ஸ்ரீ திருவாய் மொழி -4-6–தீர்ப்பாரை யாமினி–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

***- பராங்குசநாயகியன் தோழியானவள், ‘இந்நோய் பாண்டவபக்ஷ்பாதியான கண்ணபிரானடியாக

வந்ததாகையாலே இதற்கு நீங்கள் பரிஹாரமாக நினைத்துச் செய்கிறவை பரிஹாரமல்ல’ என்று க்ஷேபிக்கிறாள்.

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1-

அன்னை மீர்

தாய்மார்களே!
இனி

இப்படிப்பட்ட நிலைமையான பின்பு
தீர்ப்பாரை

இந்த நோயைத் தீர்க்க வல்லவர்களை
யாம் எங்ஙனம் நாடுதலும்

நாம் எவ்விதமாகத் தேடிப்பிடிக்க முடியும்? (முடியாது)
ஓர்ப்பால்

நன்கு நிரூபிக்குமளவில்
இ ஓள் நுதல்

அழகிய நெற்றியையுடைய இப்பெண்பிள்ளை
உற்ற இது

அடைந்திருக்கின்ற இந்த நோயானது
நல் நோய்

விலக்ஷ்ணமான நோயாகும் ;
தேறினோம்

திண்ணமாக அறிந்தோம் ;
அன்று

முன்பொருகாலத்திலே
போர்

பாரதப்போரிலே
பாகு

பாகனாயிருந்து செய்யவேண்டிய காரியங்களை
தான் செய்து

தானே முன்னின்று நடத்தி
ஐவரை

பஞ்சபாண்டவர்களை
வெல்வித்த

ஐயம் பெற்றவர்களாகச் செய்வித்த
மாயம்

ஆச்சரிய சத்தியுக்தரும்

போர் தேர் பாகனார்க்கு

யுத்தபூமியில் தேர்செலுத்தவல்லவருமான பெருமாள் விஷயத்திலே
இவள்

இப்பராங்குச நாயகியினுடைய
சிந்தை

மனமானது
துழாய்

துழாவப்பெற்று
திசைக்கின்றதுஎ

அறிவழயா நின்றதே!

அன்னைமீர்! யாம் இனித்தீர்ப்பாரை எங்ஙனம் நாடுதும்? = இச்சொல்தொடர் பலவகைக் கருத்துக்களைக் கொண்டது;

இவ்வாழ்வாருடைய அருகிலே வருமவர்களெல்லாம் இவரோடொப்ப மோஹிப்பவர்களே யன்றி,

உணர்ந்திருந்து பரிஹாரமுறைமைகளை ஆராயவல்லார் ஒருவருமில்லையே! என்கை.

நோய்க்குப் பரிஹாரம் பண்ணிக் கொண்டிருக்குமவர்களை நோக்கித் “தீர்ப்பாரையாமிளி யெங்ஙனம் நாடுதும்” என் கையாலே நீங்கள் செய்கிறவை பரிஹாரமல்ல என்றவாறுமாம்.

“கடல்வண்ணாரிது செய்து காப்பாராரே?” என்கிறபடியே * நோய்களறுக்கும் மருந்தான எம்பெருமாள் தானே இங்ஙனே நோய்செய்தானான பின்பு இனி இந்நோயைத் தீர்க்க வழியுண்டோ? என்றபடியுமாம்.

ஓர்ப்பால்-இப்போது ஆராய்;ந்து பார்த்தவிடத்தில் என்றபடி.  ஓர்ப்பு-ஆராய்ச்சி.

அகத்தினழகு முகத்திலே தெரியும்” என்பர்களே “உலகர்கள்: இவளுடைய திருமுகமண்டலத்தில் தெளிவை நோக்கும்போதே இவளுடைய நோய்க்கு நிதாநம் தெரியவில்லையோ என்கை.

இங்கே ஈடு:-“அம்புபட்ட வாட்டத்தோடே முடிந்தாரையும் நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே தெரியாதோ? குணாதிக விஷயத்தையாசைப்பட்டுப் பெறாமையாலுண்டான மோஹமாகையாலே முகத்தில் செல்விக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படியாயிற்றிருக்கிறது.”

நோய் என்னாதே ‘நன்னோய்’ என்கையாலே, ஒவ்வொருவரும் நோன்பு நோற்றுப்பெறவேண்டிய நோயன்றோ இது:

இது வளர்வதற்கு வழிதேடவேண்டுமேயல்லது இதைப்பரிஹரிக்க முயல்வது முறையோ? என்ற கருத்து வெளியாம்.

தேறினோம்-தெளிவுபெற்றோ மென்றபடி.

இது தோழி சொல்லும் வார்த்தையாகையாலே, தான் தெளிவு பெற்றதாகச் சொல்லுகிறவிதனால் அங்குள்ளாரெல்லாரும் கலக்கமுற்றிருப்பதாக ஏற்படுகின்றது:

இந்தக் கலக்கமே இவர்களுக்கு நிதியாம்:  “மஹர்ஷிகளின் கோஷ்டியில் கலக்கம் காணக் கிடைக்காது: ஆழ்வார்களின் கோஷ்டியில் தெளிவு  காணக் கிடைக்காது” என்பர் நம் முதலிகள்.  தெளிந்திருக்க வேண்டுவதன்றோ ப்ராப்தம்:

கலங்கியிருத்தல் ஹேயமன்றோவென்று ஸாமாந்யர் நினைப்பர்கள்:

“தர்ம வீர்ய ஜ்ஞானத்தாலே தெளிந்து ஹ்ருஷ்டராய் மேலே மேலே தொடுப்பாரைப் போலன்றே அருளின பக்தியாலே

உள்கலங்கிச் சோதித்து மூவாறு மாஸம் மோஹித்து வருந்தி யேங்கித் தாழ்ந்த சொற்களாலே நூற்கிறவிவர்” என்ற

ஆசார்ய ஹ்ருதய திவ்ய ஸூக்தி நோக்குக.

இத் தலைவிக்கு உண்டான நோய் இன்ன வகைத்து என்பதைப் பின்னடிகள் நிரூபிப்பன.

கண்ணபிரான், பாண்டவர் துர்யோதநாதிகள் என்ற இருவகுப்பினரையும் ஸந்தி செய்விக்கைக்காகத் துரியோதநாதியரிடம்

தூதாகச் சென்று பாண்டவர்களும் நீங்களும் பகைமை கொள்ளவேண்டா: ராஜ்யத்தில் இருவர்க்கும் பாகமுண்டு:

ஆகையால் ஸமமாகப் பிரித்துக்கொண்டு ஸமாதானமாக அரசாட்சி செய்து வாழுங்கள்; அதற்கு ஸம்மதியில்லாவிடில்,

தலைக்கு இரண்டிரண்டு ஊராகப் பாண்டவர் ஐவர்க்கும் பத்து ஊரைக்கொடுங்கள்;

அதுவும் அநிஷ்டமாகில் பாண்டவர்கள் குடியிருக்கும்படி ஒரூரையாவது  கொடுங்கள்’ என்று பலபடி அருளிச் செய்ய,

அந்தச் சொல்லுக்குச் சிறிதும் இசையாமல் ‘பராக்ரமமிருந்தால் போர் செய்து ஜயித்துக்கொள்ளட்டும்;

இந்தப் பூமி வீரர்க்கே உரியது’ என்றிப்படி திக்காரமாக மறுத்துச் சொல்லவே, தான் பாண்டவ பக்ஷபாதியாய்ப் பார்த்தஸாரதியாயிருந்து

பாரத யுத்தத்தை நடத்திவைத்து எதிரிகளைத் தோற்பித்து அடியவர்களை வெற்றி பெறுவித்தருளினன் என்ற வரலாறு அறியத்தக்கது.

இவள் சிந்தை துழாய் திசைக்கின்றது மாயப்போர்த் தேர்ப்பாகனார்க்கு =கண்ணபிரானுடைய ஆச்ரிதபக்ஷபாதம், ஆச்ரிதஸௌலப்யம்

முதலிய திருக் குணங்களில் ஈடுபட்டதனாலுண்டான நோய் காண்மின் இது என்று தெரிவித்தாளாயிற்று.

துழாய்-துழாவி: ப்ரமித்து என்றபடி.

—————

***- க்ஷுத்ர தெய்வங்களைக் குறித்துப்பண்ணும் சாந்திகளால் இவளுடைய நோய் போக்க வரிது;

எம்பெருமானுடைய லக்ஷ்ணங்களைச் சொல்லில் இவளைப் பெறலாமென்கிறாள்.

திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம்
இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது
திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றீர் ஆகில் நன்றேயில் பெறுமிது காண்மினே –4-6-2-

பதவுரை

(அன்னைமீர்)

தாய்மார்களே!,
திசைக்கின்றதே

நீங்கள் இப்படியும் அறிவு  கெடலாகுமோ?
இவள் நோய் இது

இப்பெண்பிள்ளைக்கு உண்டாகியிருக்கின்ற இந்நோயானது
மிக்க பெரு தெய்வம்

பராத்பரமான தெய்வமடியாக வந்தது;
இசைப்பு இன்றி

தகுதியில்லாதபடி
நீர்

நீங்கள்
அணங்கு ஆடும்

வெறியாடுவிக்கின்ற
இள தெய்வம் அன்று இது

க்ஷு த்ரதெய்வமடியாக வந்ததன்று இது; (ஆதலால்)
திசைப்பு இன்றியே

மனக்குழப்பம் தவிர்ந்து
நீர்

நீங்கள்
இவள்கேட்க

இப்பெண்பிள்ளையின் காதில் விழும்படியாக
சங்கு சக்கரம் என்று

சங்கென்றும் சக்கரமென்றும்
இசைக்கிற்றிர் ஆகில்

சொல்ல வல்லீர்களானால்
தன்றே

நலமாகவே
இல் பெறும்;

(இவள்) இல்லிருப்பப் பெறும்படியாகும்:
இது காண்மின்

இங்ஙனே நடத்திப் பாருங்கள்.

திசைக்கின்றதே என்பது மிக வருந்திச் சொல்வதாகும்.  இப்படியம் ப்ரமிக்கலாகுமோ ? என்று க்ஷேபிக்கிறபடி.

இவள் நோயிது மிக்க பெருந்தெய்வம் = திருவிருத்தத்தில் “வானோர் தலைமகனாம் சீராயின தெய்வநன்னோய் இது” என்றும்

“தின்மொழி நோயோ கழிபெருந்தெய்வம்” என்றும் உள்ள பாசுரங்கள் இங்கே அநுஸந்திக்கத்தக்கன.  “ …………..    என்கிறபடியே

பர தெய்வமான ஸ்ரீமந் நாராயணனாலே உண்டுபண்ணப்பட்ட நோய் இது என்றபடி.

நீர் இசைப்பின்றி அணங்காடும் இளந்தெய்வமன்று இது-இசைப்பு-பொருத்தம்:

அஃதில்லாமல் நீங்கள் செய்வித்துப்போருகிற வெறியாடல் முதலான தீய செயல்களுக்கு இலக்கான தெய்வமடியாக வந்த நோயல்ல இது என்றபடி.

இசைப்பின்றி யென்பதற்கு ஈடு:-

“நீங்கள் பண்ணுகிற பரிஹாரத்துக்கும் உங்களுக்கும் ஒரு சேர்த்தி யில்லை:  இந் நோய்க்கும் இவளுக்கும் ஒரு சேர்த்தி யில்லை: முதல் தன்னிலே பகவத் விஷயத்திலே கை வைத்தார் கொள்ளுகைக்கு ஸம்பாவனை யுடைய நோயன்று இதுதான்.  ஒரு வழியாலும் ஒரு சேர்த்தி யில்லை.”

அணங்காடுதல்-தெய்வமாவேசித்து ஆடுதல். இனிச் செய்ய வேண்டிய ஸமஞ்ஜஸமான பரிஹார ப்ரகாரமுணர்த்துவன பின்னடிகள்.

திசைப்பின்றியே-மருள் கொள்ளாமல்,

எம்பெருமானுடைய திவ்யாயுதங்களை இவள் செவிப்படுமாறு ப்ரஸ்தாவிப்பதே  நன்று என்கை.

இவ்விடத்திலே ஒரு ஐதிஹ்யம்: பட்டர் காலத்தில் ஆய்ச்சி மகன்  என்றொரு பாகவதர்;

அவர் நோவுகண்டு ப்ரஜ்ஞையற்றுக் கிடக்குங்காலத்திலே பட்டர் அவரைப் பார்க்க எழுந்தருளினாராம்:

அப்போது அந்த ஆய்ச்சிமகன் அடியோடு அறிவு நடையாடாதபடி யிருப்பதைக் கண்ட பட்டர்

அவர் அழகிய மணவாளனிடத்தில் மிக்க பக்தியுடையவர் என்பது காரணமாக அவருடைய செவியிலே மெள்ள ஊதினாப்போலே

‘அழகிய மணவாளப் பெருமானே சரணம்’ என்றாராம்:

அதனால் உணர்ச்சியுண்டாய் நெடும் போதெல்லாம் அவர் அந்த வார்த்தையையே சொல்லிக் கொண்டிருந்து திருநாட்டுக்கு நடந்தாராம்.

நன்றே இல்பெறும், நன்று எயில் பெறும்-என்று இரண்டு வகையாகப் பிரிப்பார்கள்;

இரண்டாவதில், நன்று-நன்றாக, எயில் பெறும்-வார்த்தை சொல்லப் பெறுவள் என்றவாறு மயக்கம் நீங்கி உணர்த்தி யுண்டாகுமென்கை.

———-

***- தவறுதலான செயல்களைச் செய்யாமல் எம்பெருமான் திருவடிகளை வாழ்த்துவதாகிற

பரிஹார முறைமையை யனுட்டித்தால் இவளுடைய நோய் தீருமென்கிறாள்.

இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே.–4-6-3-

பதவுரை

அன்னை மீர்

தாய்மார்களே!
இதுகாண்மின்

நான் சொல்லுகிற இக்காரியத்தைச் செய்துபாருங்கள்;
நீர்

நீங்கள்
இ கட்டுவிச்சி சொல்கொண்டு

இந்தக் குறத்தியின் பேச்சைக் கேட்டு
எதுவானாலும் செய்து

ஸ்வரூப விருத்தமானதைச் செய்து
அங்கு

அவ்விடத்திலே
ஓர் கள்ளும் இறைச்சியும்

ஹேயமான மதுவையும் மாம்சஸத்தையும்
துர்வேல்மின்

ஆராதனையாக வைக்கவேண்டர்
மது ஆர்

தேன் பொருந்தின
துழாய்

திருத்துழாய் மாலையை
முடி

திருமுடியிலணிந்துள்ள
மாயம் பிரான்

ஆச்சர்ய சக்தியுக்தனான ப்ரபுவினுடைய
கழல்

திருவடிகளை நோக்கி
வாழ்த்தினால்

மங்களாசாஸனம் பண்ணினால்
அதுவே

அதுதானே
இவள் உற்ற நோய்க்கும்

இப்பெண்பிள்ளையடைந் திருக்கிற நோய்க்கும்
அரு மருந்து ஆகும்

அருமையான மருந்தாகும்.

நான் சொல்லுகிறவார்த்தை விரைவில் பயன்தருகின்றதா இல்லையா என்பதை

நீங்கள் கைமேலே காணுங்கோளென்பாள் இது காண்மினன்னைமீர் என்கிறாள்.

காண்மின் என்றது ‘கேண்மின’ என்ற பொருளில் வந்ததாகவும் கொள்ள இடமுண்டு.

அன்னைமீர்! என்கையாலே நீங்கள் மிகவும் மூத்தவர்களேயானாலும், சொல்லுகிற நான் சிறுமியே யானாலும்

சொல்லும் பேச்சு நல்லதாயிருக்குமாகில் ஆதரிக்கவேண்டாவோ? என்கிற கருத்துத் தொனிக்கும்.

“வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே” என்கிறபடியே

என் போல்வாருடைய பேச்சுக்கு உபசார விசேஷங்கள் செய்யவேண்டியிருக்க,

அவை செய்யாவிடினும் காது கொடுத்துக் கேட்கத்தானாகாதோ என்கிற கருத்தும் தொனிக்கும்.

கட்டுவிச்சி-குறி சொல்லுகிறவள்.  இகரச்சுட்டு-அவளுடைய இழிவைப் புலப்படுத்தும்.

“காணிலு முருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார் பேணிலும் வரந்தர மடுக்கில்லாத தேவர்” என்கிறபடியே

மிகவும் நீசமான தெய்வத்தை வழிபடுகின்ற இவளை எங்கே தேடிப்பிடித்தீர்கள்! என்று க்ஷேபிக்கிறபடி.

கண் கொண்டு காணவொண்ணாத விவளை அழைத்து எதிரே யிருத்தினதுமல்லாமல் இவளுடைய கடிய கொடிய பேச்சுகளுக்குக் காது கொடுப்பதுஞ் செய்தீர்களே! என்று இடித்துக்கூறுகிறபடி.

இகரச்சுட்டு சொல்லில் அந்வயிக்கவுமாம்; கட்டுவிச்சயின் இச்சொல் என்க.

நீர்-உங்களுடைய வைலக்ஷ்ண்யத்தை நீங்கள் அறியீர்களோ?

*மறந்தும் புறந்தொழாத குடியிலே பிறந்துவைத்து நீங்கள் இங்ஙனே செய்யத்தகுமோ? என்பது கருத்து.

இவர்கள் செய்கிற காரியம் தனக்கு அஸஹ்யமாயிருக்கிறபடியை எதுவானுஞ்செய்து என்பதனால் காட்டுகின்றாள்.

வாயால் அதனை அநுவதிக்கவுங் கூசுகிறபடி.

ஹேயமான மதுவையும் மாம்ஸத்தையும்; துர்வி ஸ்ரீ வைஷ்ணவ க்ருஹத்தைக் கொடுக்க வேண்டாவென்கிறாள்.

தேவதாந்தரக்கட்டுவிச்சியின் பேச்சைக்கேட்டு தேவதாந்தர ஸமாராதனம் பண்ணுகிறார்களாகையாலே “கள்ளுமிறைச்சியும் தூவேல்மின்” என்கிறாள்.

தாமஸ தெய்வங்களுக்குத் தாமஸ பதார்த்தங்களே உகந்த உணவாதலால்

“கொல்வன முதலா அல்லனமுயலுமினையசெய்கை” (திருவாசிரியம்) என்கிறபடியே

ஆடு பலி கொடுத்தல் கோழி பலி கொடுத்தல் முதலிய தீச் செயல்களைச் செய்கிறார்களாகக் கொண்டு நிவர்த்திப்பிக்கிறபடி.

ஆழ்வாருடைய பரிஸரத்திலே கள்ளும் இறைச்சியும் தூவ ப்ரஸக்தி லேசமுமில்லையே;

இங்ஙனமே அப்ரஸக்த ப்ரதிஷேதம் பண்ணலாமோவென்னில்; கேண்மின்;

திருவாய்மொழி பக்தி சாஸ்த்ரமாயிருப்பது போலவே தர்ம சாஸ்த்ரமுமாயிருக்கும்.

ஸ்ரீவைஷ்ணவ தர்மங்களைத் தெரிவக்கின்றவத்தனையிலே நோக்கு

ஆஹாரநியமப்ரகரணத்திலே இவை பரிஹரணீயங்கள் என்னுமிடத்தை வற்புறுத்துகிற பா.

இனி, ஸ்வரூபாநுரூபமான பரிஹாரக்ரமத்தைச் சொல்லுகின்றன பின்னடிகள்.

*தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும் தாளிணைமேலும் புனைந்த தண்ணந்துழாயுடையம்மானது திருவடிகளை ஸ்மரித்து

“உன் சேவடி செவ்வி திருக்காப்பு” என்று பல்லாண்டு பாடுமளவே போதும் என்கிறாள்.

————-

***- எம்பெருமானுடைய திருநாமங்களை இப்பெண்பிள்ளை செவிப்படச் சொல்லுவதே; இந்நோய்க்குப் பரிஹாரமென்கிறாள்.

மருந்து ஆகும் என்று,அங்கு ஓர் மாய வலவை சொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்?
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே.–4-6-4-

பதவுரை

(அன்னை மீர்)

தாய்மார்களே!
மருந்து ஆகும் என்று

நோய்க்குப் பரிஹாரமாகுமென்றெண்ணி
ஓர் மாயம் அலவை சொல் கொண்டு

வஞ்சகச் செய்கைகளையுடையளாயும் தோன்றினபடியே சொல்லுபவளாயமிருக்கின்ற ஒருத்தியின் பேச்சைக்கொண்டு
நீர்

நீங்கள்
கரு சோறும்

கருஞ்சோற்றையும்
மற்றை செம்சோறும்

மற்றுள்ள செஞ்சோற்றையும்
களன்

நாற்சந்தியிலே
இழைத்து

இடுவதனால்
என் பயன்

என்ன பலனுண்டாம்? (இது வீணான காரியம்;)
உலகு ஏழும்

ஸப்தலோகங்களையும்
ஒருங்கு ஆக எ

ஒருகாலே
விழுங்கி

(பிரளம் கொள்ளாதபடி.)உட்கொண்டு
உமிழ்ந்திட்ட

பிறகு வெளிப்படுத்தின
பெரு தேவன்

பரதேவதையான ஸ்ரீமந்நாராயணனுடைய
பேர்

திருநாமங்களை
சொல்ல கிற்கில்

(இவளது காதிலே படும்படி.)சொல்லவல்லீர்களானால்
இவளை பெறுதிர்

இவளை இழவாமே பெறுவீர்கள்.

யுக்தாயுக்த நிரூபணம் பண்ணாமல் கண்டபடியே சொல்லுகிறவளுக்கு அலவையென்று பெயர்;

இங்கே கட்டுவிச்சியைக் குறிக்கின்ற சொல் இது.

பரிஹாரமுறைமை சொல்ல வந்து தோன்றினபடியே பிதற்றாநின்ற இக்கட்டுவிச்சியின் சொல்லை நம்பி

நீங்கள் க்ஷுத்ரதெய்வங்கள் வந்து ஸந்நிதிபண்ணுமிடமான நாற்சந்தி முதலானவற்றிலே செஞ்சோறு கருஞ்சோறுகளை யிடுவதனால் என்ன பயனுண்டு?

பின்னை என்செய்யவேணுமென்னில்:

ஆச்ரிதர் அநாச்ரிதர் என்கிற வாசி பாராமல் ஸகல லோகங்களையும் பிரளயம் விழுங்காதபடி தான் விழுங்கி ரக்ஷித்து

ப்ரளயம் கழிந்தவாறே வெளிப் படுத்தின பரதேவதையின் திருநாமம் சொல்ல வல்லீர்களாகில் இவள் உய்யப் பெறலாம்:

வேறு வகையான காரியங்கள் செய்வது இவளை இழப்பதற்கே  உறுப்பாமென்றவாறு.

————–

***- மகளுடைய நோய் தீரவேணு மென்று நீங்கள் பண்ணுகிற பரிஹாரம் நோயை இன்னமும் அதிகப்படுத்தா நின்றதே யன்றித்

தீரச்செய்கின்றதில்லையே:  ஆனபின்பு இந்த முறைமைகளைவிட்டு நோயின் ஸ்வரூபத்திற்கு யோக்யமான

பரிஹார முறைமை அனுஷ்டிக்கப் பாருங்களென்கிறாள்.

இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ!
குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்;
கவளக் கடாக்களிறு அட்டபிரான் திரு நாமத்தால்
தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே.–4-6-5-

பதவுரை

அன்னைமீர்

தாய்மார்களே!
இவளை

இப்பெண்பிள்ளையை
பெறும்பரிசு

(நோய்தீர்ந்து) நாம் பெறுதற்குரிய மார்க்கம்

இ அணங்கு    வெறியாடுதலாகிற இக்காரியமன்று:

ஆடுதல் அன்று

அந்தோ

ஐயோ!இ (இப்பெண்பிள்ளை)
குவளை தட கண்ணும்

குவளை மலர்போன்றதாய் விசாலமான கண்களும்
கோவை செம் வாயும்

கோவைக்கனிபோன்று சிவந்த அதரமும்
பயந்தனன்

வைவர்ணியமடையப்பெற்றாள்:

(இதற்குத்தகுந்த பரிஹாரமென்னவென்றால்)

கவளம்

மதகரமான மருந்துகளைக் கவளங்கொண்டதாய்
கடா

மதம் பெற்றதான
களிறு

(குவலயாபீடமென்னும்) யானையை
அட்ட

தொலைத்தருளின
பிரான்

ஸ்வாமியினுடைய
திருநாமத்தால்

திருநாமோச்சாரண பூர்வகமாக
தவளம் பொடி கொண்டு

பரிசுத்தமான (ஸ்ரீவைஷ்ணவ பாத) தூளியைக் கொண்டு

வந்து

நீர் இட்டிடுமின்

நீங்கள் (இவள்மேல்) துர்வுங்கோள்
தணியும்

(இவளதுநோய்) தீரும்.

இந்த நல்லசரக்கை இழவாமல் பெறவேண்டியிருந்தீர்களாகில் இப்படி விபரிதமான செயல்களைச் செய்வீர்களோ?

பெறுவதற்கு ஹேதுவென்று நினைத்து நீங்கள் செய்கிற காரியம் இழத்தற்கன்றோ ஹேதுவாகின்றது.

வேலனைக்கொண்டு வெறியாடுவிக்கின்றவிது இவளைப் பெறுவதற்கு ஹேதுவாகுமோ ?

இவளது  உயிர் மாய்வதற்கன்றோ இது ஹேது!. அநியாயமாய்; இப்பெண்பிள்ளையை இழந்துவிடப் பார்க்கின்றீர்களே!

அந்தோ! இப்படியும் ஒரு காரியம் செய்யலாமோ! என்கிற நிர்வேதம் முதலடியாக வடிவெடுத்திருக்கின்றது.

உலகத்தில் ஒரு வியாதிக்கு ஒரு சிகித்ஸை செய்தால் அது உத்தமாக இருக்குமானால் க்ரமேண குணமன்றோ காணப்படவேணும்.

குணம் காணப்படாததோடு துர்க்குணமும் காணப்பட்டால் உடனே அந்த சிகித்ஸாக்ரமத்தை விட்டுத் தொலைக்கவன்றோ அடுப்பது:

இங்கு இவளுடைய நிலைமை கண்டீர்களா! குவளைமலர்போன்று அழகியவாய கண்கள் விகாரப்பட்டனவே!:

கொவ்வைக்கனிபோன்று  பழுத்திருந்த அதரமும் நிறவேறு பாடுற்றதே!

இங்ஙனே பயத்தலைக் கண்டு வைத்தும் இப்பரிஹாரமுறையைத் தவிர்க்கின்றிவீர்களே பாவிகாள்! என்கிறாள் இரண்டாமடியால்.

இவ்விடத்தில் ஈட்டு ஸ்ரீஸூக்திகள் காண்மின்:-“அவனுடைய வாய்புகு சோறன்றோ புறியுண்கிறது:  ‘தொண்டையஞ் செங்கனிவாய் நுகர்ந்தானை’ என்றும் ‘மணநோக்கமுண்டான்’ என்றும் இவையிறே அவனுக்கு ஊண்”. இத்யாதி.

மாறன் பணித்த தமிழ்மறைக்கு ஆறங்கங்கூற அவதரித்த திருமங்கையாழ்வார் இரண்டிடத்திலே இரண்டு பாசுரங்களருளிச் செய்தார்:

“வண்டார் பூமாமலர்மங்கை மண நோக்க முண்டானே!” என்றார் ஓரிடத்தில்.

பிராட்டியானுடைய கடாக்ஷ் வீக்ஷ்ணத்தையே எம்பெருமான் உணவாகக் கொண்டிருக்கிறானென்பது இதனால் தெரிவிக்கப்பட்டது.

கள்வன் கொல்லில் “என்மகள் தன் தொண்டையஞ் செங்கனிவாய் நுகர்ந்தானை” என்றார்

இதனால் அதர ரஸத்தையே எம்பெருமான் உணவாகக் கொண்டவன் என்பது  தெரிவிக்கப்பட்டது.

“பின்னை கொல் நில மா மகள் கொல் திருமகள் கொல் பிறந்திட்டால்” என்கிறபடியே இப்பராங்குச நாயகியும் பிராட்டியேயன்றோ.

இவளுடைய குவளைத்தடங்கண்ணும் கோவைச்செவ்வாயும் அழிந்தால் எம்பெருமானுடைய உணவு முட்டுப்பட்டதே! என்று

அன்பர்கள் துடிக்கவேண்டுமத்தனையே.

பயந்தனள்-வைவர்ணியடையும்படியானாள் என்றவாறு.  பயப்பு-நிறவேறுபாடு.

நாங்கள் செய்வது நேரான பரிஹாரமன்றாகில், நீ சொல்லிக் காண் என்று தாய்மார் தோழியைக் கேட்க,

பின்னடிகளில் நேரான பரிஹார முறை பகரப் படுகின்றது.

தன்னைக் கொல்லுமாறு கம்ஸனால் ஏவி நிறுத்தப்பட்ட குவலயாபீட யானையை முடித்த கண்ணபிரானுடைய திருநாமங்களைச் சொல்லுங்கோள்; அவ்வளவே போராது; ஸ்ரீ வைஷ்ணவவர்களின் ஸ்ரீ பாதரேணுவையுங் கொண்டு ரக்ஷையிடுங்கோள்; உடனே நோய் தீருமாறு காணுங்கோள் என்றாளாயிற்று.

கடாக்களிறு-மதயானை; கவளமென்று யானை உணவுக்குப்பெயர்.  …..மென்ற வடசொல் விகாரம். தீனிகளையிட்டு மதமூட்டப்பட்ட யானை என்றபடி.  கண்ணன் திருநாமத்தைச் சொன்னால் குவளைத் தடங்கண்களின் பயப்புத்தீரும்; தவளப்பொடிக்கொண்டு இட்டால் கோவைச்செவ்வாயின் பயப்புத்தீரும் என்றதாகக் கொள்க.

….என்ற வடசொல் தவளமெனத்திரிந்தது. பரிசுத்தமான என்றபடி.

இங்கு இன்ன பொடியென்று சொல்லிற்றில்லையாகிலும் ஸ்ரீவைஷ்ணவர்களின் திருவடித் தூள் என்னும் பொருளே ஆழ்வார்க்கு விவக்ஷ்தமென்னுமிடம் மேற்பாட்டில் “மாயன்தமரடிநீறு கொண்டு” என்றதனாலும் அறுதியிடத்தக்கது.

திருமங்கையாழ்வாரும் சிறிய திருமடலில் “சீரார் செம்புழுதிக்காப்பிட்டு” என்றருளிச்செய்தார்.

புழுதியென்பது தெருப்புழுதி; செழும்புழுதியென்பது எம்பெருமானுடைய திருவடிப்பொடி; சீரார்செழும்புழுதியென்பது பாகவதர்களின்  திருவடிப்பொடி.

இனி, “தெய்வத்தண்ணந்துழாய்த்தாராயினும் தழையாயினும் தண் கொம்பதாயினம் கீழ்வேராயினும் நின்றமண்ணாயினுங்கொண்டு வீசுமினே” என்கிற திருவிருத்தப் பாசுரத்தின் படி திருத்துழாய் மண்பொடியைக் கூறினதாகவுங் கொள்வர் சிலர்.

—————–

***- கீழ்ப்பாட்டில் “தவளப்பொடிக்கொண்டு நீரிட்டிடுமன்தணியுமே” என்று கூறின தோழியை நோக்கித் தாய்மார்

“நீ சொல்லுகிறபொடி இன்னதென்று தெரியவில்லையே!; விளங்கச்சொன்னால் நலம்” என்ன் அதனை விளங்க வுரைக்கின்றாளிப்பாட்டில்.

தணியும் பொழுது இன்றி நீர் அணங்கு ஆடுதிர்; அன்னைமீர்!
பிணியும் ஒழிகின்றது இல்லை, பெருகும் இது அல்லால்;
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே.–4-6-6-

பதவுரை

அன்னைமீர்

தாய்மார்களே!
தணியும்பொழுது இன்றி

சிறிதும் ஓய்வு இல்லாமல்
நீர் அணங்கு ஆடுதிர்

நீங்கள் வெறியாடுதலைச் செய்வியாநின்றீர்கள்;

(இவ்வெறியாடலினால்)

பிணியும் ஒழிகின்றது இல்லை

நோயோ தீர்கின்றதில்லை;
இது அல்லால்

நோய்தீராத மாத்திரமேயன்றிக்கே
பெருகும்

மேன்மேலும் வருத்தியுமடைந்து வருகின்றது;
இஅணங்குக்கு

இப்பெண்பிள்ளைக்கு
மணியில் அணி நிறம்

நீலமணியிற்காட்டிலும் அழகிய நிறம்படைத்த
மாயன்

எம்பெருமானுடைய
தமர்

பக்தர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களினுடைய
அடி நீறு கொண்டு

பாததூளியைக் கொண்டு வந்து
அணிய முயலில்

இடுவதற்கு முயற்சி செய்தால்
மற்று இல்லை கண்டீர்

(இதோடொத்த பரிஹாரம்) வேறெதுவுமில்லைகிடீர்.

அந்தோ! சிறுபிள்ளைகள் போலே நீங்கள் செய்கின்றீர்களே!; (அதாவது) ஏதாவதொரு காரியத்தைச் சிறுபிள்ளைகள் செய்யாநின்றால்

அதில் தகுதியின்மை கண்டு பெரியார் மறுத்தால், அப்பிள்ளைகள் அக்காரியத்தையே மேன்மேலும் பிடிவாதமாய் வலிந்து செய்து போருவது வழக்கம்.  அப்படியே நீங்களும் நான் மறுப்பதே ஹேதுவாகப் பிடிவாதங்கொண்டு வெறியாட்டந்தனையே விடாது செய்விக்கின்றீர்களே!;

இதனால் பிணி ஒழியாததோடு பெருகிச் செல்லவுங்காணா நின்றோமே! என்கிறாள் முன்னடிகளில்.

நீலமணிவண்ணனான எம்பெருமானுடைய வடிவழகிலீடுபாடு கொண்ட பரம பாகவதர்களின் ஸ்ரீபாததூளியைக் கொண்டுவந்து…என்று

இவள் சொல்லத் தொடங்கும் போதே தாய்மார்கள் ‘இவ்வரும் பெரும்பொருள் நமக்குக்கிடைக்க வழி எது?

மிகவும் துர்லபமான வஸ்துவைச் சொல்லுகின்றாயே!, இது ஸம்பாதிப்பது கஷ்டமாயிற்ளே!’ என்று சொல்ல;

அன்னைமீர்! மாயன்தமரடி நீறு தன்னைக் கொண்டுவர வேண்டர் ‘அதைக்கொண்டு வரவேணும்; இவளுக்கு அதையிடவேணும்’ என்ற

மநோ ரதித்தாலும் போதும்; அவ்வளவிலேயே நோய் தீர்ந்ததாகும், பாருங்கோள் என்கிறாள்.

மநோ ரத மாத்திரமே பலன் அளிக்கவல்லதோ? என்கிற சங்கைக்குப் பரிஹாரமாக ஈட்டில் “…-ஆநுகூல்யஸ்ய ஸங்கல்ப: ப்ராதிகூல்யஸ்ய வர்ஜநம்” என்கிற சுலோகத்தை யெடுத்துக்காட்டித் தெளிவு பிறப்பிக்கப்பட்டது.

இது, ப்ரபத்தியின் அங்கங்களைக் காட்டுகிறவொரு பாஞசராத்ர ப்ரமாணம்.

இதில் ஆநுகூல்யத்தைப் பற்றின எண்ணம் போதுமென்றும், ப்ராதிகூல்யத்திலோ வென்னில், அதை விடுவோமென்கிற எண்ணம் போராது, விட்டேதீரவேணும் என்றும் சொல்லிற்று.

இது போலவே இங்கு மாயன்தமரடி நீறுகொண்டு இடவேணுமென்கிற முயற்சியளவே போதுமென்றும்,

பரிஹாராமாகச் செய்துபொருகிற நிஹீந க்ருத்யங்களை விடுவோமென்று எண்ணினால் மாத்திரம் போராது,

கடுக விட்டே தீரவேணுமென்றும் தெரிவித்தவாறு.

இங்கே ஸ்ரீவைஷ்ணவ பாததூளியின் ப்ரபாவபரமாக ஒரு ஐதிஹ்யமருளிச்செய்வர்.

அகளங்க நாட்டாழ்வான் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்களோடே ஓரிடத்திற்குச் செல்லுகையில் வழியிடையே ஒரு ஜைனக்கோவில் தென்பட்டது;

அப்போது இராக்காலமாயு மிருந்தது. அக்கோவில் வாசலில் சிங்கப்பதுமை யிருப்பதைக்காட்டி அவ்வாழ்வான்

‘பகவத்ஸந்நிதி ஸேவியுங்கள்’ என்று வேடிக்கையாகச்சொல்ல,

அவர்களும் மெய்யென்றேயெண்ணி ஸேவித்த பிறகு இது ஜைநக்கோவில் என்றறிந்தவாறே மோஹித்து விழுந்தார்களாம்:

அப்போது அருகே யிருந்த பிள்ளையுறங்காவில்லிதாஸர் தம்முடைய ஸ்ரீபாததூளியை  அவர்களுக்கு இட மோஹம் எழுந்தார்களாம்.

————–

***- இவளது நோய்க்குப் பரிஹாரமாக தேவதாந்தர பஜனம் பண்ணினால் இவளுக்கு இழவேயாம்.

இவள் பிழைக்க வேணுமென்றிருந்தீர்களாகில் ஸ்ரீவைஷ்ணவர்களைப் பணிவதே பாங்கு என்கிறாள்.

ஆடு அறுக்கவும மது நிவேதனம் பண்ணவும் பாரிக்கின்ற பரிஹாரமுறையை வாய்விட்டு நிந்திக்கின்றாள்.

அணங்குக்கு அருமருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள் குலைக் கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.–4-6-7-

பதவுரை

அணங்குக்கு

இப்பெண்பிள்ளைக்கு
அரு மருந்து என்று

அருமையான மருந்தென்று சொல்லி
அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்

தேவதாந்தரத்திற்கு ஆடறுக்கவும் கள் நிவேதனம் செய்யவும் பாரித்து
சுணங்கை எறிந்து

ஒருவகைக் கூத்தாடுதலையும் செய்வித்துக் கொண்டு
நும் தோள் குலைக்க படும் அன்னைமீர்

தோள்கள் துடிக்கக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற தாய்மார்களே!

(இந்தக் கூத்தாடுதலைக் கண்டு கொண்டிருப்பதும் ஒரு வேடிக்கையோ?)

உணங்கல்கெட

உலர்த்தின நெல் பாழாய்ப் போக
கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்

(அதனை மேய்கிற) கழுதையின் உதடு அசைகின்ற அழகைக் கண்டு கொண்டிருப்பதனால் ஒரு பயனுண்டோ?
மாயன் பிரான்

ஆச்சரிய சக்தியையுடையனான எம்பெருமானுடைய
தமர்

பக்தர்களான
வேதம் வல்லாரை

வைதிகர்களை
வணங்கீர்கள்

வணங்குங்கள்.

பராய் என்றது பராவி யென்றபடி. பராவுதலாவது பாரித்தல்.

ஒன்பதினாயிரப்படி, இருபத்தினாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப்படி, பன்னீராயிரப்படி ஆகிய நான்கு வியாக்கியானங்களிலும் இவ்விடத்தில் ஏகரூபமாகவே ஒரு அச்சுப்பிழை புகுந்துள்ளது;

அதாவது, “பராவி-பாரித்து” என்றிருக்கவேண்டுவது ‘ப்ரார்த்தித்து’ என்றே விழுந்திட்டது.  இங்கு அதுவன்று பொருள்;திருத்திக்கொள்க.

இரண்டாமடியில் “சுணங்கை-எறிந்து” என்றும் “சுணம்-கையெறிந்து”என்றும் கொண்டு பொருள் கூறுவர்.

சுணங்கை யென்பது சுணங்கைக் கூத்தைச் சொன்னபடி: அதாவது கையைத்தட்டி ஆடவதொருகூத்து;

தேவதாந்தர ஸமாராதனமாகச்செய்யும் செய்கைகளிலே இந்தக் கூத்தாட்டமும் ஒன்றாகக்;கொள்ளத்தக்கது.

“துணங்கை யென்று பாடமாய் துணங்கையென்ற கூத்தாகவுமாம்”  என்பர் பன்னீராயிரவுரைகாரர்.

சுணம், கையெறிந்து என்று பிரிக்குமளவில், சூர்ணமென்னும் வடசொல் சுண்ணமென்றாகி,

அது சுணம் என்று தொக்கிக் கிடப்பதாகக் கொண்டு மஞ்சட்பொடி என்று பொருள்கொள்க.

மஞ்சள்பொடியை ஒருவர்மேலே ஒருவரெறிந்து ஆடுவதென்பர்.

நும்தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!= வெறியாடுகிற காலத்தில் தோள்கள் அசைத்தாடப்படுவதுண்டே, அதனைக் கூறியவாறு.

அன்னையருடைய தோள்களுக்கு ஒரு வியாபாரம் இல்லையே;  அப்படியிருக்க “நும்தோள் குலைக்க” என்று சொல்லிற்று என்னென்னில்;

ப்ரயோஜ்யகர்த்தாக்களிடம் காணப்படும் செயலை ப்ரயோஜக கர்த்தாக்களிடம் ஏறிட்டுச் சொல்லுவதுண்டாதலால் அந்த முறையிற் சொன்னபடி.

இவ்விடத்தில் ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்;-“பகவத் விஷயத்தில் பண்ணின அஞ்ஜலி மாத்ரமும் சரண்யன் நீர்மையாலே மிகை என்றிருக்கக்கடவ நீங்கள் படும் எளிவரவேயிது.”என்பதாம்.

ஆயாஸரூபமான காரியங்களைச் செய்யப்பொறாத பகவத்விஷயத்திலே வாஸநை பண்ணிப்போருகின்ற நீங்கள்

இப்படிப்பட்ட ஆபாஸகருமங்களை ஏறிட்டுக்கொள்வதே ! என்று வெறுக்கிறபடி.

தோழி இங்ஙனே சொல்லச் செய்தேயும், வெறியாடுகிறவது ஒருவேடிக்கையான காரியமாக இருப்பதனால் தாய்மார்கள் அதைப்பார்த்து அதிசயப்பட்டுக்கொண்டிருக்க,

அந்தோ! இதென்ன வேடிக்கைபார்த்தல்!; நம்முடைய சரக்கு நடமாகிறபடியை அறிந்து கொள்ளாமல் இங்ஙனே வேடிக்கை பார்த்திருப்பது தகுதியோ என்று க்ஷேபிக்க நினைத்த

தோழி ஒரு லோகோக்தியை எடுத்துக்காட்டுகின்றாள்.

(உணங்கல் கெடக் கழுதையுதடாட்டம் கண்டு என்பயன்?)

தெருவிலே உலர்த்தப்படுகிற நெல்முதலானவை உணங்கல் எனப்படும்:

அதைக் கழுதை மேய்ந்து விடுவது உண்டு; அது மேயும்போது உதடு அசைகிற அதிசயமானது வேடிக்கைபார்க்கிறவர்களுக்கு விரும்பிக் காணத்தக்கதாகவே இருக்கும்

(ஆனாலும் நெல் நடமாவதைக்கண்டு அக்கழுதையை அடித்துத்துரத்த வேண்டியதாயருக்க, அது செய்யாதே உதடாடுகிற அதிசயத்தைக் கண்டுகொண்டிருப்போமென்று பார்ததுக் கொண்டிருந்தார்களாகில்;

அன்னவருடைய விவேகத்தை என் சொல்லுவோம்!  அவவண்ணமாகவன்றோ உங்களுடைய அவிவேகமிருப்பது என்றவாறு.

இங்கே ஈடு-“ஜீவநஸாதனமான வ்ரிஹியானது நசித்துப் போம்படிக் கீடாக அத்தைத் தின்கிற கழுதையினுடைய உதட்டின் வியாபாரம் கண்டிருந்தால் என்ன ப்ரயோஜனமுண்டு?

அப்படியே, இவளைக்கொண்டு ஜீவிக்க விருக்கிற நீங்கள் இவள் விநாசத்தை அஸிப்பபிப்பதான தேவதாந்தரஸ்பர்சமுடையார் வ்யாபாரம் கண்டிருக்கிறவித்தால் என்ன ப்ரயோஜநமுண்டு? ப்ரயோஜ்நமில்லாமையேயன்று விநாசமேயாயிற்று பலிப்பது.” என்பதாம்.

ஐயன் திருக்குருகைப் பெருமாளரையர் என்கிற வொருஸ்வாமி மற்றொருவகையாகவும் மூன்றாமடியை நிர்வஹிப்பராம்;

அதாவது, உணங்கல் கெட=இப்பெண்பிள்ளையினுடைய இளைப்பு தீருவதற்காக கழுதை=பேயினுடைய, உதடாட்டம் கண்டு என்பயன்?

நீங்கள் ஆடுங்கள்ளும் பாரித்துக்கொடுக்க அத்தை அது விநியோகம் கொள்ளும்போது அதனுடைய உதடு ஆடுமே; அதைக்கண்டு கொண்டிருப்பதனால் என்ன பயனுண்டு? என்பதாம்.

கழுது என்று பேய்க்குப் பெயர்.  “காலார் மருதும் காய்சினத்தகழுதும்” என்றும் “வஞ்சப்பகுவாய்க் கழுதுக்கு இரங்காது” என்றும் திருமங்கையாழ்வாரும் பிரயோகித்தருளினர்.

கழுதை என்றது கழுதினுடைய என்றபடி.  வேலன் ஆராதிக்கிற தேவதாந்தரத்தை இங்குக்கழுதாகச் சொன்னபடி.

அடைவுபடச் செய்யவேண்டிய பரிஹார முறையை உணர்த்துவது ஈற்றடி:  வேதம் வல்லவர்களான ஸ்ரீவைஷ்ணவர்களை வணங்குவதே இதற்குப்பரிஹாரமென்று உணர்த்தியபடி. ….

ஸகல வேதங்களுக்கும் பொருள் நானே என்று கீதையில் அவன் தானே யருளிச்செய்தபடியும், …..  என்று உபநிஷத்துதானே ஒதினபடியும்

இதர தெய்வங்களுக்குத் தனித்து ஒரு சக்தியில்லையென்றும்,

“இறுக்குமிறையிறுத்துண்ண-எவ்வுலகுக்குந்தன் மூர்த்தி, நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வ நாயகன்தானே’ என்கிறபடியே

ஸ்ரீமந்நாராயணனே இவற்றுக்கு உயிர்நிலை யென்றும் உணர்ந்த பரமை காந்திகளை வணங்குங்கோள் என்றதாயிற்று.

—————-

***- வேத வித்துக்களான ஸ்ரீ வைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு எம்பெருமான் திருவடிகளைப் பணிந்து

இவளுடைய நோயைத் தீர்த்துக் கொள்ளாதே அற்ப தெய்வங்களைப் பணிதல் உங்களுக்குக் கீழ்மை யென்கிறாள்.

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–4-6-8-

பதவுரை

(அன்னைமீர்)

தாய்மார்களே!
வேதம் வல்லார்களை கொண்டு

வைதிகர்களான ஸ்ரீவைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு
விண்னோர் பெருமான்

நித்ய ஸூரிநாதனான எம்பெருமானுடைய
திருபாதம்

திருவடிகளை
பணிந்து

அச்ரயித்து
இவள் நோய் இது

இவளுடைய இந்த நோயை
தீர்த்துக்கொள்ளாது போய்

போக்கிக்கொள்ளாமல்
ஏதம் பறைந்து

இழிவான பேச்சுகளைப்பேசி
அல்ல செய்து

ஸ்வரூபத்திற்குத் தகாத காரியங்களைச் செய்து
ஊடு

நடுநடுவே
கள் கலாய் துர்ய்

தன்னைக் கலந்து துர்வி
கீதம் முழவு இட்டு

வாத்ய கோஷங்களைப் பண்ணி
நீர் அணங்கு ஆடுதல்

நீங்கள் வெறியாடுவிக்கின்றவிது
கீழ்மையே

(இக்குடிக்கு) அவத்யமேயாம்

இதில் முதலடியில் சிறந்த சாஸ்த்ரார்த்தமொன்று வெளியிடப்படுகிறது;

யானையின் மீது ஏற விரும்புமவர்கள் யானைப் பாகனுடைய அநுமதி கொண்டு புகவேண்டுமாபோலே

ஸ்ரீவைஷ்ணவர்களைப் புரஸ்கரித்துக் கொண்டே எம்பெருமானைப் பணிதல் வேண்டுமென்பது ஸத்ஸம்ப்ரதாயம்.

ஸ்ரீபாபிட:  க்ஷ்த்ரபந்துச்ச புண்டரிகச்ச புண்ய க்ருத் ஆசார்ய வத்தயா முக்தௌ தஸ்மாத் ஆசார்யவாந்பவேத்ஃ” என்கிற பிரமாணமும்.

இதை யடியொற்றி நடாதூரம்மாளருளிச்செய்த  –ஸத்ஸங்காத் பவ நிஸ் ஸ்ப்ருஹோ குருமுகாத் ஸ்ரீசம் ப்;ரபத்யாத்மவாந்” என்பதும் இங்கே அறியத் தக்கன.

இதிஹாஸ ஸ்ரேஷ்டமான ஸ்ரீராமாயணத்தில் இவ்வர்த்தம் அநுஷ்டாந சேஷமாகக் கண்டது:

ஸ்ரீ விபீஷ்ணாழ்வான் ஸ்ரீராம ஸந்நிதானத்திலே புகும் போது அப் பெருமாளுடைய வாத்ஸல்ய

ஸௌலப்ய ஸௌசீல்யாதி குணங்களைத் தான் நன்கு அறிந்தவனாகையாலே

நேரே அவன்; திருவடிகளிலேயே வந்து விழலாமாயிருந்தும் அங்ஙணம் செய்யாதே

* ஸர்வலோக சரண்யாய ராகவாய மஹாத்மநே.  நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீ‘ணமுபஸ்திதம்” என்று

வானர முதலிகளைப் பணிந்து துவண்டதெல்லாம் இந்த சாஸ்த்ரார்த்த முறையைப் பின் பற்றியேயாம்.

ஸூக்ரிவ மஹாராஜரும் திருவடியை (மாருதியை) முன்னிட்டே பெருமாளைப் பற்றினார்.

கீழ்ப்பாட்டில் “வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே” என்று ஸ்ரீ வைஷ்ணவர்களையே உத்தேச்யராகக் கொள்ளும்படி சொல்லி வைத்து, இப்பாட்டில் அந்த ஸ்ரீ வைஷ்ணவர்களை த்வாரமாகக்கொண்டு பகவதாச்ரயணம் பண்ணும்படி சொல்லுவானேன்? என்னில்;

இங்கு நம்பிள்ளை அருளிச்செய்யும்படி:

ஸ்ரீவைஷ்ணவர்களே ஆச்ரயணீயர்;அவர்களுக்கு மேற்பட எம்பெருமானளவிலே சென்று ஆச்ரயிக்க வேண்டியதில்லைதான்;

ஆனாலும் ஸஜாதீயர்களிடத்திலே ருசி விச்வாஸங்கள் கனக்க உண்டாவது அரிதாகையாலே

அவர்களைப் பரம சேஷிகளாகக் கொள்ள இசைவு, உண்டாகா தொழியிலும்

அவர்களைப் புருஷகாரமாக வாகிலும் கொள்ளப் பாருங்கோளென்று சொல்லுகிறதென்று.

இவள்நோய் இது = இவள் என்றது பகவத் விஷயமான நோய் தவிரமற்றொரு நோய் வந்து புகுர ப்ரஸக்தியற்றவள் என்று காட்டினபடி.

நோய் இது என்றது-* வானோர் தலைமகனாம் சீராயின தெய்வநன்னோய் இது என்றபடி.

ஏதம் பறைந்து  வெறியாடுகிற வேலன் வாயாற்சொல்லுகிற வார்த்தைகளெல்லாம் அநுவதிக்கவும் தகாதாகையாலே ஏதமென்று பொதுவிலே சொன்னபடி, அவன் செய்கிற காரியங்களும் அப்படியே மிகவும் ஆபாஸங்களாகையாலே அல்லசெய்து எனப்பட்டது;

ஸ்வரூபாநு ரூபமல்லாதவற்றைச் செய்து என்றபடி.  அதை விவரிக்கிறது-கள் ஊடுகலாய்த்துர்ய் என்றும் கீதமுழலிட்டு அணங்காடுதல் என்றும்.

நிஹீந த்ரவ்யங்களைக் கலந்து தூவி, பொல்லாத பாட்டோடுங் கூடின வாத்யங்களை ப்ரவர்த்திப்பித்து நீங்கள் தைவாவேசத்தாலே ஆடுகிறவிது இக்குடிக்கே; இழுக்கு என்றதாயிற்று.

———–

***- நீங்கள் அணங்காடுவதை நான் கண் கொண்டு காண மாட்டேன்; இவள் பிழைக்க வேணுமென்றிருந்தீர்களாகில்

கண்ண பிரானுடைய திருவடிகளை நினைத்து வாழ்த்துங்கோள் என்கிறாள்.

கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்
நாழ்மை பலசொல்லி, நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்;
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து;
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே.–4-6-9-

 

பதவுரை

(அன்னை மீர்)

தாய்மார்களே!
கீழ்மையினால்

உங்கள் நீசத்தனத்தினால்
அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்

நீசனான சண்டாளனொருவன் நடத்திப்

போரும் வாத்யகோஷத்தின் சார்பாக-

பல நாழ்மை சொல்லி

தப்பு வார்த்தைகள் பலவற்றையுஞ் சொல்லி
நீர் அணங்கு ஆடும் பொய்

நீங்கள் வெறியாடுகின்ற விந்த வம்புவெலையை
காண்கிலேன்

நான் கண்கொண்டு காணமாட்டேன்:

(சிரமமாகச் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால்)

ஊழ்மையின்

முறைப்படியே
கண்ணபிரான்

க்ருஷணபகவானுடைய
கழல்

திருவடிகளை
உன்னித்து

சிந்தித்து
வாழ்த்துமின்

மங்களாசாஸநம் பண்ணுங்கள்:
ஈதே

இந்த மங்களாசாஸநமே
ஏழ்மை பிறப்புக்கும்

ஏழேழ் பிறவிக்கும்
சேமம்

க்ஷேமகரம்:
இ நோய்க்கும்

இந்த நோய் தீருவதற்கும்
ஈதே மருந்து

இதுதான் மருந்து.

ஒரு சண்டாளன் ஏதோ வாத்யம் முழங்குவதாம்; அவ்விடத்தைச் சுற்றிப்பலர் இருந்துகொண்டு

தேவதாந்தரங்களின் மேலே சில கட்டுக்கதைகளைச் சொல்லிப்பாடுவதாம்;  இதனிடையே வேலன் தலை விரித்தாடுவதாம்;

ஆகவிப்படி நீங்கள் செய்து போருகிற தப்புக்காரியங்களை என் கண்ணால் பார்க்க ஸஹிக்கின்றிலேன் என்கிறாள் முன்னடிகளில்.

ரஜோ குணத்திற்கும் தமோ குணத்திற்கும் வசப்பட்டிருக்குந் தன்மையை இங்குக் கீழ்மை என்கிறது.

நாழ்மை பல சொல்லுவதாவது-அவற்றுக்கு இல்லாத ஏற்றங்கள் பலவும் சொல்லுகை.  காழ்-அவத்யம்.

இப் பரிஹார முறைகளைத் தவிர்ந்து கண்ண பிரானது கழல் வாழ்த்துவதே எற்றைக்குமேழேழ் பிறவிக்கும் நன்மைபயக்கு மென்கிறது பின்னடிகளில். ஏழ்பிறப்பென்றது-கால முள்ளதனையம் என்றபடி.  சேமம்-க்ஷேமம். ஊழ்மையின்-முறைப் படியே என்றபடி.

இந்நோய்க்குமீதே மருந்து என்பதற்கு முன்னே ஈட்டில் ‘சம்பறுத்து ஆர்க்கைக்குப் போக வேணுமோ?” என்றொரு வாக்கியம் காண்கிறது.

இதன் பொருளாவது-நெல் முதலிய அறுத்தால் அதை ஒரு கட்டாகக் கட்டுவதற்குக் கயிறு தேடப்போகவேணும்;

சம்பு அறுத் தால் அதைக்கொண்டே அதைக் கட்டலாமாகையாலே வேறொரு கயிறு தேடப்போகவேண்டியதில்லை;

அதுபோல இங்குக் கண்ணபிரான் கழல் வாழ்த்துவது தவிர வேறொரு மருந்து தேடப் போக வேண்டாவென்கை.

“சம்பறுத்தார் ஆர்க்கைக்குப் போகவேணுமோ?” என்றும் பாடாந்தரம் காண்கிறது.  பொருள் ஒன்றே.

ஆர்க்கைக்கு-கட்டுவதற்கு போக வேணுமோ-கயிறு தேடப் போக வேணுமோ?.

————-

***- இப் பராங்குச நாயகிக்குக் கண்ணபிரான் பக்கலிலுள்ள அளவு கடந்த ப்ராவண்யத்தை

யறிந்து நீங்கள் அதற்குத் தகுதியாக நடந்து கொள்வதே யுக்தமென்கிறாள் தோழி.

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10-

பதவுரை

அவனை அல்லால்

எம்பெருமானைத் தவிர்த்து
மற்று ஒரு தெய்வம்

வேறொரு தெய்வத்தை
உன்னித்து

ஒரு வஸ்துவாக நினைத்து
தொழாள்

(இப்பெண்பிள்ளை) தொழுவது கிடையாது:

(இப்படியிருக்க)

நும்

உங்களுடைய
இச்சை

மனம் போனபடியே
சொல்லி

(நான் அநுவாதம் செய்யவும் தகாத சொற்களைச்) சொல்லி
நும்

உங்களுடைய
தோள் குலைக்கப்படும் அன்னை மீர்

தோள் அசையநிற்கிற தாய்மார்களே!,
மன்னப்படும்

நித்யமாக விளங்குகின்ற வேதங்களினால் பிரதி பாதிக்கப்படுகிறவனும்
வண் துவராபதி மன்னனை

அழகிய துவாரகாபுரிக்கு அதிபதியுமான எம்பெருமானை
ஏத்துமின்

துதியுங்கோள்:
ஏத்தலும்

துதித்தவுடனே
கதொழுது

(இப்பெண்பிள்ளை உணர்த்தி பெற்று, அவனைத்) தொழுது
ஆடும்

களித்துக் கூத்தாடுவாள்.

“இன்னார்க்கு இன்ன பரிஹார மென்றில்;லையோ? அது அறிந்து பரிஹரிக்க வேண்டாவோ?

முழங்கால் தகர, மூக்கிலே ஈரச் சீலை கட்டுமா போலே யன்றோ நீங்கள் பண்ணுகிற பரிஹாரம்.”  என்பது நம்பிள்ளை யீடு.

ஒருவனுக்கு முழங்காலிலே காயம் பட்டால் முழங்காலிலே யன்றோ சிகித்ஸை செய்ய வேண்டுவது;

அதை விட்டு, முழங்கால் பாதையின் நிவ்ருத்திக்காக மூக்கிலே சிகித்ஸை செய்வதுண்டோ?

இது ரோகத்திற்குத் தகுந்த பரிஹாரமாகுமோ? என்கை.

“……………….  -அக்ஷிரோகே ஸமுத்பந்நே கர்ணம் சித்வா குதம் தஹேத்.” என்றொரு ஸ்லோஹம் உண்டு :

கண்ணில் ரோகமுண்டானால் காதை யறுத்து ப்ருஷ்ட பாகத்தில் சூடு போட வேண்டியதென்று இதன்பொருள்.

மிருக சிகித்ஸை கூறுமிடத்திலே உள்ளதான இந்த ஸ்லோஹத்தை ஒருவன் கண்டு இந்த சிகித்ஸையைக்

கண் ரோகியான வொரு மனிதனுக்குச் செய்தானாம்.

அது போல வன்றோ இவர்கள் செய்து போருகிற பரிஹார முறை யிருப்பது என்று ஏசுகிறபடி.

அவனையல்லால் மற்றொரு தெய்வம் உன்னித்துத் தொழாள்-இப்பெண்பிள்ளை ஒரு காலத்திலும் தேவதாந்தர பஜனம் பண்ணியறியாள்.

உன்னித்து என்றது தன்னெஞ்சாலே மதித்து என்றபடி; ஒரு பொருளாகக் கொண்டு தொழாள் என்கை.

“பிறைதொழும் பருவத்திலும் பிறைதொழுதறியாள்” என்பர் நம்பிள்ளை.

அம்புலிப் பருவத்தில் பிறை தொழுவது மணிசர் யாவர்க்கும்; இயல்பாக நிகழ்வது;

அதுதானும் இவட்குக நிகழ்ந்ததில்லை யென்கிறவிது மிக்க பொருத்தமானது.

“முலையோ முழுமுற்றும்  போந்தில மொய்பூங்குழல் குறிய கலையோவரையில்லை நாவோ குழறும், கடல் மண்ணெல்லாம் விலையோ வெனமிளிருங்கண் இவள்பரமே!  பெருமான் மலையோ திருவேங்கடமென்று கற்கின்ற வாசகமே.” என்ற திருவிருத்தமும் இங்கு நினைக்கத்தக்கது.

“அறியாக் காலத் துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து” என்னும்படி யிருக்கிற ஆழ்வார்க்கு

தேவதாந்தர ஸ்பர்ஸம் ஒரு காலத்திலும் புகுவதற்கு ப்ரஸக்தி யில்லையே.

நும் இச்சை சொல்லி=உங்கள் மனம் போனபடியே சிலவற்றைச் சொல்லி என்றபடி.

நீங்கள் சொல்லுகிற சொற்கள் இவளுடைய தன்மைக்குச் சிறிதும் சேராது:

தோற்றினபடி ஏதேனும் சொல்லிப் போருகிற உங்கள் தன்மைக்குச் சேருமத்தனை  யென்று காட்டினபடி.

(நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்)  “தோள் அவனையல்லால் தொழா” என்கிற குடியிலே பிறந்து வைத்து

உங்களுடைய தோளுக்கு இப்படியும் ஒரு  துர்க்கதியுண்டாவதே! என்று பொடிகிறபடி.

தோள் குலைத்தலென்று வீணான ஆயாஸத் தைச் சொன்னவாறு:  தொழுகையைச் சொல்லிற்றாகவுமாம்,

குலைதலாவது நிலைகெடுதல். தேவதாந்தர விஷயத்தில் பண்ணுகிற நமஸ்காரமாகையாலே தோள் நிலை கெடுதலாகக் கூறுகிறபடி,

ஆவேசத்தாலே தோள் அசைத்தலைச் சொல்லுவதாகக் கொள்ளுதல் ஏற்கும்.

ஒழுங்கு படச் செய்ய வேண்டிய பரிஹார முறையை உணர்த்துவன பின்னடிகள்.

வேதாந்த விழுப் பொருளான வண் துவராபதி மன்னனுடைய திரு நாமத்தைச் சொல்லியேத்துதல் செய்யவே இந்நோய் தீருமென்றாளாயிற்று.

ஏத்துதலும்-ஏத்தினவுடனே, தொழுது ஆடும்-இப்பெண்பிள்ளை உஜ்ஜீவனம் பெற்றுவிடுவள் என்றபடி.

ஆடும் என்பதை ஏவற்பன்மை வினைமுற்றாகக் கொண்டு, நீங்கள் தொழுதாடுங்கோள் என்றதாகவுமுரைக்கலாம்.

நன்னூல் வினையியலில் “பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையில். செல்லாதாகும் செய்யுமென் முற்றே”  என்ற சிறப்பு விதிக்கு மாறாக

ஆடும் என்ற செய்யுமென் முற்றுக்கு முன்னிலைப் பொருள் கொள்ளலாமோ வென்னில், இதனைப் புதியன புகுதலாகக் கொள்க.

“நீர் உண்ணும் என முன்னிலையிற் பன்மை யேவலாப் வருதல் புகதியன புகதல்” என்று

நன்னூலுரைகாரர்களும் சொல்லிவைத்தார்கள்.

“பழையன கழிதலும் புதியன புகதலும் வழுவல காலவகையினானே” என்ற நன்னூற் சூத்திரமுங் காண்க.

.  என்னும் வடசொல் துவராபதி யெனத் திரிந்தது.

தக்ஷிண த்வராகையாகக் கொண்டாடப்படும் ஸ்ரீராஜ மன்னார் ஸந்நிதியில் இப் பாசுரம் மிக்க சிறப்புப் பெற்று வரும்.

————–

***- இத்திருவாய்மொழியை அன்போடு அதிகரிக்குமவர்கள் எம்பெருமானைப் பிரிந்து

படுகையாகிற துக்கமின்றிக்கே வாழப்பெறுவர்கள் என்று பயனுரைத்துத் தலைக் கட்டுகின்றார்.

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாடவல்லார் துக்க சீலம் இலர்களே.–4-6-11-

பதவுரை

தொழுது ஆடி

வணங்குதலும் கூத்தாடுதலுஞ் செய்து
துர் மணி வண்ணனுக்கு

அழகிய நீலமணிபோன்ற நிறமுடையனான எம்பெருமானுக்கு
ஆள் செய்து

அடிமைத்தொழில் செய்து
நோய் தீர்ந்த

நோய் தீரப்பெற்றவரும்,
வழுவாத

அவத்யமடையாத
தொல் புகழ்

இயற்கையான புகழையுடையவரும்
வண் குருகூர்

அழகிய திருநகரிக்குத் தலைவருமான
சடகோபன்

ஆழ்வார்
சொல்

அருளிச் செய்த
வழுவாத

குறையற்றதான
ஆயிரத்துள்

ஆயிரத்தினுள்ளே
வெறிகள்

வெறிவிலக்கு விஷயமான
இவை பத்தும்

இப்பதிகத்தை
தொழுதும்  ஆடி

தொழுவதும் ஆடவதுமாய்க் கொண்டு
பாட வல்லார்

பாடவல்லார்கள்
துக்க சீலம் இலர்கள்

துக்கப்படுந்தன்மையில்லாதவராவர்.

“ஆட் செய்து நோய் தீர்ந்த” என்று வாசகமிருந்தாலும் ‘உருபு பிரித்துக் கூட்டுதல்’ என்கிற முறைமையின்கீழ்  “நோய் தீர்ந்து ஆட்செய்த” என்று பொருள்கொள்ளத்தகும்.

“நோய் தீர்ந்து தொழுதாடிப் பாடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்த வண்குருகூர்ச்சடகோபன்” என்பது ஆறாயிரப்படியருளிச் செயல்.

இனி, ஆட்செய்து என்பதை சொல் திரியினும் பொருள் திரியா வினைக்குறை” என்ற நன்நூற் சூத்திரத்தின்படி எச்சத் திரிபாகக் கொண்டு ‘ஆட்செய்ய’ என்று பொருள் கொள்ளவுமாம்.

தோழியின் சொற்படியே தாய்மார்கள் தொழுதாடித் தூமணிவண்ணனுக்கு ஆட்செய்ய, அதனால் ஆழ்வார் நோய் தீர்ந்ததாகக் கூறியவாறு.

ஆழ்வாருக்கு இந்த நோய் தீருவதன்று;  ஆத்மா உள்ளவரையில் அநுவர்த்திக்கு மத்தனை.  ஆகையாலே நோய்தீர்ந்த என்று சொல்லுவதற்கு ப்ரஸக்தியில்லை; அப்படியிருக்க இங்கு ‘நோய்தீர்ந்த’ என்றது மோஹம் தெளிந்து சிறிது உணர்த்தியுண்டானமைபற்றியென்க.

இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;-“தொழுதாடித் தூமணி வண்ணனுக்காட்செய்து நோய்தீர்ந்த” என்றதுக்கு அம்மங்கியம்மாள் பணிக்கும்படி-மோஹித்தவன் அல்பம் ஆச்வஸித்தவாறே மோர்க்குழம்பு குடித்தாள் தரித்தாள் கண்விழித்தாள் வார்த்தை சொன்னாள் என்பர்களிறே; அதுபோலே காணும் என்று.”

எம்பெருமானோடு கலவிபெற்று நோய்தீர்ந்ததாகச் சொல்லுகின்றதன்று;

மேல் திருவாய்மொழயில் * சாலவிருத்தி, யிரவும்பகலும் மாறாமல் கூப்பிட்டிருந்தனனாதலால் அங்ஙனம் சொல்லுவதற்கில்லை; பிறந்த உணர்த்தியைக் கொண்டு நோய் தீர்ந்ததாகச் சொன்னவர்த்தனை.

வழுவாத தொல்புகழ் வண்குருகூர்ச் சடகோபன் = இப்போது ஆழ்வார்க்கு வழுவாத புகழாவது தேவதாந்தர ஸம்பந்தத்தை ஈஷத்தும் ஸஹியாமையயேயாம்.  “ஒருவன் வைஷ்ணவனாகையாவது இது” என்பர் நம்பிள்ளை.

மூன்றாமடியில் “இவைபத்து வெறிகளும்” என்பதை ‘வெறிகள் இவை பத்தும்’ என்று அந்வயித்துக்கொள்க:

வெறிவிலக்கான இத்திருவாய்மொழியை என்றபடி.

வெறிவிலக்காகவது-நாயகிவரஹத்தாலே நாயகி மிகவும் வருந்திக்கிடக்க, அவளுடைய வடிவு வேறுபாட்டை நோக்கி

‘இவள் இங்ஙனம் மெலிதற்குக் காரணம் என்னோ? என்று கவலைப்பட்டுக் கட்டுவிச்சியைக் குறிகேட்க,

அவளும் தன் மரபின்படி அராய்ந்து ‘இவளுக்கு முருக்கடவுள் ஆவேசித்ததொழிய வேறொன்றுமில்லை’ என்றுகூற,

அதுகேட்ட தாயார் உடனே வெறியாட்டாளனை யழைப்பித்து அவனைக்கொண்டு ஆவேசமாடுவிக்கவும்,

ஆடறுப்பது கள்ளுகுப்பது பலியிடுதாய்ப் பரிஹாரங்கள் செய்விக்கவும், முயல

அச்சமயத்தில் அவளது துன்பத்தின் மெய்க் காரணத்தை யறிந்த தோழி அம் முயற்சிகளை விலக்குவதாம்.

ஆக இப்படிப்பட்ட வெறி விலக்குத் துறையிலே அமைந்த இத்திருவாய்மொழியை ஸஹ்ருதயமாக அநுஸந்திக்க வல்லவர்கள்

எம்பெருமானைப் பிரிந்து படுகிற துயரமும் அதற்குப் பரிஹாரமாக தேவதாந்தர ஸமாராதனம் பண்ணத்

தேடுகையாகிற துயரமும் ஸம்பந்திக்கப் பெறாதே வாழ்வார்கள் என்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று–

————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: