வாலி மாவலத்து.
அவதாரிகை :– கீழ்த்திருமொழியில் திருமந்திரத்தின் சிறப்பை அநுஸந்தித்த இவ்வாழ்வார், இனி அத்திருமந்திரத்தின் அர்த்தத்துக்கு எல்லைநிலமான திவ்ய தேசங்களிலேபுக்கு அநுபவிக்க இழிகிறார்.
எம்பெருமான் ஸர்வ ஸ்வாமி என்பதும் ஸர்வஸுலபன் என்பதும் திருமந்திரத்தின் தேர்ந்த பொருள்.
அடியவர்கள் இவ்வுடம்போடே அடிமை செய்து மகிழும்படிக்குப் பாங்காக எம்பெருமான் பலவிடங்களிலும் கோயில்கொண்டு தன்னுடைய ஸ்வாமித்வத்தையும் ஸௌலப்யத்தையும் விளங்கக் காட்டிக்கொண்டு நிற்கிறானாகையாலே திவ்யதேசங்கள் திருமந்திரப்பொருளுக்கு எல்லைநிலமாம்.
அப்படிப்பட்ட திவ்யதேசங்களை மற்றுள்ள ஆழ்வார்களும் அநுபவித்தார்களெனினும், திவ்ய தேசாநுபவமே யாத்திரையாகத் திரிந்தவர் இவ்வாழ்வாரொருவரேயாவர்.
தமிழ்ப்பாஷை நடமாடுமிடங்களுக்கு எல்லையான திருவேங்க டத்தளவிலே நின்றுவிடாமல், அவ்வருகே இமயமலைச் சார்பிலுள்ள திவ்ய தேசங்களையும், மற்றும் சோழநாடு, பாண்டிநாடு, தொண்டைநாடு, நடுநாடு, மலைநாடுகளிலுள்ள திவ்ய தேசங்களையும் ஒருங்கே அநுபவிக்க ஆவல்கொண்டு இமயமலையிலுள்ள திருப்பிரிதி யென்னுந் திவ்யதேசத்தை முந்துற முன்னம் அநுபவிக்கிறார்.
இத்திருப்பதியின் திருநாமம் பிருதி என்றும், பிரிதி என்றும் வழங்கப்படும். திவ்யகவி பிள்ளைப்பெருமாளையங்கார் நூற்றெட்டுத்திருப்பதியந்தாதியில் இத்தலத்தைப்பற்றிப் பாடும்பாட்டில், ”பொருப்பிருதிக்குங் கிடந்தாற் போற் றுணித்து வீழ்த்தான், திருப்பிருதிக் கென்னெஞ்சே செல்” என்றது காண்க. இத்தலம் நந்த ப்ரயாகை என வழங்கப்படுமென்பர். (ஆல்மோராவுக்கு 135-மைலில் உள்ளது.) …
—————–
(அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.)
(வாலிமாவலத்து.) வாலியை வதை செய்தருளின பெருமான் இனிதாக எழுந்தருளியிருக்குமிடமான இமயமலையினுள் பரம போக்யமாக அமைந்துள்ள திருப்பிரிதியைச் சென்று சேருமாறு நெஞ்சை நோக்கிக் கூறுகின்றார்.
வாலி மா வலத்தொருவன துடல் கெட வரிசிலை விளைவித்து அன்று
ஏல நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்தநல்லிமயத்துள்
ஆலி மா முகிலதிர் தர வருவரை அகடுற முகடேறி
பீலி மா மயில் நடம் செயும் தடம் சுனைப் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-1-
‘மாவலத்தொருவனான வாலியினது உடல்கெட’ என்று கூட்டிக்கொள்ளலாம். மாவலத்தொருவன் – மஹாபலசாலிகளுள் அத்விதீயன் என்கை. வெள்ளிமலை பறித்த பெருவீரனான இராவணனையும் வாலிலே கொண்டு திரிந்தவனிறே வாலி. அன்னவனுடைய உடல் அழியுமாறு வில்லை வளைத்தவன் இராமன்.
ஸுக்ரீவன் இராமபிரானோடு ஸ்நேஹஞ் செய்துகொண்டு அவனது நியமனத்தினால் கிஷ்கிந்தைக்குச் சென்று வீரநாதஞ்செய்ய, அதைக் கேட்டு வாலி பொறுக்கமாட்டாதவனாய் வெளிக்கிளம்பிவந்து ஸுக்ரீவனோடு யுத்தஞ் செய்யத் தொடங்க, அப்போது இராமன் அவ்விருவரில் இன்னான் ஸுக்ரீவன், இன்னான் வாலி யென்று வாசிகண்டறியாமையால் அம்பு எய்யா தொழியவே, ஸுக்ரீவன் வாலியிடத்துப் பராஜயப்பட்டு வேதனை பொறுக்க மாட்டாமல் ரிச்யமூக பர்வதத்துக்கே மீண்டு ஓடிவந்துசேர, இராமன் அம்பு எய்யாத காரணங்கூறி இப்போது உனக்கு ஓர் அடையாளமிடுகிறேன்;
மறு படியும் வாலியை யுத்தத்துக்கு அழை’ என்று சொல்லி அவன் கழுத்தில் ஒரு பூமாலையைச் சுற்றிக் கிஷ்கிந்தைக்குப் போகவிட, ஸுக்ரீவன் சென்று முன்போலவே வீரநாதஞ்செய்ய, அதைக்கேட்டு வாலி போர்க்குப் புறப்பட அப்போது அவன் மனைவியாகிய தாரை ‘ஓ பிராணநாதா! சற்று முன்பு அடிபட்டு ஓடினவன் திரும்பி இப்போதே சண்டைக்கு அழைக்கின்றமையால் இது வெறுமனன்று; ஏதோ ஒரு பெருத்த ஸஹாயத்தை அண்டைகொண்டு வந்திருக்கவேணும்; நீ இப்போது திடீரென்று போர்க்குப்போவது தகுதியல்ல’ என்று சொல்லித் தடுத்தவளவிலும் அவள் வார்த்தயைச் செவியிலுங் கொள்ளாமல் சடக்கெனப் புறப்பட்டுவந்து ஸுக்ரீவனுடன் பிணங்கினான்.
அந்த வாலிஸுக்ரீவர்களிருவரும் ஒருவர்க்கொருவர் கீழேதள்ளுவது மேலே பாய்வது கட்டிக்கொண்டு நெருக்குவது கடிப்பது குத்துவது அடிப்பதாய் வலிதான யுத்தஞ் செய்யுங்காலத்தில், இராகவன் ஒரு மரத்தடியில் மறைந்திருந்து வாலியைப் பாணத்தினாலடித்தார். அந்த பாணத்தினால் வாலி மார்பு பிளந்து கீழே விழுந்து விட்டான்.
இதைத் தாரை கேள்விப்பட்டு அங்கதனென்னும் புத்திரனுடன் கூட ஓடிவந்து வாலியைத்தழுவிக்கொண்டு பலவாறு புலம்பி, பிறகு எதிரில் நின்ற இராமனைப் பார்த்து அவருடைய மஹாபுருவ லக்ஷணங்களைக்கண்டு இவர் ஸாக்ஷாத் பரமாத்மாவென்று நிச்சயித்துத் துதித்தனள். வாலியும் இராமனோடு வாதாடிப் பல ஸ்மாதானங்கள் சொல்லக் கேட்டு நன்மதிபெற்றுக் கைகூப்பி இராகவனைத் தொழுது ‘ஸுக்ரீவனைப் போல் அங்கதனையும் நோக்கிக்கொள்ள வேணும்’ என்று பிரார்த்தித்து விட்டு ப்ராணனையும் விட்டான்.
இராமன் வாலியைக் கொன்றவிதனில் ஸாமந்யர் சில ஆக்ஷேபங்கள் கூறுவதுண்டு; அவையும் அவற்றுக்கு ஸமாதானங்களும் வருமாறு:- இராவண வதத்திற்கு உதவி தேடுகிற இராமன் இராவணனை எளிதில் வெல்லவல்ல வாலியைக் கொன்றுவிட்டு, பயங்கொள்ளியான ஸுக்ரீவனை உதவிசெய்து கொண்டது என்ன புத்திசாலித்தனம்! என்று சிலர் சங்கிப்பர்கள்; கேண்மின்:-
வாலி முன்னமே இராவணனுடன் அக்நிஸாக்ஷிகமாக ஸ்நேஹங்கொண்டிருந்தமை பற்றி, அவனைத் தான் உதவி கொண்டால் இராவணன் முதலிய துஷ்டர்களைத் தொலைக்க வகையில்லாமையால் இராமன் ஸுக்ரீவனை நண்பனாகக் கொண்டு அவன் வேண்டுகோளின்படி வாலியை வதைத்திட்டனன். இனிச் செய்ய வேண்டிய ராவண ஸம்ஹாரமாகிற தேவகாரியத்திற்கு இவ்வாலிவதம் அங்கமெனக் கருதத்தக்கது;
எவ்வகைப் பெருந்தீங்கு செய்திருந்தாலும் சரணமடைந்தால் அவர்களைப் பாதுகாப்பதென்ற சிறந்த தருமத்தை மேற்கொண்டு நடப்பவனான இராமபிரான், அத்தருமத்தை முழுதும் விட்டு ஸுக்ரீவன் சரணமடைந்த பின்னரும் அவனை மிக வருந்திக் கொல்லத்தொடங்கி அந்தத் தருமத்திற்கு எதிரானமைபற்றி வாலியைக் கொல்லலாயிற்று.
அன்றியும், பிறர் மனைவியைக் காதலித்துக் கவர்தலும், தம்பியினிடம் பகைபாராட்டுதலும், வலியழிந்து புறங்கொடுத்து ஓடுகின் றவனைத் துரத்தித் துரத்திக் கொல்லத் தொடங்குதலும் முதலிய தீச்செயல்கள் வாலியினிடம் இருந்ததனாலும் பரம தார்மிகனான இராமன் வாலியை அழிக்கலானான், இராமபிரான்றான் ஏகபத்நீவிரதமுடையுவனாய், தம்பியரைத் தன்னுயிர்போலக் கொள்பவனாய், வலியிழந்த பகைவனை ‘இன்று போய் நாளை வா’ என்று அன்போடு சொல்லிவிடுத்தருளும் மஹா வீரனாவான்.
இஃதெல்லாமிருக்கட்டும்; மறைந்து நின்று அம்பு எய்தது கூடுமோ? எனின்; இது அரசர் கொடிய விலங்குகளைப் பதுங்கிநின்று அழிக்கும் வேட்டை முறைமையாலென்பர்.” యద్వా మృగం మృగయువన్మృగయాప ధేన ఛన్నో జఘస్థ నతు శత్రువదాభిముఖ్యాత్ |
తద్యుక్తమేవ తవ రాఘవవంశజస్య తిర్యక్షు నైవహి విషకుతయోపచారు. ” என்று அதிமா நுஷஸ்தவத்தில் ஆழ்வானருளிச்செய்ததுங் காண்க.
வேறுவகையான ஸமாதானங்களுமுள்ளன ;- முதலில் சரணமடைந்த ஸுக்ரீவனுக்கு அபயமளித்து வாலியைக் கொல்வதாக வாக்குதத்தஞ்செய்து விட்ட பெருமாள் பின்னர் வாலியினெதிரில் நின்று போர் செய்தால் இப்பெருமானது திறத்தைக்கண்டு அஞ்சி வாலியும் அவனைச் சரணமடைந்திடுவனாயின் தஞ்ச மடைந்தவனைக் கொலை செய்யக்கூடாமைபற்றி அவனைக் கொல்லாதுவிட நேர்ந்தால் முன்னைய வாக்குத் தவறிவிடுமேயென்ற நோக்கம் முக்கிய காரணமாம்.
அன்றியும், எதிர்ந்தார் வலிமையிற் பாதி தன்னிடம் வந்து கூடும்படி வாலி சிவபிரானிடத்துப் பெற்றிருக்கின்ற வரம் பழுதுபடாமலிருக்குமாறு மறைந்து நின்று அம்பெய்தனன் என்றலுமொன்று ; அவரவர்கள் தேவதாந்தரங்களிடத்துப் பெற்ற வரங்கள் பழுதுபடாதபடியன்றோ எம்பெருமான் காரியஞ்செய்வது. இங்ஙனம் பல காரணங்களுள. இங்கு விரிப்பிற் பெருகும். ஸ்ரீராமாயணம் அதன் வியாக்கியானங்கள் வல்லார்வாய்க் கேட்டுணர்க.
கடவுளரது நியாயம் நுட்பமானதும் அறிதற்கு அரியதுமாதலால் அது மனிதரது நியாயத்தோடு ஒப்புநோக்கி ஆராய்தற்கு உரிய தன்றென்பது உணரத்தக்கது. நிற்க.
அன்று வாலியைக் கொன்றவன் இன்று நீரும் நிழலும் மரமும் மணமுங் கண்டு உகந் திருந்து நித்யஸம்ஸாரிகளுக்கெல்லாம் காட்சி கொடுத்துக்கொண்டி ருக்கிறவிடமான ஹிமவானில்.–இந்த ஏழாம் வேற்றுமை நான்காமடியில் பிரிதியில் அந்வயிக்கும். இமயமலையின்கணுள்ள பிரிதியைச் சென்று அடை என்றபடி.
பின்னடிகளில் பிரிதியை வருணிக்கின்றார். மேலுள்ள பாசுரங்களிலும் இவ்வாறே காண்க.
மேகங்களானவை சிறு துளிகளைப் பெய்து கொண்டு அதிரா நிற்க அம்முழக்கத்தைக் கேட்ட மயில்களானவை மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாக மலையினுச்சிமீது ஏறிக்கொண்டு கூத்தாடுகின்றனவாம்; அப்படிப்பட் டதும் பெரிய சுனைகளையுடையதுமான பிரிதியைச் சென்று சேர்’ என்று தம் திருவுள்ளத்துக்கு உரைத்தாராயிற்று,
ஆலி என்று சிறு துளிக்குப் பெயர். ”மாமுகில் அதிர்தர மாமயில் நடஞ் செயும் ” என்றவிடத்துப் பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செயல்;-“வாத்யங்கள் வாய்த்தால் கூத்தாடுவாருடம்பு பேசாதிராதிறே. காலுக்கீடாக வாய்த்தவாறே ஆடுவாரைப்போலே அவை முழங்க இவை ஆடாநிற்குமாயிற்று. ”
அருவரை அகடுற முகடேறி =கீழ்வயிறானது மலையிலே தழுவ, கொடுமுடி யின் மீதேறி – என்கிறவிதற்குக் கருத்து யாதெனில், பீலிமா மயில்களாகையாலே தோகையின் கனத்தாலே பறந்து சென்று ஏறமாட்டாமல் மெல்லத் தவழ்ந்து சென்று ஏறுகிறபடியைக் கூறியவாறு.
அஃறிணைப் பொருள்களும் ஆநந்தமாக வாழும் திவ்ய தேசத்திலே உயர் திணைப்பொருளான நீ போய்க் களித்து வாழவேண்டாவோ நெஞ்சே! என்ற கருத்துக் காண்க.
——————-
(கலங்கமாக்கடல்.] ஸுக்ரீவமஹாராஜருடைய துயரைத் தொலைத்த விருத்தாந்தத்தைக் கீழ்ப்பாட்டில் அநுஸந்தித்தார். அந்த ஸுக்ரீவனுடைய படைத்துணையால் இராமபிரான் தன் துயரைத் தொலைத்துக்கொண்ட விருத்தாந்தத்தை இப்பாட்டில் அநுஸந்திக்கிறார்.
கலங்க மாக்கடல் அரிகுலம் பணி செய்ய அருவரை யணை கட்டி
இலங்கை மா நகர் பொடி செய்தவடிகள் தாம் இருந்த நல்லிமயத்து
விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன வேழங்கள் துயர் கூர
பிலம் கொள் வாள் எயிற்று அரியவை திரிதரு பிரிதி சென்றடை நெஞ்சே –1-2-2-
பதவுரை
நெஞ்சே |
– |
மனமே!, |
மா கடல் |
– |
மஹா ஸமுத்தரமானது |
கலக்க |
– |
கலங்கும்படி |
அரி குலம் பணி செய்ய |
– |
வாநகர ஸமூஹம் கைங்கரியம் பண்ண |
அரு வரை |
– |
அசைக்க முடியாத பெரிய மலைகளைக் கொண்டு |
அணை கட்டி |
– |
ஸேதுகட்டி |
மா இலங்கை நகர் |
– |
பெரிய லங்காபுரியை |
பொடி செய்த |
– |
பொடிபடுத்திய |
அடிகள் தாம் |
– |
ஸர்வஸ்வாமி |
இருந்த |
– |
எழுந்தருளியிருக்கப்பெற்ற |
நல் இமயத்து |
– |
நல்ல ஹிமவானில்,- |
விலங்கல் போல்வனவிறல் |
– |
மலை போன்றவையாய் மிகக்கையுடையவையாய் |
இரு சினத்தன |
– |
மிக்க கோபத்தை யுடையவையான |
வேழங்கள் |
– |
யானைகள் |
துயர்கூர |
– |
துன்பப்படும்படியாக |
பிலம் கொள் |
– |
குறைகளை இருப்பிடமாகக் கொண்டிருக்கிற |
வாள் எயிறு |
– |
வாள் போன்ற பற்களையுடைய |
அரி அவை |
– |
சிங்கங்களானவை |
திரிதரு |
– |
திரியுமிடமாகிய |
பிரிதி |
– |
திருப்பிரிதியை |
சென்று அடை |
– |
சென்று சேர்ந்திடு. |
விபீஷணாழ்வான் இராமபிரான் பக்கல் வந்து சேர்ந்து உய்ந்தபின் பெருமாளைப் பார்த்து ‘ஸ்வாமிந்! இந்த நம்முடைய ஸேனைகள் கடலைக்கடந்து அப்பாற் செல்லவேண்டுமாதலால் அதற்காகக் கடலரசனை நீர் சரணம் புகவேணும்’ என்ன;
இராமபிரான் “கடலைக்கடக்க உபாயம் சொல்லவேண்டும்” என்று கடலாசனாகிய வருணனைப் பிரார்த்தித்துத் தர்ப்பசயனத்திலே படுத்து மூன்று நாளளவும் ப்ராயோபவேசமாகக்கிடக்க,
ஸமுத்ரராஜன் அப்பெருமானது மஹிமையைக் கருதாமல் உபேக்ஷையாயிருந்துவிடவே ஸ்ரீராமன் அதுகண்டு கோபங்கொண்டு (அனைவரும் நடந்தே செல்லும்படி கடலை வற்றச்செய்வேன்’ என்று ஆக்நேயாஸ்த்ரத்தைத் தொடுக்கத் தொடங்கியவளவிலே –
வருணன் அஞ்சி நடுங்கி ஓடிவந்து இராமபிரானைச் சரணமடைந்து கடல் வடிவமான தன்மேல் அணைகட்டுதற்கு உடன்பட்டு, நளன்கையினால் நீரில் போகட்ட கற்களும் மிதக்குமென்று அவனுக்கு அவன் தகப்பனார் வரமளித்திருக்கிறாராகையால் அவனைக்கொண்டு ஸேது கட்டவேணுமென்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டான்.
இராகவனும் அப்படியே மற்ற வானரங்கள் சுற்றுமுள்ள மலைகளைப் பிடுங்கிக்கொண்டுவந்து நளன்கையில் கொடுக்கச்செய்து நளன் கையினால் அம்மலைகளை நீரில் போகடுவித்து ஸேது கட்டுவித்தான். அவ்வழியாய் வானரப்படைகளோடு இராமபிரான் இலங்கை சேர்ந்து அந்நகரையும் இராவணனுள்ளிட்ட அரக்கர் குலத்தையும் நீறுபடுத்தின வரலாறு ப்ரஸித்தம்.
ஒன்றுக்குங் கலங்கமாட்டாத மாகடல் கலங்கும்படியாகவும், ஸம்ஸார நாற்றமே அறியாத திருவனந்தாழ்வான் ஸேனைமுதலியார் முதலிய நித்ய ஸூரிகள் செய்யத் தக்க கைங்கரியத்தை இடக்கை வலக்கை வாசியறியாத வாநர ஜாதி செய்யும்படியாகவும், நீரில் ஆழ்ந்து போகக்கூடிய மலைகள் மிதந்து அணையாய் நிற்கும்படியாகவும் செய்தருளிய விசித்திரசக்தி இவ்வரலாற்றால் விசதமாகும்.
இப்படிப்பட்ட மஹாவீரன் எழுந்தருளியிருக்கப்பெற்ற இமயமலையின் கண்.
கீழ்ப்பாட்டில் இமயத்துள் என்று வந்தது; இப்பாட்டில் இமயத்து என்று வந்தது ; மேற்பாசுரங்களிலும் இப்படி மாறி மாறி வருகின்றன ; இதற்கு நிதானமேதென்னில் ; மூன்றாமடியின் முதலெழுத்து உயிரெழுத்தாக அமையும் பாசுரங்களில் இமயத்துள் என்றும், அது மெய்யெழுத்தாக அமையும் பாசுரங்களில் இமயத்து என்றும் வருமெனக் கண்டுகொள்க.
மலைபோலப் பருத்த வடிவையுடையனவாய், வடிவுக்கேற்ற மிடுக்கையு முடையனவாய், மிடுக்குக்கு உரிய கோபத்தையுமுடையனவான மத்தகஜங்கள் அஞ்சும்படியாக வாள் போன்ற பற்களையுடைய சிங்கங்கள் திரியுமிடமான பிரிதியென்று அத்தலத்தின் நிலைமை கூறப்பட்டது பின்னடிகளில். బలమ్ (பலம் ) என்ற வடசொல் பிலமெனத் திரிந்தது ; குஹை.
————
[துடிகொள்நுண்ணிடை.) ஶீதாபிராட்டிக்காக இலங்கையைப் பாழ் படுத்தினமையைச் சொன்னார் கீழ்ப்பாட்டில்.
நப்பின்னைப் பிராட்டிக்காகச் செய்ததொரு செயலைச் சொல்லுகிறார் இதில்,
துடி கொள் நுண்ணிடைச் சுரி குழல் துளம் கெயிற்று இளம் கொடி திறத்து ஆயர்
இடி கொள் வெங்குரலின விடை யடர்த்தவன் இருந்த நில்லிமயத்து
கடிகொள் வேங்கையின் நறு மலர் அமளியின் மணி யறை மிசை வேழம்
பிடியினோடு வண்டிசை சொலத் துயில் கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-3-
பதவுரை
துடி கொள் நுண் இடை |
– |
உடுக்கைபோன்ற ஸூக்ஷ்மமான இடையையும் |
சுரிகுழல் |
– |
சுருண்ட கூந்தலையும் |
துளங்கு எயிறு |
– |
பளபளவென்று விளங்குகின்ற பற்களையும் உடையவளாய் |
இள கொடி திறத்து |
– |
இளங்கொடி போன்றவளான நப்பிள்ளைப் பிராட்டிக்காக, |
ஆயர் |
– |
இடையர்களுடையவையாய் |
இடி கொள்வெம் குரல் இனம் விடை |
– |
இடிபோல் வெவ்விய குரலை யுடைவையாய் கூட்டமாக வந்தவையான ஏழு ரிஷபங்களை |
அடர்த்தவன் |
– |
வலியடக்கின பெருமான் |
இருந்த |
– |
எழுந்தருளியிருக்கப் பெற்ற |
நல் இமயத்து |
– |
நல்ல இமயமலையினுள்,- |
வண்டு இசை சொல |
– |
வண்டுகள் இசைபாடா நிற்க |
மணி அறை மிசை |
– |
இந்திரநீல மணிமயமான பாறைகளின் மேலே |
கடிகொள் வேள்கையின் நறுமலர் அமளியில் |
– |
வேங்கைமரத்தினது மணம் மிக்க புஷ்பமயமான படுக்கையிலே |
வேழம் |
– |
யானையானது |
பிடியினோடு |
– |
தன் பேடையோடுகூட |
துயில்கொளும் |
– |
உறங்குமிடமான |
பிரிதி |
– |
திருப்பிரிதியை |
சென்று அடை |
– |
சென்று சேர்வாயாக. |
கும்பனென்னும் இடையர் தலைவனது மகளும், நீளாதேவியின் அம்ச மாகப் பிறந்ததனால் நீளா என்ற பெயரால் வழங்கப்பட்டு வருபவளுமான நப்பின்னைப்பிராட்டியை மணஞ்செய்துகொள்ளுதற்காக அவள் தந்தை கன்யாசுல்கமாகக் குறித்தபடி யாவர்க்கும் அடங்காத அஸுராவேசம் பெற்ற ஏழு எருதுகளையும் கண்ணபிரான் ஏழு திருவுருக்கொண்டு சென்று வலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்துகொண்டனன் என்ற வரலாறு முன்னடிகளில் அடங்கியுள்ளது.
முதலடி முழுமையும் நப்பின்னைப்பிராட்டியின் அவயவஸௌந்தரி யத்தை வருணிப்பது. ‘அஸுராவேசம் பெற்ற ரிஷபங்களோடு எங்கனே நாம் போர் செய்வது ‘ என்று பின்வாங்காமல் உயிரைப்புல்லாக நினைத்து அவ்வெருதுகளோடு போர்செய்ய மேல்விழப்பண்ணவல்ல சிறந்த அழகு பெற்றவளாம் நம்பின்னை யென்பவள்.’ இவளுடைய திருமேனி நமக்குக் கிடைக்கு மாகில் என்ன அருந்தொழில்தான் செய்யக்கூடாது’ என்று துணிந்து விடைகளின் மேலே விழுந்தானாயிற்று.
மாதர்களின் சிற்றிடைக்கு உடுக்கையை உவமை கூறுதல் கவிமரபு. ”இளங்கொடி போன்ற நப்பின்னை திறத்து” என்னாது, “இளங்கொடி திறத்து” என்று அபேதமாகச் சொன்னது அப்பிராட்டியின் திருமேனியிலுள்ள ஸௌகுமார்யத்தை நன்கு விளக்கும்; ‘தாமரை போன்ற திருவடி’ என்ன வேண்டுமிடத்து,* “ தாவி வையங்கொண்ட தடந்தாமரைகட்கே”–* (திருவாய்மொழி 6-9-9.) என்றருளிச்செய்தது காண்க.
இளங்கொடி திறத்து = கோல்தேடியோடுங் கொழுந்து போன்ற நப்பின்னைக்காக என்றபடி. ஆயரிடிகொள் வெங்குரலினவிடை =ஆயர் என்றவிது இனவிடையில் அந்வயிக்கும்; ஆயர்களுடைய இனவிடைகளை அடர்த்தவன் என்கை. இடியிடித்தாற்போல் பயங்கரமாக இரைத்துக்கொண்டிருந்ததனால் இடிகொள்வெங்குரல் என அடைமொழி கொடுக்கப்பட்டது. பிரதிபந்தகங்களைப் போக்கி அபிமத விஷயத்தோடே புணர்ந்த பெருமான் நம்போன்ற அபிமதர்களையுஞ் சேர்த்துக்கொள்வதற்காக எழுந்தருளியிருக்கிற இமயயின் கண்
அழகிய பாறைகளின் மீது வேங்கை மலர்கள் விசேஷமாக உதிர்ந்து படுக்கை விரித்தாற்போலிராநிற்க, அதன்மீது யானையானது தன் பேடையோடு கிடந்துறங்குகைக்குப் பாங்காக வண்டுகள் கர்ணாமிருதமாக இன்னிசை பாடப் பெற்ற பிரிதியைச் சென்று சேர் நெஞ்சமே!.
நப்பின்னைப்பிராட்டியோடே பரமரஶிகன் ரமிக்குமிடமாகையாலே அங்குள்ள திர்யக்ஜந்துக்களும் ச்ருங்கார ரஸத்திலே நோக்காயிருக்கிறபடி. அமளி – படுக்கை. மணியறை என்பதற்கு மணிமயமான பாறை என்றும், அழகிய பாறை என்றும் பொருள் கொள்ளலாம். பிடி – யானைப் பேடை.
——————–
மறம் கொள் ஆள் அரி யுருவென வெருவர ஒருவனதகல் மார்வம்
திறந்து வானவர் மணி முடி பணி தர இருந்த நல்லிமயத்துள்
இறங்கி ஏனங்கள் வளை மருப்பி இடந்திடக் கிடந்து அருகு எரி வீசும்
பிறங்கு மா மணி யருவி யொடிழி தரு பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-4-
பதவுரை
மறம் கொள் வெருவர |
– |
‘சீற்றங்கொண்ட |
ஆள் அரி உருஎன |
– |
நரசிங்க மூர்த்தி’ என்று பிரஸதாவமெடுத்த மாத்திரத்திலே |
வெருவர |
– |
உலகம் அஞ்சி நடுங்கும்படியாக (நரஸிம்ஹாவதாரஞ்செய்து) |
ஒருவனது |
– |
வீரரில் ஒப்பற்றவனான இரணியனுடைய |
அகல்மார்வம் |
– |
விசாலமான மார்பைப் |
திறந்து |
– |
பிளந்து, |
வானவர் (அந்த விடாய்தீர) |
– |
(இப்படி இரணியனைக் கொன்ற மஹோபகாரத்தில் ஈடுபட்ட)தேவர்கள் |
மணி முடி பணிதர |
– |
மணிமயமான கிரிடங்களணிந்த தலையாலே வணங்கும்படியாக |
இருந்த |
– |
என்பெருமான் எழுந்தருளி யிருக்கப் பெற்ற |
நல் இமயத்துள் |
– |
விலக்ஷணமான இமயமலையின் கண், |
ஏனங்கள் |
– |
பன்றிகளானவை |
இறங்கி |
– |
தலை குனிந்து |
வளை மருப்பு |
– |
வளைந்த கொம்புகளாலே |
இடந்திட |
– |
(மணிப்பாறைகளைப்) பிளக்க (பிளந்ததனால் பெயர்ந்து) |
அருகு கிடந்து எரி வீசும் பிறங்குமா மணி |
– |
ஸமீபத்திலிருந்து கொண்டு தீ வீசுகின்ற ப்ரகாசம் மிக்க சிறந்த மணிகளானவை |
அருவியொடு |
– |
மலையருவிகளோடுகூட |
இழிதரு |
– |
இழியுமிடமான |
பிரிதி |
– |
திருப்பிரிதியை |
நெஞ்சே! சென்று அடை. |
(மறங்கொளாளரி.) நரஸிம்ஹ மூர்த்தியாகத் திருவவதரித்து இரணியன் மார்வைப்பிளந்த பெருமிடுக்குத்தோற்ற எழுந்தருளியிருக்குமிட மென்கிறது இதில்.
இரணியனாகிறான் – தேவர் மனிதர் முதலிய எவ்வுயிர்களாலும் பகலிலும் இரவிலும் வானத்திலும் பூமியிலும் வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்கு மரணமுண்டாகாதபடி வரம்பெற்றவன். இவன் தேவர் முதலிய யாவர்க்கும் பலபல கொடுமைகளைப் புரிந்து அனைவரும் தன்னையே கடவுளாக வணங்கும் படி’ செய்துவருகையில், அவன் மகனான ப்ரஹ்லாதாழ்வான் இளமை தொடங்கி மஹாவிஷ்ணுபக்தனாய்த் தந்தையின் கட்டளைப்படி முதலில் அவன்”. பெயரைச் சொல்லிக் கல்வி கற்காமல் ‘நாராயண நாமம் சொல்லிவரவே கடுங்கோபங்கொண்ட இரணியன் ப்ரஹ்லாதனைத் தன் வழிப்படுத்துவதற்குப் பலவாறு முயன்றபின் அங்ஙனம் வழிபடாத அவனைக் கொல்வதற்கு என்ன வுபாயஞ்செய்தும் அவன் பகவானுடைய அநுக்ரஹபலத்தினால் ஒரு கேடுமின்றியிருக்க,
ஒரு நாள் ஸாயங்காலத்திலே அந்த ஹிரண்யன் தன் புத்திரனை நோக்கி “நீ சொல்லும் நாராயணனென்பான் எங்கேயுளன்? காட்டு” என்ன, “தூணிலுமுளன், துரும்பிலுமுளன், எங்குமுளன்” என்று அக்குமாரன் உறுதியாய்ச் சொல்ல, உடனே இரணியன் “இங்கு உளனோ” என்று சொல்லி எதிரில்நின்ற தூணைப்புடைக்க, உடனே அதிலிருந்து திருமால் மநுஷ்யரூபமும் சிங்கவடிவுங்கலந்த நரசிங்கமூர்த்தியாய்த்தோன்றி இரணியனைப்பிடித்து வாசற்படியில் தன் மடி மீது வைத்துக்கொண்டு தன் திருக்கையில் நகங்களால் அவன் மார்பைப்பிளந்து அழித்திட்டு ப்ரஹ்லாதனுக்கு அருள் செய்தானென்பது பிரஸித்தம்.
* ‘அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே, வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்கவுருவாய், உளந்தொட்டிரணியெனொண்மார்வகலம், பிளந்திட்டகைகள்” -பெரியாழ்வார் திருமொழி 1-6-9-என்றும்,
** “எங்குமுளன் கண்ணனென்ற மகனைக்காய்ந்து, இங்கில்லையாலென்றிரணியன் தூண்புடைப்ப, அங்கப்பொழுதே அவன் வீயத்தோன்றிய, என் சிங்கப்பிரான் பெருமை ஆராயுஞ்சீர்மைத்தே”-திருவாய்மொழி 2-8-9.- என்றும் ஆழ்வார்கள் ஈடுபடுவர்கள்.
வேறேயொரு தூணிலிருந்து நரசிங்கமூர்த்தி தோன்றினால், முன்னமே ஒரு நரசிங்கத்தை உள்ளே வைத்து நாட்டிய தூண் அது என்று சொல்லி விடக்கூடுமாகையாலே அந்த வார்த்தைக்கு இடமில்லா தபடி அந்த இரணியன் தானே தனது உயரம் பருமனுக்குப் பொருந்தப்பார்த்து அளந்து நாட்டிய அவன் வாசல் தூணிலிருந்தே திருமால் நரசிங்கமாய்த் தோன்றினானென்பதும்,
வேறு யாரேனும் கையால் தட்ட அத்தட்டியவிடத்திலிருந்து தோன்றினால்’ அவர் தம்கையில் நரசிங்கத்தை அடக்கிக்கொண்டுவந்து தூணிலே பாய்ச்சினார்’ என்று சொல்லிவிடக்கூடுமாகையாலே அந்தவார்த்தைக்கு அவகாசமில்லாதபடி அவ்விரணியன் தானே தன் கையால் தட்டினவளவில் திருமால் தோன்றினனென்பதும்,
அவன் ஓரிடத்தில் தட்ட மற்றோரிடத்திலிருந்து நரசிங்கம் தோன்றினால் எங்குமுளன்’ என்று ப்ரஹ்லாதன் செய்த பிரதிஜ்ஞை தவறி ‘நீ சொல்லுகிறவன் இங்கில்லை’ என்று இரணியன் செய்த பிரதிஜ்ஞை நிலைநிற்குமாகையாலே அதற்கு இடமில்லாதபடி அவன் தட்டின இடத்திலிருந்தே திருமால் தோன்றின னென்பதும்,
அவன் தட்டின பிறகு சிறிது போது கழித்து நரசிங்கம் தோன் றினால் ‘நான் தட்டின பொழுது திருமால் அங்கில்லை ‘ என்று அவன் சொல்லி திருமால் எங்கும் எப்பொழுதும் எல்லாப்பொருள்களிலும் உள்ளும் புறமும் வியாபித்திருக்கிற உண்மைநிலையை மறுக்கக் கூடுமாகையாலே அதற்கு இடமறும்படி கர்ப்பம் கருமுதிர்தல் ப்ரஸவித்தல் முதலியனவும் குழந்தையாய் ஜனித்தல் பிறகு நாளடைவில் வளர்தல் என்பனவுமில்லாமல் அவ்வெதிரியினும் பருத்து வளர்ந்த வடிவையுடையனாய் அப்பொழுதே தோன்றினனென்பதும்,
அங்கன் தோன்றிய விடத்தும் ஹிரண்யன் ஜயசீலனாகவும் நரஸிம்ஹன் பராஜிதனாகவும் நேர்ந்தால் ‘எங்குமுளன்’ என்ற உண்மை நிலைத்தாலும் பரத்வம் வித்தியா மற்போய்விடுதல் பற்றி அதைவிடத் தோன்றாமலிருப்பதே நலமென்னும்படியிருக்குமாதலால் அங்கனமாகாதபடி அக்கொடியவனைத் தவறாது அழித்தன னென்பதும்,
தேவர் மனிதர் விலங்குகள் தாவரம் என்னும் நால்வகைப் பிறப்புக்களிலுள்ளவற்றில் ஒவ்வொன்றினாலும் தனித்தனி சாகா தபடியும், ப்ரஹ்மஸ்ருஷ்டிக்கு உட்பட்ட எந்த பிராணியினாலும் சாகாதபடியும் அவன் ப்ரஹ்மருத்ராதிகளிடத்திற் பெற்றவரம் பழுதுபடாமைக்காக நரங்கலந்த சிங்கமாய் ப்ரஹ்மஸ்ருஷ்டியினுட்படாமல் தன்னைத்தானே தோற்றுவித்துக்கொண்டு தோன்றினனென்பதும்,-
அஸ்த்ரசஸ்த்ரங்ளொன்றினாலும் சாகாதபடியும் ஈரமுள்ளதனாலும் ஈரமில்லாததினாலும் இறவாதபடியும் பெற்றவரம் வீண்போகாமே நகங்களினால் கீண்டு கொன்றன னென்பதும்,
பகலிலுமிரவிலுஞ் சாகா கபடி பெற்ற வரம் பொய்படாதபடி அப்பகலிரவுகளின் ஸந்தியாகிய மாலைப்பொழுதிலே கொன்றன னென்பதும்,- பூமியிலும் வானத்திலும் சாகாதபடி பெற்றவரம் மெய்யாம்படி தன் மடிமீது வைத்துக் கொன்றனனென்பதும்,
வீட்டின் அகத்திலும் புறத்திலும் இறவாதிருக்கும்படி பெற்றவரத்திற்கு விரோதமின்றி வாசற்படிமீது வைத்துக்கொண்டு கொன்றனனென்பதும்
இவைபோல்வன பல விசேஷங்கள் இவ்வவதாரத்திலே அருமையாக நோக்கத்தக்க விஷயங்களாம்.
“சுரரசுரர் முனிவர் நரர்கையில் பாரில் சுடர்வானில் பகலிரவில் உள் புறம்பில், பெருபடையில் தான் சாகாவிரண்யன் றன்னைப் பிரகலாதன் தர்க்கித் துண் டென்ற தூணில், நரஹரியாய்ப் பொழுதுபுகு நேரந்தன்னில் நாடியுதித்துயர் வாசற்படி மீதேறி, இரணியனைத் தொடைமிசைவைத்துகிரினாலே இருபிளவாக் கினையரியே எம்பிரானே” என்றார் பின்னோரும்.
ஆளரியுருவென வெருவர = நரசிங்க வுருவத்தைக்கண்டவர்கள் தாம் அஞ்சி நடுங்குவர்களென்பதில்லை; அவ்வடிவை யாரேனுஞ் சிலர் பிரஸ்தாவித்த வளவிலும் குடல் குழம்பும்படி யிருக்குமென்று இதனால் அவ்வடிவின் பயங் கரத்வம் ஒப்புயர்வற்றதாகக் கூறப்பட்டது.
“கை தொட்டுப் பிளக்கவேண்டாதே நரஸிம்ஹத்தினுடைய பேரைச் சொல்லவே ஆஸுரவர்க்கம் அஞ்சும்படி பாயிற்றிருப்பது” என்ற பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸுக்தி காண்க,
இரணியனும் நரஸிம்ஹமூர்த்திக்கு அடுத்தபடியாகச் சொல்லக்கூடிய மஹாசூரனாகையால் ஒருவன் என்றார். வீரர்களை எண்ணிக்கொண்டு வந்தால் இரணியனை முதல் விரலுக்கு எண்ணி அடுத்த விரலுக்கு ஒருவருமில்லாதபடி இரணியனே அத்விதீயனாயிருப்பனாம். அப்படிப்பட்டவனுடைய அகன்ற மார்வை ரத்த வெள்ளத்திற்கு மதகுதிறந்துவிட்டாற்போலே திறந்து விட்டானாயிற்று எம்பெருமான்.
இரணியன் மிடுக்கனாயிருந்தகாலத்து அவனுக்கு அஞ்சி வேற்றுருக்கொண்டு திரிந்த தேவர்கள் அவ்விரணியன் மாண்டொழிந்தானென்று கேள் விப்பட்டவாறே தங்களைக் குடியிருக்கச்செய்த மஹாநுபாவனென்று – நன்றி பாராட்டி எம்பெருமான் திருவடிகளிலே வந்து ஸாஷ்டாங்கமாக விழுவர்களாம்.
அப்படி விழும்போது, ‘ஸ்வாமிந்! இத்தனை காலமாக நாங்கள் கிரீட மணிந்து கொள்ள யோக்யதையற்று அப்படுபாவிக்கு அஞ்சி ஒளிந்துகிடந்தோம்; இன்றுதான் பழைய நிலைமைக்கு வாப்பெற்றோம்; உனது திருவருளால் கிரீடமணியப்பெற்றோங்காண்’ என்பவர்கள் போலத் தமது முடியை எம்பெருமானது பாதாரவிந்தத்திலே படச்செய்து கொண்டு வீழ்வர்களாம்.
இரணியனைக் கொன்று தேவர்களால் வணங்கப்பட்ட பெருமான் எழுந்தருளியிருக்கிற இமயமலையின்கண்.
நரஸிம்ஹபகவான் செய்தருளின காரியத்தை முன்னடிகளிற் கூறவே அதுவே போன்ற வேறொரு செய்தி நினைவுக்கு வந்து அதனைக் கூறுகின்றார் பின்னடிகளில்.
அங்குள்ள வராஹங்களானவை குனிந்து, தங்களுடைய வளைந்த கொம்புகளாலே மாணிக்கப்பாறைகளைக் குத்திப் பெயர்த்திடும்; பெயர்ந்த மாணிக்கங்களானவை மலையருவிகளோடு கூடி உருண்டுவந்து இழியும். நரஸிம்ஹமூர்த்தி இரணியனுடைய மார்வைப் பிளந்து குடல் மாலையைத் தன்மேலெடுத்துப் போட்டுகொண்டபிறகு ரத்தவெள்ள மானது கொழித்துக் கொண்டு புறப்பட்டாற்போலே அவ்வருவிகள் பாய்கின்றனவாம். ;
அப்படிப் பட்ட பிரிதியைச் சென்று சேர் நெஞ்சமே!. அருகுகிடந்து – திருப்பிரிதியின் ஸமீபத்திலேயிருந்து கொண்டு என்கை.
பிரிதியின் ஸமீபத்திலே மாணிக்க மயங்களான பாறைகள் இருக்கின்றன; மஹாவராஹங்கள் அவற்றை உரோசிப் பிளந்துவிடுகின்றன. அப்படி பிளக்கப்பட்டுக் கிளர்ந்த மணிகளானவை பளபளவென்று ஜ்வலித்துக்கொண்டு அருவிகளோடு கலந்து ப்ரவஹிக்கின்றன.
—————–
(கரைசெய்மாக்கடல்.) அவதாரங்களுக்கு அடியாகத் திருப்பாற்கடலிலே வந்து கண்வளர்ந்தருளுகிறபடியை அநுஸந்தித்துப் பேசுகிறார் இதில்.
கரை செய் மாக்கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை யலர் மகள் அவளோடும் அமர்ந்த நல்லிமயத்து
வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர்முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரச வாரி தன்னிளம் பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-5-
பதவுரை
கனை கழல் தொழுது ஏத்த |
– |
(ஆபரணங்கள் பூண்டதனால்) ஒலிசெய்கின்ற திருவடிகளை |
அமரர்கள் |
– |
தேவர்கள் |
தொழுது ஏத்த |
– |
ஸேவித்துத் துதிக்கும்படியாக, |
கரை செய் மா கடல் கிடந்தவன் |
– |
தனக்குத்தானே கரை செய்து கொண்டிருக்கிற பெரிய கடலிலே (‘க்ஷீரஸாகரத்தில்) பள்ளி கொண்ட பெருமான், |
அரை செய்மேகலை அலர் மகளவளொடும் அமர்ந்த |
– |
திருவரையிலே சாந்தப்பட்ட மேகலையை யுடையளான பெரிய பிராட்டியோடு கூட எழுந்தருளியிருக்கப்பெற்ற |
நல் இமயத்து |
– |
நல்ல இமயமலையின் கண், |
வரைசெய் மா களிறு |
– |
மலைபோற் பெரிய ஆண் யானைகளானவை |
இள வெதிர் |
– |
இளமூங்கிலைகளுடைய |
வளர் மூளை |
– |
ஓங்கி வளர்ந்தமுளைகளை(ப்பிடுங்கி) |
அளை மிகு தேன் தோய்த்து |
– |
முழைஞ்சுகளிலே மிகுதியாகவுள்ள தேனிலே தோய்த்து |
பிரசம் வாரி |
– |
(அந்தத்) தேன்வெள்ளத்தை |
தன் இள பிடிக்கு |
– |
தனது இளையபேடைக்கு |
அருள் செயும் |
– |
கொடுக்குமிடமான |
பிரிதி |
– |
திருப்பரிதியை |
நெஞ்சே சென்று அடை-. |
ஆபரணங்கள் பூண்டதனாலே ஒலிசெய்துகொண்டிருக்கிற பரவாஸுதேவன் திருவடிகளை ஸேவிக்கவேணுமென்கிற குதூஹலமுடைய நான்முகன் முதலான தேவர்கட்கு ஸ்ரீவைகுண்டத்திலே சென்று காணப்பெறுகை அஸாத்தியமாகையாலே அவர்கள் இழந்தே போகாதபடி திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்து அவர்களுக்கு ஸேவைஸாதிக்கிற ஜீராப்திநாதன் பிராட்டியுந் தானுமாய்வந்து பொருந்திவாழும் இமயமலையின்கண்.
மலைபோற்பெரியசரீரமுடைய யானைகளானவை இளையமூங்கில் முளைகளைப் பிடுங்கித் தேனிலே தோய்த்துத் தம் பேடைகளின் வாயிலே பிழியாநிற்கப் பெற்ற பிரிதியைச் சென்றுசேர் நெஞ்சமே!.
வரைசெய்மாக்களிறு = செய் – உவமவுருபு; மலைபோன்ற பெரிய யானைகள். வெதிர் என்று மூங்கிலுக்குப் பெயர். அது முளைக்கும்போதே நெடுக ஓங்கி வளருமாதலால் வளர்முளை என்றார்.
யானையானது தன் பேடையை மகிழ்விக்கவேண்டி இனிய உணவு கொடுக்க விரும்பும்; மூங்கில் முளையைப் பெயர்த்துத் தேனிலே தோய்த்து அதன்வாயிலே பிழியும்.
* ” பெருகுமத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று, இருகணிள மூங்கில் வாங்கி – அருகிருந்த, தேன் கலந்து நீட்டுந் திருவேங்கடங்கண்டீர், வான்கலந்த வண்ணண் வரை.” என்கிற பாசுரத்திலும் இவ்விஷயம் காணத்தக்கது. * இரண்டாந்திருவந்தாதி-75.
பிரசவாரி = பிரசம் என்று, கள்-தேனீ-தேன்-தேன் கூடு-வண்டு ஆகிய இவற்றுக்குப் பெயர்; வாரி என்பதற்குப் பல பொருள்களிருந்தாலும், அவற்றுள் இங்கு வெள்ளமென்னும் பொருள் கொள்ளத்தகும்; தேன் வெள்ளத்தை என்றதாயிற்று. தேனீக்கள் நிறைந்த தேனை என்றும் சொல்லலாம்.
—————-
***-(பணங்களாயிரம்.) தேவர்களுக்காக ஸ்ரீவைகுண்டத்தைவிட்டுத் திருப்பாற்கடலிலே வந்து கண்வளர்ந்த எம்பெருமான் அக்கடலளவும் போக மாட்டாத மனிசர்க்கும் அநுகூலமாக இமயமலையிலேவந்து எழுந்தருளியிருக் கிறானென்பது தோன்ற அருளிச்செய்கிறார்.
பணங்கள் ஆயிரம் யுடைய நல்லரவணைப் பள்ளி கொள் பரமா வென்று
இணங்கி வானவர் மணி முடி பணி தர இருந்த நல்லிமயத்து
மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்புற நிமிர்ந்தவை முகில் பற்றி
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டிசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-6-
பதவுரை
வானவர் |
– |
தேவர்கள் |
இணங்கி |
– |
திரளாகக் கூடி |
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு அணை பள்ளி கொள் பரமா என்று |
– |
‘ஆயிரம் படங்களையுடைய திருவனந் தாழ்வானாகிற சயனத்திலே பள்ளி கொண்டருளும் பரமபுருஷனே!’ என்று சொல்லி, |
மணி முடி பணி தர இருந்த நல்இமயத்து |
– |
மணி முடிகளாலே வணங்கும் படி எம்பெருமான் எழுந்தருளி யிருக்கப் பெற்ற நல்ல இமயமலையின் கண், |
மணம் கொள் நெடு மாதவி கொடி அவை |
– |
பரிமளமுள்ளவையும் நீண்டவை யுமான குருக்கத்திக் கொடிகளானவை |
விசம்பு உற நிமிர்ந்து |
– |
ஆகாசத்தளவுஞ் சென்று நிமிர்ந்து |
முகில் பற்றி பிணங்கு |
– |
மேகங்களைப் பற்றிக்கொண்டு அவற்றோடு சண்டைபோடுவதனாலே |
பூ |
– |
புஷ்பிக்கப்பெற்ற |
பொழில் |
– |
(குருக்கத்திச்)சோலைகளிலே |
வண்டு நுழைந்து |
– |
வண்டுகள் (மதுவைப் பருகப்) பிரவேசித்து |
இசை சொலும் |
– |
இசைபாடுமிடமான |
பிரிதி |
– |
திருப்பிரிதியை |
நெஞ்சே! சென்று அடை-; |
வானவர்கள் திரள் திரளாக இமயமலையின்கண் வந்து எம்பெருமானை நோக்கி ‘ ஸ்வாமிந்! தேவரீர் திருப்பாற்கடலிலே சேஷசயனத்திலே பள்ளி கொண்டிருந்த பெருமானன்றோ ‘ என்று சொல்லி அவன் திருவடிகளிலே தலையை வீழ்த்தி வணங்குவர்களாம். இணங்கி– பொருந்தி என்றுமாம்.
பின்னடிகளின் கருத்து: நறுமணமுள்ள குருக்கத்திக்கொடிகளானவை ஆகாசம் வெளியடையும்படி ஒங்கிப்படர்ந்து மேகமண்டலத்தோடு போராடும் போது அந்த ஸம்மர்த்தத்தாலே பூக்கள் அலரும் ; அப்பூக்களிலே மதுபானம் பண்ண நினைத்து வண்டுகளானவை அம்மேகத்துக்கும் கொடிக்கும் நடுவே நுழைந்து மதுவைப் பருகிக் களைத்துச் செருக்குக்குப் போக்குவீடாக இசைபாடாநிற்கும்; திருப்பிரிதியடங்கலும் இந்த ஆரவாரமேயாயிருக்கும். அப்படிப்பட்ட தலத்தைச் சென்று சேர் நெஞ்சே!.
மாதவிக்கொடியானது முகிலோடு பிணங்குவதாகவும் வண்டுகள் இசை பாடுவதாகவுஞ் சொல்லுகிறவிதற்கு ஒரு உள்ளுறை பொருள் கூறலாம்;- மாதவிக்கொடியென்று பிராட்டியைச் சொல்லுகிறது; முகில் என்று எம்பெருமானைச் சொல்லுகிறது ; அபராதிகளான சேதநர்களை க்ஷமித்து ரக்ஷிப்பதற்காகப் பிராட்டி எம்பெருமானோடே போராடி மன்றாடுவளிறே; அதைச் சொல்லுகிறது.
ஸாரக்ராஹிகளான மஹான்கள் வந்து புகுந்து தோத்திரம் பண்ணும்படியைச் சொல்லுகிறது வண்டிசைசொலும் என்று. பணம், பரமன், மாதவி-வடசொற்கள்
————–
கார்கொள் வேங்கைகள் கனவரை தழுவிய கறி வளர் கொடி துன்னி
போர் கொள் வேங்கைகள் புனவரை தழுவிய பூம் பொழில் இமயத்துள்
ஏர் கொள் பூஞ்சுனைத் தடம் படிந்து இனமலர் எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-7-
பதவுரை
கனம் வரை |
– |
அழகிய தாழ்வரைகளில் |
கார்கொள் வேங்கைகள் |
– |
மேக மண்டலத்தை ஆகரமித்து வளர்ந்த வேங்கை மரங்களை |
தழுவிய |
– |
தழுவிக்கொண்டிரா நின்ற |
கறிகொடி |
– |
மிளகுகளின் கொடிகளானவை |
துன்னி வளர் |
– |
நெருங்கிப் படரப்பெற்றதும் |
புனம் வரை |
– |
கொல்லை நிலங்களிலுள்ள சிறுமலைகளிலே |
போர்கொள் வேங்கைகள் தழுவிய |
– |
யுத்தத்திற்கு ஸித்தமான வேங்கைப் புலிகள் ஸஞ்சரிக்கப்பெற்றதுமாய் |
பூ பொழில் |
– |
அழகிய சோலைகளை யுடையதான |
இமயத்துள் |
– |
இமயமலையின் கண்-, |
இமையோர்கள் |
– |
தேவர்கள் |
ஏர் கொள் பூ சுனை தடம் படிந்து |
– |
அழகிய புஷ்பங்களையுடைய தடாகங்களின் துறைகளிலே தீர்த்தமாடி |
இனம் மலர் எட்டும் இட்டு |
– |
சிறந்த எட்டுவகைப் பூக்களையும் கொண்டு ஸமர்ப்பித்து |
பேர்கள் ஆயிரம் |
– |
ஸஹஸ்ர நாமங்களையும் |
பரவி நின்று |
– |
வாய்வந்தபடி சொல்லி |
அடி தொழும் |
– |
எம்பெருமான் திருவடிகளைப் பணியுமிடமான |
பிரிதி |
– |
திருப்பரிதியை |
***-(கார்கொள் வேங்கைகள்.) இமயமலையின் தாழ்வரைகளிலே மேக மண்டலத்தளவும் ஓங்கி வளர்ந்த வேங்கைமரங்கள் மிளகு கொடிகளாலே தழுவப்பெற்றுநிற்கும்; வெளி நிலங்களிலுள்ள சிறு மலைகளிலே கொடிய வேங்கைப் புலிகள் திரியாநிற்கும் ;
இப்படி எங்கும் வேங்கை மயமாகவேயிராநின்ற இமய மலையின் கண் தேவர்கள் வந்து செங்கழுநீர் செண்பகம் இருவாட்சி பாதிரி புன்னை குருக்கத்தி கருமுகை தாமரை என்னப்படுகிற எண்வகைப் புஷ்பங்களையும் தடாகங்களிலிருந்து கொணர்ந்து ஸமர்ப்பித்து ஸஹஸ்ரநாமங்களைச் சொல்லிக்கொண்டே நமஸ்கரிக்குமிடமாகிய திருப்பிரிதியைச் சென்று சேர் நெஞ்சே !.
கார்கொள் வேங்கைகள் = வேங்கை மரங்களில் பல வர்ணங்களிருப்பதால் கரிய நிறமுள்ள வேங்கை மரங்களை இங்குச் சொல்வதாகவுங் கொள்ளலாம். கார் – கருமைநிறத்தை, கொள்- கொண்டிருக்கிற என்றபடி. கறி-மிளகு.
——–
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும்பசியது கூர
அரவம் ஆவிக்குமகம் பொழில் தழுவிய அருவரை யிமயத்து
பரமனாதி எம்பனி முகில் வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள்
பிரமனோடு சென்று அடி தொழும் பெரும் தகைப் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-8-
பதவுரை
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை |
– |
இராப்பொழுதே விஞ்சி இருள் அதிகரி க்கப்பெற்ற மலை முழஞ்சுகளிலே |
இரு பசியது கூர |
– |
பெரும்பசி உண்டாக |
அரவம் |
– |
மலைப்பாம்புகளானவை |
ஆவிக்கும் |
– |
பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிற |
அகம் பொழில் தழுவிய |
– |
உட்சோலைகளோடு கூடிய |
அரு வரை இமயத்து |
– |
ஏறமுடியாத தாழ்வரையையுடைய இமயமலையின் கண், |
இமையோர்கள் |
– |
தேவர்கள் |
பிரமனோடு சென்று |
– |
நான்முகனோடு கூடச் சென்று |
பரமன் என்று எண்ணி நின்று – |
– |
பரமபுருஷனே! என்றும் |
ஆதி என்று |
– |
ஆதி மூலமே ! என்றும் |
எம் பனிமுகில் வண்ணன் என்று |
– |
குளிர்ந்த மேகம் போன்ற நிறத்தையுடைய எம்பெருமானே! என்றும் |
எண்ணி நின்று |
– |
அநுஸந்தித்துக் கொண்டு |
அடி தொழும் பெரு தகை |
– |
திருவடிகளை வணங்குதற்குரிய |
பிரிதி |
– |
பெருந்தன்மை |
பொருந்திய |
– |
திருப்பிரிதியை |
நெஞ்சே! சென்று அடை- |
(இரவு கூர்ந்து.) இமயமலையில் சோலைகள் செறிந்து கிடக்குமாதலால் ‘ இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியா” என்னுமாபோலே பகற்போது காணமுடியாமல் இரவு காலமே விஞ்சி எங்கும் இருள் மூடிக்கிடக்கும்.
அப்படி இருள் மூடிக்கிடக்கிற மலையின் குஹைகளிலே பாம்புகளானவை ஆஹாரம் பெறாமல் பெரும்பசியோடே பெருமூச்சு விட்டுக்கொண்டு கிடக்கும். அப்படிப்பட்ட இமயமலையின்கண். அமரர்கள் வந்து சேர்ந்து ‘பரமபுருஷா!, ஸகல ஜகத்காரண பூதா!!, காளமேகச்யாமளா!!!” என்றிப்படி அநுஸந்தித்துக்கொண்டு நான்முகக்கடவுளை முன்னிட்டு வணங்குமிடமாகிய திருப்பிரிதி யைச் சென்று சேர் நெஞ்சே!.
அரவம் ஆவிக்கும் அகம்பொழில் என்பதற்கு- பாம்புகளானவை சோலையின் பரிமளத்தோடே கூடின காற்றை ஆக்ராணித்துத் தரிக்கு மென்றும் உரையிடலாம்.
பரமன் ஆதி முகில்வண்ணன் என்கிறவிவற்றை முதல் வேற்றுமையாகவும் அண்மைவிளிகளாகவுங் கொள்ளலாம்
————
ஓதி யாயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல்
ஏதும் இன்றி நின்று அருளும் நம் பெரும் தகை இருந்த நல்லிமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-9-
பதவுரை
ஆயிரம் நாமங்கள் |
– |
ஸஹஸ்ர நாமங்களை |
ஓதி |
– |
எப்போதும் சொல்லிக் கொண்டு |
உணர்ந்தவர்க்கு |
– |
(அத்தாலே, ஸர்வேச்வரனே ரக்ஷகனென்று) விவேகம் பெற்றவர்களுக்கு |
உறுதுயர்அடையாமல் |
– |
உண்டாகக்கூடிய துன்பமொன்றும் உண்டாகாதபடியாகவும் |
ஏதம் இன்றி |
– |
பாவமொன்றும் இல்லாதபடியாகவும் |
நின்று அருளும் |
– |
எப்போதும் க்ருபை செய்கின்ற |
நம் பெருந்தகை |
– |
நம் ஸ்வாமியானவன் |
இருந்த |
– |
எழுந்தருளி யிருக்குமிடமான |
நல் இமயத்து |
– |
நல்ல இமயமலையின் கண்–, |
தாது மல்கிய |
– |
தாதுகள் மிக்கிருக்கிற போதுண்டான |
பிண்டி |
– |
அசோக மலர்கள் |
விண்டு அலர்கின்ற |
– |
விரிந்து அலருகிற |
தழல்புரை எழில் |
– |
நெருப்புப் போன்ற அழகை |
பேதை வண்டுகள் நோக்கி |
– |
அறிவில்லாத வண்டுகள் பார்த்து |
எரி என |
– |
நெருப்பென்று நினைத்து |
வெருவரு |
– |
பயப்படுமிடமான |
பிரிதி |
– |
திருப்பிரிதியை |
நெஞ்சே! சென்று அடை-. |
[ஓதியாயிரம்.) ஆயிரந் திருநாமங்களையும் வாயாலே சொல்லி அவற்றி துடைய அர்த்தங்களையும் அநுஸந்திப்பவர்களுக்கு எவ்விதமான துன்பமும் வந்து சேராத படியாக நித்யாநந்தத்தைக் கொடுத்து அருள் செய்கின்ற பரம புருஷன் எழுந்தருளியிருக்கப்பெற்ற இமயமலையின்கண்.
தாதுகள் நிறைந் திருக்கிற அசோகமலர் விகத்தால் அப்போ துண்டாகு மழகு நெருப்பு ஜ்வலிக்கிறாப்போலிருக்கும். வண்டுகளானவை அப்புஷ்பவிகாஸ சோபையைப் பார்த்து ‘இவை அசோகமலர்’ என்பதை மறந்து ‘இது நெருப்பு’ என்று ப்ரமிக்கும். அவற்றுக்கு இந்த ப்ரமம் நித்தியப்படியாகச் செல்லும். முதல் நாள் ‘இது நெருப்பு’ என்று ப்ரமித்து, பிறகு ஆராய்ந்து ‘நெருப்பு அல்ல, அசோகமலராமிவை’ என்று நிச்சயித்து அதிலே போயி ருந்தும் மறுநாளும் பழையபடியே ப்ரமித்து அதனருகு செல்ல அஞ்சியிருக்கும். இப்படி அச்சமும் அச்சங்கழிதலும் மாறாமல் செல்லப்பெற்ற திருப்பிரிதியைச் சென்று சேர் நெஞ்சே!.
இங்ஙனே வண்டுகளின் அஞ்சுதலைக் சொன்னவித்தால் நினைவுக்கு வரக்கூடியதொன்றுண்டு;- ‘ எம்பெருமான் ஸர்வரக்ஷகன் ‘ என்பது தெரிந்திருக்கச் செய்தேயும் ‘ஆராலே இவனுக்கு என்ன தீங்கு வந்து விடுமோ!’ என்று அஞ்சி, பல்லாண்டு பல்லாண்டென்று அவனுக்கு மங்காளாசாஸநம் பண்ணுவாரும், மற்றொருகால் அந்த அச்சம் நீங்கி ‘எம்மை ரக்ஷித்தருள வேணும்’ என்று பிரார்த்திப்பாரும், மீண்டும் பழைய அச்சமே தலையெடுத்து மங்களாசாஸநம் பண்ணுவாருமாய் ஆகவிப்படி பயமும் பயநிவ்ருத்தியும் மாறிமாறிச் செல்லுகிற ப்ரபந்நர்கள் வாழுமிடம் திருப்பிரிதி என்றதாகிறது.
இரண்டாமடியில் ஏதமின்றி என்ற பாடத்திற்காட்டிலும் ஏதுமின்றி என்ற பாடம் சிறக்கு மென்பது பெரியோர்களின் கொள்கை ; ஏதும் இன்றி – ஹேது ஒன்று மில்லாமல் ; நிர்ஹேதுகமாக என்கை. பிண்டி- அசோகமரம்
————-
கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி எம்பெருமானை
வரி கொள் வண்டு அரை பைம் பொழில் மங்கையர் கலியனதொலி மாலை
அரியவின்னிசை பாடு நல்லடியவர்க்கு அருவினை யடையாவே –1-2-10-
பதவுரை
கரியமாமுகில் படலங்கள் அவை |
– |
கறுத்த மஹாமேகங்களின் கூட்டங்களானவை |
கிடந்து |
– |
(நீர்க்கனத்தாலே திரிய மாட்டாமல்) ஓரிடத்திலே இருந்து கொண்டு |
முழங்கிட |
– |
கர்ஜிக்க, (அந்த கர்ஜனையைக் கேட்டு) |
பெரிய மாசுணம் |
– |
பெரிய மலைப்பாம்புகளானவை |
களிறு என்று |
– |
(நமக்கு இரையாம்படி) யானைகள் (வருகின்றன) என்று நினைத்து |
வரை என பெயர்தரு |
– |
மலை பேர்ந்தாற் போலே பெயர்ந்து கிட்ட வருமிடமான |
பிரிதி |
– |
திருப்பிரிதியிலே (எழுந்தருளியிருக்கிற) |
எம்பெருமானை |
– |
எம்பெருமானைக் குறித்து,- |
வரிகொள் வண்டு அறை பை பொழில் மங்கையர் |
– |
அழகிய வண்டுகள் ஒலிக்கின்ற விசாலமான சோலைகளையுடைய திருமங்கையிலே உள்ளவர்கட்குத் தலைவரான |
கலியனது |
– |
ஆழ்வாருடைய |
ஒலிமாலை |
– |
சொல்மாலையாகிய இத் திரு மொழியினது |
அரிய இன் இசை பாடும் |
– |
அருமையான இனிய இசையைப் பாடவல்ல |
நல் அடியவர்க்கு |
– |
விலக்ஷண பாகவதர்களுக்கு |
அரு வினை அடையா |
– |
மஹாபாபங்களொன்றும் கிட்டமாட்டா. |
(கரியமாமுகில்.) பரிபூர்ணமாக ஜலத்தை முகந்து கொண்டு கறுத்த நிறமுடையனவாயிருக்கிற பெரிய மேகங்களின் திரள்களானவை, உட்கொண்ட நீரின்கனத்தாலே பெயர்ந்து போகமாட்டாமல் இருந்தவிடத்திலேயிருந்து கர்ஜிக்கும் ; அப்பெருமுழக்கத்தைக் கேட்ட மலைப்பாம்புகள் த்வரியின் காம்பீர்யத்தையும் உருவின் பெருமையையுங் கொண்டு இவை யானைகளாம் என்றெண்ணி அவற்றை விழுங்கநினைத்து மலை பெயருமாபோலே பெயர்ந்து கிட்ட வருகின் றனவாம்.
சில மலைப்பாம்புகள் யானையைப்பார்த்து அஞ்சிநடுங்கி ஓடிப்போய் விடுமென்றும், பல மலைப்பாம்புகள் யானையை அணுகி விழுங்கிவிடு மென்றும் தமிழ் நூல்களால் தெரிகின்றது ; ‘
திரையன் பாட்டு ‘ என்ற ஓர் பழைய நூலில்- ‘கடுங்கண்யானை நெடுங்கை சேர்த்தி, திடங்கொண்டறைதல் திண்ண -மென்றஞ்சிப், படங்கொள் பாம்பும் விடரகம்புகூஉம், தடங்கொள் உச்சித் தாழ் வரை அடுக்கத்து” என்ற தனால் மாசுணம் களிற்றைக்கண்டு அஞ்சி யொளிக்கு மென்பது தெரிகின்றது.
( ஞால் வாய்க் களிறு பாந்தட் பட்டெனத், துஞ்சாத்துயரத் தஞ்சுபிடிப் பூசல், நெடுவரை விடரகத் தியம்பும், கடுமான் புல்லிய காடிறந்தோரே ” என்று சங்க நூல்களுள் ஒன்றான நற்றிணையிலும்,
* ‘பரியகளிற்றை அரவுவிழுங்கி மழுங்கவிருள் கூர்ந்த, கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலைமலையாரே ”என்று- திருக்கயிலாயம் முதல் திருமுறை. 2-ம் பாட்டு தேவாரத்திலும்,
(இடி கொள் வேழத்தை எயிற்றொடு மெடுத்துடன் விழுங்கும், கடிய மாசுணங் கற்றறிந்த வரெனவடங்கிச், சடை கொள் சென்னியர் தாழ்விலர் தாமிதிக் தேறப், படி கடாமெனத் தாழ்வரை கிடப்பன பாராய்” என்று -சித்திரகூடப்படலம் 34-ம் பாட்டு-கம்பராமாயணத்திலும்,
உள்ள பாட்டுக்களால் மாசுணம் யானையை விழுங்கும் என்பது தெரிகின்றது.
அஞ்சி ஒளித்தல் சிறுபான்மையும் விழுங்குதல் பெரும்பான்மையுமாயிருத்த லால் களிறென்று பெரியமாசுணம் வரையெனப் பெயர்தரு என்கிற இவ்விடத்திற்கு-மாசுணங்கள் மேகங்களை நோக்கி யானைகளாக ப்ரமித்து அவற்றை விழுங்குதற்காக மலை பெயருமாபோலே பெயர்ந்து கிட்டவருகின்ற-என்று பொருள் கொள்ளுதல் நன்கு பொருந்து மென்க
————-
அடிவரவு:- வாலி கலங்க துடி மறம் கரைசெய் பணங்கள் கார் இரவு ஓதி கரிய முற்ற.
————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
This entry was posted on November 18, 2022 at 11:12 pm and is filed under பெரிய திரு மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply