நாளை என்பது ஸ்ரீ நரசிம்மனிடம் இல்லை–முத்துக்கள் முப்பது–எஸ்.கோகுலாச்சாரி

பகவான் ஸ்ரீமந் நாராயணன் பிறப்பில்லாத பெருமான். ஆயினும் அவன் பிறவிகளை எடுக்கின்றான். அதை அவதாரங்கள் என்று சொல்வார்கள். அவதாரங்கள் என்றால், மேலிருந்து கீழே இறங்கி வருதல் என்று பொருள். வேதம், பகவானின் அவதார வைபவத்தை “அஜாயமாநோ பஹூதா விஜாயதே” என்ற அழகான தொடரால் குறிப்பிடுகிறது.

இப்படி எடுத்த அவதாரங்கள் ஒன்றல்ல இரண்டல்ல; பற்பல அவதாரங்கள். அவற்றை ஆவேச அவதாரங்கள் என்றும், அம்ச அவதாரங்கள் என்றும், பூரண அவதாரங்கள் என்றும் பலபடியாகப் பிரிக்கிறார்கள். ஸ்ரீவிஷ்ணு புராணமும் பாகவதமும் இன்னும் பல நூல்களும் பகவான் நாராயணனின் அவதாரங்களைப் பேசுகின்றன. அந்த அவதாரங்கள் பலவாக இருந்தாலும் தசாவதாரங்களை மிகச் சிறப்பாகச் சொல்லுகின்றனர்.

1. ஏன் அவதாரம் எடுக்கிறான்?

பொதுவாக பகவான் அவதாரம் ஏன் எடுக்கின்றான் என்பதற்கான காரணத்தை ஸ்ரீ கீதையிலே சொல்லுகின்றான். தர்மத்தை அழியாது காப்பாற்றுவதற்காகவும் சாதுக்கள் நலியும்போது அவர்களைக் காக்கவும் துஷ்டர்களுடைய செயல் எல்லை மீறும் போது அவர்களைக் கட்டுப்படுத்தவும் அழிக்கவும் பகவான் நேரடியாக யுகங்கள் தோறும் அவதாரம் செய்கின்றான் என்பதை ஸ்ரீ கண்ணன் ஸ்ரீ பகவத்கீதையிலே அருளுகின்றார். இந்த அவதார வரிசையை ஆழ்வார்களும் பலவாறு கொண்டாடுகிறார்கள். வைகுந்தத்திலே தன்னுடைய இருப்பை வைத்துவிட்டு இந்த உலகத்தின் இருள் நீக்க ஒரு ஒளியாக தோன்றுகின்றான் என்று நம்மாழ்வார் அவதார விசேஷத்தைக் கொண்டாடுகின்றார்.

2. சிறந்த அவதாரம் நரசிம்ம அவதாரம்

இந்த அவதாரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. அதில் மிகச்சிறந்த அவதாரம் சித்திரை மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் பகவான் எடுத்த ஸ்ரீ நரசிம்ம அவதாரம். ஒரு கண நேரத்தில் அவதாரம் எடுத்து, அவதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டு தன்னுடைய சோதிக்கு எழுந்தருளியவன். பொதுவாக தன்னுடைய பக்தனான பிரகலாதனைக் காப்பாற்றுவதற்காக நரசிம்ம அவதாரத்தை பகவான் எடுத்தார் என்று கூறுவர். அதற்காக மட்டுமே பகவான் அவதாரம் எடுக்கவில்லை. பிரகலாதனை மறைவாக நின்று காப்பாற்றி அருளிய இறைவன், நிறைவு நிலையிலும்கூட அவனைக் காப்பாற்றி இருக்கலாம். அவனுக்கு மிகவும் தொல்லையைத் தந்த இரணியனைக் கூட சங்கல்பத்தினால் அழித்து தர்மத்தை நிலைநாட்டி இருக்கலாம். ஆனால், பிரகலாதனுடைய வாக்கைக் காப்பாற்றுவதற்காக பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்தான்.

3. திட்டமிடாத அவதாரம்

பொதுவாக பகவான் அவதாரம் எடுக்கின்றபொழுது பாற்கடலில் யோகநிலையில் யோசிப்பான். ஒரு அவதாரத்தை எப்படி எடுத்து, எப்படி நிறைவு செய்வது என்பதைக் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வான். நரசிம்ம அவதாரம் தவிர மற்ற அவதாரங்கள் அப்படி எடுக்கப்பட்ட அவதாரங்கள். உதாரணமாக, மச்ச அவதாரம் எடுத்த பொழுது சத்திய விரதன் என்கிற அரசனிடத்திலே ஊழிக்கால முடிவிலே உலகமெல்லாம் நீரில் மூழ்கி இருக்கின்ற பொழுது, தான் ஒரு பெரிய மீனாக வருவேன்; அதிலே நீ ஏறிக்கொள்ள வேண்டும்; என்றெல்லாம் அவதார ரகசியத்தைக் குறித்து முன்கூட்டியே சொல்லிவிடுகின்றான். கூர்ம அவதாரத்தில், தான் ஒரு ஆமையாக வடிவம் எடுத்து பாற்கடலை கடைவதற்கு உதவுவேன் என்கின்றான்.

4. தீர்மானித்தது யார்? இரணியனா? பிரகலாதனா?

எல்லா அவதாரங்களும் ஏதோ ஒரு மனிதரின் பிரார்த்தனையாலோ, ஒரு பக்தனின் பிரார்த்தனையாலோ எடுக்கப்பட்ட அவதாரங்கள். நரசிம்ம அவதாரத்தில் இப் படிப்பட்ட முன் திட்டங்கள் எதுவும் இல்லை. யாருக்கு பிள்ளையாக, எந்த இடத்தில் பிறக்கப்போகிறோம் என்பதைக் குறித்து பகவான் திட்டமிடவில்லை. எங்கே பிறக்கப் போகிறோம், எதில் பிறக்கப் போகிறோம், எத்தனை நாழிகை தன்னுடைய அவதாரம் இருக்கப்போகிறது என்பதைக் குறித்தும் பகவான் சிந்திக்கவில்லை. உண்மையில் நரசிம்ம அவதாரத்தைக் குறித்து தீர்மானித்தவன் பிரகலாதன் அல்ல.

இரணியன்தான். அவன்தான், “உன்னுடைய பகவான் ஹரி இந்த தூணில் இருக்கிறானா?” என்று, எந்த இடத்தில் இருந்து பகவான் தோன்ற வேண்டும் என்பதை தீர்மானிக்கிறான்.” ஆம்; இருக்கிறான்” என்று பிரகலாதன் சொல்ல, அவனுடைய சத்திய வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே தூணையே தன்னுடைய தாயாகக் கொண்டு, பகவான் அவதரிக்கிறான். எனவே மற்ற அவதாரங்களைவிட நரசிம்ம அவதாரம் சிறப்புடையது.

5. மனிதனும் மிருகமும்

பொதுவாகவே தசாவதாரங்களின் சிறப்பு பரிணாம வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்ற ஒரு கருத்து உண்டு. பகவான் முதலில் எடுத்த அவதாரம் மச்ச அவதாரம். முதலில் உலக உயிர்கள் நீரில் இருந்துதான் தோன்றின என்பது அறிவியல் கோட்பாட்டின் அடிப்படை. தண்ணீரில் வாழுகின்ற மீனாக அவதாரம் செய்த பகவான், அடுத்த அவதாரத்தில் நீரிலும் நிலத்திலும் வாழ்கின்ற ஆமையாக அவதரித்தான்.

அதற்குப் பிறகு, நிலத்தில் வாழ்கின்ற வராகமாக அவதாரம் செய்தான். இந்த மூன்று அவதாரங்களும், விலங்கின் நிலையிலேயே செய்யப்பட்ட அவதாரங்கள். அடுத்த பரிணாமமான மனித வடிவம் எடுப்பதற்கு முன், மனிதனும் விலங்கும் கொண்ட ஒரு அவதாரமாக எடுத்த அவதாரம்தான் நரசிங்க அவதாரம். நரன் என்றால் மனிதன். சிங்கம் என்றால் விலங்குகளின் அரசன். இந்த இரண்டும் கலந்த கலவையாக எடுக்கப்பட்ட அவதாரம்தான் நரசிம்ம அவதார்.

6. ஆண்டாள் வர்ணித்த நரசிம்ம மூர்த்தி

ஆண்டாள் நாச்சியார், கண்ணனை, நரசிம்ம அவதாரம் போல வரவேண்டும் என்று ஒரு பாசுரத்திலே அருளிச் செய்கின்றாள். மலைக்குகையிலே தூங்குகின்ற சிம்மம், எழுந்து, தீவிழி விழித்து, பிடரி மயிர்களை எல்லாம் சிலிர்த்துக்கொண்டு, உடம்பை முறுக்கிக் கொண்டு, கர்ஜனை செய்து, வருவது போல கம்பீரமாக நடந்து வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றாள். நரசிம்ம அவதாரத்தை முழுவதும் மனதில் வைத்துக் கொண்டு ஆண்டாள் இந்தப் பாசுரத்தை அருளிச் செய்திருக்கிறாள்.

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோவில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கானத்திலிருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளாலோர் எம்பாவாய்.

7. எங்கும் இருப்பவன்

விஷ்ணு சகஸ்ரநாமத்தின் முதல் நாமம் பகவான் ஹரியைக் குறிப்பிடுகிறது. அந்த ஹரி நரஹரி என்று ஆச்சாரியார்கள் விளக்கம் அளிக்கின்றார்கள். காரணம் விஷ்ணு என்றால் எங்கும் பரந்து இருக்கின்றவன். எல்லா இடங்களிலும் கரந்து உறைபவன். அவன் தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான்; வானிலும் இருப்பான்; மண்ணிலும் இருப்பான். இந்த நிலை தான் ‘‘சர்வம் விஷ்ணு மயம் ஜகத்’’ என்கின்ற தொடருக்கு பொருளாக அமையும். அதைத்தான் தினசரி சங்கல்பத்திலே நாம் சொல்லுகின்றோம். அப்பொழுதே நரசிம்மனை பிரார்த்தித்து விடுகின்றோம். இதை நம்மாழ்வார்,

கரவிசும் பெருவளி நீர் நிலம் இவை மிசை
படர்பொருள் முழுவதுமாய் அவை அவை தொறும்
உடல்மிசை உயிரென கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே–என்று பாடினார்.

8. வேத வாக்கியம் சொல்லும் நரசிம்மன்

‘‘அஜோபி ஸந்நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபி ஸந்’’ என்கிறது வேதம். அவன் பிறந்து விட்டதால் உண்டானவன் இல்லை. அதைப் போலவே அவன் மறைந்து விட்டதால் இல்லாதவன் இல்லை. ஈஸ்வரன் ஒருக்காலும் ஜீவனாகிவிட முடியாது. ஈஸ் வரன் அவதரித்தாலும் ஈஸ்வரன்தான். மச்ச, கூர்ம, வராக முதலிய எந்த அவதாரமும் ஒரு தாய் வயிற்றில் தோன்றியதல்ல, நரசிம்மாவதாரமும் அப்படி தோன்றியது அல்ல. அதனாலேயே `பஹுதா விஜாயதே’ என்று வேதம் கூறியது. அவன் தன்னுடைய கருணையினாலே திவ்ய மங்கள விக்கிரகத்தை எடுத்துக்கொள்ளுகின்றான்.

சாந்தோக்கியம் ‘‘ஆத்மா தேவானாம் ஜனிதா பிரஜானாம் ஹிரண்ய தம்ஷ்ட்ரோ பபசோ அனசூரி:’’ என்று அவரை வர்ணிக்கிறது. படைத்தவரும் தேவர்களுக்கு ஆத்மாவாகவும் உள்ள அந்த சர்வேஸ்வரன் பளபளப்பான கோரைப்பற்கள் உள்ளவராகவும் எல்லாவற்றையும் உண்பவராகவும் காணப்பட்டார் என்று நரசிம்ம அவதாரத்தை விளக்குகிறது. நரசிம்ம காயத்ரி மந்திரம் அவருடைய கூர்மையான நகங்களையும் வஜ்ரம் போன்ற கோரைப் பற்களையும் மிகச் சிறப்பாக சொல்லுகின்றது.

வஜ்ர நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி தன்னோ நரசிம்ம பிரஜோதயாத் என்று தைத்திரிய நாராயண வல்லி நரசிம்மரை விவரிக்கிறது. அதர்வ வேதத்தைச் சேர்ந்த ந்ருஸிம்ம பூர்வ தாபனீய உபநிஷத் மனித வடிவும் சிங்க வடிவும் கொண்ட நரசிம்மனை சத்தியமாகவும் பரப்பிரம்மமாகவும் விவரிக்கிறது.

9. ஏன் இரண்யன் பெருமாளிடம் கோபம் கொண்டான்?

இரண்யாட்ஷன், இரண்யகசிபு என்று இரண்டு அசுரர்கள் இருந்தனர். அவர்களுள் இரண்யாட்ஷன் வராக மூர்த்தியால் வதம் செய்யப்பட்டான். அதனால் விஷ்ணுவிடம் துவேஷம் அடைந்த இரண்யகசிபு பிரம்ம தேவனைக் குறித்து கடுமையான தவம் செய்து, தனக்கு எந்த விதத்திலும் மரணம் வரக்கூடாது என்று வரம் வாங்கினான். தனக்கு கீழே மரணம் நேரக்கூடாது. மேலே மரணம் நேரக்கூடாது. பகலிலும் மரணம் நேரக் கூடாது. இரவிலும் மரணம் வரக்கூடாது. உள்ளும் மரணம் கூடாது. வெளியிலும் மரணம் கூடாது. உயிருள்ள பொருளாலும் மரணம் கூடாது.

உயிரற்ற பொருளாலும் மரணம் கூடாது. மனிதர்களால் மரணம் கூடாது. விலங்குகளால் மரணம் கூடாது. தேவர்களால் மனிதர்களால் மரணம் கூடாது. நோயால் மரணம் கூடாது. என்று ஒரு மரணம் எப்படி எல்லாம் நிகழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறதோ, அப்படி எந்த வகையிலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்பதோடு, தன்னுடைய சக்தியையும் ஆயுளையும் அதிகப்படுத்திக் கொள்ளும் வரங்களைப் பெற்றான்.

ஆனால் எத்தனை புத்திசாலித்தனமாக வரம் வாங்கினாலும்கூட, அந்த புத்திசாலித்தனம் யாரால் கொடுக்கப்பட்டதோ, அவர் அதைவிட புத்தி சாலித்தனமாக அதை கையாளுவார் என்பதைக் காட்டுவதுதான் நரசிம்ம அவதாரத்தின் செய்தி. இரண்யகசிபுவின் மனைவியின் பெயர் கயாது. பிள்ளையின் பெயர் பிரகலாதன். விஷ்ணுவிடம் திடமான சிந்தனையோடு பக்தி செலுத்தினான் என்பதை யஜூர் வேத அஷ்டகம், பிரஹலாதோ ஹவை காயாயவ: என்று சொல்லுகின்றது.

10. திருவல்லிக்கேணி தெள்ளிய சிங்கம்

இரண்யகசிபுவுக்கு பிரகலாதனைத் தவிர, கிலாதன், அனுகிலாதன், சமகிலாதன் என்ற மூன்று பிள்ளைகள் இருந்தனர். இதிலே பிள்ளை என்று போற்றப்படுவதாக இருந்தவன் பிரகலாதன். பள்ளியில் படித்து வந்தவுடன், “நீ படித்தது என்ன?” என்று தந்தையான இரண்யன் கேட்கின்ற பொழுது, ‘‘எதைத் தெரிந்தால் எல்லாம் தெரிந்ததாக ஆகுமோ, அதைத் தெரிந்து கொண்டேன்’’ என்று பிரகலாதன் பதில் சொல்கிறான். ‘‘என்னுடைய பெயரைத் தெரிந்து கொண்டாயா?’’ என்று கேட்கிறான்.

“இன்று இருந்து நாளை சாகும் உன்னுடைய பெயரைத் தெரிந்து, இந்த ஆத்மாவுக்கு என்ன லாபம் கிடைக்கும்? நான் சொல்வது சர்வ உலகத்தையும் படைத்து, காத்து, அழிக்கக்கூடிய பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணனைத் தெரிந்து கொண்டேன்” என்று சொன்னவுடன் கோபம் ஏற்படுகின்றது. தன்னுடைய பிள்ளை என்றும் கருதாமல் அழிக்க நினைக்கின்றான். அழிக்க நினைத்த அவனே அழிந்து போனான் என்பதை திருவல்லிக்கேணி பாசுரத்திலே திருமங்கையாழ்வார் மிக அற்புதமாக விளக்குகின்றார்.

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணி கண்டேனே

இன்றைக்கும் திருவல்லிக்கேணி திவ்ய தேசத்திலே தெள்ளிய சிங்கம் என்கிற திருநாமத்தோடு நாம் பெருமாளை தரிசனம் செய்யலாம். தெள்ளிய சிங்கம் என்பது தெளிசிங்கமாகி அவருடைய பெயரிலேயே தெளிசிங்கர் வீதி திருவல்லிக்கேணியில் இருக்கிறது.

11. ஆயுஷ் ஹோம மந்திரத்தில் நரசிம்மன்

ஆயுஷ் ஹோமம், ஆயுள் அபிவிருத்தி அடையச் செய்யப்படுகின்ற ஹோமம் ஆகும். இதற்காக ஆயுஷ் சூக்தம் ஓதப்படுகிறது. ஆயுஷ் ஹோம மந்திரம் பல மந்திரங்களைக் கொண்டது. அதிலே பகவான் “நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும், மிருத்யுவின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். அகால மரணம் ஏற்படாமல் இருக்க வேண்டும்” என்ற பிரார்த்தனைகள் வருகிறது.

அதிலே பகவானைப் பற்றிச் சொல்லுகின்ற பொழுது, ஸுவர்ண ரம்பக் கிருஹம் அர்சயம் என்கிற வாக்கியம் வருகிறது. அதாவது தங்கத்தினாலான வாழைமரம் போல உள்ள தூண் யாருக்கு பிறந்த வீடாக மாறியதோ, அங்கே தோன்றியவன் என்று கூறுகிறது. இப்படி தங்கத் தூணில் இருந்து பிறந்தவன் நரசிம்மன் என்பதால் இந்த மந்திரத்தினுடைய அதிதேவதையாக நரசிம்மன் இருக்கிறார் என்று பெரியவர்கள் கூறுகின்றார்கள்.

12. பக்தர்களுக்குப் பிரியமான உருவம்

நரசிம்மன் பயங்கரமான ரூபத்தை எடுத்து இரண்யனை வதம் செய்தார். ஆனால், இந்த ரூபம் பக்தர்களுக்கு பிரியமானதாக இருக்கிறது. அழகானதாக இருக்கிறது. அதனால்தான் ஆழ்வார்கள் இந்த ரூபத்தைவர்ணிக்கின்றபொழுது அழகியான்தானே அரிவுருவம் தானே என்று வர்ணிக்கிறார்கள். தீயவர்களுக்கு பயங்கரமானதாகத் தெரிகின்ற ரூபம், பக்தர்களுக்கும், சரணாகதர்களுக்கும் ஆச்சரியமான, ஆனந்தமான உருவமாக இருக்கிறது.

ஒருமுறை பட்டர், நரசிம்ம அவதாரத்தைப் பற்றி விளக்கம் சொல்லுகின்ற பொழுது, பயங்கரமான ரூபம் பார்த்து குழந்தை பிரகலாதன் பயப்படவில்லையா? நரசிம்மரின் கோபம் பிரகலாதன் முதலியவர்களை தாக்கவில்லையா என்கின்ற கேள்வி எழுந்த பொழுது பட்டர் அற்புதமாகச் சொன்னார். “சிங்கமானது தன்னுடைய குட்டிக்கு பால் கொடுத்துக் கொண்டே எதிரில் உள்ள மிருகங்களை வேட்டையாடுவது போல” தன்னுடைய பக்தனான பிரகலாதனை அரவணைத்துக்கொண்டு எதிரியான இரண்யனை வதம் செய்தார்.

13. யாருக்கு முதல் பூஜை?

பொதுவாக நாம் பெருமாளுக்குப் பூஜை செய்ய வேண்டும். எந்த உணவை உட்கொள்வதாக இருந்தாலும், பெருமாளுக்கு சமர்ப்பித்துவிட்டு உட்கொள்ள வேண்டும். சமர்ப்பணம் செய்துவிட்டால் சாதாரண சாதம்கூட பிரசாதமாக மாறிவிடும். நாம் பெருமாளுக்கு படைக்கிறோம், பெருமாளே அவதாரம் எடுத்து வந்தால் அவரும் பூஜை செய்ய வேண்டுமே, அவர் யாருக்கு படைப்பார்? ராம அவதாரத்திலே ராமன் தினசரி பூஜை செய்வார். அவர் பெருமாள். ஆனால் அவர் பூஜை செய்த பெருமாள் என்பதால் பெரிய பெருமாள் என்று வழங்கப்படுகிறார்.

திருவரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமாளுக்கு பெரிய பெருமாள் என்று திருநாமம். அந்த பள்ளிகொண்ட பெருமாளே திருமலையில் ஸ்ரீனிவாச பெருமாளாக அவதாரம் செய்தார். அவருக்கு பத்மாவதி தாயாரோடு திருமண வைபவம் நடக்கிறது. வந்த தேவர்களுக்காக திருமண விருந்து தயாராகிறது. இந்த பிரசாதத்தை யாருக்கு படைப்பது என்கின்ற கேள்வி எழுகிறது.

சாட்சாத் பெரிய பெருமாளாகிய ஸ்ரீனிவாச பெருமாளுக்கு படைக்கலாமா? ஸ்ரீனிவாசப் பெருமாள் இதை நரசிம்மப் பெருமாளுக்கு படைத்துவிட்டு மற்றவர்களுக்கு பரிமாற வேண்டும் என்று சொல்லுகின்றார். பெரிய பெருமாளே தன்னுடைய ஆராதனை பெருமாளாகக் கருதிய பெருமாள் நரசிம்மன் என்பதால் வைணவத்தில் அவரை பெரிய பெரிய பெருமாள் என்று சொல்லும் வழக்கம் உண்டு.

14. முதல் பக்தன் பிரஹலாதன்

ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக
வ்யாஸ (அ)ம்பரீஷ சுக சௌநக பீஷ்ம தால்ப்யான்
ருக்மாங்கத (அ)ர்ஜுந வஸிஷ்ட விபீஷணாதீன்
புண்யான் இமான் பரம பாகவதான் ஸ்மராமி

சிறந்த பக்தர்கள் வரிசையிலே பிரகலாதனுக்கு முதல் இடம் உண்டு. “முதலில் பாகவதனை நினை; பிறகு பகவானே நினை” என்கிற மரபு உண்டு. நரசிம்மப் பெருமாள் ‘‘நீ என்ன வரத்தைக் கேட்கிறாய். கேள் தருகிறேன்’’ என்று, மடியில் குழந்தை பிரகலாதனை அமர்த்திக்கொண்டு கேட்க, வைராக்கியமிக்க சின்னஞ் சிறுவனான பிரகலாதன், ‘‘எனக்கு வேறு என்ன வேண்டும்? எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னை ஒரு கணமும் மறவாத வரத்தை நீ அருள வேண்டும்’’ என்றான். இந்த வரத்தில் ஒரு நுட்பம் இருக்கிறது. பிரகிருதி மாயையால், இறைவனுடைய அருள் வெள்ளம் பாய்ந்தால் ஒழிய, இறைவனை நினைப்பது கூட சிரமம் தான். இதைத்தான் “அவன் அருளால் அவன் தாள் வணங்கி” என்று சொன்னார்கள்.

15. தந்தைக்கு நல்ல கதி வேண்டும்

பிரகலாதன் இறைவனை மறக்காத வரத்தைக் கேட்டவுடன், நரசிம்ம பெருமாள் அவனை உச்சி முகர்ந்து, ‘‘உனக்கு சர்வ மங்கலங்களும் உண்டாகட்டும். ஒரு மன்வந்திர காலம் இந்த பூவுலகில் ஆட்சிசெய்து பிறகு என்னை வந்து அடைவாயாக’’ என்றார். அதோடு அவன் இரண்டாவதாக ஒருவரத்தைக் கேட்டான். “தன்னைப் படைத்த பெருமானிடமே மோதி, பகவத் அபச்சாரமும், பாகவத அபச்சாரமும் ஒருங்கே செய்த தன்னுடைய தந்தை ஹிரண்யன் நல்ல கதி அடைய வேண்டும். அவரை மன்னிக்க வேண்டும்” என்று பிரார்த்தனை செய்தான். அதையும் நரசிம்ம பெருமாள் கனிவோடு ஏற்றுக்கொண்டார். அதற்குப் பிறகு பிரகலாதனுக்கு பட்டாபிஷேகம் செய்துவைத்தார்.

16. லட்சுமி நரசிம்ம கராவலம்பம்

ஆதிசங்கரர் நரசிம்மரைக் குறித்து இயற்றிய “லட்சுமி நரசிம்ம கராவலம்பம்’’ என்னும் ஸ்தோத்ரம் புகழ்பெற்றது.

ஸ்ரீ மத் பயோநித நிகேதன சக்ரபாணே,
போகீந்த்ரபோக மணிரஞ்ஜித புண்யமூர்த்தே,
யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத,
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்.

இந்த முதல் நான்கு வரி ஸ்லோகத்தைச் சொன்னால் போதும். எந்த வியாதிகளும், துர் மரணங்களும், தரித்திரமும் ஒருவரை அடையவே அடையாது. மனதில் எந்த கவலையும், அச்சமும் வராது. எந்த கொடிய விஷங்களும், கிரக தோஷங்களும் அவனை அணுகாது.

17. போட்டியில் ஜெயித்த நரசிம்மர்

திருமாலின் அவதாரங்களுக்குள் போட்டி நடந்ததாம் 1). மத்ஸ்ய, 2). கூர்ம, 3). வராஹ, 4). நரசிம்ம, 5). வாமன, 6). பரசுராம, 7). ஸ்ரீராம, 8) பலராம, 9). கிருஷ்ண, 10). கல்கி அவதாரங்களை, வரவழைத்தார்! முதல் சுற்றில். மத்ஸ்ய, கூர்ம, வராஹ அவதாரங்களும் முறையே. மீன், ஆமை, பன்றி ஆகிய மிருகங்களின் வடிவங்களில் இருந்தமையால், அழகுப் போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது! எனக் கூறி நிராகரித்து விட்டாராம் ஆழ்வார்.

நரசிம்மருக்குத் தலை சிங்கம்போல இருந்தாலும், உடல் மனித வடிவில் இருந்ததால் அவரை நிராகரிக்கவில்லை! “மகாபலியிடம் சிறிய பாதத்தைக் காட்டி மூவடி நிலம் கேட்டுவிட்டுப் பெரிய பாதத்தால் மூவுலகையும் அளந்தவர்!’’ என்ற குறை வாமன மூர்த்தியிடம் இருந்ததாம். பரசுராமர் எப்போதும் கையில் மழுவுடனும், கோபம் நிறைந்த முகத்துடனும் இருப்பதால், அதுவும் குறையாயிற்று.

18. நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை

பலராமன், கண்ணன் இருவரும் “ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர்தான் பங்கேற்கலாம் என்று சொல்ல’’ தம்பிக்காகப் பல ராமன் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். கல்கி பகவான் இன்னும் அவதாரமே எடுக்காததால், “நீங்கள் அவதரித்தபின் போட்டியில் வந்து பங்கேற்றுக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி அவரையும் நிரா கரித்துவிட்டார்! திருமழிசையாழ்வார். இறுதியாக, நரசிம்மர், ராமர், கிருஷ்ணர் கலந்து கொண்டார்கள். மூவரையும் பரீட்சித்து நரசிம்மர்தான் அழகு! என்று தீர்ப்பளித்தாராம் ஆழ்வார்.

ராமர் அனைத்து நற்பண்புகளும் நிறைந்த பரிபூர்ணமான மனிதனாக வாழ்ந்து காட்டினார். கண்ணன் அனைவரையும் மயக்கிய அழகர் என்பதிலும் சந்தேகமில்லை! ஆனாலும் ஆபத்தில் ஓடோடி வந்து காப்பாற்றி யதுதானே அழகு. பிரகலாதனுக்காகத் தூணைப் பிளந்து வந்து காத்த பெருமாள் நரசிம்மர்; எனவே அவரே அழகு!” என்று தீர்ப்பளித்தார் திருமழிசையாழ்வார்.

‘‘அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் – குழவியாய்த்
தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிரளிக்கும் வித்து’’

19. பரிபாடலில் நரசிம்ம அவதாரம்

சங்க இலக்கியங்களில் ஸ்ரீநரசிம்ம அவதாரத்தைக் குறித்த குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. நான்காம் பரிபாடலில், கடுவன் இளவயினார், நரசிம்ம அவதாரத்தின் தோற்றத்தைக் குறித்து விவரிக்கிறார். ‘‘சிவந்த கண்ணையுடையோனே! பிரகலாதன் நின்னைப் புகழ, அது பொறாத இரணியனுடைய மார்பினைப் பிளந்த நகத்தினை உடையை.’’ என்று நரசிம்மரின் நகத்தைப் புகழ்கிறார். சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் “மடங்கலாய் மாறட்டாய்” என்று பாடுகிறார் இளங்கோவடிகள்.

மடங்கல் என்பது சிங்கம். மாறு என்பது பகைவனாகிய இரணியனைக் குறிக்கும். அட்டாய் என்பது அவரை அழித்ததைக் குறிக்கும். சிங்க உருவம் எடுத்து, தன்னிடத்திலே மாறுபட்ட இரணியனை வென்றான் என்பது இப்பாடலின் கருத்து. ஒரே வரியிலேயே நரசிம்ம அவதாரத்தின் பெருமையை இளங் கோவடிகள் இப்பாடலில் சொல்லி இருக்கின்றார்.

20. கம்பன் இராமாயணத்தை அங்கீகரித்த அழகிய சிங்கர்

கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கு நரசிம்மப் பெருமாளின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. அவர் தன்னுடைய கம்பராமாயணத்தை அரங்கேற்றுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். கடைசியில் அவர் திருவரங்கத்தில் தாயார் சந்நதி முன் உள்ள மண்டபத்தில் புலவர்களைக் கூட்டி கம்பராமாயணத்தை அரங்கேற்றினார். அந்த நாற்கால் மண்டபத்துக்கு இடது புறம் நரசிம்மருடைய சந்நதி இருக்கிறது. அது சற்று மேடான பகுதியில் இருப்பதால் அவருக்கு மேட்டு அழகிய சிங்கர் என்கிற திருநாமம். கம்பராமாயணத்தில் இரணியன் வதைப் படலத்தில் நரசிம்மரின் தோற்றத்தை கம்பர் உணர்ச்சிகரமாக வர்ணித்த பொழுது, மேட்டழகிய சிங்கர் சிரக்கம்பம் செய்து அங்கீகரித்தார் என்பது வரலாறு.

21. இரணிய வதைப் படலம்

நரசிம்ம அவதாரத்தைக் குறித்து வேதங் களில் சொல்லப்பட்டிருந்தாலும் அதனை மிக அற்புதமாகப் பாடியவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர். கம்பர் இராமனின் கதையைப் பாடுகின்ற பொழுது, இடையில் ஸ்ரீமன் நாராயணனின் பெருமையைக் கூறுவதற்கான மிகச் சரியான இடம் கிடைக்காமல், விபீஷணனின் மூலம், நரசிம்ம அவதாரத்தின் பெருமையைக் கூறினார். அதற்கென்றே இரணியன் வதை படலம் என்கின்ற பகுதியை இயற்றினார். அதை படித்தால் போதும். நரசிம்ம அவதார மகிமையை பூரணமாகத் தெரிந்து கொள்ளலாம்.

22. வைணவத் தத்துவப் பெட்டகமே நரசிம்ம அவதாரம்

ஸ்ரீமன் நாராயணனின் திருநாமங்களின் பெருமையைக் குறித்தும், பிரகலாதாழ்வானின் வைராக்கியமான பக்தியைக் குறித்தும் கம்பர் இரணிய வதைப்படலத்தில் மிகப் பரவசமாகப் பாடியிருப்பார். கிட்டத்தட்ட 175 பாடல்களிலே நரசிம்ம வைபவத்தை அவர் பாடி இருக்கிறார். பிரஹலாதன் வாய்மொழி மூலமாக எம்பெருமானின் பெருமைகளைப் பேசும் ஒவ்வொரு பாடலும் பாராயணம் செய்யும் தகுதி படைத்த தோத்திரப் பாடல்களாகும்.

எத்தனைக் கஷ்டங்கள் இருந்தாலும், தீர்க்க முடியாத சிக்கல்கள் வந்தாலும், விளக்கேற்றி வைத்து, இந்த இரணியன் வதைப்படலத்தை ஈடுபாட்டோடு படித்தால் நிச்சயமாக நரசிம்மப் பெருமாளுடைய பூரண அருள் கிடைத்து, அந்த சிக்கல்கள் விலகும். காரணம் வேதத்துக்கு நிகரான மந்திரச் சொற்கள் எல்லாம் பெய்து கம்பன் பாடி இருக்கிறார்.

23. அவனைத் தவிர வேறு யார் நாமமும் சொல்லமாட்டேன்

பிரஹலாதன் சொல்கின்றான்.‘‘நான் நாராயணனின் நாமத்தைத் தவிர வேறு எந்த நாமத்தையும் சொல்ல மாட்டேன். காரணம், அதுவே வேதத்தின் முடிவான இறைவனுடைய திருநாமம்.

வேதத்தானும், நல் வேள்வியினானும், மெய் உணர்ந்த
போதத்தானும், அப் புறத்துள எப் பொருளானும்,
சாதிப்பார் பெறும் பெரும் பதம் தலைக்கொண்டு சமைந்தேன்;
ஓதிக் கேட்பது பரம்பொருள் இன்னம் ஒன்று உளதோ?
நான் சொல்லுகின்ற நாமத்தைவிட சிறந்த நாமம் ஒன்று இல்லை என்கின்றான்.
எனக்கும் நான்முகத்து ஒருவற்கும், யாரினும் உயர்ந்த
தனக்கும் தன் நிலை அறிவு அரும் ஒரு தனித் தலைவன்
மனக்கு வந்தனன்; வந்தன, யாவையும்; மறையோய்!

உனக்கும் இன்னதின் நல்லது ஒன்று இல்’’ என உரைத்தான். தன் தந்தையிடம் “வேதம் படித்த தந்தையே, இந்த நாமம் உனக்கும் உரியது” என்று சொல்லும் நயம் கவனிக்க வேண்டும்.

24. நாராயண மந்த்ரம்

நரசிம்ம அவதாரத்தின் பெருமையைச் சொல்லுகின்ற பொழுது எட்டெழுத்து மந்திரத்தின் பெருமையை கம்பன் பிரகலாதன் வாய் வார்த்தையாக காட்டுகின்ற நயம் அற்புதமானது.

காமம் யாவையும் தருவதும், அப் பதம் கடந்தால்,
சேம வீடு உறச் செய்வதும், செந் தழல் முகந்த
ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும், ஒருவன்
நாமம்; அன்னது கேள்: நமோ நாராயணாய!

25. அதிர்ஷ்ட பலமாக நின்று காத்தவன் நரசிம்மன்

இரணியன் பிரகலாதன்மீது கோபம் கொண்டு பற்பல இடையூறுகளைச் செய்கின்றான். அத்தனை இடையூறுகளில் இருந்தும் பிரகலாதன் தப்பிக்கின்றான். இரணியன் செய்த அத்தனை கொடுமையிலிருந்தும் அதிர்ஷ்ட பலமாக நின்று (மறைமுகமாக) காத்தவன் நரசிம்மன். கடைசியில் இரணியன் சினம் எல்லை மீறிப் போகிறது. தன் பிள்ளை உயிரை எடுக்க முடியாத கவலை பெற்ற தந்தைக்கு வருகிறது. இரணியன் சொல்கின்றான். ‘‘எத்தனையோ செய்தும் உன் உயிரை என்னுடைய படைகளால் பறிக்க முடியவில்லை. தப்பிக்கும் விதத்தை தெரிந்திருக்கிறாய். இனி நானே உன்னுடைய உயிரைப் பறிக்கப் போகிறேன்” என்று சொன்னவுடன், பிரகலாதன் சொல்லுகின்ற பதில் அற்புதமானது.

வந்தானை வணங்கி, ‘‘என் மன் உயிர்தான்
எந்தாய்! கொள எண்ணினையேல், இதுதான்
உம் தாரியது அன்று; உலகு யாவும் உடன்
தந்தார் கொள நின்றது தான்’’ எனலும்,

“தந்தையே என்னுடைய உயிர் உன்னுடைய வசத்தில் உள்ளதன்று. அது எம்பெருமானுடைய வசத்தில் உள்ளது. அவன் நினைத்தால் அன்றி, உன்னாலோ உன்னைச் சேர்ந்தவர்களோ என்னைக் கொல்ல முடியாது. என்ற அற்புதமான தத்துவத்தை அந்த இடத்திலே காட்டுகின்றான்.

26. எங்கும் நிறைந்தவன்

நிறைவாக அவன் ஒரு கேள்வி கேட்கின்றான். “நீ சொல்லுகின்ற கடவுள் இந்தத் தூணில் இருக்கிறானா?” பிரகலாதன் பதில் சொல்லுகின்றான். அந்தப் பதில் அற்புதமானது. வேத கருத்துக்களின் சாரமானது. “இந்த தூணில் மட்டுமல்ல. எல்லா இடங்களிலும் அவன் நிறைந்திருக்கிறான். அதனால்தான் அவனை விஷ்ணு என்று சொல்லுகின்றோம்”

‘‘சாணிலும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன்; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத் தன்மை
காணுதி விரைவின்’’ என்றான்; ‘‘நன்று’’ எனக் கனகன் நக்கான்.

27. காட்டவில்லையானால் உன்னைக் கொல்வேன்

“அப்படியானால் இந்தத் தூணில் நீ காட்டுகின்ற இறைவன் இல்லை என்று சொன்னால் உன்னுடைய உயிரை எடுப்பேன். உன் உடம்பிலிருந்து வரும் குருதியைக் குடிப்பேன். உன் உடலையும் தின்பேன்” ஆணவம் அதிகமாகின்ற பொழுது பேசும் பேச்சு எத்தனை விபரீதமாகும் என்பதை கம்பன் காட்டும் இடம் இது.

உம்பர்க்கும் உனக்கும் ஒத்து, இவ் உலகு எங்கும் பரந்துளானை,
கம்பத்தின் வழியே காண, காட்டுதி; காட்டிடாயேல்,
கும்பத் திண் கரியைக் கோள் மாக் கொன்றென,நின்னைக் கொன்று, உன்
செம்பு ஒத்த குருதி தேக்கி, உடலையும் தின்பென்’’–என்றான்.

28. கடவுள் நம்பிக்கையின் ஆழம்

அப்பொழுது பிரகலாதன் சொல்லுகின்ற பதில் அதிஅற்புதமானது. “என்னுடைய உயிர் உன்னால் கொல்லப்படும் அளவிற்கு அத்தனை எளிமையானதா? உன்னையும் என்னையும் படைத்த பரம்பொருளான திருமால், நீ தொட்ட தொட்ட இடங்களில் எல்லாம் இருப்பான். அப்படி அவன் தோன்றவில்லை எனில், என்னுடைய நம்பிக்கை போய் விட்டது. நீ என்ன என் உயிரை எடுப்பது? என் உயிரை நானே மாய்த்துக் கொள்வேன்.

என் உயிர் நின்னால் கோறற்கு எளியது ஒன்று அன்று; யான்
முன் சொன்னவன் தொட்ட தொட்ட இடம்தொறும் தோன்றான் ஆயின்,
என் உயிர் யானே மாய்ப்பல்; பின்னும் வாழ்வு உகப்பல் என்னின்,
அன்னவற்கு அடியேன் அல்லேன்’’ என்றனன், அறிவின் மிக்கான்

29. ஆஹா என்று சிரித்தது செங்கட் சீயம்

இரணியன் இகழ்ச்சியாக சிரித்து தன்னுடைய முறம் போன்ற கைகளினாலே தானே கட்டிய பொற்றூணை ஓங்கி அறைந்தான்.

அளந்திட்ட தூணைஅவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டுவாளுகிர்ச் சிங்க உருவாய்
உளந்தொட்டுஇரணியன் ஒண்மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி

இரணியன் சந்தேகத்தைத் தீர்க்கும் படியாக அவனே கட்டிய தூணில் ஆவிர்பவித்தான். தூணில் எப்படி தோன்றினார் என்பதை கம்பன் வர்ணிப்பது போல வேறு எங்கும் நாம் பார்க்க முடியாது.

நசை திறந்து இலங்கப் பொங்கி, ‘‘நன்று, நன்று!” என்ன நக்கு,
விசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன, ஓர் தூணின், வென்றி
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்; எற்றலோடும்,
திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, செங் கண் சீயம்.

30. பிரஹலாதன் மகிழ்ச்சி

பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை
வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது; அப் புறத்துச் செய்கை யார் அறிந்து அறையகிற்பார்?
கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது, கீழும் மேலும்.

நரசிம்மரைப் பார்த்ததும் பிரகலாதனுடைய மகிழ்ச்சி எப்படி இருந்தது என்பதை கம்பனைத் தவிர வேறு யாரும் காட்டவில்லை. நரசிம்மபெருமாளின் சிரிப்பொலியைக் கேட்டு மகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடினான். பொலபொலவென்று கண்ணீர் விட்டு அழுதான். இறைவனின் பல்வேறு விதமான நாமங்களைப் பாடி ஆரவாரம் செய்தான். தன்னுடைய சிவந்த கைகளை தலையில் வைத்து தொழுதான். ஆடினான். பாடினான். கீழே விழுந்து வணங்கினான். துள்ளிக் குதித்து ஓடினான். என்று கம்பன் பிரகலாதனுடைய அந்த உற்சாகத்தை அற்புதமாக காட்டுகின்றார்.

இந்த மகிழ்ச்சியும் ஆனந்தமும் நமக்கும் வரவேண்டும். வரும். பிரகலாதனை நினைத்து நாமும் அவனை சரணாகதி செய்வோம். நரசிம்ம ஜெயந்தி (4.5.2023) அன்று காலையில் அவனைப்பற்றிய பல்வேறு நாமங்களைக் கூறி, துளசி மாலையால் அலங்கரித்து, நெய் தீபம் ஏற்றி வைத்து, பானகமோ பாலோ இருந்தாலும்கூட போதும், நிவேதனம் செய்து, அவனுடைய காயத்ரி மந்திரங்களை ஜெபித்து, நரசிம்ம ஜெயந்தியைக் கொண்டாடுவோம்.

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: