ஸ்ரீ திருநாங்கூர் 11 கருடசேவை வைபவம் –
இறைவனை நமக்குக் காட்டித் தரும் கருவியாக வேதம் உள்ளது.
ஆனால் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு, வேதத்தைக் கற்று, அதன் பொருளை அறிந்து,
அதைப் பின்பற்றி இறைவனை அறிவது என்பது மிகவும் கடினமான காரியம்.
எனவே நம்மேல் கருணை கொண்ட வேதமே, இறைவனை நமக்கு எளிதில் காட்டித் தரும் பொருட்டு
மற்றோர் உருவம் எடுத்துக் கொண்டது.
அவ்வுருவத்தின் தலையாக வேதத்திலுள்ள திரிவ்ருத் மந்திரமும்,
கண்களாக காயத்திரி மந்திரமும்,
உடலாக வாமதேவ்யம் எனும் வேதப்பகுதியும்,
இரு இறக்கைகளாக பிருகத்-ரதந்தரம் ஆகிய வேதப்பகுதிகளும்,
கால்களாக வேதத்தின் சந்தங்களும்,
நகங்களாக திஷ்ண்யம் எனும் வேதப்பகுதியும்,
வாலாக யஜ்ஞாயஜ்ஞம் எனும் வேதப்பகுதியும்,
ஆத்மாவாக ஸ்தோமம் எனும் வேதப்பகுதியும் வடிவெடுக்க,
அவ்வாறு உருவான வடிவமே வேதசொரூபியான கருடனின் வடிவம்.
கருட சேவை உற்சவத்தின் போது, இறைவனைத் தனது தோளில் சுமந்தபடி நம்மைத் தேடி வரும் வேத ஸ்வரூபியான
கருட பகவான், நம்மைப் பார்த்து, “நீ வேதங்களின் துணைகொண்டு இறைவனைத் தேடிக் கொண்டிருந்தாயே!
இதோ அந்த இறைவனையே நான் உன்னிடம் அழைத்து வந்துவிட்டேன் பார்!” என்று
சொல்லிப் பரமனின் பாதங்களைப் பாமரர்க்கும் எளிதில் காட்டித் தந்து விடுகிறார்.
காஸ்யப மகரிஷிக்கும் வினதைக்கும் மகனாக ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி நன்னாளில் சுவாதி நட்சத்திரத்தில் தோன்றினார் கருடன்.
பருத்த உடல், பொன்மயமான சிறகுகள், வெண்மையான கழுத்துப் பகுதி, உருண்டையான கண்கள், நீண்ட மூக்கு,
கூரிய நகங்களுடன் கூடியவராய்க் கருடன் திகழ்கிறார்.
‘கரு’ என்றால் சிறகு என்று பொருள். ‘ட’ என்றால் பறப்பவர்.
சிறகுகளைக் கொண்டு பறப்பதால் ‘கருடன்’ என்றழைக்கப்படுகிறார்.
வடமொழியில் ‘க்ரு’ என்பது வேத ஒலிகளைக் குறிக்கும்.
வேத ஒலிகளின் வடிவாய்த் திகழ்வதாலும் ‘கருடன்’ எனப் பெயர் பெற்றார்.
கருடனின் தாயான வினதை, தனது சகோதரியான கத்ருவிடம் ஒரு பந்தயத்தில் தோற்றாள்.
அதன் விளைவாகக் கத்ருவுக்கும் அவளது பிள்ளைகளான நாகங்களுக்கும் அடிமையாகிச் சிறைப்பட்டிருந்தாள் வினதை.
அவளை விடுவிக்க வேண்டும் என்றால், தேவலோகத்தில் இருந்து அமுதத்தைக் கொண்டு வர வேண்டும் என்று
நிபந்தனை விதித்தாள் கத்ரு. தேவலோகத்துக்குச் சென்று அமுதத்தைக் கொண்டு வந்து
தன் தாயான வினதையைச் சிறையிலிருந்து மீட்டார் கருடன்.
தனது தாயைக் கத்ருவும் அவள் ஈன்றெடுத்த பாம்புகளும் சிறைவைத்தபடியால், பாம்புகளைப் பழிவாங்க நினைத்த கருடன்,
பாம்புகளை வீழ்த்தி அவற்றையே தனது திருமேனியில் ஆபரணங்களாக அணிந்தார்.
கருடன் தனது உடலில் எட்டுப் பாம்புகளை எட்டு இடங்களில் அணிந்துள்ளார். அவையாவன,
1.தலையில் சங்கபாலன்
2.வலக்காதில் பத்மன்
3.இடக்காதில் மகாபத்மன்
4.கழுத்தில் மாலையாகக் கார்க்கோடகன்
5.பூணூலாக வாசுகி
6.அரைஞாண்கயிறாக தட்சகன்
7.வலக்கையில் குளிகன்
8.இடக்கையில் சேஷன்
அதனால் தான் கருடன், ‘அஷ்ட நாக கருடன்’ என்றழைக்கப்படுகிறார்.
திருமால் ஒருமுறை கருடனிடம், “நான் உனக்கு ஒரு வரம் தரட்டுமா?” என்று கேட்டார்.
கருடனோ, “திருமாலே! எனக்கு வரம் வேண்டாம்! உமக்கு ஏதேனும் வரம் வேண்டுமென்றால், நான் தருகிறேன்! கேளுங்கள்!” என்றார்.
கருடனின் பிரபாவத்தைக் கண்டு வியந்த திருமால், “நீயே எனக்கு வாகனமாகி விடு!” என்று கருடனிடம் வரம் கேட்டார்.
கருடனும் அதற்கு இசைந்து, திருமாலுக்கு வாகனமானார்.
அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் பெருமாள் சந்நதிக்கு நேராகக் கருடன் சந்நதி இருப்பதைக் காணலாம்.
ஏனெனில், நாம் ஒப்பனை செய்து கொண்டால், கண்ணாடியில் அழகு பார்ப்போம் அல்லவா?
அதுபோல் அலங்காரப் பிரியரான திருமால் அலங்காரம் செய்துகொண்டால் அழகு பார்க்க ஒரு கண்ணாடி வேண்டுமல்லவா?
இறைவனைக் காட்டும் கண்ணாடி வேதம்! கருடன் வேத ஸ்வரூபியாகவே இருப்பதால்,
கருடனையே கண்ணாடியாகக் கொண்டு திருமால் அழகு பார்க்கிறார்.
அதனால் தான் பெருமாள் சந்நதிக்கு நேரே, கண்ணாடி போல் கருடன் சந்நதி இருக்கும்.
பெருமாள் கோயில்களில் பிரம்மோற்சவங்கள் நடைபெறும் போது கருடனின் படம் வரைந்த கொடி,
கொடி மரத்தில் ஏற்றப்படுவதைக் காணலாம்.
திருமலையிலுள்ள ஏழு மலைகளுள் கருடனின் பெயரில் ‘கருடாத்ரி’ என்றொரு மலை உள்ளது.
ராம ராவணப் போரில், இந்திரஜித்தின் நாகபாசத்தால் தாக்கப்பட்டு ராமனும் வானர சேனையும் மயங்கிக் கிடந்த வேளையில்,
வானிலிருந்து தோன்றிய கருடன் அந்த நாக பாசங்களை உடைத்து, ராமனும் வானர வீரர்களும் மீண்டும் எழுவதற்கு உதவினார்.
இறைவனை நாம் அழைக்கும் போதெல்லாம், அவனை விரைவில் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் வாகனமாகக் கருடன் திகழ்கிறார்.
கருடனை வழிபடுவோர்க்குப் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் ஏற்படும் பயம் விலகி, குடும்பத்தில் அனைத்து மங்களங்களும் உண்டாகும்.
கருடன் எத்தனை கருடனடி?
பட்சிராஜன்,
வைனதேயன்,
கருத்மான்,
சுபர்ணன்,
தார்க்ஷ்யன்,
காச்யபி,
சுதாஹரன்,
ககேச்வரன்,
நாகாந்தகன்,
விஷ்ணுரதன்,
புள்ளரசன்,
புள்ளரையன்,
மங்களாலயன்,
பெரிய திருவடி,
கலுழன் எனப் பல்வேறு பெயர்களால் இவர் அழைக்கப்படுகிறார்.
ஆளவந்தார் என்னும் மகான்,
“தாஸ: ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய:” என்ற ஸ்லோகத்தில்
கருடன் திருமாலுக்குத்
தொண்டராகவும்,
நண்பராகவும்,
வாகனமாகவும்,
இருக்கையாகவும்,
கொடியாகவும்,
மேல்கட்டாகவும்,
விசிறியாகவும் இருப்பதாகக் காட்டுகிறார்.
கருட மந்திரத்தை ஜபித்து, கருடனை நேரில் தரிசித்தவர் 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வேதாந்த தேசிகன் என்னும் மகான்.
அவர் ஒன்று, இரண்டு, மூன்று… என எண்ணிக்கைகளை வைத்து வடமொழியில் ஸ்லோகம் அமைத்துக் கருடனைத் துதித்தார்.
ஒப்பற்ற ஒருவரான கருடன்,
திருமாலின் இரண்டாவது வடிவமாய் விளங்குகிறார்.
ஞானியர், முனிவருள்ளும் மூன்று,
நான்கு பேர்கள் மட்டுமே
ஐந்தெழுத்து உடைய கருட மந்திரத்தின் பெருமையை நன்கறிவர்.
ஞானம், பலம், வீரியம், சக்தி, ஐஸ்வரியம், தேஜஸ் என ஆறு குணங்களை உடையவர் கருடன்.
ஏழு ஸ்வரங்களுக்கும் ஆதாரமான சாம வேத ரூபியாக உள்ளார்.
எட்டு மகாசித்திகளையும் பெற்றவர்.
அவரது உடல் நவமாக உள்ளது. (நவம் என்பது எண் ஒன்பதையும் குறிக்கும், எப்போதும் புதிதாக இருத்தல் என்றும் பொருள்படும்.
கருடனின் திருமேனி எப்போதும் புதிதாகவே உள்ளது. அதையே நவம் எனக்குறிப்பிடுகிறார்.)
பத்து நூறு (10×100=1000) கண்களை உடைய இந்திரனின் ஆயிரக்கணக்கான எதிரிகளை வீழ்த்துகிறார் கருடன்.
அவர் எண்ணிலடங்காத உருவங்களை உடையவர் என்று அந்த ஸ்லோகத்தில் கூறுகிறார் வேதாந்த தேசிகன்.
இந்த ஸ்லோகத்துக்கு ஸ்ரீமான். அன்பில் ஸ்ரீநிவாசன் என்பவர் வழங்கிய
தமிழ் மொழி பெயர்ப்பை வாசகர்களின் அனுபவத்திற்காக வழங்குகிறோம்.
“ஒருவராயும் விட்டுவிற்கு இரண்டாவது மூர்த்தியாயும்
திரிநான்கு பேர்களேதான் நன்கறிய முடிந்ததான
ரகசிய மந்திரமாம் ஐயெழுத்தின் தேவராயும்
இருமூன்று குணங்களினால் இணையற்று விளங்குவரும்
ஸ்ருதியான ஏழுஸ்வர சாமத்தின் உறைவிடமும்
இருநான்கு அணிமாதி ஐஸ்வரியக் கொள்கலனும்
திருமேனி நவமென்னும் புதிதாக அமைந்தவரும்
இருவைந்து நூறான கண்ணுடைய இந்திரனின்
விரோதிகள் பல்லாயிரர் தம்மோடு விளையாடும்
சிறகுகளின் கூர்முனையைச் சிறப்பாக உடையவரும்
உருக்களுமே எண்ணற்று உடையவரும், நாகங்களின்
ஒருபெரிய பகைவருமாய் உறும் கருட பகவானே
பெரிதாம் நம் சம்சார பயந்தன்னைப் போக்கிடுக!”
எண்ணற்ற உருவங்கள் உடையவராகக் கருடன் விளங்குவதால், கருட சேவை உற்சவங்களில்
பற்பல உருவங்களோடு கருடன் வருவதைக் காணலாம்.
தஞ்சையில் நடைபெறும் 24 கருட சேவை,
காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையிலுள்ள கூழமந்தலில் நடைபெறும் 15 கருட சேவை,
அட்சய திருதியை அன்று கும்பகோணத்தில் நடைபெறும் 12 கருட சேவை,
திருநெல்வேலிக்கு அருகே ஆழ்வார் திருநகரியில் நடைபெறும் 9 கருட சேவை,
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் 5 கருட சேவை உள்ளிட்ட உற்சவங்கள் இதற்குச் சான்றாகும்.
நாச்சியார்கோவிலில் கல் கருடனாகத் திகழும் கருடன்,
தானே உற்சவராகவும்,
மூலவராகவும்,
வாகனமாகவும் திகழ்கிறார்.
———–
திருநாங்கூர் திருத்தலங்கள்
இப்படிப் பல ஊர்களில் கருட சேவை உற்சவங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றாலும்,
தை அமாவாசைக்கு மறுநாளன்று, சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூரில் நடைபெறும் 11 கருட சேவை உற்சவம்
உலகப் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.
சுமார் 125 வருடங்களுக்கு முன்பு திருநாங்கூரில் வாழ்ந்த திருநாராயணப் பிள்ளை, இன்ஸ்பெக்டர் சுவாமி ஐயங்கார்
போன்ற பெரியோர்கள் இந்த உற்சவத்தைத் தொடங்கி வைத்தார்கள்.
அன்று தொட்டு இன்று வரை வருடந்தோறும் இவ்வுற்சவம் செவ்வனே நடந்து வருகிறது.
ஆழ்வார்களால் பாடப் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களுள் சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூர்
எனும் ஊரைச் சுற்றி 11 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன.
தட்சனின் யாகத்துக்குச் சென்ற சதிதேவியை தட்சன் அவமானப் படுத்திய செய்தியைக் கேள்வியுற்றுக்
கடுஞ்சினம் கொண்ட பரமசிவன், சீர்காழிக்கு அருகிலுள்ள உபயகாவிரி எனும் இடத்தில் ருத்திர தாண்டவம் ஆடத் தொடங்கினார்.
அவரது ரோமம் விழுந்த இடங்களில் எல்லாம் புதிய ருத்திரர்கள் தோன்றத் தொடங்கினார்கள்.
சிவபெருமானின் கோபத்தை அடக்க வழிதெரியாது தேவர்கள் தவித்தபோது,
திருநாங்கூரில் பதினொரு வடிவங்களோடு திருமால் வந்து காட்சி கொடுத்து,
பதினொரு வடிவங்களில் இருந்த பரமசிவனின் கோபத்தைத் தணித்தார்.
அதனால் தான் இன்றும் திருநாங்கூரில் 11 பெருமாள் கோயில்களும்,
அவற்றுக்கு இணையாக 11 சிவன் கோயில்களும் இருப்பதைக் காணலாம்.
1.திருமணிமாடக்கோவில் (ஸ்ரீநாராயணப் பெருமாள்)
2.திரு அரிமேய விண்ணகரம் (குடமாடு கூத்தர்)
3.திருச்செம்பொன்செய்கோவில் (செம்பொன் அரங்கர்)
4.திருத்தெற்றியம்பலம் (செங்கண்மால்)
5.திருவெள்ளக்குளம் (அண்ணன் பெருமாள்)
6.திருவண்புருடோத்தமம் (புருஷோத்தமப் பெருமாள்)
7.திருமணிக்கூடம் (வரதராஜப் பெருமாள்)
8.திருவைகுந்த விண்ணகரம் (வைகுந்தநாதன்)
9.திருத்தேவனார்த் தொகை (மாதவன்)
10.திருப்பார்த்தன்பள்ளி (தாமரையாள் கேள்வன்)
11.திருக்காவளம்பாடி (கோபாலன்)
ஆகியவையே திருநாங்கூரைச் சுற்றியுள்ள பதினொரு திருமால் திருத்தலங்களாகும்.
1.திருநாங்கூர் மதங்கேஸ்வரர்
2.திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர்
3.திருயோகீஸ்வரம் யோகநாதஸ்வாமி
4.கார்த்தியாயினி இருப்பு (காத்திருப்பு) ஸ்வர்ணபுரீஸ்வரர்
5.திருநாங்கூர் ஜ்வரஹரேஸ்வரர்
6.அல்லிவிளாகம் நாகநாதஸ்வாமி
7.திருநாங்கூர் நம்புவார்க்கு அன்பர்
8.திருநாங்கூர் கயிலாயநாதர்
9.திருநாங்கூர் சுந்தரேஸ்வரர்
10.பெருந்தோட்டம் ஐராவதேஸ்வரர்
11.அன்னப்பன்பேட்டை கலிக்காமேஸ்வரர்
எனப் பதினொரு திருவடிவங்களுடன் திருநாங்கூரைச் சுற்றி சிவபெருமான் காட்சி தருகிறார்.
திருவரங்கத்தில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி வரும் பகல்பத்து – ராப்பத்து உற்வசவங்களைப்
பன்னிரு ஆழ்வார்களுள் கடைக்குட்டியான திருமங்கையாழ்வார் நடத்தி வைத்தார்.
அது நிறைவடைந்த பின், தைமாதம் அமாவாசை அன்று திருநாங்கூரில் கோயில் கொண்டிருக்கும்
பதினொரு பெருமாள்களையும் இனிய தமிழ்ப் பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்வதற்காகத்
திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு வருகிறார்.
அப்பாசுரங்களைப் பெறும் ஆர்வத்தில் பதினொரு பெருமாள்களும் தங்கக் கருட வாகனத்தில் வந்து காட்சி கொடுத்து,
ஆழ்வாரிடம் பாடல்களை ஏற்றுச் செல்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியை நம் கண்முன்னே நிகழ்த்திக் காட்டுவது தான் திருநாங்கூர் பதினொரு கருட சேவை.
ஒவ்வொரு வருடமும் இந்தப் பெருமாள்களைப் பாடத் திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு நேரே வருவதாக ஐதீகம்.
இந்தக் கருட சேவைக்கு முந்தைய நாள் நள்ளிரவில், திருநாங்கூர் வயல் வெளிகளில் காற்றினால்
நெற்பயிர்கள் சலசலவென ஓசையிடும்.
இந்த ஓசையைக் கேட்டவுடன் திருமங்கையாழ்வார் ஊருக்குள் நுழைந்துவிட்டதாக மக்கள் புரிந்து கொள்வார்கள்.
திருமங்கையாழ்வாரின் ஸ்பரிசம் பட்ட வயல்களில் நல்ல விளைச்சல் ஏற்படும் என்பது அவ்வூர் விவசாயிகளின் நம்பிக்கை.
திருநாங்கூர் 11 கருட சேவை உற்சவம் மூன்று நாள் உற்சவமாக நடைபெறுகிறது
1.தை அமாவாசை அன்று நடைபெறும் திருமங்கை ஆழ்வாரின் மஞ்சள் குளி உற்சவம்
2.தை அமாவாசைக்கு மறுநாள் நடைபெறும் பதினொரு கருட சேவை
3.அதற்கு மறுநாள் பெருமாள்களும் ஆழ்வாரும் தத்தம் திருக்கோயில்களுக்குத் திரும்புதல்
திருநாங்கூர் பதினொரு கருட சேவை திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாகத்
தை அமாவாசையன்று திருமங்கையாழ்வாருக்கு மணிகர்ணிகை நதிக்கரையில் ‘மஞ்சள் குளி உற்சவம்’ நடைபெறுகின்றது.
மஞ்சள் குளி உற்சவம் என்றால் என்ன?
திருவரங்கத்தில் கார்த்திகை தீப நன்னாளில் ‘திருநெடுந்தாண்டகம்’ என்றழைக்கப்படும் முப்பது பாசுரங்களை இயற்றி
அரங்கன் முன்னே விண்ணப்பித்தார் திருமங்கையாழ்வார்.
அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த அரங்கன், ஆழ்வாரிடம், “உமக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.
அதற்குத் திருமங்கை ஆழ்வார், “அரங்கா! உனக்கு மார்கழி மாதத்தில் நடைபெறுகின்ற அத்யயன உற்சவத்தின் போது,
வடமொழி வேதங்களை மட்டும் ஓதுகிறார்கள். அத்தோடு சேர்த்து நம்மாழ்வார் தந்த தமிழ் வேதமாகிய
திருவாய்மொழியையும் அந்த உற்சவத்தில் ஓதச் செய்யுமாறு அருள் புரிய வேண்டும்!” என்று வேண்டினார்.
அரங்கனும் அதற்கு இசைந்தார்.
வடமொழி மறை, தென்மொழி மறை ஆகிய இருமறைகளின் பாராயணத்தோடு வெகுசிறப்பாக அத்தியயன உற்சவம் நிறைவடைந்தது.
இவ்வுற்சவத்துக்கு ஏற்பாடு செய்த திருமங்கையாழ்வாரைப் பாராட்ட விழைந்தார் அரங்கன்.
ஒவ்வொரு வருடமும் தை அமாவாசையன்று, அரங்கன் மஞ்சள் நீரில் திருமஞ்சனம் கண்டருள்வது வழக்கம்.
அதற்கு மஞ்சள் குளி உற்சவம் என்று பெயர்.
“எனக்கு நடைபெறும் இந்த மஞ்சள்குளி உற்சவம் இனி திருமங்கையாழ்வாருக்கும் வருடா வருடம் நடைபெற வேண்டும்!”
என்று அருட்பாலித்தார் அரங்கன்.
அந்த வருடம் தை அமாவாசையன்று, திருமங்கையாழ்வாரைக் கொள்ளிடக் கரைக்கு அழைத்துச் சென்ற அரங்கன்,
ஆழ்வாருக்குத் தன் கையால் மஞ்சள் குளியலை நடத்தி வைத்தார்.
வெகுசிறப்பாக நடைபெற்ற அந்த மஞ்சள் குளி உற்சவத்தின் முடிவில், “அரங்கா! நீ கருணை கூர்ந்து இந்த உற்சவத்தை
எனக்காக நடத்தி வைத்தாய். ஆனால் எங்கள் ஊரில் வாழும் எனது அன்பர்கள், இவ்வளவு தூரம் தள்ளி வந்து
இக்காட்சியைக் காண இயலாதே!” என்று அரங்கனிடம் கூறினார் திருமங்கையாழ்வார்.
“உங்களது ஊரார் கண்டு களிக்கும்படி இந்த உற்வசத்தை அடுத்த ஆண்டு முதல் உங்கள் ஊரிலேயே நடத்தி விடலாம்!” என்றார் அரங்கன்.
திருமங்கையாழ்வார் திருநாங்கூருக்கு அருகிலுள்ள திருக்குறையலூர் என்னும் ஊரைச் சேர்ந்தவரானபடியால்,
அடுத்த வருடம் முதல் தை அமாவாசை அன்று திருநாங்கூரை ஒட்டி ஓடும் மணிகர்ணிகை ஆற்றங்கரையில்
திருமங்கையாழ்வாருக்கு மஞ்சள் குளி உற்சவம் நடைபெறத் தொடங்கியது.
மஞ்சள்குளி உற்சவம்
தை அமாவாசையன்று அதிகாலை 3 மணி அளவில், திருமங்கையாழ்வார் தனது மனைவி குமுதவல்லி நாச்சியாருடன்
திருவாலி திருநகரியில் இருந்து மஞ்சள்குளி உற்சவத்துக்காகப் புறப்படுகிறார்.
திருமங்கை ஆழ்வார் ஆராதித்த பெருமாளான சிந்தனைக்கு இனியானும் அவருடன் புறப்பட்டுச் செல்கிறார்.
முதலில் திருக்குறையலூரிலுள்ள உக்ர நரசிம்மப் பெருமாள் கோயிலை அடைந்து,
உக்ர நரசிம்மரை மங்களாசாசனம் செய்துவிட்டு,
அடுத்து,
தான் திருமால் அடியார்களுக்கு அன்னதானம் செய்த இடமான மங்கை மடத்தை அடைந்து,
அங்கே வீர நரசிம்மரையும் மங்களாசாசனம் செய்து,
அதைத் தொடர்ந்து,
திருநாங்கூரிலுள்ள திருக்காவளம்பாடிக்கு எழுந்தருளி, “காவளம்பாடி மேய கண்ணா!” என்று அங்குள்ள பெருமாளைப் பாடி,
அடுத்து
திருமணிக்கூடம் வரதராஜப் பெருமாளை, “திருமகள் மருவும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே!” என்று பாடிவிட்டு,
நிறைவாகத்
திருப்பார்த்தன் பள்ளியில் ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளை,
“பவள வாயால் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவானே!” என்று பாடிவிட்டு,
நண்பகல் 12 மணியளவில் திருநாங்கூர் மணிகர்ணிகை நதிக்கரையில் உள்ள மஞ்சள் குளி மண்டபத்தை
அடைகிறார் திருமங்கை ஆழ்வார்.
அங்கிருந்தபடி, தனக்கு வைணவ இலச்சினை அளித்த ஆசாரியனாகத் திகழும் நாச்சியார்கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாளை,
“குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளை முத்தும்
தலையார்ந்த இளங்கமுகின் தடஞ்சோலைத் திருநறையூர்
மலையார்ந்த கோலஞ்சேர் மணிமாடம் மிகமன்னி
நிலையார நின்றான்தன் நீள்கழலே அடைநெஞ்சே!”–என்று பாடி விட்டு,
மஞ்சள் குளி உற்சவத்தை நடத்தி வைத்த திருவரங்கநாதனை மங்களாசாசனம் செய்கிறார் திருமங்கையாழ்வார்.
அந்தத் திருத்தலங்களில் இருந்து விசேஷமான மாலைகளும், பரிவட்டங்களும் ஆழ்வாருக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன.
மஞ்சள்குளி மண்டபத்தில், முதலில் திருமங்கை ஆழ்வார் ஆராதித்த பெருமாளான
சிந்தனைக்கினியானுக்கு ஸஹஸ்ர தாரைத் தட்டில் மஞ்சள் நீரால் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
பின், அதே ஸஹஸ்ர தாரைத் தட்டில் திருமங்கையாழ்வாரும் மஞ்சள் நீரால் திருமஞ்சனம் கண்டருள்கிறார்.
அதன்பின் விசேஷ அலங்காரங்கள் பெருமாளுக்கும் ஆழ்வாருக்கும் செய்யப்படுகின்றன.
அன்று மாலை 4 மணியளவில் அங்கிருந்து புறப்படும் திருமங்கையாழ்வார்,
திருநாங்கூர் மணிமாடக் கோயிலை அடைந்து,
“மணிமாடக் கோவில் வணங்கு என் மனனே!” என்று அப்பெருமாளைப் பாடி,
அதன்பின்
“நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐவேள்வியோடு ஆறங்கம் வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே!” என்று
திருவண்புருடோத்தமப் பெருமாளைப் பாடி,
திருவைகுந்த விண்ணகரத்தில்,
“வைகுந்த விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே!” என்று வைகுந்த நாதனைப் பாடி,
திருச்செம்பொன்செய் கோயிலில்,
“கடல்நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே!”
என்று செம்பொன் அரங்கரைப் பாடி,
திருத்தெற்றியம்பலத்தில் பள்ளிகொண்ட பெருமாளை,
“திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே!” என்று பாடி,
அரிமேய விண்ணகரத்தை அடைந்து,
“நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே!” என்று குடமாடு கூத்தரைப் பாடுகிறார்.
அன்று இரவு திருநாங்கூர் மணிமாடக் கோயிலை அடைகிறார் திருமங்கை ஆழ்வார்.
அங்கே அர்த்த ஜாம பூஜை நடைபெறுகிறது.
அடுத்த நாள் – தை அமாவாசைக்கு மறுநாள் காலை,
மணிமாடக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் திருமங்கையாழ்வாரிடம் மங்களாசாசனம் பெற்றுக் கொள்வதற்காக,
வைகுந்த விண்ணகரத்தின் வைகுந்த நாதப் பெருமாள்,
அரிமேய விண்ணகரத்தின் குடமாடு கூத்தர்,
திருத்தேவனார்தொகையின் மாதவப் பெருமாள்,
திருவண்புருடோத்தமத்தின் புருஷோத்தமப் பெருமாள்,
செம்பொன்செய்கோவிலின் செம்பொன் அரங்கர்,
திருத்தெற்றியம்பலத்தின் செங்கண்மால்,
திருமணிக்கூடத்தின் வரதராஜப் பெருமாள்,
திருக்காவளம்பாடியின் கோபாலகிருஷ்ணன்,
திருவெள்ளக்குளத்தின் அண்ணன் பெருமாள்,
திருப்பார்த்தன்பள்ளியின் தாமரையாள் கேள்வன் ஆகிய
பத்து திவ்ய தேசத்துப் பெருமாள்களும் நாங்கூர் மணிமாடக் கோயிலை நோக்கிப் பல்லக்குகளில் வரத் தொடங்குவார்கள்.
ஆழ்வாரைக் காணும் ஆவலுடன் ஒவ்வொரு பெருமாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் வருவார்கள்.
பக்தனைக் காண்பதில்தான் பரமனுக்கு எத்தனை ஆனந்தம்!
திருமங்கை ஆழ்வார் கோயிலுக்குள்ளே வீற்றிருக்க, வெளியே பத்து பெருமாள்கள் அவருக்காகக் காத்து நிற்கிறார்கள்.
அப்போது அங்கிருக்கும் அடியார்களுள் சிலர்,
“இதென்ன தலைகீழாக உள்ளது? பக்தரான ஆழ்வாருக்காக பகவான் காத்திருக்கிறாரே!” என்று பேசிக் கொள்வார்களாம்!
ஆனால் பத்துப் பெருமாள்களும் தங்களுக்குள்ளே பேசிக்கொள்வார்களாம்,
“முப்பத்தேழு திவ்ய தேசத்துப் பெருமாள்கள் திருக்குருகூரில் புளியமரப் பொந்தில் யோகத்தில் அமர்ந்திருந்த
நம்மாழ்வாரைத் தேடிச் சென்று காத்திருந்து அவரிடம் இருந்து பாடல் பெற்று வந்தார்களல்லவா?
அவர்களெல்லாம் நம்மாழ்வாரிடம் பாடல் பெற்று திவ்ய தேசப் பெருமாள்கள் ஆகி விட்டார்கள்.
ஆனால், திருநாங்கூரில் உள்ள நமது பதினோரு கோயில்களையும் தனது பாசுரங்களால் பாடி,
திவ்ய தேசங்களாக ஆக்கிய ஆழ்வார் திருமங்கை ஆழ்வார். நம்முடைய ஆழ்வாருக்காக நாம் காத்திருக்க வேண்டாமா?” என்று.
பக்தன் மேல் இறைவன் கொண்டிருக்கும் அன்பை இதன் மூலம் அறிய முடிகிறதல்லவா?
அவ்வாறு காத்திருந்து, மணிமாடக் கோயிலுக்குள் வரிசையாகப் பத்துப் பெருமாள்களும் நுழைகிறார்கள்.
அவர்களுடன் மணிமாடக் கோவில் பெருமாளும் இணைவார்.
பதினோரு பெருமாள்களையும் மங்களாசாசனம் செய்யக் குமுதவல்லி நாச்சியாரோடு திருமங்கையாழ்வார் தயாராவார்.
ஒவ்வொரு பெருமாளும் வந்து ஆழ்வாருக்குக் காட்சியளிக்க,
அந்தப் பெருமாளைத் தமது பாசுரங்களால் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வார்.
அந்தப் பெருமாளை வலம் வந்துவிட்டு, மாலை உள்ளிட்ட பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு,
அடுத்த பெருமாளைப் பாடச் செல்வார் ஆழ்வார்.
இவ்வளவு நேரம் புறப்பாடுகளில் திருமங்கையாழ்வார் மெல்ல நகர்வதையும்,
ஒரே நேரத்தில் பதினோரு பெருமாள்களையும் தரிசித்தபின் அந்த மகிழ்ச்சியில்
ஆழ்வாரின் புறப்பாடு புதிய வேகம் எடுப்பதையும் இன்றும் கண்கூடாகக் காணலாம்!
இவ்வாறு வரிசையாகப் பதினோரு பெருமாள்களையும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தவுடன்,
வண்புருடோத்தமம் திருத்தலத்தில் இருந்து அங்கே எழுந்தருளும் மணவாள மாமுனிகள்,
“வேல் அணைத்த மார்பும் விளங்கு திரு எட்டெழுத்தை
மால் உரைக்கத் தாழ்த்த வலச்செவியும்
தாளிணைத் தண்டையும் தார்க் கலியன் நன்முகமும்
கண்டு களிக்கும் என் கண்”
என்று பாடித் திருமங்கையாழ்வாரை மங்களா சாசனம் செய்வார்.
அதைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில், ஒரே நேரத்தில் பதினோரு திவ்ய தேசத்துப் பெருமாள்களுக்கும்,
திருமங்கை ஆழ்வாருக்கும் திருமஞ்சனம் நடைபெறும்.
அப்போது பெருமாள் திருமங்கையாழ்வாரிடம்,
“ஆழ்வீர்! உமது பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தேன். நீங்கள் பாடிய பாடல்கள் யாவும் வேதத்துக்கு நிகரானவை.
எனவே இன்று இரவு வேத ஸ்வரூபியான கருடன் மேலேறி உங்களுக்கு காட்சி தர உள்ளேன்.
திருமங்கை மன்னரே! நீங்கள் வழிப்பறி செய்தாலும், என் அடியார்க்கு உணவளிப்பதற்காகவே அதைச் செய்தீர்கள்!
உங்களது உள்ளம் தங்கம் போல் தூய்மையாகத் திகழ்கிறது.
உங்களது தங்கம் போன்ற உள்ளத்தைப் பறைசாற்றும் வகையில் தங்கக் கருடன் மேல் ஏறி உங்களுக்குக் காட்சி தரவுள்ளேன்.
நீங்கள் பாடிய பெரிய திருமொழி என்னும் நூலில் பதினொரு சதகங்கள் உள்ளன.
அதற்கு இணையாகப் பதினோரு கருடன்கள் மேல் பதினோரு வடிவங்களுடன் நான் காட்சி தர உள்ளேன்!” என்று கூறுவார்.
மேலும், “மங்கை மன்னரே! அன்னப் பறவை எப்படித் தண்ணீரையும் பாலையும் கலந்து வைத்தால்,
தண்ணீரை விலக்கி விட்டுப் பாலை மட்டும் எடுத்துக் கொள்கிறதோ,
அதுபோல் நீங்களும் சாரமில்லாத உலக விஷயங்களை விலக்கிவிட்டு, சாரமாக இருக்கும் இறைபக்தியைக் கைக்கொண்டீர்கள்!
எனவே நீங்கள் அன்னப்பறவையின் மீது அமர்ந்து வந்து என்னைத் தரிசனம் செய்யுங்கள்!
அதுவே பொருத்தமாக இருக்கும்!” என்று திருமங்கையாழ்வாரிடம் கூறுவார் பெருமாள்.
பதினோரு கருடன்மேல் பதினோரு பெருமாள்கள் அன்றைய தினம் நள்ளிரவில், தோளுக்கினியானில்
மணவாள மாமுனிகள் முதலில் மணிமாடக் கோயிலில் இருந்து வெளியே வருவார்.
அவரைத் தொடர்ந்து, அன்னப்பறவை (ஹம்ஸ) வாகனத்தில், குமுதவல்லி நாச்சியாரோடு திருமங்கை ஆழ்வார் வெளியே வந்து,
பெருமாள்களை வரவேற்கத் தயாராக நிற்பார்.
1.மணிமாடக் கோயிலின் நாராயணப் பெருமாள்
2.அரிமேய விண்ணகரத்தின் குடமாடு கூத்தர்
3.செம்பொன்செய்கோயிலின் செம்பொன் அரங்கர்
4.திருத்தெற்றியம்பலத்தின் செங்கண்மால்
5.திருவெள்ளக்குளத்தின் அண்ணன் பெருமாள்
6.திருவண்புருடோத்தமத்தின் புருஷோத்தமப் பெருமாள்
7.திருமணிக்கூடத்தின் வரதராஜப் பெருமாள்
8.வைகுந்த விண்ணகரத்தின் வைகுந்தநாதப் பெருமாள்
9.திருத்தேவனார்தொகையின் மாதவப் பெருமாள்
10.திருப்பார்த்தன்பள்ளியின் தாமரையாள் கேள்வன்
11.திருக்காவளம்பாடியின் கோபால கிருஷ்ணன்
ஆகிய பதினோரு பெருமாள்களும் விசேஷ அலங்காரங்களோடு தங்கக் கருட வாகனங்களில்
திருநாங்கூர் மணிமாடக் கோயிலில் இருந்து புறப்படுவார்கள்.
பதினோரு பெருமாள்கள் மங்களாசாசனம் பெறும் வரிசை பற்றி அழகான வடமொழி ஸ்லோகம் ஒன்று உள்ளது.
“நந்தாதீப கடப்ரணர்தக மஹாகாருண்ய ரக்தாம்மக
ஸ்ரீ நாராயண புருஷோத்தமதி ஸ்ரீ ரத்னகூடாதிபாந் |
வைகுண்டேஸ்வர மாதவௌ ச கமலாநாதம் ச கோபீபதிம்
நௌமி ஏகாதசாந் நாகபுரி அதிபதீந் ஸார்தம் கலித்வம்ஸிநா ||”
இதன்பொருள்: மணிமாடக் கோயிலின் நாராயணப் பெருமாள், அரிமேய விண்ணகரத்தின் குடமாடு கூத்தர்,
செம்பொன்செய்கோயிலின் செம்பொன் அரங்கர், திருத்தெற்றியம்பலத்தின் செங்கண்மால்,
திருவெள்ளக்குளத்தின் அண்ணன் பெருமாள், திருவண்புருடோத்தமத்தின் புருஷோத்தமப் பெருமாள்,
திருமணிக்கூடத்தின் வரதராஜப் பெருமாள், வைகுந்த விண்ணகரத்தின் வைகுந்தநாதப் பெருமாள்,
திருத்தேவனார்தொகையின் மாதவப் பெருமாள், திருப்பார்த்தன்பள்ளியின் தாமரையாள் கேள்வன்,
திருக்காவளம்பாடியின் கோபாலகிருஷ்ணன்
ஆகிய பதினோரு பெருமாள்களையும்
திருமங்கை ஆழ்வாரையும் வணங்குகிறேன்.
மணிமாடக் கோயிலிலிருந்து வரிசையாக வெளியே வரும் ஒவ்வொரு பெருமாளுக்கும் கோயில் வாசலில்
விசேஷ தீபாராதனை நடைபெறுகிறது.
ஒவ்வொரு பெருமாளாகத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்வார்.
பதினோரு பெருமாள்களுக்கும் மங்களாசாசனம் ஆனபின், கருட வாகனத்தில் வீதியுலா செல்லும் பெருமாள்களைப் பின்தொடர்ந்து,
ஹம்ஸ வாகனத்தில் திருமங்கையாழ்வாரும் செல்வார்.
ஆழ்வாரின் பாடல்களைப் பெற்று அவருக்கு அருள்புரிந்தாற்போல், ஊர்மக்களுக்கும், உற்சவத்தைத் தரிசிக்க வந்த
அடியார்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்ற எண்ணத்தில், பக்தர்கள் வெள்ளத்துக்கு மத்தியில்,
பதினோரு பெருமாள்களும் கருட வாகனத்தில் திருநாங்கூர் மாட வீதிகளைச் சுற்றி
மேளவாத்தியங்கள் முழங்க வாணவேடிக்கைகளுடன் வலம் வருவார்கள்.
இந்த 11 கருட சேவையைத் தரிசிக்கும் அடியார்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில்
பதினோரு திவ்ய தேசங்களைத் தரிசித்த பலன் கிட்டும் என்பது பெரியோர்களின் வாக்கு.
————-
மூன்றாம் நாள் உற்சவம் திருமங்கை ஆழ்வார் திருநகரிக்குத் திரும்புதல்
11 கருட சேவை உற்சவம் நடைபெற்ற மறுநாள் காலை, மணிமாடக் கோயிலிலிருந்து புறப்பட்டு,
அந்தந்தப் பெருமாள்கள் தத்தம் திருத்தலங்களுக்கு மீண்டும் எழுந்தருள்வார்கள்.
காலையில் மணிமாடக் கோயிலில் திருமஞ்சனம் கண்டருளும் திருமங்கையாழ்வார், மாலையில் குமுதவல்லியுடன் புறப்பட்டு,
திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாளை,
“அண்ணா அடியேன் இடரைக் களையாயே!” என்று மங்களாசாசனம் செய்து,
திருத்தேவனார்தொகை மாதவப் பெருமாளை,
“தேதென என்றிசைப் பாடும் திருத்தேவனார்த் தொகையே!” என்று பாடி,
திருவாலியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீலட்சுமிநரசிம்மப் பெருமாளை “திருவாலி அம்மானே!” என்று பாடிவிட்டுத்
தனது இருப்பிடமான திருநகரியை அடைவார்.
திருநகரியில் எழுந்தருளியிருக்கும் வயலாளி மணவாளன் எனப்படும் பெருமாள், கருட வாகனத்தில் வந்து,
ராஜகோபுரத்தின் முன்னே திருமங்கையாழ்வாரையும் குமுதவல்லியையும் எதிர்கொண்டு அழைப்பார்.
“கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே
பற்றா வந்தடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீள் வயல் சூழ் வயலாலி அம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேனே!”–என்று திருமங்கையாழ்வார் பாடி,
வயலாலி மணவாளனோடு திருக்கோயிலுக்குள்ளே எழுந்தருளுவதோடு,
இந்தப் பதினோரு கருட சேவைத் திருவிழா இனிதே நிறைவடையும்.
சிறப்பம்சங்கள்
பக்தர்கள் இறைவனை நாடிச் செல்வது வழக்கமாய் இருக்க, இங்கே இறைவன் பக்தரைத் தேடி வருகிறார்.
ஆம்! திருநாங்கூரிலுள்ள பதினோரு திருத்தலங்களுள் ஒன்றான மணிமாடக் கோயில் திருமங்கையாழ்வார் அமர்ந்திருக்க,
மீதமுள்ள பத்துத் திருத்தலங்களின் பெருமாள்களும் ஆழ்வாரைத் தேடி வந்து, காத்திருந்து, அவரிடம் பாடல் பெற்றுச் செல்வார்கள்.
* திருமங்கையாழ்வார் அருளிய தமிழ்ப் பாசுரங்கள் யாவும் வேதத்துக்கு நிகரானவை என்பதால்,
வேத ஸ்வரூபியாக இருக்கும் கருடனின் மேல் வந்து காட்சி தந்து பாடல் பெற்றுக் கொள்கிறார் பெருமாள்.
* திருமங்கை ஆழ்வாரின் பொன்போன்ற உள்ளத்தைப் பறைசாற்றும் வகையில் தங்கக் கருடன் மேல் திருமால் காட்சி தருகிறார்.
திருமங்கை ஆழ்வார், பதினோரு சதகங்களை உடைய பெரிய திருமொழி என்னும் பிரபந்தத்தால் திருமாலைத் துதி செய்தார்.
சதகம் என்பது நூறு பாடல்களின் தொகுப்பைக் குறிக்கும்.
1084 பாடல்களை உடைய பெரிய திருமொழியில் பதினோரு சதகங்கள் உள்ளன.
அந்தப் பதினோரு சதகங்களுக்கு இணையாகத் திருமாலும் பதினோரு கருடன்கள் மேல் ஆழ்வாருக்குக் காட்சி அளிக்கிறார்.
* இறைவன் கருட சேவை கண்டருள்வதோடு மட்டுமின்றி, அந்த இறைவனைக் காட்டித் தந்த ஆழ்வார் அன்ன வாகனத்திலும்,
அந்த ஆழ்வாரின் பாசுரங்களுக்கு விளக்கவுரை தந்த ஆசாரியர் தோளுக்கினியானிலும் சேர்ந்து எழுந்தருள்வது
இந்த உற்சவத்தின் மற்றொரு சிறப்பு.
கடந்த பதினேழு ஆண்டுகளாக, பதினோரு கருட சேவைக்கு மறுநாள்,
திருநாங்கூருக்கு அருகிலுள்ள திருவெள்ளக்குளம் எனப்படும் அண்ணன் கோவிலில்,
ஸ்ரீஅண்ணன் பெருமாள் திருமண மண்டபத்தில், திருமாலின் பெருமைகளையும்,
திருமங்கை ஆழ்வாரின் பெருமைகளையும் பற்றிச் சான்றோர்கள் பங்கேற்று உரையாற்றும்
‘கலியன் ஒலி மாலை’ என்னும் கருத்தரங்கம் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருச்சித்ரகூடம் ரங்காச்சாரியார் சுவாமிகளின் தலைமையில்,
கோயில் ஸ்ரீ மான். சடகோப கல்யாணராமன் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
திருநாங்கூர் மணிமாடக் கோயிலில் ஒரே சமயத்தில் பல்லாயிரக் கணக்கான அடியவர்கள் ஒன்று கூடி
இறைவனை வணங்கும் ஒப்பற்ற உற்சவமாகிய இந்தப் பதினோரு கருட சேவை விழாவில் பங்கேற்று,
தங்கக் கருட வாகனத்தில் காட்சி அளிக்கும் பதினோரு பெருமாள்களையும், கருடன்களையும்,
அன்ன வாகனத்தில் வரும் திருமங்கையாழ்வார் – குமுதவல்லி நாச்சியாரையும்,
மணவாள மாமுனிகளையும் கண்ணாரக் கண்டு, மனதாறத் தொழும் அனைத்து அன்பர்களுக்கும்
உடல்நலம், மன அமைதி, நீண்ட ஆயுள், ஆற்றல், பொலிவு ஆகியவை பெருகும். நினைத்த நற்செயல்கள் கைகூடும்.
நோய்கள் அகலும். நற்செல்வம் பெற்றுப் பல்லாண்டு வாழ்வர் என்பதில் ஐயமில்லை.
—————
தை அமாவாசையை ஒட்டி மூன்று நாட்கள் சீர்காழி அருகில் உள்ள திருநாங்கூரில் 11 கருட சேவை நடக்கும்.
முதல் நாள் திருமங்கையாழ்வார் திருநகரியிலிருந்து புறப்பட்டு
ஸ்ரீ நாராயணப் பெருமாளிடம் தொடங்கி,11 திவ்யதேசங்களையும் மங்களாசாஸனம் செய்யும் விழா நடைபெறும்.
அடுத்த நாள் ஸ்ரீ திருமங்கை யாழ்வார் ஹம்ஸ வாஹன உத்ஸவமும் நடக்கும்.
முதல் நாள் அதிகாலை 1 மணிக்கு ஸ்ரீ திருமங்கை யாழ்வார்
திருநகரியிலிருந்து புறப்பட்டு
திருக் குறை யலூர்,
திருமங்கை மடம்,
1. திருக்காவளம்பாடி, ஸ்ரீகோபாலன்.
2. திருமணிக்கூடம், ஸ்ரீவரதராஜன்
3. திருப்பார்த்தன் பள்ளி ,ஸ்ரீபார்த்தசாரதி ஆகிய திவ்யதேசங்களுக்கு
சென்று மங்களாசாஸனம் செய்து விட்டு, மஞ்சள் குளி மண்டபம் எழுந்தருளுவார்.
அங்கு திருநறையூர் நம்பியையும், ஸ்ரீ ரங்கம் அழகிய மணவாளனையும் மங்களாசாஸனம் செய்த பிறகு
திருமஞ்சனம், திருப்பாவை சாற்றுமுறை நடைபெறும்.
அருகில் இருக்கும் நதியில் இருந்து நீர் எடுத்து வந்து திருமஞ்சனம் நடைபெறுகிறது.
திருமஞ்சனம் முடிந்த பின் திருமங்கையாழ்வார் தன் மனைவியார் குமுத வல்லி நாச்சியாரின் வஸ்திரத்தைத்
தலையில் சூடிக் கொள்கிறார்.
தன்னைக் கடைத் தேற்றிய குமுதவல்லிநாச்சியாரை உயர்த்த அந்த வஸ்திரத்தை அணிந்து கொள்கிறார்.
மாலை 6 மணிக்கு ஆரம்பித்து திருநாங்கூரிலிருந்து புறப்பட்டு,
4.மணிமாடக்கோயில், -ஸ்ரீநாராயணப்பெருமாள்
5.வண்புருடோத்தமம், -ஸ்ரீவண்புருடோத்தமப் பெருமாள்
6.வைகுந்த விண்ணகரம் – ஸ்ரீவைகுண்டநாதர்,
7.செம்பொன்செய் கோயில்,- ஸ்ரீசெம்பொன்னரங்கர்
8.திருத்தெற்றி யம்பலம்-ஸ்ரீபள்ளிகொண்டபெருமாள்
9.அரிமேய விண்ணகரம் -ஸ்ரீகுடமாடுகூத்தர்
ஆகிய திவ்யதேசங்களுக்கு எழுந்தருளி மங்களா சாஸனம் செய்து முடித்து
இரவு மணிமாடக்கோயி லுக்கு எழுந்தருளிய பின் அர்த்த ஜாமம் நடைபெறும்.
இரண்டாம் நாள் பகலில் சுமார் 12 மணி அளவில் மேற்கண்ட 9 திவ்யதேசத்து எம்பெருமான்களுடன்
10 திருவெள்ளக்குளம்,_ ஸ்ரீஅண்ணன் பெருமாள்
11 திருத்தேவனார் தொகை_ ஸ்ரீமாதவப்பெருமாள்
ஆக 11 திவ்ய தேசத்து எம்பெருமான்களும் மணி மாடக்கோயில் முன் பந்தலில் எழுந்தருளுவர்.
அவர்களை ஸ்ரீ திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வார்.
ஸ்ரீ புருஷோத்தமப் பெருமாள் ஸந்நிதியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீமணவாளமாமுனிகள்
ஸ்ரீ திருமங்கையாழ்வாரை மங்களாசாஸனம் செய்வார்.
மாலை பதினொரு திவ்யதேசத்து எம்பெருமான்களுக்கும் மற்றும்
ஸ்ரீ திருமங்கையாழ்வாருக்கும் திருமஞ்சனம் நடை பெறும்.
இரவு பதினொரு எம்பெருமாளுக்கும் கருட சேவையும்,
ஸ்ரீ திருமங்கையாழ்வாருக்கு ஹம்ஸ வாஹன உத்ஸவமும்
ஸ்ரீ மணவாள மாமுனிகள்
திருவீதி புறப்பாடும் நடைபெறும்.
மூன்றாம் நாள் காலை மணிமாடக் கோயிலில் ஸ்ரீ திருமங்கை யாழ்வாருக்கு திருமஞ்சனம்,
திருப்பாவை சாற்றுமுறை, நடைபெறும்.
பிறகு காலையில் 11 மணியளவில் புறப்பட்டு
திருவெள்ளக் குளம்,
திருததேவனார்தொகை,
திருவாலி ஆகிய
திவ்யதேசங்களுக்கு எழுந்தருளி மங்களாசாஸனம் செய்து திருநகரி சேர்வார்.
இரவு திருநகரியில்
ஸ்ரீ வயலாலி மணவாளன் கருடசேவையும்
ஸ்ரீதிருமங்கையாழ்வார் மங்களாசாஸனமும்
நடைபெறும்.
————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –