ஸ்ரீ திருவாய் மொழி -5-2 –பொலிக பொலிக பொலிக –ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

***- (பொலிக பொலிக.) இந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்திக்கு எப்போதும் ஒரு குறைவில்லாமலிருக்க வேனுமென்று காப்பிடுகிறார்.

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-

பதவுரை

பொலிக பொலிக பொலிக

வாழ்க! வாழ்க! வாழ்க!
உயிர்

ஜீவராசிகளுக்குண்டான
வல்

வலிதான
நைந்த

அழிந்துபோன
இங்கு

இவ்விபூதியில்
நமனுக்கு

யமனுக்கு
யாது ஒன்றும் இல்லை

ஒரு காரியமுமில்லை.
கலியும்

கலிபுருஷனும்
நெடும்

(விரைவில்) தொலையக்கூடும்.
கண்டு கொள்மின்

(அதை) ப்ரத்யக்ஷமாகக் காண்பீர்கள்;
பூதங்கள்

பக்தர்கள்
சாபம்

பாவமானது
போயிற்று

தொலைந்தது;
நலியும்

வருத்தத்தை விளைவிக்கக்கூடிய
நரகமம்

நகரலோகங்களும்
கடல் வண்ணன்

கடல்போன்ற நிறத்தையுடையவனான பகவானுடைய
பூதங்கள்

பக்தர்கள்
மண் மேல்

இந்நிலத்தில்
மலிய புகுந்து

நிரம்பி
இசை பாடி

இனிய பாட்டுக்களைப் பாடிக்கொண்டு
ஆடி உழிதர கண்டோம்

இங்குமங்கும் நடமாடக் காண்கிறோம்.

வேதம் மும்முறை ஓதுமாபோலே இருக்கும் “பொலிக பொலிக பொலிக” என்று மும்முறை ஓதுகிறபடி.போயிற்று

வல்லுயிர்ச்சாபம் = சாபம் என்கிறது பாபத்தை; அவசியம் அனுபவித்தே தீரவேண்டுகையாலே. ஆத்மாவைப்பற்றிக் கிடந்த அவித்யை முதலானவை தொலைந்துபோயினவென்றபடி.

நலியும் நரகமும் நைந்த = இனி நரகங்களை யநுபவிக்க ஆளில்லாமையாலே அவை புல்லெழுந்தொழிந்தனவென்கை.

‘நைந்த’ என்றது நைந்தன என்றபடி; அன்சாரியை பெறாத பலவின்பால் இறந்தகாலவினைமுற்று.

நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை = யமன் ஆராய்ச்சி செய்வதற்கு இங்கு விஷயமொன்றுமில்லை.

யம லோகம் புகுவார் இருந்தாலன்றோ அவன் கணக்குப் பார்க்கவேண்டுவது. “சித்திரகுத்தனெழுத்தால் தென்புலக்கோள் பொறியொற்றி வைத்தவிலச்சினை மாற்றித் தூதுவரோடி யொளித்தார்” என்னும்படியாயிற்றென்கை.

கலியுங்கெடும் = கலிபுருஷனும் விரைவில் தொலைந்திடுவானென்கிறார்.

ஆசார்ய ஹ்ருதயத்தில் இரண்டாம் பிரகாரத்தில் “தமிழ் மாமுனிதிக்கு சரண்யமென்றவர்களாலே” என்கிற சூர்ணிகையில்

“கலியுங்கொடும்போல ஸூசிதம்” என்விடத்திற்கு வியாக்கியான மருளிச்செய்யாநின்ற மணவாளமாமுனிகள்

“இவர்தாம் மயர்வற மதிநலம் பெற்றவராகையாலே “கலியுங்கெடும்’ என்று- திருமங்கையாழ்வார் உடையவர் வோல்வார் அவதரித்துக் கலி யுக ஸ்வபாவமும் கழியுமென்று மேல்வரும் அம்சத்தை தர்சித்து அருளிச்செய்தாப்போலே” என்றருளிச் செய்துள்ள ஸ்ரீஸூக்திகள் இங்கு அநுஸந்திக்கத் தக்கன.

கண்டுகொண்மின் என்பதனால் இதில் ஸர்தேஹமில்லாமை கக்டப்பட்டதாகும். அநுபவத்தாலே அறியுமனுக்கு உபதேசம் வேணுமோவென்கை.

இப்படிச் சொல்வதற்குக் காரணம் இன்னதென்கிற்று. மேல்- கடல் வண்ணனென்று தொடங்கி,

இதுவரையில் பாகவத ஸஞ்சாரமில்லாமையாலே வல்லுயிர்ச்சாபம் நிலைபெற்று, கலியும் நரகமும் மலிந்து, நமனுக்கும் விசேஷவிருந்து கிடைத்துக்கொண்டிருந்தது;

இப்போது பாகவத ஸஞ்சாரம் மிகமிக வுண்டானபடியாலே “போயிற்று வல்லுயிர்ச்சாபம், நலியும் நரகமும் நைந்த,நமனுக்கு யாதொன்றுமில்லை, கலியுங்கெடும்” என்று உறுதிகூறத் தடையில்லையென்றபடி.

பூதங்கள் = வடமொழியில் *** (பூ – ஸத்தாயாம்) என்கிற தாதுவடியாகப் பிறந்தது பூதம் என்னுஞ்சொல். ஸத்தை பெற்றது என்று பொருள்.

எம்பெருமானது திருக்குணங்களை யநுபவித்தே ஸத்தை பெற்றவர்கள் என்றவாறு.

————————-

***ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்தியைக்கண்ட ஆழ்வார் இந்த ஸம்ருத்தியை யனுபவிப்பதற்கு மற்றும் பல அநுகூலர்களையும் ஆதரத்தோடு அழைக்கிறார்.

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2-

 

பதவுரை

வண்டு ஆர்

(மது பானத்திற்காக) வண்டுகள் பொருந்திய
தண் அம் துழாயான்

குளிர்ந்தழகிய திருத்துழாய் மாலையையணிந்தவனான
மாதவன்

திருமாலினது
பூதங்கள்

பக்தர்கள்
மண் மேல்

இந்நிலத்திலே
பண்

இராசங்களை
பாடி நின்ற ஆடி

பாடிக்கொண்டு ஆடிக் கொண்டு
பரந்து

எங்கும் பரவி
திரிகின்றன

எங்கும் பரவி உலாவுகின்றனர்;
கண்ணுக்கு இனியன

(இப்படி) கண்ணுக்குப் பரமபோக்கயமான நிலைமைகளை

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்டோம்-;

தொண்டீர்  எல்லீரும்

பாகவதர்களான ஸகல பேர்களும்
வாரீர்

வாருங்கள்;
தொழுது தொழுது நின்று

நன்றாகவணங்கி
ஆர்த்தும்

ஆரவாரிப்போம்.

தம்மால் அழைக்கப்படுகின்றவர்கள் விரைந்து ஓடிவர ஆசைப்படுதற்குறுப்பாக. “கண்மோங் கண்டோங் கண்டோம்” என்று பெருமிடறு செய்கிறார்போலும்.

கீழே * நண்ணாதார் முறுவலிப்பவிலே “கொடுவுலகங் காட்டேலே” என்ற சொல்லும்படியாக அபகவதர்களைக் கண்ட கசப்புத் தீர ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியைக் கண்ணாரக் காணப் பெறறோமென்கிறார் கண்ணுக்கினியன கண்டோம் என்று.

தொண்டீர்! எல்லோரும்வாரீர் = “மெய்யடியார்கள் தம் ஈட்டங்கண்டிடக் கூடுமேல் அதுகாணுங் கண்பயனாவதே” என்றும்

“பேராளன் பேரோலும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே” என்றும் பாகவத கோஷ்டியின் சுவடறிந்திருக்கு மவர்களே!

நீங்கள் ஒருவர் தப்பாமல் கடுக வாருங்கள்.

எதற்காக வென்ன;–தொழுது தொழுத நின்று ஆர்த்தும் = இத் திரளைத் தொழுகை தானே பரம ப்ரயோஜனமன்றோ? ப்ரயோஜனத்துக்கொரு ப்ரயோஜனம் பண்ணுவோம் என்றபடி.

யாரைத்தொழுவது? என்ன; பின்னடிகளினால் விவரிக்கின்றார்.

எம்பெருமான் * தோளிணைமேலும் நம்மார்பின்மேலும் சுடர்முடிமேலும் தாளிணை மேலும் தண்ணந்துழாய் புனைந்திருக்கு மழகையும் அதிலே வண்டுகள் மதுப்பருக ஆர்ந்திருக்கும்படியையும்,

அப்பெருமான் தான் திருவின் மணாளனாயிருந்து அடியாரை நோக்குகிறபடியையும்

நல்ல இசைகளிலே இட்டுப் பாடித் தொண்டர்கள் ஸம்பிரம் பண்ணநின்றார்கள்; இக்காட்சியைக் காண வாருங்கள் என்றாயிற்று.

——————

***- (திரியும் கலியுகம்) நித்ய ஸூரிகளும் இந்நிலத்திலே அடியிட்டு வந்து சேர்ந்து ஒன்று கூடிப்

பரிமாறலாம்படி ஸம்ஸார மண்டலம் முழுவதும் ஸ்ரீவைஷ்ணவ மயமாயிற்றென்கிறார்.

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3-

பதவுரை

திரியும்

தருமங்கள் தலைகீழாக ஆகும்படியான
கலியுகம்

கலியுகமானது
நீங்கி

தொலையப்பெற்று
பெரிய

தருமந் சிறந்த
கிதயுகம்

கிருதயுகமானது
பற்றி

வந்து புகுந்து
தேவர்கள் தாமும் புகுந்து

தேவப் பிரகிருதிகளும் தாமாகவே நெருங்கி
பேர் இன்பம் வெள்ளம் பெருக

மஹத்தான ஆனந்த வெள்ளம் பெருகும்படியாக
கரிய முகில் வண்ணன்

காளமேகவண்ணனாயும்
கடல் வண்ணன்

கடல்வண்ணனாயுமுள்ள
எம்மான்

எம்பெருமானுடைய
பூதங்கள்

பக்தர்கள்
மண் மேல்

இவ்விபூதியிலே
இரிய புகுந்து

மிக்க கோலாஹலங்களுடன் வந்து
இசை பாடி

கீதங்களைப் பாடிக் கொண்டு
எக்கும்

எல்லாவிடங்களிலும்
இடம் கொண்டன

வியாபித்துவிட்டார்கள்.

திரியுங் கலியுகம் நீங்கி = கலி பிறந்த நாற்பத்து மூன்றாநாளிலே ஆழ்வார் அவதாரித்தாரென்று பெரியார் கூறுவர்;

இன்னமும் நெடுங்காலம் தான் செங்கோல் செலுத்துவதாக வந்துபுகுந்த கலிபுருஷன் சிதையும்படியாயிற்று ஆழ்வாருடைய பெருமை.

திரியுங் கலியுகமென்றது தரும மார்க்கம் ருஜுவாக இருக்கை யன்றிக்கே தலைகீழாக இருக்கும்படியான கலியுகமென்றபடி.

மஹாபாரதத்தில் மோக்ஷதர்மத்தில் – “*** =  ந ச்ருண் வந்தி பிது; புத்ரா ந ஸ்நுஷா ந ஸஹோதரர்ந ப்ருத்யா ந கலத்தராணி பவிஷ் யத்யதரோத்தரம்.” என்று சொல்லிற்று;

கலியுகத்தில் தகப்பன் பேச்சை மகன் கேளான்; மாமியார் பேச்சை மாட்டுப்பெண் கேளாள்; தமையன் பேச்சைத் தம்பி கேளான்;

ஸ்வாமியின் பேச்சை வேலைக்காரன் கேளான்; கணவன் பேச்சை மனைவி கேளாள்; எல்லாம் தலைகீழாகவே

ஆகப்போகிறது என்பது  அந்த சுலோகத்தின் பொருள். ஆழ்வார் அதைத் திருவுள்ளம்பற்றித் திரியுங் கலியுக மென்கிறார்.

தேவர்கள் தாமும் புகுந்து – இங்குத் தேவர்கள் என்பது இந்திரன் முதலிய தேவர்களையன்று; அனந்த கருட விஷ்வக்ஸேநாதிகளான நித்ய ஸூரிகளைச் சொல்லுகிறது.

இந்தக் கொடு  வுலகத்திலலே அவர்கள் அடியிடுதற்கே ப்ரஸக்தியில்லை;

அப்படியிருந்தும், அவர்கள் இங்கே ஸ்ரீவைஷ்ணவ ஸம்ருத்தியைக் கண்டு இத்திரளிலே நாமுங்கலந்து பரிமாறி ஸத்தை பெறவேணுமென நினைத்து அங்கே புகுந்தார்களாயிற்று.

பெரியகிதயுகம்பற்றி = பெரிய க்ருதயுகமென்றால் சிறிய க்ருதயுகமும் ஒன்றுண்டோவென்று சங்கிக்கவேண்டா;

த்ரோதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் என்றிப்படி வேறு யுகங்களாலே விச்சேதமின்றிக்கே ஒரு போகியான வளர்ந்த கிருதயுக மென்றபடி.

ஆதி ஸ்ருஷ்டியில் கிருதயுகத்தைச் சொல்லுகிறது என்பாருமுண்டு.

பேரின்பவெள்ளம் பெருக = ‘பரமபதத்தில் ஆனந்தமும் சிற்றின்பம்“’ என்று சொல்லும்படியாக,

பகவதநுபவ ஆனந்தம் இந்நிலத்திலே அதிசயித்ததாயிற்று. எதனாலே யென்ன;

(கரியமுகில் வண்ணனித்யாதி.) இராமபிரான் சித்திரகூடத்தில் எழுந்தருளி யிருக்கும் போது

அவனைக் காணப் புறப்பட்ட அயோத்யாவாஸிகள்-

மேக ஸ்யாமம்  மஹாபாஹும் ஸ்திரஸத்வம் த்ருடவ்ரதம், கதா த்ரக்ஷ்பாமஹே ராமம் ஜகதச் சோகநாசகம்” என்று

எழில் மேக வண்ணனான இராமபிரானை என்று காண்போம்! என்று காண்போம்!! என்று வாய் வெருவிக்கொண்டே வந்ததுபோல்

எம்பெருமானுடைய வடிவழகு தன்னிலேயே சபலர்களான பாகவதர்கள் இந்நிலத்திலே நிரம்பி விட்டார்கள்.

இரிய – ப்ரீதி கோலாஹலம் பிறக்கும்படி யென்கை இரிதலாவது – இருந்தவிடத்தில்லாமை.

———————–

இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி
நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே.–5-2-4-

 

பதவுரை

இடம் கொள்

எங்கும் நிறைந்த
சமயத்தை எல்லாம்

துஷ்டமதங்களையெல்லாம்
எடுத்து களைவன போலே

வேர்பறியகாகப் பறித்துத் தொலைப்பாரைப் போலே
தட கடல் பள்ளி பெருமான் தன்னுடைய பூதங்களே ஆய்

ஸமுத்ரசாயியான பகவானுடைய பக்தரல்களே மலிந்து
கிடந்தும்

படுத்துக்கொண்டும்
இருந்தும்

உட்கார்ந்துகொண்டும்
எழுந்தும்

நின்று கொண்டும்
பல பல கீதம் பாடி நடந்தும்

பலபல பாட்டுக்களைப் பாடிக்கொண்டே நடந்துகொண்டும்
பறந்தும்

தரையில் கால் பாவாதபடி
குனித்தும்

கூத்தாடிக்கொண்டு
நாடகம் செய்கின்றன

களித்துத் திரியா நின்றார்கள்.

உலகத்திலே மிகச்சிறந்த வஸ்துக்கள் ஸ்வல்பமாகவும் உபயோகமற்ற வஸ்துக்கள் அபரிமிதமாகவும் விளைவது இயல்பு.

ஸங்கல்பஸூச் யோதயத்தில் தேசிகன் – ஸர்வத ; கரவீராதிந் ஸூதே ஸாகரமேகலா, ம்ருத ஸஞ்ஜீவிநீ யத்ர ம்ருக்யமாணதசாம் கதா”. என்றொரு சுலோக மருளிச்செய்கிறார்;

இந் நிலத்தில் நச்சுப் பூண்டுகளான அலரி முதலியவை மிகை மிகையாக விளைகின்றன;

உயிரைமீட்கும் ஓஷதிகள் மாருதி போல்வார் பாடுபட்டுத் தேடிப் பிடித்துக் கொணரவேண்டும்படி மிகவும் அருமைப்பட்டிருகின்றனவென்பது அந்த சுலோகத்தின் கருத்து.

இதுபோலவே இவ்வுலகில் பாஹ்யமதங்கள் குத்ருஷ்டிமதங்கள் என்று சொல்லப்படுகிற தீயமதங்கள் மலிந்தும்,

ஆஸ்திகமதம், வைதிகமதம் என்று உண்மையில் சிறப்பித்துக் கூறப்படுகிற மதம் மிக விரளமாயுமிருக்கும்.

அங்ஙனம் மலிந்து கிடக்கிற துஷ்ட மதங்களையெல்லாம் பறித்துப் பொகடுவாரைப்போலே ஸ்ரீவைஷ்ணவர்கள் மலிந்துவிட்டார்களென்கிறார்.

இதன் கருத்து என்னென்னில்;–யே கண்டலக்நதுலுஸீநலிநாக்ஷமாலா; யே பாஹுமூலபரிசிஹ்நிதசங்கக்ரா யே வா லலாடபலகே லஸதூர்த்வபுண்ட்ரர்தே வைஷ்ணவா புவகம் ஆசு பவித்ரயந்தி. * இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே

ஸ்ரீவைஷ்ணவ சிகாமணிகள் காணவினிய அழகிய லக்ஷணங்களில் குறைவின்றியே பளபளவென்று விளங்கும் படியைக் கண்டால்,

கண்ட காட்சியிலேயே அவைதிக மதங்கள் அவிந்துபோமத்தனை.

விளக்கு வரக் கண்டவாறே இருள் தன்னடையே சிதைந்தொழியுமா. போலே

ஸ்ரீவைஷ்ணவர்களின் லக்ஷண அமைதியைக் கண்டவாறே அவைதிக மதங்கள் அவிந்து போகத் தட்டுண்டோ?

இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்;? “போலே யென்பானென்னென்னில்; சாத்விகர்க்குப் பிறரை நலியவேணுமென்றோரு அபிஸந்தியில்லைறே; நெற்செய்யப் புல் தேயுமாப்போலே இவர்கள் ஊன்ற வூன்ற அவை தன்னடையே தேயுமத்தனை” என்பதாம்.

பரம் ஸாத்விகர்களான பெரியார்கள் பிறர்களது அர்த்தங்களையும் ஆசாரங்களையும் அழகுபடக்காட்டும் முகத்தாலேயே பிறர்களுடையவற்றைக் கண்டிகத்தார்களாவர்.

இப்படிப்பட்ட மஹா ஸ்ரீவைஷ்ணவர்கள் இந்நிலத்திலே மலிந்து பகவதநுபவத்தாலுண்டான மகிழ்ச்சியாலே பல பாட்டுக்களைப் பாடியும் மநோஹரமாக உலாவியும் துள்ளிக்குதித்தும் பண்ணுகிற ஸம்பிரமங்கள் என்னே! என்று ஈடுபடுகிறாராயிற்று.

“எம்பெருமானாருடைய ஸ்திதி  நாம் கொண்டாடுமாப் போலயும், ஆளவந்தார் நடையை ராஜா கொண்டாடினாப் போலேயும் இவர் கொண்டாடுகிறபடி” என்பது ஈடு.

இப்பாசுரத்தின் பின்னடிகளின் அமைப்பை நோக்கி இது அருளிச் செய்தபடி.

——————-

***-இவ்வுலகத்தில் பலபல காரியங்கள் நடைபெற்றுவந்தாலும் அவையொன்றும் ஆழ்வாருடைய திருக்கண்ணில் படாமே

ஒரே ஒரு விஷயந்தான் தமது திருக்கண்களுக்குப் புலப்டுகின்றதாக இதில் அருளிச் செய்கிறார்.

எங்கு பார்த்தாலும் பாகவத கோஷ்டி யொன்றே ஸேவை ஸாதிக்கின்றதாம் தமக்கு.

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5-

 

பதவுரை

செய்கின்றது

இவர்கள் செய்கிற காரியம்
என் கண்ணுக்கு

நான் பார்க்குமிடத்து
ஒன்றே ஒக்கின்றது

ஒன்றுபோலவே யிரா நின்றது;
இ உலகத்து

இவ்விபூதியிலே
வைகுந்தன் பூதங்களே

பகவத்பக்தர்களே
மயாத்தினால்

யதேஷ்டமாக
எங்கும் மன்னி

எல்லாவிடங்களிலும் நிறைந்து
ஆய்

இருக்கின்றார்கள்
அரக்கர்

ராக்ஷசர்களாவும்
அசுரர்

அசுரர்களாகவும்
பிறந்தீர் உள்ளீர் ஏல்

பிறந்தவர்களாயிருப்பீர்களாகில்
தொண்டீர்

இதரவிஷயங்களிலலே சபவர்களாயிருப்பவர்களே!
கொன்று

உங்களைக் கொலைசெய்து
ஊழி பெயர்த்திடும்

யுகத்தையே மாற்றிவிடுவீர்கள்; (கலியுகத்ததைக் கிருதயகமாகவே ஆக்கிவீடவார்கள்)

(ஆதலால் உங்களுக்கு)

உய்யும் வகை இல்லை

பிழைக்கும் வழிஇல்லை;
ஐயம் ஒள்று இல்லை

(இதில்) சிறிதும் ஸந்தேஹமில்லை.

மாய்த்தினாலெங்கும் மன்னி = ஸ்ரீவைகுண்ட நாதனுடைய பக்தர்களான நித்யரும் முக்தரும் ஆச்சரியமாக எங்கும் புகுந்திருக்கிறார்கள் என்கை.

மாயம் என்று ஆச்சரியத்தைச் சொல்லுவதன்றிக்கே –ஸம்பவாமி ஆத்மமாயயா” இத்யாதி ஸ்தலங்களிற்போல இச்சையென்கிற பொருளையும் சொல்லுமாதலால் ‘இச்சையாலே’ என்று நம்பிள்ளை யருளிச்செய்யும்படி — உபநிஷத்தின்படி திருநாட்டிலுள்ளவர்கள் இந்நிலத்திற்குத் திரும்புதல் இல்லையாயிருக்க, அவர்கள் இங்கு எப்படி வரக்கூடும்? என்று சங்கிக்க வேண்டா; கருமமடியாகத் திரும்புதல் இல்லையென்றதே தவிர, இச்சையாலே திரும்புதலும் இல்லையென்று சொல்லிற்றில்லை;  என்று உபநிஷத்து தானே ஓதிற்றுண்டே. இது தோன்றவே மாயத்தினால் என்பதற்கு “இச்சையாலே” என்று பொருள் பணித்தது.

ஐயமொன்றில்லை = இது நடுநிலைத் தீபகமாக இருந்து முன்னடிகளிலும் அந்வயிக்கும், பின்னடிகளிலும் அந்வயிக்கும்.

வைகுந்தன் பூதங்களே எங்கும் மன்னியிருக்கிறார்களென்பதில் ஐயமொன்றில்லை;

ராக்ஷஸ ப்ரக்ருதிகளாயும் ஆஸுர ப்ரக்ருதிகளாயும் இங்கே யிருப்பவர்கள் இனித் தொலையவே போகிறார்களளென்பதில் ஐயமொன்றில்லை. –

“ஸ்ரீவாநர ஸேகையின் நடுவே சுக ஸாரணர்கள் புகுந்தாப் போலே புகுரப் பார்த்தாருண்டாகில் உங்களுக்கு உஜ்ஜீவிக்க விரகில்லை” என்பது ஈடு.

கொன்று ஊழி பெயர்த்திடும்=வைகுந்தன் பூதங்கள் உங்களையுங்கொன்று ஊழியையும் பெயர்த்திடுவார்கள் என்கை .

ஊழியைப் பெயர்த்திடுகையாவது காலத்தையே மாற்றி விடுகை.

————————

***இந்த ஸம்ஸார நிலத்திற்குரிய ஸகல க்லேசங்களும் தீரும்படி பாகவதர்கள் ஜகத் எங்கும் பரந்தார்கள்,

அவர்களை ஆச்ரயித்து உஜ்ஜீவியுங்கோள்! என்று, கீழ்ச் சொன்னவர்களை நோக்கி யருளிச் செய்கிறார்.

கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–5-2-6-

பதவுரை

கொன்று

கொலைசெய்து
உயிர் உண்ணும்

பிராணனைமுடிக்குமதான
விசாதி

வியாதியும்
பகை

துவேஷமும்
பசி

பசியும் (முதலான)
தீயன எல்லாம்

மற்றுமுள்ள கொடியவை எல்லாவற்றையும்
இ உலகில் நின்று கடிவான்

இவ்விபூதியலே தொலைப்பதற்காக
நேமி பிரான் தமர்

சக்ரபாணியான எம்பெருமானது பக்தர்கள்
போந்தார்

வந்துள்ளார்கள்;
இசை

இசைகளை
நன்று பாடியும்

நன்றாகப்பாடியும்
துள்ளி ஆடியும்

துள்ளிக்குதித்தும்
ஞாலம்

இந்நிலத்திலே
தொண்டீர்

இதரவிஷயங்களில் சபலராயிருக்கிறவர்களே!
சிந்தையை

உங்களது நெஞ்சை
செம் நிறத்தி

செவ்வையாக (நல் விஷயத்திலே) ஸ்தாபித்து
சென்று

அப்படிப்பட்டட பக்தர்களிடத்தே போய்
தொழுது

வணங்கி
உய்ம்மின்

உஜ்ஜீவியுங்கோள்.

விசாதியென்ற வியாதியைச் சொல்லுகிறது.

வியாதியென்றும் பகையென்றும் பசியென்றும் சில கெடுதல்களைத் தனித்தனியே பிரியச்சொல்லிவந்து,

தீயனவெல்லாம் என்று ஸமுதாயமாக அருளிச்செய்கிறார்.

இவ்வுலகில் கெடுதல்களாக எவ்வெவையுண்டோ அவையெல்லாவற்றையும் என்றபடி.

யத்ராஷ்டக்ஷரஸம்ஸித்தோ மஹாபாகோ மஹீயதோ, ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்வாதி துர்ப்பிக்ஷதஸ்கரர்* (

திருவஷ்டாக்ஷாஸித்தியுடைய மஹாபாகவதர் ஒருவர் வாழுமிடத்தில் வியாதியோ பஞ்சமோ கள்வரோ தலைகாட்ட நேராது. என்கிற பிரமாணத்தின்படியே இப்பாட்டின் முன்னடிகள் அமைந்திருக்கின்றன.

நேமிப்பிரான் தமர் என்கையாலே – திருவாழியாழ்வான் பகைவர்களைப் படுத்துகிறபாடு இவர்களும் படுத்தவல்லார்களென்பது விளங்கும்

அங்ஙனம் போந்த நேமிப்பிரான் தமருடைய சேஷ்டிதங்களைச் சொல்லுகிறது மூன்றாமடி.

அவர்களைச்சென்று ஆச்ரயித்து உஜ்ஜீவித்துப் போங்கள்;

அல்லது, அவர்களிடம் சென்று அவர்களைத் துணைகொண்டு எம்பெருமானை ஆச்ரயித்து உஜ்ஜீவித்துப் போங்கள் – என்கிறது ஈற்றடி.

சிந்தையைச் செவ்வையாக நிலைநிறுத்தித் தொழவேணுமென்றது – பிரயோஜநாந்தரத்திற்கு மடியேற்காதே அநந்ய ப்ரயோஜநமாகத் தொழ வேணுமென்றபடி

———————

***-எங்கும் பரம பாகவதர்களே மலிந்து விட்டார்களென்று பரம ஸந்தோஷம் பூரித்து நின்ற ஆழ்வார்

காலதோஷத்தாலே சில அவைஷ்ணவர்களையும் கண்டார்;

அவர்கள் பகவத் பாகவத ப்ரவணர்களாயன்றிக்கே தேவதாந்தர ஸமாரராதன பரர்களாய் இருக்கிறபடியையுங் கண்டார்;

அன்னவர்களையும் உபதேசத்தாலே திருத்தப் பார்த்து இப்பாசுரமருளிச் செய்கிறார்.

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக் கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்ப தெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7-

பதவுரை

நும் உள்ளத்து

உங்கள் நெஞ்சுக்குள்ளே
நிறுத்தி

வலியப்பிடித்து உட்காரவைத்து
கொள்ளும்

சிந்திக்கப்படுகின்ற
தெய்வங்கள்

தேவதைகள்
உய்யக்கோள்

உஜ்ஜீப்பித்துக்கொள்வதும்
அவனோடே

அந்த எம்பெருமான் தன்னோடே
மறுத்தும் கண் கூர்

மீண்டு சென்று கிட்டிக்கிடீர்;

(இவ்விஷயத்தில்)

மார்க்கண்டேயனும்

மார்க்கண்டேயனும்
கரி

ஸாக்ஷியாவன்;
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா

(உங்களுக்கு) மலினமான நெஞ்சு சிறிதும் வேண்டியதில்லை;
கண்ணன் அல்லால்

ஸ்ரீக்ருஷ்ணனான அவதரித்த ஸ்ரீமந் நாராயணனல்லது
தெய்வம் இல்லை

பரதெய்வம் வேறுகிடையாது;

(ஆன பின்பு)

இறுப்பது எல்லாம்

நீங்கள் செலுத்தும் கடமைகளையெல்லாம்
அவன் மூர்த்தியாயவர்க்கே இறுமின்

அப்பெருமானுடைய சரீரபூதர்களுக்குச் செலுத்துகின்றோமென்கிற பிரதிபத்தியுடனே செலுத்துங்கள்.

உங்கள் நெஞ்சுக்குள்ளே நீங்கள் கஷ்டப்பட்டு நிறுத்திக்கொள்ளுகிற தெய்வங்களானவை

உங்களை அடியோடு ரக்ஷிக்கமாட்டா என்று நாம் சொல்லுகின்றிலோம்.

அவை செய்யும் ரக்ஷணம் நாராயணன் வழியாகவே யன்றி தாமாகவேயல்ல என்கிறோமத்தனை;

இவ்விஷயத்திற்கு மார்க்கண்டேயனே ஸாமியாயிரா என்கிறார் முன்னடிகளில்.

கீழ் * ஒன்றுந்தேவில் “புக்கடிமையினால் தன்னைக்கண்ட மார்க்கண்டேயனவனை, நக்கயிரானுமன் துய்யக் கொண்டது நாராயணனருகே” என்றவிடத்து யாம் உரைத்தவை இங்கு அறியத்தக்கன.

“மார்க்கண்டேயனும் கரியே” என்றவிடத்து ஈடு- “இவ்வர்க்கத்துக்கு ஸாக்ஷி மார்க்கண்டேயன்; அவன் நெடுநாள் தேவனை ஆச்சரயிக்க அவனைப் பார்த்து ‘நெடுநாள் நீ நம்மை ஆச்ரயித்தாய்; இவ் வாச்ரயணம் பாழே போகவொண்ணாது; உன்னோடு என்னோடு வாசியில்லை. உனக்கொரு புகல் காட்டித் தரப் போகிறோம்’ என்று பக்கலிலே கொண்டு சென்று அவனபேக்ஷிதத்தைத் தலைக் கட்டிக் கொடுத்தாள்; ஆனபின்பு இதில் ஸாஷி அவனே” என்பதாம்.

“உய்யக்கொள்” என்றே பலரும் ஓதிவருகிறார்கள்; “உய்யக்கோள்’ என்பதே பொருத்தமான பாடம் என்பர் பெரியோர்.

ஆழ்வார் இப்படிச் சொல்லக் கேட்டவாறே; தேவதாந்தர பஜனம் பண்ணித் திரிவாருடைய முகம் கறுத்துவிட்டது;

நம் தெய்வத்திற்கு இங்ஙனே குறை சொல்லுகிறாரேயென்று அவர்களுக்கு மனமும் கறுத்து முகமும் கறுத்தபடியைக் கண்ட ஆழ்வார் “கறுத்த மனமொன்றும் வேண்டா” என்று அவர்களுடைய கண்ணைத் துடைக்கிறார்.

“க்ஷுத்ரதேவதைகள் பக்கலிலே பரத்வ ப்ரதிபத்தி பண்ணியிருக்கும் தண்ணிய நெஞ்சு உங்களுக்கு வேண்டா!’ என்று பொருள் கூறப்பட்டது.

ஸித்தாந்தத்தைக் கையோலைசெய்து கொடுக்கிறார்- கண்ணனல்லால் தெய்வமில்லை என்று.

(இறுப்பதெல்லாம் இத்யாதி) இறுப்பதாவது செலுத்துவது நீங்கள் இடுகிற பூஜைகளையெல்லாம் என்ற படி.

நித்ய கருமம் நைமித்திக கருமம் காம்ய கருமம் ஆகிய இவற்றை யனுட்டிப்பதும் ‘இறுப்பதெல்லாம்’ என்பதனால் விவக்ஷிதம்.

அக்கருமங்களை யனுட்டிக்கும்போது ‘அக்னீயே ஸ்வாஹா’ என்றும், இந்த்ராயஸ்வாஹா’ என்றும் ‘வருணாயஸ்வாஹா’ என்றுமிப்படி பலபல தேவதாந்தரங்களின் பெயர்களை உச்சரித்து அவர்களுக்கு ஆராதனை செய்வதாகத்  தோற்றும்படியிருந்தாலும் உபநிஷத் ஸித்தாந்தத்தின்படி எம்பெருமானை உயிராகவும் அந்த இந்த்ராதி தேவதைகளை உடலாகவும் ப்ரதிபத்தி பண்ணிக்கொண்டு அனுட்டியுங்கோள் என்றதாயிற்று.

உலகத்தில் உடலுக்குச் செய்யும் காரியங்களாலே உயிரே த்ருப்தியடையக் காண்கிறோம்;

அதுபோல சரீர பூதங்களான தேவதைகளுக்குச் செய்யும் காரியங்களாலும் ஸர்வாந்தர்யாமியான எம்பெருமானே த்ருப்தியடையக் குறையில்லை என்று நிரூபித்ததாயிற்று.

“நீங்கள் தேவதாந்தரங்களை உத்தேசித்துச் செய்கிற ஸமாராதனங்களை வேண்டாவென்று மறுக்கவில்லை; தராளமாகச் செய்யுங்கள்;

ஆனால் அந்த தேவதாந்தாங்கள் எம்பெருமானுடைய மூர்த்தியாக (சரீரமாக) உள்ளவர்கள் என்கிற ப்ரதிபத்தியோடே செய்யுங்கள் என்றதாகிறது.

———————

***-தேவதாந்தரங்களை ஆச்ரயித்து அபேக்ஷிதங்களைப் பெற்றவர்கள் இல்லையோவென்ன,

அந்தத் தேவைகள் ஆச்ரிதர்களின் அபேக்ஷிதங்களைக் கொடுக்க சக்தர்களாம்படி பண்ணி வைத்தவன்

எம்பெருமானே, ஆதலால் அவனை ஆச்ரயித்து உஜ்ஜீயுங்கோளென்கிறார்.

இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–5-2-8-

 

பதவுரை

இறுக்கும் இறை

அவரவர்கள் செலுத்த வேண்டிய கடன்களை
இறந்து

செலுத்தி
உண்ண

அவரவர்கள் வாழும்படி
எவ்வுலகுக்கும்

வேறுவேறு வகைப்பட்டருசியையுடைய ஸமஸ்தலோகத்துக்கும்
தன் மூர்த்தி

தன்னுடைய சரீரங்களை
தெய்வங்கள் ஆக

அந்தந்த கருமங்களினால் ஆராதிக்கைக்கு உரிய தேவதைகளாக
நிறுத்தினான்

ஏற்பாடு பண்ணினவன்
அத்தெய்வநாயகன் தானே

ஸர்வதேவதாநாயநனான அப்பெருமானே யவன் (ஆகையால்)
மறு திரு மார்வன அவன் தன் பூதங்கள்

ஸ்ரீவத்ஸமென்னும் மறுவைத் திருமலிலே உடையனான அப்பெருமானுடைய அடியவர்களான பாகவதர்கள்
கீதங்கள் பாடி

பலவகைப் பாட்டுக்களைப்பாடி
வெறுப்பு இன்றி

(இருள் தருமா ஞாலத்தில் இருக்க வேண்டியதாகிறதே! என்கிற வெறுப்பு இல்லாமல்
ஞானத்து

இந்நிலத்தில்
மிக்கார்

சிறப்புற வாழ்கின்றார்கள்
நீர்

நீங்கள்
மேவி

அவர்களைச்சிட்டி
தொழுது

வணங்கி
உய்மின்

உஜ்ஜிவித்துப்போங்கள்

உலகத்தில் சக்கரவர்த்திக்கு நாம் செலுத்த வேண்டிய கப்பங்களை நேராகவே சக்ரவர்த்திக்குச் செலுத்துகிறோமோ? இல்லை,

ஆங்காங்குப் பல அதிகாரி புருஷர்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றார்களாதலால் அவர்களிடம் நாம் செலுத்துகிறோம்;

ஆனாலும் அவை அவர்களுக்குச் சேருவனவல்ல; அவரவர்கள் செலுத்தும் கப்பங்களை வாங்கிக்கொள்வதற்காக

அரசர் பெருமானால் அதிகாரி புருஷர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளார்கள் என்கிற தத்துவத்தை உலகில் நாம் எளிதாகத் தெரிந்து கொண்டிருக்கிறோம்.

இவ்வண்ணமாகவே கைல தேவதா நாயகனான எம்பெருமாள் தானும், நாம் செலுத்த வேண்டிய ஆராதனைகளைச் செலுத்துவதற்காக இதர தேவதைகளை லோகமடங்கலும் பரப்பிவைத்துள்ளான்.

அந்தத் தேவதைகளுக்கு ஸ்வதந்திரமாக ஒரு சக்தியுண்டென்று நினையாதீர்கள்.

சரீர பூதர்களான அந்தத் தேவதைகளின் வழியாக எம்பெருமானை ஆச்ரயிப்பதிற்காட்டிலும் ஸா

க்ஷாத்தாகவே அவனை ஆச்ரயித்தல் அழகியது. அப்படிப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள் இப்போது இவ்வுலகில் நிரம்பியுள்ளார்கள்.

நீங்களும் எம்பெருமானையே அநந்ய ப்ரயோஜநராய்க் கொண்டு ஆச்ரவித்து உஜ்ஜீவியுங்கோள் என்றாராயிற்று.

ஞாலத்து வெறுப்பு இன்றி = “இருள் தருமா ஞாலத்துள் இனிப்பிறவி யான் வேண்டேன்” என்றும்

“ஆதலால் பிறவிவேண்டேன்” என்றும் கொடுவுலகம் காட்டேன்” என்றும் இவ்வுலகில் வெறுப்புத் தோன்றப் பேசுமவர்கள் தாமே

“எம்மாவீட்டுத் திறமும் செய்யும்” என்றும் “

இச் சுவைதவிர யான் போய் இந்திரலோகமாளுமச்சுவை பெரினும் வேண்டேன்” என்றும்

சொல்லும்படியிருக்கையாலே ஞாலத்தில் வெறுப்பு இல்லாமை யுண்டு.

—————–

***-பகவத் பக்தர்கள் இருவகைப் படுவார்கள். பலவகைக் கைங்கரியங்களைச் செய்து போது போக்குவாரும்,

குணாநுபவத்திலே ஊன்றிப்போருவாரும், அப்படிப்பட்ட பக்தர்கள் பூமியெங்கும் பரந்தார்கள்;

மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-

பதவுரை

வேதம் புனிதம் இருக்கை

வேதத்தினுள் பரமபவித்திரமான புருஸூக்தம் முதலியவற்றை
நாவில் கொண்டு

நாவினால் உச்சரித்துக்கொண்டு
ஞானம் விதி பிழையாமே

பக்திமார்க்கம் தவறாதபடி
பூவில்

மலரோடு கூடின
புகையும்

தூபமும்
விளக்கும்

தீபமும்
சாந்தமும்

சந்தனமும்
நீரும்

திருமஞ்சனமும்
மலிந்து

பூர்ணமாகக்கொண்டு
அச்சுதன் தன்னை

எம்பெருமானை
மேவி

அடைந்து
தொழும்

ஸாங்கரியம் செய்கிற
அடியாரும்

அடியார்களையும்
பகவரும்

குணாநுபவ ரிஷ்டர்களையும்
உலகு மிக்கது

இவ்வுலகமானது அதிகமாகக் கொண்டது (ஆன பின்பு)
நீங்கள்

நீங்கள்
மேவிதொழுது.

(அவர்களை) விரும்பி வணங்கி
உய்ம்மின்

உஜ்ஜீவியுங்கள்.

* வேதப்புனிதவிருக்கையென்று தொடங்கி * மேவித் தொழுமடியாகும் என்னுமளவும் கைங்கரிய நிஷ்டர்களைச் சொல்லுகிறது.

பகவரும் என்று குணாநுபவ நிஷ்டர்களைச் சொல்லுகிறது.

(வேதப்புனித விருக்கை) வேதங்களுள் புனிதமான  ருக்குகளென்று புருஷ ஸூக்தம் நாராயணாநுவாகம் முதலியவற்றைச் சொல்லுகிறது.

ஞான விதியென்று பகவத் கீதையைச் சொல்லுகிறதாக ஸம்பிரதாயம்,

ஆசார்ய ஹ்ருதயத்தில் மூன்றாம் பிரகரணத்தில் “பகவன் ஞான விதி பணி வகையென்று இவரங்கீகரத்தாலே அதுக்கு உத்கர்ஷம்” என்ற சூர்ணிகை காண்க.

“தொடர்ந்து அடிமை செய்யும் இளையபெருமாளையும், கிடந்த விடத்தே கிடந்து குணாநுபவம் பண்ணும் ஸ்ரீபரதாழ்வானையும் போலே யிருப்பாரே யாய்த்து லோகமடைய” என்ற நம்பிள்ளை யீடுகாண்க.

——————

***நீங்கள் ஆராதிக்கிற தேவதைகளும் எம்பெருமானை ஆச்ரயித்தே தம் பதவிகளைப் பெற்றார்கள்;

நீங்களும் அவர்களைப் போலே எம்பெருமானை ஆச்ரயித்துப் பிழையுங்கோளென்கிறார்.

மிக்க உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திரு மூர்த்தி
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்!
ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே.–5-2-10-

 

பதவுரை

நக்கன் பிரானோடு

சிவபிரானும்
அயனும்

பிரமனும்
இந்திரனும்

தேவேந்திரனும்
முதல் ஆக

முதலாக
தொக்க

திரண்ட
அமரர் குழாய்கள்

தேவவர்க்கங்கள்
கண்ணன் திருமூர்த்தி

எம்பெருமானது திருவடிவத்தை
மேவி

ஆசிரயித்து
மிக்க உலகுகள் தோறும்

பரம்பின் லோகங்கள் தோறும்
எங்கும்

எவ்விடத்தில்
பரந்தன

நல்ல பதவிகளைப்பெற்று வாழ்ந்தான்;
தொண்டீர்

தொண்டர்களே!
ஒக்க

(நீங்களும்) அவர்களோடொக்க
தொழ சிற்றிர் ஆகில்

(எம்பெருமானைத்) தொழவல்லீர்களாகில்
கலியுகம்

கலியுகதோஷம்
ஒன்றும்

சிறிதும்
இல்லை

உங்களுக்கு இல்லாதபடியாரும்.

: (நக்ந:) என்னும் வடசொல் நக்கனெனத் திரிந்து, அரையில் ஆடையில்லாதவனென்று பொருள்படும்;

இது சிவபிரானுக்கு வழங்கும் நாமங்களுள் ஒன்றாகும்.

சிவனும் பிரமனும், இந்திரனும் முதலாகத் திரண்ட தேவஸமூஹங்களானவை கண்ணபிரானான ஸ்ரீமந்நாராயணனுடைய

அஸாதாரண விக்ரஹத்தை ஆச்ரயித்து, அதன் பலனாக லோகங்கள்தோறும் பரந்த செல்லமுடையா யிருக்கிறார்கள்.

அதாவது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதவியிலேயிருக்கின்றார்களென்றவாறு.

தொண்டீர்! ஒக்கத் தொழகிற்றிராகில் = தேவதாந்தா சேஷபூதரான நீங்களும் அவர்களைப்போலே

எம்பெருமானையே தொழவல்லீர்களாகில், கலியுக மொன்றுமில்லையாகும்;

அதாவது – உங்களுக்கு தேவதாந்தர ப்ராவண்யமாகிற நீசத் தனத்திற்கு ஹேதுமான கலியுக தோஷம் தொலையுமென்கை.

—————-

***-இத் திருவாய்மொழியான தன்னைக் கற்பவர்களது நெஞ்சிலுள்ள ஸகல விதமான அழுக்கையுமறுக்குமென்று பயலுரைத்துத் தலைக்கட்டுகிறார்.

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11-

 

பதவுரை

தன் அடியார்க்கு

தன் அடியவர்களுக்கு
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே

கலியுகதோஷம் ஒன்றும் தட்டாதபடி
அருள் செய்யும்

கிருபை பண்ணுகின்ற
மலியும் சுடர் ஒளி மூர்த்தி

மிகுந்த பிரகாசம் பொருந்திய தேஜோமயு திவ்யவிரஹதிதையுடையவனும்
மாயம்  பிரான்.

வேஷ்டி தங்களையுடைய ப்ரபுவுமான
கண்ணன் தன்னை

எம்பெருமானைக் குறித்து
கலி வயல்

நிறைந்த வயல்களையுடைய
தென் திசை

தென் திசையிலுள்ள
குருகூர்

திருநகரிக்குத்தலைவரான
காரி மாறன் சடகோபன்

ஆழ்வார்
புகழ்

கீர்த்திமிக்க
ஆயிரத்து பத்து

ஆயிரத்தினுள் இத்திருவாய்மொழி
உள்ளத்தை

(கற்பாருடைய) நெஞ்சை
மாசு அருக்கும்

கல்மஷமற்றதாகச் செய்

தேவதாந்தரங்களிலுண்டான பரத்வ ஜ்ஞானமும், எம்பெருமானைப் பணிந்தும் அற்பப் பிரயோஜனங்களில் விருப்புற்றிருக்கையும் முதலியன மாசு ஆகும்; இத்திருவாய்மொழியை ஓதவே அவை தீருமென்கிறது.

கலியுகமொன்று மின்றிக்கே – . எம்பெருமானை இடைவிடாது. நெஞ்சிலே கொண்டிருக்கை க்ருத்யுகம்,

அப்படிக் கொண்டிருக்கமாட்டாமை கலியுகம் என்றபடி.

கலியுகமொன்று மின்றிக்கே தன்னடியார்க்கு அருள்செய்கையாவது – தன்னை இடைவிடாது சிந்திக்களல்லராம்படி அநுக்ரஹித்தல்.

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: