இதி யதிகுலதுர்யமேதமாநை: ஸ்ருதிமதுரைருதிதை: ப்ரஹர்ஷயந்தம் |
வரவரமுநிமேவ சிந்தயந்தீ மதிரியமேதி நிரத்யயம் ப்ரஸாதம் ||
பதவுரை:
இதி – ஸ்ரீமாதவாங்க்ரி என்று தொடங்கி விஜ்ஞாபநம் என்பதிறுதியாகக் கீழ்க்கூறியபடியே,
ஏதமாநை: – மேல் மேல் வளர்ந்து வருகிற,
ஸ்ருதி மதுரை: – காதுக்கு இன்பமூட்டுமவையான,
உதிதை: – பேச்சுக்களாலே,
யதிகுல துர்யம் – யதிகளின் கோஷ்டிக்குத் தலைவரான எம்பெருமானாரை,
ப்ரஹர்ஷயந்தம் – மிகவும் மகிழச்செய்து கொண்டிருக்கிற,
வரவரமுநிம் ஏவ – மணவாளமாமுனிகளையே,
சிந்தயந்தீ – சிந்தை செய்யாநிற்கிற,
இயம்மதி: – (என்னுடைய) இந்த புத்தியானது,
நிரத்யயம் – நித்யமான,
ப்ரஸாதம் – தெளிவை,
ஏதி – அடைகிறது.
கருத்துரை:
இதுவரையில் தகாத விஷயங்களையே நினைத்து நினைத்து, அது கிடைத்தோ கிடையாமலோ கலங்கிக் கிடந்த
தமது புத்தி யதிராஜ விம்ஸதியை விண்ணபித்து யதிராஜரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்கிற
மணவாளமாமுனிகளொருவரையே நினைத்துக்கொண்டிருக்கும் நிலைமையை அடைந்து,
முன்பிருந்த கலக்கம் நீங்கித் தெளிவு பெறுகிறதென்று கூறி மகிழ்கிறார் இதனால் எறும்பியப்பா.
‘வரவரமுநிமேவ’ என்றதனால், நேராக யதிராஜரை நினையாமல், அவரைத் தமது துதிநூலால் மகிழ்விக்கும்
மணவாளமாமுநிகளையே நினைக்கும் நினைப்பு தமதறிவின் தெளிவுக்குக் காரணமென்றாராயிற்று.
பகவானையோ பாகவதரையோ ஆசார்யரையோ நினைப்பதனால் உண்டாகும் தெளிவைவிட,
ஆசார்ய பரதந்த்ரரான மாமுநிகளை நினைப்பதனால் உண்டாகும் தெளிவு அதிகமாகி, அது நிலைத்தும் நிற்குமென்றபடி.
இருபது ஸ்லோகங்களையே கொண்டு மிகச்சிறியதாகிய இந்நூலிலுள்ள பேச்சுக்களை ‘ஏத மாநை:’ என்று
மேல் மேல் வளர்ந்து கொண்டே செல்லுகிற பேச்சுக்களாக, மிகவும் மிகைப்படுத்திக் கூறியது
எம்பெருமானார் திருவுள்ளத்தால் என்று கொள்ளவேணும்.
தம்மிடத்தில் ப்ரவணரான மாமுனிகள் விண்ணப்பிக்கிற ஒவ்வொரு ஸ்லோகத்தையும்
ஆயிரக்கணக்கான ஸ்லோகங்களாக நினைப்பவரன்றோ எம்பெருமானார்.
கடுகையும் மலையாக நினைப்பவர்களன்றோ மஹாபுருஷர்கள்.
‘ப்ரஹர்ஷயந்தம்’ என்றவிடத்தில் ஹர்ஷத்திற்கு – ஸந்தோஷத்திற்கு, மிகுதியை – சிறப்பைக் குறிக்கும், ‘
ப்ர’ என்று உபஸர்க்கமாகிய விஸேஷணத்தை இட்டது, எம்பெருமானார்க்கு மாமுனிகளிடத்தில் உண்டாகும்
ஸந்தோஷம் ஸ்வயம் ப்ரயோஜனமானதேயன்றி அந்த ஸந்தோஷத்தைக்கொண்டு
மாமுனிகள் வேறொருபயனை ஸாதித்துக்கொள்ள நினைக்கவில்லையென்பதை அறிவிப்பதற்காகவே என்க.
வரவரமுநியையே நினைக்கும் சிந்தயந்தி’ என்று குறிப்பிட்டதனாலே, கண்ணனையே நினைத்த சிந்தயந்தியான
ஒரு கோபிகையைக் காட்டிலும், கண்ணனையே ஓயாமல் நினைத்த தீர்க்க சிந்தயந்தியாகிய நம்மாழ்வாரைக் காட்டிலும்
எம்பெருமானாரையே நினைக்கிற சிந்தயந்தியாகும் இம்மணவாளமாமுனிகள் விலக்ஷணரென்பது போதரும்.
எம்பெருமானை நினைப்பவரைவிட, எம்பெருமானாரை நினைப்பவரிறே உயர்ந்தவர்.
இங்கு ‘ஸ்ருதி மதுரை: உதிதை:’ என்று பதம் பிரித்துப் பொருள் கூறப்பட்டது.
ஸ்ருதிமதுரை:ருதிதை: என்றும் பதம் பிரித்துப் பொருள் கூறலாம்.
ருதிதை: என்பது அழுகைகளினாலே என்று பொருள்படும்.
இந்த யதிராஜவிம்ஸதியில் ‘அல்பாபிமே’ (6) என்று தொடங்கிப் பெரும்பாலும்
தம்முடைய அறிவின்மை, பக்தியின்மை, பாபகாரியத்தில் ஊன்றியிருத்தல் முதலியவற்றைச் சொல்லி,
ஹா ஹந்த ஹந்த – ஐயோ ஐயோ ஐயையோ என்று தமது துக்காதிஸயத்தையே விண்ணபித்ததனாலும்,
ஆத்மஸ்வரூபத்துக்கு ப்ரகாஸத்தை உண்டுபண்ணும் அழுகை பெருமையையே விளைக்குமாகையாலும்,
‘ருதிதை:’ என்ற பாடம் கொண்டு அழுகை என்னும் பொருள் கூறுதலும் ஏற்குமென்க.
மோக்ஷத்தையே தரும் எம்பெருமானாருக்கு ஸம்ஸார ஸ்ரமத்தைச் சொல்லி
மாமுனிகள் அழும் அழுகை செவியின்பத்தை உண்டாக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமா ?
அதனால் ஸ்ருதிமதுரை: என்றாரென்க.
(யதிராஜவிம்ஸதி வடமொழி அழுகை, ஆர்த்திப்ரபந்தம் தென்மொழி அழுகை என்பது அறிதல் தகும்.
————-
அத கோஷ்டீம் கரிஷ்டாநம் அதிஷ்டாய ஸுமேதஸாம் |
வாக்யாலங்க்ருதிவாக்யாநி வ்யாக்யாதாரம் நமாமி தம் ||-2-
பதவுரை:
அத – யதிராஜவிம்ஸதியை இயற்றியருளியபிறகு,
கரிஷ்டாநம் – (தனித்தனியே ஒவ்வொருவரும் நூலியற்றும் வல்லமை பெற்றவராய்) ஆசார்யஸ்தாநத்தை வஹிக்கத்தக்க பெருமை பெற்றவரான,
ஸுமேதஸாம் – நல்ல புத்திமான்களுடைய,
கோஷ்டீம் – ஸமூஹத்தை,
அதிஷ்டாய – அடைந்திருந்து,
வாக்யாலங்க்ருதிவாக்யாநி – ஸ்ரீவசநபூஷணக்ரந்தத்திலுள்ள வாக்யங்களை,
வ்யாக்யாதாரம் – விவரித்துரைக்கும் தன்மையரான,
தம் – அந்த மணவாளமாமுனிகளை,
நமாமி – வணங்குகிறேன்.
கருத்துரை:
இதுவரையில் க்ரந்தநிர்மாணமாகிய ஸ்வாத்யாயத்தை அருளிச்செய்து,
இனி ஸ்வாத்யாயத்தில் மற்றொருவகையான பூர்வாசார்யக்ரந்த வ்யாக்யானத்தை அருளிச்செய்கிறார்.
கரிஷ்டா – அத்யந்தம் குரவ: கரிஷ்டா: – உயர்ந்த ஆசார்யர்கள் என்றபடி.
இவர்களுக்கு அடைமொழி – ஸுமேத ஸ: என்பது. ஒருதடவை சொல்லும்போதே பொருளை நன்றாக அறிதலும்,
அறிந்த பொருளை மறவாதிருத்தலும், மேதா எனப்படும்.
ஸுமேத ஸ: நல்ல மேதையை உடையவர்களை, இங்ஙனம் நல்ல மேதாவிகளாய் கரிஷ்டர்களானவர் யார் என்றால் –
கோயில் கந்தாடையண்ணன், வானமாமலை ஜீயர் முதலிய அஷ்டதிக் கஜாசார்யர்களேயாவர்.
இதுவரையில் யோகத்தில் ரஹஸ்யமாக எம்பெருமானாரை அநுபவித்தவர்,
அதைவிட்டு ஸிஷ்யர்கள் இருக்கும் கோஷ்டியில் சேர்ந்து அவர்களுக்கு
ஸ்ரீவசநபூஷணக்ரந்தத்தை விவரித்தருளிச்செய்கிறார் மாமுனிகள்.
அன்னவரை வணங்குகிறேனென்றாராயிற்றிதனால்.
வசநபூஷணம் – ரத்நங்களை நிறைய வைத்துப் பதித்துச் செய்த பூஷணத்தை (அணிகலனை) ரத்நபூஷணம் என்று சொல்லுமாப்போலே, பூர்வாச்சார்யர்களுடைய வசநங்களை (சொற்களை) நிறைய இட்டுப் (தமது சொற்களைக் குறைய இட்டு) படிப்பவர்களுக்கு
ப்ரகாஸத்தையுண்டாக்குமதாகப் பிள்ளைலோகாச்சார்யரால் அருளிச்செய்யப்பட்ட க்ரந்தம் வசநபூஷணமென்று சொல்லப்படுகிறது.
அது பரமகம்பீரமாகையால் அதன் பொருள் விளங்கும்படி மாமுனிகள் வ்யாக்யானம் செய்தருளுகிறார்.
வ்யாக்யானமாவது – பதங்களைப்பிரித்துக்காட்டுதல். பொருள் விளங்காத பதங்களுக்குப் பொருள் கூறுதல்,
தொகைச்சொற்களை இன்ன தொகையென்று தெரிந்து கொள்வதற்காக அதற்கேற்றபடி பிரித்துக்கூறுதல்,
வாக்கியங்களிலுள்ள பதங்களில் எந்தப் பதம் எந்தப்பதத்தோடு பொருள் வகையில் பொருந்துமோ
அப்படிப்பட்ட பொருத்தம் காட்டுதல், ஏதாவது கேள்வி எழுந்தால் அதற்கு விடை கூறுதல் ஆகிய இவ்வைந்து வகைகளையுடையதாகும்.
‘ஸுமேத ஸ: கரிஷ்டா:’ என்று சொல்லப்பட்ட கோயில்லண்ணன் முதலியவர்களுக்கும் அறியமுடியாத வசநபூஷணத்தின்
பொருளை மணவாளமாமுனிகள் விவரிக்கிறாரென்றதனால், ஸ்ரீவசநபூஷணநூலின் பொருளாழமுடைமையும்,
மாமுனிகளின் மேதாவிலாஸமும் அறியப்படுகின்றன. எல்லாவகையான வேதங்கள் ஸ்ம்ருதிகள்
இதிஹாஸங்கள் புராணங்கள் பாஞ்சராத்ர ஆகமங்கள், திவ்யப்ரபந்தங்கள் ஆகியவற்றின் ஸாரமான பொருள்களெல்லாம்
ஸ்ரீவசநபூஷண க்ரந்தத்தில் கூறப்பட்டுள்ளதனால், இந்த ஒரு நூலை விவரித்துச்சொன்னால்
அந்நூல்களெல்லாவற்றையும் சொன்னதாக ஆகுமாகையால் இந்நூலை விவரித்து
எல்லாவிதமான ஸ்வாத்யாயத்தையும் அநுஷ்டித்தாராயிற்று மாமுனிகள் என்க.
—————-
ஸாயந்தநம் தத: க்ருத்வா ஸம்யகாராதநம் ஹரே: |
ஸ்வைராலாபை: ஸுபை: ஸ்ரோத்ருந்நந்தயந்தம் நமாமி தம்|| (3)
பதவுரை:
தத: – ஸாயங்காலத்தில் ஸந்த்யாவந்தனம் செய்தபிறகு,
ஸாயந்தநம் – மாலைக்காலத்தில் செய்யவேண்டிய,
ஹரே: ஆராதநம் – அரங்கநகரப்பனென்னும் தமது பெருமாளுடைய திருவாராதநத்தை,
ஸம்யக் – நன்றாக, (பரமபக்தியோடு),
க்ருத்வா – செய்து,
ஸுபை: – கேட்பாருக்கு நன்மை பயக்குமவையான,
ஸ்வை:ஆலாபை: – தம்மிஷ்டப்படியே பேசும் ஸுலபமான பேச்சுக்களாலே,
ஸ்ரோத்ரூந் – கேட்போரை,
நந்தயந்தம் – மகிழ்வித்துக்கொண்டிருக்கிற,
தம் – அம்மாமுநிகளை,
நமாமி-வணங்குகிறேன்.
கருத்துரை:
‘ஆர்வசனபூடணத்தின் ஆழ்பொருளல்லாமறிவார் ? ஆர் அது சொல் நேரில் அநுட்டிப்பார்’ (உபதேச. 55) என்கிறபடியே
அறிவதற்கும், அறிந்தபடியே அநுஷ்டிக்கைக்கும் முடியாத ஸ்ரீவசநபூஷணார்த்தங்களை ஸிஷ்யர்களுக்கு
உபதேசிக்கும்போது எவ்வளவு எளிய நடையில் உபதேசித்தாலும், அர்த்தத்தின் அருமைக்கு ஏற்றபடி
அவ்வுபதேசமும் அரிய நடையாகவே தோன்றும்.
ஸாயம்ஸந்த்யாவந்தநமும் பெருமாள் திருவாராதநமும் முற்றுப்பெற்ற பின்பு இப்போழுது செய்யும் ப்ரவசநம்
தன்னிச்சைப்படி தானாகவே வரும் எளிய பேச்சாகவே இருக்கும். இதுவே ஸ்வைராலாபம் எனப்படும்.
ஸகல ஸாஸ்த்ரார்த்தங்களையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் மிகமிக எளிமையான பேச்சுக்கு ஸ்வைராலாபம் என்று பெயர்.
இத்தகைய பேச்சுக்களாலே முன்பு ஸ்ரீவசநபூஷணம் கேட்ட தம் ஸிஷ்யர்களையே மகிழ்விக்கிறார் மாமுனிகள் என்க.
இங்கு ‘ஹரி:’ என்றது பூர்வதிநசர்யையில் பதினேழாம் ஸ்லோகத்தில் ப்ரச்தாவிக்கப்பட்ட ‘ரங்கநிதி’ என்ற
தம் திருவாராதநபெருமாளாகிய அரங்கநகரப்பனையேயாகும்.
ஹரி: என்றதற்கு ஆஸ்ரிதருடைய விரோதியைப் போக்குமவனென்றும்,
எல்லா தேவதைகளையும் நியமிப்பவன் (அடக்கியாள்பவன்) என்றும் பொருள்.
பூர்வதிநசர்யையில் ‘அத ரங்கநிதிம்’ (17) என்று காலையாராதநமும், ‘
ஆராத்யஸ்ரீநிதிம்’ (29) என்று பகலாராதநமும்,
இந்த ஸ்லோகத்தில் மாலையாராதநமுமாகிய மூன்று வேளைத் திருவாராதநங்களும் கூறப்பட்டது காணத்தக்கது.
———–
தத: கநகபர்யங்கே தருணத்யுமணித்யுதௌ |
விஸாலவிமல ஸ்லக்ஷ்ண துங்கதூலாஸநோஜ்ஜ்வலே || (4)
ஸமக்ரஸௌரபோத்கார நிரந்தர திகந்தரே |
ஸோபதாநே ஸுகாஸீநம் ஸுகுமாரே வராஸநே || (5)
பதவுரை:
தத: – அதன்பிறகு,
தருணத்யுமணி த்யுதௌ – பாலஸூர்யன் போல் காந்தியையுடையதாய்,
விஸால விமலஸ்லக்ஷ்ண துங்க தூலாஸன உஜ்ஜ்வலே – அகன்றதும், அழுக்கற்றதும், மழமழப்பானதும், பருமனானதுமான பஞ்சுமெத்தையினால் விளங்குகின்ற தாய்,
ஸமக்ரஸௌரப உத்கார நிரந்தர திகந்தரே – நிறைந்த, பெருமாள் சாத்திக்களைந்த மாலைகளின் நறுமணத்தின் ப்ரவாஹத்தினால் சூழப்பட்ட நான்கு திக்குகளையுமுடையதாய்,
ஸோபதாநே – சாய்ந்து கொள்வதற்கேற்ற தலையணைகளை உடையதாயுமிருக்கிற,
கநகபர்யங்கே – தங்கத்தாலான மஞ்சத்தில்,
ஸுகுமாரே – மிகவும் மெத்தென்றிருக்கிற,
வரஆஸநே – (த்யானத்துக்கு உரியதாய்) உயர்ந்த தர்ப்பம் மான்தோல் துணிகளையிட்டுச் செய்யப்பட்ட ஆஸநத்தில்,
ஸுகஆஸீநம்-(த்யானத்திற்கு தடையில்லாதபடி) ஸுகமாக உட்கார்ந்திருக்கிற,
தம்-அந்த மணவாளமாமுநிகளை,
சிந்தயாமி – ஸதா த்யாநம் செய்கிறேன்.
கருத்துரை:
ஸகலஸாஸ்த்ரார்த்தங்களுக்கும் நோக்கான பஞ்சமோபாயத்தின் (எம்பெருமானாரே மோக்ஷோபாயம் என்பதின்)
பெருமையை உள்ளடக்கியிருக்கும் தமது இனிய எளிய பேச்சுக்களாலேயே ஸிஷ்யர்களை மகிழ்வித்தபின்பு,
அவ்வெம்பெருமானாரை த்யாநம் செய்வதற்கு உறுப்பாக மாமுனிகள் ஸ்வர்ணமயமான கட்டிலில்
ஆஸநத்தில் எழுந்தருளியிருக்கும் அழகை, தாம் ஸதா த்யாநம் செய்வதாக இந்த ஸ்லோகத்தினால் தெரிவிக்கிறார்.
தாமே ஆசைப்பட்டு மஞ்சத்தில், அதிலும் ஸ்வர்ண மஞ்சத்தில் உட்காருதல், ஸந்யாஸிகட்கு ஸாஸ்த்ரத்தில்
மறுக்கப்பட்டிருந்தாலும் ஸிஷ்யர்களுடைய வேண்டுகோளுக்கிரங்கி, அவர்கள் செய்வித்திட்ட
ஸ்வர்ணமஞ்சத்தில் வீற்றிருப்பது மறுக்கப்படவில்லையென்பது கருதத்தக்கது.
‘பொன் வெள்ளி வெண்கலம் செம்பு கல் முதலியவற்றால் செய்யப்பட்ட பாத்திரங்களில் உண்பதினால்
ஸந்யாஸிக்கு பாபம் ஏற்படாது. அப்பாத்திரங்களைப் பிறரிடம் கேட்டுத் தானமாக வாங்கினால் தான்
பாபம் உண்டாகும்’ என்று மேதாதிதி கூறியதை நோக்கினால்,
உண்ணும் கலத்தைச் சொன்னது கட்டிலுக்கும் உபலக்ஷணமாய், பொன்னால் செய்த கட்டிலை
கேட்டுப் பெற்றுக் கொள்ளாமல், ஸிஷ்யர்கள் பொன்கட்டிலை இட்டு அதில் வீற்றிருக்கும்படி ப்ரார்த்தித்தால்
அதன் மீது வீற்றிருப்பது குற்றத்தின்பாற்படாதென்று கொள்ளல்தகும்.
பொன்னின் மீதோ கட்டிலின் மீதோ தமக்குள்ள ஆசையைத் தடுக்கமுடியுமே தவிர,
மிகமிக உயர்ந்தவர்களான ஸிஷ்யர்களின் வேண்டுகோளைத் தடுக்கமுடியாதிறே எப்படிப்பட்ட ஸந்யாஸிகளுக்கும்.
ஆக பொன் கட்டிலை இவர் உபயோகிப்பது தவறன்றென்க.
———–
உந்மீலத் பத்மகர்ப்பத்யுதிதலமுபரி க்ஷீரசங்காதகௌரம்
ராகாசந்த்ர ப்ரகாசப்ரசுர நகமணித்யோத வித்யோதமாநம் |
அங்குள்யக்ரேஷு கிஞ்சிந்நதமதிம்ருதுளம் ரம்யஜாமாத்ருயோகீ
திவ்யம் தத்பாதயுக்மம் திசது சிரசி மே தேசிகேந்த்ரோ தயாளு: || 6
பதவுரை:
தயாளு: – கருணை புரியுந்தன்மையராய்,
தேசிகேந்த்ர: – ஆசார்யர்களில் உயர்ந்தவரான,
ரம்யஜாமாத்ருயோகீ - அழகிய மணவாளமாமுனிகள்,
உந்மீலத்பத்ம கர்ப்பத்யுதிதலம் - மலர்ந்து கொண்டேயிருக்கிற தாமரைமலரின் உட்புறத்தின்
(சிவந்த) காந்தி போன்ற காந்தியையுடைய அடிப்பகுதியை (உள்ளங்காலை)யுடையதும்,
உபரிமேற்பகுதியில்,
க்ஷீரசங்காத கௌரம் - பாலின் திரட்சி போல் வெளுத்ததும்,
ராகாசந்த்ர ப்ரகாசப்ரசுரநகமணி த்யோத வித்யோதமாநம் - பௌர்ணமீ சந்த்ரனுடைய காந்தி போன்ற
(வெளுத்த) காந்தியால் நிறைந்த அழகிய நகங்களின் காந்தியினால் விளங்காநிற்பதும்,
அங்குளி அக்ரேஷு - நகங்களின் நுனிப்பகுதிகளில், கிஞ்சித் நதம் - சிறிது வளையையுடையதும்,
அதிம்ருதுலம் - மிகவும் மெத்தென்றிருப்பதும்,
திவ்யம் - அப்ராக்ருதமானதும்,
தத் - மிகச்சிறந்ததுமான,
பாதயுக்மம் - (தமது) திருவடியிணையை,
மே சிரசி - அடியேனுடைய தலையில்,
திசது - வைத்தருளவேணும்.
கருத்துரை:
இந்த ச்லோகம் முதலான ஆறு ச்லோகங்கள் சிஷ்யர்களின் ஸ்தோத்ர ரூபமாக அமைந்திருக்கின்றன.
இம்முதல் ச்லோகத்தில் ஒரு சிஷ்யர் தமது சிரஸிற்கு அணிகலனாக மணவாளமாமுனிகள்
தம் திருவடியிணையை வைத்தருளவேணுமென்று வேண்டுகிறார்.
தயாளு: தயைபுரிவதை இயற்கையாகக் கொண்டவர்.
பிறர் தமக்கு அடிமை செய்தால் அதுகாரணமாக தயையுண்டாகப் பெறும் பிற ஆசார்யர்களைப் போலல்லாமல்,
இயற்கையாகவே அனைவரிடத்திலும் தயை புரியும் எம்பெருமானாரைப் போன்றவர் இம்மாமுனிகள் என்றபடி.
திசதி உபதிசதி இதி தேசிக: சாஸ்த்ரார்த்தங்களை உபதேசிப்பவர் தேசிகரெனப்படுகிறார்.
தேசிகாநாம் இந்த்ர: தேசிகேந்த்ர: ஆசார்யர்களாகிற தேசிகர்கட்குத் தலைவரென்றபடி.
ஆசார்யர்கட்குத் தலைவராகையாவது ஆசார்யர்களுக்கு இருக்க வேண்டிய அறிவு, அறிவுக்குத்தக்க அநுஷ்டானம்,
தயை முதலிய குணங்களால் நிறைந்தவராயிருக்கை.
மணவாளமாமுனிகளின் திருவடிகளின் அடிப்புறம் தாமரைமலர் போல் சிவந்ததும், நகங்கள் நிலவைப்போல் வெளுத்தும்
விரல்களின் நுனிகள் கொஞ்சம் வளைந்தும், பொதுவாகத் திருவடி முழுவதும் மிகவும் மெத்தென்றும்
பால்போல் வெளுத்தும் இருக்கின்றனவாம்.
மாமுனிகள் ஆதிசேஷாவதாரமாகையால், அவர் திருவடியிணையை அப்ராக்ருதம்
(பரமபதத்தில் உள்ளதொரு உயர்ந்ததான பொருள்) என்றார்.
இவ்வுலகிலுள்ள சம்சாரிகளின் பாதங்கள் போல் தாழ்ந்தவையல்ல என்றபடி.
கீழ்த் திருவடிகளுக்கு ‘உந்மீலத்பத்மகர்ப்ப’ என்று தொடங்கிச் சொன்ன அழகுகளெல்லாம்
உத்தம புருஷனுக்கு இருக்கவேண்டிய உத்தம லக்ஷணங்களாகும்.
இத்தகைய சிறப்பத்தனையும் பெற்றுத் தமக்கு வகுத்ததுமான திருவடிகளை வைத்தருளவேணுமென்று
ஒரு சிஷ்யர் மாமுனிகளை ப்ரார்த்தித்தாராயிற்று.
இதனால் பகவத்பக்தரான ஆழ்வார் ‘நின்செம்மாபாதபற்புத்(பத்மத்தை) தலைசேர்த்து’ என்று எம்பெருமானை வேண்டினார்.
ஆசார்ய பக்தரான ஒரு சிஷ்யர் ‘பாதயுக்ம சிரசி திசதுமே’ என்று ஆசார்யரான மாமுனிகளை வேண்டுகிறார்.
மாமுனிகள் தமது திருவடியிணையை அடியேன் முடியில் வைத்தருளட்டும்’ என்று படர்க்கையாக இருந்தாலும்,
‘மாமுனிகளே! தேவரீர் திருவடிகளை அடியேனுடைய சிரஸில் வைத்தருளவேணும்’ என்று முன்னிலைப்படுத்தி
ப்ரார்த்திப்பதிலேயே இதற்கு நோக்கு. இவ்விஷயம் மேலுள்ள பல ச்லோகங்களால் விளக்கமுறும்.
—————-
த்வம் மே பந்து ஸ்த்வமஸி ஜநகஸ் த்வ ம் ஸகா தேஸிகஸ் த்வம்
வி த்யா வ்ருத்தம் ஸுக்ருதமதுலம் வித்தமப்யுத்தமம் த்வம்|
ஆத்மா ஶேஷீ பவஸி பகவந் ஆந்தர: ஶாஸிதா த்வம்
யத்வா ஸர்வம் வரவரமுநே! யந்யதாத்மாநுரூபம்||-7-
பதவுரை:
ஹே வரவரமுநே -வாரீர் மனவாளமாமுனிகளே
த்வம் – தேவரீர் அடியேனுக்கு,
பந்து அஸி-விடமுடியாத உறவினர் ஆகிறீர் .
த்வம் ஜநக: அஸி – கல்வி கற்பிப்பதனாலே நன்மையைத் தேடும் தமப்பனார் ஆகிறீர்,
த்வம் ஸகா அஸி-(1)ஆபத்தில் உதவும் தோழராகிறீர் , (2)பகவதநுபவ காலத்தில் துணைவர் ஆகிறீர்:
த்வம் தேஸிக : அஸி – அறியாதவற்றை அறிவிக்கும் ஆசார்யன் ஆகிறீர்,
த்வம் வித்யா அஸி – அவ்வாசார்யார்கள் உபதேஸித்த தாய்போல் காக்கும் வித்யை ஆகிறீர்.
த்வம் வ்ருத்தம் அஸி – முன்பு கூறிய வித்யையின் | பலனாய நன்மையைத்தரும் நன்னடத்தை ஆகிறீர்.
த்வம் அதுலம் ஸுக்ருதம் அஸி – (இதுவரையில் கூறிய உறவினர் முதலியோரின் லாபத்துக்கும்,
மேல் சொல்லப்படும் செல்வம் முதலியவற்றின் லாபத்துக்கும் காரணமான) ஒப்பற்ற புண்யமாக ஆகிறீர்.
த்வம் உத்தமம் ஸித்தம் அஸி – (ஈட்டும்போதும் காப்பாற்றும் போதும் துன்பத்தைத் தரும் அழியும் செல்வம் போலல்லாமல்)
அழியாத உத்தம செல்வமாக ஆகிறீர்,
த்வம் ஆத்மா அஸி – முற்கூரிய அனைத்தையும் தனக்காக ஏற்றுக்கொள்ளும் ஆத்மாவாக ஆகிறீர்,
த்வம் ஶேஷீ பவஸி – முற்கூறப்பட்ட ஆத்மாவையும் அடிமைகொள்ளும் தலைவராக ஆகிறீர்.
ஹே பகவந் – அறிவு ஆற்றல் முதலிய குணங்களை மிகக்கெண்ட மாமுனிகளே,
த்வம் ஆந்தரஶ்ஶாஸிதா அஸி – (1)உள்புகுந்து நியமிக்கும் பரமாத்வாக ஆகிறீர், (2)’அந்தர‘ எனப்பட்டபடி பரமாத்மாவையும் நியமிக்கும் ஆந்தரரான ஜ்ஞாநியாக ஆகிறீர்,
யத்வா – இப்படிப் பலவாராகச் சொல்லிப் பயனென்?
ஆத்மஅநுரூபம் – விரோதியைப் போக்குதல், பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யங்களாகிய விரும்பியவற்றைத் தருதல் முதலாக)
ஜீவாத்ம ஸ்வரூபத்துக்குத் தக்கதாக, யத்யத் பவதி- எது எது உள்ளதோ, தத்(ஸர்வம்) அஸி-அது எல்லாமுமாகவும் ஆகிறீர்.
கருத்துரை :
பத்நாதி இதி பந்து – நம்மை விடாமல் நாம் துன்புற்றபோது துன்புற்றும், இன்புற்றபோது இன்புற்றும்
கூடவே இருக்கும் உறவினன் என்றபடி. ஸகா தோழன்.
நாம் துயருற்றபோது துயரைப் போக்குமவராய் பகவதநுபவம் பண்ணும்போதும்,
‘போதயந்த பரஸ்பரம்‘ (கீதை 10- 9) என்று ஒருவருக்கொருவர் பகவத் குணங்களைச் சொல்லுவதற்கும்
கேட்பதற்கும் உறுப்பான துணைவர் என்றபடி, ஆத்மா – தான் என்பது அதன் கருத்து
‘தஞ்சமாகிய தந்தை தாயோடு தானுமாய் ‘ திருவாய்மொழி 3 – 6- 9) என்று ஆழ்வார் ‘
நான்‘ அன்று சொல்லவேண்டிய இடத்தில் ‘தான்‘ என்றாரிரே.
இதனால் ‘தவம்‘ ஆத்மா அஸி‘ – என்பதற்கு ‘தேவரீர் நானாக ஆகிறீர்‘ என்பது பொருளாகத்தகும்.
மேலும் ‘ஸேஷி பவஸி, ஆந்தரஸாசிதா பவஸி ‘ என்பவற்றிற்கு –
என்னயடிமை கொள்ளுமவரும் என்னையுட்புகுந்து நியமிப்பவரும் (பரமாத்வாகவும்) தேவரீரே ஆகிறீர் என்பது பொருள்.
‘ஆந்தர: ஸாஸிதா‘ என்பதற்கு பதவுரையில் கூறிய இரண்டு பொருள்களுக்கும்.
(1) ஆந்தர: என்பதற்கு அந்தரேபவ : மனத்தில் இருக்கும் பரமாத்மா என்று முதற்பொருள்,
(2) ‘ஆதமந: அந்தர: (ப்ருஹ . உப 5 -7 – 22) என்றவிடத்தில்
அந்தர: என்பதற்கு (ஆத்மாவுக்கு) உள்ளிருக்கும் பரமாத்மா என்று பொருள் கூறப்பட்டுள்ளபடியினால்,
அந்தரஸ்யா அயம் உள்ளிருக்கும் பரமாத்மாவின் உள்ளும் இருந்து அப்பறமாதவை நியமிக்கும் ஜ்ஞானி‘ என்பது இரண்டாம் பொருள்.
‘ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம்‘ (கீதை 7 – 18) (ஜ்ஞாநியோ என்றால் எனக்கு ஆத்மா என்பதே என் கருத்தாகும்)
என்று எம்பெருமான் ஜ்ஞாநியை தனக்குள்ளிருந்து தன்னையும் நியமிப்பவனாக அருளிச்செய்தது இதற்கு பிரமாணமாகும்.
யத்வா = இது முன்பு தனித்தனியே சொன்னவற்றையெல்லாம் தவிர்க்கிறது.
இப்படி ஒவ்வொன்றாக இருத்தலைச் சொல்லி கொண்டுபோனால் நூல்விரிவுபடுமென்பதனால்.
ஆத்மாவுக்குத் தகுந்ததாக உலகில் சுருக்கமாகச் சொல்லி முடித்தருளியபடி.
(இந்த ஸ்லோகத்தில் ‘தவம் ஆத்மா அஸி – (தேவரீர் அடியேனாக ஆகிறீர்) என்று இவர்
தமக்கு மாமுநிகளோடு அருளிச்செய்த ஒற்றுமை ஜீவாத்மாக்களைனவரும் ஒன்றே‘ என்று பக்ஷத்தாலல்ல;
சேஷ சேஷி பாவத்தாலும், நியந்த்ருதியாம்யபாவத்தாலுமே என்பது
‘மேலே ஸேஷீ பவஸி, ஆந்தர : ஸாஸிதா பவஸி‘ என்றருளிச்செய்வதிலிருந்து ஸ்பஷ்டமாகிறது.
இவ்வொற்றுமை தமக்குப் பரமாத்மாவோடு உள்ளமை ஸாஸ்த்ர ஸித்தமாகையாலும்
‘பீதவாடைபிரானார் பிரமகுருவாகி வந்து‘ (பெரியாழ். திரு. 5 – 2- 8) என்கிறபடியே
மாமுனிகள் பரமாத்மாவின் அவதாரமாகையாலும்;
இவர் தமக்கு அம்மாமுநிகளோடு ஒற்றுமை கூறினாரென்று கருத்தாகும்.)
————-
அக்ரே பஸ்சாது பரி பரிதோ பூதலம் பார்ஸ்வதோ மே
மௌலௌ வக்த்ரே வபுஷி ஸகலே மாநஸாம் போருஹே ச|
பஸ்யந் பஸ்யந் வரவரமுநே திவ்யமங்கரித்வயம் தே
நித்யம் மஜ்ஜந்நம்ருத ஜலதௌ நிஸ்தரேயம் பவாப்திம்||-8-
பதவுரை :
ஹேவரவரமுநே! – வாரீர் மணவாளமாமுநிகளே,
தே – தேவரீருடைய ,
திவ்யம் – ஆச்சர்யகரமான,
அங்ரித்வயம் – திருவடியிணயை,
அக்ரே – எதிரிலும்,
பஸ்சாத் – பின்புறத்திலும்,
பூதலம் பரித: – பூமியின் நான்கு பக்கங்களிலும்,
மே பார்வஸ்வத: – அடியேனுடைய இரு பக்கக்கங்களிலும்,
மௌ லௌ – தலையிலும்,
வக்த்ரே – முகத்திலும்,
கிலே வபுக்ஷி – உடலில்லுள்ள எல்லா உறுப்புக்களிலும்,
மாநஸ அம்போருஹே ச – ஹ்ருதய கமலத்திலும்,
பஸ்யந் பஸ்யந் (இடையறாத நினைவின் மிகுதியாலே) எப்போதும் ஸ்பஷ்டமாகப் பார்த்துக்கொண்டே,
அம்ருத ஜலதௌ – இறப்பவனைப் பிழைப்பூட்டும் அமுதக்கடலில்,
மஜ்ஜந் – முழ்குமவனாய் கொண்டு,
பவாப்திம் நிஸ்தரேயம் – பிறவிக்கடலைத் தாண்ட விரும்புகிறேன்.
கருத்துரை:
“குருபாதாம்புஜம் த்யாயேத் குரோரந்யம் நபாவாயேத்” – (ப்ரபஞ்சஸாரம்)
[ஆசார்யனுடைய திருவடித்தாமரைகளை த்யாநிக்க வேண்டும். ஆசார்யனைத் தவிர வேறொருவனை நினைத்தல் கூடாது.]
என்ற ப்ரமாணம் இங்கு நினைக்கத்தக்கது, ஒரு கடலில் மூழ்கிக் கொண்டே மற்றொரு கடலைத் தாண்டவிரும்பவது ஆச்சர்யமுண்டாக்கலாம், ஆசார்யனுடைய ஆச்சர்யகரமான திருவடிகளை த்யானம் செய்துகொண்டே இருக்கிற
பாவநாப்ரகர்ஷத்தின் மஹிமையினியால் எல்லாம் ஸித்திக்குமாகையால், இதில் பொருந்தாமை ஏதுமில்லை
என்கிறார் ஆசார்ய பக்தாக்ரேஸராகிய திருமழிசை அண்ணாவப்பய்யங்கார் ஸ்வாமி (வ்யாக்யாதா).
‘பகவதா ஆத்மீயம் ஸ்ரீமத் பாதாரவிந்தயுகளம் ஸிரஸி க்ருதம் த்யாத்வா
அம்ருதஸாகராந்தர் நிமக்ந ஸர்வாவயவஸ் ஸூகமாஸீத‘
(எம்பெருமானால் தன்னுடைய பரமபோக்யமான திருவடித்தாமரைகளை தன தலையில் வைக்கப்பட்டதாக
த்யாநம் பண்ணி ஆனந்தமாகிற அமுதக்கடலுக்குள்ளே மூழ்கிய எல்லா அவயங்களையும் உடையவானைக் கொண்டு
ஸுகமாக இருக்கக்கடவன்) என்று ஸ்ரீ வைகுண்டத்யத்தில் எம்பெருமானார் எம்பெருமான் விஷயத்தில்
அருளிச்செய்ததை இவர் இங்கு ஆசார்யரான மாமுனிகள் விஷயத்தில் அருளிச்செய்தார்.
————
கர்மாதீநே வபுக்ஷி குமதி: கல்பயந்நாத்மபாவம்
து: கேமக்ந:கிமிதி ஸுசிரம் தூயதே ஜந்துரேஷ: |
ஸர்வம் த்யக்த்வா வரவரமுநே ஸம்ப்ரதி த்வத்ப்ரஸாதாத்
திவ்யம் ப்ராப்தும் தவ பதயுகம் தேஹி மே ஸுப்ரபாதம்||–9-
பதவுரை:
ஹே வரவரமுநே ! – மணவாளமாமுநிகளே!,
ஏஷ: ஜந்து: – நம்மடியவனாகிய இந்த ஜீவாத்மா,
கர்ம அதீநே – முன்செய்த முழுவினையால் உண்டான,
வபுக்ஷி – தனது தேஹத்தில்,
ஆத்மபாவம் – ஆத்மாவின் தன்மையை,
கல்பயந் – ஏறிட்டு,
குமதி: – திரிபுணர்ச்சியுடையவனாய்க் கொண்டும்,
து: கே மக்ந: – ஸம்சாரது: க (ஸாகர) த்தில் மூழ்கியவனாய்க்கொண்டும்,
கிம் – எதற்காக
தூயதே – வருந்திகிறான்,
இதி (மத்வா) – என்று தேவரீர் நினைத்தருளி,
(அடியேன்) ஸர்வம் – முற்கூறிய திரிபுணர்ச்சி ஸம்ஸாரதுக்கம் முதலிய எல்லாவற்றையும்,
த்யக்த்வா – விட்டொழிந்து,
ஸம்ப்ரதி – இப்பொழுதே,
தவதிவ்யம் பதயுகம் ப்ராப்தும் – தேவரீருடைய மிகவும் அழகிய திருவடியிணையை அடைவதற்கு உறுப்பாக,
த்வத் ப்ரஸாதாத் – தேவரீருடைய (இயற்கையான) அனுக்ரஹத்தினாலே,
மே – அடியேனுக்கு,
ஸுப்ரபாதம் – (தேவரீர் திருவடிகளை அநுபவிப்பதென்னும் பகல்வேளைக்கு ஆரம்பமாகிற) நல்ல விடிவை,
தேஹி – தந்தருளவேணும்.
கருத்துரை:
‘கர்மாதீநே’ என்று, தொடங்கி, ‘தூயதே ஜந்துரேஷ:’ என்பதிறுதியாக முன்னிரண்டடிகளும்,
மாமுநிகள் தமது சிஷ்யனைப் பற்றி நினைக்கவேண்டிய நினைப்பின் அநுவாதமாகும்
‘இதி’ என்பதற்கு பிறகு ‘மத்வா’ என்றொரு பதத்தைக் கூட்டிப் பொருளுரைக்கப்பட்டது.
தேவரீர் திருவடிகளை அனுபவிக்கமுடியாமல் கழிந்த காலம் ப்ரளயராத்ரி
இனிமேல் அவ்வனுபவத்தைப் பெறப்போகும் காலம் பகல் போன்றது.
அதற்கு முற்பட்டதகிய நல்ல விடியற்காலத்தை, தேவரீருக்குண்டான் இயற்கையான க்ருபையாலே
கற்பித்தருள வேணுமென்றாயிற்று இதனால்.
————-
யாயா வ்ருத்திர் மநஸி மம ஸா ஜாயதாம் ஸம்ஸ்ம்ருதிஸ தே
யோயோ ஜல்பஸ் ஸ பவது விபோ நாமஸங்கீர்த்தநம் தே|
யாயா சேஷ்டா வபுக்ஷி பகவந்ஸா பவேத் வந்தநம் தே
ஸர்வம் பூயாத் வரவரமுநே! ஸம்யகாராதநம் தோ||-10-
பதவுரை:
ஹே வரவரமுநே ! – மணவாளமாமுநிகளே!
மம – முன்செய்த வினைக்கு வசப்பட்ட அடியேனுடைய அறிவானது,
ஜாயதாம் – (தந்தம் காரணங்களால்) உண்டாகத்தகுமோ,
ஸா வ்ருத்தி: – அந்தந்த அறிவெல்லாம்,
தே – நினைத்தவுடனே மகிழ்ச்சியூட்டுகிற தேவரீருடைய,
ஸம்ஸ்ம்ருதி: – நல்ல நினைவினுருவாகவே,
ஜாயதாம் – உண்டாகவேணும்,
ஹே விபோ – வாரீர் ஸ்வாமியே! ,
மே – அடியேனுக்கு,
யா: யா: ஜல்ப: – எந்தெந்த வார்த்தையானது,
ஜாயதாம் – (தந்தம் காரணங்களால்) உண்டாகத்தகுமோ,
ஸ: – அவ்வார்த்தையனைத்தும்,
தே – புகழத்தக்க தேவரீரைப் பற்றியதான,
ஜல்ப: – வார்த்தையுருவாகவே,
ஜாயதாம் – உண்டாகவேணும்.
ஹே பகவந் ! – அறிவாற்றர்களால் மிக்கவரே,
மம – அடியேனுடைய,
வபுக்ஷி – ஏதோவொரு வேலையைச் செய்து கொண்டேயிருக்கும் சரீரத்தில்,
யா யா சேஷ்டா – அச்செயலெல்லாம்,
தே – வணங்கத்தக்க தேவரீரைப் பற்றியதான,
வந்தநம் – வணக்கவுருவாகவே,
ஜாயதாம் – உண்டாகவேணும்,
ஸர்வம் – இதுவரையில் சொல்லியும் சொல்லாததும் போந்த, (அடியேனுடைய வினையடியாக உண்டாகத்தக்க) செயல்களெல்லாம்,
தே – தேவரீருடைய,
ஸம்யக் ஆராதநம் – ப்ரீதிக்குக் காரணமான நல்ல ஆராதநரூபமாகவே,
பூயாத் – உண்டாகவேணும்.
கருத்துரை:
அடியேனுக்கு, முன்செய்ததீவினையின் பயனாக மனத்தில் உண்டாகும் தீயஎண்ணெங்களெல்லாம்
தேவரீரருளால் மாறி தேவரீரைப் பற்றிய த்யாநமாகவே உண்டாகவேணும்,
வாயில் வரும் தீயபேச்சுக்களெல்லாம் மாறி தேவரீருடைய நாமஸந்கீர்த்தனமாகவே உண்டாகவேணும்.
உடலில் உண்டாகும் தீய செயல்களெல்லாம் மாறி தேவரீரைபற்றிய வணக்கமாகவே உண்டாகவேணும்
என்று இதனால் ப்ரார்த்தித்தாராயிற்று.
‘ஜாயதாம்’ என்பதனை ஒவ்வொறு வாக்கியத்திலும் இரண்டு தடவை திருப்பிப் பொருள் உரைக்கப்பட்டது.
‘ஜாயதாம்’ என்பது லோட் ப்ரத்யயாந்தமான சப்தம். அதற்குப் பலபொருள்கள் உள்ளன.
இங்கு முதலில் அர்ஹம் – தகுதியென்ற பொருளிலும்,
பின்பு வேண்டுகோள் என்ற பொருளிலும் அச்சொல் ஆளப்பட்டமை பதவுரையில் கூறியது கொண்டு அறிதல் தகும்.
இங்ஙனமன்றி (ஜாயதாம் என்பதை ஆவ்ருத்தி செய்யாமலேயே) அடியேன் மனத்தினிலுண்டாகும் ஜ்ஞாநமெல்லாம்
தேவரீர் நினைவாகவும், வாயில் வரும் சொற்களெல்லாம் தேவரீர் நாமஸங்கீர்த்தனமகவும்,
தேஹத்தில் தோன்றும் செயல்களெல்லாம் தேவரீர் திருவாராதநமாகவும் உண்டாகவேணும் – என்றும் பொருள் தகும்.
—————-
அபகதமதமாநை: அந்திமோபாய நிஷ்டை:
அதிகதபரமார்த்தை: அர்த்தகாமாநபேக்ஷை:|
நிகிலஜநஸுஹ்ருத்பி: நிர்ஜிதக்ரோதலோபை:
வரவரமுநிப்ருத்யை: அஸ்து மே நித்யயோக:|| 11
பதவுரை:
மே – இத்தனை நாள்கள் தீயவரோடு எப்போதும் சேர்த்திருந்த அடியேனுக்கு,
அபகதமதமாநை:- நாமே உயர்ந்தவர் என்ற கர்வமும், பெரியோர்களை அவமதிக்குமளவுக்கு வளர்ந்த அகங்காரமும் சிறிதும் இல்லாதவர்களும்,
அந்திம உபாய நிஷ்டை: – ஆசார்யாபிமானத்திற்கு இலக்காகையாகிற கடைசியான மோக்ஷோபாயத்தில் மிகவும் நிலைநின்றவர்களும்,
அதிகத பரம அர்த்தை: – பூரணமாக அடையப்பட்ட ஆச்சார்ய கைங்கர்யமாகிற பரமபுருஷார்த்தத்தை (எல்லையான பலனை) உடையவர்களும்,
அர்த்த காம அநபேக்ஷை: – மற்ற உபாயத்தையும் மற்ற பலனையும் விரும்பாதவர்களும், அல்லது செல்வத்தையும் காமபோகத்தையும் விரும்பாதவர்களும்,
நிகிலஜநஸுஹ்ருத்பி: வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் இவ்விருவருமில்லாத நடுவர்கள் ஆகிய எல்லா மனிதர்களிடமும் நன்மையைத்தேடும் நல்லமனமுடையவர்களும்,
நிர்ஜிதக்ரோதலோபை: – கோபத்தையும் உலபித்தனத்தையும் நன்றாக வென்றவர்களுமான,
வரவரமுநிப்ருத்யை: மணவாளமாமுநிகளின் அந்தரங்க சிஷ்யர்களான கோயில் கந்தாடை அண்ணன், வானமாமலை ஜீயர் முதலியவர்களோடு, நித்யயோக: (திருவடிகளைத் தாங்கும் பஞ்சுமெத்தை, திருவடி இரேகை ஆகியவற்றிற்குப் போல்) நித்தியமான ஸம்பந்தமானது,
அஸ்து – உண்டாகவேணும்.
கருத்துரை:
இதுவரையில் மதம், மானம், பொன்னாசை, பெண்ணாசை, கோபம், உலோபம் முதலிய தீயகுணங்களே
நிறையப்பெற்ற நீசஜநங்களோடு இடைவிடாமல் பழகிப்போந்த தமுக்கு, இக்குற்றங்களில் ஏதுமின்றியே,
ஆசார்யகைங்கர்யம், அதற்கு உபாயமாக ஆசார்யனையே பற்றுதல், அனைவரிடத்திலும் நல்லெண்ணம் தொடக்கமான
நற்குணங்களே மல்கியிருக்கபெற்ற மணவாளமாமுநிகளின் சிஷ்யர்களோடு
நித்யசம்பந்தம் (நீங்காத தொடர்பு) உண்டாகவேணுமென்று இதனால் ப்ரார்த்தித்தாயிற்று.
—————–
இதிஸ்துதிநிபந்தேந நஸூசிதஸ்வமநீஷிதாந்|
ப்ருத்யாந் ப்ரேமார்த்ரயா த்ருஷ்ட்யா ஸிஞ்சந்தம் சிந்தயாமி தம்||–12-
பதவுரை:
இதி – முற்கூறிய இந்த ஆறு ஸ்லோகங்களின்படியே,
ஸ்துதி நிபந்தேந – ஸ்தோத்ரமாகிய பிரபந்தத்தினால்,
ஸூசித ஸ்வமநீஷிதாந் – குறிப்பிடப்பட்ட தாம்தாம் விரும்பிய புருஷார்த்தங்களை (பயன்களை) உடைய,
ப்ருத்யாந் – விற்கவும் வாங்கவும் உரிய கோயிலண்ணன் முதலிய சிஷ்யர்களை,
ப்ரேம ஆர்த்ரயா – ப்ரீதியினால் குளிர்ந்திருக்கிற,
த்ருஷ்ட்யா – திருக்கண்ணோக்கத்திலே,
ஸிஞ்சந்தம் – குளிரச்செய்துகொண்டிருக்கிற,
தம் – அந்த மணவாளமாமுனிகளை,
சிந்தயாமி – எப்போதும் த்யாநம் செய்கிறேன்.
கருத்துரை:
இதுவரையில் ஆசார்யரான மணவாளமாமுனிகளைப் பற்றி திநசர்யை என்னும் ஸ்தோத்ரக்ரந்தம் இயற்றி அனுபவிக்கப்பட்டது,
இனி ஸ்தோத்ரத்தினால் உண்டான ப்ரீதியையுடைய மணவாளமாமுனிகளை அனுபவிக்கிறார் எறும்பியப்பா.
இதி என்பது இவ்வாறாக என்றபடி, முற்கூறிய ஆறு ஸ்லோகங்களிலுள்ள பொருளின்படியே என்று கருத்து.
அவற்றில் ‘தவம் மே பந்து:’ (7) என்று தொடங்கி ‘யாயா வ்ருத்தி’ (10) என்பதீறாக உள்ள நான்கு ஸ்லோகங்கள்
இவர் அருளிய வரவரமுநி சதகத்திலும் படிக்கப்பட்டுள்ளன.
‘உந்மீலபத்ம’ (6) என்ற இவற்றின் முன் ஸ்லோகமும், ‘
அபகதமதமாநை’ என்ற பின் ஸ்லோகமும் இவற்றோடு படிக்கப்பட்டு வருவதானாலும்,
இவ்விரண்டினை வேறொருவர் இயற்றியதாக யாரும் இருகாறும் கூறாமையாலும்,
இவ்விரண்டும் அன்நாங்கினோடு ஒப்ப எறும்பியப்பாவே அருளிசெய்தாரென்று கொள்ளுதல் பொருந்தும்.
இவ்வாறு ஸ்லோகங்களுக்குள்ளே ‘திவ்யம் தத்பாதயுக்மம் திஸது’ (6),
‘தவபதயுகம்தேஹி’ (9), ‘அங்க்ரித்வயம் பஸ்யந் பஸ்யந்’ (8) என்று மூன்று ஸ்லோகங்களில்
மாமுனிகள் தம் திருவடிகளைத் தலைமேலே வைத்தருளவேணுமென்றும்
அவற்றை இப்போதும் சேவிக்கவெண்டுமென்றும் பிரார்த்தனை உள்ளடிங்கியிருப்பது பொருந்துமென்று
கொண்டு இந்த ஆறு ஸ்லோகங்களும் அஷ்டதிக்கஜாசார்யர்களில் கோயிலண்ணன், வானமாமலை ஜீயர் இவர்களைவிட்டு
இவ்வெறும்பியாப்பா, திருவேங்கட ஜீயர், பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர், பிரதிவாதி பயங்கரம் அண்ணா,
அப்பிள்ளை, அப்புள்ளாராகிய இவ்வறுவரால் (ஒவ்வுருவர் ஒன்றாக) அநுஸந்திக்கப்பட்டனவென்று கொள்ளுதல் தகும்.
கோயில்கந்தாடைஅண்ணன் ஸதா மாமுநிகளைத் தாங்கும் பாதுகையாகவும்,
வானமாமலை திருவடிகளை விடாத ரேகையாகவும் பிரஸித்தர்களாகையால்
எப்போதும் திருவடிகளைப் பிரியாத இவ்விருவரும் மாமுனிகளின் திருவடிகளைத் தலையில் தரிக்கவேண்டுமேன்றும்
அவற்றை எப்போதும் ஸேவிக்கவேண்டுமேன்றும் ஆசைப்படார்களே என்கிறார், அண்ணாவப்பய்யங்கார் ஸ்வாமி.
எறும்பியப்பா அருளிச்செய்த இவ்வாறு ஸ்லோகங்களில் ஒன்று இவர் அநுஸந்தித்ததாகவும்,
மற்ற ஐந்தும் இவரிடம் உள்ள கௌரவத்தினாலும் ஸ்லோகங்களின் இனிமையாலும் மற்ற ஐவரும் அநுஸந்தித்ததாகவும் கொள்க.
————–
அத ப்ருத்யாநநுஜ்ஞாப்ய க்ருத்வா சேத: ஸுபாஸ்ரயே|
ஸயநீயம் பரிஷ்க்ருத்ய ஸயானம் ஸம்ஸ்மராமி தம்||-13-
பதவுரை:
அத – முற்கூறியபடியே சிஷ்யர்களுக்கு தத்வார்தோபதேசம் செய்தல் முதலியவற்றால் இரிவில் இரண்டு யாமங்கள் கழிந்தபிறகு,
ப்ருத்யாந் – முற்கூறிய சிஷ்யர்களை
அநுஜ்ஞாப்ய – விடைகொடுத்து அனுப்பிவிட்டு,
ஸுபாஸ்ரயே – கண்களையும் மனத்தையும் கவர்கின்ற எம்பெருமானுடைய திருமேனியில்,
சேத: க்ருத்வா – தமது திருவுள்ளத்தைச் செலுத்தி (அதை தியானம் செய்து) பிறகு,
ஸயநீயம் – படுக்கையை,
பரிஷ்க்ருத்ய – அலங்கரித்து,
ஸயானம் – கண்வளர்கின்ற,
தம் – அந்த மணவாளமாமுநிகளை
ஸம்ஸ்மராமி – த்யானம் செய்கிறேன்.
கருத்துரை:
‘க்ருத்வா சேத: ஸுபாஸ்ரயே’ – என்றதனால் இரவில் செய்யவேண்டிய பகவத்த்யாநமாகிய யோகம் என்று கூறப்பட்டது.
‘தத: கநக பர்யங்கே’ (4) என்று முன்பு கூறப்பட்ட பகவத்த்யாநத்துக்கு உரிய ஆசனத்தை விட்டு எழுந்திருந்து,
ஸ்தோத்ரம் செய்த சிஷ்யர்களை கடாக்ஷித்து அவர்களை விடைகொடுத்தனுப்பிவிட்டு,
படுக்கைக்கு அலங்காரமாக பகவானை த்யானம் செய்துகொண்டே திருக்கண்வளருகிறார் மாமுனிகள்.
அத்தகைய மாமுனிகளைத் தாம் த்யானம் செய்கிறார் இவ்வெறும்பியப்பா.
(மாமுனிகள் தாம் திருவனந்தாழ்வானுடைய திருவவதாரமாகையாலே அப்ராக்ருமான அவருடைய
திருமேனியழகு திருக்கண் வளருங்காலத்தில் இரட்டிதிருக்குமாகையால் த்யானம்
செய்துகொண்டே யிருக்கத் தடையில்லையிரே. மாமுனிகளுக்கு ஸுபாஸ்ரயம் எம்பெருமானுடைய திருமேனி,
இவருக்கு ஸுபாஸ்ரயம் மாமுனிகளுடைய திருமேனி என்க.
யதீந்த்ரப்ரவணாரான மாமுனிகள் எம்பெருமானை த்யாநிப்பது யதீந்த்ரரான
எம்பெருமானாருடைய திருவுள்ள உகப்புக்காக என்றும் சௌம்யஜாமாத்ருயோகீந்த்ரரை (மாமுனிகளை) த்யானம் செய்வது,
தம்மை மணவாளமாமுனிகளின் நிர்பந்தமாக நியமித்தருளிய இவர்தம் திருவாரதனப்பெருமாளாகிய
சக்ரவர்த்தித்திருமகனாரின் திருவுள்ளவுகப்புக்காக என்றும் கொள்ளலாம்.
சக்ரவர்த்தித்திருமகனாரின் நியமனம் யதீந்த்ரப்ரவணப்ரபாவத்திலும் இவரருளிய வரவரமுநி சதகத்திலும் காணத்தக்கது.
—————
திநசர்யாமிமாம் திவ்யாம் ரம்யஜாமாத்ருயோகிந:|
பக்த்யா நித்யமநுத்யாத்யாயந் ப்ராப்நோதி பரமம் பதம்||-14-
பதவுரை:
இமாம் – ‘பரேத்யு: பஸ்சிமேயாமே’ (பூர்வதிநசர்யை 14) என்று தொடங்கி
‘ஸயானம் ஸம்ஸ்மராமி தம்’ என்ற முன் ஸ்லோகமீறாக அநுஸந்திக்கப்பட்டதும்,
‘திவ்யாம் ரம்யஜாமாத்ருயோகிந திநசர்யாம் – அழகியமணவாளமாமுனிகளின் நித்யானுஷ்டாநங்களை
தெரிவிக்கிற இந்த கிரந்தத்தை,
நித்யம் – தினந்தோறும் (இரவும், பகலும்)
பக்த்யா அநுத்யாத்யாயந் – பக்தியோடு தொடர்ந்து அநுசந்திக்கிற மனிதன்,
பரமம் பதம் – இனி இதுக்குமேலில்லை என்னும்படி மிகவுயர்ந்த ஸ்ரீவைகுண்டலோகத்தை,
பராப்நோதி – அடைகிறான்.
கருத்துரை:
முடிவில் திநசர்யை என்ற இந்த கிரந்தந்தை அனநுசந்தித்தால் உண்டாகும் பிரயோஜனத்தை
அருளிச்செய்கிறார் இந்த ஸ்லோகத்தினால்
பூர்வதினசர்யையில் முதலில் பதின்மூன்றாம் ஸ்லோகம் வரையில் உபோத்காதமென்று முன்னமே சொல்லப்பட்டது.
அதில் 14வது ஸ்லோகம் முதற்கொண்டு இவ்வுத்தர திநசர்யையில் 13ம்ஸ்லோக வரையிலுமே
வரவர முநி திநசர்யை என்று என்ற நூலாகக்கொள்ளபட்டது.
‘திவ்யாம்’ என்பதற்கு திவ்யமான (மிகவுயர்ந்த) பாஞ்சராத்ராகமம் முதலிய ஸாஸ்த்ர ஸித்தங்களான
அநுஷ்டானங்களைக்கூறும் நூல் என்னும் பொருளேயன்றி
திவ்யமான – பரமபதத்திய என்று பொருள் கொண்டு, இவ்வுலகில் நடைபெறாதவையாய் பரமபதத்தில் மட்டும்
நடைபெருமவைகளான பாஞ்சசாலிக (ஐந்து காலங்களில் செய்யவேண்டிய) அநுஷ்டானங்களை
தெரிவிப்பதான நூல் என்னும் பொருளும் கொள்ளலாம்.
இந்த அநுஷ்டானங்கள் மிகவும் துர்லபங்களென்றவாறு பரமைகாந்திகளுடைய இவ்வநுஷ்டான ரூபமான தர்மமானது
க்ருதயுகத்தில் பூரணமாகவே (குறைவின்றியே) நடக்கும்.
த்ரேதத்வாபர யுகங்களில் சிறிது சிறிதாய் குறையும்; கலியுகத்தில் இருக்குமோ இராதோ தெரியவில்லை என்று
பரத்வாஜபரிஸிஷ்டத்தில் கூறியது கொண்டு இதன் அருமை விளங்கும்.
மேலும் பற்பல ஆசைகளோடு சேர்ந்த அறிவையுடையவர்களும் அது காரணமாக
பற்பல தேவதைகளை அராதிப்பவர்களுமான மனிதர்கள், கலியுகத்தில் திருமாலொருவனையே
தெய்வமாக கொள்ளும் இந்த தர்மத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
அறிவு படைத்த வித்வான்களாயிருப்பர். எம்பெருமானைபற்றியதான இவ்வுயர்ந்த நெறியை அறிந்துவைத்தும்,
கலியின் கொடுமையினால், மோகமடைந்து, இதனை அறிவதற்கு முன்புள்ள தங்களது தீயநெறியை
விட்டொழிக்க வல்லவராகமாட்டார். கலியிலும் கூட சிலவிடத்தில் ஒரு சிலர் எம்பெருமனொருவனையே
பற்றுமவர்கள் உண்டாக போகிறார்கள். அனால் கேட்ட நோக்கமுடைய புறச்சமயிகள் தங்களுடைய
கெட்டயுக்திகளாலே அவர்களையும் மயக்கிவிட போகிறார்கள் என்று அதே நூலிலுள்ளும் காணத்தக்கது.
நித்யானுஷ்டானத்தை குறிக்கும் திநசர்யா சப்தம், இலக்கணையினால் ஆராதிக்கப்படுகின்ற எம்பெருமானிடத்திலும்,
ஆராதிக்கின்ற மணவாளமாமுனிகளிடத்திலும், ஆராதனரூபமான இவ்வனுஷ்டானங்கள் விஷயத்திலும்
அளவிறந்த பக்தியோடு கூடியவனாய் இந்த க்ரந்தத்தை எப்போதும் அனுசந்திக்க வேண்டுமென்றபடி
பரமபதம் – உயர்ந்த ஸ்தானமாகிய நித்யவிபூதி. ‘அண்டங்களுக்கும் அவற்றுக்கும் மேலுள்ள மஹதாதிகளுக்கும்
மேலே உள்ள தம்மில் மிக்கதில்லையான மிகஉயர்ந்த லோகங்கள்’ என்று குலாவப்பட்ட ஸ்ரீவைகுண்டலோகமென்றபடி,
ப்ரோப்நோதி – ப்ரகர்ஷேண ஆப்நோதி நன்றாக அடைகிறான்.
அதாவது – பகவான், நித்யஸூரிகள், முக்தர்கள் என்கிற மூவர்களும் கைங்கர்யம் செய்கையாகிற
மூவகைப்பயன்களும் ஸித்திப்பதற்குத் தடையற்ற ஸ்தானத்தை ஆசார்ய பர்யந்த கைங்கர்யமாகிற
பிரகர்ஷத்தோடு பெருமையோடு அடைகிறான் என்பது தேர்ந்த கருத்து.
‘இவ்வைந்து காலங்களில் செய்யத்தக்க பகவதாராதனரூபமான கர்மத்துக்கு
மோக்ஷத்தைக் குறித்து நேரே உபாயமாகை – ஒன்றன்பின் ஒன்றாய் இடையறாது வருகின்ற
அனுஷ்டான காலங்களையறிந்து, அவ்வைந்து வகைப்பட்ட அனுஷ்டானங்களைச் செய்ய வல்லமை படைத்த
அறிவில் மிக்கவர்கள் தமது நூறாவது பிராயம் முடிவு பெற்றவுடனே விரைவாக பரமபதம் அடைகிறார்கள்’ என்று லக்ஷ்மீ தந்த்ரத்திலும்,
‘எல்லா மோக்ஷோபயங்களையும் அடியோடு விட்டு விட்டு, இவ்வைந்து அனுஷ்டானங்களையும்
ஒழுங்காகச் செய்யுமவர்கள் ஒன்றோடொன்று சேர்ந்தேயிருக்கிற கர்மஜ்ஞாநபக்திகளாகிற
உபாயத்தினின்றும் விடுபட்டவர்களாய்க்கொண்டு எம்பெருமானைப் பரமபதம் சென்று
அடைகிறார்கள்’ என்று சாண்டில்ய ஸ்ம்ருதியிலும் கூறப்பட்டுள்ளமை உண்மைதான்.
அனாலும் பரத்வாஜர் முதலிய பெரியோர்கள் எம்பெருமானாகிற ஸித்தோபாயத்தில் ஊன்றியவர்கள்
பலரூபமாகவே (பகவத்கைங்கர்யரூபமாகவே) செய்ய வேண்டுமென்று கூறியுள்ளபடியாலே இதுவே ஏற்கத்தக்கதாகும்.
ப்ரபந்நன் செய்யத்தக்க தர்மங்களைச் சொல்லிக் கொண்டு வந்து,
‘முதலில் அபிகமநம் செய்து, பகவதாராதனத்துக்கு வேண்டிய வஸ்துக்களை சேகரித்தலாகிற உபாதாநம் செய்து,
பின்பு பகவானை ஆராதித்தலாகிற இஜ்யையை அனுஷ்டித்து, நல்ல க்ரந்தங்களைப் படித்தலாகிய
ஸ்வாத்யாயத்தைச் செய்து, கடைசியில் பகவானைத் த்யானம் செய்தலாகிய யோகத்தைச் செய்பவனாய்க் கொண்டு
இங்ஙனம் இவ்வைந்து காலங்களையும் மகிழ்ச்சியுடன் கழிக்கக் கடவன்’ என்றதனால் மகிழ்ச்சியுள்ளது
பலாநுபவ வேளையாகையாலே, இவ்வைந்தினையும் உபாயமாகவல்லாமல்
பலரூபமாகவே செய்யவேணுமென்பது கருதபட்டதென்று திடமாகக்கொள்ளலாம்.
‘கர்மஜ்ஞாநபக்தி பிரபதத்திகளாகிற இந்நான்கினையும் மோக்ஷோபாயமாக அனுஷ்டியாமல் விட்டு விட்டு,
பலத்திலும் இந்நான்கினிலும் என்னுடையவை என்ற பற்று அற்றவனாய்க்கொண்டு
இப்பாஞ்சகாலிகமான அனுஷ்டானங்கள் பரமாத்மாவின் சந்தோஷமே பிரயோஜனமாகக் கொண்ட
கைங்கர்யரூபமாகச் செய்யவேண்டும்’ என்று பராஸர முனிவர் பணித்ததும் இங்கு நினைக்கத் தகும்.
———-
ஸ்ரீதேவராஜகுரு என்னும் எறும்பியப்பா அருளிச்செய்த ஸ்ரீ வரவரமுநி திநசர்யையும்,
அதற்கு வாதூலவீரராகவகுரு என்னும் திருமழிசை அண்ணவப்பய்யங்கார்ஸ்வாமி பணித்தருளிய
சம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி தி.அ .கிருஷ்ணமாசார்ய தாசன் எழுதிய தமிழுரையும் முற்றுப்பெற்றன.
————–
முடிவுரை
ஸ்ரீவரவரமுநி திநசர்யை என்னும் இந்நூல்
பூர்வதிநசர்யை,
மணவாளமாமுனிகள் அருளிச்செய்த யதிராஜ விம்சதி ,
உத்தர திநசர்யை என்ற மூன்று பகுதிகளைக் கொண்டதென்று முன்னுரையிலேயே விண்ணப்பிக்கப்பட்டது.
இரண்டு திநசர்யைகளுக்கும் அண்ணாவப்பய்யங்கார்ஸ்வாமி அருளிய ஸம்ஸ்க்ருத வ்யாக்யானம் மட்டுமே அச்சில் உள்ளது.
யதிராஜ விம்சதிக்கோவெனில் அண்ணாவப்பய்யங்கார்ஸ்வாமியின் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தோடு
ஸுத்தஸத்த்வம் தொட்டையசார்ய ஸ்வாமியும்,
பிள்ளைலோகச்சர்ய ஜீயர் ஸ்வாமியும் பணித்த மணிப்ரவாள வ்யாக்யாநங்களும் ஒருஸம்புடமாக அச்ச்சடிக்கபட்டுள்ளன.
——————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே திருப்பதி க்ருஷ்ணமாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply