ஸ்ரீ மார்க்கண்டேய முனிவர் தவியாய் தவித்தார். திருமகளே தனக்கு மகளாக அவதரிக்க வேண்டும் என்றும், நாராயணனே தனக்கு மருமகனாக அமைய வேண்டும் என்றும் ஆவல் கொண்ட அவர், அந்த இரண்டாவது எண்ணம் ஈடேறாமல் போய்விடுமோ என்று தவித்தார். திருமகள் அவருக்கு மகளாக அவதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையால், திருமாலுக்கு, தன்னுடைய சொந்த திட்டமும் நிறைவேற வேண்டியிருந்தது. முதலில் திருமாலின் திட்டம் என்ன என்று பார்ப்போம்.
துளசி, ஸ்ரீ மன் நாராயணனின் பாதங்களை அர்ச்சனைப் பொருளாக அலங்கரித்தாள். ஓர் இலையாக அவர் பாதத்தில் வீழ்ந்து கிடக்கும் தான் ஏறிட்டு அவர் திருமுக மண்டலத்தைக் காண இயலாது தவித்தாள். எத்தனை நாள் தான் பாத தரிசனம்! பரந்தாமனின் பேரெழில் முகத்தைக் காணத் தனக்கு எப்போது தான் கொடுத்து வைக்கும் என்று ஏங்க ஆரம்பித்தாள். தன்னுடைய இந்தக் குறையை வைகுந்த வாசனிடமே முறையிட்டாள். மெல்லச் சிரித்துக் கொண்டார் நாராயணன்.
தன் முகத்தை தரிசிக்க வேண்டும் என்பது தான் துளசியின் ஏக்கமா அல்லது திருமகள் மட்டும் மார்பில் நிரந்தரமாக வீற்றிருக்க தான் மட்டும் பாதத்திலேயே கிடக்க வேண்டியிருக்கிறதே என்ற பொறாமையா என்று யோசித்தார். ஆனாலும் அவளுக்கும் பெருமை சேர்க்க மனம் கொண்டார். ஆகவே, துளசியிடம், ‘‘மஹாலக்ஷ்மி, பல காலம் தவம் மேற் கொண்டு, என் அன்பை வென்று, பிறகுதான் என் மார்பில் இடம் கொண்டாள். அதேபோல நீயும் தவமியற்றினால் உனக்கு உரிய அங்கீகாரம் அளிப்பேன்,’’ என்று அறிவுறுத்தினார்.
அதோடு, திருமகள் மார்க்கண்டேய முனிவரின் மகளாக அவதரிக்கப் போகிறாள் என்றும், அவளை மணந்து கொள்ள தான் பூவுலகிற்கு வரப்போவதாகவும், அப்போது, அங்கே தவமியற்றக் கூடிய துளசிக்குத் தான் தரிசனம் தர முடியும் என்றும் வாக்களித்தார். அதுமட்டுமல்ல; ஸ்ரீதேவியை மணம் முடிக்குமுன், அதாவது தாங்கள் இருவரும் மாலை மாற்றிக்கொள்ளும் முன் துளசியையே தன் முதல் மாலையாகத் தான் தன் மார்பில் ஏற்றுக் கொள்வதாகவும் சொல்லி அவளை சந்தோஷப்படுத்தினார்.
மிகுந்த உற்சாகத்துடன் துளசி பூலோகம் வந்தாள். திருக்குடந்தையில் அமைந்திருந்த மலர்க் காட்டில், ஒரு செடி வடிவாக தவத்தை மேற் கொண்டாள். இதற்கிடையில் திருமகளே தனக்கு மகளாக வந்துதிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் தவம் மேற்கொள்ள சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்க வந்த மார்க்கண்டேயர், இந்த மலர்க் காட்டை கண்டதும் மனம் ஈர்க்கப்பட்டு உட்புகுந்தார். வெறும் காய், கனிகள், கிழங்குகளை மட்டுமே உட்கொண்டு தவம் இயற்றினார்.
எல்லாம் கூடி வந்ததை, இதை யெல்லாம் ஏற்கெனவே திட்டமிட்டு காய் நகர்த்திய பரந்தாமன், ஸ்ரீதேவியிடம், திருக் குடந்தை மலர்க் காட்டில் துளசிச் செடிக்குக் கீழே ஒரு குழந்தையாய் வடிவெடுத்து மார்க்கண்டேயருக்காகக் காத்திருக்குமாறும், பின்னொரு நாளில், அவளைத் தானே மண முடிக்க பூவுலகம் வருவதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, துளசிச் செடியின் அடியில் திருமகள் ஒரு குழந்தையாய் ஒளி வீசி, மலர்ச் சிரிப்பால் அந்த வனத்தையே மகிழ்வனமாக்கினாள். தவம் முடித்த மார்க்கண்டேயர் மெல்ல நடந்து வருகையில், துளசிச் செடிக்கு அடியில் ஒரு பேரொளி தன்னை ஈர்ப்பதைக் கண்டார். அங்கே பொன்னே உருவாக, பாரிஜாத மணமாக, தெய்வீகக் குழந்தை ஒன்று தனக்காகவே கிடப்பது கண்டு உள்ளம் பூரித்தார்.
துறவு, தவம், பற்றற்றத் தன்மை எல்லாம் அந்தக் கணத்தில் அவரிடமிருந்து விடைபெற்றன. அப்படியே அந்தக் குழந்தையை அள்ளி எடுத்து நெஞ்சார அணைத்துக் கொண்டார். தன் விருப்பப்படியே ஸ்ரீதேவியே தனக்கு மகளாகக் கிடைத்து விட்டதை அவர் உணர்ந்தார். அவர் அப்படி உணர்ந்ததை, தானும் தென்றல் சிலுசிலுப்பில் மெல்ல அசைந்து துளசிச் செடியும் ஆமோதித்தது. திருமாலின் மார்பகத்தை அலங்கரிக்கப் போகும் அந்தத் திருநாளுக்காகக் காத்திருந்தது.
பூமியிலிருந்து கிடைத்தவள் என்பதால், மகளை பூமிதேவி என்றழைத்துக் கொண்டாடினார் முனிவர். அவளை சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தார். அவள் மணப் பருவம் எய்திய போது தன்னுடைய இரண்டாவது உள்ளக் கிடக்கை நிறைவேறும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார். என்ன வேடிக்கை! முற்றும் துறந்த துறவியின் உள்ளம் லௌகீகத்துக்குத் திரும்புகிறது! இதுவும் இறை சார்ந்த, பக்தி மேன்மையின் வெளிப்பாடுதானோ!
மருமகனை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார் முனிவர். அவரது குடில் நோக்கி ஒரு பெரியவர் வந்தார். தள்ளாடும் நடை, கிழிசல் உடை, நரை முடி, இடுங்கிய கண்கள் என்று முதிய தோற்றம். வந்தவர் மார்க்கண்டேயரிடம் நேரடியாகவே கேட்டார்: ‘‘வாசலில் பேரழகாக நின்று கொண்டிருக்கிறாளே, அவள் உன் பெண்ணா? அவளை எனக்கு மணமுடித்துக் கொடு!’’
அதிர்ந்து போனார் முனிவர். என்னக் கொடுமை இது! எந்த வயதில் எந்த ஆசை வருவது என்ற விவஸ்தையே இல்லையா? ‘நான் பெருமாளுக்காகக் காத்திருக்கிறேன், இங்கே பிச்சைக்காரர் வந்து திருமணப் பேச்சு நடத்துகிறாரே’ என்று மனசுக்குள் அங்கலாய்த்தார். ‘‘பெரியவரே, உங்கள் வயது என்ன, என் மகள் வயது என்ன? அதோடு, இவளால் உங்களுக்கு சரியாக உணவு படைக்கவும் தெரியாதே. சமையலில் உப்பு போட வேண்டும் என்ற பக்குவமும் அறியாத சிறு பெண் இவள்,’’ என்று மன்றாடினார்.
‘‘அடடா, என்ன பொருத்தம் பாருங்கள்! வயது காலத்தில் எனக்கு உப்பு போட்ட பண்டம் ஆகாது என்பதை உங்கள் மகள் தெரிந்து வைத்திருக்கிறாள். இதைவிட வேறென்ன வேண்டும்? இப்படி என்னை அக்கறையுடன் கவனித்துக் கொள்ள இவளைவிட வேறு யார் எனக்குக் கிடைப்பார்கள்!’’ என்று முதியவர் நடுங்கும் குரலில் சொன்னார். இந்த பதிலைக் கேட்டுத் திடுக்கிட்டார் முனிவர். தட்டிக் கழிக்கவே முடியாது போலிருக்கிறதே என்று குழம்பி நின்றார்.
‘‘நீ உன் பெண்ணை எனக்கு மண முடித்துக் கொடுக்க வில்லை யானால் நான் என் உயிரைத் துறப்பேன்,’’ என்று சொல்லி மேலும் மிரட்டினார் முதியவர். பரிதாபமாக மகளைப் பார்த்தார் மார்க்கண்டேயர். அவளோ, பளிச்சென்று, ‘‘இந்தக் கிழவருக்கு என்னை மணமுடித்தால் நான் என் உயிரைத் துறப்பேன்.’’ என்றாள்!
இது என்ன சோதனை என்று பரிதவித்தார் முனிவர். இனியும் இந்த பக்தரைத் தவிக்க விடுவது முறையல்ல என்று கருதியதால், அவர் முன் நின்றிருந்த முதியவர் மறைந்து சர்வாலங்கார பூஷிதனாக மஹா விஷ்ணு தோன்றினார். பூமி தேவியும் வெட்கப் புன்முறுவலுடன் அவரைப் பார்த்தாள். அப்போது தான் திருமாலும், மஹாலக்ஷ்மியும் தன்னிடம் நாடகமாடியிருக்கிறார்கள் என்று முனிவருக்குப் புரிந்தது. திருமால் முனிவரைப் பார்த்து, ‘‘மார்க்கண்டேயரே, உம் மகள் எப்படி சமைத்துப் போட்டாலும் அதை நான் விரும்பி உண்பேன்.
உப்பிடப் படாதது ஒரு குறையே அல்ல. அதுவே உடல்நலம் காக்கும்,’’ என்று ஆறுதலும் அளித்தார். நெகிழ்ந்துபோனார் முனிவர். உணவுச் சுவை தான் யாரையும் எளிதாக வீழ்த்தக் கூடியது. அதையும் தன் மகளுக்காகத் தியாகம் செய்ய முன்வந்திருக்கும் இந்த மருமகன், ஒப்பிலா அப்பன் தான் என்று நெஞ்சு விம்மினார். பிறகு திருமாலிடம், ‘‘தாங்களும் என் மகளும் திருமணக் கோலத்திலேயே இத் தலத்தில் அர்ச்சாவதாரம் கொள்ள வேண்டும்.
தங்களுக்கு நிவேதிக்கப்படும் பிரசாதங்களில் உப்புச் சுவை இருத்தல் கூடாது,’’ என்று கேட்டுக் கொண்டார். இந்தக் கோரிக்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டார் பெருமாள். அதன்படி, இப்போதும் இந்த ஒப்பிலியப்பன் கோயிலில் உப்பில்லாமல்தான் பிரசாதங்கள் தயாரிக்கப்படுகின்றன, பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படுகின்றன, பக்தர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
அது உப்பில்லாத பிரசாதம் என்பது தெரியாவிட்டால், அந்த பிரசாதம் அற்புதமான சுவை கொண்டதாக இருக்கும்; தெரிந்தாலும், கொஞ்சம் மனசளவில் தயக்கம் இருக்குமே தவிர, மற்றபடி ருசியில் உப்பிட்ட உணவைவிட பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியாது. அது மட்டுமல்ல, ‘இந்தக் கோயிலுக்குள் வருபவர்கள் உப்பையோ, உப்பிட்ட உணவுப் பொருளையோ கொண்டு வரக் கூடாது; அப்படிக் கொண்டு வந்தால் அவர்கள் நரகத்துக்கு தான் போவார்கள்’ என்று ஐதீகம் இருப்பதாகவும் சொல்லி அச்சுறுத்துகிறார்கள்! ஒப்பிலியப்பன் தரிசனத்தை விடவா உப்பில்லாத இந்த பிரசாதம் பெரிது!
நம்மாழ்வார் இந்தப் பெருமாளை பொன்னே, மணியே, முத்தே என்றெல்லாம் வாழ்த்திக் கொஞ்சி மகிழ்கிறார்.
என் அப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்
பொன் அப்பன், மணி அப்பன், முத்து அப்பன், என் அப்பனுமாய்
மின்னப் பொன் மதிள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தனதாள் நிழலே– என்கிறார்
அவர். அதாவது, ‘பொன், மணி, முத்து போன்றவன் என் தலைவனான இந்தப் பெருமாள். தன் பக்தனுக்கு உதவி செய்வதில் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத தனித் தலைவன். என் தந்தை. மதில்களால் சூழப்பெற்ற திருவிண்ணகர் என்ற இந்த திவ்ய தேசத்தில் கொலுவிருக்கும் இவன் என் தலைவன் மட்டுமல்ல; என்னைப் பெற்ற தாய்; என்னை வளர்க்கும் தாய். தனது திருவடி நிழலால் என்னை என்றென்றும் காப்பான்,’ என்று உள்ளம் உருகிப் பாடுகிறார் நம்மாழ்வார்.
இந்தப் பாசுரத்தை ஒட்டியே இந்தக் கோயிலில், என்னப்பன், பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், திருவிண்ணகரத்தான் என்று பெருமாள் ஐவராக கொலுவிருக்கிறார். தங்க விமானம் கொண்டு பரிமளிக்கிறார் ஒப்பிலியப்பன். நெடிதுயர்ந்த நின்ற கோலம். கண்களாலேயே மென்மையாக அழைக்கிறார். தங்கக் கவசம் பூண்டு ஜொலிக்கிறார். இவர் காலடியில் இடது பக்கம் மார்க்கண்டேயரும், வலது பக்கம் பூமிதேவியும் மண்டியிட்டு இவருக்கு வணக்கம் செலுத்துகிறார்கள்.
திருப்பதி வெங்க டேசப் பெருமாளுக்கு நேர்ந்து கொண்ட பிரார்த்தனைகளை இவருக்கு நிறைவேற்றி, திருப்பதிக்குப் போக முடியாத குறையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். இந்தப் பெருமாளும் பார்ப்பதற்கு ஸ்ரீநிவாசன் போலவே இருக்கிறார். அதனால் தானோ என்னவோ இவருக்கும் தனி சுப்ரபாதம் உண்டு. திருமண வரம் அளிக்கும் பரந்தாமன் இவர். இந்தக் கோயிலில் தனியே இருக்கும் திருமண மண்டபத்தில் ஒவ்வொரு முகூர்த்த நாளன்றும் நிறைய பக்த ஜோடிகளுக்கு பெருமாள் அருளுடன் திருமணம் நடைபெறுகிறது என்கிறார்கள்.
பூமிதேவித் தாயார் பெருமாளுடனேயே அவர் கருவறையில் வீற்றிருப்பதால், இவருக்குத் தனி சந்நதி இல்லை. தரணிதேவி, வசுந்தரா என்றும் தாயார் அழைக்கப்படுகிறார். வழக்கம்போல அனுமன், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், ராமர் முதலானோரும் தத்தமது சந்நதிகளில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள். பிராகாரச் சுற்றில் ராமாயண, தசாவதாரக் காட்சிகள், ஆண்டாள், ஆழ்வார்கள், ஆசார்யார்கள் ஆகியோர் பேரெழில் ஓவியங்களாக நம்மை ஆசிர்வதிக்கிறார்கள்.
108 திவ்ய தேச பெருமாள்களையும் இங்கே தரிசிக்கலாம். ஆமாம், அந்தத் தோற்றங்களையும் சுதை சிற்பங்களாக, கவினுற வடிவமைத்திருக்கிறார்கள். இங்குள்ள அஹோராத்ரி புஷ்கரிணி மிகச் சிறப்பு வாய்ந்தது. பொதுவாகவே எந்த நீர்நிலையிலும் இரவு நேரத்தில் நீராடலாகாது என்பது சாஸ்திரம். ஆனால் இந்தத் தலத்தின் அஹோராத்ரி திருக்குளத்தில் மட்டும் ஒரு நாளின் எல்லா நேரத்திலும், இரவு, பகல் என்று பாராமல் நீராடலாம் என்று சாஸ்திர விதி தளர்த்தப்பட்டிருக்கிறது.
இந்த தீர்த்தம் எல்லாவகையான தோஷங்களையும் போக்கவல்லது. தேவ சர்மா என்ற வேதம் அறிந்த அந்தணன் ஒருவன் தன் குல ஒழுக்கம் மீறி, புலன் அடக்கமில்லாமல் திரிந்தான். இந்த வகையில் ஜைமினி முனிவரின் மகளிடம் அவன் முறைகேடாக நடந்து கொள்ள முயன்ற போது, வெகுண்ட முனிவர் அவனை சக்கரவாகப் பறவையாக உருமாறுமாறு சபித்தார்.
அப்படியே பறவையான அவன் இந்த அஹோராத்ரி புஷ்கரணியின் கரையில் ஒரு மரத்தில் அமர்ந்திருந்தான். அப்போது திடீரென புயல் வீச, அந்த மரம் அப்படியே குளத்தில் சாய்ந்தது. அந்த குளத்து நீர் பறவையின் மீது தெளிக்கப்பட, தேவசர்மா தன் சுய உருவம் பெற்றான்; முக்தியும் அடைந்தான். அந்த அளவுக்கு இந்தத் திருக்குளம் சக்தி வாய்ந்தது. வேதசர்மா இவ்வாறு சாபவிமோசனம் பெற்றது ஓர் இரவில் என்பதால், இந்தக் குளத்தில் இரவு நேரத்திலும் நீராடலாம் என்ற வழக்கம் வந்ததாகச் சொல்கிறார்கள்.
தியான ஸ்லோகம்
திருவிண்ணகரம் சென்று ஒப்பிலியப்பனை தரிசிக்கும் வரை அவரது தியான ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டிருக்கலாம்:
ஸ்ரீமத் விஷ்ணௌ விமாநே ககந நகரகே பத்மினீ புண்ய பூர்ணா
(அ) ஹோராத்ராக்யா ஜநாநாமபி மதபலதோ வேங்கடேச ஸ்வரூப:
பூம்யா தேவ்யா ஸமேதஸ் த்வ லவணஹவிஷ: ப்ராசனப்ரீதிரேஷ:
புத்ரீ ப்ரீத்யை ம்ருகண்டோ: ஹரிதிகபிமுகோ த்ருச்யதே பீஷ்டதாயீ– ஸ்ரீவிஷ்ணு ஸ்தல தர்சனம்
பொதுப் பொருள்: ககந நகரம் என்ற திருவிண்ணகர் திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானே நமஸ்காரம். விஷ்ணு விமான நிழலில், அஹோராத்ர புஷ்கரணிக் கரையில், வேண்டுவோர் வேண்டுவனவற்றை எல்லாம் அருளும் வேங்கடேசப் பெருமானாய், பூதேவி சமேதராய் திகழும் பெருமாளே நமஸ்காரம். தேவியின் மீதுள்ள பெரு விருப்பத்தால் உப்பு, இல்லாத அமுதை ஏற்பவராய் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் மார்க்கண்டேய முனிவருக்குக் காட்சி அருள்பவரே நமஸ்காரம். தன்னை சேவிப்பவர் விருப்பங்களை நிறைவேற்றும் எம்பெருமானே நமஸ்காரம்.
மாதம்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று விரதம் மேற்கொள்வது திருவோண விரதம் ஆகும். இது பெருமாளுக்கு உரிய நட்சத்திரம். திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். அத்துடன் சந்திர தோஷமும் நீங்க பெற்று வாழ்வில் மகிழ்ச்சி அடைவர். திருவோண விரதத்தை ஒருமுறை வாழ்வில் இருந்தால் கூட அத்தனை பாக்கியங்களும் கிடைக்கும் என்பது நியதி. 27 நட்சத்திரங்கள் இருந்தாலும் எம்பெருமானாருக்கு உரிய திருவாதிரை மற்றும் எம்பெருமானுக்கு உரிய திருவோணம் இவ் விரண்டு நட்சத்திரங்கள் தான் ‘திரு’ என்ற அடைமொழியுடன் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
ஒப்பிலியப்பன் பெருமாள் மார்கண்டேயன் மகளாக இருக்கும் பூமாதேவியை மணந்து கொள்ள பெண் கேட்டதும் பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில் தான். அவரை மணம் முடிந்ததும் ஐப்பசி மாத திருவோண நட்சத்திரம் அன்று தான். எனவே ஒப்பிலியப்பன் பெருமாள் கோவில்களில் திருவோண நட்சத்திரம் அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெருமானின் அருளாசி பெற திருவோண நட்சத்திர விரதத்தை அனைவரும் கடைபிடிக்கலாம். மிக எளிதாக வீட்டிலேயே கடைபிடிக்கக் கூடிய திருவோண விரதத்தை ஏதாவது ஒரு நாளில் கடைபிடித்தால் கூட அவர்களுக்கு பெருமாளின் அருளும், சந்திர தோஷமும் விலகும் என்பது நியதி.
தோஷங்களில் சந்திர தோஷமும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. சந்திர தோஷம் இருப்பவர்களுக்கு மனநிலையில் சீரற்ற தன்மை இருக்கும். தான் செய்வது சரியா? தவறா? என்கிற பதற்றம் நீடிக்கும். ஏதாவது ஒரு மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபாடு செய்தால் சந்திர தோஷம் முற்றிலுமாக நீங்கி நல்வாழ்வு பிறக்கும் என்பதை ஜோதிட சாஸ்திரம் உறுதியாக கூறுகிறது. அன்று மாலையில் சந்திர தரிசனம் செய்து சந்திரனின் அருளை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம்.
திருவோண விரதம் எப்படி இருப்பது?
மாதா மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தை முன் கூட்டியே குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருவோண நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவே உணவேதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அன்று இரவில் பெருமாள் மந்திரங்களை உச்சரிப்பது, விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் கொடுக்கும். மறுநாள் அதிகாலையில் எழுந்து சுத்தமாக நீராடி நல்ல உடை உடுத்திக் கொண்டு பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு அவருக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை அறையில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி விளக்கேற்றி வழிபட வேண்டும். பூஜையில் துளசி தீர்த்தம் வைத்து அந்த தீர்த்தத்தை நீங்கள் பருகலாம்.
மதியம் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் உப்பு சேர்க்கக் கூடாது. உப்பு சேர்க்காத உணவை சாப்பிட்டால் ஒப்பிலியப்பன் பெருமானின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. உப்பு சேர்க்காமல் உணவு தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மாலையில் நெய்விளக்கு ஏற்றி பெருமாளுக்கு மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்யுங்கள். இரவில் பால் மற்றும் பழம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
இவ்விரதத்தை பக்தி சிரத்தையுடன் கடைப்பிடித்து காலையில் வழிபாடு செய்யும் பொழுது நோய்கள் அனைத்தும் குணமாகும். மதிய வழிபாடு செய்யும் பொழுது செல்வம் அத்தனையும் பெருகும். மாலையில் வழிபாடு செய்யும் பொழுது செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். இரவில் இறுதியாக நான்காம் ஜாம வழிபாடு செய்யும் பொழுது முக்தி பேறு கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே இவ்வாறு திருவோண விரதத்தை முறையாக கடைபிடித்தால் ஏழேழு பிறவிக்கும் 16 செல்வங்களும் அடையலாம்.
—————–
நல்வாழ்வருளும் நரசிம்மர் திருத்தலங்கள்
திருவரங்கம் பெரிய கோயில் மேட்டழகிய சிங்கர் திருவரங்கம் பெரிய கோயிலில் தாயாரைச் சேவித்து விட்டு வெளியே வந்ததும், வடக்கு நோக்கியிருக்கின்ற, படியேறிச் செல்ல வேண்டிய, மாடக் கோயிலில் அழகிய சிங்கரான நரசிம்மப் பெருமாள் ஹிரண்யனை வதம் செய்யும் கோலத்தில் எழுந்தருளி யிருக்கிறார். அதே சமயத்தில், வலது கையை மேலே உயர்த்தி ‘அஞ்சேல்’ என்று அபயம் வழங்கி அருள் பாலிக்கிறார். கம்பநாட்டாழ்வான் இம்மேட்டழகிய சிங்கர் முன்னிலையில், ஸ்ரீரங்கநாச்சியாரை (தாயாரை) நோக்கி அமர்ந்து இந்த மண்டபத்தில் தான், தம் ராமாயணத்தை அரங்கேற்றினார். இந்த இராமாயணத்திற்குக் கம்பர் சூட்டிய பெயர் ‘இராமாவதாரம்’ ஆகும்.
திருவரங்கம் பெரிய கோயிலைச் சேர்ந்த காட்டழகிய சிங்கப் பெருமாள்
திருவரங்கம் இரயில் நிலையத்துக்கு அருகிலேயே காட்டழகிய சிங்கர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருவரங்க நகரின் கிழக்குப் பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது. சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கலி 4398-கி.பி 1297) பெரிய பெருமாளான அரங்கநகர் அப்பனிடத்தில் அன்பினால் மிக்க அடிமை பூண்டவன். இங்கே, பெருமாள் மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். உயர்ந்த விமானம், கர்ப்பக் கிரகம், அந்தராளம், முகமண்டபம், மஹா மண்டபம் மற்றும் கருடன் சந்நதியோடு இந்த கோயில்
உள்ளது.
‘கிழக்கில் காட்டழகிய சிங்கர் புராண ஸித்தம்’ என்று கோயிலொழுகுதலபுராணம் கூறுகிறது. பெரியாழ்வார் காலத்து மன்னனான அவருடைய சிஷ்யனான வல்லபதேவ பாண்டியன் இக்கோயிலில் திருப்பணிகளைச் செய்துள்ளான். மாதம்தோறும் ஸ்வாதி நட்சத்திரத்தன்று விசேஷ திருமஞ்சனம் நடைபெறும். காட்டழகிய சிங்கரைத் தரிசிக்காமல் ஸ்ரீரங்க யாத்திரை நிறைவாகாது. இந்த பெருமாளைச் சேவித்தால் வேதாந்த ஞானம் ஸித்திக்கும்.
வழி: ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்குக் கிழக்கில் மிக அருகிலேயே (நடக்கும் தொலைவிலேயே) இந்தச் சந்நதி அமைந்து உள்ளது. ‘சிங்கர் கோயில்’ என்று கேட்க வேண்டும்.
தேவர் மலை அழகிய சிங்கர்
கமலவல்லி நாச்சியாருடன் கதிர் நரசிங்கப் பெருமாள் அருள்புரியும் மிகப் பழமையான திருத்தலம்தான் தேவர்மலையாகும். கொங்கு நாட்டில் கரூர் – பாளையம் அருகிலுள்ள இத்திருத் தலத்தில் அழகிய சிங்கர் உக்கிர நரசிம்மராக கூறப்பட்டாலும், கமலவல்லித் தாயாருடன் எழுந்தருளியிருப்பதால், அன்பர்களுக்கு லட்சுமி நரசிம்மராகவும், துஷ்டர்களுக்கு உக்கிர நரசிம்மராகவும், விளங்குகிறார். பாண்டியர்களாலும், விஜயநகர, நாயக்க மன்னர்களாலும், திருப்பணி செய்யப் பெற்ற பழமையான திருக்கோயில் இது.
கமலவல்லித் தாயாருக்கு மகாமண்டபம், அர்த்த மண்டபம், கொடிமரம் ஆகியவை பெருமாளுக்கு உள்ளவை போலவே, அமைக்கப் பெற்றுள்ளன. “மோட்ச தீர்த்தம்’’ எனும் ஸ்ரீ நரசிம்ம தீர்த்தம் இத்திருத் தலத்தின் முக்கியமான தீர்த்தமாகும்.
வழி : சென்னை – திருச்சி – கரூர் அல்லது சென்னை – ஈரோடு – கரூர் வழித்தடத்தில்செல்லும் ரயிலில் கரூரில் இறங்கி, சிந்தாலவாடி, தான்தோன்றி மலை கோயில்களை சேவித்து விட்டு தேவர்மலை கதிர் நரசிங்கப் பெருமாளைச் சேவித்து விடலாம்.
சிந்தலவாடி
திருக்காவிரியின் கரைகளிலிருக்கும் அழகிய திவ்ய க்ஷேத்ரங்களில் சிந்தாலவாடியும் ஒன்று. கொங்குநாட்டில், கரூர் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் சிந்தாலவாடி இருக்கிறது. மத்வ சம்பிரதாய வைஷ்ணவர்களின் நிர் வாகத்தின் கீழ் இத்திருக்கோயில் இயங்குகிறது. பானகம், ததியன்னம் (தயிர்சாதம்), பழப் பிரசாதங்கள் போன்றவற்றைப் பெருமாளுக்கு அமுதுசெய்விக்கலாம் (நைவேத்யம் செய்யலாம்). பகவானின் திருநாமம் ஸ்ரீயோக நரசிம்மப் பெருமாள். மிகவும் பழமையான திருக்கோயில் இது.
வழி : திருச்சி – கரூர் வழித்தடத்தில், ரயில் அல்லது பேருந்தில் சென்றால், லாலாப்பேட்டை என்னும் ஊரில் இறங்கி, அங்கிருந்து சிந்தலவாடிக்கு மாநகர பேருந்தில் செல்லலாம்.
தஞ்சை மாமணிக்கோயில் வீரநரசிம்மப் பெருமாள்
(தஞ்சையாளி நகர்)
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்து ச ஸகாத்வமேவ
த்வமேவ வித்யாத் ரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவதேவ
(நீயே அன்னை, நீயே தந்தை, நீயே உறவு, நீயே நண்பன், நீயே வித்தை (கல்வி), நீயே செல்வம், நீயே எனக்கு எல்லாம் என் தேவதேவனே!)என்று நரசிம்மனை விளிப்போமாக! திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திவ்ய தேசம் இது. மணிக்குன்றப்பெருமாள், நீலமேகப் பெருமாள் ஆகிய பெருமாள்கள் இருவர் தனிக்கோயில்களில் அருகிலேயே எழுந்தருளியுள்ளனர். தஞ்சை மாமணிக்கோயில் எனும் திவ்யதேசம் மூன்று கோயில்களும் சேர்ந்ததே. திருத்தஞ்சை மாமணிக்கோயில், திருவையாறு தியாகராஜர் பிருந்தாவனம், திருக்கண்டியூர், கல்யாணபுரம், புது அக்ரஹாரம் ஆகியன அருகிலுள்ள திருத்தலங்களாம்.
வழி: தஞ்சாவூர் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்திலும் சென்று வரலாம்.
வல்லம்
(விக்கிரம சோழ விண்ணகரம்)
ஸ்ரீரங்கத்தில் ஆறாவது திருச்சுற்றான திரிவிக்கிரம சோழன் திருச்சுற்று, விக்கிரம சோழனின் கைங்கர்யம் என்று கோயிலொழுகு கூறுகிறது. அதே போல், திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் ‘விக்கிரம சோழ விண்ணகரம்’ என்று ஒரு திருத்தலம் உண்டு. அதன் இப்போதைய பெயர் வல்லம் என்பதாகும். ‘வல்லம்’ எனில் ‘பெரியது, வலியது’ என்றும் பொருள் உண்டு. மலையாளத்தில் ‘வல்லிய’ என்னும் பிரயோகம் இன்றும் ‘பெரியது, வலியது’ என்ற பொருளில் வழங்கப்படுகிறது. வலிமை மிக்க இரணியனை வகிர்ந்து கொன்ற ஸ்ரீநரசிம்மரின் தலமாதலால் ‘வல்லம்’ என்று பெயர் வந்தது போலும். இங்கே பெருமானின் பெயர் தேவராஜன். தாயாரின் பெயர் கமலவல்லித் தாயார்.
இந்திரனுக்கு அகலிகையிடம் பெற்ற சாபம் நீங்கிய தலம் இதுவே என்று சொல்லப்படுகிறது. காவிரியும், கௌதம தீர்த்தம் என்னும் திருக்குளமும் இத்திருத்தலத்தின் தீர்த்தங்களாகும். இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீயோக நரசிம்மர் தெற்கு நோக்கி அருள்புரிகிறார். எனவே, இது யம பயம் நீக்கும் திருத்தலமாகும். இதய நோய், புற்று நோய் போன்ற கொடிய நோய்கள் கூட நீங்கி, அன்பர்கள் நலம் பெறும் பிரார்த்தனை ஸ்தலமாக இது விளங்குகிறது.
வழி: தஞ்சாவூர் – திருச்சி சாலை வழித்தடத்தில் தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், திருச்சியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் வல்லம் திருத்தலம் இருக்கிறது.
கொண்டி ராஜபாளையம் அழகிய சிங்கர்
அஹோபில திவ்விய தேசத்தில் ஸ்ரீராமபிரான் தமது முந்தைய அவதாரமான நரசிம்ம மூர்த்தியை ஸ்ரீந்ருஸிம்ஹ பஞ்சாம்ருத ஸ்தோத்திரத்தால் மங்களாசாஸனம் செய்தார் என்று ஹரிவம்சத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதைச் சுட்டிக் காட்டும் விதமாக இவ்வாலயத்தில் மூலமூர்த்தியான நரசிம்மப் பெருமாளுக்கு எதிரில் ஸ்ரீகோதண்டராமரைப் பிரதிஷ்டை செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் இத்திருக்கோயிலுக்கு அஹோபில திவ்யதேச ஸாம்யம் உண்டு எனலாம். மூலவர் யோக நரசிம்மர், சோழஸிம்ஹபுரத்தைப் போலே உற்சவர் பிராட்டியைத் தொடையில் தாங்கிய மாலோலர், அஹோபிலத்தைப் போலே. ‘மா’ என அழைக்கப்படும் பிராட்டியினிடத்திலேயே மண்டியிருப்பதால், பரமபுருஷனை, ‘மாலோலன்’ என்பார்கள்.
வழி: தஞ்சாவூர் நகருக்குள்ளேயே கிழக்கு ராஜவீதியிலிருந்து கிழக்கு வாயிலுக்குச்செல்லும் சாலைப் பகுதியே கொண்டிராஜபாளையம் அழகிய சிங்கர் கோயில் உள்ளது.
கும்பகோணம் ஸ்ரீவிஜயீந்திர நரசிம்மர்
மத்வ மகான் ஸ்ரீவிஜயீந்திரரை வாதத்தில் வென்று மாயாவாதத்தை நிலைநாட்ட முடியாது என்று உணர்ந்த கங்காதர பண்டிதர் என்ற வித்வான், தவறான வழிகாட்டுதலால் விஜயீந்திரரைக் கொன்று விடுவதற்காக கொடிய விஷத்தைக் கொண்டு வந்திருந்தார். வாதப்போர் தொடங்கும் முன்பு விஜயீந்திரரைக் கண்டதும் அவருடைய தேஜஸ்ஸால் வசீகரிக்கப்பட்டார். தம் தவறை உணர்ந்து எடுத்துச் சொல்லி கண்ணீர்விட்டார். விஜயீந்திரரோ, ‘நீர் எமக்காகவே கொண்டுவந்ததை மறுக்காமல் கொடும்’ என்று அவரிடமிருந்து விஷத்தைப் பறித்து அருந்திவிட்டார். கொடிய விஷமாதலால் உடனே விஜயீந்திரரின் திருமேனி கருக ஆரம்பித்து. ‘சுவாமி… சுவாமி….’ என்று கங்காதரர் முதற்கொண்டு அனைவரும் கதறினார்கள்.
விஜயீந்திரர், ‘அன்பர்களே! எம் ஆசார்யர் ஸ்ரீவியாஸ ராஜரும் அவருடைய பூர்வ ஜன்மமான பிரஹலாதரும் விஷத்தை உண்டு ஜீரணித்தவர்களே. இதோ எம் அப்பன் நரசிம்மனைப் பாடுகிறோம். எமக்கு ஒன்றும் ஆகாது’ என்று ஸ்ரீநரஸிம்ஹாஷ்டகத்தைக் கம்பீரமாகப்பாடலானார். அவையோர் கண் முன்னாலேயே அங்கிருந்த நரசிம்மரின் திருக்கழுத்து கறுத்தது. விஜயீந்திரரின் திருமேனியின் கருநீல நிறம் மாறி முன்போல் ஆனது. இவ்வரலாறை இன்றளவும் நமக்குக் காட்ட இம்மடத்திலுள்ள நரசிம்மரின் கழுத்து கருநீலமாகவே இருக்கிறது. ஸ்ரீநரசிம்மாஷ்டகம் மிகவும் சக்திவாய்ந்த பாராயணப் பாமாலையாக விளங்குகிறது.
வழி: கும்பகோணம் நகரில் காவிரிக் கரையில் ஸ்ரீவிஜயீந்திரரின் மூலப் பிருந்தாவனம் சோலையப்பன் தெருவில் இருக்கிறது.
அரியலூர்
அரியலூரின் மையப் பகுதியில் பழமையான ஸ்ரீகோதண்ட ராம சுவாமி கோயில் இருக்கிறது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி மிகவும் விரைவில் வரமளிக்கக் கூடிய பிரார்த்தனைப் பெருமாள் ஆவார். இந்த நரசிம்ம மூர்த்தி தசாவதார மண்டபத்திலே எழுந்தருளி அருள் பாலிக்கிறார். மகத்தான சக்திமிக்க அர்ச்சா மூர்த்தி.
வழி: அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது.
திருக்குறையலூர்
உக்கிர நரசிம்மப் பெருமாள்
வேதத்துக்குப் புறம்பானவர்களால் ஏற்படும் தொல்லைகள், வேதத்துக்குப் பகையானவர்களால் ஏற்பட்ட துர்வாதங்களால் ஏற்பட்ட மதிமயக்கங்கள் ஆகியவை இப்பெருமானால் அழிக்கப்படும். சிறிய ஆலயத்தில் தம் கருணையினால் உகந்து எழுந்தருளியிருக்கும் இப்பெருமாளின் கீர்த்தி பெரிதினும் பெரிது. நரசிம்ம புராணத்தில் வரும் ஸ்ரீநரசிம்ம ஸஹஸ்ர நாமத்தின் ஸ்வரூபம் இவர். ஸாத்விக வித்தைகள் (நற்கல்விகள்) அதாவது வேதம், திவ்யப் பிரபந்தம், தெய்வீக இசையாகிய திருநாம சங்கீர்த்தனம், ஜோதிடம், நாட்டியம், இலக்கணம், வைத்தியம் போன்ற இகபரசுகம் தரும் நற்கல்விகளை அருள்பவர் இவர்.
வழி: மங்கை மடத்திலிருந்து வண்டி அமர்த்திக்கொண்டு குறையலூர் போகலாம். சீர்காழியிலிருந்து, மயிலாடுதுறையிலிருந்தும் ‘மங்கை மடம்’ என்ற பெயர்ப்பலகையுடனேயே பேருந்துகள் செல்கின்றன.
திருவாலி லட்சுமி நரசிம்மர்
தூவிரிய மலருழக்கிக் துணையோடும் பிரியாதே
பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே!
தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி
ஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே (பெரிய திருமொழி 3-6-1)
திருவாலியில் உறையும் லட்சுமி நரசிம்மனை நோக்கி நம் பிரார்த்தனைகளைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. மேற்கண்ட பாசுரத்தைப் பேசித் துதிக்கும் போது அவனே நம் நிலைமையைக் கண்டு, வேண்டியதைச் செய்து முடிப்பான். திருமணத் தடையால் வருத்தமுற்றிருப்பவர்களும், திருமணம் நடந்து துணையைப் பிரிந்து வாழ்பவர்களும் இப்பெருமானை வணங்கினால் தனிமைத் துன்பம் மறையும். சத்ஸங்கமில்லாமல் வருந்தும் பாகவதர்கள், ஸத்ஸங்கம் கிடைக்கப் பெறுவார்கள். லட்சுமி தேவியை அருகில் தொடையிலேயே அமர்த்திக் கொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் இவர்.
வழி: சீர்காழியில் இருந்து, சுமார் 10.கிமீ., தொலைவில் திருவாலி லட்சுமி நரசிம்மர் கோயிலை அடைந்துவிடலாம். திருநகரி உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர்திருவாலியும் திருநகரியும் சேர்ந்து ஒரே திவ்யதேசமாகக் கணக்கிடப்படுகின்றன. திருமங்கையாழ்வாரைத் தடுத்தாட்கொண்ட வயலாளி மணவாளனெனும் கல்யாண ரங்கநாதன் உறையும் திவ்ய தேசம் இது. இக்கோயிலிலுள்ள கல்கேணியில் ஊறும் தீர்த்தம் மிக்க சுவையையுடையது. திருமங்கையாழ்வாரை ஆழ்வாராக்க எம்பெருமானுக்கு உதவியாயிருந்த அவர் தர்மபத்தினி குமுதவல்லி நாச்சியாரும் அவருடன் எழுந்தருளியிருக்கிறார். திருநகரி கோயிலுக்குள்ளேயே உக்கிர நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். யோக நரசிம்மரும் கோயிலுக்குள்ளேயே எழுந்தருள்யுள்ளார்.
வழி: சீர்காழியிலிருந்து திருநகரிக்கு நகரப் பேருந்துகள் செல்கின்றன சுமார் 7 கிலோ மீட்டரில் அடைந்துவிடலாம்.
மங்கை மடம் அழகிய சிங்கர்
திருமங்கையாழ்வார் பாகவதர்களுக்கு விசேஷமாக ததீயாராதனம் செய்த இடமே ‘மங்கை மடம்’ என்னும் இடமாகும். இங்குதான் தம் ராஜ்ஜியத்தை இழந்து, ஆழ்வார் அன்பர்களுக்கு அன்னமிட்டு வழிபட்டார் என்பதை நினைக்கும் போது நம் கல்நெஞ்சும் கரைவதை உணரமுடிகிறது. இங்கு பிராட்டிமார்களுடன் அழகிய சிங்கப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். சிங்கவேள் குன்றமாகிய அஹோபில திவ்ய தேசத்தின் அபிமான ஸ்தலமாக இத்திருத்தலம் அமைந்துள்ளது.
வழி: திருநகரி – திருவெண்காடு – பார்த்தன்பள்ளி சாலைகள் யாவும் மங்கை மடத்தில்தான் சந்திக்கின்றன. சீர்காழியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
கடலங்குடி
திருநாங்கூர் திருப்பதிகள் எனும் 11 திவ்ய தேசங்களின் அருகில் கடலங்குடி இருக்கிறது. இன்று இது சிறிய கிராமம். ஐந்து நிலை ராஜகோபுரம், வசந்த மண்டபம், அர்த்த மண்டபம், மணி மண்டபங்கள் மற்றும் மணவாள மாமுனிகள் தீர்த்தம், அனந்த தீர்த்தம், அனுமன் தீர்த்தம், காவிரி என்று தீர்த்தங்கள் பலவற்றைக் கொண்டிருக்கிறது.
இங்கு யோக நரசிம்மர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தனிச்சந்நதியில் அருள் புரிகிறார். இவர் மிகவும் சக்தி வாய்ந்த வரப்ரசாதி. விஜயநகர மன்னர்களால் பற்பல திருப்பணிகள் செய்யப் பெற்ற இந்த அழகிய திருக்கோயில் திருஅத்தியூர் (காஞ்சி), சோழஸிம்ஹபுரம் (சோளிங்கர்), குலோத்துங்க சோழ விண்ணகரம் (இராஜ மன்னார்குடி) ஆகிய திவ்ய க்ஷேத்ரங்களின் மகிமையைக் கொண்டது.
வழி: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் ‘மணல்மேடு’ கிராமம் வழியாக பந்தநல்லூர் செல்லும் பேருந்தில் சென்றால் ‘கடலங்குடி’ திருத்தலத்தை அடையலாம்.
முகாசாபரூர்
திருமால் நெறி விரிந்து பரந்திருக்கும் நடுநாட்டில், கடலூர் மாவட்டத்தில் உளுந்தூர்ப்பேட்டை- விருத்தாசலம் சாலையில் மங்கலம் பேட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் சின்னஞ்சிறு கிராமமாக இன்று முகாசாபரூர் விளங்குகிறது.
இவ்வூரில் மிகவும் பழமையான பெருந்தேவித் தாயார் சமேத வரதராஜப்பெருமாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ருணவிமோசன லட்சுமி நரசிம்மர் மிகுந்த சக்தி வாய்ந்த பிரார்த்தனைப் பெருமாள் ஆவார்.‘அனந்த சரஸ்’ எனும் அல்லிக் குளமே புஷ்கரணியாகும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், பிராட்டியை இடது மடியில் அமர்த்திக் கொண்ட வாத்ஸல்யம் (குற்றத்தையும் குணமாகக்கொள்ளும் தாய்மைக் குணம் அதாவது, தாய்ப்பசு தன் கன்றின் உடலிலுள்ள அழுக்குகளை நாவால் வருடிச் சுத்தப்படுத்தும் உயர்ந்த குணம்) எனும் திவ்ய கல்யாண குணம் ததும்பும் அழகிய திருக்கோலம் இதுவாகும்.
வெல்லப் பானகம், கல்கண்டுப் பானகம், எலுமிச்சைப் பானகம், பஞ்சாமிர்தம், தேன், பால் போன்றவை இந்த மாலோல நரசிம்மருக்குப் பிரியமானவையாகும். ஸ்ரீவரதராஜப் பெருமாளையும், பெருந்தேவித் தாயாரையும், ஸ்ரீலட்சுமி நரசிம்மரையும் ஒருமுறை சேவித்தவர்கள், மீண்டும் மீண்டும் சேவிக்க விரும்புவார்கள்.
வழி: சென்னை – விழுப்புரம் – திருச்சி- ரயில்- பேருந்துப் பாதையில் உளுந்தூர்ப்பேட்டையிலோ அல்லது விருத்தாசலத்திலோ இறங்க வேண்டும். பின்னர், இரு ஊர்களுக்கும் இடையில் இருக்கும் மங்கலம்பேட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் முகாசாபரூர் உள்ளது.
————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply