அவதாரிகை :-
வாடினேன்வாடி யென்கிற முதல் திருமொழியிலே, தமக்குத் திருமந்திரம் லபித்தபடியைப் பேசினார்.
அந்தத் திருமந்திரத்தின் அர்த்தத்தையும் கூடவே ஆராய்ச்சி செய்தருளி திருமந்த்ரார்த்தத்துக்கு எல்லை நிலமான திவ்ய தேசங்களிலே சென்று எம்பெருமானை ஸேவிக்கவேணுமென்று திருவுள்ளம்பற்றி,
திருமந்திரத்தை வெளியிட்டருளின எம்பெருமான் எழுந்தருளி யிருக்குமிடமான ஸ்ரீபதரிகாச்ரமத்தைத் தேடி வடக்கே எழுந்தருளின வளவில் திருப்பிரிதி என்னும் திவ்யதேசம் நேர்பட, இரண்டாந் திருமொழியால் அதனை அநுபவித்து,
அதன் பிறகு வதரியை வணங்கி, அதற்குப் பிறகு ஸ்ரீ பதரிகாச்ரமத்தில் ஸந்நிதி பண்ணி யெழுந்தருளியிருக்கிற ஸ்ரீமந்நாராயணமூர்த்தியைக் கீழ்த் திருமொழியால் மங்களாசாஸநஞ் செய்து,
இனி எங்குச் செல்ல வேண்டுமென்று யோசித்து நின்றவளவில், ஸ்ரீஸாளக்ராம மென்னும் திவ்யதேசத்திலே தான் எழுந்தருளியிருந்து அடியார்கட்குக் காட்சி தந்தருளுகிறபடியை எம்பெருமான் ஆழ்வாரது ஞானக்கண்ணுக்குத் தோற்றுவிக்க,
ஆழ்வாரும் தமது திருவுள்ளத்தை யழைத்து ‘நெஞ்சே! சாளக்கிராமத்தைச் சென்று சேருவோம், வா’ என்கிறார் இத்திருமொழியில்.
ஸௌபரி என்கிற ஒரு மாமுனிவன் நீர்நிலையிலிருந்து கொண்டு தவம் புரியா நின்றவளவில் அங்கு மீன்களெல்லாம் கூடிக்களித்து விளையாடா நின்றமையைக் கண்ணுற்று ‘நாமும் இப்படி குடும்ப வாழ்க்கையிற் கூடி நின்று சிற்றின்பம் நுகர்ந்து களிக்கவேணும்’ என்று ஆவல் கொண்டு மாந்தாதா என்னும் அரசனுக்குப் பல பெண்கள் இருப்பதாக உணர்ந்து அவனிடஞ்சென்று தனக்குக் கன்னிகாதானஞ் செய்யுமாறு வேண்ட,
அரசன் இவருடைய கிழத் தனத்தையும் குரூபத்தையுங் கண்டு இசையகில்லாமல் ‘பெண் கொடுக்கமுடியாதென்று நம் வாயாற் சொன்னால் முனிவர் முனிந்து சபித்துவிடக்கூடும்; பெண்களிருக்குமிடத்திற்கு இவரை அனுப்புவோம்; இவரைக் கண்டு பெண்கள் காமுற்றார்களாகில் விவாஹம் செய்து கொள்ளட்டும்; இல்லையாகில் அவர்களே மறுத்து விடட்டும்; நம் தலையில் பழி வேண்டா’ என்றெண்ணி
முனிவரைப் பெண்களிருக்குமிட மனுப்ப, முனிவர் அங்குச் செல்லும்போதே தமது தவ வலிமையால் திவ்ய ஸுந்தரமான ரூபத்தை ஏன்று கொண்டு போய் அவர்கள் முன்னே நின்றவளவில் அங்கிருந்த ஐம்பது பெண்களும் நானே இவரை மணந்து கொள்வேன், நானே இவரை மணந்துகொள்வேன் என்று போட்டி போட்டுக்கொண்டு மேல்விழுந்தவாறே,
முனிவர் அத்தனை பெண்களையும் மணந்து கொள்ள விரும்பித் தமது தவவலிமையால் ஐம்பது வடிவமெடுத்து அப்பெண்களனைவரையும் விவாஹஞ் செய்துகொண்டு மகிழ்ந்திருந்தாரென்று புராணங்களில் இதிஹாஸ முண்டு.
அதுபோலவே எம்பெருமானும் ஆச்ரிதர்களான அஸ்மதாதிகளை அநுபவிப்பதற்காகப் பல பல திவ்யமங்கள விக்ரஹங்களைப் பரிக்ரஹித்து, திவ்ய தேசங்கள் தோறும் ஸந்நிதி பண்ணியிருக்கிறானாகையாலே ஆழ்வார் எங்கும் புகுந்து மங்களாசாஸநம் செய்ய விரும்பி ஸ்ரீஸாளக்ராமத்திலே செல்லுகிறாராயிற்று.
கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டலை நீரணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்ராமம் அடை நெஞ்சே —-1-5-1-
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பதவுரை
கலையும் கரியும் பரிமாவும் |
– |
மான்களும் யானைகளும் குதிரைகளுமாகிய மிருகங்கள் |
திரியும் கானம் கடந்துபோய் |
– |
திரியுமிடமான காட்டைத் தாண்டிச்சென்று |
சிலையும் கணையும் துணை ஆக |
– |
வில்லும் அம்பும் துணையாகக்கொண்டு |
வென்றி செருகளத்து சென்றான் |
– |
(தனக்கு) வெற்றியை விளைக்கவல்ல போர்க்களத்திலே எழுந்தருளினவனும், |
அலை நீர் |
– |
அலைக்கின்ற நீரையுடைய கடலிலே |
மலை கொண்டு |
– |
மலைகளாலே |
அணை கட்டி |
– |
ஸேது கட்டி |
மதிள் நீர் இலங்கை |
– |
மதிலையும் ஸமுத்ரத்தையும் காப்பாக உடைத்தான இலங்கையிலுள்ள |
வாள் அரக்கர் தலைவன் |
– |
வாளை ஆயதமாகக் கொண்ட இராவணனுடைய |
பத்து தலை |
– |
பத்துத்தலைகளையும் |
அறுத்து உகந்தான் |
– |
அறுத்துத்தள்ளி (ஆச்ரித விரோதி தொலைந்தானென்று) திருவுள்ள முகந்தவனுமான எம்பெருமானுடைய திவ்ய தேசமாகிய |
சாளக்கிராமம் |
– |
ஸ்ரீஸாளக்ராமத்தை |
நெஞ்சே அடை |
– |
மனமே!, சென்று சேர். |
(கலையுங்கரியும்.) நெஞ்சே! நீ ஸ்ரீஸாளக்ராமமென்னும் திவ்ய தேசத்தை அடைந்திடு.
அத்திருப்பதி யாருடையது ? – இராவணனது தலைகள் பத்தையும் அறுத்துகந்த இராமபிரானுடையது. இராவணன் தலைகளை யறுப்பதற்காக அப்பெருமான் என்னகாரியஞ் செய்தான்? – பலபல மிருகங்கள் நிறைந்து கிடந்த கொடிய காட்டைக் கடந்து சென்று
வில்லையும் அம்புகளையும் துணையாகக் கொண்டு யுத்த பூமிக்கு வருமளவில் கடலைக் கடந்து வரவேண்டிற்றான படியால் மலைகளைக்கொண்டு கடலிலே ஸேதுகட்டி அவ்வழியாலே இலங்கை வந்து சேர்ந்தானாயிற்று.
இப்படி ஆச்ரிதவிரோதிகளை அழிப்பதற்கு அருந்தொழில்கள் செய்யுமவனான பரமபுருஷன் நம்போல்வாருடைய விரோதிகளையும் தொலைப்பதற்குச் சாளக்கிராமத்திலே வந்து நிற்கிறான்; அங்குச் செல் வோம், வா நெஞ்சே ! என்றாராயிற்று.
காட்டின் கொடுமையைச் சொல்ல வேண்டில், யானை சிங்கம் புலி முதலிய துஷ்ட மிருகங்களையன்றோ முன்னே கூற வேண்டும்; கலையும் என்று ஸாதுவான மான்களை முன்னே கூறுவானேன்? என்னில்; மாரீசன் மாயமானாக வந்து செய்த கொடுமை வலிதாயிருந்ததனால் அந்த மான்சாதியை முன்னே கூறினரென்க.
பிராட்டி இராமனைப் பிரிந்து பட்ட வருத்தங்கட்கெல்லாம் மூலகாரணம் மாரீசனாகிற மாயமானே யாதலால் கொடிய மிருகங்களில் மான் முற்படவுரியதேயாம்.
இங்கு மானை முற்கூறியதற்கு வேறொரு வகையான காரணமுங்கூறலாம். அதாவது–மான் சாதியில் மிக நன்றி பாராட்டி முற்கூறுகின்றாரென்னலாம். மஹாத்ரோஹியான மாரீசனிடத்தில் நன்றி பாராட்டுதல் ஏதுக்கென்னில்; கேண்மின்.
சூர்ப்பணகை மூக்கறுப்புண்டு, ஜனஸ்தானத்திலிருந்த தன் தமையனாகிய கரன்பக்கல் சென்று இச்செய்தியைச் சொல்லிப் புரண்டழுது அவனுக்குக் கோபத்தை உண்டாக்கினவளவில் அக்கரன் பதினாலாயிரம் சேநாதிபதிகளையும் ஸேனைகளையும் இராமபிரானோடு போர் செய்ய அனுப்ப,
இராமன் அவர்களத்தனை பேரையும் தாம் ஒருவராகவே கொன்று வென்றிட்டு, பிறகு வந்த கரனையும் கொன்றுவிட்டு ஜனஸ்தானத்தை சூந்யமாக்கின போது அங்கு இராமபாணத்துக்குத் தப்பிப்பிழைத்து ஒளித்து ஓடிப்போன அகம்பநன் இலங்கைக்குச் சென்று ஜநஸ்தான மடங்கலும் பாழ்பட்ட செய்தியையும் இராமன் ஒருவராலும் வெல்ல முடியாதவனென்பதையும் சொல்லி ‘ஸீதையை அபஹரித்துக் கொண்டு வந்தால் அந்த வருத்தத்தினால் இராமன் முடிந்து விடக் கூடும்’ என்று தெரிவிக்க,
இராவணன் அவனது சொற்படியே ‘ஸீதையைக் கொள்ளை கொள்ள உபாயமென்?’ என்று யோசித்து அங்கு நின்றும் புறப்பட்டு மாரீசனிருக்குமிடத்திற்கு வந்து நீ எனக்கு ஓருதவி செய்யவேணும்’ என்று சொல்லித் தன் கருத்தை வெளியிட,
அதுகேட்ட மாரீசன் ‘அப்பா இராவணா! அந்த மஹாநுபாவனுடன் உனக்கு த்வேஷம் உதவாது; இந்த இராமன் சிறுபிள்ளையாயிருக்கும் பொழுதே விச்வாமித்ரயாகத்தில் அவருடைய பாணத்துக்கு இலக்காகி நான் பட்டபாடு இன்னும் மறக்கமுடியவில்லை; அத் திருநாமம் செவிப்படும்போதே என் உடல் நடுங்குகின்றது; இப்பேச்சை விட்டு விடு ; இதை நெஞ்சிலும் நினையாதே’ என்று யுக்தமாக உபதேசிக்க அதைக் கேட்டு இராவணன் இலங்கைக்குப் போய்விட்டான்.
பிறகு சூர்ப்பணகை இலங்கைக்குச் சென்று, தான் மூக்கறுப்புண்டபடியையும் தாசரதிகளுடைய ஸௌந்தர்ய பராக்ரமாதி குணங்கள் எல்லையற்றிருக்கிறபடியையும் ஸீதையின் இருப்பையுஞ் சொல்லி ‘இராகவனை நீ எவ்விதத்திலாவது பங்கஞ் செய்யாவிடில் நீ ஆண்பிள்ளையே அல்ல’ என்று கூறி இராவணனை நிந்தித்துக் கீழே விழுந்து புரண்டு அழ,
இராவணன் மறுபடியும் மாரீசனிடஞ்சென்று நயபயங்களினால் அவனைத் தன் சொல்வழிப்படுத்திக் கொண்டு அம்மாரீசனும் தானுமாய்ப் புறப்பட்டு வந்து தான் ஓரிடத்தில் ஒளித்திருந்தான். மாரீசன் இராவணனுடைய வலிகட்டாயம் பொறுக்கமாட்டாமல் மனம் நொந்து கொண்டே உடன்பட்டு வந்தானேயன்றி இராமபிரானிடத்தில் கறுக்கொண்டு வந்தானில்லை;
படுபாவியான இவ்விராவணனுக்கு உடன்பட்டு நாம் காரியஞ் செய்யாவிடில் இவன் நம்மைக் கொலை செய்யப்போகிறான். இவனுக்கு உடன்பட்டுக் காரியஞ்செய்தோ மாகில் இராமபிரான் நம்மைக் கொன்றுவிடப்போகிறார்; இப்பாவியின் கையில் நாம் கொலையுண்பதிற்காட்டிலும் அப்பரமபுருஷன் கையிற் கொலையுண்பது நற்கதிக்கு ஹேதுவாம்’ என்றெண்ணித் தன் மரணத்தைத் தீர்மானித்துக் கொண்டே வந்தானத்தனை.
பிறகு மாரீசன் பொன்மானின் வடிவெடுத்துக் கொண்டு ஸீதையின் பார்வையில் மேயத்தொடங்கி அக்காட்டில் நெடுந்தூரம் இராகவனை இழுத்துக்கொண்டு போய்விட்டான். அப்பொழுது இராகவன் ‘இவன்யாரோ அரக்கன்’ என்று தெளிந்து அம்புகளை அவன் மீது எறிந்தார்.
அதனால் அடியுண்ட மாரீசன் மானுருவைவிட்டு நிஜ ரூபத்துடன் கீழே விழுந்து ‘ஹா லக்ஷ்மணா! ஹா ஸீதே ! கெட்டேன்’ என்று இராகவனைப் போல் கூச்சலிட்டுக்கொண்டு மரணமடைந்தான். இங்கு நாம் ஆலோசிக்கவெண்டிய தென்ன வென்றால்,
இப்படி இவன் கூச்சலிட்டது இராவணனுக்கு உபகாரஞ் செய்ய வேணுமென்கிற எண்ணத்தினாலா? அல்லது அபகாரஞ் செய்யவேணுமென்கிற எண்ணத்தினாலா? என்று ஆராய வேண்டும். ‘இராவணன் கையாற் கொலை யுண்பதை விட இராமபாணத்தாற் கொலையுண்டு முடிதல் நன்று’ என்கிற எண்ணத்தோடு வந்த மாரீசனுக்கு இராவணன் திறத்தில் உபகாரஞ் செய்ய வேணுமென்கிற எண்ணமுண்டாக ப்ரஸக்தியில்லை;
நாம் மாண்டொழிவது போல் அவனையும் மாண்டொழியச் செய்துவிடவேண்டு’ மென்ற எண்ணங் கொண்டே இராகவனைப்போல் கூச்சலிட்டான்; மாரீசன் இப்படி கூச்சலிடாமல் வெறுமனே செத்திருப்பானாகில், பிராட்டி லக்ஷ்மணனைப்பிரிய நேர்ந்திராது;
இராவணன் பிராட்டியைக் கவர்ந்து கொண்டு போகவும் அது நிமித்த மாகத் தான் மாண்டுபோகவும் நேர்ந்திராது; தேவர்களின் பிரார்த்தனை ஈடேறவும் வழியிராது. மரணகாலத்தில் மாரீசன் போட்ட கூச்சலே ராவணஸம்ஹாரத்திற்கு மூலகாரணமாக நின்றமையால் ஸ்ரீராம விஷயத்திலே மாரீசன் உபகாரகனேயன்றி அபகாரகனல்லன் என்று நினைக்கத் தக்கது.
இப்பெருநன்றியைப் பாராட்டி இங்குக் “கலையும்” என்று மான் சாதியை முற்படக் கூறுகின்றார் ஆழ்வார் என்று கொள்க.
கரியும் – கரீ என்ற வடசொல் யானைக்குப் பெயர். பரி என்றும் பரிமா என்றும் குதிரைக்குப் பெயர். கலை, கரி, பரிமா என்பன பால்பகா அஃறிணைப் பெயர்களாதலால் கலைகளும் கரிகளும் பரிமாக்களும் எனப் பன்மைப் பொருள் படும். காநநம் என்ற வடசொல் கானம் எனச் சிதைந்தது
கானங்கடந்து போய் என்ற சொல்லாற்றலால் – ஒரு காட்டிலிருந்து மற்றொரு காடு, அந்தக் காட்டிலிருந்து மற்றொருகாடு என்றிப்படி காடுகளின் மேற் காடாக எழுந்தருளினமை தோற்றும். வழியில் ஒரு குக்ராமமும் இல்லை யென்ற படி. “***” = “தேவநேந வநம் கத்வா” என்றார் வான் மீகியும்.
சென்றான் வென்றிச் செருக்களத்து = அயோத்தியை விட்டுப் புறப்பட்ட பிறகு யுத்தம் நடந்த இடங்களெல்லாவற்றையும் நினைத்து “செருக்களத்துச் சென்றான்” என்கிறார்.
கரதூஷண யுத்தம் முதலிய இடைப்போர்கள் பல வுண்டே. ஒவ்வொரு யுத்தத்திலும் பெருமாளுக்கு விஜயமே கிடைத்தது பற்றி வென்றிச் செரு” என்றார். யுத்தங்களில் இளையபெருமாளும் மற்றும் வானர வீரர்களும் துணைவர்போல இருந்தாலும் தனிவீரனான தாசரதிக்கு எந்தத் துணையும் அபேக்ஷிதமல்ல என்பது தோன்ற “சிலையுங்கணையுந் துணையாக என்றார்!!
சிலையும் கணையுந் துணையாகக் கானம் கடந்து போய் மலைகொண்டலை நீரணைகட்டி வென்றிச் செருக்களத்துச் சென்றான்” என்றும் அந்வயிக்கலாம்.
வாளரக்கர்தலைவன் தலைபத்தறுத்து உகந்தான் = “ஒரு தேவதையை ஆச்ரயித்து அதன் பக்கலிலே ஒரு வாளைப் பெற்று அதைத் தனக்கு அரணாக நினைத்திருப்பானாய் துர்வர்க்கத்துக் கெல்லாம் நியாமகனாயிருக்கிற ராவணனுடைய தலைகள் பத்தையுமறுத்து
‘தேவர்களும் தந்தாமுடைய குடியிருப்புப் பெற்றார்கள்; ரிஷிகளும் தந்தாமுடைய ஆச்ரமங்களிலேயிருந்து தபஸ்ஸு பண்ணப்பெற்றார்கள்’ என்று உகந்தவன்;
அப்படி ஆச்ரிதவிரோதியைப் போக்கிப் பிற்பட்டார்க்குமுதவுகைக்காக வந்து வர்த்திக்கிற ஸ்ரீஸாளக்ராமத்தை ஆச்ரயிக்கப் பாராய் நெஞ்சே யென்கிறார்” என்ற பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸுக்தி அறிக
——————
கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும்
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான்
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும்
தடம் சூழ்ந்து எங்கும் அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-2-
பதவுரை
கடம் சூழ் கரியும் |
– |
மதஜலத்தையுடைய யானைகளும் |
பரிமாவும் |
– |
குதிரைகளும் |
ஒலி மா தேரும் |
– |
ஒலியையுடைய மஹாரதங்களும் |
காலாளும் |
– |
காலாட்களும் |
உடன் சூழ்ந்து |
– |
ஒன்றாகத் திரண்டு |
எழுந்த |
– |
கிளர்ந்து தோற்றின |
கடி இலங்கை |
– |
அரணையுடைத்தான லங்கை |
பொடி ஆ |
– |
பொடிபடும்படியாக, |
வடி வாய் |
– |
கூர்மையான வாயையுடைய |
சரம் |
– |
அம்புகளை |
துரந்தான் |
– |
பிரயோகித்தவனான இராமபிரான் (எழுந்தருளியிருக்குமிடமான) |
(சாளக்கிராமம் அடைநெஞ்சே( |
||
(அது எப்படிப்பட்டதென்றால்( |
||
இரு விசும்பில் இமையோர் |
– |
விசாலமான ஸ்வர்க்கத்திலுள்ள தேவர்கள் |
இடம் எங்கும் சூழ்ந்துவணங்க |
– |
பூமியெங்கும் வந்துபரவி ஆச்ரயிக்கத்தக்கதாய் |
மணம் கமழும் தடம் சூழ்ந்து |
– |
புஷ்பவாஸனைகள் வீசுகின்ற தடாகங்களாலே சூழப்பட்டு |
எங்கும் அழகுஆய |
– |
எல்லாப்பக்கங்களிலும் அழகையுடைத்தாயிருக்கிற |
சாளக்கிராமம்-* |
நெஞ்சே! சாளக்கிராமத்தைச் சென்று சேர்; அத்திவ்யதேசம் யாருடையது? —
கடஞ்சூழ்கரியும் பரிமாவு மொலிமாந்தேருங் காலாளுமுடன் சூழ்ந்தெழுந்த கடியிலங்கை பொடியாவடிவாய்ச் சரந்துரந்த பெருமானுடையது;- மதஜலத்தையுடையனவாய் மலைகள் வடிவெடுத்து நடந்தாற் போன்றுள்ள யானைத்திரள்களும், குதிரைத்திரள்களும், கோஷத்தை யுடைய பெரிய தேர்களும் காலாட்களும் ஆகிய இவையெல்லாம் ஒன்றாகத் திரண்டு பெரியகிளர்ச்சியோடே தோற்றின இலங்கை சுடுகாடாம்படியாகத் தீக்ஷ்ணமான அம்புகளைப் பிரயோகித்த சக்ரவர்த்தி திருமகன் எழுந்தருளி யிருக்கு மிடமென்கை.
தேவர்களும் இங்கு வந்து ஸேவிக்கும்படியாய் அழகான ஸந்நிவேசங்களை யுடையது என்கிறார் பின்னடிகளில்
நிலத்தில் எவ்வளவு அவகாசமுண்டோ அவ்வளவும் வந்து சூழ்ந்துகொண்டு சுவர்க்கத்திலுள்ள தேவர்கள் வணங்கப் பெற்றதும், பரிமளம் வீசுகின்ற பொய்கைகள் சூழ்ந்ததும் அழகியதுமான சாளக்கிராமத்தை நெஞ்சே ! அடை
————
உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா வெண் திக்கும்
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விரலாழி
வலவன் வானோர் தம் பெருமான் மருவா வரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன் சலம் சூழ்ந்து அழகாய சாள்க்கிராமம் அடை நெஞ்சே——1-5-3-
பதவுரை
உலவு திரையும் |
– |
உலாவுகின்ற அலைகளையுடைய கடலும் |
குலம் வரையும் |
– |
குலபர்வதங்களும் |
ஊழி முதலா எண்திக்கும் |
– |
காலம் முதலாகவுள்ள ஸகலபதார் த்தங்களும் எட்டுத்திசைகளும் |
நிலவும் சுடரும் இருளும் ஆய் நின்றான் |
– |
சந்திரனும் ஸூர்யனும் இருட்டும் ஆகிய இப்பொருள்களுக்கெல்லாம் அந்தர்யாமியாயிருப்பவனும் |
வென்றி விறல் |
– |
வெற்றியையும் மிடுக்கையுமுடைய |
ஆழி வலவன் |
– |
திருவாழியை வலத் திருக்கையிலே யுடையவனும் |
வானோர் தம் பெருமான் |
– |
தேவாதிதேவனும் |
மருவா அரக்கர்க்கு |
– |
(தன்னை) ஆச்ரயியாத ராக்ஷஸர்கள் விஷயத்தில் |
எஞ்ஞான்றும் சலவன் |
– |
எப்போதும் நன்மை செய்யாதவனுமாகிய எம்பெருமான் (எழுந்தருளியிருக்குமிடமாய்) |
சலம் சூழ்ந்து அழகு ஆய |
– |
நீர் நிலங்களால் சூழப்பட்டு அழகு பொருந்தியதான |
சாளக்கிராமம் நெஞ்சே! அடை. |
பண்டைநான் மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும், பிண்டமாய்விரிந்த பிறங்கொளியனலும் பெருகிய புனலொடு நிலனும், கொண்டல் மாருதமும் குரைகடலேழும் ஏழுமாமலைகளும் விசும்பும், அண்டமுந்தானாய் நின்ற வெம்பெருமான் -(பெரிய திருமொழி 5-7-1) என்னுமா போலே ஜகத்ஸ்வரூபியாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறார் ஒன்றரையடிக ளால்.
***” = “ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம.” என்று சுருதியும் சொல்லிற்று. ஸகல பதார்த்தங்களையும் சரீரமாகவுடையன் என்றபடி.
வென்றி விறலாழிவலவன் என்பதனால் அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹ முடைமை சொல்லுகிறது. அடியவர்களைக் காத்தருள்வதற்கு உறுப்பான ஸ்ரீ ஸுதர்சநாயுதத்தை வலத்திருக்கையிலே யுடையவன்.
வென்றி விறலாழி = எங்குப் போனாலும் ஜயத்துடன் திரும்பி வருவது ; அதற்கு அநுகூலமான பராக்ரமமுடையது.
மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன் = பகவத் பாகவத விஷயமென் றால் பொறுக்கமாட்டாத ஆஸுரப்ரக்ருதிகளுக்கு எப்போதும் தீங்கு செய்பவன். சலத்தையுடையவன் சலவன்; சலம் – தீராக்கோபம், வஞ்சம், பொய்.
நல்லார்க்கு மெய்யனாய் தீயார்க்குப் பொய்யனாயிருக்கும் எம்பெருமானுடைய சாளக்கிராமத்தை நெஞ்சே! அடைந்திடு-
—————
ஊரான் குடந்தை யுத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளைய
தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ்
பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டறைகின்ற
தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-4-
பதவுரை
ஊரான் |
– |
திருவூரகமென்னும் திவ்யதேசத்தை இருப்பிடமாகவுடையவனும் |
குடைந்தை உத்தமன் |
– |
திருக்குடைந்தையிலே எழுந்தருளியிருக்கிற புருஷோத்தமனும், |
ஒருகால் |
– |
முன்னொரு காலத்தில் |
(ஸ்ரீராமாவதாரத்தில்) |
||
சிலை இருகால் வளையதேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான் |
– |
வில்லினுடைய இரண்டு நுனிகளையும் வளைத்து அவிவேகிகளான ராக்ஷஸர்களுடைய சேனைத் தொகையைச் சிதைத்தவனும் |
வற்றா வருபுனல் சூழ் பேரான் |
– |
ஒருநாளும் வற்றாமல் மேன்மேலும் பெருகி வருகின்ற காவிரிநீர் சூழ்ந்த திருப்பேர்நகரில் கண்வளர்ந்தருள்பவனும் |
பேர்ஆயிரம் உடையான் |
– |
ஸஹஸ்ரநாமங்களை யுடையவனும் |
பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான் |
– |
நெருங்கி யிருக்கிற சிறகுகளை யுடைய வண்டுகள் ஆரவாரிக்கின்ற (திருத்துழாய்) மாலையையுடை யவனுமான எம்பெருமான் |
(எழுந்தருளியிருக்கிற( |
||
தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் |
– |
தாரா என்னும் நீர்ப்பறவைகள் நிறைந்திருக்கிற வயல்களாலே சூழப்பட்ட ஸ்ரீஸாளக்ராமத்தை |
நெஞ்சே!, அடை-. |
‘ஊரகம்’ என்கிற சொல் ஊர் என்று விகாரப்பட்டதாகக்கொண்டு ஊரகமென்கிற திவ்ய தேசத்தைத் தனக்கு இருப்பிடமாகவுடையவன் என்று பொருளுரைப்பது ஒருவழி.
கச்சியில் உலகளந்த பெருமாள் ஸந்நிதிக்குத் திருவூரக மென்று திருநாமம்.
ஊரான் என்பதைக் குடந்தையோடே அந்வயித்துக் குடந்தையூரான் என்று கொண்டு திருக்குடந்தையை இருப்பிடமாகவுடையவன் என்றுரைத்தலும் ஒரு வழி.
உத்தமன் – இப்படி திவ்ய தேசங்களிலே வந்து அனைவர்க்கும் எளியனாக எழுந்தருளி யிருப்பது காரணமாகத் திருக்குணங்கள் சிறப்புறப் பெற்றவன் என்றவாறு.
தேரா அரக்கர்=தேர்தலாவது ஆராய்தல் ; ஆராய்ச்சியற்ற அரக்கர் என் றது – ‘ஸாக்ஷாத் பரமபுருஷனான பெருமானோடு நாமோ எதிரிடுவது’ என்று விவேகிக்கமாட்டாமல் அறிவு கெட்டு எதிரிட்ட அரக்கர் என்றபடி.
அவர்களுடைய தேர் வெள்ளங்களைச் செற்றானென்றது – ஜநஸ்தானத்திற் செய்த கரவதத்தைச் சொல்லவுமாம்; இலங்கையிற் செய்த ராவணவதத்தைச் சொல்லவுமாம்.
வற்றாவருபுனல் சூழ்பேரான் = பேர் – திருப்பேர்நகர்; அப்பக்குடத்தான் ஸந்நிதி எனவும் ‘கோயிலடி’ எனவும் வழங்கப்படும். இத்தலம் காவிரிக்கரையிலுள்ளமை பற்றி ‘வற்றா வருபுனல் சூழ்’ எனப்பட்டது.
உள்ள நீர் வற்றாமல் மேன்மேலும் பெருகி வருகின்ற நீர் சூழ்ந்த திருப்பேர் நகரைத் தனக்கு வாஸஸ்தலமாக வுடையவன் என்கை.
பேராயிரமுடையான் – தன்னுடைய குணங்களையும் சரிதங்களையும் விளக்குகின்ற பல பல திருநாமங்களையுடையவன் என்கை.
பிறங்குசிறைவண்டறைகின்றதாரான்–பிறங்குதல் – பிரகாசித்தலும் நிறைந்திருத்தலும். பிறங்கு என்பதை சிறைக்கு விசேஷணமாக்கி உரைக்கவுமாம், தார்க்கு விசேஷணமாக்கி உரைக்கவுமாம்.
தாராவயல் சூழ்ந்த = தாரா என்று ஒரு பக்ஷிஜாதி; அது நீர் நிலங்களில் வாழ்வது . வடநூலார் பொதுப்படையாக ஸாரஸபக்ஷியென்பர்.
————
அடுத்தார்த்து எழுந்தாள் பில வாய் விட்டலற அவள் மூக்கயில் வாளால்
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன்
கடுத்தார்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஓன்று ஏந்தி இன நிரைக் காத்
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-5-
பதவுரை
அடுத்து ஆர்த்து எழுந்தாள் |
– |
மேல் விழுந்து வந்துகிட்டி ஆரவாரஞ்செய்து கிளர்ந்தவளான சூர்ப்பணகை. |
பிலம் வாய் விட்டு அலற |
– |
பிலம்போன்ற வாயைத்திறந்து கொண்டு கதறும்படியாக |
அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான் |
– |
அவளுடைய மூக்கை கூர்மையான வாளாலே (இளையவனைக் கொண்டு) அறுத்தவனும் |
விளங்கு சுடர் ஆழி |
– |
பிரகாசிக்கின்ற ஒளியையுடைய திருவாழியையுடையவனும் |
விண்னோர் பெருமான் |
– |
நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும் |
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையை நண்ணார்முன் இனம் நிரைக்காகல் ஒன்று ஏந்திதடுத்தான் |
– |
வேகத்துடன் ஆரவாரஞ்செய்துகொண்டு கிளர்ந்து வந்த கனத்த மழையை எதிரிகளான இந்திராதிகளின் கண்ணெதிரில் பசுக்கூட்டங்களை ரக்ஷிப்பதற்காக, (கோவர்த்தனமென்கிற) ஒரு மலையை ஏந்தித்தடுத்தவனுமான எம்பெருமான்(எழுந்தருளியிருக்கிற) |
தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் |
– |
தடாகங்களால் சூழப்பெற்று அழகாயிருக்கிற ஸாளக்ராமத்தை |
நெஞ்சே!, அடை-. |
அடுத்தார்த்தெழுந்தாளவள். பிலவாய் விட்டலற அவள் மூக்கை அயில் வாளால் விடுத்தான் என்று! சூர்ப்பணகையின் மூக்கறுத்தமை சொல்லுகிறது.
ஸ்ரீராமன் ஒரு வருஷகாலம் பஞ்சவடியில் எழுந்தருளியிருக்கும் போது ஹேமந்தகாலத்தில் சூர்ப்பணகை என்றொரு அரக்கி அழகிய வடிவமெடுத்து வந்து இராகவனைக்கண்டு காமவிகாரமடைந்து தன்னை மனைவியாகக் கொள்ளுமாறு விரும்ப, இராகவன் எனக்கு ஒரு மனைவி இருக்கிறாள்; என் தம்பியாகிய லக்ஷ்மணனை அடைந்தாயாகில் ஸுகமடையலாம்’ என்று சொல்ல,
அப்படியே அவள் லக்ஷ்மணனிடம் செல்ல, நான் ஒருவர்க்கு வேலைக்காரன், என்னை யடைந்தால் நீயும் வேலைக்காரியாவாய்; ஆகையால் அவரையே அடைவது உனக்கு நலம்’ என்று லக்ஷ்மணன் சொல்ல; இப்படி அங்குமிங்குமாய்த் திரிந்து இஷ்டத்தைப் பெறாமல் ‘நம் இஷ்டத்தை இந்த ஸீதை நிறைவேற வொட்டாமல் செய்கிறாளாகையால் இவளைத் தின்று விடுவோம்’ என்று அவ்வரக்கி ஸீதா தேவியிடம் ஓட,
உடனே இலக்குமணன் இராமபிரானது ஆஜ்ஞையினால் அவளைத் தகைந்து காதையும் மூக்கையும் அறுத்து அங்கபங்கஞ் செய்திட்டார் என்ற வரலாறு அறியத் தக்கது.
இவளை அங்கபங்கஞ் செய்தது இளையபெருமாளின் செய்கையாயினும் இதனை இராமபிரான் மேலேற்றி ஆழ்வார்கள் அநுஸந்திப்பர்கள். உலகில் ஒரு காரியம் செய்வித்தவனை, அது செய்தவனாகவே சொல்லுவதுண்டு; அது போலக் கொள்க.
அன்றியும், ‘ராமஸ்ய தக்ஷிணோ பாஹு” என்றபடி இராம பிரானுக்கு லக்ஷ்மணன் வலக்கை யெனப்படுதலால் அங்ஙனம் கையாகிய லக்ஷ்மணனுடைய செயலை அவயவியான இராமன் செய்ததாகச் சொல்லுதலும் தகுதியே.
பலராமன் செய்தருளிய ப்ரலம்பாஸுரவதத்தைக் கண்ணபிரான் செய்தருளியதாக அநுஸந்திப்பதும் இது போன்றதேயாம்.
பிலவாய்விட்டலற = முதலில் ஜனஸ்தானத்திற் சென்றும், பிறகு இலங்கையிற் சென்றும் வாய்விட்டுக் கதறியழுதபடியைச் சொல்லுகிறது.
கலையலங்குமகலல்குலரக்கர் குலக்கொடியைக் காதொடு மூக்குடனரியக்கதறியவளோடித், தலையில் அங்கை வைத்து மலையிலங்கை புகச்செய்த தடந்தோளன்” என்று மேலே அருளிச் செய்வது காண்க. அயில்–கூர்மை.
கடுத்து ஆர்த்து எழுந்த பெருமழையை இனநிரைக்கா கல்லொன்றேந்தித் தடுத்தான் – இந்திரன் பசிக்கோபத்தால் ஏழுநாள் விடா மழை பெய்விக்க, கண்ணபிரான் கோவர்த்தனத்தைக் குடையாக வெடுத்துக் கோநிரைகளைக் காத்தபடி சொல்லுகிறது.
கோவர்த்தனம் பெரியமலையா யிருக்கச் செய்தேயும் அதனைச் சிறியவொரு கல் எடுப்பது போலவே எளிதில் எடுத்தானென்பது தோன்றக் கல்லொன்றேந்தி என்றார். இப்படிப்பட்ட எம்பெருமானுடைய சாளகிராமத்தை நெஞ்சே ! அடை –
————
தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட
வாயான் தூய வரி யுருவில் குறளாய்ச் சென்று மா வலியை
ஏயான் இரப்ப மூவடி மண்ணின்றேதா வென்று உலகு ஏழும்
தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே —1-5-6-
பதவுரை
தாய் ஆய் வந்த பேய் உயிரும் |
– |
தாய்வடிவு கொண்டு வந்த பூதனையின் உயிரையும் |
தயிரும் விழுதும் |
– |
தயிரையும் வெண்ணெயையும் |
உடன் உண்ட வாயான் |
– |
ஒன்றுசேர்த்து அமுதுசெய்தவனும், |
ஏயான் |
– |
(யாசிப்பதற்குத்) தகாதவனானதான் |
தூய வரி உருவின் குறள் ஆய்மாவலியை சென்று |
– |
பரிசுத்தமும் ஸுந்தரமுமான ரூபத்தையுடையவாமநனாகி மாவலியிடம் சென்று |
இன்றே மூ அடி மண் தா என்று இரப்ப |
– |
இப்போதே (எனக்கு) மூன்றடி நிலம் கொடுஎன்று யாசிக்க, |
(அவன் நீர் வார்த்துத் தந்தவுடனே) |
||
உலகு ஏழும் தாயான் |
– |
எல்லாவுலகங்களையும் தாவியளந்து கொண்டவனும் |
காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் |
– |
காயாம்பூப்போன்ற நிறமுடையனுமான எம்பெருமான் எழுந்தரு ளியிருக்கிற ஸாளக்கிராமத்தை |
நெஞ்சே!, அடை-. |
கண்ணபிரானுக்குத் தயிர் பால் வெண்ணெய் முதலியன எப்படி போக்யமாயிருந்தனவோ, அப்படியே, தன்னைக் கொல்ல வந்த பூதனையின் உயிரும் போக்யமாயிருந்ததென்பது தோன்ற அருளிச் செய்கிற அழகு காண்மின்.
தஸ்யாஸ் ஸ்தநம் பபௌ க்ருஷ்ண ப்ராணைஸ் ஸஹ நநாத ச – ஸ்தந்யம் தத் விஷஸம்மிச்ரம் ரஸ்யமாஸீத் ஜகத்குரோ என்று ஹரிவம்சத்தில் சொல்லப்பட்டது.
“பெருமாவஞ்சப் பேய்வீயத் தூய குழவியாய் விடப்பாலமுதாவமுது செய்திட்ட மாயன்” என்றார் நம்மாழ்வாரும். (திருவாய்மொழி 1-5-9.)
ஏயான் தூயவரியுருவிற் குறளாய்ச் சென்று மூவடி மண் இன்றேதாவென்று மாவலியை இரப்ப = ஏயானென்றது தகாதவனென்றபடி ; யாசிக்கத் தகாதவ னென்கை.
உலகங்கட்கெல்லாம் ஒருதனி முதல்வனாயிருந்து வைத்து,* அலம் புரிந்த நெடுந்தடக்கையனாயிருந்து வைத்து யாசகனாய்ச்செல்வது தகுதியன்றே.
ஆயினும் உபாயமறிந்து காரியஞ் செய்பவனாதலால் இவ்வுபாயத்தாலல்லது மாவலியின் மதத்தை அடக்க வொண்ணாமை பற்றி யாசகனாய்ச் சென்றபடி.
இரப்ப என்றதற்கு மேல் ‘ அவனும் மூவடி மண் தாரைவார்த்துக் கொடுக்க’ என்று கூட்டிக் கொள்வது.
”மாவலியையே யான் இரப்ப” என்று பதம் பிரித்து உரைப்பதும் ஒன்றுண்டு.
மாவலியையே நோக்கி ‘யான் இரப்ப மூவடி மண் இன்றே தா’ என்று சொல்லி உலகேழும் தாவியளந்தவன் என்றவாறு.
“மாவலியை ஏ! யான் இரப்ப” என்றும் பிரிக்கலாம். ஏ!- அடா மாவலி!, என்றபடி
————–
ஏனோர் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப் பாரிய விரணியனை
ஊனார கலம் பிளவெடுத்த ஒருவன் தானே யிரு சுடராய்
வானாய்த் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகனைத்தும்
தானாய் தானுமானான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-7-
பதவுரை
ஏனோர் அஞ்ச |
– |
சத்துருக்களான அசுரர்கள் பயப்படும்படியாக |
அரி ஆய் |
– |
நரசிங்கமூர்த்தியாகி |
பரிய இரணியனை |
– |
தடித்த சரீரத்தை யுடையனான ஹிரண்யனை |
வெம் சமத்துள் |
– |
கடுமையான போர்க்களத்திலே |
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்தஒருவன் |
– |
மாம்ஸம் நிறைந்த மார்பு கிழியும்படி செய்த வொருவனும், |
தானே |
– |
இப்படி செய்தருளினவன் தானே |
இரு சுடர்ஆய் |
– |
சந்த்ர ஸூர்யர்களாயும் |
வான் ஆய் |
– |
ஆகாசமாயும் |
தீ ஆய் |
– |
அக்நியாயும் |
மாருதம் ஆய் |
– |
காற்றாயும் |
மலை ஆய் |
– |
மலைகளாயும் |
அலை நீர் உலகு அனைத்தும் தான் ஆய் |
– |
கடல் ஆழ்ந்த உலகங்கள் யாவுமாய் இருப்பவனும் |
தானும் ஆனான் தன் சாளக்கிராமம் |
– |
அஸாதாரணமான திவ்யமங்கள விக்ரஹத்தையுடையனுமான எம்பெருமானுடைய ஸாளக்ராமத்தை |
நெஞ்சே! அடை-. |
(ஏனோரஞ்ச வெஞ்சமத்துள்.) கீழ்ப்பாட்டில் ”உலகேழும் தாயான் என்று ஸர்வலோக வ்யாபகத்வம் சொன்னவுடனே, முன்பு ப்ரஹ்லாதன் எம்பெருமான் ஸர்வ வ்யாபகன் என்று சொன்னதும் இரணியன் அதை மறுத்துச் சொன்னதும் முதலிய கதைகள் நினைவுக்கு வந்து ஹிரண்ய வத வ்ருத்தாந்தத்தை அருளிச் செய்கிறாரிதில்.
வெஞ்சமத்துள் ஏனோரஞ்ச அரியாய் = சமம் – யுத்தம். இரணியனைக் கொன்ற இடத்தை வெஞ்சமமென்கிறார்.
ஏனோரென்றது ஏனையோரென்ற படி. மற்றவர்கள் என்று பொருள். அன்பர் தவிர மற்ற பேர்கள் என்றபடியாய் சத்துருக்களைச் சொல்லுகிறது.
இரணியனும் அவனுக்குப் பக்கபலமா யிருந்த மற்றும் பல ஆஸுரப்ரக்ருதிகளும் ஏனோர் எனப்படுகின்றனர். அவர்கள் நரசிங்கமூர்த்தியைக் கண்டவாறே குடல் குழம்பிப் போயினரென்க.
பரிய – பருமை என்னும் பண்படியாப் பிறந்த பெயரெச்சம் : ஸ்தூலகாய னான என்றபடி.
இருசுடராய் என்று தொடங்கி உலகனைத்தும் தானாய் என்னுமளவும் – ஸகல வஸ்துக்களுக்கும் அந்தராத்மாவாயிருக்கும் நிலைமை சொல்லுகிறது.
தூணில் நின்றுந் தோன்றியது சொன்ன ப்ரஸங்கத்திலே இதுவும் சொல்லத் தக்கதிறே.
தானுமானான் என்பதனால் – அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹமுடைமை சொல்லுகிறது.
இப்படிப்பட்ட எம்பெருமானுடைய சாளக்கிராமத்தை நெஞ்சே ! அடை .
————-
வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர்
சந்தார் தலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திரு மார்வில்
தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே —1-5-8-
பதவுரை
வெந்தார் என்பும் |
– |
செத்து வெந்துபோன ப்ரேதங்களின் எலும்புகளையும் |
சுடு நீறும் |
– |
சுட்ட சாம்பலையும் |
மெய்யில் பூசி |
– |
சரீரத்தில் தரித்துக்கொண்டு |
சந்து ஆர் ஓர் தலைகையகத்து கொண்டு |
– |
சந்துகள் நிறைந்த ஒரு மண்டையோட்டைக் கையிலே எடுத்துக்கொண்டு |
உலகு ஏழும் திரியும் |
– |
எல்லாவுலகங்களிலும் திரிந்தவனான |
பெரியோன் தான் |
– |
பரமசிவன் |
சென்று |
– |
கிட்டவந்து |
என் எந்தாய் சாபம் தீர் என்ன |
– |
‘என் ஸ்வாமீ!, (எனக்கு நேர்ந்திருக்கிற) சாபத்தை நீக்கியருள வேணும்’ என்று பிரார்த்திக்க, |
திருமார்பில் இலங்கு அமுதம் நீர் தந்தான் |
– |
தனது திருமார்பில் விளங்குகின்ற அம்ருத ஜலத்தை அளித்தவனான எம்பெருமான் |
(நித்யவாஸம் பண்ணுமிடமான) |
||
சந்து ஆர் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் |
– |
சந்தனமரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த ஸாளக்ராமத்தை |
நெஞ்சே!, அடை-. |
(வெந்தாரென்பும்.) சிவபிரானுடைய ஆபரணங்களையும் அலங் காரங்களையும் பேசுகிறார்.
செத்துப் போனவர்களைப் பொசுக்கினபிறகு சுடுகாட்டில் விழுந்துகிடக்கிற எலும்புகளை மாலையாகத் தொடுத்து அணிந்து கொண்டும், சாம்பலை உடம்பிலே பூசிக்கொண்டும், தந்தையின் தலையைக் கிள்ளியதனால் கையிலொட்டிக்கொண்ட கபாலத்துடன் உலகமெங்குந் திரிந்து பிச்சை யெடுத்த பரமசிவன் கடைசியாக எம்பெருமானிடம் வந்து ‘ஸ்வாமீ! என்னுடைய ப்ரஹ்மஹத்தி சாபத்தைத் தீர்த்தருள வேணும்’ என்று பிரார்த்திக்க, திருமார்பிலிருந்து வேர்வை நீரை யெடுத்துக் கபாலத்தி லேயிட்டு நிறைத்து சாபம் தீர்த்தவனான எம்பெருமானுடைய சாளக்கிராமத்தை நெஞ்சே! அடை!
என்பு – எலும்பு. சந்தார்தலை = எல்லா நரம்புகளும் வந்து கூடின விடத் திலே தலையைக் கிள்ளினனாதலால், சந்துகள் நிறைந்த தலை எனப்பட்டது.
திரியும் பெரியோன் தான் சென்று = தனக்கு மேல் பெரியவனில்லையென்று மார்பு நெறித்துக் கிடந்தவனுக்கு இந்தக்கதி நேர்ந்ததென்று ஏசியவாறு.
இவ்விடத்தில் வியாக்கியான ஸ்ரீஸூக்தி :- கூறுசெய்த வூரிலே கையும் கைத்தளையுமாய்த் திரிவாரைப் போலே ஈச்வராபிமாநியாய்த் தன் ஆஜ்ஞை நடத்திப் போந்தவிடத்திலே கையும் ஓடுமாய்த் திரிந்த துர்மாநியானவன் என்று.
[“கூறுசெய்த வூரிலே “– தான் அரசாண்ட வூரிலே. கைத்தளை – கை விலங்கு)
————
தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பில் அந்தணரும்
அண்டா வெமக்கே யருளாய் என்று அணையும் கோயிலருகெல்லாம்
வந்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய
தன்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-9-
பதவுரை
தொண்டு ஆம் இனமும் |
– |
தொண்டு செய்பவர்களான பாகவதர்களுடைய ஸமூஹமும் |
இமையோரும் |
– |
நித்யஸூரிகளும் |
துணை நூல் மார்வில் அந்தணரும் |
– |
யஜ்ஞோபவீதத்தோடு கூடின மார்வையுடைய பிராமணர்களும் |
அண்டா எமக்கே அருளாய் என்று அணையும்கோயில் |
– |
‘தேவனே, எங்களுக்கே அருள் புரிய வேணும்’ என்று சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்து நிற்கிற கோவிலாயும், |
அருகு எல்லாம் |
– |
சுற்றுப்பிரதேசங்களெங்கும் |
வண்டு ஆர் பொழிலின் பழனத்து |
– |
வண்டுகள் நிறைந்திருக்கப்பெற்ற சோலைகளிலுண்டான நீர்நிலங்களில் |
வயலின் அயலே கயல் பாய |
– |
கழனிகளிடத்துள்ள கயல் மீன்கள் வந்து துள்ள |
(அதனால்( |
||
தண்தாமரைகள் முகம்மலர்த்தும் |
– |
குளிர்ந்ததாமரை மொக்குகள் முகம் விகஸிக்கப் பெற்றதாயுமுள்ள |
சாளக்கிராமம் |
– |
ஸாளக்ராமத்தை |
நெஞ்சே!, அடை-. |
“ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்ய வேண்டும் நாம்” என்று இடைவிடாது கைங்கரியம் பண்ணப்பாரித்திருக்கின்ற ஸ்ரீ வைஷ்ணவர்களின் கோஷ்டி ஒரு பக்கத்திலும்,
பரமபதத்தில் பரத்வத்தை அனுபவிப்பதிற் காட்டிலும் இங்குள்ள ஸௌசீல்ய ஸௌலப்யங்களை அநுபவிப்பதில் மிக்க ஆவல் கிளர்ந்து இங்கே வந்து திரண்ட நித்ய ஸூரிகளின் கோஷ்டி ஒருபக்கத்திலும்,
‘நாம் உத்தமகுலத்திலே பிறந்தவர்கள் , ஸாமாந்யரோடு நாம் சேரலாகாது’ என்று கொண்டு ஒதுங்கி நிற்கும் யஜ்ஞோபவீததாரிகளான பிராமணர்களுடைய கோஷ்டி ஒருபக்கத்திலும்
ஆக இப்படி பல திரள்களாக இருந்துகொண்டு ஒவ்வொரு கூட்டத்தாரும் ‘ஸ்வாமிந் ! எமக்கே அருள் புரியவேணும்; ஸ்வாமிந் ! எமக்கே அருள் புரியவேணும்’ என்று துதித்துக்கொண்டு அணைந்து நிற்கிற கோயில் – சாளக்கிராமம்.
அது இன்னமும் எப்படிப்பட்டது? — அருகெல்லாம் வண்டார். பொழிலின்பழனத்து வயலினயலேகயல்பாயத் தண்டாமரைகள் முகமலர்த்தப் பெற்றதுமாம். அதாவது – ஸாளக்ராம க்ஷேத்ரத்தைச் சுற்றி, வண்டுகள் களித்து வாழும்படியான பூஞ்சோலைகள் இருக்கின்றனவாம்;
அவற்றுள் அச்சோலைக்குத் தாரகங்களான நீர்நிலைகள் விசேஷமாக இருக்கின்றனவாம்;
அவற்றின் ஸமீபத்தில் கயல் மீன்கள் நிறைந்த கழனிகள் உள்ளனவாம்;
அங்கிருந்து அக் கயல் மீன்கள் துள்ளிப்பாய்ந்து சோலைகளிலுள்ள நீர்நிலைகளிலேயுள்ள தாமரை மொக்குகளின் மேல் விழுகின்றனவாம்;
அதனால் அந்த மொக்குகள் விகஸித்து விளங்குகின்றன வென்று நிலவள நீர்வளங்களைச் சொன்னாராயிற்று.
”வயலினயலே கயல்பாய” என்றவிடத்து, “அயல்வயலின் கயல்பாய” என்று அந்வயித்து, ஸமீபத்திலுள்ள கழனிகளிலிருந்து கயல்கள் பாய எனப் பொருளுரைத்தலுமாம். அயல் – அருகும் இடமும்.
——–
தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆள
பேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே–1-5-10-
பதவுரை
உலகத்து |
– |
இவ்வுலகத்திலே |
அறிவு உடையார் ஆரார் |
– |
விவேகமுள்ளவர்கள் ஆரார் இருக்கிறீர்களோ(அவர்களெல்லீரும்) |
அமரர் நல் நாடு அரசு ஆள |
– |
நித்யஸூரிகளுடைய வில க்ஷணமான ஸ்ரீவைகுண்டத்தை அரசாளும் படியாக |
பேர்ஆயிரமும் ஓதுமின்கள் |
– |
(ஸ்ரீ வைகுண்டநாதனுடைய) ஆயிரந் திரு நாமங்களையும் ஓதுங்கள்: |
அன்றி |
– |
அல்லது, |
கார் ஆர் புறவில் மங்கை வேந்தன் கலியன் |
– |
மேகங்கள் படிந்துள்ள தோட்டங்களையுடைய திருமங்கை நாட்டுக்குத் தலைவரான திருமங்கையாழ்வார் |
தாரா ஆரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை |
– |
ஸாரஸபக்ஷிகள் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட ஸ்ரீஸாளக்ராமத்திலே எழுந்தருளி
யிருக்கு மெம்பெருமான் விஷயமாக |
ஒலி செய் |
– |
அருளிச்செய்த |
தமிழ்மாலை இவையே |
– |
தமிழ் மாலையாகிய இப்பாசுரங்களையே |
பிதற்றுமின் |
– |
வாய்வந்தபடி சொல்லுங்கள். |
(தாராவாரும்.) எம்பெருமானுடைய ஸஹஸ்ரநாமங்களை ஸங்கீர்த்தனம் பண்ணுவதும் இந்தத் திருமொழியைக் கற்பதும் துல்ய பலமென்கிறார்.
வானவர் நாடாகிய ஸ்ரீவைகுண்டத்தை ஸ்வாதீநமாக ஆள வேணுமென்னும் விருப்பமுடையீர் ! ஸஹஸ்ரநாமங்களை ஓதினீர்களாகில் உங்களுடைய விருப்பம் நிறைவேறும்; முரட்டு ஸம்ஸ்க்ருத பாஷையிலே அமைந்துள்ள அவற்றை உருச்சொல்லித் தரித்து ஓத வல்லமையில்லையேல் எளிதான செந்தமிழிலமைந்த இந்தப் பாசுரங்களை ஓதுங்கள்; பேற்றில் குறையில்லை என்றாராயிற்று.
“அன்றியிவையே ஓதுமினே” என்னாமல் பிதற்றுமினே என்றருளிச்செய்தமையால், “சொல்லும் க்ரமமொழியச் சொன்னாலும் தன் ஸ்வரூபம் கெட நில்லாது” (முமுக்ஷுப்படி.) என்றாற்போலே இப்பாசுரங்களை வாயில்வந்தபடி தப்புந்தவறுமாகச் சொன்னாலும் அமையும் என்ற தாயிற்று.-
——————
அடிவரவு:- கலை கடம் உலவு ஊரான் அடுத்து தாய் ஏனோர் வெந்தார் தொண்டு தாரா வாணிலா .
——————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
This entry was posted on November 19, 2022 at 8:02 pm and is filed under Uncategorized. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply