Archive for February, 2023

ஸ்ரீ இராமகாதை நுவலப்படும் பிற நூல்கள்–ஸ்ரீ சம்பு ராமாயணம் – கதையும் கவிதையும் கலந்த காவியம்–– பெங்களூரு ஸ்ரீகாந்த். (வலம் இதழில் வெளிவந்த கட்டுரை)

February 24, 2023
ஸ்ரீ வால்மீகி ராமாயணம் 

தப​:ஸ்வாத்⁴யாயனிரதம்ʼ தபஸ்வீ வாக்³விதா³ம்ʼ வரம் | 
நாரத³ம்ʼ பரிபப்ரச்ச² வால்மீகிர்முனிபுங்க³வம் || 1.1.1 ||

வான்மீகி முனிவர் “தபஸ்”, “ஸ்வாத்யாயம்” என்ற இரண்டு உபநிடதச் சொற்களைக் கொண்டே ராமாயணத்தை எழுத ஆரம்பிக்கிறார். அவை இரண்டுமே யஜுர் வேதத்தில் உள்ள தைத்ரிய உபநிடத வார்த்தைகள். எவன் ஒருவனும் தானும் கற்று, தான் கற்றதை மற்றவர்களுக்கும் அளிப்பதையே ஒவ்வொருவரின் கடமை என்று தைத்ரிய உபநிடதம் வலியுறுத்திச் சொல்கிறது. மற்றெல்லாவற்றிலும் “ருதம், சத்யம், தவம்” என்ற மூன்று குணசீலன்களே தானும் உணர்ந்து மற்றவர்களுக்கும் உணர்த்த வேண்டியவைகளில் முதன்மையாக இருப்பவை. ருதம் என்பது ஒரு மனிதன் வாழ்விலும், பிரபஞ்ச இயக்கங்களிலும் நடப்பதில் ஒரு ஒழுங்குமுறையை வகுத்துச் செல்லும் பேரியக்கம் என்று கொள்ளலாம். சத்யம் என்பது என்றும் எங்கும் உள்ளபடி உள்ளது என்றும், தவம் என்பது ஒருவனை உந்திச் சென்று இயக்கும் ஒரு தகிக்கும் உள்ளுணர்வு என்றும் ஆகும்.

“தபஸ்” என்ற சொல்லே “தப்” என்ற சம்ஸ்க்ருத மூலத்தில் இருந்து வருவது. “தப்” என்பது உஷ்ணத்தைக் குறிக்கிறது. அந்த சக்தியே வெளிப்படும்போது இயக்கங்களாக, செயல்களாகப் பரிணமிக்கிறது. தவம் என்பது தீவிர அனுஷ்டானத்திற்கும், பிரார்த்தனைக்கும், தியானத்திற்கும் கடந்து இருப்பது. தவத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக வால்மீகி முனிவரே உள்ளார். ஒரு யோகியும், ஞானியுமான வால்மீகி முனிவருக்கு நற்குணங்கள் பொருந்தி, நல்லொழுக்கத்துடன் வாழும் ஒருவனின் குணாதிசயங்களைப் பட்டியலிட்டுக் காட்டி அதன்படி நல்வாழ்வு வாழ அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனாலும் வெறும் பட்டியலிட்டால் மட்டும் மனித குலத்திற்குப் போதாது; அதன்படி வாழ்ந்து காட்டும் ஒரு மனிதனை உதாரணமாகக் காட்ட வேண்டும் என்ற உந்துதலினாலேயே அவர் இராமனை முன்னிறுத்தி ராமாயணத்தை இயற்றியுள்ளார். இப்படியாக ராமாயணத்தை இயற்றி, அதனை லவ-குசர்கள் மூலம் பலருக்கும் கொண்டு சென்றதே அவர் செய்த தவம்.

“ஸ்வாத்யாயம்” என்ற சொல்லில் “ஸ்வ” என்றும் “அத்யாய” என்றும் இரண்டு பாகங்கள் உள்ளன. அதற்கு “சுயமாகவே கற்றுக் கொள்வது” என்று பொருள். அதாவது, ஒருவன் எவ்வளவு படித்து அறிந்து கொண்டாலும், மற்றவர் மூலம் கற்றுக் கொண்டாலும், இறுதியில் அவன் தானாகவே எவ்வளவு புரிந்து கொள்கிறானோ அவ்வளவுதான் அவனுக்கு அறிவாக மிஞ்சும். எவ்வளவுக்கு எவ்வளவு அவன் உள் வாங்கிக்கொண்டு அதனைத் தன்னுடைய ஒரு பாகமாக இருத்திக் கொள்கிறானோ அதுவே அவன் கற்ற கல்வியின் அளவாக இருக்கும். அதுவே அவனது தினப்படி எண்ணங்களிலும், செயல்களிலும் பரிமளிக்கும். மற்றவர்க்கு அவன் அளிக்கும் எண்ணப் பரிமாற்றங்களிலும், செயல்களிலும் அது ஒன்றே அவனது திறனைக் காட்டிக் கொடுக்கும். வெறும் வார்த்தைகளால் மட்டும் அன்றி, அவன் சொல்வதை தனது வாழும் நெறியில் காட்டும்போதுதான் அவனது சொல்லுக்கும் செயலுக்கும் மதிப்பு இருக்கும்.

காவிய காலத்து இராமபிரானும், நமது காலத்து மகாத்மா காந்தியும் அப்படியாக வாழ்ந்து காட்டியவர்கள்தான். இதைத்தான் உபநிடதங்களும் “ஸ்வாத்யாய ப்ரவச்சநேச” என்று கூறுகிறது. அதாவது கற்றுக்கொண்டு அதை மற்றவர்க்கும் கற்றுக்கொடு என்று கூறுகிறது. கற்றுக்கொள்பவன் அதன்படியே வாழ்ந்தால், கற்றுக் கொடுப்பதற்கும் எளிதாகும். ஆக வால்மீகி முனிவர் மிகப் பொருத்தமான உபநிடதச் சொற்களைக் கொண்டு தனது காவியத்தை ஆரம்பித்து வைக்கிறார்.

வேதங்கள் “எது எப்படி இருக்கும் அல்லது இருக்க வேண்டும்” என்று கூறுமே தவிர, அதன் காரணங்களை விவரமாகக் கூறி விளங்க வைக்காது. அதனாலேயே அவைகள் ஒருவன் இப்படி இருந்ததால் இப்படி ஆயிற்று என்று விவரங்கள் தராது. அதனாலேயே கலை மற்றும் கவி நயத்துடன் காவியங்கள் படைத்து வால்மீகி போன்றோர் உதாரண புருஷர்களையும் காட்டி புராணங்களைப் படைத்தனர். அவை மூலம் வேதங்கள் கூறும் நீதி, நேர்மை சார்ந்த நல்லொழுக்கம் மிக்க ஆன்மிக வாழ்க்கை வாழும் வழியை கதாபாத்திரங்கள் மூலம் காட்டி நல்லுலகத்தைப் பற்றிய செய்தியைப் பரப்பினர். அப்படிப்பட்ட ஒரு பாத்திரம்தான் நம் காவிய நாயகனான இராமபிரான்.

அவரது குணாதிசயங்களைப் பற்றி படித்தோ, கேட்டோ அறிபவர்கள் அவரைப் போலவே நல்ல வாழ்க்கை வாழ மாட்டார்களா என்ற ஆதங்கமே வால்மீகி போன்றோரை காவியங்களைப் படைக்க வைத்தது. உபநிடத காலத்தில் வால்மீகி வாழ்ந்திருந்தார் என்றால், “ராமாயணம் படித்து ராமபிரானைப் போல அனைவரும் வாழ்ந்து நன்னெறிகளைப் பரப்ப வேண்டும்” என்று உபநிடத வாக்கியங்களே அமைந்திருக்கக் கூடும்! வேத ரிஷிகளைப் போல அல்லாது வால்மீகி வித்தியாசமாக இராமனை நன்கு விவரித்து அவர் போல வாழவேண்டும் என்று சொல்லாது சொல்கிறார். இராமாயணத்தைப் படித்தும், கேட்டும் நாம் அனைவரும் கற்க வேண்டியதைக் கற்று, அதன்படி வாழ்ந்து, அது சொல்லும் கருத்துக்களையும் பரப்புவோம் என்று வால்மீகி நம் மீது திடமாக நம்பிக்கை வைத்துள்ளார் என்றே சொல்லலாம்.

பதினாறும் பெற்ற பெருவாழ்வு

கோ ந்வஸ்மின் ஸாம்ப்ரதம்ʼ லோகே கு³ணவான் கஸ்²ச வீர்யவான் | 
த⁴ர்மஜ்ஞஸ்²ச க்ருʼதஜ்ஞஸ்²ச ஸத்யவாக்யோ த்³ருʼட⁴வ்ரத​: || 1.1.2 ||
சாரித்ரேண ச கோ யுக்த​: ஸர்வபூ⁴தேஷு கோ ஹித​: | 
வித்³வான் க​: க​: ஸமர்த²ஸ்²ச கஸ்²சைகப்ரியத³ர்ஸ²ன​: ||  1.1.3 ||
ஆத்மவான் கோ ஜிதக்ரோதோ⁴ த்³யுதிமான் கோ (அ)நஸூயக​: | 
கஸ்ய பி³ப்⁴யதி தே³வாஸ்²ச ஜாதரோஷஸ்ய ஸம்ʼயுகே³ || 1.1.4 ||

நற்குணங்களின் குன்று, 
வீரன், 
கடமையில் கருத்துடையவன், 
நன்றி மறவாதவன், 
உண்மை விளம்பி, 
மனத்திடம் மிக்கோன், 
நற்குணத்தை ஒக்கும் செயல்கள் கொண்டோன், 
அனைவரின் நலம் விரும்பி, 
கல்வி மிக்கோன், 
திறமை மிக்க தொழிலாளி, 
பழகுதற்கு எளிமையானவன், 
தன்னிலே இன்புற்றோன், 
சீற்றத்தை அடக்கியவன், 
அழகன், 
அழுக்காறு அகன்றோன், 
சீண்டினால் சீறுவோன் 
என்ற இப்பதினாறு குணங்களைக் கொண்டவனே குணசீலன் என்று இங்கு கூறப்பட்டிருக்கிறது. 
இவை அனைத்தையும் இப்படிப் பட்டியலிட்டு ஒவ்வொருவனும் இப்படி இருக்கவேண்டும் என்று கூறாமல், 
இந்தக் குணங்கள் எல்லாவற்றையும் கொண்ட ஒரு வாழும் அல்லது வாழ்ந்த மனிதன் ஒருவனின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் மூலம் 
மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் எப்படி ஒரு குணவானாக இருக்க வேண்டும் என்று கூற விரும்பி, 
அப்படிப்பட்ட ஒருவன் இருக்கிறானா என்று வால்மீகி முனிவர் தவச்சீலர் நாரதரிடம் கேட்கிறார்.

தேவபாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும், முந்திய
நாவினான் உரையின்படி, நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்புஅரோ.

தேவ பாடையின்-தெய்வ மொழி எனப்படுகின்ற வடமொழியில்;
இக்கதை செய்தவர்-இந்த இராம கதையை இயற்றிய; மூவரானவர்
தம்முளும்- வான்மீகி, வசிட்டர், போதாயனர் ஆகிய மூவருள்;
முந்திய நாவினார் உரையின்படி-முதன்மையாராகியவரும் வாக்கிற்
சிறந்தவருமாகிய வான்மீகி முனிவர் சொல்லியபடியே; தமிழ்ப் பாவினால்-தமிழ்ப் பாடல்களால்;
இது நான் உணர்த்திய பண்பு-
இந்த இராமாவதாரத்தை நான் சொல்லிய இயல்பாகும்.

வடமொழியில் இராமபிரான் கதை சொல்லியவர் மூவர்;
அவர்களுள் ஆதிகவி வான்மீகி அருளிய காப்பியத்தின் வழியாலேயே கவிச் சக்கரவர்த்தி
இராமாவதாரக் காப்பியத்தை நடத்துவதாக இச்செய்யுள்
சொல்லுகிறது.
காப்பியக் கதையின் பொது அமைப்பு ஆதிகாவியத்தின்
வழியதே;
எனினும், காப்பியக் கட்டமைப்புச் சீர்மையையும், தமிழ்ப்
பண்பாட்டு மரபையும் கருதிக்
கவிச் சக்கரவர்த்தி பல மாற்றங்கள் செய்துள்ளார் என்பதை மறந்திடுதல் கூடாது.
ஆதிகவி விரிவாக ஓதியதைச் சுருக்கியும், சுருங்கக் கூறியதை விரித்தும், சில
செய்திகளை விடுத்தும்
புதியன சில புகுத்தியும், செய்திகளை இடம்
மாற்றியும் கம்பர் தம் காவியத்தை இயற்றியுள்ளனர் என்பதையும் மனங்கொள்ளவேண்டும்.
(‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’
என்பது தொல்காப்பிய விதி,
அசைச் சொல்லாகிய ‘அரோ’ இக்
குறிப்பினை உணர்த்துவதாகக் கொள்ளலாம். ‘அசை’என்பது வெற்றிடம்
நிரப்புவதாக மட்டும் கொள்ளலாகாது.
அசைத்தல், கட்டுதல்;
கவிதை வாசித்துச் சொல்பவனைக் கட்டி நிறுத்திச் சிந்திக்க வைப்பது அசைகளின் பொருண்மையுள் ஒன்று.)

வசிட்டர் இராமபிரானுக்கு வைராக்கிய உபதேசமாகக் கூறிய நூல்
‘யோக வாசிட்டம்’;
அதில் இராம சரிதம் முழுமையாகக்
கூறப்படவில்லை.
போதாயனார் இராம காதை பாடினார் என்பது
செய்தியளவாகவே நிற்கிறது. நூல் கிடைக்கவில்லை.
கம்பர் காலத்தில் பரவியிருந்த வடமொழி இராமாயணங்கள்
வான்மீக இராமாயணம்,
அத்யாத்ம ராமாயணம்,
சம்பு ராமாயணம் என்பனவே என்பர்.
இவற்றையே கம்பர் தம் பாடலில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று கருதலாம்.
வான்மீகி, வசிட்டர், போதாயனர் என்ற பட்டியலில்
வசிட்டருக்குப் பதிலாக வியாசர் பெயரை இணைத்துரைப்பதும் உண்டு.

ஸ்ரீ இராமகாதை நுவலப்படும் பிற நூல்கள்

ஸ்ரீ இராமகாதை நுவலப்படும் பிற சமஸ்கிருத நூல்கள்

1.ஸ்ரீ மகாபாரதம் : (நான்கிடங்களில்)

ஆரணிய பருவம் 147:28-38; 252-275
துரோண பருவம் 59:1-31
சாந்தி பருவம் 22;51-62
ஏறக்குறைய 700 பாடல்களில் இராமகாதை குறிக்கப்படுகிறது.

2.ஸ்ரீ புராணங்கள் : (முதன்மையானவை)

1. விஷ்ணு புராணம் (கி.பி. 4) ( IV, 4,5)
2. பிரும்மானந்த புராணம் (கி.பி. 4) (2. 21)
3. வாயு புராணம் (கி.பி. 5) ( II.26) விஷ்ணு புராணம் போன்றது.
4. பாகவத புராணம் (கி.பி. 6) (IX 10-11) இங்குதான் சீதை
திருமகளின்அவதாரம் என்னும் செய்தி முதலில் கூறப்படுகிறது.
5. கூர்ம புராணம் (கி.பி. 7) (.19: 1; II 34)
6. அக்கினி புராணம் (கி.பி. 8-9) (.5-12) வான்மீகியின் சுருக்கம்
7. நாரதர் புராணம் (கி.பி. 10) (1. 79; II.75) வான்மீகியின் சுருக்கம்.
8. பிரம்ம புராணம் – அரிவம்சத்தின் சுருக்கம்.
9. கருட புராணம் (கி.பி. 10) பெரும்பான்மையும் பிற்கால
இடைச்செருகல்கள்
10. ஸ்கந்த புராணம் (கி.பி. 8க்குப் பின்) (II : 30) சிற்சில செய்திகள்
11. பத்ம புராணம் (கி.பி. 12-15) (116 படலம், உத்தர 24, 43,44)

1. தர்மோத்ர புராணம் (கி.பி. 7)
2. நரசிம்ம புராணம் (கி.பி. 4-5) (இயல் 47-52)
3. தேவி பாகவதம் (கி.பி. 10-11) ( III 28-30)
4. பிரகதர்ம, சௌரபுராணம் (கி.பி. 950-1050) (இயல் : 30)

இவையெல்லாம் தத்தம் சமயக் கருத்துக்களை விளக்க இராம காதையைப் பயன்படுத்துகின்றன.

மேற்கண்ட புராணங்கள் தவிர வான்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சில முழு
ஸ்ரீ இராமாயண நூல்களும் வடமொழியில் காணப்படுகின்றன.

1. யோக வசிஷ்ட (அ) வசிஷ்ட இராமாயணம் (கி.பி. 8 (அ) 12)
2. அத்யாத்ம இராமாயணம் (கி.பி. 13 இராமசர்மர்)
3. அற்புத இராமாயணம் (முந்தையதற்குப் பிற்பட்டது)
4. ஆனந்த இராமாயணம் (கி.பி. 15) வால்மீகி பெயரால் வழங்குகிறது.

இவையேயன்றி இன்னும் பல்வேறு சிறுசிறு ஸ்ரீ இராமாயண நூல்கள் வடமொழியில் கி. பி 19ஆம் நூற்றாண்டு
வரையில் தோன்றியுள்ளன.-
ஸ்ரீ காளிதாசரின் ஸ்ரீ இரகுவம்சம் முதலான பல இலக்கியங்கள் ஸ்ரீ இராமசரிதையைப்
பாடுபொருளாகப் பேசுவதையும் காண்கிறோம்.
இவற்றுள் பெரும்புகழ் வாய்ந்தன:

1. காளிதாசர் : இரகுவம்சம் (கி. பி. 4)
2. பிரவர்சேனர் : இராவணவகோ (அ) சேதுபந்தா
(கி. பி. 550-600)
3. பட்டி : இராவணவதா (கி. பி. 500-650)
4. குமாரதாசர் : ஜானகி ஹரணா (கி. பி. 8)
5. அபிநந்தர் : இராமசரிதை (கி. பி. 9)
6. க்ஷேமேந்திரர் : (a)இராமயண மஞ்சரி (கி. பி. 11).
: (b)தசாவதார சரிதை
7. சாகல்ய மல்லர் : உதார ராகவர் (கி. பி. 12)
8. சகர கவி : ஜானகி பரிணயம் (கி. பி. 17)
9. அத்வைத கவி : இராமலிங்காம்ருதம் (கி. பி. 17)
10. மோகனஸ்வாமி : இராம ரகசியம் (அ) இராம சரிதை (கி. பி. 1608)

ஸ்ரீ இராமகாதை நாடக வடிவிலும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரை
பல நூல்களாக வெளி வந்துள்ளன.
பாசர், பவபூதி, ஜெயதேவர் முதலான நாடகாசிரியர்கள் இதில் அடங்குவர்.

பௌத்த இராமாயணங்கள்

1. தசரத ஜாதகம் (பாலி, கி. மு. 5)
2. அனமகம் ஜாதகம் (பாலி, கி. மு. 5)
3. தசரத கதனம் (பாலி, கி. மு. 5)

ஜைன இராமாயணங்கள்

1. விமல சூரி : பௌம சரிதம் (பிராக்ருதம், கி. பி. 4)
2. சங்க தாசர் : வாசுதேவ ஹிண்டி (பிராக்ருதம், கி. பி. 5)
3. இரவி சேனர் : பத்ம புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 6)
4. குணபத்ரர் : உத்தர புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 10)
5. சுயம்பு தேவர் : பௌம சரிதம் (அபப்பிரம்சம், கி. பி. 9)
6. சீலங்கர் : சௌபன்ன மகா புருஷ சரிதம்
(பிராக்ருதம், கி. பி.868)
7. பத்ரேசுவரர் : ககாவலி (பிராக்ருதம், கி. பி. 11)

தமிழ்
கம்பன் : கம்பராமாயணம் (கி. பி. 9)

தெலுகு
1. கோன புத்தா ரெட்டி : ரங்கநாத ராமாயணம் (கி. பி. 13)
2. பாஸ்கரன் மற்றும் மூவர் : பாஸ்கர ராமாயணம் (கி. பி. 13)
3. ஆதுகூரி மொல்ல : மொல்ல ராமாயணம் (கி. பி. 15)

கன்னடம்
1. அபிநவ பம்பா என்னும் -நாக சந்திரர் : பம்ப ராமாயணம் (கி. பி. 11)
2. குமார வான்மீகி என்னும- நரகரி : தொரவெ ராமாயணம் (கி. பி. 16)

மலையாளம்
1. கன்னச இராம பணிக்கர் : கன்னச ராமாயணம் (கி. பி. 14)
2. துஞ்சத்த எழுத்தச்சன் : அத்யாத்ம ராமாயணம் (கி. பி. 16)

இந்தி
1. கோஸ்வாமி துளசிதாஸ் : துளசி ராமாயணம் (கி. பி. 1574)
2. கேசவ தாஸ் : இராம சந்திரிகா (கி. பி. 16)

அசாமி
மாதவ் கந்தவி : அசாமி ராமாயணம் (கி. பி. 14)

வங்காளம்
கிருத்திவாசன் : வங்காள ராமாயணம் (கி. பி. 15)

ஒரியா
பலராமதாஸ் : ஒரியா ராமயணம் (கி. பி. 16)

மராத்தி
ஏக நாதர் : பாவார்த ராமாயணம் (கி. பி. 16)

நாட்டுப்புற இலக்கியங்கள்
தமிழ், மைதிலி, போஜ்புரி, வ்ரஜ், இந்தி, மற்றும் சில வடநாட்டு
மக்களிலக்கியப் பாடல்கள்.

——————–

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் தவிர; சமஸ்கிருதத்திலேயே அதை அடியொற்றி காலப் போக்கில் மேலும்
பல ராமாயணங்கள் உருவாயின. அவை முறையே…

அத்யாத்ம ராமாயணம்
வசிஷ்ட ராமாயணம் (யோக வசிஸ்டா)
லகு யோக வசிஸ்டா
ஆனந்த ராமாயணம்
அகஸ்திய ராமாயணம்
அத்புத ராமாயணம்

ஸ்ரீ மகாபாரதத்தில் வன பர்வத்தில் ‘ராமோக்யான பர்வ’ எனும் பெயரிலும்
ஸ்ரீ பாகவத புராணத்தில் ‘9 வது ஸ்கந்தத்திலும்’ ராம கதை இடம்பெறுகிறது.
இவை தவிர ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும், அக்னி புராணத்திலும் கூட
ஸ்ரீ ராமகதையைப் பற்றி சுருக்கமாக விவரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஸ்ரீ துளசிதாசரின் ராமசரிதமானஸ். இது எழுதப்பட்ட காலம் 16 ஆம் நூற்றாண்டு.
மராத்தியில் 16 ஆம் நூற்றாண்டில் பவர்த்த ராமாயண எனும் பெயரில் மற்றொரு ராமாயணத்தை ஏக்நாத் இயற்றினார்
அஸ்ஸாமில் 15 ஆம் நூற்றாண்டில் மாதவ கந்தலி என்பவர் இயற்றிய கதா ராமாயணம் அல்லது
v கோதா ராமாயணம் எனும் ராமகதை புழக்கத்தில் இருக்கிறது.
வங்காளத்தில் 15 ஆம் நூற்றாண்டில் கிரித்திபாஸ் என்பவரால் இயற்றப்பட்ட
கிரித்திவாசி ராமாயணம் புழக்கத்தில் இருக்கிறது.
ஒதிஷாவில், ஒரிய தண்டி ராமாயணம் அல்லது ஜகமோகன் ராமாயணம் என்ற பெயரில் பலராம்தாஸ் என்பவர்
இயற்றிய ஸ்ரீ ராமாயணக் கதை 16 ஆம் நூற்றாண்டில் இருந்து புழக்கத்தில் இருக்கிறது.

ஆந்திராவில் புத்தா ரெட்டி என்பவரால் இயற்றப்பட்ட ஸ்ரீரங்கநாத ராமாயணமு மற்றும்
கவிஞர் மொல்ல என்பவரால் இயற்றப்பட்ட மொல்ல ராமாயணமு எனும் இரண்டு விதமான
v ராமாயணங்கள் புழக்கத்தில் உள்ளன.
கர்நாடகத்தில் 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குமுதெண்டு ராமாயணம்
(ஜைன பின்புலம் கொண்டு எழுதப்பட்ட ராமாயணம்) 16 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட
குமரா வால்மீகி தொரவ ராமாயணம் மற்றும் 13 ஆம் நூற்றாண்டிலேயே நாகசந்திரா என்பவரால் இயற்றப்பட்ட
ராமசந்திர சரித புராணா எனும் முன்று விதமான ராமாயணங்கள் புழங்கி வருகின்றன.
தவிரவும்–கன்னடத்தில் முத்தண்ணா எனும் லக்‌ஷ்மிநாராயணா 1895 ல் இயற்றிய உரைநடை இலக்கியமான
அல்புத ராமாயணமும் 1898 ல் வெளிவந்த ராமஸ்வதேமும் பிரசித்தி பெற்றவை.

தமிழ்நாட்டில் ஸ்ரீ வால்மீகி ராமாயணத்திற்கு அடுத்தபடியாக மிகவும் புகழ்மிக்க ஸ்ரீ ராம கதையாக
கருதப்படுவது 12 ஆம் நூற்றாண்டு வாக்கில் ஸ்ரீ கம்பர் இயற்றிய ‘ஸ்ரீ கம்பராமாயணம்’.
கேரளாவில் 16 ஆம் நூற்றாண்டில் துஞ்சத்து எழுத்தச்சன் இயற்றிய ‘அத்யாத்ம ராமாயண கிளிப்பாட்டு
மிகப் பிரபலமான ராமகதையாகக் கருதப்படுகிறது.

நேபாளத்தில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பானு பக்த ஆச்சார்யா என்பவர் இயற்றிய
பானுபக்த ராமாயணமும், 20 ஆம் நூற்றாண்டில் சித்திதாஸ் மஹஜூ இயற்றிய சித்தி ராமாயணமும் பிரசித்தி பெற்றவை.
கோவாவில் 15 ஆம் நூற்றாண்டில் கர்தலிபுரா எனுமிடத்தில் வாழ்ந்த கிருஷ்ணதாச ஷாமா என்பவரால்
கொங்கணியில் இயற்றப்பட்ட ராமாயணமு எனும் ராமகதையின் கைப்பிரதிகள்
போர்ச்சுகலில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உருது மொழியில் 17 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட போத்தி ராமாயணம் பிரபலமானது.

இவை தவிர, சம்பு ராமாயணம், ஆனந்த ராமாயணம், மந்தர ராமாயணம், கிர்தர் ராமாயணம், ஸ்ரீராமாயண மங்கேரி,
ஸ்ரீரங்கநாத் ராமாயணம், பாஸ்கர ராமாயணம், சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங்கால் இயற்றப்பட்ட
கோவிந்த ராமாயணம் மற்றும் ராதே சியாம் ராமாயணம் எனும் ராமாயணங்களும் கூட இந்தியாவில் அந்தந்த
பிரதேசத்து மக்களால் நன்கு அறியப்பட்ட ராமாயணங்களாகத் திகழ்கின்றன.

கம்போடியாவில் ரீம்கர்
தாய்லாந்தில் ராமாகீய்ன்
லாவோஸில் பிர லாக் பிர லாம்
பர்மாவில் யம ஸாட்டாவ்
மலேசியாவில் ஹிகாயத் செரி ராமா
இந்தோனேசியா மற்றும் ஜாவாவில் காகவின் ராமாயணம்.
பிலிப்பைன்ஸில் ராஜா மகாந்திரி என்ற பெயரிலும் ராமாயணக் கதை சொல்லப்படுகிறது.
இரானில் ’தாஸ்தன் இ ராம் ஓ சீதா (Dastan-e-Ram O Sita)
ஸ்ரீலங்காவில் ஜானகிஹரன் (Janakiharan)
ஜப்பானில் ராமேயன்னா அல்லது ராமன்ஸோ (Ramaenna or Ramaensho)
சீனா, திபெத் யுன்னான் (தென்மேற்கு சீனா) வில் Langka Sip Hor (thai lu language)

———-

கெமர் மொழியில் உள்ள ரீம்கெர்,
தாய் மொழியில் உள்ள ராமகியென்,
லாவோ மொழியில் எழுதப்பட்ட ப்ரா லாக் ப்ரா லாம்,
மலாய் மொழியின் இக்காயத் சேரி ராமா போன்றவை வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவியவை ஆகும்.

——–

இராமாயணம் என்னும் பெயர் இராமன், அயனம் என்னும் சொற்களின் கூட்டாகும்.
அயனம் என்னும் சொல் சமசுக்கிருதத்தில் பயணம் என்னும் பொருளுடையது.
இதனால், இராமாயணம் என்பது இராமனின் பயணம் என்னும் பொருள் குறிக்கிறது.

இலங்கையின் மையப் பகுதியில், நுவரெலியா என்னும் நகருக்கு அண்மையில் உள்ள
சீதா எலிய என அழைக்கப்படும் இடமே சீதையைச் சிறைவைத்த அசோகவனம் என்கின்றனர்.

——–

ஸ்ரீ இராமகீர்த்தி அல்லது தாய்லாந்து இராமாயணம் (இராமாக்கியென், Ramakien,) என்பது
தாய்லாந்து நாட்டின் தேசிய காப்பியம் ஆகும். இது வால்மீகி இராமாயணத்தை மூலமாகக் கொண்டது.
இதன் தொலைந்து போன மூலப்பகுதிகள் 1767ஆம் ஆண்டு நடந்த ஆயுத்தியாவின் அழிவில்
சிதைந்து போன பின்னர், 1797ஆம் ஆண்டு தாய்லாந்து மன்னனான முதலாம் இராமாவின் இதனை எழுதினார்.
இக்காப்பியத்தின் மூலம் தாய்லாந்தில் கொன் என வழங்கப்படும் முகமூடி நாடகத்திற்காக இயற்றப்பட்டது எனவும் கூறுவர்.
இரண்டாம் இராமாவின் ஆட்சியில், அந்நாட்டவர்களின் கலை, இலக்கியம் என அனைத்திலும் வேரூன்றியது.

இக்காப்பியத்தின் மூலம் ஸ்ரீ வால்மீகி ராமாயணமாக இருந்த போதிலும் இதன் நடைத்தன்மை, போர் வர்ணனை,
ஆடைகள், இதில் கூறப்படும் நில அமைப்புகள், இயற்கை காட்சிகள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவை
தாய்லாந்து பண்பாட்டுக்கு ஏற்ப மீளுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

பொருளடக்கம்
பாத்திர அமைப்பு தொகு
இதன் பாத்திர அமைப்புகள் வால்மீகி ராமாயணத்துடன் ஒத்து வந்த போதிலும்
இதன் பாத்திர பெயர்கள் தாய் மொழிக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டுளது

வால்மீகி ராமாயணம் தவிர; சமஸ்கிருதத்திலேயே அதை அடியொற்றி காலப்போக்கில் மேலும் பல ராமாயணங்கள் உருவாயின. அவை முறையே…

  • அத்யாத்ம ராமாயணம்
  • வசிஷ்ட ராமாயணம் (யோக வசிஸ்டா)
  • லகு யோக வசிஸ்டா
  • ஆனந்த ராமாயணம்
  • அகஸ்திய ராமாயணம்
  • அத்புத ராமாயணம்

துளசி தாசரின் ராமசரித மானஸை -இது எழுதப்பட்ட காலம் 16 ஆம் நூற்றாண்டு.

ஜம்மு & கஷ்மீரில் ‘ராமாவதார சரிதை’ இன்னொரு விதமான ராமாயணம் புழங்குகிறது. அது எழுதப்பட்ட காலம் 19 ஆம் நூற்றாண்டு.

குஜராத்தில் 17 ஆம் நூற்றாண்டில் துளசிதாசரின் ராமசரிதமானஸை அடியொற்றி துளசி கிருத ராமாயணத்தை பிரேமானந்த ஸ்வாமி எனும் புகழ்பெற்ற குஜராத்தி கவிஞர் இயற்றினார்.

மராத்தியில் 16 ஆம் நூற்றாண்டில் பவர்த்த ராமாயண எனும் பெயரில் மற்றொரு ராமாயணத்தை ஏக்நாத் இயற்றினார். மகாராஷ்டிரத்தில் முன்னதாக 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் மொழிபெயர்க்கப்பட்ட
மற்றொரு ராமாயணமும் புழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அஸ்ஸாமில் 15 ஆம் நூற்றாண்டில்  மாதவ கந்தலி என்பவர் இயற்றிய கதா ராமாயணம் அல்லது கோதா ராமாயணம் எனும் ராமகதை புழக்கத்தில் இருக்கிறது

வங்காளத்தில் 15 ஆம் நூற்றாண்டில் கிரித்திபாஸ் என்பவரால் இயற்றப்பட்ட   கிரித்திவாசி ராமாயணம் புழக்கத்தில் இருக்கிறது.

ஒதிஷாவில், ஒரிய தண்டி ராமாயணம் அல்லது ஜகமோகன் ராமாயணம் என்ற பெயரில் பலராம்தாஸ் என்பவர் இயற்றிய ராமாயணக் கதை 16 ஆம் நூற்றாண்டில் இருந்து புழக்கத்தில் இருக்கி

ஆந்திராவில் புத்தா ரெட்டி என்பவரால் இயற்றப்பட்ட ஸ்ரீரங்கநாத ராமாயணமு மற்றும் கவிஞர் மொல்ல என்பவரால் இயற்றப்பட்ட மொல்ல ராமாயணமு எனும் இரண்டு விதமான ராமாயணங்கள் புழக்கத்தில் உள்ளன.

கர்நாடகத்தில் 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குமுதெண்டு ராமாயணம் (ஜைன பின்புலம் கொண்டு எழுதப்பட்ட ராமாயணம்) 16 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட குமரா வால்மீகி தொரவ ராமாயணம் மற்றும் 13 ஆம் நூற்றாண்டிலேயே நாகசந்திரா என்பவரால் இயற்றப்பட்ட ராமசந்திர சரித புராணா எனும் முன்று விதமான ராமாயணங்கள் புழங்கி வருகின்றன. தவிரவும்.. கன்னடத்தில் முத்தண்ணா எனும் லக்‌ஷ்மிநாராயணா 1895 ல் இயற்றிய உரைநடை இலக்கியமான அல்புத ராமாயணமும் 1898 ல் வெளிவந்த ராமஸ்வதேமும் பிரசித்தி பெற்றவை.

தமிழ்நாட்டில் வால்மீகி ராமாயணத்திற்கு அடுத்தபடியாக மிகவும் புகழ்மிக்க ராமகதையாக கருதப்படுவது 12 ஆம் நூற்றாண்டு வாக்கில் கம்பர் இயற்றிய ‘கம்பராமாயணம்’.

கேரளாவில் 16 ஆம் நூற்றாண்டில் துஞ்சத்து எழுத்தச்சன் இயற்றிய  ‘அத்யாத்ம ராமாயண கிளிப்பாட்டு மிகப் பிரபலமான ராமகதையாகக் கருதப்படுகிறது.

நேபாளத்தில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பானு பக்த ஆச்சார்யா என்பவர் இயற்றிய பானுபக்த ராமாயணமும், 20 ஆம் நூற்றாண்டில் சித்திதாஸ் மஹஜூ இயற்றிய சித்தி ராமாயணமும் பிரசித்தி பெற்றவை.

கோவாவில் 15 ஆம் நூற்றாண்டில் கர்தலிபுரா எனுமிடத்தில் வாழ்ந்த கிருஷ்ணதாச ஷாமா என்பவரால் கொங்கணியில் இயற்றப்பட்ட  ராமாயணமு எனும் ராமகதையின் கைப்பிரதிகள் போர்ச்சுகலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உருது மொழியில் 17 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட போத்தி ராமாயணம் பிரபலமானது.

இவை தவிர, சம்பு ராமாயணம், ஆனந்த ராமாயணம், மந்தர ராமாயணம், கிர்தர் ராமாயணம், ஸ்ரீராமாயண மங்கேரி, ஸ்ரீரங்கநாத் ராமாயணம், பாஸ்கர ராமாயணம், சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங்கால் இயற்றப்பட்ட கோவிந்த ராமாயணம் மற்றும் ராதே சியாம் ராமாயணம் எனும் ராமாயணங்களும் கூட இந்தியாவில் அந்தந்த பிரதேசத்து மக்களால் நன்கு அறியப்பட்ட ராமாயணங்களாகத் திகழ்கின்றன.

மலையாளத்தில் தொடர்ந்து ராமாயண வடிவங்கள் எழுந்தபடியே இருந்தன. 12 ஆம் நூற்றாண்டில் சீராமன் என்னும் கவிஞர் எழுதிய ராமசரிதம் என்னும் பாட்டுவடிவம் மலையாளமாக அப்போதும் உருவாகியிராத அரைத்தமிழில் எழுதப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டில் கண்ணச்ச பணிக்கர் எழுதிய கண்ணச்ச ராமாயணம் கம்பராமாயணத்தின் நகல்வடிவம்போன்றது.

சம்ஸ்கிருத ராமாயணங்களுக்கு நெருக்கமான ராமாயண வடிவமான ராமாயணம் சம்பு [சம்பு ஓரு செய்யுள்வகை] புனம் நம்பூதிரியால் எழுதப்பட்டது. சம்ஸ்கிருத மணிப்பிரவாள நடையில் 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இது மலையாளமொழி சம்ஸ்கிருதக் கலப்பால் இன்றைய வடிவத்தை அடைவதையும் காட்டுகிறது

கதகளிக்காக கொட்டாரக்கர தம்புரான் இயற்றிய ராமாயண ஆட்டக்கதை என்னும் காவியவடிவம் பெரும்பாலும் உத்தர ராமாயணத்திற்கு நெருக்கமான நாடக உருவாக்கம். ராமாயணத்தின் கதகளி வடிவங்களுக்கான முன்வடிவம். கதகளியில் ராமனைவிட ராவணனே பெரிய கதாபாத்திரம். பதினாறாம் நூற்றாண்டில் இது உருவானது

பதினேழாம் நூற்றாண்டில் அத்யாத்ம ராமாயணம் என அழைக்கப்படும் துஞ்சத்து எழுத்தச்சனின் ராமாயணம் எழுந்தது. மலையாளமொழியின் பிதாவாகவும் எழுத்தச்சன் கருதப்படுகிறார். சம்ஸ்கிருத மணிப்பிரவாளத்தை விட்டு விலகி மக்கள்மொழியில் எழுதப்பட்ட இந்த ராமாயணம் மிகப்புகழ்பெற்றது. இன்றும் கேரளத்தில் ஒவ்வொரு நாளும் வாசிக்கப்படுகிறது.

இதுவன்றி கேரளத்தில் பத்துக்கும் மேற்பட்ட நாட்டார் ராமாயண வடிவங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது வாய்மொழியில் இருந்து பதிவுசெய்யப்பட்ட மாப்பிள ராமாயணம். பதினெட்டாம் நூற்றாண்டில் முஸ்லீம் கடற்பயணிகளால் பாடப்பட்டது. அரபுச்சொற்களும் முஸ்லீம் வழக்காறுகளும் கொண்டது இது.

  • கம்போடியாவில் ரீம்கர்
  • தாய்லாந்தில் ராமாகீய்ன்
  • லாவோஸில் பிர லாக் பிர லாம்
  • பர்மாவில் யம ஸாட்டாவ்
  • மலேசியாவில் ஹிகாயத் செரி ராமா
  • இந்தோனேசியா மற்றும் ஜாவாவில் காகவின் ராமாயணம்.
  • பிலிப்பைன்ஸில் ராஜா மகாந்திரி என்ற பெயரிலும் ராமாயணக் கதை சொல்லப்படுகிறது.
  • இரானில் ’தாஸ்தன் இ ராம் ஓ சீதா (Dastan-e-Ram O Sita)
  • ஸ்ரீலங்காவில் ஜானகிஹரன் (Janakiharan)
  • ஜப்பானில் ராமேயன்னா அல்லது ராமன்ஸோ (Ramaenna or Ramaensho)
  • சீனா, திபெத் & யுன்னான் (தென்மேற்கு சீனா) வில் Langka Sip Hor (thai lu language)

—————-

ஸ்ரீ சம்புராமாயணம் – கதையும் கவிதையும் கலந்த காவியம்

பொதுவாக கத்யமாக உரைநடையிலோ, பத்யமாக கவிதை வடிவிலோ தான் காவியங்கள் பெரும்பாலும் இயற்றப் பட்டு வந்த நிலையில் போஜராஜன் சம்பு (Champu) என்கிற காவிய அமைப்பில், கவிதையையும் உரைநடையையும் கலந்து வித்தியாசமாக அளித்திருக்கிறார்.

गद्यानुबन्ध रसमिश्रित पद्यसूक्ति:
ह्रुद्या हि वाद्यकलया कलितेव गीति: |
तस्माद्दधातु कविमार्गजुषां सुखाय
चम्पुप्रबन्ध रचनां रसना मदीया || (बालकाण्डम् ३)

க³த்³யானுப³ந்த⁴ ரஸமிஶ்ரித பத்³யஸூக்தி:
ஹ்ருத்³யா ஹி வாத்³யகலயா கலிதேவ கீ³தி: |
தஸ்மாத்³த³தா⁴து கவிமார்க³ஜுஷாம்ʼ ஸுகா²ய
சம்புப்ரப³ந்த⁴ ரசனாம்ʼ ரஸனா மதீ³யா || (பாலகாண்டம் – 3)

வாத்தியங்களும், வாய்ப்பாட்டும் இணைந்து ஒலிக்கும்போது அது கேட்பவர்களுக்கு எத்தனை இன்பத்தை அளிக்கிறதோ அதைப்போல கவிதையும் உரைநடையும் கலந்த சம்பு பிரபந்தமாக அமைந்துள்ள என் கவிதை, ரசனை மிகுந்த பெரியோர்களுக்கு ஆனந்தத்தை அளிக்கட்டும் என்று கூறுகிறார் கவி.

அவையடக்கம்

பகீரதன் கதை தெரிந்தது தான். தன் முன்னோர்கள் நற்கதி அடையவேண்டும் என்று அவர்களுக்கு ஈமச்சடங்கு செய்ய, தேவலோகத்தில் இருந்து கங்கையை கடுந்தவம் இருந்து தருவித்தான் பகீரதன். இன்றோ சாதாரண மனிதர்கள் கூட தன் முன்னோர்களுக்காக, பகீரதப் பிரயத்தனத்தில் சிறு துளி அளவு கூட இன்றி அதே கங்கை நீரை வெகு சுலபமாக எடுத்து தர்ப்பணம் செய்து விடுகிறார்கள். அது அவர்களின் முன்னோர்களுக்கும் நற்கதியை அளித்து விடுகிறது.

அதே போல, வால்மீகி முதலிய மாபெரும் கவிகள் மிகுந்த பிரயாசைப் பட்டு, அனைவரும் ரசித்து அனுபவிக்கும் விதத்தில் தம் வாழ்நாள் சாதனையாக வெளிப்படுத்திய கதையை, சுலபமாக நானும் எடுத்து என் சிறு முயற்சியில் காவியமாகப் படைத்தால் அது நல்லோர்கள் விரும்ப மாட்டார்களா என்ன என்று சாதுர்யமாகக் கேட்கிறார்.

वाल्मीकिगीत रघुपुंगवकीर्तिलेशै:
तृप्तिं करोमि कथमप्य्धुना बुधानाम् |
गङ्गाजलैर्भुवि भगीरथयत्नलब्धै:
किं तर्पणं न विदधाति नर:पितृणां || (बालकाण्डम् ४)

வால்மீகிகீ³த ரகு⁴புங்க³வகீர்திலேஶை:
த்ருʼப்திம்ʼ கரோமி கத²மப்ய்து⁴னா பு³தா⁴னாம் |
க³ங்கா³ஜலைர்பு⁴வி ப⁴கீ³ரத²யத்னலப்³தை⁴:
கிம்ʼ தர்பணம்ʼ ந வித³தா⁴தி நர:பித்ருʼணாம்ʼ || (பாலகாண்டம் – 4)

சம்பு ராமாயணம் வால்மீகியின் கதையமைப்பை அப்படியே தொடர்கிறது. ஆனாலும் போஜனின் கவித்துவம் பல புதிய பரிமாணங்களை நமக்குக் காட்டுகிறது. குறிப்பிட்டு ஒரு சில அம்சங்களைப் பார்ப்போம்.

ஸ்ரீராம ஜனனம்

பழைய இலக்கியங்கள் பெண்ணழகை பலவிதங்களில் பாடியிருந்தாலும், தாய்மையுற்றிருக்கும் பெண்ணை வர்ணித்த கவிதைகள் அதிகம் கிடைப்பதில்லை. தசரதனின் பட்டத்தரசிகள் பாயசத்தை அருந்தி கருத்தரித்து குழந்தைகளைப் பெற்றார்கள் என்ற அளவில் மற்ற இராமாயணக் காவியங்கள் கடந்து சென்று விடுகின்றன. ஆனால் போஜன் அழகிய கவிதைகளால் தாய்மை அடைந்த அரசியர்களை மேலும் அலங்கரிக்கிறார்.

अपाटवात्केवलमङ्गकानां मनोज्ञकान्तेर्महिषीजनस्य |
शनै: शनै: प्रोज्झितभूषणानि चकाशिरे दौहृदलक्षणानि || (बालकाण्डम् २५)

அபாடவாத்கேவலமங்க³கானாம்ʼ மனோஜ்ஞகாந்தேர்மஹிஷீஜனஸ்ய |
ஶனை: ஶனை: ப்ரோஜ்ஜி²தபூ⁴ஷணானி சகாஶிரே தௌ³ஹ்ருʼத³லக்ஷணானி || (பாலகாண்டம் – 25)

ஒளிபொருந்திய அரசியர்கள் சிற்சில காலத்தில், உடல் மெலிந்து ஆபரணங்கள் கூட அணியமுடியாமல் ஆனது, அவர்களிடம் இரு இதயம் உள்ளதற்கான அடையாளங்கள், தௌஹ்ருத லக்ஷணங்கள் அல்லது த்வி ஹ்ருதய லக்ஷணங்கள் அழகாக மிளிர்ந்தன.
குழந்தையைச் சுமக்கும் கர்ப்பிணிப் பெண்ணை, இரண்டு இதயம் உள்ளவள் (குழந்தையின் இதயம் மற்றும் தாயின் இதயம்) என்று கவிஞர் சமத்காரமாகக் குறிப்பிடுகிறார்.

அஷ்டாங்க ஹ்ருதயம் என்ற ஆயுர்வேத நூல் பின்வருமாறு கூறுகிறது:

मातृजन्यस्य हृदयं मातुश्च हृदयेन यत् |
संबद्धं तेन गर्भिण्या नेष्टं श्रद्धाविमाननं || (अष्टाङ्गहृदयम् )

மாத்ருʼஜன்யஸ்ய ஹ்ருʼத³யம்ʼ மாதுஶ்ச ஹ்ருʼத³யேன யத் |
ஸம்ப³த்³த⁴ம்ʼ தேன க³ர்பி⁴ண்யா நேஷ்டம்ʼ ஶ்ரத்³தா⁴விமானனம்ʼ || (அஷ்டாங்கஹ்ருதயம்)

சாதாரண நாட்களில் ஒரு பெண்ணுக்கு சில உணவு, உடைகள், வாசனைகள் பிடிக்கும். ஆனால் பேறுகாலத்தில் அந்த விருப்பு வெறுப்புகள் பெரிதும் மாறி இருக்கும். முன்பு பிடிக்காதது இப்போது வேண்டும் என்று கேட்பார்கள். இதற்கு காரணம் உள்ளே இருக்கும் இன்னொரு இதயம் தான் என்கிறது ஆயுர் வேத நூல். கவி போஜனுக்கு ஆயுர்வேதம் தெரியும் என்பதால்தான் அந்தக் குறிப்பை இங்கே கவித்துவமாகக் குறிப்பிடுகிறார்.

அரசியர் மூவரில் கௌசல்யைக்கு கொஞ்சம் சிறப்பு அதிகம். ஏனெனில் அவள் வயிற்றில் தான் கதையின் நாயகன் தோன்றுகிறான். அவன் சாதாரணமானவனல்ல. விஷ்ணுவின் அவதாரம்.

न्यग्रोधपत्रसमतां क्रमश: प्रयातामङ्गीचकार पुनरप्यदरं कृशाङ्गया: |
जीवातवे दशमुखोरगपीडितानां गर्भञ्चलेन वसता प्रथमेन पुंसा || (बालकाण्डम् २७)

ந்யக்³ரோத⁴பத்ரஸமதாம்ʼ க்ரமஶ: ப்ரயாதாமங்கீ³சகார புனரப்யத³ரம்ʼ க்ருʼஶாங்க³யா: |
ஜீவாதவே த³ஶமுகோ²ரக³பீடி³தானாம்ʼ க³ர்ப⁴ஞ்சலேன வஸதா ப்ரத²மேன பும்ʼஸா || (பாலகாண்டம் – 27)

கௌசல்யையின் வயிறு ஆலிலை போல இருக்குமாம். இளமையின் காரணமாக சிறுத்துப் போன இடை, கர்ப்பத்தின் காரணமாக அதன் ஆலிலை வடிவம் வெளித்தெரியுமாறு வளர்ந்ததாம். உலகெங்கும் பிரளய கால வெள்ளத்தில் மூழ்கிவிட, அப்போது ஆலிலையில் படுத்திருக்கும் குழந்தையாக விஷ்ணு மிதந்து வருவார் என்பது புராணக் கோட்பாடு. அதனை இங்கே கௌசல்யையின் இடையை ஆலிலையாகவும் அதில் சிசுவாகப் படுத்திருக்கும் ராமனே விஷ்ணு என்று அழகாக உருவகப் படுத்துகிறார்.

பெண்களின் இடை சிறுத்து இருப்பது அழகு. பல இடங்களில் காவியங்களில் பெண்களின் இடை இருந்தும் இல்லாதது போல இருப்பதாக உவமைகளுடன் குறிப்பிடுவர். கௌசல்யையும் அப்படித்தான். அவள் கருவுற்ற காலத்தில் இல்லாதிருந்த இடை தன் இருப்பை வெளிப்படுத்துகிறதாம். ஆகாயம் போல சூன்ய பிரதேசமாக இருந்த இடை இன்று விஷ்ணு பதம் ஆகி விட்டது என்கிறார் கவி. ஆகாயத்திற்கு விஷ்ணுபதம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அதைக் சிலேடையாகக் குறிப்பிடுகிறார்.

मध्यं तनुत्वादविभाव्यमानं आकाशमासीद् असितायताक्ष्या: |
गर्भोदये विष्णुपदापदेशात्कार्श्यं विहायापि विहाय एव || (बालकाण्डम् २८)

மத்⁴யம்ʼ தனுத்வாத³விபா⁴வ்யமானம்ʼ ஆகாஶமாஸீத்³ அஸிதாயதாக்ஷ்யா: |
க³ர்போ⁴த³யே விஷ்ணுபதா³பதே³ஶாத்கார்ஶ்யம்ʼ விஹாயாபி விஹாய ஏவ || (பாலகாண்டம் – 28)

முன்பு இவள் வயிறு காணமுடியாத ஆகாசம் போல இருந்தது. இப்போது கர்ப்ப காலத்தில் விஷ்ணுபதமாக ஆகி விட்டது. ராமன் விஷ்ணுவின் அவதாரம், அவன் இருக்கும் இடமாக அவள் வயிறு ஆனது என்று ஒரு அர்த்தத்திலும், ஆகாயம் போல விரிந்து பெரிதானது என்று இன்னொரு அர்த்தத்திலும் அந்த சொல்லை கவிஞர் உபயோகித்திருக்கிறார்.

ஸ்ரீராமனின் வனவாசம்

“ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள..” நீ பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போகவேண்டும் என்று கைகேயி கூறியதைக் கேட்டும் இராமனின் முகமலர்ச்சியில் ஒரு சிறிதும் மாறுதல் ஏற்படவில்லை என்பதை எல்லா இராமசரித கவிஞர்களும் பாடியுள்ளனர். இத்தருணத்தில், போஜனின் இராமன் கீழ்கண்டவாறு பேசுகிறான்:

वनभुवि तनुमात्रत्राणमाज्ञापीतं मे
सफलभुवनभार: स्थापितो वत्समूर्ध्नि |
तदिह सुकरतायामावयोस्तर्कीतायां
मयि पतति गरीयानम्ब ते पक्षपात: || (अयोद्याकाण्डम् २५)

வனபு⁴வி தனுமாத்ரத்ராணமாஜ்ஞாபீதம்ʼ மே
ஸப²லபு⁴வனபா⁴ர: ஸ்தா²பிதோ வத்ஸமூர்த்⁴னி |
ததி³ஹ ஸுகரதாயாமாவயோஸ்தர்கீதாயாம்ʼ
மயி பததி க³ரீயானம்ப³ தே பக்ஷபாத: || (அயோத்யா காண்டம் -25)

அம்மா நீங்கள் சிறிது பாரபட்சம் காட்டி விட்டீர்கள். அனைத்துலகையும் அதனுள் வாழும் மக்களையும் காப்பாற்றும் சுமை பரதனுக்கு, என்னுடைய உடலை மட்டும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்கிற சுமை எனக்கு என்று, எனக்கு சிறிய வேலையையும் தம்பிக்கு மிகப்பெரிய பாரத்தையும் சுமத்தி விட்டீர்களே என்று கேட்கிறான்.

ராமனிடம் காமம் கொண்ட சூர்ப்பனகை

ஆரண்ய காண்டத்தில், ராம லட்சுமணர்களை சூர்ப்பனகை காணும் காட்சி சுவையாக விவரிக்கப் படுகிறது.

दशरथात्मज युग्म निरीक्षण समाकुल बुद्दिरियं दधौ |
उभयकुल समस्थितशाद्वलभ्रम गतागत खिन्नगवीदशाम् || (आरण्यकाण्डम् १६)

த³ஶரதா²த்மஜ யுக்³ம நிரீக்ஷண ஸமாகுல பு³த்³தி³ரியம்ʼ த³தௌ⁴ |
உப⁴யகுல ஸமஸ்தி²தஶாத்³வலப்⁴ரம க³தாக³த கி²ன்னக³வீத³ஶாம் || (ஆரண்யகாண்டம் – 16)

சூர்ப்பனகை ஒரு பசுவைப் போல இருந்தாள் என்கிறார் கவி. ஒரு ஆற்றுக்கு இரண்டு பக்கமும் நல்ல பசும்புல் இருக்க, எந்த கரையில் மேய்வது என்று திகைத்து உண்ணாமல் இங்கும் அங்கும் பசுவைப்போல, தசரதனின் புதல்வர்கள் இருவரின் அழகிலும் மயங்கி இவரிடமும் அவரிடமும் என்று அலைந்தாளாம் சூர்ப்பனகை.

ராவண குலம் புலஸ்தியர் என்னும் ரிஷியிடம் துவங்குகிறது. புலஸ்தியரோ பிரம்மாவின் பிள்ளை. அப்படி பிரம்ம தேவனிடம் நேரடி சம்பந்தம் இருக்கும் நமக்கு ஏன் இந்த கஷ்டம் என்று பிரம்மனையே நொந்து கொள்கிறாள் அவள்.

लावण्याम्बुनिधे: अमुष्य दयितामेनामिवैनं जनं
कस्मान्नसृजदस्मदन्वय गुरोरुत्पत्तिभू: पद्मभू: |
आस्तां तावदरण्यवासरसिके हा कष्टमस्मिन्निमां
कान्तिं काननचन्द्रिकासमदाशां किं निर्ममे निर्ममे || (आरण्यकाण्डम् २८)

லாவண்யாம்பு³னிதே⁴: அமுஷ்ய த³யிதாமேனாமிவைனம்ʼ ஜனம்ʼ
கஸ்மான்னஸ்ருʼஜத³ஸ்மத³ன்வய கு³ரோருத்பத்திபூ⁴: பத்³மபூ⁴: |
ஆஸ்தாம்ʼ தாவத³ரண்யவாஸரஸிகே ஹா கஷ்டமஸ்மின்னிமாம்ʼ
காந்திம்ʼ கானனசந்த்³ரிகாஸமதா³ஶாம்ʼ கிம்ʼ நிர்மமே நிர்மமே || (ஆரண்யகாண்டம் – 28)

பிரம்மன் நமது குலத்தில் ஆதி முதல்வர். அப்படி இருந்தும் எனக்கு ஏன் இந்த சீதையைப் போல அழகு தரவில்லை? சரி அதாவது போகட்டும், இந்த ராம லட்சுமணர்களை சந்திரனைப் போல ஒளியுடையவர்களாக படைத்தும் காட்டில் வாழுமாறு ஏன் விதித்தார்? என்ன கஷ்டம் இது! என்று புலம்புகிறாள்.

புத்திமான் ஹனுமான்

கிஷ்கிந்தா காண்டத்தில் ஹனுமான் முதலில் ராம லட்சுமனர்களைச் சந்தித்து அவர்கள் நோக்கத்தைத் தெரிந்து கொண்டு, அண்ணனுக்கு பயந்து ஒளிந்து கொண்டிருக்கும் தம் மன்னன் சுக்ரீவனிடம் அழைத்துச் செல்கிறார். சுக்ரீவனும் ராம லட்சுமணர்களும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொண்டு நண்பர்களான வேளையில் சுக்ரீவன் ஹனுமானின் சாமர்த்தியத்தைப் பற்றி சொல்லுகிறான்.

अयमसुखयदेवं देव! धीमान् हनुमान्
रिपुरिति भवतोऽपि त्रस्तमस्तौजसं माम् |
दवहुतवहधूमस्तोम इत्यम्बुवाहा-
च्चकितमिव मयूरं मारुतो वारिशीत: || (किष्किन्दाकाण्डम् १२)

அயமஸுக²யதே³வம்ʼ தே³வ! தீ⁴மான் ஹனுமான்
ரிபுரிதி ப⁴வதோ(அ)பி த்ரஸ்தமஸ்தௌஜஸம்ʼ மாம் |
த³வஹுதவஹதூ⁴மஸ்தோம இத்யம்பு³வாஹா-
ச்சகிதமிவ மயூரம்ʼ மாருதோ வாரிஶீத: || (கிஷ்கிந்தா காண்டம் 12)

சுக்ரீவன் சொல்லுகிறார், பயத்தில் நான் உங்களைக் கூட விரோதி என்று நினைத்து அஞ்சினேன். அப்போது புத்திசாலியான ஹனுமான் தான் ஆறுதல் அளித்தார். எப்படி என்றால், கறுத்து திரண்டு வரும் மேகத்தை காட்டுத் தீயின் புகை என்று எண்ணி அஞ்சி நடுங்கும் மயிலுக்கு, அந்த மேகம் நெருங்குவதற்கு முன்னால், மழையின் அறிகுறியாக குளிர்ந்த காற்று வீசி எப்படி அந்த மயிலை ஆனந்தப் படுத்துமோ அப்படி இருந்தது ஹனுமானின் செயல் என்று கூறுகிறார். ஹனுமானும் வாயுவின் சம்பந்தம் உள்ளவர். மாருத என்ற சொல் இங்கே ஆழ்ந்த பொருள் உள்ளதாக ஆகிறது.

சுந்தர காண்டம்

ராம லட்சுமணர்கள் சுக்ரீவனை சந்தித்து, வாலி வதம் முடிந்து, அனுமான் இலங்கைக்கு சீதையைத் தேடியபடி வருகிறார். ராவணனின் அரண்மனை, நகரம் முழுவதும் அனுமான் தேடத் துவங்கும் போது, இரவு நேரம். அந்நேரத்தில் ஒரு காட்சி வருணனை:

आदित्य: कृतकृत्य एष भविता सीतापतेरीदृशं
साहाय्यं विरचय्य कीर्तिमतुलामादित्सुना सूनुना |
इत्यालोच्य तदा किल स्वयमपि ख्यातिं ग्रहीतुं परां
लङ्कायां रघुनाथदूतसरणौ चन्द्रेण दीपायितम् || (सुन्दरकाण्डम् १४)

ஆதி³த்ய: க்ருʼதக்ருʼத்ய ஏஷ ப⁴விதா ஸீதாபதேரீத்³ருʼஶம்ʼ
ஸாஹாய்யம்ʼ விரசய்ய கீர்திமதுலாமாதி³த்ஸுனா ஸூனுனா |
இத்யாலோச்ய ததா³ கில ஸ்வயமபி க்²யாதிம்ʼ க்³ரஹீதும்ʼ பராம்ʼ
லங்காயாம்ʼ ரகு⁴னாத²தூ³தஸரணௌ சந்த்³ரேண தீ³பாயிதம் ||
(ஸுந்த³ரகாண்ட³ம் 14)

சூரியனின் அம்சம் சுக்ரீவன் என்று கருதப் படுகிறது. ராமனுக்கு தன் பிள்ளை சுக்ரீவனைக் கொண்டு உதவி செய்து சூரியன் புகழடைந்தான். இதை ஆலோசித்து, தானே ராமனுக்கு உதவி செய்யும் காரியத்தில் இறங்கி, ராம தூதனான அனுமன் செல்லும் இடமெல்லாம் தன் ஒளிக்கிரணங்களை நிறைத்து வழிகாட்டினான் சந்திரன் என்று கவித்துவமாக குறிப்பிடுகிறார்.

பல இடங்களில் சுற்றித் தேடிவிட்டு அசோக வனத்துக்கு வந்து சீதையைச் சந்திக்கிறார். சீதையைத் தானே தூக்கிச் சென்று ராமனிடம் சேர்த்து விடுகிறேன் என்று அவர் கேட்கும்போது சீதை பலவாறும் நன்றியுடன் மறுத்து பின்னர் தன் தலையில் அணிந்திருந்த சூடாமணியை ராமனிடம் அடையாளமாகக் கொடுக்கச் சொல்லிக் கொடுக்கிறாள்.

चूडामणिं कपिवरस्य ददौ दशास्य
संत्रासपुञ्जितरुषाग्निदशं कृशाङ्गी |
आदाय तंप्रणतिपूर्वमासौ प्रतस्थे
माणिक्यगर्भवदनोरगतुल्यबाहु: || (सुन्दरकाण्ड ३६)

சூடா³மணிம்ʼ கபிவரஸ்ய த³தௌ³ த³ஶாஸ்ய
ஸந்த்ராஸபுஞ்ஜிதருஷாக்³னித³ஶம்ʼ க்ருʼஶாங்கீ³ |
ஆதா³ய தம்ப்ரணதிபூர்வமாஸௌ ப்ரதஸ்தே²
மாணிக்யக³ர்ப⁴வத³னோரக³துல்யபா³ஹு: || (சுந்தரகாண்டம் 36)

இளைத்த உடலுடன் வலிமை குன்றி இருந்த சீதை, அனுமனிடம் தன் தலையில் அணிந்திருந்த சூடாமணியைக் கொடுத்தாள். அது அவளுக்கு ராவணன் மீது இருந்த கோபத்தீயைப் போல ஒளிர்ந்தது. அதைக் கையில் வாங்கிய அனுமனின் கைகள், ரத்தினம் தாங்கிய நாகப் பாம்பு போல இருந்தது.

அனுமன் திரும்பி வந்து, தன்னுடன் வந்த வானர சேனையுடன் இணைந்து ராமனை சந்தித்து சீதையச் சந்தித்த விவரத்தைச் சொல்லுகிறார்.

अक्लेशसंभूतगतागताभ्यां वितीर्णविस्तीर्ण महार्णवोऽपि |
आनन्दसिन्दौ पृतनासमक्षमक्षस्य हन्ता नितरां ममज्ज || (सुन्दरकाण्डम् ७२)

அக்லேஶஸம்பூ⁴தக³தாக³தாப்⁴யாம்ʼ
விதீர்ணவிஸ்தீர்ண மஹார்ணவோ(அ)பி |
ஆனந்த³ஸிந்தௌ³ ப்ருʼதனாஸமக்ஷமக்ஷஸ்ய
ஹந்தா நிதராம்ʼ மமஜ்ஜ || (சுந்தரகாண்டம் 72)

ஒரு துன்பமும் இல்லாமல் சுலபமாக பெருங்கடலை இருமுறை தாண்டி வந்த அனுமன், இங்கே வானர சேனை ராமலட்சுமணர்கள் மத்தியில் அவர்களின் ஆனந்தக் கடலில் மூழ்கிவிட்டார். அரக்கர்களிடம் போரிட்டது, ராவணனைச் சந்தித்து எச்சரித்தது, சீதையைச் சந்தித்து பேசி தைரியம் சொல்லி, அவள் தந்த சூடாமணியைப் பெற்று வந்தது என்று பல சாதனைகள் செய்து எல்லோருடைய ஆனந்தத்துக்கும் அபிமானத்திற்கும் பாத்திரமான அனுமன் பேச்சின்றி அவர்கள் அன்பிலும் அங்கீகாரத்திலும் மூழ்கினார் என்று கவி அழகாக வெளிப்படுத்துகிறார்.

யுத்த காண்டத்தில் சில கவிதைகள்

சுந்தரகாண்டத்துடன் போஜ ராஜன் எழுதிய சம்புராமாயணம் நின்று விடுகிறது. அந்த சமயம் ஏற்பட்ட போரில் போஜராஜன் வீரமரணமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் லக்ஷ்மண சூரி என்னும் கவி போஜனின் கவிதை அமைப்பிலேயே யுத்த காண்டத்தையும் எழுதி முழுமை செய்துள்ளார்.

भोजेन तेन रचितामपि पूरयिष्यन्
अल्पीयसापि वचसा कृतिमत्युदराम् |
न व्रीडितोऽहमधुना नवरत्नहार-
सङ्गेन किन्न हृदि धार्यत एव तन्तु: || (युद्धकाण्डम् – २)

போ⁴ஜேன தேன ரசிதாமபி பூரயிஷ்யன்
அல்பீயஸாபி வசஸா க்ருʼதிமத்யுத³ராம் |
ந வ்ரீடி³தோ(அ)ஹமது⁴னா நவரத்னஹார-
ஸங்கே³ன கின்ன ஹ்ருʼதி³ தா⁴ர்யத ஏவ தந்து: || (யுத்த காண்டம் – 2)

ஆரம்பத்தில் பால காண்டத்தில் வால்மீகி முனிவருக்கு போஜன் வணங்கி தன எளிமையை வெளிப்படுத்தியது போலவே இங்கு, லக்ஷ்மண சூரியும் போஜகவியின் மீது தன் மரியாதையை வெளிப்படுத்துகிறார். போஜராஜனால் இயற்றப் பட்ட சம்பு ராமாயணத்தை பூர்த்தி செய்யப் புகுவதில் எனக்கு வெட்கம் எதுவும் இல்லை. ஏனெனில் நவரத்தின மாலையை நெஞ்சில் தவழ விட, அதற்கு ஒரு நூல் தேவைப் படுகிறது தானே என்று கூறுகிறார். ஆனால் யுத்த காண்டத்தின் கவிதைகளும் போஜராஜனின் கவிதையின் தரத்துக்கு சற்றும் குறைவில்லாதவை.

சம்பு இராமாயணம் முழுவதுமே கவித்துவமும், சுவையும் மிகுந்த ஒரு படைப்பு. இங்கே ஒரு சில கவிதைகளை மட்டுமே பார்த்தோம். சம்ஸ்க்ருத மொழியை கற்க விரும்போவோருக்கும், பக்தியுடன் படிக்க எண்ணுவோருக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும், ஆழ்ந்த பொருளை அறிந்து ரசிக்கக் கூடிய வேத சாத்திர விற்பன்னர்களுக்கும் கூட சம்பு ராமாயணம் அள்ள அள்ள குறையாமல் வழங்கும் பொக்கிஷமாகவே இருக்கும்.

———————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராகவ யாத வீயம்–ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மஹா பாரதம் மகிமைகள் –

February 24, 2023

வைணவன் என்ற சொல்லிற்கு அர்த்தம் ஐந்து குறள் பாக்களில் சொல்லப் படுகிறது )
1. தைவத்துள் தைவம் பர தெய்வம் நாராயணனையே தெய்வம் எனப் போற்றுபவன் வைணவன்
2. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலே பேணுபவனே எல்லோரிலும் சாலச் சிறந்த வைணவன் .
3. உடுக்கை இழந்தவன் கை போல் மற்றவர்களின் இடுக்கண் களைபவனே வைணவன் .
4. மது, புலால் நீக்கி ஸாத்விக உணவினைத் தவிர வேறு எதுவும் விரும்பாதவன் வைணவன் .
5. தெய்வத்திலும் மேலானவன் நம் ஆச்சார்யரே என்று மெய்யாக வாழ்பவனே வைணவன் .

————-

இன்றைய ஆய்வறிஞர்கள் வேதம், ஸூக்தம், ஸாஸ்த்ரம் முதலிய நூல்களை நன்கு ஆய்ந்து, விஸ்வ கர்ம குலம் ப்ருகு குலம் என தெளிந்துள்ளனர். வாயு புராணத்தின் நான்காவது அத்தியாயத்தில், இந்த நெடிய பரம்பரை சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

த்ரிஷிரா விஸ்வரூபஸ்து த்வஸ்டு: புத்ராவ பவதாம்|
விஷ்வரூபானுஜஸ்சாபி விஸ்வகர்மா ப்ரஜாபதி:||

விஸ்வகர்ம மஹத்பூதம் விஷ்வகர்மானாம் மதங்கேஷூ ச ஸம்பூதா|
புத்ரா பஞ்ச ஜடாதரா:ஹஸ்ய கெளசல ஸம்பஔர்ணா பஞ்ச பிரண்மரதா ஸதா||

இவ்வழியிலான மரபுப்படம் தரப்பட்டுள்ளது:

தரன், துருவன், சோமன், அஹன், அனிலன், அனலன், ப்ரத்யுஸன், பிரபாசன் ஆகியோரே அஷ்ட வசுக்கள் ஆவர். இவர்கள் பிரஜாபதியின் புத்திரர்கள் ஆவார்கள்.

பஞ்ச கர்ம குலங்களின் வம்சாவளி:

1) மனு :

விஸ்வகர்மாவின் தலைமகன். அங்கீரஸ் என்ற முனிவரின் மகளாகிய காஞ்சனையை மணந்தவர். மனித குலத்தின் சிருஷ்டிகர்த்தா. பிற்காலத்தில் மனுவின் பெயரினால் அறியப்பட்ட அரசன் நீதிபரி பாலனையில் தன்னிகரில்லாது திகழ்ந்ததனால் நீதிக்கே இலக்கணம் வகுத்து, மனுநீதி என்னும் பெரும் நூலை சிருஷ்டித்தார்.

2) மயன் :

விஸ்வகர்மாவின் இரண்டாம் மகன் இந்திரஜால சிருஷ்டி கர்த்தா என்று புகழப்படுபவர். பராசர முனிவரின் மகளாகிய சுசனை இவரது மனைவி.

3) த்வஷ்டா:

விஸ்வகர்மாவின் மூன்றாவது மகன். கெளசிக மஹரிஷியின் மகளான ‘ஜெயந்தி’யை மணந்தார்.

4) சில்பி :         ப்ருஹூ முனிவரின் புத்ரி கருணாவை மணந்தவர்.

5) தைவக்ஞர் (அ) விஷ்வக்ஞர் :

ஜைமினி முனிவரின் மகளான சந்திரிகா இவரது மனைவி. இவரது வழித்தோன்றலான ஸூபர்ண ரிஷி, விநதையின் மகனான கருடனுக்கு பொன்னொளியை வழங்கி, ஸ்ரீமந் மஹாவிஷ்ணுவின் வாஹனமாகும்படி அனுக்ரஹம் செய்தார். கருடன் அங்கிரஸ குலத்தில் உதித்த கன்வ முனிவரின் மகனாவார்.

இந்துமதத்திற்கு அடிப்படையாகவும், ஆதாரமாகவும் கொள்ளப்படும் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களில் விஸ்வகர்மாவினைப் பற்றி ஏராளமான விஷயங்கள், சுலோகங்கள் காணப்படுகின்றன. இவற்றிலெல்லாம் விஸ்வகர்மா முழுமுதற் பிரம்மனாகவும், அனைத்துலகத்தையும் வடிவமைத்த சிறந்த கலைஞனாகவும், வித்தையின் (கல்வி) வடிவமாகவும், அனைத்துத் திறன்களிலும் நிபுணனாகவும், கலைகளின் தலைவனாகவும், எல்லா இடங்களிலும் நிறைந்தவராகவும், சிறந்த கலைஞர்களின் மனத்திலும், அவர்கள் உருவாக்கும் கலைப்பொருட்களில் வாஸம் செய்பவராகவும், யாரையும்-எவற்றையும் சாராது விளங்கும் தனிப்பெரும் பொருளாகவும், பூர்ணத்வமுடையவராகவும், ஸூர்ய ஒளி பொருந்தியவராகவும், ஸத்வ குணமுடைவராகவும் இன்னும் பலப்பல புகழொலிகளால் அலங்கரித்துப் போற்றப்படுகிறார். எப்போது ஆதியில் நீரும், நெருப்பும், காலநிலையும், அறிவும் (ஞானமும்), மணமும், உணர்வும், ப்ரம்மனும், விஷ்ணுவும், ருத்ரனும் இல்லையோ, வெற்றிடம் மட்டுமே இருந்தபோது தானே தோன்றியவர் விஸ்வகர்மா என்றும் விஸ்வகர்மா தோன்றிய விதத்தை வேதம் விவரிக்கின்றது.

கோத்திரங்கள்பஞ்ச கம்ஸலர்கள் எனவும் கம்மாளர்கள் எனவும் விஸ்வகர்ம பெருமக்கள் எனவும் அழைக்கப்படுகின்ற குலத்தினருக்கு ஐந்துவித கோத்திரங்கள் (பூர்வீக ரிஷிகள்) உள்ளன. இன்று பலருக்கும் தங்களின் கோத்திரம் தெரியாது. தங்கள் செய்யும் தொழிலைப்பொருத்து தங்கள் கோத்திரத்தை அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

1) மனுவின் வழித்தோன்றல்கள் (இரும்பு தொடர்பான வேலையில் ஈடுபடும் கலைஞர்கள்) – சானக ரிஷி கோத்திரம் – ரிக் வேதம்

2) மயன் வழித்தோன்றல்கள் (மர வேலைக் கலைஞர்கள்) – ஸநாதன ரிஷி கோத்திரம் – சாம வேதம்

3) த்வஷ்டா வழித்தோன்றல்கள் – (உலோகத்தில் தேர்ந்த கலைஞர்களுக்கு) – அபுவனஸ ரிஷி கோத்திரம் – யஜூர் வேதம்

4) சில்பி வழித்தோன்றல்கள் (கல்லில் கலைவண்ணம் காண்போருக்கு) – ப்ரத்னஸ ரிஷி கோத்திரம் – அதர்வ வேதம்

5) விஷ்வக்ஞர் வழித்தோன்றல்கள் – (பொன்னில் எண்ணத்தைப் பொறிப்போருக்கு) – ஸூபர்ணஸ ரிஷி கோத்திரம் – ப்ரணவ வேதம்

வாஸ்த்து சாஸ்திரம் (கலை) தொடர்பான விதிமுறைகளையும், அக்கலையினது நுணுக்கங்களையும் சாக்ஷாத் சிவபெருமானே பராசர ரிஷிக்கு உபேதசம் செய்தருளினார். பராசரர் ப்ருஹத்ரதனுக்கும், ப்ருஹத்ரதன் தேவசில்பியான விஸ்வகர்மாவிற்கும் உபதேசம் செய்தனர். விஸ்வகர்ம பரப்ரஹ்மனே இன்றளவும் இக்கலையை காத்து, வளர்த்து வருவதாய் ஐதிஹம்.

ஆர்ஷபாரத கலாச்சாரத்துடன் தொடர்புடையவர்கள் விஸ்வகர்மாக்கள். இவர்களே முன்பு சிந்து நதி தீரத்தில் மொஹஞ்சதாரோ, ஹரப்பன் நகரங்களை நிர்மாணித்து, வாழ்ந்து சிந்துச் சமவெளி எனும் சீரிய நாகரிகத்தை உருவாக்கினார்கள். சிந்துச்சமவெளி நாகரிகமே பின்னாட்களில் மருவி இந்து என்னும் மதமாகியது.

வாயுபுராணத்தின் நான்காம் அத்யாயம், மத்ஸ்ய புராணத்தின் 252ஆம் அத்யாயம், மஹாபாரதம் அனுசாஷன பர்வம் 85ஆம் அத்யாயம் முதலியவற்றில் ஸ்ரீ விராட் விஸ்வகர்ம வம்சாவளியின் குலங்கள் விளக்கப்பெற்றுள்ளன.இரும்பு, மரம், கல், உலோகம், தங்கம் முதலிய பொருட்களைக் கொண்டு படைக்கும் தொழிலைச் செய்யும் கைவினைஞர்கள் “விஸ்வகர்மா” என பொதுப்பெயர் கொண்டுள்ளனர். உலகம் முழுவதிலும் இக்குலத்தோர் பரவி இருந்தாலும் ஆசியா கண்டத்தில் இவர்களின் பரவல் அதிகம் என புள்ளி – விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் வாழும் விஸ்வகர்மாக்கள் குறித்து அறிவோம்.

1) தமிழகம் :

தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் விஸ்வகர்மாக்கள் வாழ்கின்றார்கள், தச்சர், பொற்கொல்லர், ஆச்சாரி, விஸ்வபிராமணர், சில்பி, கன்னார், தட்டார், கம்மாளர் என பலவகையாக அழைக்கப்படுகின்றனர், பெரும்பான்மையோர் தமிழும், சிலர் தெலுங்கையும் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.

2) ஆந்திர மாநிலம் :

விஸ்வபிராமணர்கள் என்றும், கம்ஸலர்கள் என்றும் ஆந்திராவில் பொதுவாய் அழைக்கப்படும் இவர்கள் கம்சாலி, முசாரி, வத்ராங்கி, காசி, சில்பி என உட்பிரிவுகள் பலவற்றைக் கொண்டுள்ளனர்.

3) கேரளம் :

கேரள தேசத்தில் ஆச்சாரிகள் எனவும், விஸ்வ பிராமணர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

4)கர்நாடகம்:

கர்நாடக மாநிலத்தில் விஸ்வகர்மா என பொதுப் பெயரினையும், குசாலர், சிவாச்சார், சத்தராதி என உட்பிரிவுகளையும் கொண்ட இவர்களின் சிலர் அசைவ உணவு வகைகளை உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். வட கர்நாடகத்தில் உள்ளவர்கள் சிலர் ‘லிங்காயத்’ என்னும் வழிபாட்டு முறையைப் பின்பற்றி வருகிறார்கள்.

5) கோவா:

கோவாவில் விஸ்வகர்மாக்கள் ‘சாரி’கள் என அழைக்கப்படுகிறார்கள், மனு மய பிராமணர்கள் எனவும் இவர்கள் அறியப்படுகிறார்கள், போர்ச்சுகீசியர்களின் காலத்தில் இவ்வினத்தினர் சிலர் கிறிஸ்தவ மதத்தினைத் தழுவியுள்ளனர்.

6) ராஜஸ்தான்:

ராஜஸ்தானத்தில் ஜங்கித் பிராமணர்கள் என அழைக்கப்படும் இவர்கள் இன்றளவும் இறைவனின் உருவங்களையும் ரதங்களையும் வடிவமைத்துப் புகழ் சேர்க்கிறார்கள்.பெரும்பாலும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வாழும் இவர்கள் உயர் பொருளாதார நிலை முதல் மிகவும் ஏழ்மையான நிலைவரை தங்களது வாழ்க்கை நிலையைக் கொண்டுள்ளார்கள். பொதுவாக இந்திய சமூகத்தில் இவர்கள் குறிப்பிடக்கூடிய சமுதாய-பொருளாதார நிலையினை பெற்றுள்ளனர்.

சமூக-பொருளாதார நிலைகளில் உயர்ந்தும் தாழ்ந்தும் விளங்கும் இவர்கள் கிராமப்புற பொருளாதாரத்தில் சிறப்பான பங்கினை வகிக்கின்றனர். தற்போது தொழிற்புரட்சி மற்றும் தானியங்கி இயந்திரப்புரட்சி ஆகியவற்றின் ஆதிக்கத்தினால் வேலைவாய்ப்பை இழக்கும் இவர்கள் தங்களது குலத்தொழில்களை விடுத்து மற்ற வேலைகளுக்கும் செல்கின்றனர்.

எழுத்தாளர் ஆனந்த் கே.குமாரசாமி ஹிந்து மற்றும் புத்தமதத்தினரின் தொன்மங்கள் (ஆங்கிலம்) என்ற தனது புத்தகத்தில் கம்மாளர்கள் விஸ்வபிராமணர்கள் எனவும், வேதகம்மாளர்கள் எனவும் அறியப்படுகிறார்கள். அவர்கள் தெற்கு நோக்கிப் புலம் பெயர்ந்து, சிலோன், பர்மா, ஜாவா தீவுகள் போன்ற இடங்களில் வாழ்கிறார்கள். ஆன்மீகத்திலும், கல்வியிலும் தங்களை முன்னோடிகளாகக் கருதுகிறார்கள். இவர்கள் தங்களின் சடங்குகளைத் தாங்களே நடத்துகிறார்கள். பிராமர்களைச் சார்ந்து நிற்பதில்லை. என்று பதிவு செய்து இருக்கிறார்.

டாக்டர் கிருஷ்ணராவ் தனது நூலில், உயர்ந்த தொழில் நிலையையும், சமூக அந்தஸ்தையும் பெற்றவர்களாக இரும்பு வேலை, மரவேலை செய்வோரும், கைவினைஞர்களும் இருந்தனர். எட்டு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இவர்கள் மிகச் சிறப்பானதொரு சமூக-பொருளாதார நிலையைப் பெற்றிருந்தனர். பவித்ரமான பூநூல் அணிந்தும், தங்களை விஸ்வகர்ம பிராமணர்கள் என பிரகடனப்படுத்தியும் வாழ்ந்தனர். இவர்களின் புகழும் பெருமையும் வளர மிக முக்கிய காரணம், இவர்கள் தங்களது கலைத் திறமைகளின் மூலம் இந்தியப் பண்பாட்டினை, குறிப்பாக இந்து மத கலாச்சாரத்தை உலகினுக்கு உணர்த்தி, உணர்த்தியதுதான் என்று ஆய்ந்து கூறியிருக்கிறார்.

மறைக்கப்பட்ட வரலாறு:

சமுதாயத்திற்கான பெரும்பாலானத் தேவைகளை நிறைவேற்றியும், சமுதாயத்திற்குக் குருமார்களாய் இருந்து வழிகாட்டியும் வந்த விஸ்வகர்ம இனம் பேஷ்வாக்கள் ஆட்சிக்காலத்தில் ஒரு மிகப்பெரும் கொடுமைக்கு ஆளானது. இந்த வரலாறு பெரும்பாலும் ஆய்வறிஞர்கள் கூட அறியாதது. வரலாற்றின் ஆழ்ந்த ஏடுகளித் தேடிப்பார்த்தால் கிடைக்கும் இந்த அவலத்தின் சில துளிகள் இதோ…

பாஞ்சாலர்கள் என அழைக்கப்பட்ட விஸ்வகர்ம இனத்தவர்களின் சமூக முக்கியத்துவத்தையும், அபார வளர்ச்சியையும் கண்ட பிராமணர்கள் இவர்களை சமுதாயத்தினின்றும் ஒதுக்க ஆவல் கொண்டவர்களாய், பொறாமை மேலிட, இவர்கள் விஸ்வகர்மாக்கள். பிராமணத் தகுதியுடையவர்கள் அல்ல என்று கூறி பிராமணர்களாக ஏற்க மறுத்தனர்.இதனால் பிராமண-விஸ்வபிராமணர்களிடையே பல காலங்களாக விரோத மனப்பான்மை இருந்து வந்தது.

பேஷ்வாக்கள் எனப்படும் ஒரு இனத்தவர் மன்னர்களாக அரசாண்ட காலத்தில், விஸ்வகர்மாக்கள் பல வகையிலும் கொடுமைப்படுத்தப்பட்டனர். ஏனெனில், பேஷ்வாக்கள் பிராமண சமுதாயத்தைத் தழுவியவர்கள். இவர்கள் பாஞ்சாலர்களை இடுப்பில் வேட்டி கட்ட அனுமதிக்க வில்லை. வேறுசில காலத்தில் பஞ்ச கச்சம் போன்ற ஆடைகளை (பிராமணர்களுக்கு உரியது) அணிய தடை செய்தனர். சிகையை பாரம்பரிய வழக்கப்படி (மரபுப்படி) வளர்க்கவோ, கட்டவோ அனுமதிக்கவில்லை. இன்னும் நாம் அறியாத பல கொடுமைகளும் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

வேதகால நாகரிகத்தின் தோற்றுவாய்களாய் திகழ்ந்த இனம் ஒடுக்கப்பட்ட இந்த வரலாறு இன்று பெரும்பாலும் தேய்ந்து, மறைந்து வெளியில் தெரியாமல் போய்விட்டது.

——————

ராமாயண, மஹாபாரதம்
ஹிந்து தர்மத்தின் அற்புதமான இதிஹாஸங்களாக இலங்குபவை ராமாயணமும் மஹாபாரதமும். வேதத்தின் சுருக்கமே ராமாயணம் என்றும் ஐந்தாவது வேதம் தான் மஹாபாரதம் என்றும் தொன்று தொட்டு இந்த நாட்டில் போற்றப்பட்டு வருகிறது.உலகில் முதல் முதல் எழுந்த காவியம் என்பதால் ஆதி காவியம் என ராமாயணம் கருதப்படுகிறது. 644 ஸர்க்கங்களில் 24000 சுலோகங்களில் ஏழு காண்டங்களில் தர்மத்தின் திரு உருவான ராமனின் கதையை சம்ஸ்கிருதத்தில் மஹரிஷி வால்மீகி தருகிறார்.

18 பர்வங்களில் (100 உப பர்வங்களில்) ஒரு லட்சம் சுலோகங்களில் 2314 அத்தியாயங்களில் மஹரிஷி வேத வியாஸரால் மஹா பாரதம் இயற்றப்பட்டுள்ளது.

காலம் காலமாக இந்த இரு இதிஹாஸங்களும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஏராளமானோரை பல்லாயிரக்கணக்கில் கட்டுரைகள், நூல்கள் மற்றும் காவியங்களை வெவ்வேறு மொழிகளில் இயற்ற ஊக்குவித்திருப்பதை உலகமே அறியும்.

———————-

தைவக்ஞர் சூரிய கவி-கவி வேங்கடாத்வரி -ஸ்ரீ ராம யாத வீயம் -ஸ்ரீ ராம கிருஷ்ண விலோம காவ்யம்
ஆனால் பாரதத்தைச் சேர்ந்த மூன்று அதிசயக் கவிஞர்கள் இந்த இரு இதிஹாஸங்களை வைத்து ஒரு அற்புதமான அதிசயமான செயலை சம்ஸ்கிருத மொழியில் சாதித்துள்ளனர்.
தைவக்ஞர் சூரிய கவி என்பவர் பெரும் சம்ஸ்கிருத விற்பன்னர், கவிஞர்! அவர் 36 ஸ்லோகங்கள் அடங்கிய ராமகிருஷ்ண விலோம காவ்யம் என்று ஒரு காவியத்தை இயற்றியுள்ளார். இதில் ஸ்லோகத்தை முதலிலிருந்து படித்துக் கொண்டு போனால் ராமாயணக் கதையைக் காணலாம். ஸ்லோகத்தின் பின்னாலிலிருந்து திருப்பிப் படித்துக் கொண்டு போனால் வருவது இன்னொரு ஸ்லோகம். அதில் மஹாபாரதக் கதையைக் காணலாம். விகடகவி, தேருவருதே போன்ற சொற்களில் வரும் எழுத்துக்களைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டாலும் அதே சொற்கள் வருவது ஒரு சொல் அலங்காரம். இதை ஆங்கிலத்தில் Palindrome என்கிறோம்.

ஒரு ஸ்லோகம் அல்ல, பல ஸ்லோகங்கள் அடங்கிய ஒரு காவியமே இப்படி அமைக்கப்பட்டுள்ளது என்றால்..! வியக்க வைக்கும் இந்தக் காவியத்திலிருந்து உதாரணத்திற்கு இரு பாடல்களை இங்கு காணலாம்.

கௌசிகே த்ரிதபஸி ஷ்ரவ்ரதி யோத்ததாத் த்விதநயஸ்வமாதுரம் I
ரந்துமாஸ்வயன தத்தித்தாதயோ தீவ்ர ரக்ஷஸி பதத்ரிகேஷிகௌ II -ஆறாவது ஸ்லோகம்

இதன் பொருள் : எல்லா உயிரினங்களின் ஆசைகளை நிறைவேற்ற உறுதி பூண்ட தசரத மன்னர், (மனோ வாக்கு காயம் ஆகிய )மூன்று விதத்திலும் தவம் செய்த ரிஷி விஸ்வாமித்திரருக்குத் தன் செல்வங்களான ராமர், லக்ஷ்மணரைத் தந்தார்.

இதே ஸ்லோகத்தை திருப்பிப் போட்டுப் படித்தால் பொருள் மாறி விடும் இப்படி:- புண்ணியச் செயல்களைச் செய்த ஓ, பரீட்சித்து மன்னனே, ராக்ஷஸ குணத்தில் வேறு யாரையும் ஒப்பிடமுடியாத பூதனையையும் பறவையின் உருவில் இருந்த பகனையும் குதிரையின் உருவில் இருந்த கேசினையும் விளையாட்டு லீலையாக எல்லையற்ற ஞானம் உடைய ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் உடலிலிருந்து (உயிரை நீக்கி) முக்தி அளித்தார்.

ராம மாநா ஸதா கேத பாவே தயா வான்
அதாபி இந தேஜா ரிபவ் அநதே
காதி மோதா சஹாதா ஸ்வ பாஸா
ரஸாமே ஸூக ரேணுகா த்ரஜே பூருமே –7-

இடர் உற்றவருக்கு அருளும் காருண்ய சீலன்
கரு ஞாயிறு போன்றவன் இந்தேஜோ -ஸூர்யன் போல் பிரகாசிக்ப்பவன்
ஆனாலும் அருகில் செல்ல ஸுலப்யன் உடையவன்
அப்படிப்பட்ட ராமன் பூமி முழுவதும் சுற்றி அதைச் செல்வமாக யுடைய
ரேணுகையான புதல்வனான பரசுராமன் விரோதத்துடன் தோன்றி
பின் அவனைப் பணிந்ததும் ஸ்ரீ ராமசந்திரன் கருணையுடன் திகழ்ந்தான்

கதம் மிகுந்து இரைத்துப் பொங்கும் கனை கடல் உலகம் எல்லாம்
புதைவு செய் இருளின் பொங்கும் அரக்கர் தம் புரமும் பொற்பும்
சிதைவு செய் குறியைக் காட்டி வட திசைச் சிகரக் குன்றின்
உதயம் அது ஒழித்துத் தோன்றும் ஒரு கரு ஞாயிறு ஓத்தான் -கம்பர் –

கட்டார் சிலைக் கரு ஞாயிறு புரைவான்
கண் தாமரை போல் கரு ஞாயிறு என
செந் தண் கமலக்கண் சிவந்த வாய் ஒரு கரு ஞாயிறு
அந்த மில்லாக் கதிர் பரப்பி வளர்ந்தது ஒக்கும் அம்மானே -திருவாய் -8-5-7-

‘பூதலத்து அரசை எல்லாம் பொன்றுவித்தனை; என்றாலும்,
வேத வித்து ஆய மேலோன் மைந்தன் நீ, விரதம் பூண்டாய்,
ஆதலின் கொல்லல் ஆகாது; அம்பு இது பிழைப்பது அன்றால்;
யாது இதற்கு இலக்கம் ஆவது? இயம்புதி விரைவின்!’ என்றான்.–பரசுராம படலம் 36-

‘எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக!
மண்ணிய மணி நிற வண்ண! வண் துழாய்க்
கண்ணிய! யாவர்க்கும் களைகண் ஆகிய
புண்ணிய! விடை’ எனத் தொழுது போயினான். 40-

மேரு பூ ஜேத் ரகா காணுரே கோ ஸூமே ஸா அரஸா
பாஸ்வதா ஹா ஸதா மோதிகா
தேந வா பாரிஜாதே ந பீதா நவா யாதவே அபாத் அகேதோ
ஸமாநாமரா —ஸ்லோகம் 7 -ப்ரதிலோமம்

எப்படி ரைவதக பர்வதமானது கிருஷ்ணனின் இருப்பாள் மேருவை விஞ்சியதோ
அதே போல் பாரிஜாத மலரை அடைந்த உடன் ருக்மிணி பிராட்டி சிறிதே மணம் நிறைந்த பூ லோகத்து மலர்களை எல்லாம் அறவே விட்டாள்
அத்தைச் சூடிய பின் அவள் அம் மலரைப் போலவே வெண்மை நிறம் வீசக்கூடிய திவ்ய மேனி பெற்று
தேவ லோக மங்கையரைப் போல் கவலை அற்று மகிழ்ச்சியுடன் விளங்கினாள்
ரைவதக பர்வம் த்வாராகை ஒட்டி இருக்கும் மலை-கிர் நார் இப்பொழுது உள்ள பெயர் -ஹரி வம்சம்

————-

ஸாரஸ அஸம தாத அஷி பூம்நா தாம அசவ் ஸீதயா
ஸாது அசவ் இஹ ரேம ஷேமே அரம் ஆஸூர ஸாரஹா –ஸ்லோகம் -8-

இவையா பில வாய் திறந்து எரி கான்ற
இவையா எரி வட்டக் கண்கள் -இவையா
எரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு -திருமழிசைப் பிரான் பாசுரம் போலவே இங்கு கவி வேங்கடாத்ரி அருளிச் செய்கிறார்

ஹார ஸார ஸூமா ரம்யா ஷேமேர இஹ விஸாத் வஸா
யா அதஸீ ஸூ மதாம் நா பூஷிதா தாம ஸ ஸார ஸா –ஸ்லோகம் -8-ப்ரதி லோமம் 

அழகிய முத்தினாலான மாலையைப் போல் ஒளிர்ந்ததும்
செல்வத்துக்கு எல்லாம் அணி கலனாய் திகழ்ந்ததுமான
அந்த பாரிஜாத மலரைச் சூடின ருக்மிணி பிராட்டி அதஸி புஷ்ப மாலையை சூடின கண்ணனுடன்
மற்ற மனைவியரைக் கண்டு பயம் அற்றவளாய் அவன் திரு மாளிகைக்கு சென்றாள்

————-

ஸாகஸா பர தாய இபமா பாதா மந்யு மத்தயா
ஸா அத்ர மத்யமா தாபே போதாய அதி கதா ரஸா –ஸ்லோகம் -9- அநு லோபம்

ராஜ்ய லஷ்மியின் வைபவத்தால் பிரகாசிக்கும் அயோத்தியை நகரை கைகேயி யானவள்
ராமனுக்கு முடி சூட்டும் வைபவம் பற்றிக் கேள்விப்பட்ட வுடன் கோபத்தாலும் வருத்தத்தாலும்
உன்மத்த நிலையை அடைந்தவளாய் பரதனுக்காக நிலை நிறுத்தினாள் –

தாவில் மாமணிக்கலம் மற்றும் தனித்தனிச் சிதறி,
நாவி ஓதியை நானிலம் தைவரப் பரப்பிக்
காவி உண்டகண் அஞ்சனம் கன்றிடக் கலுழாப்
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப் புவி மிசைப் புரண்டாள். –கைகேயி சூழ்ச்சிப் படலம் –3-

ஸாரதா கதியா தபோ பேதா யா மத்யம த்ரஸா
யாத்த மந்யு மதா பாமா பயேதா ரபஸா ஆகஸா –ஸ்லோகம் -9-ப்ரதி லோமம்

தன் சீலத்தால் பெரும் புகழை யுடைய யோசித்த இடை யுடையளான -மத்ய மா -ஸத்ய பாமை
கண்ணன் பாரிஜாத மலரை ருக்மிணியிடம் அளித்த செய்தி அறிந்து கோபமும்
கண்ணனின் அன்பு தன்னிடத்தில் குறைந்ததோ என்ற பயமும் அடைந்தாள்

மேல் உள்ள இரண்டு ஸ்லோகங்களும் இரு மனைவியரின் துக்கத்தையும் கோபத்தையும் காட்டுகிறது
கைகேயி -கௌசல்யை
ஸத்ய பாமை -ருக்மிணி பிராட்டி
முன்னுரிமை பறிக்கப் பட்டு தங்களை மத்யமா -secondary -என்று கணவர் எண்ணுகிறார்கள் என்ற நினைவு

————–

தாநவாத் அபகா உமாபா ராமே கானனத ஆஸ ஸா
யா லதா அவ்ருத்த ஸேவாகா கைகேயீ மஹத அஹஹ –ஸ்லோகம் -10- அநு லோமம்

ராமனுக்கு முடி சூட்டப் போகும் விஷயம் அறிந்த கைகேயி துயரத்தால் நலிவுற்று வெளுத்தவளாய்
அறுந்த கொடி போல் தரையிலே விழுந்து தயரதனுக்கு செய்யும் அனைத்து பணிவிடைகளையும் மறந்தவளாய்
முடி சூட்டுதலை எதிர்த்து ரானைக் காட்டுக்கு அனுப்பினாள்

கூன் உருவில் கொடும் தொழுத்தை தன் சொற் கேட்ட கொடியவள் தன் சொற் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகர் –பெருமாள் திரு மொழி

‘ஏய வரங்கள் இரண்டின், ஒன்றினால், என்
சேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது’ எனப் புகன்று, நின்றாள் –
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்.–கைகேயி சூழ்ச்சிப் படலம்– 14-

நாகம் எனும்கொடியாள், தன் நாவின் வந்த
சோக விடம் தொடர, துணுக்கம் எய்தா,
ஆகம் அடங்கலும், வெந்து அழிந்து, அராவின்
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான். 15-

ஹஹ தாஹ மயீ கோகைகா வாஸோத் தா வ்ருதாலயா
ஸா ஸத் ஆந நகா அமேரா பாமா கோபத வா நதா –ஸ்லோகம் -10- ப்ரதி லோமம்

அழகிய முகம் கொண்டவளான பாமா இப்பொழுது கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ போன்ற கோபத்தால்
முகம் எல்லாம் ஜ்வலிக்க கலக்கமுற்ற மனத்தளாகி அழகிய மயில்கள் நடமாடும் தனது வீட்டினுள்
பணிப்பெண்கள் நுழையா வண்ணம் தாள் இட்டாள்

அநு வ்ரதா காம கலா ஸ்வ தீதி நீ விசித்ர சஸ்த்ராஸ்த்ர விஹார வேதி நீ
பஹு ப்ரிய ஸ்யாபி ஹரேர் அதீவ ஸா பபூவ தேவீ பஹு மாந கோசர –யாதவாப்யுதம் -14-72-ஸத்ய பாமா வர்ணனம்

பர்த்தாவின் திரு உள்ளபடி நடப்பவள்=காம சாஸ்திரம் கற்றவள்
அம்பு அஸ்த்ரங்களின் பிரயோகம் அறிந்தவள்
ஆகையால் பல மனைவியர்களிலும் இவளே கண்ணனின் அன்புக்கு பூர்ண பாத்ரமானவள்

கைகேயி யாருடன் பேசாமல் தன்னையே வருத்திக் கொள்ள
ஸத்ய பாமையோ கோபத்தால் பணிப் பெண்களை தவிர்த்தாள்

————————-

இதே காவியத்திலிருந்து இன்னொரு பாடலைப் பார்ப்போம்.
க்ஷதாய மா யத்ர ரகோரிதாயுர் அங்கானுகானன்யதயோயனானி I
நிநாய யோ வன்யனகானுகாரம் யுதாரிகோரத்ரயமாயதாக்ஷ: II– 34வது ஸ்லோகம்

இதன் பொருள் : சுக்ரீவனும் இதர குரங்குகளும் யுத்தகளத்தில் நுழைந்தவுடன் அழியப் போகும் வாழ்வை உடையவனான ராவணனால் ராமருக்கு எந்தக் காயத்தையும் விளைவிக்க முடியவில்லை.
இதையே பின்னாலிலிருந்து படித்தால் வரும் பொருள் இது: நீண்ட கண்களையுடைய ஸ்ரீ கிருஷ்ணர் மலை போன்ற உருவத்தை ஒத்த (அகாசுரன், கேசின், பூதனா ஆகிய) மூன்று பயங்கரமான அசுரர்களை வதம் செய்தான்.

இது போன்ற விலோம காவியத்தின் ஆதிகர்த்தா சூர்யகவியே என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர் பார்த்தபுரத்தில் (அஹ்மத் நகர்) 1580ஆம் ஆண்டு வாக்கில் வாழ்ந்த அற்புதமான கவிஞர். இதற்கு அவரே ஒரு உரையையும் எழுதி இருக்கிறார். அதில் இப்படிப்பட்ட ஒரு காவியம் செய்வது எவ்வளவு கஷ்டமானது என்பதையும் விளக்கியுள்ளார்.

—————-

சிதம்பர கவியின் அற்புத காவியங்கள்
அடுத்து 1600ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் வாழ்ந்த சிதம்பர கவி என்பவர் சப்தார்த்த சிந்தாமணி என்ற நூலை இயற்றியுள்ளார். இதிலும் முதலிலிருந்து படித்தால் ராமாயணமும் பின்னாலிலிருந்து படித்தால் மஹாபாரதக் கதையும் மிளிரும். தஞ்சை சரஸ்வதி மஹாலில் சுவடி வடிவில் உள்ள இந்த அற்புத நூல் இன்னும் அச்சிடப்படவில்லை எனத் தெரிகிறது. ஆனால் இதன் பெருமை உலகெங்கும் பரவி விட்டிருக்கிறது.இவர் இன்னும் ஒரு படி மேலே போய் கதா த்ரயம் என்ற காவியத்தையும் இயற்றி இருக்கிறார். இதில் ஸ்லோகத்தைப் பிரித்துப் படித்துப் பார்த்தால் ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றோடு பாகவதக் கதையையும் படிக்கலாம், ஒரே பாடலில் மூன்று பிரம்மாண்டமான நூல்கள்! அதிசயம், ஆனால் உண்மை! உலகில் இது போல எந்த ஒரு மொழியிலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சாதனையாக இது கருதப்படுகிறது!

கவிஞர் வேங்கடாத்வரி
சிதம்பர கவியை அடுத்து அதிசயமான மூன்றாவது கவிஞராகத் திகழ்பவர் வேங்கடாத்வரி என்பவர். 1650ஆம் ஆண்டு வாக்கில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த மாபெரும் கவிஞர் இவர். இவரது ராகவ யாதவீயம் என்பது 30 ஸ்லோகங்களைக் கொண்ட ஒரு அரிய நூல். ஸ்லோகத்தை நேரடியாகப் படித்தால் ராமாயணக் கதையையும் தலைகீழாகப் படித்தால் மஹாபாரத கதையையும் இதில் படிக்க முடிகிறது.இதில் இரு ஸ்லோகங்களைப் பார்க்கலாம்.

ராமநாமா சதா கேதபாவே தயாவான் அதாபீனதேஜா: ரிபௌ ஆனதே I
காதிமோதாஸஹாதா ஸ்வபாஸா ரஸாமே சுக: ரேணுகாகாத்ரஜே பூருமே II -ஸ்லோகம் 7
அனுலோமமாக அதாவது முதலிலிருந்து கடைசி வரை வரிசைக்கிரம்மாகப் பார்த்தால் இதன் பொருள் : துயரப்படுவோரிடம் எப்போதும் சதா கருணையுடன் திகழும் ராமபிரான், சூரியனைப் போலப் பிரகாசிப்பவரும் சுலபமாக அணுகக்கூடியவரும் முனிவர்களைத் துன்புறுத்திய ராக்ஷஸர்களை அழித்தவருமான அவர் ரேணுகாவின் புத்திரரும் பூமி அனைத்தையும் தனது செல்வமாகக் கொண்டு சுற்றித் திரிந்தவருமான பரசுராமரைப் பார்த்த போது குளிர்ந்த ஒளியுடன் அடக்கமுடன் திகழ்ந்தார்.
இதையே திருப்பிப் போட்டால் வரும் ஸ்லோகம்:

மேருபூஜேத்ரகா காணுரே கோஸுமே சா அரஸா பாஸ்வதா ஹா சதா மோதிகா I
தேன வா பாரிஜாதேன பீதா நவா யாதவே அபாத் அஸ்வேதா சமானாமரா II

பிரதிலோமமாக அதாவது கடைசியிலிருந்து முதல் வரை (மேலே உள்ள ஸ்லோகப்படி பார்த்தால்) இதன் பொருள் : மேருவையும் வெல்லும் ரைவர்த்தக மலையில் இருந்தபோது பாரிஜாத மலரை அடைந்த ருக்மிணி பூமியில் உள்ள குறைந்த வாசனையே உள்ள எந்த புஷ்பங்களின் மீதும் ஆசையின்றிப் போனதோடு ஒரு புதிய மேனியை அடைந்தவள் போலத் திகழ்ந்தாள்.
ஆக அனுலோமமாகவும் பிரதிலோமமாகவும் உள்ள இந்த விலோம காவியத்தின் அனைத்துப் பாடல்களையும் வார்த்தை வார்த்தையாக எடுத்து அர்த்தத்தைக் கூறப் போனால் கவிதையின் அழகும் ஆழமும் நன்கு புரிவதோடு பிரமிப்பும் வியப்பும் வரும்.

இன்னும் ஒரு பாடல்:
தாம் ஸ: கோரமதோஷ்ரீத: விக்ராம் அஸதர: அதத I
வைரம் ஆஸ பலாஹாரா வினாஸா ரவிவம்சகே II – ஸ்லோகம்18

அனுலோமமாக இதன் பொருள்: ராமனின் வலதுகரமாகத் திகழ்ந்த பயமே அறியாத லக்ஷ்மணனால் மூக்கு அறுபட்டவுடன் சூர்ப்பணகை ராமன் மேல் பழி வாங்கத் துடித்தாள்.
இந்த ஸ்லோகத்தை பிரதிலோமமாக கடைசியிலிருந்து தலைகீழாக எழுதிப் பார்த்தால் வருவது இந்த ஸ்லோகம்:-

கேசவம் விரஸானாவி: ஆஹ ஆலாபஸமாரவை: I
ததரோதஸம் அக்ராவித: அஷ்ரித: அமரக: அஸதாம் II

இதன் பொருள்:-மலைகளின் கொட்டமழிப்பவனும், தேவர்களின் தலைவனும், அசுரர்களை அழிப்பவனுமான இந்திரன் தனது சந்தோஷம், பலம், ஒளி ஆகியவற்றை இழந்தான். வானையும் பூமியையும் படைத்த கிருஷ்ணனிடம் சமாதானப்படுத்தும் சொற்களைப் பேசினான்.
காவியம் படிப்போம்; பரப்புவோம்!

(சம்ஸ்கிருத) இலக்கணத்திற்குட்பட்டு பொருள் பொதிந்த சொற்களை இப்படி அமைப்பதென்பது இறை அருளினால் மட்டுமே வரும் என சூரிய கவியே மனம் நெகிழ்ந்து சொல்லியுள்ளார்.
இப்படிப்பட்ட தெய்வீகக் கவிஞர்கள் இந்த நாட்டில் தோன்றி இதிஹாஸ மேன்மையையும் சம்ஸ்கிருத அருமையையும் நிலை நாட்டி இருப்பது சனாதன தர்மத்தின் ஏராளமான அதிசயங்களுள் இன்னும் ஒரு அதிசயமே!

ராமகிருஷ்ண விலோம காவ்யத்தை சம்ஸ்கிருதத்தில் படிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட இணையதளத்தில் http://sanskritdocuments.org/all_pdf/raamakrshhna.pdf என்ற தொடுப்பிலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

ராகவ யாதவீயம் காவியத்திற்கு ஆங்கிலத்தில் விரிவான அழகான உரை ஒன்றை எழுதி இருப்பவர் டாக்டர் சரோஜா ராமானுஜம்.இந்த சம்ஸ்கிருத ஸ்லோகத்திற்கான ஆங்கில விரிவுரை நூலையும் இணையதளத்தில் காணலாம்.

அருமையான காவியங்களை உலகிற்குத் தரும் இணைய தளங்களுக்கும் உரை எழுதிய சம்ஸ்கிருத விற்பன்னர்களுக்கும் நமது நன்றிகளை உரித்தாக்கி இக் காவியங்களின் பெருமையை உலகில் பரப்புவோம்!.ராம கிருஷ்ணரின் அருளுக்குப் பாத்திரராவோம்!!
******************

உலகில் ராமாயணம் போல தொடர்ந்து எழுதப்பட்ட இதிஹாசம் வேறு எதுவும் கிடையாது. சுமார் 3000 ராமாயணங்கள் இருப்பதால் எண்ணிக்கை விஷயத்திலும் இதற்கே முதலிடம்.

சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன் வால்மீகி ராமாயணம் எழுதப்பட்டதாக வெளிநாட்டு ஆராய்ச்சியளர் செப்புவர். ஆனால் இதுதான் ஆதி காவியம், “சோகத்திலிருந்து பிறந்ததே ஸ்லோகம்” என்று இந்துக்கள் பகர்வர். காதல் புரியும் பறவைகளில் ஒன்றை, ஒரு வேடன் அடித்து வீழ்த்த, அதைப் பார்த்த வால்மீகியின் உணர்ச்சி கொந்தளிக்க, அந்த சோகத்தில் உருவானது ஸ்லோகம் (செய்யுள்).

ராஜதரங்கிணி என்ற வரலாற்று நூலில் கல்ஹணர் என்ற புலவர் ஒரு சுவையான விஷயத்தைச் சொல்கிறார். அசோகனுக்குப் பின்னர் காஷ்மீரை ஆண்ட இரண்டாவது தாமோதரன், திவச தினத்தன்று குளிக்கப் போனபோது பசியுடன் இருந்த சில பிராமணர்கள் உணவு படைத்துவிட்டுச் செல்லும்படி கோரினராம். விடஸ்தா நதியில் குளித்த பின்னரே அவ்வாறு செய்வேன் என்று அரசன் சொல்லவும், பிராமணர்கள், விதஸ்தா நதியை அவனுக்கு முன்னால் கொண்டு வந்தனராம். அதனை அவன் மாயத் தோற்றம், உண்மயல்ல என்று சொல்லி நிராகரிக்கவே, பிரமணர்கள் அவனைப் பாம்பாகப் போகும் படி சபித்தனர். அவன் வருந்தவே, ஒரே நாளில் ராமாயணம் முழுவதையும் கேட்டால் இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறலாம் என்று அவர்கள் சாப விமோசனம் கொடுத்தனர். இந்த தாமோதரன் ஹுஸ்கர், ஜுஸ்கர், கனிஷ்கர் முதலிய மன்னர்களுக்கு முன் — 2200 ஆண்டுகளுக்கு முன் —வாழ்ந்தவன்..

2500 ஆண்டுகளுக்கு முன்னரே ராமாயணம் தென் குமரி வரை பரவிவிட்டது. புத்தமத்த ஜாதகக் கதைகளில் தசரத ஜாதகம் முதலியன    இருப்பதும் , சங்கத் தமிழ் நூலான புறநானூற்றில் வால்மீகி சொல்லாத 2 கதைகள் இருப்பதும்,  காதா சபத சதியில் கோதவரி நதிக்கரையில் ஒரு வீட்டில் ராமாயண  ஓவியம் இருப்பதாகப் பாடி இருப்பதும் இதன் பழமைக்கு சான்று பகரும். ஆழ்வார் பாடல்களில் பல புதிய விஷயங்கள் உள்ளன. வால்மீகி என்ற பெயரில் புறநானூற்றுக் கவிஞர், 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளார்!

ராமாயணம் பற்றிய மற்றொரு அதிசயம் சமண ராமாயணம், பௌத்த ராமாயணமென்று எல்லோரும் ராமன் கதை பாடி மகிழ்ந்தனர்.

ராமாயணம் பற்றிய மற்றொரு அதிசயம், நிறைய மொழிகளில் இதை இயற்றி இருப்பதாகும்.தென்கிழக்கு ஆசிய மொழிகளிலும் கூட ராமன் கதை உண்டு.

பல ராமாயணங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆயினும் அது பற்றிய குறிப்புகள் உள. மஹா ராமாயணம் மூன்றரை லட்சம் ஸ்லோகங்கள் உடையது. இப்போதுள்ள இதிஹாசங்களில், நூல்களில் உலகில் மிகப் பெரியது மஹாபாரதம்- அதில்கூட ஒரு லட்சம் ஸ்லோகம்தான்!

நாரதர் எழுதிய சம்வ்ரத ராமாயணம் 24,000, லோமசர் எழுதிய லோமச ராமாயணம் 32,000 ஸ்லோகங்களைக் கொண்டவை. 60, 000 ஸ்லோகங்களுக்கு மேலக உடைய இரண்டு ராமாயணங்கள் இருந்தனவாம்..

சமண ராமாயணம் பிராக்ருத மொழியிலும், பௌத்த ராமாயணங்கள் பாலி மொழியிலும், இந்து ராமாயணங்கள் சம்ஸ்கிருத, தமிழ் மொழிகளிலும் இருந்தன.

ப உ ம சரிய (பதும சரிதம்) என்ற சமண ராமாயண த்தை விமல சூரி என்பவர் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதியதாக ச் சொல்லுவர்– அதில் 118 பருவங்கள் உள்ளன. ராவணனின் 10 தலை, கும்பகர்ணனின் ஆறுமாத தூக்கம் முதலியன பொய் என்று இதன் ஆசிரியர் அப்போதே எழுதியுள்ளார்

பௌத்தர்களின் ஜாதக் கதையான தசரத ஜாதகத்திலும், வால்மீகி ராமாயணத்திலும் ஒரே மாதிரியான பல ஸ்லோகங்கள் இருக்கின்றன. அக்காலத்திலேயே ராமன் கதை பற்றிப் பல பொதுவான விஷயங்கள் உலவி வந்தது இதனால் தெரிகிறது

பழமைக்கு உவமைச்  சான்று

சம்ஸ்கிருதத்தில் உவமைகள் இல்லாத காவியங்கள் குறைவு. வால்மீகி  ராமாயணத்தில் 3462 உவமைகள் இருப்பதாக அந்த உவமைகளைத் தொகுத்தளித்த ஆராய்ச்சியாளர் எம்.எம்.பாடக் கூறுகிறார்.

சீதையை விஷப் பாம்புக்கு ஒப்பிடுவது, இந்திர த்வஜம் போல அவன் வீழ்ந்தான் என்று உவமிப்பது முதலியன வால்மீகியின் பழமையை காட்டுகிறது ஏனெனில் பிற்காலத்தில் பாம்பை தீய விஷயங்களுக்கு மட்டுமே உவமை கூறினர்; இந்திர விழாவில் இந்திர த்வஜ கம்பத்தை அடித்துச் சாய்க்கும் உவமை எல்லாம் பிற்காலத்தில் பயன்படுத்தப்படவில்லை.

சுந்தர காண்டத்தில் 19 ஆவது அத்தியாயத்தில் தொடர்ந்து 30 உவமைகள் வருகின்றன. இது ஒரு புதுமை.

உவமைகள் பற்றி ஆராய்ந்த அறிஞர் இதில் குறைந்தது 13 வகை உவமைகள் இருப்பதாகப் பட்டியல் தருகிறார்.

3462 உவமைகளில்

2240 பூர்ண வாக்யா ச்ரௌதி

548 தர்மலுப்தா சமாசக

257 சமாசக பூர்ண ஆர்த்தி

174 தர்ம வசக லுப்தா பூர்ணா உவமை வகைகள் என்பார்.

வால்மீகி குறைந்தது 200 வகை தாவரங்களையும், 135 வகை ஆயுதங்களையும் குறிப்பிடுகிறார்.

ராமாயணத்தைப் போற்றும் பல பாடல்கள் உண்டு. அதில் ஒரு பாடல், இந்தப் பூமியில் சூரிய சந்திரர்கள் பிரகாசிக்கும் வரை ராமாயணத்துக்கு – ராம கதைக்கு –அழிவே  கிடையாது  என்று கூறும்

காரணம் என்ன?

காம, க்ரோத, லோபம் என்ற மூன்று தீய குணங்கள் உடைய எவரும் எப்படி முடிவெடுப்பரோ அதற்கு நேர் மாறாக முடிவு எடுக்கின்றனர் ராமாயண கதாபாத்திரங்கள். இதைவிட ஒரு நல்ல குடும்பம் இருக்கவே முடியாது என்னும் அளவுக்குச் செயல்படும்  பல கட்டங்களைக் காண்கிறோம்.

இந்தப்  பூவுலகில் எல்லா நல்ல குணங்களும் நிரம்பிய நல்ல மனிதர்  எவரேனும் உண்டா?  என்று நாரதரிடம் வால்மீகி முனிவர் கேட்டபோது, நாரதர் ராமரின் குணாதிசயங்களை விவரித்து நீண்ட பதில் தருகிறார். பலரும் கேட்ட விஷயங்களே அவைகள் . பின்னர் நாரதர் விடைபெற்றுச் செல்கிறார். வால்மீகி முனிவர் தமஸா நதிக்கரையை நோக்கிச் செல்கிறார். அங்கு தினசரி நடை பெறும்  காட்சிதான் நடக்கிறது அதாவது ஒரு வேடன் பறவைகளை நோக்கி அம்பு எய்கிறான். அவை செத்து விழுகின்றன. அதைப்  பார்த்த வால்மீகிக்கு சோகம் மிக்க  உணர்ச்சிக் கொந்தளிப்பு ஏற்படுகிறது. அதன் வாயிலாக நமக்கு ராமாயணம் கிடைக்கிறது. ஆனால் அதற்கு முன்னர் ஒரு அற்புதமான வருணனை வருகிறது.

இதோ சில அரிய எடுத்துக் காட்டுகள்:-

வால்மீகி முனிவர் தமஸா நதியைச் சுற்றுமுற்றும்  பார்க்கிறார் . அற்புதமான, அமைதியான அழகுமிக்க பரத்வாஜ  ஆஸ்ரமம் தெரிகிறது .அதைச்சொற்களில் வடிக்கும் போது நாம் சித்திரத்தில் கண்ட காட்சி போல அமைகிறது  அந்தச் சொற்சித்திரம் :-

(1)

அகர்தமமிதம் தீர்த்தம் பரத்வாஜ நிசாமய

ரமணீயம் ப்ரசன்னாம்பு ஸன்மனுஷ்ய மனோ ததா

பொருள்

பரத்வாஜரே  இந்த தண்ணீரைப் பாருங்கள் ! ஸ்படிகம் போல தெள்ளத் தெளிவாக இருக்கிறது; பார்க்கவே மனதிற்கு இன்பம் தருகிறது; நேர்மையான மனிதனின் மனதுபோல களங்கமற்று இருக்கிறது.

நேர்மையான மனிதனின் மனதுபோல தெளிந்த நீரோட்டம் உடையது அந்த ஆறு. நல்ல உவமை. ரமணீயம் ப்ரசன்ன , சன் மனுஷ்ய மனஹ  (நல்ல மனிதனின் மனது) என்ற சொற்கள் கவனிக்க வேண்டிய சொற்கள்.

இப்படிப்பட்ட நல்ல மனிதர்களின் மனதுதான் அற்புதங்களைச்  செய்யும். முத்து சுவாமி தீக்ஷிதர்  அமிர்த வர்ஷனி ராகம் பாடினால் மழை  பெய்யும் ; ஆதிசங்கரர் கனக தாரா தோத்திரம் பாடினால் தங்க நெல்லிக்காய் மழை  பெய்யும். ஞான சம்பந்தர் தேவாரம் பாடினால் அஸ்திச்  சாம்பலிலிருந்து  பூம்பாவை உயிர்பெற்று எழுவாள்; கூன் பாண்டியன் நின்ற சீர் நெடுமாறனாகக்  காட்சி தருவார். இதெல்லாம் தெளிந்த நீரோடை போன்ற மனது உடையோர் சாதிக்கக் கூடிய காரியம். நமக்கும் அப்படி இருக்குமானால் அற்புதங்களை சாதிக்கலாம்.

(2)

சீதா தேவி ஓராண்டுக் காலத்துக்கு ராவணனால் சிறைவைக்கப்பட்டு அசோக வனத்தில் வாடுகிறாள். உயிர்விட எண்ணிய தருணத்தில் ராமனின் கணையாழியுடன் வந்து காட்சி தருகிறான் அனுமன். இருண்ட  வானத்தில் ஒரு ஒளிக்கீற்று தோன்றுகிறது.  ராம- ராவண யுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் வெற்றிச் செய்தியுடன் சீதையை சந்திக்க அனுமன் வருகிறான்.

“தாயே உங்களுக்குத் தீங்கு விளைவித்த அசோக வன ராட்சச , ராட்சசிக்களை ஒழித்துக்கட்டவா?” என்று கேட்கிறான் . பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே என்ற பாரதியின் வாக்கிற்கு இணங்க கருணையே வடிவான  ஸீதை சொல்கிறாள் :-

பாபானாம் வா சுபானாம் வா வதார்ஹானாம் ப்லவங்கம

கார்யம் கருணமார்யேண ந கஸ்சின்னா பராத்யதி

சீதை சொல்கிறாள் –

“இது போன்ற சிறியோர் மீது நாம் பழிவாங்குதல் அழகல்ல. அவர்களுடைய அரசர் சொன்னதையே அவர்கள் செய்தார்கள். உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் குணம் கருணையே ; அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களோ,  தீய குணங்களை உடையோரை தண்டித்தல் சரியாக இருக்கலாம்; ஆயினும் எப்படி ஒரு மனிதன், மற்றொரு மனிதனை எடைபோட முடியும் முடியும்?”

(3)

வால்மீகி , மனிதர்களை வருணிப்பதோடு இயற்கையையும் அற்புதமாக வருணிக்கிறார். காட்டில் இரவு நேரம் எப்படி இருக்கும்?

“மரங்கள் எல்லாம் அசைவற்று நிற்கின்றன. பிராணிகளும் பறவைகளும் அங்கே மறைந்து நிற்கின்றன. மெதுவாக மாலை நேரம் விடை பெற்றுப்  புறப்படுகிறது . வானத்தில் கண்கள்  (நட்சத்திரங்கள்)  முளைக்கின்றன. எங்கு நோக்கினும் நட்சத்திரங்களும் ராசி மண்டங்களும் பிரகாசிக்கின்றன அப்போது குளிர்ந்த கிரணங்களை வீசும் சந்திரன் உதயமாகி இருளை விரட்டுகிறான். பூமியில் வாழும் உயிரிங்களின் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. இரவுநேரத்தில் வலம் வரும் ஜந்துக்கள் நகரத் துவங்குகின்றன. பிற பிராணிகள் கொன்ற எச்ச  சொச்சங்களைத் தின்னும் நரிகளும் யக்ஷ ராக்ஷசர்களும் நடைபோடுகின்றன”.

இது பாலகாண்டத்தில் வரும் வர்ணனை ; ராமனுக்குச் சொல்லப்படும் விஷயம். ஒரு சிறுவனுக்கு எவ்வளவு திகிலும், பின்னர் அச்சம் நீங்கிய உணர்வும் ஏற்பட்ட வேண்டுமோ அப்படி வால்மீகி அமைத்துள்ள சொற்றொடர்கள் இங்கே உள்ளன

இப்படி நிறைய செய்திகளை நாம் பல்வேறு கோணங்களில் காணலாம் . அப்போதுதான் வால்மீகியின் பெருமையை நாம் உணரமுடியும். இவைதான் எத்தனை முறை படித்தாலும் எத்தனை முறை கேட்டாலும் ராமாயணத்தை அலுக்காமல் கேட்க வைக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள திருத்தலம் தில்லை விளாகம். இங்கு பஞ்சலோகத்திலான ஸ்ரீகோதண்ட ராமர், சீதாபிராட்டியார்,
இலக்குவன், அனுமன் ஆகியோருடன் நின்ற கோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார். இந்த விக்கிரகங்களின் கையிலும், காலிலும் உள்ள பச்சை நிற நரம்புகள்,
விரலில் உள்ள ரேகைகள், கை, கால்களில் உள்ள நகங்கள் மற்றும் அனுமனின் திருமேனியில் மண்டிக் கிடக்கும் உரோமங்கள், தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஸ்ரீராமர் கானகம் செல்லும் போது அவருடைய அன்னை கௌசலை இடது மணிக்கட்டில் கட்டிய ரட்சா பந்தன், இடது முட்டியின் கீழே கட்டப்பட்டுள்ள
ரட்சை, எழுத்துக்களுடன் கூடிய தனுசு போன்றவையும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ராமரின் முன்னோர்கள்–

1. பிரம்மாவின் மகன் -மரீசீ
2. மரீசீயின் மகன்- கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான்
4. விவஸ்வானின் மகன்- மனு
5. மனுவின் மகன் -இஷ்வாகு

6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா
8. புரண்ஜயாவின் மகன் -அணரன்யா
9. அணரன்யாவின் மகன் -ப்ருது
10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா

11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா

16. குவலஷ்வாவின் மகன் – த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா
19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப்
20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா

21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2
24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா
25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா

26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா
27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு
28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத்
29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2
30. அனரண்யாவின் மகன் – த்ரஷஸ்தஸ்வா

31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் ஹர்யஷ்வா 2
32. ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான்
33. வஸுமாவின் மகன்- த்ரிதன்வா
34. த்ரிதன்வாவின் மகன் த்ரிஅருணா
35. த்ரிஅருணாவின் மகன் -திரிசங்கு

36. திரிசங்கு வின் மகன் ஹரிசந்திரன்
37. ஹரிசந்திரநநின் மகன் ரோஹிதாஷ்வா
38. ரோஹிதாஷ்வாவின் மகன் ஹரித்
39. ஹரித்தின் மகன் -சன்சு
40. சன்சுவின் மகன் -விஜய்

41. விஜயின் மகன் -ருருக்
42. ருருக்கின் மகன் -வ்ருகா
43. வ்ருகாவின் மகன் -பாஹு
44. பாஹுவின் மகன்- சாஹாரா
45. சாஹாராவின் மகன் -அசமஞ்சன்

46. அசமஞ்சனின் மகன் -அன்ஷுமன்
47. அன்ஷுமனின் மகன் -திலீபன்
48. திலீபனின் மகன்- பகீரதன்
49. பகீரதனின் மகன் -ஷ்ருத்
50. ஷ்ருத்தின் மகன் -நபக்

51. நபக்கின் மகன்- அம்பரீஷ்
52. அம்பரீஷனின் மகன் -சிந்து த்வீப்
53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு
54. ப்ரதயுவின் மகன் -ஸ்ருது பர்ணா
55. ஸ்ருது பர்ணாவின் மகன் சர்வகாமா

56. சர்வகாமாவின் மகன்- ஸுதஸ்
57. ஸூதஸின் மகன் -மித்ரஷா
58. மித்ராஷாவின் மகன்- சர்வகாமா 2
59. சர்வகாமாவின் மகன் அனன்ரண்யா3
60. அனன்ரண்யாவின் மகன் -நிக்னா

61. நிக்னாவின் மகன்- ரகு
62. ரகுவின் மகன் -துலிது
63. துலிதுவின் மகன் – கட்வாங் திலீபன்
64. கட்வாங் திலீபனின் மகன் – ரகு2
65. ரகுவின் மகன் – அஜன்

66. அஜனின் மகன் – தசரதன்
67. தசரதனின் மகன்
68. ஸ்ரீ ராமன் அவர் பரம்பரையில் 68வது அரசன்.

இஷுவாகு தொடங்கி ராமர் வரை நான்கு சதுர்யுகம் காலம்

———————–

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதாஹஸ்தகரம்
அங்குல்யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேகி மனோகரம்
வானர தைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.

ஏக ஸ்லோக ராமாயணம்

 ஆதௌ ராம தபோவனாதி கமனம், ஹத்வா ம்ருகம் காஞ்சனம்,

வைதேஹி ஹரணம், ஜடாயு மரணம், சுக்ரீவ சம்பாஷணம்,

வாலி நிக்ரஹணம், சமுத்ர தரணம், லங்காபுரீ தாஹனம்,

பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம், சைதத்தி ராமாயணம்

ஆதியில் ராமன் காடு செல்லல்

பொன் மானைக் கொல்லல்

சீதா தேவி கடத்தல்

ஜடாயு இறத்தல்

சுக்ரீவன் சந்திப்பு/உரையாடல்

வாலீ அழிவு,

கடல் தாண்டல்

இலங்கை எரிப்பு

பின்னர் ராவணன், கும்பகர்ணன் மரணம்

இதுவே ராமாயணம்

ஸ்ரீ ஸுந்தர காண்ட மஹிமை ஸ்லோகம் –

ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்

—————-

ஏக ஸ்லோக பாகவதம்

 ஆதௌ தேவகி தேவ கர்ப்ப ஜனனம், கோபி க்ருஹே வர்த்தனம்,

மாயா பூதன ஜீவிதாபஹரணம், கோவர்தன உத்தாரணம்,

 கம்சச் சேதன கௌரவாதி ஹரணம், குந்தீ சுதா பாலனம்

சைதத் பாகவதம்  புராண கதிதம் ஸ்ரீ க்ருஷ்ண லீலாம்ருதம்

ஆதியில் தேவகியின் கர்ப்பத்தில் இறைவன் பிறப்பு

கோபியர் வீட்டில் வளர்ப்பு

மாயா உருவ பூதனையின் அழிவு

கோவர்த்தன மலையின் உயர்வு

கம்ச, கௌரவர்கள் அழிவு

குந்தீ மகன் காப்பு

இதுவே பாகவத புராணக் கதை; ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அற்புத லீலைகள்

ஏக ஸ்லோக மஹாபாரதம்

ஆதௌ பாண்டவ தார்தராஷ்ட்ர ஜனனம், லாக்ஷா க்ருஹம் தாஹனம்

த்யூதே ஸ்ரீஹரணம், வனே விசரணம், மாத்சாலயே வர்த்தனம்,

லீலாகோஹ்ரஹணம், ரணே விஹரணம், சந்திக்ரியா ஜ்ரும்பணம்,

பஸ்சாத் பீஷ்மசுயோதனாதி நிதனம்,   ஹ்யேதன் மஹா பாரதம்

 ஆதியில் பாண்டவர், திருதராஷ்ட்ரர் பிறப்பு

அரக்கு மாளிகை எரிப்பு

சூதாட்டத்தில் நாடு இழப்பு

காட்டில் சுற்றல்

மத்ஸ்ய நாட்டில் (விராடன்) வசிப்பு

ஆநிரை கவர்தல்

போரில் அழிவு

சமாதான உடன்படிக்கை மீறல்

பின்னர் பீஷ்மர், துர்யோதண வகையறா மரணம்

இதுவே மஹா பாரதம்

ஸ்ரீ தேசிக‌ நூற்ற‌ந்தாதி–

February 24, 2023

ஸ்வாமி தேசிக‌னைப் போற்றி ஸ்ரீந‌யினாராசாரியாரின் சிஷ்ய‌ரான‌ க‌ந்தாடை ம‌ன்ன‌ப்ப‌ங்கார் எழுதிய‌ அற்புத‌மான‌ நூல் ஸ்ரீதேசிக‌ நூற்ற‌ந்தாதி. ஏனோ அவ்வ‌ள‌வாக‌ ப்ர‌ப‌ல‌மாகாத‌ இந்நூலை, ப‌ல‌ அரிய‌ நூல்க‌ளைத் தேடிப்பிடித்து கூடுமான‌ம‌ட்டிலும் விளக்கங்களுடன் வெளியிட்ட‌ அன்றைய திருவ‌ல்லிக்கேணித் த‌மிழ்ச் ச‌ங்க‌ம் 1937ல் ச‌ங்க‌த்தின் இர‌ண்டாவ‌து வெளியீடாக‌ இந்த‌ தேசிக‌ நூற்ற‌ந்தாதியின் மூல‌த்தை ம‌ட்டும் ப‌திப்பித்து வெளியிட்டிருக்கிற‌து.

பின்னும் அந்த‌ நூலுக்குக் கிடைத்த‌ ஆத‌ர‌வினாலும், ஏற்க‌ன‌வே அச்சிட்ட‌ நூல் பிர‌திக‌ள் தீர்ந்து விட்ட‌தாலும், ச‌ங்க‌த்தின் 58வ‌து ப‌திப்பாக‌, பாட‌ல்க‌ளுக்குச் சிறு குறிப்புக‌ளுட‌ன் 1954ல் வெளியிடப் பட்டிருக்கிற‌து.

பின் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்குப் பின் ஸ்ரீம‌த் ஆண்ட‌வ‌ன், ஸ்ரீம‌த் ப‌ர‌வாக்கோட்டை ஆண்ட‌வ‌ன் அனுக்ர‌ஹ‌ங்க‌ளுட‌ன் திருவேங்க‌ட‌த்தான் திரும‌ன்ற‌ம், பேராசிரிய‌ர் ந‌.சுப்பு ரெட்டியாரைப் ப‌திப்பாசிரிய‌ராக‌வும், இராசிபுர‌ம் திரு மு. இராம‌சாமியை உரையாசிரிய‌ராக‌வும் கொண்டு சுருக்க‌மான‌ உரையுடன் 2002ல் வெளியிட்டுள்ள‌து.

அத‌ன்பின் ம‌துரை ஸ்ரீதேசிக‌ன் ச‌ன்ன‌தி ச‌பையின‌ர் அத‌ன் மூல‌த்தை ம‌ட்டும் 2003ல் திருப்புல்லாணி ஸ்ரீதேசிகன் சந்நிதி சம்ப்ரோக்ஷணத்தின்போது ஸ்ரீமத் ஆண்டவன் திருக்கரங்களால் வெளியிட்ட‌ன‌ர்.

சமீபத்தில், ஸ்ரீபௌண்டரீகபுரம் ஆண்டவன் ஆச்ரமத்திலிருந்து பல தேசிக விஷயமான ஸ்தோத்ரங்களுடன் இந்த நூற்றந்தாதியையும் சேர்த்து விரிவான வ்யாக்யானத்துடன் வெளியிட்டிருக்கின்றனர்.

திருவ‌ல்லிக்கேணித் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தார் அளித்துள்ள‌ குறிப்புக‌ள் வைண‌வ‌ நூல்க‌ளில் ஆழ‌ங்கால் ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்குத் தேனாய் இனிக்கும். புதிய‌வ‌ர்க‌ளுக்கு அங்கு குறிப்பிட்டுள்ள‌ மேற்கோள்க‌ள் அந்நூல்க‌ளைத் தேடிப் ப‌டித்து இன்புற‌ வைக்கும்.

ஸ்ரீதேசிக நூற்றந்தாதி

தனியன்கள்

ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞான வைராக்ய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம். (1)

யஸ்சக்ரேநிகமாந்தார்ய ஸ்துதிம் காதாசதாத்மிகாம்
மன்னப்பங்காரபிக்யந்தம் ஆச்ரயே தேசிகப்ரியம். (2)

வெண்பாத் தனியன்

சீரொன்று தூப்புற் றிருவேங் கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழமொழியுள் – ஓரொன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு

சீர் ஒன்று – சிறப்புப் பொருந்திய; தூப்புல் – தூப்புல் குடியில் அவதரித்த; திருவேங்கடம் உடையான் – வேதாந்த தேசிகர்; பார் ஒன்ற – பூமியில் நிலைத்திருக்கும்படி; சொன்ன – செய்தருளிய; பழமொழியுள்—பழமையான வேத ஸாரமாகிய நூல்களுள்; ஓரொன்றுதானே – ஒவ்வொரு கிரந்தமே; தாரணியில் வாழ்வார்க்கு – இப்பூமியில் வாழும் மனிதர்களுக்கு; வான் – வைகுந்த்த்தை; ஏறப்போம் அளவும் – ஏறியடையும் வரைக்கும்; வாழ்வு – வாழ்வாக; அமையாதோ? – பொருந்தாதோ? (பொருந்தும் என்றபடி)

பழவினைக டாமகலப் பரவாதி சிங்கத்தின்
கழலிணையைத் தன்னெஞ்சிற் கழலாமே எந்நாளும்
தொழுதொழுமன் னப்பங்கார் தூயமலர்த் தாளிணையே
தொழுதெழுநீ நன்னெஞ்சே தொல்வினைகள் தொடராவே

பழவினை – ஊழ்வினை, “அக்கேபோ லங்கை யொழிய விரலழுகித், துக்கத் தொழுநோ யெழுபவே – யக்கா, லலவனைக் காதலித்துக் கான்முரித்துத் தின்ற, பழவினை வந்தடைந்தக்கால்” (நாலடியார், தீவினையச்சம் 3); பரவாதி – புறச்சமயி, “பறந்துபுக் குப்பர வாதிக டுன்னும் படுநரகுன்” (திருநூற்றந்தாதி 51); தொல்வினை – பழவினை, “தொல்வினை தொடர்ந்து தருசூழ் பிறவியென்னும் வல்வினை தொடர்ந்து”(பிரமோத்.பஞ்சா 38); தொடரா – பின்பற்றமாட்டா; தொழுதெழுநீ நன்னெஞ்சே – “அவன், துயரறு சுடரடி தொழுதெழு என்மனனே.” (திருவாய்மொழி 1-1-1); “எம்பெருமானுடைய ஆச்ரிதஜந ஸமஸ்த்து;காபநோதந ஸ்வபாவமான திருவடி மலர்களிலே ஸர்வதேச ஸர்வாவஸ்தோசித ஸர்வசேஷ வ்ருத்தியையும் பண்ணி உஜ்ஜீவியென்று தம்முடைய திருவுள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்.” (ஆறாயிரப்படி); “இதுக்கு அவ்வருகே விக்ரஹ வைலக்ஷண்யம் சொல்ல ஒருப்பட்டுக் கீழ்நின்ற நிலையைக் குலுக்கி ‘அவன்’ என்று அவ்வருகே போகிறார்; (துயரறு) – ‘துயரறுக்கும்’ என்று முன்புள்ள முதலிகள் அருளிச் செய்யும்படி; ஸமஸ்தது;காபநோதந ஸ்வபாவமான திருவடிகள்; ஸகலாத்மாக்களுடையவும் து:கத்தைப் போக்குகையே ஸ்வபாவமான திருவடிகள்; ‘துயரறு சுடரடி’ என்று எம்பெருமானார் அருளிச் செய்யும்படி:– “வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்ருசம்பவதி து:கித:” என்றால் து:க நிவ்ருத்தியும் அவனதாயிருக்குமிறே; இவர் துயரறத்தான் துயர் தீர்ந்தானாயிருக்கை. இத்தால், இவர் மயர்வற அவன் துயரற்றபடி. (சுடரடி) – நிரவதிக தேஜோரூபமான திவ்யமங்கள விக்ரஹத்தைச் சொல்லுகிறது. (சுடர்) – பஞ்ச சக்திமயமான புகரைச் சொல்லுகிறது. (அடி) – சேஷபூதன் சேஷிபக்கல் கணிசிப்பது திருவடி களையிறே. ஸ்தநந்தய ப்ரஜை முலையிலே வாய் வைக்குமாபோலே, இவரும் ’உன் தேனே மலருந்திருப்பாதம்’ என்கிற திருவடிகளிலே வாய் வைக்கிறர். (தொழுது) – நித்யஸம்ஸாரியாய்ப் போந்த இழவெல்லாம் தீரும்படி ஸ்வரூபாநுரூபமான வ்ருத்தியிலே அந்வயித்து, (எழு)- ’அஸந்நேவஸபவதி’ என்னும் நிலைகழிந்து, “ஸந்தமேநம்ததோவிது” என்கிறவர்கள் கோடியிலே எண்ணலாம்படியாக “உஜ்ஜீவிக்கப்பார். அடியிலே தொழாமையால் வந்த ஸங்கோசம் தீரும்படி அடியிலே தொழுது-உஜ்ஜிவியென்கிறார், (என்மனனே) – இப்போதாயிற்று தம்மைக் கண்டது; ’அருளினன்’ என்று நின்ற வித்தனையிறே முன்பு. இருவர் கூடப் பள்ளியோதி யிருந்தால், அவர்களிலே ஒருவனுக்கு உத்கர்ஷமுண்டானால், மற்றையவன் தனக்கு அவனோடே ஒரு ஸம்பந்தத்தைச் சொல்லிக்கொண்டு கிட்டுமாபோல ‘மநஏவமநுஷ்யாணாம் காரணம் பந்தமோக்ஷயோ’ என்கிறபடியே நெடுநாள் பந்த ஹேதுவாய்ப் போந்தது இப்போது முந்துற்ற நெஞ்சாய் முற்பட்டு நிற்கிறபடியாலே அத்தோடே தமக்கு ஒரு ஸம்பந்தத்தை ஆசைப்பட்டு ’என்மனனே’ என்கிருர். …….. ‘தொழுதெழு’ என்கையாலே – ப்ராப்திபலமான கைங்கர்யத்தைச் சொல்லிற்று. ’என்மனனே’ என் கையாலே பரிசுத்தாந்த: கரணனே அதிகாரியென்னுமிடம் சொல்லிற்று.”-(ஈடு முப்பத்தாறாயிரப்படி) *நல்லைநெஞ்சே! நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்” -(அறிவுதரும் பெரிய திருமொழி 1-7-9), “சோதியநந்தன். கலியிற் றொழுதெழ நின்றனரே” (தேசிகமாலே, மெய்விரத நன்னிலத்து மேன்மை. 26), ‘நாதமுனிகழலே நாளுந் தொழுதெழுவோம் நமக்கார் நிகர் நானிலத்தே” (தேசிக மாலை, அதிகாரஸங்கிரஹம், 6).

எந்தைமன் னப்பங்கா ரென்றைக்குந் தன்னாமம்
சிந்தைதனில் வைத்திடவே செல்வஞ்சேர் – தந்தையொடு
தாயாகிக் காப்பரிந்தத் தாரணியி லுள்ளாரை
வாயார வாழ்த்து நலம். (3)

(3) எந்தை – எம்ஸ்வாமி; தந்தையொடு தாயாகிக் காப்பர்- “அன்னையாய் அதீதனாய் என்னை யாண்டிடும், தன்மையான்.” (கண்ணிநுண்சிறுத்தாம்பு.4), “மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித்தொழும், மாலார்வந்து இன நாள் அடியேன் மனத்தே மன்னினார், சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும், மேலாத்தாய்தந்தையும் அவரே இனி யாவாரே.” (திருவாய்மொழி 5-1-8); தாரணி-பூமி; வாயார வாழ்த்து – “எண்திசையும் அறிய இயம்புகேன், ஒண்தமிழ்ச் சடகோபனருளையே” (கண்ணிநுண் சிறுத் தாம்பு, 7.)

1. சென்னியில் சூடும் மலர்

வேதமுடித் தேசிகனே! வேதியர் குலத்து அரசே!
சாது சனங்களுக்குத் தாவளமே! – போது அமரும்
நின் அடியை என்றும் நினைத்திருப்பார் பாதம் என்தன்
சென்னிதனில் சூடும் மலர். (1)

பொழிப்புரை:- வேதங்களை உனது திருமுடியில் தரித்த அழகனே! அந்த வேதங்களை நாள் தோறும் ஓதிக் கொண்டிருக்கும் அந்தணர்கள் கூட்டத்துக்குத் தங்கும் இடமாக இருப்பவனே! தாமரை மலர் போன்ற உனது திருவடியை என்றும் எண்ணிக்கொண்டு இருக்கின்ற அடியார்களது திருவடியே எனது தலையில் (முடியில்) அணிந்துகொள்ளும் மலராகும்.

நூல்.

(1) எல்லா நூல்களும் மங்கலமொழி முதல் வகுத்துக் கூற வேண்டுவது மரபாதலால், ’வேதமுடி’ என்று தொடங்கினார்.. கம்பநாட்டாழ்வான் இயற்றியருளிய ’ஆழ்வார் நூற்றந்தாதி’ என்கிற ’சடகோபரந்தாதி’, ’வேதத்தின் முன்செல்க’ என்று : தொடங்கி யுள்ளது காண்க. வேதம் – ஆதிநூல். வித்தென்னும் பகுதியடியாகத் தோன்றிய பெயர் என்பர். வித் – ஞானம். இது: பரதகண்டத்து ஆஸ்திகர்களால் கொண்டாடப்பெறும் நூல். இது இருக்கு, எஜுஸ், சாமம், அதர்வணம் என்று நான்கு பிரிவை யுடையது. இது ஞானகாண்ட, கர்மகாண்ட வகையால் ஈச்வரனையும், அவனை உபாஸிக்கும் யஞ்ஞாதிகளையும் கூறும். இதற்கு இராவணன் சந்தமுதலிய வகுத்தான். இது சிக்ஷை, வியாகரணம், நிருத்தம், சந்தஸ், சோதிஷம், கல்பம் என ஆறு அங்கங்களை யுடையது. இதனைச் சோமுகன் என்னும் அசுரன் திருடிச்செல்லப் பின் விஷ்ணுமூர்த்தி அன்ன உருவமாய்ப் பிரமனுக்கு: உபதேசித்தனர். இதன் முடிவு உபநிஷத்துக்கள். மீமாம்சா சாஸ்திரிகள் வேதம் சிருட்டிக்கப்பட்டன அல்ல அநாதி என்பர்: நியாயவேதாந்தியர் ஈச்வரவாக்கியம் என்பர். கடவுள் வேதங்களைப் பிரமனுக்கு உபதேசிக்கப் பிரமன் அதனை இருடிகளுக்கும் அவ்விருடிகள் அதனைத் தம் சீடருக்கும் உபதேசித்தனர் என்பர். – (அபிதான சிந்தாமணி); தேசிகன் – அழகன் (தேசிகம். அழகு) ’வடிவழகார்ந்த வண்தூப்புல் வள்ளல்’-(பிள்ளை யந்தாதி. 20). குரு. “பற்றற்றவன் கொடுக்கும் பண்டமனைத்தினையும் பற்றுதலுந் தேசிகர்க்குப்பாங்கு’-(சைவ. ஆசா.88). ’பூருவா சாரியர்கள் போதமநுட் டாநங்கள், கூறுவார் வார்த்தை களைக் கொண்டுநீர் – தேறி, இருள்தருமா ஞாலத்தே யின்பமுற்று வாழும், தெருள் தருமா தேசிகனைச் சேர்ந்து’-(உபதேச ரத்தினமாலை. 72) *அருள்பெற்ற, நாதமுனி முதலான நந்நேசிகரையல்லால், பேதை மனமேயுண்டோ பேசு” (உபதேசரத்தின மாலை. 36), “தேசிகர்பால் கேட்ட செழும் பொருளை” (௸. 57), ‘யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த வுலகம் புகும்’ -(திருக்குறள். துறவு. 6) “தோனல்லாத வுடம்பை யானென்றும், தன்னோடியைபில்லாத பொருளை எனதென்றுங்கருதி அவற்றின்கட் பற்றுச் செய்வதற். கேதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான் வானோர்க்கும் எய்தற்கரிய வீட்டுலகத்தை யெய்தும். மயக்கம் அறியாமை. அதனைக் கெடுத்தலாவது தேசிகர்பாற் பெற்ற உறுதி மொழிகளானும் யோகப்பயிற்சியானும் அவை யானெனதன்மை தெளிந்து, அவற்றின்கட் பற்றை விடுதல்.”) தேசாந்தரி, வணிகன். (3, 4 பிங்கல 3678) தமிழில் தேசிகன்? என்னும் சொல்லுக்கு வணிகன் என்றும், ஆசான் என்றும் இரு பொருள்கள் உள. “தேசிகன் வணிகன் ஆசான்” – (சூடாமணி நிகண்டு) நம் தேசிகனை ஆசான் என்றமட்டில் உணர்வது போதாது. உலகமறிந்த வணிகர்களுக்கெல்லாம் இவன் உயர்ந்த, கொண்டு விலை செய்யும் வணிகன். விலையுள்ள பொருள்களைக் குறைந்த விலைக்கு வாங்கி அவை கிடையாத வேறிடங்களில் கொண்டுபோய் உயர்ந்த விலைக்கு விற்று நல்ல லாபத்தை அடைபவன் வணிகன் என்று உலகம் அறியும். விலையில்லாத (அதாவது யாரும் விலைமதிக்கவும் கொடுக்கவும் முடியாத) பொருள்களை (சாஸ்திரததிவங்களையும் அர்த்தங்களையும்) யாரும் அறியாத (அதாவது வேதசாஸ்திரங்களில் மறைபொருளாகக் கிடந்த) இடங்களில் தேடி வாங்கி (மனத்தில்  கொண்டு) இவைகிடையாது தவிக்கும் இடங்களாகிய சம்ப்ரதாய நிஷ்டர்களுக்கு அவர்களுடைய பக்திச்ரத்தையாகிய விலைக்கு மட்டில் விற்று அவன் த்ரவ்ய லாபம் அடைவதைப்போல் அன்றிக்கே படிப்போரும், கேட்போரும் அனுஷ்டிப்போரும் ஆத்மலாபம் அடையச் செய்வதாக்கும் இவன் விசித்திர வாணிபம் இருந்தபடி. தேசிகன் என்னும் வடமொழிச் சொல்லுக்கு வழி காட்டுபவன் என்பது தாதுப் பொருள். கார்யாகாரியங்களையும் விதி நிஷேதங்களையும் தன்னை அடுத்தவனுக்கு எடுத்துக்கூறி அவனை நல்வழிப்படுத்தி இவ்வுலகிலுள்ள மட்டும் பாபதோஷங்கள் இல்லாத நல்வாழ்வும் பிறகு மோக்ஷபர்யந்தமான நற்கதியும் சித்திக்கும்படி வழிகாட்டுபவன் ஆசான் ஆதலின் அவனுக்குத் தேசிகன் என்பது பெயராயிற்று. பட்டப்பெயராகவோ காரணப் பெயராகவோ மற்றவர்கள் தேசிகன் என்ற சொல்லைத் தங்கள் பெயருடன் சேர்த்துக் கொண்டபோதிலும் இச்சொல் இடுகுறிப் பெயராக இவன் ஒருவனுக்கே தமிழ் மொழி வழங்கும் நாடுகளிலும் பிற நாடுகளிலும் அமைந்து கிடக்கும் திறம் ஒன்றே இவனைப் பரமாச்சாரியன் ஆக்கித் தருகிறது. “சீலங் கவர்ந்திடுந் தேசிகர்” என்பது ரஹஸ்ய ஸந்தேசப் பாசுரம் .-(அமிருதரஞ்சனி.15) இதற்கு “சீலங்கவர்ந்திடும்” என்கிற பாட்டாலே ஸதாசார்ய ப்ரஸாதமடியாக தனக்கு வருகிற பரமபுருஷார்த்த லாபத்தை அநுஸந்திக்கிறான். (சீலங்கவர்ந்திடுமென்றது) – ஆத்ம குணங்களையும் ஆசாரத்தையும் அங்கீகரிக்கு மவர்கள் என்றபடி, (தேசிகர் என்றது)- “ஆச்ரிதரை வழியல்லா வழிபோகாதபடி விலக்கி நல்வழி காட்டுகைக்கு நிலவர் என்ற படி..”- (ரஹஸ்ய ஸந்தேச விவரணம்) என்று நம் வேதாந்த குருவே வியாக்கியான மிட்டுள்ளார். ’மருளற்ற தேசிகர் வானுகப் பாலிந்த வையமெல்லா, மிருளற் றிறைவ னிணையடி பூண்டுய வெண்ணுதலாற், றெருளுற்ற செந்தொழிற் செல்வம் பெருகிச் சிறந்தவர்பா லருளுற்ற சிந்தையினுலழி யாவிளக் கேற்றினரே.’ – (தேசிகமாலை. அதிகாரசங்கிரகம், 37) ’தெருளார் மறைமுடித் தேசிக னேயெங்க டுப்புற்றேவே.’ – (பிள்ளையந்தாதி 12) ’அருள்தரு மாரண தேசிகனே யெங்க டூப்புற்றேவே.’-(பிள்ளையந்தாதி. 18) வேதியர் — வேதமுணர்ந்தோர்; வேதியர் குலத்தரசே – ’நல்வேதியர்கள் தொழும் திருப்பா தனிராமாநுஜன்” – (இராமாநுச நூற்றந்தாதி. 105); சாதுசனங்களுக்கு – ஸ்ரீவைஷ்ணவர்கட்கு. ” வாதியர் மன்னுந்தருக்கச் செருக்கின் மறைகுலையச் சாது சனங்க ளடங்க நடுங்கத் தனித்தனியே, யாதி யெனாவகை யாரண தேசிகர் சாற்றினர்நம், போத மருந்திரு மாதுட னின்ற புராணணையே – (தேசிகமாலை. அதிகாரசங்கிரகம், 13) “சாது சனம் வாழவென்று சாற்றியநற் ப்ரபந்தசாரம்?-(தேசிகமாலை. பிரபந்தசார சிறப்புத்தனியன், சாதுக்கள். * தம்பிறப்பாற் பயனென்னே சாதுசனங்களிடையே” – (திருவாய்மொழி 3-5-4), “சாதுசனத்தை நலியும்” – (திருவாய்மொழி 3-5-5); தாவளம்- இருப்பிடம் (தெலுங்கு), வசிக்குமிடம். ‘பூவள ருந்திரு மாது புணர்ந்தநம் புண்ணியஞர், தாவள மான தனித் திவஞ் சேர்ந்து தமருடனே’- (தேசிகமாலை. பரமபத சோபானம், 18) ; போது – பூ, மலரும் பருவத்தரும்பு, “காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலருமிந் நோய்.” -(திருக்குறள், காமத்துப்பால். பொழுது கண்டிரங்கல். 7); பாதம் – திருவடி, “ அவர் பாதம் வணங்கினற்கு,”; நின்னடியையென்று நினைந்திருப்பார் பாதம் – ‘ எந்தை பிரான் தன்னை, பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர், ஒதும் பிறப்பிடை தோறும் எம்மையாளுடையார்களே.’ — (திருவாய்மொழி 3-7-3), “எந்தைபிரான் தனக்கு அடியாரடியார் தம்மடியாரடியார் தமக்கடியாரடியார்தம், அடியாரடியோங்களே.” – (திருவாய்மொழி 3-7-9) ; சென்னி – தலை; மலர் – பூ. (2)

2. நமக்குப் பற்று

மலர்மகள்கோன் தாள் இணையை மன்னி இருப்பார்கள்
சிலர் அவரால் செய்கருமம் என்னாம்? – மலர் அறுசீர்
வேதாந்த தேசிகனை வேறு ஆகாது ஏத்துவார்
பாதாம்புயம் நமக்குப் பற்று. (2)

பொழிப்புரை:– தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளது கணவன் திருமாலின் திருவடியைப் பொருந்தி (நினைந்து) இருப்பவர்கள் சிலர் உண்டு. அவர்களால் செய்யக்கூடிய காரியம் என்ன இருக்கிறது? ஆனால், குற்றம் நீங்கிய சிறப்பை உடைய வேதாந்த தேசிகனை, தன்னோடு வேறு ஆகாமல், அந்த ஆசாரியரோடு ஒன்றி நின்று போற்றும் அடியார்களது திருவடித் தாமரையே, நமக்குப் பற்றுக்கோடு ஆகும். (தஞ்சமாக) அடைக்கலமாக ஆகும்.

மலர்மகள்கோன் – திருமாமகள் கேள்வன், திருமால்; மன்னி – பொருந்தி; கருமம் – கடமை ; மலம் – அழுக்கு, பற்று, ஆர்வம், செற்றம் முதலியவற்றிற்கும் மலமெனக் கூறுவர்; வேதாந்த தேசிகன் – “எழில் வேதாந்தாரியன்” – (தேசிக மாலை திருச்சின்ன மாலை சிறப்புத்தனியன்), “மின்னுறு நூலமர் வேங்கட நாதனந் தேசிகனே” – (தேசிகமாலை, பன்னிரு நாமம் சிறப்புத்தனியன்), “ சீர்கொண்ட தூப்புற் றிருவேங்க டாரியன்.”- (௸,௸), “ சிட்டர்தொழும், வேதாந்த தேசிகனை -(தேசிகமாலை. கீதார்த்தசங்கிரகம். சிறப்புத் தனியன்), * கீதை மொழிந்தருளும் வேதாந்த தேசிகனார்.” (௸,௸), “ சீராரும்‘வேதாந்த தேசிகர்கோன்,”- (தேசிக மாலை, ஆகார நியமம். சிறப்புத்தனியன்), “ ஞானியர்கள், சென்னியணி சேர்தூப்புல் வேதாந்த தேசிகனே” ‘தூப்புல் வருநிகமாந்தாசிரியன்’-(வாழித்திருநாமம்), “வேண்பெரிய விரிதிரைநீர் வையத் துள்ளே வேதாந்த வாரியனென் றியம்ப நின்றோம். ‘ -(தேசிக மாலை, அமிருதாசுவாதினி. 37), “சந்தமிகு தமிழ்மறையோன் றுாப்புற் றோன்றும் வேதாந்த குரு.”- (தேசிகமாலை. பிரபந்தசாரம், 18), “ தீதற்ற நற் குணப் பாற்கடற் றாமரைச் செம்மலர்மேன், மாதுற்ற மார்பன் மருவவின் கீதையின் வண்பொருளைக், கோதற்ற நான்மறை மெளலியி னாசிரி யன்குறித்தான், காதற் றுணிவுடை யார் கற்கும் வண்ணங் கருத்துடனே.” – தேசிகமாலை. கீதார்த்தசங்கிரகம் 21), ’ மெய்விரத நன்னிலத்து மேன்மை யேத்தி வேதாந்த வாசிரியன் விளங்கினானே.”-(தேசிகமாலை. மெய்விரத நன்னிலத்து மேன்மை. 28), “பெருவேலியா மெம்பி ரான் பேசுபய வேதாந்த தேசிகன்”-(அழகர்பிள்ளைத் தமிழ். பழிச்சினர்ப்பரவல். 12), “செந்தமிழு மாரியமுந் தேர்ந்த பொதுத் தேசிகனே, யெந்தவிதச் சித்து மியற்ற வல்லாய்.”, “ தேசிக னிதயக் கோயிற் செழுமலர் மிசைவார்”, “செந் தமிழ்ப் புலவரேத்துந் தேசிகப் பெருமான்,” “ மருள்புகாநிலைத் தேசிகன்,” “சருவ சித்தியு மெய்தித் தேசிகன் றன்னையே நிகர், “ “ தேசிக னென்னுமாசான்,”” புவனி போற்று நந் தேசிகன் “-(ஸ்ரீலஸ்ரீ தண்டபாணிசுவாமிகள்) ; “வேறாகா தேத்துவார் – “,” தேவுமற்றறியேன், “ “வேறென்றும் நான் அறியேன்” என்ற நிலையிலுள்ளோர்; பாதாம்புயம் – திருவடித் தாமரை பற்று – அடைக்கலம் * “பற்றுக பற்றற்றான் பற்றினையப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு”-(திருக்குறள். துறவு, 10), “ கட்டப் பொருள்விரித்த காசினியி னான்மறையி, னிட்டப் பொருளியம்பு மின்பொருளைச் – சிட்டர்தொழும், வேதாந்த தேசிகனை மேவுவார் தங்கடிருப் பாதாம் புயமடியேன் பற்று. ’, ‘* கீதை மொழிந்தருளும் வேதாந்த தேசிகனார், பாதார விந்தமலர் பற்று “-(தேசிகமாலை, கீதார்த்தசங்கிரகம், சிறப்புத் தனியன்கள்); நமக்குப்பற்று- ஸ்ரீவைஷ்ணவர்களாகிய அனைவருக்குந் தஞ்சமாகும்.

3. என்பால் இருப்பார்.

பற்று ஒன்றும் இன்றிப் பராங்குசனை யேபற்றும்
சித்தம்உடை வேதாந்த தேசிகனை – குற்றம்இல்லா
அன்பால் அடைபவர்க்கு ஆளாகும் அன்பரே
என்பால் இருப்பர் இசைந்து. .3.

(பொழி) எந்தவிதமான உலகப் பற்றும் இல்லாமல், நம்மாழ்வாரையே தஞ்சமாகப் பற்றிக் கொள்கின்ற மனத்தை உடைய வேதாந்த தேசிகனை, குற்றம் இல்லாத அன்போடு அடைகின்ற பக்தர்களுக்கு அடியவர்களாகின்ற அன்பர்களே, என்னிடத்தில் விருப்பத்துடன் தங்கியிருப்பார்கள்.

(3) பற்று – ’ இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு, எல்லையில் அந்நலம், புல்குபற்றற்றே.” -(திருவாய்மொழி 1-2-4), “ அற்றது பற்றெனில், உற்றது வீடுஉயர், செற்றது மன்னுறில், அற்றிறைபற்றே.” –( ௸1-2-5), “புற்றிலன் ஈசனும், முற்றவும் நின்றனன், பற்றிலையாய் அவன் முற்றிலடங்கே.” (௸1-2-6); பராங்குசன் – பிற மதங்களாகிய யானைகளைத் தமது பிரபந்தங்களிற் கூறிய தத்துவார்த்தங்களாற் செருக்கடக்கி அவற்றிற்கு மாவெட்டியென்னுங் கருவிபோல இருக்கும் நம்மாழ்வார். “பாடுவ தெல்லாம் பராங்குசனை நெஞ்சத்தாற், றேடுவதெல் லாம்புளிக்கீழ்த் தேசிகனை-ஓடிப்போய்க், காண்ப தெலா நங்கையிரு கண்மணியை யான்விரும்பிப், பூண்பதெலா மாறனடிப் போது.”-(பெருந்தொகை. பொருளியல். 1823), ”தேன ருமகிழ்த் தொடையலு மவுலியுந் திருக்கிளர் குழைக் காதும், கான ருமலர்த் திருமுகச் சோதியுங் கயிரவத் துவர்வாயும், மோன மாகிய வடிவமு மார்பமு முத்திரைத் திருக்கையும், ஞான தேசிகன் சரணதா மரையுமென் னயனம்விட் டகலாவே.”. (௸1824); பராங்குசனையே பற்றும் – பூமன்னுமாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த, பாமன்னுமாறனடி பணிந் துய்ந்தவன் ”-(இராமாநுச நூற்றந்தாதி. 1) “மாமலர்மன் னிய மங்கை மகிழ்ந்துறை மார்பினன்றாட் டூமலர் சூடியதொல் லருண் மாறன் றுணயடிக்கீழ், வாழ்வை யுகக்கும்.”-(பிள்ளை யந்தாதி. 1); அன்பாலடைபவர் – ”அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெல்லாம், அன்பன் தென்குருகூர் நகர் நம்பிக்கு, அன்பனாய்.”- (கண்ணிநுண் சிறுத்தாம்பு. 11); ஆளாகும் அன்பர் – ” என் நம்பிக்கு ஆள், புக்ககாதல் அடிமைப் பய னன்றே ” – (கண்ணிநுண்சிறுத்தாம்பு, 9), ” நகர்நம்பிக்கு ஆள், உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே.” – (கண்ணிநுண் சிறுத்தாம்பு. 3) ; என்பால் – என்னிடத்து; இசைந்து – உடன்பட்டு.

ஸ்ரீ விஷ்ணு புராணம் — ஆறாம் அம்சம்- ஸ்ரீ சீதாராம ஸ்வாமிகள் தொகுத்தவை-

February 24, 2023

06_01 கலியுக தர்மம்
ஸ்ருஷ்டி, அரச வம்சங்கள், மன்வந்த்ரங்கள் இவைகளை இதுவரை பராசரரிடமிருந்து கேட்டு மகிழ்ந்த மைத்ரேயர் கல்பத்தின் முடிவில் (ப்ரஹ்மாவின் பகல்) நிகழும் மஹா ப்ரளயத்தைப் பற்றிக் கூறுமாறு கேட்கிறார்.
“க்ருத, த்ரேதா, த்வாபர, கலி என்று யுகங்கள் நான்கு.  மனிதர்களின் ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாள்.  மனிதர்களின் ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள். இப்படி நமது இரண்டாயிரம் சதுர்யுகங்கள் ப்ரஹ்மாவுக்கு ஒரு நாள் (கல்பம்).  ஒவ்வொரு கல்பத்தின் முதல் க்ருதயுகத்தையும், முடிவான கலியுகத்தையும் விட்டு மற்ற சதுர்யுகங்கள் யாவும் அளவு, தர்மாதர்மங்களில் சமமாகவே இருக்கும்” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே மைத்ரேயர் கலியின் லக்ஷணங்களைக் கூறுமாறு கேட்கிறார்.

“கலியுகத்தில் ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர முதலான வர்ணங்களும், அவற்றிற்குரிய ஆசாரங்களும் கெடும்.  நான்கு வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள க்ரியைகள் நடக்காது.  தர்ம விரோதமாகக் கல்யாணங்கள் நடக்கும்.  குரு-சிஷ்ய, கணவன்-மனைவி உறவுகளில் தர்மங்கள் அழியும்.  அக்னி கார்யங்களும், தேவ பூஜைகளும் கெடும்.  பலம் உள்ளவன் அரசனாவான்.  கன்னிகையை மணக்க வர்ணம், ஜாதி, கல்வி, ஒழுக்கம் எதுவும் தேவையின்றி பணமிருப்பவனே வரனாவான்.  ப்ராஹ்மணன் எந்த தகுதியுமின்றி தீக்ஷிதனாவான்.  சாஸ்த்ரங்களில் விதிக்கப்படாத க்ரியைகள் ப்ராயச்சித்தமாக ஏற்கப்படும்.  ப்ரியமான வார்த்தைகளே சாஸ்த்ரங்களாகும்.  அவைதீகமான காளி முதலான தேவதைகளையே அனைவரும் வணங்குவர்.

ப்ரஹ்மசர்ய, க்ருஹஸ்த, வானப்ரஸ்த, ஸன்யாஸ ஆச்ரமங்கள் கெடும்.  வைராக்யமில்லாமலேயே எவரும் எந்த ஆச்ரமத்தையும் கொள்வர்.
சாஸ்த்ரத்தை அனுஸரிக்காமல் தங்கள் இஷ்டப்படி உபவாஸம், தீர்த்த யாத்ரை, தானங்களைச் செய்வர்.  கொஞ்சம் பணம் இருப்பவனும் செருக்கடைவான்.  கூந்தல் அழகை மட்டும் கொண்டே பெண்கள் தங்களை அழகிகளாகக் கர்வம் கொள்வர்.  தங்கம், மணி, ரத்னங்கள், துணி முதலானவை குறைந்து அழிந்து போகும்.  இவைகளின்றி பெண்கள் கூந்தலாலேயே தங்களை அலங்கரித்துக் கொள்வர்.  பெண்கள் பணமில்லாத கணவனை விட்டு, பணம் வைத்திருப்பவனைக் கணவனாகக் கொள்வர்.  நல்ல குடும்பம், ஞானம் இவைகளை விட்டு நிறைய பணம் கொடுப்பவனையே ஆண்டவனாகக் கொள்வர்.  புத்தியை ஆத்ம ஞானம் அடைவதில் செலுத்தாது, எவரும் பணம் சம்பாதிப்பதற்கே செலுத்தி, கிடைத்த பணத்திலும் யாகாதி கர்மங்களைச் செய்யாது வீடு கட்டுவதற்கே செலவழிப்பர்.  அந்த வீடுகளும் அவர்களுக்கும், அதிதிகளுக்கும் பயன்படாத வகையிலேயே இருக்கும்.

அழகான ஆடவர்களையே விரும்பி பெண்கள் வேசிகளாவர்.  அதர்ம வழியில் சம்பாதித்திருந்தாலும், அவனிடமே மக்கள் விரும்பிச் செல்வர்.  நெருங்கிய நண்பன் கெஞ்சிக் கேட்டாலும் சுயநலத்தால் உதவ மாட்டார்கள்.  தாழ்ந்தவர்கள் ப்ராஹ்மணர்களை மதிக்க மாட்டார்கள்.  ஜாதியைக் கொள்ளாது பால் தருவதாலேயே பசுவும் கொண்டாடப்படும்.  மழை பொய்த்துப் போகும்.  இதனால் எவரும் உணவின்றி முனிவர்களைப் போல் வேர், கிழங்கு, கனிகளையே உண்டு பின் அதுவும் கிடைக்காமல் பசியால் தற்கொலை செய்து கொள்வர்.  சந்தோஷமும், சௌக்யமும் ஜனங்களிடையே கெடும்.  எங்கும் பஞ்சமும், துன்பமுமே மிகும்.  ஆசாரங்கள் கெடும், குளிக்காமலேயே சாப்பிடுவர்.  தேவ, பித்ரு, அதிதி பூஜைகள் அழியும்.

பெண்கள் நிறைய உண்டும், மெலிந்தும், பேராசையோடும் இருப்பார்கள்.  நிறைய குழந்தைகள் பிறந்தும் ஏழ்மையில் வாடுவார்கள்.  இரண்டு கைகளாலும் தலையை சொரிந்து கொள்வர்.  மாமனார், மாமியார் வார்த்தைகளைக் கேளார்.  சுயநலமும், கோபமும், தாழ்வு மனப்பான்மையும் மிகுந்து தீய சொற்களையே பயன்படுத்துவர்.  நல்ல குடும்பத்துப் பெண்களும் தீயவர்களிடம் ஆசை கொண்டு தங்கள் கணவனுக்கே பல கெடுதிகளைச் செய்வர்.
ப்ரஹ்மசாரிகள் வ்ரதங்கள், அனுஷ்டானங்களின்றியே அத்யயனம் செய்வர்.  க்ருஹஸ்தர்கள் ஹோம, தானாதிகளைச் செய்யார்.  வானப்ரஸ்தர்கள் காட்டில் கிடைக்கும் கிழங்கு, பழ வகைகளை உண்ணாது அருகிலுக்கும் க்ராமங்களுக்குச் சென்று அங்கு கிடைப்பவைகளை உண்பர்.  ஸன்யாஸிகள் பெற்றோர், உடன்பிறந்தோரை விட்டு வந்தும், புதிதாக நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு அவர்கள் வசமாகி விடுவர்.

அந்யாயமாக வரி என்ற பெயரில் அரசர்கள் பணம் பறித்தும், மக்களை நன்கு போஷிக்க மாட்டார்கள்.  வ்யாபாரிகளின் பணத்தைப் பறித்துக் கொள்வர்.  ஸேனை உள்ளவனே அரசனாவான்.  அரச குலத்தோனும் பலமின்றி ஸேவித்து ஊழியம் செய்வான்.  மேல் வர்ணத்தோர் அவர்களுக்கு அடுத்த தாழ்ந்த வர்ணத்தாரின் தொழிலை மேற்கொள்வர்.  நான்காம் வர்ணத்தவர் மேல் வர்ணத்தாரின் தொழில் செய்து ஜீவிப்பர்.
அரசர்களின் உபத்ரவம் தாங்காது மக்கள் வேறு நீச ராஜ்யங்களுக்கு சென்று வசிப்பர்.  வேத மார்க்கம் மறைந்து பாஷண்டிகள் மலிவர்.  அதர்மம் அதிகரிக்கும்.  முறை தவறிய அரசுகளால் மக்களும் முறை தவறுவர்.  வீணான தவங்களைச் செய்து இளமையிலேயே மரணமடைவர்.  ஆயுசு குறையும்.  பெண்கள் ஐந்து, ஆறு வயதிலேயே குழந்தை பெறுவர்.  ஆண்கள் எட்டு, ஒன்பது வயதிலேயே ப்ரஜா வ்ருத்தி செய்யும் சக்தியைப் பெறுவர்.  பன்னிரண்டாவது வயதில் தலை நரைத்து, இருபது வயதுக்கு மேல் வாழமாட்டார்கள்.

அறிவு குறைந்து, வைதீக வேஷம் அதிகரிக்கும். தீய எண்ணத்தால் விரைவிலேயே மக்கள் அழிவர்.  தர்ம கார்யங்கள் பாதியிலேயே தடைபடும்.  இவைகளாலேயே புத்திசாலிகள் கலி வளர்வதை அறிந்து கொள்வர்.  பாஷண்டிகளால் மதி மயங்கிய மக்கள் விஷ்ணுவை ஆராதிக்க மாட்டார்கள்.
தெய்வம், வேதம், ப்ராஹ்மணர்களால் யாருக்கு என்ன பயன்?  நீரால் செய்யப்படும் புண்யாஹவாசனங்கள் எதற்கு? என்ற கேள்விகள் மிகும்.  மழையும், விளைச்சலும் குறையும்.  கோணி போன்ற ஆடைகளை அணிவர்.  மரங்கள் யாவும் வன்னி மரங்களைப் போல் மலிவடையும்.  யாவரும் சூத்ர ஜாதியைப் போலிருப்பர்.  தான்யங்கள் சிறுத்து விடும்.  பால் நெய் போல இருக்கும்.  சந்தனம் கோரைக் கிழங்கு போலாகும்.  கிடைப்பது அரிதாகும்.  ஆண்கள் மாமனார், மாமியார்களையே மதிப்பர்.  மைத்துனர்களுக்கும், அழகிய மனைவியை உடையவர்களுக்கும் மதிப்பு ஏற்படும்.  யார் தாய்? யார் தகப்பன்? என்று தத்வங்களைக் கூறுவர்.  மனதாலும், வாக்காலும், உடலாலும் தினந்தோறும் மக்கள் பாவங்களையே செய்வர்.  சத்யமும், தூய்மையும், தகாத செயல்களில் வெட்கமும் அழியும்.  தர்மம் எங்கோ ஒளிந்து கொண்டு வசிக்கும்.
இந்தக் கொடுமைகளால், க்ருத யுகத்தில் தவத்தால் அடையும் பயன், கலியுகத்தில் நாம ஸங்கீர்த்தனம் முதலிய சிறு முயற்சிகளிலேயே கிடைக்கும்.

06_02 குறைந்த முயற்சியால் மிகுந்த பலனை எளியோனும் இந்த கலியில் அடையலாம் என்பது குறித்து தன் மகனான வ்யாஸரின் கருத்தை பராசரர் இங்கு விவரிக்கிறார்.
ஒரு ஸமயம் மஹர்ஷிகளிடையே “எந்த காலம் சிறிய தர்மத்திற்கும் பெரும் பலனைக் கொடுக்கும்? அந்த தர்மத்தையும் எளிதில் அனுஷ்டிக்கத் தகுந்தவர் யார்?” என்ற வினா எழுந்தது.  இதற்கு விடையறிய அவர்களனைவரும் வ்யாஸரிடம் சென்றனர்.  அப்போது என் மகனான வ்யாஸர் கங்கையில் மூழ்கியிருந்தார்.  அவர்களும் காத்துக் கொண்டிருந்தனர்.  ஒரு முறை வெளியே வந்த அவர் “சூத்ரன் நல்லவன், கலி நல்லது” என்று கூறி விட்டு மீண்டும் மூழ்கிவிட்டார்.  மீண்டும் வெளியே வந்த அவர் “ஆமாம், சூத்ரனே மிகுந்த புண்யசாலி” என்று கூறினார்.  சிறிது நேரத்தில் மீண்டும் நீரிலிருந்த எழுந்த அவர் “பெண்களே புண்யவதிகள், அவர்களை விட புண்யம் செய்தவர் யாருமில்லை” என்று கூறிவிட்டு மூழ்கினார்.
பின் ஸநானம், அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு வந்த அவரிடம் இந்த மஹர்ஷிகள் “நீங்கள் கங்கையிலிந்து அவ்வப்போது வெளியே வந்து கூறின வார்த்தைகளின் பொருளை அறிய விரும்புகிறோம்.  ரஹஸ்யமில்லையென்றால் அருள வேண்டும்” என்று விண்ணப்பித்துக் கொண்டனர்.  வ்யாஸர் சிரித்துக் கொண்டே “க்ருத யுகம் புண்ய பலனை பத்து வருஷங்களிலும், த்ரேதாயுகம் ஒரு வருஷத்திலும், த்வாபரயுகம் ஒரு மாதத்திலும் தரும்.  ஆனால் கலியோ ஒரே நாளில் தரும்.  அதேபோல் க்ருதயுகத்தில் கடினமான நெடுந்தவத்தாலும், த்ரேதா யுகத்தில் பெரும் யாகங்களாலும், த்வாபரத்தில் பூஜைகள், அர்ச்சனைகளாலும் அடையும் பயனை கலியில் கேசவனின் நாமஸங்கீர்த்தனத்தாலேயே அடைந்து விடலாம், சிறு முயற்சிகளான இந்த காரணங்கள் பற்றியே கலி நல்லது என்று சொன்னேன்.
அவ்வாறே ப்ராஹ்மணனுக்கும் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன.  வேதாத்யயனத்தை முறையோடு செய்து, பின் தர்ம வழியில் பொருளீட்டி, அதை வேதத்தில் விதித்துள்ள கர்மங்களில் டம்பமின்றி செலவிட வேண்டும்.  வீண் பேச்சு, செயல்களில் ஈடுபடாது, ஸதா இறை த்யானத்திலேயே இருக்க வேண்டும்.  உணவையும், நீரையும் கூட இஷ்டப்படி எடுத்துக் கொள்ள சுதந்திரம் இல்லை.  சாத்வீகமான உணவை இறைவனுக்குப் படைத்த பின்பே உண்ண வேண்டும்.  புலனடக்கத்தோடு இருக்க வேண்டும்.  இவர்கள் எப்போதும் இப்படி சாஸ்த்ரங்களுக்குக் கட்டுப்பட்டே இருக்க வேண்டும். இந்த கடும் விதிகளாலேயே அவர்களுக்கு புண்ய லோகங்கள் கிடைக்கின்றன.  இல்லையென்றால் ப்ராஹ்மணன் பாபிஷ்டனாகி, தீண்டத்தகாதவனாகி விடுகின்றான்.
வேளாளர்களுக்கு இப்படி எந்த விதக் கட்டுப்பாடுகளும் இல்லை.  வேதாத்யயனம் இல்லை.  மந்த்ரங்களின்றியே எளிய ஹோமங்களைச் செய்யலாம்.  மேல் வர்ணத்தாருக்குப் பணி செய்தே நல்ல உலகங்களை அடைகின்றனர்.  இதனாலேயே சூத்ரர்களை நல்லவர்கள் என்று கூறினேன்.
பெண்களும் இவ்வாறே.  ஆண்கள் சம்பாதிக்க வேண்டும், அதைக் காக்க வேண்டும்.  பின் ஸத்பாத்ரங்களைத் தேடி அதை செலவிட வேண்டும். இதனாலேயே புருஷர்களுக்கு மேலான லோகங்கள் கிடைக்கின்றன.  ஆனால் அவர்களுக்கு உண்மையாகப் பணிவிடை செய்வதாலேயே பெண்கள் புண்ய லோகங்களைப் பெற்று விடுகின்றனர்.  இதனாலேயே பெண்கள் புண்யவான்கள் என்று கூறினேன்” என்றார் வ்யாஸர்.  இவ்வாறாக தங்கள் ஐயம் தீர்ந்த மஹர்ஷிகளும் வ்யாஸரைப் பூஜித்துப் புகழ்ந்து கொண்டே தங்கள் இடத்திற்குச் சென்றனர்.
இவ்வாறாக கலி ஸ்வரூபத்தை மைத்ரேயருக்கு விளக்கினார் பராசரர்
06_04 இந்த வெள்ளம் ஸப்தரிஷி மண்டலத்தையும் மூழ்கடித்து அப்போது எங்கும் ஒரே ஜல மயமாக இருக்கும்.  அப்போது மஹாவிஷ்ணுவின் முகத்திலிருந்து பெருங்காற்று உண்டாகி இந்த மழை மேகங்களைக் கலைத்து விடும்.  பின் இந்த காற்று நூறு வருஷங்களுக்கு வீசிக் கொண்டிருக்கும்.  பின் இதுவும் விஷ்ணுவிடம் லயித்து விடும்.  அப்போது ப்ரளயக் கடலில் ஆதிசேஷன் மேல் சயனித்துக் கொண்டிருக்கும் ப்ரஹ்மரூபமான மஹாவிஷ்ணுவை ஜன லோகத்திலிருக்கும் ஸனகர் முதலான ஸித்தர்களும், முக்திபெற்று ப்ரஹ்ம லோகத்திலிருப்பவர்களும் வணங்கித் துதிப்பார்கள்.  வாஸுதேவன் என்ற பெயருடன் ப்ரஹ்ம ரூபியான மஹாவிஷ்ணு அப்போது ஆயிரம் சதுர்யுகங்கள் யோகநித்ரையில் இருப்பார்.  இவர் தூங்குவதன் நிமித்தமாக இந்த ப்ரளயம் நிகழ்வதாலேயே இதற்கு நைமித்திக ப்ரளயம் (அவாந்தர) என்று பெயர்.  இந்த இரவு கழிந்து அவர் கண் விழித்து மீண்டும் ஆரம்பத்தில் கூறிய ப்ரகாரம் ஸ்ருஷ்டியைத் தொடங்குகிறார்.
இனி ப்ராக்ருத ப்ரளய வர்ணனை.  நைமித்திக ப்ரளயத்தின் முடிவில் எல்லா லோகங்களும் அழிந்து விட, அதன் பின் மஹாவிஷ்ணு தத்வங்களும் அழியும்படி நினைக்கிறார்.  அப்போது ப்ராக்ருத ப்ரளயம் தொடங்குகிறது.  முதலில் தண்ணீர் நிலத்தின் (ப்ருத்வி) குணமான கந்தத்தைப் (வாஸனை)பறித்து விடும்.  அப்போது தன் குணம் அழியவே நிலம் நீரோடு நீராகி விடும்.  பின் நீரின் குணமான ரஸத்தை (ருசி) நெருப்பு எடுத்துக் கொண்டு விடும்.  அப்போது நீர் முழுதும் வற்றி நெருப்பில் ஒன்றி விடும்.  பின் நெருப்பு தன் குணமான ரூபத்தை வாயுவிடம் இழந்து, அதோடு ஒன்றி விடும்.  பின் அதுவும் தன் குணமான ஸ்பர்சத்தை ஆகாயத்திடம் இழந்து ஆகாயத்தோடு ஒன்றி விடும்.  கடைசியில் இந்த ஆகாயத்தின் குணமான சப்தத்தையும் தாமஸ அஹங்காரம் எடுத்துக் கொண்டு தன்னோடு லயப்படுத்திக் கொள்கிறது.  (இவ்வாறே பஞ்சேந்த்ரியங்கள் ஸாத்விக அஹங்காரத்தில் லயமடைகின்றன)
இந்த அஹங்காரங்கள் பின் மஹத் தத்வத்தில் ஒடுங்குகின்றன.  பின் அதுவும் ப்ரக்ருதியில் ஒடுங்குகிறது.  ஸத்வ, ரஜ, தமோ குணங்கள் சமமாக இருக்கையில் இது ப்ரக்ருதி எனப்படுகிறது.  இது வ்யக்த, அவ்யக்தங்கள் என இரு வகையில் இருக்கும்.  இதில் வ்யக்தம் இறுதியில் அவ்யக்தத்தில் லயப்படும்.  இப்படியே வ்யக்தமான ஜீவனும் முடிவில் அவ்யக்தமான பரமாத்ம ஸ்வரூபத்தில் ஒடுங்கி விடுகிறான்.  இப்படி ஜீவனும், ப்ரக்ருதியும் லயப்பட்ட பரமாத்ம ஸ்வரூபத்தையே வேதங்களும், வேதாங்கங்களும் மஹாவிஷ்ணு என்று அழைக்கின்றன.
வேதம் ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி என இரு வழிகளை போதிக்கிறது.  இவையிரண்டுமே பரமாத்மாவான விஷ்ணுவையே ஆராதிக்கின்றன.  ப்ரவ்ருத்தி மார்க்கத்தில் ருக், யஜுஸ், ஸாம வேதங்கள் இந்த விஷ்ணுவையே யாகங்களில் யக்ஞேச்வரனாக ஆராதிக்கின்றன.  நிவ்ருத்தி மார்க்கமான யோகவழியில் நிலைபெற்ற யோகிகளும் ஞானமாகவும், ஞான மூர்த்தியாகவும், மோக்ஷத்திற்கு அதிகாரியாகவும் இவனையே துதிக்கின்றனர்.  குறில், நெடில் முதலான சொற்களில் அடங்கும் அசேதனப் பொருட்களும், சொல்லில் பொருளாகாத சேதனங்களும் இவனுடைய அவயவங்களே.
இந்த ப்ரமாத்மாவிற்கு இரண்டு பரார்த்தங்கள் ஒரு பகல்.  இப்படி வ்யக்தங்கள் அவ்யக்தத்தில் ஒடுங்கவும், அந்த அவ்யக்தங்கள் ஜீவனில் ஒடுங்கவும், பின் அதுவும் பரமாத்மாவில் ஐக்யப்படவும் ஆகும் காலமான இந்த த்விபரார்த்தங்கள் பரமாத்மாவுக்கு ஒரு இரவாகும்.  கார்யங்களை ஒட்டியே இந்த இரவு, பகல் கணக்குகளேயன்றி புருஷோத்தமனுக்கு இவையெதுவுமில்லை.
06_05 ஆத்யந்திக ப்ரளயம்
மோக்ஷமே ஆத்யந்திக ப்ரளயம்.  ஞானமும், வைராக்யமும் வந்தால்தான் இந்த மோக்ஷத்தை அடைய முடியும்.  நாம் அனுபவிக்கும் விஷயங்களில் இருக்கும் கஷ்டங்களையெல்லாம் அறிந்து கொண்டால் தான் அந்த விஷயங்களையெல்லாம் அதனால் வெறுத்து அவற்றிலிருந்து விடுபட வழி தேடத் தோன்றும்.  ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம் என்ற தாபத்ரயங்களை இதற்கு நாம் அறிந்து கொள்ள வேண்டும்.ஆத்யாத்மிக தாபம் சரீர சம்பந்தமாகவும், மன சம்பந்தமாகவும் வரலாம்.  உடலுக்கு வரும் வ்யாதிகள் சரீர சம்பந்தமான தாபங்கள்.  காம, க்ரோதாதி வ்யாதிகள் மன சம்பந்தமானவை.  இவ்வாறே மற்ற விலங்குகள், பறவைகளால் உண்டாகும் துக்கங்கள் ஆதிபௌதிகம்.  இயற்கையான சீதோஷ்ணங்களால் உண்டாகும் துக்கங்கள் ஆதிதைவிகமாகும்.  இந்த தாபங்கள் கர்ப்ப ஸம்பந்தத்தாலும், நம் வினைகளாலும், அஞ்ஞானம், நரகம் இவைகளாலும் உண்டாகி ஆயிரக்கணக்கில் சூழ்ந்து இருக்கின்றன.கர்ப்பவாஸ துக்கங்கள்
கர்ப்பத்தில் இந்த உயிர் மிகவும் ம்ருதுவான சரீரத்தோடு இருக்கிறது.  மலங்களில் நடுவே தாயின் வயிற்றில் வசிக்கிறது.  உல்பம் என்ற தோல் இதன் உடலை மூடியிருக்கிறது.  முதுகு, கழுத்து எலும்புகள் வளைந்து, கை, கால்களை நீட்ட முடியாமல், மூச்சு விடவும் கஷ்டப்பட்டுக் கொண்டு, இந்த உயிர் அப்போது முடங்கிக் கொண்டிருக்கிறது.  தாயின் உணவில் இருக்கும் காரம், புளிப்புகளால் இது கடுமையாக தாக்கப்படுகிறது.  தன் அறிவைக் கொண்டு தான் செய்த வினைகளாலேயே இப்போது கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதை அறிந்து மிகுந்த வேதனையோடு இருக்கும்.

பின் ப்ரஹ்மத்தின் காற்றால் மேலும் சரீர எலும்புகள் நொறுங்கும்படி ஒடுக்கப்பட்டு, ப்ரஸவ வாயுக்களால் தலை கீழாக திருப்பப்பட்டு மல, மூத்ர சேற்றுப்பூச்சோடு மிகவும் ச்ரமப்பட்டு தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே வந்து விழுகிறது.  துர்நாற்றமுடைய யோனி த்வாரத்திலிருந்து விழும்போது முட்களால் குத்தப்படுவது, வாளால் அறுக்கப்படுவது போன்ற துன்பங்களை அனுபவித்து ஒரு புழு வெளியே வந்து விழுவதைப் போலவே இந்த ஜீவனும் வந்து விழுகிறது.  வெளியே விழுந்ததும் வெளிக்காற்றான சடம் என்ற காற்று பட்டதும் மூர்ச்சையடைந்து கர்ப்பவாஸத்தில் உண்டான விவேகத்தை முழுதும் மறந்து விடுகிறது.

பிறந்தபிறகும் உடல் அறித்தால் சொறிந்து கொள்ள முடியாது.  உடலைத் தன்னிஷ்டப்படி திருப்ப முடியாது. குளிப்பது, குடிப்பது, உண்பது என எதுவும் ஏனையோர் இஷ்டப்படியே.  எண்ணத்தை வெளிப்படுத்தவும் முடியாது.  மல, மூத்ரங்கள் நிறைந்த படுக்கை.  எறும்பு, கொசுக்கள் கடித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

இதன் பின் யௌவனம் வந்த பின்பும் அஞ்ஞானத்தால் அறிவிழந்து சிற்றின்பங்களிலேயே நாட்டம் செலுத்துகிறது இந்த ஜீவன்.  நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கே செல்வேன்? நான் பிறந்த காரணம் என்ன? ஏன் இப்படிக் கட்டுண்டிருக்கிறேன்? காரண, கார்யங்கள் என்ன? எதைச் செய்யலாம்? எதைச் செய்யக் கூடாது? எதைப் பேசலாம்? பேசக்கூடாது? தர்மாதர்மங்கள் எவை? எதில் குணம் உள்ளது? எதில் தோஷம் உள்ளது? இவையெதிலுமே ஆர்வம் செலுத்தாது விலங்குகளைப் போல புணர்வதையும், உண்பதையுமே முக்யமாகக் கொண்டு காலம் கழிக்கிறது இந்த ஜீவன்.  தமோகுணத்தால் வந்த அஞ்ஞானத்தால் கெட்ட கார்யங்களைச் செய்கிறான்.  வைதீக கார்யங்கள் அழிகின்றன.  இதனால் மேலும் புண்ய, பாவங்களைச் சேர்த்துக் கொள்கிறான்.

முதுமை எய்தியதும் உடல் சிதைந்து விடுகிறது.  பற்களும், அவயவங்களும் ஆடி விடுகிறது.  பற்கள் விழுந்தும் விடுகிறது. கண்பார்வை மங்கி, தலை நரைத்து, உடல் சுருங்கி விடுகிறது.  கருவிழிகள் கண்குழிகளில் ஒடுங்கி விடும்.  முதுகெலும்பு வளைந்து, மற்ற எலும்புகள் வெளிப்படையாகத் தெரிய, ஜீர்ண சக்தி குறைந்து, நடக்கவும், படுக்கவும் முடியாமல் துன்படைகிறது இதே ஜீவன்.  எதற்கும் அடுத்தவர் உதவியை நாடி, இந்த்ரியங்கள் செயலிழந்து வார்த்தையும் வெளிவராது அனைவரிடமும் அவமானப்படுகிறான்.  தான் இளமையில் அனுபவித்தவைகளை முன் ஜன்மத்தில் நடந்தவைகளைப் போல நினைக்கிறான்.

மரணத் தருவாயிலும் சிந்தையை மனை, மக்கள், சுற்றம், செல்வம் இவைகளில் செலுத்தி, கவலை கொள்கிறான்.  வ்யாதிகள் ரம்பங்களைப் போலவும், யம பாசங்கள் போலவும் வாட்டி, வதைக்க, கண்கள் சுழல, உடல் உதற, நாக்கு உலரத் திண்டாடுகிறான்.  உதான வாயு மேலெழும்பித் தொண்டையை அடைக்க, நெஞ்சில் கர், கர் எனக் கோழைச் சப்தம் உண்டாகி, யமபடர்கள் பிடித்திழுக்க, பழகிய உடலை விட்டு பெரும் கஷ்டத்தோடு இந்த ஜீவன் மிகுந்த தாபத்தோடும், பசி, தாகத்தோடும் வெளிக்கிளம்புகிறான்.

வெளிக்கிளம்பியதும் தன் தீவினைப்பயன்களை அனுபவிக்க யாதனா சரீரத்தைப் பெறுகிறான்.  யமகிங்கரர்கள் ஜீவனைப் பாசத்தால் கட்டி, தடியால் அடித்து, துன்பங்கள் நிறைந்த பாதையில் நடத்தி யமனிடம் இட்டுச் செல்கிறார்கள்.  பின் காய்ந்த மணலிலும்,  நெருப்பிலும் வாட்டுதல், கத்தி, வாள், கோடரிகளால் பிளப்பது, சூலத்தில் இடுவது, கொடிய விலங்குகளிடம் உணவாக விடுவது எனப் பல வகையில் துன்புறுத்துவர்.  ஸ்வர்க்கத்திற்கு சென்றாலும் புண்ய பலன் தீர்ந்து என்று மீண்டும் பிறந்து துன்பத்தை அனுபவிக்க நேருமோ என்ற நினைப்பிலேயே கிடைக்கும் ஸுக விஷயங்களையும் அனுபவிக்க முடியாமல் தவிக்கிறான்.  பின் மீண்டும் பிறப்பு.  எப்போது இறப்போம் என்பதும் தெரியாது.  இப்படி மீண்டும், மீண்டும் இந்த சக்ரத்தில் ஜீவனுக்கு, எப்படி பருத்திக் கொட்டையை பஞ்சுகள் சூழ்ந்திருக்குமோ அப்படி எங்கும் துன்பமே.  ஸுகம் தரும் என்று நினைக்கும் பல விஷயங்களையும் ஆராய்ந்து பார்த்தால் துன்பமே அதிகம்.

கொடிய ஸூர்யனைப் போன்ற இந்த துக்கங்களிலிருந்து ஜீவன்களுக்கு விடுதலை மோக்ஷமே.  அந்த மரமே ஸம்ஸார துக்கமென்கிற இந்த வெயிலில் வாடிய ஜீவன்களுக்கு நிழல் தந்து ஸுகம் அளிக்கும்.  வேறெங்கும் அது கிடைக்கப் போவதில்லை.  பிறப்பு, இறப்புகளால் உண்டாகும் மூவகைத் துன்பங்களுக்கும் இறைநினைப்பே மிகச்சிறந்த ஒரே மருந்தாகும்.  இறைவனை நினைத்து அனுபவிப்பதில் உண்டாகும் ஆனந்தம் மற்றெதையும் மறக்கச் செய்து விடும்.  துன்பம் சிறிதும் கலவாத அத்தகைய உயர்வுடையது பகவத்ப்ராப்தி.

அதனால் அறிஞர்கள் இந்த ஸுகத்தைப் பெற முயற்சிக்க வேண்டும்.  நம் கார்யங்களால் ஸித்திக்கும் ஆகமஜம், விவேகத்தால் ஸித்திக்கும் விவேகஜம் என்ற இருவகை ஞானமும், அதற்குரிய செயல்களுமே இதை அடையும் வழி.  சாஸ்த்ரங்களைப் படிப்பதாலும், நடைமுறைப்படுத்துவதாலும் கிடைக்கும் ஞானம் விளக்கு போன்றது. இது அஞ்ஞானத்தால் உண்டான இருளைக் களைந்து ஆத்மாவிற்கும், சரீரத்துக்கும் உள்ள வேற்றுமை, ஜீவாத்மா, பரமாத்மாவிற்குள்ள வேற்றுமை, இவைகளின் உண்மை ஸ்வரூபம் முதலியவைகளை விளங்கச் செய்கிறது.  நம் நற்கார்யங்களால் கிடைக்கும் இந்த ஞானம் ஆகமஜம்.  விவேகஜந்ய ஞானம் இதைவிட உயர்ந்தது.  அது ஸூர்யனுக்கு ஒப்பானது.  விளக்கை விட ஸூர்யன் எப்படிப் பொருட்களைத் தெளிவாக நமக்குக் காட்டுமோ அதுபோல இந்த விவேகஜம் அஞ்ஞானத்தை அடியோடு அழித்து விடும்.  இந்த காரணத்தாலேயே மனு ஸ்ம்ருதி வேதார்த்தங்களான உபநிஷத்துகள் போதிக்கும் விவேகஜன்ய ஞானத்தை பரப்ரம்ஹம் என்றே கோஷிக்கிறது.

அதர்வ வேதத்தைச் சேர்ந்த முண்டகோபநிஷத்  விவேகஜன்ய ஞானத்தை பரவித்யை என்றும், ஆகமஜன்ய ஞானத்தை அபர வித்யை என்றும் கூறுகிறது.  பரப்ரஹ்மமான இந்த விவேகஜமே இறைவனாகும்,  ஜீவன்முக்தர்களும் அதுவே.  பகவான் என்ற பதத்திற்குப் பொருள் படைத்து, காத்து, பின் தன்னுள் லயப்படுத்துதலே.  ஸம்ஸ்க்ருத பதமான “பக” என்பது ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்ற ஆறு குணங்களைக் குறிக்கும்.  இந்த குணங்களை உடையவனே பகவான் எனக் குறிக்கப்படுகிறான்.  இந்த சொல்லே முக்தர்களைக் குறிக்கும் போது ப்ரஹ்மத்தை அறிந்தவர் என்ற பொருளில் உபயோகிக்கப்படுகிறது.  வாஸு என்ற நாமம் எங்கும் நிறைந்திருப்பதையும், அவனிடத்திலேயே எல்லாம் வஸிக்கின்றன என்பதையும் குறிக்கும்.

இந்த விஷயத்தை முன்பே ஒரு ஸமயம் கேசித்வஜன் என்பவர் காண்டிக்ய ஜனகருக்கு உபதேஸித்திருக்கிறார்.  இந்த வாஸுதேவன் ப்ரக்ருதியும், அதன் கார்யமான துக்கமும், அஞ்ஞானமும் அற்றவன்.  அவன் அசேதனனுமில்லை, சேதனனுமில்லை.  அனைத்திற்கும் ஆத்மா அவன்.  அனைத்து நற்குணங்களும் நிறைந்தவன்.  தன் சக்தியின் சிறு அம்சத்தாலேயே உலகனைத்தையும் தாங்கக் கூடியவன்.  ஸாது ஸம்ரக்ஷணத்திற்காக தன்னிச்சைப்படியே பல அவதாரங்களை எடுக்கக் கூடியவன்.  உலகிற்கு எல்லா நன்மைகளையும் தருபவன்.  முன்பு கூறிய ஷட்குணங்களின் இடமாய் இருப்பவன்.  கர்மங்களும், அதன் தோஷங்களும் அற்றவன்.  பரப்ரஹ்மமாயிருக்கையில் அவ்யக்தனாக நமக்கு விளங்காதவனாகவும், ராம, க்ருஷ்ணாதி வ்யூஹ நிலைகளில் வ்யக்தமாக நமக்கு விளங்கும்படி இருப்பவனும் இவனே.  ஸர்வக்ஞன், ஸர்வ சக்தன், ஸர்வேச்வரன்.  இவனையே சாஸ்த்ரஞ்ய ஞானம் பொதுவாகக் கூறுகிறது.  விவேகஜம் தெளிவாகக் கூறுகிறது.

06_06  அளவற்ற கல்யாண குணங்கள், செல்வம், திவ்ய மங்கள விக்ரஹங்களையுடைய அந்த இறைவனை நம் ஊணக்கண்களால் அறிய முடியாது.  அதற்கு ஸ்வாத்யாயம், யோகம் என்ற இரு கண்கள் தேவை.  வேதாந்த சாஸ்த்ரம், த்வாதசாக்ஷரீ, ப்ரணவம் முதலிய தத்வங்களை அறிந்து தனதாக்கிக் கொள்வதே ஸ்வாத்யாயம்.  இந்த வாக்ய விசாரங்களால் தத்வங்களை நன்கு அறிந்த பிறகு அந்த ப்ரஹ்மத்தை உபாஸிக்க வேண்டும்.  இந்த உபாஸனையே யோகம்.  இந்த ஞானங்கள் ப்ரஹ்மத்தையே விஷயமாகக் கொண்டிருப்பதாலும், ப்ரஹ்மத்தையே அடைவிப்பதாலும் இவைகளே ப்ரஹ்மம் என்றும் சொல்லப்பெறுகின்றன.  யோகம் செய்ய ஆரம்பித்த பின்பும் அவ்வப்போது சாஸ்த்ரார்த்த சிந்தனையான ஸ்வாத்யாயமும் வேண்டும்.  இவ்விரண்டினுள்ளும் ஸ்வாத்யாயம் ஸாதாரணக் கண்.  யோகம் சிறந்த கண்.  இந்த சிறந்த யோகத்தைத் தனக்கு விரிவாய் விளக்குமாறு மைத்ரேயர் பராசரரை வேண்டிக் கொள்ள அவர் இது ஸம்பந்தமாக கேசித்வஜருக்கும் சாண்டிக்ய ஜனகருக்கும் நடந்த ஸம்வாதத்தைக் கூறுகிறார்.

ஜனக வம்சத்தில் தர்மத்வஜர் என்ற ஜனகர் ஒருவர் இருந்தார்.  அவருக்கு மிதத்வஜர், க்ருதத்வஜர் என்ற இரு பிள்ளைகள் இருந்தனர்.  இவர்களில் க்ருதத்வஜர் எப்போதும் வேதாந்த விசாரம் செய்து கொண்டு, மகிழ்ந்திருப்பார்.  மிதத்வஜர் கர்ம மார்க்கத்தில் அரசாண்டு கொண்டிருந்தார்.  க்ருதத்வஜருக்கு கேசித்வஜர் என்ற மகனும், மிதத்வஜருக்கு காண்டிக்யரும் பிறந்தனர்.  இருவரும் அவரவர் தந்தை வழியில் சிறந்தவர்களாக இருந்தனர்.  ஒரு ஸமயம் இவர்களிடையே பகை மூண்டு, அதில் கேசித்வஜர் வென்று, காண்டிக்யரை ராஜ்யத்திலிருந்து விரட்டி விட்டார்.  காண்டிக்ய ஜனகர் தன் மந்த்ரி, புரோஹிதருடன் காட்டிற்கு சென்று வஸிக்கலானார்.

ப்ரஹ்மத்தை உபாஸித்துக் கொண்டே ராஜ்ய பரிபாலனம் செய்து வந்த கேசித்வஜர் தன் தீவினைகள் தீர பல யாகங்களையும் செய்து வந்தார்.  அப்படி ஒரு ஸமயம் யாகம் செய்து கொண்டிருக்கையில், அதற்கு பால் தரும் அவருடைய பசுவை காட்டில் புலி ஒன்று கொன்று விட்டது.  இந்த யாகம் இப்படித் தடைபட்டதற்குக் கவலைப்பட்ட கேசித்வஜர் அதற்கான ப்ராயச்சித்தத்தை ருத்விக்குகளிடம் கேட்டார்.  அவர்கள் தங்களுக்கு அதுபற்றி தெரியவில்லை என்றும், கசேரு என்பவர் அறிவார் என்றனர்.  கசேரு தனக்கும் தெரியாது என்று கூறி பார்க்கவர் என்பவரிடம் கேட்குமாறு கூறினார்.  பார்க்கவர் சுனகர் என்பவரிடம் கேட்குமாறு கூறினார்.  அவர் அரசரிடம் தங்கள் யாருக்கும் தெரியாது என்றும், அரசரால் தோற்கடிக்கப்பட்டு, ஓடிய காண்டிக்ய ஜனகரே இந்த விஷயம் தெரிந்தவர் என்றும், விருப்பமிருந்தால் அவரிடமே சென்று கேட்டுக் கொள்ளும் என்று கூறிவிட்டார்.

“தர்மகார்யம் செய்து கொண்டிருக்கும்போது ஒருவன் மரணமடைந்தால் அவன் தர்ம பலனைப் பெற்று விடுகிறான் என்றே சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.  எனவே தவறாகப் புரிந்து கொண்டு, ப்ராயச்சித்தம் கேட்க வரும் நம்மைக் காண்டிக்யர் கொன்று விட்டாலும், நமக்கு ஒரு குறையுமில்லை.  யாகப்பலன் கிடைத்து விடும்.  இல்லாது ப்ராயச்சித்தத்தைக் கூறினாலோ யாகம் நிறைவேறி விடும், ஆகவே எது நடந்தாலும் பிழையில்லை” என ஒரு நிமிஷம் இதை யோசித்த கேசித்வஜர், பின் தன் சத்ருவான அவரிடத்திலேயே ப்ராயச்சித்தம் அறிந்து கொள்ள முடிவு செய்து அவரிடம் சென்றார்.

மான்தோலைப் போர்த்திக் கொண்டு தன்னை நோக்கி காட்டில் வந்து கொண்டிருக்கும் கேசித்வஜனைக் கண்டதும்,  காண்டிக்யரின் கண்கள் சிவந்தன.  வில்லில் நாணேற்றி, பாணத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்.  கேசித்வஜனை நோக்கி “அடே மூடா! உன் வேஷத்தில் நான் ஏமாறுவேன், அப்போது என்னைக் கொன்று விடலாம் என்று நீ நினைக்கிறாய். நீ க்ருஷ்ணாஜினம் தரித்துக் கொண்டு வந்தாலும் நான் ஏமாற மாட்டேன்.  உன்னைக் கொல்லவே செய்வேன்.  நானும், நீயும் சேர்ந்து எத்தனை மான்களைக் கொன்றுள்ளோம், அவைகள் க்ருஷ்ணாஜினம் போர்த்திக் கொண்டிருக்கவில்லையா?  என் ராஜ்யத்தைப் பறித்துக் கொண்ட நீ எனக்கு ஆததாயீ ஆவாய்.  உன்னைக் கொல்வதில் ஒரு தவறுமில்லை, என் கையில் நீ இறப்பது நிச்சயம்” என்று கூறினார்.

கேசித்வஜர் சிரித்துக் கொண்டே “காண்டிக்யரே! நாம் உம்மிடம் ஒரு ஸந்தேஹத்தைத் தீர்த்துக் கொள்ளவே வந்துள்ளேன்.  கொல்ல வரவில்லை.  இதையறிந்த பின் நீங்கள் கோபத்தையோ அல்லது பாணத்தையோ விடுங்கள்” என்றார். உடனே தன் மந்த்ரிகளுடன் இதை ஆலோசித்தார் காண்டிக்யர்.  மந்த்ரிகள் பகைவன் சிக்கியிருக்கும்போதே அவனைக் கொன்று விட்டால் ராஜ்யம் மீண்டும் வசமாகிவிடுமாதலால், அவனைக் கொன்று விடுவதே நல்லது என்று கூறினர்.  ஆனால் காண்டிக்யர் “இவனைக் கொன்று நான் இந்த ராஜ்யத்தை அடைந்தால் இவனுக்கு பரலோகம் வசமாகும்.  நான் இவனைக் கொல்லாது விட்டால் எனக்குப் பரலோகமும், இவனுக்கு பூலோகமும் கிடைக்கும்.  பூலோகஜயம் குறுகிய காலத்திற்கே ஸுகத்தையளிக்கும்.  பரலோகஸுகமோ நீண்ட காலத்திற்காகும்.  ஆகவே நான் பரலோகத்தையே பெறுவேன்.  இவனைக் கொல்ல மாட்டேன்” என்று கூறினார்.

அப்படியே கேசித்வஜருக்கு நேர்ந்ததற்கான ப்ராயச்சித்தத்தை விரிவாகக் கூறி, அவர் யாகம் முடிப்பதற்கான உதவியைச் செய்தார்.  ஆனால் யாகம் நன்கு முடிந்த பின்பும் கேசித்வஜருக்கு மனம் சந்தோஷமாயில்லை.  குழப்பமாகவே, நிம்மதியின்றியே இருந்தது.  யோசித்துப் பார்த்தார்.  “ப்ராஹ்மண பூஜைகள் நன்கு நடந்தன.  பொது மக்களுக்கும் வேண்டியவைகள் செய்யப்பட்டன.  யாசகர்களும் சந்தோஷமாகவே சென்றனர்.  எல்லாருக்குமே தகுந்த முறையில் உபசாரம் செய்தோம்.  இருந்தாலும் ஏதோ ஒன்றை விட்டு விட்டதாகவே தோன்றுகிறதே” என்று சிந்திக்கலானார்.  இறுதியில் ப்ராயச்சித்த உபதேசம் செய்த காண்டிக்ய ஜனகருக்கு குருதக்ஷிணை என்று ஒன்றும் தரவேயில்லை என்பது நினைவிற்கு வந்தது.  மீண்டும் காட்டிற்கு ஓடினார்.

தன்னைப் பார்த்ததும் மீண்டும் கோபமடைந்த காண்டிக்யரிடம் தான் வந்த காரணத்தைக் கூறினார் கேசித்வஜர்.  காண்டிக்யர் உடன் மந்த்ரிகளிடம் கலந்தாலோசித்தார்.  அவர்கள் மீண்டும் ராஜ்யத்தையே கேட்டுப் பெறுமாறு கூறினர்.  “மந்த்ரிகளுக்கு செல்வம் சேர்ப்பதைத் தவிர வேறென்ன வேலை” என்று அவர்களிடம் கூறிச் சிரித்தார்.  பின் அவர்களிடம் நிலையான மோக்ஷத்தை விளக்கி விட்டு, கேசித்வஜரிடம் ஸம்ஸார துக்கத்தைப் போக்கும் அத்யாத்ம வித்யையான யோக மார்க்கத்தைத் தனக்கு உபதேசிக்குமாறு கேட்டுப் பெற்றார்.

06_07 குருதக்ஷிணையாக, கேட்பதையெல்லாம் தருவதாகக் கூறிய தன்னிடம் யோகமார்க்கத்தை மட்டுமே உபதேசிக்குமாறு கேட்ட காண்டிக்ய ஜனகரைக் கண்டு பெரு வியப்புடன் “அரசர்கள் ராஜ்யத்தையல்லவா விரும்புவர்? அதுவும் சண்டை, எதிரிகள் இன்றி எளிதில் கிடைக்கும் ராஜ்யத்தை யாராவது மறுப்பார்களா?  நீர் ஏன் ராஜ்யத்தைக் கேட்கவில்லை?  அதுவும் ராஜ்யபரிபாலனம் நமது தர்மமாயிற்றே? ஸ்வதர்மத்தை விடுவது குற்றமல்லவா?” என்று கேட்கிறார் கேசித்வஜர்.  தான் ஏன் அந்தப் பெரும் ராஜ்யத்தை விரும்பவில்லையென்பதை என்று பின்வருமாறு பதிலுரைக்கிறார் காண்டிக்யர்.

“இந்த அரசை அறிவுள்ளவர்கள் விரும்ப மாட்டார்கள்.  நீர் கூறியது சரியே.  க்ஷத்ரியர்களுக்கு ராஜ்ய பரிபாலனமும், தர்மயுத்தங்களும் ஸ்வதர்மமே.  சக்தியிருந்து என் தர்மத்தை நான் விட்டிருந்தால் அது குற்றமே.  ஆனால் அதற்கு எனக்கு சக்தியும் இல்லை, ஆசையும் இல்லை.  ஆகையால்தான் நீங்களும் அதை பறித்துக் கொண்டீர்கள்.  எனவே இதில் என் குற்றம் எதுவுமில்லை. எனக்கும், என் மந்த்ரிகளுக்கும் இந்த ராஜ்யத்தில் தர்மத்தைக் காரணமாகக் கொண்டு ஆசை வரவில்லை.  எனக்கு வந்த ஆசை முன் ஜென்ம கர்மபலன்களை அனுபவிப்பதற்காக வந்தது.  மந்த்ரிகளுக்குள்ள ஆசை ராகத்வேஷங்களால் வந்தது.  எவருக்குமே தர்ம பரிபாலனம் செய்வதற்காக இந்த ராஜ்யத்தில் ஆசை வரவில்லை.

மேலும் நான் இப்போது ராஜ்யபரிபாலனம் செய்ய வேண்டுமானால் உம்மிடம் இந்த ராஜ்யத்தை யாசிக்க வேண்டும்.  க்ஷத்ரியர்கள் யாசிக்கக் கூடாது என்கிறது சாஸ்த்ரம்.  எனவேதான் நான் இதை விரும்பவில்லை.  மேலும் பகுத்தறிவு இல்லாதவர்களே பெரும்பாலும் இந்த ராஜ்யங்களை விரும்புவர்.  நான், எனது என்று மதிமயங்கி இருப்பார்கள்.  என் போன்ற விவேகிகள் இதை மதிக்க மாட்டார்கள்” என்று கேசித்வஜ ஜனகருக்கு, காண்டிக்ய ஜனகர் கூறினார்.  இதைக் கேட்டு மகிழ்ந்த கேசித்வஜரும் காண்டிக்யருக்கு யோக மார்க்கத்தை பின்வருமாறு உபதேசிக்கிறார்.

ஸம்ஸாரத்தில் உள்ள துன்பங்களுக்குக் காரணங்களைக் கூறி, அவைகளை விலக்குவதற்கான வழிகளையும் கூறுகிறார்.  “யோகம் செய்பவர்கள் முதலில் பரமாத்மா, ஜீவாத்மாவின் ஸ்வரூபங்களை பகுத்தறிய வேண்டும்.  வர்ணாச்ரம தர்மங்களையும் ஒரு அங்கமாகவே செய்து வர வேண்டும்.  காண்டிக்யரே! நானும் அவ்வாறே இந்த ப்ரஜா பரிபாலனம், யாகம் முதலியவைகளைச் செய்து வருகிறேன்.  இதனால் பாவங்கள் அழிந்து, உபாஸனம் நன்கு வளர்கிறது.  ஸுகங்களை அனுபவிப்பதால் புண்யபலனையும் அழித்து வருகிறேன்.  பாவ, புண்யங்கள் இரண்டுமே உபாஸனம் செய்பவனுக்கு விரோதிகளாதலால் இரண்டையுமே அவன் போக்கிக் கொள்ள வேண்டும்.  இப்படிக் கடினமான வழிகளால் தான் நானும் ரஜ, தமோ குணங்களை ஒழித்து, ஸத்வ குணத்தால் அறிவை வளர்த்துக் கொள்கிறேன்.

உங்கள் மனமோ இயற்கையாகவே விவேகத்துடன் விளங்குகிறது.  இப்போது அவித்யையின் ஸ்வரூபத்தைக் கூறுகிறேன், கேளும்.  பலன்களில் பற்று கொண்டு செய்யப்படும் கர்மாக்கள் அவித்யை என்று அறியப்படுகிறது.  இந்த காம்ய கர்மாவாகிய மரத்தை வளர்ப்பதால் ஸம்ஸாரம் என்ற பலன் உண்டாகிறது.  இதற்கு இரண்டு காரணங்கள்.  ஒன்று ஆத்மாவை விட்டு சரீரத்தையே ஆத்மாவாக நினைப்பது.  மற்றொன்று ஆத்ம வளர்ச்சிக்கு உதவாமல், இந்த சரீரத்தை மட்டுமே வளர்க்கும் உணவு, நீர், மனை, மக்கள் முதலானவைகளைத் தனதாக நினைத்துக் கொள்வது. இவ்விரண்டுமே ப்ரமைகள்.

இந்த சரீரம் பஞ்ச பூதங்களாலானது.  ஆத்மாவோ பஞ்சபூதங்களிலிருந்து வேறுபட்டு நிற்பது.  ஆனால், மூடர்கள் அனாத்மாவான இந்த சரீரத்தையே நான் என்றும், சரீர ஸுக, துக்கங்களுக்கு உண்டான உணவு, நீர், மனைவி, மக்கள் இவைகளை என்னுடையவை என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.  இப்படி இந்த ஜீவாத்மா முன் ஜென்ம கர்ம வினைகளால் எல்லா விஷயங்களிலும் இருளில் மூழ்கிக் கிடக்கிறான்.  உண்மையை அறிந்து கொள்ளாமல் இந்த ப்ரமைகளால் சரீர ஸுகத்திற்கான கார்யங்களையே செய்து வருகிறான்.  அவித்யையான இந்த கர்மாக்களால் மறுபடி ஸம்ஸாரமே உண்டாகிறது.

மண்ணாலான வீட்டுச் சுவர்களை மீண்டும் மண்ணைக் கொண்டே பூசி, மெழுகி உறுதி செய்து கொள்வது போலவே, பஞ்ச பூதங்களாலான இந்த உடலையும் உணவு, நீர் இவைகளைக் கொண்டே காத்து வளர்த்துக் கொள்கிறோம்.  பஞ்ச பூத மயமான இவைகளால் உடல் வளர்ந்து உறுதி பெறுமேயல்லாது, ஆத்மாவிற்கு ஒரு ப்ரயோஜனமுமில்லை.  ஆத்ம வளர்ச்சிக்கு உபாஸனமே வழியாகும்.  மேலும், ஆயிரக்கணக்கில் பிறவிகளை உடைய ஸம்ஸார வழியில் வந்த இந்த ஜீவன் அஞ்ஞானம் மற்றும் கர்ம வாஸனைகள் என்ற புழுதியால் துக்கங்களையே பெறுகிறான்.

உடலின் புழுதியையும், ச்ரமங்களையும் வெந்நீர்க் குளியல் எப்படிப் போக்கி ஸுகத்தைத் தருமோ, அப்படியே, வருந்தும் இந்த ஆத்மாவின் அஞ்ஞான, மோஹங்களால் உண்டாகும் துக்கங்களையும் தத்வ ஞானம் போக்கும்.  மோஹம் தொலைந்தால் ஜீவன் தன்னிலையில் இருப்பான்.  பின் ஒப்புயர்வற்ற மோக்ஷ ஸுகத்தையும் அடைகிறான்.  ஜீவன் குற்றமற்ற ஆனந்த ஸ்வரூபமே. மோக்ஷமும், ஞானமும் ஜீவன்களுக்கு இயல்பாகவே உள்ளவை,  கர்ம பலன்களைப் போல் அவை புதிதாக உண்டானவைகளல்ல.

ஆனந்த மயனான இந்த ஆத்மாவுக்கு ஸம்ஸாரத்தில் உண்டாகும் துக்கமும், அஞ்ஞானமும் இயல்பான குணங்காளாகாது.  அவை ப்ரக்ருதியின் ஸம்பந்தத்தால் வந்தவையே.  தண்ணீர் இயற்கையில் குளிர்ச்சியாகவும், பொங்காமலும், சப்தமில்லாமலும் இருக்கிறது.  ஆனால் அது தங்கியிருக்கும் பாத்ரத்திற்கு அக்னி ஸம்பந்தம் ஏற்பட்டால், அது சூடாகிறது, சப்தத்தை உண்டாக்குகிறது, பொங்கவும் செய்கிறது.  தண்ணீருக்கும் அக்னிக்கும் நேரில் ஸம்பந்தமும் கிடையாது,  அது அந்த பாத்ரத்தில் தங்கியிருப்பதால் தான் இந்த மாறுபாடுகளை அடைகிறது.  ஆனந்த ஸ்வரூபமான ஆத்மாவும் இந்த ஜலம் போன்றதே.  ப்ரக்ருதி பாத்ரம் போன்றது.  இந்த ப்ரக்ருதியுடனே தாப த்ரயங்கள் (ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம்)  நெருப்பு போல ஸம்பந்தப்படுகின்றன.  இதனாலேயே  ஆத்மாவும் அஞ்ஞானம், துக்கம், பசி, தாகம் முதலான மாறுதல்களை அடைகிறது.  ஆனாலும் ஆத்மா நித்யமானது.

இப்படி அவித்யைக்குக் காரணமான இருவகை ப்ரமைகளும், அதனால் வரும் துன்பங்களும் அழிவதற்கு உபாஸனம் ஒன்றே வழி.  அந்த யோகத்தைப் பற்றிக் கூறுகிறேன், கேளுங்கள்.  யோகத்தில் உள்ளவன் இந்த ஸம்ஸாரத்தை அடைவதில்லை.  இந்த மோக்ஷத்தை அடைவதற்கு முக்ய காரணம் மனம்.  இந்த மனம் வேறு விஷயங்களைப் பற்றியிருக்கும் போது அது ஸம்ஸாரத்திற்குக் காரணமாகிறது.  அவைகளில் பற்றாமலிருந்தால் அதுவே மோக்ஷத்திற்குக் காரணமாகிறது.  ப்ரக்ருதி, ஜீவன், ஈச்வரன் இம்மூன்று விஷயங்களைப் பகுத்தறிந்தவன் இதில் வென்று மனதை ப்ரஹ்மத்திடம் செலுத்த வேண்டும்.  அப்படிச் செய்தால் அந்த ப்ரஹ்மம் அவன் அழுக்குகளைப் போக்கி, தன்வயப்படுத்திக் கொள்கிறது.  காந்தமும், அக்னியும் தன் அருகில் இருப்பவைகளை எப்படி தன்னிடம் இழுத்துக் கொள்கிறதோ, சுத்தப்படுத்துகிறதோ அதைப் போலவே ப்ரஹ்மமும் தன்னை த்யானிப்பவனைச் செய்கிறது.

இப்படி பற்பல விஷயங்களிலேயே சுழன்று கொண்டிருக்கும் மனதை இதுவரை நினைத்துப் பார்க்காத இந்த விஷயத்தில் திருப்ப பெரு முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.  இறை த்யானத்தின் நடுவில் வேறு நினைவொன்றும் புகாதவாறு அவனை ஸ்மரிக்க வேண்டும்.  இந்த ஸ்ம்ருதியே ஒரு நிலையில் ஆனந்தமாகும்.  இறைவனிடம் நம்மை சேர்ப்பிக்கும்.

இந்த யோகம் யம, நியம, ஆஸன, ப்ராணாயாம, ப்ரத்யாஹார, தாரண, த்யான, ஸமாதி என்று எட்டு அங்கங்களுடன் கூடியது.  இதில் முதல் நிலையிலுள்ளவன் யுஞ்ஜானன் என்று அறியப்படுகிறான்.  ஸமாதி கைகூடியவன் விநிஷ்பன்னஸமாதி என்றும் யோகி என்றும் அழைக்கப்படுகிறான்.  த்யானம் வரை அடைந்தவன் யோகயுக் எனப்படுகிறான்.  இதில் யுஞ்ஜானன் பயிற்சியின் போது இடையூறுகள் வந்து மனம் வேறு வழிகளில் சிதறுமாயின் மேலும் பல பிறவிகள் யோகம் செய்து அதன் பிறகே மோக்ஷத்தை அடைகிறான்.  யோகி அவன் பாவங்கள் அனைத்தையும் த்யானத்தின் போதே போக்கிக் கொண்டு விடுவதால் அந்தப் பிறவியிலேயே மோக்ஷத்தை அடைந்து விடுகிறான்.

இந்தப் பயிற்சியிலுள்ளவன் தன் தகுதியை உறுதி செய்து கொள்ள ப்ரஹ்மசர்யம், அஹிம்ஸை, ஸத்யம், திருடாமை, தானம் வாங்காமை என்ற யமத்தின் அங்கங்களையும், ஸ்வாத்யாயம் (வேதமோதுதல்), தூய்மை, ஸந்தோஷம், தவம் முதலான நியமத்தின் அங்கங்களையும் பலனைச் சிறிதும் கருதாமல் ப்ரஹ்மத்தில் மனதை வைத்துச் செய்து வர வேண்டும்.  இதன் பின் அவன் யோகாஸனங்களில் ஒன்றில் இருந்துகொண்டு பயிற்சியைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.  இதையடுத்த ப்ராணாயாமம் என்பது ப்ராண வாயுவை பயிற்சியின் மூலம் வசப்படுத்துதல்.  அதை ஒரு இறையுருவை த்யானித்து, மந்த்ர ஜபங்களோடு செய்தால் ஸபீஜம் என்றும், இல்லையேல் அபீஜம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ப்ராணாயாமம் பூரகம், கும்பகம், ரேசகம் என்ற மூன்று அங்கங்களுடையது.  காற்றை மூக்கு, வாய்களால் வெளியே மட்டும் விடுவது ரேசகம், உள்ளே இழுப்பதை மட்டும் செய்வது பூரகம், காற்றை வெளியேயும் விடாமல், உள்ளேயும் இழுக்காமல் ஹ்ருதயத்திலேயே நிறுத்துதல் கும்பகம். இதையடுத்த ப்ரத்யாஹாரம்
என்பது இந்த்ரியங்களை வெளியே நாட்டம் காட்ட விடாது, இறை வழிபாட்டில் திருப்பி விடுவது.  இப்படி ப்ராணனையும், இந்த்ரியங்களையும் வசப்படுத்தி விட்டால் அதன் பின் இறையுருவை மனதில் நிலை கொள்ளச் செய்ய வேண்டும்.  அது தாரணையாகும்.

இந்த தாரணை மூர்த்தம், அமூர்த்தம் என்று இரு வகையாகும்.  சரீரத்தோடு கூடின ப்ரஹ்ம ஸ்வரூபத்தை மனதில் கொள்ளும் மூர்த்தம் அபரம் என்றும், மூர்த்தியற்ற ஸ்வரூபத்தை எங்கும் காணும் அமூர்த்தம் பரம் என்றும் அழைக்கப்படுகிறது.  இந்த தாரணை ப்ரஹ்ம பாவனை, கர்ம பாவனை, உபய பாவனை என்று மூன்று பாவனைகளோடு விளங்குகிறது.  எப்போதும் ப்ரஹ்மத்தையே நினைத்துக் கொண்டிருத்தல் ப்ரஹ்ம பாவனை.  நாம் செய்யும் கர்மாக்களையே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பது கர்ம பாவனை.  ப்ரஹ்மத்தையே ஸதா சிந்தித்துக் கொண்டு கர்மாக்களைச் செய்து கொண்டிருப்பது உபய பாவனை.

சரீரத்தைக் கொண்டே தேவ, மனுஷ்ய வேறுபாடுகள் வருகின்றன.  ஜீவனுக்கு இது உண்மையில் கிடையாது.  இதை அறியாத வரையில் மூர்த்த ப்ரஹ்மமும் இருக்கும்.  அமூர்த்த ப்ரஹ்மத்தில் சரீரம் கிடையாது.  எனவே ஜாதி, அழிவு முதலிய பேதங்களும் அங்கில்லை.  அது ஞானத்தை முக்யமாகக் கொண்டு ஸ்வயம் ப்ரகாசமாய் இருப்பது.  இந்த பரப்ரஹ்மத்தை யோகத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவனால் சிந்திக்க முடியாது.  அவனுக்கு முதலில் மூர்த்த ப்ரஹ்மமே சிந்திக்க இயல்பானது.  அப்போது தேவ, கந்தர்வ, தானவ, யக்ஷ முதலான தேவ ஜாதிகளும், மனுஷ்யர்கள், பசுக்கள், மலைகள், கடல்கள், நதிகள், மரங்கள், கொடிகள் என அனைத்து ரூபங்களும், அதன் காரணங்களும், ஒன்று, இரண்டு என பல பாதங்கள் உள்ளவையும், பாதங்கள் அற்றவையும் மஹாவிஷ்ணுவின் ஸ்வரூபமே.

இந்த மூர்த்தம் முன் கண்ட பாவனைகளோடு இருப்பதால் இது சுபத்தைத் தரப்போவதில் சிறந்ததில்லை.  இந்த ப்ரபஞ்சம் விஷ்ணு சக்தியால் வ்யாபிக்கப்பட்டிருக்கிறது.  இதுவே முக்த ஸ்வரூபத்தில் பரசக்தியாகவும், பக்தஜீவர்களின் ஸ்வரூபத்தில் க்ஷேத்ரக்ஞ சக்தியாகவும்,  வேத விஹிதமான கர்மசக்தியான அவித்யையாகவும் மூன்று விதத்தில் பிரிந்திருக்கிறது.  கர்மசக்தியான அவித்யையால் க்ஷேத்ரக்ஞர்கள் மறைக்கப்பட்டு அவரவர் சரீரத்திற்கேற்றார்ப்போல் அறிவு, சுக, துக்கம் முதலியவற்றில் ஏற்றத் தாழ்வுகளை அடைகின்றனர்.

உயிரில்லாத பாறை, மரக்கட்டைகளில் இருக்கும் ஜீவன் அறிவையும், ஆனந்தத்தையும் மிகவும் குறைவாகவே பெறுகிறது.  தாவரங்கள் இவைகளை விட கொஞ்சம் அதிகமாக பெறுகின்றன.  இப்படி பாம்பு முதலான ஊர்வனவைகள், பின் பறப்பனவைகள், ம்ருகங்கள், மனிதர்கள், தேவர்கள், தேவராஜன், ப்ரஜாபதி, ஹிரண்யகர்பன் என வரிசைப்படி ஜாதிகள் ஒன்றை விட ஒன்றாக ஞானம், ஆனந்தம் இவைகளை அதிகமாகக் கொண்டுள்ளன.  நல்ல விலை கொடுத்து வாங்கும் உடை எப்படி சிறந்திருக்கிறதோ அப்படியே இந்த ஞானம், ஆனந்தத்தின் அளவுகள், செய்யும் நல்ல கர்மாக்களின் அளவைக் கொண்டே அமைகின்றன.  இதனால் அந்தந்த சரீரங்களும், அதைச் சார்ந்து இருக்கும் ஆத்மாவும் அமைகின்றன.

மஹாவிஷ்ணுவின் அமூர்த்தமான ரூபமே ஸத் என்று பண்டிதர்களால் அழைக்கப்படுகிறது.  அதை யோகத்தில் தேர்ச்சி பெற்றவனே சிந்திக்க முடிகிறது.  அந்த அமூர்த்த ப்ரஹ்மம் கீழ் கண்ட மூவகை சக்திகளுக்கு இருப்பிடமாகவும், விவரிக்கப்பட்ட ப்ரபஞ்சத்தை விட வேறாகவும் இருக்கிறது.  அதிலிருந்து கொண்டே மஹாவிஷ்ணு பலவகை ரூபங்களில் அவதரிக்கிறான்.  உபேந்த்ரனாக அவதரித்து தேவ கர்மாக்களையும், மீன் முதலானவைகளாக அவதரித்து விலங்குகளின் செயல்களையும், ராம, க்ருஷ்ண அவதாரங்களில் மனுஷ்ய செயல்களையும், நரஸிம்ஹமாக அவதரித்து இடைப்பட்ட செயல்களையும் இந்த அமூர்த்த ப்ரஹ்மமே செய்தது.

இந்த அவதாரங்களும், அவைகளும் செயல்களும் நம்மால் அளவிட முடியாதவை.  அவை எந்தப் பலனையும் கருதி செய்யப்பட்டவை அல்ல.  எந்த கர்மத்தின் பலனாகவும் நடந்தவை அல்ல.  அவை லோக உபஹாரமாக நடந்தவையே.  இந்த ரூபத்தையே யோகி பயிற்சி செய்ய வேண்டும்.  எப்படி நெருப்பு கிளம்பினால் சுற்றியிருக்கும் எரித்து விடுமோ, அப்படியே இந்த ஸ்வரூபமும் யோகியின் மனதில் நிலைபெற்றால் அவனது பாவங்கள் அனைத்தையும் ஸம்ஹரித்து விடும்.  இதுவே தாரணை.  சுபத்தைக் கொடுப்பதாலும், தாரணைக்கு ஆதரவாக (ஆச்ரயம்) இருப்பதாலும் இந்த அமூர்த்த ஸ்வரூபமே ஸுபாச்ரயம்.  பக்தர்களின் ஸ்வரூபம் தாரணைக்கு ஆச்ரயமாக இருந்தாலும் அவை கீழ்க்கண்ட மூவகை பாவனைகளோடு இருப்பதால் அவை சுபமாயிருப்பதில்லை.  விஷ்ணுவின் இந்த அமூர்த்த ஸ்வரூபமே இந்த இரு குணங்களோடும் இருப்பதால் அதுவே சுபம்.

எங்கெங்கோ அலைந்து, எதையெதையோ பற்றிக்கொண்டிருக்கும் மனதிற்கு பற்றுக் கோடாக இருப்பதும், ஸம்ஸார சக்ரத்திலிருந்து யோகிகளுக்கும் மோக்ஷத்தைக் கொடுப்பதும் இந்த மங்கள ஸ்வரூபமே.  தேவர் முதலான வேறெந்த ஸ்வரூபங்களுமே கர்ம வசத்தில் இருப்பதால் சுபஞ்செய்ய சக்தியற்றவர்களே.  வேறெதிலும் ஆசையில்லாது விஷ்ணுவின் மங்கள ஸ்வரூபம் ஒன்றையே மனத்தில் நிலை கொள்ளச் செய்வதே தாரணை.

எங்கும் ஒளி நிறைந்த சந்த்ர வதனமும், தாமரையையொத்த பெரிய கண்களும், அழகிய தாடைகளும், பரந்து விரிந்த நெற்றியும், ஒத்த அளவில் தொங்கும் ஒளி மிகுந்த குண்டலங்கள் கொண்ட காதுகளும்,  சங்கு போன்ற கழுத்தும், லக்ஷ்மியைக் கொண்டிருக்கும் சிறந்த மார்பும், மூன்று மடிப்போடும், ஆழ்ந்து சுழிந்துள்ள தொப்புளும் கொண்டு விளங்கும் திருவயிறும், நீண்டு திரண்ட நான்கு கைகளும், ஸமமான துடைகளும், கணுக்கால்களும், மலர்களையொத்தத் திருவடிகளும், அரையில் சிவப்பாடையும், க்ரீடம், ஹாரங்களைப் பெற்று பொலிவோடு விளங்கும் மஹாவிஷ்ணுவான பரப்ப்ரஹ்மத்தைத் த்யானிக்க வேண்டும்.

விஷ்ணுவுக்கு நான்கு கைகள், எட்டு கைகள் என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.  எட்டு கைகள் என்று கொண்டால் அவைகளில் சார்ங்கம், சங்கம், கதை, கட்கம், சக்ரம், அக்ஷமாலைகளையும், மற்ற இரு கைகளில் தாமரையும், பாணமுமோ அல்லது வர, அபய முத்ரைகளையோ கொள்ள வேண்டும்.  நான்கு கரங்கள் எனக் கொண்டால் அவைகளில் சங்கம், சக்ரம், கதை, தாமரை இவைகளைக் கொண்டு த்யானிக்க வேண்டும்.  இப்படி அஸ்த்ரம், ஆபரணம், ப்ரத்யங்கம், ப்ரதான அங்கம் முதலியவைகளோடு கூடின ஸ்வரூபத்தை நினைத்து நிற்பது முதல் வகை தாரணை.  அஸ்த்ரங்களை விட்டு மற்ற மூன்று அங்கங்களையும் கொள்வது, பின் ஆபரணங்களையும் விடுவது, பின் கடைசியில் ப்ரதான அங்கம் ஒன்றை மட்டுமே பற்றி இருப்பது என தாரணை நான்கு வகையாகிறது.  நிற்கும் போதும், நடக்கும் போதும், எந்த செயலையும் செய்து கொண்டிருக்கும் போதும் இந்த உருவம் மனதை விட்டு அகலாதிருப்பின் யோகி தன் தாரணை ஸ்திரப்பட்டு விட்டதாகக் கொள்ளலாம்.

இதற்கடுத்த த்யானம், அஸ்த்ரம் முதலான நான்கு அங்கங்களோடு கூடின விஷ்ணுவின் ஸ்வரூபத்தை வேறெந்த நினைவுகளும் இன்றி ஸதா நினைப்பது.  இந்த த்யானம் ஸ்வரூபத்தைப் பற்றி இருப்பதால் ஸாலம்பன யோகம் என்றும், ஸபீஜ யோகம் என்றும் கூறப்படுகிறது.  இதுவே எந்த ஸ்வரூபமும், நாமமுமின்றி அமூர்த்தமான ஆத்ம ரூபமாக த்யானித்து லயிக்கும் போது ஸமாதி என்று அறியப்படுகிறது.  பரவித்யை என்றும், விவேகஜன்ய ஞானம் என்று அழைக்கப்படுகிறது.

ப்ரஹ்மத்தை அடைவிப்பது இந்த ஞானமே.  மூவகை பாவனைகளை அழித்து இந்த ஞானமே அடைய வேண்டியதான ப்ரஹ்மத்தை ஸமாதி என்ற உபாஸனத்தால் ஆத்மாவிற்குத் தருகிறது.  மோக்ஷத்தையும் தருகிறது.  இந்த உபாஸன ஞானம் இப்படி ஆதிகாலமாக மாயையால் மறைக்கப்பட்டிருந்த ஜீவாத்மாவுக்கு கருவியாக இருந்து மோக்ஷத்தைக் கொடுத்து தன் கடமையை நிறைவேற்றி, அனுக்ரஹிக்கிறது.  இப்படி மோக்ஷமடைந்த ஜீவாத்மா அந்த பரப்ரஹ்மத்தோடு லயித்து பேதமற்று விடுகிறது.

இயற்கையில் ஆனந்த மயமான இந்த ஆத்மா கர்மாக்களால் பேதங்களைக் கொள்கிறது.  பின் ஸமாதி தர்சனத்தில் கர்மங்கள் முற்றும் அழிகையில் அதன் கார்யமான பேதங்களும் முற்றிலும் அழிந்து விடுகிறது.  அப்போது எந்த பேதங்களையும் உண்டு பண்ணுபவனும் இல்லை, அவைகளை அறிபவனும் இல்லை.  இத்தகைய மோக்ஷத்தைக் கொடுப்பது இந்த ஸமாதி” என்று காண்டிக்யருக்கு கேசித்வஜர் அஷ்டாங்க யோகத்தை சுருக்கியும், விவரித்தும் கூறி “வேறு என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார்.

காண்டிக்யர் “கேசித்வஜரே! நான் ப்ரார்த்தித்தபடி எனக்கு அஷ்டாங்க யோகத்தை முழுதாக உபதேசித்தீர்கள்.  தங்கள் உபதேசத்தால் என் மனதிலிருந்த அஞ்ஞானம் முதலான அழுக்குகள் முற்றும் அழிந்தன.  என் மமகாரமும், அஹங்காரமும் தவறே.  ஆத்ம ஸ்வரூபம் அழிவற்றது, அது சொல்லிற்கு எட்டாதது.  இனி ஆண், பெண், ஆடு, மாடு என்ற பேத வ்யவஹாரங்கள் எனக்கில்லை.  வேண்டிய நன்மைகள் யாவும் எனக்குச் செய்து விட்டீர்கள்.  இனி நீங்கள் செல்லலாம்” என உபசரித்து அனுப்பினார்.  கேசித்வஜரும் மீண்டும் ராஜ்யத்திற்குத் திரும்பினார்.

காண்டிக்யர் இதன் பின் மீண்டும் ராஜ்யத்தையும் பெற்றார்.  தன் குமாரனை ராஜ்யத்தில் அபிஷேகம் செய்து வைத்து விட்டு அவர் வனம் சென்று அஷ்டாங்க யோகத்தால் மோக்ஷத்தை அடைந்தார்.  கேசித்வஜரும் கர்ம பலன்களான விஷயங்களை அனுபவித்து, பலன் கருதாது கர்மங்களையும் செய்து புண்ய, பாவங்களைத் தீர்த்துக் கொண்டு மோக்ஷத்தை அடைந்தார்.

06_08 “நிலையான ப்ரஹ்மத்திடம் ஜீவன் இப்படி லயித்து விடுவது தான் முக்தி எனும் மூன்றாவதான ஆத்யந்திக ப்ரளயமாகும்.  மைத்ரேயரே! இப்படி அனைத்தையும் உமக்கு இதுவரை விளக்கி விட்டேன்.  இந்த விஷ்ணு புராணம் எல்லா பாவங்களையும் போக்கக் கூடியது.  சாஸ்த்ரங்களில் சிறந்தது.  புருஷார்த்தங்களை நன்கு விளக்குவது.  நீங்கள் விரும்பிக் கேட்டதால் நான் உள்ளதை ஒன்று விடாமல் உபதேசித்து விட்டேன்.  இன்னும் ஏதாவது கேட்க வேண்டுமானால் கேளுங்கள்” என்று பராசரர் கூறி முடித்தார்.

மைத்ரேயர் “ஆசார்யரே! நான் கேட்டதனைத்தையும் நன்கு உபதேசித்து விட்டீர்கள்.  நானும் பக்தியுடன் கேட்டேன்.  இனி வேண்டுவது ஒன்றுமில்லை.  என் ஸந்தேஹங்கள் யாவும் இப்போது நீங்கி விட்டன.  மனதும் சுத்தமானது.  உற்பத்தி, ஸ்திதி, லயங்களையும், இதன் காரண பூதர்களான ப்ரஹ்ம, விஷ்ணு ருத்ர சக்திகளையும், பாவனைகளையும் தங்கள் அனுக்ரஹத்தால் நன்கு அறிந்து கொண்டேன்.  நாம் காணும் இந்த ப்ரபஞ்சம் முழுதும் அந்த விஷ்ணுவின் சரீரமே, அதைத் தவிர வேறில்லை என்பதே அறியவேண்டுவது.  அதை அறிந்து கொண்டேன்.  வேறு விஷயங்களால் ஒரு பயனும் இல்லை.

குருவே! தங்கள் அனுக்ரஹத்தாலேயே நான் என் ஸந்தேஹங்களும், விபரீத ஞானமும் அழியப் பெற்றேன்.  பலன் பெற்றவனானேன்.  வர்ணாச்ரம தர்மங்கள், ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி கர்மாக்களையும் அறிந்தேன்.  இனி அறிய வேண்டுவது ஒன்றுமில்லை.  என்னாலேயே தங்களுக்கு இவ்வளவு ச்ரமமும் நேர்ந்தது.  இந்த அபராதத்தைப் பொறுத்தருள வேண்டும்.  என்னைத் தங்கள் புத்ரனாகவே கருதி இவ்வளவு தத்வங்களையும் ச்ரமம் பாராமல் உபதேசித்து அருளினீர்கள்” என்று கூறி நமஸ்கரித்தார்.

இதைக் கேட்டு மகிழ்ந்த பராசரர் விஷ்ணு புராணத்தின் பெருமைகளை அவருக்கு மேலும் எடுத்துரைக்கிறார்.  “மைத்ரேயரே!  இப்படி சொல்லி முடித்த இந்த விஷ்ணு புராணம் வேதங்களுக்கு ஸமமானது.  இதைக் கேட்ட மாத்ரத்தில் எல்லா பாவங்களும் அழியும்.  இதில் ஸர்க்கம் முதலாக, தேவாஸுரர்கள், முனிவர்கள், மஹான்கள் வரலாறும், வர்ணாச்ரம தர்மங்களும், புண்ய ப்ரதேசங்களும், நதிகள், கடல்கள், மலைகள், சாஸ்த்ரங்கள் என அனைத்தையும் உங்களுக்கு விரிவாகக் கூறியுள்ளேன்.  இவைகள்  நினைத்த பொழுதிலேயே நம் பாவங்களைப் போக்கி விடும்.  மேலும், ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார கர்த்தாவான விஷ்ணு இந்த புராணத்தில் பல இடங்களில் சொல்லப்படுகிறான்.  எப்படி பயந்திருக்கும் மானைச் சூழ்ந்திருக்கும் ஓநாய்கள் எல்லாம் அங்கு தற்செயலாய் வந்த ஸிம்ஹத்தைக் கண்டதும் ஓடிவிடுமோ, அப்படியே நம்மைத் துன்புறுத்த வந்திருக்கும் பாதகங்கள் அனைத்தும் தற்செயலாய் அவன் பெயரைச் சொன்னாலே ஓடிவிடும்.

அவன் திருநாமத்தை ஒருவன் பக்தியோடு பாடினாலே அவன் பாவங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன.  நெருப்பு எப்படி தங்கத்தின் அழுக்குகளைப் போக்கி சுத்தீகரிக்கிறதோ அப்படியே அவன் நாம ஸங்கீர்த்தனமும் நம் அழுக்குகளைப் போக்கி நம்மை பரிசுத்தப்படுத்துகிறது.  அவன் பெயரைச் சொல்லக்கூட வேண்டாம்.  ஒரு நொடி நினைப்பே மிகவும் கொடூரமான இந்த கலி தோஷத்தை அழித்து விடும்.  மேரு மலையின் முன் ஒரு அணு எப்படியோ அப்படியே மஹாவிஷ்ணுவுக்கு முன் இந்த ப்ரஹ்மாண்ட ப்ரபஞ்சமும்.

ப்ரஹ்மாதி தேவ ஜாதிகளும், ஸித்தர்களும், அஸுரர்களும், அப்ஸரஸ்ஸுகளும், நக்ஷத்ரங்களும், க்ரஹங்களும், ஸப்தரிஷிகளும், லோகங்களும், லோக பாலர்களும், ப்ராஹ்மணர் முதலான மனுஷ்யர்களும், பசுக்களும், ம்ருகங்களும், பாம்புகளும், பக்ஷிகளும், மரங்களும், காடுகளும், கடல்களும், நதிகளும், இந்த்ரியங்களுக்கான விஷயங்களும், இன்னும் பலவும் நிறைந்திருக்கும் இந்த ப்ரபஞ்சம் அவனுக்கு முன் அணுவேதான்.  இந்த ப்ரஹ்மாண்டத்திற்கு ஆத்மாவும் அவனே.  எல்லாமும், எல்லாம் அறிந்தவனாகவும் இருப்பவனும் அந்த விஷ்ணுவே.  இப்படி எல்லா பாவங்களையும் போக்கும் அவனை இந்த புராணம் பல இடங்களில் கூறுகிறது.

அச்வமேத யாகத்தின் முடிவில் செய்யும் அவப்ருத ஸ்நானமும், ப்ரயாகை முதலான க்ஷேத்ரங்களில் இருக்கும் உபவாஸமும், ஒரு வருஷ அக்னிஹோத்ரமும் கொடுக்கும் பலனை இந்த புராணம் கேட்பதாலேயே கொடுக்கிறது.  ஆனி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியில் உபவாஸமிருந்து, த்வாதசியில் யமுனையில் நீராடி, மதுராவில் பிறந்தவனை நமஸ்கரிப்பதால் ஒருவனுக்குக் கிடைக்கும் அச்வமேத புண்ய பலன், இந்த புராணத்தின் ஒரு அத்யாயத்தை அவன் திருவடிகளை நினைத்து மனதோடு கேட்டாலே கிடைத்து விடும்.  இந்த த்வாதசியில் நம் குலத்தில் பிறந்த யாராவது யமுனையில் நீராடி நமக்குப் பிண்டம் தரமாட்டார்களா? நாமும் மோக்ஷத்தை அடைய மாட்டோமா? என்று ஏங்கும் பித்ருக்களும் இந்த புராணத்தின் ஒரு அத்யாயத்தை ஒருவன் கேட்டாலே அடைந்து விடுகின்றனர்.

இந்தப் புராணம் ஸம்ஸார பயத்தைப் போக்கக் கூடியது.  கேட்கவேண்டிய விஷயங்களில் சிறந்தது.  புண்யங்களுக்குள் புண்யமானது.  கெட்ட கனவுகளின் பலன்களைப் போக்கக் கூடியது.  எல்லா தோஷங்களையும் நீக்கக் கூடியது.  பிள்ளைப் பேற்றைத் தரக்கூடியது.  இப்படிப் பட்ட இதை முதலில் நாராயண ரிஷி ப்ரஹ்மாவுக்கும், அவர் ருபு என்பவருக்கும் உபதேசித்தார்.  அவரிடமிருந்து ப்ரியவ்ரதருக்கும், பாகுரிக்கும், ஸ்தம்பமித்ரருக்கும், ததீசருக்கும், ஸாரஸ்வதருக்கும், ப்ருகுவிற்கும், புருகுத்ஸருக்கும், நர்மதைக்கும் வழி வழியாக வந்தது.  பின் நர்மதை இதை த்ருதராஷ்ட்ரன், ஆபூரணன் என்ற நாகர்களுக்கு உபதேசிக்க, அவர்கள் அதை நாகராஜனான வாஸுகிக்கும், அவர் வத்ஸருக்கும், அவர் அச்வத்தாமருக்கும், அவர் கம்பளருக்கும், அவர் ஏலாபுத்ரருக்கும் உபதேசிக்க இது பாதாள லோகத்தில் பரவி இருந்தது.

ஒரு ஸமயம் பாதாள லோகம் சென்றிருந்த வேதசிரஸ் என்ற முனிவர் இதை அங்கிருந்து பெற்று வந்து பூலோகத்தில் ப்ரமதிக்குக் கொடுத்தார்.  அவர் அதை ஜாதுகர்ணருக்குத் தந்தார், அவர் அதைப் புண்யம் செய்த பலருக்கும் சொல்லி வைத்தார்.  இப்படி பரம்பரையில் வந்த இந்த புராணம் இப்போது புலஸ்த்யரின் வரத்தினால் என் நினைவுக்கு வர நானும் இதை உனக்கு உபதேசித்தேன்.  நீயும் இதைக் கலியுகத்தின் முடிவில் சினீகர் என்பவருக்கு உபதேசிக்கப் போகிறீர்கள்.

இப்படி கலிதோஷத்தைப் போக்க வல்லதும், பரம ரஹஸ்யமுமான இந்த புராணத்தைப் பக்தியோடு கேட்பவன் ஸர்வ பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான்.  புண்ய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்த பலனையும், ஸர்வ தேவதைகளையும் துதித்த பயனையும் பெறுகிறான்.  இதில் பத்து அத்யாயங்களைக் கேட்பவன் காராம்பசுவை தானம் செய்த பலனைப் பெறுகிறான்.  இதில் முதல், இடை, முடிவு என எங்கும் விஷ்ணுவே சொல்லப்பட்டிருப்பதால் இதைக் கேட்பதாலும், படிப்பதாலும், சொல்வதாலும் கிடைக்கும் பலன் வேறெதிலும் மூவுலகிலும் கிடையாது.  இதில் மோக்ஷத்தைத் தரும் அவனே பலனாகக் கிடைக்கிறான்.  அவன் ப்ரபாவங்களை நினைத்துப் பார்த்தால், அவனைச் சொல்வதால் பாவம் தொலையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அந்த மஹாவிஷ்ணுவை நினைப்பவன் நரகம் செல்வதில்லை, அவனுக்கு ஸ்வர்க்கமும் ஒரு தடையே. ப்ரஹ்ம லோக ப்ராப்தியும் அவனுக்கு ஸ்வல்பமே.  அவன் மனதிலிருந்து கொண்டு மஹாவிஷ்ணு அவனுக்கு மோக்ஷத்தையே அளிக்கிறான் என்றால் அவனைப் பாடுவதால் பாவங்கள் தொலைகின்றன என்பதில் ஒரு வியப்புமில்லை.  இவனையே யாகாதி கர்மங்களும் ஸ்துதிக்கின்றன. ஞானிகளும் இவனையே த்யானிக்கின்றனர்.  இவனைத் தவிர நாம் கேட்க வேண்டும் பொருள் வேறொன்றுமில்லை.  இவனே பித்ரு ரூபத்தில் ஸ்வதா எனப்படும் கவ்யத்தையும், தேவ ரூபத்தில் ஸ்வாஹா எனப்படும் ஹவ்யத்தையும் ஏற்கிறான்.  இவன் ப்ரமாணங்களால் அளவிட முடியாதவன்.

அந்த மஹாவிஷ்ணு பிறப்பு, இறப்பற்றவன், எந்த மாறுபாடுகளும், வளர்ச்சியும், தேய்வும் அவனுக்கில்லை.  அவனுக்கு நமஸ்காரம்.  புருஷனும் அவனே, அவன் நியமனத்தாலேயே புருஷன் விஷயங்களை அனுபவித்தும், ஞான ஸ்வரூபியாகவும், பேதமின்றியும், சுத்தனாகவும், சரீர ஸம்பந்தத்தால் அசுத்தனாகவும், கர்மங்களால் மஹதாதி தத்வங்களுக்குக் காரணனாகவும், அழிவற்றவனாகவும் இருக்கிறான்.  அந்த புருஷ ஸ்வரூபனுக்கு நமஸ்காரம்.

அவ்யக்தமான ப்ரக்ருதி ஸத்வாதி குணங்களால் உண்டாகும் கார்யங்களுக்கு லயஸ்தானமாக இருக்கிறது.  அது ஆத்மாக்களின் கர்மங்களுக்கு ஏற்ப பலன்களைத் தரவல்லது.  அதுவே கர்மாக்களுக்குக் காரணமுமாகும்.  நித்யமும் அதுவே.  இப்படி அவ்யக்த ஸ்வரூபமாயிருக்கும் விஷ்ணுவுக்கு நமஸ்காரம்.  பஞ்ச பூதங்களின் வடிவாகவும், கர்மேந்த்ரியங்களாகவும், ஞானேந்த்ரியங்களாகவும், இவைகளுக்கு விஷயங்களாகவும் இருந்து ஆத்மாவுக்கு உதவி செய்கிறதும், ஸூக்ஷ்ம ஸ்வரூபமாகவும் இருக்கும் வ்யக்தனான விஷ்ணுவுக்கு நமஸ்காரம்.

வ்யக்தம், அவ்யக்தம் என இருவகைப்பட்ட ப்ரக்ருதியும், பரமான ஜீவ சரீரங்களும், ஆத்ம ஸ்வரூபமும், பிறப்பு, இறப்பில்லாதவனும், நித்யனுமான விஷ்ணுவுக்கு உடலாய் இருக்கின்றன.  ஞானம் முதலான ஐச்வர்யங்களை உடைய அவன் எல்லா ஆத்மாக்களுக்கும் பிறப்பு, இறப்பில்லாத மோக்ஷ ஸுகத்தை ஆசிர்வதிப்பானாக.

எட்டாம் அத்யாயம் முற்றும்.  ஆறாம் அம்சம் முற்றும்.  விஷ்ணு புராணம் முற்றும்.

ஸர்வே ஜனா: ஸுகினோ பவந்து!

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் — ஐந்தாம் அம்சம்-ஸ்ரீ சீதாராம ஸ்வாமிகள் தொகுத்தவை-

February 24, 2023

05_01. எங்கும் வ்யாபித்திருக்கும் விஷ்ணு யாதவ குலத்தில், எவர்க்கும் எளியவனாய் அவதரித்துச் செய்த லீலைகளை விரிவாகக் கூறவேண்டும் என்று மைத்ரேயர் வினவ, அது பற்றிக் கூறுகிறார் பராசரர். தேவகனுக்கு தேவலோகத்துப் பெண் போன்ற அழகுடன் தேவகி என்ற ஒரு பெண் இருந்தாள். அவளை வஸுதேவன் திருமணம் செய்து கொண்டான். அவர்கள் அமர்ந்திருந்த தேரைத் தானே ஓட்டிச் சென்றான் கம்ஸன். “ஏய் மூடா! கம்ஸா! உடன் பிறந்த பாசத்தால் தேவகியை அவள் கணவனுடன் கூட்டிச் செல்கிறாய். இவள் வயிற்றில் பிறக்கும் எட்டாவது பிள்ளையே உன்னைக் கொல்லப் போகிறான்” என்று திடீரென வழியில் ஒரு அசரீரி கேட்டது. இதைக் கேட்டதும் கோபம் கொண்ட கம்ஸன் கடிவாளத்தை விட்டு, கத்தியைக் கையில் எடுத்தான். தேவகியைக் கொல்லத் திரும்பினான்.

இதைக் கண்ட வஸுதேவன் செய்வதறியாது அப்போதைக்கு சாதுர்யமாக “பெருமை வாய்ந்தவனே! இவளை ஏன் கொல்ல வேண்டும். இவளது எட்டாவது பிள்ளைதானே உனக்கு எமன். நான் இவளுக்குப் பிறக்கும் எல்லா குழந்தைகளையுமே உன்னிடமே கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன். அதை நீ உன் இஷ்டப்படி எதாவது செய்து கொள்” என்றான். இதைச் சரியென நினைத்து கம்ஸனும் அவர்களை அப்போதைக்கு விட்டான். அவர்கள் குழந்தைகளுக்காகக் காத்திருந்தான். இந்த ஸமயத்திலேயே பூபாரம் தாங்காத பூமாதேவி மேருமலையில் தேவர்களுடன் கூடியிருந்த ப்ரஹ்மாவிடம் சென்று “ஸ்வர்ணத்துக்குத் தந்தை அக்னியாவான். பசுக்களுக்கு ஸூர்யனே தந்தை.

அப்படியே எனக்கும் மற்ற லோகங்களுக்கும் நாராயணனே தந்தை. அவனுக்குத் தந்தை இல்லை. அந்த நாராயணனே என்னைக் காக்க வேண்டும். ப்ரஹ்மா, காலம், தேவ குலம், யக்ஷ, ராக்ஷஸ, அஸுர, க்ரஹ, நக்ஷத்ர, அக்னி, ஜலம், காற்று, நான், சப்தம் என அனைத்துமே விஷ்ணு மயம். விஷ்ணுவிற்கு சரீரம். இப்படி விஷ்ணுவின் சரீரமான இவைகளே ஒன்றையொன்று எதிர்த்துக் கொள்வது ஏன் என்ற சந்தேஹம் வேண்டாம். கடலிலும் பெரிய அலைகள் சிறிய அலைகளை அழிக்கவே செய்கின்றன. இப்படியே பலமுள்ளவர்கள் பலம் குன்றியவர்களை அழிக்கின்றனர். இப்பொதும் காலநேமி முதலான அப்படிப்பட்ட அஸுரர்கள் பூலோகத்தில் ப்ரஜைகளை அழித்து வருகிறார்கள்.

இவன் ஏற்கனவே விஷ்ணுவால் அழிக்கப்பட்டிருந்தும், இப்போது மீண்டும் உக்ரஸேனன் மகன் கம்ஸனாகப் பிறந்துள்ளான். அரிஷ்டன், கேசினி, ப்ரலம்பன், நரகன், தேனுகன், பாணாஸுரன் என இன்னும் பல துராத்மாக்கள் ராஜ குலங்களில் எண்ண முடியாதபடி பிறந்துள்ளனர். பல அக்ஷௌஹிணிக் கணக்கில் இருக்கும் இந்த அஸுரக் கூட்டங்களை என்னால் சுமக்க முடியவில்லை. இதுவே என் வேண்டுகோள். நான் பாதாளம் சென்று விடாதபடி என்னைக் காக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டாள். இதைக் கேட்ட தேவர்களும், ப்ரஹ்மனும் பாற்கடல் நோக்கிச் சென்றனர். “நீ வேதங்களுக்கும் எட்டாதவன், அணுவிற்கும் சிறியவன், பெரியதற்கும் பெரிதானவன்.

ப்ரஹ்மத்தைப் பற்றிய அறிவால் உண்டாகும் ஞானமாகிய பரவித்யையும் நீயே. சப்தத்தைப் பற்றிய அறிவால் உண்டாகும் ஞானமாகிய அபரவித்யையும் நீயே. உருவமும், அருவமுமானதும் நீயே. வேதங்களும், வேதாங்கங்களும், சாஸ்த்ரங்களும் நீயே. அனைத்துமறிந்தவனும் நீயே. உயர்ந்த வஸ்துவும் நீயே. வாக்கும் நீயே. நீயே ப்ரஹ்மன், அதற்கும் மேலானவனும் நீயே. மொழியும், அதன் உச்சரிப்பும், மாத்திரையும், அர்த்தமும், ஒலியும், கர்மாவும், வான சாஸ்த்ரமும், பரம்பரைகளும், பழக்கங்களும், இலக்கணமும், வேதாந்த சாரமும், தர்க்க சாஸ்த்ரமும், நீதியும் நீயே. அறியமுடியாதவன் நீ. ஆத்மா, வாழ்க்கை, உடல், குணங்கள், விஷயங்கள் இவைகளின் கோட்பாடுகளும் நீயே.

உன்னிடமிருந்தே எல்லாமும் தோன்றி, உன்னிடமே லயிக்கிறது. புலப்படாதவன் நீ, வர்ணிக்கமுடியாதவன் நீ, அறிவதற்கு முடியாதவன் நீ, முடிவில்லாதவன், உருவில்லாதவன், நிறமில்லாதவன், பெயரில்லாதவன், தூய்மையானவன், நிலையானவன் நீ. அனுபவிக்க மட்டுமே முடிந்தவன் நீ, அகக்கண்களுக்கே புலப்படுபவன் நீ. ஒன்றானதும், பலவானதும் நீ. வேகமானவன் நீ. அன்பிற்கு அகப்படுபவன் நீ. அனைத்துமாகவும், அனைத்தையும் அறிந்தவனாயினும் இருக்கும் உன்னை யாரும் அறியார். அறியாமையைப் போக்குபவன் நீ. உன்னை அறிந்தவர்கள் அனைத்தும் அறிந்தவர்களே. முதலாகவும், மத்யமாகவும், இறுதியாகவும் இருப்பவன் நீ. உலகைக் காப்பவன் நீ.

உன்னிடத்திலேயே அனைத்தும் நிலை கொண்டிருந்தது, நிலை கொண்டிருக்கிறது, இனியும் நிலை கொண்டிருக்கும். அணுவிற்கும் அணு நீ. ஆத்மாவும் நீ, வரலாறுகளுக்கெல்லாம் முந்தியவன் நீ, பூமிக்கு ஒளியும், வளமும் நீ. அனைத்துயிரின் கண் நீ, பல உருவங்களைக் கொண்டவன் நீ. எளிதில் மூவுலகும் செல்பவன் நீ. அக்னியைப் போல் ஒன்றாயிருந்தாலும் பல குணங்களானவன் நீ. உண்மையில் மாறுபாடில்லாவிடினும் எப்படி வேண்டுமானாலும் உருவகமாபவன் நீ. எங்கும் நிறைந்தவனும், இருக்கும் எல்லா உருவங்களையும் தரிப்பவன் நீ. ஞானிகளின் அறிவிற்கே புலப்படும் உயர்ந்த வஸ்து நீ. உன்னையன்றி எதுவும் இல்லை. இருந்ததும் இல்லை, இருக்கப்போவதுமில்லை.

கூறுகளாக்க முடியாததும், கூறுகளாக்க முடிந்ததும் நீயே, பொதுவானவன் நீ, தனியானவனும் நீயே. அளவிற்கரிய ஞானமும், பலமுமுடையவன் நீ, எல்லா ஞானத்தாலும், சக்தியாலும் அடையத்தக்கவனும் நீயே. வளர்ச்சியும், குறைவும் இல்லாதவன் நீ, சுயமானவனும், ஆரம்பமற்றவனும் நீ. அனைத்தையும் வெற்றி கொள்பவனும் நீ. களைப்பும், மந்தத்தன்மையும், பயமும், கோபமும், விருப்பும் உன்னைப் பாதிப்பதில்லை. செய்த தர்மத்தின் காரணமாக சுகத்தைப் பெற இருக்கும் ஆத்மா சரீரத்துடன் ஸ்வர்கத்திலும், அதர்மத்தின் காரணமாக துக்கத்தைப் பெற இருக்கும் ஆத்மா சரீரத்துடன் நரகத்திலும், இரண்டின் பயனையும் அனுபவிக்க இருக்கும் ஆத்மா பூமியிலும் பிறக்கிறது. ஆனால் உன் அவதாரங்கள் ஒன்றும் இப்படி எதனின் தொடர்ச்சியாகவும் இன்றி உலகில் பக்தியைச் செய்வதற்காகவே இருக்கிறது”

இப்படிப் பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனைப் பலவாறுத் துதிக்கிறார் தேவர்களுடன் கூடிச் சென்றிருக்கும் ப்ரஹ்மா. இந்த துதிகளைக் கேட்டு மகிழ்ந்த பரமன் தன் விச்வரூபத்தைக் காட்டி, “நான்முகனே, உன் விருப்பம் நிறைவேறினதாகுக. உன் வரவிற்கானக் காரணத்தைக் கூறு” என்கிறான். ப்ரஹ்மா “ஆயிரம் உருவும், கைகளும் உடையவனே, பல முகங்களும், திருவடிகளும் கொண்டவனே, ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களைச் செய்யும் எல்லையற்றவனே, புத்தியும், இயற்கையும், நினைவுமாயிருப்பவனே, எங்களிடம் கருணை கூறுங்கள். அஸுரர்களால் எல்லையற்ற துன்பங்களுக்கு ஆளாகியிருக்கும் பூதேவி இங்கு வந்துள்ளாள். நீயே அவள் குறை போக்கிக் காத்தருள வேண்டும்.

நானும், இந்த்ரனும், அச்வினிகளும், வருணனும், யமனும், ருத்ரனும், வஸுக்களும், ஸூர்யர்களும், காற்றும், நெருப்பும் இன்னும் அனைத்து வானவர்களும் உன் ஆணையைச் செய்ய சித்தமாயிருக்கிறோம். குறைகளற்றவனே, தேவர் தலைவனே, கட்டளையிடு” என்கிறார். இதைக் கேட்டதும் பரமன் வெள்ளையாக ஒன்றும், கருப்பாக ஒன்றுமாய் இரு மயிர்களைக் களைந்து “இவைகள் பூமியில் அவதரித்து, பூதேவின் சுமைகளையும், கவலையும் போக்கும். தேவர்களும் தங்கள் அம்சங்களோடு பூமியில் அவதரித்து, அஸுரர்களோடு யுத்தத்தில் ஈடுபடட்டும். என் பார்வையாலேயே அவர்கள் அழிவது திண்ணம். ஸந்தேஹப்படவேண்டாம். கருமையான இந்த தேஜஸ் வஸுதேவனின் பத்னி தேவகியின் கர்ப்பத்தில் எட்டாவதாகப் பிறந்து விரைவில் கம்ஸனைக் கொல்லும்” என்று கூறி மறைந்தான்.

தேவர்களும் நமஸ்கரித்து விட்டு மேருமலைக்குத் திரும்பினர். நாரதர் உடனே இந்த தேவ ரஹஸ்யத்தைக் கம்ஸனிடம் வந்து கூறிவிட்டார். அவன் உடனே வஸுதேவனையும், தேவகியையும் சிறை வைத்தான். அங்கு பிறந்த ஆறு குழந்தைகளையும் வஸுதேவர் கம்ஸனிடம் கொண்டு வந்து கொடுக்க, அவன் அவ்வப்பொழுதே அவர்கள் ஒவ்வொருவரையும் கல்லில் மோதி கொன்று விட்டான். இவர்கள் முன்பே ஹிரண்யகசிபுவிற்குக் குழந்தைகளாய்ப் பிறந்திருந்து விஷ்ணு பூஜைகளைச் செய்து வந்ததால் “அடுத்த பிறவியில் தந்தையாலேயே உங்களுக்கு மரணம்” என்று சபிக்கப் பட்டவர்கள். அவ்வாறே இப்போது நடந்தது.

யோகநித்ரைக்கு இது விஷயமாக மஹாவிஷ்ணு இட்ட உத்தரவு “மாயா! பாதாளத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஹிரண்யகசிபுவின் ஆறு குழந்தைகளையும் தேவகியின் கர்ப்பத்தில் சேர்த்து விடு. அவர்களைக் கம்ஸன் பிறந்ததும் கொன்று விடுவான். ஏழாவது கர்ப்பமாக தேவகிக்கு ஆதிஸேஷன் இருப்பான். ஏற்கனவே நந்தகோபத்தில் வஸுதேவனின் இன்னொரு மனைவி ரோஹிணி ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறாள். ஆனால் அந்த கர்ப்பம் வாயு ரூபத்திலேயே இருக்கிறது. எனவே தேவகியின் ஏழாவது கர்ப்பம் ஏழு மாதம் வளர்ந்தவுடன் அதை நீ எடுத்துச் சென்று ரோஹிணியின் வாயு ரூபமாயிருக்கும் கர்ப்பத்தைக் கலைத்து விட்டு இதை அங்கு வைத்து விடு. இழுத்துச் சென்று வைக்கப்பட்டதால் ஸங்கர்ஷணன் என்ற பெயரில் ரோஹிணிக்கு மகனாக மிகுந்த பலத்துடன் அவன் அங்கு பிறப்பான். இங்கு பயத்தில் தேவகியின் ஏழாவது கர்ப்பம் கலைந்து விட்டது என்று உலகம் நினைக்கும்.

இதன் பின் எட்டாவது கர்ப்பமாக தேவகிக்கு நானே மழை காலத்தில் ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷ அஷ்டமியில் பிறப்பேன். நீ யசோதையின் கர்ப்பத்தில் நவமியில் பிறப்பாய். வஸுதேவன் நம்மிருவரையும் என் ஏவலால், பலம் கொண்டு இடம் மாற்றுவான். கம்ஸன் உன்னைக் கொல்ல முற்படும்போது அவன் கையிலிருந்து விடுபட்டு நீ ஆகாசத்தில் நிற்பாய். மாயையான உன்னை ஆயிரம் கண் கொண்ட தேவராஜனும் தன் தங்கையாக ஏற்றுக் கொள்வான். சும்ப, நிசும்பன் முதலாக அஸுரக்கூட்டங்களை ஆயிரக்கணக்கில் நீ கொல்லப்போகிறாய். பல யோகபீடங்களை அமைத்துக் கொண்டு பூமண்டலத்தை நீ அலங்கரிக்கப் போகிறாய்.

செல்வமும், சந்ததிகளும், புகழும், பொறுமையும், ஸ்வர்க்கமும், பூமியும்,தைர்யமும், நாணமும், சக்தியும், காலைப்பொழுதும் என அனைத்து ஸ்த்ரீ வர்க்கங்களும் நீயே. ஆர்யா, துர்கா, வேதகர்பா, அம்பிகா, பத்ரா, பத்ரகாளீ, க்ஷேமதா, பாக்யதா என உன் திரு நாமங்களைத் தினமும் காலை, மாலைகளில் துதிப்பவர்களுக்கு என் அனுக்ரஹமும், அவர்கள் விருப்பங்களும் ஈடேறும். கள், மாம்ஸம், பக்ஷணங்கள், சாப்பாடு முதலியவைகளால் அனைவராலும் உபசரிக்கப்பட்டு நீயும் உன்னை பூஜிப்பவர்களுக்கு அனைத்தும் அளிப்பாய். உன் வரங்கள் அனைத்தும் என் அருளால் நிச்சயம் நடக்கும். ஆகையால் என் சொல்வதைச் செய்வாயாக”. இந்த உத்தரவின் படியே யோகமாயாவும் நடந்தாள்.

05_02. பிறப்பறியாத இறைவனும் தேவகியின் வயிற்றில் எட்டாவது கர்ப்பமாக மூவுலகிற்கும் க்ஷேமம் செய்யும் பொருட்டு உண்டானான். ஜகத்தாத்ரியும் அதே தினத்தில் யசோதையின் கர்ப்பத்தில் ப்ரவேசித்தாள். க்ரஹங்கள் பொலிவுடன் இருக்க, ருதுக்கள் ஸந்தோஷிக்க, தேவகியும் புதுப் பொலிவு பெற்றாள். அவளை எவராலும் பார்க்க முடியவில்லை. பார்த்தவர் சித்தம் கலங்கின. தேவர்களும் “ப்ரக்ருதி மஹத் தத்வத்தைத் தரித்திருப்பது போல், ப்ரணவம் வேதங்களைத் தரித்திருப்பது போல், ஸ்ருஷ்டி ஸ்ருஷ்டிக்க இருக்கும் பொருள்களைத் தரிப்பது போல், வேதங்கள் யக்ஞங்களைத் தரிப்பது போல், பூஜை பலனைத் தரித்திருப்பது போல், அரணிக்கட்டை அக்னியைத் தரித்திருப்பது போல், அதிதி தேவர்களைத் தரித்திருப்பது போல்,

பின்மாலைப் பொழுது பகலைத் தரித்திருப்பது போல், பெரியோருக்குச் செய்யும் பணிவிடை ஞானத்தைத் தரித்திருப்பது போல், வெட்கம் வணக்கத்தைத் தரித்திருப்பது போல், ஆசை பொருள்களைத் தரித்திருப்பது போல், த்ருப்தி ஸந்தோஷத்தைத் தரித்திருப்பது போல், நினைவு அறிவைத் தரித்திருப்பது போல், ஆகாசம் க்ரஹங்களையும், நக்ஷத்ரங்களையும் தரித்திருப்பது போல் இந்த தேவகியும் பரமாத்மாவைத் தரித்திருக்கிறாள். எனவே அவைகளும், இந்த தேவகியும் ஒன்றே.

ஸமுத்ரங்கள், ஆறுகள், கண்டங்கள், சிறிதும் பெரிதுமான நகரங்கள், க்ராமங்கள், குக்ராமங்கள், அக்னிகள், நீர் நிலைகள், காற்றுகள், நக்ஷத்ரங்கள், நக்ஷத்ரக் கூட்டங்கள், க்ரஹங்கள், ஆகாயம், பல்வேறுபட்ட ரதங்களுடன் கூடிய தேவக்கூட்டங்கள், மூலக்கூறுகளின் மூலங்கள், பல குணங்களுடைய நிலப் பகுதிகள், ஸ்வர்க்கம், சாதுக்கள், ஞானிகள், துறவிகள், ப்ரஹ்மாவின் தேவ பூத பிசாச நாக புருஷ ம்ருக என அனைத்தையும் அடக்கிய ப்ரஹ்மாண்டமும், ப்ரஹ்மாவும், இன்னும் அனைத்து உயிர்களும் யாரிடம் லயித்து அடங்கியிருக்கிறதோ, எவனின் உண்மை ஸ்வரூபத்தையும், குணங்களையும், பெயர்களையும், பரிமாணங்களையும் எவராலும் அறிய முடியாதோ அந்த விஷ்ணுவே உலகங்களைக் காக்க இங்கு கர்ப்பத்தில் இருக்கிறார். தேவியே, உலகுக்கு நல்லதைச் செய்வாயாக, உலகைக் காக்கும் உத்தமனான இவனை நீயும் ஆசையோடு தரிப்பாயாக” என தேவகியைத் துதித்து நின்றனர்.

05_04. மாயையின் பேச்சுக்களைக் கேட்டுக் கலங்கிய கம்ஸன் உடனே மந்த்ராலோசனைக்கு ஏற்பாடு செய்தான். ப்ரலம்பன், கேசி, தேனுகன், பூதனை, அரிஷ்டன் இன்னும் பல கொடியவர்களைக் கூட்டி “மஹா அஸுரர்களே! பல முறை முயற்சித்த போதும் இந்த தேவர்களால் என்னைக் கொல்லவா முடிந்தது. இவர்கள் ஒரு பொருட்டே அல்ல. என்னால் அவர்கள் அனைவரும் பொசுங்கினவர்களே. அல்ப வீர்யம் கொண்ட இந்த்ரன், தனித்துத் தவம் செய்யும் பரமேச்வரன், ஏமாந்த ஸமயம் பார்த்து அஸுரர்களைக் கொல்லும் இந்த விஷ்ணு. இவர்களே இப்படிப் பட்டவர்கள் என்றால் மிச்ச தேவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

முன்பொரு ஸமயம் யுத்தத்தின் போது என் அம்புகளை மார்பில் தாங்காமல், முதுகில் ஏற்றுக் கொண்டு ஓடினவன் தானே இந்த தேவர் தலைவன் இந்த்ரன். அதையும் நீங்கள் அறிவீர்கள். என் நாட்டில் மழை பொழியாமல் அவன் தடுத்த போது, நான் என் பாணங்களாலேயே மேகங்களைப் பிளந்து மழையை வேண்டுமளவு பொழியச் செய்யவில்லையா. என் மாமனார் ஜராஸந்தனைத் தவிர வேறெவரும் என்னிடம் பணிந்து கிடப்பவர்களே. இப்படியிருக்க மீண்டும் தேவர்கள் என்னைக் கொல்ல முயற்சிப்பதைக் கண்டு எனக்கு சிரிப்பும், அவர்களிடம் அவமதிப்புமே உண்டாகிறது. ஆனாலும் கெட்ட புத்தியுடைய, ஒழுக்கமற்ற தேவர்களிடம் நாம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அதற்கு இதுவே தக்க வழி. நான் சொல்வதைக் கேளுங்கள்.

பூலோகத்தில் தானம் செய்பவர்களிடமிருந்தும், யாகம் செய்பவர்களிடமிருந்துமே தேவர்கள் ஹவிஸ் முதலியவைகளைப் பெற்று வாழ்கின்றனர். எனவே இந்த யாகங்களையும், தானங்களையும், இவைகளைச் செய்பவர்களையும் நாம் அழிக்க வேண்டும். அப்போது தான் தேவர்களும் வாழ்வறியாது அழிவார்கள். மேலும் தேவகியின் வயிற்றில் பிறந்த அந்தப் பெண் என்னைக் கொல்லப் போகிறவன் ஏற்கனவே பிறந்து விட்டான் என்று கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டும். குழந்தைகளைக் கொன்று விட வேண்டும். விசித்ரமான பலமும், தோற்றமும் பொருந்திய குழந்தைகளைத் தேடித் தேடிக் கருணையின்றி கொல்ல வேண்டும். இவைகளை உடனே செய்யுங்கள்” என்று உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு தேவகி, வஸுதேவரிடம் சென்றான்.

அவர்களை விடுவித்து “வீணாக உங்கள் குழந்தைகளைக் கொன்று விட்டேன். அவர்கள் விதி அப்படி. உங்களின் தீவினைப் பயனாகவும் இது நடந்திருக்கலாம். வருந்தாதீர்கள். இவ்வளவு செய்தும் என்னைக் கொல்லப் போகிறவன் எங்கேயோ, எப்படியோ பிறந்து விட்டான். உங்கள் விதி முடியும் வரை இனி உங்களுக்குத் துயரில்லை. ஸந்தோஷமாயிருங்கள்” என்று ஆறுதல் கூறிவிட்டு, ஸந்தேகங்களுடனும், குழப்பங்களுடனும் தன் மாளிகை திரும்பினான்.

05_06. ஒரு ஸமயம் வண்டியின் கீழே குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அந்த வண்டியின் வடிவில் குழந்தையைக் கொல்வதற்காக முராஸுரன் என்பவன் புகுந்தான். இதையறிந்த குழந்தை பாலுக்கு உதைத்துக் கொண்டு அழுவது போல் பாவனை செய்து, பாரத்தோடிருந்த வண்டியைத் தலைகீழாக உதைத்துத் தள்ளி உடைத்தது. அதிலிருந்த பானை முதலியன விழுந்து உடைந்து, பொருள்கள் சிதறின. இதைக் கண்ட கோபர்கள் மேலும் வியப்படைந்தனர். வண்டியை யார் இப்படித் தள்ளியது என்று கேட்ட கோபர்களிடம், அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் குழந்தை க்ருஷ்ணன் தான் இப்படிச் செய்தது. தன் கால்களால் வண்டியை உதைத்துத் தள்ளியது, வேறு யாரும் தள்ளிவிட வில்லை என்று கூறவும் கூடியிருந்தவர்கள் மேலும் ஆச்சர்யமடைந்தனர். நந்தகோபன் ஓடிவந்து குழந்தையை எடுத்துக் கொள்ள யசோதை உடைந்து போன பானை ஓடுகளை தயிர், பூ, அக்ஷதைகளால் அர்ச்சித்தாள்.

இப்படி இருந்து கொண்டிருக்கையில் குழந்தை பலராம, க்ருஷ்ணர்களுக்கு ஜாதகர்மா, நாமகரணங்களைச் செய்து வைக்கும்படி வஸுதேவர் தன் புரோஹிதரான கர்கரை கோகுலத்துக்கு ரஹஸ்யமாக அனுப்பி வைத்தார். கோபர்களுக்கும் தெரியாதபடி மிகவும் ரஹஸ்யமாக, எளிமையாக நடந்த அந்த விழாவில் மூத்தவனுக்கு ராமன் என்றும், இளையவனுக்குக் க்ருஷ்ணன் என்றும் பெயர் சூட்டினார் கர்கர். குழந்தைகளின் விளையாட்டு தொடர்ந்தது. சாம்பலையும், புழுதியையும் உடலெங்கும் அப்பிக் கொண்டு அங்குமிங்கும் தவழத் தொடங்கினர். மாட்டுக் கொட்டிலிலும், கன்றின் கொட்டிலிலும், அவற்றின் வாலைப் பிடித்து இழுத்துக் கொண்டும், ஒரு நிமிஷங்கூட ஓரிடத்தில் இருக்காமல் விளையாடிக் கொண்டிருந்த அவர்களை ரோஹிணியாலோ, யசோதையாலோ கட்டுப்படுத்தவே முடியவில்லை.

பார்த்தாள் யசோதை. ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டாள். சொல்வதைக் கேட்காமல் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்த க்ருஷ்ணனை ஒரு குச்சியால் மிரட்டி, அவன் இடுப்பில் அந்தக் கயிற்றைக் கட்டி மறு நுனியை ஒரு மர உரலோடு சேர்த்துக் கட்டினாள். “குறும்பா! இப்ப முடிஞ்சா எங்கயாவது போ, பாக்கலாம்” என்று குழந்தையிடம் விரட்டி விட்டு நிம்மதியாக வீட்டு வேலைகளைச் செய்யச் சென்று விட்டாள். ம்.. வண்டி கிளம்பியாச்சு! ஆமாம், குழந்தை உரலையும் சேர்த்து உருட்டிக் கொண்டு செல்லத் தொடங்கியது. வீட்டுத் தோட்டத்தில் அருகருகில் வளர்ந்திருந்த இரு மருத மரங்களின் நடுவில் குழந்தை சென்று விட்டது. ஆனால் உரல் இரு மரங்களின் நடுவில் மாட்டிக் கொண்டது.

முடிந்த வரை உரலைச் சேர்த்து இழுத்து, இரு பெரும் மரங்களையும் மிகுந்த சப்தத்துடன் அடியோடு முறிந்து விழச்செய்து, கண்களை ஆச்சர்யமாக விரித்து அதை வேடிக்கை பார்த்து விட்டு, வித்யாசமான அந்த சத்தத்தையும் கேட்டு விட்டு, குழந்தை உரலோடு மீண்டும் செல்லத் தொடங்கி விட்டது. சப்தம் கேட்டு ஓடி வந்த கோபர்கள் காற்றே இல்லாமல் விழுந்து கிடக்கும் மரங்களையும், இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் கயிறோடும், அதன் தழும்போடும், தன் சிறு பற்களைக் காட்டி சிரித்துக் கொண்டிருந்த குழந்தையையும் கண்டனர். இந்த நிகழ்வுக்குப் பிறகு க்ருஷ்ணன் தாம(கயிறு, கயிறு கட்டப்பட்ட)உதரன் (வயிறு)= தாமோதரன் என்று எங்கும் கொண்டாடப்பட்டான்.

தொடர்ச்சியாக நடந்த இந்த துர்ஸகுனங்களை பூதனை மரணம், ஸகடம் உடைந்தது, மரங்கள் முறிந்தது என்று பார்த்துக் கவலையும், பயமுமடைந்த கோபர்கள் தலைவர்களுடன் ஒன்று கூடி “இனி இந்த இடமும், நம் சேரியும் மேலும் அழிவதற்குள் நாம் அருகிலிருக்கும் இன்னொரு வனப்பகுதியான ப்ருந்தாவனம் சென்று விடுவோம். அதுவே நமக்கு நல்லது. கெடுதல்கள் இன்றி நாம் இனி அங்கு வாழ்வோம்” என்று முடிவெடுத்து குடும்பங்களைப் பொருள்களோடுத் தயார் படுத்தி வண்டிகளில் புறப்பட்டனர். பசுக்கூட்டங்களையும், கன்றுகளையும், காளைகளையும் முன்னே ஓட்டிக் கொண்டு சென்றனர். எங்கும் தயிரும், பாலும் சிதறிக் கிடந்தது கோகுலம்.

இது நாள் வரை ராம, க்ருஷ்ணர்களின் லீலைகளால் பொலிந்திருந்த கோகுலம் சிறிது காலத்திற்குள் காக்கை, கழுகு இவைகளின் கூடாரமாகி விட்டது. காடாய்க் கிடந்த ப்ருந்தாவனமோ அந்த கோடைக்காலத்திலும் புல்லும், நீரும் பெற்று புதுப் பொலிவுடன் விளங்கியது. ஆயர்குடி அர்த்த சந்த்ர (அரைவட்ட) வடிவில் தங்கள் குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, வண்டிகள் நிறுத்த வசதிகளையும் செய்து கொண்டனர். குழந்தைகளிருவரும் கன்றுகளை மேய்க்கும் வயதடைந்தனர். மயில் தோகைகளாலும், வெவ்வேறு காட்டுப் பூக்களாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டு, இலைகளால் குழல்களைச் செய்தும், புல்லாங்குழலாலும் ஓசைகளை எழுப்பிக் கொண்டு, தாங்களும் மகிழந்து, பிறரையும் மகிழச்செய்து கொண்டு, பக்கவாட்டுகளில் தவழும் சுருள் கேசங்களுடன் அக்னி குமாரர்களான சாக, விசாகர்களைப் போல ப்ருந்தாவனமெங்கும் ஸஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.

தங்களை ஒத்த ஆயிரம் குழந்தைகளோடு ஒவ்வொருவர் தோள் மீது மற்றொருவர் ஏறியும், லோகபாலர்களான இருவரும் கோபாலர்களாக கன்றுகளை காத்துக் கொண்டும் விளையாடியும், சிரித்துக் கொண்டும் இப்படியே ஏழு வயதை எட்டினர். கோடை காலம் கழிந்து மழைக் காலம் தொடங்கியது. மழை நன்கு பொழிந்து எங்கு பார்த்தாலும் பசுமை விளங்கியது. பட்டுப் பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன. புதிதாய்ப் பணம் கிடைத்த துஷ்டனின் மனம் போல் கட்டுக்கடங்காது மழை நீர் திரண்டு வழிகளைப் புதிது, புதிதாகக் கண்டு பிடித்து ஓடியது. தூயவர்களின் வேதங்களுக்கும், நீதிகளுக்கும் ஒத்துப் போகும் பேச்சுக்களை, இவற்றை நம்பாத மூர்க்கர்கள் தங்கள் சத்தமான முரட்டுப் பேச்சுக்களால் மறைத்துப் பேசுவது போல், மேகங்கள் தங்கள் கறுமையால் நிர்மலனான சந்த்ரனை விளங்காதபடி மறைத்தன.

வில்லினுடைய குணமே அதன் நாண் கயிறு தான். ஆனால் நாண் இல்லாத இந்த்ர தனுஸ் மழைக் காலத்தில் உயர்ந்த இடத்திலே நிலையாக பளீரென்று இருக்கிறது. இது இந்நாளில் பகுத்தறிவில்லாத அரசனின் ஆதரவு பெற்று குணஹீனர்கள் உயர்ந்த பதவிகளில் நிலைத்திருப்பதை நினைவூட்டுகிறது. இப்படிப் பல வர்ணனைகளுடன் கூடிய மழைக் காலத்தில் அந்த ப்ருந்தாவனத்தில் ராம, க்ருஷ்ணர்கள் மற்ற இடைச்சிறுவர்களோடு கூடி உடலில் மூலிகைகளைக் கொண்டு பல வண்ணங்களைப் பூசிக்கொண்டு மகிழ்ச்சியாகத் திரிந்தனர். வனங்களில் திரிந்தனர். மயில் போலவும், தேனீக்களைப் போலவும், அடுத்தவர் போலவும் மாறிப் பேசி விளையாடுவார்கள். குழுவாகப் பாடுவார்கள். ஆடுவார்கள். மர நிழலில் தூங்குவார்கள். தூக்கம் வரும்போது இலைகளைக் குவித்து அதைப் படுக்கையாகக் கொண்டு அதில் உறங்குவர். மேகம் இடி இடிக்கும் போது கும்பலாகக் கூடி, பயப்படுவது போல் ஆ! ஆ! என்று கத்துவார்கள். இப்படி இவர்கள் இருவரும் பகலிலும், இரவிலும் பசுக்களோடும், மற்ற சிறுவர்களோடும் விளையாடி ப்ருந்தாவனத்தில் நந்த கோபன் க்ருஹத்தில் வளர்ந்து வந்தனர்.

05_07. இப்படி அண்ணாவுடன் சுற்றித்திரிந்து கொண்டிருந்த க்ருஷ்ணன் ஒரு நாள் தனியாக, நண்பர்களுடன் கூடி யமுனைக் கரையில் காட்டுப் பூக்களைச் சூடி விளையாடிக் கொண்டிருந்தான். அப்படியே யமுனையின் ஒரு மடுவிற்குச் சென்றான். அந்த மடுவில் தான் காளியன் என்ற ஒரு மஹா ஸர்ப்பம் வஸித்துக் கொண்டிருந்தது. அதன் விஷத்தால் அந்தப் பகுதியில் நீர் எப்போதும் கொதிப்போடிருந்து வந்தது. கரையிலிருந்த மரங்களும், வானில் பறக்கும் சிறு பறவைகளும் கூட அதன் கொடிய விஷத்தால் சாம்பலாகிக் கொண்டிருந்தது. இப்படி எமனின் வாயாக இருந்து வந்தது அந்த மடு.

“இந்த மடுவில் தான் காளியன் இருக்கிறான். இந்த துஷ்டனை இங்கிருந்து விரட்டி விட்டால் அவன் ஸமுத்ரத்திற்குச் சென்று விடுவான். யாருக்கும் பயன்படாமலிருக்கும் இந்த இடமும், மடுவும், யமுனையும் பசுக்களுக்கும், இடையர்களுக்கும் இன்னும் எல்லோருக்கும் பயன்படும் இடமாக மாறும். ஆக இவனை இங்கிருந்து நிக்ரஹம் செய்து விட வேண்டும்” என்று கூறிக்கொண்டு க்ருஷ்ணன் அருகில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த கடம்ப மரத்தின் மேலேறி, உடைகளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு காளியன் இருக்கும் அந்த மடுவில் வேகமாகக் குதித்தான். அப்போது அங்கிருந்து தெளித்த விஷ நீரில் நனைந்த மரங்கள் பற்றி கொழுந்து விட்டு எரிந்தன. கண்ணனும் தன் தோள்களைத் தட்டி சத்தம் போட்டான்.

சத்தம் கேட்டு ஸர்ப்பராஜனும், மேலும் பல ஸர்ப்பங்களும், ஹாரங்களுடனும், குண்டலங்களுடனும் நாக பத்னிகளும் நூற்றுக் கணக்கில் அங்கு வந்து கூடினர். சிவந்திருந்த காளியன் முகத்திலிருந்து விஷத்தீ வெளி வந்தது. ஸர்ப்பங்கள் க்ருஷ்ணனை இறுக்கிக் கட்டிக் கொண்டு, விஷத்தைக் கக்கிக் கொண்டு கடித்தன. இதைக் கண்ட மற்ற இடைச் சிறுவர்கள் கோகுலத்திற்கு ஓடி “க்ருஷ்ணன் முட்டாள் தனமாகக் காளியன் மடுவில் விழுந்து விட்டான், காளியன் அவனைக் கடித்து விழுங்குகிறான். வாருங்கள், வந்து பாருங்கள்” என்று கூக்குரலிட்டனர். இடி விழுந்தது போன்ற இந்த வார்த்தைகளைக் கேட்டு கோபியர்கள், யசோதையை முன்னிட்டுக் கொண்டு கால்கள் தடுமாறி, பயத்துடனும், அழுது கொண்டும் மடுவை நோக்கி ஓடினர்.

நந்தனும், மற்ற கோபர்களும், ஜயிக்கமுடியாத ராமனும் க்ருஷ்ணனுக்கு உதவ யமுனைக் கரைக்கு ஓடினர். மடுவில் காளியனால் தப்ப வழியில்லாமல் கட்டப்பட்டு, பொலிவற்று, செயலற்றிருக்கும் க்ருஷ்ணனைக் கண்டனர். நந்தகோபனும், யசோதையும் உணர்வற்று, நினைவற்றவராயினர். கோபியர்கள் “நாமும் யசோதையோடு இந்த மடுவிலேயே குதித்து விடுவோம். ஸூர்யனில்லாத பகலும், சந்த்ரனில்லாத இரவும், எருதுகள் இல்லாத பசுக்களும் போன்றது க்ருஷ்ணன் இல்லாத கோகுலம். நாம் அங்கு செல்ல வேண்டாம். பிறந்த வீடாக இருந்தாலும், க்ருஷ்ணன் இல்லாத கோகுலம் நீரில்லாத ஆறு போல் அழகழிந்து போனதே. நமக்கு அங்கு மகிழ்ச்சி இருக்காது. காளியன் பிடியில் இருந்தும் க்ருஷ்ணன் நம்மைக் கண்டதும் சிரிக்கிறான் பாருங்கள்” என்றெல்லாம் கூறி அழுது கொண்டிருந்தனர்.

இப்படி கோபியர் அழவும், நந்த கோபனும், யசோதையும் மூர்ச்சிக்கவும் கண்ட ரோஹிணியின் மகன் யாருக்கும் புரியாதபடி க்ருஷ்ணனைத் துதிக்கிறான். “தேவதேவ, என்ன இது. நீ மனிதர்களின் ஸ்வபாவத்தையே காட்டுகிறாயே. இந்தக் காளியன் கடிக்க, மூர்ச்சையடைகிறாயே. இன்னும் நீ உன்னை உணரவில்லையா. நீ அனந்தன் அல்லவா. ஸர்வேச்வரனல்லவா. வண்டிச் சக்ரத்தின் மையம் போல, நீயல்லவோ இந்த உலகிற்கு ஆதாரம். நீதானே முச்செயல் புரிபவனும். வேத ஸ்வரூபியே! உன்னையல்லவா தேவர்களும், யோகிகளும் பூஜிக்கின்றனர்.

பூதேவியின் ப்ரார்த்தனைப்படி அவள் பாரத்தைக் குறைக்கத் தானே நீ அவதரித்திருக்கிறாய். அப்படித்தானே உன் அம்சமான நானும் உனக்கு அண்ணனாகப் பிறந்திருக்கிறேன். நீ இப்படி மனுஷ்யனாக லீலைகள் செய்வதால், மற்ற தேவர்களும் அப்படியே இடையர்களாகப் பிறந்து உன்னுடனே வாழ்கின்றனர். நீயும் இடையனில்லை. அவர்களும் இடையர்கள் அல்ல. அவர்கள் தேவர்கள். நீ அவர்களுக்கெல்லாம் தேவன். கோபிகைகளையும் உன்னுடன் விளையாடுவதற்காக, நீயன்றோ முன்பாக அவதரிக்கச் செய்து, நீ பின்னால் பிறந்துள்ளாய். இப்போது நமக்கு இவர்களன்றோ பந்துக்களும் நண்பர்களும். உன் நிலைக் கண்டு கலங்கும் இவர்களை இப்போது புறக்கணிக்காமல் காக்க வேண்டுமல்லவா. உன் பிள்ளை ஸ்வபாவம் போதும். விளையாட்டை நிறுத்து. இந்த கொடிய காளியனை இப்போதே அடக்கி விடு”

இதைக் கேட்ட க்ருஷ்ணன் அண்ணாவைப் பார்த்து புன்முறுவல் பூத்தான். ஸர்ப்பங்களின் பிடிகளிலிருந்து வேகமாகத் தன்னை விடுவித்துக் கொண்டு மேலே வந்தான். காளியனின் வணங்காத தலையைத் தன்னிரு கைகளால் பிடித்து வளைத்து, அதன் மீதேறினான். பல தலைகள் கொண்ட காளியனின் தலைகளில் வெற்றி நடனமாடி அவனை வணங்கச் செய்தான். தலைகளைத் தூக்கும்போதெல்லாம் அவைகளை மீண்டும் வணங்கச் செய்து, கொடுமையான காயங்களை ஏற்படுத்தினான். இப்படி அங்குமிங்கும் நடனமாடிய க்ருஷ்ணனால் வாய்களில் ரத்தத்தைக் கக்கிக் கொண்டு மூர்ச்சையானான் காளியன். அவனின் இந்த நிலை கண்ட அவன் பத்னிகள் க்ருஷ்ணனையே துதித்தனர்.

“தேவ தேவா! உன்னைப் புரிந்து கொண்டோம். நீயல்லவோ அனைத்திற்கும் தலைவன். உயர்ந்தவன். அறிவுக்கெட்டாதவன். பரப்ரஹ்மத்தின் அம்சம். தேவர்களே உன்னைப் புகழ முடியாதல்லவா. அப்படியிருக்கும் போது பெண்களான நாங்கள் உன்னைத் துதிப்பது எப்படி. இந்த பஞ்ச பூத மயமான ப்ரஹ்மாண்டம் உனது ஓர் சிறு அம்சத்திலும், சிறு அம்சமல்லவா. அணுவிற்கும் அணுவான, பெரியதெற்கெல்லாம் பெரிதான உன் ஸ்வரூபத்தையும் யோகிகளும் அறியார்கள். ப்ரஹ்மாவும் உன்னைப் படைக்க இயலாது. சிவனாலும் உன்னை அழிக்க இயலாது. உன்னிருப்பிற்கும் எவரும் காரணமாக இயலாது. உன்னை வணங்குகிறோம். உனக்குக் கோபம் கிடையாது. உலக நன்மைக்காகவே இந்தக் காளியனை நீ அடக்குகிறாய்.

எங்களிடம் தயை கூர். பெண்களிடம் சாதுக்கள் இரக்கப் படுவார்களே. முட்டாள்களும் விலங்குகளிடம் இரக்கம் கொள்வார்களே. எனவே இளைத்துள்ள இந்த அல்ப ப்ராணியிடம் இரக்கம் காட்டு. உன் திருவடிகளால் துகைக்கப்பட்ட இந்த காளியன் சிறிது நேரத்தில் இறந்து விடுவான். உன் பெருமை எங்கே, இவன் எங்கே. உயர்ந்தவர்களிடம் பகையையும், ஸமமானவர்களிடம் நட்பையும் கொள்ள வேண்டும் என்பதல்லவா நீதி. இவன் உனக்குத் தாழ்ந்தவனல்லவா. இவனிடம் நீ த்வேஷம் கொள்ளாதே. இறக்கும் தருவாயில், துன்புற்றுக் கொண்டிருக்கும் இவனை அருள் கூர்ந்து விட்டு விடு. எங்களுக்கு பர்த்ரு பிக்ஷை இடு” என்றெல்லாம் வேண்டித் துதித்தார்கள்.

இப்படி நாக கன்னிகைகள் துதித்த பின், இறக்கும் தறுவாயிலிருந்த காளியனும், “என்னை மன்னித்து விடு. அணிமா முதலிய எட்டு குணங்களும், சக்தியும் உனக்கு இயல்பானதல்லவா. உன்னிடமிருந்தே தேவர்கள் முதற்கொண்டு அனைத்தும் உண்டாகிறது. நீ அனைத்திற்கும் அப்பாற்பட்டவனல்லவா. ப்ரஹ்ம, ருத்ர, இந்த்ர, மருத்துக்கள், அச்வினிகள், வஸுக்கள், ஆதித்யர்கள் என அனைவரும் கூடின இந்த உலகம் உன்னுடைய சிறு துளிதானே. ப்ரஹ்மா முதற்கொண்டு அனைவரும் உன்னை தேவலோகத்துப் பூக்களால் பூஜிக்கின்றனர். ரிஷிகளும் உன்னை இந்த்ரிய நிக்ரஹம் என்ற பூக்களால் பூஜித்துத் த்யானிக்கின்றனர். நான் எப்படி உன்னைத் துதிப்பேன்.

நீ மிகவும் பெரியவனல்லவா. நான் மிகவும் சிறியவனல்லவா. அதனாலன்றோ உன்னைத் துதிக்காமல் இருந்து விட்டேன். எனினும் உன் தயையால் என்னை நீ அனுக்ரஹிக்க வேண்டும்.
மிகக் கொடிதான எங்கள் ஸர்ப்ப ஜாதிக்குக் கடிப்பதென்பது ஸ்வபாவமல்லவா. அதனாலன்றோ உன்னை நான் கடித்து விட்டேன். என்னிடம் இதிலென்ன தவறு இருக்கிறது. உலகையும், ஜாதிகளையும் படைத்து, அவைகளின் ஸ்வபாவங்களையும் நீயன்றோ ஸ்ருஷ்டித்தவன். அப்படி நீ என்னை படைத்தபடிதானே நான் நடந்து கொண்டேன். இது ஒரு பெருந்தவறா. இதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா. இயல்புக்கு மாறாக நடந்து கொண்டால் தானே நான் தீயவனாவேன். நல்லவர்களைக் காப்பதற்காகத்தானே உன் அவதாரமும்.

அப்படி நல்லவனாக ஒரு குற்றமும் செய்யாமல் நீ ஸ்ருஷ்டித்தபடி நானிருக்கும் போது நீ என்னைத் தண்டிப்பது எப்படி ந்யாயமாகும். எனினும் இதையும் என் கொடுந்தன்மை அழிவதற்காக நீ கொடுத்த வரமாகவே நான் நினைக்கிறேன். உன்னிடமிருந்து இந்த வரத்தைப் பெற்றிருப்பதால் இந்த வரம் மேலும் சிறப்படைகிறது. நான் இனி ஒருவருக்கும் தீங்கு செய்யேன். என் விஷமும், வீர்யமும் நன்கு அழிந்தன. என்னை நன்கு ஒடுக்கியிருக்கிறாய். ப்ராணனை மட்டும் எனக்கு விட்டு விடு. நான் இனி உன் உத்தரவுப் படி நடந்து கொள்கிறேன்” என்று பலவாறுத் துதித்து வேண்டிக் கொண்டான்.

பரமனும் “காளிய! உன் மனைவி, மக்கள், பந்துக்களோடு உடனடியாக நீ ஸமுத்ரம் சென்று விட வேண்டும். யமுனை மடுவில் இனி நீ இருக்கக் கூடாது. என் பாதம் பதிந்த அடையாளங்களைக் கண்டு உங்கள் சத்ருவான கருடனும் உன்னை ஹிம்ஸிக்கமாட்டான். பயம் வேண்டாம்” என்று அபயமளித்து அனுப்பி வைத்தான். தானும் மடுவிலிருந்து வெளியேறினான். மீண்டும் பிழைத்து வந்ததாகவே க்ருஷ்ணனை எண்ணிய கோபர்கள் அவனைப் பெரிதும் கொண்டாடி அவனைக் கட்டியணைத்து, கண்ணீரால் நனைத்தனர். அண்ணன் வந்திருந்தால் இந்த க்ருஷ்ணனை அவர் மடுவில் குதிக்கவே அனுமதித்திருக்க மாட்டார். இவ்வளவும் நடந்திருக்கவும் நடந்திருக்காது. யமுனையும் சுத்தமானது. எவரும் புகழ்பாட க்ருஷ்ணனும் கோப, கோபியருடன் மகிழ்ச்சி பொங்க ப்ருந்தாவனத்திற்குத் திரும்பினான்.

05_08. பலராமனும், க்ருஷ்ணனும், மற்ற இடைச்சிறுவர்களும் மீண்டும் முன்பு போலவே காடுகளில் மாடுகளை மேய்த்துக் கொண்டு சுற்றித் திரிந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு பனங்காட்டை அடைந்தனர். இடைச் சிறுவர்கள் “இந்த பனங்காட்டில் தேனுகன் என்ற ஒரு அஸுரன் கழுதை வடிவில் இருந்து கொண்டு இதைக் காத்துக் கொண்டு, ம்ருகங்களை ஹிம்ஸித்து உணவாக்கிக் கொண்டு இருக்கிறான். இவனிடம் பயந்து கொண்டு யாரும் இதனுள் செல்வதில்லையாதலால் இங்கு பனம் பழங்கள் அதிகமாகப் பழுத்துக் குலுங்கிக் கொண்டு, இந்தப் பகுதி முழுதும் மணம் வீசிக் கொண்டிருக்கின்றன. இதை நீங்கள் பறித்துத் தந்தால், நாங்கள் விரும்பி சாப்பிடுவோம்” என்று க்ருஷ்ணனிடமும், பலராமனிடமும் கூறினர்.

க்ருஷ்ணனும், பலராமனும் உடனே இதற்குச் சம்மதித்துப் பழங்களை உதிர்க்கத் தொடங்கினர். அப்போது அவர்களை நோக்கி கொல்வதற்காக ஓடி வந்த தேனுகாஸுரன் சங்கர்சணன் மார்பில் தன் பின்னங்கால்களால் எட்டி உதைத்தான். அந்தக் கால்களைப் பிடித்து பலராமன் நன்றாக உயிர் போகும்படி சுழற்றி அவனை பனைமரங்களின் மீது எறிந்தான். மரங்களை சாய்த்துக் கொண்டு, பழங்களையும் மழைத்துளிகள் போல கீழே விழச்செய்து கொண்டு தேனுகன் உயிரை விட்டான். அவனைப் பின் தொடர்ந்து வந்த கழுதை உருவிலிருந்த மற்ற அஸுரர்களையும் க்ருஷ்ணனும், பலராமனும் கொன்று எறிந்தனர். எங்கு பார்த்தாலும் பழுத்த பனம் பழங்களும், இறந்து கிடக்கும் அஸுரர்களும் நிறைந்திருந்தது அந்த வனம். இதன் பின் சிறுவர்களும் மகிழ்வுடன் பழங்களை சுவைத்தனர். பசுக்களும் அங்கிருந்த காடு போல் இருந்த புது புற்களை நன்கு உண்டன.

05_09. இதற்குப் பின்னொரு ஸமயம், பாண்டீரம் என்ற ஆலமரத்தினருகில் இந்தச் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். பால் கறக்கும் போது மாட்டின் கால்களைக் கட்டும் கயிற்றைத் தோளில் போட்டுக் கொண்டு, காட்டு இலைகளால் தொடுக்கப்பட்ட மாலைகளை (வனமாலை) அணிந்து கொண்டு சின்னஞ்சிறு எருதுகள் போல ராம, க்ருஷ்ணர்கள் அப்போது விளங்கினர். சிங்கம் போல கத்திக் கொண்டும், ஏறுவதற்குத் தகுந்த மரங்களைத் தேடிக் கொண்டும், தூரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் கன்றுகளின் பெயரைக் கூவி அழைத்துக் கொண்டும், கருப்புப் பட்டாடையில் ராமனும், பொன்னிறப் பட்டாடையில் க்ருஷ்ணனும் மேகங்களைப் போல் திரிந்து கொண்டிருந்தனர். இப்படி உலகைக் காக்கும் இவர்கள் மனிதர்களிடையே பிறந்து அந்தத் தன்மைகளையே காட்டிக் கொண்டு, மனித வர்க்கத்தைப் பெருமைப் படுத்திக் கொண்டு இருந்தனர்.

கைகளை இரு சிறுவர்கள் பிணைத்திருக்க அதில் ஏறி விளையாடுவது, மர விழுதுகளைக் கட்டி அதில் ஊஞ்சலாடுவது, கல், மரக்கட்டைகளை சுற்றி எறிவது என பல விளையாடல்களை அவர்கள் செய்து கொண்டிருந்தனர். ஹரிணாக்ரீடனம் என்ற ஒரு விளையாட்டை அவர்கள் ஒரு ஸமயம் ஆரம்பித்தனர். அதாவது இருவர், இருவராக மான் போலத் துள்ளிக் குதித்து ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வேண்டும். முதலில் வருபவரைத் தோற்றவர் முதுகில் தூக்கிக் கொண்டு குறிப்பிட்ட தூரம் வரை ஓடவேண்டும். இதுதான் ஹரிணாக்ரீடனம். க்ருஷ்ணனும், ஸ்ரீதாமன் என்பவனும் ஜோடி சேர்ந்தனர். பலராமனுடன் ப்ரலம்பன் என்ற அஸுரன் இடைச்சிறுவன் உருவில் யாருக்கும் ஸந்தேஹம் வராதபடி ஜோடி சேர்ந்தான்.

க்ருஷ்ணனைத் தன்னால் கொல்ல முடியாதென்பதை உணர்ந்த அவன் பலராமனைக் குறி வைத்தான். இதில் க்ருஷ்ணனும், அவன் கட்சியைச் சேர்ந்தவர்களும் வென்றனர். தோற்றவர்கள் வென்றவர்களை சுமந்து கொண்டு பாண்டீரம் வரை ஓடிச் சென்று திரும்பினர். ஆனால் பலராமனைத் தூக்கிச் சென்ற ப்ரலம்பன் வானில் பறக்க ஆரம்பித்து விட்டான். கருத்த மழைக்காலத்து மேகம் போல் இருந்த அந்த அஸுரன் மேல் வெளுத்த சந்த்ரன் போலமர்ந்திருந்த பலராமன் இதைக் கண்டதும் தன்னை அதிக எடை கொண்டவனாகச் செய்து கொண்டு ப்ரலம்பனை அழுத்தினான். ஆனால் அஸுரன் அதைத் தாங்குமளவு மலை போல உருவெடுத்துக் கொண்டு தொடர்ந்து பறந்தான். பலராமன் உடனே க்ருஷ்ணனிடம் திரும்பி, “க்ருஷ்ணா! மலைபோலிருக்கும் இவனை யாரென்று அறியாமல் இருந்து விட்டோம். இப்போது நான் என்ன செய்வது” என்று கேட்டான்.

இப்போது க்ருஷ்ணர் அண்ணாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு, “அண்ணா! நீர் ஸர்வ ஸ்வரூபி, ஸூக்ஷ்மங்களுக்கெல்லாம் ஸூக்ஷமமானவர். அனைத்திற்கும் முன்பாகத் தோன்றி ப்ரளயத்திலும் எஞ்சியிருப்பவர். பரப்ரஹ்ம ஸ்வரூபமான நீர் எதற்கு இப்படி மனுஷனைப் போல் நடிக்கிறீர். உங்களை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள், உலகிற்கெல்லாம் மூலக் காரணமல்லவா தாங்கள். பூபாரம் தீர்க்கவே நாம் அவதரித்தொமென்பதை மறந்து விட்டீர்களா. உமக்கு ஆகாயமே தலை. மேகங்கள் கேசங்கள். பூமியே பாதம். அக்னி முகம். சந்த்ரன் உங்கள் மனம். வாயு மூச்சு. நான்கு திசைகளும் நான்கு தோள்கள். பலம் பொருந்திய தேவரே, ஆயிரம் தலை, கை, கால்களைக் கொண்டவரே, உங்களிடமிருந்தே ப்ரஹ்மாக்கள் தோன்றுகிறார்கள்.

அனைத்திற்கும் முந்தியவர் தாங்கள். சாதுக்கள் பலவாறு புகழும் உங்கள் ஸ்வரூபத்தை நானறிவேன். தேவர்கள் உங்களைப் புகழ்கிறார்களல்லவா. உங்களிடமிருந்தே உலகம் தோன்றி, லயிக்கிறது. ஸமுத்ரத்தின் நீர் ஆவியாகி, காற்றால் அலைக்கழிக்கப்பட்டு, இமயத்திலே பனியாய்ப் படர்ந்து, ஸூர்யக் கதிர்களால் மீண்டும் நீராகவே ஆவது போல இந்த உலகும் ஒவ்வொரு கல்பத்தின் இறுதியிலும் மீண்டும் தோற்றுவிப்பதற்காகவே உங்களால் அழிக்கப்படுகிறதல்லவா. அளவற்ற உங்கள் பலத்தால் அந்த கொடியவனை மனுஷ்ய பாவத்தோடே கொல்லுங்கள், சரி எனப்படுவதைச் செய்யுங்கள்” என்று பதில் கூறினார்.

இப்படி இந்த தயாளனால் தன் பெருமைகளை நினைவு படுத்திக் கொண்ட பலராமன் சிரித்துக் கொண்டு ப்ரலம்பனைத் தன் கை, முட்டிகளால் ரத்தம் வரும்படி த்வம்சம் செய்ய, விழிகள் வெளியே வந்து விழ, மூளை மண்டையோட்டைப் பிளந்து கொண்டு பிதுங்க, வாயில் ரத்தம் கக்கிக் கொண்டு பூமியில் விழுந்து இறந்தான் ப்ரலம்பன். ப்ரலம்பன் பிணமாய் விழுந்ததைக் கண்ட கோபர்கள் அதிசயித்து, எல்லோரும் ஒன்று கூடி, பலராமனைப் புகழ்ந்து கொண்டாடிக் கொண்டு க்ருஷ்ணனுடன் கோகுலம் திரும்பினர்.

05_10. மழைக்காலம் முடிந்து பனிக்காலம் (இலையுதிர் காலம், சரத் ருது) வந்தது. நீர் நிலைகளில் தாமரைகள் பூத்துக் குலுங்கின. ஸூர்ய வெப்பத்தால் அந்த நீர் நிலைகளில் இருந்த நீர் சூடானது. மனை, மக்கள், சுற்றங்களிலுள்ள பற்றால் க்ருஹஸ்தன் மிகுந்த தாபமடைவது (கஷ்டம், ஆனால் ஆசை, பாசமிருப்பதால் விடவும் முடியாது) போல், தாங்கள் இது நாள் வரை பழகிய குட்டைகளை விட முடியாது தவித்தன அங்கிருந்த மீன்கள். அவைகளும் அந்த சூட்டிலேயே அந்த நீரில் இருந்தன. சாரமில்லாத இந்த வாழ்வைப் புரிந்து கொள்ளாது கண்டபடி இதில் திளைத்துத் திரிந்து, பின் இளைத்து, யோகம் செய்து, இது ஸாரமற்றது என்பதை உணர்ந்து மௌனமடைந்த யோகிகளைப் போல, மழைக்காலத்தில் தோகை விரித்து ஆடிக் கொண்டிருந்த மயில்கள் இப்போது மௌனமாயிருந்தன.

எப்படி ஞானிகள் மனைவி, மக்கள், சுற்றங்களையும், அஹங்கார, மமகாரங்களையும், த்வேஷங்களையும் விட்டு பரிசுத்தமான உடலுடன் விலகுகிறார்களோ, அதேபோல் நீர் கொண்டு கருத்திருந்த மழைக்காலத்து மேகங்களும் நீரைப் பொழிந்து விட்டு, வெளுத்த நிறம் கொண்டு ஆகாயத்தை விட்டு மறைந்தன இந்த சரத் காலத்தில். பொருள்களில் பற்றுள்ளவர் மனம் போல, ஸூர்யக் கதிர்களால் குளங்களின் நீரும் வறண்டு விடுகிறது. ஞானத்தால் நல்லவர் மனம் சமத்வத்தில் நிறைந்தது போல் இந்த நீரும் வெள்ளை அல்லி மலர்களால் நிறைந்துள்ளது. பூர்ணமடைந்திருந்த சந்த்ரன், நற்குலத்தில் பிறந்து முக்தியடையத் தக்க கடைசி சரீரத்தைப் பெற்று விளங்கும் யோகிகளைப் போலிருந்தான்.

விவேகிகள் எப்படி தங்கள் மனைவி, மக்களிடமிருக்கும் பற்றிலிருந்து கொஞ்ச, கொஞ்சமாக விலகுகிறார்களோ, நதிகளும் அவ்வாறே கரைகளை விட்டு நகர்ந்து கொண்டிருந்தன. தேர்ச்சி அடையாதவர்கள் முதலில் யோகாப்யாஸம் செய்யும் போது அவர்கள் குறைகள் அவர்களை விட்டு விலகுகின்றன. பிறகு ஒரு ஸமயம் யோகத்தை விடும் போது மீண்டும் கணக்கற்ற மனக்கவலைகளும், குறைகளும் அவர்களிடமே வந்து சேர்ந்து விடுகின்றன. அதேபோல் இங்கும் மழைக்காலத்தில் நீர் நிலைகளை விட்டுச் சென்ற அன்னப்பறவைகள் இப்போது சரத்காலம் வந்தவுடன் மீண்டும் இங்கேயே வந்து சேர்கின்றன. ஸமுத்ரம் யோகத்தை அடைந்த ஸன்யாஸியின் மனம் போல் சலனமின்றி இருந்தது. விஷ்ணுமயம் ஜகத் என்பதை உணர்ந்தவனின் மனம் போல எங்கும் நீர் அழுக்கற்று விளங்கியது.

யோகிகளின் கவலைகள் யோகத்தால் அழிவது போல், ஆகாயத்தில் இருந்த மேகங்களும் இந்த சரத் காலத்தில் ஒழிந்தன. அஹங்காரத்தால் உண்டாகும் துக்கங்களை எப்படி பகுத்தறிவு போக்குகிறதோ, அதேபோல் இங்கு ஸூர்யனின் தாபத்தை சந்த்ரன் போக்குகிறான். யோகத்தின் மூலம் இந்த்ரியங்களை அவைகளின் செயல்களிலிருந்து ஒடுக்குவது போல் (ப்ரத்யாஹாரம்), சரத்காலமும் ஆகாயத்திலிருந்து மேகங்களையும், பூமியிலிருந்து சேற்றையும், தண்ணீரிலிருந்து கலக்கத்தையும் இழுக்கிறது. வாய்க்கால்கள் மூலம் நீர் நிலைகளிலிருந்து நீரை இழுத்து, தேவைப்படும் வயல் முதலான இடங்களிலே தேக்கி வைத்து, மீண்டும் அங்கிருந்து அவற்றை வெளியேற்றுவது, யோகிகள் பூரகம், கும்பகம், ரேசகம் என்ற ப்ராணாயாமத்தின் செயல்களைச் செய்வது போலுள்ளது. (மூச்சுப் பயிற்சி மூச்சை உள்ளே இழுப்பது, உள் நிறுத்துவது, வெளியே விடுவது என்ற மூன்று நிலைகளைக் கொண்டது)

இப்படி பல சிறப்புகளைக் கொண்ட அந்த சரத் காலத்தில் கோபர்கள் இந்த்ர விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். இந்த உத்ஸவம் பற்றியும், இதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற முறைகளைப் பற்றியும் முதியோர்களிடம் க்ருஷ்ணன் ஆர்வத்தோடு கேட்டான். “குழந்தாய்! சதக்ரது என்ற இந்த்ரனே மேகங்களுக்கும், ஜலத்திற்கும் அதிபதி. அவனாலேயே ஏவப்பட்டு மேகங்கள் மழை பொழிகின்றன. மழையாலுண்டாகும் பயிர்களையே நாமும், மற்ற ப்ராணிகளும் உபயோகித்து ஸந்தோஷமாய் இருந்து வருகின்றன. தேவ பூஜைகள் நடக்கின்றன. புல்லைத்தின்று பசுக்களும் மிகுதியான பாலையும், நல்ல கன்றுகளையும் தருகின்றன. மழையாலேயே பூமி செழிக்கிறது. மழை பெய்யும் இடத்திலிருக்கும் மக்களுக்கு பசி, நோய் முதலியன இல்லை.

ஸூர்யன் தன் கிரணங்களைக் கொண்டு பூமியிலிருந்து நீரை எடுத்து மேகங்களில் விடுகிறான். இந்த்ரன் லோக க்ஷேமத்திற்காக அதை மீண்டும் மழையாகப் பொழிவிக்கிறான். இதனாலேயே மழைக்காலம் முடிந்ததும் அரசன் முதலனைவரும் யாகங்கள் மூலம் இந்த்ரனை பூஜிக்கின்றனர். நாமும் அப்படியே இந்த சரத் ருதுவிலும் இந்த உத்ஸவத்தை நடத்த முயன்று வருகிறோம்” என்று க்ருஷ்ணனுக்கு நந்தகோபன் பதிலளித்தான். இதைக் கேட்ட க்ருஷ்ணன் இந்த்ரனை வெறுப்பேற்றும் வகையில் “அப்பா! நாம் பயிரிடுபவர்களும் அல்ல, வாணிபம் செய்பவர்களும் அல்ல. காடுகளில் மாடு மேய்த்துத் திரிபவர்கள். எனவே பசுக்களல்லவா நமக்கு தெய்வம்.

தர்க்கம்(ஆன்வீக்ஷிகீ), மூன்று வேதங்கள்(த்ரயீ), வார்த்தா, அர்த்த சாஸ்த்ரம் என்ற நான்கு ப்ரதான சாஸ்த்ரங்களில் வார்த்தா சாஸ்த்ரம் பயிர் செய்வது, வணிகம் செய்வது, பசுக்களை மேய்ப்பது இவைகளைப் பற்றிக் கூறுவது. நமக்குத் தொழில் மாடு மேய்ப்பது. அதனாலேயே நாம் ஜீவிக்கிறோம். அதையே நாம் கொண்டாட வேண்டும். நமக்குப் பலன் கொடுப்பதை விட்டு மற்றொன்றை பூஜிப்பது இம்மை, மறுமை இரண்டிலும் பயன் தராது. பயிரிடும் நிலத்தின் எல்லைகளைத் தாண்டி உள்ளது காடுகள். அங்கேயே நாம் வஸிக்கிறோம். இந்தக் காடுகளின் எல்லைகளாக இருப்பவை மலைகள். ஆகவே மலைகளே நமக்கு மிகவும் முக்யம். வாசல், கதவுகளைக் கொண்ட வீடுகளில் வஸிக்கும் உழவர்கள், வணிகர்கள் போன்று நாம் இல்லை.

நாம் வண்டிகளில் சுற்றிக் கொண்டு, கண்ட இடங்களில் அவர்களை விட ஸுகமாக வாழ்கிறோம். நம் ஸுக வாழ்விற்கு இந்த மலைகளே முக்யம். மலைகள் விரும்பும் உருவெடுத்து எங்கும் ஸஞ்சரிப்பதாக அறிகிறோம். தனக்குத் தீங்கு செய்பவர்களை சிங்கம் முதலான பயங்கர ம்ருகங்களின் உருக்கொண்டு அவர்களைக் கொன்று விடுமாம். ஆகையால் இந்தப் பசுக்களும், மலைகளுமே நமக்குத் தெய்வங்கள். எனவே இவைகளைக் குறித்து யாகங்களைச் செய்யுங்கள். இந்த்ரனால் நமக்கு ஒரு பயனும் இல்லை. ப்ராஹ்மணர்களுக்கு மந்த்ர யக்ஞம், உழவர்களுக்கு ஸீர(கலப்பை) யக்ஞம், நமக்கு கிரியக்ஞம், கோயக்ஞம். இதோ இந்த சிறந்த கோவர்த்தன கிரியை நன்கு உபஸரித்து, பூஜை செய்யுங்கள்.

நம் சேரியிலுள்ள தயிர், பால், நெய் முதலியவைகளைக் கொண்டு அந்தணர்களுக்கும், இன்னும் விரும்பி வரும் அனைவருக்கும் அன்னமிட்டு உபஸரியுங்கள். இப்படி மலையைப் பூஜித்து, இவர்களுக்கு அன்னமிட்ட பின், இந்த சரத்கால புஷ்பங்களால் மாடுகளை நன்கு அலங்கரித்து, இந்த மலையை வலம் வரச் செய்யுங்கள். இதுவே என்னுடைய கருத்து. நீங்கள் மகிழ்வாக இவைகளைச் செய்தால் எனக்கும், பசுக்களுக்கும், இந்த மலைக்கும் மிகவும் பிடிக்கும்” என்று நந்தகோபரிடம் கூறினான். இப்படி க்ருஷ்ணன் சொன்னதைக் கேட்ட நந்தகோபனும், மற்ற கோபர்களும் மிகவும் மகிழ்ந்து அவன் கருத்தே சரியென கொண்டாடினார்கள். அதன்படியே கிரியக்ஞத்தையும் செய்து, கோயக்ஞத்தையும் சிறப்பாக செய்து மகிழ்ந்தனர்.

பசுக்கள் மிகுந்த ஸந்தோஷத்துடன் மலையை வலம் வந்தன. க்ருஷ்ணன் எவரும் அறியாதபடி தானே மற்றொரு உருவமும் கொண்டு மலையுச்சியில் இருந்து கொண்டு, தன்னையே கோவர்த்தன தெய்வம் என்று கோபர்களிடம் கூறிக் கொண்டு, அவர்கள் படைத்த உணவு பதார்த்தங்களை மகிழ்வாக உண்டான். கீழேயிருந்த உண்மையான க்ருஷ்ணனும் மற்றவர்களோடு இவைகளில் கலந்து கொண்டு மலையுச்சிக்கும் வந்து தன்னையே வணங்கிக் கொண்டான். இப்படி இந்த இருவர்களையும் தங்களின் புண்யம் செய்த கண்களால் கண்ட கோபர்கள் இவர்களின் ஒற்றுமையைக் கண்டு வியந்தனர். இதன் பின் மலைமீதிருந்த உருவம் மறைந்தது. அதனிடமிருந்து பல வரங்களைப் பெற்றுக் கொண்டு கோபர்களும் மகிழ்ச்சியோடு வீடு வந்து சேர்ந்தனர்.

05_11. பல காலமாக நடந்து கொண்டிருந்த இந்த்ர பூஜை நிறுத்தப்பட்டதை அறிந்த இந்த்ரன் கோபம் கொண்டு ஸம்வர்த்தகம் எனும் உலகையே அழிக்கக்கூடிய மேகக் கூட்டங்களைக் கூட்டி அந்த தேவதைகளிடம், “மேகங்களே, நான் சொல்வதைக் கேட்டு உடனே என் கட்டளையை நிறைவேற்றுங்கள். நந்த கோபன் க்ருஷ்ணனைப் பெற்றிருப்பதால் திமிர் கொண்டு, மற்ற கோபர்களோடு கூடி எனக்குச் செய்து வந்திருந்த யாகத்தை நிறுத்தி விட்டான். இந்த கோபர்களின் ஸுக வாழ்வுக்குக் காரணமாயிருக்கும் பசுக்களை ஒன்றும் விசாரிக்காமல் ஒன்று விடாமல் அழித்து விடுங்கள். நானும் யானையில் வருகிறேன். தண்ணீரையும், காற்றையும் ஒன்று சேர்த்து உதவுகிறேன். புறப்படுங்கள் உடனே. அப்போது தான் இவர்கள் திமிர் அடங்கும்” என்று உத்தரவிட்டுத் தானும் புறப்பட்டான்.

அதேபோல் எங்கும் அனைத்தும் அழியும்படி பலத்த மழை பெருங்காற்றோடு கூடி பொழிந்தது. கடும் இடியோடு, கண்ணைப் பறிக்கும் மின்னல்களோடு, இருள் சூழ்ந்து பொழிந்த இந்த மழையால் எங்கும் ஒரே வெள்ளக்காடானது. இதில் சிக்கி பசுக்கள் மூர்ச்சையடைந்தன. சில கன்றுகளைக் காத்துக் கொண்டு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தன. கன்றுகளை வெள்ளத்தில் இழந்த வேறு சில பசுக்கள் கதறிக் கொண்டிருந்தன. கன்றுகள் வாட்டத்தால் சோர்ந்து தீனமாய்க் கத்திக் கொண்டிருந்தன. இப்படிப் பசுக்களும், கோபர்களும், கோபிகைகளும் துன்பப்படுவதைக் கண்ட க்ருஷ்ணன் “இந்த்ரன் தனக்கு நடந்து கொண்டிருந்த பூஜை நின்று விட்ட கோபத்தால் பகை கொண்டு இப்படிச் செய்கிறான். இதோ இந்த கோவர்த்தன மலையையே நான் பெயர்த்தெடுத்துக் இவர்களுக்குக் குடையாய்ப் பிடிப்பேன்” என்று நினைத்து அவ்வாறே அம்மலையைத் தன் ஒரு கையாலேயே பெயர்த்தெடுத்து இவையனைத்திற்கும் குடையாய்ப் பிடித்தான்.

இந்த்ரனை நினைத்து முகத்தில் புன்சிரிப்புடன் க்ருஷ்ணன் கோபர்களிடம், “கோபர்களே! காற்று, மழைக்கு அஞ்சாமல் இதற்கு அடியில் எங்கு ஸுகமோ அங்கு வந்து தங்குங்கள். இந்த மலை மேலே விழுந்து விடுமோ என்றும் அஞ்ச வேண்டாம். இதை நான் ஒரு சிறு பந்தைத் தாங்குவது போல்தான் தாங்கியிருக்கிறேன்” என்று கூறி அழைத்தான். அவர்களும் தங்கள் பசு, மனைவி, மக்கள், சட்டி, பானை, வண்டிகள் என அனைத்துப் பொருள்களோடும் இதனடியில் பள்ளத்தில் வந்து மகிழ்வோடு தங்கிக் கொண்டனர். தங்கள் வேலைகளையும் பால் கறப்பது, கடைவது எனத் தொடர்ந்தனர். ஏழு நாட்கள் விடாமல் இந்த மழை பொழிந்தது. இந்த ஏழு நாட்களும் க்ருஷ்ணனும் தன் விரல்களாலேயே ஆடாமல், அசையாமல் கோவர்த்தன கிரியைக் குடை போல் பிடித்து கொண்டிருந்தான்.

மேனியில் எங்கும் சிறிதும் வாட்டமில்லை. விரல்களும், நகங்களும் நோகவில்லை. சந்தோஷத்தாலும், வியப்பாலும் விரிந்த கண்களோடு கோபர்களும், கோபிகைகளும் க்ருஷ்ணனின் பெருமையைப் பாட ஆரம்பித்து விட்டனர். நந்தகோகுலம் அழிவதற்காக ஏழு நாட்கள் இரவு பகலாகப் பெய்த மழை வெற்றியைத் தராததால் தோல்வியடைந்த இந்த்ரன் மேகங்களைத் திருப்பி அழைத்துக் கொண்டான். மழை நின்றது. இந்த்ரனின் மிரட்டல் பயனற்றுப் போனது. மேகங்கள் வெளிர் வாங்கின. கோபர்கள் குடையிலிருந்து வெளிவந்து மீண்டும் தங்கள் இருப்பிடங்களைச் சேர்ந்தனர். க்ருஷ்ணனும் கோவர்த்தனத்தை மீண்டும் அதனிடத்திலேயே வைத்தான்.

05_13. தேவேந்த்ரன் புறப்பட்டபின், கோவர்த்தனகிரியை க்ருஷ்ணன் எளிதாகத் தூக்கிக் கொண்டிருந்ததைக் கண்டு வியந்திருந்த கோபர்கள் “க்ருஷ்ணா, பெரும் ஆபத்திலிருந்து எங்களையும், பசுக்களையும் மலையைக் குடையாய்ப் பிடித்துக் காத்தாய். உன் செயல் ஆச்சர்யகரமான குழந்தைத் தனமாயிருக்கிறது. இடையர் பிறப்பிற்குச் சம்பந்தம் இல்லாத, தெய்வீகச் செயல்களையே புரிந்து வருகிறாய். இது எப்படி என்று எங்களுக்குப் புரியவில்லை. நீயே உண்மையைச் சொல்லி விடு. முன்பு பெரும் யமுனையின் மடுவில் காளியனை ஒடுக்கினாய். ப்ரலம்பனைக் கொன்றாய். இப்போது மலையைத் தூக்கி எங்களைக் காத்திருக்கிறாய். இந்த அரிய செயல்களைக் கண்டு நாங்கள் ஸந்தேஹத்தால் மிகவும் குழம்பியுள்ளோம்.

ஹரியின் பாதங்களில் ஆணையாய் உண்மையைச் சொல்கிறோம். எல்லையற்ற வல்லமை படைத்தவனே! உன்னுடைய பெரும் பலத்தை கண்ட எங்களால் உன்னை மனிதனாக நம்ப முடியவில்லை. இந்த சேரியில் குழந்தைகள், பெண்கள், எவருக்கும் உன் மீது அன்பு உண்டு. தேவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்தாலும் செய்தற்கரிய செயல்களை நீ செய்துள்ளாய். ஆயர் குடியில் பிறந்ததையும், பிறப்பிற்கு ஒவ்வாத வீர்யத்தையும் நினைக்கும் போதெல்லாம் மிகுந்த ஸந்தேஹம் உண்டாகிறது. நீ யாரோ தேவ, ராக்ஷஸ, யக்ஷ, கந்தர்வனாகவோ தான் இருக்க முடியும். யாராயிருந்தாலும் எங்கள் உறவினன் நீ. அது ஒன்றே போதும். உன்னை நாங்கள் வணங்குகிறோம்” என்று கூறினர்.

சிறிது நேரம் இந்த வார்த்தைகளால் புண்படுத்தப்பட்டவன் போல் அமைதி காத்த க்ருஷ்ணன் “கோபர்களே, நீங்கள் என்னை உறவினன் என்று சொல்லிக் கொள்வதில் வெட்கப்படுகிறீர்கள் போலிருக்கிறது. இல்லையென்றால் உங்கள் சம்பந்தத்தை விரும்பி உங்கள் குலத்தில் பிறந்திருக்கும் என்னை ஏன் தேவன், தானவன் என்றெல்லாம் கூறவேண்டும். நான் கொண்டாடத் தக்கவனாகவே இருந்து, என் சம்பந்தத்தால் உங்களுக்கும் வெட்கமும் உண்டாகாமலிருந்தால் இந்த ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டாம். நான் தேவனோ, கந்தர்வனோ, யக்ஷனோ, தானவனோ அல்ல. உங்கள் உறவினனே. வேறு வகையில் என்னை நினைக்காதீர்கள்” என்று கோபமாகக் கூறுவது போல் கூறினான். இப்படி இவன் கோபமாய்க் கூறியதைக் கண்ட கோபர்கள் மேலே எதுவும் பேசாமல் மௌனமாகி, க்ருஷ்ணனை உறவினனாகப் பெற்றதற்கு மகிழ்ந்து அவனோடு காட்டிற்குள் சென்றனர்.

இதன் பின் ஒருநாள் ஆகாயம் தெளிவாயிருக்க, சரத் காலத்து சந்த்ரன் உலா வந்து கொண்டிருக்க, அல்லிப் பூக்கள் நீர் நிலைகளெங்கும் மணம் பரப்பிக் கொண்டிருக்க, வண்டுகள் பாட என்று இப்படி எல்லாம் அழகாக இருந்த நிலையில் க்ருஷ்ணன் கோபிகைகளுடன் விளையாடக் கருதினான். வீட்டை விட்டு வனத்திற்கு வந்து, கோபிகைகளையும் வீட்டிலிருந்து அங்கு வரவழைக்கக் கருதி புல்லாங்குழலில் ஏற்ற, இறக்கங்கங்களுடன் அவர்கள் விரும்பும் இனிய கானம் செய்தான். இதன் இனிய ஓசையைக் கேட்டதும் கோபிகைகளும் காவல்களைக் கடந்து தங்கள் வீட்டை விட்டு க்ருஷ்ணனிடம் வந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

ஒருத்தி அந்தக் குழலோசைக்கேற்ப தானும் மெல்லப் பாட, இன்னொருத்தி அவனையே மனதில் நினைத்திருக்க, மற்றொருத்தி “க்ருஷ்ணா! க்ருஷ்ணா” என்று அவன் பெயரைக் கூறிக் கொண்டு வெட்கப்பட்டுக் கொண்டிருக்க, இன்னொருத்தி க்ருஷ்ணன் பக்கம் சென்று நிற்க என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் அவன் குழலோசையை அனுபவித்திருந்தனர். இன்னொரு பெண் மாமனார், மாமியாருக்குப் பயந்து தன் வீட்டிற்குள்ளேயே அவன் நினைவாகவே இருந்தாள். அவனையே நினைத்திருந்தலால் அவள் செய்த புண்யங்களின் பலனும் கழிந்து, வீட்டை விட்டு வெளியேறி அவனிடம் சென்று சேர முடியாத துக்கத்தில் இருந்ததால் அவள் பாபப் பலன்களும் கழியப் பெற்று அந்த இரவிலேயே அவள் பகவத் த்யானத்தால் முக்தியும் அடைந்தாள்.

இப்படி எல்லோரோடும் க்ருஷ்ணன் அந்த இரவில் ராசலீலை செய்து கொண்டிருக்கையில் அவர்கள் கண்களிலிருந்து மறைந்தான். க்ருஷ்ணன் திடீரென மறைந்ததால் துயருற்று வ்ருந்தாவனத்தில் அங்குமிங்கும் அலைந்த கோபியர் அவன் லீலைகளைத் தாங்களே ஒவ்வொருவராக செய்து காட்டி மகிழத் தொடங்கினர். ஒருத்தி “தோழி, நானே க்ருஷ்ணன். அவனைப் போலவே அழகாய் நடக்கிறேன் பாருங்கள்” என்றாள். இன்னொருத்தி “நான் தான் க்ருஷ்ணன். அவனைப் போலவே பாடுகிறேன். அதைக் கேளுங்கள்” என்றாள். இன்னொருத்திக் காளியனாக ஒருத்தியைப் பாவித்து, “துஷ்டா! காளியா! நில்! ஓடாதே!” என்றவாறு தோள் கொட்டி அவளைப் பிடித்து இழுத்துக் காண்பித்தாள். நான்காமவள் இதேபோல் கோவர்த்தனகிரியைத் தூக்குவது போலவும், ஐந்தாமவள் தேனுகாவதத்தையும் இப்படி இவர்கள் க்ருஷ்ணனின் பற்பல லீலைகளைப் பாவித்துக் காண்பித்துக் கொண்டு திளைத்திருந்தார்கள்.

இப்படி இவர்கள் வ்ருந்தாவனத்தில் சுற்றி வருந்தி வருகையில் ஓரிடத்தில் த்வஜ, வஜ்ர ரேகைகள் பொருந்திய இரு காலடிச் சுவடுகளைக் கண்டாள் ஒருத்தி. மிகமகிழ்ந்த அவள் “இதோ க்ருஷ்ணனின் காலடிகள், இங்கே பாருங்கள்” என்று மற்றவர்களுக்கும் காண்பித்தாள். சிறிது தொலைவில் இன்னொருவரின் காலடிகளும் அதன் கூட இருந்தன. உடனே அவள் “இதோ பாருங்கள், க்ருஷ்ணனுடன் புண்யம் செய்த ஒருத்தியும் சென்றிருக்கிறாள். நமக்குக் கிடைக்காத பாக்யம் அவளுக்குக் கிடைத்திருக்கிறது. சிறிய இந்த காலடிகள் நெருங்கி இருப்பதால் மெதுவாய் நடக்கும் இயல்புடையவள் அவள்” என்றும் கூறுகிறாள்.

இன்னும் சிறிது தூரத்தில் க்ருஷ்ணனின் முன் பாதப்பகுதிகள் மட்டும் இருப்பதையும், அருகில் பூச்செடிகள் இருப்பதையும் கண்ட அவள் “உடன் சென்றிருப்பவள் தனக்குப் பூக்கள் வேண்டும் என்று கேட்டிருக்கிறாள். இவன் அவள் ஆசையை நிறைவேற்ற உயரத்தில் இருக்கும் அந்தப் பூக்களை முன்னங்கால்கள் மட்டும் பூமியில் படுமாறு எழும்பிப் பறித்துக் கொடுத்துள்ளான், அதனால் தான் கால்களின் பின் பகுதிகள் இங்கில்லை, பாருங்கள் நம் ஆசைகளை நிறைவேற்றாமல் அவள் ஆசையை மட்டும் நிறைவேற்றி இருக்கிறான், அவள் பாக்யமே பாக்யம்” என்று பெருமூச்சு விடுகிறாள். இன்னும் ஒரு இடத்தில் பூக்கள் கீழே சிதறி, காலால் மிதிபட்டிருப்பதைக் கண்டு “அவன் அவளுக்கு இங்கேதான் உட்கார வைத்து அலங்காரம் செய்திருக்கிறான் போலிருக்கிறது, முன் பிறவியில் இவள் விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்திருப்பாள், அதன் பலனே இது” என்று பொருமுகிறாள்.

சிறிது தூரத்தில் கண்ணன் காலடிகள் மட்டுமே காணப்படுகின்றன. உடனே ஆராய்ச்சி செய்யும் இந்தப் பெண் “கொஞ்ச நேரத்திற்கு முன் கண்ணனே பூக்களைப் பறித்து அவள் விரும்பியபடியெல்லாம் அவளுக்கு அலங்காரம் செய்து விட்டான் அல்லவா. அதனால் யாருக்கும் கிடைக்காத இந்த பாக்யம் நமக்கே கிடைத்தது என்று அவளுக்குக் கர்வம் வந்து விட்டது. கர்வம் கொண்டதால் அவளை விட்டு விட்டு தான் மட்டும் சென்றுள்ளான். அதனால் தான் அவள் காலடிகளைக் காணவில்லை” என்கிறாள்.

இன்னும் சிறிது தூரம் சென்றதும் “இங்கே பாருங்கள், க்ருஷ்ணனின் காலடிகளைத் தொடர்ந்து இன்னொரு காலடிகளும் அழுந்தித் தெரிகின்றன. ஒருத்தியை அவன் விட்டு விட்டுத் தனித்துச் செல்வதை அறிந்த இன்னொருத்தி ஓடிச் சென்று கண்ணனைப் பிடித்திருக்கிறாள் போலும். அதனால்தான் இவள் காலடிகள் அழுந்தித் தெரிகின்றன. இதோ இங்கே, இங்கே அவள் காலடிகள் ஒழுங்கீனமாக இங்குமங்கும் காணப்படுகின்றன. தன்னை நெருங்கி விட்ட அவளைத் தன் கைகளால் பிடித்திழுத்துக் கூட்டிச் சென்றிருக்கிறான் கண்ணன். இவளும் தன்னிலையிழந்து அவனோடு லயித்துச் சென்றிருக்கிறாள். அதனால் தான் இப்படி தாறுமாறாக இருக்கின்றன இங்கே அவள் கால்கள்” என்கிறாள்.

இன்னும் கொஞ்ச தூரத்தில் பெண்ணின் காலடிகள் தலைகீழாகத் தெரிவதைக் கண்ட அவள் “இவள் கண்ணன் கையைப் பிடித்ததோடு சரி போலும், வேறெந்த பாக்யத்தையும் அடையாமல் அந்த மோசக்காரனால் இவள் திருப்பியனுப்பப்பட்டிருக்கிறாள். அது தான் இது” என்கிறாள். “இங்கேயே இரு, நாம் விளையாடி மகிழ நல்ல ஒரு இடத்தைக் கண்டு பிடித்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி அவளை இங்கேயே விட்டு, வேகமாக ஓடிச் சென்றிருக்கிறான் இந்த அடர்ந்த கானகத்துள், இதற்குள் நிலவு கூடப் புகமுடியாது, இனி அவன் காலடிகளை நம்மால் தொடர முடியாது” என்று முடிக்கிறாள் அவள். இப்படி அவனைத் தேடிச் சென்ற அவர்கள் இப்போது வேறு வழியின்றி மீண்டும் வந்த வழியே திரும்பி, யமுனைக் கரையை அடைந்து அங்கேயே அவனைப் போற்றிப் புகழ்ந்து பாடி, விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் கண்ணன் இவர்களின் பக்திக்கு மகிழ்ந்து மீண்டும் தோன்றி அவர்களை நோக்கி பரவசத்துடன் வரத்தொடங்கினான். அவன் வருவதைக் கண்ட ஒருத்தி வேறொன்றும் தோன்றாது “க்ருஷ்ணா! க்ருஷ்ணா” என்றே கூறிக் கொண்டிருந்தாள். இன்னொருத்தி அவனை ஊடலுடன் புருவங்களை நெரித்துத் தன் வண்டுக் கண்களால் அவன் முகமாகிய தாமரையை நுகர்ந்து கொண்டிருந்தாள். இன்னொருத்தி கண்களால் அவனை மனதில் இருத்தி, மீண்டும் வெளியே சென்று விடாதவாறு கண்களை மூடிக் கொண்டு, அவனையே த்யானித்துக் கொண்டிருந்தாள். இவர்களைக் கண்ணனும் சிரித்துப் பேசியும், தானும் புருவங்களை நெரித்தும், கைகளால் தழுவியும் தக்கபடி சமாதானம் செய்தான். இதனால் அவர்களும் மனக்கவலை தீர்ந்து மகிழ்வுற்றனர்.

இதன் பின் ராஸ லீலை (நர்த்தனமாடும் பெண்களை வட்டமாக நிற்க வைத்து விளையாடும் ஒரு விளையாட்டு) செய்ய விரும்பினான். ஆனால் ஒருவரும் அதற்கு இசையாதவாறு அவனிடமே, அவனை ஸ்பர்ஸித்துக் கொண்டே நின்றிருந்தனர். க்ருஷ்ணன் தானே ஒவ்வொருத்தியின் கையையும் பிடித்து இன்னொருத்தியின் கையோடு சேர்த்துப் பிடிக்க வைத்தான். அவன் கை பட்டதில் தங்களை மறந்த அவர்கள் க்ருஷ்ணன் தன் கையையே பிடித்துக் கொண்டிருப்பதாக எண்ணினர். மற்றவள் கையைப் பிடித்துக் கொண்டிருப்பதாக அறியவில்லை. க்ருஷ்ணனும் தன் மாயையால் ஒவ்வொருவர் பக்கத்திலும் இருப்பது போலவே தோற்றமளித்தான். க்ருஷ்ணன் சரத் காலத்து சந்த்ரனையும், அழகு பூத்துக் குலுங்கும் நீர் நிலைகளையும் பாட, கோபியர்களோ சலிப்பின்றி அவன் பெயரையே பாடிக் கொண்டிருக்க, அவர்கள் வளையொலிகளோடு சேர்ந்து ராஸக்ரீடை வளர்ந்தது.

இடையில் களைப்படைந்த இந்த பெண்கள் கண்ணன் தோள்களில் கைகளைப் போட்டுக் கொண்டும், அவன் தாடையோடு தங்கள் தாடையை சேர்த்து வைத்துக் கொண்டும், அவனைக் கட்டி அணைத்துக் கொண்டும் இப்படி ஒவ்வொரு முறையில் தங்கள் ச்ரமத்தைத் தீர்த்துக் கொண்டனர். அவன் பாடுவதை இரு முறை திரும்பப் பாடிக் கொண்டும், அவனோடு சேர்ந்தோடியும், அவனை எதிர்த்துச் சேர்ந்தும் பலவிதங்களில் அவனோடு ஒவ்வொரு நொடியையும் அனுபவித்தனர். அவனைப் பிரியும் ஒரு நொடியும் அவர்களுக்கு ஒரு கோடி வருஷமாகத் தோன்றியது. இவ்வாறு அவர்களோடு கண்ணனும் ஆடிக் களித்தான்.

தங்கள் கணவன், தகப்பன், ஸஹோதரன் இப்படி அனைவரையும் விடுத்து அன்பிற்குரிய அவனோடே திரிந்து கொண்டிருந்தனர். எல்லா உயிர்க்கும் அந்தர்யாமியாய், ஆத்மாவாய் இருப்பதனால் இவனோடு சேர்ந்து இப்படி விளையாடிக் கொண்டிருப்பது எந்த வகையிலும் தோஷமில்லை. அவர்கள் தங்கள் ஆத்மாவோடு விளையாடி ஆத்மானுபவம் அடைந்தார்களே அன்றி வேறு புருஷனாக க்ருஷ்ணனையும், தங்கள் புருஷனை விட்டு இவனோடு விளையாடிக் கொண்டிருந்ததாக இந்த கோப ஸ்த்ரீகளையும் நினைப்பதில் ஒரு பொருளும் இல்லை. அவனுக்கு உலகமே உடல், இந்த கோபஸ்த்ரீகளும் அதில் அடக்கம். இந்த கோபஸ்த்ரீகள் உட்பட எல்லா உயிர்க்கும் அவனே ஆத்மா. ஆக இருவரிடத்தும் ஒரு தோஷமுமில்லை, குறையுமில்லை, அதர்மமுமில்லை.

05_14. க்ருஷ்ணன் ஒரு நாள் மாலைப் பொழுதில் ராஸக்ரீடைக்குச் செல்ல எத்தனிக்கையில் அரிஷ்டன் என்ற ஒரு அஸுரன் கொடிய கரிய எருதின் உருவில் ஸூர்யன் போன்ற ஒளிப் பிழம்பான கண்களுடன், குளம்புகளால் பூமியைப் பிளந்து கொண்டு, நாக்கால் உதடுகளை நக்கிக் கொண்டு, வாலைத் தூக்கிக் கொண்டு அனைவரையும் பயமுறுத்திக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தான். கெட்டியான கழுத்தும், உயர்ந்த திமிளும் கொண்டு, பின் புறம் சாணம், மூத்திரம் இவைகளால் பூசப்பட்டு, பசுக்களையும் பயந்தோடச் செய்து கொண்டு வந்து கொண்டிருந்தான். காட்டில் முனிவர்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்த இவன் முகத்தில் மரங்களை முட்டித் தள்ளியதாலுண்டான வடுக்கள் இருந்தன.

இப்படி ஒரு எருது ஓடிவருவதைக் கண்டு, அதனருகில் கூட போகமுடியாமல் கோகுலத்தில் எவரும் க்ருஷ்ணா! க்ருஷ்ணா! என்று கதறிக் கொண்டு ஓடினர். க்ருஷ்ணனும் இவர்களைக் காப்பதற்காக ஸிம்ஹநாதம் செய்து கொண்டே அதன் எதிரில் வந்தான். க்ருஷ்ணன் வயிற்றில் குத்திக் கிழிப்பதற்காக அந்த எருதும் தன் கூரிய கொம்புகளை நீட்டி கொண்டு ஓடிவந்தது. பயப்படாமல் தான் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு எருது அருகில் நெருங்கியதும் அதன் கொம்புகளைப் பிடித்து அதை அசைய விடாமல் செய்து, முழங்காலால் அதன் வயிற்றில் ஒரு உதை விட்டான் க்ருஷ்ணன். அதை பழைய துணியைப் பிழிவது போல் அடித்துப் பிழிந்து, அதன் ஒரு கொம்பையே பிடுங்கி, அதனாலேயே வாயில் ரத்தம் கக்கி இறக்கும் வரை அதை அடித்துக் கொன்றான் க்ருஷ்ணன். கோபர்கள் அவன் இறந்ததைக் கண்டு கண்ணனை மகிழ்ந்து கொண்டாடினர்.

05_15. க்ருஷ்ணனைக் கொல்வதற்காகச் சென்ற அஸுரர்கள் ப்ரலம்பன், தேனுகன், அரிஷ்டன் என்று அனைவருமே அழிந்தனர். கண்ணனோ வ்ருந்தாவனத்தில் கோவர்த்தனத்தைத் தூக்கித் தாங்குகிறான். காளியனை ஒடுக்குகிறான். மரங்களுக்கு சாப விமோசனம் கொடுத்தான். பூதனை, சகடாஸுரனை வீழ்த்தி விட்டான். இப்படி இவன் திருவிளையாடல்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கையில், பூலோகம் வந்த நாரதர் நேரே கம்ஸனிடம் சென்று க்ருஷ்ணன் பிறந்தது, வஸுதேவர் குழந்தைகளை ஒரே இரவில் இடம் மாற்றியது என இது வரை அவனுக்குத் தெளிவாயிராத அனைத்து ரஹஸ்யங்களையும் அவனிடம் கூறி விட்டார். இந்த விஷயங்களைக் கேட்டதும் கம்ஸன் வஸுதேவரிடமும், யாதவர்களிடமும் கடும் கோபம் கொண்டான்.

இளம் வயதிலேயே இவ்வளவு பேரை வதைக்கும் இந்த பலராம, க்ருஷ்ணர்கள் இன்னும் யுவர்கள் ஆனால் என்ன செய்வார்களோ என்ற பயத்தில், இப்போதே அவர்களைக் கொன்று விட வேண்டும் எனத் தீர்மானித்தான். “வ்ருந்தாவனத்திலேயே இருக்கும் கேசி என்பவனைக் கொண்டு மீண்டும் இவர்களைக் கொல்ல முயற்சி செய்வோம். அவன் அவர்களை நிச்சயம் கொன்று விடுவான். அவனிடம் தப்பி விட்டால், இங்கே ஒரு தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்து, அதற்கு ச்வபல்கனின் புதல்வரும், யதுக்களில் மதிப்பிற்குரியவருமான அக்ரூரர் மூலம் ராம, க்ருஷ்ணர்களை அழைப்போம். அதற்கு வரும் வஸுதேவனின் மகன்களான, அந்த இடைச்சிறுவர்களை நம் யானை குவலயாபீடம் கொன்று விடும், அதனிடமும் அவர்கள் தப்பி வந்தால், நம்முடைய ப்ரதான மல்யுத்தர்களான சாணூரன், முஷ்டிகன் இவ்விருவர்களைக் கொண்டு அவர்களைப் போட்டியில் கொன்று விடலாம்” என்று முடிவு செய்தான்.

உடனே அக்ரூரரையும் அழைத்து “அக்ரூரரே! நீர் எனக்கு நெருங்கிய நண்பர் அல்லவா. எனக்காக ஒரு உதவி செய்யுங்கள். என் கட்டளையை நிறைவேற்றுங்கள். தேரில் ஏறி, நந்தகோகுலம் சென்று பலராமன், க்ருஷ்ணன் இருவரையும் இங்கு அழைத்து வாருங்கள். விஷ்ணுவின் அம்சங்களான அவர்கள் என்னைக் கொல்வதற்காகவே அவதரித்துள்ளார்களாம். என் வீரர்களையும் அனுதினமும் கொன்று வருகிறார்கள். வரும் சதுர்தசியில் இங்கு ஒரு தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதற்கு நீங்கள் அவர்களை அழைத்து வரவேண்டும். அதற்கு வரும் அந்த வஸுதேவன் புத்ரர்களை என் யானை குவலயாபீடமே கொன்று விடும். மீறினால் இதே தனுர்யாகத்தில் ஒரு பகுதியாக பொது மக்கள் முன்னிலையில் ஒரு மல்யுத்தம் நடக்கும். அதில் என் வீரர்களான சாணூரன், முஷ்டிகன் இருவரும் அவர்களைத் திறமையாக நிச்சயம் கொல்வார்கள்.

அவ்விருவரும் ஒழிந்த பின் என்னைக் கொல்ல நினைப்பவர்களான வஸுதேவன், அந்த இடையன் நந்தகோபன், என் முட்டாள் தந்தை உக்ரஸேனன் இவர்களை நானே கொன்று விட்டு இவர்களின் தனத்தையும், பசுக்களையும் மற்ற அனைத்தையும் எடுத்துக் கொள்வேன். உம்மைத் தவிர மற்ற யாதவர்களனைவரும் எனக்குப் பகைவர்களே. கொஞ்சம், கொஞ்சமாக அவர்களையும் வேரில்லாமல் செய்து விட்டு, உம்முடன் சேர்ந்து நானே இந்த ராஜ்யத்தை எந்தத் தடையுமின்றி ஆளுவேன். எனவே நீங்கள் இப்போதே நந்தன் கோகுலத்திற்கு விரைவாகச் செல்லுங்கள். நான் உங்களிடம் சொன்ன எல்லா செய்திகளையும் அங்கே கூறி காரியத்தைக் கெடுத்து விடாதீர்கள். நடக்க இருக்கும் தனுர் யாக மஹோத்ஸவத்தை மட்டும் எடுத்துக் கூறி, அதற்காக அவர்கள் எல்லோரையும் தேவையான தயிர், பால் இவைகளை ஏற்பாடு செய்து கொண்டு வருமாறு கூறி விட்டு, ராம, க்ருஷ்ணர்களை மட்டும் உங்களுடன் கூட்டிக் கொண்டு வந்து விடுங்கள்” என்று அன்பாக உத்தரவிட்டான் கம்ஸன். இதைக் கேட்டதும் அக்ரூரரும் மகிழ்ச்சியோடு “அப்படியே ஆகட்டும்” என்று கூறிவிட்டுத் தன் அழகிய தேரிலேறி உடனே க்ருஷ்ணனைத் தர்ஸிப்பதற்காக மதுரையை விட்டுச் சென்றார்.

05_17. அக்ரூரர் தேர் விரைவாகச் செல்கிறது. பரமாத்மாவின் அம்சமாய் அவதரித்த ஒருவனைத் தர்ஸிக்கத் தனக்குக் கிடைத்த உயர்ந்த வாய்ப்பை, தான் பெற்ற பெறும் பேற்றை எண்ணித் தன்னைத் தானே வியந்து கொள்கிறார் அவர். “மஹா பாவியான கம்ஸனின் பணியாளாக இருந்து கொண்டு, அவன் பாவச் சோற்றையே நிதமுண்டு காலத்தைக் கழித்துக் கொண்டிருந்த என் பிறவி, மலர்ந்த தாமரையை ஒத்த திருமுகத்தை தர்ஸிக்க இருப்பதால் சாபல்யமடைந்தது. இதுநாள் வரை கம்ஸனின் கோர முகத்திலேயே விழித்து வந்த எனக்கு, இப்போது கண்ணனின் திருமுகத்தில் விழிக்கும்படி நேர்ந்திருப்பதற்கு நான் என்ன தவம் செய்திருக்கிறேனோ. பாவத்தைப் பெருகச் செய்யும் பாவியின் முகத்தையே கண்டு வந்திருக்கும் நான் இப்போது பாவமனைத்தையும் போக்கக்கூடியவனின் திருமுகத்தைக் காணப் போகிறேன்.

எவன் உருவை மனதில் நினைத்தாலே பாபங்கள் அனைத்தும் தொலையுமோ அவனை நான் நேரிலேயே பார்க்கப் போகிறேன். இந்த முகத்திலிருந்தல்லவா வேத, வேதாந்தங்கள் வெளிவருகின்றன. ஒளிரும் பொருள்களுக்கெல்லாம் இந்தத் திருமுகமல்லவா ஆதாரம். சந்த்ர, ஸூர்யர் இரு கண்களாக இருப்பதும் இந்த முகத்திலல்லவா. எவனால் இந்த உலகம் படைக்கப்பட்டு நிலைகொள்ளச் செய்யப்பட்டிருக்கிறதோ, எவனை சாதுக்கள் கொண்டாடுகிறார்களோ, எவன் யாக, பூஜைகளில் கொண்டாடப்படுகிறானோ அவனையல்லவா நான் தர்ஸிக்கப் போகிறேன். நூறு யாகங்களால் எவனை ஆராதித்து ஒருவன் தேவேந்த்ரனாகிறானோ, அந்த ஆதி அந்தமில்லா பரம்பொருளையல்லவா நான் தர்ஸிக்கப் போகிறேன். எவன் குணங்களை ப்ரஹ்ம, ருத்ர, இந்த்ர, அச்வினி, வஸுக்கள், மருத்துக்கள் எவரும் அறியாரோ அந்த ஹரி இன்று என்னைத் தொடும் பாக்யம் பெறுவேன்.

உலகிற்கு ஆத்மாவாகவும், அனைத்தும் அறிந்தவனாகவும், அனைத்துமாக இருப்பவனும், மறைந்தும், நிறைந்தும் இருப்பவனும், அளவிட முடியாதவனும், அழிவற்றவனுமாக இருப்பவன் இன்று என்னோடு பேசப் போகிறான். பிறப்பறியாதவனும், மீனாக, ஆமையாக, பன்றியாக, குதிரையாக, சிங்கமாகப் பிறந்து உலகைக் காத்தவனும் இன்று என்னோடு பேசப் போகிறான். பூபாலன், விருப்பப்படி தோற்றங்களை எடுக்கக்கூடியவன் இன்று எதையோ மனதில் நினைத்து அவதரித்துள்ளான். இந்த உலகையே தன் தலையில் தரித்துக் காக்கும், அவன் அண்ணன் பலராமனோ என்னை அக்ரூர என்று அழைக்கப் போகிறான்.

அறிந்தவனும், அறிய முடியாதவனுமான அவனைத் தங்கள் உள்ளத்தில் வைத்தே, யோகிகள் அறியாமையும், மாயைகளும் நிறைந்த இந்த ப்ரபஞ்சத்தைக் கடக்கிறார்கள். யாகம் செய்பவர்கள் யக்ஞபுருஷனென்றும், பக்தி முறையோடு பூஜிப்பவர்கள் வாஸுதேவனென்றும், தத்துவமறிந்தவர்கள் விஷ்ணு என்றும் எவனைத் துதிக்கிறார்களோ அவனை நான் வணங்குகிறேன். இவ்வுலகில் காரணமும், காரியமுமாயிருக்கும் அவன் என்னோடு அனுகூலமாயிருக்க வேண்டும். எவன் பிறப்பில்லாத அந்த ஹரியை நம்பிக்கையோடு, மனதால் த்யானிக்கிறார்களோ, அவன் எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாயிருக்கிறான்” என்றெல்லாம் இப்படிப் பலவாறு க்ருஷ்ணனைப் பற்றி மகிழ்வோடு சிந்தித்துக் கொண்டு சென்ற அக்ரூரர் ஸூர்யாஸ்தமனத்திற்கு சற்று முன்பாக, பசுக்களிடம் கோபர்கள் பால் கறந்து கொண்டிருக்கும் வேளையில் கோகுலத்தை அடைந்தார்.

காடுகளிலிருந்து ஓட்டிக் கொண்டு வந்த மாடுகளைக் கொட்டில்களில் கட்டி விட்டு பால் கறப்பதற்காக அங்கு நின்றுக் கொண்டிருந்த கண்ணனை, பசுக்களுக்கு மத்தியில், அலர்ந்த அல்லியின் நிறத்து உடலோடு, தாமரைக் கண்களோடு, மார்பில் ஸ்ரீவத்ஸமென்னும் குறியோடு, நீண்ட கைகளோடு, அகன்ற மார்போடு, உயர்ந்த மூக்குடன் இப்படி எவரையும் கவரும் தோற்றத்துடன் புன்சிரிப்போடு பொலிந்து, சிவந்த நகங்களுள்ள கால்களால் பூமியில் அங்குமிங்கும் நடந்து கொண்டு, மஞ்சள் பட்டாடையும், வனமாலைகளும், கையில் அப்போதுதான் பறித்த கொடியோடு, தலையில் வெண்தாமரை மாலையணிந்திருக்கும் நிலையில் முதன் முதலாகக் கண்டார் அக்ரூரர்.

க்ருஷ்ணனை அடுத்து, அன்னப் பறவை, மல்லிகை, சந்த்ரன் இவைகளின் நிறத்தில் உடலோடு, நீலப்பட்டாடையுடுத்தி, பெருத்த பலம் பொருந்திய கைகளோடு, மேகங்கள் சூழ்ந்த கைலாஸ மலையைப் போல், ப்ரகாசமாய் நின்றிருந்த பலராமனையும் கண்டார். கண்டதும் உடல் மயிர் சிலிர்க்க, உடல் பூரித்து நின்ற அக்ரூரர் முகம் தாமரை மலர் போல் மலர்ந்து விரிந்தது. மனதிலேயே ரமித்து வந்த இந்த இரு வாஸுதேவர்களை நேரில் கண்டதும் பக்தி பொங்கியது. கண்கள் பெற்ற பேற்றை நினைக்கிறார். “இவன் என்னைத் தீண்டினால் என் உடலும் பேறு பெற்றதாகும். எல்லாப் பாபங்களையும், தீமைகளையும் போக்குவதல்லவா அந்தக் கை, அதன் ஸ்பர்சம்.

இந்தக் கரம் தானே சக்ராயுதத்தை ஏவி, அஸுரர்களை அழித்து, உலகிற்கு நன்மை தருகிறது. வேண்டுவதை எல்லாம் அளிப்பதும் இந்தக் கரம் தானே. இந்தக் கரத்தில் நீர் வார்த்துத் தானே தேவர்களுக்கும் மேலான போகங்களைப் பெற்று மன்வந்த்ரம் முடிய அனுபவித்தான் மஹாபலி. அந்தக் கைகளால் என்னை அணைப்பானா” என்றெல்லாம் நினைத்த அக்ரூரர் “ஆஹா! அந்தப் பாபி கம்ஸனுடன் எனக்குள்ள தொடர்பால் இவன் என்னை வெறுப்பானோ. இல்லை ஏற்று என் பாபங்களைப் போக்குவானா. நல்லோர் வெறுத்து விட்டால் இந்தப் பிறவி வீணல்லவா. ஆனால் எப்போதும், எல்லோர் உள்ளத்திலும் நிறைந்திருக்கும், களங்கமற்ற தூயவனான, உண்மைப் பரம்பொருளான இந்த க்ருஷ்ணனுக்கு இந்த உலகில் தெரியாதது ஒன்றுமில்லை. என்னையும் அவனறிவான். எனவே சிறிதும் ஸந்தேஹமின்றி முழுதாக என்னை பக்தியோடு அர்ப்பணித்து, முதலும், நடுவும், இறுதியுமில்லாத விஷ்ணுவின் அம்சமான இந்த தேவதேவனிடம் செல்வேன்” என்று நினைத்து க்ருஷ்ணனிடம் சென்றார்

05_18. இப்படி மனதால் நினைத்தபடியே கண்ணனை நெருங்கிய அக்ரூரர் “நான் அக்ரூரன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, க்ருஷ்ணனின் கால்களில் விழுந்து வணங்கினார். ஆனால் க்ருஷ்ணன் உடனே அவரை கொடியும், தாமரைச் சின்னங்களும் பொறிக்கப் பெற்ற தன் கைகளால் வாரி அன்பாக அணைத்துக் கொண்டான். அதேபோல் பலராமனையும் வணங்கினார். அவர்கள் அக்ரூரரைத் தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களோடு உணவு உட்கொண்டு கௌரவமாக நடத்தப்பட்டார் அக்ரூரர். அவர்களிடம் உக்ரஸேனன், வஸுதேவன், இளவரசி தேவகி ஆகியோருக்குக் கம்ஸன் செய்த தீமைகளை எல்லாம் கூறிக் கொண்டிருந்த அக்ரூரர் தான் வந்த காரணத்தையும் கூறினார்.

இவையனைத்தையும் கேட்ட கேசவர் “இவையனைத்தையும் நான் முன்னமே அறிவேன். செய்ய வேண்டியதை விரைவில் செய்வேன். ஏதாவது மாறாக நடந்து விடுமோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இப்போதே கம்ஸன் அழிந்ததாக நினையுங்கள். நாளை நானும், பலராமனும் உங்களோடு கூடி மதுரை செல்வோம். கோபர்களில் மூத்தவர்களும் காணிக்கைகளோடு வரட்டும். இன்றிலிருந்து மூன்று இரவுகளுக்குள் கம்ஸனை அவன் கூட்டத்தாரோடு அழிப்பேன். நீங்கள் கவலைகளை விட்டொழித்து நிம்மதியாக இங்கு எங்களுடனேயே உறங்குங்கள்” என்று கூறினார். இதன் பின் அக்ரூரர் கம்ஸனின் உத்தரவுகளை கோபர்களிடன் தெரிவித்து விட்டு ராம, க்ருஷ்ணர்களோடு நந்தகோபரின் மாளிகையிலேயே சுகமாகப் படுத்து உறங்கினார்.

பொழுது விடிந்தது. அக்ரூரர் காலைக்கடன்களை முடித்துக் கொண்டார். ராம, க்ருஷ்ணர்களும் மகிழ்வோடு மதுரைக்குப் புறப்பட்டனர். இதையறிந்ததும் கோபியர்கள் கண்ணீர் விடலாயினர். க்ருஷ்ணன் பிரிவை நினைத்ததும் அவர்கள் கைகளிலிருந்து வளையல்கள் கழன்று விழுந்தன. “மதுரை சென்று விட்டால் அவன் எப்படி திரும்பி வருவான். ஒரு போதும் வர மாட்டான். அழகிய நாகரிக மங்கைகளின் அபிநயங்களோடு கூடிய தேன் மொழி வார்த்தைகளைப் பருகுவான். பட்டிக்காட்டுப் பெண்களான கோபியர்களிடம் இனி அவன் மனம் எப்படித் திரும்பும். நம்மை நினைக்கவும் மாட்டான். நம் அனைவருக்கும் ஸாரமான இவனை நம்மிடமிருந்து பிரித்து நகரத்துப் பெண்களின் நளினமான பேச்சு, வெளிப்படையான சிரிப்பு, அழகான தோற்றம், அர்த்தமுள்ள பார்வை இவைகளிடம் சேர்ப்பதால் அபலைகளான நம்மை இரக்கமில்லாத விதி அடித்து விட்டது.

மதுரை நகரத்துப் பெண்களின் பேச்சுக்கள் பாவங்கள் நிறைந்து, புன்சிரிப்போடு இருக்கும். அவர்கள் நடையும் அழகழகாயிருக்கும். பார்வைகள் கருத்தைக் கவர்ந்து விடும். க்ராமத்திலேயே பிறந்து வளர்ந்த கண்ணன் இவைகளைக் கண்டவுடன் மயங்கி, நம்மிடம் திரும்பப் போவதில்லை. இதோ, இதோ நம் கண் முன்னாலேயே கண்ணன் தேரிலேரி மதுரை செல்கிறானே. இந்த அக்ரூரர் என்பவர் நம்மை ஏமாற்றி விட்டார். இவருக்கு யார்தான் அக்ரூரர் (க்ரூரம் இல்லாதவர்) என்ற பெயரை வைத்தார்களோ. இவரை விட கொடியவர் யாரும் இருக்க மாட்டார்கள். நாமனைவரும் கண்ணனிடம் வைத்திருக்கும் அன்பை க்ரூரரான இந்த அக்ரூரர் அறியவில்லையா. கண்களுக்கு பரமானந்தத்தைத் தரும் இவனை நம்மிடமிருந்து பிரித்துச் செல்கிறாரே.

இந்தக் கண்ணனாவது நம்மீது தயை கொண்டு பிரியாமல் இருக்கக் கூடாதா. அவனும் சிறிதும் கருணையின்றி அண்ணனுடன் தேரிலேறிச் செல்கிறானே. யாராவது இவனைத் தடுக்கக் கூடாதா. நம் பெரியவர்களிடம் இவன் பிரிவை நம்மால் தாள முடியாது என்று சொல்லலாமா. அவன் பிரிவில் வாடும் நமக்கு அவர்களால் என்ன உதவி செய்ய முடியும். நந்தகோபன் தலைமையில் அவர்களும் தான் உடன் புறப்படுகிறார்கள். ஒருவரும் கோவிந்தனை இங்கேயே நிறுத்துவதற்கு முயலவில்லையே. இன்றைய இரவு கழிந்து, விடியும் பொழுது மதுரைப் பெண்களுக்கு மகிழ்வைத் தரப் போகிறது. தங்கள் கண்களாகிற வண்டுகளால் அச்யுதனின் முகமாகிற தாமரையைப் பருகிக் களிக்கப் போகிறார்கள் அவர்கள்.

மெய் மறந்து, கட்டுண்டு, கண்ணனோடு ஒரு தடையுமின்றி வழி நெடுக செல்லப் போகும் அவர்கள் பாக்யமுள்ளவர்கள். கண்ணனை நெருங்கி நின்று வணங்குவார்கள். நகரத்துப் பெண்களின் கண்கள் இமைக்காமல் க்ருஷ்ணனைக் கண்டு ஆனந்திக்கப் போகின்றன. ப்ரஹ்மன் ஒரு பெரும் நிதியை நம் கண்களில் காட்டி விட்டு அதை அனுபவிக்க விடாமல் பறித்து விட்டான். கண்ணனின் அன்பு எங்களை விட்டுப் பிரிவதைப் போல் வளையல்களும் எங்கள் கைகளை விட்டுக் கழலுகின்றனவே. இந்த க்ரூர அக்ரூரர் குதிரைகளை மெதுவாக ஓட்டக் கூடாதா. பெண்களை வருந்தவைக்கவே இந்த தயையில்லாத சதி நடக்கிறது. அந்தோ, தேர்ச் சக்ரங்களின் புழுதி மட்டும் தெரிகிறதே. வெகு தூரம் சென்று விட்டானே, புழுதியும் இப்போது காணவில்லையே” என்றெல்லாம் கோபியர் பொருமிக் கொண்டும், கதறிக் கொண்டும் இருக்க கேசவனும், ராமனும் சேரியின் எல்லையைத் தாண்டி சென்றார்கள்.

விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டப்பட்ட அந்தத் தேர் மதியம் யமுனைக் கரையை அடைந்தது. ரதத்தை நிறுத்தி விட்டுக் கீழிறங்கிய அக்ரூரர் “குழந்தைகளே! தேரிலேயே உட்கார்ந்து கொண்டிருங்கள். கீழே இறங்கினால் ஜலத்தில் விழுந்து விடுவீர்கள், நான் ஸ்னான, மாத்யாஹ்னிகங்களை முடித்துக் கொண்டு வந்து விடுகிறேன்” என்று ராம, க்ருஷ்ணர்களிடம் கூறிவிட்டு, “இந்தக் குழந்தைகள் எப்படி அந்த முரடன் கம்ஸனைக் கொல்வார்கள். வீணாக அழைத்து வந்து விட்டேனே” என்று மனதினுள் வருந்திக் கொண்டே, யமுனையில் இறங்கி, ஆசமனம் செய்து, பரப்ரஹ்மத்தைத் மனதால் த்யானித்து குளிப்பதற்காக நீரில் மூழ்கினார்.

அங்கே நீரினுள் ஆயிரம் தலைகளோடு ஆதிசேஷன் உருவில் பலராமனைக் காண்கிறார். மல்லிகை மலர் மாலைகளோடும், சிவந்து விரிந்த கண்களோடும், வாஸுகி, ரம்பை, மற்றும் மேலும் பல பலம் பொருந்திய ஸர்ப்பங்கள் சுற்றி நிற்க, கந்தர்வர்கள் புகழ்ந்து துதித்துக் கொண்டிருக்க, வனமாலை மார்பை அலங்கரிக்க, அடர்ந்த நிறத்தில் ஆடைகளோடு, திருமுடியில் தாமரை மலர்கள் தாங்கி, அழகான குண்டலங்களோடு மனதை மயக்குமாறு அங்கே நீரினுள் பலராமனைக் காண்கிறார். அதன் மடியிலேயே ஒய்யாரமாக, கருமுகில் நிறத்தில், சற்று சிவந்த விரிந்த கண்கள், சக்ரம் முதலான பஞ்சாயுதங்களுடன் நாற்கரங்கள், பொன்னிறப் பட்டாடை, பல நிறப் பூக்கள் கொண்ட பூமாலைகள், இந்த்ரதனுஸ்ஸும், மின்னல்களும் பெற்றுப் பொலியும் மேகம் போன்று கண்ணன்.

மார்பில் ஸ்ரீவத்ஸம், ஒளிவீசும் அணிகலன்களோடு கரங்கள், மின்னிக் கொண்டிருக்கும் க்ரீடம், கொண்டையில் வெள்ளைத் தாமரை. சுற்றிலும் ஸனந்தாதி முனிவர்கள் மூக்கின் நுனியில் பார்வையைக் கொண்டு துதித்துத் த்யானித்துக் கொண்டு நிற்க இப்படி அவர்களைப் பார்த்ததும் ஆச்சர்யமடைந்தார் அக்ரூரர். ரதத்திலிருந்த இவர்கள் எப்படி இவ்வளவு சீக்ரமாக இங்கு வர முடியும் என்று வியந்த அவர் ஏதோ கேட்க வாயெடுத்தார். வார்த்தைகளொன்றும் வெளியேறாமல் மாயம் செய்து விட்டான் கண்ணன். நீரிலிருந்து வேகமாக வெளியேறி ரதம் நின்றிருக்குமிடத்திற்குச் சென்றார். அங்கு ராம, க்ருஷ்ணர்கள் மனித உருவிலேயே அமைதியாக ரதத்தில் அமர்ந்திருக்கக் கண்டார்.

குழப்பத்தில் மீண்டும் குளிக்கச் சென்று நீரில் மூழ்கினார். அங்கு மீண்டும் அவர்களையே கந்தர்வர்களும், முனிவர்களும், சாதுக்களும், ஸர்ப்பங்களும் துதித்திருக்கக் கண்டார். அவர்களின் இயற்கைக் குணங்களின் உண்மையைப் புரிந்து கொண்டார். அவர்களை துதித்துப் பாடினார். “ஒன்றானவன், பலவானவன், எங்கும் நிறைந்தவன், பரமாத்மா, சொல்ல முடியாத புகழுடையோன், எப்போதும் இருப்பவன், அறிவிற்கெட்டாதவன், உண்மைப் பொருள், உன் குணங்கள் யாருக்கும் தெரியாது, முதற்பொருள், நீயே ஆத்மாவாகவும், விஷயங்களாகவும், பொருள்களாகவும், அணுக்களாகவும், பரமாத்மாவாகவுமிருப்பவன். நீயே ப்ரஹ்ம, விஷ்ணு, சிவ மூர்த்தங்களாக இருக்கிறாய். உன்னையும், உன் கார்யங்களையும் யாரும் புரிந்து கொள்ள முடியாது.

உன் பெயர் கூட தெரியாது. நீயே அது. மாற்றமில்லாதவன், நீயே க்ருஷ்ணனாகவும், அச்யுதனாகவும், அனந்தனாகவும், விஷ்ணுவாகவும் இருக்கிறாய். பிறப்பில்லாதவன், நீயே உலகம். நீயே கடவுள், நீயே எல்லாமும். உலகிற்கு ஆத்மாவும், உன்னையன்றி வேறொன்றும் எதிலுமில்லை. நீயே ப்ரஹ்மா, பசுபதி, அர்யமன், தாத்ரி, விதாத்ரி, இந்த்ரன், நீர், நெருப்பு, காற்று, செல்வங்களுக்கு அதிபதி, வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அனிருத்தன்” என்று இன்னும் பலவாறுத் துதித்து அவர்களை வணங்கினார்.

05_19. யமுனையில் மூழ்கியிருந்தவாறே க்ருஷ்ணனைத் துதித்தார் அக்ரூரர். மானஸீகமாக புஷ்பங்களால் அர்ச்சித்து, தூப உபசாரங்களைச் செய்தார். மற்றதையெல்லாம் மறந்து வெகுநேரம் அவர் மனம் அந்த பரப்ரஹ்மத்தினிடமே நிலைத்திருந்தது. இப்படி த்யானத்தில் இருந்து விட்டுப் பின் ஆத்ம லாபம் பெற்றதை நினைத்துக் கொண்டே நீரிலிருந்து வெளியேறி தேரிருக்கும் இடத்தை அடைந்தார். ஒன்றுமறியாத குழந்தைகளாக அங்கே தேரில் பலராமனும், க்ருஷ்ணனும் இருக்கக் கண்டார். அவரது ஆச்சர்யமான பார்வையைப் பார்த்த கண்ணன் “அக்ரூரரே, உமது கண்கள் மலர்ந்திருக்கின்றனவே. ஏதோ அற்புதமான ஒன்றைப் பார்த்தால் தான் கண்கள் இப்படியாகும். யமுனை நீரில் என்ன அற்புதத்தைக் கண்டீர்” என்றான்.

அக்ரூரர் “கண்ணா! நீரினுள் நான் எந்த அற்புதத்தைக் கண்டேனோ அதுவேதான் இதோ என்னெதிரில் உருக்கொண்டிருக்கிறது. உலகையே உடலாகக் கொண்ட பரமாத்மாவாகவேதான் நீ காட்சி தருகிறாய். அங்கும் இங்கும் ஒரே பரம்பொருளுடன் தான் நான களித்திருக்கிறேன். ஆனாலும் இப்போது என்னை கம்ஸ பயம் வாட்டுகிறது. உன் விளையாட்டால் நேரமும் ஆகிவிட்டது. இனிமேல் கம்ஸன் நேரமாகிவிட்டதே என்று கோபிப்பான். அடுத்தவரிடம் வேலை செய்து அவர்கள் தருவதைக் கொண்டு ஜீவனம் செய்யும் எவர்க்கும் இதுதான் கதி. எனவே நாம் விரைந்து மதுரையை அடைவோம்” என்று கூறிக் கொண்டு, தேரிலேறி குதிரைகளை விரட்டினார்.

மாலைப் பொழுதில் மதுரை நகர எல்லையை வந்தடைந்ததும், அக்ரூரர் ராம, க்ருஷ்ணர்களிடம் “நீங்களிருவரும் நடந்தே கம்ஸன் மாளிகைக்கு வாருங்கள். நான் தேரில் செல்கிறேன். வாஸுதேவர் க்ருஹத்திற்குச் செல்லாதீர்கள். ஏற்கனவே அவர் உங்களால் பல துன்பங்களை கம்ஸனிடம் அனுபவித்து வருகிறார். எனவே நேராக கம்ஸன் மாளிகைக்கே வந்து விடுங்கள்” என்று கூறிவிட்டுத் தான் மட்டும் தேரில் கம்ஸனிடம் சென்றார். ராம, க்ருஷ்ணர்கள் ராஜ வீதியில் நடந்து செல்லலானார்கள். வழியெங்கிலும் ஆண்களும், பெண்களுமாக பலர் நின்று இவர்களைத் தர்ஸித்து ஆனந்திக்க, இரு இளம் யானைகள் போல இவர்கள் விளையாடிக் கொண்டே சென்று கொண்டிருந்தனர்.

வழியில் கம்ஸனுக்குத் துணிகளை எடுத்துச் செல்லும் வண்ணான் சென்று கொண்டிருந்தான். அவன் வைத்திருக்கும் உயர்ந்த வஸ்த்ரங்களைப் பார்த்ததும், தங்களுக்கு உடுத்திக் கொள்ள அவற்றில் இரண்டைத் தருமாறு அவனிடம் புன்சிரிப்புடன் கேட்டனர். கம்ஸனின் ஆதரவில் இருக்கும் அவன் இவர்கள் இருவரையும் வாயில் வந்தபடி தீய சொற்களால் அர்ச்சித்தான். இதனால் கோபம் கொண்ட கண்ணன் அவனை அங்கேயே அடித்துக் கொன்று போட்டான். பொன்னிறப் பட்டாடை ஒன்றை எடுத்து க்ருஷ்ணனும், நீல நிறத்தில் ஒன்றை பலராமனும் உடுத்திக் கொண்டு, ஒரு பூக்கடைக்காரனிடம் சென்றனர் இருவரும். அவன் அவர்களை ஆச்சர்யத்தோடு பார்த்தான்.

இவர்கள் யாராக இருக்கக் கூடும், எங்கிருந்து வந்திருப்பார்கள் என்று திகைப்போடு யோசித்தான். இவ்வளவு அழகாக பொன்னிறத்திலும், நீல நிறத்திலும் பட்டாடைகள் அணிந்து வந்திருக்கும் இவர்கள் பூலோகத்திற்கும் வந்திருக்கும் தேவர்களோ என்று நினைத்தான். குழந்தைகள் அவனிடம் கொஞ்சம் பூக்கள் கேட்டதும் அவன் மகிழ்ச்சியில் துள்ளினான். கீழே விழுந்து கைகூப்பி, சிரஸால் அவர்களை வணங்கினான். “தெய்வங்கள் பெருங்கருணையோடு என்னை உய்விக்க என் வீட்டிற்கே வந்திருக்கின்றன. எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறேன் நான். இவர்களுக்கு நன்கு மரியாதை செய்வேன்” என்று கூறிக் கொண்டே அந்த பூக்காரர் பலமுறை அவர்கள் பாதங்களில் விழுந்து வணங்கியபடி, ஸந்தோஷமான முகத்தோடு, குழந்தைகள் விரும்பியபடி, அவர்கள் த்ருப்தி அடையும்படி, உயர்ந்த, பல வண்ணங்களில், அழகழகாக, பல வாசனைகளில், புத்தம் புதிதாக பூக்களை எடுத்து, எடுத்து அவர்களிடம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

இப்படி இந்த பூக்காரரின் உபஸரிப்பில் பெரிதும் மகிழ்ந்த க்ருஷ்ணன் “நண்பா, புண்யம் செய்தவனே, என்னை அர்ச்சித்த உன்னை நான் ஒரு போதும் கைவிடேன். லக்ஷ்மி உன்னிடம் எப்போதும் நிலையாக இருப்பாள். உனக்கு சோர்வோ, பொருட்குறைவோ ஒருபோதும் நேராது. உன் ஸந்ததிகள் மேன் மேலும் பெருகும். பூலோகத்தில் பல போகங்களையும் அனுபவித்து, இறுதியில் என்னையே த்யானத்து, என் அனுக்ரஹத்தால் உயர்ந்த லோகத்தை அடைவாய். உன் மனம் எப்போதும் தர்மத்திலேயே லயித்திருக்கும். நீயும் உன் ஸந்ததிகளும் எந்தவொரு இயற்கை உபாதைகளும் அண்டாது, நீண்ட ஆயுளோடு வாழ்வீர்களாக” என்று பல ஆசிகளை அவனுக்கு அருளிச் செய்து விட்டு, பலராமனோடு அங்கிருந்து சென்றான்.