ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி சிறப்பு —
வரமும் வாழ்வும் அருளும் #வைகுண்ட_ஏகாதசி
கங்கையை விடச் சிறந்த தீர்த்தம் இல்லை.
விஷ்ணுவை விட உயர்ந்த தெய்வம் இல்லை.
காயத்ரியை விட உயர்ந்த மந்திரம் இல்லை.
தாயிற் சிறந்ததோர் கோயிலும் இல்லை.
ஏகாதசியை விடச் சிறந்த விரதம் இல்லை.
என்கின்றன ஞான நூல்கள்.
ஆமாம் ஏற்றங்கள் மிகுந்தது ஏகாதசி. தேய்பிறையில் வரும் ஏகாதசி, வளர்பிறையில் வரும் ஏகாதசி என மாதத்துக்கு இரண்டாக, ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும்.
ஒரு சில வருடங்களில், ஒரு ஏகாதசி அதிகமாகி இருபத்தைந்து ஏகாதசிகளும் வருவதுண்டு. இவற்றுள் மார்கழி மாதம் வளர் பிறையில் வருவது ‘மோட்ச ஏகாதசி’. இதையே வைகுண்ட ஏகாதசியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம்.
புண்ணியமிகு இந்தத் திருநாளில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பேறும், அவர் களின் முன்னோர்களுக்கு முக்தியும் கிடைக்கும். அன்றைக்கு ஏகாதசியின் மகிமையையும், இந்த விரதம் இருப்பதால் உண்டாகும் பலன்களையும் விவரிக்கும் திருக்கதைகளைப் படிப்பது வெகு விசேஷம் என்பார்கள்.
அசுரர்களுக்கு அருளிய ஏகாதசி!
ஆலிலை மேல் பள்ளிகொண்ட பெருமாள் தன் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்தார். அப்போது பிரம்மனுக்கு அகங்காரம் மேலிட்டது. அதே வேளையில் பகவானின் காதுகளில் இருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டார்கள்.
அகம்பாவம் பிடித்த பிரம்மனை அப்போதே கொல்ல முயன்றார் கள். பெருமாள் அவர்களைத் தடுத்து ”பிரம்மனைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கு வேண்டிய வரத்தை நானே தருகிறேன்” என்றார்.
கொஞ்சம் இறங்கி வந்தால், அது தெய்வமாகவே இருந்தாலும் அலட்சியப்படுத்துவது என்பது அசுரர் களின் சுபாவம் போலிருக்கிறது. அசுரர்கள் அலட்சிய மாக, ”நீ என்ன எங்களுக்கு வரம் கொடுப்பது? நாங்கள் உனக்கே வரம் தருவோம்” என்றார்கள்.
ஸ்வாமி சிரித்தார். ”அப்படியா? சரி! இப்படி அகங்காரம் கொண்ட நீங்கள் என்னால் வதம் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு ராட்சசர்களாகவே பிறக்க வேண்டும்” என்றார்.
அசுரர்கள் திகைத்தார்கள். ”ஸ்வாமி! தாங்கள் இவ்வாறு எங்களுக்குத் தண்டனை அளிக்கக் கூடாது. தங்களோடு ஒரு மாத காலம் நாங்கள் சண்டையிட வேண்டும். அதன் பிறகு தங்களுடைய அருளினால் நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்” என வேண்டினார்கள்.
அவர்கள் வேண்டியபடியே ஒரு மாத காலம் போரிட்டு, பிறகு அவர்களை வதைத்தார் பெருமாள். இறுதியில் மகாவிஷ்ணுவின் குணங்கள் எல்லாவற்றையும் உணர்ந்த அசுரர்கள், ”தெய்வமே! தங்கள் பரமபதத்தில் நாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும்” என வேண்டிக் கொண்டனர். ஒரு மார்கழி மாதம், வளர்பிறை ஏகாதசியன்று (பரமபதத்தின்) வடக்கு நுழைவாயிலைத் திறந்த பகவான், அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்தார்.
அங்கே ஆதிசேஷன் மேல் இருக்கும் அனந்தனின் திவ்விய மங்கள வடிவம் கண்டு பரம ஆனந்தம் அடைந்தனர் அசுரர்கள்.
”ஸ்வாமி! பிரம்மா முதலான எல்லோருக்கும் பகவானான தங்களை அர்ச்சாவதாரமாக (விக்கிரக வடிவமாக)ப் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி அன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று (கோயிலில்) வடக்கு நுழைவாயில் வழியாக வெளியே எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் வடக்கு நுழைவாயில் வழியே வெளியே வருபவர்களும், அவர்கள் எவ்வளவு பெரும் பாவிகளாக இருந்தாலும், மோட்சம் அடைய வேண்டும். இதுவே எங்கள் பிரார்த்தனை!” என்று வேண்டினார்கள்.
”அப்படியே ஆகும்!” என அருள் புரிந்தார் அச்சுதன். ‘வைகுண்ட ஏகாதசி அன்று வைகுண்டவாசனை தரிசிப்பவர்கள் அனைவருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும்’ என நமக்காக அன்றே அசுரர்கள் வேண்டி இருக்கிறார்கள். ஒப்பில்லாத ஸ்வாமியும் அதற்கு ஒப்புதல் தந்திருக்கிறார்.
எனவே, வைகுண்ட ஏகாதசி தினத்தில் இல்லத்தில் விரதம் இருந்து வழிபடுவதுடன் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தில் கலந்துகொள்வதாலும், பெருமாளைத் தரிசித்து வழிபடுவதாலும் இம்மை செழிக்கும்; மறுமை சிறக்கும். சகல செளபாக்கியங்களும் ஸித்திக்கும்.
முன்னோருக்கும் அருளும் ஏகாதசி
கம்பம் எனும் நகரை மன்னர் வைகானஸர் ஆண்டு வந்தார். குடிமக்களுக்குக் குறையேதும் இல்லாத ஆட்சி. ஆனால், மன்னருக்கு?
ஒரு நாள் இரவு. மன்னர் ஒரு கனவு கண்டார். அது அவருக்குத் துயரத்தை விளைவித்தது. பொழுது விடிந்ததும் வேதத்தில் கரை கண்டவர்களை அழைத்தார்.
”உத்தமர்களே! நேற்று இரவு நான் ஒரு கெட்ட கனவு கண்டேன். என் முன்னோர்கள் நரகத்தில் விழுந்து துயரப்படுகிறார்கள். என்னைப் பார்த்து, ‘மகனே! நாங்கள் படும் துயரம் உன் கண்ணில் படவில்லையா? இந்த நரகத்தில் இருந்து எங்களை விடுவிக்க ஏதாவது வழி செய்ய மாட்டாயா?’ என்று கதறி அழுதார்கள். இதற்கு என்ன அர்த்தம்? நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்” என்று வேண்டினார் மன்னர்.
”மன்னா! பர்வதர் என்று ஒரு முனிசிரேஷ்டர் இருக்கிறார். உன் முன்னோர்கள் ஏன் நரகத்தில் இருக்கிறார்கள்? அவர்களை எப்படிக் கரை ஏற்றுவது என்பதெல்லாம் அவருக்குத்தான் தெரியும். அவரிடம் போ!” என்று வழி காட்டினார்கள் உத்தம வேதியர்கள்.
மன்னர் உடனே பர்வதரைத் தேடிப் போனார். அவரிடம் தான் கண்ட கனவைச் சொல்லி, தன் வருத்தத்தை நீக்குமாறு வேண்டினார்.
உடன் கண்களை மூடி சிறிது நேரம் தியானித்த பர்வத முனிவர் பின் கண்களைத் திறந்து, எதிரில் கை கூப்பி நின்றிருந்த மன்னரிடம் சொல்லத் தொடங்கினார்:
”வைகானஸா! உன் தந்தை, அரசன் என்ற பதவி போதையில் மனைவியை அலட்சியம் செய்தான். ‘இல்லற தர்மத்தில் ஈடுபடுபவர்கள், நல்ல பிள்ளை பிறக்க வேண்டும் என்பதற்காக மனைவியுடன் சேர வேண்டிய காலங்களில் சேர வேண்டும்’ என்பதை மறந்தான். அந்தப் பாவம்தான் அவனுக்கு நரகம் கிடைத்திருக்கிறது.’
”நீ உன் மனைவி மக்களுடன், மோட்ச ஏகாதசி விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து, பரவாசுதேவனான பகவானை பூஜை செய்! அதன் பலனை உன் முன்னோர்களுக்கு அர்ப்பணம் செய்! அவர்களுக்கு நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்!” என்று சொன்னார் பர்வதர்.
வைகானஸனும் மோட்ச ஏகாதசி விரதம் இருந்து, பலனை முன்னோர்களுக்கு அர்ப்பணித்தார். அதன் பலனாக அவன் முன்னோர்கள் நரகத்தில் இருந்து விடுதலை பெற்று, மகனுக்கு ஆசி கூறினார்கள். அன்று முதல் வைகானஸன் மோட்ச ஏகாதசியைக் கடைப்பிடித்துச் சிறப்படைந்தார். ஆம், நமக்கும் நம் முன்னோர்களுக்கும் நற்கதி தரக் கூடிய ஏகாதசி இது.
மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்றும், முக்கோடி ஏகாதசி என்றும் போற்றி வணங்கி வருகிறோம். இந்நாளில் விரதம் கடைப்பிடித்து பெருமாளை தரிசித்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
———–
இந்த பரமபத வாசல் திறப்பு விழா நம்மாழ்வார் காலத்துக்குமுன் இல்லை என்று கூறுவர்.
கலியுகத்தில், நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்குச் செல்வோர் யாரும் இல்லாததால், வைகுண்ட வாசல் மூடப்பட்டு இருந்ததாம். நம்மாழ்வார் முக்தியடைந்த நாளில்தான் அது திறக்கப்பட்டதாம். இதனை அறிந்த நம்மாழ்வார், “எனக்கு மட்டும் வைகுண்ட வாசல் திறந்தால் போதாது; என்னைத் தொடர்ந்து தங்கள்மீது பக்தி செலுத்தும் அடியவர்களுக்காகவும் வைகுண்ட வாசல் திறக்கவேண்டும்’ என்று பெருமாளிடம் வேண்டினார். நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று, மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்கவாசல் திறக்க வழி செய்தார் மகாவிஷ்ணு. அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக- சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியாகப் போற்றப்படுகிறது என்பர்.
———–
ஏகாதசி விரத நியதிகள்
தசமி அன்றும், துவாதசி அன்றும் ஒரு வேளைதான் உணவு உண்ண வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து, நித்திய கர்மாக்களை (காலை வழிபாடு) செய்ய வேண்டும். ஏகாதசி அன்று துளசியைப் பறிக்கக் கூடாது. முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மஹாவிஷ்ணுவை முறைப்படி பூஜை செய்ய வேண்டும். முடிந்தவர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். முடியாத பட்சத்தில் ஸ்வாமிக்குப் பழங்களை நைவேத்தியம் செய்து விட்டு உண்ணலாம்.
ஏகாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது. இரவில் பஜனை அல்லது மஹாவிஷ்ணுவின் கதைகளைக் கேட் பது முதலியவற்றில் ஈடுபட்டு கண்விழிக்க வேண்டும். கோபம், கலகம், காமம் முதலியவற்றை விட்டுவிட வேண்டும். துவாதசி அன்று காலையில் ஸ்வாமியைப் பூஜை செய்து விட்டுப் பிறகே உண்ண வேண்டும். ஓர் ஏழைக்காவது உணவு தந்து, அதன் பிறகே நாம் உண்பது நல்லது. அன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை உண்பது நல்லது.
ஏகாதசிகள் – 25
உற்பத்தி ஏகாதசி,
மோட்ச ஏகாதசி,
ஸபலா ஏகாதசி,
புத்ரதா ஏகாதசி,
ஷட்திலா ஏகாதசி,
ஜயா ஏகாதசி,
விஜயா ஏகாதசி,
ஆமலகி ஏகாதசி,
பாப மோசனிகா ஏகாதசி,
காமதா ஏகாதசி,
வரூதிநி ஏகாதசி,
மோகினி ஏகாதசி,
அபரா ஏகாதசி,
நிர்ஜலா ஏகாதசி,
யோகினி ஏகாதசி,
சயினி ஏகாதசி,
காமிகா ஏகாதசி,
புத்ர(ஜா)தா ஏகாதசி,
அஜா ஏகாதசி,
பத்மநாபா ஏகாதசி,
இந்திரா ஏகாதசி,
பாபாங்குசா ஏகாதசி,
ரமா ஏகாதசி,
ப்ரபோதினி ஏகாதசி,
கமலா ஏகாதசி ஆகியவையே 25 ஏகாதசிகளாகும்.
————
இதற்கு ஏன் “அத்யயன உற்சவம்“ என்று பெயர் வந்தது..?
“அத்யயனம்“ என்றால் சொல்லுதல் என்று பொருள்..! “அனத்யயனம்“ என்றால் சொல்லாமலிருத்தல்..!
பாஞ்சராத்ர ஆகமம், பல உற்சவங்களை, அததற்குரிய காலத்தில் செய்யச் சொல்கின்றது..!
ஆகமம், தனுர் மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தொடங்கி வேதங்கள் ஓதி பகவானை வழிபடச் சொல்கின்றது.
இவ்விதம் செய்யப்படும் இந்த உற்சவத்திற்கு “மோக்ஷோத்ஸவம்“ என்று பெயர்.
அதில் மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசியன்று ஆரம்பித்து, பத்து நாட்கள், “வேத அத்யயனம்“ செய்யச் சொல்கின்றது..!
ஆகமத்தினால் பரிந்துரைக்கப்பட்ட சிறப்பான உறசவம் இது..!
இது போன்று சயனத்திற்கு ஏன் ஊடல் குறித்துக் கூட ஒரு உற்சவத்தினைப் பரிந்துரைக்கின்றது..!
இந்த ஊடல் உற்சவம்தான் பங்குனி மாத பிருமமோற்சவத்தில் மட்டையடி உற்சவமாக நடைபெறுகின்றது..!
மார்கழி (தனுர்) மாதம் மிகச் சிறப்பு வாய்ந்தது. உத்ராயண புண்ய காலம் என்பது தேவர்களுக்கு ஒரு பகற் பொழுது..!
தேவர்களின் பகற் பொழுதின் விடியற்காலம் என்பது மார்கழி மாதம் ஆகும்..!
பகவான் கண்ணன் கீதையில் “மாதங்களில் நான் மார்கழி“ என்று சொல்கின்றான்..!
வைகுந்த வாசல் – வடக்குப்புறம் அமைந்திருப்பது ஏன்..?
“உத்ரம்“ என்ற வடமொழி சொல் வடக்குத் திக்கைக் குறிக்கும்.
இந்த “உத்ரம்“ என்ற பதத்திற்கு “ஸ்ரேஷ்டம்” (உன்னதமானது) என்ற பொருளுண்டு.
“உத்தராயண புண்ய காலம்” உன்னதமான காலம் என்றழைக்கப்படுகின்றது.
மிக உன்னதமான இந்த வடக்குத் திக்கு மோக்ஷ வாசலான வைகுந்தவாசல் அமையக் காரணமாயிற்று.
வைகுந்த வாசல் – சிறப்பு..!
( வைகுண்ட ஏகாதசி -பரமபத வாசல் –
பிரமன் ஸ்ருஷ்ட்டி -மது கைடபர் -மிருதுவானவனுக்கு மது -அவனுக்கு கடினம் கைடபர் -இருவரும் -வேதம் அபகரித்து —
ஹயக்ரீவர் அவதாரம் -பல வருஷம் சண்டை -மின்னல் பார்த்து
ஐ மின்னல் துர்க்கா தேவி -தேவி பாகவத புராணம் கதை -பீஜா மந்த்ரம் -நாங்கள் சங்கல்பம் செய்தால் தான் மரணம் -வரம் பெற்றார்கள்
அஹங்கரித்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்றும் கேட்டார்கள் –
சாக சங்கல்பம் செய்யும் வரம் கேட்கச் சொல்லி அவர்களும்-கேட்டு -அழிக்க –
அவர்களுக்கும் மோஷம்-வடக்கு வாசல் வழியாக மார்கழி சுக்ல பஷ ஏகாதசி கூட்டிப் போனார்கள் –
கும்பகோணம் -ஸ்ரீ ப்ரஸ்ன சம்ஹிதை பாஞ்சராத்ர ஆகமம் -ஸ்ரீ கேள்வி பெருமாள் பதில் -அதிலும் இந்த வரலாறு
கும்பகோணம் ஸ்ரீ வைகுண்டம் ஆகவே தனியாக வைகுண்ட வாசல் இல்லை
பதினோரு இந்திரியங்கள் பாபம் பிராயச்சித்தம் ஏகாதசி –
மார்கழி உகந்த மாதம் -அதில் இது வருவதால் ஸ்ரேஷ்டம்- )
வேதத்தினை அபகரித்துச் சென்ற மது, கைடபன் என்ற இரு அரக்கர்களை திருமால் அழித்தார்.
திருமாலின் கையினால் மோஷம் பெற்ற அவர்கள் வைகுண்டத்தில் வாசம் செய்ய வேண்டினர்.
திருமாலின் கருணையினால், அவர்கள் சுக்லபக்ஷ ஏகாதசி யன்று வைகுந்த விண்ணகரத்தின் வடக்கு வாயிலின்
மூலமாக மோக் ஷலோகம் சென்றனர். அப்போது அவர்கள், மார்கழி சுக்ல ஏகாதசி யன்று, திருக் கோயில்களிலுள்ள
சுவர்க்க வாசல் வழியே எழுந்தருளும் பெருமாளைத் தரிசிப்பவர்கள் அனைவருக்கும் மோக்ஷம் கிட்ட வேண்டும் என்று பிரார்த்திக்க,
பெருமாளும் இசைந்து ஆசி வழங்கினார். அதன் படியே இந்த வாசலானது முக்தி தரும் வாசலாயிற்று..
எப்போது திருவாய்மொழித் திருநாளாக மாறியது..?
இந்த வேத அதயயன உற்சவமானது, திருமங்கையாழ்வார் காலம் வரையில் வேதத்திற்கு ஏற்பட்ட உற்சவமாகத் தான் நடந்து வந்தது..!
திருமங்கையாழ்வார், நம்மாழ்வாரின் திருவாய்மொழி உற்சவமாக, சுக்லபட்ச ஏகாதசி தொடங்கி பத்து நாட்கள்,
இந்த உற்சவத்தினை அரங்கனருளுால் மாற்றியமைத்தார்..!,
திருமங்கையாழ்வார் அரங்கனிடத்து ஒரு கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகைத் தினத்தன்று,
அரங்கனிடத்து விசேஷமாக பிரார்த்திக்கின்றார் திருமங்கை மன்னன்…!
அரங்கனிடத்துத் திருமங்கையாழ்வார் யாசித்தது மூன்று வரங்கள் தாம்..!
1) புத்த விஹாரங்களில் உள்ள தங்கத்தினை ஸ்ரீரங்கம் விமானத்திற்காகக் கொள்ளை யடித்தப்போது நிறைய
புத்த பிட்சுக்களும் புத்த மதத்தினரும் பலியானர். இவர்கள் அனைவருக்கும் நற்கதி கிடைக்கவேண்டும் என்று யாசித்தார்..!
2) திருமங்கைமன்னன் படித்துறையில் (இது வடதிருக் காவேரி கொள்ளிடம் அருகேயுள்ளது..)
பிரேத சம்ஸ்காரம் ஆனவர்களுக்கு வைகுண்ட பிராப்தி வேண்டும் என்றார்..!
3)ஆழ்வார்கள் அருளிச்செயலுக்கு ஏற்றம் தரும் வகையிலும், நம்மாழ்வாரின் மோட்ச வைபவம் சிறப்பாக நடைந்தேற வேண்டியும்,
அத்யயன உற்சவத்திற்கு அரங்கன் அனுமதியளிக்க வேண்டும் எனவும் வேண்டினார்.
ஆழ்வார் வேண்டி அரங்கன் என்ன மறுக்கவா போகிறார்…?
மனப்பூர்வமாக சம்மதித்தார் அரங்கன்..!
ஆழ்வார்களுக்கு ஏற்றம் தரும் “அத்யயன உற்சவம்“ ஆரம்பமானது..!
தமிழ் மறை உற்சவமாக மாற்றி யமைத்தார்..! அதனுடன் கூட வேதம் ஓதுதலும் நடந்து வருகின்றது..!
நாதமுனிகள் காலத்தில் எப்படி நடந்தது..? உற்சவங்கள் எப்படி மாற்றப்பட்டன..,?
வெகுகாலம் வரை ஆழ்வார் திருநகரியிலிருந்து, ஸ்ரீரங்கம் கோயில் பரிஜனங்களோடு, வேத பாராயணம், திவ்ய பிரபந்தத்தோடு,
நம்மாழ்வார் எழுந்தருளுவார்..! அந்த சமயம், சில முக்ய கைங்கர்ய பரர்களைத் தவிர, யாருமில்லாததால்,
வேத பாராயணம் போன்ற கைங்கர்யங்கள் நடைபெறவியலாததால், கைசிக ஏகாதசி தொடங்கி,
நம்மாழ்வார் இங்கு எழுந்தருளும் காலம் வரை “அனத்யயன” காலம் ஆனது..!
இந்த ஸம்பிரதாயங்களை எல்லாம் நாம் மறந்து விடக்கூடாது என்பதற்காக இம்மாதிரி பல நிகழ்வுகள் இன்னமும் ஸ்ரீரங்கத்தில் நடைமுறையிலிருந்து வருகின்றது..!
நாதமுனிகள் காலத்தில், நாதமுனிகள் இவ்வைபவத்தினை, பகல் பத்து, இராப்பத்து, என இரண்டாக பிரித்து,
பகல் பத்தில் நம்மாழ்வார் தவிர்த்த இதர ஆழ்வார்களின் பாசுரங்களை “திருமொழித் திருநாளா”கவும்,
இராப்பத்தினை “திருவாய்மொழி”த் திருநாளாகவும், தம் மருமகன்களான மேல அகத்தாழ்வார்,
கீழை அகத்தவார்களுக்கு இயல், இசை, நாடகமாக, திவ்யபிரபந்தங்களுக்கு மெருகூட்டி, திறம்பட போதித்து
அரையர் ஸேவைக்கு ஆதாரமானார்..!
அன்றுந்தொட்டு இன்று வரை இவ்வைபவம் சிறப்புற, வேதம் தமிழ் செய்த மாறனுக்கு பொலிவு தரும் வைபவமாக
“நம்மாழ்வார் மோட்ச“த்துடன் இனிதே தொடர்ந்து நடந்து வருகின்றது..!
எம்பெருமானாரின் விடாய் தீர்த்த உற்சவம்….!
தாம் ஜீவித்திருக்கும் வரை, தமது தீராத ஒர் ஆசையினை, எ்ம்பெருமானாருக்கு, அவருக்குப் பின் வந்த தரிசன ப்ரவர்த்தகர்கள்,
அவரது அர்ச்சா திருமேனியுடன் இருககும் போது பூர்த்தி செய்துள்ளார்கள்..! ஆம்..! திருக்கச்சி நம்பிக்கு பிரஸாதம் அமுது செய்தபின்,
எம்பெருமானார், அவரது சேஷத்தினை பிரஸாதம் கண்டுருளுவார்..!
ஜீவிதத்துடன் இருந்தபோது உள்ள உள்ளக்கிடக்கையினை, ஏக்கத்தினை, அவர் அர்ச்சா திருமேனியுடனிருக்கும் போது தீர்த்து வைத்துள்ளார்கள்..!
வேறு சில விசேஷங்கள்..!
இந்த உற்சவத்தின் போது நம்பெருமாளே ஒரு பக்தன் எவ்விதம் மோக்ஷ உலகம் செல்கிறான் என்பதனை காண்பிக்கின்றார்..!
இந்த ஆத்மா முக்தி பெறும் போது, வைகுண்டத்தில் “விரஜா நதி” எனும் நதிக்கரையினை அடைகின்றது.
விரஜா நதியினில் அந்த ஆத்மா திவ்யமான ஒளி பொருந்திய தேஜோ மயமாகின்றது.
தேவர்கள் எதிர் கொண்டழைத்து வைகுந்தம் அழைத்துச் செல்கின்றனர்..!
ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் மூல ஸ்தானத்தினை விட்டு புறப்படுகையில் போர்வை சாற்றிக் கொண்டு கிளம்புவார்.
மூன்றாம் பிராகாரத்தில் அமைந்துள்ள “விரஜா நதி“க்கு ஒப்பான “விரஜாநதி” மண்டபத்தினை அடைந்தபோது,
அங்கு வேதகோஷங்கள் நடைபெறும். இது தேவர்கள், அந்த முக்திபெற்ற ஆத்மாவினை எதிர்கொண்டழைப்பதற்கு ஒப்பாகும்.
சற்று தள்ள வைகுந்த வாசல் முன்பு, அரங்கன் தம் போர்வையினைக் களைந்து, ஒளி பொருந்திய திருவாபரணங்களை,
தம் மேல் சாற்றிக் கொண்டு தேஜோ மயமாய், மிக்கக் காந்தியுடன் சேவை சாதித்தருளுவார்.
இது விரஜா நதியில் தீர்த்தமாடிய அந்த ஆத்மா தேஜோமயமாய் விளங்குவதற்கு ஒப்பாகும்…!
இவ்விதம் அரங்கன் பெருங்கருணையுடன், தாமே ஒரு சேதனனாகயிருப்பது, தம் பக்தன் எப்படி மோக்ஷம் பெறுகின்றான்
என்பதனை தாமே நிகழ்த்திக் காட்டுகின்றார்.
நாச்சியார் திருக்கோலம், நம்பெருமாளின் வேடுபறி, நம்பெருமாள் கைத்தல சேவை, நம்மாழ்வார் கைத்தல சேவை,
நம்மாழ்வார் மோக்ஷம் ஆகிய உற்சவங்கள் அவசியம் கண்டு, உள்வாங்கி, நாம் உணர்ந்து, உய்ய வேண்டிய ஒரு அற்புத உற்சவம்,
இந்த அத்யயன உற்சவம்..!
இவ்வைபவத்தில் அரங்கனுக்கு, ஆழ்வார் மீதும் அவர்கள் பாடிய தீந்தமிழ் பாசுர்ங்கள் மீதும் கொண்ட பாசம் அபரிமிதமானது..!
எல்லா உற்சவத்தினைக் காட்டிலும், இந்த உற்சவம்தான் நெடிய உற்சவம்..!
எல்லா உற்சவத்தினைக் காட்டிலும், இந்த உற்சவ காலத்தில், அரங்கன் தம்மை அலங்கரித்துக் கொள்வதிலும்,
ஆழ்வார் பின்னே அலைந்து திரிவதிலும் அதிக நாட்டமுடையவனாக உள்ளான்..!
இந்த உற்சவத்தில் அவனது தேஜஸ், காந்தி, கீர்த்தி, தயை மிக மிக அதிகம்..!
சூரிய குல வம்ச அரசர்கள் (கட்வாங்கன், இஷ்வாகு, தசரதன், ராமன்) போன்றவர்களும்,
சந்திர குல வம்ச அரசர்கள் (சந்தனு) போன்றவர்களும் வணங்கி உய்வடைந்தனர்..!
இதனைத் தெளிவுபடுத்தும் விதமாக சூரியனுக்குரிய நவரத்னமாகிய ரத்னாங்கியை நம்பெருமாள் அணிந்தும்,
சந்திரனுக்குரிய நவரத்னமாகிய, நல்முத்த்ங்கியைப் பெரிய பெருமாள் அணிந்தும்,
எளியவராகிய நாமும் உய்யும் வண்ணம், வைகுண்ட ஏகாதசியன்று சேவை சாதித்தருளுகின்றார்..!
எல்லா பெரிய ரக்ஷா பந்தன உற்சவத்தின் போதும், ஏழாம் திருநாள் தாயார் ஸந்நிதி எழுந்தருளி, திருமஞ்சனம் கண்டருளிச் செல்வார்..!
ஆனால் இந்த இருபது நாள் உற்சவத்தில் ஒரு நாள் கூட தாயார் ஸந்நிதி பக்கம் திரும்பமாட்டார்..!
ஆழ்வார்களையும், அரையர் கொண்டாட்டத்தினையும் ரசிப்பதில், அவன் அதில் லயித்து கிடப்பதில் அலாதி பிரியம் அவனுக்கு..!
இந்த மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசியன்றுதான், தேவர்களுக்கு அமிர்தம் கிடைத்தது.
இன்றுதான் கண்ணன் அர்ச்சுனனுக்கு கீதை உபதேசம் செய்த நாள் – கீதா ஜெயந்தி.
வைகுந்த ஏகாதசி நிர்ணயம் செய்வது எப்படி?
ஸ்ரீஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி அண்ணா அவர்கள் ஏகாதசி விரதத்தினைப் பற்றி பல புராணங்கள்,
சாஸ்திரங்களிலிருந்து தமது “ஸ்ரீபாகவத தர்ம சாஸ்திரம்“ என்னும் நூலில் விரிவாகக் கூறியுள்ளார்.
அவரது திருவடிகளை மனதினால் வணங்கி, வைகுண்ட ஏகாதசி சம்பந்தமான சில செய்திகளைக் காண்போம்.
மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியில் விரதமிருந்து, துவாதசியில் கேசவனை ஆராதித்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
பிரும்மஹத்தி தோஷம் கூட விலகும் – பாத்ம புராணம்-
இப்போது ஏகாதசி நிர்ணயம் பற்றிய சர்ச்சைகள் பல ஏற்படுகின்றன. இந்த ஏகாதசி நிர்ணயம் பற்றி சில வரிகள்..!
கங்காஜலம் பவித்ரமாயினும், கள்ளு கலந்துவிட்டால் அசுத்தமே.
பஞ்சகவ்யம் பவித்ரமாயினும் நாய் முகர்ந்தால் அசுத்தமே.
அதுபோன்று இரண்டு பக்ஷங்களிலும் வரும் ஏகாதசியில் தசமி கலந்தால் அதை விட்டுவிடவேண்டும்.
தசமி கலந்த ஏகாதசி அஸூர ப்ரீதி – ப்ருஹன் நாராயணீயம் –
தசமி கலந்த ஏகாதசி அசுரர்களுக்கு ஆயுளும் பலமும் தரும். இந்த ஏகாதசி விரதம் பகவானுக்குப் பிடிக்காது. – பாத்ம புராணம்-
தசமி ஒரு வினாடி இருந்தாலும், அந்த ஏகாதசி ஆகாது. பல கேடுகளை விளைவிக்கும் – ப்ரம்ம வைவர்த்தம்-
உதயத்திற்கு முன்பே தசமி வேதையிருந்தாலும் ஏகாதசியினை விட்டு விட வேண்டும் -கருட புராணம்-
ஆக எக்காரணம் கொண்டும் ஏகாதசியன்று தசமி திதி கலக்கக்கூடாது.
சூர்யோதயத்திற்கு முன்பு வரும் பிரும்ஹமுகூர்த்த காலத்தில் தசமியிருந்தாலும் கூடாது.
(சூர்யோதயம் முன்பு நான்கு நாழிகைகள் (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்) பிரும்ஹமுகூர்த்தக் காலம்).
————-
திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனவேதான், ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிப்படுகிறது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால்,நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார் என்பது ஐதீகம்.
ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். ஏகாதசி உபவாசம் இருப்பது, இந்த ஜன்மாவை நமக்குக் கொடுத்த பரம்பொருளுக்கு, நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை என்றே தர்மசாஸ்திரம் கூறுகிறது.
————-
ஸ்ரீ சாரங்க பாணி திருக்கோயிலில் பரமபத வாசல் இல்லை
இவரே நேராக ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து வந்து ஸ்ரீ கோமள வல்லித் தாயாரைத் திருமணம் கொண்டார்
இவரை சென்று சேவித்தால் ஸ்ரீ வைகுண்டம் கிட்டும்
இதே போல் காஞ்சி ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரம்
ஸ்ரீ பெரும் பூதூர் ஆதி கேசவப் பெருமாள் பாஷ்யகாரர் திருக்கோயிலில் இல்லை
அன்று பெருமாளும் உடையவரும் பூதக்கால் திரு மாண்டத்துக்கு எழுந்து இருந்து சேவை சாதிப்பார்கள்
திருக்கண்ணபுரம் சவுரி ராஜ்ப பெருமாள் திருக்கோயில்
திரு வெள்ளறை புண்டரீகாக்ஷபெருமாள் திருக்கோயில்
——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply