ஸ்ரீ அரையர் சேவை பற்றி ஸ்ரீ ரெங்கம் அரையர் ஸ்வாமிகள் –ஸ்ரீ ஆண்டாள் கேட்கும் “முத்துகுறி” –முனைவர் ஸ்ரீராம்–அவர்கள் –

“நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைத் தொகுத்த நாதமுனிகள் காலத்திலிருந்து எங்களின் அரையர் மரபு தொடங்குகிறது.
நாதமுனிகளின் தங்கை தன் இரு மகன்களைத் தான் திவ்யப் பிரபந்தங்களைப் பெருமாள் கோயில்களில் பாட அர்ப்பணிக்கிறார்.
அவர்கள் மேலகத்து ஆழ்வார், கீழகத்து ஆழ்வார் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களுடைய வழிவந்த வாரிசுகள்தான் நாங்கள்.

பெருமாள் கோயில்களில் ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களைப் பாடும் அரையர்கள் குடும்பங்கள்
ஸ்ரீவில்லிப்புத்தூர், மேல்கோட்டை, திருநாராயணபுரம் (கர்நாடகா), ஆழ்வார் திருநகரி ஆகிய இடங்களில் இருக்கிறார்கள்.
ஸ்ரீரங்கத்தில் இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கிறோம். இன்னொரு குடும்பம் ராமானுஜம் அரையருடையது.

என்னோட 11-வது வயதிலிருந்து நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைப் பாடி வருகிறேன்.
வைகுண்ட ஏகாதசியின்போதான 20 நாள் விழாவில் ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களைப் பாட கோயிலில் இருந்து வந்து அழைத்துச் செல்வார்கள் இதுதான் மரபு.
எங்களின் பாடல்களைக் கேட்டு பெருமாள் தன்னுடைய பரிவட்டத்தையும் குல்லாவையும் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
அதனால், பாடலைப் பாடும்போது குல்லா அணிந்துகொண்டு பாடுவோம்.
நாங்கள் பாடல்களை நேரடியாக பெருமாள் முன்பு நேரடியாகப் பாடுவதாக உணர்கிறோம்.

பகல்பத்து விழாவின் முதல் ஐந்து நாளில் பெரியாழ்வார் திருமொழி, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி பாடுவோம்.
வைகுண்ட ஏகாதசி முதல் நம்மாழ்வார் மோட்சம் வரைக்கும் திருவாய்மொழி பாடுவோம்.
இயல், இசை, நாடகம் என்கிற அடிப்படையில் பாடல்களைக் காட்சிகளாக்க அபிநயமும் நடத்துவோம்.
அதற்கு அடுத்த நாள் இயற்பா என நாலாயிரம் பாடல்களையும் பாடி முடித்துவிடுவோம்.
இதைத்தவிர அரங்கநாதர் உற்சவ காலங்களிலும் பாடுவோம்.

தம்பிரான் படி வியாக்கியானம், பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை போன்றவர்களின் வியாக்கியானப் படிகள் வழிவழியாக எங்களிடம் மட்டுமே இருக்கிறது.
இதை எங்கள் குடும்பங்களுக்கு மட்டுமே சொல்லித் தருகிறோம். வேறு யாருக்கும் சொல்வதில்லை. அரங்கநாதர் கோயிலில் மட்டுமே நாங்கள் பாடுவோம்.

இயற்பா பாடுவதற்கு இருந்த அமுதானார் என்பவரின் குடும்பத்தில் வாரிசு இல்லாததால்
அவருக்குப் பின் இயற்பாவையும் 24 ஆண்டுகளாக நாங்கள்தான் பாடுகிறோம்” என்றார் சம்பத் அரையர்.
உங்கள் மகன்களும் பாடுவார்களா என்று கேட்டபோது, “நிச்சயமாக, எங்கள் குடும்பத்தில் சிறு வயதிலிருந்தே பயிற்றுவிக்கிறோம்.
என் மகன் பரத்வாஜ் விமான பைலட்டாக இருக்கிறார். ஆனாலும் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதும் அவர் பாடுவார்.
இளைய மகன் இன்ஜினியர், அவரும் பாடுவார். எங்களுக்கு அரசு உதவித்தொகை தருவதாகச் சொன்னார்கள்.
நாங்கள் அதை மறுத்துவிட்டோம். இதை பெருமாளுக்கு செய்யும் சேவையாக மட்டுமே நினைக்கிறோம்” என்றார்.
அருகிலிருந்த பரத்வாஜும் நிச்சயமாக இதை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்று உறுதியாகச் சொன்னார்.

ஆழ்வார்களின் இனிமையான பக்திப் பாசுரங்களால் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமியையும், கோயிலையும்
மந்திர கனத்திற்கு ஒப்பான அதிர்வைத் தந்து வரும் அரையர்களின் சேவை ஒரு நீண்ட பாரம்பரியமாக தொடர்ந்து வந்திருக்கிறது.
கோயிலில் இருந்து புறப்பட்ட போது அரையர்கள் என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டதற்குப் ‘பாட்டுக்கு அரசன்’ என்று பெருமை பொங்கச் சொன்னார் பரத்வாஜ்.

அரங்கனுக்கு நடக்கும்அனைத்து விழாக்களும் பொதுவாக 10 நாட்களே நடக்கும். மார்கழிவைகுண்ட ஏகாதசி விழா மட்டும் 22 நாட்கள் நடக்கும். இதனாலேயே இது பெரிய திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.

மார்கழி உற்சவத்தின் முதல் பத்து நாட்கள் திருமொழித் திருநாள் எனவும் பின்னால் வரும் 10 நாட்கள் திருவாய்மொழித் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இதில் முதல் பத்து நாட்கள் பகல் நேரத்தில் அரையர் சேவை நடைபெறும். திருவாய்மொழித் திருநாளின் போது அரையர் சேவை இரவு நேரத்தில் நடைபெறும். இந்த அரையர் சேவை நடைபெறும் காலத்தை வைத்து இதை பகல்பத்து இராப்பத்து என்றும் அழைக்கின்றனர்.

 • திருமங்கையாழ்வார் காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பத்துநாள் திருவாய்மொழி திருநாளாக ஆரம்பிக்கப்பட்டது
 • நாதமுனிகள் காலத்தில் மற்ற ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு ஏகாதசிக்கு முன்னதாக பத்து நாட்கள் சேர்க்கப்பட்டு 21 நாள் திருநாளாக அரையர் சேவையுடன் ஆரம்பிக்கப்பட்டது.
 • ஜகதசாரியன் சுவாமி ராமானுஜர் நம்மாழ்வார் தொடக்கமாக அனைத்து ஆழ்வார்களின் உற்சவ மூர்த்திகளை எழுந்தருளச் செய்து விழாவிற்கு மேலும் பொலிவு ஊட்டினார்.
 • பராசரபட்டர் காலத்தில் மார்கழி பெரிய திருநாள் தொடக்க விழாவாக திருநெடுந்தாண்டகம் சேர்க்கப்பட்டு இன்றுவரை 22 நாட்கள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
 • மணவாள மாமுனிகள் காலத்தில் தம்பிரான் படி வியாக்கியானம் அரையர் சேவையில் சேர்க்கப்பட்டது.
 • நம்பெருமாள் வீணை வாசிப்பு கைங்கரியம்
  முத்தமிழ் விழாவில் தமிழ்வேதமான, திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை அரையர்கள் தாளம் இசைத்துப் பாடுவார்கள்.
  வீணை இசைக் கலைஞர்கள்,
  சில பிரபந்தப் பாசுரங்களை பலவகை அமிர்தமான ராகங்களில்,யாழ்(வீணை) இசைத்தும், வாய்ப்பாட்டாகவும் பாடுவார்கள்.

  இராப்பத்து நாட்களில் நம்பெருமாளின் இரவுப் புறப்பாட்டில், நாழிகேட்டான் வாசலிலிருந்து, மேலப்படி ஏறும்வரை,
  நம்பெருமாள் சுமார்1.30 மணி நேரம் இந்த அற்புதமான இசையைக் கேட்டுக்கொண்டு வருவார்.

  சாந்தோக்ய உபநிஷத்தின்படி, வீணையில் இசைக்கப்படும் இசை எல்லாம் சேர்ந்து பரப்ரம்மமான ஸ்ரீமந்நாராயணனை போற்றுமாம்.

  மேலும் வீணை இசையே மஹாலக்ஷ்மித் தாயாரின் ஒரு வடிவம் என்கிறது உபநிஷத்.

  உடையவர் நியமித்து அருளிய வீணாகானச் சேவை:
  திவ்யப் பிரபந்தங்களில் பெரிதும் ஈடுபட்டிருந்த உடையவர்,
  பல பாசுரங்களிலும் ஆழ்வார்கள் யாழிசையை பாடியுள்ளார்கள்.
  எனவே, ஸ்வாமி இராமானுஜரும் பெரியபெருமாள் கேட்டு உகக்க வேண்டும் என்று கருதி, வீணை இசைக்கும் கைங்கரியத்தை ஏற்பாடு செய்தார்.

  பெருமாள் வீணை கானம் கேட்டருளும் சமயங்கள்:

  திருப்பள்ளி எழுச்சியின் போது – ‘கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்’ எனும் திருப்பள்ளி எழுச்சி பாசுரம்.
  இரவில் திருக்காப்பு சேர்க்கும் போது – ‘மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே என்னும் பெருமாள் திருமொழி பாசுரம்.
  வைகுண்ட ஏகாதசி இராப்பத்தில்
  மற்ற சில உற்சவங்களில் பெருமாள் புறப்பாட்டின் போது வீணை கானம் சேவிக்கப்படும்.

  —————————–

ஸ்ரீ ஆண்டாள் கேட்கும் “முத்துகுறி”

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கும் உற்சவங்களில் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு முத்து குறி.
ஆண்டாள் எம்பெருமானையே எப்பொழுதும் நினைப்பவள்.
கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனைப்
புண்ணிற் புளிப் பெய்தாற் போலப்புறம் நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையிற் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே- – என்பது ஆண்டாளின் நிலை.
“தோழியர்களே. கண்ணனெனும் கருந்தெய்வத்தின் அழகையும், அவனுடன் கூடிமகிழும் காட்சியையும் எப்போதும் கண்டு கிடக்கின்றேன்.’’
“புண்ணிலே புளியைப் பூசுவதைப் போல், அயலில் நின்று என்னைக் கேலி செய்யாமல் என் வருத்தத்தை அறியாமல் விலகி நிற்கின்ற அந்தப் பெருமான்
தன் இடையில் கட்டியிருக்கும் மஞ்சள் பட்டுடையை கொண்டு வந்து என் வாட்டம் தீருமாறு வீச மாட்டீர்களா?’’ என்பது இந்தப் பாசுரத்தின் பொருள்.

ஆண்டாள் எம்பெருமானை அடைவதற்கு வழி இருக்கிறதா என்று துடிக்கிறாள். அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் வீதி வழியே குறி சொல்லும் ஒரு குறத்தி போகிறாள்.
அவளை அழைத்து தோழிகள் சூழ்ந்திருக்க தன் கவலைக்கான காரணத்தையும், அது தீர்வதற்கான
வழியையும் கேட்பது போல அமைந்த நிகழ்ச்சிதான் முத்துகுறி கேட்கும் நிகழ்ச்சி.
ஆண்டாள் கவலையோடு கேள்வி கேட்பதும், அவள் நோய்க்கு கட்டுவிச்சி நீண்ட பதில் சொல்வதும், சுவாரசியமாக இருக்கும்.

அதற்காகவே வடிவமைக்கப்பட்ட உரையாடலை அபிநயத்தோடு அரையர்கள் பேசுவார்கள்.
நெல்லை மாவட்ட இலக்கியங்களில், குறிகேட்கும் இந்த நிகழ்ச்சிகள் நிறைய வரும். `
`குற்றாலக் குறவஞ்சி’’ என்ற சிற்றிலக்கியமே, இந்த உரையாடலில் அடிப்படையில் அமைந்ததுதான்.
இந்த நிகழ்ச்சி ஆடிப்பூர உற்சவத்தில் நடைபெறும். பத்தாம் நாள் உற்சவத்தில், சப்தாவரணம் நடக்கும்.
அன்று ஆண்டாள் முத்துகுறி கேட்கும் வைபவம் நடைபெறும்.
கட்டுவிச்சி பாவனையில் அபிநயம் பிடிக்கும் அரையர் சுவாமி வாயால் ஆண்டாள் இதைக் கேட்டு மகிழ்வாள்.

அரையர் சுவாமி ஒரு கருப்பு பட்டுத்துணியில் சோழிகளை போட்டு குறி சொல்வதுபோல் அபிநயம் செய்வார்.
ஆடித் திருநாளிலும், பங்குனித் திருநாள் ஒன்பதாம் நாள் விழாவுக்கு பிறகு, திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த திருநெடுந்தாண்டகம் என்கிற பாசுரத்தில்
“பட்டுடுக்கும் அயர்த்திரங்கும் பாவை பேணாள்’’ என்று தொடங்கும் பாடலுக்கு அபிநயம் பிடிப்பர்.
மார்கழி மாதத்தில் ஆண்டாள் கோயில் பிராகாரத்தில் ஆண்டாள் மட்டும் தனியாக எழுந்தருளி இருக்க,
தலையில் பட்டு குல்லாய் அணிந்து அரையர் அபிநயம் செய்து முத்து குறி செய்வார்.
இதில், இரண்டு பேர் கிடையாது. அவரே கேள்வி கேட்டு, அவரே பதில் சொல்ல வேண்டும். ஓரங்க நாடகம் போலிருக்கும்.

“சூழ நீர் பாயும் தென்னங்குறுங்குடி, திருமாலிருஞ்சோலை, சுக்கு குத்தி
கழத்தட்டி, வஞ்சி நகரம் என்னும் இஞ்சி நறுக்கி,
ஞானசாரம் பிரமேய சாரம் என்கின்ற சாற்றை எடுத்து,
ஸ்ரீசைலேச தயாபாத்திரத்தில் சேர்த்து
அச்சுதன் என்னும் அடுப்பை வைத்து,
உத்தமன் என்னும் உமியைத் தூவி,
வேங்கடம் என்னும் விறகை முறித்திட்டு,
நீர்மலை என்னும் நெருப்பை மூட்டி,
மணி மந்திரம் என்னும் துடிப்பினாலே,
வானமாமலை என்னும் வட்டிலில் சேர்த்து,
திருமணி கூடத்திலே இறக்கி,
உபதேசரத்தினமாலை என்னும் உரை கலத்தில் இட்டு,
கண்ணி நுண் சிறுத்தாம்பினால் மாத்திரை தேய்த்து,
விண்ணகரம் என்னும் மேல்பொடி போட்டு,
கண்ணபுரம் என்னும் கரண்டியால் கலக்கி,
திருவாய்மொழி என்னும் தேனைக் கலந்து,
திருப்பள்ளி எழுச்சி என்று திகழக் கலக்கித்
திருக்குடந்தை என்று எடுத்து புசி. உன் நோய் தீரும்.”

இதை நீட்டி முழக்கி சொல்லி முடித்ததும், இப்பொழுது கோதையின் தோழிகள் கேட்கிறார்கள்.
“என்ன மருந்து சாப்பிட்டாய்?’’

கோதை பதில்,“எங்கும் இல்லாத மருந்து. விலையில்லா மருந்து.
வடக்கே சென்று வாயு புத்திரன் கொணர்ந்த மருந்து.
தெற்கே சென்று தேவர்கள் கொணர்ந்த மருந்து.
அனுமன் அங்கதன் கொணர்ந்த மருந்து. ஆழ்வார்கள் ஆசாரியர்கள் அனுசந்தித்த மருந்து.
“ஸ்ரீமன் நாராயணா…” என்று தொடங்கும் திவ்யமந்திர மருந்து’’ என்கிறாள்.

இப்படிப் போகும் அரையர் நிகழ்ச்சி. அரையர் சேவை உள்ள ஒரு சில தலங்களில் ஸ்ரீவில்லிபுத்தூரும் உண்டு.
நாதமுனிகள், ஆழ்வார்களின் அருளிச் செயலை, இயல், இசை, நாடகமாகத் தொகுத்தார்.
பொதுவாக தனித்தனியாக இருக்கும்.
இம்மூன்றும், ஒன்றாக கலந்து இருக்கும் நிகழ்ச்சிதான் அரையர் சேவை.
அவர்கள் பாடல் பாடுவார்கள். அதற்கான உரையையும் சொல்லுவார்கள். அபிநயம் பிடிப்பார்கள். வெறும் கைத்தாளம் கொண்டு மட்டும்தான் பாடுவார்கள்.
பக்கவாத்தியம் எதுவும் இருக்காது. இவர்கள் பாடலுக்கு உரை சொல்லும் பொழுது தனி உரையை பயன் படுத்துவார்கள்.
தம்பிரான்படி வியாக்கியானம் என்று பெயர்.

————-

“கோயிலுடைய பெருமாளரையர்” என்றோ,
“வரந்தரும் பெருமாளரையர்” என்றோ,
“மதியாத தெய்வங்கள் மணவாளப்பெருமாளரையர்” என்றோ.
“நாத விநோத அரையர்” என்றோ அரங்கனின் கைங்கர்யபரர்களால் ,அரையர் ஸ்வாமிகளுக்கு அருளப்பாடு சாதிக்கப்படும்.

(பகல்பத்து ,இராப்பத்து விழாக்காலங்களில்,அரையர் ஸ்வாமிகளுக்கான அருளப்பாடு,மேற்சொன்னவாறே சாதிக்கப்படும்)

அரையர்களுக்கு ஸ்தாநீகர் ,தீர்த்தம், சந்தனம், தொங்குபரியட்டம்,மாலை ஆகியவற்றை சாதிப்பார்…

பிறகு அரங்கன் பள்ளிகொண்டு இருக்கும் கர்ப க்ருஹத்தின் (மூலஸ்தானத்தின்) மேற்கு பகுதியில்,அரையர் ஸ்வாமிகள் இருந்துகொண்டு,

“பொங்குசீர் வசனபூடணமீந்த உலகாரியன் போற்றிடத் திகழும் பெருமாள்”
“போதமணவாள மாமுனி ஈடுரைப்பது கேட்டுப் பூரித்து நின்ற பெருமாள்”–என்ற கொண்டாட்டங்களைச் சொல்லி,
திருநெடுந்தாண்டகத்தின் முதல் பாட்டு “மின்னுருவாய்” என்பதை பலதடவை இசைப்பர்.

பிறகு,அரையர்கள் சந்தனமண்டபத்திற்கு எழுந்தருளி, திருநெடுந்தாண்டகத்தின் முதல் பாட்டு “மின்னுருவாய்”
என்று தொடங்கும் முதல் பாசுரத்தினை இசையுடன் அபிநயம் செய்வர்.

பிறகு முதல் பாட்டிற்கு ,”ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை” சாதித்த,வ்யாக்யான(விரிவுரை) அவதாரிகைகளும்,
இரண்டாம் பாட்டிலிருந்து,11 பாட்டான,”பட்டுடுக்கும்”என்னும் பாசுரம் வரை,”தம்பிரான்படி” வியாக்யானமும் சேவிக்கப்டும்.

திவ்ய பிரபந்த பாசுரங்களுக்கு, நாதமுனிகள் தொடங்கி, அவரின் வம்சத்தில் உதித்த, அரையர் ஸ்வாமிகள்
(இன்றைய அரையர் ஸ்வாமிகளின் முன்னோர்கள்) எழுதி வைத்த, வ்யாக்கியானங்களுக்கு (விரிவுரை) “தம்பிரான் படி வியாக்யானம்” என்று பெயர்.
இந்த தம்பிரான்படி வியாக்கியானம் ஓலைச் சுவடிகளில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, பரம்பரையாக பாதுகாக்கப் பட்டு வருகிறது.
இந்த தம்பிரான்படி வியாக்கியானம் அச்சு வடிவில் இல்லை.
தற்பொழுது அரையர் கைங்கர்யம் செய்யும், அரையர் ஸ்வாமிகளிடம் உள்ள ஓலை ச்சுவடிகளில் இருந்து இந்த தம்பிரான்படி வியாக்கியானம் சேவிக்கப்படும்.

இந்த தம்பிரான் படி விரிவுரை, சொல்லழகும், பொருளழகும் கொண்ட, கருத்தாழமிக்க, சொற்றொடர்களாகும்.
இவற்றை கேட்கக் கேட்க, பக்தர்களின் உள்ளத்திலே பக்தியும், மகிழ்ச்சியும் பொங்கும்.

திவ்யப் பிரபந்தச் சொற்கள் பின்னிப் பிணைக்கப் பட்டு, சந்தத்தோடு அவைகள்,அரையர் ஸ்வாமிகளால் சேவிக்கப்படும் போது,
அதைக் கேட்போரின் உள்ளத்தில், நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் சொல்லழகு புலப்படும்…..

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: