கள் அன்றிக்கே -அவன் கழித்தவை
கொண்டு தேக யாத்ரையாம் படி யிருக்குமவர்கள் இ றே  நாங்கள் –

ஸ்வரூப சித்யர்த்தமாக அத்தலையில் உச்சிஷ்டங்களை ஆகாங்ஷித்து போகையில்
உண்பன் என்று இருக்கும் அத்தனையோ -என்னில் –
விடுத்த இத்யாதி –ஸ்வாமி சந்தேச காரிகளாய் கொண்டு -இப்படி தேக யாத்ரை நடத்துமவர்கள் இ றே நாங்கள்-
விடுத்த திசைக் கருமம் திருத்தி –
க்ரியதாம் -என்கிற சந்தேசமே தாரகமாக ஏவின கார்யத்தை செய்து தலைக் கட்டுகை –
ஸ்வாமி ஏவின கார்யத்தை குறையச் செய்யுமவன் அதமன் –
அத்தை குறையாமல் செய்து தலைக் கட்டுமவன் மத்யமன் –
அதுக்கு மேலே அதுக்கு அவிருத்தமான கார்யங்களையும் விசாரித்து செய்து தலைக் கட்டுமவன் உத்தமன் –
கார்யே கர்மணி நிர்த்ஷ்டேயோப ஹூந்ய பிசாதயேத்
பூர்வ கார்யா விரோதே ந ஸ கார்யம் கர்த்துமர்ஹதி -என்கிற திருவடி இ றே அவன் ஆகிறான்
பிராட்டி இருந்த இடம் அறிந்து வா -என்று விட –
இருந்த இடமும் அறிந்து -அவன் பலம் இருந்தபடி என் -என்று பெருமாள் கேட்டருளினால்
அறிந்திலேன் என்ன ஒண்ணாது -என்று அத்தலையிலே பல பரிஷையும் பண்ணி
ஊரில் அரணையும் தலை அழித்து -மூலையடியே போம் படி பண்ணி வந்தான் இ றே

திருவோணத் திரு விழவில் –
ஏவின கார்யத்தை குறை யறச் செய்த அளவிலும் பர்யாப்தி பிறவாமையாலே
திருவவதரித்து அருளின திருவோணம் ஆகிற மங்கள திவசத்திலே என்ன தீங்கு
வருகிறதோ என்று மங்களா சாசனம் பண்ணி வர்த்திக்குமவர்கள்
படுத்த இத்யாதி –
அதிலும் பர்யாப்தி பிறவாமையாலே
திரு வநந்தாழ்வான் மேலே சாய்ந்த போதை அழகுக்கு கண் எச்சில் வாராமைக்கு
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் -படுக்கப்பட்டு ஸ்வ சம்ச்லேஷத்தாலே விகசிதமாக
நின்றுள்ள பணைத்தை உடையனாய் -மென்மை -குளிர்த்தி -நாற்றம் என்கிறவற்றை
பிரக்ர்தியாக உடைய திரு வநந்தாழ்வான் ஆகிற படுக்கையிலே கண் வளர்ந்து அருளுகிற
அழகுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் -ஸ்வதஸ் சர்வஞ்ஞனையும் மயங்கப்
பண்ணும் படுக்கை -அவன் ஸ்வ ஸ்பர்சத்தாலே விக்ர்தனாகப் பண்ணும்
இவனுடைய வடிவும் -அவனுடைய வடிவும் -கிடந்ததோர் கிடக்கை -என்கிறபடியே
பரிச்சேதிக்க ஒண்ணாத அழகு இ றே கண் வளர்ந்து அருளுகிற போதை அழகு –
ஒரு வெள்ளி மலையிலே காள மேகம் சாய்ந்தால் போலே கண் வளர்ந்து அருளுகிற போதை-பரபாக ரசத்தை அனுசந்தித்தால் மங்களா சாசனம் ஒழியச் செல்லுமோ என்கிறார்கள்

————————————————————————–

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பல்லாண்டு -8–நெய்யிடை நல்லதோர் சோறு நியதமும் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

April 5, 2013

அவதாரிகை –

அண்டக் குலத்தில் அழைத்த ஐஸ்வர்யார்த்திகள் இசைந்து வர -அவர்களைக் கூட்டிக் கொள்ளுகிறார் –
வாழாளில் அழைத்த -அநந்ய பிரயோஜனர் தங்கள் ஏற்றத்தை சொல்லிக் கொண்டு புகுந்தார்கள் -எந்தை தந்தை தந்தை-யிலே
ஏடு நிலத்தில் -அழைத்த கைவல்யார்த்திகள் -தாங்கள் திருந்திப் புகுந்தமை சொன்னார்கள் -தீயில் பொலிகின்ற -விலே
இவர்கள் தாங்கள் ஷூத்ர புருஷார்த்தத்தை அபேஷிக்க -அநந்ய பிரயோஜனருக்கு முகம் கொடுத்தால் போலே
முகம் தந்து -அந்த ஐஸ்வர்யத்தை தந்த ஔதார்யத்துக்கு தோற்று -ஐஸ்வர்யத்தை விட்டு
சுத்த ஸ்வபவாராய் -இவ்வுதாரனை மங்களா சாசனம் பண்ணுவோம் என்று புகுருகிறார்கள்
அண்டக் குலத்திலே அண்டாத்யஷத்வம் ஐஸ்வர்யத்துக்கு மேல் எல்லையாய் பேசிற்று –
அவ் ஐஸ்வர்யார்த்திகள் பேச்சான இந்த பாட்டிலே -சரீரத்துக்கு தாரக போஷக போக்யங்களை
இரந்தார்களாய் -அத்தை அவன் தந்தானாகப் பேசிற்று -இதுக்கு நிபந்தனம் இன்று
ஸ்வரூப ஞானம் பிறந்து புகுருகிறவர்கள் ஆகையாலே அதினுடைய ஷூத்ரதை
தோற்றப் பேசுகிறார்கள் –
அண்டாத்யஷனான ப்ரஹ்மாவுக்கும் -தாரக போஷக போக்யங்களே  இ றே பிரயோஜனம்
அதற்க்கு மேற்பட்ட பகவத்விபூதியை எனக்கு என்கிற அபிமானத்தால் வந்த ஸ்வரூப ஹாநியே இ றே பலம்

நெய்யிடை நல்லதோர் சோறு நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே –9-

 

வியாக்யானம் –

நெய்யிடை
இடை என்று நிறையாய் -நெய்யோடு ஒத்த சோறு என்னுதல்
இடை -என்று நடுவாய் -நெய்யின் இடையிலே சில சோறும் உண்டு என்னுதல்
இத்தால் போஷக ப்ரசுரமான தாரக த்ரவ்யத்தை தரும் என்கை
நல்லதோர் சோறும் –
சோற்றுக்கு நன்மையாவது –
இட்டவன் இட்டோம் என்று இருத்தல் -உண்டவன் இதுக்கு என் செய்வோம் என்று இருத்தல் -செய்யாத சோறு –
அதாவது
தாய் இட புத்ரன் உண்ணும் சோற்றுக்கு இவ்விரண்டும் இல்லை இ றே
ஓர் சோறு –
இப்பாவ சுத்தியே  அன்றிக்கே விலஷண ரசோபேதமாய் இருக்கை
அங்கன் இன்றிக்கே -சேஷ பூதன் சேஷிக்கு இடும் சோறு போலே இருக்கை

அதாகிறது –
அஹங்காரோபேதம் இன்றிக்கே பக்த்யு பர்ஹ்ர்த்யமாய் இருக்கை –
ஈஸ்வரனும் -பக்தாநாம் -என்கிற நினைவாலேயும் வத்சலனாயும் இ றே இடுவது –
அநந்ய பிரயோஜன் ஸ்வாமி விஷயத்தில் இடும் சோறு எங்கனே இருக்கும் என்னில் –
விதுராந நானி புபுஜே ஸூ சீ நி குண வந்திச -என்னும்படி பாவந முமாய் -போக்யமுமாய்
இருக்கை -சு சீ நி -என்றது சுத்தங்களாய் இருக்கை -சோற்றுக்கு சுத்தி யாவது
துர்யோதனன் தன் ஐஸ்வர்யத்தைப் பற்ற அபிமாநித்தான் –
பீஷ்மன் ஞாநாதிகன் என்று அபிமாநித்தான்
த்ரோணன் வர்ணத்தாலிகன் என்று அபிமாநித்தான்
இவை ஒன்றும் இன்றிக்கே -பக்த் வுப ஹ்ர்தமாய் இருக்கை
நியதமும் –
அதாகிறது -ஐஸ்வர்யம் ஈச்வரனே கொடுக்கிலும் அஸ்திரமாய் இருக்கக் கடவது –
அது அழிந்தவன்றும் அந்த ஐஸ்வர்யத்தை சமாதானம் பண்ணிக் கொடுக்குமவன் ஆகையாலே
நியதமும் -என்கிறது -இத்தாலே இ றே –அர்த்தார்த்தி -என்றும் –ஆர்த்தன் -என்றும்
ஐஸ்வர்யத்துக்கு இரண்டு வகை சொல்லிற்று -அங்கன் அன்றிக்கே
தேவதாந்தரங்களைப் பற்றி ஈஸ்வரனை இல்லை செய்யுமன்றும் தந் முகேன
சோறிடுமவன் என்கை -சர்வேஸ்வரன் இட்ட சோற்றை தின்று அவனை இல்லை செய்யும்
க்ர்தக்நர் இ றே சம்சாரிகள் -தன்னை இல்லை செய்யுமன்றும் ரஷிக்கும் உதாரன் இ றே சர்வேஸ்வரன்
அத்தாணிச் சேவகமும் –
அத்தாணி -என்று பிரியாமை –சேவகம் -என்று சேவை
ஐஸ்வர்யார்த்திக்கும் அநவரத பாவநையும் -அந்திம ச்ம்ர்த்தியும் அநந்ய பிரயோஜநோபாதி
கர்த்தவ்யம் இ றே
ஆனால் ஐஸ்வர்ய சாதனத்தையும் –தந்து -என்று பிரயோஜத்தோடு ஒக்க சொல்வான்
என் என்னில்
வெள்ளுயிர் ஆன பின்பு சொல்லுகிறார்கள் ஆகையாலே அந்த சாதனமும் ஸ்வயம்
பிரயோஜனமாய் இ றே இருப்பது -அநந்ய பிரயோஜனனுக்கு ஸ்வயம் பிரயோசனமான
சேவை சாதனமாக்கி கிடீர் ஷூத்தரமான ஐஸ்வர்யத்தை தந்தது என்கை

கையடைக்காயும்
தாரக போஷகங்கள் கீழே சொல்லிற்றாய் -மேல் -போகய பதார்த்தங்களை தந்தபடி சொல்லுகிறது
திருக்கையாலே இட்ட வெற்றிலை பாக்கு என்று இவர்கள் பக்கல் கௌரவத்தாலே
இட்ட சீர்மையை சொல்லுகிறது -சேஷ பூதன் சேஷியை குறித்து இடும் பிரகாரத்தாலே இ றே
சேஷி யானவன் சேஷ பூதனுக்கு இடுவது
கழுத்துக்கு பூணொடு காதுக்குக் குண்டலமும் –
தேகத்தை உத்தேச்யம் என்று இருக்குமவன் ஆகையாலே -தன் உடம்பை அலங்கரித்து
அத்தை அனுபவித்து இருக்குமவன் இ றே ஐஸ்வர்யார்த்தி
பகவத் பரனாய் ஈஸ்வரனை அலங்கரித்து சதா தர்சனம் பண்ணி இருக்கிறான் அல்லனே
ஸ்வரூபத்தை உணர்ந்து -ஜ்ஞான வைராக்ய பக்திகளை ஸ்வரூபத்துக்கு ஆபரணமாக
நினைத்து இருக்கிறான் அல்லனே
கழுத்துக்கு பூணோடு காதுக்கு குண்டலமும் -என்று விசேஷிப்பான் என் என்னில் –
தன் கண்ணுக்கு அவிஷயமாய் -நாட்டார் கொண்டாடும் அதுவே தனக்கு பிரயோஜனமாய்
இருக்கையாலே
அவயவாந்தரந்களிலே -அங்குலீய காத்யாபரணங்கள் தன் கண்ணுக்கு விஷயமாய் இருக்கும் இ றே
பெருமாள் மீண்டு எழுந்து அருளின அளவிலே இந்த்ரன் வரக் காட்டின ஹாரத்தை
பிராட்டியும் தாமும் இருந்து திருவடிக்கு பூட்டினால் போலே -ஈஸ்வரன் பரிந்து
இது கழுத்துக்காம் -இது காதுக்காம் -என்று திருக்கையாலே பூட்டின ஆபரணமும்

ப்ரதேஹி ஸூ ப கே ஹாரம் யஸ்ய துஷ்டாஸி பாமிநீ -என்கிறபடியே இந்த்ரன்
வரக் காட்டின ஹாரத்தை பெருமாள் வாங்கி பார்த்தருளி -பிராட்டிக்கு கொடுக்கிற போது
அத்தை வாங்குகிறவள் -பெருமாளை ஒரு திருக் கண்ணாலும் திருவடியை ஒரு திருக் கண்ணாலும் பார்த்து வாங்கினாள்
ப்ரேஷி தஜ்ஞா ஸ் து கோசலா -என்று பார்வையில் கருத்து அறியுமவர் ஆகையாலே
அவனுக்கு கொடுக்கலாகாதோ -என்று அருளினார் -ஸூ ப கே -அடியார் ஏற்றம் அறிந்து
கொண்டாடுகைக்கு ஈடான சௌபாக்கியம் உள்ளது உனக்கே யன்றோ என்ன –
உம்முடைய திரு உள்ளத்தால் அன்றோ நான் கொடுக்கிறது என்று பிராட்டி விண்ணப்பம்
செய்ய -நான் முற்பாடனாகப் பெறாமையாலே உன்னுடைய உகப்பின் கார்யத்தைக் கொடுக்கல் ஆகாதோ
என்றார் -இப்படி அநந்ய பிரயோஜனனுக்கு ஆதரித்து பூட்டினால் போலே ஆய்த்து
ஷூத்ரனான என்னை ஆதரித்து பூட்டிற்றும்

மெய்யிட
திருவடிகளில் ருசி பிறந்த பின்பு ஆகையாலே -உடம்பு த்யாஜ்யம் என்கிற நினைவு
தோன்ற குத்சித்து சொல்லுகிறபடி
நல்லதோர் சாந்தமும் –
சசாதான் இதுக்கு தரமாகப் பெற்றதோ -சர்வ கந்த -என்கிற வடிவுக்கு ஸ தர்சமாக குப்ஜை
ஆதரித்து சாத்தின சாந்து போலே இருக்கும் சாந்தை அன்றோ எனக்கு இட்டது –
ஸூ கந்த மேதத் -குப்ஜை கம்சனுக்கு பரணியோடே சாந்து கொண்டு போகா நிற்க –
வாரீர் பெண் பிள்ளாய் நமக்கும் நம் அண்ணர்க்கும் சாந்திட வல்லீரோ -என்ன
அவ்வடிவையும் இருப்பையும் கண்டு ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமான சாபல்யத்தாலே மறுக்க மாட்டிற்று இலள் –
இவர்கள் இடைப்பிள்ளைகள் -சாந்தின் வாசி அறிய மாட்டார்கள் -என்று ஆக்கனாய் இருப்பதொன்றை இட்டாள்
அத்தை பார்த்து -நாற்றம் கொளுத்தின படி அழகியது தளம் அழகிதன்று -என்ன
அதுக்கு மேலே யொரு சாந்தை இட -ராஜார்ஹம் -இது கம்சனுக்குசெருக்கிலே
பூசலாம் இத்தனை வாசி அறிந்து பூசுவருக்கு ஸ்தர்சம் அல்ல -அன்றியே
வழக்கனான சாந்து என்னவுமாம்
ருசிரம் -சௌகந்த்யம் கிடக்க நிறம் அழகியதாய் இருந்தது என்ன
இவர்கள் இடைப் பிள்ளைகள் என்று இருந்தோம் -சாந்தின் வாசி அறிந்தபடி என்
என்று ஆதரித்து பார்க்க -ருசிராந நே -உன் முகத்தில் ஆதரத்துக்கு சதர்சமாய் இருக்க
வேண்டாவோ நீ இடும் சாந்து -என்ன -அவளும் தலையான சாந்தை இட –
ஆவ யோர்க்காத்ர சத்ருசம் -எங்கள் உடம்புக்கு ஸதர்சமான மேதக வஸ்துவை இட்டு
மர்த்தித்து தா என்றான் -அதாவது -பூசும் சாந்து -என்கிற படியே உன்னுடைய ஆதரத்தாலே
ச்மச்க்ர்த்தமாக்கி தா என்றபடி -இப்படி இவள் ஆதரித்து சாத்தின மாளிகைச் சாந்தை
கிடீர் தம் திருக் கையால் என் உடம்பில் பூசிற்று-தந்த போதை திருமுகத்தில் கௌரவத்திலும் ஔதார்யத்திலும் தோற்று ஐஸ்வர்யத்தை
விட்டு அவன் தானே யமையும் யென்னும்படியாய் தந்தது
என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல –
சோரேணாத்மாபஹாரிணா -என்கிறபடியே ஆத்ம அபஹாரம் பண்ணி -அதனாலே
ஷூத்ர பிரயோஜன காமனாய் -சம்சாரியாய் போந்த என்னை –
வெள்ளுயிர் ஆக்க வல்ல –
முன்பு ஷூத்ரனாய் போந்தான் ஒருவன் சுத்த ஸ்வபாவன் ஆனான் என்று தெரியாதபடி
அச்ப்ருஷ்ட சம்சார கந்தரிலே ஒருவன் -என்னலாம் படி யாய்த்து விஷயீ கரித்தது
வல்ல-தன்னதொரு ஸ்வபாவ விசேஷத்தாலே வஸ்துவை வஸ்வந்தரம் ஆக்க வல்ல சக்தன் என்கை-பையுடை இத்யாதி-மங்களா சாசனத்துக்கு விஷயம் ஏது என்ன -அவ் விஷயத்தை சொல்லுகிறார்
தன்னோட்டை  ஸ்பர்ச சுகத்தாலே விகஸித பணமான நாகத்தினுடைய பகை உண்டு
பெரிய திருவடி -அவனை கொடியாக உடையவனுக்கு
அநந்த சாயியாய் கருடத்வஜனானவனுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறேன் என்கை
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே திரு வநந்த வாழ்வானோட்டை சேர்த்தியால்
வரும் அழகு நித்ய ஸ்ரீ யாக வேணும் என்றும்
ஏதேனும் ஒன்றை அபேஷித்து வந்தவர்களையும் எனக்காக்கிக் கொள்ள வல்லேன்
என்று கொடி கட்டி இருக்கிற சக்தி நித்ய ஸ்ரீ யாக செல்ல வேண்டும் என்றும்
திருப்பல்லாண்டு பாடுகிறேன் என்கிறார்

அநந்ய  பிரயோஜனரும் -கைவல்யார்த்திகளும் -சங்கதராகிற  இடத்தில் சமூஹமாக பேசினார் –பாடுதும் -கூறுதும் -என்றும்
இதில் ஐஸ்வர்யார்த்தியை ஏக வசனத்தாலே பேசுவன் என் என்னில் –கூறுவன் –என்று
அவர்கள் திரள் பரிச்சின்னமாய் -ஐஸ்வர்த்யார்திகள் திரள் அபரிச்சின்னம் ஆகையாலே
ஒரூருக்கு ஒருத்தன் வார்த்தை சொல்லுமா போலே சொல்லுகிறார்

————————————————————————–

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பல்லாண்டு -7-தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

April 4, 2013

அவதாரிகை-

ஏடு நிலத்திலே இவராலே ஆஹூதரான கைவல்யார்த்திகள் தங்கள் ஸ்வபாவத்தை
சொல்லிக் கொண்டு வர -அவர்களோடே சங்கதர் ஆகிறார் -இவர்களை அழைத்த
போது -வரம்பொழி வந்து ஒல்லைக் கூடுமினோ -என்று நீங்கள் பற்றின புருஷார்த்தத்தை விட்டு
வாரும் கோள் என்றும் -நமோ நாராயணாய -என்று -அநந்ய ப்ரயோஜனராய் வாரும் கோள் என்றும் –
நாடும் நகரும் நன்கறிய -என்று விசேஷஜ்ஞர் பரிகிரஹிக்கும் படியாகவும் -அவிசேஷஜ்ஞர்
உபேஷிக்கும் படியாகவும் வாரும் கோள் என்று இ றே அவர்களை அழைத்தது –
அதில் -ஷூத்ர புருஷார்த்தத்தை விடுகையும் -அநந்ய பிரயோஜனர் ஆகையும் -நம்முடைய க்ர்த்யம்
அனுகூலர் பரிகிரஹிக்கையும் ப்ரதிகூலர் கை விடுகையும் செய்ய வடுப்பது என் என்று பார்த்து
வைஷ்ணவ சிஹ்னமான திரு விலச்சினையைத் தரிக்கவே -த்யாஜ்ய உபாதேயங்கள்
இரண்டும் ஸித்திக்கும் என்று பார்த்து -அத்தைத் தரித்துக் கொண்டு வந்தோம் என்றார்கள் –

தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரத்தின்
கோயில் பொறியாலே ஒற்று உண்டு நின்று குடி குடி ஆட் செய்கின்றோம்
மாயப் பொரு படை வாணனை யாயிரம் தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய வாழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே –7-
தீயில் -சந்திர ஆதித்தியர்களில் காட்டிலும்
பொலிகின்ற -மிக விளங்கா நின்ற
செஞ்சுடர் -சிவந்த தேஜஸை உடைத்தாய்
ஆழி -மண்டல ஆகாரமான
திகழ் -ப்ரகாசியா நின்றுள்ள
திருச் சக்கரத்தின் கோயில் -திரு ஆழி ஆழ்வான் எழுந்து அருளி இருக்கிற கோயிலாய்
பொறியாலே -சிஹ்னத்தாலே
ஒற்று உண்டு நின்று -சிஹ்நிதராய் நின்று
குடி குடி -எங்கள் சந்தானம் எல்லாம்
ஆட் செய்கின்றோம் -அடிமை செய்வதாய் வந்தோம்
மாயப் -க்ரித்ரிமாக
பொரு -போர் செய்யா நின்றுள்ள
படை -சேனையை உடையவனாய்
வாணனை -பாணாசுரனுடைய
யாயிரம் தோளும் -ஆயிரம் தோள்களின் நின்றும்
பொழி குருதி பாயச் -ரக்தமானது மதகு திறந்தால்  போலே புறப்பட்டு ஓடும்படி
சுழற்றிய -சுழற்றின
வாழி -திரு ஆழி ஆழ்வானை நியமிப்பதில்
வல்லானுக்குப் -சமர்த்தன் ஆனவனுக்கு
பல்லாண்டு கூறுதுமே-திருப்பல்லாண்டு பாடுவோம்

வியாக்யானம் –

தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி என்று –
வைஷ்ணவ கோஷ்டியிலே புகுரப் பண்ணின-உபகார ச்ம்ர்த்தியாலே ஆழ்வானைக்
கொண்டாடுகிறார்கள் –
தீயில் பொலிகின்ற -தீ என்கிற சப்தம் சந்திர ஆதித்யாதி தேஜோ பதார்த்தங்கள்
எல்லா வற்றுக்கும் உப லஷணம் -அதில் காட்டில் தேஜஸு வர்த்திகை யாகிறது –
அத்யர்க்கா நலதீப்தம் தத் ஸ்தானம் -என்கிற பரமபதத்தில் தேஜஸு மிக்கு இருக்கக் கடவது –
அதில் காட்டில் அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹ தேஜஸு மிக்கு இருக்கக் கடவது –
அதுக்கு பிரகாசாமாய் இ றே திரு வாழி ஆழ்வானுடைய தேஜஸு இருப்பது –
வடிவார் சோதி வலத் துறையும் சுடர் ஆழி -என்னக் கடவது இ றே
தஸ்ய பாஸா சர்வ மிதம் விபாதி -என்கிற படியே அவனுடைய தேஜசாலே சர்வமும்
விளங்கா நின்றது என்னா நிற்க -திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு இவன் பிரகாசகனாம்படி என் என்னில் –
செஞ்சுடர் –
காளமேக நிபாச்யாமமான வடிவுக்கு இருட்டு அறையிலே விளக்கு ஏற்றினால் போலே
பரபாக ரூபத்தால் வந்த ப்ரகாசத்வத்தை சொல்லுகிறது
ஆழி திகழ் திருச் சக்கரம் –
இட்டளத்தில் பெரு வெள்ளம் போலே புறம்பு போக்கற்று -தன்னிலே -மண்டல ஆகாரமாய்
கொண்டு விளங்கா நின்றுள்ள திருவாழி ஆழ்வான் -என்கை

சக்கரத்தின் கோயில் –
ஆழ்வான் எழுந்து அருளி இருக்கிற மண்டல ஆகாரமான வாஸஸ்தானம்
பொறியாலே ஒற்று உண்டு நின்று -அதாகிறது
சிஹ்னத்தால் சிஹ்நிதராய் நின்று –
திரு இலச்சினை தரித்த பின் இ றே -இவன் ஜன்மாந்தரத்தில் போகாதே -மோஷாந்தரத்தில்-போகாதே -ஸூஸ் திரனாகப் பெற்றது -பகவத் அங்கீகாரமும் இது உண்டானால் இ றே அதிசயிப்பது –
ஸ்ரீ மத் த்வாரகையில் நின்றும் ஆஸ்ரித விரோதி நிரசனமாக எழுந்து அருளுகிற போது
திருவாசல் காக்கின்ற முதலிகள் -மீள எழுந்து அருளும் அளவும் இங்குப் புகுரக் கடவார் யார்-அல்லாதார் யார் -என்று விண்ணப்பம் செய்ய

சக்ரா கிங்தாஸ் பிரவேஷ்டவ்யா யாவதா கமநம் மம
நா முத்ரிதாஸ் வேஷ்டவ்யா யாவதா கமநம் மம-என்று இந்த லஷணம் உடையார் யாவர் சிலர்
அவர்கள் நிச்சங்கமாக புகுரக் கடவர்கள் -அல்லாதாரை -பாவ பரிஷை பண்ணி புகுர விடக்
கடவது என்றான் இ றே கிருஷ்ணன் -இது தான் ஈஸ்வரன் அங்கீகாரத்துக்கும் உடலாய் –
தானும் -நாம் அவன் உடைமை -என்று நிர்ப்பரனாய் இருக்கைக்கும் உடலாய் –
தான் பண்ணின பாபத்தை அனுசந்தித்து க்ரூரமாக பார்க்கக் கடவ யமாதிகளும்
அஞ்சும்படியாய் இருப்பது ஓன்று இ றே –
சக்ராதி தாரணம் பும்ஸாம் பர சம்பந்த வேதனம்
பதி வ்ரதா நிமித்தம் ஹி வலயாதி விபூஷணம் -என்று பகவத் சம்பந்தத்துக்கு ஜ்ஞாபகமாய் இ றே இருப்பது
குடி குடி ஆட் செய்கின்றோம் –
ஸ புத்ர பௌத்ரஸ் ஸ கண -என்கிறபடியே சந்தானமாக அடிமை செய்யக் கடவோமாய் வந்தோம்-இப்படி அநன்யார்ஹராய் இருப்பார் செய்யும் அடிமை யாவது -திருப்பல்லாண்டு பாடுகை இ றே
எந்த அபதாநத்துக்கு நீங்கள் மங்களா சாசனம் பண்ணுகிறது என்னில்
மாயப் பொரு படை இத்யாதி –
எங்களை புகுர நிறுத்தின ஆழ்வான் உடைய வீரப் ப்ரகாசமான துறையிலே திருப்பல்லாண்டு-பாடக் கடவோம் என்கிறார்கள்
மாயப் பொரு படை வாணனை –
ஆச்சர்யமாக பொரும் சேனையை உடைய வாணன் என்னுதல்
ஆச்சர்யமாக பொரும் ஆயுதத்தை உடைய வாணன் என்னுதல்
மாயம் -என்று க்ர்த்ரிமமாய் க்ர்த்ரிமமான யுத்தத்தை உடையவன் என்னவுமாம்
ஆயிரம் தோளும் பொழி குருதி பாய –
ஆயிரம் தோள்களாலும் மதகு திறந்தால்  போலே ரக்த வெள்ளம் குதி கொண்டு பூமிப்
பரப்படைய பரம்பும்படி –பொழிதல் -சொரிதல்
இதுக்கு இவன் பண்ணின வியாபாரத்து அளவு எது என்னில்
சுழற்றிய –
திரு வாழியை விட வேண்டி இற்றில்லை -சுழற்றின இத்தனை –
அவன் ஒருக்கால் திரு ஆழியைச் சுழற்ற வாணனுடைய தோள்கள் ஆயிரமும் ஒருக்காலே
மலைக் கொடுமுடிகள் போலே முறிந்து விழுந்தன –

வாணனுடைய தலையை அறாது ஒழிந்தது குற்றம் போறாமை யன்று
உஷை பித்ர் ஹீநை யாகாமைக்காகவும் –
தேவதாந்தர பஜனம் பண்ணுவாருக்கு பலம் இது என்னும் இடத்துக்கு மச்சமாகவும் –
அதாவது –
பரிவின்றி வாணனைக் காத்தும் என்று பிரதிக்ஜை பண்ணி
யுத்தத்திலே இவனைக் காட்டிக் கொடுத்து -ஸ பரிகரனாய் கொண்டு முதுகு
காட்டிப் போனான் ரஷகன் -ரஷ்ய பூதன் தோள் துணி உண்டான் -உன்னை ரஷிக்கப்
புக்கு நான் பட்டதோ -என்றும் -உன்னை ஆஸ்ரயித்து நான் பட்டதோ -என்றும்
இருவரும் கூடக் கட்டிக் கொண்டு கதறுகை இறே பலமாய் விட்டது –

ஆழி வல்லானுக்கு –
வில் வல்லான் -வாள் வல்லான் -தோள் வல்லான் -என்னுமா போலே
யஸ்ய ஸா ஜனகாத்மஜா -என்கிறபடியே பிராட்டியை எனக்கு என்ன இட்டுப் பிறத்தல்
திருவடி தோளிலே நல் தரிக்க விருத்தல் -கை பேராமல் திரு வாழியைப் பிடித்தல் –
செய்யுமது ஆய்த்து சர்வாதிகத்துவதுக்கு லஷணம்-

பல்லாண்டு கூறுதுமே –
அத்தலையில் அடிமை செய்த ஆழ்வான் உடைய வீர ஸ்ரீக்கும்
அடிமை கொண்ட கிருஷ்ணனுடைய வீர ஸ்ரீக்கும் –
மங்களா சாசனம் பண்ணுவார் பெற்றது இல்லை –
அவ் விழவு தீர இன்று இருந்து திருப் பல்லாண்டு பாடுகிறோம் என்கிறார்கள்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பல்லாண்டு -6–எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

April 4, 2013

அவதாரிகை

அநந்ய பிரயோஜனருக்கும் பிரயோஜநாந்த பரருக்கும் உண்டான நெடு வாசி அறிந்து
இருக்கச் செய்தேயும் அநந்ய பிரயோஜனரை அழைத்த சமனந்தரம் -இவர்களை
அழைக்கைக்கு அடி -உதாராஸ் சர்வ ஏவைத -என்னுமவன் சீலத்தாலும் –
அவனோடு இவர்களுக்கு உண்டான அவர்ஜநீய சம்பந்தத்தாலும் –
இவர்களுக்கும் அவற்றையே  நினைத்து தேங்காதே புகலாம் படியாய் இ றே இருப்பது –
ஆகையாலே -அநந்ய பிரயோஜனரை அழைத்தவோபாதி இவர்களையும் அழைத்தாராய்-நின்றார் கீழ் –

இதில் வாழாளில் அழைத்த அநந்ய பிரயோஜனர் -தங்கள் ஸ்வரூபத்தையும்
ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தியையும் சொல்லிக் கொண்டு வந்து புகுர -அவர்களைக்
கூட்டிக் கொள்ளுகிறார் –
ஏழாட் காலும் பழிப்பிலோம் -என்று பிரயோஜனந்த பரரைக் குறித்து தாம் அருளிச் செய்த-தம்முடைய திரளுக்கு உண்டான ஏற்றத்தை புகுருகிறவர்கள் -தங்களுக்கு உண்டானதாக-சொல்லிக் கொண்டு வந்து புகுருகிறார்கள் -தம் தாம் ஏற்றம் சொல்லிக் கொண்டு வந்து-புகுருகை சாத்விகருக்கு யுக்தமோ என்னில் –ஆழ்வார் உடைய திரு உள்ளம் பயம்-கெடுகைக்காக சொல்லுகிறார்கள் ஆகையாலே யுக்தம்

பன்னகாச நமாகாசே பதந்தம் பஷி சேவிதே-வைநதேய மஹம் சக்த பரிகந்தும் சஹச்ரச -என்று திருவடி ஸ்வ சக்தியை சொன்னான் இ றே-முதலிகள் உடைய பயம் சமிக்கைகாக –

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி
வந்து வழி வழி யாட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
யந்தியம்போதில் யரி வுருவாகி யரியை யழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே -6-

எந்தை -நானும் என் அப்பனும்
தந்தை -அவனுக்கு அப்பனும்
தந்தை -அவனுக்கு அப்பனும்
தந்தை -அவனுக்கு அப்பனும்
தம் மூத்தப்பன் -அவனுக்கு அப்பனும் பாட்டனுமாகிய
ஏழ் படி கால் தொடங்கி -ஏழு தலைமுறை முதல் கொண்டு
வந்து -மங்களா சாசனம் பண்ணுகைக்கு யோக்யமான சமயங்களிலே வந்து
வழி வழி -முறை முறையாக
யாட் செய்கின்றோம் -தப்பாமே அடிமை செய்கின்றோம்
திருவோணத் திருவிழவில் -திருவோணம் என்கிற திரு நாளிலே
யந்தியம்போதில் -அசுரருக்கு பலம் வர்த்திக்கிற அந்திப் பொழுதில்
யரி வுருவாகி -ந்ர்சிம்ஹ ரூபியாய் கொண்டு
யரியை -ஆஸ்ரிதனனான ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு சத்ருவான ஹிரண்யனை
யழித்தவனை-உரு அழித்து பொகட்டவனுக்கு உண்டான
பந்தனை தீர-அணுக்கம் தீரும் படி
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று
பாடுதும்  -பாடுவோம்-

 

வியாக்யானம் –

எந்தை -தானும் தகப்பனுமாக இருவர்
தந்தை தந்தை தந்தை -என்று ஒரு மூவர்
தம் -என்று முடிந்தவனை அனுபாஷிக்கிறது
மூத்தப்பன்-அப்பன் -என்று தமப்பனார் –மூத்தப்பன் -என்று பாட்டனார்
ஆகையாலே அங்கே இருவர் –
ஆக எழுவரையும் சொல்லுகிறது
ஆழ்வார் ஏழ் ஆட் காலும் பழிப்பிலோம் -என்று திரள அருளிச் செய்தார்
இவர்களும் ஏழ் படி கால் -என்று திரள சொல்லா நின்றார்கள்

பிரித்து சொல்லுகிற இதுக்கு பலம் என் என்னில் -ஸ்வ சந்தானத்தில் மங்களா சாசனம்
பண்ணிப் போந்தவர்கள் பக்கல் உண்டான ப்ரீதி அதிசயத்தாலே சொல்லுகிறார்கள்
சஹி வித்யா தஸ்தம் ஜனய திதச் ஸ்ரேஷ்டம் ஜன்ம கரியான் ப்ரம்ஹத பிதா -என்று
வித்யா சந்தானத்தை கொண்டாடுமா போலே -பிதரம் மாதரந்தாரான் -என்று த்யாஜ்யமான-
யோநி சந்தானத்தை கொண்டாடுகை யுக்தமோ என்னில் யுக்தம் –கொண்டாடுகைக்கு
பிரயோஜனம் பகவத் சம்பந்தம் ஆகையாலே -வித்யா சந்தானத்திலும் பகவத் விமுகன் த்யாஜ்யன் அல்லனோ –
ஏழ் படி கால் தொடங்கி –
அர்த்த க்ரமத்தாலே ஏழையும் சொல்லச் செய்தேயும் திரளச் சொல்லுகிறது -ஸ்வ சந்தானத்தில்
உண்டான ஆதர அதிசயத்தாலே
வந்து
மங்களா சாசனம் பண்ணுகைக்கு யோக்யமான தசைகளிலே வந்து
வழி வழி யாட் செய்கின்றோம் –
முறை முறையாக தப்பாமே அடிமை செய்கின்றோம்
இத்தால் -இஸ் சந்தானத்துக்கு மங்களா சாசன விச்சேதம் பிறந்தது இல்லை என்கை

யாஜ்ஞக  சந்தானத்துக்கு த்ரி புருஷ விச்சித்தியாலே அப்ராஹ்மண்யம் சொல்லுமா போலே
மங்களா சாசன விச்சித்தியால் வைஷ்ணத்வ ஹாநி சொல்லும் குறை எங்கள் சந்தானத்தில்-இல்லை என்கிறார்கள் -யஸ்ய வேதஸ் சவேதீச விச்சித்யே தேத்ரி பூருஷம்-சவை துர்ப்ராஹ்ம ணோஜெயஸ் சர்வகர்ம பஹிஷ்க்ர்த -என்னக் கடவது இ றே
வழி வழி -என்று
சாஸ்திர மார்க்கத்தாலும் சிஷ்ட ஆசாரத்தாலும் என்றுமாம்
சாந்திஸ் சாந்திஸ் சாந்தி -என்றும் -பச்யேம சரதஸ் சதம் -என்றும்
சர்வான் தேவான் நமஸ்யந்தி -என்றும் -மங்களா நிப்ர யுஞ்ஜானா -என்றும் சொல்லக் கடவது இ றே

ஆட் செய்கின்றோம் –ஆட் செய்கை யாவது திருப் பல்லாண்டு பாடுகை இ றே
மேலே பந்தனை தீரப் பல்லாண்டு -என்றதை வர்த்தியாக சொல்லுகையாலே
இதுக்கு கீழே தங்களுடைய சந்தானத்தில் ஏற்றம் சொன்னார்களாய் -மேலே –
தங்களுடைய வ்ர்த்தி விசேஷம் சொல்லுகிறார்கள்
திருவோணத் திருவிழவில் –
விசேஷித்து திரு நஷத்ரம் சொல்லாத இடத்துக்கு எல்லாம் இதுவே திரு நஷத்ரமாக கடவது –
திருவோணம் என்கிறது ஜன்ம நஷத்ரம் என்னில் -உகவாதார் அறிந்து அபிசரிப்பர்கள் என்று
அஞ்சி -திருவோணம் என்கிற திரு நாளிலே என்று மறைத்து சொல்லுகிறார்
அந்தியம் போதில் –
தேவர்களுக்கு பலம் ஷீணமாய் -அசுரருக்கு பலம் வர்த்திக்கும் சமயத்திலே
அரி உருவாகி –
ஒரு கால விசேஷம் வேண்டாதே சர்வ காலமும் மங்களா சாசனம் பண்ண வேண்டும் படியான-வடிவை உடையவனாய் நாரசிம்ஹ் வபுஸ் ஸ்ரீமான் -என்றும்
அழகியான் தானே அரி   உருவம் தானே -என்றும்
நரம் கலந்த சிங்கமாய் -என்றும் சொலக் கடவது இ றே
அரியை அழித்தவனை
அரி -என்று சத்ரு –
சஹஜ சத்ருவான ஹிரண்யனை குற்றுயிர் ஆக்கி விடாதே உரு அழித்தவனை
சுகிர்த்து எங்கும் சிந்தப் பிளந்த -என்னக் கடவது இ றே
அவனை அழியச் செய்தது பய ஸ்தானம் ஆகிறது பின்புள்ளார் பகை கொண்டாடுவார் என்னும் அத்தாலே

பந்தனை தீர
துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யன் உடலை கீண்டு பொகுடுகையால் வந்த அனுக்கம் தீர –
திரு வவதரித்த திவசத்தில் உண்டான அபதானம் ஆகையாலே அனுக்கம் என்றது இ றே
பல்லாண்டு
அனுகூலர் வாயாலே ஒருக்கால் மங்களா சாசனம் பண்ண -அவ் வஸ்துவினுடைய
அனுக்கம் போய் நித்தியமாய் செல்லும் என்று இ றே இவர்கள் நினைவு
பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே –
ஒருக்கால் பல்லாண்டு என்றத்தால் பர்யாப்தி பிறவாமையாலே கால தத்வம்
உள்ளதனையும் நித்யமாக செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகையே
எங்களுக்கு வ்ருத்தி என்கிறார்கள்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பல்லாண்டு -5-அண்டக் குலத்துக்கு அதிபதி யாகி -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

April 4, 2013

அவதாரிகை –

முற்பட அநந்ய பிரயோஜனரை அழைத்தார்
கேவலரும் ஐஸ்வர்யார்த்திகளும் பிரயோஜனாந்த பரராய் இருக்கச் செய்தேயும்
கேவலருடைய துர்கதியைக் கண்டு முந்துற அழைத்தார் -இப்பாட்டில் ஐஸ்வர்யார்த்திகளை-அழைக்கிறார்-

அண்டக் குலத்துக்கு அதிபதி யாகி அசுரர் ராக்கதரை
யிண்டைக் குலத்தை யெடுத்துக் களைந்த விருடிகேசன் தனக்குத்
தொண்டைக் குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தை தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே -5-

அண்டக் குலத்துக்கு -அண்ட சமூஹத்துக்கு
அதிபதி யாகி -தலைவனாய்
அசுரர் ராக்கதரை -அஸூர ராஷசர்கள் உடைய
யிண்டைக் குலத்தை -நெருங்கின திரளை
யெடுத்து-சேரத் திரட்டி
களைந்த -நிர்மூலமாகப் போக்கின
விருடிகேசன் தனக்கு-இந்திரியங்களை தன் வசமாக நடத்துமவனுக்கு
தொண்டைக் குலத்தில் -அடிமை செய்யும் குலத்தில்
உள்ளீர் -உளரான நீங்கள்
வந்து
அடி -சர்வேஸ்வரன் திருவடிகளை
தொழுது
ஆயிரம் நாமம் -அவன் திருநாமங்கள் எல்லாம்
சொல்லி-வாயாரச் சொல்லி
பண்டைக் குலத்தை -பகவத் விமுகராய் இருந்த பழைய ஜாதியை
தவிர்ந்து-நான் எனது என்ற நினைவோடு விட்டு
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே -அநேகம் ஆயிரம்  சம்வஸ்தரங்கள்
நித்தியமாய் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணும் கோள்

வியாக்யானம் –

அண்டக் குலத்துக்கு அதிபதியாகி –
தேவதைகள் உடைய ஐஸ்வர்யத்துக்கு எல்லாம் மேலான அண்டாதிபத்யம் இ றே
ஐஸ்வர்யத்துக்கு மேல் எல்லை-அந்த ப்ரஹ்மா ஈஸ்வரனை ஆஸ்ரயிக்கும் ப்ரகாரம் சொல்லுகிறது
அண்டாதி பதயே நம -என்று இ றே இப்பத ப்ராப்திக்கு சாதன மந்த்ரம் -அந்த அண்ட
ஐஸ்வர்ய விசிஷ்டனாய் இ றே சர்வேஸ்வரனை அனுசந்திப்பது -வ்யாஹ்ர நமநுஸ்மரன் -என்கிறபடியே இம் மந்த்ரத்தை சொல்லவும் -நெஞ்சாலே ஐஸ்வர்ய விசிஷ்டனாக
அனுசந்திகவும் மாய் இ றே ஆஸ்ரயண பிரகாரம் இருப்பது

அறவனை ஆழிப்படை அந்தணனை என்று ஸுத்தி குண யோகத்தை சொல்லுவாரைப் போலே-அண்டக் குலத்துக்கு அதிபதியான
ஆகாரமே யன்றோ இச் சப்தத்தில் உள்ளது -ஆஸ்ரயண பிரகாரம் தோற்ற இருந்தது
இல்லையே என்னில் -உதாரனாய் இருப்பான் ஒருவன் கையிலே எலுமிச்சம் பழம்
இருந்தால் -இது இருந்த அழகு என் -என்று சொன்ன அளவிலே -பாவஜ்ஞ்ஞனாய் இருக்குமவன் -கொள்ளலாகாதோ -என்று கருத்து அறிந்து கொடுக்கும் இ றே -அப்படியே
அண்டாதிபத்யத்தில் அபேஷை உண்டு என்று தங்கள் அபேஷையை ஆவிஷ்கரிக்கிறார்கள் –
இத்தால் பிரயோஜனாந்த பரரைக் குறித்து –உதாரா -என்னுமவனுடைய ஔ தார்யம் பிரகாசிக்கிறது
அண்டக் குலத்துக்கு
அண்டா நாந்து சஹாஸ்ராணாம் -என்று தொடங்கி -கோடி கோடி சதா நிஸ -என்று
அசங்க்யாதமான அண்டங்களுக்கு நிர்வாஹன் ஆகையாலே அபேக்ஷித்தார்  அபேஷித்த-அண்டங்களை கொடுக்கைக்கு உடைமையை சொல்லுகிறது
அதிபதியாகி –
உபய விபூதிக்கும் நிர்வாஹன் ஆகை
ஆகி –
ஆஸ்ரிதர் தன்னை அனுசந்தத்தித்த அளவிலே யாயிருக்கை –
ஐஸ்வர்யார்த்தி ஐஸ்வர்ய விசிஷ்டனாக அனுசந்தித்தால் அவ்வளவாய் இருக்கும்
கைவல்யார்த்தி அஸ்ப்ர்ஷ்ட சம்சார கந்தனாக அனுசந்தித்தால் அவ்வளவாய் இருக்கும்

அசுரர் இராக்கதரை
இப்பதத்துக்கு அசுரர்களாலே வேத அபஹார ஆபத்துக்களில் களை யறுத்துக் கொடுக்கையும்
ரஷகனுக்கு பரம் இ றே –ஆர்த்தன் -என்றும் அர்த்தார்த்தி -என்றும் -ஐஸ்வர்ய புருஷார்த்தம்
இரண்டு முகமாய் இ றே இருப்பது -அதில் அர்த்தார்தியை கீழே சொல்லி -இவ் வம்சத்தினாலே
ஆர்த்தனை சொல்லுகிறது -ஜன்ம ப்ரப்ர்த்தி பரா நர்த்தமே பண்ணிப் போருவது இரண்டு வர்க்கம் இ றே –

சம்பந்தம் ஒத்து இருக்க நிரசநத்திலே இழிகிறது ஆஸ்ரித விரோதிகள் என்று இ றே
இன்டைக் குலத்தை
மிகவும் நெருங்கின திரளை -இண்டர் -என்று சண்டாளர் –

இவர்களை சண்டாளர் என்று சொல்லுகிறது -நிஹீனர் என்னும் நினைவாலே
உத்க்ர்ஷத்துக்கு எல்லை -பர ச்ம்ர்த்தி ஏக பிரயோஜனாய் இருக்கை
நிகர்ஷத்துக்கு எல்லை -பர அனர்த்தமே யாத்ரையாய் இருக்கை
இவ் வாபத்துக்களிலே அஸூர சத்ரவே நம -என்று இ றே இவர்களுடைய
ஆசஸ்ரயண பிரகாரம் இருப்பது

எடுத்துக் களைந்த
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -என்னுமா போலே ஆஸ்ரிதர் பக்கல் அழல்
தட்டாதபடி நிரசிக்கை -களைந்த என்றால் போதாதோ எடுத்துக் களைந்த என்றது பொல்லா அரக்கன் போலே –
இலங்கை பாழாளாக -என்றதும் -விபீஷண பரிக்ரஹத்துக்கு ஒரு நோவு வராதபடி இ றே
விபீஷண க்ரஹத்துக்கு அழல் தட்டாதபடி இ றே லங்கா தஹனம் பண்ணிற்று திருவடியும்
இருடிகேசன் –
பிரயோஜனாந்த பரருக்கு ஐஸ்வர்யாதிகளில் கர்ம அனுகூலமாக ருசியைப் பிறப்பிக்கும் -தன் பக்கலிலே ந்யச்த பரராய் இருப்பவருக்கு ஸ்வரூப அநுரூபமாக ருசியைப் பிறப்பிக்கும் –
ஐஸ்வர்யார்த்தமாக அவன் பக்கலிலே கண் வைக்கும் போதே அவன் வடிவு அழகிலே உறைக்க வையும் கோள்
அவன் -மமேதம் -என்கிற அபிசந்தியைக் குலைத்து தன் பக்கலிலே ருசியைப் பிறப்பிக்கும்
அத்தாலே அபேஷித்த ஐஸ்வர்யத்தை விஸ்மரித்து அவன் தன்னையே பற்றலாம்

தனக்குத் தொண்டைக் குலத்தில் உள்ளீர் –
இப்படி ஐஸ்வர்யத்தில் ப்ரேமம் போய் பகவத் பிரேம யுக்தர் உடைய திரளிலே உளரான நீங்கள்
தொண்டைக்குலம் என்று தனியே ஒரு சந்தானம் போலே காணும்
தேஹமே ஸ்வரூபம் என்று இருப்பாருக்கும் -சேஷத்வமே ஸ்வரூபம் -என்று இருப்பாருக்கும்
இத்தனை வாசி உண்டு இ றே -இனி அநந்ய ப்ரயோஜனராய் இருப்பாருக்கு க்ர்த்த்யம் இன்னது என்கிறார் மேல்
வந்தடி தொழுது –
திருவடிகளே பிரயோஜனமாக வந்து -அநுகூல வ்ர்த்திகளைப் பண்ணி -ஐஸ்வர்யமே பிரயோஜனமாய்
விஷய அனுபவமே யாத்ரையாய் இருக்கும்படி பாரும் கோள்
ஆயிர நாமம் சொல்லி –
இரண்டு திருநாமத்தையே நிர்பந்திக்க வேண்டுவது -மமேதம் -என்று இருக்கும் அன்று இ றே
ததேவம் -என்கிற புத்தி பிறந்தால் பகவத் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திருநாமங்கள்
எல்லாம் போக்யமாய் இ றே இருப்பது -அவற்றை வாயாராச் சொல்லி –

பண்டைக் குலத்தை தவிர்ந்து
தொண்டைக் குலத்தை வந்து அன்வயித்தவாறே -மமேதம் -என்று இருந்த காலம் ஜன்மாந்தரமாய்
தோற்றும் இ றே -ஒரு ஜன்மத்தில் த்விஜன்மன் ஆகிறான் இ றே
ராஜர்ஷியான விஸ்வாமித்திரன் அந்த ஜன்மத்திலே ப்ரஹ்மர்ஷியானான் இ றே
அங்கு தபஸாலே வர்ண பேதம் பிறந்தது
இங்கு பகவத் ப்ரசாதத்தாலே ஸ்வரூப பேதம் பிறந்தது
உனக்கு நான் -என்ற அநந்தரம் -நான் எனக்கு -என்ற விது வ்யதிரேகமாய் தோன்றும் இ றே
பல்லாண்டு –
இப்படி அநந்ய  பிரயோஜனரான நீங்கள் மங்களா சாசனம் பண்ணும் கோள்
பிரயோஜனாந்த பரனாய் போந்தவன் நமக்கு ஆஸாசிக்கும் இத்தனை பரிவனாகப் பெற்றோமே
என்று அவன் குளிர நோக்கும் –
பல்லாயிரத்தாண்டு என்மினே-
பின்னை பல்லாயிரத்தாண்டு என்னும் கோள் –
அந்நோக்கு அழகு நித்திய ஸ்ரீ யாய் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணும் கோள்
உங்களுக்கு இம் மாத்ரத்தாலே ஸ்வரூபமும் -அத்தாலே ஈஸ்வரனுக்கு ச்ம்ர்த்தியும்
உண்டாகப் பெற்றால் ஆறி இருக்கிறது என் -சடக்கென மங்களா சாசனம் பண்ணும் கோள் என்கிறார் –

————————————————————————–

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பல்லாண்டு -4—ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

April 3, 2013

அவதாரிகை –

ஏடு இத்யாதி –
கீழே அநந்ய பிரயோஜனரை அழைத்தார் -அவர்கள் மங்களா சாசனத்துக்கு பிரத்யாசன்னர்
ஆகையாலே நீரிலே நீர் சேர்ந்தால் போலே சேர்ந்து இருக்கும் இ றே -அவ்வளவிலும்
பர்யாப்தி பிறவாமையாலே -ஈஸ்வரன் கை பார்த்து இருக்குமவர்கள் -என்னும் இவ்வளவைக்
கொண்டு ஆப்த ப்ராப்தி காமரையும் ஐஸ்வர்ய காமரையும் அழைக்க கோலி -அதில்
முந்துற ஆத்ம ப்ராப்தி காமரை அழைக்கிறார் -ஐஸ்வர்யத்தில் காட்டில் ஆத்ம ப்ராப்தி
உத்க்ர்ஷ்டம் என்றும் நினைவாலே அழைக்கிறார் அல்லர் -அந்த மோஷத்தை இவர் அநர்த்தம்
என்று இருக்கையாலே -இனி எத்தாலே முற்பட அழைகிறது என்னில் –
பகவத் சம்பந்தத்துக்கு உபகரணமான சரீர மோஷம் அணித்தாகையாலும் -அம் மோஷத்தை
ப்ராபித்தால் மீள ஒண்ணாமை யாலும் -ஐஸ்வர்ய காமனுக்கு காலாந்தரத்திலே யாகிலும்
பகவத் சம்பந்தம் பண்ண யோக்யதை உண்டாகையாலும் -இவனுக்கு அந்த யோக்யதையும்
அழிகை யாகலும் துர்கதியைக் கண்டு முற்பட அழைக்கிறார்
பிரயோஜனாந்தர பரர் -மங்களா சாசனம் பண்ண வாரும் கோள் -என்றால் வருவார்களோ வென்னில்
பகவத் ப்ராப்தியில் உத்க்ர்ஷத்தையும் -அத்தைப் பற்ற கைவல்யத்தினுடைய நிகர்ஷத்தையும்
அறிவித்தால் -விட்டுப் பற்ற வேணும் -என்னும் ஆத்ம குணோ பேதரை இ றே இவர் அழைக்கிறது –

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடும் மனம் உடையீர்கள் வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடு நரகமும் நன்கு அறிய நமோ நாராயணா என்று
பாடு மனமுடைப் பத்தர் உள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே -4-

ஏடு -பொல்லாங்கான
நிலத்தில் -மூல பிரக்ருதியிலே
இடுவதன் முன்னம் -சேர்ப்பதருக்கு முன்னே
வந்து
எங்கள் குழாம் -அநந்ய பிரயோஜனரான எங்கள் திரளிலே
புகுந்து
கூடும் மனம் உடையீர்கள் -கூட வேண்டும் என்ற நினைவு உடையவர்களாய் இருப்பீர் ஆயின்
வரம்பு ஒழி -வரம்பு ஒழிய
வந்து ஒல்லைக் கூடுமினோ -விரைவாக வந்து சேரும் கோள்
நாடு -நாட்டில் உள்ள அவிசேஷஜ்ஞரும்
நரகமும் -நகரத்தில் உள்ள விசேஷஜ்ஞரும்
நன்கு அறிய -நன்றாக அறியும் படி
நமோ நாராயணா என்று
பாடும் -பாடத்தக்க
மனமுடை-மனஸ் உண்டாம்படியான
பத்தர் உள்ளீர் -பிரேமத்தை உடையீர் ஆகில்
வந்து பல்லாண்டு கூறுமினே -வந்து பல்லாண்டு பாடும் கோள் என்கிறார்

வியாக்யானம் –

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்
ஏடு என்பது பொல்லாங்கு -உங்களைப் பொல்லாங்கு நிலத்தில் இடுவதன் முன்னம் -என்று பிள்ளை அமுதனார் –
ஏடு -என்கிற சூஷ்ம சரீரத்தை -ஸ்தூல சரீரத்தை காட்டில் பிரதானமாய் -அதனுடைய
பிரயோஜனமாய் நிற்கையாலே -பாலில் ஏடு -என்னுமா போலே -சொல்லுகிறது
நிலத்தில் இடுவதன் முன்னம் –
ஸ்வ காரணமான மூல பிரக்ருதியிலே லயிப்பதற்கு முன்னே –
இது நிர்வஹித்து போரும்படி
ஏடு -என்று உடம்புக்கு பேராய் -ஸ்தூல சூஷ்ம ரூபமான சரீரம் ஸ்வ காரணமான
மூல பிரக்ருதியிலே லயிப்பதருக்கு முன் என்னவுமாம் –
இவ்வாக்யத்தால் அவர்கள் அநர்த்தத்தை கண்டு அழைக்கிறார் என்னும் இடம் தோற்ற இருக்கிறது இ றே

வந்து
ஸ்வதந்த்ரராய் இருப்பாருக்கு தம்மளவிலே வரும் இடத்தில் உண்டான தூரத்தை சொல்லுகிறது
எங்கள் குழாம் புகுந்து –
கேவலரும் ஒரு சமஷ்டியாய் இறே இருப்பது -அது ஸ்வதந்த்ரம் ஆகையாலே அந்யோன்யம்
சேர்த்தி அற்று இருக்கும் -ஒருத்தருடைய ச்ம்ர்த்தி ஒருத்தரதாய்  இ றே இத் திரள் இருப்பது –
பரஸ்பர நீஸ பாவை -என்னக் கடவது இ றே
இத்திரளில் புகுவாருக்கு எவ்வதிகாரம் வேணும் என்னில்
கூடும் மனம் உடையீர்கள் –
புகுருவோம் என்ற நினைவே வேண்டுவது
அவி லஷணமான புருஷார்தங்களுக்கு புரச் சரணங்கள் கனக்க வேண்டி இருக்க
அதில் விலஷணமான இத் திரளிலே புகுருகைக்கு புரச் சரணம் வேண்டாது இருப்பது என்
என்னில் -அவை அப்ராப்த புருஷார்த்தங்கள் ஆகையாலே புரச் சரணங்கள் அபேஷிதங்களாய் இருக்கிறன
இது ஸ்வரூப ப்ராப்தம் ஆகையாலே வேண்டா-உடையீர்கள்-
இந்த இச்சையால் வந்த பிரயோஜன அதிசயத்தாலே -வைஸ்ரவணன் -என்னுமா போலே
அருளிச் செய்கிறார் -கூட நினைப்பார்களுக்கு செய்ய வேண்டுவது முன்பு நின்ற சிறுமையை குலைத்து வர வேணும்
வரம்பு ஒழி வந்து
வரம்பு ஒழிய என்கிற இது வரம்பு ஒழி -என்று கிடக்கிறது

சர்வேஸ்வரனுக்கு பிரகார பூதனாய் -அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை
அனுபவிக்க இட்டுப் பிறந்தவன் -ஜரா மரண மோஷாயா -என்று ஸ்வ அனுபவத்தளவிலே
ஒரு வரம்பை இட்டுக் கொண்டான் இ றே -அத்தை ஒழிந்து வாரும் கோள் -என்கிறார் –
ஒல்லைக் கூடுமினோ –
பற்றுகிற புருஷார்தத்தின் உடைய வை லஷண்யத்தை அனுசந்தித்தால் பதறிக் கொண்டு
வந்து விழ வேண்டாவோ –
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் -என்றது சரீரத்தில் அஸ்தைர்யத்தை பற்ற –
இங்கு ஒல்லை -என்கிறது -பற்றுகிற விஷயத்தினுடைய வை லஷண்யத்தைப் பற்ற –
கூடும் மனம் உடையீர்கள்  -என்றும் –கூடுமினோ -என்றும் -அருளிச் செய்கிறார் இ றே
யோக்யதையைப் பற்ற –
அத்திரளில் நின்றும் -பிறிகதிர் பட்டார் சிலர் இவர்கள் என்றும் தோற்றும் இ றே

ஸ்வரூபம் வெளிச் செறித்தக்கால் -விளங்க நிற்றல் –
நாடு நகரமும் நன்கறிய –
இத்திரளிலே புகுருகைக்கு வேண்டுவன அருளிச் செய்தார் -இதுக்கு மேல் மங்களா சாசனத்துக்கு
வேண்டுவன அருளிச் செய்கிறார் –நாடு -என்று அவிசேஷஜ்ஞரை சொல்லுகிறது –
நகரம் -என்று விசேஷஜ்ஞரை சொல்லுகிறது –
ராஜாவுக்கு ப்ரத்யா சந்னர் இ றே நகரஸ்தர் -நாட்டார் தூரஸ்தர் இ றே -ஆகையாலே அருளிச் செய்கிறார்
நன்கறிய –
நன்றாக அறிய –
பகவத் ப்ரத்யா சத்தியாலே அவிசேஷஜ்ஞர் விடும்படியாகவும் -அது தானே ஹேதுவாக
விசேஷஜ்ஞர் பரிக்கிரஹிக்கும் படியாகவும் –
நன்கறிய –
இந் நன்மையை அறிய என்றுமாம்
நாமோ நாராயணா என்று
இவ்வளவும் போராது -தன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்து ஸ்வரூப அனுரூபமான
கைங்கர்யத்தை பெற வேணும் -என்று வைஷ்ணவனாய் வர வேண்டும் என்று –
அஹமபிநமம -பகவத ஏவாஹமஸ்மி -என்று இ றே  நமஸ் சப்தத்துக்கு அர்த்தம் இருப்பது
ஸ்வாமி பக்கல் பண்ணும் அநுகூல வ்ர்த்தி இ றே புருஷார்த்தம் ஆவது –
பாடு மனமுடைப் பத்தருள்ளீர்
நினைத்து இருக்கும் அவ்வளவு போராது
ப்ரீதிக்கு போக்கு விட்டுப் பாடுவோம் என்னும் நெஞ்சு உண்டாம் படியான பிரேமத்தை
உடையீர் ஆகில்
வந்து பல்லாண்டு கூருமினோ
வந்து திருப்பல்லாண்டு பாடும் கோள்
இத்திரளிலே புக வேணும் என்று இருப்பீர் -அத்தை செய்யும் கோள்
அவ்வளவு போராது -உங்களுடைய வ்ருத்தி விசேஷமும் பெற வேணும் என்று இருப்பீர்
திருப்பல்லாண்டு பாடும் கோள் -என்று க்ரியையை இரண்டாக்கி நிர்வஹிக்கவுமாம்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பல்லாண்டு -3–வாழாட் பட்டு உள்ளீரேல்—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

April 2, 2013

அவதாரிகை –

கீழ் இரண்டு பாட்டாலே தாம் திருப்பல்லாண்டு பாடினார்
இனிமேல் தம்முடைய மங்களா சாசனத்தாலே தமக்கு பர்யாப்தி பிறவாமையாலே
சதுர்விதா பஜந்தே மாம் -என்கிறபடியே -ஐஸ்வர்ய கைவல்ய பகவத் சரணார்திகள்
மூவரையும் கூட்டிக் கொள்வாராக நினைத்து -அதில் மங்களா சாசனத்துக்கு பகவத் ப்ராப்தி காமர்-ப்ரத்யாசன்னர் ஆகையாலே அவர்களை அழைக்கிறார் -ஏகஸ் சாது ந புஞ்ஜீத -என்கிற-ந்யாயத்தாலே -இம் மங்களா சாசன ரசம் எல்லாரும் புஜிக்க வேணும் என்கிற நினைவாலே-அழைக்கிறார் என்றுமாம்
அவர்களோடே கூட மங்களா சாசனம் பண்ணுகை தமக்கு தாரகம் ஆகையாலும் என்றுமாம் –
அடியார்கள் தங்கள் இன்பமிகு பெரும் குழுவு கண்டு -என்றும் –
அடியார்களை உடன் கூடுவது என்று கொலோ -என்றும்
கண்ணாலே காண்கையும் -அத் திரளிலே புகுருகையும் -இவை எல்லாம் உத்தேச்யமாய் இ றே இருப்பது-

வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே -3-

வாழ் ஆள்-கைங்கர்ய ரூபமான போகத்துக்கு
பட்டு -பொருந்தி
உள்ளீரேல்  -இருப்பீர்கள் ஆனால்
வந்து -விரைவாக வந்து
மண்ணும் -திரு முளைத் திரு நாளுக்குப் புழுதி மண் சுமக்கையும்
மணமும்  -அந்தக் கல்யாணத்துக்கு அபிமாநியாய் இருக்கையும்
கொண்மின் -நீங்கள் ச்வீகரியும் கோள்
கூழ் -சோற்றுக்காக
ஆள் பட்டு -அடிமை ஓலை எழுதிக் கொடுத்து
நின்றீர்களை -கண்ட இடம் எங்கும் நிற்கிற உங்களை
எங்கள் குழுவினில் -அநந்ய ப்ரயோஜனரான எங்கள் திரளிலே
புகுதல் ஓட்டோம் -சேர ஓட்டோம்
உங்கள் திரளுக்கு வாசி என் என்ன –
ஏழாட் காலும்-முன் ஏழ் பின் ஏழ் நடு ஏழ் ஆகிய இருப்பதொரு தலைமுறையிலும்
பழிப்பிலோம் -ப்ரயோஜன பரர் என்றும் -சாதனாந்த பரர் என்றும் -பழிக்கப் படாதவர்கள் என்ன
நாங்கள்
அது உங்கள் தொழில் கண்டு அறிய வேணும் என்ன
இராக்கதர் வாழ் -இராட்ஷசர் வர்த்திக்கிற
இலங்கை -இலங்கையானது
பாழாளாகப் -ஆள் பாழாம் படியாக
படை -யுத்தத்திலே
பொருதானுக்கு-அன்று எதிரிகள் அம்பு மார்விலே தைக்கும்படி பொருதவனுக்கு
பல்லாண்டு கூறுதுமே -இன்று இருந்து மங்களா சாசனம் பண்ணிப் போருவோம்
சிலர் நாங்கள் என்கிறார் –

வியாக்யானம்-

வாழ் ஆள் -என்று
நிரதிசய ஸூக ரூபமான வ்ர்த்தியைச் சொல்லுகிறது
வ்யதிரிக்த விஷயங்களில் அடிமை -துராராதனம் ஆகையாலும் -துஸ்சகம் ஆகையாலும் –
அத்யல்ப பலம் ஆகையாலும் -துக்க ரூபமாய் இ றே இருப்பது
சர்வம் பரவசம் துக்கம் -சேவாஸ் ஸ்வவ்ருத்தி –நாய் தொழில் -என்னக் கடவது இ றே
இவ்விஷயம் தன்னிலும் ப்ரயோஜனாந்த பரராய் இழிந்தால் பலம் பந்தகம் ஆகையாலும்
அநந்ய பிரயோஜநரோ பாதி -அநவரத பாவனையும் -அந்திம பிரத்யமும் -வேண்டுகை யாலும்-துக்க ப்ராயமுமாய் இருக்கும் -சாதனாந்தர நிஷ்டனுக்கும் கர்த்தவ்ய புத்தியாலே ரசம் இல்லை –
இக்குறைகள் ஒன்றும் இன்றிக்கே -ப்ராப்த விஷயத்தில் தன்னைப் பேணாதே பர ச்ம்ர்த்தியை ஆஸாசிக்க
சர்வ நிரபேஷனான ஈஸ்வரன் இத்தைக் கண்டு -இதொரு ப்ரேம ஸ்வபாவம் இருந்தபடி என் –
என்று ப்ரீதனாக -இவனுக்கு அந்த ப்ரீதியே புருஷார்த்தமாய் இ றே இருப்பது –

பட்டு -என்பது-
உவரிக்கடலில் முத்துப் பட்டது என்னுமா போலே -நான் -எனக்கு -என்று இருக்கிற
சம்சாரத்திலே பகவத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கும்படி கை ஒழிந்து இருப்பார் சிலரை
பெறுகையாவது அலாப்ய லாபம் என்னும் இடம் தோற்ற அருளிச் செய்கிறார்-

நின்றீர்-
வாயு பரவசமாய் திரிகிற த்ர்ணம் போலே கர்ம பரதந்த்ரனாய் திரிகிற சம்சார சேதனனுக்கு
பகவத் ஜ்ஞான பூர்வகமாக தத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கப் பெற்றால் இ றே ஸ்திதி உண்டாவது –

உள்ளீரேல்-
ஸ மஹாத்மா ஸூ துர்லப -என்று அநந்ய பிரயோஜனரை கிடையாது என்று சர்வேஸ்வரன் கை விட்ட
சம்சாரம் ஆகையாலே மங்களா சாசனத்துக்கு ஆள் தேட்டமாய் இ றே இருப்பது
நாக பாசத்தில் அன்று அடைய மோஹித்துக் கிடக்க திருவடியும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பிராணன் உடையார் உண்டோ -என்று தேடினால் போலே சம்சாரத்தில் ஸ்வரூப ஞானம் உடையார்
தேட்டமாய் இ றே இருப்பது –
இந்த யதி -சப்தத்தாலே -சம்சாரத்தில் வைஷ்ணத்வம் துர்லபம் என்றது ஆய்த்து

அநந்ய பிரயோஜனரான வைஷ்ணவர்களும் -நம்மை விரும்புவார் சிலர் உண்டாவதே -என்று
சந்நிஹிதராக வந்து அவர்களுடைய ஸ்வரூப ஸ்வாபவம் ஆராய்வதற்கு முன்பே அவர்களோடு
கலந்துகொடு நிற்க வேண்டும்படியான த்வரை சொல்கிறது
மண்ணும் மணமும் கொண்மின் -என்கிறார் –
மண்ணுக்கும் மணத்துக்கும் உரியார் அந்தரங்கரான அடியார் இ றே
அடிமை விலையோலை எழுதும் பொழுதும் -மண்ணுக்கும் மணத்துக்கும் உரியனாக வேணும்
என்று இ றே எழுதுவது –
மண்ணாவது -ஸ்வாமிக்கு ஒரு மங்களம் உண்டானால் அங்குரார்ப் பணத்துக்கு புழுதி மண் சுமக்கை
அந்த ந்யாயத்தாலே இ றே நம் ஆழ்வார்களுக்கு அது க்ர்த்யம் ஆகிறது
மணமாவது -அந்த கல்யாணத்துக்கு தான் அபிமாநியாய் இருக்கை
இவ்விரண்டும் சர்வ கைங்கர்யத்துக்கும் உப லஷணம்
கொண்மின் -என்ற இடத்தால் -வாங்குமின் என்னாது கொள்மின் என்றது –
அடிமை செய்யுமிடத்தில் கிடந்தானை கண்டேறுகை-ஸ்வ தந்த்ரனாகை -யன்றிக்கே  சிலர் தரக் கொள்ள
வேணும் யென்கையும் -தருமவர்களும் -உங்களதான அடிமையை நீங்கள் ச்வீகரியும் கோள்
என்று சீரிதாகக் கொடுக்கக் கடவர்கள் யென்கையும் ஆகிற சாஸ்த்ரார்த்தையும் வெளியிடுகிறது

கூழ் ஆள் இத்யாதி-
இவர் அழைத்த வாசி அறியாதே பிரயோஜனாந்தபரர் அடையப் புகுர தொடங்கிற்று –
அவர்களை நிஷேதிக்கிறார் –கூழ் ஆள் -என்று சோற்றுக்காக யாரேனுக்கும் தன்னை
எழுதிக் கொடுக்கை -இது பிரயோஜனாந்த பரருக்கும் உப லஷணம் -தன்னை பகவத் தாஸ்ய
ஏக போகன் -என்னுமிடம் அறியாதே பிரயோஜனாந்தரங்களைக் குறித்து அவன் தன்னையே
ஆஸ்ரயிக்கிறார்கள் இ றே –
கூழ் ஆள் -என்று அநந்ய பிரயோஜனராய் இழிந்து பிரயோஜநாந்தரங்களை வேண்டிக் கொள்ளும்
இரு கரையரைச் சொல்லுகிறது -என்றுமாம் –
பட்டு -என்றது
அகப்பட்டேன்  -என்றபடி –
அதாவது பந்தகம் ஆகையாலே -ஸ்வரூப விரோதியாய் அனர்த்தததை பண்ணும் என்னுமத்தாலே சொல்லுகிறது –
நின்றீர்களை -பஹூ வசனத்தாலே -உள்ளீரேல் -என்று தேட வேண்டாதே பார்த்த பார்த்த
இடம் எங்கும் பிரயோஜனாந்த பரராய் இருக்கை

எங்கள் குழு -என்று
இத் திரளுக்கு உண்டான வ்யாவ்ர்த்தி தோற்ற அருளிச் செய்கிறார் –
தேகாத்ம அபிமாநிகள் -தேவதாந்திர ப்ரவணர் -இவ்விஷயம் தன்னிலே புகுந்து
பிரயோஜநாந்தரங்களை அபேஷிப்பார் -அநந்ய ப்ரயோஜனராய் சாதனாந்தரங்களிலே
அநந்ய பரராய் இருப்பார் ஆகிற திரள்கள் எல்லாவற்றிலும் வ்யாவர்த்தமாய் அன்றோ
எங்கள் திரள் இருப்பது என்கிறார் –
புகுதல் ஓட்டோம் –
ஆரே புகுவார் -என்று ப்ரார்த்திக்கிற இவர் -நிர்த்தயரைப் போலே புகுதல் ஒட்டோம்
என்பான் என் என்னில் -வசிஷ்டன் பரம தயாளன் ஆனாலும் சண்டாளனை அக்நி
கார்யத்திலே கூட்டிக் கொள்ளான் இ றே
இத்தால் அநந்ய பிரயோஜனருக்கு பிரயோஜன பரரோட்டை சஹ வாஸம் அசஹ்யமாய்
இருக்கும் என்றது ஆய்த்து
எங்கள் திரளில் காட்டிலும் உங்கள் திரளுக்கு வாசி என் என்னில் –
ஏழ் ஆள் காலும் பழிப்பிலோம் -என்கிறார்
ஏழ் ஆள் -என்று தமக்கு கீழே ஒரு மூன்றும் -மேலே ஒரு மூன்றும் -தாமுமாக ஏழு படியைச் சொல்லுகிறது
இஸ் சமுதாயத்தை பற்றி சாஸ்திரங்கள் சப்த சப்த ச சப்த -என்று இந்த ஏழையும்
இதுக்கு கீழே ஓர் ஏழையும் -இதுக்கு மேலே ஓர் ஏழையும் -ஆக இருப்பதொரு படி காலைச் சொல்லுகிறது

தசபூர்வாந்த சாபரா நாத்மா நஞ்சைக விம்சதிம் பங்க்திஞ்ச புநாதி -என்று முக பேதேன
சாஸ்திரம் சொல்லிற்று –
ஏழாட் காலும் -என்கிற சப்தம் இவ்வளவை நினைக்கிறது -இத்தால் ஒரு சந்தாநத்திலே
ஒருவன் அநந்ய பிரயோஜனன் ஆனால் அவனைப் பற்ற பகவத் பிரபாவம் சம்பந்தி
சம்பந்திகள் அளவும் செல்ல கீழும் மேலும் வெள்ளம் இடுகிறது
பழிப்பிலோம் –
விஷயாந்தர ப்ராவண்யம் என்ன -தேவதா ந்தர பஜனம் என்ன -இவை தூரதோ நிரச்தம்
ஆகையாலே பதர் கூட்டித் தூற்ற வேண்டா
இனி அநந்ய ப்ரயோஜனராய் அநந்ய சாதநராய் இருப்பாருக்கு பழிப்பு ஆவது
பிரயோஜனாந்தர பரதையும் சாதநாந்தர பரதையும் இ றே
அவற்றை உடையோம் அல்லோம் என்கிறார்
நாங்கள்
எங்கள் குழுவு -என்ற போதை செருக்குப் போலே பகவத் விஷயீ காரத்தால் வந்த செருக்கு
தோற்ற சொல்லுகிறார் –
உங்கள் ஸ்வரூபம் நீங்கள் சொன்ன அளவில் விஸ்வசித்து இருக்குமத்தனை யளவு
யடியோம் அல்லோம் -உங்கள் வ்ர்த்தி விசேஷத்தைக் கொண்டு உங்களை அறிய வேணும் என்ன –
அது நீங்கள் அறியும் புடை யல்ல -எங்கனே என்னில் -ஒரு கார்யப்பாடாக உள்ள அமங்களங்கள்
போக மங்களா சாசனம் பண்ணும்படி யாதல் -இல்லாத மங்களங்கள் உண்டாக வேணும் என்று
மங்களா சாசனம் பண்ணுதல் செய்யும் அளவு இ றே நீங்கள் அறிவது -முன்பு வ்ய்ர்த்தமாய்
கழிந்த செயலுக்கு இன்று இருந்து வயிறு பிடிக்கும் திரள் காண் எங்களது
இராக்கதர் வாழ் இலங்கை –
துர்வர்க்கம் களித்து வர்த்திக்கும் தேசம்
புறம்பே போய் பர ஹிம்சை பண்ணி -குளவிக் கூடு போலே திரண்டு -கடலையும்
மதிளையும் அரணாக்கி அமணக் கூத்தடிக்கும் தேசம் என்கை
இலங்கை தான் விபீஷண விதேயம்  இ றே -இலங்கை பாழ் ஆக என்னாதே –இலங்கை ஆள் பாழ் ஆக என்றது –
இனி ந நமேயம் என்ற ராவணனையும் அவனுடைய அதிக்ரமத்துக்கு துணையான ராஷசரையும்
அழியச் செய்து -ஸ்ம ஸா ந சத்ரு ஸீ பவேத் -என்று பிராட்டி அருளிச் செய்த படியே
அவ் ஊரை மூலையடியே போம் படி பண்ணினான்
படை பொருதானுக்கு –
இப்படி செய்தது ஈஸ்வரத் பெடாரான சங்கல்ப்பத்தால் அன்றிக்கே எதிரிகள் அம்பு மார்விலே
தைக்கும்படி பொருதவனுக்கு
பல்லாண்டு கூறுதுமே
அப்போதை கையும் வில்லுமாய் சீறிச் சிவந்து எதிரிகள் மேலே வியாபாரிக்கும் போதை
ஆகர்ஷகமான வடவு அழகுக்கு மங்களா சாசனம் பண்ணிப் போருவோம் சிலர் காண் நாங்கள் -என்கிறார்

ராகவார்த்தே பராக்ராந்தாந ப்ரானே குருதே தயாம் -என்கிறபடியே அக்காலத்தில்
முதலிகளுக்கு அம்புக்கு இறாய்க்கப் பணி போருகையாலே அக்காலத்திலே
மங்களா சாசனம் பண்ணுவாரைப் பெற்றது இல்லை -பிராட்டி பிரிந்த போதே நம்
குடி இருப்பு பெற்றோம் என்ற ப்ரீதியாலே பிரமாதிகள் அந்ய பரர் ஆனார்கள் –
அக்காலத்தில் மங்களா சாசானம் பண்ணப் பெறாத குறை தீர இன்று இருந்து
மங்களா சாசனம் பண்ணுவோம் சிலர் காண்  நாங்கள் -என்கிறார் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்