ஸ்ரீ பண்டரிபுரம் ஸ்ரீ விட்டல கோவில்

ஸ்ரீ  பண்டரிபுரம் ஸ்ரீ விட்டல கோவில்

ஸ்ரீ விட்டல் என்னும் விட்டோபாவும் (கிருஷ்ணன்) ருக்மிணியும் தரிசனம் தரும் விட்டல கோவில் இடம்பெற்ற பண்டரிபுரம் , சோலாப்பூரிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது , பண்டரீபுரம் ரயில் நிலையத்தில் இறங்கியும் கோவிலுக்குப் போகலாம்.

1195-ம் ஆண்டுமுதல் வரலாற்றுக் குறிப்புகளில் இடம்பெறும் கோவில் இது.

இந்த ஊரில் மேலும் பல கோவில்களும் புனிதர்களின் மடங்களும் பக்தர்களைக் கவர்ந்து இழுக்கின்றன . பீமா என்னும் நதி இந்த ஊரின் நடுவே சந்திரபாகா என்ற பெயரில் பாய்கிறது . தமிழ் நாட்டில் தேவாரம், திவ்யபிரபந்தம் உள்ளது போலவே மஹாராஷ்டிரத்தில் மராத்தி மொழியில் அபங்கம் என்னும் பக்தி பாடல்கள் உள்ளன. அவற்றில் இந்த நதியின் பெயரும் இறைவனின் பெயரும் அடிக்கடி வரும்.

நாமதேவ் பயரி என்னும் இடத்தைத் தாண்டி பஸ்ச்சிம  வாயில் வழியாக நுழைந்தால்
கீழ்கண்ட கடவுளரின் கோவில்களைக் காணலாம் :
கணபதி,
தத்தாத்ரேயர்,
கருடன்,
மாருதி என்னும் அ
கருட கம்பம் ,
நரசிம்மர்,
ஏகமுக தத்தாத்ரேயர்,
ராமேஸ்வர லிங்கம்,
கால பைரவர்,
லெட்சுமி நாராயணன்,
காசி விஸ்வநாதர் ,
சத்ய பாமா,
ராதிகா,
சித்தி விநாயகர் ,
மஹா லெட்சுமி,
கண்டோபா ,
அமிதா பாய் ,
சனைச்சரன் ,
குப்த லிங்கம்,
கனோபத்ர சந்நிதிகள்.

ஸ்ரீ விட்டல் சந்நிதி

இதுதான் பிரதான கோவில்;
நகரின் நடுவில் அமைந்துள்ளது கோவிலுக்கு எட்டு வாசல்கள் இருக்கின்றன.
கிழக்கு வாசலை நாமதேவர் என்ற மகானின் பெயரில் அழைக்கின்றனர்.
அவர் இறந்த பின்னர் அவருடைய வேண்டுகோளின் பேரில் அவருடைய உடற்பகுதிகள் புதைக்கப்பட்ட
இடத்தின் மீது கட்டப்பட்ட படிகளை உடையது நாமதேவ் ப்யாரி .
அதைத் தாண்டிச் சென்றால் வருவது முக்தி மண்டபம்.
அங்கே மூன்று அறைகள் உண்டு.
பின்னர் நாம் நுழைவது மரத் தூண்களைக் கொண்ட சபா மண்டபம்.;
அடுத்தது 16 கம்பங்களை-தூண்களை உடைய சோல் கம்ப ;
அதில் ஒரு தூண் தங்கத் தகடால் மூடப்பட்டிருக்கும்

இது கருட கம்பம் எனப்படும் . அதனருகே உள்ள கற்பலகையில் பொது .ஆண்டு CE 1208 கல்வெட்டைக் காணலாம் . பின்னர் 4 தூண்களை உடைய சோகாம்ப் வரும்.

பின்னர் வெள்ளிக்கூரை வேய்ந்த மண்டபத்தில் ஸ்ரீ விட்டல் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருவார்
அவரைக் கண்டு ஆசிபெற ஆண்டுதோறும் பத்து லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்.
விட்டல் ,
விட்டோபா,
விட்டல் நாத் ,
பண்டரிநாதன் ,
பாண்டுரங்கன் என்ற பல பெயர்களில்
அவரைப் போற்றியவாறு பக்தர்கள் பவனி வருவார்கள் .
பின்னர் ருக்மிணி சந்நிதி வருகிறது.
அவரையும் தரிசித்த பின்னர் வெளியே செல்லலாம்.

பாத ஸ்பர்ச தரிசனம் – காலைத் தொட்டு வணங்கலாம்

ஜாதி, குலம் , கோத்ரம் வேறு பாடின்றி அனைவரும் விட்டோபா சிலை அருகில் சென்று, தொட்டு வணங்கலாம்.
விடோபாவின் பாதங்களில் பக்தர்கள் தலையை வைத்து வழிபடுவது மரபு.
இந்த சம்பிரதாயத்தை வேறு    எந்தக் கோவிலிலும் காணமுடியாது
இதற்கான வரிசையில் நின்றால் 3 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
விழாக் காலங்களில் 5 மணியும்
ஏகாதசி மற்றும் யாத்திரை ஊர்வலம் வரும் நாட்களில் 36 மணி நேரமும்
காத்திருக்க நேரிடலாம் ;
இவரிடம் திருப்பதி பாலாஜியும் கூடத் தோற்றுவிடுவார்!!

முக தரிசனம்

கியூவரிசையில் நிற்க இயலாதோர், முக தரிசனம் செய்யலாம்.
இதை அரை மணி நேரத்தில் முடித்து விடலாம்.
ஆயினும் விட்டலையும் ருக்மிணியையும் 25 அல்லது 15 மீட்டர் தொலைவிலிருந்தே காண முடியும் .
தமிழ் நாட்டுக் கோவில்களில் ஆறு கால பூஜை இருப்பது போல இங்கும்
அதிகாலை முதல், பல ஆரத்திகள், தீவாராதனைகள் நடைபெறும்

நகரிலுள்ள ஏனைய கோவில்கள் :
பத்மாவதி கோவில்,
லகுபாய் அம்பா பாய்,
கோபால்பூர்,
விஷ்ணு பாத,
புண்டரீக ,
நாமதேவ்,
ஞான தேவ் ,
துகாராம் ,
கால மாருதி,
தம்பத மாருதி,
வியாச நாராயண,
யாமை துர்கா ,
கஜான மஹராஜ்,
ராம் பாக் ,
லக்ஷ்மண் பாக் கோவில்கள் .

அருகிலுள்ள முக்கிய இடங்கள்

கைக்கடி மஹராஜ் மடம் , தனபுரி மஹராஜ் மடம், குஜராத்தி தேவஸ்தான,ம்.

வாரி விழாவின்போது, பல சந்யாசிகள் பெயர்களில் பக்தர்கள் சுமந்துவரும் பல்லக்குகள்,
கோவிலுக்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் வர்காரி என்னும் இடத்தில் நிறுத்தப்படும்
மஹான் ஞானேஸ்வர் பெயரில் ஆலந்தி நகரிலிருந்து 2 லட்சம் பக்தர்களுடனும்
தேஹு என்னும் இடத்திலிருந்து மேலும் பல்லாயிரம் துகாராம் பக்தர்களும் ,வருவார்கள்.
பிற இடங்களில் மேலும் எட்டு லட்சம் பேர் சேருவர் .
இது 800 ஆண்டுகளாக நடைபெறுகிறது
ஆஷாட ஏகாதசி விழாதான் மிகப் பெரியது
சித்திரை,
ஆடி,
கார்த்திகை,
மாசி ஆகிய நாலு மாதங்களில்
இந்த பவனிகள் நடைபெறுகின்றன.

 

வாரி என்பது கால் நடையாக பவனி வருதல்,
வர்காரி என்பது அப்படி காலில் நடந்து வரும் பக்தர்கள் ஆவர்..
பக்தர்களின் பரவசம்மிகுந்த ஊர்வலங்கள், நம்மூர் காவடி ஊர்வலங்களை நினைவப்படுத்தும்.

காஞ்சி மஹா சுவாமிகள் (1894-1994), சாதாரா நகரில், 1980-ல்
வியாச பூஜை காலத்தில்  சில மாதங்களுக்கு முகாமிட்டிருந்தார்.
அப்போது சிதம்பரம் மாதிரியில் வடக்கிலும் ஒரு கோவில் அமைக்க திட்டமிட்டார்.

ஏழு குன்றுகள் சூழ்ந்ததால் இது சாதாரா என்று அழைக்கப்படுகிறது .
சுவாமிகளின் திட்டத்தைக்  கேட்டவுடன் ஊர்ப் பிரமுகரும்
காஞ்சி சங்காராச்சார்யார் ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதியின் பக்தருமான சாமண்ணா ,
தனது நிலத்தைக் கோவில் கட்ட தானம் செய்தார்.
அப்போதைய கர்நாடக, தமிழ்நாடு, மஹாராஷ்டிர அரசுகள், அந்தக் கோவிலுக்கு நிதி உதவி செய்தன.
கேரள மாநிலம், நல்ல ஜாதி மரங்களைக் கோவில் கட்ட கொடுத்து உதவியது.
தர்ம சிந்தனையாளர்களும் பொருளுதவி செய்தனர் .

சிதம்பரம் போலவே எழுந்த இந்தக் கோவிலின் கும்பாபிஷேகம்
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் 1984-ம் ஆண்டு நடத்தப்பட்டது
கோவில் கட்டும் பணி 1981ல் துவங்கி மூன்றே ஆண்டுகளில் நிறைவு அடைந்தது.
சிதம்பரத்திலிருந்து வரும் தீட்சிதர்களே உத்தர சிதம்பரம் நடராஜருக்கும்
அபிஷேக ஆராதனைகள் செய்யவேண்டும் என்றும் சுவாமிகள் விரும்பினார்.
அதன்படி இப்போதும்
ரொடேஷன் Rotation முறையில் சிதம்பரம் தீட்சிதர்களே இக் கோவிலுக்கு வந்து பூஜை செய்கின்றனர்.

மும்பை நகரத்தில் மட்டுமே இருபது புகழ்மிகு இந்துக் கோவில்கள் உள்ளன. இதோ அவற்றின் பெயர்கள் :-

1.சித்தி விநாயகர் கோவில்

2.மகாலெட்சுமி கோவில்

3.மும்பாதேவி கோவில்

4. குட்டி சபரிமலை கோவில்

5. ஹரே கிருஷ்ணா கோவில் கோவில்

6.வைஷ்ணவ தேவி கோவில்

7.பாபுல்நாத் சிவன் கோவில்

8.வாகேஸ்வரர் சிவன் கோவில்

9.ராதா கோபிநாத் கோவில்

10.பாலாஜி/ வெங்கடேஸ்வரா கோவில்

11.சுவாமிநாராயண் கோவில்

12.பிரபாதேவி கோவில்

13.கண்டேஸ்வரர் ஹனுமான் கோவில்

14.இச்சாபுரி கணேஷ் கோவில்

15.ஆர்ய சமாஜ் கோவில்

16.சிருங்கேரி மடம் கோவில்

17.சுவர்ணா கோவில்

 18.ஸஹர் ஐயப்ப சிவா பார்வதி கோவில்

19.BAPS சுவாமிநாராயண கோவில்

20.சமணர் கோவில் (Jain Temple)

மும்பா தேவி கோவில்

மும்பை என்ற பெயருக்கே காரணமாக அமைந்த மிகப்பழைய கோவில் இது.
துர்கா தேவியின் வேறு பெயர் மும்பா தேவி.
மதுரைக்கு மீனாட்சி,
காஞ்சிக்குக் காமாட்சி,
காசிக்கு விசாலாக்ஷி என்பது போல
ஒவ்வொரு ஊருக்கும் உரித்தான கடவுள் உண்டு.
அவ்வகையில் மும்பை நகரின் தெய்வம் மும்பா தேவி .
விவசாயிகளும், மீனவர்களும், சந்திர வம்ச க்ஷத் ரியர்களும் காலா காலமாக வழிபடும் தெய்வம் அவள் .
தற்போதைய கட்டிடங்கள் 1675-ம் ஆண்டு கட்டப்பட்டவை.
ஒரு மேடை மீது காட்சி தரும் தேவிக்கு கிரீடம், நகைகள் ஆகியன அழகு சேர்க்கின்றன.
கருங்கல்லிலான  தேவிக்கு முகத்தில் ஆரஞ்சு வர்ணம் பூசப்பட்டுள்ளது
கோவிலுக்குள் பிற தெய்வச் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.
செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை திறந்திருக்கும் இக்கோவிலுக்கு
செவ்வாயன்று நிறைய பக்தர்கள் வருகின்றனர்.

சித்தி விநாயகர் கோவில்

பிள்ளையார், எல்லா இந்துக்களுக்கும் முதற் கடவுள் என்ற போதிலும் மஹாராஷ்டிர மக்களுக்கு தேசீய கடவுளும் ஆகும்.
வங்காளத்தில் துர்கா பூஜை போல மஹாராஷ்டிரத்தில் கணேஷ் சதுர்த்தி ஒரு வாரத்துக்குக் கொண்டாடப்படும்.
மும்பை நகர சித்தி விநாயகருக்குக் கூடுதல் சிறப்பு என்னவென்றால்
பாலிவுட் நடிகர் நடிகையரும் அரசியல்வாதிகளும் வருகை தந்து கோவிலின் பெருமையை உயர்த்திவிட்டனர் ;
எல்லோருக்கும் வரம் தரும் சக்தி உடையவர் என்பது இதன் பொருள்.
1801-ம் ஆண்டில் கட்டப்பட்டது.

இங்குள்ள பிள்ளையார் வலம் சுழி பிள்ளையார்
இந்த மாநிலத்தின் பெரிய வரும்படி தரும் கோவில்களில் இதுவும் ஒன்று.
அந்தக் காலத்திலேயே ஆண்டு வருமானம் 25 கோடிரூபாய்
கோவிலின் மரக்கதவுகளில் பல தெய்வ உருவங்களைக் காணலாம் .
தங்கத் தகடுகளுக்கு இடையே கர்ப்பக்கிரகம் ஜொலிக்கும். அதிகமான பக்தர்கள் வரும் கோவில் இது.

மகாலெட்சுமி கோவில்

மும்பை நகருக்குச் செல்லுவோர்
சித்தி விநாயகர் கோவிலையும்
மஹா லக்ஷ்மி கோவிலையும்
தரிசிக்காமல் வர மாட்டார்கள்.
உலகின் செல்வச் செழிப்பு மிக்க நகர்களில் பம்பாயும் ஒன்று.
இதற்குக் காரணம் மஹாலெட்சுமியும்
மும்பா தேவியும் என்பது மக்களின் நம்பிக்கை
இந்து சமய வணிகர் தாக்ஜி தாதாஜி  இந்தக் கோவிலை 1831ம் ஆண்டில் கட்டினார்
இங்கு மூன்று தேவிகள் காட்சி தருகின்றனர்.
மகாலெட்சுமியானவள் கைகளில் தாமரை மலர்களை ஏந்தி நிற்கிறாள்;
மஹா காளியும் மஹா ஸரஸ்வதியும் இருபுறங்களில் நிற்கிறார்கள் .
மூவரும் தங்க வளையல்கள், மூக்குத்திகள், இரத்தின மாலைகளுடன் ஜொலிக்கின்றனர்
வசந்த காலத்தில் வரும் நவராத்திரியும்
ஆஸ்வீன மாத பெரிய நவராத்ரியும்
(தமிழக கணக்குப்படி புரட்டாசி நவராத்ரி)
மிகப் பெரிய பண்டிகைகள் .
கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் எல்லாம் மின் விளக்குக்களால் அலங்கரிக்கப்படுகிறது.

இந்தக்கோவில் பற்றி செவி வழிக் கதைகளும் உலவுகின்றன.
பிரிட்டிஷ் கவர்னர் ஹார்ன்பி என்பவர் வோர்லி, மலபார் என்னும் இரண்டு இடங்களை இணைக்க
ஒரு கடற் பாலம் கட்டுவதற்குத் திட்டமிட்டு அந்தப் பணியை ராம்ஜி ஷிவ்ஜி பிரபு என்ற
தலைமை என்ஜினீயரிடம் ஒப்படைத்தார்.
ஆனால் பாலம் கட்ட முடியாதபடி பல இடையூறுகள் தலையெடுத்த வண்ணமிருந்தன.
ஒரு நாள் ராம்ஜியின் கனவில் மகாலெட்சுமி தோன்றி,
தான் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடப்பதைத் தெரிவித்தாள்.
முஸ்லீம் படை எடுப்பாளர்களால் கடலுக்குள் தூக்கி எறியப்பட்டிருந்த சிலைகளை
ராம்ஜி மீட்டு, கோவில் கட்ட வழிவகை செய்தார் .
பின்னர் பாலம் கட்டும் பணி  இனிதே நிறைவேறியது .
ஒரு குன்றின் மீது அமைந்த இந்தக்கோவில்,
இன்று ஏராளமான பக்தர்களைக் கவர்ந்து இழுக்கிறது.

பாலாஜி – வெங்கடேச்வர சுவாமி கோவில்

பாலாஜி கோவில், தமிழ்நாட்டு கோபுரம் போல பெரிய உயரமான கோபுரத்துடன் திகழ்கிறது.
ஏனைய மராட்டிய கோவில்களின் தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது .
Nerul நெருள் ரயில் நிலையத்துக்கு அருகில் குன்றின் மேல் அமைந்த இந்தக் கோவில்,
பக்தர்களுக்கு திருப்பதியை நினைவுபடுத்தும்.
தென்னிந்திய மக்களைக் கவர்ந்து இழுக்கும் கோவிலுக்குள் ராமானுஜர், ருக்மிணி , லட்சுமி, ராம , லட்சுமண, ஹனுமான் சந்நிதிகளும் இடம்பெற்றுள்ளன
60 அடி  உயர கோபுரமும், உள்ளே அமைந்த நந்தவனமும் (தோட்டமும்) கோவிலுக்கு அழகு சேர்க்கின்றன .

ஸ்வாமி நாராயணர் கோவில்

ஸ்வாமி நாராயண பக்தர்களில் இரண்டு பிரிவினர் இருக்கின்றனர்.
அவர்கள் தனித்தனியே கோவில்களைக் கட்டி வழிபடுகின்றனர்.
இந்த ஸ்வாமி நாராயண கோவில் மிகவும் பழமையானது
ஸ்வாமி நாராயண சம்பிரதாயத்தினர்ன் நடத்ததும் இக்கோவில் 1903ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது
ஸ்வாமி நாராயணனுடன்,
கிருஷ்ணா,
லட்சுமி நாராயணன்,
ராதா,
கணஷ்யாம் சிலைகளும் அலங்கரிக்கின்றன
ஜன்மாஷ்டமி , ராம நவமி பண்டிகை காலங்களில் பக்தர்கள் பெருமளவில் வருகை புரிகின்றனர்.

மாதா வைஷ்ணவ தேவி கோவில்

ஜம்மு காஷ்மீரின் ஜம்மு பகுதியில் இருக்கும் வைஷ்ணோ தேவி கோவில் உலகப் பிரசித்தி பெற்ற பெரிய தலம் .
அந்தக் கோவில் ஒரு குகைக்குள் இருப்பதால் ஊர்ந்து சென்றுதான் கோவிலுக்குள் நுழைய முடியும்.
அதே பாணியில் மும்பை நகர வைஷ்ணவ தேவி கோவில் அமைக்கப்பட்டுள்ளது .
நகரின் நடுப்பகுதியில் இருக்கிறது. இந்தக் கோவில்
மாறுபட்ட புதிய அனுபவத்தை நல்கும் இடமாகத் திகழ்கிறது

————–

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் அருகில் உள்ள பரிக்கல் கிராமத்தில் புகழ்பெற்ற  ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோயில்  இருக்கிறது

இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுப் பழமை உடையது.
மத்வ பீடத்தைச் சேர்ந்த வியாசராஜ சுவாமிகள் 738 இடங்களில் ஆஞ்சனேயர் கோவில்  அமைக்க எண்ணி
இந்தக் கிராமத்தையும் தேர்ந்தெடுத்தார் .
ஆனால் பல தடைகள் ஏற்பட்டன.
பின்னர், வசந்த ராஜா என்பவர் கோவில் கட்ட முற்பட்டபோதும் தடைகள் ஏற்பட்டதாம்.
அதற்குப்பின்னர் கனகவல்லி சமேத லட்சுமி நரசிம்ம மூர்த்தி ஸ்தாபிக்கப்பட்டது.
தாயாரை அணைத்த வண்ணம்  பெருமாள் இருப்பதால், நரசிம்மனின் உக்கிரம் தணிந்து ,
அருள் சுரக்கும் கோவில் இது .

இங்கு வருவோருக்குப் பதவி உயர்வு கிடைக்கும்,
திருமணத் தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மேலும் மன நோயால் பாதிக்கப்பட்டோரின் நோயும் நீங்கும்.

திரை போட்டிருந்ததால், நாங்கள் வரிசையில் நின்று காத்திருந்தோம்.
மன நோயால் பாதிக்கப்பட்ட ஒரு TEEN AGE BOY டீன்  ஏஜ் பையனை அவனது தந்தை அழைத்து வந்திருந்தார்.
அவன் ஆடிக்கொண்டும் சப்தம் போட்டுக்கொண்டும் இருந்தான்.
கோவிலுக்குப் பலரும் எண்ணெயும் கொண்டுவந்து கொடுத்தார்கள்.

இங்கு மூலவருடன் ஆஞ்சனேயரும் உள்ளார்.

கிராம மக்கள் திரித்த ஊர்ப்பெயர் !-
இரு முறை கோவில் கட்டுவதில் தடை  ஏற்பட்டதற்கு பரகால என்ற அசுரனே காரணம்  என்றும்
அதனால் அவன் வேண்டிக்கொள்ள, ஊர்ப்பெயரை பெருமாள்
பரகால என்றிருக்க அனுமத்தித்ததாகவும்  தவறாக கதை கட்டப்பட்டிருக்கிறது.
உண்மையில் நரசிம்மர் அழித்தது ஹிரண்ய கசிபு என்ற அசுரனை.
அவர் அப்படிச் செய்ததற்கு காரணம். நாராயணன் பெயரை சொல்லிக்கொண்டிருந்த
பிரஹ்லாதனைக் காப்பாற்றுவதற்காக என்பது எல்லோரும் அறிந்த கதை .

பிரஹலாதன் பெயர் மருவி
பரகால  என்றும்
பரிக்கல் என்றும்
மருவியது என்பதே பொருத்தம்!!

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று நரசிம்மரை  நமக்குக் காட்டிய
பிரஹலாதன் பெயரை கிராம மக்கள் தெளிவாக எழுதி ஒட்டவேண்டும் .
பரகால அரக்கன் அல்ல; பக்தன்; அதாவது பிரகலாதன்!

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: