***- எல்லாவுலகங்களையும் நிர்வஹிக்க வல்லவனான எம்பெருமாளை ஏத்தப்பெற்ற
வெனக்கு ஒரு காலத்திலும் ஒரு குறையுமில்லை யென்கிறார்.
வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-
பதவுரை
வீற்றிருந்து |
– |
(பரமபதத்திலே) எழுந்தருளியிருந்து |
ஏழ் உலகும் |
– |
எவ்வுலகங்களிலும் |
தனி கோல் செல்ல வீவு இல் சீர் |
– |
அத்விதீயமான செங்கோல் நடக்கும்படி |
ஆற்றல் மிக்கு ஆளும் |
– |
சாந்தியுடனே ஆள்கின்ற |
அம்மானை |
– |
ஸ்வாமியாய் |
வெம் மா பிளந்தான் தன்னை |
– |
கொடிய (கேசி என்னும் அசுரனான) குதிரையை வாய்பிளந்து கொன்ற பெருமானை |
போற்றி என்றே |
– |
போற்றி போற்றி என்று வாழ்த்திக்கொண்டே |
கைகள் ஆர தொழுது |
– |
கைகளின் விடாய் தீரும்படி அஞ்சலி பண்ணி |
சொல் மாலைகள் |
– |
சொற்களாகிற மாலைகளை |
ஏற்ற |
– |
(அவன் உகக்கும்படி) ஸமர்ப்பிக்கைக்கு |
நோற்றேற்கு |
– |
புண்ணியஞ் செய்துள்ள எனக்கு |
இனி |
– |
இனிமேல் |
எழுமையும் |
– |
ஏழேபடியான ஜன்மங்களிலும் |
என்ன குறை |
– |
என்ன குறையுண்டாம்! |
திருநாட்டில் திருவனந்தாழ்வான் மீது பெரியபிராட்டியாரோடுகூட எழுந்தருளியிருந்து
“பொங்கோதஞ் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும், அங்காதுஞ் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்” என்கிறபடியே
உலகமெல்லாம் செங்கோல் செலுத்தி நியமிப்பவனாய்,
இங்ஙனம் நியமிப்பதற்குறுப்பான ஞானம் சக்திமுதலிய திருக்குணங்கள் நிரம்பப்பெற்றவனாய்
தன்னுடைய ப்ரபுத்வத்தினால் கொடுங்கோன்மை காட்டாதே சாந்தியோடே யிருந்து ஆள்பவனாய்,
ஸ்ரீக்ருஷ்ணாய்த் திருவததரித்துக் கேசி வதம் பண்ணின வெனக்கு எற்றைக்கு மேழேம்பிறவிக்கும் ஒரு குறையில்லை யென்றாராயிற்று.
திருநாட்டில் அநுபவத்தையும் இங்கிருந்தே யநுபவிக்கப் பெற்ற நான் ‘அங்கே போகப் பெற்றிலேன்’ என்கிற குறையுடை யேனல்லேன் என்றவாறு.
ஆற்றல் மிக்கு என்பதற்கு “அநுத்ரிக்த ஸ்வபாவனாய்” என்று ஆறாயிரப்படி. உபய விபுதிக்தனான செருக்காலே தன்பக்கல் சிலர்க்குக் கிட்ட வொண்ணாபடி யிருக்கை யல்லாமல் ஸ விநயமாக அரசு புரிகையைச் சொன்னபடி.
ஸ்ரீராமபிரான் அரசாண்டபடியைச் சொல்லுமிடத்து “……………..-ராமோ ராஜ்ய முபாஸித்வா” என்றார் வால்மீகி முனிவர்.
இங்கு உபாஸித்வா என்ற ப்ரயோகம் மிகவழகியது.
தன்பக்கலில் குடிமக்கள் அஞ்சுகையன்றிக்கே குடிமக்களிடத்தில் தான் அஞ்சிவர்த்திப்பன் போலும் ஸ்ரீராகவன்.
அப்படியேயாயிற்று எம்பெருமான் ஏழுலகும் தனிக்கோல் செலுத்தும்படி.
ஆறுதல் என்கிற பொருளிலே ஆற்றல் என்றிருப்பதாகக்கொள்க. அதாவது-சாந்தி.
ஆற்றல் என்று மிடுக்குக்கும் போராதலால், இவ்வளவையும் ஸாமர்த்தியம் மிகுந்தவன் என்றதாகவுமாம்..
வெம்மாபிளந்தா னென்று இங்கு அருளிச் செய்ததைப்பற்றி இரண்டு வகையான நிர்வாஹமுண்டு;
கீழே “ஆற்றல் மிக்காளும்” என்றதற்கு மிடுக்கோடே கூடி யாளும் படியைப் பொருளாகச் சொல்லும் பஷத்தில் அதற்கு இந்த வெம்மா பிளந்த சரிதை த்ருஷ்டாந்தமாகக் கடவது.
‘இது உபலக்ஷணமாய் இப்படி மிடுக்குடையனாய்ச்செய்த செயல்களையெல்லாம் எடுத்துக்கொள்ளலாம். இது பட்டருடைய நிர்வாஹம்.
“வெம்மா பிளந்தான்” என்றதை அந்தக் காரியத்தில் நோக்காகக் கொள்ளாமல் கண்ணபிரான் என்று வ்யக்தியைக் காட்டுவதற்காகச் சொன்ன சொல்லாகக் கொண்டு, ஆற்றல் மிக்காளுமவன் யாவனென்றால் கண்ணபிரான்=என்று காட்டுவதாகக்கொள்க.
ஆற்றல் என்பதற்கு ‘சாந்தி’ என்னும் பொருளில் இந்த நிர்வாஹம்.
சாந்தியோடே ஆளுந்தன்மை ஸ்ரீ ராம பிரானிடத்திலு மிருந்தாலும் ஸ்ரீ கண்ண பிரானிடத்தில் இது செவ்வனே காணத் தக்கதாம்.
பிறந்தவன்றே கம்ஸனைக்கொன்று முடிக்க வல்லமையிருந்தும் நெடுநாள் ஒளித்து வளர்ந்ததும், அடியவர்களுக்கு இழிதொழில் செய்து திரிந்ததும் முதலானவை காண்க. இது அம்மங்கியம்மாளுடைய நிர்வாஹம்.
—————
***- கீழ்ப்பாசுரத்திற் சொன்ன மேன்மைக்கு அடியான பிராட்டி ஸம்பந்தத்தை
யுடையவனை ஸகல பாதங்களும் தீரும்படி புகழப் பெற்றனென்கிறார்.
மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-
பதவுரை
மைய கண்ணான் |
– |
மை யெழுதப்பட்ட கண்ணை யுடையனாய் |
மலர்மேல் உறைவாள் |
– |
தாமரைமலரிலே வஸிப்வபளான லக்ஷ்மி |
உறை |
– |
நித்யவாஸம் பண்ணப்பெற்ற |
மார்பினன் |
– |
மார்பையுடையனாய் |
செய்ய கோலம் தட கண்ணன் |
– |
சிவந்து அழகையுடைத்தாய் விசாலமான திருக் கண்களையுடையனாய் |
விண்ணோர் பெருமான் தன்னை |
– |
நித்யஸூரி நாதனை எம் பெருமானை |
மொய்ய சொல்லால் |
– |
செறிந்த சொற்களாலே சமைந்ததாய் |
இசை |
– |
இசையை யுடைத்தான |
மாலைகள் |
– |
மாலைகளாலே |
வியல் ஞாலத்து |
– |
அகன்ற புவியிலேயிருக்கச்செய்தே |
இசை |
– |
இசையை யுடைத்தான |
மாலைகள் |
– |
மாலைகளாலே |
வியல் ஞாலத்து |
– |
அகன்ற புவியிலேயிருக்கச்செய்தே |
வெய்ய நோய்கள் முழுதும் |
– |
கொடிய க்லேசங்கள் அனைத்தும் |
வீய |
– |
நசிக்கும்படியாக |
ஏத்தி |
– |
துதித்து |
உள்ள பெற்றேன் |
– |
என்னெஞ்சாலே அநுபவிக்கப் பெற்றேன். |
மையகண்ணாள்-கறுத்த கண்ணையுழடையவள் என்றபடி. ஸ்த்ரீகளுக்கு இது லக்ஷணம்.
வடநூலார் அஸிதேக்ஷணா என்று பிரயோகிப்பர்கள்.
பிராட்டி எம்பெருமானுடைய கரிய திருமேனியை இடைவிடாது கண்டுகொண்டிருப்பதனால்
கருமை மிக்க கண்ணையுடையளாயினன்போலும் என்று ரஸோக்தியாகவும் நம் முதலிகள் அருளிச்செய்வர்கள்.
“பெரிய பிராட்டியர் திருக் கண்களாலே ஒருகால் கடாகூஷித்தால் ஒருபாட்டம் மழை பொழிந்தாப்போலே ஸர்வேச்ரன் திருமேனி குளிரும்படியாயிற்றிருப்பது” என்ற ஈட்டு ஸ்ரீஸூக்தியும் நோக்குக.
மலர்மேலுறைவாளுறை மார்பினன்=பூவிலும் கூசி அடியிடுமவள் பொருந்தி வாழப்பெற்ற திருமார்பை யுடையவன்.
ஸ்ரீஜநகராஜன் திருமகள் பெருமாளைக் கைப்பிடித்த பின்பு ஸ்ரீ மிதிலாபுரியை நினையாதாப்போலே
ஸ்ரீமஹாலெக்ஷ்மியும் இவன் மார்பில் சுவடு அறிந்த பின்பு தாமரைப் பூவும் நினைக்க மாட்டாளாம்.
செய்யகோலத் தடங்கண்ணன்=பிராட்டியானவள் எம்பெருமானுடைய கரிய கோலந் திருவுருவைக் கண்டுகொண்டேயிருந்த கருங் கண்ணியானதுபோலே, எம்பெருமானும் அப்பிராட்டியினுடைய செய்ய திருமேனியையே கடாகூஷித்துக்கொண்டிருக்கையாலே அத்திருமேனியிற் சிவப்பு ஊறி இவன் செய்யகோலத்தடங்கண்ணனாயிருக்கும்.
இக்கண்ணழகும் இச்சேர்த்தியழகும் காட்டிலெறிந்த நிலாவாகாமே அநுபவிக்கைக்கு ஒரு நாடாகவுண்டு என்கிறது விண்ணோர்பெருமான் தன்னை என்று.
ஆக இப்படிப்பட்ட எம்பெருமானைத் தொடையழகு பொருந்திய சொல்மாலைகளைக் கொண்டு துதிக்கவே, அநுபவித்தே அறவேண்டும்படியான கருமபந்தங்கடங்கலும் தொலைந்தொழிந்தன வென்கிறார் பின்னடிகளில்.
இன்னருடைய கருமபந்தங்கள் என்று பிரித்துச்சொல்லாமையாலே, உலகத்திலேயே கருமபந்தங்கள் இல்லையாம்படி செய்துவிட்டமை தோன்றுகின்றது.
நம்பிள்ளையீடு:-“பனை நிழல்போலே என்னையொருவனையும் நோக்கிக் கொள்ளுகையன்றிக்கே* ஊரும்நாடு முலகமும் தன்னைப்போலேயாம்படி நானிருந்த விபூதியிலுண்டான கருமங்களுடைய நசித்ததென்கை.
———————-
***- திருவாய்மொழி அடிமை செய்யப்பெறுகையால் தமக் குண்டான ஆனந்தம்
எம்பெருமானுடைய ஆனந்தத்தையும் அதிசயித்தது என்கிறார்.
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-
பதவுரை
வீவு இல் இன்பம் |
– |
அழிவில்லாத ஆனந்தமானது |
மிக எல்லை நிகழ்ந்த |
– |
மிகுதியான எல்லையிலே வர்த்திக்கிற (படியினாலே) |
நம் அச்சுதன் |
– |
அச்சுதன் என்னும் திருநாமத்தையுடையனாய் |
வீவு இல் சீரன் |
– |
முடிவில்லாத வைலக்ஷண்யத்தையடையனாய் |
மலர்கண்ணன் |
– |
தாமரை மலர்போன்ற கண்களையடையனாய் |
விண்ணோர் பெருமான் தன்னை |
– |
விண்ணோர்க்குத் தலைவனானவனை |
லீவு இல் காலம் |
– |
ஒழிவில்லாத காலமெல்லாம் |
இசை மாலைகள் |
– |
இசைமிக்க சொல்மாலைகளாலே |
ஏத்தி |
– |
துதித்து |
மேவ பெற்றேன் |
– |
கிட்டப்பெற்றேன்; |
மேவி |
– |
கிட்டி |
வீவு இல் |
– |
முடிவில்லாத |
இன்பம் |
– |
ஆனந்தத்தினுடைய |
மிக எல்லை |
– |
முடிவான எல்லையிலே |
நிகழ்ந்தனன் |
– |
இராநின்றேன். |
முதலடி ஆனந்தவல்லியை யடியொற்றி அருளிச்செய்தததென்று ஆசாரியர்கள் திருவுள்ளம் பற்றுகிறார்கள்.
ஆனந்தவல்லியையாவது தைத்திரியோப நிஷத்தில் ஒரு பகுதி.
அது எம்பெருமானுடைய திருக்குணங்களுள் ஒன்றான ஆனந்த குணத்தைப்பற்றிப் பேசுகின்றது.
அந்த ஆனந்தம் இவ்வளவு கொண்டதென்று சொல்ல முடியாதென்பதைப் காட்டுவதற்கு அங்கு ஒருவகையான கல்பநை செய்யப்பட்டிருக்கின்றது. (அதாவது-)
ஒரு மநுஷ்யன்; அவன் நல்ல யௌவந பருவத்திலுள்ளவன்; ஸகல சாஸ்திரங்களையும் ஒன்று விடாமல் ஓதிப் பிறர்களுக்கும் ஓதுவிப்பவன். ஆலஸய்மின்றி எல்லாக் காரியங்களையும் வழுவாமற் செய்பவன்; தேஹத்திலும் மனத்திலும் திடமுள்ளவன்; இவ்வளவும் வாய்ந்தாலும் தரித்ரனாயிருந்தால் பயனில்லையே. அப்படியின்றிச் செல்வமெல்லாம் நிறைந்த பூமண்டலம் முழுவதையும் செங்கோல் செலுத்தி ஆளும்படியான ஒப்புயவர்வற்ற ஸமபத்தும் வாய்ந்தவன்.
இப்படிப்பட்ட அதிசயங்கள் நிறைந்த ஒரு மநுஷ்யனிருந்தால் அவனுக்கு உண்டாகக்கூடிய ஆனந்தத்தை முன்னே எடுத்துக்காட்டி, அதைவிட நூறு பங்கு அதிகமான ஆனந்த முடையவர்களாக மநுஷ்ய கந்தர்வர்கள் என்ற வகுப்பைக்கூறி
அவர்களைவிட நூறுபங்கு அதிகமான ஆனந்தமுடையவர்களாக தேவகந்தவர்களைக் கூறி இப்படியே நூறுநூறுபங்கு அதிகமான ஆனந்த முள்ளவர்களாக வரிசையாய் சிரலோகலோகபித்ருக்களையும், ஆஜாநஜ தேவர்களையும், தேவர்களையும் இந்திரனையும் ப்ருஹஸ்பதியையும் பிராஜாபதியையும் சொல்லிவந்து,
அந்த பிராஜாபதியின் ஆனந்தத்தைவிட நூறுபங்கு அதிகமான ஆனந்தமுடையது பரப்ரஹ்மம் என்று சொல்லிப்பார்த்து, ‘ப்ரப்ரஹ்மத்தின் ஆனந்தத்தை இவ்வளவு மட்டமாகவா சொல்லிவிடுகிறது’ என்று குறைப்பட்டு என்றபடி மறுபடியும் திரும்புகிறதாம்;
அதாவது கீழ்ச் சொல்லிக் கொண்டுவந்த ப்ரக்ரியையில் கடைசியாக யாதெர்ரு ப்ரஜாபதி சொல்லப்பட்டானோ, அவனை அடுத்த பர்யாயத்தில் மநுஷ்ய ஸ்தானத்திலே நிறுத்தி
அவன் முதலாக ப்ரஜாபதி யளவும் சொல்லிக்கொண்டுபோய், அந்த ப்ராஜாபதியின் ஆனந்தத்தைவிட நூறுபங்கு அதிகமான ஆனந்தம் பரப்ஹமத்தினுடையது என்று சொல்லி முடிக்கப்பார்த்து
அதுவும் கூடாமையாலே முன்போலே ஒரு பர்யாயம் சொல்லுவது-இப்படியே அந்தாதியாக இன்றைக்கும் புந: புநராவ்ருத்தியிலே கிடக்கின்றானாம் வேத புருஷன்.
இப்படி அபரிச்சேத்யமான ஆனந்த முடையவனெம்பெருமான் என்று இப்பாட்டில் முதலடியில் அருளிச்செய்து, ஈற்றடியில்,
“வீவிலின்பம் மிகவெல்லை நிகழ்ந்தனன்’ என்கைர்யலே எம்பெருமானுடைய ஆனந்தவல்லியிற் காட்டிலும் ஆழ்வாருடைய ஆனந்தவல்லி மேம்பாடுடையதாகக் கொள்ள இடமுண்டு.
லீவு-விச்சேதம்; அது இல்லாத இன்பம்-அவிச்சிந்நமான ஆனந்தம். அதுதான் எவ்வளவென்னில், மிகவெல்லைநிகழ்ந்த-‘இனி இதுக்கு மேலில்லை’ என்னலாம்படியான எல்லையிலுள்ளதாம்.
வீவில் சீரன் என்று நித்ய விபூதியுடைமையையுஞ் சொல்லும்; கல்யாண குiமுடையையுஞ் சொல்லும்.
மலர்க்கண்ணன்-இயற்கையான ஆனந்தமுடையவ னென்னுமிடம் திருக்கண்கள் தாமே கோட்சொல்லித் தருமாம்.
—————
***- நித்ய ஸூரி நாதனாயிருந்து வைத்து நித்ய ஸம்ஸாரியான என் பக்கலில்
பண்ணி யருளின மஹோபகாரம் என்னே! என்று ஈடுபடுகிறார்.
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-
பதவுரை
மேவி நின்று |
– |
நெஞ்சு பொருந்தியிருந்து |
தொழுவார் |
– |
அனுபவிப்பாருடைய |
வினை போக |
– |
பாபங்கள் யாவும் நசிக்கும்படி |
மேவும் |
– |
தான் அவர்களோடே கலக்கின்ற |
பிரான் |
– |
மஹோபகாரகனாய் |
துர்வி அம் புள் |
– |
சிறகுகளையுடைய அழகிய பெரிய திருவடியை |
உடையான் |
– |
ஊர்தியாகவுடையனாய் |
அடல் ஆழி |
– |
போர்வல்ல திருவாழியை யுடையனான |
அம்மான் தன்னை |
– |
ஸர்வேச்வரனை |
நா இயலால் |
– |
நாவினுடைய தொழிலாலே |
இசை மாலைகள் |
– |
இசைரூபமான் மாலைகளையிட்டு |
ஏத்தி நண்ண பெற்றேன் |
– |
ஏத்துகையாகிய நண்ணுதலைப் பெற்றேன்; |
ஆவி |
– |
எனக்கு அந்தாராத்ம பூதனான எம்பெருமான் |
என் ஆவியை |
– |
என்னுடைய ஆத்மாவை |
செய்த ஆற்றை |
– |
இங்ஙனம் செய்த ப்ரகாரத்தை |
யான் அறியேன் |
– |
நான் அறியமாட்டேன். |
எம்பெருமானுக்கு ப்ரணதார்த்திஹரன் என்று ஒரு திருநாமமுண்டு; அதன் பொருளை முதலடியில் அநுஸந்திக்கிறார்.
மேவி நின்று தொழுகையாவது தன்னையே விரும்பித் தொழுகை; ப்ரயோஜநாந்தரங்களுக்கு மடியேலாதே அநந்யப்ரயோஜநர்களாய்த் தொழுகை.
“நம்பும் மேவும் நசையாகும்மே” என்கிறபடியே மேவுதலாவது ஆசைப்படுகை; தன்னையே ஆசைப்பட்டு என்றபடி.
ப்ரயோஜநாந்தரங்களை ஆசைபட்டுக் தொழுவாருடைய வினைகளைப் போக்கமாட்டானோ? என்று கேட்கவேண்டா.
தூவி அம் புள்ளுடையான் -துர்வியென்று சிறகுக்குப்பெயர்; கருத்மானுக்குச் சிறகிருக்கின்றமையை இவர் எடுத்துரைக்க வேணுமோ? வேண்டர் ஆயினும் உரைப்பது அநுபவ ராஸிக்யத்தாலேயாகும்.
“பண்கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்துத் திண்கொள்ள வோர்க்கும் கிடந்தென் செவிகளே” என்று கீழே அருளிச் செய்தாரே,
ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே பெரிய திருவடியின் சிறகே உறைந்திருக்கும் போலும். அம்புள் -அழகிய புள்;
என்ன அழகு என்னில்; *** த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்க சோபிநா.” என்று ஆளவந்தார் அருளிச் செய்த படியே எம்பெருமானுடைய திருவடி பட்டுப் பட்டுத் தழும்பேறின அழகு.
அடலாழியம்மான்=அடல்-கொல்லுகை, வலிமை, போர் வெற்றி என நான்கு பொருள்களுண்டு.
நா இயலால் இசைமாலைகளேத்தி -நாப்பு
நாட்டினதெல்லாம் இயலும் இசையுமாயிற்றென்பர். கவிபாடவேணுமென்கிற முயற்சியின்றியே நாக்கு இயம்பிற்றெல்லாம் நல்லிசை மாலைகளாயினவாம். திருவாய்மொழியைக் கொண்டு அவனையேத்தி அநுபவிக்கப் பெற்றே னென்கை.
(ஆவி என்னாவியை இத்யாதி.) ஆவி என்கிறது எம்பெருமானை; உலகுக்கு ஓரயிராயிருக்கையாலும், வேதாந்தங்களிலே ஆத்மா என்று எம்பெருமானை வழங்கியிருக்கையரலும் ஆவியென்னத் தட்டில்லை,
(என் ஆவியைச் செய்தவாற்றை யானறியேன்) விபுவான் தான் அணுவான வெள்ளைத் தன்னிலும் மேற்பட்ட (அல்லது, தன்னோடொத்த) ஆனந்தத்தை யுடையேனாம்படி பண்ணின விதம் ஆச்சரியம் என்றவாறு.
——————–
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5-
பதவுரை
ஆற்ற |
– |
பொறுக்கப்பொறுக்க |
நல்ல வகை |
– |
விலக்ஷ்ணமாயுள்ள (ஜ்ஞாந பக்திகள் பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகளாகிற) ப்ரகாரங்களை |
காட்டும் |
– |
அடியார்களுக்குக் காட்டிக் கொடுக்கின்ற |
அம்மானை |
– |
சர்வேச்வரனாய் |
அமரர் தம் ஏற்றை |
– |
நித்தியஸூரிநாதனாய் |
எல்லாப் பொருளும் |
– |
எல்லா அர்த்த விசேஷங்களையும் (கீதோபநிஷந் முகத்தாலே) |
விரித்தானை |
– |
விரிவாக உபதேசித்தவனான |
எம்மான் தன்னை |
– |
எம்பெருமானை |
வினை |
– |
பாபங்களும் |
நோய்கள் |
– |
பெரிய வ்யாதிகளும் |
காற்றின் முன்னம் கடுகி |
– |
காற்றிலும் வேகமாக ஓடிப்போய் |
கரிய |
– |
வெந்துபோம்படியாக |
மாற்றம் மாலை புனைந்து |
– |
சொல்மாலையைத் தொடுத்து |
ஏத்தி |
– |
துதித்து |
நாளும் |
– |
ஸர்வகாலமும் |
மகிழ்வு எய்திளேன் |
– |
மகிழ்ச்சியைப்பெற்றேன் |
***- எம்பெருமான் அடியார்களுக்குச் செய்தருள நினைக்கும் நன்மைகளை ஒருகாலே செய்து முடிப்பதில்லை; பொறுக்கப் பொறுக்கச் சிறிது சிறிதாகச் செய்தருள்வன்.
ஆசார்யஹ்ருதயத்தில் இரண்டாவது ப்ரகரணத்திலுள்ள *புணர்தொறு மென்னக் கலந்துபிரிந்து * இத்யாதி சூர்ணிகை இங்கு அநுஸந்தேயம்:
அதன் கருத்தாவது-* பொய்ந் நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்புமிந் நின்ற நீர்மையினி யாமுறாமையென்று பிரார்த்தித்தபோதே ஆழ்வாருடைய அபேக்ஷிதம் செய்துவிடாமலிருக்க
இவரை இந்நிலத்திலே வைத்துத் தன்னுடைய ஸம்ச்லேஷ விச்லேஷங்களாலே ஜ்ஞானபக்திகளை வளர்த்தது எதுக்காக வென்னில்;
கனமான கர்ணபூஷணமிடுதற்கு இடமாம்படி நூலிட்டுத் திரியிட்டுக் குதம்பையிட்டுக் காது பெருக்குமாபோலவும்,
ஒருமாஸம் உபவாஸமிருந்தவர்களுக்கு முதலிலே போஜனமிட்டால் பொறாதென்று சோற்றையரைத்து உடம்பிலே பூசிப் பொரிக்கஞ்சி கொடுத்துப் பொரிக்கூழ் கொடுத்து நாளடைவிலே போஜனம் பொறுப்பிக்குமா போலவும்,
பகவதநுபவம் கனாக்கண்டறியாத விவர்க்கு அதிச்லாக்யமாய் நித்யஸூரிகள் அநுபவிக்கிற போகத்தை முதன் முதலிலே கொடுத்தால் ஸாத்மியா தென்று கருதி அது ஸாத்மிக்கைக்காக செய்வித்தபடி என்கை.
ஆற்ற நல்லவகை இன்னாருக்குக் காட்டும் என்னாமையாலே இது பொதுவிலே சொன்னதித்தனை.
ஆழ்வாரிடத்திலே ஸமந்வயம் காணலாம்.
எல்லாப்பொருளும்; விரித்தானை – அறியவேண்டிய பொருள்களையெல்லாம் பகவத் கீதை முகமாக விரித்தருளிச் செய்தவனென்றபடி.
அப்பொருள்களாவன.-
ஜீவாத்மாக்களுக்கும் பரமாத்மாவுக்கும் பேதம்,
ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதம்,
அசித்திற்காட்டில் சித்துக்குண்டான வாசி,
ஆத்மாக்களின் நித்யத்வம் தேஹங்களின் அநித்யத்வம்,
ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் பண்ணுவித்தலாகிற நியாமகத்வம் ஈச்வரனுக்கேயுள்ள தென்பது,
பக்திமான்கள் நிமித்தமாகவும் அவதார ப்ரயுக்தமாகவும் அவன் எளியனாகின்றானென்பது,
ஆச்சயிக்குமிடத்து அனைவர்க்கும் ஸமனாயிருக்கிற னென்பது
(அதாவது) அறிவு ஒழுக்கம் ஜாதி முதலியவற்றால் ஏற்றத்தாழ்வு பெரிது முடைய எவ்வகுப்பினர்க்கும் ஒருங்கே ஆச்ரயணீயனாக இருத்தல்,
அஹங்காரதோஷம், இந்த்ரிய ப்ராபல்யம், மற்றை யிந்திரியங்களிற் காட்டிலும் மநஸ்ஸினுடைய ப்ராதாந்யம்,
நான்கு வகைப்பட்ட ஸூக்ருதி களின்பேதம்,
தேவாஸூரவிபாகம்,
விபூதியோகம்,
விச்வரூபதர்சநம்,
ஸாங்கபத்தி, அங்கப்ரபத்தி ஸ்வதந்த்ரப்ரபத்தியாகிற இருவகை ப்ரபத்தி என்றிப்படிப்பட்ட பொருள்களாம்.
ஸ்ரீவசந பூஷணத்தில் முதல் ப்ரபரணத்தில்-“அறியாதவர்த்தங்களையடைய அறிவித்து” என்றவிடத்து
மணவாளமாமுனிகளின் வியாக்கியானத்தில் இவ்வர்த்த விசேஷவிவரணம் நன்கு காணத்தக்கது.
இப்படி எம்பெருமான் பண்ணின வுபபாரத்திற்குக் கைம்மாறு காணாமையாலே ஏத்தினேன், அதுதிருவாய்மொழியாய்த் தலைக்கட்டிற்று:
துக்கங்களும் துக்க ஹேதுவான கருமங்களுமெல்லாம் விரைவாகவே தொலைந்தன வென்கிறார்.
காற்றில் முன்னங்கடுகி என்றது-விரைவின் மிகுதியைச் சொன்னபடி.
—————–
***- ‘ஆழ்வீர் ! உமக்கு வேண்டுவது என் ? என்று எம்பெருமான் கேட்க, இது வரையில்
நான் பெறாதே இனி ஸாதித்துத் தரவேண்டுவதொரு பொருளுண்டோ வென்கிறார்.
கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-
பதவுரை
கரிய மேனி மிசை |
– |
(திருக்கண்ணின்) கூரிய விழியின் மேலே |
வெளிய நீறு |
– |
அஞ்சன நீற்றினை |
சிறிதே இடும்; |
– |
அளவாக அணிகிற |
பெரிய கோலம் |
– |
அளவிறந்த அழகினையுடைய |
தடம் கண்ணன் |
– |
விசாலமான திருக்கண்களையுடையனாய் |
விண்ணோர் பெருமான் தன்னை |
– |
நித்யஸூரிகளுக்குத் தலைவனான ஸர்வேச்வரனை |
உரிய சொல்லால் |
– |
(இவ்வழகுக்குத்) தகுதியான சொற்களாலே |
இசை மாலைகள் |
– |
இசைவடிவான மாலைகளையிட்டு |
ஏத்தி |
– |
துதித்து |
உள்ள |
– |
அநுபவிக்க |
பெற்றேற்கு எனக்கு |
– |
பெற்றவனான எனக்கு |
இன்று தொட்டும் |
– |
இன்று தொடங்கி |
இனி என்றும் |
– |
இனிமேலுள்ள காலம் எல்லாம் |
அரியது உண்டோ |
– |
துர்லபமாயிருப்பதும் ஒன்றுண்டோ |
(கரியமேனி மிசை வெளிய நீறு சிறிதேயிடும்) இதற்குப் பலவகையாகப் பொருள் பணிப்பர்கள்.
மேலே “பெரிய கோலத்தடங்கண்ணன்” என்று திருக்கண்களின் ப்ரஸ்தா வமிருக்கையாலே கரிய மேனி மிசை என்றது. திருக்கண்களில் கருவிழியினுடைய கறுத்த நிறத்தால் வந்த அழகுக்கு மேலே என்றபடி.
வெளிய நீறு சிறிதேயிடும்-அஞ்ஜன சூர்ணத்தை மங்கலமாகச் சிறிது அணிந்து கொள்ளுகிற என்றபடி.
“வெளியம்-அஞ்ஜன சூர்ணத்தை மங்கலமாகச் சிறிது அணிந்து கொள்ளுகிற என்றபடி.
“வெளியம்-அஞ்ஜனம்” என்று பன்னீராயிரம்,
வேதாந்த தேசிகன் தாத்பர்யரத்நாவளியில் இப்பாசுரத்திற்காக “கர்ப்பூரா லேபசோபே” என்றருளிச் செய்திருக்கக்காண்கையாலே,
சாமளமான திருமேனி யிலே பச்சைக்கருப்பூர தாளியையணிந்து கொள்ளுகிற என்றும் பொருள் கொள்ளலாம்.
வெளிய என்றது வெள்ளிய என்றபடி.
கரி அம்மேனிமிசை வெளிய, நீறு சிறிதேயிடும் என்று கொண்டு, கரி-குவலயாபீட யானையானது,
அம்மேனிமிசை கண்ணபிரானது அந்தத் திருமேனியிலே, வெளிய-சீறிப் பாய்ந்தவளவிலே,
சிறிதே-க்ஷ்ணகாலத்திற்குள், நீறு இடும்-அந்த யானையைப் பொடி படுத்தின-என்றானாம் ஒரு தமிழன்.
உரிய சொல்லால்-திருவாய்மொழிக்கு இது அஸாதாரணமான பெருமை
ராமகதையைச் சொல்லுவதாக ராமாயணமென்று தொடங்கி, கங்கையின் உற்பத்தி, ஸூப்ரம் மண்யனுடைய உற்பத்தி,
புஷ்பகவர்ணநம் முதலான கதைகளைப் பரக்கப் பேசுவதால் அஸத்கீர்த்தநம் பண்ணி வாக்கிலே அசுத்தி படைத்தான் வால்மீகி:
‘நாராயண கதை’ என்பதாகத் தொடங்கி ஸம்பவபர்வத்திலே பீமர் முதலான பற்பலருடைய உத்பத்தி ப்ரகாரங்களை விரிவாகப் பேசுகையாலும், ‘பூசல்பட்டோலை’ (யுத்த புஸ்தகம்) என்னும்படி பாரதப்போர் வகைகளையே பரக்கநின்று வருணித்த படியாலும்
அஸத்கீர்த்தனத்திலே மிகவும் பரந்து அசுத்திபடைத்தான் வேத வ்யாஸபகவான்.
ஆகவிப்படி, தொடங்கினபடிக்குச் சேராமே அஸத்கீர்த்தநத்தைப் பண்ணி வாக்கை அசுத்தமாக்கிப் பின்பு
அஸத் கீர்த்தந காந்தார பரிவர்த்தந பாம்ஸூலாம், வாசம் செளரிகதாலாப கங்கயைவ புநீமஹே.” என்று அதற்கு சுத்திபண்ண வேண்டாதபடி
“திருமாலவன் கவி யாது கற்றேன்”. (திருவிருத்தம்) என்று திருமால் விஷயமான கவியென்று அடியில்வாயோலை யிட்டபடியே
இதர விஷய ஸம்பந்தமுள்ள ஒரு சொல்லும் ஊடு கலசாதபடி சொற்களைத் தெரிந்தெடுத்து
விஷயத்திற்குத் தகுதியான சொற்களாலே அருளிச் செய்ததிறே திருவாய்மொழி.
இப்படித் திருவாய்மொழிபாடி அநுபவிக்கப் பெற்ற வெனக்கு இனி அருமையானது எதுவுமில்லை யென்றாராயிற்று.
—————–
***- கீழ்ப்பாட்டில் “அரியதுண்டோ வெனக்கு இன்று தொட்டு மினியென்றுமே” என்று செருக்குத் தோற்றப் பேசினார்.
இத்தகைய செருக்கு எத்தாலே வந்ததென்ன, எம்பெருமானருளாலே வந்த தென்கிறாரிப் பாட்டில்.
என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்றனைக்
குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்னகுறை நமக்கே?–4-5-7-
என்றும் |
– |
பரத்வம் முதலான ஸர்வாவஸ்தைகளிலும் |
ஒன்று ஆகி |
– |
ஒரேப்ரகாரமுடையனாய்க் கொண்டு |
ஒத்தாரும் மிக்கார்களும் |
– |
ஸமராயும் அதிகராயும் இருப்பார் |
தன்தனக்கு |
– |
தனக்கு |
இன்றி நின்றானை |
– |
இல்லாமலிருப்பவனாய் |
எல்லா உலகும் உடையான் தன்னை |
– |
எல்லாவுலகத்தையும் தனக்கு •••ஷமாகவுடையனாய் |
மழை |
– |
மழையை |
குன்றம் என்றால் |
– |
மலை ஒன்றினாலே |
காத்த பிரானை |
– |
தடுத்த மஹோபகாரகனான வனைக்குறித்து |
சொல் மாலைகள் |
– |
சொல்மயமான மாலைகளை |
நன்று சூட்டும் விதி |
– |
அவன் ஆதரித்துச் சூடும்படி சூட்டுகைக்குற்ற பாக்கியத்தை |
எய்தினம் |
– |
கிட்டப்பெற்றோம்: (ஆதலால்) |
நமக்கு என்னகுறை |
– |
நமக்கு ஒருகுறை யுண்டோ? |
பரமபத நிலையனாய் நிற்கும் நிலைமையோடு, மநுயாதி ஸஜாதீயனாய் அவதரிக்குமவதாரங்களோடு வாசியற
எல்லா நிலைமைகளிலும் தன்னோடு ஒத்தவர்களும் மேம்பட்டவர்களுமின்றிக்கே யிருப்பவனாய்,
ஸகல லோகங்களையும் தனக்கு சேஷமாகவுடையனாய், அந்த சேஷ வஸ்துக்களுக்கு இந்திரனால் நேர்ந்த ஆபத்தை,
கண்டதொரு மலையாலே போக்கினவனான ஸர்வேச்வரனைத் திருவாய்மொழியாகிற சொல்மாலைகளாலே
அழகாக அலங்கரிக்கும் படியான பாக்கியம் பெற்றோம்: ஆனபின்பு நமக்கு ஒரு குறையுண்டோ வென்கிறார்.
என்றும் ஒன்றாகி என்றது -மேலே சொல்லப்படுகிற, ஒத்தாரும் மிக்கார்களும் தனக்கு இல்லாமையாகிற விஷயம்
எல்லா நிலைமைகளிலும் ஒரே விதமாகவேயிருக்குமென்றபடி.
பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவதாரமென்கிற நிலைமைகளுக்குள்ளே
ஒவ்வொரு நிலைமையும் ஒத்தாரும் மிக்காருமின்றி யிருக்குமென்கை.
தன்தனக்கின்றி நின்றானை என்கிற விடத்திற்கு ஒரு விசேஷார்த்தமுண்டு,
ஆளவந்தார் மகனார் சொட்டை நம்பி பணித்தாராம்; -“தன் தனக்கு என்றது தானான தனக்கு என்றபடி:
ஒருவகைக்கு ஒப்பின்றிக்கேயிருக்கிறது பரத்வத்தில் அல்ல ‘ஆத்மாநம் மாநுஷம் மந்யே’ என்கிறபடியே,
அவதரித்து மனிச்சு ஏறிட்டுக்கொண்டு நிற்கிற நிலையிலே” என்று.
மேலே கூறப்பட்ட அர்த்தம் எந்தச் சொல்லிலிருந்து கிடைக்கின்றது? என்று ஆராய வேணும். கேண்மின்:
தனக்கு என்னாமல் தன் தனக்கு என்றதில் உட்புகுந்து ஆராயவேணும்;
ஸ்ரீ பரதாழ்வானோடுகூட சித்திரகூடஞ் சென்ற வஸிடபகவான் ஸ்ரீராமபிரானை நோக்கி “…………………-ஆத்மாநம் நாதிவர்த்தேதா:” என்றான்;
‘தன்னை மீறாதே’ என்பது சப்தார்த்தம்.
இங்கே ஆத்மாநம் என்பதற்கு-‘உயிர் நிலையான பரதாழ்வானை’ என்று சிலர்பொருள் கூறுவதுண்டு.
அப்படியல்லாமல் பட்டர் அருளிச் செய்தாவது-ஆத்மாநம் என்றது தானான தன்மையை யென்றபடி;
தானான தன்மையாவது ஆச்ரித பாரதங்தரியம்; அதனை இழக்கவேண்டா என்பதாம்.
வடமொழியில் ஆத்மா என்பது போலத் தமிழில் தான் என்பதாம்.
அது தன்னிலும் தனக்கு என்பதற்கும் மேலாக, ‘தன்தனக்கு’ என்கையாலே
எம்பெருமானுடைய தானான தன்மைமையே சுட்டிக்காட்டுகிற சொல் இது என்று கொள்ள வேணும்.
எம்பெருமானுடைய தானான தன்மை எதுவென்றால் ஆச்ரித பாரதந்திரியமே யென்பது கீழே மூதலிக்கப்பட்டது.
ஆகவே, ஆச்ரிதபரதந்திரனாக அவதரித்த விடத்திலே ஒத்தாரும் மிக்காரு மில்லாதிருப்பவன் என்றதாயிற்று.
இதனால் தேறிய கருத்து யாதெனில்; எம்பெருமானுடைய பரத்வத்திற்கு எல்லை கண்டாலும் காணலாம்;
அவனுடைய ஸௌசீல்யத்திற்கு அது காண முடியாது என்பதாம்.
இங்ஙனம் பூர்ணமான விஷயத்தை நாம் எங்ஙனம் பேசுவது! என்று கொண்டு மீளாமல்,
துணிந்து ஊடுருவப் பேசப் புகுந்த என்னுடைய பாக்கியமே பாக்கியம் என்றாராயிற்று.
——————-
***- ஆழ்வார் தம்பக்கலிலே எம்பெருமானுக்குண்டான அபிநிவேஸத்தைக் கண்டு, இப்படிப்பட்ட
எம்பெருமானைக் கவி பாட வல்ல எனக்குப் பரமபதத்தில் ஸூரிகளும் நிகரல்லர் என்கிறார்.
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-
பதவுரை
நமக்கும் |
– |
நித்ய ஸம்ஸாரிகளான நமக்கும் |
பூவின் மிசை நங்கைக்கும் |
– |
தாமரை மலரில் வசிக்கும் பெரிய பிராட்டியாருக்கும் |
இன்பனை |
– |
இன்பமளிப்பவனும் |
ஞாலத்தார் தமக்கும் |
– |
லீலாவிபூதியிலுள்ளார்க்கும் |
வானத்தவர்க்கும் |
– |
பரமபத வாசிகளுக்கும் |
பெருமானை |
– |
தலைவனும் |
தண் தாமரை சுமக்கும் |
– |
குளிர்ந்த தாமரை மலர்சுமக்கும்படியான |
பாதம் பெருமானை |
– |
திருவடிகளை யுடையனுமான ஸர்வேச்வரன் விஷயத்தில் |
சொல்மாலைகள் |
– |
திருவாய்மொழியை |
சொல்லும் ஆறு |
– |
சொல்லும்படியாக |
அமைக்க வல்லேற்கு |
– |
அமைதியைப்பெற்ற எனக்கு |
அகல்வானத்து |
– |
அகன்ற நித்ய விபூதியிலும் |
யாவர் இனிநிகர் |
– |
யார்தான் இனி ஒப்பாவார்? |
பெரிய பிராட்டியாரிடத்திலும், அவளுடைய பரிகரமான நம்மிடத்திலும் ஸ்நேஹித்திருப்பவன் எம்பெருமான் என்று
இந்தமுறையிலே யிட்டுப் பாசுரமருளிச்செய்ய வேண்டியிருக்க,
“நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும்” என்று தம்மை முந்துறச் சொல்லிப் பிறகு பிராட்டியைச்; சொல்லி யிருப்பது
கொண்டு ஒரு விசேஷார்த்தம் சிக்ஷ்க்கப்படும்.
(ஆசார்ய ஹ்ருதயத்தில் இரண்டாம் பிரகரணத்தில்-“இன்பு மன்பும் முற்படுவது கொழுந்துவிடுதாகிறது.” இத்யாதி சூர்ணிகை இங்கே அநுஸந்தேயம்.)
எம்பெருமான் ப்ரீதிபண்ணுமிடத்தில் நித்யாநபாயிநியான பிராட்டியிற்காட்டிலும்
அதிகமாகவே நம்மிடத்தில் பண்ணுவனென்னுமிடம் இதனால் அறியத்தக்கது.
இங்கே ஈட்டு ஸ்ரீ ஸூக்திகாண்மின்;-“இனபனா மிடத்தில்; முற்பாடு இங்கேயாய்ப் பின்பாயிற்று அவளுக்கு ஸ்நேஹித்திருப்பது” என்று.
இவ்வர்த்தம் ஸ்ரீராமாயணத்தில் ஒரு ஸந்தர்ப்ப விசேஷத்தில் பெருமாளாலேயே வெளிடப்பட்டது; எங்ஙனே யென்னில்,
பெருமாள் எழுந்தருளி நிற்கச்செய்தே இராவணன் கோபுர சிகரத்திலேவந்து தோன்றினவாறே
‘ராஜ த்ரோஹியான பயல் இங்ஙனம் கூச்சமன்றித் திருமுன்பே நிற்பதும் நீதியோ’ என்று சீற்ற முற்ற ஸூக்ரிவ மஹாராஜர்.
அவன் மேலே எழப்பாய்ந்து மீண்டு வந்தபோது பெருமாள் *** த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீதயா மம?” என்றார்;
‘உனக்கு ஓர் அனர்த்தம் விளையுமாகில் பின்னை ஸீதாபிராட்டிதான் எனக்குக்கிடைத்தன? என்பது இதன் பொருள்.
இதனால்இ பிராட்டி பக்கலிற்காட்டிலும் அடியவர் திறத்தில் எம்பெருமானுக்குள்ள அன்பின் கனம் அறியவெளிதாம்.
ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை ஸ்ரீ இங்கும் வானத்தவர்க்கு முன்னே ஞாலத்தார் முற்படுகிறார்கள்.
இங்கே ஈடு: -“மாதா பிதாக்கள் ப்ரஜைகளில் குறைவாளர் பக்கலிலேயிறே; அத்தாலே ஸம்ஸாரிகள் முற்படவேண்டுகிறது” என்று.
நித்ய விபூதியிலுள்ளார்க்கு இரங்குவது மீனுக்குத் தண்ணீர் வார்ப்பது போலேயா மித்தனை.
ஞாலத்தவர்க்கு இரங்குவதே பாலை நிலத்தில் தண்ணீர்ப்பந்தல் வைத்தாறாகும்.
தண்தாமரை சுமக்கும் பாதப்பெருமானை = குளிர்ந்த ஆஸந பத்மத்தாலே தரிக்கப்பட்ட திருவடிகளையுடையவ னென்கை.
எம்பெருமானுடைய திருவடிகளின் கீழ்; பத்மாஸந மிருப்பது அறியத்தக்கது.
“அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ” என்றதும் அநுஸந்தேயம்.
தண்டாமரையின் மீது விளங்குகின்ற பாதங்களையுடையவன் என்னவேண்டுமிடத்தில்
“தண்டாமரை சுமக்கும் பாதன்” என்றது ஒரு உத்ப்ரேக்ஷையில் நோக்காக, அதாவது-
குளிர்த்தியிலும் பரிமளத்திலும் செவ்வியிலும் தாமரைப்பூவானது திருவடிக்குத் தோற்றுப்போயிற்றாம்;
தோற்றவர்கள் வென்றவர்களைச் சுமப்பது என்கிற ஒரு வியவஸ்தை உலகிற் காண்பதாதலால்,
தோல்வியடைந்த தாமரைப்பூ வெற்றிபெற்ற திருவடியைச் சுமக்க வேண்டியதாயிற்றுப்போலு மென்கை.
ஆழ்வான் ஸூந்தரபாஹூஸ்தவத்தில் இக்கருத்தை அமைத்து ஒரு ச்லோகமருளிச் செய்தார்;-
*** ஸ்ரீ ஸௌந்தர்ய மார்த்தவ ஸூகந்தரஸப்ரவாஹை: ஏதே ஹி ஸூந்தரபுஜஸ்ய பதாரவிந்தே, அம்போஜடம்பபரிரம்பணமப்யஜைடாம் தத் வை பராஜிதமிமே சிரஸா பிபர்த்தி.’ என்பதாமது.
அழகு, ஸௌகுமார்யம், நறுமணம், மகரந்தரஸப்ரவாஹம் ஆகிய இவற்றாலே அழகருடைய இந்தத் திருவடிகளானவை தாமரையை வென்றிட்டபடியினால் தோல்வியடைந்த அந்தத் தாமரைப்பூ இந்தத் திருவடிகளைச் சுமக்கின்றது என்றவாறு.
இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயத்தில் சொல் மாலைகள் சொல்லுமாறு அமைக்கவல்ல எனக்குத் திருநாட்டிலும் இனி நிகரில்லை யென்கிறார்.
சொல்மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு என்ற விடத்தில் நிர்வாஹ பேதமுண்டு;
பட்டருக்கு முன்புள்ள முதலிகள் எப்படி நிர்வஹித்தார்களென்றால் ஆழ்வாரை நோக்கி ஸர்வேச்வரன் ‘ஆழ்வீர்! நம்மைக் குறித்து ஒரு கவி சொல்லும்’ என்றால்
சிறிதும் மயங்காமல் அப்போதே சடக்கெனக் கவி சொல்லி முடிக்கும்படியான வல்லமை வாய்ந்த எனக்கு-என்று நிர்வஹித்துப் போந்தார்களாம்:
பட்டர் நிர்வஹிப்பதாவது-மேலே எழாம்பத்தில் * என்றைக்கு மென்னை என்கிற திருவாய்மொழியிற்படி ஸர்வேச்வரன் தானே கவிபாடினா னாகையாலே கவிபாடின ஸாமர்த்தியம் அவ்வளவாகப் பாராட்டத்தக்கதன்று;
அந்த எம்பெருமான் திருக்கண்களாலே குளிரக் கடாக்ஷித்து ‘நீர் ஒரு கவிசொல்லும்’ என்றால் உள்ளெலா முரகிக்க
குரல்தழுத் தொழிந்தேன் என்னுங் கணக்கிலே சிதிலராகாமே தரித்து நின்று சொல்மாலைகள் சொன்னதன்றோ பாராட்டத்தக்கது;
அந்தத்தன்மையை ஆழ்வார் இங்கு அருளிச்செய்கிறார் என்றாம்.
அமைக்க என்ற சொல்லின் ஸ்வாரஸ்யத்திற்கு மிகவும் பொருந்திய நிர்வாஹம் இது. அமைத்தல்-தரித்தல்.
——————
***- இப்பாட்டு ஆழ்வாருடைய ஸர்வ விலகஷ்ணமான பெருமையைக் காட்டுகின்றது.
பரமபதத்திலுள்ள நித்யர்களென்ன. முக்தர்களென்ன, இவ்விபூதியிலுள்ள பராசர பாராசர்ய வால்மீகி ப்ரப்ருதிகளான மஹரிகளென்ன,
ஆகிய இவர்களெல்லாரிற் காட்டிலும் ஆழ்வார்க்குண்டான வைலக்ஷ்ண்யம் இப்பாசுரத்தில் வெளியாகின்றது.
எம்பெருமானுடைய பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவதாரங்களென்ற எல்லா நிலைமைகளிலும் புக்குக்
கவி சொல்ல வல்ல வெனக்கு எதிருண்டோ வென்கிறார்.
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தன்னை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9-
பதவுரை
வானத்தும் |
– |
ஸ்வர்க்கத்திலும் |
உள்வானத்து உம்பரும் |
– |
அதுக்குள்ளாகப் பெரியதாயிருக்கிற மஹர்லோகாதிகளிலும் |
மண்ணுள்ளும் |
– |
பூமிக்குள்ளும் |
மண்ணின் கீழ் தானத்தும் |
– |
பூமியின் கீழ் இருக்கிற பாதாள உலகத்திலும் |
எண் திசையும் |
– |
இவற்றிலுண்டான எட்டுவிதமான பதார்த்தங்களிலும் |
தவிராது |
– |
ஒன்றிலும் வழுவாதபடி |
நின்றான் தன்னை |
– |
வ்யாபித்து நிற்பவனும் |
கூன் நல் சங்கம் |
– |
வளைந்தவடிவால் அழகிய ஸ்ரீ பாஞ்சஜந்யத்தை |
தட கையவனை |
– |
பெரிய திருக்கையிலுடையவனும் |
குடம் ஆடியை |
– |
குடக்கூத்தினாலே ஸகல ஜனங்களையும் வசீகரித்தவனும் |
வானம் கோனை |
– |
நித்ய ஸூரிகளுக்குத் தலைவனுமான ஸர்வேச்வரன் வியத்திலே |
கவி சொல்ல வல்லேற்கு |
– |
கவி பாடவல்ல எனக்கு |
இனி மாறு உண்டே |
– |
இனி எதிர் உண்டோ? |
நித்யமுக்தர்கள் பரத்வமல்லது வேறொன்றையும் அறியார்கள்.
மஹர்ஷிகளில் வந்தால், பராசுர பகவானும் வேதவ்யாஸபகவானும் க்ருணாவதாரமல்லது மற்றொன்று அறியார்கள்.
வால்மீகி பகவான் ஸ்ரீராமாவதாரமன்றி யறியான்.
ஸநக ஸநந்தநாதிகள் அந்தர்யாமித்வத்திலே அதிகமாக ஊன்றியிருப்பார்கள்.
இங்ஙனே பார்க்குமிடத்து ஒவ்வொருவர்க்கு ஒவ்வொன்று பாழியாயிருக்கும்.
நம்மாழ்வாருடைய தன்மை இங்ஙனனேயன்று;
வானத்தும் வானத்துள்ளும்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்தானத்தும் எண்டிசையும் தவிராது நின்றானைக் கவிபாடுபவாராயிற்றிவர்.
இங்கு விசேஷணாம்ஸங்களில் முழுநோக்கு.
விசேய பூதனான எம்பெருமான விஷயத்தில் கவிபாடுதல் மற்றவர்கட்கும் உள்ளதேயானாலும்,
விசேஷணாம்ஸங்களிலே தனித்தனியே புகுந்து அவ்வோ நிலைமைகளுக்கும் கவிபாடுதல் ஆழ்வா ரொருவர்க்கேயா மித்தனை.
முன்னிரண்டடிகளாலே எம்பெருமானுடைய ஸர்வவ்யாபகத்வம் சொல்லப்படுகிறது.
இந்த வ்யாப்தியை மற்றையோர்கள் பேசுவதிற் காட்டிலும் ஆழ்வார் பேசுவதிலே சுவை மிக்கிருக்கும்.
“பரந்த தண்பரவையுள் நீர்தொறும் பரந்துளன்” என்பது முதலான பாசுரங்கள் காண்க.
எம்பெருமானுடைய வ்யாப்தி விஷயத்திலே சிலர் விப்ரதிபத்தி பண்ணிப்போருவர்கள்.
அணுவான பதார்த்தங்களிலே எம்பெருமானுக்கு உள்ளீடாக வ்யாப்தி ஸம்பவிக்க மாட்டாதென்றும்,
ஒரு பதார்த்தத்திலே அவனுக்குப் பரிபூரண வ்யாப்தியை அங்கிகரிக்குமளவில்
மற்றொரு பதார்த்தத்தில் வியாபிக்க ப்ரஸக்தியில்லாமையாலே பரிஸமாப்ய வ்யாப்தியை அங்கீகரிக்கலாகாதென்றும்
இங்ஙனே சில விப்ரதிபத்திகளைப் பண்ணாநிற்பர்கள்.
இவற்றுக்கெல்லாம் பரிஹாரமாக ப்ரஹ்ம வ்யாப்தி பரிக்ரியா என்கிற வடமொழி க்ரந்தம் இயற்றி யுள்ளோம்; அதிலே பரக்கக் கண்டு கொள்வது.
கூனல் சங்கத் தடக்கையவனை=முன்னிரண்டிகளிற் சொல்லியபடி எங்கும் வியாபித்து நிற்கிறவன்
அடியவர்களைக் காத்தற்பொருட்டு மநுயஸஜாதீயனாய் வந்து அவதரிக்கும்படி சொல்லுகிறது.
இங்குச் சங்கை சொன்னது சக்கரத்திற்கும் உபலக்ஷ்ணம்.
கண்ணனாய்த் திருவவதரிக்கும் போது திருவாழி திருச்சங்கோடே வந்து பிறந்தமை அறியத்தக்கது.
“ஜாதோஸி தேவதேவஸ! ஸஙகசக்ர கதாதர!* என்ற வஸூதேவர் வார்த்தையும் காண்க.
குடமாடியை யென்று குடக்கூத்தைச் சொன்னது கிருணாவதார சேதங்களுக்கெல்லாம் உபலக்ஷ்ணம்.
இங்ஙனே கிருணாவதாரத்தைத் தெரிவித்தது மற்றுமுள்ள விபவாவதாரங்களுக்கெல்லாம் உபலக்ஷ்ணம்.
வானக்கோனை=ஓர் ஊரளவன்றியிலே ஒரு நாட்டுக்காகக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறபடி.
பர வ்யூஹ விபவாந்தர்யாம் யர்ச்சவதாரமென்கிற ஐந்தனுள் மூன்று இப்பாட்டில் சொல்லப்பட்டன:
திருவாய்மொழி அர்ச்சாவதார வேதமாதலால் அர்ச்சாவதாரத்தை விசேஷித்து எடுக்க வேண்டா.
வியூஹத்தைப்பற்றிச் சொல்லவேண்டுவது அதிக மில்லையென்று திருவுள்ளம்.
“எம்பெருமான்றன்னைக் கவிசொல்லவல்ல என்னோ டொக்குமோ ஸர்வேச்வரனான எம்பெருமான் தானும்” என்பறு ஆறாயிரப்படியருளிச் செயல்.
——————
***- தாம் பாடுகிற கவிகளின் இனிமையைத் தாம் அநுஸந்தித்து, எம்பெருமானுக்கு நல்லராயிருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவற்றைக் கேட்டால் எங்ஙனே இனியராகிறாரோ வென்கிறார்.
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-
பதவுரை
உண்டும் |
– |
(ப்ரளயத்திலே) உண்டு வயிற்றிலே வைத்தும் |
உமிழ்ந்தும் |
– |
பிறகு வெளி நாடுகாண உமிழ்ந்தும் |
கடந்தும் |
– |
(மற்றொருகால்) அளந்து காற்கீழேயிட்டும் |
இடந்தும் |
– |
(அவாந்தர ப்ரளப்த்திலே வராஹ ரூபியாய்) இடந்தெடுத்தும் |
கிடந்தும்; |
– |
(ஸ்ரீராமாவதாரத்திலே) கடற்கரையிலே கிடந்தும் |
நின்றும் |
– |
இராவணவதத்தின் பிறகு தேவர்கட்குக் காட்சி கொடுத்துநின்றும் |
கொண்ட கோலத்தொடு |
– |
மீண்டுவந்து பட்டாபிஷேகம் பண்ணின கோலத்தொடே |
வீற்றிருந்தும் |
– |
எழுந்தருளியிருந்தும் |
மணம் கூடியும் |
– |
பதினோராயிரம் ஆண்டு பூமியை ரக்ஷிக்கையாலே பூமிப்பிராட்டி |
விரும்பியணைக்க அவளோடே ஸம்ச்லேஷித்தும் |
||
கண்ட ஆற்றால் |
– |
இப்படி ப்ரத்யக்ஷ்மாகக் கண்ட சேடிதங்களால் |
உலகு தனதே என |
– |
உலகம் தனக்கே பேஷம் என்று நாடாகச்சொல்லும்படி |
நின்றான் தன்னை |
– |
நின்ற ஸர்வேச்வரன் விஷயத்தில் |
வண் தமிழ் |
– |
அழகிய தமிழ்ப்பிரபந்தத்தை |
நூற்க |
– |
தொடுக்கைக்கு |
நோற்றேன் |
– |
புண்ணியம் பண்ணினேன்: (இத்திவ்யப்ரந்தமானது) |
அடியார்க்கு |
– |
எம்பெருமானடியார்கட்கு |
ளஇன்பம் மாரி |
– |
ஆனந்த மழைபொழியும் மேகமாயிரா நின்றது. |
எம்பெருமானுடைய சேடிதங்களடங்க என் சொல்லுக்குள்ளேயாம்படி கவிபாட வல்லேனாய் ப்ராப்த விஷயத்திலே
வாசிகமாக அடிமை செய்யப்பெற்றது மாத்திரமன்றிக்கே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆனந்தமளிக்கவல்லவனானே னென்கிறார்.
எம்பெருமானுடைய சேஷ்டிதங்கள் பலவற்றையும் முன்னடிகளில் கங்காப்ரவாஹம்போல் அருளிச்செய்கிறார்.
உண்டது பிரளயாபத்தில், உமிழ்ந்தது பிரளயம் நீங்கினவாறே:
கடந்தது வாமநரவதாரத்தில், இடந்தது வராஹவதாரத்தில், கிடந்தது கடற்கரையிலே:
ஸேதுபந்தனத்திற்கு முன்னே ஸமுத்ரராஜனைநோக்கி அஞ்ஜலி பண்ணிக்கிடந்தகிடை நின்றது-
ராவண ஸம்ஹாரம் ஆனபிறகு தேவர்களுக்குக் காட்சி கொடுத்து நின்றது.
கொண்டகோலத்தொடு வீற்றிருந்தது-ஜடா வல்கலதாரியாய்ப் பர்ணசாலைகளிலே இருந்த இருப்பாதல்:
மகுடாபிஷேகஞ் செய்துகொண்டு பதினோராயிரமாண்டு இருந்த இருப்பாதல்.
… (தச வர்ஷஸஹஸ் ராணி தச வர்ஷசதரநி ச, ராமோ ராஜ்யமுபாஸித்வா.) என்கிறபடியே பதினோராயிரமாண்டு பூமியை ரக்ஷிக்கையாலே பூமிக்கு அபிமாநிநியான பிராட்டி விரும்பியணைக்க அவளோடே ஸம்ச்லேஷித்தமை சொல்லுகிறது மணங்கூடியும் என்று.
கண்டவாற்றால் என்றது இப்படி ப்ரத்யக்ஷ்ஸித்தமான சேஷ்டித ப்ரகாரங்களாலே என்றபடி.
ஒருவன் ஒரு நிலத்தைத் திருத்துவது செடிகொடிகள் வைப்பது எருவிடுவதாய் நெடுங்காலம் க்ருஷிபண்ணக்கண்டால்
‘இந்த நிலம் இவனுடையது’ என்று அறியலாமன்றா;
அதுபோல, உண்கை உமிழ்கை முதலான பலபல சேஷ்டிதங்களினால் ‘உலகமெல்லாம் எம்பெருமானுடையது’ என்று
அறுதியிடக் குறையில்லையாயிற்று.
ஆக இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயமாகத் திருவாய்மொழி பாடுகைக்குப் பாக்கியம் பண்ணினேன்;
இத்திருவாய்மொழியானது தொண்டர்கட்கு ஆனந்தத்தைப் பொழியும் மேகமாகவுள்ளது என்கிறது ஈற்றடி.
ஆசார்யஹ்ருதயத்தில் “வீட்டின்ப வின்பப்பாக்களில் த்ரவ்யபா‘ர் நிரூபணஸமம் இன்பமாரியிலாராய்ச்சி” என்றவிடத்து
இன்பமாரி என்பதற்கு “திருவாய்மொழி முகத்தாலே ஆனந்தத்தை வர்ஷிக்கும் மேகமான ஆழ்வார்” என்று வியாக்கியானம் காண்கையாலே
இங்கு “அடியார்க்கு இன்பமாரியாகிய நான் வண்டமிழ் நூற்க நோற்றேன்” என்று உரைத்தலுமாம்.
—————-
***- இத்திருவாய்மொழி கற்பாருடைய தீ வினைகளையெல்லாம் பெரியபிராட்டியார் தீர்த்தருளக்கூடுமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.
மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே.–4-5-11-
பதவுரை
மாரி மாறாத |
– |
மழைதப்பாதபடியினாலே |
தண் |
– |
குளிர்ந்து |
அம் |
– |
அழகியதான |
வேங்கடம் மலை |
– |
திருவேங்கடம்மலையிலேயுள்ள |
அண்ணலை |
– |
ஸ்வாமி விஷயமாக |
வாரி மாறாத |
– |
ஜலஸம்ருத்தி குறையாத |
பை பூ பொழில் சூழ் |
– |
பரந்த பூஞ்சோலைகளாலே சூழப்பட்ட |
குருகூர் நகர் |
– |
திருநகரியில் (அவதரித்த) |
காரி மாறன் சடகோபன் |
– |
ஆழ்வார் |
சொல் |
– |
அருளிச்செய்த |
ஆயிரத்து |
– |
ஆயிரத்தில் |
இப்பத்தால் |
– |
இப்பத்துப் பாசுரங்களினால், |
வேரி மாறாத |
– |
பரிமளம் அறாத |
பூ மேல் இருப்பாள் |
– |
தாமரை மலரிலே நித்ய வாஸம் பண்ணுகிற பிராட்டி |
வினை தீர்க்கும் |
– |
எல்லாப் பாபங்களையும் போக்கியருள்பவன் |
மழை ஒருநாளும் மாறாதபடியாலே குளிர்ந்து அழகியதான திருவேங்கடமலையிலே,
தாழ்ந்தார்க்கு முகங்கொடுக்கைக்காக வந்து நிற்கிற சீலம்பொருந்திய எம்பெருமான் விஷயமாகப் பணித்ததாம் இப்பதிகம்;
ஒரு பாசுரத்திலும். திருவேங்கடமுடையானுடைய ப்ரஸ்தாவமே இல்லையாயிருக்க இங்ஙனே சொல்லுவானேன்? என்னில்;
தர்மியின் ஐக்கியத்தைக் காட்டினபடி.
திருவாய்மொழிக்கு அர்ச்சாவதாரத்திலேயே முழுநோக்கு என்று காட்டினபடியுமாம்.
இப்பதிகத்தில் “நமக்கும் பூவின்மிசை நங்கைக்கு மின்பனை” என்று பெரிய பிராட்டியார்க்கு முன்பே
நித்ய ஸம் ஸாரிகளுக்கு முகங்கொடுக்கும் சீலத்தைச் சொல்லிற்றாகையாலே
சீலத்துக்கு எல்லையான திருவேங்கடமுடையானைக் கவிபாடினபாயாயிற்றென்ப.
“வேரிமாறாதபூமேலிருப்பாள் வினைதீர்க்கும்” என்கையாலே
பிராட்டிக்கும் எம்பெருமானுக்குப் போலவே பலனளிக்குந்திறன் உண்டென்று சிலர்சொல்லுவார்கள்.
நம்மை எம்பெருமான் அங்கீகரிப்பதற்கு இடையூறாக இருக்கும் தீவினைகளைப் புருஷகாரக்ருத்யத்தாலே
பிராட்டி போக்குவாள் என்றதித்தனை. சதுச் ச்லோகீ பாஷ்யத்திலே ஸ்ரீமந்நிக மாந்ததேசிகன் “…
ஹெ-அஸ்தி கர்மார்ஹபலதே பத்யௌ க்ருத்யத்வயம் ச்ரிய:இ நிக்ரஹாத் வாரணம் காலே ஸந்துக்ஷ்ணமநுக்ரஹே.” என்று ஒரு காரிகை அருளிச் செய்துள்ளார்.
இஃதொன்று போதும் அவ்வாசிரியருடைய ஸித்தாந்தத்தை நன்கு தெளிய.
இக்காரிகையின் பொருளில் யாரும் விவாதப்பட இடமில்லை.
இதிற் சொல்லுவதாவது-கர்மாநுகுணமாய்ப் பலன் கொடுப்பதில் எம்பெருமானுக்கே அதிகாரமுள்ளது.
அவன் ஹிதைஷியான பிதாவாகையாலே சில ஸமயங்களில் நிக்ரஹிப்பது முண்டு; சில ஸமயங்களில் அநுக்ரஹிப்பதுமுண்டு;
அப்படிப்பட்ட ஸமயங்களில் பிராட்டி என்ன செய்கிறாளென்னில்,
அவன் அநுக்ரஹத்தில் அபிமுகனாயிருக்கும்போது இவள் அதை மேன்மேலும் வளரச் செய்வதில் ஊக்கங்கொள்ளுகிறாள்.
நிக்ரஹத்தில் அபிமுகனாயிருக்கும்போது அதை தணிப்பதிலே ஊக்கங்கொள்ளுகிறாள்.
இவ் விரண்டு செயல்களே பிராட்டியினுடையவை-என்பதே மேற்குறித்த காரிகையின் பொருள்.
‘இதுவன்று பொருள்’ என்று யாரும் இயம்ப இயலாது. இது தான் தேசிகஸித்தாந்தம் இதுவே தான் லோகதேசிக ஸித்தாந்தமும்.
————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-