ஸ்ரீ திருவேங்கட நாதர் அருளிய  கீதாசாரத் தாலாட்டு–விளக்கம்: ஸ்வாமீ பூர்ணாநந்த ஸரஸ்வதீ

ஸ்ரீ  கீதாசாரத் தாலாட்டு–நூலாக்கம்: ஸ்ரீ  திருவேங்கடநாதர்–விளக்கம்: ஸ்ரீ ஸ்வாமீ பூர்ணாநந்த ஸரஸ்வதீ–

 

    தமிழர்கள் அனைவரும் அறிந்தது தாலாட்டு. ஒரு தமிழ்த்தாய் கண்ணன் சொன்ன கீதையை, கண்ணனையே குழந்தையாக்கி தாலாட்டாகப் பாடுகிறாள். அதுவே கீதாச்சாரத் தாலாட்டு.

கீதை இறுதிக்காலத்தில் படிப்பது அல்ல; இருக்கும் காலத்தில் படிக்க வேண்டியது. ஏனெனில், கீதை வாழ்க்கையைக் கவலையின்றி வாழச் சொல்லித்தருகிறது, நம்மை நாம் ஆளச் சொல்லித்தருகிறது, மரணத்திலிருந்து மீளச் சொல்லித்தருகிறது, பிறவி‌ கடைத்தேறச் சொல்லித்தருகிறது.

உலகம் விழிக்கப் பாடிய பாடலைப், பாடினவனை உறங்கச் செய்யப் பாடிய பாடலிது!

படைத்தவன் சொன்ன வழி படித்தவன் நடந்தால் படைத்தவனுக்குப் பாரில் என்ன வேலை?

பாற்கடலில் தான் பாடியதையே கேட்டுப் பள்ளி கொள்ளவேண்டியது தானே!

கண்ணன் கேட்டுத் துயிலும் அத்தாலாட்டை, நாமும் கேட்டுக் கவலையின்றி பள்ளி கொள்வோம்

பரந்தாமன் போல்,சோகம் விட்டு யோக நித்திரையில்!

முகவுரை

தொண்டை நாட்டில் மாதை எனப்படும் திருவாமாத்தூர் என்னும் ஊரின் மன்னனாக விளங்கியவர் இந்நூலாசிரியரான திருவேங்கடநாதர்.இவருக்கு இரு புதல்விகள் இருந்தனர். இவர்களுள் ஒருத்திக்கு மகப்பேறு வாய்க்கப் பெறாமையால் மனம் வருந்தி ஏங்கித் தவித்தாள். அன்பு மகளின் ஏக்கம் காணச் சகியாத திருவேங்கடநாதர், அழகிய கண்ணன் பொம்மை ஒன்றைக் கொடுத்து கிருஷ்ணனையே குழந்தையாக பாவிக்கும்படி கூறினார். அதை தாலாட்டும் பொருட்டு பகவத்கீதையின் ஞான யோகத்தின் ஸாரத்தைத்   தாலாட்டுப் பாடல்களாக ஆக்கிக்கொடுத்தார். அம்மாது, தந்தையின் அருள் வாக்கின்படி பாலகிருஷ்ணனைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டி வர சில ஆண்டுகளில் புத்திரப் பேறு வாய்த்தது என்பது வரலாறு.

இக்கீதாசாரத்தாலாட்டு அர்ஜுனனின் ஸந்தேஹத்திற்கு, கிருஷ்ண பரமாத்மா ஸமாதானம் கூறும்விதமாக அமைந்துள்ளது. பந்த மோட்சங்களின் இயல்பு பற்றியும், ஒரு சிலர் ஞானிகளாகவும், ஒரு சிலர் அஞ்ஞானிகளாகவும்  இருப்பது எதனால் என்பது பற்றியும், ஜடம் ஆன உடல் எவ்வாறு கர்மத்தைச் செய்யும், அக்கர்மபலனை எவ்வாறு அனுபவிக்கும் என்பது பற்றியும், ஆன பல ஐயங்கள் குறித்து, மிக ஆழ்ந்த கருத்துக்களை தெளிவாகக் கூறுகின்றது. சாமானியரும் ஆத்ம தத்துவத்தை உணருமாறு  எளிதாகக் கூறுவது, இந்நூல்.

சிறப்புப் பாயிரம்

மாதையர் கோன் வேத நவில் வாய் வேங் கடநாதன்

காதை யுறப் பார்த்தனுக்குக் கண்ணனருள் – கீதைக்

கருத்துயர் தாலாட்டாகக் கட்டுரைத்தான் யாரும்

கருத்துயர் தீர்ந்(து) எய்தக் கதி.

திருவாமாத்தூர் என்னும் ஊரின் தலைவனாக வாழ்ந்த, வேதம் பயின்ற வேங்கடநாதன் என்பவர், அர்ஜுனனுக்குக் கண்ணபிரான் விரிவாக அருளிய பகவத்கீதையின் உயர்ந்த கருத்துக்களை, அனைவரும் கொடிய பிறவித் துன்பம்  நீங்கி மோக்ஷ கதியை அடையவேண்டும் என்பதற்காக, எளிய தாலாட்டுப் பாடலாக அமைத்துள்ளார்.

இறைவணக்கம்

ஐ வகைப் பொருளும் நான்கு கரணமும் குணங்கள் மூன்றும்

செய் வினை இரண்டும் ஒன்றி யாவரும் திகைப்ப நின்ற

பொய் யிருள் அகல ஞானப் பொருட்கதிர் விரித்த புத்தேள்

கைவளராழிச் செங்கட் கண்ணனைக் கருத்துள் வைப்பாம்.

ஒலி முதலான விஷயங்கள் ஐந்து, காது முதலான அறிவுக் கருவிகள் ஐந்து, வாய் முதலான செயற்கருவிகள் ஐந்து, பிராணன் முதலான வாயுக்கள் ஐந்து என ஐந்து ஐந்து பிரிவுகளான பொருள்களையும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என நான்கு விதமான அகக் கரணங்களையும், சத்துவம் ரஜஸ் தமஸ் ஆகிய மூன்றுவித குணங்களையும், நல்வினை, தீவினை என இருவிதமான செயல்களையும் பற்றிக்கொண்டு, அனைவரும் மயங்கி நிற்கச் செய்யும் மாயையாகிய அஜ்ஞான இருளகல, தத்துவ ஞானம் ஆகிய ஒளிக்கதிர்களைப் பரவச் செய்த தெய்வமான சங்கு, சக்கரம் தாங்கிய திருக்கரங்களையும் சிவந்த விழிகளையும் உடைய ஞானசூரியன் ஆகிய ஶ்ரீகிருஷ்ண பரமாத்மாவை மனதில் நினைத்து தியானிக்கின்றோம்.

பாடல் : 1

சீராரும் பரமார்த்த தெரிசனத்தை அருள் செய்யப்

பேராரும் தேசிகனாய்ப் பெருமானே வந்தவரோ.

எங்கள் பெருமானே, ஆத்மாவாகிய பரம்பொருளை அர்ஜுனன் காணுமாறு உபதேசித்து அருள, குருமூர்த்தியாக எழுந்தருளி வந்தவர் நீர் தானோ!

உலகம், உயிர், இறைவன், ஆகிய மூன்றின் தத்துவங்களையும் அர்ஜுனன் வாயிலாக எல்லா மனிதர்களுக்கும் உபதேசிக்க வேண்டும் என்று குருவாக பகவானே எழுந்தருளி இருக்கின்றார்.

பாடல் 2:

திருத் தேரில் சாரதியாய்ச் சேர்ந்திருந்தும் கீதையினால்

அருச்சுனனுக்கு மெய்ஞ்ஞான மனைத்தும் உரை செய்தவரோ!

சிறந்ததொரு தேரில் பாகனாய் இருந்தும், கீதா உபதேசமாய் அருச்சுனனுக்கு மெய்ப்பொருள் முழுவதையும் உரைத்தருளியவர்  நீர்தானோ!

குரு உயரமான இருக்கையிலிருந்து உபதேசிப்பதும் சிஷ்யன் கீழே இருந்து கேட்பதும் மரபு. மேலும், வேறு எந்தத் தொழிலும் இல்லாமல், அமைதியான தனிமையான இடத்தில் கற்பிப்பது வழக்கம். தேரில் அர்ஜுனன் எஜமானனாக உயரே இருக்க, கிருஷ்ணன் கீழே தேரோட்டியாக இருந்தவர். இடமோ யுத்தகளம்.அப்படி இருந்தும் அர்ஜுனனுக்கு ஆத்ம தத்துவத்தை பெருங்கருணையோடு உபதேசித்து அருளினார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்.

பாடல் 3:

செஞ்சமரில் பந்து சனம் சேதமுறும் என்றிறங்கி

அஞ்சிய பார்த்தன் பயமாங் ககற்ற வரு ளால் நோக்கி..

    “அறப்போரில், (தர்மத்திற்கான யுத்தத்தில்)  போரிட வந்திருக்கின்ற உறவினர்கள் அனைவரும் மரணம் அடைவார்களே”, என்று இரக்கம் கொண்டு அச்சமடைந்த அர்ஜுனனது பயத்தை, அப் போர்க்களத்திலேயே நீக்கக் (கருதிய பகவான்) கருணையுடன் பார்த்து.. (உபதேசிக்கத் தொடங்கினார்.)

    உறவினர்களையும் குருமார்களையும் கொல்வதினால் பாபம் வரும், அவர்கள் இறப்பதினால் குலதர்மம் கெடும், சமூகஒழுக்கம் கெடும். இவை ஏற்படக் காரணமாக இருந்தவர்களுக்கு மறுமையில் நரகம் கிடைக்கும்; இம்மையிலோ, அதனால் கிடைக்கும் ராஜ்ஜியம் ரத்தம் தோய்ந்ததாக இருக்கும், என்றெல்லாம் சிந்தித்து அர்ஜுனன் பயத்தையும் மனக்கலக்கத்தையும் அடைந்தான். யுத்தம் செய்ய சக்தி அற்றவனாக தேர்த்தட்டில் அமர்ந்தான். தன் மனக்குழப்பம் நீங்க, அறிவு தெளிவுபெற வழிகாட்டுமாறு பகவானிடம் சரண் அடைந்தான். இவ்வாறு குழப்பத்தை அடைந்திருந்த அர்ஜுனனுக்கு, புன்னகையுடன் (” சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமின்றி, அறத்தின்படி அவரவர் கடமையைச் செய்பவர் உயர்கதி அடைவார்,” என்று அர்ஜுனன் நிமித்தமாக அனைவருக்கும் சொல்ல விரும்பிய பகவான்) கீதையை அருளிச் செய்கின்றார்.

பாடல் 4:

சுற்றமறில் சோகமெனச் சொல்லினை கற்றறிந்தவன் போல்

கற்றுணர்ந்த பேரதனால் கலங்கார் காண் என்றவரோ.

    கற்றறிந்தவன்போல்,உறவினர் அழிந்துபோனால் துன்பம் – பாபம் – கவலை வருமென்று சொன்னாய், கற்று (மெய்ப்பொருள்) உணந்தவர்கள் மரணத்தைக் குறித்து மனங்கலங்கமாட்டார்கள் என்று அருளியவர் நீர் தானோ!

    அறத்தைக் காப்பது அரசனின் கடமை; சொந்த விருப்பு வெறுப்புகளை அதில் நுழைப்பது அறிவீனம். (சொந்த விருப்பு வெறுப்புகளால் பற்றுக் கொண்டு தன் கடமை தவறுதல் பாபம் என்று அறியாமை). கடமை தவறுதல் பாவம். உறவினர்களே தர்மத்திற்கு விரோதமாக, எதிரிகளாக இருந்தால் அவர்களை விலக்குதல் பாபம் ஆகாது என்பது அறிவுடையவர்‌ கருத்து.

மேலும், “உடல் விதியின்படி அழியக்கூடியது, ஆத்மா அழிவில்லாதது; அனைவரும் அழிவற்ற ஆத்மாக்கள்”, என்று கற்றவர்கள் உடலின் அழிவைக் குறித்து வருந்த மாட்டார்கள்.

பாடல் 5: அர்ஜுனனின் கேள்வி

கலங்காரோ இறப்புவரில் கற்றுணர்ந்த பேரேனும்

மலங்காமல் நானிருக்கும் வகை யுரையும் என வினவ..

    கற்றறிந்தவர்கள் மரணம் வந்தாலும் மனம் கலங்க மாட்டார்கள் என்றால், நானும் சோகத்தால் மயங்காமல் இருக்கும் வழியை அருளுங்கள் என்று (அர்ஜுனன்) கேட்க.

பாடல் 6: பிறப்பும் இறப்பும் இல்லை

நீயு நானும் புவி மேல் நிருபர்களும் மெய் யுணர்வால்

ஆயுங்கால் பிறந்திறப்பது ஆர்க்குமிலை என்றவரோ!

    உண்மையை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, நீயும் நானும் இந்த பூமியிலுள்ள அரசர்களும் மற்ற யாவரும் பிறப்பதும் இறப்பதும்  இல்லை என்று அருளியவர் நீர் தானோ!

பாடல் 7: பிறவி யாருக்கு?

ஈங்கெ வர்க்கும் பிறந்திறப்பது இல்லை யென்றீர் இவ் வுலகில்

நீங்குபவம் யாருக்கிதனை நிச்சயமாகச் சொல்லுமென…

பொருள் :

    இங்கு எவர்க்கும் பிறப்பு, இறப்பு இல்லை என்று சொன்னீர், (எனில்) இந்த உலகத்தில் இறத்தல் பிறத்தல் யாருக்கு என்றிதனை உறுதியாகச் சொல்லுங்கள் என (அர்ஜுனன் கேட்க..)

பாடல் 8: என்றுமுள்ள ஆத்மா நீ

இத் தரையில் பிறந்திறப்பது எடுத்த வுடற் கடுத்த பொறி

நித்தியமாகிய ஆன்மா நின் சொரூபம் என்றவரோ!

    இந்த பூமியில் பிறந்து இறப்பது (கர்மபலனை  அனுபவிப்பதற்காக ஜீவன்) எடுத்த உடம்புக்கு பொருந்திய இயற்கையாகும். நித்தியமான ஆத்மாவே உன்னுடைய சொரூபம் என்று அருளிச் செய்தவர் நீர்தானோ!

    சூக்ஷ்ம உடலோடு கூடிய ஜீவன், தன் புண்ணிய பாபத்தை அனுபவிப்பதற்காக ஸ்தூல உடலை எடுக்கின்றான். அத்தூல உடலுக்குத்தான் பிறப்பும் இறப்பும்; இரு உடல்களுக்கும் ஆதாரமாக இருக்கின்ற ஆத்மா பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. ஆத்மாவே மெய்ப் பொருள். ஆத்மா மேல் கற்பிக்கப்பட்ட தாற்காலிகமான தோற்றமே உடல், தங்கத்தின் மேல் நகைகள் போல. பிறப்பு இறப்பு இல்லாத நித்தியமான ஆத்மாவே நமது யதார்த்த சொரூபம்.

பாடல் 9: நான் யார்?

அங்கம் உயிர் இந்தி(ரி)ய நான் அன்றி வேறு எனைக்  காணேன்

இங்கு யான் வேறுண்டேல் எனக் கரியப் புகலுமென..

    உடல், பிராணன், ஞான, கர்மப் பொறிகள் இவையே நான் என்பதன்றி, வேறு ‘நானைக்’ காண வில்லை. இவ்வுடல் (முதலானவற்றை விட) வேறான ‘நான்’ உண்டு என்றால், அதனை இங்கு நான் அறியும்படி விளக்க வேண்டும் என்று (அர்ஜுனன்) கேட்க..

பொறிகள் = கருவிகள்.

அறிவுப் பொறிகள் (5)= மெய், வாய், கண், மூக்கு, செவி.

செயல் பொறிகள் (5) = கைகள், கால்கள், வாய், மல, ஜல உறுப்புகள்.

பாடல் 10: அறிபவனே நீ!

மெய் யுயிர் இந்தி(ரி)யங்கள் அல்லால் வேறறியேன் என்றவனைப்

பைய அவை யால் அறியப் படானும் நீ என்றவரோ!

    உடல், பிராணன், பொறிகள் இவை அல்லாமல் வேறு அறியேன் என்று அறிந்தவனும், புலன்களால் அறியப்படாதவனும் நீ என்றவரும் நீர்தானோ !

    எந்த அறிவைக் கொண்டு உடல், மனம், பிராணன் இவற்றை நீ அறிகின்றாயோ அந்த அறிவே நீ. கண் முதலான கருவிகளால் ஒரு பொழுதும் புறப் பொருளாக அறியப்பட முடியாதது அது. அப்படி எந்த ஒரு – அறிவு – சைதன்யம் – உயிர் – ஆத்மா – உடலிற்கு வேறாக இருக்கின்றதோ அதுவே உனது (நமது) உண்மையான நான். உடலுக்கு ஆதாரமாக இருப்பது அது. எது இருப்பதனால் உடல் இருக்கின்றதோ எது இல்லையென்றால் உடல் இருக்காதோ, அதுவே ஆத்மா. அதுவே உண்மையில் நான் என்று கருதப்பட வேண்டியது, அறியப்பட வேண்டியது. அது உடலிற்கு வேறான தனித்த சொந்தமான இருப்புடையது. அறிவே வடிவமானது அது.

பாடல் 11: பிறப்பு எதனால்?

தேகம் வேறாகில் அதைச் சேர்ந்தது இவண் ஏதெனவே

சோகமே விளை கருமத் தொடர்ச்சியினால் என்றவரோ!

    “ஆத்மா உடலிற்கு வேரானதென்றால் அது உலை அடைந்தது எதனால் ?” என்று அர்ஜுனன் கேட்க, “துன்பத்தைக் கொடுக்கின்ற வினைப் பயனின் விளைவால்”  என்று அருளியவர் நீர் தானோ!

பாடல் 12: முதல் வினைப் பயன் எப்படி?

தேகம் எடா முன் கருமச் செயல் வருமாறு ஏதெனவே

ஏகமா மரமும் வித்தும் எனும் முறை போல் என்றவரோ!

    உடல் எடுப்பதற்கு முன் முதல் வினைப் பயன் எப்படி வந்தது? என்று அர்ஜுனன் கேட்க, ஒன்றாகிய மரமும் விதையும் எனும் முறை போல (முதலும் முடிவுமின்றி தொடரும் வட்டச் சுழற்சி) என்று அருளியவர் நீரோ! (ஜீவன் அனாதி என்பது கருத்து)

பாடல் 13: கர்மம் யார் செய்வது?

காயமும் தானும் பிரிதேல் கன்மம் எவர் செய்ததென

தீய உடற் கலதுகன்மச்  செயல் தனக்கே தென்றவரோ!

 உடலும் ஆத்மாவும் வேறு வேறானால் கர்மம் யார் செய்ததென அர்ஜுனன் கேட்க, கர்மச் செயல் கொடிய தேகத்திற்கே அல்லாமல் தனக்கு(ஆத்மாவுக்கு) ஏது? (இல்லை) என்றருளியவர் நீர் தானோ!

பாடல் 14: கர்மபலனை அனுபவிப்பது யார்?

படர் கருமம் உடல் செய்யில் பலம் உறுவது ஆர்க்கெனவே

அடர் பலமும் உடற்கேயாம் அறிவார்க்கே தென்றவரோ!

    பற்பல விதமாக விரிந்து இருக்கின்ற கர்மங்களை உடல் செய்யுமானால் கர்மங்களின் பயன் – புண்ணிய பாவங்கள் – வந்து சேர்வது யார்க்கென அர்ஜுனன் வினவ, இடைவெளி யில்லாமல் மாறிமாறி வருகின்ற பலன்களும் உடலுக்கே ஆகும், அதை அறிபவர்க்கு ஏது? (சாட்சியாயிருக்கு ஆத்மாவுக்கு இல்லை) என்று அருளியவர் நீர்தானோ!

    தூல உடம்பையே நானென்று  அபிமானம் கொள்கின்ற ஸூக்ஷ்ம உடலிலிருக்கின்ற அகங்காரமாகிய ஜீவனே, கர்மங்களைச் செய்கிறான். பிறகு கர்ம பலனை அனுபவிப்பவனும் அவனே.

ஆத்மா இரண்டிற்கும் சாட்சியாக இருக்கின்றது.

பாடல் 15: சொர்க்கநரகம் அனுபவம் யாருக்கு?

வெய்ய வினை உடற்கென்றால் மெய்யிங்கே விழ ஆன்மா

ஐயமற நரக சொர்க்கம் அனுபவிப்பது ஏதெனவே.

    கொடிய வினைப் பயனானது உடலுக்குத் தானென்றால், உடலானது இங்கே பூமியிலேயே (மரண காலத்தில்) விழுந்து விட, ஆன்மாவானது சந்தேகமின்றி நரக, சொர்க்கங்களை அனுபவிப்பது எதனால் என்று அர்ஜுனன் கேட்க!

பாடல் 16: அனுபவிப்பது உண்மை இல்லை

அனுபவமே இலையது வீண் ஆரோபித நிகழ்த்தில்

தனு கரணச் செயல் தனதாய்ச் சார்வது போல் என்றவரோ!

    ஆன்மாவிற்கு சொர்க்க நரகங்களில் அனுபவமே இல்லை. அவ்வாறு இருப்பதாக நினைப்பது பற்றிக் கூறினால், உடல் மற்றும் கை முதலான கருவிகளின் செய்கைகளைத் தன்னுடைய – ஆத்மாவுடைய –  செயலாகக் கருதுவது போலத், தவறான கற்பிதமாகும் என்று அருளியவர் நீர்தானோ!

    ஸ்தூல உடலை விட்டுப் பிரிந்து சென்ற சூக்ஷ்ம உடலே சொர்க்க, நரகங்களை அனுபவிக்கின்றது. ஆத்மா எங்கும் வியாபித்து ஆகாயம் போல் இருப்பது. ஆத்மா தூல, சூக்கும உடல்களுக்கு ஆதாரமாக இருப்பது, இரண்டிற்கும் வேறாக, இருப்பது. ஆத்மாவின் மேல் மாயையினால் உடல்கள் கற்பிக்கப் பட்டிருக்கின்றன. கற்பிதமான உடலையே தான் என்றும் அவற்றின் செயல்களை தன்னுடையது என்றும் நினைக்கின்ற ஜீவன், சொர்க்கம் முதலானவைகளையும் “நானே அனுபவிக்கின்றேன்” என்று கருதுகிறான். இது அறியாமை அன்றி உண்மை இல்லை.

பாடல் 17: உடலை நானென நினைப்பதேன் ?

மற்றுடலின் செய்கை தன் மேல் வரு மயக்கம் ஏதெனவே

முற்றுணர்வொன் றில்லாத மோக மென்று சொன்னவரோ!

    ஆத்மாவிற்கு வேறாயுள்ள உடம்பினது செயல்கள் ஆத்மாவாகிய தன்னிடத்தில் வரும் மயக்கத்திற்கு காரணம் என்ன வென்று அர்ஜுனன் கேட்க, பூரண ஆத்ம ஞானம் இல்லாத அஜ்ஞானமே காரணமென்று கூறி யருளிய பகவான் நீர் தானோ!

பாடல்18: அறிவு யாருக்கு?

அறிவு தேகம் தனக்கோ ஆன்மாவிற்கோ எனவே

பிரிவு செயில் அசித்து உடலம் பிரம்மம் அறிவு என்றவரோ!

    அறியும் தன்மை உடலுக்கு உள்ளதா? ஆத்மாவுக்கு உள்ளதா? என அர்ஜுனன் கேட்க,  உடம்பையும் ஆத்மாவையும் பிரித்து ஆராய்ந்து பார்க்குமிடத்து, உடம்பு ஜடம் என்றும், பிரம்மம்(ஆத்மா) அறிவு வடிவம் என்றும் அருளியவர் நீர்தானோ!

பாடல் 19: ஜடமான உடல் செயல்படுவது எப்படி?

தேகம் அசித்தாகில் இந்தச் செயல் வருவதே தெனவே

ஏக பரஞ்சோதியின் முன் இருக்கையினால் என்ற வரோ!

    உடம்பு ஜடமானால் இந்த செயல் வருவது எப்படி ? என்று அர்ஜுனன் கேட்க, ஒன்றாகவும் மேலாகவும் உள்ள சைதன்ய ஸ்வரூபமான ஆத்மாவின் முன்னிலையில் இருப்பதனால்  உடம்பிற்கு இயங்கும் சக்தி வருகின்றது என்று அருளிய பகவான் நீர்தானோ!

 உடம்பு பஞ்சபூதங்களால் ஆனது ஆகவே ஜடமானது, ஆத்மா ஸ்வயம் சைதன்யமானது. ஆத்மாவினுடைய சம்பந்தத்தினாலேயே உடலானது இருப்பையும் இயக்கத்தையும் பெறுகின்றது.

பாடல் 20: அதெப்படி எனில்…

இருக்கினும் அசேதனத்திற்கு இச் செயல் உண்டோ எனவே

உருக்குப் படா காந்தம் முன்னில் ஊசி நிகர் என்ற வரோ!

    சேதனத்தின் முன்னிலையில் இருந்தாலும் ஜடமான உடம்பிற்கு செய்கை எப்படி வரும்? என்று அர்ஜுனன் கேட்க, நெருப்பினால் உருக்கப் படாத காந்தத்தின் முன்னிலையில் ஊசியானது அசைவது போலும் என்று அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 21: சுகதுக்கம் யாருக்கு?

சொன்ன செயல் உடற்கானால் சுக துக்கம் யார்க்கெனவே

அன்ன சுக துக்கமுந்தான் அவ் வுடற்கே என்றவரோ!

மேற்சொல்லிய செய்கையானது தேகத்திற்கு என்று சொன்னால் இன்பத் துன்பங்கள் அனுபவிப்பது யார்?, என்று விஜயன் கேட்க, அந்த இன்ப துன்பங்களும் உடலுக்கே என்று அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 22: ஜடமான உடலுக்கு எப்படி?

 சேதனமாம் ஆத்மாவைச் சேராத துக்க சுகம்

ஓது சடமாம் உடலை உற்றிடுமோ சொல்லுமென..

    சைதன்ய வடிவமாகிய ஆத்மாவைச் சேராத துன்ப இன்பங்கள், ஜடம் என்று சொல்லப்பட்ட உடலை எப்படிச் சேரும் சொல்லுங்கள் என.. (அர்ஜுனன் கேட்க)

பாடல் 23: இன்ப துன்பம் மனதுக்கு 

பூதம் ஐந்தோடு ஐந்து உயிர்கள் புலன்கள் பத்து மனம் முதல் நான்கு

ஈது இரு மெய் இதில் மனத்துக்கு இன்ப துன்பம் என்றவரோ!

    ஆகாய முதல் ஐந்து பூதங்களும், பிராணன் முதலான ஐந்து வாயுக்களும், ஞானேந்திரியங்கள் கர்மேந்திரியங்களான புலன்கள் பத்தும், மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்ற அகக் கரணங்கள் நான்கும் (24 தத்துவங்கள்) ஆகிய இவை இரண்டு சரீரங்கள் ஆகும். இவற்றுள் மனம் என்ற ஓர் தத்துவமே இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றது என்று அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 24: இருவுடல்களுக்கும் காரணம் எது?

இந்த இருவகைத் தனுவிற்கு ஏது ஏது என வினவ

முந்தைய காரணம் அதனால் மூன்றுதனு என்றவரோ!

    இப்பொழுது கூறிய இரண்டு வகையான உடல்களுக்கும் காரணம் எது என்று அர்ஜுனன் கேட்க, இவ் விரண்டு சரீரங்களுக்கும் முதன்மையாய் உள்ள காரணம் அஜ்ஞானம். அதனால் (அந்த காரண சரீரம் ஒன்று இருத்தலால்) மூன்று சரீரங்கள் என்றவரோ!

    பூதங்கள் ஐந்தும் ஒன்றோடு ஒன்று கலந்து தோன்றியது ஸ்தூல சரீரம்(பருவுடல்), கர்மேந்திரியங்கள் 5, ஞானேந்திரியங்கள் 5, பிராணன் 5, அகக்கரணங்கள் 4, ஆக 19 தத்துவங்கள் சேர்ந்தது சூக்ஷ்ம சரீரம் (நுண்ணுடல்). அவித்யா காரணசரீரம். இம்மூன்றும் சேர்ந்ததே ஜீவசரீரம். இவற்றுள் மனத்தில் ஆத்மசைதந்யம் பிரதிபிம்பிக்க ஜடமான உடல்கள் சேதனத்தன்மையைப் பெறுகின்றன.

பாடல் 25: மனமும் ஜடம் அல்லவா ?

மனம் அறியும் துக்க சுக வரவென்றீர் அம் மனமும்

வினவில் அசேதனம் அலவோ விரித்தெனக்கு விளம்பும் என.

    வரும் இன்பத் துன்பங்களை மனம் அறிகிறது என்று சொன்னீர் அந்த மனமும் ஆராய்ந்து பார்க்குமிடத்து (மற்ற தத்துவங்கள் போல) ஜடமானது அல்லவா! அப்படிப்பட்ட மனம் இன்ப துன்பங்களை அனுபவிக்கும் விதத்தை எனக்கு விளங்கும்படியாக அருளுங்கள் என்று அர்ஜுனன் கேட்க…

பாடல் 26: ஆன்ம ஸம்பந்தத்தினால்

அம் மனத்தில் ஆன்மா அபேதம் போல் தோன்றுதலால்

விம்மு துக்க சுகத்தை மனம் மேவும் என்று சொன்னவரோ!

    (ஜடமான) அம்மனத்தில் ஆத்மாவானது பிரதிபலித்து வேறுபாடு இல்லாதது போலத் தோன்றுவதால், கலக்கத்தை தருகின்ற துக்கத்தையும் சுகத்தையும் மனமானது அடைகின்றது என்று சொன்ன பகவான் நீர்தானோ!

    ஜடமான மனம் ஆத்மாவின் சம்பந்தத்தினால் சேதனத்துவத்தைப் பெறுகின்றது. தான் அடைந்த சேதனத்துவத்தை உடலுக்குக் கொடுப்பதோடு, உடம்பின் மேல் அபிமானம் கொண்டு, உடம்பையே தான் என்று கருதுவதால், உடம்பின் சுகதுக்கங்களையும் தன்னுடையதாகக் கருதுகின்றது. கண்ணாடியில் ஏற்படுகின்ற பிரதிபிம்பம் அந்த கண்ணாடியைத் தானாகக் கருதி, கண்ணாடியின் நன்மை தீமைகளை தன்னுடையதாகக் கருதுவதுபோன்றது இது.  (அந்த பிரதிபிம்பத்திற்குக் காரணமான நிஜமுகம் கண்ணாடிக்கு வெளியே கண்ணாடிக்கு வேறாக இருக்கின்றது. கண்ணாடியில் ஏற்படும் அழுக்குகள் நிஜ முகத்தை ஒருபொழுதும் பாதிப்பது இல்லை என்பதே விவேகம். இது பின்னர் விவரிக்கப்படும்.)

பாடல் 27: ஆத்மா துக்கப்படுவது ஏன்?

அந்த மனோ துக்கசுகம் அதனிடத்து நில்லாமல்

வந்திலங்கும் ஆன்மாவை மருவிய தென் சொல்லுமென.

    அந்த மனதிற்குரிய இன்ப துன்பங்கள் அதனிடத்திலேயே நின்று விடாமல், அறிவு வடிவாக விளங்குகின்ற ஆத்மாவை வந்து சேர்ந்தது எப்படி என்று சொல்லும் என பகவானை அர்ஜுனன் கேட்க.

பாடல் 28: மனதின் ஸம்பந்தத்தினால்

வெய்ய கனலின் சூடு மேல் வைத்த சட்டியினூடு

உய்யப் புனலூடு வந்தங்கு ஒன்றுதல் போலென்றவரோ!

   கொடிய நெருப்பினிடத்துள்ள வெப்பமானது மேலே வைத்துள்ள சட்டியின் வழியே அதில் ஊற்றி வைத்துள்ள நீரினிடத்தில் வந்து சேர்வதைப் போல, (மனத்திலுள்ள இன்ப துன்பங்கள் அம்மனத்தோடுள்ள ஆத்மாவை) பொருந்தியது என்றவரோ!

பாடல் 29: சித்தும் சடமும் எப்படிச் சேரும்?

சித்தாகும் ஆன்மாவும் ஜடமாகும் சித்தமும் தான்

ஒத்தாங்கு இரண்டும் ஒன்றாய் உற்ற வகை சாற்றுமென.

அறிவு வடிவமாகும் ஆத்மாவும்  ஜடமான மனமும் வேறுபாடு இல்லாதது போல இரண்டும் ஒன்றாய் சேர்ந்த விதத்தை உரைத்தருளும் என்று அர்ஜுனன் கேட்க..

பாடல் 30: நெருப்பும் இரும்பும் போல

வல்லிரும்பு கனலுடனே மருவியது போல் மனமும்,

ஒல்லையில் ஆன்மாவுடனே உற்றது காண் என்றவரோ!

    வலிமையான இரும்பு நெருப்புடனே சேர்ந்து (ஒளிபெற்றிருப்பது) போல, மனமும் அனாதியான ஆத்மாவுடனே சேர்ந்து சேதனத்துவம் பெற்றிருக்கின்றது. இதனை அறிவாயாக என்று அருளியவர் நீர்தானோ!

பாடல் 31: ஆத்மா மனதுடன் சேர்ந்தது உண்மையா?

உற்றது எதனால் எனவே உள்ளம் அவிவேகமுறப்

பற்றியதன் மேலுமதன் பண்பு வந்தது என்றவரோ!

   மனதின் தர்மங்களான இன்ப துன்பங்கள்  ஆன்மாவிற்கு இருப்பதாகத் தோன்றுவது எதனால்? என்று அர்ஜுனன் கேட்க,  மனதானது விவேகம் செய்யாமையால் ஆத்மாவாகிய தன்னிடத்தில் மனதின் பண்புகள் தெரிகின்றன என்று அருளிய பகவான் நீர்தானோ!

    நெருப்பு ஒளிபொருந்தியது, குறிப்பிட்ட வடிவம் அற்றது.   இரும்பு வடிவம் உடையது, ஒளியற்றது. இரண்டும் வேறுவேறானவை. ஆனால் நெருப்பும் இரும்பும் சேரும் பொழுது நெருப்பு வடிவம் உடையது போலவும், இரும்பு பிரகாசம் உடையது போலவும் இரண்டின் தன்மைகளும் ஒன்றாகி ஒரே பொருளாகத் தெரிகின்றது. அதுபோல சேதனமான ஆத்மாவும் அவிவேகம் உள்ள மனதும் ஒன்று சேரும் பொழுது, மனது சேதனத் தன்மை உடையதாகவும், ஆத்மா துன்பத்தை அடைந்ததாகவும் இரண்டும் ஒன்றாகித் தெரிகின்றது.

பாடல் 32: இன்ப துன்பங்கள் ஆத்மாவுக்கு இல்லை!

அடுத்த குணம் போமோ பின் ஆன்மாவை விட்டெனவே

எடுத்த செம்பூ நிறம் படிகத்து ஏறுதல் போல் என்றவரோ!

    ஆத்மாவை அடைந்துள்ள இன்ப துன்பங்கள் நீங்கிப் போகுமா? என்று விஜயன் கேட்க, சிவந்த நிறமுடைய பூவின் நிறம் அருகிலுள்ள ஸ்படிக கல்லில் ஏறி தோன்றுவது போல் என்றவரோ!

    சிவந்த பூவும் ஸ்படிக லிங்கமும் அருகருகே இருக்கும் பொழுது வெண்மையான ஸ்படிக லிங்கம் சிவப்பு நிறத்தை அடைந்தது போலத் தோன்றும். அதுபோல, மனதையும் ஆத்மாவையும் பிரித்து ஆராய்ந்து பார்க்காத பொழுது, ஆத்மா மனதின் இன்ப துன்பத்தை அடைந்து விட்டதாகத் தோன்றுகின்றது. ஆனால் ஸ்படிகமும் ஆத்மாவும் எப்பொழுதும் தன் சொரூபத்திலிருந்து மாற வில்லை என்பதே உண்மை. அதை ஆராய்ந்து அறிந்து கொள்வதே விவேகம் – ஞானம்.

பாடல் 33: ஆசைகள் தோன்றுவது எதனால்?

சுத்த படிகம் போல் சொரூபமாய்த் தானிருக்க

மெத்தவும் ஆசாமலினம் மேவியதென் சொல்லுமென.

தூய்மையான ஸ்படிகம் போல சச்சிதானந்த சொரூபமாய்த் தான்(ஆத்மா) இருக்க மிகுந்த ஆசையாகிய அழுக்கானது தன்னிடத்தில் வந்தது எப்படி ? என்று சொல்லும் என அர்ஜுனன் கேட்க.

பாடல் 34: வாசனையால் வந்தது!

அனாதியாம் வாசனையால் அடைந்தது ஆசாமலினம்

மனோ பந்தம் இருக்கின் முக்தி வாராது என்று உரைத்தவரோ!

    ஆசையானது அனாதியான வாஸனையால் வந்திருப்பது. அதுவே மனதிற்கு பந்தமாம். அது இருக்கும் வரை முக்தியானது ஏற்படாது, என்று அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 35: பந்தம் எது? முக்தி எது?

பந்தமெது முக்தியெது பகுத்துரைக்க வேண்டும் எந்தன்

சிந்தை தெளியவென்று திருத்தாளினை வணங்க.

    பந்தம் என்பது என்ன? முக்தி என்பது என்ன? என்று எனது மனமானது தெளிவாக அறியும்படி, (அவற்றின் இலக்கணங்களை) வேறு பிரித்துச் சொல்ல வேண்டுமென்று கேட்டு (பகவானின்) திருவடிகளை வணங்க..

பாடல் 36: பந்தம் இது, முக்தி இது!

தேகாதி தான் எனவே சேர் அபிமானம் பந்தம்

ஆகாத மானம் விடில் அரிய முத்தி என்றவரோ!

    உடல் முதலானவைகள் நான் என்பதாக இருக்கின்ற அபிமானமே – பற்றுதலே – பந்தமாகும். ஆகாத துன்பத்தைத் தருகின்ற அபிமானத்தை விட்டு விட்டால் அதுவே கிடைத்தற்கு அரிதான முக்தி என்று அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 37: அபிமானம் வந்ததெப்படி?

அபிமானம் வருவகையும் ஆங்கது தான் தீர் வகையும்

தபியாமல் நானறியத் தயவாகக் கூறுமென!

    உடல் நானென்ற அபிமானம் வந்து சேருகின்ற வழியையும், அந்தத் தவறான அபிமானம் நீங்குவதற்குரிய வழியையும் இந்த அபிமானத்தால் துன்பம் அடையாமல், (உண்மையை) நான் தெரிந்து கொள்ளக் கருணையோடு வழி கூறுமென அர்ஜுனன் கேட்க..

பாடல் 38: அறியாமையால் வந்ததிது!

மறந்திடும் அஞ்ஞானத்தால் மானம் வந்தது அஜ்ஞானம்

இறந்து விடின் மானமும் போமென்ன உரை செய்தவரோ!

    தனது ஆத்ம வடிவத்தை மறந்த (மறைத்த) அஜ்ஞானத்தினால் அபிமானம் வந்தது. அந்த அஜ்ஞானம் அழிந்து விட்டால் (அதன் காரியமான) உடல் பற்றும் அழிந்து விடும் என்று அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 39: அறியாமை வருவதும் போவதும் எப்படி?

அந்தமுறை அஜ்ஞானம் அணுகுவதும் போவதுவும்

சந்தயமில்லாது அறியத் தயவாகக் கூறுமென.

    என் ஸ்வரூபத்தை மறைக்கும் விதமாக அஜ்ஞானமானது வந்து சேர்வதும், அழிந்து போவதும் எப்படி என்று ஐயம் இல்லாமல் நான் அறிந்து கொள்ளும்படி கருணையுடன் கூறி அருளுங்கள் என அர்ஜுனன் கேட்க..

பாடல் 40: மெய்யறிவால் போகும்!

அஜ்ஞானம் வந்தது அனாதியது சொல்வதல்ல

மெய் ஞானத்தாலே விடுமென் றுரைத்தவரோ!

    அஜ்ஞானம் ஒரு காரணத்தால் வந்தது என்று சொல்வதற்கில்லை, அது அனாதி யானது. மெய்ப் பொருளைப் பற்றிய மெய் ஞானத்தால் அது நீங்கும் என்று உரைத்தருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 41: சூரியன் முன் இருள் வருமா?

இரவி யெதிர் அடுத்து வந்த இருட்போல அஜ்ஞானம்

வர விதியோ ஜோதி தன் பால் வந்த வகை ஏதெனவே!

    சூரியனின் எதிரில் நெருங்கி வந்த இருள் போல, ஞான சூரியன் ஆகிய என்னிடத்தில் (ஆத்மாவிடத்தில்) அஜ்ஞானமானது வருவதற்கு இயலுமோ? வந்த வகை எப்படி யென்று சொல்லுமென (அர்ஜுனன் கேட்க).

பாடல் 42: ஆனந்த சாகரம் நீ

அந்த அறிவு வந்தால் அஜ்ஞானம் இல்லை அப்பால்

சந்நதமும் ஆனந்த சாகரம் நீ என்றவரோ!

    (இந்த உடல் முதலானவைகளை விட வேறாகிய) ஞானப் பிரகாச வடிவம் நான் என்னும் ஞானம் உனக்கு வந்து விட்டால் அஜ்ஞானமானது உன்னிடத்தில் இல்லாததே ஆகும். அந்த ஞானம் தோன்றிய பிறகு எப்பொழுதும் நீ ஆனந்தக் கடலாய் இருப்பாய் என்று அருளிய பகவான் நீர் தானோ!

    சூரியன் வரும் வரையே இருள் இருக்கும். சூரியன் தோன்றியவுடன் இருள் மறைந்துவிடுவது போல, நான் ஆத்மா என்று அறியாத வரையே அஜ்ஞானம். நான் சச்சிதானந்த ஆத்மா என்று அறிந்து கொண்ட பிறகு அஜ்ஞானம் இல்லை.

பாடல் 43: துக்க சுகம் தீராதது ஏன்?

வேதாந்தத்தால் குருவால் மெய் ஞானம் வந்தவுடன்

தீதான துக்க சுகம் தீராதது ஏதெனவே!

    வேதாந்த நூல்களை கேட்டலாலும் குருவின் உபதேசத்தாலும் மெய் யறிவு வந்தவுடனேயே கொடியதான துன்ப இன்பங்கள் ஒழியாதது எதனால் என்று அர்ஜுனன் கேட்க..

    வேதாந்தம் எனப்படுகின்ற உபநிஷத் முதலான தத்துவ நூல்களை குருமுகமாக கேட்பதன் வாயிலாகவே ஆத்ம ஞானமானது உண்டாகும். அப்படிக் கேட்கின்ற பொழுது புரிந்தாலும், அதனுடைய பலனை அனுபவிக்க முடியாமல் இருப்பது எதனால்? என்பது கேள்வி.

பாடல் 44: அபரோக்ஷ ஞானத்தாலே நீங்கும்!

பற்றறுமோ துக்க சுகம் பரோக்ஷ ஞானத்தாலே

அற்றமாம் அவ் விரண்டும் அபரோக்ஷத்தாலே என்றவரோ!

    பரோக்ஷ ஞானத்தினால் துன்ப இன்பங்கள் வந்து சேருதல் நின்று போய் விடாது, அவ் விரண்டும் அபரோக்ஷ ஞானத்தாலேயே நீங்கும் என்றருளிய பகவான் நீர்தானோ!

    கேள்வி ஞானம் விஷய அறிவாக மட்டும் இருக்கின்ற பொழுது அது பலனைத் தருவது இல்லை. எவ்விதமான தடைகளும் இன்றித் தன்னறிவாக அது புரிந்து கொள்ளப்படுகின்ற பொழுதுதான் பலனைத் தரும்.

பாடல் 45 : பரோக்ஷம் எது ? அபரோக்ஷம் எது ?

பரோக்ஷம் அபரோக்ஷமெது பகுத்துரைக்க வேண்டும் என் தன்

திரோதமாம் புத்தி நன்றாய்த் தெளியும் படிக்கெனவே.

    பரோக் ஷஞானம் என்பது யாது? அபரோக் ஷஞானம் என்பது யாது?  அறியாமையால் மறைக்கப் பட்டுள்ள என்னுடைய அறிவுவானது நன்றாகத் தெளியும்படி பிரித்து கூற வேண்டும் என்று அர்ஜுனன் கேட்க..

பாடல் 46: பரோக்ஷம் இது, அபரோக்ஷம் இது !

பகர்ந்த சத்த ஞானம் பரோக்ஷம் அனுபவத்தான்

அகம் பிரம்மம் எனும் ஞானம் அபரோக்ஷம் என்றவரோ!

    வேதாந்த நூல்களாலும் குருவாலும் சொல்லப்பட்ட ஆத்மா, ப்ரஹ்மம் போன்ற சப்தங்களின் (சொற்களின்) பொருளறிவு பரோக்ஷ ஞானம் ஆகும். தத்துவமசி, அகம் பிரம்மாஸ்மி போன்ற மகா வாக்கியங்களின் விசாரத்தால் (ஆராய்ச்சியால்) உண்டாகும் “நான் பிரம்மமாக இருக்கிறேன்” என்னும் அநுபவ உணர்வு அபரோக்ஷ ஞானம் என்று அருளிய பகவான் நீர் தானோ!

உடலுக்கு வேறாக ஆத்மா இருக்கின்றது என்றும், உலகத்திற்கு வேறாக பிரம்மம் (கடவுள்) இருக்கின்றது என்றும் அறிந்து கொள்வது பரோக்ஷ ஞானம். பிரம்மமே ஆத்மாவாக இருக்கின்றது, ஆத்மாவே நான் என்று அறிந்து கொள்வது அபரோக்ஷ ஞானம்.

பாடல் 47: உடற் பற்று போகாதது ஏன்?

தான் பிரம்மம் என்றறிந்தும் தனுவைத் தான் என்ற புத்தி,

ஏன் போகவில்லை அதை எனக்கறியப் புகலுமென.

    நான் பிரம்மம் என்று அறிந்த பிறகும் உடல் முதலானவைகளை நான் என்று எண்ணும் (தவறான) அறிவு ஏன் நீங்கவில்லை, அது நீங்குவதற்கான காரணத்தை நன்கறியுமாறு தாங்கள் திருவாய் மலர்ந்தருள வேண்டுமென்று அர்ஜுனன் கேட்க.

பாடல் 48: பயிற்சியினால் நீங்கும்

கேள்வியினால் மனனத்தால் கிளர்ந்த யோகங்களினால்

ஆள் பிரம்மத்து அனுபவம் வந்து அது தீரும் என்றவரோ!

குரு வாயிலாக வேதாந்த நூல்களைக் கேட்பதனாலும், அவற்றின் பொருளைச் சிந்தித்து ஐயங்களை தெளிவுபடுத்திக் கொள்வதனாலும், தெளிவாக அறிந்து கொண்ட அந்தத் தத்துவஞானத்திலேயே மனதைத் தொடர்ந்து நிறுத்துவதனாலும் நான் பிரம்மம் என்ற ஞானமானது  மனதில் உறுதிப் படும் பொழுது, பழைய வாஸனையான உடல் நானென்பது நீங்கும்.

பாடல் 49: நான் ஞான வடிவம் ஆக முடியுமா?

ஆதியாம் சித் சொரூபம் ஆகாத தானினிமேல்

சோதி மனனாதியினால் சொரூபமாமோ எனவே!

    முதலில் சித் சொரூபமாக இல்லாத ஆத்மா இனி மேல் கேள்வி, மனனம் முதலானவைகளால் சித் ஸ்வரூபமாக ஆகுமா? என அர்ஜுனன் கேட்க..

பாடல் 50: எப்போதும் ஞான வடிவு தான் நீ

எப்போதும் சின் மயம்  தானெனல் மறந்து தேடுவது

செப்புமிடற்று அணி யிருக்கத் தேடுதல் போல் என்றவரோ.

    எக் காலத்திலும் தான் சித் சொரூபம் தான் என்பதை மறந்து, அதை அடைய வேண்டும் என்று தேடுவது, கழுத்திலேயே நகை இருக்கும் பொழுது அதை மறந்து புறத்தே தேடுதல் போல் என்றவரோ!

பாடல் 51: நான் நானாவேனா?

தேடிய பின் தேக புத்தி தீர்ந்து போய் சித் சொரூபம்

கூடுவனோ யான் என் குறை தீரச் சொல்லுமென.

    கேள்வி, மனனங்களால் (நான் யார்? என்று) ஆராய்ந்த பின்பு, உடல் நான் என்னும் தவறான அறிவு நீங்கிப் போய், அவற்றை அறியும் அறிவே நான் என்று அதை அடைவனோ என் ஐயம் தீர உபதேசியுங்கள் என்று அர்ஜுனன் கேட்க..

பாடல் 52: நானாயிருப்பதில் ஐயமென்ன?

வந்த வுடல் வேறாயும் வாசனையால் தானெனலால்

சந்தயம் என் தன் சொரூபம் தானாதற்கு என்றவரோ!

    வினைப் பயனால் வந்த உடல், தனக்கு வேறாக இருந்தாலும் உடலை நானென்று வாழ்ந்த பழைய வாசனையால், இப்பொழுதும் தான் எனவே தோன்றுகின்றது. வாசனையை நீக்கி, உடலை அறிகின்ற ஆத்மாவே தன் சொரூபம் என்று தானாக நிற்பதில் ஐயம் என்ன?

பாடல் 53: உடல் மயக்கம் நீங்குவது எப்படி?

தனுவைத் தான் எனும் பிரமை சத்த ஞானத்தில் அறாது

அனுபவ மெய்ஞ் ஞானத்தால் அறும் வகை ஏது உரையுமென.

    உடலை நான் என்று நினைக்கும் மயக்கமானது சாஸ்திர விசாரணையால் உண்டான பரோக் ஷஞானத்தால் நீங்காமல், உண்மை அனுபவம் ஆகிய அபரோக்ஷ ஞானத்தால் நீங்குகின்ற விதம் எப்படி சொல்லுங்கள் என்று அர்ஜுனன் கேட்க…

பாடல் 54: ஐயமின்றிய அறிவொளியினால் தொலையும்

விளக்கு விளக்கு எனுமதனால் வெய்ய இருள் போய் விடுமோ

துளக்கமிலா விளக்கேற்றில் தொலையுமிருள் என்றவரோ!

    விளக்கு விளக்கு என்று சொல்வதினால் மட்டும் கொடிய இருள் நீங்கி விடுமோ? (நீங்காது). அசைவின்றிய விளக்கேற்றினால் இருளானது நீங்கிப் போகும் (அதுபோல, பிரம்மம் இருக்கின்றது என்ற பரோக்ஷ ஞானத்தினால் மட்டும் தேகம் நான் என்ற அறிவு நீங்காது. அந்த ப்ரம்மமே அறிவு வடிவாக எப்பொழுதும் ஆத்மாவாக(நானாக) விளங்கிக் கொண்டிருக்கிறது என்ற அபரோக்ஷ ஞானத்தினால் தான் உடல் அபிமானமானது நீங்கும்) என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 55: அஞ்ஞானம் எப்போது நீங்கும்?

நெடுங்காலம் ஆன்மாவை நீங்காத அஞ்ஞானம்

விடுங்காலம் எந்நாளோ மெய்ஞ் ஞானத்தால் என்றவரோ!

    அனாதி காலமாய் ஆத்மாவை மறைத்து இருக்கின்ற அஞ்ஞானமானது ஆத்மாவை விட்டு நீங்குவது எப்பொழுது ? என்று அர்ஜுனன் கேட்க, ஆத்மாவைப் பற்றிய மெய்ஞ் ஞானத்தினால் அது விலகும் என்று உபதேசித்து அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 56: மெய்ஞ்ஞானத்தால் நீங்கும்!

அந்தகாரம் குகையில் ஆயிரம் நாள் இருந்தாலும்

செந் தீபம் கண்டவுடன் தீர்வது போல் என்றவரோ!

    இருளானது ஒரு குகையில் பல்லாயிரம் நாட்கள் இருந்தாலும், பிரகாசமான ஒரு விளக்கை ஏற்றியவுடன் மறைந்து போய் விடுவது போல, (அனாதிகாலமாய் ஆத்மாவை மறைத்திருக்கும் அஜ்ஞானமானது சாஸ்திர விசாரத்தால் ஆத்ம ஞானம் ஏற்பட்டவுடன் மறைந்து போய் விடும்) என்று அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 59: கர்மம் ஞான ஸாதனமாவது எப்படி?

அஜ்ஞான இருள் துரக்க அறியாத நல்ல கன்மம்

மெய் ஞானம் தனைப்பலிக்கும் விதம் எவ்வாறு என வினவ.

    அஜ்ஞானமாகிய இருளை நீக்குவதற்கு இயலாத நல்ல செய்கையானது, மெய் ஞானத்தை தோற்றுவிக்கும் செயலை எவ்வாறு செய்ய முடியுமென அர்ஜுனன் கேட்க.

பாடல் 60: கர்மம் இரு விதம்

கருமம் இரு வகையாம் காமியம் நிட் காமியமென்று

இரு வகையில் நிட் காமமேது காண் என்றவரோ!

    கர்மமானது காம்யம் என்றும் நிஷ் காம்யம் என்றும் இரு வகையாகும். அவற்றுள் நிஷ்காம்ய கர்மம் (மனத்தூய்மையை கொடுப்பதன் வாயிலாக) ஞானம் தோன்றுவதற்கு காரணமாகுமென அறிவாயாக, என்றருளிய பகவான் நீர்தானோ!

    பந்தத்தை தோற்றுவிக்கின்ற புண்ணிய பாப செய்கைகள் மோட்சத்தை அடைவதற்கு எப்படிக் காரணமாகின்றன? என்று கேட்டால், கர்மம் காம்யம், நிஷ்காம்யம் என்று இரண்டு விதமாக இருக்கின்றது. கர்ம பலனை விரும்பி செயல்களைச் செய்தல் காம்யம். அது பந்த காரணம். கர்ம பலனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கடமையைச் செய்தல் நிஷ் காம்யம். இறைவனுக்கு செய்யும் தொண்டுணர்வோடு பலனை எதிர்பாராமல் நமது கடமைகளைச் செய்கின்ற பொழுது அது மனத் தூய்மை என்ற உயர்ந்த பலனைக் கொடுக்கும். அது ஆத்ம ஞானத்தை பெறுவதற்கான தகுதி ஆகும். ஆகவே இது மோஷகாரணம்.

(அனைத்து அறன் மனத்துக் கண் மாசிலன் ஆதல். -திருக்குறள் 34)

பாடல் 61: துன்பங்களிலிருந்து விடுபடுவது எப்படி?

கருமமே காரணமாய்க் கட்டுரைத்தீர் இவ் வுலகை

ஒருவும் வகையை எனக்கு  ஓதென்று அடி பணிய.

    பிறவி வருவதற்கும், பிறவியிலிருந்து விடுபடுவதற்கும் கருமமே சாதனமாக விரித்துரைத்தீர்கள். இவ்வுலகத் துன்பங்களிலிருந்து நான் விலகுகின்ற விதத்தை எடுத்துரைக்க வேண்டும் என்று (அர்ஜுனன் பகவானுடைய) திருவடிகளைப் பணிந்து வினவ..

    ஸகாமமாக செய்யும் கர்மம் பிறவி வருவதற்கும் நிஷ்காமமாக (கர்மயோகம்) செய்யும் கர்மம் பிறவியிலிருருந்து விடுபடுவதற்கும் காரணமாக இருக்கின்றது. எவ்விதமாக கர்மத்தைச் செய்தாலும் துன்பம் வருகின்றது. துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி என்பது கேள்வி.

பாடல் 62: இவ்வுலகம் உண்மையல்ல!

இந்திர சாலம் போல இவ்வுலகை நம்மிடத்தில்

தந்திரமாய்த் தோற்றுவித்தோம் சத்தியம் அல என்றவரோ!

    மாய வித்தையினால்  செய்யப்பட்ட பொருட்களைப்போல இந்த உலகை நாம் நம்மிடத்தில் மாயத் தோற்றமாகத் தோற்றுவித்து இருக்கின்றோம். இது உண்மை இல்லை என அருளிய பகவான் நீர்தானோ!

    மாய வித்தை செய்பவனால் தோற்றுவிக்கப்பட்ட பொருள்களை, அவை வெறும் தோற்ற மாத்திரம் உண்மையில் இல்லை என்று புரிந்து கொள்ளுதலே அவற்றை விலக்குதல் ஆகும். அதை போல உலகம் இறைவனின் மாயா சக்தியினால் தோற்ற மாத்திரமாக படைக்கப் பட்டிருக்கிறது, ஆகவே, நிரந்தரமான உண்மை யில்லை என்று புரிந்து கொள்வதே உலகத்திலிருந்து வரும் துன்பங்களிலிருந்து விலகும் வழி ஆகும்.

பாடல் 63: பொய்யானது எப்படி தோன்றும்?

மித்தையெனும் சகத்து நின்பால் விளங்குமோ என வினவ

சுத்தி தனிலே ரசதம் தோன்றுதல் போல் என்றவரோ!

    பொய்யான உலகம், உண்மையான உன்னிடத்தில் தோன்றுமோ? என்று அர்ஜுனன் கேட்க, சிப்பியில் வெள்ளி தோன்றுவது போல என்று அருளிய பகவான் நீர் தானோ!

  இல்லாத ஒரு பொருள், இருக்கின்ற ஒன்றின்மேல் இருப்பதுபோல தோன்றுவதற்கு மித்யா என்று பெயர். மணல் வெளியில் இருக்கின்ற சிப்பியின் மேல் சூரிய ஒளிபட்டு வெள்ளி காசு கிடப்பது போலத் தோன்றுகின்றது. அதுபோல, ஒரே உண்மைப் பொருளான பிரம்மத்தின் மேல் மாயையினால் உலகம் இருப்பது போலத் தெரிகின்றது.

பாடல் 64: முன் இருந்ததா இவ் வுலகம்?

அயல் வெள்ளி சுத்தியின் மேல் ஆரோபிதம் கூடும்

இயல் உள்ள சகமும் முன் வேறு இருந்ததும் உண்டெனவே!

    வேறாக தனியே இருக்கும் வெள்ளியானது சிப்பியில் கற்பிதமாகத் தோன்றுகிறது. காரண காரிய ரூபமாக உள்ள இந்த உலகமும் காண்பதற்கு முன் வேறாகத் தனியே இருந்ததும் உண்டா? என அர்ஜுனன் கேட்க.

பாடல் 65: இல்லாததுவும் தோன்றும்!

மன மயக்கம் பிடிக்கில் இல்லா வத்துவும் தோன் றிடும் அதுவோ

கனவில் விண்ணில் தான் பறக்கக் கண்டது போல் என்றவரோ!

    மன மயக்கம் ஏற்படுகின்ற பொழுது இல்லாத பொருளும் கூட இருப்பதாகத் தோன்றும். அது எது போல என்றால், கனவில் ஆகாயத்தில் தான் பறப்பதாக காண்பது போல, என்றருளிய அருளிய பகவான் நீர் தானோ!

    உலகம் பிரம்மத்தின் மேல் கற்பிக்கப்பட்டுள்ளது என்றால், முன்னில்லாத உலகம் கற்பனை மாத்திரமாகத் தோன்ற முடியுமா? என்பது கேள்வி. மாயையினால், மனத்தினால் எதையும் (இல்லாததையும்) கற்பனை பண்ண முடியும் என்பது பதில்.

பாடல் 66: உலகம் விளங்குவது எதனால்?

கனவு போல் பிரபஞ்சம் என்றீர் கண் விழித்தால் கனவு பொய்யாம்

வினவு சகம் தினமும் மெய்யா விளங்குவது என் சொல்லுமென. 

கனவு போல உலகத் தோற்றம் பொய்யானது என்று சொன்னீர்கள். விழித்தவுடன் கனவு மறைந்து விடுகிறது. காணப் படுகின்ற உலகமோ எப்பொழுதும் விளங்குவது ஏன்? என்று அர்ஜுனன் வினவ.

பாடல் 67: மெய்யறிவு வந்தால் மறைந்துவிடும்

மெய்யாக விளங்குவது மெய்ஞானம் வருமளவும்

பொய்யாம்பின் கனவு அது போல்  போதம் வரில் என்றவரோ!

    உலகம் உண்மையான விளங்குவது மெய்யறிவு வரும் வரைதான். மெய் ஞானம் வரும்பொழுது கனவு போல உலகமும் பொய்யாய் மறைந்து விடும் என்று அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 68: ஞானிகளுக்கும் உலகம் தெரிவது எதனால்?

முன்பு கண்ட கனவு பொய்யாம் முழி சாக்ரம் போல என்றீர்

பின்பு முக்தித் தசை அடைந்தும் பிரபஞ்சம் நிற்ப தேதெனவே.

முன்பு உறக்கத்தில் கண்ட கனவு போல, விழிப்பு நிலையில் தோன்றுகின்ற உலகமும் பொய் என்று சொன்னீர். ஆனால் முக்திநிலை அடைந்த பிறகும் உலகமானது (கனவைப் போல விழித்தவுடன் மறைந்து விடாமல்) தோன்றுவது எதனால் என்று அர்ஜுனன் கேட்க..

பாடல் 69: தோற்றத்தில் இருந்தாலும் பயன்படாது

தெரிந்தவர்க்குத் தோற்றுவது தெத்த படம் போல்வதல்லால்

பரந்த சகம் காரியத்தில் பயன்படாது என்றவரோ!

    மெய்ப் பொருளை அறிந்தவருக்கு உலகம் தோன்றுவது, எரிந்த துணியானது தோன்றுவது போல் அல்லாமல், விரிந்த இந்த உலகமானது விவகாரத்திற்கு பயன்படாது என்று அருளிய பகவான் நீர்தானோ!

    மடித்து வைக்கப்பட்ட துணி நெருப்பில் எரிந்து போனாலும் அப்படியே இருப்பது போல் தோன்றுகின்றது. ஆனால் அது முன்பு போல விவகாரத்திற்குப் பயன்படாது. அதுபோல் ஆத்ம ஞானத்திற்குப்பிறகு உலகம் தோற்றத்தில் இருந்தாலும் ஞானிக்கு அது பயன்படுவது இல்லை. சுகத்தையும் துக்கத்தையும் தருவதாக இருப்பதில்லை.

பாடல் 70: அஜ்ஞான காரியம் உடனே போகாதது ஏன் ?

கர்ம வினை அஜ்ஞானம் கடந்துமதன் காரியம்

புன்மை உறு மெய்யுடனே போகாதது ஏதெனவே.

(ஞானத்தால்) அஜ்ஞானத்தைக் கடந்த பிறகும் அஜ்ஞான காரியமான உடலானது, அஜ்ஞானத்தோடு நீங்கிப் போகாதது எதனால் என்று அர்ஜுனன் கேட்க…

பாடல் 71: சிறிது காலம் இருக்கும்!

வெட்டவிழும் மரம்பசந்து விளங்குதல் போல் சிலகாலம்

நட்டகன்மம் மாய்ந்து மங்கம் நடத்திடுங்காண் என்றவரோ!

    வெட்டிய உடன் கீழே விழுந்த மரமானது சிறிது காலத்திற்கு பசுமையாகவே தோன்றுவது போல, தான் முன்பு செய்த கர்மம் அழிந்து போனாலும் அதன் காரியமாகிய உடல் சிறிது காலம் இயங்கிக் கொண்டிருக்கும் என்று நீ அறிவாயாக என்று அருளிய பகவான் நீர் தானோ!

    வினைகளுக்குக் காரணமான அஜ்ஞானம் ஞானத்தினால் அழிந்து போன பிறகும், தற்போது உள்ள இந்த உடல் தோன்றுவதற்கு காரணமான பிராரத்த வினை மட்டும் அனுபவித்துத்தான் தீரும். ஆகவே, அது இருக்கும் வரை உடலானது இருந்து போகும்.

பாடல் 72: ஆத்மா பலவா?

சென்மம் போய் முக்தியினை சேரச் சிலர் இருக்கத், தொன்மை ஆன்மா பலவோ சொரூபம் பகரும் என.

    முக்தி அடைந்து சிலர் பிறவி விட்டுப் போய்விட, சிலர் பிறவியுடன் இங்கிருப்பதனால், அனாதியான ஆத்மா அநேகமா?  இதன் உண்மையைச் சொல்லும் என்று அர்ஜுனன் கேட்க..

பாடல் 73: ஆன்மா ஒருவனே!

பிரம்மமென்றும் ஈசனென்றும் பெருகு பல ஜீவனென்றும்

உரை மயக்கம் அலது ஆன்மா ஒருவனே என்றவரோ!

    நிர் குண பிரம்மம் என்றும் ஸகுண ஈஸ்வரன் என்றும் பல ஜீவன்கள் என்றும் சொல்வது (அறியாமையினால் ஏற்பட்ட) தவறான அறிவே யல்லாமல் ஆத்மா ஒன்று தான் என்பதே உண்மை என்று அருளிய பகவான் நீர் தானோ!

    ஒன்றேயான இரண்டற்ற நிர்குண பிரம்மமே, ஸகுண ஈஸ்வரனாகவும் அறியாமையோடு கூடிய பல ஜீவர்களாகவும் விளங்கிக் கொண்டிருக்கின்றது என்பதே உண்மை.

பாடல் 74: பலவாய் தோன்றுவது எதனால்?

ஏகம்தான் ஆன்மா எனும் வகையே மெய்யானால்

ஆகந்தோறும் பலவாய் அமர்ந்ததுமென்னோ சொல்லுமென!

    ஒன்றுதான் ஆத்மா என்பது உண்மையானால் உடல் தோறும் பலவாக ‘நான்’ என்று இருப்பது எதனாலோ?, சொல்லும் என அர்ஜுனன் கேட்க

பாடல் 75: தோன்றுவது பிரதிபிம்பம்

பலகடத்தில் பானு பிம்பம் தோன்றுதல் போல்

தொலைவில் புத்தி தொறும் ஆன்மா தோன்றுதல் காண் என்றவரோ!

    சூரியனின் பிரதி பிம்பமானது பல குடங்களில் உள்ள நீரில் தோன்றுவது போல, முக்தி அடையும்வரை அழிவில்லாமல் இருக்கக்கூடிய மனதில் ஆத்மாவின் பிரதி பிம்பம் தோன்றுகின்றது, அறிவாயாக! என்று அருளிய பகவான் நீர்தானோ!

    சூரியன் ஒன்றுதான். அதன் பிரதிபிம்பம் பல நீர்நிலைகளில் பலவாகத் தோன்றுவது போல, ஆத்மா ஒன்றுதான், அதனுடைய பிரதிபிம்பம் பல மனங்களில் பலவாகத் தோன்றுகின்றது.

பாடல் 76: முக்தி யாருக்கு?

ஆதித்தன் போலான்மா அளவில்புத்தி தொறும்தோன்றில்

சாதிக்கும் முத்தி எவர்தமக்கு அதனைச் சாற்றும் என,

    சூரியன் போல ஆத்மா மனம்தோறும் எண்ணற்ற பிரதி பிம்பமாகத் தோன்றுகின்றது என்றால்,  முக்தி அடைவது யார் ?  அதனைச் சொல்லும் என அர்ஜுனன் வினவ.

பாடல் 77: பந்தமும் முக்தியும் மனதிற்கே!

பந்தம் முக்தி தானுமந்தப் பரந்த புத்தி தனக்கே யாம்

அந்த பிம்பம் தனக்கிலை யென்று அறிவு வரச் சொன்னவரோ.

    பந்தமும் முக்தியும் (விஷயங்களை நோக்கி) விரிந்த மனதிற்குத் தான். அந்த பிரதி பிம்பங்களுக்கு மூலமான  ஆத்மாவாகிய தனக்கு (பந்தமும் முக்தியும்) இல்லை, என்று அர்ஜுனனுக்கு அறிவு ஏற்படும்படி உபதேசித்த பகவான் நீர்தானோ!

    உடலும் மனமும் ஜடமானவை. மனதில் சைதன்யமான ஆத்மாவின் பிரதிபிம்பம் ஏற்பட மனது சேதனத்தன்மை பெறுகின்றது. (சூரிய ஒளிபட்ட கண்ணாடி பிரகாசத்தை அடைவதுபோல) உயிர் பெற்ற மனமானது, ‘உடலை நான்’ என்று நினைக்கின்றபொழுது பந்தத்தையும் ‘ஆத்மா நான்’ என்றறிகின்றபோது முக்தியையும் அடைகிறது. ஆத்மா இரண்டிற்கும் சாக்ஷி மாத்திரமாக இருக்கின்றது. அது பந்தத்தையும் அடைவதில்லை, முக்தியையும் அடைவது இல்லை.

பாடல் 78: பலஜீவன்கள் எதனால்?

பரமேகம் ஆயுமதில் பல சீவர் ஏதெனவே

ஒரு கடலில் பல குமிழி உதிப்பது போல் என்றவரோ!

    பரமாத்மா ஒன்றாக இருந்தாலும் அதனிடத்தில் பல ஜீவர்கள் தோன்றுவது எப்படி? என அர்ஜுனன் வினவ, ஒரு கடலில் பல நீர்க் குமிழிகள் (காற்றினால்) தோன்றுவது போல, (மாயையினால் பல ஜீவர்கள் தோன்றுகின்றனர்) என்றருளிய பகவான் நீதானோ!

பாடல் 79: பேரின்பம் எப்படித் தோன்றும்?

சீவனது தானென்றும் சேரும் பிரம்மமென்றும்

ஆவதுவோ பேரின்பம் ஆங்கதெனக்கு ஓதுமென!

தான் ஜீவன் என்றும் பிரம்மம் அடையத் தக்கது என்றும் இருந்து, பின்னர் ஜீவன் பிரம்மமாக ஆவதுதான் பேரின்பம் என்று சிலர் சொல்வது பற்றி எனக்கு அருளுங்களென அர்ஜுனன் கேட்க,

பாடல் 80: ஒன்றே, இரண்டிலை!

ஏகம் பிரம்மம் இரண்டிலை நீ வேறுமல

சோகமுறும் பேதம் அறில் தோன்றுமின்பம் என்றவரோ!

    பிரம்மமும் ஆத்மாவும் ஒன்றுதான், இரண்டு இல்லை, நீ பிரம்மத்திற்கு வேறானவன் இல்லை. துன்பத்தைக் கொடுக்கும் வேறு எனும் தவறான அறிவை விட்டுவிட்டால் பேரின்பமானது தோன்றும் என்று அருளிய பகவான் நீர்தானோ!

    பிம்பம் ஒன்றுதான் உண்மைப் பொருள், பிரதி பிம்பம் தோற்ற மாத்திரம். உடலிலும் மனதிலும் தோன்றி யிருக்கும் தற்காலிகமான உயிர்த் தன்மையை உடலோடு இணைத்து, அந்த உடலும் மனமுமே நான் என்று கருதியது அறியாமை. உடலும் மனமும் தானே இயங்கக் கூடியவையல்ல, உடலுக்கு வேறான ஆத்மாவின் சம்பந்தத்தினாலேயே இவை இயக்கம் பெற்றிருக்கின்றன. இதுவரை உடலிலிருந்த நான் என்ற அகங்காரம் வெறும் பிரதிபிம்பம் மாத்திரமே. அதனுடைய உண்மை ஆத்மா. ஆகவே, பிரதிபிம்பம் நானல்ல உண்மையான ஆத்மாவே நான், ஆத்மாவே ப்ரஹ்மம் என்ற ஞானம்  வருகின்ற பொழுது பேரின்பம் தோன்றும். ஆகவே, பிரதிபிம்பம்(ஜீவன்) பிம்பத்தை(பிரம்மத்தை) அடைகின்றது என்பதில்லை; பிரதிபிம்பம் உண்மை இல்லை என்று விடுத்து, பிரம்மமே உண்மை  என்றிருக்கின்ற அத்வைத நிலையே பேரின்பத்தை தரும்.

பாடல் 81: சித் மாத்திரமாக இருக்க முடியுமா?

சீவ பேதம் போமோ சித்தொன்றாமோ எனவே

ஆவல் மனம் அறும் சுழுத்தி அவத்தையில்பார் என்றவரோ!

    ” ஜீவன் நான் (வேறு ப்ரம்மம் வேறு) என்ற அறிவானது நீங்கி இருக்க முடியுமா? ஒன்றேயான சித் மாத்திரமாக நிற்க இயலுமா?” என்று அர்ஜுனன் வினவ, (விழிப்பு நிலையில் விஷயங்களில்) ஆவல் கொண்டு அலைகின்ற மனமானது, ஆழ்ந்த உறக்க நிலையில் (சிதான்மா மாத்திரமாக) இருப்பதைப் பார்ப்பாயா!

    மனதை ஆத்ம தத்துவத்தில் லயமாக்கினால் உறக்கத்தில் போல விழிப்பு நிலையிலும் சிதான்மா மாத்திரமாக இருக்க முடியும் என்பது கருத்து. தூங்காமல் தூங்குவது என்று இதுவே சொல்லப் படுகின்றது.

பாடல் 82:  பூத மயத் தோற்றம் ஏன்?

பேதமல இவ் வுலகம் பிரம்ம மயம் என்றறிந்தும்

பூத மய மாய்த் தோற்றல் போகாதது ஏதெனவே!

    இந்த உலகம் பிரம்மத்திற்கு வேறானதல்ல, பிரம்ம ஸ்வரூபமே என்றறிந்த பின்னரும், பஞ்சபூத வடிவமாகத் தோன்றுதல் மறைந்து போகாது எதனால்? என அர்ஜுனன் கேட்க,

பாடல் 83: கானல் நீர் போல் தெரிகிறது!

கானலை நீரென்றோடிக் கண்டவர்க்குத் தீர்ந்த பின்னும்

வானுலவு நீராகி வயங்குதல் போல் என்றவரோ!

    கானல் தோற்றத்தை நீரென்று கருதி அருகில் சென்று பார்த்தவருக்கு, அது நீரில்லை என்று தெரிந்த பின்னரும், காட்சியில் வானிலிருந்து பொழிந்த மழைநீராகவே தோன்றுவது போல, என்றருளிய பகவான் நீர்தானோ!

    கானல்நீர் உண்மையில்லை என்றறிந்த பின்னும் அங்கு நீர் இருப்பது போல தோற்றம் தெரியத்தான் செய்கின்றது. அறிவில் இல்லை; தோற்றத்தில் இருக்கின்றது. அதைப் போல உலகமும் உண்மையில்லை என்றறிந்த பின்னும் தோற்றத்தில் இருக்கின்றது. (பிரம்மமயமே என்று அறிவில் இருக்கின்றது, தோற்றத்தில் பஞ்சபூத மயமாய் தெரிகின்றது. சூரியன் தோன்றுவதும் இல்லை, மறைவதும் இல்லை என்பது அறிவு, ஆனால் அனுபவத்தில் தோற்றமும் மறைவும் தெரிகிறது.)

பாடல் 84: மூன்றாயிருத்தல் வேறுபாடில்லையா?

அறிவானும் நல்லறிவும் அறியப் படும் பொருளும்

பிறிவாய் மூன் றாயிருத்தல் பேதமலவோ வெனவே.

    அறிபவனும், நல்ல அறிவும், அறியப்படும் பொருளும் பிரிந்து மூன்றாக இருத்தல் வேறுபாடு இல்லையா? என அர்ஜுனன் கேட்க,

    அறிவு, அறியப்படும் பொருள், அறிவு இந்த மூன்றிற்கும் திரிபுடி என்று பெயர். மூவகை வேறுபாடுகள். ஆத்மாவுக்கு வேறாக ஒன்றுமில்லை என்றால் இவ்வேறுபாடுகள் அனுபவத்தில் இருக்கின்றனவே, என்பது கேள்வி.

பாடல் 85: தோன்றினாலும் உண்மையில்லை!

சொப்பனத்தில் தனித்தொருவன் தோற்றம் வேறு இல்லை யங்கே

கற்பனையாம் பொருளறிவு காண்பவன்போல் என்றவரோ!

    தனியே ஒருவன் உறங்கும்பொழுது கனவில் காணப்படும்பொருள், அறிவு, காண்பவன் மூன்றும் வேறுவேறாகத் தோன்றுவது போலக் கண்டாலும், அவை மனதிற்கு வேறாக இல்லை. (நனவிலும் இம்மூன்றும் வேறுவேறாகத் தோன்றினாலும் உண்மையில் ஆத்மாவிற்கு வேறாக இல்லை) என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 86: பேதங்களை மறப்பது எப்படி?

கற்பனையாம் பேதங்கள் காணாமல் போம் வகையை

விற்பனமாய் நானறிய விளம்புமெனவே வணங்க,

    கற்பனையான இந்த வேறுபாடுகள் தெரியாமல் மறைந்து போகும் முறையை நான் நன்றாக அறிந்து கொள்ளும்படி சொல்லி யருள வேண்டுமென்று அர்ஜுனன் வணங்கிக் கேட்க,

பாடல் 87: யோகத்தால் பேதம் நீங்கும்

துரியமாம் யோகத்தால் தூய மனம் லயமானால்

அரிய மூ வகை விகற்பம் அழியுமென்று சொன்னவரோ.

   நிதித்யாஸனமாகிய தியான யோகப் பயிற்சியினால் துரியமான ஆத்ம தத்துவத்தில் (விருப்பு வெறுப்புகளற்ற) தூய்மையான மனம் லயமானால் இம் மூவகை வேறுபாடுகளும் அழிந்து போகுமென்று அருளிய பகவான் நீர்தானோ!

    நிதித்யாஸனம் என்பது சிரவணத்தில் ஐயமின்றி அறிந்த ஆத்மதத்துவத்தை, தனிமையில் அமர்ந்து இடைவிடாமல் சிந்தித்தல்.

பாடல் 88: ஆத்மா தெரியாததேன்?

சிறந்திருக்கும் ஆன்மாவும் செகமெல்லாம் நிறைந்திருந்தும்

மறைந்தெனக்குத் தோன்றாத வகை யேது சொல்லுமென,

    சச்சிதானந்த வடிவமாய் சிறப்புடன் விளங்கும் ஆத்மா, உலகமெங்கும் பரவியிருந்தாலும் எனது மனதிற்கு இதுநாள்வரை விளங்காமலிருந்த காரணம் என்ன? சொல்லுங்கள் என்று அர்ஜுனன் வினவ,

பாடல் 89: உலகம் மறைத்திருக்கிறது!

சத்துச்சித்தா னந்தம் தாம் மூன்றும் அதனுடனே

ஒத்துற்று நாம உருவம் சகமாகி,

    சச்சிதானந்தம் ஆத்மாவின் சொரூப இலக்கணமாகும். இந்த மூன்றுடனே பெயரும் வடிவமும் சேர்ந்து உலகமாகி (இருக்கின்றது.)

பாடல் 90: நாம ரூபம் மறையத் தெரியும்!

இருக்கையினில் தோன்றாது இவை மூன்றும் பிரமமென

மரிக்கில் வரும் பின்னிரண்டு மரிசகமென்று உரைத்தவரோ!

    (நாமரூபங்களோடு) இருக்கையில் சச்சிதானந்தம் மூன்றும் பிரம்மம் என்று தெரியாது. அழிகின்ற உலகமானது நாமரூபம் மாத்திரம் (என்று குரு வாயிலாக வேதாந்த நூல்களைச்) சிந்தித்து நீக்குகின்றபொழுது தெரியும், என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 91: ஆத்மா அறியப்படும் பொருள் ஆகுமா?

அறிந்து கொள் ஞானத்தாலே ஆன்மாவை என்றுரைத்தீர்

சிறந்தொளிரும் ஆன்மாவும் திருசியமாமோ எனவே.

    ஞானத்தினாலே ஆத்மாவை அறிந்து கொள் என்று சொன்னீர் எங்கும் வியாபித்து அறிவாய் ஒளிரும் ஆத்மாவும் அறியப்படும் பொருள் ஆகுமா? என்று அர்ஜுனன் கேட்க.

பாடல் 92: அஜ்ஞானம் விலக ஆத்மா தானே விளங்கும்!

முந்திய ஞானத்தாலே முதிருமஞ்ஞானம் துறக்கில்

சிந்தையில் ஆன்மாச்சுயமாய்த் திகழுமென்று சொன்னவரே.

    முதன்மையான ஆத்மஞானத்தினால் அனாதி காலமாயுள்ள அஜ்ஞானத்தை நீக்கினால், தானே ஒளிரும்  ஆத்மாவானது மனதில் விளங்கும் என்றருளிய பகவான் நீர் தானோ!

பாடல் 93 : முக்தி சுகம் எப்படி இருக்கும்?

இனியமுத்திச் சுகமிருப்பது எப்படி யென்றே வினவ

அனுபவத்திலறி விடயானந்தம் போலென்றவரோ !

இனிமையான முக்தி இன்பமானது எப்படி இருக்கும்? என்று அர்ஜுனன் வினவ, விஷயானந்தம் போல அனுபவத்தில் அறிந்துகொள், என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 94 : மனோ லயம் தான் முக்தியா?

மன லயம் வந்தவரலது மற்றிலரோ முக்தரென

சனகனை போல் சீவன் முக்தர் தாமுமுளர் எனறவரோ!

    மனம் ஒடுங்கி யோகத்தில் இருப்பவர் அல்லாது வேறு யாரும் ஜீவன்முக்தராக இல்லையா ? என அர்ஜுனன் வினவ, ஜனக மஹாராஜனைப் போல (உலக விவகாரம் செய்கின்ற) ஜீவன் முக்தர்களும் உலகில் உள்ளனர் என்ற அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 95 : ஜீவன் முக்தர் லக்ஷணம் யாது?

ஜீவன் முக்தி அடைந்தோர்கள் செயலுமவர் தம் குணமும்

நா வுரைக்கும் வாசகமும் நானறியச் சொல்லுமென.

    ஜீவன் முக்தி அடைந்தவர்களுடைய செயல்களும், அவர்களுடைய நற் குணங்களும், அவர்கள் பேசுகின்ற வார்த்தைகளும் நான் அறிந்து கொள்ளும்படி உபதேசித்தருள வேண்டும் என்று அர்ஜுனன் கேட்க.

பாடல் 96 : அனைத்தும் உடலுக்கு என்றிருப்பார்?

வரும் கருவு பிறப்பினொடு வளர்தல் பருத்தல் குறைதல்

ஒருங்கலும் மெய்க்கு என்றதனைப் ஒறுத்திருப்பார் என்றவரோ!

    வினைப் பயனுக்கு ஏற்ப வரும் கர்ப்பத்தில் இருத்தல், பிறத்தல், வளர்தல், மாறுதல், தேய்தல், அழிதல் என்னும் ஆறு மாறுபாடுகளும் உடலுக்கே என்று அதனைப் பற்றாது விலகியிருப்பார் ஜீவன்முக்தர் என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 97: செயல்கள் அனைத்தும் கரண தர்மங்கள்!

பார்ப்பதுவும் கேட்பதுவும் பகர்வதுவும் செல்வதுவும்

ஏர்ப்பதுவும் கரண தன்மம் எனப் புகல்வார் என்றவரோ!

    பார்த்தலும் கேட்டலும் பேசுவதும் நடப்பதும் வாங்குவதுமான அனைத்தும் ஞான, கர்ம இந்திரியங்களின் செயல்கள் என்று சொல்லுவார் ஜீவன்முக்தர் என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 98: உணர்ச்சிகள் எல்லாம் மனதின் தர்மங்கள்!

பசி தாகம் உயிர்க்கெனவே பயந்துக்கம் சுகங்காமம்

வசிகோபம் மதிக்கெனவே மகிழ்ந்திருப்பார் என்றவரோ!

பசியும் தாகமும் பிராணனுக்கென்றும், பயம், துக்கம், சுகம், காமம், குற்றமுடைய கோபம் போன்றவை மனதிற்கென்றும், (ஆத்மாவிற்கு இவை ஒன்றுமில்லை என்று) எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருப்பார் ஜீவன் முக்தர் என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 99: தாமரை இலை நீர் போல் வாழ்வர்!

வீடும் தாரமும் உறவும் மேவியென்றும் இருந்தாலும்

நீடுந்தாமரை இலை நீர் நிகராவார் என்றவரோ!

    வீடும் மனைவியும் மற்ற உறவுகளும் சேர்ந்து இருந்தாலும் தாமரை இலையில் தண்ணீர் போல ஒட்டியும் ஒட்டாமல் பற்றற்று வாழ்வர் ஜீவன்முக்தர் என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 100: புளியம்பழமும் ஓடும் போல் வாழ்வர்!

பற்றிடும் காயமும் தானும் பன்னாள் ஒன்றாயினும்

பினுற்ற புளியம் பழமும் ஓடுமொப்பார் என்றவரோ!

    அஞ்ஞான காலத்தில் தானென்று பற்றிடும் உடலும், ஆத்மாவாகிய தானும் பலகாலம் ஒன்றாக சேர்ந்திருந்தாலும், ஞானமடைந்த பின்னர், புளியம்பழமும் அதன் ஓடும் போல பந்தமில்லாமல் வாழ்வர் ஜீவன்முக்தர் என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 101: ஒட்டாமல் வாழ்வர்!

கூறும் உலகியற்கையுடன் கூடினும் மெய்ஞானம் வந்தோர்

சேறும்பிள்ளைப் பூச்சியும்போல் திரிவர்காண் என்றவரோ!

    மெய்ஞ்ஞானம் உள்ள ஜீவன்முக்தர், பெரியோர்கள் கூறுகின்ற உலக வழக்கத்துடனே சேர்ந்து வாழ்ந்தாலும், சேற்றில் திரிகின்ற பிள்ளைப்பூச்சி போல் ஒட்டாமல் வாழ்வர் என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 102: கலங்காமல் வாழ்வர்!

ததியூடு கடைந்த வெண்ணெய் தான் மோரில் கிடப்பது போல்

மதியோடு கூடினும் பின் மயங்கார் காண் என்றவரோ.

    தயிரைக் கடைந்து வந்த வெண்ணெய், மோரின் மேல் கலத்தல் இன்றி இருப்பது போல, (ஆத்மா அநாத்ம விவேகம் செய்து ஆத்மாவைப் பிரித்தறிந்த பின்னர், பிராரப்தம் இருக்கும்வரை) மனதோடுகூடி காரியங்களைச் செய்யினும், மனதைத் தான் என்று மயங்க மாட்டார் ஜீவன் முக்தரென அறிந்து கொள்வாயாக, என்றருளிய பகவான் நீர்தானோ‌!

பாடல் 103: புண்ணியரே கண் வளரீர்!

அருச்சுனன் தன் பொருட்டாக அனைவருக்கும் ஞானம் வரப்

பொருந்திய தேசிக வடிவாம் புண்ணியரே கண் வளரீர்!

    அர்ஜுனனின் நிமித்தமாக அனைத்து முமுக்ஷுக்களுக்கும் மெய்ஞ் ஞானம் உண்டாகும் விதமாக (உபநிஷத் தத்துவத்தை) உபதேசிக்க  குரு வடிவாக வந்த புண்ணியரே துயில்வீராக!

பாடல் 104: பேரொளியே கண்வளரீர்!

ஆயர்குல மாதரளவுலோ ரைப் புணர்ந்தும்

தூய பதி னாறு ஆயிரவருடன் தோய்ந்து இருந்தும்,

இடையர் குலப் பெண்கள் பலரோடு சேர்ந்திருந்தும், தூய்மையான பதினாறாயிரம் ராஜகுல மங்கையரோடு கலந்திருந்தும்,

பாடல் :105

பரம முனிவர் முன்னே பரிச்சித்தைத் தீண்டியன்று

பிரம சரி யம் செலுத்தும் பேரொளியே கண் வளரீர்.

    அந்நாளில் (உயிரற்ற குழந்தையாய் இருந்த) பரீக்ஷித்தை, மேலான முனிவர்கள் முன்னிலையில், “நான் நித்ய பிரம்மச்சாரி” என்று சொல்லித் தொட்டு உயிர்கொடுத்த சைதன்ய ஸ்வரூப ஜோதியே கண்ணுறங்கு!

    பகவான் லீலையாய் பல பெண்களோடு இருந்தாலும் ஆத்ம தத்துவத்தை ஒரு நாளும் மறவாமல் இருந்ததே பிரம்மச்சர்யம். உலக விவகாரங்கள் எப்படி இருந்தாலும் ஆத்மா நிர்விகாரம் என்று மனதில் மாறுபடாமல் இருப்பதே முக்திநிலை என்பதை உணர்த்துவதே தாத்பரியம்.

பாடல் 106: கேட்டோர் முக்தி பெறுவர்!

ஆதி மூ லம் விசயற்(கு) ஆதி மறை யின்பொருளை

ஓதி உணர்த்திய இவ் வுண்மையினைக் – காதலுற்றுக்

கற்றோரும் கேட்டோரும் காசினியில் வாழ்ந்து முக்தி

பெற்றோர்கள் முத்தர் பெறும் பேறு!

    அனைத்திற்கும் முதற் பரம்பொருளான ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா  பழமையான வேதத்தின் பொருளை அர்ஜுனனுக்கு உபதேசித்து உணர்த்திய இந்த மெய்ப் பொருள் உண்மையினை, ஆவலுடன் குரு வாயிலாகக் கற்பவர்களும் கேட்பவர்களும், உலகத்தில் ஜீவன் முக்தர்களாய் வாழ்ந்து, முக்தி பெற்றோர்கள் பெரும் பேரான விதேக கைவல்யம் பெறுவார்கள்.

ஸ்ரீ  திருவேங்கட நாதர் அருளிய  ஸ்ரீ  கீதாசாரத் தாலாட்டு முற்றிற்று

—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: