முன்னுரை
இது – மயர்வற மருளப்பெற்ற ஆழ்வார்களுள் தலைவரும், ப்ரபந்தந ஜந கூடஸ்தருமான நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு திவ்யப்ரபந்தங்களுள் இரண்டாவதான பிரபந்தம்.
திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, திருவாய்மொழி என்ற நான்கு வேதங்களின் ஸாரமாம்.
நாலாயிரப் பிரபந்தத்தில் மூன்றாவது ஆயிரமாகிய இயற்பாவில் இது ஆறாவதாகும். யஜுர்வேத ஸாரமுமாம்.
ஆழ்வார் தமது ஞானக் கண்ணுக்கு இலக்கான எம்பெருமானை நோக்கி. ‘தேவரீரை அநுபவிப்பதற்கு இடையூறான தேஹ ஸம்பத்த்தை அறுத்துத் தந்தருளவேணும்‘ என்று ஸம்ஸார ஸம்பந்த நிவ்ருத்தியை அபேக்ஷித்தார் – முதற் பிரபந்தமாகிய திருவிருத்தத்தில்.
ஆழ்வார் அப்படி பிரார்த்தித்த போதிலும், எம்பெருமான் இவ்வாழ்வாரைக் கொண்டு நாட்டுக்கு நன்மையாகச் சில திவ்ய ப்ரபந்தங்களை வெளியிடுவித்து சம்சாரிகளைத் திருத்திப் பணி கொள்ளத் திருவுள்ளம் பற்றினவனாகையாலே
“பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்புமிந்நின்ற நீர்மை இனியாமுறாமை“ என்று இவர் அபேக்ஷித்த இந்த ஸம்ஸாரத்தை விட்டு விலகி ஒரு
* நலமந்தமில்லதோர் நாட்டிலே போய்ச்சேரவேணுமென்று பாரிப்பது நம்முடைய குணங்களை அநுபவிப்பதற்காகவேயன்றி வேறொன்றுக்காகவன்றே : அந்த குணாநுபவத்தை இவர்க்கு நாம் இவ்விடத்திலேயே வாய்க்கச் செய்வோம்,
இங்கே தானே இவர் குணானுபவனம் பண்ணிக் களித்தாராய், அவ்வநுபவம் உள்ளடங்காமல் புறவெள்ளமிட்டுப் பிரபந்தங்களாகப்பெருகி லோகோபகாரமும் செய்தாராகட்டும்“ என்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றித் தனது ஸ்வரூப ரூபகுண விபூதிகளைக் காட்டிக்கொடுக்க
ஆழ்வார் அவற்றைக் கண்டு பரமானந்ந்தம் பொலிய அநுபவிக்கிறார் இத்திருவாசிரியத்தில்.
ஸம்ஸார ஸம்பந்தங் கழிந்து பரமபத்த்திலே போனபின்பு அநுபவிக்க்க்கூடிய எம்பெருமானது
மேன்மையையும் நீர்மையையும் வடிவழகையும் இங்கிருந்துகொண்டே சுருக்கமாக ஏழு பாட்டாலே அநுபவிக்கிறாராயிற்று.
ஆசிரியப் பாக்களினாலமைந்த இத்திவ்யப் பிரபந்த்த்திற்குத் திரு ஆசிரியம் எனத் திருநாமம் வழங்கலாயிற்று.
அடியொன்றுக்கு நான்கு சீராய் இயற்சீர் பயின்றும் வெண்சீர் விரவியும் மூன்றாமடிக்குக் குறையாமல் பலவடிகளால் அகவலோசையுற்று இறுதியில் ஏ யென்னும் அசையுடன் முடிவது ஆசிரயப்பாவாம்.
இது –நேரிசை யாசிரியப்பா, நிலை மண்டில வாசிரியப்பா முதலிய நான்கு வகைகளையுடையது,
எல்லாவடிகளும் நாற்சீராய் ஈற்றயலடி முச்சீராய் முடிவது நேரிசை யாசிரியப்பா.
எல்லாவடிகளும் நான்கு சீராலேயே முடிவது நிலை மண்டில வாசிரியப்பா.
இப்பிரபந்தத்தில் 1,2,3,6-ஆம் பாசுரங்கள் நேரிசையாசிரியப்பாக்கள்.
4,5,7-ஆம் பாசுரங்கள் நிலைமண்டில வாசிரியப்பாக்கள்.
அந்தத்தித் தொடையால் அமைந்ததாம் இப்பிரபந்தம்.
————–
அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளி செய்த தனியன்-
————————————————————————–
காசினியோர் தாம் வாழ கலி யுகத்தே வந்து உதித்து
ஆசிரியப் பா வதனால் அரு மறை நூல் விரித்தானை
தேசிகனை பராங்குசனை திகழ வகுளத் தாரானை
மாசடையா மனத்து வைத்து மறவாமல் வாழ்த்துதுமே-
காசினியோர் தாம் |
– |
பூலோகத்திலுள்ளவர்கள் |
வாழ |
– |
உஜ்ஜீவிப்பதற்காக |
கலியுகத்தே |
– |
இக் கலியுகத்தில் |
வந்து உதித்து |
– |
இந் நிலத்தில் வந்து அவதரித்து |
அருமறை நூல் விரித்தானை |
– |
தெரிய வரிதான வேத சாஸ்த்ரங்களை விவரித்தவரும் |
தேசிகனை |
– |
ஆசார்யரும் |
திகழ் வகுளம் தாரானை |
– |
விளங்குகின்ற மகிழ் மாலையை அணிந்துள்ளவருமான |
பராங்குசனை |
– |
நம்மாழ்வாரை |
மாசு அடையா மனத்து வைத்து |
– |
அஹங்கார மமகாரங்களாகிற குற்றங்களற்ற மனத்திலே வைத்து |
மறவாமல் |
– |
ஒருகாலும் மறவாமல் |
வாழ்த்துதும் |
– |
மங்களாசாஸநஞ்செய்வோம். |
————————————————————————–
பர-எதிரிகளை அங்குசம் -புற சமய வாதிகளை–தேசிகன்-ஆசார்யன்-
வெண்பா போல் ஆசிரிய பா -ஒரு வகை–அரு மறை-அரிய வேதம்-
காசினி-பூமி-தானே பிரகாசிக்கும் காசினி-
பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் தனியனுக்கு –
மணி பிரவாளம்-முத்து பவளம்-ஹாரம் போல்-கண்டத்துக்கு மேல் ஓன்று அறியாத காசினியோர்
ஆத்ம ஷேமம் பார்க்காமல்–கலி கோலாகலம் குறைக்க -யுவ வர்ண -கிரமம் படி உதித்தார்–ஆவிர்பூதம் ஆனார்-
உதயம்-சூர்யன்-வகுள பூஷண பாஸ்கரன் –அஞ்ஞானம் இருட்டு விலக்க –
கிருத யுகம் பிராமண-தத்தாத்ரியன் — திரேதா -ஷத்ரியன்- ராமன் –துவாபர -வைஸ்யன் -கண்ணன் -கலி -பராங்குசன்
லோகாந்தரத்தில் இருந்து வந்து உதித்தார் –
அவதரித்து செய்த கார்யம்–ஆசிரிய பா இனத்தில் -விஸ்தாரம்-புரியும் படி அரிய வேதத்தை விரித்து
அதுவே நிரூபகம் ஆகும் படி-விரித்தான்-என்கிறார்–
தொண்டு வைத்தே அருள பாடு போல்..–
வண் தமிழ் நூல் ஆக்கினார்—எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் –
மூன்று ஏற்றம்-ஆயிரம்-தமிழ்-இனிமை-
வேதார்த்த தரிசியான பராங்குச தேசிகன்-தன் துளவ தாரானை போல் வகுள தாரானை –
கண்ணன் கழலினை ..திண்ணம் நாரணமே -சங்க பலகை ஏற்றி–
சங்க புலவர் –சேமம் குருகையோ செய்ய திரு பாற்கடலோ
நாமம் பராங்குசனா நாரணனா-..தாமம் துளவமோ வகுளமோ
தோள்கள் இரண்டோ நான்கும் உளவோ பெருமாள் உனக்கு -என்ன கடவரே
பாவின் இன் இசை பாடி திரிவனே–
மாசற்றார் மனது உளானை -வணங்கி நாம் இருப்பது அல்லால்–திரு மாலை-பாசுரம்
மனன் அகம் மலம் அற -தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே –நிர்மல மனஸ்–ஆசை கொண்டு மனத்தில் வைக்க வேண்டும்
இசைவித்து என்னை உன் தாள் இணை கீழ் இருத்தும் அம்மான்-
தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே –
மனக்கே வந்து இடை வீடு இன்றி மன்னி-
பரி விராஜர் பரம ஹம்சர் –நல்லது தீயது விலக்கி- சரண் நடந்து காட்டி-
பக்தர் ஹிருதய தாமரை அமர்ந்து—நாள் கமழ வகுள் மார்பினன்-
சுப ஆஸ்ர்யம் -மங்களமான புகல் இடம்-பவித்ராணாம் பவித்ரம் மங்களானாம் மங்களம் –சத்வ குணம் வளரும்-
மறவாமல் மங்களா சாசனம் பண்ணுவோம்..
நம்மை திருத்த பாடி அருளினார் –வாழ்த்த வேண்டும்- ஆழ்வார் –திவ்ய மங்கள விக்ரகமே ஸூபாஸ்ரயம் —
இவ்விருள் தருமாஞாலத்திலே ஸம்ஸாரிகளாய்த் தடு மாறுகிற நம்போல்வாரை உஜ்ஜீவிக்கச் செய்வதற்காக இக்கலியுகத் திலே இப்பூமண்டலத்திலே வந்து திருவவதரித்துத் திருவாசிரிய மென்னுமித் திவ்யப்ரபந்தத்தை அருளிச்செய்து இதன் மூலமாக வேதார்த்தங்களை வெளியிட்டவரும்,
” ஆத்யஸ்ய ந: குலபதே : ” என்று ஆளவந்தாரருளிச்செய்தபடி ஸ்ரீவைஷ்ணவகுல கூடஸ்த ராய்க்கொண்டு ப்ரதமாசார்யரும்,
மகிழ்மாலையை நிரூபகமாகச் சாத்திக்கொண்டிருப்பவரும்,
புறமதத்தவர்களைக் கண்டித்து ஒழித்த தனாலே பராங்குசர் என்று திருநாமம் பெற்றவருமான நம்மாழ்வாரை நிஷ்கல்மஷமான நெஞ்சிலேவைத்து நித்தியம் வாழ்த்துவோமென்றதாயிற்று.
பராங்குசன் என்பதற்கு மாஞானிகள் சொல்லும் அர்த்தமும் ஒன்றுண்டு ; பரர்கட்கு அங்குசம் (மாவட்டி) போன்றவர்,- மதாந்தரஸ்தர்களை அடக்குகிறவர் என்கிற பொருள் ஒருபுறமிருக்கட்டும். பரன் என்று பரமபுருஷனான எம்பெருமானைச் சொல்லுகிறது. அவனைத் தம்முடைய ஸ்ரீஸுக்திகளாகிற மாவட்டியினால் வசப்படுத்திக்கொள்ளவல்லவர் என்கை. *
“வலக்கையாழி இடக்கைச் சங்கமிவையுடை மால்வண்ணனை, மலக்கு நாவுடையேற்கு” என்று தாமே அருளிச்செய்தார்.
சில குத்ருஷ்டிகள் மறை குலையச் சாது சனங்களடங்கத் தருக்கச் செருக்காலே எம்பெருமானுடைய பாத்வத்தை இல்லை செய்தவளவிலே ஸர்வேச்வரன் அதுகண்டு நடுங்கி “நான் பரதத்வமல்லேன், நான் பரதத்வமல்லேன்’ என்று பின் வாங்க,
ஆழ்வார், “ஒன்றுந்தேவுமுலகும்” என்கிற திருவாய்மொழி யாகிற மாவட்டியையிட்டு அவ்வெம்பெருமானாகிற களிற்றை ஓடவொட்டாதே நிலை நிறுத்திப் பரத்வஸ்தாபனம் பண்ணினபடியாலே பராங்குசரென்கிறது என்று கருத்து.
————————————————————————–
அவதாரிகை-
இது யஜூர் வேத சாரமாகும்
திரு விருத்தத்தில் ஸ்வரூப ரூப குண விபூதி காட்டி கொடுக்க – உபய விபூதிகளை அனுசந்தித்து –
நித்ய விபூதி உள்ளோர் -நித்ய சம்சாரிகளை
வீட்டை திருத்த -கலியும் கெடும் கண்டு கொண்மின் –
கர்ம பர தந்த்ராய் இதர விஷய போக -தேக -யாத்ரையிலே கழித்து —
சர்வேஸ்வரன் உடன் நித்யர் போல் இருக்க தமக்கு யோகியதை இருந்தும்
மோகம் சர்வ பூயோஷம்–இழந்ததை அனுசந்தித்து –தேக சம்பந்தம் கழித்து கொள்ள வழி தம் பக்கம் இல்லாமல்–கர்மாதீனம் பிறந்து–
மேலும் கர்மா சேர்த்து-பிறவி மாறி மாறி-அவனை திரு அடிகளில் விண்ணப்பம் செய்து-
இனி உறாமை-அருளி–அழுந்தார் பிறப்பாம் -இறுதி பாசுரமும் அருளி-
இப் பிர பந்தத்திலும் அதுவே தாத்பர்யம்-
உறாமை உடன் உற்றேன் ஆக்காமல்-அலற துடிக்க அழ பிராத்திக்க வைத்து –
நச்சு பொய்கை ஆகாது இருக்க /பிர பந்தம் தலை கட்ட/நாடு திருத்த /–தன் குழந்தை பட்டினி போட்டு நம்மை வாழ வைக்க-
பிறந்த ஆற்றாமை தீர பாசுரம் அருளுகிறார் —
அம்பு படுக்கை சம்சாரம் பீஷ்மர் பஞ்ச பாண்டவர் போல்-
ஆழ்வார் நமக்கு அருள-இங்கு வைக்கலாம் படி அல்ல இவர் த்வரை–
இது தாழ்ந்தது என்று அறிந்த ஆழ்வாரை கொண்டே பாட வைத்து –
இருபது தடவை இனி இனி கூப்பிட வைத்தார்-பல நீ காட்டி-குண அனுபவம் இங்கே கொடுத்து திவ்ய தேசம் காட்டி-தேகம் தோஷம் –
அங்கே போய் அனுபவம் கேட்க வேண்டாம் படி அனுபவம் அதிகம் இங்கே காட்டி–அவற்றை அந்ய பரராய் அனுபவிக்கிறார்-
அந்தமில் பேரின்பம் அடைய துடிப்பது
நமது குணாநுபவம் செய்ய என்று அறிந்து கொண்டு
அவை எல்லாம் இங்கேயே காட்டி அருள
இங்கேயே பண்ணிக் களித்தாராய்
அந்த அனுபவம் உள்ளடங்காமல்
புற வெள்ளம் இட்டுப் பெரு வெள்ளம் இட்டு பிரபந்தங்களாக பெருகி
லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி
தனது ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டிக் கொடுக்க
அவனது
மேன்மையையும்
நீர்மையையும்
வடிவு அழகையும்
ஏழு பாசுரங்களாலே
அருளிச் செய்கிறார் –
————————————————————————–
செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர்
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய்
திகழ பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண் வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப
நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எரி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக
மூ வுலகு அளந்த சேவடியோயே –1-
————————————————————————–
பதவுரை
பவளம் செம் வாய்–பவழங்களாலே சிவந்த இடங்களை யுடையதும்
திகழ் பசும் சோதி–விளங்குகின்ற பசுமையான நிறத்தை யுடையதுமான
மரகதம் குன்றம்–ஒரு பச்சை மா மலையானது,
செக்கர் மா முகில் உடுத்து–சிவந்த பெரிய மேகத்தை அரையில் உடுத்துக் கொண்டும்
மிக்க செம் சுடர் பரிதி சூடி–மிகவும் சிவந்த தேஜஸ்ஸையுடைய ஸூர்யனை சிரஸ்ஸில் அணிந்து கொண்டும்
அம்சுடர் மதியம் பூண்டு–குளிர்ந்த ஒளியையுடைய சந்திரனைக் கண்ட பூக்ஷணமாக அணிந்து கொண்டும்
பல சுடர் புனைந்து–(நக்ஷத்திரங்களாகிற) பல தேஜஸ்பதார்த்தங்களையும் (பலவகை ஆபரணங்களாக) அணிந்து கொண்டும்
கடலோன் கைமிசை–கடலரசனுடைய கை மேலே
கண்வளர்வதுபோல்–படுத்துக் கொண்டிருப்பது போல
பீதக ஆடைமுடி பூண் முதலா மேதகு பல்கலன் அணிந்து–பீதாம்பரம், திருவபிஷேகம் கண்டிகை முதலான
சிறந்த பல திருவாபரணங்களைச் சாத்திக்கொண்டு
சோதி வாயவும் கண்ணனும் சிவப்ப–அழகிய வாயும் கண்களும் சிவந்திருக்கப் பெற்று
பச்சை-பசுமையான
மேனி-திவ்யமங்கள விக்ரஹத்தின் நிறமானது
மீதிட்டு மிக பகைப்ப–மற்ற ஒளிகளெல்லாவற்றிற் காட்டிலும் மேலோங்கி மற்ற ஒளிகளோடு
போர் செய்து கொண்டு விளங்கப் பெற்று
எறி கடல் நடுவுள்–அலை யெறிகின்ற கடலினிடையே
நஞ்சு வினை–விஷத் தொழிலையும்
கவர் தலை-கப்புவிட்டுக் கிளர்கின்ற(பல) தலைகளையுமுடைய
அரவு-திருவனந்தாழ்வானாகிற
இன் அமளி ஏறி-போக்யமான சயனத்தின் மீது ஏறி
அறி துயில் அமர்ந்து -யோக நித்திரையில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வம் குழாங்கள்-சிவன் பிரமன் இந்திரன் முதலிய எல்லாத் தேவ ஸமூஹங்களும்
கை தொழ கிடந்த-ஸேவிக்கும்படியாகப் பள்ளி கொண்டிருக்கிற,
தாமரை உந்தி தனி பெரு நாயக-தாமரைப் பூவைத் திருநாபியிலே உடைய அத்விதீய ஸர்வேச்வரனே!
மூ உலகு அளந்த-மூன்று லோகங்களையும் அளந்த
சே அடியோய்-அழகிய திருவடிகளை யுடையவனே! (வாழ்ந்திடுக!)
[செக்கர் மா முகில்.]
ஆழ்வார், கீழ்ப்பிரபந்தமாகிய திருவிருத்தத்தின் முதற்பாட்டில் “அழுக்குடம்பும்” என்று
தம்முடைய சரீரத்தின் தண்மையைப் பேசினார்;
இந்த முதற் பாட்டில் எம்பெருமானுடைய திருமேனியின் வைலக்ஷண்யத்திலீடு பட்டுப் பேசுகிறார்.
அப்ராக்ருதமாய் ஒப்புயர்வற்றதான பகவத் திவ்ய மங்கள விக்ரஹத்திற்கு ப்ராக்ருத வஸ்துக்களிலே
ஒன்றை உபமானமாக எடுத்துக் கூறுவதானது
ஒட்டுரைத் திவ்வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும், பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ என்றபடி
அவத்யமேயாயினும், ஓர் உபமானத்தையிட்டே அநுபவித்துத் தீர வேண்டியிருப்பதாலும்,
வேதாந்தங்களிலும் அப்படியே உபமானங்களை யிட்டே நிரூபித்திருப்பதாலும்
இவ்வாழ்வார் தாமும் இங்கு ஓர் உபமானத்தை யிட்டுப் பேசி அநுபவிக்கிறார்.
‘ப்ரஸித்தோபமை’ என்றும் ‘அபூதோபமை’ என்றும் உவமை இரண்டு வகைப்படும்;
முகம் சந்திரனைப் போன்றது-திருவடி தாமரையைப் போன்றது-என்றிங்ஙனே பேசுதல் ப்ரஸித்தோபமையாம்;
இனி அபூதோபமையாவது-
தமிழில் இல் பொருளுவமை எனப்படும்.
ப்ரஸித்தமல்லாத ஒரு விஷயத்தைக் கவிகள் தம் புத்தி சமத்காரத்தாலே ஏற்படுத்திக் கொண்டு
அதனை த்ருஷ்டாந்தமாக்கிக் கூறுதல் அபூதோபமையாம்.
இப்படிப்பட்ட அபூதோபமையைக் கூறுவதன் கருத்து-
உபமேயப் பொருளானது ஒப்பற்றது என்பதைத் தெரிவிப்பதேயாம்.
இப்பாசுரத்தில் அபூதோபமை வருணிக்கப்படுகிறது.
எம்பெருமான் திரு வரையில் திருப் பீதாம்பரம் சாத்திக் கொண்டும்
திரு முடியில் திருவபிஷேகமணிந்து கொண்டும்
இப்படியே மற்றும் பலபல திருவாபரணங்களைப் பூண்டு கொண்டும்,
செந்தாமரை போன்ற திருவாயும் திருக்கண்களும் விளங்கவும்,
ச்யாமமான திருமேனி நிறமானது மற்ற சோபைகளெல்லாவற்றையுங்காட்டில் விவேக்ஷித்து விளங்கவும்
கடலினிடையே திருவனந்தாழ்வானெனும் திருவணையின் மீதேறித் திருக் கண் வளர்ந்தருளாகிறபடிக்கு
த்ருஷ்டாந்தமாக வருணிக்கப் பொருத்தமான பிரஸித்தோபமை ஒன்றில்லாமையால் அபூதோபமை அருளிச் செய்கிறார்.
மரகதப் பச்சை மயமான ஒரு மலையானது
செந்நிறமான மேகத்தைப் பீதக வாடையாக உடுத்துக் கொண்டும்,
கிரீடத்தின் ஸ்தானத்திலே ஸூர்யனை அணிந்து கொண்டும்,
கண்டிகை ஸ்தானத்திலே சந்திரனை அணிந்து கொண்டும்,
முத்து ஸரம் முதலான மற்றும் பல திருவாபரணங்களின் ஸ்தானத்திலே நக்ஷத்திரங்களைப் புனைந்து கொண்டும்
திரு அதரம் திருக் கண்களின் ஸ்தானத்திலே பவழ மயமான பிரதேசங்களை யுடைத்தாகியும்
ஒரு கடலிலே பள்ளி கொண்டிருந்தால் எப்படி யிருக்குமோ அப்படி யிரா நின்றது
தேவரீர் திருக்கோலமுந்தாமுமாகத் திருப்பள்ளி கொண்டருளுகின்றமை-என்றாராயிற்று.
செக்கர் என்று சிவப்பு நிறத்துக்கும் செவ் வானத்துக்கும் பெயர்;
இங்கே, சிவந்த மேகமென்றும், செவ் வானத்தில் தோன்றிய மேகமென்றும் பொருள் கொள்ளலாம்.
மேகங்கள் மலைச் சாரலிற் படியுமாதலாலும்,
செக்கர் மா முகில் படிந்திருந்தால் பீதக வாடை யுடுத்தாற் போலிருக்கு மாதலாலும் “செக்கர்மா முகிலுடுத்து” எனப்பட்டது.
எம்பெருமான் உபமேயம்; மலை உபமானம்; பீதாம்பரம் உபமேயம், செக்கர் மா முகில் உபமானம்.
“கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்த நீண் முடியன்” என்று திருவபிஷேகத்திற்கு ஸூர்யனை
ஒப்புச் சொல்லுவதுண்டாதலால் “மிக்க செஞ்சுடர்ப் பரிதி சூடி” எனப்பட்டது.
எம்பெருமானுடைய கிரீடத்திற்கு ஸாதாரண ஸூர்யன் உபமானமாகப் போராமையால்
மிக்க செஞ்சுடர் என விசேஷிக்கப்பட்டது.
பரிதி என்கிற வட சொல் ஸக்ஷாத்தாக ஸூர்யனைச் சொல்லாதாகிலும் தமிழில் இலக்கணையால்
ஸூர்யனுக்குப் பேராயிருக்கும்.
இங்கு உபமானமாகிய மலை ஸூர்ய மண்டலம் வரை ஓங்கியிருப்பதாகக் கொண்டால்
ஸூர்யன் கிரீடத்தின் ஸ்தானத்திலே ஆவன்.
மார்பில் அணிந்து கொள்ளும் ஆபரணங்களில் ‘சந்த்ர ஹாரம்’ என்பது ஒன்று;
அது சந்திரன் வடிவமாக அமைக்கப்படுமாதலால் அப் பெயர் கொண்டதாகிறது.
சந்திரனுக்கு மலையினோடு ஸம்பந்தம் கீழ்ச் சொன்னபடியிலேயாம்:
ஸூர்ய சந்த்ர மண்டலம் வரையில் ஓங்கின மலை என்று கொள்க. மதி-சந்திரன்; அம்-சாரியை.
பல சுடர் என்றது
ஆகாசத்திலுள்ள மற்றும் பல நக்ஷத்ராதி தேஜஸ் ஸமூஹங்களைச் சொன்னபடி.
திருவாபரணங்களில் நக்ஷத்ர ஹார மென்பதுமொன்று.
புனைந்த என்று பாடமான போது
பெயரெச்சமாகி மரகதக் குன்றத்திற்கு விசேஷணமாகக் கடவது!
பவளச் செவ்வாய்- ‘ப்ரவாளம்’ என்ற வடசொல் பவளமெனத் திரியும்.
வாய் என்று இடங்களைச் சொன்னபடி.
மலையிற் பல இடங்களில் பவளமுண்டாதலால் பவளங்களாற் சிவந்த இடங்கள்
“கை வண்ணந் தாமரை வாய் கமலம் போலும் கண்ணிணையுமரவிந்தம் அடியுமஃதே” என்றும்
“பவள வாய் கமலச் செங்கண்” என்றும் சொல்லப்படுகிற திவ்ய அவயவங்களுக்கு உபமானமாகக் கூறப்பட்டன.
திகழ் பசுஞ்சோதி மரகதக் குன்றம்-
பசுமை நீலம் கருமை என்ற நிறங்களை அபேதமாகக் கூறுவது கவி மரபாதலால்
எம்பெருமானுடைய காளமேகத் திருவுருவத்திற்கு மரகதக் குன்றத்தை[-பச்சைமாமலையை] உவமை கூறினார்.
ஸாதாரண மலையானது எம்பெருமானுடைய துளக்கலாகா நிலைக்கும் வளர்த்திக்கும் ஒப்பாகுமேயன்றி,
காணப் புக்கவர்களின் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து
அவர்களுடைய ஸம்ஸார பந்தங்களை யெல்லாம் போக்குந்தன்மையும்
எப்போதும் தியானஞ்செய்வதற்கு உரியதாயிருத்தலும்
பெருங்கருணைக்கு இருப்பிடமாயிருத்தலும் முதலிய குண விசேஷங்களில் ஒப்பாக மாட்டாமையால்,
திகழ் பசுஞ்சோதி மரகதம் என்று குன்றம் விசேஷிக்கப்பட்டது.
ஆக இப்படிப்பட்டதொரு குன்றம் உலகில் எங்குமில்லை;
இருந்தாலும் அது கடலோன் கை மிசைக் கண் வளர்வது அஸம்பாவிதம்;
ஆக இத்தனையும் ஸம்பாவிதமாகில் எம்பெருமான் படிக்குப் போலி சொல்லலாமாய்த்து.
செக்கர் மா என்று தொடங்கி, கண் வளர்வது என்னுமளவும் உபமானத்தை சிக்ஷித்து முடித்து,
இனி பீதக வாடை என்று தொடங்கி உபமேயமான எம்பெருமானுடைய அநுபவத்தில் இழிகிறார்.
செக்கர் மா முகிலுக்கு உபமேயம் பீதக வாடை;
மிக்க செஞ்சுடர்ப் பரிதிக்கு உபமேயம் முடி(அதாவது-கிரீடம்);
அஞ்சுடர் மதிக்கும் பல சுடர்கட்கும் உபமேயம் பூண் முதலா மே தகு பல்கலன்.
பூண் என்பது ஆபரண ஸாமாந்யத்துக்குப் பேராயினும்
இங்கே சந்த்ரஹார மென்கிற ஆபரண விசேஷத்தைக் குறிக்குமென்க.
மேதகு-மேவத்தகு என்றபடியாய், (திருமேனிக்குப்) பொருந்தத் தக்கன என்றதாம்.
மெய்தகு என்றும் பாடமுண்டாம்;
மெய்-திருமேனி.
கலன் –ஆபரணம்.
மீதிட்டுப் பச்சை மேனி மிகப் பகைப்ப-
எம்பெருமானுடைய திருமேனியில் பீதக வாடையின் சோதி ஒரு நிறமாகவும்,
திருவபிஷேகத்தின் சோதி மற்றொரு நிறமாகவும்,
திவ்ய பூஷணங்களின் சோதி வேறொரு நிறமாகவும்
திருவாய் திருக்கண் முதலிய அவயவங்களின் சோதி மற்றுமோர் நிறமாகவும்
இப்படிப் பலவகை நிறச்சோதிகள் இருந்தாலும் திருமேனியின் நிறமாகிய
பாசியின் பசும் புறம் போன்ற மற்ற எல்லாச் சோபைகளோடும் போரிட்டு வெற்றி பெற்று விளங்குகின்றதாம்.
மேனி என்று உடலுக்கும் நிறத்துக்கும் பேர்; இங்கு நிறத்தைச் சொல்லுகிறது. பசுமை நிறமானது;
(மீதிட்டு மிகப் பகைப்ப-மிகப் பகைத்து மீதிட என்று விகுதி மாற்றிக் கூட்டி யுரைக்கலாம்.)
என்னுடைய சோபையின் முன்னே உங்களுடைய சோபை எப்படி விளங்கலாம் என்று போராடித் தானே மேற்பட்ட தாயிற்றாம்.
மீதிடுதல்-வெற்றி பெறுதல் என்னலாம்.
ஆக இவ்வளவும் எம்பெருமானுடைய திவ்ய சோபைகளை வருணித்தாராயிற்று.
இனி பள்ளி கொள்ளுமழகைப் பேசுகிறார்.
க்ஷீர ஸாகர மத்தியில் திருவனந்தாழ்வான் மேல் துயில் கொண்டருளி,
சிவன் பிரமன் இந்திரன் முதலான தேவர்களால் தொழப்படுமவனே!
தாமரை பூத்த திரு நாபியை யுடைய ஸர்வேச்வரனே!
பண்டொரு கால் மாவலி பக்கல் நிரேற்று மூவுலகுமளந்தவனே! ஜய விஜயீ பவ-என்றாராயிற்று.
திருமேனி யழகிலும் துயில் கொண்ட அழகிலும் இவ்வாழ்வார் நெஞ்சைப் பறி கொடுத்தாராகையாலே
ஒரு வினை முற்றோடே பாசுரத்தை முடிக்க மாட்டாமல்
“மூவுலகளந்த சேவடியோயே!” என்று கண்ணாஞ் சுழலையிட்டுக் கிடக்கிறார்.
நஞ்சு+வினை-நச்சு வினை;
சத்துருக்கள் மேல் விஷத்தை உமிழும் தொழிலை யுடையவனிறே திருவனந்தாழ்வான்.
கவர் தலை-கப்புவிட்டுக் கிளர்கின்ற தலைகளை யுடைய என்று சப்தார்த்தம்;
பலபல தலைகளை யுடைய என்பது தார்ப்பரியம்.
அமளி-படுக்கை.
அறி துயில்-யோக நித்திரை.
சேவடியோய்-சேவடியோன் என்பதன் விளி.
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .