விபரீதானி நிமித்ததானி  —

ராமன் பட்டாபிஷேகம் நடைபெறாது என்பது முக்காலமும் உணர்ந்த முனிவரான வால்மீகிக்கு முன்னரே தெரிந்துவிட்டது. முனிவர்களும் ஜோதிடத்தை வைத்துத்தான் அப்படிச் சொல்லுகின்றனர். நிமித்தம் என்ற ஆரூடம் பற்றிய ஸம்ஸ்க்ருத்ச் சொல்லை தொல்காப்பியரும் பயன்படுத்துகிறார். பகவத் கீதையிலும் விபரீதானி நிமித்ததானி  என்ற வாக்கியத்தைக் காண்கிறோம். 2400 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் எழுதிய அர்த்த சாஸ்திரத்திலும் காண்கிறோம். வால்மீகி ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றிலும் நிறைய இடங்களில் நிமித்தம் என்ற சொல் வருகிறது ; அதற்கு இரண்டு அர்த்தம் உண்டு (1)காரணம் , (2)ஜோதிட அறிகுறிகள் என்ற இரண்டு பொருள் அவை.

இதோ வால்மீகி எச்சரிக்கை:

அவஷ்டப்தம் ச மே ராம நக்ஷத்ரம் தாருணைர் க்ரஹைஹி

ப்ராயேண ஹி நிமித்தா நாமீத்ருசா நாமு பக்ரமே

ராஜா ஹி ம்ருத்யுமாப்னோதி கோராம் வாபதம் ருச்சதி

தாவதே வாபி ஷிஞ்சஸ்வ  சலா ஹி ப்ரா ணி நாம் மதி

ராமா ! எனது நக்ஷத்ரம் கொடிய க்ரஹங்களால் தாக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான நிமித்தங்கள் தோன்றும் பொழுது அரசன் மரணம் அடைவான் , இல்லையேல் கொடிய விபத்தைச்  சந்திப்பான். ஆதலால் அதற்குள் பட்டாபிஷேகத்தைச் செய்துகொள் என்று தசரதர் சொன்னதாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது .

ராமாபிரானுக்கு மரணம் சம்பவிக்காமல் 14 வருஷ வனவாசம் என்னும் விபத்தே நிகழ்ந்தது.

புறநானூற்றிலும் இதே காட்சி :

புறநானூற்றிலும் கொடிய நிமித்தங்களால் அரசன் மரணம் அடைவான் என்று புலவர் கூடலூர் கிழார் அஞ்சுகிறார். அதே போல அரசன் மரணம் அடைகிறார்.

புலவர் கூடலூர் கிழார் ஒரு சங்க கால ஜோதிடர்

ஒருநாள் எரிகல் METEOR  ஒன்று வானத்திலிருந்து விழுந்தது.

அதனைக் கண்ணுற்ற புலவர் அப்போது இருந்த கிரஹ, நக்ஷத்ரங்களின் நிலையையும் அரசன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலின் ஜாதத்தையும்  ஒப்பிட்டுக் கணித்துப் பார்த்தார்.

அரசன் அன்றைக்கு ஏழாம் நாள் மரணம் அடைவான்  என்பதைக் கண்டறிந்தார் . அதுபோலவே மன்னர் இறந்தான். அப்போது அவர் பாடிய பாடல் இது. இந்தப் பாடலில் அரண்மனைக்குள் கண்ட நிமித்தங்களையும் கூடலூர்க் கிழார் பட்டியலிட்டுள்ளார்.

புறநானூறு 229

ஆடு இயல் அழல் குட்டத்து

ஆர் இருள் அரை இரவில்,

முடப் பனையத்து வேர் முதலாக்

கடைக் குளத்துக் கயம் காய,

பங்குனி உயர் அழுவத்து,                    5

தலை நாள்மீன் நிலை திரிய,

நிலை நாள்மீன் அதன் எதிர் ஏர்தர,

தொல் நாள்மீன் துறை படிய,

பாசிச் செல்லாதுஊசித் துன்னாது,

அளக்கர்த் திணை விளக்காகக்    10

கனை எரி பரப்ப, கால் எதிர்பு பொங்கி,

ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே;

அது கண்டு, யாமும் பிறரும் பல் வேறு இரவலர்,

‘பறை இசை அருவி நல் நாட்டுப் பொருநன்

நோய் இலனாயின் நன்றுமன் தில்’ என 15

அழிந்த நெஞ்சம் மடிஉளம் பரப்ப,

அஞ்சினம்; எழு நாள் வந்தன்று, இன்றே;

மைந்துடை யானை கை வைத்து உறங்கவும்,

திண் பிணி முரசம் கண் கிழிந்து உருளவும்,

காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும்,     20

கால் இயல் கலி மாக் கதி இல வைகவும்,

மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின்,

ஒண் தொடி மகளிர்க்கு உறு துணை ஆகி,

தன் துணை ஆயம் மறந்தனன் கொல்லோ

பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு        25

அளந்து கொடை அறியா ஈகை,

மணி வரை அன்ன மாஅயோனே?— 229

பொருள்

மேட இராசி பொருந்திய கார்த்திகை நாளின் KRITHIKA NAKSHATHRA முதற்காலின்கண்

நிறைந்த இருளை உடைய பாதி இரவின்கண்

முடப்பனை போலும் வடிவுடைய அனுட ANUSHA NAKSHATRA நாளின் அடியின்வெள்ளி (முதல் நட்சத்திரம்) முதலாகக்,

கயமாகிய குளவடிவு போலும் வடிவமைவுடைய புனர்பூசத்துக் PUNAR PUSA கடையின் வெள்ளி எல்லையாக விளங்கப்,

பங்குனி FALGUNA MONTH  மாதத்தினது முதற் பதினைந்தின்கண் உச்சமாகிய உத்தரம் UTTARA STAR அவ் உச்சியினின்றும் சாய,

அதற்கு எட்டாம் மீனாகிய மூலம்MOOLAM STAR அதற்கு எதிரே எழாநிற்க, அந்த உத்தரத்துக்கு முன் செல்லப்பட்ட எட்டாம் மீனாகிய மிருகசீரிடமாகிய MRIGASHIRSHA (நட்சத்திரம்) துறையிடத்தே தாழக்,

கீழ்த்திசையிற் போகாது, வடதிசையிற் போகாது,

கடலாற் சூழப்பட்ட பூமிக்கு விளக்காக முழங்காநின்ற தீப் பரக்கக்,

காற்றால் பிதிர்ந்து கிளர்ந்து ஒரு மீன் விழுந்தது, வானத்தினின்றும்;

அதனைப் பார்த்து யாமும் பிறருமாகிய பல்வேறு வகைப்பட்ட இரவலர்

எம்முடைய பறையொலி போலும் ஒலியை உடைய அருவியை உடைய நல்ல மலைநாட்டு வேந்தனாகியவன்

நோயை உடையன் அல்லன் ஆகப்பெறின் அழகிது என

இரங்கிய நெஞ்சத்துடனே மடிந்த உள்ளம் பரப்ப யாம் அஞ்சினேம்;

அஞ்சினபடியேஏழாம் நாள் வந்தது ஆகலின், இன்று,

BAD OMENS – BAD NIMITTAS

வலிமையுடைய யானை கையை நிலத்தே இட்டுத் துஞ்சவும்,

திண்ணிய வாரால் பிணிக்கப்பட்ட முரசம் கண் கிழிந்து உருளவும்,

உலகிற்குக் காவலாகிய வெண்கொற்றக் குடை கால் துணித்து உலரவும்,

காற்றுப் போலும் இயலை உடைய மனம் செருக்கிய குதிரைகள் கதி இன்றிக் கிடக்கவும்,

இப்படிக் கிடக்கத்,

தேவர் உலகத்தை அடைந்தான்; ஆகையாலே,

ஒள்ளிய வளையையுடைய மகளிர்க்கு மேவப்பட்ட துணையாகித், தனக்குத் துணையாகிய மகளிரையும் மறந்தான் கொல்லோ?

பகைவரைப் பிணித்துக்கொள்ளும் வலிமையும், நச்சினோர்க்கு அளந்து கொடுத்தல் அறியாத வண்மையும் உடைய நீலமலை போலும் மாயோன்.

இந்தப் பாடலில் ஏராளமான ரகசியங்கள் உள்ளன

1. தமிழர்கள், சங்க காலத்திலேயே ஜோதிடத்தில் எந்த அளவுக்கு நிபுணத்துவம் அடைந்தனர் என்பதைக் காட்டும் 200 சங்க கால ஜோதிடக் குறிப்புகளில் மிகவும் முக்கியமான பாடல் இது.

2. கிரேக்க நாட்டிலிருந்துதான் இந்துக்களுக்கு ஜோதிடம் வந்தது என்று சொன்ன வெளிநாட்டுஅறிஞர்களின் முகத்திரையைக் கிழிக்கிறது.

3. ஆரிய- திராவிடம் வாதம் பேசி தங்களை அறிஞர்கள் போலக் காட்டிக்கொள்ளும் அரைவேக்காடுகள் முகத்தில் தார் TAR போன்ற கரியைப் பூசுகிறது.

4. இந்தப் பாடலில் வரும் பங்குனி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையும் பிராமணர்கள் தினமும் மூன்று வேளை செய்யும் சந்தியா வந்தனத்தில் சொல்லும் பாசி (பிராச்யை )ஊசி (உதீச்யை )  என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொற்களையும் கவனித்தல் வேண்டும். அஸ்வினி முதல் உள்ள நட்சத்திரக் கணக்கையும் கவனிக்க வேண்டும் .

இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் திரு ஞான சம்பந்தர் பாடிய கோளறு திருப்பதிகத்திலும் இந்த நக்ஷத்திரக் கணக்கு வருகிறது.

5. தமிழர் மாதங்களின் பெயர்கள் அனைத்தும் , சம்ஸ்க்ருத மாதங்களின் தமிழாக்கம் என்பதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் வழங்கிய சொற்பொழிவுகளிலிருந்து அறிக

6. நட்சத்திரங்களின் வடிவத்தை வைத்து, அவைகளுக்குப் பெயரிடும் முறையும் சம்ஸ்க்ருத ஜோதிட நூல்களில் உளதே . மிருக சீர்ஷம் = மான்  தலை என்பது போல பல மொழி பெயர்ப்புகள்.

7. எரிகல் வீழ்ச்சி (METEOR FALLING) ஒவ்வொரு வினாடியும் லட்சக் கணக்கில் நடக்கிறது என்பது வானியல் ASTRONOMY படித்தோருக்குத் தெரியும் ; ஆயினும் குறிப்பிட்ட திசையில் குறிப்பிட்ட நாளில் நிகழ்வதைக் கொண்டு ஆரூடம்  சொல்லுவார்கள்..

8. இது ராமாயண, மஹாபாரத காலத்திலிருந்தே வடஇமயம் முதல் தென் குமரி வரை  இருப்பதால் ஜோதிடம் என்பது கிரேக்கத்திலிருந்து வந்தது என்பது பிதற்றல்.

9.ஜோதிடம் சொல்லும்போது ஸம்ஸ்க்ருதச் சொற்களைப் பயன்படுத்திய கூடலூர்க் கிழார் பெரிய சம்ஸ்க்ருத அறிஞராக இருந்திருக்க வேண்டும்.

10. தமிழும் ஸம்ஸ்க்ருதமும் அறிந்தால்தான் இந்திய வரலாற்றைப்  பற்றிப்  பேச ஒருவருக்கு அருகதை உண்டு.. எடுத்துக்காட்டாக வராஹ மிஹிரரின் பிருஹத் சம்ஹிதாபிருஹத் ஜாதகம் ஆகியவற்றை ஐந்தாம் நூற்றாண்டு என்று சொல்லுவதும் தவறு. கூடலூர்க் கிழார், வால்மீகி போன்றோர் சொல்லும் ஜோதிடம், இந்தக் கலை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே செப்பம் அடைந்திருப்பதைக் காட்டுகிறது. ராமர் பட்டாபிஷேகத்துக்கு சித்திரா பெளர்ணமி நாளை வசிஷ்டர் தேர்ந்தெடுத்ததும் இன்னொரு சுலோகத்தில் வருகிறது.

ஆகவே தமிழ் மட்டும் படித்தவன் 50 சதவிகித அறிஞன்; ஸம்ஸ்க்ருதம்  மட்டும் படித்தவன் 50 சதவிகித அறிஞன்; இரண்டையும் பாடித்தவனே  முழு அறிஞன் . தமிழ் நாட்டில் டாக்டர் நாகசாமி, பி.எஸ் குப்புசுவாமி சாஸ்திரி போன்ற பேரறிஞர்கள் இப்போது இல்லாததால் பலரும் தமிழ் இலக்கியத்தை சரியாக எடைபோட முடிவதில்லை .

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: