ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் தீ பக்தியாதி குணார்ணவம்
யதீந்த்ரப் பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முநிம்-
இந்த திவ்ய பிரபந்தத்தின் அமைப்பின் அழகு நிகர் அற்றது -அமுது ஒழுகுகின்ற தமிழனில் விளம்பிய சீர்மை சொல்லப் புகில் வாயமுதம் பரக்கும்
முதல் ஆழ்வார்களின் திருவவதார நாட்களை முதலிலே அருளிச் செய்து உடனே மாதங்களின் அடைவே அருளிச் செய்கிறார் –
அதாவது முதலில் ஐப்பசி மாதத்தில் திருவவதரித்த முதல் ஆழ்வார்களை அருளிச் செய்து அதற்கு அடுத்து கார்த்திகையில்
திருவவதரித்த திருமங்கை ஆழ்வார் -திருப் பாண் ஆழ்வார் – இரண்டு ஆழ்வார்களையும்
அதற்குப் பின் மார்கழி மாசம் திருவவதரித்த தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரையும்
பின்பு தை மாசம் திருவவதரித்த திரு மழிசை ஆழ்வாரையும் மாத க்ரமமாக அருளிச் செய்கிறார்
வாசி யறிந்த வதரியில் நாரணர் மனம் கொள்
தேசுடை எந்தை மணவாள மா முனி சீர் தழைப்பச்
சி சயிலேச தயா பாத்திரம் என்னும் சீர் மந்த்ரம்
தேசிகனாய்க் கண்டுரைத்தார் இவ்வையம் சீருறவே –ஸ்ரீ கோயில் அண்ணன் –
————————
ஸ்ரீ கோயில் கந்தானை அண்ணன் அருளிச் செய்த தனியன் –
முன்னம் திருவாய்மொழிப் பிள்ளை தாம் உபதேசித்த நேர்
தன்னின்படியை தணவாத சொல் மணவாள மா முனி
தன்னன்புடனே செய்த யுபதேச ரத்ன மாலை தன்னைத்
தன்நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே –
முற்காலத்தில் ஸ்வ ஆசார்யரான ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை உபதேசித்து அருளின கிராமத்தை அதிக்ரமியாமல் அனுவர்த்தித்தே
பேசுமவரான ஸ்ரீ மணவாள மா முனிகள் தம்முடைய பரம கிருபையினால் செய்து அருளின ஸ்ரீ உபதேச இரத்தின மாலை என்கிற
திவ்யப் பிரபந்தத்தை தங்கள் ஹ்ருதயத்திலே -கண்ட பாடம் செய்து தரிக்கின்றவருடைய திருவடிகளே -நமக்குத் தஞ்சம் –
—————————————————————
தமக்குக் கிடைத்த உபதேச வழியின் படியே வெண்பாவில் அமைத்துப் பேசுவதாகக் கூறுதல்
எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால்
வந்த வுபதேச மார்க்கத்தைச் -சிந்தை செய்து
பின்னவரும் கற்க வுபதேசமாய்ப் பேசுகின்றேன்
மன்னிய சீர் வெண்பாவில் வைத்து —–1-
எமக்கு ஆசிரியரான ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை என்கிற ஸ்ரீ திருமலை யாழ்வார் உடைய பரம கிருபையினால் கிடைத்த உபதேச வழியை
அனுசந்தித்து பின்பு உள்ளாறும் கற்குமாறு பொருத்தமான சீர்களை யுடைய வெண்பா வென்கிற யாப்பிலே அமைத்து
உள்ளத்திற்கும் உலகத்திற்கும் உபதேச ரூபமாகப் பேசுகின்றேன் —
மன்னிய சீர் -வெண்பாவுக்கு விசேஷணம் ஆக்காமல்
மன்னிய சீர்களைப் பேசுகின்றேன் -ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஆச்சார்யர்களின் திருக் குணங்களைப் பேசுகின்றேன் என்னவுமாம்
——————————————-
இப்பிரபந்தத்தை விவேகிகள் உகப்பதே போதும் என்கிறார்
கற்றார்கள் தாமுகப்பர் கல்வி தன்னுள் ஆசையுள்ளோர்
பெற்றோம் என யுகந்து பின்பு கற்றார் -மற்றோர்கள்
மாச்சர்யத்தால் இகழில் வந்தது என்னெஞ்சே யிகழ்கை
ஆச்சர்யமோ தானவர்க்கு ————–2-
மனமே கல்வி பயின்றவர்கள் இப் பிரபந்தத்தைப் பெற்று மகிழ்ந்திடுவர்கள் -கல்வியில் விருப்பம் உள்ளவர்கள் இது லபிக்கப் பெற்றோமே என்று
அகம் குழைந்து பிறகு இதை அப்யசிப்பர்கள் -கீழ்ச் சொன்ன இரண்டு வகுப்பிலும் சேராத மற்றையோர்கள் மாத்சர்யத்தினால் பகை பாராட்டி
இதனை இகழ்ந்தால் அதனால் நமக்கு உண்டாகும் சேதம் என்ன -ஒன்றும் இல்லை -அப்படிப்பட்டவர்களுக்கு நல்ல விஷயங்களை இகழ்வது
எனபது வியப்போ -அவர்கட்கு இது இயல்பே யன்றோ
ஆச்சரியமோ தானவர்க்கு -என்று பிரித்து ஆஸூர பிரக்ருதிகளுக்கு -என்றும் சொல்வர் -ஆயினும் இப்பொருள் விவஷிதம் அல்ல என்பர்
——————————————————————————-
ஆழ்வார் ஆச்சார்யர் ஸ்ரீ ஸூக்த்திகளுக்கு பல்லாண்டு –
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி -ஏழ்பாரும்
உய்ய வர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து – ———-3-
ஸ்ரீ பொய்கையாழ்வார் முதலான ஆழ்வார்கள் வாழ்ந்திடுக -அவர்கள் அருளிய திவ்ய பிரபந்தங்கள் வாழ்ந்திடுக
தாழ்வு ஒன்றும் இல்லாத மிகச் சிறந்த ஸ்ரீ எம்பெருமானார் முதலான ஆசார்யர்கள் வாழ்க
பூ மண்டலம் முழுவதும் உஜ்ஜீவிக்குமாறு அவ்வாசிரியர்கள் அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகளும் விலஷணமான வேதங்களோடு கூட வாழ்க
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து -என்றது வேதங்களும் வாழ வேணும் என்று அவற்றுக்குமாக மங்களா சாசனம் செய்த படி
ஆழ்வார் ஆச்சார்யர்களின் ஸ்ரீ ஸூக்திகளுக்கு எல்லாம் வேதமே மூலமானது பற்றி அவற்றுக்கும் மங்களா சாசனம் ப்ராப்தம்
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து அவர்கள் உரைத்தவர்கள் -என்று அந்வயித்து-
வேதங்களுக்குச் சேர ஆசாரியர்கள் அருளிச் செய்தவை -என்ற பொருளும் உரைப்பர் –
————————————————————-
ஆழ்வார்களின் திரு அவதார க்ரமம் அருளுகிறார்-
பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ் மழிசை
ஐயன் அருள் மாறன் சேரலர் கோன்–துய்ய பட்ட
நாதன் அன்பர் தாள் தூளி நற்பாணன் நற்கலியன்
ஈதிவர் தோற்றத்து அடைவாம் இங்கு ——-4-
பொய்கையாழ்வார் முதல்வர் -பூதத் தாழ்வார் இரண்டாமவர் -பேயாழ்வார் மூன்றாமவர் -கீர்த்தி வாய்ந்த திரு மலிசைப் பிரான் நான்காமவர் –
அருள் மிக்க நம்மாழ்வார் ஐந்தாமவர் -குலசேகரப் பெருமாள் ஆறாமவர் -பரி சுத்தரான பெரியாழ்வார் ஏழாமவர்-தொண்டர் அடிப்பொடி யாழ்வார் எட்டாமவர் –
பரம சாத்விகரான திருப் பாண் ஆழ்வார் ஒன்பதாமவர் -விலஷணரான திருமங்கை யாழ்வார் பத்தாமவர்
இந்த வரிசைக் க்ராமமானது இவ் உலகில் இவ் வாழ்வார்களின் அவதார க்ரமமாகும்
சிலர் ஆராய்ச்சி செய்வதாகப் புகுந்து மனம் போனவாறாக கல்பிப்பர் -அதனால் ஆஸ்திகர்களின் நெஞ்சு
கலங்காமைக்காகப் பொய்யில்லாத மணவாள மா முனிகள் இங்கனே அடைவு தன்னை அமைத்து அருளுகிறார்
————————————————————————–
ஆழ்வார்கள் திருஅவதரித்த மாத நஷத்ரங்களை அருளிச் செய்கிறார்
அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள்
இந்த வுலகில் இருள் நீங்க -வந்துதித்த
மாதங்கள் நாள்கள் தம்மை மண்ணுலகோர் தாம் அறிய
ஈதென்று சொல்லுவோம் யாம் —5-
அழகிய தமிழ்ப் பாஷையினால் திவ்யப் பிரபந்தங்களை ஆராய்ந்து அருளிச் செய்த மேலே கூறிய ஆழ்வார்கள்
இந்த இருள் தரும் மா ஞாலத்தில் அகவிருள் தொலைவதற்காக வந்து அவதரிக்கப் பெற்ற மாசங்களையும்
நஷத்ரங்களையும் தெரிந்து கொள்ளும் பொருட்டு இன்னவை என்று இனி நாம் அருளிச் செய்வோம்
இந்த முதல் ஆழ்வார்கள் இன்ன இடத்தில் அவதரித்தார்கள் எனபது காலப் பழமையால் நிச்சயிக்கப் போகாது -போன்ற வாக்கியப் பிறழ்வு விளைந்திட்டதே
இங்கனே நேராமைக்காகவே மா முனிகள் ஆழ்வார்கள் அவதரித்த மாச நஷத்ர திவ்ய தேசங்களை இப்பிரபந்தத்தில் இட்டு அருளுகிறார்
—————————————————————————————————-
முதல் ஆழ்வார்கள் திருவவதரித்த மாத நஷத்ரங்கள் அருளுகிறார் –
ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் -எப்புவியும்
பேசு புகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
தேசுடனே தோன்று பிறப்பால் —-6-
இவ்வாழ்வார்கள் மூவரும் விபவத்தில் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதவராய் -ஓடித் திரியும் யோகிகளாய் இருந்ததனாலும்
அர்ச்சையிலும் அப்படியே கூடியே வாழ்வதனாலும் இம் மூவருக்கும் சேர்த்தே பாசுரம் இட்டு அருளினார் ஆயிற்று
ஐப்பசி -ஐப்பிசி-பாட பேதங்கள் -தேசுடனே -அயோநிஜத்வ பிரயுக்தமான தேஜஸ் ஸூ -விவஷிதம் -சிறப்பால் ஒப்பிலவாம் -அந்வயம்
——————————————————————————————-
முதல் ஆழ்வார்கள் திருநாமம் காரணம் அருளிச் செய்கிறார்
மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நற்றமிழால் நூல் செய்து நாட்டை யுய்த்த -பெற்றிமையோர்
என்று முதல் ஆழ்வார்கள் என்னும் பெயர் இவர்க்கு
நின்றது உலகத்தே நிகழ்ந்து ———-7-
மற்றும் உள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்து உதித்த படியினால் முதல்வர் ஆயினர் –
நல் தமிழால் நூல் செய்ததனால் ஆழ்வார்கள் ஆயினர்
பெற்றிமை -பெருமை-பெற்றிமையோர் -பெரியோர் என்றபடி –
—————————————————————-
திருமங்கை ஆழ்வார் உடைய திருவவதார நாள் அருளிச் செய்கிறார் –
பேதை நெஞ்சே இன்றைப் பெருமை யறிந்திலையோ
ஏது பெருமை இன்றைக்கு என்று என்னில் -ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர் கோன் மா நிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள் காண் – ———8-
நாள் பாட்டாக சேவிக்க -சிஷ்யர்கள் பிரார்த்தித்த -இன்று -அமைத்து -நாள் பாடல்களில் அருளிச் செய்கிறார்
————————————————————————
மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கம் கூற திருவவதரித்த பெருமையை அருளிச் செய்கிறார்
மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன்
ஆறங்கம் கூற அவதரித்த – வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகை நாள் இன்று என்று காதலிப்பார்
வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து ——————–9-
வேத சதுஷ்ட்ய அங்க உப அங்கங்கள் பதினாலும் போலே இந்நாலுக்கும் இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும்
மற்றை எண்மர் நன் மாலைகளும் -ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூக்திகள்
சீஷா வியாகரணம் நிருக்தம் சந்தஸ் கல்பம் ஜ்யோதிஷம் -ஆறு வேத அங்கங்கள்
மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்திரங்கள் -ஆகிற எட்டு உப அங்கங்கள்
நம்மாழ்வார் திரு உள்ளத்தைப் பின் பற்றியே மற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்து உள்ளார்கள் என்றபடி
——————————————————————————————————
திருப்பாண் ஆழ்வார் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார்
கார்த்திகையில் ரோஹிணி நாள் காண்மின் இன்று காசினியீர்
வாய்த்த புகழ்ப் பாணர் வந்துதிப்பால் –ஆத்தியர்கள்
அன்புடனே தான் அமலனாதி பிரான் கற்றதற்பின்
நன்குடனே கொண்டாடும் நாள் – ——–10-
அறிய வேண்டும் அர்த்தங்களை எல்லாம் அழகாக அமைத்து பத்தே பாசுரமாகச் சுருங்க அருளிச் செய்தவர் இவ் வாழ்வார் யாதலால்
அமலனாதி பிரான் கற்றதன் பின் -என்று சிறப்பித்து எடுத்து அருளுகிறார்
நன்குடனே கொண்டாடும் நாள் -நலமாக கொண்டாடப் பெரும் நாளாகும் இது
——————————————————————–
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார்
மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மா நிலத்தீர்
என்னிதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் -துன்னு புகழ்
மா மறையோன் தொண்டர் அடிப் பொடி யாழ்வார் பிறப்பால்
நான்மறையோர் கொண்டாடும் நாள் ———-11-
துன்னு புகழ் -நிரம்பிய புகழை யுடையராய்
மா மறையோன் -பரம வைதிகரான
நாள் மறையோர் -விதிக்க உத்தமர்கள்
கொண்டாடும் நாள் -ஆதரிக்கும் நாளாகும் இது –
—————————————————————————
திருமழிசைப் பிரான் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார்
தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் –துய்ய மதி
பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாள் என்று
நற்றவர்கள் கொண்டாடும் நாள் ———12-
துய்ய மதி -பரிசுத்தமான மதியைப் பெற்ற
இவ் வாழ்வார் பேயாழ்வாரை அடி பணிந்து திருந்தினவர் ஆதலால் -துய்ய மதி பெற்ற -என்று அருளிச் செய்கிறார்
சப்த ரிஷிகள் மக நஷத்ரம் சுற்றி வர்த்திப்பதாகச் சோதிடர்கள் சொல்லுவார்கள் –
அதற்கு ஏற்ப நல் தவர்கள் கொண்டாடும் நாள் -என்று அருளிச் செய்கிறார்
தரணி என்னும் வடசொல் தாரணி என்று நீட்டல் பெற்றது
—————————————————————————————-
குலசேகர ஆழ்வார் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார்
மாசிப் புனர்பூசம் காண்மின் இன்று மண் உலகீர்
தேசித் திவசத்துக்கு ஏது என்னில் -பேசுகின்றேன்
கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால்
நல்லவர்கள் கொண்டாடும் நாள் ————13-
நல்லவர்கள் -சத்துக்கள்
தேசு -தேஜஸ்
திவசம் -நாள் –
———————————————————————————–
நம்மாழ்வார் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார்
ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தைப்
பாரோர் அறியப் பகர்கின்றேன் –சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
நாதன் அவதரித்த நாள் ———–14-
சீர்மை மிகுந்த வடமொழி வேதத்தை த்ராவிடமாகச் செய்து அருளின -யதார்த்த வாதியாய் அழகிய திரு நகருக்குத் தலைவரான
நம்மாழ்வார் திருவவதரித்த திரு நாள் அன்றோ
——————————————————————————-
நம்மாழ்வார் -அவர் திருவவதரித்த திருநாள் –அவர் திருவாக்கு -திருநகரி –
நான்குமே ஒப்பற்றவை என்று அருளிச் செய்கிறார்
உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள்
உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர் -உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ
ஒரு பார் தனில் ஒக்கும் ஊர் ————15-
———————————————————————————
பெரியாழ்வார் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார் –
இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே
இன்றைக்கு என்னேற்றம் எனில் உரைக்கேன் -நன்றி புனை
பல்லாண்டு பாடிய நம் பட்டர் பிரான் வந்துதித்த
நல்லானியில் சோதி நாள் ————-16-
நம் பட்டர் பிரான் என்று அபிமானித்து அருளிச் செய்கிறார்
நன்றி புனை பல்லாண்டு பாடிய நம் பட்டர் பிரான் என்று அன்வயம் –
———————————————————————————–
மா நிலத்தில் முன்னம் பெரியாழ்வார் வந்துதித்த
ஆனி தன்னில் சோதி என்றால் ஆதரிக்கும் -ஞானியர்க்கு
ஒப்பு ஒருவர் இல்லை இவ் வுலகு தனில் என்று நெஞ்சே
எப்பொழுதும் சிந்தித்து இரு ————17-
நம் பெரியாழ்வார் என்று மீண்டும் அபிமானித்து அருளுகிறார்
ஆனி திரு ஸ்வாதீ நஷத்ரம் என்ற போதே கொண்டாடும் ஞானிகளான பெரியோர்களுக்கு சமமானவர்கள் யாரும் இலர்
என்றதை சதா காலமும் அனுசந்திப்பாய் என்று அறிவிலியான நெஞ்சே என்று உபதேசித்து அருளுகிறார்
———————————————————————————-
பெரியாழ்வார் என்ற திரு நாமத்துக்கு காரணம் அருளிச் செய்கிறார் –
மங்களா சாசனத்தில் மற்று உள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்து அளவு தானன்றி -பொங்கும்
பரிவாலே வில்லி புத்தூர் பட்டர் பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர் ———-18
மூத்தவரும் இல்லாத போதும் -பெரிய பிரபந்தங்கள் அருளிச் செய்யாதவர் என்றாலும் –
நம் பட்டர் பிரானுக்கு நம் பெரியாழ்வார் என்கிற விருது – -மற்ற ஆழ்வார்கள் உடைய அபி நிவேசத்தில் காட்டிலும் –
எம்பெருமானுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடித்து -இவரது விஞ்சி எழுந்த பரிவு காரணமாக –
மங்களா சாசனம் செய்து அருளி யதாலேயே –
காதாசித்கமாக இல்லாமல் இதுவே யாத்ரையாக இருந்ததே இவருக்கு –
——————————————————————————–
திருப்பல்லாண்டின் முதன்மைக்கு காரணம் அருளிச் செய்கிறார் –
கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கு எல்லாம்
ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் -வேதத்துக்கு
ஓம் என்னுமது போலே உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய்த்
தான் மங்கலம் ஆதலால் —————-19-
கோதில வாம் -அசாரம் என்று கழிக்கத் தக்க அம்சங்கள் ஒன்றும் இன்றிக்கே முழுவதும் சாரமே யான -என்றபடி –
வேதங்களுக்கு பிரணவம் முதன்மையானது போலே திவ்ய பிரபந்தங்களுக்கு எல்லாம் திருப்பல்லாண்டு முதன்மை யாயிற்று –
பிரணவமானது சகல வேதார்த்த சார நிதியாகவும் மங்கலச் சொல்லாகவும் இருக்கும்
அது போலவே திருப் பல்லாண்டும் சகல திவ்ய பிரபந்த சாரார்த்த நிதியாகவும் மங்கள மயமாகவும் இருக்கும் –
சர்வாதிகாரமான இப் பிரபந்தத்தில் ஓம் என்று பிரயோகிததனால் பிரணவம் சர்வாதிகாரம் என்று
மாமுனிகள் திரு உள்ளம் என்று உணரத் தகும்
———————————————————————
திருப்பல்லாண்டுக்கும் பெரியாழ்வாருக்கும் ஒப்பில்லாமை அருளிச் செய்கிறார்
உண்டோ திருப் பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை தான்
உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பு ஒருவர் -தண் தமிழ் நூல்
செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் இவர் செய்கலையில்
பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார் ———-20-
பைதல் நெஞ்சே -பேதை மனமே
நீ உணர்ந்து பார் -இதை நீ விமர்சித்து அறிவாயாக
அவர் செய் கலையை -பாட பேதம் -மறக்கவும் மறுக்கவும் தக்கது -அது அனந்விதம்
———————————————————————–
ஆண்டாள் மதுரகவிகள் உடையவர் இம் மூவருடைய திருவவதார நாள்களை அருளிச் செய்ய சங்கல்பித்து அருளுகிறார்
ஆழ்வார் திரு மகளார் ஆண்டாள் மதுரகவி
வாழ்வார் எதிராசராம் இவர்கள் -வாழ்வாக
வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும்
இந்த வுலகோர்க்கு உரைப்போம் யாம் -21-
வாழ்வாக -லோக உஜ்ஜீவன அர்த்தமாக –
ஆழ்வார் திருமகளார் -ஆழ்வார்கள் எல்லார்க்கும் திருமகள் -என்னவுமாம் -கீழ் அருளிச் செய்த பெரியாழ்வார் திருமகளார் -என்னவுமாம்
பொய்கையாழ்வார் போல்வார் எம்பெருமானது திருக் கல்யாண குணக் கடலில் ஆழ்ந்ததனால் ஆழ்வார்கள் என்று பெயர் பெற்றால் போலே
நம்மாழ்வார் உடைய குணக்கடலில் ஆழ்ந்ததனால் மதுரகவி ஆழ்வார் ஆனார் –
திவ்ய பிரபந்தங்கள் சேர்த்தியில் உள்ளமையால் மதுர கவி ஆழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் திரு நாள் பாட்டு அருளிச் செய்கிறார்
எம்பெருமானார் தமிழ் மறைகள் ஆயிரமும் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் -என்றபடி அருளிச் செயல்களை வளர்த்த தாய் ஆதலாலும்
அவர் விஷயமான நூற்றந்தாதிப் பிரபந்தம் திருவவதரித்தலளாலும் அவர்க்கும் திருநாள் பாட்டி இட்டு அருளுகிறார்
திருவரங்கத்தமுதனார் பிரபந்தம் பணித்தவராய் இருந்தாலும் அவர்க்கு அர்ச்சைத் திருக் கோலம் அமைந்து இலதாதளால்
நாள் பாட்டு சேவிக்க பராசக்தி இல்லை என்று விடப்பட்டது –
—————————————————————————
ஆண்டாள் உடைய திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார்
இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக
வன்றோ ஆண்டாள் அவதரித்தாள் -குன்றாத
வாழ்வாக வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்—————22-
குன்றாத வாழ்வான -நித்ய ஸ்ரீ யான
எம்பெருமான் இந்நிலத்திலே திருவவதரித்து கீதோ உபநிஷத்தை தன முகத்தாலே வெளியிட்டு அருளி உபகரித்தான்
அது வடமொழியையும் ககனமாயும் இருப்பதனால் அனைவர்க்கும் ஒருங்கே பயன்படவில்லை
இக்குறை தீரப் பெரிய பிராட்டியார் தாமே வந்து திருவவதரித்து வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் -என்று புகழ்த் தக்கதான
திவ்ய பிரபந்தத்தை எளிய தமிழ் நடையில் உபகரித்து அஸ்மாதாதிகளை உய்வித்தால் எனபது இங்கு உணரத் தக்கது –
——————————————————————————
ஆண்டாளுக்கும் திருவவதரித்த நன்னாளுக்கும் ஒப்பில்லை என்பதை அருளிச் செய்கிறார்
பெரியாழ்வார் பெண் பிளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப்பூரத்தின் சீர்மை -ஒரு நாளைக்கு
உண்டோ மனமே யுணர்ந்து பார் ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு———23-
ஆண்டாளோடு ஒத்த வ்யக்தி உண்டாகில் அன்றோ இந்நாள் உடன் ஒத்த நாளும் வேறு ஓன்று இருக்கும்
பெண் பிளை-சரியான பாடம் -பெண் பிள்ளை -வெண்டளை பிரளும்
——————————————————————————–
ஆண்டாள் உடைய பெருமையை அருளிச் செய்கிறார்
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து ————24-
அஞ்சு குடிக்கு -ஐந்து குடும்பம் –முதல் ஆழ்வார் -அயோ நிஜ குடும்பம் -என்று கொண்டு –
எம்பெருமானுக்கு எண்ண தீங்கு வருகிறதோ என்று அஞ்சுகின்ற ஆழ்வார்களின் பதின்மரின் குடிக்கு –
பின் திருவவதரித்த தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருப் பாண் ஆழ்வார் கலியன் ஆகியவரையும் கூட்டி
பிரஜா பித்ருப்ய -வேதத்தில் ஓதப்பட்டதோர் கடனும் ஆழ்வார்கட்கு ஆண்டாளால் தீர்ந்தது என்கை –
பெண்மையை ஏறிட்டுக் கொண்ட ஆழ்வார்கள் –ஆண்டாள் இயற்கையிலே பெண்ணாய்ப் பிறந்து புருஷோத்தமனை அனுபவிக்கும் திறத்தில்
சிறந்த உரிமை யுடையளானாது பற்றி -விஞ்சி நிற்கும் தன்மையளாய் -என்கிறார் –பருவம் நிரம்புவதற்கு முன்னமே-அவரைப் பிராயம் தொடங்கி-
வானிடை வாழும் அவ்வானவர்க்கு -எனபது முதலான அருளிச் செயல்களால் பிஞ்சாய்ப் பழுத்தாள் என்கிறார்
—————————————————————————–
மதுரகவி யாழ்வார் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார் –
ஏரார் மதுரகவி இவ் வுலகில் வந்துதித்த
சீராரும் சித்திரையில் சித்திரை நாள் -பாருலகில்
மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துத்தித்த நாள்களிலும்
உற்றது நமக்கு என்று நெஞ்சே ஓர் ———–25-
எமக்கு உற்றது -நமக்கு மிகவும் உபாதேயமானது
ஓர் -பிரதிபத்தி பண்ணுவாயாக
உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தையும் சொல்லுவார் பத்துப் பேர் உண்டு இறே
அவர்கள் பாசுரம் கொண்டு அன்று இவ்வர்த்தம் அறுதி இடுவது -அவர்களைச் சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே –
அவர் பாசுரம் கொண்டு இவ்வர்த்தம் அறுதி இடக் கடவோம் –
ஆசார்யானே உபாயம் -அர்த்தம் அருளிச் செய்த கண்ணி நுண் சிறுத் தாம்பு -அருளிச் செய்த இவ்வேற்றம் உண்டே இவருக்கு
——————————————————————————-
மதுரகவிகள் உடைய திவ்ய பிரபந்தம் நாலாயிரத்தினுள் சேர்ந்தமை அருளிச் செய்கிறார்
வாய்த்த திரு மந்த்ரத்தின் மத்திமமாம் பதம் போல்
சீர்த்த மதுரகவி செய்கலையை -ஆர்த்த புகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளிச் செயல் நடுவே
சேர்வித்தார் தாற்பர்யம் தேர்ந்து ———–26-
ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்கள் எல்லாம் எம்பெருமான் உடைய ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களைப் பரக்கப் பேசுவன
திருமந்தரம் த்வயம் சரம ஸ்லோஹம்-ரஹஸ்ய த்ரய பொருள்களையே விவரிப்பனவாகும்
நம பதார்த்தம் பாகவத சேஷத்வம் -காட்டுமே அத்தை கனக்கப் பேசும் கண்ணி நுண் சிறுத்தாம்பு அருளிச் செயல்களின் நடுவே
சேர்த்து அருளினார்கள் நிறைந்த புகழை உடைய நம் பூர்வாசாரியர்கள்
——————————————————————————–
எம்பெருமானார் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார்
இன்று உலகீர் சித்திரையில் ஏய்ந்த திருவாதிரை நாள்
என்றையினும் இன்று இதனுக்கு ஏற்றம் என்தான் -என்றவர்க்குச்
சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் தம் பிறப்பால்
நால் திசையும் கொண்டாடும் நாள் ———27-
என்றையிலும் -மற்றும் உள்ள தினங்களைக் காட்டிலும்
————————————————————————
ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர்-ஏழ்பாரும்
உய்ய எதிராசர் உதித்து அருளும் சித்திரையில்
செய்ய திருவாதிரை ————–28-
நமக்கு வாழ்வு ஆன நாள் – நமக்கு விசேஷிதித்து உஜ்ஜீவன ஹேதுவான நாள்
ஏழ் பாரும் உய்ய -உலகம் எல்லாம் உஜ்ஜீவிக்கும் படி –
தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் -மொய்ம்பால் வளர்த்த விதத்தாய் இராமானுசன் -என்றும்
எங்கள் கதியே இராமானுச முனியே சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எனக்குத் தா -என்றும் சொல்லுகிறபடியே பெருமை மிக பொருந்தும் என்பதால் எதிராசர் உதித்து அருளும்
சித்திரையில் செய்ய திருவாதிரை -என்று அருளிச் செய்கிறார்
———————————————————————
எந்தை எதிராசர் இவ் வுலகில் எம் தமக்காக
வந்துதித்த நாள் என்னும் வாசியினால் -இந்தத்
திருவாதிரை தன்னின் சீர்மை தன்னை நெஞ்சே
ஒருவாமல் எப்பொழுதும் ஓர் ———29-
ஒருவாமல் -இடைவிடாமல்
ஓர் -சிந்தித்திரு
ஆதி சேஷனே எம்பெருமானாராக திருவவதரித்து அருளினார் -இவர் நலம் அந்தம் இல்லாதோர் நாட்டிலே
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் -இத்யாதிப்படியே எம்பெருமானுக்கு சகல வித கைங்கர்யங்களும் செய்து கொண்டு
வாழ வேண்டி இருக்க அதை விட்டுப் பல பல கஷ்டங்களுக்கும் ஆஸ்பதமான இவ்விருள் தரும் மா ஞாலத்திலே திருவவதரித்து அருளினது
நித்ய சம்சாரிகளான நம் போல்வாரைப் பிறவிக் கடலில் நின்றும் கை கொடுத்து எடுப்பதற்காகவே என்று அனுசந்தித்து
இவரது திருவவதார திருநாளைக் கொண்டாட வேணும் என்று அருளிச் செய்கிறார்
——————————————————————–
எண்ணரும் சீர் பொய்கை முன்னோர் இவ் உலகில் தோன்றிய ஊர்
வண்மை மிகு கச்சி மலை மா மயிலை –மண்ணியில் நீர்
தேங்கும் குறையலூர் சீர்க் கலியன் தோன்றிய ஊர்
ஓங்கும் உறையூர் பாணனூர்————-30-
மண்ணி யாற்றின் தீர்த்தம் தேங்கும் இடம் -திருக்குறையலூர்
———————————————————————–
தொண்டர் அடிப் பொடியார் தோன்றிய ஊர் தொல் புகழ் சேர்
மண்டங்குடி என்பர் மண்ணுலகில் -எண்டிசையும்
ஏத்தும் குலசேகரனூர் என உரைப்பர்
வாய்த்த திரு வஞ்சிக் களம் ——–31-
தொல் புகழ் -நித்தியமான புகழை உடைய
———————————————————————–
மன்னு திருமழிசை மாடத் திருக் குருகூர்
மின்னு புகழ் வில்லி புத்தூர் மேதினியில் -நன்னெறியோர்
ஏய்ந்த பத்தி சாரர் எழில் மாறன் பட்டர் பிரான்
வாய்ந்து உதித்த ஊர்கள் இவை———32-
————————————————————————-
சீராரும் வில்லிபுத்தூர் செல்வத் திருக் கோளூர்
ஏரார் பெரும் பூதூர் என்னும் இவை –பாரில்
மதி யாரும் ஆண்டாள் மதுர கவி யாழ்வார்
எதிராசர் தோன்றிய ஊர் இங்கு ———33
செல்வம் திரு கோளூர் -ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ மல்கிய திருக் கோளூர்
மதி ஆறும் -ஞானம் நிரம்பிய
அப்பிள்ளை என்னும் ஆசிரியர் இராமானுச நூற்றந்தாதித் தவிர்த்தே நாலாயிரக் கணக்கு இட்டு அருளினார்
-மா முனிகள் அதை நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் உடன் ஒக்க ஆதரிக்க வேணும் என்றும்
அத்யயன நியமம் இந்த நூற்றந்தாதிக்கும் சேர்த்துக் கொள்ளப் பட வேணும் என்றும் நியமித்து அருளினார் -என்பர்
———————————————————————–
ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல் ஏற்றம்
தாழ்வாதும் இன்றி யாவை தாம் வளர்த்தோர் -ஏழ்பாரும்
உய்ய வவர் செய் வியாக்கியைகள் உள்ளது எல்லாம்
வையம் அறியப் பகர்வோம் வாய்ந்து ———–34-
ஏழ் பாரும் உய்ய -உலகங்கள் எல்லாம் உஜ்ஜீவிக்குமாறு
அவர் செய்த -சரியான பாடம் -அவர்கள் செய்த -வெண்டளை பிறழும
—————————————————————————
ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும்
தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் –வீழ்வார்கள்
என்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீ யவர் பால்
சென்று அணுகக் கூசித் திரி -35-
ஆழ்வார்கள் ஏற்றமும் அருளிச் செயல் ஏற்றமும் குறையாதபடி அவற்றை வளர்த்து அருளின ஆசார்யர்களைப் பற்றி ப்ரஸ்தாவிக்கையாலே
அப்படிப்பட்ட ஆசாரியர்களின் திரு உள்ளம் புண் படுமாறு சில த்ரமிட உபநிஷத் பாஹ்ய குத்ருஷ்டிகள் தோன்றி
ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும் தூஷித்துக் கொண்டு இருந்ததனால் அவர்களுடைய சஹவாசமும் வர்ஜநீயம் என்று அருளிச் செய்கிறார்
தாழ்வா -என்கிற பாடம் -சரியானது -தாழ்வாக -வெண்டளை பிறழும்
————————————————————–
தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர்
அருளிச் செயலை அறிவார் ஆர் -அருள் பெற்ற
நாத முனி முதலாம் நம் தேசிகரை அல்லால்
பேதை மனமே யுண்டோ பேசு ——–36-
தெருள் உற்ற -யாதார்த்த ஞானிகள்
அருள் பெற்ற நாத முனி முதலாம் நம் தேசிகரை அல்லால் -ஆழ்வார் அருளை லபிக்கப் பெற்ற ஸ்ரீ மன் நாதமுனிகள் முதலாக உள்ள
நம் ஆசாரியர்களைத் தவிர –
கீழ்ப்பாட்டில் சஹாவாச யோக்யர் அல்லாதாரக் கழிக்கக் பட்ட பாவிகள் -நம் பூர்வாச்சார்யர்களின் பரம்பரையில் படிந்தவர்கள் அல்லர்
முதலாம் -சரியான பாடம் -முதலான பாடம் வெண்டளை பிறழும் -நாதமுனி முன்னான -பாட பேதம் -அது சம்ப்ரதாய பாடம் அன்று
——————————————————————–
ஓராண் வழியாய் யுபதேசித்தார் முன்னோர்
ஏரார் எதிராசர் இன்னருளால் -பாருலகில்
ஆசை யுடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் என்று
பேசி வரம்பறுத்தார் பின் ————–37-
கீழ்ப்பாட்டில் நாத முனி முதலாம் நம் தேசிகரை-என்று அருளிச் செய்தவர் -எம்பெருமானாரை விசேஷித்து எடுத்துக் கூற வேண்டி அருளிச் செய்கிறார்
ஆர்த்தி பிரபந்தத்தில் -மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தான் வாழியே -என்றபடி எம்பெருமானார்
தமிழ் மறையை வளர்த்து அருளின பிரகாரங்களில் மிக முக்கியமான தொரு பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –
பூர்வாசார்யர்கள் இவருக்கு முன்பே திவ்ய பிரபந்த வியாக்கியானங்களை இட்டருள வல்லவராய் இருந்தும் ஒருவரும் இட்டருள வில்லையே
-உபதேசித்து வந்தார்கள் அத்தனை –அப்படி உபதேசித்தும் ஸ்ரீ வைஷ்ணவர்களை ஒரு திரளாகக் கூட்டி உபதேசித்தமை இல்லையே –
ஓராண் வழியடைவாகவே உபதேசம் நிகழ்ந்து வந்தது –
எம்பெருமானார் இங்கனே வரம்பு இருக்கத் தகாது -இதனால் நம் ஸ்ரீ வைஷ்ணவ தர்சனம் சங்குசிதம் ஆகிறதே யல்லது விரிவு பெறுகின்றதில்லை
-எனவே வரம்பை அறுத்து ஆசை உடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் என்று வரம் அறுத்தார்
-இதனாலே திருவாய் மொழிக்கு வியாக்கியானங்கள் விசேஷமாக அவதரிக்க இடம் உண்டாயிற்று
-பிள்ளை லோகாசார்யர் முதலானோர் ரஹச்ய கிரந்தங்களை அருளிச் செய்து அருளிச் செயல் பொருளை வளர்த்து அருளினதற்கும்
இத்தகையே எம்பெருமானார் நியமனமே மூலம்
முன்புள்ளார் அநு வ்ருத்தி பிரசன்னாசார்யர்கள் -என்றும் -எம்பெருமானார் க்ருபா மாத்ர பிரசன்னாச்சார்யர் என்றும் நம் முதலிகள் அருளிச் செய்வார்கள்
——————————————————–
எம்பெருமானார் தரிசனம் என்றே இதுக்கு
நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் -அம்புவியோர்
இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த
அந்தச் செயலை அறிகைக்கா ————38-
ஸ்ரீ ராமானுஜரால் நூதனமாக நிருமிக்கப் பட்ட தர்சனம் இல்லையே
ஸ்ரீ ரெங்க நாதர் இத்தை ஸ்ரீ ராமானுஜ தர்சனம் என்று நியமித்து அருளியதற்கு காரணம் ஸ்ரீ ராமானுஜர் பல படிகளாலும்
வளர்த்து அருளியதால் -திவ்ய பிரபந்தங்களை வளர்த்து அருளினது இங்கு முக்கியமானது –
அந்த செயல் அறிகைக்காக -சுத்த பாடம் -செயலை -வெண்டளை பிறழும்
—————————————————-
பிள்ளான் நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை
தெள்ளார் வடக்குத் திரு வீதிப் பிள்ளை
மணவாள யோகி திருவாய்மொழியைக் காத்த
குணவாளர் என்று நெஞ்சே கூறு———-39-
தெள்ளார் -தெளிந்த ஞானம்
நெஞ்சே கூறு -மனமே இவர்களது
வியாக்யானம் இயற்றுவதும் ஒருவகை சம்ரஷணம் ஆதலால் காத்த என்னக் குறை இல்லை
——————————————————-
முந்துறவே பிள்ளான் முதலானோர் செய்தருளும்
அந்த வியாக்கியைகள் அன்றாகில் -அந்தோ
திருவாய் மொழிப் பொருளைத் தேர்ந்துரைக்க வல்ல
குரு ஆர் இக்கால நெஞ்சே கூறு———40-
அந்தோ -ஆனந்தக் குறிப்பு
———————————————————-
தெள்ளாரும் ஞானத் திருக் குருகைப் பிரான்
பிள்ளான் எதிராசர் பேரருளால் -உள்ளாறும்
அன்புடனே மாறன் மறைப் பொருளை யன்றுரைத்த
தின்பமிகு மாறாயிரம்————-41-
32-எழுத்துக்கு கிரந்தம் படி என்று சங்கேதம்
———————————————————-
தஞ்சீரை ஞானியர்கள் தாம் புகழும் வேதாந்தி
நஞ்சீயர் தாம் பட்டர் நல்லருளால் -எஞ்சாத
ஆர்வமுடன் மாறன் மறைப் பொருளை யாய்ந்துரைத்தது
ஏர் ஒன்பதினாயிரம் —————-42-
எஞ்சாத ஆர்வம் உடன் -குறையாத பரிபூரணமான அன்புடனே
—————————————————————
நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவி விட
பின் பெரியவாச்சான் பிள்ளை யதனால் -இன்பா
வருபத்தி மாறன் மறைப் பொருளைச் சொன்னது
இருப்பத்து நாலாயிரம் ———–43-
ஆவரு பத்தி மாறன் -ஆனந்த ரூபமாகப் பெருகி வந்த பக்தியை யுடையரான நம்மாழ்வார் அருளிச் செய்த –
வியாக்யானங்கள் அருள்வதற்கு பல காரணங்கள் உண்டு -பின்புள்ளார் உஜ்ஜீவன அர்த்தமாக –
-ஸ்வ ஆச்சார்யர் உபன்யசித்து அருளும் அர்த்த விசேஷங்கள் பெருக்காறு போல் அன்றிக்கே அதிலே தேங்கின மடுக்கள் போலே
விளங்க வேணும் என்றும் -ஸ்வ ஆசார்யர் நியமித்து அருள -தமது புலமையை காட்டி வைக்கவும்
இங்கே நம்பிள்ளை உடைய பரம கருணா பிரயுக்தமான நியமனத்தால் பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் இட்டு அருளினார்
—————————————————————–
தெள்ளியா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை
வள்ளல் வடக்குத் திரு வீதிப் பிள்ளை யிந்த
நாடறிய மாறன் மறைப் பொருளை நன்குரைத்தது
ஈடு முப்பத்தாறாயிரம் ————44-
தெள்ளியது ஆ செப்பு நெறி தன்னை -தெளிவாக அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்தி க்ரமத்தை உட்கொண்டு
நம்பிள்ளை உபன்யாசத்தைப் பகல் எல்லாம் கேட்டு இருந்து ஈடு -ஏடு படுத்தி வைத்தவர் வடக்குத் திரு வீதிப் பிள்ளை –
நம்பிள்ளை நியமனம் படியாக எழுதவில்லை -நம்பிள்ளை தாரும் என வாங்கி பிறகு பகவன் நியமனத்தாலே பிரசாரத்திற்கு அருளும்படி யாயிற்று
வள்ளல் -ஈடு ஏடு படுத்திய வள்ளல் தனம் -உலகுக்கு உயிர் போன்ற பிள்ளை லோகாசார்யர் – அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இரண்டு
திரு புத்ர ரத்னங்களையும் பெற்று உதவியது பற்றியும் வள்ளல் தன்மை உண்டே
———————————————————————–
அன்போடு அழகிய மணவாளச் சீயர்
பின்போரும் கற்றறிந்து பேசுகைக்காத்-தம் பெரிய
போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது
ஏதமில் பன்னீராயிரம் ————45-
தம் பெரிய போதம் உடன் -தமது பெரிய ஞானத்தினால் -ஆசார்ய க்ருபாதீனமான போதம் அன்றிக்கே -ஸ்வ தந்த்ரமான போதம் -என்றபடி
ஏதமில் -குற்றமற்றதான –
பிரதி பதார்த்த ரூபமான வியாக்யானம் -எளிய உரை -என்பதால் பின்போரும் அன்போடு கற்று அறிந்து பேசுகைக்காக-என்கிறார்
———————————————————–
பெரியவாச்சான் பிள்ளை பின்புள்ளவைக்கும்
தெரிய வியாக்கியைகள் செய்வால் -அரிய
அருளிச் செயல் பொருளை ஆரியர்கட்கு இப்போது
அருளிச் செயல் ஆய்த்து அறிந்து————46-
தெரிய -விளக்கமாக
ஆரியர்ட்கு அறிந்து அருளிச் செயல் ஆயத்து -ஸ்வாமி களுக்கு தெரிந்து பிரவசனம் பண்ணுவதற்குப் பாங்காயிற்று
பின்புள்ளார் ஆசார்ய பீடத்தில் அமர்ந்து திவ்ய பிரபந்த ஆழ் பொருள்களை பிரவசனம் செய்ய சௌகர்யம் விளைந்தது இவர் அருளிச் செய்ததால்
——————————————————————–
நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு
எஞ்சாமை யாவைக்கும் இல்லையே -தஞ்சீரால்
வைய குருவின் தம்பி மன்னு மணவாள முநி
செய்யுமவை தாமும் சில ———-47-
நாள் இரண்டுக்கு -சில பிரபந்தங்களுக்கு என்றபடி -சங்கையில் நோக்கு அன்று
நஞ்சீயர் -திருப்பாவைக்கும் -கண்ணி நுண் சிறுத் தாம்புக்கும்
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -திருப்பாவை -கண்ணி நுண் சிறுத் தாம்பு –அமலனாதி பிரான்
மன்னு மணவாள முனி -வாதி கேசரி அழகிய மணவாள சீயர் என்றபடி -திருவிருத்தம்
பெரியாழ்வார் திருமொழிக்கு ஸ்வா பதேசம் திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்ததாக அருளிச் செய்ய வில்லையே
-அவர் திரு வம்சத்தில் வந்தவரால் அருளிச் செய்ததாக இருக்க வேண்டும்
———————————————————————–
சீரார் வடக்குத் திரு வீதிப் பிள்ளை எழுது
ஏரார் தமிழ் வேதத்து ஈடு தன்னைத் -தாருமென
வாங்கி முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்
தாம் கொடுத்தார் பின்னதனைத் தான் – ———-48-
வடக்குத் திருவீதிப் பிள்ளை பட்டோலை கொண்டு நம்பிள்ளை சந்நிதியிலே கொண்டு போய் வைத்து அருளினார் –
அதை அவர் கடாஷித்து -ஆனை கோலம் செய்தால் போலே அழகியதாகவே காண்கிறது -ஆகிலும் நமது கட்டளை இன்றிக்கே எழுதினீர்-
இருக்கட்டும் என்று சொல்லி அந்த ஸ்ரீ கோசத்தை உள்ளே வைத்து அருளினார்
பெரிய பெருமாள் உடைய நியமனத்தால் அன்றி நம்பிள்ளை இந்த ஸ்ரீ கோசத்தை தந்து அருளார் என்று தெரிந்து கொண்ட
ஈ யுண்ணி மாதவப் பெருமாள் -இந்த ஈடு வியாக்யானம் உலகில் பிரசாரம் பெற வேணும் என்று ஆவல் கொண்டு பலகாலம் பெரிய பெருமாளை
வலம் செய்து வந்தார் –பெரிய பெருமாள் திரு உள்ளம் உவந்து இரங்கி நம் பிள்ளைக்கு நியமித்து அருளவே பின்பு அந்த ஸ்ரீ கோசத்தை ஈந்து அருளினார் –
————————————————————————-
ஆங்கு அவர்பால் பெற்ற சிறியாழ்வானப் பிள்ளை
தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் -பாங்குடனே
நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் நல்ல மகனார்க்கு அவர் தாம்
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு —————49-
ஆங்கு அவர்பால் பெற்ற சிறியாழ்வானப் பிள்ளை தாம் – அவ்வண்ணமாக அந்த நம்பிள்ளை இடத்தில் பெற்றுக் கொண்டவரான
சிறியாழ்வான் அப்பிள்ளை என்கிற அவ்வாசிரியர் —ஈ யுண்ணி மாதவர் -என்றபடி
கொடுத்தார் தம் மகனார் தம் கையில் –தம்முடைய திருக் குமாரான பத்ம நாபப் பெருமாளுடைய திருக் கையில் அந்த ஈட்டைக் கொடுத்து அருளினார்
பாங்குடனே நாலூர் பிள்ளைக்கு கொடுத்தார் -அந்த பத்ம நாபப் பெருமாள் திரு உள்ளத்தில் இரக்கத்துடன் நாலூர் பிள்ளை என்னும் ஆசிரியர் இடம் கொடுத்து அருளினார் –
அவர் தாம் நல்ல மகனார்க்கு கொடுத்தார் -அந்த நாலூர் பிள்ளை தாம் தமது திருக் குமாரரான நாலூராச்சான் பிள்ளைக்கு அதைக் கொடுத்து அருளினார்
அவர் தாம் மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு-அந்த நாலூராச்சான் பிள்ளையே அதிசயமாக மேல் உள்ளவர்களுக்கு உபதேசித்து அருளினார் –
ஈட்டுத் தனியனில் -இரு கண்னருக்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடளித்தற்கு ஏய்ந்த மாதவர் பற்பநாபர் –என்பதையும்
வந்தே மாதவ பத்மநாப ஸூமன கோலேச தேவாதிபான் -ஸ்லோஹமும் இங்கே அனுசந்திக்க யுரியது
————————————————————————–
நம் பெருமாள் நம் ஆழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
என்பர் அவர் தம் ஏற்றத்தால் -அன்புடையோர்
சாற்று திரு நாமங்கள் தான் என்று நன்னெஞ்சே
ஏத்து அதனைச் சொல்லி நீ இன்று——-50-
ஸ்ரீ வசன பூஷணம் திவ்ய சாஸ்திரம் சீர்மையை அருளிச் செய்யத் தொடங்கி பிள்ளை லோகாசார்யருக்கு திருநாமம்
வந்த வழியைக் காட்டி அருள -நம்பிள்ளைக்கு அந்த திருநாமம் வந்த வழியைக் காட்டும் முகமாக
நம் உபபதமாக பெற்றவர்களின் கோஷ்டியை அருளிச் செய்கிறார் –
நம் -பிரேம விஷய கார்யம் -இப்படி முன்னோர்கள் இவர்களது பெருமையைக் கண்டு அதற்குத் தக்க இட்டருளின திரு நாமங்களை
உகந்து அனுசந்தித்து உஜ்ஜீவிக்க திரு உள்ளத்துக்கு அருளிச் செய்கிறார் –
———————————————————–
துன்னு புகழ்க் கந்தாடை தோழப்பர் தம்முகப்பால்
என்ன உலகாரியரோ என்று உரைக்கப் -பின்னை
உலகாரியர் என்னும் பேர் நம் பிள்ளைக்கு ஓங்கி
விலகாமல் நின்றது என்றும் மேல்————51-
கந்தாடை தோழப்பர்-நம்பிள்ளை -இது என்ன ஆச்சர்யமான குணம் என்று வியந்து நீர் என்ன லோகாசார்யாரோ என்று ஈடுபட்டு
அருளிச் செய்த விருத்தாந்தம் -இந்த குண விசேஷத்தினால் உலகத்தை எல்லாம் ஈடுபடுத்திக் கொள்ள வல்லவர் என்றபடி
——————————————————
பின்னை வடக்குத் திரு வீதிப் பிள்ளை யன்பால்
அன்ன திரு நாமத்தை யாதரித்து -மன்னு புகழ்
மைந்தர்க்குச் சாத்துகையால் வந்து பரந்தது எங்கும்
இந்தத் திரு நாமம் இங்கு ————-52-
ஆசார்ய பக்தி விசேஷத்தினால் அந்த லோகாசார்யா திரு நாமத்தை யசச்வியான தமது திருக் குமாரர்க்கு-
ஆசார்ய அனுக்ரஹ அதிசயத்தினால் தோன்றியதால் – விரும்பி நாமகரணம் இட்டபடியினால் உலகு எங்கும் பரவியதாயிற்று
————————————————————–
அன்ன புகழ் முடும்பை யண்ணல் உலகாரியன்
இன்னருளால் செய்த கலை யாவையிலும் -உன்னில்
திகழ் வசன பூடணத்தின் சீர்மை யொன்றுக்கு இல்லை
புகழ் அல்ல இவ்வார்த்தை மெய் யிப்போது———-53-
ஸ்ரீ வசன பூஷண திவ்ய சாஸ்த்ரமானது -சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத ரூப வேத சாரார்த்த சங்க்ரஹ வாக்ய ஜாதம் -என்கிறபடியே
அறிய வேண்டும் அர்த்தம் எல்லாம் அழகாக நிரம்பப் பெற்றதாதலால் இது நிகர் அற்றது எனபது அர்த்தவாதம் அன்று
-மெய்யுரையே -புகழ் அல மெய் -அதிசய உக்தி அன்று சத்யமானதே
——————————————————————
முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு -மின் அணியாச்
சேரச் சமைத்து அவரே ஸ்ரீ வசன பூஷணம் என்
பேர் இக்கலைக்கு இட்டார் பின் —————54-
உயிர்க்கு மின் அணியா-ஆத்மாவுக்கு அழகிய அலங்காரமாக
சேர சமைத்து -சேர்த்து அணி வகுத்து
ரத்ன பிரசுரமான பூஷணத்துக்கு ரத்ன பூஷணம் என்ற பேராமாப் போலே பூர்வாசார்யர்களுடைய வசன பிரசுரமாய்
அனுசந்தாக்களுக்கு ஔஜ்வல்ய கரமாய் இருக்கையாலே ஸ்ரீ வசன பூஷணம் என்று திருநாமம் ஆயிற்று –
முமுஷூக்கள் கண்டத்துக்கு பூஷணமாய் இருக்குமே
சீர் வசன பூடணம் என் பேர்-சரியான பாடம் -என்னும் பேர் பொருந்தாது
———————————————————————
ஆர் வசன பூஷணத்தின் ஆழ் பொருள் எல்லாம் அறிவார்
ஆர் அது சொல் நேரில் அனுடிப்பார் -ஓர் ஒருவர்
யுண்டாகில் அத்தனை காண் உள்ளமே எல்லார்க்கும்
அண்டாதது அன்றோ அது —————55-
அது சொல் நேரில் அனுட்டிப்பார் ஆர் -அந்த வசன பூஷன கட்டளையில் அனுஷ்டிக்க வல்லவர்களும் இலர்
இது ஒரு மீமாம்ஸா சாஸ்திரம் -அறியவும் அனுட்டிக்கவும் மிகவும் அரிது
மனுஷ்யாணாம் சஹாஸ்ரேஷூ கச்சித் யத்தி சித்தயேயததாமாபி சித்தா நாம் கச்சித் மாம் வேத்தி தத்வத –
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு அதிகாரி தரக் கூடுமே
குற்றம் செய்தவர்கள் பக்கல் பொறையும் கிருபையும் சிரிப்பும் உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடக்க வேணும்
விஹித போகம் நிஷித்த போகம் போலே லோக விருத்தம் அன்று நரகஹேதுவும் அன்று ஆயிருக்கச் செய்தே ஸ்வரூப விருத்தமுமாய்
வேதாந்த விருத்தமுமாய் சிஷ்ட கர்ஹிதமுமாய் ப்ராப்ய பிரதி பந்தகமுமாய் இருக்கையாலே த்யாஜ்யம் -போன்றவை அனுஷ்டிக்க அரியனவே
———————————————————————-
உய்ய நினைவுடையீர் உங்களுக்குச் சொல்லுகின்றேன்
வையம் குரு முன்னம் வாய் மொழிந்த -செய்ய கலை
யாம் வசன பூஷணத்தின் ஆ ழ் பொருளைக் கற்று அதனுக்
காம் நிலையில் நில்லும் அறிந்து ———–56-
ஆழ் பொருளை கற்று உகந்து -ஆழ்ந்த பொருள்களை ஆசார்ய முகமாக அதிகரித்து உணர்ந்து
அதனுக்கு ஆம் நிலையில் நில்லும் -அவ்வறிவுக்கு ஏற்ற அனுஷ்டானத்தில் ஊன்றி இருங்கள்
உய்ய நினைவுடையீர் –ஸ்ரீ வசன பூஷன அர்த்தங்களை அறியாதார்க்கும் அனுஷ்டியாதார்க்கும் உஜ்ஜீவிக்க விரகு இல்லை என்று காட்டி அருளுகிறார்
———————————————————–
தேசிகர் பால் கேட்ட செழும் பொருளைச் சிந்தை தன்னில்
மாசறவே யூன்றி மனனம் செய்து -ஆசரிக்க
வல்லார்கள் தாம் வசன பூஷணத்தின் வான் பொருளைக்
கல்லாதது என்னோ கவர்ந்து ————57-
ஆசார்யர்கள் இடத்தில் கேட்ட சிறந்த அர்த்தங்களை நெஞ்சிலே அழுக்கற ஊற்றமாக சிந்தனை செய்து அப்படியே
அனுஷ்டிக்க வல்லவர்களான அதிகாரிகள் ஸ்ரீ வசன பூஷணத்தின் உடைய திவ்யார்த்தங்களை அபி நிவேசத்துடனே
அதிகரியாமல் இருப்பது ஏனோ -அந்தோ
மா முனிகளுக்கு உலகோர் எல்லாரும் இந்த சாஸ்த்ரத்தை அதிகரிக்க வேணும் என்கிற அபி நிவேசம் விளங்கிற்று
—————————————————————————–
சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால்
மெச்சும் வியாக்கியை தான் யுண்டாகில் –நச்சி
அதிகாரியும் நீர் வசன பூஷணத்துக்கு அற்ற
மதியுடையீர் மத்தியத்தராய் ———-58-
ஸ்ரீ வசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்துக்கும் பல பல வியாக்கியானங்கள் உண்டே -அவற்றை அதிகரிக்க வேண்டும்
-அசூயை இன்றி அதிகரிக்க வேணும் –
————————————————————————
சீர் வசன பூஷணத்தின் செம்பொருளைச் சிந்தை தன்னால்
தேறிலுமாம் வாய் கொண்டு செப்பிலுமாம்–ஆரியர்காள்
என்தனக்கு நாளும் இனிதாகா நின்றதையோ
உம்தமக்கு எவ்வின்பம் உளதாம் ——–59-
நைச்ய அனுசந்தானத்தால் மா முனிகள் -ஒ மஹா நீயர்களே -ஸ்ரீ வசன பூஷணத்தின் உடைய செவ்விய பொருள்களை நெஞ்சினால் ஆராய்ந்து
பார்க்கிலுமாம் எடுத்து உரைக்கிலுமாம் எனக்கு அப் பொழுதைக்கு அப் பொழுது என்னாராவமுதம் என்னலாம் படி உள்ளது -மிக ஆனந்தம்
-உங்களுக்கு எப்படிப்பட்ட ஆனந்தமாய் இருக்கின்றதோ –
செம் பொருளை -சரியான பாடம் -செழும் பொருளை -வெண்டளை பிறழும்
———————————————————–
தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார்
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயை கோன்-இன்பமிகு
விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் ஆதலால்
நண்ணா ரவர்கள் திரு நாடு —————60-
அம்புயை -அம்புஜத்திலே பிறந்த பிராட்டி -பத்மா கமலா போன்ற திரு நாமம்
ஸ்வ தந்த்ரனை உபாயமாகத் தான் பற்றின போது இ றே இப் பிரசங்கம் தான் உள்ளது -என்கிற சூர்ணிகை முதலாக
ஈஸ்வரனைப் பற்றுகை கிடைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி ஆசார்யனைப் பற்றுகை காலைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி -என்கிற
சூர்ணிகை நடுவாக -இது பிரதமம் ஸ்வ ரூபத்தைப் பல்லவிதமாக்கும்-புன்பு புஷ்பிதமாக்கும் -அநந்தரம் பல பர்யந்தமாக்கும் -எனபது ஈறாக
ஆசார்ய நிஷ்டையே சரம உபாயம் என்று மிக அற்புதமாக அருளிச் செய்யப் பட்டு இருத்தலால் அவ்வர்த்த விசேஷம் இங்கே
நிரூபிக்கப் படுகிறத-தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமா போலே ஸ்வரூப விகாசத்தைப் பண்ணும் ஈஸ்வரன்
தானே ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் அத்தை வாடப் பண்ணும் -இத்தை ஒழிய பகவத் சம்பந்தம் துர்லபம் -என்கிற ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ சூக்திகள் அனுசந்தேயம் –
——————————————————————
ஞானம் அனுட்டானமிவை நன்றாகவே யுடைய
னான குருவை அடைந்தக்கால் -மா நிலத்தீர்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும் ————61-
ஆசார்ய பக்தி அவசியம் என்றது கீழ்ப் பாட்டில் -இதில் ஜ்ஞான அனுஷ்டான சம்பந்தனான ஆசார்யனைப் பணிந்தால் அன்றிப் பேறு பெற முடியாது என்கிறது
வண்டுகளோ வம்மின் -அஞ்சிறைய மடநாராய் -பல காலும் பஷிகளை விளிப்பார்கள்
உபாப்யாமேவ பஷாப்யாம் ஆகாசே பஷிணாம் கதி ததைவ ஜ்ஞான கர்ம்ப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம —
சேர்ப்பாரைப் பஷிகளாக்கி ஜ்ஞான கர்மங்களைச் சிறகு என்று -ஆசார்ய ஹ்ருதயம் ஸ்ரீ சூக்திகள்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் -பிராட்டியின் புருஷகாரத்தாலே மோஷம் அளிக்க வல்லவன் -ஆயினும் சதாசார்யார்களை
ஆஸ்ரயியாதார்க்கு பிராட்டியின் புருஷகாரமும் பலிக்க மாட்டாது என்று காட்டின படி
ஆசார்ய ஆஸ்ரயணம் முக்யத்தைத்தை அருளவே தானே வைகுந்தம் தரும் -என்று பிராட்டி புருஷகாரம் இன்றி
ஸ்வயமாகவே வீடு தந்து அருள்வன் என்று காட்டி அருளுகிறார்
——————————————————-
உய்ய நினைவு யுண்டாகில் உம குருக்கள் தம் பதத்தே
வையும் அன்பு தன்னை இந்த மா நிலத்தீர் -மெய்யுரைக்கேன்
பையரவில் மாயன் பரமபதம் உங்களுக்காம்
கையிலங்கு நெல்லிக் கனி ————-62-
அன்பு தன்னை -பக்தியை
ஆசார்ய பக்தர்களுக்கு பரமபதமானது கையிலங்கு நெல்லிக் கனியாம் என்றது பரமபத போகங்களை எல்லாம் இந்நிலத்திலேயே
சாஷாத் கரிக்கப் பெறலாம் என்றபடி
பொன்னுலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ-என்னும்படி பிறர்க்கும் வழங்குவதற்கு உரித்தாம் படி விதேயமாகும் -என்பதுவாம்
————————————————————-
ஆசார்யன் செய் உபகாரமானவது
தூயதாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் -தேசாந்
தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது
இருத்தல் இனி ஏது அறியோம் யாம் ——–63-
இருத்தலினில்-இருத்தலின் -பாட பேதங்கள் –
இரும்பைப் பொன்னாக்குமா போலே ஆசார்யன் செய்த மஹா உபகாரம் சிஷ்யனுடைய நெஞ்சில் நன்றாகத் தோன்றுமாகில்
வஸ்தவ்யம் ஆசார்ய சந்நிதியே-என்ற அத்யவசாயம் வேண்டுமே -ஆயினும் பிரிந்து இருப்பார் பிரபல பாபமே ஹேது என்று
வெட்டிதாகச் சொல்லக் கூசி எது யாம் அறிடோம் -என்கிறார்
—————————————————————
தன்னாரியனுக்குத் தானடிமை செய்தவன்
இந்நாடு தன்னில் இருக்கும் நாள் -அந்நேர்
அறிந்தும் அதில் ஆசை இன்றி யாசாரியனைப்
பிரிந்து இருப்பார் ஆர் மனமே பேசு ———-64-
ஆசார்யன் பக்கலில் அர்த்தங்கள் கேட்கும் அளவே அவர்க்குக் கைங்கர்யம் பண்ண வேணும் -அர்த்தம் கேட்டுத் தலைக் கட்டினவாறே
வேறிடம் சென்று எங்கேனும் வாழலாம் என்று நினைப்பது தகுதி யன்று -ஆசார்யன் இந்த விபூதியில் எழுந்து அருளி இருக்கும் அளவும்
அனுதினமும் கைங்கர்யம் செய்தே சத்தை பெற வேணும் என்கிற சாஸ்த்ரார்தம் இதனால் காட்டி அருளுகிறார்
——————————————————————–
ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை -ஆசையுடன்
நோக்குமவன் என்னு நுண் அறிவைக் கேட்டு வைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை யரிதாம் ———65-
ஆசார்யரானவர் சிஷ்யனுடைய ஆத்மா ஸ்வரூபத்தை நோக்கி இருக்கக் கடவர் –
ஸ்வரூப ஜ்ஞானம் ஆகிற தேஜஸ் பொருந்திய சிஷ்யனானாவன் -அவ்வாச்சார்யர் உடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை
பக்தி உடன் பேணக் கடவன் என்கிற இந்த நுட்பமான விசேஷார்த்தத்தை ஸ்ரீ வசன பூஷணம் போன்றவற்றில் கேட்டு இருந்தாலும் கூட
ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன் -சிஷ்யன் ஆசாரியனுடைய தேஹத்தை பேணக் கடவன் –
இரண்டும் இருவர்க்கும் ஸ்வரூபமாய் பகவத் கைங்கர்யமுமாய் இருக்கும்
ஆசார்யனுக்கு தேக ரஷணம் ஸ்வரூப ஹானி சிஷ்யனுக்கு ஆத்ம ரஷணம் ஸ்வரூப ஹானி -போன்றவற்றை கேட்டும்
அவ்வழியில் நிஷ்டையோடு இருத்தல் எப்படிப் பட்டவர்களுக்கும் அருமைப் பட்டே இருக்கும் -எளிதன்று –
————————————————————————
பின்பழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில்
அன்பு அதுவும் அற்று மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்—————–66-
பின்பழகிய பெருமாள் ஜீயருக்கு இருந்த ஆசார்ய ப்ரேமம் ஒப்புயர்வற்றது -நம்பிள்ளை திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் செய்யப் பெற வேணும்
என்றே சில ஔஷதங்களை ச்வீகரித்துத் திரு மேனியைப் போஷிக்க விருப்பம் கொண்டு இருந்தவர் –
இவரைப் போலே நம்மால் இருக்க முடியாமல் போனாலும் இவருடைய நிஷ்டையைச் சிந்தனை செய்யவாவது பெற்றால்
அதுவே நாம் உஜ்ஜீவிக்கப் போதுமானது என்று காட்டி அருளுகிறார்
———————————————————————–
ஆச்சார்யர்கள் அனைவரும் முன் ஆசரித்த
ஆசாரம் தன்னை அறியாதார் -பேசுகின்ற
வார்த்தைகளைக் கேட்டு மருளாதே பூருவர்கள்
சீர்த்தி நிலை தன்னை நெஞ்சே சேர் ——–67-
நம்முடைய பூருவாசாரியர்களின் அனுஷ்டான சரணியிலேயே -செய்யாதன செய்யோம்-மேலையார் செய்வனகள் -படியே
வர்த்தித்தல் வேண்டும் என்று நியமித்து அருளுகிறார்
————————————————————
நாத்திகரும் நற்கலையின் நன்னெறி சேர் ஆத்திகரும்
ஆத்திக நாத்திகரு மாமிவரை -ஓர்த்து நெஞ்சே
முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என விட்டு நடுச்
சொன்னவரை நாளும் தொடர்———68-
அஜ்ஞனனான விஷய பிரவணன் கேவல நாஸ்திகனைப் போலே -ஜ்ஞானாவானான விஷய ப்ரவனணன் ஆஸ்திக நாஸ்திகனைப் போலே
சாஸ்த்ரத்தில் ப்ராமாண்ய புத்தி இல்லாமல் தான் தோன்றியாகச் செய்து திரிகின்றவன் வெறும் நாஸ்திகன் –
சாஸ்த்ரங்களை பிரமாணமாக இசைந்து ஆஸ்திகன் என்று சொல்லத் தக்கவநாயும் அந்த சாஸ்திர வரம்பில் அடங்காமல் தோன்றினபடியே
செய்து திரிவது பற்றி நாஸ்திகனாமாயும் இருப்பவன் ஆஸ்திக நாஸ்திகன் எனப்படுவான் -ஆஸ்திகர்களே நமக்கு அநு வர்த்த நீயர்கள் -என்று அருளிச் செய்கிறார்
————————————————————————-
நல்ல மணம் உள்ள ஒன்றை நண்ணி இருப்பதற்கு
நல்ல மணம் யுண்டாம் நலமது போல் -நல்ல
குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக்
குணமதுவே யாம் சேர்த்தி கொண்டு——-69-
நயமது போல் -நலமது போல் -பாட பேதங்கள்
அனுகூல சஹவாசமும் பிரதிகூல சஹவாச நிவ்ருத்தியும் சதாசார்யா பிரசாதத்தால் வர்த்திக்கும் படி
பண்ணிக் கொண்டு போர்க் கடவன் -ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தி
———————————————————————
தீய கந்தம் உள்ளது ஒன்றைச் சேர்ந்து இருப்பது ஒன்றுக்குத்
தீய கந்தம் ஏறும் திறமது போல் -தீய
குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பாருக்குக்
குணமதுவேயாம் செறிவு கொண்டு ——–70-
ஆதலால் துஷ்ட சஹவாசம் அவர் நீயம் -சத்சஹவாசமே கர்த்தவ்யம் -என்றதாயிற்று
———————————————————————-
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப்
பின்னோர்ந்து தாமதனைப் பேசாதே –தன்னெஞ்சில்
தோற்றினதே சொல்லி இது சுத்த யுபதேச பர
வார்த்தை என்பார் மூர்க்கராவார்——-71-
பூர்வர்கள் அருளிச் செய்தவற்றை முறை வழுவாமே சதாசார்யா சந்நிதானத்தில் கேட்டு உணர்ந்து -பின்பு அதை அப்படியே மனனம் பண்ணி
தாங்கள் அதை அப்படியே பேச வேண்டியது ப்ராப்தமாய் இருக்க அங்கனம் பேசாமல் தமது உள்ளத்திலே தோற்றின தான் தோன்றி
அர்த்தங்களையே சொல்லி இந்த அர்த்தமே சுத்த சம்ப்ரதாய உபதேச பரம்பரையாய் வரலுற்றது என்று பொய்யும் சொல்லுமவர்களே மூர்க்கர் எனத் தகுந்தவர்கள் –
திருட பூர்வச்ருதோ மூர்க்க-பூர்வேப்ய ஸ்ருதம் –பூர்வ ஸ்ருதம் -த்ருடம் பூர்வ ஸ்ருதம் யஸ்ய ச திருட பூர்வஸ்ருத்த
உக்தமாகவும் சாரமாகவும் தான் தோன்றியாக சொல்லி உலகை வஞ்சிப்பவரே மூர்க்கர் -என்று அருளிச் செய்கிறார்
————————————————————————
பூர்வாச்சார்யர்கள் போத மனுட்டானங்கள்
கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் -தேறி
இருள் தரும் மா ஞாலத்தே இன்புற்று வாழும்
தெருள் தருமா தேசிகனைச் சேர்ந்து——–72-
———————————————————————-
இந்த யுபதேச ரத்ன மாலை தன்னைச்
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் -எந்தை
எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகிச்
சதிராக வாழ்ந்திடுவர் தாம் ———73-
பூர்வாசாரியர்களின் உடைய ஜ்ஞான அனுஷ்டானங்களை எடுத்துச் சொல்லுகின்ற மகான்களின் உடைய ஸ்ரீ சூக்திகளினால்
நீங்கள் தெளிவு பெற்று நல்லறிவை -நிதியாகக் கொண்டு -உபகரித்து அருளவல்ல சிறந்த ஆசாரியரை அடி பணிந்து
இவ்விருள் தரும் மா ஞாலத்திலே ஆனந்த நிர்ப்பரர்களாய் வாழுங்கோள்
நலமந்த மில்லதோர் நாடாகவே தோற்றும் -இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்
-இப்பத்தும் உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் -போலே -இதுவே தெருள் தரும் மா ஞாலமாகி விடும் என்ற திரு உள்ளம் தோன்றும் –
எம்பெருமானார் திரு உள்ளாத்திற்கு உகப்பான விஷயங்களையே தொடுத்து அருளிச் செய்த இந்த சொல் மாலையைச் சிந்தையிலே
அணிந்து கொள்ளுமவர்க்கு எம்பெருமானாருடைய பரம கிருபையே பேறாகும் என்று பலன் அருளிச் செய்து தலைக் கட்டி அருளுகிறார்
———————————————————————–
எறும்பி அப்பா அருளிச் செய்தது
மன்னுயிர்காள் இங்கே மணவாள மா முனிவன்
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை -உன்னிச்
சிரத்தாலே தீண்டின் அமானவனும் நம்மைக்
கரத்தாலே தீண்டல் கடன் –
74 சிம்ஹாச நாபதிகள் -74 பாசுரங்கள் பாடி அருள மா முனிகள் திரு உள்ளம் -அவரையே தெய்வமாக கொண்ட
எறும்பி அப்பா இறுதி பாசுரம் பணித்து பெரிய பெருமாள் இடம் திருவடி பணிந்து பிரார்த்திக்க அப்படியே பகவன் நியமனம் ஆயிற்று
இந்த உடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி –விரசை தனில் குளித்து அங்கு அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று -என்றபடி
முக்தி சாம்ராஜ்ய அனுபவத்துக்கு முன்னாக அமானவ கர ஸ்பர்சம் இன்றியமையாதது ஆகும் –
அது மா முனிகளின் பக்தர்களுக்கு நேருவது கடைமையாகும் -என்றும்
அது நேருவது அவசியம் அற்றது என்றும் இருவகைப் பொருளில் அருளிச் செய்கிறார்
————————————————-
சடரிபு பாத பத்மப் ருங்கோ வரவர யோகி கதாம் ருதாந்தரங்க
அகதயதுபதேச ரத்னமாலா விவ்ருதி ஸூ தாம் ஜனதார்ய யோகிவர்யா-
———————————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் .
எறும்பி அப்பா திருவடிகளே சரணம் –
திருவாய் மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .