ஸ்ரீ பெரிய மொழி -1-7–அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய்– ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

அவதாரிகை

கீழ்த் திருமொழியில், தாம் செய்த பலபல பாவங்களை யெடுத்துரைத்து, அந்தோ! இப்படி கணக்கில்லாத பாவங்களைச் செய்துவிட்டேனே!; யமலோகத்திலே யமபடர்களால் நேரக்கூடிய கொடுமைகளை நினைக் குங்கால் அளவற்ற அச்சமும் நடுக்கமும் உண்டாகின்றதே!’ என்று பலவாறாகச் சொல்லித் தம்முடைய அநுதாபந் தோற்றக் கதறினார்.

அப்படி கதறின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! நம்முடைய பக்தனான ப்ரஹ்லாதன் உமக்குத் தெரியுமே ; யமகிங்கரர்களாலும் செய்யமுடியாத துன்பங்களை அவனுக்கு அவனுடைய தகப்பனான ஹிரண்யகசிபு என்பவன் செய்வித்தானென்பதும் உமக்குத் தெரியுமே. அப்படி பல்வகைத் துன்பங்களுக்கு ஆளான அந்த ப்ரஹ்லாதனை நாம் ரக்ஷிக்க வேண்டி ஆச்சரியமான ஒரு அவதாரம் செய்ததும் உமக்குத் தெரியுமே.

அந்த நரஸிம்ஹாவதாரம் பிற்பட்டவர்களுக்குப் பயன் படாமற் போயிற்றேயென்று வயிறெரியவும் வேண்டாதபடி நாம் சிங்கவேள் குன்றமென்னும் விலக்ஷணமான திவ்ய தேசத்திலே நித்யஸந்நிதியும் பண்ணி வைத்திருக்கிறோமே. ஆச்ரிதர்களின் விஷயத்தில் நாம் இவ்வளவு பரிந்து காரியஞ் செய்வோம் என்பது உமக்குத் தெரியாதோ ? ஏன் நீர் வருந்துகின்றீர்?” என்றருளிச் செய்ய,

ஆழ்வாரும் பரமஸந்தோஷமடைந்து அந்த நரஸிம்ஹாவதாரத்தையும் அந்த திவ்யதேசத்தையும் அநுபவித்து இனியராகிறார் இத்திரு மொழியில்.

கீழ்த்திருமொழியில் ஒன்பதாம் பாட்டிலே ‘தேனுடைக் கமலத்திரு வினுக்கரசே!” என்று பெரிய பிராட்டியாரை முன்னிட்டுச் சரணாகதி செய்தது போலவே இத்திருமொழியிலும் ஒன்பதாம் பாட்டில் “அல்லிமாதர்புல்க நின்ற ஆயிரந்தோளன்” என்று லக்ஷ்மீஸம்பந்தத்தை முன்னிட்டே அநுபவிக்கிறார்.

இத்திருமொழியில் எட்டாம்பாட்டுவரையில் ஒவ்வொருபாட்டிலும் முன் னடிகளில் நரஸிம்ஹாவதார வ்ருத்தாந்தமும் பின்னடிகளில் சிங்கவேள் குன்றத்தின் நிலைமையும் வருணிக்கப்படுகின்றன.

இத்திருப்பதியின் திருநாமம் அஹோ பிலம் என வழங்கப்படும். இது வடநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று. ‘சிங்க வேள் குன்றம்’ என்றும் ‘சிங்கவேழ்குன்றம்’ என்றும் இதனை வழங்குவதுண்டு. சிங்கம் – நரஸிம்ஹ ஸ்வரூபியாய், வேள் – யாவராலும் விரும்பப்படுகின்ற கட்டழகுடையவரான பெருமான் எழுந்தருளிய, குன்றம் – திருமலை எனவும்; நரஸிம்ஹமூர்த்தி யெழுந்தருளியிருக்கின்ற ஏழு குன்றங்களையுடைய தலம் எனவும் பொருள் படுமாறு காண்க.

இத்தலம், சிங்கம் புலி முதலிய பயங்கரமான விலங்குகள் ஸஞ்சரிக்கப்பெற்ற, கல்லும் புதரும் முள்ளும் முரடுமான கொடிய அரணியமாக இப்போது இருப்பது போலவே ஆழ்வார்காலத்திலும் இருந்த தென்பது இத்திருமொழியில் வர்ணனைகளால் நன்கு விளங்கும்.

இப்படிப்பட்ட பயங்கரமான துஷ்ட மிருகங்களும் கொடிய வேடர் முத லானவர்களும் அத்தலத்தின்கண் இருப்பதும்- மங்களாசாஸநபரர்களான நம் ஆழ்வார்களுக்கு ஒருவகையான ஆநந்தத்திற்கு ஹேதுவாகின்றது போலும் ;

எல்லாரும் எளிதாக வந்து அணுகக்கூடிய தேசமாயிருந்தால் ஆஸுரப்ரக்ருதிகளும் பலர் வந்து எம்பெருமானுக்கு ஏதாவது தீங்கு இழைக்கக்கூடுமேயென்கிற அச்சத்திற்கு அவகாசமில்லாமல் ‘தெய்வம ல்லால் செல்ல வொண்ணா” என்னும்படி கஹநமாயிருப்பது மங்களாசாஸநருசியுடையார்க்கு மகிழ்ச்சியேயிறே.

—————–

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்காவாகம் வள்ளு கிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைம் கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்
செங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே–1-7-1-

பதவுரை

அங்கு

(‘நீ சொல்லுகிற விஷ்ணு இங்கில்லை’ என்று இரணியன் சபதஞ் செய்த) அவ்விடத்திலே
அம் கண் ஞாலம் அஞ்ச ஓர் ஆள் அரி ஆய்

அழகியதாய் விசாலமான பூமியிலுள்ளாரெல்லாரும் பயப்படும்படியான ஒப்பற்ற நரசிங்கமூர்த்தியாய் (எம்பெருமான் தோன்றினதைக் கண்டு)
அவுணன் பொங்க

இரணியன் கிளர்ந்த வளவிலே,
ஆகம்

அவனது உடலை
வள் உகிரால்

கூர்மையான நகங்களாலே
போழ்ந்த

இருபிளவாகப் பிளந்த
புனிதன் இடம்

பரம பரிசுத்தனான எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடமாவது;-
செம் கண் ஆளி

(சீற்றத்தால்) சிவந்த கண்களையுடைய சிங்கங்களானவை
பை கண் ஆனை கொம்பு கொண்டு

பசுமையான கண்களையுடைய யானைகளின் தந்தங்களைக் கொணர்ந்து
பத்திமையால்

பக்தியினாலே
அடி கீழ்

(பகவானுடைய) திருவடிகளிலே
இட்டு

ஸமர்ப்பித்து
இறைஞ்சும்

ஆச்ரயிக்கப்பெற்ற
சிங்கவேள் குன்றம்

அஹோபிலமென்கிற சிங்க வேள்குன்றமாம்.

கீழ் இரண்டாந் திருமொழியின் நான்காம் பாட்டின் உரையில் நரஸிம்ஹாவதார ப்ரமேயங்களை மிக்க விரிவாக வரைந்தோ மாதலால் அங்கே கண்டு கொள்வது.

பக்தசிரோமணியான ப்ரஹ்லாதனுக்கு நேர்ந்த துன்பங்களை ஸஹிக்கமுடியாமையினாலே எம்பெருமான் அளவற்ற சீற்றங்கொண்டு பயங்கரமான வொரு திருவுருவத்தை ஏறிட்டுக்கொண்டான்; அந்தச் சீற்றம் ப்ரஹ்லாத விரோதியான இரணியனளவில் மாத்திரமே உண்டானாலும், அளவு மீறியிருந்ததனால் ‘உலகங்கட்கெல்லாம் இப்போதே உபஸம்ஹாரம் விளைந்திடுமோ!’ என்று அனைவரும் அஞ்சி நடுங்கும்படி யிருந்தது பற்றி அங்கண்ஞாலமஞ்ச அங்கோராளரியாய் என்றார்.

இவ்விடத்திலே வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்க:- ”நரஸிம்ஹமாயிற்றுத்தான் ஜகத்ரக்ஷணத்துக்காகவிறே; அங்கனேயிருக்கச் செய்தேயும் விளைவதறியாமையாலே ஜகத்தாக நடுங்கிற்றாயிற்று. இது எவ்வளவாயத் தலைக்கட்டுகிறதோ! என்றிருந்ததாயிற்று.”

இனி, அங்கண்ஞால மஞ்ச என்பதற்கு – இரணியனுடைய ஒப்பற்ற தோள் வலியைக் கண்டு உலகமெல்லாம் அஞ்சிக்கிடந்த காலத்திலே என்று பொருளு ரைப்பாருமுளர்.

அங்கு என்றது-

“எங்குமுளன் கண்ணனென்ற மகனைக்காய்ந்து, இங் கில்லையாலென்று இரணியன் தூண் புடைப்ப, அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப்பிரான் ” (திருவாய்மொழி 2-8-9.)என்றபடியே இரணியன் எந்த இடத்தில் எம்பெருமானில்லை யென்று தட்டினானோ அந்த இடத்திலேயே என்றபடி.

” அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்க வுருவாய் ” -(பெரியாழ்வார் திருமொழி 1-6-9.)

அவுணன் பொங்க = அசுரர்கட்கு அவுணர் என்று பெயர். இங்கு ஹிரண் யாஸுரனைச் சொல்லுகிறது. இவன் அன்று வரையில் தனக்கு விரோதியாகத் தன் முன்னே வந்து தோற்றின ஒருவனையும் கண்டறியாமல் அன்றுதான் புதிதாக நரசிங்கமூர்த்தியாகிய எதிரியைக்கண்டபடியால் கண்டகாட்சியிலே கொதிப்படைந்தனனாம்.

அப்படி அவன் கொதிப்படைந்தவளவிலே அவனது ஆகத்தை (மார்வை) தீக்ஷ்ணமான திருநகங்களாலே கிழித்தெறிந்தனன் எம்பெருமான். பொங்க என்பதை ஆகத்துக்கு அடைமொழியாக்கி, அவுணனுடைய அகன்ற மார்பை என்றுரைப்பர் சிலர்.  

போழ்ந்த புனிதன் = புனிதனென்றால் பரிசுத்தன் என்றபடி. இரணியனது மார்பைப் பிளந்ததனால் என்ன பரிசுத்தி உண்டாயிற்று என்று கேட்கக்கூடும்; ஜகத்தைஸ்ருஷ்டித்தல் முதலிய தொழில்களில் பிரமன் முதலானவர்களை ஏவிக் காரியம் நடத்திவிடுவது போல் ப்ரஹ்லாதனை ரக்ஷிப்பதிலும் ஒரு தேவதையை ஏவிவிடாமல் தானே நேராக வந்து தோன்றிக் கைதொட்டுக் காரியஞ்செய்தமையே இங்குப் பரிசுத்தியெனக்கொள்க.

இப்படி பரிசுத்தனான எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடம் எதுவென்றால், சிங்கவேள் குன்றமென்னும் திருப்பதியாம். அஃது எப்படிப்பட்ட தென்னில் ; சிங்கம் யானை முதலிய பிரபல ஜந்துக்கள் திரியுமிடம் அது என்பதைக் காட்டுகிறார் பின்னடிகளில்.

பகவானுடைய ஸந்நிதாநமஹிமையினால் அவ்விடத்து மிருகங்களும் பகவத்பக்தி மிக்கிருக்கின்றன வென்கிறார். சிங்கங்கள் யானைகளைக் கொன்று அவற்றின் தந்தங்களைப் பிடுங்கிக் கொண்டு வந்து பெருமாள் திருவடிகளிலே ஸமர்ப்பித்து வணங்குகின்றனவாம்.

यदन्नः पुरुषो भवति तदन्नास्तस्य  देवता  யதந்நபுருஷோபவதி ததந்நாஸ் தஸ்ய தேவதா” [ஸ்ரீராமாயணம் அயோத்யா காண்டம் 103-30.] (எந்தெந்த உயிர்கட்கு எது எது ஆஹாரமோ, அந்தந்த உயிர்கள் அந்த ஆஹாரத்தைக் கொண்டு தம் தேவதைகளை ஆராதிக்கும்) என்பது சாஸ்த்ரமாதலால் யானைகளின் அவயவங்களை ஆஹாரமாகவுடைய சிங்கங்களும் யானைத்தந்தங்களைக் கொண்டு பகவதாராதநம் நடத்துகின்றனவென்க.

ஆளி என்று சிங்கத்துக்கும் யாளிக்கும் பெயர் ; இங்கே சிங்கத்தைச் சொல் லுகிறது.

செங்கண் = (இங்கே வியாக்கியான ஸ்ரீஸுக்தி) “இவற்றுக்கு ஆனைகளின் மேலே சீற்றம் மாறாதே யிருக்கச் செய்தேயும் பகவத் பக்தி ஒரு படிப்பட்டுச் செல்லுமாயிற்று; சீற்றம் விக்ருதியாய் பகவத் பக்தி ப்ரக்ருதியாயிருக்கு மாயிற்று.”

—————–

அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
கொலைக் கையாளன் நெஞ்சிடந்த கூர் உகிராளன் இடம்
மலைத்த செல் சாத்தெறிந்த பூசல் வன் துடிவாய் கடுப்ப
சிலைக்கை வேடர் தெழிப் பறாத சிங்க வேள் குன்றமே—1-7-2-

பதவுரை

அலைத்த பேழ்வாய்

(சீற்றத்தாலே) நாக்கு அலையா நின்றுள்ள பெரிய வாயையும்
வாள் எயிறு

ஒளி பொருந்திய பற்களையுமுடையதாய்
ஓர்

ஒப்பற்றதாய்
கோள்

மிடுக்கையுடையதான
அரி ஆய்

நரஸிம்ஹமாய்க்கொண்டு
கொலை கையாளன் அவுணன் நெஞ்சு இடந்த

ஜீவ ஹிம்சையில் கைகாரனான இரணியனுடைய மார்வைக் கிழித்தெறிந்த
கூர் உகிராளன் இடம்

கூர்மையான நகங்களையுடைய எம்பெருமான்  எழுந்தருளியிருக்கு மிடமாவது:-
மலைத்த

(வேடர்களாலே) ஆக்கிரமிக்கப்பட்ட
செல் சாத்து

வழிப்போக்கு ஜனங்களின் ஸமூகத்தாலே
எறிந்த

(பிரதியாகச்) செய்யப்பட்ட
பூசல்

சண்டையிலே
வல் துடி வாய் கடுப்ப

கடூரமான தொனியை யுடைத்தான பறையானது கோஷம் செய்ய,
சிலை கை வேடர்

வில்லைக் கையிலேயுடைய வேடருடைய
தெழிப்பு

ஆரவாரமானது
அறாத

எப்போதும் மாறாத

சிங்கவேள்குன்றம்-.

சீற்றத்தாலே கடைவாயுடனே நாக்கை எற் றிக்கொள்ளுகிற பெரிய வாயையுடைய நரசிங்கமூர்த்தியாய்த் தோன்றி, பர ஹிம்ஸையே போது போக்கான இரணியனுடைய மார்பைப் பிளந்த பெருமான் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேழ்குன்றம்.

அவ்விடத்தின் நிலைமையைப் பேசுகிறார் பின்னடிகளில்; தீர்த்தயாத்திரையாகப் பலர் அங்குச் செல்லுகின்றனராம்; அவர்களை அவ்விடத்து வேடர்கள் வந்து தகைந்து சண்டை செய்வர்கள்; பரஸ்பரம் பெருஞ்சண்டை நடக்கும்; அந்தச் சண்டையிலே வேடர்களின் பறையோசையும் வில்லோசையும் இடை விடாது இருந்து கொண்டேயிருக்கும். இதுவே அத்தலத்தின் நிலைமை-என்கிறார். உள்ளதை உள்ளபடி சொல்லவேண்டுமிறே.

மலைத்த செல்சாத்து = மலைத்தலாவது ஆக்கிரமித்தல்; வேடர்களாலே ஆக்கிரமிக்கப்பட்ட என்றாவது, வேடர்களை எதிரிட்டு ஆக்கிரமித்த என்றாவது பொருள் கொள்ளலாம். வேடர்கள் வந்து பொருகிறபோது தாங்கள் வெறுமனிரார்களே , தாங்களும் ப்ரதியுத்தம் செய்வர்களே, அதைச் சொல்லுகிற தென்னலாம்.

(செல் சாத்து.) வடமொழியில் ஸார்த்தம் என்ற பதம் ஸமூஹ மென்னும் பொருளது; அப்பதமே இங்கே சாத்து என விகாரப்பட்டிருக்கின்றது. செல்கின்ற சாத்து எனவே யாத்திரை செய்பவர்களின் கூட்டம் என்று பொருள் கிடைத்தது.

பூசல் என்றபதத்திற்கு யுத்தம் என்றும், பெரிய கோஷம் போடுதல் என்றும்  பொருளுண்டு. இரண்டு பொருளும் இங்குக் கொள்ளலாம்.

வேடர்களாலே ஆக்கிரமிக்கப்பட்ட  வழிப்போக்கர்கள் போடும் கூசலானது பெரிய பறையடித்தாற்போல ஒலிக்கின்றது என்றும் வேடர்கள் வழிப்போக்கர்களை மறித்துச் செய்கிற சண்டையிலே வேடர்களுடைய பறைகள் கர்ண கடூரமாக ஒலிக்கின்றன என்றும் கருத்தாகலாம்

————-

ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம்
ஓய்ந்த மாவுமுடைந்த குன்றும் அன்றியும் நின்றழலால்
தேய்ந்த வேயுமல்ல தில்லாச் சிங்க வேள் குன்றமே–1-7-3-

பதவுரை

ஏய்ந்த பேழ்வாய் வாள் எயிறு

(வடிவுக்குத்) தகுதியாகப் பெருத்த வாயையும் வாள் போன்ற பற்களையுடைமுடையதாய்
ஓர் கோள் அரி ஆய்

ஒப்பற்றதாய் மிடுக்கையுடையதான நரசிங்கமாகி
அவுணன்

இரணியாசுரனுடைய
வாய்ந்த ஆகம்

வளர்ந்த உடலை
வள் உகிரால்

கூர்மையான நகங்களாலே
வகிர்ந்த

கிழித்தெறிந்த
அம்மானது இடம்

ஸ்வாமி எழுந்தருளி யிருக்கிற இடமாவது:-
ஓய்ந்த மாவும்

(கடினமான நிலங்களில் அங்குமிங்கும் திரிந்து அலைந்ததனால்) களைத்துப்போன மிருகங்களும்
உடைந்த குன்றும்

உடைந்துபோன சிறு மலைகளும்
அன்றியும்

இன்னமும்
நின்று அழலால் தேய்ந்த வேயும் அல்லது

இருந்தபடியே நெருப்பாலே குறைகொள்ளியாய்க் கிடக்கிற மூங்கிலும் ஆகிய இவைகள் தவிர
இல்லா

வேறொன்றுமில்லாத

சிங்கவேள்குன்றம்-.

வடிவின் பெருமைக்குத் தகுதியாகப் பெரிய வாயையும், ஒளி பொருந்திய (அல்லது, வாள் போன்ற) கோரப்பற்களையு முடைய நரசிங்கமாகத் தோன்றி இரணியனுடைய மாம்ஸஞ் செறிந்த மார்வைப் பிளந்த பெருமான் உறையுமிடம் சிங்கவேள் குன்றம்.

“நறிய மலர்மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட, பொறி கொள் சிறைவண் டிசைபாடும்” ( பெரிய திருமொழி 5-1-1.)என்றும்,

“வண்டின முரலுஞ்சோலை மயிலினமாலுஞ்சோலை, கொண்டல்மீதணவுஞ்சோலை குயிலினங் கூவுஞ்சோலை” ( திருமாலை. 14.)என்றும்

வருணிக்கத் தக்க நிலைமையோ அவ்விடத்தது என்றால்; இல்லை, அந்த ஸந்நிவேசம் வேறுவகையானது என்கிறார் .

ஆனை குதிரை சிங்கம் புலி முதலிய மிருகங்கள் இங்குமங்கும் ஓடியலைந்து ஓய்ந்து நிற்கக் காணலாம்; உடைந்து கிடக்கும் கற்பாறைகளைக் காணலாம்; இன்னமும் சில காணவேண்டுமானால், மூங்கில்கள் நெருப்புப்பற்றி யெரிந்து குறைக் கொள்ளியாயிருக்குமாற்றை விசேஷமாகக் காணலாம்; இவை யொழிய வேறொன்றும் காண்பதற்கில்லையாம் அங்கு. இவையெல்லாம் இவ்வாழ்வார்க்கு வண்டின முரலுஞ் சோலை போலே தோற்றுகின்றன வென்பர் பெரியவாச்சான் பிள்ளை.

“அது விதுவுது என்ன லாவனவல்ல என்னையுன் செய்கை நைவிக்கும்” ((3) திருவாய்மொழி 5-10-2.)என்றபடி எம்பெருமானுடைய சரித்திரம் எதுவாயிருந்தாலும் எல்லாம் ஆழ்வார்களுடைய நெஞ்சைக் கவர்வது போல், அப்பெருமான் உகந்தருளின நிலங்களில் உள்ளவைகளும் எதுவா யிருந்தாலும் அவ்விடத்தவை’ என்கிற காரணத்தினால் எல்லாம் இவர்க்கு உத்தேச்யம் என்பது அறியத்தக்கது.

“பிறர்க்குக் குற்றமாய்த் தோற்றுமவையும் உபாதேயமாய்த் தோற்றுகையிறே ஒரு விஷயத்தை உகக்கையாகிறது” என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தியுங் காண்க.

ஓய்ந்தமாவும் என்பதற்கு – நிலத்தின் வெப்பத்தினால் பட்டுப்போன மா மரங்களும் என்றும் பொருள் கொள்ளலாம்.   

—————-

எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் எதலனின் இன்னுயிரை
வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம்
கவ்வு நாயும் கழுகும் உச்சிப் போதொடு கால் சுழன்று
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே—1-7-4-

பதவுரை

எவ்வம் வெம்வேல்

துன்பத்தை விளைப்பதாய் தீக்ஷ்ணமான வேலாயுதத்தையுடையனாய்
ஏதலன்

பாகவத விரோதியான
பொன் பெயரோன்

இரணியனுடைய
இன் உயிரை

இனிமையான பிரானணை
வவ்வி

அபஹரித்து
ஆகம்

(அவனுடைய) சரீரத்தை
வள் உகிரால்

கூர்மையான நகங்களாலே
வகிர்ந்த அம்மானது இடம்

கிழித்தெறிந்த பெருமான் எழுந்தருளியிருக்குமிடமாவது:-
கவ்வும் நாயும்

(கண்டவர்களை) யெல்லாம் கவர்கின்ற நாய்களும்
கழுகும்

கழுகுகளும் (நிறைந்திருப்பதனாலும்)
உச்சிப் போ தொடு கால் சுழன்று

கொழுத்த வெய்யிலும் சுழல்காற்றும் எப்போது மிருப்பதனாலும்
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா

தேவதைகள் தவிர மற்றையோர் சென்று கிட்ட  முடியாததான

சிங்கவேள்குன்றம்-.

கையும் வேலுமாயிருக்கிற விருப்பைக் கண்ட காட்சியிலே எல்லாரையும் துக்கப்படுத்தவல்லவனான இரணியனுடைய உயிரைக் கவர்ந்து அவனது மார்வைப் பிளந்தருளின பெருமான் உறையுமிடமாவது சிங்கவேழ்குன்றம்.

வேற்று மனிசரைக் கண்டபோதே வந்து துடைகளிலே கவ்விக் கடிக்கிற நாய்களும், அப்படி கடிக்கப்பட்டு மாண்டொழிந்த பிணங்களைக் கவ்வுகின்ற கழுகுகளும் ஆங்கு மிகுதியாகக் காணப்படுமாம்.

செடி மரமொன்று மில்லாமையினாலே நிழலென்பது காணவே முடியாது; உச்சிவேளையில் எப்படிப் பட்ட வெய்யில் காயுமோ, அதுவே எப்போதும் காய்கின்றது; சுழல்காற்றுகள் சுழன்றபடியே யிராநின்றன.

இப்படி யிருக்கையினாலே ஸாமாந்யரான மனிசர் அங்குச் சென்று கிட்டுதல் அரிது; மிக்க சக்தி வாய்ந்த தேவதைகளே அங்குச் செல்லுதற்கு உரியர்; இங்ஙனே கஹநமான தலமாயிற்று இது.

எவ்வும் என்றும் எவ்வம் என்றும் பாடபேதம். பொன் பெயரோன் = ஹிரண்யம் என்ற வடசொல் பொன் என்னும் பொருளுடையதாதலால் ஹிரண்யாஸுரனைப் பொன்பெயரோனென்பது.

ஏதலன் என்று சத்ருவுக் குப் பெயர்; ஸர்வபூதஸுஹ்ருத்தான எம்பெருமானுக்கு இவன் நேரே சத்ரு வல்லனாகிலும் பாகவதசிரோமணியான ப்ரஹ்லாதாழ்வானுக்கு சத்ருவான முறைமையாலே பகவானுக்கும் சத்ருவாயினன்.

ஆச்ரிதர்களின் விரோதிகளைத் தன் விரோதிகளாக நினைத்துப் பேசுமவனிறே எம்பெருமான்.

”ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்து இன்னுயிரை வவ்வினான்” என்று – மார்வைப் பிளந்தது முன்னமும் உயிரைக் கவர்ந்தது அதன்பின்புமாகச் சொல்ல வேண்டியிருக்க இங்கு மாறாடிச் சொன்னது- இரணியன் நரசிங்க மூர்த்தியைக் கண்ட க்ஷணத்திலேயே செத்த பிணமாக ஆய்விட்டானென்ற கருத்தைக் காட்டு தற்கென்க.

”கவ்வுநாயுங் கழுகும் உச்சிப்போதொடு கால் சுழன்று” என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறலாம்.

உச்சிப்போது என்று ஸுர்யனையே சொல்லுகிறதாகக் கொண்டு, நாய்களும் கழுகுகளுங்கூட அவ்விடத்தில் நடக்கும்போது தரையின் வெப்பம் பொறுக்க முடியாமல் கால் தடுமாறி திண்டாடுகின்றன; அப்படியே ஸுர்யனும் அவ்விடத்திலே வந்தால் அவனுக்கும் இதுவே கதி; தன்னுடைய தாபத்தைத் தானே பொறுக்கமாட்டாமல் அவனும் கால் தடுமாறிப் பரிதபிப்பன் என்றவாறுமாம்.

இத்திருப்பதியிற் சென்று ஸேவிக்க விருப்பமுடையரான இவ்வாழ்வார் “தெய்வமல்லால் செல்ல வொண்ணா” என்று அருமை தோன்ற அருளிச்செய்யலாமோ? எனில்; நரஸிம்ஹமூர்த்தியின் அழகைக்கண்டு அஸூயைப் படுவதற்கும் அவனுக்கு ஏதேனும் அவத்யத்தை விளைப்பதற்கும் உறுப்பாக ஆஸுரப்ரக்ருதிகள் அங்குச் செல்லமுடியாது; எம்பெருமானுடைய ஸம்ருத்தியைக் கண்டு உகந்து பல்லாண்டு பாடவல்ல ஆழ்வார் போல்வார்க்குத்தான் அவ்விடம் அணுகக் கூடியது என்ற கருத்துத் தோன்ற அருளிச் செய்கிறா ரென்க

—————-

மென்ற பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
பொன்ற வாகம் வள்ளுகிரால்  போழ்ந்த புனிதனிடம்
நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடிரிய
சென்று காண்டற்கரிய கோயில் சிங்க வேள் குன்றமே–1-7-5-

பதவுரை

மென்ற பேழ்வாய்

(சீற்றத்தாலே) மடித்த பெரிய வாயையும்
வாள் எயிறு

வாள்போன்ற பற்களையுமுடையதாய்
ஓர்

ஒப்பற்றதாய்
கோள்

மிடுக்கையுடையதான
அரி ஆய்

நரசிங்கமாகி
பொன்றஅவுணன்

(தன்னைக் கண்டமாத்திரத்திலே) செத்துப்போன இரணியனுடைய
ஆகம்

உடலை
வள் உகிரால்

கூர்மையான நகங்களாலே
போழ்ந்த

பிளந்திட்ட
புனிதன் இடம்

பரிசுத்தனான பகவான் எழுந்தருளியிருக்குமிடமாவது:-
சூறை

சுழல்காற்றானது
நின்ற செம் தீ மொண்டு

குறைவில்லாமலிருக்கிற சிவந்த நெருப்பை வாரிக்கொண்டு
நீள் விசும்பூடு இரிய

விசாலமான ஆகாசமடங்கலும் ஓடிப்பரவுகிறபடியாலே
சென்று காண்டற்கு அரிய கோயில்

கிட்டிச் சென்று ஸேவிக்க முடியாத கோயிலான

சிங்கவேள்குன்றம்-.

சீற்றத்தாலே பல்லோடு நாக்கைச் செலுத்தி மென்றுகொண்டே யிருக்கிற பெரிய வாயையும் ஒளிவிடுகிற எயிற்றையும் மிடுக்கையுமுடைய நரசிங்கமாய்த் தோன்றி இரணியன் உயிர்மாளும்படியாக அவனது மார்வைப் பிளந்த பெருமானெழுந்தருளி யிருக்குமிடம் சிங்கவேழ் குன்றம். அஃது எப்படிப்பட்டது? மாறாமல் நின்று எரிகிற அக்நியைச் சுழல் காற்றானது முகந்து கொண்டு ஆகாயமெங்கும் பரவி வீசியெறிகையாலே சென்று காண்பதற்கு அருமைப்படும் கோயில்.

”அவுணன் பொன்றவாகம்” என்ற விடத்திற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறலாம். நரசிங்கத்தைக் கண்டவுடனே இரணியன் பொன்ற – முடிந்து போக, முடிந்தபிறகு அந்தப் பிணத்தைக் கிழித்துப்போட்டான் என்னலாம் இது அதிசயோக்தி. அன்றி, அவுணன் பொன்றும்படியாக (முடியும் படியாக) அவனது உடலைக் கிழித்தானென்னவுமாம்.

சூறை — சூறாவளிக்காற்று எனப்படும். அக்காற்று செந்தீயை மொண்டு கொண்டு ஆகாயத்திலே ஓடுகின்றதாம்.

“நீள் விசும்பூடு எரி” என்றும் பாட மருளிச்செய்வர். ஆகாயத்திலே போய் ஜ்வலிக்க என்றபடி.

சென்று காண்டற்கரிய கோயில் என்றவிடத்து வியாக்கியான ஸ்ரீஸுக்தி காண்க. “இப்படி யிருக்கையாலே ஒருவர்க்கும் சென்று காண்கைக்கு அரிதா யிருக்குமாயிற்று. பரமபதம்போலே இந்நிலத்துக்கும் நாம் பயப்பட வேண்டா என்று ஹ்ருஷ்டராகிறார்” என்று –

—————–

எரிந்த பைங்கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடி தெவ்வுரு வென்று
இரிந்து வானோர் கலங்கியோடே இருந்த வம்மானதிடம்
நெரிந்த வேயின் முழை யுள் நின்று நீண் எரி வா யுழுவை
திரிந்த வானைச் சுவடு பார்க்கும் சிங்க வேள் குன்றமே–1-7-6–

பதவுரை

எரிந்த

(சீற்றத்தாலே) ஜ்வலிக்கின்ற
பை கண்

பசுமைதங்கிய கண்களோடும்
இலங்கு பேழ்வாய் எயிற்றொடு

விளங்கா நின்ற பெரிய வாயில் பற்களோடும் கூடியிருக்கிற
இது

இந்த நரசிங்கத் திருக்கோலமானது
எவ்வுரு என்று

என்ன பயங்கரமான ரூபம்! என்று அஞ்சி
வானோர்

தேவர்கள்
இரிந்து கலங்கி ஓட

அங்குமிங்கும் சிதறிக் கால் தடுமாறி ஓடும்படியாக
இருந்த

எழுந்தருளியிருந்த
அம்மானது இடம்

ஸர்வேசரனுடைய இடமாவது:-
உழுவை

புலிகளானவை
நெரிந்த வேயின் முழையுள் நின்று

நெருக்கமான மூங்கிற் புதர்களினின்றும்
நீள் நெறி வாய்

பெரிய வழியிலே (வந்து)
திரிந்த ஆனை சுவடு பார்க்கும்

காட்டில் திரிகின்ற யானைகள் போன அடையாளத்தைஆராய்ந்து பார்க்குமிடமான

சிங்கவேள்குன்றம்-.

சீற்றத்தாலே அக்நிஜ்வாலைபோலே ஜ்வலிக்கிற சிவந்த கண்ணையும் ஒளிவிடாநின்ற பெரிய வாயையும் கோரப்பற்களையும் கண்டு “அப்பப்ப! இதென்ன உரு!” என்று பயப்பட்டு தேவர்கள் அங்கு மிங்கும் கால் தடுமாறிச் சிதறி ஓடும்படியாக நரசிங்கவுருக்கொண்டு எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேழ்குன்றம்.

அஃது எப்படிப்பட்ட இடமென்னில்; மூங்கில் புதர்களினின்றும் புலிகள் பெருவழியிலே வந்து சேர்ந்து “இங்கு யானைகள் நடமாடின அடையாள முண்டோ?” என்று பார்க்கின்றனவாம். யானைகளை யடித்துத் தின்பதற்காக அவை உலாவின இடங்களைத் தேடித் திரிகின்ற புலிகள் நிறைந்ததாம் அத் தலம்.

—————-

முனைத்த சீற்றம் விண் சுடப் போய் மூ வுலகும் பிறவும்
அனைத்தும் அஞ்ச வாளரியாய் இருந்த வம்மானிதிடம்
கனைத்த தீயும் கல்லும் அல்லா வில்லுடை வேடருமாய்
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே—-1-7-7-

பதவுரை

முனைத்த சீற்றம்

மிக்க கோபமானது
போய்

வளர்ந்து சென்று
விண் சுட

ஆகாயத்தைக் கொளுத்தவும்
மூ உலகும்பிறவும்

மூன்று லோகங்களும் மற்றுமுள்ளவைகளும்
அனைத்தும்

எல்லாம்
அஞ்ச

பயப்படவும்

ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம்:-

கனைத்த தீயும்

ஒலி செய்கின்ற நெருப்பும்
கல்லும்

(அந்த நெருப்பினால் வேகின்ற) கற்களும்
அல்லா வில் உடை வேடரும் ஆய்

உலகத்தில் கண்டறியாத விற்களையுடைய வேடர்களும் நிறைந்திருப்பதனாலே
தினை தனையும் செல்ல ஒண்ணா

க்ஷணகாலமும் கிட்ட வொண்ணாததான

சிங்கவேள்குன்றம்-

நரசிங்கமூர்த்தி இரணியன் மீது கொண்ட கோபம் அளவற்றிருந்ததனால் அந்தக் கோபாக்நி  மேலுலகமளவும் போய்ப் பரவி எங்கும் தஹிக்கப்புகவே ஸர்வலோக ஸம்ஹாரஸமயம் பிறந்துவிட்ட தென்று மூவுலகத்திலுள்ளோரும் அஞ்சி நடுங்கும்படியா யிருந்ததாம். அப்படிப்பட்ட உக்ர நரஸிம்ஹன் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேள் குன்றம்.

அவ்விடம் எப்படிப்பட்டது?; எரிகிறபோதுண்டான வெடுவெடென்கிற ஓசையையுடைத்தான நெருப்பும், அந்த நெருப்பிலே வைக்கோல் போர்போலே வேகின்ற கல்லுகளும், இவற்றிற்காட்டிலும் கொடியவர்களான கையும் வில்லுமாய்த் திரிகின்ற வேடர்களும் அங்கு நிறைந்திருப்பதனாலே ஒரு நொடிப் பொழுதும் சென்று கிட்ட முடியாத தலமாம் அது. –

“உகவாதார்க்குக் கண்ணாலே காணலாம்படி சென்று கிட்டிக்கண்ணெச்சில் பட வொண்ணாதபடி யிருந்த தேசமாயிற்று” என்ற பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸுக்தி இங்கு நோக்கத் தக்கது.

தினைத்தனையும் = தினை என்று ஒரு சிறிய தானியத்திற்குப் பெயர் ; அவ்வளவும் என்றது – ஸ்வல்பகாலமும் என்றபடி.

“எட்டனைப்போது” (திருநெடுந்தாண்டகம் – 11) என்ற விடத்து எள் என்ற தானியத்தை யெடுத்துக்காட்டின தொக்கும் இது–

————

நாத் தழும்ப நான் முகனும் ஈசனுமாய் முறையால்
ஏத்த அங்கு ஓர் ஆளரியாய் இருந்த வம்மானதிடம்
காய்த்த வாகை நெற்றொலிப்பக் கல்லதர் வேய்ங்கழை போய்
தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்க வேள் குன்றமே–1-7-8-

பதவுரை

நான் முகனும் ஈசனும் ஆய்

பிரமனும் சிவனும் கூடிக் கொண்டு
நா தழும்ப

நாக்குத் தடிக்கும்படி
முறையால் ஏத்த

கிரமப்படி ஸ்தோத்ரம் பண்ண

ஓர் ஆள் அரி ஆய்இருந்த அம்மானது இடம்-.

காய்த்த

காய்கள் நிறைந்த
வாகை

வாகை மரங்களினுடைய
நெற்று

நெற்றுகளானவை
ஒலிப்ப

சப்திக்க,
கல் அதர்

கல்வழிகளிலேயுண்டான
வேய் கழை

குழல் மூங்கிற் செடிகள்
போய்

ஆகாசத்தை அளாவிப்போய்
தேய்த்த

(மூங்கில்கள் ஒன்றோடொன்று) உராய்கையினாலுண்டான
தீயால்

நெருப்பினால்
விண் சிவக்கும்

ஆகாசம் சிவந்திருக்கப்பெற்ற

சிங்கவேள்குன்றம்-.

நான்முகக் கடவுளாகிய பிரமனும் சிவனும் முறைவழுவாது துதிக்கும்படியாக விலக்ஷணமான நரசிங்கவுருக் கொண்டு எம்பெருமா னெழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேள் குன்றம்.

அஃது எப்படிப்பட்டது? – காய்கள் காய்த்துத் தொங்கப் பெற்ற வாகை மரங்களின் நெற்றுக்களானவை காற்றடித்துக் கலகலென் றொலிக்கின்றனவாம் சில விடங்களில். மற்றுஞ் சில விடங்களிலோ வென்னில்; ஆகாசத்தளவும் ஓங்கி வளர்கின்ற மூங்கில்கள் ஒன்றோடொன்று உராய்ந்து நெருப்புப்பற்றி யெரிந்து விண்ணுலகத்தையும் சிவக்கடிக்கின்றனவாம்.

நாத்தழும்ப என்றதனால் இடைவிடாது அநவரதமும் துதிக்கின்றமை தோன்றும். முறையால் ஏத்த என்பதற்கு மாறிமாறித் துதிக்க என்றும் பொருள் கொள்ளலாம். ஒருசந்தை நான்முகனும் மற்றொரு சந்தை சிவனுமாக இப்படியே மாறிமாறி ஏத்துகின்றமையைச் சொன்ன படி.

நெற்று – உலர்ந்த பழம். அதர் – வழி. வேய் + கழை = வேய்ங்கழை

——–

நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்
அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம்
நெல்லி மல்கிக் கல்லுடைப்பப் புல்லிலை யார்த்து அதர் வாய்ச்
சில்லி சில் லென்ற சொல் அறாத சிங்க வேள் குன்றமே—1-7-9-

பதவுரை

நெஞ்சே

ஓ மனமே!
நல்லை

நீ மிகவும் நல்லவன்;
நம்முடை நம்பெருமான்

நமக்கு ஸ்வாமியாய்
அல்லி மாதர் புல்க நின்ற

பெரிய பிராட்டியாரை அணைத்துக் கொண்டிருப்பவனாய்
ஆயிரம் தோளன் இடம்

ஆயிரந்தோள்களை யுடையனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கு மிடமாய்,
நெல்லி

நெல்லி மரங்கள்
மல்கி

நிறைந்து

(கற்களினுள்ளே வேரோட்டத்தினால்)

கல் உடைப்ப

பாறைகளை உடைக்கவும்
புல் இலை ஆர்த்து

பனையோலைகள் ஒலிசெய்யவும்
அதர் வாய்

வழிகளிலே
சில்லி

சுவர்க்கோழிகளையுடைய
சில் என்று ஒல் அறாத

சில் என்கிற ஒலி இடைவிடாமல் ஒலிக்கவும் பெற்ற
சிங்கவேள் குன்றம்

சிங்கவேள்குன்றத்தை
நாம்தொழுதும்

நாம் ஸேவிப்போம்.

கீழ்ப்பாட்டுகளில் தெய்வமல்லால் செல்ல வொண்ணா” என்றும், சென்று காண்டற்கு அரிய கோயில்” என்றும், ‘தினைத்தனையுஞ் செல்லவொண்ணா” என்றும் இத்திவ்ய தேசத்தின் அருமையைச் சொல்லிவந்தாரே;

அந்த அருமை ஆஸுரப்ரக்ருதிகளான பகவத் விரோதிகளுக்கேயொழிய, உகந்திருக்கும் அடியவர்களுக்கு அன்றே. அதனை இப்பாட்டில் வெளியிடுகிறார்.

பெரிய பிராட்டியாரை முன்னிட்டுக்கொண்டு நாம் அஞ்சாமல் சிங்கவேள் குன்றத்திலே சென்று தொழுவோம் நெஞ்சமே! என்கிறார் .

அல்லிமாதரான பிராட்டியோடே அணைந்திருப்பதனாலே நரசிங்க மூர்த்தியின் கோபாக்நிக்கு நாம் அஞ்சவேண்டியதில்லையென்றும்,

அவன் தான் நம்முடை நம்பெருமானாகையாலே அந்நிலத்தின் கொடுமைக்கும் அஞ்ச வேண்டிய தில்லையென்றும் குறிப்பிட்டபடி.

நம்பெருமான் என்றாலே போதுமாயிருக்க “நம்முடை நம்பெருமான்” என்றது அடியார் திறத்தில் அவன் மிகவும் விதே யனாயிருக்கும்படியைக் காட்டும்.

அல்லிமாதர்புல்க நின்ற ஆயிரந்தோளன் என்ற சொல் நயத்தால்-பிராட் டியை அணைக்கும் போது எம்பெருமானுக்கு ஸந்தோஷ மிகுதியினால் தழுவுதற்கு உறுப்பான தோள்கள் ஸஹஸ்ர முகமாக வளர்கின்றமை விளங்கும்.

“இவளணைத்தால் இவளைக் கட்டிக்கொள்ள ஆயிரம் தோள் உண்டாமாயிற்று” என்பர் பெரியவாச்சான் பிள்ளையும்.

”தாள்களை யெனக்கே தலைத்தலைச் சிறப்பத்தந்த பேருதவிக்கைம்மாறாத், தோள்களையாரத் தழுவியென்னுயிரை அறவிலை செய்தனன்” (திருவாய்மொழி 8-1-10.)என்று ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணினத்தாலுண்டான ஸந்தோஷத்தினால்

“தோள்களாயிரத்தாய் முடிகளாயிரத்தாய் துணை மலர்க் கண்களாயிரத்தாய், தாள்களாயிரத்தாய் பேர்களாயிரத்தாய்” (திருவாய்மொழி 8-1-10.) என்னும்படி யானால் பிராட்டியின் சேர்த்தியினால் உண்டாகக் கூடிய உடல் பூரிப்பு சொல்ல வேணுமோ ?

(நெல்லி மல்கி இத்யாதி.) நெல்லி மரங்களானவை கல்லிடைகளிலே முளைத்து வளர்ந்து கல்லிடைகளிலே வேரோடுகையாலே அந்த வேர்கள் பருத்துப் பாறைகளைப் பேர்க்கின்றனவாம்.

பெரியவாச்சான் பிள்ளையும் ”நெல்லி மரங்கள் வேரோடிக் கற்களையுடையப் பண்ணும்” என்றே அருளிச் செய்கிறார்;

இங்கே சிலர் சொல்லும் பொருளாவது – நெல்லி மரங்களிலிருந்து இற்றுவிழுகின்ற நெல்லிக்காய்கள் பாறைகளின் மீது விழுந்து கற்களையுடைக்கின்றன என்பதாம். அப்போது, நெல்லி என்றது ஆகுபெயரால் நெல்லிக்காய்களைச் சொல்லவேண்டும்.

புல்லிலை யார்த்து = மூங்கிலிலைகளின் ஓசையைச் சொல்லிற்றாகவுமாம். பனை யோலைகளின் ஓசையைச் சொல்லிற்றாகவுமாம். ஆர்த்தல் – ஒலித்தல்.

சில்லி சில்லென்றொல்லறாத = வடமொழியில் சுவர்க்கோழிக்கு ‘ஜில்லிகா’ என்று பெயர்; அச்சொல்லே இங்குச் சில்லி யென்று கிடக்கிறது. “நல்லை நெஞ்சே ” (நல்ல நெஞ்சே)” என்பன பாட பேதங்கள்

————-

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே—-1-7-10-

பதவுரை

செம்கண் ஆளி

சிவந்த கண்களையுடைய சிங்கங்கள்
இட்டு

(தமக்குக் கிடைத்த யானைத் தந்தம் முதலியவற்றைத்) திருவடிகளிலே ஸமர்ப்பித்து
இறைஞ்சும்

வணங்குமிடமான
சிங்க வேழ் குன்று உடைய

சிங்கவேழ் குன்றத்தை இருப்பிடமாகவுடையனாய்
எங்கள் ஈசன்

ஸம்ஸாரிகளான நமக்கெல்லார்க்கும் ஸ்வாமியாய்
எம் பிரானை

நமக்கு உபகாரகனாயுமுள்ள ஸ்ரீ நரஸிம்ஹமூர்த்தி விஷயமாக,
இரு தமிழ் நூல் புலவன்

பெரிய தமிழ் சாஸ்த்ரத்தில் வல்லவராய்
மங்கை ஆளன்

திருமங்கை நாட்டுக்குத் தலைவராய்
மன்னு தொல்சீர்

நித்யஸித்தமான ஸ்ரீ வைஷ்ணவலஷ்மியை உடையவராய்
வண்டு அறைதார்

வண்டுகள் படிந்து ஒலி செய்கின்ற மாலையை யணிந்தவராய்
செம் கை ஆளன்

மிக்க உதாரரான
கலியன்

ஆழ்வாரருளிச்செய்த
செம் சொல் மாலை

செவ்விய இச்சொல் மாலையை
வல்லவர்

ஓதவல்லவர்கள்
தீது இலர்

தீமை யொன்றுமின்றி நன்மை பெற்றவராவர்.

வீரலக்ஷ்மி விளங்குங் கண்களையுடைய சிங்கங் களானவை யானைக்கோடு முதலியவற்றைக் கொண்டு ஸமர்ப்பித்து வணங்குமிட மான சிங்கவேழ் குன்றத்திலே யெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் விஷயமாகத் திருமங்கை மன்னன் அருளிச்செய்த சொல்மாலையை ஓதவல்லவர்கள் தீங்கின்றி வாழ்வார்கள் என்று – இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.

செங்கணாளியிட்டிறைஞ்சும் என்றவிடத்து –नवं शवमिदं पुण्यं वेदपारगमच्युत | यज्ञ्शीलं महाप्राज्ञं ब्राह्मणं शिवमुत्तमम् || நவம் சவமிதம் புண்யம் வேதபாரகமச்யுத – யஜ்ஞ்சீலம் மஹா ப்ராஜ்ஞம் ப்ராஹ்மணம் சிவ முத்தமம் என்ற கண்டாகர்ணனுடைய வசனம் நினைக்கத்தகும். அவன், தனக்கு உண வாகிய பிணங்களை எம்பெருமானுக்கு நிவேதநஞ் செய்து உண்டது போல, சிங்கங்க ளும் செய்கிறபடி.

————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: