திருப்பல்லாண்டு
தனியன்கள்
நாதமுனிகள் அருளிச் செய்தது
கு3ருமுக2மநதீ4த்ய ப்ராஹ வேதா3நஶேஷா2ந்
நரபதி2பரிக்லுப்தம் ஶுல்கமாதா3துகாம: |
ஶ்வஷுரமமரவந்த்3யம் ரங்க3 நாத2ஸ்ய ஸாக்ஷாத்
த்3விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி ||
பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை
மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்றொருகால் *
சொன்னார் கழற் கமலம் சூடினோம் * – முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம் * கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து
பாண்டியன் கொண்டாடப் பட்டர் பிரான் வந்தான் என்று *
ஈண்டிய சங்கம் எடுத்தூத * – வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான் *
பாதங்கள் யாமுடைய பற்று
———-
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு
பதவுரை
மல் ஆண்ட–மல்லர்களை நிரஸித்த
திண் தோள்–திண்ணிய தோள்களையுடையனாய்
மணி வண்ணா–நீலமணிபோன்ற திருநிறைத்தை யுடையனானவனே!
பல் ஆண்டு பல் ஆண்டு–பலபல வருஷங்களிலும்
பல் ஆயிரம் ஆண்டு–அநேக ப்ரஹ்ம கல்பங்களிலும்
பல கோடி நூறு ஆயிரமும்–இப்படி உண்டான காலமெல்லாம்
உன் சே அடி–உன்னுடைய திருவடிகளினுடைய சிவந்த
செவ்வி–அழகுக்கு
திருக்காப்பு–குறைவற்ற ரக்ஷை உண்டாயிடுக.
பாண்டியராஜனுடைய பண்டித ஸபையிலேவந்து பரதத்வநிர்ணயம் பண்ணின பெரியாழ்வார்க்கு
அவ்வரசன் யானையின் மேலே மஹோத்ஸவம் செய்வித்தபோது அந்த உத்ஸவத்தைக்கண்டு ஆநந்திப்பதற்காக
ஸ்ரீவைகுண்ட ஸபரிவாரனாய் எழுந்தருளி எதிரே ஸேவைஸாதிக்க,
ஆழ்வார் ஸேவித்து வந்த அருமருந்தன்ன எம்பெருமானுக்கு எழும்பூண்டெல்லாம் அஸுரக்ஷ ஸமயமாயிருக்கிற இந்நிலத்திலே
யாராலே என்ன தீங்கு விளைகிறதோ என்று அதிசங்கைப்பட்டு
‘ஒரு அமங்களமும் நேரிடாதபடி மங்களமே உண்டாயிருக்கவேணும்’ என்று பல்லாண்டு பாடுகிறார். அதாவது – ஜய விஜயீபவ என்கிறார்.
ஆழ்வார் இப்படி அதிசங்கையாலே மங்களாசாஸகம் பண்ணுகிறாரென்று தெரிந்துகொண்ட எம்பெருமான்
‘ஐயோ! ஏன் இவர் இப்படி பயப்படுகிறார், எப்படிப்பட்ட எதிரிகளையும் ஒரு விரல் நுனியாலே வென்றொழிக்கவல்ல
தேஹ வலிவு நமக்கு உண்டென்பது இவர்க்குத் தெரியவில்லை போலும், அந்த வலிவைக் காட்டினோமாகில் இவருடைய அச்சம் அடங்கிவிடும்’
என்று நினைத்து, முன்னோ க்ருஷணவதார காலத்தில் தன்னைக் கொல்லும்படி கம்ஸனால் ஏவப்பட்டுவந்த சாணூரன் முஷ்டிகன்
முதலிய மல்லர்களை நொறுக்கித் தள்ளின தன்னுடைய புஜபலத்தைக் காட்டினான்;
ஆழ்வாருடைய அச்சம் தணிவதற்காகக் காட்டின அந்த வலிவு ஆழ்வாருடைய பயம் அதிகரிப்பதற்கே காரணமாயிற்று.
புத்திரன் சூரனாயிருந்தால் அவனுடைய தாயானவுள் ‘இவன் ஒருவரையும் லக்ஷியம் பண்ணாமல் யுத்தம் செய்யப் போய்விடுவனே!
யாராலே என்ன கெடுதி நேர்ந்துவிடுமோ’ என்று பயப்படுவதுபோல்
இவரும் அந்த மல்லாண்ட திண்டோள் வலிமைக்குப் பயப்பட்டு மீண்டும் மங்களாசாஸநம் பண்ணுகிறார்.
பல்லாண்டு என்று ஒரு தடவை சொன்னால் போராதா? ‘‘பல்லாயிரத்தாண்டு’’ என்றும் ‘‘பல்கோடி நூறாயிரம் பல்லாண்டு’’ என்றும்
அதிகமாகச் சொல்லுவானேன்? என்னில் ;
தாஹித்தவன் தாஹம் தீருகிறவரையில் ‘தண்ணீர், தண்ணீர்’ என்றே சொல்லிக் கொண்டிருப்பதுபோல்
இவரும் தம்முடைய அச்சம் அடங்குமளவும் மங்களாசாஸகம் ஓயமாட்டார்.
மல்லாண்ட என்றவிடத்தில் மல் என்ற சொல் மல்லர்களைச் சொல்லும். ஆயுதத் துணையின்றி தேஹ வலிவையேகொண்டு சண்டை செய்பவர் மல்லர்.
இனி, மல்லாண்ட என்பதற்கு ‘பலசாலியான’ என்றும் பொருளுண்டு. மல் – வலிவு.
‘‘உன் சேவடி செவ்வி திருக்காப்பு’’ என்று திருவடிக்கு மாத்திரம் மங்களாசாஸநமிருந்தாலும்
இது திருமேனி முழுமைக்கும் மங்களாசஸநம் பண்ணினதாகும். சேஷபூதனுக்குத் திருவடியே உத்தேச்யம் என்பதைக் காட்டவே
சேவடி செவ்வி திருக்காப்பு என்றார். செவ்வடி என்றாலும் சேவடி என்றாலும் ஒன்றே.
இந்தப் பாசுரம் பல்லவிபோல ஒவ்வொரு பாசுரத்தோடும் சேர்த்துச் சொல்லத் தகுந்தது.
இதையும் மேல் பாசுரத்தையும் சேர்த்து ஒரு பாட்டாக அநுஸந்திப்பது ஸம்ப்ரதாயம்.
————
அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே
பதவுரை
அடியோ மோடும்–தாஸபூதர்களாய் அடியேன் தொடக்கமாயுள்ள சேதநர்களோடும்
நின்னோடும்–ஸ்வாமியான தேவரோடும்
பிரிவு இன்றி–பிரிவில்லாமல்
ஆயிரம் பல்லாண்டு–(இந்த ஸமபந்தம்) நித்யமாய்ச் செல்லவேணும்
வடிவு ஆய்–உனக்கு நிரூபகபூதையாய்
நின்–உன்னுடைய
வல மார்பினில்–திருமார்பின் வலது பக்கத்தில்
வாழ்கின்ற–பொருந்தியிராநின்றுள்ள
மங்கையும்–நித்யயௌவநசாலிநியான பெரிய பிராட்டியார் தொடக்கமான நாய்ச்சிமார்களும்
பல்லாண்டு;
வடிவு ஆர்-(உன்) திருமேனியை வ்யாபித்திருக்கிற
சோதி–ஜ்யோதிஸ்ஸையுடையனாய்
வலத்து–வலத்திருக்கையிலே
உறையும்–நித்யவாஸம் பண்ணுமவனாய்
சுடர்–பகைவரை எரிக்குமவனான
ஆழியும்–திருவாழியாழ்வானும்
பல்லாண்டு-;
படை–ஸேனைகளையுடைய
போர்–யுத்தங்களில்
புக்கு–புகுந்து
முழங்கும்–கோஷிக்கின்ற
அ–அளவற்ற பெருமையுடைய
பாஞ்ச சன்னியமும்–ஸ்ரீபாஞ்சஜந்யாழ்வானும்
பல்லாண்டு – ; (ஏ ஈற்றசை. )
விளக்க உரை
சேஷபூதர்களான அடியோங்களூம் ஸர்வசேஷியான தேவரீரும் ஒருவரையொருவர் விட்டுப் பிரியாமல் நெடுநாளளவும் மங்களமாக வாழ வேணும்;
பெரிய பிராட்டியாரும் தேவரீருமான சேர்த்தி எப்போதும் மாறாமல் நித்தியவாழ்ச்சியாகச் செல்லவேணும்;
திருவாழி யாழ்வானும் திருச்சங்காழ்வானும் குறையொன்றுமின்றி வாழவேணும் – என்று இப்பாட்டால்
உபய விபூதிகளோடுங் கூடின நிலைமைக்கு மங்களாசாஸநம் பண்ணுகிறார்.
‘‘அடியோமோடும்‘‘ என்று இந்த லீலா விபூதியிலிருக்கிற தங்களையும்,
மற்ற மூன்றாலே, பரமபதமாகிய நித்யவிபூதியிலுள்ள பெரிய பிராட்டியார் முதலானவர்களையும் இப்பாட்டில் கூறியிருப்பதனால்
உபயவிபூதியுக்தனான எம்பெருமானுக்கு இப்பாசுரத்தால் பல்லாண்டு பாடினாராயிற்று.
எம்பெருமானுடைய மங்களத்தை மாத்திரமே அபேக்ஷிப்பவரான இவ்வாழ்வார் அடியோமோடும் என்று தம்முடைய மங்களத்தையும்
ஏன் விரும்புகிறாரென்னில், மங்களாசாஸநம் பண்ணுவதற்குத் தம்மைப் போன்ற அடியவர்கள் இல்லாவிடில் எம்பெருமானுக்கு
என்ன தீங்கு விளைந்திடுமோவென்கிற பயசங்கையினால் மங்களாசாஸநத்தில் ஊக்கமுடைய தம்முடைய மங்களத்தையும் விரும்புகிறார்.
ஆகவே, எம்பெருமானுடைய மங்களாசாஸநத்தின் அபிவிருத்திக்காகவே தம்முடைய ஸ்தைர்யத்தை வேண்டுகின்றாரென்க.
(வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கை.) பெரிய பிராட்டியாராலே எம்பெருமானுக்கு மேன்மை உண்டாகின்றதென்பது
‘வடிவாய்’ என்ற விசேஷணத்தினால் விளங்கும்.
புஷ்பத்திற்குப் பரிமளத்தினாலும், ரத்தினத்திற்கு ஒளியினாலும் மேன்மையுண்டாகக் காண்கிறோமிறே.
மங்கை – எப்போதும் மங்கைப் பருவமுடையவள்; அந்தப் பருவத்துக்கு வயதின் எல்லை – பன்னிரண்டு முதல் பதின்மூன்றளவும்.
ஆழ்வார்க்குக் கண்ணெதிரிலே விளங்குகிற சங்கை ‘‘அப்பாஞ்சசன்னியமும்’’ என்று (பரோக்ஷமான வஸ்துவைக் கூறுமாபோலே)
கூறலாமோவென்னில்; தம்முடைய கண்ணெச்சில் படாதபடி முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு சொல்லுகிறார் என்று கொள்க.
அல்லது, அன்று பாரதப் போரிலே அப்படிப்பட்ட அரிய பெரிய காரியங்கள் செய்த பாஞ்சஜந்யம் என்றும்,
அழகிய பாஞ்சஜந்யம் என்றும் பொருள் கொள்ளலாம்.
————–
வாழாட்பட்டு நின்றீ ருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாண்டு கூறுதமே
பதவுரை
வாழ் ஆள் பட்டு–உஜ்ஜீவிப்பதற்கு உறுப்பான (எம்பெருமானுடைய) அடிமைத் தொழிலில் ஈடுபட்டு
நின்றீர்–நிலைத்து நின்றவர்கள்
உள்ளீரேல்–இருப்பீர்களாகில்
வந்து–(நீங்கள் எங்களோடே) வந்து சேர்ந்து
மண்கொள்மின்–(எம்பெருமானுடைய உத்ஸவார்த்தமான (திருமுளைத் திருநாளுக்குப்) புழுதி மண் சுமவுங்கள்;
மணமும் கொள்மின்–(அந்த உத்ஸவத்துக்கு) அபிமாகிகளாகவும் இருங்கள்;
கூழ் ஆள்பட்டு நின்றீர்களை–சோற்றுக்காக (ப் பிறரிடத்தில்) அடிமைப்பட்டிருப்பவர்களை
எங்கள் குழுவினில்–எங்களுடைய கோஷ்டியிலே
புகுதலொட்டோம்–அங்கீகரிக்க மாட்டோம்; (எங்களுக்குள்ள சிறப்பு என்ன வென்கிறீர்களோ,)
நாங்கள்–நாங்களோவென்றால்
ஏழ் ஆள் காலும்–ஏழு தலைமுறையாக
பழிப்பு இலோம்–ஒருவகைக் குற்றமும் இல்லாதவர்கள்
(எங்களுடைய தொழிலோவென்னில்)
இராக்கதர் வாழ் இலங்கை–ராக்ஷஸர் வஹிக்கிற லங்கையிலிருந்த
ஆள்–ஆண் புலிகள் யாவரும்
பாழ் ஆக–வேரோடே அழிந்து போம்படி
படை–(வாநர) சேனையைக் கொண்டு
பொருதானுக்கு–போர் செய்த பெருமாளுக்கு
பல்லாண்டு கூறுதும்–பல்லாண்டு பாடுகிறவர்களாய் இருக்கின்றோம்
விளக்க உரை
இவ்வாழ்வார் தனியராயிருந்து மங்களாசாஸநம் பண்ணுவதில் த்ருப்திபெறாமலும்,
‘போக்யமான வஸ்துவைத் தனியே அநுபவிப்பது தகாது’ என்கிற நியாயத்தைக் கொண்டும்
இன்னும் பல பேர்களையும் மங்களாசாஸநத்திற்குத் துணைகூட்டிக் கொள்ளவேணுமென்று நினைத்தார்.
உலகத்தில் எத்தனை வகையான அதிகாரிகள் இருக்கிறார்களென்று ஆராய்ந்து பார்த்தார்.
செல்வத்தை விரும்புமவர்கள், ஆத்மாநுபவக்கிற கைவல்யத்தை விரும்புமவர்கள், எம்பெருமானுடைய அநுபவத்தை அபேக்ஷிப்பவர்கள்
என்றிப்படிப்பட்ட அதிகாரிகள் இருப்பதைக் கண்டார்;
இம்மூவகை யதிகாரிகளில் செல்வத்தை விரும்புமவர்களும் கைவல்யத்தை விரும்புமவர்களும் ப்ரோஜநாந்தரபரர்களாயிருந்தாலும்,
அந்த அற்ப பலனுக்காகவாவது எம்பெருமானைப் பணிந்து பிரார்த்திக்கின்றார்கள் ஆகையால் அவர்களையும் திருத்திப் பணிகொள்ளலாம்
என்று ஆழ்வார் நிச்சயித்து மேற்சொன்ன மூவகை அதிகாரிகளையும் மங்களாசாஸநத்துக்கு அழைக்கவிரும்பி,
முதல்முதலாக, எம்பெருமானுடைய அநுபவத்தையே விரும்புமவர்களான ஜ்ஞாநிகளை அழைக்கிறார்.
‘‘அப்யர்ஹிதம் பூர்வம்’’ (எது சிறந்ததோ, அது முற்படும்) என்கிற நியாயத்தாலே
ச்ரேஷ்டர்களான ஞானிகளுக்கு முதல் தாம்பூலம் கொடுக்கிறார்போலும்.
பகவத் விஷயம் தவிர மற்ற விஷயங்களில் செய்கிற கைங்கரியம் எல்லாம் செய்வதற்குக் கஷ்டமாயும்,
கஷ்டப்பட்டுச் செய்தாலும் அந்த தேவதைக்கு த்ருப்திகரமல்லாமலும்,
ஒருவாறு த்ருப்திகரமானாலும் அற்பபலனைக் கொடுப்பனவாயும் இருப்பதால் அவை துயரத்தையே விளைக்கும்;
பகவத் விஷயத்தில் செய்யும் கைங்கரியமோ, எளிதாகச் செய்யக் கூரியதாயும், விரைவில் எம்பெருமானை உவப்பிக்க வல்லதாயும்,
சாச்வதமான பலனையளிப்பதாயும் இருப்பதால் அப்படிப்பட்ட பகவத் கைங்கரியத்தில் ஊன்றி யிருப்பவர்களை ‘‘வாழாட்பட்டு நின்றீர்’’ என்றழைக்கிறார்.
அப்படிப்பட்ட அதிகாரிகள் மிகவும் அருமைப்படுவர்கள் என்பதைக் காட்டுகிறார் ‘‘உள்ளீரேல்’’ என்று.
(மண்ணும் மணமும் கொண்மின். ) மண் கொள்ளுகையாவது -மஹோத்ஸவத்தில் அங்குரார்ப்பணத்திற்குப் புழுதி மண்சுமப்பது.
மணங் கொள்ளுகையாவது – அந்த மஹோத்ஸவத்தினிடத்தில் அபிமாநங்கொண்டிருப்பது.
முற்காலத்தில் அடிமை யோலை யெழுதும்போது ‘‘மண்ணுக்கும் மணத்துக்கும் உரியேனாகக் கடவேன்’’ என்றெழுதுவது வழக்கமாம்.
முதலடியில் ‘‘உள்ளீரேல்’’ என்று ஆழ்வார் உரக்கக் கூவினபடியைக் கேட்ட பலபேர்கள் அவரழைத்த வாசியறியாமல் ஓடிவந்தார்கள்.
அவர்களில் வயிற்றுப் பிழைப்புக்காக நீச ஸேவைபண்ணி ஜீவிப்பவர்களும் சேர்ந்திருந்தபடியால் அவர்களை விலக்கித் தள்ளுகிறார் இரண்டாமடியால்.
பகவத் ஸமபந்தத்தால் தமக்கு உண்டாயிருக்கிற பெருமையும், தம்முடைய காலக்ஷேப க்ரமத்தையும் அருளிச் செய்கிறார் பின்னடிகளில்.
(ஏழாட்காலும்) முன்னே மூன்று, பின்னே மூன்று, நடுவில் ஒன்று; ஆக ஏழு தலைமுறையிலும் என்றபடி
அன்றி, முன்னேழு, பின்னேழு, நடுவேழு என்று கொண்டு (அதாவது முன்னே பத்து, பின்னே பத்து, நடுவில் தான் ஒன்று என்று கொண்டு)
இருபத்தொரு தலைமுறையைச் சொன்னதாகவுமாம். நாங்கள் அநாதிகாலமாக எம்பெருமானையே உபாயமாகவும் உபேயமாகவுங் கொண்டு,
அப்பெருமான் என்றைக்கோ செய்தருளின ராவணஸம்ஹாரத்திற்கு இன்றிருந்து மங்களாசஸநம் பண்ணுகிறோம் ஆகையாலே
பரமவிலக்ஷணர்களாயுள்ள எங்களுடைய கோஷ்டியில் நீங்கள் பிரவேசிக்கலாகாதென்று வயிறு வளர்க்கும் வம்பர்களை விலக்கித் தள்ளினாராயிற்று.
————-
ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ
நாடுநகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று
பாடுமனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே.
பதவுரை
வந்து–(கைவல்யத்தில் ஆசையை விட்டு) வந்து
எங்கள் குழாம் புகுந்து–(அநந்யப்ரயோஜநரான) எங்களுடைய கோஷ்டியிலே அந்வயித்து–
கூடும் மனம் உடையீர்கள்–ஒன்றாய்ச் சேர்ந்துவிட வேணுமென்கிற விருப்பமுடையவர்களாயிருந்தால்
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்–பொல்லாத ஸ்தானமாகிய கைவல்யத்திலே உங்களைக கொண்டு தள்ளுவதற்குமுன்னே
வரம்புஒழி வந்து–(ஆதமாநுபவம் மாத்திரம் செய்வோமென்று நீங்கள் வைத்துக் கொண்டிருக்கிற)
வரம்பை ஒழித்துக் கொண்டு (இனி பூர்ணாநுபவம் பண்ணுவோமென்று) வந்து
ஒல்லை–சீக்கிரமாக
கூடுமின்–எங்களோடு சேர்ந்து விடுங்கள்
(அப்படியே சேர்ந்தபின்பு)
நாடும் நகரமும் நன்கு அறிய-நாட்டிலுள்ளவர்களும் நகரத்திலுள்ளவர்களும் (உங்களுடைய) நன்மையை அறிந்து கொள்ளும்படி
நமோ நாராயணாய என்று–திருமந்திரத்தைச் சொல்லி
பாடும் மனம் உடைபத்தர்–பாடுகின்ற எண்ணத்தையுடைய பக்தர்களுக்குள்
உள்ளீர் வந்து–சேர்ந்தவர்களாயிருந்து
பல்லாண்டு கூறுமின்–(எம்பெருமானுக்கு) மங்களா சாஸநம் பண்ணுங்கள்
விளக்க உரை
இப்பாட்டில், ஆத்மாநுபவத்தையே விரும்பியிருக்கும் கைவல்யார்த்திகளைக் மங்களாசாஸநத்துக்கு அழைக்கிறார்.
கீழ்ப்பாட்டில் கூழாட்பட்டவர்களை விலக்கினாப்போலே இவர்களையும் விலக்க வேண்டியிருந்தாலும்,
இவர்கள் கைவல்யமாகிற ஸ்வப்ரயோஜநம் பெறுவதற்காகவாகிம் எம் பெருமானைச் சரணமடைந்தார்களேயென்கிற மகிழ்ச்சியினால்
அவர்களையும் அழைத்து, கிரமமாக உபதேசங்களாலே ஐச்வர்யார்த்திகளும் ப்ரயோஜநாந்தரபரர்களாயிருக்க,
அந்த ஐச்வர்யார்த்திகளை முதலில் அழைப்பதைவிட்டுக் கைவல்யார்த்திகளைக் கூப்பிட்டது ஏனென்னில்; கேண்மின்; –
ஐச்வர்யார்த்திகளை ஸாவகாசமாகவும் திருத்திக் கொள்ளலாம்; கைவல்யார்த்திகளை அப்படி ஸாவகாசமாகத் திருத்திக்கொள்ள முடியாது.
ஏனென்றால், கைவல்யார்த்திகளின் உபாயாநுஷ்டாநம் முடிந்துவிட்டால், ஆத்மாநுபவத்துக்காக ஏற்பட்ட மோக்ஷலோகத்தில் போய்ச்சேர்ந்து விடுவார்கள்;
மறுபடியும் அங்கிருந்து ஒருநாளும் திரும்பி வருதல் இல்லாமையாலே இப்போதே அவர்களைத் திருத்திக்கொள்ளாமல்
சிறிது விளம்பித்தாம் அந்த அதிகாரிகள் பாழாய்ப்போவர்களே! என்கிற அநுதாபத்தினால்
ஆலஸ்யம் ஸஹியாமல் ஐச்வர்யார்த்திகளுக்குமுன்னே கைவல்யார்த்திகளை யழைக்கிறார்.
ஏடுநிலம் என்று கைவல்யஸ்தாநத்தை எங்ஙனமே சொல்லுமென்னில்; பிரகாணபலத்தினால் சொல்லும்;
பொல்லாத ஸ்தானமென்று பதப்பொருள்
அன்றியே, ஏடு – ஸூக்ஷ்மசரீரமானது, நிலத்தில் – தனக்குக் காரணமான மூலப்ரக்ருதியிலே,
இடுவதன்முன்னம் -லயிப்பதற்குமுன்னே, என்றும் பொருள் கொள்ளலாம்.
ஸ்தூலசரீரமென்றும் ஸூக்ஷ்மசரீரமென்றும் சரீரம் இருவகைப்படும்;
பஞ்சபூதங்களின் (ஸூக்ஷ்ம அவஸ்தைகளாகிய) தந்மாத்ரைகள் ஐந்தும் கருமேந்திரியங்கள் ஐந்தும் ஞானேந்திரியங்கள் ஐந்தும்
மநஸ்ஸு ஒன்றும் ஆகிய பதினாறு தத்துவங்களுடன் கூடிய சரீரம் ஸூக்ஷ்ம சரீரமெனப்படும்;
தந்மாத்ரைகளின் ஸ்தூலங்களான பூதங்களூடன் சேர்ந்து அவற்றோடு பஞ்சவிஷயங்களும், ப்ரக்ருதி, மஹாந், அஹங்காரம் – ஆகிய
இருபத்தினான்கு தத்துவங்களுடன் கூடிய சரீரம் ஸ்தூலசரீரமெனப்படும்.
ஆத்மா தனது ஸூக்ஷ்மசரீரம் விரஜாநதீஸ்நாநத்தால் நீங்கியபின்புதான் பரமபதத்தையோ கைவல்யத்தையோ அடையும்.
இவ்விரண்டில் எதையடைந்தபின்பும் திரும்பி வருவதல் இல்லை.
(இவ்விருவகையான சரீரங்களுள் ஸூக்ஷ்மசரீரமானது ஸ்தூல சரீரத்திற்காட்டிலும் பிரதானமாய் அதனுடைய ஸாரமுமாயிருப்பதால்,
பாலின் ஏடு போலுமென்ற காரணம் பற்றி ‘ஏடு’ என்பது ஸூக்ஷ்மசரீரத்தைக் காட்டும்.
‘‘வரம்பொழிய’’ என்பது வரம்பொழி என்று கடைக்குறையாயிருக்கிறது. வரம்பொழியவந்து என்றபடி.
இவ்விடத்தில், வரம்பாவது – அவரவர்கள் ஏற்படுத்திக் கொண்ட ஒரு எல்லை; ‘ஆத்மாநுபவத்தோடு நாம் நின்றுவிட வேண்டியது;
பகவானை யநுபவிக்கப்போகக்கூடாது’ என்று நீங்கள் வைத்துக்கொண்ட வரம்பை ஒழித்துவிட்டு உடனே வந்து சேருங்கள் என்றழைக்கிறார்.
கைவல்ய நிஷ்டர்கள் ‘‘ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரந் மாமநுஸ்மரந்’’என்கிற சாஸ்திரப்படி தங்கள் கோரிக்கை
நிறைவேறுவதற்காகப் பிரணவத்தை மாத்திரம் உச்சரிப்பார்கள்;
இனி அப்படியல்லாமல் திருவஷ்டாக்ஷரத்தையும் பூர்த்தியாகக் கோஷித்துக்கொண்டு வரவேணுமென்று பின்னடிகளால் அழைக்கிறார்.
பத்தர் – பக்தர்.
———–
அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு
தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டு பல்லாயிரத் தாண்டென்மினே.
பதவுரை
அண்டம் குலத்துக்கு அதிபதி ஆகி–அண்ட ஸமூஹங்களுக்கெல்லாம் நியாமகனாய்
அசுரர் இராக்கதரை–அஸூர ராக்ஷஸர்களுடைய
இண்டை குலத்தை–நெருக்கமான கூட்டத்தை
எடுத்து களைந்த–நிர்மூலமாக்கின
இருடீகேசன் தனக்கு–ஹ்ருஷீகேசனான * பகவானுக்கு
தொண்டர் குலத்தில் உள்ளீர்–அடியவராயிருப்பவர்களுடைய கோஷ்டியில் சேர்ந்தவர்களே!
(ஐச்வர்யார்த்திகளே!) நீங்கள்
பண்டை குலத்தை தவிர்ந்து–(பிரயோஜநாந்தரத்தை விரும்பிக்கிடந்தமையாகிற) பழைய தன்மையை நீக்கிக் கொண்டு
வந்து–எங்களோடு சேர்ந்து
அடிதொழுது–பகவானுடைய திருவருடிகளை ஸேவித்து
ஆயிரம் நாமம் சொல்லி–எல்லாத் திருநாமங்களையும் அநுஸ்ந்தித்து
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மின்–எப்போதும் மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டிருங்கள்
விளக்க உரை
இப்பாட்டில் ஐச்வர்யார்த்திகளை அழைக்கிறார். அவர்கள் இரு வகைப்படுவர்;
நெடுநாளாக இருந்து கைதப்பிப் போன செல்வத்தை மறுபடியும் அடைய விரும்புகிறவர்கள் ஒரு வகுப்பு;
நெடுநாள் தரித்ரராகவேயிருந்து புதிதாகச் செல்வமுடைய விரும்புகிறவர்கள் மற்றொரு வகுப்பு.
(முதல் வகுப்பினர் – ப்ரஷ்டைச்வர்யகாமர்களென்றும் இரண்டாம் வகுப்பினர் அபூர்வை ச்வர்யகாமர்களென்றும் சொல்லப்படுவர்.)
இவ்விரு வகுப்பினரையும் இப்பாட்டில் அழைக்கிறார். இவ்வர்த்தம் இப்பாட்டில் எங்ஙனே தெரிகின்றது என்றால்; கேண்மின்; -‘
‘அண்டக்குலத்துக்கு அதிபதியான இருடீகேசனுக்குத் தொண்டக்குலதிலுள்ளீர்!’’ என்றும்,
‘‘அசுரரிராக்கதரை இண்டைக்குலத்தை யெடுத்துக் களைந்த இருடீகேசனுக்குத் தொண்டக்குலத்திலுள்ளீர்!’’ என்றும்
விளியை இரண்டாகப் பகுத்துக்கொள்க.
அண்டங்களுக்கு அதிபதியாயிருக்கை ஐச்வரியத்துக்கு முடிவெல்லையாய் இருப்பதால், புதிதான ஐச்வரியத்தைப் பெற விரும்புகின்ற
அதிகாரிகள் அப்படிப்பட்ட அண்டாதிபதித்வத்தைப் பெற விரும்பி அந்த விருப்பம் வெளிப்படும்படி
‘‘அண்டாதிபதயே நம; அண்டாதி பதயே நம:’’ என்று எப்போதும் உருப்போடுவர்கள்!
அந்த அதிகாரிகளை அழைக்கிறாரென்பது முதல்விளியால் விளங்கும்
ஏற்கனவேயிருந்த செல்வத்தை அஸுரராக்ஷஸாதிகள்
போன்ற சத்துருக்கள் அபஹரித்துக் கொண்டதனால் அச்செல்வத்தை மறுபடியும் ஸம்பாதித்துக்கொள்ள விரும்பும் அவர்கள்
அந்த விருப்பம் வெளிப்படும்படி ‘‘அஸுரசத்ரவே நம:, அஸுரசத்ரவே நம: என்று உருப்போடுவார்கள்.
அந்த அதிகாரிகளை அழைக்கிறாரென்பது இரண்டாம் விளியால் விளங்கும்.
ஆகவிப்படி இருவகை அதிகாரிகளையும் அழைத்து ‘‘அந்தோ! நீங்கள் ஸ்வயம்ப்ரயோஜநமாக ஸஹஸ்ரநாமங்களையும்
(வாயாரச் சொல்லி ஆநந்திக்கலாமாயிருக்க, அதைவிட்டு, ‘அண்டாதிபதி, அஸுரசத்ரு:’என்ற இரண்டு நாமங்களை மாத்திரம் அற்பபலனுக்கான உருப்போட்டுக்கொண்டிருக்கிறீர்களோ, இது தகாது; இனி ஆயிரநாமங்களையும் அநந்ய்ப்ரயோஜநமாக அநுஸந்தித்து
எங்களுடைய கோஷ்டியிலே சேர்ந்து மங்களாசாஸநம்பண்ண வாருங்கள் – என்றழைத்தாராயிற்று.
அண்டமாவது – உலகவுருண்டை; அது அளவற்றதாகையாலே அண்டக்குலமென்கிறது அதுக்கு அதிபதியென்று
எம்பெருமானைச் சொல்வது கருத்துடன் கூடியதாகும். உன்னைப் போலே நாங்களும் அண்டாதிபதியாக வேணுமென்று தெரிவித்துக் கொண்டபடி.
இண்டைக்குலம் – நெருக்கமான கூட்டம் என்றபடி. ‘இண்டக்குலம்’ என்று பாடமாகில், ‘‘இண்டர் – குலம்’’ என்று பிரியும்.
அஸுரராக்ஷஸர்களாகிற சண்டாளருடைய கூட்டத்தை என்றபடி. இருடீகேசன் – ஸ்ருஷீகேசன்; இந்திரியங்களை அடக்கியாள்பவன் என்கை.
தொண்டர் + குலம் : தொண்டர்க்குலம்.
————–
எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே.
பதவுரை
எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி–என் பிதாவும் அவருடைய பிதாவும் அவருடைய பிதாவும்
அவருடைய பிதாவும் அவருடையபாட்டனுமாகிய ஏழு தலைமுறையாக
வந்து–(உரிய காலங்களில்) வந்து
வழி வழி–முறைதப்பாமல்
ஆள் செய்கின்றோம்–கைங்கரியம் பண்ணுகிறோம்
திரு ஓணம் திருவிழவில்–ச்ரவண நக்ஷத்ரமென்கிற திருநாளிலே
அந்தி அம்போதில்–அழகிய ஸரயம் ஸந்தியாகாலத்தில்
அரி உரு ஆகி–நரஸிம்ஹமூர்த்தியாய்த் தோன்றி
அரியை–(ஆச்ரிதனான ப்ரஹலாதனுக்குப்) பகைவனான இரணியனை
அழித்தவனை–கொன்றொழித்த பெருமானுக்கு
பந்தனை தீர–(அன்றைய) அனுக்கம் தீரும்படி
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுவதும்–மங்களாசாஸநம் செய்வோம்.
விளக்க உரை
‘‘வாழாட்பட்டு’’ என்கிற பாசுரத்தில் அநந்யப்ரயோஜநர்களான முமுக்ஷூக்களை யழைத்தாரென்றோ;
அழைக்கும்போது ‘‘ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள்’’ என்று தம்முடைய பெருமையைச் சொல்லியழைத்தார்.
அப்படி அழைக்கப்பட்ட அநந்யப்ரயோஜகர்கள் ‘நாங்களும் உம்மைப் போலவே ஏழுதலைமுறையாக அடிமை செய்கிறவர்கள்’
என்று தங்களுடைய பெருமையையும், எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் பண்ணுகிறவர்களென்கிற தங்களுடைய
தினசரியையும் சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்ததாக இப்பாசுரம் அருளிச் செய்யப்படுகிறது.
‘என் தந்தை’ என்பது எந்தையென மருவிற்று. ஏழ்படிகால் – ‘படி’யென்பதற்கு உடம்பு என்று பொருள்;
அச்சொல் தலைமுறையைக் காட்டுகிறது.
எங்களுடைய ஸந்ததியில் ஒருவர் தப்பாமல் எல்லாரும் ஆட்செய்பவர்கள் என்பதற்காக வழிவழியென்கிறார்.
(திருவோணத் திருவிழாவில் இத்யாதி) எம்பெருமான் எந்த நக்ஷத்திரத்தில் அவதரித்தாலும் அவையெல்லாம் வேதத்தில் சொன்னபடி
விஷ்ணு நக்ஷத்ரமாகிய திருவோண நக்ஷத்திரத்தின் அம்சமாயிருக்கத்தக்கவை யாகையாலும்,
விசேஷித்துத் திருநக்ஷத்திரம் சொல்லாத அவதாரங்களுக்கெல்லாம் இதையே நக்ஷத்திரமாகக் கொள்வது உசிதமாகையாலும்
‘‘திருவோணத் திருவிழாவில் ; அரியுருவாகி’’ என்றார். ச்ரவண என்னும் வடசொல் ஓணமெனத் திரிந்தது.
அரியுரு ஹிம்ஹமென்னும் பொருளதான ஹரியென்னும் வடசொல் அரியென்று விகாரப்பட்டிருக்கின்றது.
‘‘நரஹரியாகி’’ என்னாமல் ‘அரியுருவாகி’ என்றது பிரதானமான சிரஸ்ஸு ஸிம்ஹமாயிருப்பதனாலாம்.
தூணிலே நரசிங்கமாகத் தோன்றி இரணியனைக் கொன்று ப்ரஹ்லாதனைக் காத்தருளின இதிஹாஸம் ப்ரஸித்தம்.
பந்தநா என்னும் வடசொல் பந்தனையெனத் திரிந்தது; அனுக்கம் என்று பொருள்.
——————
தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி திகழ்திருச் சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழிகுருதி
பாயச் சுழற்றிய ஆழிவல் லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.
பதவுரை
தீயின்-(சந்திரன்: ஸூர்யன் அக்நி முதலிய) சுடர்ப்பொருள்கள் எல்லாவற்றையும்விட
பொலிகின்ற–பிரபலமாகப் பிரகாசிப்பதும்
செம் சுடர் திகழ்–சிவந்த ஒளியோடுகூடி விளங்குவதுமான
திருசக்கரத்தின்–திருவாழியாழ்வான் எழுந்தருளியிருக்கிற
கோயில்–ஸ்தானமாகிய
ஆழி–வட்டவடிவமான
பொறியாலே–அடையாளத்தினால்
ஒற்றுண்டு நின்று–அடையாளம் செய்யப்பட்டவர்களாயிருந்து
குடிகுடி–அநாதிஸந்தாநமாக
ஆள் செய்கின்றோம்–(எம்பெருமானுக்குக்) கைங்கரியம் செய்து வருகின்றோம்: (அதுவும் தவிர)
மாயம் பொருபடை வாணனை–க்ருத்ரிம யுத்தம் செய்பவனும் சேனைகளை உடையவனுமான பாணாசுரனுடைய
ஆயிரம் தோளும்–ஆயிரந் தோள்களினின்றும்
பொழி–வெளிக்கிளம்புகிற
குருதி–ரக்தமானது
பாய–வெள்ளமாகப் பாய்ந்தோடும்படி
சுழற்றிய ஆழி–திருக்கையிலே சுழலச் செய்த சக்கராயுதத்தை
வல்லானுக்கு–ஆளவல்ல எம்பெருமானுக்கு
பல்லாண்டு கூறுதும்–மங்களாசாஸநம் செய்வோம்
விளக்க உரை
‘‘ஏடுநிலத்தில்’’ என்னும் பாசுரத்தில் கைவல்யார்த்திகளை அழைத்தாரன்றோ; அழைக்கும்போது ‘‘நாடுநகரமும் நன்கறிய’’ என்று
உங்களுடைய நன்மையை எல்லாரும் தெரிந்துகொள்ளும்படி நீங்கள் வரவேணுமென்று ஒரு வார்த்தை சொன்னார்.
அவர்களும் அப்படியே வரவேணுமென்று நிச்சயித்து சங்கு சக்கரங்களாலே திருவிலச்சினை செய்துகொள்வது நல்ல உபாயம்’ என்று
அதைச் செய்துகொண்டு அடிமை செய்பவர்களாய் பாணஸுரயுத்தத்தில் ஸ்ரீக்ருஷ்ணனுக்கு அடிமை செய்த திருவாழியாழ்வானுக்கும்
அவனை அடிமைகொண்ட ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அக்காலத்தில் மங்களாசாஸநம் செய்யப் பெறாத குறைதீர
மங்களாசாஸநம் செய்பவர்களாக ஆய்விட்டோம் என்று தாங்கள் குடும்பமாகத் திருந்தினபடியைச் சொல்லிக்கொண்டு
வந்தார்களாக அருளிச்செய்யும் பாசுரம் இது.
‘‘ஸுதர்சநம் பாஸ்கரகோடிதுல்யம்’’ என்கிறபடியே திருவாழியாழ்வான் கோடிஸுர்ய ப்ரகாசனாகையால் ‘‘தீயிற்பொலிகின்ற’’ எனப்பட்டது.
தேஜ: பதார்த்தங்கள் எல்லாவற்றையும்விட அதிகமாக ஜ்வலிக்கிற என்றபடி.
பொலிகின்ற என்பதும், திகழ் என்பதும் திருச்சக்கரத்திற்கு அடைமொழிகள்.
இனி, ‘‘தீயிற்பொலிகின்ற’’ என்பதை சக்கரத்தின் பொறிக்கு அடைமொழியாக்கி, அக்நியால் விளங்குகிற சக்கரத்தின் பொறி என்றும் உரைக்கலாம்.
மந்த்ர பூர்வமாக ஹோமஞ்செய்த அக்நியில் காய்ச்சப்பட்ட சங்கு சக்கரங்களின் பொறிகளை (அடையாளங்களை)
புஜங்களில் அணிந்து கொள்வது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம்.
பாண : என்ற வடசொல் வாணனெனத் திரிந்தது.
———–
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே.
பதவுரை
நெய் எடை–நெய்யோடு ஸமமான நிறையை யுடையதாய்
நல்லது–போக்யமாய்
ஓர்–விலக்ஷணமான
சோறும்–ப்ரஸாதத்தையும்
நியதமும் அத்தாணி சேவகமும்–எப்போதும் பிரியாமல் கூடவேயிருந்து செய்கிற ஸேவக வ்ருத்தியையும்
கை அடைக்காயும்–திருக்கையால் ப்ரஸாதிக்கும் தாம்பூலத்தையும்
கழுத்துக்கு பூணோடு–கழுத்தில் தரித்துக் கொள்ளவேண்டிய ஆபரணத்தையும்
காதுக்கு குண்டலமும்–காதில் இட்டுக் கொள்ளவேண்டிய குண்டலத்தையும்
மெய் இட–உடம்பில் பூசிக்கொள்ளும்படி
நல்லது ஓர் சாந்தமும்–சிறந்த சந்தனத்தையும்
தந்து–(ரஜஸ்தமோ குணங்களால் ஐச்வரியத்தை விரும்பின என்னுடைய விருப்பத்தின்படியே) கொடுத்து
என்னை–இப்படி ஸம்ஸாரியாயக் கிடந்த என்னை
வெள் உயிர் ஆக்கவல்ல–சுத்த ஸரத்விகனாகச் செய்தருளினவனாய்
பை உடை நாகம் பகை கொடியானுக்கு–படத்தையுடைய பாம்புக்கு விரோதியான கருடனைக் கொடியாக வுடையனான எம்பெருமானுக்கு
பல்லாண்டு கூறுவன்–மங்களாசாஸநம் பண்ணுவேன்.
விளக்க உரை
“அண்டக்குலத்துக்திபதியாகி’’ என்னும் பாசுரத்தில் ஐச்வர்யார்த்திகளை அழைத்தாரே;
அவர்கள்தாம் எம்பெருமானிடத்தில் சில ஐச்வர்யங்களைப் பெற்றுக்கொண்டு திருந்தி மங்களாசாஸநத்துக்கு ஸித்தராக
வந்தபடியைச் சொல்லிக் கொள்ளுகிறார்களாக அருளிச் செய்வது இந்தப் பாசுரம்.
கீழ்ப்பாசுரங்களிற் போல் இதில் பன்மையின்றியே ‘‘பல்லாண்டு கூறுவன்’’ என்று ஒருமையாகப் பிரயோகமிருப்பதற்குக் காரணம் கேண்மின்; –
உலகத்தில் அநந்ய ப்ரயோஜநர்களுடைய கூட்டமும் கைவல்யார்த்திகளுடைய கூட்டமும் மிகவும் ஸ்வல்பமா யிருக்குமாகையாலே
அந்தக் கூட்டங்களிலுள்ள நாலைந்து பேர்கள் பேசினதாகக் கொண்டு அவர்களது பாசுரங்களில்
‘‘பல்லாண்டு பாடுதுமே’’ என்றும் ‘‘பல்லாண்டு கூறுதுமே’’என்றும் பஹுவசந ப்ரயோகம் பண்ணப்பட்டது.
ஐச்வர்யார்த்திகளான இவர்களுடைய கூட்டம் அப்படி ஸவல்பமாயிராமல் அளவற்றிக்குமாகையால்,
ஒரு பெரிய கூட்டத்துக்கெல்லாம் ஒருவன் பிரதாநனாய் நின்று பேசுவது வழக்கமாகையால் அப்படியே இருக்கும் ஒருவன் பேசுவதாகவைக்கப்பட்டது.
மேல் ‘‘அல்வழக்கொன்றுமில்லா’’ என்கிற பாட்டிலுள்ள ஏகவசநத்துக்கும் இதுவே ஸமாதாநம்.
உலகத்தார்க்கு வேண்டிய பதார்த்தங்கள் மூன்றுவிதம் – தாரகம், போஷகம், போக்யம் என
அன்னம் தாரகம், நெய் பால் தயிர் முதலானவை போஷகம், சந்தனம் புஷ்பம் தாம்பூலம் முதலியவை போக்யம்.
ஆக இந்தப் பதார்த்தங்கள் ஒருவனுக்குப் போதுமானவை கிடைத்தால் அவ்வளவில் த்ருப்திபெற ப்ராப்தம் ஊர்ப்பட்ட
அண்டாதிபத்யமெல்லாம் வேணுமென்று விரும்புவது பகவத்மாகும். ஆகையால் ஸ்வரூபஜ்ஞாநமில்லாமல் அண்டாதிபத்யம் அளிக்கவேணுமென்று
நாங்கள் எம்பெருமானைப் பிரார்த்தித்தாலும் அவன் பரமக்ருபாளுவாய் எங்களை உஜ்ஜீவிப்பிக்கத் திருவுள்ளம்பற்றி
எங்களுக்கு உசிதமாய் வேண்டியவளவு தாரக – போஷக – போக்ய வஸ்துக்களைக்கொடுத்து இனிமேலாவது
எங்களுக்கு நல்ல புத்தியுண்டாகும்படி குளிரக்கடாஷித்து ‘‘ஐச்வரியம் த்யாஜ்யம், பகவத்கைங்கர்யமே புருஷார்த்தம்’’ என்னும்
அத்யவஸாயத்தைப் பிறப்பித்து எங்களை சுத்தஸ்வரூபராக ஆக்கினான்.
அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் பண்ணுவோம் நாங்கள் – என்று ஐச்வர்யத்திகள் சொல்லுவதாக இந்தப் பாசுரம் உள்ளது.
‘‘நெய் எடை’’ என்றும் ‘‘நெய் இடை’’ என்றும் பாடபேதமுண்டு.
முந்தினபாடத்தில், நெய்பாதி சோறுபதியாய் இரண்டும் அளவொத்திருக்குமென்கை.
ஒருவீசைச்சோற்றுக்கு ஒருவீசை நெய் சேர்ப்பதென்றால், இதனில் விஞ்சிய நல்ல சோறு இல்லையன்றோ.
‘‘நெய்யிடை’’ என்ற பாடத்தில், நெய்யின் நடுவே உள்ள சோறு என்று பொருளாய்,
நெய்யின் அளவு அதிகமாயும் ப்ரஸாதத்தினளவு அல்பமாயுமிருக்கு மென்கை.
நல்லது ஓர் சோறு இட்டவன் ‘நாம் இட்டோம்’ என்று அஹங்காரங் கொண்டாலும், உண்டவன்,
‘இதற்கு நாம் என்ன கைம்மாறு செய்வோம்’ என்றிருந்தாலும் நல்ல சோறாகமாட்டாது;
பெற்ற தாய் இட, புத்திரன் உண்ணுஞ் சோறுபோலே அன்புடன் இடப்பட்டு ருசியில் குறையில்லாத சோறு என்றபடி.
அத்தாணிச் சேவகமாவது – ஆஸ்தாநஸேவகம்; எம்பெருமானிருக்கும் இடத்தில் கூடவேயிருந்துகொண்டு பிரியாமல் நின்று
செய்கிற கைங்கரியம் ஐச்வர்யார்த்தியானவன் சொல்லுகிற இந்தப் பாசுரத்தில் ‘அத்தாணிச் சேவகமும் தந்து’’ என்று எங்ஙனே சொல்லலாம்?
அநந்யப்ரயோஜநனுக்கன்றோ அத்தாணிச் சேவகமுள்ளது; சோறு அடைக்காய் பூண் குண்டலம் ஆகிய இவற்றைத் தந்து என்பது சேருமேயொழிய
அத்தாணிச் சேவகமும் தந்ததாகச் சொல்லுகிறது சேராதேயென்னில்;
ஐச்வர்யார்த்தியாயிருந்தாலும் பகவத் க்ருபையாலே திருந்தி அநந்ய்ப்ரயோஜநனாய் வந்தமை தோற்றும்படியாகச் சொல்லுகிற
பாசுரமாகையாலே சேருமென்க. நான் அபேக்ஷித்த ஜீவநத்தைமாத்திரம் கொடுத்துவிடாமல் உஜ்ஜீவநத்தையு முண்டாக்கி
என்னைப் பரிசுத்தாத்மாவாகச் செய்தானே! என்று ஸந்தோஷித்துச் சொல்லுகிற பேச்சு.
வெள்ளுயிர் – சுத்தமான ஆத்மா. ஸத்வம் ரஜஸ் தமஸ் என்று மூன்று குணங்களுண்டு.
அவற்றுள் ஸத்வகுணத்தை வெண்ணிறம் உள்ளதாகவும் ரஜோ குணத்தைச் சிவப்பு நிறமுள்ளதாகவும்
தமோ குணத்தைக் கறுப்பு நிறமுள்ளதாகவும் கூறுவது கவிஸமயமாதலால் இங்கே ஸாத்விகளை வெள்ளுயிரென்றார்.
பையுடைநாகப் பகைக்கொடியானுக்கு என்கிறவிடத்தில், ‘‘பையுடை நாகத்தானுக்கு’’ என்றும்
‘‘(நாகப்) பகைக்கொடியானுக்கு’’ என்றும் பிரித்துக் கொள்வது நன்று.
‘‘அநந்தசாயியாய் கருடத்வஜனானவனுக்கு மங்களாசாஸநம் பண்ணுகிறேனென்கை’’ என்று வியாக்கியானமருளிச்செய்த
பெரிய வாச்சான்பிள்ளையின் திருவுள்ளம் இதுவேயாம்.
நாகத்துக்கு ‘பையுடை’ என்று விசேஷணமிட்டபடியால் அது வீணாகாமைக்காக இப்படி அர்த்தம் செய்யவேண்டிய தாயிற்றென்ப.
ஸந்தோஷத்தாலே விரிந்த படங்களையுடைய திருவனந்தாழ்வான்மேலே சயனிப்பவனாயும், அந்த நாகஜாதிக்கு சத்ருவான
கருடனை த்வஜமாகவுடையனாயும் இருக்கிற எம்பெருமானுக்கு என்றபடி.
நித்யம், குண்டலம், நாகம் – வடசொற்கள்.
——————–
உடுத்துக் களைந்தநின் பீதக வாடை யுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடும்இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக்கரு மம்திருத் தித்திரு வோணத் திருவிழவில்
படுத்தபைந் நாகணைப் பள்ளிகொண் டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.
பதவுரை
உடுத்து–தேவரீர் அரையில் சாத்திக்கொண்டு
களைந்த–கழித்துவிட்ட
நின் பீதகவாடை–தேவரீருடைய பீதாம்பரத்தை
உடுத்து–உடுத்துக்கொண்டும்
கலத்தது–தேவர் அமுதுசெய்த பாத்திரத்தில் மிகுந்திருப்பதை
உண்டு–புஜித்தும்
சூடி களைந்தன–தேவர் சாத்திக்கொண்டு களைந்தவைகளான
தொடுத்த–தொடுக்கப்பட்டுள்ள
துழாய் மலர்–திருத்துழாய் மலர் -மாலைகளை
சூடும்–சூட்டிக் கொள்ளுகிறவர்களான
இத்தொண்டர்களோம்–இப்படிப்பட்ட தாஸர்களான நாங்கள்
விடுத்த திசை கருமம் திருத்தி–தேவரீர் ஏவியனுப்பிய திக்கிலே ஆகவேண்டிய காரியங்களை ஒழுங்காகச் செய்து,
படுத்த–கீழே பரப்பிய
பை நாகம் அணை–படத்தையுடைய பாம்பாகிற படுக்கையில்
பள்ளி கொண்டானுக்கு–சயனித்திருக்கிற தேவரீருக்கு
திருஓணம் திருவிழவில்–ச்ரவணத் திருநாளிலே
பல்லாண்டு கூறுதும்–மங்களாசாஸநம் செய்வோம்
விளக்க உரை
‘‘வாழாட்பட்டு’’ என்னும் பாசுரத்தில் அழைக்கப்பட்டு ‘‘எந்தை தந்தை தந்தை’’ என்னும் பாசுரத்தால் தங்கள் வ்ருத்தியைச்
சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்த அநந்யப்ரயோஜநர்கள் தாம் எம்பெருமானை நோக்கிப் பல்லாண்டு பாடும்படியை அருளிச்செய்வது இப்பாட்டு.
‘‘நின் பீதகவாடை’’ என்று முன்னிலையாகச் சொல்லியிருப்பதால் இந்தப் பாசுரம் எம்பெருமானையே நோக்கி
அவர்கள் சொல்லுவதாக நன்கு விளங்கும். கீழே ஆழ்வாரால் அழைக்கப்பட்ட மூவகை அதிகாரிகளும் வரிசையாக
‘எந்தை தந்தை’ ‘தீயிற்பொலிகின்ற’ ‘நெய்யெடை நல்லது’ என்னும் பாசுரங்கள் சொன்னது ஆழ்வாரை நோக்கிச் சொன்னதாம்.
இனி, ‘உடுத்துக்களைந்த’ ‘எந்நாளெம்பெருமாள்’ ‘ அல்வழக்கொன்று மில்லா’ என்கிற மூன்று பாசுரங்களும் –
அவர்கள் எம்பெருமானையே ஸாக்ஷாத்தாக நோக்கிச் சொல்வதாம்.
மேலிரண்டு பாசுரங்களில் எம்பெருமானுடைய விளி வ்யக்தமாகவுள்ளது;
இப்பாசுரத்தில் அப்படி வ்யக்தமாக இல்லாவிடிலும் ‘‘நின் பீதகவாடை’’ என்கிற சொல்லாற்றலால் வ்யந்தமாகிறது.
எம்பெருமானே! நாங்கள் எங்களுக்கென்று அன்னம் வஸ்திரம் புஷ்பம் முதலானவற்றை விலைக்கு வாங்கி உபயோகிப்பதில்லை.
தேவரீர் அனுபவித்துக் கழித்தவற்றை மஹாப்ரஸாதமாகக் கொண்டு அவற்றையே உடுப்பதும் உண்பதும் சூடுவதும், செய்வோம் நாங்கள்;
அவ்வளவோடும் நில்லாமல், தேவரீருக்கு எந்த திக்கிலே எந்த காரியம் ஆக வேண்டியிருந்தாலும் அவற்றை ஒழுங்குபடச்செய்து முடிப்பதும் செய்வோம்.
அவ்வளவிலும் த்ருப்தி பெறாமல், ஒரு வெள்ளிமலையில் காளமேகம் சாய்ந்து கிடப்பதுபோல் ஆதிசேஷ சயனத்திலே
தேவரீர் பள்ளிகொண்டிருக்கிற கிடையழகுக்குப் பல்லாண்டு பாடுவதும் செய்வோமென்கிறார்கள்.
பீதகவாடை – ‘பீதம்’ என்னும் வடசொல் சுப்ரத்யயம் பெற்றுப்பீதகமென்றாயிற்று. பொன்வர்ணமான ஆடை என்கை.
எம்பெருமானுடைய திவ்ய பீதாம்பரத்தைப் பிறர் உடுத்துக் கொள்ளலாமோ? அஃது அப்பெருமானுக்கே அஸாதாரணமன்றோ? என்னில்;
அவனுக்கு அஸாதாரணமான பீதாம்பரத்தை இங்கே விவக்ஷிக்கவில்லை.
சில ஆஸனங்களில் ஸாதாரணத் திருப்பரிவட்டங்களும் சாத்திக் கொள்வதுண்டாகையால் அவற்றைச் சொல்லுகிறது.
அவை பீதகவாடையாகுமோ வென்னில்; எம்பெருமான் திருவரையில் சாத்திக்கொள்ளும் வஸ்த்ரங்களெல்லாம்
திவ்யபீதாம்பரத்தின் அம்சமேயாமென்பது சாஸ்த்ரம்.
பள்ளிகொண்டானுக்கு – பள்ளி கொண்டவுனக்கு என்கை. முன்னிலையில் படர்க்கைவந்த இடவழுமைதி ‘
‘ஒருமையிற் பன்மையும் பன்மையிலொருமையும், ஓரிடம் பிறரிடம் தழுவலுமுளவே’’ என்பது நன்னூல்.
—————–
எந்நாள் எம்பெரு மான்உன் தனக்கடி யோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திருமது ரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நா கத்தலை பாய்ந்தவ னே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே
பதவுரை
எம்பெருமான்–ஸ்வாமிந்!
உன்தனக்கு–தேவரீர்க்கு
அடியோம் என்றெழுத்துப்–நாங்கள் அடிமைப்பட்டவர்கள் என்று சொல்லானது
பட்ட நாள்–எங்களுடைய வாயில் உண்டாகப்பெற்றநாள்
எந்நாள்–எந்த தினமோ,
அந்நாளே–அந்த தினம் முதலாகவே
அடியோங்கள்–அடியோங்களுடைய
அடிகுடில்–அடிமைப்பட்ட ஸந்தானமெல்லாம்
வீடுபெற்று உயந்ததுகாண்–நல்ல கதியையடைந்து உஜ்ஜீவித்துவிட்டது
செம் நாள் தோற்றி–நல்ல நக்ஷத்திரத்திலே திருவவதரித்து
திரு மதுரையுள்–அழகிய வடமதுரையிலே
(கம்ஸனுடைய ஆயுதசாலையில் புகுந்து)
சிலை குனித்து–வில்லை வளைத்து முறித்து
ஐந்தலைய–ஐந்து தலைகளையுடய
பை–படத்தோடு கூடின
நரகம்–காளிய நாகத்தினுடைய
தலை–தலைமேலே
பாய்ந்தவனே–குதித்தவனே!
உன்னை பல்லாண்டு கூறுதும்–தேவரீருக்கு மங்களாசாஸநம் செய்வோம்
விளக்க உரை
‘‘ஏடு நிலத்தில்’’ என்கிற பாசுரத்தில் அழைக்கப்பட்டு ‘‘தீயிற்பொலிகின்ற’’ என்னும் பாசுரத்தால்
தாம் திருந்தினபடியைச் சொல்லிக்கொண்டு வந்துசேர்ந்த கைவல்யார்த்திகள் எம்பெருமானை நோக்கி
மங்களா சாஸநம் பண்ணுகிறபடியைச் சொல்வது இந்தப்பாசுரம்.
எம்பெருமானே நாங்கள் கைவல்ல புருஷார்த்த ப்ராப்திக்கு ஸாதகமாக ‘‘ஓம், நம:’’ முதலிய சொற்களைச் சொல்லிக் கொண்டு
தேவரீரை பஜநம் பண்ணினோம்; தேவரீர் எங்களைக் கடாக்ஷித்து நாங்கள் மீட்சியற்ற கைவல்யத்தை யடைந்து
கெட்டுப் போகாதபடி அருள்புரிந்து நல்லபுத்தியை யுண்டாக்கினபடியால் அடியோங்கள் இப்போது திருந்தி
தேவரீருக்குப் பல்லாண்டு பாடுகிறவர்களாக ஆய்விட்டோ மென்கிறார்கள்.
எம்பெருமானே! தேவரீருக்கு அடியோமென்று எழுத்துப்பட்ட நாள் எந்நாளோ, அந்நாளிலேயே அடியோங்களுடைய குடில்
உஜ்ஜீவித்துப் போயிற்று என்றது – நாங்கள் கைவல்யப்ராப்திக்கு ஸாதகாமாக ஓம், நம: என்பதை அநுஸந்தித்து
அதனால் யாத்ருச்சிகமாக நல்லபுத்தி பிறந்து குடிகுடியாக உஜ்ஜீவித்தோமென்றபடி. குடில் – க்ருஹம்; கைச்யாநுஸந்தாநப் பேச்சு.
வில்விழவென்கிற வியாஜம் வைத்துக் கம்ஸனால் வரவழைக்கப்பட்ட கண்ணபிரான் அவனுடைய ஆயுதசாலையிலே புகுந்து
வில்லையெடுத்து முறித்ததும்
தன்னுடைய விஷத்தாலே யமுநாநதியின் ஒரு மடுவைக் கெடுத்துக்கொண்டு
எல்லார்க்கும் பயங்கரமாயிருந்த காளியநாகத்தைத் தண்டித்ததும் ப்ரஹித்தம்.
———————
அல்வழக் கொன்றுமில் லாஅணி கோட்டியர் கோன்அபி மானதுங்கன்
செல்வனைப் போலத் திருமா லேநானும் உனக்குப் பழவடியேன்
நல்வகை யால்நமோ நாரா யணாவென்று நாமம் பலபரவி
பல்வகையாலும் பவித்திர னேஉன்னைப் பல்லாண்டு கூறுவனே.
பதவுரை
திருமாலே–ச்ரியபதியே!
அல் வழக்கு ஒன்றுமில்லா–அநீதிகள் ஒன்றுமில்லாமலிருக்கிற
அணிகோட்டியர் கோன்–அழகிய திருக்கோட்டியூரில் உள்ளவர்களுக்குத் தலைவரும்
அபிமாநம்துங்கன்–ஸ்ரீவைஷ்ணவாபிமாநத்தாற் சிறந்தவருமான
செல்வனைபோல–செல்வநம்பியைப் போலவே
நானும்–நானும்
உனக்கு–தேவரீருக்கு
பழ அடியேன்–பழமையான தாஸனாய்விட்டேன்
பல் வகையாலும் பவித்திரனே–எல்லாவிதங்களாலும் பரிசுத்தனான பெருமானே
நல் வகையால்–அடியேனுக்கு நன்மையுண்டாகும்படி
நமோ நாராயணா என்று–திருமந்திரத்தை அநுஸந்தித்து
பல நாமம் பரவி–(தேவரீருடைய) அனேக திருநாமங்களைச் சொல்லியேத்தி
உன்னை பல்லாண்டு கூறுவன்–தேவரீருக்கு மங்களாசாஸநம் பண்ணுவேன்.
விளக்க உரை
‘‘அண்டக்குலத்துக்கு’’ என்னும் பாசுரத்தாலே அழைக்கப்பட்டு ‘‘நெய்யெடை’’ என்னும் பாசுரத்தால் தாங்கள்
திருந்தினபடியைச் சொல்லிக் கொண்டுவந்து ஐச்வர்யார்த்திகள் எம்பெருமானை நோக்கி மங்களாசாஸநம் பண்ணுகிறார்கள் இதில்
ஐச்வர்யத்திகள் எண்ணிறந்தவர்கள் ஆகையாலே அவர்களுள் ஒருவன் சொல்லுகின்றனென்று
‘‘நெய்யெடை’’ என்கிற பாசுரத்தில் ‘‘கூறுவனே’’ என்று ஏகவசநப்ரயோகம் பண்ணினதுபோலவே இதிலும் கொள்வது.
அல்வழக்கு ஒன்றுமில்லா- தேஹமே ஆத்மாவென்று நினைப்பது, பகவானுக்கு சேஷமாய்ப் பரதந்த்ரமான
ஆத்மாவை ஸ்வத்ந்த்ரமென்று நினைப்பது, தேவதாந்தரங்களைப் பரதெய்வமாக நினைப்பது,
எம்பெருமானிடத்தில் க்ஷுத்ர பலன்களை அபேக்ஷிப்பது, மோக்ஷத்துக்காகவும் கருமம் ஞானம் முதலிய உபாயாந்தரங்களை
அநுஷ்டிப்பது இவை முதலானவை அல்வழக்குகள் – அநியாயங்கள்;
அவையில்லாதவரான செல்வநம்பி தேவரீர்க்கு எப்படி நித்யதாஸரோ அப்படி நாங்களும் நித்யதாஸராய்விட்டோம் என்கிறார்கள்.
‘அணிகோட்டியர்கோன்’ என்கையாலே செல்வநம்பி திருக்கோட்டியூரில் அவதரித்தவர் என்று விளங்குகிறது.
இத்தனைநாள் வரையில் ஐச்வர்யத்தியாயிருந்து இன்று வந்து சேர்ந்தவன், ‘செல்வநம்பிக்கைப்போலே நானும் பழவடியேன்’
என்னாலாமோவென்னில், பாபத்தாலே வந்த அஹங்காரம் கழிந்துவிட்டால் எல்லா ஆத்மாக்களுக்கும்
அடிமையே நிலைநிற்பதாகையால் அப்படிசொல்லக் குறை ஏன்? இப்போது நல்வகையால் என்றபடியால் இதுவரையில்
இந்த ஐச்வர்யார்த்திகள் பகவந் நாமங்களைக் கெட்டவழியில் உபயோக்ப்படுத்தினார்களென்று ஏற்படுகின்றது.
கெட்டவழியாவது – பிரயோஜநாந்தரப்ரார்த்தகை. இதுவரையில் தங்களுக்கிருந்த அசுத்திகளையெல்லாம் போக்கி
சுத்தப்படுத்திச் சேர்த்துக்கொண்டபடியால் பல்வகையாலும் பவித்திரனே! என்கிறார்கள். அபிமானதுங்கன் – வடசொல் தொட.
———–
பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே.
பதவுரை
பவித்திரனை–பரிசுத்தனும்
பர மேட்டியை–பரமபத நிலயனும்
சார்ங்கம் என்னும் வில் ஆண்டான் தன்னை–ஸ்ரீசார்ங்கமென்கிற தநுஸ்ஸை அடக்கி ஆள்பவனுமான எம்பெருமானை
வில்லிபுத்தூர் விட்டு சித்தன்–ஸ்ரீவில்லிபுத்தூரிற் பிறந்த பெரியாழ்வார்
விரும்பிய சொல்–ஆதரத்தோடு சொன்ன சொல்லாகிய இப்பிரபந்தத்தை,
நல் ஆண்டு என்று–நமக்கு நல்ல காலம் வாய்த்ததென்று (மகிழ்ந்து)
நவின்று உரைப்பார்–ஸர்வதா அநுஸந்திப்பவர்கள்
பரமாத்மனை–ஸ்ரீமந்நாராயணனை
சூழ்ந்து இருந்து–சுற்றும் சூழ்ந்துகொண்டு
(நமோ நாராயணாய என்று. . . )
பல்லாண்டும்–எப்போதும்
பல்லாண்டு ஏத்துவர்–மங்களாசாஸநம் பண்ணப்பெறுவார்கள்.
விளக்க உரை
பரமபதத்தில் எழுந்தருளியிருப்பவனாய் நித்ய பரிசுத்தனாய்ப் பஞ்சாயுதங்களைத் தரித்துக் கொண்டிருப்பவனான ஸர்வேச்வரன்
விஷயத்தில் பெரியாழ்வார் பொங்கும் பரிவாலே பாடின இத்திருப்பல்லாண்டு திவ்யப்ரபந்தத்தை,
நமக்கு நல்லகாலம் வந்துவிட்டதென்கிற கொண்டாட்டத்துடன் இவ்விபூதியில் எஞ்ஞான்றும் பாடுகிறவர்கள்
மறுமையில் மோக்ஷலோகத்தை ய்டைந்து அங்கும் எம்பெருமானுடைய முகோல்லாஸத்தையே புருஷார்த்தமாக நினைத்து
அனேக தேஹங்களை எடுத்துக்கொண்டு அப்பெருமானுடைய நான்கு பக்கங்களிலும் இருந்துகொண்டு மங்களாசஸநம்
பண்ணப்பெறுவர்களென்று இதனால் பலன் சொல்லித் தலைகட்டிற்றாயிற்று.
பவித்திரன் – தான் பரிசுத்தனாயிருப்பதோடு அபரிசுத்தர்களையும் பரிசுத்த ராக்கவல்லவன் பரமேஷ்டீ என்னும் பரமேட்டியெனத் தெரிந்தது.
மிகச்சிறந்த ஸ்தானத்தில் வாழ்பவன் என்று பொருள். சார்ங்கம் என்பது (வடமொழியில்) வில்லுக்குப் பொதுப் பெயராயிருந்தாலும்,
பெருமானுடைய திருவில்லுக்குச் சிறப்புப் பெயருமாம் ‘‘வில் ஆண்டான்’’ என்ற சொல்லாற்றலால் -‘சத்துரிக்களைக் காட்டு, காட்டு’
என்று விம்மிக் கிளம்புகின்ற வில்லை அடக்கியாள்பவன் எம்பெருமான் என்பது விளங்கும்.
வில்லிகண்டார் என்பவர்களில் மூத்தவனான வில்லி என்பவனால் ஏற்படுத்தப்பட்ட புதிய நகரமாகையால் வில்லிபுத்தூரென்று திருநாமம்;
வில்லி யென்பவன் புற்றில்நின்றும் வடபத்ரசாயிப் பெருமாளைக் கண்டெடுத்துப் பிரதிஷ்டை செய்த திவ்யதேசமென்று
இதனை வில்லி புற்றூர் என்றுங் கூறுகின்ற்னர்.
வடமொழியில் ஸ்ரீதந்விநவ்யபுரம் எனப் பெரும்பான்மையாகவும் ஸ்ரீத்ந்லிவல்மீகபுரம் எனச் சிறுபான்மையாகவும் வழங்கப்பெறும்.
விட்டுசித்தன் – விஷ்ணுவை சித்தத்திலே உடையவர் என்று பொருள்.
மற்ற ஆழ்வார்களுடைய சித்தத்திலும் எம்பெருமான் எழுந்தருளியிருந்தாலும்
‘‘அரவத்தமளியினோடும் அழகிய பாற்கடலோடும், அரவிந்தப்பாவையுந்தானும் அகம்படி வந்து புகுந்து,
பரவைத் திரைபலமோதப் பள்ளி கொள்கின்ற பிரானை’’ என்றும்
‘‘பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டோடி வந்து, என் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பி’’ என்றும்
இவ்வாழ்வார்தாமே பேசிக்கொள்ளும்படியாக எம்பெருமான் குடும்பத்தோடே வந்து நித்யவாஸம் பண்ணப்பெற்ற ஏற்றம்
இவ்வாழ்வார் திருவுள்ளத்திற்கே அஸாதாரணமென்றுணர்க.
————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –