Archive for the ‘திருமங்கை ஆழ்வார்’ Category

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -14–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

கீழ்ப் பாட்டில் “கரும்பினைக் கண்டுகொண்டு என் கண்ணினை களிக்கு மாறே“ என்று
ஆனந்த பரவசராய்ப் பேசினவர்,
ஐயோ! பழுதே பல பகலும் போயினவே யென்று கழிவிரக்கங்கொண்டு,
கீழ் நாள்களெல்லாம் வாளாவிருந்தொழிந்து பாவியானேனெயென்று முடி மேல் மோதிக் கொள்ளுகிறார்.

காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும்
பாவியேனாக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன்
தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை
பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே –

பதவுரை

காவியை–கரு நெய்தல் மலரை
வென்ற–தோற்பித்த
கண்ணார்–கண்களை யுடையரான மாதர்களினது
கலவியே–கலவியையே
கருதி–நினைத்துக் கொண்டு
நாளும்–அநாதி காலமாக
பாவியேன் ஆக எண்ணி–மஹா பாபியாகும்படி மநோ ரதித்து
அதனுள்ளே–அந்தப் பாவப் படு குழியிலேயே
பழுத்தொழிந்தேன்–பரி பக்குவனாய் விட்டேன;
தூவி சேர்–(அழகிய) சிறகையுடைய
அன்னம் மன்னும்–அன்னப் பறவைகள் பொருந்தி வாழ்கிற
சூழ் புனல்–சுற்றிலும் ஜல ஸம்ருத்தியை யுடைத்தான
குடந்தை யானை–திருக்குடந்தைக்குத் தலைவனான எம்பெருமானை
பாவியேன்–பாவியான நான்
பாவியாது–சிந்தியாமல்
பாவியேன் ஆயினேன்–(மேலும்) மஹா பாபியானேன்.

“கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி, நீண்ட வப்பெரியவாய கண்கள்
என்னைப் பேதைமை செய்தனவே!“ என்று ஈடுபட வேண்டிய திருக் கண்களை விட்டொழிந்து,
பிளிச்சைக் கண்ணிகளையெல்லாம் காவியை வென்ற கண்ணாராக ப்ரமித்து
அவர்களோடு கூடி வாழ்வதே பரம புருஷார்த்தமென்று கருதி, ஸுக்ருத லேசமும் பண்ணாத
மஹா பாபி யாவதற்கே வழி தேடி,

(தசரத சக்ரவர்த்தி வெண் கொற்றக் குடை நிழலிலே பழுத்தாற் போலவும்,
நம்மாழ்வார் “உனது பாலேபோற் சீரில் பழுத்தொழி்ந்தேன்“ என்று பகவத் குணங்களிலேயே பழுத்தாற் போலவும்)
அந்தப் பாவங்களிலேயே பழுத்தொழிந்தேன்

நான் பரம போக்யமான திருக் குடந்தைமா நகரிலே திருக் கண் வளர்ந்தருள்கின்ற ஆராவமுதாழ்வாரைச்
சிறிதாகிலும் நெஞ்சில் நினைத்திருந்தேனாகில் பாவங்கள் தொலையப் பெற்றிருப்பேன்.
அது செய்யாமை யன்றோ படுபாவியானேனென்றாராயிற்று.

தூவிசேரன்ன மன்னுங் குடந்தை =
ஞானம் அனுட்டானம் ஆகிய இரண்டு சிறகுகளமைந்த ‘ஹம்ஸர்‘ என்னும்படியான
மஹான்கள் வாழுமிடமென்று ஸ்வாதேசார்த்தங் கூறுவர்.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -13–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

பரம புருஷனான எம் பெருமானை மிகவும் அபரிசுத்தனான நான் எனது எச்சில் வாயால் ஸங்கீர்த்தனம் பண்ணி
‘ஐயோ! இப்படி அபசாரப் பட்டோமே!‘ என்று அஞ்சின என்னுடைய அச்சம் தீர
அப் பெருமான் வந்து என் கண்ணுள்ளே தோன்றி அபயமளித்தானென்கிறார்.

இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என்தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே–13-

பதவுரை

ஆவியை–உலகங்கட்லெல்லாம் ஓருயிராயிருப்பவனும்
அரங்கம் மாலை–திருவரங்கத்திலுள்ளவனுமான எம் பெருமானைக் குறித்து,
அழுக்கு உடம்பு எச்சில் வாயால்–இவ்வழுக்குடம்பின் எச்சில் வாயினால்
தூய்மை இல் தொண்ட நான்–அபரிசுத்தனும் கண்ட விடங்களில் தொண்டு பட்டவனுமான நான்
தொல்லை நாமம்–அநாதியான திருநாமங்களை
சொல்லினேன்–சொன்னேன்;
பரவியேன் பிழைத்த ஆறு என்று அஞ்சினேற்கு–பாவியான நான் பிழை செய்த விதம் என்னே!“ என்று அநுதாபமுற்ற வெனக்கு
அஞ்சல் என்று–அபயமளித்து
காவி போல்–கருங்குவளை நிறத்தரான
வண்ணார் வந்து என் கண் உள்ளே தோன்றினார்–என் கண்களினுள்ளே ஸேவை ஸாதித்தார்.

ஆவியை –
“ஓருயிரேயோ உலகங்கட்கெல்லாம்” என்கிறபடியே அனைத்துலகுக்கும் பிராணனாயிருப்பவன் எம்பெருமான்.
இப்படிப்பட்டவனை யன்றோ என்னுடைய எச்சில் வாயில் கொண்டு கெடுத்தேனென்கை.

(அரங்கமாலை)
கண்ணுக்குத் தோன்றாதபடி நிற்கிற உயிர் போலன்றியே எல்லாருங் காணலாம்படி
திருவரங்கம் பெரிய கோயிலிலே காட்சி தந்து ஆச்ரிதர் பக்கலில் வியாமோஹமே வடிவெடுத்தவன்
போலிருக்கிற எம்பெருமானையன்றோ நான் தூஷித்தேனென்கை.
தூஷிக்கையாவது எச்சில் வாயிற் கொள்ளுகை. அதனைச் சொல்லுகிறார். அ

ழுக்குடம்பேச்சில் வாயால் என்று. கண்டவர்களின் காலிலும் விழுந்து உடம்பு அழுக்காயிற்று;
கண்டவர்களையும் தோத்திரம் பண்ணி வாய் எச்சிலாயிற்று.
‘ஐயோ! தப்பாக இவை செய்தோம்‘ என்கிற அநுதாபமு மில்லாமையாலே தூய்மையற்ற தொண்டனாயினேன்.
இப்படிப்பட்ட நான். இவ்வழுக் குடம்பிலமைந்த எச்சில் வாயினால்

(சொல்லினேன் தொல்லைநாமம்) ‘தொல்லை நாமம்‘ என்றது –
அநாதிகாலமாக நித்யஸூரிகள் முதலானார்க்கு ஜீவனமாயிருக்கின்ற திருநாமம் என்றபடி.
பல பெரியோர்களுக்கு உதவும் படியான வஸ்துவை அநியாயமாக நான் வாய்வைத்துக் கெடுத்துவிட்டேனே!,
இனி அவர்கள் எங்ஙனே ஜீவிக்கப் போகிறார்கள்! என்று நைச்யாநுஸந்தானமாகப் பேசுகிறபடி.

தொல்லை நாமங்களை அழுக்குடம்பெச்சில் வாயால் நான் சொன்னது மாத்திரமன்றியே
”நானுஞ் சொன்னேன் நமருமுரைமின்“ என்று நமர்களையும் சொல்லுவித்தன்றோ கெடுத்தேன்;
ஆ ஆ! என்ன அபசாரப்பட்டோம்!, என்ன அபசாரப்பட்டோம்!!,
இனி நமக்கு உய்யும் வழியுண்டோ?” என்று நான் அஞ்சினவளவிலே
‘ஆழ்வீர்! அஞ்சவேண்டா‘ என்று வடிவழகைக் காட்டி மருந்தையிட்டுப் பொருந்த விட்டான் எம்பெருமான் என்றாராயிற்று.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -11–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

என்னுடைய மனத் துயரங்களை நானே தீர்த்துக் கொள்ளப் போமோ?
நீயே அருள் புரிய வேணுமென்று எம்பெருமானை நோக்கிப் பிரார்த்திக்கிறார்–

தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு
கண்டு நான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய்
அண்டமா எண் திசைக்கும் ஆதியாய் நீதியான
பண்டமாம் பரமசோதி நின்னையே பரவுவேனே –11-

பதவுரை

எந்தாய்–எம்பெருமானே!,
தொண்டு எல்லாம்–எல்லாவகையான அடிமைகளையும்
பரவி–(செய்யவேணும் செய்ய வேணுமென்பதாக) வாயாரப் பேசி
நின்னை தொழுது–உன்னை வணங்கி
அடி பணியும் ஆறு கண்டு–திருவடிகளிலே பணிவிடை செய்யும் படிகளை மநோ ரதித்து
தான் கவலை தீர்ப்பான் ஆவதே–நான் மனக் கவலை தீர்த்துக் கொள்ள முடியுமோ?
பணியாய்–அருளிச் செய்ய வேணும்;
அண்டம் ஆய்–அண்டங்களிலுள்ளாரெல்லார்க்கும் தலைவனாய்
எண் திசைக்கும் ஆதி ஆய்–எட்டுத் திசைகளிலுள்ள தேவதை கட்கும் காரண பூதனாய்
நீதி ஆன பண்டம் ஆம்–முறைமையான செல்வமாயிருப்பவனான
பரம சோதி–பரஞ்சோதியே!
நின்னையே–உன்னையே
பரவுவேன்–ஸ்தோத்ரம் பண்ணுவேன்.

(தொண்டெல்லாம் பரவி)
”ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்யவேண்டும். நாம்“ என்று நம்மாழ்வாரும்,
பவாம்ஸ்மு ஸஹ வைதேஹயா கிரிஸாநஷுரம்ஸ்யதே,
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதச்சதே.“ என்று இளைய பெருமாளும்
பாரித்துப் பேசினாப் போலே அடியேனும் எல்லாத் தொண்டுகளையும் செய்திடுவோமென்று
பாரிப்புக் கொண்டு தேவரீரைத் திருவடி தொழ வேணு மென்றும் மநோ ரதங்கொண்டிருக்குமளவால்-

என்னுடைய மனத் துன்பங்களை நான் போக்கிக் கொண்டேனாக வழியுண்டோ?
தேவரீர் திறத்திலே கைங்கரியம் செய்வதோ, தேவரீர் திருவடிகளைத் தொழுது பணிந்து நிற்பதோ
எல்லாம் தேவரீருடைய திவ்ய ஸங்கல்பத்தினால் நடைபெற வேண்டியவையே யன்றி
எலி யெலும்பனான நீசனேன் நினைத்தபடி எது தான் ஆகும்? ஒன்றுமாகாது;
என் கவலையை நானே தீர்த்துக் கொள்ளவல்லனோ? அல்லேன்.

தொண்டு செய்தலும் நின்னைத் தொழுதபடி பணிதலும் தலைக் கட்டப் பெற்றால் கவலை தீரத் தட்டில்லை;
அவை தலைக் கட்டுவது தேவரீருடைய ஸங்கல்பத்தாலாகுமத்தனை யாதலால் அங்ஙனே
தேவரீர் ஸங்கல்பித் தருளவேணுமென்று தேவரீரையே துதித்துப் பிரார்த்திக்கின்றனென்கிறார்.

“பரந்த சிந்தையொன்றி நின்று நின்ன பாத பங்கயம், நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்கவேண்டுமே“
என்ற திருமழிசைப்பிரான் பாசுரத்தின் கருத்தை இங்குக் காண்க.

எண்டிசைக்கு மாதியாய் =
அஷ்டதிக் பாலகர்களுக்கும் பாலகன் என்றபடி.

நீதியான பண்டம் =
பண்டமாவது தனம்; நீதியான பண்டமானது, முறைமைப்படி ப்ராப்தமான தனம்,
“சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய் தந்தையுமவரே“ என்கிறபடியே
எமக்கு ப்ராப்தமான செல்வம் தேவரீரே யென்றவாறு.

நின்னையே பரவுவேன் =
என்னுடைய கவலைகளை நானே தீர்த்துக் கொள்ள முடியாதாகையால்
நீயே தீர்க்க வேணுமென்று நின்னையே பரவுகின்றேனென்கை.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -10–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

ஸம்ஸாரத்தின் கொடுமைக்கு அஞ்சி தேவரிருடைய திருவடிகளைப் பற்றின வளவேயோ?
தாங்க வொண்ணாத பரமபக்தியும் உண்டாயிற்றே! என்கிறார்.

சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீ வினையேன்
பக்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய்
முத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்றும் அறிகிலேனே–10-

பதவுரை

சித்தமும்–நெஞ்சமும்
செவ்வை நில்லாது–தரித்து நிற்கிறதில்லை;
தீ வினையேன்–மஹா பாபியான நான்
என் செய்கேன்–என்ன பண்ணுவேன்?
எந்தாய்–எம்பெருமானே!
பத்திமைக்கு–அளவிறந்து பெருகிச் செல்லுகின்ற) பக்தியின் ஸ்தானத்திலே
அன்பு உடையேன் ஆவதே–(கீழ்ப்படியான) அன்பை உடையேனாம்படி
பணியாய்–செய்தருளவேணும்;
முத்து–முத்துப் போன்றவனே!
ஒளி மரகதமே–ஒளி பொருந்திய மரகதப்பச்சை போன்றவனே!
முழங்கு ஒளி முகில் வண்ணா–கர்ஜிப்பதும் ஒளிபொருந்தியது மான காளமுகம் போன்றவனே!
என் அத்த–என் நாயனே!
நின் அடிமை அல்லால்–உன் பக்கல் கைங்கரியம் தவிர
யாது ஒன்றும் அறிகிலேன்–வேறொன்றும் (புருஷார்த்த மாக) அறியமாட்டேன்.

(சித்தமும் செவ்வை நில்லாது)
கடலிலே நீந்த வேணுமென்று புகுந்து முதலடியில் தானே தெப்பத்தை இழக்குமா போலே,
அநுஸந்திக்கப் புகுந்து தரித்து நிற்க மாட்டாதே நெஞ்சு பறியுண்டதென்கிறார்.
“உருகுமால் நெஞ்சமுயிரின் பரமன்றிப், பெருகுமால் வேட்கையுமென்செய்கேன் தொண்டனேன்“ என்ற
நம்மாழ்வாரைப் போலே கதறுகிறார்.
பக்திப் பாரவச்யத்தாலே அநுபவிக்கப் போகாமால் நெஞ்சை யிழக்கும்படியான பாபத்தைப் பண்ணின
நான் என்ன செய்வேனென்கிறார்:

(பத்திமைக்கு அன்புடையேனாவதே பணியாய்)
ஜந்ம தரித்ரனுக்கு அளவு கடந்த பசியுண்டானால் பசிக்குத் தக்கபடி உணவு கிடைக்கப் பெறாதொழியில்
‘பசி மந்தித்துப் போவதற்கு மருந்து கொடுப்பாருண்டோ?‘ என்று விசாரிக்குமா போலே
ஆழ்வாரும் தம்முடைய பேராசைக்குத் தக்கபடி அநுபவிக்கப் பெறாமையாலே
ஆசையை அளவுபடுத்தினால் போது மென்கிறார்.

அளவுகடந்த ஆசை நிலைமைக்குப் பத்திமை யென்று பெயர்;
ஓரளவிலே நிற்கிற ஆசை நிலைமைக்கு அன்பு என்று பெயர் என்பதாகக் கொள்க.

இப்போது ஆழ்வாருடைய ஆசையின் நிலைமை எல்லை கடந்த அவஸ்தையிலே நிற்பதால்
‘இப்படிப்பட்ட பத்திமையைக் கொண்டு என்னால் பாடாற்றப் போகவில்லை,
இந்த நிலைமையை மாற்றி வெறும் அன்பு நிலைமையையே தந்திடாய்‘ என்று வேண்டிக் கொள்ளுகிறார்.

”என்றனளவன்றால் யானுடையவன்பு” என்னுமாபோலே அளவுகடந்து செல்லுகின்ற
ஆசைப் பெருக்கத்தைக் குறைத்து ஓரளவிலே அமைத்திடாய் என்கை.

பசிக்குத்தக்க சோற்றையாவது இடு; அல்லது,
பசியையாவது உள்ள சோற்றுக்குத் தகுதியாக அமைத்திடு என்பாரைப்போலே சொல்லுகிறார்.

“கண புரத்துப் பொன் மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல்,
என்னிவை தான் வாளாவெனக்கே பொறையாகி, முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்,
மன்னு மருந்தறிவீரில்லையே” என்ற பெரிய திருமடலும் இக் கருத்துப் பட நின்றமை உணர்க.

இங்ஙனே தமக்கு அளவுகடந்த பக்திப் பெருங்காதல் விளைவதற்கு அடி இன்னதென்கிறார்
முத்தொளி மரதகமே! முழங்கொளி முகில்வண்ணா! என்ற விளியினால்,
முத்துப் போலே குளிர்ந்ததாயும் மரதகம் போலே சாம நிறத்ததாயிருக்கின்ற திருமேனி யழகில் ஈடுபட்டதனால்
இப்படிப்பட்ட பக்தி யுண்டாயிற்றென்றவாறு.

வடிவழகிலே யீடுபடுமவர்கள்
”தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமலமன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாருமஃதே”
என்றாற்போல ஒவ்வொரு திவ்யாவபவத்திலும் நெஞ்சு நீர்ப்பண்டமா யுருகி ஈடுபட்டிருக்குமத்தனை யொழிய,
தரித்து நின்று கைங்கரியம் பண்ண முடியாதாதலாலும், தமக்குக் கைங்கரியம் பண்ணுவதிலேயே
அதிகமான ஆவல் இருப்பதனாலும்
”பக்திமைக்கு அன்புடையேனாவதே பணியாயெந்தாய்!” என்று வேண்டும்படி யாயிற்றென்பதை
ஈற்றடியினால் விளங்கக் காட்டினாராயி்ற்று.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -9–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

நாட்டார் எக் கேடு கெட்டாலும் கெட்டுப் போகட்டும்; நானும் அவர்களிலொருவனாய்க் கெட்டுப் போகாதே
மருவி வாழப் பெற்றனே யென்று மகிழ்ந்து
எம்பெருமானையே துணையாகக் கொண்டிருக்கும் தமது அநந்ய கதித்வத்தை வெளியிடுகிறார்.
என் உள்ளமானது ஜனன மரணங்களை நினைத்து உருகா நின்றது;
இதற்கு நான் செய்து கொள்ளக் கூடிய பரிஹார மொன்றுமில்லை;
நீயே துணை நிற்க வேணும் என்று எம்பெருமானை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறார்.

உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையில் எரி நின்று உண்ணும்
கொள்ளி மேல் எறும்பு போலக் குழையுமால் என்தன் உள்ளம்
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட
ஒள்ளயீர் உம்மை யல்லால் எழுமையும் துணை யிலோமே–9-

பதவுரை

உள்ளமோ–மனமோ வென்னில்
ஒன்றில் நில்லாது–ஒரு விஷயத்திலும் பொருந்தி நிற்கிறதில்லை;
ஓசையின் எரி–ஓசையோடு கூடின அக்னி
நின்று உண்ணும்–கவ்வி நின்று உண்ணப் பெற்ற
கொள்ளிமேல்–கொள்ளியில் அகப்பட்ட
எறும்பு போல–எறும்பு போலே
என் தன் உள்ளம்–எனது நெஞ்சானது
குழையும்–கைகின்றது;
அல்-அந்தோ! ;
(இப்படியிருப்பதனால்):
தெள்ளியீர்–தெளிந்த ஸ்வபாவத்தை யுடையீராய்
தேவர்க்கு எல்லாம் தேவர் ஆய்–தேவாதி தேவனாயிருந்து வைத்து
ஒள்ளியீர்–தேஜஸ்வி யானவரே!
எழுமையும்–எந்த நிலைமையிலும்
உம்மை அல்லால்–தேவரீரைத் தவிர்த்து
துணை இலோம்–வேறு துணை யற்றவர்களாய் இருக்கின்றோம்.

உள்ளமோ ஒன்றில் நில்லாது =
ஊர்வசீஸாலோக்யம் வேணுமென்று நாட்டங்கலும் தவம் புரியா நிற்க,
அந்த ஊர்வசி தானே அர்ஜுநனிடம் வந்து நின்று ‘எனக்கு நீ நாயகனாகக் கடவை‘ என்ன;
கையெடுத்துக் கும்பிட்டு ‘மாதே! எனக்கு நீ தாய் முறையாகிறாய்; இந்த விருப்பம் உனக்குத் தகாது:
‘கடக்கநில்‘ என்றான் அர்ஜுநன்
தானே கீதையில் கண்ணபிரானை நோக்கி
சஞ்சலம் ஹி மந க்ருஷ்ண! என்கிறான்;

அவனே அவ்வார்த்தை சொல்லும் போது நாமெல்லாம் எந்த மூலைக்கு! என்கிறார் போலும்,
கெட்ட விஷயங்களையே பற்றினாலும் அவற்றிலாவது நெஞ்சு நிலைத்து நிற்கிறதோ;
அதிலும் தோள் மாறுகின்றது, ஒன்றிலும் நிலைத்து நிற்பதில்லை;
இப்படிப்பட்ட நெஞ்சைப் படைத்திருக்கையாலே
தீக்கதுவின கொள்ளிக் கட்டையில் அகப்பட்டுக் கொண்ட எறும்பு போலே துடியா நின்றேன் என்கிறார்.

தெள்ளீயிர்
எனக்குக் கலங்குகை இயற்கையானாப் போலே தேவரீர்க்குத் தெளிந்திருக்கை இயற்கையன்றோ வென்கிறார்
தெள்ளீயிர் என்ற விளியினால்.
ஒரு மேட்டைக் கொண்டு ஒரு பள்ளத்தை நிரப்புமா போலே தேவரீருடைய தெளிவைக் கொண்டு
என்னுடைய கலக்கத்தைத் தொலைக்க வேணுமென்பது உட்கோள்.

(தேவர்க்கெல்லாம் தேவராய் உலகங்கொண்ட ஒள்ளியீர்)
அடியவர்கட்குக் காரியம் செய்வதென்று வந்து விட்டால் தேவரீருடைய பெரு மேன்மையைச் சிறிதும் பார்ப்பதில்லை யன்றோ?
‘தேவாதி தேவனாகிய நானோ யாசகனாய்ச் செல்வேன்?‘ என்று இறாய்க்காதே,
‘எவ்விதத்தாலும் அடியாருடைய அபேக்ஷிதம் தலைக் கட்டுவதே நன்று‘ என்று திருவுள்ளம் பற்றினவரன்றோ தேவரீர்!
அப்படி யாசகத் தொழில் செய்ததனால் உம்முடைய தேஜஸ்ஸுக்கு ஏதேனும் குறையுண்டாயிற்றே?
அதனால் மேன் மேலும் தேசு பொலியப் பெற்றீரன்றோ,
இப்படிப்பட்ட ஆச்ரித பக் ஷபாதத்தைத் தேவரீரிடத்திற் கண்டவர்கள்
எற்றைக்குமேழேழ் பிறவிக்கும் வேறொருவரைத் துணையாகக் கொள்வரோ? என்றாராயிற்று.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -8–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

ஸம்ஸாரிகள் தேஹத்தைப் பூண் கட்டிக் கொள்ள விருக்கிறார்களே யன்றி எம்பெருமானை
மருவி வாழ்வாரில்லையே! என வருந்திப் பேசுகிறார்.

வானிடைப் புயலை மாலை வரை யிடைப் பிரசமீன்ற
தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார்
மானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க தந்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே-8-

பதவுரை

வானி்டை புயலை–ஆகாசத்திலே வாழ்கிற மேகம் போன்ற வடிவுடையவனும்
மாலை–(அடியார் திறத்தில்) வியாமோஹமுடையவனும்
வரையிடே–மலையிலே
பிரசம் ஈன்ற–தேனீக்களாலே சேர்க்கப்பட்ட
மானிடம் பிறவி–(தாங்கள் மிக அருமையான) மநுஷ்ய ஜன்மமெடுத்திருப்பதை
மதி்க்கிலர்–எண்ணுகிறார்களில்லை;
அந்தோ–ஐயோ! ;
தம் தம்–தங்கள் தங்களுடைய
தேன் இடை–தேனீலே முளைத்த
கரும்பின்–கரும்பினுடைய
சாற்றை–சாறு போலப் பரம போக்யனும்
திருவினை–திருவுக்குந் திருவாகிய செல்வனுமான எம்பெருமானை
மருவி–ஆச்ரயித்து வாழ மாட்டார்கள்–
ஊனிடை குரம்பை வாழ்க்கைக்கு–மாம்ஸமயமான சரீரத்தில் வாழ்வதற்கு
உறுதியே–உறுதியையே
வேண்டினார்–விரும்பி நிற்கின்றார்கள்;
கொள்க–(இதை நீங்கள்) அறிந்து வைப்பது.

வானிடைப்புயலை =
ஆகாசத்தினிடையே நீர் கொண்டெழுந்து வந்து தோற்றுகிற காள மேகம் வடிவழகை யுடையவனை.
வானிடை யென்று விசேஷித்ததற்குக் கருத்து என்னென்னில்;
ஒரு + ஆலம்பனமுமில்லாத ஆகாசத்தை மேகம் பற்றினாப் போலே புகலொன்றில்லா வடியேனை விஷயீகரித்தான் என்றவாறு.

அப்படி விஷயீகரிப்பதற்கு ஹேது ஏதென்ன
‘மாலை‘ என்கிறார்;
வியாமோஹமே வடிவெடுத்தவனாதலால் என்க.

(வரையிடைப் பிரசமீன்ற தேனிடைக் கரும்பின் சாற்றை)
எம்பெருமானுடைய போக்யதை லோக விக்ஷணமென்று காட்டுதற்காக அபூர்வமானதொரு கரும்பை சிக்ஷிக்கிறார்;
தண்ணீர் பாய்ச்சப் பெற்று வளர்கின்ற கரும்பினன சாறு போன்றவனென்றால் சிறிதும் த்ருப்தி பிறவாமையாலே
‘வரையிடைப் பிரசமீன்ற தேனிடைக்கரும்பு‘ என்று புதிதாக வொரு வஸ்துவை வளர்ந்த கரும்பு இருக்குமானால்
அதன் சாறு போன்றவ னெம்பெருமான் என்னலாம் என்பது கருத்து.

(திருவினை)
‘திரு‘ என்னுஞ் சொல்லால் சொல்லப்படுகிறவள் பிராட்டியாகையாலே அவளைச் சொல்லுகிற சொல்லினால்
இங்கு எம்பெருமானைச் சொன்னது திருவுக்குந் திருவாகிய செல்வனென்றபடி.
எல்லார்க்கும் மேன்மையைத் தருமவளான பிராட்டிக்கும் தான் மேன்மை தருமவன் என்றவாறு.

ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை மருவி வாழ்ந்து போகலாமாயிருக்க,
அந்தோ!
அப்பெருமான்றானே வந்து மேல் விழச் செய்தேயும் விலக்கித் தள்ளுபவரான பாவிகளுண்டாவதே! என்று வெறுக்கிறார்.

(மானிடப் பிறவியந்தோ மதிக்கிலர்)
உலகத்தில் பிரம ஸ்ருஷ்டி பலவகைப்படும். பூச்சிகளும் புழுக்களும் பறவைகளும் மிருகங்களுமாகப் பிறத்தலே
பெரும்பான்மையாக வுள்ளது; மானிடப்பிறவி பெறுதல் மிக அரிது.
ஆனது பற்றியே –துர்லபோ மாநுஷோ தேஹ” என்றது. அதுவென்?
கோடிக்கணக்கான மனிதர்களும் உலகிற் காணப்படா நிற்க, மானிடப்பிறவி அரிதென்று எங்ஙனே
சொல்லலாமென்று பலர் கேட்கக் கூடும்;

ரத்ன வியாபாரி வீதிகளில் குவியல் குவியலாக ரத்னங்கள் காணக் கிடைக்கின்ற மாத்திரத்தினால்
‘அவை அரியவையல்ல, எளியவவை தான்‘ என்று யாரேனும் சொல்லக் கூடுமோ?
உலகத்திலுள்ள மானிடர்கள் எல்லோருடையவும் தொகைக் குறிப்பைக் கண்டு பிடித்து விடலாம்;
ஒரு சிறு கிராமத்திலுள்ள அஃறிணை யுயிர்களின் தொகையைக் கண்டுபிடித்தல் சிறிதும் எளிதன்று என்பது
குறிக் கொள்ளப் படுமேல் ‘மானிடப்பிறவி அரிது‘ என்னுமிடம் தன்னடையே தெளிந்ததாகும்.

இப்படி அருமையான மானிடப் பிறவியைப் பெற்றவர்கள் அதற்குத் தக்கவாறு வர்த்திக்க வேண்டாவோ?
உணவு களையுண்டு வயிறு நிரப்புகை, விஷயபோகங்கள் செய்கை, உறங்குகை முதலிய காரியங்களையே
செய்வதற்கோ மானி்டப் பிறவி படைத்தது?
இக் காரியங்கள் பசுக்களுக்கும் மானிடர்க்கும் பொதுவையாகையாலே இனி மானிட ரென்கிற ஏற்றம் பெற வேண்டில்
எம்பெருமானை மருவி வாழ்தலன்றோ வரியது;
அந்தோ!
உலகர் இவ்விஷயத்தில் கருத்தூன்றாதே தங்கள் தங்கள் தேஹத்தைப் பூண் கட்டிக்கொள்ளவே
தேடுகிறார்களத்தனை யன்றி வாழ்ச்சிக்கு வழி தேடுவாராருமில்லையே யென்று உலக வியற்கைக்கு வயிறு பிடிக்கிறாராயிற்று.

“மானிடப் பிறவியந்தோ மதிக்கிலர்” என்பதற்கு வேறு வகையாகவும் பொருள் கூறுவர்;
* தீண்டா வழும்பும் செந்நீரும் சீய நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றம் மிகுமுடலாகிய
மநுஷ்ய சரீரத்தைப் பெற்றுவைத்தும் அந்தோ! திவ்ய சரீரம் பெற்று விட்டதாக மார்பு நெறித்திருக்கின்றார்களே! என்று.

‘குரம்பை‘ என்று குடிசைக்குப் பெயர்;
தேஹமானது ஆத்மா வஸிங்குங் குடிசையாதல் அறிக.
இவ்வுலகத்துப் பாமரர்கள் அநித்யமான தேஹம் வாடாமல் வதங்காமல் தளிர்த்திருந்தால் போதுமென்று
பார்க்கிறார்களே யன்றி
நித்யமான ஆத்ம வஸ்து உஜ்ஜீவிக்கும் வழியைச் சிறிதும் நாடுகின்றார்களில்லையே என்பதாம்.

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -7–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

கீழ்ப்பாட்டில் ”அமரர் சென்னிப் பூவினை” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
‘ஆழ்வீர்! என் குறைப்படுகிறீர்? உம்முடைய தலைக்கும் நாம் அணியாக வீற்றிருப்போம், தலையைக் காட்டும்‘ என்ன;
என் தலைக்கு நீ வேண்டா; உன் சீலத்தைச் சிந்தை செய்யுந் தொண்டர்களே
என் தலை மிசை மன்னுதற்கு உரியார் என்கிறார் போலும்.

இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற
மெய்மையை விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய
செம்மையைக் கருமை தன்னைத் திருமலை யொருமையானைத்
தன்மையை நினைவார் என் தன் தலைமிசை மன்னுவாரே

பதவுரை

எமக்கு–நமக்கு
இம்மையை–இவ் வுலகத்து இன்பத்தைத் தருமவனும்
மறுமை தன்னை–பரலோகத்து இன்பத்தைத் தருமவனும்
விரிந்த சோலை–பரந்த சோலைகளை யுடையதாய்
வியன்–ஆச்சரியமான
திரு அரங்கம்–ஸ்ரீரங்கத்திலே
மேய–நித்ய வாஸம் பண்ணுமவனும்
செம்மையை கருமை தன்னை திருமலை–(யுக பேதத்தாலே) செந் நிறத்தையும் கரு நிறத்தையுங் கொண்டுள்ளவனும்
திருமலை–திருவேங்கடமலையிலே நின்று கொண்டு
ஒருமையானை–(மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும்) ஒருமைப்பட்டிருப்பவனுமான எம்பெருமானுடைய
தன்மையை–சீலத்தை
நினைவார்–நினைக்க வல்லவர்கள்
என் தன்–என்னுடைய
தலை மிசை–தலையிலே
மன்னுவார்–பொருந்தத் தக்கவர்கள்

இம்மையை மறுமை தன்னை –
இஹ லோக ஸுகம், பர லோக ஸுகம் என்ற இருவகை யின்பத்தையும் அளிப்பவனென்றபடி.
எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைப் பற்றின ஞான விகாஸம் பெற்றுக் களிப்பதே
ஆழ்வார் திருவுள்ளத்தினால் இம்மையின்பமாகும்;
திருவனந்தாழ்வானைப்போலே ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ்த்தைகளிலும் அந்தரங்க கைங்கரியம்
பண்ணப் பெற்றுக் களிப்பதே மறுமையின்பமாகும்;
ஆக, இஹ லோகத்திலே தன்னைப் பற்றின ஞான விகாஸத்தையுண்டாக்கி இன்பம் பயந்தும்,
பர லோகத்திலே நித்ய கைங்கரியத்திலே மூட்டி இன்பம் பயந்தும் அடியார்களை வாழ்விப்பவன் எம்பெருமான் என்றதாயிற்று.

எமக்கு வீடாக நின்ற மெய்ம்மையை-
இங்கு வீடு என்றது இலக்கணையால் மோக்ஷாபாயத்தைச் சொன்னபடி.
கீழ்ச் சொன்ன பிராப்யங்களுக்கு ப்ராபகனாயிருப்பவனென்கை.
அவ் வுபாயம் ஸுலபமான விடத்தைப் பேசுகிறார் வியன் திருவரங்க மேய என்று.

செம்மையைக் கருமை தன்னை –
எம்பெருமான் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நிறத்தைக் கொள்வன்;
கிருத யுகத்திலுள்ளவர்கள் ஸத்வ குணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகக்குமவர்களாகையாலே
அவர்கட்காகப் பால் போன்ற நிறத்தைக் கொள்வன்;
த்ரேதா யுகத்திலே சிவந்த நிறத்தைக் கொள்வன்,
த்வாபர யுகத்திலே பசுமை நிறத்தைக் கொள்பவன்;
கலி யுகத்தில் எந்த நிறங்கொண்டாலும் ஈடுபடுவாரில்லாமையாலே இயற்கையான நீல நிறத்தோடிருப்பவன்.

(இது ”பாலினீர்மை செம்பொனீர்மை” என்ற திருச்சந்த விருத்தப் பாசுரத்திலும்
”நிகழ்ச்தாய் பால் பொன் பசுப்புக் கார்வண்ணம் நான்கும்” என்ற நான்முகன் திருவந்தாதிப் பாசுரத்திலும்
திருமழிசைப் பிரானாலும் அருளிச் செய்யப்பட்டுள்ளது.)

இங்கு ”செம்மையைக் கருமை தன்னை” என்று இரண்டு யுகங்களின் நிறத்தைச் சொன்னது
மற்றவர்க்கும் உபலக்ஷணமென்க.

திருமலை யொருமையானை =
”தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே வானோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே”
என்றும் சொல்லுகிறபடியே திருமலையிலே நின்று நித்ய ஸூரிகளுக்கும் நித்ய ஸம்ஸாரிகளுக்கும் ஒக்க
முகங்கொடுக்கும் அவன் என்றவாறு.

ஒருமையான் –
ஒருமைப்பட்டிருப்பவன், பொதுவாயிருப்பவன்,
திருமலையானது நித்ய விபூதிக்கும் லீலா விபூதிக்கும் நடு நிலை என்பதாகத் திருவுள்ளம்.
இங்குள்ளார் சென்று பரத்வ குணத்தை அநுபவிப்பர்கள்;
அங்குள்ளார் வந்து சீல குணத்தை அநுபவிப்பர்கள்; ஆக இருபாடர்க்கும் வைப்பாயிருப்னென்க.

தன்மையை நினைவார் =
கீழும் இரண்டாம் வேற்றுமையாய் இங்கும் இரண்டாம் வேற்றுமையாயிருத்தால் எங்ஙனே அந்வயிக்குமென்னில்;
கீழிலவற்றை உருபு மயக்கமாகக் கொள்க;
திருமலை யொருமையானுடைய தன்மையை என்றவாறு.
எம்பெருமானடைய தன்மையாவது, அடியவர்களிட்ட வழக்காயிருக்குந் தன்மையென்க.
அதனை அநுஸந்தித்து ஈடுபடுமவர்கள் என் தலை மேலார் என்றாராயிற்று.

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -6–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

பகவத் விஷயத்தை அநுபவிக்கப் புகுமவர்கள் வாயாலே ஏதோ சில பாசுரங்களைச் சொல்லிப் புகழ்கின்றார்களே,
என்ன பாசுரஞ் சொல்லிப் புகழ்வது! பெரு வெள்ளத்திலே புகுந்து முழுகுமவர்கள் குமிழ் நீருண்டு கிடக்குமத்தனை போல,
பகவத் விஷய ஸாகரத்திலும் அழுந்திக் கிடக்கலாமே யொழிய ஏதேனும் பாசுரமிட்டுச் சொல்லப் போமோ? என்கிறார்.

மூவரில் முதல்வ நாய ஒருவனை யுலகங் கொண்ட,
கோவினைக் குடந்தை மேய குருமணித் திரளை, இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர் சென்னிப்
பூவினை, புகழும் தொண்டர் எஞ்சொல்லிப் புகழ்வர் தாமே?–6-

பதவுரை

மூவரில்–த்ரி மூர்த்திகளுள்
முதல்வன் ஆய ஒருவனை-முதற் கடவுளாகிய அத்விதீயனும்
உலகம் கொண்ட கோவினை–(மாவலியிடத்தில்) உலகங்களை இரந்து பெற்ற ஸ்வாமியும்
குடந்தை மேய–திருக்குடந்தையில் நித்ய வாஸம் செய்பவனும்
குரு மணி திரளை–சிறந்த நீல ரத்னக் குவியல் போன்றவனும்
இன்பம் பாவினை–இன்பந்தரும் பாட்டுக்களைப் போலே சுவை மிக்கவனும்
பச்சை தேனை-பசுந்தேன் போலே நாவுக்கு இனியனும்
பைம் பொன்னை–பசும் பொன் போல் விரும்பத் தக்க கவனும்
அமரர் சென்னி பூவினை–நித்ய ஸூரிகளுக்குத் தலை மேலணியும் பூவாயிருப்பவனுமான பெருமானை
புகழும்–புகழ்கின்ற
தொண்டர் தாம்–தொண்டர்கள்
என் சொல்லி புகழ்வர்-எதைச் சொல்லிப் புகழ்வார்கள்?

மூவரில் முதல்வனாய வொருவனை –
ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களுக்குக் கடவர்களென்றும் த்ரிமூர்த்திகளென்றுஞ் சொல்லப்படுகிற
அரி அயன் அரன் என்னுமிவர் தம்முள் முழுமுதற் கடவுளாயிருப்பவன். அன்றியே,
ஏகமேவ அத்வதீயம் ப்ரஹ்ம -என்ற சுருதியின்படி
இந்திரனைக் கூட்டி மூவராக்கி அம்மூவர்களிற் காட்டிலும் முழுமுதற் கடவுளாயிருப்பவன்
என்றும் பொருள் கூறுவர்.

உலகங் கொண்ட கோவினை – மூவர்க்கும் முதற்கடவுளாயிருந்தால் அவர்களுக்கு ஆக வேண்டிய
காரியத்தைத் தலைக் கட்டிக் கொடுக்க வேணுமே;
அவர்களுள் ஒருவனான இந்திரனுக்குக் காரியஞ்செய்து கொடுத்தமை சொல்லுகிறது.
மஹாபலி அபகரித்த பூமியை மீட்டுக்கொடுத்தமை சொன்னடி.

குடந்தை மேய குருமணித் திரளை – இன்னும் ஸம்ஸாரிகள் இடர்ப் பட்டாருண்டாகிலும் துவளலாகாதென்று
அவர்கட்குக் கதியாகத் திருக் குடந்தையிலே படுக்கை பொருந்திப் பள்ளி கொள்ளும் நிலையை நோக்குங்கால்
சிறந்த நீல ரத்னங்களைக் குவிந்திருக்குமா போலே புகர்த்து விளங்கும்படி.
‘குரவ் ’ என்னும் வடசொல் குருவென்று கிடக்கின்றது. சிறந்த வென்று பொருள்.

இன்பப் பாவினை –
”அந்தமிழினின்பப் பாவினை” என்றார் குலசேகரப் பெருமாளும்.
அருளிச் செயல் போலே செவிக்குத் தித்திப்பவன் எம்பெருமான் என்றவாறு.

பச்சைத் தேனை –
செவிக்கு மாத்திரமன்றியே நாவுக்கும் இனியனா யிருப்பவன்;
நாள் பட்ட தேன் போலல்லாமல் அப்போதுண்டான தேன் போலே பரம போக்யன்.

பைம் பொன்னை –
உடம்புக்கு அணையலாம்படி விரும்பத் தக்கவனென்க.

அமரர் சென்னிப் பூவினை-நித்ய ஸூரிகள் தலைமேற் புனைந்து கொண்டாடும் தத்துவம்.
”எம்மா வீட்டுத் திறமும் செப்பம், நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து …….. அம்மா வடியேன் வேண்டுவதே”
என்று நாமெல்லாரும் பிரார்த்தித்துப் பெற வேண்டிய பேறு சிலர்க்குக் கை வந்திருக்கின்றதே யென்று தலை சீய்க்கிறார்.

ஆக இப்படிப் பட்ட எம்பெருமானைப் புகழ்கின்ற தொண்டர்கள் என் சொல்லிப் புகழ்வரென்கிறார்.
இத்தால், தாம் பாசுரம் பேசுவதும் எம்பெருமானுடைய பெருமையின் எல்லையைக் கண்டன்று;
போது போக்க வேண்டியத்தனை என்றதாம்.

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -5–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

கீழ்ப்பாட்டிலுள்ள ”கேட்கயானுற்றதுண்டு” என்ற வாக்கியத்தை இப் பாட்டிலும் இயைத்துக் கொள்ளலாம்.
”தீர இரும்புண்ட நீரது போல என்னாருயிரை யாரப் பருக, எனக்காராவமுதானாயே” என்ற
திருவாய்மொழிப் பாசுரத்தையே பெரும்பாலும் அடியொற்றி அருளிச் செய்வது இப்பாசுரம் என்க.

இரும்பனன் றுண்ட நீர்போல் எம்பெரு மானுக்கு, என்றன்
அரும்பெற லன்பு புக்கிட் டடிமைபூண் டுய்ந்து போனேன்,
வரும்புயல் வண்ண னாரை மருவியென் மனத்து வைத்து,
கரும்பினின் சாறு போலப் பருகினேற் கினிய லாறே.–5-

பதவுரை

இரும்பு–இரும்பானது
அனன்று–பழுக்கக் காய்ந்து
உண்ட நீர் போல்–(அக்காய்ச்சலடங்கும்படி) உட் கொண்ட ஜலம் போலே
எம்பெருமானுக்கு–எம்பெருமான் திறத்திலே
என் தன்–என்னுடைய
அரு பெறல் அரு பெறல் அன்பு புக்கேட்டு–பெறுதற்கரிதான அன்பைச் செலுத்தி
அடிமை பூண்டு–கைங்கரியம் பண்ணி
உய்ந்து போனேன்–உஜ்ஜீவிக்கப் பெற்றேன்;
(அன்றியும்)
வரும்-(அடியார் இருக்குமி்டந்தேடி) வருகி்ன்ற
புயல் வண்ணனாரை–மேக வண்ணனான அப்பெருமானை
மருவி–கி்ட்டி
என் மனத்து வைத்து–என்னெஞ்சிலே பொருந்த வைத்து
கரும்பின் இன் சாறு போல–கரும்பினுடைய இனிய ரஸம் போலே
பருகினேற்கு–அநுபவிக்கப் பெற்ற எனக்கு
இனிய ஆறே–போக்யமாயிருக்கிறபடி என்னே!.

இரும்பானது அக்நியாலே மிகவும் காய்ச்சப்பட்டு அக்காய்ச்சலடங்க நீரைப் பருகுமா போலே
நானும் என்னுடைய தாபமடங்க பகவத் விஷயத்தில் அன்பாகிற தண்ணீரைப் பருகி,
ப்ராப்தமான அவ் விஷயத்திலே அடிமை செய்யப் பெற்று
உஜ்ஜீவித்தேனென்பன முன்னடிகள்.

தகாத விஷயங்களில் அன்பு உண்டாவதே சஹஜமாய்,
பகவத் விஷயத்தில் அன்பு உண்டாவது மேட்டுமடையா யிருத்தல் பற்றி அரும்பெறலன்பு எனப்பட்டது.
நெருப்பிலே தாமரை பூத்தாலும் பூக்கும்;
அஹங்காரப் பெரு நெருப்பிலே எம்பெருமான் விஷயமான அன்பு விளைவது மிகவுமரிது.

‘அடிமைப்பூண்டு‘ என்றதனால் ஆத்மாவுக்கு அடிமையே ஆபரணமென்பது பெறப்படும்.

(வரும்புயல் வண்ணனாரை இத்யாதி.)
இருந்தவிடத்தே யிருந்து வர்ஷித்து இன்பம் பயக்கும் மேகம் போலே அடியாருள்ள விடங்களிலே சென்று வர்ஷித்து
இன்பம் பயக்கும் மேகம்போலே அடியாருள்ள விடங்களிலே சென்று ஈரக்கையாலே தடவி
விடாய் தீர்க்குமவன் எம்பெருமான்.

அன்னவனை என் மனத்திலே பொருந்த வைத்துக் கருப்பஞ்சாறு போலே பருகினேன்;
பருகின மாத்திரத்திலே வாயாற்சொல் வொண்ணாத இனிமையாயிருக்கின்றதே! ;
இதற்கென்ன காரணம்! தெரியவேணுமென்றாராயிற்று.

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -4–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

எம்பெருமானை ஒரு கேள்வி கேட்கிறே னென்கிறார் சமத்காரமாக.
மஹா வாரஹ மூர்த்தியாகத் திருவவதரித்துப்
பூமியை எயிற்றிற் கொணர்ந்த எம்பெருமான் கனவிலெழுந்தருளிக் காட்சி தந்தவாறே
அப்பெருமானை மன மொழி மெய்களால் அன்போடு பிடித்து விழுங்கி விட்டேன்;
விஷயாந்தரங்களை யநுபவித்து ரஸித்துப் போந்த எனக்கு இவ் விஷயம் பரமரஸ்யமாயிருந்தது;
இப்படி இருந்ததற்குக் காரணமருளிச் செய்ய வேணுமென்று கேட்கிறேனென்கிறார்.

கேட்க யானுற்ற துண்டு கேழலா யுலகங்க் கொண்ட,
பூக்கெழு வண்ண நாரைப் போதரக் கனவில் கண்டு,
வாக்கினால் கருமந் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால்,
வேட்கைமீ தூர வாங்கி விழுங்கினேற் கினிய லாறே!-4-

பதவுரை

யான் கேட்க உற்றது உண்டு–அடியேன் (ஒரு விஷயம்) கேட்க வேண்டியதுண்டு; (மறு மாற்ற மருளிச் செய்ய வேணும்)
கேழல் ஆய்–வராஹரூபியாகி
உலகம் கொண்ட–பூமியைக் கோட்டில் எடுத்துக் கொண்டேறின
பூ கெழு வண்ணனாரை–பூப் போன்ற மெல்லி வடிவுடையரான பெருமாளை
கனவில் போதர கண்டு –கனவில் எழுந்தருளக் கண்டு
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால்–மன மொழி மெய்களாகிற மூன்று கரணங்களாலும்
சிரத்தை தன்னால்–ச்ரத்தையோடு
வேட்கை மீதுர–ஆசை மிக
வாங்கி விழுங்கினேற்கு–பிடித்து அநுபவித்த வெனக்கு
இனிய ஆறே–போக்யமாயிருக்கிறவிதம் என்னே!

கேட்க யானுற்றதுண்டு= நம்மாழ்வார் தம்முடைய திவ்ய ப்ரபந்தங்களிலே எம்பெருமானை நோக்கிச் சில கேள்விகள் கேட்டிருக்கிறார்;

பெரிய திருவந்தாதியில் ”அருகுஞ்சுவடுந் தெரிவுணரோம், அன்பே பெருகும் மிக இதுவென் பேசீர்” என்றும்,

”புவியுமிருவிசும்பும் நின்ன கத்த, நீயென் செவியின்வழி புகுந்தென்னுள்ளாய்,
அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை யென்பதை யாரறிவார், ஊன்பருகுநேமியா யுள்ளு“ என்றும்,

திருவாய்மொழியில். ”இன்றென்னைப் பொருளாக்கித் தன்னையென்னுள் வைத்தாய்,
அன்றென்னைப் புரம்போகப் புணர்த்ததென் செய்வான், குன்றென்னத் திகழ்மாடங்கள் சூழ் திருப்பேரான்,
ஒன்றெனக்கருள் செய்ய உணர்த்தலுற்றேனே” என்றும்
இங்ஙனே சில கேள்விகள் கேட்டார்;

அவற்றுக்கு எம்பெருமான் ஒரு மறுமாற்றமும் அருளிச்செய்திலன்; அப்படிப்பட்டவன்
இவ்வாழ்வாருடைய கேள்விக்கு மாத்திரம் மறுமொழி கூறப்புகுகிறானோ?
மாட்டானென்றோ இவர் அறிந்து வைத்தும், நசையாலே கேட்கிறாராயிற்று.

‘உன்னையநுபவித்த எனக்கு நீ பரம போக்யனாயிருக்கின்றாயே, இதற்கு என்ன காரணம் சொல்லு என்று கேட்கிற
இவரது கேள்விக்கு ஸர்வஜ்ஞனான எம்பெருமான்றானும் என்ன மறுமாற்றம் அருளிச் செய்யக் கூடும்?
இவர் கேட்கிற இவரது கேள்விக்குத் தான் அர்த்தமுண்டோ?

”அண்ணிக்கு மமுதூறு மென்னாவுக்கே” என்று மதுரகவியாழ்வார் தம்முடைய ஆனந்தத்தை வெளியிடடுக் கொண்டது போல
இவர் தாமும் கேள்வியென்னும் வியாஜத்தினால் தமது பரமாநந்தத்தையே பிரகாசிப்பித்துக் கொள்ளுகிறாரத்தனை என்று உணரக் கடவது.

‘சர்க்கரையை நாக்கில் போட்டவுடனே தித்திக்கின்றதே, அதற்கு என்ன காரணம்? என்று
ஒருவர் கேட்டால் அக் கேள்விக்குக் கருத்து யாது?

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –