அமலனாதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே –1–
இப் பதங்களில் அடைவே ஆழ்வார் அனுபவித்த படி-
1-மோக்ஷ பிரதத்வம் -சம்சார நிவர்த்தக காஷ்டை -அமலன்
2-ஜகத் காரணத்வ காஷ்டை-ஆதி
3-ஜகத் சரண்யத்வ காஷ்டை-ஆதி
4-சர்வ உபகாரத்வ காஷ்டை-பிரான்
5-கிருபா விசேஷத்வ காஷ்டை-அடியார்க்கு ஆட்படுத்த
6-ஸ்வாதந்தர்ய காஷ்டை-என்னை ஆட்படுத்த
7-நித்ய நிர்தோஷத்வ காஷ்டை-விமலன்
8-நித்ய ஸூரி நிர்வாஹத்வ -திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டா ஸ்வாமித்வ காஷ்டை-விண்ணவர் கோன்
9-ஸுலப்ய காஷ்டை-வேங்கடவன்
10-ஸுசீல்ய காஷ்டை-நிமலன்
11-வாத்சல்ய காஷ்டை-நின்மலன்
12-கைங்கர்ய சாதன விசேஷத்வ ப்ராப்ய காஷ்டை-நீதி வானவன்
13-சர்வ ஸ்வாமித்வ ஆஸ்ரித பக்ஷபாத காஷ்டை-அரங்கத்து அம்மான்
14-திருவடிகள் பாவானத்வ காஷ்டை-திருப் பாதம்
15-திருவடிகள் போக்யத்வ காஷ்டை- கமல பாதம்
16-அயத்ன -அநாயாசேந போக்யத்வ காஷ்டை-வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றவே
—————-
ஆசார்ய அபிமானமே உத்தாரகம் .
ஸ்ரீயப்பதியாகிய எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனிடத்தில் நாம் கொள்ளும் அடிமைத்திறம்
முதல் பருவத்தின் நிலை, பிரதமபர்வ நிலை என்றும், ஆசாரியர் திறத்தில் கொண்ட
கடைப்பருவத்தின் நிலை சரமபர்வை நிஷ்டை என்று கூறப்படும்.
இரத்தினத்தின் சிறப்பை உணர உணர, அதனைக் கொடுத்த வள்ளலிடம் மதிப்பு உயர்வது போல,
எம்பெருமானுடைய பெருமையை உணர, உணர,
அவனுக்கு நம்மை ஆளாக்கின ஆசாரியன் திறந்து மதிப்பு ஏறி, அவனுக்கு ஆட்படுதல் இயல்பு.
நிர்ஹேதுமுகமாக, எம்பெருமான், மாதவனால் மயர்வற மதினலம் அருளப்பட்ட ஆழ்வார்கள் அருளிச்செய்த
திவ்யப்பிரபந்தங்கள் எம்பெருமானுடைய புகழைக் கொண்டவைகளாக இருப்பினும்
அவற்றின் சாரமான திரண்ட பொருள் “சரமபர்வ நிஷ்டை என்பதேயாகும்.
அதாவது ஆச்சாரியர் திறத்தில் கொண்ட அடிமைத்திறமேயாகும் .
“ மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சினுள் நிறுத்தினான்”- —
தேவுமற்றறியன் என்று மதுர கவிகள் அருளிச் செய்ததும்,
நின் திருவெட்டெழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை (பெரிய திருமொழி 8.10.3) என்று
திருமங்கையாழ்வார் அருளிச்செய்ததும் இவ்விடம் நோக்கத்தக்கது.
ஆசார்ய அபிமான நிஷ்டன் பகவானை அறவே விட்டவனாக மாட்டான்.
ஆசார்யானது வழிபாட்டிலேயே, எம்பெருமானும் வழிபட்டவன் ஆகின்றான்.
இதை அறுதியிட்டே எம்பெருமானாகிய இராமானுஜரை வழிபட்டனர் முன்னோர்கள் .
இராமானுஜ நூற்றாந்தாதியின் “இருப்பிடம் வைகுந்தம் “ எனும் 106 வைத்து பாசுரம்
இதை மிக அழகாக உணர்த்துகிறது .
இத்தகைய அரிய இராமானுஜ நூற்றந்தாதி,
‘ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்’ என்ற கருத்தினை அழகாக உணர்த்துகிறது.
ஆக, எம்பெருமானாரை பற்றுவதே பிரபத்தி.
“ ராமானுஜ “ எனும் சதுரா க்ஷரியே திருமந்திரம்.
அவரது திருவடிகளிலே பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம், என்று
நடாதூரம்மாள் அருளிச் செய்தது, இவ்விடம் நோக்கத் தக்கது.
எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருப்பதே நமக்கு கிட்டிய பெரும் பேறு.
மெய்யான தவம் சரணாகதி. அத்தையுடையவர் எம்பெருமானார்.
தம்மைச் சார்ந்தவர்கள் அனைவருடைய பாபங்களை பொறுத்தருளுமாறு பெருமாளிடம் சரணாகதி செய்து வரம் பெற்றுள்ளமையால்,
அத்தகைய வல்லமை அவருக்கு வந்தது. அவர் செய்த பிரபத்தியினாலேயே நாம் அனைவரும் அவர் சம்பத்தை முன்னிட்டு
பிரபன்னர்களாகி வினையினின்றும் விடுபடுகின்றோம் .
பிரபன்ன ஜனங்களாகிய நம் அனைவருக்கும் அவரே கூடஸ்தர் என்று நம்மால் அவர் போற்றப்படுகிறார்.
நம் கூடஸ்தர் நமக்கு வைத்திருக்கும் சொத்து சரணாகதி . அதுவே நமக்கு உஜ்ஜீவனம்.
எவனொருவன் புத்தி கெட்டவனாய் , காமத்தினால் பீடிக்கப்பட்டவனாய் இருப்பினும்,
“ ராமனுஜாய நமஹ என்னும் சொல்லை மட்டும் அடிக்கடி சொல்லி புகுந்தால்,
பகவானைக் சார்ந்தவர்களான யோகியர், எந்த மோஷத்தைப் பெறுவதற்காக ஒதுகின்றனரோ ,
அந்த மோக்ஷத்தை அடைகிறான்.–
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -1 –
பூமன்னு மாது ;; பெரிய பிராட்டி.
பொருந்திய மார்பன் ;; பெரிய பெருமாள்
புகழ் மலிந்த பா ;; திருவாய்மொழி
பாமன்னு மாறன் ; வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன், நம்மாழ்வார்.
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் .’ பகவத் ராமானுஜர்.
மேற்படி ஐந்தும் பஞ்சாம்ருதம் போன்று திருவரங்கத்து அமுதனாரால்
இராமானுஜ நூற்றந்தாதியில் முதல் பாசுரமாக விளக்கப்பட்டுள்ளது .
எம்பெருமானுக்கே உரியவன் நான் என்பது தத்வ ஞானம். எனக்கெற்புடைய வழி,
சித்தோபாயமான எம்பெருமானே என்னும் உணர்வு , ஹித ஞானம்.
அத்தகைய வழியால் பெறப்படும் பேறு, அனுபவித்தற்குரிய கல்யான குணங்களையுடைய எம்பெருமானே என்று அறிந்து
உணர்வு அடையும் ஞானம் ‘புருஷார்த்தம் ஆகும்.
இவ்வாறு தத்வ, ஹித, புருஷார்த்த ஞானம் முதிர்ந்த நிலையில், இம்மூன்றும் ஆழ்வாரே என்று உணர்ந்தவர் எம்பெருமானார்.
அவர் திருவடிகளே அடையவேண்டியதே நமக்கு ப்ராப்யம் ஆகும்.
கள்ளார் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத வன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஓன்று அறியேன் எனக்குற்ற பேர் இயல்வே – 2-
பெரிய பெருமாளாம், ஸ்ரீ ரங்கநாதனுடைய பாதாரவிந்தங்களிலே சரணாகதி பண்ணுவதற்கு இட்டுப்பிறந்த மனுஷ்ய பிறவியைப் பற்றியும்,
அவன் திருவடிகளில் நெஞ்சு கொள்ளாத மனிதரை விட்டு நீங்கி, குறையலூர் பிரானாகிய திருமங்கையாழ்வாரிடம், அடிபணிந்த இராமானுஜரின்
சீல குணத்தையே தம் நெஞ்சு ஆட்கொண்டதைக் கூறுகிறார்.
அத்தகைய செயலுக்கு தம் நெஞ்சுக்கு அடிபணிந்ததாக சொல்கிறார் இரண்டாம் பாசுரத்தில்.
பேரியல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னைப் பேய்ப் பிறவிப்
பூரியரோடு உள்ள சுற்றம் புலத்திப் பொருவரும் சீர்
ஆரியன் செம்மை இராமானுசன் முனிக்கு அன்பு செய்யும்
சீரிய பேறு உடையார் அடிக் கீழ் என்னைச் சேர்ததற்கே -3-
என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்னைப் பழ வினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதை வில்லையே -4 –
எம்பெருமானைப் பற்றுதல் ஞானத்தின் முதிர்ந்த நிலை.
அவ்வளவல்லாது எம்பெருமானார் அடியார்களவும் பற்றுதல் ஞானத்தின் முதிர்ச்சிக்கு எல்லை நிலமாகும்.
அப்படியான உயர்ந்த நிலையில் தம்மை வைத்துள்ளார் எம்பெருமானார் என்று அமுதனார் வியக்கிறார் நான்காம் பாசுரத்தில்.
எனக்கு உற்ற செல்வம் இராமானுசன் என்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர்
தனக்குற்ற அன்பர் அவன் திரு நாமங்கள் சாற்றும் என் பா
இனக்குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல்விது என்றே -5 –
அறிவிலா மாந்தர் உலகில் காணும் செல்வத்தை யன்றி மற்றொன்றைச் செல்வமாக கொள்ளார்.
ஒருக்கால் மனக் குற்றம் சிறிது மாறி சாஸ்திரத்தின் பொருளாகிய ஸர்வேஸ்வரனைச் செல்வமாக ஏற்றுக் கொண்டாலும்,
சாஸ்திரத்தின் உட்பொருளாகிய ‘ஆசார்யனை செல்வமாக இசையவே மாட்டார்கள்.
காரணம் அவர்கள் பகவத் ப்ரசாதத்தால் மனக் குற்றம் நீங்கப்பெறாமையே.
புலமை மற்றும் போதாது. பகவானுடைய அனுக்ரஹமும் வேண்டும், சாஸ்திரத்தின் உட்பொருள் அறிவதற்கு.
அதை உணர்ந்த அமுதனார் , எனக்குற்ற செல்வம் ராமானுஜர் என்கிறார்.
இயலும் பொருளும் இசையத் தொடுத்து ஈன் கவிகள் அன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசனை மதியின்மையால்
பயிலும் கவிகளில் பக்தி இல்லாத வென்பாவி நெஞ்சால்
முயல்கின்றனன் அவன் தன் பெரும்கீர்த்து மொழிந்திடவே – 6 –
மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத் ஆழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி எல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே -7-
வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செம்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே
யிருத்தும் பரமன் இராமானுசன் எம் இறையவனே -8 –
முழுமை வாய்ந்த ஆசார்யர் எம்பெருமானாரே. ஆதலின் அவரே வேதத்தின் உட்பொருள்.
அவரைப்பற்றி இருத்தலே வேத மார்கம்.
மற்றவர்களையும் அங்ஙனம் பற்றி நிற்கச் செய்வதே, வேதமார்க்கத்தை பிரதிஷ்டாபனம் செய்தல்.
ஆகவே, “ஸ்ரீமத் பிரதிஷ்டாபனச்சார்யார் : என்னும் விருது எம்பெருமானாரையே சாரும்.
அத்தகைய பெருங்குணம் வாய்ந்த இராமானுஜர், தம்மை இப்புவியில் ஒரு பொருளாக ஆக்கியதையும்,
அவரையே தனக்குற்ற செல்வமாகக் கொண்டதையும் தெரிவிக்கிறார்.
இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும்
நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமானுசன் புகழோதும் நல்லோர்
மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே – 9-
பரபக்தியாவது பிரிவில் வருந்தும்படியான நிலையையும் கூடும் போது மகிழும்படியான நிலையையும் விளைவிப்பதான தனிப்பட்ட அன்பு.
பரஞானமானது அத்தகைய அன்பு முதிர்ந்த நிலையில் ஏற்படும் சாஷாத்காரம், நேரடியான தோற்றம்.
பரம பக்தியாவது ஷண காலமும் பிரிவை சஹிக்கமாட்டாது, அனுபவித்தே ஆகவேண்டிய முதிர்ந்த பேரன்பு.
இதுவே ஞானமேன்னும் நிறை விளக்கு என்கிறார் 9ம் பாசுரத்தில்.
மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள்
தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திரு உடையார் என்றும் சீரியரே – 10-
திருக்கோவலூரில் பெரிய பிராட்டியுடன் கூட ஆயனார் எனும் எம்பெருமானைக் காட்டிக்கொடுத்த மூன்றாம் ஆழ்வார் பேயாழ்வார்.
அன்னவரது திருவடிகளை புகழும் இயல்பினரான எம்பெருமானாரிடத்தில் பக்தியுடையவர்களுடைய திருவடிகளைத்
தலைக்கு அணியாகக் கொள்ளும்படியான செல்வத்தை உடையவர்கள் யாரோ,
அவர்கள்தான் என்றைக்கும் நித்ய ஸ்ரீமான்கள் என்கிறார் அமுதனார், தனது பத்தாம் பாட்டில்..
சீரிய நான் மறைச் செம் பொருள் செம் தமிழால் அளித்த
பாரியிலும் புகழ்ப் பாண் பெருமாள் சரணாம் பதுமத்
தாரியல் சென்னி யிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் தம்
காரிய வண்மை என்னால் சொல்ல ஒண்ணாது இக்கடலிடத்தே – 11-
சிறப்பு வாய்ந்த நான்கு வகைப்பட்ட வேதங்கள் பரம்பொருளாகிய ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதி(ஐஸ்வர்யம்)
இவைகளை உள்ளபடியே விளங்க வைக்கின்றன. இதுவே வேதத்திற்கு உண்டான சீர்மை.
இதுவே சீரிய நான்மறை என்கிறார் அமுதனார்.
ஸ்வரூபம் என்பது பகவானுடைய திவ்யாத்ம தத்துவம்.
ரூபமாவது உடம்பானது.
குணமானது ஆத்ம தத்வத்தைப் பற்றி நிற்கும் ஞானம், சக்தி, கிருபை முதலிய பண்புகளும் ,
சுடருடம்பைப் பற்றி நிற்கும் அழகு, மென்மை , இளமை முதலியவைகளாகும்.
விபூதியாவது, நித்யவிபூதி என்றழைக்கப்படும் பரமபதமும், லீலாவிபூதி என்றழைக்கப்படும் இவ்வுலங்களும் இறைவனது சொத்தாகும்.
வேதத்தின் இவ்வரிய பொருளை திருப்பாணாழ்வார் “அமலனாதிபிரான் “ என்றும் பாசுரத்தில்,
அமலன், விமலன், நின்மலன்,நீதிவானவன் என்று பல சொற்களால் அருளிச் செய்ததைப் போற்றுகிறார் 11ம் பாசுரத்தில்..
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப் போது
அடங்கும் இதயத்து இராமானுசன் அம் பொன் பாதம் என்னும்
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல் செய்யாத்
திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே —12-
ஆழ்வார் ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்ற கீர்த்தியை யுடைய திருமழிசை ஆழ்வாரின் திருக் கமலப் பதங்களையே
பற்றியிருக்கும் எம்பெருமானரின் தாள் பற்றி இருப்பவரின் திருப்பதங்களையே பற்றி இருப்பவர்களை ‘திரு முனிவர்’ என்கிறார்.
அத்தகைய ஞானம் கொண்டவற்கே தாம் அன்பு செய்வதாக அமுதனார் கூறுகிறார்.
அதாவது, எம்பெருமானாரின் அடியவர்க்கு அடியவர்களுக்கே அவர் அன்பு செய்ய விரும்புகிறார். (12)
செய்யும் பசும் துளவத் தொழில் மாலையும் செம் தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும் பேராத சீர் ரங்கத்
தய்யன் கழல்க்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா
மெய்யன் இராமானுசன் சரணே கதி வேறு எனக்கே – 13-
காவேரியே விரஜையாறு. ஸ்ரீ ரங்க விமானமே ஸ்ரீ வைகுண்டம். ஸ்ரீ ரங்கநாதனே பரவாசுதேவன்.
ஆக, கண்ணனெதிரே தோன்றும் பரமபதமாகிய ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீ ரங்கநாதனுக்கு
திருத்துழாய் மாலையும், செந்தமிழ் பாக்களால் ஆன சொல் மாலையும் சமர்ப்பித்து வந்த தொண்டரடிப்பொடியாழ்வார்
திருவடிகளையே ஆச்ரயித்த ராமானுஜர் திருவடிகளே தமக்கு சரண் ஆகும் என்கிறார். (13)
கதிக்குப் பதறி வெம்கானமும் கல்லும் கடலும் எல்லாம்
கொதிக்க தவம் செய்யும் கொள்கை ஆற்றேன் கொல்லி காவகன் சொல்
பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமானுசனைச் சொர்விலனே -14 –
ஒரு மாலையில் இடமறிந்து ரத்னங்களைப் பதிப்பது போல ,
குலசேகராழ்வார் அருளிச்செய்த பெருமாள் திருமொழியில் சொற்கள் தக்கவாறு பதிக்கப்பட்டுள்ளன.
அத்தை மனத்தில் கொண்ட எம்பெருமானார் திருவடிகளை பற்றியவரது பாதங்களை தாம் பற்றுவதால்,
கானகத்திலும், மலையிலும், கடல்களிலும் தவம் செய்ய முற்பட வேண்டிய கட்டாயம் தமக்கு இல்லை என்கிறார் அமுதனார். (14 )
சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை யொன்றும்
பாராதவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்
பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே -15 –
எம்பெருமானின் அழகை மட்டும் கண்டு, அவனது ரஷிக்கும் ஆற்றலை காணாமையால் உண்டான அச்சத்தில்
விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வார் சாதித்தது ‘பல்லாண்டு பல்லாண்டு என்று ‘. இது அஸ்தான பய சங்கை எனப்படும்.
அதாவது, பயமே ஏற்பட வேண்டாத இடத்தில், அன்பு மிகுதியால், என் பெருமானுக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்று பயப்படுதல்.
பரம பதத்தில் சாமவேத கோஷ்டி சப்தத்தைக் கண்டு , ஆதிசேஷன் எம்பெருமானுக்கு ஆபத்து வந்ததோ என அஞ்சி சீறுவதுபோல.
அப்படிப்பட்ட பெரியாழ்வாரின் பதம் பணிந்த ராமானுஜரின் பாதம் பணியாத அற்ப மனிதரை சேர மாட்டேன் என்கிறார். (15)
தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 –
ப்ரத்யக்ஷம், அனுமானம், சப்தம் என்ற பிரமானங்களில் சப்தப் பிரமானத்தில் அடங்கியது மறை எனப்படும் வேதம்.
அத்தகைய தாழ்வொன்றுமில்லாத வேதம் பிற்காலத்தில் தாழ்வு படுத்தப்பட்டது.
பாஹ்யர்களும் , குத்ருஷ்டிகளும் கலி புருஷனுடைய கையாட்கள்.
வேதம் நித்யமன்று என்று கூறி வேதத்தை ஒப்புகிக்கொள்ளாத புற மதத்தவர்கள் . இவர்கள் பாஹ்யர்கள் எனப்படுவர்.
அவ்வாறன்றி, வேதத்தைப் ப்ரமாணமாக ஒப்புக்கொண்டு உட்புகுந்தாலும், அதன் உண்மைப் பொருளை உணராது ,
தமக்குத் தோன்றிய வகையில் விளக்கமளிக்கும் மனிதர் குத்ருஷ்டிகள் எனப்படுவர்.
இவ்விரு திறத்தாரால் மாசு படுத்தப்பட்ட வேதத்தை ‘கலியும் கெடும் கண்டு கொண்மின்’ என்பதற்கிணங்க,
மறையைத் தாழ்வு நிலையினின்று ‘ஸ்ரீ பாஷ்யம் ‘ மூலமாக மிக உயர்ந்த நிலைக்கு அளித்தருளியவர் இராமானுஜர் .
ஆண்டாளின் அன்புக்கு பாத்திரமானவர். அவள் கிருபையால் வாழ்கின்ற வள்ளல் ‘திருப்பாவை ஜீயர் என அழைக்கப்படும் இராமானுஜர் .(16)
முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வெந்து எய்தினரே -17 –
வேதமனைத்தும் தன் ஒருவனையே துதிக்கும் நோக்கமுடையவைகளாய் இருத்தல் பற்றி வந்த செருக்கால்,
ஒப்பற்ற மதம் பிடித்த யானையைப் போல் தோற்றமளிக்கிறான் ,
திருக்கண்ணமங்கை என்கிற திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் பத்தராவிப் பெருமாள்.
அவன் திருமங்கையாழ்வாரின் தமிழ்ப் புலமைக்கு அடியவனாகி, ஆவணி ரோஹிணியில் பெரியவாச்சான் பிள்ளையாக அவதரித்தான் .
திருமங்கையாழ்வாரும் கார்த்திகை கார்த்திகையில் நம்பிள்ளையாக அவதரித்து திராவிட வேதத்தின் பொருளை
ஆச்சார்ய ஸ்தானத்தில் இருந்து அருளிச்செய்ததாக கூறுவர் பூர்வர்.
அத்தகைய குறையல்பிரானடிக்கீழ் அன்புடைய இராமானுஜரிடம் அடிபணிந்தவர்கள் துயரங்கள் முந்தினும் வருந்தார்.
இன்பங்கள் மொய்த்திடினினும் சந்தோஷப்பட மாட்டார்கள். அவைகள் கர்ம பலன்களாக தாமே வந்து போகின்றது என்று அமைதியாக இருப்பர்,(17)
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –
கீதை அருளிச் செய்வதற்காகவே கண்ணன் அவதரித்தது போலே , திருவாய்மொழி அருளிச் செய்வதற்காகவே அவதரித்தவர் நம்மாழ்வார் .
‘நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய், ஆக, யானே பெரியவன் என்று
நம்மாழ்வார் தன்னைப் பெரியன் என்று கூறுகிறார், பெரிய திருவந்தாதி 75ம் பாசுரத்தில்.
அத்தகைய நம்மாழ்வாரையும் தன் உள்ளத்தே ஆசார்யனாய் கொண்ட மதுர கவிகளை ‘பெரியவர்” என்று கூறுகிறார் அமுதனார்.
எம்பெருமானை தம் உள்ளத்திலே வைத்துக்கொண்டு கொள்ளுதல் எல்லா ஆழ்வார்களுக்குமுண்டான முதல் நிலையாகும்.
ஆனால் ஆசார்யனையே முதலும் இறுதியுமாக வைத்துக்கொள்ளல் மதுரகவியாருக்கே உள்ள சீர்மையாக அமைந்தபடியால்
அவரே ‘பெரியவர்’ ஆகிறார். (18)
உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-
எப்படி உன் சரீரம் உன் விருப்பத்திற்கேற்ப பயன்பட்டு , தனக்கொரு பயன் கருதாது உனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறதோ ,
அதுபோல உன் ஆத்மாவை தனக்கு சரீரமாகக் கொண்டுள்ள எம்பெருமானுக்கு,
நீயும் அவன் விருப்பப்படி பயன்பட்டு, உனக்கொரு பயன் கருதாது , அந்த எம்பெருமானுக்கு மகிழ்ச்சியை ஊட்டுதல் வேண்டும்
என்கிற ‘அனன்யார்ஹசேஷத்வ’ ஞானத்தை திருவாய்மொழி உணர்த்துகிறது.
நம்மாழ்வாருக்கு ‘திருமாலிருஞ்சோலை என்கிற 98 வது திருவாய்மொழி முடிய பர பக்தியும்,
99 வது திருவாய்மொழியான ‘சூழ் விசும்பும் பணிமுகில் ‘ பரஞானமும்
100 வது திருவாய்மொழியான ‘முனியே நான்முகனே’ பரம பக்தியும் எம்பெருமான் அருளால் விளங்கியதாக பெரியோர் கூறியுள்ளனர் .
அத்தகைய அரிய திருவாய்மொழி எனும் இந்த திவ்ய அமுதத்தை உலகத்திருக்கு தெரியப்படுத்திய
இராமானுஜரே எமக்கு ஆராவமுது என்கிறார் அமுதனார். (19)
ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசன் என்தன் மா நிதியே – -20
நாதமுனிகளுக்கு ‘கண்ணினுந் சிறுத்தாம்பு ‘காட்டியவர் , மதுரகவிகள் வம்சத்திலுதித்த பராங்குச நம்பி என்பவர்.
அத்தைக் கொண்டு ‘ஆராவமுது ‘ ஆகிய நாலாயிர திவ்ய பிரபந்தகளையும் நமக்கு காட்டியவர் ஸ்ரீமத் நாதமுனிகள்.
அதுகொண்டே அருள் கொண்ட நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகுகியவர் இராமானுஜர்.
அதுபற்றியே அவரை சீலங்கொண்ட நாதமுனிகள் என்கிறார் அமுதனார். (20)
நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே – 21- –
தான் செய்வதாக நினையாமல்,’ பகவான் என்னைக் கொண்டு தன் பணியை தன் உகப்புக்காகச் செய்து கொள்கிறான்’
என்கிற நினைப்போடு, அதாவது, அஹங்காரக் கலப்பில்லாமல் செய்து கொள்வது ‘சாத்வீகத் தியாகம்’ என்று கூறுவர்.
அத்தகைய மேன்மையான குணம் கொண்டு வாழ்ந்து காட்டியவர் யமுனைத் துறைவன் எனும் ஆளவந்தார் –
அவரை இறைவனென்று போற்றுகிறார்.
அவரைப் பற்றி பற்றிய பின்பு, நான் நீசர்கள் வாசல் நின்று
அவர்களை ‘நிதியை பொழியும் முகிலென்று’ கூறமாட்டேன் என்கிறார். (21)
கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –
ஆழ்வார்களையும் ஆச்சார்யர்களையும் போற்றி பணிந்தவர் ராமானுஜர்.
என்றும் அவரை போற்றி பணிந்தவர் தாள்களிலே தாம் அடிபணிவதாக அருளிச்செய்த அமுதனார் 22ம் பாசுரத்தில்.
பாணாசுரனை அழித்த கண்ணனைக் கூறுகிறார்.
அந்த மாய கண்ணனை போற்றும் ரமானுஜனை தனது வைப்பு நிதி என்கிறார்.
“நேர் சரிந்தான், கொடிக் கொழி கொண்டான்” என்றபடி பாணாசுரனை அழித்த கண்ணபிரானின் ‘பரத்வம்’ சொல்லப்படுகிறது.
வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத வுறுவினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழக்கே -23 –
எம்பெருமானார் திருவடிகளில் அந்நயப் ரயோஜனர்களாய் பக்தி பண்ணுபவர்கள்
கூரத்தாழ்வான் , முதலியாண்டான், எம்பார், பிள்ளையுறங்காவில்லிதாசர் , திருக்குருகைப்பிள்ளான் பிரான் போன்றவர்கள்.
அவர்கள், எம்பெருமானாரை ஆபத்து காலத்தில் உதவும் பொருட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ள மாநிதியைப் போல வைத்துள்ளனர் .
நல்லன்பர்கள் அங்ஙனம் மனத்தகத்தே வைத்த இராமானுஜன் என்னும் நிதியை
மகா பாபியான நான் வஞ்சித்து வைத்துக் கொள்வது இராமானுஜனுக்கு இழுக்கு உண்டாகாதோ என அமுதனார் அஞ்சுகிறார் . (23)
மொய்த்த வெம் தீ வினையால் பல்லுடல் தோறும் மூத்து அதனால்
எய்த்து ஒழிந்தேன் முன நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன்
பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்து அவிய
கைத்த மெய் ஞானத்து இராமானுசன் என்னும் கார் தன்னையே – 24- –
தேன் கூட்டிலே ஈக்கள் மொய்த்துக் கொண்டிருப்பதுபோலே, ஒரு ஜீவனின் ஆத்ம தத்வத்தை புண்ய பாபங்கள் எனும்
இரு தீய வினைகள் மொய்த்துக் கொண்டுள்ளன.
அனுபவித்ததாலோ, ப்ராயசித்தத்தினாலோ தொலைந்து ஒழியாதபடியுள்ள இந்த அருவினைகள்,
உடல்தோறும் மூத்து,துன்புற்று களைத்துப் போகின்றன .
நீசச் சமயங்ளை அழித்தொழித்து, மறைகளைக் காக்க அவதரித்த எம்பெருமானாரின் திருவடி சம்பந்தம் தமக்கு கிடைக்கப் பெற்று,
தாம் தீய வினைகளினின்று உயர்ந்தமையைக் கூறுகிறார். (24)
காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ என்னை யுத்த பின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 – –
தாமே வந்து தன்னை ஆட்கொண்டதால், எம்பெருமானாரது சௌலப்பியமும்,
தமது தாழ்மையையும் கருதாது ஆட்கொண்டமையால் அவரது சௌசீல்யமும்,
நிர்ஹேதுகமாய் கொண்டதால் ஸ்வாமித்யமும்,
கருணை இராமானுஜ என்றதால் கருபையும் , வாத்சல்யமும் எம்பெருமானாரிடம் தோன்றுகிறது.
இக்குணங்கள் தம் அல்லலைத் தீர்த்து , தித்திக்க வைக்கின்றன என்கிறார்.
அவைகளே தமக்கு தாரகமும் , போஷகமும், போக்யமும் ஆகின என்கிறார். (25)
திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே –26- –
பிறப்பாலும், அறிவாலும், நடத்தையாலும் தனக்கு கீழ் பட்டவர்களாக பாகவதர்களை நினைப்பதும் அபசாரமாகும்.
அதுபோல, அவர்களுடைய பெருமைகளை நினையாதிருப்பதும் அபசாரமாகும்.
அதாவது அவர்கள் ஆசார்யனுக்கு சமானவர்கள் என்றும்,
தன்னிலும் , ஈஸ்வரனிலும் அதிகர் என்றும் நினையாதிருப்பதும் அபச்சாரமாக தலைக்கட்டும்
என்று ஸ்ரீ வசன பூஷணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
அவ்வாறே, எம்பெருமானாரைப் பற்றுவதற்கு முன் ஒருவரிடமுள்ள குறை, அறிவினாலோ, பிறப்பினாலோ, நடத்தையினாலோ
உண்டாயிருப்பினும் அதுவே அவரது நலமாகக் கொள்ளப்படும். இவை ஒரு தடையாக இருக்க மாட்டாது.(26)
கொள்ளக் குறைவற்று இலங்கிக் கொழுந்து விட்டு ஓங்கிய உன்
வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய்
வெள்ளைச் சுடர் விடுமுன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று
தள்ளுற்று இரங்கும் இராமானுச என் தனி நெஞ்சமே -27-
மாசு படிந்த தமது கீழ்மையை நோக்காது, எம்பெருமானாருடைய மேன்மையான குணத்தினால், மஹா பாபியான,
அருவருக்கத் தக்க குணங்களை யுடைய தன் மனஸ்ஸிலேயும் புகுந்தார்.
இது அவரது உயர்ந்த குணத்துக்கு இழுக்கு உண்டாகாதோ என அஞ்சுகிறார் 27ம் பாட்டில்.
நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே – -28 –
கம்சன் பால் சீற்றம் கொண்ட கண்ணனையும், நப்பின்னை பால் காதல் கொண்ட கண்ணனையும் நண்ணாதவர்கள் வஞ்சகர்களே.
கண்ணனுக்கு பரதந்திரனான நாம் , நம்மை ஸ்வதந்திரனாக நினைப்பது ஆத்ம அபஹாரம்.
அத்தகையவர்களுக்கு கிட்டமுடியாதவர் இராமானுஜர்.
பிரதம பருவம் என்கிற எம்பெருமானின் அடித் திறத்தையும் அறியாத நான் எதிர்பாராது,
சரம பர்வத்தின் எல்லை நிலமான ஆசார்யரைத் துதிக்கப் பெற்றேன்.
அத்தகைய ஆசார்யரின் குணங்களையொழிய என் வாக்கானது மற்றவரை மறந்தும் துதிக்க மாட்டாது.
இது எனக்கு நேர்ந்த ஆச்சர்யமான வாழ்வு என்கிறார். (28)
கூட்டும் விதி என்று கூடும் கொலோ தென் குருகைப் பிரான்
பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ் மெய் உணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை என்னாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே -29 –
திருவாய்மொழியை ஈன்று எடுத்த தாய் சடகோபன். அதனை வளர்த்து , அந்த வளர்ச்சியைக் கண்டு உய்த்தவர் இராமானுஜர்.
கண்ணனைப் பெற்றெடுத்த தேவகியை விட அவனை வளர்த்த யசோதையே இன்பம் அனைத்தும் பெற்றாள்.
அவ்வாறு திருவாய்மொழி என்னும் திராவிட வேதத்தை மறைகளைக் கொண்டு, தெளிவு படுத்திய இராமனுஜரை உள்ளபடி அறிந்திருப்பவர்கள் ,
கூரத்தாழ்வான், எம்பார், முதலியாண்டான் எழுநூறு சந்நியாசிகள், எழுபத்து நான்கு சிம்மாசனதிபதிகள்,
எண்ணற்ற ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆகியோர்.
அவர்களின் திறளான கூட்டங்களை கண்ணால் கண்டு களிக்க வேண்டும் என்கிறார். (29)
இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்ணிறந்த
துன்பம் தரு நிரயம் பழ சூழில் என் தொல் உலகில்
மன் பல் உயிர் கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே – -30 –
அனாதியான இவ்வுலகத்தில் எண்ணற்ற ஆத்மாக்களுக்கு சேஷியாக விளங்குபவன் எம்பெருமானே என்று
அருளிச் செய்த வள்ளல் எம்பெருமானார். அவர் என்னை இன்று அடிமைத்திறமாக கொண்டார்.
இனிமேல் எனக்கு இன்பத்தைத்தரும் பெரு வீடான பரமபதம் கிடைத்தால் என்ன ?
அல்லது துயரத்தைத் தரும் ஸம்ஸாரம் என்னும் நரகம் வாய்த்தால் தான் என்ன என்கிறார். (30)
ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோநிகள் தோற் உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண்டகு தோள் அண்ணல் தென்னத்தியூரர் கழல் இணைக் கீழ்
பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே – 31-
ஆண்டுகள் நாள் திங்களாய், பலவகைப் பிறப்பிலும், இறப்பிலும் இருந்த பிறவிகள் எண்ணிக்கை யில்லை.
இப்படிப்பட்ட நாம், இப்பிறப்பிலே எம்பெருமானாருடைய நிர்ஹேதுக க்ருபையினாலே அவரை அடைய பெற்றோம்.
அழகிய திருத்தோள்களை உடைய ஸ்வாமியாய், அழகிய திரு அத்தியூரில் எழுந்தருளியுள்ள,
பேரருளாளன், தேவாதி ராஜனின் திருவடிகளில் பக்தி செலுத்துபவருமான எம்பெருமானாரை சேர்ந்து
இப்போது நிலைக்கப் பெற்றோம், என்று களிப்புறுகிறார். (31)
பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அரும் தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே – 32-
கலி தோஷத்தினால் துன்புற்ற இந்த ஞாலத்தியுள்ளோரை தன்னுடைய வள்ளல் தனத்தினால் அவதரித்து,
கை தூக்கி விட்டு காப்பற்றியவரும் சரணாகதி என்கிற அரிய தபஸ்ஸை அனுஷ்டிப்பவருமான எம்பெருமானாரையே சேர்பவர்களுக்கு,
தங்கள் தன்மைக் குண்டான மதிப்பும் , பொறுமையும், சாமர்த்தியமும், கீர்த்தியும், நல்ல விலக்ஷணமான அறிவும்,
பக்திச் செல்வமும் தாமாகவே வந்து அடையும். (32)
அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் கை யாழி என்னும்
படையோடு நாந்தகமும் படர் தாண்டும் ஒண் சார்ங்கமும் வில்லும்
படையார் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று
இடையே இராமானுச முனியாயின விந் நிலத்தே -33 –
மனம் – சக்கரம், புத்தி – கதை, ஞானம் – நந்தகம், ஸாத்வீக அஹங்காரம்-வில், தாமஸ அஹங்காரம் – சங்கு.
ஆக இவைகள் எம்பெருமானுக்கு ஆயுதங்களாகவும், ஆபரணங்களாகவும் உள்ளன.
பிராட்டியினுடைய சன்னதியில் இந்த திவ்யாயுதங்கள் அழிப்பவனாகவில்லை. காப்பவைகளாகவே உள்ளன.
இவள் இல்லாதபோது ஆயுதங்கள் இராவணனை அழித்தன.
அவள் உள்ளபோது ப்ரம்மாஸ்திரமும் கூட காகத்தை அழிக்கவில்லை. காகம் காக்கப் பெற்றது.
நித்ய ஸூரிகளான இந்த பஞ்சாயுதங்கள், ராமானுஜர் ஆதிசேஷனுடைய ஸாஷாத் அவதாரம் ஆகையினாலே,
அவரது ஆவேச அவதாரமாக வந்து அவதரித்தன இப்பூவுலகில் என்கிறார் 33ம் பாட்டில்.
நிலத்தை செறுத்து உண்ணும் நீசக் கலியை நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை என் பெய் வினைதென்
புலத்தில் பொறித்த வப்புத்தகச் சும்மை பொறுக்கிய பின்
நலத்தைப் பெறுத்தது இராமானுசன் தன நயப் புகழே -34 –
உலகத்திலுள்ளோரை நிலை குலையச் செய்யும் நீசக் கலியை அழித்தத்தினால் எம்பெருமானார் புகழ் ப்ரகாசிக்க வில்லை.
எப்போது அவர் புகழ் பிரகாசித்தது எனில், தாம் எண்ணற்ற பாவங்களை செய்து, அவை சித்திர குப்தனால் புஸ்தங்களாக எழுதப்பட்டு,
அவைகளை ராமானுஜர் , தம்மீது, காரணமில்லாக் கருணை கொண்டு அழித்தபின்னரே, ஏற்பட்டது என்கிறார். (34)
நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தை
புயலே எனக் கவி போற்றி செய்யேன் பொன்னரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமானுசன் மன்னு மா மலர்த் தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -35 –
தீராத வினைகள் ஏற்பட மூன்று வழியுண்டு.
முதலாவதாக, எம்பெருமான், ஸ்ரீமன் நாராயணனைத் தவிர மற்ற தெய்வங்களைக் கொள்ளுதல்.
‘ஆதிப்பிரான் நிற்க மற்றதெய்வம் நாடுதிறே ‘ என்றபடி.
இரண்டாவது, சேவிக்கத் தகாத மனிதர்களை வேண்டி பொருள் பெற அவர்களை போற்றுதல்.
மூன்றாவது, அழியக்கூடிய சப்தாதி விஷயங்களில் ஈடுபடுதல்.
இவைகள் அருவினை எனப்படும்.
இராமானுஜனை அடைந்த என்னை இந்த அருவினைகள் என்ன செய்யும் என்று கேட்கிறார்.(35)
அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –
அர்ஜுனனை வ்யாஜ்யமாகக் கொண்டு பகவான் கிருஷ்ணன் பெருங்கடலிடையே ரத்தினங்கள் மறைந்து கிடப்பது போல,
வேதமாகிற சமுத்திரத்தில் மறைந்து கிடந்த விலக்ஷணமான வேதார்த்தங்களை ஆராய்ந்து கண்டு அளித்தார், ஸ்ரீமத் பகவத் கீதை மூலமாக.
இப்படி அளித்த பின்னும் உலகத்தவர் தமது அறியாமையினால் இடரின் கண் வீழ்ந்தனர் .
இவர்கள் படும் துன்பத்தை சஹியாதே, எம்பெருமானார் ‘கீதா பாஷ்யம்’ என்ற நூலின் மூலமாக
அரும் பொருளை இலகுவாக அறியும்படி அருளிச் செய்தார் (36).
படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – 37-
ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை யின்றவமே
போக்கிப் புறத்திட்ட தென் பொருளா முன்பு புண்ணியர் தம்
வாக்கில் பிரியா விராமானுச நின்னருளின் வண்ணம்
நோக்கில் தெரிவரிதால் உரையாய் இந்த நுண் பொருளே – 38-
இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் எபெருமானாருடைய நெஞ்சில் ஆழமாக புகுந்து தேங்கிக் கொண்டது.
‘ அஹம் சர்வம் கரிஷ்யாமி ‘என்று சகலவித கைங்கர்யங்களையும் பண்ணி இளைய பெருமாள் இளையாழ்வாராக அவதரித்தவரன்றோ?,
இராமானுஜர். அத்தகைய எம்பெருமானாரின் பாதாரவிந்தகளில் மனம் பொருந்தி, அன்பு கணிந்திருக்கும் மஹானுபவர்கள்
தம்மை எம்பெருமானார்க்கு ஆட்படுத்தினார்கள் என்கிறார் அமுதனார்.
ஆக, தானும் பற்றவில்லை. அவரும் சுவீகரிக்கவில்லை. உடையவருடைய சம்பந்த, சம்பந்திகளே, கொண்டு சேர்த்தார்கள்.
அப்படி இன்று நிலைப்பித்த என்னை, இத்தனை காலம் புற விஷயங்களிலே தள்ளி வைத்தது எக்காரணம் பற்றி என்று
ஆதங்கத்துடன் வினவுகிறார் பின் வரும் இரண்டு பாசுரங்களிலே.(37/38)
பொருளும் புதல்வரும் பூமியும் பூம் குழலாரும் என்றே
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்றுளார் தரமோ
இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன்னீறிலபெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமானுசன் செய்யும் சேமங்களே -39 –
‘தாயே தந்தையே என்றும் தாரமே கிளைமக்களே’ என்றும் இவற்றையே பெரும் பேறாக எண்ணி,
இதற்கு மேல் மேம்பட்டது வேறு ஒன்று உண்டு என்னும் தெளிவற்ற ஞானமின்றி திரிந்த நமக்கு,
அஞ்ஞானமாகிய இருளை நீக்கியவர் இராமானுஜர்.
அதுமட்டும் இன்றி தம்முடைய கணக்கற்ற கல்யாண குணங்களையே சிந்திக்கத் தக்கதான ஞானத்தையும் அருளினார்.
இவை இராமானுஜர் செய்த ஷேமங்களே என்கிறார்.(39)
சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 – –
அறம் , பொருள்,வீடு, காமம், என்கிற நான்கு புருஷார்த்தங்களில்
‘ கண்ணனுக்கே ஆனது காமம்’ என்பது ராமானுஜ முனியின் சித்தாந்தம்.
காமமே முக்கிய புருஷார்த்தம் என்பது அவர் தெளிவு.
அக் காமம் தனக்கு இன்பமாயிருக்கும் என்றோ, கண்ணனுக்கு இன்பமாயிருக்கும் என்றோ, எண்ணலாகாது.
கண்ணனுக்கே இன்பமாயிருக்க வேண்டும்.
அவன் இன்புறுவதைக் காண்பதைத் தவிர, தனக்கு வேறு புருஷார்த்தம் இல்லை என்று கருதிச் செலுத்தும் காமமே பரம புருஷார்த்தம்.
எம்பெருமானாரும் பக்தி ரூபமான இந்த பகவத் காமத்தின் விஷேஷத்தை ஸ்ரீ பாஷ்ய முகேன அருளிச் செய்துள்ளார் .(40)
மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய வப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே – 41-
‘அஜாயமானோ பஹுதோ விஜாயதே’ என்கிறபடி, பிறப்பே இல்லாத எம்பெருமான்,
தேவனாக உபேந்தரனாகவும், மனிதனாக இராமனாகவும், க்ருஷ்ணனாகவும், விலங்கினமாக மீனாகவும், ஆமையாகவும், வராஹமுமாகப் பிறந்தான்.
மக்களைக் காப்பதற்கு பிராட்டியாருடன் ‘மாதவனாக’ பிறந்தும் உலகத்தார் அவனை புரிந்து கொள்ளவில்லை.
அவனையும் தம்மைப் போல ஒரு மனிதன் என்று உலகத்தவர் நினைக்கின்றனர் என்று பகவான் ஸ்ரீ மத் பகவத் கீதையில் கூறியுள்ளார்.
ஆனால் பகவத் ராமானுஜர் அவதரித்த பிறகு, ஸ்ரீ பாஷ்யம் போன்ற க்ரந்தங்களாலே தத்துவ, ஹித, புருஷார்த்தங்கள் விளங்கி,
‘ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாமாயன் ‘ நாராயணனே பரம்பொருள் என்பதை
உலகத்தார் உள்ளங்கை நெல்லிக்கனி என அறிந்து ஞானம் பெற்றனர். (41)
ஆயிழையார் கொங்கை தங்கு மக்காத லளற்ற ழுந்தி
மாயும் என்னாவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள்
நாயகன் எல்லா வுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
தூயவன் தீதில் இராமானுசன் தொல்லருள் சுரந்தே -42 – –
சேற்றிலே விழுந்தவர்களைக் காக்க முற்படுபவர்கள் சாமர்த்தியம் உடையவர்களாய்,
அச் சேற்றிலே பாய்ந்து அதிலே தத்தளிப்பவர்களை எடுப்பது போல
எம்பெருமானார் , நங்கையர்களின் ஸ்தனமாகிய காமச் சேற்றில் விழுந்தவர்களை தாமே வந்து எடுத்து அருளினார்.
“ போலி அழகில் மயங்கி சேற்றில் விழுந்தாயே, அழகுத் தெய்வமாகிய மாமலராள் காதலுறும் நாயகனுடைய
மெய்யழகிலன்றோ ஈடுபட வேண்டும்” என்று பிள்ளை உறங்கா வில்லி தாசரை எம்பெருமானார் திருத்தி அருளின ரன்றோ?.
அங்ஙனமே அனைத்து உலகத்தவரையும் நாராயணனுக்கு சேஷ பூதராக்கினார். (42)
சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றவோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசன் என்று சொல்லுமினே – 43-
நாராயண நாமம் சொல்லச் சொல்ல அமுதமாக இருக்கிறது.
நம்மாழ்வார் நாமம் ஒருகால் சொன்னாலே, நாவிலே அமுதம் ஊறிக்கொண்டே இருக்கிறது என்றார் மதுரகவி ஆழ்வார்.
ஆனால் இராமானுச நாமமோ, சொல்லத் தொடங்கியவுடனே அமுதனார்க்கு நாவில் அமுதம் பாய்கிறதாம்.
அனாதி காலமாக சப்தாதி விஷங்களிலேயே போந்த உங்களுக்கு ஒரு ஹிதம் சொல்கிறேன்.
ராமானுஜ நாமம் என்கிற திருநாமத்தை சொல்லுங்கோள் .
கைங்கர்யம் சம்பத்தும் , ஸ்வரூப ஞானமும் தன்னடைவிலேயே வந்து சேரும் என்கிறார் 43ம் பாட்டில்.
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை
யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணரும் சீர்
நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே – -44 –
இந்தப் பரந்த உலகில் புருஷார்த்தத்தை தேடி அலைபவர்க்கு இராமானுஜரின் திருநாமமே பரம புருஷார்த்தம் ஆகும் .
இதனை மனதில் கொள்ளாமல், இராமானுச திருநாமத்தின் மீது நம்பிக்கைக் கொண்டு
சொல்லாதவர்களின் தன்மையை நினைந்து வருந்துகிறார் 44ம் பாட்டில்.
பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்ததற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி என்று இப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லாற்
கூறும் பரம் அன்று இராமானுச மெய்ம்மை கூறிடிலே – 45- –
“ ராமானுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே” என்று கூரத்தாழ்வானும் எம்பெருமானாரது திருவடிகளையே உபாயமாகப் பற்றினார்.
அவரைப் பற்றி பின்பற்றி , அமுதனாரும், தனக்கு ப்ராப்யம், பிராபகம் இரண்டுமே எம்பெருமானார் திருவடிகளே என்கிறார் 45ம் பாசுரத்தில்.
சரம பர்வத்துக்குண்டான வாசி அறியாதவரக்கே பிரதம பருவம் ப்ராப்யமாகிறது.
அதாவது ஆச்சார்ய அபிமானம் உள்ளவருக்கு, எம்பெருமான் மீது அபிமானமும் இரண்டாம் பக்ஷம் என்கிறபடி.
கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானைத் திசை யனைத்தும்
ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே -46- –
பௌத்தம், சார்வாஹம், நையாயிகம், ஜைனம், சாங்கியம், யோகம், ஆகிய ஆறு புற சமயத்தினரும் அழியும்படி செய்ய
அவதரித்த இராமானுஜர், நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதமாகிய திருவாய்மொழியை கண்டறிந்தவர்.
‘நீசனேன், நிறைவொன்றுமிலேன்” எனும்படி நீசத்தனத்தில் நிகரற்றவனாக உள்ள நானும்,
அருள் புரிவதில் நிகரற்றவறான தேவரீரும் நிலைத்து ஏன் இணைய மாட்டோம், என்கிறார் அமுதனார்.
அவ்வாறு பகவத் விஷயத்துக்கு கூட இடமின்றி, எம்பெருமானார் அமுதனாரது சிந்தையினுள்ளே நிறைந்திருந்தார் என்றபடி. (46)
இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்
தரம் செப்பும் அண்ணல் இராமானுசன் என் அருவினையின்
திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தை உள்ளே
நிறைந்து ஒப்பற விருந்தான் எனக்காரும் நிகர் இல்லையே – 47- –
கண்ணாலே காணும்படி தன் ஈஸ்வரத்தன்மை வெளிப்பட, தானே வந்து ஸ்ரீ ரங்கத்தில் கண் வளர்ந்தருளுகிற ஸ்ரீரங்கநாதன் என்பார்
எம்பெருமானார். “ராமோ விக்ரஹவான் தர்ம:” என்றும்
க்ருஷ்ணம் தர்மம் சநாதனம்” என்றும்,
அதர்ம வழியிலே போகும் இவ்வுலகத்தாற்கு தர்மோபதேசம் செய்த ராமானுஜரை “ அறம் செப்பும் அண்ணல்” என்கிறார் அமுதனார்.
அத்தகைய பெருமை மிகு எம்பெருமானார் என் சிந்தையில் புகுந்ததினால், எனக்கு நிகர் யாருமில்லை என்று
‘ஸாத்வீக அஹங்காரம்’ தோற்ற கூறுகிறார். (47)
நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – -48 —
“வானவர்க்கு ஈசன் என்றால் தேசமோ திருவேங்கடத்தானுக்கு” என்பது போல்
குற்றமற்றவரை ஏற்பத்தில் அருளுடையொருக்கு சிறப்பில்லை.
குற்றம் நிறைந்தவரை ஏற்றுக்கொள்வதில் தான் அருளுடையோருக்கு சீர்மை.
நான் நீசத்தனத்தில் நிகரற்றவன்.தேவரீர் அருள் புரிவதில் நிகரற்றவர்.
நமது நிகரற்றத் தன்மையில் நம் இருவருக்கும் ஒற்றுமை இருக்கும் போது,
நாம் ஒருவரை விட்டு ஒருவர் அகல தேவையில்லை என்று நைச்சியானந்தம் தோற்றக் கூறுகிறார்.(48)
ஆனது செம்மை யற நெறி பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி இறந்தது வெங்கலி பூம் கமலத்
தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத்
தானத்தில் மன்னும் இராமானுசன் இத்தலத்து உதித்தே -49 –
தென்னரங்கத்தில் வயல்கள் நீரால் விளைவன அல்ல.
அவை தம்மிடத்துத் தோன்றிய தாமரை மலரிலிருந்து பெருகும் தேன் பாய விளைவனவாம்.
அத்தகைய ஸ்ரீரங்கத்தில், ‘அரசருக்கு தம்முடி போல இவருக்கு
தென்னரங்கனின் திருமுடிகள் நினைத்தபோது சூடலாம்படி சொந்தமாயின போலும்.
அவர் அவதரித்ததினால் வைதீக மார்க்கம் செழிப்புற்றது.
புல் விளைய களை அழியுமாப் போல, இவர் அவதரிக்கவும் அறு சமயங்கள் அழிந்தது என்கிறார் 49ம் பாட்டில்.
உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்றலர் நெஞ்சம் அஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றம் எல்லாம்
பதித்த வென் புன் கவிப் பாவினம் பூண்டன பாவு தொல் சீர்
எதித்தலை நாதன் இராமானுசன் தன் இணை யடியே – – 50-
அடியைத் தொடர்ந்து எழும் ஐவர் கட்காய் அன்று பாரதப்போர்
முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த
அடியர்க்கு அமுதம் இராமானுசன் என்னை யாள வந்திப்
படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே –51 –
பார்த்தசாரதியின் திருவருளால் அவதரித்த எம்பெருமானார் தமது அடியார்களுக்கு அம்ருதமாகவே உள்ளாராம்.
அத்தகைய இராமானுஜர் தமக்காகவே அவதாரம் செய்தார் என்கிறார் 51ம் பாட்டில்.
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இப் பார் முழுதும்
போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினேன் இடைத்தான் புகுந்து
தீர்த்தான் இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு
ஆர்த்தான் இவை எம் மிராமானுசன் செய்யும் அற்புதமே –52-
அதுமட்டுமன்றி, அதிமானுஷமான செயல்கள் புரிந்து, என்னை ஸ்ரீ ரங்கநாதனின் தாள் பணியச் செய்தார்.
இது இராமானுஜர் செய்யும் அற்புதமே என்கிறார். (52)
அற்புதன் செம்மை இராமானுசன் என்னை யாள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல்லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்
நற் பொருள் தன்னை இந் நானிலத்தே வந்து நாட்டினனே – -53 –
பிரதான பிரதி தந்திரம் என்பது, பிற மதத்தவரால் ஏற்கப்படாது, நம் மதத்தவரால் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்ட
முக்கிய வேதப் பொருள் எனப்படும். அது சித்,அசித் ஈஸ்வரன் என்கிற தத்வத்ரயமும், சரீர,சரீரி பாவமும் ஆகும்.
இது நற்பொருள் என்றும் அத்தைத் தெரிவித்து உலகத்தவரை தெளிவுபடுத்திய
எம்பெருமானாரை ‘என்னை ஆளவந்த கற்பகம்’ என்கிறார்.(53)
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்
வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன்னியல்வு கண்டே – 54- –
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன. நாரணைக்காட்டிய வேதம் களிப்புற்றது.
‘ நாராயண பர ப்ரம்ஹ தத்வம் நாராயண; பர;, அந்தர் பஹீச்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித; என்னும்படி.
இப்படியான பேரெழுச்சி எழுந்ததன் காரணம் பூலோகத்தில் திரண்ட சீல குணமுடையவரான
எம்பெருமனாருடைய ஸ்வபாவத்தைப் பார்த்து, என்கிறார் அமுதனார் 54ம் பாசுரத்தில்.
சிங்கத்தைக் கனவில் கண்டாலும் சாமான்யமான மிருகங்கள் தானே நசித்தொழியும்.
அவற்றைக் கொல்வதற்கு சிங்கம் ஒரு முயற்சியும் செய்ய வேண்டா.
அதுபோல நீசச் சமயங்கள் இராமானுஜரின் இயல்பு கண்டவாறே மாண்டன.
கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமானுசனைத் தொகை யிறந்த
பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே – -55 –
‘என் அமுத்தினைக் கண்ட கண்கள்,மற்றொன்றைக் காணாவே’ என்று பாண் பெருமாள் அருளிச்செய்தபடி ,
கண்டவர் சிந்தையை கவருபவன் , கடிபொழில் தென்னரங்கன்.
‘சர்வ கந்த, சர்வ ரஸ’ எனும்படி வேதங்களாலே போற்றப்படும் அரங்கன் இருக்கும் இடம் தொண்டுக்குப் பாங்கான இடம்.
அத்தகைய அரங்கனை வேதாந்த விழுப் பொருள் என்று ஸ்ரீ பாஷ்யத்தாலே நிரூபித்து,
வேதம் களிப்புறும்படிச் செய்தவர் இராமானுஜர்.
நீர், நிலம், காடு மலை என்று வேறுபாடின்றி மேகமானது மழையைப் பொழிவது போல,
எந்த பயனையும் கருதாது உபகரித்தமையால், இராமானுஜரை ‘கொண்டல்’ என்கிறார்.
அநந்யப் ப்ரயோஜனராய், இவ்வாறு எம்பெருமானரை ஆச்ரயித்தவர்கள் குலமே நம்மை ஆளும் குலம் என்கிறார் 55ம் பாட்டில்.
கோக்குல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமானுசனை யடைந்த பின் என்
வாக்குரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே -56-
56ம் பாட்டில் எம்பெருமானின் ஆவேச அவதாரமாகிய பரசுராம அவதாரம் கூறப்படுகிறது.
அவரைப் பற்றி போற்றிய இராமானுஜரை புனிதன் என்கிறார்.
அந்தப் புனிதனை அடைந்த பின் என் வாக்கானது வேறெதையும் பேசாது. நெஞ்சும் நினைவில் கொள்ளாது என்கிறார்.
மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலரடிக்கா
ளுற்றவரே தனக்குற்றவராய்க் கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமானுசனை யின் நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதமையே -57-
அரங்கன் மலரடிக்கு ஆளுகையே பேறு .
திருவரங்கத்தில் அரங்கன் திருவடிவாரத்தில் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம்.
மற்ற புருஷார்த்தங்கள், புருஷார்த்தங்களாக மதிக்கத் தக்கனவல்ல என்று அரங்கனுக்கு ஆளுற்றவர் கருதுகின்றனர்.
இவர்கள் பரமபதநாதனுக்கு ஆளுகையும் பெரிய பேறாக மதிக்கிலர்.
திருவரங்கத்தில் ஈடுபட்டவர்கள், பரமபதத்தையும் விரும்ப மாட்டார்கள் என்பதனை பெரியவாச்சான் பிள்ளை
‘’ ஸ்ரீ ரங்கத்தில் உள்ளவர்கள் ‘பரமபதம் வரில் என் செய்வதென்’ என்று நடுங்குபவர்கள் போலே காணும் ,
அவ்வூரில் வர்த்திக்கின்றவர்கள் ‘ என்று ரசமாக அருளிச் செய்துள்ளார்.
பராசர பட்டர், ஒரு திருமஞ்சனத்தின் போது எம்பெருமான்,
’ பட்டரே, சீக்கிரம் பரமபதம் போக வேண்டுமே என்று அஞ்சினாயோ’ என்று வினவ,
அதற்கு பட்டர், பரமபதம் போக நான் அஞ்சவில்லை. உம்முடைய குளிர்ந்த முகமும், திருநாமத் தழும்பையும்
இழந்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன் ‘ என்றாராம்.
அதே போல, ஆளவந்தார் மகன் சொட்டை நம்பியும் ‘ ஸ்ரீ வைகுண்டத்தில் சென்றால், நம்பெருமாளுடைய குளிர்ந்த முகம்போல்,
ஸ்ரீ வைகுண்ட நாதனின் முகம் குளிர்ந்ததில்லையாகில், முறித்துக் கொண்டு இங்கு வந்துவிடுவேன்’ அன்று அருளிச் செய்துள்ளார்
அவ்வாறு ஸ்ரீ ரங்கநாதனான மாதவனின் திருவடிகளை உபாயமாகவும், உபேயமாகவும் கொள்ளுமவர், உத்தம அதிகாரி எனப்படுவர்.
தவங்களுள் சிறந்தது சரணாகதி. சரணாகதியைக் கைக் கொண்டும், தம்முடைய உபதேசத்தாலும், நூல்களாலும்
உலகினரை சரணாகதி நெறி ஒழுகச் செய்தும், சரணாகதியை நிலை நிறுத்தின எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பிறகு,
தமது பேதமை விலகியதாக அமுதனார் கூறுகிறார்.(57)
பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னிப் பிரமம் நன்று என்று
ஓதி மற்று எல்லா வுயிரும் அக்தென்று உயிர்கள் மெய் விட்டு
ஆதிப் பிரானோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58-
கடளவாய திசை எட்டினுள்ளும் கலி யிருளே
மிடை தரு காலத்து இராமானுசன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அவ் இருளைத் துரந்திலனேல் உயிரை
யுடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை யுற்று உணர்ந்தே – -59-
‘’அஹம் ப்ரம்மாஸ்மி, தத்வமஸி “ போன்ற சில வேத வாக்கியங்களை மட்டும் எடுத்துக் கொண்டு
அனைத்தும் பிரம்மம் என்றும் கடைசியில் அனைத்தும் ப்ரம்மத்தில் ஐக்கியமாகி விடுகின்றன என்றும்
சில குத்ருஷ்டிகளின் மாயா வாதத்தை இராமானுஜர் முறியடிக்கா விடில்,
நாராயணனே பரம்பொருள் என்று இவ்வுலகத்தார் அறியாமலே போயிருப்பர் என்கிறார் 58,59ம் பாட்டில்.
உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –
அர்த்த பஞ்சகத்தை உணர்ந்த மெய்ஞ்ஞானியர் கூடுமிடமெல்லாம் புக்கு நிற்கிறார் எம்பெருமானார்.
அதாவது திருவாய்மொழி பாடும் இடங்களில் எல்லாம் பரம ரசிகருமான எம்பெருமானார் தானும் இருக்கிறார்.
மேலும் திருமங்கையாழ்வ்வரைப் போல , பிராட்டியார் நித்ய வாசம் பண்ணக்கூடிய அழகிய மார்பை யுடைய
எம்பெருமான் எழுந்தருளியுள்ள திருப்பதிகள் தோறும் மண்டி அனுபவிக்கப் புகுபவர் எம்பெருமானார்.
அவர் எங்கள் குலக் கொழுந்து என்கிறார் 60ம் பாட்டில்.
கொழுந்து விட்டோடிப் படரும் வெங்கோள் வினையால் நிரயத்
தழுந்தி யிட்டேனை வந்தாட் கொண்ட பின்னும் அரு முனிவர்
தொழும் தவத்தோன் எம் இராமானுசன் தன புகழ் சுடர்மிக்கு
எழுந்தது அத்தால் நல்லதிசயம் கண்ட திரு நிலமே – 61- –
‘ஸ மஹாத்மா ஸு துர்லப’ என்று க்ருஷ்ண பகவான் தான் அவதரித்த விபவாதாரத்துக்குப் பின்பு
நம்மாழ்வார் அவதரிக்கையாலே, அவருடைய காட்சி தமக்கு கிடைக்காமல் போனதே
என்று நினைத்துச் சொன்னான்’ என்று பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்.
திருக்கண்ணமங்கை எம்பெருமான் கண்ணனும், பெரியவாச்சான் பிள்ளையாக அவதரித்தார் என்று சொல்வர் பெரியோர்.
நம்மாழ்வாரின் க்ருபைக்குப் பாத்திரமான நாதமுனிகளையும் , ஆளவந்தாரையும் அரு முனிகள் என்கிறார்.
அத்தகையோர் தொழுதேத்தும் இராமானுஜனை அடைந்து இவ்வுலகும் அதிசயம் கண்டது . (61)
இருந்தேன் இருவினை பாசம் கழற்றி இன்றி யானிறையும்
வருந்தேன் இனி எம் இராமானுசன் மன்னு மா மலர்த்தாள்
பொருந்தா நிலைவுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப்
பெரும் தேவரைப் பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே – -62 –
பெருந்தேவர்கள் என்று கூறப்படும், நித்ய ஸூரிகளுக்கு இணையான, ஸ்ரீ வைஷ்ணவர்கள் கழல் பிடித்த பின்,
தமது இரு வினைகளும் கழிந்தன என்றும்
அவ்வாறு கழிந்த பின் தான் புரிய வேண்டிய செயல்கள் ஏதுமில்லாது ‘க்ருத்க்ருதயனானேன் ‘ என்கிறார்.
அதாவது பேற்றினைப் பெறுவதற்கு செய்ய வேண்டியவைகளைச் செய்து முடித்தவன் ஆனேன் என்கிறார்.
“ ஆதலின் நீ உண்மையாக என்னைப் பற்றிய அறிவிலும், காண்டலிலும் அடைதலிலும் ஐயமற்றவனாய்,
சுகமாய் இரு என்று சரணாகதி கத்யத்தில் எம்பெருமானின் திருவாக்காக இந்த க்ருத க்ருத்யதமே பேசி முடிக்கப்படுகிறது.
சரம ஸ்லோகத்தில் சரண் ஏற்ற எம்பெருமான் ‘மாசுச:(கவலைப்படாதே என்பதற்கும் இதுவே பொருளாம். (62)
பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கிய சீர்
அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் அறு சமயச்
செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்திப்
படியைத் தொடரும் இராமானுசா மிக்க பண்டிதனே – 63- –
பெண் யானையை, அது எதிர்வழி கொடாத நிலையிலும், பேராத பேரன்பால் அதனையே பின் தொடர்ந்து திரியும்
ஆண் யானையை போல் அடியேன் தேவரீருடைய பிரகாசிக்கும் தன்மை வாய்ந்த குணங்களைக் கொண்ட
திருவடியை பின்பற்றித் திரியும் ஸ்வபாவத்தைத் தந்தருளவேண்டும்.
‘ பகுத்தறிவு அற்றவர்கள் சப்தாதி விஷயங்களில் எத்தகைய பற்று நீங்காது உள்ளனரோ,
அத்தகைய ப்ரீதி உன்னைத் தொடர்ந்து நினைத்த வண்ணம் இருக்க வேண்டும் என்று
பிரகலாதாழ்வான் அச்சுதனிடம் வேண்டியது போல், எம்பெருமானாரிடம் வேண்டுகிறார். (63)
பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழும் தண்டம் ஏந்திக் குவலயத்தே
மண்டி வந்தேன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வற்றதே – – 64- –
அன்பு கொண்ட யானையைப் போலல்லாமல்,மதம் கொண்ட வேழமென் இராமனுசமுனி வேழம்,
பசுந்தமிழாகிற திருவாய்மொழி அனுபவத்திலுண்டான ஆனந்தம் மதநீராகிப் பாய்ந்து, வேதமேன்னும் ‘கதை’யை எடுத்துக்கொண்டு
பாஹ்யர்களையும், குத்ருஷ்டிகளையும் வாழ்வறச்செய்தார் என்று அமுதனார் 64ம் பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார் .
தெற்கே திருமாலிருஞ்சோலையில் ஒரு யானையாகவும்,
வடக்கே திருவேங்கடமுடையான் என்று ஒரு யானையும்,
கிழக்கே திருக்கண்ணபுரத்து எம்பெருமானாக ஒரு யானையும்,
மேற்கே ஒரு மதம் பிடித்த யானை சாய்ந்தாற்போலே திருவரங்கத்தில் ஒரு யானையும் ஆகிய
நான்கு யானைகளுக்கு ஒத்தாற்போல் ஐந்தாவது வேழமாக எம்பெருமானார் விளங்குகிறார் என்றபடி. (64)
வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல்
கூழற்றது குற்றமெல்லாம் பத்திதா குணத்தினர்க் கந்
நாழற்றது நம்மிராமானுசன் தந்த ஞானத்திலே – – 65-
எம்பெருமானார் அருளிய ஞானத்தாலே, பூமண்டலமானது பாக்யம் பெற்றது, எவ்வாறு எனில்,
களையெடுத்தபின் பயிர் தலை நிமிர்ந்து ஓங்கி வளருமாப்போலே, இவர் அவதரித்தபின் புறச்சமய வாதியர்கள் அழிந்தனர் .
வைதீகர்கள் பூமியெங்கும் தலைநிமிர்ந்து திரிந்தனர். தத்வ சாஸ்திரங்களில் உள்ள சந்தேகங்கள் தீர்ந்து
பொய்ஞானம் அகன்று மெய்ஞானமே விளங்கியது.
குற்றங்களும் தோஷங்களும் தன்னுள் பொதிந்துள்ளவர்கள், அக்குற்றம் நீங்கியவர்கள் ஆயினர். (65)
ஞானம் கனிந்த நலம் கொண்டு நாடொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த விராமானுசன் தன்னை எய்தினர்க்கத்
தானம் கொடுப்பது தன் தகவென்னும் சரண் கொடுத்தே -66 –
ஞானம் கனிந்து பக்தியாகி அந்த பக்தி ப்ரபத்தியான பின்னரே மாதவன் மோக்ஷம் கொடுக்கிறான்.
எம்பெருமானாரோ, தன் கிருபையை தானே வலிய சென்று அளிக்கிறார்.
பிராட்டியுடன் கூடிய எம்பெருமான் இருவராக அளிக்கும் மோஷப் பிரவாகத்தை,
எம்பெருமானார் தாம் ஒருவராகவே அளித்து உத்தாரக ஆசாரியர் ஆகிறார். (66)
சரண மடைந்த தருமனுக்காப் பண்டு நூற்றுவரை
மரண மடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரண மிவை வுமக் கன்று என்று இராமானுசன் உயிர் கட்
கரணங்கு அமைத்திலனேல் அரணார் மற்று இவ் வார் உயிர்க்கே – 67- –
இந்த தேகமும் அவயவங்களும் அவனுடைய சரணார விந்தங்களைப் பற்றுவதற்காகவே அவனால் கொடுக்கப்பட்டது.
இப்படி சம்சாரத்திலிருந்து விடுபடுவதற்கு சாதனாமாகக் கொடுத்த கரணங்களைக் கொண்டு,
நதியைக் கடக்கக் கொடுத்த தெப்பத்தைக் கொண்டு அத்தைக் கடவாதே வெள்ளதோடு போவாரைப் போல் ,
இந்த கரணங்கள் உங்கள் உபயோகத்துக்காக வைக்கப்பட்டவைகளல்ல என்று உபதேசித்தவர் எம்பெருமானார்.
அத்தகைய ரஷையை அவர் செய்யா விடில் இந்த ஆத்மாவை காப்பது யார் என்கிறார்.
‘ ராமானுஜ என்கிற சாமர்த்தியம் படைத்த நான்கு அக்ஷரங்கள் இல்லாமற்போனால்,
என் போன்ற ஜந்துக்கள் எந்த நிலையை அடைவோம் என்று கூரத்தாழ்வான் சொன்னார்ப் போலே
சொல்லுகிறார் அமுதனார் 67ம் பாசுரத்தில்.
ஆரெனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன விராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே – 68- –
அரசன் சிம்மாசனத்திலிருந்து செப்புகிறாப்போலே, கண்ணன் தேர்த் தட்டிலிருந்து சொன்ன கீதையின் செம்மைப் பொருளை
இந்த உலகத்தார் அறிய மாட்டாது இடர் பட்டனர்.
எம்பெருமானார் கீதையின் சீரிய பொருளை தெள்ளத் தெளிவாக, தாம் இயற்றிய கீதா பாஷ்யத்தில் அருளிச் செய்தார்.
இந்த சீர்மையை உணர்ந்து எம்பெருமானாரை பணிந்தனர் நல்லவர்கள். அவர்களிடம் எனது ஆவியும் பணிந்தது.
ஆக எனக்கு ஒப்பாவார் யார் என்று சாத்வீக அஹங்காரத்தால் வந்த களிப்பில் கூறுகிறார். (68).
சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்
அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென் தனக்கு அன்றருளால்
தந்த வரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – 69- –
அரங்கன் தந்தவை இந்த ஊன உடலும் சம்சாரத்தில் விழுந்து உழலுவதற்கு உறுப்பான கரணங்கள்.
ஆனால் எம்பெருமானார் தந்தவைகளோ அந்த அரங்கனின் திவ்ய சரணங்களாகும் என்று 69ம் பாசுரத்தில் கூறுகிறார்.
என்னையும் பார்த்து என்னியல்வையும் பார்த்து எண்ணில் பல் குணத்த
உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி என்பால்
பின்னையும் பார்க்கில் நலமுளதே யுன் பெரும் கருணை
தன்னை என் பார்ப்பர் இராமானுசா வுன்னைச் சார்ந்தவரே – 70 –
அரங்கன் தராததையும் தந்த பின்னரும், அனாதிகாலமாக தொடரும் வல்வினையால் வந்த வாசனா லாபம்,
அத்தாலே சப்தாதி விஷயங்களில் தலை தூக்கி வளரும் ருசிகள் ஆகியவையே அமுதனாரது இயல்பாகி விட்டனவாம்.
அவ்வாறிருந்தும் தம்மை ஆட்கொண்ட எம்பெருமானாரது கருணை, பெருங்கருணையாகும்.
இதை ஆராய்ந்து பார்த்தால், இராமானுஜரை ஆஸ்ரயிப்பவர்கள், குறைவாக நினைக்க மாட்டார்களோ என ஆதங்கப்படுகிறார். (70)
சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும் தகையே !–71-
விஷய ப்ரவணனாகிய தாம் எங்கே, சரம சேஷியாகிய தேவரீர் எங்கே?
சபலத் தன்மை வாய்ந்த என் நெஞ்சு தேவரீர் திருவடிக்கீழ் பொருந்தியதென்றால் , அது தேவரீரின் கடாஷத்தாலன்றோ?
திருக்கோஷ்டியூரில் கேட்போரின் தன்மையை ஆராயாது, உபதேசத்தின் சீர்மையை பாராது, தம் பெருந்தன்மைக்கேற்ப,
ஆசையுடையோர்க்கெல்லாம், தாம் அரும்பாடுபட்டு பெற்ற சரம ஸ்லோக அர்த்தத்தை
அருளிச் செய்தமையினால் ‘ எம்பெருத்தகை’ என்கிறார் அமுதனார். (71)
கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே
உய்த்தனன் தூய மறை நெறி தன்னை என்றுன்னி வுள்ளம்
நெய்த்த வன் போடிருந்தேத்தும் நிறை புகழோருடனே
வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே -72- –
அந்த ஓவ்தார்ய குணத்தால் தீய சமயங்கள் அழிந்தன. தூய வேத நெறிகள் நிலைநிறுத்தப்பட்டன.
தம்மையும் அந்த தூய குணங்களையுடைய பெரியோரிடம் சேர்த்து வைத்தார் என்கிறார் தமது 72ம் பாசுரத்தில்.
வண்மை யினாலும் தன் மாதகவாலும் மதி புரையும்
தண்மை யினாலும் இத்தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த விராமானுசனை வுன்னும்
திண்மை யல்லால் எனக்கில்லை மற்றோர் நிலை நேர்ந்திடிலே – – 73- –
அவரே தமக்கும் உலகத்தோர்க்கும் ரஷகர் ஆகிறார். ருசி, விசுவாசம் இல்லாதவரையும் வலுவில்
ருசி, விசுவாசஸங்களை விளைவித்து, சரம உபாயத்துக்கு ஆளாக்கினார் எம்பெருமானார். (73)
தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டலனைய வண்மை
ஏரார் குணத் தெம்மி ராமானுசன் அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே – -74-
நித்யமாயிருத்தல்,அபௌர்ஷமேயம், ப்ரத்யஷ ப்ரமானம், எல்லா சேதனர்களுக்கும் நல்லதும், தீயதும், உணர்த்தல்,
எம்பெருமானுடைய ஆக்ஜைக்கு உட்பட்டிருத்தல் ஆகிய மிக்க சீர்மையை உடையது வேத சாஸ்திரங்கள்.
அதை மீறுபவர்களை தனது கூராயுதத்தால் அழிப்பது எம்பெருமான்.
ஆனால் எம்பெருமானாரோ, அவ்வப்போத, தமது சிந்தையில் தோன்றும் சிறந்த யுக்திகளைக்கொண்டே,
அவர்களை சிதைக்கிறார் என்க.(74)
செய்த்தலைச் சங்கம் செழு முத்த மீனும் திருவரங்கர்
கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி நம் கண் முகப்பே
மெய்த்தலைத் துன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே
மொய்த்தலைக்கும் வந்து இராமானுசா ! வென்னை முற்று நின்றே – – 75-
ஆச்சார்ய அபிமானமே உத்தாராகம்’ என்றிருப்பவர்களை மிகவும் உகக்கிறான் சர்வேஸ்வரன்.
உகப்பின் மிகுதியால், அவர்கள் திறத்து தானே மேல் விழுந்து தன் கைச் சக்கரத்து அழகும், வடிவழுகம் காட்டி,
‘உன்னை விடேன்’ என்றாலும் முக்கோலேந்திய எம்பெருமானாரின் கைத்தல அழகு , என்னை ஈடுபடச்செய்கிறது.
சஸ்திரமேந்திய, எம்பெருமானைவிட, சாஸ்திரமேந்திய உடையவரின் கைத்தலமே என்னை ஈரக்கிறதென்கிறார் 75ம் பாட்டில்
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே – -76 –
கீர்த்தி மிக்க திருவேங்கடப் பொற்குன்றமும், நித்ய ஸூரிகள் சேர்ந்த இடமான ஸ்ரீ வைகுந்தமும்,
சயன திருக்கோலமுடைய திருப்பாற்கடலும் எம்பெருமானார்க்கு ப்ரீதி உள்ள இடங்களாகும்.
அவ்வாறே, அமுதனார்க்கு மிகவும் ப்ரீதி உள்ள இடம்,
எம்பருமானாரின் அழகுமிகுந்த, இணையத் திருவடிகளே என்கிறார் 76ம் பாசுரத்தில்.
‘திருபொலிந்த சேவடி என் சென்னிமேல் பொறித்தாய் ‘ என்றபடி.
எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் நின்ற, வீற்றிருந்த , சயனத் திருக்கோலங்களை கூறுகிறார்.
அவை உடையவருக்கு எவ்வளவு இன்பம் அளிக்குமோ, அவ்வளவு உடையவரது திருத்தாமரையடிகள்
அமுதனார்க்கு இன்பம் பயக்கின்றனவாம்.
ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப் பல் பொருளால் இப்படியனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமானுசற்கு என் கருத்து இனியே – 77 –
வினைகளுக்கு வேர் போன்றதான என் வாசனைகளை அறவே போகும்படி விரட்டிய பின்னும்,
உதவுவதற்கு ஏதேனும் உண்டோ என வினவுகிறார் 77ம் பாட்டில்.
கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ யிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் என்னெஞ்சினில்
பொருத்தப்படாது எம்மிராமானுச! மற்றோர் பொய்ப் பொருளே – – 78- –
இப்படி எம்பெருமானார் தன்னை திருமகள் கேள்வனுக்கே ஆக்கிய பின், வேறொரு மெய்ப் பொருள்
இந்த நெஞ்சில் பொறுத்தப் படாது என்கிறார் 78ம் பாட்டில்.
பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இந்தப் பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமானுசன் நிற்க வேறு நம்மை
உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கி யாதென்று லர்ந்தவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்லோர் நல்லறி விழந்தே – – 79- –
ஆதிப்பிரான் நிற்க மற்றத் தெய்வம் நாடுதிறே ‘ என்றார் நம்மாழ்வார்.
பொய்மையைச் சுரக்கும் புற சமயத்தை அழித்தொழித்து, மெய்ம்மையே சுரக்கும் வேதத்தை ஒளி பெறச்செய்த
ராமானுஜர் இருக்க, நம்மை உஜ்ஜீவிக்க நல்லதொரு தெய்வம் எங்கே என்று தேடுகிறார்களே
இவ்வுலகத்தவர் என்கிறார் 79ம் பாட்டில்.
நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர் அவர்க்கே
எல்லா விடத்திலும் என்றும் எப்போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே – -80 – –
ராமானுஜ’ என்னும் இந்த திறமை வாய்ந்த நான்கு அக்ஷரங்கள் இல்லை யெனில், என்னைப் போன்ற ஜந்துக்கள்
எந்த நிலைமையை அடைந்திருக்கும் என்று கூரத்தாழ்வான்,
இந்த திருநாமத்தின் சீர்மையை நினைத்து அதன்பால் மஹா விஸ்வாசம் கொண்டு பேசுகிறார்.
அத்தகைய கூரத்தாழ்வான், எம்பார், முதலியாண்டான் போன்ற அடியவர்களையே
தமக்கு உரிய தெய்வமாகக் கொண்டு ‘ஒழிவில் காலமெல்லாம் வழுவிழா அடிமை” செய்வேன் என்கிறார் 80ம் பாசுரத்தில்.
சோர்வின்றி வுன்தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற வெனக்கு அரங்கன் செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச இனி யுன்
சீரொன்றிய கருணைக்கு இல்லைமாறு தெரிவுறிலே – – 81- –
பாகவத சேஷத்வத்தின் சுவை அறியாதிருந்த எனக்கு, அந்த பாகவதற்கே உரியது
இந்த ஆத்மா என்னும் உணர்வை உண்டு பண்ணினார் , எம்பெருமானார்.
அவ்வித பாகவத சேஷத்வத்திலே ஊறி நின்றவர்க்கே அரங்கதெம்பெருமான் தன் திருவடிகளை
விட்டுப் பிரியாத நிலையை விளைவிக்கிறான்.
அவ்வித பாக்கியத்தை தமக்கு தந்தளித்த எம்பெருமானாரின் மஹத்வம் ஒப்புயர்வற்றது என்கிறார் 81ம் பாசுரத்தில்.
தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது வெந்தீ வினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற வென்னை ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் என்ன புண்ணியனோ !
தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே – – 82- –
நல்லதை பற்றிய அறிவு தமிடம் இல்லாததால் அல்லதைப் பற்றிய அறிவே என்னிடம் இருந்தது.
அப் பேர்ப் பட்ட என் நெஞ்சிலும் சாஸ்திரத்தின் மிகச் சீரிய உட்பொருள் பதியுமாறு, சாரமாக உபதேசித்து
என்னை ஒப்பற்ற கேள்வி ஞானமுடையவனாக செய்தருளினார் எம்பெருமானார்.
உலகெங்கும் பரவிய கீர்த்தியை உடையவரும், மேகம் போன்ற வள்ளல் தன்மை உடையவருமான
என்ன தார்மீகரோ எம்பெருமானார் என்று வியக்கிறார் 82ம் பாட்டில்.
சீர் கொண்டு பேரறம் செய்து நல்வீடு செறிதும் என்னும்
பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன் உன் பத யுகமாம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமானுச ! இது கண்டு கொள்ளே – – 83-
பகவானிடம் சரணாகதி பண்ணி நல் வீடாகிய பரம பதத்தை நாடும் பிரபன்னர்கள் நாட்டில் பலர் உள்ளனர்.
அடியேனோ, சரம பருவத்தின் எல்லை நிலமாகிய ஆசார்யராகிய தேவரீரைப் பற்றிக்கொண்டு,
அத்திருவடிகளே , பரமபத்தைவிட விலக்ஷணமான மோக்ஷமாக அடியேனுக்கு அமைந்துள்ளது
என்று தமக்கு பேரின்பம் விளைவிக்கும் எமாபெருமானார் திருவடிகளே மோஷப் ப்ரதாயகம்
என்று கூறுகிறார் அமுதானார் 83ம் பாட்டில்.
கண்டு கொண்டேன் எம் இராமானுசன் தன்னை காண்டலுமே
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் என் தொல்லை வெந்நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்
றுண்டு கொண்டேன் இன்னுமுற்றனவோ தில் உலப்பில்லையே – -84 – –
கண்டேன் கமலமலர்ப் பாதம்: காண்டலுமே வின்டேயொழிந்தன வினையாயின வெல்லாம் : என்றார் நம்மாழ்வார்.
அவ்வாறே அமுதனாரும் இராமானுசனைக் கண்டு கொண்டேன்.
கண்ட மாத்திரத்திலே அவரோடே நில்லாது அவர்க்கு ஆட்பட்டாருடைய அழகிய திருவடிகளில் அடிமைப்பட்டு விட்டேன்.
எனது அனாதியான கொடிய பாபங்கள் நீங்கப் பெற்றேன். இப்படி தாஸ்யத்திலேயே அன்வயிக்கவே,
எனது அருவினைகள் அனைத்தும் தொலைந்தன .
இன்னும் நான் பெற்ற நன்மைகள் சொல்ல முடிவில்லாதது என்கிறார். . (84)
ஓதிய வேதத்தின் உட் பொருளாய் அதன் உச்சி மிக்க
சோதியை நாதன் என வறியாது உழல்கின்ற தொண்டர்
பேதைமை தீர்த்த விராமானுசனைத் தொழும் பெரியோர்
பாத மல்லால் என்தன் ஆர் உயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே – – 85- –
“ எந்த ப்ராம்மனன் நான்கு வேதங்களையும் நெஞ்சில் தாங்கிக்கொண்டு இருப்பினும் , வாசுதேவனை அறியவில்லையோ ,
அவன் வேதச் சுவையின் பளுவினால் ஆச்ரயிக்கப்பட்ட கழுதை ஆவான். ‘குங்கமப்பூ சுமந்த கழுதை போலாவான்.
வேதத்திலும், வேதாந்தத்திலும் இந்த சரீரம் – ஆத்மா என்னும் சம்பந்தம் காட்டப்பட்டிருப்பதால்
உடல் உயிருக்கே சேஷப்பட்டிருப்பது போல் நாம் அனைவரும் நமது ஆத்மாவான இறைவனுக்கே அடிமைப்பட்டவர்கள் ஆவோம்.
இறைவன் அந்தர்யாமியாக இருந்து எல்லோரையும் நியமிக்கின்றான். அதனால் அவன் எல்லார்க்கும் ஆத்மா.
நாம் அனைவரும் அவனுக்கு அடிமைபட்டவர்கள் என்னும் அனன்யார்ஹசேஷத்வ ஞானம் அறியப் பெறாமையால்
பிறர்க்கே தொண்டுபட காரணமாயிற்று இந்தப் பேதமையை நீக்கியவர் இராமானுஜர் (85)
பற்றா மனிசரைப் பற்றி அப் பற்று விடாதவரே
உற்றார் என உழன்றோடி நையேன் இனி ஒள்ளியநூல்
கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம்
பெற்றார் யவர் அவர் எம்மை நின்றாளும் பெரியவரே – – 86-
‘ஊருக்கே உழைத்து ஏழையானேன்’ என்று திருமங்கையாழ்வார் கூறியது போல்,
ஒன்றுக்கும் பற்றாத, அதாவது எதனுக்கும் திறமையற்ற அற்ப மனிதர்களை அண்டி அவர்களையே உறவென்று கருதி,
அலைந்து கஷ்டப்பட்டு, அவர்களைக் காணவேண்டும் என்று ஓடி இனிமேல் நிலைகுலைந்து போகமாட்டேன்.
தத்துவ, ஹித புருஷார்த்தங்களைத் தெள்ளத் தெளிவாக அறிந்து , மிக்க ப்ரேமையால் ,
தங்கள் கல்விக்கு ப்ரயோஜனம் இதுவே என்று எம்பெருமானாரை ஆச்ரயிக்கும் கூரத்தாழ்வான் போன்றவரே
என்னை ஆளும் பெரியவர் என்று அமுதனார் கூறுகிறார்.(86)
பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணம் கட்கு
உரிய சொல்லென்றும் உடையவன் என்று என்றென்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி யிராமானுசன் மறை தேர்ந்து உலகில்
புரியு நன் ஞானம் பொருந்தாதவரைப் பொரும் கலியே – – 87- –
கடலில் செல்ல இயலாவிடிலும், தன் சுத்திக்காக கரை யோரத்தில் மூழ்கி எழுவாரைப் போல,
அறிவாற்றல் கொண்டு பேசமுடியாவிடினும் தங்கள் தகுதிக்கு முயன்றவரை,
எம்பெருமானாரை போற்றுபவர்கள் உள்ளனர்.
எம்பெருமானார் என்னும் ஆச்சார்யனாகிற துறையில், சத்வ குணம் தலை யெடுத்து, ஞான ஸ்நானம் செய்தவர்கள்
தூயவர்களாயிருப்பவர்கள் ஆதலாலே, அவரை கலி நலியாது.
அவ்வாறு அடையாதவர்களையே கலிதோஷம் நல்கும் என்கிறார் 87ம் பாசுரத்தில்.
கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமாள்
ஒலி மிக்க பாடலைக் வுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன் மறைவாதியராம்
புலி மிக்கதென்று இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே – – 88- –
மிகவும் கொடியவர்களான குத்ருஷ்டிகள் எனும் புலிகள் மிகுந்து சாதுக்களான உலகியனரை நலிந்து திரிய,
அப்புலிகளைத் தொலைக்க வல்ல உயர் மிக்க ஸிம்ஹமாய் வந்து
புவனத்தைக் காக்க முற்படுகின்றார் எம்பெருமானார் என்கிறார் 88ம் பாட்டில்.
போற்றரும் சீலத்து இராமானுச நின் புகழ் தெரிந்து
சாற்றுவனேலது தாழ்வது தீரில் உன் சீர் தனக்கோர்
எற்றமென்றே கொண்டிருக்கிலும் என் மனம் ஏத்தி யன்றி
ஆற்ற கில்லாது இதற்கென்னினைவா என்றிட்டஞ்சுவனே – – -89 – –
நினையார் பிறவியை நீக்கும் பிரானை இந்நீணிலத்தே
எனையாள வந்த விராமானுசனை இருங்கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே – – 90-
பெரிய பெருமாளைச் சரணடைந்து எம்பெருமானார், தம்மோடு ஏதேனும் ஒருவகையில் சம்பந்தம் உடையோர் அனைவருக்கும்
வீடு தரவேண்டி ப்ரார்த்தித்து , அத்தைப் பெற்றவராகையாலே , அவரை நினைப்போர்க்கெல்லாம் பிறவியை நீக்கும் உபகாரத்தை ,
அதாவது மோக்ஷத்தை தரவல்லவராவார்.
ஆனால் அத்தகைய எம்பெருமானரை மனம், வாக்கு, செயல் ஆகிய முக்கரணங்களில்
ஒன்றிலாவது ஈடுபடாமல் இருக்கின்றனர் மாந்தர்.
இவர்கள் ‘உய்ய ஒரே வழி,, உடையவர் திருவடி’ என்று அறியாமல், பிறப்பினால் நேரும் துன்பங்களில் அழுந்தி
துன்புறுவர்களாக உள்ளனர் என்கிறார் 90ம் பாசுரத்தில்.
மருள் சுரந்தாகம வாதியர் கூறும் அவப் பொருளாம்
இருள் சுரந் தெய்தவுலகிருள் நீங்கத் தான் ஈண்டிய சீர்
அருள் சுரந் தெல்லாவுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே – – -91 —
எல்லா ஆத்மாக்களுக்கும் தலைவன் பெரிய பெருமாளே என்கிறார் 91ம் பாட்டில்.
வேதம் கூறிய உண்மைப் பொருளைக் கூறாது அவப் பொருளைக் கோரும் ஆகம வாதிகளைச் சாடுகிறார்.
நாராயணனே முதற்பெருங்கடவுள். பிரமன் ருத்ரன் முதலியோர் படைப்புக்கு உட்பட்டவர்களே.
அப்பெருங்கடவுளான, எம்பெருமானே உலகினுக்கு உபாதான காரணமாகவும்,
தானே சங்கல்பித்து மாறுதலினால் நிமித்த காரணமும் அவனே என்பது வேதத்தின் உண்மைப் பொருள்.
அவ்வாறில்லாமல் பரம் பொருளைக் கீழ்ப் படுத்தியும், கீழ்ப் பொருளை பரம் பொருளாக்கியும், கூறுவது அவப் பொருளாகும்.
இந்த உண்மைப் பொருளை உலகுக்கு உணர்த்திய எம்பெருமானார் புண்ணியனே என்கிறார்.
புண்ணிய நோன்பு புரிந்துமிலேன் அடி போற்றி செய்யும்
நுண்ணரும் கேள்வி நுவன்றுமிலேன் செம்மை நூற் புலவர்க்
கெண்ணரும் கீர்த்தி இராமானுச ! இன்று நீ புகுந்ததென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக் காரணம் கட்டுரையே – – 92–
அர்ச்சா மூர்த்தியின் வழிபாட்டைப் பேசும் பஞ்சராத்ரம் பகவான் திருவடிகளையே உபாயமாய் பற்றும்படி புகழ்கின்றது.
அரங்கனாம் பெரிய பெருமாளும், நீட்டிய திருக்கரத்தாலே தன் திருவடிகளையே உபாயமாய் பற்றும்டி
காட்டிய வண்ணமாய் பள்ளிக் கொண்டிருப்பதாலே, வைகுந்தத்தில் எழுந்தருளியுள்ள
பரவாசுதேவனான நாராயணன், அரங்கனே என்பது எம்பெருமானாரின் சொல்லாகும்.
‘ நீசனேன் நிறைவொன்றுமிலேன் ‘என்கிறபடி நல்லதோர் விரதத்தை அனுஷ்டித்திலேன் .
கேள்வியறிவு ஞானத்தையும் பெற்றிலேன். அவ்வாறிருக்க, இராமானுஜர் தாமாகவே வந்து
அடியேனுடைய கண்ணிலுள்ளும், நெஞ்சினிலும் நிறைந்த நிர்ஹேதுக கிருபையின் காரணத்தைச்
சொல்ல வேண்டும் என்கிறார். 92ம் பாட்டில்.
கட்டப் பொருளை மறைப் பொருளென்று கயவர் சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரானல்லனே என் பெரு வினையைக்
கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னும் ஒள் வாளுருவி
வெட்டிக் களைந்த இராமானுசன் என்னும் மெய்த்தவனே – – -93 –
மெய்யான தவம் சரணாகதி . அத்தை யுடையவர் எம்பெருமானார்.
தம்மைச் சார்ந்தவர் அனைவருடைய பாபங்களையும் பொறுத்தருளுமாறு பெருமாளிடம் சரணாகதி செய்து
வரம் பெற்றுள்ளமையால் அத்தகைய வல்லமை அவருக்கு வந்தது.
அவர் செய்த பிரபத்தியினாலேயே நாம் அனைவரும் அவர் சம்பந்தத்தை முன்னிட்டு பிரபன்னர்களாகி வினையினுன்றும் விடுபடுகிறோம்.
பிரபன்ன ஜனங்களாகிய நம் அனைவருக்கும் அவரே கூடஸ்தர் என்று நம்மால் அவர் போற்றப் படுகிறார் .
நம் கூடஸ்தர் நமக்கு வைத்திருக்கும் சொத்து சரணாகதி. அதுவே நமக்கு உஜ்ஜீவனம்.
அவரே தமது பெருவினையை கிழங்கோடு தொலையும்படி செய்தார் என்கிறார் அமுதனார் தமது 93ம் பாட்டில்.
தவந்தரும் செல்வம் தகவும் தரும் சரியா பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும் பரந்தாம மென்னும்
திவந்தரும் தீதிலிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் கட்கு
உவந்தருந்தேன் அவன் சீரன்றி யான் ஒன்றும் உள் கலந்தே – – – 94- –
அநேக கல்யாண குணங்களையுடைய எம்பெருமானார் தம்மை வந்து அடைந்தவர்களுக்கு சரணாகதி நிஷ்டையை கொடுத்தருளினார்.
அவர்கட்கு பிறப்பினால் ஏற்படும் சம்சாரத்தை உண்டாக்கும் கொடிய கர்மங்களை தூள் தூளாகும்படி செய்தார்.
அதற்கும் மேலே ‘பரந்தாமம்’ என்று சொல்லப்படுகின்ற ஸ்ரீவைகுந்த லோகத்தை கொடுத்தருளுவார்.
ஆயினும் நான் அந்த எம்பெருமானாருடைய குணங்களைத் தவிர வேறொன்றையும்
மனம் மகிழ்வுற்று விரும்பி அநுபவிக்க மாட்டேன் என்கிறார் அமுதனார்.
“ எம்பெருமானாரைப் பற்றுகையே பிரபத்தி. ‘ராமானுஜ என்கிற சதுர்ஷாரியே திருமந்திரம்.
அவர் திருவடிகளிலே பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம் .
இதுவே முடிவு கட்டின என் சித்தாந்தம்’ என்று அருளிச்செய்தாரென்றோ நடாதூரம்மாள் .
இதுவே அமுதனாரது நிலை. (94)
உண்ணின்று உயிர் களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப்பன் எம்மிராமானுசன்
மண்ணின் தலத் துதித்துய் மறை நாலும் வளர்த்தனனே – – -95 – –
அனாதி காலமாக பலப் பல பிறப்புகள் பிறந்து சம்சாரத்திலே உழல்கின்றனர் இந்த ஆத்மாக்கள்.
அவர்களை உய்விக்கும் நோக்கத்துடன், அவர்கள் மேல் கொண்ட வாத்சல்யத்தினால் எம்பெருமான்
அந்தர்யாமியாய் நின்று உற்றனவே செய்து உய்விக்கின்றான்.
நெருங்குவதற்கும் அருவருக்கத்தக்க குற்றங்கள் மலிந்த உயிருக்குள் புகுந்து ,
இவ்வளவு பரிவு வாய்தவனாக எம்பெருமான் இருக்கின்றான்.
இருப்பினும், எம்பெருமானாரோவெனின், பலவகைப்பட்ட உயிர்களுக்கெல்லாம் நேரடியாகவே வீடு அள்ளிப்பதற்காகவே ,
விண்ணகத்தினின்றும் இம்மண்ணகத்திற்கு நேரே வந்து அவதரித்தார் என்கிறார் 95ம் பாட்டில்.
வளரும் பிணி கொண்ட வல்வினையால் மிக்க நல்வினையில்
கிளரும் துணிவு கிடைத்தறியாது முடைத்தலை யூன்
தளருமளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்கு
உளரெம் மிறைவன் இராமானுசன் தன்னை வுற்றவரே – – 96- –
நான்கு வேதங்களையும் வளரும்படி செய்தருளினார்,
சேதனர்கள் உய்வதற்கு . அனுபவித்தோ, பரிகாரம் பண்ணியோ, தீராத, தொடர்ந்து வரும், கர்மவினையினால்,
எம்பெருமானார் வழி காட்டிய ப்ரபத்தி மார்க்கத்தில் தமக்கு மஹா விசுவாசம் ஏற்படவில்லை என்கிறார் 96ம் பாட்டில்.
தன்னை வுற்றாட் செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள்
தன்னை வுற்றாட் செய்ய என்னை வுற்றானின்று தன் தகவால்
தன்னை வுற்றாரன்றித் தன்மை வுற்றாரில்லை என்றறிந்து
தன்னை உற்றாரை இராமானுசன் குணம் சாற்றிடுமே – – -97 –
அப்பேர்ப்பட்ட எனக்கு சம்சாரத்தில் தரித்து, தனியாக திரியவிடாமல் எம்பெருமானாரைச் சார்ந்த அடியவர்கள் துணையாக உள்ளார்கள்.
குழியைக்கடக்கும் கூரத்தாழ்வான் போன்றோர், தேவுமற்றறியேன் என்று சம்சாரக் குழியில் விழாது என்னைக் காக்க வல்லவர்கள் என்கிறார்.
தம்மைத்தாமே பற்றியிருக்கும் கூரத்தாழ்வான், எம்பார், முதலியாண்டான் போன்றோருடைய குணநலன்களை உலகரியச் செய்வதர்க்கு,
அவர்களை பற்றி நிற்குமாறு அடியார்களின் அடியார்களை ஆட்கொள்ளச் செய்தார் எம்பெருமானார்.
இவ்வாறு எம்பெருமானார், தம்மை, ஆழ்வானை பற்றியிருக்கச் செய்ததையும் ,
ஆழ்வானும் தமக்கு ஆசாரியன் ஆகிய சம்பவத்தையும், குறிப்பால் உணர்த்துகிறார், 97ம் பாட்டில்.
இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே யினி நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே
விடுமே சரணமென்றால் மனமே நையல் மேவுதற்கே – – -98 – –
“ எவனொருவன் புத்தி கெட்டவனாயும் , காமத்தால் பிடிக்கப்பட்ட பட்டவனாயும் இருந்தபோதிலும்,
“ராமானுஜாய நமஹ; எனும் சொல்லை மட்டும் அடிக்கடி சொல்லிப் புகுந்தால்,
பகவானைச் சார்ந்தவர்களான யோகியர்கள் ப்ருக்ருதி மண்டலத்துக்கு அப்பாலுள்ள., எந்த மோஷத்தைப் பெறுவதற்கு ஒதுகின்றனரோ,
அந்த மோஷத்தையே அடைகிறான்” என்று ராமானுஜாஷ்டக சுலோகத்தில் கூறப்பட்டுள்ளது.
எம்பெருமான் சர்வ ஸ்வந்திரனாததால் , நாம் சரணம் செய்தும், நம்முடைய அளப்பரிய வினைப் பயன்களால்,
நரகம் அளிப்பானோ என்று அஞ்ச வேண்டாம்.
காரணம், எம்பெருமானாரைப் பற்றியவர்கள் பேற்றுக்காக வருந்தவேண்டாம் என்கிறார் 98ம் பாசுரத்தில்.
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன்
சொற் கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே
பொற் கற்பகம் எம்மிராமானுச முனி போந்த பின்னே – – 99- –
விசாலமான இப்பூமியில், சிறந்த கற்பக வ்ருஷம் போல உதாரரான ஸ்வாமி எம்பெருமானார் அவதரித்த பின்பு
புற மதத்தவர்களான, வேதத்தை ஒத்துக்கொள்ளாத பாஹ்யர்களும், வேதங்களை பிரமானமாகக் கொண்டும்,
அதை தங்கள் மனம் போனபடி வகுத்தெடுத்துக் கொண்ட குத்ருஷ்டிகளும், அறவே மாண்டனர்.
ஸ்ரீ ராமானுஜர் அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யம் இவ்வித பாஹ்யர்களையும், குத்ருஷ்டிகளையும்
அடியோடு அழியச் செய்ததால் எம்பெருரமானாரை “பொன் கற்பகம்” என்கிறார். (99)
போந்ததென் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில் ஒண் சீ
ராம் தெளி தேனுண்டமர்ந்திட வேண்டி நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமானுச இதுவன்றி யொன்றும்
மாந்தகில்லாது இனிமற்றொன்று காட்டி மயக்கிடலே – – 100- –
எனது மனதாகிற பொன் வண்டு தேவரீரின் திருவடிப் பூவினையே விரும்புகிறது.
அத் திருவடிகளிலுள்ள மென்மை , குளிர்ச்சி, மணம் , அழகு போன்ற கல்யாண குணங்களில் ஈடுபட்டு
அங்கேயே நித்யவாஸம் பண்ண வேண்டுமென்று தேவரீரிடம் வந்தது.
மற்றபடி வேறொன்றைக் காண்பித்து என்னை மயங்கப் பண்ணாதேயும் என்று இறைஞ்சுகிறார் 100ம் பாட்டில்.
இங்கு ‘வேறொன்று’ என்று எம்பெருமானின் திருவடியைக் கூறுகிறார்.
இது சரமபர்வ நிஷ்டையான , ஆச்சார்ய நிஷ்டையைக் குறிக்கிறது.
மயக்கு மிருவினை வில்லியிற் பூண்டு மதி மயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றிய வென்னைத் துயரகற்றி
உயக்கொண்டு நல்கு மிராமானுச என்ற துன்னை வுன்னி
நயக்கு மவர்க்கி திழுக்கென்பர் நல்லவ ரென்று நைந்தே – – 101- – –
எம்பெருமானாருக்கு இயல்பாக அமைந்த குணங்கள் இரண்டு.
தன்னை அண்டியவர்களின் பாபத்தைப் போக்குவதும், தன்னையே அனுபவிக்கும் போகியத்தவமுமாகும்.
இதுவரையில் தமது பாபங்களாகிய கர்ம வினைகளை எம்பெருமானார் நீக்கியத்தையே பேசி வந்த நான்,
அவரையே அனுபவிக்கக்கூடிய போக்யத்தை அதிகம் பேசாததால்,
மற்றவர்கள் அதை எனது பிசகு என்று கருதுவார்கள் என்று அஞ்சுகிறார் 101ம் பாட்டில்.
நையும் மனமுன் குணங்களை வுன்னி என் நா விருந்தெம்
ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காணக் கடல் புடை சூழ்
வையமிதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே – – 102- –
“நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்” “பாவமே செய்து பாவியானேன்” என்கிறபடி,
அனாதி காலமாக என்னை தொடர்ந்து வந்த வல்வினைகள் , எம்பெருமானாரை பற்றியபின் அழிந்துவிட்டது.
“ உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை “ என்கிறபடி,
தமது மெய் , நா, மனம் ஆகிய மூன்றும் எம்பெருமானாரிடத்திலேயே தங்கிவிட்டது என்கிறார்.
எல்லோரையும் மயக்கும் இந்த வள்ளல் தனமும், ஹௌதார்ய குணமும் என்னையும் என் கரணங்களையும் ஈடுபடும்படி செய்தது,
எக்காரணத்தினாலோ? என்று வினவுகிறார் 102ம் பாசுரத்தில்.
வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன்
கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து
விளைந்திடும் சிந்தை யிராமானுசன் என்தன் மெய்வினைநோய்
களைந்து நன்ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே – – 103 –
சிங்கப்பெருமானது சீற்றம் அடியார்க்கு தினந்தோறும் சிந்திப்பதற்கு உரியது. அதுவே உய்யும் வழி.
தன் திறந்து அபராதங்களைப் பொறுக்கும் எம்பெருமான், தனது அடியார் திறத்து செய்யப்பட்ட அபராதங்களைப் பொறுக்காதவனாய்,
அவுணனின் ஆகம் (மார்பு) பிளந்தமை ஆகிய இந்த கீர்த்திகள் எம்பெருமானார் திருவுள்ளத்திலே ஓங்கி வளர்ந்த பயிர்களாக விளைகிறதாம்.
ஆத்திரம் தீர, நகத்தால் முடித்ததோடு நில்லாமல், பிணத்தைப் பார்த்தும் , நாமடித்துக் கோபத்தைக் காட்டுவதே
நரசிங்கனது சீற்றத்தின் எல்லை..
பெரியவாச்சான் பிள்ளை, முதல் திருவந்தாதி 65ம் பாசுர வ்யாக்யானத்தில்
‘’ சரணா கதற்கு தஞ்சமான தனமாவது ஆஸ்ரிதார்த்தமாக இரண்யனைப் பற்றப் பண்ணும் சீற்றம்” என்கிறார்.
நரம் கலந்த சிங்கமான ந்ருஸிம்ஹனே வல்வினை போக்கி தெள்ளறிவுடன் வாழ்விப்பார் என்பது ஞானம்.
அத்தகைய ஞானத்தை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தருகிறார் எம்பெருமானார் என்கிறார், அமுதனார். (103)
கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –
எம்பெருமானாருடைய திருமேனியழகை அனுதினமும் அனுபவிப்பதான க்ருபையை அருளிச் செய்தால்,
கொடிய நரகமாகிய ஸம்ஸாரத்திலும் தரித்திருப்பேன்.
அவ்வனுபவம் கிடைக்கப்பெறாவிடில், பரமபத்திலும் தயாரித்திருக்க மாட்டேன் என்கிறார் 104ம் பாட்டில்.
உள்ளங்கை நெல்லிக்கனியென அந்தக் கண்ணனையே காட்டித் தரிலும் தமக்கு மிகவும் பிரியமானது,
எம்பெருமானாரது திருவடிவழகும், திருமேனியில் விளங்கும் குணங்களுமேயாகும் என்கிறார்.
கருத்த மேகமானது தன்னிடமுள்ள முழுமையான நீரனைத்தையும் பொழிந்த பிறகு, வெளுத்துப் போகும் .
அவ்வாறு செழுமை வாய்ந்த மேகம் போல் இராமானுஜர் உள்ளதால் அவரை “செழுங்கொண்டல் “ என்கிறார்.
செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன்ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப்பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந் திரைத்தாடுமிடம் அடியேனுக் கிருப்பிடமே – – -105 –
“ஸதா பச்யந்தி சூரய; என்றபடி நித்யஸூரிகளிடையே ஸ்ரீ வைகுந்தத்தில் இன்பத்தை அளித்துக் கொண்டிருக்கும் எம்பெருமான்,
ஸம்ஸாரிகளை கைவிடாத வாத்சல்ய குணத்தாலே அங்கிருந்து வந்து இறங்கிய இடம் திருவேங்கட மாமலை.
இரண்டு குழந்தைகளுக்கிடையே கிடந்து பாலூட்டும் தாய் போலே, தரையிலும் இறங்காமல் விண்ணகத்திலும் தங்காமல்
வேங்கட மலை உச்சியில் உள்ளான்.
அவன் மேலும் உகப்படைந்து தன்னைச் சரணடையாதார் திறத்திலும் தானே வலுவாக சென்ற இடம்,திருமாலிருஞ்சோலை .
இவ்விடங்களைக் கோவில் கொண்டது போல், எபெருமானார் இதயத்தையும் கோயிலாகக் கொண்டான், எம்பெருமான்.
அந்த எம்பெருமானார் இப்போது எழுந்தருளியுள்ள இடம் தன்னுடைய இதயத்தினுள் என்கிறார் 106ம் பாட்டில்.
ஆசார்ய சம்பத்தினுடைய மகிமை, அமுதனார் கால் பாவமாட்டேன் என்று ஒதுக்கிய ஸ்ரீ வைகுந்தமும்,
ஆச்சார்யனோடும், அவனுகந்த ஈஸ்வரனோடும் தானாகவே இவரை நாடி வருகின்றன.
இதனால் ஆசார்யனைப் பற்றுகை பகவானைப் பற்றுகையினின்றும் வேறுபட்டதன்று:.
பேற்றினை எளிதில் தர வல்லது என்பது தெளிவாகின்றது.
“ ஈஸ்வனைப் பற்றுகை கையைப் பிடித்து காரியம் கொள்ளுமா போலே, ஆச்சார்யனைப் பற்றுகை
காலைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமாப்போலே” என்று ஸ்ரீ வசன பூஷனம் 47ம் சூர்ணிகையில்
பிள்ளைலோகாச்சார்யார் அருளிச் செய்துள்ளார்.
இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோய் உடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்றுவீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்று இருக்கும்படி என்னை யாக்கி யங்கு யாட்படுத்தே – – – 107-
அடுத்த பாசுரத்தில், (107) அடியேன் செய்யும் விண்ணப்பம் ஒன்றுண்டு என்று கூறி,
வியாதிகளுக்கு இருப்பிடமான சரீரம் தோறும் பிறப்பதும், இறப்பதுமாய் எண்ணரிய துன்பங்களால் தாக்கப்பட்டு,
நாசமடையும் நிலை ஏற்பட்டாலும் தேவரீருடைய அடியவர்களுக்கே அன்புடையவனாக ,ஆட்கொண்டு,
அடியேனை அவ்வடியார்கள் திறத்திலே அடிமையாக அமையும்படி அருள் புரிய வேண்டும் என்று அமுதனார் விண்ணப்பிக்கிறார்.
அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-
நீர் உளது எனில் உளது மீன். மார்பு உளது எனின் உள்ளாள் , பெரிய பிராட்டி.
நாரத்தைப் (நீர்) பற்றியுள்ளன கயல் மீன்கள். நாராயணனைப் பற்றியுள்ளாள் பங்கயப்பாவை.
தென்னரங்கனுடைய திருமார்பிலே நித்யவாசம் பண்ணுகிறவளாய், சிறந்த தாமரைப்பூவிலே பிறந்த பாவையான
ஸ்ரீ ரங்க நாச்சியாரை , புருஷாகாரமாகப் போற்றுவோம் என்கிறார் அமுதனார் தமது 108ம் பாசுரத்தில்.
சரமபர்வ நிஷ்டருக்கு ப்ராப்யம் ஆச்சார்ய சரணாவிந்தம் என்பதையும்,
இவ்விடமும் பரமபதத்திலும் கூட அவரது திருவடிகள் சரணம் என்றும்
அது பிரிவின்றி நிரந்தரமாக உள்ளதாக பற்றுபவர்கள் ,
ஆச்சார்ய நிஷ்ட்டைக்கு அதிகாரிகள் என்பதையும் அமுதனார் இங்கு காட்டியுள்ளார்.
“இராமானுஜ சரணாரவிந்தம் நம் தலைமிசை மின்ன, மங்கள வாழ்க்கை பெற்று, நிரந்தரமாக வீற்றிருப்பதற்கு ,
மலர் சூடி , மங்கள வடிவினளான மலர்மகளைப் போற்றுவோம்” என்று
“ பூ மன்னு மாது “ என்று தொடங்கி “
“ கடைசியில் “பங்கய மாமலர்ப் பாவை “ என்று சொல்லி,
“சர்வம் சம்பத்யதே” என்று இராமானுஜருக்கு சரணாகதி அளித்த ஸ்ரீ ரங்கா நாச்சியரைப் போற்றிப் பொலிவு செய்து,
இந்த நூற்றாந்தாதியை தலைக் கட்டி யருளுகிறார் , திருவரங்கத்தமுதனார்.
—————
1-மோக்ஷ பிரதத்வம் -சம்சார நிவர்த்தக காஷ்டை -அமலன்
பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அரும் தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே – 32-
அபிபவியா நின்று உள்ள கலி தோஷத்தாலே துக்கப்பட்ட பூமியை -இத்தலையிலே அர்த்தித் வாதி நிரபேஷமாக
தம்முடைய ஒவ்தார்யத்தாலே -வந்து -நிமக்நோத்தாரணம் பண்ணி -ரஷித்தவராய் -பிரபன்ன ஜன கூடஸ்தர் ஆகையாலே –
தஸ்மான் நியாச மேஷாம் தபஸா மதிரிக்த மாஹூ-தைத்ய நாரரா -என்கிறபடியே
சர்வ தபச்சுக்களிலும் மேலாய்க் கொண்டு -துர்லபமாய் இருக்கிற சரணாகதி ரூப தபஸ்ஸை உடையராய்-
எங்களுக்கு தம்மை முற்றூட்டாக தந்த-ஸ்ரீ எம்பெருமானாரை-சேரும் அவர்களுக்கு
ஸ்வரூப அனுரூபமான மதிப்பும்-
வியசன சுகங்களில் அனவ சாதா நுத்தர்ஷ-ஹேதுவான ஷமா குணமும் –
ஜிதேந்த்ரியத்வ ரூபமான பராபிபவன சாமர்த்த்யமும்-
குணவத்தாப்ரதையும்-
தத்வ ஹித புருஷார்த்தங்களை விஷயமாக வுடைத்தாய் ஆகையாலும்-கட்டளைப் பட்டு இருந்துள்ள ஜ்ஞானமும்-
தத் கார்யமான பக்தி ரூப சம்பத்தும்-
ரதிர் மதி –ஸ்ரீ குணரத்னகோசம் -17 – இத்யாதி -ஸ்லோகத்தின் படியே
ஸ்ரீ பிராட்டி கடாஷ லஷ்யமானவர்களுக்கு-அவை தானே மேல் விழும் என்றால் போலே-
இங்கும் அபேஷியாது இருக்க தானே வந்து சேரும் –
பொருந்துதல்-சேருதல்-அதாவது ஸ்வரூப அனுரூபத்வம்
தேசு-மதிப்பு–
ஸ்ரீ உடையவர் நித்ய விபூதியும் -இஹ பர லோக இன்பம் அருளுவார் –
அல் வழக்குகள் போக்கி அடியார்க்கு ஆட்படுத்த வல்லவர் அன்றோ –
—————
2-ஜகத் காரணத்வ காஷ்டை-ஆதி
————
3-ஜகத் சரண்யத்வ காஷ்டை-ஆதி
———–
4-சர்வ உபகாரத்வ காஷ்டை-பிரான்
——————
5-கிருபா விசேஷத்வ காஷ்டை-அடியார்க்கு ஆட்படுத்த
————–
6-ஸ்வாதந்தர்ய காஷ்டை-என்னை ஆட்படுத்த
—————
7-நித்ய நிர்தோஷத்வ காஷ்டை-விமலன்
——————
8-நித்ய ஸூரி நிர்வாஹத்வ -திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டா ஸ்வாமித்வ காஷ்டை-விண்ணவர் கோன்
—————
9-ஸுலப்ய காஷ்டை-வேங்கடவன்
—————-
10-ஸுசீல்ய காஷ்டை-நிமலன்
—————–
11-வாத்சல்ய காஷ்டை-நின்மலன்
——————
12-கைங்கர்ய சாதன விசேஷத்வ ப்ராப்ய காஷ்டை-நீதி வானவன்
—————-
13-சர்வ ஸ்வாமித்வ ஆஸ்ரித பக்ஷபாத காஷ்டை-அரங்கத்து அம்மான்
————-
14-திருவடிகள் பாவானத்வ காஷ்டை-திருப் பாதம்
————–
15-திருவடிகள் போக்யத்வ காஷ்டை- கமல பாதம்
—————
16-அயத்ன -அநாயாசேந போக்யத்வ காஷ்டை-வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றவே
———–
அமலன்- தனக்கு அடிமை -பொருந்திய தேசம்
விமலன் -அடியார்க்கு தன்னை
நிமலன் -நிர்ஹேதுகம் -காரேய்
நின்மலன் -தனக்கு இன்புறவே அடியார்க்கு
இதுக்கும் மேல்
மண் மிசை –நாரணர்க்கு ஆளாயினரே
புண்யம் போத -வகுள பூஷண பாஸ்கரர் போல்
பிராட்டி -லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி
காரேய் கருணை -அங்கு உடன் இருந்த ராக்ஷஸிகள் -இவரோ நம் வரை ஏறிப்பாயும்
க்ரந்தஸ்தம் மூலம் -ஆச்சார்ய பரம்பரை மூலம்
————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்