எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26-
இம் மூன்றையும் மூன்று அதிகாரிகள் பக்கலிலே ஆக்கி ஆழ்வான் ஒருருவிலே பணித்தானாய்ப்
பின்பு அத்தையே சொல்லிப் போருவதோம் என்று அருளிச் செய்வர் –
அவர்கள் ஆகிறார் -ஆர்த்தோ ஜிஞாஸூ-கீதை -7-16-இத்யாதிப் படியே
ஐஸ்வர் யார்த்திகள்
ஆத்ம ப்ராப்தி காமர்
பகவத் பிராப்தி காமர் -என்கிற இவர்கள் –
சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப–கீதை -7-16-
பரதர்ஷப அர்ஜுந:-பரதரேறே அர்ஜுனா!
அர்தார்தீ-பயனை வேண்டுவோர்,
ஆர்த:-துன்புற்றார்,
ஜிஜ்ஞாஸு:-அறிவை விரும்புவோர்,
ஜ்ஞாநீ-ஞானிகள் என,
சதுர்விதா ஸுக்ருதிந: ஜநா:-நான்கு வகையான நற்செய்கையுடைய மக்கள்,
மாம் பஜந்தே-என்னை வழிபடுகின்றனர்.
நற் செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே,
துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என. நான்கு வகையார்–
எழுவார் –
தம் தாமுடைய த்ருஷ்ட பலங்களுக்கு ஈடாக மேலே சென்று ஆஸ்ரயிப்பார்-
பிரயோஜனம் கை புகுந்தவாறே போவார் ஐஸ்வர் யார்த்திகள் இறே
பொருள் கை உண்டாய் செல்லக் காணில் போற்றி என்று ஏற்று எழுவர் -திருவாய்மொழி -9-1-3-என்கிறபடியே –
விடை கொள்வார் –
உன்னை அனுபவித்து இருக்கப் பண்ணுமதும் வேண்டா –
எங்களை நாங்களே அனுபவித்து இருக்க அமையும் என்று ஆத்ம அனுபவத்தைக் கொண்டு போவார்
தலை யரிந்து கொள்ளுகைக்கு வெற்றிலை இடுவித்துக் கொள்ளுவாரைப் போலே
பலம் நித்யம் ஆகையாலே மீட்சி இல்லை இறே கைவல்யத்துக்கு –
ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் –
நித்ய யோக காங்ஷ மாணராய் உள்ளார் –
ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனான
சர்வேஸ்வரனை ஒரு காலும் பிரியக் கடவர் அன்றிக்கே எப்போதும் அனுபவிக்கக் கடவர்களாய் இருக்குமவர்கள்
யேன யேன தாத்தா கச்சதி -என்கிறபடியே
இளைய பெருமாளைப் போலே சர்வ அவஸ்தைகளிலும் கிட்டி நின்று அனுபவிக்கப் பெறுவார்கள் ஆய்த்து
எல்லார்க்கும் நினைவும் சொலவும் ஒக்கப் பரிமாறலாவது
பரம பதத்திலே அன்றோ என்னில்
நித்ய ஸூரிகளும் கூட அவனுடைய சௌலப்யம் காண வருகிறதும் திரு மலையில் அன்றோ -என்கிறார் –
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே –
இவர்கள் மூவருடைய வினைச் சுடர் உண்டு
பாபம் ஆகிற தேஜஸ் தத்வம்
அத்தை அவிக்குமாய்த்து திருமலையானது
ஐஸ்வர்ய விரோதி
ஆத்ம பிராப்தி விரோதி
பகவத் ப்ராப்தி விரோதி
இவை யாகிற வினைச் சுடரை நெருப்பை அவித்தால் போலே சமிப்பிக்கும்
மூவர்க்கும் உத்தேஸ்ய விரோதிகளைப் போக்கும் -என்றபடி –
சிலருக்கு சத்ரு பீடாதிகள்
சிலருக்கு இந்த்ரிய ஜெயம்
சிலருக்கு விஸ்லேஷம் –
வானோர் மனச் சுடரைத் தூண்டும் மலை –
விரோதி உள்ளார்க்கு அத்தைப் போக்கக் கடவதாய்
அது இல்லாத நித்ய ஸூரிகள் உடைய ஹ்ருதயத்தை
அவனுடைய சீலாதி குண அனுபவம் பண்ணுகையாலே
போக வேணும் என்னும் படி கிளைப்பிக் கொடா நிற்கம் திருமலையானது –
இங்கே வர வேணும் -என்னும் ஆசையை வர்த்திப்பியா நிற்கும்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே–
பகவத் பிராப்தி விரோதி –ஆத்மபிராப்தி விரோதி -ஐஸ்வர்ய பிராப்தி விரோதி
ஆன பாபங்களை எரிகிற நெருப்பை அவித்தால் போலே நசிப்பிக்கும் வேங்கடமே –
இங்கு உள்ளார் ஒழிவில் காலம் எல்லாம் -என்ன
அங்கு உள்ளார் -அகலகில்லேன் -என்னச் சொல்லும் –
———-
அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-55-
அவன் தமர் எவ்வினையராகிலும் –
அவன் தமர் எவ்வினையர் ஆகில் என்
இதுக்கு என்ன ஆராய விட்டவர்கள் அகப்பட ஆராயப் பெறாத பின்பு
வேறே சிலரோ ஆராய்வார்
இது தான் யமபடர் வார்த்தை
இத் தலையிலும் குண தோஷங்கள் ஆராயக் கடவோம் அல்லோமோ என்னில்
அவனுடையார் என்ன செயல்களை உடைத்தார் ஆகிலும்
அவனுக்கு அநு கூலர் ஆனவர்கள் விதித்த வற்றைத் தவிரில் என்
நிஷேதித்த வற்றைச் செய்யில் என் –
எங்கோன் அவன் தமரே என்று ஒழிவது அல்லால் –
எங்களுக்கு ஸ்வாமி யானவனுடையார் இவர்கள் என்று கடக்கப் போம் அல்லது –
ப்ரபவதி சம்யமனே மமாபி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
பரிஹர மது ஸூ தன பிரபன்னான் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
த்யஜ பட தூ ரதரேண தான பாபான்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-33-
நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர் –
இத்தை எல்லாம் ஆராய்வதாகச் சமைந்து இருக்கிற அவனுக்கு
அந்தரங்கர் ஆனாலும் ஆராய ஒண்ணாது கிடீர்
இப்படி ஆராய ஒண்ணாத படி இருக்கிறார் தான் ஆர் –
அரவணை மேல் பேராயர்க்கு ஆட்பட்டார்களோ என்னில்
அங்கன் அன்று
பேர் ஆராயப் பட்டு அறியார் கிடீர்
ஒரு பாகவதன் பேரை ஒரு அபாகவதன் தரிப்பது
அவனுடைய பேரும் கூட யமன் சதச்ஸில் பட்டோலை வாசித்துக் கிழிக்கப் பெறாது –
ஒரு பாகவதனுடைய பேரை
ஒரு அபாகவதன் தரித்தால் அவனுடைய பெரும் எம சதசிலே வாசிக்கப் பெறாது என்கிறது –
அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் –
அவன் படுக்கையை ஆராயில் இறே இவர்களை ஆராய்வது
அத்துறை நாம் ஆராயும் துறை அல்ல என்று கை விடும் அத்தனை –
செய்தாரேல் நன்று செய்தார் -என்று பிராட்டிக்கும் நிலம் அல்லாத விடத்தை
யமனோ ஆராயப் புகுகிறான் –
நாரணன் தம்மன்னை நரகம் புகாள்-பெரியாழ்வார் திரு மொழி -4-6-1-என்று ஒரு
மாம்ச பிண்டத்தை நாராயணன் என்று பேரிட்டால்
பின்னை அவனைப் பெற்ற தாயார் சர்வேஸ்வரனுக்குத் தாயாய்ப்
பின்னை நரக பிரவேசம் பண்ணக் கடவள் அல்லள் –
கிருஷ்ணனுக்கு அடிமை புக்கிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை –
தங்கள் அளவன்றிக்கே
தங்கள் பேரும் கூட
நாட்டார் கார்யம் ஆராய்கைக்கு ஆளாய் இருக்கிற யமனுக்கு
அந்தரங்க படராய் இருக்கிறவர்களால் ஆராயப்பட்டு அறியார் கிடீர் –
————-
தோளைத் தொழ அறியோம்–அத் தோளை தொழுவர் தாளைத் தொழும்
இத்தனை என்கிறார் –
தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி–43–
சக்ரவர்த்தி திருமகன் தாள் இரண்டும் -சரண்ய லஷணம் தான் இருக்கும் படி இதுவாகாதே –
அவன் திருவடிகள் இரண்டையும் –
ஆர் தொழுவார்-
ஏதேனும் ஜன்ம வ்ருத்தங்கள் ஆகவுமாம் –
ஏதேனும் ஞானம் ஆகவுமாம் –
இந்தத் தொழுகை யாகிற ஸ்வ பாவம் உண்டாம் அத்தனையே வேண்டுவது
ஒருவனுக்கு உத்கர்ஷ அபகர்ஷங்கள் ஆகிறன இது யுண்டாகையும்இல்லை யாகுமையும் இறே –
ஆரேனுமாக வமையும் -தொழுகையே பிரயோஜனம் –
பாற் கடல் சேர்ந்த பரமனைப் பயிலும் திரு வுடையார் யாவரேலும் அவர் கண்டீர் -திருவாய் -3-7-1-
ஆர் –
ராஷசனாக அமையும் –
குரங்குகளாக அமையும் –
ஷத்ரியனாக -அர்ஜுனன் -அமையும் –
பிசாசாக -கண்டகர்ணன் -அமையும் –
பாதம் அவை தொழுவது அன்றே –
தொழும் அவர்கள் ஆரேனுமாமாப் போலே அவர்கள் பக்கலிலும் திருவடிகள் உத்தேச்யம் -என்கிறார் –
அவன் தன்னை ஆஸ்ரயிக்கை ஆகிறது –
ஒருவன் கையைப் பிடித்துக் கார்யம் கொண்டவோபாதி –
வைஷ்ணவர்கள் முன்னாகப் பற்றுகை யாகிறது
மறுக்க ஒண்ணாத படி ஒருவன் காலைப் பிடித்துக் கார்யம் கொண்ட மாத்ரம் –
பாதமவை தொழு தென்றே –
அவர்களோடு ஒப்பூண் உண்ண வல்ல –
என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —
புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம் –
அழகு சேர்ந்த தோளானது எனக்குப் பண்ணும் தரமாகிறது –
சீர் கெழு தோள் –
அவர்களில் தமக்கு உள்ள வாசி –
இத் தோளைத் தொழ வமையும் இனி -புருஷார்த்த உபாயமாகத் தோற்றின சரீரம் இறே –
பாதமவை தொழுவதன்றே –
ததீயர் அளவும் வந்து நிற்கப் பெற்ற லாபத்தாலே
சீர் கெழு தோள் -என்கிறார் –
எட்டும் இரண்டும் ஏழும் மூன்றுமாக இருபது தோள்களையும்-முடி அனைத்தையும்
தாள் இரண்டும்-மற்றும் விழும்படிக்கு ஈடாக சரத்தை துரந்தவன்-ஆஸ்ரித விரோதி யாகையாலே-
நம்மாலே ஸ்ருஷ்டன் என்றும் பாராதே-முடியச் செய்தவனுடைய திருவடிகள் இரண்டையும்-
யாவர் சிலர் தொழுதார்கள்-ஏதேனும் ஜன்மம் ஆகிலும்
அவர்கள் உடைய தாளைத் தொழுகை அன்றோ-புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம்-
சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகள் இரண்டையும் தொழுமவர்களாய்
அபிமான ஹேது அல்லாத ஏதேனும் ஜென்ம வ்ருத்தாதிகளை உடையராய் இருக்கும் மஹா புருஷர்களுடைய
பரம உத்தேச்யமாக பிராமண பிரசித்தமான அந்தத் திருவடிகளைத் தொழுமதன்றோ –
அவர்களில் வியாவிருத்தனான என்னுடைய ததீயரைத் தொழ என்றால்
பல்கிப் பணைக்கும் அழகு சேர்ந்த தோள்களானவை-எனக்குச் செய்யும் உபகாரம் –
————
பகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-
குறி கொண்டு பகவானையே பஜிக்கும் அதிலும்-ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு
பற்றுகை சீரீயது என்கிறார் –
(இப்பாட்டின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அவதாரிகையில்
“பகவனையே பஜிக்குமதிலும் ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு பற்றுகை சீரியதென்கிறார்“ என்ற
(அச்சுப்பிரதி களிற் காணும்) வாக்கியம் பிழையுடையது,
“புருஷகாரமாகக் கொண்டு“ என்கிற வாக்கியம் ஏட்டுப் பிரதிகளில் காண்பரிது, சேரவும் மாட்டாது.
“பகவானையே பூஜிக்குமதிலும் ததீயரைப் பற்றுகை சீரியதென்கிறார்“ என்னுமளவே உள்ளது.
“ததீயரைப் புருஷகாரமாகப் பற்றுதல் சிறந்தது“ என்கிற அர்த்தமன்று இப்பாட்டுக்கு விஷயம்,
“ததீயரை உத்தேச்யராகப் பற்றுதல் சிறந்தது“ என்னுமர்த்தமே இப்பாட்டுக்குச் சீவன்.)–காஞ்சி ஸ்வாமிகள்
மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-
எதிரியான ஹிரன்யனைச் செறிந்த யுகிராலே யவனுடைய மார்வை இரண்டு கூறாக
அநாயாசேன பிளந்த-நரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு
ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்
அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –
மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு கூறாகக் கீறிய கோளரியை –
ஈஸ்வரன் என்று பாராதே-தனக்கு எதிரியான ஹிரண்யனை-
கூரிய உகிராலே மார்விரண்டு பிளவாகக் கீண்ட-நரசிம்ஹத்தை
வேறாக ஏத்தி இருப்பாரை –
வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –
அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப்
பல்லாண்டு -என்று-ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு
பாடும் பெரியாழ்வார் போல்வார்
வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம் –
சாத்தி இருப்பார் ஆகிறார் –
வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று-பெரியாழ்வார் பக்கலிலே நயச்த்த பரராய்
இருக்கும் ஆண்டாள் போல்வார் –
தவம் -ஸூ க்ருதம்-
———-
எல்லாப் புருஷார்த்தங்களிலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார் –
இப்படி கர்மாத் யுபாயங்கள் போலே பழுதாகை அன்றிக்கே பழுதற்ற உபாயம் தான் ஏது என்ன
பகவத் சமாஸ்ரயணமும் பாகவத சமாஸ்ரயணமும் பழுதற்ற வுபாயங்கள் –
இவை இரண்டு வுபாயங்களிலும் உத்க்ருஷ்டமான வுபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்கிறார் ஆகவுமாம் –
எம்பெருமானை ஆச்ரயிப்பதுபோல் காட்டிலும் பாகவதர்கள் பாதம் பணிதல் பாங்கு என்னும் பரம ரகஸ்யார்த்தை
வெளியிட்டு அருளுகிறார் -கீழே மாறாய தானவனை 18-பாசுரத்தில் மேலும் இத்தையே அருளிச் செய்கிறார்-
சித்திர்ப் பவதி வா நேதி சம்சய வுச்யுதஸேவி நாம் ந சம்சயோஸ்தி தத் பக்த பரிசர்ய ஆரதாத்மநாம் -மோக்ஷ ஏக ஹேது அன்றோ
-மார்பிலே கை வைத்து உறங்கலாம் -அதனால் -பழுதாகது ஓன்று அறிந்தேன்-என்று கம்பீரமாக அருளிச் செய்கிறார் –
பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-
பழுது இத்யாதி -பழுது அன்றியே இருப்பது ஓன்று அறிந்தேன்
பழுத் போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –
அது எங்கனே என்னில்
போக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய
திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு ஆஸ்ரயித்து
வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து
பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு ஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த
தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –
விண்டிறந்து
பரமபதத்தில் திரு வாசல் திறந்து -என்றுமாம் –
கலந்த வினை கெடுத்து–ஆத்மாவுடன் சேர்ந்த தீ வினைகளைத் தீர்த்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –பரமபத வாசலைத் திறந்து சிறப்புடனே எழுந்து அருளி இருக்கப் பெறுவர்
பாற்கடலான் பாதத்தை கண்டு இறைஞ்சுக்கை அன்றிக்கே -பாற் கடலான பாதம் தொழுவாரை
கண்டு இறைஞ்சுமவர் நல் வாழ்வு பெறுவார் என்றதாயிற்று –
ஸ்ரீ வசன பூஷணம் -பழுதாகாது ஓன்று அறிந்தே –என்பதை பூர்வ உபாயத்துக்கு பிரமாணம் என்றும்
நல்ல வென் தோழி/ மாறாய தானவனை -பாட்டுக்களை
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதற்கு பிரமாணம் –என்று அருளிச் செய்வது அறிக
——————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசைப்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-