***- ஏறாளுமிறையோனும்) ஸௌசீல்யமே வடிவெடுத்த எம்பெருமான் விரும்பாத அழகிற நிறம் எனக்கு ஏதுக்கு? என்கிறாள்.
ஏறு ஆளும் இறையோனும், திசை முகனும், திருமகளும்,
கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குல மா அசுரர்களை
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறை இலமே.–4-8-1-
பதவுரை
ஏறு ஆளும் இறையோனும் |
– |
விருஷபவாஹனனான சிவபிரானும் |
திசைமுகனும் |
– |
நான்முகனும் |
திருமகளும் |
– |
பெரியபிராட்டியாரும் |
கூறு ஆளும் |
– |
‘இன்னஇடம் இன்னாருடையது’ என்று பங்கிட்டுக் கொண்டு வஸிக்கப்பெற்ற |
தனி உடம்பன் |
– |
விலக்ஷ்ணமான திருமேனியையுடையவனும், |
அசுரர்களை |
– |
அசுரர்களை |
குலம் குலம் ஆ |
– |
கூட்டங் கூட்டமாக |
நீறு ஆகும்படி ஆக |
– |
சுடநீறாகி யொழியும்படியாக |
நிருமித்து |
– |
ஸங்கல்பித்து |
(அவ்வளவேயன்றிக்கே) |
||
படை தொட்ட |
– |
ஆயதங்கொண்டும் காரியஞ் செய்த |
மாறு ஆளன் |
– |
எதிர்த்தலையுடையனுமான எம்பெருமான் |
கவராத |
– |
விரும்பாத |
மணி மாமை |
– |
அழகிய நிறத்தில் |
குறைவு இலம் |
– |
அபேஷையுடையோமல்லோம். |
ஆரம்பிக்கும்போதே “ஏறாளுமிறையோன் கூறாளாந் தனியுடம்பன்” என்றது
ஒரு தாமஸ தெய்வத்துக்கு எளிதான திருமேனி எனக்கு அரிவாதே! என்ற வருத்தத்தைக் காட்டுமென்க.
“வேதாத்மா விஹகேச்வர:” என்கிறபடியே வேதஸ்வரூபியான பக்ஷிராஜனை வாஹநமாகக்கொண்ட எம்பெருமான்முன்னே
மூடஜந்துவானவொரு எருதை வாஹநமாகக்கொண்டு திரிகின்ற உருத்திரனும், நான்முகனும், ஸ்ரீ மஹாலக்ஷ்;மியும்
ஆகிய இவர்கள் கூறிட்டு ஆளும்படி அத்விதீயமான திருமேனி படைத்த பெருமான் என்றது-அ
வனுடைய ஸௌசீல்யமென்னும் மஹாகுணத்தை யநுபவித்துப் பேசினபடி.
“சிவனொடு பிரமன் வண்திருமடந்தை சேர்திருவாகம் எம்மாவியீரும்” என்கிறார் மேல் ஒன்பதாம் பத்திலும்.
அங்கு உரைத்ததெல்லாம் இங்கும் அறியத் தக்கது.
குலங்குமா அசுரர்களை நீறாகும்படியாக நிருமித்துப் படைதொட்ட = சீலகுணம் சொல்லிற்றுகீழ்;
வீர்யகுணம் சொல்லுகிறது இதனால்.
தான் நினைத்தால் விரோதி வர்க்கங்களைக் கிழங்கறக் களைந்து தொலைப்பதில் ஓர் அருமை யுண்டோ?
சக்தி யுக்தன் உபேக்ஷித்தால் உயிர்தரிக்க வழியுண்டோவென்கை.
நிருமித்து என்றது-ஸங்கல்பித்து என்றபடி.
ஜகத் ஸ்ருஷ்டி முதலிய அரிய பெரிய தொழில்களை யெல்லாம் ஸங்கல்ப மாத்ரத்தாலே செய்து போருகின்றவன்
பாகவதவிரோதிகளான அசுரர்களை ஸங்கல்ப மாத்ரத்தாலே தொலைத்திடாமல் படைதொட்டு நீறாக்குகின்றனனாம்;
இஃது ஏன்? என்னில்; “ஈச்வரன் அவதரித்துப்; பண்ணின ஆனைத்தொழில்களெல்லாம் பாகவதபசாரம் பொறாமையென்று ஜீயரருளிச்செய்வர்” என்ற ஸ்ரீவசந பூஷண திவ்ய ஸூக்தி அறியத்தக்கது.
இங்கே மணவாளமாமுனிகளின் வியாக்கியான ஸ்ரீஸூக்தி வருமாறு:-“ஸங்கல்ப மாத்ரத்தாலே ஸர்வத்தையும் நிர்வஹிக்க வல்ல ஸர்வ சக்தியான ஸர்வேச்வரன், தன்னை யழிய மாறி இதர ஸஜாதீயனாய் அவதரித்துக் கைதொடனாய் நின்று செய்த ஹிரண்ய ராவணாதி நிரஸந ரூபங்களான அதிமாநுஷ சேஷ்டிதங்களெல்லாம் ப்ரஹ்லாதன் மஹர்ஷிகள் தொடக்கமான அவ்வோ பாகவத விஷயங்களில் அவ்வவர் பண்ணின அபசாரம் ஸஹியாமையாலே யென்று ஆப்த தமரான நஞ்சீயரருளிச் செய்வரென்கை”
மாறாளன் = ஆச்ரிதர்களின் விரோதிகளைத் தன் விரோதிகளாகக் கொண்டு அவர்களோடு மாறுபட்டிருப்பவன் என்பது பரம தாற்பரியம்.
கவராத மணிமாமை-அப்படிப்பட்ட பெருமான் ஓடிவந்து மேல் விழுந்தாலன்றோ இவ்வழகிய நிறம் எனக்கு உத்யேச்யமாவது; அல்லாதபோது இது எனக்கு ஹேயமேயாகும். இந்த நிறமில்லையென்று நான் அழுகிறேனோவென்கை.
குறைவு என்பதற்கு லக்ஷ்ணையால் அபேக்ஷிதம் என்று பொருளாகும்.
குறைவிலும்-அபேக்ஷை யுடையோமல்லோம்; வேண்டியதில்லை என்றவாறு.
—————-
***-பிராட்டியோடே கூடியிருக்குமழகைக் காட்டி என்னை யடிமை கொண்டவன் விரும்பாத நெஞ்சால் ஒரு காரியமில்லையென்கிறாள்.
குற்றங்களையும் நற்றமாக உபபாதித்து அருள் புரிவிக்கின்ற பெரிய பிராட்டியாரும் கூடவிருக்கச்செய்தே
என்னை உபேக்ஷித்திருக்குமாகில் என்னுடைமையால் எனக்குத் தான் ப்ரயோஜனம் என்? என்கிறாள்.
மணி மாமை குறையில்லா மலர் மாதர் உறை மார்பன்
அணி மானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.–4-8-2-
பதவுரை
மணி மாமை குறைவு இல்லா |
– |
அழகிய நிறம் நிரம்பி யிருக்கப் பெற்ற |
மலர்மாதர் |
– |
பூமகளான பெரியபிராட்டியார் |
உறை |
– |
நித்யவாஸம் பண்ணப்பெற்ற |
மார்பன் |
– |
திருமார்பையுடையவனும் |
அணிமானம் தட வரை தோள் |
– |
அழகியதாகப் பெருத்து திருத்தோள்களையுடையவனும் |
அடல் ஆழி தடகையன் |
– |
தீக்ஷ்ணமான திருவாழியைப் பெரிய திருக்கையிலேயுடையவனும் |
பணி மானம் பிழையாமே |
– |
கைங்கர்ய வ்ருத்திகள் தப்பாதபடி |
அடியேனை |
– |
அடியேனை |
பணிகொண்ட |
– |
கிங்கரனாக ஆக்கிக்கொண்டவனும் |
மணி மாயன் |
– |
நீலமணிவண்ணனுமான எம்பெருமான் |
கவராத |
– |
விரும்பாத |
மட நெஞ்சால் குறைவு இலம் |
– |
விதேயமான நெஞ்சில் அபேக்ஷையுடையோமல்லோல். |
“மணிமாமை குறைவிலமே” என்று நான் வெறுத்ததுபோலே வெறுக்கவேண்டாமல் நித்ய ஸம்ச்லேஷம் பெற்றிருக்கிறவளும்,
புஷ்பத்தில் பரிமளத்தையே வடிவாக வகுத்தாற்போலே ஸௌகுமார்யத்தில் சிறந்திருக்கிறவளுமான பெரியபிராட்டி
நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருமார்பையுடையவனும், அழகிய பருத்த திருத்தோள்களையுடையவனும்,
பிராட்டியும் தானுமான சேர்த்திக்கு அஸ்தாநே பய ஸங்கை பண்ணி மங்களாசாஸந பரனாயிருக்கும் திருவாழி யாழ்வானைக் கையிலேந்தினவனும்,
இளைய பெருமாளை அடிமை கொண்டாப்போலே ஏற்கனவே என்னையுமடிமைகொண்டவனும்,
நீலமணிபோன்றழகிய வடிவுபடைத்தவனுமான பெருமான் விரும்பாத நெஞ்சு எனக்கும்வேண்டா.
பணிமானம் பிழையாமே என்றவிடத்து ஒரு ஜதிஹ்யம்:-
எம்பெருமானார் மடத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்யா நிற்க, அவர்களுக்குத் தீர்த்தம் பரிமாறுகின்ற கிடாம்பியாச்சான்
நேரே நின்று பரிமாறாமல் ஒரு பக்கமாயிருந்து பரிமாறினாராம்; அதைக் கடாக்ஷித்த எம்பெருமானார் ஓடிவந்து முதுகிலே யடித்து
‘உடோஇ இப்படியா பரிமாறுவது? நேரேநின்றன்றோ பரிமாறவேணும்’ என்று சிக்ஷிக்க,
அப்போது ஆச்சான் “பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்டருளிற்றே!” என்று உகந்தாராம்.
ஆழ்வார் தாம் செய்து பொருகிற வாசிக கைங்கர்யத்தைப்பற்ற “பணிமானம் பிழையாமே யடியேனைப் பணி கொண்ட” என்கிறாரென்றுணர்க.
“கவராத மடநெஞ்சால் குறைவிலமே” என்ற விடத்தில் நஞ்சீயர் அருளிச்செய்வராம்; *கோவைவாயாளென்கிற திருவாய்மொழியில் ‘பூசுஞ்சாந்து என்னெஞ்சமே’ என்னும்படி அப்போது அப்படி விரும்பினவன் இன்று இப்படி உபேக்ஷிக்கையாலே, நாயகன் தாமதித்து வந்தானென்று அவன் முன்னிலையில் சாந்தைப் பரணியோடே உடைப்பாரைப் போலே என்னெஞ்சு எனக்கு வேண்டா வென்கிறாள் என்று.
————————-
***- (மடநெஞ்சால்) கண்ணபிரான் விரும்பாத அடக்கம் எனக்கு வேண்டாமென்கிறாள்.
மட நெஞ்சால் குறையில்லா மகள் தாய் செய்து ஒருபேய்ச்சி
விட நஞ்ச முலை சுவைத்த மிகு ஞானச் சிறு குழவி
பட நாகத்து அணைக் கிடந்த பருவரைத் தோட் பரம் புருடன்
நெடு மாயன் கவராத நிறையினால் குறை யிலமே.–4-8-3-
பதவுரை
மடநெஞ்சால் குறைவு இல்லா தாய் மகள் செய்த ஒரு பேய்ச்சி |
– |
நெஞ்சில் நெகிழ்ச்சியைப் பரிபூர்ணமாகக்கொண்ட |
தாய் மகள் செய்த |
– |
யசோதையாகிய தாயாகத் தன்னையாக்கிக்கொண்ட |
ஒரு பேய்ச்சி |
– |
பூதனையென்கிறவொரு பேய்ச்சியினுடைய |
விடம் நஞ்சம் |
– |
கொடிய விஷம்பொருந்திய |
முலை |
– |
முலையை |
சுவைத்த |
– |
உறிஞ்சியுண்டவனும் |
மிகு ஞானம் சிறு குழவி |
– |
மிக்க ஞானத்தையுடைய சிறு குழந்தையானவனும் |
படம் நாகம்அணைகிடந்த |
– |
படமெடுத்த நாகமாகிற படுக்கையிலே சயனிப்பவனும் |
பரு வரை தோள் |
– |
பெரியமலைபோலே வளர்;த தோள்களையுடையவனும் |
பரம்புருடன் |
– |
புருஷோத்தமனாக ப்ரஸித்த பெற்றவனும் |
நெடு மாயன் |
– |
எல்லைகடந்த ஆச்சர்யகுண சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமான் |
கவராத |
– |
விரும்பாத |
நிறைவினால் குறைவு இலம் |
– |
அடக்கத்தில் அபேக்ஷயுடையோமல்லோம். |
பூதனையென்னும் ராக்ஷஸி கம்ஸனேவுதலால் நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து
அங்குத் தூங்கிக் கொண்டிருந்த ஸ்ரீக்ருஷ்ண சிசுவை யெடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையை உண்ணக் கொடுத்துக் கொல்ல முயல,
பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப் பிடித்துப் பாலுண்ணுகிற பாவனையிலே
அவளுயிரையும் உறிஞ்சி அவளை முடித்திட்டனன் என்கிற வரலாறு முன்னடிகட்கு அறியத் தக்கது.
ஆஸூர ப்ரக்ருதியான பூதனைக்கு “மடநெஞ்சால் குறைவில்லா” என்று விசேஷணமிட்டது ஏன்? என்னில்;
அப்பூதனை தன்னுருவத்தை மறைத்து யசோதைப் பிராட்டிபோல் பாவனை காட்டி வந்தாளாகையாலே தாய்போலப் பரிவை ஏறிட்டுக்கொண்டு வந்தாளென்றவாறு.
“பெறற்தாய்போல் வந்தபேச்சி பெருமுலையூடு உயிரை வற்றவாங்கியுண்டவாயன்” என்றார் திருமங்கையாழ்வாரும்.
பூதத்தாழ்வாரும் “மகனாகக்கொண்டெடுத்தாள் மாண்பாய கொங்கை, அகனாரவுண்பனென்றுண்டு, மகனைத் தாய் தேறாதவண்ணம் திருத்தினாய்” என்றார்.
(இதன் கருத்து:-நஞ்சு தீற்றிய முலையைக் கொடுத்து உன்னைக ;கொல்ல வந்த பேய்ச்சியானவள் மெய்யே தாய் போன்று பரிவு காட்டி உன்னை வாரி யெடுத்தணைத்து முலைகொடுத்தாள்; நீயும் மெய்யே குழந்தையாகவே பாவனை காட்டி அம்முலையைச் சுவைத்துண்பவன்போல அவளுயிரையே உறிஞ்சியுண்டாய். அதுமுதலாக உனது மெய்த் தாயான யசோதைப்பிராட்டிக்கு உன்னிடத்தில் நம்பிக்கையுண்டாக இடமில்லாமலே போயிற்று; ‘இவனை நாம் சிறு குழந்தையென்று நம்பவே கூடாது’ என்று எப்போதும் துணுக்குத் துணுக்கென்று அவன் அஞ்சியிருக்கும் வண்ணமே செய்துவிட்டாய் என்றவாறு.)
செய்தொரு என்றிவிடத்தில் தொகுத்தல் விகாரம்; ‘செய்தவொரு’ எனவிரியும்.
விடநஞ்ச முலைசுவைத்த-விஷம் என்றும் நஞ்சம் என்றும் பர்யாயமாயிருக்க, இரண்டு சொற்களையும் சேர்த்துச் சொன்னதனால் விஷத்தின் கொடுமை காட்டப்பட்டதாகும். நாட்டில் விஷங்களெல்லாம் அம்ருதம் என்னலாம்படியான விஷம் என்பர்.
மிகுஞானச் சிறுகுழவி=பாகவதர்கள் சிறுமாமனிசர் என்று பெயர் பெற்றது போலப் பகவானும் மிகுஞானச் சிறுகுழவி யென்று பெயர் பெற்றனாயிற்று. ஸர்வஜ்ஞசிசு என்றபடி.
வயிறாரப் பாலுண்ட படியாலே குழந்தைக்குப் படுக்கை தேட்டமாயிற்று; படுத்துக் கொண்டது என்கிறார் போலும் படநாகத்தணைக்கிடந்த என்பதனால்.
நிறைவினால் குறைவிலம்–நிறைவு என்பது பூர்த்தி; இங்கு ஸ்த்ரீத்வ பூர்த்தியைச் சொல்லுகிறது. அதாவது அடக்கம்.
எம்பெருமானாகவே வந்து திருவுள்ளம் பற்றுவனென்று எண்ணி இதுவரை அடக்கத்தோடிருந்தேன்;
இனி அதை விட்டுத் தொலைக்க வேண்டியதே போலும் என்றவாறு.
————–
***- நப்பின்னைப் பிராட்டியைப் பெறுதற்காக எருதேழடர்த்த பெருமான் விரும்பாத செவ்விய நிறம் எனக்கு ஏதுக்கென்கிறாள்.
நிறையினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை
பொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்த
கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழி கோல் கை
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே –4-8-4-
பதவுரை
நிறைவினால் குறைவு இல்லா |
– |
குறையற்ற ஸ்த்ரீத்வ பூர்த்தியையடையவளும் |
நெடு பணை தோள் |
– |
நீண்டு பணைத்ததோள்களையுடையவனும் |
மடம் |
– |
அறிந்தும் அறியாமையாகிற மடப்பம் பொருந்தியவளுமான |
பின்னை |
– |
நப்பின்னையினுடைய |
முலை அணைவான் |
– |
திருமுலைத்தடத்தோடு சேருகைக்காக |
(மணப்பதற்காக) |
||
பொறையினால் |
– |
வருத்தங்களைப் பொறுத்திருந்து |
பொரு விடை ஏழ் அடாத்து உகந்த |
– |
கொடிய விருஷபங்களேழையும் நொரித்து மகிழ்ந்தவனும் |
கறையின் ஆர் துவர் உடுக்கை |
– |
(நாவல் முதலிய காட்டுப்பழங்களின்) கறைமிகுந்த துவர்நிறமான வஸ்த்ரத்தையும் |
கடையா |
– |
பால்கறக்கும் முங்கிற்குழாயையும் |
கழிகோல் |
– |
கையிலேஉடையவனும் |
சறையினார் |
– |
தன்உடம்பைப்பேணாதவனுமான எம்பெருமான் |
கவராத |
– |
விரும்பாத |
தளிர்நிறத்தால் குறைவு இலம் |
– |
தளிர்போலே செவ்விதான நிறத்தில் விருப்பமுடையோமல்லோம் |
கும்பனென்னும் இடையர் தலைவனது மகளும், நீளாதேவியின் அம்ஸமாகப் பிறந்ததனால் நீளா என்ற பெயரால் வழங்கப்பட்டு வருமவளுமான நப்பின்னைப் பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக அவள் தந்தை கன்யாசுல்கமாகக் குறித்தபடி யார்க்கும் அடங்காத அஸூராவேசம்பெற்ற ஏழு எருதுகளையும் கண்ணபிரான் எழுதிருவுருக்கொண்டு சென்று வலியடக்கி அவளை மணஞ்செய்து கொண்டானென்றவரலாறு முன்னடிகட்கு அறியத்தக்கது.
பொறையினால்=நப்பின்னையை எப்படியாவது பெற்றுவிட வேணுமென்கிற ஆசையினால், பொறுக்கவொண்ணாத வ்யஸநங்களையும் பொறுத்துக்கொண்டமை தெரிவித்தவாறு.
“எருதுகளின் கொம்பாலும் குளம்பாலும் நெருக்குண்ட வித்தை அவள் முலையாலே பிறந்த விமர்த்தமாக நினைத்திருந்தான்” என்ற ஈட்டு ஸ்ரீஸூக்தியின் அழகு காண்க.
பெரியதிருமொழியில் “மின்னினன்ன நுண்மருங்கல் வேயேய்தடந்தோள் மெல்லியற்கா, மன்னு சினத்த மழவிடைகள் ஏழன்றடர்த்த மாலதிடம்” என்றவிடத்து வியாக்கியானத்தில்-“கருமாறிபாய்ந்தும் அணையவேண்டுமாய்த்து நப்பின்னைப் பிராட்டியின் வடிவழகு” என்றருளிச் செய்ததும் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.
கருமாறிபாய்த வென்பது, கச்சிமாநகரில் காமாகூஷியம்மனாலயத்தில் குளத்திலே நாட்டப்பட்டிருந்த மிகக் கூர்மையான இரண்டு சூலங்களிடையே உயரத்தில் நின்றும் குதிப்பதாம்.
பண்டைக் காலத்தில் ஏதேனும் இஷ்ட ஸித்தி பெற வேண்டுவார் இவ்வருந்தொழிலை வெகு சாதுர்யமாகச் செய்து அபாமொன்றுமின்றியே உயிர்தப்பி இஷ்டஸித்தி பெறுமவர்கள் மிகச்சிலரேயாவர்.
மிகக்கடினமான இக்காரியத்திற்குத் துணிந்தார்களென்றால் இதனால், அவர்கள் பெறவிரும்பியே வஸ்து மிகச்சிறந்ததென்பது விளங்குமன்றோ.
அப்படியே நப்பின்னை திருமேனியின் சிறப்பை விளக்கவந்ததாகும் இவ்வாக்கியம்.
கறையினார் துவருடுக்கை இத்யாதி. “ஆநிரைமேய்க்க நீ போதி அருமருந்தாவதறியாய், கானகமெல்லாந் திரிந்து உன் கரிய திருமேனிவாட” என்கிறபடியே ஸ்ரீகோபால க்ருஷ்ணன் காடுகளிலே திரியுங்கால் கொள்ளுங் கோலம் இவ்வடியில் வெகு அழகாக வருணிக்கப்படுகிறது.
பலபல காட்டுப்பழங்களைப் பறித்துத் துணியிலே கட்டிக்கொண்டு தின்பனாதலால் கறையினார்துவருடுக்கை எனப்பட்டது.
இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்;-“இடையர் காட்டுக்குப் போம்போது முள்கிழியாமைக்கு உடுக்கும் உடைத் தோலைச் சொல்லுகிறது. ……காட்டில் பழங்களைப் பறித்திடுகையாலே கறை மிக்கிருக்கும்; அத்தாலே கறை மிக்க துவராயிற்று உடுக்கை.”
கடையாவின கழிகோல்-கடையாவோடு சேர்ந்த கழிகோல் என்றபடியாய் கடை யாவும் கழிகோலும் என்றதாம்.
பால் கறப்பதற்குக் கொள்ளும் மூங்கிற் குழாய்ப்பாத்திரம் கடையா எனப்பெயர் பெறும்.
கழிகோல்-ஸ்வாதீனப்படாத பசுக்களை நியமிப்பதற்காக வைத்துக் கொள்ளும் கோல் அன்றிக்கே, முன்னணைக் கன்று பசுக்களோடே போனால் முலையுண்ணாமைக்கு, சொறுக்கோலென்று அதன் மூஞ்சியிலே கட்டி விடுவர்கள்;–அதைச் சொன்னதாகவுமாமம.
தங்களக்கென்று ஓர் இருப்பிடமில்லாத ஸந்நியாஸிகள் தங்களுடைய பிஷா பாத்திரமான சிக்கம் முதலானவற்றைக் கையோடே கொண்டிருக்குமாபோலே இடைச்சாதியில் மெய்ப்பாடனான கண்ணபிரான் கடையாவும் கழிகோலும் கையிலே கொண்டு திரிவானாயிற்று.
சறையினார்=இடையர்கள் அரையிலே கட்டிக்கொள்வதொரு மணியுமுண்டு; சறைமணியென்று அதற்குப்பெயர். “இடையர் அரையிலே கோத்துக்கட்டி முன்னே போகாநின்றால் அந்த த்வனி வழியே பசுக்களெல்லாம் ஒடி வரும் படியாயிருப்பதொன்று”. என்கிற ஈட்டு ஸ்ரீஸூக்தியும் காண்க.
அந்த மணியையடையவன் என்கை. அன்றிக்கே, சறை என்று தாழ்வு;
இடக் கை வலக்கையறியப் பெறாமே தாழ்ந்த இடைக்குலத்திலே பிறந்தவன் என்றதாகவுமாம்.
அன்றிக்கே, சறையென்று சறாம்பியிருக்கையாய், உடம்பைப் பேணாதிருக்கிறவன் என்றதாகவுமாம்.
இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;-
“அல்லாத இடையர் விஷூஅயந ஸங்க்ரமணங்களுக்கு உடம்பிருக்கத் தலை குளித்தல் உடம்பிலே துளிநீர் ஏறிட்டுக் கொள்ளுதல் செய்வீர்களாகில், இவனுக்கு அது செய்யவும் அவஸரமற்றிருக்குமாயிற்று பசுக்களின் பி;ன்னே திரிகையாலே. -ரக்ஷ்ய வர்க்கத்தினுடைய ரக்ஷணத்துக்காகத் தன்னைப் பேணாத அவ்வடிவை அணைக்கைக் காயிற்று இவள் ஆசைப் படுகிறது.”
ஸ்ரீராமாயண-அயோத்யா காண்டத்தில், பட்டாபிஷேகார்த்தமான சில நியமங்களோடே கூடியிருக்கின்ற ஸ்ரீராமபிரானைக் குறித்துப் பிராட்டி யருளிச் செய்ததான “…. = தீகூஷிதம் வ்ரத ஸம்பந்நம் வராஜிநதரம் சுசிம், குரங்கச்ருங்கபாணிஞ் ச பச்யந்தீ த்வா பஜாம்ய ஹம்.” என்கிற ச்லோகத்தை நம்பிள்ளை இங்கு ஈட்டில் வியாக்கியானித்தருளுமழகு வாசா மகோசரம். ரஸிகர்கள் விரும்பி நோக்கத்தக்கது.
—————–
***- (தளிர்நிறத்தால்) இராமபிரானுடைய சேஷத்வத்திற்கு உறுப்பல்லாத அறிவு எனக்கு வேண்டாவென்கிறாள்.
தளிர் நிறத்தால் குறையில்லாத் தனிச் சிறையில் விளப்புற்ற
கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.–4-8-5-
பதவுரை
தளிர் நிறத்தால் குறைவு இல்லா |
– |
தளிர்போன்றழகிய நிறத்தால் பரிபூர்ணையாய் |
தனி சிறையில் விளிப்புற்ற |
– |
தனிச்சிறையிருந்ததனால் ப்ரஸித்தி பெற்றவளாய் |
கிளி மொழியாள் காரணம்; ஆ |
– |
கிளியினதுபோன்ற இனிய மொழியையுடையளான ஸீதா பிராட்டிநிமித்தமாக |
கிளர் அரக்கன் நகர் எரித்த |
– |
செருக்கனான இராவணனுடைய பட்டணத்தை நெருப்புக்கு இரையாக்கினவனும் |
களி மலர்துழாய் அலங்கல் கமழ் முடியன் |
– |
தேனையடைய மலரோடுகூடின திருத்துழாய் மாலையாலே பரிமளிக்கின்ற திருமுடியையுடையவனும் |
கடல் ஞாலத்து |
– |
கடல்சூழ்ந்த மண்ணுலகில் |
அளிமிக்கான் |
– |
மிகுந்த அன்பையுடையவனுமான எம்பெருமான் |
கவராத |
– |
விரும்பாத |
அறிவினால் குறைவு இலம் |
– |
அறிவில் அபேக்ஷை யுடையோமல்லோம். |
ஸீதாபிராட்டியைக் குறிக்க வேண்டுமிவ்விடத்தில் தனிச் சிறையில் விளப்பற்ற என்றருளிச்செய்தது
அப்பிராட்டியினுடைய ஒப்புயர்வற்ற பிரபாவாதிஸயத்தை வெளியிடுதற்கேயாம்.
தேவதேவ திவ்ய மஹிஷியான தன் பெருமையையும் சிறையிருப்பின் தண்மையையும் பாராதே
தேவ ஸ்த்ரீகளின் சிறையை விடுக்கைக்காகப் பிராட்டி தான் சிறை யிருந்தது கருணையின் மிகுதியாலாகுமத்தனை.
குழந்தை கிணற்றில் விழுந்தால் உடன் குதித்தெடுக்கும் தாயைப்போலே,
இச்சேதநர் விழுந்த ஸம்ஸாரத்திலே தானுமொக்க வந்த பிறந்து இவர்கள் பட்டதையெல்லாம் தானும் பட்டு ரகூஷித்தருளுகையாலே
நிருபாதிகமான மாத்ருத்வமும் வாதஸல்யமும் இச்சிறையிருப்பினால் விளங்குமென்பர்.
ஆச்ரிதரான தேவர்களுடைய ஸ்த்ரீகளின் சிறையை விடுவிக்கைக்காகத்தன் அநுக்ரஹத்தாலே
தானே வலியச் செய்துகொண்டதாகையாலே பிராட்டிக்குச் சிறையிருப்பு ஏற்றத்திற்கு உறுப்பாமித்தனை.
உலகத்தவர்கட்குக் கர்ம நிபந்தனமாக நேர்கின்ற சிறையிருப்பே ஹேயமாகும்.
பிள்ளை லோகசார்யரும் ஸ்ரீ வசநபூஷணத்தில் “இதிஹாஸ ச்ரேஷ்டமான ஸ்ரீராமாயணத்தால் சிறையிருந்தவளேற்றம் சொல்லுகிறது” என்றருளிச்செய்தது இவ்வாழ்ர்ர் பாசுரத்தை அடியொற்றியேயாம்.
விளப்புற்ற என்றது, ப்ரஸித்திபெற்ற என்றபடி.
பிராட்டியை இலங்கையிற் கண்டு பெருமாளிடம் சென்ற அனுமன்
“விற்பெருந்தடந்தோள் வீர! வீங்குநீரிலங்கை வெற்பில், நற்பெருந்தவத்தளாய நங்கையைக் கண்டேனல்லன், இப்பிறப்பென்பதொன்றும் இரும்பொறை யென்பதொன்றும் கற்பெனப்படுவதொன்றுங் களிநடம் புரியக்கண்டேன்” (கம்பராமாயணம்) என்றனன்.
இப்படிப்பட்ட பலவகை ப்ரஸித்திகள் இங்கு விவகூஷிதம்.
“மதுரா மதுராலாபா” என்று ஸ்ரீராமபிரானும் வாய்வெருவும்படியான பேச்சினிமைபெற்றவளாதலால் கிளிமொழியாள் எனப்பட்டது.
(நகரொரித்த-கமழ்முடியன்) இராவணனைக் கொன்று லங்கைச்வர்யத்தை விபீஷணனுக்காக்கினபின் தன்னுடைய முடிதரிக்கப்பெற்றதுபோலும். “…. = அபிஷிச் ச லங்கார்ம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம்-க்ருதக்ருத்யஸ் ததா ராமோ விஜ்வா: ப்ரமுமோதஹ.” என்ற வான்மீகி வசனமுங் காண்க.
அடியவர் முடிசூடப்பெறுவது தன் பேறாயிருக்கை.
கடல் ஞாலத்து அளிமிக்கான் = இந்த ஸம்ஸா: மண்டலத்திலே மிகுந்த அருளையுடையவன் என்கை.
பரமபதவாஸத்திற்காட்டிலும் இந்நிலவுலகில் வஸிப்பதே எம்பெருமானுக்கு மிகவும் ப்ரியம் என்றவாறு.
‘த்ரிபாத் விபூதியிலே பரிபூர்ணாநுபவம் நடவாநிற்க அது உண்டதுருக்காட்டாதே தேஸரந்தரமதனாக புத்ரன் பக்கலிலே பித்ரு ஹ்ருதயம் கிடக்குமாபோலே ஸம்ஸாரிகள் பக்கலிலே திருவுள்ளம் குடிபோய்” என்கிற ஸ்ரீ வசநபூஷண ஸ்ரீஸூக்தி காண்க.
இப்படிப்பட்ட எம்பெருமான் விரும்பாத அறிவு எனக்கு எதற்கு?
“ஒண்தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” என்கிறபடியே அவனை நோக்கும் அறிவே அறிவு; என்று ஸித்தாந்தமாயிருப்பதுபோல, அவனால் விரும்பப்படும் அறிவே அறிவு-என்பதும் ஸித்தாந்தமாகிறதிங்கு.
—————
***-தன்னைப் பெறுதற்கு உபாயமானவற்றை யெல்லாம் தானே அருளிச் செய்து, ஹிதோபதேசத்திற்குப் பாங்கல்லாதவர்களைத்
தன் அழகாலே வசப்படுத்திக் கொள்பவனான பெருமான் விரும்பாத லாவண்யம் எனக்கு எதற்காக? என்கிறாள்.
அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6-
பதவுரை
அறிவினால் குறைவு இல்லா |
– |
‘நமக்கு அறிவு இல்லையே!’ என்ற குறைபடமாட்டாத |
அகல் ஞாலத்தவர் அறிய |
– |
விரிவான நிலவுலகிலுள்ளாரனைவரும் அறியும்படியாக |
நெறி எல்லாம் |
– |
(கருமயோகம் முதலிய) ஸகலோபாயங்களையும் |
எடுத்து உரைத்த |
– |
ஸாரமாகவெடுத்தருளிச்செய்த |
நிறை ஞானம் |
– |
பரிபூர்ண ஞானத்தையுடைய |
ஒரு மூர்த்தி |
– |
விலக்ஷணஸ்வாமியாய், |
குறிய மாண்உருஆகி |
– |
வாமந ப்ரஹ்மசாரி வேஷத்தையுடையனாய் |
கொடு கோளால் |
– |
(மாவலியை வஞ்சிக்கையாகிற) கொடியவழியினால் |
நிலம் கொண்ட |
– |
பூமியைத் தன்னதாக்கிக் கொண்ட |
கிறி |
– |
உபாஜ்ஞனான |
அம்மான் |
– |
எம்பெருமான் |
கவராத |
– |
விரும்பாத |
கிளர் ஒளியால் குறைவு இலம் |
– |
மிகுந்த லாவண்யத்தில் விருப்பமுடையோமல்லோம். |
“அறிவினால் குறைவில்லா அகல்ஞாலத்தவர்” என்பதற்கு அறிவினால் பரிபூர்ணர்களான இவ்வுலகத்தவர்கள்’ என்று பொருளன்று.
‘நமக்கு அறிவு இல்லையே!’ என்று குறைபட அறியாதவர்கள் என்றபடி.
‘நமக்குச் சோறில்லையே, தண்ணீரில்லையே, துணிமணியில்லையே!’ என்று குறைபடுவர்கள்;
அறிவு இல்லையே’ என்றுமாத்திரம் குறைவுபடுவதில்லை ஸம்ஸாரிகள்.
இங்கே நம்பிள்ளையீடு;-“நாட்டார் அந்ந பாநாதிகறெல்லாவற்றாலும் கார்யமுடையராயருப்பார்களிறே; அறிவொன்றிலுமாயிற்று குறைவுபடவறியாதது. அறிவால் கார்யமின்றிக்கேயிருப்பாராயிற்று.
பகவத்கீதை அர்ஜூநனை நோக்கி அவதரித்ததாயினும், அவனை ஒரு வியாஜமாக நிறுத்தி அஸ்மதாதிகளுக்குமாக அது அருளிச் செய்யப்பட்டதாகையாலே “அகல்ஞாலத்தவரறிய நெறியெல்லாமெடுத்துரைத்த” என்றார்.
கர்மஜ்ஞான பக்திப்ரபத்திகளும், அவதாராஹஸ்யஜ்ஞானம், புருஷோததமவித்யை முதலானவைகளுமான உபாயங்களெல்லாவற்றையும் திருவுள்ளம்பற்றி “நெறியெல்லாம்” என்கிறார்.
(குறியமாணுருவாகி இத்யாதி,) உபதேசத்தாலே திருந்தாதாரை வடிவழகாலே திருத்துவதொருமுறை உண்டாதலால் அது இங்கு விவகூஷிதம்.
கொடுங்கோள்=கோள் என்று ப்ரதிக்ரஹத்தைச் சொல்லுகிறது; முதனிலைதிரிந்த தொழிற்பெயர்.
கொடிய கோளாவது கடினமான ப்ரதிக்ரஹம், சிறிய காலைக் காட்டிப் பெரிய காலாலே கொண்ட வஞ்சனையைச் சொன்னபடி.
கொடுங்கோளால் நிலங்கொண்ட என்ற இவ்விடத்து “… ஸ்ரீகஸ்த்வம் ப்ரஹ்மந்! அபூர்வ: க்வ ச தவ வஸதி: யாகிலா ப்ரஹ்மஸ்ருஷடி: கஸ் தே த்ராதாஸ்தி அநாத: க்வ ச தவ ஜநக: நைவதாதம் ஸ்மராமி, கிம் தே அபீஷ்டம் ததாநி, த்ரிபதபரிமிதா பூமி: அத்யல்பமேதத், த்ரைலோக்யம் பாவகர்ப்பம் பலமிதி நிகதந் வாமநோ வஸ் ஸ பாயாத்.” என்கிற ச்லோகம் அநுஸந்திக்கத்தகும்.
இது மாவலிக்கும் வாமநமூர்த்திக்கும் ஸம்பாஷயைர்ன ச்லோகம். இதன் மிகவினிய பொருளைக் கேண்மின்-;
மாவலி:-(ஹே ப்ரஹ்மந்! த்வம் க:?) ப்ராஹ்மணகுமாரனே! நீ யாவன்? என்று கேட்க;
வாமனன்:-(அபூர்வ) என்கிறான். இதற்கு இரண்டு பொருள்; இதுவரையில் ஒரு நாளும் நான் இரப்பாளனாக வந்தவனல்லேன் என்றும் ஒருபொருள்: “….” என்கிற வ்யுத்பத்தியினால் ‘எல்லார்க்கும் முற்பட்டவன் நான்’ என்பது மற்றொரு பொருள்.
மாவலி:-(தவ வஸதி: க்வ) உனது இருப்பிடம் யாது? என்று கேட்க,
வாமனன்:-(யா அகிலா ப்ரஹ்மஸ்ருஷ்டி:-ஸா மம வஸதி:) என்கிறான். யாசகனாகையாலே பிரமன் படைத்த உலகமெங்கும் திரிபவன் நான் என்பது ஒருபொருள். கருதரியவுயிர்க்குயிராய்க் கரந்தெங்கும் பரந்துறையுமொரு தனிநாயகனாயிருப்பவன் யான் என்பது மற்றொரு பொருள்.
மாவலி:-(தே த்ராதா க:?) நீ யாருடைய ஸம்ரக்ஷணையில் இருந்து வருகிறாய்? என்று கேட்க,
வாமனன்:-(அநாதா) என்கிறான், எனக்கு யாரும் நாதனில்லை என்கை. புகலற்றுத் திரிகிறனென்பதும், உலகுக்கெல்லாம் நானே நானாதலால் எனக்கு யாரும் நாதரில்லை என்பதும் கருத்து.
மாவலி:-(தவ ஜநக: க்வ) உன்னுடைய தகப்பனார் எங்கே? என்று கேட்க;
வாமனன்:-(தாதம் நைவ ஸ்மராமி) என்கிறான். தகப்பனார் எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை யென்கிறவிது மிகவும் சாதுர்யமான பேச்சு. மிக்க இளம்பிராயத்திலேயே தகப்பனாரை யிழந்துவிட்டேனென்பதும், உலகுக்கெல்லாம் நானே பிதாவாகையால் எனக்கொரு பிதா இருக்க நியாயமில்லையென்பதும் கருத்து.
மாவலி:-(தே கிம் அபீஷ்டம் ததாநி?) உனக்கு நான் கொடுக்கவேண்டியதாக நீ விரும்பும் பொருள் என்? என்று கேட்க;
வாமனன்:-(த்ரிபதபரிமிதாபூமி:) என்றான்; என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண் வேண்டுமத்தனை யென்கை.
இப்படிப்பட்ட வாக் சாதுர்யத்தை நினைத்துக் கொடுங்கோளால் நிலங்கொண்ட என்றதாகவுமாம்.
கிறி-உபாயம்; அவன் தரும் விரகு அறிந்து வாங்கவல்ல பெருவிரகன் என்கை.
இப்படிப்பட்ட பெருமான் விரும்பாத லாவண்யத்தில் எனக்கு அபேக்ஷயில்லை யென்றாளாயிற்று.
——————
***-ஆச்ரித விரோதியான இரணியனைப் பிளந்தொழிந்த நரஸிம்ஹன் விரும்பாத வளை எனக்கு வேண்டா வென்கிறாள்
கிளர் ஒளியால் குறைவில்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,
கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த,
வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியன், மணி நீல
வளர் ஒளியான் கவராத வரிவளையால் குறையிலமே.–4-8-7-
பதவுரை
கிளர்ஒளியால் குறைவு இல்லா |
– |
கிளர்கின்ற தேஜஸ்ஸூ நிரம்பப் பெற்ற |
அரி உரு ஆய் |
– |
நரசிங்கமூர்த்தியாய் |
கிளர்ந்து எழுந்து |
– |
சீறிக்கொண்டு தோன்றி, |
கிளர் ஒளிய இரணியனது |
– |
மிக்கதேக பொருந்திய இரணியனுடைய |
அகல் மார்பம் |
– |
விசாலமான மார்பை |
கிழித்து உகந்த |
– |
இருபிளவாக்கித் திருவுள்ளமுகந்தவனும், |
வளர் ஒளிய |
– |
வளர்கின்ற ஜ்வாலையையுடைய |
கனல் |
– |
நெருப்புப் போலேயிருக்கிற |
ஆழி |
– |
சக்கரத்தையும் |
வலம்புரியன் |
– |
சங்கையுமுடையவனும், |
நீலம் மணி வளர் ஒளியான் |
– |
நீலரத்னம் போன்று விளங்குகின்ற திருமேனி விளக்கத்தை யுடையனுமான பெருமான் |
கவராத |
– |
விரும்பாத |
வரி வளையால் குறைவு இலம் |
– |
அழகிய வளையில் அபேக்ஷ யுடையோமல்லோம். |
கிளர்ந்த வொளி குறைவின்றிக்கேயிருக்கிற நரஸிம்ஹமூர்த்தியாய்ச் சீறிக்கொண்டு தோற்றி
வளரொளிய கனலாழி வலம்புரியன்-இரணியனது உடல் நலஸிம்ஹனுடைய திருநகருங்களுக்கே இரைபோரப்
பெறாமையாலே திவ்யாயுதங்களுக்கு இங்குக் காரியமேயில்லையாயிற்று:
‘இங்கு நமக்கு ஒன்றும் இரைகிடைக்கவில்லையே!’ என்கிற சீற்றத்தினால் சங்கும் சக்கரமும் வயிறெரிகிறபடி.
அப்படிப்பட்ட எம்பெருமான் விரும்பாத-(அதாவது) அவன் வாங்கித் தன் கையில் இட்டுக்கொள்ளாத வளை எனக்கு வேண்டா என்றாளாயிற்று.
—————
***மண்ணின்பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்து விரோதிகளைத் தொலைத்து
அமரர்கள் துதிக்க நின்ற பெருமான் விருமாபாத மேகலை எனக்கு ஏதுக்கென்கிறாள்.
வரி வளையால் குறை யில்லாப் பெரு முழக்கால் அடங்காரை
எரி அழலம் புக ஊதி இருநிலம் முன் துயர் தவிர்த்த
தெரி வரிய சிவன் பிரமன் அமரர் கோன் பணிந்து ஏத்தும்
விரி புகழான் கவராத மேகலையால் குறையிலமே.–4-8-8-
பதவுரை
முன் |
– |
முன்பொரு காலத்தில் |
வாவளையல் |
– |
வரிகளையுடைய சங்கில் நின்று முண்டான |
குறைவு இல்லா பெருமுழக்கால் |
– |
மிக பெரிய கோஷத்தினலே |
எரி அழலம் |
– |
கிளர்ந்தெரிகிற (பயமாகிற) அக்கியானது |
அடங்காரை புக |
– |
பகைவர்களிடத்துப் புகும்படியாக |
ஊதி இரு நிலம் |
– |
(சங்கை) ஊதி விசாலமான பூமண்டலத்தினுடைய |
துயர் |
– |
(பெரும்பாரத்தினுலுண்டான) கஷ்டத்தை |
தவிர்த்த தெரிவு அரிய சிவன் பிரடன் அமரர் கோன்; |
– |
(இவ்வுபகாரத்திற்காக) அறிய முடியாத சிவன் பிரமன் இந்திரன் ஆகிய இவர்கள் |
பணிந்து |
– |
வணங்கி |
ஏத்தும் |
– |
துதிக்கப்பெற்ற |
விரி புகழான் |
– |
பரந்த புகழையுடையனுமான எம்பெருமான் |
கவராத |
– |
விரும்பாத |
மேகலையால் |
– |
அரைவடத்தில் |
குறைவு இலம் |
– |
அபேக்ஷையுடையோமல்லோம். |
வரிவளையால் என்கிற பதம் ‘குறைவில்லா’ என்பதில் அந்வயிப்பன்று, பெருமுழக்கால்’ என்பதில் அந்வயிப்பதாகும்;
ஸ்ரீபாஞ்சஜந்யத்தாலுண்டான மஹாகோஷத்தாலே’ என்றபடி.
“படைபோர்ப்புக்கு முழங்குமப் பாஞ்சசன்னியம்” என்கிறபடியே பாஞ்சசன்னியம் முழங்கின்னவளவிலேயே
எதிரிகள் குடல் குழம்பிக் குமுழறிபோவர்கள். பாரத யுத்தம் பிரகரணங்களில் இதன் பெருமை அறியத்தக்கது.
கண்ணபிரானையன்றி மற்று எவனையும் கனவிலுங் கருதாதிருந்த ருக்மிணிப் பிராட்டியை
சிசுபாலனோடு விவாஹம நடத்துவதாகக் கோடித்து வித்தமாயிருந்த ஸமயத்தில்
கண்ணவிரானது வரவை யெதிர்பார்த்திருக்க அப்பிராட்டியின் நெஞ்சு முதிந்துபோய்
இனி நாம் உயிர் துறப்பதே நல்லுபாயம் என்று நிச்சயித்திருந்த க்ஷணத்தில் கண்ணவிரான் மிகவிரைந்து எழுந்தருளிப்
புறச்சோலையிலே நின்று தனது ஸ்ரீபாஞ்சஜந்த்தைத் திருப்பவளத்திலே வைத்து ஊத,
அவ்வோசை ருக்மிணிப்பிராட்டியை மகிழ்வித்தளவேயன்றி,
சிசுபாலனையும் அவனைச்சார்ந்தவர்களையும் எரியழலம் புகழ்செய்தமை ப்ரஸித்தம;
இப்படிப்பட்ட இதிஹாஸங்கள் இங்குக் கொள்ளத்தக்கன.
(தெரிவரிய இத்யாதி.) எம்பெருமான் எங்கெங்கு வெற்றிபெற்று நிற்கின்றனோ
அங்கங்கெல்லாம் சிவனும் பிரமனுமிந்திரனும் முதலானவர்கள் பணிந்து ஏத்துவர்கள்;
அப்படி அவர்கள் ஏத்துவது பாபரனான எம்பெருமானுக்கு ஒரு பெருமையன்றாகிலும்,
துர்மானங் கொண்டாடித் திரியும் அத்தெய்வங்கள் அந்த துர்மானந் தவிர்ந்து காலவிசேஷங்களிலே எ
ம்பெருமானைப் பணிந்தேத்துகை அவர்களுக்கும் ஸ்வரூபலாமாய் எம்பெருமானுக்கும் ஒருவாறு ஸந்தோஷதரமாயிருக்கையாலே
ஆழ்வார்கள் அதனை ஒரு பொருளாக எடுத்துக் கூறுவர்கள்.
மேகலை-நெவநா என்ற வடசொல் திரிபு.
————–
*** வாணனாயிரம் தோள் துணித்த பெருமாள் விரும்பாத உடம்பு எனக்கு ஏதுக்கு? என்கிறாள்.
மேகலை யால் குறை யில்லா மெலி வுற்ற அகல் அல்குல
போக மகள் புகழ்த் தந்தை விறல் வாணன் புயம் துணித்து
நாக மிசைத் துயில்வான் போல் உலகெல்லாம் நன்கொடுங்க
யோகு அணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே.–4-8-9-
பதவுரை
மே கலையால் |
– |
உடையழகினால் |
குறைவு இல்லா |
– |
குறையற்றவளும் |
மெலிவு உற்ற |
– |
ஸூகுமாரத்தன்னை பெருந்தியவளும் |
அகல் அல்குல் |
– |
அகன்ற சிதம்ப ப்ரசேதத்தை யுடையவளும் |
போதன் |
– |
போகத்திற்கு யெனளுமான |
மகள் |
– |
உஷையென்னும் பெண்ணுக்கு |
தந்தை |
– |
புகழையுடையனாய் |
புகழ் |
– |
புகழையுடையனாய் |
விறல் |
– |
பலிஷ்டனான |
வாணன் |
– |
பாணாஸூரனுடைய |
புயம் |
– |
தோள்களை |
துணித்து |
– |
அறுத்தொழித்தவனாய், |
நாகம் மிசை |
– |
ஆதிசேஷன்மீது |
துயில்வான் போல் |
– |
உறங்குவான் போலே |
உலகு வல்லாம் |
– |
ஸகலலோகமும் |
நன்கு ஒடுங்க |
– |
நன்மையிலே சேரும்படி |
யோகு அணைவான் |
– |
உபாயசிந்தை பண்ணுமவான எம்பெருமான் |
கவராத |
– |
விரும்பாத |
உடம்பினால் குறைவு இலம் |
– |
உடம்பில் அபேக்ஷயுடையோ மல்லோம். |
“மேகலையால் குறைவில்லா” என்பது பாணா ஸூரபுத்ரியான உஷைக்கு அடையொழி.
மேகலை என்பதைக் கீழ்ப்பாசுரத்திற்போலே என்னும் வடசொல்லன் திரிபாகக்கொள்;ளவுமாம்;
அன்றி, ‘மேகலையால்’ என்று இரண்டு சொல் வடிமாகக்கொண்டு, விரும்பத்தக்க (கலை) வஸ்த்ரத்தினால் என்று கொள்ளவுமாம்.
“நம்பும் மேவும் நசையாகும்மே” என்பது தொல்காப்பியம். மேம்பாடுடைய கலையினால் என்னவுமாம்.
“உஷைக்குக் கூறை யுடை அழகியதாயிருக்கும் போலே காண்” என்பராம் வங்கிப் புரத்து நம்பி.
அல்குல்-மத்யப்ரதேசம். அல்குமென்று பெண்குறியையே சொல்லுவதாகப் பலர்பிரமித்திருப்பதுண்டு.
திருக்கோவையர் முதலிய நூல்களில் சிற்சிலவிடங்களில் அப்பொருளில் பிரயோகம் கண்டாலும்
அருளிச்செயல்களில் காண்கிற பிரயோகம் அப்பொருளில் அல்ல.
“திருமலிந்து திகழ்மார்வு தேக்கந்தென்னால்குலேறி” என்ற பெரியாழ்வார் திருமொழியும்
“பூந்துகில் சேரல்குல்” என்ற பெருமாள் திருமொழியும் முதலாயின காண்க்.
———————-
உடம்பினால் குறையில்லா உயிர் பிரிந்த மலைத் துண்டம்
கிடந்தன போல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த
தடம் புனல சடை முடியன் தனி ஒரு கூற மர்ந்துறையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே.–4-8-10-
பதவுரை
உடம்பினால் குறைவு இல்லா |
– |
பெரிவுடம்பு படைத்த |
அசுரர் குழாம் |
– |
அசுரக்சுட்டங்களை |
உயிர் பிரிந்த மலை துண்டம் கிடந்தனபோல் |
– |
உயிரைவிட்டு நீங்கின பர்வதகண்டங்கள் கிடந்காற்போலே |
பல துணி ஆ |
– |
பலபல கண்டங்களாம்படி |
துணித்து |
– |
துண்டித்து |
உகந்த |
– |
(ஆச்ரிதவிரோதிகள் தொலைந்தன வென்று) திருவுள்ள முவந்தவானாய், ஒரு பக்கத்திலே, |
தடம் புனல் சடை முடியன் தனி அமர்ந்து உறையும் |
– |
பரந்த கங்காதீர்த்தத்தைத்தரித்த ஜடாமகுடத்தையுடையனான சிவபிரான் பொருந்தி வாஸம் பண்ணப்பெற்ற |
உடம்பு உடையான் |
– |
திருமேனியை யுடைவனான எம்பெருமான் |
கவராத |
– |
விரும்பாத |
உயிரினால் குறைவு இலம் |
– |
ஆத்மாவில் அபேக்ஷையுடையோ மல்லோம். |
***- (உடம்பினால் குறைவில்லா.) முன்னடிகளால் எம்பெருமானுடைய விரோதி நிரஸந ஸாமர்ததியம் பேசப்படுகிறது.
“உடம்பினால் குறைவில்லா” என்கிற அடைமொழி அசுரர்குழாத்திலே அந்வயிக்கும்.
“ஊன்மல்கிமோடு பருப்பார்” என்கிறபடி கண்ட பொருள்களையும் தின்று உடம்பை வளர்த்திருப்பர்கள் அசுரர்கள்.
ஆத்மாவைப் போஷியாதே தேஹ போஷணத்திலேயே நோக்குடையவர்கள் என்றபடி.
பண்டொருகாலத்தில் மலைகளெல்லாம் இறகுகளோடு கூடி வானத்திலெழுந்துதிரிந்து நாடுநரங்களுக்கு விநாசங்களை விளைத்திட்டனவென்றும், அப்போது தேவேந்திரன் தனது வஜ்ராயுதத்தினால் அம்மலைகளின் இறகுகளைத் துணித்து வீழ்த்தனன் என்றும் இதிஹாஸங்கள் கூறும்.
எம்பெருமானால் துணித்து வீழ்த்தப்பட்ட அசுரர்கள் அம்மலைக்களோடு ஒப்பிடத்தக்கவர்களெனக் கொண்டு “உயிர்பித்த மலைத்துண்டம் கிடந்தனபோல்” எனப்பட்டது.
“ஸப்ராணனாய்க்கொண்டு ஸஞ்சரித்த பர்வதங்கள் இந்த்ரன் கையில் வஜ்ராயுகத்திலே பல கூறும்படி துணியுண்டு
கிடந்தாப்போலே அஸூர வர்க்கத்தைப் பல கூறாம்படி துணித்துகந்தானாயிற்று” என்பது நம்பிள்ளையீடு.
தடம்புனால்சடைமுடியன் தனியொருகூறமர்ந்துறையு முடம்புடையான்=தன்னுடைய சேஷத்வத்தைச் சிலகாலங்களிலே மறந்து
தன்னையே சச்வரனாத அபிமானிக்கும் குர்மானியான ருத்ரனுக்கும் உடம்புகொடுக்குமெம்பெருமான்
எனக்கு உடம்பு கொடுத்தில்னென்றால் பின்னை இந்த உயிர் எனக்கு எதுக்கு? என்கிறார்.
“உயிரினால் குறைவிலம்” என்றது இந்த ஆத்மா தொலைந்து போகட்டுமென்றபடி.
நித்யமான ஆத்மவஸ்து எங்ஙனே தொலைந்து போகுமென்று குசோத்யம் செய்யவேண்டா
எம்பெருமானுடைய விருப்பத்திற்கு உடலாவதே ஆத்மாவுக்குச் சிறந்த ஸ்வரூபம் என்று காட்டினபடி.
ஆசார்ய ஹ்ருதயத்தில் ‘சேஷத்வ பஹர்ப் பூத ஜ்ஞாநந்த மயனையும் ஸஹியாதார் த்யாஜ்யோபாதியை ஆதரியார்களே” என்றருளிச்செய்த ஸ்ரீஸூக்தியும்,
முமுஷுப்படியில் “உயிரினால் குறைவிலமென்கிறபடியே த்யாஜ்யம்” என்றருளிச்செய்த ஸ்ரீஸூக்தியும் இங்கு உணரத்தக்கன.
————
***-இருள் தருமாஞாலத்தில் பிறப்பையறுத்துப் பரமபதம் பெறுதற்கு
இத்திருவாய்மொழி ஸாதனமாயிருக்குமென்று பயலுரைத்துத் தலைக்கட்டுகிறது.
உயிரினால் குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித்
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடங் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப் பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே.–4-8-11-
பதவுரை
உயிரினால் குறைவு இல்லா |
– |
எண்ணிறந்த ஆத்மாக்களையுடைய |
ஏழ் உலகு |
– |
ஸமந்த லோகங்களையும் |
தன்னுள்; ஒடுக்கி |
– |
தன்னுடைய ஸங்கல்பத்திலே யடக்கிவைத்து |
தயிர் வெண்ணெய் உண்டானை |
– |
தயிரும் வெண்ணெயும் அமுது செய்தவனான எம்பெருமான் விஷயமாக |
(தடம் குருகூர் சடகோபன்; |
||
செயிர் இல் |
– |
குற்றமற்ற |
இசை |
– |
இசையோடு கூடின |
சொல்மாலை |
– |
சொல்மாலையாகிய |
ஆயிரத்துள் |
– |
ஆயிரம் பாட்டினுள்ளே |
இபத்தால் |
– |
இந்தப்பதிகத்தினால் |
வயிரம் சேர் பிறப்பு அறுத்து |
– |
உரமேறின ஸம்ஸாரத்தை அடியறுத்து |
வைகுந்தம் |
– |
பரமபதத்தை |
நண்ணுவர் |
– |
கிட்டப்பெறுவர். |
உயிரினால் குறைவில்லா என்றது ஒரு ஜீவாத்மாதவும் தப்பாதபடி என்றவாறு.
“நெற்றி மேற்கண்ணாலும் நிறைமொழிவாய் நான்முதனும் நீண்ட நால்வாய் ஒற்றைக்கை
வெண்பகட்டிலொருவனையு முள்ளிட்டவமரரோடும் வெற்றிப்போர்க்கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கியய்யக்கொண்ட” என்றும்
“மண்னாமல் தான் விழுங்கி யுய்யக் கொண்ட” என்றும் திருமங்கையாழ்வாரருளிச் செய்தபடியே
இந்திரன் பிரமனீசனென்றிவர்களில் ஒருவரும் தப்பாமல் என்றதாயிற்று.
உலகேழ் தன்னுள்ளொடுக்கித் தயிர்வெண்ணெயுண்டானை = இங்கே நம்பிள்ளையீடு காண்மின்;-
“தயிரும் வெண்ணெயும் மகளமமுவுகாண்ப்புகுகிறபோது ‘செருப்பு வைத்துத் திருவடி தொழுவாரைப்போலே அந்யபரதைக்கு உடலாகவொண்ணது’ என்று எல்லாலோகங்களுக்கும் வேண்டும் ஸம்விதானம் தன் ஸங்கல்பத்தாலே செய்து பின்னையாயிற்று வெண்ணெயமுதுசெய்தது.” என்பதாம்.
“உலகேழ் தன்னுள் ஒடுக்கித் தயிர்வெண்ணெயுண்டான்” என்கிற சொற்செறிவின் அழகை நோக்கி நம்பிள்ளை இங்ஙனே யருளிச்செய்தது இன்சுவைமிக்கது.
காலில் செருப்போடே கோவிலுக்குச் செல்பவர்கள் கோபுரவாசற்புடையிலே செருப்பை விட்டிட்டு உள்ளேபுகுந்து பெருமாளை ஸேவிக்குமளவிலும செருப்பிலே நினைவு இடையறாமல் செல்லுகின்றபடியாலே “ஸ்வாமிந்! தீர்த்தம் ஸாதிக்க, திருத்துழாய்ஸாதிக்க” என்னவேண்டும்போதும் ‘செருப்புஸாதிக்க’ என்பர்களாம்;
எம்பெருமானும் உலங்களுக்குச் செய்யவேண்டிய ஸம்விதானங்களைச் செய்யாமல் நெய் தயிர் வெண்ணெய் களவுகாணப்புகந்தால் இடையிடையே அந்த உலகநினைவும் உண்டாகி, செருப்பை வைத்துத் திருவடிதொழுத கதையாக ஆய்விடுமென்றெண்ணி, எல்லா லோகங்களுக்கும் வேண்டும் ஸம்விதானங்களைத் தன் ஸங்கல்பத்தாலே செய்துமுடித்து அந்யபரதைக்கு இட மறுத்துக்கொண்டு வெண்யெயமுதுசெய்யப் புகுந்நானென்று ரஸோக்தியிருக்கிறபடி.
“கர்ப்பிணிகள் வயிற்றில் பிள்ளைக்கீட்டாக போஜநாதிகள் பண்ணுமா போலே உள்விழுங்கின லோகங்களுக்கு ஜீவனமாகத் தயிர்வெண்ணெயுண்டான்” என்ற ஈட்டு ஸ்ரீஸூக்தியும் பரம போக்யம்.
இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயமாக ஆழ்வார் அருளிச்செய்த ஆயிரத்துளிப் பத்தால் ஸம்ஸாரத்தை அடியறுக்கலாமென்றதாயிற்று.
வயிரம்சேர் பிறப்பு ஸ்ரீ வேண்டாவென்று கழித்தாலும் விடாதபடிகாழ்ப்பு ஏறிக்கிடக்கிற ஸம்ஸாரம்.
செயிர் இல் = சொற்குற்றமும் பொருட்குற்றமும் இல்லாத என்றபடி.
————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply