ஸ்ரீ திருவாய் மொழி -4-7–சீலம் இல்லாச் சிறிய னேலும் -ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1-

 

பதவுரை

சீலம் இல்லா

நன்மை யொன்று மில்லாத
சிறியன் ஏலும்

சிறியவனா யிருந்தேனாகிலும்
செய் வினையோ

செய்த பாபமோ
பெரிது

பெரிதாயிருக்கின்றது;
ஆல்

அந்தோ!;
ஞாலம் உண்டாய்

(பிரளயத்தில்) உலகங்களை உண்டவனே!
நாராயணா

நாராயணனே!
என்று என்று

என்றிப்படிப் பலகாலும் சொல்லி
காலம் தோறும்

எல்லாக்காலத்திலும்
யான் இருந்து

நான் ஆசையோடிருந்து கொண்டு
கை தலை பூசல் இட்டால்

கையைத் தலையிலே வைத்துக் கூப்பிட்டால்,
கோலம் மேனி

அழகிய திருமேனியை
காண

நான் ஸேவிக்குமாறு
வாராய்

வருகிறார்யில்லை;
கூவியும் கொள்ளாய்

கூவிக் கொள்வதும் செய்கின்றில்லை.

***- ஆழ்வார் சில ஞானிகளைச் சிறுமாமனிசர் என்று  அருளிச்செய்வதுண்டு;

வடிவு சிறுத்து ஞானம் பெருத்தவர்கள் என்கிற காரணத்தாலே அவர்களைச் சிறுமாமனிசரென்கிறது.

இப்பாட்டின் முதலடியில் ஒரு விதத்திலே தம்மையும் சிறுமாமனிசராகச் சொல்லிக் கொள்கிறார் போலும்.

நற்குண மொன்றுமில்லாததனால் சிறியவன்; பண்ணின பாபங்களில் பெரியவன் என்கிறார்.

சீலமாவது நன்னடத்தை.  அஃதில்லாமைபற்றித் தம்மை நீசராக அநுஸந்தித்துக் கொள்ளுகிறார்.

செய் வினையோ பெரிதால் என்றவிடத்திற்கு நம்பிள்ளையீடு;- “பண்ணின பாபத்தைப் பார்த்தவாறே சிதசிதீச்வரதத்வத்ரயத்தையும் விளாக்குலை கொள்ளும் படி பெருத்திருந்தது.  ஸம்ஸாரிகளுடைய குற்றங்களைப் பொறுக்கு மீச்வரனுடைய குணங்களிலும், அவன் தந்த பக்தி ரூபாபந்ந ஜ்ஞானத்திலுங் காட்டில் பெரிதாயாயிற்றிருக்கிறது.”

நல்ல காரியங்களைச் செய்யாமற்போனாலும் செய்ய வேணுமென்று நெஞ்சினால் நினைத்தாலும் பலனுண்டு;

தீய காரியங்கள் விஷயத்தில் அப்படியல்ல;

தீயன செய்யவேணுமென்று நெஞ்சினால் நினைத்திருந்து அப்படியே செய்யாதொழிந்தால் குற்றமில்லை என்று நூற்கொள்கையுண்டு.

நான் அப்படியல்லாமல் தீயன செய்து தலைக்கட்டினே னென்கிறார் செய்வினையோ என்பதனால்.

தாம் செய்த பாவங்கள் மிகப்பல என்பதை மேலே முதலிக்கிறார்.

எம்பெருமானை நான் விரும்பினபடியே அநுபவிக்கப்பெறாமல் இழந்திருக்கினன்றேனாதலால்

செய்வினை பெரிதென்னுமிடத்தில் ஸந்தேஹமுண்டோவென்கிறார்.

அசோக வனத்தில் பிராட்டியும் “மமைவதுஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ்தி ந ஸம்சய: ஸமர்த்தாவபி தௌ யந்மாம் நாவேக்ஷேதே பரந்தபௌ” என்றாள்.

விரோதிகளைத் தொலைத்து என்னை ரக்ஷிக்கைக்குறுப்பான ஆற்றல் படைத்த அவ் விரண்டு ஆண் புலிகளும்

என்னைக் கடாக்ஷியாதே யிருந்தார்களாகில் இது என்னுடைய பாபத்தின் பலனேயன்றோ என்றாள் பிராட்டி.

இங்கு * துஷ்க்ருதம் கிஞ்சித்மஹத் * என்கிறாள்.  கிஞ்சித் என்றால் சிறிது என்றபடி; மஹத் என்றால் பெரிது என்றபடி.

சிறிதாயும் பெரிதாயுமிருக்கிற பாபம் எனக்கு உண்டென்று சொல்லுகிற பிராட்டியின் திருவுள்ளம் யாதெனில்;

பகவத் விஷயத்திலே பட்ட அபசாரத்தைச் சிறிய பாபமென்றும் பாகவத விஷயத்திலே பட்ட அபசாரத்தைப் பெரிய பாபமென்றும் கருதினபடி,

காட்டுக்குப் புறப்படும் ஸமயத்திலே தன்னை உடன் கொண்டு சொல்ல மாட்டேனென்ற பெருமாளை நோக்கி

“ஸ்த்ரியம் புருஷவிக்ரஹம்” என்று பழித்துக்கூறினது பகவத் விஷயாபசாரம்.

மாரிச மாயமான் பின்னே பெருமாள் எழுந்தருளியிருந்தபோது கபடமான கூக்குரலைக் கேட்ட பிராட்டி

இளைய பெருமாளை நோக்கிப் பல வார்த்தைகள் சொல்லியிருக்கையில்

“-அநார்யகருணாம்ப ந்ருசம்ஸ! குலபாம் ஸந!*என்று தொடங்கி

** ஸ்ரீமமஹேதோ: ப்ரதிச்சந்ந: ப்ரயுக்தோ பரதேந வா தந்நஸித்யதி ஸௌமித்ரே தவ வா பரதஸ்ய வா.” என்று

மிகவும் கடுமையாகப் பழித்துக் கூறினது பாகவதாபசாரம்.

இவற்றுள் பகவதபசாரம் அவ்வளவு கொடிதன்றாகையாலே கிஞ்சித் எனப்பட்டது;

பாகவதாபசாரம் மிகக் கொடியதாகையாலே மஹத் எனப்பட்டது.

ஆழ்வார் தாம் கதறிக் கூவியழைக்கிற படியை அருளிச் செய்கிறார் ஞாலமுண்டாய்! என்று தொடங்கி.

விசாலமான பூமிப் பரப்பை யெல்லாம் பிரளய வெள்ளம் கொள்ளை கொள்ளப்புகுந்த காலத்திலே

“மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம், உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கியுய்யக்கொண்ட” என்கிறபடியே திருவயிற்றிலே வைத்து ரக்ஷித்தவனே! என்று கூப்பிடா நின்றேன்.

ஆபத்துக்கு வந்து உதவுமவனல்லையோ நீ; பிரளயாபத்து வந்தால்தான் ரக்ஷிப்பதென்று ஒரு விரத முண்டோ?

ஞானமூர்த்தி=சேதநகோடியிலே சேர்ந்த எனக்கும் ஞானமுண்டு;

ஆகிலும் என்னுடைய ஞானம் என்னை நித்ய ஸம்ஸாரியாக்கிக் கொள்வதற்கன்றோ உதவுகின்றது.

இந்த ஸம்ஸாரத்தைக் கழித்து என்னைத் திருவடிக்கு ஆளாக்கிக் கொள்ளுகைக்கீடான ஞானமன்றோ உன்னுடையது.

“ஆமாறொன்றறியேன் நான்” என்றிருக்கும்மடியேனுக்கு “ஆமாறறியும் பிரானே!” என்னப்படுகிற நீ உதவித் தீர வேண்டுமே;

நீ செய்யமாட்டாதது ஒன்றுமில்லை.  ஒருவனுக்கு; கண்ணும் தெரியாதே காலும் நடைதாராதேயிருந்தது;

மற்றொருவனுக்குக் கண்ணும் தெரிந்து காலும் நடைதருவதாயிருந்தது;

இப்படியிருக்குமானால் ஆர்க்கு ஆர் வழிகாட்டிக்கொண்டு போவார் என்பதை நான் சொல்ல வேணுமோ?

ஞானமும் சக்தியுமுள்ளவர்களெல்லாரும் அஜ்ஞரம் அசந்தருமாயிருப்பாரை ரக்ஷித்தேயாக

வேணுமென்று ஒரு நிர்ப்பந்தமுண்டோவென்று எம்பெருமானுக்குத் திருவுள்ளமாக, நாராயணா என்கிறார்.

ரக்ஷிக்கவேண்டிய ப்ராப்தியில்தையாகில் நிர்ப்பந்தமில்லைதான்;

ப்ராப்தியுள்ள விடத்திலே உபேக்ஷித்திருந்தால் பழிப்பாகுமன்றோ.

“உன்றன்னோடுவேல் நமக்கு இங்கொழிக்க வொழியாது” என்னும்படியான குடல்துடக்கு இருக்கும்போது கைவாங்கியிருக்கவல்லையோ?

சரீரத்திற்கு ஆகவேண்டிய நன்மையை சரீரியன்றோ நோக்கக்கடமைப்பட்டவன்.

உடையவன் உடமையைப் பெறுகைக்கு வியாபரிக்க வேண்டாவோ? என்பதான கருத்துக்கள் நாராயணா ! என்பதில் உய்த்துணரத்தக்கன

என்றென்று என்கையாலே இப்படியே பலகால் கூப்பிட்டுக் கொண்டே யிருக்கின்றமை காட்டப்பட்டது.

இவர்தாம் கூப்பிடுவது ஒரு ப்ரயோஜனத்திற்காகவாகில் அது கிடைத்த தென்று வாய் ஓயலாம்;

கூப்பிடுகைதானே ப்ரயோஜநமாகையாலே ஓவாதுரைக்கு முரை இதுவேகாணீர்.

காலந்தோறும் யானிருந்து என்றவிடத்தில் நம்பிள்ளையீடு:-“படுவதெல்லாம்பட்டு நூறே பிராயமாக இருக்கவேணுமோ? குணாதிக விஷயத்தைப் பிரிந்தால் முடியவொட்டாது ‘இன்னமும் காணலாமோ’ என்னும் நசை.”

கைதலைபூசலிடுவதாவது-“மத்தகத்திடைக் கைகளைக்கூப்பி” என்றும்  …

சிரஸ்யஞ்ஜலிமாதாய” என்றும் சொல்லுகிறபடியே தலைமேல் கரங்குவிக்கை

ஆற்றாமையினால் தலைமேல மோதிக் கொள்ளும்படியைச் சொல்லுகிறதென்றுங் கூறுவர்.

கோலமேனி காணவாராய் = ஆசைப்பட்டவர்கள் கண்டு அநுபவிப்பதற்காகவன்றோ இத்திருமேனி படைத்தது.

“பக்தாநாம் த்வம் ப்ரகாசஸே” என்று சொல்லியிருக்க இப்படி யும் உபேக்ஷிப்பதுண்டோ?

“வாசிவல்லீரிந்தளுரிர்! வாழ்ந்தேபோம் நீரே !’ என்று வயிறெரிந்து சொல்லும்படியாக வைத்துக்கொள்வது தகுதியோ?

பரிமள ப்ரசுரமான தீர்த்தத்தைச் சேகரித்துவைப்பது விடாயர்விடாய் கெடுவதற்காகவன்றோ;

அதனை அவர்கட்கு எட்டாதேவைப்பது முண்டோ? என்கிறார்.

காணவாராய் என்றது காண வரவேணு மென்றபடி யன்று; காணவருகின்றிலையே! என்றபடி.

நித்ய விபூதியிற்சென்று ஸேவிப்பதிலுங்காட்டில் இவ் விபூதியிலேயே ஸேவிக்கப்பெறுதல்

பரமோத்தேச்யமாகையாலே இக்கருத்துத் தோன்ற “கூவியுங்கொள்ளாயே” என்கிறார்.

——————

***- ஏற்கனவே தம் திறத்தில் எம்பெருமான் செய்தருளியிருக்கிற உபகாரங்கள் சிலவற்றைச் சொல்லி

‘இப்படி உபகாரம் செய்தருளின நீ இப்போது உபேக்ஷிப்பது தகுதியோ?’ என்கிறார்.

கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று
நள் இராவும் நன்பகலும் நான் இருந்து,ஓலம் இட்டால்
கள்ள மாயா! உன்னை என் கண் காண வந்து ஈயாயே.–4-7-2-

பதவுரை

கொள்ள

அநுபவிக்கவநுபவிக்க
மாளா

எல்லைகாணவொண்ணாத
இன்பம் வெள்ளம்

ஆனந்தப்பெருக்கை
கோது இல

குறையற
தந்திடும்

உபகரிக்கின்ற
என் வள்ளலே

என் உதாரனே!
வையம் கொண்ட

(மாவலிபக்கல் நீரேற்றுப் பெற்று) உலகங்களையெல்லாம் அளந்து கொண்ட
வாமனா

வாமன்மூர்த்தியே!
ஓ ஓ என்று

என்று ஆர்த்தியோடே சொல்லி
நள் இராவும் நன் பகலும்

இரவும் பகலும்
நான் இருந்து ஓலமிட்டால்

நான் ஆசையோடிருந்து கூப்பிட்டால்
கள்ளம் மாயா

க்ருத்ரிமனான ஆச்சர்ய பூதனே!
உன்னை

உன்னை
என் கண் காண

என் கண்கள் காணுமாறு
வந்து ஈயாய் ஏ

வந்து ஸேவை ஸாதிக்கின்றிலையே!,

* தீர்ப்பாரையாமினிக்குமுன்னே * வீற்றிருந்தேழுலகில் “வீவிலின்பம் மிகவெல்லை நிகழ்ந்தனன்” என்று சொல்லும்படியாக

அப்போது எம்பெருமான் தந்த பரமாநந்த ஸந்தோஹத்தைத் திருவுள்ளம்பற்றிக்

“கொள்ளமாளா வின்பவெள்ளம் கோதில தந்திடும் என் வள்ளலே!” என்கிறார்.

கொள்ளக் கொள்ள மாளாத இன்ப வெள்ளமாவது மேன்மேலும் பெருகிச்செல்கின்ற இன்பவெள்ளம்.

அதனைக் கோதில்லாதபடி தருகையாவது என்னென்னில்; பகவத் விஷயத்தை அநுபவித்துக் கொண்டே வரும்போது

‘அநுபவித்தது போதும்’ என்று தோன்றினாலும்,

‘இதைவிட்டு இன்னொரு விஷயத்தை அநுபவிப்போம் என்று  ஆசை பிறந்தாலும் அது இன்பத்திற்குத் கோது;

அத்தகைய கோது இல்லாதபடி தந்தனனென்றது “எப்பொழுதும் நான் திங்களாண்டூழியூழிதொறும்

அப்பொழுதைக்கப்பொழுது என்னாராவமுதமே’ என்னும்படியாகத் தந்தருளினனென்றபடி.

என் வள்ளலே! என்று சொல்லி ஓ! என்கிறார்,

இப்படி இப்போது கூப்பிடப்பண்ண நினைத்திருந்தால் வீற்றிருந்தேழுலகிலே அப்படியென்னை அநுபவிப்பிக்கவேணுமோ? என்கைக்காக.

வையங்கொண்ட வாமனாவோ! ஸ்ரீ ப்ரயோஜநாந்தர பரனான வொருவனுக்குக் காரியஞ் செய்ய நினைத்து

அழிய மறின வுனக்கு அநந்யப்ரயோஜநனான என் விஷயத்திலே இரங்குகை அரிதோ என்று கூறியவாறு.

வையத்தை இரந்த காலத்தில் வாமநவேஷமிருந்ததேயல்லது,

வையங்கொண்ட காலத்தில் அஃது இல்லையே; த்ரிவிக்ரம வேஷமன்றோ அப்போது இருந்தது;

அப்படியிருக்க ‘வையங்கொண்ட வாமனா!, என்றது என் என்னில்;

ஆழ்வாருடைய திருவுள்ளத்தில் வாமந வேஷமொன்றே அழகின் மிகுதியால் நிலைத்திருக்கிறபடி.

இந்திரனைப்போலே ராஜ்யம்பெற்று மீள வேண்டியவரல்லாமையாலே

இங்ஙனே கூப்பிடுவதே இவர்க்குப் போது போக்கென்று “என்றென்று” என்பதனால் தெரிவிக்கப்படும்.

இப்படிப் பல திருமாங்களைச் சொல்லி இரவும் பகலும் நான் கூப்பிட்டால்

என் கண்கள் விடாய் கெடும்படி நடையழகு காட்டி என் முன்னே வந்து நிற்கின்றிலையே! என்கிறார்.

————–

***- நான் விரும்புகிறபடி என் கண்முன்னே வந்து காட்சி தந்தருளத் திருவுள்ளமில்லையாகிலும்

‘-நீ பாவி, உனக்கு நான் காட்சிதரமாட்டேன்” என்கிறவொரு வார்த்தையையாவது

என் கண் வட்டத்திலே வந்து சொல்லி போனாலாகாதோவென்கிறார்.

ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,
கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண் பனி சோர நின்றால்,
பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே.–4-7-3-

பதவுரை

தீ வினைகள்

பாவங்களை
ஈவு இலாத

முடிவில்லாதபடி
எத்தனை செய்தனன் கொல்

எவ்வளவு செய்தேனோ!
தாவி

திருவடிகளாலே வியாபித்து
வையம்

உலகங்களை
கொண்ட

ஸ்வாதீனப்படுத்திக் கொண்ட
எந்தாய்

ஸ்வாமியே!
தாமோதரா

தர்மபால் ஆப்புண்ட தழும்பை உதரத்திலுடையவனே!
என்று என்று கூவி கூவி

என்று பலகால்சொல்லி இடைவிடாதே கூப்பிட்டு
நெஞ்சு உருகி

நெஞ்சு நீராயுருகி
கண் பனி சோர நின்றால்

கண்ணீர் பெருக நின்றால்,
பாவியேன்

பாவியான நான்
காண

கண்ணாலே ஸேவிக்ககும்படியாக
வந்து

எழுந்தருளி
நீ பாவி என்று

‘(ஆழ்வாரே!) நீர் பாபிகாணும்’ என்று
ஒன்று சொல்லாய்

ஒரு வார்த்தையும் சொல்லுகின்றாயில்லை.

அவனோட்டைக் கலவியையே அல்லும் பகலும் ஆசைப்பட்டுக்கொண்டு கிடக்கிற ஆழ்வார்

‘பாவி   ‘பாவி நீ யென்றொன்று சொல்லாய்’  என்கைக்குக் கருத்து யாதெனில்;

‘ஆழ்வீர்! நீர் பாவமே செய்து பாவியானவராகையாலே உம்மோடு கலப்பதற்கு எனக்கு விருப்பமில்லை! என்று

சொல்லுகிற இந்த வார்த்தையாவது தமது முகத்தை நோக்கி அவன் சொல்லுவானாகில்

அப்போதைய ஸேவையாவது கிடைக்குமே என்றும்

கண்ணிலே தென்பட்டானாகில் பிறகு அவனை உபாயங்களால் கவர்ந்து கொள்ளலாமென்றும் நினைத்துச் சொன்னதத்தனை.

ஆண்டாளும் “மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே” என்றது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

“அவச்ய மநு போக்வத்யம் க்ருதம் கர்ம சுபாசுபம்” என்றும்

“ நாபுக்தம் க்ஷியதே கர்ம கல்பகோடிசதைரபி” என்றுமுள்ள பிரமாணங்களை நோக்கினால்

தீ வினைகள் அநுபவித்துத் தீர்க்கமுடியும் என்று ஏற்படுகிறது;

அப்படியும் தீராத எத்தனை பாவங்களைப் பண்ணினேனோ! என்கிறார் முதலடியில்.

“மதியிலேன் வல்வினையே மாளாதோ” என்றதும் காண்க.

தாவியித்யாதி. * தன்னுருவமாரு மறியாமல் தானங்கோர் மன்னுங்குறளுருவில் மாணியாய் மாவலிதன் பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து போர்வேந்தர்மன்னை மனங்கொள்வஞ்சித்து நெஞ்சுருக்கி என்னுடைய பாதத்தால்; யானளப்ப மூவடிமண் மன்னா! தருகென்று வாய்திறப்ப, மற்றவனுமென்னால் தரப்பட்டதென்றலுமே, அத்துணைக் கண் மின்னார் மணிமுடிபோய் விண்தடவ, மேலெடுத்த பொன்னார் கனைகழற்காலேழுலகும் போய்;க்கடந்த பரத்வத்தைச் சொல்லுவேன்;

* உறியார்ந்த நறுணெ;ணெயொளியால் சென்று அங்குண்டானைக்கண்டு ஆய்ச்சியுரலோடார்க்கத் தறியார்ந்த கருங்களிறே போல நின் தடங்கண்கள் பனிமல்குந் தன்மையாகிய ஸௌலப்யத்தைப்பேசுவேன்;

இங்ஙனே பரத்வ ஸௌப்யங்களை மாறிமாறிப்பேசிக் கண்ணுங் கண்ணீருமாய் நின்றக்கால் கண்ணெதிரே வந்து ஸேவைத்தந்தருளலாகாதோ?

அநுக்ரஹம் செய்யத் திருவுள்ளமில்லையாகிலும் நிக்ரஹித்து விட்டேனென்றாவது கண்முன்னே வந்து நின்று சொல்லிப்போனாலாகாதோ?

என்னை நீ பாக்கியன் என்றாலும் பாவியென்றாலும் அதில் எனக்கொரு நிர்ப்பந்தமில்லை;

உன் திரு மிடற்றோசை கேட்கவேண்டுவதே எனக்கு அபேக்ஷிதம்;

கண்ணுக்குத் தோற்றாதே நின்று மிடற்றோசையைக் காட்டி விட்டாலும் த்ருப்தியடையேன்;

என் கண்ணுக்கு இலக்காகி வந்து சொல்ல வேணும்.

————-

***- பிரமன் முதலிய தேவர்களுக்கும் காணக்கிடைக்காத பெருமானை வடிவழகு காண

விரும்பி வெட்கமுற்று நான் கூப்பிடாநின்றேனே! இதற்கு என்ன பலனுண்டு! என்கிறார்.

காண வந்து,என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ,
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்! நின்று அருளாய் என்று என்று,
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?–4-7-4-

பதவுரை

வானோர்

பிரமன் முதலிய தேவர்கள்
பேணி

விரும்பியும்
காணமாட்டா

காணமுடியாதபடி
பீடு உடை

பெருமை வாய்ந்த
அப்பனை

ஸ்வாமியை நோக்கி,
ஆணி செம் பொன் மேனி எந்தாய்

“மாற்றுயர்ந்த பொன் போல விரும்பத்தகுந்த திருமேனி படைத்தபிரானே!
தாமரை கண் பிறழ

தாமரைப்பூப்போன்ற திருக்கண்கள் விளங்கும்படி

(என்னைப் பார்த்துக் கொண்டு)

காணவந்து

நான் காணுமாறு வந்து
என் கண் முகப்பே

என் கண் முன்னே
நின்றருளாய்

நின்றருளவேணும்
என்று என்று

என்று ஓயாதே சொல்லி
சிறு தகையேன் நான்

நீசனாகிய நான்
நாணம் இல்லா

வெட்கம் கெட்டவனாய்க்கொண்டு
இங்கு அலற்றுவது என்

இங்கே அலற்றுவதற்கு ஒரு பிரயோஜனமுமில்லையே!.

ஆணி செம்பொன் மேனி ஸ்ரீ ஆணிப்பொன்னாவது மாற்றறிதற்குக் கொள்ளும் உயர்தரப்பொன்.  இதுக்குமேலே மாற்றமில்லை யென்னும்படியான சிறந்த பொன் என்றும் கொல்லுவர்.  எம்பெருமானுடைய திருமேனி கருமுகில் திருநிறத்ததாயிருக்க, செம்பொன்மேனி என்றது என்? என்னில்; செம்பொன் நிறத்திற்கு உவமையாகக் கூறப்பட்டதன்று: ஸ்ப்ருஹணீயத்தைக்குக் கூற்றினென்க; அதுபோல விரும்பத்தக்க திருமேனி என்றபடி.  “… ஸ்ரீப்ரசாஸிதாரம் ஸர்வேஷரம் அணீயாம் ஸமணீயஸாம், ருக்மாபம் ஸ்வப்நதீகம்யம் வித்யாத்து புருஷம்பரம்.” என்றும், “….” என்றுமுள்ள பிரமாணங்களைக்கொண்டும் நிர்வஹிக்கலாம்.  ஹிரண்யவர்ணையான பிராட்டியின் சேர்க்கையாலுண்டான நிழலீட்டாலே எம்பெருமானும் ஹிரண்மயனாகத் தோற்றலாம்.  இப்படிப்பட்ட திருமேனி படைத்தவனே! என் கண் முன்னே வந்து நிற்கவேணும்; என்று பலகால் சொல்லியழைக்கின்றேனே! இதற்கு ஒரு பலன் கிடைக்கப்போகிறதோ?

மேம்பட்டவர்களாய்ப் பிரசித்தி பெற்றிருக்கின்ற தேவர்களுக்கும் காணக் கிடைக்கமாட்டாத பெருமானைத் தாம் காண ஆசைப்பட்டது வெட்கமில்லையாயின் காரியமென்று காட்டதற்காக நாணமில்லா என்கிறார்.

——————

***- பிரமன் முதலானோர்க்கும் காணமுடியாதிருக்கிற உன்னுடைய அழகைக் காண வேணுமென்று ஆசைப்பட்டு

‘இப்பொழுதே வந்திடாய்’ என்று அபேக்ஷித்து நாம் அபேக்ஷித்தபடியே வந்தருள்வன் என்று நம்பி

வரும் போதை யழகைக் காணவேணுமென்று பாரித்திருக்கின்றேனே! என்னுடைய சாபல்யத்தை என் சொல்லுவேன்! என்கிறார்.

அப்பனே!அடல் ஆழி யானே! ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே!‘உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்?’என்று
எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு, ஆவி துவர்ந்து துவர்ந்து,
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே.–4-7-5-

பதவுரை

அப்பனே

உபகாரம் செய்யுமியல்வினனே!
அடல் ஆழியானே

வீரத்தன்மை வாய்ந்த திருவாழியையுடையவனே!
ஆழ் கடலை

ஆழமான கடலை
கடைந்த

கடைந்து அன்பர்கட்கு அமுதமளித்த
துப்பனே

ஸமர்த்தனே!
உன் நான்கு தோள்களும்

உனது திருத்தோள்கள் நான்கையும்
கண்டிட கூடும் கொல் என்று

ஸேவிக்க நேருமோ! என்று எண்ணி
எப்பொழுதும்

எப்போதும்
கண்ணநீர் கொண்டு

கண்ணீரோடிருந்து
ஆவி துவர்ந்து துவர்ந்து

பிராணன் மிகவும் உலர்ந்து
இப்பொழுதே வந்திடாய் என்று

உடனே எழுந்தருள வேணுமென்று அபேக்ஷித்து
ஏழையேன்

சபலனான நான்
நோக்குவன்

சுற்றும் பாராநின்றேன்.

அப்பன் என்று உபகாரம் செய்பவனைச் சொல்லுகிறது.

நீ முகங்காட்டாதபோதும் உன்னையே சொல்லிக் கூப்பிடும்படியாக இவ்வளவு மஹோபகாரம் பண்ணினவனே!என்றபடி.

எனக்கு நீ அருள்செய்ய நினைத்தால் என்னுடைய பாபங்கள் குறுக்கே நிற்கவற்றோ?

“எப்போதுங் கை கழலா நேமியான்  நம்மேல் வினை கடிவான்” என்றபடியே

என் வினைகளைத் துணிக்க திருக்கையிலே திவ்யாயுதமுண்டே யென்பார் அடலாழியானே! என்கிறார்.

கையுந் திருவாழியுமான அழகு காண ஆசைப்பட்டன்றோ நான் கூப்பிடுகிறது என்றவாறுமாம்.

ஆழ்கடலைத் கடைந்த துப்பனே! = உன்னளவிலே பல்லாண்டு பாடாதே உன் திருமேனியை நோவுபடுத்திக் காரியங்கொள்ள

நினைப்பார்க்கும் காரியம் செய்து தலைக்கட்டுகின்ற வுனக்கு என்னெதிரேவ்நது நின்று காட்சி தருகைக்குத் திருவுள்ளமுண்டாகாதது என்னோ?

‘நம் உடம்பை நோவுபடுத்துகின்றவர்களுக்குத் தான் நாம் காரியம் செய்யக் கடவோம்’ என்று ஏதேனும் நியமம் கொண்டிருப்பதுண்டோ?

“கடலைக்கடைந்த துப்பனே!” என்ற இவ்விடத்தில் விவக்ஷிதமான துப்பாவது –

“விண்ணவரமுதுண அமுதில்வரும் பெண்ணமுதுண்ட எம்பெருமானே!” என்கிறபடியே

தேவர்களுக்கு உப்புச்சாறு எடுத்துக் கொடுக்கிற வியாஜத்தாலே தான் பெண்ணமுதாகிற ஸ்ரீ மஹாலக்ஷ்மியை லபித்த ஸாமர்த்தியம்.

உன் தோள்கள் நான்கும் கண்டிட = கடல்கடைந்த காலத்திலே தேவர்கள் எப்போது நம் உணவு கடலில் நின்றும் கிளரப்போகின்றதோ என்று கடலைக்கவிழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்களே யல்லது தோளழகிலே துவக்குண்டு காப்பிட்டார்களில்லை;

அக்குறைதீர “மல்லாண்ட திண்டோன் மணிவண்ணா! பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு” என்று திருத்தோள்களுக்கு மங்களாசாஸநம் பண்ணவேணு மென்றதன்றோ நான் பாரித்திருப்பது.

கண்ணபிரானாய் வஸூதேவ க்ருஹத்திலே அவதரித்தபோது “ஜாதோஸி தேவ தேவேஸ! ஸங்க சக்ர கதாதர!” என்ற நான்கு திருத்தோள்களோடே அவதரித்தாயென்றும்,

பிறகு மாதா பிதாக்கள் “உபஸம்ஹர விச்வாத்மந்! ரூபமேதத் சதுர்ப்புஜம்” என்று, நான்கு திருத்தோள்களோடு கூடின இத்திருவுருவத்தை மறைத்திடாய் என்று வேண்டிக்கொள்ள, அப்படியே மறைத்திட்டதாகவும்,

உகவாதார்க்குக் கூசி மறைத்திட்ட அதனை உகந்த பெண்களுக்குக் காட்டிக்கொடுத்தாயென்றும் கேள்விப்படுகிறேன்;

அவ்வண்ணம் எனக்கும் நீ காட்டிக் கொடுக்க நேர்ந்து நான் காணப்பெறலாகுமோ வென்று பாரித்துக் கிடக்கின்றேனென்பது உள்ளுறையும் கருத்து.

கண்ண நீர் கொண்டு = ஆனந்தாச்ரு, சோகாச்ரு என்று இருவகையான கண்ணீர்கள் உண்டு.  அவ்விரண்டும் இங்கு விலக்ஷிதமாகலாம்; அத்திருவுருவத்தை நினைத்தவளவிலேயே ஒரு ஆனந்தம் பெருகிச் செல்லுமாகையாலே ஆனந்தாச்ருவாகும்.

‘நாம் பாரிக்கிறபடி நமது கண்களுக்குப் புலப்படவில்லையே!’ என்று வருத்தமுமாகையாலே சோகாச்ருவமாகும்.

ஆவி துவர்ந்து -பிராணன் பசையற உலர்ந்து என்றபடி.

ஆவி அடியோடு தொலையமாட்டெ னென்கிறது என்கிற வருத்தத்தைக் காட்டினபடி.

இப்பொழுதே வந்திடாயென்று = தாமதித்து வந்தாயாகில்; திருப்புளியாழ்வாரைக் கட்டிக்கொண்டு அழவேண்டியதாகு மத்தனை யுனக்கு;

இப்பொழுதே வந்தாயாகில் என் கண்ணிலே விழிக்கப்பெறுவாய் என்றவாறு.

ஏழையேன நோக்குவனே! = இங்ஙனே சொன்னவளவிலும் ஸர்வஜ்ஞன் நினைவறிந்து வாராதிருப்பனோ?

அவசியம் வந்தே தீருவேன்; ஆபத்து மிகுந்தவாறே தவறாது வந்து தோன்றுகிற வழக்கத்தை

கஜேந்திராழ்வான் ப்ரஹ்லா தாழ்வான் போல்வார் பக்கலிலே கண்டிருக்கிறோமாகையாலே

வந்தே தீருவேன் என்று நிச்சயித்து சாபலத்தாலே திசையெங்கும் நோக்குகின்றேன் என்கை.

ஏழையேன் நோக்குவனே யென்றவிடத்தில் ஒரு ஐதிஹ்யமுண்டு;

சோழராஜஸதஸ்ஸிலே திருக்கண்களையிழந்த கூரத்தாழ்வானை உடையவர் வரதராஜன் விஷயமாக ஒரு ஸ்தலம் பணிக்கும்படி நியமித்தார்; பேரருளாளன் வரந்தரும் பெருமாளென்று பேர்பெற்றிருக்கையாலே திருக்கண் தந்தருள்வன் என்று திருவுள்ளம் பற்றி அப்படி நியமித்தருளினார்.

ஆசார்ய நியமனத்தை யடியொற்றி ஆழ்வானும் வரதராஜஸ்தவ மருளிச்செய்து அதை உடையவர் திரு முன்பே விண்ணப்பம் செய்து வருகையில் “நீலமேகநிபம் அஞ்ஜநபுஞ்ஜச்யாம குந்தலம் அநந்தவயம் த்வாம்.  அப்ஜபாணிபதம் அம்புஜநேத்ரம் நேத்ரஸாத்குரகரிஸ! ஸதா மே.” என்கிற ச்லோக ரத்நத்தைத் திருச்செவி சாத்தின உடையவர்

“ஆழ்வான்! இப்பாசுரம் கேட்டால் பெருமாள் இரங்காமையில்லை; உன்முகத்தைக்காட்டு பார்ப்போம்” என்றாராம்.

கனிந்த சொற்களுக்கு எம்பெருமான் காட்சிதந்தே தீருவன் என்று அன்பர்கள் நம்புவதற்குறுப்பான ஐதிஹ்யம் இது.

————-

***- எம் பெருமானே! என்னுள்ளே நீ நிறைந்திருந்தும் எனக்கு நீ உன்னைக் காட்டாமலிருப்பது

திருவுள்ளமில்லாமையன்றோ என்று நான் அறிந்து வைத்தும்

அவிவேகத்தாலே காணவாராய்! காணவாராய்! என்று கதறுகின்றேன் என்கிறார்.

நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே.–4-7-6-

பதவுரை

நாள் தோறும்

ஸர்வகாலத்திலும்
என்னுடைய

என்னுடைய
ஆக்கை உள்ளும்

சரீரத்தினுள்ளும்
ஆவி உள்ளும்

ஆத்மாவினுள்ளும்
அல் புறத்தின் உள்ளும்

மற்றுமுண்டான இந்த்ரியம் முதலானவற்றிலும்
நீக்கம் இன்றி

நீங்காமல் (ஒன்றையும் விடாமல்)
எங்கும் நின்றாய்

எங்கும் வியாபித்திருக்கின்ற பெருமானே!
நின்னை

உன்னை
அறிந்து அறிந்தே

(அருள் செய்யத் திருவுள்ளமில்லாதவன் என்று) நன்றாக நான் அறிந்துவைத்தும்
யான்

நான்
உன்னை காண்பான்

உனது திவ்யமங்கள விக்ரஹத்தை ஸேவிக்கவேண்டி
நோக்கி நோக்கி

எல்லாத் திசைகளிலும் பார்த்து
எனது ஆவி உள்ளே

எனது நெஞ்சுக்குள்ளே
நாக்கு நீள்வன்

நாக்கை நீட்டுகின்றேன் (ஆசைப்படுகிறேன்)
ஞானம் இல்லை

இப்படிப்பட்ட நான் விவேகமற்றவனத்தனை.

இறைப்பொழுதும் ஓயாதே எட்டி யெட்டிப் பார்க்கின்றேன்;

எந்தத் திசை வழியாக வருவாயென்று தெரியாமையாலே நாற்புறமும் விழித்துப் பார்க்கிறேன்; எதற்காகவென்னில்;

உன்னைக் காண்கைக்காகவத்தனை.

காண்பதற்கு மேலே வேறொரு ப்ரயோஜனத்தைக் கனவிலும் கருதாத குடியிலே யன்றோ பிறந்திருப்பது.

‘இப்படி எனக்கு ஆசை’ என்று வாய்விட்டுச் சொல்லமாட்டாதே நாக்கை நீட்டியிருக்கின்றேன்.

நாக்கை நீட்டுவானேன் என்னில்; “கன்னலங்கட்டி தன்னை; கனியை யின்னதமுதந் தன்னை

” என்றும் எனக்குத்தேனே பாலே கன்னலே யமுதே” என்றும்

“விழுமியமுனிவர் விழுங்குங் கோதிலின் கனியை” என்றும் சொல்லுகிறபடியே

பகவத்விஷயமென்பது பரம போகய் வஸ்துவாகையாலே “தூவமுதைப் பருகிப்பருகி”

“அடியேன் வாய்மடுத்துப் பருகிக்களித்தேனே” என்கிற கணக்கிலே நாவுக்கும் விஷயமுண்டே.

நாக்கு நீட்டினவளவில் விரும்பின பொருள் கிடையாதொழிந்தவாறே

‘இதில் நாம் நசை வைப்பது தகுதியன்று’ என்று கைவாங்கி நிற்பதன்றோ ப்ராப்தம்.

அரிதென்னுமிடம் அறியாதே சிறு குழந்தைகள் நாக்கை நீட்டினபடியே யிருப்பதுண்டு;

அதுபோலவே நானும் என்று காட்டுகிறார் ஞானமில்லை என்பதனால்.

ஞானமில்லை என்றதை உபபாதிக்கிறது மேலுள்ளதெல்லாம்.

என்னுடைய சரீரத்திலும் ஆத்மாவிலும் மற்றும் இந்த்ரியாதிகளிலும் ஒன்றையும் விடாதே எல்லா ஸ்தலத்திலும் வியாபித்து நின்றாய் நீ என்பதை அறியேனோ?

இப்படிப்பட்ட நீ என் கண்ணுக்குத் தோற்ற வேணுமென்று திருவுள்ளம் பற்றியானாகில் உடனே தோற்றியிருக்கலாமே;

“வாசி வல்லீர்” என்கிறபடியே இன்னாருக்குத்தான் தோற்றவேணும் இன்னாருக்குத் தோற்றலாகாது என்று ஒரு நிர்ப்பந்தம் வைத்துக் கொண்டிருக்கிறாயென்று நான் தெரிந்துகொண்டு வாய் மூடியிருக்கை  அழகியது.  அப்படியிருக்கின்றிலேனே;

உன் கருத்தையறிந்து வைத்தும் ஆறியிருக்கின்றிலேனாகையாலே எனக்கு ஞானமில்லை யென்னுமிடம் ஸித்ததேயன்றோ என்றாராயிற்று.

ஞானமில்லை என்றதற்கு ஒரு உள்ளுறை பொருளுண்டு; மற்றையோருடைய ஞானம் போன்றதன்று என்னுடைய ஞானம்;

“மயர்வற மதிநலமருளினன்” என்றபடி பக்திரூபாபன்ன ஜ்ஞானத்ததைத் தந்தருளினாயாகையாலே

“அத்யந்த பக்தி யுக்தாநாப் ந சாஸ்த்ரம் நைவ ச க்ரம:, என்ற கட்டளையிலே துடிக்கின்றேன் என்பதாம்.

“காற்றும் சுழியும் கட்டி அழக்கொண்ட பெருங் காதலுக்குப் பத்திமை நூல்வரம்பில்லையே” என்ற ஆசார்ய ஹ்ருதய திவ்யஸூக்தியும் இதற்கு ஸம்வாதமாக அநுஸந்தேயம்.

“நீக்கமன்றி யெங்கும் நின்றாய்” என்றவிடத்திலே நம்பிள்ளையீடு; -“கிழிச்சீரையிலே தனங்கிடக்கப் புறங்கால் வீங்குவாரைப்போலே காணும் இவர்படி” என்று

(அதாவது) உள்ளே நிதி கிடக்கச்செய்தேயும் சிலர்வெளியிலே செல்வம்பெற வேணுமென்று பாரிப்பர்;

அதுபோலே ஆழ்வார் தம்மிடத்திலே அந்தர்யாமியாய்ப் பூர்ணனாயிருக்கின்ற பரம புருஷனை அநுபவித்து

த்ருப்தி பெற மாட்டாதே பாஹயாநுபவத்திலே மநோரதத்தைப் பெருக்கித் துவள்கின்றார் என்கை.

————-

***- ஆழ்வீர்! *நாக்கு நீள்வன் ஞானமில்லை* என்று உம்மை நீர் நிந்தித்துக் கொள்வதானது

என்னுடைய நிந்தையிலன்றோ முடிந்து நிற்கிறது; உமக்கு நான் ஒரு உபகாரமும் செய்யவில்லைபோலே வருந்துகின்றீரே;

நன்கு ஆராய்ந்து பாரும்; எத்தனை உபகாரங்கள் என்னால் பெற்றிருக்கிறீரென்பதை அறிந்து சொல்லும்’ என்று எம்பெருமான் அருளிச்செய்ய,

‘பிரானே! சில உதவிகளை நீ செய்ய நான் பெற்றதுண்டு; அடியோடு ஒன்றுமில்லையென்று சொல்லுகின்றிலேன்;

பெற்றவளவு போராது என்கிறேத்தனை’ என்று சொல்லத் தொடங்கி,

பெற்ற அளவு இன்னதென்கிறார் இப்பாட்டில்; -பெறவேண்டியதை மேற்பாட்டிலே சொல்ல விருக்கிறார்.

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-

பதவுரை

நறுதுழாயின் கண்ணி அம்மா

பரிமளம்மிக்க திருத்துழாய் மாலையையுடைய பெருமானே!
நான் உன்னை கண்டுகொண்டு

நான் உன்னை (மாநஸஸாக்ஷ்ர்த்காரமாக) ஸேவிக்கப்பெற்று
அறிந்து அறிந்து

உன்னுடைய உபாயத்வத்தையும் உபேயத்வத்தையும் நன்றாக அறிந்து
தேறி தேறி

மிக்க தெளிவையுடையேனாகி
யான்

இப்படித் தெளிவுபெற்ற நான்
எனது ஆவி உள்ளே

என் நெஞ்சுக்குள்ளே
நிறைந்த ஞானம் மூர்த்தியாயை

பரிபூர்ண ஜ்ஞானஸ்வரூபனான உன்னை
நின்மலம் ஆக வைத்து

விசதமாக அநுபவித்து
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன்

பிறப்பதும் சாவதுமாயிருந்து படுகிற அஜ்ஞான ஸம்ஸாரத்தைத் தவிர்த்துக் கொள்ளப் பெற்றேன்.

இப்பாட்டில், “நறுந்துழாயின் கண்ணியம்மா! நானுன்னைக்கண்டு கொண்டு பேதைமை தீர்ந்தொழிந்தேன்” என்றருளிச்செய்வதைப் பார்த்தால், * கோலமேனி காண வாராய்* என்று அபேக்ஷித்தபடியே எம்பெருமான் வந்து காட்சி தந்துவிட்டதாகத் தோன்றும்.

உண்மை அப்படியில்லை;

அடுத்தபாட்டில் “கண்டுகொண்டு பாடியாட-வந்திடகில்லாயே” என்றிருக்கையாலே இன்னமும் காணப்பெற்றிலர்என்றே கொள்ளவேணும்.

ஆனால், இப்பாட்டில் நானுன்னைக் கண்டுகொண்டே என்கிறாரே; இதற்குப்பொருள் என்? என்னில்;

மாநஸ சாஷாத்காரம் என்றும் பாஹ்ய சாஷாத்காரம் என்றும் காண்கை இரண்டு விதம்;

*முனியே நான்முகனுக்கு உட்பட்டதெல்லாம் மாநஸ சாஷாத்காரமே யாகும்.

ஆகவே இப்பாட்டில் சொன்னது மாநஸ சாஷாத்காரம் என்றும் ,  மேற்பாட்டில் விரும்புவது பாஹ்யஸாக்ஷ்ர்த்காரமென்றும் அறிக.

ஆசார்யஹருதயத்தில் (முடிவில்) “கமலக்கண்ணனென்று தொடங்கிக் கண்ணுள் நின்றிறுதிகண்டேனென்ற பத்தும் உட்கண்ணாலேயாய்” என்றருளிச்செய்தது இங்கே அநுஸந்தேயம்.

அறிந்தறிந்து என்றும், தேறித் தேறி என்றும் இரட்டித்துச் சொன்னதன் கருத்தாவது,

எம்பெருமானருளாலே அர்த்த பஞ்சகத்தையும் தாம் அறியப் பெற்ற படியை அறிந்தறிந்து என்று கூறி,

அதில் ஒவ்வொன்றிலும் நல்தெளிவு பெற்றபடியைத் தேறித்தேறி யென்று கூறினாரகை.

(அது எங்ஙனேயென்னில்;

1. எம்பெருமானுடைய பரத்வத்தை யறிதல் பரஸ்வரூபஜ்ஞானம்,

‘அவன் ஆச்ரித பாரதந்த்ரியமே வடிவாக வுடையவன்’ என்று அறிதல் அந்த ஜ்ஞானத்தின் தெளிந்தநிலை

2.  நாம் எம்பெருமானுக்கு அடிமைப்பட்டவர்கள் என்று அறிதல் ஸ்வஸ்வரூபஜ்ஞானம்;

பாகவத சேஷத்பர்யந்தமாக அறிதல் அந்த ஞானத்தின் தெளிந்தநிலை.

3. எம்பெருமானுடைய திருவடிகளையே உபாயமாகப் பற்றுகை உபாய ஸ்வரூப ஜ்ஞானம்.

அவனை நாமாகப் பற்றுகிற பற்றும் அஹங்கார கர்ப்பமாகையாலே அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷ்கமென்றிருக்கை அந்த ஞானத்தின் தெளிந்தநிலை.

4. * ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்கை புருஷார்த்த ஸ்வரூப ஜஞானம்.

கைங்கரியம் செய்வதனால் உண்டாகிற ஆனந்தம் எம்பெருமானுடையதேயாகும்;

அந்த ஆனந்தத்தைக்கண்டு சைதந்ய கார்யமாக ஆனந்திப்பதே நமக்கு  உற்ற ஆனந்தம் என்றிருக்கை அந்த ஞானத்தில் தெளிந்தநிலை

5. அஹங்கார மமகாரங்கள் த்யாஜ்யமென்றிருக்கை விரோதிஸ்வரூப ஜ்ஞானம்.

கைங்காரியத்தை நான் செய்கிறேன், எனக்காகச் செய்கிறேன் என்று செய்கை பரமவிரோதியென்றுணர்கை அந்த ஞானத்தில் தெளிந்தநிலை.

ஆக விப்படி அர்த்த பஞ்சகத்தை ஸாமாந்ய ரூபேணவும் விசேஷ ரூபேணவும் உணர்ந்து தெளிவு பெற்றபடியை

அறிந்தறிந்து தேறித்தேறி என்றதனால் அருளிச்செய்தாராயிற்று.

இப்படி நீ அறிவிக்க அறிந்த யான் பரிபூர்ண ஜ்ஞாநஸ்வரூபனான உன்னை என்னுடைய நெஞ்சினுள்ளே மிக விசதமாக அநுஸந்தித்து, சாவது பிறப்பதாய்க் கொண்டு தடுமாறுகிற அறிவுகேடு தவிரப்பெற்றேன்.  இதில் த்ருப்திபெற முடியுமோ? என்கிறார்.

மூன்றாமடியில் ‘இடரும்’ என்று பல பிரதிகளிலும் காண்கிறது;  ‘இடறும்’ என்று வல்லின றகரமான பாடமே யுக்தம்.

“ஈமினெமக்கொருதுற்றென்று இடறுவர்”  (4-1-7) என்று கீழேயும் ;அருளிச்செய்தார்.

ப்ரஜை தெருவிலே யிடறி” என்ற ஸ்ரீவசநபூஷணமும் காண்க.  இடறுதல் – கிலேசப்படுதல்.

நறுந்துழாயின் கண்ணி யம்மா என்ற விடத்திற்கு ஈடு;-“இவ்வறிவு பிறக்கைக்கு  அவனிட்ட பச்சையிருக்கிறபடி; வைத்த வளையத்தைக் காட்டி அவ்வடிவிலே குருகுல வாஸத்தைப் பண்ணுவித்து  அறிவு பிறப்பித்தாயிற்று தனக்காக்கிக் கொண்டது.”

ஆக இப்பாட்டால் ஆழ்வார் தாம் பெற்ற அளவைச் சொன்னாராயிற்று.

———————

 

***- பெற்ற உபகாரங்களைப் பேசினார் கீழ்ப்பாட்டில்; இனிப் பெறவேண்டுமது தன்னைப் பேசுகிறார் இப்பாட்டில்.

இந்த ஸம்ஸார நிலந்தன்னிலேயே உன்னைக்கண்டு அடியோங்கள் எல்லாவடிமைகளுஞ் செய்து

உஜ்ஜீவிக்கும்படி அருள் புரிய வேண்டு மத்தனையே அபேஷிதமென்கிறார்.

கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப்பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி, உகந்துகந்து,
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.–4-7-8-

பதவுரை

வண் துழாயின் கண்ணிவேந்தே!

அழகிய திருத்துழாய்மாலையையுடைய நாயனே!
கண்டுகொண்டு

(நெஞ்சினால் காண்கையன்றிக்கே) கண்ணாரக் கண்டு
என் கைகள் ஆர

எனது கைகள் ஆவல் தீரும்படி
நின் திருபாதங்கள் மேல்

உனது திருவடிகளின் மீது
எண் திசையும் உள்ள பூ கொண்டு

எங்குமுள்ள புஷ்பங்களை சேகரித்துக்கொண்டு
ஏத்தி

தோத்திரஞ்செய்து பரிமாறி
உகந்து உகந்து

மிகவும் உகந்து
தொண்ட ரோங்கள்

அடியோரமான நாங்கள்
பாடி ஆட

பாடுவதாடுவதாம்படி
கடல் சூழ் ஞாலத்துள்ளே

கடல் சூழ்ந்த இந்நிலவுலகுக்குள்ளே
வந்திடகில்லாயே

(என் கண்முகப்பே)  வந்து நிற்க மாட்டேனென்கிறாயே

காணப்பெறாமல் பட்டினி கிடக்கின்ற கண்கள் பட்டினி தீரும்படி காணவேணும்.

கைகளின் விடாய்தீர உன் திருவடிகளிலே எண்டிசையுமுள்ள பூக்களையுங் கொண்டு தூவ வேணும்;

அத்தாலே உன்னுடைய திருவுள்ளம் உகக்க, அவ்வுகப்புக்கண்டு அடியோங்கள் உகந்து, அவ்வுகப்புக்குப் போக்குவீடாகப் பாடவும் ஆடவும் வேணும்.  இப்பரிமாற்றங்களுக் கெல்லாம் ஏகாந்தமாகத் திருநாட்டிலே கொண்டு போகிறனென்ன வொண்ணாது;

இப்பேறு கடல் சூழ்ஞாலத்துள்ளே யாகவேணும்.  அங்கு நித்ய ஸூரிகளுக்கு ஸேவைஸாதிக்கிறபடியே

*தோளிணைமேலும் நன்மார்பின் மேலும் சுடர்முடி மேலும் தாளிணைமேலும் புனைந்த தண்ணந்துழாய் மாலையோடே வந்து காட்சி தந்தருளவேணும்;  இப்படி எத்தனை நாள் பிரார்த்தித்த விடத்திலும் வந்தருள்கின்றிலையே; நான் பெறாதது இத்தனையே யென்றாராயிற்று.

—————-

***- எம்பெருமான்மேலே பழியிட்டுப் பயன் என்?  அவனைக் காண்கைக்கு உபாயமாக பகவத்கீதை முதலான

சாஸ்த்ரங்களிலே கூறப்பட்ட கர்மயோகாதிகளுள் ஒன்றிலும் அந்வயமில்லாதிருக்கின்ற நான்

கிடந்து கூப்பிடுவதில் என்ன ப்ரயோஜனம்? என்று தம்மில் தாம் சொல்லிக் கொள்ளுகிறாராயிருக்கிறது

இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;
மடவல் நெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவுகின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?–4-7-9-

பதவுரை

ஒன்று இடகிலேன்

(இரந்தார்க்கு) ஒரு பிச்சையும் இட்டறியேன்;
ஒன்று அட்டகில்லேன்

(தாஹித்தவர்களுக்குச்) சிறிது (தண்ணீரும்) வார்த்தறியேன்;
ஐம் புலன்

இந்திரியங்களைந்தையும்
வெல்லகில்லேன்

பட்டிமேயாதபடி அடக்கியாண்டறியேன்;
கடவன் ஆகி

நியதியுடையவனாகி
காலம் தோறும்

உரிய காலங்களிலே
பூ பறித்து ஏத்தகில்லேன்

புஷ்பங்களை ஸம்பாதித்து அர்ச்சித்துத் துதித்தறியேன்;

(இப்படி அகிஞ்சநனாயிருக்கச் செய்தேயும்)

மடம் வல் நெஞ்சம்

மூர்க்கத்தனமும் கடினத்தன்மையும் பொருந்தின நெஞ்சானது
காதல் கூர

ஆசை விஞ்சிவரப்பெற்று
வல் வினை யேன்

மஹாபாபியான நான்
அயர்ப்பு ஆய்

அவிவேகியாய்
சக்கரத்து அண்ணலை

சக்கரபாணியான எம்பெருமானை
தடவுகின்றேன்

காணத்தேடுகின்றேன்;
எங்கு காண்பன்

எங்கே காணக்கடவேண்?

இடகிலேன் என்றது.  “ஐயமும் பிச்சையும் ஆந்தனையுங்கைகாட்டி” என்கிறபடியே ஒருவர்க்கு ஒரு பிச்சையிட்டறியேன் என்றபடி.

அட்டகில்லேன் என்றது தாஹித்து வந்தவர்களுக்குத் தண்ணீர் வார்த்தறியேன் என்றபடி.

இங்ஙனே சில காரியங்கள் செய்திருந்தால் கர்மயோகத்திலே கணக்கடைக்கலாம்; அதற்கு வழியில்லையாயிற்று என்கை.

ஐம்புலன் வெல்லகில்லேன்–செவிவாய் கண் முதலிய இந்திரியங்கள் பட்டிமேயாதபடி நோக்கினேனாகில் ஞானயோகத்திலே சிறிது அடியிட்டதாகக் கணக்கிடலாம்; அதற்கும் வழியில்லையாயிற்று.

கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகில்லேன்= திருவாராதனத்திற்கு யோக்யதையுள்ள காலங்களிலே புஷ்பங்கள் சேகரித்துமறியேன், ஸமர்ப்பித்துமறியேன்.

இவை செய்தால் பக்தியோகத்திலே சிறிது அந்வயமுள்ளதாகக் கணக்கிடலாம்; அது தனக்கும் வழியில்லையாயிற்று.

கடவனாகி-ஒரு நியமத்தோடே கூடினவனாகி என்றபடி.

ஆகவிப்படி அகிஞ்சநனாயிருக்கச் செய்தேயும் ஏதோ நப்பாசையினால் அறிவு கெட்டவனாய்க் கொண்டு சக்கரபாணியான எம்பெருமானைத் தேடாநின்றேன்; காண வழி ஏது?

“சக்கரத் தண்ணலையே” என்றவிடத்து நம்பிள்ளையீடு;-“யசோதைப்பிராட்டி கையும் வெண்ணெயுமாகப் பிடித்துக் கொண்டாப்போலே கையும் * நெய்யாராழியுமாகப் பிடித்துக் கொள்ளவாயிற்று இவர் ஆசைப்படுகிறது” என்பதாம்.

——————

***- நம்மிடத்தில் ஒரு கைம்முதலுமில்;லாமையை நோக்கி எம்பெருமான் நமக்குக் காட்சி தர விரும்பாமலிருப்பது யுக்தமே;

அப்படி அவன் இருக்கும்போது அவனை நாம் மறந்து பிழைக்கலாமன்றோ;

அப்படி மறக்கவும் முடியாதபடி அப்பெருமான் மாநஸ ஜ்ஞானத்திற்கு விஷயமாகிக் கொண்டிருக்கிறானே!

இதற்கு என்னபண்ணுவேனென்று கிலேசப்படுகிறார்.

சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–4-7-10-

பதவுரை

சக்கரத்து அண்ணலே என்று

கையும் சக்கரமுமான அழகைக்காட்டி என்னை ஈடுபடுத்திக்கொண்டவனே! என்று சொல்லி
தாழ்ந்து

அநுபவம் கிடைக்கப்பெறாத க்லேசத்தையடைந்து
கண்நீர் ததும்ப

கண்ணீர்மல்க
பக்கம் நோக்கி நின்று

சுற்றும் பார்த்து நின்று
அலந்தேன்

தளர்ந்தவனான
பாவியேன்

பாவியானநான்
காண்கின்றிலேன்

காணப்பெறுகின்றிலேன்:

(காணக்கிடைக்காதவனை மறந்துவிடலாமென்று பார்த்தாலோ)

மிக்க ஞானம் மூர்த்தி ஆய

மிகுந்த ஞானஸ்வரூபனாய்
வேதம் விளக்கினை

வேதமாகிற தீபத்தாலே காணப்படும்வனான எம்பெருமானை
என் தக்க

எனக்கேற்ற
ஞானம் கண்களாலே

ஞானமாகிற கண்ணாலே
கண்டு தழுவுவனே

கண்டு தழுவிக் கொண்டேயிருக்கிறேனே!
(எப்படி மறக்கமுடியும்?)

கையுந்திருவாழியுமான அழகைக்காட்டி என்னையீடுபடுத்திக் கொண்டவனே! என்று சொல்லித்

தரைப்பட்டுக் கண்களில் நீர் பெருகப்பெற்றேன்; எந்தப் பக்கமாக வருகின்றானோ வென்று பக்கந்தோறும் நோக்கினேன்;

மஹாபாபியாகையாலே காணப்பெற்றிலேன்.

காணாவிட்டால் மறந்து பிழைக்கலாமே; நெஞ்சில் பிரகாசியாமலிருந்தாலன்றோ மறக்கலாம்;

பரிபூர்ணமான ஞானத்தையே வடிவாகவுடையனாய் வேதவேத்யனாயிருக்கிற அப்பெருமானை மறவாமலிருப்பதற்குறுப்பாக

எனக்குத்தகுந்தாப்போலே ஒரு ஜ்ஞான த்ருஷ்டியுண்டாகி அத்தாலே கண்டுதழுவும்படியாயேயுள்ளது;

மறக்கவும் வழியில்லை- தரிக்கவும் வழியில்லை என்றாராயிற்று.

ஆழ்வார்க்கு ப்ரேமம் ஞானம் என்று இரண்டுண்டு;

கண்ணாரக்காணப் பெறாமையாலே ப்ரேமம் க்லேச ஹேதுவாயிற்று;

மறந்து பிழைக்கவும் முடியாமையாலே ஞானமும் க்லேசஹேதுவாயிற்று என்று தளருகிறபடி.

கண்டுதழுவுவனே என்னுமிடம் களித்துக் கூறுவதுபோலத் தோற்றினாலும் பிரகரணத் திற்குச் சேரவேண்டுகையாலே

க்லேசோக்தியாகவே பூருவர்கள் வியாக்கியானித்தருளினார்கள்.

இரண்டாமடியில் “அலர்ந்தேன்” என்கிற பாடம் பிழையுடைத்து; ‘அலந்தேன்’ என்றே யிருக்கத் தக்கது.

பெரிய திருமொழியில் “அலந்தேன் வந்தடைந்தேன்” என்றார் திருமங்கை யாழ்வாரும்.  அலமந்தேன் என்றவாறு.

—————–

***- (தழுவிநின்ற.)  இத்திருவாய்மொழியைக்கற்று ப்ரேம பரவசராமவர்கள் திருநாட்டிலே சென்று

நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்காட்டுகிறார்.

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–4-7-11-

பதவுரை

தழுவி நின்ற

விட்டு நீங்காத
காதல் தன்னால்

(பகவதனுபவத்திலுள்ள) ஆசையினாலே
தாமரை கண்ணன் தன்னை

செந்தாமரைக்கண்ணனான எம்பெருமானைக்குறிந்து
குழுவு மாடம் தென்குருகூர்

திரண்ட மாடங்களையுடைய திருநகரிக்குத் தலைவரான
மாறன் சடகோபன்

ஆழ்வார்
சொல்

அருளிச்செய்த
வழு இலாத

குறையற்ற
ஒண் தமிழ்கள்

அழகிய தமிழ்ப்பாஷையினாலாகிய
ஆயிரத்துள்

ஆயிரம் பாட்டினுள்
இ பத்தும்

இத்திருவாய்மொழியை
தழுவ

கருத்தோடுகூட
பாடி

இசைபாடி
ஆட வல்லார்

களித்துக் கூத்தாடவல்லவர்கள்
கைகுந்தம் ஏறுவர்

திருநாட்டில் ஏறப்பெறுவர்கள்.

திருத்துழாய் பரிமளத்தோடு கூடவே அங்குரிக்குமாபோலே ஆழ்வார்

“அறியாக்காலத்துள்ளே அடிமைக்கணன்பு செய்வித்து”  என்றபடியே

பகவத் விஷயமானகாதலோடு கூடவே அவதரித்தவராதலால் “தழுவிநின்ற காதல் தன்னால்” என்றார்.

* ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யேத் மதுஸூதந:இ ஸாத்விகஸ்ஸ து விஜ்ஙேய: ஸ வை மோக்ஷ்ர்ர்த்தசிந்தக.” என்கிறபடியே

எம்பெருமான் தனது செந்தாமரைக் கண்களால் கருவிலே கடாக்ஷித்தருளியே இந்தக் காதலை உண்டு

பண்ணினானென்பது தோன்றத்  தாமரைக்கண்ணன்தன்னை என்கிறார்.

“மறக்குமென்று செந்தாமரைக்கண்ணெடும், மறப்பறவென்னுள்ளே மன்னினான்” என்றார் தீழும்.

குழுவுமாடத்தென்குருகூர் என்றவிடத்திற்கு ஈடு;-“*ஸர்வஞ்ச குசலம் க்ருஹே* என்னுமாபோலே ஆழ்வார்க்கு ஆர்த்தி மிகமிக ஸர்வேச்வரன் வரவு தப்பாது என்று திருநகரி குடிநெருங்கிக் குளிர்ந்து தேறினபடி.” என்பது.

இதன் கருத்து யாதெனில்; -பெருமாள் ராவணவதம் செய்தருளித் திருவயோத்யைக்கு மீண்டெழுந்தருளும்போது

பரத்வாஜமஹர்ஷி பக்கலிலே போந்து தெண்டனிட்டு

“அயோத்தியில் பரதன் முதலிய யாவரும் ஸௌக்கியமாக இருக்கிறார்களா?  அவ்விடத்துச் செய்தி ஸ்வாமிக்கு ஏதேனும் தெரியுமோ?” என்று கேட்க.

அதற்கு விடை கூறுகின்ற முனிவர்  “… ஸ்ரீ பங்கதிக்தஸ் து ஜடிலோ பரதஸ் த்வாம் பரதீக்ஷ்தே.  பாதுகே தே புரஸ்க்ருத்ய ஸர்வஞ் ச குசலம் க்ருஹே.” என்றார்.

*கங்கலும் பகலும் கண் துயிலறியாமே கண்ணநீர் கைகளாலிறைத்துச் சேற்றிலே அழுந்திக்கிடக்கிறான் பரதாழ்வான் என்று சொல்லிவிட்டு ‘க்ருஹத்தில் எல்லாரும் குசலந்தான்’ என்றார் முனிவர்.

பரதாழ்வான் வாசாமகோசரமாகத் துடித்துக்கொண்டிருக்கும்போது “ஸர்வஞ்ச குசலம் க்ருஹே” என்று சொல்லக்கூடுமோ?  என்கிற சங்கைக்குப் பரிஹாராமாக நம்பிள்ளை யருளிச் செய்கிற அர்த்தம் பரம யோக்யமானது:

‘ஆர்த்தி பொறுக்கவொண்ணாதபடி மிகுந்தவாறே எம்பெருமான் சடக்கெனவந்து முகங்காட்டியே தீருவன்’ என்பதை நன்கு உணர்ந்தவர்களாகையாலே பரதாழ்வானுடைய அதிமாத்ரமான ஆர்த்தியைக கண்டவர்கள் ‘ஸ்ரீராமபிரான் அடுத்த க்ஷ்ணத்தில் அவசியம் வந்தேதீருவன்’ என்று திண்ணமாக நம்பி வெகு ஸந்தோஷத்துடனே குழுமியிருந்தார்களாம்.

ஆனது பற்றியே முனிவர் “ஸர்வஞ்ச குசலம் க்ருஹே” என்றார்.

அதுபோலவே இங்கும் ஆழ்வாருடைய ஆர்த்தியின் கனத்தைக்கண்ட குருகூர்வாழும் நல்லார்கள் ‘இப்போது எம்பெருமான் வருகை தப்பாது’ என்று தேறிக் குழுமியிந்தார்களாம்:

ஆகவே குழுவுமாடத் தென்குருகூர் எனப்பட்டது-என்பது இன்சுவை மிக்கபொருள்.

மாறன்-ஸம்ஸார நிலைக்கு மாறாக இருந்தவர்; அல்லது ஸம்ஸாரத்தை மாற்றினவர்.

இப்படிப்பட்ட ஆழ்வார் பகவத் குணங்களிலொன்றும் குறையாமே அருளிச் செய்த ஆயிரத்துள் இப் பத்தையும் ஸார்த்தமாகப் பாடியாட வல்லார் வைகுந்தமேறுவர் என்றாராயிற்று.

————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: