கீழ்
மா காந்த நாரணர் வைகும் வகை -என்று வ்யாப்தியை பிரஸ்தாபித்து
இப்படி சர்வ வ்யாபகனான அவனோடு அநாதியாய் வருகிற சம்பந்தம் யுண்டாய் இருக்க
அத்தை அறியாதே
கீழ் சொன்ன மோஹாந்தரிலே-அந்ய தமராய் இருந்த நான்
ஆச்சார்ய சம்பந்தத்தால் அன்றோ உஜ்ஜீவித்தது என்று
ஸூவ லாபத்தை எப்போதும் அனுசந்தித்துப் போரு என்று
தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –
நாராயணன் திருமால் நாரம் நாம் என்னுமுறை
யாராயில் நெஞ்சே யநாதி யன்றோ -சீராரும்
ஆச்சார்யனாலே அன்றோ நாம் உய்ந்தது என்றோ
கூசாமல் எப்பொழுதும் கூறு—45-
திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் -என்கிறபடியே
அவன் ஸ்ரீ யபதி நாராயணன்
நாம் -நாரம் -என்கிற-இந்த அநாதய அயன சம்பந்தம் நிரூபிக்கில்
மனசே-இன்றாக யுண்டானது அன்றே-அநாதியாக வருகிறது அன்றோ –இப்படியாய் இருக்க
நெடும் காலம் சம்பந்த ஞானம் அன்றிக்கே அசித் பிராயமாய் இழந்து அன்றோ கிடந்தது
இப்போது
தத் சம்பந்தத்தை யுணர்த்தின-ஜ்ஞாநாதி குண பரி பூரணராய் இருக்கிற
ஸ்ரீ ஆச்சார்யனாலே அன்றோ நாம் உஜ்ஜீவித்தது என்று –
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் -என்கிறபடியே
லஜ்ஜை அபிமானங்களை விட்டு சர்வ காலமும் பிரசித்தமாக அனுசந்தித்துக் கொண்டு போரு –
இறையும் உயிரும் -இத்யாதி
ஆத்ம நோஹ்யதி நீசச்ய-
—————————————–
கீழ் ஸ்ரீ ஆச்சார்யனாலே அன்றோ நாம் உய்ந்தது -என்கிற
இத்தை விசேஷ நிஷ்டமாக்கி அருளிச் செய்கிறார் –
திருவாய் மொழிப் பிள்ளை தீ வினையோம் தம்மைக்
குருவாகி வந்து உய்யக் கொண்டு -பொருவில்
மதிதான் அளித்து அருளும் வாழ்வு அன்றோ நெஞ்சே
எதிராசர்க்கு ஆளானோம் யாம்—46-
பொருவில் -உபமான ரஹிதமான-
தொண்டர்க்கு அமுது உண்ண சொன்ன மாலையான ஸ்ரீ திருவாய் மொழி -என்றபடி
பூஸூரரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போக்யமாக திரு வவதரித்த ஸ்ரீ திருவாய்மொழியில்
அவகாஹித்து -அதில்
சப்த ரசம்
அர்த்த ரசம்
பாவ ரசம்
என்கிற இவற்றை அனுபவித்து-தத் ஏக நிஷ்டராய்
தத் வ்யதிரிக்த சாஸ்த்ரங்களை த்ருணவத் பிரதிபத்தி பண்ணி
ஸ்ரீ திரு வாய் மொழி யோட்டை சம்பந்தத்தையே நிரூபகமாய் யுடைய ராய்
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே சர்வ வித கைங்கர்யமே அநவரதம் செய்து கொண்டு போரா நிற்கிற
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை
(சடகோபர் தாசர் என்றே இன்றும் அருளப்பாடு உண்டே இவர் வம்சத்தாருக்கு )
ஒப்பிலா தீ வினையேனை உய்யக் கொண்டு -என்கிறபடியே
க்ரூர கர்மாக்களாய் இருக்கிற நம்மை
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே குருவாகி -என்றபடி
ஸ்ரீ ஆச்சார்யராய் திரு வவதரித்து-
நாம் இருந்த இடம் தேடி வந்து உஜ்ஜீவிக்கும்படி அங்கீ கரித்து
சாஸ்திர ஜ்ஞாநாதிகள் போல் அன்றிக்கே
உபமான ரஹிதமான ஸ்ரீ திரு மந்தரத்தால் பிறக்குமதான ஜ்ஞானத்தை யுபகரித்து அருளும் சம்பத் அன்றோ
மனசே-பிராப்த சேஷியான ஸ்ரீ எம்பெருமானார்க்கு அடிமையானோம் -நாம் –
பத த்ரய அர்த்த நிஷ்டை தான்-ததீய பர்யந்தமாய் அல்லாது இராது-என்று கருத்து –
————————————————
ஸ்ரீ எதிராசர்க்கு ஆளானோம் யாம் -என்ற ப்ரீதி யுத்ததியாலே
கீழே
மா கந்த நாரணானார் -என்றும்
நாராயணன் திருமால் -என்றும் ப்ரஸ்துதமான ஸ்ரீ நாராயண சப்தத்தோடு விகல்பிக்கும் படியாக
அதில்
சதுரையாய் இருப்பதான ஸ்ரீ ராமானுஜ -என்கிற திரு நாம வைபவத்தை வெளி இட வேண்டி அத்தை
வ்யதிரேக முகத்தாலே வெளி இட்டு அருளுகிறார் –
இராமானுசாய நம என்று இரவும் பகலும் சிந்தித்து
இரா மானுசர்கள் இருப்பிடம் தன்னில் இறைப் பொழுதும்
இரா மானுசர் அவர்க்கு எல்லா வடிமையும் செய்ய வெண்ணி
இரா மானுசர் தம்மை மானுசராக என் கொல் எண்ணுவதே—–47-
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் -என்கிறபடியே
ஸ்ரீ ராமானுஜாய நம -என்று திவா ராத்திரி விபாகம் அற அனுசந்திக்க பிராப்தமாய் இருக்க
அத்தைச் செய்யாது இருக்கிற
பசு சமரான மனுஷ்யர்கள் வர்த்திக்கிற ஸ்தலம் தன்னிலே ஷண காலமும் துஸ் சஹமாய் வர்த்தியாது இருக்கிற
ஸ்ரீ ஆழ்வான் போல்வாராய்
சாஸ்திர வச்யரான மனுஷ்ய ஜன்மாக்களுக்கு
எத் தொழும்பும் சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் -என்கிறபடியும்
சர்வ வித கைங்கர்யங்களையும் செய்ய எண்ணி இருக்க பிராப்தமாய் இருக்க
அத்தைச் செய்யாதே இருக்கிற க்ருதக்ன மனுஷ்யர்தங்களை
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேன் -என்கிறபடியே
பசு சமரான அவர்களை மனுஷ்யராக எப்படி எண்ணுவது
பஸூபிஸ் சமான -என்னும் இத்தனை –
——————————————————————-
கீழ்
எல்லா அடிமையும் செய்ய எண்ணி
ஸ்ரீ இராமானுசாயா -என்கிற பிரசங்கத்திலே
தம்முடைய வாகாதி கரணங்களை இப்படியே அவர்கள் விஷயத்தில் அனந்யார்ஹமாம்படி
ஸ்ரீ பெரிய பெருமாள் பண்ணி யருளின படியை
ப்ரீதியாலே பேசி அருளுகிறார் –
எண்ணாது என் நெஞ்சம் இசையாது என் நா இறைஞ்சாது சென்னி
கண்ணானவை யொன்றும் காணலுறா கலியார் நலிய
ஒண்ணாத வண்ணம் உலகு அளித்தோன் எதிராசன் அடி
நண்ணாதவரை யரங்கேசர் செய்த நலம் நமக்கே–48-
கலியார் நலிய ஒண்ணாத வண்ணம் -கலியில் உள்ளார் நலியாத படியும் –
கலி புருஷன் நலியாத படியும்
நலம் -சம்பத்து
இங்கே தேக சம்பத்தி இறே-
தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் -என்கிறபடியே
கலியானது-தன்னுடைய க்ரௌர்யத்தினாலே பாதியாதபடி லோகத்தை ரஷித்தவராய்
பேறு ஒன்றும் மற்று இல்லை -என்கிறபடியே
பிராப்ய பிராபகங்களான எம்பெருமானார் திருவடிகளைக் கிட்டி ஆஸ்ரியாதவர்களை
நையும் மனம் உன் குணங்களை எண்ணி -இத்யாதியாலும்
நித்யம் யதீந்திர -இத்யாதியாலும் சொல்லுகிறபடியே
தத் விஷயத்திலே பிரவணமான என்னுடைய மனஸ்ஸூ தொடக்கமான கரணங்கள் ஆனவைகள்
ஸ்மரித்தல்
ஸ்துதித்தல்
பஜித்தல்
தர்சித்தல்
ஆகிற ஸ்வ ஸ்வ கார்யங்களை செய்யாது –
சிந்தையினோடு கரணங்களைத் தந்த ஸ்ரீ ரெங்க ராஜரான ஸ்ரீ பெரிய பெருமாள்
அவை அந்ய சேஷம் ஆகாமல் நமக்குச் செய்த நன்மை இவை யாய்த்து –
இசையாது நா –மன பூர்வோ வாகுத்தர -என்கிறபடியே
அதுக்கு அனந்தர பாவிதான நாவுடைய வாயானது
நாவியிலா லிசை மாலைகள் ஏத்தி -என்கிறபடியே
ஸ்துதி ரூபமான சப்த சந்தர்ப்பங்களைப் பண்ண மாட்டாது –
இறைஞ்சாது சென்னி –
ப்ரணமாமி மூர்த்த்னா -என்னுமவருடைய -சென்னி இறே
கண்ணானவை ஒன்றும் காணலுறா –
கண் கருதிடும் காண
ஸ்ரீ மாதவாங்கரி -என்னும்படியான திருஷ்டிகள்-ஏக தேசமும் தர்சிக்க ஆசைப் படாது –
காணல் உறுகின்றேன் -(நான்முகன்-41 )-என்கிற இடத்துக்கு
காண ஆசைப் படுகிறேன் என்று இறே அருளிச் செய்தது –
காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -(நான்முகன் -41)-
காணல் உறுகின்றேன் – – இப்படி இவர் திரு மலையைக் காண ஆசைப் பட்டவாறே –
அவன் தான் திரு மலையில் சம்பத்துக் கிடக்க
வந்து இவர் திரு உள்ளத்திலே புகுந்து அருளினான் –
திருமலையில் சம்பத்தைக் காண ஆசைப்படா நிற்க என் மநோ ரதத்தை விசதம் ஆக்கினார் -என்கிறார் –
கலியார் -என்கிறது
ஏவினார் கலியார் -என்கிறபடியே-பாதகத்வித்தின் உறைப்பை பற்ற வாய்த்து –
———————————————-
எதிராசன் அடி நண்ணாதவரை எண்ணாது -இத்யாதியாலே
தமக்கு சம்சாரிகள் இடத்தில் யுண்டான வைமுக்யத்தை தர்சிப்பித்து மீள
அவர்கள் அனர்த்தத்தைக் கண்டு ஆற்ற மாட்டாதே
அவர்களுக்கு மோஷ உபாயமாக
ஸ்ரீ எம்பெருமானார் உடைய ஆஸ்ரயணாதிகளை விதிக்கிறார் –
நந்தா நரகத்து அழுந்தாமை வேண்டிடில் நா நிலத்தீர்
எந்தாதையான எதிராசனை நண்ணும் என்றுமவன்
அந்தாதி தன்னை யனுசந்திக்குமவன் தொண்டருடன்
சிந்தாகுலம் கெடச் சேர்ந்திரு முத்தி பின் சித்திக்குமே–49-
நந்தா நரகத்து அழுந்தா வகை -என்றும்
நரகத்திடை நணுகா வகை -என்றும் சொல்லுகிறபடியே
ஒரு கால் அனுபவித்து முடியாததாய்
மற்றை நரகம் -என்னும்படி
சம்சாரம் ஆகிற நரகத்தில் மக்னர் ஆகாமை அபேஷிதம் ஆகில்
நாலு வகைப் பட்ட பூமியில் உண்டான வர்களே –
எனக்கு ஜனகரான ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயிங்கோள்-
சர்வ காலத்திலும் மோஷைக ஹேதுவாய் இருக்கிற அவர் திரு நாமத்தை
பாட்டுக்கள் தோறும் பிரதிபாதிப்பதாய்-
அதேவ பிரபன்ன ஜன காயத்ரியாய்-
இருக்கிற அவர் விஷயமான ஸ்ரீ நூற்றந்தாதி தன்னை அனுசந்தியுங்கோள்-
உன் தொண்டர்களுக்கே -என்னும்படி
அவர் திருவடிகளிலே சபலராய் தொண்டு பட்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடன்
தத் இதர சஹவாசத்தால் யுண்டான மநோ துக்கம் எல்லாம் கெட
ஒரு நீராகப் பொருந்தி இருங்கோள்
ஆன பின்பு முக்தி யானது சம்சயம் அற்று சித்திக்கும் –
இத்தால்
இவருடைய ஆஸ்ரயணாதிகளுக்கு தானே
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தியைப் பண்ணும்-என்று கருத்து –
—————————————————————-
அவர்கள் ஆஸ்ரயிக்கிறோம் என்று ஆறி இருக்க மீளவும் அவர்களைக் குறித்து
ஏன் காலத்தை வ்யர்த்தமே போக்குகிறீர்கள்
அவர் திரு நாமத்தை ஸ்மரிக்க அதி துர்பலமான பலம் சித்திக்கும் என்கிறார் –
அவத்தே அருமந்த காலத்தைப் போக்கி யறி வின்மையால் இப்
பவத்தே யுழல்கின்ற பாவியர்கள் பல காலம் நின்று
தவத்தே முயல்பவர் தங்களுக்கும் எய்த ஒண்ணாத வந்தத்
திவத்தே யும்மை வைக்கும் சிந்தியும் நீ எதிராசர் என்றே—50
யத்னம் -அல்பம் -பலம் -அதிகம் –
திரு நாமம் அனுசந்திக்கைக்கு யோக்யமாய் இருப்பதான
ஸ்லாக்கியமான காலத்தை வ்யரத்தமே போக்கி
அஜ்ஞ்ஞானத்தாலே சம்சாரத்திலே பரிப்ரமிக்கிற பாபிகளாய் உள்ளவர்களே
சர்வ காலத்திலும் ஒருபடிப் பட நின்று தபஸ்சிலே உத்சாஹிக்குமவர்களாய் இருக்கும் அவர்களுக்கும்
பிராபிக்கப் போகாமல் இருப்பதாய்
தத்ஷரே பரமேவ்யோமான் -என்று சொல்லுகிற ஸ்ருதி பிரசித்தியை உடைத்தாய் இருப்பதான
அந்த ஸ்ரீ பரம பதத்திலே
நித்ய சம்சாரிகளான உங்களை ஏற்றி நித்யர் உடன் ஒரு கோவை யாக்கி வைக்கும்
அதுக்கு உடலாக கீழ்ச் சொன்னவைகள் தான் நேர்த்தி என்னலாம் படி
அதிலும் எளிதாய் இருப்பதான ஸ்ரீ எம்பெருமானார் திரு நாமத்தை
ஸ்ரீ எதிராசன் என்று நீங்கள் மனசிலே சிந்தியுங்கோள்
நேர்த்தி அல்பமாய்-பலம் அதிகமாய்-இருக்கும்
நேர்த்தி -யத்னம் –
—————————————————–
இனி
சம்சாரிகள் இழவைத் தான் சொல்ல வேணுமோ –
உம்முடைய நிலை இருந்தபடி என் என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக
அவர்களோபாதி அநாதி காலம் எல்லாம் வ்யர்த்தமே போய் இருக்க
அதன் இழவு இன்றிக்கே இருக்கிற எனக்கு தேவர் உடைய கிருபை யுண்டான பின்பு
தத் அலாபக் க்லேசம் யுன்டாய்த்து என்று ஸ்வ லாபத்தைப் பேசி அருளுகிறார்
இழவு -அலாப க்லேசம் –
என்றும் உளன் ஈசன் உயிரும் அன்றே உண்டு இக்காலம் எல்லாம்
அன்று அளவாகப் பழுதே கழிந்தது இருவினையால்
என்று இழவு இன்றி இருக்கும் என்நெஞ்சம் இரவு பகல்
நின்று தபிக்கும் எதிராசா நீ அருள் செய்த பின்னே –51-
தவிக்கும் -தபிக்கும் -பாட பேதங்கள் –
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை அன்றி இலை-என்கிறபடியே
ஒழிக்க ஒழியாத-அவிநாபாவ -நித்தியமான சம்பந்தம் உண்டாகையாலே
நியந்தாவான ஈஸ்வரன் என்று தொடங்கி சித்தனாய் இருக்கும் –
அப்படியே ஈசிதவ்யனான ஆத்மாவும்-
ப்ருதக் சித்த விசேஷணம் ஆகையாலே அன்றே உண்டாய் இருக்கும்
இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை -நான்முகன் திருவந்தாதி-7-
அகதியான எனக்கு நீ போக்கி கதி இல்லை
அப்படியே சர்வ பிரகார பரி பூர்ணனான உன்னுடைய க்ருபைக்கு வேறு சிலரை விஷயமாக உடையை எல்லை –
என்றும் ஒக்க இவ்வாத்மா உன் அருளுக்கே விஷயமாய் உன் கடாஷம் ஒழியில்
என் சத்தை இல்லையானபடி-மெய்யாய் இருக்கிறபடி கண்டாயே
அப்படியே-நீயும் என்னாலே உளையாய் என்னை ஒழிய இல்லை யாகிறாய்
இப்படி அன்று தொடங்கி
தேவர் விஷயீ காரம் பெற்ற இன்றளவாக யுண்டான என்னுடைய பிரபல கர்மத்தாலே-
சேஷி சேஷ சம்பந்த ஜ்ஞான கார்யமான கைங்கர்யத்துக்கு
அடைத்த இந்த அநாதி காலம் எல்லாம் வ்யர்த்தமே போயிற்று என்று
இழந்த காலத்துக்கு அனுதபியாமல் இருந்த என்னுடைய மனசானது
தேவர் விசேஷ கடாஷம் அருளிய பின்பு
திவா ராத்ர விபாகம் அற இதிலே ஒருப்பட்டு நின்று பரிதபியா நிற்கும் –
இது என்ன ஸ்வபாவம்
ஒரு கிருபா பிரபால்யம் இருந்தபடியே-
இருவினை -பெரிய வினைகள் என்றும் -புண்ய பாபங்கள் என்றும் ஆகவுமாம்-
———————————————————
அனுதாபாதிகள் யுண்டாகவே
ஸ்ரீ எம்பெருமானாருக்காக ஸ்ரீ பெரிய பெருமாள் –
ஸ்ரீ மான் சமாரூட பதங்க ராஜ -என்கிறபடி எழுந்து அருளி அபிமானித்து அருளும்
பேற்றின் கௌரவத்தை அனுசந்தித்து அருளுகிறார் –
கனக கிரி மேல் கரிய முகில் போல்
வினதை சிறுவன் மேற்கொண்டு -தனுவிடும்போது
ஏரார் அரங்கர் எதிராசர்க்காக என் பால்
வாரா முன்னிற்பர் மகிழ்ந்து —52-
தனு -சரீரம்
காஞ்சனஸ்ய கிரேஸ் ஸ்ருங்கே ஸ கடித்தோ யதோ யதா -என்றும்
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வர்ண மயமான மகா மேருவின் மேலே
பெரும் பவ்யம் மண்டி யுண்ட பெரு வயிற்ற கரு முகிலானது கினியப் படிந்து இருக்குமா போலே
பரபாக ரசா வஹமாம் படி-
விந்தை சிறுவன் என்னும்படியான ஸ்ரீ பெரிய திருவடி மேல் கொண்டு
தேக பாத சமயத்தில் தாய் முகம் காட்டுமா போல்
சௌந்தர் யாதிகளால் பூரணரான பெரிய பெருமாள்-ஸ்ரீ எம்பெருமானார்க்காக
நான் இருந்த இடத்தே வந்து ஹர்ஷ யுக்தராய் முன்னிற்பர் –
(தேவ பிரான் கரிய கோலத் திரு உருக் காண்பன் என்றார் போல் )
இத்தால்-
எனக்கு அபேஷிதமான முகமும் முறுவலும் காட்டி அனுபவிப்பித்து அருளுவர் –
என்பது நிச்சயம் -என்று கருத்து –
—————————————
இப்படி ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ பெரிய திருவடி மேல் கொண்டு வந்து திரு முக பிரதானம்
பண்ணும்படியை அனுசந்தித்து
அதுக்கு இடைச் சுவராய் பாபஸ்பத தேகத்துடன் துஸ் சஹமான துக்கங்களை அனுபவித்து இருக்க முடியாது
ஆகையால் ஹித பிரவர்த்தகரான தேவர் சகல துக்காஸ்பதமான சம்சாரத்தில் நின்றும்
அடியேனை சீக்கிரமாக உத்தரிப்பித்து அருள வேணும் -என்கிறார்
இதத்தாலே தென்னரங்கர் செய்கிறது என்று அறிந்தே
இருந்தாலும் தற்கால வேதனையின் கனத்தால்
பதைத்து ஆவோ வென்னும் இந்தப் பாவ வுடம்புடனே
பல நோவும் அனுபவித்து இப் பவத்து இருக்கப் போமோ
மதத்தாலே வல்வினையின் வழி யுழன்று திரிந்த
வல்வினையேன் தன்னை யுனக்கு ஆளாக்கிக் கொண்ட
இதத் தாயும் தந்தையுமாம் எதிராசா என்னை
இனிக் கடுக இப் பவத்தின் நின்றும் எடுத்தருளே –53-
ஆரப் பெரும் துயரே செய்திடினும் -இத்யாதிப்படியே
ஹித புத்யா பெரிய பெருமாள் க்ருபா பலமாக
துக்கங்களை அனுபவிப்பித்து அருளுகிறார் என்று அறிந்தே இருந்தாலும்
அந்த அந்த காலத்தில் யுண்டான வேதனையின் மிகுதியாலே துடித்து
அந்த துஸ் சஹதையால் யுண்டான விஷாதத்தாலே துக்க ஸூசகமான சப்தங்களை சொல்லும்
இந்த பாப சரீரத்தோடு பஹூ துக்கங்களை அனுபவித்து
துக்கா வஹமான இந்த சம்சாரத்தில் இருக்க சக்யமோ –
பாவியேன் செய்து பாவியேன் -என்கிறபடியே தேக மதத்தாலே பிரபல கர்மத்தின் மார்கத்தாலே
அதுவே யாத்ரையாய் வர்த்தித்த மகா பாபியான என்னை
சத்துக்களுக்கு ஆஸ்ரயணீயராய் இருக்கிற தேவர்க்கு
அடிமை யாக்கிக் கொண்டு அருளின ஹிதத்தை நடத்தவும்
மாதாவும் பிதாவுமாய் இருக்கிற தேவர் சம்பந்தத்தை அறிந்த பின்பு
அடியேனை சீக்கிரமாக இந்த சம்சாரத்தில் நின்றும்
மாந்தாரய -என்னும்படி எடுத்துக் கரை ஏற்றி அருள வேணும் –
அவர்ஜ நீய சம்பந்தம் அடியாக இறே உத்தரிப்பித்து அருளுவர்-என்று கருத்து –
———————————————————
இப்படி இவர் அபேஷித்த படியே
ஸ்ரீ எம்பெருமானாரும் இவர் அபேஷிதம் எல்லாம் செய்வாராக எண்ணி இருக்க
இவருக்கு அது பற்றாமல்-ஒரு பகல் ஆயிரம் ஊழியாய் மீளவும் அவர் தம்மைப் பார்த்து
சர்வவித பந்துவாய் இருக்கிற தேவர்
நான் இந்த தேஹத்தோடே இருந்து துக்கப் படாமல்
என்று தான் நலமந்தம் இல்லாதோர் நாட்டிலே சேரும்படி ஏற்றி அருளுவது என்கிறார் –
இன்னும் எத்தனை நாள் இவ் வுடம்புடனே
இருந்து நோவு படக் கடவேனையோ
என்னை இதினின்றும் விடுவித்து நீர்
என்று தான் திரு நாட்டில் ஏற்றுவீர்
அன்னையும் அத்தனும் அல்லாத சுற்றமும்
ஆகி என்னை அளித்து அருள் நாதனே
என்னிதத்தை இராப்பகல் இன்றியே
ஏகம் எண்ணும் எதிராச வள்ளலே—–54-
வள்ளல் -பிரத்யுபகார ரஹிதமாக யுபகரிக்கும் உதாரர்-
அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான் -என்கிறபடியே
பிரிய ஹிதங்களைப் பண்ணுகிற மாதா பிதாக்களும்
மற்றும் அனுக்தமான அசேஷ பந்துக்களும் எல்லாமுமாய்-என்னை ரஷித்து அருளுகிற நாதனே –
என் மனம் ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே -என்கிறபடியே
என்னுடைய ஹிதத்தை திவா ராத்திரி விபாகம் அற ஒருபடி சிந்திக்கிற பரம உதாரராய்
எதிகளுக்கு நாதர் ஆனவரே
உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ -என்கிறபடியே
தேவர்க்கு சேஷ பூதன் ஆன பின்பு
இன்னம் எத்தனை காலம் இந்த தேஹத்திலே இருந்து வேதனை படக் கடவேன்
ஐயோ-அடியேனை பந்தமான இந்த தேகத்தில் நின்றும் முக்தனாம்படி பண்ணி
என்று தான் திரு நாட்டின் உள்ளே ஏற்றி அருளுவுதீர் –
அந்நாளும் ஒரு நாள் ஆமோ
——————————————
செய்த அம்சத்தில் ‘க்ருதஞ்ஞதையும் செய்ய வேண்டிய அம்சத்தில் அபேஷிதையும்
அதிகாரிக்கு வேண்டுவது ஒன்றாகையாலே
அந்த கிருதஞ்ஞதா ஸூசகமாக ஸ்ரீ எம்பெருமானார் யுடைய பிரசாதத்தாலே
தாம் பெற்ற பேறுகளை அனுசந்தித்து -வித்தராய் – அருளுகிறார் –
தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை யுணவாகப் பெற்றோம்
மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுதுபோக்காகப் பெற்றோம்
பின்னை ஓன்று தனில் நெஞ்சு போராமை பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே–55-
உள்ளுதல் -விசாரித்தல் –
தர்சநீயமான ஸ்ரீ கோயிலிலே –
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆள் கொள்வாராய்-
அன்போடு தென் திசை நோக்கிப் பள்ளி கொண்டு அருளுகிற
ஸ்ரீ பெரிய பெருமாள் நிர்ஹேதுக கிருபைக்கு லஷ்யமாகப் பெற்றோம் –
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கத் திருப்பதி -என்றும் –
ஆராமம் சூழ்ந்த அரங்கம் -என்றும்
தலையரங்கம் -என்றும்
சொல்லுகிறபடியே -அகில திவ்ய தேச பிரதானமான
ஸ்ரீ திருவரங்கத் திருப்பதியே நித்ய வாசஸ் ஸ்தானமாகப் பெற்றோம் –
பரபக்தியாதி கல்யாண குணங்கள் பொருந்தி இருக்கிற ஸ்ரீ ஆழ்வாருடைய
தொண்டர்க்கு அமுதான வகுள பூஷண வாக் அம்ருதத்தையே அன்னமாகப் புஜிக்கப் பெற்றோம்-
தேவு மற்று அறியேன் -என்கையாலே அவர்களை சிரித்து இருப்பார் -என்னும்படியான
ஸ்ரீ மதுர கவிகளுடைய திவ்ய ஸூக்திப்படியே
யதீந்திர மேவ நிரந்தரம் சிஷே வேதை வதம்பரம் -என்றும்
உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா மன்னு புகழ் சேர் வடுக நம்பி தன்னிலைமை -என்றும்
நாமும் நம்முடையாரும் பேசும் படியான சரம பர்வ நிஷ்டையே நிஷ்டையாகப் பெற்றோம் –
தத் பிரதிபாதகங்களான நம்முடைய பூர்வாச்சார்யர்கள் உடைய திவ்ய ஸூக்திகளான
ரஹஸ்யங்களை-நெஞ்சு தன்னால் தேறலுமாம் –என்னும்படி
மேல் எழ அன்றிக்கே ஆந்தரமாக அனுசந்திக்கப் பெற்றோம்
அதில் ஆதர அதிசயத்தை உடைய நமக்கு மற்று ஒன்றில் பொழுது போக்காமல்
முழுதும் அவற்றையே கால ஷேபமாகப் பெற்றோம் –
இப்படியான அநந்தரம் தத் இதர கிரந்தங்களில் ஒன்றிலும்-மனஸ்ஸூ சலியாமல்
இதிலியே பிரதிஷ்டிதமாம் படி இருக்கப் பெற்றோம்
இது எல்லாம் ஒரு தட்டும் -தான் ஒரு தட்டுமாய் இருக்குமதாய்
இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து இருக்கையும் -என்னும்படி அரிதாய் இருப்பதான
பர உச்சாராயம் கண்டால் அசஹிஷ்ணுதை இல்லாத மஹாத்மத்தையும் லபிததோமே-
இது ஒரு மகா லாபம் இருந்தபடியே —
—————————————-
ஸ்ரீ மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம் -என்று
தம்முடைய நிலையை வெளி இடா நின்று கொண்டு
அதுக்கு அனுரூபமாக அவர் திருவடிகளிலே கைங்கர்யத்தை அபேஷிககிறார்-
உன் தன் அபிமானமே உத்தாரகம் என்று
சிந்தை தெளிந்து இருக்கச் செய்த நீ -அந்தோ
எதிராசா நோய்களால் என்னை நலக்காமல்
சதிராக நின் திருத் தாள் தா –56
எதிகளுக்கு நாதர் ஆனவரே -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்னும்படி
தேவருடைய அபிமானமே இவ்வாத்மாவுக்கு உத்தாரகம் என்று
தெளிவுற்ற சிந்தையர் -என்னும்படி-மன பிரசாதம் யுண்டாய்
தன் நிஷ்டராய் இருக்கும்படி பண்ணி -உபகரித்து அருளின தேவர்
ஐயோ
வேதனைகளால் அடியேனை நலக்கேடு பண்ணாமல்
நேமாம் பிரக்ருதிம் ஸ்தூல சூஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய -என்றபடி சாமர்த்தியமாக
உன் பாத யுகமாமேர் கொண்ட வீடு -என்கிறபடியே தேவர் திருவடிகளையே பிரசாதித்து அருள வேணும் –
—————————————————
இப்படி நீர் சொல்லுகிற நிர்பந்தங்கள் எல்லாம் கேட்டு நாம் உம கார்யம் செய்கைக்கு
எந்த சம்பந்த பிராபல்யம் கொண்டு தொடருகிறீர்-என்ன
ஸ்ரீ பிள்ளை திருவடிகளை ஆஸ்ரயித்த ராஜ குல மகாத்ம்யத்தாலே ஒரு வஸ்து என்று அபிமானித்து
அடியேனுடைய அபராதம் பாராத தேவர்
யதீஸ்வர ஸ்ருணு ஸ்ரீ மன் கிருபயா பரயா தவ -என்கிறபடியே
அடியேனுடைய முக்த ஜல்பிதத்தை செவி தாழ்த்து கேட்டு அருள வேணும் என்கிறார் –
தேசிகர்கள் போற்றும் திருவாய் மொழிப் பிள்ளை
வாச மலர்த்தாள் அடைந்த வத்து வென்று -நேசத்தால்
என் பிழைகள் காணா எதிராசா அடியேன்
புன்பகர்வைக் கேளும் பொறுத்து—57-
தேசிக குல கூடஸ்தரான ஸ்ரீ ஆழ்வார் உடைய அசேஷ வ்ருத்தியிலும் அந்விதராய்
அதுவே யாத்ரையாகச் செய்து கொண்டு போருகையாலே
செந்தமிழ் வேத திருமலை ஆழ்வார் வாழி-என்று ஸ்ரீ ஆச்சார்யர்களாலே மங்களா சாசனம் பண்ணும் படியான
மகாத்ம்யத்தை உடையரான ஸ்ரீ பிள்ளை யுடைய சௌகந்த்ய சௌகுமார்ய யுக்தமான
திருவடிகளை ஆஸ்ரயித்து
சேஷத்வ ஆஸ்ரயமான வஸ்து என்கிற ஸ்நேஹத்தால்-அடியேனுடைய அபராதங்களை தர்சியாதே
அதில் அவிஞ்ஞாதா வாய் இருக்கிற தேவர் அடியேனுடைய தோஷ யுக்தமான
முக்த ஜல்பிதத்தை சீறாமல் சஹித்து நின்று சாதாரமாக திருச் செவி சாத்தி அருள வேணும் –
———————————————————–
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை வாச மலர்த்தாள் அடைந்தது – என்கிற மாத்ரமேயோ
அவராலே லப்த ஞானனான எனக்கு-த்வத் சம்பந்த ஞானம் இல்லையோ -என்கிறார்-
எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால்
உன் தன உறவை உணர்த்திய பின் -இந்த யுயிர்க்கு
எல்லா வுறவும் நீ என்றே எதிராசா
நில்லாதது வுண்டோ என் நெஞ்சு —-58-
ஸ்ரீ திருமந்தரம் மாதாவும் பிதா ஸ்ரீ ஆச்சார்யனும் என்று அருளிச் செய்வார்கள் -என்கிறபடியே
எனக்கு ஜனகரான ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை தம்முடைய நிர்ஹேதுக கிருபையாலே
தேவர் திருவடிகளிலே சர்வ வித பந்துத்வத்தையும்-அஜ்ஞ்ஞாதஞாபனம் பண்ணி ரஷித்து அருளின
அநந்ரம்
இப்படி யுண்டான சம்பத்தத்தை அறிந்த இவ்வாத்மாவுக்கு மாத்ரா பிரதிபாத்யமான நவ வித சம்பந்தமும்
தேவர் என்று அத்யவசித்து அதில் நிலை நில்லாதே இருக்குமது உண்டோ -என்னுடைய மனஸ்ஸூ –
தந்தை நல் தாய் தாரம் தனயர் பெரும் செல்வம் என் தனக்கு நீயே -என்றும்
அல்லாச் சுற்றமுமாகி -என்றும் அன்றோ இருப்பது-
————————————–
இப்படி தேவர் திருவடிகளிலே சம்பந்த ஞானத்தை உடைய எனக்கு
ஹித பரரான ஸ்ரீ பெரிய பெருமாள்
ஸ்ரீ பெரிய திருவடியை மேற்கொண்டு வந்து
முக தர்சனம் யுண்டாக்கி
தாமே மார்க்க சிந்தை பண்ணி
தேக விமோசனம் பண்ணும் கால அவதியை
அருளிச் செய்ய வேணும் என்கிறார் –
எந்தை திருவரங்கர் ஏரார் கருடன் மேல்
வந்து முகம் காட்டி வழி நடத்த -சிந்தை செய்து இப்
பொல்லா வுடம்பு தனைப் போக்குவது எந்நாள் கொலோ
சொல்லாய் எதிராசா சூழ்ந்து —–59-
எனக்குத் தந்தையும் தாயும் ஆவாராய் ஸ்ரீ கோயிலை இட்டு நிரூபிக்கும் படியான ஸ்ரீ பெரிய பெருமாள்
அஞ்சிறைப் புள் பாகரான ஆகாரம் தோன்ற
சௌந்தர் யாதிகளால் மிக்கு இருக்கிற ஸ்ரீ பெரிய திருவடி மேல்
கொண்டு எழுந்து அருளி
சரீர வியோக சமயத்திலே
எனக்கு அபேஷிதமான கஸ்தூரி திரு நாமத்தையும்
நல் கதிர் முத்தம் வெண்ணகை செவ்வாய் -என்று முறுவலை யுடைத்தான
ஒளி மதி சேர் திரு முகத்தையும் காட்டி அனுபவிப்பித்து
அரங்கத்து உறையும் இன் துணைவனான தான் அர்ச்சிராதி மார்க்கத்திலே கொண்டு போய்-
நயாமி -யில் படியே வழி நடத்த மனனம் பண்ணி –
உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே-என்னும்படியே
அதுக்கு அந்தர பாவியாக வந்த ஹேயமான தேஹம் தன்னை தேவர்க்காகப் போக்கி அருளுவது எந்நாள்
அத்தை நான் தேறி இருக்கும்படி விசாரித்து அருளிச் செய்து அருளுவீர்
பூர்ணே சதுர்தசே வர்ஷே -என்று நாள் அவதி இட்டு
பின்பு
ஆருரோ ஹரதம் ஹ்ருஷ்ட -என்று ஹ்ருஷ்ட யுக்தராய் இருந்தால் போலே
அது கொண்டு நான் ஹ்ருஷ்டனாக இருக்கலாய்த்து
அன்றிக்கே
சூழ்ந்து -என்கிறது-
ஸ்ரீ பெரிய பெருமாள் அவா அறச் சூழ்ந்தபடி யாகவுமாம்–
சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து -என்னும் இடத்துக்கு
விசாரித்து -என்று இறே வியாக்யானம் பண்ணி அருளினார்கள்-
—————————————
இனி
நம் பேற்றுக்கு நாம் தவரிக்க வேணுமோ – ஸ்ரீ பெரிய பெருமாள்
ஸ்ரீ எம்பெருமானார்க்கு பண்ணி அருளிய பேறுகள் எல்லாம் அவர் திருவடிகளிலே சம்பந்தம் உடைய நமக்கு
தாயப் பிராப்தமாய் இருப்பது ஓன்று அன்றோ
என்று அத்தைத் தாம் பெற்றதாக திரு உள்ளத்தோடு கூடி ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –
இந்த வரங்கத்து இனிது இரு நீ என்ற அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் -சிந்தை செய்யில்
நம்மதன்றோ நெஞ்சமே நற்றாதை சொம் புதல்வர்
தம்மதன்றோ தாய முறை தான் —60-
த்வயம் அர்த்த அனுசந்தாநேன சஹாசதைவம் வக்தா யாவச் சரீரபாதம் அத்ரைவ ஸ்ரீ ரெங்கே ஸூ கம் அஸ்வ -என்று
அருளிச் செய்து -அநந்தரம் –
நித்ய கிங்கரோ பவிஷ்யசி மாதே பூதத்ர சம்சய
இதி மயை வஹ் யுக்தம்
அத ஸ்தவம் தத்வதோமத் ஜ்ஞான தர்சன பிராப்தி ஷூ நிஸ் சம்யச் ஸூ க மாஸ்வ-என்னும் அளவாக
தேக பாதம் தொடங்கி
கைங்கர்ய பர்யந்தம் உண்டான பேறுகள் எல்லாம்
நாமே தலைக் கட்டித் தருகிறோம் என்று
ஸ்ரீ பெரிய பெருமாள் நமக்கு ஜனகரான ஸ்ரீ எம்பெருமானாருக்கு வழங்கி அருளின வரத்தை நிரூபிக்கில்
அவர்க்கு அவர்ஜ நீயரான நம்மது அன்றோ –
அது எப்படி என்னில்
நிருபாதிக பிதாவானவன் ஸ்வம்-தாய பிராப்தியாலே புத்திரன் தனக்கேயாய் அன்றோ இருப்பது
ஆகையால் நம் பிராப்திக்கு நாமே யத்தனிக்க வேண்டா எல்லாம் சித்தமாய் அன்றோ இருக்கிறது
இனி அவர் இடத்தில் ந்யஸ்த பரராய் இருக்கும் அத்தனையே வேண்டுவது-
ஆக
இத்தால் உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் ஸ்ரீ பெரிய பெருமாளாலே பெற்று ஸ்ரீ உடையவராய்
அத்தாலே ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயியாய்-பிரபன்ன ஜன கூடஸ்தராய்
இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே-
ருசி காரயமாக ஸ்ரீ யதீந்திர பிரவணரான ஸ்ரீ ஜீயர் பண்ணி அருளின
பிராப்ய பிரார்த்தனை
அவர் அபிமான அந்தர்பூதர் எல்லாருக்குமாய் அத்தாலே ஸ்ரீ எம்பெருமானார் பிரசாதத்தைப் பெற்று
நித்ய விபூதியிலே நிரந்தர பகவத் அனுபவ கைங்கர்ய நிரதராய் வாழப் பெறுவார்கள்
என்ற அர்த்தம் சொல்லித் தலைக் கட்டிற்று ஆயிற்று –
ஸ்ரீ எதிராசா ஸ்ரீ எதிராசா என்று சம்போதிக்கிறது
எல்லாம் தமக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி யுன்டாகையாலும்
யதஸ் ஸூத்த சத்வா -என்கிறபடி
ஸ்ரீ எதிகளுக்கு நாதர் ஆகையாலும் அத்தை அடிக்கடி ஆதரித்து அருளிச் செய்கிறார் —
———————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்