ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழியிலும்- ஸ்ரீ பெரிய திருமொழியிலும் அந்தாதி பதிகங்கள் —

அந்தாதி (12) 
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே - நாலாயி:151/4 
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை - நாலாயி:2382/3  
அளவு இயன்ற அந்தாதி ஆயிரத்துள் இ பத்தின் - நாலாயி:2942/3 
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் - நாலாயி:3063/3 
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் - நாலாயி:3074/3 
நிரை கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் - நாலாயி:3373/3 
நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இ பத்தால் - நாலாயி:3384/3 
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் - நாலாயி:3450/3 
கேழ் இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப்பேரெயில் மேய பத்தும் - நாலாயி:3593/3 
தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் வல்லார் - நாலாயி:3692/3 
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் - நாலாயி:3934/3 
அவா இல் அந்தாதி இ பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே - நாலாயி:4000/4

அந்தாதிகளால் (1)
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த – நாலாயி:4000/3

ஸ்ரீ முனைவர்.ப.பாண்டியராஜா-முன்னாள்:துணைமுதல்வர்,
தலைவர்,கணிதத்துறை இயக்குநர், கணினித்துறை-அமெரிக்கன் கல்லூரி, மதுரை
கணினி நிரல்களின் மூலம் உருவாக்கப்பட்ட தொடர் அடைவுகள் மூலம்-
அருளிச் செயல்களில் அந்தாதி- தொடர் அடைவுகள்-எளிதாக காணலாம்

—————–

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழியில் அந்தாதி பதிகம்

போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரு மில்லை கடல் வண்ணா உன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை யுண்ட பித்தனே கேசவ நம்பீ உன்னைக் காது குத்த
ஆய்ப்பாலர் பெண்டுகளெல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன்–2-3-1-

வண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி மலர்ப் பாதக் கிங்கிணி யார்ப்ப
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய்
எண்ணற் கரிய பிரானே திரியை எரியாமே காதுக் கிடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய கனகக் கடிப்பும் இவையா–2-3-2-

வையமெல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகரக் குழை கொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியை யிடுவன் நீ வேண்டிய தெல்லாம் தருவன்
உய்ய இவ் வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடராயர் கொழுந்தே
மையன்மை செய்து இள வாய்ச்சிய ருள்ளத்து மாதவனே இங்கே வாராய்–2-3-3-

வண நன் றுடைய வயிரக் கடிப்பிட்டு வார் காது தாழப் பெருக்கி
குண நன் றுடையர் இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நின் றழகிய இக் கடிப்பு இட்டால் இனிய பலாப்பழம் தந்து
சுண நன் றணி முலை யுண்ணத் தருவன் நான் சோத்தம் பிரான் இங்கே வாராய்–2-3-4-

சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழ லாரொடு நீ போய்
கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் குணங் கொண்டிடுவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் பிரானே திரியிட வொட்டில்
வேய்த்தடந் தோளார் விரும்பு கருங்குழல் விட்டுவே நீ இங்கே வாராய்–2-3-5-

விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி யதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே யஞ்சி மதுசூதனே யென்றறிந்தேன்
புண்ணேது மில்லை உன் காது மறியும் பொறுத்து இறைப் போது இரு நம்பீ
கண்ணா என் கார் முகிலே கடல் வண்ணா காவலனே முலை யுணாயே–2-3-6-

முலை யேதும் வேண்டேனென் றோடி நின் காதில் கடிப்பைப் பறித்தெறிந் திட்டு
மலையை யெடுத்து மகிழ்ந்து கல் மாரி காத்துப் பசு நிரை மேய்த்தாய்
சிலை யொன்று இறுத்தாய் திரி விக்கிரமா திரு வாயர் பாடிப் பிரானே
தலை நிலாப் போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே–2-3-7-

என் குற்றமே யென்று சொல்லவும் வேண்டா காண் என்னை நான் மண் ணுண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற் றிலையே
வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும்
துன்புற்றன வெல்லாம் தீர்ப்பாய் பிரானே திரி யிட்டுச் சொல்லுகேன் மெய்யே–2-3-8-

மெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதித் தொடுப்புண்டாய் வெண்ணெயை யென்று
கையைப் பிடித்துக் கரை யுரலோடு என்னைக் காணவே கட்டிற் றிலையே
செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில் சிரிதரா உன் காது தூரும்
கையில் திரியை யிடுகிடாய் இந் நின்ற காரிகையார் சிரி யாமே–2-3-9-

காரிகை யார்க்கும் உனக்கும் இழுக்குற்றென்? காதுகள் வீங்கி யெறியில்
தாரியா தாகில் தலை நொந் திடுமென்று விட்டிட்டேன் குற்றமே யன்றே
சேரியிற் பிள்ளைகளெல்லாரும் காது பெருக்கித் திரியவும் காண்டி
ஏர் விடை செற்று இளங் கன்று எறிந்திட்ட இருடீகேசா என் தன் கண்ணே–2-3-10-

கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக் கடி கமழ் பூங் குழலார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்க ளமுதே
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்றும் நோவாமே காதுக் கிடுவன்
பண்ணைக் கிழியச் சகட முதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய்–2-3-11-

வாவென்று சொல்லி என் கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை
நோவத் திரிக்கில் உனக்கிங் கிழுக்குற்றென்? காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளைச்
சாவப் பாலுண்டு சகடிறப் பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய்–2-3-12-

வார் காது தாழப் பெருக்கி யமைத்து மகரக் குழையிட வேண்டி
சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தாற் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடி யாரே–2-3-13-

—————————

ஸ்ரீ பெரிய திருமொழியில் அந்தாதி பதிகம்

மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மா வலியைப்
பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்துப் பொரு கடல் சூழ்
தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கிது காணீர்
என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே –11-3-1-

இருந்தான் என்னுள்ளத்து இறைவன் கறை சேர்
பருந்தாள் களிற்றுக் கருள் செய்த செங்கண்
பெருந்தோள் நெடுமாலைப் பேர் பாடி யாட
வருந்தாது என் கொங்கை யொளி மன்னு மன்னே -11-3-2-

அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன்னேய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே –11-3-3-

அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு
வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிச்
சிறியானோர் பிள்ளையாய்  மெள்ள நடந்திட்டு
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே –11-3-4-

தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத்
தம்மையே ஒக்க அருள் செய்வராதலால்
தம்மையே நாளும் வணங்கித் தொழுது இறைஞ்சி
தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே –11-3-5-

வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம்
உய்த்தார் ஒளி விசும்பில் ஓரடி வைத்து ஓரடிக்கும்
எய்தாது மண் யென்று இமையோர் தொழுது ஏத்தி
கைத்தாமரைக் குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே –11-3-6-

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற விவை   யென்ன மாயங்கள்
பெண்ணானோம் பெண்மையோம்   நிற்க வவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே–11-3-7-

பாடோமே எந்தை பெருமானைப் பாடி நின்று
ஆடாமே ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து
சூடாமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம்
கூடாமோ கூடக் குறிப்பாகில் நன்னெஞ்சே —11-3-8-

நன்னெஞ்சே நம்பெருமான் நாளும் இனிதமரும்
அன்னம் சேர் கானல் அணியாலி கை தொழுது
முன்னம் சேர் வல்வினைகள் போக முகில் வண்ணன்
பொன்னம் சேர் சேவடி மேல் போதணியப் பெற்றோமே –11-3-9-

பெற்றார் ஆயிரம் பேரானைப் பேர் பாடப்
பெற்றான் கலியன் ஒலி செய்த தமிழ்  மாலை
கற்றோர் முற்று உலகு ஆள்வர் இவை கேட்க
உற்றார்க்கு உறு துயர் இல்லை யுலகத்தே –11-3-10-

—————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: