ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் பிரபந்தம் -ஸ்ரீ வடிவு அழகிய நம்பி தாஸர் அருளிச் செய்தது –

காராரும் பொழில் வஞ்சி கா வலவன் கதிர் மௌலிக்
கூராரும் சுடர் வேல் கைக் குல சேகரின் திறமும்
ஏராரும் பாகவதர் இன்னருளால் சிறுத்தை இயம்பி
சீராரும் திருப்பாண் ஆழ்வார் திறமும் செப்புவோம் –1-

மாணார்ந்த திறல் அரங்கர் மணி வண்ணனைக் கண்ட கண்கள்
காணா மற்று ஒன்றினையும் எனக் கரந்து கட்டுரைத்த
பாணாழ்வார் அனுபவத்தைப் பாட எனப் பக்தர்கள் முன்
நாணாதே ஒருப்பட்டேன் இதன் வேறு நகை யுளதோ –2-அவை அடக்கம்

மனு மகனுக்கு அயன் கொடுத்த மரகத மா மணிக்குன்றம்
எனும் அரங்கத்து அம்மானை இதயமலர் அணைக்கிடத்தி
அனுபவிக்கும் திறம் உணரில் திருமகளும் அஞ்சும் அடியேன்
பனுவலுக்கோ வெளியாவர் பாணாழ்வார் அல்லரோ –3

மனு மகன் -இஷ்வாஹு –
இவர் பெருமையைச் சொல்ல திருமகளும் அஞ்சும் படி இருக்க அடியேன் பாட்டுக்கு உட்படுவாரோ மாட்டாரோ

என்றால் பொய்யடியேனுக்கு எளிதோ மற்றவன் கீர்த்தி
நின்று ஆங்கே அது நிற்க நாயினேன் புன் சொலினும்
ஒன்றாம் அது என் எனில் உரை தோறும் திருப்பாணன்
குன்றாத திரு நாமம் வரலான் மெய் குறித்தோரே-4

திருநாமம் சொல்வதால் பெற்ற வலிமையாலே சொல்லுவேன்

திருப்பாணார் திரு அவதாரம்

ஆங்கு அவையே துணையாக அறைவேன் மெய் விண் நின்று
பூம் கமலக் கண் எம்மான் திருவருளால் புவியின் மறை
ஓங்கு திரு உறையூரில் திருக்குலத்தார் உறு தவத்தின்
பங்கு அதனால் கார்த்திகை மாதத்தில் வளர் பக்கத்தில் –5-

செய்ய நெறி உரோகிணியில் தேவர்களும் திரு மறையும்
வையக மா முனிவர்களும் மா தவரும் மகிழ்ந்து ஏத்தப்
பையத் தரவணைக் கிடந்தான் பத்தர் குழாம் பரிந்து ஓங்க
ஐயன் என ஆள வந்த திருப்பாணான் அவதரித்தான் –6-

இளமையிலேயே பாண் பெருமாள் சிறப்பு

ஈன்றாரும் அறியாதே இலை மறை காய் என மண்ணில்
தோன்றாதே வளர்ந்து அருளிச் சுருதி தொழ உலகு உய்ய
மூன்றாறு திரு வயதில் கைசிக நாரத முனிவர்
போன்றாரும் இவர்க்கு ஒவ்வார் எனும் இசையில் பொதுவின்றி –7-

சூழ் விசும்பு மதில் அமரர் தொல் உலகும் அம் புவியும்
ஆழ் கடலும் எண் கிரியும் அயன் அரனும் அசுரர்களும்
வாழும் உயிர்ச் சராசரமும் நீராள மயமாக
ஏழிசையும் பாண் பெருமாள் நம் பெருமாள் இடத்து இசைத்தார் –8-

பாணரது இசைத் தொண்டினை பலரும் போற்றுதல்

தென்னாற்றங்கரை நின்று திருப்பாணார் இவை பயில
அந்நாட்டார் திருக்குலத்தில் அவதரித்தார் இவர் யாரோ
பொன்னாட்டில் உள்ளவரோ எனப் புகலப் புண்ணியரும்
பன்னாளும் திருவரங்கத்து அம்மானைப் பணிந்து ஏத்தி –9–

அப்படியே பல காலம் அந்தரங்க சேவை பண்ணி
ஒப்பிலார் சங்கீதம் பயின்றிடு நாள் உயர்வானும்
இப்படியும் அளந்த பிரான் திரு மார்பில் இந்து அமரும்
செப்பென்னும் கன தனத்தாள் திரு மங்கை மனம் மகிழ்ந்தே –10-

பிராட்டி ஏவ அரங்கன் திருப்பாணரை அழைத்து வரச் சொல்லி வாயில் காப்போரை நியமித்தல்

திருவரங்க நகர் எம்பிரான் வடிவை செப்பும் வானில் உறை தேவரும்
மருவரும் பொருவில் வீடதாதி உலகு ஏழினும் இசை வழுத்துவோர்
ஒருவர் இங்கு அவரை ஒத்துளார்கள் பிறர் உண்டு கொல் உரை செயும் பவிப்
பெருகு காதலர் புறம்பு நிற்றல் பழுது என்று செங்கமலை பேசலும்

அண்டர் அண்டமுள் அடங்க உண்டு துயில் கொண்ட மால் அணி அரங்கனார்
புண்டரீக மலர் மங்கை கட்டுரை செய் போதில் அங்கு அவளின் நைந்து நம்
தொண்டரைக் கொணர்மின் என்று செம்பவள வாய் திறந்து இறைவர் சொல்ல அக்
கொண்டல் கோயில் திரு வாசல் காவலவர் ஏகினார் குழுவோடு ஏகியே –12-

வீதி பற்பல கடந்து சென்றவர்கள் திரு முகத்துறையை மேவி நின்று
ஆதி நாதன் அருள் அச்சு தன்னணி அரங்கன் இன்று உனை அழைத்தனன்
போதி எங்களோடும் என்று செப்பியவர் பொற் பாதங்களில் இறைஞ்சலும்
சாதியில் கடையன் என்று பாணர் அது தக்கது அன்று என வணங்கினார்

வர மறுத்த பாணரை அரங்கன் தொண்டர் குலமே தொழு குலாம் என்று சொல்லி அழைத்து வரச் சொல்லுதல்

வணங்கி நின்றவர் உரைப்ப மற்றவர்கள் மாசிலா நெறி அரண்கள் முக்
குணங்கள் தந்தவர் முன் எய்தி இம்மொழிகள் கூறுவோம் என வம் ஏகி நல்
பணங்கள் ஆயிரம் இலங்கு அநந்தன் மிசை மன்னா ஓ இனிய பத்தனார்
இணங்கு கின்றிலர் குணங்கள் எண்ணி இவண் எய்துவான் என இறைஞ்சினார் –14-

அந்த உரை சிந்தை புக ஆதி யவரோடு
முந்தை மறை நீதி குல முற்றும் வருவித்த
எந்தம் உறு தொல் குலம் இயம்பில் எமது அன்ப
வந்த குலமே குலம் வரச்சொலும் என்றார் –15–

நன்றிவை உரைத்திடுவம் நாத என நால்வர்
சென்று விரைவில் திருமுகத்துறை செறிந்தே
நின்று இசை வழுத்து நிமலர்க்கு இவை நிகழ்த்த
ஓன்று உளது கேண்மின் என மற்றவர் உரைப்பார் –16-

மின்னல் போன்று ஒளி வீசும் சரீரத்தை யுடைய விஷ்ணுவின்
பின்னை மணாளனை அடைந்து பிறிதற்றுத்
தன்னை யற விட்டு தலைவர்க்கு அது தகும் கொல்
என்னை யவரோடும் இறை எண்ணிடவும் என்றே –17-

செப்பி அடியேன் முடிவில் தீ வினை செய் நீசன்
ஒப்பரிய சோதி வளர் உத்தம தலத்தில்
எப்படி மிதிப்பது இரு கால் கொடு எனை ஆளும்
அப்பனொடு கட்டுரைமின் அன்பர் என ஆழ்வார் –18-

கூற இறை ஏவலோடே சென்றவர்கள் கோவே
மாறிடில் உமைக்கொடு செல்வோம் வலியில் என்றே
ஏறி எதிர் செல்ல அவர் ஓடி அவண் எட்டாது
ஆறு வரு காவிரியின் அக்கரையில் ஆனார் –19-

இத்திறம் அரங்கரோடு இயம்பிடுவம் என்றே
மெய்த்திறம் உணர்ந்த நெறி நால்வர்களும் மீண்டு ஆங்கு
அத்திறமும் ஆயனோடு அறைந்தனர்கள் அம்மான்
எத்திறம் இயற்றில் இவண் எய்தும் என எண்ணி –20-

அரங்கன் லோக சாரங்க முனிவரைக் கூவிப் பாணரைத் தோளில் தூக்கி வரச் சொல்லுதல்

அலகிலா மா மாயை அரங்கன் தனை அர்ச்சனை செய்யும்
உலக சார்ங்க முனியை உவந்து கூவி உத்தம போய்ப்
பலரும் காண நின் தோளில் பாணாழ்வானைப் பரிந்து ஏற்றி
நிலவும் பதியை வளம் செய்து கொணர்க என்றான் நிகர் இல்லான் –21-

மாசிலா முனிவன் மாயன் மலரடி வணங்கி ஏக
ஆசிலா அனைத்துக் கொத்தும் அவனுடன் சென்மின் என்றே
ஈசனும் அருளிச் செய்ய யாவரும் எழுந்து சென்று அத்
தேசினான் நின்று பாடும் திரு முகத்துறையை மன்னி –22-

சுற்றுற வளைந்து கொண்டு தொழுதனர் திருப்பாணாழ்வார்
உற்றவர் தாள்கள் தம்மில் உடன் பணிந்து உருக ஈசற்கு
அற்ற மா முனிவன் ஆழ்வீர் அருளிப்பாடு உமக்கு இன்று என்றான்
நற்றவம் உடைய பத்தர் நான் அது செய்யேன் என்றார் –23-

ஏடவிழ் துளபத்தாரான் எடுத்து உமைக் கொணரச் சொன்னான்
ஓடவும் ஓட்டோம் ஆழ்வீர் என்றனர் உவந்து சென்றார்
மாடு நின்றவரை நோக்கார் மற்றொரு திசையை நோக்கிக்
கூடுமோ நீசன் மாசில் குலத்தொடும் என்று கூற –24-

லோக சாரங்கர் திருப்பாணாழ்வாரைத் தோளில் தூக்கிக் கொண்டு திருவரங்கம் கோயிலினுள் செல்லுதல்

கடுப்பினில் ஆழ்வார் ஓடக் காத்துற வளைந்து நின்றார்
தடுத்தனர் ஓடல தன்னைச் சரண் என வணங்கி மண்ணில்
படுத்தனர் திருப்பாணாழ்வார் பங்கயத்து அயனும் போற்ற
எடுத்துற முனிவன் ஏந்தி இருத்தினான் திருத்தோள் தன்னில் –25-

நண்ணரும் இலங்கை வேந்தை நாளை வா என்ற அந்நாள்
கண்ணனைத் தோள் மேல் கொண்டு களித்த மாருதியை மானப்
பண்ணமர் கவி வலானைத் தாங்கிய பனவன் பெற்ற
உள் நிறை மகிழ்ச்சி ஏழேழ் உலகினில் ஒருவருக்கு உண்டோ –26–

இடி நிகர் முரசம் ஆர்ப்ப இமையவர் முனிவர் சித்தர்
கடி மலர் சிந்தி ஆர்ப்பக் காசினியோர்கள் போற்றிப்
படி மீசை இறைஞ்சி வாழ்த்தப் பக்தர்கள் குழாங்கள் ஆடும்
அடி தொறும் சேறு பாயும் ஆனந்த அருவி நீரால் –27–

அணி அரங்கத்தை முக்கால் அவ்வணம் வலம் செய் தேகப்
பணியணைக் கிடந்த மா மால் பாணர் மெய் விழிகள் நேர் முன்
கணி கணன் பின்னே போன கஞ்ச மா மலர்த்தாள் ஆதி
மணி முடி வரையும் காட்டி மாசிலா மகிழ்ச்சி ஈந்தார் –28–

பாணர் பரவிய பாட்டு

மும்மலமும் அற்ற நீதி முனி வரன் திருத்தோள் மன்னி
எம்மலமும் கடிவார் வீதி ஊடவர் ஏகும் காலை
அமலன் என்னாதி நீதி அணி அரங்கத்துள் எம்மான்
கமல பாதங்கள் வந்து என் கண்ணுள் ஓக்கின்றன என்றும் –29-

நின்ற தாள் போய தாளால் நிலம் விசும்பு அளந்து நீண்ட
வென்றி வேல் அரக்கர் துஞ்ச வெங்கணை துரந்த வேந்தன்
மன்றல் சேர் துளபத் தாரான் வளர் திரு அரையில் கண்டு
சென்றதாம் சிவந்த செம்பொன் ஆடையில் சிந்தை என்றும் –30-

மந்தி பாய் வேங்கட மலையை மன்னியும்
இந்தியம் கடிந்தவர் இதயப் போதிலும்
சிந்தியாது அடி தொழும் திருவரங்கனார்
உந்தி மேல் எனதுயிர் ஒடுங்கிற்று என்னவும் –31-

கலகமார் இலங்கையர் வேந்தன் காட்டிய
அலகிலா ஆற்றலை அறுத்த மாயனார்
உலகெலாம் உண்டு ஒடுக்கு உதர பந்தனம்
நிலவும் என்னுள்ளத்து என நெகிழ்ந்து கூறியும் –32-

தந்தை தாய் சுற்றம் உற்ற தமியனேன் உயிரும் ஆகி
முந்தை நாள் விரும்பிச் செய்து மொய்த்த வல் வினையும் தீர்த்து என்
சிந்தையே கோயில் கொண்டு திரு வரங்கத்துள் மன்னும்
எந்தையார் திரு மார்பு அன்றோ என்னை ஆட் கொண்டது என்றும் –33–

வண்டடர் இதழித் தாரோன் வல் வினை முழுதும் தீர்த்துக்
கொண்டல் வந்து அமரும் சோலைக் குளிர் புனல் அரங்கம் மன்னி
அண்டரண்டங்கள் ஆதி அணைத்துள்ள பொருளும் தண்டாது
உண்டமர் மிடறு கண்டீர் உயக்கொண்டது என்னை என்றும் –34-

கையமர் ஆழி சங்கம் கதிர் மதி இருபால் மன்னும்
மையமர் கிரி யிது என்ன வளர்வதாம் கருணைக் குன்றம்
பையர வணையுள் மன்னும் அரங்கனார் பதுமம் போன்ற
செய்ய வாய் ஐயோ இன்று என் சிந்தனை கவர்ந்தது என்றும் –35-

பரிய வாள் அவுணன் ஆகம் படி மிசை மடி மேல் இட்ட
அரிய வாள் உகிரால் கீண்ட அரி எனது அரங்கத்து அம்மான்
உரிய மா முகத்தில் நீண்டு செவ்வரி ஓடி வாடாப்
பெரிய வான் கண்கள் என்னைப் பேதைமை செய்த என்றும் –36–

பாலனாய் ஞாலம் உண்டு பங்கயச் செல்வி தன்னோடு
ஆல மரத்திலோர் சிற்றிலை அமர் அரங்கத்து அம்மான்
கோல மா மணிகள் ஆரம் குறு நகை முடிவில் சோதி
நீல மா மேனி நெஞ்சை நிறை கொண்டது ஐயோ என்றும் –37–

கொண்டல் போல் உருவத்தானைக் கோவலனாகி நெய் பால்
உண்ட செவ்வாயினானை உளம் புகுந்து உருக்குவானை
அண்டர்கள் பெருமாள் தன்னை அமுதினை அரங்கத்தானைக்
கண்ட என் கண்களால் பின் காண்கிலேன் ஒன்றை என்றும் –38-

அப்படியே திருமொழி ஓர் பத்து உரைத்து அங்கு அணி யரங்கன் திரு முற்றத்தில்
ஒப்பரிய முனி வரனோடு எய்தி அவன் திருத்தோள் நின்று உம்பர் வாழ்த்தச்
செப்பரிய பாண் பெருமாள் நம்பெருமாள் சரணம் எனச் சென்று தாழ்ந்தார்
இப்படியே இறை அருளின் செயல் இருக்கும் என்று ஒருவருக்கு இயம்பலாமே –39-

ஆழ்வார் திருவரங்கன் திருவடியில் அடங்குதல்

சரணம் எனத் திருவடிக்கீழ் சென்று இறைஞ்சும் பாண் பெருமாள் தன்னை நோக்கிக்
கரண ஒழுங்குறும் வஞ்சப் பொய்யன்புக்கு எட்டாத கமல செவ்வாய்ப்
பூரணன் எழுந்து இணை யடியை மெய்யன்பர் சென்னி மிசைப் பொருத்தப் பூட்ட
அரண் இதுவே புகலிடம் என்று அக்கமலத் திருவடியில் அடங்கினாரால் –40-

இன்ப வீடு அடைவார் தூலமாம் உடல் விட்டு எழில் திகழ் சூச்சுமம் கழற்றித்
துன்பவா தனையும் விரசையில் போக்கிச் செறிவர்கள் துகளறு பாணர்
என்பு தோல் உரோமத் தூலமும் அரங்கன் இணை யடி எய்தியது என்றால்
அன்பினால் அன்றி ஒன்றினால் உய்யும் உபாயம் என் அண்டத்தில் உளதே –41-

————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடிவு அழகிய நம்பி தாஸர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: