ஸ்ரீ திருவாய் மொழி – ஓர் அறிமுகம்–ஸ்ரீ ஸுதர்சன ராமானுஜ தாஸன்–

ஸ்ரீமந் நாத முநிகள் நம்மாழ்வாரைப் பற்றி இந்த ஸ்லோகத்தை அருளியுள்ளார்:

யத்கோ ஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம், நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர | யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய|| “

யாவருடைய ஆயிரம் கிரணங்கள் (ஆயிரம் திருவாய்மொழி பாசுரங்கள்) மனிதர்களின் அறியாமையை அகற்றுகிறதோ,
யாவருடைய திருமேனியில் நாராயணன் தன்னுடைய சங்குடனும் சக்கரத்துடனும் விளங்குகிறானோ,
யாவருடைய வசிப்பிடத்தின் பெருமையை சாஸ்த்ரங்கள் கூறுவதால் நன்கு படித்தவர்களால் வணங்கப்படுகிறதோ,
வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த நம்மாழ்வாராகிற சூரியனை நான் வணங்குகிறேன்-

“த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட: கேயூரவாந் மகர குண்டலவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மய வபு: த்ருத சங்க சக்ர: “

இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படுவது, அழகாக அலங்கரிக்கப்பட்ட நாராயணன் சங்க சக்கரங்களை தரித்துக் கொண்டு
ஸவித்ர மண்டலத்தில் எழுந்தருளியுள்ளான். அவனே எப்பொழுதும் த்யானிக்கத் தகுந்தவன்.
நாதமுநிகள் இங்கே நம்மாழ்வாரை எம்பெருமான் ஆனந்தத்துடன் எழுன்தருளியிருக்கும் ஸவித்ரு மண்டலமாகவும் சூரியனாகவும் சொல்கிறார்.
ஆழ்வாரின் ஆயிரம் பாசுரங்களை ஆயிரம் கிரணங்களாக விளாக்குகிறார்.
ஆழ்வார் தன்னுடைய ஒளியால் (பாசுரங்களால்) மதுரகவி ஆழ்வாரை வடக்கிலிருந்து ஈர்த்து திருக்குருகூருக்கு வரவழைத்தார்.
ஸவித்ரு மண்டலத்திலிருந்து வரும் கிரணங்களுக்கு ஸாவித்ரம் என்று பெயர் –
ஆதலால் திருவாய்மொழிக்கு இங்கே ஸாவித்ரம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது

“ஆதித்ய ராம திவாகர அச்யுத பாநுக்களுக்குப் போகாத வுள்ளிருள் நீங்கி ஶோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதிற் கமல மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கரோதயத்திலே”–ஆசார்ய ஹிருதய சூத்ரம் இங்கு கவனிக்கத்தக்கது:

காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாய
பக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |
யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்
தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய ||

பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும், பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ, அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன். (பராங்குச பஞ்ச விம்சதி – 2)

ஶ்ரியப்பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் அருளிச்செய்தவைகளே திவ்ய ப்ரபந்தங்கள்.

இதனை ஸ்ரீமத் வரவரமுனிகள் * அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் * என்று கொண்டாடுகிறார்.

இங்கு ஸ்ரீ பிள்ளைலோகஞ்சீயர் ஸ்வாமி வ்யாக்யானம் * செந்தமிழான செம்மை உடைத்தாகையாலே ஸர்வ ஸுலபமாய் ச்லாக்யமான த்ராவிட பாஷையாலே ஆய்த்து ஸர்வ வேதாந்த ஸாரங்களை ஸங்க்ரஹித்து இவர்கள் பண்ணிய தமிழ் என்னும்படி பண்ணியருளிற்று.

* மேலும் * செந்திறத்ததமிழோசை வடசொல்லாகி * என்று முதலாக எடுக்கலாம்படியிறே இதன் வைபவம் இருப்பது.

அதாவது நற்கலைகள் என்று தோஷமேயில்லாததான வேதமாய், அது தானும் முக்குணத்தின் வசப்பட்டவர்களுக்கு அந்தந்த குணங்களுக்குத் தக்க சொல்லுமதாய் இருக்கும். அதன் ஸாரபாகத்தைச் செந்தமிழால் அளித்தவர்கள் ஆழ்வார்கள்.

இவர்களை * கோது இலவாம் ஆழ்வார்கள் * என்று கொண்டாடுகிறார் பெரிய ஜீயர்.

கோதிலவாம் என்பதனை இரண்டு விதமாக அந்வயித்து (சேர்த்து), அருளிச் செயல்களுக்கும், ஆழ்வார்களுக்கும் விசேஷணம் காட்டியருளியுள்ளார் பிள்ளைலோகஞ்சீயர்.

(1) கோதிலவாம் கலைகள் என்று கொண்டபோது, ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் கோது அற்றவைகள் என்று அருளினாராயிற்று,

இங்கு கோதாவது (கோது – குற்றம்) கண்டவர்களையும் தோத்திரம் பண்ணுகை. இதனை * அழுக்குடம்பு எச்சில் வாய் * என்று இகழ்ந்தார் கலிகன்றி.

அருளிச் செயல்கள் அனைத்தும், இந்த தோஷ கந்தமின்றியே இருக்கும் (தோஷமன்றி இருத்தல் அன்றிக்கே அதன் வாசனையும் கூட இல்லாதவாறு இருக்கை).

இதனை ஆசார்ய ஹ்ருதயத்திலே * ராமாயணம் நாராயண கதை என்று தொடங்கி * என்கிற சூர்ணிகையிலே விவரித்தருளினார் ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

ஆகவேயிறே இது தன்னை * தீதிலந்தாதி * (8-2-11) என்றார் ஆழ்வாரும்.

(2) இனி * கோதிலவாம்* என்பதை ஆழ்வார்களிடத்து அந்வயிக்கும் பொழுது, ஜீவாத்மாவின் அத்யந்த பாரதந்த்ரயத்திற்குச் சேராத உபாயங்களில் கை வைக்காத ஏற்றம் பெற்ற ஆழ்வார்கள் என்றபடி.

120188497.0p9mnWFF

நம்மாழ்வார் வைபவம்

இவ்வாழ்வார்களில் தலைவர் நம்மாழ்வார். இவரே ஆழ்வார் கோஷ்டியிலும், ஆசார்யர்கள் கோஷ்டியிலும் அக்ரேஸரர் ( முன்னே இருப்பவர்). * ப்ரபன்ன ஜன கூடஸ்த்தர் * என்று இவருக்குத் திருநாமம். ப்ரபன்னர்களான ஜனங்களுக்கு மூலபுதர் என்றபடி. இவரை வைத்துத் தான் ப்ரபத்தி மார்க்கம் நன்றாகப் பரவும்படிச் செய்தான் பகவான்.

தேஹமே ஆத்மா * என்று கொண்டு * உண்டியே உடையே உகந்து ஓடும் * ஸம்ஸாரிகளுக்கும், தேஹம் வேறு ஆத்மா வேறு என்கிற ஜ்ஞானம் உள்ள மஹரிஷிகளுக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் இருக்கும். அப்படிப்பட்ட மஹரிஷிகளுக்கும் ஆழ்வாருக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் இருக்கும். இவ்வாழ்வாரே ஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்ய நிலையை (உள்ளதை உள்ளபடி உணரும் உண்மையான நிலை) அறிந்து அதனை தமது அருளிச் செயலில் அருளியும் அனுஷ்டித்தும் காட்டினார்.  இப்படிப்பட்ட ஆழ்வாரின் அருமையினையும், அவர் போன்ற அதிகார்கள் கிடைப்பது அரிது என்பது தோற்றவும், கண்ணன் கீதையில் * வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸு துர்லப: * என்று கண்ணீரோடு அருளினான்.

ஈட்டில் முதல் ச்ரியப்பதிப்படியில், ஆழ்வார் ப்ரபாவம் சொல்லுமிடத்து நம்பிள்ளையின் ஸ்ரீஸுக்திகள்.

இப்படியிருக்கிற சிதசிதீஶ்வரர்கள் ஸ்வரூபஸ்வபாவங்களை அறியக்கடவார் ஒருவருமில்லை. இவற்றையுள்ளபடி அறிவாரில் தலைவராயிற்று இவ்வாழ்வார். இவர்க்கு ஒப்புச் சொல்லலாவார் ஸம்ஸாரிகளிலுமில்லை நித்யஸூரிகளிலும் இல்லை. தம்படி தாமுமறியார், ஸம்ஸாரிகளுமறியார்கள் ஸர்வேஶ்வரனும் அறியான். * ஆழ்வார் ப்ரபாவம் அருளிச் செய்யுமிடம் இது!

பகவான் இவ்வாழ்வாரை விசேஷ கடாக்ஷம் பண்ணியருளியதால் தத்வங்களை விசதமாக அறிந்தார் நம்மாழ்வார். இனி மற்றைய ஆழ்வார்களும் இதே போன்றுதான் அருளப்பட்டார்கள் என்பதனால்,  அவர்களிடம் இருந்து வ்யாவ்ருத்தி தோற்ற இவரது சீர்மையை அருளிச்செய்கிறார் அடுத்த வரியினால்.

அப்படிப்பட்ட ஆழ்வார்கள் அனைவருக்கும் இவர் தலைவர் என்றபடி!

பூதம் ஸரஸ்ச்ச * என்கிற தனியனாது அருளிச்செயல் ஸேவிக்கும் காலங்களில் முன்னே ஓதப்பட்டு வரப்படுகிறது. இதன் ஸாராம்ஸமாவது => ஏனைய ஆழ்வார்களும் எம்பெருமானாரும் நம்மாழ்வாருக்கு அவயவ பூதர்கள் என்பதாகும்.

தம்படி தாமுமறியார் => ஏதேனும் ஒரு ஸாதனைத்தை அனுஷ்டித்து வைத்து அதனால் பலிக்கப் பெற்றது இல்லாமையினாலே தம்முடைய பெருமையினைத் தாமும் அறியார் ! எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபையினால் ஆயிற்று இவ்வாழ்வார்க்கு வந்த நன்மைகள் யாவும்.

ஸம்ஸாரிகளுமறியார்கள் => இவரைப் போன்று ஒரு வ்யக்தி ஸம்ஸாரத்தில் காணமாட்டாமையினாலே ஸம்ஸாரிகளும் இவரது ப்ரபாவத்தினை அறியார்கள்

ஸர்வேஶ்வரனும் அறியான் => தன்னுடைய க்ருஷிபலங்களும் திருக்குணங்களும் இவரிடத்தில் பலித்தது போல் வேறொருவரிடம் பலிக்காமையினாலே எம்பெருமானும் அறியான்.

ஸம்ஸாரிகளைக் காட்டில் ஆழ்வார் பெருமை படைத்தவர் என்று ஒப்புக் கொண்டாலும், நித்யஸூரிகளைக் காட்டிலும் வ்யாவ்ருத்தர் என்று சொல்லலாமோ என்னில் – * விண்ணுளாரிலும் சீரியர் * என்று ஆழ்வார் வ்யாவ்ருத்தரே !

யாவர்நிகர் அகல்வானத்தே (4-5-8) => எம்பெருமானைக் கவிபாட வல்ல எனக்குப் பரமபதத்தில் ஸூரிகளும் நிகரல்லர் , என்று ஆழ்வாரும் தம்மைப் ப்ரஸ்தாவிக்கும்படியாயிற்று இவரது புகழ்.

வேதம் தமிழ் செய்த மாறன்

ஸ்ரீ நம்மாழ்வாருக்கு * வேதம் தமிழ் செய்த மாறன் * என்றே திருநாமம். அவரது வாழித் திருநாமத்தில் * வேதத்தைச் செந்தமிழால் விரித்து உரைத்தான் வாழியே * என்றே ஓதிவரப்படுகின்றது.

ஸ்ரீமத் வரவரமுனிகள் தம்முடைய உபதேசரத்தினமாலையினில் ஆழ்வாரை * வேதம் தமிழ் செய்த மாறன் * என்று கொண்டாடுகிறார்.

அதாவது தன்னை அதிகரிக்கைக்கு (கற்கைக்கு) அநேகமான அதிகாரங்களை உடைத்தாய் இருத்தல்,

த்ரைகுண்ய விஷயமாயிருத்தல் (முக்குணத்தின் வசப்பட்டவர்களுக்காயிருத்தல்)

அன்றிக்கே, ஸர்வரும் அதிகரிக்கும்படியாகவும், உத்தரபாகத்தின் அர்த்தத்தை மாத்திரம் ப்ரதிபாதிக்கும்படியாய் இருப்பது ஆயிற்று இவ்வாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி.

இப்படி அருளிச்செய்யுமிடத்து இவரது ஆப்ததமத்வம் தோற்ற * மெய்யன் * என்றார் ஸ்ரீமத்வரவரமுனிகள். ஆப்தர் என்றால் * यथार्थद्रष्टुत्वेसति यथार्थवक्त्रुत्वम् – आप्तत्वम् * – அதாவது தான் உள்ளதை உள்ளபடி அறிந்து கொண்டு அது தன்னையே பிறர்க்கும் உபதேஸித்துப் போருபவர்கள். இவர்களில் தலைவரன்றோ ஆழ்வார் !

இதனை அமுதனாரும் * எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை * என்றருளினார்.

எய்தற்கு அரிய மறைகள் – அடைவதற்கு அரிதாய் உள்ள மறைகள். தன்னுள்ளே கொண்டுள்ள அர்த்தங்களை மறைப்பதினால் மறை ஆயிற்று.

இதன் அர்த்தங்களை அறிவதற்கு ந்யாய ஸஞ்சாரம் பண்ணும் மஹரிஷிகளே அர்ஹர்கள். மற்றையோர்களுக்கு அது கைகூடாது என்றபடி.

இதனை அதிகரிக்கவும் ஸ்ம்ருதி இதிஹாஸம் புராணம், மீமாம்ஸா இவற்றின் உதவி வேண்டும்.

வேதார்த்தம் அறுதியிடுவது ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களாலே * (2) என்கிற ஸ்ரீ வசன பூஷண ஸூத்ரமும் அதற்கு மாமுனிகள் வ்யாக்யானமும் இதனை விவரிக்கின்றன. மேலும் * அநந்தா வை வேதா: * என்று வேதங்களை முழுவதுமாக அதிகரிப்பதும் இயலாத காரியம்.

ஆயிரம் இன்தமிழால் – இனி ஸ்ரீசடகோப வாங்மயமான திருவாய்மொழி எய்தற்கரியதாய் இல்லாதல் சொல்லப்பட்டது.

ஆயிரம் – என்பதினால் திருவாய்மொழியின் அளவுபட்டமையும்,

இன்தமிழால் – என்பதினால் அனைவரும் அதிகரிக்கலாம்படியும், அதுவும் இன்தமிழாகையினாலே எய்தற்கு எளியதாய் இருக்கிறது.

யச் ச்ருதே: உத்தரம் பாகம் சக்ரே த்ராவிட பாஷயா * [ யாவரொரு நம்மாழ்வார் வேதத்தின் உத்தர பாகத்தை த்ராவிட பாஷையினால் அருளிச் செய்தாரோ ] என்று பராங்குசாஷ்டகம்.

ஆழ்வார் தமரே கேசவன் தமராகி தேஜஸ் மிக்கு -எழும் பிறப்புக்களிலும் -தாஸ்ய பூதராக இருப்பார்கள்

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு
ஆறு என்று நெஞ்சே அணை—17-

இதில்-கீழ் மேல் உண்டானவர்கள் எல்லாரும் தம்முடைய சம்பந்தத்தாலே ஸ்ரீ பகவத் தாஸ்ய லாபத்தை லபித்தார்கள் என்று
ஹ்ருஷ்டராய்ப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
கீழ்-தம் அளவில் உண்டான உகப்பு தம் ஒருவர் அளவிலும் சுவறி விடுகை அன்றிக்கே தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்-விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினர் -என்கிற
விரோதி நிவ்ருத்தி அளவன்றிக்கே-பலத்தாலும் வெள்ளமிட்டு-அலை எறிகிற படியைக் கண்டு –
மமாப்யேஷ யதாதவ -என்னும்படி ஒருவனுடைய வ்யாமோஹம் இருக்கும் படியே என்று வித்தராய்
தம்மை இப்படி சபரிகரமாக விஷயீ கரிக்கைக்கு அடியான-அவன் குண சேஷ்டிதங்களை
திருத் த்வாதச நாம முகத்தாலே பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிற
கேசவன் தமரில் -அர்த்தத்தை-கேசவனால் எந்தமார்கள் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும் தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -எம்பிரான் எம்மான் நாராயணனாலே-
எமர் -கீழ் மேல் ஏழ் பிறப்பும் -கேசவன் தமர் -ஆனார்கள்-மாசரிது பெற்று – அத்தாலே -நம்முடைய வாழ்வு வாய்க்கின்ற வா –
என்றத்தை நினைக்கிறது –

கேசவனால் எந்தமர்கள் –
ஜகத் காரண பூதனாய்-விரோதி நிரசனம் பண்ணுமவனாய் – பிரசஸ்த கேசவனான அவனாலே
மதீயர் தேசு அடைந்தார் என்று தேஜஸ் சைப் பிராபித்தார்கள் என்று – ஸ்ரீ கேசவன் தமராகை இறே இவர்களுக்கு தேஜஸ்
தாஸ்யம் இறே ஆத்மாவுக்கு தேஜஸ் கரமாவது –
அத்தை தம்மோட்டை சம்பந்தத்தாலே கீழ் மேல் உண்டான சம்பந்தி பரம்பரையில் உள்ளவர்கள் எல்லாரும் லபித்தார்கள் என்று
அந்த யுபகார கௌரவத்தாலே-அவன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமாய் ஸ்ரீ வைஷ்ணத்வ சிஹ்னமாய்
கேசவன்
நாரணன்
மாதவன்
கோவிந்தன்
விட்டு
மது சூதனன்
திரி விக்ரமன்
வாமனன்
சிரீதரன்
இருடீகேசன்
பற்ப நாபன்
தாமோதரன் – என்கிற திரு த்வாதச திரு நாமங்களை பேசி அனுபவித்து ஹ்ருஷ்டராய் அத்தை இப்படி நன்றாக அருளிச் செய்த –
சிறப்பு -நன்று –

வீசு புகழ் மாறன்-
சம்பந்த சம்பந்திகள் அளவும் ஸ்ரீ வைஷ்ணத்வம் ஏறிப் பாயும் படியான வைபவத்தால் வந்த பிரசுரமான யசஸ்சை உடைய
ஸ்ரீ ஆழ்வார் உடைய-

மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு என்று –
புஷ்பம் போன்ற திருவடிகளே நித்தியமான ஆத்மாக்களுக்கு எல்லாம் உஜ்ஜீவிக்கைக்கு உசித உபாயம் என்று –

நெஞ்சே அணை-
அவர்களிலே ஒருவனாய்-அம்சம் பெறும்படியான எனக்கு உபகரணமாய் சௌமனஸ்யம் உள்ள மனசே
பிரஸூன சமமான திருவடிகளை நீயும் சமாஸ்ரயணம் பண்ணு–

நாராயணனாலே -என்று –
அவனுடைய ஸ்வீகாரமே நிரபேஷ உபாயம் என்றதின் அனுவாதமான கேசவனால் என்கிற இப் பதத்திலே -தத் விவரணமாக
மாதவன் என்றதே கொண்டு -என்றும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் மேவும் தன் மயமாக்கினான் -என்றும்
என்னைக் கொண்டு -என்றும்
தன் பேறு ஆனமைக்கு -விட்டிலங்கு செஞ்சோதி -என்றும்
அம்மான் திரிவிக்ரமனை எனக்கே அருள் செய்ய –எனக்கு என்ன –விதி சூழ்ந்தது -என்றும்
தொழும் மனமே தந்தாய் -என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும்
உன்னை என்னுள் வைத்தேன் என் இருடீகேசனே -என்றும்
ஏற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -என்றும்
தாமோதரனை -என்றும்-அருளிச் செய்த சந்தைகளும் அனுசந்தேயங்கள்-

மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு-
மதுரகவி ப்ரக்ருதிகள் என்றுமாம்
மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுஜர் உத்தாரகர் என்கிறார் ஆயிற்று என்றுமாம்

———————————

அருளிச் செயல் வைலக்ஷண்யம்

இங்ஙனம் ஏற்றம் பெற்ற ஆழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியானது அதிவிலக்ஷணமாயிருக்கும். இதனை * ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல் ஏற்றம் * என்று ஸுசிப்பித்தருளினார் ஸ்ரீமத் வரவரமுனிகள்.

அதாவது எம்பெருமானுடைய மயர்வற மதிநலம் ஆகிய அருள் கொண்டு அன்றோ ஆயிரம் இன்தமிழ் பாடினது.

இப்படி இருக்கும் இன்தமிழும் பகவதேகபரமாய், போக்யமுமாய், ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய், ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய், ஸம்ஸார விச்சேதமுமாய், சீக்ர பலப்ரதமுமாய் இருக்கை. இவையனைத்தும் பிள்ளைலோகஞ்சீயர் காட்டியருளிய விசேஷணங்கள்.

பகவதேகபரமாய் – எம்பெருமானை மட்டுமே ப்ரதிபாதிக்கக் கூடியதாய். ஸ்ரீ ராமாயணம், மஹாபாரதம் ஆகியவை எம்பெருமானுடைய வைபவங்களை ப்ரதிபாதிக்க என்று தொடங்கி மற்றையவர்களைப் பற்றி பேசுவது போலன்றிக்கே, * மாற்றங்களாய்ந்து கொண்டு * (6-8-11) என்று சொற்களை ஆராய்ந்தெடுத்து வேறு ப்ரஸ்தாவம் அன்றிக்கே எம்பெருமானையே விஷயமாகக் கொண்டது திருவாய்மொழி.

போக்யமுமாய் – ஸ்ரீமந்நாதமுனிகள் திருவாய்மொழிக்கு தனியன் இட்டருளும்பொழுது, முதலில் * பக்தாம்ருதம் * என்கிறார்.

அதாவது திருவாய்மொழியை பக்தர்களுக்கு அம்ருதம் போன்றது என்கிறார். இதனால் இத்திருவாய்மொழியின் போக்யத்வம் நன்கு புலப்படும்.

பூஸுரர்களாகிற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுதமானது தொண்டர்க்கமுதம்.  * தொண்டர்க்கமுதன்ன சொல்மாலைகள் *.

இங்கு ஸ்ரீ உ.வே. காஞ்சி ஸ்வாமியின் திவ்யார்த்த தீபிகை. ” இவ்வுலகில் கவிபாடினவர்கள் மற்றும்பலருமுண்டாகிலும், இப்படி “தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்” என்று பெருங்களிச்சியாகப் பேசினவர் பிறராருமிலர்.

தம்முடைய திருவாய்மொழி திருப்புளியாழ்வாரடியிலே சுவறிப் போகாமல் காருள்ளளவும் கடல்நிருள்ளளவும் வேதமுள்ளளவும் தேவகீதனுள்ளளவும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுதமாய்ப் பரமபோக்யமாய் விளங்கப்போகிறதென்பதை ஆழ்வார்கண்டறிந்து அருளிச்செய்தது அதிசயிக்கத்தக்கது.

திருவாய்மொழிக்குத் தனியனிடத்தொடங்கின ஸ்ரீமந்நாதமுனிகள் தொடங்கும்போதே பக்தாம்ருதம் என்றருளிச்செய்தது இந்தப் பாசுரத்தையுட்கொண்டேயாம்.

பாலேய்தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரம் முதலிலேயே (1–5–11) என்று அருளிச்செய்திருந்தாலும் தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் என்கிற இப்பாசுரம் இணையற்றது.

” இது இவ்வுலகில் உள்ளார்க்கும் மட்டுமன்றி வானவர்களான நித்ய ஸூரிகளுக்கும் பரம போக்யமாய் இருக்கும்.

இதனை ஆழ்வார் * கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே * என்றவிடத்தில் அருளினார்.

இத்திருவாய்மொழியினைக் கேட்டால் நித்யஸூரிகள் திருப்தி பெறமாட்டார்கள். மீளவும் சொல்ல வேண்டும் என்று சொல்லுவர்கள் என்றபடி.

ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய் – இதனால் அர்த்த பஞ்சகம் சொல்லப்பட்டது. * அறிய வேண்டும் அர்த்தமெல்லாம் இதற்குள்ளே உண்டு – அதாவது அஞ்சர்த்தம் * என்கிற முமுக்ஷுப்படி ஸூர்ணிகைகள் இங்கு நினைக்கத்தக்கன. மொழியைக் கடக்கும் பெரும் புகழையுடையவரான கூரத்தாழ்வானின் திருக்குமாரரான ஸ்ரீ பராசர பட்டர், திருவாய்மொழி அறிவிக்கும் பொருளானது அர்த்த பஞ்சகமே என்பதை,

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்–என்கிற தனியனினால் அருளிச்செய்கிறார்.

அதாவது மிக்க இறைநிலை என்பதினால் பரமாத்ம ஸ்வரூபமும், மெய்யாம் உயிர்நிலை என்பதினால் ஜீவாத்ம ஸ்வரூபமும், தக்க நெறி என்பதினால் உபாயஸ்வரூபமும், தடையாகித் தொக்கியலும் ஊழ்வினை என்பதினால் விரோதி ஸ்வரூபமும், வாழ்வினை என்பதினால் புருஷார்த்த ஸ்வரூபமும் அருளிச் செய்தாராயிற்று.

ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய் – இத்திருவாய்மொழியினை கேட்டதால் எம்பெருமான் தானே தனக்கு ப்ரீதி உள்ளடங்காமல் போக்கு வீடாகத் தென்னா தென்னா என்று ஆனந்திக்கிறான் என்பதனை ஆழ்வார் தாமும் * தென்னா வென்னும் என்னம்மான் திருமாலிருஞ்சோலையானே * என்றருளினார்.

ஸம்ஸார விச்சேதமுமாய் – அளவு காண இயலாத ஸம்ஸாரத்தையும் * ஸம்ஸாரம் ஸாகரம் கோரம் * என்றிருப்பதையும் வற்றச் செய்வதாய் இருப்பது திருவாய்மொழி. * ஆயிரத்துள் இப்பத்து அருளுடையவன்தாள் அணைவிக்கும் முடித்தே.* (2-10-11) என்றாறிரே ஆழ்வார். ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களில் இப்பத்துப் பாசுரங்களே பாவங்களை ஒழித்து, எம்பெருமான் திருவடிகளில் சேர்ப்பிக்கும் என்றபடி.

பகவத் விஷயம்

இன்றளவும் திருவாய்மொழி காலக்ஷேபத்தை * பகவத் விஷயம்* என்றே வ்யவஹரிப்பர்கள் பூர்வர்கள். இதனாலே இதன் ஏற்றம் தெரிந்து கொள்ளலாம். அனைத்து ஶாஸ்த்ரங்களுமே எம்பெருமானை ப்ரதிபாதிக்கின்றன என்பது நமது ஸித்தாந்தத்தில் ஒப்புக் கொண்ட விஷயம். உபப்ருஹ்மணங்களான இதிஹாஸ புராணங்கள் இருக்கட்டும். பூர்வ மீமாம்ஸா ஶாஸ்த்ரமும் கூட எம்பெருமானுக்கு ஆராத்ய விஷயத்தைச் சொல்வதால் அதுவே விஷயம் என்பது நோக்கத்தக்கது.

இதனை ஸ்ரீவசன பூஷண வ்யாக்யானத்தில் ஸ்ரீமத்வரவரமுனிகள் *….. பூர்வோத்தர மீமாம்ஸைகளில் * அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா * என்றும் * அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா * என்றுமிறே உபக்ரமித்தது. ஆகையாலே பாகத்வயத்துக்கும் ப்ரதிபாத்யம் ஆராதநரூபமான கர்மமும், ஆராத்யவஸ்துவான ப்ரஹ்மமுமிறே…. *. விஷயம் இங்ஙனம் இருக்க திருவாய்மொழி காலக்ஷேபத்தை மாத்திரம் பகவத் விஷயம் என்று குறிப்பிடுவான் என் என்னில், திருவாய்மொழியில் உள்ள  பகவதேகபரத்வம். இது கீழேயே நன்கு விளக்கப்பட்டது.

இங்கு எம்பெருமான் தானும் திருவாய்மொழியில் மகிழ்ந்து உறைகிறான் என்பதனை ஸ்ரீபராசரபட்டர் தம்முடைய ஸ்ரீரங்கராஜஸ்தவத்திலே

வடதலதேவகீ ஜடரவேதஶிர: கமலாஸ்தந ஶடகோபவாக்வபுஷி ரங்கக்ருஹே சயிதம்
வரதமுதாரதீர்க்கபுஜலோசநஸம்ஹநநம் புருஷமுபாஸிஷீய பரமம் ப்ரணதார்த்திஹரம் || ( பூர்வ சதகம் – 78)

என்ற ஸ்லோகத்தினால் அருளிச்செய்தார். எம்பெருமான் மகிழ்ந்து உறையும் இடங்களைக் குறிப்பிட்டு வருகையிலே ஆலிலை, தேவகீ பிராட்டியின் திருவயிறு, முதலானவற்றோடு ஆழ்வார் அருளிச்செயலான திருவாய்மொழியிலும் எம்பெருமான் ஆதரத்தோடு உறைகிறான் என்பது இதனால் கிடைக்கப்பெற்ற அர்த்தமாகும்.!

நாகணைமிசை நம்பிரான் சரணே சரண்

வேதாந்தத்திலே விதிக்கப்பட்ட உபாயங்கள் பக்தியும் ப்ரபத்தியும் ஆகும். அதில் இவ்வாழ்வார் அனுஷ்டித்தும், உபதேசித்தும் வைப்பது பகவானே உபாயம் என்பதாகும். இதனை ஆழ்வார் அனுஷ்டித்துக் காட்டிய இடங்கள்

 • நோற்ற நோன்பிலேன் (5-7-1) (பலமாகக் கைகூடுவதற்கு கர்ம யோகங்களை அநுஷ்டித்தேன் அல்லேன்.)
 • ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் (5-7-10) (என் ப்ராப்திக்கு வழியாக உன் திருவடிகளையே உபாயமாகத் தந்துவிட்டாய்)
 • கழல்களவையே சரணாகக் கொண்ட (5-8-11) (க்ருஷ்ணனுடைய திருவடிகளையே தனக்கு உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட சடகோபன்)
 • நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் (5-10-11) (திருவநந்தாழ்வான் மேல் திருக்கணவளர்ந்தருளிய ஸ்வாமியானவன் திருவடிகளே நமக்கு உபாயம்.)

அர்ச்சாவதாரம்

 மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள் தன்னொடும் ஆயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவனான பேயாழ்வார்,

அர்ச்சாவதாரத்தைப் பற்றுகையே சுலபமானதும், நாம் உய்வதற்கும் வழியாகும் என்பதனை,

பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து
நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா – விருப்புடைய
வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து.

என்கிற பாசுரத்தினால் நமக்கு உணர்த்தினார். அதாவது மலைமேல் ஒற்றைக்கால் விரலால் நின்றுகொண்டும், மழைகாலத்தில் நீர்நிலைகளிலே மூழ்கிக்கிடந்தும், பஞ்சாக்நி நடுவில் நின்றுகொண்டும் இப்படிப்பட்ட உடலை வருத்தித் தவம்புரிவது பாவங்கள் தொலைந்து நற்கதி அடையவேண்டும் என்பதனாலே. அவ்வாறு வருந்தவேண்டா! திருவெஃகாவில் உள்ள ஸ்வாமியின் திருவடிகளிலே அந்நயப்ரயோஜநராய்ப் புஷ்பங்களைப் ஸமர்ப்பித்து ஆச்ரயித்தால் தீவினைகளெல்லாம் தன்னடையே ஓடிப்போய்விடுமே.

(ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர்
கானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய்
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–3-2-1-)

(இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18-)

(ஸ்வ யத்னத்தால் காண்பாருக்கு காணப் போகாது –என்கிறது –
சரணம் சொல்லி நிரந்தரம் கைங்கர்யம் செய்தாலே போகுமே
கோர மா தவம் செய்தான் அவன் அன்றோ நம்மைப்பெற
இங்கும் நீர் தவம் செய்ய வேண்டா)

(அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8–)

(வெறிதே யருள் செய்வர் –நிர்ஹேதுகமாக திருவருள் செய்வர் –யமே வைஷ வ்ருணுதே -கடவல்லி உபநிஷத் -2-என்கிறபடியே
தான் அங்கீகரிக்க நினைத்தார்க்கு)

(சும்மெனாதே கை விட்டு ஓடிப்போகுமே
நாம் ஆராய்ந்து கை தொழுதால் என்றும்
தீ வினைகள் ஆய்ந்து விலகிப்போகுமே)

சர்வேஸ்வரன் சம்சாரத்திலே புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நின்றான்
நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா -என்கிறார் –

உடம்பை ஒறுத்து -துஷ்கரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து துக்கப்பட வேண்டா —
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை ஆஸ்ரயிக்க சகல துக்கங்களும்
தன்னடையே விட்டுப் போம் என்கிறார் –

(தொழுதால்-ஆல் –அநந்யார்ஹமாக கை தொழுவது துர்லபம் -என்பதைக் காட்டியவாறு)

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்–
பனி நாள் மலைகளில் (நின்றும் பனி நாளில்  )பொய்கைளிலே புக்குக் குளித்து

ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா–
கோடை நாள் பஞ்சாக்கினி மத்யஸ்தனாய் நிற்கவும் வேண்டா –

(வேண்டா என்று முன்னிலையாகச் சொல்வதே போதுமே
நீர் வேண்டா என்று குறிப்பிட்டுச் சொல்வான் என்னில்
நம்மைப் பெறவே அவன் கோர மா தவம் செய்கின்றான் என்பதை காட்டவே -)

(தஸ்மாத் நியாஸமே உத்க்ருஷ்ட தபஸ் ஸூ)

(மூன்று தத்வங்கள் மூன்று காலங்கள் அப்பிள்ளை
இங்கு இரண்டு
பொருப்பிடை ஐந்து நெருப்பிடை கோடைக்காலம் ஆச்சார்ய ஹ்ருதயம்)

விருப்புடைய-வெக்காவே சேர்ந்தானை–
விரும்பப் படுவதான திரு வெஃகாவிலே சேர்ந்தவனை –

(அனைவருக்கும் விருப்பு -உகந்து அவனுக்கும் -ஆழ்வாராதிகளுக்கும் -ஆச்சார்யர்களுக்கும் -நமக்கும்)

(புருஷகாரத்துக்கு திவ்ய தேசம் இருக்கும் என்றவாறு)

மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்-அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-
அநந்ய பிரயோஜனனாய் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆய்ந்து அனுசந்தித்து கை தொழுதால் –
அசேதனமான கொடிய பாபங்கள் தானே தன்னை ஆஸ்ரயிக்க நிற்க வற்றோ –
தீ வினைகள் தானே ஆராய்ந்து நமக்கு நிலம் அன்று என்று போகாவோ என்றுமாம் –

வ்ருஷ்டி பிரதீஷாஸ் சாலய-என்னும் நியாயத்தாலே
சும்மானாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -என்கிறபடியே –

(மழைக்கு பயிர்கள் காத்து இருக்க ஞானம் உண்டோ-அதே போல் தீ வினைகளுக்கு ஞானம் இல்லை
சேதன சமாதியில் சொல்கிறார்)

எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே
நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை இவ்வுலகினில் யார் பெறுவார்
நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம்
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -5- 4-3 –

உடம்பை ஒறுத்து -துஷ்கரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து துக்கப்பட வேண்டா —
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை ஆஸ்ரயிக்க சகல துக்கங்களும்
தன்னடையே விட்டுப் போம் என்கிறார் –

(கல் எடுத்துக் கல்-மாரி காத்தாய்! என்னும்* காமரு பூங் கச்சி ஊரகத்தாய்! என்னும்* 
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய்! என்னும்* வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே! என்னும்*
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய்! என்னும்* மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா! என்னும்* 
சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று* துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே!    )

பனி காலத்தில் மலைகளில் நடுவே நின்றும் –
குளிர் காலத்திலே பொய்கைகளிலே புக்கு நீரிலே முழுக்கிக் கிடந்தும்
உஷ்ண காலத்தில் பஞ்சாக்கினி நடுவே நின்று வெந்து விழுந்தும் –
இப்படி குரூரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து நீங்கள் துக்கப்பட வேண்டா –

(மாற்றி செய்தால் உகந்தே செய்வோமே)

அவனோடு அல்லாதாரோடு வாசியற சர்வரும் ஒரு மிடறாக விரும்பும் படியான திரு வெஃகாவில்
தன்னைப் பேணாதே நம்மை ரஷிக்கைக்காக வந்து கண் வளர்ந்து அருளினவனை
பிரயோஜனாந்தர பரதையாகிற பொய் கலசாதே
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு பூக்களை அக்ரமமாகப் பணிமாறி
கையாலே அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயித்ததால்
துஷ் கர்மங்கள் அடங்கலும் நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் அன்று என்று அனுசந்தித்துத் தானே விட்டுப் போகாவோ

சும்மெனாதே கை விட்டோடி என்னுமா போலே
சேதன சமாதியாலே சொல்லுகிறது —

அன்றியே
மெய்ம்மலர் தூவி -ஆய்ந்து -அவன் குணங்களை அனுசந்தித்து -கை தொழுதால்
தீ வினைகள் அக்காவே என்னவுமாம்

மென்மலர் என்ற பாடமாகில்
மிருதுவான மலரை -என்றதாகிறது –

(புண்யம் பாபம் -அவனுக்கு பிரியமும் சீற்றமுமே தானே
அஞ்சலி பரமாம் முத்திரை -அம் ஜலதி -அஞ்சலி)

(கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள்ளாய் ஓர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே –11-7-6-)

(தூயோமாய் வந்து -அநந்ய ப்ரயோஜனராய் -மடி தடவாத சோறுக்கு விதுரரையும்,
சுறு நாறாத பூவுக்கு ஸ்ரீ மாலாகாரரையும்,
சுண்ணாம்பு படாத சாந்திற்குக் கூனியையும் பிள்ளைலோகாச்சார்யார் உதாரணமாகக் கூறுகிறார்.)

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1-

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கு என்று -உரிமையுடன்
ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு——6-

————-

வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தஶரதாத்மஜே |
வேத: ப்ராசதேஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா||

இது ஸ்காந்த புராணத்தில் உள்ள வசனம். வேதத்தினால் அறியப்படுபவன் எம்பெருமான். *சுடர் மிகு சுருதியுள் உளன்* என்று இதனை அருளினார்

நம்மாழ்வார். * ஶ்ருதி ஸிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே * என்றார் எம்பெருமானார். அப்படி வேதத்தினால் அறியப்படுபவனான எம்பெருமான் தசரதனுக்குக் குமாரனாக திருவவதரித்த போது, வேதமும் வால்மீகி முனிவரிடம் இருந்து ஸ்ரீராமாயணமாகத் தோன்றிற்று.

இதனை * வேத வேத்ய ந்யாயம் * என்று உரைப்பர்கள் பூர்வர்கள்.

இந்த ந்யாயத்தாலே நோக்கினால், திருவாய்மொழி முதலான அருளிச்செயல்களுக்கு நோக்கு அர்ச்சாவதாரம் என்னலாம்படியிருக்கும்.

நித்ய முக்தர்களுக்கு அனுபவிக்கக் கொடுத்துக் கொண்டு இருக்கும் நிலை பரமபதம்.

க்ஷீராப்தியில் ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அபயம் கொடுத்துக் கொண்டு இருப்பவன் எம்பெருமான்.

ராமக்ருஷ்ணாதி அவதாரங்களோ குறிப்பிட்ட தேசகாலத்தவர்களுக்காய் இருக்கும்.

தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே * என்று ஆச்ரிதர்கள் விரும்பிய திருமேனியையே தனக்குத் திருமேனியாகக் கொண்டு ஸர்வஸுலபனாய் இருக்கும் அர்ச்சாவதார எம்பெருமானை ப்ரதிபாதிப்பது, ஸுலபமான ஆழ்வாருடைய திருவாய்மொழியே.

இதனுடைய ஸுலபத்வமும் கீழேயே சொல்லப்பட்டது.

thirucherai-nammazhwar-thiruvadi-thozhal-2013-27

ஆழ்வார் பிறருக்கு உபதேசிப்பதும் அர்ச்சாவதார எம்பெருமானைப் பற்றவே! இது *செய்ய தாமரைக்கண்ணனாய் * பதிகந்தன்னில் ஸுஸ்பஷ்டம். இதனை ஸ்ரீமத்வரவரமுனிகள் தம்முடைய திருவாய்மொழி நூற்றந்தாதியில்

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றி வவற்றுள் – எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான்
பன்னு தமிழ் மாறன் பயின்று (26)

என்று ஸங்க்ரஹித்தார்.  இவ்விபூதியிலேயே கிட்டி ஆச்ரயிக்கும்படி ஸ்ரீ அர்ச்சாவதாரம் எளிது! கண்ணுக்குத் தோற்றும்படி நிற்கை அர்ச்சையிலேயிறே! ஆழ்வார் திருவுள்ளமான * நெஞ்சினால் நினைப்பான் எவன் அவனாகும் நீள் கடல் வண்ணன் * என்றத்தைப் ப்ரதிபாதிக்கும்படி. இத்திருவாய்மொழி ப்ரவேசத்தில் பரமாசார்யரான ஸ்ரீநம்பிள்ளையின் ஸ்ரீஸூக்திகள். * ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களினுடையவும் ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளடைய ஸ்வாதீநமாம்படி இருக்கிறவன், தன்னுடைய ஸ்வரூபஸ்தித்யாதிகள் ஆஶ்ரித அதீனமாம்படியாய் அவர்களுக்கு க்ருஹக்ஷேத்ராதிகளோபாதி கூறுகொள்ளலாம்படி நின்ற நிலையிறே * …. * இவன் ஏதேனும் ஒரு த்ரவ்யத்தையிட்டால் அத்தைத் திருவாய்ப்பாடியில் யசோதாதிகள் வெண்ணெயோபாதி விரும்பக்கடவனாய், இப்படித் தன்னை அமைத்துக் கொண்டு நிற்கிற இடமிறே அர்ச்சாவதாரமாவது. *

இதில் ஸ்ரீ அர்ச்சாவதார பர்யந்தமான சௌலப்யத்தை சம்சாரிகளைக் குறித்து
உபதேசிக்கிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தாமே விழுவாரைத் தடி கொண்டு அடிக்கை அன்றோ நாமும் கை விடுகை -என்று
தம்மாலே பொடியப் பட்டார் நாட்டார் இழவு பொறுக்க மாட்டாத கிருபா அதிசயத்தாலே
மீண்டும் அவனுடைய சௌலப்யத்தை உபதேசிக்கைக்காக ஸ்ரீ பர ஸ்ரீ வ்யூஹ ஸ்ரீ விபவங்களை
அடைவே அருளிச் செய்து கொண்டு சென்று-நீங்கள் உகந்த படியே உகந்து எழுந்து அருளப் பண்ண
அத்தை அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடு ஒக்க விரும்பும் சீலாதி அதிசயத்தாலே
உங்களோடு புரையறக் கலந்து சர்வ அபேஷிதங்களையும் குறைவற உபகரிக்கும் ஸ்ரீ அர்ச்சாவதாரத்தில் ஆஸ்ரயிங்கோள்
என்கிற செய்ய தாமரைக் கண்ணனில் தாத்பர்யத்தை அருளிச் செய்கிறார் செய்ய பரத்துவமாய் -இத்யாதியாலே -என்கை-

செய்ய பரத்துவமாய்ச் –
பர பரானாம் பரம -என்று இதர விலஷணமான அழகிய ஸ்ரீ பரத்வமாய் –

சீரார் வியூகமாய் –
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந-என்னும்படி இறே ஸ்ரீ வ்யூஹம் இருப்பது

சீர் –
என்று குணம் ஆதல்-ஐஸ்வர்யம் ஆதல் –

துய்ய விபவமாய்த் –
பிரத்யஷ அனுபவ யோக்யமான தூய்மையை யுடைய ஸ்ரீ விபவமாய் –
செய்ய தாமரைக் கண்ணன் -என்றும்
அமரர் குல முதல் -என்றும்
தடம் கடல் கிடந்தான் -என்றும்
அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில் கொண்ட அண்ணல் -என்றும்
தயரதற்கு மகன் தன்னை -என்றும்
குரவை கோத்த குழகனை -மணி வண்ணனை குடக் கூத்தனை என்றும்-இறே பரத்வாதிகளை அருளிச் செய்தது

தோன்றி வற்றுள் –
இப்படி
தேச
கால
அதிகாரி–நியமங்களை யுடைத்தாய் பிரமாணங்களாலேயாய் பிரத்யஷிக்கலாம் படியாய்
இருக்கிற இவற்றில் வைத்துக் கொண்டு –

எய்துமவர்க்கு இந்நிலத்தில் –
இவ் விபூதியில் கிட்டி ஆஸ்ரயிக்கும் அவர்களுக்கு –

அர்ச்சாவதாரம் எளிது என்றான் –
ஸூலபத்தாலே ஸ்ரீ அர்ச்சாவதாரம் சமாஸ்ரயணத்துக்கு சஷூர் விஷயமுமாய்
நித்ய சந்நிதியும் யுண்டாகையாலே அதி ஸூலபம் என்கிறார் –
நெஞ்சினால் நினைப்பான் எவனாகும் நீள் கடல் வண்ணன் -என்றத்தை நினைக்கிறது –
எளிவரும் இணைவனாம் -என்றவை ஸ்ரீ பரத்வமாம் படி அவனாகும் சௌலப்ய காஷ்டையை காட்டி -என்றார் இறே
எளிவரும் இயல்பினான் -இணைவனாம் -அவருக்குள் இரண்டும் ஸ்ரீ பரத்வமாம் படி -அவனாகும் சௌலப்யம் காஷ்டை -ஆச்சார்ய ஹிருதயம்
ஸ்ரீ மத்ய அயதனே விஷ்ணோஸ் சிஸ்யே நரவராத்மஜா -என்றும் –
நாரயாணம் உபாகமத் -என்றும்
ஸ்ரீ விபவத்தாலே அர்ச்சயமான ஏற்றம் உண்டாய் இறே இருப்பது -ஸ்ரீ பெருமாள் அர்ச்சித்த ஸ்ரீ பெரிய பெருமாள்-ஏற்றம் –
அவரையே கடாக்ஷித்ததால் வந்த திருக்கண்களின் ஏற்றத்தால் -விசாலாட்சி

இப்படி அர்ச்சாவதார வைபவத்தை அருளிச் செய்தவர் தாம் இன்னார் -என்கிறார் –
பன்னு தமிழ் மாறன் பயின்று-
அதாவது-சேதனரோடு செறிந்து ஆராயப் படுமதான த்ரவிடத்தை நிரூபகமாக யுடையரான ஸ்ரீ ஆழ்வார் –
பண்ணிய தமிழ் -என்னும்படி பிரமாண சரமத்தை வெளி இட்டால் போலே
பிரமேய சரமமான அர்ச்சாவதாரம் எளிது என்று வெளி இட்டு அருளினார் -என்கை-

—————–

வ்யாக்யானங்கள்

ஆழ்வார் அருளிச் செயல்களுக்கு அவதரித்த வ்யாக்யானங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவைகள். ஸ்ரீ அபயப்ரதராஜர் எனப்படும் ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையே அனைத்து திவ்யப்ப்ரபந்தங்களுக்கும் வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார்.

* மன்னு மணவாளமுனி செய்யுமவை தாமும் சில * என்று மாமுனிகள் குறிப்பிடும்படி ஸ்வாமி பிள்ளை லோகாசார்யருக்குத் திருத்தம்பியாரான ஸ்ரீ அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் சில அருளிச் செயல்களுக்கு வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார்.

இவ்வ்யாக்யானங்கள் திவ்ய ப்ரபந்தங்களின் ஆழ்ந்த பொருள்களையும் அவற்றை அருளிச் செய்த ஆழ்வார்களின் திருவுள்ளத்தை ப்ரதிபாதிப்பதாயும் இருக்கும்.

இதனை ஸ்ரீமத்வரவரமுனிகள் தம்முடைய உபதேச இரத்தினமாலையிலே * பிள்ளான் நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை தெள்ளார் வடக்குத் திருவீதிப்பிள்ளை மணவாளயோகி திருவாய்மொழியைக் காத்த குணவாளரென்று நெஞ்சே கூறு * என்ற பாசுரத்திலே அருளிச்செய்தார்.

—————————

திருவாய்மொழியைக் காத்த * என்றருளினார். இத்தால் ப்ரமாண ஶ்ரேஷ்டமான திருவாய்மொழிக்கு அபார்த்தங்கள் வாராமல் காத்தருளிய குணவாளர்கள் இவர்கள் என்று திருவுள்ளம் பற்றியருளினாராயிற்று.

இத்திருவாய்மொழிக்கு மட்டும் 5 வ்யாக்யானங்கள் அருளிச் செய்யப்பட்டுள்ளன. இதிலிருந்தே இதன் ஏற்றம் விளங்கும்.

இன்பமிகும் ஆறாயிரம் * என்று முதல் வ்யாக்யானம் ஸ்ரீவிஷ்ணுபுராண ஸங்கையையிலே (எண்ணிக்கையிலே) * தெள்ளாரும் ஞானத் திருக்குருகைப்பிரான் பிள்ளானாலே * அருளிச் செய்யப்பட்டது.

ஏர் ஒன்பதினாயிரம் * என்று * வேதாந்தி நஞ்சீயரால் * திருவாய்மொழிக்கு அதன் அர்த்த கௌரவம் தோற்ற அருளிச்செய்யப்பட்டது. ஸ்ரீ பாஷ்ய ஸங்க்யையிலே இருக்கும் இதன் எண்ணிக்கை. * மாயவாதியர் தான் அஞ்சப் பிறந்தவன் சீமாதவனான * வேதாந்தியன்றோ இவர்!

இன்பா வரு பத்தி மாறன் * – இன்பமாக வருகிற கடாக்ஷத்தாலே வந்த பக்தியையுடைய மாறனின் மறைப்பொருளச் * இருபத்திநாலாயிரமாகச் * சொன்னவர் பெரியவாச்சான் பிள்ளை. இவர் தாமும் ஸ்ரீராமாயணத்தில் ஈடுபட்டிருப்பார் என்பது ஸுப்ரஸித்தம். அதனாலேயே * ராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் * என்ற சாயையிலே பாசுரம் அமைத்தார் ஸ்ரீமத்வரவரமுனிகள்.

ஶ்ருதப்ரகாஶிகா ஸங்க்யையிலே * வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை * யினாலே ஏடுபடுத்தப்பட்டது * ஈடு முப்பதாறாயிரம் *. இதுவும் கேட்ட அர்த்தத்தை ப்ரகாஶப்படுத்தப்பட்டது தான்! இது தானும் * இந்த நாடறிய * என்று ஸர்வரும் கொண்டாடும்படி * தெள்ளியதா நம்பிள்ளை * யினால் அருளிச்செய்யப்பட்டது.

அடுத்தது * பன்னீராயிரமாக * அழகிய மணவாளச் சீயரால் அருளிச் செய்யப்பட்டது. * இத்தை யொழிய நாலு வ்யாக்யாநம் உண்டானாலும் ஶப்தார்த்த நிர்ணயத்துக்கு இத்தை கொண்டே ஸாதிக்கவேண்டுமிறே * என்று இதன் ஏற்றம் ஸ்ரீ பிள்ளைலோகஞ்சீயரால் அருளப்பட்டது. * த்ரமிடோபநிஷத் ஸங்கதியும் * இவராலேயே அருளிச்செய்ய்யப்பட்டது.

எப்படி வேதஶிரோபாகமான உபநிஷத்துக்களுக்கு வ்யாஸ பகவானால் ஸூத்ரங்களாக அர்த்தம் நிர்ணயிக்கப் பட்டதோ அதே போன்று ஸ்வாமி அழகிய மணவாள்ப் பெருமாள் நாயனாரால் * ஆசார்ய ஹ்ருதயத்தில் * திருவாய்மொழியின் அர்த்தங்கள் ஸூத்ர ரூபங்களாக நிச்சயிக்கப்பட்டுள்ளன.

ஸ்வாமி வேதாந்தாசார்யரால் * த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியும் த்ரமிடோபநிஷத் ஸாரமும் * ஶ்லோக ரூபங்களாக திருவாய்மொழியின் அர்த்தங்களைப் ப்ரதிபாதிப்பதாக அனுக்ரஹிக்கப்பட்டன.

ஸ்ரீமத் வரவரமுனிகளால் * திருவாய்மொழி நூற்றந்தாதி * ஒவ்வொரு பத்துப் பாசுரங்களுக்கும் ஸாரமாக இன்பம் பயக்கும்படி * சொல்லும் பொருளுமாகத் * தொகுத்துரைக்கப்பட்டுள்ளது.

இத்தனை வ்யாக்யானங்கள் மற்றும் பூர்வர்கள் க்ருதியினாலேயே இத்திருவாய்மொழியின் ஏற்றம் நன்கு விளங்கும்.

பெண் பேச்சு

91009763.m2ijMhV6.Parangusa_nayaki_thirukkolam

திருவாய்மொழியில் ஆழ்வார் தம்முடைய பேச்சாக மட்டும் இன்றி * பெண் பேச்சு * ஆகக் கூறியுள்ளதும் பாசுரங்கள் உள.

வடமொழி மறையான வேதத்தின் ப்ரதம ப்ரவர்த்தகனான ப்ரஹ்மாவிற்கு நான்குமுகங்கள். * யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் .. * என்று ஸ்ருஷ்டியில் எம்பெருமான் முதலில் பிரமனுக்கே வேதத்தை ஓதிவைத்தருளினான்.

கல்பந்தோறும் மாறாமல் வரும் திருவாய்மொழியினை நம்மாழ்வாரைக் கொண்டு ப்ரவர்ப்பித்து அருளினான்.

இவருக்கும் நான்கு முகங்கள் என்னலாம்படி இருக்கும்!

 1. தாமான தன்மையில் பாடியருள்வது.
 2. தலைவிப் பேச்சாகப் பாடியருள்வது.
 3. தோழி முகத்தினால் பாடியருள்வது.
 4. அன்னை முகத்தினால் பாடியருள்வது

இப்படி பெண்பேச்சு ப்ரேம தஶையிலே என்பதை * ஜ்ஞானத்தில் தம் பேச்சு; ப்ரேமத்தில் பெண்பேச்சு * (118) என்கிற ஆசார்ய ஹ்ருதய ஸூத்ரத்தில் காட்டப்பட்டுள்ளது.

இவர் இப்படிப் பெண்கள் நிலைமை அடைவதன் காரணமானது எம்பெருமானின் * அப்ராக்ருத விக்ரஹமே * ஆகும்.

அதுவே இவருடைய ஆண்தன்மையை அழித்து பெண்கள் பாவனையினை ஏறிட்டுக் கொள்ளும்படி செய்யும். பெருமாளைக் குறித்து

ஆடவரும் பெண்மையினை அவாவுறும் தோளினாய் * என்றார் கம்பநாட்டாழ்வார். பெருமாளை ஸேவித்த மாத்ரத்தில் ஆடவர்களும் கூட ஸ்த்ரீத்வத்தை ஆசைப்பட்டார்களாம்!

அதே போன்று இவ்வாழ்வார் ஈடுபட்ட திருமேனியானது * குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோர் உரு * (5-5-10) என்றன்றோ இருப்பது.

திரள் திரளாக நித்தியசூரிகள் கைகோத்துக்கொண்டு இழியும்படி – சோதி வெள்ளத்தினுள்ளே எழுவது ஓர் உரு-* தேஜஸாம் ராஶிம் ஊர்ஜிதம் * (ஸ்ரீ விஷ்ணு புராணம்) [ பகவான் தேவர்களுக்கு ஸேவை கொடுத்த போது, அந்த ப்ரஹ்மாதி தேவர்கள், திருச்சங்கு திருவாழி கதை முதலான திவ்யாயுதங்களை தரித்திருப்பவனும், இதுவரை காணப்படாத ரூபஸந்நிவேஶத்துடனும் தேஜஸ்ஸுக்களுடைய (ஒளிக்கற்றைகளின்) ஸமூஹமாயிருக்கிற அந்த விஷ்ணுவைக் கண்டார்கள் ]என்கிறபடியே, தேஜஸ்ஸின் நடுவே ஊகிக்கப்படுவதாயன்றோ வடிவு இருப்பது.

இந்த ஸ்த்ரீத்வமும் வந்தேறியா? (இயல்பாக இல்லாததா?) என்னில், அது வந்தேறியன்று. எம்பெருமான் ஒருவனே புருஷோத்தமன். ஏனைய ஜீவாத்மாக்கள் அனைவருமே பெண்கள் தான்! இதனை விஶதமாக * வித்யை தாயாகப் பெற்று * (121) என்கிற ஆசார்ய ஹ்ருத்ய சூர்ணிகையினாலே. தாய்ப் பேச்சாக, தோழிப் பேச்சாகப் பேசுவது எதனால் எனில்,

தோழி – நாயகன் மற்றும் நாயகிகளை சேர்ப்பவள் – ஆழ்வாருக்கு ஸம்பந்த ஜ்ஞானம் தலையெடுக்கும் அவஸ்தையிலே தோழிப் பாசுரம்.

தாய் – நாயகி படிகடந்து செல்லக் கூடாது என்று உரைப்பள் ஆகையினால் – ஆழ்வாருக்கு உபாய அத்யவஸாயம் (எம்பெருமான் தன்னை வந்து ரக்ஷிப்பன்) தலையெடுக்கும் அவஸ்தையிலே தாய்ப் பாசுரம்.

நாயகி – நாயகனோடு கூடி இருக்க ஆசைப்படுபவள் ஆதலின் – ஆழ்வாருக்கு எம்பெருமானை கிட்டி அனுபவித்தல்லது தரியாமை (இதனை ப்ராப்யத்வரை என்பர் ஆசார்யர்கள்) தலையெடுக்கும் அவஸ்தையிலே தலைவி பாசுரம்

இம்மூன்று அவஸ்தைகளும் முறையே திருமந்த்ரத்தில் உள்ள பதத்ரயங்களின் ப்ரதிபாத்ய விஷயம் – ஆசார்யமுகேந அதிகரிக்க வேண்டுவது. இவை அனைத்தும் * ஸம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி * (133) * ஸகி வெறிவிலக்கி * (134) என்கிற இரண்டு ஆசார்ய ஹ்ருத்ய ஸூர்ணிகைகளில் நன்கு விளக்கப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.

உபதேசப் பத்து

திருவாய்மொழி ஒவ்வொரு 100 பாசுரங்களிலும் 10 பாசுரங்கள் பிறர்க்கு உபதேசம் பண்ணும் திருவாய்மொழிகளாக ஆயிற்று. அதாவது ஒவ்வொரு பத்திலும் ஒரு திருவாய்மொழி முழுமையும் உபதேச பரமாக ஆயிற்று. இதனை ஆசார்ய ஹ்ருதயத்தில் * பாட்டுக்குக் க்ரியையும் பத்துக்குக் கருத்தும் போலே நூற்றுக்கு உபதேஸப்பத்து * (216) என்ற ஸுர்ணிகையில் அருளினார்.  அவையாவன

 1. முதல் பத்தில் * வீடுமுன் முற்றவும் * (1-2) [பகவத் பக்தியைப் பண்ணி ஆச்ரயிங்கோள் என்று உபதேசம்]
 2. இரண்டாம் பத்தில் * கிளர் ஒளி இளமை *  (2-10) [எம்மா வீட்டில் நிஷ்கர்ஷித்த புருஷார்த்தத்தைப் பெறும் பொருட்டுத் திருமாலிருஞ்சோலையை ஆச்ரயிக்கும்படி பிறர்க்கு உபதேசித்தல் ]
 3. மூன்றாம் பத்தில் * சொன்னால் விரோதம் * (3-8) [மன்னா மனிசரைப் பாடாமல் பரமனைப் பாடித் துதிக்கும்படி புலவர்க்கு உபதேசித்தல் ]
 4. நான்காம் பத்தில் * ஒன்றும் தேவும் * (4-10) [ ஸ்ரீமந்நாராயணனே பரதேவதையாகையால் மற்ற தெய்வங்களை விட்டு அவனையே பற்றுங்கள் என்று உபதேசித்தல் ]
 5. ஐந்தாம் பத்தில் * பொலிக பொலிக * (5-2) [ஸ்ரீவைஷண்வர்கள் திரளைக்கண்டு வாழ்த்தி, அல்லாதாரை உபதேசித்துத் திருத்துதல்]
 6. ஆறாம் பத்தில் *நல்குரவும் செல்வமும் * (6-3) [ ப்ரணயகலஹத்தில் முரண்பட்ட தம்மை வசீகரித்தவன் விருத்த விபூதி ஐச்வர்யம் , அதாவது முரண்பட்டது அனைத்தையும் செல்வமாகக் கொண்டு திருவிண்ணகரில் உறைபவன் – அவனது * கழல்களன்றி மற்றோர்களைகணிலம் * * வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும்வன்சரணே  ]
 7. ஏழாம் பத்தில் * இன்பம் பயக்க * (7-10) [ இன்பக்கவி பாடுவித்த ஸ்ரீமந்நாராயணனை – உள்ளித் தொழுமின் தொண்டீர் – தீவினை உள்ளத்தின் சார்வல்லவே என்று உபதேசம் ]
 8. எட்டாம் பத்தில் * எல்லியும் காலையும் * (8-6) [ ஆழ்வாரது பெருவிடாய் தீரக் கலக்கக் கருதி திருக்கடித்தானத்தில் இருக்கும் எம்பெருமானை ஏத்த நில்லா குறிக்கொண்மின் இடரே என உபதேசம்.]
 9. ஒன்பதாம் பத்தில் * மாலை நண்ணி * (9-10) [ நீர் விரும்பியவை யாவும் உமது இவ்வுடம்பு முடியும் பொழுது தருவேன் என்று ஆழ்வார்க்கு எம்பெருமான் அருள, அவர் உவந்து, திருக்கண்ணபுரத்திலே சென்று அவனைச் சேருமாறு பிறர்க்கு உபதேசித்தல் ]
 10. பத்தாம் பத்தில் * கண்ணன் கழலிணை * (10-5) [ ஆழ்வார் எம்பெருமானிடத்து பக்தியுடையார் செய்ய வேண்டிய செயல்களையெல்லாம் சுருங்கச்சொல்லி, பரோபதேசத்தை நிறைவுபடுத்தல் ]

இந்த உபதேசப் பத்தும் அந்த நூறு பாசுரங்களுக்கு, பாட்டுக்கு க்ரியா பதம் போல ப்ரதானம் என்று. இந்த உபதேசமும் அந்த நூறு பாசுரங்களின் தாத்பர்யத்தை ஒட்டியும் இருக்கும்.

தூது

இத்திருவாய்மொழியில் எம்பெருமானைக் குறித்துத் தூது விடும் பதிகங்கள் 4. அவற்றில் தூது விடுவதற்குப் பக்ஷிகள் அனுப்பப்பட்டிருந்தாலும், ஸ்வாபதேஶத்தால் அவை ஆசார்யர்களையே குறிக்கும். இவ்விஷயம் ஆசார்ய ஹ்ருதயத்தில் மூன்றாம் ப்ரகரணத்தில் ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டுள்ளது.

இந்த தூது பதிகங்களின் தாத்பர்யத்தினையும் * தம்பிழையும் சிறந்த செல்வமும் படைத்த பரப்பும் தமரோட்டை வாஸமும் மறப்பித்த க்ஷமாதீக்ஷாஸாரஸ்ய ஸௌந்தர்யங்களை உணர்த்தும் வ்யூஹ விபவ பரத்வத்வ்ய அர்ச்சைகள் தூது நாலுக்கும் விஷயம் * (156) என்கிற ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகையில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி தூது விடப்படும் பதிகங்கள் அஞ்சிறைய மடநாராய் (1-4), வைகல் பூங்கழிவாய் (6-1), பொன்னுலகாளீரோ (6-8) எங்கானலகங்கழிவாய் (9- ) ஆகும். இவற்றுள்

 1. அஞ்சிறைய மட நாராய் – *கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் * என்று வ்யூஹ நிலையில், *என் பிழைத்தால் திருவடியின் தகவினுக்கு * என்று அபராதங்களைப் பொறுக்கும் தன்மை பற்றாசாகத் தூது;
 2. வைகல் பூங்கழிவாய் – *மாறில் போரரக்கன் மதிள் நீறெழச் செற்று உகந்த * என்று விபவத்தில், *புணர்த்த பூந்தண்துழாய் முடி * என்று ஆர்த்தர்களை ரக்ஷிக்க வேண்டும் என்று தீக்ஷையுடைமையைப் பற்றாசாகக் கொண்டு தூது;
 3. பொன்னுலகு ஆளீரோ – * வானவர் கோனைக் கண்டு * என்று பரத்வத்திலும், * எங்குச் சென்றாகிலும் கண்டு * என்று அந்தர்யாமித்வத்திலும் தூது;
 4. எங்கானலகங்கழிவாய் – * திருமூழிக்களத்தார்க்கு * என்று அர்ச்சாவதாரத்திலே தூது

ஒவ்வொரு பத்திலும் வெளியிடப்படும் திருக்குணங்கள்

எம்பெருமானது திருக்குணங்களை விசதமாகக் காண்பிப்பது திருவாய்மொழியிறே! அமுதனார் முதல் பாசுரந்தன்னிலேயே * புகழ் மலிந்த பா மன்னு மாறன் * என்றாரிறே! * உயர்நலமுடையவன் * (1-1-1), * ஈறிலவண்புகழ் * (1-2-10) என்று உபக்ரமித்து (ஆரம்பித்து), * உலப்பில் கீர்த்தி * (6-101) என்று மத்யத்திலும் (நடுவிலும்) *சுடர்ஞான இன்பம் * (10-10-10) என்று முடிவிலும் திருக்குணங்களே அருளிச் செய்யப்பட்டிருக்கை காணத்தக்கது. * சீர்த்தொடை ஆயிரமிறே * திருவாய்மொழி

எம்பெருமானுடைய தசாவதாரம் போன்று 10 பத்துக்கள் கொண்டதான திருவாய்மொழியில் ஒவ்வொரு பத்திலும் ஒரு திருக்குணம் ப்ராதான்யேன இருக்கும். அவையாவன

 1. முதல் பத்தில் – பரத்வம்
 2. இரண்டாம் பத்தில் – காரணத்வம்
 3. மூன்றாம் பத்தில் – வ்யாபகத்வம்
 4. நான்காம் பத்தில் – நியந்த்ருத்வம்
 5. ஐந்தாம் பத்தில் – காருணிகத்வம்
 6. ஆறாம் பத்தில் – சரண்யத்வம்
 7. ஏழாம் பத்தில் – சக்தத்வம்
 8. எட்டாம் பத்தில் – ஸத்யகாமத்வம்
 9. ஒன்பதாம் பத்தில் – ஆபத்ஸகத்வம்
 10. பத்தாம் பத்தில்  – ஆர்த்திஹரத்வம்

திருமந்த்ர ப்ரதிபாதனம் திருவாய்மொழி

திருமந்த்ரமாவது மந்த்ர ராஜன் என்று அழைக்கப்படுவதாகும். முமுக்ஷுக்களுக்கு அறிய வேண்டிய ரஹஸ்யங்களிலே வைத்து முதலாவதாக இருப்பதாகும்.

இதில் உள்ள * பதத்ரயமும் – ஆத்ம பரமாத்ம ஸம்பந்தத்தையும், தத்ஸம்பந்தவிரோதியான ஸ்வஸ்வாதந்த்ரயத்தினுடைய நிவ்ருத்தியையும், தத்ஸாபல்யஹேதுபூதமான கிஞ்சித்காரத்தையும் ப்ரதிபாதிக்கிறது. *, என்று ஸ்வாமி பிள்ளைலோகாசார்யரால் பரந்தபடியில் அருளிச் செய்யப்பட்டது.

ஆதலால் திருமந்த்ரத்தால் அறியப்படுவது அர்த்த பஞ்சகம் ஆகும்.

திருவாய்மொழியினால் அறியப்படுவதும் அர்த்தபஞ்சகமாகும். இப்படி ப்ரதிபாத்ய விஷயங்கள் இரண்டினுக்கும் ஒன்றாய் இருக்கும்.

இன்னமும் * கண்கள் சிவந்து * (8-8) பதிகத்தில் முதலிரண்டு திருவாய்மொழிகள் வழியாக எம்பெருமானின் ப்ரஸ்தாவமாக அகாரார்த்தமும், பின்பு ஜீவ ஸ்வரூபம் சொல்லும் முகத்தாலே மகாரார்த்தமும், * கருமாணிக்க மலைமேல் * (8-9) பதிகந்தன்னில் * அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் * இத்யாதிப் பாசுரங்களால் உகாரார்த்தமும், * நெடுமாற்கடிமை செய்வேன்போல் * (8-10) பதிகத்தால் பாகவத சேஷத்வம் அறிவிக்கும் ப்ரகாரமாக நமப்பதார்த்தமும், * கொண்ட பெண்டிர் * (9-1) பதிகத்தால் எம்பெருமானை ஒழிந்தவர்கள் ஆபாஸ பந்துக்கள் என்று நாராயணார்த்தமும், * பண்டை நாளாலே * (9-2) பதிகத்தால் கைங்கர்ய ப்ரார்த்தனையான வ்ய்க்த சதுர்த்தியுமாக திருமந்த்ரம் ப்ரதிபாதிக்கப்பட்டது என்னவுமாம்.

த்வயார்த்த ப்ரதிபாதனம் திருவாய்மொழி

திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்படும் விஷயம் த்வயம் என்னலாம்படியும் இருக்கும். இதனை ஸ்வாமி அழகியமணவாளப்பெருமாள் நாயனார் – * த்வயார்த்தம் தீர்க்க ஶரணாகதி என்றது ஸார ஸங்க்ரஹத்திலே * என்று அருளிச் செய்தார். பகவானாகிய ஸர்வேஶ்வரன் தன்னுடைய கருணையினாலே சேதனர்க்கு ரஹஸ்யத்ரயங்களையும் ப்ரகாஶிப்பித்து அருளினான். அதன் அர்த்தங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு 18 ரஹஸ்யங்களாக அருளிச் செய்தார் ஸ்ரீ லோகதேஶிகன். அவற்றில் * ஸார ஸங்க்ரஹம் * என்பது ஒரு ரஹஸ்யம். அதனில் திருவாய்மொழியில் த்வயார்த்தம் சொல்லப்படுகிறது என அழகாகக் காட்டியருளியுள்ளார்.

 • ஶ்ரிய:பதித்வம்
 • நாராயணத்வம்
 • ஸ்ரீமானான நாராயணனுடைய ஸர்வலோக ஶரண்யமான அவனுடைய சரணாரவிந்தயுகளத்வம்
 • அதினுடைய ப்ராபகத்வம்
 • சேதனனுடைய பற்றுதல்
 • லக்ஷ்மீவல்லபனுடைய கைங்கர்ய ப்ரதாநார்த்த நித்ய ஸம்பந்தத்வம்
 • ஸர்வேஶ்வரனுடைய நிரதிஶய போக்யத்வம்
 • ஸர்வஸ்வாமித்வம்
 • நித்யகைங்கர்யத்வம்
 • கைங்கர்ய ப்ரதிபந்தகங்கள் களைதலும்

ஆகிய இப்பத்து விஷயங்களே திருவாய்மொழிக்கும் த்வயத்திற்க்கும் நோக்கு!

ஶ்ரிய:பதித்வம் தெரிவிக்கப்பட்டது, * மலர்மகள் விரும்பும் அரும்பெறல் நம் அடிகள் * (1-3-1) – தாமரை மலரிலே பிறந்து அதனையே இருப்பிமடாக உடைய பிராட்டி அதனைவிட்டு ‘அகலகில்லேனிறையுமென்று அவர்மேன்மங்கை யுறைமார்பா” என்கிறபடியே திருமார்பை விரும்பி விடாதேயிருக்கப் பெற்ற பெருமான்; * மலராள் மைந்தன் *(1-5-9) திருமகள் கொழுநன்; * திருமகனார் தனிகேள்வன் * (1-6-9) தருமத்தினுடைய பரமப்ரயோஜனமே ஒரு வடிவு கொண்டாப்போலே யிருக்கிற பெரிய பிராட்டியார்க்குத் தனிக்கேள்வன் ; * திருவின்மணாளன் * (1-9-1) பெரியபிராட்டியார்க்கு மணவாளனுமான பெருமாள்; * பூமகளார் தனி கேள்வன் * (1-9-4) பெரிய பிராட்டியார்க்கு ஒப்பற்ற நாதனுமான எம்பெருமான்; * மலராள்மணவாளனை * (1-10-4) திருமகள் நாதனுமான எம்பெருமானை ஆகிய பாசுரங்களால்.

நாராயணத்வம் தெரிவிக்கப்பட்டது * எம்பெருமான்நாரணற்கு * (2-1-7) எனக்கு ஸ்வாமியான நாராயணனுக்கு; * எம்பிரானெம்மான்நாராயணனாலே * (2-7-1) வடிவழகாலே என்னையும் தோற்பித்து விஷயீகரித்த மஹோபகாரனாயுமிருக்கின்ற நாராயணனாலே ; * நாரணன்முழுவேழுலகுக்கும் நாதன் * (2-7-2) எல்லா உலகங்களுக்கும் ஸ்வாமியும் ஆகிய பாசுரங்களால்

எம்பெருமானுடைய ஸர்வலோக ஶரண்யமான திருவடித்தாமரைகள் சொல்லப்பட்டது * நாண்மலராமடித்தாமரை * (3-3-9); * அங்கதிர் அடியன் * (3-4-3) அழகையும் ஒளியையுமுடைய திருவடிகளையுடையவன்; * அன்றுதேர்கடவிய பெருமான்கனைகழல் * (3-6-9) அர்ஜுநனுக்குத் தேர் செலுத்திய பெருமானாயுமிருக்கின்ற க்ருஷ்ணனுடைய திருவடிகளை; * சீர் அடியானே * (3-8-1) சிறப்புள்ள திருவடிகளையுடையவனே ஆகிய பாசுரங்களால்

அதினுடைய ப்ராபகத்வம் சொல்லப்பட்டது * இலங்கைநகர் அம்பெரியுய்த்தவர் * (4-2-8) இலங்காபுரியில் அம்புகளில் இருந்து கிளம்பும் அக்னியை செலுத்தின இராமபிரானுடைய; * வல்வினை தீர்க்கும் கண்ணனை * (4-4-11) ஸகல பாபங்களையும் போக்குமியல்வினனான க்ருஷ்ணனை ; * வெய்ய நோய்கள் முழுதும் வியன்ஞாலத்து வீயவே. * (4-5-2) கொடிய க்லேசங்கள் அனைத்தும் நசிக்கும்படியாக; * மேவி நின்று தொழுவார் வினைபோக * (4-5-4) நெஞ்சு பொருந்தியிருந்து அனுபவிப்பாருடைய பாபங்கள் யாவும் நசிக்கும்படி; * வேட்கையெல்லாம் விடுத்தெனையுன் * (4-9-9) விஷயாந்தர விருப்பங்களெல்லாவற்றையும் கழித்து ஆகிய பாசுரங்களால்

சேதனனுடைய பற்றுதல் சொல்லப்பட்டது * தமியேனுனக்கு அருளாய் * (5-7-2) இப்படித் தனிப்பட்டிருக்கிற என் விஷயத்திலே அருள்புரியவேணும்; * ஆறெனக்குநின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் * (5-7-10); * உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறைவேண்டேன் * (5-8-3) “என்னான் செய்கேன்” என்பதனால் ‘நான் என்ன செய்வது?’ என்று கேட்கிறால்லர்; என்னாலே ஒன்றும் செய்ய முடியாதே என்று கையை விரித்துச் சொல்லுகிறபடி ; * கழல்கள் அவையே சரணாக் கொண்ட * (5-8-11) திருவடிகளையே சரணமாகப்பற்றின; * நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் * (5-9-11) சேஷசாயியான எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குத் தஞ்சமென்று ஆகிய பாசுரங்களால்

லக்ஷ்மீவல்லபனுடைய கைங்கர்ய ப்ரதாநார்த்த நித்ய ஸம்பந்தத்வம் சொல்லப்பட்டது * திருமாமகளிருந்தாம் மலிந்திருந்து * (6-5-8) * அடிமை செய்வார் திருமாலுக்கே * (6-5-11) * ஒசிந்த வொண்மலராள்கொழுநன் * (6-7-8) * என்திருமார்வற்கு * (6-8-10); * கோலத் திருமாமகளோடு * (6-9-3) ஆகிய பாசுரங்களால்

ஸர்வேஶ்வரனுடைய நிரதிஶய போக்யத்வம் சொல்லப்பட்டது * கன்னலே அமுதே * (7-1-2) பரமபோக்யனே!; * கொடியேன் பருகின்னமுதே * (7-1-7) பாவியேனான நானும் பருகும் படியான இன்னமுதமே!; * அலைகடல் கடைந்தவாரமுதே * (7-2-5) அலையெறிகின்றகடலைக் கடைந்த ஆராவமுதமே!; * திரு மாலின்சீர், இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ * (7-9-9) பொருத்தமான ஸாமர்த்தியத்தையுடைய திருமாலின் குணங்களை இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் கூட்டிக்கொண்டு அநுபவித்தாலும் ஆரமாட்டேன் ஆகிய பாசுரங்களால்

ஸர்வஸ்வாமித்வம் ப்ரதிபாதிக்கப்பட்டது – * அடியனேன் பெரியவம்மான் * (8-1-3) * விண்ணவர்கோன் நங்கள்கோன் * (8-2-2) * அமர்ந்த நாதனை * (8-4-10) * மூவுலகாளி * (8-9-5) ஆகிய பாசுரங்களால்

நித்யகைங்கர்யத்வம் ப்ரதிபாதிக்கப்பட்டது  * பண்டைநாளாலே நின் திருவருளும் * (9-2-1) * குற்றேவல் செய்து * (9-2-2) * கொடுவினையேனும் பிடிக்க * (9-2-3) * ஆட்கொள்வானொத்து * ( 9-6-7) * அடிமைப்பணி செய்யப் புகுந்தேன் * (9-8-4) ஆகிய பாசுரங்களால்

கைங்கர்ய ப்ரதிபந்தகங்கள் களைதல் ப்ரதிபாதிக்கப்பட்டது   * துயர் கெடுங்கடிது * (10-1-7) * எழுமையும் ஏதஞ்சாரா * (10-2-2) * அந்தி தொழுஞ் சொல்லுப் பெற்றேன் * (10-8-7)  ஆகிய பாசுரங்களால்

ப்ரபந்தைகார்த்யம்

திருவாய்மொழி ஆயிரத்திற்கும் ப்ரமேயமாக * அவித்யா நிவர்த்தக * (234) என்கிற சூர்ணிகையில் ஆசார்ய ஹ்ருதய கர்த்தாவான ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் ஸங்க்ரஹிக்கும் அர்த்தமாவது – ஸம்ஸாரத்திற்குக் காரணமான அஜ்ஞானத்தைப் போக்குவிப்பதான ஜ்ஞானத்தை (* மயர்வற மதிநலம் அருளினன் * ) அருளிய பகவானது நிர்ஹேதுகமான அநுக்ரஹத்தாலே (*அவாவற்று வீடு பெற்ற * ) ஸம்ஸாரம் அகல எம்பெருமானின் கைங்கர்ய ரூபமான மோக்ஷம் லாபம் என்பதாகும்.

எந்த எம்பெருமானுடைய ப்ரஸாதத்தினால் ஜ்ஞானம் கிடைக்கிறதோ, அதே ப்ரஸாதமே மோக்ஷம் தனையும் அருளவல்லது – அது நிர்ஹேதுகம் என்றபடி

 

101183670_10157361177655893_5294547382829056000_o

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள்
உண்டோ சடகோபர்க்கு ஒப்போருவர் – உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்குண்டோ
ஒரு பார் தனில் ஒக்கு மூர்!

ஸ்ரீநகர்யாம் மஹாபுர்யாம் தாம்ரபர்ணி உத்தரே தடே
ஸ்ரீ திந்த்ரிணீ மூலதாம்நே ஶடகோபாய மங்களம்

—————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: