ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்த தனியன் –
கலயாமி கலித்வம்சம் கலிம் லோகதிவாகரம்
யஸ்ய கோபி பிரகாசாபிர் ஆவித்யம் நிஹதம் தம –
கோ -கிரணம் சொல் ஆவித்யம் –அவித்யயா க்ருதம்-அஞ்ஞானம்
———————————————–
ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த தனியன்
வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ் வேந்தன் வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரம் கொள்
மங்கையர் கோன் தூயோன் சுடர்மான வேல்
————————————————-
ஸ்ரீ ஆழ்வான் அருளிச் செய்த தனியன் –
நெஞ்சுக்கு இருள் கடி தீபம் அடங்கா நெடும் பிறவி
நஞ்சுக்கு நல்லமுதம் தமிழ நன்னூல் துறைகள்
அஞ்சுக்கு இலக்கியம் ஆரண சாரம் பரசமயப்
பஞ்சுக் கனலின் பொறி பரகாலன் பனுவல்களே
அஞ்சு -எழுத்து -சொல் -பொருள் -யாப்பு அணி -லஷணங்கள்-
———————————————————-
ஸ்ரீ எம்பார் அருளிச் செய்த தனியன்
எங்கள் கதியே ராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எனக்குத் தா –
———————————————————-
ஸ்ரீ மணவாள மாமுனிகள் அல்லது ஸ்ரீ சோமாசியாண்டான் அருளிச் செய்தது
மாலைத் தனி வழியே பறிக்க வேணும் என்று
கோலிப் பதிவிருந்த கொற்றவனே -வேலை
அணைத்தருளும் கையால் அடியேன் வினையைத்
துணித்து அருள வேணும் துணிந்து –
——————————————————-
* * *- (வாடினேன்வாடி.) அநாதிகாலம் விஷயப்ரவணராய் எம்பெரு மானை மறந்திருந்த இவ்வாழ்வார் நிர்ஹேதுகமான பகவத்கிருபையால் திருவஷ் டாக்ஷர மஹாமந்திரத்தைப் பெற்று ஸ்வரூபமுணர்ந்து திருந்தினராதலால், அந்த மஹா மந்திரத்தின் (உள்ளீடான ஸ்ரீ நாராயண நாமத்தின்) சிறப்பை விரித் துரைத்துக்கொண்டு, தாம் நெடுங்காலமாக பகவத் விஷயத்தை மறந்து அநர்த் தப்பட்டபடியையும் இப்போது உஜ்ஜீவிக்கப் பெற்றபடியையும் பலருமறியப் பேசுகிறார் – இத்திருமொழியில் .
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-1-
பதவுரை
வாடினேன் |
– |
கீழ்க் கழிந்த காலமெல்லாம் வாடிக் கிடந்தேன்; |
வாடி |
– |
அப்படி வாடியிருந்ததனால் |
மனத்தால் வருந்தினேன் |
– |
மனவருத்தமடைந்தேன்; |
பெரு துயர் இடும்பையில் |
– |
அளவற்ற துக்கங்களுக்கு இருப்பிடமான ஸம்ஸாரத்திலே |
பிறந்து கூடினேன் |
– |
பிறந்து (அந்த ஸம்ஸாரத்திலேயே) பொருந்தப் பெற்றேன்; |
கூடி |
– |
அப்படி ஸம்ஸாரியாய்க் கிடந்ததனால் |
இளையவர் தரும் கலவியே கருதி |
– |
இளமை தங்கிய பெண்கள் தரக்கூடிய சிற்றின்பத்தை ஆசைப்பட்டு |
அவர் தம்மோடு ஓடினேன் |
– |
அந்தப்பெண்கள் போன வழியையே பற்றி ஓடினேன்; |
ஓடி |
– |
இப்படி ஓடித்திரியுமிடத்து; |
உய்வது ஓர் பொருளால் |
– |
ஆத்மோஜ்ஜீவநத்துக்கு உறுப்பான எம்பெருமான் திருவருளாலே |
உணர்வு எனும் பெரு பதம் திரிந்து |
– |
ஞானமென்கிற ஒரு சிறந்த ஸ்தானத்தில் அடிவைத்து |
நாடினேன் |
– |
நன்மை தீமைகளை ஆராயப் புகுந்தேன்; |
நாடி |
– |
அப்படி ஆராயுமளவில் |
நாராயணா என்னும் நாமம் நான் கண்டு கொண்டேன் |
– |
திருவஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்தை நான் லபிக்கப்பெற்றேன். |
***- “பெரும்பதம் தெரிந்து” என்றும் பாடமுண்டு; ஞானமென்கிற ஒரு பெரிய பதவியினால் ஹிதாஹிதங்களைத் தெரிந்து கொண்டு என்றபடியாம்.
இன்று தாம் உஜ்ஜீவிக்கப்பெற்றாலும் கீழே வீணாகப் பலகாலம் கழிந்து விட்டபடியால்
1. “பழுதே பல பகலும் போயின வென்று அஞ்சி யழுதேன் ”-1. முதல் திருவந்தாதி -16 என்றும்
2. “தெரிந்துணர்வொன்றின்மையால் தீவினையேன் வாளாவிருந்தொழிந்தேன் கீழ் நாள்களெல்லாம்” -பெரிய திருவந்தாதி-82,-என்றும்
இழந்த நாளைக்கு வயிறெரியாதிருக்கமுடியாதாகையால், ஐயோ! அளவற்ற காலத்தை அநியாயமாகப் பாழ் படுத்தினேனே!! என்கிற வருத்தத்தை முந்துற முன்னம் வெளியிடுகிறார்.
3. “ஒண்தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” -முதல் திருவந்தாதி – 67 என்ற படி
எம்பெருமானொருவனையே விஷயமாகக் கொள்ள வேண்டிய ஞானம் இது வரையில் அவனைத்தவிர்த்துப் பல பல துர்விஷயங்களைப் பற்றிக் கிடந்ததனால் ஆத்மாவுக்கு இருக்கவேண்டிய விகாஸம் குன்றிப்போய் வாட்டமுண்டாயிருந்தது ;
4. “கோல் தேடியோடுங் கொழுந்ததே போன்றதே. மால்தேடியோடும் மனம் “ -இரண்டாந் திருவந்தாதி – 27-என்றபடி
எம்பெருமானாகிற கொள்கொம்பைப் பற்றித் தரித்து நிற்க வேண்டிய ஆத்மா அந்தக் கொம்பை இழந்ததனால் கொம்பைவிட்டு நீங்கிய தளிர் வாடுமாபோலே வாடிப்போயிற்று. அப்படி வாடிப் போனதனால் உண்டான மனவருத்தம் ஒரு நாளும் தீராதாயிற்று.
“வருந்தினேன் மனத்தால்” என்கிற இந்த மனவருத்தம் முன்பு உண்டானதோ? இப்போது உண்டானதோ? என்னில் ; அன்றும் இன்றும் உண்டான வருத்தத்தைச் சொல்லுகிறது. நெடு நாள் இழந்து போன முற்காலத்திலும் வருத்தமுண்டு; இழந்தோமேயென்கிற அநுதாபம் பிறந்த இக்காலத்திலும் வருத்தமுண்டு;
அதாவது – முன்பு இந்திரியங்கள் விஷயாந்தரங்களில் ஊன்றி அவற்றை அநுபவிக்க ஆசைப்படும் போது அவ்விஷயங்கள் இஷ்டப்படி கிடையாமையாலும், கிடைத்தாலும் அவற்றில் உண்மையான இனிமை இல்லாமையாலும் மனம் வருந்தியே கிடக்குமாயிற்று.
நித்தியாநந்தமயமாயிருக்கவேண்டிய மநஸ்ஸை வீணான வருத்தத்திற்கு ஆளாக்கினோமே! என்கிற வருத்தம் இப்போதுண்டாமது.
முன்புண்டான மனவருத்தத்தையே இங்கு முக்கியமாகச் சொல்லுகிறது.
**** (ஸம்ஸாரஸாகரம் கோரம் அருந்தக்லேச பாஜநம்) என்றபடி எண்ணிறந்த துன்பங்களுக்கு ஆஸ்பதமான ஸம்ஸாரப்படு குழியிலே வந்து பிறந்ததனாலே சிற்றின்பங்களை அனுபவிப்பதிலேமிக்க ஆசைகிளர்ந்து அதனாலே கண்டவிடமெங்கு மோடித்திரிந்து ஸ்வரூபநாசம் பெற்று முடிவில் மனவருத்தமொன்றே கைகண்ட பலனாகத் தலைக்கட்டிற்றென்று கீழ்நாளைய வருத்தத்தை முன்னிரண்டடிகளாலே சொல்லி முடித்தா ராயிற்று.
இனி, இன்று தமக்குண்டான பெரும்பேற்றைப் பேசுகிறார் உய்வதோர் பொருளால் என்று தொடங்கி, ”எம்பெருமானுடைய திருவருளாலே” என்ன வேண்டிய ஸ்தானத்தில் ”உய்வதோர் பொருளால்” என்று சேமித்துச் சொல்லுகிறார்.
ஆத்மவர்க்கங்களுக்கெல்லாம் உஜ்ஜீவநஹேதுவான பொருள் பகவத் கிருபையேயன்றி வேறொன்றுமல்ல என்பது ஸகல சாஸ்த்ரஸித்தாந்தமாகையாலே இங்கு உய்வதோர் பொருளென்று பகவத்கிருபையைச் சொல்லத் தடையில்லை.
அப்படிப்பட்ட பகவத்கிருபையாலே நல்லறிவு என்கிற ஒரு சிறந்த பதவியிலே அடிவைத்து அந்த விவேக வுணர்ச்சியைக் கொண்டு இனி நமக்குத் தஞ்சமேதென்று ஆராய்ந்து பார்த்தேன் ; பார்த்ததில் ஸ்ரீமந் நாரா யண நாமமே தஞ்சமென்று கடைப்பிடித்தேன் என்றாராயிற்று.
”பெரும்பதம் தெரிந்து” என்றும் பாடமுண்டு; ஞானமென்கிற ஒரு பெரிய பதவியினால் ஹிதாஹிதங்களைத் தெரிந்து கொண்டு என்றபடியாம்.
“நாராயணாவென்னும் நாமம்” என்றது அந்தத் திருநாமத்தை மாத்திரம் சொல்லுவதாகக் கொள்ளுதலும், அந்தத் திருநாமத்தோடு கூடிய திருவஷ்டாக்ஷர மஹாமந்த்ரத்தளவும் சொல்லுவதாகக் கொள்ளுதலும் உண்டு.
திருமந்தரத்தில் நாராயணாய என்று சதுர்த்தீவிபக்தி (நான்காம் வேற்றுமையாக இருக்குஞ்சொல் இங்கு நாராயணாவென்று கடைக்குறையாய்க் கிடக்கிறது.
அன்றி, நாராயணா! என்று விளியுருபு ஏற்றுக்கிடப்பதாகச் சொல்லுவாருமுளர்.
“நாராயணனென்னும் நாமம் ” என்னாதே விளியீறாகச் சொல்லுவானேன் என்றால், அல்லும் பகலும் ‘நாராயணா! நாராயணா!!’ என்று விளித்துக் கதறுவதே பாகவதர்களின் போது போக்காகையால் அது தோன்ற இங்கு. விளியீறாகக் கிடக்கிறதென்பர்.
நாராயணாய என்பதே இங்கு விகாரப்பட்டிருக்கின்ற தெனக் கொள்ளுதலே சிறக்கும்.
———————
*** –(ஆவியே யமுதே.) இப்பாட்டிலும் முன்னடிகளால் பூர்வாவஸ்தையிலநுதாபத்தையும், பின்னடிகளால் உத்தராவஸ்தையிலாநந்தத்தையும் பேசுகிறார்.
ஆவியே அமுதே என நினைந்து உருகி அவரவர் பணை முலை துணையா
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதே யொழிந்தன நாள்கள்
தூவிசேர் அன்னம் துணையோடும் புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –1-1-2-
பதவுரை
ஆவியே என |
– |
‘எனக்கு உயிர் போன்றவளே!‘ என்றும் |
அமுதே என |
– |
‘எனக்கு அம்ருதம் போல் இனியவளே!’ என்றும் இப்படிப் பலவாறாகச் சொல்லி வாய் பிதற்றிக்கொண்டு) |
நினைந்து உருகி |
– |
சிற்றின்பங்களை நினைத்து நினைத்து மனமுருகி |
அவர் அவர் |
– |
பலபல பெண்டுகளுடைய |
பணைமுலை |
– |
பருத்த முலைகளையே |
துணை ஆ |
– |
ரக்ஷகமாகக்கொண்டு |
பாவியேன் |
– |
பாபியான நான் |
உணராது |
– |
ஸ்வரூபஜ்ஞானம் பெறாததன் பயனாக |
எத்தனை பகலும் பழுது போய் ஒழிந்தன |
– |
ஐயோ! எத்தனை காலம் வீணாகக் கழிந்தன; |
எத்தனை நாள்கள் பழுது போய் ஒழிந்தன |
– |
அந்தோ எத்தனை நாள்கள் பாழாய்க் கழிந்தன! |
(காலமெல்லாம் பாழாகப் போயிற்றே!.) |
||
தூவிசேர் அன்னம் |
– |
இறகுகளையுடைய அன்னப்பறவைகள் |
துணையொடும் புணரும் |
– |
பேடையோடு புணருமிடமாய் |
புனல் சூழ் |
– |
நீர்நிலங்கள் சூழ்ந்ததான |
குடந்தையே |
– |
திருக்குடந்தையையே |
தொழுது |
– |
ஸேவித்து |
உய்ய |
– |
உஜ்ஜீவிக்கும்படியாக |
நாராயணா என்னும் நாமம் என்நாவினால் நான் கண்டு கொண்டேன் |
– |
திருவஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்தை எனது நாவிலே உரைத்துக் கொள்ளப் பெற்றேன். |
“ஆவியே ஆரமுதே!!” என்று எம்பெருமான் விஷயத்திலே சொல்ல வேண்டிய பாசுரங்களை ஸ்த்ரீகள் விவயத்திலே சொல்லியும், அந்த மாதர்களால் உண்டாகக்கூடிய சிற்றின்பங்களை நினைந்து அதிலே ஈடுபட்டும்,
“வன் துணைவானவர்க்காய் வரஞ்செற்று அரங்கத்துறையும் இன் துணைவன்” –பெரிய திருமொழி 3-7-6.-என்று எம்பெருமானையே துணையாகக் கொள்ள வேண்டியது நீங்கி அந்த ஸ்த்ரீகளின் கொங்கைகளையே துணையாகக் காதலித்தும்
இப்படியாக மஹா பாபியான நான் அவிவேகத்தாலே பாழாகப் போக்கின காலங்களுக்கு அளவேயில்லை; ஹா! ஹா!! இப்படிபழுதே கழிந்தவை எத்தனையோ பகல் ! எத்தனையோ நாள்கள்!! கணக்கேது வழக்கேது என்று கழிவிரக்கங் கொள்ளு கிறார் – முன்னடிகளில்
இதுவரையில், விஷமானவற்றை அமுதாக ப்ரமித்துக் கிடந்த நிலைமை நீங்கி, மெய்யே அமுதமாகவுள்ளதை இன்று ஸேவிக்கப்பெற்றேன்; (அதா வது) ஆராவமுதப் பெருமானைத் திருக்குடந்தையிலே கண்டு தொழுதேன்;
அபதார்த்தங்களைப் புகழ்ந்து பேசின வாயாலே திருமந்த்ரத்தை அநுஸந் தித்து ஸ்வரூபம் பெற்றேன் என்று மகிழ்கின்றார் – பின்னடிகளில்.
“தூவிசோன்னம் துணையொடும் புணரும்” என்றது. – பெருமாளும் பிராட்டியும் நித்திய வாஸம் பண்ணுகிறபடியைச் சொல்லிற்றாகக் கொள்க. அன்னம் என்றது எம்பெருமானை; துணை என்றது பிராட்டியை. நம்முடைய அபராதங்களைப் பொறுப்பிப்பவளும் பொறுப்பவனும் பிரியாதே வாழுமிட மென்கை.
இத்திருமங்கையாழ்வார்க்கு மற்றைத் திருப்பதிகளெல்லாவற்றினும் திருக்குடந்தையில் அபிநிவேசம் அளவற்றதென்னுமிடம் உய்த்துணரத்தக்கது;
இங்கே தொடக்கத்தில் திருக்குடந்தையைப் பேசி,
மேலே சரமப்பிரபந்தமாகிய திருநெடுந்தாண்டகத்தின் முடிவிலும் “தண் குடந்தைக் கிடந்தமாலை நெடியானை அடிநாயேன் நினைந்திட்டேனே” என்று திருக்குடந்தையைப் பேசித் தலைக்கட்டினபடியாலென்க–
—————-
* * * – (சேமமே வேண்டி.) பகவத் விஷயானுபவத்தாலே மிகவும் இனி தாகச் செல்ல வேண்டிய காலமெல்லாம் பாழாய்க் கழிந்தனவே யென்கிற அநு தாபமே மீண்டும் மேலிட்டு உள்ளடங்காத துக்கந் தோன்றப் பேசுகிறார்.
சேமமே வேண்டித் தீ வினை பெருக்கித் தெரிவைமார் உருவமே மருவி –
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன கழிந்த வந்நாள்கள்
காமனார் தாதை நம்முடை யடிகள் தம்மடைந்தார் மனத்திருப்பார்
நாமம் நானுய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-3-
பதவுரை
சேமமே வேண்டி |
– |
நன்மையையே அபேக்ஷித்திருந்தும் (அதற்கு உறுப்பாக வினை செய்யாமல்) |
தீ வினை பெருக்கி |
– |
துஷ்கருமங்களை அதிகமாகச் செய்து |
தெரிவைமார் உருவமே மருவி |
– |
ஸ்திரீகளுடைய வடிவழகையே பேணி |
கழிந்த அந்நாள்கள் |
– |
கீழே கழிந்த நாள்களானவை |
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய் ஒழிந்தன |
– |
ஊமை கண்ட கனவிலுங் காட்டில் வீணாகக் கழிந்து போயின; |
காமனார் தாதை |
– |
மன்மதனுக்குப் பிதாவும் |
நம்முடை அடிகள் |
– |
நமக்கு ஸ்வாமியும் |
தம் அடைந்தார் மனத்து இருப்பார் |
– |
தம்மைப் பற்றினவர்களுடைய நெஞ்சில் நீங்காதிருப்பவருமமான பெருமாளுடைய |
நாமம் |
– |
திருநாமமாகிய |
நாராயணா என்னும் நாமம் |
– |
நாராயண நாமத்தை |
நான் உய்ய |
– |
நான் உஜ்ஜீவிக்கும்படியாக |
நான் கண்டு கொண்டேன் |
– |
நான் காணப் பெற்றேன். |
‘நமக்கு ஒருவராலும் ஒருவிதமான துன்பமும் நேரிடக் கூடாது, இன்பமே பெருக வேண்டும்; க்ஷேமமாக நாம் வாழவேண்டும்’ என்கிற அபேக்ஷை மாத்திரம் பரிபூர்ணமாயிருந்தது;
அவ்வபேக்ஷைக்குத் தக்கபடி நல்ல காரியங்களைச் செய்தாலன்றோ அப்படியே க்ஷேமமாக வாழலாகும்; அப்படியிருக்க, க்ஷேமத்தை விரும்புதல் மாத்திரஞ் செய்து நல்லகாரிய மொன்றுஞ் செய்யா தொழிந்தேன் ;
அவ்வளவேயோ ? பல கெட்ட காரியங்களையும் ஏராளமாகச் செய்து தீர்த்தேன் ; ஸ்த்ரீகளுடைய வடிவழகிலே ஈடுபட்டுச் செய்யாத பாவமில்லை. இப்படி பாவமே செய்து பாவியான எனக்குக் கழிந்தநாள்கள் அந்தோ! வீணாகக் கழிந்தன.
ஊமை கனாக்கண்டால் அதை ஒருவரிடத்தும் வாய் விட் டுச் சொல்லிக் கொண்டு ஆநந்திக்கமுடியாது; ஆகவே ஊமைகண்ட கனாக்கள் பழுதேயாம்; ஊமையர்க்கு வாய்விட்டுச் சொல்லிக்கொள்ள முடியாமற் போனா லும் தம் நெஞ்சினுள்ளேயாகிலும் நினைத்திருந்து மகிழக்கூடும். அப்படி நினைத்துத் தமக்குள்ளேயே மகிழக்கூடிய விஷயமும் ஒன்றில்லாமையாலே ஊமனார் கண்ட கனவிலுங் காட்டில் வியர்த்தமாகவே என் நாள்கள் கழிந்து போயினவென்கிறார்.
ஆக முன்னடிகளாலே இழந்த நாளைக்கு அநுதபித்து, இன்று பெற்ற பேற்றின் கனத்தை நினைத்து மகிழ்ந்து பேசுகிறார் பின்னடிகளில் .
அழகிற் சிறந்த மன்மதனுக்கும் ஜநகனாகையாலே அதிஸ்ந்த ரனாய், ஸர்வ ஸ்வாமியாகையாலே ப்ராப்தசேஷியாய், ஒருகால் தன்னைப்பணிந்தவர்கள்ளுடைய நெஞ்சை விட்டுப் பிரியாதவனாகையாலே ஸுலபனாயுமுள்ள எம் பெருமானுடைய திருநாமமாகிய ஸ்ரீமந்நாராயண மஹா மந்த்ரத்தை இன்று நான் லபிக்கப் பெற்றேனாகையால் இனி எனக்கொரு குறையுமில்லையென்றாராயிற்று.
ஸ்ரீக்ருஷ்ணன் மன்மதனுடைய அம்சமாகிய பிரத்யும்நனுக்குத் தந்தையாதலால் காமனார் தாதை என்றார். தாத: என்ற வடசொல் தாதை யெனத் திரிந்தது. க்ஷேமம் என்ற வடசொல் சேமமெனத் திரிந்தது.
தெரிவைமார் – பெண்கள் என்றபடி. ஐந்து வயது முதல் ஏழுவயது வரையில் பேதைப் பருவமென்றும், எட்டு முதல் பன்னிரண்டு வரையில் பெதும்பைப் பருவமென்றும், பதின்மூன்றாம் வயது மங்கைப்பருவமென்றும், பதினான்கு முதல் பத்தொன்பது வரையில் மடந்தைப் பருவமென்றும், அதன் மேல் ஆறு வயது வரையில் அரிவைப் பருவமென்றும், இருபத்தாறு முதல் முப்பத்திரண்டு வயது வரையில் தெரிவைப் பருவமென்றும் இலக்கண நூல்களிற் கூறப்பட்டுள்ளது இருந்தாலும், பேதை மங்கை அரிவை தெரிவை இத்யாதி பதங்களை ஸ்த்ரீகளுக்குப் பொதுப் பெயராகப் பிரயோகிப்பதுமுண்டு.
————
***- “வென்றியேவேண்டி”, ‘நாம் எல்லார்க்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்’ என்று ஆசைப்பட வேண்டியது போய் எல்லாரிலும் நாம் மேற்பட்டிருக்க வேண்டும்; நாமே வெற்றி பெற்று எல்லாரும் நமக்குத் தோற்றிருக்க வேண்டும்’ என்று ஆசைப்பட்டுக் கிடந்தேன் ; கையிலிருந்து ஒரு காசு நழுவிப் போனாலும் ஸர்வஸ்வமும் இழந்தாற் போல் அது தவித்துக் கிடந்தேன் ; மாதர்களோடு புணர்ந்து வாழ்வதற்கு மேற்பட வாழ்ச்சியேயில்லையென்று துணிந்து கிடந்தேன் ; ஒன்றிலும் நிலைத்து நிற்கமாட்டாமல் கண்டவிடங்களிலும் சபலமாய்த் திரியும் நெஞ்சை யுடையேனான நான் என் செய்வது ! எப்படி உஜ்ஜீவிப்பது !! என்று தடுமாறிக் கிடந்தவளவிலே எம்பெருமானுடை நிர்ஹேதுகக் கிருபையாலே இன்று நன்றாக உஜ்ஜீவிக்க வழி ஏற்பட்டது என்றாராயிற்று.
வென்றியே வேண்டு வீழ் பொருட்கிரங்கி வேற்கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-4-
பதவுரை
வென்றியே வேண்டி |
– |
வெற்றியையே விரும்பியும் |
வீழ் பொருட்கு இரங்கி |
– |
நச்வரமான பொருள்களைப் பற்றிக் கரைந்தும் |
வேல் கணார் கல்வியே கருதி |
– |
வேல் போன்ற கண்களையுடைய மாதர்களின் கலவியை ஆசைப்பட்டும் |
(ஆக இப்படிகளாலே) |
||
நின்ற ஆ நில்லா நெஞ்சினை உடையேன் |
– |
நின்றபடி நில்லாத [சஞ்சலமான] நெஞ்சை யுடையேனான நான் |
என் செய்கேன் |
– |
என்ன பண்ணுவேன்? |
அன்று |
– |
முன்னொரு காலத்து |
நெடு விசும்புஅணவும் பன்றி ஆய் |
– |
நெடிய ஆகாசத்தை அளாவி வளர்ந்த மஹா வராஹஸ்வரூபியாய் |
பாரகம் கீண்ட |
– |
பூ மண்டலத்தை உத்தரித்த |
பாழியான் |
– |
மிடுக்கையு டையனாய் |
ஆழியான் |
– |
ஸ்ரீ ஸுதர்சந பாணியான ஸர்வேச்வரனுடைய |
அருளே |
– |
க்ருபையினாலே |
நான் நன்று உய்ய |
– |
நான் செவ்வையாக உஜ்ஜீவிக்கும்படி |
நாராயணா என்னும் நாமம் நான் கண்டு கொண்டேன் -; |
“வீழ்பொருட்கிரங்கி” – நசித்துப்போவதே இயல்வான உடலுக்காகக்கரைந்து என்றும் பொருள் கொள்ளலாம். “வேற்கணார்” – ஸ்த்ரீகளின் கண்ணுக்கு வேல் உவமை கூறப்படும். “நின்றவா” – நின்றவாறு என்றபடி.
“நெடுவிசும்பணவும் பன்றியாயன்று பாரகங்கீண்ட” வரலாறு: – ஹிரண்யகசிபுவின் உடன் பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னுங் கொடிய அசுரன் தன் வலிமையாற் பூமியைப் பாயாகச் சுருட்டி யெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச் சென்றபோது தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளினால் திருமால் மஹாவராஹரூபியாகத் திருவவதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனை நாடிக் கண்டு பொருது கோட்டினாற் குத்திக் கொன்று பாதாளலோகத்தைச் சார்ந்திருந்த பூமியைக் கோட்டினாற் குத்தி அங்கு நின்று எடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளினன் என்பதாம்.
இப்பொழுது நடக்கிற ச்வேதவராஹ கல்பத்துக்கு முந்தின பாத்மகல்பத்தைப் பற்றிய பிரளயத்தின் இறுதியில் ஸ்ரீமந்நாராயணன் ஏகார்ணவமான பிரளய ஜலத்தில் முழுகியிருந்த பூமியை மேலேயெடுக்க நினைத்து மஹாவராஹரூபியாகிக் கோட்டு நுனியாற் பூமியை எடுத்து வந்தனனென்ற வரலாறும் உண்டு
”பாராருலகம் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில், ஏராருருவத் தேனமா யெடுத்த வாற்றலம்மான்”-பெரிய திருமொழி 8.8.3- என்று இவ்வாழ்வார் தாமே அருளிச் செய்துமுளர்.
”நெடுவிசும்பணவும் பன்றி யாய்” என்றது – ஆகாசாவகாச மடங்கலும் விம்ம வளர்ந்தமையைச் சொன்ன படி. பாழியான் – மஹாபலசாலி. அருளே என்றது அருளால் என்றபடி; மூன்றனுருபு தொக்கி நிற்கிறது
———–
கள்வனேன் ஆனேன் படிறு செய்திருப்பேன் கண்டவா திரி தந்தேனேலும்
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கமைந்தேன் சிக்கெனத் திருவருள் பெற்றேன்
உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பெலாம் கண்ண நீர் சோர
நள்ளிருளளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா வென்னும் நாமம் —1-1-5-
பதவுரை
கள்வனேன் ஆனேன் |
– |
(கீழ்க்கழிந்த காலமெல்லாம்) ஆத்மாபஹாரக் கள்வனாகி |
படிறு செய்து இருப்பேன் |
– |
பலபல தீமைகளைச் செய்பவனாகி |
கண்ட ஆ திரிதந்தேனேலும் |
– |
(இப்படி) மனம்போன படியே திரிந்துழன்றேனாயினும் (இன்று) |
தெள்ளியேன் ஆனேன் |
– |
தெளிவு பெற்றவனானேன்: |
திருஅருள்சிக்கன பெற்றேன் |
– |
பகவத் கிருபையைத் திண்ணிதாக லபிக்கப் பெற்றேன்; |
செல் கதிக்கு அமைந்தேன் |
– |
போகவேண்டிய நல்வழிக்கு ஆளானேன்; |
உள்எலாம் உருகி |
– |
ஹ்ருதய மடங்கலும் நீர்ப்பண்டமாகிக் |
குரல் தழுத்தொழிந்தேன் |
– |
குரல் தழுதழுக்கப்பெற்று |
கண்ண நீர் உடம்பு எலாம் சோர |
– |
ஆநந்த பாஷ்பமானது சரீரம் நிறையப்பெருகப்பெற்று |
நள் இருள் அளவும் பகல் அளவும் |
– |
அஹோராத்ர விபாகமின்றி ஸர்வகாலத்திலும் |
நாராயணா என்னும் நாமம் நான் அழைப்பன் |
– |
நாராயணா நாமத்தைச்சொல்லி நான் கதறா நிற்பன். |
***- (கள்வனேனானேன்.) உலகில் திருடப்படும் பொருளின் தாரதம்மியத்திற்கு ஏற்பவும் பொருளுடையவனது யோக்யதையின் தாரதம்மியத்திற்கு ஏற்பவும் பாபத்திலும் தாரதம்மியமுண்டு; விறகு திருடினவனுடைய பாபத்திற்காட்டில் ரத்னம் திருடினவனுடைய பாபம் பெரிது; சூத்ரனுடைய பொருளைத் திருடின பாபத்திற்காட்டில் பிராமணனுடைய பொருளைத் திருடின பாபம் பெரிது.
நான் திருடின பொருளும் சிறந்தது, அப்பொருளுடையவனும் ஸர்வோத்தமன் ; சிறந்தரத்னத்தினும் மேற்பட்டதான ஆத்மவஸ்துவை அபஹரித்தேன்; அந்த வஸ்துவோ ஸர்வோத்தமனான எம்பெருமானுடையது. ஆகையாலே – ‘இதற்கு மேற்பட்ட பாபமில்லை’ என்னலாம்படியான கொடிய பாபத்திற்குக் கொள்கலமான களவைச் செய்தவனாயினேன்.
(அதாவது — ஈச்வர சேஷமான ஆத்மாவை ஸ்வசேஷமாகக் கொண்டிருந்தேன், அஹங்காரமமகாரவிசிஷ்டனாயிருந்தேன் – என்றபடி.)
‘படிறு செய்கையாவது’ – தீம்பு செய்கை; ஆஸ்திகராயிருப்பார் அப்பா! ஈச்வர சேஷமான ஆத்மவஸ்துவை அபஹரிக்கலாகாது’ என்று உபதேசித்தாலும் ஈச்வரனாவதென்? அவனுக்கு சேஷமாயிருக்கையாவதென்?’ என்று திரஸ்காரமாகச் சொல்லி அந்த ஆத்மாபஹாரத்தை வற்புறுத்திக்கொண் டேன் என்றவாறு
“கண்டவா திரிதருகையாவது” – விதிநிஷேத சாஸ்த்ரங்களுக்குச் சிறிதும் கட்டுப்படாமல் ‘மனமே அரசன், மதியே மந்திரி ‘ என்று கொண்டு பசுக்களிலுங் கேடாகக் காரியங்கள் செய்கை. ஆக இப்படி நான் அநாதி காலமாக ஆத்மாபஹாரம் முதலிய கொடிய பாவங்களைச் செய்து போந்தேனாகிலும் இன்று பகவத்கிருபையைத் திண்ணிதாகப் பெற்று நல்லது கெட்டதுகளை ஆராய்ந்துணரக் கூடிய விவேகஞானம் பெற்று “இனி இவன் ஸம்ஸாரத்துக்கு ஆளாக மாட்டான், பரமபதத்துக்கு ஆளாகுமத்தனை” என்று ஞானிகள் நிச்சயிக்கும்படியாகச் சிறந்த நிலைமைக்கு வந்து விட்டேன்.
இப்போது நானிருக்கிறபடியைப் பாருங்கள்; ஸ்ரீமந்நாராயண நாமத்தை அநுஸந்திக்க வேணுமென்று நினைக்கும்போதே எனது ஹருதயம் நீர்ப்பண்டமாக உருகுகின்றது; அத்திருநாமத்தை வாய்விட்டுச் சொல்லத் தொடங்கினால் குரல் தழதழத்துப் போகிறது; ஆநந்தக் கண்ணீர் உடம்பெங்கும் முத்துமாலையிட்டாற்போலே பெருகுகின்றது. இப்படியாயிருந்து கொண்டு அஹோராத்ரமும் நான் நாராயண நாமந்தன்னையே கதறுபவனாயினேன் என்றாராயிற்று.
தெள்ளியேன் தெளிவு பெற்றவன். செல்கதி – பரமபதப்ராப்தி
————-
***- (எம்பிரானெந்தை) திருமந்திரத்தின் அர்த்தத்தை ஒருபடி அநு ஸந்திப்பதாயிருக்கும் இப்பாட்டு. “
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கரசு என்னுடை வாழ் நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுத்த வெம் மண்ணல்
வம்புலாம் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-6-
பதவுரை
நம்பிகாள் |
– |
பகவத் குணாநுபவத்தால் நிறைந்திருக்கின்ற பாகவதர்களே!, |
எம்பிரான் |
– |
எமக்கு உபகாரகனும் |
எந்தை |
– |
எமக்குத் தந்தையும் |
என்னுடைய சுற்றம் |
– |
எனக்கு ஸகலவித பந்துவும் |
எனக்கு அரசு |
– |
என்னை ஆண்டவனும் |
என்னுடைய வாழ்நாள் |
– |
என்னுடைய ப்ராண பூதனும் |
அரக்கர் வெருக்கொள அம்பினால் |
– |
ராக்ஷஸர் அஞ்சும்படியாக அம்புகளினால் |
நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல் |
– |
தகர்த்து அவர்களது உயிரைமுடித்த அஸ்மத்ஸ்வாமியுமான ஸர்வேச்ரனுடைய |
வம்பு உலாம் சோலை |
– |
பரிமளம் வீசுகின்ற சோலைகளையும் |
மாமதிள் |
– |
பெரிய மதிள்களையும் உடைத்தான |
தஞ்சை மா மணிக்கோயிலே வணங்கி |
– |
தஞ்சைமாமணிக் கோயிலையே ஸேவித்து |
நான் உய்ய |
– |
(உங்களைப் போலே) நானும் உஜ்ஜீவிக்கும் படியாக |
நாராயணா என்னும் நாமம் கண்டு கொண்டேன்-; |
****** (மாதா பிதா ப்ராதா நிவாஸச் சரணம் ஸுஹ்ருத் கதிர் நாராயண 🙂 என்று ஸுபாலோபநிஷத்திலே சொன்ன அர்த்தத்தை அநுஸந்திக்கிறார். எனக்குப் பல உபகாரங்கள் பண்ணினவனும், எனக்குத் தந்தையும், எனக்கு எல்லா உறவுமுறையும், விரோதிகளைப் போக்கி என்னை ஆண்டவனும், என்னுடைய ஜீவித ஸர்வஸ்வமும், ஸங்கல்பத்தாலல்லாமல் சரமாரி பொழிந்து ராக்ஷஸவர்க்கங்களைக் கிழங்கெடுத்தவனுமான ஸர்வஸ்வாமி எழுந்தருளியிருக்கிற பரமபோக்யமான தஞ்சைமாமணிக்கோயிலைத் தொழுது ‘ஸர்வவித பந் துவும் அவனே” என்கிற அர்த்தத்துக்கு வாசகமான திருநாமத்தைக் காணப் பெற்றேன் என்றாராயிற்று.
என் தந்தை என்பது “எந்தையென” மருவிற்று, வாழ்நாள் என்பது “வாணா ளென” மருவிற்று. வெருக்கொள் = வெரு – அச்சம் கொள்ள என்பது “கொள” என்று தொக்கியிருக்கிறது; அச்சங்கொள்ள என்றதாயிற்று. “செகுத்தல்” – அழித்தல். “அண்ணல்” – பெருமை பொருந்தியவன் . உலாவும் என்பது “உலாம்” என்று கிடக்கிறது. தஞ்சை மாமணிக்கோயில் – தஞ்சாவூர் ‘ என வழங்கிவருவது.
————-
இற்பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னதோர் தன்மை என்று உணரீர்
கற்பகம் புலவர்களைக் கண் என்று வுலகில் கண்டவா தொண்டரைப் பாடும்
சொற் பொருளாளீர் சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின்
நற்பொருள் காண்மின் பாடி நீர் உய்ய்மின் நாராயணா வென்னும் நாமம் –1-1-7-
பதவுரை
இல் பிறப்பு அறியீர் |
– |
இல்வாழ்க்கை நடத்துகிறபடியையும் குடிப்பிறப்பையும் அறியாதவர்களாயும் |
இவர் அவர் என்னீர் |
– |
இப்போது ஸம்பந்நராயிருக்குமிவர்கள் முன்பு தரித்ரராயிருந் துவர்களென் றறியாதவர்களாயும் |
இன்னது ஓர் தன்மை என்று உணரீர் |
– |
‘இவர்களுடைய தன்மை இப்படிப் பட்டது’ என்றறியாதவர்களாயும், |
உலகில் தொண்டரை |
– |
உலகில் பிறர்க்கு இழிதொழில் செய்து ஜீவிக்கும்நீசர்களை |
கற்பகம் என்று |
– |
கல்பவ்ருக்ஷம்போல் ஸர்வஸ்வதானம் செய்பவரென்றும் |
புலவர் என்று |
– |
ஸர்வஜ்ஞரென்றும் |
களைகண் என்று |
– |
ரக்ஷகர் என்றும் (ஆகவிப்படி) |
கண்ட ஆ பாடும் |
– |
மனம் போனபடி (சிறப்பித்துக்கூறிக்)கவிபாடுகின்ற |
சொல்பொருள் ஆனீர் |
– |
சொல்லும் பொருளும் நன்கறிந்த மஹாகவிகளே! |
சொல்லுகேன் |
– |
உங்களுக்கு ஹிதஞ்சொல்லுகிறேன்; |
வம்மின் |
– |
நீசரைக் குறித்துக் கவிபாடுவதை விட்டு இப்படி வாருங்கள்; |
புனல் சூழ் குடந்தையே தொழுமின் |
– |
நீர் சூழ்ந்த திருக்குடந்தையை ஸேவியுங்கள்: |
நாராயணா என்னும் நாமம் பாடி நீர் உய்ம்மின் |
– |
நாராயணா நாமத்தைப் பாடி நீங்கள் உஜ்ஜீவித்துப் போங்கள்; |
நல் பொருள் காண்மின்; |
– |
உங்களுக்கு நான் உபதேசிக்கும் சிறந்த அர்த்தம் இதுவே காணுங்கள். |
*** (இற்பிறப்பு.) – நூல்களைக் கற்றுக் கவிபாடும் வல்லமை பெற்றவர்கள் உபயோகமற்றக்ஷத்ர மநுஷ்யர்களை வீணேசிறப்பித்துக்கூறிக் கவிபாடுவதுண்டே; அன்னவர்களை நோக்கி வெறுத்து, ஐயோ! நீங்கள் வாக்குப்படைத்ததற்கு இதுவோ ப்ரயோஜனம்; க்ருபணனைக் கல்பவ்ருக்ஷமென்பதும், நிரக்ஷரகுக்ஷியான மூடனை ப்ருஹஸ்பதியென்பதும், தெருத்திண்ணையில் தங்கவும் இடந்தராமல் துரத்தித்தள்ளுமவனை ஸர்வரக்ஷகனென்பதும் ஆகவிப்படி பொய்யுரை கூறுவதேயோ நீங்கள் கற்ற கல்விக்குப் பயனாவது!; கவிபாடுகைக்குப் பாங்கான ஊரும் ஆறும் பேருமுடையனான பெருமானை நான் காட்டித் தருகிறேன், வாருங்கள்; திருக்குடந்தையாராவமுதனை வாயாரப் புகழ்ந்து உஜ்ஜீவித்துப் போங்கள்; இதுவே உங்களுக்கு நான் உபதேசிக்கும் சிறந்த அர்த்தம் – என்கிறார்.
“இல் பிறப்பு அறியீர்” = இல் அறியீர், பிறப்பு அறியீர் என்க. ‘இல் அறி யீர்’ என்றது இல்லறம் அறியீர் என்றபடி. இல்லறமாவது க்ருஹஸ்த தருமம் இழிவான அநுஷ்டான முடையராயிருந்தாலும் இழிவான குலத்திலேபிறந்தவர்களாயிருந்தாலும் அந்த இழி தொழிலையும் இழி பிறப்பையும் நீங்கள் அறியாமல் தானே அவர்களை நல்லொழுக்கமுடையராகவும் நற்குலமுடையராகவும் வருணித்துக் கவிபாடிவிடுகிறீர்கள் என்பது கருத்து.
இவர் அவரென்னீர் = இவர் – இப்போது கையில் கொஞ்சம் பணங்காசு உள்ளவர்களாகத் தென்படுகிற இவர்கள், அவர் என்னீர் – இதற்கு முன்பு கையுங் கபாலமுமாய்த் திரிந்த பிச்சைக்காரப்பயல்கள் என்று தெரிந்து கொள்ளாது பரம்பரையாகப் பெருஞ்செல்வர்களெனப் போற்றுகின்றீர்களே என்றவாறு.
அன்றியே, இவரவர் என்று ஒரு வார்த்தைப்பாடாய் இன்னாரினையாரென்று தெரிந்து கொள்ள மாட்டீர்களென்றபடியுமாம்.
இன்னதோர் தன்மை யென்றுணரீர் – இவர்களுடைய தன்மை இவ்வளவு தான் என்று தெரிந்து கொள்ளாமல் அபாரசக்தி யுடையவர்களாகக் கொண்டு கவிபாடி விடுகிறீர்கள் என்றவாறு. அறியீர், என்னீர், “உணரீர்” – முன்னிலை யெதிர்மறைப் பன்மை வினைமுற்றுகள்.
“கற்பகம்” – நினைத்ததை யெல்லாம் அளிக்கவல்ல தேவலோகத்து வ்ருக்ஷம். உலகில் தொண்டரைக் கற்பகமென்றும் புலவரென்றும் களைகணென்றும் கண்டபடி பாடித்திரிகிற கவிகளே! என்று விளித்தபடி.
“புலவர்களைகண்” என்று சேர்த்து யோஜித்து, புலவர்களுக்கு ரக்ஷகராயிருப்பவர்களென்று சொல்லிக் கவி பாடுகிறவர்களே! என்பதாகவும் உரைக்கலாம். களைகண் – “ஆதாரம் தொண்டர்” – சேகவத் தொழில் செய்பவர்கள் . –
“சொல் பொருள் ஆளீர்” – சொல்லின்பமும் பொருளின்பமும் இல்லாமல் கவிபாடுகிறவர்களாயிருந்தால் கவலையே யில்லை; புன்சொற்களாலே எந்தப்புல் லியரைப் போற்றினாலும் கவலையில்லை; சொல்நோக்கும் பொருள் நோக்கும் சிறப்புறக் கவிபாட வல்ல நீங்கள் உங்களது அருமந்த சொற்களை இழிபிறப் பாளர்மேல் செலுத்தி வாக்கை எச்சிலாக்கிக் கொள்ளுகிறீர்களே என வருந்துகின்றேன் என்ற கருத்துக் காண்க
————–
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெரு நிலத்தாருயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டித் திரி தருவேன் தவிர்ந்தேன் செல்கதிக்கு உய்யுமாறு எண்ணி
நல் துணையாகப் பற்றினேன் அடியேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-8-
பதவுரை
கலைகள் |
– |
சாஸ்த்ரங்களை |
கற்றிலேன் |
– |
கற்றறிந்தவனல்லேன்; |
ஐம்புலன் கருதும் கருத்துள் |
– |
பஞ்சேந்திரியங்கள் விரும்புகின்ற விஷயங்களிலே |
மனதைத் திருத்தினேன் |
– |
நெஞ்சைச் செலுத்திக் கிடந்தேன்; |
அதனால் |
– |
இப்படியிருந்ததனாலே |
பேதையேன் |
– |
அவிவேகியான நான் |
நன்மை பெற்றிலேன் |
– |
ஒரு நன்மையும் பெறாதவனாயினேன்; |
பெரு நிலத்து ஆர் |
– |
பெரிய இப்பூமியிலேயுள்ள |
உயிர்க்கு எல்லாம் |
– |
பிராணிகளுக்கு எல்லாம் |
செற்றமே வேண்டி |
– |
தீங்கு செய்வதையே புருஷார்த்தமாகக்கொண்டு |
திரிதருவேன் |
– |
(அதுவே போதுபோக்காகத்)திரிந்து கொண்டிருந்தேன், |
(இப்படி நெடுங்காலம் கெட்டுப் போனேனாகிலும், இன்று பகவத் கடாக்ஷத்தாலே)- |
||
தவிர்ந்தேன் |
– |
இக்கொடுமைகளெல்லாம் தவிரப்பெற்றேன்; |
அடியேன் |
– |
தாஸனாகப் பெற்ற நான் |
செல்கதிக்கு உய்யும் ஆறு எண்ணி |
– |
செல்ல வேண்டிய நல்வழியை நண்ணி உஜ்ஜீவிக்கும்படியைச் சிந்தித்து |
நாராயணா என்னும் நாமம் |
– |
நாராயணா நாமத்தை |
நல் துணை ஆக பற்றினேன் |
– |
நல்ல ஸஹாயமாகக் கைக்கொண்டேன். |
** * – (கற்றிலேன் கலைகள் ] ஓர் ஆசிரியன் திருவடிகளிலே சென்று பணிந்து குனிந்து கேட்டவனல்லேனாகையாலே ஒரு சாஸ்த்ர ஞானமும் எனக்கில்லை ; நெஞ்சை ஒரு நொடிப்பொழுதாகிலும் நல்விஷயத்திலே செலுத்தின னல்லேன் ; செவி வாய் கண் மூக்கு உடலென்னுமைம்புலன்கள் விரும்புகின்ற சப்தாதி விஷயங்களிலேயே நெஞ்சைச் செலுத்திப் போந்தவனாதலால் அறிவு கேடனாய் ஹிதசிந்தை பண்ணப்பெற்றிலேன்;
எனக்கொரு நன்மை ஸம்பாதியாதவளவேயன்றி உலகத்திலுள்ள பிராணிகளையெல்லாம் ஹிம்ஸிக்கும் வழியைச் சிந்தித்தும் திரிந்தேன்; எல்லாரையும் ஹிம்ஸித்து நான் வயிறு வளர்க்கும் வழியையே நோக்கினேன். இப்படி நான் இருந்தது நேற்றுவரையில் ; இன்று இந்த நிலைமைகளெல்லாம் தவிர்ந்து நல்வீடு சேர்ந்து உஜ்ஜீவிக்க வேண்டிய வழியைச் சிந்தித்து, இக்கரையில் நின்றும் அக்கரையிலே கொண்டு தள்ள வல்லதொரு திருநாமத்தைத் துணையாகப் பற்றினேன்
————–
** *- (குலந்தரும்) “நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் ” என்று பலகால் அருளிச் செய்கின்ற ஆழ்வாரை நோக்கிச் சிலர் ‘நீர் ஆதரித்துப் போருகிற இத்திருநாமம் என்ன பலனைத் தரக்கூடியது?’ என்று கேட்க, இது தரமாட்டாத பலனே உலகில் இல்லை யென்கிறார்.
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயராயின வெல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் யாயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-9-
பதவுரை
நாராயணா என்னும் நாமம் |
– |
நாராயண நாமமானது (தன்னை அநுஸந்திக்கு மவர்கட்கு) |
குலம் தரும் |
– |
உயர்ந்த குலத்தைக் கொடுக்கும்; |
செல்வம் தந்திடும் |
– |
ஐச்வரியத்தை அளிக்கும்; |
அடியார் படு துயர்ஆயினஎல்லாம் |
– |
அடியவர்கள் அனுபவிக்கிறதுக்கமென்று பேர்பெற்றவையெல்லாவற்றையும் |
நிலம் தரம் செய்யும் |
– |
தரை மட்டமாக்கிவிடும் |
நீள் விசும்பு அருளும் |
– |
பரமபதத்தைக் கொடுக்கும்: |
அருளொடு |
– |
எம்பெருமானுடைய கிருபையையும் |
பெரு நிலம் |
– |
கைங்கரியமாகிற மஹாபதவியையும் |
அளிக்கும் |
– |
உண்டாக்கும்; |
வலம் தரும் |
– |
(பகவதநுபவத்துக்குப் பாங்கான) சக்தியைக் கொடுக்கும்; |
மற்றும் |
– |
இன்னமும் வேண்டிய நன்மைகளை யெல்லாம் |
தந்திடும் |
– |
செய்து கொடுக்கும்; |
பெற்ற தாயினும் |
– |
பெற்று வளர்க்கும் தாயைக் காட்டிலும் |
ஆயின செய்யும் |
– |
ஹிதங்களைச் செய்து கொடுக்கும்; (ஆக இப்படி) |
நலம் தரும் சொல்லை நான் |
– |
வேண்டிய நன்மைகளைத்தருமதான நாராயண நாமத்தை |
கண்டு கொண்டேன் |
– |
அடியேன் லபிக்கப் பெற்றேன். |
”தொண்டக்குலத்திலுள்ளீர் ! வந்தடி தொழுது ஆயிரநாமஞ் சொல்லிப் பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே ” என்றபடி எம்பெருமானுடையவையான விச்வம் விஷ்ணு வஷட்கார இத்யாதி திருநாமங்களைச் சொன்னாலே பழைய இழிகுலம் நீங்கிப் புதியதோர் சிறந்த குலம் உண்டாகுமென்றால், நாராயணா வென்னும் நாமம் நற்குலத்தைத் தருமென்பதில் என்ன ஸந்தேஹம்?
இத்தால்- ஒருவன் நற்குலமுடையோனென்பதற்கு பகவத் ஸம்பந்தம் காரணமேயொழிய பிராமண யோனிப் பிறப்பு முதலியன காரணமல்ல என்றதாயிற்று. இங்கே உரைக்க வேண்டுமவற்றையெல்லாம் ஸம்ப்ரதாய ஸித்தாஞ்ஜனத்திலே விரித்துரைத்தோம்.
செல்வம் தந்திடும் = ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்மியைத் தருமென்றபடி. இலங்கைச் செல்வமனைத்தையும் விட்டிட்டுப் புகலற்று வானத்திலே வந்து நின்ற விபீஷ ணாழ்வானை (அந்தரிக்ஷகத: ஸ்ரீமாந்) என்றார் வால் மீகி முனிவர். அப்போது அவ்விபீஷணரிடத்து இருந்த ஸ்ரீயாவது ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயேயாம். இராமபிரான் பின்னே காட்டுக்குப் புறப்பட்ட இளையபெருமாள் (லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந:) எனப்பட்டார்; அப்போது லக்ஷ்மணனுக்கிருந்த லக்ஷ்மியாவது ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்மியே யாம். முதலையின் வாயிலே அகப்பட்டுத்துடியாநின்ற கஜேந்திராழ்வான் (ஸது நாகவர: ஸ்ரீமாந்) என்னப்பட்டான் ; அப்போது கஜேந்திராழ்வானுக்கிருந்த ஸ்ரீயாவது ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயேயாம்.
செல்வம் என்பதற்கு இங்ஙனே பொருள் சொல்லுகையல்லாமல், உலகத்தார் புருஷார்த்தமாக நினைக்கிற ஐச்வர்யத்தையே அர்த்தமாகச் சொல்வது முண்டு. சிறந்த ஐச்வரியத்தைத் தருமென்கை. ”நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் றன்னையே தான் வேண்டுஞ் செல்வம் ” என்ற பெருமாள் திருமொழிப் பாசுரங்காண்க.
அடியார் படுதுயராயின வெல்லாம் நிலந்தரஞ் செய்யும் – ப்ராயச்சித்தங் களாலே தொலைந்து போகக்கூடிய பாபங்கள் பலவுண்டு ; அவையல்லாமல் கட்டாயமாக அநுபவித்தே தீரவேண்டிய பாவங்களும் பலவுண்டு; அவற்றை இங்கே படுதுயர் என்கிறார்; படுதல் – அநுபவித்தல்; அநுபவித்தே தீர வேண்டிய துயர் என்றவாறு. அப்படிப்பட்ட துயரங்கள் எத்தனையிருந்தாலும் அடியவர் திறத்தில் அவை ஒன்றுமில்லாமே போம். துயராயின எல்லாம் = துயரென்று பேர் பெற்ற எல்லாவற்றையும்; நிலம்தரம் செய்யும் = தரை மட்டமாக ஆக்கி விடும்; சூந்யமாக்கிவிடும் என்கை.
மற்றொருவகையாகவும் பொருள் கூறலாம்; அதாவது – தரணம் என்கிற வடசொல் கடைக்குறைப் பட்டுத் தரமென்று கிடப்பதாகக் கொண்டு (தரணமாவது விலகிப்போதல்) துயர்களை இடம் விட்டு விலகிப்போம்படி செய்யும் என்கை. ”வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ , கானோ ஒருங்கிற்றுங் கண்டிலமால்” (பெரிய திருவந்தாதி -) என்று போனவிடம் தெரியாதபடி பறந்தோடிப் போய்விடு மென்றவாறு.
நீள்விசும்பருளும் = துயரங்களைப் போக்குகை மாத்திரமல்ல; ஒப்பற்ற ஆந்தமயமான ஸ்தானத்தையும் (மோக்ஷபதவியையும்) தருமென்கை
அருளொடு பெருநிலமளிக்கும் = அருளையும் பெருநிலத்தையும் அளிக்கும் என்கை. அருளையளிக்கையாவது – எம்பெருமானுடைய கிருபைக்கு விஷய மாக்குகை. இனி, பெரு நிலமளிக்கையாவதென்? கீழே சொல்லப்பட்ட நீள் விசும்பென்ற பரமபதத்திற் காட்டிலும் வேறுபட்டவொரு பெருநிலமுண்டோ? என்னில் ; பரமபதஞ்சென்ற பின்பும் அங்கே குணாநுபவம் பண்ணுகையென்றும் கைங்கரியம் செய்கையென்றும் இரண்டு படிகள் உண்டே ; அவற்றுள் கைங்கரியஞ் செய்யப் பெறுகையைப் பெருநிலமென்கிறது இங்கு.
வலம் தரும் = బలమ్ (பலம்) என்ற வட சொல் வலமெனத்திரியும் ; பலமாவது சக்தி; நித்யஸூரிகளைப் போல இடைவிடாது பகவதநுபவம் பண்ணுகைக்குப் பாங்கான வலிமையை உண்டாக்கும் என்றபடி. “அருளொடு பெரு நிலமளிக்கும் வலந்தரும்” என்று சேர்த்து யோஜிப்பது முண்டு; அப்போது அளிக்கும் என்றவிது வினைமுற்று அல்ல ; வலத்துக்கு அடைமொழி. கருத்து யாதெனில், நாராயணாவென்னும் நாமத்தை யார் சொல்லுகிறார்களோ அவர்கள் தாங்கள் பரமபதத்தைப்பெறுகிற மாத்திரமல்லாமல் பிறர்க்கும் அருள் கூர்ந்து பரமபதமளிக்க வல்லாராம்படியான சக்தியைத் தருமென்பதாம்.
மற்றும் தந்திடும் = இவனுக்கு ஹிதமாய் இவனறியாதவற்றையும் தானே கொடுக்கு மென்கை.
பெற்றதாயினும் ஆயின செய்யும் = பல சொல்லுவதேன்? பத்து மாதஞ்சுமந்து மெய் நொந்து பெற்ற தாயானவள் செய்யும் நன்மைகளிற் காட்டிலும் அதிகமாகச் செய்யுமென்கிறார்.
ஆக இப்பாட்டால்,(நமோ நாராயணாயேதி மந்த்ரஸ் ஸர்வார்த்த ஸாதக:) என்றதை விவரித்தாராயிற்று…
————-
* * *- (மஞ்சுலாஞ்சோலை.) இது திருநாமப்பாட்டு எனப்படும். கலியன் சொன்ன இப்பாசுரங்கள் வழியாக நாராயணா வென்னும் நாமத்தை எப்போதும் அநுஸந்தியுங்கள்; பாவங்களெல்லாம் பறந்தோடிப்போம் – என்று தலைக்கட்டுகிறார்.
மஞ்சுலாம் சோலை வண்டு அறை மா நீர் மங்கையார் வாள் கலி கன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை இவை கொண்டு சிக்கெனத் தொண்டீர்
துஞ்சும் போது அழைமின் துயர்வரில் நினைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா வென்னும் நாமம் –1-1-10-
பதவுரை
மஞ்சு உலாம் சோலை வண்டு |
– |
மேகங்கள் உலாவுகின்ற சோலைகளையுடையதும் |
வண்டுஅறை மா நீர் |
– |
வண்டுகள் படிந்து ஒலிசெய்கின்ற சிறந்த தீர்த்தத்தை யுடையதுமான |
மங்கையார் |
– |
திருமங்கையென்னும் நாட்டிலே உள்ளவர்கட்குத் தலைவரும் |
வாள் |
– |
வாளை உடையவருமான |
கலிகன்றி |
– |
திருமங்கையாழ்வார் |
செம் சொலால் எடுத்த |
– |
செவ்விய சொற்களைக்கொண்டு அருளிச்செய்த |
தெய்வம் |
– |
திவ்யமான |
நல்மாலை இவை |
– |
இந்த நல்ல சொல் மாலையை |
சிக்கென கொண்டு |
– |
நாவிலே த்ருடமாகக்கொண்டு |
தொண்டீர் |
– |
பாகவதர்காள்! |
துஞ்சும் போது அழைமின் |
– |
சரீரம் முடியுங் காலத்தில் இத்திருநாமங்களைச் சொல்லுங்கோள்; |
துயர்வரில் நினைமின் |
– |
மற்றும் துக்கங்களுண்டான போதும் இவற்றையே நினையுங்கோள்; |
துயர்இலீர் சொல்லிலும் நன்று ஆம் |
– |
துக்கமொன்று மில்லாதவர்கள் இவற்றை அநுஸத்தித்தாலும் நன்மையாகும்; |
நாராயணா என்னும் நாமம் |
– |
நாராயண நாமமானது |
நம்முடை வினைக்கு |
– |
நமது பாபங்களை முடிப்பதற்கு |
நஞ்சு தான் கண்டிர் |
– |
விஷமேயாமென்பது தின்ணம் |
மஞ்சுலாஞ்சோலை யென்பதும் வண்டறைமாநீர் என்பதும் மங்கைக்கு அடைமொழிகள் . மேகங்கள் படிந்து உலாவும்படியான உயர்த்தியையுடைய சோலைகளையுடைத்தாய், வண்டுகள் மொய்க்கின்ற நீர்ப்பெருக்கையுமுடைத்தான மங்கை என்கை.
அன்றியே, மஞ்சுலாஞ்சோலைகளிலே உள்ள வண்டுகள் வந்து மொய்க்கின்ற நீர்ப்பெருக்கையுடைய மங்கை என்னவுமாம்.
வண்டறைமாநீர் எனவே தீர்த்தங்கள் மதுவோடு கூடிப் பெருகு மென்க. மதுவில் நசையாலேயாம் வண்டுகள் வந்து மொய்ப்பது. *“ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பிகந்து , ஊக்கமேமிகுந்து உள் தெளிவின்றியே, தேக்கெறிந்து வருதலிற் றீம்புனல், வாக்கு தேனுகர் மாக்களை மானுமே.” என்றதை நோக்குக.
நீர்வளம் பொருந்திய திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவராய் வாளை நிரூபகமாக கொண்டவரான கலியன் வேதார்த்தங்கள் எல்லார்க்கும் தெரியும்படி செவ்விய சொல்லாலே அருளிச் செய்ததாய், திவ்யமான மாலைபோலே பரமபோக்யமாக அநுபவிக்கத் தக்கதான இத்திருமொழியைக் கொண்டு,
பகவத் பக்தராயுள்ளவர்களே! சரீரம் முடியும்போது யமபடர்களால் நேரிடக் கூடிய துன்பங்களுக்குப் பரிஹாரமாகவும், மற்றும் தாபத்ரயங்கள் வந்து மேலிடும் போது அவற்றுக்குப் பரிஹாரமாகவும் இத்திருநாமத்தையே வாய் வெருவியிருக்கக் கடவீர்கள்.
துயரங்களுக்குப் பரிஹாரமாகவேதான் இதனைச் சொல்ல வேணுமென்கிற நிர்ப்பந்தமில்லை; ஒரு துயரும் இல்லாவிடினும் ஸ்வயம்ப்ரயோஜநமாக அநுஸந்திக்கத்தகும்.
“எனக்கென்றும் தேனும் பாலுமமுதுமாய திருமால் திருநாமம் – நமோ நாராயணமே” என்று நமக்கு அமுதாகிய இதுதானே கொடுவினைகட்குக் கொடிய விஷமாயிருக்கும்;
ஆகையாலே, இத்திருமந்திரந்தவிர மற்றதெல்லாம் ஸம்ஸாரத்திலே வேர் பற்றுகைக்கு உறுப்பாயிருக்குமென்றும், இஃதொன்றுமே ஸம்ஸாரத்தை வேரறுக்கவல்லது என்றும் தெளிந்து கொண்டு எப்போதும் இதனை அநுஸந்திப்பதிலேயே ஊன்றியிருங்கள் என்று அன்பர்க்கு உபதேசித்துத் தலைக்கட்டினாராயிற்று–
———
இத்திருமொழி – எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் —
அடிவரவு:–வாடினேன் ஆவியே சேமம் வென்றி கள்வனேன் எம்பிரான்இற்பிறப்பு கற்றிலேன் குலம் மஞ்சு வாலி.
———————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
This entry was posted on November 18, 2022 at 7:44 pm and is filed under பெரிய திரு மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply