***- ஸகலஜகத்காரணபூதனான ஸர்வேச்வரன் திருநகரியிலே எளியனாய்க் காட்;சி தந்தருளா நிற்க,
வேறு தெய்வத்தைத் தேடி யோடுகிறீர்களே! இது என்ன அறிவு கேடு! என்று வெறுக்கிறார்.
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-
பதவுரை
தேவும் |
– |
தேவர்களும் |
உலகும் |
– |
அவர்களுக்கிருப்பிடமான உலகங்களும் |
உயிரும் |
– |
மனிதர் முதலிய பிராணிகளும் |
மற்றும் யாதும் |
– |
மற்றுமுள்ள எல்லாமும் |
ஒன்றும் இல்லா அன்று |
– |
சிறிதுமில்லாத அந்த ஊழிக்காலத்திலே |
நான்முகன் தன்னொடு |
– |
பிரமனையும் |
தேவர் |
– |
தேவதைகளையும் |
உலகு |
– |
உலகங்களையும் |
உயிர் |
– |
பிராணிகளையும் |
படைத்தான் |
– |
படைத்தவனும் |
நின்ற |
– |
சாஸ்த்ரங்களில் நிலைத்திருப்பவனுமான |
ஆதி பிரான் |
– |
ஆதிநாதனென்றும் எம்பெருமான் |
குன்றம் போல் மணிமாடம் நீடு |
– |
மலைபோன்ற திருமாளிகைகள் உயர்ந்திருக்கப்பெற்ற |
திருகுருகூர் அதனுள் |
– |
திருநகரியிலே |
நிற்க |
– |
காட்சிதந்து கொண்டிருக்கும் போது |
மற்றைதெய்வம் |
– |
வேறுதெய்வங்களை |
நாடுதிர் ஏ |
– |
தேடியோடுகின்றீர்களே. |
எம்பெருமானுடைய ஜகத்காரணத்வத்தை மூதலிப்பன முன்னடிகள்.
ஒன்றும் என்பதை மேலுள்ள தேவும் இத்யாதிகளுக்கு விசேஷணமாக அந்வயிப்பதும்,
“தேவுமுலகு முயிரும் மற்றம்யாதும் ஒன்றும் இல்லாவன்று” என்று அந்வயித்து உரைப்பதும் பொருந்தும்.
விசேஷணமாக அந்வயிப்பதனால், ஒன்றுதல்-பொருந்துதலாய், அதாவது லயிப்பதாய், என்கிறபடியே,
கார்யத்திற்குக் காரணத்திலே லயமாகச் சொல்லுகையாலே காரண பூதனான தன்பக்கலிலே சென்று ஒன்றுகிற (அதாவது, லயமடைகிற)
தேவும்-தேவஜாதியும்,
உலகும்-அத்தேவர்களின் இருப்பிடங்களும்,
உயிரும்-மனிசர் முதலிய பிராணிவர்க்கமும்,
இப்படி பிரித்துப் பிரித்துச் சொல்லவேண்டாதபடி எதுவுமே இல்லாமலிருந்த ஊழி காலத்திலே முந்துற முன்னம் நான்முகனைப் படைத்து,
அவன் வழியாக தேவ ஜாதியையும் அவர்களுக்கு இருப்பிடமான லோகங்களையும்
இவ்வருகே சேதந வர்க்கங்களையும் ஸ்ருஷ்டித்தானாயிற் எம்பெருமான் என்று கொள்க.
இங்கே நம்பிள்ளையீட்டில் விநோமாக அருளிச்செய்வதொரு ஸ்ரீஸூக்திகாண்மின்;-“ஸர்வேச்வரன் சதுர்முகனை ஸ்ருஷ்டித்தான்; சதுர்முகன் பஞ்சமுகனை ஸ்ருஷ்டித்தான்; ஆக இதுதான் பஹூமுகமாயிற்றுக் காணும்.”
ஆக இப்படிபட்ட ஸர்வேச்வரன் உங்களுக்குக் கண்ணாலே கண்டு ஆச்ரயிக்கலாம்படி, மலை போன்ற மணிமாடங்கள்
உயர்ந்திருக்கிற திருநகரியிலே ‘நம்மைக் காணவருவார் ஆரேனுமுண்டோ?’ என்று நின்று நின்று எதிர்பார்த்திருக்க,
வேறேயொரு தெய்வத்தை அந்தோ! தேடித்திரிகின்றீர்களே!
“***”= வாஸூதேவம் பரித்யஜய யோந்யம் தேவமுபாஸதே. த்ருஷிதோ ஜாஹ்நீதீரே கூபம் கநதி துர்மதி’ என்கிற ச்லோகம் இவ்விடத்திற்குப் பொருந்த அநுஸந்திக்கத்தகும்.
தாஹித்தவன், கங்கை பெருகியோடுமிடத்திலே அதிலே அள்ளிக் குடித்துத் தன் விடாய் தீரமாட்டாதே
அதன் கரையிலே குந்தாலிகொண்டு கிணறுகல்ல முயலுமா போலே இருந்தது இவர்களுடையபடி.
திருமாலையில் “கேட்டிரே நம்பிமீர்காள்! கெருடவாகனனும் நிற்கச், சேட்டைதன் மடியகயத்துச் செல்வம்பார்த் திருக்கின்றீரே.” என்ற பாசுரமும் இங்கு நினைக்கத்தகும்.
திருக்குருகூர்-இது பாண்டிநாட்டுத் திருப்பதிகள் பதினெட்டில் ஒன்று; ஆழ்வார் திருநகரியென வழங்கப்படுமது. குருகாபுரி என்பது வடமொழிவழக்கு.
——————–
***- உலகர்களே! நீங்கள் எந்த தெய்வங்களைப் பணிகின்றீர்களோ, அந்த தெய்வங்களோடு உங்களோடு ஒரு வாசியில்லை;
நீங்கள் எப்படி கார்யபூதர்களோ அப்படியே அவர்களும் கார்யபூதர்களேயல்லது காரணபூதர்களல்லர்;
ஆகையாலே, அவர்களை நீங்கள் ஆச்ரயிப்பது போல உங்களையும் அவர்கள் ஆச்ரயிக்கலாம்.
உங்களைக் காட்டிலும் அவர்களுக்குச் சிறிது ஞானமும் சக்தியும் ஏறியிருக்கிறது என்கிற இவ்வளவே யல்லது வேறொரு வாசி யில்லை கிடீர்;
உங்களோடு அவர்களோடு வாசியற அனைவர்க்கும் காரணபூதனான
ஸ்ரீமந்நாராயணன் காட்சி தந்தருளுமிடமாகிய திருநகரியைப் பணியுங்கோளென்கிறார்.
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2-
பதவுரை
பல் உலகீர் |
– |
பலவகைப்பட்ட உலகர்களே! |
நீர் |
– |
நீங்கள் |
நாடி |
– |
தேடி |
வணங்கும் |
– |
வணங்கும்படியாகவுள்ள |
உம்மையும் |
– |
உங்களையும் |
முன் படைத்தான் |
– |
முன்னம் படைத்தவனும் |
வீடு இல் சீர் |
– |
நித்யஸித்தங்களான திருக்குணங்களிலுண்டான |
புகழ் |
– |
புகழையுடையனுமான |
ஆதி பிரான் அவன் மேவி உறைகோயில் |
– |
ஆதிநாதன் விரும்பி யெழுந்தருளியிருக்குமிடமான |
மாடம் மாளிகை சூழ்ந்து அழகு ஆய திரு குருகூர் அதனை |
– |
மாடமாளிகைகளால் சூழப்பட்டு அழகு வாய்ந்த திருநகரியை |
பாடி ஆடி |
– |
பாடுதலும் ஆடுதலும் செய்து கொண்டு |
பரவி |
– |
துதித்து |
பரந்து செல்மின்கள் |
– |
எல்லாவிடத்திலும் பரவி நடவுங்கள். |
நீர்நாடிவணங்கும் தெய்வமும்-நாடுதலாவது தேடுதல்; உங்களால் தேடிவணங்கப்படுகிற தெய்வங்களையும் என்றபடி.
சாஸ்த்ரங்களானவை என்று பரமபுருஷனைத் தேடவேண்டு மென்று சொல்லா நிற்க
அந்தோ! நீங்கள் காபுருஷர்களைத் தேடி யோடுவதே! என்று கர்ஹிக்கிறபடி.
எம்பெருமான் உங்களைத் தேடா நிற்க நீங்கள் நீசர்களைத் தேடி யோடாநின்றீர்களே! என்றுமாம்.
இங்கே நம்பிள்ளையீடு;-“கள்ளரைத் தேடிப் பிடிக்குமா போலே தேடிப் பிடிக்க வேண்டி யிருக்கிறபடி; ஆடு திருடின கள்ளாரிறே இவர்கள் தாம்;. -ஜீவ ஹிம்ஸையையே ஆராதனமாகக்கொண்டிருக்கிற ஷூத்ர தெய்வங்களென்று காட்டினபடி.
வீடு இல் சீர்புகழ்=சீர் என்பதற்குச் செல்வம் என்கிற பொருளும் குணம் என்கிற பொருளும் உண்டு.
ஒருநாளுங் குறையாத செல்வங்களையுடையவன் என்றும், நித்ய ஸித்தங்களான திருக் குணங்களையுடையவன் என்றும் கொள்க.
அவன்மேவியுறை கோயில் என்றவிடத்து நம்பிள்ளையீடு;-“அவன் பரம பதத்தில் உள்வெதுப்போடே போலே காணுமிருப்பது; ஸம்ஸாரிகள் படுகிற க்லேசத்தை அநுஸந்தித்து ‘இவை என்படுகிறனவோ’ என்று திருவள்ளத்தில் வெறுப்போடேயாயிற்று அங்கிருப்பது…….
‘பரமபத்திலும் படுகிற க்லேசத்தை யநுஸந்தித்துத் திருவுள்ளத்தில் வெதுப்போடேயாயிற்று எழுந்தருளியிப்பது என்று பட்டர் அருளிச்செய்ய •••
ஆச்சானும் பிள்ளை யாழிவானும் இத்தைக்கேட்டு பரமபதத்திலே ஆஙந்த நிர்ப்பானாயிருக்கிற விருப்பிலே திருவுள்ளத்திலே ஒரு வ்யஸகத்தோடே யிருந்கானென்கை ஒசிதமோ?” என்றார்கள் -என்று பண்டிதரென்கிறவர் வந்து விண்ணப்பஞ்செய்ய
என்றது குணப்ரகரணத்திலேயோ தோஷ ப்ரகரணத்திலேயோ வென்று கேட்கமாட்டிறடறிலீரோ? இது குணமாகில் குணமென்று பேர் பெற்றவற்றில் அங்கில்லாததொன்றுண்டோ என்றருளிச்செய்தார்.”
இந்த ஐதிஹ்யம் இங்கு அருளிச்செய்ய ப்ரஸக்தி ஏதென்னில் மூலத்தில் “அவன் மேவியுறைகோயில்” என்றுள்ளது
மேவியுறைதலாவது ஆசையோடு வாழ்தல் பரமபதத்தில்பட்ட துக்கம் இங்குத் தீரப்பெறுவோமென்று ஆசைப்பட்ட வாழ்தலென்றே பொருள் சொல்லவேண்டியிருத்தலால்;
பரமபதத்திலும் பெருமானுக்கு துக்க ப்ரஸக்தி யுண்டோ வென்று சங்கை யுண்டாகுமாதலால் அதைப் பரிஹரிக்க ஐதிஹ்யமருளிச் செய்தபடி.
எம்பெருமானை ஸமஸ்த கல்யாண குணாத்மகன் என்றும் உயர்வற வுயர் நலமுடையவன் என்றும் கூறுகின்றவர்கள்
ஒன்றெழியாமே ஸகல குணங்களும் அப்பெருமானிடத்தே ஸமஸ்த கல்யாண குணாம்ருதோதி என்று சொல்வதற்குக் குறை நேர்ந்ததாகும். துக்கப்படுவதென்பது கல்யாணகுணமன்றே அது ஹேய குணமாயிற்றே என்று சிலர் கலங்குவர்கள்
ஸ்வார்த்தமான சோகம் ஹேயமேயன்று அதுதான் சிறந்த குணமெனப்படும்.
ஆனதுபற்றியே இராமபிரானுடைய சுப ப்ருசம் பவதி துஃக்கித என்கிறார்கள் .
எம்பெருமானாரும் ஸ்ரீபாஷ்யத்தில் ••• என்றருளிச் செய்தார்.
ஸஹஸ்ரநாமத்திலே விகர்த்தா என்னும் திருநாமத்தின் பாஷ்யத்திலே இதன் கருத்து )
தமக்காக இன்பதுன்பங்கள் இல்லாமலிருந்தும் பிறர் இன்பதுன்பங்களை அநுபவிப்பதனால் தாம் இன்பதுன்பங்களையடைந்து விகாரப்படுகிறவர்
இந்த விகாரம் பிறாரிடத்திலுள்ள அன்புபற்றியதாதலால் ஈச்வரனுக்குக் குற்றமாகாது என்று ஸ்பஷ்டமாகவே அருளிச்செய்தார்.
எம்பெருமான் அனுபவிக்கிறதாகச் சொல்லப்படுகின்ற துக்கம் மெய்யானதா பொய்யானதா என்கிற விசாரமே அவசியமற்றது.
எம்பெருமானென்று ஒருவனுளனென்றும் அவன்றன் சமஸ்த கல்யாணகுணநிதியென்றும் இசைகின்றவர்கள்
அப்பெருமானைப் பாதுக்க துக்கியாக இசைந்தேதீரவேணும்.
இக்குணம் அவனுக்குப்பொருந்தாது என்பவர்கள் நிர்க்குணப்ரஹ்மவாதிகளேயாவர்.
முதற்பாட்டில் “திருக் குருகூரதனுள்; நின்றவாதிப்பிரான்” என்று எம்பெருமானளவுஞ்சென்று பேசின ஆழ்வார்
இப்பாட்டில் “திருக்குருகூரதனைப் பாடியாடிப் பரவிச்சென்மின்கள்” என்கிறார்
எம்பெருமானிற்காட்டிலும் அவன் உகந்தருளினவிடமே பரமப்ராயம் என்று காட்டினபடி.
திவ்யதேசத்திலே சென்று சேர்ந்து சேவிப்பதிலுங்காட்டில் வழிப்போக்குத்தானே மிக இனிதாகையாலே பாடியாடிப் பரவிச்சென்மின்கள் என்கிறார்.
பரந்தே என்றவிடத்து ஈடு “பெரிய திருநாளுக்கு —(ஸர்வதோதிக்க) மாக வந்தேறுமா போலே பாடி யாடிப் பரவிச்சென்மின்கள்”.
—————
***- உலகங்களை ரகூஷித்தருள்வதற்காக எம்பெருமான் செய்து போரும் செயல்களை
ஆராய்ந்து பார்த்தாலும் இவனே பரம புருஷனென்று அறியப்போது மென்கிறார்.
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3-
பதவுரை
பரந்த |
– |
விஸ்தீர்ணமான |
தெய்வமும் |
– |
தேவதாவர்க்கங்களையும் |
பல் உலகம் |
– |
(அவர்களுக்குப்) பல உலகங்களையும் |
படைத்து |
– |
ஸ்ருஷ்டித்தும் |
அன்று |
– |
பிரளயம் வந்த காலத்திலே எல்லாவற்றையும் ஒரு சேர விழுங்கி |
கரந்து |
– |
உள்ளே யொளித்து வைத்தும் |
உமிழ்ந்து |
– |
பிறகு வெளிப்படுத்தியும் |
கடந்து |
– |
(மஹாபலிடத்தில் தானம் பெற்று) அளந்து கொண்டும் |
இடந்தது |
– |
(மஹாவராஹமாய்) இடந்தெடுத்தும் ஆக இப்படிச்செய்த காரியங்களை |
கண்டும் |
– |
பிரமாணங்களாலே கண்டறிந்து வைத்தும் |
தெளிய கில்லீர் |
– |
தெளியமாட்டாத |
பல் உரலகீர் |
– |
பலவகைபட்ட உலகத்தவர்களே! |
அமரர் |
– |
தேவர்கள் |
சிரங்களால் வணங்கும் |
– |
தலையால் வணங்கப் பெற்ற |
திருகுருகூர் அதனுள் |
– |
திருநகரியில் எழுந்தருளியிருக்கிற |
பரன் |
– |
பரம புருஷனுக்கு |
திறம் அன்றி |
– |
பிரகாரமாயல்லது |
மற்று |
– |
வேறு ஸ்வதந்திரமாயிருப்பதொரு |
தெய்வம் இல்லை |
– |
தேவதை கிடையாது |
பேசுமின் |
– |
அப்படிப்பட்ட தேவதையொன்று உண்டாகில் சொல்லுங்கள். |
தேவ வர்க்கம் முதற்கொண்டு பூவுலகங்களையும் படைத்ததும்
மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம் உண்ணா பெருவெள்ள முண்ணுமல் தான்விழுங்கி உய்யக் கொண்டதும்,
பிறகு வெளிநாடுகாணப்புறப்படவிட்டதும்,
வாமனவதாரம் பண்ணி மூவடி நீரேற்றுப்பெற்று அளந்து கொண்டதும்,
மஹாவராஹமாய் அண்டபித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்துக் கொண்டதுமாகிய இத்தகைய செயல்களைக் கொண்டே
இவனே பர தேவதை என்று திண்ணமாக எண்ணலாயிருக்க, அந்தோ! தெளிவுபெற மாட்டிற்றிலீரே என்கிறர் முன்னடிகளில்.
எந்த தெய்வங்களை நீங்கள் சென்று பணிகின்றீர்களோ அந்த தெய்வங்களும் வந்து தலையாலே வணங்கும் திருக்குருகூரில்
பரத்வம் பொலிய நிற்கும் பெருமானுக்குச் சரீரமல்லாத தெய்வம் ஒன்றுண்டோ? *** என்னும்படியாக வன்றே ஸகல தெய்வங்களுமிருக்கின்றன.
ஸ்ரீமந் நாராயணனைப் போலே ஸ்வதந்த்ரமான தெய்வம் ஒன்றுண்டாகில் எடுத்துப் பேசுங்களென்களென்கிறார்.
—————
***- அநுமாநத்தாலே ஈச்வரனை ஸாதிக்கவிரும்புமவர்களும்
பசுபதியே ஸர்வேச்வரனென்று கூறுபவர்களுமான சிலரை இப்பாசுரத்தாலே நிராகரித்தருளுகிறார்.
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4-
பதவுரை
பேசநின்ற |
– |
உங்களால் பரதெய்வமாகப் பேசப்படுகின்ற |
சிவனுக்கும் |
– |
ருத்ரனுக்கும் |
பிரமன் தனக்கும் |
– |
(அவனது தந்தையான) பிரமனுக்கும் |
பிறர்க்கும் |
– |
மற்றுமுள்ள தேவதைகளுக்கும் |
நாயகன் அவனே |
– |
தலைவன் ஸ்ரீமந்நாராயணனே என்னுமிடத்தை |
கபாலம் நல் மோக்கக்து |
– |
கபாலமோக்ஷக்கதையினால் |
கண்டுகொண்மின் |
– |
தெரிந்துகொள்ளுங்கள் |
தேசம் |
– |
தேஜஸ்ஸுபொருந்திய |
மா |
– |
சிறந்த |
மதிள் சூழ்ந்து |
– |
மதில்களால் சூழப்பட்டு |
அழகு ஆய |
– |
அழகு பெற்றதான |
திரு குருகூர் அதனுள் |
– |
திருநகரியில் எழுந்தருளியிருக்கிற |
ஈசன் பால் |
– |
ஸர்வேச்வரன் விஷயத்திலே |
ஓர் அவம் பறைதல் |
– |
தப்பான பேச்சுக்களைப் பேசுவது |
இலிங்கியர்க்கு |
– |
லிங்கப்பிரமாண வாதிகளுக்கு |
என் ஆவது |
– |
என்னபலனைத்தரும்! |
இலிங்கியர்க்கு என்றது ஹேதுவாதிகளுக்கு என்றபடி, அநுமானத்தைக் கொள்பவர்களே ஹேதுவாதிகளாவர்கள்.
சப்த ப்ரமாணமான அந்த சாஸ்த்ரத்தின் முன்னே வேறு எந்த ப்ரமாணமும் நிற்கமாட்டாதாகையாலே
அந்த சாஸ்த்ரப்ரமாண விருத்தமாக இலிங்கியர் பேசுவது பொருளற்றது என்று நிரூபிக்கிறார்.
இலிங்கியர் – லிங்கவாதிகள், லிங்கமாவது ஹேது, அநுமாநமென்கை.
ஒரு காலத்திலே பரமசிவன் தன்னைப்போலவே பிரமனும் ஐந்து தலையுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குதற்கு இடமாயிருக்கின்ற தென்று கருதி “அவனது சிரமொன்றைக் கிள்ளியெடுத்துவிட, அக்கபாலம் அப்படியே சிவன் கையில் ஒட்டிக்கொள்ளுதலும் அவன் ‘இதற்கு என்னசெய்வது‘ என்று கவலைப்பட,
தேவர்களும் முனிவர்களும், ‘இப்பாவந்தொலையப் பிச்சையெடுக்க வேண்டும், என்றைக்குக் கபாலம் நிறையுமோ அன்றைக்கே இது கையைவிட்டு அகலும்‘ என்று உரைக்க,
சிவபிரான் பலகாலம் பல தலங்களிலுஞ்சென்று பிச்சையேற்றுக்கொண்டே வருந்தித் திரிந்தும் அக் கபாலம் நீங்காதாக,
பின்பு ஒருநாள் பதரிகாச்ரமத்தையடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயண மூர்த்தியை வணங்கி இரந்த போது
அப்பெருமான் அக்ஷயம் என்று பிக்ஷையிட உடனே அதுநிறைந்து கையைவிட்டு அகன்றது என்பது கபாலநன்மோக்க வரலாறு.
கொலை யுண்பவனும் கொலை செய்பவனுமான பிரமனும் உருத்திரனும் பரதெய்வமாக இருக்கத் தகுதியுடையரல்லரென்பது இக்கதையினால் தெற்றெனவிளங்கும்.
சிலர் சிவனுக்குப் பராம்யத்தையும் சிலர் பிரமனுக்குப் பாரம்யத்தையும் பேசுவதுண்டாதலால் ஆழ்வார் அதைத் திருவுள்ளம்பற்றிப் “பேசநின்ற சிவனுக்கும் பிரமன்றனக்கும்“ என்கிறார்.
‘பேசநின்ற‘ என்பது சிவனுக்குப் போலவே பிரமனுக்கும் அடைமொழியாகத்தகும்.
சில மூலைகளிலே இவர்களுக்குப் பரத்வம் தோன்றும்படியான வசநவ்யக்திகள் இருந்தாலும்
ஸ்ருஜதஸ் தஸ்ய தேவஸ்ய பத்மம் ஸூர்யஸமப்ரபம், நாப்யாம் விநிஸ்ஸ்ருதம் பூர்வம் தத்ரோத்பந்ந, பிதாமஹ, * என்றும்,
யத் தத் பத்மமபூத் பூர்வம் தத்ர ப்ரஹ்மா வ்யஜாயத, ப்ரஹ்மணச் சாபி ஸம்பூதச் சிவ இத்யவதார்யதாம் * என்றும்,
ப்ரஹ்மண, புத்ராய ஜ்யேஷ்டாய ச்ரேஷ்டாய * என்றும்,
மஹாதேவஸ் ஸர்வமேதே மஹாத்மா ஹுத்வா ஆத்மாநம் தேவதேவோ பபூவ*. என்றுமுள்ள நூற்றுக்கணக்கான பிரமாணங்களுக்குச் சேர நிர்வஹிக்கவேண்டுகையாலே
அப்படி நிர்ணயித்தருளின பரம வைதிகரான ஆழ்வார் “சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகனவனே“ என்று துணிந்து அருளிச் செய்கிறார்.
இங்கே நம்பிள்ளையீட்டு ஸ்ரீஸூக்திகள் காண்மீன்-
“நீங்கள் ஈச்வர்ர்களாக சங்கித்தவர்களிருவரும் நின்ற நிலை கண்டதே,
ஒருவன் தலைகெட்டு நின்றான், ஒருவன் ஒடுகொண்டு ப்ராயச்சித்தியாய் நின்றான்.
ஓட்டையோடத்தோடு ஒழுகலோடமாய், உங்கள் குறைதீரப் பற்றுகிற நீங்ள் உங்களிலும் பெருங்குறை வாளரையோ பற்றுவது?
‘பாதகியாய் பிக்ஷைபுக்குத் திரிந்தான்‘ என்று நீங்களே சொல்லி வைத்து அவனுக்குப் பரத்வத்தைச் சொல்லவோ?
ஒருவனுடைய ஈச்வரத்வம் தலையோடே போயிற்று. மற்றவனுடைய ஈச்வரத்வம் அவன் கையோடேயென்று காட்டிக்கொடுக்கிறார்
(கண்டு கொண்மின்) உத்தம் அகங்களிலே நீங்கள் எழுதியிட்டுவைத்த க்ரந்தங்களைப் பார்த்துக் கொள்ள மாட்டிகோளோ முன்னே நின்று பிதற்றாதே யென்கிறார்.“
தேசம் – சேஜஸ் என்ற வடசொல்திரிபு. தேசு பொலிந்த திருமதிளாலே சூழப்பட்டு அழகாய திருநகரிலே நிற்கிற ஸர்வேச்வரன் பக்கலிலே குறை கூறும்படியான தௌர்ப்பாக்யமுண்டாயிற்றே! என்று வெறுக்கிறார்.
——————-
***- லைங்க புராணம் முதலாகச் சில குத்ருஷ்டி ஸ்ம்ருதிகளையும்
பாஹ்ய ஸ்ம்ருதிகளையும் பிரமாணமாக்க் கொண்டு பேச வந்தவர்களை நிராகரித்தருளுகிறார்.
இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5-
பதவுரை
இலிங்கத்து இட்ட புராணத்தீரும் |
– |
லிங்கமாஹாத்மிய விஷயமாகக் கல்பிக்கப்பட்ட புராணத்தைப் பற்றினவர்களாயும் |
சமணரும் |
– |
ஜைநர்களாயும் |
சாக்கியரும் |
– |
பௌநர்களாயும் |
வலிந்து வாது |
– |
விதண்டாவாதம் செய்பவர்களாயுமிருக்கிற நீங்களாகவும் |
மற்றும் நும் தெய்வமும் ஆகிநின்றான் |
– |
தேவதாந்தரங்களாகவும் (இப்படி ஸர்வசரீரகனான) |
பொலிந்து நின்ற பிரான் |
– |
பொலிந்து நின்ற பிரானென்கிற எம்பெருமானை, |
செந்நெல் |
– |
செந்நெற்பயிர்களானவை |
மலிந்து |
– |
ஸம்ருத்திபெற்று |
கவிரி வீசும் |
– |
சாமரை வீசப்பெற்ற |
திரு குருகூர் அதனுள் |
– |
திருநகரியிலே |
கண்டீர் |
– |
ஸேவியுங்கோள் |
ஒன்றும் |
– |
எள்ளளவும் |
பொய் இல்லை |
– |
அஸத்யமில்லை, |
போற்றுமின் |
– |
துதியுங்கோள் |
புராணங்களானவை ராஜஸங்களென்றும் தாமஸங்களென்றும் ஸாத்விகங்களென்றும் பாகுபாடுற்றிருக்கின்றன.
அக்நேச்சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரதீர்த்திதம், ராஜஸேஷு சமாஹாத்ம்யம் அதிகம் ப்ரஹ்மணோவிது, ஸாத்விகேஷ்வத கல்பேஷு மாஹாத்ம்யம் அதிகம் ஹரோ ஸங்கீர்ணேஷு ஸரஸ்வத்யா, பித்ரூணாம் ச நிகத்யதே.
(தாமஸகல்பங்களில் அக்நியினுடையவும் சிவனுடையவும் மாஹாத்மிபத்தையும், ராஜஸகல்பங்களில் நான்முகனுடைய மாஹாத்மியத்தையும், ஸாத்விககல்பங்களில் பித்ருக்களினுடையவும் ஸரஸ்வதியினுடையவும் மாஹாத்மியத்தையும் பேசியிருப்பதாக மஹர்ஷிகளே கூறிவைத்தார்கள்.
ஸ்ரீவிஷ்ணுபுராணம் எப்படி அவதரித்திருக்கின்றதென்பதைச் சிறிது உற்றுப்பார்க்கவேணும்,
யந்மயம் சஜகத் ப்ரஹ்மந் யதச்சைதச் சராசரம், லீநமாஸீத் யதா யத்ர லயமேஷ்யதி யத்ர ச. * என்று பொதுவிலே கேள்விகேட்க,
விஷ்ணோஸ் ஸகாஸாத் உத்பூதம் ஜகத் த்த்ரைவ ச ஸ்திகம், ஸ்திதிஸம்யம கர்த்தாஸௌ ஜகதோஸ்ப ஜகச் ச ஸ. * என்று விடை அழகாக அவதரித்திருக்கின்றது.
இப்படி யல்லாமல், எருமையை யானையாக்க் கவிபாடித்தரவேணு மென்பாரைப் போலே
லிங்கத்துக்குப் பெருமையிட்டுச் சொல்லவேணுமென்று கேள்வியாய், அதன்மேற்பிறந்த்து லிங்கபுராணமாகையாலே
இலிங்கத்து இட்ட புராணத்தீரும் என்று ஆழ்வார் மருமத்தை வெளியிட்டுப் பேசியிருளினாராயிற்று.
வேதபாஹ்யா, ஸ்ம்ருதயோ யாச் ச காச் ச குத்ருஷ்டய, ஸர்வஸ் தா நிஷ்பலா, தமோநிஷ்டாஹி தா, ஸ்ம்ருகா. * என்று மநு மஹர்ஷி சொல்லிவைத்ததும் அறியத்தக்கது.
இப்படிப்பட்ட பாஹ்யகுத்ருஷ்டிமத நிஷ்டர்களை விளித்து, ‘நீங்களும் நீங்கள் தொழுகிற தெய்வங்களும் அவனேயாகி நின்றான்‘ என்று இங்கு ஆழ்வார் அருளிச்செய்வது “***“ – இத்யாதி ப்ரமாணங்களை உட்கொண்டாம்.
சிவபிரான் திரிபுரமெரித்த வரலாற்றை நன்குணர்ந்தால் ஒவ்வொரு தேவதைக்கும் எம்பெருமானே உயிராகி நிற்பவன் என்பது புலனாகும்,
இப்படி ஸர்வாந்தராத்மாவாக இருக்கும் ஸர்வேச்வரன் ப்ரத்யக்ஷபூதனல்லன் என்று கண்ணழிவு சொல்லவொண்ணாதபடி
திருநகரியிலே ஸந்நிஹிதனாய், பரமபத்த்திலுங்காட்டில் இங்கே தன் திருக்குணங்கள் நன்கு விளங்கப் பெற்றதனால்
பொலிந்து நின்ற பிரானென்று திருநாமம் அணிந்து விளங்கும் பெருமானை ஸேவித்து, நாம் உபபாதிக்கும் எல்லாக்
குணங்களையும் அந்த்த் திருமூர்த்தியிலே அநுபவித்து மங்களாசாஸநம் பண்ணுங்கோளென்கிறார் பின்னடிகளால்.
——————
***- ஸ்ரீமந்நாராயணனே ஸர்வேச்வரனாகில் அவன் தன்னையே ஆச்ரயிக்கும்படி எங்களைப் பண்ணாமல்
இதர தெய்வங்களைத் தொழுமாறு எங்களைச் செய்துவைத்தது ஏன்? என்று சிலர் கேட்பதாகக் கொண்டு
அவர்களுக்கு உத்தரமளிக்கும் பாசுரம் இது. உங்கள் பாபந்தான் அதற்குக் காரணம் என்று விடை கூறிற்றாகிறது.
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-
பதவுரை
மற்று ஓர் தெய்வம் |
– |
வேறோரு தேவதையை |
போற்றி பேண |
– |
துதிக்கு ஆதரிக்கும்படியாக |
புறத்து இட்டு |
– |
வேறுபடுத்தி |
உம்மை |
– |
உங்களை |
இன்னே |
– |
இப்போதுநீங்களிருக்கிற விதமாக |
தேற்றி வைத்தது |
– |
தேவதாந்தரங்களை நம்பும்படியாக (எம்பெருமான்) செய்து வைத்ததானது |
எல்லீரும் |
– |
எல்லாரும் (எதற்காகவென்றால்) |
வீடு பெற்றால் |
– |
முக்தியுடைந்தால் |
உலகு இல்லை என்றே |
– |
புண்யபாண விஷயமான சாஸ்த்ர மரியாதை குலைந்துபோகுமென்கிற காரணத்தாலேயாகும்; |
சேற்றில் |
– |
சேற்றுநிலத்தில் |
செந்நெல் |
– |
செந்நெற்பயிர்களும் |
கமலம் |
– |
தாமரையும் |
ஓங்கி |
– |
ஓங்கி வளரப்பெற்ற |
திரு குருகூர் அதனுள் |
– |
திருநகரியிலே எழுந்தருளியிருக்கின்ற |
ஆற்றல் வல்லவன் |
– |
பரமசக்தியுக்தனான பெருமானுடைய |
மாயம் கண்டீர் |
– |
மாயையேயாமத்தனை; |
அது |
– |
மாயையென்பதை |
அறிந்து |
– |
தெரிந்துகொண்டு |
அறிந்து |
– |
அது தப்பும் வழி அவன் திருவடிகளைப்பற்றுவதே’ என்றும் தெரிந்துகொண்டு |
ஓடுமின |
– |
திருவடியே சென்று சேரப் பாருங்கள். |
இப்பாசுரத்தில் எல்லீரும் வீடுபெற்றால் உலகில்லையென்றே என்பது தான் மருமமாகவுள்ளது.
ஆபாத ப்ரதீதியில் இதற்கு என்னபொருள் தோன்று மென்றால், எல்லாரும் ஸ்ரீமந்நாராயணனையே தொழப்பெற்றால்,
எல்லாருமே வீடுபெற்றுவிட்டால் லீலா விபூதி அடியற்றுப்போய்விடும்;
அங்ஙனம் போகாமைக்காகவே எம்பெருமான் உங்களை இதர தேவதாபஜநம் பண்ணி
ஸம்ஸாரிகளாய்த் தொலைந்துபோம்படி செய்துவைத்தான்-என்பதாகப் பொருள்தோன்றும்.
இப்படிப்பட்ட பொருள் எம்பெருமானுக்கு மிக்க அவத்யத்தை விளைக்குமதாகையாலே ஆழ்வார் இப்பொருள்பட அருளிச்செய்ய பரஸக்தியில்லை;
ஆறாயிரப்படி முதலிய வியாக்கியானங்களில் இங்ஙனே பொருள் நெஞ்சாலும் நினைக்கப்படவில்லை.
ஆனால், திருவாயமொழிக்கு ஸம்ஸ்க்ருதப் பதவுரையிட்டு (ஒன்பதாயிரப்படி இயற்றிய) தசோபநிஷத்பாஷ்யகாரரான ஸ்ரீரங்கராமாநுஜஸ்வாமி இப்பொருளையே பணித்து வைத்தார்; அவருடைய வாக்கியம் வருமாறு;-…..” என்பதாம்.
பிள்ளான் முதலிய ஸகலபூருவாசாரியார்களும் திருவுள்ளம்பற்றின பொருள் யாதெனில்;
உலகில்லையென்ற என்ற விடத்தில் உலகு என்பதற்கு சாஸ்த்ர மர்யாதை என்று பொருள்.
அவரவர்கள் பண்ணின புண்ய பாப ரூப கருமங்களுக்குத் தக்க படி பலன் கொடுப்பதென்ற ஒரு சாஸ்த்ர மரியாதை ஏற்பட்டிருக்கின்றது;
நீங்கள் முற்பிறவிகளில் பிரபலமான தீவினைகளைச் செய்திருந்தபடியால் அவற்றின் பலனாக இப்பிறவியில்
உங்களை கூஷூத்ரதேவதாபஜனம் பண்ணும்படியாக உபேஷித்திடலாயிற்று
கொடிய பாவங்கள் செய்த உங்களை புண்யாத்மாக்களைப்போலே ஸ்ரீமந்நாராயண ஸமாச்ரயணமே செய்யும்படி பண்ணி
விடுவதானால் அப்போது முன்சொன்ன சாஸ்த்மரியாதை அழிந்துவிடுமன்றோ.
அங்ஙனம் அழியாமைக்காகவே உங்களை இங்ஙனே நிறுத்திவைத்தது-என்கை.
வேதாந்ததேசிகனும் தார்பர்ய ரத்நாவளியில்; ….: என்று இவ்வர்த்தத்தையே வெளியிட்டருளினார்.
*மம மாயா துரத்யயா* என்று அவன்தானே கீதையில் சொல்லிவைத்தபடி தப்பவொண்ணாத இந்த மாயையை
அவன் திருவடிகளைக் கட்டியே தப்பப் பாருங்களென்கிறார் பின்னடிகளில்.
—————-
***- தேவதாந்தரங்களை ஆச்ரயிப்பதனால் என்னபலன் உண்டாகுமோ அது உங்களுக்கு இதுவரையில் தெரியாமையில்லை;
இந்நாள் வரையிலே கைகண்ட பலன்தானே இனிமேலும் காணக்கடவதாயிருக்கும்;
ஆனபின்பு கருளக்கொடியுடையானுக்கு அடிமை புகுவதுவே உறுவ தென்கிறார்.
ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.–4-10-7-
பதவுரை
ஓடி ஓடி |
– |
ஸம்ஸார சக்ரத்தில் ஓடியோடி |
பலபிறப்பும். பிறந்து |
– |
பலபல யோனிகளிலே பிறந்து |
பல் படி கால் |
– |
வம்ச பரம்பரையாக |
மற்று ஓர் தெய்வம் வழி ஏறி |
– |
தேவதாந்தரங்களை அந்தந்த நூல்களிலே சொல்லியிருக்கிறபடி |
பாடி ஆடி பணிந்து |
– |
பலபடியாக வழிபட்டு |
கண்டீர் |
– |
பலன் கைபுகுந்தமை கண்டீர்களே; |
வானவர் |
– |
தேவர்கள் |
கூடி |
– |
திரண்டு |
ஏத்த நின்ற |
– |
துதிக்கும்படி நின்ற |
திரு குருகூர் அதனுள் |
– |
திருநகரியிலே எழுந்தருளியிருக்கின்ற |
ஆடு புள்கொடி ஆதி மூர்த்திக்கு |
– |
ஆடுங்கருளக்கொடியுடைய ஆதிநாதப் பெருமாளுக்கு |
அடிமை புகுவது |
– |
அடியராயிருந்த தகுதி |
தேவதாந்தரபஜனத்தின் பலனை முன்னடிகளில் அருளிச்செய்கிறார்.
மற்றோர் தெய்வம் பாடியாடிப்பணிந்ததற்குப் பலன் ஓடியோடிப் பல பிறப்பும் பிறப்பதேயத்தனை என்றாராயிற்று.
…. ஸ்ரீப்ரஹ்மாணம் சிதிகண்டம் ச யாச் சாந்யா தேவதா: ஸ்ம்ருதா:இ ப்ரதிபத்தா ந ஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம்*
(பிரமன் சிவன் முதலிய தேவதைகளைச் தொழுவதனால் அற்பபலனே கிடைக்குமாதலால் விவேகிகள் அத்தெய்வங்களைத் தொழுவதில்லை) என்கிற பிராமாணத்தை அடியொற்றி ஆழ்வார் அருளிச்செய்கிறபடியால் இங்கே ஒரு ஆக்ஷேபமும் இடம்பெறாது.
நீங்கள் தொழநிற்கிற தெய்வங்களும் வந்து தொழுது தத்தம் வாய்படைத்த பலன் பெறுமாறு தோத்திரம் செய்யுமிடமான திருக்குருகூரிலே ஸேவை ஸாதிக்கின்ற பறவை யேறு பரம் புருடனுக்கு அடிமை செய்வதே ஸ்வரூப ப்ராப்த மென்றாராயிற்று.
ஆடுபுள்= ‘ஆடு’ என்று வெற்றிற்க்கும் பெயராதலால் வென்றிக் கருடன் என்னவுமாம்.
—————
***- மார்க்கண்டேயன் ருத்ரனை ஆராதித்துத் தன் அபேகூஷிதம் பெற்றானே யென்று
சிலர் சொல்ல, அந்தக் கதையின் மருமமும் கேட்கலாகாதோ வென்கிறார்.
புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர்தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8-
பதவுரை
அடிமையினால் |
– |
அடிமைசெய்து |
புக்கு |
– |
உள்புகுந்து |
தன்னை கண்ட |
– |
தன்னைக்காணப்பெற்ற |
மார்க்கண்டேயனவனை |
– |
மார்க்கண்டேயனென்று ப்ரஸித்த னானவனை |
அன்று |
– |
அக்காலத்தில் |
நக்கபிரான் |
– |
திகம்பரச்சாமியான ருத்ரன் |
உய்யக்கொண்டதும் |
– |
ரகூஷித்ததும் |
நாராயணன் அருளே |
– |
நாராயணனுடைய வெண்ணிறமாக அலர்கின்ற |
தட தாழை |
– |
பெரியதாழைகளை |
வேலி |
– |
வேலியாகவுடைய |
திருகுருகூர் அதனுள் |
– |
திருநகரியிலே |
மிக்க |
– |
மேம்பாடுடைய |
ஆதி பிரான் நிற்க |
– |
ஆதிநாதப்பெருமாளிருக்க |
மற்ற எ தெய்வம் |
– |
வேறு எந்த தேவதைகளை |
விளம்புதிர் |
– |
பேசுகிறீர்கள்? |
மருகண்டு வென்னும் முனிவர் பி;ள்ளை யில்லாக் குறையினால் பிரமனைக் குறித்துத் தவஞ் செய்தபோது, பிரமன் ப்ரத்யக்ஷமாகி ‘முனிவரே! அறிவில்லாமையும் அங்கஹீநத்வமும் பெரும் பிணியும் தீயகுணங்களுமுடையவனாய் பதினாறு பிராயமே வாழ்பவனான குமாரனை விரும்புகின்றீரோ? அன்றி, கூர்மையான புத்தியும் அழகு பொலிந்தவடிவமும் ஆரோக்கியமும் நற்குணமுமுடையவனாய்ப் பதினாறு பிராயமே வாழ்பவனான குமாரனை விரும்புகின்றீரோ? சொல்லும்’ என்ன,
முனிவர், ‘ஆயள் சிறிதேனும் அறிவும் அழகும் குணமும் சிறந்து பிணியிலானாகும் ஸத்புத்ரனையே வேண்டுகின்றேன்’ என்று தம் கருத்தைக்கூற,
நான்முகக்கடவுள் அவ்வாறே அநுக்ரஹித்தனர். :
(புராண பேதத்தால்இக்கதை சிறிது பேதப்படுவதுண்டு, பிராமனுடைய அநுக்ரஹத்தினால் ம்ருகண்டு முனிவதற்குப் பிள்ளை பிறந்த்தாகவும், அப்பிள்ளை ஒருநாள் வீதியில் விளையாடிக்கொண்டிருக்கிற்று, என்று ஆகாசவாணியொன்று செவிப்பட, அதனால் அத்தாய் தந்தையர் மிக்க வருத்தங்கொண்டதாகவும், அதுகண்ட மார்க்கண்டேயன் இதற்கு நீங்கள் வருந்தவேண்டா, இவ்வாபத்தை நானே போக்கிக்கொள்ளுகிறேன் என்று அவர்களைத் தேற்றித் தான் சிவபூஜை செய்யத் தொடங்கினென்பதாகவும் சில புராணங்கள் கூறும். )
அங்ஙனம் ஊழ்வினையாற் பதினாறுயிராயம்பெற்றுப் பிறந்த புத்திரனான மார்க்கண்டேயன் தனது அல்பாயுஸ்ஸைக்குறிதது வருந்திய தாய் தந்தையரைத் தேற்றித் தான் விதியைக் கடந்து வருவதாகச்சொல்லி, தீர்க்காயுஸ்ஸூ பெறுதற் பொருட்;டுத் தினந்தோறும் சிவபூஜை செய்துவருகையில்
ஒருநாள் யமன் துர்தரையனுப்ப, அவர்கள் மார்கண்டேயனது தவக்கனலால் அவனை அணுகமாட்டாது அவன் செய்யும் சிவபூஜைச் சிறப்பைக்கண்டஞ்சி வெருண்டோடி யமனிடம் செய்திசொல்ல,
யமனும் கோபித்துத் தனது மந்திரியான காலனை ஏவ, அவன் வந்து நயபயங்களாவழைக்கவும் மார்க்கண்டேயன் வரமாட்டேனென்று சொல்லிவிட,
பிறகு யமன் சிவலிங்கமுட்பட வலித்திழுக்கும்போது சிவபிரான் ஸ்ரீமந்நாராயணனைத் சிந்தைசெய்து அவனது திருவருள்பெற்று அங்குநின்று வெளிப்பட்டு யமனைக் காலாலுதைத்துத் தள்ளி முனிமகனுக்கு என்றும் பதினாறு பிராயமாகவே அனேக கல்பகாலமாகவும் இனிது வாழும்படி தீர்க்காயுஸ்;ஸைக் கொடுத்தருளினன் என்பது வரலாறு.
இங்ஙனம் சிவபிரான் மார்க்கண்டேயனுக்கு அருள்செய்து திருமாலினருளால் தான் பெற்ற சந்தியினாலேயென்பதும், அச்சிவபிரானுக்கு அந்தராத்மாவாய் நின்று தொழில் செய்தவன் ஸர்வேச்வரனான ஸ்ரீமந்நாராயனனே என்பதுமாகிய உண்மை உணரத்தக்கது.
சில புராணங்களில் மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது பரமசிவனே மார்க்கண்டேயனுக்கு அபயமளித்ததாகக் காணப்படினும், மஹபாரதத்தில் ஆரண்யபருவத்தில் நூற்றுத்தொண்ணுர்ற்றிரண்டாமத்யாயத்தில் மார்கண்டேயன் தரும்புத்திரரை நோக்கிச் சொல்லுமளிவில் ஸ்ரீமந்நாராயணனுடைய வார்த்தைகளை அநுவதிக்குமிடத்து, … ஸ்ரீ பித்ருபத்தோஸி விப்ரர்ஷே! மாஞ்சைவ சரணம் கத: *என்றுள்ள ச்லோகத்தினால் இவன் ஸ்ரீமந்நாராயணனை சரணம் புகுந்தவனென்பது நன்கு விளங்கும்.
ஸ்ரீ பாகவதத்திலும பன்னிரண்டாம் ஸ்கந்தத்தில் எட்டாமத்தியாயத்தில் … -ஆராதயந் ஹ்ருஷீகேசம் ஜிக்யே ம்ருத்யும் ஸூதுர்;ஜயம்* (ஸ்ரீமந்நாராயணனை ஆராதித்து வெல்ல வொண்ணாத யமனை வென்;றொழிந்தான்) என்று ஸ்பஷ்டமாகச் சொல்லிற்று.
மார்கண்டேயன் இங்ஙனம் நெடுநாள் வாழ்ந்து வருகையில், மஹா ப்ரளயத்தைத் தான் காண வேணுமென்று ஆசை கொண்டு எம்பெருமானைப் போற்றிப் பிரார்த்தித்து அங்ஙனம் காணும் போது, மஹாப்ரளயத்தில் திருமாலொருவனை யன்றி மற்றைத் தேவரெவரையும் பிழைத்திருக்கக் காணாதவனாய் அப்பெருமானது திருவயிற்றினுள்ளே அனைவரையுங்கண்டு, முடிவில் தான் நற்கதி பெறுதற்பொருட்டுத் திருமாலையே சரணமடைய, அப்பெருமான் அவனைத் தனது திருவடிகளிற்சேர்த்துக்கொண்டருளினன் என்பதும் அறியத்தக்கது,
இதைத் திருவுள்ளம்பற்றியே பன்னீர்யிரப்படியுரையில் “அன்று உய்யக் கொண்டதும்” என்பதற்கு -“ப்ரளயதசையிலே பிழைப்பித்து பகவத்பானாக்கி உஜ்ஜூப்பித்தது” என்று உரை கூறப்பட்டது.
நாராயணனருளே என்றவிடத்து ஈடு;-“நீ நெடுநாள் பச்சையிட்டு ஆச்ரயித்தாய்; அவ்வாச்ரயணம் வெறுமன் போயிற்றதாக வொண்ணாது-என்று அவனை யழைத்து ‘நானும் உன்னோபாதி ஒருவனை ஆச்ரயித்துக் காண் இப்பதம் பெற்றது; இனி ஊண் கொடுத்தல் உபதேசங் கொடுத்தலிறே என்று சொல்லி அவனைக் கொண்டு போய் ஸர்வேச்வரன் பக்கலிலே காட்டிக் கொடுத்தானாயிற்று.
ஆதலால் இப்படி ஸர்வேச்வரனான நாராயணனை யொழிய மற்று எந்தத் தெய்வத்தைக் கொண்டாடுகிறீர்களென்பன பின்னடிகள்.
—————
***- வேத பாஹ்யர்களும் குத்ருஷ்டிகளும் பண்ணுகிற துஸ் தர்க்கங்களால் அழிக்க வொண்ணாத ஐச்வர்யத்தை யுடையனான
எம்பெருமானெழுந்தருளி யிருக்கிற திருநகரியை ஆச்ரயியுங்கோள் பிழைக்க வேண்டியிருந்தீர்களாகில் என்கிறார்.
விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9-
பதவுரை
விளம்பும் |
– |
கண்டபடி சொல்லுவது தவிரப் பொருட்பொருத்தம் சிறிதுமில்லாதவைகளான |
ஆறு சமயமும் |
– |
ஆறுவகைப்பட்ட பாஹ்ய மதங்களும் |
அவை ஆகிய |
– |
அந்த பாஹ்யமதங்கட்குப் பரியாயமான |
மற்றும் |
– |
குத்ருஷ்டி மதங்களும் |
தன் பால் |
– |
தன் விஷயத்திலே |
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய |
– |
எல்லைகாணவொண்ணாதனாயிருக்கிற |
ஆதி பிரான் |
– |
ஸகலஜகத காரணபூதனான ஸர்வேச்வரன் |
அழகும் |
– |
நித்யவாஸம் பண்ணுமிடமாய் |
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய |
– |
வளம்மிக்க குளிர்ந்த நீர் நிலங்களாலே சூழப்பட்டு அழகியதான |
திருகுருகூர் அதனை |
– |
திருநகரியை |
(நீங்கள்) |
||
உம்மை |
– |
உங்களை |
உய்யக் கொண்டு போகுறில் |
– |
உஜ்ஜிவிப்பித்துக்கொண்டு நடக்கவேண்டியிருந்தீர்களாகில் |
உளம் கொள் ஞானத்து |
– |
அந்தரங்கஜ்ஞானத்துக்குள்ளே |
வைம்மின் |
– |
வைத்துச் சிந்தனை செய்யுங்கள். |
வேதம் முதலிய சாஸ்த்ரங்களை ப்ரமணமாக இசையாதவர்கள் வேத பரஹ்யர்கள் எனப்படுவர்; அவற்றை ப்ரமாணமாக இசைந்துவைத்தும் அவற்றுக்குத் தவறான அர்த்தங்களைப்; பண்ணுமவர்கள்
(அதாவது) எம்பெருமானொருவன் தவிர மற்ற தத்துவமொன்றுமேயில்லையென்றும், அவனுக்குத் குணமில்லை, நிக்ரஹமில்லை யென்றும் சொல்லுமவர்கள் குத்ருஷ்டிகளெனப்படுவார்;
இவ்விருவகுப்பினரையும்பற்றிக் கூரத்தாழ்வான் ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில் ஒரு ச்லோக மருளிச்செய்கிறார்; அதாவது-
*…- பாஹ்யா: குத்ருஷ்டய இதித்விதயேப்பாரம் கோரம் தமஸ் ஸமுபயாந்தி நஹீக்ஷஸே தாந், ஜக்தஸய காநநம்ருகைர் ம்ருகத்ருஷ்ணிகேப்ஸோ: காஸாரஸத்வநிஹதஸ்ய ச கோ விசேஷ:?* என்பதாம்.
இதன் பகவத் கடாக்ஷத்திற்கு இலக்காகமாட்டாமல் நசித்துப்போவர்கள்.
வேதத்தை அடியோடே ப்ரமாணமாக அங்கீகரியாதே துர்ஷிக்கின்ற பாஹ்யர்கள் நசித்துப்போவது யுக்தம்;
அப்படியல்லாமல் வேதத்தை ப்ரமாணமாக அங்கீகரித்து வைதிகர்களென்று பேர்பெற்றிருக்கின்றவர்களும் நசித்துப்போவர்களென்னலாமோ என்ன;
இருவகுப்பினரும் துல்ய யோகக்ஷேமர்களேயென்பது ஒரு த்ருஷ்டாந்த முகத்தாலே மூதலிக்கப்படுகிறது;
விடாய்மிகுத்துத் தண்ணீரைத் தேடியோட இரண்டு ம்ருகங்கள் புறப்பட்டன;
அவற்றில் ஒரு ம்ருகமானது தடாகத்தில் புகாதே கானலைக்கண்டு தண்ணீர்ப்பெருக்காக மயங்கி ஓடிக் கொண்டேயிருக்கையில்
வழியிடையிலே நேர்பட்ட புலி முதலிய கொடிய விலங்குகளினால் அடித்துத் தின்னப்பட்டதாயிற்று.
இது இப்படியாக, மற்றொரு மிருகமானது விடாய்த்தீரத் தடாகத்திலேயே சென்று சேர்ந்தது;
ஆனால் அடைவே இழியவேண்டிய துறையிலே யிழியாமல் துறைதப்பி யிழியவே
அங்குக் கிடந்த வொரு கொடிய விலங்குகளினால் அடித்துத் தின்னப் பட்டதாயிற்று.
இது இப்படியாக, மற்றொரு மிருகமானது விடாய்தீரத் தடாகத்திலேயே சென்று சேர்ந்தது;
ஆக இரண்டு மிருகங்களும் தடாகப்ரவேச-அப்ரவேசங்களாலே சிறிது வாசி பெற்றிருந்தாலும் விநாசத்திலே வாசியற்றவர்களேயாவர். என்றதாயிற்று.
கானலிலே மயங்கியொழிந்த ம்ருகத்தின் ஸ்தானத்தில் பாஹ்யர்கள்;
தடாகத்திலே யிழந்து துறைதப்பியொழிந்த ம்ருகத்தின் ஸ்தானத்திலே குத்ருஷ்டிகள் என்றுணர்க.
விளம்பும் ஆறுசமயமும் = சாக்ய, உலுர்க்ய, அக்ஷபாத, க்ஷபண. கபில, பதஞ்சலி மதங்கள் எனப்படுகிற ஆறும் பாஹ்ய ஸமயங்களாம்;
சாக்யர்-பௌத்தர்; உலுர்க்யர்-சார்வாகர்; அக்ஷபாதரென்று கௌதமரைச் சொல்லி நையாயிக வைசேகூஷிகர்களை நினைக்கிறது. க்ஷபணர்-ஜைநர்.
அவையாகிய மற்றும்–மற்றும் அவற்றோடொத்த குத்ருஷ்டிகளும் என்றபடி.
“அவையாகியும்” என்பது பன்னீராயிரப்படி யுரைக்.கு மாத்திரம் பாடம்.
மற்றும் என்பதற்கே குத்ருஷ்டிவர்க்கமெனப் பொருள்கொண்டு,
அவையாகியும் என்பதற்கு ‘ஸபையாகத் திரண்டாலும்’ என்று பொருள் கூறினர் பன்னீராயிரவுரைகாரர்.
அவை-ஸபை; பாஹ்யர்களும் ருத்ருஷ்டிகளும் பெருந்திரளாகக் கூடினாலும் பரிச்சோதித்து அறிய முடியாதவன் எம்பெருமான் என்றபடி.
ஆறுசமயங்களுக்கு விளம்பும் என்று அடைமொழி கொடுத்தது-அர்த்தமில்லாத வெறும். சொற்களையே பிதற்றுகிறவர்களென்று காட்டினபடி.
ஆக, பாஹ்யர்களாலும் குத்ருஷ்டிகளாலும் சலிப்பிக்க வொண்ணாது ஸ்வரூப ரூப குண விபூதிகளை யுடைய ஸர்வேச்வரன் எழுந்தருளி யிருக்குமிடமாய், வளம் மிக்க நீர் நிலங்களாலே சூழப்பட்டு அழகியதான திருநகரியை, உளங் கொள் ஞானத்து வைம்மின்-மாநஸ ஜ்ஞானத்துக்கு விஷயமாக்குங்கள் என்றபடி.
இது யாரைநோக்கி யுரைக்கிற தென்னில்; உம்மில் உய்யக்கொண்டு போகுறில்= உஜ்விக்க விருப்பமுடையீராகில்.
போக + உறில், போகுறில்; தொகுத்தல்.
—————–
***- தன் ஐச்வர்யத்தில் ஒன்றும் குறையாமல் திருநகரியில் வந்து நின்றருளின
பொலிந்து நின்ற பிரானுக்கு அடிமை செய்கை தானே ஸ்வரூபாநுரூபமென்கிறார்.
உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள்
குறிய மாண் உருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.–4-10-10-
பதவுரை
எத்தேவும் |
– |
எல்லாத் தேவதைகளும் |
எ உலகங்களும் |
– |
எல்லாவுலகங்களும் |
மற்றும் |
– |
மற்றுமுண்டான சேதநர தேசனங்களுமாகிய |
இத்தனையும் |
– |
இவையடங்கலும் |
தன் பால் |
– |
தன்னுடையதான |
மறு இல் மூர்த்தியோடு ஒத்து |
– |
நிஷ்கலங்கமான அஸாதாரண விக்ரஹம்போன்று (ஸகல விதத்தாலும் விதேயங்களாகியென்றபடி) |
நின்ற வண்ணம் நிற்க |
– |
குறையற நிற்குமிருப்பிலே |
செறுவில் |
– |
விளை நிலங்களில் |
செந்நெல் |
– |
செந்நெற்பயிர்களும் |
கரும்பொடு |
– |
கருப்பஞ்சோலைகளும் |
ஓங்கு |
– |
வளரும்படியான |
திருகுருகூர் அதனுள் |
– |
திருநகரியிலே |
குறிய மாண் உரு ஆகிய |
– |
வாமநப்ரஹ்மசாரி வேஷமெடுத்தவனும் |
நீள் குடக் கூத்தனுக்கு |
– |
(க்ருஷடணனாய்ப்) பெரிய குடக் கூத்தாடினவனுமான பெருமானுக்கு |
ஆள் செய்வதே |
– |
அடிமை செய்வதே |
உறுவது ஆவது உற்றதாம்.- |
பாட்டினடியிலுள்ள உறுதாவது என்பதை, முடிவிலுள்ள ஆட்செய்வதே என்பதனோடு கூட்டுக; ஆட்செய்வதே உறுவதாவது என்றபடி.
எத்தேவும் எவ்வுலகங்களும் மற்றும் இத்தனையும் தன்பால் மறுவில் முர்த்தியோடொத்து இத்யாதி.
இந்திரன் சந்திரன் குபேரன் என்று சொல்லப்படுகிற ஸகல தேவதாவர்க்கமும், ஸமஸ்த லோகங்களும்,
மற்றுமுண்டான சேதநாசேதவர்க்கமுமான இவையாகப் பெற்ற எம்பெருமான்
திருக்குருகூரிலே நின்றருளிகிறானாகையாலே அவனுக்கு ஆட்செய்வதே உறுவது என்றபடி.
மறுவின் மூர்த்தி யென்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறுவர்;
மறு என்று ஸ்ரீவத்ஸத்திற்கும் பெயராகையாலே அதனையுடைத்தான திருமேனி;
(அல்லது) மறு என்று அவத்யமாய், அஃதில்லாத (ஹேயப்ரத்யநீகமான) திருமேனியென்னுதல்.
எவ்வுலகங்களும் மற்றும் தன்னுடைய மூர்த்தியோடொத்திருக்கையாவது என்னெனில்;
சரீரத்தினுடைய லக்ஷணம் இன்னதென்று அறிந்தால் இது அறிந்ததாகும்; …-
யஸ்ய சேதநஸ்ய யத் த்ரவ்யம ஸர்வாத்மநா ஸவார்ததே நியந்தும் தாரயிதுஞ்ச சக்யம் தச சேஷதைக ஸ்வரூபஞ்ச தத் தஸ்ய சரீரம்.* என்பது சரீர லக்ஷணம்.
ஆத்மாவுக்கு ஸகல ப்ரகாரங்களாலும நியாம்யமாய் ஸேஷப் பட்டிருக்கையே சரீரத்வமாதலால் ஸகல தேவதைகளும் எம்பெருமானுக்கு இங்ஙனே யிருக்கும்படியைச் சொன்னவாறு.
செறு-விளைநிலம்.
குடக்கூத்தன்-அந்தணர்க்குக் செல்வம் விஞ்சினால் யாகஞ்செய்வது போல இடையர்க்குச் செல்வம் விஞ்சினால் அதனாலுண்டாகுஞ் செருக்குக்குப் போக்குவீடாக அவர்களாடுவதொரு கூத்து குடக்கூத்தெனப்படும்.
தலையிலே அடுக்குமிடமிருக்க இரு தோள்களிலும் இருகுடங்களிருக்க இருகையிலும் குடங்களை யேந்தி ஆகாசத்திலே யெறிந்து ஆடுவதொரு கூத்து இது.
————-
***- இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டும் பாசுரம் இது.
ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-
பதவுரை
ஆள் செய்து |
– |
(உபதேச முகத்தாலே ஸம்ஸாரிகளைத் திருத்திப்பணிகொள்ளுகையாகிற) கைங்கரியத்தைப் பண்ணி |
ஆழி பிரானை சேர்ந்தவன் |
– |
ஆழியங்கையனான பெருமானை அடைந்தவரும் |
வண் குருகூர் நகரான் |
– |
திருநகரிக்குத் தலைவரும் |
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் |
– |
பரிமளம் மாறாதமாலையைத் திருமார்பிலே அணிந்தவருமான |
மாறன் சடகோபன் |
– |
ஆழ்வார் |
வேட்கையால் |
– |
ஆதரத்தோடு |
சொன்ன பாடல் ஆயிரத்துள் |
– |
ஆயிரம்பாட்டினுள்ளே |
இ பத்தும் |
– |
இப்பதிகத்தை |
வல்லார் |
– |
ஓதவல்லவர்களுக்கு |
மீட்சி இன்றி |
– |
மீண்டும் திரும்பிதலில்லாத |
வைகுந்தம் மாநகர் மற்றது |
– |
ஸ்ரீ வைகுண்டமஹாநகரமாகிய அவ்விடம் |
கையது |
– |
கரஸ்தம். |
(ஆட்செய்து ஆழிப்பிரானைச் சேர்ந்தவன்) ஆட்செய்கையாவது கைங்கரியம் பண்ணுதல்
இது மாநஸிகமென்றும் வாசிகமென்றும் காயிகமென்றும் மூவகைப்பட்டிருக்கும்; இங்கு வாசிகைங்கரியம் கொள்ளத்தகும்.
எம்பெருமான் கையுந் திருவாழியுமான அழகைக்காட்டித் தம்மை ஆட்படுத்திக் கொண்டானென்பது தோன்ற ஆழிப்பிரானை என்றார்.
முதலடிக்கு ஈட்டு ஸ்ரீஸுக்திகள் பரமபோக்யங்களாயிருக்கையாலே அவை ஈண்டுக் குறிப்பிடப் பெறுகின்றன;-
“அடிமைதான் த்ரிவிதம்-மாநஸ வாசிக காயிகங்கள். இவற்றில் மாநஸ காயிகங்களுக்கு ஆளல்லர்; என்றிய வென்னில்,
*காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்* என்கையாலே. இனி வாசிகமொன்றுமே யானால்
வாசிகமாக திருவாய்மொழி பாடி அடிமை செய்தாரென்கிறதோ வென்னில்; அன்று;
அப்படியாமன்று இப்பாசுரம் *முனியே நான்முகனிலே யாக வேணும்.
இல்லையாகில் இவர் வாசிகமாக அடிமை செய்த *புகழுநல்லொருவனிலேயாகப் பெறில் முக்க்யம்;.
ஆனால், தேவதாந்தரபரத்வ நிரஸந பூர்வகமாக ஸர்வேச்வரனுடைய பரத்வத்தை யருளிச் செய்கையாலே யானாலோவென்னில;
அதுவாகில் முதல் திருவாய்மொழியிலே யாகவமையும்.
பரத்வ நிர்ணயத்திலே பரோபதேசமு மாகை யாலே யானாலோவென்னில்,
அதுவாகில் *திண்ணன் வீட்டிலேயாதல்* அணைவதரவணையிலே யாதலாகவமையும்.
ஆனால் அர்ச்சாவதாரத்திலே பரத்வமருளிச் செய்கையாலே யானாலோவென்னில்; அதுவுமொண்ணாது.
அது *செய்யதாமரைக் கண்ணனிலே யாகவமையும்.
பரோபதேசம் பண்ணுகையாலே சொல்லிற்றானாலோவென்னில், அதுவுமொண்ணாது;
*வீடுமின் முற்றவும் தொடங்கிப் பல விடங்களிலும் பரோபதேசம் பண்ணினார்; அவற்றிலுமாகப் பெற்றதில்லை;
ஆனால் எதாவதென்னில்; இவ்வொன்றுந்தேவிலே
*பரன் திறமன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை பேசுமினே* என்று பொலிந்து நின்ற பிரானே ஸர்வஸ்மாத் பரனென்று இவரருளிச்செய்யக் கேட்டு
*கபாலநன்மோக்கத்துக் கண்டு கொண்மின்* என்னக்கண்டு ஜகத்தாகத் திருந்தி ஸ்ரீவைஷ்ணவர்களாயிற்று.
இவர்தாம் அவர்களுக்கு மங்களாசாஸநம் பண்ணும்படியிறே அவர்கள் தாம் திருத்தினபடி.
*பொலிகபொலிக என்று இதுக்கென்ன வொரு திருவாய்மொழி நேருகிறாரிறே.
ஸர்வேச்வரன் அவதரித்துத் திருத்தப் பார்த்தவிடத்தும் திருந்தாத ஸம்ஸாரத்திலே இவர் திருத்தத்திருந்தினபடி.
இனி இவர்க்குத் தத்வ நிர்ணயம் பண்ண வேண்டாதபடி *இடங்கொள் சமயத்தை யெல்லாமெடுத்துக் களைவன போலே தடங்கடற்பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாம்படி திருத்துகையாலே ஆட்செய்தாழிப் பிரானைச் சேர்ந்தவன் என்கிறார்.
இந்த நன்மைக்கு அடி நல்லார் நவில் குருகூரிலே பிறப்பு, என்பது தோன்ற வண்குரு கூர்நகரான் என்கிறார்.
நாட்கமழ்மகிழ்மார்பினன் ஆழ்வார் தாம் வகுளமாலையை அணியாகக் கொண்டவராதலால் வடமொழியில் ‘வகுளாபரணர், வகுளபூஷணர் என்றும், தென்மொழியில் ‘மகிழ்மாலைமார்பினர்’ என்றும் வழங்கப்படுவர்.
ஸ்ரீமத்வேதாந்ததேசிகன் யதிராஜஸப்ததியில்
—ஸ்ரீ யஸ்ய ஸாரஸ்வதம் ஸ்ரோதோ வகுலாமோத வாஸிதம்இ ச்ருதீநாம் விச்ரமாயாலம் சடாரிம் தமுபாஸ்மஹே. என்றருளிச்செய்த ச்லோகம் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.
ஆழ்வார் அணிந்து கொண்டிருக்கும் வகுளமாலையின் நறுமணம் திருவாய்மொழியிலும் வீசிக் கிடப்பதாக அருளிச்செய்கிறார்.
இத்தகைய நறுமணம் வடமொழி வேதத்திற்கு இல்லாமையாலே அதற்கொரு குறையுண்டு என்பதையும் காட்டியருளினார்.
வேட்கையால் சொன்னபாடல் = உலகத்திலே கவி சொல்லுவார் பலருண்டு; அவர்கள் பெரும்பாலும் தம்தம் கவித்திறம் காட்டுவதற்கே பாடல்கள் பாடுவர்; ஆழ்வார் அங்ஙனமின்றி பக்தி பலாத்காரத்தாலே பரவசமாகத் திருவாய்மொழி பணித்தாரென்று அறியத்தக்கது.
ஆசார்யஹிருதயத்தில்-“நீர் பால் செய்யமுதாய் நிரம்பின ஏரி நெளிக்குமதாபோலே பரபச்த்யாதிமயஜ்ஞாநாம்ருப்தி நிமிகிற வாய்கரைமிடைந்து மொழிபட்டு அவாவிலந்தாதியென்று பேர்பெற்றது.” என்ற சூர்ணிகை இங்கு அநுஸந்தேயம்.
“வைகுந்தமாநகர்மற்றது” என்ற விடத்தில் மற்று என்பது அசையச் சொல்லாய் வைகுந்தமாநகராகிற அவ்விடம் என்று பொருள்படும்;
அன்றியே, வைகுந்தமாநகரமாகிய நித்ய விபூதியும் மற்றதாகிய லீலாபூதியும் என்றும் பொருள்கொள்ளலாம்.
உபய விபூதி ஸாம்ராஜ்யமுண்டாகுமென்று பலன் சொல்லிற்றாயிற்று.
————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply