போரார் நெடு வேலோன் பொன் பெயரோன் ஆகத்தை
கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு குடல் மாலை
சீரார் திரு மார்வின் மேற்கட்டிசெங்குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா எழுந்தான் அரி யுருவாய் அன்றியும்
பேர் வாமனாகிய காலத்து மூவடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டிச் சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
காரார் வரை நட்டு நாகம் கயிறாக
பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்
தாரார்ந்த மார்வன் தடமால் வரை போலும்
போரானை பொய்கை வாய் கோட்பாட்டு நின்று
நீரார் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடும் கையால்
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு
தீராத சீற்றத்தாலே சென்று இரண்டு கூறாக
ஈராஅதனை இடர் கடிந்தான் எம்பெருமான்
பேர் ஆயிரம் உடையான் பேய்ப்பெண்டிர்நும் மகளை
தீரா நோய் செய்தான் என வுரைத்தாள்சிக்கென மற்று
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போரார் வேல் கண்ணீர் அவனாகில் பூம் துழாய் தாராது ஒழியுமே மற்று
ஆரானும் அல்லனே என்றுஒழிந்தாள் நான் அவனை
காரார் திருமேனி கண்டதுவே காரணமா
பேராபிதற்றா திரி தருவான் பின்னையும்
ஈராப் புகுதலும் இவ்வுடலைதண் வாடை
சோரா மறுக்கும் வகை யறியேன்சூழ் குழலார்
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்குவாளா விருந்து ஒழிந்தேன்
வாராய் மட நெஞ்சே வந்து மணி வண்ணன்
சீரார் திருத் துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் -தரும் -என்று இரண்டத்தில் ஒன்ற்றதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்
ஆராயுமேலும் பணி கேட்டுஅது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
காரார் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது வல்வினையேன்
ஊரார் உகப்பதே யாயினேன்
ஊரார் வார்த்தை மற்று எனக்கு இங்கு
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் யுருகும் என்னாவிநெடும் கண்கள்
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன்
பேராயினவே பிதற்றுவன் பின்னையும்
காரார் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார் அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வாரார் வனமுலை வாசவத்தை என்று
ஆரானும் சொல்லப் படுவாள் அவளும்பெரும் தெருவே
தாரார் தடம் தோள் தளைக் காலன் பின் போனாள்
ஊரார் இகழ்ந்திடப் பட்டாளே மற்று எனக்கு இங்கு
ஆரானும் கற்பிப்பார் நாயகரே நான் அவனை
————————————————————————–
போரார் நெடு வேலோன் இத்யாதி
பிராட்டிக்காக அம்பு ஏற்றபடி சொல்லிற்று கீழ் –
அப்படி க்ரமம் செய்ய ஒண்ணாத படி ஆஸ்ரிதர் உடைய பிரதிஜ்ஞா சம காலத்திலே தோற்ற வேண்டி –
அதுக்கு உதவத் தோற்றின இரண்டு வடிவை ஒன்றாகத் தைத்துக் கொண்டு புறப்பட்டு
அவன் விரோதியைப் போக்கின படி சொல்லுகிறது மேல் –
போரார் –
எதிரிகள் சரீரங்களிலே வ்யாபரித்துத் திரியும் அத்தனை போக்கி
ஓர் இடத்திலே இருக்க அவசரம் இல்லை –
நிணமும் சதையும் குடலும் சூழ்ந்து
கழுகும் பருந்தும் பேயும் சேவிக்கத் திரியும் அத்தனை போலே காணும்
நெடு வேல் –
அவஷ்டப்ய மஹத் தனு -என்னுமா போலே
இவனால் அடக்கி யாள ஒண்ணாதாய் இருந்த படி –
வேலோன் –
பட்டுக் கிடக்கும் போதும் பிடித்த வேல் விடாதே
இதுவே தனக்கு நிரூபகமாய் இருக்கும் -என்கை –
பொன் பெயரோன்
ஹிரண்யன் என்று இ றே பெயர்
ஆகத்தை
திரு வுகிருக்கு இரை போரும்படி
காட்டில் பன்றிகளை ஊட்டி வளர்போபாரைப் போலே
ப்ரஹ்மாதிகள் வரங்களாலே பூண் கட்டின மார்வு இ றே –
கூரார்ந்த வள்ளுகிரால் –
கூர்மை மிக்குச் செறிந்த உகிர் –
பிராட்டிமரோடே பரிமாறும் போது அவர்களும் கூசும்படியான சௌகுமார்யத்தையும்
சத்ருக்களோடே பரிமாறும் போது அவர்களை அழியச் செய்ய வேண்டும் திண்மையை யுடையனாய் இருக்குமா போலே
இவற்றுக்கும் இரண்டு புடை உண்டு போலே காணும்
கீண்டு –
நரசிம்ஹத்தின் தோற்றரவிலே சீற்றத்தைக் கண்டு பையல் உடம்பு வெதும்பி
பொசுக்கின பன்றி போலே பதம் செய்ய அநாயாசேன கிழித்த படி –
குடல் மாலை சீரார் திரு மார்வின் மேற்கட்டி –
சீற்றத்தின் மிகுதியாலே குடலைப் பறித்துத் திரு மார்பிலே கட்டிக் கொண்டான் ஆயிற்று
அதாவது -விஜய ஸ்ரீ விளங்குகிற திரு மார்விலே அதுக்கு மாலை இட்ட படி –
பிராட்டி இருக்கிற திரு மார்விலே காணும் காட்டிற்று
அநாஸ்ரித விஷயத்தில் இத்தனை சீற்றம் இவனுக்கு இல்லை யாகில் அவள் அணையாள் இ றே –
செங்குருதி சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி-
ரக்த வெள்ளம் கொழிக்கும் படி கிழித்து
அவனைப் பிராட்டிமாரோடே கலக்கைக்கு அலங்கரித்த திருத் தோளின் மேலே
சீற்றத்தின் மிகுதியாலே எடுத்து அறைந்து கொண்டான் ஆயிற்று
செங்குருதி சோராக் கிடந்தானை –கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு குடல்மாலை சீரார் திரு மார்வின் மேல்கட்டி –குங்குமத் தோள் கொட்டி ஆரா வெழுந்தான் – என்று அந்வயம் –
ஆர்ப்பதும் செய்தான் -கிளருவதும் செய்தான் –
ஆரா எழுந்தான் அரி யுருவாய் –
அவாக்ய அநாதர-என்று எதிர்த் தலை இல்லாமையாலே வார்த்தை சொல்லான் என்று
பிரசித்தனாய் இருக்கிறவன்
ஆஸ்ரித விரோதியைப் போக்கப் பெற்றோம் -என்னும் ஹர்ஷத்தாலே ஆர்த்துக் கொண்டான் –
அன்றியும் -இத்யாதி –
இப்படி அழியச் செய்ய வேண்டும் பராதி கூல்யமே அன்றியே –
ஆனுகூல்ய லவம் உடையவனாய் இருக்கும் இ றே மஹா பலி
அதாவது -ஔதார்ய குணம் எனபது ஓன்று உடையவன் ஆகையால் அவனைச் சடக்கென அழியச் செய்ய ஒண்ணாமை யாலும்
தேவர்களுக்காக அவனை அழியச் செய்ய வேண்டுகையாலும் –
அவன் கொடுக்க உகப்பன் -என்னுமத்தை நினைத்துத்
தன்னை இரபபாளன் ஆக்கி அவன் பக்கலிலே சென்று நீர் ஏற்று பூமியை வாங்கி இந்த்ரனுக்குக் கொடுத்தபடி சொல்லுகிறது –
அன்றியும் பேர் வாமனாகிய காலத்து –
நாட்டில் வாமனர்கள் எல்லாம் வளர்ந்து அருளின இடம் என்னலாம் படி
சிறுத்து இருக்கும் என்னுதல் –
வடிவே யன்றியே பெரும் வாமனனாகிய காலம் –
மூவடி மண் தாராய் –
மஹா பலி எனக்கு மூவடி மண் தர வேணும் -என்றான்
அவனும் -தருகிறோம் -என்றான் –
அங்ஙகனாக ஒண்ணாது தாராய் -என்றான் –
வளைப்பாரைப் போலே
எனக்கு என்று
ஒன்றையும் எனக்கு எண்ணாதவன் காணும் -எனக்கு -என்றான் –பரார்த்தம் ஆகையாலே
வேண்டிச் சலத்தினால் நீர் ஏற்று உலகுஎல்லாம் நின்றளந்தான் மாவலியை –
வேண்டிக் கையிலே நீர் விழுந்தவாறே சிறுகாலைக் காட்டிப்
பெரிய காலாலே லோகம் அடைய அளந்து கொண்டான் –
மாவலியை மூவடி மண் தாராய் எனக்கென்று
வேண்டிச் சலத்தினால் நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் -என்று அந்வயம்
ஆராத போரில் இத்யாதி –
தேவர்களும் அசுரர்க்களுமாய்க் கடலைக் கடையப் புக்கு
மாட்டாதே –
தான் கடலைக் கடிந்தபடி சொல்லுகிறது –
ஆராத போரில்
இவர்களுக்கு ஆராதே இருக்கும் -என்னுதல்
தனக்கு யாராதே இருக்கும் என்னுதல் –
அசுரர்களும் தானுமாய்
தேவர்களும் அசுரர்க்களுமாய் என்ன வேண்டி இருக்க
எதிர்த் தலையான அசுரர்களைச் சொல்லி
பின்னைத் தன்னைச் சொல்லுவான் என்னில் –
ஆனுகூல்ய இலவம் உடையார் -தான் -என்னும் சொல்லுக்கு உள்ளே அடங்குகையாலே தன்னைச் சொல்லிற்று —
காரார் வரை நட்டு –
மந்த்ரத்தில் படிந்த மேகம் அலசாதபடி கொடு வந்து நாட்டின நொய்ப்பம் இருந்தபடி –
நாகம் கயிறாக –
சேதனன் இ றே –
மலையிலே சுற்றிக் கடையா நின்றால் தனக்கு அது வ்யசநமாய் இராதே –
இவன் கர ஸ்பர்சத்தால் வந்த சுகத்துக்கு அந்த வ்யாபாரத்தாலே போக்கு விட்டிலன் ஆகில்
அவனால் இது உண்டு அறுக்க ஒண்ணாத படி இருக்கும் இ றே –
பேராமல் தாங்கிக் கடைந்தான் –
கீழே உடையாமே மேல் கொந்தளியாமே பக்கத்தில் சாயாமே கடைந்தபடி –
திருத் துழாய் தாரார்ந்த மார்வன் –
கடலைக் கடைகிற போது தோளும் தோள் மாலையுமாய் நின்று கடைந்த படி –
தடமால் வரை -இத்யாதி-
பிரயோஜநாந்த பரர் கார்யம் செய்த படி சொல்லிற்று கீழ் –
அநந்ய பிரயோஜனான ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் முதலையின் கையிலே அகப்பட
அவன் அகப்பட்ட மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து விழுந்து
அவன் விரோதியைப் போக்கி அவன் அபிமதம் செய்து கொடுத்தபடி சொல்லுகிறது மேல் –
தடமால் வரை போலும்
தடம் -என்றும் மால் என்றும் சொல்லுகையாலே
பருத்து உயர்ந்த மலை போல் இருக்கிறவன்
இப்பெருமை சொல்லுகிறது இங்கு என் என்னில்
பெரியது நோவு பட்டால் ஆற்ற மாட்டாது என்கைக்காக –
போரானை –
யுத்த உன்முகனாய் திரிகிறான் அன்று இ றே
செருக்காலே மலைகளோடு பொருது திரிகிறபடி –
பொய்கை வாய் –
வெளி நிலம் ஆகில் எதிரிகளைத் துணிக்கும் இ றே –
தன்னிலம் அல்லாத நீர் நிலத்திலே –
கோட்பாட்டு –
சத்ருவான முதலையின் கையிலே அகப்பட்டு
நின்று
அவன் நீருக்கு இழுக்க
இவன் கரைக்கு இழுக்க
சில நாள் எல்லாம் சென்று முதலையின் வ்யாபாரமேயாய்
தன் வியாபாரம் அற்று நின்றபடி –
நீரார் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடும் கையால் –
செவ்வி மாறாத தாமரைப் பூவைப் பிடித்த கையத்தனையும் ஒழிய
நீரிலே அழுந்தினவன் ஆயிற்று
நாராயணா ஒ
சர்வ ஸ்வாமி யானவனே -என்றபடி
மணி வண்ணா –
விடாய்த்தார்க்குத் தண்ணீர் வார்க்குமவன் அன்றோ நீ -என்கை
நாகணையாய் –
உன்னுடம்பை ஆசைப்பட்டாருக்குக் கொடுக்குமவன் அல்லையோ நீ -என்றான்
வாராய்
என்னுடைய ஆர்த்தி தீரும்படி அழகிய வடிவைப் பாரித்துக் கொண்டு
இங்கனே எழுந்து அருள வேணும் –
என் ஆர் இடரை நீக்காய்
இப்போது இவன் ஆர் இடர் -என்கிறது –
துக்க நிவ்ருத்தியை பண்ணாய் -என்கிறான் அல்லன் –
இப்பூ செவ்வி மாறும் காட்டில் திருவடிகளிலே இடுவித்துக் கொள்ளை என்றபடி –
என
என்று இப்பாசுரத்தாலே இவன் சொல்ல
என வெகுண்டு
சர்வேஸ்வரன் இவ்வார்த்தை செவிப்பட்டவாறே கோபித்து அருளினான் –
தீராத சீற்றத்தாலே
முதலையின் கையிலே அகப்படக் கொடுத்து
அகப்பட்டவன் நோவு பட்டத்துக்குப் பின்பு
அவனை ரஷித்து என் செய்தோம் ஆனோம் –என்று இன்னும் தீராதே கிடக்கிறது இ றே -சீற்றத்தால் சென்று –
வகானத்தின் மேல் அன்று போலே காணும் சென்றது –
கோபத்தின் மேலே காணும்
கோபம் வழி காட்டச் சென்றான் இத்தனை –
தான் அறிந்து சென்றான் அன்று காணும் –
இரண்டு கூறாக ஈரா –
ஆனைக்கும் நோவு வாராமல்
முதலையை இரு பிளவாம்படி திரு ஆழியாலே பிளந்து அருளின படி –
அதனை இடர் கடிந்தான் –
அப்படி நோவு பட்டு இருக்கிற ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை
அம்முதலை பிடித்த ஸ்ரீ பாதத்தை தன் திருக் கைகளாலே ஒத்துவது –
திருப் பவளத்தாலே ஊதுவது –
திருப் பரிவட்டத் தலையாலே ஒத்துவது -ஆனான் –
எம்பெருமான் –
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு அன்றிக்கே
இவள் தான் பெற்றாளாம் படி தோற்ற
இக்கட்டுவிச்சி -என் நாயகனே -என்கிறாள் –
பேர் ஆயிரம் உடையான் –
இப்படி ஆஸ்ரித ரஷணத்துக்குகாகச் செய்த அபதானங்களுக்கு வாசகமான
திரு நாமங்கள் எண்ணிறந்தவற்றை உடையவன் –
ஆஸ்ரிதர் இவ்விஷயத்தில் இழிகைக்கு பல துறை யுண்டால் போலே
அவர்கள் அனுசந்திக்கைக்கும் பல திரு நாமங்களை உடையவன் –
பேய்ப்பெண்டிர் –
சர்வேஸ்வரன் அடியாக வந்தது இந்நோய் -என்றாலும்
தேவதாந்திர ஸ்பர்சம் உண்டு -என்று
அதிசங்கை பண்ணுகிற அறிவு கேடிகள் இ றே நீங்கள் –
நும் மகளை –
உங்கள் வயிற்றிலே பிறந்தவனை
உங்கள் வயிற்றில் பிறந்தவள் பர தேவதைக்கு நோவு படும் இத்தனை யல்லது அவர தேவதைகளுக்கு நோவு படுமோ –
தீரா நோய் செய்தான் என வுரைத்தாள்-
இந்நோய் தீரும்படி என் என்று விசாரிக்கிறவர்களுக்கு இ றே
தீரா நோய் செய்தான் -என்கிறது –
இவளுக்கு சர்வேஸ்வரன் அடியாக வந்த நோயாகிறது தீரில் செய்வது என் -என்று
அவர்கள் பயப்படுகிறார்களாக கருதி –தீரா நோய் -என்கிறாள் காணும் –
இப்போது தீரா நோய் -என்கிறது பக்தியை இ றே –
யாவதாத்மா பாவியான நோய் இ றே
ப்ராப்தி தசையிலும் அனுவர்த்திக்கும் இ றே-
என வுரைத்தாள் –
தென்றலும் சிறு துளியும் பட்டால் போலே இருக்கிறது காணும் தனக்கு இனிதான படி
உரைத்தாள்-
என்றும் இந்நோய் கொண்டால் ஆகாதோ இவள் புகுந்து இப்படி பரிஹாரம் சொல்லப் பெறில்
கட்டுவிச்சி அப்படிச் சொன்னாள் ஆகில் உங்கள் தாய்மார் செய்தது என் என்னச் சொல்லுகிறாள் மேல் –
சிக்கென மற்று ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
இந்நோவு பேராயிரம் உடையான் அடியாக வந்தது -என்று சொன்னாள் கட்டுவிச்சி
என்னைப் பெற்ற தாயாரும் -தேவதாந்திர ஸ்பர்சம் இல்லை இ றே -என்று பலகாலும் கேட்டு –
போரார் வேல் கண்ணீர் அவனாகில் பூம் துழாய் தாராது ஒழியுமே-
பெண் பிள்ளைகள் பதறுகிற பதற்றத்தை கண்டு
நோவுக்கு நிதானம் சர்வேஸ்வரன் ஆனபின்பு
நீங்கள் இப்படி பதற வேணுமோ
புவனி எல்லாம் நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே -என்னுமா போலே
அவனாகையும் நம்முடைய அபேஷிதம் செய்யான் என்கையும்
அக்னி நா சிஞ்சேத் -போலே அசங்கதம் அன்றோ –
ராமோ த்வீர் நாபி பாஷதே -இத்வத்
தன்னடிச்சி யல்லளே –
அபேஷிதம் ஆனவை தானாகச் செய்யாது ஒழிந்தாலும்
காலைக் கட்டியாகிலும் செய்வித்துக் கொள்ள ப்ராப்தி இல்லையோ -என்று
இப்படி தொளிமார்க்குச் சொல்லி
மற்று ஆரானும் அல்லனே என்று-
தேவதாந்த்ரமான நாய் தீண்டிற்று இல்லை இ றே -என்று தானே தெளிந்து நிர்ப்பரை யானாள் –
எம்பெருமானோடே சம்பந்தம் உடைய இவளுக்கு நான் கரைய வேணுமோ என்று
தளப்பம் அற்றாள்-என்று அவள் செய்தது என் -என்னில்
ஒழிந்தாள் –
ஒழிந்தாள்
நான்
என் பந்தாடலில் அவனைக் கையும் மடலுமாகக் காணக் கடவதாக உத்யோகித்துப் புறப்பட்டு
அவன் குடக் கூத்திலே தோற்ற -நான் –
அவனை
தன் வடிவு அழகைக் காட்டி என்னை அனன்யார்ஹை ஆக்கினவனை –
காரார் திருமேனி கண்டதுவே காரணமா –
அவனுடைய ஸ்ரமஹரமான திரு மேனியைக் கண்டதுவே ஹேதுவாக
ரிஷிகளையும் ஆழ்வார்களையும் போலே யாயிற்று திருத் தாயாரும் இவளும் –
அவன் ஸ்வரூப ரூப குணா ஜ்ஞானம் ஆயிற்று ரிஷிகளுக்கு
திவ்ய விக்ரஹ த்திலும் விக்ரஹ குணத்திலும் ஆயிற்று ஆழ்வார்களுக்கு –
குணா ஜ்ஞானத்தில் அகப்பட்டார்க்கு ஆற்றலாம் இ றே –
வடிவு அழகிலே அகப்பட்டார்க்கு ஆற்ற ஒண்ணாது இ றே
அப்படி குணா ஜ்ஞானம் உடையவள் ஆயிற்று திருத் தாயார் —
ஆகையாலே தரித்து இருந்தாள் –
அவ் வடிவு அழகிலே அகப்பட்டார்களுக்கு பெற்று அல்லது தரிக்க ஒண்ணாது இ றே –
பேரா
ஆண் பெண் ஆனபடி
பிதற்றா
பெண் ஆன தன்மையை தானும் இழந்த படி –
திரி தருவான் பின்னையும் -நசிக்க வி றே கண்டது –
அப்படிச் செய்யாதே யாதநா சரீரம் போலே பின்னையும் திரிந்தேன் –
ஈராப் புகுதலும்
புகுந்து ஈருகிறது இல்லை
ஈர்ந்து கொண்டு புகுரா நின்றது –
இவ்வுடலை –
பண்டே தொட்டார் மேலே தோஷமாம்படி விரஹ க்ருசமான உடலை என்னுதல் –
பிரிவுக்குச் சிளையாத உடம்பு என்னுதல் –
தண் வாடை
நஞ்சூட்டின ஆயுதம் போலே குளிர்த்தியை யுடைத்தான வாடை
சோரா மறுக்கும்
சோரவும் பண்ணா நின்றது
மறுக்கவும் பண்ணா நின்றது
வகை யறியேன் –
திரள சோரப் பண்ணா நின்றது என்று சொல்லும் இத்தனை ஒழிய செய்கிற வகைகள் பேச்சுக்கு நிலம் அல்ல –
சூழ் குழலார் –
வாடை உடம்பிலே பட்டாலும்
மயிர் முடியும் அழகும் கலையாதே இருக்குமவர்கள்
ஆரானும்
என் செயல் பொல்லாது என்று இருக்கக் கடவார் இல்லை –
எங்கேனும் சிலவர் -என்கை –
அவ்யுத் பன்னருமாய் அவிப தேச்யருமாய் இருப்பார் சிலர் என்கை
ஏசுவர் என்னும் அதன் பழியை
அவர்கள் அலர் தூற்ற -அத்தால் வரும் பழியை
இவள் ஆற்றாமைக்கு அவன் உதவின படி பொல்லாது -என்னுதல் –
அவன் பிரிந்தால் இவள் ஆறி இராதே இங்கனே படுகிறது என் என்னுதல் -செய்வார்கள் இ றே –
வாராமல் காப்பதற்கு –
அவன் ஸ்வரூபத்துக்கும்\நம் ஸ்வரூபத்துக்கும் நிறக்கேடு வாராமைக்கு
வாளா விருந்து ஒழிந்தேன் –
குனியக் குறுணி பற்றுகிற காலத்திலே இரண்டு மருங்கும் மனிசர் காண
மடலைக் கொண்டு புறப்படப் பெறாதே அருமந்த காலத்தைப் பாழே போக்கினேன்-
வாராய்
எழுந்திராய்
மட நெஞ்சே
இப்போது பவ்யமான நெஞ்சே -என்கிறது அன்று
அறிவு மாண்டு கிடக்கிற நெஞ்சே -என்றபடி –
அவனை நோக்கி எல்லாம் உண்டாயிற்றே -எழுந்திராய்
வந்து
சென்று என்றபடி
வரவு செலவைக் காட்டும் இ றே –
அவன் பக்கலிலே சென்று
மணி வண்ணன் –
தன்னைப் பிரிந்தார் மடல் எடுக்கும்படி பண்ண வல்ல வடிவு படைத்தவனே
சீரார் திருத் துழாய் மாலை நமக்கு அருளி –
அநந்ய பிரயோஜனர் இட்ட மாலை –
மிக்க சீர்த் தொண்டர் –
பிரயோஜனாந்த பரர் இட்டதாகில் அவர்கள் நெஞ்சில் அபி சந்தியால் சுருள் சுறுள் நாறும் என்கை –
நமக்கு அருளி –
பிரணயித்வம் போயிற்றே நம் ஆற்றாமைக்கு உதவாத போதே
இனி கிருபை பண்ணில் உண்டு இத்தனை இ றே –
தாரான் -தரும் -என்று இரண்டத்தில் ஒன்ற்றதனை –
தரிலுமாம் -தாராது ஒழியிலுமாம் –
இரண்டில் ஓன்று அமையும் நமக்கு –
அதாவது
தந்தான் ஆகில் அத்தாலே தரிக்கிறோம்
இல்லையாகில் முடிந்து பிழைக்கிறோம்
ஆரானும் ஒண்ணாதார் கேளாமே சொன்னக்கால் –
அவன் குணத்தை அழிக்க இருப்பாரும் உண்டு
அவர்கள் கேளாமே செவியிலே அவனுக்குச் சொல்லு –
அவனை அழித்து இவள் மடல் மடல் எடுத்துப் புக்க படி –அவனை யுகவாதார் கேளாமே -என்கிறாள் இ றே –
ஆராயுமேலும் பணி கேட்டு
உன்னைக் கண்ட போதே -அவள் என் பட்டாள்-அவள் உள்ளே
அவ்வாஸ்ரயம் இன்னும் நமக்குக் கிடைக்குமோ -என்று
திரு வுள்ளம் ஆனானே யாகிலும்
அது அன்று எனிலும் –
அங்கன் அன்றியே துஷ்யந்தனைப் போலே -நாம் அங்கனைக்கு ஒப்பாள் ஒருத்தியை அறியோமே -என்றான் ஆகிலும்
போராது ஒழியாதே-
அறிந்திலேன் என்றான் என்றால்
அவன் திரு வுள்ளத்துக்கு ஏற அறிவித்து மறு மாற்றம் கொண்டு போர வேணும் என்று நில்லாதே
போந்திடு நீ
என் ஆற்றாமை கண்டும் மற்றவனைப் போல் அன்றியே
நீ போந்திடு –
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
நான் தானே கிடீர் இந்நெஞ்சு தன்னை அங்கே தங்கப் பண்ணினேன் –
அதாவது என் என்னில் –
பெருங்குடி புதுக்குடி மகனை -பழைய பையலைப் போலே வரம்பிலும் வாய்க்காலிலும் சூடு பொகடாதே கொள் –
என்னுமதுவே யடியாக
அவ்விடங்கள் ஆகாதே களவுக்கு ஸ்தானம் என்று செய்யா நிற்கும் –
போராது ஒழியாதே போந்திடு நீ -என்றேன் நான்
அவ்விஷயத்தைக் கண்டால் போராது ஒழிய வாகாதே அடுப்பது என்று அது அங்கே நின்றது –
காரார் கடல் வண்ணன் –பின் போன நெஞ்சமும் வாராதே –என்னை மறந்தது –
என் ஆற்றாமை கண்டு கண்ணும் கண்ணநீருமாய்ப் போன நெஞ்சு
அவனைக் கண்டவாறே அவன் வடிவு அழகிலே துவக்குண்டு என்னை மறந்தது-கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும் வாராதே என்னை மறந்தது
ராமம் மே அனுகதா த்ருஷ்டி -இத்யாதி வத்
வல்வினையேன் –
என்நெஞ்சம் எனக்கு உதவாதபடியான
மகா பாபத்தைப் பண்ணினேன் –
ஊரார் உகப்பதே யாயினேன் –
தங்கள் அபிமத சித்தி சாதன அனுஷ்டானத்தாலே என்று இருக்குமவர்களைப் போலே
என் அபிமதத்துக்கும் நான் உத்சாஹிக்கும் படி யானேன் –
ஊரார் வார்த்தை –
அவனாலே பேறு என்று இருந்த இவள் கண்டாயே உண்டபடி
இவளைப் போலே உண்ணும் அத்தனை அவன் கை பார்த்து இருந்தவர்கள் -என்பார்களே -அவர்கள் –
இப்படி ஆற்றாமை மிக்கால் உசாவி தரிக்க வேண்டாவோ -என்னில்
மற்று எனக்கு இங்கு ஆராய்வார் இல்லை –
என்நெஞ்சம் எனக்கு உதவாது இருக்க
வேறு நமக்கு இங்கு உசாத் துணை உண்டோ –
மற்று இல்லை -என்கையாலே இன்னமும் அவனே வந்து ஆராயில் ஆராயும் அத்தனை -என்கை-
அவ்வருள் அல்லன அருளும் அல்ல -என்றும்
வையகத்துய்ப் பல்லார் அருளும் பழுது -என்றும் இறே இவர்கள் தாங்கள் அறுதி இட்டு இருப்பதும் –அழல்வாய் மெழுகு போல் நீராய் யுருகும் என்னாவி –
நெஞ்சு உதாவாது என்னலாமோ
நெஞ்சைப் பிடித்து தரித்து இருக்க வேண்டாவோ -என்னில்
அக்னி சகாசத்தில் மெழுகு போலே இற்றுப் போகா நின்றது -என்னுடைய ஆத்மவஸ்து –
நெடும் கண்கள் ஊரார் உறங்கிலும் தான் உறங்கா –
இப்படி ஆற்றாமை விளைந்ததாகில்
நித்ரையால் அத்தைப் போக்கினாலோ என்னில்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் -என்கிறபடியே
எல்லாரும் உறங்கிலும் என் கண்கள் உறங்குகிறது இல்லை
நெடும் கண்கள்
கண் பரப்பு எல்லாம் தலைச் சுமை யாயிற்று
அஸி தேஷணை இ றே –
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -என்று இவள் பிறந்த ஊரிலே உறங்கி அறிவாரும் இல்லை இ றே –
இப்படி இருக்க அவர்கள் உறங்கிலும் என் கண்கள் உறங்கா என்கிறார் –
உத்தமன்
உறக்கம் அறும்படி தன் தாழ்ச்சியைக் காட்டி அகப்படுத்தின மேன்மையை யுடையவன் –
பேராயினவே பிதற்றுவன் –
இப்படி அபிமத காலத்தில் உதவாது ஒழிந்தால்
அவனை நினையாது இருக்க இ றே அடுப்பது
அது மாட்டாதே
அவன் திரு நாமங்களை அடைவு கெடச் சொல்லா நிற்பன்
பின்னையும்
அதுக்கு மேலேயும் சில ஹிதம் சொல்ல
காரார் கடல் போலும் காமத்தர் ஆயினார் ஆரே பொல்லாமை அறிவார் –
இங்கன் சொல்லலாமோ –
பத்து மாசம் ஆறி இருந்திலளோ ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள்
அப்படி இரா விடில் போல்லாதாகாதோ -என்னில்
பேர் ஆழமான கடல் போலே ஆசை கரை புரண்டு போரா நிற்க –
பொல்லாங்கு சொல்லுவார்கள் -என்று ஆறி இருக்கப் போமோ –
ஆறி இருந்தவர்களுக்கு ஆசை அளவு பட்டதாம் இத்தனை இ றே –
ஸ்வரூப ஜ்ஞானத்தாலே ஆற்றலாமோ அவ்வடிவைக் காண வேணும் என்னும் ஆசை கரை புரண்டு இருப்பார்க்கு
ஸ்வரூப ஜ்ஞானத்தால் ஆற்றினார் உண்டாகில் அவர் ஆசை மட்டமாம் இத்தனை இ றே –
அது நிற்க
இது நீ துணிந்தமை இத்தனை -என்ன வேண்டா
இதுக்கு சிஷ்டா சாரமும் உண்டு -என்கை
பழையருமாய் விலஷணருமாய் இருப்பார் அநுஷ்டித்தார்கள் என்கை
ஆரானும் ஆதானும் அல்லள்
சைதன்யம் குறைந்தவளும் அல்லள்
அசித் கல்பையும் அல்லள் –
அவள் காணீர் –
அவளைக் கேளுங்கோள்
வாரார் வனமுலை
தன்னால் தரித்துத் தாங்க ஒண்ணாத முலை என்று பருவம் மிக்கு இருக்கிறபடி சொல்லுகிறது –
காந்தன் தாங்குதல்
அது பெறாத போது-வாராலே தரித்தல் -செய்யும் இத்தனை –
வாசவத்தை என்று ஆரானும் சொல்லப் படுவாள் –
பிரசித்தை அன்றோ –
விலஷணர் எல்லாம் கொண்டாடப் பட்டவள் அன்றோ –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் ஓலக்கத்திலும் குறைவற்ற
ஒருத்தி என்று கொண்டாடப் படுமவள் அன்றோ
அவளும் –
இத்துணிவு துணிந்தேன் நானே அல்லேன்
அவளும் துணிந்தாள் -என்கை –
தன் பேராயம் எல்லாம் ஒழிய
உங்களை இசைவிக்கைகாக இத்தனை வார்த்தை சொன்னேன் நான்
தோழிமார் உடைய பெரிய திரளைக் கடுக விட்டு நின்றாள் இத்தனை அன்றோ –
நெருப்பில் காலிட ஒண்ணாதால் போலே தோழிமார் திரளில் கால் பொருந்திற்றோ அவளுக்கு –
பெரும் தெருவே
தோழிமாரை விட்டு ஒரு மூலையிலே இருந்தாளோ
பெரும் தெருவே யன்றோ போனது -என்கை –
தாரார் தடம் தோள் தளைக் காலன் பின் போனாள்-
விலங்கு இட்டு இருக்கிற வத்சராயன் பின்னே போகிற இவள்
தோளும் தோள் மாலையும் கண்டு
அவனை ஆசைப் பட்டுப் போனாள் போலே அன்றோ போனது –
ஊரார் இகழ்ந்திடப் பட்டாளே –
அப்படி அவன் பின்னே போனவளை ஊரார் கொண்டாடின வித்தனை யல்லது பழி சொன்னார் உண்டோ –
மற்று எனக்கு இங்கு ஆரானும் கற்பிப்பார் நாயகரே
இத் துணிவுக்கு புறம்பான வார்த்தை சொல்லிக் கற்பிப்பார் எனக்கு நாயகர் அல்லர்
பயிலும் திரு வுடையார் யாவரேலும் அவர் கண்டீர் பயிலும் பிறப்பிடை தோறு எம்மை யாளும் பரமரே -என்று இருக்கும் நிலை தவிர்ந்தேன்
இத்துணிவுக்கு உடன்பட்டார் எனக்கு நாயகர்
க்ரம ப்ராப்தி பொறுக்க வேணும் -என்று இருப்பார் எனக்கு நாயகர் அல்லர் –
அன்னை என் செய்யில் என் ஊர் என் சொல்லில் என்
நான் –
இத் துணிவுக்குப் புறம்பானர் எல்லாரையும் விட்டு இருக்கிற நான்
அவனை
ஸ்வ வ்யதிரிக்தர் எல்லாரையும் விடுவித்தவனை-
நான் அவனை
பந்தடிக்க என்று புறப்பட்ட நான்
குடக் கூத்தாடப் புறப்பட்டவனை -என்றுமாம்
வழி பறிக்கப் புறப்பட்டு
வழி பறி யுண்டேன்-என்றபடி –
————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்