ஸ்ரீ பெரிய மொழி -1-6–வாணில முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார்— ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி யல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொன்னெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவர் தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—-1-6-7-

பதவுரை

விளங்கனி முனிந்தாய்

விளாம்பழமாய் வந்து தோன்றின அஸுரனைச் சீறித் தொலைத்தவனே!
வஞ்சனேன் அடியேன் 

நெஞ்சினில் பிரியா வானவா

வஞ்சகனான என்னுடைய நெஞ்சினுள்ளும் புகுந்து பிரியாதிருக்கிற தேவனே!
தானவர்க்கு என்றும் நஞ்சனே

அசுரர்களுக்கு எப்போதும் மிருத்யுவாயிருப்பவனே!

நைமிசாரணியத்துள் எந்தாய்!-;

நீதி அல்லாதன

அநீதியான ஒழுக்கங்களை
நெஞ்சினால் நினைந்தும்

(முதலில்) நெஞ்சாலே நினைத்தும்
வாயினால் மொழிந்தும்

(பிறகு) வாயாலே சொல்லியும்
செய்தும்

(பிறகு) செய்கையினால் அனுட்டித்தும்
துஞ்சினார்

முடிந்தவர்கள்
செல்லும்

அடையத்தக்க
தொல் நெறி

நரகமார்க்கத்தை
கேட்டே

(கற்றுணர்ந்த பெரியோர் சொல்லக்) கேட்டமாத்திரத்திலே
துளங்கினேன்

நடுங்கினவனாய்க்கொண்டு உன் திருவடி அடைந்தேன்-.

மனமொழி மெய்கள் மூன்றாலும் பாவங் களையே செய்து செத்தவர்கள் போகிற வழியின் கொடுமையைக் கேள்விப்பட்ட மாத்திரத்திலே நடுநடுங்கி வந்து உன் திருவடிகளைப் பற்றினேன் என்கிறார்.

சிலர் பாவஞ் செய்யவேணுமென்று முன்னாடி நெஞ்சால் நினையாமலும் வாயால் சொல்லாமலுமிருந்தாலும் திடீரென்று விதிவசமாகப் பாவஞ்செய்து விட நேருவதுண்டு; அப்படிப்பட்டவர்களுடைய பாவங்கள் பொறுமைக்கு விஷயமாகவுங்கூடும்;

அங்ஙனன்றிக்கே, ‘நாம் கட்டாயம் பாவஞ் செய்ய வேணும் ‘ என்று நெடுநாளாகவே நெஞ்சில் பாரித்துக் கொண்டு அதை அடிக்கடி வாயாலுஞ் சொல்லிக் கொண்டிருந்து அப்படியே செய்கையிலும் செய்து தீர்ப்பவர்களுடைய பாவங்கள் அநுபவித்தே தீரவேண்டியவையாகையால் நீதியல்லாதன நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் செய்தும் ” என்றார்.

இங்ஙனே செய்து செத்தவர்கள் செல்லுகிற தொன்னெறியாவது நரகமார்க்கம். தொல் நெறி = அநாதியான வழி; பகவத்கீதையில் எட்டாவது அத்யாயத்தில் “శుక్లకృష్ణగతీ హ్యేతే జగతళ్ళాశ్వతే మ | ఏకయా యాతనావృత్తి మన్యయావర్తతే పునః” = சுக்லக்ருஷ்ணகதீ ஹ்யேதே ஜகதச் சாச்வதே மதே-ஏகயா யாத்யநாவ்ருத்தி மந்யயாவர்த்ததே புந:” (சுக்லகதியென்கிற அர்ச்சிராதிமார்க்கமும் க்ருஷ்ண கதியென்கிற தூமாதிமார்க்கமும் உலகத்திற்கு சாச்வதமாய் ஏற்பட்டவைகள் ; இவற்றுள் சுக்லகதியாற் சென்றவன் மறுபடியும் இவ்வுலகத்திற்குத் திரும்பி வருகிறதில்லை ; க்ருஷ்ணகதியாற் செல்லுமவன் திரும்பிவிடுகிறான்) என்னும் போது அர்ச்சிராதிமார்க்கம் போலவே தூமாதி மார்க்கமும் நித்தியம் என்றமை யால் இங்குத் தொன்னெறி என்றது பொருந்துமென்க.

சாச்வதம் என்கிற விஷயத்தில் இரண்டு மார்க்கங்களும் ஒத்திருந்தாலும் அர்ச்சிராதிமார்க்கம் பெரும் பாலும் புல்மூடிக்கிடக்கும்; தூமாதிமார்க்கம் இடையறாத ஆட்களையுடைத்தாய் வழி தேய்ந்திருக்குமென்று வாசி காண்க.

விளங்கனி முனிந்த வரலாறு வருமாறு :- கண்ணபிரானைக் கொல்லும்படி கம்ஸனால் ஏவப்பட்ட அஸுரர்களில் கபித்தாசுரன் விளாமரத்தின் வடிவமாய் கண்ணன் தன்கீழ்வரும்பொழுது மேல்விழுந்து கொல்வதாக எண்ணிவந்து நிற்க, அஃதறிந்த க்ருஷ்ணபகவான், அவ்வாறே தன்னைக கொல்லும் பொருட்டுக் கன்றின் வடிவங்கொண்டு வந்த வத்ஸாஸுரனைப் பின்னிரண்டு கால்களையும் பிடித்து எடுத்துச் சுழற்றி விளாமரத்தின் மேலெறிய, இருவரும் இறந்து தமது அசுரவடிவத்துடனே விழுந்தனரென்பதாம்.

” அடியேன் “ என்று கபடமாக ஒருவார்த்தை சொன்னாலும் அதை மெய் யன்போடு சொன்ன சொல்லாகத் திருவுள்ளம்பற்றி நெஞ்சை விட்டு அகலாது நெஞ்சிலேயே குடிகொண்டிருப்பன் என்கிற ஸௌசீல்ய குணத்தைப் பேசுகிறார் வஞ்சனேனடியேன் னெஞ்சினில் பிரியாவானவா என்று.

இப்படிப்பட்ட ஸௌசீல்யம் பிரதிகூலர் பக்கலிலும் இருக்குமாகில் அர்த்தமாகுமே; அப் படியில்லை என்கிறார் தானவர்க்கு என்றும் நஞ்சனே! என்று

———–

ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல் எங்கனே வாழுமாறு ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா
பாவினாரின் சொல் பன் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-8-

பதவுரை

குறுங்குடி

திருக்குறுங்குடியிலெழுந்தருளியிருக்கிற
நெடு கடல் வண்ணா

பெரிய கடல் போன்ற திருநிறமுடையவனே!

நைமிசாரணியத்துள் எந்தாய்-;

கலியார்

கலிபுருஷனென்கிற ஒரு மஹாப்ரபுவானவர்
நலிக என்று

“இந்தத் திருமங்கை மன்னனை ஹிம்ஸியுங்கோள்” என்று சொல்லி
என் மேல்

என் மேலே
ஐவர் ஏவினார்

பஞ்சேந்திரியங்களையும் ஏவிவிட்டார்;
எங்ஙனே வாழும் ஆறு

அந்தக் கலிபுருஷர் இனி பிழைக்க வழி ஏது? (ஏனென்னில்;)
நான்

அடியேன்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்

குறும்பர்களான அந்த இந்திரியங்கள் செய்யத்தக்க கொடுமைகளை அப்புறப்படுத்திவிட்டேன்;

(அதுதானெப்படிச் செய்தீரென்னில;)

என் நாவினால்

எனது நாவினாலே
பா ஆர் இன் சொல் பல் மலர்கொண்டு

நல்ல சந்தங்கள் நிறைந்த இனிய சொற்களாகிற புஷ்பங்கள் பலவற்றையுங் கொண்டு
உன் பாதமே பரவி

உன் திருவடிகளையே தோத்திரஞ்செய்து
பணிந்து

கீழே விழுந்து

உன் திருவடிவந்து  அடைந்தேன்-;

(ஆதலால் கலியை வென்றேனென்றபடி.)

கலி புருஷன் என்னைத் துன்பப்படுத்த நினைத்துத் தனக்குக் கையாட்களான இந்திரியங்களையழைத்து நீங்கள் திருமங்கை யாழ்வாரை நன்றாக ஹிம்வித்துவிடுங்கள் என்று ஏவினான் ;

நான் இத்தனை நாளும் இருந்தபடியே இருந்தேனாகில் அவற்றால் மிகவும் துன்பப்பட்டிருப்பேன்;

தைவாதீநமாக நான் பழைய நிலைமையில் நின்றும் நீங்கி உன் திருவடிகளில் புஷ்பங்களை ஸமர்ப்பித்தும் நமஸ்காரம் செய்தும் தோத்திரங்கள் பண்ணியும் வருகிறேனாகையால் இந்திரியங்களின் செங்கோன்மை என்னிடம் செல்லவொண்ணாதபடி தடுத்துவிட்டேன்;

கலி புருஷனுடைய கட்டளை பாறிப்பறந்து போயிற்று; அந்தக்கலி புருஷன் இனி இவ்வுலகில் வாழ்வதற்கே வழியில்லை – என்று திருவுள்ளமுவந்து அருளிச் செய்கிறாராயிற்று.

கலியார் = பெருமைப்படுத்திச் சொல்லுகிற வார்த்தையன்று; கோவமும் பகையும் இழிவுந்தோற்றச் சொல்லுகிறபடி. ”வினையார் ” என்று பாவங்களைச் சொல்வது போல. நலிக = வியங்கோள் வினைமுற்று.

“எங்ஙனே வாழுமாறு என்பதற்கு இனி நான் எப்படி வாழ்வேன்’ என்று ஆழ்வார் இந்திரியங்களுக்கோ கலிபுருஷனுக்கோ அஞ்சி நடுங்கிச் சொல்லுகிறதாகப் பொருள் கூறுவர் சிலர் ; அது பிரகரணத்திற்குச் சேராது.

“கோவினார் செய்யுங் கொடுமையை மடித்தேன்” என்று உடனே அருளிச் செய்கிறாராகையாலே, தாம் அஞ்சின தாகப் பொருள் கொள்ள வொண்ணாது. அந்தக் கலி புருஷன் இனி வாழ்வதற்கு வழி யுண்டோ ? என்பதாகவே கொள்க

——————-

ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக் குரம்பை பிரியும் போது உன் தன் சரணமே சரணம் என்று இருந்தேன்
தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய்
நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-9-

பதவுரை

தேன் உடை கமலம் திருவினுக்கு அரசே

தேன் நிறைந்த தாமரைப்பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்க்குப் பதியானவனே!
திரை கொள்மா நெடு கடல் கிடந்தாய்

அலைகள் நிரம்பிய மிகப்பெரிய திருப் பாற்டலில் கண் வளர்ந்தருளுமவனே!

நைமிசாரணியத்துள் எந்தாய்!-;

ஊன்

மாமிசத்தை
இடை சுவர் வைத்து

நடுநடுவே சுவராக வைத்து
என்பு

எலும்புகளை
தூண் நாட்டி

கம்பங்களாக நட்டு
உரோமம் வேய்ந்து

மயிர்களை மேலே மூடி
ஒன்பது வாசல் தான் உடை

நவத்வாரங்களையுடையதாகச் செய்யப்பட்ட
குரம்பை

குடிசை போன்ற இந்த சரீரத்தை
பிரியும் போது

விட்டுப்பிரியுங்காலத்தில்
உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன்

உன்னுடைய திருவடிகளே ரக்ஷகமாக வேணுமென்று நினைத்திருந்தேன்;
நானுடை தவத்தால் திருஅடி அடைந்தேன்

(இப்போது) என்னுடைய பாக்கியத்தினால் திருவடிவாரத்தில் சேரப்பெற்றேன்.

தம்முடைய அத்யவஸாயத்தை வெளி யிடுகிறாரிதில்.

சரீரத்தை ஒரு குடிசையாக உருவகப்படுத்துகின்றார். குடிசையில் இடையிடையே சுவர்கள் வைக்கப்பட்டிருக்கும்; இவ்வுடலில் மாம்ஸபிண்டங்கள் சுவர்போலிருக்கின்றன; குடிசையில் தூண்கள் நாட்டப்பட்டிருக்கும்; இதில் எலும்புகள் தூண்கள் போன்றுள்ளன. குடிசையில் பல வாசல்களுண்டு;

உடலிலும் நவத்வாரங்கள் ப்ரத்யக்ஷமே. குடிசை ஓலைக்கொத்து முதலியவற்றால் மூடப்பட்டிருக்கும்; இதுவும் உரோமங்களால் மூடப்பட்டிராநின்றது.

ஆக இவ்வகைகளாலே ஒரு குடிசை யென்னலாம்படி யிராநின்றதிறே இவ்வுடல்; குடிசையிலே நாம் வாழ்வதுபோல் இவ்வுடலில் ஆத்மா வாழ்கின்றான்; இவ்வுடலைவிட்டு ஆத்மா வெளிக்கிளம்புங்காலமே மரணமெனப்படும்.

அப்படி மரணம் நேர்ந்தபிறகு இவ்வாத்மா போய்ச் சேரவேண்டிய இடம் எம்பெருமான் திருவடிகளே – என்கிற அத்யவஸாயம் தமக்கு இருக்கிறபடியை முன்னடிகளால் அருளிச் செய்தாராயிற்று.

யமபடர்கள் வந்து என்னைப்பற்றியிழுத்துக் கொண்டு போய்ப் பலவகையான ஹிம்ஸைகளைச் செய்வதற்கு உறுப்பான பாவங்களை நான் வேண்டியபடி செய்து வைத்திருந்தாலும், இன்று தேனுடைக்கமலத்திரு வாகிய பெரியபிராட்டியாரை முன்னிட்டு உன்னைச் சரணமடையும்படியான பாக்கியம் எனக்கு நேர்ந்ததனால் இனி நான் யமபுரம் சென்று வருந்த வேண்டிய ப்ரஸக்தியில்லை;

உன் திருவடிகளையே கிட்டி ஆநந்திக்க வழி ஏற்பட்டுவிட்டது என்று தம்முடைய மகிழ்ச்சியை வெளியிட்டாரென்றுணர்க.

“நானுடைத் தவத்தால்”என்றது என்னுடைத்தவத்தால் என்றபடி.

இவருடைய தவமாவது என்ன? என்றால், எம்பெருமானுடைய திருவருளையே தம்முடைய தவமாகச் சொல்லிக்கொள்வர்கள் ஆழ்வார்கள்.

உன்னருளாலே உன்னடி வந்து பணிந்தேனென்றபடி.

————–

ஏதம் வந்து அணுகா வண்ண நாம் எண்ணி எழுமினோ தொழுதும் என்று இமையோர்
நாதன் வந்து இறைஞ்சும் நைமி சாரணி யத்து எந்தையைச் சிந்தையுள் வைத்து
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலி செய் மாலை தான் கற்று வல்லார்கள்
ஓத நீர் வையகம் ஆண்டு வெண் குடைக் கீழ் உம்பரும் ஆகுவர் தாமே–1-6-10-

பதவுரை

ஏதம் வந்து அணுகா வண்ணம்

“துக்கங்கள் நம்மிடம் வந்து சேராத வகையை
நாம் எண்ணி

நாம் எண்ணியிருப்போமாகில்
தொழுதும் எழு மின் என்று

(நைமிசாரண்யத்திலேபோய்த்) தொழுவோம் வாருங்கள்” என்று சொல்லி

(தேவர்களெல்லாரையுங்கூட்டிக்கொண்டு)

இமையோர் நாதன் வந்து

தேவேந்திரன் வந்து
இறைஞ்சும்

ஆச்ரயிக்கப்பெற்ற
நைமிச அரணியத்து எந்தையை

நைமிசாரண்யத்தில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானை
சிந்தையுள் வைத்து

தியானம் செய்து
காதல் மிகுந்த

பகவத்பக்தி அதிகரிக்கப்பெற்ற
கலியன்

திருமங்கையாழ்வார்
வாய் ஒலி செய்மாலை

அருளிச் செய்த இச்சொல் மாலையை
கற்று வல்லுநர்கள் தாம்

அப்யஸித்துத் தேறினவர்கள்
ஓதம்நீர் வையகம்

கடல் சூழ்ந்த இப்பூமண்டலத்தை
வெண் குடை கீழ் ஆண்டு

வெளுத்த குடை நிழலின் கீழே இருந்துகொண்டு அரசாட்சி செய்தபின்பு
உம்பரும் ஆகுவர்

நித்யஸூரிகளோடும் சேரப்பெறுவர்கள்.

இமையோர் நாதனாகிய இந்திரன் தனது பரிவாரங்களை யெல்லாம் அழைத்து நாம் எல்லாரும் நைமிசாரணியத்துள் சென்று எம்பெருமானை ஸேவிப்போம் வாருங்கள்;

ஸேவித்தோமாகில் நம் முடைய ஏதங்களெல்லாம் ஓடிப்போய்விடும்’ என்று சொல்லி எல்லாரையும் கூட்டிக்கொண்டு வந்து ஸேவித்திருக்குமிடமாம் நைமிசாரணியம்.

அவ்விடத்தில் அரண்ய ரூபியாக ஸேவைஸாதிக்கின்ற எம்பெருமான் விஷயமாகத் திரு மங்கையாழ்வாரருளிச் செய்த இச்சொல்மாலையை ஓதவல்லவர்கள், இவ்வுலகத்து அநுபவங்களில் விருப்பமுண்டாகில் அவற்றை உண்டுகளித்தபின் நித்ய ஸூரிகளின் கோஷ்டியிலும் சென்று சேர்ந்து நித்யாநந்தம் அநுபவிக்கப்பெறுவர்கள் என்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.

———–

அடிவரவு:- வாணிலா சிலம்பு சூதினை வம்பு இடும்பையால் கோடிய நெஞ்சினால் ஏவினார் ஊன் ஏதம் அங்கண்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: