ஸ்ரீ திருவாய் மொழி -5-3–மாசறு சோதி–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

***-பராங்குச நாயகி மடலூர்வதாக எண்ணினபடியை அறிந்ததோழி அதனை விலக்கப்புகுந்து

‘ஊரார் பழிசொல்வர்காண்’ என்ன; அவனுடைய அழகு முதலியவற்றிலே அகப்பட்டுக் கலங்கின

நான் ஊரார் பழியை லக்ஷியம் பண்ணும் நிலைமையிலே இலேன் என்கிறாள் தலைவி.

மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1-

 

பதவுரை

மாறு அறுசோதி

அழுக்கற்ற தேஜஸ்ஸையுடைய
செய்ய வாய்

சிவந்த திருப்பவளத்தையுடைய
என் மணி குன்றத்தை

மாணிக்கமலைபோல் எனக்கு யோக்யனானவனும்,
ஆக அது சீலனை

குற்றமற்ற சீலகுணத்தையுடையவனும்
ஆதி மூர்த்தியை

முழுமுதற் கடவுளுமான எம்பெருமானை
நாடி

தேடி
பாக அறவு எய்தி

உடம்பில் பசுமை நிறம் அழிவடைந்து
அறிவு இழந்து

அறிவும் இழக்கப்பெற்று
ஏனை நானையம்

எத்தனை காலமிருப்போம்?
தோழி

தோழியே!
ஏசு அறும்

ஏசுவதற்கென்றே அற்றுத்தீர்ந்த
ஊரவர்

ஊராருடைய
கவ்வை

பழிமொழி
என் செய்யும்

யாது செய்யும்?

முதலடியினால் எம்பெருமானுடைய ஒப்புயர்வற்ற வடிவழகு பேசப்படுகிறது.

“மடலெடுக்கை மாசு என்றிருக்கிறாள் தோழி; மடலெடாதொழிகை மாசு என்றிருக்கிறாளிவள்.

வ்யதிரேகத்தில் இப்படி. ஆற்றாமை விளையாததாகில் நாம் காண்கிற விஷயங்களேபாதியாமே- வடிவிலே யணைந்த வளாகையாலே முற்பட வடிவிலே மண்டுகிறாள்” என்கிற ஈட்டு ஸ்ரீஸூக்திகள் காண்க.

வெறும் வடிவழகு மாத்திரத்தைக்கண்டு துடிக்கிறேனல்லேன்; அகவாயில் சில குணங்களையுங் கண்டு துடிக்கிறேன் காண் என்கிறாள்-

ஆசறு சீலணை என்பதனால், ஆசு என்றாலும் மாசு என்றாலும் குற்றம் என்பதே பொருள்; குற்றமற்ற சீலமானவது, கலக்கும்போது தன்பேறாகவே கலந்தபடி.

பாசறவெய்தி = இதற்குப் பலவகையாகப் பொருள் கூறுவர்.

(1) பாசறவு என்று துக்கத்திற்குப் பெயர்; அதை எய்தி.

(2) பாச அறவு – என்று பிரித்து, பாசு – பசுமைநிறமானது, அறவு- அழிந்துபோவது; ஸவவர்ணியமடைந்து என்றபடி.

(3) பாசு என்று பாசமாய். (அதாவது பற்று) பந்துக்கள் பக்கல் பாசம் நீங்கி.

(4) அற என்பதற்கு ‘முழுவதும்’ என்றும் ‘மிகவும்’ என்றும் பொருளுண்டாகையாலே ஸ்நேஹம் முழுவதையும் அவன் பக்கலிலேயடைந்து என்னவுமாம்.

எம்பெருமான் நம்மை நாடிக்கொண்டு வரவேணுமேயன்றி நாமாக அவளை நாடுவது ஸ்வரூப ஜ்ஞானத்திற்குப் போராதேயென்று சிலர் சொல்ல, அறிவிழந்து எத்தனையோ நாளையும் என்கிறான். அறிவு (ஸ்வரூப ஜ்ஞானம்) அடியோடே தொலைந்து எத்தனையோ நாள் ஆயிற்றே என்றபடி.

இங்கே நம்பிள்ளை யீடு:-மயர்வற மதிநலமருளப் பெற்றவன்றே போயிற்றில்லையோ நம்முடைய அறிவு; திர்யக்கின் காலிலே விழுந்து தூதுவிட்டவன்று அது ஞாநகார்யம் என்றிருந்தாயோ இன்றிருந்து கற்பிக்கைக்கு, அன்றே *மதியெல்லாமுள் கலங்கிற்றில்லையோ? தன் பக்கலிலே கை வைத்தால் மற்றென்றறியாதபடி பண்ணும் விஷயமிறே. ‘பேரின்பமெல்லாம் துறந்தார் தொழுதாரத் தோள்’ என்னக்கடவதிறே. *** என்று ப்ராப்தி ஸமயத்தில் இவ்வருகுள்ளவற்றை நினையாதபடி பண்ணுகையே யன்றிக்கே ஜ்ஞானம் பிறந்த சமயமே பிடித்தும் இவ்வருகுள்ளவற்றை நினையாமே பண்ணவல்ல விஷயமன்றோ. தன்னையுமநுஸந்தித்து லோகயாத்ரையையு மநுஸந்திக்கும்படியோ அவன்படி.” என்பதாம்.

ஆனாலும்  ஊரார் சொல்லும்படிக்கு அஞ்சவேண்டாவோ வென்ன, ஏசறு முரவர்கவ்வை தோழியென் செய்யுமே என்கிறான்.

ஏசு அறும் ஊரவர் = ஏசுகையிலே அற்றுத் தீர்ந்திருக்கிற ஊரார் என்றபடி.

ஏசுவதற்கென்றே பிறந்திருக்கிற ஊராருடைய பழிமொழிகள் நமக்கு அவத்யமோ? அதுவே நமக்குத் தாரகமன்றோ வென்கை.

மடலெடுக்கிற ப்ரஸ்தாவம் இங்கு இல்லாமற் போனாலும் மேலே “மடலூர்துமோ” என்றும் “யாமடலூர்ந்தும்” என்றும் ஸ்பஷ்டமாகச் சொல்லுகையாலே மடலூரும் நோக்கத்தை யுட் கொண்டே இவை யருளிச் செய்வதாகக் கொள்கை.

—————–

***கீழ்ப்பாட்டில், ஊரார் சொல்லுபழி நமக்கென்ன செய்யப் போகிறதென்றால்;

‘இப்படியும் ஒரு வார்த்தையுண்டோ? பழிக்கு அஞ்சாதே யிருக்கவொண்ணுமோ? பழி பரிஹரிக்கவேண்டியது அவசியமாயிற்றே’ என்ன,

நான் பழி பரிஹரிக்க வேண்டாவென்று சொல்லுகின்றேனல்லேன்; பழி பரிஹரிக்கும்படியான நிலைமையில் இல்லையே! என்கிறாளிப்பாட்டில்.

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப் பூர்ந்தவே.–5-3-2-

 

பதவுரை

என் செய்ய தாமரை கண்ணன்

சிவந்ததாமரை போன்ற திருக்கண்களையுடையனான என்னாதன்
என்னை

என்னுடைய
நிறை

அடக்கத்தை
கொண்டான்

கொள்ளை கொண்டான்; (அதனாலே)
முன்

முதன் முதலாக
செய்ய மாமை இழந்து

விலக்ஷணமான மேனி நிறம் அழியப்பெற்று
மேனி மெலிவு எய்தி

சரீரமும் மெலிந்து
என் செய்ய வாயும்

எனது சிவந்தவாயும்
கரு கண்ணும்

கறுத்தகண்ணும்
பயப்பு ஊர்ந்து

பாலை நிறம் படரப் பெற்றன.
தோழீ

தோழியே!
இனி

இந்நிலைமையானபின்பு
நம்மை

நம் விஷயத்திலே
ஊரவர் கவ்வை

ஊராருடைய பழிமொழி
என் செய்யும்

என்ன பண்ணும்?

என்செய்யுமூரவர்கவ்வை தோழி! இனி நம்மை என்று தன் வடிவைக் காட்டுகிறாள் போலும்.

இனி என்கிறாயே, இதற்கு என்ன அர்த்தம்? என்ற கேட்க, மேல் மூன்றடிகளும் அவ்வர்த்தம் கூறுவன.

தோழீ! நான் இப்படி அவகாஹிப்பதற்கு முன்னே என்னை நீ இதில் நின்றும் மீட்டிருக்கலாமாயிற்று; எல்லை நடந்து விட்டதே யென்கிறாள்.

“இனி என்னை” என்னாதே “இனி நம்மை” என்கிறது தோழியையும் தன்னோடு கூட்டிக்கொண்டு.

நிறவேறுபாடு தனக்குப்போலவே அவளுக்குமுள்ளதென்று இத்தால் கட்டப்பட்டதாகும்.

“யாமுடைந்துணையென்னுந் தோழிமாரும் எம்மில்முன் அவனுக்கு மாய்வராலோ” என்றது இங்கே அநுஸந்தேயம்.

தோழியானவள் ‘மடலெடுக்க வேண்டா’ என்று வாயாலே நிஷேதிக்கிறாளே யல்லது

மடலெடுக்க வேண்டும்படியான நிலமை அவளுக்கும் உள்ளதேயென்று காட்டுதற்கே நம்மை’ என்றது.

என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான் = எம்பெருமான் தனது திருக்கண்ணாலே குளிரநோக்கி என்னை ஸ்வஸ்வாபஹாரம் பண்ணினானென்கிறாள்.

அவனது திருக்கண்ணழகிலே தோற்று நிறையிழந்த நான். ஊரவர் சொல்லும் பூமியைப் பரிஹரிக்கு மெல்லையிலே நிற்கிறேனோ?

நிறைகொள்ளுகையாவது- நாண் மடம் அச்சம் முதலிய ஸ்த்ரீத்வ குணங்களை இழக்கச் செய்கை.

‘நூறாயிரம் புருஷோத்தமர்கள் கூடினாலும் தோற்றுப்போக வேண்டியது தவிரவேறில்லை’ என்றிருந்த என்னுடைய

ஸ்த்ரீத்வத்தை  ஒரு புருஷோத்தமன் புண்டரீகாயனத்தைக் காட்டிக் கொள்ளை கொண்டுபோய் விட்டனென்கிறாள்.

நிறைகொண்டான் என்று ஸமுதாயமாகச் சொன்னதை மற்றையிரண்டிகளால் விவரிக்கின்றாள்.

* முந்நுறமுள்ளம் மாமை யிழந்தேன். (மாமை – மேனிநிறம்.)

இழந்த நிறம் திரும்பி வந்தாலும் தங்குகைக்கு ஆச்ரயமில்லாதபடி மேனி சருகாகப்பெற்றேன்;

கலக்கிறபோது ‘இதொரு செய்யவாய் இருந்தபடி என்!’ இது ஒரு கருங்கண் இருந்தபடி என்! என்று

அவன் வாய்வெருவும்படியிருந்த வாயும் கண்ணும் விவர்ணமாகப் பெற்றேன்!

இத்தகைய நிலைமையான பின்பு ஊரார் பழி பரிஹரிக்கை யென்றோர் பொருளுண்டோ?

——————

***எம்பெருமானுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களிலே நெஞ்சைப் பறி கொடுத்த என்னை ஊராருடைய பழிமொழி என்ன செய்யுமென்கிறாள்.

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை
சார்ந்து சுவைத்த செவ் வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்
தீர்ந்த  என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–5-3-3-

பதவுரை

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன்

(நலிவதற்காக) ஊர்ந்து வந்த சகடத்தைப் பொடிபடுத்தின திருவடிகளையுடையவனும்
பேய்முலை

பூதனையின் முலையை
சார்ந்து

மனம் பொருந்தி
சுவைத்த

பசையறவுண்ட
செம் வாயன்

செவ்விய வாயையுடையவனுமான எம்பிரான் (அந்தச் செயல்களாலே)
என்னை நிறைகொண்டான்

என்னுடைய ஸ்த்ரீத்வ பூர்த்தியை அபஹரித்தான்;
தீர்ந்த என் தோழீ

எனக்கு நன்மை தேடுகையிலே) அற்றுத் தீர்ந்திருக்கின்ற என் தோழியே!
போர்ந்தும பெயர்ந்தும்

எந்தவிதத்திலும்
அவனோடு அன்றி ஓர் சொல் இலேன்

அவ்வெம் பெருமான் விஷயமான பேச்சன்றி வேறொரு பேச்சு உடையேனல்லேன்;
ஊரவர் கவ்வை என்செய்யும்

ஊரார் அலர் தூற்றுதல் என்னை என்ன பண்ணும்?

கண்ணபிரான் சகடாஸுரநிரஸனம் பண்ணினதும் பூதநா ஸ்தந்ய பானம் பண்ணி அவளை மாய்த்ததும்

கம்ஸன் வரவிட்ட விரோதி வர்க்கங்களை மாய்த்தபடி என்று தோழி நினைத்திருந்தாள்.

இப்போது பராங்குசநாயகி சொல்லுகிறாள்- சகடாஸுரபஞ்ஜநாதிகள் என்னைத் தன் பக்கலிலே

ஈடுபடுத்திக் கொள்ளுகைக்காகச் செய்தனவேயன்றி வேறில்லையென்கிறாள்.

பருவம் நிரம்பிய பின்பு செய்திருந்தானாகில் இங்ஙனே சொன்னாலும் சொல்லலாம்;

மிக்க இளம்பிராயத்திலே செய்த இவை இவளை யீடுபடுத்துகைக்கு உடலாவது எங்ஙனேயென்று

நம்பிள்ளை சங்கித்துக்கொண்டு ஸமாதானமருளிச் செய்யுமழகு பாரீர் –

“இவளுக்குத் தன் பக்கல் ப்ராவண்யத்தை விளைக்கை அவனுக்கு ஸத்தா ப்ரயுக்தமென்கை ” என்று

நந்தகோப கிருஹகத்தில் ஒரு வண்டியின் கீழ்ப்புறத்திலே கண்ணனைத் தொட்டிலிலிட்டுக் கண் வளர்த்தி யசோதை யமுனை நீராடப்போனான்;

கம்ஸனால் ஏவப்பட்ட அசுரனொருவன் அச்சகடத்தில் வந்து ஆவேசித்து ஸ்ரீகிருஷ்ண சிசுவின் மேலே விழுந்து

கொல்ல முயன்றதை அறிந்த அப்பகவான், பாலுக்கு அழுகிறபாவனையிலே தன் சிறிய திருவடிகளை மேலே தூக்கி யுதைத்தருள,

அவ்வுதை பட்ட மாத்திரத்தில் அச்சகடு திருப்பப்பட்டுக் கீழே விழுந்து அசுரனுட்பட அழிந்தது என்பது ஊர்ந்த சகடமுதைத்த வரலாறு.

க்ருஷ்ண சிசுவை நாடி யுணர்ந்துகொல்லும்பொருட்டுக் கஞ்சன் ஏவின அசுரர்களின் ஒருத்தியான பூதனையென்னும் ராக்ஷஸி நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து, அங்குத் தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ண சிசுவையெடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையைக்கொடுத்துக் கொல்ல முயல, பகவானாகிய குழந்தை அவ்வரக்கியின் ஸ்தனங்களைக் கைகளால் இறுகப் பிடித்துப் பாலூண்கிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவள் இறக்கும்படி செய்தருளினனென்பது பேய்முலை சுவைத்தவராõறு.

“பேய்முலை சார்ந்து சுவைத்த செவ்வாயன்” என்றவிடத்து செவ்வாயன் என்ற பதஸ்வாரஸ்பத்தை நோக்கி நம்பிள்ளை யருளிச் செய்கிறார்- “பிள்ளை நன் முலையுண்ணப்புக்கால்- தாய்மார் முலைக்கீழே முழுகினவாறே பால் சுரக்கும்; பிள்ளைப் பாலையுண்டு உபகார ஸ்ம்ருதியாலே முகத்தைப் பார்த்து ஸ்மிதம் பண்ணுமாயிற்று. அப்படியே அவளும் (பூதனையும்) தாயாய் வந்து முலை கொடுக்கையாலே இவனும் பிள்ளையாயே முலைக் கீழே முழுசி முலை யுண்டு உபகார ஸ்மிகுதியாலே முகத்தைப் பார்த்து அதரத்தில் பழுப்புத் தோற்ற ஸ்மிதம் பண்ணியாயிற்று முலையுண்டது.”

என்னை நிறை கொண்டான் = “ஒரு வ்யாபாரத்தாலே இரண்டு ஸ்த்ரீவதம் பண்ணினான். தன்னை யாசைப் பட்டாரில் உகவாதார்க்கே நன்றாயிற்று. அவளை  நற்கொலையாகக் கொன்றான்; என்னை உயிர்க் கொலையாகக் கொல்லா நின்றான்.” என்பது மிக ஆச்சரியமான நம்பிள்ளையீடு.

இப்படி உயிர்க்கொலையாகக் கொல்லும் விஷயத்திலே மேன்மேலும் வாஸநை பண்ணிப்போருவானேன்?

அவ்விஷயத்தைவிட்டு வேறு விஷயங்களிலே  போது நோக்கிக் களிக்கலாகாதோ வென்ன,

போந்தும் பெயர்த்தும் அவனோடன்றி ஓர் சொல்லிலேன் என்கிறாள்.

போயும் வந்தும் அவன் திறமான சொற்களால்லது போது போக்குகைக்கு வேறு சொல்லுடையேனல்லேன்.

இவள் இப்படிச் சொன்னவாறே நிஷேதிக்கிற தோழி தானும் மிக உகந்தாள் .

‘நாம் இவளை அவனோடே சேர்ப்பதற்குப் பட்டபாடுஸாமான்யமன்றோ;

அப்படிச் சேர்ப்பித்த நாமே இவளை மறப்பிக்க முயன்றாலும் மறவாதபடி இவள் ஆழ அவகாஹிப்பதே!” என்று உகந்தாள்.

அவ்வுகப்பைக் கண்ட பராங்குச நாயகி தீர்ந்த என் தோழி! என்று கொண்டாடி அணைக்கிறாள்.

தாய்மார் சொல்லும் ஹித வசனத்தையே நீயும் சொல்லுகையாலே நீயும் அவர்களைப் போலே நிஷேதிப்பவள் என்று வெறுத்திருந்தேன்;

உன் நினைவு இதுவாயிருந்ததே! இப்படி வா- என்று உகந்து கூறுகின்றாள் போலும்.

பிராட்டி, திருவடியை இராவணன் வரவிட்ட ஆள் என்று சங்கித்திருந்தது தவிர்ந்து

‘பெருமாள் பக்கலில் நின்றம் வந்தவள்’ என்றறிந்த பின்பு அவனைக் கொண்டாடினாப்போல இவளும் கொண்டாடுகிறபடி.

———————

ஊரவர் கவ்வை எரு விட்டு அன்னை சொல் நீர் படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4-

 

பதவுரை

தோழீ

தோழியே!
ஊரவர்

ஊராருடைய
கவ்வை

பழமொழிகளை
எரு இட்டு

எரவாக இட்டு
அன்னை சொல் நீர் படுத்து

தாயின் ஹிதசைனமாகிற நீரைப்பாய்ச்சி
ஈரம் நெல் வித்தி

ஆசையாகிற நெல்லை விதைத்து
முளைத்த

முளைப்பித்த
நெஞ்சம் பெரு செயுள்

நெஞ்சாகிற பெரிய வயலிலே
பேர் அமர் காதல்

பெரிய ஊர்ப்பூசலை விளைவிப்பதான காதலாகிற பயிரை
கடல் புரைய

கடல்போலே அபரிச்சிந்நமாக
விளைவித்த

பலிக்கும்படிபண்ணின
கார் அமர் மேனி

கார்கால மேகத்தின் நிறம் பொருந்திய திரு மேனியையுடைய
அடியனே

கடியனோ? (கடியனல்லன்)

***தோழியானவள் தலைவியை நோக்கி, ‘அம்மா! ஊரவர் சொல்லும் பழிமொழிகளை நாம் பொருள் படுத்தமாலிருப்பதும் நன்றுதான்;

ஆனால் எம்பெருமானால் உனக்கு ஏதேனும் லாபமுண்டாயிருந்தால் ‘ஊரவர் கவ்வை கிடக்கட்டும்’ என்றிருக்கலாம்:

எம்பெருமானோ உன்னை ஒரு சரக்காகவும் மதிக்கவில்லை; ஊரார் பழி சொல்வதொன்றுதானே மிகுகிறது;

ஈரநெஞ்சு இளநெஞ்சு இல்லாதவனான அவனை விட்டிடதலே நலம்’ என்று சொன்னாள்.

அது கேட்டதலைவி, “தோழீ நீ சொல்லும் வார்த்தையா இது? நன்று சொன்னாய்; எம்பெருமான் எனக்கு என்ன குறை செய்தான், சொல்லிக்காண்” என்றாள்.

அதற்குத் தோழியானவள் “அம்மா! ஊரவர் எவ்வளவு பழமொழிகள் சொல்லிலும் அவற்றை லக்ஷியம் பண்ணாதபடியான ப்ராவண்யம் உனக்கு இருக்கச் செய்தேயும் இந்நிலையிலும் அவள் வந்து உனக்கு முகங்காட்டவில்லையே! இதைவிட வேறு என்ன குறைவேணும்” என்றாள்.

அதற்குத் தலைவி ‘அவன் இப்போது வந்து முகங்காட்டாவிட்டாலும்,  தன்னையொழிய நமக்கு மற்றொன்றால் பொருந்தாதபடி பண்ணினானே! அவனையா பொல்லாதவனென்று சொல்லுகிறது? என்கிறாள்.

எம்பெருமான் இப்பராங்குச நாயகிக்கு ப்ரேமத்தை விளைவித்தவாறு இப்பாட்டில் விசதமாகச் சொல்லப்படுகிறது.

(ஊரவர் கவ்வை எருவிட்டு) ஒரு வயலிலே பயிர் செழிபுற்றோங்கி விளங்கவேணுமானால் முன்னம் நல்ல எருவிடவேணும்; தண்ணீர் பாய்ச்சவேணும்; நெல் விதைக்கவேணும்; இத்தனை செய்தால் அது முளைத்துச் செழிப்பான பயிராய் வளர்ந்து விளங்கும்.

அதுபோல இங்கு ஆழ்வாருடைய நெஞ்சாகிற பெரிய வயலுள் காதலாகிய பயிர் நன்கு வளர்வதற்கு *பத்தியுழவனென்று ப்ரஸித்தனான எம்பெருமான் செய்த காரியங்கள் இதில் ரூபக மரியாதையிலே கூறப்படுகின்றன.

பகவத் விஷயத்தில் அத்வேஷமுண்டான காலமே தொடங்கி ஊரார் பழிசொல்லத் தொடங்கினார்கள்.

அந்தப் பழியையே ப்ரேமத்திற்கு எருவாக இட்டான் எம்பெருமான். ஊரார் பழிக்கப் பழிக்க, அதுவே காரணமாக ப்ரேமம் வளரத் தொடங்கிற்றென்படி.

ஊரார் பழிசொல்லா திருந்தார்களாகில் இத் தலைவி பகவத் விஷயத்தை உபேக்ஷித்திருப்பன போலும்.

“எனக் குற்றசெல்வ மிராமானுசனென்றிசையகில்லா மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ்” என்ற இராமாநுச நூற்றந்தாதிப் பாசுரம் இங்கு நினைக்கத்தக்கது.

அன்னை சொல் நீர்படுத்து = ஊரவர் பழிச் சொல்வதுகொண்டே  இவ்வளுடைய பகவத் விஷய ப்ராவண்யத்தைத் தாயாரும் அறிந்து ஹித வசனங்கள் சொல்ல ஆரம்பித்தால்; அந்த ஹிதவசனமே தண்ணீர் பாய்ச்சினபடியாயிற்று.

எருவாவது அடியிலே ஒருகாலே யிட்டுவிடுவது; நீர் மாறாமல் பாய்ச்சப்படுவது;

இத்தால், ஊரார் ஒருகால் பழிசொல்லி விடுமித்தனை; தாயார் உடனிருந்து எப்போதும் பொடிந்துகொண்டே யிருப்பவள் என்பது பெறப்படும்.

ஈரநெல் வித்தி = ஈரமென்று அன்புக்குப் பெயர்; அன்பாகிற நெல்லை விதைத்து என்றபடி. விதைத்தவன் எம்பெருமானென்க.

முளைந்த நெஞ்சப் பெருஞ் செயுள் = இங்கு ‘முளைத்த’ என்றதை ‘முளைப்பித்த’ என்றதாகக் கொள்ளவேணுமென்று நம்பிள்ளை திருவுள்ளம்.

எருவும் இட்டு நீரும் பாய்ச்சினாலும் முளைக்குமிடத்தும் அவனருள் இன்றியமையாததாகையாலே இங்ஙனே கொள்ளத் தகுதியுண்டு.

(நெஞ்சப் பெருஞ்செயுள்) செய் என்று பயிர் விளையும் நிலத்திற்குப் பெயர்; ‘பெருஞ்செயுள்’ என்று பெருமையை யிட்டு விசேஷித்ததற்கு நம்பிள்ளை யருளிச் செய்தது காணீர்- “ஸம்ச்லே விச்லேஷங்களாலே புடை படுத்தி நித்ய விபூதியோபாதி பரப்புடைத்தாம்படி பெருக்கினானாயிற்று” என்று.

ஆக, ஊரவர் கவ்வை யாகிற எருவையிட்டு, தாயாருடைய நிரந்தர ஹித வசனமாகிற நீரை நிறுத்தி

ஆசையாகிற நெல்லை வித்தி முளைப்பித்த நெஞ்சமாகிற பெரிய விளை நிலத்துக்குள்ளே,

பேரமர் காதலை கடல்போல் விளைவித்தானாயிற்று.

பேர்- பெரியதாய், அமர்- அர்ந்ததான, காதல் என்று பொருள். அமர் என்று பூசலுக்குப் பெயராகக் கொண்டால் பெரிதான பூசலை விளைத்த காதல் என்று கொள்ளலாம்.

இப்பொருளில் “பேரமர்க்காதல்” என்று ககரவொற்று மிக்குப் பாடமிருக்கவேணும்.

அமர்ந்த காதல் என்னும் பொருளிற் வினைத்தொகையாலே இயல்பாம்.

விளைவித்த காரமர்மேனி = அடியிலே எருவுமிட்டு நீரும் பாய்ச்சினாலும் மேலே மழை பெய்தல் இல்லையாகில் அப்பயிர் தலை குளிர்ந்திராதே;

காளமேகத் திருவுருவைக் காட்டிக்காட்டி இக்காதலை வளர்த்திக்கொண்டு போனானென்பது தோன்ற “விளைவித்த காரமர்மேனி” என்றது.

தோழீ! நம் கண்ணன் கடியனே? = இவ்வளவு மஹோபகாரம் செய்தருளினவனையே கடியனென்பது.

நீதான் தோழியாயிருந்து வைத்து இங்ஙனே சொல்லத்தருகுமோ?

நீர்மையையுடையவன் என்று சொல்லி முதலிலே பொருந்தவிட்ட நீயே இப்போது நிர்த்தயன் என்னத் தகுமோ? என்கிறாள்.

திருவள்ளுவர் குறளில் “ஊரவர் கவ்வை யெருவாக அன்னை சொல் நீராக நீளுயிந்தோய்” என்றொரு குறள் உள்ளது காண்க. கௌவை எனினும் கவ்வை எனினும் ஒக்கும்.

ஆசார்ய ஹ்ருதயத்தில் “பெரும்பாழில் க்ஷேத்ரஜ்ஞன் பெருஞ்செய்” என்கிற ஆச்சரியமான சூர்ணிகை இப் பாசுரத்தையே முக்கிய லஷ்யமாகக் கொண்டு அவதரித்தமையுணர்க.

———————

***தோழி! நான் சொல்லுகிறபடியே எம்பெருமான் குணசாலியாகவன்றிக்கே நீ சொல்லுகிறபடியே குணஹீநனானாலும்

என்னெஞ்சம் அவனையல்லது அறியாது; இவ்விஷயத்தில் நின்றும் என்னை மீட்கைக்காகவன்றோ நீ அவனை குண ஹீந னென்பது; குணஹாநியையிட்டே நான் அவனை விரும்பி மேல்விழுகிறேனாகக் கொள்ளாய்;

ஆகவே உன்னுடைய சொல்லுக்கு ஒரு ப்ரயோஜனமில்லைகாண் என்கிறாள்.

கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடி கொள் இடை மடத் தோழி! அன்னை என் செய்யுமே!–5-4-5-

பதவுரை

கடியன்

தன் காரியத்தில் விரைகின்ற கடுமையையுடையவன்
நெடியமால்

போகத் தொடங்கினால் விலக்க அரிதாம்படி பெரிய மேன்மையையுடையவன்;
உலகம் கொண்ட அடியன்

உலகம் முழுவதையும் தன்னதேயாம்படியளந்து கொண்ட திருவடியை யுடையவன்;
அறிவு அருமேனி மாயத்தான்

நல்லவனோ தீயவனோ என்று விவேகிக்க அரிதாம்படி அழகாலே மயக்கும் மாயத்தையுடையவன்;
கொடியன்

அக்காரியம் தலைக்கட்டினால் திரும்பிப் பாராமல்போகிற கொடியவன்;
ஆகிலும்

இங்ஙனே யானாலும்
கொடிய என் நெஞ்சம்

கொடிதான என்னுடைய மனமானது
அவனே என்று கிடக்கும்

அப்பெருமானே தஞ்சமென்று கிடக்கின்றது;
எல்லே

என்னே!
துடிகொள் இடை

உடுக்கை போன்ற இடையையும்
மடம்

மடப்பத்தையுமுடைய
தோழீ

தோழியே!
அன்னை

என் தாய்
என் செய்யும்

என்ன செய்யக்கூடும்?

கடியன் = ஸ்வகார்யத்திலே எனவேக முடையவன் என்கை. தனக்கொரு காரியமுண்டானால் தானே வந்து மேல்விழுந்து சடக்கெனக் கலக்குமவன் என்றபடி. கொடியன் = இத்தலையில் நோபுபாராதே பிரியுமவன் என்கை.

நெடியமால்- மிகவும் பெரியவன்; அதாவது- கைபுகுந்திருக்கச் செய்தேயும் அளவிட வொண்ணாதபடி யிருக்குமவன் என்கை.

இதனுடைய கருத்தாவது- மேல்விழுந்து கலவா நிற்கச் செய்தே பிரியவேணுமென்று நினைப்பன்;

அப்படி அவன் நினைத்ததையறிந்து, பிரியலாகாதென்று மடிபிடித்துக் கால்கட்டி விலக்கப்பார்க்கலாமே;

அப்படி விலக்குவதற்குக் கூசிநடுங்கி அஞ்சியிருக்கவேண்டும்படி திடீரென்று பரத்வம் பாராட்டியிருப்பவனென்றவாறு.

உலகங் கொண்டவடிவன் = பிறருடைமையைத் தனக்காக்க நினைத்தால் பின்னையும் அவர்களுக்கு ஓர் அடியும் சேஷியாதபடிபண்ணி அவர்களைப் பாதாளத்தில் தள்ளுமவன்.

அறிவருமேனி மாயத்தன் = வடிவைக்கண்டால் ‘ஸர்வஸ்வதானம் பண்ணவிருக்கிறானோ? ஸர்வஸ்வாபஹாரம் பண்ணவிருக்கிறானோ? என்று தெரியாதபடி ஆச்சரியமான தன்மையையுடையவள்.

மாயத்தன் என்பதற்கு நம்பிள்ளையீடு;- “நானும் என்னுடைய நீ யீட்டவழக்கு என்ற இவ்வுக்தியை அநுஸந்தித்து அதிலே நெஞ்சு அபஹ்ருதமாயிருக்க, அவ்வளவிலே கண்ணிலே மணலைத்தூவி அகலவல்லவன்” என்பதாம்.

இப்படிப்பட்ட குணஹாநிகளைக் கோடிக்கணக்காகச் சொல்லவேணுமானாலும் நானன்றோ சொல்லவல்லேன்;

தோழீ! இவை உன்னாலும் சொல்லப்போகாது; இதற்கென்றே இட்டுப்பிறந்த சிசுபாலாதிகளாலும் சொல்லப்போதாது;

இவ்வளவு குணஹாநிகளையும் நான் அறிந்துவைத்தேயன்றோ இவ்விஷயத்தில் ஈடுபட்டுக் கிடக்கிறது. ஆகிலும் என்றதனால் ஏற்படுகிற கருத்து இது.

கொடிய என்னெஞ்சம் = லோகவிலக்ஷணமாயன்றோ என்னுடைய நெஞ்சு இருப்பது, குணம்கண்டு பற்றுவதும்,

குணஹாநிகண்டு கைவிடுவதும் நாட்டார் படியாயிருக்க, குணஹாநிதானே பற்றுகைக்கு உடலாயன்றோ எனக்கிருக்கிறது என்கிறாள்.

அவனென்றே கிடக்கும் என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் நிர்வஹிப்பர்கள். இவை தோஷங்களே யானாலும் அவனுடைய தோஷங்களாகையாலே தத்ஸம்பந்தத்தையிட்டு இவை நமக்கு உபாதேயங்களே யென்று நெஞ்சு கொள்ளுவதாக ஒரு நிர்வாஹம்,

கீழ்ச்சொன்ன குணஹாரிகளில் நோக்கு இன்றிக்கு தர்மியான எம்பெருமானை மாத்திரமே என்னெஞ்சு பற்றியிருக்கின்றது- என்பதாக மற்றொரு நிர்வாகம்.

“நிர்விசேஷ சிங்மாத்ரம் ப்ரஹ்ம” என்று மாயாவாதிகள் விசேஷணமற்ற விசேஷ்யம்ஸத்தை மாத்திரமே அங்கீகரிக்கிறாப்போலே, குணமோ குணஹாநியோ அந்த விசேஷணாம்ஸத்தில் தாத்பர்ய மின்றிக்கே விசேஷ்ய பூசனான எம்பெருமானளவிலே ஊன்றியிருக்கின்றதாகச் சொன்னபடி.

ஸ்ரீவசநபூஷணத்தில்- “பகவத் விஷயத்தில் இழிகிறதும் குணங்கண்டன்று; ஸ்வரூபப்ராப்தமென்று. இப்படி கொள்ளாதபோது குணஹீநமென்று நினைத்த தசையில் பகவத் விஷயப்ரவ்ருத்தியும் தோஷாது ஸந்தாநதசையில் ஸம்ஸாரத்தில் ப்ரவ்ருத்தியும் கூடாது. * கொடியேவென்னெஞ்ச மவனென்றே கிடக்கும். *அடியேன் நான் பின்னுமுன்சேவடியன்றி நயவன். * என்னா நின்றார்களிறே. குண க்ருத தாஸ்யத்திலும் காட்டில் ஸ்வரூப ப்ரயுக்தமான தாஸ்யம் இறே ப்ரதாநம். அநஸூயைக்குப் பிராட்டி யருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது.” என்றுள்ள திவ்ய ஸூக்திகள் இங்கே அநுஸந்தேயங்கள்.

தலைவி சொன்ன வார்த்தையைக் கேட்ட தோழியானவள் “அம்மா! நீ சொல்லுவதை நான் அறியேனோ? நான் விலக்குகிறேனல்லேன்; தாயார் வெறுக்கும் என்று சொல்லுகிறேன்” என்ன;

அன்னை என்செய்யுமே என்கிறாள்;- உன் வார்த்தை கேளாத நானோ தாயார் வார்த்தை கேட்பேன்? அந்நிலை கழிந்ததில்லையோ வென்கிறாள்.

————–

***-நீ இங்ஙனே துணிவு கொண்டால் தாயார் ஜீவிக்கமாட்டாள்; அத்தாலே ஊராருடைய பழிப்பும் மிகும் என்று தோழி சொல்ல,

கண்ணபிரானுடைய குண சேஷ்டிதங்களில் நான் அகப்பட்டேன். இனி யார்  என் செய்தாலென்ன என்கிறாள்.

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-

பதவுரை

தோழிமீர்

தோழிமார்களே!
முன்னை அமரர் முதல்வர்

நித்ய ஸூரிநாதனும்
வண் துவராபதி மன்னன்

அழகிய த்வாரகாபுரிக்கு அரசனும்
மணிவண்ணன்

நீலமணிவண்ணனுமான
வாசுதேவன்

கண்ணபிரானாகிற
வலையுள்

வலையினுள்ளே
அகப்பட்டேன்

சிக்கிக் கொண்டேன்;
இனி

ஆன பின்பு
என்னை

என் திறத்திலே
உமக்கு ஆசை இல்லை

நீங்கள் ஆசைவைக்க நியாயமில்லை;
அன்னை என் செய்யில்

தாய் எது செய்தால்தான் என்ன?
என் ஊர் என் சொல்லில்

என் ஊரார் எதுசொன்னால்தான் என்ன?

அன்னை என்செய்யில் ஏன்? = “தாயார் பொறாள், தாயார் பொறாள்’ என்று தோழி அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள்;

தலைவி அவளை நோக்கி ‘தாயார் பொறாமல் என்ன செய்துவிடுவள்’ என்று கேட்டாள்;

‘உயிர் மாய்ந்து போவள்’ என்று தோழி விடை கூறினாள்.

அதற்குத் தலைவி சொல்லும் விடை இது, ‘தாயார் ஜீவித்தாலென்ன? முடிந்தாலென்ன?’ என்றவாறு.

‘தாயார் முடிவதையும் கணிசியாமல் இவள் நாயகனுடைய வடிவழகிலேயீடுபட்டாள்’ என்று ஊரார் பழி சொல்லுவர்களே! என்ன;

ஊரென் சொல்லிலென்? என்கிறாள்.

இப்படி உதறிச் சொல்லுகைக்குக் காரணம் என்ன? என்று கேட்க; முன்னை யமார் முதல்வன் வண்துவராபதி மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுள் அகப்பட்டேன், (ஆகையாலே) என்னை (ப் பற்றி) இனி உமக்கு ஆசையில்லையென்கிறாள்.

“வாசுதேவன் வலையுளே அகப்பட்டேன்” என்றது- வாசுதேவனாகிற வலையிலேயகப்பட்டேன் என்றும், வாசுதேவனுடைய வலையிலே யகப்பட்டேன் என்றும் பொருள் பெறும்.

வலையாவது தன் பக்கலில் அகப்பட்டாரை வேறு இடத்திற்குப் போகவொட்டாமல் செய்வதாதலால் எம்பெருமானை வலையாகக் கூறுதல் பொருந்தும்.

“பாலாலிலையில் துயில் கொண்டபரமன் வலைப்பட்டிருந்தேனை” என்றாள் ஆண்டாளும்.

எம்பெருமானுடைய வலை என்று பொருள் கொள்ளும்போது திருக்கண்களை வலையாகக் கொள்ளலாம்.

“உசுவையால் நெஞ்சமுள்ளுருகி உன் தாமரைத்தடங்கள் விழிகளின் அக வலைப் படுப்பாள்” என்பர் மேலே.

இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்; “ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் வலையாக அபிநயித்துப் பாடாநிற்க, திருக்கண்களைக் காட்டியருளினாரெம்பெருமானார். ‘கார்த்தண் கமலக்கண்ணென்னும் கயிறு’ என்னக்கடவதிறே. அநுகூலம் போலேயிருந்து தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளும் நோக்கிலே அகப்பட்டேன்.”

——————–

***-எம்பெருமான் பக்கலில் குண ஹாநி சொன்னவர்களுடைய வாய் அடங்கும்படி நாம்

அவனைக் காணப் பெற்றுத் தலையாலே வணங்கலாம்படியான காலம் வாய்க்குமோ தோழீ என்கிறாள்.

வலையுள் அகப்படுத்து என்னை நன் நெஞ்சம் கூவிக் கொண்டு
அலை கடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்
கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு
தலையில் வணங்கவுமாங் கொலோ? தையலார் முன்பே.–5-3-7-

 

பதவுரை

கலைகொள்

சேலை யணிந்ததும்
அகல்

அகன்றதுமான
அல்குல்

நிதம்பத்தையுடைய
தோழீ

தோழியே,
என்னை

என்னை
வலையுள்

(தன்னுடைய குணசேஷ்டிதங்களாகிற) வலையிலே
அகப்படுத்து

சிக்கிக்கொள்ளும்படி செய்து
நல் நெஞ்சம்

(எனது) நல்ல நெஞ்சையும்
கூவிக்கொண்டு

அடியறுத்து அழைத்துக்கொண்டு
அலைகடல் பள்ளி அம்மானை

அலை யெறிகின் நாடலிலே (ஏகாந்தமாகப்) பள்ளிகொள்ளும் ஸ்வாமியாய்.
ஆழி பிரான் தன்னை

திருவாழியாழ்வானை ஏந்தியுள்ள மஹோபகாரகனாக எம்பெருமானை
நம் கண்களால் கண்டு

நமது கண்களாலே பார்த்து
தையலார் முன்பே

(பழிசொல்லுகிற) மாதர்களின் நண்வட்டத்தில்
தலையில்

தலையாலே
வணங்கவும் ஆம் கொலோ

வணங்கவும் கூடுமோ?

என்னைத் தன்னுடைய குணசேஷ்டிதங்களாகிற வலையில் அகப்படுத்திக்கொண்டு *காற்றிற் கடியனாயோடித் திருப்பாற்கடலிலே புக்கொளித்த பெருமானைத் தோழீ! அவனுக்கு குண ஹாநி சொல்லுகிற இந்தப் பெண்டுகள் கண்ணெதிரே நம் கண்ககளால் கண்டு தலையாலே வணங்கப்பெறுவோமே என்றாளாயிற்று.

“தலையில் வணங்கவுமாங்கோலோ” என்றவிடத்து ஈட்டில் சுவைமிக்க ஓர் ஐதிஹ்யமுள்ளது. ராஜேந்த்ரசோழன் என்கிறவிடத்தில் கூரத்தாழ்வான் இப்பாசுரத்தை உபந்யஸித்தருளாநிற்கையில் ஆமருவிநிரை மேய்த்தான் நம்பியாரென்று நூறு பிராயம் போந்திருப்பாரொரு பெரியவர் நடுங்க நடுங்க எழுந்திருந்து நின்று “ஸ்வாமி! தலைமகள் தலையாலே வணங்கப் பெறுமோ?” என்று கேட்க, அதற்கு ஆழ்வான் ‘இதில் என்ன  ஸந்தேஹம்? சிஷ்டாசாரமுண்டு காணும்; ஸ்ரீநாகராஜன் திருமகள் அநுஷ்டித்தான்காணும்’ என்று சொல்லி ***•••••••••••••••••••••••••• =கௌஸல்யா லோகபர்த்தாரம் ஸுஷுவேயம் மகஸ்விநீ, தம் மமார்த்தே ஸுகம் ப்ருச்ச திரஸா சாபிவாத* என்கிற (ஸுதையின் வாக்காகிய) ஸ்ரீராமாயணச்லோகத்தையெடுத்து விரியவுயந்யஸித்தருளினாராம்.

பிராட்டி பெருமாளைத் தான் தலையாலே வணங்கினதாகச் சொல்லும்படி திருவடியிடத்துக் கூறியிருக்கின்றாள். இங்கே ஒரு ரஹஸ்யார்த்தம் பெரியார் அருளிச்செய்வதுண்டு பெருமாள் நாட்டுக்குப் புறப்படும்போது பாதுகையும் கூடவந்தது, பிராட்டியும் கூடவந்தாள். பாதுகை பெருமாளைப் பிரிந்து வடக்கே சென்றது; பிராட்டி அதற்குப் பிறகு பெருமாளைப் பிரிந்து தெற்கே செல்ல நேர்ந்தது. பெருமாளை விட்டுப்பிரிந்ததென்னுமிடம் பாதுகைக்கும் பிராட்டிக்கும் ஒத்திருக்கச் செய்தேயும், பாதுகை ரஜ்யாபிஷேகம் பெற்று மிகுந்த செல்வச் சிறப்பை அநுபவியா நின்றது; பிராட்டி எழுநூறு ராக்ஷஸிகளினிடையே கிடந்து பலவகை வருத்தங்களும் பட நேர்ந்தது. இதைப் பிராட்டி ஆலோசித்துப் பார்த்தாள். “பாதுகை பரமானந்தத்திலிருக்கவும் நாம் பெரிய ஆபத்தில் விழுந்து கிடக்கவும் என்ன காரணம்?” என்று ஆராய்ந்து பார்த்தாள்; பெருமாளுடைய திருவடி ஸம்பந்தம் பெற்ற பாக்கியம் பாதுகைக்கு இருந்ததனாலே அது சிறப்புப் பெற்றது; நாம் பத்தினியான முறைமையாலே *** வாணிநா பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா* என்கிற தந்தை கட்டளையின்படி கையைப் பிடிக்க நேர்ந்ததனாலே பாதுகைக்குண்டான சிறப்பு நமக்கு வாய்க்கவில்லை; இதுவரையில் பெருமாளுடைய திருவடி ஸம்பந்தம் பெறாத குறை தீர இன்று ஆசார்யமுகேந அதனைப் பெற்றிடுவோம் என்று கருதியே *சிரஸ: சாபிவாத* என்று சொல்லியனுப்பினானென்று.

இவ்வர்த்தம் காட்டிலும் “இதுதான் ப்ரணய ரோஷம் தலையெடுத்துச் சொல்லுகிற வார்த்தையோ? அயேக்ஷை தோற்றச் சொல்லுகிற வார்த்தையோ?” என்று தொடங்கியுள்ள ஸ்ரீஸூக்திகளிலும் உறைந்திருக்கும்.

————–

***மஹோபகார சீலனான எம்பெருமானை குணஹீகன் என்று குறைகூறின தாய்மார்

‘அந்தோ! இப்பெருமாளையோ நாம் குணஹீகனென்று குறைகூறின தாய்மார்

“அந்தோ! இப்பெருமானையோ நாம் குணஹீகனென்று சொன்னது!” என்று வெட்கப்பட்டுக்

கவிழ் தலையிடும்படி நாம் அப்பெருமானைக் காண்பது என்றைக்கோ? என்கிறாள்.

பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானை எந்நாள் கொலோ?
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–5-3-8-

 

பதவுரை

தோழீ

தோழியே!
பேண் முலை உண்டு

பூதனையின் முலையைப் புசித்து
சாடல் பாய்ந்து

சகடத்தை முறித்துத் தள்ளி
மருது இடைபோய்

இரட்டை மருதமரங்களிளிடையே தவழ்ந்து சென்று
முதல் சாய்த்து

(அற்றை) வேரோடே தள்ளி
புள்வாய் பிளந்து

பகாசுரனுடைய வாயைக் கிழித்து
களிறு அட்ட

குவளையபீட யானையைக் கொன்று முடித்த
தூ முறுவல் தொண்டை வாய்பிரானை

பரிசுத்தமான மந்தஹாஸத்தையும் கொங்கைக் களிபோனற் திருபப்பவளத்தையுமுடைய பெருமானை
அன்னையர் நாண

தாய்மார் தலைதொங்கும்படியாக
உரம் உறுகின்றது

நாம் கிட்டுவது
ஏ நான் கொலோ

என்றைக்கோ?

எம்பெருமானுக்குப் பரோபகார சீலத்வம் நேற்று இன்றைக்கு வந்ததன்றே,

ஜன்மஸித்தமாயிற்றேயென்று நிரூபிக்கிறான் பேய்முலையுண்டு இத்யாதியால்.

பூதனையால் வந்த ஆபத்தைப் போக்கி, சகடத்தினால் வந்த அனர்த்தத்தைத் தவிர்த்து,

இரண்டை மருத மரங்களால் வந்த தீமையைத் தொலைத்து, பகாஸுரனால் வந்த வாதையை நீக்கி,

குவலயாபீட யானையினால் நேர்ந்த விபத்தையும் தெலைந்து

இப்படி ஆச்ரித விரோதி நிரஸநம் பண்ணி உபகரிக்கப் பெற்றோமே! என்று தூமுறுவல் செய்து நிற்கும்

பெருமானை நம் தாய்மார் கண்டால் ‘இவனிடத்திலோ நாம் குணஹாநி சொன்னது’ என்று

நாணிக் கவிழ்ந்திருப்பார்களே; அன்னவனை நாம் கிட்டுவது எந்நாள் கொலோ! என்றாளாயிற்று.

ஈட்டுஸ்ரீஸூக்தி:- “இப்போது அவனை ஸ்பர்சித்து நம் ப்ரயோஜநம் பெற ஆசைப்படுகிறோமல்லோம்; (அன்னையர் நாணவே) ‘பிரிந்த வனந்தாம் அவன் தானே வருமளவும் ஆறியிருந்திலன், அவன் தானும் வரவு தாழ்ந்தான்’ என்று இரண்டு தலைக்கும் பழி சொல்லுகிற தாய்மார் முன்பே, ‘நாம் இத்தனை மடலெடுக்குமளவாம்படி பிற்பாடரானோமாகாதே’ என்று ஹ்ரீரேஷாஹி மமாதுலா* என்கிறபடியே அவன் லஜ்ஜித்து வந்து நிற்கிறபடியைக் கண்டு ‘இவனையோ நாம் இவ்வார்த்தை சொல்லிற்று!’ என்று அவர்கள் லஜ்ஜித்துக் கவிழ்தலையிடும்படியாக.”

—————–

***என் பக்கல் ஸர்வஸ்வமும் கொள்ளை கொண்டு எட்டா நிலத்திலிருக்கிறவனை

ஸகல லோகமும் பழிக்கும்படி மடலூரக் கடவேனென்று தோழிற்குத் தனது நெஞ்சை வெளியிடுகிறாள்.

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9-

 

பதவுரை

என் தோழி

எனது தோழியே!,
என்னை

என்பக்கலில் நின்றும்
நாணும்

நாணத்தையும்
நிறையும்

அடக்கத்தையும்
கவர்ந்து

கொள்ளை கொண்டு
நல் நெஞ்சம் கூய்க்கொண்டு

(எனது) நல்ல நெஞ்சையும் ஆகர்ஷித்துக்கொண்டு
சேண் உயர் நாளத்து இருக்கும்

மிகவும் உயர்ந்த பரமபதத்திலெழுந்தருளியிருக்கிற
தேவபிரான் தன்னை

நிதய் ஸூரிநாதனை
உலகு தோறு

ஒவ்வொருவலகத்திலும்
அவர் தூற்றி

பழிதூற்றி
ஆம் கோணைகள் செய்து

செய்யக்கூடிய மிறுக்குக் களைச்செய்து
கு திரி ஆய்

அடங்காத பெண்ணாய்
மடல் ஊர்தும்

மடலூரக் கடவோம்;
ஆணை

இது திண்ணம்

வாசல் விட்டுப் புறப்பட மாட்டாதிருக்குமிருப்பு நாண்;

நெஞ்சினுள்ளேயோடுவது தாய்மார்க்கும் சொல்லவொண்ணாகபடியிருக்குமடக்கம் நிறை;,

இவ் விரண்டையும் கொள்ளை கொண்டானென்றது அதி மாத்ர ப்ராவண்யத்தை விளைத்தானென்றபடி.

நெஞ்சாவது ஸ்வாதீநமாக இருந்தால் குறையில்லையே,

அதனையும் தன் பக்கலிலே கொடித்துக் கொண்டவை சொல்லிற்று நன்னெஞ்சம்  கூவிக்கொண்டு என்றதனால்,

“முயற்சி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சு” என்கிறபடியே தன்னிற்காட்டிலும் அவன் விஷயத்திலே

ஊற்றம் முற்பட்டிருக்கையாகிற நன்மையை நோக்கி நன்னெஞ்சம் என்றது.

சேணுயர் வானத்திருக்கும் தேவபிரான் தன்னை = கீழே “என்னை நன்னெஞ்சம் கூவிக்கொண்டு அலைகடற் பள்ளியம்மானை” என்று திருப்பாற்கடலிலே சென்று ஒளிந்துக் கிடந்ததாகக் சொல்லிற்று. இப்போதிங்கு ஸ்ரீவைகுண்டத்திலே போய் இருப்பதாகச் சொல்லுகிறது;

கடலிலே கிடந்தால் பதற்றத்தினால் திரைமேலே அடியிட்டு கையும் மடலுமாய் க்ஷீரஸாநகரத்திலே இவள் வந்து நிற்கவுங்கூடும் என்று நினைத்து எட்டா நிலத்திலே போய் இருந்தாள்போலும்

அவன் எங்குச் சென்றால்தானென்ன? “ஊராதொழியேலுலகறியவொண்ணுதவீர்’ என்று சபதஞ் செய்து கிடக்கிற எனக்குத் தப்பிப் பிழைக்கவொண்ணுமோ அவனால்?

தோழி! நான் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் கேள்; அவ்வோலக்கமும் அவனும் அவ்விருப்பும் என் கையிலே படப்புகுகிறபாடு பாராய்;

இருந்தவிடத்தே இருக்க வொட்டுவேனென்றிருக்கிறாயோ? உலகமெங்கும் புக்குப் பழிதூற்றி அழிக்கக் கடவேன்.

என்னை ஊரார் பழி சொல்லும்படி பண்ணின அவனை லோகமாகப் பழி சொல்லும்படி நான் பண்ணக்கடவேன் என்கிறாள்.

கோணை- மீறுக்கு; ஆம் கோணை = எவ்வெவ்விதமாக மிறுக்குகள் செய்ய முடியுமோ அவ்வவ்விதமெல்லாம் செய்வேனென்கிறாள்.

குதிரி- நாணப்பெண், அடங்காப்பெண். ** (குஸ்த்ரீ) என்னும்  வடசொல் குதிரி யெனத் திரிந்ததென்னலாம்.

——————-

***மடலூர்வதில் தனக்குள்ள உறுதியை நன்கு வெளியிடுகிறாள். பாட்டினடியில் யாம் என்றது ஸ்வ ஸ்வரூபத்தை உறுத்திக் காட்டுகிறபடி.

யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நா மடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10-

 

பதவுரை

யா மடம் இன்றி

ஏதேனும் ஒரு படியாலும் பெண்மைக்குரிய ஒடுக்கமில்லாமல்
தெருவு தோறு

வீதிகள் தோறும் புகுந்து
அயல் தைய லார்

அயல் பெண்களும்
நாடும்

ஸகல லோகமும்
நா மடங்கா பழி தூற்றி

நாக்கு இடைவிடாதே சொல்லுகிற பழிமொழிகளைத் தூற்றி
இரைக்க

இரைச்சல்  போடும்படி
யாம்

நாம்
மடல் ஊர்ந்தும்

மடலூர்ந்தாகிலும்
ஆழி அம் கை நம்பிரானுடைய

திருவாழியைத் தரித்த அழகிய திருக்கையையுடைய எம்பெருமானுடைய
தூ மடல்

பரிசுத்தமான இதழ்களையுடைய
தண் அம் துழாய் மலர்

குளிர்ந்தழகிய திருத்துழாய்மலர் மாலையை
கொண்டு

அவன் தரப்பெற்று
சூடுவோம்

தலையில் அணிவோம்.

திருவடி அசோக வனத்தில் பிராட்டியை நோக்கி ‘தேவரீர் இவ்வளவு  அல்லல் படுவானேன்?

ஒருநொடிப் பொழுதில் அடியேன் தேவரீரைப் பெருமாள் திருவடிவாரத்திலே கொண்டு சேர்க்குமாறு இசைந்தருளலாகாதோ?’ என்று சொல்ல,

அதுகேட்ட பிராட்டி –சரைஸ் து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தாக:, மாம் நமேயத் யதி காகுத்ஸ்த: தத் தஸ்ய ஸத்ருசம்பவேத் என்றாள்.

எம்பெருமானுடைய திருவுள்ளப்படியே என்ன ஆகிறதோ அதைப் பார்த்துக் கொண்டிருப்பது நமக்கு ஸ்வரூபமே யன்றி

நாமாக ஒரு அதி ப்ரவ்ருத்தி செய்யத்தகாது என்பது இப்பிராட்டி வசனத்தினால் சிக்ஷிக்கப்பட்டதாகிறது.

இப்படி யிருக்க வேண்டிய ஸ்வரூபத்தை யுடையேனான நான் என்று காட்டுகிறபடி.

ஆனாலும் பதறாதிருக்க முடியவில்லை யென்கிறாள் மடலூர்ந்தும் என்பதனால்.

மடலூர்தல் என்பதற்குத் தமிழர்கள் சொல்லுகிறபடி பனை மட்டையைக் கையிலே கொள்ளுதல் முதலான காரியங்கள் இங்கு விவக்ஷிதமல்ல; ஸாஹஸமாக அதி ப்ரவ்ருத்திகளைச் செய்தாகிலும் என்றபடி. அதாவது தன்னுடைய பதற்றத்தைக் காட்டுதல்.

எம் மாழி யங்கைப் பிரானுடைய என்ற விடத்திலே நம்பிள்ளை யீடு காண்பீன்; “அவன் கையுந்திருவாழியும் போலே யன்றோ நாள் கையும் மடலுமாய்ப் புறப்பட்டாயிருப்பது. நான்  கையும் மடலுமாகப் புறப்பட்டால் அஞ்சி எதிரே வந்து தன் கையில் ஆபரணத்தை வாங்கி என் கையிலே யிட்டு, தன் தோளில் மாலையை வாங்கி என் தோளிலே விட்டானாகில் குடி யிருக்கிறான்; இல்லை யாகில் எல்லாம் இல்லை யாகிறது.”

எம்பெருமான் பக்கலில் தான் பெற நினைப்பது திருத்துழாய் ப்ரஸாத மந்தனையே யென்பது தோன்ற இரண்டாமடியுள்ளது.

மூன்றாமடியில் “யாம், மிடமின்றி” என்று பிரித்துப் பொருள் காட்டப்படுகிறது ஒன்பதினாயிரப்படியில்,

“யாமடமென்றது ஏதேனுமொரு மடப்பமுமென்றயடி” என்பர் பன்னீராயிர வுரைகாரர்.

ஈற்றடியிலும், ‘நா, மடங்கா’ என்றும், ‘நாம் அடங்கா’ என்றும் கொள்வர்.

மடங்குகலாவது ஓய்தல்; நாக்கு ஓயாதே சொல்லும் பழிமொழி யென்க.

————–

***இத்திருவாய்மொழி சொல்லவல்லார் என்னைப்போலே  மடலூர்வேனென்ன வேண்டாதே.

தாங்களிருக்குமிடத்தே எம்பெருமான், தானே வந்து நித்ய சம்ச்லேஷம் பண்ணப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறார்.

இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை
விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11-

பதவுரை

இரைக்கும்

கோக்ஷிக்கின்ற
ஈறா கடல் கண்ணன்

கருங்கடல் போன்ற வடிவழகையுடையவன்
கண்ணபிரான் தன்னை

கண்ணபிரானான எம்பெருமானைக் குறித்து
விரை கொள்பொழில்

பரிமனம்மிக்க சோலைகளையுடைய
குருகூர்

திருநகரியில் அவதரித்த
சடகோபன்

ஆழியார்
சொன்ன

அருளிச் செய்த
நிரைகொள்

சாஸ்த்ரமரியாதைப்படியே ஒழுங்குகளைக்கொண்ட
அந்தாதி

அந்தாதித் தொடையாமைந்த
ஓர் ஆயிரத்துள்

ஆயிரம் பாசுரங்களிலுள்ளே
இயற்றும்

இப்பதிகத்தை
உரைக்க வல்லார்க்கு

ஓதவல்லவர்களுக்கு
தம் ஊர் எல்லாம்

தம்தம் இருப்பிடமெல்லாம்
வைகுந்தம் ஆகும்

பரமபதம் போலே பேரின்பசீலமாக விளங்கும்

“இரைக்குங் கருங்கடல் வண்ணன்” என்றதற்கு இரண்டுபடியாக அருவிச்செய்வார்கள்.

வண்ணமென்று நிறத்துக்கும் தன்மைக்கும் பெயர்;

நிறத்தைச் சொல்லும் போது மட அலர்ந்தாகிலும் பெற வேண்டும்படியான வடிவழகு சொல்லிற்றாகிறது.

தன்மையைச் சொல்லும்போது, ப்ரக்ருதத்தில் கடலுக்கும் எம்பெருமானுக்கும் துன்பமாகச் சொல்லக்கூடிய தன்னை யாதெனில்;

இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;- “(இரைக்கும் கருங்கடல் வண்ணன்) அனந்தாழ்வான் பணித்தானாக நஞ்சீயர் வந்து பட்டருக்கு  என்றபோது கடல் கீழ் மண் கொண்டு மேல் மண் எறிந்தாற்போலே யாயிற்று. இவள் மடலூர்வன் என்ற துணிவைக் கேட்டு அவன் தன் ஸர்வாதிகத்வம் கலங்கினபடி என்றருளிச்செய்தார்” என்று

ஸமுத்ர ராஜனை நோக்கிப் பெருமாள் சரணாகதி பண்ணச் செய்தேயும் அதன் முகங்காட்டாவிட்டவாறே இளையபெருமானை நோக்கி *** – சாபமாநய ஸௌமித்ரே!” (லக்ஷ்மணா! வில்லைக் கொண்டு வா) என்று நியமித்தருளினவுடனே கடல் கலங்கினது ஸ்ரீராமாயண ப்ரஸித்தம்.

ஸ்ரீராமன் அம்பு தொடுக்க நினைத்ததும் ஆழ்வார் மடலூர்வேன் என்றதும் துல்யமாகையாலே  (இப்போது ஸமுத்ர ஸாயி யான எம்பெருமான்) மடலூர்வேன் என்ற சொல்லைக் கேட்டவாறே கலங்கினானாயிற்று. ஆக இத்தன்மையிலே ஸரம்யம் என்று அனந்தாழ்வாள் திருவுள்ளம் பற்றின படி.

வைகுந்தமாகும் தம்மூரெல்லாம் = இத்திருவாய்மொழியைச் சொல்ல வல்லவர்களுக்கு உத்தேச்ய பூமி பரமபதமாகும் என்று ஒரு நிர்வாஹம்

இவர்கள் நாடறிய மடலெடுத்துக்கொண்டு புறப்படவேண்டா; இவர்களிருந்த விடங்களிலே அவன் தானே வந்து நித்ய ஸம்ச்லேக்ஷத்தைப் பண்ணுகையாலே அவர்களிருந்தவிடந்தானே பரமபதமாம் என்று மற்றொரு நிர்வாஹம்.

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: