கண்டோம் ஸ்ரீ அழகர்.. கண்டோம் மகிழ்வு.. கொண்டோம் மதுரை வாழியவே’ பச்சை பட்டில் வைகையில் எழுந்தருளிய ஸ்ரீ கள்ளழகர்!
விண்ணதிர எழுந்த ஸ்ரீ கோவிந்தா முழக்கங்களுக்கு இடையே மக்கள் வெள்ளத்தில் அழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
பச்சை பட்டுத்தி ஜொலித்த ஸ்ரீ கள்ளழகர் ஸ்ரீ கோவிந்தா முழக்கங்களுக்கு கிடையே வைகை ஆற்றில் இறங்கினார்.
மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருக்கல்யாணம், தேரோட்டம் முடிந்த நிலையில் முக்கிய நிகழ்வான ஸ்ரீ கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை முதல் தொடங்கியது. விண்ணதிர எழுந்த ஸ்ரீ கோவிந்தா முழக்கங்களுக்கு இடையே மக்கள் வெள்ளத்தில் ஸ்ரீ அழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதையடுத்து அங்கு திரட்டிருந்த மக்கள் பக்தி பரவசத்துடன் ஆடி பாடி மகிழ்ந்தனர்.
சர்க்கரை தீபம் ஏந்தி ஸ்ரீ கள்ளழகரை தரிசித்த பக்தர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு ஸ்ரீ சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு ஸ்ரீ கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.
இந்த-ஸோபக்ருத் ஆண்டிற்கான கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 1 ஆம் தேதி தொடங்கிய நிலையில் 4ஆவது நிகழ்வாக நேற்று அதிகாலை மதுரை நகருக்குள் கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை வரவேற்கும் வகையில் மூன்றுமாவடி எனுமிடத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி தொடங்கி புதூர், டிஆர்ஓ காலனி, ரிசரவ்லைட், அவுட்போஸ்ட் தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அப்போது வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபத்தை ஏந்தி கள்ளழகரை வரவேற்றனர்.
தொடர்ந்து நள்ளிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் திருமஞ்சணம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அதிகாலை 2.30 மணிக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிவித்துகொண்டு வெட்டிவேர் சப்பரத்திலும் அதன் பின்னர் ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளினார்.
இதனையடுத்து மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள கருப்பணசாமி கோவிலில் இருந்து தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆறு நோக்கி புறப்பட்ட கள்ளழகரை வரவேற்கும் வகையில் கள்ளழகர் மற்றும் கருப்பணசாமி வேடமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர்.
ஆழ்வார்புரம் வைகையாற்று பகுதிக்குள் கள்ளழகர் தங்க குதிரையில் வருகை தரும்போது வெள்ளிக்குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகரை வரவேற்றார்.
வைகையாற்றில் எழுந்தருள வந்த கள்ளழகரை ராமர் பாதம் தாங்கிகள் முன்னே வர சக்கரை தீபம் ஏற்றி பெண்கள் வரவேற்றனர்.
அப்போது வைகை ஆற்றில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், சர்க்கரைதீபம் ஏந்தியும் கோவிந்தா கோவிந்தா என விண் அதிரும் வகையில் பக்தி கோசங்களின் மத்தியில் காலை 5.45 மணிக்கு பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் தாமரை இலைகள், மலர்களால் நிரப்பபட்டிருந்த வைகையாற்று பகுதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்..
தொடர்ந்து ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள இந்து அறிநிலையத்துறை மற்றும் வீர ராகவ பெருமாள் கோவில் சார்பில் அமைக்கப்பட்ட மண்டகப்படிகளில் கள்ளழகர் மற்றும் வீர ராகவ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது.
பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளியதால் மும்மாரி மழை பொழிந்து விவசாயம் கொழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையோடு பக்திகோஷம் எழுப்பினர்
இதனையடுத்து இராமராயர் மண்டகப்படியில் நடைபெறும் தீர்த்தவாரி எனப்படும் நிகழ்ச்சிக்காக கள்ளழகர் புறப்பட்டார்.
முன்னதாக வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக 2டன் வண்ண மலர்களால் மண்டகப்படி அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியையொட்டி இரும்புவேலிகள் அமைக்கப்பட்டு 5 ஆயிரம் காவல்துறையினர் பலத்தபாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியை காண்பதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்களால் தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை மக்கள் வெள்ளதால் நிரம்பி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.
மேம்பாலங்களிலும், கட்டிடங்களில் மேல் அமர்ந்து பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
வைகையாற்றில் பக்தர்கள் இறங்குவதற்காக வைகை ஆறு ஒட்டிய தடுப்பு சுவர்களின் அருகே 4 இடங்களில் தற்காலிக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது வைகையாற்றை சுற்றிலும், தீயணைப்புத் துறையினர்,மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தனர்.
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதையடுத்து பல்லாயிரக்கணக்காணோர் வைகையாற்றின் கரையோரங்கில் அமரந்து முடி காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர்.
கள்ளழகரை தரிசிப்பதற்காக நள்ளிரவில் இருந்தே வெளியூர்களில் இருந்துவந்த பக்தர்கள் சாலைகளில் அமர்ந்திருந்து பின்னர் வைகை ஆற்று கரையோர பகுதிக்கு புறப்பட்டு சென்று கள்ளழகர் எழுந்தருளுவதை நேரில் கண்டு களித்தனர்.
பச்சை பட்டு
கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி ஆற்றில் இறங்கியது விவசாயம் பெருகும், நாடு செழிக்கும் என்பதை கோடிட்டு காட்டுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து 6-ம் தேதி காலையில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் காட்சி அளிக்கிறார். 7-ம் தேதி இரவு பூப்பல்லக்கு விழா நடக்கிறது. வரும் 8-ம் தேதி காலை அதே பரிவாரங்களுடன் கள்ளழகர் அழகர் கோயிலுக்கு புறப்பாடாகிறார். அன்று இரவு அப்பன் திருப்பதியில் திருவிழா நடைபெறவுள்ளது.
9ம் தேதி காலையில் கள்ளந்தரி வழியாக கள்ளழகர் கோயிலுக்கு சென்று இருப்பிடம் சேருகிறார். 10-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறும்.
ஏன் கள்ளழகர் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்குகிறார் என்று தெரியுமா? அதற்கு புராணக்கதைகள் உள்ளது.
மதுரையில் மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. அப்போது, திருமாலின் அவதாரமாக விளங்கும் சுந்தரராஜப்பெருமாள் தன் தங்கை மீனாட்சியின் திருமணத்தை காண்பதற்காக சீதனத்தோடு அழகர் மலையிலிருந்து கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு வருகிறார். ஆனால், அவர் வருவதற்குள் திருமணம் முடிந்து விடுகிறது.
இத்தகவல் கள்ளழகர் வைகை ஆற்றின் வடகரைக்கு வரும்போது அவருக்கு தெரியவருகிறது. இதனால் கோபமடைந்த கள்ளழகர் மதுரை மாநகருக்கு வராமல் வண்டியூர் வழியாக மீண்டும் அழகர் மலைக்கே திரும்பிச் சென்று விடுகிறார்.
ஆனால், கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு இன்னொரு கதையும் உள்ளது. புகழ்பெற்ற நூபுர கங்கையில் ஒரு நாள் சுதபஸ் முனிவர் தண்ணீரில் மூழ்கி தவம் செய்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக துர்வாச முனிவர் தன் சீடர்களுடன் நூபுர கங்கைக்கு வருகை வந்தார். ஆனால், இவர் வருவதை சுதபஸ் முனிவர் கவனிக்கவில்லை. இதனால், கோபமடைந்த துர்வாச முனிவர் இன்றிலிருந்து நீ தவளையாக மாறுவாய் என்று சுதபஸ் முனிவருக்கு சாபமிடுகிறார். தன் தவறை உணர்ந்த சுதபஸ் முனிவர் மன்னிப்பு கேட்டார்.
அப்போது, மனமிறங்கிய துர்வாச முனிவர், சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தன்று மறுநாள் வரும் கிருஷ்ணபட்ச பிரதமை திதியில் சுந்தரராஜப்பெருமாள் உமக்கு சாபவிமோசனம் அளிப்பார் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார். சாபத்தால் தவளையாக மாறிய சுதபஸ் முனியவர், சுந்தரராஜப்பெருமாளை நினைத்து வைகை கரையில் தவம் இருக்கிறார்.
சுதபஸ் முனியவர் செய்த தவத்தால், மனம் மகிழ்ந்த சுந்தரராஜப்பெருமாள் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்கி சுதபஸ் முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார் என்று புராணக் கதை சொல்கிறது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில் என்று தனித்தனியாக சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், சைவ-வைணவ சமயங்களின் ஒற்றுமையை காத்திடும் வகையில் மதுரையை ஆண்ட மாமன்னர் திருமலைநாயக்கர் ஒரே விழாவாக இணைத்து நடத்தினார்.
இவையே அன்று முதல் இன்று வரை சித்திரை திருவிழாவாக மதுரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை திருவிழா தினத்தன்று, மலையை விட்டு இறங்கும் அழகரை எதிர்கொண்டு அழைத்து மதுரை மக்கள் எப்படி வரவேற்பு கொடுத்தார்களோ அதேபோன்று, அவரை வழியனுப்பவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரை எல்லையில் திரண்டு நின்றுக்கொண்டிருப்பார்கள். அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் ஒரு பெரிய மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.
அந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள் என பல வர்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டியை திறந்து கைவிட்டு ஒரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த புடவை சிக்குகிறதோ அந்தப் புடவையைத்தான் கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது அணிவிப்பார்கள்.
கள்ளழகர் பச்சை திறத்தில் புடவை கட்டி வந்தால் அந்த வருடத்தில் நாடு செழிப்பாக இருக்குமாம். சிவப்பு புடவை கட்டி வந்தால் அந்த வருடம் நாட்டில் அமைதி குலைந்து, பேரழிவு ஏற்படுமாம். வெள்ளை நிறத்தில் புடவை கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்குமாம். மஞ்சள் திறத்தில் புடவை கட்டி வந்தால் மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் அந்த வருடம் நடக்கும் என்று மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
சித்ரா பவுர்ணமிக்கு நான்கு நாள் முன்னதாகச் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடுகிறது. முதல் இரண்டு நாட்கள் கோவிலில் இருப்பார் அழகர். மூன்றாம் நாள் மாலை மதுரையை நோக்கிப் புறப்படுகிறார். ஆரம்ப காலத்தில் கோவிலை விட்டு கிளம்பும் அழகர், அலங்காநல்லூர் போய்ச் சேருவார். அங்கு அழகரை குதிரை வாகனத்தில் தூக்கி வைத்து (ஆற்றில் இறங்குவதற்காக) அலங்காரம் செய்வார்கள். அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால், அலங்கார நல்லூராக இருந்து, பின்பு அலங்காநல்லூராக மாறிப் போனதாகச் சொல்கிறார் கள். அலங்காநல்லூரில் இருந்து தேனூருக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கும் அழகர், அதன் பிறகு வண்டியூருக்கு வந்து மண்டூக முனிவருக்கு (சுதபஸ்) சாபவிமோசனம் கொடுப்பார். இதனால் மண்டூர் என அழைக்கப்பட்டு அதுவே மண்டி யூராகிப் பிறகு வண்டியூராகிப் போனதாம்.
கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (பூமராங்), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கி அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டுவரும் அவர், வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந் நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப் படிகளில் ஆசி வழங்கிவிட்டு, நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்து சேருகிறார். அதற்கு முன்னதாக மதுரை எல்லையான மூன்று மாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர் சேவை நிகழ்ச்சி களை கட்டுகிறது. நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கள்ளழகருக்கு அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்துக்கும் நூபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம். இதிலும்கூட ஒரு நம்பிக்கை. அழகருக்கான ஆடைகள், அலங்காரப்பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும்.
இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா…என பல வண்ணங் களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோவிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கை விட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும். வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் ‘ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?’ எனப்பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஐந்தாம் நாள் பவுர்ணமியன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். இதற்கு தல்லாகுளத்தை விட்டு கள்ளழகர் கிளம்பியதுமே தண்ணீர் பீய்ச்சும் வைபவம் தொடங்குகிறது. அந்தக் காலத்தில் அழகர் வருவதற்குப் புதிதாகப் பாதை அமைத்ததால் தூசி கிளம்பாமல் இருப்பதற்காகவும், வெப்பத்தைத் தணிப்பதற்காகவும் தண்ணீர் பீய்ச்சும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். காலப் போக்கில் தண்ணீர் பீய்ச்சுவது ஒரு முக்கிய வைபவமாக மாறிப்போனது. அழகர் ஆற்றில் இறங்கி வண்டியூர் போய்ச் சேரும் வரை இந்த வைபவம் கலகலப்பாக நடக்கிறது. ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப்பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார். ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள். அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு ஐந்தாம் நாள் இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர். ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோவிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவானகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் (இந்த மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலைநாயக்கரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே தேனூரில் நடந்து கொண்டிருந்த வைபவங்கள் இப்போது இந்த மண்டபத்தில் நடக்கிறது) வந்து சேருகிறார் அழகர். தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார். பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு ஆறாம்நாள் இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்கு தங்குகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், ஏழாம் நாள் காலையில் அங்கிருந்து அனந்த ராயர் பல்லக்கில் (திருமலை நாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்ட இது முழுக்கத் தந்தத்தால் இழைக்கப்பட்டது) தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும். எட்டாம்நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலை நோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக் கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோவிலைச் சென்றடைவார். பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கிறது. அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவுற்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது மதுரை. இதே போல ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது
மதுரை, மதுரை சித்திரை பெருந்திருவிழாவையொட்டி மதுரை வந்த கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நேற்று விடிய விடிய நடந்தது. அதை தொடர்ந்து மதுரை வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அழகரை தரிசனம் செய்வர்.
மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது சித்திரை பெருந்திருவிழாவாகும். இந்த விழா கடந்த 1-ம் தேதி மாலையில் அழகர்கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பின்னர் அலங்கரிக்கப்பட்ட தங்கப்பல்லக்கில் கள்ளழகராக கோலம் கொண்டு பெருமாள் மதுரையை நோக்கி புறப்பட்டார்.
அப்போது 18-ம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து வழி நெடுகிலும் கள்ளந்திரி, அப்பன் திருப்பதி ஜமீன்தார் மண்டபம் உள்ளிட்ட பல மண்டபங்களில் அழகர் எழுந்தருளினார். தொடர்ந்து நேற்று காலையில் மூன்று மாவடி பகுதியில் காலை 6 மணிக்கு சுவாமி அதே பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பெருமாள் திருமஞ்சனமாகி, குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுடைய திருமாலையை சாற்றி, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதை தொடர்ந்து இன்று(5-ம் தேதி) அதிகாலையில் 2.30 மணிக்கு மேல் 3 மணிக்குள் ஆயிரம் பொன் சப்பரம் எழுந்தருளல் நடைபெற்றது.
அதை தொடர்ந்து இன்று காலை 5.45 மணிக்கு மேல் 6.12 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்குகிறார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்வார்கள். நாளை 6-ம் தேதி தேனூர் மண்டபத்தில் காலை 9 மணிக்கு அழகர் சேஷ வாகனத்தில் எழுந்தருளுகிறார். பிற்பகல் 3 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தருள்வது நடைபெறுகிறது. அதை தொடர்ந்து அன்று இரவு தசாவதார காட்சி நடைபெறுகிறது. இந்த வருடம் 480 மண்டபங்களில் அழகர் எழுந்தருள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.
விழாவையொட்டி மதுரை புறநகர் பகுதியில் மாவட்ட காவல்துறை சார்பில் வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சீருடை அணியாத போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முத்துக்கள் முப்பது-வாராரு வாராரு… அழகர் வாராரு…
தமிழகத்திற்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அதில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள வானளாவிய கோபுரங்களும், கோயில்களும் முக்கியமானவை. தமிழகத்தின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் எடுத்துக்காட்டும் ஆலய விழாக்கள் முக்கியமானவை. அவற்றில், மிகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றுதான் சித்திரையில் “அழகர் பெருவிழா”. ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ‘‘வைகை ஆற்றில் இறங்குதல்” நிகழ்வினை பல்லாயிரக் கணக்கானோரை ஈர்க்கிறது. இந்த சித்திரைத் திருவிழாவைப் பற்றி பல்வேறு தகவல்களை “முப்பது
முத்துக்களாகக்” காண்போம்.
1. மதுரையின் சிறப்பு
மதுரை என்றாலே தமிழ். தமிழ் என்றாலே மதுரை. தமிழ் நாடு என்று நினைத்தால், முதலில் நினைவுக்கு வருவது மதுரை தான். சங்கம் வளர்த்த மதுரை சுமார் 2,500 ஆண்டுகள் பழமையானது. கடம்ப மரங்கள் நிறைந்த வனப்பகுதியாக இருந்ததால் `கடம்பவனம்’ என்றும், மருத மரங்கள் அதிக அளவில் காணப்பட்டதால் `மருதை’ என்றும், அனைவரும் கூடி இலக்கியக் கலந்துரையாடல் செய்தமையால் கூடல் மாநகர் என்றும், நீர் நிலைகளுக்கு நடுவே அமைந்தமையால் ஆலவாய் என்றும், கோட்டையின் நான்கு வாயில்கள் சங்கமிப்பதால் நான்மாடக் கூடல் என்றும், அழைக்கப்படும் பெருமைகளைக் கொண்டது.
2. வீதிகளில் தமிழ் மணம்
மதுரைக்குத் தான் எத்தனை பெயர்கள்? 1.மல்லிகை மாநகர், 2.கூடல் நகர், 3.மதுரையம்பதி, 4.கிழக்கின் ஏதென்ஸ், 5.நான் மாடக்கூடல், 6.மீனாட்சி பட்டணம், 7.ஆலவாய், 8.கடம்பவனம், 9.அங்கண் மூதூர், 10.தூங்கா நகரம், 11.கோவில் நகரம் 12. பூலோக கயிலாயம் என பல பெயர்கள் உண்டு. சித்திரை வீதி, மாசி வீதி, ஆவணி வீதி என தமிழ் மாதங்களின் பெயராலேயே தெருப்பெயர்கள் அமைந்திருக்கும் சிறப்பு மதுரைக்கே உரியது. மாடக்குளம், ஆத்திகுளம், கரிசல்குளம் என நீர் நிலைகளின் பெயராலேயே கிராமங்களுக்கு பெயரை வைத்து நீருக்கு மரியாதை செய்யும் வழக்கமும் அதிகம்.
3. அன்னை மீனாட்சி அருளாட்சி செய்யும் இடம்
4. ஆற்றைப் பார்த்தாயா? எம் அழகரைப் பார்த்தாயா?
மதுரை என்றாலே “விழாக்களின் நகரம்” என்று சொல்லுவார்கள். வருடம் முழுக்க ஏதேனும் ஒரு விழா நடந்து கொண்டே இருக்கும். அப்படி நடக்கின்ற விழாக்களில் மிக முக்கியமான விழா, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழா மற்றும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா. அழகர் ஆற்றில் இறங்குவதைக் காணுவதற்கு உலகமெங்கும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். ‘‘ஆற்றைப் பார்த்தாயா, எம் அழகரைப் பார்த்தாயா” என்கின்ற கூற்று இந்த விழாவின் சிறப்பினை எடுத்துரைக்கும்.
5. பெண்ணைப் பார்த்தால் மீனாட்சி, ஆணைப் பார்த்தால் அழகர்
மதுரை என்றாலே மீனாட்சி பெயரும், அழகர் பெயரும் பிரசித்தம். மேலூர் அழகர் கோயில் பக்கம், வீட்டில் ஒரு அழகர் இருப்பார். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் சித்திரை திருவிழாவுக்கு புறப்பட்டு வந்து சேருவார்கள். வைகை ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழாவில், அழகருக்கு ஆயிரம் பாட்டு இருந்தாலும் “வாராரு வாராரு அழகர் வாராரு” பாட்டு தான் ஊரில் எந்த பக்கம் திரும்பினாலும் கேட்கும்.
6. வைகை நதியின் சிறப்பு
சித்திரை விழாவில் மூன்று சிறப்புகள் உண்டு. ஒன்று மதுரை. இரண்டாவது அழகர் மலை. மூன்றாவது வைகை நதி. வைகை நதிக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? மீனாட்சி அம்மனின் திருமணத்திற்கு வந்த குண்டோதரன் என்ற அசுரன், தாகத்தால் சிவனை வேண்டினான். அப்போது சிவபெருமான், `வை…கை’ என்று குண்டோதரனுக்கு உத்தரவிட, வைகை பிறந்ததாக புராணங்கள் சொல்லுகின்றன.
7. சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு பெயர்
ஸ்வாரஸ்யமாக இன்னொருசெய்தி. திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் `வை’யும் சிவபெருமானின் இருப்பிடமான கைலாயத்தின் `கை’யும் இணைந்து சங்கரநாராயணர்களின் இருப்பிடமான தீர்த்தமாக `வைகை’ அமைந்திருக்கிறது. வைகுதல்=தங்குதல், நிலைபெறுத்தல் என்ற ஒரு பொருளும் உண்டு.
8. சமயம், தமிழ் சேர்ந்ததால்…
மதுரையில், சமயமும் தமிழும் சேர்ந்து நிலை பெறச் செய்வதால் வைகை என்று பெயர். “அவள் வைகுவதால், வைகையும் ஆகிறாள்” என்பார்கள் சான்றோர்கள். வைகைக்கு வேகவதி என்று பெயரும் உண்டு. தமிழ் இலக்கியத்தில் வெகுவாக வைகை புகழப்பட்டுள்ளது. ‘‘வையை என்னும் பொய்யாக் குலக்கொடி”, ‘‘ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் நாட்களிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வையை” என்பன போன்ற தொடர்கள் வைகை நதியின் பெருமையைச் சொல்லும். சிவ பெருமானின் திருவிளையாடல்கள் வைகை ஆற்றங்கரையில் நிகழ்ந்ததாகக் கூறுவர். வடமொழி நூல்கள் வைகையை ‘‘க்ருதமாலா” நதி என்று குறிக்கின்றன.
9. வைகை ஏன் கடலை அடையவில்லை?
பெரும்பாலும் ஆறுகள் மலைகளில் தோன்றி சமவெளிகளில் பாய்ந்து கடலை அடையும். ஆனால், வைகை கடலை அடையாத ஆறு. அது ஏன் கடலை அடையவில்லை என்பதற்கு கவிஞர் ஒரு கற்பனையான காரணத்தைப் பாட்டாகக் கூறினார். பெருந்தொகை என்னும் நூலில் இடம்பெற்றுள்ள அப்பாடல், ‘நாரி இடப்பாகர்க்கு நஞ்சளித்த பாவி’ என்று வாரி இடம் போகாத வையையே நதி பெண். கடல் ஆண். தேவர்கள் பாற்கடலை கடைந்தார்கள்.
அப்போது ஆலகால நஞ்சு வந்தது. கடலில் வந்த அந்த நஞ்சை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார். வைகை நினைத்ததாம். “ஏ கடலே..எங்கள் அன்னை மீனாட்சியின் நாயகனுக்கு நஞ்சு கொடுத்த உன்னைச் சேர என் மனம் ஒப்பவில்லை. எனவே, உன்னை அடைய மாட்டேன்.” மீனாட்சியின் நாயகனுக்கு நஞ்சு கொடுத்த கடலை அடைதல் பாவம் என்பதால் வையை கடலை அடையவில்லை!
10. அற்புதமான ஆறு வைகை
தமிழகத்திலேயே உற்பத்தியாகி இங்கேயே கடல் சேர்கிற வைகை ஆற்றின் நீளம் 258 கி.மீ. ஆகும். இது தமிழகத்தின் நான்காவது பெரிய ஆறு ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலைதான் வைகை உற்பத்தியாகிற இடம். வருசநாடு, மேகமலை பகுதிதான் வைகையின் பிறப்பிடம். கடல் மட்டத்திலிருந்து 5,333 அடி உயரத்தில் இருக்கிற மேகமலையில் உள்ள ஒரு சிகரமான வெள்ளிமலையில்தான் அது உற்பத்தியாகிறது.
சுருளியாறு, தேனியாறு, வரட்டாறு, வராகநதி, மஞ்சளாறு, நாகலாறு, மருதநதி, சிறுமலையாறு, சாத்தையாறு முதலியவை வைகையின் துணை ஆறுகளாகும். பழனி மலையில் உற்பத்தியாகும் வராகநதி கொடைக்கானல் மலையிலிருந்து வரும் பாம்பாற்றுடன் (வெள்ளி அருவி உள்ள ஆறு) இணைந்து தேனிக்குக் கிழக்கே குன்னூருக்குத் தெற்கில் வைகையுடன் கலக்கிறது. பின்னர் முல்லையாறாக பயணிக்கிறது. இவ்வாறு பயணிக்கும் பொழுது சுருளியாறு இதனுடன் கலக்கிறது. பின்னர், வள்ளல் நதி என்று சொல்லப்படும் வருசநாட்டு பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் வள்ளல் நதியுடன் கலந்து வைகையாறாக வைகை அணையைச் சென்று அடைகிறது.
11. அழகர் மலை
12. ஆழ்வார்களால் பாடப்பெற்ற அழகர் மலை
மதுரையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்புறம் அடிவாரத்தில், அமைந்துள்ள இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. பலவகை மரங்களும், செடிகளும், கொடிகளும் மிகவும் நெருக்கமாக வளர்ந்து பச்சைப்பசேலெனக் கண்ணுக்குக் குளிர்ச்சியாக காட்சி தரும் இப்பகுதியில் இயற்கையாகவே சோலைகள் பல அமைந்திருகின்றன. சோலைகளில் பூக்களும் காய்களும், கனிகளும் மிகுதியாக உண்டாகி கண்ணுக்கும் மனத்திற்கும் இன்பம் ஊட்டும் இம் மலையைப் பற்றிய செய்திகள் பழந்தமிழ் இலக்கியங்களில் மிகுதியாக உண்டு.
13. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் காட்டும் அழகர் கோயிலின் சிறப்பு
‘‘அவ்வழி படரீர் ஆயின், இடத்து செவ்வழி பண்ணிற் சிறைவண்டு அரற்றும் தடந்தால் வயலொடு தண்பூங் காவொடு கடம்பல கிடந்த காடுடன் கழிந்து திருமால் குன்றத்து செல்குவிர் ஆயின் ”என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அழகர் கோயிலின் சிறப்பு பற்றி கூறுகிறார்.
14. இரண்டாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பழமை
சிலப்பதிகார ஆசிரியர் ‘விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபில் புண்ணிய சரவணம், பவகாரணியோடு இட்டசித்தி எனும் பெயர் போகி விட்டு நீங்கா விளங்கிய பொய்கை முட்டாச் சிறப்பின் மூன்றுள ஆங்கு’ என்று மூன்று பொய்கைகள் இருப்பதாகவும் கூறுகிறார். ஆனால், நாம் அறிந்தது நூபுர கங்கை என அழைக்கப்படும் ஒரே ஒரு பொய்கை. இதன், மூலம் சிலப்பதிகாரத்திற்கு முன்பே அழகர் கோயில் அமைக்கப்பட்டது என தெரிய வருகிறது. ஆழ்வார்களின் காலத்திற்கு பிறகும் கோட்டைகள் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
15. சொக்கத் தங்கத் திருமேனி
அழகரின் திருமேனி பொன்மயமானது. அபரஞ்சி தங்கம் என்கின்ற சுத்தமான தங்கத்தால் ஆன திருமேனி. இங்கும் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபர் ஆலயத்திலும் மட்டுமே அபரஞ்சி தங்க உற்சவ மூர்த்திகள் உள்ளனர். திருமாலிருஞ்சோலையில் மூலவரும் உற்சவரும் பஞ்ச ஆயுதங்களுடன் காட்சி தருகின்றார்கள் என்பது ஒரு சிறப்பு. இங்குள்ள பெருமாள் கையில் உள்ள சக்கரம் பிரயோக சக்கரம். தாயார் சுந்தரவல்லி என்ற திருநாமத்தோடு காட்சி தருகின்றார். தேவி என்ற பெயரும் இவருக்கு உண்டு.
16. மதுரையைச் சுற்றி மூன்று அழகர்கள்
மதுரையைச் சுற்றி மூன்று அழகர்கள் இருக்கிறார்கள். ஒன்று மாலிருஞ் சோலை அழகர். இன்னொன்று திருமோகூர் அழகர். மூன்றாவது மதுரையிலேயே இருக்கக்கூடிய கூடல் அழகர். திருமாலிருஞ்சோலை அழகருக்கு கள்ளழகர் என்று பெயர். கருவறையில் பெருமாள் பரமசுவாமி எனப்படுகிறார். ஆண்டாள்,
‘‘எழில் உடைய அம்மனைமீர்! என்
அரங்கத்து இன்னமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர் எம்மானார்
என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே
என்று வர்ணிக்கும் அழகு இவர்க்கு அப்படியே பொருந்தும்.
17. நூபுரகங்கை நீரூற்று
18. பாவங்கள் தீர்க்கும் பவ நாசினி
19. ஆலயத்தில் எங்கும் அழகு, கலை நயம்
இங்கு பெருமான் மட்டும் அழகரல்ல. மலை அழகு, மண்டபங்கள் அழகு, சிலை அழகு, சோலைகள் அழகு. கண்ணதாசன் ஒரு பாடலில் இந்த அழகை ‘‘மலை அழகா? அழகர் சிலை அழகா” என்று வர்ணிப்பார். மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட வடிவமானது. ஆரியன் மண்டபத்தில் இசைத் தூண்கள் உள்ளன. கல்யாண சுந்தரவல்லி தாயாரின் சந்நதியும் கலைநயத்துடன் உள்ளது. இராயகோபுரம் திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது. சிதைந்த நிலையிலும் இக்கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் சிற்பிகளின் உன்னத உளி வேலைப்பாட்டினை வெளிப்படுத்துகிறது.
20. எத்தனை மண்டபங்கள்? எத்தனை சிற்பங்கள்?
திருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன், ரதி, திரிவிக்கிரமன் அவதாரம், லட்சுமி வராகமூர்த்தி ஆகிய பெயர்களைக் கொண்ட கற்றூண்களில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கால சிறந்த படைப்புகளாகும். வசந்த மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் அழகிய ஒவியங்கள் உள்ளன. கோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பசாமி சந்நதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது.
அங்கே அழகர் அணிந்திருக்கும் நகைகளின் பட்டியல் வாசிக்கப்படுகிறது. திருவிழாக்கண்டு திரும்பிக் கோயிலுக்குள் செல்லும் முன்பு, கொண்டு சென்ற நகைகள் எல்லாம் திரும்ப பத்திரமாகக் கொண்டு வந்துவிட்டதை கருப்பசாமியிடம் காட்டிச் செல்ல வேண்டும். அழகருக்கு அபிஷேகம் செய்ய கொண்டுவரப்படும் தீர்த்தத்தைக் கூடக் கருப்பசாமியிடம் காட்டிவிட்டுத்தான் எடுத்துச் செல்வது வழக்கம்.
21. அழியா அழகுடையான்
ஆழ்வார்கள் பலர், பெருமானை அழகர் என்றே மங்களாசாசனம் செய்கின்றனர். அழகன் என்ற சொல் வைணவத்தில் பிரசித்திபெற்ற சொல். இராமனை அழியா அழகுடையான் என்று கம்பன் வர்ணிக்கின்றார்.
வெய்யோனொளி தன்மேனியி (ன்) விரிசோதியி(ன்) மறையப்
பொய்யோவெனு மிடையாளடு மிளையாளடு போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோ இவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்.
திருமங்கையாழ்வார் திருநாகைப் பெருமானை ‘‘அச்சோ ஒருவர் அழகியவா”
என்று வர்ணிக்கின்றார்.
22. கள்ளழகர் என்ற திருநாமம் ஏன்?
இந்த அழகு எவரையும் வசப்படுத்தும். எல்லோர் உள்ளத்தையும் அவர் அறியாமலேயே எடுத்துக் கொள்ளும் என்பதால் கள்ளழகர் என்று பெயர். ‘‘கோலமாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்லாது ஓரெழில், நீல மேனி ஐயோ. நிறை கொண்டது என் நெஞ்சினையே.” என்றும், “வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை” என்றும் திருப்பாணாழ்வார் பாடுகிறார். இந்த அழகைக் காணத்தானே சித்திரை விழாவில், 20 லட்சம் பேர் மதுரையில் கூடுகிறார்கள். அவ்வளவு பேரும் கூடுவதால் மதுரைக்கு கூடல் என்று பெயர்.
23. இன்னொரு காரணம்
கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (வளரி), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர். அழகர் கள்ளர் வேடத்தில் வருவதால், அழகர் என்ற பெயர் கள்ளழகர் என மாறியது.
24. அடைந்தால் இவனையே அடைய வேண்டும்
சித்திரை விழாவில் தங்கக் குதிரையில் அழகர் கம்பீரமாக வைகையில் இறங்கும் போது காண ஆயிரம் கண் வேண்டும். இந்த அழகுக்கு ஒரு வர்ணனை. கண்ணன் நடந்து செல்கிறான். ஆயர் பெண்கள் பார்க்கிறார்கள். “ஆஹா அடைந்தால் இவனை அல்லவா அடைய வேண்டும்” என்று நினைப்பதோடு மட்டுமல்லாமல் வாய்விட்டும் சொல்கிறார்கள். கண்ணன் காலத்தில் அவன் அழகு சரி, இப்போது அர்ச்சசையில் எந்த பெருமானின் அழகை, கண்ணனின் அக்கால அழகுக்கு இணையாகப் பாடுவது என்று ஆழ்வார் நினைக்கிறார். அவருக்கு இந்த திருஅழகர் உருவம் தான் நினைவுக்கு வருகிறது.
சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச் சுருள்
பங்கி நேத்திரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே
பாடவும் ஆடக் கண்டேன் அன்றிப் பின்-
மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்
மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால்
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக்
கொடுமின்கள் கொடீராகிற் கோழம்பமே.
‘‘மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால் மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்” என்ற வரியைப் பாருங்கள். பெரியாழ்வாருக்கு கள்ளழகர் அழகின் மீது உள்ள ஈடுபாடு புரியும். அந்த அழகைக் காணத்தான் கடைசிக் காலத்தில் இங்கேயே தங்கி விட்டார் பெரியாழ்வார். அவர் திருவரசு அழகர் மலை அடிவாரத்தில் கோயிலை ஒட்டி உள்ளது.
25. ஸுந்தர பாஹு
அழகன் என்பதற்கு வடமொழியில்
சுந்தரராஜன் என்று பெயர். “சுந்தரத் தோளுடையான்”(ஸுந்தர பாஹு) என்று அவரை
ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்கின்றனர்.
சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்
மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ்
சாறுகொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ.
கூரத்தாழ்வான் 132 ஸ்லோகங்களால் இவர் மீது ஸுந்தர பாஹுஸ்தவம் என்ற அருமையான நூலை இயற்றியுள்ளார். அதில் இப்பெருமானை “வன கிரீஸ்வர” என்றும், “சத்ய ரூபா” என்றும், “காருண்ய ருத வாரிதே” என்றும், “உத்சார் சத் வத்சலா” என்றும் பல படியாக அழைக்கிறார்.
26. திருமலை மன்னர் செய்த ஏற்பாடு
16ஆம் நுாற்றாண்டு வரை, அழகரின் சித்திரை உற்சவம் (சைத்ரோத் சவம்) சித்திரை மாதத்திலும், மீனாட்சி அம்மனின் உற்சவம் மாசி மாதத்திலும் நடைபெற்றது. மீனாட்சி அம்மன் உற்சவத்தின் மிக முக்கியமான நிகழ்வு திருத்தேர், மாசி மாதத்தில் நடைபெற்றது. இந்த திருத்தேர் ஓடும் வீதிகளுக்கு மாசி வீதி என்றே பெயர். திருமலை மன்னர் காலத்திற்கு முன் கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லுார், தேனூர் ஆகிய ஊர்கள் வழியாக சோழவந்தான் வந்து அங்குள்ள வைகையாற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா சித்திரை மாதத்தில் முழு நிலவன்று நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில், வெவ்வேறு மாதங்களில் நடைபெறும் இந்த விழா ஒரே மாதத்தில் நடைபெற்றால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று, கள்ளழகரை “மதுரை வைகையாற்றில்” எழுந்தருளச் செய்து, மதுரை சித்திரைத் திருவிழாவாக நடத்தினார்.
27. வைணவ தல புராணம் கூறும் கதை
சைவத்தில் தங்கை மீனாட்சி திருமணம் காண, மதுரை வரும் அழகர், திருமணம் முடிந்ததால், வைகை ஆற்றுக்கு வந்து திருப்புவதாக சொல்கிறார்கள். ஆனால், வைணவ தலபுராணம் கூறும் கதை வேறு. சுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுர கங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும்போது துர்வாச முனிவரை கவனியாது இருக்கக்கண்டு கோபமுற்ற துர்வாசர், சுதபமுனிவரை மண்டூகமாக (தவளை) மாறும்படி சாபமிட்டார். சுதபமுனிவர் வைகை ஆற்றில் மண்டூக வடிவில் தவமியற்றி திருமாலால் சாபம் நீங்கப்பெற்றார். முனிவர் கண்டு வணங்கிய அவ்வுருவே சுந்தரபாஹூ என்று வடமொழியிலும் அழகர், மாலிருஞ்சோலைநம்பி என்று தமிழிலும் வழங்கப்படுகிறது.
28. ஆரம்ப நாள் நிறைவு நாள்
சித்திரைத் திருவிழா 14 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை திருமஞ்சனத்தோடு திருவிழா நிறைவு பெறுகிறது. சென்ற ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக, அழகர் ஆற்றில் இறங்குவதை காணும் பாக்கியம் பெற முடியாமல் செய்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா பெருந்தொற்று குறைந்த பின் இவ்விழா நடைபெறுவதால், மக்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றனர். ஏப்ரல் 14 ஆம் தேதி அழகர் மலையில் இருந்து, ஸ்ரீகள்ளழகர் கள்ளர் திருக்கோலத்தில் கண்டாங்கி சேலை கட்டி மதுரைக்கு பல்லக்கில் புறப்படுகிறார். அதிர்வேட்டு முழங்க அழகர் கிளம்புவார். ஏப்ரல் 15 ஆம் தேதி இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை நடைபெறும்.
29. பக்தர்களின் ஆரவாரம்
மதுரைக்கு வரும் அழகரை பக்தர்கள் சர்க்கரைக் கிண்ணத்தில் தீபம் ஏற்றி எதிர் கொண்டு அழைப்பார்கள். ஆற்றில் இறங்கிய அழகர் ஆற்றின் வழியாகவே வண்டியூர் போய்ச் சேருகிறார். கூடவே பக்தர்களும் அழகருடன் செல்வார்கள். வண்டியூரில் பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக் கொள்ளும் கள்ளழகர், அங்குள்ள பெருமாள் கோயிலை வலம் வந்து, அதன் பிறகு சர்ப்பவாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் வந்து சேருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 17ஆம் தேதி வண்டியூர் தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனத்தில் அருள்பாலிக்கிறார். கருட வாகனத்தில் எழுந்தருளும் அழகர் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் தருகிறார்.
பிறகு, தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு இரவில் வந்து சேருகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் தல்லா குளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். வழியெங்கும் மக்கள் சுக்கும் வெல்லமும், தந்து அழகரின் வருகையை பக்தியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடுவார்கள்.
18 ஆம் தேதி திங்கட்கிழமை மோகனாவதாரத்திலும், இரவில் கள்ளழகர் திருக்கோலத்தில் புஷ்ப பல்லக்கில் அழகர் கோவிலுக்கு திரும்புகிறார். 19 ஆம் தேதி அதிகாலையில், பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தவாரே அழகர் கோயிலைச் சென்றடைவார். மலையை விட்டு இறங்கும் அழகரை எதிர்கொண்டு அழைத்து மதுரை மக்கள் எப்படி வரவேற்பு கொடுத்தார்களோ, அதேபோல அவரை வழியனுப்பவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரை எல்லையான புதூர், மூன்றுமாவடி பகுதிகளில் திரண்டிருப்பார்கள்.
30. அழகர் என்ன பட்டு உடுத்தப் போகிறார்?
அழகர் ஆற்றில் இறங்கும் போது என்ன வண்ணத்தில் பட்டு உடுத்துவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உண்டு. முதல் நாள் அர்ச்சகர் கனவில் இன்ன வண்ண பட்டு என்று சொல்லி, அர்ச்சகர் அந்த வண்ணம் சாற்றுவார் என்று சொல்கிறார்கள். இன்னொரு விதமாகவும், அழகரின் பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது. அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா, என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை வருகிறதோ, அது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் தினம் அணிவிக்கப்படும்.
அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சல் இருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன நிறத்தில் பட்டுடுத்தி வரப் போறாரோ? எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
மதுரை ஆற்றில் கள்ளழகர் விழா காண்பது போலவே, மானா மதுரையில் சுந்தரவரதரும், பரமக்குடியில் ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாளும் ஆற்றில் இறங்குகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் விழா என்பதால், சித்திரை விழா கோலாகலமாக நடைபெறும் என்று மக்கள் உற்சாகத்தோடு காத்திருக்கிறார்கள்.
—————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமாலிருஞ்சோலை ஸூந்தர வல்லி ஸமேத ஸூ ந்தர ராஜ பரம ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply