அறுசீரடி அல்லது எண்சீரடி பயின்ற செய்யுளினால் கடவுளரை பாடுவதற்குரியது தாண்டகம் எனும் சிற்றிலக்கிய வகை (பிரபந்தம்).
அறுசீரடியினாலாகிய தாண்டகத்தினைக் குறுந்தாண்டகம் என்றும்
எண்சீரடியால் அமைந்ததினை நெடுந்தாண்டகம் என்றும் பன்னிருபாட்டியல் பகருகிறது.
- பாடலின் ஒவ்வொரு அடியும் இடையிலே தாண்டுவதை இந்தப் பாடல்களில் காணலாம். பாடலின் அகத்தே தாண்டுவது தாண்டகம்.
-
தாண்டகம் என்பது ஒருவகைச் செய்யுள் யாப்பு ஆகும். தாண்டக யாப்பினால் இயற்றப்பட்டவை தாண்டகம் என்னும்இலக்கிய வகையாகப் பெயர் பெறுகின்றன. இதனை முறையே யாப்பருங்கல விருத்தியாலும் (95-ம் நூற்பா உரை)வீரசோழியத்தாலும் (129) அறிய முடிகின்றது. இவ்வகையான நூல்களையும் பக்தி இலக்கியம்தான் நமக்கு முதலில் அறிமுகம் செய்கின்றது. திருநாவுக்கரசரின் ஆறாம் திருமுறை முழுவதும் இத்தாண்டக யாப்பே. 981 பாடல்கள் கொண்ட அவரது 99 பதிகங்கள் திருத் தாண்டகம் என்றே வழங்குகின்றன.
-
திவ்வியப் பிரபந்தத்தில் திருமங்கையாழ்வார் பாடியதிருத் தாண்டகங்கள் பாவின் குறுமை, நெடுமை ஆகிய அளவு கருதி முறையே திருக்குறுந்தாண்டகம்,திருநெடுந்தாண்டகம் எனப்பெயர் பெறுகின்றன.
-
வடமொழித் தாண்டகத்தையே தமிழுக்குரிய தாண்டகமாக்கி வீரசோழியமும் யாப்பருங்கல விருத்தியும் குறிப்பிடுகின்றன. இங்கு ஒரு வேறுபாடு எண்ணத்தகும். வீரசோழியம் தண்டகம் என்றே குறிக்க யாப்பருங்கல விருத்தி மட்டும் தாண்டகம் எனக் கூறுகிறது. வடமொழி யாப்புப்படி விருத்தம் என்னும் பொதுப்பெயர்,அளவொத்த நான்கடியையும் அனைத்துச் செய்யுளையும் குறிக்கும். அடிகளிற் பயிலும் எழுத்துகளின் எண்ணிக்கை அடிப்படையில்விருத்தங்களைச் சந்தம் எனவும், தண்டகம் எனவும் பிரிப்பர்.ஓரெழுத்து முதல் இருபத்தாறு எழுத்தளவும் உடைய அடிகளால் ஆகிய செய்யுள் சந்த விருத்தமாம்.இருபத்தேழு எழுத்துகளுக்கு மேல்வரின் அது தண்டக விருத்தமாகும்.இதனையே தாண்டக விருத்தம் எனப் பெயரிட்டு விளக்குகிறதுயாப்பருங்கல விருத்தி. ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகத்தில் சிற்சில அடிகள் 27 எழுத்துகளும் அவற்றின்மிக்கு 28, 29 எழுத்துகளும் பெற்று வருகின்றன.முப்பது பாசுரத்திற்கும் மொத்தம் உள்ள நூற்றிருபது அடிகளில் இவ்வாறு தாண்டக அடிகளாக வருவன 24 அடிகள் மட்டுமே.எனினும் ஒரு பாசுரம் கூட முழுவதும் தாண்டக அடிகளைக் கொண்டிருக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.உதாரணத்திற்கு முதல் பாசுரத்தில் முதலாம் அடியில் 26 எழுத்துகள், 2-ம் அடியில் 27 எழுத்துகள், 3-ம் அடியில் 28எழுத்துகள், 4-ம் அடியில் 27 எழுத்துகள் அமைந்துள்ளன. இவ்வாறு எழுத்துகளைக் கணக்கிட்டால்,திருநெடுந்தாண்டகத்தில் தாண்டக அடிகளாக அதாவது 27 முதலாக அவற்றின் மிக்க எழுத்துகளைப் பெற்று வருவன 24அடிகள் மட்டுமே. (எழுத்துகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் போது, குற்றியலுகரமும், ஒற்றும் நீங்கலாகக்கணக்கிடப்படும்)யாப்பருங்கல விருத்தி கூறும் தாண்டக யாப்பு, தமிழில் உள்ள திருத்தாண்டகங்களுக்குப் பொருந்தி வரவில்லைஇனித்தாண்டகம் தமிழ் யாப்பே என்பார் கூற்றினை நோக்குவோம். அதற்கு முன்னர் ஆழ்வார் பாடியதிருத்தாண்டகங்களின் யாப்பமைதி பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். ஆழ்வார் காலத்திற்குப் பின்னர் வளர்ச்சியுற்றயாப்பிலக்கணத்தின்படி நோக்கினால், ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகம் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள்முப்பது கொண்டதாகும். இவ்வகை விருத்தத்தில் 1,2,5,6 ஆகிய நான்கு சீர்களும் காய்ச்சீர்களாகவும் 3,4,7,8 ஆகிய நான்குசீர்களும் இயற்சீர்களாகவும் வரும். இயற்சீர் நான்கினுள் 3,7 ஆகிய சீர்கள் புளிமா, அன்றித் தேமாவாக வரும். 4,8 ஆகிய சீர்கள் தேமாவாக மட்டுமே அமையும். எனவே இவ்வகை விருத்தம்காய்-காய்-மா-தேமா-காய்-காய்-மா-தேமா–என்னும் வாய்பாடு கொண்டதாகும்.இப்போது திருக்குறுந்தாண்டகத்தை நோக்குவோம். இவ்வகை விருத்தத்தில் எல்லாச் சீர்களும் இயற்சீர்களாகவே வரும்.சிறுபான்மை காய்ச்சீர் வருதலுமுண்டு. பெரும்பாலும் 1,4 ஆகிய சீர்கள் விளச்சீராகவும், 2,3,5,6 ஆகிய சீர்கள் மாச்சீர்களாகவும் வரும். சுருங்கக் கூறின்,விளம்-மா-தேமா-விளம்-மா-தேமா–என்னும் வாய்பாடு கொண்டதாகும்.தாண்டக யாப்பு தமிழ் மரபினதே எனக் கூறும் க.வெள்ளை வாரணன், தொல்காப்பியர் கருத்துப்படி அதனை எண்சீரான் வந்த கொச்ச ஒரு போகு என்பர்.ஆதலின் இயல்வகை குறித்த தாண்டகம் என்னும் இப்பெயரினை பெறாவாயின என விளக்குகிறார். மேலும், அவர்திருநாவுக்கரசரது திருத்தாண்டக யாப்பு, கழிநெடிலடிக்கு மேலெல்லையாகிய இருபது எழுத்தென்னும் அளவினைக்கடந்து இருபத்தேழு எழுத்திற்கு உட்பட்டு வருவதாகும். யாப்பருங்கல விருத்தியில் தாண்டகம் என்ற பெயராற்குறிக்கப்பட்ட தாண்டக யாப்பு இருபத்தேழு எழுத்து முதலாக அவற்றின் மிக்க எழுத்துகளை பெற்று வருவதாகும் எனஇரண்டனுக்குமுள்ள வேற்றுமையையும் எடுத்துக் காட்டுகிறார். இங்குத் தாண்டகம் தமிழ் யாப்பின் வழிப்பட்டதேஎன்பதற்கு அவர் கூறும் விளக்கமும் யாப்பருங்கல விருத்தியில் கூறப்படும் தாண்டகம் வேறு, திருநாவுக்கரசரின் தாண்டகம் வேறு என்பதற்கு அவர் சில காரணங்களைக் காட்டுகிறார்.மேற்குறித்தவாறு திருநாவுக்கரசரின் திருத்தாண்டகத்தைத் தமிழ் மரபினதாகக் காட்டும் வெள்ளைவாரணன்,திருமங்கையாழ்வாரின் திருத்தாண்டகங்களையும் தமிழ் யாப்பு வழிப்பட்டதாகவே ஏற்றுக் கொள்கிறார். அவர்கருத்துப்படி, ஆழ்வாரின் நெடுந்தாண்டகம் அப்பரின் திருத்தாண்டகத்துக்கும், ஆழ்வாரின் குறுந்தாண்டகம் அப்பரின்திருநேரிசைக்கும் இணையாகின்றன. திருநாவுக்கரசரின் திருநேரிசைப் பதிகங்களும், ஆழ்வாரின் குறுந்தாண்டகமும் ஒரேவகை யாபில் அமைந்தவை. அதாவது, விளம்-மா-தேமா, விளம்-மா-தேமா என்னும் வாய்பாடு கொண்ட அறுசீர்விருத்தங்கள் அவை. இங்ங்கனமாக, ஒன்று திருநேரிசை எனவும், மற்றொன்று திருக்குறுந்தாண்டகம் எனவும்வெவ்வேறு பெயர் பெறுகின்றன. இப்பெயர் மாற்றத்துக்கு என்ன காரணம்? அறுசீரில் இருபது பாசுரங்கள் கொண்டதாண்டகமும் எண்சீரில் முப்பது பாசுரங்கள் கொண்ட தாண்டகமும் ஆழ்வார் பாடினார். எண்சீரினும் ச்றுசீர் குறியது.அன்றியும் அறுசீர் யாப்பிலான பாடற்பகுதி, எண்சீர் யாப்பிலான பாடற்பகுதியினும் குறைந்த எண்ணிக்கை கொண்டது.ஆதலின் அவை குறுந்தாண்டகம், நெடுந்தாண்டகம் என வேறுபடுத்தப்பட்டன எனலாம். இவ்வமைதி ஆழ்வாரின் இரண்டு தாண்டகங்களைப் பொறுத்தவரை ஏற்கத்தக்கதாகும்.ஆயின் அப்பரின் திருநேரிசைப் பதிகங்கள் குறுந்தாண்டகமாகக் கொள்ளப்படவில்லையே. இது ஏன்?என்னும் வினாவுக்குவிடை காண இயலவில்லை. மற்றொரு சிக்கலும் உண்டு. குறுந்தாண்டகம் என்று அழைக்கப்படும் ஆழ்வாரின்பாடற்பகுதி முதலில் தாண்டகம் ஆகுமா? என்பதுவே அச் சிக்கலாகும். ஆழ்வாரின் குறுந்தாண்டகப் பாடல்களும்,அப்பரின் திருநேரிசைப் பாடல்களும் இருபது எழுத்துக்கு மேற்படாது அடங்கிவரும் அடிகளையுடைய அறுசீர் விருத்தயாப்பினமாகும். அங்ஙனமாயின் க.வெள்ளைவாரணன் தாண்டகத்துக்குக் கூறிய இலக்கணப்படி அடிக்கு இருபதுஎழுத்துகளைத் தாண்டாத இவை தாண்டகமாகா. வடமொழி மரபுப்படி இருபத்தேழு எழுத்து என்னும் எல்லைக்கு இங்குஇடமே இல்லை. ஆகத் தமிழ்மரபு வடமொழி மரபு ஆகிய இரண்டினாலும் தாண்டகமாகாத ஆழ்வாரின் பாடற்பகுதிகுறுந்தாண்டகம் எனப் பெயர் பெற்றது எவ்வாறு என்பது விளங்கவில்லை.இயற்சீர் = ஈரசைச் சீர்= அகவற்சீர் . பழம் பெயர் தான்.“ ஈரிசை கூடிய சீரியற் சீர் ; அவைஈரிரண் டென்ப இயல்புணர்ந் தோரே “இயலல்- பொருந்துதல்
-
பின்வந்த பாட்டியலாரும் இச் சிக்கலுக்கு ஓர் தீர்வினைத் தந்திடவில்லை.மூவிரண் டேனும் இருநான் கேனும்சீர்வகை நாட்டிச் செய்யுளி னாடவர்கடவுளர்ப் புகழ்வன தாண்டகம் அவற்றுள்அறுசீர் குறியது நெடியதெண் சீராம்-எனப் பன்னிருபாட்டியல் கூறுகின்றது.
-
இந்நூற்பாவில் தாண்டகத்துக்குரிய எழுத்தெண்ணிக்கை பற்றிய குறிப்பு இல்லை.அன்றியும் ஆழ்வார் அறுசீர் யாப்பில் பாடியவற்றைக் குறுந்தாண்டகம் என ஏற்றுக்கொண்டே இந்நூற்பா இலக்கணம்கூறுகின்றது. பன்னிரு பாட்டியலார் கூறும் இவ்விலக்கணம் திருமங்கையாழ்வார் முறையே அறுசீரிலும் எண்சீரிலும்பாடிய இலக்கியங்களுக்கான இலக்கணம் ஆகின்றது. அஃதாவது இலக்கியம் கண்டதற்கு அமைந்த இலக்கணம் இது.எனினும் தாண்டக சதுரர் எனச்சிறப்பிக்கப் பெற்ற திருநாவுக்கரசரின் ‘தாண்டக இலக்கியம்’ பற்றிப் பன்னிரு பாட்டியல் குறிப்பிடவில்லை.ஆழ்வாரின் திருத்தாண்டகப் பாசுரங்களினும் (30+20) திருநாவுக்கரசரின் திருத்தாண்டகப் பாடல்கள் எண்ணிக்கையில் (981)பன்மடங்கு மிக்கன. போற்றித் திருத்தாண்டகம், காப்புத் திருத்தாண்டகம், நின்ற திருத்தாண்டகம், தனித் திருத்தாண்டகம்,வினா விடைத் திருத்தாண்டகம் எனப் பொருளடிப்படையில் பலவாறு பெயர் பெறுவன. இவ் வியல்புகளைப் பாட்டியல்கள்கருத்திற்கொண்டு இலக்கணம் கூறாததற்கான காரணம் தெரியவில்லை. திருநாவுக்கரசர், திருமங்கையாழ்வார் ஆகியஇருவரது தாண்டகங்களையும் ஒப்ப வைத்தும் உறழ்ந்து நோக்கியும் பாட்டியல் நூலார் இலக்கணம் கூறியிருந்தால்இன்று நமக்கு எழக்கூடிய சிக்கல்கள் தோன்றியிருக்க மாட்டா.பின்வந்த முத்து வீரியம் தாண்டக யாப்புக்குரிய இலக்கணத்தையும் பின்வருமாறு கூறுகின்றது.இருபத்தேழு எழுத்து ஆதி யாகஉயர்ந்த எழுத்தடி யினவாய் எழுத்தும்குருவும் இலகுவும் ஒத்து வந்தனஅளவியல் தாண்டகம் எனவும் அக்கரம்ஒவ்வாதும் எழுத்தலகு ஒவ்வாதும் வந்தனஅளவழித் தாண்டகம் எனவும் பெயர்பெறும் —என்பது அந்நூற்பாவாகும்.
-
(நூற்பா-1115) வீரசோழியம், யாப்பருங்கல விருத்தி ஆகிய நூல்கள் புகுத்திய புதுமரபிற்கேற்பமுத்து வீரியம் இங்குத் தாண்டகத்திற்கு இலக்கணம் கூறுகின்றது. அளவியல் தாண்டகம், அளவழித் தாண்டகம் ஆகியஇரு வகைகளையன்றி குறுந்தாண்டகம், நெடுந்தாண்டகம் என்னும் பகுப்புமுறை இங்கு இடம் பெறாமை கவனிக்கத்தக்கது. ஆக பாட்டியல்கள் கூறும் தாண்டக இலக்கணம் இரு வகையில் அமைகின்றது.1. பன்னிருபாட்டியல் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் கூறியது ஒரு வகை2.முத்துவீரியம், யாப்பருங்கலவிருத்தியைத் தழுவிப் புதிய மரபில் இலக்கியம் காண்பதற்கு இலக்கணம் கூறியது மற்றொரு வகை.மற்றொரு வகை.இங்ங்னம் தாண்டகம் பற்றிய கருத்துகள் தமிழ் இலக்கண ஆசிரியர்களிடம் மாறுபட்டும் குழம்பியும் காணப்படுவதால்அதனை நாம் இன்று தெளிவாக உணர முடிவதில்லை. ஆழ்வார் பாசுரங்களுக்கு யாப்பு வகை குறித்த திவ்யபிரபந்தப்பதிப்பாசிரியர்களும் தாண்டகம் பற்றித் தெளிவான விளக்கம் தரவில்லை. “பகவானுடைய திவ்ய சேஷ்டிதங்களைத்தாண்டக ரூபத்தில் நிரூபிக்கிறபடியால் . . . ” இத்திருநாமம் பெற்றதாகக் கூறுவர் கோமடம் எஸ்.எஸ்.ஐயங்கார். இங்குஅவர் தாண்டக ரூபம் என்றாரே தவிர அதன் ரூபம் (வடிவம்) பற்றியோ இலக்கணம் பற்றியோ எதுவும் கூறாததுகவனிக்கத்தக்கது.
-
திருமங்கையாழ்வாரின் தாண்டகங்களைப் பொறுத்தவரை மற்றொரு தடையும் உண்டு. எண்சீரும் அறுசீருமாகப் பாடியபாசுரப்பகுதிகள் திவ்யபிரபந்தத்தில் உள்ளன.விளம்-மா-தேமா, விளம்-மா-தேமா –என்பது குறுந்தாண்டக யாப்புகாய்-காய்-மா-தேமா, காய்-காய்-மா-தேமா–என்பது நெடுந்தாண்டக யாப்பு.இதே வாய்பாடில் இதே ஆழ்வார் எழுதிய பாடல்கள் அனைத்தும் தாண்டகம் எனப்பெயர் பெறாமை கவனிக்கத்தக்கது.தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய திருமாலை முழுவதும் குறுந்தாண்டகம் போல அறுசீர் ஆசிரிய விருத்த யாப்பிலானதே.
-
மேலும் திருமாலை, குறுந்தாண்டகம் ஆகிய இவ்விரு நூல்களிலும் முறையே 17, 13 ஆம் பாசுரங்களின்ஈற்றடிகள் மிகுதியும் ஒத்திருத்தலும் இங்குச் சுட்டத்தக்கது.விரும்பிநின் றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன் றில்லைஇரும்புபோல் வலிய நெஞ்சம் இறையிறை உருகும் வண்ணம்சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்டகரும்பினைக் கண்டு கொண்டென் கண்ணிணை களிக்கு மாறே (திருமாலை-17)இரும்பனன் றுண்ட நீரும் போதரும் கொள்க என்றன்அரும்பிணி பாவ மெல்லாம் அகன்றன என்னை விட்டுசுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்டகரும்பினைக் கண்டு கொண்டென் கண்ணிணை களிக்கு மாறே (திருக்குறுந்தாண்டகம்-13)3,4 ஆம் அடிகள் முற்றிலும் ஒத்திருந்தாலும் திருமாலை ஏன் தாண்டகம் என்ற பெயர் பெறவில்லை?சைவத்திலும் இந்நிலையுண்டு. அப்பர் தாண்டகத்துக்குக் கையாண்ட அதே எண்சீர் யாப்பில் திருஞானசம்பந்தர் 11 பதிகங்களும், சுந்தரர் 27 பதிகங்களும், மாணிக்கவாசகர் 6 பதிகங்களும் பாடியுள்ளனர். ஒன்பதாம் திருமுறையில் 11 பாடல்களும், பதினொராந்திருமுறையில் 36 பாடல்களும் அதே யாப்பில் அமைந்துள்ளன. எனினும் அவை தாண்டகம்எனக் குறிக்கப் பெறாமையை அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.இந்நிலையில் யாப்பருங்கல விருத்தியுரை காரர் தரும் ஒரு குறிப்பு, சிறிது வெளிச்சம் காட்டுகிறது. தாண்டகம் என்பதுதொல்காப்பியரால் கொச்சக ஒருபோகு எனவும், காக்கைபாடினியார் போன்ற ஒருசார் ஆசிரியரால் பாவினமாகவும்கொள்ளப்பட்டது என்பது அவர் தரும் குறிப்பாகும். அதன்படி தாண்டகத்துக்குப் பயன்பட்ட அறுசீர் யாப்பு, ஒருசார்ஆசிரியரால்ஆசிரியப்பாவின் இனமான விருத்தமாகக் கொள்ளப்பட்டது என்பது உறுதி ஆகின்றது. அவ்வகை விருத்தங்கள்வடமொழித் தாண்டகத்தின் தனித்தன்மைகளுள் ஏதேனும் ஒன்றைப் பெற்றுத் தமிழில் தாண்டகம் எனப்பெயர்பெற்றிருக்கலாம் எனக் கருத இடமுள்ளது. அளவொத்த நான்கு அடிகளைக் கொண்ட வடமொழித் தாண்டக யாப்பு, ஓர்அடிக்கு 27 முதல் 999 வரை நீண்டு சென்று முடியும் என்பர். அவ்வகை நீட்சி காரணமாக எச்சங்களைத் தொடர்ந்துசெல்லும் போக்குத் தண்டக விருத்தங்களில் அமைந்தது. குறிப்பிடத்தக்க இத்தனித் தன்மையைத் தமிழ்த் தாண்டகப் பாக்களிலும் காண முடிகின்றது.தேசிகரின் கருட தண்டகத்தையும், காளிதாசனின் சியாமளா தண்டகத்தையும்எழுத்தெண்ணிக்கை பார்த்ததில்,கருட தண்டகத்தில் ஒவ்வொரு பாடலும் 108 எழுத்துகள் இருக்கின்றன. அடிமுடி தெரியாதலால், ஒரு அடிக்கு சராசரி 27 எழுத்துக்கள் என்று கொள்ளலாம்.சியாமளா தண்டகத்தில் என்னிடம் உள்ள பதிப்பில் பாடல்கள் தொடர்ச்சியாக உரைநடைபோல் தட்டச்சுசெய்யப்பட்டிருப்பதால் எழுத்தெண்ணிக்கையை அறுதியிட்டுக் கூற முடியவில்லை. ஒரு மாதிரியாக, பகுத்துப் பார்த்ததில்ஒரு சீரான எழுத்தெண்ணிக்கை வரவில்லை என்றுதான் தோன்றுகிறது. வேறு பதிப்புகளில் பாடல் ஒவ்வொன்றும்சரியாகப் பகுத்துக் கொடுக்கப் பட்டிருந்தால் அன்பர்கள் எழுத்தெண்ணிக்கையைச் சரி பார்க்கவும்.எச்சங்களாகத் தொடர்ந்து செல்லும் போக்கு நெடுந்தாண்டகத்தில் எவ்வாறு அமைந்துள்ளது என்று பார்ப்போம்.மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய். . விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப். . பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணா தெண்ணும்பொன்னுருவாய் மணியுருவில் பூத மைந்தாய். . புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதிதன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை. . தளிர்புரையும் திருவடியென் தலைமே லவே(ஈற்றுச்சீர் தேமாவாக இருக்க லாவே என்றிருக்கலாம். ஆயின் மூலத்தில் இப்படித்தான் உள்ளது)என்னும் திருநெடுந்தாண்டகத்தில் முதற்பாகத்தைக் கவனித்தால் பாசுர அடிகளின் இடையிலோ முடிவிலோ முற்றின்றி,வினையெச்சமாய்த் தொடர்ந்து இறுதியிலேயே முற்றுப் பெறுதலைக் காணலாம். பெரும்பாலான பாசுரங்கள் இவ்வகைப்போக்கிலேயே3 அமைந்து உள்ளமை கவனிக்கத்தக்கது.
-
திருநெடுந்தாண்டகத்தில் முதல் பத்துப் பாசுரங்கள் தாமான தன்மையிலும்,
-
அடுத்த பத்துப் பாசுரங்கள் தாய் கூற்றிலும்,
-
இறுதிப்பத்துப் பாசுரங்கள் மகள் கூற்றிலும் அமைந்தன என்பர்.
-
இங்ங்னம் கூற்றுநிலை மாறுபட்டபோதும் மேற்குறித்த அமைப்பு மாறுபடவில்லை.இப்போது தாய் கூற்றாக அமைந்த ஒரு பாடலை ஆராய்வோம்.கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்னும். . காமருபூங் கச்சியூ ரகத்தாய் என்னும்வில்லிறுத்து மெல்லியள்தோள் தோய்ந்தாய் என்னும். . வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே என்னும்மல்லடர்த்து மல்லரையன் றட்டாய் என்னும். . மாகீண்ட கைத்தலத்தென் மைந்தா என்னும்சொல்லெடுத்துத் தன்கிளியைச் சொல்லே என்று. . துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின் றாளேஎன்னும் பாசுரத்தில் மகள் கூற்று தனித் தனியாக முற்றுப் பெறுவதுபோல் தோன்றினும் தாய் அதனை மீண்டும் எடுத்துச் சொல்லும் போக்கில்,கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்னும். . காமருபூங் கச்சியூ ரகத்தாய் என்னும்இடையறாத் தொடர்ச்சியுடன் கூற்று அமைதல் காணலாம்.
-
இப்போது மகள் கூற்றாக அமைந்த ஒரு பாடலின் பகுதியைக் காண்போம்.மைவண்ண நறுங்குஞ்சிக் குழல்பின் தாழ. . மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாடஎய்வண்ண வெஞ்சிலையே துணையா யிங்கே. . இருவராய் வந்தாரென் முன்னே நின்றார்என்னும் பாசுரப்பகுதி மகள் கூற்றாக அமைவது. இதன்கண், இருவராய் வந்தார்என் முன்னே நின்றார் என்பதில் வந்தார் என்னும் முற்று வந்து என எச்சப் பொருளே தந்து தொடர்தலும் நோக்குதற்குரியது.வந்தார் என்பது வந்தவர் என்னும் பொருள்படும். மேற்படி சொன்னவண்ணம் வந்தவராகிய அவர் என்றும் கொள்ளலாம்]
திருநாவுக்கரசர் பாடிய திருத்தாண்டகங்களுக்குள் கிடைக்கப்பெற்றனவற்றுள் முதலாகப் பாடப்பெற்ற பதிகம்
‘மறுமாற்றத் திருத்தாண்டகம்‘ (6.98).
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
.. நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
.. இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
.. சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
.. கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.–6.98.1
வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
.. வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவுந் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
.. எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
.. அனலாடி ஆன்அஞ்சும் ஆட்டு கந்த
செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்
.. செவ்வான வண்ணரென் சிந்தை யாரே.-6.95.2
சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
.. தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
.. மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
.. ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
.. அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே.–6.95.10
அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும் மடி
.. அழகெழுத லாகா அருட்சே வடி
சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்த வடி
.. சோமனையுங் காலனையுங் காய்ந்த வடி
பெரும்பித்தர் கூடிப் பிதற்றும் மடி
.. பிழைத்தார் பிழைப்பறிய வல்ல வடி
திருந்துநீர்த் தென்கெடில நாடன் னடி
.. திருவீரட் டானத்தெஞ் செல்வன் னடி.–6.6.4-
—-
தருமை ஆதீனம் வெளியிட்ட ஆறாம் திருமுறை உரைநூலின் முன்னுரைகளில் காண்பது:
“…..நாவரசர் அருளிய தேவாரம் நம்மை இறைவன் திருவருளிலே அழுந்தச் செய்யும் மந்திரங்கள்.
தேவாரத் திருமுறைகள் பண்ணாங்கம், சுத்தாங்கம் என இரண்டு பிரிவுகள் உடையன.
அவற்றுள் பண்ணாங்கம் தாள அமைப்புடன் கூடிய பதிகங்களாகும். திருநாவுக்கரசர் தேவாரத்தில் திருவிருத்தம், திருத்தாண்டகம் ஆகியன சுத்தாங்கமாகப் பாடுவதற்கு உரியன. …. …
திருவிருத்தம் நான்காம் திருமுறையில் அமைந்துள்ளது.
திருத்தாண்டகம் ஆறாம் திருமுறையாக விளங்குகிறது.
பன்னிரு திருமுறைகளில் தாண்டகம் என்ற யாப்பு வகையில் திருமுறை அருளியவர் திருநாவுக்கரசு சுவாமிகளே ஆவார்.
அதனால் இவர் தாண்டக வேந்தர், தாண்டகச் சதுரர் எனப் போற்றப்படுகிறார்.
இறைவன் புகழை விளங்க விரித்துரைக்கும் முறையில் தாண்டக யாப்பு வகை இவருக்குப் பெரிதும் துணை செய்துள்ளது. …..”
பெரிய புராணத்தில்:
‘நாமார்க்குங் குடியல்லோ‘ மென்றெடுத்து நான்மறையின்
கோமானை நதியினுடன் குளிர்மதிவாழ் சடையானைத்
தோமாலைச் செந்தமிழின் செழுந்திருத்தாண் டகம்பாடி
“யாமாறு நீரழைக்கு மடைவிலமென் றருள்செய்தார்.
தேமாலைச் செந்தமிழின் செழுந் திருத்தாண்டகம் – திருத்தாண்டகப் பதிகத்தைப் பற்றிக் கூறநேர்ந்த இடம் இதுவே முதலாதலின் அதன் தன்மையை இவ்வாறு விரித்தனர்.
தேம் – சொல்லினிமையும் ஓசையினிமையும்,
மாலை – ஒரு பாட்டினுள்ளே பல பெயரும் தொடர்ந்துவந்து ஓரிடத்து முடிபுறும் தன்மையும்,
செந்தமிழ் – நிரம்பிய தமிழினிமையும்,
இன் – பொருளினிமையும்,
செழுமை – பயனினிமையும்,
திரு – இறைவனது தன்மை பற்றிய நிலையும்,
தாண்டகம் – யாப்பும் பண் வகையும் உணர்த்தின.
இங்குக் கூறிய அடைமொழிகள் தாண்டகங்கட்குப் பொதுவாகவும், இப்பதிகத்துக்குச் சிறப்பாகவும் உரியன.
தேவாரத்தினைத் தாண்டகச் செய்யுளால் திருநாவுக்கரசர் ஒருவரே யருளியிருத்தலால் அவர்க்குத் தாண்டக வேந்தர் என்று பெயராயிற்று.
—
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –