பண்டைய தமிழ்நூல்களில் திருமால் வழிபாடு பற்றிய குறிப்புகள்–பேராசிரியர் ஸ்ரீ ந. சுப்புரெட்டியார் அவர்கள் —

1. தொல்காப்பியம்

மாயோன் மேய காடுறை உலகமும்—என்ற பழந்தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்தால் அறியலாம்.

மாயோன் – கண்ணன், கருநிற முடையோன்! இதனால் மாயோன் என்று முன்னோர்களால் குறிப்பிடப் பெறும் தெய்வம் திருமாலின் பூர்ண அவதாரமான கண்ணனே என்பது பெறப்படுகின்றது. இவ்வுரிமைத் தலைமை அப் பெருமானுக்கு அமைந்ததற்கு அவனது இறைமைப் பண்புகளே காரணமாகும் என்று கருதலாம்.

மாயோன் மேய மன்பெறுஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ் பூவை நிலையும்-

என்ற நூற்பா ‘பூவை நிலை’ என்ற புறத்திணையினை விளக்குவது. இதனை மாயோனுடைய காத்தற் புகழை மன்னர்க்கு உவமையாகக் கூறும் ‘பூவை நிலை’ என்று விளக்குவர் நச்சினார்க்கினியர். மேலும் அவர்,

கடல்வளர் புரிவளை புரையு மேனி
யடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்
மண்ணுறு திருமணி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்–என்னும் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டுவர்.

இப் பாடலில் பலதேவனும் திருமணி (திருமறு-ஶ்ரீவத்சம்) யையுடைய திருமாலும் வருதலைக் காணலாம்.
பலதேவனைத் தமிழ்நூல்கள் நம்பிமூத்தபிரான் என்று குறிப்பிடும்.

———

2. பத்துப்பாட்டு
தொல்காப்பியத்தை அடுத்துப் பத்துப்பாட்டும் எட்டுத் தொகை நூல்களும் எழுந்தன.
இவை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியனவாகக் கூறுவர்.
முதற்கண்கூறிய பத்துப்பாட்டில் மாயோனைப்பற்றிய குறிப்புகள் பல காணலாம். அவற்றுள் சில :
‘புள்ளனி நீள்கொடிச் செல்வன்’
‘நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலையிய ‘உலகங் காக்கும் ஒன்றுபுரி கொள்கை’
‘இருநிலங் கடந்த திருமறு மார்பின் ‘முந்நீர் வண்ணன் பிறக்கடை’
‘அவ்வயின், அருந்திறல் கடவுள் வாழ்த்தி’–[அத்திரு வெஃகாவணையில் அரிய திறலினை யுடைய திருமாலை வாழ்த்தி]
இது பிரம்ம தேவர் செய்த வேள்வியினை அழிக்க வந்த வேகவதி நதியைத் தடுத்தற்பொருட்டுத் திருமால் பள்ளி கொண்டு அணைபோற் கிடந்த தலம்;
இங்கே கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருமாலுக்கு வேகாசேது என்பது திருநாமம்.

‘காந்தளஞ் சிலம்பில் கயிறு நீடுகுலைப் படிந்தாங்குப்
பாம்பனைப் பள்ளியமர்ந்தோன் ஆங்கண்.’
‘வலம்புரி பொறித்த நேமியொடு மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போல’[16]

[நேமியொடு, வலம் புரிதாங்கு தடக்கை மாஅல் -சக்கரத்தோடே வலம் புரியைத் தாங்கும் பெரிய கையையுடைய மால்.
மா- பொறித்தமா. அல் – திருமார்பிடத்தே திருமகளை வைத்த மால்.
நீர்செல நிமிர்ந்த மாஅல் போல – மாவலி வார்த்த நீர் தன் கையிலே சென்றதாக உயர்ந்த திருமால் போல]
‘கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் மாயோன் மேய ஓண‌ நந்நாள்’
இந்த மேற்கோள்களிலிருந்து
(i) மாயோனது கொடி கருடக்கொடி என்றும்
(ii) அவன் காப்புக் கடவுள் என்றும், (
iii) திருமார்பகத்தே திருமறுவை (ஸ்ரீ வத்சம்) அணிந்த கடல் நீர் வண்ணன் என்றும்
(iv) திருவெஃகாவில் (காஞ்சியில்) கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பவன் என்றும்,
(v) அங்குப் பாம்புப் படுக்கையில் சயனத் திருக்கோலமாகக் காட்சி அளிக்கின்றான் என்றும்,
(vi) நான்கு முகத்தையுடைய ஒருவனைப் பெற்ற திருவுந்தியையுடையவன் என்றும்,
திருவாழியையும் திருச்சங்கையும் தன் கைகளில் தாங்கியவன் என்றும், (
vii) மாவலியிடம் மூவடி மண் வேண்டிச் சென்று கேட்டபொருளை நீர் வார்த்துக்கொடுக்க, பேருருவங்கொண்டு காட்சி அளித்தவன் என்றும்,
(viii) அவுணர்களை அழித்தவனும் மாமை (கருமை) நிறமுடையோனுமாகிய அவன் பிறந்த நாள் திருவோணம் என்றும்
அறியப் பெறும் செய்திகளாகும்.

————

3. எட்டுத்தொகை
எட்டுத் தொகை நூல்களில் — பரிபாடலில்– இப்போதுள்ள பதிப்பில் திருமாலுக்குரியவையாக ஆறு பாடல்களும் (1,2,3,4,13,15)
பரிபாடல் திரட்டில் ஒன்றும் ஆக ஏழு பாடல்கள் உள்ளன.
இவற்றில் கூறப் பெறும் செய்திகள் :
திருமால் ஆயிரம் பணாமுடிகளைக் கொண்ட ஆதிசேடன்மீது பள்ளி கொண்டவன்;
பூவைப் பூவண்ணன்;
திருமகள் விரும்பியமர்ந்த திருமார்பினன்;
திருமார்பில் கெளத்துவ மணியை (ஸ்ரீ வத்சம்) யுடையவன்;
பொன்னாடை புனைந்தவன்;
கருடக் கொடியையுடையவன்;
நான்முகனுக்கும் காமனுக்குத் தாதை,
திருவாழியை வலக்கையில் தரித்திருப்பவன் (1).

கேழல் உருவைக் கூறும் உயிர்கள் உளவாதற்பொருட்டு வராகத் திருக்கோலம் கொண்டவன்;
வெண்ணிற முள்ளவனுக்குப் பிறப்பு முறையால் முதியவன்;
உயிர்கள் தோறும் அந்தர்யாமியாய் இருப்பவன்;
ஆழிப்படையால் அவுணர்களின் தலைகளைப் பனங்காய்கள் போல் உருளச்செய்தவன்;
ஆழிப்படையின் உருவம் பகைவர் உயிருண்ணும் கூற்றையும், அதன் நிறம் சுட்ட பொன்னோடு விளங்கிய நெருப்பையும் ஒக்கும்;
திருமேனி நீலமணியையும் கண்கள் தாமரை மலர்களையும் ஒக்கும்;
கருடக் கொடியையுடையவன்;
தேவர்கட்கு அமிழ்தம் வழங்க வேண்டும் என்று திருவுள்ளத்தில் கொண்ட அளவில் அதன் பயனால்
மூவாமையும் ஒழியா வலியும் சாவாமையும் உரியனவாயின (2).

அன்பராயினார் பிறவிப் பிணியை அறுக்கும் மாசில் சேவடியை உடையவன்;
நீலமணி போன்ற திருமேனியையுடையவன்;
கருடனின் அன்னையாகிய விநதையின் இடுக்கண் தீர்த்தவன்,
கேசி என்னும் அரக்கனை மாய்த்தவன்;
மோகினி உருவம் கொண்டு அமரர்கட்கு அமுதம் அளித்தவன்;
இவனுக்கு ‘உபேந்திரன்’ என்ற திருநாமமும் உண்டு;
நான்முகனின் தந்தை; அவனைத் தனது திருவுந்தியில் தோற்றுவித்தவன்.

‘கீழேழ் உலகமும் உற்ற அடியினன்’(20)என்பதால் திருமால் திரிவிக்கிரமனாக உலகளந்த செயல் குறிக்கப் பெற்றதால் வாமனாவதாரமும் நுவலப் பெற்றதாகும்.
தனி நின்று உலகைக் காப்பவன்.
இருபத்தைந்து தத்துவங்களாலும் ஆராயப்பெறும் பெருமையை உடையவன்.
பிறவாப் பிறப்பு இல்லாதவன்;
அவனைப் பிறப்பித்தோரும் இலர்.

மாவிசும்பு ஒழுகுபுனல் வறள அன்னச் சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய் (25-26)

செங்கட் காரி கருங்கண் வெள்ளை-பொன்கட் பச்சை பைங்கண் மாஅல் (181–182)–என்ற அடிகள்
சிவந்த கண்ணையும்,கரிய மேனியையும் உடைய வாசுதேவன், கரிய கண்ணையும் வெள்ளிய திருமேனியையும் உடையச ங்கர்ஷணன்,
சிவந்த திருமேனியையுடைய பிரத்திம்யுனன்,
பசிய உடம்பையுடைய அதிருத்தன் என்ற திருமாலினது நான்கு வகை வியூகங்களும் இப் பாடலில் நுவலப் பெறுகின்றன. (3)

நீலமேனியையும் அலையடங்கிய கடலையும் நீர் நிறைந்த மேகத்தையும் ஒத்த திருமேனியையுடையவன்.
பிரகலாதன் பொருட்டுத் தூணிலிருந்து நரசிம்மனாகத் தோன்றி இரணியனின் மார்பைக் கிழித்த நகத்தையுடையவன்.
பண்டைக் காலத்தில் பூமி வெள்ளத்தில் அழுந்திய போது வராக வடிவம் கொண்டு அந் நிலத்தைத் தன் கோட்டால்
எடுத்து நிறுத்திய செயல் உலகம் தாங்கும் மேருமலையின் செயலோடு ஒக்கும்.
பனை, கலப்பை, யானை முதலிய கொடிகள் இருப்பினும் கருடக் கொடியே சிறந்தாகத் திகழும்.
அன்பர் நெஞ்சிற் கருதிய வடிவமே அவனது வடிவம்;
தனி வடிவம் இல்லாதவன் வனமாலை அணிந்தவன். தன்னினும் சிறந்த திருவடிகளையுடையவன்;
நிறைந்த கடவுள் தன்மையையுடையவன். வேறு பண்புகளும் நிறைந்தவன்.
ஆலின் கீழும் கடம்பினும் ஆற்றிடைக் குறையினும், மலையிடத்தும் பிறவிடத்தும் பொருந்திய தெய்வங்களாக
வேறுவேறு பெயரும் உருவமும் கொண்டு விளங்குபவன், “ஆர்வலர் தொழுகைகளில் அமைதியாக அமர்ந்திருப்பவன்.
அவரவர் ஏவலனாகவும் அவரவர் செய்த பொருளுக்குக் காவலனாகவும் இருப்பவன்”(4)

பீதாம்பரத்தையும் திருமுடியையும் மாலையையும் கருடக்கொடியையும்கொண்டவன்.
காத்தல் தொழிலையும் உடையவன்.
திருஆழியையும், திருச்சங்கையும் ஏந்திய கைகளையுடையவன்.
தன்னைத் தொழுவோர்க்கு வைகுண்ட பதவியை வழங்குபவன்.
ஐந்து பூதங்களும் மூவேழு உலகத்து உயிர்களும் அவனிடத்து உண்டாயின.
பாற்கடல் நடுவே ஆயிரம் தலையையுடைய ஆதிசேடன் மீது அறிதுயில் கொள்பவன்.
கலப்பையைப் படையாக உடையவன்.
பூமியை நடுக்கமற எடுத்த ஆதிவராகன்,மேகம், காயாம் பூ, கடல், இருள், நீல மணி என்னும் ஐந்தையும் ஒக்கும் திருமேனியையுடையவன்.
காலக் கூறுபாடுகளைக் கடந்து நிற்பவன். அவனுடைய திருவடி, திருக்கை, திருக்கண், திருப்பவழம் இவை தாமரை மலரையொக்கும்,
நெருப்பையொத்த வெட்சிமலரை இடையிட்டுக் கட்டின திருத்துழாய் மாலையையுடையவன்,
அவரவர் செய்த தவப்பயனால் தியானிக்கத்தக்கவன். (13)

மலைகளில் சிறந்த திருமாலிருங் குன்றத்தில் மாயோனாகவும் பலதேவனாகவும் சேவை சாதிப்பவன்.
அவன் அருளின்றி வீடுபேறு அடைதல், துறக்கம் பெறுதல் அரிது.
திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளியிருக்கும் திருமால் துளவமாலையை அணிந்தவன்.
நீலமணிபோன்ற மேனியையுடையவன் ஒளி மிக்கவன், ஒற்றைக் குழையையுடையவன்; கருடக் கொடியையுடையவன்.
கலப்பையை ஆயுதமாகக் கொண்டவன், திருவாழி, திருச்சங்கு முதலிய ஐந்து படைகளையுடையவன்.

————

(ஆ) பரிபாடல் திரட்டு :
இருந்தையூர் என்னும் திருப்பதியில் எழுந்தருளியிருப்பவன். இதில் அமுதம் கடைந்த செய்தி கூறப்பெற்றுள்ளது.
(இருந்தையூர் என்பது மதுரையில் உள்ள திருக்கூடல் என்னும் திருப்பதி)

————-

(இ) கலித்தொகை :

இதில் திருமாலைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஒருகுழை யொருவன்போல் இணர் சேர்ந்த மராமரமும் (கலி-27) என்ற அடியில் நம்பி மூத்தபிரான் குறிப்பிடப்பெற்றுள்ளான்.
‘கொடுமிடல் நாஞ்சிலான்’ (கலி 36) என்று கூறப்பெறுபவன். ‘மல்லரை மறஞ்சாய்த்தமால்’ (கலி-52) என்று மாயோன் குறிப்பிடப்பெறுகின்றான்.
ஒரு பாடலில் (கலி-103) ‘மாயோன்’ என்ற சொல் வருகின்றது.
முல்லைக் கலியொன்றில் (104),
பால்நிற வண்ணன்போல் பனைக் கொடிப் பழிதிரிந்த வெள்ளையும்
பொருமுரண் மேம்பட்ட பொலம்புனை புகழ்நேமித் திருமறு மார்பன்போல் திறல் சான்ற காரியும் (8-10) என்ற அடிகளில்
பனைக் கொடியைக் கொண்ட பால் நிற பலதேவனைப் பற்றிய குறிப்பும் திருவாகிய மறுவினையுடைய (ஶ்ரீ வத்சம்) திருமாலைப் பற்றிய குறிப்பும் வருகின்றன.

இதே பாடலில்,
பால்மதி சேர்ந்த அரவினைக் கோள்விடுக்கும் நீணிற வண்ணன்(37-38)–என்ற அடிகளில் திருமாலைப்பற்றிய குறிப்பும் காணப் பெறுகின்றது.

அடுத்த பாடலில் (கலி.105),
வள்ளுரு நேமியான் வாய்வைத்த வளைபோலத் தெள்ளிதின் விளங்கும் களிநெற்றிக் காரியும் (9-10)–என்ற அடிகளில்
மாயோன் ஆழி தாங்கிய கையன் என்றும் அவன் வாய் வைத்து ஊதும் சங்குபோல் கரி கொண்ட நெற்றியையுடைய கரிய ஏறு என்ற குறிப்பும்,
அதே பாடலில் நம்பி மூத்த பிரானைப் பற்றிய குறிப்பும் (11-12) வருகின்றன.

நெய்தற் கலியின் ஒரு பாடலில் (கலி-124)
ஞாலமூன் றடித்தாய முதல்வர்க்கு முதுமறைப் பாலன்ன மேனியான் அணிபெறத் தைஇய (1-2) என்ற அடிகளில்
உலகம் மூன்றும் தன் திருவடியால் அளந்தவனைப்பற்றிய குறிப்பினையும்
இவனுக்கு மூத்த முறையினையுடைய நம்பி மூத்தபிரானைப் பற்றிய குறிப்பினையும் காணலாம்.

திருமாலின் அவதாரச் செயல்களைப்பற்றிக் கூறும் பாரத இராமாயணக் குறிப்புகள் பலவற்றைக் கலித்தொகையில் கலி-101, கலி-104, கலி-106, கலி-134 காணலாம்.

——————-

(ஈ) அகநானூறு :
(1) அகம் -39இல் குறிக்கும் செய்தி: ஆயமகளிர் யமுனையாற்றில் நீராடுங்கால் அவர்கள் கரையில் இட்டு வைத்த ஆடைகளைக் கண்ணபிரான்
விளையாட்டாக எடுத்துக்கொண்டு குருந்தமரத்தேறியிருக்க அப்பொழுது நம்பிமுத்த பிரான் அங்குவர,
அம்மகளிர் ஒரு சேர மறைதற்கு வேறு வழியின்மையால் கண்ணன் தான் ஏறியிருந்த மரத்தின் கொம்பைத் தாழ்த்துக் கொடுத்தான் என்பது.
இச்செய்தியைச் சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையில் இளங்கோ அடிகளும் குறிப்பிடுவர்.
(ii) அகம் -70 இல்,
வென்வேற் கவுரியர் தொன்முது கோடி முழங்கி வரும் பெளவம் இரங்கு முன்றுரை
வெல்போர் இராமன் அருமறைக் குவித்த வல்வீ லாலம்போல ஒலியவிந் தன்றிவ் வழுங்க லுரே–என்ற அடிகள் குறிப்பிடும் செய்தி :
இராமன், தானும் மற்ற வாணர வீரர்களும் இலங்கைமேற் செல்லுதற்பொருட்டுத் திருவணைக்கரையில் (கோடிக்கரை) இருந்த
ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே அரியமறைகளை ஆராய்ந்த பொழுது அங்குள்ள பறவைகள் ஒலிக்காதவாறு தன் ஆணையால் அடக்கினான் என்ற வரலாறு குறிப்பிடப் பெற்றுள்ளது.
இது தமிழ் நாட்டு வழக்கு இராமாயணங்களில் காணப்படாதது.
(iii) அகம் -220இல் வரும் வரலாறு :
பரசுராமன் தன் தந்தையான யாமதங்கியை (ஐமதக்கினிமுனிவர்) கொன்ற கார்த்த வீரியனை மட்டுமில்லாது
இருபத்தொரு தலைமுறை மன்னர் மரபினைக் கொன்றழிப்பதாக மேற்கொண்ட கொடுஞ்சூளுரை குறிக்கப் பெற்றுள்ளது.
(iv) அகம்-137 இல் திருவரங்கத்தில் நடைபெறும் பங்குனி உத்திர விழா குறிக்கப் பெறுகின்றது.
பங்குனித் திங்களில் உத்திர நட்சத்திரமும் நிறைமதியும் கூடிய நன்னாளில் உறையூரில் பங்குனி உத்திர விழா சிறப்புற்றிருந்ததென்பது இறையனார் நூற்பா (நூற்பா-15) உரையில்,
“இனி ஊர் துஞ்சாமை என்பது ஊர் கொண்ட பெருவிழா நாளாய்க் காண்பாரில்லை யாமாகவும் இடையீடாம் என்பது;
அவை மதுரை ஆவணி அவிட்டமே, உறையூர்ப்பங்குனி உத்தரமே, கருவூர் வள்ளிவிழாவே என இவையும்
இவை போன்ற பிறவும் எல்லாம் அப்பெற்றியான பொழுது இடையீடாம் என்பது” என வருதலான் அறியப்படும்.

—————-

(2) புறநானூறு : புறநானூற்றில் வரும் குறிப்புகளைக் காண்போம்
(i) புறம்-174ல் அசுரர் சூரியனை ஒளித்ததும், திருமால் அதனை மீட்டதும் கூறப் பெற்றுள்ளன.[20]
இந்த வரலாற்றைப் பற்றி அறியக்கூடவில்லை.
இன்னொரு பாடலில் (ii) (புறம்-378) இராமாயண நிகழ்ச்சிபற்றி ஒருகுறிப்பு வருகின்றது.
சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்சேட்சென்னி ஊன் பதி பசுங்குடையாருக்குச் சில பரிசிற் பொருளை நல்கினான். அவை பல அணிகலன்களாகக் கொண்டிருந்தன.
அவை பொருநர்க்கெனச் சமைக்கப் பெறாதவை;
அரசர்க்கும் செல்வர்க்குமெனச் சமைக்கப் பெற்றவை; போரில் பகைவர்பால் கொண்டனவும் அவற்றுள் அடங்கியிருந்தன.
அவற்றைப் பசுங்குடையாருடன் போந்த சுற்றத்தினர் பகிர்ந்து கொண்டு தாம் தாம் அணிந்து மகிழ்ந்தனர். இதனைக்கிணைப் பொருநன் கூற்றில் வைத்துக் கூறுவான்.
இராமனுடன் போந்த சீதையை இராவணன் கவர்ந்து சென்றபோது அவள் கழற்றி எறித்த அணிகலன்களைக் குரங்குகள் எடுத்து
அணிந்து கொண்டதைக் கண்டோர் சிரித்து மகிழ்ந்ததைப் போல பொருநனின் கிளைஞர்கள் அந்த அணிகலன்களை அணிந்து கொள்ளும் வகையறியாது
விரலில் அணிபவற்றைச் செவியிலும், செவியில் அணிபவற்றை விரலிலும், கழுத்திலணிபவற்றை இடுப்பிலும் அணிந்து கொண்டு
நகைப்புக்கு இடமாயினர் என்று கூறும்போது இராமனைப் பற்றிய குறிப்பு வருகின்றது.

———————-

(ஊ) நற்றிணை : இத் தொகை நூலில் கடவுள் வாழ்த்துப் பாடல் தத்துவத்தின் கருத்துகளை மிக அழகாக விளக்குகின்றது.
மாநிலம் சேவடி யாகத் தூநீர் விளைநரல் பெளவம் உடுக்கை யாக
விசும்புமெய் யாகத் திசைகை யாகப் பகங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரி யோனே-(நற்.1)

இதில் திருமால் மறைகளால் போற்றப்படும் நிலையும் அவர் எங்கும் பரந்து நிற்கும் நிலையும் (வியாபகத்துவம்)
எள்ளுக்குள் எண்ணெய்போல் எவ்வுயிர் மாட்டும் (உயிரல்லாத பொருள்களிலும் கூட) நிற்கும் நிலையும் (அந்தர் யாமித்துவம்)
அவன் ஆழிதாங்கி நிற்பதும் பிறவும் கூறப் பெற்றிருப்பதை ஆழ்ந்து நோக்கித் தெளியலாம்.
என்ற பெரிய திருமொழிப் பாசுரப் பகுதியில் இக்கருத்து நிழலிடுவதைக் காணலாம்.
இதில் ஸ்ரீ வைணவத்தின் உயிர்நாடி போன்ற சரீர – சரீரி பாவனை தத்துவம் அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம்.

————-

(எ) பதிற்றுப்பத்து : பதிற்றுப்பத்தில் ஒரு பாடலில் (நான்காம் பத்து-1) ஒரு குறிப்பு காணப்படுகின்றது.
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடிய இப்பாடற் பகுதியில்
திருவனந்தபுரத்தில் கோயில் கொண்டுள்ள திருமாவின் வழிபாட்டுச் சிறப்புக் கூறப் பெறுகின்றது.
திருக்கோயிலின் நாற்புற வாயிலின் வழியாகத் தலைமேல் கைகூப்பி ஒருங்கு கூடிச் செய்யும் பேராரவாரம் நான்கு வேறு திசைகளில் பரந்து ஒலிக்கின்றது.
கோயிலில் தொங்கும் மணியை இயக்கிக் கல்லெனும் ஒசையை உண்டாக்குவர்;
உண்ணா நோன்பு மேற்கொண்ட விரதியர் குளிர்ந்த நீர்த்துறையில் நீராடி மார்பில் புதிதாகத் தொடுக்கப் பெற்ற திருத்துழாய் மாலையையும்,
காண்பவர் கண்கூசும் ஒளி திகழ் திருவாழியையும் உடைய செல்வனான திருமாலை வணங்கி வாழ்த்தி
நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியுடன் தத்தம் இருப்பிடம் திரும்பிச் சேர்வர்.
இப்பாடலில் செல்வன் என்பது திருவனந்தபுரத்துத் திருமாலை என்று கூறுவர் பழைய உரைகாரர்.

————–

4. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்:
இப்பகுதியில் அடங்கிய நூல்களை நோக்குவோம்.
(அ) திருக்குறள் : இஃது உலகப் பொது மறையாகக் கருதப் பெறுவது. இதில் வரும் வைணவம் பற்றிய குறிப்புகளை,
(1) இறைவன் பெயர்கள்
(2) அவதாரங்கள்
(3) இருவகை உலகுக்கும் தலைவன் என்று மூன்று பகுதிகளாக நோக்கலாம்.

(1) இறைவனின் பெயர்கள் :
முதல் குறளில் வரும் ஆதிபகவன் என்னும் பெயரை நோக்குவோம்.
இதனை ஆதியாகிய பகவன் என்று ஒரு பெயராகவும் ஆதியும் பகவனும் என்று இரு பெயராகவும் கொள்ளலாம்.
சிவஞான சித்தியார் பரபக்கம் பாஞ்சராத்திரி (வைணவ) மதமறுதலையில் “ஆதியாய் அருவுமாகி” என்ற செய்யுளாலும்
“பாஞ்சராத்திரி நீ உன் கர்த்தாவை ஆதி என்று கூறினாய்
அங்ஙனம் ஆதியாயின் ஆதிக்கு முடிவுண்டாய் கர்த்தாவும் அல்லனாவான்’ என்ற அதன் உரையாலும்
‘ஆதி என்ற பெயர் திருமாலுக்கு உரிய பெயராகும்.’ஆதிமூலம் என்ற பெயரும் நோக்கற் பாலதாகும்.
நம்மாழ்வாரும் ‘அந்தமில் ஆதியம் பகவன் என்பர்.
பகவான் அருளிய கீதை பகவத்கீதை பகவான் வரலாறு கூறும் நூல் பாகவதம், பகவான் அடியார்கள், பாகவதர்கள் எனும் வழக்காறுகளால்
‘பகவத்கீதை’ ‘பாகவதம்’ ‘பாகவதர்’ எனும் பெயர்களுக்கு மூலமாகிய பகவான் என்ற சொல் திருமாலுக்கே உரிய பெயரைக் குறிக்கின்றது என்பது உறுதி.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (5)
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் (10)

என்னும் குறட்பாக்களில் இறைவன் என்னும் சொல் உள்ளது.
இறைவன் என்பதற்கு எல்லாப் பொருள்களிலும் தங்குகின்றவ்ன் என்பது பொருள்.
இது ‘நாராயணன் ‘விஷ்ணு’, ‘வாசுதேவன் எனும் பெயர்களின் தமிழ் வடிவமாதலை உணரின் இறைவன் எனும் சொல் திருமாலுக்கே உரியதாம்.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் (6)என்பதில் காணப் பெறும்.
ஐந்தவித்தான் எனும் பெயர் ரிஷிகேசன்’ (இருடிகேசன்) என்ற திருநாமத்தின் தமிழ் வடிவமாகும்.
ரிஷிகம்-இந்திரியம்: இந்திரியங்களின் தலைவன் என்னும் பொருளுடையது. அ
வித்தல் என்பது ஈண்டுத் தன் வயமாக்குதல் என்னும் பொருளைத் தரும்.
ஓராயிரமாய் உலகேழிற்கும்-பேராயிரம் கொண்டதோர் பீடுடைய திருமாலுக்குச் சிறந்தனவாய் திருநாமங்கள் ‘பன்னிரு திருநாமம்’ எனப்படும்.
அவற்றுள் ‘ரிஷிகேசன்’ என்பதும் ஒன்று. ஆகவே, பொறிவாயில் ஐந்தவித்தான் என்பது திருமாலுக்கு உரியதேயாகும்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது (8) என்பதனுள் வரும் ‘
அறவாழி அந்தணன்’ என்பதும் அறவனை ஆழிப்படை அந்தணனை, ‘அறமுயல் ஆழிப்படையவன்’ என்னும்
திருவாய்மொழித் தொடர்களால் திருமாலுக்கு உரியது என்று உணரலாம்.
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வனங்காத் தலை (9) என்பதில்
எண்குணத்தான்’ ‘எளிமைக் குணமுடையவன்’ என்று பொருள்படும்.
இஃது இப்பொருளாதலை,
எண்பதத்தான் ஒரா முறை செய்யா மன்னவன் (548)
எண்பதத்தால் எய்தல் எளிதென் (991) என்பவற்றில் இவற்றின் சொற்பொருளால் அறியலாம். ‘
எளிவரும் இயல்வினன்’ (1;2;3)
“யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான்(1;3;4) எனவரும் திருவாய்மொழித் தொடர்களால் உறுதியாகும்.
மேலும் இறைவனின் திருக்குணங்களுள் செளலப்பிய குணம் (சுலப குணம்) என்பதனை அடியார்கள் சிறப்பித்துக் கூறுவதும் இதனை வலியுறுத்தும்.
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு (1103)-என்பதில்
தாமரைக் கண்ணான் என்ற பெயர் திருமாலுக்கன்றி வேறு எத்தெய்வத்துக்கும் இல்லாமை உய்த்தறியத்தக்கது.

—————–

(2) அவதாரங்கள் :
எம்பெருமான் எடுத்த அவதாரங்கள் எண்ணற்றவை. அவற்றுள் பத்து அவதாரங்கள் மிகு புகழ் வாய்ந்தவை.
ஆனால் திருக்குறளில் குறிப்பிடப்பெற்றவை மூன்று அவதாரங்களே.
அவை இராமாவதாரம், கிருட்டினா அவதாரம், திரிவிக்கிரமாவதாரம்.
நீதியை உரைக்க வந்த திருக்குறளில் வெளிப்படையாகவும், குறிப்பாகவும் இவற்றைக் காட்டியுள்ளதை நோக்கின் திருவள்ளுவரின் சமயம் இன்னதென்பதை உணரலாம்.
திருமால் இராமாவதாரத்தில் மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழும் முறையைத் தாமே நடத்திக் காட்டினார். அங்ஙனம் நடந்து காட்டிய ஒழுக்க நெறி ஒன்று.
கிருட்டிணாவதாரத்தில் வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் எங்ஙனம்? என்பதை உபதேச வாயிலாகச் (பகவத்கீதை) சொன்ன ஒழுக்கநெறி மற்றொன்று
இராமனாக வந்து நடந்து காட்டியருளிய ஒழுக்க நெறி எனவும்,
கண்ணனாக வந்து சொல்லியருளிய ஒழுக்க நெறி எனவும் இரட்டுற மொழிதல் என்னும் உத்தி வகையால்,
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் (6)–என்னும் குறளில் திருமாலின் இரண்ட வதாரத்தையும் கட்டுதல் அறியலாம்.
கிருட்டினாவதாரத்தில் துரியோதனனிடம் “படை எடேன் அமரில் எனப் பணித்ததை” மீறி
வீடுமனின் விருப்பிற்கிணங்க அவன் நடத்திய போரில் ‘ஆனதெனக்கினியாக எனத் தனியாழி எடுத்தமையும்
பொய்யே அறியா’ தருமனை ‘அசுவத்தாமன் என்னும் யானை இறந்தது’ எனத் துரியோதனன் செவிபடச் சொல்லச் செய்து
அதற்குத் துரியோதனன் வேறு பொருள் கொள்ளுமாறு மயங்கச் செய்தமையும்,
பிறந்த பொழுதே இறந்த நிலையில் இருந்த பரீட்சித்து, பெண்களை நோக்காத பேராண்மையையுடைய ஒருவன் திருவடியால் உய்வான் எனக் கண்ணபிரான் உரைக்க,
அந்நிலையில் யாவரும் முன் வராமை கண்டு ‘யானே பெண்களை நோக்காதவன்’ எனத் தன் திருவடியைப் பதிய வைத்து அவனைப் பிழைக்கச் செய்தமையும் முதலிய வரலாறுகளை மனத்திற் கொண்டே,
வாய்மை எனப்படுவதி யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல் (291)
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். (292) என்ற திருக்குறளைக் கூறினர் எனக் கருதலாம். ‘
புரை தீர்ந்த நன்மையைப் பொய்மை பயவாது, அங்ஙனம் பயக்கின்ற அப்பொய்மையும் வாய்மை இடத்த’ என்று கூற வந்தது.
கண்ணபிரானின் வரலாற்றை நோக்கியே எனக் கருதலாம்.
‘இராமனது மெய்யும் கிருட்டிணனது பொய்யும் நமக்குத் தஞ்சம்’ எனும் வைணவ சம்பிரதாய ஆன்றோர் வாக்கும் இதனை அரண் செய்யும்.

திருமால் திருக்குறள் அப்பனானபின் ‘மண்முழுவதும் அகப்படுத்து நின்ற பேருருவத்தைத் திரிவிக்கிரமன்’ என்பர்.

விக்கிரமம்-பெருவலி, திரிவிக்கிரமம்-மூவகைப் பெருவலி, இதனை அறியாது ஒருசிலர் ‘திருவிக்கிரமம்’ என்று பிழைபட எழுதுவர்.
முதலாவது உலகளந்தது; அடுத்தது விண்ணளந்தது. மூன்றாவது மாவலித் தலையில் தன் திருவடியை வைத்து அவனைப் பாதளத்தில் ஆழ்த்தியது.
எனவே, இவ்வகையான மூவகை வலியையும் காட்டுவதற்காகவே ‘உலகளந்தான்’ எனக் கூறாது
‘தன்னடியாலே எல்லா உலகங்களையும் அளந்தான்’ எனப் பொருள் கொள்ளுமாறு ,
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு. (610)-என விளக்கிய நுட்பம் உணரத் தக்கது.

—————–

(3) இருவகை உலகுக்கும் தலைவன் :
நாம் வாழும் உலகு மண்ணுலகு. வானவர் வாழும் உலகு வானுலகு.
“இருள்சேர்ந்த இன்னா உலகு”
‘அளறு ஆரிருள்’ எனப்படும் கீழுலகு -இவையாவும் மக்கள் பிறவிச்சுழலில் சிக்கித் தவிக்கும் விளையாட்டுலகு எனவும்,
இறைவனுடைய விளையாட்டுலகம் எனவும் பொருள்படுமாறு இவ்வனைத்துலகையும் ‘லீலாவிபூதி’ என்பர்.
எம்பெருமானும் அவன் அடியார்களும் நித்தியமாய் இன்பத்தோடு வாழும் உலகு ‘முக்தி உலகு’. இதனை ‘நித்திய விபூதி’ என்பர்.
இவ்வாறு கூறுவது வைணவமரபு.
இருவகை உலகிற்கும் தலைவன் திருமாலே என்பதைக் குறிக்கத் திருமாலை ‘உபயவிபூதி நாதன்’ என்பர் ஆன்றோர்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி’
பகவன் முதற்றே உலகு (1)
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு (610)
எனும் இருகுறள்களால் இவ்வுலகிற்கு அவன் தலைவன் என்பதனை விளக்கினார்.

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு (1103)
எனும் குறளில் முற்றும் துறந்தார் எய்தும் தாமரைக் கண்ணானுடைய ‘(முக்தி) உலகு’ எனக் குறித்தலால்
‘அந்தமில் இன்பத்து அழிவில்வீடு’,
‘நலம் அந்தம் இல்லதோர் நாடு’,
‘வானோர்க்குயர்ந்த உலகு’ என்றெல்லாம் ஆழ்வார்கள் சிறப்பித்துக் கூறும் நித்திய விபூதிக்கும் திருமாலே தலைவன் என்பதைக் கூறினர்.
எனவே ‘உபயவிபூதிநாதன்’ திருமாலே என உறுதி செய்தாராயிற்று.
இம்முக்தியுலகிற் சென்றவரை ‘புனை கொடுக்கிலும் போக ஒட்டார்’ என்றபடி
அவ்வுலகிலேயே நிலைபெறுவாரன்றி ஈண்டுத் திரும்பிவாரர் என்பது வைணவ சமயக் கோட்பாடு.
இதனை
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி (356)-என்று விளக்கினார் என்பது சிந்திக்கத்தக்கது.

—————

(ஆ) திருவள்ளுவமாலை: இதில்இரண்டு பாடல்கள் உள்ளன.
மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான் வாலறிவின்
வள்ளுவரும் தன்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவவெல் லாம்.அளந்தார் ஒர்ந்து (6)–இது பரணர் பாடியது,
இதில் திரிவிக்கிரமாவதாரக் குறிப்பு உள்ளது. திருமால் தன் இரண்டு அடிகளால் புறஉலகத்தை விரும்பி அளந்தார்.
வள்ளுவர் அவ்வுலகோரின் அக உலகையெல்லாம் ஆராய்ந்து அளந்தார்.
உப்பக்கம் நோக்கி உபகேசி தோள்மணந்தான்
உத்திர மாமதுரைக் கச்சென்ப-இப்பக்கம்
மாதாது பங்கி மறுவில் புலச் செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு (21)
இப்பாடலை நல்கூர் வேள்வியார் பாடியது உபதேசிநப்பின்னை என்றும், அவள் தோள்மணந்தான் கண்ணபிரான் என்றும், உத்தர மாமதுரை அவன் அவதரித்த வடமதுரை என்றும்
மாதாநுபங்கி செருக்கொழில் உடையான் என்றும் பொருள் உரைப்பர்.

————-

(ஈ) திரிகடுகம் : இந்நூலை இயற்றியவர் நல்லாதனார்.
கண்ணகன் ஞாலம் அளந்ததுஉம் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருதம் சாய்த்ததுஉம்-நண்ணிய
மானச் சகடம் உதைத்தது உம் இம்மூன்றும்
பூவைப்பூ வண்ணன் அடி.–இஃது இந்நூல் காப்பாக வந்த பாடல்.
திருமால் திரிவிக்கிரமனாக ஞாலம் அளந்த வரலாறும், கண்ணனாக அவதரித்தபோது குருந்தம் சாய்த்தது, சகடம் உதைத்தது என்ற
இரண்டு நிகழ்ச்சிகளும் இதில் குறிப்பிடப் பெற்றுள்ளன.

—————-

(உ) நான்மணிக் கடிகை : இதன் ஆசிரியர் விளம்பி நாயனார் என்ற நல்லிசைப் புலவர்.
மதிமன்னு மாயவன் வான்முகம் ஒக்கும்;
கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்;
முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர்மலர் மற்றவன் கண் ஒக்கும்; பூவைப்
புதுமலர் ஒக்கும் நிறம்.–இஃது இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்,
மாயவன் வியக்கத்தக்க ஆற்றலுடைய திருமால் சக்கரப் படை அவன் திருக்கண்களுக்கும் பூவை மலர் அவன் நிறத்திற்கும் உவமையாக வந்தன.

————–

(ஊ) கார்நாற்பது : இந்நூலை இயற்றியவர் கண்ணங் கூத்தனார் என்ற நல்லிசைப்புலவர்.
பொருகடல் வண்ணன் புனைமார்பின் தார்போல்
திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ
வருதும் என மொழிந்தார் வாரார்கொல் வானம்
கருவிருந் தாலிக்கும் போழ்து (1)-என்பது முதற்பாடல்.
தோழி தலைமகட்குப் பருவம் காட்டி வற்புறுத்தும் துறையில் அமைந்தது.
கடலின் நிறத்தையுடைய திருமால் திருமார்பில் அணிந்த பூமாலைபோல் இந்திரவில்லைக் குறுக்காக நிறுத்தி இனிய மழை பெய்யும்போது (கார்காலத்தில்)
தாம் வருவதாகக் கூறிச் சென்றார் என்று தலைவி தோழிக்குக் கூறுகின்றாள்.

————–

(எ) இனியவை நாற்பது: இதனை இயற்றிய நல்லிசைப் புலவர் பூதம்சேந்தனார் என்பவர். மும்மூர்த்திகளையும் குறிப்பிடும் பாடல் கடவுள் வாழ்த்தாக வந்துள்ளது.
கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே;
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே;
முந்துறப் பேணி முந்நான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது.–என்பது காப்புச் செய்யுள்
சேர்த்தல், ஏத்தல், தொழுதல் என மனம், வாக்கு, காயம் என்னும் திரிகரண வழிபாடு கூறினார்.
தொல் மாண் துழாய் மாலையான் என்பவன் திருமால்

—————-

(ஏ) ஐந்திணை ஐம்பது : திணைக்குப்பத்தாக ஐம்பது பாடல்களைக் கொண்ட இந்த நூல் அகப்பொருட் பனுவல், இயற்றியவர் மாறன் பொறையனார், முல்லைத்திணையைத் தொடங்கும் முதற் பாடல் இது.
மல்லர்க் கடந்தான் நிறம்போன்று இருண்டெழுந்து
செல்வக் கடம்பமர்ந்தான் வேல்மின்னி – நல்லாய்!
இயங்கெயில் எய்தவன் தார்பூப்ப ஈதோ
மயங்கி வலனேருங் கார். (1)
கார்காலம் தோன்றியதைக் கூறுவது இப்பாடல்
மல்லரை வென்ற கண்ணனின் நிறம்போல் இருளைச் செய்து எழுந்து கடப்பந்தாரினை விரும்பிய முருகனின் வேல்போல் மின்னி விசும்பில் இயங்குகின்ற முப்புரங்கனை எய்தவன்
கொன்றைத்தார் மலரும்படியாக வலமாகச் சுழன்று எழா நின்றது கார்காலம். இதில் கண்ணனைப் பற்றிய குறிப்பு வந்துள்ளது.

—————-

(ஐ) பழமொழி நானூறு :
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று இந்நூலாகும். இதன் ஆசிரியர் மூன்றுறையரையனார். இது நானுறு வெண்பாக்களைக் கொண்டது.
ஒவ்வொரு வெண்பாவும் ஒவ்வொரு பழமொழியைக் கொண்டு திகழ்கின்றது. இதில் ஒரு வெண்பா:
ஆவிற் கரும்பனி தாங்கிய மாலையும்
கோவிற்குக் கோவலன் என்றுலகம் கூறுமால்
தேவர்க்கு மக்கட் கெனல்வேண்டா தீங்குரைக்கும்
நாவிற்கு நல்குரவு இல் (42)
பழித்துரைக்கப் புகுவார்க்கு உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்பதில்லை என்ற கருத்தைக்கூறுகின்றது இவ்வெண்பா.
பசுக் கூட்டங்கட்கு வந்த அரிய துன்பத்தை நீக்கிய திருமாலையும் ஆநிரைகட்குத் தக்க இடையன் என்றே உலகம் சொல்லும் என்பது இவ்வெண்பா விளக்கும் கருத்து.
கோவர்த்தனத்தைக் குடையாகக் கவித்த வரலாறு இதில் வருவதைக் காணலாம்.

————–

5. இரட்டைக் காப்பியங்கள் :
தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் காப்பியமாகிய சிலப்பதிகாரம் படைத்தவர் (இரண்டாம் நூற்றாண்டு) இளங்கோ அடிகள்,
தொடர்ந்து மணிமேகலை சீத்தலைச் சாத்தனாரால் படைக்கப்பெற்றது.
இந்த இரண்டும் இரட்டைக் காப்பியங்கள் என்ற பெயரால் வழங்கி வருகின்றன.

(அ) சிலப்பதிகாரம் : இக் காவியத்தில் பல இடங்களில் திருமால் வழிபாடு பற்றிய குறிப்புகள் உள்ளன.
மாங்காட்டு மறையோன் உறையூருக்கருகில் கோவலன் கண்ணகியுடனும், கவுந்தியடிகளுடனும்
ஒர் இளமரக்காவில் பயணிகள் தங்கும் இருப்பிடத்தில் தங்கியிருந்தபோது அவர்களைச் சந்திக்கின்றான்.
இவன் தென்திசையினின்றும் வடதிசையை நோக்கி வருபவன்.
கோவலன் அவனை நோக்கி, ‘யாது நும்மூர்? ஈங்கென வரவு?’ என்று வினவுகின்றான்.
இந்த இரண்டு வினாக்களில் முன்னதினும் பின்னது சிறப்புடைத் தாதலின் அதற்கு விடைகூறும் இடத்தில்
திருவரங்கம் திருவேங்கடம் இவற்றின் வருணனைகள் வருகின்றன.
நீல மேக நெடும்பொற் குன்றத்துப்
பால்விரிந் தகலாது படிந்தது போல ஆயிரம்
விரித்தெழு தலையுடை அருந்திறல்
பாயற் பள்ளிப் பலர்தொழுதேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்
திருவமர் மார்பின் கிடந்த வண்ணமும்.–
என்பது திருவரங்கத்தில் திருமால் அறிதுயில் கொண்டு கிடந்த வண்ணத்தை நுவல்வது.
இதில் உயர்ந்த பொன்மலையின்மீது நீலமுகில் படிந்ததுபோல் ஆயிரம் தலைகளையுடைய ஆதிசேடனாகிய பாயலின் மீது
காவிரியின் ஆற்றிடைக் குறையாகிய திருவரங்கம் என்ற திவ்விய தேசத்தில் திருமகள் அமரும் மார்பனாகிய
திருமால் பள்ளி கொண்டருளும் செய்தி கூறப் பெற்றுள்ளது.

அடுத்து, மாங்காட்டு மறையோன் திருவேங்கடத்தில் திருமாலின் நின்ற திருக்கோலத்தைக் கூறுகின்றான்.
வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
ஒங்குயர் மலயத்து உச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய விடைநிலை தானத்து
மின்னுக்கோடி எடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண்சங்கமும்
தலைபெறு தாமரைக் கையில் ஏந்தி
நலங்கினர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம்பூ ஆடையில் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்–
இது ‘அகலகில்லேன் இறையும்’ என்று ‘அலர்மேல் மங்கை உறை மார்பனாகிய’ வேங்கடவாணனின் நின்ற திருக்கோலத்தைக் காட்டுவது.
இதில் ஒலிக்கின்ற அருவிகள் மலிந்த திருவேங்கடம் என்னும் திருமலையில் ஞாயிறும் திங்களும் இருமருங்கும் ஓங்கி விளங்கிய இடைப்பட்ட விடத்தே
நல்ல நீல நிறத்தையுடைய மேகம் தன் மின்னாகிய புதுப் புடவையை உடுத்து தன் வில்லாகிய பணியைப் பூண்டு நின்றாற்போல
ஆழியையும் சங்கையும் தாமரைக் கையகத்தே வலனும் இடனும் ஏந்தி அழகிய ஆரத்தைத் திருமார்பில் பூண்டு
பொற்பூவாடையை உடுத்து அவன் நின்றருளும் செய்தி தரப்பெறுகின்றது.

இவற்றைத் தவிர, சிலப்பதிகாரத்தில் வேறு சில இடங்களில் வேங்கடத்தைப் பற்றிய குறிப்பு காணப் பெறுகின்றது.
‘நெடியோன் குன்றமும் தொடியோன் பெளவமும்
தமிழ்வரம் புறுத்த தண்புனல் நன்னாடு’. –என்றும், .
வேங்கட மலையும் தாங்கா விளையுள்
காவிரி நாடும். –என்றும் வருதலைக் காணலாம்

இனிச் சிலப்பதிகாரத்தில் திருமால் குன்றமும் அதன் கண் உள்ள பிலத்துவாரமும் அவண் இருந்த பவகாரணி முதலிய மூன்று பொய்கைகளும் கூறப் பெற்றுள்ளன.
திருமால் குன்றம் என்பது அழகர் மலை
இம்மலை திருமாலிருஞ்சோலை மலை என்றும் ஆழ்வார் பாசுரங்களால் அறியப்பெறும்
மதுரைக்கு வருங்கால் பல கோயில்களைக் கூறிய இளங்கோ அடிகள் கருடனைக் கொடியாகவுடைய திருமால் கோயிலையும்
மேழிப் படையை வலமாக ஏந்திய நம்பி முத்த பிரான் கோயிலையும் குறிப்பிடுவர்.
இன்னும் காவிரிப்பூம்பட்டினத்தில் பலதேவன் கோவிலும், திருமால் கோயிலும் இருந்தமையைக் குறிப்பிடுவர் அடிகள்.
இவற்றால் திருமால் வணக்கம் தென்னிந்தியாவில் மிகப் பழங்காலத் திலேயே இருந்திருக்க வேண்டும் என்பது தெளியப்படும்.

மேலும் மாங்காட்டு மறையோன்,
நீள்நிலம் கடந்த நெடுமுடி அண்ணல்
தாள்தொழு தகையேன் போகுவல்–என்ற பகுதியால்
தன்னைத் திருமாலடியான் என்று குறிப்பிடுவ தாலும்
திவ்விய தேசங்கட்கு யாத்திரையாகப் புறப்பட்டவன் என்று சொல்லிக் கொள்வதாலும்
திருமால் வழிபாடு பெரு வழக்காக இருந்ததை அறியக் கிடக்கின்றது.

மாங்காட்டு மறையோனைஒரு பழைய பாகவதனாக நினைந்து திரு இராமராசன்
தென்னரங் கேசனை வேங்கடம் மேய செழுமுகிலைத்
தன்னிரு கண்களும் காட்டென்ன உள்ளம் தனைக்கவற்ற
மன்னிய யாத்திரை மேற்கொள்ளும் மாங்கால் மறையவன் சீர
சென்னியில் தாங்கினன் ; வாழிய அன்னவன் திருவடியே.[–என்று தம் நூலில் போற்றுவர்.

மதுரையில் குரவைக் கூத்துள் ஆய்ச்சியரின் ஒருபாடலில் கண்ணனின் அவதாரம் பற்றிய செய்தி வருகின்றது.
கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையும் தீங்குழல் கேளாமே தோழி (1)
பாம்பு கயிறாக் கடல்கடந்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி (2)
கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன்
எல்லைநம் ஆனுல் வருமேள் அவன்வாயில்
முல்லையந் தீங்குழல் கேளாமே தோழி (3)
இவற்றுள் கண்ணன் கன்று வடிவாக வந்த வத்சலாசுரனைக் கொண்டு விளாமர வடிவாக நின்ற
கபித்தாசுரன் மேல் எறிந்து இருவரையும் கொன்றசெய்தியும்,
திருமால் வாசுகி என்னும் அரவத்தைக் கயிறாகவும், மந்தரமலையை மத்தாகவும் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்த செய்தியும்
காட்டையடுத்த மலைச் சாரலில் கண்ணன் மகளிரைமறைப்பதற்காகக் குருந்தமரத்தை வளைத்த செய்தியும் குறிப்பிடப்பெற்றிருப்பதைக் காணலாம்.
இவையெல்லாம் ஆயர்குலப் பெண்கள் கூடிக் கண்ணனுடைய குழலிசையைப் புகழ்ந்து பாடிய பாடல்கள்.

ஆயர்குலப் பெண்கள் கூடிக் கண்ணனுடைய குழலிசையைப் புகழ்ந்து பாடும் பாடல்கள் இனிய சுவையைத் தருவதுடன்
திருமால் வழிபாட்டுச் சிறப்பினையும் உணர்த்து கின்றன. முன்னிலைப் பரவலாக வரும் பாடல்கள் இவை :
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல் வண்ணன் பண்டொருநாள் கடல் வயிறு கலக்கிளையே
கலக்கியகை யசோதையார் கயிற்றால் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே.

அறுபொருள் இவன் என்றே அமரர்கணம் தொழுதேத்த
உறுபசியொன் றின்றியே உடல்கடைய உண்டனையே
உண்டவாய் களவினால் உறிவெண்ணெய் உண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே

திரண்டமார் தொழுதேத்தும் திருமால்நின்
இரண்டடியால் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமே மருட்கைத்தே[33]

இவற்றுள் திருமால் கடல் கடைந்த வரலாறும், யசோதைப் பிராட்டியாரின் தாம்பால் ஆப்புண்டதும்;
பசியின்றியே உலகெல்லாம் உண்டு தன் திருவயிற்றில் அடக்கியதும்; உலகம் உண்ட வாயாலேயே களவினால் கொண்ட உறிவெண்ணெயை உண்டு களித்ததும்
திரிவிக்கிரமாவதார காலத்தில் இரண்டடியால் மூவுலகை அளந்ததும் அதே அடியால் பாண்டவர்க்காக ஒலை சுமந்து தூதாக நடந்ததுமான செய்திகள் குறிக்கப்பெறுகின்றன.

‘படர்க்கைப் பரவலாக வரும் பாடல்கள் இவை:
மூவுலகும் ஈரடியால் முறைதிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசிலம்பத் தம்பியொடு கானபோந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே.

பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்னென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே.

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
நடந்தானைத் துதுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை எத்தாத நாவென்ன நாவே
நாராயணாவென்னா நாவென்ன நாவே.[34]

இப்பாடல்களுள் ஈரடியால் மூவுலகளந்தமை தம்பியொடுகான் போந்தமை,
‘சோ’ என்னும் அரணம் அழித்தமை உலகனைத்தையும் கொப்பூழில் உதிக்கச் செய்தமை
கண்முதல் கனிவாய் ஈராக உள்ள கரியனைக் கண்களால் கண்ட மை,
கண்ணனுக்குக் கஞ்சன் இழைத்த வஞ்சனைச் செயல்களை யெல்லாம் கடந்து நின்றமை,
பாண்டவர்க்காக நூற்றுவர்பால் தூது சென்றமை ஆகிய செயல்கள் குறிப்பிடப்பெற்றுள்ளன.
திருவனந்தபுரத்து எம்பெருமான் ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன் (29:52) என்றும்
ஆடகமாடத்து அரவணைக் கிடந்தோன்(30:51) என்றும் இரண்டு இடங்களில் குறிப்பிடப் பெற்றுள்ளான்.
ஆக சிலப்பதிகாரத்தில் பரதத்துவம், வியூகம், விபவம், அர்ச்சை என்ற திருமாலின் நான்கு வகை நிலைகளும் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்.

மேலும் ஆய்ச்சியர் குரவையில் கண்ணன் ஆயர்பாடி மகளிருடன் குரவை யாடிய செய்தியையும் காணலாம்.
இச்செய்தியில் ஏழு இளம்பெண்கள் தமது மணங்குறித்து வளர்த்த ஏழுவகை ஏற்றினை அடக்கினவனையே மனப்போம் எனக் குறித்து வளர்த்தனர்.
இம் மகளிரைப் பழைய நரம்புகள் நிற்கும் முறைமைகளிலே நிறுத்தி இடையர் குலத்து மாதரி இவர்கட்குப் படைத்துக் கோட்பெயரிடுவாளாயினள்.
பன்னிரண்டு இராசிக்குள்ளே இடபம், கடகம், சிங்கம், துலாம், தனுசு, கும்பம் மீனம் என்னும் ஏழினும் குரல் முதலாய் ஏழும் முறையே நிற்பது ஒரு முறை.
துலாம், தனுசு, கும்பம், மீனம் இடபம், கடகம்,சிங்கம் என்னும் ஏழினும் குரல் முதலாய் ஏழும் முறையே நிற்பது மற்றோர் முறை.
இவ்விருமுறையானும் எழுவரும் நின்று கைகோத்துப் பாடுகின்றனர்.
ஆகலின் ஒரு கால் இடத்தில் நின்றவர் மற்றொரு கால் வலத்திலும் வலத்தில் நின்றவர் இடத்திலுமாக மாறி நிற்றல் இயல்பு.
இவ்வாறு குரவையாடினர். இக்கூத்து பெரும்பாலும் இராசக்கிரீடை என வடமொழியாளர் கூறும் ஆட்டத்தை யொத்திருப்பதைக் காணலாம்.
இக்கூறியவற்றிலிருந்து நாராயணனும் திருமாலும் ஆயர்பாடிக் கண்ணனும் ஒன்றுபட்டு
மக்களால் வனங்கப்பெற்ற காலம் கி.பி.2ஆம் நூற்றாண்டின் பின்னரே ஏற்படும்.
பரிபாடல் திருமாலையும் அவன் தமயனாகிய பலதேவனையும் குறிக்கும்.
இவற்றிலிருந்து கண்ணபிரானும் அவன் பிராட்டி நப்பின்னையும் பலதேவனும் வணங்கப்பெற்ற செய்தி நன்கு விளங்கும்.
பல தேவற்குத் தனிக் கோயில்கள் அக்காலத்தில் இருந்தன என்பதற்குச் சங்கத் தொகை நூல்களில் போதிய சான்றுகள் உள்ளன.
திருமால் வணக்கம் இவ்வாறு தென்னகத்தே மிகப் பழங்காலத்திலிருந்தே உள்ளது என்பது தெளியப்படும்.

—————

(ஆ) மணிமேகலை : சிலப்பதிகார காலத்துடன் எழுந்தக் காப்பியம் மணிமேகலை,
இதிலும் வைணவம்பற்றிய குறிப்பு உள்ளது.
மணிமேகலை வஞ்சிநகர்க்கண் இருந்து பல்வகைச் சமயவாதிகளையும் கண்டு அவரவர் சமயப் பொருள்களைக் கேட்க விரும்பினாள்.
அளவை வாதிமுதல் பூதவாதி ஈறாகவுள்ள அனைவரும் தத்தம் சமயக் கருத்துகளை உரைத்தனர்.
வைணவவாதி கூறுவான்;
காதல் கொண்டு கடல்வணன் புராணம்
ஒதினன் நாரணன் காப்பென்று கூரைத்தனன்.என்று
ஈண்டுக் கடல்வண்ணன் புராணம் என்பது விட்டுணு புராணத்தை.
புராணம் – பழைமையான வரலாறு;
இவன் வைணவ சமயத்தில் பேரன்பும் கடைப்பிடியும் உடையவனாதலால் ‘காதல் கொண்டு ஒதினான்’ என்றார்.
‘நாராயணன் முறை செய்தலேயன்றிக் காத்தலும் அவன் கடன்’ என்று வற்புறுத்தினான்.
‘ஆதிபகவன் முதற்றே உலகு’ என்று வள்ளுவர் இறைவனைச் சுருங்கக் கூறியதுபோல் ‘நாரணன் காப்பு’ என்று சுருக்கமாக உரைத்தனன்.

——————-

இ) சீவகசிந்தாமணி :
இந்நூல் சீவகன் என்னும் ஒரரசன் பிறந்தது முதல் வீடுபேறு அடையும் வரை உள்ள கதையைக் கூறுவது
திருத்தக்க தேவர் என்னும் சைன முனிவரால் இயற்றப்பெற்றது. பிற்காலத்தில் அதி மதுரமான காப்பியங்கள் இயற்றிய மகாகவிகள் பலர்க்கும் வழிகாட்டிய இனிய காவியம்.
அந்தக் காலத்தில் திருமால்பற்றியும் அவரது அவதாரங்கள் பற்றியுமான செய்திகள் மக்களிடையே பெரு பெருவழக்காக இருந்ததை நேரில் கண்டவராதலால் தாம் இயற்றும் காவியம் மக்களிடையே நன்கு பரவுவதற்கு வாய்ப்பாக அமையும் என்று கருதிய
திருத்தக்க தேவர் அவற்றைத் தம் காவியத்தில் பொருத்தமான இடங்களில் பெய்து தம் காவியத்தைச் சிறப்பித்துள்ளார்; ஒன்றிரண்டு செய்திகள் ஈண்டுக் காட்டப் பெறுகின்றன.
(i) குருந்தொசித்த வரலாறு: சீவகசிந்தாமணி நாமகள் இலம்பகத்திலும்
(ii) கண்ணன் மறைந்து வளர்ந்த கதை அதே இலம்பகத்திலும்
((iii) கண்ணன் நப்பின்னையை மணந்த குறிப்பு கோவிந்தையார் இலம்பகத்திலும்
(iv) இராமன் மராமரம் எய்த வரலாறு கனகமாலையார் இலம்பகத்திலும் குறிப்பிடப் பெற்றுள்ளன.

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: