ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -தனியன் -அவதாரிகை–முதல் பத்து–பாசுரங்கள்- 1-10-–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

அல்லும் பகலும் அனுபவிப்பார் தங்களுக்குச்
சொல்லும் பொருளும் தொகுத்து உரைத்தான் -நல்ல
மணவாள மா முனிவன் மாறன் மறைக்குத்
தணவா நூற்றந்தாதி தான் –

தணவா -மிகவும் பொருந்தின

—————————————————————

மன்னு புகழ் சேர் மணவாள மா முனிவன்
தன்னருளால் உட்பொருள்கள் தம்முடனே -சொன்ன
திருவாய் மொழி நூற்றந்தாதி யாம் தேனை
ஒருவாது அருந்து நெஞ்சே உற்று-

திருவாய் மொழி அம் தேன் -பக்தாம்ருதத்தில் இருந்து வந்த பெண் அமுதம் போல் ஸ்ரேஷ்ட உத்தம திவ்ய பிரபந்தம் அன்றோ

——————————————————————

ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் -திருமாலால் அருளப் பெற்ற சடகோபன் -என்னும்படி
ஆழ்வாருக்கு மயர்வற மதிநலம் அருள

இப்படி நிர்ஹேதுக கடாஷ பூதரான ஆழ்வாரும்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் -என்னும்படி திருவாய்மொழி முதலான திவ்ய  பிரபந்தங்களை
பண்ணார் பாடலாம் படி பாடி அருளி
அநந்தரம்
தம்முடைய நிரவதிக கிருபையாலே ஸ்ரீ மதுரகவி பிரப்ருதி ச ஜனங்களுக்கு
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து -என்னும்படி உபதேசித்து
அவ்வளவும் அன்றிக்கே
ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போல் ஆம்படி செயல் நன்றாகத் திருத்தி பணி கொண்டு அருளி நடத்திப் போந்த
அநந்தரம்
நெடும் காலம் சென்றவாறே
இத் திவ்ய பிரபந்தங்கள் சங்குசிதமாய் போனபடியைத் திரு உள்ளம் பற்றி
இதுக்காவார் ஆர் -என்று பார்த்து ஸ்ரீ மந் நாதமுனிகளை -அருள் பெற்ற நாதமுனி -என்னும்படி
தம்முடைய கடாஷ விசேஷத்தாலே கடாஷித்து அருளி இவருக்கு
திவ்ய ஜ்ஞானத்தையும் யுண்டாக்கி அந்த திவ்ய சஷூர் மூலமாகவே
சரணாகதி புரசரமாக தீர்க்க சரணாகதியான திருவாய்மொழி முதலான திவ்ய பிரபந்தங்களையும் பிரகாசிப்பித்தது அருளினார் –

இப்படி ஆழ்வார் உடைய திவ்ய கடாஷத்துக்கு விஷய பூதரான ஸ்ரீ மன் நாத முனிகளும்
அழித்தலுற்றவன்றிசைகள் ஆக்கினான் -என்னும்படி
இத் தமிழ் மறைகளை இயலிசை யாக்கி நடத்தியும்
அதுக்கு மேலே ஸ்ரீ குருகை காவல் அப்பன் ஸ்ரீ உய்யக் கொண்டார் துடக்கமான ஆஸ்திகரைக் குறித்து
பிரபர்த்தி யாரத சஹிதமாக இத்தை பிரகாசிக்க
அவர்களும் அப்படியே அவர் திருப் பேரனார்க்கு ஸ்ரீ மணக்கால் நம்பி முகேன் பிரசாதிப்பிக்க
பின்பு ஸ்ரீ ஆளவந்தார் அவை வளர்த்தோன் -என்னும்படி அவரும் அத்தை வர்த்திப்பிக்க
அவர் கடாஷ லஷ்ய பூதராய்
மாறன் அடி பணிந்து உய்ந்த எம்பெருமானாரும் -வளர்த்த இதத் தாய் -என்னும்படி வர்த்திப்பித்து கொண்டு போன பின்பு
ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ரயண் சாலிகளான
ஸ்ரீ கோவிந்த ஸ்ரீ கூராதி ஸ்ரீ பட்டார்யா ஸ்ரீ நிகமாந்த முனி பர்யந்தமாய்
உபதேச பரம்பரையா சங்குசித வ்யாக்யானமாக நடந்து சென்ற இது

திருமால் சீர்க்கடலை உள் பொதிந்து
இன்பத் திரு வெள்ளம் மூழ்கின
ஸ்ரீ நம் ஆழ்வார் அவதாரமாய் ஸ்ரீ நம்பிள்ளை என்று பேர் பெற்ற ஸ்ரீ லோகாச்சார்யாராலே
லோகம் எங்கும் வெள்ளம் இடும்படி தீர்த்தங்கள் ஆயிரமான திருவாய்மொழி
விசத வியாக்யான ரூபமாக பிரவகிக்க அது
ஆங்கு அவர் பால் -என்று துடங்கி மேலோர் அளவும் விஸ்த்ருதம் ஆயிற்று-

இப்படி தீர்க்க சரணாகதியான திருவாய்மொழி ஸ்ரீமந் நாத யாமுன ஸ்ரீ யதி வராதிகளால் வர்த்திப்பித்துக் கொண்டு போந்தமை பற்ற
திருவருள் மால் -என்றும்
நாதம் பங்கஜ நேத்ரம் -என்றும்
இத் தனியன்களாலே வந்த இந்த சம்ப்ரதாய க்ரமம் தேவாதிபரளவும் தர்சிக்கப் பட்டது
இப்படி பரம்பரையா நடந்து வந்த திருவாய்மொழியின் ஈட்டின் சம்ப்ரதாய க்ரமம் தான்
அதுக்கு தேசிகரான ஸ்ரீ தேவப் பெருமாள் கைக் கொண்டு அருளும் ஸ்ரீ திருமலை ஆழ்வார் அடியாக இறே
காந்தோ பயந்த்ருயமிக கருணைக சிந்தோ -என்னும் படியான ஸ்ரீ ஜீயர் இடத்திலே
ஸ்ரீ மணவாள மா முனியான வேரி தேங்கி -என்னும்படி தங்கிற்று
அத்தைப் பற்றி இறே
ஆர்யா ஸ்ரீ சைல நாதா ததிக தசட சித் ஸூ கதி பாஷயோ மஹிம் நாயோ கீந்த்ரச் யாவதாரோ சயமிதிஹிகதித்த -என்றும்
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை திருத் தாள் சேர்ந்து அங்கு உரை கொள் தமிழ் மறைக்கும்
மறை வெள்ளத்துக்கும் ஓடமாய் ஆரியர்கள் இட்ட நூலை யுள்ளு உணர்ந்து என்றும்
தமிழ் வேதமாகிய வோத வெள்ளம் கரைகண்ட கோயில் ஸ்ரீ மணவாள மா முனி -என்றும் சொன்னார்கள் –
இப்படி முப்பத்தாறாயிரப் பெருக்கர் ஆகையாலே -மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் -என்னும்படி
தம் விஷயமான திருவாய்மொழியின் அர்த்தத்தை இவர் இடத்தில் கேட்க வேணும் என்று
ஸ்ரீ பெருமாள் தாமும் திரு உள்ளமாய் -ஸ்ருத்வாகூடம் சடரி புதிராத்தத்வம் த்வதுக்தம் -என்னும்படி
ஆழம் கால் பட்டு கேட்டு அருளினார் இறே-
அதன் பின்பு ஸ்ரீ பட்ட நாத முனி வான மகாத்ரியோகி துடக்கமான ஆச்சார்யர்கள் ஆகிற கால்களாலே புறப்பட்டுக்
காடும் கரம்பும் எங்கும் ஏறி பாய்ந்து பலித்தது

இப்படி ஈசேசிதவ்ய விபாகமற
ஸ்வ ஸூ கத்தியாலே வசீகரிக்க வல்ல வைபவமானது –
ஸ்ரீ மணவாள மா முனி தோன்றிய பின் அல்லவோ தமிழ் வேதம் துலங்கியது -என்றும்
ஸ்ரீ மணவாள மா முனி வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி  அல்லவோ தமிழ் ஆரணமே -என்றும்
அந்வய வ்யதிரேகங்கள் இரண்டாலும் சொல்லப் பட்டது –
இவர் தாமும் -எந்தை ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் வந்த உபதேச மார்க்கம் -என்றும்
அத்தாலே ஸ்ரீ மாறன் கலை உணவாகப் பெற்றோம் என்றும்
ஸ்ரீ வகுள பூஷண வாக் அம்ருதாசனம் -என்றும்–தாமும் அருளிச் செய்தார் –

ஏவம் வித மாஹாத்ம்யம் இவர் தம்முடைய அனுபவத்துக்கு போக்கு வீடாகவும்
திருவாய்மொழி யினுடைய துர்க்ரஹமான அர்த்தங்களை எல்லாம் எல்லாரும் அறியும்படி
ஸூ கரஹமாகவும் ஸூ வ்யக்தமாகவும் -சொல்லும் பொருளும் தொகுத்து உரைத்தான் -என்னும்படி சங்கதியாக
இப் பிரபந்தத்திலே அருளிச் செய்கிறார்
ஈட்டில் சங்கதியே யாயிற்று இவர் தாம் இப்படி சங்க்ரஹித்து அருளிச் செய்கிறது –

இப் பிரபந்தங்களுக்கு அநேக நிர்பந்தங்கள் உண்டாய் இறே இருப்பது -அது எங்கனே என்னில் –
1-வெண்பா -என்கிற சந்தஸ் -ஆகையும்
2-இப்படியான இப் பாட்டில் முற்பகுதியில் ஓரோர் திருவாய்மொழியின் தாத்பரியமும் தத் சங்கதிகள் அடைகையும்
3-பாட்டுக்கள் தோறும் ஆழ்வார் திருநாமங்கள் வருகையும்
4-அதில் தாத்பர்யங்களை தத் பர்யந்தமாக பேசுகையும்
5-அந்தாதியாய் நடக்குகையும் ஆகிற
இவ் வைந்து நிர்பந்தம் உண்டாய் இருக்குமாயிற்று-

இது தான் பாலோடு அமுதம் அன்ன ஆயிரமான திருவாய் மொழியின் சாரம் ஆகையாலே
திருவாய் மொழி நூற்றந்தாதி யாம் தேனை -என்னும்படி
சரசமான நிரூபகமாய்
ஆயிரத்தின் சங்க்ரஹம் ஆகையாலே ஓரோர் திருவாய் மொழியின் அர்த்தத்தை
ஓரோர் பாட்டாலே அருளிச் செய்கையாலே நூறு பாட்டாய்
அல்லும் பகலும் அனுபவிப்பார்க்கு நிரதிசய போக்யமாய்
அவ்வளவும் அன்றிக்கே
ஸ்ரீ உடையவர் நூற்றந்தாதியோபாதி ஸ்ரீ ஆழ்வார் நூற்றந்தாதியும் உத்தேச்யம் ஆகையாலே
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே பிரேமம் யுடையார்க்கு அனவரத அனுசந்தேயமுமாய் இருப்பதும் ஆயிற்று –
இதில் சரம பர்வமான ஆழ்வார் திருவடிகளை இறே பிராப்ய பிராபகங்களாக நிஷ்கரிஷிக்கிறது –
அது தான் பராங்குச பாத பக்தராய் –
சடகோபர் தே மலர் தாட்கேய்ந்து இனிய பாதுகமாம் எந்தை ராமானுசன் அளவும் வந்து இருக்கும் இறே
ஸ்ரீ ஆழ்வார் தாம்
ஸ்ரீ திவ்ய மகிஷிகள் யுடையவும்
ஸ்ரீ திவ்ய ஸூரிகள் யுடையவும்
ஸ்ரீ முக்தருடையவும்
ஸ்ரீ முமுஷூக்கள் யுடையவும்–படிகளை யுடையவராய் இருக்கையாலே
ஸ்ரீ உடையவரும் இவர் விஷயத்திலே யாயிற்று ஈடு பட்டு இருப்பது-

——————————————————

அவதாரிகை –

இதில் சர்வ ஸ்மாத் பரன் திருவடிகளில் தொழுது எழப் பாராய் என்று பரத்வ பிரதிபாதகமாய் இருக்கிற
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியான இத் திருவாய் மொழி அடியாகவே
சேதனர்க்கு மோஷ லாபம் என்னும் அர்த்தத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஸ்வரூப ரூப குண விபூதிகளால் பரிபூர்ணனாய்
சர்வ ஸ்மாத் பரனாய்
ஸ்ரீ யபதியாய்
அபௌருஷேயமான ஸூ திருட பிரமாணமான ஸ்ருதிகளால் பிரதி பாதிக்கப் பட்டுள்ள
ஸ்ரீ எம்பெருமானை
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாம்படி
அவன் பிரசாதத்தாலே
சாஷாத் கரித்து
அனுபவித்து
அனுபவித்த படியே ச விபூதிகனான ஸ்ரீ எம்பெருமானைப் பேசி
ஏவம் விதனானவன் திருவடிகளிலே
குணைர் தாஸ்யம் உபாகத -என்னும்படி அடிமை செய்து உஜ்ஜீவி என்று
தம் திரு உள்ளத்தை அனுசாதித்து அருளிச் செய்த
முதல் திருவாய் மொழியின் அர்த்தத்தை அனுவதித்து
உயர்வே பரன்படியாலே -அருளிச் செய்கிறான் என்கை-

—————————————————–

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு—-1

——————————————————-

வியாக்யானம் –

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு –
பரத்வத்தில் பரத்வம் ஆயிற்று இத் திருவாய் மொழியில் பிரதி பாதிக்கப் படுகிறது

ஆமவை யாயவையாய் நின்றவர் -என்றும்
முழுதுண்ட பரபரன் -என்றும்-
அளி பொறை யாய் நின்ற பரனடி மேல்-என்றும்
பரத்வத்தை ஆயிற்று இதில் சொல்கிறது

உயர்வே பரன் படி ஆவது –
தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்றும்
பர பராணாம் பரம -என்றும்
சொல்லுகிற சர்வ ஸ்மாத் பரத்வத்தையாயிற்று
உயர்வற உயர் நலம் -என்று அருளிச் செய்த அத்தை அடி ஒற்றி ஆயிற்று இவர் இப்படி அருளிச் செய்கிறது –

உயர்வே -என்கிற அவதாரணத்தாலே
அல்லாதார் உயர்திகளைப் போலே தாழ்கை அன்றிக்கே
மேல் மேல் என என்றும் உயர்தியாய் இருக்கை-
நேதி நேதி -என்றும்
நோத்யமதோ அதி சேரதே -என்றும்
நலத்தாலும் உயர்ந்து உயர்ந்து அப்பாலன் -என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும்
தேவர்க்கும் தேவாவோ -என்றும் -சொல்லக் கடவது இறே
அன்றிக்கே
உயர்வு -என்று உச்சாரமாய்
ஏ -என்று ஏய்கையாய் பொருந்துதலாய்
அது அல்லாருக்குப் போலே அநனுரூபமாய் இருக்கை அன்றிக்கே
ஏய்ப்பரன் என்று -அனுரூபமாய் பொருந்தி இருக்கிற பரன் என்றுமாம்
இப்படி உயர்தியாய் இருக்கிற பரன் படியாவது பரத்வைகாந்தமான ஸ்வ பாவம்
திவ்யம் ததாமி தே சஷூ பஸ்யமே யோகம் ஐஸ்வர்யம் -என்னும்படி
மயர்வற மதி நலம் அருளி
அவன் பிரசாதத்தாலே காட்டக் கண்டு
இப்படி அவன் காட்டினவைகள் எல்லா வற்றையும்-

உயர் வேத நேர் கொண்டு உரைத்து –
அபௌ ருஷேயமாய் -நித்தியமாய் -நிர்தோஷமாய்
பிரத்யஷாதி பிரமாணங்கள் போலே ஹேத்வந்தரன்களால் அழிக்க ஒண்ணாது ஆகையாலே
சர்வ பிரமாண உத்கர்ஷமான ஸ்ருதி சாயையாலே அருளிச் செய்தது –
அதாவது –
சோஸ்நுதே சர்வான் காமான் -என்று கல்யாண குண யோகத்தை நலமுடையவன் –என்றும்
தாது பிரசாதாம் மகிமானம் -என்கிற கிருபா வைபவத்தை -அருளினான் -என்றும்
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூ ர்யயா-என்கிறவிக்ரஹ விபூதி யோகத்தை
அயர்வறும் அமரர்கள் அதிபதி அவனவன் துயர் அறு சுடரடி -என்றும்
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம்-
ஆனந்த மய
ஆனந்தோ ப்ரஹ்ம –
என்கிற திவ்ய ஆத்ம ஸ்வரூப வை லஷண்யத்தை-உணர் முழு நலம் -என்றும்

பாதோச்ய விசவா பூதானி த்ரிபாத ச்யாம் ருதந்தி -என்று உபய விபூதியும் சொல்லி
பதிம் விச்வச்ய -என்றும் சொன்ன அந்த உபய விபூதி நாதத்வத்தாலே
லீலா விபூதியும் அவனது என்னுமத்தை -இலனது -தொடங்கி தர்சிப்பித்தும்
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம
நேஹானா நாஸ்தி கிஞ்சன –
ச ஆத்மா அங்கான் யன்யாதே வதானி -என்கிற
சர்வ பிரகாரத்வத்தையும்
சர்வ அந்தர்யாமித்வேன சர்வ ஸ்மாத் யர்த்தத்தையும்
நாமவன் –
அவரிவர் –
என்கிற பாட்டுக்களிலே பிரகாசிப்பித்தும்

தேன வினாத்ருணா க்ரமபி நசலதி –
யயா ஈச்வரஸ் சர்வ பூதாநாம் க்ருத்யேசேர்ஜூன திஷ்டதி
பிராமபன் சர்வ பூதா நியந்த்ராரூடா நிமாயயா –
என்கிற பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் தத் ஆதீனம் என்னுமத்தை நின்றனர் இருந்தனர் -என்றும்
யச்யாத்மா சரீரம் யஸ்ய பிருத்வி சரீரம் -என்கிற சர்வ சரீரத்வத்தையும்
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித -என்கிற சர்வ வ்யாப்தியையும்
ஹ்ரீச்சதே லஷ்மீஸ் ச பத்ன்யௌ-என்கிற ஸ்ரீ யபதித்வத்தையும்
திட விசும்பு -என்ற பாட்டாலே காட்டியும்

(அஹந்தா ப்ரஹ்ணச் தஸ்ய -என்று ஸ்வரூப அந்தர்பாவம் உண்டாகையாலே
ஸ்வரூபம் புக்க இடத்தே
ஸ்வரூப நிரூபக பூதையான பிராட்டியும் உண்டாக குறை இல்லை –
இப்பாட்டில் ஸ்ரீ யபதித்தவம் ஸ்பஷ்டமாக இல்லா விடிலும்
அவ ரஷணே தாது -ரக்ஷிக்கும் பொழுது அவள் ஸந்நிதி வேண்டுகையாலே என்னுமா போல்)

தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் தன தேவதானாம் பரமஞ்ச தைவதம் –
நாராயணம் பரம் ப்ரஹ்ம தத்தவன் நாராயண பர
என்ற சர்வ ஸ்மாத் பரத்வத்தை சாதித்து
திர மூர்த்தி சாம்யத்தையும் நிவர்த்தித்த படியை -சுரர் அறி வரு -நிலையாலே ஸூ வ்யக்தமாயும்
வேத பாஹ்யனான சூன்யவாதியை -உளன் எனில் -இத்யாதிகளால் நிரசித்தும்
அணோர் அணியாந-என்கிற வ்யாப்தி சௌகர்யத்தை
பரந்த தண் பரவையிலே பேசியும்
இப்படி வேத மார்க்க அனுசாரியாய் ஆயிற்று முதல் பாட்டு துடங்கி அருளிச் செய்தது

அத்தை பற்றி இறே உயர் வேத நெறி கொண்டு உரைத்து -என்று இவர் அருளிச் செய்தது –
சுடர்மிகு ஸ்ருதி என்று இ றே ஸ்ருதி பிரமாணத்தை அங்கீ கரித்து அருளிற்று
அஹந்தா ப்ரஹ்ணச் தஸ்ய -என்று ஸ்வரூப அந்தர்பாவம் உண்டாகையாலே
ஸ்வரூபம் புக்க இடத்தே
ஸ்வரூப நிரூபக பூதையான பிராட்டியும் உண்டாக குறை இல்லை –

மயர்வேதும் வாராமல்
அவன் ஆழ்வாருக்கு மயர்வற மதி நலம் அருளினான்
இவரும் நமக்கும் மயர்வு -ஞான அனுதயம் – அந்யதா ஞானம் -விபரீத ஞானம் -அனைத்தும் அறும் படி அருளிச் செய்து

மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல் –
பரோபதேச கர்ப்ப ஸ்வ அனுபவ பிரகாசகமான ஸ்ரீ ஸூக்தியாலே
மனுஷ்ய ஜன்மாக்களாய் உள்ளவர்களை வாழ்விக்கும் —
வாழ்விக்கை யாவது –
பகவத் அனுபவ ஏக பரராககி-சந்த மேநம் -என்னும் படி பண்ணுகை
தம்மைத் தொழுது எழப் பண்ணினாப் போலே –

(தாழ்ச்சி எங்கும் தவிர்ந்து திருவடிக்கீழ் வாழ்வதே வாழ்ச்சி)

மாறன் சொல் -வேராகவே விளையும் வீடு–
அதாவது
இப்படி சகல ஜீவ உஜ்ஜீவன தத் பரரான ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தி யடியாகவே
பகவத் ஜ்ஞானம் யுண்டாய் -அது அடியாக மோஷ லாபம் என்றபடி
திவ்ய ஸூக்தி மூலமாக இறே முக்தி பலிக்கும் இறே
பரன் அடி மேல் குருகூர் சடகோபன் சொல் நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே என்றத்தை கடாஷித்து அருளிச் செய்த படி

அன்றிக்கே
ஆழ்வார் திரு நாமம் அடியாகவே மோஷம் சித்திக்கும் என்கிறார் ஆகவுமாம்
தத் உக்தியாலே யாதல்
தத் விஷயமான உக்தியாலே ஆதல் -ஆகலாம் இறே –
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்னக் கடவது இறே –

(குருகூர் நம்பி பா -அவரைப் பற்றிய பா -கண்ணி நுண் சிறுத்தாம்பு போல்
இங்கும் -தத் விஷயமான உக்தி-திருவாய் மொழி நூற்று அந்தாதி சொல்லவே வீடு பேறு கிட்டுமே)

—————————————————————————-

அவதாரிகை –

இதில் தம்முடைய திரு உள்ளம் போலே-அனுபவத்துக்குத் துணையாய்
திருந்தும்படி சம்சாரிகளைக் குறித்து பரோபதேசம் பண்ணுகிற
பாசுரத்தை அனுபவித்து அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
கீழ் ஸ்ரீ எம்பெருமான் உடைய பரத்வத்தை அனுபவித்தவர்-அனுபவ ஜனித ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே
போதயந்த பரஸ்பரம் -பண்ணி அல்லது தரிக்க மாட்டாதே துணைத் தேட்டமாய்த்து-
ஈடானாரை சம்சாரத்தில் காணாமையாலே அவர்களைத் திருத்தி யாகிலும் சேர்த்துக் கொள்வோம் என்று
பரோபதேச பிரவ்ருத்தராய்
பகவத் வ்யதிரிக்த விஷயங்களின் தோஷ பாஹூள்யத்தையும்
பகவத் குண வை லஷண்யத்தையும் உபதேசியா நின்று கொண்டு
அப்ராப்த விஷயங்களை விட்டு-பிராப்த விஷயமான எம்பெருமானை பஜியுங்கோள்-என்கிற
வீடுமின் முற்றத்தின் அர்த்தத்தை-வீடு செய்து இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-என்கை-

——————————————–

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் -நீடு புகழ்
வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி யருள் பத்து——2-

——————————————————

வியாக்யானம்-

வீடு செய்து மற்றெவையும் –
த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச -என்னும்படி பரிக்ரஹங்கள் அடைய பரித்யஜித்து –

வீடு செய்து –
விடுகையைச் செய்து –

மற்றெவையும்
பகவத் வ்யதிரிக்தமாய் இருந்துள்ளவை எல்லாவற்றையும் நினைக்கிறது
பஜன விரோதிகளாய்-அஹங்கார ஹேதுக்களாய்-உள்ளது அடங்கலும் முமுஷூவுக்கு த்யாஜ்யம் இறே
வீடுமின் முற்றவும் வீடு செய்து -என்றத்தைப் பின் சென்ற படி –
மின்னின் நிலையில் மன்னுயிர் ஆக்கைகள் என்னும் இடத்தை இறை யுன்னுமின் நீரே -என்றும்
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -என்றும்
அது செற்று -என்றும்
உள்ள இம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து -என்றும்
இப்படி சதோஷமாய் இருக்குமது எல்லாம் த்யாஜ்யமாய்-அத்தால்
சகுணமாய் இருக்குமது உபாதேயமாய் இறே இருப்பது-அத்தைச் சொல்லுகிறது –

மிக்க புகழ் நாரணன் தாள் –
ஈறில வண் புகழ் நாரணன் -என்றத்தைப் பின் சென்றபடி
சம்ருத்தமான கல்யாண குண சஹிதனாய்-சர்வ ஸ்மாத் பரனான
ஸ்ரீ நாராயணன் யுடைய சரணங்களை –

நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் —
வீடு செய்மின்-இறை யுன்னுமின் நீரே-என்று நாடாகவே ஆஸ்ரயிக்கும் படி இறே இவர் உபதேசிப்பது
அத்தை நினைத்து இறே நாடு -நலத்தால் அடைய -என்கிறது

நலத்தால் அடைகை ஆவது
எல்லையில் அந்நலம் புக்கு -என்றும்
அவன் முற்றில் அடங்கே -என்றும்
ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே -என்றும்
இறை உள்ளில் ஒடுங்கே -என்றும்
ஒடுங்க அவன் கண் -என்றும்
அங்கனா பரிஷ்வங்கம் போலே அபி நிவேசத்தாலே ஆஸ்ரயிக்கும் படியை விதித்த படி -என்கை –
இப்படி லோகத்தில் உண்டான ஜனங்கள் பக்தியாலே பஜிக்கும் படி நன்றாக உபதேசித்து அருளும் –

உபதேசத்துக்கு நன்மையாவது –
நிர் ஹேதுகமாகவும்
உபதேச்ய அர்த்தங்களில் சங்கோசம் இன்றிக்கே உபதேசிக்கையும்-என்றபடி –

திருவாய் மொழி தோறும் திரு நாமப் பாட்டு உண்டாகையாலே
அத்தையும் தத் பலத்தோடே தலைக் கட்டாக அருளிச் செய்கிறார் –
நீடு புகழ் வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப் –
அதாவது
சம்சாரிகள் வைமுக்கியம் பாராமல்-பரோபதேசம் பண்ணுகையாலே
நித்யமுமாய்-நெடுகிப் போருகிற யசஸை யுடையவராய்-தர்ச நீயமான-உதாரமான
ஸ்ரீ திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் -என்னுதல்
அன்றிக்கே
வண்மை-வண் தென் குருகூர் வண் சடகோபன் -என்னும்படி -ஸ்ரீ ஆழ்வாருக்கு விசேஷணம் ஆதல்
இப்படியான தம் ஔதார்யத்தினாலே இந்த மகா பிருத்வியில் உண்டானவர்கள் எல்லாரும்
ஸ்ரீ பகவத் பஜனத்தாலே சத்தை பெற்று வாழும் படி –

பண்புடனே பாடி யருள் பத்து-
பண்பு -ஸ்வபாவம்
தம்முடைய கிருபா ஸ்வபாவத்திலே யாதல்
ஔதார்ய ஸ்வபாவத்திலே ஆதல்
பரப்பறப் பாடி அருளினது பத்துப் பாட்டாயிற்று

சேரத் தடத் தென் குருகூர் சடகோபன் சொல் சீர்த்தொடை ஆயிரத்தோர்த்த இப்பத்து -என்றத்தை பின் சென்றது
பாட்டுக்கு கிரியையும் பத்துக்கு கருத்தும் -என்கையாலே-பத்துப் பாட்டுக்கும் உயிர்பாட்டு பிரதானமாய் இருக்கும்
அந்த நிதானப் பாட்டுக்கு சேஷமாய் இருக்கும் மற்றப் பாட்டு அடங்கலும்
இது இந்த திருவாய்மொழி திவ்ய பிரபந்தத்துக்கு எல்லாம் உள்ளது ஓன்று இறே

வீடுமின் -என்று
த்யாஜ்ய உபாதேய தோஷ குண பரித்யாக சமர்ப்பண க்ரமத்தை
சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து -என்று ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்திலே ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தார் –
இத்தை பக்தி பரமாக யோஜித்து
ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ பாஷ்யம் தலைக் கட்டி அருளின பின்பு பத்தி பரமாகவே யோஜித்து க்ரமத்தைப் பற்ற வாயிற்று
ஆச்சார்யர்கள் எல்லாரும் அப்படியே யோஜிததார்கள்

இவரும் அப்படியே அருளிச் செய்தார்-

——————————————————

அவதாரிகை –

இதில் சௌலப்யத்தை யுபதேசித்த திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
சர்வ ஸ்மாத் பரனாய் அதீந்த்ரியன் ஆனவனை ஷூத்ரரான நாங்கள் கண்டு
பஜிக்கும் படி எங்கனே என்று வெருவுகிற சம்சாரிகளைக் குறித்து
பரனானவன் தானே அதீந்த்ரியமான வடிவைக் கண்ணுக்கு இலக்காக்கிக் கொண்டு
இதர சஜாதீயனாய் சம்சாரிகளுக்கும் பஜீக்கலாம் படி
தன் கிருபையாலே ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி ரூபேண அவதரித்து ஸூலபனான பின்பு பஜிக்கத் தட்டில்லை என்கிற
பத்துடை அடியவரில் -அர்த்தத்தை-பத்துடையோர்க்கு -என்று அருளிச் செய்கிறார் என்கை –

—————————————————–

பத்துடையோர்க்கேன்றும் பரன் எளியனாம் பிறப்பால்
முத்தி தரும் மா நிலத்தீர் -மூண்டவன் பால் -பத்தி செய்யும்
என்று உரைத்த மாறன் தன இன் சொல்லால் போம் நெடுகச்
சென்ற பிறப்பாம் அஞ்சிறை—3-

———————————————————

வியாக்யானம் –

பத்துடையோர்க்கேன்றும் பரன் எளியனாம் பிறப்பால் –

பத்துடையோர்க்கு -பக்திமான்களுக்கு
பத்துடையோர் -நிதி யுடையோர் என்னுமா போலே
ஆசா லேசா மாதரத்தையே போரப் பொலிய எண்ணி இருக்கும் ஈஸ்வர அபிப்ராயத்தாலே அருளிச் செய்கிறார்
பத்துடை அடியவர் -என்றார் இறே –
ஏவம் வித பக்தி உக்தருக்கு

என்றும் –
சர்வ காலத்திலும் –

பரன் –
யாவையும் யாவரும் தானாம் அமையுடை நாரணன் –
மலர் மகள் விரும்பும் நமரும் பெறலடிகள்- என்றும் சொல்லப் படுகிற சர்வ ஸ்மாத் பரனான ஸ்ரீ சர்வேஸ்வரன்

எளியனாம் –
வாயு ஸூநோ (யுத்த காண்டம் )-என்றும்(ராவணனால் தூக்க முடியாத இளைய பெருமாளை கரு முகை மாலை போல் எழுந்து அருளப் பண்ணினார் )
இமௌஸ்ம -இத்யாதிப் படியே -எளியனாம்(அஹம் வேத்மி மஹாத்மாநம் விசுவாமித்திரர் சொல்ல உமக்கு நாங்கள் கிங்கரர்கள் என்றானே பெருமாள் )
பத்துடை அடியவர்க்கு எளியவன் மத்துறு கடை வெண்ணெய் களவினில்
உரவிடை ஆப்புண்டு உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு -எத்திறம்
என்னும்படி கட்டவும் அடிக்கவும் படி எளியனாம் -ஸூலபனாம் –

அது எத்தாலே என்னில் –
பிறப்பால் –
அவதாரத்தாலே
பல பிறப்பாய் ஒளி வரும் என்றத்தை நினைக்கிறது –

முத்தி தரும் –
அவதரித்த இடத்தே-பஷிக்கும்-ரஷஸ் ஸூக்கும் மோஷத்தைக் கொடுக்கும் –
வீடாம் தெளிவரும் நிலைமையது ஒழிவிலன் -என்றத்தைப் பின் சென்ற படி –

மா நிலத்தீர் –
அவன் அவதரிக்கைக்கு ஈடான இந்த மகா பிருதிவியில் உள்ளவர்களே –

மூண்டவன் பால் -பத்தி செய்யும்-
விதி ப்ரேரிதராய் அன்றிக்கே அத்யந்த அபி நிவேச யுக்தராய்
பரத்வ சௌலப்யத்வாதி குண விசிஷ்டனானவன் திருவடிகளிலே பக்தியைப் பண்ணுங்கோள்-

என்று உரைத்த-
என்று அருளிச் செய்த –
இத்தால் -நன்று என நலம் செய்து அவனிடை -என்றத்தை அனுபாஷித்த படி –

பத்தி செய்யும்-என்று உரைத்த-மாறன் தன் இன் சொல்லால் போம் –
அவதார சௌலப்யத்தை முன்னிட்டு ஆஸ்ரயிங்கோள் -என்று ஸ்ரீ ஆழ்வார் ஸ்ராவ்யமாக அருளிச் செய்த
இத் திருவாய் மொழியின் அனுசந்த்தாநத்தாலே நிவ்ருத்தமாம் –

நெடுகச் சென்ற பிறப்பாம் அஞ்சிறை-
அநாதி காலம் தீர்க்கமாய்ப் போந்த ஜன்மம் ஆகிற குரூரமான சிறை –
அறுவர் தம் பிறவி அஞ்சிறை -என்றத்தை அனுவிதாயானம் பண்ணின படி –
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மா மேதி சோர்ஜூந-என்னக் கடவது இறே-

—————————————————

அவதாரிகை –

இதில் அபராத சஹத்வத்தை அறிவியுங்கோள் -என்று
தூத ப்ரேஷணம் பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
அவதார சௌலப்யத்தை யுபதேசித்து
அவனை ஆஸ்ரயியுங்கோள் என்று பிறர்க்கு உபதேசித்த இடத்தில்
அதில் அவர்கள் விமுகராய் இருக்கையாலே அவர்களை விட்டு
குண சாம்யத்தாலே கிருஷ்ணாவதாரத்தோடு போலியான த்ரிவிக்ரம அவதாரத்தை அனுசந்தித்து
தச் சரணங்களை திரிவித கரணங்களாலும் அனுபவிக்க பாரித்த இடத்தில்
அது முற்காலத்திலே யாய் தாம் பிற்பாடர் ஆகையாலே
பாரித்த படியே அனுபவிக்க பெறாமல் கலங்கின தசையில்
மதியினால் குறள் மாணாய உலகு இரந்த கள்வரான
அத்தலைக்கு அறிவிக்க வேணும் என்று
கடகரை அர்த்தித்துச் சொல்லும் க்ரமத்தை
கலந்து பிரிவாற்றாளாய் தலை மகள் -என் அபராதத்தைப் பார்த்து பிரிந்து போனவருக்கு
கிங்கோப மூலம் மனுஜேந்திர புத்திர -என்னும்படி
தம் அபராத சஹத்வத்தையும் ஒரு கால் பார்க்க கடவது அன்றோ என்று சொல்லுங்கோள் என்று
தன் உத்யானத்தில் வர்த்திக்ற பஷிகளை
தன் பிராண ரஷணத்துக்கு உறுப்பாக தூது விடுகிற பேச்சாலே
சொல்லச் சொல்லுகிற –அஞ்சிறைய மட நாரையில் -அர்த்தத்தை
அஞ்சிறைய புட்கள் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் —

அஞ்சிறைய புட்கள் தமை யாழியானுக்கு நீர்
என் செயலைச் சொல்லும் என விரந்து-விஞ்ச
நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும் பத்தி வளம்-————–4-

—————————————————————————————————-

வியாக்யானம்–

அஞ்சிறைய புட்கள் தமை-
விலஷணமான பஷங்களை உடைய பஷிகளை
அஞ்சிறைய மட நாராய் -என்று இ றே அருளிச் செய்தது –

புட்கள் -என்றது –
இனக் குயில்காள் –
மென்னடைய அன்னங்காள் –
நன்னீலமக அன்றில்காள் –
வண் சிறு குறுகே-
ஆழி வரி வண்டே –
இளங்கிளியே
சிறு பூவாய் –
என்று இப்படி அருளிச் செய்தவற்றை —

யாழியானுக்கு நீர் –
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் மடலாழி யம்மானை -என்றத்தை கடாஷித்த படி –
முதல் தூதுக்கு விஷயம் வ்யூஹம் இ றே –

நீர் –
வ்யூஹத்தையும் பேதித்துக் காண வல்ல நீங்கள் –

என் செயலைச் சொல்லும் என விரந்து-
என் செயலை தர்சிப்பியுங்கோள் என்று அர்த்தித்து –

என் செயலாவது –
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் -என்றும்
என்நீர்மை -என்றும்
நன்னீர்மை இனி அவர் கண் தங்காது -என்றும்
மல்கு நீர் கண்ணேர்க்கு -என்றும்
அவராவி துவரா முன் -என்றும் –
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் -என்றும்
தன் ஆற்றாமையை ஆவிஷ்கரித்தமை –
என் பிழையே நினைத்து அருளி
அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு
என்று ஒரு வாய்ச் சொல் -என்று
அவன் அபராத சஹத்வத்தை ஆவிஷ்கரித்ததும் இதில் ஸூசிதம் –
இப்படி ஆற்றாமையை ஆவிஷ்கரித்து –
விஞ்ச நலங்கியதும் –
மிகவும் நலம் குலைந்ததும்

மாறன் இங்கே நாயகனைத் தேடி மலங்கியதும் பத்தி வளம் –
ஆழ்வார் இங்கே
இவ்விடத்திலே
கூப்பீடு கேட்கும் இடமான கடலிலே
அடலாழி அம்மானான நாயகனைத் தேடி –
பாலாழி நீ கிடக்கும் பண்பை யான் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்று மலங்கியதும்
பக்தி அதிசயம் –
மதி எல்லாம் உள் கலங்கின பக்தி பிரபாவம் –

வளம் -பெருமையும் சம்பத்தும்
நலங்குதல் -நலம் கேடு
மலங்குதல் -திண்டாட்டம் –

——————————————————

அவதாரிகை –

இதில் சர்வ சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாக சௌசீல்யத்தை பேசுகிற பாசுரத்தை அனுவதித்து -அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
அஞ்சிறைய மட நாரையில் தூத பரேஷண வ்யாஜத்தாலே தம் ஆற்றாமையை அவனுக்கு அறிவித்த
அநந்தரம்
அவன் வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு
அவன் பெருமையையும் தம் சிறுமையையும் நினைத்து ஸூரி போக்யனானவனை அயோக்யனான நான் கிட்டி
தூஷிப்பதில் அகன்று போகை நன்று என்று தாம் அகலப் புக
ஆழ்வீர்-
உம்முடைய பொல்லாமையைப் பாராதே
நம்முடைய செல்லாமையைப் பாரீர் -என்று
ஆக்ரம்யா லோகன் -என்று ஸ்ரீ த்ரிவிக்ரம அபதான சித்தமான தன் சௌசீல்யத்தையும்
நவநீத சௌர்ய வ்ருத்தாந்த சித்தமான தன் செல்லாமையையும் காட்டி-தம்மை அவன் சேர்த்துக் கொள்ள
அத்தாலே தாம் அகலுகை தவிர்ந்து பொருந்தின படியை அருளிச் செய்கிற
வள வேழு உலகின் அர்த்தத்தை-வளம் மிக்க -இத்யாதியால் அருளிச் செய்கிறார் -என்கை-

————————————————————

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளமுற்று அங்கூடுருவ ஓர்ந்து -தளர்வுற்று
நீங்க நினை மாறனை மால் நீடு இலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான் பரிந்து—-5-

ஊடுருவ  ஓர்ந்து -தீர்க்கமாக ஆராய்ந்து

——————————————-

வியாக்யானம்–

வளம் மிக்க மால் பெருமை -மன்னுயிரின் தண்மை –
அதாவது –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரி நிர்வாகத்தால் வந்த ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய பெருமையையும்
அசித் சம்ஸ்ருஷ்டம் ஆகையாலே ஹேய சம்சர்கார்ஹ்யமாய் அணு பரிணாமமாய் இருக்கிற ஆத்மாவின் உடைய
தண்மையையும்-என்கை
வள வேழ் உலகின் முதலாய வானோர் இறையை கள வேழ் வெண்ணெய் தொடு யுண்ட கள்வா என்பன்
அருவினையேன் -என்று அருளிச் செய்த படியை அடி ஒற்றின படி –

உளமுற்று –
ஸ்ரீ எம்பெருமான் யுடையவும்-தம்முடையவும் உத்கர்ஷ அபகர்ஷங்கள் திரு உள்ளத்திலே பட்டு

அங்கூடுருவ ஓர்ந்து –
இப்படி திரு உள்ளத்தில் உற்ற தசையில் நிரூபிக்கும் இடத்து முடிய விசாரித்து
அருவினையேன் -என்று துடங்கி
அடியேன் சிறிய ஞானத்தன் -என்னும் அளவும் ஆராய்ந்து இப்படி தீர்க்க தர்சியாய் தர்சித்து –

தளர்வுற்று –
மிகவும் அவசன்னராய்-ந கல்வத்யைவ யதி ப்ரீத்தி -இத்யாதிப் படியே

(பிராட்டி பெருமாள் உத்கர்ஷத்தையே நினைத்து தன்னை முடித்துக் கொள்ளாதால் போலேயும்
இளைய பெருமாள் தன் அவதாரம் முடித்துக் கொண்டு மீண்டால் போலேயும்
உத்தர இராமாயண ஸ்லோகம்)

நீங்க நினை மாறனை –
அகன்று அத்தலைக்கு அதிசயத்தை பண்ண எண்ணுகிற ஸ்ரீ ஆழ்வாரை

நீங்குகை
ஸ்வ விநாசம் ஆனாலும் ஸ்ரீ ஸ்வாமிக்கு அதிசயம் -ஆவஹராய் விஸ்லேஷிக்க ஸ்மரிக்கிறவரை

மால் –
தன் செல்லாமையைக் காட்டி ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –
நெடுமாலே – மாலே மாயப் பெருமானே -என்றத்தை கடாஷித்து அருளிச் செய்தபடி –
ஏவம் வித வ்யாமுக்தன் ஆனவன் –

நீடு இலகு சீலத்தால் –
நெடுகிப் போரும்தான-நித்ய விசதக சீல குணத்தாலே
அதாவது திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -என்றும் –
உண்டாய் உலகு ஏழும் முன்னமே –என்று துடங்கி -நெய்யூண் மருந்தோ மாயோனே -என்றும்
இப்படி சௌசீல்யாதிகளாலே வசீகரித்த படி -என்கை-

பரிந்து பாங்குடனே சேர்த்தான் –
பரிந்து பாங்குடனே சேர்க்கையாவது-
இவனை ஸ்நிக்தநோபாதியாக ஸ்நேஹித்து மங்க விடாமல்-அலாப்ய லாபமாக ஹர்ஷதுடனே சங்கதாராக பண்ணினான்
ஸ்ரீ திருவாய் பாடியிலே வெண்ணெயோபாதி இவரையும் சேர விரும்பினான் –
வைகலும் வெண்ணெய் கை கலந்து யுண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே -என்னக் கடவது இறே-

————————————————

அவதாரிகை –

இதில் ஆஸ்ரயணத்தில் அருமை இல்லாமையை அருளிச் செய்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
சீலவானே யாகிலும்-ஸ்ரீ யபதியான பூர்ணனானவன் பெருமைக்கு ஈடாக
ஷூத்ரனாய்-ஷூத்ர உபகரணான இவனால் பச்சை இட்டு ஆஸ்ரயிக்கப் போகுமோ –
ஸ்ரீ யபதித்வம் -இத்தலையில் குற்றம் பாராமல் அங்கீ கரிக்கும் நீர்மைக்கு உடலாகையாலும்
பரிபூர்ணத்வம் -இத்தலையில் குற்றம் பாராமல் பெற்றது கொண்டு சந்தோஷிக்கைக்கு உடலாகையாலும்
ஆஸ்ரியிப்பார்க்கு பத்ர புஷ்பாதிகளால் ஸ்வ ஆராதன் என்கிற
பரிவதில் ஈசனனில் அர்த்தத்தை -பரிவதில் ஈசன் படியை -இத்யாதியால் அருளிச் செய்கிறார் –

———————————————–

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கு என்று -உரிமையுடன்
ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு——6-

————————————————

வியாக்யானம்–

பரிவதில் ஈசன் படியைப் –
ஹேய பிரத்ய நீக கல்யாணை கதானான ஸ்ரீ சர்வேஸ்வரன் யுடைய ஸ்வ ஆராதன ஸ்வ பாவத்தை –

பண்புடனே பேசி –
பரிபூர்ணன் ஆகையாலே இட்டது கொண்டு த்ருப்தனாம் ஸ்வ பாவத்துடனே அருளிச் செய்து –
பரிவதில் ஈசனை -என்று துடங்கி -புரிவதும் புகை பூவே – என்றத்தை பின் சென்ற படி –
அன்றிக்கே
பண்புடனே பேசி இன்று -அவனுடைய ஸ்வ ஆராததையைச் சொல்லி அல்லது
நிற்க மாட்டாத தன் ஸ்வ பாவத்தாலே சொல்லி -என்றாகவுமாம்-

அரியனலன் ஆராதனைக்கு என்று –
இப்படி பத்ர புஷ்பாதிகளாலே -ஸ்வ ஆராதனாகையாலே ஆஸ்ரயிக்கும் இடத்தில்
சபர்யா பூஜிதஸ் சமயக் -என்னும்படி ஸபர்யைக்கு அருமை இல்லாதவன் என்றபடி –

உரிமையுடன் ஓதி யருள் மாறன் –
அந்தரங்கமான சிநேகத்தோடு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்
அதாவது –
எது ஏது என் பணி என்னாது அதுவே யாட் செய்யுமீடே -என்றும்
உள் கலந்தோர்க்கு ஓர் அமுதே -என்றும்
அமுதிலும் ஆற்ற இனியன் -என்றும்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே-என்றும்
அவனைத் தொழுதால் -என்றும்
தருமவரும் பயனைய திரு மகளார் தனிக் கேள்வன் -என்றும்
ஆஸ்ரயணாதி பல பர்யந்தமாக அருளிச் செய்தவை -என்கை –

ஒழிவித்தான் இவ்வுலகில் பேதையர்கள் தங்கள் பிறப்பு –
இப்படி உபதேசிக்கையாலே-இந்த லோகத்தில் அறிவிலிகள் ஆனவர்கள்-பிறவியை அகற்றுவித்தார் –
இஜ் ஜகத்தில் அஞ்ஞர் உடைய ஜன்ம சம்பந்தத்தை ஸுவ ஸூக்தியாலே நிவர்த்திப்பித்தார் –
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே – என்றத்தை பின் சென்ற படி –

————————————————————

அவதாரிகை –

இதில் ஆஸ்ரயண ரச்யதையை பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஆராதனத்தில் அல்ப சந்துஷ்டதையாலே
அவனுக்கு செய்ய வேண்டியது பணி இல்லையே யாகிலும்
உள்ளது தேவையாய் இருக்கும் அன்று
ஆஸ்ரயணீயம் கூடாதே என்ன
ஸ்மர்த்தவ்ய விஷய சாரச்யத்தாலே
பல தசையில் போலே ஆஸ்ரயணம் தசையே பிடித்தும்
ரசிக்கும் விஷயம் ஆகையாலே
அபிமத விஷயத்தில் பரிமாற்றம் போலே
ஆஸ்ரயணம் அத்யந்தம் சரசமாய் இருக்கும் என்கிற
பிறவித் துயரில் -அர்த்தத்தை
பிறவி யற்று -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

பிறவி யற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும்
திறம் அளிக்கும் சீலத் திருமால் -அறவினியன்
பற்றும் அவர்க்கு என்று பகர் மாறன் பாதமே
உற்ற துணை என்று உள்ளமே ஓடு ————7-

வியாக்யானம்–

பிறவி யற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும் திறம் அளிக்கும் சீலத் திருமால் –
ஜன்ம சம்பந்தம் அற்று
நிரதிசய போக்யமான பரமாகாசத்திலே
நிரதிசய ஆனந்தத்தை அனுபவிக்கும் படி
அனுஹ்ரகிக்கும் ஸ்வ பாவனான
ஸ்ரீ யபதி யானவன் –
தருமவரும் பயனாய திரு மகளார் தனிக் கேள்வன் -என்றத்தை அனுபாஷித்து அருளின படி –

ஏவம் விதனானவன்
அறவினியன் பற்றும் அவர்க்கு என்று-
மிகவும் சரசனாய் இருக்கும் ஆஸ்ரயிக்குமவர்களுக்கு என்று-
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன்-
தூய வமுதைப் பருகி பருகி என் மாயப் பிறவி மயர்வறுத்தேனே –
என்னுமத்தை அடி ஒற்றி அருளிச் செய்த படி –

மற்றும் அவனுடைய போக்யதைக்கு அனுகுணமாகும் படி
ஆழிப் படை அந்தணனை -என்றும்
ஒண் சுடர்க் கற்றையை என்றும்
விடுவேனோ என் விளக்கை -என்றும்
பின்னும் விராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன் –என்றும்
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதல் -என்றும்
அருளிச் செய்தவையும் தத் சேஷங்களாகக் கடவது –

அறவினியன் பற்றுமவர்க்கு என்று பகர் மாறன் பாதமே உற்ற துணை என்று உள்ளமே ஓடு –
இப்படி ஆஸ்ரயிப்பார்க்கு-
குணைர் விருருசே ராம-என்னும்படி
நிரதிசய போக்கினாய் இருக்கும் என்று
இத் திருவாய் மொழி முகேன அருளிச் செய்யும் ஆழ்வார் திருவடிகளே
பிராப்தமான துணை என்று
நெஞ்சே
சீக்ர கதியாகச் சென்று பற்று –
முந்துற்ற நெஞ்சாய்
அங்கே  பற்றும் படி ஓடு-

—————————

அவதாரிகை –

இதில் ருஜூக்களோடு குடிலரோடு வாசி அற ஆர்ஜவ குண யுக்தன் என்று அனுசந்தித்த
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் – எங்கனே என்னில் –
ஆஸ்ரயணம் அத்யந்த சரசமாய் இருந்ததே யாகிலும்
ஆஸ்ரயிக்கிறவர்கள் கரணத் த்ரயத்தாலும் செவ்வைக் கேடரான சம்சாரிகள் ஆகையாலே
பரிமாற்றத்தில் அருமை தட்டி இராதோ என்னில்
நீர் ஏறா மேடுகளிலே விரகாலே நீர் ஏற்றுவாரைப் போலே
இவர்களுடைய செவ்வைக் கேடே தனக்கு செவ்வையாகும் படி இன்று ஆஸ்ரயிக்கிற இவர்கள் அளவிலும் செவ்வியனாய்
பரிமாறும் ஆர்ஜவ குண யுக்தன் என்கிற -ஓடும் புள்ளில் அர்த்தத்தை
ஓடு மனம் செய்கை-இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-

—————————————————–

ஓடு மனம் செய்கை உரை யொன்றி நில்லாதாருடனே
கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை –நாடறிய
ஒர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை—-8-

———————————————-

வியாக்யானம்–

ஓடு மனம் செய்கை உரை யொன்றி நில்லாதாருடனே கூடி –
சஞ்சலமாய்-நின்றவா நில்லா நெஞ்சும் – அதன் வழியே பின் செல்லும் வாக் காயங்களும்
ஒருமைப் பட்டு இருக்கை அன்றிக்கே செவ்வை கெட நடக்கும் குடிலரோடு கூடிக் கலந்து –

நெடுமால் அடிமை கொள்ளும் நிலை —
சர்வ ஸ்மாத் பரனானவன் அடிமை கொள்ளும் ஆர்ஜவ ஸ்வபாவத்தை –

நாடறிய ஒர்ந்து –
நாட்டார் அறியும் படி ஆராய்ந்து –

அவன் -தன் செம்மை-
தெனதே தம நுவ்ரதா- ராமோ ராஜ்ஜியம் உபாசித்வா -என்னும் படியான அவனுடைய ஆர்ஜவத்தை

உரை செய்த –
அருளிச் செய்த –
அதாவது
ஓடும் புள்ளேறிச் சூடும் தண் துழாய் நீடு நின்றவை யாடும் அம்மானே -என்று
நித்ய சூரிகள் திறத்தில் பரிமாறும் ஆர்ஜவத்தையும்
அம்மனாய் -என்றும்
கண்ணாவான்-என்றும்
நீர் புரை வண்ணன் -என்னும் அளவும்
நித்ய சம்சாரிகளோடே செவ்வையனாய் பரிமாறும் ஆர்ஜவத்தையும்-அருளிச் செய்தார் -என்கை

இப்படி உரை செய்த -மாறன் என –
ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் என்று அனுசந்திக்க –

ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை –
ஸ்வரூப அனுரூபமான சம்பத்தாய் உள்ளவை எல்லாம் பொருந்தி சென்று ஒன்றி நின்ற திரு -என்னும்படி நிலை நிற்கும் –

————————————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ எம்பெருமான் உடைய சாத்ம்ய போக பிரதவத்தை அருளிச் செய்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில்
இத்தலையில் செவ்வைக் கேடு தனக்கு செவ்வையாம்படி இவர்களுக்கு பாங்காக தன்னை அமைத்து பரிமாறும்
ஆர்ஜவ குண யுக்தனே ஆகிலும்-தன் நினைவு அறிந்து செவ்வியராய் பரிமாறும்
திருவடி திரு வநந்த ஆழ்வான் துடக்கமான நித்ய ஆஸ்திரரோடு உகப்போடே கலக்குமா போலே
இன்று ஆஸ்ரயிக்கும் அவர்களோடு உகப்போடே கலந்து பரிமாறக் கூடுமோ என்னில்
அவர்கள் எல்லாரோடும் ஓரோர் பிரகாரத்தில் பரிமாறுகிறவன்-அவர்கள் எல்லாரோடும் பரிமாறுகிற பரிமாற்றம்
எல்லாவற்றையும் இவன் ஒருவனுடனே சர்வ இந்த்ரியங்களாலும் சர்வ காத்ரங்களாலும் பொறுக்கப் பொறுக்க பரிமாறும் –
என்கிற-இவையும் அவை யில் அர்த்தத்தை இவை அறிந்தோர் தம் அளவில் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

———————————————————-

இவை யறிந்தோர் தம்மளவில் ஈசன் உவந்து ஆற்ற
அவயவங்கள் தோறும் அணையும் -சுவை யதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொற்றாள் நம் சென்னி பொரும் –9-

ஆற்ற -சாத்மிக்க சாத்மிக்க

——————————————————-

வியாக்யானம்–

இவை யறிந்தோர் தம்மளவில் –
இந்த ஆர்ஜவ குணத்தை அறிந்தவர்கள் விஷயத்தில்
ஈசன் உவந்து ஆற்ற அவயவங்கள் தோறும் அணையும் -சுவையதனைப் பெற்று –
ஸ்ரீ சர்வேஸ்வரன் ஹ்ருஷ்டனாய் சாத்மிக்க சாத்மிக்க சர்வ அவயவங்களிலும்
சம்ஸ்லேஷிக்கும் ரசம் தன்னைப் பெற்று-பொறுக்க பொறுக்க உறுப்பு தோறும்
செறிப்பு தீரக் கலக்குமதான பெறாப் பேற்றைப் பெற்று –
அதாவது
சரா மோவா நரேந்தரஷ்ய பிரசாதம் அபி காங்ஷதே-(ச ராமோவா நரேந்தரஷ்ய பிரசாதம் அபி காங்ஷதே-சுக்ரீவனுடைய பிரசாதம் கிட்டுமோ என்று இருந்த பெருமாள் போல் )என்னும்படி
என்னுடைச் சூழல் உளானே-
அருகல் இலானே-
ஒழிவிலன் என்னோடு உடனே –
கண்ணன் என் ஒக்கலையானே-
மாயன் என் நெஞ்சின் உளானே
என்னுடைத் தோள் இணையானே
என்னுடை நாவின் உளானே
கமலக் கண்ணன் என் கண்ணின் உளானே
என் நெற்றி உளானே
என் உச்சி உளானே –
என்று தலைக்கு மேலே ஏறின படியை அடி ஒற்றின படி –

அணையும் சுவை யாவது –
அருகலில் அறுசுவை-
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் துடக்கமானாரோட்டை கலவியில் ரசங்கள் எல்லாம் ‘
ஏக விஷயத்தில் உண்டாம்படி கலந்து -என்றத்தை நினைக்கிறது-

ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச –
இப்படிப் பெறாப் பேறு பெற்று-அத்தால் உண்டான அபி நிவேசத்தாலே
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை கேவலம் வாக்காலே வசிக்க(கேவலம் நாவினால் நவிற்று இன்பம் எய்யலாமே )

மால் பொற்றாள் நம் சென்னி பொரும் –
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் யுடைய ஸ்ப்ருஹணீயமான சரணங்கள்
நம்முடைய சென்னித் திடரிலே சேரும் –

பொரு -என்று ஒப்பாய்-அத்தால் -சேரும் -என்றபடி
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொரும் -என்றத்தை அருளிச் செய்த படி –

————————————————————

அவதாரிகை –

சர்வாங்க சம்ச்லேஷம் பண்ணுகைக்கு ஹேத்வாந்தரம் காணாமல் ‘
நிர்ஹேதுகமாகாதே -என்று நிர்வ்ருத்தர் ஆகிற படியை பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
எங்கனே என்னில்

இப்படி உகப்புடனே பண்ணும் சர்வாங்க சம்ச்லேஷம் ஆகிற இந்தப் பேற்றுக்குத் தகுதியாக
இவனாலே நேர்ந்து செய்யத் தக்கது உண்டோ -என்னில்

புத்தியாதி சகல பதார்த்தங்களுக்கும் நியாமகன் ஆகையாலே
அத்வேஷம் துடங்கி
பரிகணிநை நடுவாக
பரமபக்தி பர்யந்தமாக தானே விளைவித்து
வந்து
நிர்ஹேதுகமாக அங்கீகரிக்கும் ஸ்வபாவன் என்று அவனுடைய நிர்ஹேதுக உபகாரத்வத்தை அனுசந்தித்து
நிர்வ்ருத்தராகிற –பொருமா நீள் படையில் அர்த்தத்தை பெருமாழி சங்குடையோன் -என்று துடங்கி அருளிச் செய்கிறார்-

———————————————————-

பெருமாழி சங்குடையோன் பூதலத்தே வந்து
தருமாறு ஓர் ஏது அறத் தன்னை -திறமாகப்
பார்த்துரை செய் மாறன் பதம் பணிக வென் சென்னி
வாழ்த்திடுக வென்னுடைய வாய் —10-திரமாக -ஸ்திரமாக என்றபடி -எதுகைக்கு ஒக்கும்

————————————————-

வியாக்யானம்–

பெருமாழி சங்குடையோன் பூதலத்தே வந்து –
சத்ருக்கள் மேலே பொரா நிற்கிற ஸ்ரீ திரு வாழி ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் ஆகிற
திவ்ய ஆயுதங்களை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரன்
எதிர் அம்பு கோக்கிற இந்த பூதலத்திலே சஷூர் விஷயமாம் படி வந்து
பொரு மா நீள் படை என்று துடங்கி கரு மாணிக்கம் என் கண் உளதாகும் -என்றத்தை
கடாஷித்து அருளிச் செய்தபடி –

தருமாறு ஓர் ஏது அறத் தன்னை –
நிர்ஹேதுகமாக தன்னை உபகரிக்கிற உபாயத்தை –

ஓர் ஏது அறத் தன்னை -தருமாறு-
ஒரு ஹேது இன்றிக்கே நிர்ஹேதுகமாக பல ஸ்வரூபனான தன்னையே தருகிற பிரகாரத்தை –

திறமாகப் பார்த்துரை செய் மாறன் –
அதாவது
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் என் கண்ணுள்ளே வரும் -என்கிற
பக்திக்கும் பரிகணைனைக்கும் ஒக்க முகம் காட்டும் படிக்கு மேலே
ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு கண்டாயே -என்று
குகேனே சஹித சங்கத சீதயா லஷ்மணஸ்ய என்று கரை சேர்த்த நிர்ஹேதுக கிருபையை
அல்ப அஞ்ஞராலே அவி சால்யமாம் படி ஸ்திரமாக தர்சித்து
அந்த பிரகாரத்தை அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் உடைய

(குகன் உடன் கூடிய பின்பு இவர்களுடன் இருப்பும் இருப்பானதே -முன்பு தன்னம் தனியாக தவித்து இருந்தாரே பெருமாள்-இதே போல் ஹனுமதா சங்கதா -பெறாப் பேறாக தான் நினைக்கும் படி-ஸ்வார்த்தமாகவே கொள்ளுபவன் )

(எண்ணவும் வேண்டாம் வேறே ஒன்றை எண்ணி 26 வாயாலே சொன்னாலும்-ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு கண்டாயே-இதுவும் கூடவும் இல்லாமல் -தன்னையே நினைப்பவனாகக் கொள்ளும் ஸ்வ பாவன் அன்றோ)

பதம் பணிக வென் சென்னி வாழ்த்திடுக வென்னுடைய வாய் –
இப்படி நிர்ஹேதுக வைபவத்திலே நிர்வ்ருத்தர் ஆகிறபடியை வெளியிட்ட ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை
மூர்த்த்னா ப்ரண மாமி -என்னும்படி என் சிரஸ் சாந்து பஜித்திடுக –
திருக் குருகைப் பெருமாள் தன் திருத் தாள்கள் வாழியே-என்று
என் வாக்கானது மங்களா சாசனம் பண்ணி விடுக-

இப்படி உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே
தாம் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே ஆழம் கால் பட்ட படியை அருளிச் செய்து அருளினார் –

—————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: