அவதாரிகை:-
கீழ்த் திருமொழியில் வதரிவணங்குதுமே என்று ஸ்ரீபதரிகாச்ரமத்திற்கு ஆதாரமான திருமலையை வணங்கப் பாரித்தார் ; பதரீநாதன் எழுந்தருளியிருக்கும் ஸந்நிதிமாத்திரம் இவர்க்கு உத்தேச்யமன்று; அந்த ஸந் நிதிக்கு ஆதாரமான திருமலை முழுதுமே உத்தேச்யமா கையாலே அது தன்னைப் பேசினார் கீழே.
வழியடைவே மலையுச்சியிற்சென்று பதரிகாச்ரமமென்னும் ஸந் நிதியையும் அதில் எழுந்தருளியிருக்கிற ஸ்ரீநரநாராயணப் பெருமாளையும் அநுபவித்துப் பேசுகிறதாயிருக்கிறது இத்திருமொழி.
“தாட்கடிமையென்று தமையுணரார்க் கெட்டெழுத்துங் கேட்க வெளியிட்டருளுங் கேசவனை – வேட்கையொடு, போவதரிதானாலும் போய்த் தொழுவோம் நெஞ்சமே, மாவதரியாச்சிரமத்து.” என்ற நூற்றெட்டுத் திருப்பதியந்தாதிப் பாசுரம் இங்கு நினைக்கத்தக்கது.
முன்னொரு காலத்தில் குருசிஷ்ய க்ரமத்தை உலகத்தில் அனைவர்க்கும் நன்கு விளக்குவதற்காக நானென்னும் சிஷ்யனும் நாராயணனென்னும் குருவுமாக ஸ்ரீபதரிகாச்ரமத்தில் எம்பெருமான் அவதரித்து, சிஷ்யனுக்குக் குரு திருமந்திரத்தை உபதேசித்தருளின விடம் இது என்பது ஸம்ப்ரதாயம்.
எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்.
ஏனம் முனாகி யிரு நிலம் இடந்து அன்று இணை யடி யிமையவர் வணங்க
தான வனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்த வென் தலைவன்
தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நன்னறு மலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே —1-4-1-
பதவுரை
முன் அன்று |
– |
முன்னொரு காலத்தில் |
இணை அடி |
– |
(தனது) உபய பாதங்களைத் |
இமையவர் வணங்க |
– |
தேவர்கள் வந்து வணங்குமாறு |
ஏனம் ஆகி |
– |
மஹாவராஹரூபியாகி |
இரு நிலம் இடந்து |
– |
விசாலமான பூ மண்டலத்தைக் கோட்டு நுனியாற் குத்தி யெடுத்தவனாயும், |
தானவன் ஆகம் |
– |
இராவணணுடைய சரீரமானது |
தரணியில் புரள |
– |
பூமியிலே (செத்துப்) புரளும்படி |
தடசிலை குனித்த |
– |
பெரிய வில்லை வளைத்தவனாயுமிருக்கிற |
என் தலைவன் |
– |
அஸ்மத் ஸ்வாமி |
(எங்கேயுள்ளான் என்னில்;) |
||
வானவர் |
– |
தேவர்கள், |
தேன் அமர் சோலை கற்பகம் பயந்த |
– |
தேன் நிறைந்த நந்தனவனத் திலேயுள்ள கல்ப வ்ருக்ஷங்கள் கொடுத்த |
தெய்வம் நல் நறு மலர் |
– |
திவ்யமாய் நல்ல மணம் மிக்க பூக்களை |
கொணர்ந்து |
– |
கொண்டு வந்து ஸமர்ப்பித்து |
வணங்கும் |
– |
வணங்குமிடமாய் |
கங்கையின் கரை மேல் |
– |
கங்கையின் கரையிலுள்ள தான |
வதரி ஆச்சிரமத்து |
– |
ஸ்ரீபதரிகாச்ரமத்திலே |
உள்ளான் |
– |
எழுந்தருளியிருப்பவன்.
—— |
ஸ்ரீதேவி பூதேவிகட்காக அரிய பெரிய காரியஞ்செய்த மஹாநுபாவன் எழுந்தருளியிருக்குமிடம் ஸ்ரீபதரிகாச்ரமம் என்கிறார்.
முதலடியில் பூதேவிக்குக் காரியஞ் செய்தமையும், இரண்டா மடியில் ஸ்ரீதேவிக்குக் காரியஞ் செய்தமையுஞ் சொல்லுகிறது.
பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துப் போன ஹிரண்யாக்ஷனைக் கொன்று பூமியைக் கொணர்ந்து பழையபடி விரிப்பதற்காகவும், பூமிக்கு நேர்ந்த பிரளயாபத்தைப் போக்கியருளுதற்காகவும் திருமால் வராஹாவதாரம் செய்தருளினதை முதலடியிற் கூறினர்.
ஸ்ரீதசரத ராமனாய்த் தோன்றி இராவணனை ஸம்ஹரித்து ஸ்ரீ தேவியின் காரியம் செய்தமையை இரண்டாமடியிற் கூறினர்.
இமையவர் வணங்க என்பது நடுநிலைத் தீபகமாய் முன்னும் பின்னும் அந்வயிக்கும். “இமையவர் வணங்க ஏனமாகி” என்றும் “இமையவர் வணங்கத் தடஞ்சிலை குனித்த” என்றும் அந்வயிப்பது. தேவர்கள் வணங்கும்படியாக அவதரித்தவன் என்றும், தேவர்கள் வணங்கி வேண்டிக்கொண்டதனாலே அவதரித்தவன் என்றும் இருவகையும் பொருள் படும்.
தானவனாகம் தரணியில்புரள = இங்கே தானவன் என்று ராக்ஷஸராஜனா கிய இராவணனைச் சொல்லுகிறது. கெட்டகாரியஞ் செய்பவர்களை யெல்லாம் ஆஸுரயோனிகளென்று சாஸ்த்ரம் சொல்லுகையாலே இராவணனைத் தானவ னென்னக் குறையில்லை.
“தையலாள் மேல் காதல்செய்த தானவன் வாளரக்கன்” என்று மேலேயும் அருளிச் செய்வர்.
”ஏனமுனாகி” என்றெடுத்த வரா ஹாவதாரப்ரகரணத்திற்குச் சேர, தானவன் என்பதற்கு ஹிரண்யாக்ஷனென்கிற அஸுரனை அர்த்தமாகச் சொல்லலாமாயினும் தடஞ்சிலை குனித்த என்ற ஸ்வாரஸ்யம் பொருந்துகைக்காக இராவணனையே அர்த்தமாக அருளிச் செய் தார் பெரியவாச்சான் பிள்ளையும்.
இப்படி நிலமகளிருவர்க்கும் காரியஞ் செய்த பெருமான் தான் என்றைக்கும் அஸ்மதாதிகளுக்கும் காரியஞ் செய்வதற்காக ஸ்ரீபதரிகாச்ரமத்திலே நித்ய ஸந்நிதிபண்ணி எழுந்தருளியிருக்கிறா னென்கிறார். இந்திரன் முதலிய தேவர்கள் தேனொழுகுகின்ற கற்பக நறுமலர்களைக் கொணர்ந்து வணங்குமிடமாயும் கங்கைக் கரையிலுள்ள தாயுமிருக்கிற ஸ்ரீபதரி காச்ரமத்திலே வாழ்பவன்.
வணங்கும் என்ற அடைமொழி கங்கையிலே அந்வயிக்கவுமாம் வதரியாச்சிரமத்திலே அந்வயிக்கவுமாம்.
”வதரியாச்சிராமத்துள்ளானே ” என்று எங்கும் பாடம் வழங்கி வருகின்றது. ரா என்று நீட்டவேண்டிய காரண மொன்றுமில்லை. ‘ ‘பதரிகாச்ரமம் என்ற வடசொல் : வதரியாச்சிரமம்’ என்று திரியுமேயன்றி ரகரம் நீண்டுவரக் காரணமில்லை.
”வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல், விரித்தல் தொகுத்தல் வருஞ் செய்யுள் வேண்டூழி” என்ற நன்னூற் சூத்திரத்தைக் கொண்டு நீட்டலுக்கு உபபத்தி சொல்ல வேண்டும். வேண்டுழி என்றாராகலின் அந்த நீட்டல் இங்கு வர ப்ரஸக்தியில்லை.
‘வதரியாச்சிராமத்துள்ளானே’ என்ற பாடத்தில் குற்றங்குறையொன்று மில்லா திருக்க நீட்டல் விகாரம் ஏதுக்கு? ஆயினும் எங்குமுள்ள பெரியோர்களெல்லாரும் ஒருமிடறாக நீட்டியே ஒதுகின்றனராதலால் அப்பாடத்தை இன்று நாம் மறுப்பது தகுதியன் றென்று கொண்டு யாமும் அப்பாடத்தையே ஆதரிக்க முற்பட்டோம்.
கற்று ணர்ந்த பெரியோர்கள் இதனை விமர்சிக்கக் கடவர்கள்
——————
கானிடை யுருவைச் சுடுசரம் துரந்து கண்டு முன் கொடும் தொழில் உரவோன்
ஊனுடை யகலத்தடு கணை குளிப்ப உயிர் கவர்ந்துகந்த வெம் மொருவன்
தேனுடைக் கமலத் தயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு
வானிடை முது நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யா ச்சிராமத்துள்ளானே——1-4-2-
பதவுரை
கானிடை |
– |
காட்டிலே |
உருவை |
– |
(மாரீசனாகிய) மாயா மிருகததை |
முன் கண்டு |
– |
கண்ணெதிரில் பார்த்து |
(அதன் பின்னே சென்று) |
||
சுடு சரம் துரந்து |
– |
(அதன் மேல்) தீக்ஷ்ணமான பாணத்தைப் பிரயோகித்தவனும் |
கொடு தொழில் உரவோன் |
– |
கொடுமையான தொழிலை யுடையனாய் பலசாலியான வாலியினுடைய |
ஊன் உடை அகலத்து |
– |
மாம்ஸமான மார்விலே |
அடு கணை குளிப்ப |
– |
தீக்ஷ்ணமான பாணத்தை அழுத்தி |
உயிர் கவர்ந்து |
– |
(அவனது பிராணனை அபஹரித்து |
உகந்த |
– |
மகிழ்ந்தவனுமான |
எம் ஒருவன் |
– |
விலக்ஷணனான அஸ்மத்ஸ்வாமி (எவ்விடத்திலுள்ளா னென்றால்) |
தேன் உடை கமலத்து அயனொடு |
– |
தேனையுடைய(திருநாபிக்) கமலத்தில் பிறந்த பிரமனோடு கூட |
தேவர் |
– |
மற்றுமுள்ள தேவர்களும் |
சென்று சென்று |
– |
பலகால் வந்து |
இறைஞ்சிட |
– |
வணங்கப் பெற்றதும் |
பெருகு வானிடை முது நீர் கங்கையின் கரைமேல் |
– |
பெருகுகின்ற புராதனமாக ஆகாசகங்கைக் கரைமீது உள்ளதுமான |
வதரி ஆச்சிராமத்து |
– |
ஸ்ரீபதரிகாச்ரமத்திலே |
உள்ளான் |
– |
எழுந்தருளியிருக்கிறான். |
பெருமாளையும் பிராட்டியையும் பிரிப்பதற்கு மாயமான் வடிவுகொண்டு வந்த மாரீசனை ஒழித்தபடியையும், ஆச்ரிதனான ஸுக்ரீவனுக்கு விரோதியான வாலியை ஒழித்தபடியையும் முன்னடிகளில் அருளிச் செய்கிறார்.
இராமபிரானும் ஹீதாபிராட்டியும் பஞ்சவடியில் எழுந்தருளியிருக்கும் போது சூர்ப்பணகையின் கெட்ட நடத்தை காரணமாக ஜநஸ்தாநத்திலுள்ள அரக்கர்களை யெல்லாம் இராமன் வேரறுக்க நேர்ந்தகாலத்து அங்கு இராமபாணத்துக்குத் தப்பிப் பிழைத்து ஒளித்து ஓடிப்போன அகம்பநன் இலங்கைக்குச் சென்று ஜனஸ்தான மடங்கலும் பாழ்பட்ட செய்தியையும் இராமன் ஒருவராலும் வெல்லமுடியாதவ னென்பதையும் சொல்லி ‘ஸீதையை அபஹரித்துக் கொண்டு வந்தால் அந்த வருத்தத்தினால் இராமன் முடிந்து விடக்கூடும்’’ என்றான்.
இராவணன் அவனது சொற்படியே ‘ஸீதையைக் கொள்ளை கொள்ள உபாயமென்?’ என்று யோசித்து அங்கு நின்றும் புறப்பட்டு மாரீசனிருக்கு மிடத்திற்கு வந்து “நீ எனக்கு ஓருதவி செய்ய வேணும்” என்று சொல்லிக் தன் நினைவை வெளியிட,
அது கேட்ட மாரீசன் “அப்பா இராவணா! அந்த மஹாநு பாவனுடன் உனக்குத்வேஷம் உதவாது; இந்த இராமன் சிறு பிள்ளையாயிருக்கும்பொழுதே விச்வாமித்ரயாகத்தில் அவருடைய பாணத்துக்கு இலக்காகி நான் பட்டபாடு இன்னும் மறக்கமுடியவில்லை; அத்திருநாமம் செவிப்படும் போதே என் உடல் நடுங்குகின்றது; இப்பேச்சை விட்டுவிடு; இதை நெஞ்சிலும் நினையாதே’ என்று ஒழுங்காக உபதேசிக்க,
அதைக் கேட்டு இராவணன் இலங்கைக்குப் போய்விட்டான். பிறகு சூர்ப்பணகை சென்று தான் மூக்கறுப் புண்டபடியையும், தாசரதிகளுடைய ஸௌந்தர்ய பராக்ரமாதி குணங்கள் எல்லை யற்றிருக்கிறபடியையும் வீதையின் இருப்பையுஞ் சொல்லி; “இராகவனை நீ எவ்விதத்திலாவது பங்கஞ்செய்யாவிடில் நீ ஆண்பிள்ளையே யல்ல” என்று கூறி இரா வணனை நிந்தித்துக்கீழே விழுந்து புரண்டு அழ,
இராவணன் மறுபடியும் மாரீசனிடஞ் சென்று நயபயங்களினால் அவனைத் தன் சொல்வழிப்படுத்திக்கொண்டு அம் மாரீசனும் தானுமாய்ப் புறப்பட்டு வந்து தான் ஓரிடத்தில் ஒளிக்திருந்தான். மாரீசன் தனது மாயாசக்தியினால் பொன் மானின் வடிவு எடுத்துக்கொண்டு வீதையின் பார்வையில் மேயத் தொடங்கினான்.
அப்பொன்மானை ஸீதை கண்டு அதைப் பிடித்துத் தரவேணுமென்று ஒரே பிடிவாதமாக இராமனிடம் சொன்னாள். அதற்கு இணங்கிய இராகவன் இளையோனைப் பிராட்டிக்குக் காவலாக வைத்துவிட்டுத் தான் வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டு மானின் பின்னே போக அந்தமான் கொஞ்சங்கொஞ்சமாக ஒதுங்கி ஒதுங்கிப் போய் அக்காட்டில் நெடுந்தூரம் இராகவனை இழுத்துக்கொண்டு போய்விட்டது.
அப்பொழுது இராகவன் “இவன் யாரோ அரக்கன்” என்று தெளிந்து அம்புகளை அவன் மீது எறிந்தார். அதனால் அடியுண்ட மாரீசன் மானுருவைவிட்டு நிஜரூபத்துடன் கீழே விழுந்து “ஹா லக்ஷ்மணா! ஹா ஸீதே! கெட்டேன்” என்று இராகவனைப்போல் கூச்சலிட்டுக்கொண்டு மரணமடைந்தான் என்ற வரலாறு இங்கு அறியத்தக்கது.
கானிடை உருவை= தண்டகாரண்யத்தில் வந்த மானை என்றபடி. உரு என்று மானுக்குப் பெயர்.
கொடுந்தொழிலுரவோன் என்று வாலியை நினைக்கிறது. இராமன், தன் விஷயத்தில் யாதொரு அபராதமும் செய்தறியாத வாலியைக் கொன்றது பிசகு என்று சொல்லுமவர்கட்கும் ஸமாதாநம் சொல்லுகிறவர் போல் கொடுந்தொழில் என்று வாலிக்கு அடைமொழி கொடுக்கிறார். வாலி இராமன் விஷயத்தில் தீங்கு ஒன்றும் செய்யாவிடினும் கொடியவர்களைத் தண்டித்தல் கொற்றவனுடைய கடமையாதலால் கண்டித்தனனென்க.
எவ்வகைப் பெருந்தீங்கு செய்திருந்தாலும் சரணமடைந்தால் அவர்களைப் பாதுகாக்க வேண்டியதென்கிற சிறந்த தருமத்கை ஸுக்ரீவன் விஷயத்தில் வாலி கைவிட்டதனாலும், பிரான் மனைவியைக் காதலித்துக்கவர்தல், தம்பியினிடம் பகைபாராட்டுதல், வலியழிந்து புறங்கொடுத்து ஓடுகின்றவனைத் துரத்தித் துரத்திக்கொல்லத் தொடங்குதல் முதலிய தீச்செயல்கள் வாலியிடம் இருந்ததனாலும்–
சரணாகதரக்ஷணத்தையே விரதமாகக் கொண்டவனும் ஏகபத்நீ விரதமுடையவனும் தம்பியைத் தன்னுயிர் போலக் கொள்பவனும், வலியிழந்த பகைவனை ( இன்று போய் நாளைவா’ என்று அன்போடு சொல்லி விடுத்தருளும் மஹாவீரனுமான சக்ரவர்த்தித் திருமகன் வாலியை அழிக்கலானான் என்று காட்டுகிறார் கொடுந் தொழிலுரவோன் என்பதனால்.
உரவோன் = உரம் என்று வலிவுக்குப் பெயர்; பலசாலிகளில் மிகப் பிரசித்தனாதலால் உரவோன்’ என்ற சொல்லைக்கொண்டே வாலியைக் குறிப்பிடுகிறார். உத்தர ஸ்ரீராமாயணத்தில் முப்பத்தொன்பதாவது ஸர்க்கத்தில் வாலியினது வலியின் பெருமை விசித்திரமாக விவரிக்கப்பட்டுள்ளது. அதனை இங்கே சுருக்கி யுரைப்போம் ;
பலசாலிகளைப் பலாத்காரமாகச் சண்டைக்கழைத்து வெற்றிபெறவேணு மென விரும்பி பூமிமுழுமையும் திரியத்தொடங்கின இராவணன் கிஷ்கிந்தை யிற்சென்று வாலியைத் தன்னுடன் போர் புரிய விளித்தனன் ; அப்போது அங்கு வாலியில்லாமையால் அங்கிருந்த ஒரு வாநரன் வந்து, ‘அமர்புரிய ஆவல்கொண்ட அரக்கர் தலைவரே! உமக்கு எதிர்நிற்கவல்ல வாலி இப்பொழுது இங்கில்லை; நான்கு ஸமுத்ரமுஞ் சென்று ஸந்தியோபாஸநஞ் செய்து இன்னு மொரு முஹூர்த்தத்திற்குள் இவ்விடம் திரும்பிவருவார்; அதுவரை இங்கே காத்திரும். அவர் வந்தவுடனே உமக்கு மரணம் வித்தம்; அதற்குள்ளேயே மரணமடைய விரும்பி விரைகுவீராகில் உடனே தென் கடலுக்குச் செல்லுக; அங்கு நிலத்திலெழுந்த நெருப்புப்போலே வாலி வீற்றிருக்கக் காண்பீர்” என்று கூறினன்.
அதனைச் செவியுற்ற இராவணன் உடனே விமானமேறித் தென்கடலை நோக்கிச்சென்று அங்கு அந்தி தொழுதலில் ஏகாக்ரமாக நின்ற வாலியைக்கண்ணுற்று விமானத்தினின்றுமிறங்கி அப்படியே வாலியைப் பிடித்துக் கொள்ள வேண்டுமென்றெண்ணி அடி ஓசைப்படாது விரைவாக நடந்து சென்ற னன்.
இதனைக் கீழ்க்கண்ணாற் கண்ட வாலி சலியாது அங்கனமே நிற்க இராவணன் மெல்ல அருகில் வந்தவுடனே தன்னைப் பிடிக்கக் கைநீட்டிய அவனைத் தான் முன்னே பற்றிப் பிடித்தெடுத்துக் கக்ஷத்திலிடுக்கிக்கொண்டு அப்படியே ஆகாயத்தில் எழும்பி அதிக வேகமாகச் சென்று மற்ற மூன்று கடல்களிலும் வைதிகச்சடங்குகளைச் செய்துமுடித்து
இராவணனைச் சுமந்தவாறே புறப்பட் டுக் கிஷ்கிந்தாபுரி சேர்ந்து ஒரு தோப்பில் இறங்கினதும் இராவணனைக் கக்ஷத் தினின்றும் கீழேவிடுத்து நகைத்து’ ஓகோ! தாங்கள் எங்கிருந்து இப்பொழுது வருவது?’ என வினவினான்.
வாலியினது செய்கையால் மிக்க வியப்புற்ற ராவணன் மிகவுமிளைப்புற்றுக் கண்களை வெருள வெருள விழித்து நோக்கி ‘உனது வலியே வலி ; உனது வீரியமே வீரியம்’ என்று பலவாறு புகழ்ந்து பேசி அவனோடு ஸ்நேஹஞ் செய்து கொண்டான். இப்படிப்பட்ட பெருவீரனை வாலியை உரவோன் என்றல் மிகப் பொருந்துமன்றே.
அவனுடைய மாம்ஸ ப்ரசுரமான மார்விலே கொயைம்பு அழுந்தும்படி பண்ணி அவ்வழியாலே அவ னுயிரை நீக்கி (ஆச்ரிதனான ஸுக்ரீவனுடைய விரோதியைப் போக்கப்பெற்றோம்’ என்று மன மகிழ்ச்சி கொண்ட மஹா நபாவன் எழுந்தருளியிருக்கு மிடம் ஸ்ரீபதரிகாச்ரமம்.
தாமரையிற் பிறந்த நான் முகன் முதலிய தேவர்கள் ‘நான் முன்னே, நான் முன்னே’ என்று ஸ்பர்த்தித்து அவகாஹிக்கப் பெற்றதும் மேன்மேலனப் பெருகிவருகின்ற தீர்த்தத்தையுடையதுமான கங்கையாற்றின் கரையிலுள்ள தாம் அந்த ஆச்ரமம்.
பெருகுவானிடை முதுநீர் கங்கையின் கரைமேல் வதரியாச்சிரமத்து-தேனுடைக்கமலத் தயனொடு தேவர் சென்று சென்றிறைஞ்சிட உள்ளான்” என்று அந்வயிப்பதும் பொருந்தும்.
அயன் = அஜன் ; அ- திருமாலிடத்தினின்று, ஜன்-தோன்றினவன். முதுநீர்= புதிதாகச் சுரந்த நீர் அல்ல ;
(இமம் மே கங்கே யமுநே ஸரஸ்வதி) என்று உபநிஷத்திலே சொல்லப்பட்டுள்ளமை யால் வேதம் போலவே நித்யமான நதி என்க.
——————-
இலங்கையும் கடலும் அடலருந்திப் பின் இரு நிதிக் கிறைவனும் அரக்கர்
குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் கொழும் சுடர் சுழன்ற
விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில் வெண் துகில் கொடி யென விரிந்து
வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே—1-4-3-
பதவுரை
முன் |
– |
ஸ்ரீராமாவதாரத்தில் |
இலங்கையும் |
– |
லங்காபுரியென்ன |
கடலும் |
– |
(அதற்கு அகழான) தெற்கு ஸமுத்ரமென்ன |
அடல் அருதுப்பின் இரு நிதிக்கு இறைவனும் |
– |
ஒருவராலும் வெல்ல முடியாத பலத்தையுடையனாய்ப் பெரிய நிதிகளுக்கு ஸ்வாமியான ராவணனென்ன |
அரக்கர் குலங்களும் கெட |
– |
ராக்ஷஸஜாதியென்ன ஆகிய இவையெல்லாம் ஒழியும்படியாக |
கொடுதொழில் புரிந்த கொற்றவன் |
– |
கடுமையான காரியங்களைச் செய்தருளின மஹாப்ரபு (எவ்விடத்திலுள்ளா னென்றால்) |
கொழு சுடர் சுழன்ற விலங்கவில் உரிஞ்சி |
– |
ஸூர்யன் சுழன்று வரப்பெற்ற (மேரு) மலை வரைக்கும் சென்று முட்டி |
மேல் நின்ற விசும்பில் |
– |
மேலேயிருக்கிற ஆகாசத்திலே |
வெண் கொடி துகில் என விரிந்து |
– |
வெளுத்த த்வஜபடமென்ன லாம்படி பரந்து |
வலந்தரும் |
– |
(வேகத்தாலே) மிடுக்கையுடையதும் |
மணி நீர் |
– |
அழகிய தீர்த்தத்தை யுடையதுமான |
கங்கையின் |
– |
கங்கைநதியினுடைய |
கரை மேல் |
– |
கரையின்மேலுள்ள |
வதரியாச்சிராமத்து |
– |
ஸ்ரீபதரிகாச்ரமத்திலே |
உள்ளான் |
– |
எழுந்தருளியிருப்பவன். |
ஒருவரால் அழிக்க வொண்ணாத லங்கா புரியும் அதற்கும் அகழாகி ரக்ஷகமாயிருந்த தெற்கு ஸமுத்ரமும், இராவணனும், அவனுக்குத் துணையாயிருந்த ராக்ஷஸஜாதியடங்கலும் நாசமடையும்படி தனது கொடுமையான பராக்கிரமத்தைச் செலுத்திக் காரியஞ்செய்த ராஜாதி ராஜன் எழுந்தருளியிருக்குமிடம் வதரியாச்சிரமம்.
இலங்கையும் இராவணனும் அரக்கர் குலங்களும் கெட்டது உண்மை; கடல் கெடவில்லையே; “கடலும் கெட” என்று இங்கே அருளிச்செய்தது என்? என்னில்; கடலரசனை நோக்கி ‘இலங்கைக்குச் செல்ல வழிவிட வேணும்’ என்று சரணாகதி பண்ணி வேண்டின் போது அவன் அஹங்கரித்திருக்கவே “***”–ஸாகரம் சோஷயிஷ்யாமி = கடலைவற்றச் செய்துவிடுகிறேன்” என்று சீறிச்சிவந்த கண்ணினனாய் அம்புதொடுத்தனனாதலால் “கடல்கெடக் கொடுந்தொழில் புரிந்த கொற்றவன் ” என்னக்குறையில்லை யென்க. கடலிடையே அணைகட்டின அருந்தொழி லைக் கூறியவாறுமாம்.
அடலருந்துப்பின் இருநிதிக்கிறைவன் = துப்பு –ஸாமர்த்தியம்; வர பலத்தாலும் புஜபலத்தாலும்’ எனக்காரும் நிகரில்லை’ என்று செருக்குற்றுத் திரிந்தவன் என்று கருத்து. குபேரனிடமிருந்த சங்கநிதி பத்மநிதிகளை இராவணன் கவர்ந்து கொண்டதுபற்றி இருநிதிக்கிறைவனாயினன்.
இப்படிப்பட்ட ராவணாதிகளை அழித்தவனான பெருமான். எழுந்தருளியி ருக்குமிடமாகிய வதரியாச்சிரமம் கங்கையின் கரைமேலுள்ளது; அக்கங்கை எப்படிப்பட்டதென்னில்; கொழுஞ்சுடர் சுழன்ற விலங்கலி லுரிஞ்சி மேல் நின்ற விசும்பில் வெண்துகிற் கொடியென விரிந்து வலந்தரு மணிநீருடையது ; (அதாவது)- கொழுஞ்சுடர் என்று ஸுர்யனைச் சொல்லுகிறது;
விலங்கல் என்று மலைக்குப் பெயர்; கொழுஞ்சுடர் சுழன்ற விலங்கலாவது மேருமலை; மேரு பர்வதத்தைச் சுற்றித்திரிவானிறே ஸூர்யன். (ஸ்ரீவிஷ்ணுபுராணம் இரண்டாவது அம்சத்தில் எட்டாவது அத்தியாயம் நோக்கத்தக்கது.) அந்த மேருமலை தேவலோகத்தை அளாவியிருப்பதனாலும், ” ***”- மேரு ப்ருஷ்டே பதித்வோச்சை ‘நிஷ்க்ராந்தா சசிமண்டலாத்-ஜகத: பாவநார்த்தாய யா ப்ரயாதி சதுர்த்திசம்.” என்று ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் (2-8-112.) சொல்லியிருப்பதனாலும் “கொழுஞ்சுடர் சுழன்ற விலங்கலிலுரிஞ்சி ” எனப்பட்டது.
மேல்நின்ற விசும்பில் வெண்துகில்கொடியென விரிந்து = வெண்ணிறமான கங்கை நீர் விசும்பின்மீது ப்ரவஹிப்பதைப் பார்த்தால்-மாடமாளிகைகளின் உச்சியில் நாட்டப்படுகிற தவஜங்களில் கட்டப்பட்டுள்ள வெளுத்த துணிகள் காற்றில் அசைந்து பரம்புவது போலிருக்கின்றதென்று உத்ப்ரேக்ஷிக்கிற படி
—————-
துணி வினி யுனக்குச் சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு
பிணி யொழித்தமரர் பெரு விசும்பு அருளும் பேரருளாளன் எம்பெருமான்
அணி மலர்க் குழலாரரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர்
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே–1-4-4-
பதவுரை
மனமே |
– |
நெஞ்சமே!, |
இனி உனக்கு துணிவு சொல்லுவன் |
– |
இதுமுதலாக உனக்கு இருக்க வேண்டிய உறுதியைச் சொல்லுகிறேன் (கேள்); |
தொண்டர்கள் தமக்கு |
– |
ஆச்ரிதர்களுக்கு |
பிணிஒழித்து |
– |
வியாதிகளைப்போக்கி |
அமரர் பெரு விசும்பு அருளும் |
– |
நித்ய ஸூரிகளுடையதான பரமபதத்தை (அவர்கட்கு) அளித்தருளாநின்ற |
பேர் அருள் ஆளன் |
– |
பரமதயாளுவான |
எம்பெருமான் |
– |
ஸர்வேச்வரனை |
தொழுது எழு |
– |
வணங்கி உஜ்ஜீவிக்கக் கடவை; |
(அப்பெருமான் எவ்விடத்திலுள்ளானென்னில்;) |
||
அணி நீர் |
– |
(கங்கையிலுள்ள) அழகிய ஜலமானது |
மலர் அணி குழலார் அரம்பையர் |
– |
புஷ்பங்களை யணிந்த கூந்தலையுடைய அப்ஸரஸ் ஸ்த்ரீகளினுடைய |
துகிலும் |
– |
சேலைகளையும் |
ஆரமும் |
– |
ஹாரங்களையும் |
வாரி வந்து |
– |
திரட்டிக்கொண்டுவந்தும் |
மணி கொழித்து |
– |
ரத்னங்களைத் தள்ளிக்கொண்டு வந்தும் |
இழிந்த |
– |
ப்ரவஹிக்கப்பெற்ற |
கங்கையின் |
– |
கங்காநதியினுடைய |
கரை மேல் |
– |
கரைமேலுள்ள |
வதரி ஆச்சிரமத்து |
– |
ஸ்ரீபதரிகாச்ரமத்திலே |
உள்ளான் |
– |
எழுந்தருளியிருக்கிறான். |
நெஞ்சே! இப்போது உனக்கு உறுதியாக ‘ஒரு நல்வார்த்தை சொல்லுகிறேன் கேள். அதுயாதெனில்; தொண்டர்களுடைய ‘விரோதியைப் போக்கிப் பரமபதத்தை அளிக்கின்ற பேரருளாளன் ஸ்ரீ பதரிகாச்ரமத்தில் எழுந்தருளியிராநின்றான்; அங்கே சென்று அவனை நீ வணங்கி உஜ்ஜீவிக்கக்கடவை ; இதுவே உனக்கு நான் உரைக்கும் உறுதிச்சொல்.
அந்த வதரியாச்சிரமம் கங்கைக்கரையிலுள்ளது; கங்கை எப்படிப்பட்ட தென்னில்; கண்ணன் செய்கிற காரியமெல்லாம் செய்யும் அக்கங்கை தானும்; அவன் ஓ “ஆற்றிலிருந்து விளையாடுவோங்களைச், சேற்றாலெறிந்து வளை துகில் கைக்கொண்டு, காற்றிற் கடியனாய் ஓடி” என்றபடி ஆய்ச்சிகளின் துகில்களையும் ஹாரங்களையும் வாரிக்கொண்டு ஓடுவது போல்,
மேலுலகத்து மாதர்களுடைய வஸ்த்ரங்களையும் முக்தாஹாரம் முதலியவற்றையும் வாரிக்கொண்டும் பல பல ரத்னங்களையும் தள்ளிக்கொண்டும் பெருகி ஓடுகின்றதாம் கங்கை.
பெரிய ஆறுகள் தம்மிடத்து நீராடிக் கொண்டிருப்பவர்களுடைய வஸ்த்ர பூஷணாதிகளை அடித்துக்கொண்டுவருதல் இயல்பு. அரம்பையர்- தெய்வப் பெண்கள். ஆரம் — ஹாரம் என்ற வடசொல் திரிபு.
————
பேய் இடைக்கிருந்து வந்த மற்றவள் பெரு முலை சுவைத்திட பெற்ற
தாய் இடைக்கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த வென் தலைவன்
சேய் முகட்டுச்சி யண்டமும் சுமந்த செம் பொன் செய் விலங்கலில் இலங்கு
வாய் முகட்டிழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே —1-4-5-
பதவுரை
வந்த |
– |
(யசோதையின் வேஷங்கொண்டு)வந்தவளான |
பேய் |
– |
பூதனையினுடைய |
இடைக்கு இருந்து |
– |
இடுப்பிலேயிருந்துகொண்டு |
அவள்தன் |
– |
அப்பேய்மகளுடைய |
பெரு முலை |
– |
பெரிய முலையை |
சுவைத்திட |
– |
ருசிபார்த்து உண்ண |
பெற்ற தாய் |
– |
(அதைக்கண்ட) யசோதையானவள் |
இடைக்கு இருத்தல்அஞ்சுவன் என்று தளர்ந்திட |
– |
(‘நான் இனி இவனை) இடுப்பிலே எடுத்துக் கொள்ள அஞ்சுகிறேன்’ என்று சொல்லிக் கூசும்படியாக |
வளர்ந்த |
– |
வளர்ந்தவனான |
எம் தலைவன் |
– |
அஸ்மத் ஸ்வாமி |
(எவ்விடத்திலுள்ளானென்னில்;) |
||
சேய் முகடு உச்சி |
– |
உயர்ந்த கொடுமுடியின் உச்சியிலே |
அண்டம் சுமந்த |
– |
அண்டத்தைச் சுமக்கிற |
செம் பொன் செய்விலங்கலில் |
– |
மேரு பர்வதத்திலே |
இலங்கு |
– |
விளங்குகின்ற |
வாய்முகடு |
– |
விசாலமான சிகரத்தில் நின்றும் |
முன் இழிந்த |
– |
ப்ரவஹிக்கின்ற |
கங்கையின் |
– |
கங்கைநதியினுடைய |
கரை மேல் |
– |
கரைமீதுள்ள |
வதரியாச்சிராமத்து |
– |
ஸ்ரீபதரிகாச்ரமத்திலே |
உள்ளான் |
– |
எழுந்தருளியிருப்பவன். |
கீழ்ப்பாட்டில் “ அணிமலர்க்குழலாராம் பையர் துகிலும் ஆரமும் வாரிவந்து ” என்ற சொற்போக்கில் கண்ணபிரானுடைய திருவிளையாடல் ஆழ்வார்க்கு நினைவுக்கு வாவே, மற்றொரு க்ருஷ்ண சேஷ் டித்த்தை ஸ்மரித்துப்பேசுகிறார் இதில்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலையுண்டு அவளை முடித்தவரலாறு கீழ்த் திருமொழி முதல்பாட்டினுரையிற் கூறப்பட்டது. வந்த பேயிடைக்கிருந்து அவள் தன் பெருமுலை சுவைத்திட என்று அந்வயம்.
யசோதையைப்போலவே வடிவு கொண்டு வந்த பூதனையினுடைய மடியிலே நன்மகன் போல இருந்து அவளது முலையையுண்டு அவளை முடிப்பதுஞ்செய்த ஸ்ரீ கிருஷ்ணசிசுவைக் கண்ட தாயானவள், ‘அப்பப்ப! இனி இப்பிள்ளையை மடியிலெடுத்துக் கொள்ளக்கூடாது! முலையுண்கிறபாவனை யில் உயிரை முடிக்கும் பிள்ளை இது; இதன் இயல்வுக்கு அஞ்சவேண்டியிருக் கிறது’ என்று கூசும்படியாக அவ்வளவு .சூரனாய்வளர்ந்த தலைவன் எழுந்தருளி யிருக்குமிடம் வதரியாச்சிரமம்.
பெற்ற தாய் இடைக்கிருத்தலஞ்சுவனென்று தளர்ந்திட = இப்பிள்ளையை நாம் மடியிலே வைத்து முலைகொடுத்துப் பழக்கினபடியாலன்றோ இவன் கண் டார் மடியிலும் பொருந்தி முலையுண்கிறது ; இனி நாம் இவனை இடுப்பிலெடுத் துக் கொள்ளவேகூடாது என்று கூசினாள் யசோதை என்னவுமாம்.
வதரியாச்சிரமம் கங்கையின் கரையிலுள்ளது; அக்கங்கை எப்படிப்பட்ட தென்னில்; ஓங்கியிருந்துள்ள சிகரத்தின் உச்சியிலே அண்டத்தைத் தரிக்கிற செம்பொன்மலை யாதொன்றுண்டு-மேருபர்வதம்; அதிலே விளங்குகின்ற விசாலமான சிகரத்தினின்றும் இழிந்ததாம். அண்டம்-மேலுலகம். அண்டமும் என்ற விடத்து உம்மை-இசை நிறை
————
தேரணங்கல்குல் செழும் கயல் கண்ணி திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து
பாரணங்கிமிலேறேழு முன்னடர்த்த பணி முகில் வண்ணன் எம்பெருமான்
காரணம் தன்னால் கடும் புனல் கயத்த கரு வரை பிள வெழக் குத்தி
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே–1-4-6-
பதவுரை
தேர் அணங்கு அல்குல் |
– |
தேர்போன்று அழகிய நிதம்பத்தை யுடையளும் |
செழுகயல் கண்ணி திறத்து |
– |
அழகிய கயல்போன்ற கண்களையுடையளுமான நப்பின்னைக்காக |
ஒரு மறத்தொழில் புரிந்து |
– |
கோபம் மிக்க செயலைச்செய்து |
பார் அணங்குஇமில் |
– |
பூமியிலுள்ளாரெல்லாரும் நடுங்கும்படியான முசுப்பையுடைய |
ஏறு ஏழும் முன் அடர்த்த |
– |
ஏழு எருதுகளையும் கண்முன்னே வலியடக்கின |
பனி முகில் வண்ணன் |
– |
குளிர்ந்த மேகம்போன்ற வடிவையுடையனான |
எம்பெருமான் |
– |
எம்பெருமான் (எங்கே எழுந்தருளியிருக்கிறானென்றால்) |
காரணம் தன்னால் |
– |
பகீரதப்ரயத்நமாகிற காரணத்தினால் |
கடு புனல் கயத்த |
– |
வேகமாகப் பெருகுகின்ற ஜலம் நிறைந்த பள்ளங்களையுடையதும் |
கரு வரை பிளவுஎழ குத்தி |
– |
பெரியதொருமலைபிளந்துபோம்படி (அம்மலையை) உடைத்துக்கொண்டு |
வாரணம் கொணர்ந்த |
– |
(அங்குள்ள) யானைகளைத் தள்ளிக் கொண்டுவந்து ப்ரவஹித்ததுமான |
கங்கையின் |
– |
கங்காநதியினுடைய |
கரைமேல் |
– |
கரையின்மீதுள்ள |
வதரியாச்சிராமத்து உள்ளான் |
– |
ஸ்ரீபதரிகாச்ரமத்திலே உள்ளான். |
கண்ணபிரான் தொட்டிற்பருவத்திற் செய்த சேஷ்டித் மொன்றைக் கீழ்ப்பாட்டி லருளிச்செய்தார்; யௌவனப்பருவத்திற் செய்ததோர் செயலைச் சொல்லுகிறாரிதில்.
கும்பனென்னும் இடையர் தலைவனது மகளாயும் நீளாதேவியின் அம்சமாகப் பிறந்ததனால் “நீளா’ என்ற பெயரால் வழங்கப்பட்டு வருபவளுமான நப்பின்னைப்பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக அவள் தந்தை கந்யாசுல்கமாகக் குறித்தபடி யார்க்கும் அடங்காத அஸுராவேசம்பெற்ற ஏழு எருதுகளையும் கண்ணபிரான் ஏழு திருவுருக் கொண்டு சென்று வலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்து கொண்டனன். அப்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான்.
தேரணங்கல்குல் = அல்குலுக்குத் தேரை உவமை கூறுதல் கவிமரபு. அணங்கு என்று அழகுக்கும் பேராகையாலே தேர்போன்று அழகிய’ என்று உரைக்கப்பட்டது. இனி, அணங்கென்று வருத்தத்திற்கும் வாசகமாதலால் தேரை வருத்துகின்ற அல்குல் என்னவுமாம். தேர் இதற்கு உவமையாக முடியாது வருந்துகின்ற தென்க.
மறத்தொழில்புரிந்து = எருதுகளின் மேல் கோபாவேசத்தைக் காட்டி என்றவாறு. ‘பாரணங்கிமில் ” என்ற விசேஷணம் அவ்வெருதுகளின் பயங் கர்த் தன்மையைக் காட்டுதற்காம். பார் – பூமியிலுள்ளார்க்கு ஆகுபெயர். இமில் – முசுப்பு. பெருமிடுக்குடைய எருதுகளோடு போர் செய்தவளவிலும் திருமேனி நிறத்திற்குச் சிறிதும் வாட்டமுண்டாகவில்லை யென்பது விளங்க “ஏறேழு மடர்த்த பனி முகில்வண்ணன் ” என்றார்.
இப்படிப்பட்ட எம்பெருமான் எழுந்தருளி யிருக்குமிடமான் ஸ்ரீபத்ரி காச்ரமம் எவ்விடத்துள்ளது ?– கங்கையின் கரைமேலுள்ளது. அக்கங்கை எப்படிப்பட்டது ? – காரணந்தன்னால் கடும்புனல் கயத்த கருவரை பிளவெழக் குத்தி வாரணங் கொணர்ந்ததாம்.
இதன் கருத்து யாதெனில் ; (ஸகரசக்ர் வர்த்தி அச்வமேதயாகஞ் செய்தது; ஸகரகுமாரர்கள் கபிலமாமுனியால் நீறா யொழிந்தது, அம்சுமான் ஸகரனது யாகக் குதிரையைக் கொண்டு வந்தது; பகீரதன் கங்கைக்காகத் தவஞ் செய்து அதனைக் கொண்டுவந்தது – இந்த வரலாறுகள் ஸ்ரீராமாயணம் பாலகாண்டத்தில் 38+43. ஸர்க்கங்களிற் காணத்தக்கன.)
பகீரதன் கங்கையை அவதரிப்பிக்கிறபோது நடுவழியிலே ஒரு மலை தகைந்துகொண்டு நின்றதாகவும், கங்காப்ரவாஹமானது மிக்க வேகமாக வரும் போது விசையினால் அந்த பாலையை இரண்டு பிளவாம்படி குத்திப் புறப்பட்டு அம்மலையிலிருந்த யானைகளையும் தள்ளிக்கொண்டு வந்திழிந்ததாகவும் சில புராணங்களில் சொல்லப்படுகிறதாம்.
மற்றொரு விதமாகவும் சொல்லுவதுண்டு ;– பகீரதன் கொணர்ந்த கங்காப்ரவாஹத்தை மலை தகைந்தவளவிலே அவன் இந்திரனை நோக்கித் தவம்புரிந்தனனாம்; தபஸ்ஸினால் ப்ரஸந்தனான இந்திரன் தனது யானையை அனுப்பி அம்மலை இருபிளவாம்படி குத்துவித்ததாகவும், பிறகு அந்த யானை கங்காப்ரவாஹத்தைத் தட்டுத் தடங்கலின்றிக் கொண்டு புறப்பட்டதாகவும் புராணப்பிரஸித்தியுண்டாம்.
இவ்விரண்டு வகையான யோஜனைகளும் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் அருளிச் செய்யப்பட்டவை.
முதல் யோஜனையில், வாரணங்கொணர்ந்த என்றது-(கங்கையைத் தகைந்த மலையிலிருந்த) யானைகளை உருட்டிக்கொண்டு வந்திழிந்த என்றபடி. இரண்டாம் யோ:ஜனையில், (இந்திரனுடைய) யானையினால் மலையைப்பிளந்து கொண்டு வரப் பட்ட என்றபடி.
காரணந்தன்னால் = கபிலமாமுனியின் சாபத்தால் நீறாய்க்கிடந்த தன் பாட்டன்மாரை சுத்தி செய்தற்காகக் கங்கையைப் பெற வேணுமென்று பகீரதன் தவம்புரிந்தமையாகிற காரணத்தினால் என்றபடி. கங்கையைக் கொண்டுவருகிற போது மலை தகைந்த வளவிலே இந்திரனை நோக்கித் தவம்புரிந்த காரணத்தினால் என்னவுமாம்.
கடும்புனல்கயத்த என்றவிடத்து, கயத்த என்பதற்கு “தகைந்த” என்று சிலர் பொருள் கூறுவர்; அஃது ஆதாரமற்றதாகும். கைத்த என்று பாடமிருப்பின் அப்பொருள் கொள்ளலாகும். கயத்த என்றே எங்கும் பாடம் வழங்குகின்றது.
பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த வியாக்கியானத்தில்- “பகீரதன் கங்கையை அவதரிப்பிக்கிறபோது நடுவழியிலே ஒரு மலை தகைந்துகொடு நின்றதாய் அத்தை இரண்டு பிளவாம்படி குத்தி யானை களையு முருட்டிக்கொண்டு இவ்வருகே போந்து இழிந்ததாகச் சொல்லக் கடவது ”என்றருளிச் செய்திருப்பதைக்கண்டு, கயத்த என்பதற்குத் தகைந்த என்று சிலர் பொருள் வரைந்திட்டனர்;
மலையைக் குத்திக்கொண்டு இழிவதற்கு ப்ரஸக்தியை நிரூபணம் செய்வதற்காகப் பெரியவாச்சான் பிள்ளை ஒரு மலை தகைந்துகொண்டு நின்றதாக அருளிச்செய்தாரேயன்றி, கயத்த என்பதற்கு அது பொருள் என்று உரைத்தாரல்லர்.
ஆகையாலே கயத்த என்பதற்குத் தகைந்த என்று பொருள் கொள்ள வழியுமில்லை ; அவசிய்மு மில்லை. கயத்த என்றது கயத்தையுடைய என்றபடி.
கயமாவது தண்ணீர் தேங்கும் பள்ளம். வெகு வேகமாகப் பெருகுகின்ற தண்ணீர் நிறைந்த பள்ளங்களுடைய என்று பொருளாயிற்று. இது கங்கைக்கு விசேஷணமாகவு மாம்; கருவரைக்கு விசேஷணமாகவுமாம்.
கருவரை என்ற விடத்துக் கருமையாவது பெருமை. பெரியமலை என்றபடி. வரை என்பது பால்பகா அஃறிணைப் பெயராதலால் ‘மலைகள்’ எனப் பன்மைப் பொருள் பட்டு, கங்கை பெருகி வரும்போது வழியில் பல பல மலைகள் நேர்படுமாதலால் அவற்றை யெல்லாம் தன் வேகத்தாலே பேதித்துக்கொண்டு அங்குள்ள யானைகளையும் உருட்டிக் கொண்டு ப்ரவஹித்ததாக உரைத்தலும் பொருந்தும்–
————–
வெந்திறல் களிறும் வேலை வாய் அமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரர்க்கு அருளி எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான்
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே—-1-4-7-
பதவுரை
வேலை வாய் வெம்திறல் களிறும் |
– |
கடலில் நின்றுமுண்டான மிக்க மிடுக்கையுடைய ஐராவதமென்கிற யானையையும் |
அமுதும் |
– |
அம்ருதத்தையும் |
விண்ணொடு |
– |
ஸ்வர்க்கலோகத்தையும் |
விண்ணவர்க்கு அரசும் |
– |
தேவர்களுக்கெல்லாம் அரசனாயிருக்குந் தன்மையையும் |
இந்திரற்கு அருளி |
– |
இந்திரனுக்குக் கொடுத்தருளி |
எமக்கும் ஈந்தருளும் |
– |
நமக்கும் வேண்டிய அருளைச் செய்கிற |
எந்தை எம் அடிகள் எம்பெருமான் |
– |
ஸர்வேச்வரன் (எங்கே எழுந்தருளியிருக்கிறானென்னில்) |
அந்தரத்து அமரர் |
– |
ஸ்வர்க்கத்திலுள்ள தேவர்களெல்லோரும் |
அடி இணை வணங்க ஸேவித்துப் |
– |
எம்பெருமானுடைய திருவடிகளை ஸேவித்துப் பிரார்த்திக்க |
ஆயிரம் முகத்தினால் அருளி |
– |
(அவர்களது வேண்டுகோளின்படி) பலமுகமாகப் பிரவஹிக்கும்படி (கங்கையை நோக்கி) நியமித்தருள |
மந்தரத்து இழிந்த |
– |
(அவ்வண்ணமாகவே) மந்தர மலையினின்றும் பெருகின |
கங்கையின் கரை மேல் |
– |
கங்கையின் கரைமீதுள்ள |
வதரியாச்சிராமத்து உள்ளான் |
– |
ஸ்ரீபதரிகாச்ரமத்திலே உள்ளவன்.’ |
திருமால் தேவர்களின் பிரார்த்தனைக் கிணங்கிக் கடல்கடைந் தருளின காலத்து, கடையப்பட்ட அக்கடலினின்று ஐராவதயானை, உச்சைச்ச்ரவஸ் என்னுங் குதிரை, விஷம், சந்திரன், கல்ப வ்ருக்ஷம், அமுதம் முதலியன உண்டாயினவென்று புராணங்கள் கூறும். அவற்றில் தேவேந்திரனுக்கு ஐராவதயானையையும் அமிருதத்தையும் தேவர்கட் குத் தலைவனாயிருக்கும் ஸாம்ராஜ்யத்தையும் கொடுத்தருளி, அந்தரங்க அடியவர்களான நமக்குத் தன்னையே கொடுத்தருளி உபகரித்த எம்பெருமான் வதரி யாச்சிரமத்துள்ளான்;
அவ்வாச்சிரமம் எங்குள்ளது?–கங்கையின் கரைமேலுள்ளது. அக்கங்கை எப்படிப்பட்டது?– அந்தரத்தமரரடியிணைவணங்க ஆயிரமுகத்தினாலருளி மந்தரத் திழிந்தது.
அதாவது-கங்கையானது ஒரு முகமாக வந்து இழிந்தால் பெரிய விசையோடே வருகிறமிடுக்கைக் கடல் பொறா தென்று தேவர்கள் எம்பெருமான் திருவடிகளைப் பணிந்து ‘ கங்கை பல முக மாகப் பெருகும்படி அருள் புரிய வேணும்’ என்று பிரார்த்திக்க,
அவன் ‘ அப்படியே ஆகுக’ என்று அருள் கூர்ந்து கங்கையை நியமித்த வளவிலே கங்கை பல முகமாகப் பெருகிற்றாம்.
“அந்தரத் தமரர் அடியிணை வணங்க ” என்று இன்னாருடைய அடியை வணங்கினராகச் சொல்லாமையால், எம்பெருமானுடைய அடியிணையை வணங்கினராகக் கொள்ளப்பட்டது.
அன்றி, கங்காதேவியின் திருவடிகளிலேயே வணங்கிப் பிரார்த்தித்தனரென்றுங் கொள்ளலாம்.
”அன்றிக்கே, கங்கை தன்னை யாச்ரயிக்க அதுதானருளுகையாகவுமாம் ” என் றார் பெரியவாச்சான் பிள்ளையும்.
எம்பெருமானடியிணையை வணங்கினராகக் கொள்ளும் யோஜனையில், மூன்றாமடியின் இறுதியிலுள்ள அருளி என்றதை எச்சத்திரிபாகக் கொள்ளவேணும்;
ஆயிரமுகத்தினால் பிரவஹிக்கும்படி அருள என்றபடி. ஆயிரமுக மென்றது அனேகப்ரகாரமாக என்றபடியாமத்தனை.
“மேருவிலே யிழிந்து மந்தரத்திலே யிழிந்து ஹிமவானிலே யிழிந்து இங்கனே பலவகைகளாலே வரும்படியைச் சொல்லக் கடவதிறே” என்ற வியாக்கியான ஸ்ரீஸுக்தி காண்க-
——————
மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன்னிறத்து உரவோன்
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்
தான் முனிந்திட்ட வெந்திறல் சாபம் தவிர்த்தவன் தவம் புரிந்து உயர்ந்த
மா முனி கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே——1-4-8-
பதவுரை
ஒருகால் |
– |
(பஞ்சவடியில் எழுந்தருளியிருந்த) ஒரு ஸமயத்தில் |
மான் முனிந்து |
– |
மாரிசமாயமானின் மேற் சீறி |
வரி சிலை வளைத்த மன்னவன் |
– |
அழகிய வில்லை (அந்த மான் மேலே) வளைத்தெறிந்த செருக்கனாயும் |
பொன் நிறத்து உரவோன் |
– |
பொன்போன்ற நிறத்தையுடைய ஹிரண்யனென்னுமொரு பலிஷ்டனுடைய |
ஊன் முனிந்து |
– |
உடலை ஒழித்து விடுவதாகச் சீற்றங்கொண்டு |
அவனது உடல் இரு பிளவு ஆ |
– |
அவ்வசுரனுடைய சரீரம் இரண்டு பிளவாம்படி |
உகிர் நுதி மடுத்து |
– |
நகங்களின் நுனியை (அவ்வுடலில்) அழுத்தினவனாயும், |
அயன் தான் அரனை முனிந்து |
– |
நான்முகக் கடவுள் சிவன் மேல் சீறி |
இட்ட |
– |
(அவனுக்குக்) கொடுத்த |
வெம் திறல் சாபம் தவிர்த்தவன் |
– |
மிகவும் க்ரூரமான சாபத்தைப் போக்கினவனாயுமுள்ள எம் பெருமான் (எங்குள்ளானெனில்;) |
தவம் புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த |
– |
தபஸ்விகளில் தலைவரான பகீரதர் கொண்டுவந்த |
கங்கையின் கரைமேல் |
– |
கங்கையின் கரைமீதுள்ள |
வதரியாச்சிராமத்து உள்ளான் |
– |
ஸ்ரீபதரிகாச்ரமத்திலுளன். |
மாரீசனாகிற மாயமான் மேலே அம்பு எய்து அதனை முடித்தவனும், பரமபக்தனான ப்ரஹ்லாதனுக்குக் கொடுமையியற்றி மஹாத்ரோஹியான ஹிரண்யகசிபுவின் மார்பைப் பிளந்தொழித்தவனும், பிரமனால் சிவனுக்கு நேர்ந்த ப்ரஹ்மஹத்திசாபத்தைத் தொலைத்தருளினவனுமான எம்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான்.
அயனரனைத்தான் முனிந்திட்ட வெந்திறல்சாபந்தவிர்த்த வரலாறு:– ஒரு காலத்திலே பரமசிவன் தன்னைப்போலவே பிரமனும் ஐந்து தலையுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குதற்கு இடமாயிருக்கின்ற தென்று கருதி அவனது சிரமொன்றைக் கிள்ளியெடுத்துவிட, அக்கபாலம் அப்படியே சிவன்கையில் ஒட்டிக்கொள்ளுதலும், அவன் ‘இதற்கு என் செய்வது’ என்று கவலைப்பட,
தேவர்களும் முனிவர்களும் ‘இப்பாவந் தொலையப் பிச்சையெடுக்கவேண்டும் : என்றைக் குக் கபாலம் நிறையுமோ, அன்றைக்கே இது கையைவிட்டு அகலும்’ என்று உரைக்க,
சிவபிரான் பலகாலம் பலதலங்களிலுஞ்’ சென்று பிச்சை யேற்றுக் கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக, பின்பு ஒரு நாள் பதரிகாச்ரமத்தை யடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி இரந்தபோது அப்பெருமான் ‘அக்ஷயம்’ என்று பிக்ஷையிட, உடனே அது நிறைந்து கையைவிட்டு அகன்றது என்பதாம்.
தவம்புரிந்துயர்ந்தமாமுனிகொணர்ந்த என்பதற்கு இரண்டுவகையாகப் பொருள் கூறுவர்;-
விச்வாமித்ரன் க்ஷத்ரியனாயிருக்கச் செய்தேயும் தவம் புரிந்து ப்ரஹ்மர்ஷித்வமாகிற உயர்த்தி பெற்றானாகையாலே தவம்புரிந்துயர்ந்த மாமுனி யென்று விச்வாமித்ரனைச் சொல்லுகிறது.
அவன் கொணர்ந்த கங்கை யென்றது. ஸ்ரீராமலக்ஷ்மணர்களைத் தன்னுடைய யஜ்ஞரக்ஷணார்த்தமாக அழைத்துக்கொண்டு போனபோது கங்கையின் வரலாறுகளைச் சொல்லிக் கொண்டே கங்கைக்கரைமேல் அழைத்துக்கொண்டு போயினனாதலால். தவம் புரிந்துயர்ந்த மாமுனியினால் (ஸ்ரீராமலக்ஷ்மணர்களைத் தன் கரைமீது) கொண்டு வரப்பெற்ற கங்கை என்ற தாயிற்று.
இப்பொருள் கொள்வது அரியவழி யென் றெண்ணின ஸ்ரீபராங்குச தாஸரென்பவர் “மாமுனி புகன்ற கங்கையின் கரை மேல்” என்று பாடத்தைத் திருத்திக்கொண்டால் நன்றாகுமே என்றாராம்;
அதை நம்பிள்ளை கேட்டருளி உள்ள பாடத்திற்கு நாம் பொருளுரைக்கக் கட மைப் பட்டிருக்கிறோமேயன்றி இல்லாததொரு பாடத்தைக் கற்பிக்க வல்லோமல்லோம்” என் றருளிச் செய்தாராம்.
இனி, தவம்புரிந்துயர்ந்தமாமுனி என்று பகீரதமுனியையே சொல்லிற்றாய், அவனால் கொண்டுவரப்பட்ட கங்கை யென்று உரைத்தலும் ஒன்று.
—————-
கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க் குரை கடல் உலகுடன் அனைத்தும்
உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான்
அண்டமூடறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கவனி யாளலமர பெருகு
மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே—–1-4-9-
பதவுரை
கொண்டல் |
– |
மேகங்களையும் |
மாருதங்கள் |
– |
வாயுஸமூஹத்தையும் |
குலம் வரை |
– |
குலபர்வதங்களையும் |
தொகு நீர் குரை கடல் |
– |
நீர் நிறைந்து கோஷம் செய்கிற கடல்களையும் |
உலகு அனைத்தும் |
– |
மற்றுமெல்லா வுலகங்களையும் |
உடன் உண்ட மா வயிற்றோன் |
– |
ஏககாலத்தில் அமுதுசெய்த பெரிய திருவயிறுடையனும், |
ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான் |
– |
சந்திரஸூர்யர்கள் பொருந்தியிருக்கிற மேலுலகத்திற்கும் காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனுமான எம்பெருமான் (எங்குளன் எனில்) |
அன்று |
– |
பகீரதன் கங்கையை அவதரிப்பித்த அப்போது |
அண்டம் ஊடு அறுத்து |
– |
ப்ரஹ்மலோகத்தை இடைவெளி யாக்கிக்கொண்டு |
அந்தரத்து இழிந்து |
– |
ஆகாசத்தில் வந்திழிந்து |
அங்கு |
– |
அங்கு நின்றும் |
அவனியாள் அலமர பெருகும் |
– |
பூமி நடுங்கும்படியாக (பூமியிலே) ப்ரவஹித்ததும் |
மண்டு மா மணி நீர் |
– |
நெருங்கி நிறைந்து தெளிந்த ஜலத்தை யுடையதுமான |
கங்கையின் கரை மேல் |
– |
கங்கையின் கரைமேலுள்ள |
வதரியாச்சிராமத்து உள்ளான் |
– |
ஸ்ரீபதரிகாச்ரமத்திலுள்ளான். |
ஸகல பதார்த்தங்களையும் பிரளயங் கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து நோக்கினவனும் உபயவிபூதி நாதனு மான எம்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான்.
“ஒண்சுடரேய்ந்த உம்பருமூழியுமானான்” என்றது உபயவிபூதி நாதத்வத்தைச் சொன்னபடி. எங்கனே யென்னில்;
உம்பரும் ஆனான் என்பதனால் மேலுலகத்திற்கு நிர்வாஹகனாயிருக்குந் தன்மை சொல்லிற்று.
‘ஊழியுமானான்’ என்பதனால், “****’’ ந காலஸ் தத்ர வை ப்ரபு: ” என்னப் பட்ட விண்ணுலகுக்குப் பிரதிகோடியாய், காலம் நடமாடக் கடவதான இவ்வுலகுக்கு நிர்வாஹகனாயிருக்குந் தன்மை சொல்லிற்று. (ஊழி–காலம்.)
(அண்டமுடறுத்து இத்தியாதி.) அண்டமென்று ப்ரஹ்மலோகத்தைச் சொல்லுகிறது;
அதை ஊடறுத்து-நடுவே வழிபண்ணிக்கொண்டு, அந்தரத்து இழிந்து அதற்குக் கீழ்ப்பட்ட அந்தரிக்ஷலோகத்திலே வந்திழிந்து, அங்கு அவனியாள் அலமரப் பெருகும் – அங்கு நின்றும், பூமிப்பிராட்டி பொறுக்க மாட்டாமல் தடுமாறும்படி (பூமியிலே வந்து) பெருகுகின்றதாம்.
அப்படிப்பட்ட கங்கையின் கரைமேலுள்ளது வதரியாச்சிரமம். மாருதம், அண்டம், அவநி-வடசொற்கள்
————-
வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானை
கரும் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாயொலி செய்த பனுவல்
வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே–1-4-10-
பதவுரை
வரும் திரை மணி நீர் கங்கையின் கரை மேல் |
– |
(பெரிய வேகத்தோடு) வருகிற அலைகளை யுடைத்தாய் தெளிந்த ஜலத்தை யுடைத்தான |
கங்கையின் கரை மேல் |
– |
கங்கையின் கரை மேலே |
வதரியாச்சிராமத்து உள்ளானை |
– |
ஸ்ரீபதரிகாச்ரமத்தில் எழுந்தருளியிருக்கிற |
கரு முந்நீர் கடல் வண்ணனை |
– |
கறுத்த மூன்று வகைப்பட்ட நீரையுடைய கடல் போன்ற நிறத்தனான ஸ்ரீமந் நாராயனனை. |
எண்ணி |
– |
அநுஸந்தித்து |
கலியன் |
– |
திருமங்கையாழ்வார் |
வாய் ஒலி செய்த |
– |
திருவாய்மலர்ந்தருளிய |
பனுவல் |
– |
பாசுரமாய் |
வரம் செய்த |
– |
சிறந்ததான |
ஐந்தும் ஐந்தும் |
– |
இப்பத்துப்பாசுரங்களையும் |
வல்லார்கள் தாம் |
– |
ஓதவல்லவர்கள் |
வெண் குடை கீழ் |
– |
வெண் கொற்றக் குடையின் கீழ் வாழ்ந்து கொண்டு |
இரு கடல் உலகம் ஆண்டு |
– |
பெரிய கடல்சூழ்ந்த இப்பூமியை ஆண்டபின் |
உடன் |
– |
அடுத்தபடியாக |
வானவர் உலகு மருவி |
– |
ப்ரஹ்மலோக நிர்வாஹகராக இருந்து |
இமையவர் ஆகுவர் |
– |
(அதன் பிறகு) நித்யசூரியளாகவும் ஆவர்கள். |
இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டும் பாசுரம் இது.
பெரிய வேகத்தோடு வருகிற அலைகளையுடைத் தாய் தெளிந்த தீர்த்தத்தையுடைத்தான கங்கையின் கரைமேலே ஸ்ரீபதரிகாச்ரமத்திலே யெழுந்தருளியிருக்கிற கடல்வண்ணனான ஸ்ரீமந்நாராயணமூர்த்தியைச் சிந்தித்துத் திருமங்கையாழ்வாரருளிச்செய்த சிறந்த இப்பாசுரங்களை ஓதவல்லவர்கள், கடல் சூழ்ந்த மண்ணுலகத்தை நெடுநாள் ஆண்டபின் ப்ரஹ்மபதத்தை நிர்வஹித்து அதன்பிறகு நித்யஸுரிகளோடே ஒரு கோஷ்டியாக இருக்கப் பெறுவர்.
“ஏராரின்னிசை மாலை வல்லார் இருடீகேசனடியாரே”, “வைகுந்தமேறுவரே” என்றாற்போலே பரமபுருஷார்த்தத்தையே பலனாகச் சொல்லவேண்டி யிருக்க, இருங்கடலுலகமாள்வதான க்ஷுத்ர புருஷார்த்தத்தைப் பலனாகச் சொல்வதேன்? என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்டார்;
அதற்கு அவர் ரஸோக் தியாக ஒரு உத்தரம் அருளிச்செய்தாராம் ; அதாவது- “திருமங்கையாழ்வார் அவதரித்த பின்பு த்யாஜ்யமான ஐச்வர்யமும் பரம புருஷார்த்தமாய் விட்டது காணும்; பணமுள்ள விடங்களிற் சென்று கொள்ளையடித்து பகவத் பாகவத கைங்கரியங்கள் பண்ணுகிறவராகையாலே ஹேயமான ஐச்வரியமும் இவ்வாழ் வார் திருவுள்ளத்தால் உத்தேச்யமாய் விட்டதிறே” என்றாராம்.
ஆரார் எந்த எந்த பலன்களை விரும்பினாலும் அந்த அந்த பலன்கள் இவ்வருளிச் செயல் மூலமாகக் கிடைக்குமென்பது உண்மைப்பொருள்.
“ இத்தால் சொல்லிற்றாய்த்து– இவன் அபிஸந்தி பண்ணின வற்றை யெல்லாம் தருமென்றபடி.” என்ற பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸுக்தியும் காண்க.
கருங்கடல் முந்நீர்வண்ணனை என்றவிடத்து முந்நீர் என்பது கருங்கட லுக்கு விசேஷணம்.
முந்நீர்–ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர் (மழைநீர்) என்னும் மூன்றுவகை நீரையுடையது எனப்பண்புத்தொகையன் மொழியாகிய காரணப்பெயரென்பது பழைய கொள்கை.
இதனைமறுத்துக் கூறுகின்றார் அடியார்க்கு நல்லார். ஆற்று நீரென்பது மழைநீரே யாகையாலும், இவ்விரண்டு மில்லாதபோது ஊற்றுநீருமில்லையாகையாலும் இவற்றை முந்நீரென்பது பொருந்தாது என்று சொல்லி வேறு பொருள் கூறுகிறார் ;
அதாவது- முச் செய்கையையுடைய நீர் முந்நீரென்பதாம்.
முச்செய்கையாவது- மண்ணைப் படைத்தலும் மண்ணை யழித்தலும் மண்ணைக் காத்தலுமாம்.
நீரினின்று நிலம் பிறந்ததென வேதமோதுதலால் படைத்தலும், நீரின்றி உலகம் பிழையாதாதலால் காத்தலும், இறுதியில் நீரினால் மூடப்பட்டு உலகம் அழிதலால் அழித்தலும் ஆக முத்தொழில்களும் கடலுக்கு உரியனவாம். நச்சினார்க்கினியர் கருத்தும் இதுவே.
நம் பூருவாசாரியர்கள் முன்றுவகை நீரையுடையதென்னும் பொருளையே ஆதரிப்பர்.
முன்னீர் என றன்னகரமாகப் பாடமோதி, பழைய நீர் என்றுரைப்பாருமுண்டு: ஆதியிற் கடவுள் நீரையே படைத்தாரென்று புராணங்கூறும்.
பனுவல்- சாஸ்த்ரம்; சொல்லுமாம். வரஞ்செய்த-வரமென்று பகவத் ப்ரஸாதத்தைச் சொல்லிற்றாய், தம்முடைய கவன ஸாமர்த்தியத்தாலன்றிக்கே எம்பெருமானுடைய – இன்னருளால் செய்யப்பட்ட பாசுரமென்றபடி.
வட மொழியில் வரமென்று ச்ரேஷ்ட்ட வாசகமுமாகையாலே சிறந்ததாகச் செய் யப்பட்ட என்ற பொருளும் கொள்ளற்பாலதே-
———-
அடிவரவு- ஏனம் கானிடை இலங்கை துணிவு பேய் தேர் வெந்திறல் மான் கொண்டல் வருந்திரை கலை.
——————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
This entry was posted on November 19, 2022 at 6:35 pm and is filed under பெரிய திரு மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply