Archive for the ‘அஷ்ட பிரபங்கள்’ Category

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி – -61-80-

January 25, 2022

மாதம்பத் துக்கொங்கை யுமல்குற் றேரும் வயிறுமில்லை
மாதம்பத் துக்குறி யுங்கண்டிலேம் வந்து தோன்றினை பூ
மாதம்பத் துக்கெதிர் மார்பா வரங்கத்து வாழ் பரந்தா
மாதம்பத் துக்கருத் தில்லார் பிறப்பென்பர் வையகத்தே –61-

பூ மாது அம்பத்துக்கு எதிர் மார்பா – தாமரை மலரில் வீற் றிருக்கிற திருமகளாரது கண்களுக்கு இலக்காய்
விளங்குகின்ற திருமார்பினழகை யுடையவனே!
அரங்கத்து வாழ் பரந்தாமா – திருவரங்கத்தில் நித்திய வாசஞ்செய்கின்ற பரந்தாமனே!
மா தம்பத்து – பெரிய தூணிலே,
கொங்கையும் – தனங்களும்,
அல்குல் தேரும் – தேர்த் தட்டுப் போன்ற அல்குலும்,
வயிறும் -, இல்லை -; மாதம் பத்து குறியும் கண்டிலேம் – (கர்ப்ப காலமாகிய) பத்து மாசத்துக்கு முரிய கர்ப்ப
சின்னங்களையும் (அத்தூணிலிருந்தனவாகக்) கண்டோமில்லை; (அங்ஙனமிருக்கவும்),
வந்துதோன்றினை – (தூணிலிருந்து நரசிங்கமூர்த்தியாக) வந்து அவதரித்தாய்; (இந்நுட்பத்தை யுணராமல்),
தம் கருத்து பத்து இல்லார் – தமது கருத்திலே (உன்விஷயமான) பக்தி யில்லாதவர்கள்,
வையகத்து பிறப்பு என்பர் – பூமியிலே (உனக்குக் கரும வசத்தால் நேர்ந்த) பிறப்பென்று (அதனைச்) சொல்வார்கள்; (எ – று.)

சாதாரணமான பிறப்புக்கு உரிய சின்ன மொன்று மில்லாமல் உனது நரசிங்காவதாரம் விலக்ஷணமாயிருக்கவும்
அதனையுமுட்படப் பிறப்பென்று இகழ்வது, உன்பக்கல் பக்தி யில்லாதவர்கள் அவதார ரகசிய ஞான மில்லாமையாற்
சொல்லும் பேதைமைச் சொல்லேயென்பது கருத்து.
“மண்ணும் விண்ணுமுய்ய, மூதண்டத்தானத்தவதரித்தானெனின் முத்தி வினைத்,
தீதண்டத் தானத்தனுவெடுத்தானெனிற் றீநரகே”,

“மாயன் தராதலத்து, மீனவதாரம் முதலானவை வினை யின்றி
இச்சை, யானவ தாரறிவா ரவரே முத்தராமவரே” என்பர் பிற பிரபந்தங்களிலும்.

ஜீவாத்மாக்கள் தேவதிர் யங்மநுஷ்ய ஸ்தாவர ரூபங்களாய்ப் பிறப்பது போலக் கரும வசத்தினாலன்றி,
பரமாத்மா மத்ஸ்ய கூர்மாதி அவதாரங்கள் செய்வது துஷ்ட நிக்ரக சிஷ்ட பரி பாலநத்தின்பொருட்டுத் தான் கொண்ட
இச்சையினாலேயே யாகுமென்ற இவ் வுண்மையை யுணர்தல், அவதார ரஹஸ்ய ஞ்ஜாநம் எனப்படும்.

பத்து மாதக் குறி – மசக்கை நோய், உடல் விளர்த்தல், வயிறு பருத்தல், முலைக் கண் கறுத்தல் முதலியன.

“பீரமலர்ந்த வயாவுநோய் நிலையாது, வளைகாய்விட்டபுளியருந்தாது, செவ்வாய் திரிந்து வெள்வாய்பயவாது,
மனை புகையுண்டகருமணிடந்து, பவளவாயிற் சுவைகாணாது, பொற்குடமுகட்டுக் கருமணியமைத்தெனக்,
குங்குமக்கொங்கையுந் தலைக்கண்கறாது, மலர வவிழ்ந்த தாமரைக் கயலென, வரிகொடு மதர்த்த கண் குழியாது,
குறிபடு திங்களொருபதும் புகாது, தூணம் பயந்த மாணமர் குழவி” என்ற கல்லாடம், இங்குக் காணத்தக்கது.

பரந்தாமன் என்ற வடசொல் – மேலான இடத்தையுடையவ னென்றும், சிறந்த சோதிவடிவமானவ னென்றும் பொருள்படும்.
பக்தி என்ற வடசொல் ‘பத்து’ என்று விகாரப்படுதலை, “பத்துடையடியவர்க் கெளியவன்” என்ற திருவாய்மொழியிலுங் காண்க.
மஹா, ஸ்தம்பம், மாஸம், அம்பகம் என்ற வடசொற்கள் விகாரப் பட்டன. கொங்கையும் மல்குல், மகரவொற்று – விரித்தல்

———–

வைகுந்தர் தாமரை போற்பாதர் நாகத்து மாதர்புடை
வைகுந்த மேற்கொண்டு இருந்தார் வடிவைந்தின் வாழுமிடம்
வைகுந்தம் பாற்கடன் மா நீர் அயோத்தி வண் பூந்துவரை
வைகுந்த மன்பர் மனம் சீரரங்கம் வடமலையே–62-

வை – கூர்மையான,
குந்தர் – குந்தமென்னும் ஆயுதத்தை யுடையவரும்,
தாமரை போல் பாதர் – செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை யுடையவரும்,
மாதர் புடைவை – கோப ஸ்திரீகளுடைய சேலைகளை,
நாகத்து – புன்னை மரத்தின் மேலும்,
குந்தம் மேல் – குருந்த மரத்தின் மேலும்,
கொண்டு இருந்தோர் – கவர்ந்து கொண்டு சென்று ஏறி யிருந்தவருமாகிய திருமால்,
வடிவு ஐந்தின் – ஐந்து வடிவத்தோடும்,
வாழும் – வாழ்கிற,
இடம் – இடங்களாவன, (முறையே),
வைகுந்தம் – பரமபதமும்,
பால் கடல் – திருப்பாற்கடலும்,
மா நீர் அயோத்தி வள் பூ துவரை – மிக்க நீர் வளமுள்ள அயோத்தி வளப்பமுள்ள அழகிய துவாரகை ஆகிய நகரங்களும்,
வைகும் தம் அன்பர் மனம் – (சஞ்சலப்படாது) நிலை நிற்கிற தமது அடியார்களுடைய மனமும்,
சீர் அரங்கம் வடமலை – ஸ்ரீரங்கம் வடக்கிலுள்ள திரு வேங்கடமலை என்னுந் திவ்வியதேசங்களுமாம்; (எ – று.)

வடிவு ஐந்து என்றது – பரத்வம் வியூகம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சை என்ற ஐவகை நிலைகளை.
இவற்றில், பரத்வமாவது – பரமபதத்தில் எழுந்தருளியிருக்கும் நிலை.
வியூகமாவது – வாசுதேவ சங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்தர்களாகிய நான்குரூபத்துடன் திருப்பாற்கடலில் எழுந்தருளியிருக்கும் நிலை.
விபவம் – ராம கிருஷ்ணாதி அவதாரங்கள்.
அந்தர்யாமித்வம் – சராசரப் பொருள்க ளெல்லாவற்றினுள்ளும் எள்ளினுள் எண்ணெய்போல மறைந்து வசித்தல்;
அடியார்களின் மனத்தில் வீற்றிருத்தலும் இதில் அடங்கும்.
அர்ச்சை – விக்கிரகரூபங்களில் ஆவிர்ப்பவித்தல்.

வலனோங்கு பரமபத மா மணி மண்டபத்தில் அமர்
நலனோங்கு பரம் பொருளாய் நான்கு வியூகமும் ஆனாய்
உபயகிரிப்புய ராமனொடு கண்ணன் முதலான விபவ வுருவமும் எடுத்து
வீறும் உயிர் தொறும் குடிகொள் அந்தர்யாமியுமான தமையாமே எளிதாக
இந்த நெடு வேங்கடத்தில் எல்லாரும் தொழ நின்றோய்–என்பது இங்கு நோக்கத்தக்கது.

அப்பொழுது கண்ணபிரான் ஏறினது புன்னைமர மென்றும், குருந்த மர மென்றும் இருவகையாகக் கூறுத லுளதாதலால்,
காலபேதத்தால் இரண்டையுங் கொண்டு கூறின ரிவ ரென்க.
இனி, ‘வைகுந்தந்தாமரை போற்பாதர்’ என்று பாடங்கொண்டு,
நாகத்து – (காளியனென்னும்) பாம்பின்மேல், வை – வைத்த, குந்து – குந்துகிற (சிறிதுதூக்கியெடுத்து நட னஞ்செய்கிற),
அம் தாமரை போல் பாதர் – அழகிய தாமரைமலர்போன்ற திருவடிகளையுடையவர் என்று உரைத்தலும் அமையும்;
குந்துபாதம் = குஞ்சிதபாதம்:
‘வைகுந்தந் தாமரைபோற் பாதர் நாகத்து’ –
“பாதமாம் போதைப் படத்துவைத்தார்” என்றாற் போலக் கொள்க; என்றது,
காளியன் முடியில் தமதுதிருவடி பதிந்த தழும்பு என்றும் நிலையாகவிருக்கும்படி அழுந்தவைத்தவ ரென்ற பொருளை விளக்கும்;

‘ஓ சர்ப்பராசனே! நீ கருடனுக்கு அஞ்ச வேண்டாம்; உன்சிரசில் என்திருவடி பொறித்த வடு இருத்தலைக் கண்டு
உன்னை அவன் ஒன்றுஞ் செய்யமாட்டான்’ என்று கண்ணன் காளியனுக்கு வரமளித்தமை காண்க.

வை – உரிச்சொல்; “வையே கூர்மை” என்பது, தொல்காப்பியம். குந்தம் – ஈட்டியென்ற ஆயுதம்;
இது, மற்றைப்படைக்கலங்கட்கும் உபலக்ஷணம்.
எம்பெருமான் விசுவ ரூபத்தில் மிகப் பல கைகளுடையனாய் அவற்றில் ஏந்தும் ஆயுதங்களிற் குந்தமும் ஒன்றாம்.

“வடிநுதிக்குந்தம் வலமிடம் வாங்குவ”,
“வெங்கணை யத்திரள் குந்தநிறப்படை வெம்புமுலக்கைகள் போர்,……
தங்கிய சக்கர பந்தி தரித்தன தண் பல கைத்தலமே” என்பன காண்க.

குந்தம், தாமரஸம், பாதம், நாகம், வைகுண்டம், அயோத்யா, த்வாரகா, ஸ்ரீ – வடசொற்கள்.
திருமாலின் திருப்பதிகளுள் தலைமை பெற்றனவான கோயில் திருமலைகளைக் கூறினது, பிறவற்றிற்கும் உபலக்ஷணமாம்.

————–

வடமலை தென்மலை கச்சி குறுங்குடி மானிற்பது
வடமலை வேலை யரங்கம் குடந்தை வளருமிடம்
வடமலை கொங்கைத் திருவோடிருப்புவை குந்தங்கர
வடமலை யன்ப ருளநடை யாட்ட மறை யந்தமே –63-

மால் – திருமால்,
நிற்பது – நின்ற திருக்கோலமாக எழுந் தருளியிருக்குமிடம்,
வடமலை தென்மலை கச்சி குறுங்குடி – வடக்குத் திருமலையாகிய திருவேங்கடமும்
தெற்குத் திருமலையாகிய திருமாலிருஞ்சோலை மலையும் திருக் கச்சி யத்திகிரியும் திருக் குறுங்குடியுமாம்;
வளரும் இடம் -(அப்பெருமான்) பள்ளி கொண்டு திருக் கண் வளர்ந்தருளுமிடம்,
வடம் அலை வேலை அரங்கம் குடந்தை – ஆலிலையும் அலைகளை யுடைய திருப்பாற் கடலும் ஸ்ரீரங்கமும் திருக்குடந்தையுமாம்;
வடம் அலை கொங்கை திருவோடு இருப்பு – ஆரங்கள் அசையப் பெற்ற தனங்களை யுடைய திருமகளுடன்
வீற்றிருந்த திருக்கோலமாக எழுந்தருளியிருக்கு மிடம்,
வைகுந்தம் – பரமபத மாம்;
நடை – நடந்து சென்று சேரு மிடம்,
கரவடம் மலை அன்பர் உளம் – கபடத்தை யொழித்த அடியார்களுடைய மனமாம்;
ஆட்டம் – திருவுள்ள முகந்து நடனஞ்செய்யுமிடம்,
மறை அந்தம் – வேதாந்தமாகிய உபநிஷத் துக்களாம்; (எ – று.)

முதல்வாக்கியத்திலுள்ள ‘மால்’ என்பதை மற்றை வாக்கியங்களிலுங் கூட்டுக; முதனிலைத்தீவகம்.
திருவேங்கடம் – நூற்றெட்டுத் திவ்வியதேசங் களுள் வடநாட்டுத்திருப்பதி பன்னிரண்டில் ஒன்று.
திருமாலிருஞ்சோலை மலையும், திருக்குறுங்குடியும் – பாண்டியநாட்டுத்திருப்பதி பதினெட்டிற் சேர்ந்தவை.
கச்சி – தொண்டைநாட்டுத்திருப்பதி இருபத்திரண்டில் ஒன்று; பெருமாள்கோவில் என்று சிறப்பாக வழங்கும்.
அரங்கமும், குடந்தையும் – சோழநாட்டுத்திருப்பதி நாற்பதிற் சேர்ந்தவை.
ஆலிலையிற் பள்ளிகொள்ளுதல், பிரளயப்பெருங்கடலில். வேதாந்தம் எம்பெருமானது சொரூபத்தையும்
குணஞ் செயல்களையும் மகிமையையுமே எடுத்துப்பாராட்டிக் கூறுதலால்,
அதில் அப்பெருமான் மிக்ககுதூகலத்துடன் நிற்கின்றன னென்பார், ‘ஆட்டம் மறையந்தம்’ என்றார்.
கச்சி – காஞ்சீ என்ற வடசொல் லின் விகாரம்.
மால் – பெருமை, அடியார்களிடத்து அன்பு, திருமகள்பக்கல் மிக்க காதல், மாயை இவற்றை யுடையவன்.
நிற்பது – வினையாலணை யும்பெயர்.
வடம் – வடசொல்; இந்த ஆலமரத்தின்பெயர், முதலாகுபெய ராய், அதன் இலையை உணர்த்திற்று. வடம் = வடபத்திரம்.
இருப்பு, நடை, ஆட்டம் – தொழிலாகுபெயர்கள்.
நிற்பது முதலியவற்றிற்குப் பிறபல தலங்களும் உள்ளனவாயினும், இச்செய்யுளிற் சிலவற்றையே எடுத்துக் கூறினார்.
மலை அன்பருளம் – வினைத்தொகை.

—————-

அந்தக ராசலம் வந்தாலுனை யழை யாதிருப்பார்
அந்தக ராசலங் கா புரியார்க்கு அரங்கா மறையின்
அந்தக ராசலக் கூக்குர லோயுமுன் னாழ் தடங்கல்
அந்தக ராசலத் தேதுஞ்ச நேமி யறுக்கக் கண்டே –64-

ராச லங்கா புரியார்க்கு – தலைமை பெற்ற இலங்காபுரி யில் வாழ்ந்த (இராவணன் முதலிய) அரக்கர்களுக்கு,
அந்தக – யமனானவனே!
அரங்கா – ரங்கநாதனே!
மறையின் அந்த – வேதாந்தத்தில் எடுத்துக் கூறப்படுபவனே!
கரஅசலம் கூக்குரல் ஓயும்முன் – கஜேந்திராழ்வான் (ஆதிமூலமேயென்று உன்னைக்) கூவியழைத்து முறையிட்ட ஓலம் அடங்குதற்கு முன்னமே,
ஆழ் தடம் கலந்த கரா சலத்தே துஞ்ச நேமி அறுக்க – ஆழ்ந்த தடாகத்திற் பொருந்திய முதலையானது
அந்நீரிலே யிறக்குமாறு (நீ பிரயோகித்த) சக்கராயுதம் (அதனைத்) துணிக்க,
கண்டு – பார்த்தும்,
அந்தகர் – ஞானக் கண் குருடரான பேதையர்கள்,
சலம் வந்தால் – (தங்கட்குத்) துன்பம் நேர்ந்த காலத்து,
உனை அழையாதிருப்பார் – (அதனைத் தீர்க்குமாறு) உன்னை அழையாமலிருப்பார்கள்;
ஆ – அந்தோ! (எ – று.)

ஆ – இரக்கக்குறிப்பிடைச்சொல்; அவர்களுடைய பேதைமையையும் வினைப்பயனையுங் குறித்து இரங்கியவாறு. ”

வேங்கடத்தாரையும் ஈடேற்ற நின்றருள் வித்தகரைத்
தீங்கடத்தாரை புனைந்து யேத்திலீர் சிறியீர் பிறவி
தாங்கடத்தாரைக் கடத்தும் என்று யேத்துதீர் தாழ் கயத்து
ளாம் கடத்தாரை விலங்குமன்றோ சொல்லிற்றைய மற்றே –திருவேங்கடத்து அந்தாதி

அந்தகர், சலம், அந்தகன், ராஜலங்காபுரீ, அந்தம், கராசலம், ஜலம், நேமி – வடசொற்கள்.
கரா – க்ராஹ மென்ற வடசொல்லின் சிதைவு. (பிராணிகளை) விடாது பிடித்துக்கொள்வது என்று காரணப்பொருள்படும்.
ராஜலங்காபுரியார் – லங்காபுரிராசர் எனினுமாம்.
கர அசலம் – துதிக்கை யையுடைய மலை: எனவே, யானையாயிற்று; வலிமை பருமைகளிலே மலைபோன்ற தென்க: தீர்க்கசந்தி.
துஞ்சுதல் – தூங்குதல்; இறத்தலைத் துஞ்சுத லென்பது – மங்கலவழக்கு: மீண்டும் எழுந்திராத பெருந்தூக்க மென்க.
அழையாதிருப்பார் என்பதில், இரு – துணைவினை. அழையாது – இருப்பார் என்று பிரித்து,
அழையாமல் அத்துன்பத்திலேயே உழன்றி ருப்பார்கள் என்று உரைத்தலுமொன்று.
‘கண்டு’ என்பதில் உயர்வு சிறப் பும்மை விகாரத்தால் தொக்கது;
கண்டும் அதன் பயனாகிய அழைத்தலைச் செய்யாமை பற்றி, குருட ரென்றார்.

————-

அறுகு தலைப் பெய் பனி போன்ற தாதுருவாய்ப் பிறத்தல்
அறுகு தலைப் பிள்ளை யாய்க்காளை யாய்க்கிழ மாகியையள்
அறுகு தலைச் செய்து வீழ்காய் தாநென்னுமாரிருளை
அறுகு தலைக்கோல் பணி யரங்கா நின் கண் ஆசை தந்தே –65-

கு – பூமியை,
தலை – முடியின் மேல்,
கொள் – கொண்டு சுமக்கின்ற,
பணி – ஆதிசேஷனிடத்துப் பள்ளிகொண்டருள்கின்ற,
அரங்கா – ரங்கநாதனே!
அறுகு தலை பெய் பனி போன்ற – அறுகம்புல்லின் நுனியில் வீழும் பனிபோலச் சிறிய,
தாது – இந்திரியம்,
உரு ஆய் – மனிதவடிவ மாகப் பரிணமித்து,
பிறந்து – (பின்பு) ஜனித்து, (பிறகு),
அலறு – அழுகிற,
குதலை பிள்ளை ஆய் – மழலைச்சொற்களையுடைய பாலனாகி,
காளை ஆய் – (அதன்பின்னர்) யௌவநபருவமுடையவனாய்,
கிழம் ஆகி – (அப்பால்) மூப்படைந்து,
ஐ அளறு உகுதலை செய்து – கோழையாகிய சேறு சிந்துதலைச் செய்து,
வீழ் – இறக்கிற,
காயம் – உடம்பை,
நான் என்னும் – நான் என்று நினைத்து அபிமானிக்கிற அகங்காரமாகிய,
ஆர் இருளை – போக்குதற்கு அரிய (எனது)மனவிருளை,
அறு – நீக்கு:
நின்கண் ஆசை தந்து – உன் பக்கல் பக்தியை (எனக்கு) உண்டாக்கி; (எ – று.)

நின் கண் ஆசைதந்து, காயம் நானென்னும் ஆரிருளீ அறு என இயைத்து முடிக்க.

காயம் நானென்னும் ஆரிருள் – தானல்லாத உடம்பை யானென்று கருதி அதனிடத்துப் பற்றுச்செய்யும் மயக்கம்;
இது, அகப்பற்று எனப்படும்.
ஆர்இருள் – பண்புத்தொகை; வினைத்தொகையாய், நிறைந்தஇரு ளெனினுமாம்.
ஆரிருள் – முச்சுடர்களினொளி முதலியவற்றாற் போக்கு தற்குஅரிய அகவிருள்: அஜ்ஞாநாந்தகாரம்;
சரீரத்தை ஆத்மாவென்று மாறு படக்கருதும் விபரீதஞானம்.

முதல்மூன்றடிகளில் யாக்கையினியற்கையை யெடுத்துக்கூறினார்;
(இதனை, “ஒளிகொள்நித்திலமொண்பவளச்செறு, விளைய வித்திய தென்ன நல்வீரியம்,
தளிர்நிறத்தெழுதாய் கருவிற்பனித் துளியிற்சென்றுபொருந்தித்துளக்குறும்” என்பது முதலாகப் பாகவதத்திற் பரக்கக்காணலாம்.)

தாது, காயம், கு, பணீ, ஆசா – வடசொற்கள்.
குதலை – நிரம்பாமென் சொல். காளை – இளவெருது: அதுபோலக் கொழுத்த பருவமுடையானுக்கு இலக்கணை.

———–

ஆசுக விக்கு நிகரெனக்கில்லை என்றற் பரைப்பூ
ஆசுக விக்கு வில் வேள் வடிவா வறி வாலகத்திய
ஆசுக விக்கு வலய மன்னா வென்ற ரற்றி யிரந்து
ஆசுக விக்கும் புலவீர் புகழ்மின் அரங்கனையே –66-

ஆசு கவிக்கு எனக்கு நிகர் இல்லை என்று – ஆசு கவிபாடுதலில் எனக்கு ஒப்பாவார் எவருமில்லை யென்று காட்டுபவராய்,
அற்பரை – புல்லர்கள் பலரை,
‘பூ ஆசுகம் இக்கு வில் வேள் வடிவா – மலர்களாகிய அம்புகளையும் கரும்பாகிய வில்லையுமுடைய மன்மதன் போலழகிய வடிவ முடையவனே!
அறிவால் அகத்தியா சுக – ஞானத்தினால் அகத்தியனையும் சுகனையும் போன்றவனே!
இ குவலயம் மன்னா – இந்தப் பூமண்டலத்துக்கு அரசனே!’
என்று அரற்றி – என்று தனித்தனி புகழ்ந்து விளித்துப் பிதற்றிக் கவி பாடி,
இரந்து – (அவர்களைக் கூறை சோறு முதலியன) வேண்டி,
ஆசு கவிக்கும் – குற்றங்களால் மூடப்படுகிற,
புலவீர் – புலவர்களே! –
அரங்கனை புகழ்மின் – நம்பெருமாளைப் புகழுங்கள்; (எ – று.)

பந்தத்துக்கு ஏதுவான நர ஸ்துதி செய்து கெடுவதை விட்டு மோக்ஷத்துக்கு ஏதுவான திருவரங்க நாதனைத் துதி செய்து
உய்யுங்களென்று உபதேசஞ் செய்தார்.

என்னாவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள்
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்
மின்னார் மணி முடி விண்ணவர் தாதையைப் பாடினால்
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே -ஆழ்வார்

ஆசுகவிக்கு – உருபுமயக்கம். ஆசுகவி – வடமொழித்தொடர். ஆசுகவி – நால்வகைக்கவிகளுள் ஒருவகை; அதாவது

மூச்சு விடு முன்னே முன்னூறும் நானூறும் ஆச்சு என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ
இம்மென்னு முன்னே ஏழு நூறும் எண்ணூறும் அம்மென்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ
எழுந்த ஞாயிறு விழுவதன் முன்னம் கவி பாடினது எழு நூறே –நிமிஷக் கவிராயர் -என்னும்படி) விரைவிற் பாடுங் கவி.
(மற்றவை – மதுரகவி, சித்திரகவி, விஸ்தாரகவி.)

தாமரைமலர் அசோகமலர் மாமலர் முல்லைமலர் நீலோற்பலமலர் என்ற ஐந்தும் – மன்மதனுக்கு அம்பாம்.
அகத்தியன் -தமிழ்ப் பாஷையை வளர்த்த முனிவன். சுகன் – வியாச முனிவனது குமாரன்:
அவனினும் மேம்பட்ட அறிவொழுக்கங்களை யுடையவன். தென்மொழி யுணர்வு மிகுதி யுடைமையைக் குறித்தற்கு அகத்தியனே யென்றும்,
வடமொழியுணர்வு மிகுதி யுடைமையைக் குறித்தற்குச் சுகனே யென்றும் விளிப்பரென்க.
இங்குக் குறித்த விளிகள் நான்கும், வடிவழகு அறிவு ஒழுக்கம் செல்வம் இவற்றின் சிறப்பைக் காட்டு மென்றுங் கொள்ளலாம்.

அல்பர், ஆசுகம், இக்ஷு, அகஸ்த்யன், சுகன், குவலயம் – வடசொற் கள்.
அகஸ்த்யன் என்ற பெயர் – (விந்திய) மலையை அடக்கியவ னென்று பொருள்படும்; அகம் – மலை.
மூன்றாமடியில், சுகம் என்று எடுத்து, மன்னனுக்கு அடைமொழியாக்கி, இன்பத்தை யனுபவிக்கிற அரசனே யென்றலு மொன்று.
நான்காமடியில், ஆசு உகவிக்கும் என்று பதம் பிரித்து, குற்ற முண்டாக மகிழ்விக்கிற என்று பொருள் கொள்ளலுமாம்.

———–

கனக விமான மற்றீனர்க்கு உரைக்கிலென் கால் பெற்றவா
கனகவி மானற் கருடப் புள்ளூர்த்தியைக் கான்மலர்கோ
கனகவி மானம் புவிமான் றடவரக் கண் வளரும்
கனகவி மானத் தரங்கனை நாச்சொல்லக் கற்ற பின்னே –67-

கால் பெற்ற – வாயு பகவான் ஈன்ற,
வாகன கவி – வாகன மாயமைந்த குரங்காகிய அநுமானையும்,
மால் நல் கருடன் புள் – பெருமையை யுடைய அழகிய கருடப் பறவையையும்,
ஊர்தியை – ஏறி நடத்துபவனும்,
கோகனக விமான் – தாமரை மலரில் வாழும் திருமகளும்
அம் புவி மான் – அழகிய பூமி தேவியும்,
கால் மலர் தவர – (தனது) திருவடித் தாமரைகளைத் தடவ,
கண் வளரும் – அறிதுயிலமர்கிற,
கனக விமானத்து – சுவர்ண மயமான விமாநத்தை யுடைய,
அரங்கனை -ரங்கநாதனுமாகிய எம்பெருமானை,
நா சொல்ல கற்ற பின் – (எனது) நாவினாற் புகழ்ந்து சொல்லப் பயின்ற பின்பு,
கனம் கவி – பெருமை பொருந்திய பாடல்களை,
மானம் அற்று – மானங்கெட்டு,
ஈனர்க்கு உரைக்கிலென் – அற்பர்கள் விஷயமாக (யான்) பாடேன்; (எ – று.)

‘நர ஸ்துதியாகக் கவி பாடலாகாதென்று பரோபதேசஞ் செய்யத் தலைப் பட்டீரே,
நீர் அங்ஙனம் நர ஸ்துதி செய்ததில்லையோ?’ என்று புலவர்கள் தம்மைக் குறித்து ஆசங்கித்ததாகக் கொண்டு,
‘யான் அரங்கனைத் துதிக்கக் கற்ற பின் ஈனர்க்குக் கவி யுரைக்கிலேன்’ என்றாரென்க.
அதற்கு முன்பு அறியாப் பருவத்தில் ஒருகால் மனிதரைப் பாடியிருந்தால் அது ”
அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்” –என்றபடி அமையு மென்பது, உட்கோள்.

சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ
என்னாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னாதெனா வென்று வண்டு முரல் திருவேங்கடத்து
என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே-

சீர் பூத்த செழும் கமல திருத் தவிசின் வீற்று இருக்கும்
நீர் பூத்த திரு மகளும் நில மகளும் அடிவருட –அறி துயில் இனிதமர்ந்தோய்–திருவரங்க கலம்பகம் –

கால் பெற்ற வாகன கவி மானற் கருடப் புள்ளூர்தி – சிறிய திருவடியை இராமாவதாரத்திலும்
பெரிய திருவடியை மற்றை எப்பொழுதிலும் வாகனமாகக் கொண்டு அவர்கள் தோள் மேலேறி வருபவன்,
கோகனகவிமான் அம்புவிமான் கான்மலர் தடவரக் கண் வளரும் –

கநகவி, மாநம், ஹீநர், வாஹநகபி, கோகநதம், புலி, கநகவிமாநம் என்ற வட சொற்கள் விகாரப்பட்டன.
கால் மலர் – மலர் போன்ற கால் : முன் பின்னாகத்தொக்க உவமத்தொகை.
கோகநதம் என்ற வடசொல் – கோகமென்னும் நதியில் ஆதியிலுண்டானதென்றும்,
சக்கரவாகப் பறவைகள் தன்னிடத்து மகிழ்ந்து விளையாடப் பெற்றதென்றும் காரணப் பொருள் கூறப்பெறும்.
வி – வீ என்பதன் குறுக்கல்; வீ – மலர். மான் – மான் போன்ற பார்வையை யுடைய பெண்ணுக்கு உவமையாகுபெயர்.
தடவர, வா – துணை வினை. தடவு வா என்ற இரண்டு வினைப் பகுதி சேர்ந்து ஒரு சொல் தன்மைப் பட்டு விகாரமடைந்து தடவா என நின்றதென்க.
கண் வளர்தல் – கண்மூடித் துயிலுதற்கு இலக்கணை.
உரைக்கிலென், கு – சாரியை, இல் – எதிர்மறை யிடை நிலை. உரைக்கில் என் என்று பதம் பிரித்து,
(எல்லாப் புருஷார்த்தங்களையும் பெருமையோடு பெறுமாறு) அரங்கனைப் புகழக் கற்ற பின்பு மானமிழந்து
ஈனர் மேற் கவி பாடுதலால் என்ன பயனென்று உரைத்தலு மொன்று. “நான் சொல்ல” என்றும் பாட முண்டு.

———–

கற்றின மாயவை காளையர் வான் கண்டு மீனினைவ
கற்றின மாயமு நீ கன்று காளையராகிப் பல்ப
கற்றின மாயர் பரிவுறச் சேரி கலந்தமையும்
கற்றின மாய வொண்ணா வரங்கா செங்கமலற்குமே –68–

அரங்கா – ! –
கன்று இனம் ஆயவை – கன்றுகளின் கூட்டங்களும்,
காளையர் – (இடையர் சாதிச்) சிறு பிள்ளைகளும்,
வான் கண்டு மீள் நினைவு அகற்றின – தாம் வானத்தை யடைந்து மீண்டமை பற்றிய ஞாபகத்தை யொழித்த,
மாயமும் – அற்புதமும், –
நீ -,
கன்று காளையர் ஆகி – அக் கன்றுகளும் ஆயச் சிறுவர்களுமாக வடிவு கொண்டு,
பல் பகல் – வெகு காலமளவும்,
தினம் – நாள் தோறும்,
ஆயர் பரிவு உற சேரி கலந்தமையும் – (தம் தமக்கு உரிய) இடையர்கள் கண்டு (தம் பக்கல் முன்னினும்)
அன்பு மிகுமாறு இடைச்சேரியிற் சேர்ந்து வந்த விசித்திரமும், –
செம் கமலற்கும் – சிவந்த (உனது நாபித்) தாமரை மலரில் தோன்றியவனான பிரம தேவனுக்கும்,
இனம் கற்று ஆய ஒண்ணா – இன்னமும் ஆராய்ந்து அறிய முடியாதனவா யிருக்கின்றன; (எ – று.)

வான் கண்டது பிரமன் மாயையினாலாயினும், வான் கண்டு மீண்டமை பற்றிய நினைவு சற்றுமில்லாதபடி அகற்றியது மாயவனது மாயை யென்க.
மெய்ச் சிறுவரின் மேலும் மெய்க் கன்றுகளின் மேலும் உள்ள பரிவினும் மிக்க பரிவு போலிச் சிறுவரின் மேலும்
போலிக் கன்றுகளின் மேலும் உண்டானது, எம்பெருமான் கொண்ட வடிவமாதலினாலென்பர்.
கமலற்கும், உம் – உயர்வு சிறப்பு; உனது எதிரில் மாயை செய்ய வந்தவனுக்கும் உனது பெருமாயைகள் அறியப்படா என்றபடி.
எல்லா மாயைக்கும் மேம்பட்ட மாயை செய்ய வல்லாய் நீ யென்பது குறிப்பு.
கன்று + இனம் = கற்றினம்; வேற்றுமையில் மென் றொடர் வன் றொடராயிற்று.
ஆயவை – முதல் வேற்றுமைச் சொல்லுருபு.
பகல் – நாளுக்கு இலக்கணை. தினம் என்றதில், தொறுப் பொருளதாகிய உம்மை விகாரத்தால் தொக்கது,
உற – மிகுதி யுணர்த்தும் உறு என்ற உரிச் சொல்லின் மேற் பிறந்த செயவெனெச்சம்.
சேரி – இங்குத் திருவாய்ப்பாடி. கற்று ஆய – ஆய்ந்து கற்க என விகுதி பிரித்துக் கூட்டுக.
இனம் – இன்னம் என்பதன் தொகுத்தல். ஒண்ணா – ஒன்றா என்பதன் மரூஉ.

————-

கமலங் குவளை மடவார் தனம் கண்கள் என்றுரைத்த
கமலங் குவளை முதுகாகியும் கரை வீர் புனல் கா
கமலங் குவளை விளையாடரங்கன் விண் காற்றுக் கனல்
கமலங் குவளையுண் டான்றொண்ட ராயுய்ம்மின் காம மற்றே –69-

மடவார் – மாதர்களுடைய,
தனம் கண்கள் – கொங்கைகளையும் கண்களையும்,
கமலம் குவளை என்று உரைத்து – (முறையே) தாமரை மொட்டும் நீலோற் பலமலருமா மென்று புனைந்துரைத்து,
மலங்கு வளை முதுகு ஆகியும் அகம் கரைவீர் – வருந்துகிற கூன் முதுகான பின்பும் (முற்ற மூத்த பிறகும்)
(மகளிர் பக்கல் ஆசையால்) மனமுருகுகின்றவர்களே! –
(நீங்கள்),
காமம் அற்று – (இத் தன்மையதான) பெண்ணாசையை யொழித்து,
விண் காற்று கனல் கமலம் கு அளை உண்டான் – ஆகாசம் வாயு அக்நி ஜலம் பூமி ஆகிய பஞ்ச பூதங்களையும்
வெண்ணெயையும் அமுது செய்தவனும்,
புனல் காகம் மலங்கு வளை விளையாடு அரங்கன் – நீர்க் காக்கைகளும் மலங்கு என்ற சாதி மீன்களும் சங்குகளும் விளையாடுகிற
(நீர் வளம் மிக்க) ஸ்ரீரங்கத்திலெழுந் தருளியிருப்பவனுமான நம் பெருமாளுக்கு,
தொண்டர் ஆய் – அடியார்களாகி,
உய்ம்மின் – உஜ்ஜீவியுங்கள்; (எ – று.)

தீ வினைக்குக் காரணமான பெண்ணாசையை யொழித்து, வீடு பெறுமாறு எம்பெருமானுக்கு அடியார்களாகி ஈடேறுங்கள் என்பதாம்.
சிற்றின்பத்தால் உய்யீர், பேரின்பம் பெற்று உய்யப் பாரும் என்பது, குறிப்பு.
முதலடியில், கமலம் தனம் குவளை கண் என முறையே சென்று இயைதல், முறைநிரனிறைப் பொருள்கோள்; வடிவுவமை.
ஐம்பெரும்பூதங்களை யுட்கொள்ளுதல், மகா பிரளய காலத்தில். வெண்ணெ யுண்டது,
கிருஷ்ணாவதாரத்தில். விண் காற்று கனல் கமலம் கு என்ற ஐம்பூத முறைமை, உற்பத்தி கிரமம் பற்றியது.
கமலம், குவளை – முதலாகு பெயர்கள். ஓசை நயத்தின் பொருட்டு, காற்றுக் கனல் என வலி மிக வில்லை.

————

காமனத்தால் விழ ஊதியக் காவை கவரரங்கன்
காமனத்தா வென்று நைவார்க்கு அமுதன் கல் நெஞ்சார்க்கு இரங்
கா மனத்தான ளக்கும் கடல் பார் கலம் போன்றது மீ
கானமத் தாமரையோன் கங்கை பாய்மரம் கான் மலரே –70 –

கா மன் – கற்பகச் சோலைக்குத் தலைவனான இந்திரன்,
நத்தால் விழ – பாஞ்ச ஜந்யத்தின் ஓசையினால் மூர்ச்சித்துக் கீழ் விழும்படி,
ஊதி – (அந்தத் தனது திவ்விய சங்கத்தை) ஊதி முழக்கி,
அ காவை கவர் – அச்சோலையிலுள்ள பஞ்ச தருக்களுள் ஒன்றான பாரிஜாத தருவைக் கவர்ந்து கொண்டு வந்த,
அரங்கன் – ரங்கநாதனும்,
காமன் அத்தா என்று நைவார்க்கு அமுதன் – “மன்மதனது தந்தையே!” என்று சொல்லி விளித்து(த் தன் பக்கல்)
மனமுருகும் அடியவர்க்கு அமிருதம் போலினியனாகின்றவனும்,
கல் நெஞ்சர்க்கு இரங்கா மனத்தான் – (அங்ஙனமுருகாது தன் திறத்திற்) கல்லுப் போல வலிய
நெஞ்சை யுடையராயிருப்பார் பக்கல் தானும் மனத்துக் கருணை கொள்ளாதவனுமான எம்பெருமான்,
அளக்கும் – (திரிவிக்கிரமாவதாரத்தில்) அளந்தருளிய,
கடல் பார் – கடல் சூழ்ந்த பூமியானது,
கலம் போன்றது – (அக்கடலில் மிதக்கும்) மரக் கலம் போன்றது;
அ தாமரையோன் – அந்த (மேலுலகமாகிய சத்திய லோகத்திலே வசிக்கின்ற) பிரமதேவன்,
மீகாமன் – மாலுமி போன்றனன்;
கால் மலர் – (மேல் நோக்கிச் சென்ற திருமாலினது) தாமரை மலர் போன்ற திருவடியானது,
மரம் – பாய் மரம் போன்றது;
கங்கை – (அத் திருவடி யினின்று பெருகிய) கங்கா நதியானது,
பாய் – (அம் மரத்திற் கட்டிய) பாய் போன்றது; (எ – று.)

பூமியை மரக்கலத்தோடும், பிரமனை மாலுமியோடும், கங்கையைப் பாயோடும், திருவடியைப் பாய் மரத்தோடும் உவமித்தார்;
இயைபுவமையணி.
விரி கடல் சூழ் மேதினி நான் முகன் மீகானாச் சுர நதி பா யுச்சி தொடுத்த –வரி திருத்தாள் கூம்பாக வெப்பொருளும் கொண்ட
பெரு நாவாய் யாம் பொலிவுற்றாயினதால் அன்று – என்றதனோடு இதனை ஒப்பிடுக. ”
போன்றது” என்ற முற்றை உரிய படி மற்றை வாக்கியங்களிலுங் கூட்டி யமைக்க.

கண்ணனது மனைவியும் திருமகளின் திருவவதாரமுமான உருக்குமிணிப் பிராட்டியினிடம் மன்மதன்
பிரத்யும்நனென்னுங் குமாரனாகத் தோன்றினானென்ற வரலாறு பற்றி, திருமால் “காமன்தந்தை” எனப்படுவன்.
இங்கு “காம னத்தா” என்றது, காமனுக்கு நியாமகனே யென்றபடி.
நைவார்க்கு அமுதன் கல் நெஞ்சர்க்கு இரங்கா மனத்தான் – நல்லார்க்கு நல்லானும் பொல்லார்க்குப் பொல்லானுமாய் ஒழுகுபவனென்க.

———–

மலருந்தி மேல்விழ மெய் நெரித்தான் வையம் ஏழும் துஞ்சா
மலருந்தினான் அரங்கன் குறளாய் மண்ணளந்த வந்நாண்
மலருந்தி வாக்கதிர் வண் குடையாய் முடி மா மணியாய்
மலருந்தி யாய்த் திருத்தாள் விரலாழி மணி யொத்ததே –71–

மலர் – மல்லர்கள்,
உந்தி மேல் விழ – தள்ளித் தன் மேல் வந்து விழ,
மெய் நெரித்தான் – அவர்களுடலை நொருக்கி யழித்தவனும்,
வையம் ஏழும் துஞ்சாமல் அருந்தினான் – ஏழு வகை யுலகங்களையும் அழியாதபடி யுட் கொண்டவனுமான,
அரங்கன் -,
குறள் ஆய் – (முதலில்) வாமன மூர்த்தியாய்ச் சென்று,
மண் அளந்த அநாள் – (உடனே பெரு வடிவாய் வளர்ந்து) உலகத்தை அளந்து கொண்ட அந்தக் காலத்திலே,
மலரும் திவாக் கதிர் – பரவி விளங்குந் தன்மையதான சூரிய மண்டலமானது, –
(அப்பெருமானுக்கு),
வள் குடை ஆய் – (முதலில்) அழகிய குடை போன்றிருந்து,
முடி மா மணி ஆய் – (உடனே) கிரீடத்திலுள்ள நடு நாயக மணி

போன்று, மலர் உந்தி ஆய் – (பிறகு) நாபித் தாமரை மலர் போன்று,
திருதாள் விரல் ஆழி மணி ஒத்தது – (அதன் பின்பு) திருவடி விரலிலணியும் மோதிரத்திற் பதித்த மாணிக்கத்தைப் போன்றது; (எ – று.)

இதுவும், கீழ்ச் செய்யுள் போலத் திரிவிக்கிர மாவதாரவைபவங் கூறியது. திருமால் திரிவிக்கிர மாவதாரத்தில் வானத்தை
யளாவி ஓங்கி வளர் கையிற் சூரியன் வரவரக் கீழ்ப் பட்டுப் பலவாறு உவமை கூறுதற்கு உரியனாயின னென்க.

முன்னம் குடை போல் முடி நாயக மணி போல்
மன்னும் திலகம் போல் வாள் இரவி
பொன்னகலம் தங்கு கௌத்துவம் போலும்
உந்தித் தட மலர் போல் அங்கண் உலகு அளந்தாற்காம்-என்ற செய்யுளிலும் இவ்வகைக்கருத்து நிகழ்தல் காண்க

பூமரு பொங்கர் புடை சூழ் அரங்கர் பொலங்கழலால்
பாமரு மூவுலகும் கொண்ட போது பழிப்பு இல் பெரும்
காமரு மோலிச் சிகா மணி ஆகி கவுத்துவம் ஆய்
தேமரு நாபி அம் தாமரை ஆனது செஞ்சுடரே –திருவரங்கத்து மாலை -35

மல்லரென்பது, “மலர்” எனத் தொக்கது. திவாக் கதிர் – பகலிற்குஉரிய சுடர். ஆய் – உவமவுருபு. தாள்விரலாழி – காலாழி.

———

மணிவா சற்றூங்க வொரு குடைக்கீழ் வையம் காத்துச் சிந்தா
மணி வா சவனென வாழ்ந்திருப்பார் பின்னை மாதிருக்கு
மணி வாசமார் பரங்கே சவா வென்று வாழ்த்தித் திரு
மணி வாசகம் கொண்டணிவார் அடியை வணங்கினரே –72-

மணி – ஆராய்ச்சி மணி,
வாசல் தூங்க – அரண்மனை வாயிலிலே தொங்க,
ஒரு குடை கீழ் – ஒற்றை வெண் கொற்றக் குடையின் கீழ்,
வையம் காத்து – உலகத்தை யரசாண்டு,
சிந்தாமணி வாசவன் என வாழ்ந்திருப்போர் – சிந்தாமணி யென்னுந் தெய்வ ரத்தினத்துக்கு உரிய
இந்திரன் போல இனிது வாழ்ந்திருப்பவர்கள்,
பின்னை மாது இருக்கும் – திருமகள் வீற்றிருக்கின்ற,
மணி – அழகிய,
வாசம் மார்பு – திவ்விய பரிமளமுள்ள மார்பை யுடைய,
அரங்கா – ரங்கநாதனே!
கேசவா – கேசவனே! என்று வாழ்த்தி – என்று விளித்துத் துதித்து,
இ வாசகம் கொண்டு – இந்தக் கேசவாதி நாமங்களை யுச்சரித்துக் கொண்டு,
திருமண் அணிவார் – திருமண் காப்பைத் தரித்துக் கொள்ளும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய
அடியை – திருவடிகளை,
வணங்கினரே – நமஸ்கரித்தவர்களே; (எ – று.)

“ஈராறு நாம முரை செய்து மண் கொ டிடுவார்கள்” என்றபடி
கேசவன் நாராயணன் மாதவன் கோவிந்தன் விஷ்ணு மதுசூதநன் திரிவிக்கிரமன் வாமநன் ஸ்ரீதரன்
ஹ்ருஷீகேசன் பத்மநாபன் தாமோதரன் என்ற திருமாலின் துவாதச நாமங்களை முறையே சொல்லி
உடம்பிற் பன்னிரண்டிடத்தில் முறையே திருமணிட்டுக் கொள்ளுகின்ற ஸ்ரீவைஷ்ணவர்களை வணங்கினவர்களே
அந் நல் வினையின் பயனால் உலக முழுவதும் ஒரு குடைக்கீழாளுஞ் சக்கரவர்த்தி பதவி யெய்திச் சகல
ஐசுவரியங்களையு மனுபவித்து மேம்பட்டு வாழ்வோரென்று, பாகவதர்க்கு அடிமை பூணுதலின் மகிமையை வெளியிட்டவாறாம்.
அவ்வரசர் பெருமையினும் பாகவதர் பெருமையை பெருமை யென்பது, குறிப்பு.

ஆராய்ச்சிமணி – அரண்மனை வாயிலிற் கட்டி வைப்பதொரு மணி:
எவரேனும் அரசனிடத்துத் தமது குறையைக் கூற வேண்டின் இம் மணியை யடித்தலும், அவ்வொலி கேட்ட மாத்தி ரத்திலே
அரசன் விரைந்து போந்து வாயிலை யடைந்து அங்குள்ளாரை வினாவி அவர் குறையை யறிந்து அதனைத் தீர்த்தலும் இயல்பு.

சிந்தாமணி – கருதிய பொருளைத் தருந் தேவமணி. திருப்பாற்கடல் கடைந்த காலத்தில் மூதேவி முன்னர்ப் பிறக்க
அதன் பின்னர்ப் பிறந்த திருமகளுக்குப் பின்னை யென்றும் இளையாளென்றும் பெயர்கள் நிகழ்ந்தன.
பன்னிரு நாமத்துள் முதலான கேசவ நாமத்தைக் கூறியது, மற்றவற்றிற்கும் உப லக்ஷணம்.

வாசல் – வாயில் என்பதன் மரூஉ. தூங்குதல் – தொங்குதலாதலை “தூங்கு சிறை வாவல்” எனச் சிந்தாமணியிலுங் காண்க.
கேசவன் என்ற திருநாமம் – பிரமனையும் உருத்திரனையும் தன் அங்கத்திற் கொண்டவனென்றும் (க – பிரமன், ஈசன் – சிவன்),
கேசி என்னும் அசுரனைக் கொன்றவனென்றும், மயிர் முடியழகுடையவனன்றும் பொருள் பெறும்.
இவ் வாசகம் என்பது “இவாசகம்” எனத் தொக்கது. வாசகம் – சொல்: வடமொழி. ஈற்று ஏகாரம் – பிரிநிலையோடு தேற்றம்.

————

வணங்கரி யானரங்கன் அடியார் தொழ வாளரவு
வணங்கரி யாடற் பரி தேர் நடத்தெந்தை வானவர்க்கும்
வணங்கரி யான் அன்றிக் காப்பாரில்லாமை விண் மண் அறியும்
வணங்கரியானவர் வாணன் கண்டாகனன் மார்க்கண்டனே –73-

வணம் கரியான் “திருமேனி நிறம் கருமையாயுள்ளவனும்,
அடியார் தொழ – தொண்டர்கள் சேவிக்க,
வாள் அரசு உவணம் கரி ஆடல் பரி தேர் நடத்து – ஒளியையுடைய ஆதிசேஷனும் கருடனும் யானையும்
ஆட்டக் குதிரையும் தேரு மாகிய வாகனங்களி லெழுந்தருளித் திருவீதி யுத்ஸவங் கண்டருள்கிற,
எந்தை – எமது தலைவனும்,
வானவர்க்கும் வணங்கு அரியான் – தேவர்கட்கும் தரிசித்து நமஸ்கரித்தற்கு அருமையானவனும் ஆகிய,
அரங்கன் அன்றி – ரங்க நாதனே யல்லாமல்,
காப்பார் இல்லாமை – (சரணமடைந்தவர்களைத் துயர் தீர்த்து வேண்டுவன அளித்துப்) பாதுகாப்பவர்
மற்று எவருமில்லாதிருக்கிற உண்மையை,
விண் மண் அறியும் வணம் – வானுலகத்தாரும் நிலவுலகத்தாரும் அறியும்படி,
கரி ஆனவர் – சாக்ஷியானவர்கள், (யாவரெனில்), –
வாணன் கண்டாகன மார்க்கண்டனே – பாணாசுரனும் கண்டா கர்ணனும் மார்க்கண்டேயனு மாவர்; (எ – று.)

இம் மூவரும் முதலிற் சிவபிரானை யடுத்து அவனால் தமது குறைகள் தீரவும் வேண்டுவனயாவும் பெறவும் மாட்டாமல்
பின்பு திருமாலருள் பெற்றுப் பேறு பெற்று உய்ந்தமை அவரவர் சரித்திரத்தால் நன்கு விளங்குதல் பற்றி, இங்ஙனங் கூறினார்.
சாக்ஷியாதற்கு ஏது – வாணாசுரனுடைய கைகளைக் கண்ணன் சக்கராயுதத்தால் அறுக்கிற போது அவனுக்கு ரக்ஷகனாய் நின்ற
சிவபிரான் ஒன்றும் எதிர் செய்ய மாட்டாது அப் பெருமானை இரக்க, அதற்கு இரங்கி அவன் நான்கு கைகளோடும் உயிரோடும் விட்டருள,
அவ் வசுரன் பின்பு ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி உறவு பூண்டு உய்ந்ததும்; கண்டா கர்ணன் முதலிற்
சிவபக்தியோடு விஷ்ணு த்வேஷமும் மேலிட்டிருந்து பின்பு சிவனால் முத்தி பெற மாட்டாது கண்ணபிரானாற் பெற்றதும்;
மார்க்கண்டேயன் மகா பிரளய காலத்தில் திருமாலையே யன்றி மற்றைத் தேவரெவரையும் பிழைத்திருக்கக் காணாது
அப் பெருமானது திருவயிற்றினுள்ளே அனைவரையுங் கண்டது மன்றி, முன்பு சிவபிரானருளால்
நீண்ட ஆயுளை மாத்திரமே பெற்ற தான் பின்பு பரகதிக்குத் திருமாலையே வேண்டினமையுமாம்.

வர்ணம் என்ற வடசொல்லின் விகாரமான வண்ணம் என்பது, வணம் எனத் தொக்கது.
அரங்கன்னடியார், னகரவொற்று – விரித்தல். வாள் அரவு – கொடிய பாம்புமாம்.
உவணம் – ஸுபர்ணம் என்ற வடசொல்லின் சிதைவு.
ஆடல் பரி – வெற்றியையுடைய குதிரை யெனினுமாம். விண், மண் – இடவாகுபெயர்கள்.

—————–

கண்ட லங் காரளகம் கெண்டை மேகம் கவிரிதல் சொல்
கண்ட லங்கா ர முலையிள நீர் என்று கன்னியர் சீர்
கண்ட லங் காரங்கமருளேன் புனல் கயல் கொக்கு என்று அஞ்சக்
கண்ட லங்கார மலரரங்கேசர்க்குக் காதலனே –74-

புனல் – நீரிலுள்ள,
கயல் – கயல்மீன்கள்,
கொக்கு என்று அஞ்ச – “கொக்கு” என்று நினைத்துப் பயப்படும்படி,
கண்டல் – தாழைகள்,
அங்கு – அந்நீரின்பக்கங்களில்,
ஆர மலர் – மிகுதியாக மலரப் பெற்ற,
அரங்கம் – திருவரங்கத்துக்கு,
ஈசர்க்கு – தலைவரான நம்பெருமாளுக்கு,
காதலன் – அன்பு பூண்டவனான யான், –
கன்னியர் – இளமங்கையரது,
கண் தலம் கார் அளகம் – கண்களும் கரிய கூந்தலும்,
கெண்டை மேகம் – (முறையே) கெண்டை மீனையும் காள மேகத்தையும் போலும்:
இதழ் – (அவர்களுடைய) அதரம்,
கவிர் – முருக்க மலர் போலும்:
சொல் – பேச்சு,
கண்டு – கற்கண்டு போலும்:
அலங்கு ஆரம் முலை – அசைகிற ஹாரங்களை யுடைய தனங்கள்,
இளநீர் – இளநீர் போலும்,
என்று -,
சீர் கண்டு அலங்காரம் மருளேன் – (அவர்களுடைய) சிறப்பைக் குறித்து அவர்கள் புனை கோலத்தால் மதி மயங்கேன். (எ – று)

திருவரங்கர்க்கு அன்பனாயினே னாதலால், பெண்ணாசை மயக்கத்தி லாழே னென்பதாம்.
பேரின்பத்துக்கு இடமான பெருமானிடத்துக் காதல் செலுத்தினால், சிற்றின்பத்திற்கு இடமான மகளிர் பக்கல் மோகம் தீருமென்பது, குறிப்பு.

கண்தலம் – கண்ணாகிய இடம்.
முதலடியில் கண்தலம் கெண்டை, காரளகம் மேகம் என முறையே சென்று இயைதல், முறைநிரனிறைப்பொருள் கோள்.
இளநீர் – தெங்கினிளங்காய். கயல்மீன் வெண்டாழைமலரைக் கொக்கென்று கருதி அஞ்சிய தென்றது, மயக்கவணி;

“அருகு கைதை மலரக் கெண்டை, குருகென் றஞ்சுங் கூடலூரே” என்ற ஆழ்வாரருளிச் செயலை அடியொற்றியது இந்த வருணனை.

கொக்கு மீன் குத்திப் பறவை யாதலால், அதற்கு மீன் அஞ்சும்.
இதழுக்கு முருக்கம்பூ செந்நிறத்திலுவமம்.

————

காதலை வாரி மண் வெண் கோட்டில் வைத்ததுண்டு காட்டியரங்
காதலை வா கழற் குள்ளாக்கி னாய்கரப் பெங்கெனவே
காதலை வார் குழை வைதேகியை நின் கருத்துருக்குங்
காதலை வானரரத் தேட விட்டாயிது கைதவமே –75–

அரங்கா-! தலைவா – (எல்லாவுயிர்கட்குந்) தலைவனே!-
காது – மோதுகின்ற,
அலை – அலைகளையுடைய,
வாரி – கடலினாற்சூழப்பட்ட,
மண் – பூமியை,
வெள் கோட்டில் வைத்து – (வராகாவதாரத்திலே) வெண்ணிறமான மருப்பிற் குத்தியெடுத்து,
உண்டு – (பிரளயகாலத்திலே) வயிற்றி னுட்கொண்டு,
காட்டி – (அந்தப் பிரளயம் நீங்கினவாறே) வெளிநாடு காண உமிழ்ந்து,
கழற்கு உள் ஆக்கினாய் – (திரிவிக்கிரமாவதாரத்திலே) ஓரடிக்குள் ஒடுங்கச் செய்தாய்;
(அங்ஙனம் நிலவுலகமுழுதையும் ஸ்வாதீனமாக நடத்திய நீ),
நின் கருத்து உருக்கும் காதலை – உனது மனத்தை யுருகச் செய்கிற ஆசை மயமானவளாகிய,
காது அலை வார் குழை வைதேகியை – காதுகளி லசைகிற பெரிய குழை யென்னும் அணிகலத்தையுடைய ஜாநகிப் பிராட்டியை,
கரப்பு எங்கு என வானரர் தேட விட்டாய் – (இந் நிலவுலகத்தில் இராவணன்) ஒளித்து வைத்தது எவ்விடத்தென்று
தேடிப் பார்த்தறியும்படி (அநுமான் முதலிய) வாந ரவீரர்களை (நாற்றிசைக்கும்) அனுப்பினாய்;
இது கைதவமே – இது (உனது) மாயையேயாம்; (எ – று.)

இரணியாக்ஷனாற் பூமி முழுதும் ஒளிக்கப்பட்ட போது அது இருந்த இடத்தை நாடிக் கண்டு அதனை யெடுத்து வந்தவனும்
அந்தப்பூலோகமுட்பட எல்லா வுலகங்களையும் உண்டு உமிழ்ந்தவனும்
பூமிமுழுவதையும் ஓரடிக்கு உள்ளாக்கினவனு மாகிய நீ.
அந்நிலவுலகத்தில் இராவணனாற் கவரப்பட்ட சீதை யிருக்குமிடத்தை அறியாய் போன்று வாநரரைத் தேடவிட்டது,
மாயச் செய்கையே யென்பதாம். எல்லாம் உன்திருவிளையாடலே யென்பது, குறிப்பு.

காது அலை – வினைத்தொகை. கரப்பு – தொழிற்பெயர்.
வைதேஹீ – வடமொழித் தத்திதாந்தநாமம்: விதேகராஜனது குலத்திற் பிறந்தவள்.
காதல் = காதலி. கைதவம் – வடசொல். ஏ – அசை.

———

தவராக வக்கணை யொன்றாற் கடற்றெய் வந்தான் என்றிருந்
தவராகந் தீர்த்துத் தொழக் கண்ட நீ தர்ப்பை மேற் கிடந்து
தவராகப் பாவித்தென் னோதொழு தாய் தண் அரங்கத்துமா
தவராக வாகண் ணனே எண் ஒண்ணா வவதாரத்தானே –76-

தண் – குளிர்ச்சியான,
அரங்கத்து – திருவரங்கத்தி லெழுந் தருளியிருக்கின்ற,
மாதவ – திருமகள் கொழுநனே!
ராகவா – இராமனாகத் திருவவதரித்தவனே!
கண்ணனே – கிருஷ்ணனாகத் திருவவதரித்தவனே!
எண் ஒணா அவதாரத்தனே – மற்றும் கணக்கிடமுடியாத (மிகப்பல) திரு வவதாரங்களையுடையவனே!
தவர் – வில்லினின்று எய்யப்பட்ட,
ஆகவம் கணை ஒன்றால் – போர்க்கு உரிய அம்பு ஒன்றினால் (ஆக்நேயாஸ்திரத்தினால்),
கடல் தெய்வம் தான் என்று இருந்த அ ராகம் தீர்த்து தொழ கண்ட – கடலுக்கு அதி தேவதையான வருணன் தான் (ஸ்வதந்த்ரன்)
என்று செருக்கியிருந்த அந்த அபிமானத்தை யொழித்து (உன்னை) வணங்கும்படி (பின்பு) செய்த வல்லமையை யுடைய, நீ-, (
முதலில்), தர்ப்பைமேல் கிடந்து – தருப்பசயனத்திற் படுத்து,
தவர் ஆக பாவித்து – விரதாநுட்டானஞ்செய்பவர் போலப் பாவனை காட்டி,
என்னோ தொழுதாய் – ஏன் (அத்தேவனை) வணங்கினையோ? (எ – று.)

வருணனைச் செருக்கடக்கித் தொழும்படி செய்யும் வல்லமையுடைய நீ முதலில் வல்லமையில்லாதவன்போல அவனைத்தொழுது
வரங்கிடந்தது உனதுமாயையினாற் செய்த திருவிளையாடல்போலு மென்பது குறிப்பு.
முன்பு மாநுடபாவனையைக் காட்டிப் பின்பு பரத்வத்தை வெளியிடத் தொடங்கின னென்க.

ஆஹவம், தைவம், ராகம், தர்ப்பம், மாதவன், அவதாரம் – வடசொற் கள்.
தான் என்று இருந்த அராகம் – தான் இராமபிரானுக்கு அடங்கினவ னல்ல னென்று கருதி உபேக்ஷித்திருந்த அகங்காரம்.
அ ராகம் எனச் சுட்டியது, கதையை உட்கொண்டு.
இனி, அராகம் என்பதன் முதல் அகரத்தை “ரவ்விற்கு அம்முதலா முக்குறிலும்,……. மொழிமுதலாகி முன்வருமே” என்றபடி
ராகம் என்ற வடசொல்லின் முதலில் வந்த குறிலாகவுங் கொள்ளலாம்.
தவர் என்றதில், “தவம்” என்றது, பிராயோபவேசத்தை.

மத்ஸ்யம் கூர்மம் முதலிய தசாவதாரங்களேயன்றி நாரதன் நரநாராயணர் கபிலன் தத்தாத்ரேயன் பிருது தந்வந்திரி
வியாசன் புத்தன் அருச்சுனன் முதலாகச் சமயோசிதமாக எம்பெருமான் தனது திவ்வியசங்கல்பத்தினாற் கொண்ட
திருவவதாரங்கள் பற்பலவாகப் புராணங்களிற் கூறப்படுதல் பற்றி, “எண்ணொணாவவதாரத்தனே” என்றார்.

—————

தாரா கணமண் ணளந்த வந்நாளன்பர் சாத்தும் துழாய்த்
தாரா கணம் புயம் போலரங்காதல மேழுக்குமா
தாரா கண மங்கை யாயும்பர் தூவிய தா ண் மலர் வீழ
தாரா கணமு நில்லா காற்றிற் சூழ் வளந்தான் ஒக்குமே –77-

அன்பர் – அடியார்கள்,
சாத்தும் – சமர்ப்பித்த,
துழாய் தாரா — திருத்துழாய் மாலையை யுடையவனே!
கண் அம்புயம் போல் – கண்கள் தாமரை மலர் போலிருக்கப் பெற்ற,
அரங்கா-!
தலம் ஏழுக்கும் ஆதாரா – ஏழுவகை யுலகங்கட்கும் ஆதாரமாயிருப்பவனே!
கண மங்கையாய் – திருக் கண்ணமங்கை யென்னுந் திவ்வியதேசத்தி லெழுந்தருளியிருக்கின்றவனே! –
மண் அளந்த அ நாள் – (நீ) உலகமளந்த அக் காலத்தில்,
தாரா கணம் – (வானத்திற் சுற்றுகின்ற) நக்ஷத்திர மண்டலம் (எப்படியிருந்த தென்றால்),
உம்பர் தூவிய தண் மலர் – தேவர்கள் (அக் காலத்தில் உன் மீது) சொரிந்த குளிர்ந்த மலர்கள்,
வீழ் தாரா – பூமியில் விழாதனவாயும்,
கணமும் நில்லா – ஒருகணப் பொழுதேனும் (வானத்தில் ஓரிடத்தில்) நிலையுற்றி ராதனவாயும்,
காற்றில் சூழ் – வாயு மண்டலத்தில் அகப்பட்டுச் சுழல்கின்ற,
வளம் – மாட்சிமையை,
ஒக்கும் – போன்றிருந்தது; (எ – று.) – தான் – அசை.

உனது பெருவடிவத்துக்கு முன் நக்ஷத்திரங்கள் மலர்கள் போலச் சிறி யனவாயின வென்பது, குறிப்பு.
பற்பல நிறமுடையனவாய் விளங்கும் நக்ஷத்திரங்கள், பற்பலநிறமுள்ள மலர்கள்போலும்.
இடையிற் பெருவடிவ மாய் எழுந்த எம்பெருமானைச் சுற்றிலும் நக்ஷத்திரங்கள் வானத்தில் திரிந் ததற்கு,
மலர்கள் காற்றிலகப்பட்டுக் கீழ்விழாமலும் ஓரிடத்துநிலையுறாமலும் சுழலுதலை ஒப்புமைகூறினார்; உவமையணி.
தேவர்கட்குப் பகைவனாய் அவர்களை வென்று அடக்கிய மாவலியைச் செருக்கடக்குதற்குத் திருமால் திரிவிக்கிரமனாய் வளர்ந்த
சமயத்தில் அதுகண்ட களிப்பினால் தேவர்கள் மேலுலகத்தினின்று மலர்மாரி சொரிந்தன ரென்க.

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த அந்நாள்
மறை முறையால் வானாடர் கூடி முறை முறையின் தாதிலகு பூத்தொளித்தால் ஒவ்வாதே
தாழ் விசும்பின் மீதிலகித் தான் கிடக்கும் மீன் -ஆழ்வாரருளிச் செயலை அடியொற்றியது, இச்செய்யுள்.

கண் அம்புயம் போல் அரங்கன் – புண்டரீகாக்ஷன். எல்லாவுலகங்கட் குங் கீழே எம்பெருமான் ஆதி கூர்ம ரூபியாயிருந்து
கொண்டு அவற்றையெல் லாந் தாங்குதலும், பிரளய காலத்தில் அனைத்துலகத்தையும் வயிற்றில் வைத்திருத்தலும்,
பகவானது திவ்விய சக்தியின் உதவியினாலன்றி யாதொரு பொருளும் எங்கும் நிலைபெறாமையும் பற்றி, “தலமேழுக்கும் ஆதாரா” என்றார்.

திருக்கண்ணமங்கை – சோழநாட்டுத் திருப்பதிகளி லொன்று. உம்பர் – இடவாகுபெயர்.
மலர் – பால்பகாஅஃறிணைப்பெயர்; இங்குப் பன்மையின் மேலது. வீழ்தாரா, நில்லா – எதிர்மறைப் பலவின்பால் முற்றுக்கள் எச்சமாய் நின்றன;
ஆதலால், “அல்வழி ஆ மா மியா முற்று முன்மிகா” என்றபடி இவற்றின் முன் வலி இயல்பாயிற்று.
வீழ்தாரா = வீழா; தா – துணைவினை, ர் – விரித்தல். தாரா கணம் – வடமொழித்தொடர்.

——–

தானந் தியாகந் தவங்கல்வி தீர்த்தந் தழலிலவி
தானந் தியாகந் தருமிழி பாயின தண்ணரங்கத்
தானந் தியாகப் பகன் மறைத்தான் பெயர் தந்திடும்வே
தானந் தியாகண் டலனறி யாப்பரந் தாமத்தையே –78 –

தானம் – தானஞ்செய்தலும்,
தியாகம் – தியாகமளித்தலும்,
தவம் – தவஞ்செய்தலும்,
கல்வி – நூல்களை யோதுதலும்,
தீர்த்தம் – புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதலும்,
தழலில் அவி நந்து யாகம் – அக்கினியிலே ஹவிஸ் பக்குவமாகப் பெறுகின்ற யாகமும், (என்னும் இவையெல்லாம்)
இழிபு ஆயின தரும் – இழிவான பதவிகளையே (தம்மை யுடையார்க்குக்) கொடுக்கும்;
அந்தி ஆக பகல் மறைத்தான் – மாலைப் பொழுது உண்டாம்படி சூரியனை (ச் சக்கரத்தால்) மறைத்தவனான,
தண் அரங்கத்தான் – குளிர்ந்த திருவரங்க நகருடையானது,
பெயர் – திருநாமமோ,
வேதா நந்தி ஆகண்டலன் அறியா பரந்தாமத்தை தந்திடும் – (தன்னைக் கருதினவர்க்குப்) பிரமனும் சிவனும் இந்திரனும்
அறிய மாட்டாத பரம பதத்தைக் கொடுத்திடும்) (எ – று.) – இரண்டாமடியில், தான் – அசை.

ஆதலால், அவன் திருநாமத்தைக் கூறிப் பரமபதமடையுங்க ளென்பது, குறிப்பு.
நற்கதி பெறுதற்குஉரிய உபாயமென்று கொள்ளப்படுகிற தானம் முதலிய அனைத்தினும் பகவந் நாம ஸ்மரணத்துக்கு
உள்ள மகிமையை வெளி யிட்டார்.
மற்றவையெல்லாம், அழியுந் தன்மையனவான இழிந்த இந்திரன் முதலிய இறையவர் பதங்களையே கொடுக்க மாட்டும்;
நாமஸ்மரணமோ, அந்தமி லின்பத்து அழிவில் வீட்டைத் தரும் என வேறுபாடு விளக்கப்பட்டது.

இங்குத் தானம் முதலியனவாகக் கூறினது, சுவர்க்கம் முதலிய சிற்றின் பங்களை உத்தேசித்துச் செய்யும் காமியகருமங்களை;
முத்தி யுலகத்து நிரதிசய வின்பத்தைப் பெறுதற்கு உபயோகமாகச் செய்யும் நிஷ்காம்ய கருமங்களை யன்றென் றறிக.

தானம் – சற் பாத்திரங்களிலே கொடுத்தல் என்றும்,
தியாகம் – வரையறை யின்றிப் பொதுப்படக் கொடுத்தல் என்றும் வேற்றுமை யுணர்க;
முன்னது – புண்ணியக் கொடை யென்றும், பின்னது – புகழ்க் கொடை யென்றுங் கூறப்படும்.

தாநம், த்யாகம், தபஸ், தீர்த்தம், ஹவிஸ், யாகம், வேதா, நந்தீ, ஆகண் டலன், பரந்தாமம் – வடசொற்கள்.
அவி – வைதிகாக்கினியில் மந்திர பூர்வமாக ஓமஞ்செய்யப்படும் நெய்ம் முதலிய தேவருணவு.
நந்துதல் – கெடுதல்; இங்கு, நன்றாகப்பசநமாதல். நந்துயாகம் – வினைத்தொகை.
நந்தியாகம் என்பதில் இகரத்தை, “யவ்வரி னிய்யாம்” என்றபடி நிலை மொழி யீற்றுக் குற்றியலுகரம் திரிந்த தென்றாவது,
“யவ்விற்கு, இய்யும் மொழி முதலாகி முன் வருமே” என்றபடி வருமொழி வடசொல்லின் யகரத்துக்கு முன் வந்த இகர மென்றாவது கொள்க.
ஆகண்டலன் – (பகைவரை) நன்றாகக் கண்டிப்பவன். பரந்தாமம் – மேலான இடம். தரும் – முற்று. இழிபாயின – பெயர்; செயப்படுபொருள்.
தந்திடும் என்றதில் இடு – துணிவுணர்த்தும். பகல் – சூரியனுக்கு இலக்கணை.
நந்தி என்றதன் நகரம், யமகத்தின் பொருட்டு னகரமாகப் கொள்ளப்பட்டது.

————-

தாமரை மாத்திரை மூப்பற்ற வானவர் தண்ணறும் செந்
தாமரை மாத்திரை வந்தா டலை வரைத் தண்ணரங்க
தாமரை மாத்திரை போல்வளைந் தேற்றுத் தருப் பொருட்டால்
தாமரை மாத்திரைக் கேசங்கி னோசையிற் சாய்ந்தனரே –79-

தாமரை மாத்திரை – பதுமமென்னுந் தொகை யளவுள்ளவர்களான,
மூப்பு அற்ற வானவர் – முதுமை யில்லாத இயல்பை யுடைய தேவர்கள்,
தரு பொருட்டால் – பாரிஜாத தருவின் நிமித்தமாக,
திரை தண் நறுஞ் செம் தாமரை வந்தாள் மா தலைவரை தண் அரங்க தாமரை – திருப் பாற்கடலிற் குளிர்ந்த பரிமளமுள்ள
சிவந்த தாமரை மலரின் மீது தோன்றினவளான திருமகளினது கணவரும் குளிர்ந்த ஸ்ரீரங்கத்தை இடமாகக் கொண்டவருமாகிய நம்பெருமாளை,
மா திரை போல் வளைந்து ஏற்று – பெரிய திரைச் சீலை போலச் சூழ்ந்து எதிர்த்து,
சங்கின் ஓசையின் – (அப் பெருமான் ஊதி முழக்கிய) சங்கத்தினோசையினால்,
தாம் -,
அரை மாத்திரைக்கே – அரை மாத்திரைப் பொழுதிலே,
சாய்ந்தனர் – மூர்ச்சித்து வீழ்ந்தனர்.

பதுமமென்பது, ஒருபெருந்தொகை; அது, கோடியினாற் பெருக்கிய கோடி.
இங்குப் பதுமமென்ற அத்தொகையை அதற்கு ஒருபரியாயநாமமாகிற “தாமரை” என்ற சொல்லினாற் குறித்தது. லக்ஷிதலக்ஷணை.
மாத்ரா என்ற வடசொல் விகாரப்பட்டது.
தா – வருத்தம் மிக்க,
மரை – மரணமும்,
மா – மிகுந்த,
திரை – தோற்சுருக்கமும்,
மூப்பு – முதுமையும்,
அற்ற வானவ ரென்று உரைப்பாரு முளர். திருப் பாற்கடல் கடைந்த போது, அதனினின்று மலர்ந்த செந்தாமரை மலரை
ஆசனமாகக் கொண்டு திருமகள் திருவவதரித்தனளென்று புராணம் கூறும்.

முதலடியிலும் இரண்டாமடியிலும் வந்த “தாமரை” என்ற சொல்லுக்குப் பொருள் வெவ்வேறாதலால், யமக விலக்கணம் சிதைந்ததாகாது.
மா – இலக்குமியைக் குறிக்கையில், வடசொல். திரை – அலை; கடலுக்குச் சினையாகுபெயர்.
பொருட்டு – நான்காம் வேற்றுமைச் சொல்லுருபு; ஆல் – அசை.
மாத்திரை – கண்ணிமைப் பொழுது, அல்லது கைந் நொடிப் பொழுது.
திரைச் சீலை யுவமை – பிறர் காண வொண்ணாதபடி சூழ்ந்து கொள்வதற்கு.

———-

சாகைக்குந் தத்துத் துகிறூக்கி மாதர் தமை நகைத்தாய்
சாகைக்குந் தத்துவங் கட்கு மெட்டாய் தண் புனல் அரங்கே
சாகைக்குந் தத்துப் படையாழி யேந்த றமர்கள் வெய்யோர்
சாகைக்குந் தத்துத் தவிர்க்கைக்கும் போலுமுன் சங்கற்பமே–80-

சாகை – கிளைகளை யுடைய,
குந்தத்து – குருந்த மரத்தின் மேல்,
துகில் தூக்கி – (கோப ஸ்திரீகளுடைய) சேலைகளை எடுத்துப் போய் வைத்துக் கொண்டு,
மாதர் தமை நகைத்தாய் – அந்த இடைப் பெண்களை நோக்கிப் பரிகாசமாகச் சிரித்தவனே!
சாகைக்கும் தத்துவங்கட்கும் எட்டாய் – வேதங்களுக்கும் தத்துவங்களுக்கும் எட்டாதவனே!
தண் புனல் அரங்கம் ஈசா – குளிர்ச்சியான நீர் வளத்தை யுடைய ஸ்ரீரங்கத்துக்குத் தலைவனே! –
கை – (நினது) திருக் கைகளில்,
குந்தத்து – குந்தமென்னும் ஆயுதத்தோடு,
புடை ஆழி – பகை யழிக்க வல்ல சக்கரத்தையும்,
ஏந்தல் – தரித்திருத்தல்,
வெய்யோர் சாகைக்கும் தமர்கள் தத்து தவிர்கைக்கும் உன் சங்கற்பம் போலும் – துஷ்டர்கள் அழியுமாறும்
அடியார்கள் துன்பம் நீங்குமாறும் நீகொண்ட கருத்தினாற் போலும்; (எ – று.)

“போலும்” என்பது – ஒப்பில்போலி: அதாவது – உவமைப் பொருள் தராத “போல்” என்னுஞ் சொல்;
“ஒப்பில் போலியு மப்பொருட்டாகும்” என்ற தொல்காப்பியத்தால்,
அச் சொல் உரையசைப் பொருளதாகி வாக்கியாலங்காரமாய் நிற்கு மென்று விளங்குதலால்,
எம்பெருமான் திருக்கைகளிற் சிறந்த படைக்கலங்களைக் கொண்டிருத்தல் துஷ்ட நிக்கிரகஞ் செய்து சிஷ்ட பரிபாலனம்
பண்ணுஞ் சங்கல்பத்தினாலேயே யாமென்ற கருத்து அமையும்.
சாகை – வேதத்தின் பகுப்பு; வேதத்துக்குச் சினையாகு பெயர்.
தத்துவங்கள் – ஐம்பொறி, ஐம்புலன், ஐம்பூதம், ஐந்துகருமேந்திரியம், பிரகிருதி, மஹாந், அகங்காரம், மநஸ் என்பன.
எட்டுதல் – புலனாதல். இனி, வேதங்கட்கும் மற்றைத் தத்துவ நூல்கட்கும் சிறிதளவே யன்றி
முழுவதுஞ் சொல்ல முடியாதவனே யென்று உரைப்பினும் அமையும்;
இப் பொருளில், தத்துவமென்பது – அதனை யுணர்த்தும் நூலுக்கு ஆகு பெயராம். தமர் – தம்மைச் சேர்ந்தவர்.

சாகா, தத்வம், ஸங்கல்பம் – வடசொற்கள்.
கை குந்த துப்பு உடை ஆழி ஏந்தல் என்று பதம் பிரித்து, கை – கையில், குந்த – இருக்க,
துப்பு உடை ஆழி ஏந்தல் – வலிமையை யுடைய சக்கரத்தைத் தரித்தல் என்று உரைத்தலு மொன்று.

“தமர்கள் வெய்யோர் சாகைக்கும் தத்துத் தவிர்கைக்கும்” என்ற தொடரில்,
“தமர்கள்” என்பது “தத்துத் தவிர்கை” என்பனோடும்,
“வெய்யோர்” என்பது “சாகைக்கும்” என்பதனோடுமாக மாறிச் சென்று இயைதல், எதிர் நிரனிறைப் பொருள்கோள்.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி – -41-60-

January 24, 2022

கலக் கூழைக் கைக்குங் கருத்துடை யீரங்கத்துள் இலைக்
கலக் கூழைக் கைக்குங் கறியிட்டுத் துய்த்திரும் காது படைக்
கலக் கூழைக் கைக்குள் வருவாணனைக் கண்ணுதலும் விட்ட
கலக் கூழைக் கைக்குப்பை கண்டானை வீதியில் கண்டு வந்தே –41-

கலக்கு – (மனத்தைக்) கலங்கிச் செய்கிற,
ஊழை – ஊழ் வினையை,
கைக்கும் – வெறுத்து ஒழிக்க வேண்டு மென்னும்,
கருத்து உடையீர் -எண்ணத்தை யுடையவர்களே! (நீங்கள்),
அரங்கத்துள் – ஸ்ரீரங்கத்திலே, –
காது – (பகைவரை) மோத வல்ல,
படைக் கலம் – ஆயுதங்களை யுடைய,
கூழை கைக்குள் – படை வகுப்பின் ஒழுங்கினிடையிலே,
வரு – (போர்க்கு) வந்த,
வாணனை – பாணாசுரனை,
கண் நுதலும் விட்டு அகல – (தன்னைச் சரண மடைந்தது பற்றிப் பாதுகாப்பதாக உடன் பட்ட) நெருப்புக் கண்ணை
நெற்றியிலுடையவனான சிவபிரானும் (பாதுகாக்கமாட்டாமற்) கைவிட்டு விலக,
கூழை கை குப்பை கண்டானை – (அவ் வாணனது) குறைபட்ட கைகளின் குவியலைக் கண்டவனை
(அவன் கைகளைத் துணித்து வீழ்த்திக் குவியல் செய்தவனான எம்பெருமானை),
வீதியில் கண்டு – திருவீதியிலே உத்ஸவங்கண்டருளத் தரிசித்து,
உவந்து – மன மகிழ்ந்து,
இலை கலம் கூழை கைக்கும் கறி இட்டு துய்த்தும் இரும் – இலையாகிய பாத்திரத்திலே கூழாகிய
இழிந்த வுணவைக் கசக்கின்ற கறிகளைச் சேர்த்து உண்டு கொண்டாயினும் வசித்திருங்கள்; (எ – று.)

வறுமையினால் வருந்தியாயினும் நம்பெருமாளைச் சேவித்துக் கொண்டு ஸ்ரீரங்கத்திலே வசித்தல் கொடிய பழவினையை
யொழித்து முத்தி பெறுவித்தற்குச் சாதனமாகு மென்று சனங்களுக்கு உபதேசித்தவாறாம்.
அரங்கத்துள் கண்டு உவந்து இரும் என இயையும்.

இரண்டாமடியில், கலம் – உண்கலம், கைக்கும் – இனியதல்லாத என்றபடி.
கறி – கறிக்கப்படுவது; கறித்தல் – கடித்துத் தின்னுதல். இட்டுந் துய்த்து என்றவிடத்து உம்மை மாற்றப்பட்டது.
காது படைக்கலம் – வினைத்தொகை. படைக்கலம் – போர்க்கருவி.
கண்ணுதல் – வேற்றுமைத் தொகை யன்மொழி. கை – படைவகுப்பினது, கூழைக்குள் – பின்னணிக்குள்ளே,
வரு – வருகின்ற என்று உரைப்பாரு முளர்.
நான்காமடியில், கைக்குப்பை – கைகளின் தொகுதியை, கூழைகண்டான் – குறை செய்தவனென்று இயைத்து உரைப்பினுமாம்.

————-

கண்ட கனாவின் பொருள் போல யாவும் பொய் காலன் என்னும்
கண்ணா கனாவி கவர்வதுவே மெய்கதி நல்கேனக்
கண்ட கனாவிப் பொழுதே செல் கென்றருள் காரங்கற்
கண்ட கனாவின் புறக்கண்டு வாழ்த்திக் கடிதுய்ம்மினே –42-

யாவும் – (செல்வம் இளமை முதலிய) எல்லாப் பொருள்களும்,
கனாவின் கண்ட பொருள் போல பொய் – சொப்பனத்திலே காணப்பட்ட பொருள் போலப் பொய்யாகும்
(சிறிதும்நிலைபேறின்றி அழியு மென்றபடி);
காலன் என்னும் கண்டகன் ஆவி கவர்வதுவே மெய் – யம னென்கிற கொடியவன் (பிராணிகளின்) உயிரை
(உடம்பினின்று) கவர்ந்து கொள்ளுதலே உண்மை: (ஆதலால்),
கதி நல்கு – (எனக்கு) உயர்ந்தகதி யாகிய பரமபதத்தை. அளித்தருள்வாய்,’
என – என்று (கண்டாகர்ணன்) பிரார்ததி்க்க,
கண்டகனா இ பொழுதே செல்க என்று அருள் – ‘கண்டா கர்ணனே! இப்பொழுதே (பரமபதத்திற்குச்)
சென்று சேர்வாயாக’ என்று சொல்லி அருள் செய்த,
கார் அரங்கன் – (கைம்மாறு கருதாத கொடையிலும் கரிய திருநிறத்திலும் குளிர்ச்சியிலும் காளமேகம்) போன்றவனான ஸ்ரீரங்கநாதனை,
கடிது – விரைவில்,
கண் தக கண்டு – கண்கள் தகுதி பெறுமாறு தரி சித்தும்,
நா இன்புஉற வாழ்த்தி – நாக்கு இனிமை யடையுமாறு துதித்தும்,
உய்ம்மின் – ஈடேறுங்கள்; (எ – று.)

காலன் – பிராணிகளின் ஆயுட் காலத்தைக் கணக்கிடுபவன். கண்டகம் – முள்;
அதுபோலப் பிராணிகளை வருத்துபவன், கண்டகன்.
மூன்றாமடியில் ‘கண்டகனா’ என்பது – வடமொழிச்சிதைவு.
செல்கென்று – தொகுத்தல்.
கண் தக நா இன்புற கண்டு வாழ்த்தி – முறைநிரனிறைப்பொருள்கோள்.
கண் தக – கண் படைத்த பயன் பெற என்றபடி.
அரங்கற்கண்டகநா வின்புறக்கண்டு என்றவிடத்து, உயர்திணையில் இரண்டனுருபு தொக்கது:
உயர்திணைப்பெயரீற்று னகரமெய் பொதுவிதிப்படி வலிவர இயல்பாகாது றகரமாத் திரிந்தது,
இரண்டாம் வேற்றுமைத் தொகையாதலால்;
‘இயல் பின் விகாரம்.’ நாவின்புற என்றவிடத்து, நகரவேறுபாடு, யமகநயத்தின் பொருட்டுக் கொண்டது.

————-

கடிக்கும் பணி நஞ்சமுதாகும் தீங்கு நன்காகும் பராக்
கடிக்கும் பணியலர் தாழ்வார் கல்லாமையும் கற்றமையாம்
கடிக்கும் பணி யறம் எல்லாம் அரங்கர் பைம் கன்னித் துழாய்க்
கடிக்கும் பணி யொளிக்கும் நல்ல பாதம் கருதினார்க்கே –43-

அரங்கர் – ரங்கநாதரது,
பைங் கன்னி துழாய் கடிக்கும் – பசிய இளமையான திருத்துழாய் மணம் வீசப் பெற்றனவும்,
பணி ஒளிக்கும் – ஆபரணங்கள் விளங்கப் பெற்றனவமான,
நல்ல பாதம் – அழகிய திருவடிகளை
கருதினர்க்கு – தியானித்தவர்கட்கு,
கடிக்கும் பணி நஞ்சு அமுது ஆகும் – கடிக்கிற பாம்பின் விஷமும் அமிருதமாகும்;
தீங்கும் நன்கு ஆகும் – (பிறர் செய்யுந்) தீமையும் நன்மையாய் முடியும்;
பராக்கு அடிக்கும் பணியலர் தாழ்வார் – பராமுகஞ் செய்து அவமதிக்கிற பகைவர்களும் கீழ்ப் படிந்து வணங்குவார்கள்;
கல்லாமையும் கற்றமை ஆம் – பயின்றறியாத பொருள்களும் பயின்றன போல விளங்கும்;
பணி அறம் எல்லாம் கடிக்கும் – (சாஸ்திரங்களிற்) சொல்லப்பட்ட தருமங்களெல்லாம் சித்திக்கும்; (எ – று.)

எம்பெருமானது திருவடிகளை மநநஞ் செய்பவர்க்கு நேர்கிற இஷ்டப் பிராப்தியும், அநிஷ்ட நிவிருத்தியும் இச் செய்யுளிற் கூறப்பட்டன.

பணம் – படம்; அதனையுடையது, பணீ எனப் பாம்புக்குக் காரணக் குறி: அவ்வடசொல், பணியென ஈயீறு இகரமாயிற்று.
பராக்கடித்தல் – முகங்கொடாது அசட்டை செய்தல்; ஏமாற்றுதலுமாம்.
பணியலர் – வணங்காதவர்; எனவே, பகைவராயிற்று: எதிர்மறைப் பலர் பால் வினையாலணையும் பெயர்.

மூன்றாமடியில், கடித்தல் – கிடைத்தல். பணியறம் – வினைத்தொகை; இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாகக் கொண்டு,
கைங்கரிய ரூபமான நல்வினைப் பயன்களெல்லாம் கை கூடு மெனினுமாம்.

நான்காமடியில், கடிக்கும் என்பது – கடி என்ற உரிச்சொல்லின் மேற் பிறந்த எதிர்காலப் பெயரெச்சம்.
ஒளித்தல் – ஒளி செய்தல். ‘கடிக்கும்’, ‘ஒளிக்கும்’ என்ற தெரிநிலைப் பெயரெச்சங்களும்,
‘நல்ல’ என்ற குறிப்புப்பெயரெச்சமும், அடுக்கி, ‘பாதம்’ என்ற பெயரைக் கொண்டன.
முதலிரண்டடிகளில் முரண்தொடை காண்க.
கடிக்கும் பணி நஞ்சு அமுதாதல் முதலியவற்றைப் பரம பாகவத னான பிரகலாதன் முதலாயினாரிடம் காணலாம்.
ஒளிக்குந்நல்ல, நகர மெய் -விரித்தல்.

————-

தினகரனார் கலிதீ காற்றோடுங்கும் செயலும் விண் மீ
தினகரனார் கொண்ட லேழ் செருக்காமையும் சென்றெதிர் மோ
தினகரனாருயிர் செற்றார் அரங்கர் திகிரி சங்கேந்து
தினகரனார் நம் பெருமாள் அமைத்த திருக்கை கண்டே –44-

தினகரன் – சூரியனும்,
ஆர்கலி – கடலும்,
தீ – அக்கினியும்,
காற்று – வாயுவும், (ஆகிய இவைகளெல்லாம்),
ஒடுங்கும் செயலும் – தம் தம் வரம்பு கடவாது ஓரெல்லைக்கு உட்பட்டு அடங்கி யிருக்குஞ்செயலும்,
விண் மீதில் நகரனார் கொண்டல் ஏழ் செருக்காமையும் – வானத்தில் (அமராவதி யென்னும்) நகரத்தை யுடையவனான
இந்திரனாற் செலுத்தப்படுகிற ஏழு மேகங்களும் செருக்கி அளவிறந்த மழை பொழிந்து உலகங்களை யழித்திடாமையும்,
(என்னும் இவை யாதுகாரணத்தா லெனின்),
சென்று எதிர் மோதின கரன் ஆர் உயிர் செற்றார் – எதிராக வந்து பொருத கரனென்னும் அரக்கனது அருமையான உயிரை யொழித்தவரும்,
திகிரி. சங்கு ஏந்தின கரனார் – சங்க சக்கரங்களைத் தரித்த திருக்கைகளை யுடையவரும்,
நம்பெருமாள் – நம்பெருமாளென்று திருநாம முடையவருமான,
அரங்கர் – ரங்கநாதப்பிரான்,
அமைத்த – நில்லென்று குறித்து வைத்த,
திரு கை – திருக்கையை,
கண்டே – பார்த்தேயாம்; (எ – று.)

திநகரன் முதலியன அமைந்து நடப்பது திருவரங்கர் திருக்கை கொண்டு குறிப்பித்த திருவாணையைக் கண்டேயாமென
அப்பெருமானது ஸர்வ நியாமகத்வம் இதிற் கூறப்பட்டது.

நெடும் கடல் நிற்பதும் நாயிறு காய்வதும் நிற்றலும் கால்
ஒடுங்கி நடப்பதும் தண் கார் பொழிவதுவும்-ஊழிதனில்
சுடும் கனல் பற்றிச் சுடாதே இருப்பதும் தும்பை புனைந்து
அடும் கனல் ஆழி யரங்கேசர் தம் திருவாணையினே-திருவரங்கத்து மாலை

திநகரன் – பகலைச்செய்பவன்: வடசொல்.
ஆர்கலி – நிறைந்த ஓசையையுடையது; வினைத்தொகையன்மொழி.
விண்மீதினகரனார் என்றவிடத்து, ‘ஆர்’ என்ற பலர்பால்விகுதி – உயர்வுப்பொருளது.
கொண்டல் – நீர்கொண்ட மேகம்; தொழிலாகுபெயர்.
கொண்டலேழ் – ஸம்வர்த்தம், ஆவர்த்தம், புஷ்கலம், சங்கிருதம், துரோணம், காளமுகி, நீலவர்ணம் என்பன.
இந்திரன் மேகவாகன னாதலால், ‘விண்மீதினகரனார்கொண்டலேழ்’ எனப்பட்டது.
ஆர்கொண்டல் என்றெடுத்து, ஒலிக்கின்ற மேகம் எனப் பொருள்கொள்ளினுமாம்.
ஆர்உயிர் – பண்புத்தொகை.
‘நம்பெருமாளமைத்த திருக்கை’ என்றது, அபயஹஸ்தமாயமைந்த வலத்திருக்கையை.
கரன் என்ற வடசொல் – கொடியவனென்று பொருள்படும்; இவன் இராவணனுக்குத் தம்பி முறையில் நிற்கின்ற ஓரரக்கன்;
தண்ட காரணியத்திலே சூர்ப்பணகை வசிப்பதற்கென்று குறிப்பிட்ட ஜனஸ்தானமென்ற விடத்தில் அவட்குப்
பாதுகாவலாக இராவணனால் நியமித்து வைக்கப்பட்ட பெரிய அரக்கர் சேனைக்கு முதல் தலைவன்.

————

திருக் காவிரிக்கும் யமுனைக்கும் கங்கைக்கும் தெள்ளமுதாந்
திருக் காவிரிக்கும் கடற்கும் பிரான் என்னரங்கம் என்னத்
திருக் காவிரிக்கு மொழியார்க்குத் தீ மெழுகா விரன்புய்த்
திருக் காவிரிக்குமது ஒவ்வாறவன் உங்கள் சென்மைத்தையே –45-

திரு கா விரிக்கும் – அழகிய சோலைகளைச் செழித்து வளரச் செய்கின்ற,
யமுனைக்கும் – யமுனா நதிக்கும்,
கங்கைக்கும் – கங்கா நதிக்கும்,
தெள் அமுது ஆம் திரு காவிரிக்கும் – தெளிவான அமிருதம் போலினிய தாகிற மேன்மை யுள்ள காவேரி நதிக்கும்,
கடற்கும் – சமுத்திரத்துக்கும்,
பிரான் – தலைவனான எம்பெருமானது,
தென் அரங்கம் – அழகிய திருவரங்கம்,
என்ன – என்று (ஒருதரமேனும் வாயினாற்) சொல்ல,
அன்பு உய்த்து இருக்கா – அன்பு செலுத்தியிராமல்,
திருக்கு ஆவிர் – மாறுபடுவீர்கள்;
இக்கு மொழியார்க்கு – கருப்பஞ்சாறு போலினிய சொற்களை யுடைய மகளிர் திறத்திலோ,
தீ மெழுகு ஆவிர் – தீப்பட்ட மெழுகு போலக் கரைந்து உருகுவீர்கள்; (இவ்வாறு ஆக),
அவன் உங்கள் சென்மத்தை இரிக்குமாது எ ஆறு – அப்பெருமான் உங்களுடைய பிறப்பை யொழிப்பது எங்ஙனம் நிகழும்? (எ – று.)

திருவரங்கமென்று வாயினாற் சொல்லுதலுஞ் செய்யாமல் விஷயாந்த ரங்களில் ஊன்றி நிற்கின்றீர்களே,
அவன் உங்கள் ஜந்மத்தை எங்ஙனம் ஒழிப்பான்? என்று, நல்வழிச் செல்லாதவர்களைக் குறித்து இரங்கிக் கூறினர்.
‘திருக் காவிரிக்கும்’ என்ற அடைமொழியைக் கங்கை காவிரிகட்குங் கூட்டலாம்.
யமுனைக்குப் பிரான் என்றது, யமுநாநதிதீரத்திற் கிருஷ்ணாவதாரஞ் செய்து பல திருவிளையாடல்களை நிகழ்த்தி யருளியதனால்.
கங்கைக்குப் பிரான் என்றது, அந்நதி திருமாலின் ஸ்ரீபாத தீர்த்தமாதலால்.
காவிரிக்குப் பிரான் என்றது உபயகாவேரி மத்தியிற் பள்ளி கொண்டருளுதலால்.
கடற்குப் பிரான் என்றது, கடலை உறைவிடமாகக் கொண்டிருத்தலால்.
யமுனை கங்கை முதலிய புண்ணியநதிகளின் தீர்த்தத்தினும் காவேரி தீர்த்தத்திற்கு உள்ள இனிமை மிகுதி தோன்ற,
அதற்கு ‘தெள்ளமுதாம்’ என்ற அடைமொழி கொடுத்தார்.

யமுநா என்ற வடமொழி – யமனுடன் பிறந்தவன் என்று பொருள்படும். யமனும் யமுனையும் சூரியன் மக்க ளென்றறிக.
காவிரி – காவேரீ என்ற வடசொல்லின் விகாரம்: அப்பெயர் – கவேரனென்ற அரசனது மகள் என்று பொருள்படும்.
இக்ஷு, ஜந்மம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
இருக்கா = இராமல்; ஈறுகெட்டஎதிர்மறைவினையெச்சம்;
கு – சாரியை; உடன்பாட்டு இறந்த கால வினை யெச்சமாக ‘இருந்து’ எனப் பொருள் கொண்டு,
‘தீமெழுகாவிர்’ என்றதனோடு இயைப்பினும் அமையும்.

———–

சென்மத் தரங்கங் கருமம் சுழி பிணி சேலிணங்கு
சென்மந் தரங்கதிர் பொன் கோள் கண் மாரி திண் கூற்ற சனி
சென்மந் தரங்க வற்றுள் விழுவோர் கரை சேர்க்கும் வங்கஞ்
சென்மந் தரங்கவின் றோளா ரரங்கர் திருப்பதமே –46-

சென்மம் – (மாறி மாறி வருந் தன்மை யனவான) பிறப்புக்கள்,
தரங்கம் – (மாறி மாறி வரும்) அலைகளை யுடைய கடலாகும்;
கருமம் – (உயிர்களைப் பிறப்பிலே சுழலச் செய்வதான) ஊழ்வினை,
சுழி – (அகப்பட்ட பொருள்களைத் தன்னில் உழலச்செய்வதான) நீர்ச் சுழியாகும்;
பிணி – (பிறந்த உயிர்களை வருத்துகின்ற) தேக வியாதிகளும் மநோ வியாதிகளும்,
சேல் – (நீரி லிழிந்தாரைக் குத்தி வருத்துகிற) மீன்களாகும்;
குசென் – அங்காரகனும்,
மந்தர் – சனியும்,
அம் கதிர் – அழகிய சூரிய சந்திரர்களும்,
பொன் – பிருகஸ்பதியும்,
கோள்கள் – மற்றைய கிரகங்களும்,
மாரி – மழையும்,
திண் கூற்று – (பிராணிகளைத் தவறாது அழிக்கும்) வலிமையுடைய யமனும்,
அசனி – இடியும்,
(ஆகிய ஆதி தைவிகத் துன்பங்கட்குக் காரணமான தேவ வர்க்கங்கள்),
இனம் – (அம் மீனின்) இனமாய்ப் பிராணிகளை வருத்துகிற நீர் வாழ் ஜந்துக் களாகும்;
அவற்றுள் செல் மந்தர் – அப் பிறப்புக்களிலே (கரும வசத்தாற்) சென்று அகப்பட்டுக் கொண்ட அற்ப பாக்கியமுடைய மனிதர்கள்,
அங்கு விழுவோர் – அக் கடலில் விழுந்து வருந்துபவர்களாகும்;
செல் மந்தரம் கவின் தோளார் அரங்கர் திரு பதமே – மேகந் தவழும் மந்தர கிரி போன்ற அழகிய தோள்களையுடையவரான ரங்கநாதரது திருவடியே,
கரை சேர்க்கும் வங்கம் – (அப்பிறவிக் கடலினின்று) முத்திக் கரை சேர்க்கும் மரக்கலமாகும்; (எ – று.) – ஈற்றுஏகாரம் – பிரிநிலை.

அவயவி அவயவம் முதலிய அனைத்தையும் இங்ஙனம் உருவகஞ்செய்து உரைத்தது. முற்றுருவகவணி;
வடநூலார் ஸகலரூபக மென்பர்.

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தா, ரிறைவனடி சேராதார்,”
“அறவாழி யந்தணன்றாள் சேர்ந்தார்க் கல்லாற், பிறவாழி நீந்த லரிது” என்பவாதலால்,
‘சென்மம்தரங்கம் செல் மந்த ரங்கு அவற்றுள் விழுவோர் கரை சேர்க்கும் வங்கம் அரங்கர் திருப்பதமே’ என்றார்.

‘செல்மந்தரம்’ என்றது, மந்தரத்தின் உயர்வு தோன்றக் கூறியதாம். அஷ்ட குல பர்வதங்களி லொன்றாகிய
மந்தரமலை போல ஓங்கி வளர்ந்த தோளென்க;
பாற்கடலைக் கலக்கிய மந்தரம் போலப் போர்க் கடலைக் கலக்குந் தோளென்றுங் கொள்க.

செல்வது செல் என மேகத்துக்குக் காரணக்குறி. கவின் – உவம வுருபுமாம்.
ஜந்மம், தரங்கம், கர்மம், குஜன், மந்தர், அசநி, பதம் – வடசொற்கள்.
தரங்கம் – கடலுக்குச் சினையாகுபெயர்.
குஜன் என்ற பெயர் – பூமியினின்று பிறந்தவ னென்றும்,
மந்தன் என்ற பெயர் – (நொண்டியாதலால்) மெதுவாக நடப்பவ னென்றும் பொருள்படும்.
குசென் என்றது, யமகநோக்கிய விகாரம்.

இரண்டாமடியில் ‘மந்தர்’ என்ற பன்மை – இழிவுணர்த்தும்.
செல் மந்தரம் கவின் தோளார் என்பதற்கு – மேகமும் மந்தர கிரியும் போன்ற திருமேனி யழகையும்
தோள்களை யுமுடையவ ரென்று உரைத்தலு மொன்று;
மேகம் போன்ற அழகிய மேனியும், மந்தரம் போன்ற தோளுமென முறைநிரனிறை.

மூன்றாமடியில், மந்தர் – மந்த புத்தி யுடையாருமாம்.

————-

பதக்கம லங்க லணிமார்ப பொன்னி படிந்திமை யோர்
பதக்கம லங்க ளறுசீ ரரங்க பகட்டயிரா
பதக்கம லங்கரித் தூர்வோன் சிவனையன் பார்க்கவந்துன்
பதக்கம லங்க ளடியேன் றலைக்கென்று பாலிப்பதே –47-

பதக்கம் – பதக்கமென்னும் அணிகலத்தையும்,
அலங்கல் – (பலவகை) ஆரங்களையும்,
அணி – அணிந்த,
மார்ப – திருமார்பையுடையவனே!
இமையோர் – தேவர்கள்,
பொன்னி படிந்து – திருக்காவேரி தீர்த்தத்தில் நீராடி,
பதக்கம் மலங்கள் அறு – தீவினைகளாகிய அசுத்தம் நீங்கப் பெறுதற்கிடமான,
சீர் அரங்க – ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனே!
பகடு அயிராபதம் கம் அலங்கரித்து ஊர்வோன் – பெருமையை யுடைய ஐராவதமென்ற யானையின்
மத்தகத்தைச் சிங்காரித்து ஏறி நடத்துபவனான இந்திரனும்,
சிவன் – சிவபிரானும்,
அயன் – பிரமனும்,
பார்க்க -, வந்து (நீ) எழுந்தருளி,
உன் பதம் கமலங்கள் அடியேன் தலைக்கு பாலிப்பது – உனது திருவடித் தாமரை மலர்களை அடியேனுடைய
முடியில் வைத்து அருள்செய்வது, என்று – எந்நாளோ! (எ – று.)

அலங்கல் – தொங்கியசைதல்; மாலைக்குத் தொழிலாகுபெயர்.
இமையோர் – கண் இமையாதவர்.
யமகத்தின்பொருட்டு, பாதகம் என்ற வடசொல் குறுக்கலும் விரித்தலு மாகிய விகாரங்களைப் பெற்றுப் பதக்கம் என நின்றது.
அயிராபதம் – ஐராவதம் என்ற வடசொல்லின் போலிவிகாரம்.
கம், சிவன், பதம், கமலம் – வடசொற்கள். கம் – தலை. சிவம் – சுபம்; அதனை(த் தன் அடியார்க்கு)ச் செய்பவன், சிவன்.
அயிராபதப்பகடு என்று மாற்றி, ஐராவதமென்னும் ஆண்யானை யென்றும் உரைக்கலாம்:
பகடு – யானையின் ஆண்மைப்பெயர். கமலம் என்ற பெயர் – நீரை யலங்கரிப்பது என்று காரணப் பொருள்படும்.

——————

பாலனம் செய்யமர் நாடாண்டு பூணொடு பட்டணிந்து
பாலனம் செய்ய கலத்ததுண்டு மாதர்பால் போகத்தையும்
பாலனம் செய்ய விருப்பதி லையம் பருகி நந்தன்
பாலனம் செய்யவள் கோமான் அரங்கம் பையில்கை நன்றே –48-

பால் அனம் – வெண்ணிறமான அன்னப் பறவைகள்,
செய் – கழனிகளில்,
அமர் – பொருந்தி வசிக்கப் பெற்ற,
நாடு – தேசத்தை,
ஆண்டு – அரசாட்சி செய்து,
பூணொடு பட்டு அணிந்து – ஆபரணங்களையும் பட்டாடையையும் தரித்து,
செய்ய கலத்து பால் அனம் உண்டு – சிவந்த (செம் பொன் மயமான) பாத்திரத்திற் பாற்சோற்றைப் புசித்து,
மாதர் பல் போகத்தையும் பாலனம் செய்ய இருப்பதில் – மகளிர் சேர்க்கையாலாகும் பல வகையின்பங்களையும் பரிபாலித்து வீற்றிருப்பதனினும்,
ஐயம் பருகி – இரந்து பெற்ற கூழைக் குடித்தாயினும்,
நந்தன் பாலன் அம் செய்யவள் கோமான் அரங்கம் பையில்கை – நந்தகோபனது குமாரனும் அழகிய
திரு மகளின் கணவனுமான திருமாலினது ஸ்ரீரங்கத்திலே வாசஞ்செய்தல், நன்று – நல்லது; (எ – று.) – ஈற்று ஏகாரம் – தேற்றம்.

அனம் – ஹம்ஸம் என்ற வடசொல்லின் சிதைவான அன்ன மென்ப தன் தொகுத்தல்.
நீர்வளமிகுதியால் தாமரை முதலிய நீர்ப்பூக்க ளுள்ள விடத்திலே சென்று விரும்பி வாழ்தல் அன்னப்பறவையின் இயல்பாதலால்,
‘பாலனஞ்செய்யமர்’ என்ற அடைமொழி நாட்டின்வளத்தை யுணர்த்தும்.
அணிதல் – பொதுவினை. அனம் = அந்நம்.
பசும் பொன்னினாலாகிய பூணை ‘பைம்பூண்’ என்றல் போல, செம் பொன்னினாலாகிய கலத்தை ‘செய்யகலம்’ என்றார்.
கலம் – உண்கலம். பாலனஞ்செய்தல் – தவறாமல் நுகர்தல்.
செய்ய = செய்து: எச்சத் திரிபு.
தமக்கு உரிய பலவகைப் போகங்களையும் மாதர்கள், பாலனம் செய்ய – தவறாது நடக்கும்படி பாதுகாக்க என்று உரைப்பினும் அமையும்.
இருப்பதில் – ஐந்தனுருபு எல்லைப் பொருளது.

நந்தன் – கண்ணனை வளர்த்த தந்தை. வசுதேவனும் தேவகியும் நகம் சனாற் சிறையிலிருத்தப்பட்டு
வடமதுரையில் தளைபூண்டிருக்கையில், திருமால் தேவகியினிடம் எட்டாவது கருப்பத்தில் கண்ணனாய் அவதரிக்க,
அக் குழந்தையைக் கம்சன் கொல்லக் கூடு மென்ற அச்சத்தால், தாய் தந்தையர் அத் தெய்வக் குழவியின் அநுமதி பெற்று
அந்தச்சிசுவை அதுபிறந்தநாடுராத்திரியிலேயே திருவாய்ப்பாடியிலுள்ள இடையர்க்கெல்லாந்தலைவனான
நந்தகோபனது திருமாளிகையிலே இரகசியமாகக் கொண்டு சேர்த்துவிட்டு, அங்கு அப்பொழுது அவன் மனைவியான யசோதைக்கு
மாயையின்அம்ச மாய்ப் பிறந்திருந்த தொரு பெண்குழந்தையை எடுத்துக்கொண்டுவந்து விட,
அதுமுதற் கம்சனைக் கொல்லுகிறவரையில் கண்ணபிரான் அக்கோ குலத்திலேயே
நந்தகோபன்குமரனாய் யசோதைவளர்க்க வளர்ந்தருளின னென்று உணர்க.
செய்யவள் – செவ்வியையுடையவள். கோமான், மான் – பெயர்விகுதி. பையில்கை = பயில்கை;
இப்போலி, அடுத்த யமகச்செய்யுளின் அந்தாதித் தொடர்ச்சி நோக்கிக் கொள்ளப்பட்டது.
‘பருகி’ என்ற வினையை நோக்கி, ‘ஐயம்’ என்றது – கூழ் எனப்பட்டது. போகம்,, பாலநம், பாலன் – வடசொற்கள்.
நம் செய்யவள் கோமான் என்று எடுத்துரைத்தலுமொன்று.

————

பையிலத்தி மூளை நரம்பூன் உதிரம் பரந்த குரம்
பையிலத்தி யுள்விளை பாண்டமென்னாமல் புன்பாவையர் தோல்
பையிலகத்தி செய்து நரகெய்து வீருய்யப் பற்றுமினோ
பையிலத்தி மேவித் துயில் கூரரங்கர் பொற் பாதத்தையே –49-

பையில் – (ஒன்றோடொன்று) பொருந்தி யிருக்கின்ற,
அத்தி – எலும்பும்,
மூளை – மூளையும்,
நரம்பு – நரம்பும்,
ஊன் – தசையும்,
உதிரம் – இரத்தமும்,
பரந்த – பரவிய,
குரம்பை – (உயிர் சிலநாள் தங்குஞ்) சிறு குடிசை (இது):
இலத்தி உள் விளை பாண்டம் – மலம் அகத்திலே மேன்மேலுண்டாகப்பெறும் பாத்திரம் (இது)’,
என்னாமல் – என்று (உடம்பின் அசுத்தத் தன்மையைக்) கருதாமல்,
புல் பாவையர் தோல் பையில் அத்தி செய்து – இழிகுணமுடைய மகளிரது உடம்பினிடத்து ஆசை வைத்து,
நரகு எய்துவீர் – நரகத்தை யடைபவர்களே! – (நீங்கள்),
உய்ய – ஈடேறுமாறு,
அத்திபையில் மேவி துயில் கூர் அரங்கர் பொன் பாதத்தை பற்றுமினோ – (திருப்பாற்) கடலில் (ஆதிசேஷனது) படத்தின் கீழ்த்
திருவுள்ளமுவந்து யோக நித்திரை செய்தருளுகிற ஸ்ரீரங்கநாதருடைய அழகிய திருவடிகளைச் சரணமடையுங்கள்; (எ – று.)

அத்தி என்பது – எலும்பு என்ற பொருளில் அஸ்தி என்ற வடசொல்லும், ஆசை என்ற பொருளில் அர்த்தி என்ற வடசொல்லும்,
கடல் என்ற பொருளில் அப்தி என்ற வடசொல்லும் சிதைந்ததாம்.
பையில் = பயில்; முதற்போலி, ருதிரம், பாண்டம், நரகம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
தோற்பை – தோலினாலாகிய பை. அத்தி செய்தல் – அர்த்தித்தல்: வேண்டுதல்.
பற்றுமினோ என்ற ஓகாரம் – கழிவிரக்கத்தைக் காட்டும்.

“குடருங் கொழுவுங் குருதியு மென்புந், தொடரு நரம்பொடு தோலும் – இடையிடையே, வைத்த
தடியும் வழும்புமா மற்றிவற்றுள், எத் திறத்தா ளீர்ங்கோதையாள்”,
“ஊறி யுவர்த்தக்க வொன்பதுவாய்ப்புலனுங், கோதிக் குழம்பலைக்குங் கும்பம்,”
“தோற்போர்வை மேலுந் துளை பலவாய்ப் பொய்ம்மறைக்கும், மீப்போர்வை மாட்சித் துடம்பானால் –
மீப்போர்வை, பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப், பைம்மறியாப் பார்க்கப்படும்” என்ற
நாலடியார்ப் பாடல்கள் உடம்பின் அசுத்தியை நன்கு விளக்கும்.

இச் செய்யுளில் அடிதோறும் முதலிலுள்ள ஐகாரம் குறுக்கமாதலால், அதனைத் தனியே நேரசையாகக் கொள்ளாது
அடுத்த குறிலோடு சேர்த்து நிரையசையாகக் கொள்ள வேண்டும்;
இல்லாவிடின், “நேர்பதினாறே நிரை பதினேழென், றோதினர் கலித்துறை யோரடிக் கெழுத்தே” என்றது
முதலிய கட்டளைக் கலித்துறை யிலக்கணம் சிதையும்.
கீழ்ச்செய்யுளின் ஈற்றடியில் வந்த “பையில்கை” என்றவிடத்தும் இங்ஙனமே காண்க.

———–

பாதகங் கைக்கு மரங்கர் பல்பேய் பண் டிராவணனுற்
பாதகங் கைக்கு மென் றெள்ளக்கொய் தார் படிக்கேற்ற திருப்
பாதகங் கைக்குள் விழு முன்னமே பங்கயன் விளக்கும்
பாதகங் கைக்குளிர் நீர் விழுந்த தீசன் படர் சடைக்கே –50-

பாதகம் – (அடியார்களுடைய) பாவங்களை,
கைக்கும் – வெறுத்தொழிக்கின்ற,
அரங்கர் – ரங்கநாதரும், பல் பேய் – பலபேய்கள்,
பண்டு. முன்னாளில்
இராவணன் உற்பாதம் கம் கைக்கும் என்று எள்ள – இராவணனுடைய உற்பாதமான தலைகள் கசக்குமென்று இகழுமாறு,
கொய்தார் – (அத்தலைகளைத்) துணித்தவருமான திருமால்,
படிக்கு – (தாம் மாவலி பக்கல் வேண்டிய) மூவடி நிலத்தைத் தவறாது பெறுதற்காக,
ஏற்ற – வாங்குதற்கு உடன்பட்ட,
திருப்பாத கம் – (கொடுப்பதைத்) திருப்பக் கூடாத ஜலம்
(வாக்கு தத்தத்தோடு மகாபலி சக்ரவர்த்தி தாரை வார்த்துக் கொடுக்கிற நீர்),
கைக்குள் விழும் முன்னமே – (அப்பெருமானது) அகங்கையில் விழுதற்கு முன்னமே, –
பங்கயன் விளக்கும் பாதம் கங்கை குளிர் நீர் – பிரமன் திருமஞ்சனஞ் செய்த திருவடியின் தீர்த்தமாகிய குளிர்ந்த கங்கா ஜலமானது,
ஈசன் படர் சடைக்கே வீழ்ந்தது – சிவபிரானது பரவிய சடையிலே விழுந்திட்டது; (எ – று.)

மாவலி பக்கல் மூவடி மண் வேண்டிப் பெற்று உலகனைத்தையும் தனது உடைமை யாக்கி அவனைச் செருக்கடக்குதற்கென்று
திருமால் கொண்ட திருவவதாரமாகிய வாமன மூர்த்தியின் கையில் மகாபலி தாரை வார்த்துக் கொடுத்த நீர் விழுவதன் முன்,
அவ் வாமனன் திரிவிக்கிரமனாய் வளர்ந்து உலகமளக்க மேலே சத்திய லோகத்துச் சென்ற அப்பிரானது திருவடியை
அங்குப் பிரமன் தன் கைக் கமண்டல தீர்த்தத்தாற் கழுவி விளக்க அந்த ஸ்ரீபாத தீர்த்தமாகப் பெருகிய
கங்காநதி சிவபிரானது சடையில் வீழ்ந்தது என்றார்.

விரைவுமிகுதி தோன்ற; இங்ஙனம் காரணத்தின் முன் காரியம் நிகழ்ந்ததாகக் கூறுதல், மிகையுயர்வுநவிற்சியணி.

தார் ஏற்ற வெண் குடை மாவலி வார்க்கவும் தாமரை மேல்
சீரேற்ற தொன்னான் முகத்தோன் விளக்கவும்
செம்போன் முடிக் காரேற்ற யரங்கேசர் கையும் கழலும் ஒக்க நீர் ஏற்றன
வண் திருக் குறளாகி நிமிர்ந்த வன்றே -திருவரங்கத்து மாலை

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து –
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்திக்
கறை கொண்ட கண்டத்தான் சென்னியின் மேல்
ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை யாங்கு

உத்பாதம் – வடசொல்: பின்நிகழுங் தீமைக்கு அறிகுறியாக முன்னர்த் தோன்றுந் தீ நிமித்தம்;
இராவணனது பத்துத் தலைகளை உலகத்தின் தீமைக்கு அறிகுறி யென்றும் இனியன வல்லவென்றும்
பிணம் பிடுங்கித் தின்னும் இயல்பினவான பேய்களும் இகழ்வதாகக் கூறியது, அவனது மிக்க இகழற் பாட்டை விளக்கும்.
பங்கஜம் – சேற்றில் முளைப்பது: வடசொல்; தாமரைக்குக் காரண விடுகுறி: அதில் தோன்றியவன், பங்கயன்.
ஈசன் – ஐசுவரியமுடையவன். சடைக்கு – உருபுமயக்கம்.

————–

பட நாகத்தந்தர மீதிருப்பான் எம் பரன் அரங்கன்
பட நாகத் தந்தம் பறித்தோன் புகழைப் பரவுமின்க
பட நாகத் தந்தக் கரணம் பொல்லான் சிசுபாலன் முற்பல்
பட நாகத் தந்த வசைக் குந்தந்தான் றொல் பரகதியே –51-

அந்தரம் மீது – பரம பதத்தில்,
படம் நாகத்து – படங்களை யுடைய திருவனந்தாழ்வான்மீது,
இருப்பான் – வீற்றிருப்பவனும்,
எம் பரன் – எமது இறைவனும்,
நாகம் தந்தம் பட பறித்தோன் – (கம்சனேவிய குவலயாபீடமென்னும்) யானையினது தந்தத்தை (அவ்வானை) அழியுமாறு பறித்துக் கொண்டவனுமான,
அரங்கன் – ரங்கநாதனது,
புகழை – கீர்த்தியை,
பரவுமின் – கொண்டாடித் துதியுங்கள்;
(அங்ஙனம் அனைவரும் புகழுமாறு அப்பெருமான் யாதுசெய்தா னெனின்), –
கபடன் – வஞ்சகனும்,
ஆகத்து அந்தக்கரணம் பொல்லான் – உடம்பின் அகத்துறுப்பான மனம் தீயவனுமாகிய,
சிசுபாலன் – சிசுபாலனென்பவன்,
முன் – முன்பு,
பல் பட – பலவாறாக,
நா கத்து – நாவினாற் பிதற்றின,
அந்த வசைக்கும் – அப்படிப்பட்ட (மிகக்கொடிய) நிந்தனைச் சொற்களுக்கும்,
தொல் பரகதி தந்தான் – அநாதியான பரமபதத்தைக் கொடுத்தருளினான்; (எ – று.)

சிசுபாலன் எம்பெருமானை இகழ்ந்ததற்குப் பயனாகப் பரகதியைப் பெற்றன னென்றால்,
அப்பெருமானைப் புகழ்வதற்குப் பயன் பரகதி யென்பது கூறாமலே யமையு மென்ற கருத்து, இதில் தொனிக்கும்.
சிசுபாலன் – வசுதேவனது உடன்பிறந்தவளும் அதனாற் கண்ணனுக்கு அத்தையும்
சேதி தேசத்தரசனான தமகோஷனுக்குப் பத்தினியுமாகிய சுருதசிரவையென்பவ ளுடைய மகன்.
திருமாலின் துவாரபாலகராகிய ஜயவிஜயர்கள் ஒருசமயத்தில் விஷ்ணுலோகத்தினுட் செல்லவந்த ஸநகாதியோகிகளைத்
தடுத்தமை பற்றி அவர்கள் வெகுண்டுகூறிய சாபமொழியால் மூன்றுபிறப்புத் திருமாலுக்குப் பகைவராய்ப் பூமியிற் சனித்து
அத்திருமாலின்கையா லிறப்பவ ராகி, முதலில் இரணிய இரணியாக்ஷராகவும், அதன்பின் இராவண கும்பகர்ணராகவும்,
அப்பால் சிசுபால தந்தவக்கிரராகவுந் தோன்றின ரென அறிக.

எம்பெருமான் பக்தியோடு தன்னைத் தியானிப்பவர்க்குத் திருவுள்ள முவந்து மோக்ஷமளிப்பதுபோலவே,
விரோதத்தினாலாகிலும் தன்னைஇடைவிடாது நினைந்திருந்தவர்க்கும் சிறுபான்மை தனது பரம
கிருபையால் அந்த முக்தியை யளிக்கின்றன னென்பது நூற்கொள்கை.

அந்தரம் – வானம், பரமாகாசம். மூன்றாமடியில் ‘கபடநாகத்து’ என்ற விடத்து, னகரவேறுபாடு யமகநயம்பற்றியது.
வசைக்கும், உம் – இழிவு சிறப்பு. பர கதி – உயர்ந்த கதி

————

பரவையி லன்ன கட் பாஞ்சாலி நின்பரமென்ன நிரு
பறவையில் மேகலை ஈந்தான் அரங்கன் பணிந்து இமையோர்
பரவையிலாழிப் பிரான் அடிக்கீழுற் பவித்து அழியும்
பரவையில் மொக்குகளைப் போல் பல கோடி பகிரண்டமே–52-

பரவு – விசாலித்த,
ஐயில் அன்ன கண் – வேலைப்போன்ற (கூரிய) கண்களை யுடைய,
பாஞ்சாலி – திரௌபதி,
நின் பரம் என்ன – ‘(என்னைக் காப்பது) உனது பாரம்’ என்று சொல்லி முறையிட்டுச் சரணமடைய,
நிருபர் அவையில் – அரசர்கள் கூடிய சபையிலே,
மேகலை ஈந்தான் – (அவட்கு) ஆடையை யளித்தவனும்,
இமையோர் பணிந்து பரவு – தேவர்கள் வணங்கித் துதிக்கப்பெற்ற,
ஐயில் ஆழி பிரான் – கூரிய சக்கராயுதத்தை யேந்திய இறைவனுமான,
அரங்கன் – திருவரங்கநாதனது,
அடிக்கீழ் – திருவடியில்,
பரவையில் மொக்குளை போல் – கடலில் தோன்றும் நீர்க் குமிழிகள் போல,
பல கோடி பகிரண்டம் – அநேக கோடிக் கணக்காகிய அண்ட கோளங்கள்,
உற்பவித்து – தோன்றி,
அழியும் – (சிலகாலம் கழிந்தவாறே) மாய்ந்துபோம்; (எ – று.)

வாரித்தலமும் குல பூதரங்களும் வானு முள்ளே –
பாரித்து வைத்த இவ்வண்டங்கள் யாவும் படைக்க முன்னாள்
வேரிப் பசும் தண் துழாய் அரங்கேசர் விபூதியிலே
மூரிப் புனலில் குமுழிகள் போலே முளைத்தனவே -திருவரங்கத்து மாலை

பாஞ்சாலீ – வடமொழித்தத்திதாந்தநாமம். பாஞ்சாலதேசத்து அரசனது மகள்; பஞ்சபாண்டவரது பத்தினி.
மேகலை யென்ற எண்கோவை யிடையணியின் பெயர், ஆடைக்கு இலக்கணை.
மேவு கலை என வினைத் தொகை நிலைத் தொடராக எடுத்து,
விரும்பப்படுகின்ற ஆடை யென்றும், பொருந்திய ஆடை யென்றும் பொருள் கொள்ளலாம்.
ஐயில் = அயில். பஹி ரண்டம் – வெளியண்டம்; இங்கு, அண்டமென்ற மாத்திரமாய் நின்றது. யமகநயத்தின்பொருட்டு,
‘நிருபரவையின் மேகலை’, ‘பரவையின் மொக் குளை’ என்று சந்தி புணர்க்காமல் லகரவீறாகவே நிறுத்திக் கொண்டார்.

————-

அண்ட மடங்கலையும் தந்து காத்தவை யந்தந்தன்பால்
அண்ட மடங்கலைச் செய்கா ரணமம் பொன் முத்தலைவான்
அண்ட மடங்கலை யீர்த்தோடும் பொன்னி யரங்கன் புட்கார்
அண்ட மடங்கலை முந்நீர் மகளுகப் பாகவென்றே –53-

அம் – அழகிய,
பொன் – பொன்னையும்,
முத்து – முத்துக் களையும் கொழிக்கின்ற,
அலை – அலைகள்,
வான் அண்ட – மேக மண்டலத்தை யளாவி யுயர,
மடங்கலை ஈர்த்து ஓடும் – சிங்கங்களை யிழுத்துக் கொண்டு ஓடி வருகிற,
பொன்னி – காவேரி நதியினாற் சூழப்பட்ட,
அரங்கன் – திருவரங்கத்தி லெழுந்தருளி யிருக்கிற பெருமான்,
அண்டம் அடங்கலையும் – அண்ட கோளங்களெல்லாவற்றையும்,
தந்து – படைத்து,
காத்து – பாதுகாத்து,
அவை அந்தம் தன்பால் அண்ட மடங்கலை செய் – அவ்வண்டங்களெல்லாம் கற்பாந்த காலத்திலே மீண்டும்
தன் பக்கல் ஒடுங்கும்படி அழிவு செய்கின்ற, காரணம் – ஏது, (யாதெனில்),
காரண்டம் புள் அடங்கு அலை முந்நீர் மகள் உகப்பு ஆக என்றே – நீர்க் காக்கையாகிய பறவைகள் தம்மிலடங்கப் பெற்ற
அலைகளை யுடைய திருப்பாற் கடலினின்று தோன்றிய திருமகள் (கண்டு) களிப்படைதற்கு என்றேயாம்; (எ – று.)

எம்பெருமான் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிலை யுஞ் செய்வது பெரியபிராட்டியாரின் மனத்தை
மகிழ்விக்குந் திருவிளையாட லேயா மென்பது, கருத்து.
இரட்டுறமொழித லென்னும் உத்தியால், ‘முந் நீர்மக ளுகப்பாக’ என்பதற்கு –
(அண்டங்கட்கெல்லாம் அதிஷ்டாந தேவதையான) கடலாடை சூழ்ந்த பூமிப்பிராட்டி மகிழ்ச்சி யடைய வென்றும் பொருள் கொள்ளலாம்.

அண்டமடங்கலையுந் தந்து காத்து அவை அந்தந் தன்பால் அண்ட மடங்கலைச்செய் –
தன்னுள்ளே திரைத்து எழுந்த தரங்க வெண் தடம் கடல்
தன்னுள்ளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுள்ளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுள்ளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே -திருமழிசைப் பிரான் –

அடங்கல் என்றது, எஞ்சாமைப் பொருளைக் காட்டும்; உம்மை – முற்றும்மை, அந்தம் அண்ட – அழிவை யடைய,
மடங்கலைச்செய் – ஊழிக்காலத் தைச் செய்கிற வென்றுரைத்தலு மொன்று.
பொன்னும் முத்தும் சிங்கங்களும் – மலையிலுள்ளவை. மலையில் முத்து, யானைத் தந்தம் முதலியவற்றினின்று தோன்றியவை யென்க.
மடங்கல் – (பிடரி மயிர்) மடங்குதலை யுடைய தென ஆண் சிங்கத்துக்குக் காரணக் குறி.
காரண்டவம் – வடசொல். உகப்பு – தொழிற்பெயர்.

———–

ஆக மதிக்கு முகமன் முகமுடை யானயன் வாழ்
ஆக மதிக்கு நவநீதக் கள்வ வவனி கொள்வார்
ஆக மதிக் குளம் சேர் ரங்கா வுன்னை யன்றித் தெய்வம்
ஆக மதிக்குள் எண்ணேண் அடியேன் பிரராரையுமே –54-

ஆகமம் – (காமிகம் முதலிய) ஆகமங்களைக் கூறிய,
திக்கு முகம் மேல் முகம் உடையான் – நான்கு முகங்களுக்கு மேலும் ஒருமுகத்தை (ஐந்து முகங்களை) யுடையவனான சிவபிரானும்,
அயன் – பிரமனும்,
வாழ் – இனிது வசிக்கின்ற,
ஆக – திருமேனியை யுடையவனே!
மதிக்கும் நவநீதம் கள்வ – கடைந்தெடுத்த வெண்ணெயை (க் கிருஷ்ணாவதாரத்திற்) களவு செய்துண்டவனே!
அவனி கொள் வாராக – பூமியைக் கோட்டினாற் குத்தி யெடுத்துக் கொண்டு வந்த வராக மூர்த்தியானவனே!
மதி குளம் சேர் அரங்கா – சந்திர புஷ்கரிணி பொருந்திய ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனே!
அடியேன் – (உனது) அடியவனான நான்,
உன்னை அன்றி பிறர் ஆரையும் தெய்வம் ஆக மதிக்குள் எண்ணேன் – உன்னை யல்லாமல் வேறு எவரையும்
கடவுளாக மனத்திற் கருதுதலுஞ் செய்யேன்; (எ – று.)

“மறந்தும் புறந்தொழா மாந்தர்” என்றபடி பர தேவதையாகிய ஸ்ரீமந்நாராயணனையே யன்றி அவனது திருமேனியிலடங்கிய
அபரதேவதை களைச் சிறிதும் பொருள் செய்யாமையில் தமக்கு உள்ள உறுதியை இங்ஙனம் வெளியிட்டார்.

திருமாலின் திருநாபியிற் பிரமனும், வலப் பக்கத்திற் சிவ பிரானும் அடங்கியுறைதலை,
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனை தன உந்தியிலே தோற்றுவித்து
கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன்– என்ற அருளிச்செயல்கொ ண்டும் உணர்க.

இங்கு ‘ஆகமம்’ என்றது, காமிகம் முதல் வாதுளம் ஈறாகச் சொல்லப் படும் இருபத்தெட்டுச் சிவாகமங்களை.
சிவபூசை செய்யுந்திறம் சிவ ஸ்வரூபம் முதலியவற்றைச் சொல்லுகிற இந்தச் சைவாகமங்கள் அச்சிவபிரானாலேயே சொல்லப்பட்டவை.

திக்கு என்பது – இலக்கணையால், அதன்தொகையாகிய நான்கென்னும் எண்ணின் மேல் நின்ற தென்க.
சிவபிரான் நான்கு திசையையும் நோக்கிய நான்கு முகங்களோடு மேல் நோக்கிய ஊர்த்துவமுக மொன்றுமாக
ஐந்துமுகங்களையுடையா னென்ற விவரம் விளங்க,
‘திக்கு முகமேல் முகமுடையான்’ என்றன ரென்றுங் கொள்ளலாம்.

சதாசிவமூர்த் தியினுடைய ஐந்து முகங்களுள்ளும்
சத்தியோசாதமென்னும் முகத்தினின்று காமிகம் யோகஜம் சிந்தியம் காரணம் அசிதம் என்னும் ஐந்து ஆகமங்களும்,
வாமமென்னும் முகத்தினின்று தீப்தம் சூக்குமம் சகத்திரம் அஞ்சுமான் சுப்பிரபேதம் என்னும் ஐந்து ஆகமங்களும்,
அகோரமென்னும் முகத்தினின்று விசயம் நிச்சுவாசம் சுவாயம்புவம் ஆக்நேயம் வீரம் என்னும் ஐந்துஆகமங்களும்,
தத்புருஷமென்னும் முகத்தினின்று ரௌரவம் மகுடம் விமலம் சந்திரஞானம் விம்பம் என்னும் ஐந்து ஆகமங்களும்,
ஈசாநமென்னும் முகத்தினின்று புரோற்கீதம் லளிதம் சித்தம் சந்தாநம் சர்வோக்தம் பாரமேசுவரம் கிரணம் வாதுளம் என்னும்
எட்டு ஆகமங்களும் தோன்றின வென்று அறிக.

நவநீதம் என்ற வடசொல் – புதிதாக ஈட்டப்பட்டது என்றும், அவநி என்ற வடசொல் – காத்தற்கு உரியது என்றும் காரணப் பொருள்படும்.
கள்வன், வ் – பெயரிடைநிலை. சந்திரபுஷ்கரிணி – க்ஷயரோகமடைந்து அழியும் படி தக்ஷப் பிரஜாபதியினாற் சாபமடைந்த
சந்திரன் தவஞ்செய்து அச் சாப நிவிருத்தி பெற்ற குளம்.
மதி – நன்குமதிக்கப்படுபவன். மதி – அறிவு; வடசொல். ‘மதிக்குள் வையேன்’ என்றும் பாடம்.

———–

ஆரத் தநந்தருந் தாய்தந்தை யா நந்த மாவரிகழ்
ஆரத் தநந்தனன் றீமை கண்டாலங்கவுத் துவ பூண்
ஆரத் தநந்த சயனா வணியரங்கா திகிரி
ஆரத் தநந்தன் மதலா யென் றீங்குனக்கத் தன்மைத்தே –55-

அத்த – (எனது) தந்தையே!
அம் கவுத்துவ – அழகிய கௌஸ்துபமென்னும் இரத்தினத்தைத் (திருமார்பில்) தரித்துள்ளவனே!
பூண் ஆரத்து – அணிந்த ஹாரங்களையுடைய,
அநந்தசயனா – ஆதிசேஷனைப் படுக்கையாக வுடையவனே!
அணி அரங்கா – அழகிய திருவரங்கத்துக்குத் தலைவனே!
திகிரி ஆர் அத்த – சக்கராயுதம் பொருந்திய திருக்கையை யுடையவனே!
நந்தன் மதலாய் – நந்தகோபன் வளர்த்த குமாரனே! –
ஆர தநம் தரும் தாய் – (தான் பெற்ற பிள்ளைக்குக்) குடிக்க முலைப் பாலைக் கொடுக்கிற தாயும்,
தந்தை – தந்தையும்,
நந்தனன் தீமை கண்டால் – தமது புதல்வன் (இளமையில் தம்மை உதைத்தல் ஏசுதல் முதலிய) தீங்குகள் செய்தலைக் கண்டால்,
ஆநந்தம் ஆவர் – மகிழ்ச்சி யடைவரே யன்றி,
இகழார் – வெறுப்புக் கொள்ளார்: –
என் தீங்கு உனக்கு அ தன்மைத்தே – (அறிவிற் சிறியேனான) எனது பிழையும் (எந்தையான) உனக்கு அத் தன்மையதேயாம்; (எ – று.)

அன்பிற் சிறந்த தாய் தந்தையர் தம் மக்கள் இளமையிற் செய்கிற சிறு குறும்புகளைப் பொருள் செய்யாது
அவற்றைக் கண்டு களித்து நிற்றல் போல, அருளிற் சிறந்த எம்பெருமானும் தனது அடியாரது பிழைகளைப் பாராட்டாது
“என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றுசெய்தா ரென்பர்போலும்” என்னும்படி
அவற்றையே குணமாகப் பாவித்துப் போக்யமாகக் கொண்டு அருள் செய்வ னென்பதாம்.

“திருவரங்கத்துள்ளோங்கு, மொளியுளார் தாமே யன்றே தந்தையுந் தாயு மாவார்” என்ற திருமாலை இங்கு உணரத்தக்கது.

இக்கருத்துக்கு, இரண்டாமடியில் ‘அத்த’ என்றதைத் தந்தையை யழைக்கும் விளியாகக் கொண்டமை இனிது பொருந்தும்;

“அணியார் பொழில் சூழரங்க நக ரப்பா” என்றார் பெரியாரும்.

இனி, அத்தம் என்று பிரித்து அர்த்தம் என்ற வடசொல்லின் விகார மென்று கொண்டு,
அத்த நந்தனன் – செல்வப் புதல்வன் என்று உரைப்பாரும்,
அதம் நந்தனன் என்று பிரித்து அந்தத் தமது புதல்வ னென்று உரைப்பாருமுளர்.

இரட்டுறமொழிதலென்னும் உத்தியால், ‘ஆரத் தநந் தரும்’ என்பதற்கு –
(தனது மகனுக்குத்) தனது செல்வத்தை முழுவதுங் கொடுக்கின்ற என்று உரைத்து,
அந்த அடைமொழியைத் தந்தைக்குங் கூட்டலாம்; (ஆர – நிரம்ப; தநம் – செல்வம்.)
நந்தநன் என்ற பெயர் – (தாய் தந்தையர்க்கு) ஆநந்தத்தைச் செய்பவனென்று காரணப் பொருள்படும்.
‘என் தீங்கு’ என்றது; வணங்காமை புகழாமை முதலியவற்றை. தீங்கு – சாதி யொருமை.

ஸ்தநம், தநம், ஆநந்தம், நந்தநன், கௌஸ்துபம் ஹாரம், அநந்தசயநன், ஹஸ்தம் – வடசொற்கள்.
கௌஸ்துபரத்தினம், திருப்பாற்கடலினின்று தோன்றியது.
ஹாரம் – மார்பின்மாலை.
‘பூணாரத்து’ என்றது, அநந்த சயநனுக்கு அடைமொழி.
மதலாய் – மதலை யென்பதன் ஈறுதிரிந்த விளி.
தாய் தந்தை – பன்மை விகுதி பெறாத பொதுத்திணை யும்மைத் தொகை.

————–

அத்தனு மன்புள வன்னையும் பேரு மனந்தமதாம்
அத்தனு மன்புல னாதலி னாண்டரு ளம்புயைவீர்
அத்தனு மன்புயமீதே றரங்கனஞ் சார்ங்கவயிர்
அத்தனு மன்புகல் பேரிரு வீர்க்குமடிய னென்றே –56-

அத்தனும் – தந்தையும்,
அன்பு உள அன்னையும் – (மக்களிடத்து) மிக்க அன்பையுடைய தாயும்,
பேரும் – பெயரும்,
அனந்தம் அது ஆம் – எல்லை யில்லாததாகப் பெற்ற,
அ தனு – அந்தந்த உடலில் (பலவகைப் பிறப்புக்களில்),
மன் – பொருந்தி வருகிற,
பு(ல்)லன் – எளியவன் யான்:
ஆதலின் – ஆகையால்,
அம்புயை – இலக்குமி யென்றும்,
வீரத்து அனுமன் புயம் மீது ஏறு – பராக்கிரமத்தை யுடைய அநுமானை (இராமாவதாரத்தில்) வாகனமாகக் கொண்டு
அச் சிறிய திருவடியின் தோள்களின் மேலேறிய,
அரங்கன் – ரங்கநாதனாகிய,
அம் சார்ங்கம் வயிரம் தனு மன் – அழகிய சார்ங்க மென்னும் உறுதியான வில்லை யுடைய பெருமா னென்றும்,
புகல் – சொல்லப்படுகிற,
பேர் இருவீர்க்கும் – உங்களிரண்டு பேர்க்கும்,
அடியன் என்று – அடியவனாக என்னைக் கொண்டு,
ஆண்டு அருள் – பாதுகாத்தருள்வாய்; (எ – று.)

ஒவ்வொரு பிறப்புக்கு ஒவ்வொரு தந்தையும் தாயும் பெயருமாக எத்தனையோ பிறப்புக்களில் எத்தனையோ
தந்தை தாயர்களையும் பெயர்களையுங் கொண்டு உழன்று வருகிறவன் யானென்று தனது சிறுமையை விண்ணப்பித்து,
இனியாயினும் பரம பிதாமாதாக்களாகிய நீயும் பெரிய பிராட்டியாரும் என்னை ஆட் கொண்டு உங்கட்கு அடியனென்ற
பெயரையிட்டுப் பிராகிருத பிதாமாதாக்களின் தொடர்பையும் பிராகிருத நாமத்தையும் போக்கி எனக்கு
முத்தி யளித்தருள வேண்டு மென்று பிரார்த்தித்தபடி.
“தாயொக்கு மன்பின்” என்னும்படி மக்களிடத்துத் தந்தையினன்பினும் தாயினன்பு மிகுதலால்,
அன்னைக்கு ‘அன்புள’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது;
இனி, அதனை மத்திம தீபமாகக் கொண்டு அத்தனுக்கும் இயைத்தலு மொன்று.

உள்ள, புல்லன் என்பவை – உள, புலன் என்று தொகுத்தல் விகாரமமடைந்தன.
‘தனு’ என்றது – உடம்பைக் குறிக்கையில் தநு என்ற வட சொல்லின் விகாரமும்,
வில்லைக் குறிக்கையில் தநுஸ் என்ற வட சொல்லின் விகாரமுமாம்.
மன்புலன் – வினைத் தொகை.
அம்புயை – அம்புஜா என்ற வட சொல்லின் விகாரம்; தாமரை மலரில் வாழ்பவ ளென்று பொருள்.
நான்காமடியில், மன் – மன்னன்; பண்பாகுபெயர். இருவீர் – முன்னிலைப் பன்மைக் குறிப்பு வினையாலணையும் பெயர்.

————

அடியவராகவும் ஆட்கொள்ளவும் எண்ணி யாருயிர்கட்கு
அடியவராகம் படைத்தமை யாலகமே பெரிய
அடியவராக வரங்கருக்கு ஆட்செய ருட்கதையால்
அடியவராகம் செய்மாரனுக்காட் செயுமை வரையே –57-

அடியவர் ஆகவும் – (ஜீவாத்மாக்கள் பரமாத்மாவாகிய தமக்குத்) தொண்டர்களாகுமாறும்,
ஆள் கொள்ளவும் – (அங்ஙனம் தொண்ட ரானவர்களைத் தாம்) அடிமை கொள்ளுமாறும்,
எண்ணி – திருவுள்ளங்கொண்டு,
அவர் – அப்பெருமான்,
அடி – ஆதிகாலத்தில் (சிருஷ்டிகாலத் தில்),
ஆர் உயிர்கட்கு ஆகம் படைத்தமையால் – நிறைந்த உயிர்கட்குச் சரீரத்தைக் கொடுத்ததனால்,
அகமே – மனமே!
பெரிய அடிய வராகம் அரங்கருக்கு ஆள் செய் – பெரிய கால்களை யுடைய வராக மூர்த்தியாக அவ தரித்த ஸ்ரீரங்கநாதர்க்கு (நீ) அடிமையாவை;
(அங்ஙனமாகி),
அருள் கதையால் – (அவருடைய) கருணையாகிய தண்டாயுதத்தைப் பெற்று,
அது கொண்டு,
அவம் ராகம் செய் மாரனுக்கு ஆள் செயும் ஐவரை அடி – கெட்ட ஆசையை விளைக்கிற மன்மதனுக்கு அடிமை செய்யும்
பஞ்சேந்திரியங்களாகிய ஐந்து உட் பகைவர்களையும் தாக்கி வலி யடக்குவாய்; (எ – று.)

உபயவிபூதி நாயகனான சர்வேசுரன், த்ரிபாத் விபூதியாகிய பரமபதத்திலுள்ளார் எப்பொழுதும் பரமானந்தத்தையே
நுகர்ந்து வருதல் போலவே, உரைமெழுக்கிற் பொன் போல் மூலப் பிரகிருதியிலழுந்திக் கிடக்கிற உயிர்களும்
தம் தம் முயற்சியால் அப் பெரும் பதவியை யடைந்து இன்புற்று வாழலாம்படி,
அவ்வுயிர்கள் தன்னைத் தரிசித்தல் தொழுதல் சேர்தல் தியானித்தல் துதித்தல் முதலிய பணி விடைகளைப் புரிதற்கு உபயோகமாக,
கண் கை கால் மனம் வாய் முதலிய உறுப்புக்களோடு கூடிய உடம்பை அவ்வுயிர்கட்கு ஆதியில் அளித்தருளினனாதலால்,
நீ அப் பரம கருணாநிதியின் பக்கலிலேயே அடிமை பூண்டு, அவனருளாற் பஞ்சேந்திரிய நிக்கிரகஞ்செய்து
வீடு பெறுவை யென்று தம் மனத்துக்கு நல்லறிவுணர்த்தினார்.

‘அருட்கதை யாலைவரை யடி’ என்றது –
“யானு மென்னெஞ்சு மிசைந்தொழிந்தோம் வல் வினையைக், கானும் மலையும் புகக்கடிவான் –
தானோர், இருளன்ன மா மேனி யெம்மிறையார் தந்த, அருளென்னுந் தண்டா லடித்து” என்ற அருளிச் செயலின் கருத்தைக் கொண்டது.

அவராகஞ்செய்மாரனுக்குஆட்செயும் ஐவர் –
“மாரனார்வரிவெஞ்சிலைக் காட்செய்யும், பாரினார்” என்றார் பெரியாரும்.

அடி – அடிநாளில். ‘அவர்’ என்ற சுட்டுப்பெயர் முன்வந்தது,
செய்யுளாதலின்: ‘செய்யுட் கேற்புழி’ என்றார் நன்னூலாரும்.
அடியவர் என்று எடுத்து, ஆதிகாரணமானவ ரென்று உரைப்பாரு முளர்.

“சிலம்பினிடைச் சிறுபரல்போற் பெரியமேரு திருக்குளம்பிற் கண கணப்பத்
திருவாகாரங், குலுங்க நிலமடந்தைதனை யிடந்து புல்கிக் கோட்டிடை வைத்தருளிய வெங்கோமான்” என்றபடி
பெரிய கால்களையுடைய மகா வராக ரூபமாகத் திருவவதரித்ததனால், ‘பெரிய அடிய வராக வரங்கர்’ என்றார்.

ஆர்உயிர் – அருமையான உயி ரெனினுமாம்; முக்தி பெறுதற்கு உரிய தென்றபடி.
மாரன் என்ற வடசொல் – (ஆசை நோயால்) மரண வேதனைப் படுத்துபவனென்று காரணப் பொருள்படும்.
‘அகமே’ என்ற விடத்து, ‘அறிவே’ என்றும் பாட முண்டு.
அரங்கர்க்கு ஆட் செய்தால் ஐவரை யடிக்கலாம்; அடித்தால் உய்யலாம் என்பது குறிப்பு.

————–

செவிலித்தாய் நல் தாய்க்கு அறத்தொடு நிற்றல் –

வரையாழி வண்ணர் அரங்கேச ரீசர்முன் வாணன் திண் தோள்
வரையாழி யார் புள்ளின் வாகனத்தே வந்த நாடொடிற்றை
வரையாழிய துயராய்த் தூக நாணு மதியுஞ் செங்கை
வரையாழி யும் வளையும் மிழந்தாள் என் மடமகளே –58-

வரை ஆழி வண்ணர் – (கண்டவர் மனத்தைக்) கவர்ந்து கொள்ளும் கடல் போன்ற கரிய திரு நிறத்தை யுடையவரும்,
ஈசன் முன் வாணன் திண் தோள் வரை ஆழியார் – (பாதுகாப்பதாக ஏற்றுக் கொண்ட) சிவபிரானது முன்னிலையிலே
பாணாசுரனுடைய வலிய தோள்களைத் துணித் தொழித்த சக்கராயுதத்தை யுடையவருமான,
அரங்க ஈசர் – திருவரங்கநாதர்,
புள்ளின் வாகனத்தே வந்த நாள்தொடு – கருட வாகனத்திலேறிப் பவனி வந்த நாள் தொடங்கி,
இற்றை வரை – இன்றைநாளளவும்,
என் மட மகள் – எனது மடமைக் குணமுடைய மகள்,
ஆழிய துயர் ஆய் – ஆழ்ந்த மனக் கலக்க முடையவளாய்,
தூசும் – ஆடையையும்,
நாணும் – நாணத்தையும்,
மதியும் – அறிவையும்,
செம் கை வரை ஆழியும் வளையும் – சிவந்த கைகளி லணிந்துள்ள மோதிரத்தையும் வளையல்களையும்,
இழந்தாள் – இழந்து விட்டாள்; (எ – று.)

இயற்கைப் புணர்ச்சி முதலிய சில வகைகளால் தலைவியைக் களவிற் கூடிய தலைவன் பிரிந்த பின்பு அப் பிரிவாற்றாமைத்
துயரத்தால் உளமழிந்து உடல் மெலிந்து கை வளையும் விரலாழியும் நெகிழ்ந்து கீழ் விழ ஆடை சோர நாணங்குலைந்து
அறிவிழந்து நிலைமாறி நிற்கிற தலைவியின் துயர்க் காரணத்தைத் தோழியாலறிந்த செவிலித்தாய்,
அத்தலைவனைத் தலைவிக்கு வெளிப்படையாக மணம் புரிவித்துத் துயர் நீக்கக் கருதியவளாய்,
அத்தலைமளின் நிலைமையை நற்றாய்க்கு உரியவற்றாலுணர்த்திய துறை, இச்செய்யுளி லடங்கியது.

தியானநிலையில் நின்ற ஐயங்காரது அகக் கண்ணுக்கு எம்பெருமான் கருடாரூடனாய்ப் புலனாகி மறைந்த வளவிலே,
அப்பெருமானது ஸதாஸாந்நித்யத்தை அபேக்ஷித்துப் பிரிவாற்றாமையால் வருந்துகிற ஐயங்காருடைய துயரத்தை
நோக்கிய ஞானிகள் அவர் பக்கல் தம்மினும் மிக்க ஆதரத்தை யுடைய பேரறிவாளர்க்கு
ஐயங்காரது நிலைமையை யெடுத்துக் கூறுதல், இதற்கு உள்ளுறைபொருள்;

தன்னைச் சரணமடைந்தவன் பரிபவப் படுவதைப் பார்த்தும் ஒன்றும் பரிகாரஞ்செய்யமாட்டாதொழிய வென்பார், ‘ஈசன்முன்’ என்றார்.
தொட்டு என்பது ‘தொடு’ எனத் தொகுத்தல் விகாரப்பட்டது.
இன்று + வரை = இற்றைவரை; மென்றொடர் வன்றொடராய் ஐகாரச்சாரியை பெற்றது.
ஆழிய – இறந்தகாலப்பெயரெச்சம்: ‘இன்’ என்ற இடைநிலை ஈறுதொக்கது.
வளையும்மிழந்தாள், மகரவொற்று – விரித்தல். மடமை – பேதைமை; இளமையுமாம். வரைதல் – கவர்தல், நீக்குதல், கொள்ளுதல்.

————

தலைவி தனது வேட்கை மிகுதியைக் கூறல்

மகரந்த காதலை வாழ்வென்ன வாரிசுட்டாய்திதி தன்
மகரந்த காதலை வானிலுள் ளோர்க்கு மண்னோர்க்கு வட்டா
மகரந்த காதலை வார் குழை யாய் வளர் சீரங்க தா
மகரந்த காதலை வாக்கிற் சொல்லேன் மட வாரெதிரெ –59-

மகரம் – (கடலிலேயே வாழுமியல்பினவான) சுறா மீன்களும்,
அலை வாழ்வு தகாது என்ன – கடலில் வாழ்தல் இனிக் கூடாதென்று தவிததுக் கூறும்படி,
வாரி சுட்டாய் – கடலை (ஆக்நேயாஸ்திரத்தால்) எரிக்கத் தொடங்கியவனே!
திதி தன் மகர் அந்தகா – திதியென்பவளுடைய புதல்வர்களான அசுரர்கட்கு யமனானவனே!
வானின் உள்ளோர்க்கு தலை – மேலுலகத்திலுள்ளவர்களான தேவர்கட்குத் தலைவனே!
மண்ணோர்க்கு உவட்டா மகரந்த – நில வுலகத்து வாழும் மனிதர்கட்குத் தெவிட்டாத தேன் போலினியவனே!
காது அலை வார் குழையாய் – காதுகளில் அசைகிற பெரிய குண்டலங்களை யுடையவனே!
வளர் சீரங்க தாம – ஸ்ரீரங்கத்தைக் கண் வளருமிடமாகக் கொண்டவனே!
கரந்த காதலை – (உன் மேல் எனக்கு) அந்தரங்கமாக வுள்ள மோகத்தை,
மடவார் எதிரே வாக்கின் சொல்லேன் – (தோழியர் முதலிய) மகளிரின் முன்னிலையிலே
பகிரங்கமாக வாயினாற் சொல்லுந் தரமுடையேனல்லேன்; (எ – று.)

இயற்கைப் புணர்ச்சி முதலிய வகைகளால் தலைவியைக் களவிற் கூடி நின்ற தலைவன்
அங்குப் பழி யெழுந்த தென்று தோழியால் விலக்கப்பட்ட பின்னர் அப்பழியடங்கச் சிலநாள்
ஒருவழிப் பிரிந்துறைதல், ஒருவழித்தணத்த லெனப்படும்; அங்ஙனம் பிரிந்துறைகின்ற சமயத்தில்,
அப்பிரிவை யாற்றாது வருந்துகிற தலைவி, தனது நினைப்பு மிகுதியால் தலைவனை எதிரில் நிற்கின்றவாறு போலப் பாவித்து,
அங்ஙனம் உருவெளித் தோற்றத்திலே வெளிப்பட்ட அத்தலைவனை முன்னிலைப் படுத்திக் கூறியது, இது.
ஒருவழித்தணந்துவந்த தலைவன் சிறைப்புறமாக, அதனையுணர்ந்த தோழி அவனை முன்னிலையாக்கிக்
கூறியதென்று இதற்குத் துறைகொள்ளுதலு மொன்று.

நெஞ்சென்னும் உட்கண்ணால் எம்பெருமானைத் தரிசித்த ஐயங்கார் அவன் பக்கல் தமக்கு உண்டான
வியாமோகத்தை அப்பெருமானைக்குறித்து விண்ணப்பஞ்செய்தல், இதற்கு உள்ளுறைபொருள்.

கரந்தகாதலை வாக்கிற் சொல்லேன் மடவாரெதிரே – எனது அந்தரங்க பக்திமிகுதியைப் பேதையரான
உலகத்தார் முன்னிலையிலே வாயினாற்சொல்லேன் என்க.

‘மகரம் தகாது அலைவாழ் வென்ன வாரிசுட்டாய்’ என விளித்தது,
பிரிந்த ஒரு தலைவியை மீளவுங்கூடுதற்காக அரிய பெரிய முயற்சி செய்த நீ இங்ஙனம்
என் பக்கல் உபேக்ஷைசெய்வது தகுதியோ வென்ற குறிப்பு.
‘காதலை வார்குழையாய்’ என்றது, காதும் குண்டலமும் சேர்ந்த சேர்த்தி யாலாகிய செயற்கை யழகைக்
கண்டு அதிலீடுபட்டுக் கூறியது. மற்றைவிளிகள்,
அப்பெருமானது பராக்கிரமம், துஷ்டநிக்கிரகம், பரத்வம், இனிமை, இனிய இடமுடைமை முதலியவற்றில் ஈடுபாடு.
மகரமென்னும் மீன் கடலிலேயே வாழ்வதாதலை ‘மகராலயம்’ என்ற கடலின் பெயர் கொண்டும்,
“கடல்வாழ் சுறவு” என்ற தொல்காப்பியங்கொண்டும் உணர்க. இது கடலில் வாழுமியல்பினதாய்ச் சிறத்தல் பற்றியே,
இதனைத் தலைமையாக எடுத்துக் கூறினார்: இது, மற்றை நீர்வாழுயிர்கட்கும் உபலக்ஷணமாம்.

வாரி – நீர்: வடசொல்: கடலுக்கு இலக்கணை.
அந்தகன் – அந்தத்தைச் செய்பவன்: அந்தம் – அழிவு திதிதன் மகரந்தகா – காசியப முனிவரது மனைவியருள்
திதியென்பவளது புதல்வராதலால் தைத்யரெனப்படுகிற அசுரர்களை அழித்தவனே யென்றபடி.
மகர் – மகன் என்பதன் பன்மை: மகார் என்றும் வழங்கும்.
தலை – தலைவனுக்குப் பண்பாகுபெயர்: உவமையாகுபெயராக,
உத்தம அங்கமாகிய தலைபோலச் சிறந்தவனே யென்றும் பொருள்கொள்ளலாம்: அண்மைவிளி யாதலின், இயல்பு.

ரங்கநாதன் நிலவுலகத்தில் எழுந்தருளி யிருந்து அவ்வுலகத்தார்க்குக் காட்சிக் கினியனாதல் பற்றி,
‘மண்ணோர்க்கு உவட்டா மகரந்த’ என்றார்.
இனி, தலைமை பெற்ற வானிலுள்ளார்க்கும் மண் ணுலகத்தார்க்கும் தெவிட்டாத தேனே யென்று உரைப்பாரு முளர்.

உவட்டா மகரந்த’ என்றதை “ஆராவமுதே” என்றாற்போலக் கொள்க. தாமம் – வடசொல்: இடம்.
இனி, ‘வளர் சீரங்க தாம’ என்பதற்கு –
ஸ்ரீரங்கத்தில் வளர்ந்து விளங்குகிற ஒளிவடிவமானவனே யென்று உரைத்தலும் அமையும்:
தாமம் – ஒளி. கரந்த காதல் – உயிர்ப் பாங்கிக்கும் ஒளித்த வேட்கை யென்றபடி.

————

இதுவும் அது –தலைவி தனது வேட்கை மிகுதியைக் கூறல்-

வாராக வாமனனே யரங்கா வட்ட நேமி வல
வாராக வாவுன் வடிவு கண்டான் மன்மதனு மட
வாராக வாதரம் செய்வன் என்றால் உய்யும் வண்ணம் எங்கே
வாராக வாச முலையேனைப் போலுள்ள மாதருக்கே –60-

வாராக – வராகாவதாரஞ்செய்தவனே!
வாமனனே – வாமந மூர்த்தியானவனே!
அரங்கா – ஸ்ரீரங்கநாதனே!
வட்டம் நேமி வலவா – வட்டவடிவமான சக்கராயுதத்தைப் பிரயோகித்தலில் வல்லவனே!
ராகவா – ரகுகுலராமனாகத் திருவவதரித்தவனே!
உன் வடிவு கண்டால் – நினது திருமேனியழகைப் பார்த்தால்,
மன்மதனும் மடவார் ஆக ஆதரம் செய்வன் – (எல்லாராலும் காமிக்கப்படுங் கட்டழகுடையவனான) மன்மதனும் (
தான் உன்னைக் கூடுதற்கு) மகளிராய்ப் பிறக்க ஆசைப்படுவன்: என்றால்,
வார் ஆகம் வாசம் முலையேனை போல் உள்ள மாதருக்கு உய்யும் வண்ணம் எங்கே – கச்சணிந்தனவும் மார்பிலெழுந்தனவும்
நறுமணப்பூச்சுடையனவுமான தனங்களை யுடையளாகிய என்னைப்போல விருக்கிற மகளிர்க்கு
(உன் வடிவழகு கண்ட பின்பு) பிழைத்திருக்கும்வகை எவ்வாறோ! (எ – று.)

அழகிற் சிறந்த ஆண் பாலான மன்மதனும் புருஷோத்தமனான நினது வடிவைக் கண்டு தான் பெண்ணுருக் கொண்டு
உனது அழகின் நலத்தை யனுபவிக்க. எண்ணுவனாயின், பெண்பாலான என் போன்ற மடமங்கை யர்க்குப்
பிழைக்கும் வழி என்னே யென்பதாம்.
கீழ் 24 – ஆஞ் செய்யுளின் விசேடவுரையிற் கூறிய விஷயங்கள், இங்கும் நோக்கத்தக்கன.

‘வாராக’ என்று விளித்தது, நினது காதலியரில் ஒருத்தியினது (பூமிதேவியினது) துயரத்தை நீக்குதற்குப்
பெரு முயற்சி செய்து அவளை யெடுத்துக்கொண்டு வந்து கூடி யருளியவனே யென்ற குறிப்பு.
‘வாமனனே’ என்றது – சௌலப் பியத்தையும்,
‘அரங்கா’ என்றது – இன்ப நுகர்ச்சிக்கு ஏற்ற இனிய விடத்தில் வசித்தலையும்,
‘வட்டநேமிவலவா’ என்றது – பகையழிக்க வல்ல படைக்கலத்திற் கைதேர்ந்தவனாதலையும்,
‘ராகவா’ என்றது – உயர்குடிப் பிறப்பையும் உணர்த்தும்.

தண்டகாரணியவாசிகளான முனிவர்கள் கண்டு காமுற்று ஆண்மை மாறிப் பெண்மை பெறவிரும்பும் படியான
சௌந்தரியாதிசயத் தையுடையா யென்ற கருத்தும், ‘ராகவா’ என்ற விளியில் தொனிக்கும்.

மன்மதன் தான் கொண்ட ஆசை மிகுதியால் தானொருவனே பலமகளிராக வடிவு கொண்டு உத்தம புருஷனான எம்பெருமானை
அநுபவிக்க விரும்புவ னென்பது, ‘மடவாராக’ எனப் பன்மையாற் கூறியவதனால் தோன்றும்.

‘வாராகவாசமுலையேன்’ என்றது, போகாநுபவத்துக்கேற்ற பருவம் நிரம்பியவ ளென்றவாறு.
‘நேமிவலவா’ என்பதற்கு – சக்கராயுதத்தை வலக் கையிலுடையவனே யென்று உரைப்பினும் அமையும்;
இவ்வுரைக்கு, ‘நேமி வலவா’ என்றதைக் கீழ் 35 – ஆஞ் செய்யுளில் “சங்கஇடவ” என்றாற் போலக் கொள்க;
வலவன், இடவன் என்பன – வலம், இடம் என்றவற்றின்மேற் பிறந்த பெயர்க ளென்க.

வாராக – வராஹ என்ற வடசொல்லின் விகாரம்.
வட்டம் – வ்ருத்த மென்ற வடசொல்லின் சிதைவு.
மந்மதன் என்ற வடமொழிப்பெயர் – (ஆசை நோயால்) மனத்தைக் கலக்குபவ னென்று பொருள்படும்;
உம் – உயர்வு சிறப்பு. வாமநன், நேமி, ராகவன், ஆதரம், வாஸம் – வடசொற்கள்.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி – -21-40-

January 23, 2022

காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்|
ஸ வாஸுதேவோ ரங்கேச: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்||
விமானம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்|
ஸ்ரீரங்கசாயி பகவாந் ப்ரணவாத்த ப்ரகாசக: ||

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரெங்க மிவா பரம்
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடம் ஈஷ்யதே

———

நரகந்தரம்புவி இம்மூன்று இடத்தும் நனி மருவு
நரகந்தரங்கித்து வெம் காலற்கு அஞ்சுவர் நாயகவா
நரகந்தரம்புள் பிடறு ஏறு அரங்கர் நல் ஆய்க்குலத்தி
நரகந்தரங்க முற்றார் அடியார்க்கு நமன் அஞ்சுமே ———-21–

நரகு – நரகம்,
அந்தரம் – சுவர்க்கம்,
புவி – பூமி,
இ மூன்று இடத்தும் – என்கிற இந்த மூன்றுஉலகங்களிலும்,
நனி மருவுநர் – மிகுதியாகப் பொருந்தியுள்ள சனங்களெல்லாம்,
அகம் தரங்கித்து வெம் காலற்கு அஞ்சுவர் – மனம் அலைந்து கொடிய யமனுக்குப் பயப்படுவார்கள்;
நாயக வாநர கந்தரம் புள் பிடர் ஏறு அரங்கர் – சிறந்த குரங்கான அநுமானுடைய கழுத்தின் மேலும்
(பக்ஷி ராஜனான) கருடனுடைய பிடரியின் மேலும் ஏறுகிற திருவரங்கரும்,
நல் ஆய்க்குலத்து இநர் – சிறந்த இடையர் குலத்தில் (வளர்ந்து அதனை விளக்கின) சூரியன் போன்றவரும்,
தரங்கம் அகம் உற்றார் – திருப்பாற் கடலை வசிக்குமிடமாகக் கொண்டு அங்கு வாழ்பவருமான நம்பெருமாளுடைய,
அடியார்க்கு – தொண்டர்கட்கு,
நமன் அஞ்சும் – அந்த யமன் பயப்படுவான்.

மூன்று உலகங்களிலுள்ளாரும் யமனுக்கு அஞ்சுவர்;
அந்த யமன் திருமாலடியார்க்கு அஞ்சுவன் என்று அடியார்களின் பெருமையை விளக்கியவாறாயிற்று,
ஆதலால், அனைவரும் எம்பெருமானுக்கு அடியராய் உய்யக் கடவரென்பது, குறிப்பெச்சம்.
இங்ஙனம் இவர்கள் அஞ்சுதற்கும், அவன் அஞ்சுதற்கும் காரணம் – முறையே மூவுலகத்தாரும் தீராவினையை யுடைமையும்,
திருமாலடியார் வினை தொலைத்திருத்தலு மென்க.

அடியார்க்கு நமன் அஞ்சுதலை,
“திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன்னாமம், மறந்தும்புறந் தொழாமாந்த ரிறைஞ்சியுஞ்,
சாதுவராய்ப் போதுமின்க ளென்றான் நமனுந் தன், தூதுவரைக் கூவிச் செவிக்கு” என்ற அருளிச் செயலினாலும் அறிக.

“ஒருகாலத்தில் பாசத்தைக் கையிலெடுத்துக் கொண்டு பிராணிகளைக் கொண்டுவரும்படி புறப்பட்ட தன் சேவகனை
யமதருமராசனானவன் அந்தரங்கத்தில் அழைத்து
“ஓ படனே! நீ உன்தொழிலை நடத்திவருகையில் ஸ்ரீமதுசூதநனை ஆசிரயித்தவரைத் தொடாதே, விட்டுவிடு;
நான் மற்றவர்களுக்குப் பிரபுவேயல்லது வைஷ்ணவர்களுக்குப் பிரபுவல்லேன் ………
“கமலநயான! வாசுதேவ! விஷ்ணுவே! தரணிதர! அச்சுத! சங்கசக்ரபாணி! நீ அடியேங்களுக்குச் சரணமாகவேண்டும்” என்று
எவர்கள் சொல்லிக்கொண்டே யிருப்பார்களோ, அப்படிப்பட்டமகாபரிசுத்தபுருஷரை ஓ படனே!
நீ கண்ணெடுத்துப் பாராமல் தூரமாய் ஓடிப்போ; விகாரநாசாதிகளில்லாமல் சத்திய ஞாநாநந்த மயனாய்ப் பிரகாசிக்கின்ற
அந்த எம்பெருமான் எவனுடைய இருதயகமலத்தில் வாசஞ்செய்துகொண்டிருப்பனோ, அந்தமகாபுருஷனுடைய கடாக்ஷம்
பிரசரிக்கு மிடங்களிலெல்லாம் நீ செல்லத்தக்கவனல்லை, நானும் செல்லத்தக்கவனல்லேன்;
பதறிச்சென்றால், அவ்வெம்பெருமானுடைய திருவாழியின் தேஜோவிசேஷத்தினாலே பதராக்கப்படுவோம்;
அந்தமகாபுருஷன் ஸ்ரீவைகுண்டதிவ்வியலோகத்துக்கு எழுந்தருளத்தக்கவன்’ என்று கூறினன்’ என்ற வரலாற்றை
ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் யமகிங்கரசம்வாதரூபமான வைஷ்ணவப்பிரபாவத்திற் பரக்கக்காணலாம்.

ஸ்வர்க்க மத்திய பாதாள மென்று மூன்றாகப்பகுக்கப்படுகிற பதினான்குஉலகங்களிலு முள்ள பிராணிகளெல்லாம்
இயல்பில் கர்மபந்தமுடையவர்க ளாதலால், கர்மிகளைத் தண்டிப்பவனான யமனைக் குறித்து அஞ்சுவ ரென்க.

நரகு – நரகம்; இது, கீழுலகங்கட்கெல்லாம் உபலக்ஷணம்.
அந்தரம் – வானம்; இது, மேலுலகங்கட்கெல்லாம் உபலக்ஷணம்.
மருவுநர், ந் – பெயரிடைநிலை. அகம் – அகத்து உறுப்பு, அந்த:கரணம்; அகம் – உள்.
காலன் – பிராணிகளின் ஆயுளைக் கணக்கிடுபவன்.

பெருமான் இராமாவதாரத்தில் அநுமானையும், எப்பொழுதும் கருடனையும் வாகனமாகக் கொண்டு அவர்கள் பிடரியில் ஏறியருள்வன்;
அதுபற்றி, அவர்கள் முறையே திருவடியென்றும், பெரிய திருவடியென்றும் பெயர் பெறுவர்.
கந்தரம் – வடசொல்; தலையைத் தரிப்பது: கம் – தலை. பிடர் – கழுத்தின் பின்புறம்.

இநன் – சூரியன்; வடசொல். “உலகங்களாகிய தாமரைகளெல்லாம் மலரும்பொருட்டு, தேவகியாகிய கிழக்குச் சந்தியில்
அச்சுதபாநு (திருமாலாகிய சூரியன்) உதித்தருளினான்” என்று கண்ணனைச் சூரியனாகக் கூறியுள்ளதனால்,
‘ஆய்க்குலத்துஇநர்’ என்றார். அக்குலத்துக்கு நன்மை, தேவாதி தேவனான திருமால் மனிதனாய் எழுந்தருளிக்
குழந்தைப் பருவத்தில் வளர்ந்தருளப் பெற்ற பேறுடைமை.

அகம் – இடம், வீடு. நமன் அஞ்சும் – செய்யுமென்முற்று, ஆண்பாலுக்கு வந்தது.
ஆய்க்குலத்திநர் அகம் தரங்கம் உற்றார் என்று எடுத்து,
இடைச் சாதியாருடைய வீட்டிலும், பாற்கடலிலும் பொருந்தியவ ரென்றும், ஆயர் குலத்தில் வளர்ந்தவரும்
பாற்கடலினிடத்துப் பொருந்திய வருமானவரென்றும் உரைப்பாரு முளர்.

———–

அஞ்சு அக்கரம் தலை கங்கையன் எற்றலும் அஞ்சிறைய
அஞ்சம் கரத்தலை குண்டிகையான் மண்டை அம் கை விட்டே
அஞ்ச கரத்தலை செய்து பித்து ஏக அருள் அரங்கன்
அம் சக்கரத் தலைவன் தாள் அலால் மற்று அரண் இலையே–22–

அஞ்சு அக்கரம் தலை கங்கையன் ஏற்றலும் – பஞ்சாக்ஷர மந்திரத்துக்கு உரியவனும் தலையிற் கங்கா நதியைத்
தரித்தவனு மான சிவபிரான் (தன்பக்கல் வந்து) இரந்தவளவிலே,
அம் சிறைய அஞ்சம் கரத்தலை குண்டிகையான் மண்டை அம் கை விட்டே கரத்தலை செய்து அஞ்ச – அழகிய இறகுகளையுடைய
ஹம்ஸவாகனத்தையும் கையிற்கமண்டலத்தையு முடையனான பிரமனது கபாலமானது (அச்சிவபிரானுடைய)
உள்ளங்கையை நீங்கி மறைதலைச்செய்து விலகவும்,
பித்து ஏக – (அச்சிவபிரான் கொண்டிருந்த) திகைப்பு ஒழியவும்,
அருள் – கருணைசெய்த,
அம் சக்கரம் தலைவன் அரங்கன் – அழகிய சக்கராயுதத்தையுடைய இறைவனான ரங்கநாதனுடைய,
தாள் அலால் – திருவடியே யல்லாமல்,
மற்று அரண் இலை – வேறு ரக்ஷகம் (எவ்வுயிர்க்கும்) இல்லை; (எ – று.)

மும்மூர்த்தியில் ஒருமூர்த்தியான சிவபிரான் பிரமகபாலத்தால் தனக்கு நேர்ந்த சங்கடத்தைத் தீர்த்துக்கொள்ள
வேறுவகையில்லாமற் கலங்கி எம் பெருமானைச் சரணமடைய, அப்பெருமான் எளிதில் அதனைத் தீர்த்தருளின னென்ற
வரலாற்று முகத்தால், நம்பெருமாளுடைய பரத்வத்தை வெளியிட்டு, அப்படிப்பட்ட சர்வேசுவரனல்லாமல்
வேறுபுகலிடமில்லையென்று ஜீவாத்மாக்களின் அநந்யகதித்வத்தை விளக்கினார்.

பித்தேகவருளரங்கன் –
“சிரந்தடிவா னிவனோ வென் றயன் வெய்ய தீய சொல்லக்,
கரந்தடிவான் தலைகவ்வப் பித்தேறலிற் கண்ணுதலோன்,
இரந்தடிவீழத் துயர்தீர்த்த வேங்கடத்தெந்தை” என்றார் திருவேங்கடத்தந்தாதியிலும்.

ஐந்து – அஞ்சு; முழுப்போலி.
அக்ஷரம், கங்கா, ஹம்ஸம், பித்தம், சக்கரம், சரணம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
சிறைய – குறிப்புப் பெயரெச்சம்.
கரத்தலை, தலை – ஏழனுருபு; கரம் – வடசொல்.
வைதிகர் கையிலே எப்போதும் ஜலபாத்திரங்கொண்டிருத்தல், பரிசுத்தியின்பொருட்டென்க.
அகம் + கை = அங்கை; “அகமுனர்ச் செவி கை வரின் இடையன கெடும்” என்றார் நன்னூலார்.
விட்டே, ஏ – அசை. அஞ்ச = விலக, காரியப் பொருளைக் காரணச் சொல்லாற் குறித்தார், உபசார வழக்கால்.
மூன்றாமடியில் உள்ள ‘கரத்தலை’ என்பது – கரத்தல் என்ற தொழிற்பெயரின் இரண்டாம் வேற்றுமை விரி.
சக்கரத் தலைவன் – ஆழிப் பிரான்.

————

இலங்கை யிலாதரனைங்கரன் மோடி யெரி சுரத்தோன்
இலங்கை யிலாத மலையான ஈசன் இரிய வெம்போரில்
இலங்கை யிலாதபடி வாணனைச் செற்ற வென்னரங்கன்
இலங்கை யிலாதவன் போகக் கண்டான் என் இதயத்தனே–23–

இலங்கு அயில் ஆதரன் – விளங்குகின்ற வேலாயுதத்தினிடத்து விருப்பமுடையவனான சுப்பிரமணியனும்,
ஐங் கரன் – (நான்கு கைகளோடு துதிக்கையுமாகிய) ஐந்துகைகளையுடையவனான விநாயகனும்,
மோடி – துர்க்கையும்,
எரி – அக்கினியும்,
சுரத்தோன் – ஜ்வர தேவதையும்,
இலம் கயிலாதமலை ஆன ஈசன் – வசிக்குமிடம் கைலாச கிரியாகப்பெற்ற இறைவனான சிவனும்,
இரிய – அஞ்சி நிலைகெட்டு ஓட,
வெம்போரில் – உக்கிரமான யுத்தத்தில்,
அம் கை இலாதபடி வாணனை செற்ற – அழகிய (ஆயிரம்) கைகள் இல்லாமற்போம் வண்ணம் பாணாசுரனை அழித்திட்ட,
என் அரங்கன் – எனது திருவரங்கனும்,
இலங்கையில் ஆதவன் போக கண்டான் – இலங்காபுரியிற் சூரியன் போகும்படி செய்தவனுமான திருமால்,
என் இதயத்தன் – எனது இருதயகமலத்தி லுள்ளான்; (எ – று.)

துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலந சீலனும், அங்ஙனம் நல்லோரைக்காத்தற் பொருட்டுத் தீயோரையழிக்குமிடத்துச்
சர்வசங்காரமூர்த்தியே வந்து தடுத்தாலும் தடுக்கவொண்ணாத பேராற்றலுடையவனு மான பெருமான்
எனது மனத்தில் எழுந்தருளியிருக்கும்படி அவனை நான் எப்பொழுதும் மனத்திலே நிலை நிறுத்தித் தியானித்து வருகின்றே னென்பதாம்.

“மோடியோட வங்கி வெப்பு மங்கியோடவைங்கரன்,
முடுகியோடமுருக னோடமுக்கணீசன் மக்களைத்,
தேடியோட வாணனாயிரம்புயங்கள் குருதிநீர், சிந்தி
யோட நேமிதொட்ட திருவரங்கராசரே” என்றார் திருவரங்கக்கலம் பகத்திலும்.

“இருணன்காசற வெழுகதிரவனிற்கவென்றும், அருணன் கண்களுங் கண்டிலா விலங்கை” என்றபடி
இராவணனிடத்து அச்சத்தால் சூரியன் சென்றறியாத இலங்கையிலே அவ்விராவணனைக் கொன்றதனால்
சூரியன் தனது சஞ்சாரரீதியின்படி அங்குத் தடையின்றி இனிதுசெல்லும்படி செய்தனன் இராமபிரானென்பது,
‘இலங்கையிலாதவன் போகக்கண்டான்’ என்பதன் கருத்து.

இலங்கையரசனாய்த் தேவர்கட்கு இடையூறு செய்து வந்த இராவணனைச் சங்கரித்துத் தேவர்கட்கு நன்மைசெய்தவனென்ற
பொருளை ‘இலங்கையி லாதவன் போகக்கண்டான்’ என வேறுவகையாற்சொன்னது, பிறிதினவிற்சியணி.
காணுதல் – செய்தலென்னும் பொருளில் வருதலை, ‘திருநகரங்கண்ட படலம்’ என்றவிடத்திலுங் காண்க.

முருகன் வேற்படையில் விருப்பமுடையனாதல், ‘வேலன்’ என்ற அவன் பெயரினாலும் விளங்கும். இவன், சிவபிரானது இளையகுமாரன்.
விநாயகன் யானைமுகமுடையனாதலால், ஐங்கரனாவன்; இவன், சிவபிரானது மூத்தகுமாரன்.
துர்க்கை – பார்வதியின் அம்சமானவள்.
அயில் என்பது – ஐயில் எனவும் கைலாஸம் என்ற வடசொல்லின் திரிபான கயிலாதம் என்பது கையிலாதம் எனவும்
யமகவமைப்பின் பொருட்டு முதற்போலியால் அகரத்துக்கு ஐகாரம் பெற்றன;
“அ ஐ முத லிடையொக்கும் சஞயமுன்” என்றார் நன்னூலார்.
ஜ்வரம், பாணன், ஆதபன், ஹ்ருதயம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
இலம் – இல்லம் என்றதன் தொகுத்தல்; அம் – சாரியை. ஈசன் – ஐசுவரியமுடையவன்.
யமகநயத்தின்பொருட்டு ‘போரில்’ என்ற ஏழாம்வேற்றுமை விரி, போர் இல் என உருபுபிரிக்கப்பட்டது;
இங்ஙனம் சொல்லணிக்காகப் பிரித்துக்காட்டியிருந்தாலும், பொருள்நோக்குமிடத்துச் சேர்த்துப் படித்துக் கொள்க.
ஆயிரங்கைகளிற் பெரும்பாலன ஒழிந்ததனால், ‘கையிலாதபடி’ எனப்பட்டது.
காலில் விழுந்தபின் கண்ணபிரானால் துணியாது விடப்பட்ட நான்கு கைகளும் பொலிவிழந்தன வென்பதும் தொனிக்க,
‘அங்கையிலாதபடி’ என்றன ரென்னலாம். செற்ற, செறு – பகுதி.
ஆதவன் – ஆதபன் என்ற வடசொல்லின் விகாரம்; நன்றாகத் தபிப்பவன் என்று பொருள்.

—————

அத்தனை வேதனை ஈன்ற அரங்கனை ஐம்படை சேர்
அத்தனை வேதனை வாய் வைத்த மாயனை ஆர் அணங்கு ஓர்
அத்தனை வேதனை தீர்த்தானைச் சேர்க்கிலள் ஆயிரம் சால்
அத்தனை வேதனை யப்புவள் சாந்து என்று அனல் அரைத்தே —-24–

அத்தனை – எப்பொருட்கும் இறைவனும்,
வேதனை ஈன்ற அரங்கனை – பிரமனைப் பெற்ற திருவரங்கனும்,
ஐம்படை சேர் அத்தனை – பஞ்சாயுதங்கள் பொருந்திய திருக் கைகளை யுடையவனும்,
வேதனை வாய் வைத்த மாயனை – (கிருஷ்ணாவதாரத்தில்) வேய்ங்குழலைத் திருவாயில் வைத்து ஊதிய மாயவனும்,
ஆர் அணங்கு ஓர் அத்தனை வேதனை தீர்த்தானை – அருமையான (பார்வதியென்னுஞ் சிறந்த) தெய்வ மகளைத்
தனது உடம்பில் ஒருபாதியிலுடையவனான சிவபிரானைத் துயர் தீர்த்தருளியவனும் ஆன அழகிய மணவாளனை,
சேர்க்கிலள் – (என்னுடன்; சேரச் செய்யாள்;
அனை – (என்னுடைய) தாய், (பின்னை என் செய்வளென்றால்,-)
சாந்து என்று அனல் அரைத்து – சந்தனக்குழம்பென்று நெருப்பை யரைத்து,
ஆயிரம் சால் அத்தனை வேது அப்புவள் – ஆயிரஞ்சாலவ்வளவு வெப்பத்தை (என்னுடம்பிற்பூசி) நிரப்புவள். (எ – று)

கீழ் 23 – பாசுரங்களில் எம்பெருமானுடைய பலவகைப் பிரபாவங்களைக் கூறி அவனது உத்தம புருஷத் தன்மையைக்
கருதியதனாலே, அப்பொழுதே அவனைக் கிட்ட வேண்டும்படியான ஆசை யுண்டாய்,
அங்ஙனம் அவனைக் கிட்டப் பெறாமையாலே, ஐயங்கார் ஆற்றாமை மீதூர்ந்து தளர்ந்தார்;
அத்தளர்ச்சியாலே தாமான தன்மை யழிந்து ஆண் பெண்ணாம்படியான நிலைமை தோன்றி ஒருபிராட்டி நிலையை யடைந்தார்;

ஆண் பெண்ணாதல் கூடுமோ வெனில், –
“கண்ணிற் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினாய்,”
“வாராக வாமனனே யரங்கா வட்ட நேமி வலவா ராகவா உன் வடிவு கண்டால்
மன்மதனும் மடவாராக ஆதரஞ்செய்வன்” என்ப வாதலாலே, இது கூடும்:

தண்டகாரணியவாசிகளான முனிவர் இராமபிரானது சௌந்தரியாதிசயத்தில் ஈடுபட்டுத் தாம் பெண்மையைப் பெற விரும்பி
மற்றொரு பிறப்பில் ஆயர் மங்கையராய்க் கண்ணனைக் கூடின ரென்ற ஐதிகியமும் உணர்க.
“கண்ணனுக்கே, யாமது காமம் அறம் பொருள் வீடிதற் கென்றுரைத்தான்,
வாமனன் சீலன் இராமாநுசன் இந்த மண்மிசையே” என்பதன் பொருளும் அறியற்பாலது.
(“பெண்டிரும் ஆண்மை வெஃகிப் பேதுறு முலையினாள்,”
“வாண் மதர் மழைக்கணோக்கி, ஆண் விருப்புற்று நின்றார் அவ்வளைத்தோளினாரே” எனப் பெண் ஆணாகும் இடமும் உண்டு.)

அங்ஙனம் ஆண் பெண்ணாகிலும் சாதாரணப் பெண்மையையே யன்றி எம்பெருமானுக்கு உரியவளாகும்
ஒரு பிராட்டியின் நிலைமையை அடையுமாறு எங்ஙனமெனில், –
பரமாத்மாவினது தலைமையும், ஜீவாத்மாவினது அடிமையும், ஜீவாத்மா பரமாத்மாவுக்கே உரியதாயிருக்கையும்,
புருஷோத்தமனாகிய எம்பெருமானது பேராண்மைக்கு முன் உலக முழுதும் பெண் தன்மையதாதலும்,
ஜீவாத்மாவினது சுவாதந்திரிய மின்மையும், பாரதந்திரியமும், தாம் எம்பெருமானது சேர்க்கையால்
இன்பத்தையும் பிரிவினால் துன்பத்தையும் அடைதலும், அவனையே தாம் கரணங்களெல்லாவற்றாலும் அனுபவித்து ஆனந்தித்தலும்
முதலிய காரணங்களால், தம்மைப் பிராட்டிமாரோடொக்கச் சொல்லத் தட்டில்லை.

தோழி நிலைமையும் தாயார் நிலைமையும் முதலியன ஆகிறபடி எங்ஙனே யென்னில், –
தாம் விரும்பிய பொருளின் வரம்பின்மையால் அங்ஙன மாகுமென்க.
சிருங்கார ரசப்பிரதானமான அகப்பொருட்கிளவித்துறைகளைத் தோத்திரப் பிரபந்தரூபமான ஞானநூலாகிய
இதிற் கூறுதற்குக் காரணம்,
கடுத்தின்னாதானைக் கட்டிபூசிக் கடுத்தின்பிப்பார்போலச், சிற்றின்பங்கூறும்வகையாற் பேரின்பத்தைக் காட்டி நாட்டுதல் என்பர்.

ஓர் உத்தம புருஷன் பரிவாரத்துடன் வேட்டையாடுதற்குப் புறப்பட்டு வனத்துக்குச் சென்றவனாய்,
ஓர் உத்தம கன்னிகையும் தோழியருடன் பூக்கொய்து விளையாடுதற்கென்று பூஞ்சோலையிற் சேர்ந்தவளவிலே,
ஒவ்வொரு வியாஜத்தால் தோழியர் பிரிய அக் கன்னிகை அங்குத் தனித்து நின்ற சமயத்திலே,
ஒவ்வொரு வியாஜத்தாற் பரிவாரங்கள் பிரியத் தனிப்பட்டவனாய் அப் புருஷன் அங்கு வந்து சேர,
இருவரும் ஊழ்வினை வசத்தால் இங்ஙனம் தற்செயலாய் ஓரிடத்திலே சந்தித்து ஒருவரை யொருவர் கண்டு காதல் கொண்டு
காந்தருவ விவாகக் கிராமத்தாற் கூடி உடனே பிரிய, பின்பு அப்பிரிவினாலாகிய தாபத்தால் வருந்தி அரிதில் மீண்டு
வந்த அத்தலைமகளைக் கண்ட செவிலித் தாய் அத்தாபத்துக்குக் காரணம் இன்னதென்று அறியாளாய்
அப்பொழுது நிகழ்கிற வேனிற் காலத்தினாலாகிய தென்று கருதி அதனைத் தணித்தற் பொருட்டுச் சந்தனக் குழம்பை
அம் மகளுடம்பின் மேல் மிகுதியாக அப்பிச் சைத்யோபசாரஞ் செய்ய, காலதாப மல்லாததால் அதனைத் தணிக்க மாட்டாத
அச்சந்தனக் குழம்பு கலவிக் காலத்தில் இன்பஞ்செய்யும் பொருள்களுள் ஒன்றாதலால் பிரிவுக் காலத்தில் காம தாபத்தை
மிகுவிப்பதாய் மிக்கவெப்பஞ் செய்ய, அதனால் மிகவருந்திய தலைமகள் தோழியின் முன்னிலையில் அத்தாய் செயலைக்
குறித்து வெறுத்துக்கூறியது இது.

அழகியமணவாளன் ஒருகால் ஐயங்காரது ஞானக்கண்ணுக்கு இலக்கான பொழுது அவனைக்கிட்டி
முத்தியின்ப மனுபவிக்கும்படியான ஆசைகொண்டவரான இவரை அப்பெருமான் அப்பொழுதே சேர்த்துக் கொள்ளாது மறைய,
அதனாலுண்டான துயரத்தால் ஐயங்கார் தபிக்கிற காலத்தில், அவ் வருத்தத்தின் காரணத்தை இன்னதென்று அறியாத
அவரிடம் அன்புள்ள ஞானிகள் அவர்க்குச் செய்த உபசாரங்கள் அவர் வருத்தத்தைத் தணிவிக்க மாட்டாது
அதனை மிகுவிக்கிற நிலையிலே ஐயங்கார் அவர்களது திறத்தைத் தமது நண்பரை நோக்கி உரைத்தவாறாகும்
இது வென்று இச்செய்யுளுக்கு உள்ளுறைபொருளும் காண்க.

வேதன் – வேதம் வல்லவன்; நான்கு முகங்களாலும் நான்கு வேதங்களை யும் பாராயணஞ்செய்கின்றவன்;
வேதா என்னும் வடசொல்லின் திரிபெனக் கொண்டால், விதிப்பவன் (படைத்தற்கடவுள்) என்று பொருள்படும்.

இரண்டாமடியில் ஹஸ்தம் என்ற வடசொல் அத்தம் என்றும்,
மூன்றாமடியில் அர்த்தம் என்ற வடசொல் அத்தம் என்றும் விகாரப்பட்டன.

வே – மூங்கில்; வேய் என்பதன் விகாரம்: அதனாலாகிய புள்ளாங்குழலுக்குக் கருவியாகு பெயர்;
தன் – சாரியை. பலவிடங்களிற் பரவிமேய்கிற பசுக்கூட்டங்களை ஒருங்குசேர்த்தற்பொருட்டும்,
அவற்றைமகிழ்வித்தற்பொருட்டும் கண்ணன் வேணுகானஞ்செய்தனன்.

மாயன் – மாயையை யுடையவன்; மாயையாவது – செயற்குஅரியன செய்யுந் திறம்;
ஆச்சரியகரமான குணங்களும் செயல்களுமாம்; பிரபஞ்ச காரணமான பிரகிருதியுமாம்.
வேதனை, பிரமகபாலம் கை விடாமையால் நேர்ந்தது.

‘ஆயிரஞ்சால்’ என்றது, மிகுதியை விளக்கக் கூறியது; சால் – பெரியபாத்திரம்.
வேது – வெவ்வியது. அனை – அன்னை; தொகுத்தல். வேதநா, சந்தநம் என்ற வடசொற்கள் – வேதனை, சந்து என்று விகாரப்பட்டன.
ஆர் அணங்கு ஓரத்தன் நை வேதனை எனப் பிரித்து, நிறைந்த அழகுடையளான அம்பிகையைப் பக்கத்திலுடையனான
சிவபிரான் வருந்திய வருத்தமென்று உரைப்பாரு முளர். நை – வினைத்தொகை,

————-

அரைக்கலை வேலை யுடுத்த மண் பல் பகலாண்டு பற்றல்
அரைக்கலை வேலை யுடை வேந்தர் வாழ் வெண்ணலை வரையும்
அரைக்கலை வேலை யவர்க்கே புரிவை என்றாலு நெஞ்சே
அரைக்கலை வேலை யரங்கனுக்கு யாட்பட வாதரியே———25–

நெஞ்சே – (என்) மனமே!
அரைக்கு – அரையினிடத்து,
அலை வேலை உடுத்த – அலைகளை யுடைய கடலை (ஆடையாக)த்தரித்த,
மண் – பூமியை,
பல் பகல் ஆண்டு – பலநாளளவும் அரசாண்டு,
பற்றலரை கலை வேலை உடை – பகைவர்களை நிலை குலைந்தோடச் செய்கிற வேலாயுதத்தை யுடைய,
வேந்தர் – அரசர்களது,
வாழ்வு – (நிலையற்ற) வாழ்க்கையை,
எண்ணல் – ஒரு பொருளாகக் கருதாதே:
ஐவரையும் – பஞ்சேந்திரியங்களையும்,
அரைக் கலை – நீ அடக்க மாட்டாமல்,
அவர்க்கே வேலை புரிவை என்றாலும் – அவ்விந்திரியங்கட்கே வசப்பட்டு (அவை செல்லும் வழியிலேயே நின்று அவற்றிற்குப்)
பணி விடை செய்வாயாயினும்,
அரை கலை வேலை – அரைக் கணப் பொழுதாயினும்,
அரங்கனுக்கு ஆட்பட ஆதரி – ஸ்ரீரங்கநாதனுக்கு அடிமை செய்ய விரும்புவாய்.

இவ் வுலகத்தில் எதிரற்ற தனியரசாட்சி கிடைப்பதாயினும், அது முத்திப் பெருஞ்செல்வத்தை நோக்கப் பெரிதும் அற்பமாதலால்,
அதனை விரும்பாதே; பெரும்பாலும் காலத்தை யெல்லாம் ஐம்பொறிகளின் வழியிலேயே செலுத்துவையாயினும்,
அவப் பொழுதிலும் தவப் பொழுது’ என்றபடி மிகச் சிறிது பொழுதேனும் நம் பெருமாளுக்கு அடிமை செய்ய விரும்புவையாயின்,
பஞ்சேந்திரிய மூலமாக வுண்டாகிற சகல கருமங்களையும் போக்கி எல்லாச் செல்வங்களினும் மேலான முத்திப் பேற்றைத்
தவறாமலடைதல் கூடும் என்று தன் நெஞ்சத்தைத் தானே விளித்து அறிவுறுத்தினார்.

அரை – பாதி; உடம்பின் நடுவுறுப்பான இடைக்கு ஆகுபெயர். அரைக்கு = அரையில்; உருபுமயக்கம்.
அலை வேலை – இரண்டனுருபும் பயனுந்தொக்க தொகை;
அலை யலைக்கிற வேலை யெனக் கொண்டால், வினைத்தொகையாம்.
இனி, அரை – இடையில், கலை – ஆடையாக, வேலை – கடலை, உடுத்த என்று பதவுரை கூறினுமாம்.
கலை – மேகலை யென்னும் இடையணியுமாம்.

பூமியைச் சூழ்ந்துள்ள கடலைப் பூமியாகிய பெண் உடுக்கும் ஆடையாகவும் அப் பெண் இடையிலணியும்
அணியாகவும் கூறுதலும், அரசனாளப் படுகின்ற பூமியை அக் கணவனாலளப்படும் மனைவியாகக் கூறுதலும் கவிசமயம்.
பகல் – நாளுக்கு இலக்கணை. ஆண்டு உடை என இயையும்.
பற்றலர் – விரும்பாதவர், சேராதவர்: எதிர்மறை வினையாலணையும் பெயர்.
கலை வேல் – வினைத்தொகை. எண்ணல் – எதிர்மறை யொருமை யேவல்.

அடக்குதற்கு அரிய உட்பகைவ ரென்ற கருத்து
‘ஐவர்’ என்ற உயர் திணைத் தொகைக் குறிப்புப் பெயரில் தோன்றுதல் காண்க;
உம் – முற்று அரைக் கலை – முன்னிலை யொருமை யெதிர்மறை முற்றெச்சம்:
கு – சாரியை, அல் – எதிர்மறை யிடை நிலை. ஏ – பிரிநிலை. உம் – இழிவு சிறப்பு.
கலை -கால நுட்பம்: ‘கண்ணிமைப் பொழுது பதினெட்டுக் கூடினால், ஒரு காஷ்டை;
முப்பது காஷ்டைகள் கூடினால், ஒரு கலை’ என்ற கால வளவையை யுணர்க.

—————

ஆதவன் அந்தரம் தோன்றாமல் கல் மழை ஆர்த்து எழு நாள்
ஆ தவனம் தர வெற்பு எடுத்தான் அடியார் பிழை பார்
ஆதவன் அம் தரங்கத்தான் அரங்கன் அடியன் என்று உள்
ஆத அனந்தரம் கண்டீர் வினை வந்து அடைவதுவே——–26–

ஆதவன் – சூரியன்,
அந்தரம் – வானத்திலே,
தோன்றாமல் – கட்புலனாகாதபடி,
கல் மழை – ஆலாங்கட்டியைப் பொழிகின்ற மேகங்கள்,
ஆர்த்து எழு நாள் – ஆரவாரித்துக் கொண்டு எழுந்த காலத்தில்,
ஆ – பசுக்கள்,
தவனம்தர – தவிப்பை யடைய,
வெற்பு எடுத்தான் – (அத் துன்பத்தை நீக்கும் பொருட்டுக்) கோவர்த்தந கிரியை (க்குடையாக) எடுத்துப் பிடித்தவனும்,
அடியார் பிழை பாராதவன் – தன் அடியார்களுடைய குற்றத்தைப் பொருள் செய்யாது அவர்கட்கு அருள் செய்பவனும்,
அம் தரங்கத்தான் – அழகிய அலைகளை யுடைய கடலிற் பள்ளி கொள்பவனும் ஆகிய,
அரங்கன் – ஸ்ரீரங்கநாதனுக்கு,
அடியன் தொண்டன்
யான், என்று உள்ளாத அனந்தரம் கண்டீர் – என்று (ஒருவன் தன்னைக்) கருதாத பின்பன்றோ,
வினை வந்து அடைவது – (முன்பு அவன் செய்த) கருமம் (தன் பயனை விளைத்தற்கு அவனிடம்) வந்து சேர்வது; (எ – று.)

பிறப்பு அநாதியாய் வருதலின் ஒருவன் முற் பிறப்புக்களில் எவ்வளவு கருமம் செய்திருப்பினும்,
அவன் தன்னைத் திருவரங்கநாதனது அடியவனென்று கருதுதல் மாத்திரஞ் செய்வனாயின்,
அவனது பழவினை யனைத்தும், விளக்கின் முன் இருள் போலவும், காட்டுத் தீ முன்னர்ப் பஞ்சுத்துய்போலவும்
இருந்த விடமுந் தெரியாதபடி விரைவில் அழிந்திடு மென்பதாம்.

கண்டீர் என்ற முன்னிலைப் பன்மை யிறந்த கால வினை முற்று,
இடைச் சொல் தன்மைப்பட்டுத் தேற்றப் பொருள் குறித்து நிற்கும்.
அந்தரம் ஆர்த்து என்று இயைத்து, வானத்தை யுடைத்துக் கொண்டு எனினுமாம்.
எழு நாள் – வினைத்தொகை; பண்புத் தொகையாய், ஏழுநா ளென்றும் பொருள்படும்.
மேகங்களின் மிக்க மழை பசுக்களுக்கு வருத்தத்தை விளைத்ததோடு, அவற்றின் மிக்க பேரிடிகளினோசையும்
அச்சத்தால் ஆநிரையை மிகவருத்தின தென்பது, ‘கல்மழை யார்த் தெழுநாள் ஆதவனந்தர’ என்பதில் தோன்றும்.
ஆதவநம்தர என்பதற்கு – பசுக்கள் (அம்மழை மிகுதியைப் பொறுக்கு மாற்றலின்றி நிலை நிற்க மாட்டாமல்)
ஓடத்தொடங்க என்று உரைத்தலு முண்டு.

இந்திரன் கல்மழைபொழிவித்ததனால் அதனைக் கல்மலைகொண்டே தடுத்திட்டனன்,
அவன் நீர்மழைபொழிவித்திருந்தால் அதனை நீர்கொண்டே தடுத்திருப்பன்,
அகடித கடநாசாமர்த்தியமுடைய எம்பெருமான் என்ற தாற்பரியம்,
‘கன்மழைக்காக வெற்பெடுத்தான்’ என்ற சொற்போக்கில் தோன்று மென்பர் ஆன்றோர்.

அடியார் பிழை பாராதவன் – “தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலுஞ் சிதகுரைக்குமேல்,
என்னடியா ரதுசெய்யார் செய்தாரேல் நன்றுசெய்தா ரென்பர்போலும்,
மன்னுடைய விபீடணற்காய் மதிவிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண்வைத்த,
என்னுடைய திருவரங்கர்க்கன்றியும் மற்றொருவர்க்கு ஆளாவரே” என்ற பெரியாழ்வாரருளிச்செயலைக் காண்க.

அம் – உரிச்சொல். தரங்கம் – அலை.
‘அம் தரங்கம்’ என்பதை அடையடுத்த சினையாகுபெயரென்றாவது, பண்புத் தொகை யன்மொழியென்றாவது கொள்ள வேண்டும்.
அடியார் அந்தரங்கத்தான் என்றும் எடுத்து, “மலர்மிசை யேகினான்” என்றபடி
அன்பால் நினைக்கின்ற அடியார்களுடைய இதயத்தில் அவர் நினைந்த வடிவோடு சென்று வீற்றிருப்பவன் என வுரைப்பினும் அமையும்.
அடியன் – தன்மையொருமை. உள்ளாதவன் அந்தரம் என்று பதம் பிரித்து,
உள்ளாதவன் – கருகாதவனுக்கு, அந்தரம் – முடிவில், வினை வந்து அடைவது என்று உரைப்பாரு முளர்.

அந்தரம், தபநம், தவநம், தரங்கம், அந்தரங்கம், அநந்தரம் – வடசொற்கள்.
அடைவதுவே – குற்றியலுகரம் சிறுபான்மை கெடாது பொது விதியால் வகர வுடம்படு மெய் பெற்றது.

—————

அடையப்பன் னாகம் கடிவா யமுதுக வங்கி குளிர்
அடையப்பன் னாக மருப்பா யுதமிற வன்று குன்றால்
அடையப்பன் னாக மிசை தாங்கப் பாலர்க்கு அருள் செய்ததால்
அடையப்பன் னாகம் கரியான் அரங்கன் எட்டக்கரமே –27-

ஆல் அடை – (பிரளயப்பெருங்கடலிலே) ஆலிலையிற் பள்ளி கொண்டருள்கிற,
அப்பன் – (யாவர்க்குந்) தலைவனும்,
ஆகம் கரியான் – திருமேனி கறுத்திருப்பவனுமான,
அரங்கன் – ரங்கநாதனது,
எட்டு அக்கரம் – திருவஷ்டாக்ஷரமந்திரமானது, –
பல் நாகம் அடைய கடி வாய் அமுது உக – விஷப் பற்களினாற் சர்ப்பங்கள் (உடம்பு) முழுவதிலும் கடித்த வாயினிடமாக அமிருதம் சிந்தவும்,
அங்கி குளிர் அடைய – நெருப்புக் குளிர்ச்சியை யடையவும்,
பல் நாகம் மருப்பு ஆயுதம் இற – பல யானைகளின் தந்தங்களாகிய ஆயுதங்கள் ஒடியவும்,
குன்றால் அடை அப்பு அ நாகம் மிசை தாங்க – மலையோடு அடுத்தலை யுடையதான ஜலம் (கடல்) அந்த மலையின்மீது ஏந்தவும்,
பாலற்கு – சிறுவனான பிரகலாதனுக்கு,
அன்று – அந்நாளில் (இரணியன் பலவாறு வருத்தத் தொடங்கிய காலத்தில்),
அருள் செய்தது – கருணை புரிந்தது; (எ – று.)

தனித்தனி எல்லாப்பிராணிகளாலும் இறவாதபடி வரம் பெற்றவனும் மூவுலகையும் வென்று தன்னையே கடவுளாக
அனைவரும் வணங்கும்படி செய்துவருகின்றவனுமான இரணியாசுரன்
தன்மகனான பிரகலாதனுக்கு அசுர குருவாகிய சுக்கிராசாரியரைக்கொண்டு அக்ஷராப்பியாசஞ் செய்விக்கிறபொழுது,
அக்காலவழக்கத்தின்படி அவ்வாசிரியன் ‘இரணியாயநம:’ என்று முதலிற் சொல்லிக் கல்வி கற்பிக்க,
பிரகலாதன் அங்ஙனஞ்சொல்லிக் கல்விகற்க உடன்படாது நாராயண நாமத்தை யுட்கொண்ட அஷ்டாக்ஷர மகாமந்திரத்தைச் சொல்ல,
அதனை யுணர்ந்த இரணியன் மைந்தனைத் தன்வழிப்படுத்துதற்குப் பலவாறுமுயன்றும்
அவன் வழிப்படாது விடாப்பிடியையுடையனானமை கண்டு கடுங்கோபங்கொண்டு,
தன்னைச் சார்ந்த அசுரர்களை யழைத்துப் பிரகலாதனைக் கொன்றுவிடும்படி கட்டளையிட்டனன்;

அதற்கு இசைந்த அவர்கள் தக்ஷகன் முதலிய கொடிய அஷ்டமகாநாகங்களைக் கொண்டுவந்து அக்குமாரன்மீது கடிக்கவிட,
அந்தப்பெரும்பாம்புகள் காளி காளாத்திரி யமன் யமதூதி என்ற விஷப்பற்கள் கொண்டு
அவனுடைய சகல அவயவங்களிலுங் கடித்து உக்கிரமான விஷங்களைக் கக்க,
அவன் இடைவிடாது நாராயணநாமோச்சாரணஞ் செய்துவந்ததுபற்றி அவன்பக்க லெழுந்த திருமாலருளால்,
அக்கடித்தவாய்களினின்று சொரிந்த விஷமே அமிருதமயமாக, அந்தப்பரமபாகவதன் சிறிதும் ஊறுபாடின்றி யிருந்தனன்;

அசுரர்கள் அவனை நெருப்பிலே போகட, அத்தீயும் குளிர்ந்து அவனை எரிக்கமாட்டாதாயிற்று;
இரணியன் கட்டளையால் திக்கஜங்கள் பிரகலாதனைப் பூமியிலே வீழ்த்தித் தங்கள் வலியதந்தங்களாற் பாய்ந்து இடித்தபோது,
திருவருள்வலிமைபெற்ற அவனது மார்பிற் பட்டதனால் அத்திசையானைகளின் தந்தங்கள் முறிந்து போய்விட்டன;

அசுரர்கள் அவனைப் பெரியமலையுடன் சேர்த்து நாகபாசங்களினாற் கட்டிக் கடலிலே போகட,
அச்சமுத்திரத்திலே அம்மலையானது பிரகலாதன் தன்மேற்பக்கத்திலிருக்கத் தெப்பமாய்மிதந்தது:
நாகபாசந் தானே விடுபட்டதனாற் பிரகலாதன் இனிது பிழைத்துக் கரைசேர்ந்தனன்;

இங்ஙனம் பலவாறாகத் துன்பந்தீர்த்துப் பக்தனைப் பாதுகாத்தது எனப் பெரியதிரு மந்திரத்தின் பிரபாவத்தை வெளியிட்டார்.

நாகம் மருப்பு ஆயுதம் இற என்பதற்கு –
யானைத்தந்தங்களும் ஆயுதங்களும் ஒடிபட வென்று உரைத்தலுமாம்;
அசுரர்கள் ஒருங்குசேர்ந்து பலவகைப்படைக்கலங்களைக் கொண்டு பிரகலாதனை வதைக்கத்தொடங்க
அவ்வாயுதங்களெல்லாம் அவனுடம்பிற் பட்டமாத்திரத்தில் ஒடிந்துபோய்விட
அவன் அவற்றாற் சிறிதும்வேதனையுறாது விளங்கின னென்பதும் உணர்க,

நம்பெருமாள் எழுத்து எட்டின் பெருமை நவிலுமதோ
சம்பரன் மாயம் புரோகிதர் சூழ் வினை தார் அணி வாள்
வெம்படை மாசுணம் மாமத வேழம் விடம் தழல் கால்
அம்பரமே முதலானவை பாலனுக்கு அஞ்சினவே –திருவரங்கத்து மாலை –81

நாகம் என்ற வடசொல் – யானையையும் பாம்பையும் குறிக்கும்போது, நகத்தில் வாழ்வது எனக் காரணப்பொருள்படும்:
தத்திதாந்தநாமம்; (நகம் – மலையும், மரமும்) அங்கி – அக்நி என்ற வடசொல்லின் சிதைவு.
குளிர் – முதனிலைத்தொழிற்பெயர்.

மூன்றாமடியில், அடை – அடுத்தல்; தொழிற் பெயர்: அடு – பகுதி, ஐ – விகுதி,
குன்றால் அடை அப்பு என்பதற்கு – மலைகளினாலே யடைக்கப்பட்ட சமுத்திர மெனினும் அமையும்;
நாகபா சத்தினாற்கட்டிக் கடலிலேயிடப்பட்ட பிரகலாதன்மேல் இரணியன்கட்ட ளைப்படி அசுரர்கள் அனேகமலைகளைக்
கொண்டுபோய்ப் போகட்டு அழுத்து வாராயின ரென்று புராணங் கூறும்.
‘அன்றுகுன்றாலடையப்பு’ என்று எடுத்து, அக்காலத்தில் (இராமாவதாரத்தில்) மலைகளைக்கொண்டு திருவணை
கட்டியமைக்கப்பட்ட கட லென்று இயற்கையடைமொழி புணர்ந்ததாகப் பொருளுரைத்தல் சிறப்பன்று.
‘நாகம்’ – மலையையுணர்த்தும்போது, நக மென்ற வடசொல்லின் நீட்டல்.
ஆயுதம், அப், பாலன் – வடசொற்கள். அப்பன் – ஸர்வஸ்வாமி. ஈற்றடியில், ன் – விரித்தல்.

முன்றாமடியில், ‘அந்நாகம்’ என்பது, ‘அன்னாகம்’ என்று கொள்ளப் பட்டது, யமகநயத்தின்பொருட் டென்க.

—————-

அக்கர வம்புனைந் தாரய னாரிடை யாயிரு நால்
அக்கர வம்பு மலராள் கொழுநன் அரங்கன் செங்கோல்
அக்கர வம்புயன்றான் மூலம் என்ப தறிவித்திடான்
அக்கர வம்புவி மேல் வேழ மே வெளி யாக்கியதே –28-

இரு நால் அக்கரம் – அஷ்டாக்ஷரமகாமந்திரத்துக்கு உரியவனான,
வம்பு மலராள் கொழுநன் – வாசனையையுடைய தாமரைமலரில் வீற்றிருக்கின்ற திருமகளுக்குக் கணவனும்,
செம் கோலம் கரம் அம்புயன் – சிவந்த அழகிய தாமரைமலர்போன்ற திருக்கைகளையுடையவனுமாகிய,
அரங்கன் ரங்கநாதன், –
அக்கு அரவம் புனைந்தார் அயனார் இடை ஆய் – எலும்பையும் சர்ப்பங்களையும் ஆபரணமாகத்தரித்த
சிவபிரானுக்கும் பிரமதேவருக்கும் நடுவிலே தானிருந்து கொண்டு,
தான் மூலம் என்பது அறிவித்திடான் – தானே (எல்லார்க்கும்) ஆதிமூலப்பொருள் என்கிற உண்மையை வெளிப்படுத்தான்;
அ கரவு – அந்த ஒளிப்பை,
அம் புவிமேல் வேழமே வெளியாக்கியது – அழகிய நிலவுலகத்தில் (கஜேந்திரனாகிய) யானையே பகிரங்கப்படுத்தி விட்டது; (எ – று.)

படைத்தல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களையும் முறையே செய்பவராதலாற் பிரம விஷ்ணு ருத்திர ரென்று
முறைப்படுத்திக் கூறப் படுகின்ற திரிமூர்த்திகளுள் இடைப்பட்டவனான திருமால்
முன்னும் பின்னு முள்ளமற்றையிருவர்க்கும் ஸமனானவன்போன்றிருத்தலால்,
‘அவனே அம் மூவரில் மற்றையிருவர்க்கும் முதற்பொருள்’ என்கிற மெய்ம்மை அறிதற்கு அரிதாயிருந்தது;
அந்த மறைபொருள், கஜேந்திராழ்வான் ஸ்ரீமந்நாராயணனை மற்றைப்பெயர்களாற் குறியாமல் ‘ஆதிமூலமே’ என்று குறித்து
விளித்ததனால் இனிது வெளியாயிற்று என்பதாம்.
“உன்னொக்க வைத்த விருவர்க்கு மொத்தி யொருவர்க்கு முண்மையுரையாய்” என்றது,
முதன் மூன்றடிகட்கு மேற்கோளாகத்தக்கது.
கஜேந்திராழ்வான் ஆதிமூலமேயென்று பொதுப்படக் கூப்பிட்டபொழுது, எம்பெருமானல்லாத பிறதேவரெல்லாரும்
தாம்தாம் அச்சொல்லுக்குப் பொருளல்ல ரென்று கருதி யொழிய,
திருமால் தானே வந்து அருள்செய்தன னாதலால், இரகசியார்த்தம் வெளியாயிற் றென்க.

அக்கு – ருத்திராக்ஷமாலையுமாம். கரவு – கள்ளம். வேழமே, ஏ – இழிவு சிறப்பு;
“விலங்குமன்றோ சொல்லிற்று ஐயமற்றே” என்பர் திருவேங்க டத்தந்தாதியிலும்.

————–

ஆக்கு வித்தார் குழலால ரங்கே சரன் பால் விதுரன்
ஆக்குவித்தார வடிசில் உண்டார் கடலாடையகல்
ஆக்குவித்தாரறி வற்றேனைத் தம்மடி யார்க்கடிமை
ஆக்குவித்தாரடியே யடியேன்று ய்க்குமாரமுதே–29-

குழலால் – வேய்ங்குழலினிசையால்,
ஆ குவித்தார் – பசுக்களை (ஓரிடத்துத் திரளாக)க் கூட்டினவரும்,
விதுரன் ஆக்கு வித்தாரம் அடிசில் – விதுரன் சித்தஞ்செய்த விசேஷ போஜநத்தை,
அன்பால் உண்டார் – அன்பினாற் புசித்தருளியவரும்,
கடல் ஆடை அகலா – சமுத்திரமாகிய ஆடையை நீங்காத,
கு – பூமியின் உற்பத்திக்கு,
வித்தார் – விதை போலக் காரணமானவரும்,
அறிவு அற்றேனை தம் அடியார்க்கு அடிமை ஆக்குவித்தார் – அறிவற்ற என்னைத் தமது அடியார்கட்கு
அடியவனாகும்படி அருள்செய்தவருமாகிய,
அரங்கஈசர் – ரங்கநாதருடைய,
அடியே – திருவடிகளே,
அடியேன் துய்க்கும் ஆர் அமுது – தாசனாகிய யான் அனுபவிக்கும் அருமையான அமிருதமாம்.

அமிருதத்தை நுகர்ந்து ஆனந்தமடைவார்போல அடியேன் எம்பெரு மானுடைய திருவடிகளைத் தியானித்தல் துதித்தல் பூசித்தல்
முதலியன செய்து பேரானந்தமடையவே னென்பதாம்.
பலவிடங்களிற் பரவி மேய்கிற பசுக் கூட்டங்களை ஒருங்கு சேர்த்தற் பொருட்டும், அவற்றை மகிழ்வித்தற் பொருட்டும்,
கண்ணன் இனிமையாக வேணு காநஞ் செய்வன்.
விதுரன் – திருதராட்டிரனுக்கும் பாண்டுவுக்கும் தம்பி முறையாகிறவன்;
விசித்திர வீரியனது மனைவியாகிய அம்பிகையினால் ஏவியனுப்பப்பட்ட தாதியினிடம் வியாச முனிவனருளாற் பிறந்தவன்;
பாண்டவர்க்குந் துரியோதனாதியர்க்குஞ் சிற்றப்பன். கண்ணன் பாண்டவர்க்காகத் துரியோதனனிடம் தூது பேசுபவனாய்
அத்தினாபுரிக்குச் சென்ற போது அங்கு வேறு யாருடைய வீட்டிற்குஞ் செல்லாமல் ஞான பக்திகளிற் சிறந்த
விதுரனுடைய திருமாளிகையினுட் புக்குத் தங்கி அங்கு அவனால் மிக்க அன்புடனமைக்கப்பட்ட
விருந்துணவை அமுதுசெய்தருளின னென்பது, பிரசித்தம்.

குழல் – அதனொலிக்கு, முதலாகுபெயர். அன்பால் உண்டார் என இயையும்; அன்பால் ஆக்கு என்றும் இயைக்கலாம்.
வித்தாரவடிசில் – பல வகைச் சுவைப் பண்டங்களோடு கூடிய உணவு, விஸ்தாரம், கு – வடசொற்கள்.
அகலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். அடியே, ஏ – பிரிநிலை.
அடியே அடியேன் துய்க்கும் ஆரமுது – “உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாங்,
கண்ண னெம்பெருமான்” என்றார் நம்மாழ் வாரும். அரங்கேசர் – குணசந்தி.

————-

ஆராதனம் செய்து கண்டனின் கீர்த்தி யறைவன்றிரு
ஆரா தனம் செய்வன் வேதா வென்றாலடியேன் புகழ்கைக்கு
ஆராதனம் செய்ய போதாந்திரு மகளாக பல் பூண்
ஆராதனம் செயன்பாகா வரங்கத் தமர்ந்தவனே –30-

செய்ய போது – செந்தாமரை மலர்,
ஆதனம் ஆம் – வீற்றிருக்குமிடமாகப் பெற்ற,
திருமகள் இலக்குமியை, ஆக – மார்பிலுடைய வனே!
பல் பூண் ஆரா – ஆரத்தையும் மற்றும் பலவகை யாபரணங்களையுந் தரித்தவனே!
தனஞ்செயன் பாகா – அருச்சுனனுக்குச் சாரதியானவனே!
அரங்கத்து அமர்ந்தவனே – திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனே!
ஆராத நஞ்சு எய்து கண்டன் – உண்ணத் தகாத விஷம் பொருந்திய கழுத்தை யுடையவனான சிவபிரான்,
நின் கீர்த்தி அறைவன் – உனது புகழை யெடுத்துச் சொல்லித் துதித்துப் பாடுவன்;
வேதா – பிரமதேவன்,
திரு ஆராதனம் செய்வன் – (உனக்குப்) பூசனை புரிவன்;
என்றால் -, அடியேன் புகழ்கைக்கு ஆர் – நான் (உன்னைத்) துதித்தற்கு என்ன தகுதியுடையேன்!

திரிமூர்த்திகளுள் மற்றை யிருவரும் புகழ்ந்து பூசனை புரியுஞ் சிறப்பை யுடைய உனது புகழ் எளியனான என்னால்
எடுத்துச் சொல்லுந் தரமுடையதன்று என்பதாம்.
‘ஆராதநஞ்செய்துகண்டன்’ என்றது – மகா பாகவதனான உருத்திரனுடைய செயற்கரியன செய்யுந் திவ்விய சக்தியையும்,
‘வேதா’ என்ற பெயர் – விதித்தற் கடவுளான பிரமனது பெருமையையும் விளக்கும்.

திருமாலின் கட்டளைப்படி தேவர்கள் அசுரர்களைத் துணைக் கொண்டு திருப்பாற்கடல் கடைகையில், அதனினின்று எழுந்த
அதி பயங்கரமானதொரு பெரு விஷத்தைக் கண்ட மாத்திரத்தில் அதன் கொடுமையைப் பொறுக்க மாட்டாமல்
அஞ்சி யோடிச் சரணமடைந்த தேவர்களின் வேண்டுகோளால் அவ்விஷத்தைச் சிவபிரான் அமுது செய்து
கண்டத்தில் நிறுத்தி அனைவரையும் பாதுகாத்தருளின னென்பது வரலாறு;

பாற்கடல் கடைகையில் அதனினின்று உண்டான பலபொருள்களுடனே விஷமும் தோன்றத் திருமால் அவற்றில்
விஷத்தைச் சிவபிரானுக்குக் கொடுத்து உண்ணச் செய்தன ரென்றும் வரலாறு கூறப்படும்.
அருச்சுனனது வேண்டுகோளின்படி கண்ணன் திருவருளால் மகாபாரத யுத்தத்தில் அருச்சுனனுக்குத் தேரூர்ந்து
அதனாற் பார்த்தசாரதி யென்று ஒரு திருநாமம் பெற்றமை பிரசித்தம்.

முதலடியில் ‘னஞ்செய்து’ என்றவிடத்து நகரம் னகரமாகத் திரித்துக் கொள்ளப்பட்டது. யமகநயத்தின்பொருட் டென்க.
கண்டம், கீர்த்தி, ஆராதநம், வேதா, ஆஸநம், ஹாரம், தநஜ்ஞ்யன் – வடசொற்கள்.

மூன்றாமடியில், ஆர் – யார் என்பதன் மரூஉ. திருமகளாக – திருமகளாகன் என்ற பெயரின் ஈறுகெட்டவிளி.
ஹாரம் – பொன்னாலும் முத்தினாலும் மற்றையிரத்தினங்களாலும் மலரினாலு மாகிய மார்பின் மாலை.
தருமபுத்திரன் இராஜ சூயயாகஞ் செய்யவேண்டிய பொழுது அருச்சுனன் வடக்கிற்சென்று பல அரசர்களை வென்று
அவர்கள் செல்வத்தைத் திறைகொணர்ந்ததனால், அவனுக்கு ‘தநஞ்ஜயன்’ என்று ஒருபெயராயிற்று;
இனி, இப்பெயர்க்கு – வெற்றியைச் செல்வமாகவுடையவ னென்றும் ஒருபொருள் கொள்ளலாம்.
அடியேன் ஆர் என்றவிடத்து, யார் என்ற வினாவினைக்குறிப்புமுற்று – தன்மையொருமைக்கு வந்தது.

இரண்டாமடியிறுதியில், வருமொழி முதலுயிர்வரக் குற்றியலுகரக்கேடு கொள்ளாமலும், பொது விதிப்படி வகரவுடம்படுமெய்த்
தோற்றத்தையேனும் ஏற்காமலும் சந்திபிரித்து நிறுத்தினது, யமகவமைப்பின் பொருட்டு.
இங்ஙனம் சொல்லணிக்காகப் பிரித்துக்காட்டியிருக்கிற இடங்களிலெல்லாம், கட்டளைக்கலித்துறையிலக்கணவமைதியை நோக்குமிடத்து,
குற்றிய லுகரம் அலகுபெறவில்லை யென்று கொள்ளவேண்டும்;
இல்லாவிடின், “முதற்சீர்நான்கும் வெண்டளைபிழையாக், கடையொருசீரும் விளங்காயாகி, நேர்பதினாறே
நிரைபதினேழென், றோதினர் கலித்துறை யோரடிக் கெழுத்தே” என்ற கட்டளைக் கலித்துறை யிலக்கணம் அமையாது.
இங்ஙனம் கொள்ள வேண்டிய விடங்களிலெல்லாம் மூலத்தில் இப்பதிப்பில் (+) இக்குறி இடப்பட்டிருக்கிறது.

—————

அமர வரம்பையி னல்லார் பலரந்திக் காப்பெடுப்ப
அமர வரம்பையில் வேல் வேந்தர் சூழ மண்ணாண்டிருந்தோர்
அமர வரம்பையில் கான்போயிறந்தன ராதலில் வீடு
அமர வரம்பையின் மஞ்சா ரரங்கருக் காட் படுமே –31–

அமர அரம்பையின் நல்லார் பலர் அந்திக் காப்பு எடுப்ப – தேவசாதியாகிய ரம்பை யென்னும் அப்ஸர ஸ்திரீயைக் காட்டிலும்
அழகிய வர்களான மகளிர் பலர் திருவந்திக்காப்பு எடுக்கவும்,
அமர அரம் பையில் வேல் வேந்தர் சூழ – போர்க்கு உரியதும் அரமென்னும் வாள் விசேடத்தால் அராவப்பட்டதுமான
வேலாயுதத்தை யேந்திய அரசர்கள் பக்கங்களிற் சூழ்ந்து நிற்கவும்,
மண் ஆண்டு இருந்தோர் அமர – நிலவுலகத்தை யர சாண்டிருந்தவர்க ளெல்லாரும்,
(பின்பு),
வரம்பை இல் கான் போய் இறந்தனர் – எல்லையை யுடையதாகாத வனத்திற்குச் சென்று மாய்ந்தார்கள்:
ஆதலில் – ஆகையால்,
வீடு அமர – (நீங்கள்) பரமபதமடைதற்பொருட்டு,
அரம்பையில் மஞ்சு ஆர் அரங்கருக்கு ஆள்படும் – வாழை மரத்தின் மீது மேகங்கள் தங்கப்பெற்ற ஸ்ரீரங்கத்தில்
எழுந்தருளியிருக்கிற நம்பெருமாளுக்கு அடிமைப்படுங்கள்; (எ – று.)

செல்வம் யாக்கை இவற்றின் நிலை யில்லாமையை முதல் வாக்கியத்தில் எடுத்துக் காட்டி,
இரண்டாம் வாக்கியத்தில், அரங்கனுக்கு ஆட்பட்டால் அழியாச் செல்வமாகிய முத்தி சித்திக்கு மென்றார்.
அரசர்கள் தமது ஆயுளிற் பெரும்பான்மை அரசாண்டு முதுமை வந்த பின்பு அவ்வரசாட்சியைத் தமது மைந்தர்க்கு அளித்து
வனம் புகுந்து மறுமைப் பேற்றின் பொருட்டுச் சில காலம் தவஞ்செய்தலு முளதாயினும், அச்சில நாளைத் தவத்தால்
வீடு பேறு கிடைக்கு மென்ற நிச்சய மில்லை யென்பதும் இதிற் போதரும்.
‘வேந்தர் சூழ மண்ணாண்டிருந்தோர்’ என்றதனால், சக்கரவர்த்திக ளென்றதாயிற்று.

அரம்பை – ரம்பா என்ற வடசொல்லின் விகாரம்; இன் – ஐந்தனுருபு, எல்லைப் பொருளது;
இங்ஙனம் உபமான உபமேயங்களினிடையே வரும் எல்லைப் பொருளை உறழ்பொரு வென்பர்.
அந்திக் காப்பு எடுத்தல் – பவனி வருதலாகிய திருவிழாவின் முடிவிலே கண்ணெச்சில் கழித்தற் பொருட்டு ஆரதி யேந்துதல்;
அந்திக் காப்பு – அந்தி மாலைப் பொழுதில் திருஷ்டி தோஷ பரிகாரத்திற்காக ஆரதியேந்துதலுமாம்.

இரண்டாமடியில், அமரம் – ஸமரம் என்ற வடசொல்லின் விகாரம்;
அமர என்று எடுத்து, அமர் என்ற பெயரின்மேற் பிறந்த குறிப்புப்பெயரெச்ச மெனினுமாம்.
பயில் என்பது பையில் எனப் போலியாய் நின்றது, யமகத்தின்பொருட்டு.
அரம்பயில்வேல்- கீழ் ‘அரங்காதுவார்கணை’ என்றதனோடு ஒப்பிடுக.

மூன்றாமடியில், அமர என்பது – ‘அடைய’ என்பது போல எஞ்சாமைப் பொருள் காட்டி நின்றது;
அம் மரம் என்று எடுத்து, அழகிய மரங்களையுடைய வென்று உரைப்பாரு முளர்.
வரம்பையில் என்றவிடத்து, இல் என்பது – செயப்படுபொருள் குன்றாததாய் நின்றது.
அரம்பையில் மஞ்சுஆர் அரங்கம் – வாழை மரங்களின் உயர்ச்சி வளத்தை விளக்க வந்த தொடர்புயர்வுநவிற்சி யணி.
ஆட்படும் – உம்ஈற்று ஏவற்பன்மை.

—————

ஆளாக வந்த வடியேற் கருள்பரி யானை திண் டேர்
ஆளாக வந்தனிற் செற்றிலங்கே சனை யட்டவல்வில்
ஆளாக வந்தன் புயந்துணித் தாயரங் காமுளரி
ஆளாக வந்தமி லுன்னடி யார்க்கன்ப னாவதற்கே –32-

ஆகவந்தனில் – போரிலே,
பரி – குதிரைகளையும்,
யானை – யானைகளையும்,
திண் தேர் – வலிய தேர்களையும்,
ஆள் – காலாள்களையும்,
செற்று – அழித்து,
இலங்கா ஈசனை அட்ட – இலங்கையரசனான இராவணனைக் கொன்ற,
வல்வில் ஆளா – வலிய வில்லை யாள்கிற வீரனே!
கவந்தன் புயம் துணித்தாய் – கபந்தனென்ற அரக்கனது தோள்களை யறுத்திட்டவனே!
அரங்கா – ரங்கநாதனே!
முளரியாள் ஆக – தாமரை மலரில் வாழ்பவளான திருமகளை மார்பிற் கொண்டவனே!
ஆள் ஆக வந்த அடியேற்கு – அடிமை யென்று வந்து உன்னைச் சரணமடைந்த எனக்கு,
அந்தம் இல் உன் அடியார்க்கு அன்பன் ஆவதற்கு அருள் – எல்லை யில்லாத உனது அடியார்கட்கு
அடியவனாகுமாறு கருணை செய்வாய்; (எ – று.)

எம்பெருமானுக்குத் தொண்டனாவதனோடு அப்பெருமானடியார்கட்கு அடிமை பூண்டொழுகுதலில்
தமக்கு உள்ள அபேக்ஷையைக் கூறினார்.

பரியானை தேர் ஆள் – சதுரங்க சேனை. குதிரை, ஓரங்கமாதலோடு மற்றோரங்கமான
தேரைச் செலுத்துவது மாதலால், முன்நிறுத்தப்பட்டது.
அதனையடுத்து யானையை நிறுத்தினது, அது சேனைக்கு அலங்காரமாதலும் வீரர்க்கு வாகனமாய் நிற்றலோடு
தானும் போர்செய்து பகையழிப்பதாதலும் பற்றியென்க.
ஆஹவம், லங்கேசன், அந்தம் – வடசொற்கள். லங்கேசன் – குணசந்தி.
முளரி – முட்களை யுடைய அரியையுடையது: வேற்றுமைத் தொகையன்மொழி; அரி = அரை: தண்டின் சுற்றுப்புறம்.

————-

ஆவா கனத்த ரடியார் மனத்துட் புள்ளான வொப்பில்
ஆவா கனத்த ரரங்கர் பொற்றாளுக்கு அடிமைப் படார்
ஆவா கனத்த வழுக்குடல் பேணி யறி வழிந்தவ்
ஆவா கனத்த ரிருந்தென் னிராமலென் னம்புவிக்கே–33-

அடியார் மனத்துள் ஆவாகனத்தர் – அடியார்களுடைய இதய கமலத்தில் வந்து வீற்றிருத்தலை யுடையவரும்,
புள் ஆன ஒப்பு இலா வாகனத்தர் – கருடப் பறவையாகிய ஒப்பற்ற வாகனத்தை யுடையவருமாகிய,
அரங்கர் – ஸ்ரீரங்கநாதருடைய,
பொன் தாளுக்கு – அழகிய திருவடிகளுக்கு,
அடிமைப்படார் – ஆட்படமாட்டார்கள் (சிலர்):
ஆ ஆ – அந்தோ!
கனத்த அழுக்கு உடல் பேணி – பாரமாயுள்ள அசுத்தமான தம் உடம்பைப் பாதுகாத்துக் கொண்டு,
அறிவு இழந்து – மதி கெட்டு,
அவா ஆகு – (சிற் றின்பத்தில்) ஆசை கொள்ளுகிற,
அனத்தர் – பயனற்ற அவர்கள்,
அம் புவிக்கு – அழகிய இந்நில வுலகத்தில்,
இருந்து என் – உயிர் வாழ்ந்திருத்தலால் என்ன லாபம்?
இராமல் என் – இராதொழிதலால் என்ன நஷ்டம்? (எ – று.)

அரங்கர்க்கு ஆட்படாதவர் இருந்தென்ன? போயென்ன? என்றபடி;
எனவே, இவ்வுலகத்தில் மானுடப் பிறப்பெடுத்தலின் பயன் அரங்கர்க்கு ஆட்பட்டு உய்தலே யென்பது, தேர்ந்தகருத்து.
‘மலர்மிசை யேகினான்’ என்றபடி அன்போடு தியானிக்கின்ற அடியார்களுடைய இதய கமலத்தில் எம்பெருமான்
அவர் நினைந்த வடிவத்தோடு வந்து வீற்றிருத்தலால், ‘ஆவாகனத்த ரடியார்மனத்துள்’ என்றார்.
ஆவாகனத்தர் – தம்மைத்தாமே அங்கு நிலைநிறுத்துபவ ரென்க.

ஆவாஹநம், மநஸ், வாஹநம், கநம், அநர்த்தம், புவி – வடசொற்கள்.
“நேமி சேர் தடங்கையினானை நினைப்பிலா வலி நெஞ்சுடைப், பூமிபாரங்கள்” என்றபடி
பகவத் பக்தரல்லாதவரது உடல் பூமிக்குப் பாரமாதலால், ‘கனத்த வுடல்’ எனப்பட்டது.
ஆ ஆ – இரக்கக் குறிப்பிடைச் சொல்லின் அடுக்கு.

————-

அம்பு விலங்கை நகர் பாழ் படச் சங்கு மாழியும் விட்டு
அம்பு விலங்கை கொண்டாயரங்கா வன்றிடங்கர் பற்றும்
அம்பு விலங்கை யளித்தா யினியென்னை யாசை யென்றிவ்
அம்பு விலங்கையிட் டேசம் சிறையி லடைத் திடலே –34-

அம் – அழகிய,
புவி – பூமியில்,
லங்கை நகர் பாழ்பட – இலங்காபுரியிலுள்ள அரக்கர்கள் அழியும்படி,
சங்கும் ஆழியும் விட்டு அம்பு வில் அம் கை கொண்டாய் – சங்க சக்கரங்களைக் கைவிட்டு
(வந்து இராமனா கத்திருவவதரித்து) அம்பையும் வில்லையும் அழகியகைகளிற் கொண்டவனே!
அரங்கா!
அன்று – அந்நாளில்,
அம்பு – ஜலத்திலே,
இடங்கர் பற்றும் – முதலையினாற் பிடித்துக் கொள்ளப்பட்ட,
விலங்கை – மிருக ஜாதியான கஜேந்திராழ்வானை,
அளித்தாய் – பாதுகாத்தருளியவனே! –
இனி -, என்னை -,
ஆசை என்று இயம்பு விலங்கை இட்டு – ஆசை யென்று சொல்லப் படுகிற (ஆசையாகிய) விலங்கைப் பூட்டி,
ஏசும் சிறையில் அடைத்திடல் – இகழப்படுகிற (பிறப்பாகிய) சிறைச் சாலையில் அடைக்காதே; (எ – று.)

உனக்கு ஆட்பட்ட அடியேனது காமம் முதலிய குற்றங்களைப் போக்கி இனிப் பிறப்பில்லாதபடி
முத்தி யளித்தருள வேண்டு மென வேண்டியபடி.
பெருமாள் இலங்கை யரசனான இராவணன் முதலிய இராக்கதர்களை யழிக்கக் கருதி வனவாசஞ்செல்லுங்காலத்தில்
சங்க சக்கராம்சமான பரத சத்துருக்கனர்களை உடன் கொண்டு செல்லாது நகரத்திலேயே விட்டுச் சென் றமையும்,
‘சங்கும் ஆழியும் விட்டு’ என்றதில் அடங்கும்.

ஒருவிலங்கினாலே மற்றொரு விலங்கிற்கு நேர்ந்த துன்பத்தையும் பொறாமல் தனது பேரருளினால்
அரை குலையத் தலை குலைய மடுக்கரைக்கே வந்து உதவின மகா குணத்தி லீடுபட்டு,
‘அன்று இடங்கர் பற்றும் விலங்கையளித்தாய்’ என்றார்.
விலங்கு – திர்யக்ஜாதி. ‘விலங்கையிட்டேசஞ்சிறையில்’ என்று பாடமோதி,
விலங்கை யிட்டே, சம் – ஜந்மமாகிய, சிறையில் – சிறைக்கூடத்தில் என்று உரைப்பாரு முளர்;
சம் = ஜம்: ஜநநம், பிறப்பு. ஏசு அம் சிறை என்று எடுத்து, அம் – சாரியை எனினும் இழுக்காது.
உயிரைப்பந்தப்படுத்துதலால், பிறப்பு ‘சிறை’ எனப்பட்டது.
“அவாவென்ப எல்லா வுயிர்க்கு மெஞ்ஞான்றும், தவாஅப் பிறப்பீனும் வித்து” என்றது கொண்டு,
அவாவை ‘விலங்கு’ என்றதன் காரணத்தை உணர்ந்து கொள்க.

லங்கை நகர் – இடவாகுபெயர். மூன்றாமடியில், அம்பு – வடசொல்.
அடைத்திடல் – எதிர்மறை யொருமை யேவல்; எதிர்மறைவியங்கோளுமாம்.

————-

இடவ மலைக்கும் புயங்க மலைக்கு மிலங்குமால்
இடவ மலைக்கு மிருங்க மலைக்கு மிறை வசங்க
இடவ மலைக்கும் புனல் அரங்கா வெய்த்த மார்க் கண்டன் கண்டு
இடவ மலைக்கு முலகழி யாதுள் ளிருந்த தென்னே –35–

இடவ மலைக்கும் – ருஷப கிரியாகிய திருமாலிருஞ்சோலை மலைக்கும்,
புயங்க மலைக்கும் – சேஷ கிரியாகிய திருவேங்கட மலைக்கும்,
இலங்கும் அகல் இடம் அமலைக்கும் -விளங்குகின்ற விசாலமான நிலவுலகத்துக்கு உரிய அதி தேவதையான பூமி தேவிக்கும்,
இருங் கமலைக்கும் – பெரிய செந்தாமரை மலரில் வாழ்பவளான ஸ்ரீதேவிக்கும்,
இறைவ – தலைவனே!
சங்கம் இடவ – சங்கத்தை இடக்கையிலுடையவனே!
மலைக்கும் புனல் அரங்கா – (கரையை) மோதுகின்ற காவிரி நீர்ப் பெருக்குப் பாயுந் திருவரங்கத்தி லெழுந்தருளியிருப்பவனே!
எய்த்த மார்க்கண்டன் கண்டிட – (பிரளயத்தி லலைபட்டு) மெலிவடைந்த மார்க்கண்டேய முனிவன்
(நினது திருவயிற்றினுட் சென்று) காணுமாறு,
அம் அலைக்கும் உலகு அழியாது உள் இருந்தது – (பிரளய வெள்ள) நீரினால் அழிக்கப்பட்ட உலகங்களெல்லாம்
அழியாமல் நினது திருவயிற்றினுள்ளே யிருந்த விதம்,
என்னே – என்ன விசித்திரமோ!

ருஷபம் தவஞ்செய்து பேறுபெற்ற மலையாதலால் தென்திருமலைக்கு ‘ருஷபகிரி’ என்றும்,
பரமபதநாதனது கட்டளையின்படி அவனுக்குப் பல வகைக் கைங்கரியங்களைச் செய்யும் ஆதிசேஷனே
அப்பெருமான் இனிது எழுந்தருளி யிருத்தற்கு மலை வடிவமானதனாலும்
மேரு மலையினிடமிருந்து ஆதிசேஷனுடணே வாயுவினாற் கொணரப்பட்ட மலையாதலாலும்
வடதிரு மலைக்கு ‘சேஷகிரி’ என்றும் பெயர்கள் வாய்த்தன.

இடவம் – ருஷபம் என்ற வடசொல்லின் விகாரம்.
புஜங்கமலை யென்பது – ‘சேஷகிரி’ என்பதன் பரியாயநாமமாக நின்றது. புஜங்கம் என்பது, புயங்கம் என்று விகாரப்பட்டது.
அமலா, கமலா என்ற வடசொற்கள் – ஆவீறு ஐயாயின. அமலை – குற்றமில்லாதவள்.
இறைவன் – இறைமை என்ற பண்பினடியாப் பிறந்த பெயர்; வ் – பெயரிடைநிலை.
மலைத்தல் – பொருதல். எய்த்தல் – மெலிதல்.
மார்க்கண்டன் – மிருகண்டுவினது குமாரன்; வடமொழித் தத்திதாந்தநாமம். அம் – நீர்; வடசொல்.

காலகதியைக் கடந்து என்றும் பதினாறாக நெடிதூழிவாழும்படி நீண்ட ஆயுள்பெற்ற மார்க்கண்டேய முனிவன்
பத்திர நதிக்கரையில் தவம் புரிந்து நரநாராயணரது தரிசனத்தைப்பெற்று
‘யான் பிரளயக்காட்சியைக் காணு மாறு அருள்புரியவேண்டும்’ என்று பிரார்த்திக்க, அவ்வாறே அவர்கள் அநுக் கிரகித்துச்
சென்றபின்பு மாயவன் மாயையால் மகாபிரளயந் தோன்ற, அப் பிரளயப் பெருங்கடலிற் பலவாறு அலைப்புண்டு
வருந்திய மார்க்கண்டேயன், அவ்வெள்ளத்தில் ஆலிலையின் மீது ஒருகுழந்தை வடிவமாய் அறிதுயிலமர்கிற
ஸ்ரீமந்நாராயணனைக் கண்டு அப்பெருமானது திருவயிற்றினுட் புக்கு, அங்கிருந்த உலகங்களையும் எல்லாச்
சராசரங்களையும் கண்டு பெரு வியப்புக் கொண்டன னென்பது, இங்குக் குறித்த விஷயம்.

—————–

இருந்தை யிலங்க வெளிறு படாதென் செய்தாலு நிம்பத்து
இருந்தை யிலந்தித்தி யாதவை போற் புல்லர் யாவும் கற்றாய்ந்து
இருந்தை யிலம் பன்ன கண்ணார்க்கு அல்லால் வெண்ணெ யில்லி லொளித்து
இருந்தை யிலங்கை யரங்கற்கு அன்பாகி யிருக்கிலரே–36-

என் செய்தாலும் – என்ன உபாயஞ்செய்தாலும்,
இருந்தை – கரியானது,
இலங்க – விளங்கத் தக்கதாக,
வெளிறு படாது – வெண்ணிற மடையாது;
(என்செய்தாலும்) -,
நிம்பத்து இருந் தையிலம் தித்தியாது – சிறந்த வேப்பெண்ணெய் இன்சுவை பெறாது;
அவை போல் -, –
புல்லர் – அற்பகுணமுடையரான கீழ்மக்கள்,
யாவும் கற்று ஆய்ந்து இருந்து – சகல சாஸ்திரங்களையும் பயின்று ஆராய்ந்திருந்தும்,
ஐயில் அம்பு அன்ன கண் ணார்க்கு அல்லால் – கூரிய அம்பு போன்ற கண்களை யுடைய மகளிர்க்கு அன்பாயிருப்பரேயல்லாமல்,
இல்லில் ஒளித்து இருந்து வெண்ணெய் ஐயில் அம் கை அரங்கர்க்கு அன்பு ஆகி இருக்கிலர் – (ஆய்ச்சியருடைய) கிருகத்தில்
(அவரறியாதபடி) ஒளித்து வீற்றிருந்து வெண்ணெயை எடுத்து உண்ட அழகிய கையை யுடைய ரங்கநாதர்
விஷயமாக அன்பு கொண்டிருக்க மாட்டார்கள்; (எ – று.)

என்றது, புல்லறிவாளரியல்புக்கு இரங்கியவாறாம். உவமையணி.
‘என் செய்தாலும்’ என்பதை மத்யதீபமாக முன் பின் வாக்கியமிரண்டற்கும் கூட்டுக.
வெண்ணெயை ஒளித்திருந்து உண்டது, கிருஷ்ணாவதாரத்தில்.
நிம்பம், தைலம் – வடசொற்கள்.
இரண்டாமடியில் ‘தையிலம்’ என்பதும், மூன்று நான்கா மடிகளில் ‘ஐயில்’ என்பதும் – யமகத்தின் பொருட்டுக் கொண்ட போலிகள்.
தைலம் – எண்ணெய்; திலம் – எள்: அதன் சம்பந்தமானது. இங்கு இச்சொல் நெய் என்ற மாத்திரமாய் நின்றது.
வேப்பெண்ணெய்க்கு ‘இரும்’ என அடைமொழி கொடுத்தது, இகழ்ச்சிக்குறிப்பு; கைப்பிற் பெரிய என்று பொருள்கொள்ளினுமாம்.
யா – அஃறிணைப் பன்மை வினாப்பெயர்.
மூன்றாமடியில், ‘இருந்து’ என்பது – துணைவினை:
நான்காமடியில், ‘இருந்து’ என்பதற்கு – உட்கார்ந்து என்பது பொருள்;
ஆகவே, ஒரு சொல் வந்த பொருளில் வாராமை காண்க.
மூன்றாமடியில், ‘இருந்து’ என்றதன் பின் உயர்வு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது.
ஐயில் அம்பு அன்ன – வேலையும் அம்பையும் போன்ற எனினுமாம்.

————

இருக்குமந் தத்தி லாரியா வரங்கன் மண் ஏழுக்குந்தய்
இருக்குமந் தத்திரு வாய்மலர்ந் தான் எட்டு எழுத்தைக் குறி
இருக்குமந் தப்புத்தி யீர்த்து நல் வீடெய்தலாகும் கை போய்
இருக்குமந் தச்செசிட் டூமன்முந் நீர்கடந் தேறிடிலே–37-

இருக்கும் அந்தத்தில் அறியா அரங்கன் – வேதமும் தனது முடிவில் (வேதாந்தமாகிய உபநிஷத்துக்களில்) அறிய மாட்டாது நின்ற ரங்கநாதனும்,
மண் ஏழ் உண்டும் தயிருக்கும் அந்த திரு வாய் மலர்ந்தான் – ஏழு வகைப்பட்ட உலகங்களை யெல்லாம் புசித்தும்
(வயிறு நிரம்பாமற் கிருஷ்ணாவதாரத்திலே) தயிரை உண்ணும்பொருட்டாகவும் அந்த அழகிய வாயைத் திறந்தவனு மான திருமாலினது,
எட்டு எழுத்தை – திருவஷ்டா க்ஷரமந்திரத்தை,
குறியிருக்கும் – சிந்தியாத உங்களுக்கும்,
மந்தம் புத்தி ஈர்த்து நல் வீடு எய்தல் ஆகும் – கூர்மையற்ற அறிவை யொழித்து (தத்துவ ஜ்ஞாநம் பெற்று)ச் சிறந்த முக்தியை அடைதல் கூடும்:
கை போய் இருக்கும் அந்தன் செவிடு ஊமன் முந்நீர் கடந்து ஏறிடில் – கைகளில்லாத முடவனும் குருடனும் செவிடனும் ஊமையுமான
ஒருவன் கடலைக் கடந்து அக்கரையேறுவனானால்; (எ – று.)

ஏறிடில் எய்தலாகும் என இயையும். முடம், குருடு, செவிடு, ஊமை என்ற உறுப்புக் குறைகளை யெல்லாமுடைய ஒருவன்
கடல் கடந்து கரையேறுவது உண்டானால், எம்பெருமானது திருவஷ்டாக்ஷரத்தைச் சிந்தியாத உங்கட்கும்
பிறவிக் கடல் கடந்து முத்திக் கரை சேர்தல் உளதாம் என்றார்; என்றது, அஸம்பாவித மென்றபடியாம்:
இது, பொய்த்தற்குறிப்பணி; வட நூலார் மித்யாத்யவஸிதியலங்கார மென்பர்: இதன் இலக்கணம் –
ஒரு பொருளைப் பொய்யென்று நிரூபித்தற்கு மற்றொரு பொய்ப் பொருளைக் கற்பித்தல்.
நீந்த மாட்டாமைக்கு முடமும், கரை இன்னதிசை யிலுள்ளது எனக் காண மாட்டாமைக்குக் குருடும்,
அதனைக் குறித்துப் பிறரை உசாவியுணர மாட்டாமைக்கு ஊமையும், பிறர் சொல்லக் கேட்டறியமாட்டாமைக்குச் செவிடும் சேர்க்கப்பட்டன.

ருக், அந்தம், மந்தம், புத்தி, அந்தன் – வடசொற்கள்.
இருக்கும், உம் – உயர்வுசிறப்பு; பகவானது சொரூபத்தை யுணர்ந்து உரைத்தற்கென்றே யமைந்ததும் என்றபடி,
மண் ஏழ் – ஈரேழுலகம். மண்ணேழுண்டும், தயிருக்கும் என்ற உம்மைகள் – முறையே, உயர்வு சிறப்பு இழிவு சிறப்புப் பொருளன.
அந்தத் திருவாய் – உலகமுண்ட பெருவாய். குறியிர் – முன்னிலைப் பன்மை யெதிர்மறை வினையாலணையும்பெயர்;
இர் – விகுதி: எதிர்மறை ஆகாரம் புணர்ந்து கெட்டது. உம் – இழிவுசிறப்பு. எய்தல், எய்து – பகுதி.
முந்நீர் – படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று நீர்மை யுடையது; நீர்மை – தன்மை:
ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர் (மழைநீர்) என்னும் மூன்றுநீரையுடையது என்றலு முண்டு; பண்புத்தொகையன்மொழி.

—————

ஏறும் கரியும் பரியும் செற்றான் பரன் என்று மன்றுள்
ஏறும் கரி மறை யாதலினால் ஐயாம் யாதுகுமக்கீடு
ஏறும் கரிய வரங்கற்கு அன்பாய்வினை யென்னுமிடி
ஏறும் கரியுமினி மேற் பிறவியிட ரில்லையே –38-

‘ஏறும் – எருதையும்,
கரியும் – யானையையும்,
பரியும் – குதிரையையும்,
செற்றான் – வென்றவனான திருமால் தானே,
பரன் – (யாவர்க்கும்) மேலான இறைவன்,’
என்று – என்று ஐயந் திரிபறத் தெரிவித்து,
மன்றுள் ஏறும் – அவை யேறுகிற (நியாய சபையாராற் சரி யென்று ஏற்றுக் கொள்ளப்படுகிற),
கரி – சாட்சி,
மறை – வேதமாகும்:
ஆதலினால் – ஆதலால்,
உமக்கு – உங்கட்கு,
ஐயம் யாது – (திருமாலே பரம் பொரு ளென்கிற விஷயத்திற்) சந்தேக மென்ன?
(சிறிதும் சங்கைகொள்ளவேண்டா என்றபடி):
கரிய அரங்கர்க்கு அன்பு ஆய் – கரிய திருநிறமுடைய ரங்கநாதருக்கு (நீங்கள்) அன்புள்ள அடியார்களாகி,
ஈடேறும் – உய்வு பெறுங்கள்: (அங்ஙனம் நீங்கள் அன்பரானால்),
வினை என்னும் இடி ஏறும் கரியும் – (தொன்று தொட்டு வருகிற உங்கள்) கருமமாகிய பேரிடியும் கரிந்தொழியும்:
இனிமேல் பிறவி இடர் இல்லை – (உங்கட்கு) வரும் பிறப்புத் துன்பமும் இல்லையாம்; (எ – று.) – ஈற்று ஏகாரம் – தேற்றம்.

இது, உலகத்தார்க்கு நல்லறிவுணர்த்தியது.
அரங்கர்க்கு அன்புபூண்டு ஒழுகினால், அப்பரமனதருளால், மூவகைக் கருமங்களில் சஞ்சிதம் ஆகாமியம் என்ற இரண்டும் ஒழிய,
பிராரப்தகருமமும் வலியொடுங்கியிடுமென்க.
(சஞ்சிதம் – பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரால் அளவின்றி யீட்டப்பட்ட வினைகளின் பயன்கள்.
பிராரப்தம் – அவ்வினைப் பயன்களுள் இறந்த உடம்புகளால் அனுபவித்தன ஒழியப் பிறந்த உடம்பால் முகந்து நின்றவை.
ஆகாமியம் – இப் பிறப்பில் ஈட்டப்பட்டுப் பின் அனுபவிக்கக் கடவன.)

வேதம் அனைவராலும் தடையின்றி ஒப்புக் கொள்ளப்படும் மூலப் பிரமா ணமென்பார், ‘மன்றுளேறுங் கரி மறை’ என்றார்.
வினைப் பயன் தவறாது விளைந்து வருத்துதலால், ‘இடியேறு’ எனப்பட்டது.
ஏறு – ஆண்பாற்பெயர்; சிறந்ததையும் பெரியதையும் ‘ஏறு’ என்றல், மரபு.

————–

இடராக வந்தெனைப் புன் சிறு தெய்வங்கள் என் செயுமான்
இடராக வன் பிணி மா நாகம் என் செயும் யான் வெருவி
இடராக வன்னி பினலிடி கோண் மற்றுமென் செயும் வில்
இடராக வன்னரங்கன்று இருந்தாள் என்னிதயத்ததே–39-

வில் – வில்லை,
இடம் – இடக்கையிலேந்திய,
ராகவன் – ரகுகுலத்தி லவதரித்தவனான,
அரங்கன் – ரங்கநாதனது,
திரு தாள் – திருவடி,
என் இதயத்தது – அடியேனது மனத்தி லுள்ளது: (ஆதலால்),
புல் சிறு தெய்வங்கள் – இழி குணமுடைய அற்ப தேவதைகள்,
என்னை – இடர்,
ஆக வந்து என் செயும் – துன்பம் விளைப்பனவாக வந்து நெருங்கி யாது செய்ய மாட்டும்?
மானிடர் ஆகம் வல் பிணி மா நாகம் – மனித சரீரத்துக்கு உரிய கொடிய நோய்களாகிய பெரும் பாம்புகள்,
என் செயும் -?
ராகம் வன்னி – செந்நிறமுடைய தீயும்,
புனல் – நீரும்,
இடி – இடியும்,
கோள் – (நவ)கிரகங் களும்,
மற்றும் – இன்னும் தீங்கு விளைப்பன யாவும்,
யான் வெருவியிட என் செயும் – நான் அஞ்சும்படி என்ன செய்ய மாட்டும்? (எ – று.)

“வேண்டுதல் வேண்டாமை யில்லானடி சேர்ந்தார்க்,கி யாண்டு மிடும்பையில” என்றபடி
தன்னைப் பற்றி வருவனவும், பிற வுயிர்களைப் பற்றி வரு வனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையால்
வரும் பிறவித் துன்பங்கள்யாவும் எம்பெருமானது திருவடியை இடைவிடாது நினைப்பவர்க்கு உளவாகா என்பதாம்.
(தன்னைப் பற்றி வருவன – உடம்பைப் பற்றி வருந் தலைநோய் முதலியனவும், மனத்தைப் பற்றிய காமம் கோபம் முதலியனவும்;
இவை, ஆத்யாத்மிகம் எனப்படும்.
பிற வுயிர்களைப் பற்றி வருவன – மிருக பக்ஷி மநுஷ்ய பிசாச சர்ப்ப ராக்ஷ ஸாதிகளால் உண்டாவன; இவை, ஆதிபௌதிகம் எனப்படும்.
தெய்வத்தைப் பற்றி வருவன – குளிர் காற்று மழை இடி வெயில் முதலியவற்றால் நேர்பவை; இவை, ஆதிதைவிகம் எனப்படும்.
(இவற்றை வடநூலார் தாபத்ரய மென்பர்.)

மானிடர் – மாநுஷர் என்ற வடசொல்லின் விகாரம்.
ராகவஹ்நி என்ற வடமொழித் தொடர், விகாரப்பட்டது.
ராகவன் – வடமொழித்தத்திதாந்த நாமம்.
இதயம் – வடசொற்சிதைவு. தாள் – சாதி யொருமை. ராகவன்னரங்கன், னகரமெய் – விரித்தல்.

—————–

அத்திரங்கா யாமென வுணரேன் எனதாசையுன்கை
அத்திரங்கா யத்தியிற் பெரிதானாரை யாகிப்பல் வீழ்
அத்திரங்கா யந்திரம் போல் பொறி ஐந்து அழியுமக்கால்
அத்திரங்கா யரங்கா வடியேனுன் அடைக்கலமே –40–

அரங்கா – ! –
காயம் – உடம்பு,
அத்திரம் – நிலையற்றது,
என உணரேன் – என்று அறியும் மெய்யுணர்வுடையனல்லேன் யான்;
எனது ஆசை – என்னுடைய அவாவோ,
உன் கை அத்திரம் காய் அத்தியின் பெரிது – உனது கையினால் எய்யப்பட்ட ஆக்கிநேயாஸ்திரத்தினால்
தவிப்படைந்த கடலினும் பெரியது;
நரை ஆகி – கிழத்தனம் முதிர்ந்து,
பல் வீழ – பற்கள் விழ,
திரங்கா – தோல் திரைந்து,
யந்திரம் போல் பொறி ஐந்து அழியும் அ காலத்து – யந்திரம் போல இடையீடின்றித் தொழில் செய்கிற
பஞ்ச இந்திரியங்களும் அழியும் மரண காலத்தில்,
இரங்காய் – இரக்கங் கொண்டு (அடியேனுக்கு) அருள் செய்வாய்;
அடியேன் உன் அடைக்கலம் – நான் உனது தாசனாகச் சரண்புகுந்தேன்; (எ – று.) – ஆல் – அசை.

“எய்ப் பென்னை வந்து நலியும் போ தங்கேது நா னுன்னை நினைக்க மாட்டேன்,
அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தே னரங்கத்தரவணைப் பள்ளியானே” என்ற பெரியாழ்வாரருளிச்செயல் இங்குக் கருதத்தக்கது.

அஸ்திரம், காயம், ஆசா, அஸ்த்ரம், அப்தி, யந்த்ரம், காலம் – வட சொற்கள்.
அப்தி – நீர்தங்குமிடம்; அப் – ஜலம். ‘உன்கையத்திரங்காய்’ என்றது, கடலுக்கு அடைமொழியாய் நின்றது.
திரங்கா – உடன்பாட் டெச்சம்.
யந்திரம்போற் பொறியைந்து அழியும் என்பதற்கு – (சூத்திர மற்ற) மரப்பாவை போலப் பஞ்சேந்திரியங்களும்
அழியு மென்று உரைத்தலு மொன்று.
பொறியைந்து என்பதில், இனைத்தென்றறிபொருளில் வரும் முற்றும்மை விகாரத்தால் தொக்கது.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அடிமுடி தேடிய கதைக்கு மறுப்பு.!–

January 22, 2022

அடிமுடி தேடிய கதைக்கு மறுப்பு.!
ஆதாரம்:-[திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய ‘பரப்பிரம்ம விவேகம்’ என்னும் மகத்தான படைப்பில் இருந்து]

“சர்வம் விஷ்ணு மயம் ஜகத்”

சைவர்களால் திருமாலான சர்வேஷ்வரனை சிறுமை படுத்த திட்டமிட்டு புனையப்பட்ட கதைகளில் ஒன்றுதான்
“அடிமுடி தேடிய கதை” இந்த மூட பங்கத்தை நிர்மூலமாக்கவே இந்த பதிவு..!

சைவர்கள் இயற்றிய கதையை பார்ப்போம்;

முன்னொரு காலத்தில் திருமாலும் திசைமுகனும் தானே கடவுளென்று பிணங்கி நிற்க;
அவர்கள் வேறுபாட்டை நீக்கும் பொருட்டு அண்ணாமலையார்(சிவன்) அக்கினிப் பிழம்பான மலைவடிவமாய்
அவர்கள் முன் தோன்றவே, திருமால் வராகமாய் அவனடியைத் தேடியும்,
பிரமன் அன்னமாய் அவன் முடியைத் தேடியும் அலைந்தார்களாம்..😀 நல்ல நகச்சுவை கதையொன்று இது.!

இதற்க்கான மறுப்பு இனி:-

“அண்ட மளக்க வடிக்கீ ழொடுங்கியுல குண்ட பொழுதுதரத் துள்ளொடுங்கி—
துண்டமதி சூடினான் மாலருளாற் றோன்றினான் ஆங்கவனைத் தேடினான் மாலென்ப தென்”.

இதன் கருத்து:— அண்டங்களனைத்தையும் திருமால் அளந்தான், அப்பொழுது அனைத்துலகங்களும் அவனடிக்கீழ் ஒடுங்கியது.
பிரளய காலத்தில் காப்பதற்காக உலகையெல்லாம் உண்டான். அக்காலத்தில் உலகனைத்தும் அவனது திருவயிற்றில் ஒடுங்கியது
ஸ்ருஷ்டிகாலத்தில் அருள்கொண்டு உலகனைத்தையும் உமிழ்ந்தான். அச்சமயம் பிறைசூடியாகிய சிவபெருமான் முதல்
சகல ஜீவர்களும் மறுபடியும் தோன்றினர். இவ்வாறிருக்க சிவனடியைத் திருமால் தேடினான் என்பது ஏனோ? என்பதாகும்.

அண்டமளந்த வரலாறு.

விரோசனன் மகன் மாவலி. இவன் பெருவலி படைத்தவன்; வரபலம் மிக்கவன்.
இவன் தன் ஆற்றலால் மூன்று உலகங்களையும் வென்று தன் ஆட்சிக்குட்படுத்தினான்.
ஒரு சமயம் மாவலி வேள்வியொன்று இயற்றினான். அதுகாலை, இந்திரன் வேண்டுகோளுக்கிணங்கித் திருமால் வாமனனாகி
மாவலிபால் சென்று மூவடி மண் வேண்டினான். அப்பொழுது அசுரகுருவாகிய சுக்கிரன், ‘
வந்திருப்பவன் மாயத் திருமால்; இவனுக்குத் தானம் கொடுக்காதே’ என்று தடுத்தான்.
மாவலியோ குருவின் சொல்லையும் மீறி வாமனனுக்குத் தாரை வார்த்து பாரைக் கொடுத்தான்.
தானம் கொடுத்த மண்ணைத் திருமால் அளக்கத் தொடங்கினான். நெடு வடிவங்கொண்டு ஓரடியால் மண்ணுலகையும்,
மற்றோரடியால் விண்ணுலகையும் அளந்து மூன்றாமடிக்கு இடமில்லாமலிருக்கவே மாவலியின் முடியில் வைத்து
அவனைப் பாதாளத்துக் கிறைவனாக்கினான் என்பது இவ்வரலாற்றினை—-

“ஒருகுறளா யிருநில மூவடிமண் வேண்டி உலகனைத்து மீரடியா லொடுக்கி ஒன்றும்
தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன்……” என்பர் திருமங்கையாழ்வார்,

இனி திருமால் அண்டமளந்த வரலாற்றினை அடியில் வரும் சான்றுகள் கொண்டு தெளிக.

“கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை”(பரிபாடல் 3-20)

“ஞாலம் மூன்றடித் தாய முதல்வதற்கு” (கலித்தொகை- நெய்தற்கலி 7)

“மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்”(அகம் 220)
[நெடியோன்–திரிவிக்கிரமனாகிய திருமால்]

“ஏமம் ஆகிய நீர்கெழு விழவின் நெடியோன் அன்ன நல் இசை”
(பதிற்றுப்பத்து 2-5)

“இருநிலம் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன்…”
(பெரும்பாணாற்றுப்படை)

“நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போல்”
(முல்லைப்பாட்டு)

“நீரும் நிலனும் தீயும் வளியும் மாக விசும்பொரு ஐந்துடன் இயற்றிய மழுவாள் நெடியோன் தலைவன் ஆக” (மதுரைக்காஞ்சி)

“கோள்வாய் மதியம் நெடியோன் விடுத்தாங்கு” (சிந்தாமணி)

“மூவுலகும் ஈரடியால் முறைதிறம்பா வகைமுடியத் தாவிய சேவடி”(சிலம்பு)

“திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்! நின் செங்கமல ரண்டடியால் மூலவுலகும் இருள்தீர நடந்தனையே”(சிலம்பு)

“வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணில மளந்தோன் ஆடிய குடமும்”
(சிலம்பு)
எனப் பல இடங்களிலும் தமிழ்நூல்களிலும் திரிவிக்கிரமாவதாரம் பேசப்படுவது காண்க.

“வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி நீணிலம் அளந்தோன் மகன்முன் ஆடிய” (மணிமேகலை மலர்வளம் புக்க காதை)

“நெடியோன் குறளுரு வாகி, நிமிர்ந்து, தன் அடியிற் படியை அடக்கிய அந்நாள் நீரிற் பெய்த, மூரி வார்சிலை, மாவலி….”
(மணிமேகலை சிறைக்கோட்டம் – அறக்கோட்டம் ஆக்கிய காதை)

“நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி” (மணிமேகலை உலகவறவி புக்ககாதை)

என்று மணிமேகலையிலும் பல இடங்களில் வாமனதிரிவிக்கிரமா வதாரங்கள் பற்றிக் கூறுவன நோக்குக.

உலகப் பொது மறை என்று கூறப்படும் திருக்குறளிலே வள்ளுவனாரும்.

“மடியிலா மன்னவன் எய்தும்; அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு”(திருக்குறள்-610)

என்று கூறுவது காண்க.

“கானின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன் கூனின் றளந்த குறளென்ப…” (பொன்முடியார்-திருவள்ளுவமாலை)

“மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியான் ஞாலம் முழுதும் நயந்தளந்தான்…” (பரணர் -திருவள்ளுவமாலை)

“கண்ணகன் ஞாலம் அளந்தூஉம் காமருசீர்த் தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம்—-
நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும் பூவைப்பூ வண்ணன் அடி.”
(திரிகடுகம் கடவுள் வாழ்த்து)

“வைய மகளை யடிப்படுத்தாய் வையகத்தா ருய்ய வுருவம் வெளிப்படுத்தாய் —வெய்ய
வடுந்திற லாழி யரவணையா யென்று நெடுந்தகை நின்னையே யாம்”.(புறப்பொருள் வெண்பா மாலை)
எனப் பிற நூல்களிலும் உலகளந்த செய்தி வருவது காண்க.

தமிழ் அணங்குக்குச் சிறந்த அணிகலனாய் மிளிர்வது இறையனார் அகப்பொருளாகும்.
சிவபெருமானால் அருளிச்செய்யப்பெற்ற காரணத்தினால் இந்நூலுக்கு இறையனார் அகப்பொருள் என்று பெயர்.
இதற்க்கு உரை கண்டவர் தெய்வப்புலமை நக்கீரனார். இவர் கடைச்சங்கத்தில் வீற்றிருந்த புலவர் பெருந்தகையாவர்,
நக்கீரனார் எழுதிய உரையிலே எடுத்துக்காட்டாக அமைந்த பாடல்களில் சில திருமாலின் திரிவிக்கிரமாவதாரம் பற்றிப் பேசுகின்றன.
இதனை அடியிற் காண்க;

வேழம் வினாதல்

“வருமால் புயல்வண்கை மான்தேர் வரோதயன் மண்ணளந்த திருமா லவன்வஞ்சி அன்னஅஞ் சீரடிச் சேயிழையீர்!
கருமால் வரையன்ன தோற்றக் கருங்கைவெண் கோட்டுச் செங்கட் பொருமால்
களிறொன்று போந்ததுண் டோநும் புனத்தயலே”(இறையனார் அகப்பொருளுரை 57)

“கொடியார் நெடுமதிற் கோட்டாற் றரண்கொண்ட கோன் பொதியிற் கடியார் புனத்தயல் வைகலுங் காண்பல்
கருத்துரையான் அடியார் கழலன் அலங்கலங் கண்ணியன் மண்ணளந்த நெடியான்
சிறுவன்கொல் லோவறி யேனோர் நெடுந்தகையே” (இறையனார் அகப்பொருளுரை -88)

“சென்றார் வருவது நன்கறிந் தேன்செருச் செந்நிலத்தை வென்றான் பகைபோல் மெல்லியல் மடந்தைமுன் வெற் நின்றான்
அளந்த நிலமும் குளிர்ந்தது நீள்புயலால்[பெடுத்து பொன்தான் மலர்ந்து பொலங்கொன்றை தாமும் பொலிந்தனவே”.
(இறையனார் அகப்பொருளுரை 317)

சங்கினை வாழ்த்துதல்

“தேனிற வார்கண்ணிச் செம்பியன் மாறன் செழுங்குமரி வானிற வெண்திரை மால்கடல் தோன்றினை மண்ணளந்த
நீனிற வண்ணனும் ஏந்தினன் தம்முன் நிறம்புரைதீர் பானிற வெண்சங்கம் யார்நின்னின் மிக்க படிமையரே”. (இறையனார் அகப்பொருளுரை 314)

“திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்” என்ற நம்மாழ்வார் வாக்கினுக்கிணங்க,
திருமாலின் பெருமையினை அரசர்கள் மேல் ஏற்றிக் கூறுவது பண்டைக் காலத் தமிழ்ப் புலவர்கள் மரபு.
இம்மரபுக்கேற்ப நக்கீரர் உரையிலும் மாலின் புகழை மன்னன்மேல் ஏற்றிக் கூறினார். மேலும் சில பாடல்களும் காண்க:–

“வானுற நிமிர்ந்தனை வையக மளந்தனை பான்மதி விடுத்தனை பல்லுயி ரோம்பினை
நீனிற வண்ணநின் நிரைகழல் தொழுதனம்.” (யாப்பருங்கலக் காரிகை மேற்கோள்)

“முன்புலக மேழினையுந் தாயதுவு மூதுணர்வோர் இன்புறக்கங் காநதியை யீன்றதுவும் —
நன்பரதன் கண்டிருப்ப வைகியதுங் கான்போ யதுமிரதம் உண்டிருப்பா ருட்கொண் டதும்

வெந்த கரியதனை மீட்டுமக வாக்கியதும் அந்தச் சிலையினைப்பெண் ணாக்கியதும் —
செந்தமிழ்தேர் நாவலன்பின் போந்ததுவு நன்னீர்த் திருவரங்கக் காவலவன் மாவலவன் கால்.” (தண்டியலங்காரம் குளகச் செய்யுள் மேற்கோள்)
[வெந்த கரி — கரிக்கட்டையான பரீட்சித்து. செந்தமிழ் தேர் நாவலன் –திருமழிசைப்பிரான்]

உலகளந்த வரலாற்றைக் கூறும் பாடல்கள் தண்டியலங்காரத்தில் மேலும் பல உண்டு.
விரிவுக்கஞ்சி விடுத்தனம். இனி கம்பர் கூறுவதைக் காண்போம்.

“நின்றதாண் மண்ணெலா நிரப்பி யப்புறம் சென்றுபா விற்றிலே
சிறிது பாரெனா ஒன்றவா னகமெலா மொடுக்கி யும்பரை
வென்றதாள் மீண்டது வெளிபெ றாமையே.”(கம்பராமாயணம்- வேள்வி 36)

பரம சைவராக விளங்கிய கவி ஒட்டக்கூத்தரும் இவ்வரலாற்றினை விட்டு வைக்கவில்லை.
நக்கீரரைப் போல மாலின் பெருமையை மன்னன் மேலேற்றிக் கூறுகிறார்:—-

“நவ்வி மடநோக்கான் ஞாலத்தை யோரடியால் வவ்வி யிருதோளில் வைத்தமால்.”(குலோத்துங்க சோழன் உலா)

“மிக்கோ னுலகளந்த மெய்யடியே சார்வாகப் புக்கோ ரருவினைபோற் போயிற்றே– அக்காலம்
கானகத்தே காதலியை நீத்துக் கரந்துறையும் மானகத்தேர்ப் பாகன் வடிவு.” (புகழேந்திப் புலவர்: நளவெண்பா, கலிநீங்கு காண்டம் -7)
என்றார் புகழேந்தியும்.
கம்பர் ஒட்டக்கூத்தர், புகழேந்தி மூவரும் சமகாலப் புலவர்கள் என்பது பலர் கொள்கை.
இவர்கள் மூவருமே உலகளந்த உத்தமன் வரலாற்றினைக் கூறுவது குறிக்கொள்ளத் தக்கது.

“போதங்கொண் மாணுருவாய்ப் புவியிரந்த அஞ்ஞான்று புகன்று கொண்ட வேதங்கள் நான்கினையும் வேதியர்பால் கேட்டருளி மீண்டும் கற்றே”
(கலிங்கத்துப்பரணி)என்றார் சயங்கொண்டாரும்.

“தேடிய அகலிகை சாபம் தீர்த்ததாள் நீடிய உலகெலா மளந்து நீண்டதாள் ஓடிய சகடிற வுதைத்துப் பாம்பின்மேல்
ஆடியுஞ் சிவந்ததா ளென்னை யாண்டதாள்”(வில்லிபாரதம்)
என உலகளந்த திருவடியின் பெருமையினை வில்லிபுத்தூரார் பாரதத்தில் நயம்பட உரைப்பதை உணர்க.

“பூவரு மயன்முதல் யாவரு மறியா
மூவுல களந்தநின் சேவடி வாழ்த்தி”
(திருவரங்கக் கலம்பகம்)

“அடலவுணன் பாற்குறுகி அற்பநிலங் கையேற்றாய் கடலகிலம் யாவுமுந்தி காட்டுவது கண்டிலையோ.”
(அழகர் கலம்பகம்)
என்பனவும் காண்க.

இதுவரை சங்க கால இலக்கியங்களிலிருந்தும், தொன்மையான சிறந்த தமிழிலக்கியங்களிலிருந்தும் சான்றுகள் காட்டப்பட்டன.
இனி, காலத்தால் முற்பட்ட முதலாழ்வார்களுடைவும், திருமழிசைப் பிரானுடையவுமான
அருளிச்செயலமுதத் திருவாககினை மட்டும் காண்போம். மற்றைய ஆழ்வார்கள் கூறுவதை திவ்யப்பிரபந்தத்தில் கண்டு தெளிக.

“நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால் சென்று திசையளந்த செங்கண்மால்”
(பொய்கையாழ்வார்)

“அடிமூன்றில் இவ்வுலகம் அன்றளந்தாய் போலும்
அடிமூன் றிரந்தவனி கொண்டாய்”
(பூதத்தாழ்வார்)

“வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால் மூவடிமண் நீயளந்து கொண்ட நெடுமாலே”
(பேயாழ்வார்)

“தாளால் உலகம் அளந்த அசைவேகொல் வாளா கிடந்தருளும் வாய்திறவான்”
(திருமழிசையாழ்வார்)

இனி, அடிமுடி தேடிய கதைக்கு மறுப்பான வெண்பாவின் மேல் பகுதியைக் காண்போம்.

உலகுண்டபொழுது……மாலென்பதென்?

இதன் கருத்து;

திருமால் பிரளய காலத்தில் அழியாமல் காக்க அனைத்துலகங்களையும் உண்டான்.
உலகங்கள் அனைத்தும் அவன் உதரத்துள் ஒடுங்கின. அக்காலம் பிரம்மன், சிவன், தேவர், மனிதர் முதலிய அனைவரும்
திருமால் திருவைற்றுள் உறைந்தனர். சிருஷ்டி காலத்தில் தன் கருணையினால் உண்ட உலகனைத்தையும் உமிழ்ந்தான்.
அப்போது பிரம்மன் முதல் அனைத்துலகங்களும், பிறை சூடியாகிய சிவனும் தோன்றினர்.
உண்மை இவ்வாறிருக்க: சிவபெருமான் அடியைத் திருமால் தேடினான் என்பது எவ்வாறு பொருந்தும்? என்பது கருத்து.

இக்கருத்தினை..

“அன்றுலக முண்டுமிழ்ந்தா யகிலசெகத் காரணனீ என்றுனக்கே யாளானோம் இமிழருவி வடமலைவாழ்
மன்றல்கமழ் துழவோயுன் வயிற்றுளெங்களொடு கடை சென்றுறைந்து மீளவருந் தேவரை யாமதியோமே.”[நாட்
என்று திருவேங்கடக் கலம்பகம் தெளிவாகக் கூறும்.

இனி இதன் சான்றுகள்:—-

ஐம்பெரும் பூதங்கள், சூரிய சந்திரர்கள், மற்ற கிரகங்கள், பன்னிரு ஆதித்தியர், அஷ்டவசுக்கள், ஏகாதச ருத்திரர்கள்,
அசுவிநீ தேவர்கள், இயமன், உருத்திரன் முதலியவர்களும், மூவேழ்உலகமும், அவற்றில் உள்ள சராசரஜீவர்களோடு,
உந்திக் கமலத்தில் தோன்றிய பிரமனும் திருமாலிடத்திலிருந்தே தோன்றினர் என்பதைப் பரிபாடல் தெளிவாக விளக்குவது காண்க;

“மா அயோயே! மாஅயோயே!
மறுபிறப் பறுக்கும் மாசில் சேவடி
மணிதிகழ் உருபின் மா அயோயே!
தீவளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்
ஞாயிறுந் திங்களும் அறனும் ஐவரும்
திதியின் சிறாரும் விதியின் மக்களும்
மாசில் எண்மரும் பதினொரு கபிலரும்
தாமா இருவரும் தருமனும் மடங்கலும்
மூவேழ் உலகமும் உலகினுள் மன்பதும்
மாயா வாய்மொழி உரைதர வலந்து
வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீயென மொழியுமால் அந்தணர் அருமறை.”(பரிபாடல்-3)

மேலும், பரிபாடலிலே திருமாலின் வராகாவதாரம் பேசபபடுகிறது.
ஆனால் வராக வடிவெடுத்து சிவனடியைத் தேடியதாக எங்குமே கூறவில்லை.
ஊழி காலத்தில் நீரினுள் அமிழ்ந்த பூமியை வராகாவதாரம் எடுத்து மீண்டும் நிலைநிறுத்திய திருமாலின்
முதுமையை எவரும் அறியார் என்றே உள்ளது.

“கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின் முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா
ஆழி முதல்வ! நிற்பேணுதும் தொழுது”. (பரிபாடல் – 2)
என்றும்,

“புருவத்துக் கருவல் கந்தரத்தால்
தாங்கி, இவ்வுலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்”.(பரிபாடல்-4)

என்றும் பரிபாடல் முதலான சங்கநூல்கள் திருமால் பெருமையைப் பாடுகின்றனவேயொழிய,
சிவனடியை வராக வடிவெடித்துத் திருமால் தேடியதாக எங்குமே இல்லை.
இது ஸுதர்சனம் ஆசிரியரால் சங்ககாலத் தமிழர் சமயத்திலும், சாதிமத ஆராச்சியிலும் விரிவாக நிலைநாட்டப்பெற்றுள்ளது.

ஸுதர்சனம் வெளியீடான சோலைமலைக்குறவஞ்சியும்.

“சாலவே அனந்தன் தலையில் இடுப்புவியெலாம்
கோலமோர் துகளெனக் கொடுவந்து வைத்ததால்
சுவேத வராக கல்பப்பேர் சொல்லி
இவேதியர் முதலாய் இனம்சங்கல் பிக்கிறார்
அப்படிக் கிருக்க அருணைக் கல்லடியை
எப்படி அறியா திருந்ததென் றிசைத்தாய்?.”

என்று கூறிச் செல்வது காண்க.

இனி. கூரேச விஜயத்தில், ‘அடிமுடி தேடிய கட்சி என்ற அத்தியாயத்தின் உரைத் தொகுப்பினை அடியிற் காண்க:

“பிரளய காலத்தில் சிவனையும், சிவனைப் பெற்ற பிரமனையும், அவனால் படைக்கப்பட்ட தேவ, மனுஷ்ய, திரியக்ஸ்தாவரங்களையும்,
சிவனால் வசிக்கப்பட்ட கைலை முதலிய அஷ்டகுல பர்வதங்களையும், தன்னுடைய குக்ஷியில் தரித்திருக்க,
இந்தச் சிவன் விஷ்ணுவினுடைய குக்ஷியை விட்டு நழுவி இருந்தானோ? இப்படியிருக்க விஷ்ணு வராகாவதாரம் பண்ணி,
சேதனனான சிவனுடைய பாதத்தைத் தேடினாரென்பது வேத விருத்தமன்றோ?………

“திருவண்ணாமலையின் பிரபாவத்தைக் கேளுங்கள். அதற்கு சுதர்சனகிரியென்று திருநாமம். அதனுடைய சரித்திரமாவது—
ஜைமினி பாரதத்தில் ஆரண்ய பர்வத்தில் தர்மநந்தனனுக்கு ரோமசரிஷி திவ்யதேசங்களின் பிரபாவங்களில்,
திருக்கோவலூர் திவ்யதேசத்தின் சரித்திரம் சொன்னவுடனே சுதர்சநகிரி மகாத்மியத்தைச் சொல்லுகிறார்….

“அதாவது; ஜகத் சிருஷ்டியின் ஆதியில் திருவாழி ஆழ்வானை லோக சிருஷ்டி பண்ணச் சொல்லி அனுப்ப,
அவர் அப்படிச் செய்யாமலிருந்ததின் பேரில் பிரம்மாவை சிருஷ்டித்து ஜகத் சிருஷ்டி பண்ணச் சொல்லி நியமிக்க,
அவரும் அப்படியே வெகுகாலம் கழித்ததின் பேரில், சிவனை சிருஷ்டித்து ஜகத் சிருஷ்டி பண்ணும்படி அனுப்ப,
அவரும் அப்படியே அலட்சியமாயிருந்ததின் பேரில் ஒரு வராஹத்தை சிருஷ்டித்து ஜகத் சிருஷ்டி பண்ணும் படி அனுப்பினார்.

அந்த வராஹத்தைக் கண்ட பிரம்மா, நீர் யார்? எதற்கு வந்தீர்?’ என்று கேட்க,
‘நான் சிருஷ்டி பண்ணும்படி ஸ்ரீமகா விஷ்ணு (வினாலே) அனுப்ப வந்தேன் என்ன.
அதற்க்கு பிரம்மா கோபித்து, ‘என்னை சிருஷ்டிங்கும் படி அனுப்பியிருக்கிறாரே’ என்று
வராஹத்துடன் வாதம் செய்கையில் சுதர்சந ஆழ்வான்,
‘ஒருவருக்கொருவர் சம்வாதம் நேரிட்டால் மத்யஸ்தராவார்கள் இருவரையும் சமாதானம் பண்ணாமல் பார்த்துக்
கொண்டிருப்பார்களாகில் அவர்களுக்கு நரகமுண்டு’ என்று வேதத்திற்சொல்லுகையால் தான் மத்யஸ்தராய் வந்து,
‘ஓய்! வராஹ மூர்த்தியே! நீர் லோக சிருஷ்டி பண்ண வந்தேன் என்று சொல்லுகிறீர்,
உம்முடைய வியாபாரம் மிகப் பெரிதாயிருக்கையால் இதோ நான் பர்வத ரூபமாயிருக்கிறேன்,
என்னை நீர் கெல்லுவீராகில், நீர் சிருஷ்டிக்க சாமர்த்தியமுடையவரென்று நம்புகிறேன்’ என்று சொன்னார்.”

வராஹ மூர்த்தியும் அப்படியே அந்த சுதர்சநகிரியை தம்முடைய கோர தந்தங்களினாலே பேர்த்தெறிந்தது
மல்லாமல் விஸ்வரூபம் தரித்து மஹத்தான உக்கிரத்துடனே சேவை சாதிக்கையில், திருவாழியாழ்வானும்
பிரம்ம ருத்திரர்களும் வேத வாக்கியங்களினாலே தோத்திரம் செய்து, கோபத்தை சாந்தம் பண்ண வேண்டும்
என்று பிரார்த்திக்கையில், அப்படியே ஸ்ரீஸ்வாமியானவர் திருவுள்ளத்தில் சந்தோசமுண்டாய் பிரம்மாவை அழைத்து ‘
நீர் லோக சிருஷ்டியைப் பண்ணக்கடவீர்’ என்றும், ருத்திரனை அழைத்து ‘
நீர் சங்காரத் தொழிலைப் பண்ணக் கடவீர்’ என்றும் நியமிக்க;
அப்போது சிவன் ஸ்வாமியை மிகவும் தோத்திரம்செய்து, ‘இந்த கொடிய வியாபாரம் அடியேனுக்கு நியமிக்க வேண்டாம்,
என்று கண்ணுங் கண்ணீருமாய் அழுததின்பேரில், ஸ்வாமி கிருபை கூர்ந்து,
‘ஆகில் நீர் சூரியனைப் பார்க்கக்கடவீர், அவனிடத்தில் நின்றும் வைவஸ்வத மனு என்கிற இயமன் உண்டாவான்,
அவனைக்கொண்டு நித்ய சம்ஹாரங்களைப் பண்ணுவிக்கடவீர்,
முடிவில் நீர் சுதாவாய் பிரளயகால ருத்திர ரூபத்தைத் தரித்து சர்வ சம்ஹாரம் பண்ணக்கடவீர்’ என்று நியமித்தார்

“சிவனுக்கு அந்த சுதர்சநகிரியின் அடிவாரத்தில் ஒரு ஆலயம் பிரஷ்டை பண்ணும்படியும்,
தம்மையும் அவ்விடத்தில் விஷ்ணுஸ்தலமாய் பிரதிஷ்டை பண்ணும்படியாகவும் நியமித்து,
உத்ஸவங்கள் நடந்தேறி வருகிறதாய் ஜைமினி பாரதத்தில் ஏழு அத்தியாயங்களில் இந்தச் சரித்திரம் சொல்லப்பட்டிருக்கிறது”

“அதன் பின் வல்லாளகண்டன் என்ற அரசனால் அந்த விஷ்ணுஸ்தலம் சிவஸ்தலமாக்கப் பட்டது. அதற்க்கு ஒரு மாகாத்மியமும் உண்டாக்கப்பட்டது”.

“இந்த சுதர்சநகிரிக்கும் அண்ணாமலை என்ற பெயருண்டாக்கி, சிவனுக்குப் பாட்டனான விஷ்ணுவானவர்
வராஹரூப மெடுத்துப் பேரனுடைய பாதத்தைத் தேடினார் என்றும்,
சிவனுக்கு பிதாவான பிரம்மாவானவர் குமாரனுடைய சிரசைத் தேடினார் என்றும்,
இந்தப் பொய்களுக்குத் தகுதியாய், தாழம்பூ பொய்சாட்சி சொன்னதாயும், அதற்க்காகத் தாழம்பூ தேவார்ஹமல்லாதே
போகக்கடவதென்று சபித்ததாயும் இந்தக் கதை ஸ்காந்தபுராணத்தின் பூர்வபாகத்தில் சொல்லப்பட்டிருக்கிறதென்றும் சொல்வது
வேதங்களுக்கும் இதிஹாசமாகிய பாரதத்திற்கும், புராணங்களுக்கும் விரோதிக்கிரதுமல்லாமல் பௌத்திரன் காலைப் பாட்டன் தேடுகிறதும்,
புத்திரன் சிரசைப் பிதா தேடுகிறதுமாகச் சொல்லுகிறது யுக்தி விரோதமுள்ளதாய், பரிஹாஸாஸ்பதமாகவிருக்கிறது.”

“விஷ்ணுவானவர் பாதளத்தில் கீழே ஆதிகூர்மமாயும், அதற்க்குமேல் ஆதிசேஷனாயும், அவதரித்திருக்கச் சிவனுடைய
காலைத் தேடிக் காணாதே போய்விட்டாரென்று சொல்வது புராண விரோதமென்று கண்டித்தார்.”
[கூரேச விஜயத்தின் உரைத் தொகுப்பு]

எனவே அடிமுடி தேடிய கதை ஒரு பொய், புரட்டு, புனைப்பு கதை என்பது தெரிகிறது.

“சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
எம்பெருமானார் திருவடிகளே சரணம்..!
கூரேசர் திருவடிகளே சரணம்…!

ஆதாரம்:-[திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய ‘பரப்பிரம்ம விவேகம்’ என்னும் மகத்தான படைப்பில் இருந்து]

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அஷ்டபிரபந்தத்தி லடங்கிய ஸ்ரீ புராண கதைகள்–

January 22, 2022

ஸ்ரீ அஷ்டபிரபந்தத்தி லடங்கிய ஸ்ரீ புராண கதைகள்–

கஜேந்திரனைப் பாதுகாத்த கதை:-
இந்திரத்யும்நனென்னும் அரசன் மிக்கவிஷ்ணுபக்தியுடையனாய் ஒருநாள் விஷ்ணுபூசைசெய்கையில் அகஸ்தியமகாமுனிவன் அவனிடம்எழுந்தருள, அப்பொழுது அவன் தன்கருத்து முழுவதையும் திருமாலைப் பூசிப்பதிற் செலுத்தியிருந்ததனால், அவ்விருடியின் வருகையை அறிந்திடானாய் அவனுக்கு உபசாரமொன்றுஞ் செய்யாதிருக்க, அம்முனிவன் தன்னை அரசன் அலட்சியஞ்செய்தா னென்று கருதிக் கோபித்து “நீ யானைபோலச் செருக்குற்றிருந்ததனால், யானையாகக் கடவை’ என்று சபிக்க, அங்ஙனமே அவன் ஒருகாட்டில் யானையாகத் தோன்றினனாயினும் முன்செய்த விஷ்ணுபக்தியின் மகிமையால் அப்பொழுதும் விடாமல் நாள்தோறும் ஆயிரந்தாமரைமலர்களைக் கொண்டு திருமாலை அருச்சித்துப் பூசித்துவருகையில், ஒருநாள், பெரியதொரு தாமரைத்தடாகத்தில் அருச்சனைக்காகப் பூப்பறித்தற்குப் போய் இறங்கினபொழுது, அங்கே முன்பு நீர்நிலையில்நின்று தவஞ்செய்துகொண்டிருந்த தேவலனென்னும் முனிவனது காலைப் பற்றியிழுத்து அதனாற் கோபங்கொண்ட அவனது சாபத்தாற் பெரியமுதலையாய்க்கிடந்த ஹூஹூஎன்னுங் கந்தருவன் அவ்வானையின் காலைக் கௌவிக்கொள்ள, அதனை விடுவித்துக்கொள்ள முடியாமல் கஜேந்திரன் ஆதிமூலமேயென்று கூவியழைக்க, உடனே திருமால் கருடாரூடனாய் அங்குஎழுந்தருளித் தனதுசக்கரத்தைப் பிரயோகித்து முதலையைத்துணித்து யானையை அதன்வாயினின்று விடுவித்து இறுதியில் அதற்கு முத்தியை அருள்செய்தனன் என்பதாம். கஜேந்திராழ்வான் ஆதிமூலமேயென்று பொதுப்படக் கூப்பிட்டபொழுது எம்பெருமானல்லாத பிறதேவரெல்லோரும் தாம்தாம் அச்சொல்லுக்குப் பொருளல்ல ரென்று கருதியொழிய, அதற்கு உரிய திருமால் தானே வந்து அருள்செய்தன னென நூல்கள் கூறும், ஒரு விலங்கினாலே மற்றொருவிலங்குக்கு நேர்ந்த துன்பத்தைத் தான் இருந்தவிடத்திலிருந்தே தீர்ப்பது சர்வசக்தனான எம்பெருமானுக்கு மிகவும் எளியதாயினும் அப்பெருமான் அங்ஙனஞ்செய்யாமல் தனதுபேரருளினால் அரைகுலையத் தலைகுலைய மடுக்கரைக்கே வந்து உதவின மகாகுணத்தில் ஈடுபட்டு, அதனைப் பாராட்டிக்கூறுவர். இவ்வரலாற்றில், திருமாலே பரம்பொருளாந்தன்மை வெளியாம்.

ஹம்ஸாவதார கதை:-
முன்னொருகாலத்தில் மது கைடப ரென்ற அசுரர்கள் பிரமதேவனிடத்திலிருந்து வேதங்களை அபகரித்துக்கொண்டு
கடலில் மூழ்கி மறைந்துவிட, ஞானவொளியைத்தரும் பெருவிளக்கான வேதங்கள் ஒழிந்தமைபற்றி உலகமெங்கும் பேரிருள்மூடி நலியாநிற்க, பிரமன்முதலியோ ரனைவரும் கண்கெட்டவர்போல யாதொன்றுஞ்செய்யவறியாமல் திகைத்து வருந்துவது கண்டு திருவுள்ளமிரங்கித் திருமால் ஹயக்கிரீவனாகிக் கடலினுட் புக்கு அவ்வசுரர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொன்று வேதங்களை மீட்டுக் கொணர்ந்து, ஹம்ஸரூபியாய்ப் பிரமனுக்கு உபதேசித்தருளின னென்பதாம். இவ்வரலாறு சிறிதுவேறுபடக் கூறுதலுமுண்டு.

அண்டமுண்டு ஆலிலைகலந்த கதை:-
பிரமன்முதலிய சகலதேவர்களுமுட்பட யாவும் அழிந்துபோகின்ற யுகாந்தகாலத்திலே ஸ்ரீமகாவிஷ்ணு அண்டங்களையெல்லாம் தன்வயிற்றில்வைத்து அடக்கிக்கொண்டு சிறுகுழந்தைவடிவமாய் ஆதிசேஷனது அம்சமானதோர் ஆலிலையின்மீது பள்ளிகொண்டு யோகநித்திரைசெய்தருளுகின்றன னென்பதாம்.

கடல்கடைந்த கதை:-
முன்னொருகாலத்தில், இவ்வண்டகோளத்திற்கு அப்புறத்திலுள்ள விஷ்ணுலோகத்துச் சென்று திருமகளைப் புகழ்ந்து பாடி அவளால் ஒருபூமாலை பிரசாதிக்கப்பெற்ற ஒரு வித்தியாதரமகள், மகிழ்ச்சியோடு அம்மாலையைத் தன்கைவீணையில் தரித்துக்கொண்டு பிரமலோக வழியாய் மீண்டுவருகையில், துர்வாசமகாமுனி எதிர்ப்பட்டு அவளை வணங்கித் துதிக்க, அவ்விஞ்சைமங்கை அம்மாலையை அம்முனிவனுக்கு அளித்திட்டாள்; அதன்பெருமையை யுணர்ந்து அதனைச் சிரமேற்கொண்ட அம்முனிவன் ஆனந்தத்தோடு தேவலோகத்திற்கு வந்து, அப்பொழுது, அங்கு வெகுஉல்லாசமாக ஐராவதயானையின்மேற் பவனிவந்துகொண்டிருந்த இந்திரனைக் கண்டு அவனுக்கு அம்மாலையைக் கைந்நீட்டிக்கொடுக்க, அவன் அதனை அங்குசத்தால் வாங்கி அந்த யானையின் பிடரியின்மேல் வைத்தவளவில், அம்மதவிலங்கு அதனைத் துதிக்கையாற் பிடித்து இழுத்துக் கீழெறிந்து காலால் மிதித்துக் துவைத்தது; அதுகண்டு முனிவரன் கடுங்கோபங்கொண்டு இந்திரனை நோக்கி “இவ்வாறு செல்வச்செருக்குற்ற நினது ஐசுவரியங்களெல்லாம் கடலில் ஒளித்துவிடக்கடவன’ என்று சபிக்க, உடனே தேவர் செல்வம்யாவும் ஒழிந்தன; ஒழியவே, அசுரர் வந்து பொருது அமரரை வெல்வாராயினர். பின்பு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் சரணமடைந்து, அப்பிரான் அபயமளித்துக்கட்டளையிட்டபடி, அசுரர்களையுந் துணைக்கொண்டு, மந்தரமலையை மத்தாக நாட்டி, வாசுகியென்னும் மகாநாகத்தைக் கடைகயிறாகப் பூட்டிப் பாற்கடலைக்கடையலாயினர் என்பதாம்.

துருவனது வரலாறு:-
சுவாயம்புவமனுவின் மகனான உத்தான பாத மகாராஜனுக்குச் சுநீதி யென்னும் மனைவியினிடத்துப் பிறந்த துருவனென்பவன், ஒருநாள் சிங்காதனத்தில் வீற்றிருந்த தன்தகப்பனுடைய மடியிலே யுட்கார்ந்திருந்த தனது மாற்றுத்தாயான சுருதியின் மகனாகிய உத்தமனென்பவனைப் பார்த்துத் தானும் அப்படி உட்காரவேண்டு மென்று அருகிற்போக, அதுகண்ட சுருசி, செருக்குக்கொண்டு “என்வயிற்றிலே பிறவாமல் வேறொருத்தி வயிற்றிற் பிறந்த நீ இச்சிங்காசனத்திலே யிருக்க
நினைக்கின்றது அவிவேகம்; நீ அதற்குத் தகுந்தவ னல்லன்; என்மகனே அதற்குயோக்கியமானவன்’ என்று இவனை இழித்துச்சொல்ல, அதுபொறாமல் துருவன் சரேலென்று தனது தாயார் வீட்டுக்குப் போய் அவளுடைய அநுமதியைப் பெற்றுக்கொண்டு, அப்பட்டணத்திற்குச் சமீபத்திலே யிருப்பதொரு உபவனத்திலே யிருந்த ஸப்தரிஷிகளைக்கண்டு தண்டனிட்டு அவர்களால் வாசுதேவ விஷயமான ஸ்ரீதுவாதசாக்ஷர மகாமந்திரம் உபதேசிக்கப்பெற்று, மதுவனத்துக்குப்போய் ஸ்ரீவிஷ்ணுவைத் தன் இருதயகமலத்திலே இடைவிடாது தியானித்துக்கொண்டிருக்க, எம்பெருமான் அவனது தியானத்திற்குத் திருவுள்ளமுகந்து பிரதியக்ஷமாய்க் கிருபைசெய்து வரமளிக்க,அவனுடைய அநுக்கிரகத்தினாலே மூன்றுலோகங்களுக்கும்மேற்பட்டதும், சகலதாரா கிரகநக்ஷத்திரங்களுக்கும் ஆதாரபூதமும், அவர்களுடைய ஸ்தானங்களுக்கெல்லாம் அதியுன்னதமுமான திவ்வியஸ்தானத்தை யடைந்து, தனதுதாயான சுநீதியும் நக்ஷத்திரரூபமாய்த் தனது அருகிலே பிரகாசித்துக் கொண்டிருக்க, கல்பாந்த பரியந்தம் சுகமாக இருக்கின்றன னென்பதாம்.

மத்ஸ்யாவதார வரலாறு:-
முன் ஒரு கல்பத்தின் அந்தத்திற் பிரமதேவன் துயிலுகையில் அவன்முகங்களினின்று வெளிப்பட்டுப் புருஷரூபத்துடன் உலாவிக்கொண்டிருந்த நான்குவேதங்களையும் மகாபலசாலியும் நெடுங்காலந் தவஞ்செய்து பெருவரங்கள் பெற்றவனுமான சோமுகனென்னும் அசுரன் கவர்ந்துகொண்டு பிரளயவெள்ளத்தினுள் மறைந்துசெல்ல, அதனையுணர்ந்து திருமால் ஒருபெருமீனாகத் திருவவதரித்து அப்பெருங்கடலினுட்புக்கு அவ்வசுரனைத் தேடிப் பிடித்துக் கொன்று, அவன்கவர்ந்து சென்ற வேதங்களை மீட்டுக் கொணர்ந்து அவற்றைப் பிரமனுக்குக் கொடுத்தருளின னென்பதாம். இவ்வசுரன்பெயர் சோமகனென்றலும், இவ்வரலாற்றை வேறுவகையாக விரித்துக்கூறுதலு முண்டு.

கூர்மாவதார கதை:-
கடல் கடைந்தகாலத்தில் அப்பொழுது, மத்தாகிய மந்தரகிரி கடலினுள்ளே அழுந்திவிட, தேவர்கள் வேண்டுகோளினால் திருமால் பெரியதோர் ஆமைவடிவ மெடுத்து அம்மலையின் கீழேசென்று அதனைத் தனது முதுகின்மீது கொண்டு தாங்கி அம்மலை கடலில் அழுந்தி விடாமற் கடைதற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தன னென்பதாம்.

வராகாவதார கதை:-
இரணியனது உடன்பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னுங் கொடிய அசுரராஜன் தன்வலிமையாற் பூமியைப் பாயாகச்சுருட்டி யெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச் சென்றபோது, தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளினால் திருமால் மகாவராகரூபமாகத் திருவவதரித்துக் கடலினுட் புக்கு அவ்வசுரனை நாடிக் கண்டு பொருது கொன்று பாதாளலோகத்தைச் சார்ந்திருந்த பூமியைக் கோட்டினாற்குத்தி அங்குநின்று எடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளின னென்பதாம்.நரசிங்காவதார கதை:- தனித்தனி தேவர் மனிதர் விலங்கு முதலிய பிராணிகளாலும் ஆயுதங்களாலும் பகலிலும் இரவிலும் பூமியிலும் வானத்திலும் வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்கு மரணமில்லாதபடி வரம்பெற்றவனும், இரணியாக்கனது உடன்பிறந்தவனுமான இரணியன் தேவர் முதலிய எல்லோர்க்கும் கொடுமை இயற்றித் தன்னையே கடவுளாக அனைவரும் வணங்கும்படி செய்துவருகையில், அவனது மகனான பிரகலாதாழ்வான், இளமை தொடங்கி மகாவிஷ்ணுபக்தனாய்த் தந்தையின் கட்டளைப்படியே அவன்பெயர்சொல்லிக் கல்விகற்காமல் நாராயணநாமம் சொல்லிவரவே, கடுங்கோபங்கொண்ட இரணியன் பிரகலாதனைத் தன்வழிப்படுத்துதற்குப் பலவாறு முயன்றபின், அங்ஙனம்வழிப்படாத அவனைக் கொல்லுதற்கு என்ன உபாயஞ் செய்தும் அவன் பகவானருளால் இறந்திலனாக, ஒரு நாள் சாயங்காலத்தில் தந்தை மைந்தனை நோக்கி ‘நீ சொல்லும் நாராயணனென்பான் எங்குஉளன்? காட்டு’ என்ன, அப்பிள்ளை, “தூணிலும் உளன், துரும்பிலும் உளன், எங்கும் உளன்’ என்று சொல்ல, உடனே இரணியன் ‘இங்கு உளனோ?’ என்று சொல்லி எதிரிலிருந்த தூணைப் புடைக்க, அதினின்று திருமால் மனிதரூபமும் சிங்கவடிவமுங்கலந்த நரசிங்கமூர்த்தியாய்த் தோன்றி இரணியனைப் பிடித்து வாயிற்படியில் தன்மடியின்மீது வைத்துக் கொண்டு தனது திருக்கைந்நகங்களால் அவன்மார்பைப் பிளந்து அழித்திட்டு, பிரகலாதனுக்கு அருள்செய்தனன் என்பதாம்.

உலகமளந்தது, திரிவிக்கிரமாவதாரத்தில்; அவ்வரலாறு வருமாறு:-
மகாபலியென்னும் அசுரராஜன் தன்வல்லமையால் இந்திரன்முதலிய யாவரையும் வென்று மூன்றுஉலகங்களையுந் தன்வசப்படுத்தி அரசாட்சிசெய்து கொண்டு செருக்குற்றிருந்தபொழுது, அரசிழந்ததேவர்கள் திருமாலைச்சரணமடைந்து வேண்ட, அப்பெருமான் குள்ளவடிவான வாமநாவதாரங் கொண்டு காசியபமகாமுனிவனுக்கு அதிதிதேவியினிடந் தோன்றிய பிராமணப்பிரமசாரியாகி, வேள்வியியற்றி யாவர்க்கும் வேண்டியஅனைத்தையுங் கொடுத்து வந்த அந்தப்பலியினிடஞ் சென்று, தவஞ்செய்தற்குத் தன்காலடியால் மூவடிமண் வேண்டி, அதுகொடுத்தற்கு இசைந்து அவன் தாரைவார்த்துத் தத்தஞ்செய்த நீரைக் கையிலேற்று உடனே திரிவிக்கிரமனாக ஆகாயத்தை யளாவி வளர்ந்து ஓரடியாற் பூலோகத்தையும், மற்றோரடியால் மேலுலகத்தையும் அளந்து, தானமாகப்பெற்ற மற்றோரடி நிலத்திற்கு இடமின்றாகவே அதற்காக அவன்வேண்டுகோளின்படி அவனது முடியில் அடியைவைத்து அவனைப் பாதாளத்திலழுத்தி அடக்கின னென்பதாம். பூலோகத்தையளந்ததில், அதன்கீழுள்ள பாதாளலோகமும் அடங்கிற்று; எனவே, எல்லாவுலகங்களையும் அளந்ததாம். இவ்வரலாற்றினால், கொடியவரையடக்குதற்கும் இயல்பில் அடிமையாகின்ற அனைத்துயிரையும் அடிமைகொள்வதற்கும் வேண்டிய தந்திரம் வல்லவனென்பது தோன்றும்.

வெள்ளிநாட்டங் கெடுத்த கதை:-
திருமால் வாமனவடிவங்கொண்டு மாவலியினிடஞ் சென்று மூவடிமண் வேண்டியபோது அவ்வசுரன் அங்ஙனமே கொடுக்கிறே னென்று வாக்குதத்தஞ்செய்கையில் அருகுநின்ற அசுரகுருவாகிய சுக்கிராசாரியன் “உன்னை வஞ்சனையால் அழிக்கும்பொருட்டுத்திருமால்தானே இங்ஙனம் வந்துள்ளானாதலின், அவனுக்குக் கொடாதே’ என்று சொல்லி ஈவது விலக்க, அதுகேளாமல் மகாபலி ‘என்னிடம் ஒன்றை இரப்பவன் புருஷோத்தமனாயின் அவனுக்கு நான் அதனைக்கொடுத்துப் புகழ்பெறாதுவிடுவேனோ?’ என்றுகூறித் தாரைவார்த்துத் தத்தஞ்செய்யும் பொழுது அவ்வசுரராசனிடத்து மிக்க அன்பையுடைய சுக்கிரன் சிறுவடிவங்கொண்டு அம்மாவலியின் கைக்குண்டிகையின் துவாரத்திலே சென்று அடைத்து நீர்விழவொட்டாது செய்ய, அப்பொழுது வாமனன் அங்ஙனம் அடைத்துக்கொண்ட பொருளை அகற்றுவான்போலத் தனது திருக்கையிற் பவித்திரமாகத் தரித்திருந்த தருப்பைப்புல்லின் நுனியினால் அந்தச்சலபாத்திரத்தின் துவாரத்தைக் குடையவே, அதுபட்டுச் சுக்கிரனது கண்ணொன்று சிதைந்த தென்பதாம்.

இராவணனைக் கார்த்தவீரியன் வென்ற கதை:-
இராவணன் திக்குவிசயஞ் செய்துவருகிறபொழுது கார்த்தவீரியார்ச்சுனனது மாகிஷ்மதிநகரத்திற்குச் சென்று போர்செய்ய முயலுகையில், அங்குள்ளார் ‘எங்களரசன் தனக்கு உரிய மாதர்களுடனே போய் நருமதையாற்றில் ஜலக்கிரீடைசெய்கின்றான்’ என்று சொன்னதனால், உடனே இராவணன் அங்கிருந்து நருமதையாற்றைச் சேர்ந்து அதில்நீராடிக் கரையில்மணலாற் சிவலிங்கத்தை யமைத்துப் பிரதிஷ்டைசெய்து பூசிக்கும்போது, அந்த யாற்றில் மேற்கே இறங்கியுள்ள கார்த்தலீரியார்ச்சுனன் தனது நீர்விளையாட்டுக்கு அந்நீர்ப்பெருக்குப் போதாதென்றகருத்தால் அந்நீரைத் தனதுஆயிரங்கைகளுள் ஐந்நூற்றினால் தடுத்து நீரைமிகுவித்து மற்றை ஐந்நூறுகைகளைக்கொண்டு பலவகை விளையாட்டுக்கள் நிகழ்த்துகின்றதனால் எதிர்வெள்ளமாகப் பொங்கி வருகின்ற நீர்ப்பெருக்குத் தனது சிவலிங்கத்தை நிலைகுலையச்செய்ததுபற்றிக் கடுங்கோபங்கொண்டு இராக்கதசேனையுடனே சென்று அருச்சுனனை யெதிர்த்துப்போர்செய்ய, அவன் தனது ஆயிரங்கைகளுள் இருபதினால் இராவணனது இருபதுகைகளைப் பிடித்துக்கொண்டு மற்றையகைகளால் அவனைப் பலவாறு வருத்தித் தனது ஆற்றலால் எளிதிற்கட்டித் தனதுபட்டணத்திற்கொண்டுபோய்ச் சிறையில்வைத்திட, அதனை விபீஷணனால் அறிந்து அவன்பாட்டனாராகிய புலஸ்தியமகாமுனிவர் அருச்சுனனிடம்வந்து வேண்டி அவனுக்கு ‘ராவணஜித்’ என்ற ஒரு பெரும்பெயரைக் கொடுத்து, இராவணனைச் சிறைவிடுவித்துச் சென்றன ரென்பதாம்.

தார்த்தவீரியனைப் பரசுராமன் கொன்ற கதை:-
அவ்வருச்சுனன் ஒரு காலத்திற் சேனையுடனே வனத்திற்சென்று வேட்டையாடிப் பரசுராமரது தந்தையான ஜமதக்நிமுனிவரது ஆச்சிரமத்தை யடைந்து அவரநுமதியால் அங்கு விருந்துண்டு மகிழ்ந்து மீளுகையில், அவரிடமிருந்த காமதேனு அவர்க்குப் பலவளங்களையும் எளிதிற் சுரந்தளித்தமை கண்டு அதனிடம் ஆசை கொண்டு அப்பசுவை அவரநுமதியில்லாமல் வலியக்கவர்ந்துபோக, அதனை யறிந்த அப்பார்க்கவராமர் பெருங்கோபங்கொண்டு சென்று கார்த்தவீரியனுடன் போர்செய்து அவனைப் பதினொருஅகௌகிணிசேனையுடனே நிலைகுலைத்து அவனது ஆயிரந்தோள்களையும் தலையையும் தமது கோடாலிப் படையால் வெட்டி வீழ்த்தி வெற்றிகொண்டன ரென்பதாம்.

அகலிகையின் சாபவிமோசன வரலாறு:-
கௌதமமுனிவனது பத்தினியான அகலிகையினிடத்திற் பலநாளாய்க் காதல்கொண்டிருந்த, தேவேந்திரன் ஒருநாள் நடுராத்திரியில் அம்முனிவனாச்சிரமத்துக்கு அருகேவந்து பொழுதுவிடியுங்காலத்துக் கோழிகூவுவதுபோலக்கூவ, அதுகேட்ட கௌதமமுனிவன் சந்தியாகாலஞ் சமீபித்துவிட்டதென்று கருதியெழுந்து காலைக்கடன் கழித்தற்பொருட்டு நீர்நிலைநோக்கிப் புறப்பட்டுச் செல்ல, அப்பொழுது இந்திரன் இதுவே சமயமென்று அம்முனிவருருக்கொண்டு ஆச்சிரமத்துட்சென்று அவளிடஞ் சேர்கையில் “தன்கணவனல்லன், இந்திரன்’ என்று உணர்ந்தும் அகலிகைவிலக்காமல் உடன்பட்டிருக்க, அதனை ஞானக்கண்ணினால் அறிந்து உடனே மீண்டுவந்த அம்முனிவன் அவளைக் கருங்கல் வடிவமாம்படி சபித்து, உடனே அவள் அஞ்சி நடுங்கிப் பலவாறு வேண்டியதற்கு இரங்கி, “ஸ்ரீராமனது திருவடிப்பொடி படுங்காலத்து இக்கல்வடிவம் நீங்கி நிஜவடிவம் பெறுக’ என்று அநுக்கிரகிக்க, அவ்வாறே கல்லுருவமாய்க் கிடந்த அகலிகை ஸ்ரீராமலக்ஷ்மணர் விசுவாமித்திரனோடு மிதிலைக்குச் செல்லும்போது இராமமூர்த்தியின் திருவடித்துகள் பட்டமாத்திரத்திலே கல்வடிவம் நீங்கி இயற்கைநல்வடிவம் அடைந்தன ளென்பதாம்.

தசரதராமன் பரசுராமனை வென்ற வரலாறு:-
விதேகதேசத்து மிதிலாபுரியில் வாழ்கின்ற ஜநகமகாராஜன், தனதுகுலத்துப் பூர்விகராசனான தேவராதனிடம் சிவபிரானால் வைக்கப்பட்டிருந்ததொரு பெரிய வலிய வில்லை எடுத்து வளைத்தவனுக்கே தான் வளர்த்தமகளான சீதையைக் கல்யாணஞ் செய்து கொடுப்பதென்று கந்யாசுல்கம் வைத்திருக்க, வேள்விமுடித்த விசுவாமித்திர முனிவனுடன் மிதிலைக்குச் சென்ற ஸ்ரீராமபிரான் அவ்வில்லை யெடுத்து வளைத்து நாணேற்றுகையில், அது பேரொலிபடுமாறு முறிந்திட, அதனாற்சனகன் இராமனாற்றலைக்கண்டு மிக்ககளிப்புக்கொண்டு சீதையை இராமனுக்கு மணஞ்செய்து வைத்தனன். சீதாகல்யாணத்தின்பின்பு தசரதசக்கரவர்த்தி தனதுகுமாரர்களுடன் மிதிலையினின்று அயோத்திக்கு மீண்டுவருகையில், பரசுராமன் வலியச்சென்று இராமபிரானை யெதிர்த்து ‘முன்பு ஹரிஹரயுத்தத்தில் இற்றுப்போன சிவதநுசை முறித்த திறத்தையறிந்தேன்; அதுபற்றிச் செருக்கடையவேண்டா; வலிய இந்த விஷ்ணுதநுசை வளை, பார்ப்போம்’ என்று அலக்ஷ்யமாகச் சொல்லித் தான் கையிற் கொணர்ந்த வில்லைத் தசரதராமன்கையிற் கொடுக்க, அப்பெருமான் உடனே அதனைவாங்கி எளிதில்வளைத்து நாணேற்றி அம்புதொடுத்து ‘இந்தப் பாணத்திற்கு இலக்கு யாது?’ என்றுவினாவ, பரசுராமன் அதற்கு இலக்காகத் தனது தபோபலம் முழுவதையும் கொடுக்க, அவன் க்ஷத்திரிய வம்சத்தைக் கருவறுத்தவனாயிருந்தாலும் வேதவித்தும் தவவிரதம் பூண்டவனுமாயிருத்தல் பற்றி அவனைக்கொல்லாமல் அவனது தவத்தைக் கவர்ந்த மாத்திரத்தோடு ஸ்ரீராமன் விட்டருளின னென்பதாம்.
இராமபிரான் வனஞ்சென்ற வரலாறு: – சீதாகல்யாணத்தின்பிறகு தச ரதசக்கரவர்த்தி இராமபிரானுக்குப் பட்டாபிஷேகஞ்செய்ய யத்தனிக்கையில் மந்தரைசூழ்ச்சியால் மனங்கலக்கப்பட்ட கைகேயி, தன்கொழுநரான தசரதரை நோக்கி, முன்பு அவர் தனக்குக்கொடுத்திருந்த இரண்டுவரங்களுக்குப் பயனாகத் தன்மகனான பரதனுக்குப் பட்டங்கட்டவும் கௌசல்யை மகனான இராமனைப் பதினான்குவருஷம் வனவாசஞ்செலுத்தவும் வேண்டுமென்று சொல்லி நிர்ப்பந்திக்க, அதுகேட்டு வருந்திய தசரதர் சத்தியவாதி யாதலால், முன்பு அவட்கு வரங்கொடுத்திருந்த சொல்லைத் தவறமாட்டாமலும் இராமன்பக்கல் தமக்குஉள்ள மிக்கஅன்பினால் அவ்வரத்தை நிறைவேற்றுமாறு அவனை வனத்திற்குச் செல்லச்சொல்லவும் மாட்டாமலும் கலங்கி வாய்திறவாதிருக்கிற சமயத்தில், கைகேயி இராமனை வரவழைத்து “பிள்ளாய்! உங்கள்தந்தை பரதனுக்கு நாடுகொடுத்துப் பதினான்குவருஷம் உன்னைக் காடேறப்போகச் சொல்லுகிறார்’ என்றுசொல்ல, அச்சொல்லைத் தலைமேற்கொண்டு, அந்த மாற்றாந்தாயின் வார்த்தையையும், அவட்குத் தனதுதந்தை கொடுத்திருந்த வரங்களையும் தவறாது நிறைவேற்றி மாத்ரு பித்ருவாக்ய பரிபாலனஞ்செய்தலினிமித்தம் இராமபிரான் தன்னைவிட்டுப் பிரியமாட்டாதுதொடர்ந்த சீதையோடும் இலக்குமணனோடும் அயோத்தி யைவிட்டுப் புறப்பட்டு வனவாசஞ்சென்றன னென்பதாம்.

காகன் நயனங்கொண்ட கதை: –
வனவாசகாலத்தில் சித்திரகூடமலைச் சாரலிலே இராமபிரானும் ஜாநகிப்பிராட்டியும் ஏகாந்தமாக இருக்கிற சமயத்தில், இந்திரன்மகனான ஜயந்தன் பிராட்டியினழகைக்கண்டு மோகித்து அவளைத் தான் ஸ்பர்சிக்க வேண்டுமென்னுந் தீயகருத்தினனாய்த் தேவவேஷத்தை மறைத்துக் காகவேஷத்தைப் பூண்டுகொண்டுவந்து, பிராட்டியின் மடியிலே பெருமாள் பள்ளிகொண்டருளுகையில் தாயென்றறியாதே பிராட்டியின் திருமார்பினிற்குத்த, அவ்வளவிலே பெருமாள் உணர்ந்தருளி அதிகோபங்கொண்டு ஒருதர்ப்பைப்புல்லை யெடுத்து அதிற் பிரமாஸ்திரத்தைப் பிரயோகித்து அதனை அந்தக்காகத்தின்மேல் மந்தகதியாகச்செலுத்த, அக்காகம் அந்த அஸ்திரத்துக்குத் தப்பி வழிதேடிப் பலவிடங்களிலும் ஓடிச்சென்று சேர்ந்தவிடத்தும் ஒருவரும் ஏற்றுக்கொள்ளாமையாலே மீண்டும் இராமனையே சரணமடைய, அப்பெருமான் அருள்கொண்டு, அக்காகத்துக்கு உயிரைக்கொடுத்து அந்த அஸ்திரம் வீண்படாமல் காகத்தின் ஒரு கண்ணை அறுத்தவளவோடு விடும்படி செய்தருளின னென்பதாம்.

இராவணன் மாரீசனைக்கொண்டு மாயஞ்செய்து சீதையைக்கவர்ந்த வரலாறு:-
தாடகையின் மகனும், சுபாகுவின் உடன்பிறந்தவனும், இராவணனுக்கு மாமன்முறை பூண்டவனும், இராமபிரானிடத்துப் பழம்பகைமை யுடையவனும், மாயையில் மிகவல்லவனுமான மாரீசனென்ற ராக்ஷசன், சீதையைக் கவர்ந்து செல்லக்கருதி இராவணனது தூண்டுதலின்படி மாயையினாற் பொன்மானுருவங்கொண்டு தண்டகாரணியத்திற் பஞ்சவடியிலே சீதையினெதிரிற் சென்று உலாவுகையில், அவள் அதனைநோக்கி அதன்பக்கல் அன்புகொண்டு அதனைப்பிடித்துத்தரும்படி இராமபிரானைப் பிரார்த்திக்க, இலக்குமணன் “இது பொய்ம்மான்’ என்றுஉண்மை கூறித்தடுக்கவும் கேளாமற் பிராட்டி மீண்டும்நிர்ப்பந்திக்கவே, இராமன் அதனைப்பிடித்தற்குத் தொடர்ந்துசென்றபோது, அந்த மான் கையிலகப்படாமற் பலவாறு ஓட்டங்காட்டி நெடுந்தூரஞ்செல்ல, அதுகண்டு இராமன் மாயமானென்று துணிந்து அதன்மேல் அம்பெய்ய, மாரீசன் அம்புபட்டுவீழ்கையில், தன் மெய்வடிவங்கொண்டு “ஹாஸீதே! லக்ஷ்மணா!’ என்று இராமன்குரலாற் சத்தமிட்டு விழுந்திறக்க, அக்குரல்கேட்டவுடனே அதனை அரக்கன்வஞ் சனையென்று உணர்ந்த இலக்குமணன் வாளாஇருக்க, அவ்வுண்மையுணராமற் சீதை இராமனுக்கு அபாயம்நேர்ந்ததென்றே கருதிக் கலங்கி அதனையுணர்ந்து பரிகரித்தற்பொருட்டு இலக்குமணனை வற்புறுத்தியனுப்பி விட, சீதைதனித்துநின்ற சமயம் பார்த்து இராவணன் சந்யாசிவடிவங் கொண்டுவந்து பிராட்டியை வலியக்கவர்ந்து தேரின்மேல்வைத்துச்சென்று இலங்கைசேர்ந்தன னென்பதாம்.

மராமரம் எய்த கதை:-
இராவணனால் அபகரிக்கப்பட்ட சீதையைத் தேடிக்கொண்டு சென்ற இராமலக்ஷ்மணரை அநுமான்மூலமாகச் சிநேகித்த பிறகு, சுக்கிரீவன், தனதுபகைவனும் மகாபலசாலியுமான வாலியைக் கொல்லும் வல்லமை இராமபிரானுக்கு உண்டோ இல்லையோ வென்று ஐயமுற்று, தன்சந்தேகம்தீரும்படி “எதிரிலுள்ள ஏழுமராமரங்களையும் ஏக காலத்தில் தொளைபடும்படி எய்யவேண்டும்’ என்று சொல்ல, உடனே இராமபிரான் ஓரம்புதொடுத்து அந்த ஸப்த ஸாலவிருக்ஷங்களை ஒருங்கு தொளைபடுத்தின னென்பதாம்.

கவிக்கு முடிகவித்த கதை: –
இராமன் இலக்குமணனுடனே சீதையைத் தேடிச்செல்லுகையில் வழியிலெதிர்ப்பட்ட அநுமான் மூலமாகச் சூரிய குமாரனான சுக்கிரீவனோடு நண்புகொண்டு அவன்வேண்டுகோளின் படி அவனது தமையனும் வாநரராசனுமான வாலியைத் தந்திரமாகக் கொன்று சுக்கிரீவனுக்குக் கிஷ்கிந்தைநகரத்தில் முடிசூட்டிவைத்தனன் என்பதாம்.

சூர்ப்பணகையின் மூக்கை யறுத்த வரலாறு:-
வனவாசம் புறப்பட்ட இராமலக்ஷ்மணர் சீதையுடனே கோதாவரி நதிதீரத்திற் பஞ்சவடியாச்சிர மத்தில் வசித்தபொழுது, அவர்களைக்கண்டு மோகங்கொண்ட இராவணன் தங்கையான சூர்ப்பணகை அந்த இராகவ வீரர்களிடம் தனித்தனி வந்து தன்னை மணம் புணரும்படி பலவாறு வேண்டவும், அவர்கள் உடன்படாததனால், அவள் ‘சீதையை அகற்றிவிட்டால் இராமன் என்னை மணம்புரிதல் கூடும்’ என்று எண்ணி, தனிப்பட்ட சமயம் பார்த்துப் பிராட்டியை யெடுத்துச்செல்ல முயன்றபோது, இலக்குமணன் கண்டு ஓடிவந்து சூர்ப்ப ணகையை மறித்து அவளது மூக்கு காது முதலிய சிலவுறுப்புக்களை அறுத்து விட்டனன் என்பதாம்.
கரனைக்கொன்ற வரலாறு:- இலக்குமணனால் மூக்குமுதலியன அறுக் கப்பட்டவுடனே இராமலக்குமணரிடங் கறுக்கொண்டு சென்ற சூர்ப்பணகை கரன்காலில்விழுந்து முறையிட, அதுகேட்டு அவன் பெருங்கோபங் கொண்டு மிகப்பெரியசேனையோடும் அறுபதுலக்ஷம் படைவீரரோடும் சேனைத்தலைவர்பதினால்வரோடும் தூஷணன் திரிசிரா என்னும் முக்கிய சேனாதிபதிகளோடும் புறப்பட்டுவந்து போர்தொடங்குகையில், இராமன் லக்ஷ்மணனைச் சீதைக்குப் பாதுகாவலாகப் பர்ணசாலையில் நிறுத்தித் தான் தனியே சென்று எதிர்த்துப் பெரும்போர்செய்து அவ்வரக்க ரனைவரையுந் துணித்து வெற்றிபெற்றன னென்பதாம்.

இராமபிரான் சடாயுவுக்கு முத்தியளித்த வரலாறு:-
இராவணன் மாய மான்வடிவுபூண்ட மாரீசனைக்கொண்டு இராமலக்குமணரைப் பிரித்துச் சீதைதனித்துநின்ற சமயம் பார்த்து அவளை வலியஎடுத்துத் தேரின்மேல் வைத்துச் செல்லுமளவிலே, அவள்கூக்குரலிட்டதைக் கேட்டுக் கழுகரசனும் தசரதசக்கரவர்த்திக்கு உயிர்த்தோழனாய்ப் பிராயத்தில் அவரினும் தான் மூத்தவனாதலால் தமையன்முறை பூண்டவனும் அதனால் மக்களிடத்தும் மருகி யிடத்துங் கொள்ளும் அன்பை இராமலக்ஷ்மணரிடத்தும் சீதையினிடத்தும் கொண்டு பஞ்சவடியில் அவர்கட்குக் காவலாக இருந்தவனுமான ஜடாயு ஓடிவந்து எதிர்த்துப் பெரும்போர்செய்து அவனது கொடிமுதலியவற்றைச் சிதைத்து, முடிவில், அவனெறிந்த தெய்வவாளினாற் சிறகுஅறுபட்டு வீழ, இராவணன் சீதையைக் கொண்டுபோய் இலங்கையிற் சிறைவைத்திட்டான்; பின்புவந்த இராமலக்ஷ்மணர் பர்ணசாலையிற் சீதையைக்காணாமற் கலங்கி அவளைத்தேடிச்செல்லும்வழியிற் சடாயு வீழ்ந்துகிடக்கக்கண்டு சோகிக்கையில், குற்றுயிருடனிருந்த அக்கழுகரசன் நடந்தசெய்தியைச் சிறிதுகூறி உயிர்நீப்ப, இராமபிரான் தமக்குப்பெரியதந்தைமுறையான அச்சடாயுவுக்குப் பரமபதமளித்துச் சரமகைங்கரியஞ்செய்துமுடித்தன ரென்பதாம்.

கபந்தனைக் கொன்ற வரலாறு:-
இவன், தண்டகாரணியத்தில் ஒருபக் கத்திலே இருந்து தனது நீண்டகைகளிரண்டையும் எட்டியமட்டிற் பரப்பித் துழாவி அவற்றினுள் அகப்பட்ட ஜீவராசிகளையெல்லாம் வாரி வாய்ப்பெய்து விழுங்கிக்கொண்டிருக்க, அங்குச்சென்று இவன்தோள்களினிடையே அகப்பட்ட இராமலக்ஷ்மணர் அத்தோள்களை வாள்களால் வெட்டித்தள்ளியவளவில், இவன், முன்னையசாபமும் முற்பிறப்பின் தீவினையும் தீர்ந்து இராக்கத சரீரத்தையொழித்துத் திவ்வியசொரூபம்பெற்றுப் பெருமானைப் பலவாறு துதித்து நற்கதிக்குச் சென்றன னென்பதாம்.

கடல்சுட்ட கதை:-
இராவணனாற் கவரப்பட்ட சீதாபிராட்டி இலங்கையிலிருக்கின்ற செய்தியை அநுமான் சென்று அறிந்துவந்து சொன்ன பின்பு இராமபிரான் வாநரசேனையுடனே புறப்பட்டுச் சென்று கடற்கரையை யடைந்து, கடலைக்கடக்க உபாயஞ்சொல்லவேண்டுமென்று அக்கட லரசனாகிய வருணனைப் பிரார்த்தித்து அங்குத் தருப்பசயனத்திலே படுத்து ஏழுநாளளவும் பிராயோபவேசமாகக்கிடக்க, சமுத்திரராசன் அப்பெருமானது மகிமையை அறியாமல் உபேக்ஷையாயிருக்க, ஸ்ரீராமன் அதுகண்டு
கோபங்கொண்டு, அனைவரும் நடந்துசெல்லும்படி கடலை வற்றச்செய்வே னென்று ஆக்கிநேயாஸ்திரத்தைத் தொடுக்கத் தொடங்கியவளவிலே, அதன் உக்கிரத்தால் வருணன் அஞ்சி நடுங்கி ஓடிவந்து அப்பெருமானைச் சரணமடைந்து கடல்வடிவமான தன்மேல் அணைகட்டுதற்கு உடன்பட்டு ஒடுங்கி நிற்க, பின்பு இராமமூர்த்தி வாநரங்களைக்கொண்டு மலைகளால் சேதுபந்த நஞ் செய்தனன் என்பதாம்.

அநுமான் ஓஷதிமலைகொணர்ந்த வரலாறு:-
இராமலக்ஷ்மணர் வாநர சேனைகளுடனே கடல்கடந்து இலங்கைசேர்ந்து நடத்திய பெரும்போரில் ஒருநாள் இராவணன்மகனான இந்திரசித்து பிரமாஸ்திரத்தைப் பிரயோகித்து அதனால் லக்ஷ்மணனையும், வாநரராஜனான சுக்கிரீவனையும் வாநரசேனைகளையும் கட்டுப்படுத்தி அவசமாய் மூர்ச்சித்து மரணமடைந்தவர்போற் கிடக்கும்படி செய்தபொழுது, இராமபிரானும் அவர்கள் நிலைமையைக் கண்டு துக்கித்து விழுந்திட, ஜாம்பவான்சொன்னபடி அநுமான் அதிவேகமாகப் புறப்பட்டு, இமவத்பர்வதத்திற்கு வடக்கேயுள்ள ஓஷதிபர்வதத்தைச் சார்ந்து அம்மலையிலுள்ள ம்ருதஸஞ்சீவநீ, விஸல்யகரணீ, ஸாவர்ண்யகரணீ, ஸந்தாநகரணீ என்ற மூலிகைகளைத் தேடுகையில், அந்தத்திவ்வியஓஷதிகள் மறைந்தனவாக, அநுமான் அந்தமலையையே வேரோடுபெயர்த்து எடுத்துக்கொண்டு வந்துசேர, அதன்காற்றுப்பட்டமாத்திரத்தால் அனைவரும் மயக்கம்ஒழிந்து மூர்ச்சைதெளிந்து ஊறுபாடுதீர்ந்து உயிர்த்துஎழுந்தனர் என்ற வரலாறு, இங்கு அறியத்தக்கது. அப்போரில் மற்றொருசமயத்தில் இராவணன் விபீஷணன்மேல் எறிந்த தெய்வத்தன்மையுள்ள வேலாயுதத்தை அவன்மேற்பட வொட்டாமல் இலக்குமணன் தன்மார்பில் ஏற்றுக்கொண்டு அதனால் மூர்ச்சையடைகையில் மீளவும் அநுமான் அம்மலையைக்கொண்டுவந்து இலக்குமணனை உயிர்ப்பித்தன னென்பதும் உணர்க.

இராமபிரான் சராசரங்களை வைகுந்தத்தில் ஏற்றிய வரலாறு:-
இராம பிரான் இவ்வுலகத்தை விட்டுச்செல்லத்தொடங்கிய சமயத்தில், அயோத்தியா நகரத்து உயிர்களெல்லாம் அப்பெருமானைச் சரணமடைந்து “தேவரீர் எங்குச்சென்றாலும் அடியேங்களையும் உடனழைத்துக்கொண்டு செல்ல வேண்டும்’ என்று பிரார்த்திக்க, ஸ்ரீராமன் அவர்களுடைய அன்பின் உறுதியைக் கண்டு ‘அப்படியே ஆகட்டும்’ என்று அருளிச்செய்து, அனைவரையும் தம்மைப் பின்தொடர்ந்து வருமாறு பணித்தருளிப் பிரயாணப்பட்டனர்; அப்பொழுது, அந்நகரத்திருந்த மனிதர்களே யன்றி விலங்கு பறவை முதலிய அஃறிணையுயிர்களும் அகமகிழ்ந்து சுவாமியின்பின் சென்றன: இங்ஙனம் பலரும் புடைசூழ ஸ்ரீபகவான் சரயூநதியில் இறங்கித் தன்னடிச்சோதிக்கு எழுந்தருளும்போது, தம்மிடத்து இடையறாத அன்புகொண்டு பின்பற்றிச் சரயுவில்மூழ்கி உடம்பைத்துறந்த எல்லாவுயிர்கட்கும், பிரமலோகத்திற்கு மேற்பட்டதாய்ப் பரமபதம்போலவே புக்கவர் மீண்டுவருதலில்லாத மேம்பாடுள்ள ஸாந்தாநிகமென்னும் உலகத்தை அளித்தருளினர் என்பது, இங்கு அறியத்தக்கது.
பலராமன் யமுனா நதியை அடக்கிய வரலாறு:- ஒரு காலத்தில் பலராமர், பக்கத்தில் ஓடுகின்ற யமுநாநதியை நோக்கி, “ஓ யமுனாய்! நீ இங்கே வா, நான் நீராடவேண்டும்’ என்று அருளிச்செய்ய, அவ்யமுனை அவர் மதுபானமதத்தினால் இப்படிச்சொல்லுகின்றாரென்று அவர்வார்த்தையை அவமதித்து அங்கே வரவில்லையாக, அதுகண்டு அவர் வெகுண்டு தமது ஆயுதமான கலப்பையைக் கையிலெடுத்து அதன் நுனியாலே அந்நதியை இழுக்க, அந்நதி தான்போகும்வழியைவிட்டு அவரெழுந்தருளியிருக்கும் வனத்தில் வந்து பெருகிய தன்றியும், தன்னுடைய சரீரத்தோடு அவர்க்கெதிரில்வந்து பயத்தினாலே மிகவும் நடுநடுங்கி விசேஷமாக வேண்டிக்கொள்ள, பின்பு அந்நதியை க்ஷமித்து அதில்நீராடின ரென்பதாம்.

பலராமன் அஸ்தினாபுரத்தைச் சாய்த்த வரலாறு:-
அஸ்தினாபட்டணத் திலே துரியோதனன் தன்மகளான இலக்கணைக்குச் சுயம்வரங்கோடிக்க, அக்கன்னிகையை ஸ்ரீகிருஷ்ணனது மஹிஷிகளுளொருத்தியாகிய ஜாம்பவதியின் குமாரனான ஸாம்பனென்பவன் பலாத்காரத்தால் தூக்கிக்கொண்டுபோக, துரியோதனாதியர் எதிர்த்து யுத்தஞ்செய்து அவனைப் பிடித்துக் காவலிலிட்டுவைக்க, அச்செய்திகேட்ட பலராமர், தான் அவனை விடுவித்து வருவதாய்ச் சொல்லிப் புறப்பட்டு அஸ்தினாபுரத்திற்கு எழுந்தருளி ‘நம்முடைய ஸாம்பனை விடவேண்டும்’ என்று அருளிச்செய்ய, அக்கௌரவர் யாவரும் “துஷ்டகாரியஞ்செய்த அவனை நாங்கள் விடமாட்டோம்’ என்று ஒரேகட்டுப்பாடுடையவர்களாய் இகழ்ந்துபேச, பலராமர் கரையில்லாத கோபங்கொண்டு எழுந்திருந்து, “குருகுலத்தார் வாசஞ் செய்துகொண்டிருக்கின்ற இந்நகரத்தைக் கங்கையிற் கவிழ்த்துவிட்டு, பூமியிற் கௌரவப் பூண்டில்லாமற் செய்துவிடுவோம்’ என்று சொல்லி, தமது கலப்பையை மதிலின்மேலுள்ள நாஞ்சிலென்னும் உறுப்பில் மாட்டியிழுக்க, அதனால் அப்பட்டணமுழுவதும் அசைந்துசாயவே, அதுகண்ட கௌரவரெல்லாரும் மனங்கலங்கிச்சாம்பனை இலக்கணையோடும்பல சிறப்புக்களோடும் கொண்டு வந்து சமர்ப்பித்து வணங்கி வேண்ட, இராமபிரான் அவ்வளவோடு கலப்பையை வாங்கியருளின ரென்பதாம்.

கண்ணன் பேய்ச்சியூட்டிய நஞ்சை அமுதுசெய்த விவரம்:-
கிருஷ்ணனைப் பெற்ற தாயான தேவகியினது உடன்பிறந்தவ னாதலால் அக்கண்ண பிரானுக்கு மாமனாகிய கம்சன், தன்னைக்கொல்லப்பிறந்த தேவகீபுத்திரன் ஒளித்து வளர்தலை அறிந்து, அக்குழந்தையை நாடியுணர்ந்துகொல்லும்பொருட்டுப் பலஅசுரர்களை யேவ, அவர்களில் ஒருத்தியான பூதனையென்னும் ராக்ஷசி நல்லபெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து, அங்குத் தூங்கிக்கொண்டிருந்த கண்ணனாகியகுழந்தையை எடுத்துத் தனது நஞ்சுதீற்றியமுலையைக் கொடுத்துக் கொல்லமுயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின்தனங்களைக் கைகளால் இறுகப்பிடித்துப் பாலுண்ணுகிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவளைப் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்புநரம்புகளின்கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தனன் என்பதாம்.

சகடுதைத்த கதை:-
நந்தகோபகிருகத்தில் ஒருவண்டியின் கீழ்ப்புறத்திலே தொட்டிலிற் பள்ளிகொண்டிருந்த ஸ்ரீகிருஷ்ணன், ஒருகால் அச்சகடத்திற் கம்சனால் ஏவப்பட்ட அசுரனொருவன் வந்து ஆவேசித்துத் தன்மேலே விழுந்து தன்னைக்கொல்லமுயன்றதை யறிந்து பாலுக்குஅழுகிற பாவனையிலே தன் சிறிய திருவடிகளை மேலேதூக்கி உதைத்தருள, அவ்வுதைபட்ட மாத்திரத்தில் அச்சகடு திருப்பப்பட்டுக் கீழேவிழுந்து அசுரனுள்பட அழிந்த தென்பதாம்.

ததிபாண்டன் முக்தியடைந்த வரலாறு:-
ததிபாண்டன் – தயிர்க்கல முடையவன். ஒரு நாள் கண்ணன் யசோதை முலைகொடாததற்காக வெகுண்டு தயிர்த்தாழிகளை உடைத்து உருட்டிவிட்டு, அதுகண்டு தன்னை அடிக்கக் கோலெடுத்துவந்த அவளுக்கு அகப்படாதபடி ததிபாண்டனென்பவனது மனையிலே ஓடிமறைய, அதுகண்ட அவன் கண்ணனது திருவடித் தாமரைகளைப் பிடித்துக்கொண்டு “எனக்குமுத்தியளிக்கவேண்டும்’ என்ன கண்ணன் ‘எனதுதாய் என்னை அடிக்கவருகிறாள்; என்காலை விடு’ என்றுசொல்ல, அவன் ‘நீ எனக்கும் எனக்குவேண்டிய இருபத்தெட்டுமனையிலுள்ளோர்க்கும் எனது தயிர்த்தாழிக்கும் பரமபதங்கொடாயானால், யான் உன்காலை விடாமல் உன்னை யசோதை கையிற் காட்டிக்கொடுப்பேன்’ என்று கூற, ஸ்ரீகிருஷ்ணன் உடனே அவன் வேண்டுகோளின்படியே முத்தி யருளிச்சென்றன னென்பதாம்.

நாகத்துப்பாய்ந்த கதை:-
யமுநாநதியில் ஓர்மடுவில் இருந்துகொண்டு அம்மடுமுழுவதையும் தன்விஷாக்கினியினாற் கொதிப்படைந்த நீருள்ளதாய்ப் பானத்துக்கு யோக்கியமாகாதபடி செய்த காளியனென்னுங் கொடிய ஐந்தலைநாகத்தைக் கிருஷ்ணன் தண்டிக்கவேண்டுமென்று திருவுள்ளங்கொண்டு, அம்மடுவிற்குச்சமீபத்தி லுள்ளதொரு கடம்பமரத்தின்மே லேறி அம்மடுவிற் குதித்து, கொடியஅந்நாகத்தின் படங்களின்மேல் ஏறித் துவைத்து நர்த்தனஞ்செய்து நசுக்கி வலியடக்குகையில், மாங்கலியபிக்ஷையிட்டருள வேண்டுமன்று தன்னைவணங்கிப்பிரார்த்தித்த நாககன்னிகைகளின் விண்ணப்பத்தின்படி அந்தக்காளியனை உயிரோடு கடலிற் சென்று வாழும்படி விட்டருளினன் என்பதாம்.

தேநுகனை வதைத்த கதை:-
கண்ணன் பலராமனோடும் ஆயர்சிறுவர் களோடும் மாடுமேய்த்துக்கொண்டு, பழங்கள் அழகாக மிகுதியாய்ப்பழுத்து வாசனைவீசிக்கொண்டிருந்த ஒரு பனங்காட்டை யடைந்து அப்பனம் பழங்களை விரும்பி யுதிர்த்துக் கொண்டுவருகையில், அவ்வனத்துக்குத்தலைவனும் கம்சனது பரிவாரத்தி லொருவனுமாகிய கழுதைவடிவங்கொண்ட தேநுகாசுரன் கோபமூண்டு ஓடிவந்து எதிர்த்துப் போர்செய்ய, உடனே கண்ணன் அதிலாவகமாய்ப் பின்னங்காலிரண்டையும் பற்றி அவ்வசுரக்கழுதையைச் சுழற்றி உயிரிழக்கும்படி பனைமரத்தின்மேலெறிந்து அழித்தன னென்பதாம்.

கூனிமருங்கு உண்டையோட்டின வரலாறு:-
ஸ்ரீகிருஷ்ணன், கம்சனால் அக்குரூரரைக்கொண்டு அழைக்கப்பட்டுப் பலராமனுடனே மதுராபுரியின்
இராசவீதியில் எழுந்தருளுகையில் சந்தனக்கிண்ணத்தைக் கையிலேந்தி வருகிற மங்கைப்பருவமுடைய ஒருகூனியைக் கண்டு, ‘நீலோற்பலம் போன்ற கண்ணுடையவளே! யாருக்கு நீ இந்தப்பூச்சுக்கொண்டுபோகிறாய்?’ என்று விலாசத்தொடு கேட்டருள, அந்தக்கூனி, இவ்வாறு காதலுடையவன் போலக் கண்ணன் அருளிச்செய்தது கேட்டு அவனது திருக் கண்களினாலே மனமிழுக்கப்பட்டவளாய், அவன்மேற் காதலுற்று ‘ஓ அழகனே! நான் நைகவக்கிரை யென்பவ ளென்றும், கம்சனாலே சந்தனாதிப் பூச்சுக்கள் சித்தஞ்செய்யும் வேலையில் வைக்கப்பட்டவளென்றும் நீ அறியாயோ?’ என்று விண்ணப்பஞ்செய்ய, கண்ணன் “எங்கள் திருமேனிக்கு ஏற்ற வெகுநேர்த்தியான இந்தப்பூச்சை எங்கட்குக் கொடுக்கவேண்டும்’ என்று சொன்னவுடனே அவள் ‘அப்படியே திருவுள்ளம் பற்றுங்கள்’ என்று மிக்க அன்போடு சமர்ப்பிக்க, அப்பூச்சைத் திருமேனியில் அணிந்து ஸ்ரீ கிருஷ்ணன் அவளிடத்து மிகவும் பிரசன்னனாய், நடுவிரலும் அதன் முன்விரலுங்கொண்ட நுனிக்கையினாலே அவளை மோவாய்க்கட்டையைப்பிடித்துத் தன் திருவடிகளினால் அவள்கால்களை அமுக்கி இழுத்துத் தூக்கிக் கோணல் நிமிர்த்து அவளை மகளிரிற் சிறந்தவுருவின ளாக்கியருளின னென்பது, இங்குக்குறித்த கதை. இனி, இராமாவதாரத்தில் மந்தரையென்னுங் கூனியின் முதுகின்புறத்திலே வில்லினால் மண்ணுண்டையைச் செலுத்தியவன் என்றும் உரைக்கலாம்;இராமன் சிறுவனாயிருந்தகாலத்தில் ஒருநாள் கையிற் சிறுவில்லும் மண்ணுண்டையுங் கொண்டு விளையாடிவருகையில், ஒருகால் விற்கொண்டு எய்த உண்டை கைகேயியின் வேலைக்காரியான மந்தரையின் முதுகின்புறத்தே தற்செயலாய்த் தெறிக்க, அவள் தனதுகூனுடைமையை இராமன் இங்ஙனம்பரிகசித்தன னென்று தவறாகக்கருதி மனம்வருந்தி அவன்மேற் சினங்கொண்டு அரசன்மைந்தனாதலின் ஒன்றுஞ்செய்ய இயலாமற் சென்று தனக்கு வாய்க்குந்தருணம் நோக்கிக் கறுக்கொண்டிருந்து பின்பு கைகேயிக்குக் கலகஞ்செய்து இராமபட்டாபிஷேகத்தைத் தவிர்த்து அப்பெருமானை வனம்புகுத்தின ளென வரலாறு அறிக.

மாதர் புடைவைகளைக் கொடுத்த வரலாறு:-
திருவாய்ப்பாடியிலுள்ள கோபஸ்திரீகள் கண்ணபிரானிடங் கொண்ட வேட்கைமிகுதியால் அவன் தம்மிடம் காதல்விஞ்சுமாறு நோன்புநோற்று அந்நோன்பின் முடிவில் யமுனாநதியிலே நீராட, அப்பொழுது அவர்கள் கரையில் அவிழ்த்துவைத்து விட்டுப்போன ஆடைகளையெல்லாம் கண்ணன் வந்து எடுத்துக்கொண்டு அருகிலுள்ள மரத்தின்மே லேறியிருந்துசிறிது பொழுது அவர்களை அலைக்கழித்துப் பின்பு அவர்கள் கைகூப்பிவணங்கி மிகவும் பிரார்த்தித்ததனால் அவர்கட்கு அத்துகில்களை அளித்தருளின னென்பதாம்.

ஏறுசெற்ற விவரம்:-
கண்ணன் நப்பின்னைப்பிராட்டியைத் திருமணஞ் செய்துகொள்ளுதற்காக, அவள்தந்தை கந்யாசுல்கமாகக் குறித்தபடி, யாவர்க்கும் அடங்காத அசுராவிஷ்டமான ஏழுஎருதுகளையும் ஏழுதிருவுருக் கொண்டு சென்று வலியடக்கித் தழுவின னென்பதாம். கண்ணனைக்கொல் லும்படி கம்சனால் ஏவப்பட்ட அசுரர்களில் அரிஷ்டனென்பவன் எருதுவடி வங்கொண்டு பசுக்களையெல்லாம் முட்டி இடைச்சேரியைப் பயன்படுத்திக் கொண்டு ஸ்ரீகிருஷ்ணனது திருவயிற்றின்மேற் கண்வைத்துக் கொம்பு களைநீட்டிப் பாய்ந்துவர, கண்ணபிரான் அவனைக் கொம்புகளிற் பிடித்து அசையவொட்டாமற்செய்து தன்காலினால் அவன்வயிற்றில் ஓரிடியிடித்து அவன்கழுத்தைப் பிடித்துக் கசக்கி அவனுடையகொம்புகளில் ஒன்றைப் பறித்து அதனாலேயே அவனை அடித்துக் கொன்றன னெனினுமாம்.

மருதிடைத்தவழ்ந்த கதை:-
கண்ணன் குழந்தையாயிருக்குங் காலத்தில் துன்பப்படுத்துகின்ற பல திருவிளையாடல்களைச் செய்யக் கண்டு கோபித்த நத்தகோபன்மனைவியான யசோதை, ஒருநாள் கிருஷ்ணனைத் திருவயிற்றிற் கயிற்றினாற்கட்டி ஓருரலிலே பிணித்துவிட, கண்ணன் அவ்வுரலையிழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவிலே யெழுந்தருளியபொழுது, அவ்வுரல் குறுக்காய்நின்று இழுக்கப் பட்டபடியினாலே அம்மரங்களிரண்டும் முறிந்துவிழுந்தவளவிலே, முன் நாரதர்சாபத்தால் அம்மரங்களாய்க்கிடந்த நளகூபரன் மணிக்கிரீவன் என்னும் குபேரபுத்திரர் இருவரும் சாபந்தீர்ந்து சென்றனர் என்பதாம். அந்தக் குபேரபுத்திரர்கள் முன்பு ஒருகாலத்தில் பலதெய்வமகளிருடனே ஆடையில்லாமல் ஜலக்கிரீடை செய்துகொண்டிருக்கையில், நாரதமகா முனிவர் அங்கு எழுந்தருள, மங்கையரனைவரும் நாணங்கொண்டு ஆடையெடுத்து உடுத்து நீங்க, இந்த மைந்தர் மாத்திரம் மதுபாநமயக்கத்தால் வஸ்திரமில்லாமலே யிருக்க, நாரதர் கண்டு கோபங்கொண்டு ‘மரங்கள் போலிருக்கிற நீங்கள் மரங்களாவீர்’ என்று சபித்து, உடனே அவர்கள் வேண்டிக்கொண்டதற்கு இரங்கி, ‘நெடுங்காலஞ் சென்றபின்பு திருமால் உங்களையடையுஞ்சமயத்தில் இவ்வடிவமொழிந்து முன்னையவடிவம்பெற்று மீள்வீர்’ என்று சாபவிடை கூறிப் போயினர் என அறிக.

கன்றால் விளவெறிந்த கதை:-
கம்சனா லேவப்பட்ட அசுரர்களிற் கபித்தாசுரன் விளாமரத்தின் வடிவமாய், கண்ணன் தன்கீழ்வரும்பொழுது மேல்விழுந்துகொல்வதாக எண்ணி வந்துநிற்க, அதனையறிந்து, கிருஷ்ண பகவான் அவ்வாறே தன்னைமுட்டிக்கொல்லும்பொருட்டுக் கன்றின்வடி வங்கொண்டுவந்த வத்ஸாசுரனைப் பின்னிரண்டுகால்களையும் பிடித்து எடுத்துச் சுழற்றி விளாமரத்தின்மேல் ஏறிய இருவரும் சிதைந்து தமதுஅசுரவடி வத்துடனே விழுந்து இறந்தன ரென்பதாம்.

பகாசுரனைக் கொன்ற வரலாறு:-
பகனென்னும் அசுரன் கொக்கு வடிவங்கொண்டு கண்ணபிரானைக்கொல்வதாக நெருங்கிவர, அப்பொழுது கண்ணன் அப்பறவையின் வாயலகுகளை இருகையாலும் பிடித்துக் கிழித்து அதனை யழித்தன னென்பதாம்.

பரிவாய் பிளந்த கதை:-
கம்சனா லேவப்பட்ட அசுரர்களிற் கேசி யென்பவன் குதிரையினுருவத்தோடு ஆயர்கள் அஞ்சிநடுங்கும்படி கனைத்துத் துரத்திக்கொண்டு கண்ணபிரான்மேற் பாய்ந்துவர, அப்பெருமான் தன் திருக்கையை நன்றாகப் பெருக்கி நீட்டி அதன்வாயிற் கொடுத்துத் தாக்கிப் பற்களையுதிர்த்து உதட்டைப்பிளந்து அதனுடம்பையும் இருபிளவாக வகிர்ந்து தள்ளின னென்பதாம்.

பிரமதேவன் கண்ணன்திருவிளையாடலைக் கண்டு வியந்த வரலாறு:-
கண்ணன் ஆயர்சிறுவர்களுடன் பசுவின் கன்றுகளைமேய்த்துவரும் நாட்களில் ஒருநாள், பிரமதேவன் எம்பெருமானது திருவிளையாட்டைக் காணவேண்டு மென்று கருதிக் கன்றுகளையுஞ் சிறார்களையுந் தன்மாயையினால் வானத்தே மறைத்துவைக்க, அச்சுதன் அஃதுணர்ந்து வண்ணமும் வனப்பும் தோற்றமும் வடிவும் தொழிலும் குணமும் பூணும் துகிலும் தாரும் குழலும் சிறிதும் வேற்றுமையில்லாமல் தானே சிறாருங் கன்றுமாகித் தத்தம்மனைகட்குப் போய்வந்துகொண்டிருக்க, இங்ஙனமே ஓராண்டுசெல்ல, நான்முகன் அது கண்டு நாணமுற்றுச் சிறார்களையுங் கன்றுகளையுங் கொணர்ந்து சமர்ப்பித்துக் கண்ணனைப் பிரதக்ஷிணஞ்செய்து வணங்கிப் பலவாறு தான்செய்த பிழையைப் பொறுத்தருளும்படி வேண்டிக்கொண்டன னென்பதாம்.

கண்ணன் காட்டுத்தீயை விழுங்கிய கதை:-
பிருந்தாவனத்தில் முஞ்சாரணியத்திற்பிரவேசித்தபோது தைவிகமாகத்தோன்றித் தங்களைச்சூழ்ந்த பெருங்காட்டுத்தீயில் அகப்பட்டுக்கொண்டு கோபாலர்களும் கோக்களும் முறையிட்டுப் பலவாறு துதிக்கக் கேட்டு, ஸ்ரீகிருஷ்ணன் ‘நீங்கள்யாவரும் பயப்படாமல் உங்கள் நேத்திரங்களை மூடிக்கொள்ளுங்கள்’ என்று நியமித்தருளி, தனதுவிராட்ஸ்வரூபத்தை வகித்து அவ்வக்கினியைச்சுவாலையோடும் பானஞ்செய்து, அவ்வாயர்களையும் ஆநிரையையும் பாண்டீர மென்னப்பட்ட ஆலமரத்தினடியில் தனது மாயையினாற் கொண்டுவந்துசேர்த்துக் காத்தருளினன் என்பதாம்.

‘வரைக்குடையாய்’ என்ற விவரம்:-
திருவாய்ப்பாடியில் ஆயர்களெல்லாருங் கூடி மழையின் பொருட்டாக இந்திரனை ஆராதித்தற்கென்று வழக்கப்படிசமைத்த சோற்றைக் கண்ணபிரான் ஒருகால் அவனுக்கு இடாதபடி விலக்கிக் கோவர்த்தனமலைக்கு இடச்சொல்லித் தானே ஒருதேவதாரூபங் கொண்டு அமுதுசெய்தருள, அவ்விந்திரன் கோபத்தோடு புஷ்கலாவர்த்தம்முதலிய பலமேகங்களை யேவி, கண்ணன்விரும்பிமேய்க்கிற கன்றுகளுக்கும் பசுக்களுக்கும் கண்ணனுக்குஇஷ்டரான இடையர்க்கும் இடைச்சியர்க்கும் தீங்குதரும்படி கல்மழையை ஏழுநாள் இடைவிடாது பெய்வித்தபொழுது, கண்ணன் கோவர்த்தனமென்னும்மலையை யெடுத்துக் குடையாகப்பிடித்து மழையைத்தடுத்து எல்லாவுயிர்களையும் காத்தருளின னென்பதாம்.

ஆயரெல்லாம் பரமபதத்திற் சென்று மீண்ட வரலாறு:-
யமுனையில் தீர்த்தமாடுகின்ற சமயத்தில் ஓரசுரனால் வருணலோகத்திற் கொண்டுபோ யொளிக்கப்பட்ட நந்தகோபரை ஸ்ரீகிருஷ்ணன் அங்குஎழுந்தருளி மீட்டு வந்தபொழுது தன்னைப் பூஜித்து உத்தமகதியையடைய விரும்பிய சகல கோபாலர்களுக்கும் ஞானக்கண்ணைக் கொடுத்து, தனது திவ்வியதேஜோ மயமான ஸ்வரூபத்தையும், பரமபதம் முதலிய ஸர்வபுண்ணியலோகங்களையுங் காணும்படி யருளினன் என்பதாம்.

கண்ணன் பாரிஜாததருவைக் கொணர்ந்த வரலாறு:-
கண்ணன் நரகா சுரனையழித்தபின்பு அவனால் முன்புகவரப்பட்ட (இந்திரன் தாயான அதிதி தேவியின்) குண்டலங்களை அவ்வதிதிதேவிக்குக் கொடுக்கும்பொருட்டுச் சத்தியபாமையுடனே கருடன்தோள்மேலேறித்தேவலோகத்துக்குச்செல்ல அங்கு இந்திராணி சத்தியபாமைக்குச் சகல உபசாரங்களைச் செய்தும் தேவர்க்கேயுரிய பாரிஜாதபுஷ்பம் மானுடப்பெண்ணாகிய இவளுக்குத் தகாதென்று சமர்ப்பிக்கவில்லை யாதலின், அவள் அதனைக் கண்டு விருப்புற்றவளாய்ச் சுவாமியைப்பார்த்து “பிராணநாயகனே! இந்தப்பாரிஜாததருவைத் துவாரகைக்குக் கொண்டுபோகவேண்டும்’ என்றதைக் கண்ணன் திருச்செவிசார்த்தி உடனே அந்தவிருக்ஷத்தை வேரோடு பெயர்த்துக் கருடன் தோளின்மேல் வைத்தருளி, அப்பொழுது இந்திராணி தூண்டிவிட்டதனால் வந்துமறித்துப்போர்செய்த இந்திரனைச் சகலதேவ சைனியங்களுடன் சங்க நாதத்தினாலே பங்கப்படுத்தி, பின்பு பாரிஜாதமரத்தைத் துவாரகைக்குக் கொண்டுவந்து சத்தியபாமைவீட்டுப் புறங்கடைத் தோட்டத்தில் நாட்டியருளின னென்பதாம்.

கண்ணன் குமாரர்களை மீட்டுக் கொடுத்த வரலாறு:-
கண்ணன் சாந்தீபிநி யென்னும் பிராமணோத்தமர்பக்கல் கைலசாஸ்திரங்களையும் அத்தியயநம் பண்ணின அநந்தரம் குருதக்ஷிணை கொடுக்கத் தேடுகின்ற வளவிலே, அவ்வாசாரியரும் இவனுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களை அறிந்தவ ராகையாலே, “பன்னிரண்டு வருஷத்துக்கு முன்பு பிரபாஸதீர்த்தகட்டத்திற் கடலில் முழுகி யிறந்துபோன என்புத்திரனைக் கொண்டுவந்து தரவேண்டும்’ என்று அபேக்ஷிக்க, கண்ணன் ‘அப்படியேசெய்கிறோம்’ என்று, அப்புத்திரனைக் கொண்டுபோன, சங்கின்ரூபந்தரித்துச் சமுத்திரஜலத்தில் வாசஞ்செய்கின்ற பஞ்சஜநன் என்கிற அசுரனைக்கொன்று, யமபட்டணத்துக்கு எழுந்தருளி, அங்கு யாதனையிற் கிடந்த அக்குமாரனைப் பூர்வதேகத்தில் ஒன்றும் விசேஷமறக் கொண்டுவந்து கொடுத்தருளினா னென்பதும்;

தேவகிதேவி கம்ஸனாற்சங்கரிக்கப்பட்ட தன்னுடைய புத்திரர்கள் அறுவரையுங் காணுமாறு அபேக்ஷித்தபொழுது, கிருஷ்ணபகவான் மாதாவின் வார்த்தைக்கிசைந்து பாதாளலோகஞ்சேர்ந்து பலிசக்கரவர்த்தியினுடைய சபைக்குச்சென்று, அங்குஇராநின்ற மரீசிப்பிரஜாபதியினுடைய புத்திரர்களும், பிரமசாபத்தால் இரணியகசிபுவின்குமாரர்களாய்ப் பிறந்தவர்களும், தனக்குமுன்பு தேவகியின்கர்ப்பத்திற் சேர்க்கப்பட்டவருமாகிய அவ்வறுவரையும் அதிசீக்கிரத்திற் கொண்டுவந்து கொடுத்தருளின னென்பதும்;

ஒருபிராமணனுக்கு முறையே பிறந்த மூன்று பிள்ளைகள் பிறந்த அப்பொழுதே பெற்றவளுமுட்பட முகத்தில் விழிக்கப்பெறாதபடி இன்னவிடத்திலே போயிற்றென்று தெரியாமல் காணவொண்ணாது போய்விடு கையாலே, நாலாம் பிள்ளையை ஸ்திரீ பிரசவிக்கப்போகின்ற வளவிலே அந்த அந்தணன் கண்ணபிரான்பக்கலிலே வந்து ‘இந்த ஒரு பிள்ளையை யாயினும் தேவரீர் ரக்ஷித்துத் தந்தருளல்வேண்டும்’ என்று அபேக்ஷிக்க, கிருஷ்ணன் ‘அப்படியே செய்கிறோம்’ என்று அநுமதி செய்த பின்பு ஒரு யாகத்தில் தீக்ஷிதனானதனால் தான் எழுந்தருளக் கூடவில்லை யென்று அருச்சுனனுடன் சொல்ல, அருச்சுனன் ‘நான் போய் ரக்ஷிக்கிறேன்’ என்று பிரதிஜ்ஞைசெய்து, பிராமணனையுங் கூட்டிக்கொண்டுபோய்ச்
சூதிகாகிருகத்தைச் சுற்றும் காற்று முட்படப் பிரவேசிக்க வொண்ணாதபடி சரக்கூடமாகக் கட்டிக் காத்துக்கொண்டு நிற்கையிலே, பிறந்த பிள்ளையும் பிறந்தவளவிலே பழையபடியே காணவொண்ணாது போய்விடவே, பிராமணன் வந்து அருச்சுனனை மறித்து, “க்ஷத்திரியாதமா! உன்னாலேயன்றோ என்பிள்ளை போம்படி யாயிற்று; கிருஷ்ணன் எழுந்தருளிக் காப்பதை நீ யன்றோ கெடுத்தாய்’ என்று நிந்தித்துக் கிருஷ்ணன்பக்கலிலே தள்ளிக் கொண்டுவர, கண்ணபிரான் கண்டு புன்னகைகொண்டு ‘அவனை விடு; உனக்குப் பிள்ளையை நான் கொண்டுவந்து தருகிறேன்’ என்று அருளிச் செய்து பிராமணனையும் அருச்சுனனையும் கூடத் தேரிலேகொண்டு ஏறி அருச்சுனனைத் தேரை நடத்தச் சொல்லி அத்தேர்க்கும் இவர்கட்கும் திவ்விய சக்தியைத் தனது சங்கற்பத்தாற் கற்பித்து இவ்வண்டத்துக்குவெளியே நெடுந்தூரமளவும் கொண்டுபோய் அங்கே ஓரிடத்தில் தேருடனே இவர்களை நிறுத்தித் தோஜோரூபமான பரமபதத்திலே தன்னிலமாகையாலே தானேபோய்ப் புக்கு, அங்கு நாய்ச்சிமார் தங்கள் ஸ்வாதந்திரியங் காட்டு கைக்காகவும் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தியினது திவ்வியசௌந்தரியத்தைக் கண்டு களிக்கைக்காகவும் அழைப்பித்துவைத்த அந்தப்பிள்ளைகள் நால்வரையும் அங்குநின்றும் பூர்வரூபத்தில் ஒன்றும் குலையாமற் கொண்டுவந்து கொடுத்தருளினன் என்பதுமாம்.

குருந்தமொசித்த கதை:-
கிருஷ்ணனைக் கொல்லும்பொருட்டுக் கம்சனால் ஏவப்பட்ட பல அசுரர்களில் ஒருவன் அக்கண்ணபிரான் மலர்கொய்தற்பொருட்டு விரும்பி யேறும் பூத்த குருந்தமரமொன்றிற் பிரவேசித்து அப்பெருமான்வந்து தன்மீது ஏறும்போது தான் முறிந்துவீழ்ந்து அவனை வீழ்த்திக்கொல்லக் கருதியிருந்தபோது, மாயவனான கண்ணபிரான் அம்மரத்தைப் பிடித்துத் தன்வலிமைகொண்டு முறித்துஅழித்தனனென்பதாம்.

நாரதமுனிவர் குடும்பத்திடும்பையனுபவித்த வரலாறு:- ஒருகாலத்தில் நாரதமுனிவர் திருமாலைத்தரிசிக்கையில் தாம் பிரமவிருடியென்றும் தத்துவ ஞானங்கைவந்தவரென்றும் செருக்குக்கொண்டு சிலவார்த்தைகூற, எம்பெருமான் தமதுமாயை எவராலுங் கடத்தற்கரிய தென்பதைப் புலப்படுத்த வேண்டு மென்று திருவுளங்கொண்டு, அங்கு அருகிலுள்ளதொரு தடாகத்தில் ஸ்நாநஞ்செய்யுமாறு முனிவர்க்குக் கட்டளையிட்டனர்; உடனே இருடி தமதுவீணையைக் கரையில்வைத்துவிட்டுக் குளத்தில் மூழ்கினமாத்திரத்தில் திவ்வியமான பெண்ணுருவ மடைந்தனர். விஷ்ணுவோ இவரது யாழைக் கைக்கொண்டு மறைந்துவிட்டார். பிறகு, தமது முன்னைய நிலைமையை மறந்த நாரதியென்னும் இப்பெண்ணைக் கண்ட ஓரரசன் தனது அரண்மனைக்கு அழைத்துச்சென்று அவளை மணந்து அவளிடம் பலபுதல்வரைப் பெற்றான். இவ்வாறு இம்மாது பலபுத்திரர்களைப்பெற்றுச் சம்சாரக்கவலை கொண்டு அலைவதைத் (இந்தமக்களை, பிரபவன் முதலிய அறுபதுபிள்ளைக ளென்றுங் கூறுவர்.) திருமால் கண்டு இவர்க்கு முன்னையநிலையைக் கொடுத்து இவரதுகவலையை நீக்கத் திருவுளங்கொண்டு ஒரு கிழவடிவங் கொண்டு சென்று அம்முனிமாதை அருகிலுள்ளதொரு பொய்கையில் முழுகிவரும் படி நியமிக்க, இவர் அவ்வாறே சென்று அமிழ்ந்து முழுகியமாத்திரத்திற் பழையபடியே முனிவடிவமடைந்து கரையேறினர். அப்பொழுது திருமால் தான் முன்பு கொண்டுசென்ற யாழைக்கொடுத்து நடந்த வரலாற்றைக் கூறி இவரதுமனத்தைத் தெளிவித்து அழைத்துச்சென்றன ரென்பதாம்.

யானையை மருப்பொசித்த கதை:-
வில்விழாவென்கிற வியாஜம்வைத்துக் கம்சனால் வரவழைக்கப்பட்டு ஸ்ரீகிருஷ்ணபலராமர்கள் கம்சன ரண்மனையை நோக்கிச் செல்லுகையில், அவனது அரண்மனைவாயில் வழியில் தம்மைக்கொல்லும்படி அவனால் ஏவி நிறுத்தப்பட்ட குவலயாபீடமென்னும் மதயானை கோபித்துவர, அத்யாதவவீரர் அதனை யெதிர்த்து அதன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியை யெடுப்பதுபோல எளிதிற் பறித்து அவற்றையே ஆயுதமாகக்கொண்டு அவற்றால் அடித்து அவ்யானையை உயிர்தொலைத்துவிட்டு உள்ளேபோயின ரென்பதாம்.

கண்ணன் உக்கிரசேனராசனுக்குப் பட்டாபிஷேகஞ்செய்த வரலாறு:-
கண்ணன் கம்ஸவதஞ்செய்த பின்பு, மகனிழந்தவனும் தன்மாதாமகனுமாகிய உக்கிரசேனமகாராஜனைத் தளையினின்றும் விடுவித்து வடமதுரையிற் பட்டாபிஷேகஞ் செய்தவுடனே வாயுவை நினைக்க, அவனும் உடனே ஸ்வாமிஸந்நிதிக்கு வந்துநிற்க, அவனை நோக்கி “ஓ வாயுவே! ஸுதர்மை யென்கிற தேவசபையானது நம்முடைய உக்கிரசேன மகாராஜாவுக்கே ஏற்றது; அதில் யதுவமிசத்தார் வீற்றிருக்கத் தகுந்திருக்கின்றது: ஆதலால், ஒப்பற்ற அந்தச்சபையை மகாராஜாவுக்கு அனுப்பிவிடு என்று இந்திரனுக்கு என்கட்டளையைத் தெரிவித்துச் சபையைக்கொண்டுவா’ என்று நியமித்த வுடனே, அதை வாயு சிரசில் வகித்துப்போய்ப் புரந்தரனுக்குத் தெரிவிக்க, அவனும் அச்சபையைச் சமீரணன் கையிற் கொடுத்துவிட, உடனே வாயு அதைக் கொண்டுவந்து சுவாமிசந்நிதியிற் சமர்ப்பிக்க, அதனைச் சுவாமி உக்கிரசேனனுக்குப் பிரசாதித்தருள, அச்சபையிலே யாதவர்யாவரும் வீற் றிருந்தார்க ளென்பதாம்.

கண்டாகர்ணனுக்கு முத்தியளித்த விவரம்:-
கைலாசகிரியிற் சிவபிரானை யடுத்துத் தொண்டுபூண்ட பூதகணத்தலைவர்களில் ஒருவன், அச்சிவபக்தியுடன் விஷ்ணுவேஷமுங் கொண்டு, விஷ்ணுநாமத்தைப் பிறர்சொல்லக் கேட்டலுமாகாதென்று தன்காதுகளில் மணிகளைக்கட்டிக்கொண்டு அவற்றை ஒலிசெய்யுமாறு எப்பொழுதும் கருத்துடன் அசைத்துக் கொண்டிருந்ததனால், கண்டாகர்ண னென்று பெயர்பெற்றான். அவன் ஒருகாலத்திற் சிவபிரானைக்குறித்து அநேகவருடம் தவம்புரிந்து, ருஷபாரூடனாய்த் தரிசனந் தந்த அக்கடவுளை நோக்கி ‘எனக்கு நித்தியமான முத்தியை அளித்தருள்க’ என்று பிரார்த்திக்க, அப்பெருமான் “அதனையளித்தற்கு உரியவன் திருமாலே. மற்றைப்பிரபஞ்சவாழ்வில் எதுவேண்டினும் யான் தரக்கடவேன்’ என்றுகூறிச் சென்றனன். அதுகேட்டவுடனே கண்டாகர்ணன் காதிற்கட்டிய மணிகளைக் கழற்றியெறிந்து, சிவபிரானுக்குநண்பனான குபேரனிடஞ் சென்று நிகழ்ந்தசெய்தியைக் கூற, அவனும் ‘அழியாப் பதத்தை அரியே அருள்வன்’ என்றுசொல்லி அஷ்டாக்ஷரமந்திரத்தையும் துவாதசாக்ஷர மந்திரத்தையும் உபதேசித்து, அத்திருமால் கிருஷ்ணனாகத் திருவவதரித்துத் துவாரகையில்வசிக்கிற செய்தியையுஞ் சொல்லி, “எவ்வளவு தீவினை செய்தாலும் விஷ்ணுநாமத்தை உச்சரித்தமாத்திரத்திலே அவ்வினை யனைத்தும் தொலையும்’ என்றுஉணர்த்த, அவற்றையறிந்த கண்டாகர்ணன் தன்னைச்சார்ந்த பூதகணங்களுடனே புறப்பட்டு விஷ்ணுநாமங்களை வாயினாற் சொல்லிக்கொண்டே இடைவழியி லெல்லாம் பசுவதை பிராமணவதை முதலிய அளவிறந்த உயிர்க்கொலைகளைச் செய்துகொண்டு, கங்கா நதியுடன் யமுநாநதி சேருமிடமான பிரயாகையைச் சேர்ந்து அஷ்டாக்ஷரதுவாதசாக்ஷரமந்திரஜபத்துடன் நாராயணனைத் தியானித்து அப்பரமனை அகத்திற்கண்டதன்றி அங்குப் புறத்திலே கிருஷ்ணமூர்த்தியைக் கண்ணுற்றுக் களிகூர்ந்து அப்பெருமானது திருவடிகளிற் சரண்புகுந்து ‘எனக்கு அழியாப்பதத்தை அளித்தருள்க’ என்று பிரார்த்தித்தான். அதற்குக் கண்ணபிரான் ‘நீ ஆதியில் என்னிடத்திற் பகைமைகொண்டபோதிலும், இடை விடாது என்னை நினைப்பிற் கொண்டிருந்ததனாலும், பின்பு மிக்கநம்பிக்கையுடன் எனதுநாமங்கள் பலவற்றை உச்சரித்ததனாலும், பிறகு ஜபம் தியாநம் ஸ்தோத்ரம் முதலிய வழிபாடுகள் செய்ததனாலும், உனதுவினைகளெல்லாம் தொலைந்தன; இனிப் பரமபதம் அடைவாய்’ என்று அநுக்கிரகித்தான். பின்பு கண்டாகர்ணன் “அந்தஸ்ரீவைகுண்டத்தை என்தம்பியான தந்தகனுக்கும் அருள்க’ என்று வேண்ட, கண்ணன் ‘உன்னைப் போல உன்தம்பியும் என்பக்கல் அன்புடையனோ?’ என்ன, மணிகர்ணன் ‘இல்லை’ என்றான். “அஃதுஇல்லையாயினும், எனதுபக்தனான உன்னிடத்திலேனும் அன்புடையனோ? என்று வாசுதேவன் வினாவியதற்கு, ‘அதுவு மில்லை; பரதேவதையான உன்னிடத்திலும், தமையனான என்னிடத்திலும் பகைமையுடையன் அவன்’ என்ற கண்டாகர்ணனை நோக்கி ஸ்ரீகிருஷ்ணன் ‘ஆயின், என்ன இயைபுகொண்டு அவனுக்கு உயர்கதியளிப்பேன்?’ என்றான். கண்டாகர்ணன் ‘அவனுக்கு என்னிடம் அன்பில்லை யாயினும், எனக்கு அவன்மேல் அன்பு உண்டு’ என்று சொல்ல, கண்ணபிரான் அதுகேட்டு மனமகிழ்ந்து ‘ஆனால் அவனுக்கும் முத்திதந்தேன்: எனது அன்பர் எவர்பக்கல் அருள் புரிகின்றனரோ, அவரும் பேறுபெறுதற்கு உரியரே; இனி நீயும் உன்தம்பியும் விமானமேறி வீடுபெறுவீர்’ என்றுசொல்லி விடையளித்துச்செல்ல அங்ஙனமே அவ்விருவரும் பரமபதம்புக்கன ரென்பதாம்.

வாணனையழித்த கதை:-
பலிசக்கரவர்த்தியின்சந்ததியிற் பிறந்தவனான பாணாசுரன் ஒருகாலத்துச் சிவபிரானது நடநத்தைத் தரிசித்து அதற்குத் தனது இரண்டுகைகளால் மத்தளந்தட்ட, சிவபெருமான் அருள்கூர்ந்து அவனுக்கு ஆயிரங்கைகளையும் நெருப்புமதிலையும் அளவிறந்தவலிமையையும் மிக்க செல்வத்தையும் தான் தனது பரிவாரங்களோடு அவன்மாளிகை வாயிலிற் காவல்செய்திருத்தல் முதலிய வரங்களையும் தந்தருளினன்; அந்தப்பாணாசுரனுடைய பெண்ணாகிய உஷையென்பவள், ஒருநாள் ஒரு புருஷனோடு தான் கூடியதாகக் கனாக்கண்டு, முன் பார்வதி அருளியிருந்தபடி அவனிடத்தில் மிக்கஆசை பற்றியவளாய், தனது உயிர்த்தோழியான சித்திரலேகைக்கு அச்செய்தியைத்தெரிவித்து, அவள்மூலமாய் அந்தப்புருஷன் கிருஷ்ணனுடைய பௌத்திரனும் பிரத்யும்நனதுபுத்திரனுமாகிய அநிருத்த னென்று அறிந்துகொண்டு, “அவனைப்பெறுதற்கு ‘உபாயஞ்செய்யவேண்டும்’என்று அத்தோழியையே வேண்ட, அவள் தன் யோகவித்தைமகிமையினால் துவாரகைக்குச் சென்று அநிருத்தனைத் தூக்கிக்கொண்டுவந்து அந்தப்புரத்திலே விட, உஷை அவனோடு போகங்களை அநுபவித்துவர, இச்செய்தியைக் காவலாளராலறிந்த அந்தப்பாணன் தன்சேனையுடன் அநிருத்தனை யெதிர்த்து மாயையினாற் பொருது நாகாஸ்திரத்தினாற் கட்டிப்போட்டிருக்க, துவாரகையிலே அநிருத்தனைக் காணாமல் யாதவர்களெல்லாரும் கலங்கியிருந்தபோது, நாரதமகாமுனிவனால் நடந்தவரலாறு சொல்லப்பெற்ற ஸ்ரீகிருஷ்ணபகவான், பெரியதிருவடியை நினைத்தருளி, உடனே வந்து நின்ற அக்கருடாழ்வானது தோளின்மேல் ஏறிக்கொண்டு பலராமன்முதலானாரோடுகூடப் பாணபுரமாகிய சோணிதபுரத்துக்கு எழுந்தருளும் போதே, அப்பட்டணத்தின் சமீபத்திற் காவல்செய்துகொண்டிருந்த சிவபிரானது பிரமதகணங்கள் எதிர்த்துவர, அவர்களையெல்லாம் அழித்து, பின்பு சிவபெருமானாலேவப்பட்டதொரு ஜ்வரதேவதை மூன்றுகால்களும் மூன்றுதலைகளுமுள்ளதாய் வந்து பாணனைக்காப்பாற்றும்பொருட்டுத்தன்னோடு யுத்தஞ்செய்ய,தானும்ஒருஜ்வரத்தையுண்டாக்கி இதன்சக்தியினாலே அதனைத் துரத்திவிட்டபின்பு, சிவபிரானது அநுசரராகையாற் பாணாசுரனது கோட்டையைச் சூழ்ந்துகொண்டு காத்திருந்த அக்கினிதேவரைவரும் தன்னோடு எதிர்த்துவர, அவர்களையும் நாசஞ்செய்து, பாணாசுரனோடு போர் செய்யத் தொடங்க, அவனுக்குப் பக்கபலமாகச் சிவபெருமானும் சுப்பிரமணியன் முதலான பரிவாரங்களுடன் வந்து எதிர்த்துப் போரிட, கண்ணன் தான் ஜ்ரும்பணாஸ்திரத்தைப் பிரயோகித்துச் சிவனை ஒன்றுஞ் செய்யாமற் கொட்டாவி விட்டுக்கொண்டு சோர்வடைந்துபோம்படி செய்து, சுப்பிரமணியனையும் கணபதியையும் உங்காரங்களால் ஒறுத்து ஓட்டி, பின்னர், அநேகமாயிரஞ்சூரியர்க்குச் சமமான சுதரிசநமென்கிற தனதுசக்கரத்தை யெடுத்துப்பிரயோகித்து, அப்பாணனது ஆயிரந்தோள்களையும் தாரைதாரை யாய் உதிரமொழுக அறுத்து அவனுயிரையுஞ் சிதைப்பதாக விருக்கையில், பரமசிவன் அருகில்வந்து வணங்கிப் பலவாறுபிரார்த்தித்தனால் அவ்வாணனை நான்குகைகளோடும் உயிரோடும் விட்டருளி, பின்பு அவன் தன்னைத் தொழுது அநிருத்தனுக்கு உஷையைச் சிறப்பாக மணம்புரிவிக்க, அதன் பின் மீண்டுவந்தன னென்பதாம்.

சிசுபாலனைக்கொன்றவரலாறு:-
சிசுபாலன், பிறந்தபொழுது, நான்கு கைகளையும் மூன்று கண்களையு முடையனாயிருந்தான்; அப்பொழுது அனைவரும் இதுஎன்னவென்று வியக்கும்போது ஆகாயவாணி ‘யார் இவனைத் தொடுகையில் இவனதுகைகளிரண்டும் மூன்றாம்விழியும் மறையுமோ, அவனால் இவனுக்கு மரணம்’ என்றுகூறிற்று; அவ்வாறே பலரும் தொடுகையில் மறைபடாத கைகளும் கண்ணும் கண்ணபிரான் தொட்டவளவிலே மறைபட்டன; அதனால் “இவனைக்கொல்பவன் கண்ணனே’ என்று அறிந்த இவன்தாய்’யாதுசெய்யினும் என்மகனைக் கொல்லலாகாது’ என்று கண்ணனை வேண்ட, அந்தஅத்தையின் நன்மொழிக்கு ஒருசார் இணங்கிய கண்ணன் “இவன் எனக்கு நூறுபிழைசெய்யுமளவும் இவன்பிழையை நான் பொறுப்பேன்’ என்றுகூறியருளினன்: பின்பு, சிசுபாலன், தனக்குக் கண்ணன் சத்துருவென்பதை இளமையிலேயேயறிந்து அதனாலும் முந்தினசன் மங்களின் தொடர்ச்சியாலும் வளர்ந்த மிக்கபகைமையைப் பாராட்டி, எப்பொழுதும் அப்பெருமானுடைய திவ்வியகுணங்களையும் திவ்வியச்செயல் களையும் நிந்திப்பதே தொழிலாக இருந்தான்; இவனுக்கு மணஞ்செய்து கொடுப்பதென்று நிச்சயித்திருந்த ருக்குமிணியைக் கண்ணன் வலியக்கவர்ந்து மணஞ்செய்ததுமுதல் இவன் கண்ணனிடத்து மிக்கவைரங்கொண்டனன்; பின்பு இந்திரப்பிரத்தநகரத்தில் நடந்த ராஜசூயயாகத்தில் தருமபுத்திரனாற் கண்ணபிரானுக்கு முதற்பூஜை செய்யப்பட்டதைக் கண்டு சிசுபாலன் மிக்க கோபங்கொண்டு அளவிறந்த வசைச்சொற்களைப் பிதற்றி அதுபற்றிக் கண்ணனது சக்கராயுதத்தால் தலைதுணிக்கப்பட்டு இறந்து தோஜோமயமான திவ்விய சரீரம்பெற்று எம்பெருமானது திருவடியை யடைந்தன னென்பதாம்.

திரௌபதிக்குத் துகிலீந்த கதை:-
துரியோதனன்சொன்னபடி துச்சாதனன் திரொளபதியைச் சபையிற்கொணர்ந்து துகிலுரியத்தொடங்கியபோது அவள் கைகளால் தன்ஆடையை இறுகப்பற்றிக்கொண்டே கண்ணபிரானைக் கூவியழைக்க, அப்பெருமான் அருள்செய்யாது தாழ்த்துநின்று, பின்பு துச்சாதனன் வலியஇழுக்கையில் ஆடையினின்று கைந்நெகிழ அவள் இருகைகளையும் தலைமேல்வைத்துக் கூப்பிவணங்கித் துதித்தவுடனே ஸ்ரீகிருஷ்ணன் அவளுடைய ஆடைமேன்மேல் வளருமாறு அருள் செய்து மானங்காத்தன னென்பதாம்.

மல்லரைக்கொன்ற கதை:-
கம்சனால் வலியஅழைக்கப்பட்டுக் கிருஷ்ண பலராமர்கள் அவனதுசபையிற் செல்லுகையில், அவர்களையெதிர்த்துப் பொருது கொல்லும்படி கம்சனால் ஏவப்பட்ட சாணூரன் முஷ்டிகன் முதலிய பெரு மல்லர்கள் சிலர் வந்து எதிர்த்து உக்கிரமாகப் பெரும்போர்செய்ய, அவர்களையெல்லாம் அவ்யாதவவீரரிருவரும் மற்போரினாலேயே கொன்று வென்றிட்டனர் என்பதாம். அன்றி, கண்ணன் பாண்டவதூதனாய்த் துரியோதனனிடஞ் சென்ற பொழுது, துரியோதனன் இரகசியமாகத் தனதுசபா மண்டபத்தில் மிகப்பெரிய நிலவறையொன்றைத் தோண்டுவித்து அதில் அநேகமல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளே யிருக்கவைத்து அப்படுகுழியைப் பிறர் அறியவொண்ணாதபடி மூங்கிற்பிளப்புக்களால் மேலேமூடி அதன்மேற் சிறந்த இரத்தினாசனமொன்றை யமைத்து அவ்வாசனத்திற் கண்ணனை வீற்றிருக்கச்சொல்ல, அங்ஙனமே ஸ்ரீகிருஷ்ணன் அதன்மேல் ஏறினமாத்திரத்திலே மூங்கிற்பிளப்புக்கள் முறிபட்டு ஆசனம் உள்ளிறங்கிப் பிலவறையிற் செல்லுமளவில், அப்பெருமான் மிகப்பெரிதாக விசுவரூபமெடுத்துப் பலகைகளையுங் கால்களையுங் கொண்டு எதிர்க்கவே, அப் பிலவறையிலிருந்த மல்லர்கள் அழிந்தன ரென்ற கதையையுங் கொள்ளலாம்.

சூரியனை மறைத்த கதை:-
மகாபாரதயுத்தத்திற் பதின்மூன்றாநாளிலே அருச்சுனகுமாரனான அபிமந்யுவைத் துரியோதனனது உடன்பிறந்தவள் கணவனான சைந்தவன் கொன்றுவிட, அங்ஙனம் தன்மகனைக்கொன்ற ஜயத்ரதனை மற்றைநாட்சூரியாஸ்தமத்திற்குள் தான்கொல்லாவிடின் தீக்குதித்து உயிர்விடுவதாக அருச்சுனன் சபதஞ்செய்ய, அதனையறிந்த பகைவர்கள் பதினான்காநாட் பகல்முழுவதும் சயத்திரதனை வெளிப்படுத்தாமற் சேனையின்நடுவே நிலவறையில் மறைத்துவைத்திருக்க, அருச்சுனனதுசபதம் பொய்த்துவிடுமேயென்று சிந்தித்துக் கண்ணன் சூரியனை அஸ்தமித்தற்குச் சிலநாழிகைக்கு முன்னமே தன்சக்கராயுதத்தால் மறைத்துவிட, அப்பொழுது எங்கும் இருளடைந்ததனால், அருச்சுனன் அக்கினிப்பிரவேசஞ் செய்தலைக் களிப்போடுகாணுதற்குத் துரியோதனாதியருடனே சயத்திரதன் வந்து எதிர்நிற்க, அச்சமயத்திற் கண்ணன் திரு வாழியை வாங்கிவிடவே, பகலாயிருந்ததனால், உடனே அருச்சுனன் சயத்திரதனைத் தலைதுணித்தன னென்பதாம்.

அசுவத்தாமன் பாண்டவர் வம்சத்தைக்கருவறுத்த விவரம்:-
அசுவத்தாமன் துரியோதனன் வேண்டுகோளின்படி பாண்டவர்வம்சத்தைக் கருவறுப்பதொரு பாணத்தைப் பிரயோகிக்கையில், அது சென்று அபிமந்யுவின் மனைவியும் கர்ப்பவதியுமான உத்தரையின் வயிற்றி லுள்ள சிசுவைக் கருகச்செய்து வெளிப்படுத்தியபோது, ‘நித்தியபிரமசாரியாயிருப்பானொருவன் பரிசித்தால் இக்கரிக்கட்டை குழந்தையாய்விடும்’ என்று கண்ணன் ஒருநிபந்தனை ஏற்படுத்தி அதற்குரியவர் ஒருவரும் இலராகவே, அப்பெருமான், ‘யானே’ நித்தியபிரமசாரி’ என்று திருவடியால் தொட்டமாத்திரத்தில் அக்கரிக்கட்டை உயிர்பெற்று எழுந்தது என்பதாம்.

கண்ணன் அறுபுரஞ் செற்ற கதை:-
முன்ஒருகால் பரமசிவன் திரிபுரசங்காரஞ்செய்தபொழுது அங்கு எரிக்கப்படாமல் மிச்சமாய்நின்ற அறுபதினாயிரம் அசுரர்கள், தங்கள்பந்துக்களது வதத்தால் மிக்க தாப மடைந்தவர்களாய் ஜம்பூ மார்க்கமென்னும் புண்ணியக்ஷேத்திரத்தைச் சேர்ந்து பிரமனைக்குறித்துப் பலநாள் தவஞ்செய்து அப்பிரமனருளாற் பூதலத்திலே அழித்தற்கரிய ஆறுபட்டணங்களைப் பெற்று மிக்க குதூகலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கையில், வசுதேவரது நண்பரும் யாஜ்ஞவல்கியரது சிஷ்யருமாகிய பிரமதத்தரென்னும் முனிவரர் மகா புண்ணிய ஸ்தலமாகிய அவ்வறுபுரத்தை யடைந்து அங்கு ஆவர்த்தை யென்னும் நதியின் தீரத்தில் அசுவமேதயாகஞ் செய்ய, அப்பொழுது வியாசாதி ருஷிகணங்களும் வசுதேவாதி ராஜ சமூகமும் அங்குச் சேர்ந்து நிற்க, நிகும்பன் முதலிய அவ்வறுபுரத்து அசுரரனைவரும் அங்கு வந்து ‘எங்களுக்கு யஜ்ஞபாகமும், உமது கன்னிகைகளும், சகல ரத்நாதி திரவியங்களுங் கொடுக்கப்பட்டாலன்றி, இங்கு வேள்விசெய்யவொண்ணாது’ என்று மறுக்க, பிரமதத்தர், அதற்கு இசைந்திலராதலின், அவர்கள் யாவரும் மற்றுமுள்ள அசுரராஜர்க ளநேகருடன் வந்து யாகசாலையைச் சூழ்ந்து நின்று கன்னிகைகளைக் கவர்ந்துகொண்டு பலவாறு இடையூறு செய்ய, வசுதேவரது விருப்பத்தின்படியே, ஸ்ரீகிருஷ்ணன், பலராமாதி யாதவசேனையோடும் வேறுபல ராஜசேனைகளோடும் புறப்பட்டுச்சென்று, எதிர்த்து வந்த அவ்வசுரர்களுடன் பொருது, தனது திருவாழியால் நிகும்பன் முதலிய அவர்களெல்லாரையுஞ் சங்கரித்து, அவர்களால் அபகரித்துக்கொண்டு போகப்பட்ட கன்னிகைகளை மீட்டுவந்து, யாகத்தை நிர்விக்கினமாக நிறைவேறச் செய்தருளின னென்பதாம்.

பாரதயுத்தத்தில் இறந்த அரசர்களைத் திருதராஷ்டிரனுக்குக் காட்டிய வரலாறு:-
துரியோதனாதியர் சைனியத்தோடும் பாரத யுத்தத்தில் மாண்ட பின்பு, புத்திரசோகவானான திருதராட்டிரன், மனைவியாகிய காந்தாரியோடும், குந்தியோடும் பாண்டவர்களோடும், மற்றும் அந்த யுத்தத்திலிறந்த அரசர்களுடைய பத்தினிகளோடும், வனத்தை யடைந்து ஆச்சிரமத்தில் வாசஞ்செய்திருந்தபொழுது, ஒருநாள், ஸ்ரீ வேதவியாசபகவான்வேறு சில மகாரிஷிகளோடும் அங்கு எழுந்தருள, யுதிஷ்டிரர் அவருக்கு வந்தனை வழிபாடுக ளியற்றிய பின்பு, திருதராட்டிரனும், காந்தாரிமுதலி யோரும், தத்தம் பந்து மித்திர புத்திர பௌத்திராதிகள் யுத்தத்தில் இறந்து போனதற்காகப் பலவாறு சோகித்து, அவர்களை ஒருமுறை பார்க்கும் படி காட்டியருளவேண்டு மென்று வியாசமுனிவரைப் பிரார்த்திக்க, அவர் அங்ஙனமே அன்று அஸ்தமனமானபின்பு யுத்தத்தி லிறந்த அரசரனைவரையும் அவரவர் சைனியங்களுடன் கங்காஜலத்தினின்றும் எழுந்துவரக் காண்பித்தருள, அன்றிரவு முழுவதும் அவரவர்கள் தத்தம் பந்து மித்திர புத்திர பௌத்திராதிகளோடு கூடியிருந்து மகிழ்ந்த பின்பு அவர்கள் யாவரும் அந் நதியில் முழுகிமறைந்துபோயின ரென்பதாம்.

ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்த வரலாறு:-
பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவவதரித்தவரும், வைஷ்ணவ சம்பிரதாயத்திற் பிரசித்திபெற்ற ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருவருமாகிய பெரியாழ்வார் ஒருநாள் தமது பூந்தோட்டத்தில் திருத்துழாய்ப்பாத்தியமைத்தற் பொருட்டு நிலத்தைக் கொத்துகையில், அங்கு ஸ்ரீதேவிபூதேவிகளின் அம்சமான ஒருமகள் தோன்றினாள்; அவளை அந்தஆழ்வார் தமது மகளாகக் கொண்டு கோதையென்று நாமகரணஞ்செய்து வளர்த்துவந்தார்; அம்மங்கை இளமைதொடங்கி எம்பெருமானிடத்திலே பக்திப்பெருங்காதல் கொண்டு அப்பெருமானையே தான் மணஞ்செய்துகொள்ளக் கருதி, தனது தந்தையார் அவ்வில்லிபுத்தூரில்வாழும் எம்பெருமானுக்குச் சாத்தும்பொருட்டுக் கட்டிவைத்த திருமாலையை அவரில்லாதசமயம்பார்த்து எடுத்துத் தான் கூந்தலில் தரித்துக்கொண்டு, ‘அப்பெருமானுக்கு நான் நேரொத்திருக்கின்றேனோ, இல்லையோ?’ என்று தன் செயற்கையழகைக் கண்ணாடியிலேகண்டு, தந்தையார் வருதற்குமுன் அம்மலர்மாலையைக் களைந்து, முன் போலவே நலங்காமல் வைத்துவந்தாள்; இச்செய்தியையுணராமல் ஆழ்வார் அம்மாலையைக் கொண்டுபோய்ச் சுவாமிக்குச் சாத்திவர, பெருமானும்பிரீதியோடு ஏற்றருளினான்; இங்ஙனம் பலநாள் கழிந்தபின் ஒருநாள், வெளியிற்சென்ற ஆழ்வார் விரைவில்மீண்டுவந்தபொழுது, பூமாலையைத் தமது மகள் சூடியிருப்பதைப் பார்த்து, கோபித்து அவளைக் கண்டித்துப் புத்தி சொல்லிவிட்டு அன்று எம்பெருமானுக்கு மாலைசாத்தாமல் நின்றார். அன்றையிரவில் திருமால் ஆழ்வாரது கனவில் தோன்றி ‘உமது மகள் சூடிக் கொடுத்தமாலையே நமதுஉள்ளத்திற்கு மிகவும் உகப்பாவது’ என்று அருளிச் செய்ய, அதனால், ஆழ்வார் தம்மகளைத் திருமகளென்றேகருதி, யாவர்க்குந் தலைவி யென்ற காரணத்தால் ‘ஆண்டாள்’ என்றும், மலர்மாலையைத் தான் சூடிக்கொண்டபின்பு பெருமானுக்குக் கொடுத்ததனால் ‘சூடிக்கொடுத்தாள்’ என்றும் பெயரிட்டு வளர்த்துவந்தனர்: பின்பு அம்மங்கை ‘திருப்பாவை,’ ‘நாச்சியார்திருமொழி’ என்ற திவ்வியப்பிரந்தங்களைப் பாடி வாழ்ந்து, தந்தையாருடன் ஸ்ரீரங்கத்திற்குச் சென்று நம்பெருமாளது திருமேனியில் ஐக்கியமாயினள் என்பதாம். ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை விட்டு வேறுதிருமாலையை யமைத்துப் பெரியாழ்வார் எம்பெருமானுக்குச்சமர்ப்பிக்க அதனைப் பெருமான் ‘இந்தமாலை கோதைமணம்பெறவில்லை’ என்று வெறுத்தருளின னென வரலாறுகூறுதலும் உண்டு.

இராவணன் வெள்ளிமலைபறித்த கதை:-
இராவணன் அளகாபுரிக்குச் சென்று குபேரனை வென்று அவனது புஷ்பகவிமானத்தைப்பறித்து அதன் மேலேறிக்கொண்டு கைலாசமலைக்குமேலாக ஆகாயமார்க்கத்திலே விரைந்து மீண்டுவருகையில், அம்மலையின் மகிமையால் விமானம் தடைப்பட்டு நிற்க, அதற்குக் காரண மின்னதென்று அறியாது திகைக்கும்போது நந்திகேசுவரர் எதிரில்வந்து ‘சிவபிரானெழுந்தருளியிருக்குமிடமான திருக்கைலாசத்தின் பெருமை யிது’ என்றுசொல்லவும், கேளாமல் அந்தத் தசமுகன், ‘எனது பிரயாணத்திற்குத் தடையாகிய இம்மலையை இப்பொழுதே வேரோடுபறித்து எடுத்து அப்பாலெறிந்துவிட்டுத் தடையின்றி மேற்செல்வேன்’ என்றுகூறி விமானத்தினின்று இறங்கித் தனது இருபதுகைகளையும், அம்மலையின்கீழ்க் கொடுத்து அதனைப்பெயர்த்தன னென்பதாம்.

சிவபிரான் திரிபுரமெரித்த கதை:-
தாரகாசுரனது புத்திரர்களாகிய வித்யுந்மாலி தாராகாக்ஷன் கமலாக்ஷன் என்னும் மூவரும் மிக்கதவஞ்செய்து மயனென்பவனாற் சுவர்க்க மத்திய பாதாளமென்னும் மூன்றிடத்திலும் முறையே பசும்பொன் வெண்பொன் கரும்பொன்களால் அரண்வகுக்கப்பட்டு ஆகாயமார்க்கத்திற் சஞ்சரிக்குந் தன்மையையுடைய மூன்று பட்டணங்களைப் பெற்று மற்றும்பல அசுரர்களோடும் அந்நகரங்களுடனே தாம்நினைத்த விடங்களிற் பறந்துசென்று பலவிடங்களையும் பாழாக்கிவருகையில், அத்துன்பத்தைப் பொறுக்கமாட்டாத தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளால் சிவபெருமான் பூமியைத் தேராகவும் சந்திரசூரியர்களைத் தேர்ச்சக்கரங்களாகவும், நான்குவேதங்களைக் குதிரைகளாகவும், பிரமனைச் சாரதியாகவும், மகாமேருவை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும், விஷ்ணுவை வாயுவாகிய சிறகமைந்து அக்கினியை முனையாகவுடைய அம்பாகவும், மற்றைத்தேவர்களைப் பிறபோர்க்கருவிகளாகவும் அமைத்துக்கொண்டு யுத்தசந்நத்தனாகிச் சென்று போர்செய்ய யத்தனிக்கையில், தேவர்கள் தத்தமது வல்லமையை நினைந்து அகங்கரித்ததனை உணர்ந்து சினந்து அவர்களுதவியைச் சிறிதும் ஏற்றுக்கொள்ளாமல், தானே புன்சிரிப்புச்செய்து அசுரரனைவரையும் பட்டணங்களோடு எரித்தருளின னென்பதாம்.

சிவபிரான் பிறைசூடிய கதை:-
சந்திரன் தக்ஷமுனிவனதுபுத்திரிகளாகிய அசுவினி முதலிய இருபத்தேழு நட்சத்திரங்களையும் மணஞ்செய்துகொண்டு அவர்களுள் உரோகிணியென்பவளிடத்து மிகவுங்காதல்கூர்ந்து அவளுடனே எப்பொழுதுங் கூடிவாழ்ந்திருக்க, மற்றைமகளிரின்வருத்தத்தை நோக்கி முனிவன் அவனை ‘க்ஷயமடைவாயாக’ என்று சபிக்க, அச்சாபத்தாற் சந்திரன் பதினைந்துகலைகளுங் குறைந்து மற்றைக்கலையொன்றையும் இழப்பதற்குமுன்னம் சிவபிரானைச் சரணமடைய, அப்பெருமான் அருள்புரிந்து அவ்வொற்றைக்கலையைத் தன்தலையிலணிந்து மீண்டுங் கலைகள்வளர்ந்துவரும்படி அநுக்கிரகித்தன னென்பதாம். திருப்பாற்கடல் கடைகையில் அதனினின்று தோன்றிய பிறைச்சந்திரனைச் சிவபெருமான் சிரமேற்கொண்டன னென்றும் வரலாறு கூறப்படும்.
சிவபிரான் கங்கைதரித்த வரலாறு:- திருமால் உலகமளந்தகாலத்தில் மேலே சத்தியலோகத்துச் சென்ற அப்பிரானது திருவடியைப் பிரமன் தன்கைக் கமண்டலதீர்த்தத்தாற் கழுவிவிளக்க, அந்தஸ்ரீபாததீர்த்தமாகப்பெருகிய கங்காநதி தேவலோகத்தி லிருக்க, சூரியகுலத்துப் பகீரதசக்கரவர்த்தி, கபிலமுனிவனதுகண்ணின்கோபத்தீக்கு இலக்காய் உடலெரிந்து சாம்பலாய் நற்கதியிழந்த தனதுமூதாதையரான சகரபுத்திரர் அறுபதினாயிரவரை நற்கதிபெறுவிக்கும் பொருட்டு நெடுங்காலம் தவஞ்செய்து அக்கங்காநதியை மேலுலகத்திலிருந்து கீழுலகத்துக்குக் கொணர்கையில், அதனது வெகுவிசையாகப்பெருகிவரும் வெள்ளப்பெருக்கைத் தாங்கும் வல்லமை பூமிக்கு இல்லாமைபற்றிச் சிவபிரானைப் பிரார்த்திக்க, அப்பகீரதனதுவேண்டுகோளின்படி பரமசிவன் அந்நதியைத் தனது முடியி லேற்றுச் சிறிதுசிறிதாகப் பூமியில் விட்டருளின னென்பதாம்.

அரவம் பூண்ட கதை:-
ஒருகாலத்திற் சிவபிரான் தன்னைமதியாத தாருக வனத்து முனிவர்களுடைய கருவத்தைப் பங்கஞ்செய்யவும் அவர்களின் மனைவிமார்களது கற்புநிலையைப் பரிசோதிக்கவுங் கருதித் தான் ஒருவிடவடிவங்கொண்டு அவரில்லந்தோறுஞ் சென்று பிக்ஷாடநஞ்சென்று தன்னைநோக்கிக் காதல்கொண்ட அம்முனிபத்தினியரது கற்புநிலையைக் கெடச்செய்ய, அதுகண்டு பொறாமற் கோபம்மூண்ட அம்முனிவர்கள் அபிசாரயாகமொன்றுசெய்து அவ்வோமத்தீயினின்று எழுந்த நாகங்கள், பூதங்கள், மான், புலி, முயலகன், வெண்டலை முதலியவற்றைச் சிவனைக் கொன்றுவரும்படி யேவ, சிவபெருமான் தன்மேற்பொங்கி வந்த நாகங்களை ஆபரணங்களாகவும் பூதங்களைத் தனது கணங்காளாகவுங் கொண்டு, மானைக் கையிலேந்திய புலியைத் தோலையுரித்து உடுத்து முயலகனை முதுகிற் காலால் ஊன்றி வெண்டலையைக் கையாற்பற்றிச் சிரமேல் அணிந்து இங்ஙனமே அவற்றையெல்லாம் பயனிலவாகச் செய்துவிட்டன னென்பதாம்.

சிவபிரான் இரத்தலைத் திருமால் ஒழித்த கதை:-
ஒரு காலத்திலே, பரமசிவன் தன்னைப்போலவே பிரமனும் ஐந்துதலையுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குதற்கு இடமாயிருக்கின்ற தென்று கருதி அவனது சிரமொன்றைக் கிள்ளியெடுத்துவிட, அக்கபாலம் அப்படியே சிவன்கையில் ஒட்டிக்கொள்ளுதலும், அவன் “இதற்கு என்செய்வது?’ என்று கவலைப்பட, தேவர்களும் முனிவர்களும் “இப்பாவந்தொலையப் பிச்சையெடுக்கவேண்டும்: என்றைக்குக் கபாலம் நிறையுமோ, அன்றைக்கே இது கையைவிட்டு அகலும்’ என்றுஉரைக்க. சிவபெருமான் பலகாலம் பலதலங்களிலுஞ் சென்று பிச்சையேற்றுக்கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக, பின்பு ஒருநாள் பதரிகாச்சிரமத்தை யடைந்து அங்குஎழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி இரந்தபோது, அப்பெருமான் “அக்ஷயம்’ என்று பிக்ஷையிட, உடனே அது நிறைந்து கையை விட்டுஅகன்றது என்பதாம். திருமால் தனது திருமார்பின் வேர்வைநீரைக் கொண்டு அக்கபாலத்தை நிறைத்து ஒழித்ததாகவும் வரலாறு உண்டு.

அஷ்டபிரபந்தத்திலடங்கிய புராண கதைகள் முற்றும்.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளைப்பெருமாளையங்கார் வரலாறு–

January 22, 2022

ஸ்ரீ பிள்ளைப்பெருமாளையங்கார் வரலாறு

*அழகிய மணவாளதாச ரென்கிற திவ்வியகவி பிள்ளைப் பெருமாளை யங்கார்,
(கிருஷ்ணனுடைய குழந்தைத் திருநாமமாகிய பிள்ளைப் பெருமாளென்னும் பெயரை இடப் பெற்ற ஐயங்கா ரென்று
இப்பெயர்க்குப் பொருள் கூறுவர். ஐயங்காரென்பது, ஸ்ரீவைஷ்ணவப் பிராமணர்க்குக் குறியாக வழங்கும்.
அழகிய மணவாளனென்பது, ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளி யிருக்கின்ற திருமாலின் திருநாமம்;
அப்பெருமானுக்கே அடியவராயிருந்ததனால், இவர் அழகிய மணவாளதாச ரெனப் பெயர் பெற்றனர்.)
சோழநாட்டில் திருமங்கை யென்னுந் திருப்பதியில் பிராமணவரு ணத்தில் ஸ்ரீவைஷ்ணவ சமயத்தில் அவதரித்து,
நல்லாசிரியர்பக்கல் தென் மொழியில் தொல்காப்பியம் முதலிய அரிய பெரிய இலக்கண நூல்களையும்
பழைய சங்கச் செய்யுள்களையும் அக்காலத்து வழங்கிய மற்றை நூல்களையும் ஐயந்திரிபற ஓதி உணர்ந்து,
இங்ஙனமே வடமொழியிலும் வேதம் வேதாங்கம் வேதாந்தம் முதலிய சகல கலைகளிலும் வல்லவராகி,
மற்றும் தமது ஸ்ரீவைஷ்ணவ சமயத்திற்கு உரிய சம்பிரதாயக் கிரந்தங்க ளெல்லாவற்றையுங் கற்று அவற்றிலும் அதிநிபுணராய்,
அடக்கம் முதலிய நற்குணங்களெல்லாம் ஒருங்கே அமையப் பெற்று, ஆழ்வார்களருளிச் செயல்களில் ஆழ்ந்து ஈடுபடுபவராய்,
திருவரங்கம் பெரியகோயிலி லெழுந்தருளி யிருக்கின்ற நம் பெரிய பெருமாளுடைய திருவடித் தாமரைகட்கு
மிக்க பக்திப் பேரன்புபூண்டு ஒழுகுமவராய் அமர்ந்திருந்தனர்.
(இவரை ‘தென்கலை வைணவர்’ என்பர், புலவர் புராண நூலுடையார் )

அந்நாளில், அந் நாட்டில் ஆண்டு கொண்டிருந்த அரசன்,
(இவ்வரசனைப் பெரிய திருமலை நாயக னென்பர் ஒரு சாரார்; அது, காலக் கணக்குக்கு ஒத்துவராது)
அவரது நற் குணங்களனைத்தையும் அறிந்து,
‘இக்குணங்களெல்லாம் ஒருங்கு அமைவது அருமை அருமை!’ என வியந்து, அவரைத் தனது சம்ஸ்தானத்திற்கு வரவழைத்து
அவர்க்குத் தனது இராஜாங்க காரியங்களிற் சிறந்ததோர் உத்தியோகங் கொடுத்து, அவரைத் தன் சமீபத்தில் வைத்துக் கொண்டனன்.
அவர் உத்தியோகத்தை மேற்கொண்டிருந்தபோதும் விஷ்ணு பக்தி விஞ்சி நின்றார்.

அப்பொழுது ஒருநாள், இராஜ சம்ஸ்தானத்தில் உத்தியோகம் நடத்து கின்றவர்களின் நடுவே தாமும் உடனிருந்து
காரியஞ்செய்துவருகிற அவர், தமது தோளி லணிந்த உத்தரீயத்தை இரண்டு கையிலுங்கொண்டு ‘கிருஷ்ண கிருஷ்ண’ என்று தேய்த்தனர்.
அது கண்ட பலரும் ‘ஐயங்காரே! நீர் நுமது உத்தரீயத்தை இங்ஙனம் ஏன் செய்தீர்?’ என வினவ,
அவர், ‘திருவரங்கம் பெரியகோயிலில் நம்பெருமாள் திருத்தேரி லெழுந்தருளித் திருவீதியிலுத்ஸவங்கண்டருளுகிறபோது
அருகு பிடித்த கைப்பந்தத்தின் சுவாலை தாவியதனாற் பற்றி யெரிகின்ற திருத்திரையை அவித்தேன்’ என்றார்.

அது கேட்டு அவர்கள் ‘கோயிலில் நம்பெருமாள் திருத்தேருத்ஸவங் கண்டருளு கிறது உமக்கு இங்ஙன் எங்ஙனே தெரிந்தது?’
என்று நகைத்து ‘ஏதோ இவர்க்கு இவ்வாறு திகைப்பு உண்டாயிருக்கிறது: இது இராஜ சேவைக்கு மிக விரோதமாகுமே!’ என்று
அவர் விஷயத்தில் இரக்கமுற்றவர்களாய், நடந்த செய்தியை அரசனுக்கு அறிவித்தனர். இது நிற்க;

கோயிலில் திருத் தேரிலே திருத் திரையிற் பந்தத்தின் சுவாலை தாவி யெரியும் போது அருகிற் பெருமாளைச் சேவித்து நின்ற
ஐயங்கார் கைகளால் திரையைத் தேய்த்துத் தீயை அவித்திட்டதாக அர்ச்சகர் முதலிய சந்நிதி கைங்கரியபரர்கள் கண்டு
உடனே தோஷ பரிகாரஞ்செய்து திருத் தேருத்ஸவத்தை நடத்தினார்கள்.

பின்பு இவ்வரலாறுகளைச் செவி யுற்றறிந்த அரசன் ஆச்சரிய பரவசனாய் ஐயங்காரை நோக்கி
‘திருத்தேருத்ஸவத்திற்கு எங்ஙனே போயினீர்!’ என்ன,
ஐயங்கார் ‘எனக்கு மாநஸாநுபவமே யல்லது கோயிலுக்குப் போனதில்லை’ என,
அரசன் ‘ரதோத்ஸவத்தினன்றுநீர் அங்கு இருந்ததாகப் பலர் சொல்வது பொய்யோ?’ என்ன,
அப்போது இவர் இங்கிருந்தபடியே உத்தரீயத்தை ‘கிருஷ்ண கிருஷ்ண’ என்று தேய்த்தது கண்ட சிலர்
‘இவர் அப்பொழுது இங்கே தான் இருந்தனர்’ என்று உண்மை கூற,

அரசன் ‘நன்று!’ என்று அத் தெய்விகத் திருவருட் செயலைக் குறித்து ஆச்சரியப்பட்டது மன்றி அன்றை யிரவு நித்திரையில்
தான் நம்பெருமாள் சந்நிதிக்குப் போனதாகவும், தென் திருக்காவேரியில் ஐயங்கார் நீராட்டஞ்செய்து நிற்கக் கண்டு
அவருடனே சந்நிதிக்குப் போய்ப் பெரிய பெருமாளைச் சேவித்து மீளும் போது ஐயங்காரைக் காணாது மயங்கியதாகவுங் கனாக் கண்டு,
கண் விழித்து, பொழுது விடிந்தவுடனே ஐயங்காரை வருவித்து,
‘நீர் மகாநுபாவரும் நம் பெருமாளுக்கு அந்தரங்க பக்தருமாக இருக்கின்றதனால், இனி என்னிடம்
உத்தியோகஞ்செய்தற்குச் சிறிதுந்தக்கவரல்லீர்; அடியேன் இதுவரையிலுந் தேவரீர் பெருமையை அறியாது செய்த அபராதங்களை
யெல்லாம் பொறுத்து, அடியேன் செய்யவேண்டும் பணிவிடையை நியமித்தருளவேண்டும்’ என்று வேண்ட,
ஐயங்கார் ‘பெரியகோயிலில் எனக்கு நிரந்தரவாசங்கிடைக்கும்படி செய்யவேண்டும்’ என்ன,
அரசன் அன்றுதொடங்கிக் கோயிலில் அவர்க்கு ஓர் இருப்பிடம் அமைப்பித்து,
தளிகைப் பிரசாதமும் அவர்க்குக் கிடைக்குமாறு செய்து அனுப்பி விட்டனன்.

அவரும், அவ்வாறே எழுந்தருளியிருந்து, திருவரங்கத்தந்தாதி, திருவரங்கத்துமாலை, திருவரங்கக்கலம்பகம்,
ஸ்ரீ ரங்கநாயகரூசல், திருவேங்கடமாலை, திருவேங்கடத்தந்தாதி, அழகரந்தாதி, நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி என்னும்
எட்டு நூல்களையும் (இந்த எட்டுநூல்களும், ‘அஷ்டப்பிரபந்தம்’ எனவும், ‘ஐயங்கார்பிரபந்தம்’ எனவும் வழங்கும் )
பரப் பிரஹ்ம விவேகம் முதலிய பல நூல்களையும் அருளிச்செய்து, பலநாள் வாழ்ந்திருந்தனர்.

இவர் திருவேங்கடமாலை முதலிய நூல்க ளியற்றியதைக் குறித்து ஒருசாரார் வழங்குவதொரு வரலாறு வருமாறு:-
இவர் ஸ்ரீரங்கநாதனுக்கே தொண்டராகி அப் பெருமானை யன்றிப் பிறிதொரு தெய்வத்தை மறந்துந்தொழாத மனவுறுதியுடையவராய்,
அப் பரமன் விஷயமாகவே அந்தாதியும் மாலையும் கலம்பகமும் ஊசலும் பாடிய பொழுது,
திருவேங்கடமுடையான் இவர் வாயால் தாம் பிரபந்தம் பாடப்பெற விரும்பித் தமது உண்மை வடிவத்துடன்
இவரது கனவில் தோன்றி ‘வேங்கடத்தின் விஷயமாகச் சிலபிரபந்தம்பாடுக’ என்று கட்டளையிட,
இவர் அதற்கு இணங்காமல் ‘அரங்கனைப் பாடிய வாயாற் *குரங்கனைப் பாடேன்’ என்றுகூறி மறுக்க,
(திருவேங்கடமுடையானைக் குரங்கனென்றது, குரங்குகளுடன் மலையில் வாழ்தலால்;
“மந்தியாய் வடவேங்கடமாமலை,” “வானரமும் வேடுமுடை வேங்கடம்” என்றார் ஆழ்வார்களும்.
குரங்குகள் தங்களுக்கு என்று வசிக்கும் இடம் இல்லாமல் கிளைக்கு கிளை தாவுவது போல்
ஆஸ்ரிதர்களைப் பிடிக்க முயன்று அவர்கள் திரு உள்ளம் தேடி திரிபவன் இவனே என்றவாறு )

திருவேங்கடமுடையான் எங்ஙனமாவது இவர்வாயாற் பாடல்பெற அவாக் கொண்டதுமன்றி,
எல்லாத் திருப்பதிகளிலும் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் ஒருவனே யென்று இவர்க்குத் தெரிவித்து
இவர் கொண்டுள்ள பேத புத்தியை அகற்றவுங் கருதியதனால், இவர்க்கு உடனே கண்டமாலையென்னுங் கொடியநோய் உண்டாகும்படி செய்ய,
அந்த வியாதியால் மிக வருந்திய இவர் அதன்காரணத்தை உணர்ந்து கொண்டு அப்பெருமான் பக்கல் தாம் அபசாரப்பட்ட அபராதம்
தீருமாறு உடனே திருவேங்கடமாலை திருவேங்கடத்தந்தாதி என்னும் பிரபந்தங்களை இயற்றி அப்பெருமானைத் துதிக்க,
அது பற்றித் திருவுள்ளமுவந்த திருவேங்கடமுடையான் உடனே இவரெதிரில் எழுந்தருளிக் காட்சிதந்து அநுக்கிரகிக்க,
(திருவேங்கடமுடையான் [ஸ்ரீநிவாசன்] ஐயங்கார்க்குச் சேவை சாதித்த இடம் – கோயிலில் சலவைக் கல்மண்டபப் பிராகாரமென்கிற
உட் பிரகாரத்தில் தென் கிழக்குப்பக்கத்தில் என்பர் )
அதனால் இவர் அப்பொழுதே அந்நோய் நீங்கப் பெற்றவராகி, பின்பு, அவ்வடமலைக்கு ஈடான தென்மலையின் விஷயமாக
அழகரந்தாதி பாடி, அப்பால் தமது பேத புத்தி யொழிந்தமை நன்கு விளங்க நூற்றெட்டுத் திருப்பதி யந்தாதி பாடினர்.

பரமத நிரஸநம் பண்ணி ஸ்வமதஸ்தாபநஞ் செய்தற் பொருட்டு இவர் பாடிய பாடல்களின் தொகுதியே,
பரப் பிரஹ்ம விவேக மெனப்படுவது.

விசுவரூப தரிசந பசு சம்வாதமென்னும் மறுபெயரை யுடைய பரப்ரஹ்ம விவேக மென்னும் நூலின் உரைத் தொடக்கத்தில்
அந்நூலின் வரலாற்றைக் குறித்து எழுதியுள்ள விவரத்தை அடியிற் காண்க:-

“திருவரங்கத்தமுதனார் திருப் பேரனாராகிய அழகிய மணவாளதாச ரென்கிற திவ்விய கவி பிள்ளைப் பெருமாளை யங்கார்
நம் பெருமாள் முதலிய சில திவ்விய தேசப்பெருமாள் களின் மீது தமிழ்ப் பிரபந்தங்கள் பல செய்தருளுங்காலத்தில்,
தமிழிலக்கண விலக்கியங்களைக் கற்றுவல்ல சிறந்த புலவர்கள் பலரும் இவருடைய கவிகளிற்
சொல் நோக்கு பொருள் நோக்கு முதலியவற்றைக் கண்டுங் கேட்டுங் கொண்டாடுவதை ஆனைக் காவிலிருக்கும்
ஆகமவாதிகள் கேள்விப்பட்டு ‘இப் படிப்பட்ட வித்துவானால் நம்முடைய ஜம்புகேசுவரச் சிவபெருமான்
மீது ஒரு பிரபந்தம் பாடுவித்துக்கொள்ளவேண்டும்’ என்னுங் கருத்துடையவர்களாய்
ஒருநாள் இவருடைய திருமாளிகையில் வந்து தங்கள்கருத்தை வெளியிட, அதுகேட்டருளி,

திரிகரணத்தாலுந் தேவ தாந்தரத்தைப் பற்றற விட்ட சுத்த சத்துவ தொண்டக் குல ஸ்ரீவைஷ்ணவ சிகாமணியாகிய ஐயங்கார்
புன்னகை கொண்டு ‘யாம் அரங்கனைப்பாடின வாயினால் மற்றொரு *குருங்கனைப் பாடுவதில்லையே’ எனத்
திருவாய் மலர்ந்தருள,

(குரங்கம் – மான்: வடசொல்; அதனை இடக்கையிலேந்தியுள்ளவன், குரங்கன்: எனவே, சிவபிரானாம்.
அன்றி, குரங்குமுகமுள்ள நந்திகேசுரனை அடிமையாகவுடையனாதல்பற்றியும்,
அநுமானாக அவதரித்தவ னாதல்பற்றியும், சிவபிரானைக் குரங்க னென்றன ரென்னலாம்.
கு – குற்சிதமான, ரங்கன் – அம்பலத்தையுடையான் என்றுங் கூறுவர்)

கேட்டு, ‘குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொள்ளுமவரைப் போல நம்முடைய பரமசிவத்தின் மீது
பாடல் பெற்றுக் கொள்ள வந்து குரங்கனென்னுஞ் சொல்லைப் பெற்றுக் கொண்டோமே’ என்று மனம் பொறாதவர்களாய்ச்
சடக்கென எழுந்திருந்து, ‘எவ்வகையினாலாவது உம்முடைய வாக்கினால் எங்கள் பரம சிவத்தின் மீது
ஒரு பாடலாவது பெற்றுக் கொள்ளுகிறோம்’ என்று சபதங்கூறித் தங்களிருப்பிடத்திற்குப் போய் அதற்கு வகை தேடிக் கொண்டிருந்தனர்கள்.

இப்படியிருக்கச் செய்தே, கோயிலில் உதயத்தில் திருக் காப்பு நீக்கி நம்பெருமாளுக்குச் செய்யுங் கைங்கர்யமாகிய
விசுவ ரூபதரிசநஞ் செய்விக்கப் போகிற சமயத்திற் கொண்டு போய் அர்ச்சகர் சமர்ப்பிக்கிற பொருள்களில் ஒன்றாகிய
கபிலை யென்கிற பசுவானது ஒருநாள் ஆனைக்காவைச் சார்ந்த ஒருபுலத்தில் மேய அதை மேற்கூறிய ஆகமவாதிகள் பிடித்து
இதனால் தாங்கள் கொண்டகருத்தை ஈடேற்றுவித்துக் கொள்ளலாமென நினைத்துக் கட்டி வைத்தனர்கள்.

அன்று இராத்திரி கோயிலில் அர்ச்சகர் முதலாயினோர் விசுவரூப தரிசந பசுவைக் காணாமல் தேடிக் கொண்டு போகையில்,
ஆனைக்காவி லிருக்கக் கண்டு ஆகமவாதியர்களைப் பசுவைக் கொடுக்கும்படி கேட்க,
அவர்கள் ‘உங்களுடைய பிள்ளைப் பெருமாளையங்கார் வந்து கேட்டால் தருகிறோம்’ என்று சொல்ல,
அதுகேட்டு, விசுவரூப தரிசநத்துக்கு ப்ராதக் காலத்தில் வேண்டுமே யென்னும் எண்ணத்தினால்
அதை மறுத்து ஒன்றும் பேசாமல் ஒத்துக் கொண்டு, பரபரப்புடன் சென்று ஐயங்காரிடத்தில் விண்ணப்பஞ்செய்ய,

“மறந்தும்புறந்தொழாமாந்தர்” என்கிறபடியே அந்தப் பிரபந்நநிஷ்டாநுபவராகிய வைதிக வைஷ்ணவரானவர் அதுகேட்டருளி,
‘துஷ்கர்ம காலம் தவிர மற்றைக் காலத்தில் ருத்திர பூமியில் அடிவைப்பது கூடுமோ?
அன்றியும், அவ்வாலயத்திற் பிரவேசிப்பது வைதிக வைஷ்ணவனுக்குத் தக்கதன்று:
‘ஆனை துரத்தி வந்தாலும் ஆனைக்காவில் நுழையாதே என்கிற பழமொழியையேனும் கேட்டதில்லையோ?
ஆதலால், அந்த ஆகமவாதியர்களைக் கோயிலிடத்தில் அழைத்துவாருங்கள்’ எனச் சொல்லினர்.

அவ்வாறே அந்த ஸ்ரீவைஷ்ணவர்களும் ஆனைக்காவிற் சென்று அவர்களுக்குச் சொல்ல, எவ்வகையாலாயினும்
ஐயங்காரால் ஒருபாடல் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவர்களும்,
‘நம்முடைய எண்ணம் நிறைவேறுங் காலம் இதுதான்’ என்று அதற்கு ஒத்துக்கொண்டு,
அதிக சந்தோஷத்தோடு அக் கபிலையையும் ஓட்டிக்கொண்டு, ஜயவிஜயர்கள் எழுந்தருளியிருக்கும்
சந்தநு மகாராஜமண்டபத்தில் வந்து சேர்ந்தனர்கள்.

ஐயங்காரும் அவ்விடத்தில் எழுந்தருளி, ‘கபிலையை விடுவதற்கு உங்களுடைய கருத்து ஏது?’ என்று கேட்டருள,
அவர்கள் ‘உம்முடைய வாக்கால் ஜம்புகேசுரச்சிவபெருமானாகிய எங்கள் தெய்வத்தின் மீது ஒருபாடல் பாடித் தருவீரேல்,
விசுவரூப தரிசனப் பசுவை நாங்கள் விடுவதற்கு யாதோராடங்கமு மில்லை’ என்று சொல்லினர்.
“பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த, நன்மை பயக்கு மெனின்” என்கிற குறளின்படி
அவர்கள் சொன்னதற்கு இணங்கினவரைப் போல நடித்து ஐயங்கார்
‘நம்பெருமாளுக்கு விசுவரூப தரிசனத்திற்கு மற்றாநாள் பிராதக் காலத்தில் ஆடங்கமாகிறபடியால்,
அப்பசுவை விடுவீர்களாகில், உடனே யாம் பாடுகிறோம்’ என,
‘எங்கள் சிவபெருமான்விஷயமாக நீர்பாடுவது யதார்த்தமாகில், அப்பாட்டில் இரண்டொரு சீரையேனும் முன்னே,
சொல்லுவீராகில் பசுவை விடுகிறோம்’ என்று அவர்கள் சொல்ல,
ஐயங்காரும் புன்னகைகொண்டு அவ்வாறே “மங்கை பாகன்” என்று முதலிரண்டு சீரை அருளிச் செய்த மாத்திரத்தில்,
அப்பசுவை விட்டனர்கள்.

உடனே ஐயங்காரும் முன் தாம் சொன்ன சீரைத் தொடங்கி,

“மங்கைபாகன் சடையில்வைத்த கங்கை யார்பதத்துநீர்
வனசமேவு முனிவனுக்கு மைந்தனான தில்லையோ
செங்கையா லிரந்தவன் கபால மாரகற்றினார்
செய்யதாளின்மல ரரன்சிரத்தி லான தில்லையோ
வெங்கண்வேழ மூலமென்ன வந்த துங்கள்தேவனோ
வீறுவாணனமரி லன்று விறலழிந்த தில்லையோ
அங்கண்ஞால முண்டபோது வெள்ளிவெற்பகன்றதோ
ஆதலா லரங்கனன்றி வேறுதெய்வ மில்லையே.

ஆதலால், சீவகோடியிற் சார்ந்தவரேயொழிய உங்கள் தேவதை பரமாத்மா வல்லர்” என்று இச்செய்யுளைச் சொல்லி
‘உலகத்துக்குப் பலதெய்வங்கள் உண்டோ? ஒரு தெய்வமேயாம்; அத்தெய்வம் திருவரங்கனே யல்லாமல் வேறில்லை’ என,

அது கேட்டு அவ்வாகமவாதியர்கள் ‘கிணறுவெட்டப்பூதம் புறப்பட்டாற்போல் இது என்ன விபரீதமாய் முடிந்ததே!’ என்று
சினங்கொண்டு அந்த ஆகமவாதிகளுக்குட் சிறந்த நிஷ்டாநுபவர்களாகிய சிலவித்வான்கள் வேதவிருத்தமாகிய
ஆகமபுராணங்களைக்கொண்டு புலவர் பெருமானாகிய ஐயங்காரோடு வாதுசெய்யத் தொடங்கினர்கள்.

அவ்வாதி சைவவித்வான்கள் கேட்ட வினாவுக்கு விடை சொல்லியருளிய உத்தரங்களைப் பின்னுள்ளோரும் தெரிந்துகொள்ளும்படி
பரமகாருணிகராகிய ஐயங்கார் வெள்ளைப்பாவாற் கூறினார்.
ஆதிசைவசமயநிஷ்டாநுபவர்களாகிய வித்துவான்கள் சொல்லிக் கொண்டுவந்த பிரச்நைகளுக்கு
வடமொழியிலும் தென்மொழியிலும் தெய்வப்புலமையுள்ள வீரவைஷ்ணவசிகாமணியாகிய ஐயங்கார் அருளிச்செய்த
விடைகளை மறுத்துச்சொல்ல ஒன்றுந் தோன்றாமல் அவ்வாதியர்கள் ‘ஓம்’ என்று தங்கள்தங்களிருப்பிடத்துக்குச் சென்றனர்கள்.”

‘திருநறையூர் நம்பி மேக விடு தூது’ என்றநூலும் இவர்செய்த தென்பர்.

இவர்செய்தனவாகத் தனிப்பாடல்களும் சில வழங்குகின்றன.

பின்பு இவர் ஒருநாள் தமது திருவடிகளிற் சம்பந்த முடையவர்களை நோக்கி
‘நமக்கு அந்திமதசை பசுவினாலே நேரிடும்’ என்று சொல்லி அப்படியே சக்கரவர்த்தித் திருமகனைச் சேவித்துக்கொண்டு
ஸ்ரீவைகுண்டநாதர் சந்நிதியிற் சேவிக்கும்பொழுது, ஒரு நொண்டிப்பசு வந்து தவறி இவர்மேல் விழ,
அது விழுந்ததனாலாகிய துன்பத்துடனே இவர்

“துளவ துளவவெனச் சொல்லுஞ் சொற் போச்சே
அளவி னெடுமூச்சு மாச்சே – முளரிக்
கரங்கால் குளிர்ந்ததே கண்ணும் பஞ்சாச்சே
இரங்கா யரங்கா வினி ”

என்று சொல்லித் திருநாட்டை யலங்கரித்தனர்.

இவர், சிலேடை திரிபு யமகம் அந்தாதி கலம்பகம் ஊசல் முதலியன விசித்திரமாகப் பாடுவதில் ஒப்புயர்வில்லாது மிக வல்லவர்;
இது, இவர் செய்துள்ள நூல்களால் இனிது விளங்கும்:
அன்றியும், ‘திவ்வியகவி’ என்ற இவரது பட்டப்பெயர்தானே இதனை வற்புறுத்தும்.
இவர் இயற்றிய திருவரங்கக்கலம்பகம் – வெண்பாப்பாடுதலில் வல்ல புகழேந்தியும்,
விருத்தம்பாட வல்ல கம்பரும், அந்தாதிக்கு எடுத்த ஒட்டக்கூத்தரும்,
கலம்பகத்திற்கென்று சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற இரட்டையர்களும்,
சந்தம்பாடுதலிற் சமர்த்தரான படிக்காசுப்புலவரும் முதலிய மகாவித்வான்கள் சேர்ந்து செய்தாலொத்த சிறப்பினை யுடையது.

இங்ஙன மிருக்க, ஒருசாரார் ‘ஐயங்கார் அம்மானையில் அடி சறுக்கினார்’ என்று குறை கூறுவது,
சிறிதும் சரியன்று; திருவரங்கக்கலம்பகத்திலுள்ள “தேனமருஞ்சோலை” என்ற தொடக்கத்து அம்மானைச் செய்யுளினது ஈற்றடியின்
பிற்பகுதியிற் பொருந்திய சிலேடைப் பொருள் நயத்தையும் சரித்திர வமைப்பையும் ஆழ்ந்த கருத்தையும் ஊன்றி நோக்குமிடத்து,
அங்ஙனம் இழித்துரைப்பாரது பழிப்புரை வெற்றுரையே யா மென்பது தெற்றென விளங்கும்:

அன்றியும், அக்கூற்று அழுக்காற்றினா லாகியதேபோலும;
அந்த அம்மானைச் செய்யுளின் அருமை பெருமைகள் இங்கு விரிப்பிற் பெருகும்.
இன்னும், இவர் செய்துள்ள பிரபந்தங்களெல்லாம், ஸ்ரீவைஷ்ணவசம்பிரதாயத்தில் உள்ள நம்மாழ்வார் முதலிய
ஆழ்வார்கள் பன்னிருவர் அருளிச்செய்த திவ்வியப்பிரபந்தங்களின் ஸாரார்த்தங்களும்,
நாதமுனிகள் முதலிய ஆசாரியர்களுடைய அருளிச்செயல்களின் விசேஷார்த்தங்களும் பொதிந்திருத்தல் மாத்திரமேயன்றி,
“சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடைநோக்கும் நடைநோக்கும் துறையின்நோக்கோடு எந்நோக்குங் காண இலக்கிய” மாகியும் இருப்பன.

இவர், ஸ்ரீவைஷ்ணவவிசிஷ்டாத்வைத மதஸ்தாபநாசாரியரான ஸ்ரீ பகவத்ராமாநுஜாசார்யரென்கிற
ஸ்ரீபாஷ்யகாரரது அந்தரங்கசிஷ்யரான கூரத்தாழ்வானுடைய குமாரராகிய ஸ்ரீபராசரபட்டரது சிஷ்ய ராதலாலும்,
அந்தப்பட்டரது திருவவதாரம் சாலிவாகனசகாப்தம் ஆயிரத்துநாற்பத்தைந்தில் என்று தெரிதலாலும்,
இவரதுகாலம் இற்றைக்குச் சற்றேறக் குறைய எழுநூற்றறுபது வருஷத்துக்குமுன்ன ராகின்றது;
(இப்பொழுது நிகழ்கிற சாலிசகம் – 1836.)
இவரை ஸ்ரீபாஷ்யகாரரது ஸ்ரீபாதத்தி லாசிரயித்தவர்களுட் பிரதானரும்,
இராமாநுசநூற்றந்தாதி அருளிச்செய்தவருமாகிய திருவரங்கத்தமுதனாரது திருக்குமார ரென்று பலரும்
திருப்பேரனாரென்று சிலரும் வழங்கிவருவதும், கீழ்க்கூறிய காலக்கணக்கையே வற்புறுத்தும்.

இவர்பேரனார், ஸ்ரீரங்கநாயகியாரூசல்செய்த கோனேரியப்பனையங்கார்.

இன்னும் இவரது வைபவவிசேஷங்களை வல்லார்வாய்க் கேட்டு உணர்க.

அடியில் வருகிற புலவர்புராணச் செய்யுள்கள் இங்குநோக்கத் தக்கவை:-

(1) ” தென்கலைவயிணவன் செகமெலாம்புக
ழின்கவிப்பிரபலன் இணையில்பட்டர்தம்
நன்கணத்தினர்களிலொருவன் நாரணன்
பொன்கழலன்றி மற்றொன்றும் போற்றிலான்.

(2) மருவழகியமணவாளதாசனென்
றொருபெயர்புனைந்தவன் உரைக்குமோர்சொலாற்
பொருள்பலதருங்கவிபொறிக்கும்பொற்பினிற்
பெருமிதனெனப் பலர்பேசும் பெற்றியான்.

(3) செவ்வியசொற்சுவைசிறிதுந்தேர்ந்திடா
தவ்வியப்போர்பொருமவர்களன்றிமற்
றெவ்வியற்புலவருமிசைந்துநாடொறுந்
திவ்வியகவியெனச்செப்புஞ்சீர்த்தியான்.

(4) தேனையுமமுதையுமனையதீஞ்சொலோர்ந்து
ஆனையின்கன்றெனவமைக்கும்பாடலான்
ஏனையபாடலொன்றேனுமோதிலான்
பூனைபோல்வஞ்சனைப்புந்திகொண்டிலான். ”

இவரை மிகுதியாகச் சிவதூஷணை செய்கின்றவ ரென்று சைவர்கள் பழித்தற்குப் புலவர் புராணமுடையார்
கூறும் சமாதானத்தை அடியில் வருகின்ற செய்யுள்களிற் காணலாம்:-

(15) “சிவனைநிந்தனைசெய்தவனேயென
இவனைச்சிற்சிலிளஞ்சைவரேசுவார்
அவன்தன்மாயவனாகத்திற்பாதியென்று
உவந்துபாடியபாக்களுமுள்ளவே.

(16) என்றென்றுந்தனதிட்ட தெய்வத்தையே
நன்றென்றேத்திடல்ஞானிகள்சம்மதம்
அன்றென்றோதவொண்ணாததனாலவன்
குன்றென்றச்சுதனைக்குறிக்கொண்டதே.

(17) சைவரிற்சிலர் தாமரைக்கண்ணனை
வைவதொப்ப வயிணவரிற்சிலர்
மைவனக்களவள்ளலைநிந்தனை
செய்வதுண்டு மதங்கொண்டசிந்தையால்.

(23) திரிவுசொற்றிறந்தேடித்தினந்தினம்
அரியின்மேற்கவிபாடிடுமந்தணன்
கரிவலஞ்செய்கருவைமன்றன்னிலும்
பெரிதுநிந்தனைபேசிலனுண்மையே.

(24) வளங்குலாந் துறைமங்கலவாசன்போல்
உளங்கனன்றரியன்பரொருவரும்
களங்கறுத்தவராயிரர்க்காதுதல்
விளங்கொர்பாடல்விளம்பிலர்மெய்ம்மையே. ”

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி – -1-20-

January 22, 2022

காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்|
ஸ வாஸுதேவோ ரங்கேச: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்||
விமானம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்|
ஸ்ரீரங்கசாயி பகவாந் ப்ரணவாத்த ப்ரகாசக: ||

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரெங்க மிவா பரம்
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடம் ஈஷ்யதே

———

திரு அரங்கா உறை மார்பா திசை முகன் சேவிப்ப கந்
திருவர் அங்கு ஆதரித்து இன்னிசை பாட திருக் கண் வளர்
திருவரங்கா வுன் பழ அடியேற்கு அருள் செய்ய எழுந்
திரு வரம் காதலித்தேன் உனக்கே தொண்டு செய்வதற்கே–1-

திரு – திருமகள்,
அரங்கு ஆ – தான் வசித்தற்கு உரிய இடமாக (க்கொண்டு),
உறை – வசிக்கப் பெற்ற,
மார்பா – திருமார்பை யுடையவனே!
திசைமுகன் சேவிப்ப – பிரமன் தரிசித்து வணங்கவும்,
கந்திருவர் அங்கு ஆதரித்து இன் இசை பாட – கந்தருவர்கள் அவ்வாறே (தரிசித்து வணங்கிப்) பக்தி கொண்டு
இனிமையான கீதம் பாடவும்,
திரு கண் வளர் திரு அரங்கா – திருவரங்கமென்னுந் திருப்பதியில் அழகாகப் பள்ளி கொண்டு யோக நித்திரை செய்தருள்பவனே!
உனக்கே தொண்டு செய்வதற்கு வரம் காதலித்தேன் – (யான்) உனக்கே அடிமை செய்யுமாறு வரம் பெற ஆசைப்பட்டேன்:
உன் பழ அடியேற்கு அருள் செய்ய எழுந்திரு – நினது பழமையான அடியவனாகிய எனக்குக் கருணை செய்தற்கு எழுந்திருப்பாயாக; (எ – று.)

முதல் -வரி -திருவரங்கா -திரு அரங்கு ஆ -திரு மகள் தான் வசித்தற்கு இடமாக கொண்டு
இரண்டாம் வரி -திருவரங்கா தரித்து -கந்தருவர் அங்கு ஆதரித்து
மூன்றாம் வரி -திருவரங்கா -அவனையே குறித்து அருளி
நான்காம் வரி -திருவரங்கா -எழுந்திரு-உனக்கே தொண்டு செய்வதற்கு வரம் காதலித்தேன் – வரம் பெற ஆசைப்பட்டேன்-

‘திரு என்பது – கண்டாரால் விரும்பப்படுந் தன்மை நோக்கம்: என்றது, அழகு;
இஃது என்சொல்லியவாறோ வெனின், –
யாவனொருவன் யாதொரு பொருளைக் கண்டானோ அக் கண்டவற்கு அப் பொருள்மேற் சென்ற விருப்பத்தோடே கூடிய அழகு.
அதன் மேல் அவற்கு விருப்பஞ்சேறல் அதனிற் சிறந்த உருவும் நலனும் ஒளியும் எவ்வகையானும் பிறிதொன்றற்கு இல்லாமையால்’,
‘எல்லாராலும் விரும்பப்பட்ட அழகு அவட்கு உண்டாகையாலே திருமகள் என்று பெயராயிற்று’ என்பது, திருக்கோவையார் பேராசிரியருரை.
“அகலகில்லே னிறையு மென் றலர்மேன்மங்கை யுறை மார்பா” என்றாற்போல, ‘திருவரங்காவுறைமார்பா’ என்றார்.
அரங்கு – ரங்க மென்ற வடசொல்லின் விகாரம்: இதற்கு – கூத்தாடுமிடமென்றபொருளும் உண்டு;
ஆ – ஆக என்பதன் விகாரம்.
இனி, அரங்கா – அழுந்தி யெனினுமாம்; சிறிதுபொழுதும் விட்டுநீங்காமல் நிலையாக என்றபடி:
ஒருசொல்; செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு இறந்தகாலவினையெச்சம்:
அரங்கு – வினைப்பகுதி, ஆ என்ற விகுதியே இறந்தகாலங்காட்டும். உறை மார்பு – வினைத்தொகை, இடப்பெயர் கொண்டது.

“எம்மாண்பிலயன் நான்கு நாவினாலுமெடுத்தேத்தி யீரிரண்டுமுகமுங் கொண்டு,
எம்மாடுமெழிற்கண்களெட்டினோடுந் தொழுதேத்தி யினிதிறைஞ்சநின்ற செம்பொன்,
அம்மான்றன் மலர்க் கமலக் கொப்பூழ் தோன்ற வணி யரங்கத்தரவணையிற் பள்ளிகொள்ளு, மம்மான்”,

“ஏதமில் தண்ணுமை யெக்கம் மத்தளி யாழ் குழல் முழவமோ டிசை திசை கெழுமிக்,
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கெந்தருவரவர் கங்குலுமெல்லாம்,
மாதவர் வானவர் சாரண ரியக்கர் சித்தரு மயங்கினர் திருவடிதொழுவான்,
ஆதலிலவர்க்கு நாளோலக்கமருள அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே” என்ற ஆழ்வாரருளிச் செயல்களை அடியொற்றி,
‘திசைமுகன் சேவிப்பக்கந்திருவரங் காதரித்தின்னிசைபாடத் திருக்கண்வளர் திருவரங்கா எழுந்திரு’ என்றார்.

திசைமுகன் – நான்கு திசையையும் நோக்கிய நான்குமுகமுடையவன்;
எம் பெருமானைத்துதித்தல் முதலியன செய்தற்கு வேண்டிய கருவியிற் குறைவற்றவனென்பது இதில்தொனிக்கும்.
சேவிப்ப, பாட – வினைச் செவ்வெண்.
கந்தர்வர் என்ற வடமொழி, யமக நயத்தின் பொருட்டு, கந்திருவரென விகாரப்பட்டது;
பதினெண்வகைத் தேவ கணங்களுள் ஒருசாரார் இவர்: இசை பாடுதலிற் சிறந்தவர்.
அங்கு – அப்பிரமன் போலவே யென்றபடி; அவ்விடத்திலே யெனினுமாம்: அசையாகவுங் கொள்ளலாம்.

உன் பழவடியேன் –
“எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்ப னேழ் படிகால் தொடங்கி வந்து வழி வழியாட்செய்கின்றோம்” என்றபடி
வம்ச பரம்பரையாக நெடுங்காலமாய் உனக்கு அடிமைசெய்துவருகிற தொண்டக்குலத்தில் தோன்றிய நான் என்றபடி.
அழகிய மணவாள தாசர் பெரியபெருமாள் திருவடிகளிலே அடிமை செய்ய ஆசைப்பட்டு அருகிற்சென்றவளவிலே,

அர்ச்சா ரூபியான அப்பெருமான் எதிர்முகங் கொடுத்தல், திருக்கண்களாலே குளிர நோக்குதல், கைகளை நீட்டி யணைத்தல்,
குசல ப்ரச்நம் பண்ணுதல் முதலியன செய்யாதே பள்ளி கொண்டிருக்க, அவனைப் பள்ளி யுணர்த்தி
அவனுணர்ந் தருளும் போதை யழகு கண்டு அவன் உகந்து வாய்திறந்து ஏவுங் குற்றேவல்களைச் செய்ய வேண்டி,
அவனை ‘எழுந்திரு’ என எழுப்புகிறார். எழுந்திருத்தல் – துயிலொழிதல்.
இதில், இரு என்பது – துணைவினை.

இனி, எழுந்து இரு – நாளோலக்கமாக வீற்றிரு என்றுங் கொள்ளலாம்.
“கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலங்கிடத்தி உன் திருவுடம்பசையத்,
தொடர்ந்து குற்றே வல் செய்து தொல்லடிமை வழி வருந்தொண்ட ரோர்க்கருளித்,
தடங்கொள் தா மரைக் கண் விழித்து நீயெழுந் துன் தாமரை மங்கையு நீயும்,
இடங்கொள் மூவுலகுந்தொழ இருந்தருளாய் திருப்புளிங்குடிக்கிடந்தானே” எனப்பள்ளி கொண்ட பெருமாளை
நம்மாழ்வார் துயிலுணர்த்தியெழுப்பி அடிமைசெய்யப் பரரித்தமை காண்க.

“மறந்தும் புறந்தொழா மாந்தர்” ஆதலால்,
“எற்றைக்குமேழேழ்பிறவிக்கு முன்றன்னோ, டுற்றோமேயாவோ முனக்கே நாமாட்செய்வோம்” என்றாற்போல,
“உன்பழவடியேன் உனக்கே தொண்டு செய்வதற்கு வரங் காதலித்தேன்” என்றார்;
ஏ – பிரிநிலை. வரம் – வேண்டுவன கொள்ளுதல்.

எல்லா நூல்களும் மங்கலமொழி முதல் வகுத்துக் கூறவேண்டுவது மரபாதலால், ‘திரு’ என்று தொடங்கினார்;
“சீர் மணி பரிதி யானை திரு நிலம் உலகு திங்கள், கார் மலை சொல் எழுத்துக் கங்கை நீர் கடல் பூத் தேர் பொன்,
ஏருறு மிவை மூவாறும் இதிற்பரியாயப்பேரும், ஆரு மங்கலச்சொல் செய்யுளாய்ந்து முன்வைக்க நன்றாம்” என்பது காண்க.

———–

செய்யவளைக் குருவின் இன்னருளால் திருத் தாள் வணங்கி
செய்ய வளைக் குலம் சூழ் அரங்க ஈசன் சிறிது அமுது
செய்ய வளைக்கும் புவிக்கும் அங்காந்த செவ்வாய் முகுந்தன்
செய்ய வளைக்கும் சிலம்பு அணி பாதங்கள் சேர்ந்தனமே -2-

குரு இன் அருளால் – ஆசாரியருடைய இனிமையான கிருபா கடாக்ஷத்தினால்,
செய்யவளை திரு தாள் வணங்கி – திருமகளைத் திருவடி தொழுது, –
செய்யவளை குலம் சூழ் அரங்க ஈசன் – கழனிகளிலுள்ள சங்கினங்கள் சூழப் பெற்ற திருவரங்கத்து நாதனும்,
அளைக்கும் புவிக்கும் அமுது செய்ய சிறிது அங்காந்த செம்வாய் முகுந்தன் – வெண்ணையையும் பூமியையும் உண்ணுதற்குச் சிறிது
திறந்த சிவந்த வாயை யுடைய முகுந்தனென்னும் ஒரு திருநாம முள்ளவனுமான திருமாலினது,
செய்ய வளைக்கும் சிலம்பு அணி பாதங்கள் – செவ்வியை யுடைய வளைந்துள்ள சிலம்பென்னும் ஆபரணத்தை யணிந்த திருவடிகளை,
சேர்ந்தனம் – அடைந்தோம்; (எ – று.)

ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்று அருளி செய்கிறார் -இத்தால்
சேர்ந்தனம் -முன்னோரும் தாமும் -பின்னோரும்
முதல் வரி செய்யவள் -செந்நிறம் உடையவள் -அவள் தாளை வணங்கி -அவளைத் தாளாலே சென்று வணங்கி
இரண்டாம் வரி -செய்ய வளை -கழனிகளில் உள்ள சங்கினங்கள் சூழப் பெற்ற திருவரங்கம்
மூன்றாம் வரி -அளைக்கும் புவிக்கும் -வெண்ணெயையும் பூமியையும் உண்ண -அமுத செய்ய சிறிது அங்காந்த செவ்வாய் முகுந்தன்
நான்காம் வரி -செவ்வியை உடைய வளைந்துள்ள சிலம்பு அணிந்த திருவடிகளை சேர்ந்தனம்

செய்ய -சிலம்புக்கும் திருப் பாதத்துக்கும் அடை மொழி-

ஸதாசாரியனை யடுத்து அவனபிமானத்தை அவனருளாற்பெற்று அது மூலமாக வுண்டான பிராட்டி புருஷகார பலத்தாலே
பெருமாள் திருவடியிலே சரண் புகுந்தோ மென்றார்.
ஆக, இதனால், ஆசார்யாபிமானமே உத்தாரக மென்னும் அர்த்தம் சொல்லியதாயிற்று.
ஈற்று ஏகாரம் – தேற்றவகையால், இனி எமக்கு ஒரு குறையுமில்லை யென்ற பொருளைத் தொனிப்பிக்கும்,
சேர்ந்தனம் என்ற தன்மைப் பன்மை – தனது குலத்து முன்னோரையும் பின்னோரையும் தனது அடியார்களையும் உளப்படுத்தும்.
வணங்கிச் சேர்ந்தனம் என இயையும்.

செய்யவள் – செந்நிறமுடையவள்: செம்மையென்னும் பண்பினடியாப் பிறந்த பெயர்.
குரு என்ற வடசொல் – அஜ்ஞாநமாகிய அகவிருளை யழிப் பவனென்று அவயவப்பொருள்படும். (கு – இருள், ரு – ஒழிப்பவன்.)
இன் அருள் – பண்புத்தொகை; இன் – சாரியையெனக் கொண்டு குருவினது அருளென்றால், னகரமெய் – விரித்தல் விகாரமாம்.

செய்யவளைத் தாளை வணங்கி என இரண்டு செயப்படு பொருள் வந்த வினையாகவாவது,
செய்யவளினது தாளை வணங்கி என உருபு மயக்க மென்றாவது, செய்யவளைத் தாளிலே வணங்கி யென்றாவது கொள்க.

செய்ய என்ற சொல் – இரண்டாமடியில் செய் என்னும் பெயரின் மேற் பிறந்த குறிப்புப் பெயரெச்சமும்;
மூன்றாம் அடியில், செய் என்னும் வினைப் பகுதியின் மேற் பிறந்த குறிப்புப் பெயரெச்சமும்;
மூன்றாம் அடியில், செய் என்னும் வினைப்பகுதியின் மேற் பிறந்த தெரி நிலை வினையச்சமும்
நான்காமடியில், செவ்வியை யுணர்த்தும் செம்மை யென்னும் பண்பின் மேற் பிறந்த குறிப்புப் பெயரெச்சமுமாம்;

வயலை ‘செய்’ என்பது பன்றிநகாட்டுத் திசைச் சொல்.
வளை – வளைந்துள்ளது; உட்சுழிந்துள்ளது. ‘செய்ய வளைக்குலஞ்சூழரங்கம்’ என்பது, நீர்வளமிகுதியை உணர்த்தும்.
அரங்கேசன் – குணசந்தி பெற்ற வடமொழித்தொடர்.
பெரியோர் உண்ணுதல், அமுதுசெய்தலெனப்படும்: உபசாரச்சொல்.

வெண்ணெ யுண்ண வாய் திறந்தது, கிருஷ்ணாவதாரத்திலே திருவாய்ப்பாடியில்வளர்ந்த குழந்தைப் பருவத்திலென்க.
புவி என்ற சிறப்புப்பெயர், பொதுப்பொருளின் மேலதாய் உலக மென்றவாறாம்.
அதனை யுண்ண வாய்திறந்தது, பிரளயகாலத்திலென்க.
பிரமன் முதலான சகலதேவர்களுமுட்பட யாவும் அழிந்து போகிற யுகாந்த காலத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு அண்டங்களை
யெல்லாம் தன் வயிற்றில் வைத்து அடக்கிக் கொண்டு பிரளயப் பெருங்கடலில் ஆதிசேஷாம்சமான தோராலிலையின் மீது
யோகநித்திரை செய்தருள்கின்றன னென்பது, நூற்கொள்கை.
அங்காந்த, அங்கா – பகுதி.
முகுந்தன் – (தன் அடியார்க்கு), மு – முத்தியின்பத்தையும், கு – நிலவுலகவின்பத்தையும், தன் – கொடுப்பவன்.
செய்ய என்பது – சிலம்புக்கும் பாதத்துக்கும் அடைமொழியாகத் தக்கது,
சிலம்புவது, சிலம்பு எனக் காரணக் குறி; நூபுரம், பாத தண்டை.

————-

தனமாதர் அம் சொல் குதலை புதல்வர் தரணி இல்லம்
தனம் ஆதரம் செயும் வாழ்வு அஞ்சியே தஞ்ச நீ எனப் போந்
தனம் ஆ தரங்கிக்க வெற்பு எடுத்தாய் தண் அனந்த சிங்கா
தன மாதரங்கம் உள்ளாய் அரங்கா முத்தி தந்து அருளே —-3-

ஆ பசுக்கள்,
தரங்கிக்க – (இந்திரன் பெய்வித்த மழையி னால்) நிலை கலங்க,
வெற்பு எடுத்தாய் – (அவற்றைப் பாதுகாத்தற்பொருட்டுக்) கோவர்த்தந கிரியைக் குடையாக எடுத்துப் பிடித்தவனே!
தண் அனந்த சிங்காதன – ஆதிசேஷனை மெத்தென்ற சிங்காதனமாக வுடையவனே!
மாதரங்கம் உள்ளாய் – பெரிய கடலிற் பள்ளி கொண்டுள்ளவனே!
அரங்கா – ஸ்ரீரங்கநாதனே! –
தனம் மாதர் – கொங்கை யெழிலை யுடைய மகளிரும்,
அம் சொல் குதலை புதல்வர் – அழகிய மழலைச் சொற்களை யுடைய பிள்ளைகளும்,
தரணி – விளை நிலமும்,
இல்லம் – வீடும்,
தனம் – செல்வமும் ஆகிய இவற்றில்,
ஆதரம் செயும் – ஆசை கொள்ளுகிற,
வாழ்வு – (நிலையற்ற இப்பிரபஞ்ச) வாழ்க்கைக்கு,
அஞ்சி – பயந்து,
நீயே தஞ்சம் என போந்தனம் – நீயே ரக்ஷகமென்று கொண்டு (வந்து உன்னைச்) சரணமடைந்தோம்;
முத்தி தந்தருள் – (அங்ஙனம் அடைந்த எமக்கு) மோட்சத்தைக் கொடுத்தருள்வாய்; (எ – று.)

தரங்கிக்க -நிலை கலங்க -இந்த்ரன் பெய்வித்த மழையினால்
மாதரங்கம் -பெரிய கடலிலே
அநந்தன் -ந அந்த -பிரளயத்திலும் அழிவில்லாதவன்
ஆதரம் செயும் வாழ்வு அஞ்சியே-ஆசை கொள்ளுகிற நிலை யற்ற சம்சார வாழ்வுக்கு அஞ்சியே

பற்றற்று உன்பக்கல் சரணம் புக்கோம்; நீ எமக்கு நற்கதி யருளக் கடவை யென்பதாம்.
உன்னை நம்பி யடுத்துள்ள உயிர்களைச் சிரமம் பாராது துயர் நீக்கிப் பாதுகாத்தருளுந் தன்மை யுடையாய்
என்னுங்கருத்துத் தோன்ற, ‘ஆ தரங்கிக்க வெற்பெடுத்தாய்’ என விளித்தார்: கருத்துடை யடை கொளி யணி.

ஆதிசேஷன் திருமாலுக்குப் பலவகைக் கைங்கரியங்கள் புரியும் வகையை
“சென்றாற் குடையாம். இருந்தாற் சிங்காதனமாம், நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும்,
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம்புல்கும், அணையாம் திருமாற்கு அரவு” என்றதனால் அறிக.

திருப்பாற்கடலிலும் பிரளயப் பெருங்கடலிலும் திருமால் பள்ளி கொள்கின்றன னென்பது, நூற்கொள்கை.
குதலை – நிரம்பாமென்சொல். “குழலினிது யாழினி தென்ப தம்மக்கள், மழலைச்சொற் கேளாதவர்,”
“மக்கள் மெய் தீண்ட லுடற்கின்பம் மற்றவர், சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு” என்றபடி
தம் புதல்வருடைய மழலைச் சொல் தந்தை தாயர்க்கு மிக்க இனிமை விளைத்தலால், ‘அஞ்சொற்குதலைப் புதல்வர்’ என்றார்.
இல்லம், அம் – சாரியை. இரண்டாமடியில், ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது.
தரங்கிக்க – அலைய; தரங்கம் என்னும் பெயரின் மேற்பிறந்த செயவெனெச்சம்.
தரங்கம் – அலை: வடசொல்; கடலுக்குச் சினையாகுபெயர்.
அநந்தன் என்ற வடமொழிப்பெயர், ந + அந்த என்று பிரிந்து, (பிரளயத்திலும்) அழிவில்லாதவ னென்று பொருள்படும்.
முக்தி என்ற வட சொல்லுக்கு – பற்றுக்களை விட்டு அடையும் இடமெனக் காரணப் பொருள்.

———–

தந்தமலைக்கு முன் நின்ற பிரான் எதிர் தாக்கி வெம்போர்
தந்தமலைக் குமைத்தான் அரங்கேசன் தண் பூவினிடை
தந்தமலைக்கு தலைவன் பொற் பாதம் சரண் என்று உய்யார்
தந்தமலைக்கும் வினையால் நைவார் பலர் தாரணிக்கே ——-4-

தாரணிக்கு – பூமியில்,
பலர் – அநேகர், –
தந்தம் மலைக்கு முன் நின்ற பிரான் – தந்தங்களை யுடையதொரு மலை போன்ற யானைக்கு
(கஜேந்திராழ்வானுக்கு) எதிரில் எழுந்தருளிக் காட்சி தந்த பெருமானும்,
எதிர் தாக்கி வெம் போர் தந்து ம(ல்)லை குமைத்தான் – எதிர்த்து மோதிக் கொடிய போரைச் செய்த மல்லர்களைச் சிதைத்து அழித்தவனும்,
தண் பூவின் தந்து இடை அமலைக்கு தலைவன் – குளிர்ச்சியான தாமரை மலரில் வீற்றிருக்கின்றவளும் நூல் போன்ற (மிக மெல்லிய)
இடையையுடையவளும் குற்றமற்றவளுமான திருமகளுக்குக் கொழுநனும் ஆகிய,
அரங்கேசன் – ஸ்ரீரங்கநாதனுடைய,
பொன் பாதம் – அழகிய திருவடிகளை,
சரண் என்று – சரணமாக அடைந்து,
உய்யார் – உய்வு பெறாராய்,
அலைக்கும் தம் தம் வினையால் நைவார் – வருத்துகிற தங்கள் தங்கள் பூர்வ கர்மங்களினால் வருந்துவார்கள்.

முதல் வரி -தந்த மலைக்கு முன் நின்ற பிரான் -தந்தங்களை உடைய தொரு மலை போன்ற
யானைக்கு -கஜேந்திர ஆழ்வானுக்கு எதிரில் எழுந்து அருளி காட்சி தந்த பெருமானும்
இரண்டாம் வரி -எதிர் தாக்கி வெம் போர் தந்த மல்லைக் குமைத்தான் –
மூன்றாம் வரி -தண் பூவின் தந்து இடை அமலைக்கு தலைவன் -குற்றமற்ற திருமகளுக்கு கொழுநன்
நான்காம் வரி -அலைக்கும் தம் தம் வினையால் நைவார்
வெண்ணெய் வைத்துக் கொண்டு நெய்க்கு அழுவார் போலே சரண் புக்க மாதரத்தில்
சரணாகதருடைய கருமங்களை ஒழித்து முக்தி தருபவன் திருவடிகள் இருக்க

வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அழுவார் போலே, சரண் புக்க மாத்திரத்தில் அச் சரணாகதருடைய
கருமங்களை யெல்லாம் ஒழித்து முத்தி தருபவையான எம்பெருமானது திருவடிகள் இருக்க
அவற்றை யடைந்து பிறவிப் பெருங்கடல் கடந்து வாழாது உலகத்திற் பேதையர் பலர்
கரும வசப்பட்டு வருந்துவது என்னே யென்று உலகை நோக்கி இரங்கிய படியாம்.

‘தந்தமலை’ எனவே, யானை யென்றாயிற்று; மலை – உவமை யாகு பெயர்: பருமை வலிமைகளால் உவமம்.
முன் – இடமுன்.
இரண்டாமடியில், மலை என்பது – தொகுத்தல். மல் – ஆயுதமின்றி உடல் வலிமை கொண்டு செய்யும் போர்;
இங்கு அப்போருடையார்க்கு ஆகு பெயர்.
இடைத்தந்து – முன் பின் னாகத் தொக்க உவமைத் தொகை; தந்து – வடசொல்.
அமலை – அமலா என்ற வடசொல் ஆவீறு ஐயாயிற்று; இப் பெயர், தூய்மை யுடைமையை உணர்த்தும்.
சரண் – சரணமென்ற வடசொல்லின் விகாரம். தாரணிக்கு – உருபு மயக்கம். தரணி என்ற வடசொல் விகாரப்பட்டது.

———–

தாரணி தானவன் பால் இரந்தான் சங்கம் வாய் வைத்து ஒன்னார்
தாரணி (தார் அணி )தான் அவம் செய்தான் அரங்கன் தமர்கள் பொருந்
தாரணி தான ( பொருந்தார் அணிது ஆன அமராவதியும் ) தரு நிழலும்
தாரணி தானம் அயிராவதமும் தருகினுமே——-5–

தானவன் பால் – அசுரனான மகாபலியினிடத்து,
தாரணி இரந்தான் – (மூன்று அடி) நிலத்தை யாசித்தவனும்,
சங்கம் வாய் வைத்து – (தான் தனது) திவ்விய சங்கத்தை வாயில் வைத்து ஊதிய மாத்திரத்தாலே,
ஒன்னார் தார் அணி அவம் செய்தான் – பகைவர்களுடைய படை வகுப்பி னொழுங்கைப் பழுது படுத்தியவனும் ஆன,
அரங்கன் – ரங்கநாதனுடைய,
தமர்கள் – அடியார்கள், –
அணிது ஆன அமராவதியும் – அழகியதாகிய சுவர்க்க லோகத்தையும்,
தரு நிழலும் – (அங்குள்ள) கற்பக விருக்ஷங்களின் நிழலையும்,
தார் அணி தானம் அயிராவதமும் – கிண்கிணி மாலையை யணிந்ததும் மதங்கொண்டதுமான ஐராவதமென்னுந் தெய்வ யானையையும்,
தருகினும் – (வலியக்) கொடுத்தாலும்,
பொருந்தார் – (மனமிசைந்து அவற்றைப் பெற) உடன் படார்; (எ – று.)

தாநவன் -காசியப முனிவரது மனைவி தநு என்பவளது மரபினன்-அசுரனான மகாபலியிடம் நிலத்தை யாசித்தவனும்
அணிது -அணித்து -சமீபத்தில் உள்ள -இந்திர லோகம் அமராவதி மற்றவற்றை விட அருகில் உள்ளதால் –
அணிது -எளிது என்னும் பொருளிலும் கொள்ளலாம்
பாரிஜாத தருவை கொணர்கையில் எதிர்த்த -சங்க நாதத்தினால் பங்கப் படித்தினான்
மகா பாரத யுத்தத்திலும் சங்கு ஒலியால் அச்சப் படுத்தியும் -அறிவோம்

திருமாலடியார்கள் மீளா வுலகமாய்ப் பேரின்பத்திற்கு உரிய இடமான பரமபதத்திற்குச் செல்ல இணங்குவரே யன்றிச்
சில காலம் சிற்றின்பங்களை யனுபவித்தற்கே உரிய சுவர்க்க லோகத்து இந்திர பதவியைக் கொடுத்தால்
அதனையும் சிறிதும் பொருள் செய்யார் என்பதாம்;
“ஆனாத செல்வத் தரம்பையர் கடற்சூழ, வானாளுஞ் செல்வமு மண்ணரசும் யான் வேண்டேன்” என்று
குலசேகராழ்வார் அருளிச் செய்தமை காண்க;
பிரமன் கட்டளையால் இந்திரன் சரபங்க மகரிஷியைச் சத்திய லோகத்துக்கு அழைத்தபோது,
மகா விஷ்ணு பக்தரான அம் முனிவர் அம் மேலுலகையுமுட்பட இகழ்ந்து
“அற்பங்கருதேன்” என்றும்,
“மறுகாநெறி யெய்துவென்” என்றும் உரைத்ததும் உணரத்தக்கது.

தாநவன் – (காசியப முனிவரது மனைவிகளுள்) தநுவென்பவளது மரபினனென்று பொருள்படும்; வடமொழித் தத்திதாந்தநாமம்.
ஒன்னார் – ஒன்றார் என்பதன் மரூஉ. அவம் செய்தான் – பயனிலதாக்கியவன். தமர் – தம்மவர்: கிளைப்பெயர்.
அணிது – அண்ணிது; அதாவது – சமீபத்திலுள்ளது என்றும் உரைக்கலாம்.
எல்லா வுலகங்களினும் மேலுள்ளதான முத்தி யுலகத்தின் சேய்மையை நோக்குமிடத்து, இந்திரனது நகரமான
அமராவதி மிக அருகிலுள்ளதாதல் காண்க.
சேணுலகமாகிய முத்தியைப் பெற வல்ல பாகவதர்க்குச் சுவர்க்க லோகம் அரியதொன்றன் றாதலால்,
எளிது என்னும் பொருளில் ‘அணிது’ என்றதாகவுங் கொள்ளலாம்.
சங்கம், அமராவதி, தரு, தாநம், ஐராவதம் – வடசொற்கள். அமராவதீ என்ற பெயர் – தேவர்களை யுடையதென்று காரணப் பொருள்படும்.
சுவர்க்க லோகத்தில் பஞ்சதேவ தருக்களின் நிழல் இந்திரன் அரசு வீற்றிருக்கு மிடமாதலை,
“இன்றளிர்க் கற்பகநறுந்தே னிடைதுளிக்கு நிழலிருக்கை” என்றதனாலும் அறிக.
அயிராவதம் – முதற்போலி. இது, இந்திரனது வெள்ளை யானை; நான்கு தந்தங்களை யுடையது.
தருகின், கு – சாரியை. உம்மை – உயர்வு சிறப்பு.

கண்ணன் சத்திய பாமைக்காகப் பாரிசாத தருவைத் தேவ லோகத்தினின்று பெயர்த்துப் பூலோகத்துக் கொணர்கையில்
வந்து எதிர்த்துப் போர் செய்த சகல தேவசைநியங்களையும் தனது சங்க நாதத்தினாலே பங்கப்படுத்தினமையும்,
மகா பாரத யுத்தத்தில் கண்ணன் அருச்சுனனுக்குச் சாரதியாய் நிற்கையில் தனது சங்கினொலியாற்
பகைவர்களை அஞ்சுவித்து அழித்தமையும், மற்றும் பல போர்களில் இங்ஙனஞ் செய்தமையும் பற்றி,
‘சங்கம் வாய்வைத் தொன்னார் தாரணி தானவஞ்செய்தான்’ என்றார்.

“அருட்கொண்ட லன்னவரங்கர்சங்கோசையிலண்டமெல்லாம்,
வெருட்கொண்டிடர்படமோ கித்துவீழ்ந்தன வேகமுடன்,
தருக் கொண்டு போகப் பொறாதே தொடருஞ் சதமகனும்,
செருக் கொண்ட முப்பத்து முக்கோடி தேவருஞ் சேனையுமே,”

தருண வாள் நிருபர் மயங்கி வீழ் தர வெண் சங்கமுமுழக்கி” என்பன காண்க.

———-

தருக காவலா வென்று புல்லரைப் பாடித் தன விலை மா
தருக்கு ஆவலாய் மயிலே குயிலே என்று தாமதராய்
தருக்கா அலா நெறிக்கே திரிவீர் கவி சாற்றுமின் பத்
தருக்கு ஆ அலாயுதன் பின் தோன்று அரங்கர் பொன் தாள் இணைக்கே ——–6–

தரு காவலா என்று புல்லரை பாடி – கற்பக விருக்ஷத்துக்குத் தலைவனான இந்திரனே யென்று அற்ப மனிதர்களைப் புகழ்ந்து பாடியும்,
தனம் விலை மாதருக்கு ஆவல் ஆய் மயிலே குயிலே என்று – கொங்கை யெழிலை யுடைய வேசையர்கள் பக்கல்
மோகங்கொண்டு (அவர்களை) மயிலே யென்றும் குயிலே யென்றும் கொண்டாடி விளித்தும்,
தாமதர் ஆய் – தாமத குணத்தை யுடையவர்களாய்,
தருக்கா – களிப்புக் கொண்டு,
அலா செறிக்கே திரிவீர் – நல்லதல்லாத வழியிலேயே திரிகிற புலவர்களே! –
(இனி நீவிர் அங்ஙனஞ்செய்வதை விட்டு),
பத்தருக்கு ஆ அலாயுதன் பின் தோன்று அரங்கர் பொன் தாள் இணைக்கே கவி சாற்றுமின் – அடியார்கட்கு அருள் செய்யும்
பொருட்டாகப் பலராமனுக்குப் பின்னே (அவன் தம்பியாய்க் கண்ணனாய்த்) திருவவதரித்த
நம்பெருமாளுடைய உபயதிருவடிகளின் விஷயமாகவே கவிபாடித் துதியுங்கள்; (எ – று.) –
ஈற்று ஏகாரம் – பிரிநிலை.

தாமதராய் -தமோ குணத்தை உடையவராய்
அலாயுதன் -பலராமன்
அலா நெறி -துர் மார்க்கம்
சாற்றும் இன் பத்தருக்கு

எம்பெருமானைத் துதித்து அவனருள் பெற்று அழிவிலா வீட்டை அடைதற்கு ஏற்ற சாதனமான நாவையும் கவன சக்தியையும்
அவன் விஷயத்தில் உபயோகியாமல் தரும விரோதமாக நிலை யில்லாத பொருளையும் சிற்றின்பத்தையும் பெறுதற்கு ஆசைப்பட்டு
அவற்றிற்காக நரகவனமும் விலைமாதரை நயந்துரைத்தலுஞ் செய்யும் அற்பப் புலவர்களை நோக்கி,
‘அங்ஙனஞ் செய்ய வேண்டா: துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலந சீலனும் அடியவர்க்கெளியவனுமான
ரங்கநாதன் விஷயமாகக் கவி பாடித் துதித்து உய்யுங்கள்’ என உணர்த்தியவாறாம்.

செல்வ அதிகாரங்களிற் சிறப்பை விளக்குதற்கு இந்திரனே யென்றும்,
சாயலிலும் குரலிலும் உள்ள இனிமையை விளக்குதற்கு மயிலே குயிலே யென்றும் விளிப்ப ரென்க.
பலராமன் – கண்ணனுக்குத் தமையன்; திருமாலின் எட்டாம் அவதாரம்:
வசுதேவனுடைய பத்தினிகளுள் தேவகியின் கருப்பத்தில் முதலில் ஆறு மாசந் தங்கிப் பின்பு ரோகிணியின்
கர்ப்பத்திற் சென்று சேர்ந்து ஆறுமாசம் இருந்து பிறந்தவன் இவன்.
ஹலாயுதன் என்ற இவன் பெயர் – ஹல ஆயுத எனப் பிரிந்து, கலப்பையை ஆயுதமாக வுடையவ னென்று பொருள்படும்; தீர்க்கசந்தி;
ஹலம் – கலப்பை. கண்ணன் – திருமாலின் ஒன்பதாம் அவதாரம்.

காவலன் – காத்தலில் வல்லவன். புல்லர் – புன்மை யுடையவர்.
விலை மாதர் – தமது இன்பத்தை விலை கொடுப்பார் யாவர்க்கும் விற்கும் மகளிர்.
ஒழுக்க வழு, காமம், நீதிவழு முதலியன தாமச குண காரியமாம்.
தருக்கா – உடன்பாட்டு இறந்த கால வினையெச்சம்.
அலாநெறி – துர் மார்க்கம், தீயொழுக்கம். நெறிக்கு – நெறியில்; உருபுமயக்கம். ஏ – பிரிநிலையோடு இழிவுசிறப்பு.
திரிவீர் – திரிவார் என்பதன் ஈற்றயல்திரிந்த விளி.
சாற்றும் இன் பக்தருக்கு, இன்பத்தர் – இனிமையான அடியார்களென்றலு மொன்று.
பத்தர் – பக்தர் என்ற வட சொல்லின் விகாரம்; பக்தி யுடையவர்.
ஆக என்பது, ஆ என விகாரப்பட்டது.
பின் என்பது – இங்கே காலப் பொருளது.
‘கவி சாத்துமின்’ என்ற பாடத்துக்கு – கவி மாலையைச் சமர்ப்பியுங்க ளென்று பொருள்.

————

தாளத் தனத்தத்தைச் சொல்லியரால் வரும் தாழ் மல பா
தாளத் தனத்தத்தைத் தப்ப நிற்பீர் புடை தங்கிய வே
தாளத்தன் அ தத்தை தீர்த்தான் அரங்கன் சகடு உதைத்த
தாள் அத்தன் அத்தத்து ஐ ஆயுதன் பாதம் தலைக் கொண்மினே ——-7–

தாளம் தனம் தத்தை சொல்லியரால் வரும் – கைத் தாளம் போன்ற வடிவமுடைய கொங்கைகளையும்
கிளி கொஞ்சிப் பேசுவது போ லினிய சொற்களையு முடைய அயல் மாதர்களின் சம்பந்தத்தா லுண்டாகும்,
தாழ் மல பாதாளத்து அனத்தத்தை – ஆழ்ந்த அசுத்தம் பொருந்திய நரகத் துன்பத்தை,
தப்ப நிற்பீர் – தப்பி உய்ய வேண்டி நிற்பவர்களே! – (நீங்கள்),
புடை தங்கிய வேதாளத்தன் அதத்தை தீர்த்தான் – எல்லாப் பக்கங்களிலுஞ் சூழ்ந்து நின்ற பூத கணங்களை
யுடையவனான சிவபிரானது (பிச்சை யெடுத்த லாகிய) அந்தத் துன்பத்தைப் போக்கி யருளியவனும்,
சகடு உதைத்த தாள் அத்தன் – சகடாசுரனை உதைத்துத் தள்ளி யழித்த திருவடிகளை யுடைய இறைவனும்,
அத்தத்து ஐ ஆயுதன் – திருக் கைகளில் ஏந்தும் பஞ்சாயுதங்களை யுடையவனுமான,
அரங்கன் – ரங்கநாதனுடைய,
பாதம் – திருவடிகளை,
தலை கொண்மின் – தலை மேற் கொண்டு பணியுங்கள்; (எ – று.)

தாளத் தனத்தத்தைச் சொல்லியரால் வரும் -கைத் தாளம் போன்ற
வடிவமுடைய கொங்கைகளையும் கிளி கொஞ்சிப் பேசுவது போலே
இனிய சொற்களையும் உடைய அயல் மாதர்களின் சம்பந்தத்தால் உண்டாகும்
தாழ் மல பாதாளத்து அ னத்தத்தை-ஆழ்ந்த அசுத்தம் பொருந்திய நரக துன்பத்தை தப்ப நிற்பீர்
புடை தங்கிய வேதாளத்தன் அ தத்தை தீர்த்தான் -எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்து நின்ற
பூத கணங்களை உடையவனான சிவபிரானது -பிச்சை எடுதலாகிய -அந்த துன்பத்தை போக்கி அருளினவனும்
சகடு உதைத்த தாள் அத்தன் அத்தத்து ஐ ஆயுதன்-பஞ்சாயுதங்கள் ஏந்திய திருக்கைகளை யுடையவன்
பாதம் தலைக் கொண்மினே

தத்தை – கிளி; அதன் மொழிக்கு முதலாகுபெயர். சொல்லி என்ற பெண்பாற் பெயரின் மேல்
அர் – பலர்பால் விகுதி. நரகம் கீழுலகிலுள்ளதாதலால், அதனை ‘பாதாளம்’ என்றார்; இடவாகுபெயர்.
அநர்த்தம் பேதாளம் சகடம் ஹஸ்தம் என்ற வட சொற்கள் விகாரப் பட்டன.
தாருக வனத்து முனிவரால் ஏவப் பட்டுத் தன்னைக் கொல்ல வந்து சூழ்ந்த பூத கணங்களைச் சிவபிரான் தனது
ஆற்றலால் அடக்கி அடிமை யாக்கிக் கொண்டன னாதலால், ‘புடை தங்கிய வேதாளத்தன்’ எனப்பட்டான்.
அத்தத்து என்றவிடத்து, அகரச்சுட்டு – பிரசித்தியையும் இழிவையும் விளக்கும்.
நத்தத்தை எனப் பதம் பிரித்து, கேட்டை யென்று உரைப்பாரு முளர்;
நத்தம் – நந்து என்ற வினைப் பகுதியின் தொழிற்பெயர்.

———

தலையிலங்கா புரம் செற்றான் அரங்கன் என் தாழ் சொல் புல்கு
தலையில் அங்கு ஆதரம் செய்த பிரான் சரண் அன்றி மற்றோர்
தலை யிலங்கா நின்ற கண் இலம் காண்கைக்கு தாழுகைக்குத்
தலை யிலம் காதிலம் கேட்கைக்கு வாயிலம் சாற்றுகைக்கே ———-8–

தலை இலங்கா புரம் செற்றான் – தலைமை பெற்ற (ராக்ஷச ராஜ தானியான) இலங்கை நகரை அழித்தவனும்,
என் தாழ் சொல் புல்கு தலையில் ஆதரம் செய்த பிரான் – எனது இழிவான துதிச் சொற்களில் பொருட்சிறப்பில்லாத
(தம் மக்கள் பேசும்) மழலைச் சொற்களினிடத்தில் (தாய் தந்தையர் அன்பு வைக்குமாறு) போல விருப்பம் வைத்த பெருமானு மாகிய,
அரங்கன் – திருவரங்கனுடைய,
சரண் அன்றி – திருவடிகளே யல்லாமல்,
மற்று ஓர்தலை – வேறோரிடத்தை,
காண்கைக்கு – தரிசித்தற்கு,
இலங்கா நின்ற கண் இலம் – விளங்குகின்ற கண்களை யுடையோமல்லோம்;
தாழுகைக்கு – வணங்குதற்கு,
தலை இலம் – தலையை யுடையோமல்லோம்;
கேட்கைக்கு – கேட்பதற்கு,
காது இலம் – செவிகளை யுடையோமல்லோம்;
சாற்றுகைக்கு – துதித்துப் பேசுதற்கு,
வாய் இலம் – வாயை யுடையோமல்லோம்; (எ – று.) – இரண்டாம்அடியில், அங்கு – அசை.

தலையிலங்கா புரம் செற்றான் -தலைமை பெற்ற இலங்கை நகரை அழித்தவனும்
என் தாழ் சொல் புல்கு தலையில் அங்கு ஆதரம் செய்த பிரான் -என் இழிவான துதிச் சொற்களில் –
பொருள் சிறப்பு இல்லாத தம் மக்கள் பேசும் மழலைச் சொற்களின் இடத்தில்
தாய் தந்தை அன்பு கொள்ளுவது போலே விருப்பம் வைத்த பெருமான்

தேவாதி தேவனான எம்பெருமான் விஷயத்தில் உபயோகித்து ஈடேறுவதற்கே உரியவையாய் அமைந்த உறுப்புக்களைத்
தேவதாந்தர விஷயத்தில் உபயோகிக்கக் கடவோமல்லோம் யாம் என்றார்,

“மறந்துபுறந்தொழாமாந்த” ராதலின்; “வாயவனை யல்லது வாழ்த்தாது கையுலகந், தாயவனை யல்லது தாம் தொழா –
பேய் முலை நஞ்சு, ஊணாக வுண்டானுருவொடு போரல்லால், காணா கண் கேளா செவி” என்ற
ஆழ்வாரருளிச்செயலை அடியொற்றியது இச்செய்யுள்.

இலங்கா புரத்துக்குத் தலைமை, திக் விஜயஞ்செய்து அனைவரையும் கீழப் படுத்திய ராக்ஷச ராசனான இராவணனது
இராசதானியா யிருத்தல். அதனைச் செற்றது, ஸ்ரீராமாவதாரத்தில். இராம தூதனான அநுமான் இலங்கையை எரியூட்டி யழித்ததும்,
அவ்விலங்கா நகர வாசிகளான கொடிய அரக்கர்களை யெல்லாம் இராமபிரான் அழித்திட்டதும் ஆகிய இரண்டும்
‘இலங்காபுரஞ்செற்றான்’ என்ற தொடரில் அடங்கும்.
செற்றான், செறு – பகுதி. குதலையில், இல் – ஐந்தனுருபு, ஒப்புப்பொருளது;
ஏழனுருபாகக் கொண்டு, எனது இழிவான புல்லிய குதலைச் சொல்லாகிய துதியில் எனினுமாம்.
இலங்கா நின்ற, ஆநின்று – நிகழ்கால இடை நிலை. இலம் என்ற தன்மைப் பன்மை – பிறரையும் உளப்படுத்தியது.

—————

கை குஞ்சரம் அன்று அளித்தாய் அரங்க மண் காக்கைக்குமாய்க்
கைக்குஞ்சரம் (கும் சரம் )அசரம் படைத்தாய் கடல் நீறு எழ து
கைக்குஞ்சர (கும் சர ) மகரம் குழையாய் எனைக் கைக் கொள் உடல்
கைக்குஞ்சரம (கும் சரம ) தசையில் அஞ்சேல் என்று என் கண் முன் வந்தே —9–

கை – துதிக்கையை யுடைய,
குஞ்சரம் – யானையை (கஜேந்திராழ்வானை),
அன்று – (ஆதி மூலமே யென்று கூவி யழைத்த) அக் காலத்தில்,
அளித்தாய் – பாதுகாத்தருளியவனே!
அரங்க – திருவரங்கனே!
காக்கைக்கும் – காக்கப்படுவதற்கும்,
மாய்க்கைக்கும் – அழிக்கப்படுவதற்கும் உரியனவாக,
மண் – உலகத்திலே,
சரம் அசரம் படைத்தாய் – ஜங்கமமும் ஸ்தாவரமுமான உயிர்களைப் படைத்தருளியவனே!
கடல் நீறு எழ துகைக்கும் சர – கடல் வறண்டு புழுதிபடும்படி அதனை வருத்தத் தொடங்கிய ஆக்நேயாஸ்திரத்தை யுடையவனே!
மகரம் குழையாய் – மகர குண்டலங்களை அணிந்துள்ளவனே!
உடல் கைக்கும் சரம தசையில் என் கண் முன் வந்து அஞ்சேல் என்று எனை கைக்கொள் – உடம்பை (உயிர்) வெறுத்தொழியும்படியான
(எனது) அந்திமகாலத்திலே நீ எனது கண்களினெதிரில் வந்து தோன்றிக் காட்சி கொடுத்து ‘அஞ்சாதே’ என்று அபயமளித்து
என்னை அடிமையாக ஏற்றுக்கொண்டருள்வாயாக; (எ – று.)

கை குஞ்சரம் அன்று அளித்தாய் -துதிக்கை உடைய யானையை -கஜேந்த்ரனை
அன்று
அரங்க மண் காக்கைக்கும் மாய்க்கைக்கும் சரம் அசரம் படைத்தாய் -ஜங்கமம் ஸ்தாவரங்கள் படைத்து
கடல் நீறு எழ துகைக்கும் சர -ஆக்நேய அஸ்த்ரத்தை வுடையவனே
மகரம் குழையாய்–எனைக் கைக் கொள் உடல் கைக்கும் சரம தசையில்-உடம்பை உயிர் வெறுத்து ஒழியும்படியான அந்திம தசையில்
அஞ்சேல் என்று என் கண் முன் வந்தே –

எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் போலே பிரார்தித்தவாறும்

பெரியாழ்வார் திருமொழியில் “துப்புடையாரை” என்ற தொடக்கத்துத் திருப்பதிகத்தில்
“ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்”,
“வஞ்ச வுருவின் நமன்றமர்கள் வலிந்து நலிந் தென்னைப் பற்றும் போது,
அஞ்சலமென்றென்னைக் காக்க வேண்டும் அரங்கத்தரவனைப் பள்ளியானே” என்றவற்றின் பொருள்
இச் செய்யுளில் விளங்குதல் காண்க.

கஜேந்திராழ்வானைக் காத்தருளின வரலாற்றை யெடுத்துக் கூறினது, உயர்திணைப் பொருள்களோடு
அஃறிணைப் பொருள்களோடு பேதமற அடிமைப் பட்ட உயிர்களை அன்போடு துயர் தீர்த்துப் பாதுகாத்தருள்கிற
எம்பெருமானது கருணை மிகுதியை விளக்குதற்கு, குஞ்சரத்துக்குக் கொடுத்த ‘கை’ என்ற அவசியமில்லாத அடைமொழி,
அந்த யானை கால் முதல் உடம்பு முழுவதும் முதலையின் வாய்ப்பட்டு எம்பெருமானை யழைத்தற்குக் கைம் மாத்திரமே
வெளித் தோன்ற நின்ற தென்னுங் கருத்தைப் புலப்படுத்தும்.

“கைம்மான மதயானை யிடர் தீர்த்த கருமுகிலை,”
“கடுத்த கராங்கதுவ நிமிர் கையெடுத்து மெய் கலங்கி….. எடுத்தொரு வாரண மழைப்ப நீயோ வன்றே னென்றாய்” என்பன காண்க.

மண் சரம் அசரம் படைத்தாய் – உலகங்களையும் சராசரங்களையும் படைத்தவனே யென்றும்,
உலகங்களைச் சராசரங்களுடன் படைத்தவனே யென்றும் கொள்ளலாம்.
சரம் – சஞ்சரிப்பன, இயங்குதிணைப் பொருள். அசரம் – சஞ்சரியாதன, நிலைத்திணைப்பொருள்.

மண் காக்கைக்கும் மாய்க்கைக்கும் சரம் அசரம் படைத்தாய் –
“உலகம் யாவையும் தாமுளவாக்கலும், நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா, அலகிலாவிளையாட்டுடையாரவர்” என்றபடி
உலகங்களைப் படைத்தலையும் காத்தலையும் அழித்தலையும் விளையாட்டாக வுடையவனே யென்றபடி.

நீறுஎழ – எரிபட்டுச் சாம்பலாய் மேலெழ,
மகரகுண்டலம் – சுறாமீன் வடிவமமையச் செய்யப்படுவதோர் காதணி. இது, மற்றை யாபரணங்கட்கும் உப லக்ஷணம்.

குஞ்சரம் – வடசொல்; காட்டுப் புதர்களிற் சஞ்சரிப்ப தென்றும், துதிக்கையுடைய தென்றும் காரணப்பொருள்படும்.
‘அன்று’ எனச் சுட்டினது, கதையை உட்கொண்டு.
சரம தசா – வடமொழித் தொடர்.
அஞ்சேல் – எதிர்மறை யொருமையேவல். காக்கை, மாய்க்கை – ‘கை’ விகுதி பெற்ற தொழிற்பெயர்.
சரம தசையில் எனைக் கைக்கொள் – “எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்,
அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தேன்” என்றாற் போலப் பிரார்த்தித்தவாறாம்.

———–

வந்தனை ஏற்றனை என் புன் சொல் கொண்டனை வன் மனத்தே
வந்தனை ஏற்று அனை யாவையும் ஆயினை வான் தர வு
வந்தனை யேற்றனைத் தானொத்த தாளில் வைப்பாய் பலித்து
வந்தனை யேற்றனைத் தீர்த்தாய் அரங்கத்து ,மாதவனே ———–10–

ஏற்றனை பலித்து வந்தனை தீர்த்தாய் – ருஷப வாகனமுடையனான சிவபிரானை இரத்தற்றொழிலை நீக்கி யருளியவனே!
அரங்கத்து மாதவனே – திருவரங்கத்தில் எழுந்தருளி யிருக்கிற திருமகள் கணவனே!
(என்) – எனது,
வந்தனை – நமஸ்காரத்தை,
ஏற்றனை – ஏற்றுக்கொண்டாய்;
என் புல் சொல் கொண்டனை – எனது இழிவான துதிச் சொற்களை ஏற்றுக் கொண்டாய்;
(என்) வல் மனத்தே வந்தனை ஏற்று – எனது வலிய மனத்திலே வந்து பொருந்தி,
அனை யாவையும் ஆயினை – (எனக்குத்) தாயும் மற்றை எல்லா வுறு துணையு மாயினாய்;
வான் தர உவந்தனை ஏல் – (எனக்குப்) பரம பதம் அளிக்கத் திருவுளங்கொண்டனையானால்,
தனை தான் ஒத்த தாளில் வைப்பாய் – (வேறு ஒப்புமை யில்லாமையால்) தன்னைத் தானே ஒப்பதான (உன்)
திருவடியில் (என்னைச்) சேர்த்துக்கொண்டருள்வாய்; (எ – று.)

யேற்றனை பலித்து வந்தனை தீர்த்தாய் -ரிஷப வாகனம் உடைய சிவ பிரான் இரத்தல் தொழிலை நீக்கி அருளினவனே
அரங்கத்து ,மாதவனே
என் வந்தனை ஏற்றனை
புன் சொல் கொண்டனை
என் வன் மனத்தே வந்தனை ஏற்று-வலிய மனத்திலே வந்து பொருந்தி
அனை யாவையும் ஆயினை-எனக்கு தாயும் மற்று எல்லா உறு துணையும் ஆயினை
வான் தர வுவந்தனை யேல்
தனை தானொத்த தாளில் வைப்பாய்-தன்னைத் தானே ஒப்பதான திருவடியில் சேர்த்து கொண்டு அருள்வாய்

எளியேன் திரி கரணங்களாலுஞ் செய்யும் வந்தனை வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு என் பக்கல் அன்பு காட்டினை யாதலால்,
அந்த அன்பை முற்றச் செலுத்தி எனக்குப் பரமபதங்கிடைக்குமாறு என்னை உன்
திருவடியிற் சேர்த்துக் கொண்டருள வேண்டுமென வேண்டியபடி.
அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின் கண் எம்பெருமான் அவர் நினைந்த வடிவத்துடன் விரைந்து சென்று
வீற்றிருத்தலால், ‘மனத்தே வந்தனையேற்று’ என்றார். ‘என்’ என்பதைப் பிறவிடத்துங் கூட்டுக.

வந்தனை – வந்தநா என்ற வடசொல்லின் விகாரம்.
ஏற்றனை என்ற முன்னிலை யொருமை யிறந்த காலமுற்றில், ஏல் – பகுதி;
ஏற்றல் – அங்கீகரித்தல், இணங்குதல், கொள்ளுதல்.
வன் மனம் . “இரும்புபோல் வலியநெஞ்சம்” “மரங்கள்போல் வலியநெஞ்சம்” என்பன காண்க.
வந்தனை – முன்னிலை யொருமை யிறந்தகால முற்றெச்சம்.
ஏற்று என்ற இறந்தகாலவினை யெச்சத்தில், ஏல் – பகுதி; ஏலுதல் – பொருந்துதல்.

அனையாவையும் ஆயினை – “அத்தனாகி யன்னையாகி யாளுமெம்பிரானுமாய்” என்றார் பெரியாரும்.
அனை – அன்னை யெண்பதன் தொகுத்தல்: தனையென்பதும் இவ்வாறே. ஏல் – என்னில் என்பதன் மரூஉ.

தனைத்தானொத்ததாள் – இயைபின்மையணி: ஒருபொருளையே உபமானமும் உபமேயமுமாகச் சொல்லுதல்,
இதன்இலக்கணம்; உவமையாதற்கு ஏற்ற பொருள் வேறு யாதுமில்லை யென்பதை விளக்கும்.
ஏற்றனைப் பலித்து வந்தனைத் தீர்த்தாய் – இரண்டு செயப்படுபொருள் வந்த வினை.
பலித்து வந்தனை ஏற்றனுக்குத் தீர்த்தாய் என உருபு மயக்கமுமாம்.
பலித்துவம் – ஒருசொல்; அதன்மேல், தன் – சாரியை, ஐ – இரண்டனுருபு.
பலி துவந்தனை எனத் தொடர் மொழியாக் கொண்டு பிரித்து, இரத்தலினாலாகிய துன்பத்தை எனினுமாம்;
துவந்தனை – துன்பம்; பந்தம். ஏறு – பசுவின் ஆண்பாற்பெயர்; எருது: அதனையுடையவன், ஏற்றன்.
மாதவன் – ஸ்ரீய: பதி: வடசொல்; மா – இலக்குமி, தவன் – கணவன். அரங்கத்துமா – ஸ்ரீரங்கநாயகி.
வைப்பாய் – ஏவலொருமை முற்று; விளிப் பெயராகக் கொண்டு, ஓர் உயிர்க்குப் பரமபதமளிக்கத் திருவுளங் கொண்டனை யானால்,
அவ்வுயிரையித் திருவடியிற் சேர்த்துக் கொண்டருள்பவனே யென்றலும் ஒன்று.

—————

மாதங்கத் தானை யரங்கனை வஞ்சன் இலங்கையிலே
மாதங்கத் தான் ஐ யிரு திங்கள் தாழ்த்து பின்பு வாம் பரி தேர்
மாதங்கத் தானை வலத்தானை முன் வதைத்தானைத் தன் பான்
மாதங்கத்தானை வைத்தானை வைத்தேன் என் மதி யகத்தே ——–11-

மாதங்கம் தானை அரங்கனை – சிறந்த மாற்றுயர்ந்த பொன்மயமான ஆடையையுடைய திருவரங்கனும், –
வஞ்சன் இலங்கையிலே மாதங்க – வஞ்சகனான இராவணனுடைய இலங்காபுரியிலே திருமகளின் அவதாரமான சீதாபிராட்டி தங்கியிருக்க,
தான் -, ஐ இரு திங்கள் தாழ்த்து – பத்து மாதம் கழித்து,
பின் – பின்பு,
வாம் பரி தேர் மாதங்கம் தானை வலத்தானை முன் வதைத்தானை – தாவிச் செல்லுங்குதிரைகளும் தேர்களும் யானைகளும்
காலாள்களுமாகிய சேனையின் பலத்தோடு மற்றும் பலவகை வலிமைகளை யுமுடையனான இராவணனை முற்காலத்தில் அழித்திட்டவனும்,
மாது அங்கத்தானை தன்பால் வைத்தானை – உமாதேவியை வாமபாகத்திற் கொண்டுள்ளவனான
சிவபிரானை (த் தனதுவல) ப்பக்கத்தில் அமைய வைத்துள்ளவனுமான திருமாலை,
என் மதியகத்து வைத்தேன் – எனது மனத்தினுள்ளே நிலையாக வைத்திட்டேன்; (எ – று.)

எப்பொழுதும் நம்பெருமாள்பக்கலிலே மனத்தைச்செலுத்தி அப்பெருமானையே தியானிக்கின்றேன் என்பதாம்.

தங்கத்தானை – பீதாம்பரமெனப்படும் பொற்பட்டாடை.
வஞ்சன் – எண்ணம் சொல் செயல் என்னும் திரிகரணத்தொழிலிலும் வஞ்சனைக்கொண்டவன்;
பிராட்டியை வஞ்சனையாற் கவர்ந்துசென்றவன்.
திருமால் இராமனாகத் திருவவதரித்தபோது திருமகள் சீதையாகத் திருவவதரித்ததனால், சீதையை ‘மா’ எனக் குறித்தார்.
ஐயிருதிங்கள் – பண்புத் தொகைப் பன்மொழித்தொடர்.
சாந்திரமானபக்ஷத்தில் அமாவாசைக்கு அமாவாசை ஒருமாசமெனக்கொண்டு சந்திரசம்பந்தத்தாற் கணக்கிடுதல்பற்றி,
திங்கள் என்ற சந்திரனது பெயர் இலக்கணையாய் மாதத்தை யுணர்த்தும்; ‘
மதி’ என்பதும் இவ்வாறே வருதல் காண்க.
வாம் – வாவும் என்னுஞ் செய்யுமெனெச்சவீற்றுயிர்மெய் சென்றது.
மூன்றாமடியிலுள்ள ‘மாதங்கம்’ என்ற வடசொல் மதங்க முனிவரிடத்தினின்று ஆதியில் உண்டானதென்று காரணப்பொருள்படும்.
இங்கே, வலம் – வரபலம் புஜபலம் ஆயுதபலம் மனோபலம் ஸ்தாநபலம் முதலியன,
பலம் என்ற வடசொல், வலமென விகாரப்பட்டது; வலம் – வெற்றியுமாம்.
பின், முன் என்பன – காலத்தின்மேல் நின்றன.
மாது அங்கத்தான் – அர்த்தநாரீசுவர மூர்த்தியானவன்.
மாதங்கத்தானைத் தன்பால் வைத்தான் – “பிறைதங்குசடையானை வலத்தேவைத்து,”
“வலத்தனன் திரிபுரமெரித்தவன்” என்பன காண்க.
மதியகத்து – அறிவிலே எனினுமாம்; அகத்து – ஏழனுருபு.
அம்பிகையை ஒருபாகத்தில் வைத்தவனைத் தனது ஒரு பாகத்தில் வைத்தவனை
எனது அகத்துறுப்பினுள்ளே வைத்தேன் யான் என ஒரு சமத்காரம் தோன்றக் கூறியவாறு.

———–

மதிக்கவலைப் புண்ட வெண்டயிர் போல மறு குறு மென்
மதிக்கவலைப் புண்டணி கின்றிலேன் மண்ணும் வானகமும்
மதிக்கவலைப் புனல் சூழ் அரங்கா நின் மனத்தருடா
மதிக்கவலைப் புன் பிறப்பினி மேலும் வரும் கொல் என்றே —–12-

மண்ணும் வானகமும் மதிக்க – மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் கொண்டாடும்படி,
அலை புனல் சூழ் – அலைகளையுடைய காவேரிதீர்த்தத்தாற்புடைசூழப்பெற்ற,
அரங்கா – திருவரங்கத்தில் எழுந்தருளி யிருப்பவனே!
நின் மனத்து அருள் தாமதிக்க – உனது திருவுள்ளத்திலுண்டாகும் கருணை (என்பக்கல் உடனே சித்தியாமல்) காலம்நீட்டித்தலால்,
வலை புல் பிறப்பு இனிமேலும் வரும்கொல் என்று வலைபோன்ற இழிவான சன்மம் இனிமேலும் (எனக்கு) வந்துவிடுமோ வென்று சிந்தித்து,
மதிக்க அலைப்புண்டவெள் தயிர்போல மறுகுறும் என் மதி கவலை புண் தணிகின்றிலேன் – கடைதலால் அலைக்கப்பட்ட வெண்மையான
தயிர்போல (ஒருநிலை நில்லாது) சுழல்கிற எனதுமனத்தின் கவலையாகிய விரணம் ஆறப்பெற்றிலேன்; (எ – று.)

எனதுகவலை தணியுமாறு விரைவில் எனக்கு நற்கதியருளவேண்டு மென்பதாம்.
எனது கவலை தணியுமாறு எனக்கு நல் கதி அருள வேண்டும் என்பதாகும்
வலை மிருக பஷிகளைப் பந்தப்படுதுவது போலே பிறப்பு உயிரை பந்தப்படுதலால்
வலைப்புன் பிறப்பு எனப்பட்டது-

மறுகுறும், மறுகு – பகுதி, உறு – துணைவினை.
மனத்திற்குச் சுழற்சி – பலவகைச்சிந்தனையால் தடுமாற்றங்கொள்ளுதல்.
கவலை – கவற்சி; ‘ஐ’ விகுதி பெற்ற தொழிற்பெயர். கவலைப்புண் – மனோவியாதி.
தணிகின்றிலேன் – தன்மையொருமை யெதிர்மறை நிகழ்காலமுற்று.
மண், வானகம் – இடவாகு பெயர்கள்.
மூன்றாமடியில், மதிக்கச் சூழ் என இயையும். வலை மிருகபக்ஷிகளைப் பந்தப்படுவதுபோலப்
பிறப்பு உயிரைப் பந்தப்படுத்துதலால், ‘வலைப்புன்பிறப்பு’ எனப்பட்டது.
இனிமேலும் – இப்பிறப்பு ஒழிந்தபின்பும் என்றபடி.
வருங்கொல் என்றதில், கொல்என்ற இடைச்சொல் – ஐயவினாப் பொருளோடு இரக்கத்தையும் உணர்த்தும்.

————

வருந்து வரைப்பட்ட மங்கையர் எண்மர் மனங்களைக் க
வருந்து வரைப்பட்ட வாய் அரங்கேசனை வஞ்சப்பகை
வருந்து வரைப்பட்ட வேழம் அட்டானை மறந்து உலகோர்
வருந்து வரைப்பட்ட வீப்போன் மடந்தையர் மால்வலைக்கே ——–13–

துவரை வரும் – துவாரகாபுரியில் வந்து சேர்ந்த,
பட்டம் மங்கையர் எண்மர் – பட்டத்துத் தேவிமார் எட்டுப் பேர்களுடைய,
ருக்மிணி -சத்யபாமை -ஜாம்பவதி -சத்யை -மித்ரவிந்தை -ஸு சிலை -ரோகிணி -லஷணை-என்கிற எட்டு பட்ட மகிஷிகள்
துவரை வரும் -கண்ண பிரானுக்கும் திருத் தேவிமார்களுக்கும் அடை மொழி.
மனங்களை கவரும் – (தன்பக்கல்) இழுக்கின்ற,
துவரை பட்ட வாய் – செந்நிறத்தைப் பொருந்திய வாயழகையுடைய,
அரங்க ஈசனை – ரங்கநாதனும்,
வஞ்சம் பகைவர் உந்து – வஞ்சனையை யுடைய பகைவர் (தன்னை நோக்கிச்) செலுத்திய,
வரை பட்ட வேழம் – மலையை யொத்த (குவலயாபீடமென்னும்) யானையை,
அட்டானை – கொன்றவனுமான திருமாலை,
மறந்து, உலகோர் – உலகத்துச்சனங்கள்,
ஐ பட்ட ஈ போல் – கோழையில் அகப்பட்டு (மீளவொண்ணாதபடி) சிக்கிக்கொண்டழிகிற ஈயைப்போல,
மடந்தையர் மால் வலைக்கே வருந்துவர் – மகளிர் பக்கல் கொள்ளும் மோகமாகிய வலையிலே அகப்பட்டு (மீளமாட்டாது) வருந்துவர்; (எ – று.)

ஜராசந்தனும் காலயவநனும் ஒருங்குபடை யெடுத்து வந்த காரணத்தாற் கண்ணன் மதுரையை விட்டுத் துவாரகாபுரியை
மேல்கடலிலே நிர்மாணஞ்செய்துகொண்டு அங்குச் சகலசனங்களுடனே குடிபுகுந்தமையும்,
வெவ்வேறுநாடுகளிற்பிறந்த ருக்மிணி முதலிய இளமகளிர் கண்ணனால் மணஞ்செய்துகொள்ளப்பட்டு
அவனதுவாசஸ்தாநமான துவாரகைக்கு வந்துசேர்ந்தமையும் காண்க.

அம்மனைவியரனைவர்க்கும் ஒருநிகராக மகிழ்ச்சிவிளைத்து வந்தமையை ‘மனங்களைக் கவரும்’ என்றதனால் வெளியிட்டார்.
‘எண்மர்மனங்களைக் கவருந் துவரைப்பட்டவா யரங்கேசன்’ என்றது, அதரத்தினழகில் ஈடுபாடு.
‘பகைவர்’ என்றது, கம்சனையும், அவனது பாகன் முதலிய ஏவலாளரையும்.

துவரை – வடமொழிச் சிதைவு.
பட்டமங்கையர் – பட்டமகிஷிக்கு உரிய நெற்றிப்பொற்பட்டத்தைத் தரித்துள்ள மாதர்கள்,
எண்மர் – எட்டு என்ற பகுதி எண்என விகாரப்பட்டது: ம் – பெயரிடைநிலை.
இரண்டாமடியில், துவர் ஐ பட்ட என்று பதம் பிரித்து, செந்நிறமும் அழகும் அமைந்த என்று உரைப்பாரு முளர்.
மூன்றாமடியில், பட்ட – உவமவுருபு. அட்டான், அடு – பகுதி.
அகப்பட்டவரை மீளவிடாமையால், மடந்தையரதுமால் ‘வலை’ எனப்பட்டது. வலைக்கு – உருபுமயக்கம்.

———-

எம்பெருமானுக்கு ஆட்பட்டு உய்யாமல் விஷயாந்தரங்களில் ஆழ்ந்து அழிகிற பேதை மாந்தர்களுடைய
தன்மையைக் குறித்து இரங்கிக் கூறியவாறாம்.

மாலைக்கல்லார மடவார் புண்ணாக்கையில் வாஞ்சை வைத்து
மாலைக்கல்லாரம் புலிக்கு நையா நிற்பர் மாய்விப்பதோர்
மாலைக்கல்லாரம் புயத்தாளில் வைக்கும் மதில் அரங்க
மாலைக்கல்லார் அஞ்சலி யார் என்னே சில மானிடரே ——–14–

சில மானிடர் – (உலகத்துச்) சிலமனிதர்கள்,
மாலை கல்லாரம் மடவார் புண் ஆக்கையில் வாஞ்சை வைத்து – மாலையாகத் தொடுக்கப்பட்ட செங்கழுநீர் மலர்களைச் சூடிய
மாதர்களுடைய அசுத்தமான உடம்பினிடத்திலே விருப்பம் வைத்து, (அக்காமத்தினால்),
மாலைக்கு அல் ஆர் அம் புலிக்கு நையா நிற்பர் – (காமோத்தீபகப்பொருள்களான) அந்தி மாலைப் பொழுதுக்கும்
இரவில் விளங்குகின்ற சந்திரனுக்கும் வருந்தி நிற்பார்கள்;
மாய்விப்பது ஓர் மாலை கல்லார் – (இவ்வாறு தங்களை) அழியச் செய்வதான ஒப்பற்ற காம மயக்கத்தைக் களைந்தொழிக்க மாட்டார்கள்;
அம்புயம் தாளில் வைக்கும் – தாமரைமலர்போன்ற (தனது) திருவடிகளில் (அடியார்களை) இருத்துகிற,
மதில் அரங்கம் மாலை – (ஏழு) மதிள்கள்சூழ்ந்த திருவரங்கத்திற் பள்ளிகொண்டிருக்கிற திருமாலை,
கல்லார் – துதிக்கமாட்டார்கள்;
அஞ்சலியார் – கை கூப்பி வணங்க மாட்டார்கள்:
என்னே – இது என்ன பேதைமையோ?

மாலைக்கல்லாரம் – கல்லாரமாலை என முன் பின்னாக மாற்றிக்கூட்டிச் செங்கழுநீர்மலர்மாலை யென்னலாம்.
கல்ஹாரம் – வடசொல். ‘மாலைக்கல்லாரமடவார்’ என்றது, மேனி மினுக்குபவ ரென்றபடி.
மடவார் இளமையை அல்லது மகளிர்க்கு உரிய பேதைமைக் குணத்தை யுடையவர்.
வாஞ்சை – வாஞ்சா என்ற வடசொல்லின் விகாரம்.
நையா – உடன்பாட்டு இறந்தகால வினையெச்சம்.

மூன்றாமடியில், மால் – பெண்மோகம். கல்லல் – கல்லுதல், வேரூன்றினதைப் பெயர்த்தொழித்தல்.
‘அம்புயத்தாளில் வைக்கும்’ என்றதனால் திருவடியே வீடாயிருக்கு மென்றபடி.
ஸ்ரீரங்கம் ஸப்தப்ராகார முடைய தாதலால், அச்சிறப்பு விளங்க, ‘மதிலரங்கம்’ எனப்பட்டது.

நான்காமடியில், கற்றல் – எம்பெருமானுடைய திருநாமங்களைச் சொல்லிப் பழகுதலும்,
அவனுடைய சொரூபகுணவிபவங்களைக் கூறுகிற நூல்களைப் படித்தலும்,
அவனைப் புகழ்ந்து கூறுதலும்.

மானிடர் – மாநுஷரென்ற வடசொல்லின் திரிபு;
காசியபமுனிவரது மனைவியருள் மநுவின் சந்ததியா ரென்று காரணப்பொருள்படும்.

தாம்காதலித்த மகளிரின் சேர்க்கை நேராத விரகதசையில் அந்திப் பொழுதும், சந்திரனது நிலாத் தோற்றமும்
அத்துயரை வளர்த்து வருத்து மென்க.
புண்ணாக்கை – மாம்சசரீரம்.

————–

மானிடராக வரலரிதோர் மண்டலத்தின் நெறி
மானிடராக மிலாதவராதன் மலரயனார்
மானிடராக மத்தாலன்பராய வரங்கத்துள் எம்
மானிடராக மலரடிக்கு ஆட்படும் வாழ்வரிதே ——–15–

ஓர் மண்டலத்தின் – ஒப்பற்ற இந்தநிலவுலகத்திலே,
மானிடர் ஆக வரல் – மனிதராய்ப் பிறத்தல்,
அரிது – அருமையானது;
(அங்ஙனம் மனிதசன்மமெடுத்தாலும்),
இடர் ஆகம் இலாதவர் ஆதல் (அரிது) – துன்பம் மிக்க விகார சரீரமில்லாதவராதல் அரியது;
(அங்ஙனம் உடற்குறையில்லாதவராயினும்),
நெறிமான் (ஆதல் அரிது) – நீதி நெறியுடையவனாயிருத்தல் அருமையானது;
(அங்ஙனம் சன்மார்க்கத்தில் ஒழுகினாலும்),
மலர் அயனார் – தாமரைமலரில்தோன்றிய பிரமதேவரும்,
மான் இடர் – மானை இடக்கையிலேந்திய சிவபிரானும்,
ஆகமத்தால் – சாஸ்திரங்களிற் கூறிய முறைப்படி,
அன்பர் ஆய – தொண்டுபூண்டொழுதற்கு இடமான,
அரங்கத்துள் – ஸ்ரீரங்கத்தில் (பள்ளிகொண்டருள்கிற),
எம்மான் – எம்பெருமானுடைய,
இடம் ராகம் மலர் அடிக்கு – பெருமை யுடைய சிவந்த தாமரை மலர் போன்ற திருவடிகளுக்கு,
ஆள்படும் – அடிமை செய்து ஒழுகுகிற,
வாழ்வு – வாழ்க்கை,
அரிதே – (பெறுதற்கு) அருமையானதே; (எ – று.)

திருவரங்கநாதனான திருமாலினது திருவடிகளுக்கு அடியவராதல் நல்வினைப் பயனாலன்றி நேராது என்பதாம்.

அரியது கேட்கின் வரிவடிவேலாய் அரிது அரிது மானிடராதல் அரிது
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு பேடு நீக்கிப் பிறத்தல் அரிது
பேடு நீக்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்வர் ஆயின் வானவர் நாடு வழி திறந்திடுமே-

நெறிமான் என்பதில், மான் – ஆண்பாற்பெயர்விகுதி.
அயனார், மானிடர் – உயர்வுப்பன்மை.
மலர் – திருமாலின் நாபித்தாமரைமலர்.
அயன் – அஜன்; இவ்வடமொழிப்பெயர் – திருமாலினிடத்தினின்று தோன்றினவனென உறுப்புப்பொருள்படும்;
அ – விஷ்ணு. சிவபிரான் இடக்கையிலேந்திய
மான், தாருகவனமுனிவர் ஏவினது.

நான்காமடியில், மான் – மஹாந்.
இடராகம் என்பதற்கு – தன்னிடத்துச் செந்நிறத்தையுடையஎன்று உரைத்தலு மொன்று.
எம்மானிடம் – எம்பெருமானுடைய என்று உரைத்து,
இடம் என்பதை ஆறனுருபின்பொருளில்வந்த சொல்லுரு பென்பர் ஒருசாரார்.
ஈற்று ஏகாரம் – தேற்றம். ‘இலாதவனாதல்’ என்றும் பாடம்.
‘அரிது’ என்பதும், ‘ஆதல்’ என்பதும் எடுத்துப் பிறவிடத்தும் கூட்டப்பட்டன.

———–

அரி தாமரைக்கண் தோல் உடுத்தார் அயனார்கு அரியான்
அரி தாமரைக்கண் அம்மான் திருப்பாதம் அடைமின் சன்மம்
அரி தாமரைக்கணம் தங்காது உயிர் அவனூர் வினவில்
அரி தாமரைக்கணம் ஈர்த்து ஓடும் பொன்னி யரங்கம் அன்றே ———16–

அரி – இந்திரனுக்கும்,
தாம் அரைக்கண் அம் தோல் உடுத்தார் – தாம் இடையிலே அழகிய புலித்தோலை யுடுத்துள்ளவரான சிவபிரானுக்கும்,
அயனார்க்கு – பிரமதேவர்க்கும்,
அரியான் – (அறிதற்கு) அரியவனும்,
அரி – ஹரி என்னும் ஒருதிருநாமமுடையவனும்,
தாமரை கண் அம்மான் – செந்தாமரைமலர் போன்ற திருக்கண்களையுடைய தலைவனுமான எம்பெருமானுடைய,
திரு பாதம் – திருவடிகளை,
அடைமின் – சரணமடையுங்கள்;
(அதனையடைவதனாற் பயனென்னவெனின், -)
சன்மம் அரிது ஆம் – மீண்டும் பிறப்புஇல்லாமற்போம்:
(அது எங்ஙனமெனின், -)
உயிர் அரைக்கணம் தங்காது – (சரணமடைபவருடைய) உயிர் (முத்தி புகுமே யன்றி மறுபடி ஓருடம்பில்)
அரை க்ஷணப் பொழுதும் பொருந்தி நிற்க மாட்டாது:
அவன் ஊர் வினவில் – அப்படிப்பட்ட மகாவிபவமுடைய எம்பெருமானது திருப்பதி (யாது என்று) வினாவினால்,
அரி தாம் மரை கணம் ஈர்த்து ஓடும் பொன்னி அரங்கம் அன்றே – சிங்கங்களையும் தாவிப்பாயும் மான்களின் கூட்டத்தையும்
ஒருங்கு இழுத்துக்கொண்டு ஓடிவருகிற உபய காவேரியின் மத்தியிலுள்ள திருவரங்கமன்றோ? (எ – று.) – அன்றே – தேற்றம்.

முதலடியில், அரி – ஹரி; (பகைவரை) அழிப்பவன். தாம் – அசை. அரைக்கண், கண் – ஏழனுருபு.
அரை – பாதி; உடம்பிற் பாதியளவிலுள்ள உறுப்பான இடையைக் குறிக்கும்போது ஆகுபெயர்.

இரண்டாமடியில், அரி – ஹரி; (அடியார்களுடைய துயரத்தை) ஒழிப்பவன். தாமரைக்கண் அம்மான் – புண்டரீகாக்ஷன்.
அரி – செவ்வரிபரந்த கண் என்றலும் ஒன்று; அரி – உத்தம லக்ஷணமான சிலசிவந்தரேகைகள்.
இனி, அரி – (காண்பவர்களுடைய கண்களையும் மனத்தையும்) அபஹரிக்கிற (கவர்கிற) கண் எனினுமாம்.
அம்மான் – அப்படிப்பட்ட மகான். ஜந்மம் – வடசொல். அரிது என்பதில், அருமை – இன்மைமேலது.
கணம் – க்ஷணம்; வடமொழிவிகாரம்.

நான்காமடியில், அரி – ஹரி; யானை முதலிய விலங்குகளை அரிப்பது; அரித்தல் – அழித்தல். தாம் – தாவும் என்பதன் விகாரம்;

கீழ் 11 – ஆஞ் செய்யுளில் ‘வாம்’ என்பது போல. ஸஹ்யபருவதத்தினின்று உற்பத்தியாகிப் பெரு வெள்ளமாய்ப்
பெருகி வரும் விசையில் அக்குறிஞ்சி நிலக் கருப் பொருளாகிய சிங்கம் மான் முதலிய விலங்குகளை
அடித்துத் தள்ளிக் கொண்டு வரும் காவேரியென்க;

“மலைத்தலையகடற் காவிரி, புனல்பரந்துபொன்கொழிக்கும்” என்றபடி
தான் பெருகும் போது பொன்னைக் கொழித்துக்கொண்டு வருதலால், காவேரிக்குப் பொன்னியென்று பெயர்;
இ – உடைமைப் பொருள் காட்டும் பெண் பால் விகுதி.

செய்யுளடிகளினிறுதியில் சந்தி அநித்யமென்பது இலக்கண நூலார் துணி பாதலின், நின்ற அடியின் ஈற்றோடு வரும்
அடியின் முதல் சேருமிடத்துப் புணர்ச்சி கொள்ளப் பட்டிலது, யகமப்பொருத்தத்தின்பொருட்டு.
இதனை, மேல் இங்ஙனம் வருமிடங்கட்கெல்லாங் கொள்க.

————-

அரங்காதுவார் கணை கண் வள்ளை கோங்கின் அரும்பு மங்கை
அரங்காதுவார் முலை என்று ஐவர் வீழ்ந்தனர் ஆடரவின்
அரங்காதுவாரமிலா மணியே யணியார் மதில் சூழ்
அரங்காதுவாரகையாய் அடியேன் உன் அடைக்கலமே ———-17–

மங்கையர் – இளமகளிருடைய,
கண் – கண்கள்,
அரம் காதுவார் கணை – அரமென்னுங்கருவியினால் அராவப்பட்ட (கூரிய) நீண்ட அம்பு போலும்:
அம் காது வார் முலை – (அம்மாதரது) அழகிய காதுகளும் கச்சிறுக்கிய கொங்கைகளும்,
வள்ளை கோங்கின் அரும்பு – (முறையே) வள்ளை யென்னும் நீர்க்கொடியின் இலையையும் கோங்கமரத்தின் அரும்பையும் போலும்,
என்று – என்று (உவமமுகத்தாற் புனைந்து) கருதி,
ஐவர் வீழ்ந்தனர் – பஞ்சேந்திரியங்களாகிய ஐந்துபேர் (அம்மகளிர் பக்கல்) ஆசைகொண்டு (அப்பெண்மோகக்கடலில்) விரைந்து விழுந்தன்மையர்;
ஆடு அரவு இன் அரங்கா – படமெடுத்தாடுகிற (காளியனென்னும்) பாம்பை இனிய கூத்தாடுமிடமாகக் கொண்டவனே!
துவாரம் இலா மணியே – புரைசலில்லாத முழு மாணிக்கம் போன்றவனே!
அணி ஆர் மதில் சூழ் அரங்கா – அழகு நிறைந்த மதிள்களாற் சூழப்பட்ட திருவரங்க நகருடையவனே!
துவாரகையாய் – (கிருஷ்ணாவதாரத்தில்) துவாரகாபுரியில் எழுந்தருளியிருந்தவனே!
அடியேன் உன் அடைக்கலம் – நான் உனக்கு அடைக்கலப் பொருளாகின்றேன்; (எ – று.)

யான் உன்னையே சரணமாக அடைந்து உன்னாற் பாதுகாக்கப்படும் பொருளாயினேனாதலால்,
என்னைப் பஞ்சேந்திரியங்களின் வசப்பட்டு அழியாதபடி பாதுகாத்தருளவேண்டு மென்பதாம்.

அரம் . வாள்விசேடம். அரங்காது வார்கணை – “வாளரந்துடைத்த வைவேல்” என்றாற்போலக் கொள்க.
காது வார் என்ற இரண்டும் – வினைத்தொகை. வார் – உரிச்சொல்லுமாம்.
வள்ளைபோலும் காது, கோங்கினரும்புபோலும் முலை என முறையே சென்று இயைதல், முறைநிரனிறைப்பொருள்கோள்.

இரண்டாமடியில், வார் – கஞ்சுகம்.
மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐம்பொறிகளை ஐவர் என உயர்திணையாகக்கூறியது,
இழிப்புப்பற்றிய திணைவழுவமைதி;
தொல்காப்பியவுரையில் நச்சினார்க்கினியர்.”தாம்வந்தார் தொண்டனார்” என்பது,
உயர்சொல் குறிப்புநிலையின் இழிபு விளக்கிற்று’ என்பது, இங்கு உணரத்தக்கது. ஐவர் – தொகைக்குறிப்பு.
வீழ்ந்தனரென இறந்தகாலத்தாற் கூறினது, விரைவை விளக்கும்.

மூன்றாமடியில், அரங்கு – ரங்கமென்ற வடசொல்லின் விகாரம். த்வாரம், த்வாரகா – வடசொற்கள்.
அனைவராலும் விரும்பியேற்றுக்கொள்ளப்படுதலும், மதித்தற்கரிய மதிப்புடைமையும், சிறப்பும் பற்றி, ‘மணியே’ என்றார்.
‘அடியேன்’ என்றது, பணிவை விளக்கும்.
‘அடியேன் உன் அடைக்கலம்’ என்றவிடத்து, தன்மையிற் படர்க்கை வந்த இடவழுவமைதியும்,
இழிப்பினால் (பணிவு பற்றி) உயர்திணை அஃறிணையாகக் கூறப்பட்ட திணைவழுவமைதியும் இருத்தல் காண்க.

கண்ணன் காளியனுடைய முடியின்மேல் ஏறி நர்த்தநஞ்செய்தருளும் போது ஐந்து தலைகளை யுடைய அந்நாகம்
எந்தெந்தப் படத்தைத் தூக்குகின்றதோ அந்தப்படத்தைத் துவைத்து நர்த்தனஞ்செய்து நின்று
அப்பாம்பின் வலிமையை யடக்கி அதனை மூர்ச்சையடையச் செய்கையில் பலவகை
நடனத்திறங்களைச் செய்து காட்டியமை தோன்ற, ‘ஆடரவினரங்கா’ என்றார்.

முதலடியினிறுதியில், மங்கையர் என்ற பெயர்ப்பகுபதத்தினிடையே சந்தியால் வரும் உடம்படு மெய்யாகிய
யகரத் தோற்றத்தைக் கொள்ளாது விட்டது, யமகநயத்தின்பொருட்டு.
இப்படி பகுபதத்தின் அல்லது பகாப்பதத்தினிடையிலே யுள்ள எழுத்துக்களை யமகப் பொருத்தத்தின் பொருட்டுப்
பிரித்து எழுதியுள்ள விடங்களிலெல்லாம் மூலத்தில் (-) இக்குறி இடப்பட்டிருக்கிறது.
இங்ஙனம் சொல்லணிக்காகப் பிரித்துக்காட்டியிருந்தாலும் பொருள் நோக்கும் பொழுது சேர்த்துப் படித்துக் கொள்க.

—————

அடைக்கலந் தாயத்தவர் போலுடலுறையை வரையும்
அடைக்கலந் தாவுலகம் கொண்ட தாள்களுக்கண்ட முண்டால்
அடைக்கலந் தாயரங்கா வாயர்பாடியிலன்று நெய்பால்
அடைக்கலந் தாய் வைத்து வாய் நெரித்தூட்ட வழுமையனே——–18–

அண்டம் – அண்ட கோளங்களை,
உண்டு – உட் கொண்டு,
ஆல் அடை கலந்தாய் – ஆலிலையிற் சேர்ந்து (பிரளயப் பெருங்கடலிற்) பள்ளி கொண்டவனே!
அரங்கா!
அன்று – அக் காலத்தில் (முன்பு கண்ணனாகத் திரு வவதரித்த பொழுது),
ஆயர்பாடியில் – திருவாய்ப் பாடியிலே,
நெய் – நெய்யை (எண்ணெயை),
பாலடை கலம் வைத்து – பாலடையாகிய பாத்திரத்திற் பெய்து கொண்டு,
தாய் – (உன்னை வளர்த்த) தாயாகிய யசோதைப் பிராட்டி,
வாய் நெரித்து ஊட்ட – (உனது) வாயில் வைத்து அவ் வாயை நெரித்து உண்பிக்க,
அழும் – (ஏறிட்டுக் கொண்ட மனிதப் பிறப்புக்கேற்ப எளிய சிறு குழந்தை போலவே) அழுத,
ஐயனே – இறைவனே!
தாயத்தவர் போல் – பங்காளிகள் போல,
உடல் உறை – (விலக்க வொண்ணாதவராய் எமது) உடம்பாகிய குடிசையிலே ஒருங்கு உடன் இருக்கிற,
ஐவரையும் – ஐந்து இந்திரியங்களையும்,
அடைக்கலம் – (விஷயாந்தரத்திற் செல்ல வொட்டாமல்) அடக்கி வசப்படுத்தி வைக்க வல்லமை யுடையோமல்லோம், (யாம்);
தாய் உலகம் கொண்ட தாள்களுக்கு அடைக்கலம் – தாவி உலகங்களை அளந்து கொண்ட
(உனது) திருவடிகளுக்கு அடைக்கலப் பொருளாகிறோம்; (எ – று.)

யாம் பஞ்சேந்திரிய நிக்ரக சக்தியை யுடையோமல்லோமாயினும் உனது திருவடிகளிற் சரண்
புகுந்தோ மாதலால், எங்களை நீ பாதுகாத்தருளக் கடவை யென்பதாம்.

அடைக்கலம் – தன்மைப் பன்மை யெதிர் மறைமுற்று; கு – சாரியை, அல் – எதிர்மறையிடைநிலை.
அடைத்தல் – இப்பொருளதாதலை, “ஐவரை யகத் திடை யடைத்த முனி” என்ற விடத்துங் காண்க.
தாயம் – பங்குக்கு உரிய பொருள்; அதனைப் பெறுதற்கு உரியவர், தாயத்தவர்; தாயாதிகள், ஞாதிகள்.
ஓர் இல்லத்திலே ஒருங்குவசித்தற்கு உரியவர்களான அவர்கள்,
ஓர் உடம்பிலே ஒருங்கு வசிக்கின்ற ஐம்பொறிகட்கு உவமை கூறப்பட்டனர்;
இவ்வுவமையில் ‘பங்காளியோ பகையாளியோ’ என்னும்படி தீங்கு செய்யுந்தன்மையும் விளங்கும்.
ஐவரையும், உம் – இனைத்தென்றறிபொருளில்வந்த முற்றும்மை.

தாய் என்ற தெரிநிலை வினையெச்சத்தில், தாவு என்பதன் விகாரமான தா – வினைப்பகுதி, ய் என்ற விகுதியே இறந்தகாலங்காட்டும்.
அண்டம் – உலக வுருண்டை. அடை என்ற சொல் – இலை யென்ற பொருளில் வருதலை,
‘அடைக்காய்’ என்றவிடத்திலுங் காண்க. ஆ – பசு; அதனையுடையவர், ஆயர்: இடையர்; ய் – எழுத்துப்பேறு. அவர்கள் வசிக்கிற ஊர்,
ஆயர்பாடி. கண்ணபிரான் வளர்ந்த இடம், கோகுலமென்னும் பெயரினது.

‘அன்று’ எனச் சுட்டினது, கதையை உட்கொண்டு. பாலடை – பால்புகட்டும் சங்கு;
பால் அடுக்கப் பெறுவதெனப் பொருள்படுங் காரணக்குறி;
கலம் – உண்கலம்.

“பத்துடையடியவர்க் கெளியவன் பிறர்களுக் கரியவித்தகன்” என்றபடி
அருமையான பரத்வத்தையுடைய எம்பெருமான் அதனை இருந்தது தெரியாதபடி விட்டு
எளிமை மேற்கொண்டு பாவனைசெய்த சௌலப்பியம் விளங்க,
‘ஆயர்பாடியி லன்று செய் பாலடைக் கலந்தாய்வைத்து வாய் நெரித்தூட்ட வழுமையனே’ என்றார்.

————-

செல்வ நிலையாமையையும் சிற்றின்பத்தின் சிறுமையையும் அறிந்து அவற்றை வெறுத்து,
முற்ற மூத்த நிலையில் மனம் ஒருநிலைப்படா தாதலால், இம்மையில் வருந்தியாவது
இளமை தொடங்கியே அழகிய மணவாளனுக்குத் தாசராவீரேல்,
மறுமையில் பேரின்பமடைந்து அழிவிலாநந்தம் பெறலாமென்று உலகத்தார்க்கு உணர்த்தியவாறாம்.

ஐயமருந்திவை யுண் என்று மாதர் அட்டு ஊட்டும் செல்வம்
ஐயமருந்தினைப்போதே அவர் இன்பம் ஆதலினால்
ஐயமருந்தியக்கங் குறுகா முன் அரங்கற்கு அன்பாய்
ஐயமருந்தயும் வாழ்மின் கண் மேல் உனக்கு ஆநந்தமே ——–19–

ஐய – ஐயனே!
இவை – இவ்வுணவுகள்,
மருந்து – (இன்சுவை மிகுதியால்) தேவாமிருதம்போன்றன;
உண் – (இவற்றை) உண்ணக் கடவை,’
என்று – என்று (அன்புபாராட்டி உபசாரவார்த்தை) சொல்லி,
மாதர் – காதற்கு இடமான உரிமை மகளிர்,
அட்டு ஊட்டும் – (தாமே) சமையல் செய்து உண்பிக்கும்,
செல்வம் – ஐசுவரியம்,
ஐயம் – சந்தேகத்துக்கு இடமானது (நிலையற்றது என்றபடி);
அவர் இன்பம் – அந்த மகளிருடைய போக ரசமும்,
அருந் தினை போதே – சிறிய தினையென்னுந் தானியத்தி னளவினதான அதி சொற்ப காலத்ததே;
ஆதலினால் – ஆதலால்,
ஐ அமரும் தியக்கம் குறுகாமுன் – கோழை (கண்டத்திற்) பொருந்துகிற கலக்கம்
(அந்திமதசையில் ஆகின்ற தடுமாற்றம்) நெருங்குதற்கு முன்னமே,
ஐயம் அருந்தியும் அரங்கற்கு அன்பு ஆய் வாழ் மின்கள் – பிச்சை யெடுத்துப் புசித்தாயினும் ரங்கநாதன்
விஷயத்திற் பக்தி கொண்டு சீவியுங்கள்; (இப்படிசெய்வீராயின்),
மேல் – இனிமேல்
(இப்பிறப்பு ஒழிந்தவளவில் என்றபடி),
உமக்கு – உங்களுக்கு, ஆநந்தமே – (பரமபதத்து) நித்தியாநந்தமே உண்டாம்; (எ – று.) –
ஈற்று ஏகாரம் – பிரிநிலையோடு தேற்றம்.

ஐய – ஸ்வாமீ; இவ்விளி, அன்பையும் மரியாதையையும் காட்டும்: அண்மை விளி யாதலின், ஈறு அழிந்தது.
மருந்து = சாவா மருந்து; சாவாமைக்குக் காரணமாகிய மருந்து.
‘இவை’ என்ற பன்மையால், பல்வேறு வகைப்பட்ட உண்டிகளும் சிற்றுண்டிகளுமென விளங்கும்.
ஊட்டும், உண் என்பதன் பிறவினையான ஊட்டு – பகுதி.
செல்வவானாதலால் பரிசாரகர் பலர் இருக்கையிலும் மனைவியரே சமைத்து உண்பித்தல், அன்புடைமையால் இன்பஞ்செய்தற்பொருட்டு,
‘ஊட்டும்’ என்ற சொல்லின் ஆற்றலால், தாம் கையில் வாங்கி யுண்ணாமல் மனைவியர் தாமே வாயிற் போகட உட்கொள்ளுதல் தோன்றும்.
செல்வச் செருக்கினால் சிறிதளவே உண்டு மிச்சத்தை வேண்டாவென்று விலக்குதலால்,
‘சாமி! அமிருதம் இவை உண்’ என்று உரிமை மகளிர் வேண்டலாயிற்று.
செல்வம் என்ற பெயர் தானே அதன் நிலைமை யின்மையை விளக்கும்.
செல்வம் – நிலைத்திராமல் நீங்கிச் செல்வதென்று பொருள்படுங் காரணக்குறி:
செல் – பகுதி, அம் – கருத்தாப் பொருள்விகுதி, வ் – எழுத்துப்பேறு.

“அறுசுவையுண்டி யமர்ந்தில்லா ளூட்ட, மறுசிகைநீக்கி யுண்டாரும் – வறிஞராய்ச்,
சென்றிரப்ப ரோரிடத்துக் கூழெனிற் செல்வமொன்று, உண்டாக வைக்கற்பாற்றன்று,”

“முல்லை முகை சொரிந்தாற்போன் றினிய பாலடிசில் மகளிரேந்த, நல்ல கருணையால் நாள்வாயும்
பொற்கலத்துநயந் துண்டார்கள், அல்லலடைய அடகிடுமி னோட்டகத்தென்று அயில்வார்க்கண்டும்,
செல்வம் நமரங்காள் நினையன்மின் செய்தவமே நினைமின்கண்டீர்”,

“ஆமின்சுவை யவையாறோ டடிசிலுண்டார்ந்தபின், தூமென் மொழிமடவா ரிரக்கப் பின்னுந் துற்றுவார்,
ஈமி னெமக் கொரு துற்றென் றிடறுவ ராதலிற், கேண் மின் துழாய்முடி யாதியஞ்சோதிகுணங்களே” என்பன இங்கு நோக்கத்தக்கவை.

அருமை – சிறுமையின்மேலது. தினை – சிறுமைக்குக் காட்டுவதோ ரளவை.
போகாதே, ஏ – தேற்றத்தோடு இழிவு சிறப்பு.

செல்வ நிலையாமையையும், இன்ப நிலையாமையையும் முன்னிரண்டடியில் விளக்கினவர்,
மூன்றாமடியில் இளமை நிலையாமையையும், யாக்கை நிலையாமையையும் விளக்கினார்.
தியக்கம் – தியங்கு என்ற பகுதியின் தொழற்பெயர்; அம் – விகுதி, வலித்தல் – விகாரம்.
ஐ அமர் உந்தி அக்கம் குறுகாமுன் எனப் பதம் பிரித்து, கோழை (கண்டத்தில் வந்து சிக்கிக் கொண்டு
வெளிவருதற்பொருட்டுப்) போரைச் செலுத்தி இந்திரியங்கள் ஒடுங்காத முன்னே யென்று உரைத்தலு மொன்று.

செல்வம் இன்பம் இளமை யாக்கை நிலையாமை விளக்கி
புலன்கள் நைய மெய்யில் மூத்துப் போந்திருந்து உள்ளம் எள்கிக்
கலங்க ஐக்கள் போத உந்திக் கண்ட பிதற்றா முன்
அலங்கலாய தண் துழாய் கொண்டு ஆயிரம் நாமம் சொல்லி
வலம்கொள் தொண்டர் பாடியாடும் வதரி வணங்குதுமே -பெரிய திருமொழி

அக்கம் – அக்ஷ மென்ற வடசொல் லின்விகாரம்.
இனி, அக்கம் குறுகாமுன் – கண்பார்வை குறைதற்கு முன்னே எனினுமாம்.
அருந்தியும், உம் – இழிவுசிறப்பு. வாழ்மின்கள், கள் – விகுதிமேல் விகுதி.
மேல் ஆநந்தம் – மேன்மையான ஆநந்தத்தைத் தருவதாம் எனினுமாம்.

———–

நந்த மரங்கனை மா கடல் ஏழு நடுங்க எய்த
நந்த மரங்கனைப் பற்று நெஞ்சே வினை நையும் முன்கை
நந்த மரங்கனையார் மயல்போம் வரு நற் கதிவா
நந்த மரங்கனைவர்க்கும் எஞ்ஞான்று நரகில்லையே ———20–

நெஞ்சே – என் மனமே!
மரம் (ஏழும்) நந்த – ஏழு மராமரங்களும் அழியவும் (துளைபடவும்),
கனை மா கடல் ஏழும் நடுங்க – ஒலிக்கின்ற பெரிய ஏழு சமுத்திரங்களும் அஞ்சி நடுங்கவும்
(வெம்மையை ஆற்றாமல் கலங்கிக் குழம்பவும்),
ஏழும் -மரங்களிலும் கடல்களிலும் கூட்டிப் பொருள்
எய்த – அம்புதொடுத்த,
நம்தம் அரங்கனை – திருவரங்கத்து எம்பெருமானை (நம்பெருமாளை),
பற்று – சரணமடைவாய்; (அங்ஙனம் அடைந்தால்),
வினை நையும் – கருமங்கள் அழிந்து போம்;
முன் கை நந்து அமர் அங்கனையார் மயல் போம் – முன்னங்கைகளிற் சங்கு வளையல்கள் பொருந்திய
மாதர்கள் பக்கல் உண்டாகும் ஆசை மயக்கமும் ஒழியும்;
நல் கதி வாநம் வரும் – (எல்லாப் பதவிகளினுஞ்) சிறந்த பதவியாகிய பரமபதம் சித்திக்கும்;
தமர் அனைவர்க்கும் – (நமக்கே யன்றி) நம்மைச் சார்ந்தவரெல்லார்க்கும்,
எஞ்ஞான்றும் – எப்பொழுதும் நரகு இல்லை – நரகமடைதல் இல்லையாம்; (எ – று.) –
ஈற்று ஏகாரம் – தேற்றம். அங்கு – அசை.

உவர்நீர்க்கடலின் மேல் இராமபிரான் ஆக்நேயாஸ்த்ரந்தொடுக்கத் தொடங்கியவளவில், அதன் வெப்பத்திற்கு ஆற்றாது
ஏழு கடல்களும் கொதித்தனவென்பதை,
“அண்டமூலத்துக்கப்பாலாழியுங் கொதித்த தேழு,
தெண்டிரைக் கடலின் செய்கை செப்பி யென் தேவன் சென்னி,
பண்டைநாளிருந்த கங்கைநங்கையும் பதைத்தாள் பார்ப்பான்,
குண்டிகையிருந்தநீரும் குளுகுளு கொதித்ததன்றே” என்றதனால் அறிக.

“ஒற்றைச்சரஞ் சுட்ட வுட்கடல்போற் புறத்தோலமிட,
மற்றைக்கடல் வெந்த தெவ்வண்ணமோ மதமாவழைக்க,
அற்றைக்குதவுமரங்கர் வெங்கோபத்தை யஞ்சி யரன்,
கற்றைச்சடையினிடையே வெதும்பினள் கங்கையுமே” என்றார் திருவரங்கத்துமாலையிலும்.

‘ஏழும்’ என்பதை ‘மரம்’ என்பதனோடும் கூட்டுக; கடைநிலைத்தீவகம்.
பற்றுதல் – இடைவிடாது நினைத்தல்.
நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாதலால், ‘வினை’ எனப் பொதுப்படக் கூறினார்.
நைதல் – நசித்தல்.
‘முன்கை’ என்றதில், முன் என்பது – இடமுணர்த்தும்.
நந்து – சங்கு; அதனாலாகிய வளைக்குக் கருவியாகுபெயர்.
அங்கநா என்ற வடசொல், அங்கனை யென விகாரப்பட்டது; அச்சொல், அழகிய தனது அங்கங்களாற்
பிறரைத் தன்னிடம் சேர்ப்பவ ளென்று பொருள்படும்.

பொதுநகரத்துக்கும் சிறப்புனகரத்துக்கும் வரிவடிவில் மிக்கவேறுபாடு இருப்பினும்,
ஒலிவடிவில் மிக்கவேறுபாடு இல்லாமைபற்றி, யமகம் திரிபு சிலேடை இவற்றில் நகரனகரங்களை
அபேதமாகக்கொண்டு அமைத்தல் மரபாதலால், ‘வானம்’ என்னவேண்டியவிடத்து ‘வாநம்’ எனப்பட்டது.
இங்ஙனம் யமகநயத்தின்பொருட்டு வரிவடிவின் வேறுபாடு கருதாது ஒலிவடிவொற்றுமையால் ஒன்றுக்குஒன்றாகக்
கொள்ளப்பட்ட எழுத்துக்கள், தடித்தவெழுத்தில் அச்சிடப்பட்டிருக்கின்றன.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி -தனியன் -காப்புச் செய்யுள்கள் -1-5-

January 22, 2022

காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்|
ஸ வாஸுதேவோ ரங்கேச: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்||
விமானம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்|
ஸ்ரீரங்கசாயி பகவாந் ப்ரணவாத்த ப்ரகாசக: ||

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரெங்க மிவா பரம்
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடம் ஈஷ்யதே

———

‘திரு’ என்னும் பலபொருளொருசொல் – வடமொழியில் ‘ஸ்ரீ’ என்பது போல,
தமிழிலே தேவர்கள் அடியார்கள் ஞானநூல்கள் மந்திரங்கள் புண்ணிய ஸ்தலங்கள் புண்ணிய தீர்த்தங்கள் முதலிய
மேன்மையையுடைய பலபொருள்கட்கு விசேஷணபதமாகி மகிமைப்பொருளைக்காட்டி, அவற்றிற்குமுன்னே நிற்கும்;
இங்கு அரங்கத்திற்கு அடைமொழி; அந்தாதிக்கு அடைமொழியாகவுமாம்.

(ஸ்ரீவைகுண்டம் திருப்பாற்கடல் சூரியமண்டலம் யோகிகளுடைய உள்ளக்கமலம் என்னும் இவையனைத்தினும் இனிய தென்று திருமால்)
திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்கு மிட மானதுபற்றி, ‘ரங்கம்’ என்று அவ் விமானத்திற்குப் பெயர்;
திருமால் இங்கு ரதியை (ஆசைப் பெருக்கத்தை) அடைகின்றன னென்க. ரங்கம் என்னும் வடமொழி,
அகரம் மொழிமுதலாகி முன்வரப்பெற்று ‘அரங்கம்’ என நின்றது; (நன்னூல் – பதவியல் – 21.)

இங்கு ‘அரங்கம்’ என்பது – விமானத்தின்பெயர் திருப்பதிக்கு ஆனதோர் ஆகுபெயர் (தானியாகுபெயர்).
இனி, திருமகளார் திருநிருத்தஞ்செய்யுமிடமாயிருத்தலாலும், ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திருவுக்கு (மேன்மைக்கு) க்கூத்துப்
பயிலிடமாயிருத்தலாலும், ஆற்றிடைக்குறை (நதியினிடையேஉயர்ந்த திடர்) யாதலாலும், திருவரங்கமென்னும் பெயர் வந்த தெனினுமாம்.

இங்கு ‘அரங்கம்’ என்பது – அத்திருப்பதியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானைக் குறித்தது; இலக்கணை.
இனி, “திருவாளன் திருப்பதிமேல் திருவரங்கத் தமிழ்மாலை விட்டுசித்தன் விரித்தன” என்று பெரியாழ்வார் திருமொழியிற்
கூறியபடி திருவரங்கத்தின் விஷயமான தமிழ்த்தொடை யாதல்பற்றி ‘திருவரங்கத்தந்தாதி’

இந்நூலிலுள்ள கலித்துறைகள் யாவும் யமக மென்னுஞ் சொல்லணி யையுடையன வாதலால், இந்நூல் யமகவந்தாதியாம்.
யமகமாவது – பலஅடிகளிலாயினும் ஓரடியிற்பலவிடங்களிலாயினும் வந்த எழுத்துத் தொடர்களே மீண்டும் வந்து பொருள் வேறுபடுவது;
இது, தமிழில் மடக்கு என்னப்படும். இந்நூற்செய்யுள்களிலெல்லாம் நான்கடிகளிலும் முதலெழுத்துக்கள் சில ஒன்றி நின்று
வெவ்வேறு பொருள்விளைத்தல், இடையிட்டுவந்த முதல் முற்று மடக்கு எனப்படும்.

இந்நூல் – நூற்புறமாக முதலிற்கூறப்பட்ட காப்புச்செய்யுள் ஐந்தும்,
நூலினிறுதியிற் கூறப்பட்ட தற்சிறப்புப்பாயிரச்செய்யுள் ஒன்றும் தவிர,
அந்தாதித்தொடையாலமைந்த நூறு கட்டளைக்கலித்துறைகளை யுடையது.
சொற்றொடர்நிலைச்செய்யுள் பொருட்டொடர்நிலைச்செய்யுள் என்ற வகை யில், இது, சொற்றொடர்நிலை;
“செய்யு ளந்தாதி சொற்றொடர் நிலையே” என்றார் தண்டியலங்காரத்தும்.

தலத்தின் பெயர் – ரங்கம், ஸ்ரீரங்கம், திருவரங்கம், பெரியகோயில், கோயில் என்பன.
பூலோக வைகுண்டம், போகமண்டபம்,
ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரம் என்பவை – விசேஷநாமங்களாம். இது, ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரம் எட்டில் ஒன்று.

இத்திருப்பதியின் எம்பெருமானது திருநாமம் – ஸ்ரீரங்கநாதன், பெரியபெருமாள், நம்பெருமாள், அழகியமணவாளன்.
கோலம் – பள்ளி கொண்ட திருக்கோலம். சேஷசயனம்.
சந்நிதி – தெற்கு நோக்கியது.
நாச்சியார் – ஸ்ரீரங்கநாயகி, ஸ்ரீரங்கநாச்சியார்.
விமானம் – பிரணவாகார விமானம், வேத சிருங்கம்.
நதி – உபய காவேரி. [தென்திருக்காவேரியும், வடதிருக்காவேரியும் (கொள்ளிடம்.)]
தீர்த்தம் – சந்திரபுஷ்கரிணி முதலிய நவதீர்த்தங்கள்.
தலவிருக்ஷம் – புன்னைமரம்.
பிரதியக்ஷம் – தர்மவர்மா, ரவிதர்மன், சந்திரன், காவேரி முதலான வர்களுக்குப் பிரதியக்ஷம்.

பாடல் – பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார்,
பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் என்கிற
ஆழ்வார்கள் பதின்மர், ஆண்டாள் இவர்கள் மங்களாசாஸநம்.

பஞ்சகாவியங்களுள் ஒன்றாகிய சிலப்பதிகாரத்தில் இந்தத் திவ்வியதேசமும் இதிலெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானும்
நீல மேக நெடும் பொற் குன்றத்து பால் விரிந்து அகலாது படிந்தது போலே
ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல் பாயற் பள்ளி பலர் தொழுது ஏத்த
விரை திரை காவிரி வியன் பெரும் துருத்தி திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும்
—என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற வந்தேன்
என்று பாராட்டிக் கூறப்பட்டிருத்தலுங் காண்க.

————————–

தனியன் –
சிறப்பு பாசுரம் –
மணம் வாள் அரவிந்தைமார் நோக்க இம்மை மறுமையில் மா
மண வாளர் தம் பதம் வாய்த்திடும் கோயிலிலே வந்த அந்த
மண வாளர் பொன் திருப்பாத அம்புயங்கட்கு மாலை என
மண வாளர் சூடும் யமகம் அந்தாதியை வாசிமினே-

கோயிலில் வந்த – திருவரங்கத்தி லெழுந்தருளியுள்ள,
அந்தம் மணவாளர் – அழகிய மணவாளருடைய,
பொன் திரு பாத அம்பு யங்கட்கு – அழகிய திருவடித்தாமரைகட்கு (உரிய),
மாலை என – மாலையாக,
மணவாளர் சூடும் – அழகிய மணவாளதாசர் சாத்திய,
யமகம் அந்தாதியை – இந்த யமகவந்தாதிப் பிரபந்தத்தை வாசிமின் –
(நீங்கள் படியுங்கள்:) (இதனைப்படிப்பீராயின் உங்கட்கு), –
இம்மை – இம்மையிலே,
மணம் வாள் அர விந்தைமார் நோக்க – வாசனையையும் ஒளியையுமுடைய செந்தாமரை மலரில்
வசிக்கின்ற அஷ்டலக்ஷ்மிகளும்
ஆதிலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, தநலக்ஷ்மி, தானியலக்ஷ்மி, வீரலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, சந்தாநலக்ஷ்மி, சௌபாக்கிய லக்ஷ்மி
கருணையோடு பார்த்தருள, –
மறுமையில் – மறுமையிலே,
மா மணவாளர் தம் பதம் வாய்த்திடும் – திருமகள் கணவரான திருமாலினது ஸ்தானம்
[ஸ்ரீவைகுண்டம்] தவறாது கிடைக்கும்; (என்றவாறு.) –
ஏ – ஈற்றசை.

ஸ்ரீரங்கத்துக்கு அருகி லுள்ளதும் நிசுலாபுரியென்னும் மறுபெயரை யுடையதுமான உறையூரை
இராச தானியாகக் கொண்டு அதில் வீற்றிருந்து அரசாளுகிற தர்மவர்மாவின் வம்சத்தவனான நந்தசோழன்
வெகுகாலம் பிள்ளையில்லாமலிருந்து ஸ்ரீரங்கநாதனைக்குறித்துத் தவஞ்செய்து அத்தவத்தின் பயனாய்
ஒருநாள் தாமரையோடையில் ஒருதாமரைமலரில் ஒருபெண்குழந் தையிருக்கக்கண்டு களித்து
அக்குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து கமலவல்லி யென்று திருநாமஞ்சாத்தி வளர்த்துவருகையில்,
மங்கைப்பருவ மடைந்த அந்தப்பெண் தோழியருடன் உத்தியானவனத்தில் மலர்கொய்து விளையாடிவரும்போது,
திருமகளின் அம்சமான அப்பெண்மணியை மணம் புரிந்து ஏற்றுக்கொள்ள விரும்பிய ஸ்ரீரங்கநாதன்

அதி சுந்தர மூர்த்தியாய் விபவாவதாரமாகக் குதிரைமீது ஏறி வேட்டையாடச்செல்லுகிற வியாஜத்தால் அவளெதிரில்
எழுந்தருளிக் காட்சிகொடுக்க, மிகஅழகிய அப்பெருமானைக் கண்டு கமலவல்லி மோகங்கொள்ள,
அதனையுணர்ந்த நந்தசோழன் அந்தக்கன்னிகையை ரங்கநாதனுக்கு மிக்கசிறப்போடு மணம்புரிவித்தான்;
இங்ஙனம் அழகியவடிவங்கொண்டுமணம்பெற்றுக் கலியாணக்கோலத்தோடு விளங்கியதனால்,
ஸ்ரீரங்கநாதனுக்கு அழகியமணவாளனென்று ஒருதிருநாம மாயிற்று;
(மணம் – விவாகம்; அதனை ஆள்பவன் [பெற்றவன்] – மணவாளன்.)
முன்னிலும் பின்னழகிய பெருமாள், ஆபரணத்துக்கு அழகு கொடுக்கும் பெருமாள் என்ற திருநாமங்களும் உண்டு.
“எழிலுடையவம்மனைமீர் என் அரங்கத்து இன்னமுதர், குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழி, லெழு
கமலப்பூவழகர் எம்மானார் என்னுடைய, கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே” என்ற நாச்சியார் திருமொழியையுங் காண்க.
அழகிய மணவாள னென்ற பொருளில் ‘அந்த மணவாளன்’ என்றார்; (அந்தம் – அழகு).
அந்த என அகரச்சுட்டின் மரூஉவாக எடுத்து, அப்படிப்பட்ட [அதாவது – அதிப்பிரசித்திபெற்ற] என்றும் உரைக்கலாம்; உலகறிசுட்டு.

கோ+இல்=கோயில்; பொதுவிதிப்படி கோவில்என வகரவுடம்படு மெய் பெறாது யகரம்பெற்று வழங்குவது, இலக்கணப்போலி.
பெருமானுடைய இருப்பிடமென ஆறாம்வேற்றுமைத் தொகையாகவாவது,
தலைமையான இடமெனப் பண்புத்தொகையாகவாவது விரியும். (கோ – தலைவன், தலைமை; இல் – இடம், வீடு.)
இது தேவாலயங்கட்கெல்லாம் பொதுப்பெயராயினும், நூற்றெட்டுத் திருமால் திருப்பதிகளுள்
திருவரங்கம் தலைமைபெற்ற தாதலால், இதனைக் ‘கோயில்’ எனச் சிறப்பாகவழங்குவது, வைஷ்ணவ சம்பிரதாயம்;

ரங்கநாதன் ஆதியில் பிரமனது திருவாராதநத்திருவுருவமாய்ச் சத்தியலோகத்திலே இருந்து பின்பு
இக்ஷ்வாகுகுலதநமாய்த் திருவயோத்தியி லெழுந்தருளியிருந்து,
பின்பு விபீஷணாழ்வானால் இவ்விடத்து வந்தமை தோன்ற, ‘கோயிலில் வந்த அந்த மணவாளர்’ என்றார்.

பொன் – பொன்போலருமையாகப் பாராட்டத்தக்க எனினுமாம்.

பா தாம்புஜம் – தீர்க்கசந்தி பெற்ற வடமொழித்தொடர்; திருவடியாகிய தாமரைக்கு என உருவகப்பொருள்பட ‘
பாதாம்புயங்கட்கு’ எனக் கூறினாலும், மேல்வரும் ‘மாலையெனச்சூடும்’ என்ற முடிக்குஞ்சொல்லுக்கு ஏற்ப,
தாமரை போன்ற திருவடிக்கு என முன்பின்னாகத்தொக்க உவமைத்தொகையாகக் கருத்துக் கொள்ளுதலே சிறப்பாமென்க;
உருவகத்துக்கு ஏற்ற தொடர்ச்சிச் சொல் இல்லாமையின். திருவடிக்குத் தாமரைமலர் உவமை,
செம்மை மென்மை யழகுகட்கு. அம்புஜம் – நீரில்தோன்றுவதெனப் பொருள்படும்;
தாமரைக்குக் காரணவிடுகுறி; மலர்க்கு முதலாகுபெயர். (அம்பு – நீர்.) அம்புய ங்கட்குமாலையென – நான்காம்வேற்றுமை, தகுதிப்பொருளது;
அழகியமணவாளனது திருவடிகளின் மகிமைக்கும் மென்மைக்கும் ஏற்ற சிறப்பும் மென்மையும் வாய்ந்தது
இந்நூலென்ற கருத்து இதனாற்போதரும். பாதாம்புயங்களிற் சூடின எனக் கொள்ளுதலும் ஒன்று; உருபு மயக்கம்.

பெருமானது திருவடிகளிற் சூட்டும் பூமாலைபோன்ற பாமாலை யென்க;
(“அடிசூட்டலாகுமந்தாய மம்,” “செய்யசுடராழியானடிக்கே சூட்டினேன்சொன்மாலை,”
“கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ் – உற்ற, திருமாலை பாடுஞ் சீர்” என்றார் பெரியாரும்.)

வாள் – ஒளி; உரிச்சொல். அரவிந்தம் – தாமரை; வடசொல்: அதில் வாழ்பவள், அரவிந்தை:
அதன்மேல், மார் – பலர்பால்விகுதி. இம்மை – இப்பிறப்பு, மறுமை – இறந்தபின்வரும் நிலை.
மாமணவாளர் – ஸ்ரீயஃபதி.மா, பதம் – வடசொற்கள்.
“தேனார்கமலத்திருமாமகள்கொழுநன், தானே வைகுந்தந்தரும்” என்றபடி பிராட்டியின் புருஷகார பலத்தாலே
பெருமான் தனது உலகத்தைத் தந்தருள்வ னென்பதுதோன்ற, ‘மாமணவாளர்தம்பதம் வாய்த்திடும்’ என்றார்.
மணவாளர் என்றது – மூன்றடியிலும், உயர்வுப்பன்மை.
ஒரு பெயரின் ஒருபகுதியைக் கொண்டு அப் பெயர் முழுதையுங்குறிப்பதொரு மரபுபற்றி,
அழகியமணவாளதாசரை ‘மணவாளர்’ என்றார்; இதனை வடநூலார் ‘நாமைகதேசேநாமக்ரஹணம்’ என்பர்.
இரண்டாமடியில், தம் – சாரியை. வாய்த்திடும், இடு – தேற்றமுணர்த்தும் துணைவினை.

‘மணவாளர்’ என ஆக்கியோன் பெயரும், ‘யமகவந்தாதி’ என நூற்பெயரும்,
‘கோயிலில் வந்த அந்தமணவாளர் பொற்றிருப்பாதாம்புயங்கட்கு மாலையெனச்சூடும்’ என நுதலியபொருளும்,
‘மணவாளரவிந்தைமார்நோக்க விம்மை மறுமையில் மாமணவாளர்தம்பதம் வாய்த்திடும்’ எனப் பயனும் பெறப்பட்டன.
“ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை, நூற்பெயர்யாப்பே நுதலியபொருளே, கேட்போர் பயனோடா யெண்பொருளும்,
வாய்ப்பக்காட்டல் பாயிரத்தியல்பே” என்ற சிறப்புப்பாயிரத்திலக்கணத்தில் மற்றவை குறிப்பிக்கப்படுவன உய்த்துணர்ந்துகொள்க.

இக்கவி, பிறன்கூறியது; அபியுக்தரிலொருவர்செய்த தென்பர்:
இது, வைஷ்ணவசம்பிரதாயத்தில் ‘தனியன்’ எனப்படும்;
(நூலுள் அடங்காது தனியே பாயிரமாய் நிற்றல் பற்றியது, அப்பெயர்; ‘அன்’ விகுதி – உயர்வுப் பொருளது.)

———–

காப்பு

காப்பு – காத்தல்; அது, இங்கு, காக்கின்ற கடவுளின் விஷயமான வணக்கத்தைக் குறிக்கும்:
ஆகவே, கவி தமக்குநேரிடைத்தக்க இடையூறுகளை நீக்கித் தமது எண்ணத்தை முடிக்க வல்ல
தலைமைப் பொருளின் விஷயமாகச் செய்யுந் தோத்திர மென்பது கருத்து.

[விஷ்வக்ஸேநரும், பஞ்சாயுதமும்.]
ஓர் ஆழி வெய்யவன் சூழ் உலகு ஏழ் உவந்து ஏத்து அரங்கர்
கார் ஆழி வண்ணப் பெருமாள் அந்தாதிக்கு காப்பு உரைக்கின்
சீர் ஆழி அம் கையில் பொன் பிரம்பு ஏந்திய சேனையர் கோன்
கூர் ஆழி சங்கம் திரு கதை நாந்தகம் கோதண்டமே–1-

ஓர் ஆழி – ஒற்றைச் சக்கரங்கோத்த தேரையுடைய,
வெய்யவன் – சூரியனால்,
சூழ் – சூழ்ந்துவரப்பெற்ற,
உலகு ஏழ் – ஏழுதீவுகளாகவுள்ள பூமியி லிருக்கிற சனங்கள்,
உவந்து ஏத்து – மனமகிழ்ந்து துதிக்கப் பெற்ற,
அரங்கர் – திருவரங்கமென்னுந் திருப்பதியில் எழுந்தருளியிருக்கின்றவரும்,
கார் ஆழி வண்ணம் பெருமாள் – கரியகடல் போன்ற திருநிறமுடைய நம்பெருமாளுமாகிய எம்பெருமான் விஷயமாக (யான்பாடுகிற),
அந்தாதிக்கு – அந்தாதியென்னும் பிரபந்தம் இடையூறின்றி இனிது நிறைவேறுதற்கு,
காப்பு – பாதுகாவலாகும் பொருள்கள், –
உரைக்கின் – (இன்னவை யென்று) சொல்லுமிடத்து, –
சீர் ஆழி அம் கையில் பொன் பிரம்பு ஏந்திய சேனையர்கோன் – சிறந்த மோதிரத்தை யணிந்த அழகிய கையிற்
பொன் மயமான பிரம்பை [செங்கோலைத்] தரித்த சேனை முதலியாரும்,
கூர் ஆழி சங்கம் திருகதை நாந்தகம் கோதண்டமே – கூரிய சக்கரமும் சங்கமும் அழகிய கதையும் வாளும் வில்லுமாகிய
(திருமாலின்) பஞ்சாயுதங்களும்;

“சிறைப் பறவை புறங்காப்பச் சேனையர் கோன் பணிகேட்ப,
நறைப் படலைத் துழாய் மார்பினாயிறுபோன் மணி விளங்க,
அரியதானவர்க்கடிந்த ஐம்படையும் புடை தயங்க,….
ஆயிர வாய்ப் பாம்பணை மேலறி துயிலினினி தமர்ந்தோய்”,

“கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம் கொலை யாழி கொடுந் தண்டு கொற்ற வொள் வாள்,
காலார்ந்த கதிக் கருடனென்னும் வென்றிக் கடும் பறவை யிவை யனைத்தும் புறஞ் சூழ் காப்பச்,
சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த திருவரங்கத் தரவணையிற் பள்ளி கொள்ளு, மாலோன்” என்றபடி
எம்பெருமானது திருவுள்ளக் கருத்தின்படி அவனுக்குக் குற்றேவல் செய்யும் பரிசனங்களும் எப்பொழுதும் அவனருகில் விடாது நின்று
அவனது திருமேனிக்குப் பாதுகாவல் செய்பவருமான ஸ்ரீசேனை முதலியாரும், திவ்விய பஞ்சாயுதமூர்த்திகளுமே,
அப்பெருமானது தோத்திரமாகத் தாம் செய்யும் அந்தாதிக்கு நேரும் இடையூறுகளை நீக்கிப் பாதுகாப்ப ரென்று
கொண்டு அவர்களை இவ்வந்தாதிக்குக் காப்பு என்றார்.

ஸ்ரீவைஷ்ணவ சமயத்தவரான இந்நூலாசிரியராற் கூறப்பட்ட இக் காப்புச் செய்யுள் அந்த ஸ்ரீமகாவிஷ்ணுவினது
தொண்டர்கட்குத் தலைவரான சேனை முதலியாரையும், அத் திருமாலின் ஐம்படையையுங் குறித்ததாதலால்,
வழிபடு கடவுள் வணக்கம் ஏற்புடைக் கடவுள் வணக்கம் என்ற வகை யிரண்டில் வழி படு கடவுள் வணக்கமாம்.

அடுத்த நான்குசெய்யுள்களும் இவ்வாறே. தம் தமது மதத்துக்கு உரிய கடவுளை வணங்குதலே யன்றி
அக்கடவுளினடியார்களை வணங்குதலும் வழிபடு கடவுள் வணக்கத்தின் பாற்படுமென அறிக.

சேனையர் கோன் – பரமபதத்திலுள்ள நித்திய முக்தர்களின் திரளுக்கும் மற்ற வுலகங்களிலுள்ள திருமாலடியார்கட்கும்
தலைவராதலாற்சேனை முதலியாரென்றும் சேனைத் தலைவரென்றும் சொல்லப்படுகிற விஷ்வக்ஸேநர்.
தம்மைச் சரணமடைந்தவர் தொடங்குந் தொழில்கட்கு வரும் விக்கினங்களை [இடையூறுகளை]ப் போக்குதலாலும்,
தம்மை யடையாது அகங்கரித்தவர்கட்கு விக்கினங்களை ஆக்குதலாலும் விக்நேசுவரரென்று பெயர்
பெற்றவரான விநாயகர் இவரது அம்சத்தைச் சிறிதுபெற்றவரே யாதலால், இவரை முதற் காப்பாகக் கொள்ளுதல் சாலும்.

“ஆளி லமர ரரங்கேசர் சேவைக் கணுகுந்தொறுங், கோளில் திரளை விலக்கும் பிரம்பின் கொனை படலால்,
தோளிலடித் தழும்புண்டச் சுரர்க்கு” என்றபடி திரள் விலக்குதற் பொருட்டும்,
எம்பெருமானது ஆணையைத் தான் கொண்டு நடத்துதற்கு அறிகுறியாகவும் இவர் கையிலே பொற்செங்கோலேந்தி நிற்பர்.

இவர்கையில் ‘ஆழி’ என்றது, எம்பெருமானிடம் இவர் பெற்றுள்ள அதிகாரத்துக்கு அறிகுறியான முத்திரை மோதிரத்தை.
திருமாலின் பஞ்சாயுதங்களுள் சக்கரம் – சுதர்சநமென்றும், சங்கம் – பாஞ்சஜந்ய மென்றும், கதை – கௌமோதகி யென்றும்,
வாள் – நந்தக மென்றும், வில் – சார்ங்க மென்றும் பெயர்பெறும்.
இவை துஷ்ட நிக்கிரக சிஷ்டபரிபாலநஞ் செய்யுங் கருவியாய்ச் சிறத்தலால், இவற்றைக் காப்பாகக் கொண்டார்.

சூரியனது தேர் சம்வற்சர ரூபமான ஒற்றைச் சக்கரமுடைய தென்று புராணம் கூறும்.
வெய்யன் – உஷ்ணகிரணமுடையவன்; வெம்மை யென்னும் பண்பினடியாப் பிறந்த பெயர்.
இங்கு ‘உலகேழ்’ என்றது, ஜம்பு பிலக்ஷம் குசம் கிரௌஞ்சம் சாகம் சால்மலி புஷ்கரம் என்ற ஏழுதீவுகளை,
இங்கு ‘உலகு’ என்றது, உயிர்களின்மேல் நிற்கும்.
காராழிவண்ணம் – மேகமும் கடலும் போன்ற திருநிறமெனினுமாம்.

பெருமாள் = பெருமான், பெருமையையுடையவர்;
இதில், பெருமை யென்ற பகுதி ஈற்று ஐகாரம் மாத்திரம் கெட்டு, பெரும் என நின்றது; ‘
ஆன்’ என்ற ஆண்பால்விகுதி ‘ஆள்’ என ஈறு திரிந்தது;
‘ஆள்’ என்ற பெண்பால் விகுதியே சிறுபான்மை ஆண் பாலுக்கு வந்ததென்றலும் ஒன்று:
அன்றி, பெருமையை ஆள்பவனெனக்கொண்டால் ஆள் என்ற வினைப் பகுதி கருத்தாப் பொருள் விகுதி புணர்ந்து கெட்டதென வேண்டும்.

பெருமாளந்தாதி என்ற தொடரில் தொக்குநின்ற ஆறாம்வேற்றுமையுருபின் பொருளாகிய சம்பந்தம் – விஷயமாகவுடைமை;
விஷ்ணுபுராணம், விநாயகரகவல் என்பவற்றிற் போல.

நாந்தகம் – நந்தக மென்பதன் விகாரம். ஆழி என்ற சொல் – தேர்ச் சக்கரம் மோதிரம் சக்கராயுதம் என்ற பொருள்களில்
வட்டவடிவுடைய தென்றும், கடலென்றபொருளில் ஆழ்ந்துள்ளது என்றும் காரணப் பொருள்படும்;
இனி கடலென்றபொருளில் பிரளயகாலத்து உலகங்களை அழிப்ப தென்றும்,
சக்கராயுதமென்ற பொருளில் பகைவர்களையழிப்ப தென்றும் கொள்ளலு மொன்று.
‘ஓர்ஆழி’ என்றது – ஒற்றைச் சக்கரமுடைய தேருக்கு, பண்புத் தொகை யன்மொழி.

இச் செய்யுளில் ஆழி என்கிற ஒரு சொல் அடி தோறும் வேறு பொருளில் வந்தது, சொற்பின்வருநிலையணி.
இப்பொருளணியோடு திரிபு என்னும் சொல்லணியும் அமைந்திருத்தல் காண்க.
(திரிபாவது – ஒவ்வோரடியிலும் முதலெழுத்துமாத்திரம் வேறுபட்டிருக்க, இரண்டு முதலிய பல எழுத்துக்கள்
ஒன்றி நின்று பொருள்வேறுபடுவது.) இவ்விரண்டணியும் பேதப்படாமற் கலந்துவந்தது, கலவையணி.

———–

[பன்னிரண்டு ஆழ்வார்களின் அருளிச் செயல்.]

வையம் புகழ் பொய்கை பேய் பூதன் மாறன் மதுரகவி
யையன் மழிசை மன் கோழியர் கோன் அருள் பாண் பெருமான்
மெய்யன்பர் காற் பொடி விண்டு சித்தன் வியன் கோதை வெற்றி
நெய்யங்கை வேற் கலியன் தமிழ் வேத நிலை நிற்கவே –2-

வையம் புகழ் – உலகத்தவர்களாற் புகழப்படுகிற,
பொய்கை – பொய்கையாழ்வாரும்,
பேய் – பேயாழ்வாரும்,
பூதன் – பூதத்தாழ்வாரும்,
மாறன் – நம்மாழ்வாரும்,
மதுரகவி ஐயன் – மதுரகவியாழ்வாரும்,
மழிசை மன் – திருமழிசையாழ்வாரும்,
கோழியர்கோன் – குலசேகராழ்வாரும்,
அருள் பாண் பெருமாள் – (நம்பெருமாளின்) விசேஷ கடாக்ஷம் பெற்ற திருப்பாணாழ்வாரும்,
மெய் அன்பர் கால் பொடி – தொண்டரடிப் பொடியாழ்வாரும்,
விண்டு சித்தன் – பெரியாழ்வாரும்,
வியன் கோதை – பெருமையை யுடைய ஆண்டாளும்,
வெற்றி நெய் வேல் அம்கை கலியன் – சயம் பொருந்தியதும் நெய் பூசியதுமான வேலாயுதத்தை யேந்திய
அழகிய கையை யுடைய திருமங்கையாழ்வாரும் ஆகிய பன்னிரண்டு ஆழ்வார்களால் அருளிச்செய்யப்பட்ட,
தமிழ் வேதம் – திரவிட வேதமாகிய (நாலாயிர) திவ்வியப் பிரபந்தங்கள்,
நிலை நிற்க – (எக் காலத்தும் அழிவின்றி உலகத்தில்) நிலை பெற்றிருக்கக் கடவன; (எ – று.)

ஆசீர்வாதம் [வாழ்த்து]. நமஸ்காரம் [வணக்கம்], வஸ்துநிர்த்தேசம் [தலைமைப்பொருளுரைத்தல்] என்ற
மூவகை மங்களங்களுள், இது வாழ்த்தாம்.
ஆழ்வார்களால் வெளியிடப்பட்ட திவ்வியப்பிரபந்தங்களின் சொற்பொருட் கருத்துக்கள் அமைய
அப்பிரபந்தங்கள் போலச் செய்யப்படுவது இத்திரு வரங்கத்தந்தாதி யாதலால்,
இந்நூலின் இக்காப்புச் செய்யுளை ஏற்புடைக் கடவுள்வாழ்த்தென்றும் கொள்ளலாம்.

வையம் – இடவாகுபெயர். ‘வையம்புகழ்’ என்ற அடைமொழியை எல்லா ஆழ்வார்கட்கும் கூட்டலாம்.
இனி, வையம் புகழ் பொய்கை – “வையந் தகளியா” என்றுதொடங்கிப் பிரபந்தம்பாடி (எம்பெருமானை)த் துதித்த
பொய்கையாழ்வா ரெனினுமாம்; அவ்வுரைக்கு, வையம் என்பது – அவர் பாடிய முதல் திருவந்தாதிக்கு முதற்குறிப்பு.
“பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை, யையனருள்மாறன்சேரலர்கோன் –
துய்யபட்ட, நாதனன்பர் தாட்டூளி நற்பாணனன்கலியன், ஈதிவர்தோற்றத்தடைவாமிங்கு” என்றபடி
திருவவதாரக்கிரமத்தால் பொய்கையார் பூதத்தார் பேயார் மழிசைப்பிரான் மாறன் குலசேகரர் பெரியாழ்வார்
தொண்டரடிப்பொடி திருப்பாணர் திருமங்கையாழ்வார் என முறைப்படுத்தி,
பெரியாழ்வாரது திருமகளான ஆண்டாளையும் நம்மாழ்வாரது சிஷ்யரான மதுரகவியையும் ஈற்றில் வைத்தாயினும்,
ஆண்டாளைப் பெரியாழ்வாரை யடுத்தும் மதுரகவியை நம்மாழ்வாரை யடுத்தும் வைத்தாயினும் கூறுவதே முறையாயினும்,
இங்குச் செய்யுள் நோக்கி முறை பிறழ வைத்தார்.

பொய்கை – குளம்; பொற்றாமரைப் பொய்கையில் திருவவதரித்த ஆழ்வாரை ‘பொய்கை’ என்றது, இடவாகுபெயர்.
இனி, உவமவாகுபெயராய், ஊர்நடுவேயுள்ள குளம்போல எல்லார்க்கும் எளிதிற் பயன்கொடுப்பவ ரென்றுமாம்.

பேய் – உவமையாகுபெயர்: உலகத்தவராற் பேய் போல எண்ணப் படுபவர்; அல்லது, அவர்களைத் தாம் பேய் போல எண்ணுபவர்:
“பேயரே யெனக்கி யாவரும் யானுமோர், பேயனே யெவர்க்கும் இது பேசி யென்,
ஆயனே யரங்கா வென்றழைக்கின்றேன், பேயனாயொழிந்தே னெம்பிரானுக்கே” என்ற கொள்கைப்படி,
இவர் பகவத் பக்தியாற் பரவசப்பட்டு, நெஞ்சழிதல் கண்சுழலுதல் அழுதல் சிரித்தல் தொழுதல்
மகிழ்தல் ஆடுதல் பாடுதல் அலறுதல் முதலிய செய்கைகளையே எப்பொழுதும் கொண்டு,
காண்பவர் பேய் பிடித்தவரென்னும்படி யிருந்ததனால், பேயாழ்வாரென்று பெயர் பெற்றனர்.

பூதன் – எம்பெருமானை யறிதலாலே தமது உளனாகையை யுடையவராதலால், இவர்க்கு, பூதனென்று திருநாமம்:
‘பூஸத்தாயாம்’ என்றபடி ஸத்தையென்னும் பொருள்கொண்ட பூ என்னும் வடமொழி வினையடியினின்று பிறந்த பெயராதலால்,
பூதன் என்பதற்கு – ஸத்தை [உள்ளவனாயிருக்கை] பெறுகின்றவனென்று பொருளாயிற்று.
இனி, இத்திருநாமத்துக்கு – உலகத்தவரோடு சேராமையாற் பூதம் போன்றவரென்று பொருளுரைத்தல் சம்பிரதாயமன்று.

நம்மாழ்வார்க்கு அநேகம் திருநாமங்கள் இருப்பினும் அவற்றில் ‘மாறன்’ என்பது, முதலில் தந்தையார் இட்ட
குழந்தைப் பெயராதலால் அதில் ஈடுபட்டு அப்பெயரினாற் குறித்தார்.
பிறந்தபொழுதே தொடங்கி அழுதல் பாலுண்ணுதல் முதலியன செய்யாது உலகநடைக்கு மாறாயிருந்ததனால்
சடகோபர்க்கு ‘மாறன்’ என்று திருநாமமாயிற்று.
வலியவினைகட்கு மாறாக இருத்தலாலும், அந்நியமதஸ்தர்களை அடக்கி அவர்கட்குச் சத்துருவாயிருத்தலாலும்,
பாண்டியநாட்டில் தலைமையாகத் தோன்றியதனாலும் வந்த பெயரென்றலும் உண்டு.

மதுரகவி – இனிமையான பாடல் பாடுபவர்.

மழிசைமன் – திருமழிசையென்று வழங்குகின்ற மஹீஸார க்ஷேத்திரத்தில் திருவவதரித்த பெரியோன்;
இது, தொண்டைநாட்டி லுள்ளது.

கோழியர்கோன் – கோழியென்னும் ஒருபெயருடைய உறையூரி லுள்ளார்க்குத் தலைவர்;
உறையூர், சோழ நாட்டிராசதானி. சேரநாட்டரசரான குலசேகராழ்வார் திக்விஜயஞ்செய்த போது
சோழராசனை வென்று கீழ்ப்படுத்தி அந்நாட்டுக்குந் தலைமை பூண்டதனால், ‘கோழியர்கோன்’ எனப்பட்டனர்.
“கொல்லிகாவலன் கூடல்நாயகன் கோழிக்கோன் குலசேகரன்” என்றதனால்,
இவர் தமிழ்நாடுமூன்றுக்குந் தலைமைபூண்டமை விளங்கும்.
முற்காலத்து ஒருகோழி நில முக்கியத்தால் அயல்நாட்டு யானையோடு பொருது அதனைப் போர் தொலைத்தமை கண்டு
அந்நிலத்துச்செய்த நகரமாதலின், ‘கோழி’ என்று உறையூருக்குப் பெயராயிற்று.
இனி, குலசேகராழ்வார் அரசாட்சிசெய்த இடமான கோழிக்கூடு என்ற சேரநாட்டு இராசதானி
(நாமைகதேசேநாமக்கிரகணத்தால்) கோழியெனப்பட்ட தென்றலு மொன்று.

பாண்பெருமாள் – வீணையும் கையுமாய்ப் பெரிய பெருமாள் திருவடிக்கீழே நிரந்தர சேவை பண்ணிக்கொண்டு பாட்டுப் பாடிப் புகழ்பவர்;
பாண் – இசைப்பாட்டு: அதற்குத் தலைவர், பாண்பெருமாள். இவர் நம் பெரியபெருமாளுடைய திருமேனியழகில் ஈடுபட்டு
அதனை அடிமுதல் முடிவரை அநுபவித்து அப்பெருமாளாற் கொண்டாடி யழைக்கப்பெற்று அப்பெருமாளின்
திருவடிகளிலே ஐக்கியமடைந்ததனால், ‘பெருமாள்’ என்று சிறப்பித்துக் கூறப்படுவர்;
“சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழா லளித்த, பாரியலும் புகழ்ப் பாண்பெருமாள்”,
“காண்பனவுமுரைப்பனவு மற்றொன்றின்றிக்கண்ணனையேகண்டுரைத்தகடியகாதற், பாண்பெருமாள்” என்பன காண்க.

உறையூரில் அயோநிஜராய் நெற்பயிர்க் கதிரில் அவதரித்துப் பஞ்சம சாதியிற் பாணர் குலத்திற்பிறந்தானொருவன் வளர்க்க வளர்ந்து
யாழ்ப் பாடலில் தேர்ச்சிபெற்று மகாவிஷ்ணுபக்தரான இவர், ரங்கநாதனுக்குப் பாடல் திருத்தொண்டு செய்யக் கருதி,
தாம்தாழ்ந்தகுலத்தில் வளர்ந்தவராதலால் உபயகாவேரி மத்தியிலுள்ள ஸ்ரீரங்கதிவ்விய க்ஷேத்திரத்தில் அடியிடு தற்குந் துணியாமல்
தென் திருக்காவேரியின் தென்கரையில் திருமுகத்துறைக்கு எதிரிலே யாழுங்கையுமாக நின்றுகொண்டு
நம்பெருமாளைத் திசைநோக்கித் தொழுது இசைபாடி வருகையில், ஒருநாள், நம்பெருமாள் தமக்குத் தீர்த்த கைங்கரியஞ்செய்பவரான
லோகசாரங்கமகாமுனியின் கனவில் தோன்றி ‘நமக்கு நல்லன்பரான பாண்பெருமாளை இழிவாக நினையாமல்
நீர் சென்று தோள்களில் எழுந்தருளப்பண்ணிவாரும்’ என்று நியமிக்க,
அவரும் அங்ஙனமே சென்று பாணரை அரிதில் இசைவித்துத் தோளில் எடுத்துக்கொண்டு வந்து சேர்க்க,
அம்முனிவாகனர் அணியரங்கனைச்சேவித்து அவனடியிலமர்ந்தனர்;
இங்ஙனம் விசேஷகடாக்ஷம் பெற்றமைபற்றி, ‘அருட்பாண்பெருமாள்’ என்றார்.
ஐயன் – ஆர்யன்: பூசிக்கத்தக்கவன், அந்தணன்; ஆசாரியன்.

மெய்யன்பர்காற்பொடி – உள்ளும்புறமும் ஒத்துத் தொண்டு செய்யும் மெய்யடியாரான ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
திருவடித் தூளிபோல அவர்கட்குக் கீழ்ப்படிந்து அடிமைபூண்டு ஒழுகுபவராதலால், இவர்க்கு, தொண்ட ரடிப்பொடியென்று திருநாமம்.

இளமைதொடங்கி எப்பொழுதும் தமது சித்தத்தை விஷ்ணுவினிடத்திலே செலுத்தி
“மார்வமென்பதோர்கோயிலமைத்து மாதவனென்னுந் தெய்வத்தை நாட்டி” என்னும்படி அப்பெருமானை மனத்திலே
நிலைநிறுத்தித் தியானித்துவந்ததனால், விஷ்ணுசித்தர் என்று பெரியாழ்வார்க்குப்பெயர்.

கோதை – மாலை; எம்பெருமானுக்கு மாலைபோல மிகஇனியளா யிருப்பவள்;
அல்லது, எம்பெருமானுக்குச் சமர்ப்பித்தற்காகத் தனது தந்தையார் அமைத்து வைத்த பூமாலையை அவர் இல்லாத சமயத்தில்
தான் சூடிக்கொண்டு அழகு பார்த்துப் பின்பு கொடுத்தவள்;
அன்றி, எம்பெருமானுக்குப் பாமாலை சூட்டினவள்.
“ஆழ்வார்கள்தஞ் செயலை விஞ்சிநிற்குந் தன்மையளாய்ப், பிஞ்சாப்பழுத்தாளை யாண்டாளை” என்றபடி.
ஞான பக்தி யாதிகளில் ஆழ்வார்களனைவரினும் மிகவிஞ்சியிருத்தல், மிக்க விளமையிலேயே பரமபக்தியை
இயல்பாகக்கொண்டமை முதலிய சிறப்புக்களை யுடைமையால், ‘வியன்கோதை’ என்றார்.

கலியன் – மிடுக்குடையவன். சோழராசன் கட்டளைப்படி மங்கை நாட்டுக்கு அரசராகிய இவ்வாழ்வார்
குமுதவல்லி யென்னுங் கட்டழகியை மணஞ்செய்துகொள்ளும்பொருட்டு அவள்விருப்பத்தின்படி நாள்தோறும்
ஆயிரத்தெட்டு ஸ்ரீவைஷ்ணவர்களை அமுதுசெய்வித்து வருகையில், கைப்பொருள் முழுவதுஞ் செலவாய் விட்டதனால்
வழிபறித்தாகிலும் பொருள் தேடிப் பாகவதததீயாராதநத்தைத் தடையற நடத்தத் துணிந்து வழிச் செல்வோரைக் கொள்ளை யடித்து
வரும்போது ஸ்ரீமந்நாராயணன் இவரை யாட்கொள்ளக் கருதித் தான் ஒரு பிராமணவேடங் கொண்டு
பல அணி கலங்களைப் பூண்டு மணவாளக் கோலமாய் மனைவியுடனே இவரெதிரில் எழுந்தருள,
இவர் கண்டு களித்து ஆயுதபாணியாய்ப் பரிவாரத்துடன் சென்று அவர்களை வளைந்து வஸ்திர ஆபரணங்களை யெல்லாம்
அபகரிக்கையில், அம்மணமகன் காலிலணிந்துள்ள மோதிரமொன்றைக் கழற்ற முடியாமையால் அதனையும் விடாமற் பற்களாலே
கடித்துவாங்க, அம்மிடுக்கை நோக்கி எம் பெருமான், இவர்க்கு ‘கலியன்’ என்று ஒருபெயர்கூறினா னென உணர்க.

தமிழ் வேதம் – வேதங்களின் சாராம்சமான கருத்து அமையப் பாடிய தமிழ்ப் பிரபந்தங்கள்.
வியன் – உரிச்சொல்; வியல் என்பதன் விகாரமுமாம். நெய் வேல் – பகைவரது நிணம் தோய்ந்த வேலுமாம்.

———–

குரு பரம்பரை-

சீதரன் பூ மகள் சேனையர் கோன் குருகைப் பிரான்
நாதமுனி உய்யக் கொண்டார் இராமர் நல் ஆளவந்தார்
ஏதமில் வண்மை பராங்குச தாசர் எதித் தலைவர்
பாதம் அடைந்து உய்ந்த ஆழ்வான் எம்பார் பட்டர் பற்று எமக்கே –33-

சீதரன்-(பரமாசாரியனான) திருமாலும்,
பூமகள் – (அத்திரு மாலினது சிஷ்யையான) திருமகளும்,
சேனையர் கோன் – (அப் பெரிய பிராட்டியாரின் சிஷ்யரான) சேனை முதலியாரும்,
தென் குருகை பிரான் – (அச்சேனைத் தலைவரது சிஷ்யரான) அழகிய திருக் குருகூரில் அவதரித்த தலைவராகிய நம்மாழ்வாரும்,
நாதமுனி – (அச்சடகோபரது சிஷ்யரான) ஸ்ரீமந் நாதமுனிகளும்
உய்யக்கொண்டார் – (அந்நாதமுனிகளின் சிஷ்யரான) உய்யக்கொண்டாரும்,
இராமர் – (அவருடைய சிஷ்யரான) ராமமிச்ரரென்னுந் திருநாமமுடைய மணக்கால்நம்பியும்,
நல் ஆளவந்தார் – (அவரது சிஷ்யரான ஞானங் கனிந்த) நலங்கொண்ட ஆளவந்தாரும்,
ஏதம் இல் வண்மை பராங்குசதாசர் – (அவர் சிஷ்யரான) குற்றமில்லாத உதார குணமுள்ள பெரியநம்பியும்,
எதி தலைவர் – (அவர் சிஷ்யரான) யதிராஜராகிய ஸ்ரீபாஷ்யகாரரும்,
பாதம் அடைந்து உய்ந்த ஆழ்வான் – (அவருடைய) திருவடிகளைச் சரணமடைந்து நல்வாழ்வு பெற்ற கூரத்தாழ்வானும்,
எம்பார் – (அவ்வாழ்வான் போலவே ஸ்ரீபாஷ்யகாரர்க்கு அதி அந்தரங்க சிஷ்யரான) எம்பாரும்,
பட்டர் – (கூரத்தாழ்வானுடைய குமாரரும் எம்பாரது சிஷ்யருமான) பட்டரும்,
(ஆகிய இவர்கள்), எமக்கு பற்று – எமக்குத் தஞ்சமாவர்; (எ – று.)

இந்த நூல் ஆச்ரியருக்கு பட்டர் ஆசார்யர் ஆகையாலே அவர் வரை அருளி
அவர் திரு தகப்பனாரையும் சேர்த்து அருளுகிறார்
இந்நூலாசிரியர்க்குப் பட்டர் ஸ்வாசாரிய ராதலால், குருபரம்பரையில் அவரளவே கூறலாயிற்று,

சீதரன் முதல் பட்டர் ஈறாகச் சொல்லும் குரு பரம்பரைக் கிரமத்தில் எதித்தலைவர்க்குப் பின்னே எம்பார்க்கு முன்னே
கூரத்தாழ்வானை வைக்கவேண்டிய அவசியமில்லையாயினும்,
ஸ்வாசாரியரான பட்டர்க்குக் கூரத்தாழ்வான் திருத்தமப்பனாராதல்பற்றியும்,
தம்குல முதல்வரான திருவரங்கத்தமுதனார் ஸ்ரீபாஷ்யகாரருடைய திருவடிகளில் ஆசிரயித்தற்குக்
கூரத்தாழ்வான் புருஷகாரராய் நின்றமை பற்றியும், அவ்வாழ்வானை இடையிலே நிறுத்தினார்.
இது, இந்நூலாசிரியருடைய குலகுருபரம்பரை யென்க.

அன்றியும், ஸ்ரீபாஷ்யகாரரது நியமனத்தின்படி சென்று பட்டர்க்கு த்வயோபதேசஞ்செய்து ஆசாரியராகி
அவர்க்குப் பஞ்சஸம்ஸ்காரங்களையும் திருவாய்மொழிமுதலிய கிரந்தங்களையும்,
அவற்றின் வியாக்கியாநங்களையும் அருளினவர், எம்பார்:
பட்டர்க்கு ஜாதகரும நாமகரண சௌளோபநயநாதிகளையும், ஸ்ரீபாஷ்யாதி கிரந்தங்களையும் அருளினவர்,
திருத் தந்தையாரான கூரத்தாழ்வான்; ஆதலால், ஆழ்வானையும் பட்டர்க்கு ஆசாரியரென்றல் ஒருவாறு அமையும்.

ஸ்ரீதரன் – வடசொல்; திருமகளைத் (திருமார்பில்) தரிப்பவன்.
பூமகள் – (மலர்களிற் சிறந்ததான) தாமரைமலரில் வாழும் மகள்.
தென் குருகை – தெற்கிலுள்ள குருகூரெனினுமாம்; இது, தென்பாண்டி நாட்டிலுள்ளது: ஆழ்வார்திருநகரியென வழங்கும்.

நாதமுனி – தலைவராகிய முனிவர்: யோகீசுவரர். முநி – மநநசீலன்;
ஸ்ரீரங்கநாதனுடைய ‘நாதன்’ என்ற திருநாமத்தை வகித்து நம்மாழ்வாரால் தமக்கு உபதேசிக்கப்பட்ட
அர்த்தங்களை அடைவே எப்பொழுதும் மநநம் பண்ணிக் கொண்டு எழுந்தருளியிருக்கிற அந்தணராதலால்,
நாதமுனி யென்று பெயர் வழங்கலாயிற்று என்பதையும் உணர்க.

உய்யக்கொண்டார் –
மணக்கால்நம்பி முதலிய பலரையும் உய்யுமாறு ஆட் கொண்டவர்:
அன்றி, நாதமுனிகளால் உய்வு பெற ஆட்கொள்ளப்பட்டவ ரெனினுமாம்.

மணக்காலென்கிற ஊரில் திருவவதரித்தவராதலால் மணக்கால்நம்பி யென்று திருநாமம்பெற்ற ஆசாரியரது இயற்பெயர்,
ராமர் என்பது: கடவுளின் பெயரை அடியார்கட்கு இடுதல், மரபு.

நாதமுனிகளின் பேரனாரான யமுனைத்துறைவர் இளமையிலே ராஜபுரோகிதனும் மகாவித்துவானுமான
ஆக்கியாழ்வானோடு வாதஞ்செய்யத் தொடங்கியபோது இராசபத்தினியானவள் ‘இவர் தோற்கமாட்டார்’ என்று அரசனுக்கு உறுதிகூற,
அரசன் அதனை மறுத்து, ‘நமது ஆக்கியாழ்வான் தோற்றால் இவர்க்குப் பாதி இராச்சியம் தருவேன்’ என்று பிரதிஜ்ஞைசெய்ய,
உடனே நடந்த பலவகை வாதங்களிலும் யமுனைத்துறைவரே வெற்றியடைய,
அதுகண்டு தனதுபிரதிஜ்ஞை நிறைவேறினமைபற்றி மகிழ்ச்சிகொண்ட இராசமகிஷி
‘என்னையாளவந்தவரோ!’ என்றுகொண்டாடியதனால், இவர்க்கு ‘ஆளவந்தார்’ என்று திருநாமமாயிற்று.

பெரியநம்பியின் மறுபெயரான பராங்குசதாசரென்பது பராங்குசரென்னும் ஒருதிருநாமத்தையுடைய நம்மாழ்வாரது
அடியவரென்று பொருள்படும்.
இவர் ஸ்ரீபாஷ்யகாரர்க்குப் பஞ்சஸம்ஸ்காரங்களையும் மந்த்ரரத்நத்தையும் அருளி
அவரை நம் தரிசநப்பிரவர்த்தகராம்படி செய்திட்ட சிறப்புத் தோன்ற,
இவர்க்கு ‘ஏதமில் வண்மை’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
இங்கு வண்மை, கைம்மாறு கருதாது மந்திரோபதேசஞ் செய்தல்;
அதற்கு ஏதமின்மை, நூல்முறைக்கும் சிஷ்டாசாரத்துக்கும் சிறிதும் வழுப்படாமை.

எதித்தலைவர் – சந்யாசிசிரேஷ்டர். யதி என்ற வடசொல், எதியென விகாரப்பட்டது;
யந்திரம் – எந்திரம், யமன் – எமன், யஜ்ஞம் – எச்சம், யது – எது, யஜுர் – எசுர் என்பன போல.

ஆழ்வான் – எம்பெருமானுடைய குணகணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்.
கூரமென்கிற தலத்தில் அவதரித்தவராய், ‘கூரத்தாழ்வான்’ என்று வழங்குகிற பெயர் இங்கு
நாமைகதேசே நாமக்ரஹணத்தால் ‘ஆழ்வான்’ எனப்பட்டதென்றும் கொள்க.

ஸ்ரீபாஷ்யகாரர் கோவிந்தபட்டருடைய வைராக்கியத்தைக் கண்டு அவர்க்குச் சந்யாசாச்சிரமந் தந்தருளித்
தமது திருநாமங்களிலொன்றான எம்பெருமானா ரென்ற பெயரை அவர்க்குச் சாத்த,
அவர் அப்பெரும் பெயரைத் தாம் வகிக்க விரும்பாதவராய் ‘தேவரீர்க்குப் பாதச் சாயையாயிருக்கிற அடியேனுக்குத்
தேவரீர் திருநாமச்சாயையே அமையும்’ என்று விண்ணப்பஞ்செய்ய,
பாஷ்யகாரரும் அப்பெயரையே சிதைத்து எம்பார் என்று பெயரிட்டருளினார்.

பண்டிதர்க்கு வழங்குகின்ற ‘பட்டர்’ என்ற பெயர் கூரத்தாழ்வானுடைய குமாரர்க்குச் சிறப்பாக வழங்கும்.
எம்பெருமானாரால் நாம கரணஞ்செய்தருளப்பெற்றவர், இவர்.

பற்று – பற்றுக்கோடு, ரக்ஷகம்.

எமக்கு என்ற தன்மைப் பன்மை,
ஸ்ரீவைஷ்ணவரனைவரையும் உளப்படுத்தியது; கவிகட்குஉரிய இயற்கைப் பன்மையுமாம்.

————

(எழுபத்து நான்கு சிங்காசநாதிபதிகள்.)

திருமாலை யாண்டான் திருக்கோட்டியூர் நம்பி திருவரங்கப்
பெருமாள் அரையர் திருமலை நம்பி பெரிய நம்பி
அருமால் கழல் சேர் எதிராசர் தாளில் சிங்கா தனராய்
வரும் ஆரியர்கள் எழுத்து நால்வர் என் வான் துணையே –4-

திருமாலை யாண்டன் -, திருக்கோட்டி நம்பி -, திருவரங்கப் பெருமாளரையர் -,
திருமலைநம்பி -, பெரியநம்பி -, (என்பவர்களுடைய),
அருமால் கழல் – அருமையான சிறந்த திருவடிகளை,
சேர் – அடைந்த,
எதிராசர் – எம்பெருமானாருடைய,
தாளின் – திருவடி சம்பந்தத்தால்,
சிங்காதனர் ஆய் வரும் – ஸிம்ஹாஸநாதிபதிகளாய் விளங்குகின்ற,
ஆரியர்கள் எழுபத்து நால்வர் – ஆசாரியர்கள் எழுபத்து நான்கு பேரும்,
என் வான் துணை – எனக்குச் சிறந்த துணையாவர்;

முதலிரண்டடியிற் குறித்த ஐவரும், ஸ்ரீபாஷ்யகாரர்க்குப் பஞ்சாசாரிய ரெனப்படுவர்.
அவர்களில், திருமாலையாண்டான், இவர்க்குத் திவ்வியப் பிரபந்த வியாக்கியாநம் அருளிச்செய்து
‘சடகோபன் பொன்னடி’ என்கிற திருநாமத்தைச் சாத்தியருளினார்;
திருக்கோட்டியூர்நம்பி, இவர்க்குத் திருமந்திரார்த்தத்தையும் சரம ச்லோகார்த்தத்தையும் அருளிச்செய்து
‘எம்பெருமானார்’ என்கிற திருநாமத்தைச் சாத்தியருளினார்;
திருவரங்கப்பெருமாளரையர், இவர்க்குப் பெரிய திருமொழி மூலமும் திருவாய்மொழி மூலமும்
கண்ணி நுண்சிறுத்தாம்பு வியாக்கியாநமும் த்வயார்த்தமும் அருளிச்செய்து ‘லக்ஷ்மணமுனி’ என்கிற திருநாமஞ் சாத்தியருளினார்;
பெரியதிருமலைநம்பி, இவர்க்கு ஸ்ரீராமாயண வியாக்கியாநம் அருளிச் செய்து ‘கோயிலண்ணன்’ என்கிற திருநாமஞ் சாத்தியருளினார்;
பெரியநம்பி, இவர்க்கு ‘ராமாநுஜன்’ என்கிற திருநாமமும் திருமந்திரமும் த்வய சரமச்லோகங்களும் உள்படப்
பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தருளி, முதலாயிரம் இயற்பா என்ற ஈராயிர மூலத்தை அருளிச்செய்தார்.

எழுபத்து நால்வர் – பட்டர், சீராமப்பிள்ளை, கந்தாடையாண்டான், அநந்தாழ்வான், எம்பார், கிடாம்பியாச்சான் முதலியோர்.
இவர்கள் பெயர் வரிசையை, குருபரம்பராப்பிரபாவம் முதலிய நூல்களிற் காணலாம்.
இவர்கள், ஸ்ரீபாஷ்யகாரரிடமிருந்து உபய வேதாந்தார்த்தங்களையும் உபதேசம் பெற்று அவராலேயே
ஆசாரிய புருஷர்களாக நியமிக்கப்பட்டவர்கள்.
சிங்காதனராய் வரும் ஆரியர்கள் – ஆசாரிய பீடத்தில் வீற்றிருந்து அதற்கு உரிய அதிகாரத்தை நிர்வகிப்பவர்கள்.
‘எதிராசர்தாளிற் சிங்காதனராய் வருமாரியர்கள்’ என்ற சொற்போக்கினால்,
பாஷ்யகாரராகிய ஒரு சக்ரவர்த்தி பின் கீழடங்கி ஆட்சி செய்யும் சிற்றரசராவர் இவரென்பது தோன்றும்.

——–

நம்மாழ்வார்

மால் தன் பராங்கதி தந்து அடியேனை மருள் பிறவி
மாறு அன்பர் ஆன குழாத்துள் வைப்பான் தொல்லை வல் வினைக்கு ஓர்
மாறன் பாராமுகம் செய்யாமல் என் கண் மலர்க் கண் வைத்த
மாறன் பராங்குசன் வாழ்க என் நெஞ்சினும் வாக்கினுமே-5-

மால்தன் – திருமாலினுடைய,
பராங்கதி – பரமபதத்தை,
தந்து – அளித்து,
அடியேனை – தொண்டனான என்னை,
மருள் பிறவி மாறு அன்பர் ஆன குழாத்துள் வைப்பான் – மயக்கமுள்ள பிறப்பு நீங்கப்பெறுகிற
அடியார்களான முக்தர்களுடைய கூட்டத்தில் (ஒருவனாகச்) சேர்த்தருள விருப்பவனும்,
தொல்லை வல்வினைக்கு ஓர் மாறன் – அநாதியாய் வருகிற வலிய கருமங்கட்கு ஒரு சத்துருவா யுள்ளவனும்,
பராமுகம் செய்யாமல் என் கண் மலர் கண் வைத்த மாறன் பராங்குசன் – உபேக்ஷை செய்யாமல் என் மீது
தாமரை மலர் போன்ற (தனது) திருக்கண் பார்வையை வைத்தருளியவனும் மாறனென்றும் பராங்குசனென்றும்
பெயர்களையுடையவனுமான ஸ்ரீசடகோபன்,
என் நெஞ்சினும் வாக்கினும் வாழ்க – எனது மனத்திலும் மொழியிலும் வாழக்கடவன்; (எ – று.)

இப்பிரபந்தம் இனிது முடிதற்பொருட்டு ஆழ்வார் எனது மனத்திலும் வாக்கிலும் இருந்து நல்ல கருத்துக்களையும்
வளமான சொற்களையும் தோற்றுவிப்பாராக வென வேண்டியவாறாம்.
ஆழ்வாரை மனத்திற்கொண்டு தியானித்துச் சொல்லிற்கொண்டு துதிப்பே னென்ற கருத்தும் அமையும்.

மால்தன் பராங்கதி – விஷ்ணுலோகமாகிய ஸ்ரீவைகுண்டம்.
மருள் – விபரீத ஞானம். மருட் பிறவி – அவித்தையினாலாகிற பிறப்பு எனினுமாம்;
“பொருளல்லவற்றைப் பொருளென் றுணரும், மருளானா மாணாப் பிறப்பு” என்றார் திருக்குறளிலும்.
கருமத்தை முற்றும் ஒழித்து மீளாவுலகமாகிய முக்தி பெற்றவர் மீண்டும் பிறத்தல் இல்லையாதலால், ‘பிறவி மாறுஅன்பர்’ எனப்பட்டனர்.
வல்வினைக்கு மாறன் – அழித்தற்கு அரியகருமங்களை எளிதில் அழிப்பவன்.
பராமுகம் = பராங்முகம், முகங்கொடாமை.
என்கண், கண் – ஏழனுருபு.
மலர்க்கண் வைத்தல் – அருள் நோக்கம்.
மிகக் களித்துக் கொழுத்துச் செருக்கித் திரிந்து எதிர்த்து வாதப் போர்க்கு வரும் பிற மதத்தவராகிய மத யானைகளைத்
தமது பிரபந்தங்களிற் கூறிய தத்வார்த்தங்களினால் அடக்கிக் கீழ்ப்படுத்தித் தம் வசத்தில் வைத்து நடத்துந் திறமுடையராய்
அவற்றிற்கு மாவெட்டி யென்னுங் கருவிபோ லிருத்தலால்,
நம்ஆழ்வார்க்குப் பராங்குசனென்று திருநாமமாயிற் றென்க:
பர அங்குசன் என்று பிரிக்க: பரர் – அயலார்; அங்குசம் – மாவெட்டி, தோட்டி, தந்து வைப்பானென முடியும்.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நூற்று எட்டுத் திருப்பதி அகவல் —

December 13, 2021

திருவரங்கத்தம்மனாரின் நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை,
வங்கிபுரத்தாய்ச்சியின் 108 திருப்பதிக் கோவை, பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி,
குரவை ராமானுஜதாசரின் நூற்றெட்டுத் திருப்பதித் திருப்புகழ்,
திருநின்றலூர் திருமலை தத்தங்கியார் தொண்டன் இயற்றிய 108 திருப்பதி அந்தாதி, நூற்றெட்டு திருப்பதி வெண்பா,
முத்துசாமி ஐயங்காரின் 108 திருப்பதி அகவல், ந.சுப்பராயப்பிள்ளையின் 108 திருப்பதிக்கோவை,
ரா.ராகவையங்காரின் 108 திருப்பதிப் பாடல்கள், சண்முக முதலியாரின் 108 திருப்பதிப் போற்றி அகவல்,
உபயகவி அப்பாவின் 108 திருப்பதித் தாலாட்டு, 108 திருப்பதி வண்ண விருத்தம் (உ.வே.சா. நூலகம்),
விஷ்ணு ஸ்தல மஞ்சரி போன்றவை திவ்ய தேசங்களைப் பற்றிய தகவல்களைத் தரும் சில நூல்களாகும்.

ஈரிருபதாம் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
யோர் பதின் மூன்றா மலை நாடு ஓரிரண்டாம் சீர் நடு நா
டாறோடீ ரெட்டுத் தொண்டை யவ்வட நாடாறிரண்டு
கூறு திரு நாடு ஒன்றாகக் கொள்–ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார்

நடு நாடு -தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திவ்ய தேசங்கள்
தொண்டை -தொண்டர்கள் நிறைந்த தேசம் -தொண்டை நில மகட்கு முக்கிய அங்கம்-

1-பதின்மர் மங்களா சாசனம் -திருவரங்கம் மட்டும்
2-தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் தவிர மற்றவர்கள் அனைவரும் மங்களா சாசனம் -திருவேங்கடமும் திருப்பாற் கடலும்
3-எண்மர் மங்களா சாசனம் -ஸ்ரீ பரமபதம்
4-எழுவர் மங்களா சாசனம் -ஸ்ரீ திருக்குடந்தை
5-அறுவர் மங்கள சாசனம் -ஸ்ரீ திருமாலிருஞ்சோலை
6-ஐவர் மங்களா சாசனம் –6 திவ்ய ஸ்தலங்கள்
7-நால்வர் மங்களா சாசனம் –5 திவ்ய ஸ்தலங்கள்
8-மூவர் -மங்களா சாசனம் –5 திவ்ய ஸ்தலங்கள்
9-இருவர் -மங்களா சாசனம் –21 திவ்ய ஸ்தலங்கள்
10-ஒருவர் மங்களா சாசனம் –61 திவ்ய ஸ்தலங்கள்

திருப்பாணாழ்வார் -3-
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் -4-
பொய்கை ஆழ்வார் –6-
குலசேகரப்பெருமாள் -8-
ஆண்டாள் -11-
பூதத்தாழ்வார் -13-
பேயாழ்வார் -15-
திருமழிசைப்பிரான் -17-
பெரியாழ்வார் –19-
நம்மாழ்வார் –36-
திருமங்கை ஆழ்வார் –86-

இவற்றில்
கிழக்கு – 79 திவ்ய தேசங்கள்
மேற்கு – 19 திவ்ய தேசங்கள்
வடக்கு – 3 திவ்ய தேசங்கள்
தெற்கு – 7 திவ்ய தேசங்கள்

இவற்றில்
கடல் கரை ஸ்தலங்கள் –7-
கட்டு மலையில் –6-
காவிரிக்கரையில் -12-
மலைமேல் சரிவில் உள்ளவை –13-
வடகலை திருமண் காப்பு உள்ளவை –13-

இவற்றில்
சயன திருக்கோலம் -27-
வீற்று இருந்த திருக்கோலம் -21-
நின்ற திருக்கோலம் -60-

இவற்றில்
உத்யோக சயனம் -1-
தர்ப்ப சயனம் -1-
தல சயனம் -1-
புஜங்க சயனம் -20-
போக சயனம் -1-
மாணிக்க சயனம் -1-
வடபத்ர சயனம் -1-
வீர சயனம் -1-

——–

பொய்கையார் -6-/ பூதத்தார் -13-/ பேயார் -15-/திருமழிசையார் -17-/ நம்மாழ்வார் -37-/குலசேகரர் -9-/
பெரியாழ்வார் -18-/ ஆண்டாள் -11-/ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-/ திருப்பாணாழ்வார் -3-/
திருமங்கை ஆழ்வார் -86-திவ்ய தேசங்களுக்கு மங்களா சாசனம் –

11-ஆழ்வார்கள் –திருவரங்கம் –
9-ஆழ்வார்கள் -திருமலையும் திருப்பாற் கடலும் –
8-ஆழ்வார்கள்–பரமபதம் –
7-ஆழ்வார்கள் –திருக்குடந்தை –
6-ஆழ்வார்கள் –திருமாலிருஞ்சோலை –
5-ஆழ்வார்கள்-6-திவ்ய தேசங்கள்
4-ஆழ்வார்கள்-3-திவ்ய தேசங்கள் –
3-ஆழ்வார்கள் -5-திவ்ய தேசங்கள் –
2-ஆழ்வார்கள்-21-திவ்ய தேசங்கள்
1–ஆழ்வார்-67-திவ்ய தேசங்கள்

ஐவர் மங்களாசாசனம் –6-திவ்ய தேசங்கள்
-1-திரு அயோத்தியை –பெரியாழ்வார் / குலசேகரர் /தொண்டர் அடிப் பொடியார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-2-திருக் கண்ணபுரம் –பெரியாழ்வார் / ஆண்டாள் / குலசேகரர் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-3-திருக் கோட்டியூர் –பூதத்தார் / பேயார் /திரு மழிசையார் / பெரியாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-4-திருத் துவாரகை –திருமழிசையார் / பெரியாழ்வார் / ஆண்டாள் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-5-திரு வடமதுரை –பெரியாழ்வார் / ஆண்டாள் / தொண்டர் அடிப் பொடியார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
திருக் கோவர்த்தனம் –பெரியாழ்வார் -10-பாசுரங்கள் / ஆண்டாள் -3-பாசுரம்
திரு விருந்தாவனம் –ஆண்டாள் -10-பாசுரங்கள்
–6-திரு வெக்கா -பொய்கையார் /-பேயார் /திரு மழிசையார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்

நால்வர் மங்களா சாசனம் -3-திவ்ய தேசங்கள்
-1-திருக்குறுங்குடி –திருமழிசையார் / பெரியாழ்வார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-2-திருப்பாடகம் –பூதத்தார் / பேயார் / திருமழிசையார் / திருமங்கை ஆழ்வார்
திருவாய் -5–10–6-நின்றவாறும் இருந்தவரும் கிடந்தவாறும் வியாக்யானத்தால் மங்களாசாசனம் உண்டே -என்பாரும் உண்டு
-3-திருப்பேர் நகர் –திருமழிசையார் / பெரியாழ்வார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்

மூவர் மங்களா சாசனம் -5-
-1-திரு அத்திகிரி –பூதத்தார் / பேயார் / திருமங்கையார்
-2-திரு வல்லிக் கேணி –பேயார் / திருமழிசையார் / திருமங்கையார்
-3-திரு ஆய்ப்பாடி –பெரியாழ்வார் / ஆண்டாள் / திருமங்கையார்
-4-திருக் கோவலூர் –பொய்கையார் -பூதத்தார் -திருமங்கையார்
-5-திரு விண்ணகர் –பேயார் / நம்மாழ்வார் / திருமங்கையார்

இருவர் மங்களா சாசனம் -20-திவ்ய தேசங்கள்
திரு அட்டபுயகரம் –பேயார் -கலியன் /திருவாலி –கலியன் -குலசேகரர் /திரு ஊரகம் -கலியன்-திருமழிசையார் /
திருக்கடிகை –பேயார் -கலியன் /திரு எவ்வுள்ளூர் –திருக் கடல் மல்லை –திரு சாளக்கிராமம் -திருச் சித்ர கூடம் –திரு தஞ்சை –
-திருத் தண் கால் –திரு நாவாய் –திரு மோகூர் திரு பதரி -திரு வல்ல வாழ் -ஸ்ரீ வில்லிபுத்தூர் -திரு வெள்ளறை –திரு வேளுக்கை –

பாஞ்சராத்ர பாத்மம் ஐந்து வகை பிரதிஷ்டைகளைச் சொல்லும்
1–ஸ்தாபனா -நின்ற திருக்கோலம் /
2–அஸ்தாபனா -அமர்ந்த திருக்கோலம் /
3–சமஸ்தாபனா –கிடந்த திருக்கோலம்
4–பரஸ்தாபனா –வாஹனங்களிலே பல திருக்கோலம் உத்சவர் அலங்காரம்
5–ப்ரதிஷ்டானா–சன்மார்ச்சையுடன் அமைப்பது –

நின்ற திருக்கோலம் -67-/ கிழக்கு நோக்கி -39-/ மேற்கு நோக்கி -12-/ தெற்கு நோக்கி -14-/ வடக்கு நோக்கி -2-
அமர்ந்த திருக்கோலம் -17-/ கிழக்கு நோக்கி -13-/ மேற்கு நோக்கி -3-/ தெற்கு நோக்கி -0-/ வடக்கு நோக்கி -1-
கிடந்த திருக்கோலம் -24-/ கிழக்கு -18-/ மேற்கு -3-/ தெற்கு -3-/ வடக்கு -0-

ஜல சயனம் / தல சயனம் / புஜங்க சயனம் -சேஷ சயனம் /உத்தியோக சயனம் /வீர சயனம் /போக சயனம் /
தர்ப்ப சயனம் /பத்ர -ஆலிலை -சயனம் /மாணிக்க சயனம் /உத்தான சயனம்

———————

பிரஸித்த அபிமான திவ்ய தேசங்கள்
1-திரு நாராயண புரம் -மேல்கோட்டை
2-ராஜ மன்னார் கோயில்
3- பூரி ஜெகன்நாத்
4-ஸ்ரீ முஷ்ணம்
5- ஸ்ரீ புஷ்கரம்
6- ஸ்ரீ ஜநார்த்தனம் -கேரளா மேற்கு கடல் கரை
7- ஸ்ரீ கூர்மம்
8- ஸ்ரீ சிங்கப்பெருமாள் கோயில்
9-அவந்தி -உஜ்ஜயினி
10-கயா க்ஷேத்ரம்
11-பிரயாகை
12- மயிலாப்பூர்
13- திரு மழிசை
14-திரு வஞ்சிக்களம்
15-திரு மண்டங்குடி
16-திருக்குறையலூர்
17-காட்டு மன்னார் கோயில்
18-பூ இருந்த வல்லி
19-ஸ்ரீ பெரும் புதூர்
20- ஸ்ரீ கூறும்
21- மழலை மங்கலம்
22-பச்சைப்பெருமாள் கோயில்
23-மதுராந்தகம் ஏரி காத்த ராமர் திருக்கோயில்
24-ஸ்ரீ குருவாயூர்
25-குணசீலம்
26-பண்டரிபுரம்
27-தொண்டனூர்
28-ஸ்ரீ ரெங்க பட்டணம்

——

நூற்று எட்டுத் திருப்பதி வெண்பா -குருகை இளைய பெருமாள் சிஷ்யர்

சோழ நாடு ஈர் இருபதாம் சொற் பாண்டி ஈர் ஒன்பதாம்
பாழி மலை நாட்டுப் பதின்மூன்றும் -வாழ் தொண்டை
நாடு இரு பத்து மூன்று வடநாடு ஆறு இரண்டு நடு நாடு இரண்டு
கடல் வீட்டோடு நூற்று எண் பதியாம் –

————

ஸ்ரீ நூற்றெட்டுத் திருப்பதிப் போற்றி அகவல்
ஸ்ரீ ஆழ்வார் களின் மங்களாசாகனம் (பாடல்) பெற்ற
ஸ்ரீ நூற்றெட்டுத் திருப்பதிகளின் பெயர்களையும் அடக்கி 108 அடிகள் கொண்ட ஒர் அகவல் பா –
இதில் ஆறு அபிமான ஸ்தலங்களை குறிப்பிடுகிறார்

இந்நூலின் ஆசிரியர் -ஸ்ரீ முத்து ஸ்வாமி ஐயங்கார் -ஸ்ரீ ராகவ ஐயங்காரின் திருத்தந்தையார் –

108 திருப்பதிப்பாடல்கள் என்று ஸ்ரீ ராகவ ஐயங்கார் அருளிச் செய்த 8 வெண்பாக்களும் உண்டு

———–

உலகு உய்ய அரங்கம் உறையூர் தஞ்சை அன்பில்
கரம்பனூர் ஆதனூர் வெள்ளறை கண்டியூர்
அழுந்தூர் கவித்தலம் புள்ளம் பூதங்குடி
சிறு புலியூர் குடந்தை திருவிண்ணகரம்

திருத்தலைச் சங்க நாண் மதியம்
திருப்பேர் நகர் திருச்சேறை வெள்ளியங்குடி
அரிமேய விண்ணகரம் வண் புருஷோத்தமம்
ஆலி நறையூர் தில்லைச் சித்ரகூடம்

சீ ராம விண்ணகரம் காவளம்பாடி கண்ண மங்கை
நந்திபுர விண்ணகரம் நாக்கை இந்தளூர்
கண்ணங்குடி திருக்கண்ண புரம்
மணி மாடக்கோயில் வைகுண்ட விண்ணகரம்

கூடலூர் வெள்ளக்குளம் மணிக்கூடம்
தேர்வானார் தொகை திருத்தெற்றி அம்பலம்
செம் செய் பொன் கோயில் திருப்பார்த்தன் பள்ளி
சோழ நாட்டிடை மறை சொல் பதி நாற்பதின்

திரு மாலிருஞ்சோலை ஸ்ரீ வர குண மங்கை
திருப்புல்லாணி திரு மெய்யம் திருப்புளிங்குடி
திருமோகூர் திருக்குருகூர் திருக்கோட்டியூர் திருக்கூடல்
ஸ்ரீ வைகுண்டம் திருக்குளந்தை திருக்குறுங்குடி

திருக்கோளூர் ஸ்ரீவில்லி புதுவை
தொலைவில்லி மங்கலம் தூய்த் திருப்பேரை
சீ வர மங்கை திருத்தண் காலூர்
பாண்டி நாட்டிடை வாழ் பதி பதினெட்டின்

போற்றும் அநந்த புரம் புலியூர் செங்குன்றூர்
வித்துவக்கோடு மூழிக் களம் வண் பரிசாரம்
காட்கரை நாவாய் வாறன் விளை வண் வண்டூர்
வல்ல வாழ் திருக்கடித்தானம் திருவட்டாறு
பகர் மலை நாட்டிடை பதி பதின்மூன்றின்

திருவகீந்த்ர புரம் திருக்கோவலூர்
நடு நாட்டிடை இரண்டு நலம் தரு பதியின்

அத்தி மா மலை யூரகம் திருத்தண்கா
புட் குழி அட்ட புயங்க நீரகம் காரகம்
வெக்கா கள்வனூர் பாடகம் நின்றவூர்
எவ்வுளூர் நிலாத் திங்கள் துண்டம்

திரு வேளுக்கை திருக்கார்வானம்
பவள வண்ணம் பரமேஸ்வர விண்ணகரம்
திருவிடை வெந்தை திருக்கடல் மல்லை
அல்லிக்கேணி வளர் திருக்கடிகை நீர்மலை
தொண்டை நாட்டிடையின் இன்புறும் பதிகள் இருபத்து இரண்டின்

திருவேங்கடம் சிங்க வேழ் குன்றம் அயோத்யை
தேங்கிய வதரியாச்சிரம் நைமிசாரண்யம்
பிரீதி சாளக்ராமம் கங்கைக்கரை வாழ் கண்டம்
திருவாய்ப்பாடி துவாரகை பாற்கடல் மதுரை
வடநாட்டிடை மன்னிய பதிகள் பத்துடன் இரண்டில்

பரமபதம் என்னும் திரு நாடு ஒன்றையும் சேர்த்து நூற்று எட்டில்

யதிபதி அருளால் இயற்றிய திரு நாராயண புரம்
திரு ராஜமன்னார் கோயில்
மன்னிய வ்ருந்தாவனம் பெரும் பூதூர்
மெய்ப்புகழ் பாப விநாசம் சீர் மூஷ்ணம்
புராண நூல் தலங்கள் போற்றும் ஓர் ஆறின்

உலகிடை மற்றுள ஓங்கிய பதியின்
மலர்மகளுடனே மன்னிய திருமால்
ஏழையேன் உள்ளத்து இருந்து இங்கு
ஊழி என ஊழியாய் உலகு அளித்திடவே –

———–

ஆந்திர பிரதேசம் மற்றும் வட இந்தியா

1. திருமலா (திருப்பதி) ஆந்திர பிரதேசம் 2. அஹோபிலம் ஆந்திர பிரதேசம் 3. முக்திநாத், சாலிகிராமம் நேபாளம்
4. நைமிசாரண்யம் உ.பி. 5. மதுரா உ.பி. 6. கோகுலம் உ.பி. 7. ரகுந்தாதர் ஆலயம் உத்தர்கண்ட்
8.பத்ரிநாத் ஆலயம் உத்தர்கண்ட் 9. ஜ்யோதிமட் உத்தர்கண்ட் 10. அயோத்யா உ.பி. 11. த்வாரகா குஜராத்.

மலைநாடு

12. ஸ்ரீ பத்மநாபஸ்வாமி ஆலயம், திருவனந்தபுரம் 13. திருகட்கரை 14. மூழிக்களம் 15. திருவல்லா
16. திருகடிதானம் 17. செங்குன்றூர் 18. திருப்புள்ளியூர் 19. திருவாரன்விளை 20. திருவான்வந்தூர் 21. திருநாவாய் 22. வித்துவக்கோடு

மதுரை

23. திருமயம் 24. திருக்கோஷ்டியூர் 25. கூடல் அழகர் பெருமாள் கோவில் 26. அழகர்கோவில்
27.திருமோகூர் 28. ஸ்ரீ வில்லிப்புத்தூர் 29. திருத்தங்கள் 30. திருப்புல்லாணி

காஞ்சிபுரம்

31. திருக்கச்சி 32. அஷ்டபுஜகரம் 33. திருவெஃகா 34. திருத்தண்கா (தூப்புல்) 35.திருவேளுக்கை 36. திருக்கள்வனூ
37.திரு ஊரகம் 38. திரு நீரகம் 39. திருக்காரகம் 40. திருக்கார்வானம் 41. திருப்பரமேஸ்வர விண்ணகரம்
42. திருப்பவளவண்ணம் 43. திருப்பாடகம் 44. நிலாத் திங்கள் துண்டம் பெருமாள் கோவில் 45. திருப்புட்குழி

சென்னை

46. திருவல்லிக்கேணி 47. திருநீர்மலை 48. திருவாடானை 49. திருக்கடல்மல்லை 50. திருநின்றவூர் 51. திருவள்ளூர் 52. திருக்கடிகை

மயிலாடுதுறை மற்றும் சீர்காழி

53. திருவழுந்தூர் 54. திருவிந்தளூர் 55. காழீசிரம விண்ணகரம் 56. திருக்காவளம்பாடி 57.திருச்செம்பொன்சேய்
58. திரு அரிமேய விண்ணகரம் 59. திரு வண்புருஷோத்தமம் 60. திருவைகுந்த விண்ணகரம் 61. திருமணிமாடம்

62. திருதேவனார்தொகை 63. திருத்தெற்றியம்பலம் 64. திருமணிக்கூடம் 65.திருவெள்ளக்குளம் 66. திருப்பார்த்தன்பள்ளி
67. தலை சங்க நன்மதியம் 68. திருச்சிறுபுலியூர் 69. திருவாலி-திருநகரி

தஞ்சாவூர்

70. திருச்சித்ரகூடம் 71. திருக்கண்ணன்குடி 72. திருநாகை 73. திரு தஞ்சை 74. திருக்கூடலூர் 75. திருக்கவித்தாலம்
76. திரு ஆதனூர் 77. திருப்புள்ள பூதங்குடி 78. திருக்குடந்தை 79. திருச்சேறை 80. திருநந்திபுர விண்ணகரம்
81. திருநறையூர் 82. திரு விண்ணகர் 83. திரு வெள்ளியங்குடி 84. திருக்கண்ண மங்கை 85. திருக்கண்ணபுரம்
86. திருவந்திபுரம் 87. திருக்கோவலூர் 88. திருக்கண்டியூர்

திருச்சி

89. ஸ்ரீரங்கம் 90. திருக்கோழி 91. திருகரம்பனூர் 92. திருவெள்ளறை 93. திரு அன்பில் 94. திருப்பேர் நகர்

திருநெல்வேலி

95. திருவரமங்கை 96. திருக்குறுங்குடி 97. ஸ்ரீவைகுந்தம் 98. திருவரகுணமங்கை 99. திருப்புளிங்குடி
100. திருக்குருகூர் 101. திருத்துளை வில்லி மங்கலம் 102. திருக்கோளூர் 103. திருக்குளந்தை 104. தென் திருப்பேரை

கன்யாகுமரி

105. திருவட்டாறு 106. திருவன்பரிசரம்

விண்ணுலகம்

107. திருப்பாற்கடல் 108. பரமபதம்

108 திருப்பதிகளை சுலபமாக நினைவில் கொள்ள நூற்றெட்டு திருப்பதி யகவல் உள்ளது

———

சோழநாட்டு திருப்பதிகள்:

1. ரங்கநாத பெருமாள் திருக்கோயில் ஸ்ரீரங்கம்திருச்சி
2. அழகிய மணவாளர் திருக்கோயில் உறையூர்திருச்சி
3. உத்தமர் திருக்கோயில் உத்தமர் கோவில்திருச்சி
4. புண்டரீகாட்சன் திருக்கோயில் திருவெள்ளறைதிருச்சி
5. சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில் அன்பில்திருச்சி
6. அப்பக்குடத்தான் திருக்கோயில் கோவிலடிதஞ்சாவூர்
7. ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில் கண்டியூர்தஞ்சாவூர்
8. வையம்காத்த பெருமாள் திருக்கோயில் திருக்கூடலூர்தஞ்சாவூர்
9. கஜேந்திர வரதன் திருக்கோயில் கபிஸ்தலம்தஞ்சாவூர்
10. வல்வில்ராமன் திருக்கோயில் திருப்புள்ளம்பூதங்குடிதஞ்சாவூர்
11. ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில் ஆதனூர்தஞ்சாவூர்
12. சாரங்கபாணி திருக்கோயில் கும்பகோணம்தஞ்சாவூர்
13. ஒப்பிலியப்பன் திருக்கோயில் திருநாகேஸ்வரம்தஞ்சாவூர்
14. திருநறையூர் நம்பி திருக்கோயில் நாச்சியார்கோயில்தஞ்சாவூர்
15. சாரநாதப்பெருமாள் திருக்கோயில் திருச்சேறைதஞ்சாவூர்
16. பக்தவத்சல பெருமாள் திருக்கோயில் திருக்கண்ணமங்கைதிருவாரூர்
17. சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில் திருக்கண்ணபுரம்நாகப்பட்டினம்
18. லோகநாதப்பெருமாள் திருக்கோயில் திருக்கண்ணங்குடிநாகப்பட்டினம்
19. சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் நாகப்பட்டினம்நாகப்பட்டினம்
20. நீலமேகப்பெருமாள் (மாமணி) திருக்கோயில் தஞ்சாவூர்தஞ்சாவூர்
21. ஜெகநாதன் திருக்கோயில் நாதன்கோயில்தஞ்சாவூர்
22. கோலவில்லி ராமர் திருக்கோயில் திருவெள்ளியங்குடிதஞ்சாவூர்
23. தேவாதிராஜன் திருக்கோயில் தேரழுந்தூர்நாகப்பட்டினம்
24. கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில் திருச்சிறுபுலியூர்திருவாரூர்
25. நாண்மதியப்பெருமாள் திருக்கோயில் தலச்சங்காடுநாகப்பட்டினம்
26. பரிமள ரங்கநாதர் திருக்கோயில் திருஇந்தளூர்நாகப்பட்டினம்
27. கோபாலகிருஷ்ணன் திருக்கோயில் காவளம்பாடிநாகப்பட்டினம்
28. திரிவிக்கிரமன் திருக்கோயில் சீர்காழிநாகப்பட்டினம்
29. குடமாடு கூத்தன் திருக்கோயில் திருநாங்கூர்நாகப்பட்டினம்
30. புருஷோத்தமர் திருக்கோயில் திருவண்புருசோத்தமம்நாகப்பட்டினம்
31. பேரருளாளன் திருக்கோயில் செம்பொன்செய்கோயில்நாகப்பட்டினம்
32. பத்ரிநாராயணர் திருக்கோயில் திருமணிமாடக்கோயில்நாகப்பட்டினம்
33. வைகுண்டநாதர் திருக்கோயில் வைகுண்ட விண்ணகரம்நாகப்பட்டினம்
34. அழகியசிங்கர் திருக்கோயில் திருவாலிநாகப்பட்டினம்
34A. வேதராஜன் திருக்கோயில் திருநகரிநாகப்பட்டினம்
35. தெய்வநாயகர் திருக்கோயில் திருத்தேவனார்த்தொகைநாகப்பட்டினம்
36. செங்கண்மால் திருக்கோயில் திருத்தெற்றியம்பலம்நாகப்பட்டினம்
37. வரதராஜப்பெருமாள் திருக்கோயில் திருமணிக்கூடம்நாகப்பட்டினம்
38. அண்ணன் பெருமாள் திருக்கோயில் திருவெள்ளக்குளம்நாகப்பட்டினம்
39. தாமரையாள் கேள்வன் திருக்கோயில் பார்த்தன் பள்ளிநாகப்பட்டினம்
40. கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில் சிதம்பரம்கடலூர்

நடுநாட்டு திருப்பதிகள்:

41. தேவநாத பெருமாள் திருக்கோயில் திருவகிந்திபுரம்கடலூர்
42. திருவிக்கிரமசுவாமி திருக்கோயில் திருக்கோவிலூர்விழுப்புரம்

தொண்டைநாட்டு திருப்பதிகள்:

43. வரதராஜப் பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம்காஞ்சிபுரம்
44. அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம்காஞ்சிபுரம்
45. விளக்கொளி பெருமாள் திருக்கோயில் தூப்புல்காஞ்சிபுரம்
46. அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம்காஞ்சிபுரம்
47. உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருநீரகம்காஞ்சிபுரம்
48. பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் திருப்பாடகம்காஞ்சிபுரம்
49. நிலாதுண்டப்பெருமாள் திருக்கோயில் நிலாதிங்கள்துண்டம்காஞ்சிபுரம்
50. உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருஊரகம்காஞ்சிபுரம்
51. சொன்ன வண்ணம்செய்த பெருமாள் திருக்கோயில் திருவெக்காகாஞ்சிபுரம்
52. உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருகாரகம்காஞ்சிபுரம்
53. உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருக்கார்வானம்காஞ்சிபுரம்
54. கள்வப்பெருமாள் திருக்கோயில் திருக்கள்வனூர்காஞ்சிபுரம்
55. பவளவண்ணபெருமாள் திருக்கோயில் திருபவளவண்ணம்காஞ்சிபுரம்
56. பரமபதநாதர் திருக்கோயில் பரமேஸ்வர விண்ணகரம்காஞ்சிபுரம்
57. விஜயராகவப் பெருமாள் திருக்கோயில் திருப்புட்குழிகாஞ்சிபுரம்
58. பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில் திருநின்றவூர்திருவள்ளூர்
59. வீரராகவர் திருக்கோயில் திருவள்ளூர்திருவள்ளூர்
60. பார்த்தசாரதி திருக்கோயில் திருவல்லிக்கேணிசென்னை
61. நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் திருநீர்மலைகாஞ்சிபுரம்
62. நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில் திருவிடந்தைகாஞ்சிபுரம்
63. ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில் மகாபலிபுரம்காஞ்சிபுரம்
64. யோக நரசிம்மசுவாமி திருக்கோயில் சோளிங்கர்வேலூர்

வடநாட்டு திருப்பதிகள்:

65. ரகுநாயகன் திருக்கோயில் சரயு-அயோத்திபைசாபாத்
66. தேவராஜன் திருக்கோயில் நைமிசாரண்யம்உத்தர் பிரதேஷ்
67. பரமபுருஷன் திருக்கோயில் நந்தப் பிரயாக்உத்தராஞ்சல்
68. நீலமேகம் திருக்கோயில் தேவப்ரயாகைஉத்தராஞ்சல்
69. பத்ரிநாராயணர் திருக்கோயில் பத்ரிநாத்சாமோலி
70. ஸ்ரீமூர்த்தி திருக்கோயில் முக்திநாத்நேபாளம்
71. கோவர்த்தநேசன் திருக்கோயில் மதுராஉத்தர் பிரதேஷ்
72. நவமோகன கிருஷ்ணன் திருக்கோயில் ஆயர்பாடிடெல்லி
73. கிருஷ்ணர் (துவராகாநாதர்) திருக்கோயில் துவாரகைஅகமதாபாத்
74. பிரகலாத வரதன் திருக்கோயில் அஹோபிலம்கர்நூல்
75. வெங்கடாசலபதி திருக்கோயில் மேல்திருப்பதிசித்தூர்

மலைநாட்டுத் திருப்பதிகள்:

76. நாவாய் முகுந்தன் திருக்கோயில் திருநாவாய்மலப்புரம்
77. உய்யவந்தபெருமாள் திருக்கோயில் திருவித்துவக்கோடுபாலக்காடு
78. காட்கரையப்பன் திருக்கோயில் திருக்காக்கரைஎர்ணாகுளம்
79. லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில் திருமூழிக்களம்எர்ணாகுளம்
80. திருவாழ்மார்பன் திருக்கோயில் திருவல்லவாழ்பந்தனம் திட்டா
81. அற்புத நாராயணன் திருக்கோயில் திருக்கடித்தானம்கோட்டயம்
82. இமையவரப்பன் திருக்கோயில் திருச்சிற்றாறுஆலப்புழா
83. மாயப்பிரான் திருக்கோயில் திருப்புலியூர்ஆலப்புழா
84. திருக்குறளப்பன் திருக்கோயில் திருவாறன் விளைபந்தனம் திட்டா
85. பாம்பணையப்பன் திருக்கோயில் திருவண்வண்டூர்ஆலப்புழா
86. அனந்த பத்மநாபன் திருக்கோயில் திருவனந்தபுரம்திருவனந்தபுரம்
87. ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் திருவட்டாறுகன்னியாகுமரி
88. திருவாழ்மார்பன் திருக்கோயில் திருப்பதிசாரம்கன்னியாகுமரி

பாண்டியநாட்டுத் திருப்பதிகள் :

89. அழகிய நம்பிராயர் திருக்கோயில் திருக்குறுங்குடிதிருநெல்வேலி
90. தோத்தாத்ரிநாதன் திருக்கோயில் நாங்குனேரிதிருநெல்வேலி
91. வைகுண்டநாதர் திருக்கோயில் ஸ்ரீ வைகுண்டம்தூத்துக்குடி
92. விஜயாஸனர் திருக்கோயில் நத்தம்தூத்துக்குடி
93. பூமிபாலகர் திருக்கோயில் திருப்புளியங்குடிதூத்துக்குடி
94. ஸ்ரீ நிவாசன் திருக்கோயில் தொலைவிலிமங்கலம்தூத்துக்குடி
94A. அரவிந்தலோசனர் திருக்கோயில் தொலைவிலிமங்கலம்தூத்துக்குடி
95. வேங்கட வாணன் திருக்கோயில் பெருங்குளம்தூத்துக்குடி
96. வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில் திருக்கோளூர்தூத்துக்குடி
97. மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில் தென்திருப்பேரைதூத்துக்குடி
98. ஆதிநாதன் திருக்கோயில் ஆழ்வார் திருநகரிதூத்துக்குடி
99. ஆண்டாள் திருக்கோயில் ஸ்ரீ வில்லிபுத்தூர்விருதுநகர்
100. நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில் திருத்தங்கல்விருதுநகர்
101. கூடலழகர் திருக்கோயில் மதுரைமதுரை
102. கள்ளழகர் திருக்கோயில் அழகர்கோவில்மதுரை
103. காளமேகப்பெருமாள் திருக்கோயில் திருமோகூர்மதுரை
104. சவுமியநாராயணர் திருக்கோயில் திருக்கோஷ்டியூர்சிவகங்கை
105. ஆதிஜெகநாதர் திருக்கோயில் திருப்புல்லாணிராமநாதபுரம்
106. சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில் திருமயம்புதுக்கோட்டை

நில உலகில் காணமுடியாத திருப்பதிகள்:

107. ஸ்ரீ க்ஷீராப்தி நாதன் திருக்கோயில்திருப்பாற்கடல்விண்ணுலகம்
108. ஸ்ரீ பரமபத நாதன் திருக்கோயில்பரமபதம்விண்ணுலகம்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ திருவரங்க சிலேடை மாலை –ஸ்ரீ அபி நவ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் —

October 28, 2021

நூறு வெண்பா பாடல்கள் –
முதல் இரண்டு வரிகளால் திருவரங்க சிறப்பையும்
பின் இரண்டு வரிகளால் திரு அரங்க நாதனின் சிறப்பையும் சொல்லும்

ஐந்து பாடல்களுக்கு ஒரு முறை 20 பாடல்களில் மூன்று சிலேடைகளும்
பத்து பாடல்களுக்கு ஒரு முறை பத்துப் பாடல்களில் நான்கு சிலேடைகளும்
நூறாவது வெண்பாவில் மா மணி மகுடம் போல் ஐந்து சிலேடைகளும் கொண்ட திவ்ய பிரபந்தம்

ஸ்ரீ ஸ்வாதி திருநாள் அரச கவிஞரான ஸ்ரீ தென் திருப்பேரை வாசி யான ஸ்ரீ குழைக்காத ஐயங்காரின்
திருப்புதல்வரான கவி ஸ்ரீ ஸ்ரீ நிவாஸ ஐயங்காருக்கும்
அவரது அருமைத் தேவியாரான ஸ்ரீ குழைக்காத நாய்ச்சியாருக்கும் -1869-திரு அவதரித்த ஸ்வாமி இவர் –
ஸ்ரீ அனந்த கிருஷ்ண ஐயங்கார் -இயல் பெயர் -இவருக்கு
ஸ்ரீ வானமா மலை -25 பட்ட ஜீயர் இவருக்கு அபிநவ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் என்ற
பட்டப்பெயர் சூட்டி அபிமானித்து அருளினார்

ஸ்ரீ பத்ம நாப ஸ்வாமி சந்திரகலா மாலை
ஸ்ரீ திருப்பேரைக் கலம்பகம்
ஸ்ரீ தனிப்பா மஞ்சரி போன்ற பல நூல்களையும் இயற்றி உள்ளார்

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் குலத்தரான இவரை கருவிலே திருவுடையவர் என்றும்
ஸ்ரீ மதுரகவி என்றே புகழ வேண்டும் என்பர்

———-

அணி அரங்க மாலை அடி பணிந்து அம் நல் தாளுக்கு
அணி அரங்க மாலை அணிந்தான் -தணிவில்
அனந்த வளத்து தென் பேரையான் றலவ காரன்
அநந்த க்ருஷ்ண பேர்க் கவிஞன் ஆய்ந்து –ஸ்ரீ உ வே சுவாமிநாத ஐயர் –1900-

ஆலை யுறு வான் தாட்க்கு அரங்கச் சிலேடை வெண்பா
மாலை யன்பாய்ச் சூட்டி இசை மன்னினான் -ஆலையுடன்
தென்ன நந்த மாவருக்கை சேரும் திருப்பேரை
மன்னன் அநந்த கிருஷ்ண கவி மான் –இராம நாத புரம் ஸமஸ்தான வித்வான் ப்ரஹ்ம ஸ்ரீ பிச்சு ஐயர் அவர்கள் -1904-

————-

திருவரங்க மாலுக்குச் சிலேடைத் தார் சாத்திப்
பெரு வரங்கள் நாளும் பெறவே –வரு கவிகள்
கொம்பேறித் தாவும் குருகூர் மகிழ் மாறன்
அம்போ ருகத்தாள் அரண் –1-காப்பு வெண்பா

சிலேடைத் தார்-சிலேடை மாலை
கவிகள் -குரங்குகள்
குருகூர் -ஆழ்வார் திரு நகரி
மகிழ் -மகிழம்பூ மாலையை யுடைய
மாறன் -நம்மாழ்வார்
அம்போருகம்–தாமரை
அரண் -காப்பு –

அம்போ ருகத்தாள் –தாமரையில் வீற்று இருப்பவள் –திருமகள் -கலைமகள் இருவருக்கும் பொருந்தும்
அரண் -நம்மாழ்வார் -திரு மக்கள் காலை மக்கள் மூவருமே காப்பாவார்கள்
குருகூர் மகிழ் மாறன் -மால் -தன் -அம்போ ருகத்தாள் -ஆழ்வார் திருநகரியை உகந்து கொண்டு அருளிய
ஸ்ரீ ஆதி நாதராது பாதார விந்தம் என்றுமாம் –

——————

மன்னும் இதயத்தில் வைத்தேன் சிலேடை யதாய்
உன்னு பதங்கள் உதிக்கவே –மின்னும்
மதிள் மருவு தண் அரங்க மாலின் அருள் வாய்ந்த
பதின்மர் அரும் பூம் பதம் –2-பதின்மர் வெண்பா

பதங்கள் -சொற்கள்
பதம் -திருவடி
பதின்மர் பதங்களையும் இதயத்தில் வைத்தலால் –
உன்னிய பதங்கள் எல்லாம் -பல பொருள் தரும் சிலேடையாய் உதிக்கும் என்கிற நயம் காண்க
பதின்மர் -ஆழ்வார் மதுரகவியார் நீங்கலாக உள்ள ஆழ்வார்கள்

———-

நாடியே நான் பணிந்தேன் நன்கு அருள்வாய் மல்லி வள
நாடியே கோதாய் நறுங்குழல் நீ -சூடிய நன்
மாலை அணி அரங்க மா மணவாளற்கு உவந்து
மாலை சொல நின் தாள் மலர் –3-ஆண்டாள்

மல்லி வள நாடி–மல்லி வள நாட்டுக்கு உரியவள் -வில்லி எனும் வேடனது தாயான மல்லி என்பவள்
ஆண்ட நாடு மல்லி நாடு எனப் பெயர் பெற்றது
ஆண்டாள் நீ சூடிய மாலையை ஏற்றவன் ஆதலின் நின் தாள் மலர் பணியும் நான் உவந்து சூடும்
இப் பா மாலையை ஏற்றுக் கொள்வான் என்று ஆசிரியர் கூறும் பொருள் நயம் காண்க –

————-

இக் கோன் பிதாவாம் எழில் அரங்கர் அண்டர் இறைஞ்ச சு
இக் கோன் அடி புனையும் இம் மாலை -தக்கோர்
மதுர கவி என்றே மதிப்பான் அமைத்தேன்
மதுர கவியாரை மனத்து –4-மதுர கவி யாழ்வார்

இக் கோன் பிதா-இக்கு -கரும்பு -வில்லை யுடைய மன்மதனுக்குப் பிதா -சாஷாத் மன்மத மன்மதன்
இக்கோன் -இந்தப்பெருமான்
அண்டர்-தேவர் என்றும் இடையர் என்றும்
அண்டர் இறைஞ்சு இக் கோன் –ஆயர் வணங்கும் இவ்வாயர் தலைவன்
மதுர கவி என்றே மதிதித்து தக்கோர் எல்லாம் பாராட்ட மதுர கவி ஆழ்வாரை மனத்து அமைத்தேன்-என்கிறார்

———

சீர் அங்கம் ஒன்றும் தெரியா மட நெஞ்சே
சீர் அரங்கற்கு இம் மாலை செப்ப எணில் -தூர
மதித் தலைவன் தாழை வளர்ந்து ஓங்கும் பூதூர்
எதித் தலைவன் தாளை இறைஞ்சு –5–உடையவர்

சீர் அங்கம் -சிறப்பு வாய்ந்த ஆறு அங்கங்கள் –சீர் முதலிய யாப்பின் உறுப்புக்கள் என்றுமாம் –
தூரமதித் தலைவன் தாழை வளர்ந்து ஓங்கும் பூதூர் -வெகு தூரத்தில் உள்ள சந்திரனிடம் பொருந்துமாறு
தாழை வளர்ந்து ஓங்கும் ஸ்ரீ பெரும்பூதூர்
எதித் தலைவன் தாளை இறைஞ்சு –எதிராஜர் உடையவர் இணை அடிகளையே ஸ்துதித்துப் போ

————-

அல்லும் பகலும் அனுதினமும் என்னெஞ்சே
சொல்லரிய பேர் இன்பம் தோய்வதற்கா -நல்ல
குணவாள மாந்தர் குழாம் ஏத்தும் எந்தை
மணவாள மா முனியை வாழ்த்து –6- மா முனிகள்

————-

சென்னிக்கு அணி மலராம் சிந்தை அளிக்கு அம்புயமாம்
மன்னு பவக் கடற்கோர் வங்கமதாம் –தன்னின்
பதியோடு அலர் மங்கை பற்று வர மங்கைப்
பதி வாழ் எதியின் பதம் –7- ஆச்சார்ய ஸ்துதி

அம்புயமாம் –தாமரை மலராம்
வங்கமதாம் –மரக்கலமாம்
அலர் மங்கை தன் இன் பதியோடு பற்று வர மங்கைப் பதி -மிதுனமாய் உகந்து வீற்று இருந்து அருளும்
ஸ்ரீ வரமங்கை பதி -ஸ்ரீ நான்கு நேரி –
வாழ் எதியின் பதம் –எதி ஸ்ரீ வானமா மலை ஆதீன கர்த்தரும் இந்நூல் ஆசிரியரின் ஞான ஆச்சார்யரான
ஸ்ரீ ராமானுஜ ஸ்வாமிகள் -அஷ்ட திக் கஜங்களில் முதல்வர்

எதியின் பதம் சிரத்தில் சூடும் மலராகவும்
மனமாகிய வண்டுக்கு ஏற்ற தாமரையாகவும்
பாவமாகிய கடலைக் கடத்தற்கு ஏற்ற மரக்கலமாகவும் -விளங்கு கின்றது -என்கை –

———-

நூல் அருமை சற்றும் நுகராத புன் மதியேன்
கோலச் சிலேடை வெண்பாக் கூறுவது –பாலகர் தாம்
பாண்டி வரைந்து பரவையை வட்டாடும் கால்
தாண்டுவது போலாம் தலத்து –8- அவை அடக்கம் –

பாண்டி வரைந்து வட்டாடுதல் -பாண்டி ஒரு வித விளையாட்டு –
அவ்விளையாட்டுக்கு உரிய அரங்கினை வகுத்து -அதில் கண்ட வாய் -சமுத்திரம் -காடு எனப்பெயர் இட்டு வட்டு ஆடுதல்
அரங்கு இன்றி வட்டாடி அற்றே -திருக்குறள்
அல்ப மதியையுடைய நான் அழகிய சிலேடை வெண்பாக்களைக் கூறி விடுவேன் என்பது
பாலகர் பாண்டி வரைந்து விளையாடுகையில் சமுத்திரம் தாண்டினேன் என்று கூறுதலை ஒக்கும் -என்று அடக்கத்தை அறிவிக்கிறார் –

————-

திங்கள் நுதல் ஆயிழையார் தேங்கூந்தல் கொங்கை நடை
அங்கனமே நேரும் அரங்கமே –துங்க வகிச்
சக்கரத்தான் அனத்தான் தனி வாரி சக்கரத்தான்
சக்கரத்தான் அனத்தான் தலம் –1-மூன்று சிலேடைகள்

திங்கள் நுதல் ஆயிழையார் -சந்திரனை ஒத்த நெற்றியை யுடைய பெண்கள் உடைய
தேங்கூந்தல் அங்கனமே நேரும் -அம் கனமே நேரும் – -அழகிய கூந்தலானது ஜலத்தை யுடைய மேகத்தை ஒக்கும்
கொங்கை அங்கனமே நேரும்–அழகிய பாரத்தைப் பொருந்தும்
நடை அங்கனமே நேரும்–அங்கு அனமே நேரும் -அனம்-அன்னம் – -நடையோ அன்னத்தை நிகர்க்கும்
துங்கம் -உயர்வு
வகிச் சக்கரத்தான் அனத்தான்-அகி சேஷம் -சக்கரம் -மலை –சேஷாசலத்தை இருப்பிடமாகக் கொண்டு அருளுகிறவன்
தனி வாரிசக் கரத்தான் –ஒப்பற்ற -வாரிசாம் -தாமரை போன்ற திருக்கரங்கள் யுடையவன்
சக்கரத்தான் நத்தான் –சக்ராயுதமும் சங்கும் ஏந்தியவன் –
தலம் –இடம்

—————-

செம் பொன் மதிள் புறத்தும் தேர் வீரர் தூணியிலும்
அம்பு அகழி சேரும் அரங்கமே -பைம் பொழில் வாய்
செல் நகரான் குன்றான் திருக் குருகையான் குடந்தைப்
பொன்னகரான் குன்றான் புரம் –2-

செம் பொன் மதிள் புறத்தும் அம்பு அகழி சேரும்-நீர் நிறைந்த அகழி
தேர் வீரர் தூணியிலும் அம் பகழி சேரும்-அழகிய பாணங்கள் சேரும்
அரங்கமே –
பைம் பொழில் வாய் செல் நகரான் குன்றான் -சோலையின் இடத்து மேகம் சஞ்சரிக்கும் ரிஷப கிரியை யுடையவன்
திருக் குருகையான்
குடந்தை பொன்னகரான் குன்றான் -திருக்குடந்தைப் பதி குறையாதவன்
புரம் –பட்டணம்

——————

கொங்கு ஏய் தடத்துக் குமுத மலர் ஒண் புரிசை
அம் கேழ் மருவும் அரங்கமே -மங்கா
இருக்கு அந்தரத்தார் எழில் கந்த ரத்தார்
உருக் கந்தரத்தார் உவப்பு –3–

கொங்கு ஏய் தடத்துக் -வாசனை பொருந்திய தடாகம்
குமுத மலர்
ஒண் புரிசை -அழகிய மதிள்
அம் கேழ் மருவும் -அழகிய நிறத்தைப் பொருந்தும்
அரங்கமே –
இருக்கு அந்தரத்தார் -இருக்கு -வேதம்
எழில் கந்த ரத்தார் –காந்தாரம் -கழுத்து
உருக் கந்தரத்தார் -திரு மேனி மேகத்தை ஒத்தவர் -கந்தரம் -மேகம்

————–

செம்மைத் தெருவினிலும் சேயிழையார் கைகளிலும்
அம்மனைகள் காணும் அரங்கமே -இம்மகியில்
வில்லாண்டு வந்தார் விமலன் புதுவையர் கோன்
பல்லாண்டு உவந்தார் பதி–4–

தெருவினிலும் அம்மனைகள் காணும்–தெருவினில் அழகிய வீடுகள் காணப் பெறும்
சேயிழையார் கைகளிலும் அம்மனைகள் காணும்–கைகளில் அம்மனைக் காய்கள் காணப் பெறும்

————

சித்திர நற் கோபுரங்கள் செல் வரிலம் மாதரிடை
அத்தம் திகழும் அரங்கமே -பத்தர் உளம்
தங்க விமானத்தார் தனிச் சீர்ப் ப்ரணவமாம்
தங்க விமானத்தார் தலம்–5- மூன்று சிலேடைகள்

கோபுரங்கள் அத்தம் திகழும்-ஹஸ்த நக்ஷத்ரத்தை அளாவி நிற்கும்
செல்வர் இல்லம் அத்தம் திகழும்-பொருள் செல்வத்தால் பிரகாசிக்கும்
மாதரிடை அ தந்து இகழும் –மென்மையினால்-நுட்பத்தால் – பஞ்சு நூலையும் பழிக்கும்
பத்தர் உளம் தங்கு அவிமானத்தார்-அபிமானத்தை யுடையவர்
ப்ரணவமாம் தங்க விமானத்தார் –தங்க மயமான ப்ரணவகார விமானத்தை யுடையவர்

————

மங்காத பொன்னறையில் மா மணி மின் மாட மதில்
அங்கே தனம் சேர் அரங்கமே –இங்கு ஏழு
திண்ண விடை முன் பொறுத்தார் சிற்றனையால் வற் கலையை
வண்ண விடை முன் பொறுத்தார் வாழ்வு –6-

மங்காத-குறையாத
பொன்னறை–பொக்கிஷம்
பொன்னறையில் அம் கேதனம் சேர் மின் மாட மதில் –மின்னுகிற மாடங்களிலும் மதில்களிலும் கொடி சேர்ந்து -கேதனம் -கொடி
ஏழு திண் அம் விடை முன் பொறுத்தார் -நப்பின்னைப் பிராட்டிக்காக ஆன் ஏறு ஏழு வென்றான்
முன்பு ஓறுத்தார் –வலிமை அழித்தார்
வற் கலை-மரவுரி
சிற்றனை-கைகேயி
வண்ணம் இடை முன் பொறுத்தார் -அழகிய இடுப்பிலே தரித்து அருளினார்

————-

கஞ்ச மலர் சேர் கழனியிலும் வேள் இடத்தும்
அஞ்சம் படுக்கும் அரங்கமே –வஞ்சகர்கள்
வந்திக்கத் தாமதியார் மா நிலத்தில் அன்பரிடம்
சந்திக்கத் தாம் மதியார் சார்பு –7–

கஞ்சம் -தாமரை
கழனி-வயல்
வேள் -மன்மதன்
கழனியிலும் அஞ்சம்-அன்னம் -படுக்கும்
வேள் இடத்தும் அஞ்சு அம்பு அடுக்கும் -பஞ்ச பாணங்கள்
வந்திக்க–வணங்க -தாம் மதியார்
தாமதியார் -தாமஸிக்க மாட்டார் -விரைந்து எழுந்து அருள்வார்

————

அங்க மறை யோது முதிர் அந்தணரும் ஆடவரும்
அங்கயனை மானும் அரங்கமே –பொங்கும்
அரங்கிலே சங்கெடுத்தான் ஐவருக்க நேகந்
தரங்கிலே சங்கெடுத்தான் சார்பு –8–

அங்க மறை யோது-ஆறு அங்கங்களையும் வேதங்களையும் யோதும்
முதிர் அந்தணரும் -அறிவால் முதிர்ந்த வேதியர்
அந்தணரும் அங்கயனை மானும் -பிரம தேவனை ஒக்கும்
ஆடவரும் அங்கயனை மானும் -ஆடவரும் அங்கசனை -மன்மதனை ஒக்கும்
அரங்கமே –யுத்த அரங்கம் -போர்க் களம்
சங்கெடுத்தான்-பாஞ்ச ஜன்யத்தை முழங்கியவன்
ஐவர் -பாண்டவர் ஐவர்
அநேகம் தரம் கிலேசம் கெடுத்தான்-பல தடவைகள் துயரங்கள் தீர்த்து அருளிய பஞ்ச பாண்டவ ஸஹாயன்

——————

ஊனமிலா முல்லையரும் ஒண் செல் வருமன்பால்
ஆனை வளர்க்கும் அரங்கமே –தானவரை
கொன்றவிரும் செங்கதையான் கோ மகனா வந்து வனம்
சென்ற இரும் செங்கதையான் சோர்வு –9-

ஊனமிலா -குற்றம் இல்லாத
முல்லையரும் –முல்லை நிலத்திற்கு உரிய ஆயர்
மன்பால் ஆனை வளர்க்கும் –மிகுதியான பாலைத் தரும் பசுவை வளர்க்கும்
ஒண் செல்வரும் அன்பால் ஆனை வளர்க்கும் – அழகிய செல்வந்தர்களும் யானையை வளர்க்கும்
அரங்கமே —
தானவரை –அஸுரரை
கொன்று அவிரும் செங்கதையான் –ஸம்ஹரித்து விளங்கா நிற்கும் இரத்தம் தோய்ந்த சிவந்த கதை ஆயுதத்தை யுடையவன்
கோ மகனா வந்து -சக்கரவர்த்தி திருமகனாய் திரு அவதரித்து அருளி
வனம் சென்ற இரும் செங்கதையான் –தண்டகாரண்யம் சென்ற பெரிய அழகிய வரலாறு -ஸ்ரீ ராமாயணம்-

——————

மங்கையர் தம் மார்பு கரம் வாழ் உயிர் மேலோர் ஆயுள்
அங்கம் சுகம் கொள் அரங்கமே –இங்கு இணையில்
மா சுபத்திரைக்கு அணனார் வண் தாமரைக் கணனார்
மாசு பத்திரைக் கணனார் வாழ்வு –10- நான்கு சிலேடைகள்

மார்பு அம் கஞ்சுகம்-கச்சு கொள்ளும்
கரம் அங்கு அஞ்சுகம் -கிளியைக் -கொள்ளும்
வாழ் உயிர் –ஸ்ரீ ரெங்கத்தில் நித்ய வாசம் செய்யும் நாள் பேறு பெற்ற பிராணிகள் -அங்கம் சுகம் கொள்ளும் -தேக ஆரோக்யத்தைப் பொருந்தும்
மேலோர் ஆயுள் -ஞானிகளின் பிராயம் -அங்கம் சுகம் கொள் -அங்கு அஞ்சு யுகம் கொள்ளும்
இணை -உவமை
மா -அழகு -சுபத்திரைக்கு அண்ணனார்
வண் தாமரைக் கண்ணனார்
மா சுபம் திரைக் கண்ணனார் -பெரிய மங்களகரமான ஷீராப்தியை யுடைய கண்ண பிரான்
கண்ணனார் -கடல் இடமாகக் கொண்டவர்

———-

பொன்னார் புரிசைகளும் பூம் பொழிலும் நீரகழும்
அன்னாக மேவும் அரங்கமே -ஒன்னாருக்கு
அஞ்சாம கானத்தான் அன்று அடைந்த கானத்தான்
அஞ்சாம கானத்தான் ஆர்வு –11–மூன்று சிலேடைகள்

புரிசைகளும் அன்னரக மேவும்-அம் நரக மேவும் -மதிள்கள் வானத்தை அளாவும்–புரிசைகள் மலையை ஒக்கும் எனவுமாம்
பொழிலும் அன்னாக-அந் நாகம் – மேவும்-சோலைகளும் அழகிய புன்னை மரங்களைப் பெற்று இருக்கும்
நீர் அகழும் அன்னரக-அ நாக – மேவும்-மதில்களைச் சூழ்ந்த கிடங்கும் -பாம்பு -சர்ப்ப லோகமாகிய பாதாளம் ஆகும்
ஒன்னார் -பகைவர்
அஞ்சாம கானத்தான்-அஞ்சா மகான் நத்தான் -மகான் -பெரியோன் -நத்தான் -சங்கை ஏந்தினவன் -நந்து -சங்கு -வலித்தல் விகாரம் பெற்றது
அன்று அடைந்த கானத்தான்-காட்டை யுடையவன்
அஞ்சாம கானத்தான்-அழகிய சாம வேத கீதத்தை யுடையவன்

————

பண்டை வயலில் பயிரிடு முன்னும் பின்னும்
அண்ட சங்கள் வைகும் அரங்கமே –கண்ட கர்க்குத்
தாங்கைச் சரச மன்னார் தண் புதுவை மான் கமலத்
தேங்கைச் சரச மன்னார் சேர்வு–12–

பயிரிடு முன்னும் அண்டு அசங்கள் வைகும் -நெருங்கிய ஆடுகள் தங்கும்-
வயலில் உரத்துக்காக ஆட்டுக் கிடைகள் வைத்தல் வழக்கம்
பயிரிடு பின்னும் அண்டசங்கள்-பறவைகள் – வைகும்
கண்டகர்க்குத்-அசுரர்களுக்கு – தாம் கைச்ச -கைத்த -ரசம் அன்னார்
புதுவை மான்-ஆண்டாள் – கமலம் தேம் கை சரச மன்னார் –ரெங்க மன்னார்

————-

சிங்கார நல் வணிகர் செல்வர் துயில் இடங்கள்
அங்காடி மேவும் அரங்கமே -வெங்கானில்
சேர்ந்த விரதத்தினார் திண் விசயன் சாரதியா
ஊர்ந்த விரதத்தினார் ஊர் –13-

வணிகர் அங்காடி-கடைவீதி -மேவும்
துயில் இடங்கள் அங்கு ஆடி-நிலைக் கண்ணாடி – மேவும்
வெங்கானில் சேர்ந்த விரதத்தினார் -ஸ்ரீ ராம அவதாரம்
விசயன் சாரதியா ஊர்ந்த ரதத்தினார்-ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்

————

வாசமுறு யோகியரும் வாழ்த்து மறை ஒலியும்
ஆசை யகலும் அரங்கமே -வாச யுரங்
கூடு திருப்பாவை யினான் கோதை எனும் சோழியப் பெண்
பாடு திருப்பாவை யினான் பற்று –14-

வாசமுறு யோகியரும் ஆசை யகலும்-ஆசை மூவாசைகள் நீங்கும்
வாழ்த்து மறை ஒலியும் ஆசை யகலும்–வேத கோஷமும் திக்குகளை வியாபிக்கும்
வாச யுரங் கூடு திருப்பாவை யினான் -உரம் வாசம் கூடும் -துளவ சந்தனாதி மணம் பொருந்திய உரத்தில் கூடு
திரு மார்பின் கண் வசித்தலைப் பொருந்திய திரு மகள் ஆகிய அழகிய பெண்ணை யுடையவன்
கோதை எனும் சோழியப் பெண்-ஆண்டாள் -சோழியர் குலத்தில் உதித்த பெண்
பாடு திருப்பாவை யினான் பற்று -பாடிய திருப்பாவை எனும் திவ்ய பிரபந்தத்தை யுடையவன் விரும்பும் இடம்

————-

வாழு மடவார் கரம் தேர் வண்கா விரி நதி பொன்
ஆழி மருவும் அரங்கமே -பாழி மிகும்
தானவரை முன் பரித்தார் தண்ட டத்தில் அன்று அழைத்த
தானவரை முன் பரித்தார் சார்பு –15–மூன்று சிலேடைகள்

மடவார் கரம் பொன் ஆழி-தங்க மோதிரம் – மருவும்
தேர் பொன் ஆழி -அழகிய சக்கரங்கள் – மருவும்
நதி பொன் ஆழி-திரு மகள் பிறந்த கடலை – மருவும்
பாழி-வலிமை
தானவரை முன் பரித்தார் -முன்பு அரித்தார் -அசுரரை வலி அழித்தார் -முற்காலத்தில் ஸம்ஹரித்தார்
தண் தடத்தில் அன்று அழைத்த தான வரை-ஸ்ரீ கஜேந்திராழ்வானை-
தானம் வரை -மத ஜலத்தை சொரிகின்ற மலையாகிய யானை
முன் பரித்தார் -அந்நாளில் காத்து அருளினார் –

————-

மங்குல் தவழ் சோலையிலும் மாளிகை சார் பஞ்சரத்தும்
அங்கிளைகள் மேவும் அரங்கமே -பொங்கும்
பயமா மலைக்குடையான் பண்டாய ரேத்து
நயமா மலைக்குடையான் நாடு –16–

மங்குல் -மேகம்
சோலையிலும் அங்கிளைகள்-கோப்புகள் – மேவும்
பஞ்சரத்தும் -பஞ்சரம் கூடு கிளிக்கூண்டு -அங்கிளைகள் -அழகிய கிளிகள் -மேவும்
பயமாம் அலைக்குடையான்–பயம் பால் -அலை கடல் –திருப்பாற் கடலுக்கு உரிமை யுடையவன்
ஆயர் -இடையர்
நயம் மா மலை குடையான் -அழகான கோவர்த்தன மலையைக் குடையாக யுடையவன் –

———–

வஞ்சியர் தம் கண்ணிணையும் மாடமுறு மந்திரமும்
அஞ்சனங்கள் ஆரும் அரங்கமே -தஞ்சிகையில்
தோய்ந்த கலா பத்தார் துகள் மாதுலனான் முன்
வாய்ந்த கலா பத்தார் மனை –17–

வஞ்சியர் -வஞ்சிக் கொடி போன்ற மகளிர்
மந்திரம்-மாளிகை
கண்ணிணையும்–அஞ்சனங்கள்-மை – ஆரும்-பொருந்தும்
மந்திரமும் அஞ்சனங்கள்-அம் ஜனங்கள் – ஆரும் -நிறையும்
சிகை -குஞ்சி
தோய்ந்த கலா பத்தார் -அணியப்பெற்ற மயில் இறகை யுடையவர்
மாதுலனால் -கம்சனால்
முன் வாய்ந்து அகல் ஆபத்தார்–முதலில் ஏற்பட்டுப் பின் எளிதில் நீங்கிய ஆபத்துக்களை யுடையவர் –

———-

தங்க நெடும் கேதனமும் சாரும் பல தருவும்
அங்கனி யோடேயும் அரங்கமே -துங்க
அருவரை முன் அங்கு எடுத்தார் அன்று மல்லரான
இருவரை முன்னம் கெடுத்தார் இல் –18-

கேதனம்–துகில் கொடி
கேதனமும்-அங்கனி யோடே-கன்யா ராசியோடு —
தருவும் அங் கனி யோடே-அழகிய பழங்களுடன்
துங்கம் -உயர்வு
வரை -கோவர்த்தன கிரி -முன் அங்கு எடுத்தார் -குடையாகப் பிடித்தவர்
மல்லர் இருவர் -சாணூர முஷ்டிகர் -இருவரை முன்னம் கெடுத்தார்-ஸம்ஹரித்தார்

————

பேரா விலங்கையர் கோன் பீமன் நளன் நேர் மடையர்
ஆரா தனம் செய் அரங்கமே -சீர் ஆயர்
வின் மந்திர முடையார் வெண்ணெய் யுண்டார் எஞ்ஞான்றும்
தன் மந்திரமுடையார் சார்பு –19–

பேரா -அழியாத
விலங்கையர் கோன் –விபீஷணன் -ஆரா தனம் செய் அரங்கமே
பீமன் நளன் நேர் மடையர்-மடைப்பள்ளிக் காரர்
பீமன் நளன் இருவரும் பாக ஸாஸ்த்ர விற்பன்னர்
ஆராதனம் -திரு அமுது வகைகள்
வில் -ஒளி
மந்திரம் –வீடு
முடை நாற்றம் ஆர் வெண்ணெய் யுண்டார்
தன்மம் -தர்மம்
திரம் யுடையார் -ஸ்திரமாக யுடையார்

————–

ஓங்கு பெரும் செல்வர் ஒண் மஞ்சம் காவிரி நெல்
ஆங்கு திரை மேவும் அரங்கமே –பூங்கமல
வாசமா தங்கத்தான் வந்தருள் மா தங்கத்தான்
வாசமா தங்கத்தான் வாழ்வு –20—நான்கு சிலேடைகள்

செல்வர்-ஆம் குதிரை மேவும்
ஒண் மஞ்சம் -ஆங்கு திரை-திரைச்சீலை – மேவும்
காவிரி ஆங்கு திரை -அலை -மேவும்
நெல் ஆம் குதிர் ஐ மேவும்-குதிர் -நெல்லைச் சேமித்து வைக்கும் குலுக்கை
பூங்கமல வாசம் மாது அங்கத்தான்
வந்தருள் மா தங்கத்தான் –இரங்கிக் காத்து அருளப் பெற்ற கஜேந்திரனை யுடையவன்
வாசம் -வஸ்திரம் -மா தங்கத்தான் -அழகிய பீதாம்பரத்தை யுடையவன் –

—————

மச்சமுறும் பண்ணை மத வாரணம் இரதம்
அச்சங்கள் தரும் அரங்கமே –இச்சை கொளும்
அம் பவள வாயினான் அம் புதியில் மீனுருவா
அம் பவள வாயினான் அயர்வு –21-

பண்ணை அச்சங்கள் தரும்- அச் சங்கு அடரும் -நெருங்கும்
மத வாரணம் -மத யானை -அச்சங்கள் தரும்
இரதம் அச்சங்கள் தரும் –அச்சு அங்கு அடரும் –
அம் பவள வாயினான்
அம் புதியில் மீனுருவா -கடலில் மத்ஸ்ய அவதாரம்
அம் பவள வாயினான் -அம்பு அ அளவு ஆயினான் -தண்ணீரின் அளவாய் வளர்ந்தவன் –

—————

வாம் பரி செல் வீதி வணிகரும் நூல் ஆய்வோரும்
ஆம் பொருளை எண்ணும் அரங்கமே -சாம்பன் கைக்
காவனவின் முன்பு ஓசித்தான் அன்று அமுது மா விதுரன்
பாவனவின் முன்பு ஓசித்தான் பற்று –22–

வாம் பரி செல் வீதி -தாவுகின்ற குதிரைகள் செல்லுகின்ற வீதிகளில்
வீதிகளில் வணிகரும் ஆம் பொருளை எண்ணும்-தேடும் பொருள்களை ஓன்று இரண்டு என்று என்னும் வீதிகளில்
நூல் ஆய்வோரும் ஆம் பொருளை எண்ணும் -நூலில் பொருந்திய விழுமிய கருத்துக்களை சிந்திக்கின்ற
சாம்பன் -சிவன்
கைக்கு ஆ வன வில் முன்பு ஓசித்தான் –வனம் அழகு -ஒசித்தல் -முறித்தல் -சிவ தனுஸ்ஸை முறித்தவன்
ஆம் பொருளை எண்ணும் அரங்கமே -சாம்பன் கைக்
மா விதுரன் பாவன இல் முன் அன்று அமுது பொசித்தான் -புசித்தவன் –
பற்று –

————–

ஊரிலுறும் பொன்னளியும் ஊடு மட வாரணியும்
ஆர மதில் மின்னும் அரங்கமே -சேரன்
விருத்தங்களுள்ளான் மெல்லடி போற்றாதார்
வருத்தங்களுள்ளான் மனை –23–

பொன்னளியும் -அழகிய வண்டுகளும்
ஆர மதில் மின்னும்-ஆடவரும் மகளிரும் அணிந்த பூ மாலைகளிலே விளங்கும்
மட வார் அணியும் ஆர மதில் மின்னும் -மிகுதியாக மதிள்களிலே பிரகாசிக்கும்
சேரன் விருத்தங்களுள்ளான் -குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த பெருமாள் திருமொழி விருத்தப் பாக்களின் கண் எழுந்து அருளி உள்ளவன்
மெல்லடி போற்றாதார் வருத்தங்கள் உள்ளான் -நினையாதவன்

———-

செம்பொன் நெடும் கோட்டைகளும் கிண் தனுக்கை வேட்டுவரும்
அம்புலியை நாடும் அரங்கமே -உம்பர்
உரக மட மானார் ஒருங்கே யுவப்ப
வரக மட மானார் மனை –24-

கோட்டைகளும் அம்புலியை நாடும் -சந்திரனை அளாவும்
வேட்டுவரும் அம் புலியை நாடும்-தேடித் திரியும்
உரக மட மானார்-நாக கன்னியர்
உம்பரும் மானாரும் ஒருங்கே யுவப்ப
வர கமடம் ஆனார் -மேன்மை வாய்ந்த கூர்மாவதாரம் எடுத்து அருளினார் -கமடம் -ஆமை

————-

தம்புரத்தில் ஆசை யற்றோர் சார்ந்த கொடி கோபுரங்கள்
அம்பர மேனாடும் அரங்கமே -வம்பு மலர்க்
காமனைக் கண் முன்னட்டான் கையேற் பொழித்தான் விண்
காமனைக் கண் முன்னட்டான் காப்பு –25- மூன்று சிலேடைகள்

தம்புரத்தில் -தம் சரீரத்தில்
ஆசை யற்றோர் -தவ முனிவர்
அம்பர மேனாடும்-அம் பரம் மேல் நாடும் -அழகிய பரலோகத்தின் மேல் விருப்பத்தைச் செலுத்தும்
கொடி -அம்பரம் துணி மேல் நாடும்
கோபுரங்கள் அம்பரம் -ஆகாயம் – மேல் நாடும்
வம்பு -வாசனை
காமனைக் கண் முன் அட்டான் -மன்மதனை நெற்றிக்கண்ணால் சுட்டு எரித்த சிவன்
கையேற்பு -கையினால் யாசித்தால்
விண் கா -பாரிஜாத விருக்ஷம்
மனை கண் முன்னட்டான் -ஸ்ரீ சத்யபாமா தேவி திரு க்ரஹத்தின் முன் நட்டு அருளினவன் –

———-

ஏறு இரதப் பொன் நேமி ஏர் விரசைக் காவிரியாம்
ஆறு அச்சு உழி மேவு அரங்கமே -பேறு மிகும்
தேசு அங்கம் மழிசையார் சீரப்பாவார் வேய் தனில் வாய்
வாசம் கமழ் இசையார் வாழ்வு –26-

ஏறு இரதப் பொன் நேமி -உருளை -ஆறு அச்சு உழி மேவு -வழிகளில் அச்சின் கண் மேவு
ஏர் விரசைக் காவிரியாம் ஆறு அச்சு உழி மேவு -அ சுழி மேவு
தேசு அங்கம் மழிசையார் –திருமழிசை ஆழ்வார்
வேய் -மூங்கில்
வாய் வாசம் கமழ் இசையார் -வேணு கானத்தை யுடையவர்

———-

சாலத் திகழ் மணத்துத் தையலர் கையும் பொழிலும்
ஆலத்தி காணும் அரங்கமே –பாலத்
துருவனை முன்னம் களித்தார் தொல் வீடணனைச்
செருவனை முன்னம் களித்தார் சேர்வு –27–

சால-மிகுதியாக
தையலர் கையும் ஆலத்தி-நீராஞ்சனம் – காணும்
பொழிலும் ஆலத்தி -ஆல் அத்தி -ஆல் அத்தி மரவகைகள் – காணும்
பாலத் துருவனை முன்னம் களித்தார்
தொல் வீடணனைச் -செருவனை முன்னம் -போர் புரிவதன் முன்னம் -களித்தார்-அபயம் அளித்து ரஷித்தார் –

—————-

காரண முன்னூலினரும் கா முகரும் என்றும் சீர்
ஆரணம் கைக் கொள்ளும் அரங்கமே -பார் அளந்து
பீன வடிவானார் பிரமற்குக் காட்டினார்
ஏன வடிவானவர் இடம் –28-

முன்னூலினரும் -பழைய ஸாஸ்த்ரங்களை உணர்ந்த பெரியோர்
நூலினரும் என்றும் சீர் ஆரணம் -வேதம் -கைக் கொள்ளும்
கா முகரும் என்றும் சீர் ஆரணங்கைக்-அழகிய மகளிரைக் கொள்ளும்
பீன அடி வான் ஆர் பிரமற்குக் காட்டினார் -பெரிதான தம் திருவடியை ஸத்ய லோகத்தில் பொருந்திய பிரம தேவனுக்குக் காட்டி அருளியவர்
ஏன வடிவானவர் –ஸ்ரீ வராஹ வடிவானவர்

—————–

வந்தனமே செய்ய வரும் மன்னவரும் வீணைகளும்
அந்தந்தி மேவும் அரங்கமே -சிந்து பதி
மாண்டவன் வானாக வத்தான் வாழக் கதிர் மறைத்தான்
தாண்டவன் வானாக வைத்தான் சார்பு –29–

மன்னவரும் அம் தந்தி-யானை – மேவும்
வீணைகளும் அந்தந்தி-நரம்பு – மேவும்
சிந்து பதி –ஜயத்திரதன்
மாண்டு அவன் வானாக–இறக்க –
அத்தான்-அத்தையின் புத்திரனான அர்ஜுனன்
வாழக் கதிர் மறைத்தான் –சக்கரத்தால் ஸூர்யனை மறைத்து அருளியவன்
தாண்டவன் –சிவன்
வான் ஆகவம் -பெரிய யுத்தம்-பாணாசூர யுத்தம்
ஆக வத்தான் –யுத்தத்தை யுடையவன்

—————

பொங்கேரி யிக்கு வனம் பூந்தண்டலை வீதி
அங்கே கயம் சேர் அரங்கமே -செங்கீதை
ஓர் விசயன் பாற் பணித்தார் உற்றானும் தாம் என்றே
ஓர் விசை அன்பால் பணித்தார் ஊர் –30- நான்கு சிலேடைகள்

பொங்கு ஏரி அங்கே கயம்-ஆழம் – சேர்
யிக்கு வனம் -அங்கே கயம் -யானை – சேர்
பூந்தண்டலை-பூஞ்சோலையில் – அம் கேகயம்-மயில் – சேர்
வீதி அங்கு ஏகு அயம்-குதிரை – சேர்
செங்கீதை -சிறந்த ஸ்ரீ பகவத் கீதை
ஓர் விசயன் -ஒப்பற்ற விஜயனுக்கு
பணித் தார் உற்றான் -நாக ஆபரணங்களை யுடைய ருத்ரன்
அன்பால் -ருத்ராணாம் சங்கர ச அஸ்மி -என்று கீதையில் உபதேசம் பண்ணி அருளினவன்
ஓர் விசை –ஒரு தடவை

———–

பம்பு வரி நெல் பருந்தரளம் காவேரி
அம்பணை வாய் மேவும் அரங்கமே -நம்பியே
பண்டு அழைத்த வாரணத்தார் பாணி தனில் வாரணத்தார்
பண்டு அழைத்த வாரணத்தார் பற்று –31–மூன்று சிலேடைகள் –

நெல் அம்பணை -வயல் -வாய் மேவும்
தரளம் -முத்து -அம்பணை-மூங்கில் – வாய்-கணை – மேவும்
காவேரி அம்பு-நீர் – அணை வாய் -அணைக்கட்டுகளிலே -மேவும்
அம்பணை வாய் மேவும்
பண்டு அழைத்த வாரணம் -ஸ்ரீ கஜேந்திராழ்வான்
பாணி -திருக்கரம்
வாரணம் -மூங்கில் -புல்லாங்குழல்
பண் தழைத்த ஆரணம் -சாம வேதம்

———

வார் அணிந்த கொங்கை மடவார் விழி சாயல்
ஆரு மயின் மானும் அரங்கமே -நேரில்
அரு கமல யுந்தியினான் அன்று அயனை ஈன்ற
ஒரு கமல யுந்தியினான் ஊர் –32-

மடவார் விழி–ஆரும் அயில் -வேல் -மானும்
மடவார் சாயல் -ஆரும் மயில் மானும்
நேரில் -நிகரற்ற
அருகு அமல யுந்தியினான்-சமீபத்தில் -இரு பாலும்-பரிசுத்த நதியை யுடையவன் -உந்தி- நதி
ஒரு கமல யுந்தியினான்-ஒப்பற்ற நாபி கமலத்தை யுடையவன் –

—————

தும்பை புனை யரசர் தூணிகள் மின்னார் அளகம்
அம்பதிக நேரும் அரங்கமே -வம்பு மலர்த்
தாது திரு மாலையார் தாசரடித் தூள் ஆழ்வார்
ஒது திருமாலையார் ஊர் –33–

தும்பை -போருக்குச் செல்லுவோர் அணியும் மாலை
தூணிகள்—அம்பு புட்டில் –அம்பு அதிகம் நேரும்-பொருந்தும்
மின்னார் அளகம்–பெண்கள் கூந்தல்
அம்பதிக நேரும்
புனை யரசர் தூணிகள் மின்னார் அளகம்
அம் -அழகிய -பதிகம் -சைவலம் -நீர்ப்பாசி — நேரும் -ஒக்கும்
வம்பு -வாசனை
தாது உதிரும் மாலையார்-மகரந்தம் சிந்துகின்ற துளப மாலையை யுடையவர்
தாசரடித் தூள் ஆழ்வார் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
ஒது திருமாலையார்–திருமாலை பிரபந்தம் அருளிச் செய்தவர்

————-

தூய மறையாளர் சொல்லின்ப நாவலர் சீ
ராய மகம் செய் அரங்கமே -பேயினது
கொங்கை அங்கம் சுவைத்தார் கொற்றம் பெறு படைகள்
செங்கை அங்கு அஞ்சு வைத்தார் சேர்வு –34–

மறையாளர் சீராய மகம் -யாகம் -செய்
நாவலர் சீரா யமகம்–ஒரு விதச் சொல்லணி – செய்
கொங்கை அங்கம்–ஸ்தானமாகிய உறுப்பை – சுவைத்தார்
கொற்றம் -வெற்றி
செங்கை அங்கு –படைகள் அஞ்சு வைத்தார்

————-

மங்கல நற் பாலிகைகள் மாந்தர் இரும் புரவி
அங்குரங்கள் மேவும் அரங்கமே –செங்கமல
மாது வசம் அன்புள்ளார் வானவரும் கண்டு தொழு
மாது வசம் அன்புள்ளார் வாழ்வு –35–மூன்று சிலேடைகள்

பாலிகைகள்–முளைப் பாலிகைகள் – அங்குரங்கள்-முளைகளை – மேவும்
மாந்தர் -அங்கு உரம் -வலிமை -கண் மேவும்
புரவி -அம் குரங்கள் -குரம் -குளம்பு -மேவும்
செங்கமல மாது வசம் அன்புள்ளார்
மா துவசம்–அழகிய கொடியாக – மன் புள்ளார் -பக்ஷி ராஜனாகிய கருடனை யுடையவர்

————-

சீரார் பொன் கொள்வோரும் தேர் புலவரும் கலையே
ஆராய்ந்து உரை செய் அரங்கமே –வாரார்
முரசு அங்கன் தூதினான் மோது ஆகவத்தால்
வர சங்கு அன்று ஊதினான் வாழ்வு –36–

பொன் கொள்வோரும் கலையே -கல்லையே -உரை கல்லையே -ஆராய்ந்து உரை செய்-உரைத்துப் பார்க்கின்ற
தேர் புலவரும் கலையே -ஸாஸ்திரங்களையே -ஆராய்ந்து உரை செய் -ஸம்பாஷிக்கின்ற
முரசு அங்கன் தூதினான்–முரசு அடையாளக் கொடியை யுடைய தருமனுக்காக கௌரவர் இடம் தூது சென்றவன்
மோது ஆகவத்தால் -ஆகவும் போர் -வர சங்கு-மேன்மையான பாஞ்ச ஜன்யம் அன்று ஊதினான்

—————

சாலை தனில் தீம் பலவைச் சாடு குரங்கும் கரும்பும்
ஆலை மருவும் அரங்கமே –வாலி தனைத்
துஞ்சக் கரந்து அரித்தான் தொண்டரையே காப்பதற்காச்
செஞ்சக்கரம் தரித்தான் சேர்வு –37–

தீம் பலவை–தித்திப்பான பலா மரத்தை
குரங்கும் -ஆலை -மரத்தை -மருவும்
கரும்பும் ஆலை இயந்திரத்தை – மருவும்
வாலி தனைத் துஞ்சக்–சாகக் – கரந்து -மறைந்து -அரித்தான்-அழித்தவன்
தொண்டரையே காப்பதற்காச் செஞ்சக்கரம்-செம் சக்கரம் – தரித்தான் -தாங்கியவன் –

————-

ஊக முற்ற வேதியரும் உள் ததி சேர் தாழியும் மோர்
ஆகமத்தைக் கொள்ளும் அரங்கமே –மா கரிக்கு
மோக்கந் தரத்தான் முனம் வந்து இடங்கர் உயிர்
போக்கந் தரத்தான் புரம் –38–

ஊகம் -யூகம்-ஞானம்
வேதியரும் ஓர் ஆகமத்தைக் கொள்ளும்
உள் ததி-தயிர் – சேர் தாழியும் மோரக மத்தைக் கொள்ளும்
மா கரி-கஜேந்திரன் -மா கரிக்கு மோக்கந் தரத்-மோக்ஷம் தர -தான் முனம்-முன்னே – வந்து
இடங்கர்–முதலை – உயிர் போக்கு அந்தரத்தான் –ஆகாய மார்க்கத்தை யுடையவன்

————-

கொம்பார் தருக்களிலும் கூடு திரை வாவியிலும்
அம் பார்ப்பு மேவும் அரங்கமே -நம் பாணர்
பாட்டினை முன் கேட்டார் பகை யரசர் பாலைவர்
நாட்டினை முன் கேட்டார் நகர் –39–

கொம்பார்-கிளை ஆர்ந்த – தருக்களிலும்
அம் பார்ப்பு -அழகிய பறவைக் குஞ்சு -மேவும்
திரை -அலை -கூடு வாவியிலும் -தடாகத்திலும்
அம்பு ஆர்ப்பு -ஜலத்தின் ஆரவாரம் -மேவும்
பாணர் -திருப்பாண் ஆழ்வார்
பாட்டினை முன் -முற் காலத்திலே -கேட்டார் -திருச்செவியின் மாந்தினவர்
பகை யரசர் -கௌரவர் -பால் ஐவர் -பாண்டவர் -நாட்டினை முன் -முன் நின்று கேட்டார் -இரந்தவர்

———–

அங்கனையார் மார்பு கயம் அந்தணர் கை நூல் உணர்வோர்
அங்குசத்தைக் கொள்ளும் அரங்கமே -வெங்கபடர்
பாலார் கலி யுடையார் பைம்பொன் கலி யுடையார்
பாலார் கலி யுடையார் பற்று –40–நான்கு சிலேடைகள் —

அங்கனையார் –பெண்கள்
மார்பு- அங்குசத்தைக் -குசம் -ஸ்தானம் -கொள்ளும்
கயம்-யானை அங்குசத்தைக்-அடக்கும் கருவியைக் – கொள்ளும்
அந்தணர் –அங்குசத்தைக் -தர்ப்பையைக் -கொள்ளும்
நூல் உணர்வோர் –அங்குசத்தைக்–அங்கு சத்தைக் சாரத்தைக் – கொள்ளும்
வெங்கபடர் பால் –வஞ்சகர் பால்
ஆர் -நிறைந்த -கலி-பாவத்தை – யுடையார் -தகரார்
பைம்பொன் கலி–வஸ்திரம் பீதாம்பரம் – யுடையார் -தரித்தவர்
பாலார் கலி யுடையார்-பால் ஆர் கலி -கடல் -உடையார்

———–

பூ மேவு கான் மதகு பூங்குழலார் ஆகம் உளம்
ஆ மோதஞ் சாரும் அரங்கமே –சீ மூத
வண்ணத்தான் ஆகத்தான் மாயத்தா னேயத்தான்
வண்ணத்தான் ஆகத்தான் வாழ்வு –41–மூன்று சிலேடைகள் –

பூ மேவு கான்-கால் -ஆற்றுக்கால் – மதகு -ஆ மோதஞ்-ஆம் ஓதம் -நீரின் ஒலி – சாரும்
பூங்குழலார் ஆகம் ஆமோதஞ்–பரிமளம் – சாரும்
உளம் ஆ மோதஞ்–ஸந்தோஷம் – சாரும்
சீ மூத வண்ணத்தான் –மேக வண்ணத்தான்
நாகத்தான் -பரம பதத்தை யுடையவன்
வண்ணத்தான்–வண் அழகிய நத்தான்-சங்கை ஏந்தியவன்
நாகத்தான் –ஆதி சேஷனை யுடையவன்

———–

கும்பு பொறி வண்டு மணிக் குண்டலங்கள் மாதரார்
அம்புயத்து மின்னும் அரங்கமே -கொம்பனையார்
அற் பரதத்துக் கினியான் ஆசை கொளா தாட் கொள்வான்
நற் பரதத்துக் கினியான் நாடு –42–

கும்பு -கும்பல்
பொறி வண்டு மாதர் -அழகு -ஆர் அம்புயத்து-தாமரையினிடத்து – மின்னும்
மணிக் குண்டலங்கள்-மாதரார் -பெண்களின் -அம் புயத்து–தோள்களிலே மின்னும்
கொம்பனையார் -மகளிர்
அற்ப ரதத்துக்கு -சிற்றின்பத்துக்கு -இனி யான் ஆசை கொளாது ஆட் கொள்வான்
நற் பரதத்துக்கு -பரத நாட்டியதுக்கு – இனியான் -இனிமை யுடையவன்

————

மங்காத வெப்பொருளும் மா மணம் செய்வோர் அகமும்
அங்கா வணம் சேர் அரங்கமே -இங்கார்ந்தோர்
வாச மருந் தூணினார் வந்து தொழ வார்த்து வந்த
தேச மருந் தூணினார் சேர்வு –43–

எப்பொருளும் அங்கு ஆவணம்-கடை வீதி சேர்
மா மணம் செய்வோர் அகமும் -அம் காவணம் -பந்தர் -சேர்
வாச மருந்து ஊணினார்-மணம் பொருந்திய அம்ருதத்தை உண்ட தேவர்
ஆர்த்து வந்தது -ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரத்தில்
தேச மருந் தூணினார்-தேசு அமரும் ஒளி பொருந்திய மணித்தூணை யுடையவர்

—————

தாண்டு வராற் பண்ணைகளும் சன்ம வுயிர் யாவும் சீர்
ஆண்டு முத்திக் கேயும் அரங்கமே -பாண்டவர் பால்
கட்டுப்பட்டா விளைத்தான் கா வெனத் துரோபதைக்குப்
பட்டுப் பட்டா விளைத்தான் பற்று –44–

பண்ணைகளும் –வயல்களும்
ஆண்டு சீர் முத்து இக்கு ஏயும் -அவ்விடத்து அழகிய முத்துக்களை சொரியும் கரும்புகளைப் பொருந்தும்
சன்ம வுயிர் யாவும்-இகத்தில் – சீர் ஆண்டு -சிறப்புக்களை அனுபவித்துப் பின் முத்திக்கு -மோக்ஷத்துக்கு -ஏயும் -பக்குவத்தை அடையும்
பாண்டவன் -சகாதேவன் -கட்டுப்பட்டு ஆ -உயிர் – இளைத்தான்–மெலிவுற்றான்
கா வென –காப்பாற்றுவாய் என்று அரற்ற
பட்டுப் பட்டா விளைத்தான் -பட்டுப் புடவையை ஒன்றன் பின் ஒன்றாக விளைந்து கொண்டே இருக்கும் படி அருள் செய்தான்

————–

சேறுமதற் கம்பு மலர் தேங்குழலார் கஞ்ச மிறை
ஆரு மஞ்சஞ்சாரும் அரங்கமே -வீர விற் பூ
அம்புருவ நோக்கினான் அன்று ஏழ் மரம் துளைத்தவ்
வம்புருவ நோக்கினான் வாழ்வு –45–மூன்று சிலேடைகள்

மதற்கு -மன்மதனுக்கு
அம்பு மலர் -புஷ்ப பாணம்
இறை ஆரும் அஞ்ச அஞ்ச ஆரும் -கடவுளர் எவரும் அஞ்சத்தக்க அஞ்சு பாணம் பொருந்தும்
தேங்குழலார் -மகளிர் -இறை-கணவன் – ஆரும் மஞ்சம் -சப்ரமஞ்சம் -சாரும்
கொஞ்சம் -தாமரை -இறை -சிறகு -ஆரும் அஞ்சம் -அன்னம் -சாரும்
வீர விற் –வீரம் பொருந்திய வில்லும்
பூ -தாமரைப் பூவையும்
முறையே உவமையாகக் கொண்ட
அம்புருவம் நோக்கினான் -அழகிய புருவங்களை கண்களையும் யுடையவன்
அன்று -ஸ்ரீ ராமாவதார காலத்தில்
ஏழ் மரம் துளைத்து அவ் வம்பு உருவ -ஊடுருவச் செல்ல -நோக்கினான் –

———–

கங்குலிலே காமுகர்கள் காவலர்பால் நா வலர்கள்
அங்கணிகை மேவும் அரங்கமே -பொங்கமரில்
நாணுதலின் மான்மதத்தார் நால் வாயின் கோடி டந்தார்
வாணுதலின் மான்மதத்தார் வாழ்வு –46–

காமுகர்கள் அங்கணிகை-வேசிகை – மேவும்
நா வலர்கள் அங்கு காவலர்பால்-அணிகை -ஆபரணங்களை -மேவும் அடையும்
நாணுதல் இல் மால் மதத்து ஆர் நால் வாயின்-குவலயா பீடம் என்னும் யானையின் – கோடு இடந்தார் -தந்தத்தை முறித்து அருளியவர்
வாணுதலின்-நெற்றியில் மான்மதத்தார்-கஸ்தூரி திலகத்தை யுடையவர் -மான்மதம் -கஸ்தூரி

————-

தேசு மணி மாடம் சீர் மாரன் பாணி மலர்
ஆசுகம் கண் நீங்கா அரங்கமே -காசிபனில்
வாய்ந்த வட பத்திரத்தான் மாவா மனனானான்
ஏய்ந்த வட பத்திரத்தான் இல் –47-

மலர் ஆசுகம்–பூங்காற்று – கண் நீங்கா
மாரன்-மன்மதன் – பாணி-கை -மலர் ஆசுகங்கள் -புஷ்ப்ப பானங்கள் நீங்கா
காசிபன் இல்-மனைவியாக வாய்ந்தவள் -அதிதி – தபம் திரத்தால் -வலிமையால் மா வாமனன் -வாமநவதாரம் ஆனான்
ஏய்ந்த வட பத்திரத்தான் –ஆலிலைப் பள்ளி யுடையவன் –

————

மாறன் அடியாராம் வைணவர் நாமம் பொன்னி
ஆறு இரண்டாக் காணுமே அரங்கமே -தேறி யணை
ஆய் மா தரங்கத்தார் ஆனந்த மாத் துயில
வாய் மா தரங்கத்தார் வாழ்வு –48-

மாறன்–மால் தன் அடியாராம் வைணவர் இடும் – நாமம்-திருமண் காப்பு –
ஆறு இரண்டாக்-பன்னிரண்டாக –
பொன்னி–காவேரி – ஆறு இரண்டாக்–கொள்ளிடம் காவேரி என்று இரண்டு கிளையாக -காணுமே
யணை ஆய் மாதர் -கோபிகா ஸ்த்ரீகள் -அங்கத்தார்–சரீரத்தை யுடையவர்
ஆனந்த மாத் துயில வாய் – பொருந்திய -மா தரங்கத்தார் –திருப்பாற் கடலை யுடையவர் –

————-

தற் பரனை எண்ணித் தவம் புரிவோர் நூல் உணர்வோர்
அற் பகலை ஓரா அரங்கமே –பொற் பணிகள்
பூண்டவியப் பண்ணினார் பூ பார மன்னவரை
மாண்டவியப் பண்ணினார் வாழ்வு –49-

தற் பரனை -ஸர்வேஸ்வரனை
எண்ணித்
தவம் புரிவோர் -அற் பகலை-அல் பகலை -இரவு பகல் என்று ஓரா -உணராத
நூல் உணர்வோர் அற்ப -சொற்பமான -கலை-சாஸ்திரங்களை ஓரா -ஆராய்ச்சி செய்யார்
பொற் பணிகள் பூண்ட வியப்பு அண்ணினார் -பொருந்தியவர்
பூ பார மன்னவரை -பூமிக்குப் பாரமாகப் பொருந்திய அரசரை
மாண்டவியப் பண்ணினார் -பாரத யுத்தத்தில் இறந்து ஒழியப் பண்ணினவர்

————

எப்புறத்தும் மா மரத்தும் ஏரியிலும் பாடிடத்தும்
அப்பணிலம் சேரும் அரங்கமே -இப்புவியோர்
உண்ணும் பலத்தார் உடன் பலத்தார் முன் சவரி
உண்ணும் பலத்தார் உவப்பு –50- நான்கு சிலேடைகள்

எப்புறத்தும் -அப்பணிலம் -அப்பு அண் நிலம் -நீர் வளம் பொருந்திய நன்செய்கள் -சேரும்
மா மரத்தும் -அப்பணிலம் சேரும் -அப்பு அணிலம் -பற்றுகின்ற அணில்கள் -சேரும்
ஏரியிலும் அப்பணிலம்-அ பணிலம் -சங்குகள் – சேரும்
பாடிடத்தும் அப்பணிலம்–அ பண்ணில் அம் அழகு சேரும்
உண்ணும் பலத்தார் -உள் நம்பு அலத்தார் -அலம்-கலப்பை -ஏந்தியவர் -பல ராமர்
உடன் பலத்தார் -சகோதர பலமாக யுடையவர்
முன் சவரி உண்ணும்–உண் அம் – பலத்தார் -பழத்தை யுடையவர் –

————-

கொண்டல் நிகர் பூங்குழலார் கொங்கை யிதழ் நற்றொரு பொன்
அண்டு வரை யொப்பாம் அரங்கமே -பண்டு
படுகள முன் சேதித்தார்ப் பார்த்திபன் முத்தாரம்
படுகள முன் சேதித்தார்ப் பற்று –51–மூன்று சிலேடைகள்

கொண்டல் நிகர் –மேகத்தை ஒத்த -பூங்குழலார் கொங்கை -பொன் அண்டு வரை -மேரு மலைக்கு -யொப்பாம்
யிதழ் -பொன் அம் துவரை -அழகு வாய்ந்த பவளத்தை -யொப்பாம்
நல் தெரு பொன் அம் துவரை –ஸ்ரீ லஷ்மீகரம் பொருந்திய ஸ்ரீ மத் த்வாரகா புரியை –யொப்பாம்
படு கள முன் -ரண களத்தில்
சேதித்தார்ப் பார்த்திபன்-சிஸூ பாலன் உடைய
முத்தாரம் படு களம் -முத்து மாலை அணிந்த கழுத்தை – முன் சேதித்தார்–அறுத்து அருளியவர்

————–

சுத்த மணி மேடையில் நூல் சொல்வோர் தின மணியால்
அத்த மன மோரும் அரங்கமே -பத்தன்
தரும வலை யுண்ணே ரார் தண் கரத்தார் என்னைக்
கரும வலை யுண்ணே ரார் காப்பு –52–

சுத்த மணி -குற்றமற்ற ரத்னம்
மேடையில் தின மணியால் -ஸூர்யனால் -கடிகாரத்தால் –
அத்த மனம் -அஸ்தமனம்
ஓரும்
நூல் சொல்வோர்-தினம் அணியால்–அலங்கார ஸாஸ்த்ரத்தால்
அத்தம் -பொருள் நூல் கருத்துக்களை -மனம் ஓரும்
அரங்கமே –
பத்தன் -குசேலர்
தரும் அவலை யுண் ணேர் -அழகு ஆர் தண் கரத்தா