திருப்பிரிதியை அநுபவித்த பிறகு திருவதரியை அநுபவிக்க இழிகிறார்.
பதரீ என்ற வட சொல் வதரியெனத் திரிந்துகிடக்கிறது. வடமொழியில் இலந்தைமரங்களுக்கு பதரீ என்று பெயர். அம்மரங்கள் அடர்ந்து கிடக்கும் ஸ்தாந மென்பதுபற்றி பதரிகாச்ரமம் என்று ப்ரஸித்தமாக வழங்கப்படுகிற க்ஷேத்ரத்தை இத்திருமொழியிலும் அடுத்த திருமொழியிலும் அனுபவிக்கிறார்.
வதரியென்பது வேறு, வதரியாச்சிரமம் என்பது வேறு – என்று சிலர் நினைத்திருப்பதுண்டு; உண்மையில் இரண்டும் ஒன்றே.
” தென்னரங்கமே தென்னரங்கமே” என்று ஒருபதிகமருளிச்செய்து ”அரங்மாநகரமர்ந் தானே” என்றும் “அணி பொழில் திருவரங்கத்தம்மானே” என்றும் வேறு பதிகங்களருளிச்செய்தவளவால் திவ்யதேசம் மாறுபட்டு விடாதிறே. அது போல் இங்குங்கொள்க.
“வதரி வணங்குதுமே, வதரி வணங்குதுமே” என்ற இத்திருமொழியால் பதரிகாச்ரம க்ஷேத்ரத்தை மங்களாசாஸநம் பண்ணுகிறாரென்றும்,
“வதரியாச்சிரமத்துள்ளானே” என்ற அடுத்த திருமொழியால் அந்த க்ஷேத்திரத்தி லெழுந்தருளியிருக்கு மெம்பெருமானைத் துதிக்கின்றாரென்றும் உணர்க.
அடுத்த திருமொழியாகிய எனமுனாகி என்ற திருமொழியின் வியாக்கி யான அவதாரிகைத் தொடக்கத்தில் ”ஸ்ரீபதரியென்றும் பதரிகாச்ரமமென்றும் இரண்டு திருப்பதியாய்” என்று பெரியவாச்சான் பிள்ளை ஸ்பஷ்டமாக அருளிச் செய்திருக்கிறாரே, அதற்குக் கதி என்? என்று கேட்கக்கூடும். கேண்மின்;–
ஸ்ரீபதரீநாதன் எழுந்தருளியிருக்கிற திருமலை முழுவதையும் திருவுள்ளம்பற்றி வதரிவணங்குதுமே என்றும்,
அந்தத் திருமலையில் ஏகதேசமாயும் ஸ்ரீநாராயண மூர்த்தி தவம்புரிந்த இடமாயும் தானே சிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று திருமந்திரத்தை வெளியிட்டருளின இடமாயுமிருக்கிற ஸ்ரீபதரிகாச்ரம ஸ்தாக விசேஷத்தைத் திருவுள்ளம்பற்றி வதரியாச்சிராமத்துள்ளானே என்றும் அரு ளிச் செய்கிறார் ஆழ்வார் – என்னுமிவ்வளவையே பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸூக்தி காட்டுமத்தனை யொழிய வேறில்லை.
திவ்யதேசக்கணக்கில் இவ்விரண்டை யும் வெவ்வேறாகக்கொண்டு கணக்கிட்டால் நூற்றெட்டுத் திருப்பதி யென்பது போய் நூற்றொன்பது திருப்தியென்ன வேண்டிற்றாம்.
பிள்ளைப்பெருமாளையங் கார் பாடிய நூற்றெட்டுத் திருப்பதியந் தாதியில் வடநாடு பன்னிரண்டனுள் வதரி என்று தனியே ஒரு திருப்பதி கூறப்படுவதில்லை ;
“தாட்கடிமை யென்று தமையுணரார்க் கெட்டெழுத்தும், கேட்க வெளியிட்டருளுங் கேசவனை- வேட் கையொடு, போவ தரிதானாலும் போய்த்தொழுவேர் நெஞ்சமே, மாவதரியாச்சிரமத்து.” என்று ஸ்ரீபதரிகாச்ரமமொன்றே பாடப்பட்டுள்ளது.
ஆகையாலே, திருப்பதிக்கணக்கில் இரண்டும் ஒன்றே என்றும், ஆழ்வாரது திருவுள்ள நோக்கத்தால் ஸ்தாகபேதமுண்டென்றும் கொள்ள வேணும். நிற்க.
வதரி யென்னுமித்திருப்பதி மற்ற * கண்டியூரரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை யென்னுந் திருப்பதிகள் போலல்லாமல் வெகு பரிச்ரமப்பட்டு அடையக்கூடிய தலமாதலால் சரீரம் கட்டுக்குலைவதற்கு முன்னே போய் அநுபவிக்கவேண்டு மத்தனை யன்றி உடல் தளர்ந்துபோனபின் நெஞ்சால் நினைக்கவும் அரிதாமா தலால் அப்படிப்பட்ட தளர்ச்சி நேருவதற்கு முன்னே (அதாவது-உடல் பாங்காக இருக்குங் காலத்திலேயே) சென்று ஸேவிக்கக் கடவதென்று அருளிச்செய்கிறார் இதில்.-
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை யூடு உயிரை
வற்ற வாங்கி யுண்ட வாயான் வதரி வணங்குதுமே –1-3-1-
பதவுரை
முற்ற மூத்து |
– |
பூர்த்தியாகக் கிழத்தனமடைந்து |
கோல் துணை ஆ |
– |
ஊன்றுகோலை ஸஹாயமாகக் கொண்டு கூன் முதுகிட்டு |
முன் அடி நோக்கி வளைந்து |
– |
முன்காலைக் கவிழ்ந்து நோக்குமாபோலே |
இற்ற கால்போல் தள்ளி |
– |
முறிந்த கால்போலே தடுமாறி |
மெள்ள இருந்து |
– |
மஹாப்ரயாஸத்தோடே உட்கார்ந்து |
இளையா முன் |
– |
இவ்விதமாகக் கஷ்டங்களையடைவதற்கு முன்னே, |
பெற்ற தாய்போல் வந்த |
– |
பெற்ற தாயான யசோதையின் வடிவுகொண்டு (தன்னைக் கொல்ல) வந்த |
பேய்ச்சி |
– |
பூதனையினுடைய |
பெரு முலை ஊடு |
– |
பெரிய முலையின் வழியாக |
உயிரை |
– |
அவளது உயிரை |
வற்ற வாங்கி உண்டவாயன் |
– |
நிச்சேஷமாக உறிஞ்சி உண்ட திருப்பவளத்தை யுடையனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற |
வதரி |
– |
ஸ்ரீபதரியை |
வணங்குதும் |
– |
வணங்குவோம். |
(முற்றமுத்து.) சரீரத்துக்கு எவ்வளவு கிழத்தனம் வரக்கூடுமோ அவ்வள வும் வந்து, நடந்து செல்லமாட்டாமல் ஒரு கோலைக் கையிலே அவலம்ப மாகப் பிடித்துக்கொண்டு முதுகு கூனிட்டுப் போகவே முன்னடியை நோக்கி வளைந்து, முறிந்துபோன காலைக்கொண்டு நடக்கமுடியாதது போல ஓரடி யும் எடுத்து வைக்கமாட்டாமல் தடுமாறி, தடி பிடித்துக்கொண்டும் நடக்க மாட்டாமல் திடீரென்று தரையிலே விழுந்திருந்துகொண்டு பெருமூச்சு விட்டு இப்படியாக ச்ரமப்படுகிற காலம் வந்துவிட்டால் பதரிகாச்ர மயாத்ரையை நெஞ்சால் நினைக்கவும் முடியாதே; ஆகையால் அப்படிப்பட்ட கெட்ட நிலைமை வருவதற்கு முன்னே ஸ்ரீபதரியைச் சென்று வணங்குவோம் வாருங்க ளென்று அன்பர்களை அழைக்கிறார் போலும்.
பேய்ச்சிபெருமுலையூடுயிரை வற்றவாங்கியுண்ட வரலாறு:- ஸ்ரீக்ருஷ்ணனைப் பெற்ற தாயான தேவகியினது உடன்பிறந்தவனாய் அக்கண்ண்பிரானுக்கு மாமனாகிய கம்ஸன், தன்னைக் கொல்லப்பிறந்த தேவகீபுத்திரன் ஒளித்து வளர்தலை அறிந்து, அக்குழந்தையை நாடியுணர்ந்து கொல்லும் பொருட்டுப் பல அசுரர்களை யேவ, அவர்களில் ஒருத்தியான பூதனை யென்னும் ராக்ஷஸி நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக்கொண்டிருந்த கிருஷ்ணசிசுவையெடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையைக் கொடுத்துக் கொல்லமுயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப் பிடித்துப் பாலுண்ணுகிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவளைப் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்பு நரம்பு களின் கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தனன் என்பதாம்.
கோல்துணையா என்றவிடத்து வியாக்யானத்தில் ஓர் ஐதிஹ்யம் அருளிச் செய்வர்;- நஞ்சீயர் ஸந்த்யாஸாச்ரமஸ்வீகாரம் செய்துகொள்ளும்போது த்ரிதண்டம் தரித்துக்கொள்வதற்கான மந்திரம் “” (ஸகா மா கோபாய)
(இதன் பொருளாவது – ஓ த்ரிதண்டமே! நீ எனக்குத் துணையாயிருந்து என்னை ரக்ஷிக்கவேணும் என்பதாம்.) என்னக் கேட்டு, ஸர்வஜ்ஞனாயும் ஸர்வசக்தனாயும் பரமசேதநனாயுமிருக்கிற எம்பெருமானையே துணையாகப் பற்ற வேண்டியிருக்க அசேததமான தண்டத்தை நோக்கி இங்கனே சொல்லும்படி யாக ஒரு ஆச்ரமம் நேருவதே! என்று ஸாதித்தாராம்.
சாஸ்த்ர விதிப்படி கோலைத் துணை கொள்ள வேண்டியது அங்கு ; கிழத்தனத்தில் கோலைத் துணை கொள்வது அசக்தியினாலே. அப்படிப்பட்ட அசக்தி வருவதற்கு முன்னே வதரி வணங்குதும்.
இவ்விடத்தில் இன்னு மோர் ஐதிஹ்யமும் சொல்லுவதுண்டு; நஞ்சீயர் பட்டர் திருவடிகளுக்கு அந்தரங்கராய் வர்த்திக்கிறநாளிலே ஒரு கைசிகத்வாதசி யன்று பட்டர் ப்ரஹ்மரதத்திலெழுந்தருளித் திருவீதி யலங்கரிக்கப் புறப்பட்ட வாறே நஞ்சீயரும் ஸ்ரீபாதம் தாங்கப் புக, “உத்தமாச்ரமியாய் த்ரிதண்டதாரி யான உமக்கு இக்காரியம் தகாது” என்று பட்டர் முதலானார் மறுத்துக்கூற,
நஞ்சீயர்” எனக்கு நீ துணையாகி என்னை ரக்ஷிக்கவேணும்” என்கிற மந்திரத்தைச் சொல்லி ஸ்வீகரிக்கப்பட்ட இந்த முக்கோல்தானே இன்று எனக்கு விரோதியாகிறதோ? இக்கோல் எனக்குத் துணையல்லவோ? ஸ்வரூப ரக்ஷணத் துக்கு இக்கோல் இடையூறாயின் இஃது எனக்கு வேண்டா ” என்று சொல்லி த்ரிதண்டத்தை விட்டெறியப் போனாராம்.
அப்போது அவருடைய பக்தி விசேஷத்தைக் கண்டு அனைவரும் வியந்தனர். இவ் வைதிஹ்யங்கள் கோல் துணையா என்ற ப்ரஸங்கத்திலே நினைவுக்கு வரக்கூடியன.
கிழத்தனத்தில் முதுகு கூனிட்டபின் முன்னடி நோக்கி வளைதல் இயல்பு-
—————–
முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன்னொரு கோலூன்றி
விதிர் விதிர்த்துக் கண் சுழன்று மேற்கிளை கொண்டு இருமி
இது வென்னப்பர் மூத்தவாறு என்று இளையவர் ஏசாமுன்
மது வுண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-2-
பதவுரை
கை தலத்தால் |
– |
ஒரு கையாலே |
முதுகு பற்றி |
– |
முதுகைப் பிடித்துக்கொண்டும் |
முன் ஒரு கோல் ஊன்றி |
– |
(மற்றொருகையாலே) முன்னே ஒரு கொம்பை ஊன்றிக் கொண்டும் |
விதிர்விதிர்த்து |
– |
(உடல்) நடுங்கியும் |
கண் சுழன்று |
– |
(லொக்குலொக்கென்ற) பெரிய த்வநியைக்கொண்டு இருமியும் |
(ஆக இப்படிப்பட்ட ஜூகுப்ஸைகளைக் கண்டு) |
||
இளையவர் |
– |
இளம்பெண்கள் (மோவாய்த் கட்டையில் கையை வைத்துக்கொண்டு) |
அப்பர் மூத்த ஆறு இது என் என்று ஏசா முன் |
– |
“இந்தப் பெரியவர் கிழத்தன மடைந்த விது என்ன விசித்திரம்!” என்று சொல்லிப் பரிஹஸிப்பதற்கு முன்னே, |
மது உண் வண்டு |
– |
பூவில் தேனைப் பருகுகின்ற வண்டுகள் |
பண்கள் பாடும் |
– |
இசை பாடப்பெற்ற |
வதரி |
– |
ஸ்ரீபதரியை |
வணங்குதும் |
– |
வணங்குவோம் |
[முதுகுபற்றி.) கிழத்தனத்தில் நாலடி நடந்தாலும் பலஹீனத் தால் முதுகு நோகும்; ஒருகையாலே முதுகைப்பிடித்துக்கொள்ள வேண்டிய தாகும் ; முன் பக்கமாக வளைந்து விழாமைக்காக ஒரு தடியை ஊன்றிக்கொள்ள வேண்டியதாகும்;
இப்படி இரண்டு பக்கமும் கப்புக்கால் கொடுத்து நடக்கச் செய்தேயும் உடம்பு நடுங்கியும் கண்கள் சுழலமிட்டும் பெரிய த்வனியுண்டாம்படி இருமல் செய்தும் வெகு ஆயாஸம் தோற்ற நடக்க நேருமாகையாலே அந்த கோரமான நிலைமையைக்காணும் மாதர்களெல்லாரும் மோவாய்க்கட்டையில் கையை வைத்துக்கொண்டு ( ஸ்வாமிகளே! நன்றாச்சுது ; இப்படியும் ஒரு கிழத் தனம் வருவதுண்டோ ? உலகில் எல்லாரும் மூப்பதுண்டு; இப்படி மூப்பவர்களை எங்குங்கண்டறியோம் ; இஃது என்ன விசித்திரமான மூப்பு!” என்று சொல்லி ஏளனஞ் செய்வர்கள் ;
அப்படிப்பட்ட பரிதாபநிலைமையிலே வதரியை நெஞ் சாலும் நினைக்க ப்ராப்தி இராது; ஆகையாலே, அப்படிப்பட்ட கிழத்தனம் வருதற்கு முந்தியே கரணகளே பரங்கள் பூர்ணசக்தியோடு இருக்கும் கிளரொளி யிளமையில்தானே பரமபோக்யமான வதரியை வணங்குதல் நன்று என்றாரா யிற்று
தேனைப்பருகின வண்டுகள் களிப்புக்குப் போக்குவீடாக எல்லாப் பண்களையும் பாடப்பெற்ற வதரியென்றது- “எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே” என்னும்படியான எம்பெருமானைப் பூர்ணமாக அநுபவித்து அவ் வநுபவத்தாலுண்டாகிய ஆநந்தத்திற்குப் போக்குவீடாக “—” – ஏதத் ஸாம காயந்நாஸ்தே. ஹாவு ஹாவு ஹாவு” (தைத்திரீய உபநிஷத்து) என்றபடி ஸாமகாநம் பண்ணிக்களிக்கிற முமுக்ஷக்கள் வாழப் பெற்ற வதரி என்றபடி.
விதிர்விதிர்த்தல் –நடுங்குதல். மேற்கிளைகொண்டிருமி = மேலான கிளை என்று பெரிய த்வனியைச் சொல்லுகிறது; கிழவர்கள் லொக்கு லொக்கென்று இருமும்போது உரத்த ஒலி உண்டாதல் காண்க-
————-
உறிகள் போல் மெய்ந்நரம்பு எழுந்து ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி
நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று நடுங்கா முன்
அறிதியாகில் நெஞ்சம் அன்பாய் ஆயிர நாமம் சொல்லி
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-3-
பதவுரை
மெய் நரம்பு |
– |
சரீரத்திலுள்ள நரம்புகள் |
உறிகள் போல் எழுந்து |
– |
உறிகளைப் போலே மேலே கிளம்பித் தோன்றும்படியாக |
ஊன் தளர்ந்து |
– |
மாம்ஸம் கட்டுக்குலைந்து |
உள்ளம் எள்கி |
– |
நெஞ்சும் சிதிலமாகி |
நெறியை நோக்கி கண் சுழன்று |
– |
நடந்து செல்லவேண்டிய வழியை நோக்கினவாறே கண்கள் சுழலமிட்டு |
நின்று |
– |
போகமாட்டாதே ஸ்தம்பித்து நின்று |
நடுங்கா முன் |
– |
நடுங்கும்படியான காலம் வருவதற்கு முன்னே, |
நெஞ்சம் |
– |
ஓ மனமே! |
அறிதி ஆகில் |
– |
நீ விவேகியாகில் |
அன்பு ஆய் |
– |
பக்தி பூண்டு |
ஆயிரம் நாமம் சொல்லி |
– |
(எம் பெருமானது) திருநாமங்களை யெல்லாம் சொல்லிக் கொண்டு, |
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதும் |
– |
பரிமளம் மிக்க வண்டுகள் இசைபாடப்பெற்ற ஸ்ரீபதரியை வணங்குவோம் வா. |
(உறிகள்போல்.) சரீரத்தில் நரம்புகளானவை இளமைப்பருவத்தில் மறைந்து கிடக்கும்; முதுமையில் சரீரம் பசையற உலர்ந்தபடியாலே அந்த நரம்புகள் உறிகள் போலே நீண்ட கொத்துக் கொத்தாகக் கிளம்பி விளங்கும் அதற்குத் தகுதியாக மாம்ஸம் க்ஷணமாகி மனமும் நலிவுபடும். இப்படிப்பட்ட நிலைமையிலும் ஓரிடத்தில் வெறுமனே கிடக்கமாட்டாதே தாம்பும் தடியுமாகப் புறப்பட்டு எங்கேயாவது போகத் தொடங்குவர்கள்.
நெடிய வழி யைப் பார்த்தவாறே கண்சுழலும்; பின்பு அடி பேர்ந் திடமாட்டாதே நடுங்கி நிற்பர்கள்; நெஞ்சமே! கிழத்தனத்தில் இங்கனே படும்பாடுகள் தெரிந்ததா உனக்கு; அப்போது பகவந்நாமங்களில் ஒன்றிரண்டையாகிலும் சொல் லத்தான் முடியுமோ?
ஒரு திவ்ய தேசத்திற்குச் செல்லத்தான் முடியுமோ? ஒன்றும் முடியாது. நெஞ்சால் நினைக்கவுமரிது; வாயாற் சொல்லவுமரிது; காலால் நடக்கவுமரிது.
ஆகையால் போகப்போகப் பார்த்துக் கொள்வோ மென்று ஆறியிராமல், சரீரம் கொஞ்சம் த்ருடமாயிருக்கு மிக்காலத்திலேயே பக்தியுடன் பகவானுடைய திருநாமங்களையெல்லாம் அநுஸந்தித்துக்கொண்டு பரம போக்யமான வதரியை வணங்குதல் நன்றுகாண் என்றாராயிற்று –
——————
பீளை சோர கண் இடுங்கி பித்தெழ முத்து இருமி
தாள்கள் நோவ தம்மில் முட்டி தள்ளி நடவா முன்
காளையாகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான்
பாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே—-1-3-4-
பதவுரை
கண் இடுங்கி பீளை சோர |
– |
கண்கள் பசையற்றுப் பிளிச்சை பெருகவும் |
பித்து எழ |
– |
பித்தம் மேலிடும்படியாகவும் |
மூத்து |
– |
கிழத்தனமடைந்து |
இருமி |
– |
(க்ஷயரோகத்தாலே) இருமிக் கொண்டு |
தாள்கள் தம்மில் முட்டி நோவ |
– |
கால்கள் ஒன்றோடொனறு தாக்கி நோகும்படியாக |
தள்ளி நடவாமுன் |
– |
தடுமாறி நடப்பதற்கு முன்னே-, |
அன்று |
– |
முன்னொரு காலத்தில் |
காளை ஆகி |
– |
இளம்பிள்ளையா யிருந்துகொண்டு |
கன்று மேய்த்து |
– |
கன்றுகளை மேய்த்து |
குன்று எடுத்து நின்றான் |
– |
(அவற்றுக்கு நேர்ந்த மழைத் தீங்கை யொழிப்பதற்குக்) கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து நின்ற எம்பெருமானது |
வாளை பாயும் தண்தடம் சூழ்ந்த |
– |
வாளை மீன்கள் குதித்துப் பாய்கின்ற குளிர்ந்த குளங்கள் சூழ்ந்த |
வதரி |
– |
ஸ்ரீபதரியை |
வணங்குதும் |
– |
வணங்குவோம். |
(பீளைசோர.) கிழத்தனத்தில் கண்கள் சுருங்கிப்போய் அவற்றில் நின்று பிளிச்சை பெருகவும், பித்தம் மேலிட்டுத் தலைசுற்றித் தள்ளம்பாறி நடக்கவும் நேர்தல் இயல்வு. அப்படி நேர்ந்தகாலத்து வதரி வணங்குதல் முடி யாத காரியமா தலால் அப்படி நேருவதற்கு முன்னமே அதனை வணங்குதல் நன்று . .
பீளை – கண்ணழுக்கு. இடுங்குதல் – சுருங்குதல். பித்து – பித்தம்’ என்ற வடசொற்சிதைவு. தாள்கள் தம்மில் முட்டுதலாவது = இரண்டுகால்களும் அடைவே நடக்கமாட்டாமையாலே ஒரு முழந்தாளை மற்றொரு முழந்தாள் தாக்குதல்.
காளை= “காளையே எருது பாலைக்க திபன் நல்லிளையோன் பேராம்” என்பது நிகண்டு.
காளையாகிக் கன்று மேய்த்தது கிருஷ்ணாவதாரத்தில். குன்றெடுத்துநின்ற வரலாறு:- திருவாய்ப்பாடியிலுள்ள இடையர்களெல்லா ரும் கண்ணபிரானுடைய அற்புத சரிதைகளைக்கண்டு . இவனே நம் குலக் கொழுந்து, இவன் சொற்படி நடப்பதே நமது கடமை” என்று தீர்மானித் திருந்தார்கள்.
இருக்கையில் சரத்காலம் வந்தது; அப்போது இடையர்கள் வருஷந்தோறும் நடத்துவதுபோல் இந்திரனுக்குப் பூசை செய்யப் பலபல வண்டிகளில் சோறும் தயிரும் நெய்யும் காய்கறிகளும் மற்றுமுள்ள பூஜைப் பொருள் களையும் அமைப்பதைக்கண்டு கண்ணபிரான் ‘ஓ பெரியோர்களே! இவை எதுக்காக’ என்றான்;
அதற்கு அவர்கள் “அப்பா! தேவேந்திரனுடைய அநுக்ர ஹத்தினால் காலங்களில் தகுதியாக மழைபெய்து அதனால் பசுக்களும் நாமும் ஸுகமே வாழ்கின்றோம்; இனி எப்போதும் அந்த இந்திரன் நம்மை இப்படியே ரக்ஷிக்கவேணு மென்கைக்காக அவனுக்கு வருஷத்துக்கு ஒரு முறை பொங்க லிடுவதுண்டு; அதற்காக இவையெல்லாம் சேர்த்து வைத்தோம்” என்றனர்.
கண்ணன் அதுகேட்டு நாமும் நம்முடைய பசுக்களும் எதனால் ஜீவிக்கின்றோமோ அதற்கன்றோ பூஜை செய்ய வேன்டும் ; இக் கோவர்த்தன மலையன்றோ பசுக்களுக்குப் புல்லும் தண்ணீரும் கொடுத்துக் காப்பாற்றுகின்றது; இந்திரனால் நமக்கு என்ன பிரயோஜனமுண்டு? இதையெல்லாம் நீங்கள் இந்த மலைக்கே பலியிடுங்கள்’ என்ன,
இடையர்கள் அப்படியே செய்யத் துணிந்து மலைக்கே பலியிட்டவளவில், கண்ணபிரான் தான் அம்மலையில் ஆவேசித்து அவற்றை யெல்லாம் தானே அமுது செய்திட்டான்.
பின்பு பூஜையிழந்த இந்திரன் சீற்றமுற்றுத் தன் பரிஜனங்களான மேகங்களையழைத்து (இடைக்குலத்துக்குப் பெருந்தீங்கு விளையும்படி விடாமழை பெய்யுங்கள்’ என்று சொல்லிக் கட்டளையிடவே அம்மேகங்கள் அப்படியே வந்து ஏழுநாள் விடாமழை பெய்ய,
இடையரும் பசுக்களுமெல்லாம் கதறிக்கதறிக் கண்ணனையே சரணமடைய, கண்ணபிரான் அபயமளித்து அந்த மலையைப் பிடுங்கிக் குடையாகத் தூக்கித் தாங்கி, கோகுலத்தைச் சேர்ந்த ஸகல பிராணிகளையும் அதன் கீழ் அழைத்துக் கொண்டு சிறிதும் அபாயமின்றிக் காப்பாற்றியருளினன்.
ஏழுநாள் இடை விடாது கல்மாரி பெய்தும் யாருக்கும் எவ்விதமான பாதையும் நேரிடாமையைக் கண்ட இந்திரன் பராத்பரனான ஸ்ரீக்ருஷ்ணனுடைய மஹிமைக்கு வியந்து கீழ்” இறங்கி வந்து பணிந்து அபராத க்ஷாமணம் பண்ணிக்கொண்டு போய்ச் சேர்ந்தான்-
————
பண்டு காமரர் ஆனவாறும் பாவையர் வாய் அமுதம்
உண்டவாறும் வாழ்ந்தவாரும் ஒக்க உரைத்து இருமி
தண்டு காலா ஊன்றி ஊன்றித் தள்ளி நடவா முன்
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே—1-3-5-
பதவுரை
பண்டு |
– |
இளம்பிராயத்தில் |
காமர் ஆன ஆறும் |
– |
மாதர்கள் விரும்புதற்குத்தாம் உரியராக இருந்தபடியையும் |
பாவையர்வாய் அமுதம் உண்ட ஆறும் |
– |
அம்மாதர்களுடைய வாயமுதத்தைப் பருகினபடியையும் |
வாழ்ந்த ஆறும் |
– |
சிற்றின்பங்களில் அழிந்தபடியையும் |
ஒக்க உரைத்து இருமி |
– |
சொல்லுவது இருமுவது, மறுபடியும் சொல்லுவது இருமுவது ஆக இப்படியாகி |
தண்ட காலா |
– |
தடியைக் காலாகக்கொண்டு |
ஊன்றி ஊன்றி |
– |
(அசக்தியினால் ஓரிடத்திலேயே) பலதடவை ஊன்றி |
தள்ளி |
– |
தடுமாறி |
நடவாமுன் |
– |
நடக்க நேருவதற்கு முன்னே |
வண்டு பாடும் தண் துழாயான் |
– |
(மதுவுக்காக வந்து) வண்டுகள் பாடுகிற திருத்துழாய் மாலையை யுடையனான எம்பெருமானது |
வதரி |
– |
ஸ்ரீபதரியை |
வணங்குதும் |
– |
வணங்குவோம் |
ஸம்ஸாரிகளுடைய காலக்ஷேபக்ரமத்தைப் பேசுகிறார். உடலில் வலிவு இருந்தகாலத்தில் ஒரு நல்ல காரியம் பண்ணியறியார்கள் ; விஷய போகங்கள் செய்வதற்கு எவ்வளவு நிஷித்த காரியங்கள் செய்ய வேணுமோ அவ்வளவும் செய்து தீருவர்கள்; இப்படியாக யௌவனபருவத் தைக் கழித்துவிட்டுக் கிழத்தனத்தில் வந்தவாறே அப்போதாவது இழந்த நாளைக்கு அநுதாபப்பட்டு ஏதாவது நன்மை தேடிக்கொள்ள விரும்புவார்களோ; அது கிடையாது;
பின்னை என் செய்வார்களென்னில்; தங்கள் உடம்பு கட்டுக் குலைந்தபடியையும் ரூபலாவண்யங்கள் மங்கிப்போன படியையும் விஷய போகங்கள் செய்யமுடியாதபடியையும் நினைந்து நினைந்து வருந்தி ‘ஐயோ! இளமையில் அப்படியிருந்தேனே; என்னைக் கண்டு காமுறாதவர்களே கிடையாதே ; எத்தனையோ மாதர்களை அனுபவித்தேனே; எப்படியோ வாழ்ந்தேனே’; இப்போது ஒன்றுக்குமுதவாத காஷ்ட்ட லோஷ்ட்டத்துக்குங் கடைகெட்டவனாய் விட்டேனே!” என்று கதறியழுவதும் நடுநடுவே லொக்கு லொக்கென்று இருமுவதும் செய்வர்கள்.
அப்போதாவது ஆசையற்று வாளா கிடப்பர்களோ? கிடவார்கள்; தண்டு காலா ஊன்றியூன்றித் தள்ளிநடந்து செல்லப் பார்ப்பர் கள்; (எங்கே? – பாவையர் வாயமுதமுண்ட விடத்திற்கு.)அப்படிப்பட்ட நிலைமை நேருவதற்கு முன்னே, தோளினை மேலும் நன் மார்வின் மேலுஞ் சுடர்முடிமேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணந் துழா யுடையம்மானெழுந்தருளியிருக்கிற வதரியை வணங்குதல் நன்று.
பாவையர்வாயமுதம் என்றதும், வாழ்ந்தவாறும் என்றதும் ஸம்ஸாரிகளுடைய சொலவை அநுவதித்தபடி. பிளிச்சைக்கண்ணிகளைப் பாவைய ரென்பதும், அவர்களது ஊத்தைவாயில் நீரை அமுத மென்பதும், அவர்களோடு கலந்து கெட்டுப்போனதை வாழ்ச்சியென்பதும் ஸம்ஸாரிகளுடைய சொல்லேயன்றி ஆழ்வாருடைய நெஞ்சிலும் அப்படி யில்லையிறே. பாவையர் = பதுமைபோல் அழகியவர்கள் என்றபடி.
ஒக்கவுரைத்திருமி = உரைப்பதும் இருமுவதும் ஒரே காலத்திலாம். நாலு புதங்களைச் சேர்த்துச் சொல்ல சக்தியற்று எப்போதும் இருமிக்கிடக்குங் காலத்திலே வாயாற் சொல்லமுடியுந்தனையும் சில பகவந்நாமங்களைச் சொல்லிப் போதுபோக்கலாமாயிருக்க அப்போதும் பழைய கெட்ட காரியங்களையே அநுவாதஞ் செய்துகொண்டு பாழாய்ப் போவர்கள் ஸம்ஸாரிகள்.
—————-
எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம்
பித்தர் போலே சித்தம் வேறாய் பேசி அயரா முன்
அத்தன் எந்தை யாதி மூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த
மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே–1-3-6-
பதவுரை
எய்த்த சொல்லோடு |
– |
பலஹீனமான பேச்சுடனே |
ஈளை ஏங்கி |
– |
கோழைவந்து தங்கப் பெற்று |
இருமி |
– |
இருமி |
உடலம் இளைத்து |
– |
சரீரம் மெலிந்து |
பித்தர் போல |
– |
பைத்தியம்பிடித்தவர்கள்போல |
வேறு சித்தம் ஆய் பேசி |
– |
விகாரப்பட்ட மனமுடையராய் வார்த்தை சொல்லி |
அயரா முன் |
– |
தளருவதற்கு முன்னே-, |
அத்தன் |
– |
ஸர்வஸ்வாமியாய் |
எந்தை |
– |
எமக்குத் தந்தையாய் |
ஆதிமூர்த்தி |
– |
உலகத்திற்கு மூலக்கடவுளாய் |
ஆழ் கடலை கடைந்த |
– |
(ஒரு காலத்தில் தேவர்களுக்காக) ஆழ்ந்த கடலைக் கடைந்தவனாய் |
மைத்த ஜோதி |
– |
மைபோல் சாமமான புகரையுடையனான |
எம்பெருமான் |
– |
எம்பெருமானுடையதான |
வதரி வணங்குதும் |
– |
ஸ்ரீபதரியை வணங்குவோம். |
கிழத்தனத்தில் ஒருவார்த்தை சொல்ல ஆரம்பிக்கும்போதே தட்டித் தடுமாறிக் குதலைச் சொல்லாக வரும் ; அத்தோடு கூடவே கபமும் வந்து விழும் ; கூடவே இருமலும் வந்து சேரும் ; ஆக இவ் வளவால் சரீரமானது இன்னமும் அதிகமாக பலஹீனப்பட்டுவிடும்.
அவ்வள விலும் வாயை மூடிக்கொண்டு வெறுமனிருக்கமாட்டார்களாகையால் பைத் தியம் பிடித்தவர்கள் போல் சித்தம் ஸ்வாதீனமல்லாமல் எதையாவது தத்தக பித்தகவென்று பேசுவார்கள்; அந்தப் பேச்சும் பொறாமல் ஆயாஸம் அதிகரித்து விடும்.
அப்படிப்பட்ட நிலைமையில் நாமெங்கே? வதரி யெங்கே? நெஞ்சால் நினைக்கத்தான் முடியுமோ ? ஆகையாலே இப்போதே வதரியை வணங்குவோம் என்றாராயிற்று.
அத்தன் என்பதனால், பொதுப்படையாக உலகத்துக்கெல்லாம் ‘ஸ்வாமி என்பதும், எந்தை என்பதனால், விசேஷித்துத் தமது ஸ்வாமி என்பதும் சொல்லப்பட்டதாம்.
ஆழ்கடலைக் கடைந்தது கூர்மாவதாரத்தில். அந்த வரலாற்றை மேலே கூர்மாவதாரப்ரஸங்கம் வருமிடத்து வரைவோம்.
————–
பப்ப வப்பர் மூத்த வாறு பாழ்ப்பது சீத் திரளை
ஒப்ப ஐக்கள் போத வுந்த உந்தமர் காண்மின் என்று
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியா முன்னம்
வைப்பும் நங்கள் வாழ்வு மானான் வதரி வணங்குதுமே—1-3-7-
பதவுரை
சீத் திரளை ஒப்ப |
– |
சீயின் திரட்சிபோல |
ஐக்கள் |
– |
கோழையானது |
போத உந்த |
– |
மிகவும் அதிகரிக்க, (அந்த நிலைமையைக் கண்டு) |
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் |
– |
செப்புப் போன்ற மெல்லிய முலைகளையுடைய மங்கைமார்கள் |
பப்ப அப்பர்மூத்த ஆறு பாழ்ப்பது |
– |
“அப்பப்ப! இந்த சாமியார் கிழத்தன மடைந்த விதம் மிகவும் பொல்லாது” (என்று தங்களில் சொல்லிக்கொண்டும்) |
உம் தமர் காண்மின் என்று |
– |
“அடீ!உங்களோடு உறவுள்ள ஐயங்காரைப் பாருங்கள்” என்று(அயற்பெண்களோடே ஏளனமாகச் சொல்லியும்) |
சிரியாத முன்னம் |
– |
சிரிப்பதற்கு முன்னமே-, |
நங்கள் வைப்பும் வாழ்வும் ஆனான் வதரி வணங்குதும் |
– |
நமக்கு நிதி போன்றவனும் நம்மை வாழ்விப்பவனுமான எம்பெருமானது ஸ்ரீபதரியை வணங்குவோம். |
உலகில் விசித்திரமானதொன்றைப் பார்க்கும்போ தும் விகாரமானதொன்றை பார்க்கும்போதும் கண்கூசி அப்பப்ப! என்று மெய் சிலிர்த்துக் கூறுவது வழக்கம். கிழவர்கள் தண்டுகாலாவூன்றியூன்றித் தள்ளி நடந்துகொண்டு, தாம் நெடுநாள் பழகின மின்னிடை மடவார் வீதியேறச் சென்றவாறே அளவு கடந்த கிழத் தன விகாரங்களைக்கண்டு அந்த மாதர்கள் ‘அப்பப்ப!’ என்று தங்களுக்குள்ளே அதிசயித்து, ‘உலகில் எல்லாரும் கிழத் தனமடைவதுண்டு; இதென்னடோயப்பா! ‘இப்படிப்பட்ட கிழத்தனம் எங்குங் கண்டதில்லை. மிகவும் பொல்லாத கிழத்தனமாயிருக்கின்றதே இது;’ என்று சொல்லிச் சிரிப்பர்கள் ; அவ்வளவோடு நில்லாமல் அண்டைவீட்டுக் காரிகளை யழைத்து ‘உங்கள் எஜமானர் வந்திருக்கிற அழகைப்பாருங்கள் ‘ என்று காட்டியும் சிரிப்பர்கள் ; அப்படிப்பட்ட பரிஹாஸங்களுக்கு ஆளாவ தற்கு முன்னே வதரி வணங்குதல் நன்று.
ஐ என்றும் ஐக்கள் என்றும் ஐயார் என்றும் கோழைக்குப் பெயர். உந்தமர் காண்மின் = உண்மையில் தாங்கள் விரும்பி ஆதரித்திருந்த புருஷர்களாயிருந் தாலும் அப்போதைய நிலைமையைக்கண்டு வெறுத்துத் தங்களுக்கொரு உறவு சொல்லிக்கொள்ள வெள்கி அயற்பெண்டுகளை யழைத்து : உங்களவர் வந்தார், பாருங்கள் ‘ என்று சொல்லி ஏசிச் சிரிப்பர்களாம் செப்பு நேர்மென் கொங்கை நல்லார் தாம்.
இவ்விடத்தில் வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின்;- “இவன் பக்கல் யௌவனமும் கையில் வீசமும் உள்ள வன்று எல்லாருமொக்க என்தமர் என் தமர் என்பர்கள் ; கையில் வீசமும் போய் ‘இவனோட்டை ஸம்பந்தம் நமக்கு அவத்யாவஹம்’ என்று தோற்றும்படி யௌவனமும் போன வாறே உன்னுடையவன் என்றும், மற்றையவளும் ‘உன்னோடேயன்றோ அவனுக்கு உறவு’ என்றும் தங்களோடே தொற்றறச் சொல்லிப் பிணங்கா நிற்பர்கள்,”
செப்புநேர்மென் கொங்கைநல்லார் என்று விசேஷித்ததற்கு விநோதமாகக் கருத்து அருளிச்செய்வர் பெரியவாச்சான் பிள்ளை;- “இவனைக்கொண்டு போது போக்குகைக்காக முலைக்கச்சை நெகிழ்த்தி முலையினுடைய ஸந்நிவேசத்தைக் காட்டுவர்கள் ; இவன் கண்ணை விடுத்து எழப் பார்க்கும் ; அதைக்கண்டு ‘பிள்ளாய்! இவன் இவற்றோடு என்ன உறவுண்டாய்ப் பார்க்கிறான் ! ஐயோ!’ என்று சிரிப்பர்களாயிற்று.”
நங்கள்வைப்பும் வாழ்வுமானான் = எம்பெருமானே உபாயம், அவனே உபேயம் என்கிற அர்த்தம் சொல்லுகிறது. வைப்பு என்று உபாயத்வமும், வாழ்வு என்று உபேயத்வமுஞ் சொல்லிற்றாம்.
—————-
ஈசி போமின் ஈங்கு இரேன் மின் இருமி இளைத்தீர்
உள்ளம் கூசி யிட்டீர் என்று பேசும் குவளை யம் கண்ணியர் பால்
நாசமான பாசம் விட்டு நன்னெறி நோக்கல் உறில்
வாச மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே –1-3-8-
பதவுரை
இருமி இளைத்தீர் |
– |
“(ஐயங்கார்களே!) இருமலும் இளைப்புமாக ஆனீர்கள்; |
உள்ளம் கூசியிட்டீர் |
– |
நெஞ்சு கூசப் பெற்றீர்கள்; |
போமின் |
– |
அப்பால் ஒழிந்து போங்கள் |
ஈ சி |
– |
சீ சீ ; |
ஈங்கு இரேல்மின் |
– |
இங்கே இருக்கக்கூடாது;” |
என்று பேசும் |
– |
என்றிப்படி அவமரியாதையாகப் பேசுகிற |
குவளை அம் கண்ணியர் பால் |
– |
கருநெய்தல் போன்ற அழகிய கண்ணையுடைய மாதர்களிடத்து |
நாசம் ஆன பாசம் விட்டு |
– |
ஸ்வரூபநாசத்தை விளைக்க வல்ல ஆசாபாசத்தை விட்டுத் துலைத்து |
நல் நெறி நோக்கல் உறில் |
– |
நல்வழி போகப்பார்க்கும் பக்ஷத்தில் |
வாசம் மல்கு தண்துழாயான் வதரி வணங்குதும் |
– |
பரிமளம் மிக்குக் குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடைய எம்பெருமானது ஸ்ரீபதரியை வணங்குவோம். |
முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து சென்று குறடேறும்போதே, சீ சீ, நட, நட” என்று துரத்தியடிப்பர்கள் ; வாசலை விடமாட்டாத சாபல்யத்தாலே ‘அம்மா! நான் உள்ளே வரவில்லை; தெருத்திண்ணையிலேயே கிடந்து போகிறேன்’ என்று விநயமாகச் சொல்லி உட்காரப் பார்த்தவளவில், ஈங்கிரேல்மின்’ என்று வெருட்டுவர்கள்;
பண்டெல்லாம் ‘ என்னைவிட்டுப் பிரியக்கூடாதென்று சொல்லிக்கொண்டிருந்த நீங்கள் இன்று இங்கனே வெருட்டுவானேன் என்று கேட்டால், இருமி இளைத்தீர், உள்ளம் கூசியிட்டீர் என்பர்கள். அப்படி சொல்லி வெருட்டும் போதும் பாவக் கொடுமையாலே அந்தப் பிளிச்சைக்கண்ணிகளிடத்துப் பாசம் ஒழியாது மயங்கி நிற்குங்கள் கிழப்பிணங்கள்; ஆசாபாசம் விடவொண்ணாதே. அந்த ஆசாபாசம் ஸ்வரூப நாசத்துக்கே உறுப்பாகையாலே அதனை விட்டொழித்து நல்வழிசேர நினைவுண்டாகில் வதரி வணங்குதல் நன்று.
ஈசி-சீ சீ’ என்ற இழிவுரையின் விகார அநுகாரம். குவளையங்கண்ணியர் என்றது-கண்ணழகிலே துவண்டு நிற்கும் கிழப்பிணங்களின் கருத்தாலே யாம். நாசமான என்றது-நாச ஹேதுவான என்றபடி. பாசம்- அன்பு. நன்னெறி – அர்ச்சிராதி மார்க்கம் என்னலாம்.
—————–
புலன்கள் நைய மெய்யில் மூத்துப் போந்திருந்த உள்ளம் எள்கி
கலங்க வைககள் போத உந்திக் கண்ட பிதற்றா முன்
அலங்கலாய தண் துழாய் கொண்டு ஆயிர நாமம் சொல்லி
வலம் கொள் தொண்டர் பாடி யாடும் வதரி வணங்குதுமே —1-3-9-
பதவுரை
மெய்யில் |
– |
சரீரத்தில் |
புலன்கள் நெய்ய |
– |
செவி வாய் கண் முதலிய இந்திரியங்களெல்லாம் சிதிலமாம்படி |
மூத்து |
– |
கிழத்தன மடைந்து |
போந்து இருந்து |
– |
(நால்வரிருக்குமிடத்தில் தலை காட்டக்கூசி ஏகாந்த ஸ்தலத்திலே) போயிருந்து |
உள்ளம் எள்கி கலங்க |
– |
நெஞ்சு விகாரப்பட்டுக் கலங்க |
ஐக்கள் போத உந்தி |
– |
கோழைகளை அதிகமாக உமிழ்ந்து கொண்டு |
கண்ட |
– |
நெஞ்சில் தோன்றின வற்றை யெல்லாம் |
பிதற்றா முன் |
– |
பிதற்றுவதற்கு முன்னே,- |
வலம் கொள் தொண்டர் |
– |
சிறந்த பக்தர்கள் |
அலங்கல் ஆய தண் துழாய் கொண்டு |
– |
மாலையாகத் தொடுக்கப்பட்ட குளிர்ந்த திருத்துழாயைக் கையிற் கொண்டு |
ஆயிரம் நாமம் சொல்லி |
– |
ஸஹஸ்ரநாமங்களை அநுஸகத்தித்துப் |
பாடி ஆடும் |
– |
பாடுதலும் ஆடதலும் செய்யப்பெற்ற, |
வதரி வணங்குதும் |
– |
ஸ்ரீபதரியை வணங்குவோம் |
கருமேந்திரியங்களென்றும் ஜ்ஞானேந்திரியங்க ளென்றும் இந்திரியங்கள் இருவகைப்படும். வாய் கை கால் குதம் குறி என்பன கருமேந்திரியங்கள்; நாக்கு மூக்கு கண் காது உடல் என்பன ஞானேந்திரியங்கள். இவை யெல்லாம் சிதிலமாவது கிழத்தனத்தில். கண் தெரியாதபடியும் காது கேளாதபடியும் அடியெடுத்து வைக்க முடியாதபடியும் கிழத்தனம் அதி கரித்து ஒரு மூலையிலே கிடந்து கண்டபடி பிதற்ற நேருங்காலத்தில் வதரியை ஸ்மரிக்கத்தான் யோக்யதை ஏது? அப்போதைக் கிப்போதே வதரிவணங்குதல் நன்று .
“கண்ட பிதற்றாமுன் ” என்றவிடத்து கண்ட = பலவின்பால் வினையாலணையும் பெயர்; இரண்டாம் வேற்றுமைத் தொகை: கண்ட வார்த்தைகளையும் என்றபடி.
வலங்கொள் தொண்டர் = బలమ్ (பலம்) என்ற வடசொல் வலமெனத் திரிந்ததாகக் கொண்டால் ‘ வலங்கொள் ‘ என்றது ‘ப்ரபலர்களான ‘ என்றபடி: பகவானை அநுபவிப்பதில் கைதேர்ந்தவர்களான என்கை. வலங்கொள்ளுதல் என்று பிரதக்ஷிணஞ் செய்தலைச் சொல்லிற்றாகவுமாம்
————
வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை
கொண்டு தொண்டர் பாடி யாடக் கூடிடில் நீள் விசும்பில்
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே –1-3-10-
பதவுரை
வண்டு |
– |
வண்டுகளானவை |
தண் தேன் உண்டு வாழும் வதரி |
– |
குளிர்ந்த தேனைப் பருகிக் களித்து வாழுமிடமான ஸ்ரீபதரியில் எழுந்தருளியிருக்கிற |
நெடு மாலை |
– |
ஸர்வேச்ரன் விஷயமாக, |
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் |
– |
தாழைகளை வேலியாகக் கொண்ட திருமங்கைக்குத் தலைவரான ஆழ்வார் |
ஒலி |
– |
அருளிச்செய்த |
மாலை கொண்டு |
– |
இந்தச் சொல் மாலையைக் கொண்டு |
தொண்டர் |
– |
பக்திமான்கள் |
பாடி ஆட கூடிடில் |
– |
பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் அநுபவிக்கப் பெற்றால் |
அவர்க்கு |
– |
அப்படிப்பட்ட மஹான்களுக்கு |
நீள் விசும்பில் அண்டம் அல்லால் |
– |
பரமகாசத்திலேயுள்ள பரம பதத்தைத் தவிர |
மற்று ஓர் ஆட்சி அறியோம் |
– |
வேறொரு லோகமாளப் பெறுதல் இல்லை. |
இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டுகிற பாசுரம் இது.
வண்டுகள் தேனைப் பருகிக் களித்து வாழுமிடமான ஸ்ரீபதரியிலே எழுந்தருளியிருக்கின்ற ஸர்வேச்வரன் விஷயமாகத் திருமங்கையாழ்வார் அருளிச் செய்த இந்த ஸ்ரீஸூக்திகளாலே அப்பெருமானைப் பாடி, பாட்டுக்குத் தகுதியாக ஆடி அநுபவிக்கப்பெற்றால் அவர்கள் ஸாக்ஷாத் பரம பதத்தை ஆளப் பெறுவர்களேயன்றி அல்பங்களாயும் அஸ்திரங்களாயுமுள்ள உலகங்களிற் சென்று துவளமாட்டார்களென்றதாயிற்று.
ஒவ்வொரு பாட்டிலும் வதரிவணங்குதுமே என்று தலத்தைப்பற்றிச் சொல்லிவந்தவர் இப்பாட்டில் வதரிநெடுமாலை என்று தலைக்கட்டுகையாலே வதரிநாராயணனை உத்தேசித்தே வதரி வணங்கினாரென்னுமிடம் வ்யக்தமாகிறது.
இத்திருமொழியில் ஒவ்வொரு பாட்டிலும் இளையாமுன், ஏசாமுன், நடுங்கா முன், தள்ளி நடவாமுன், பேசி அயராமுன், சிரியாதமுன்னம் என்று அருளிச் செய்து வந்தாரே; இப்படிப்பட்ட அசக்திகாலம் உங்களுக்கு நேருவதற்கு முன்னே வதரியைப்போய் வணங்குங்கள் ‘ என்று பிறர்க்கு உபதேசித்தாரா? அன்றி, அசக்திவருவதற்கு முன்னே ஆழ்வார் தாம் வதரியை வணங்கப் பாரித்தாரா? என்று கேள்விகேட்பர் சிலர்.
வணங்குதும் என்று தன்மையாகச்சொல்லியிருக்கிறாரேயன்றி “வணங்குமினே” என்று முன்னிலையாகச் சொல்லவில்லை; ஆகையாலே பிறர்க்கு உபதேசிக்கிறாரென்னப் போகாது; தாம் பாரிக்கிறார் என்றே சொல்லவேண்டும்.
ஆனாலும், “பண்டு காமரானவாறும் பாவையர் வாயமுதமுண்டவாறும் வாழ்ந்தவாறும்”, ஒக்கவுரைத்திருமி ”பப்பவப்பர் மூத்த வாறு பாழ்ப்பது சீத்திரளை யொப்ப, ஐக்கள் போதவுந்த உன்தமர் காண்மினென்று, செப்பு நேர்மென் கொங்கை நல்லார் தாம் சிரியாத முன்னம்”, ”ஈசி போமினீங்கிரேன்மின்” இத்யாதி பாசுரங்களின் போக்கை நோக்குமிடத்து ஆழ்வார் இங்கனே தம்மைப்பற்றிச் சொல்லிக் கொள்ளமாட்டாரென்று தோன்றுகிறது.
விஷயாந்தரங்களைக் காரியுமிழ்ந்து மறந்தொழிந்த இவர் மறு படியும் தமக்கு அப்படிப்பட்ட ஸம்பவங்கள் நேரிடுமென்று நினைப்பது கூடாது. ஆகையாலே இத்திருமொழி பரோபதேசமும் ஸ்வாநுபவமும் கலந்த அருளிச் செயல் என்றே நிச்சயிக்க வேண்டும்.
“தில்லைத் திருச்சித்திரகூடம் சென்று சேர்மின்களே ” என்றும் : திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே” என்றும் பரோபதேசமாய் முன்னிலையாகச் சொல்லுமிடங்களில் ஸ்வாநுபவத்திற்கும் குறை யில்லா தாப் போலே வணங்குதும் என்று ஸ்வாநுபவமாய்த் தன்மையாகச் சொன்ன இவ்விடத்திலும் ஸ்வாநுபவத்தோடு கூடவே பரோபதேசமும் நிகழ்கின்றதென்று கொள்ளக்கடவது.
பிறரை நோக்கிச் சொல்ல வேண்டிய வார்த்தைகளையும் தன்மையாகவே சொல்லிவிடுவதும் ஒரு வழக்கமுண்டு-
———-
அடிவரவு:-முற்ற முதுகு உறிகள் பீளை பண்டு எய்த்த பப்ப ஈசி புலன்கள் வண்டு ஏனம்.
————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
This entry was posted on November 19, 2022 at 1:57 pm and is filed under Uncategorized. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply