ஸ்ரீமத் ராமானுசருடைய 1006 வது திரு அவதார உத்சவம்🙏—ஸ்ரீ திருப்பாவை ஜீயர் அனுபவம்– ஸ்ரீ யதுகிரி ஸ்ரீ ராம் ஸ்வாமிகள் —

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

இன்று முதல்….
உடையவர் என்றழைக்கப்படுமவரான
ஸ்ரீமத் ராமானுசருடைய 1006 வது திரு அவதார உத்சவம்🙏

*ஸ்ரீமத் ராமானுஜரது
திருநாம
வைபவங்கள் மிகவும் சிறப்புடையன*

இளையாழ்வார்:

இளையாழ்வார் (ராமானுஜன்): ராமானுஜரின் தாய்மாமாவான பெரிய திருமலை நம்பி
குழந்தையின் லட்சணங்களைக் கண்டு இவர் ஸ்ரீ ராமனுக்கு எப்படி தம்பி இலக்குவனோ
அதுபோன்று உலகம் உய்யப் பிறந்த உத்தம புருஷன் என எண்ணி
இளையாழ்வார் என்று நாம கரணம் செய்வித்தார்….

யதிராஜர்:

துறவிகளின் அரசர்):*
பகவத் ராமானுஜர் இல்லறவாழ்வைத் துறந்து சந்நியாசம் மேற்கொண்டார்.
காஞ்சி வரதராஜரே அவரை வாரும் யதிராஜரே!
(யதி- துறவி, ராஜர்- அரசர், துறவிகளின் அரசர்) என்று அழைத்து மகிழ்ந்தார்.

உடையவர்:

காஞ்சியிலிருந்து திருவரங்கம் வந்து திருவரங்கன் திருவடியில் கைங்கர்யம் மேற்கொண்டார்
அப்போது, திருவரங்கன் திருவாய் மலர்ந்து கண்குளிர நோக்கி வாரீர்!! எம் உடையவரே!
இனி உபய விபூதி ஐஸ்வர்யமும் உமக்கே! இனி, நீர்! இங்கு நித்ய வாசம் செய்து கொண்டு நம் காரியத்தையும்
ஸ்ரீ ரங்க ஸ்ரீயையும் வளர்த்து வாரும் உம்முடைய திருவடி மற்றும் திருமுடி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மோட்சம் தந்தோம் என்றார்.
அன்று முதல் பகவத் ராமானுஜர் உடையவர் என்று அழைக்கப்பட்டார்.

எம்பெருமானார்:

ராமானுஜர் ஆசாரியரான திருக்கோஷ்டியூர் நம்பியிடம் 17 முறை சென்றார். 18 -ஆவது முறை
திருமந்திரத்தின் பொருளை மற்ற யாருக்கும் இப்பொருளை வெளிப்படுத்தக் கூடாது என்று
ஸ்ரீ ராமனுஜரிடம் சத்ய சங்கல்பம் பெற்று ராமானுஜருக்கு ரகசியமாக ஒரு மந்திரத்தை உபதேசித்தார்.
திரு மந்திரத்தின் பொருளை பெற்ற ராமானுஜர் மிக்க உவகை கொண்டு தான் ஒருவர்க்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை,
இவர்கள் உய்வு பெறவேண்டும் என்று, மிக்க ஆர்த்தியுடன் தம்மை அர்த்தித்த சில ஸ்ரீவைஷ்ணவ அடியார்க்கு உபதேசித்தார்……
இதைக்கேள்வியுற்ற திருக்கோஷ்டியூர் நம்பிகள், அடியேனுக்கு இப்படி ஒரு நல்ல எண்ணம் இதுவரை தோன்றவில்லையே என்று,
ராமனுஜரின் விரிந்த உள்ளத்தை எண்ணி, அவரை வாரியணைத்து உச்சி முகர்ந்து
*வாரீர் எம்பெருமானாரே’ என்றவாறு அணைத்துக் கொண்டாடினார்…

ஸ்ரீ பாஷ்யக்காரர்:

ஸ்ரீமத் நாதமுனிகளின் திருப்பேரனார்
ஸ்ரீ ஆளவந்தாரின் மூன்று மனோரதங்களில் ஒன்று
ஸ்ரீ வேதவியாசர் அருளிச் செய்த பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைத சித்தாந்த முறையில் உரை செய்வது
இதற்கு ஸ்ரீ போதாயன மஹரிஷி அருளிய போதாயன விருத்தி கிரந்தம், காஷ்மீர் தேசத்திலுள்ள ஸ்ரீ சாரதா பீடத்தில் இருந்தது.
ஸ்ரீ கூரத்தாழ்வானுடன் வட தேச யாத்திரை சென்ற பகவத் ராமானுஜர் போதாயன விருத்தி கிரந்தத்தை
பல சிரமங்களுக்கிடையே பெற்றார், ஸ்ரீரங்கம் திரும்பியதும் பகவத் ஸ்ரீராமானுஜர் பிரம்ம சூத்திரங்களுக்கு
கூரத்தாழ்வான் உதவியுடன் பாஷ்யம் (விளக்க உரை) எழுதி காஷ்மீர் தேசத்திலுள்ள ஸ்ரீ சாரதா பீடத்தில்
எழுந்தருளியுள்ள ஸ்ரீ சரஸ்வதிதேவியின் திருவடிகளில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற ஏற்பாடு செய்தார்.
ஸ்ரீசரஸ்வதி தேவியும் மிக உகந்து விளக்க உரையை அங்கீகரிக்கும் பொருட்டு தன் முடி மேல் தாங்கி
பகவத் ராமனுஜரை பாராட்டி ஸ்ரீ பாஷ்யக்காரர் என்ற திருநாமம் சூட்டி தன்னிடம் உள்ள
ஹயக்ரீவர் விக்கிரகத்தையும் கொடுத்து கெளரவித்தாள்……

திருப்பாவை ஜீயர்:

திருப்பாவையில் பக்தி, அதிக ஈடுபாடுகொண்ட ராமானுஜர் மார்கழி மாதத்தில் ஒரு நாள் திருப்பாவையை
அநுஸந்தித்துக் கொண்டே வீதியில் வரும் போது தன் ஆசாரியர் ஸ்ரீ பெரிய நம்பியின் வீட்டின் முன் வரும்போது
அவருடைய பெண் அத்துழாயை பார்த்து மூர்ச்சித்து விழுந்தார்.
திடுக்கிட்ட அத்துழாய் தன் அப்பாவிடம் இதை கூறினாள்.
ராமனுஜரின் திருப்பாவையின் பிரேமையை மெச்சிய ஸ்ரீ பெரியநம்பிகள், உந்துமதகளிற்றன்பாசுர அநுஸந்தானமோ!*
என்று அவரைத் “திருப்பாவை ஜீயரே
என்று விளித்து அகம் மகிழ்ந்தார். அன்று முதல் ராமானுஜர் திருப்பாவை ஜீயர் ஆனார்……..

கோயிலண்ணர்:

பகவத் ராமானுஜர் நாச்சியார் திருமொழி பாசுரங்களுக்கு வியாக்யானம் செய்த பொழுது
நாறு நறும் பொழில் மாலிருந்சோலை நம்பிக்கு என்ற பாசுரத்தின் பொருளை விளக்கினார்.
அதில், கோதை ஸ்ரீ ரங்கநாதன் தனக்கு மணாளனாக அமைந்தால் திருமாலிருஞ்சோலை ஸ்ரீ அழகர் பெருமாளுக்கு
100 தடா வெண்ணெயும் 100 தடா அக்காரஅடிசிலும் செய்து சமர்ப்பிப்பதாக வேண்டியிருந்தாள்.
ஆனால் சமர்ப்பிக்கவில்லை; ராமானுஜர் அதை நிறைவேற்றினார். பின்பு ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்றார்.
கோயிலுக்குள் நுழைந்தபோது அர்ச்சைவடிவில் இருந்து ஆண்டாள், என் கோயில் அண்ணாவே வாரும் என்று அழைத்தார்.
தன்னை அண்ணா என்று அழைத்த ஆண்டாளுக்கு ஒரு சிம்மாசனம் சமர்ப்பித்தார் ராமானுஜர்.
இன்றளவும் அர்த்த மண்டபத்தில் வைக்கப்பட்ட
அந்த சிம்மாசனத்தில்தான் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரங்க மன்னார், ஸ்ரீ கருடர் எழுந்தருளி இருக்கின்றனர்.
ஆண்டாளின் அவதாரம் பகவத் ராமானுஜர் அவதாரத்திற்கு முன்னமே நிகழ்ந்தாலும், ஆண்டாளின் வாழித் திருநாமத்தில்
அனுபவிக்கப் பெறுகிறோம்……

லட்சுமணமுனி:

திருக்கோட்டியூர் நம்பிகள் சில முக்கிய அர்த்த விசேஷங்களை பகவத் ராமனுஜருக்கு சொல்லும் படி
திருவரங்கப் பெருமாள் அரையரிடம் வேண்டிக்கொண்டார்.
ராமனுஜரும் ஆசாரியரான திருவரங்கப்பெருமாள் அரையருக்கு பக்குவமாக பாலமுது காய்ச்சி கொடுத்து
மேலும் பல தொண்டினை செய்து அவருக்கு உகப்பாக நடந்து கொண்டார்.
ஆறு மாத காலம் தொண்டு செய்து ஸ்ரீ ஆளவந்தார் அருளிய ஸ்தோத்திர ரத்னம் மற்றும் சதுஸ்லோகி
ஆகியவற்றின் ஆழ்பொருளை அறிந்து கொண்டார்.

திருவரங்கப்பெருமாள் அரையர், எப்படி லட்சுமணன் அண்ணன் ஸ்ரீ ராமபிரானுக்கு சிறந்த தொண்டனாக
தன்னலம் கருதாது இரவு பகல் பாராது செயல்பட்டாரோ, அது போல் நம் ராமனுஜரின் செயல்களும் உள்ளது
என்ற நிலையால் “லட்சுமணமுனி’என்று திருநாமம் சூட்டி மகிழ்ந்தார்.

சடகோபன் பொன்னடி:

நம்மாழ்வரித்தும் அவர் அருளிச் செய்த திருவாய்மொழியிலும் ராமனுஜருக்கு அளவற்ற ஈடுபாடு.
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் தம்மை “சடகோபன் பொன்னடி’ என்றே அழைக்குமாறு வேண்டினார்.

குணம் திகழ் கொண்டல்:

திருவாய்மொழியின் மணம் தரும் இசை மன்னும் இடம் தோறும் புக்கு நிற்கும் “குணம் திகழ் கொண்டல்’ என்று
ராமானுஜ நூற்றந்தாதி எழுதிய திருவரங்கத்தமுதனார் ராமானுஜரை கொண்டாடுகிறார்.

ஜெகதாச்சாரியார்:

ராமானுஜர் காட்டிக் கொடுத்த பக்தி மார்க்கம் அனைவரும் அவரவர் தகுதிக்கும் அறிவுத்திறனுக்கும் தருந்தவாறு
பின்பற்றக்கூடியதாக இருக்கிறது பண்டிதரும், பாரரும், பெண்களும், பாலகரும் பின்பற்றக்கூடியது.
இதனால் இவர் எல்லாக்காலத்து மக்களுக்கும் பயன்படக்கூடிய பக்தி மார்க்கத்தைக் காட்டியருளியதால்
உலகத்துக்கு வழிகாட்டி என்ற முறையில் “ஜெகதாசாரியார்’ என்று போற்றப்படுகிறார்.

தேசிகேந்திரர்:

திருமலை வெங்கடேசப்பெருமாளால் ராமானுஜருக்கு வழங்கப்பட்டது.
உலக மக்களை நல்வழி படுத்துபவர் என்பதால் “தேசிகேந்திரர்’ எனப்படுகிறார்.

———–

ஸ்ரீமதே ராமானுஜாய நம:🙏

ஸ்ரீ திருப்பாவை ஜீயர்

திருப்பாவையில் மிக்க ஈடுபாடு கொண்டிருந்ததாலும் ,
அதை அநுஸந்திப்பதில் போர அபிநிவிஷ்ராயிருந்ததாலும் வ்யபதேசம்…..
அதுவுமன்றிக்கே முக்ய ஹேது ஒவ்வொரு பாசுரத்திலும் எம்பெருமானாரைச் சிந்திக்க வேண்டும் படியான
சொற்றொடர்கள் அமைந்துள்ளபடியாலும், இதை ஏறிட்டுரைக்கும் முறையிலன்றிக்கே
ஏற்ற முறையில் விவரிக்கப்படுமதாக உள்ளபடி……

1. மார்கழித் திங்கள்……

மதி நிறைந்த நந்நாள்.. என்றது பரிபூரணசுக்லபக்ஷம்.. . .
உள்ளுரைப்பொருள்…
மதி-ஜ்ஞானம்.. . . அது நிறையப்போகிற நந்நாள்..
எம்பெருமானார் அவதரித்த நாள் இருள்தரு மா ஞாலத்தவர்க்கு ஜ்ஞானம் நிறைவதற்கு ஹேதுவான நந்நாள்..

நிறையப்போகிற என்னுமிடத்து நிறைந்த என்றது 0கால வழுவமைதி என்று தமிழர்…
வடமொழி வ்யாகரணத்தில் ஆசம்ஸாயாம் பூதவச்ச என்னுமது..

யதிராஜ ஸப்ததியில்..
அநபாய விஷ்ணுபத ஸம்ஸ்ரயம் பஜே
என்று எம்பெருமானாரை விலக்ஷண பூரண சந்திரனாக ப்ரதிபாதிக்கப்படுகிறார்…
அந்த யதிராஜ சந்திரன் தோன்றிய நந்நாள்!!!

சித்திரைத்திங்கள் மனிதர்களுக்கு முதல் மாதம்…
மார்கழித் திங்கள் தேவர்களுக்கு முதல் மாதம்!!
ஆகவே ஸ்வாமி யின் அவதாரம் முதல் மாதம் என்கிற ப்ரஸித்திக்குக் குறையில்லை!!!!! 🙏

2. வையத்து வாழ்வீர்காள்!…..

பாற்கடலுள் பையத்துயின்ற பரமன்…. திருப்பாற்கடலிலே துயின்ற பரமன் க்ஷீராப்திநாதன்…
நம்மாழ்வார்
உனது பாலே போல் சீரில் பழுத்தொழிந்தேன்
என்கிற பாசுரத்தினால் பகவத் குணங்களைப் பாலாகப்பேசினார்..
அவர்தாமே அக்குணங்களைக்
சீர்க்கடலையுள் பொதிந்த என்று கடலாகவும் பேசினார்.

ஸ்ரீ பாஷ்யகாரரும்
அநந்த குணஸாகரம் ப்ரஹ்ம ” என்றார் பரமபுருஷனை…
அவ்வளவோடு நில்லாமல் அக்குணங்களையே தமது திவ்யக்ரந்தங்களில்
வாய் வெருவுவதும் செய்கிறார்..
ஏவஞ்ச, பகவத்குண ஸாகரத்திலே அஸ்தமிதாந்ய பாவராய் இன்புறும் பரமர் எம்பெருமானார் என்றபடி….. .. 🙏

3. ஓங்கி உலகளந்த உத்தமன்……

மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து…..
ஞானம் கனிந்த நலம் கொண்டு ….
இத்யாதிகளான நூற்றந்தாதிப் பாசுரங்களிற்படியே
எம்பெருமானைவிட ஓங்கி… அதிசயித்து. …
உலகத்தையெல்லாம் ஸ்வாதீனமாக்கிக்கொண்ட உத்தமர்
ஸ்ரீராமானுஜர் ஒருவரே. . ……

ஒருவர்க்கும் ஒன்றுஞ்சொல்லாதவர் அதமர்…
நிர்பந்தத்தினால் சொல்லுமவர் மத்யமர்….
தம்முடைய கருணையினால் தாமே சொல்லுமவர் உத்தமர்..
ஓராண்வழியாய் உபதேசித்தார் முன்னோர் என்கிற உபதேசரத்தினமாலை யின் படி உத்தமர் ஸ்ரீராமானுஜர் ஒருவரே….

நூற்றந்தாதியில் மற்றொரு பேறு மதியாது என்கிற பாசுரத்தில்
உத்தமனாக வும்
கூறப்பட்டுள்ளார்.. 🙏

4.ஆழிமழைக் கண்ணா…..

இப்பாடலில் ஆழியும் சங்கும் சார்ங்கமும் வருவதனால்
அடையார் கமலத்து அலர்மகள் கேள்வன் என்கிற
நூற்றந்தாதிப் பாசுரத்தின் படிக்கும்
வவ்ருதே பஞ்சபிராயுதைர் முராரே: என்கிற
யதிராஜ ஸப்ததி ப் படிக்கும்
பஞ்சாயுதாழ்வார்களின் ப்ராதுர்ப்பாவ விசேஷமான எம்பெருமானார் நினைப்பூட்டப்படுகிறார்.

ஒன்றும்நீ கைகரவேல்…..
அருமையாகப் பெற்ற அர்த்த விசேஷங்களை ஒன்றும் ஒளித்திடாமல்
வர்ஷித்த மேகம் இராமனுசனென்னுஞ் சீர்முகிலே….

ஆழியுள் புக்கு என்றவிடத்தில்
உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம் என்கிற
ஸ்ரீபாஷ்யகார திவ்யஸூக்தி மிகப் பொருத்தமாக அநுஸந்திக்கத்தகும்….. 🙏

5. மாயனை மன்னு வடமதுரை…..

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு..
எம்பெருமானார்……
இடக்கை வலக்கை அறியாத இடையர்கள் வாழ்ந்தவிடம் திருவாய்ப்பாடி…
அதில் தோன்றிய அணி விளக்கு… ஆயர்பாடிக்கு அணிவிளக்கே!! என்று
யசோதைப்பிராட்டியால் அழைக்கப்பெற்ற கண்ணபிரான்.

ந்ருபசு: என்று ஆளவந்தாரும்
வ்ருத்த்யா பசுர் நரவபு: என்று மணவாள மாமுனிகளும் அருளிச் செய்தபடி
பசுப்ராயர்களான அஸ்மதாதிகள் வர்த்திக்குமிடமும் ஆயர்குலமாதலால்
இருள்தருமாஞாலமாகிற இவ்வாயர் குலத்திலே தோன்றிய அணி விளக்கு —
இராமானுச திவாகரர்..

புண்யாம்போஜ விகாஸாய பாப த்வாந்த க்ஷயாய ச
ஸ்ரீமாந் ஆவிரபூத் பூமௌ ராமானுஜ திவாகர: என்னக்கடவதிறே…. 🙏

6. புள்ளும் சிலம்பினகாண்……….

புள்ளரையன் கோயில் வெள்ளை விளி சங்கு என்பது
எம்பெருமானார்க்கு மிகச் சிறந்த ப்ரத்யபிஜ்ஞாபகம்..

பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன்னியமே… என்றபடி பால் போன்ற நிறத்தது..

ஸ்வாமி எம்பெருமானாரும்
துக்தோ தந்வத் தவள மதுரம் ஸுத்த ஸத்வைகரூபம் யஸ்ய ஸ்புடயதிதராம் யம் பணீந்த்ராவதாரம் என்றபடி
பால் போன்ற திருநிறத்தவர்.
இந்தச் சங்கு எங்கு வாழ்ந்ததென்னில். புள்ளரையன்கோயில்…….

பூமருவப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறும் புனலரங்கமே என்று
பெரியாழ்வார் புள்ளரையன் கோயிலாகக் கூறிய திருவரங்கத்தில் வாழ்ந்தது.

சக்கரம் சங்கு என்ற இரண்டு திவ்யாயுதங்களில் சக்கரம் கருதுமிடம் பொருது என்ற
அருளிச்செயலின் படியே
காசீவிப்லோஷாதி நாநா கார்யவிசேஷங்களுக்காக பாஹ்ய ஸஞ்சாரங்கள் செய்து கொண்டேயிருக்கும்.

திருச்சங்கு அப்படியன்றியே
உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்
*கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே என்னும்படி இருக்கும்.
ஸ்வாமி தாமும் யாவச்சரீரபாதம் அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ -(சரணாகதி கத்யே) என்ற
ஸ்ரீரங்கநாதன் கட்டளையைப் பெற்றுக் கோயிலே கதியாயிருந்தவர்.
ஆகவே, கோயில் சங்கு என்றது ஸ்வாமி எம்பெருமானார்க்கு மிகப் பொருத்தம்….. 🙏

7. கீசு கீசென்றெங்கும்……..

கலந்து பேசின பேச்சரவம்………
பூர்வாசார்ய ஸ்ரீஸூக்திகளோடே கலந்திருக்கும்படி.. (அவற்றுக்கு முரண்படாதபடி)
ஸ்ரீஸூக்தி அருளிச் செய்தவர் ஸ்ரீராமானுஜர் என்பது இவருடைய திவ்யஸூக்தியினால் ஸித்தம்.
ஸ்ரீபாஷ்யம் தொடங்கும்போதே
பகவத் போதாயன க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்மஸூத்ர வ்ருத்திம் பூர்வாசார்யாஸ் ஸஞ்சிக்ஷிபி:
தந்மதாநு ஸாரேண ஸூத்ராக்ஷராணி வ்யாக்க்யாஸ்யந்தே
என்றருளிச்செய்தவர் ஸ்வாமி ஒருவரேயன்றோ!!!!

அன்றியும் ,
கலந்துபேசுவதாவது–
வடமொழி தென்மொழிகளைக் கலந்து மணிப்ரவாளமாகப் பேசுவது. ..
இத்தகைய க்ரந்தம் முதன்முதலாகத் திருவாறாயிரப்படியே தோன்றியது..
அது *பிள்ளான் அருளியதாயினும் எதிராசர் பேரருளால் என்று
மணவாள மாமுனிகள் அருளிச் செய்தபடியே ஸ்வாமி கற்பித்த நடையேயாம் அது..
ஆகவே *இருமொழிகளைக் கலந்து பேசின பேச்சுக்கு நிதான பூதர் ஸ்வாமி என்று குறிப்பிட்டவாறு… 🙏

8. கீழ்வானம் வெள்ளென்று…..

மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து….என்றதில்
ஸ்வாமி யின் ப்ரபாவமே நன்கு ஸ்புரிக்கும்..
*அர்வாஞ்சோ யத்பத ஸரஸிஜத்வந்த்வமாச்ரித்ய பூர்வே மூர்த்நா யஸ்யாந்வயமுபகதா தேசிகா முக்திமாபு:. என்ற பட்டர்
ஸ்ரீஸூக்திப்படி க்கும்

*பாதகோடீரயோஸ் ஸம்பந்தேந ஸமித்யமான விபவாந் என்ற
நிகமாந்த மஹாகுருஸூக்திப்படிக்கும்
திருவடி ஸம்பந்தத்தாலே பின்னர்களையும்
திருமுடி ஸம்பந்தத்தாலே முன்னோர்களையும் வாழ்வித்தவர் ஸ்வாமி எம்பெருமானார்

* மிக்குள்ள பிள்ளைக ள் என்றது ஸ்வாமிக்கும் பூஜ்யர்களாயிருந்த பூர்வர்களை,
அவர்களைப் *போகாமல் காத்து என்றது தாம் அவதரித்து அவர்களை நற்கதி யெய்துவித்தபடியைக் காட்டுமதாம்… 🙏

9. *தூமணிமாடத்துச் சுற்றும்…..

மணிக்கதவம் தாள் திறவாய்…….

மணியென்று ரத்னத்திற்குப் பெயர்.
நவரத்னங்களாகையாலே ஒன்பது என்கிற ஸங்க்யை ஸூசிதமாகிறது.
கதவு என்பது பதார்த்தங்களைச் சேமித்து வைப்பது.
ஸ்வாமி யினுடைய திவ்யக்ரந்தங்களே இங்குக் கதவென்பன.
ஸ்வாமி அருளிச் செய்தவை
ஸ்ரீபாஷ்யம்,
வேதாந்த தீபம்,
*வேதாந்த ஸாரம்,
*வேதார்த்த ஸங்க்ரஹம்,
கீதா பாஷ்யம்,
சரணாகதி கத்யம்,
ஸ்ரீரங்க கத்யம்,
*ஸ்ரீவைகுண்ட கத்யம்,
*நித்யம் என்று ஒன்பது திவ்யக்ரந்தங்களாகையாலே அவையே இங்கு மணிக்கதவ மெனப்படுகிறது..

அவற்றைத்திறக்க வேணுமென்றது—
அவற்றிலுள்ள அர்த்தவிசேஷங்கள் எங்களுக்கும் நிலமாம்படி விளக்கியருளவேணுமென்றபடி.. 🙏

10. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற…….

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்……
அருங்கலமே…. என்ற இரண்டு விளிகளிலும்
ஸ்வாமியின் ப்ரத்யபிஜ்ஞை நன்கு உண்டாகும்.*

நோற்று என்றது மஹாபாக்ய வசத்தாலே என்றபடி.

*ஸுவர்க்கம் புகுகின்ற— வர்க்கமென்று ஸமூஹத்திற்குப் பெயர்.
ஒரு வகுப்பு என்றபடி.

(ஸு) என்பதனால்
மிகச் சிறந்த வகுப்பு என்றதாகும்.

யாதவப்ரகாசரிடத்திலே வாசித்துக் கொண்டிருந்து அவர் சாயையிலே ஒதுங்கி இருந்த ஸ்வாமி
அவருடைய கருத்தின்படியே ஆபத்துக்களை அடைந்து போகாமல்
நம்போலியர்களின் பாக்யவசத்தாலே பெருந்தேவி மணவாளனான பேரருளாளனது பரமக்ருபைக்கு இலக்காகி
ஸ்ரீவைஷ்ணவ வகுப்பிலே புகுந்து அனைவர்க்கும் தாயாயிருந்தவர்.

*சுவர்க்கம் என்பதற்கு ஸ்வர்க்கமென்றே பொருளானாலும்
யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா என்ற ஸ்ரீராமாயணத்தின்படி
எம்பெருமானோடு கூடப்பெற்றவர் என்றதாகும்.

ஸித்தாஸ்ரமத்தில் நின்றும் வருகிறோமென்று சொல்லிக் கொண்டு வந்த
வேடனும் வேடுவிச்சியுமான பகவத் தம்பதிகளோடே கூடப்பெற்றமை கூறினபடி.

அருங்கலமே!! என்றது
அருமை பெருமை வாய்ந்த ஆபரணமே!! என்றும்
உத்தம ஸத்பாத்ரமே!! என்றும் பொருள்படும்.
நம்முடைய குருபரம்பரையிலே மஹாபூஷணமாக விளங்குமவர் ஸ்வாமி

* தஸ்மிந் ராமானுஜார்யே குருர் இதி ச பதம் பாதி நாந்யத்ர
என்னும்படிக்குப் பொருத்தமாக உத்தம ஸத்பாத்ரமாயும் விளங்குமவர்…… 🙏

11ஆம் பாசுரம்…
கற்றுக் கறவைக் கணங்கள்

இப்பாசுரத்தில் கற்றுக் கறவை என்று தொடங்கி
கோவலர் தம் பொற்கொடியே என்னுமளவுமுள்ள விளி பூர்த்தியாக
எம்பெருமானார் தன்மையையே தெரிவிக்குமதாய் இருக்கும்..

கற்று–
சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்குமெல்லையில்லா வறநெறியாவும் தெரிந்தவன் என்ற
நூற்றந்தாதிப் பாசுரப்படியே எல்லாக் கல்விகளையும் கற்று;

கறவைக்கணங்கள் பல கறந்து…
பஞ்சாசார்ய பதாச்ரித என்று யதிராஜ வைபவத்தில் கூறியுள்ளதை விவரிக்கிறபடி..

கவா மங்கேஷு திஷ்டந்தி புவனானி சதுர்தச-என்கிறபடியே
கோக்கள் பதினான்கு லோகங்களையும் தம்முள் வஹிக்குமாபோலே
சதுர்தச வித்யைகளையும் தம்முட்கொண்டு நன்றாகக் கறக்கும் ஆசார்யர்கள் பலரிடத்திலும்
ஸத்ஸம்ப்ரதாயார்த்தங்கள் கேட்டு உய்ந்தவர் ஸ்வாமி ,,…….

பெரிய நம்பி பக்கலிலே பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்று மந்த்ரார்த்தங்கள் கேட்டும்,
பெரிய திருமலைநம்பி பக்கலிலே ஸ்ரீராமாயணார்த்தம் கேட்டும்,
திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே ரஹஸ்யார்த்தங்கள் சிக்ஷித்தும்
திருமாலையாண்டான் பக்கலிலே திருவாய்மொழிப் பொருள் கேட்டும்,
ஆளவந்தாராழ்வார் ஸ்ரீபாதத்திலே அருளிச் செயல் கற்றும்
நல்வார்த்தைகள் கேட்டும் போந்தவராகையாலே
கறவைக்கணங்கள் பலகறந்து என்றது ஸ்வாமி க்கு மிகப்பொருத்தம்..

அதற்கு மேல் செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்……..
எம்பெருமானை
நிர்க்குணனென்றும்
நிர்விபூதிகனென்றும்
நிர்லக்ஷ்மீகனென்றும்
திவ்யமங்களவிக்ரஹ சூன்யனென்றும் சொல்லுமவர்கள்–செற்றார்.. ;

அவர்களுடைய திறலழிய–
வாக்கு மிடுக்குத் தொலையும்படியாக,
திசைதொறு மெழுந்தருளி வாதப் போர் நிகழ்த்தியவர் ஸ்வாமி….

விப்ரம் நிர்ஜித்ய வாதத: என்கிறபடியே
இது குற்றமாகையன்றிக்கே ஸித்தாந்த ரக்ஷணார்த்தமாகச் செய்ததாகையாலே
நற்றமேயாயிற்றென்று காட்ட குற்றமொன்றில்லாத என்றது.

கோ என்னும் வடசொல் நாநார்த்தமாகையாலே
ஸ்ரீஸூக்தியையும் சொல்லக் கடவது.
யத் கோஸஹஸ்ர மபஹந்தி தமாம்ஸி பும்ஸாம் என்றவிடத்திலும் இது காணலாம்.

கோ வல்லவர்–
மஹாவித்வான்கள்.

அவர்தம் பொற்கொடி-
ஸ்வாமி..

கோ அ(ல்)லர்—
ஸ்வதந்திரரல்லர்…🙏

12 ஆம் பாசுரம்….
கனைத்திளங் கற்றெருமை…….

ஸ்வாமி யின் திருவவதார ஸ்ரீபெரும்புதூரில் இரட்டித்து சேவிக்கும் பாசுரமிது..
பூருவாசாரியர்களும் தங்கள் வ்யாக்யானங்களின் முடிவிலே எம்பெருமானாரை ப்ரஸ்தாவித்திருக்கும் பாசுரமுமிது.

இப்பாடலில்
நற்செல்வ னென்றது ஸ்வாமி யைக்கருதி…

நற்செல்வன் என்பதை வடமொழியில் கூறவேணுமானால்
லக்ஷ்மி ஸம்பந்ந:-என்னவேணும்….
ஸ்ரீராமாயணத்தில் லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந: என்னப்பட்ட இளையபெருமாளே யன்றோ
இளையாழ்வார் ஆகத் திருவவதரித்தவர்…

அவர் அஹம் ஸர்வம் கரிஷ்யாமி என்று விபவாவதாரத்திலே அடிமை செய்யப் பெற்றார்.
இவர் நித்ய கிங்கரோ பவாநி அர்ச்சாஸ்தலங்களிலே ஒப்புயர்வற்ற அடிமைகள் செய்யப்பெற்றார்..

மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றுமுவந்திடு நாள் 🙏🙏

13 ஆம் பாசுரம்…..
புள்ளின் வாய் கீண்டானை……

இப்பாட்டில்
கள்ளந்தவிர்ந்து கலந்து …என்றது
உயிரான சொற்றொடர்……….

கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேண ஆத்மாபஹாரிணா என்றபடி
ஆத்மாபஹாரக் கள்வமொன்றுண்டு.;

அது தவிர மற்றொரு கள்வம் கேண்மின்;
ஏகஸ் ஸ்வாது ந புஞ்ஜீத புஞ்ஜீத பஹுபிஸ் ஸஹ…..
இன் கனி தனியருந்தான் என்கிறபடியே
போக்ய பதார்த்தங்களைப் பலரோடுங்கூடி யநுபவித்துக் களிக்கையன்றிக்கே
அசலறியாதபடி யநுபவிக்கை கள்வம்;

எம்பெருமானார்க்கு முற்பட்ட ஆசாரிர்களிடத்து இத்தகைய கள்வமிருந்தது;
அதனைத் தவிர்ந்தவர் ஸ்வாமி யொருவரே தவிர்ந்து
எல்லாரோடுங் கலந்து அநுபவித்தவர்.

பிள்ளைகளெல்லாரும் பாவைக்களம் புக்கார் என்றதும்
ஸ்வாமி யின் பெருமையை நினைப்பூட்டும்.
*பாவைக்களம் என்பது காலக்ஷேப மண்டபம்.
அதில் எல்லோரும் புகழ் பெற்றது ஸ்வாமி க்கு முன்பு இல்லை.
அதிகாரப்பரீக்ஷை பண்ணிப் பலர் விலக்கப்பட்டிருந்தார்களன்றோ!!..
ஆசைக்கு மேற்பட்ட அதிகார ஸம்பத்தியில்லை யென்றுகொண்ட ஸ்வாமியின் காலத்தில் தான்
பிள்ளைகளெல்லாரும் பாவைக்களம் புக்கார் !!!
அதனை நன்கு காட்டினபடி……… 🙏

14 ஆம் பாசுரம்…………….

உங்கள் புழக்கடைத் தோட்டத்து……

இப்பாடலில்…..

செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின…..
என்பதில் ஸ்வாமி யின் திவ்யப்ரபாவமொன்று நினைவுக்கு வரும்.

ஸ்வாமி யாதவப்ரகாசரிடத்திலே பூர்வபக்ஷ வேதாந்தம் வாசித்தபோது
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம
ஐததா³த்ம்யமித3ம் ஸர்வம் தத்த்வமஸி இத்யாதி
ஸ்ருதி வாக்யங்களுக்கு அவர் அபார்த்தம் கூற,
ஸ்வாமி “இப்படியன்றோ பொருள்” என்று உபபந்நமான அர்த்தமருளிச்செய்ய ,
மேல் வாய் திறக்க மாட்டாதே, ஹூங்காரமே பண்ணிப்போந்ததாக வைபவ நூல்கள் விளம்புகின்றன.
அது இங்கு நினைவுக்கு வரும்.

ஸ்வாமி திருவாய் மலர்ந்தருளியது செங்கழுநீர் வாய்நெகிழ்ந்தமை
யாதவர் மறுமாற்றம் சொல்லமாட்டாமே வாய்மூடிக் கிடந்தது ஆம்பல்வாய் கூம்பினமை

மேலே
செங்கல்பொடிக்கூ றை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
என்றதும் ஸ்வாமி க்கு மிகப் பொருத்தம்.

செங்கல்பொடிக்கூறை—-
காஷாயேண க்ருஹீத பீதவஸநா
யதிராஜ ஸப்ததி யில் போற்றப்பட்ட திவ்ய மூர்த்தி…

வெண்பல்–
அச்யுதபதாம்புஜ யுக்மருக்மவ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாயமேநே என்னும்படி
மஹாவிரக்த ஸார்வபௌமராகையாலே …
யத் தஸ்மை திஷ்டதேந்ய: க்ருபணம்சரண: தர்சயந் தந்த பங்க்தீ என்னும்படி
பிறர்பாடே பல்லைக்காட்டப் பெறாதவர்.

தவத்தவர்–
மம மம என்னாதே தவ தவ என்று சேஷத்வம் பரிமளிக்க நிற்பவர்.

தங்கள் திருக்கோயில்—-
அமுதனாருடைய ஆதீனத்திலிருந்த கோயில் தங்கள் திருக்கோயில் என்னும்படி
தம்மதீனமாகப் பெற்றவர்.

சங்கிடுவான்—-
சங்க: என்ற வடமொழி சங்கு என்று திரிவதுபோல்
சங்கு: என்ற வடமொழியும் சங்கு எனத்திரியும்.
இச்சொல் திறவுகோல் என்னும் பொருளைத்தரும்.
ஆறாயிரப்படியில் இப்பொருளும் படிக்கப் பெற்றது.
ஆழ்வான் மூலமாகத் திருக்கோயில் திறவுகோலைப்பெற்ற இதிஹாஸம் இச்சொற்றொடரில் அநுஸந்திக்கலாகிறது……. 🙏

15 ஆம் பாசுரம்……

எல்லே இளங்கிளியே……

இப்பாட்டில் உனக்கென்ன வேறுடையை… என்னுஞ்
சொற்றொடர் நிதியானது…
உமக்கு மட்டும் அசாதாரணமான பெருமை என்னே! என்று வியந்து கூறப்பட்டுள்ளது.
ஸ்வாமி க்கு முன்னே நம்மாழ்வரும் ஸ்ரீமந்நாதமுனிகளும் ஆளவந்தாரும்
நம் தர்சனத்திற்கு நிர்வாஹகர்களாயிருக்கச்செய்தேயும்
நம்மாழ்வார் தர்சனம் என்றோ,
நாதமுனிகள் தர்சனம் என்றோ,
ஆளவந்தார் தர்சனம் என்றோ
வ்யவஹாரம் வாராமே எம்பெருமானார் தர்சனம் என்றே வ்யவஹாரம் நிகழ்ந்துவருகைக்கீடான
ஸ்வாமி யின் அஸாதாரணமான பெருமை இங்கு அநுஸந்திக்க உரியது.

மாற்றாரை மாற்றழிக்க வல்லா னென்ற விடத்தில்—
பாஷண்ட த்ருமஷண்டதாவதஹனச் சார்வாக சைலாசநி:
பௌத்த த்வாந்த நிராஸ வாஸரபதிர் ஜைநேப கண்டீரவ:
மாயாவாதி புஜங்கபங்க கருட:

தற்கச்சமணரும் சாக்கியப்பேய்களும்…….. நீசரும் மாண்டனர்………

சாறுவாகமத நீறு செய்து…..
இத்யாதிகள் நினைவுக்கு வரும்…. 🙏

16 ஆம் பாசுரம்….
நாயகனாய் நின்ற நந்தகோபன்….

யதிராஜ ஸப்ததியில்….
அமுநா தபநாதிஸாயி பூம்நா யதிராஜேன நிபத்த நாயகஸ்ரீ: மஹதீ குருபங்க்தி ஹாரயஷ்டி: என்று
பணித்தபடியே நம்முடைய குருபரம்பரா ஹாரத்தில் நாயகமணியாய் விளங்குமவர் ஸ்வாமி……………

நந்தகோபன்……
தனக்கு ஔரஸபுத்திரனில்லாமல் ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம் என்னப்பட்ட
ஒரு தெய்வத்தைப் புதல்வனாகக் கொண்ட நந்தகோபன் போலே
ஸ்வாமி யும் யதிராஜ ஸம்பத்குமாரா!……
என்னும்படி செல்வப்பிள்ளையை த் தம் புத்திரராகப் பெற்றவர்………..

உடைய……….
உடையவர் என்கிற திருநாமம் ஸூசிதமாகிறதென்று கொள்ளக்குறையில்லை………

கோயில்காப்பான்.
ஸ்ரீமந்! ஸ்ரீரங்க ச்ரியமநுபத்ரவா மநுதிநம் ஸம்வர்த்தய என்னும்படி
ஸ்ரீரங்க ஸ்ரீயைக் காத்தருளினவர் ஸ்வாமி…………

கொடித்தோன்றும் தோரண வாசல் காப்பான்…………
உபய விபூதி ஸாம்ராஜ்ய பட்டாபிஷிக்தா!… என்பது ஸ்வாமி க்குக் கட்டியம்.

கீழ் கோயில் காப்பானே! லீலா விபூதி ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம் சொல்லிற்று.
இங்கு நித்யவிபூதி ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம் சொல்லுகிறது.
*கொடியணி நெடுமதிள் கோபுரம் குறுகினர் நெடுவரைத்தோரணம் நிறைத்து எங்கும் தொழுதனருலகே என்னும்படி
கொடித்தோன்றும் தோரண வாசல் நித்ய விபூதி வாசல்!;
அதையும் பிறர் புகாதபடி காத்தருள்பவர் ஸ்வாமி……. 🙏

17ஆம் பாசுரம்……
அம்பரமே தண்ணீரே………

அம்பரத்தையும் தண்ணீரையும் சோற்றையும் அறம் செய்தவர் ஸ்வாமி..
அம்பரம் வ்யோம வஸ்த்ரயோ: என்ற நிகண்டுவின்படி அம்பரமாவது ஆகாசம்;
பரமாகாசமெனப்படுகிற பரமபதம் அதையும்
விரஜை யாகிற தண்ணீரையும்,
அன்னம் ப்ரஹ்மேதி வ்யஜாநாத் என்று உபநிஷத்தில்
அன்னமாகச் சொல்லப்பட்ட பரப்ரஹ்மாநுபவத்தையும்,

அறஞ்செய்யும் எம்பெருமான் ……..
க்ருபாமாத்ர ப்ரஸன்னாசார்யராய் உபகரித்தருளினவர் எம்பெருமானார்….
மேலே அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த வும்பர்கோமான் என்றதும்
எம்பெருமானாரை நன்கு நினைப்பூட்டும்.

ஆளவந்தாருடைய சரம திருமேனியை ஸ்வாமி சேவிக்கப்பெற்றபோது
ஆளவந்தாரோடே நான் சேர்ந்து வாழப்பெறில் பரமபதத்திற்குப் படிகட்டியிருப்பேனே! என்று
ஸ்வாமி பணித்ததாக ப்ரஸித்தி. ஆளவந்தாரோடே சேர்ந்து வாழப்பெறாமற்

போனாலும்
யத் பதாம்போருஹத்யான ஸ்லோகப்படியும் ஏகலவ்யனன்றோ நான் என்ற ஸூக்திப்படியும்
அவருடைய விலக்ஷண அநுக்ரஹ பாத்ரமாயிருக்கப்பெற்ற பெருமையினால்
நித்யவிபூதிக்கும் லீலாவிபூதிக்கும் இடைச் சுவர் தள்ளி உபயவிபூதியையும் ஒரு போகி யாக்கினவர்
நம் ஸ்வாமி யென்று ப்ரஸித்தமாயிற்று.

மதுரகவி சொன்ன சொல் நம்புவார்பதி வைகுந்தங்காண்மினே என்றவிடத்து வ்யாக்யானத்தில்
உபயவிபூதிக்கும் இடைச்சுவர் தள்ளின பெருமை பட்டருடையதாக அருளிச் செய்யப்பட்டிருந்தாலும்
அப்பெருமை ஸ்வாமிக்கு கிம்புனர்ந்யாய ஸித்தமே.
அம்பரத்தை— பரமாகாசத்தை
ஊடறுத்தவர் என்றதாயிற்று…. 🙏

18ஆம் பாசுரம்.. …..

உந்து மதகளிற்றன்…….

இப் பாசுரம் மூலமாகவே ஸ்வாமி க்குத்
திருப்பாவை ஜீயர்
என்று வ்யபதேசம் உண்டாயிற்றென்றும் ப்ரஸித்தமாதலால் இங்கு நாம் எதுவும் விவரிக்கவேண்டிற்றில்லை.
ஆனாலும் கீழும் மேலுமுள்ள விவரணங்களுக்குச்சேர இங்குமொன்றுரைப்போம்.

கந்தங்கமழும் குழலீ!…. என்று
கேசபாசத்தையிட்டுச் சொன்னது ஸ்வாமி யின் திருவுள்ளத்திற்கு மிகவுகப்பான ஸம்போதனமாம்.
மதாந்தரஸ்தர்களான யதிகள் சிகையை வஹியாதே முண்டனம் செய்து போருவர்கள்;
அங்ஙனன்றிக்கே
காரிசுதன் கழல் சூடிய முடியும் கன நற்சிகை முடியும் என்றும்
கமனீய சிகாநிவேசம் என்றும் நம் முதலிகள்
உள்குழைந்து பேசும்படி கமனீய சிகாபந்தத்தோடு ஸ்வாமி சேவை சாதித்தவழகு
நெஞ்சுகுளிர அநுபவிக்கப்பட்டதாயிற்று….. 🙏

19 ஆம் பாசுரம்……….

குத்து விளக்கெரிய……….

திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே எம்பெருமானார் பதினெட்டு பர்யாயம் எழுந்தருளி
ரஹஸ்யார்த்த விசேஷம் பெற்று அவ்விடத்திலேயே அதைச் சிலர்க்கு உபதேசித்தருளின இதிஹாஸம்
இப்பாட்டில் நன்கு ஸூசிதமாகிறது.

தோரண விளக்கு குத்து விளக்கு என்று இருவிளக்குண்டு.
தோரண விளக்கு ஸ்தாவரமாயிருக்கும்.
குத்து விளக்கு ஜங்கமமாயிருக்கும்.
ஸ்வஸ்தானத்திலேயே ஸ்தாவரராகவிருந்த திருக்கோட்டியூர் நம்பி தோரண விளக்காவர்
பலகால் கதாகதம் செய்தருளின எம்பெருமானார் குத்து விளக்காவர்
இந்தக் குத்துவிளக்கு எரிய—நம்பி பக்கலிலே அர்த்த விசேஷம் கேட்டு ஜ்வலிக்க என்றபடி.

கோட்டு………..
ஏகதேச விக்ருதம் அநந்யவத் பவதி என்கிற வடமொழி வ்யாகரண முறையின்படி
கோட்டி என்றதாகக்கொள்க.
கோஷ்டி என்னும் வடசொல் கோட்டி என்று தானேதிரியும்.!
திருக்கோட்டியூர் என்றதாயிற்று.

அவ்விடத்திலே
கால் கட்டு…
ரஹஸ்யார்த்தம் உபதேசித்தருளாநின்ற நம்பிகள்
தம் திருவடியைத்தொட்டு சபதம் செய்து கொடுக்கும்படி நியமித்தாரன்றோ!
அந்த கால் கட்டு ஸூசிதமாகிறது.

மேலேறி..
ஏற்கனவே தம்மை அநுவர்த்தித்துக் கொண்டிருந்த சில விலக்ஷணர்களுக்கு உபதேசிக்கத் திருவுள்ளம் பற்றிய ஸ்வாமி,
ஸந்நிதியின் மேல் தளத்திலேறினபடியைக் காட்டுகிறது. இப்படி ஆசார்ய திவ்யாஜ்ஞையைக் கடந்து உபதேசித்திருப்பரோ
சாஸ்த்ர வச்யரான ஸ்வாமி? என்கிற சங்கைக்குப் பரிஹாரம் செய்கிறது..

மலர் மார்பா! என்னும் விளி…
ஸ்வாமி யினுடைய ஹ்ருதய வைசால்யமே
அதற்குக் காரணமென்று காட்டினபடி…
மலர்ந்த ஹ்ருதயமுடையவரே! என்று விளித்தபடி…………. 🙏

20 ஆம் பாசுரம்………

முப்பத்து மூவ ரமரர்க்கு….. …..

இப்பாட்டில் செப்பமுடையாய்!
திறலுடையாய்!
செற்றார்க்கு வெப்பம்
கொடுக்கும் விமலா!…. என்னும் விளிகள் ஸ்வாமிக்கு மிகவும் ஏற்றிருப்பவை.

வடமொழியில் ஆர்ஜவ மெனப்படும் குணம் தமிழில் செப்ப மெனப்படும்.
மநோவாக்காயங்களின் ஒற்றுமையாகிற
கரணத்ரய ஸாரூப்யமே ஆர்ஜவம்.. அதுதான் செப்பம்..

ஸ்வாமி யினுடைய திவ்யஸ்ரீஸூக்திகளை சேவிக்கும்போது
ஒவ்வோரக்ஷரமும் அவருடைய ஆர்ஜவ த்தை யன்றோ தெரிவிக்கின்றது.
பரநிந்தை முதலியவற்றை நெஞ்சாலும் நினையாமலும் வாக்கிலும் காட்டாமலுமிருந்த பெருமை ஸ்வாமி க்கும்
ஸ்வாமி யின் புநரவதார பூதரான மணவாள மாமுனிக ளுக்கும் அஸாதாரணமன்றோ!

திறலுடையாய்……
திறலாவது பராபிபவந ஸாமர்த்யம்.
நீறுபூத்த நெருப்புப் போலேயிருந்து இதர வாதிகளின் துர்வாதங்கள் தலை யெடுக்க
வொட்டாதபடி செய்தருளுமாற்றலும் ஸ்வாமி க்கு அஸாதாரணம்.

செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும்… ……
செற்றா ராகிரார் எம்பெருமானுடைய பெருமையை ஸஹியாதே
குணிநமபி குணைஸ் தம் தரித்ராணம்….. ஆஹூ: என்ற பட்டர் ஸ்ரீஸூக்திப்படியே
அப்பெருமானை ஸர்வ தரித்ரனாகப் பேசிவைத்தவர்கள்;
அவர்களுக்கு வெப்பம் கொடுத்தவர் ஸ்வாமி

வெப்ப மாவது ஸ்வரம். பீதி ஜ்வரம்.

தஸ்மை ராமானுஜார்யாய நம: பரமயோகிநே, ய: ச்ருதி ஸ்ம்ருதி ஸூத்ராணாம்
அந்தர் ஜ்வரமசீ சமத் என்று
ஸ்வாமி ச்ருதி ஸ்ம்ருதி ஸூத்ரங்களுக்கிருந்த அந்தர் ஜ்வரத்தைப் போக்கடித்ததாகச் சொல்லிற்று.

அதை எங்கே போகவிட்டார் தெரியுமோ?
செற்றா ருடைய உள்ளத்திலே போகவிட்டாராயிற்று.
திருவடி இலங்கையைக் கொளுத்தினாரே, எந்த நெருப்பைக் கொண்டு கொளுத்தினாரென்று கேட்க,
வாலில் அரக்கர் பற்ற வைத்த நெருப்பினால் என்றார்களாம்.;
அன்று அன்று;
சோகவஹ்னிம் ஜனகாத்மஜாயா:, ஆதாய தேநைவ ததாஹ லங்காம் என்று
பிராட்டி திருவயிற்றிலே மண்டிக் கிடந்த சோகாக்னியை அங்கு நின்றும் கிளப்பி
அதனாலேயே இலங்கையைக் கொளுத்தினாரென்றார் மர்மஜ்ஞர்.
அதுபோலவே இங்கும் ச்ருதி ஸ்ம்ருதி ஸூத்ரங்களின் அந்தர் ஜ்வரத்தையெடுத்துச்
செற்றார் வயிற்றிலெறிந்தபடி…. 🙏

21 ஆம் பாசுரம்…..

ஏற்றக்கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப………..

வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான்……..
என்னும்போது ஸ்வாமி யின் பெருமை தவிர வேறு எதுவும் நினைவுக்கு வாராது..
ஸ்வாமி க்கு முன்பிருந்த ஆசார்யர்களை எடுத்துக்கொண்டு
அவர்களுக்கு எத்தனை சிஷ்யர்கள்?
என்று கேட்டால் இருவர் மூவர் நால்வர் ஐவர் என்ன வேண்டுமத்தனை..

ஸ்வாமியின் சிஷ்ய வர்க்கங்களைப் பற்றிக் கேட்டாலோ
ஏகாந்திபிர் த்வாதசபிஸ் ஸஹஸ்ரை: ஸம்ஸேவிதஷ ஸம்யமிஸப்த சத்யா என்று
உடனிருந்தவர்கள் பேசும்படியாயிருக்கும்.
அன்றியும்,
மஹாஜ்ஞான நிதிகளாகத் தேர்ந்தெடுத்து எழுபத்து நான்கு ஸிம்ஹாஸநாதிபதிகளென்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் தாம் எப்படிப்பட்டவர்களென்னில்;

எதிர்பொங்கி மீதளிப்ப………..
சிஷ்யாதிச்சேத் பராஜயம் என்னும்படி ஆசார்யரையும் விஞ்சினவர்களாயிருப்பர்கள்.
காச்மீரத்தில் சாரதா பீடத்தில் ஸ்வாமி யும் ஆழ்வானும் போதாயநவ்ருத்தியைக் கடாக்ஷியா நிற்க,
அதற்கு இடையூறு விளைந்த போது க்ரந்தத்தைப் பூர்த்தியாகப்பார்க்க முடியவில்லையே! என்று ஸ்வாமி க்லேசிக்க,
அந்த வ்ருத்திக்ரந்தத்தைப் பூர்த்தியாகக் கடாக்ஷித்து அத்தனையும் ஹ்ருதி தரித்துக்கொண்டிருந்த ஆழ்வான்
இங்கே விண்ணப்பஞ்செய்யவோ? இரண்டாற்றின் நடுவே விண்ணப்பஞ் செய்யவோ?.என்று பணித்தாரென்று ப்ரஸித்தம்.

இப்படியேயன்றோ மேன்மேலுமுள்ள சிஷ்யவர்க்கங்களின் சரித்திரமும்.
அவர்கள் இன்னமும் எப்படிப்பட்டவர்களென்னில்;
மாற்றாதே பால் சொரியும்……
அவ்வாசார்யர்களின் பரம்பரை பெரும்பாலும் அநுஸ்யூதமாக நிகழ்ந்து வந்து பால் போன்ற
அர்த்தவிசேஷங்களைச் சொரிந்து கொண்டிருக்கும்படி சொன்னவாறு..

இத்தகைய வள்ளல் பெரும் பசுக்களை ஆற்றப்படைத்தவர் ஸ்வாமி..
ஆற்ற-அபரிமிதமாக.
மேலே மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் என்ற
விடத்து யாதவப்ரகாசர் வந்து பணிந்த வ்ருத்தாந்தம் மிகப் பொருத்தம்….. 🙏

22 ஆம் பாசுரம்…..

அங்கண் மா ஞாலத்தரசர்……

திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல் அங்கணிரண்டும் கொண்டு என்றதில்
ஸ்வாமி யினுடைய உபயவேதாந்தக்ரந்த ப்ரவசனபடுத்வம் பேசப்படுகிறது.
திங்களும் ஆதித்யனும் ஏக காலத்தில் எழுவது அஸம்பாவிதம்.
ஆதித்யனெழும்போது தீக்ஷ்ணதையும், திங்களெழும்போது தண்ணளியும் அநுபவிக்கலாயிருக்கும்.
உபயவேதாந்த ப்ரவர்த்தகரான ஸ்வாமி காலை வேளைகளில் ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் ஸாதிப்பதும்,
மாலை வேளைகளில் அருளிச் செயல்(பகவத்விஷய) காலக்ஷேபம் ஸாதிப்பதுமாயிருப்பர்.

மதாந்தர ப்ரத்யாக்க்யா நதத்பரமான ஸ்ரீபாஷ்யத்தின் அர்த்தங்கள் அநுபவிக்கப்படும்போது தீக்ஷ்ணதையும்
செவிக்கினிய செஞ்சொல் சீர் கலந்த சொல் ஈரச்சொல் என்ன நின்ற அருளிச்செயல்களின் அர்த்தங்கள்
அநுபவிக்கப்படும்போது ஸௌம்யதையும் காணலாயிருக்க
இரண்டிலுமிரண்டுமுண்டானாலும் இப்படிச் சொல்லுகிறதும் ஊற்றத்தைப் பற்ற என்ற
*ஸ்ரீவசனபூஷண ப்ரக்ரியையிலே கொள்ளக் கடவது.

மேலே அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் என்றவிடத்திலும்
உபய வேதாந்தப் பொருள்களையும் எங்களுக்குக் கடாக்ஷித்தருள வேணுமென்ற ப்ரார்த்தனையுள்ளது.
சக்ஷுஸ் மத்தா து சாஸ்த்ரேண என்றபடி கண்ணென்பது சாஸ்த்ரமேயாம்.
உபயவேதாந்தங்களும் ஸ்வாமி க்கு இரண்டு திருக்கண்களென்க.
ஒன்றில் ஆதரமும் மற்றொன்றில் அநாதரமும் கொண்டிருக்கையே சாபமாகும்.
அது தொலையவேணுமென்றவாறு. ஸ்வாமி பக்கலிலே சிஷ்யர்கள் ப்ரார்த்திப்பது இது…. 🙏

23 ஆம் பாசுரம்…………..

மாரிமலைமுழைஞ்சில்………..

அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்படும்
சீரியசிங்கம் நம் யதிஸார்வ பௌமஸிம்மம் தவிர வேறுண்டோ?..
நூற்றந்தாதியில் கலிமிக்க செந்நெல் கழனிக்குறையல் கலைப்பெருமானொலிமிக்க பாடலையுண்டு
தன்னுள்ளம் தடித்து அதனால் *வலிமிக்க சீயமிராமானுசன் என்று சீரிய சிங்க மாகச் சொல்லப் பட்டவர் ஸ்வாமி .

உலகில் சிங்கம் ஹேயமான உணவை உண்டு செருக்கியிருக்கும்.;
யதிராஜஸிம்மம் திருமங்கையாழ்வாருடைய திவ்யஸூக்திகளையுண்டு அதனால் தடித்திருக்குமென்கிறார் அமுதனார்..

இதற்கு மலையும் முழஞ்சும் விலக்ஷணமாயிருக்கும்.
முந்நூறாண்டு வேதமோதின பரத்வாஜ மஹர்ஷிக்குத் தேவேந்த்ரன் வேதங்களை மலையாகக் காட்டினனென்று
வேதமே சொல்லுகையாலே வேதமே மலையாகக் கொள்ள வுரியது.
அதில் முழஞ்சாவது
தர்மஸ்ய தத்வம் நிஹிதம் குஹாயாம் என்னும்படி தர்மஸூக்ஷ்மங்கள் பொதிந்து இருக்குமிடம்.
அதிலே மன்னிக் கிடந்து லௌகிக விஷயங்களில் திருக்கண் செலுத்தாதே
ஆத்மந்யேவ ஆத்மாநம் பச்யந் ஸுகித்திருப்பவர் ஸ்வாமி……….

அறிவுற்று……
நாம் அவதரித்தது எதற்காக? என்று
தம் அவதார ப்ரயோஜனத்தைக் குறிக்கொண்டு என்றபடி…….

தீவிழித்து………
(அமரகோசே) புத்திர் மநீஷா திஷணா தீ: என்றவிடத்து புத்திபர்யாயமாகப் படிக்கப் பட்ட..
தீ: என்பது இங்குத் தீயென நிற்கின்றது.
அது விழித்திருப்பது—விகஸித்திருப்பது *ஸ்வாமிக்கே யென்க……

எப்பாடும் பேர்ந்து உதறி…..
ஸ்ரீரங்கம் கரிஸைலமஞ்சனகிரிம் தார்க்ஷ்யாத்ரி ஸிம்ஹாசலௌ
ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம்,
ஸ்ரீமத் த்வாரதீவ ப்ரயாக மதுரா யோத்யா கயா புஷ்கரம்
ஸாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமேத ராமானுஜோயம் முநி: என்கிறபடியே
எண்டிசையும் பாதசாரத்தாலே ஸஞ்சரித்து,
ஆங்காங்கு விபக்ஷர்களுண்டாகில் அவர்களை உதறி யருளினவர் ஸ்வாமி….. 🙏

24 ஆம் பாசுரம்…

அன்றிவ்வுலகமளந்தாய்……..

இதில் வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி என்பதை உயிராகக் கொள்க.
கொல்வது கோல் என்னுமாபோலே வெல்வது வேல் எனப்படும்.
கண்ணபிரான் திருக்கையில் வேலாகச் சொல்லப்படுவது திருவாழியாழ்வான்.
ஸ்வாமி திருக்கையில் வேலாகச் சொல்லப்படுவது த்ரிதண்டம்.

ஸப்ததியில் விஷ்வக்சேனோ யதிபதிரபூத்வேத்ர ஸாரஸ் த்ரிதண்ட:
என்று சேனையர்கோன் ஸ்வாமி யாகத் திருவவதரிக்க,
உபயவிபூதி நிர்வாஹ நிபுணமாய் அவருடைய திருக்கையிலுள்ள திருப்பிரம்பு தானே த்ரிதண்டமாயிற்று என்னப்பட்டது.

அந்தத் திருப்பிரம்புக்கு எவ்வளவு சக்தியோ அவ்வளவும் ஸ்வாமி யின் த்ரிதண்டத்திற்கும் உண்டென்க.

தாடீ பஞ்சக த்தில் ஸ்வாமிக்கு ப் பேசவேண்டிய பெருமைகளெல்லாம்
த்ரிதண்டத்தின் மேலும்
யஜ்ஞஸூத்ரத்தின் மேலும் ஏறிட்டுப் பேசப்பட்டுள்ளன.
அங்ஙனம் பேசுகையில்
பாஷண்டஷண்ட திரிதண்டன வஜ்ரதண்டா:—-
ராமானுஜஸ்ய விலஸந்தி முநேஸ் த்ரிதண்டா:.என்றும்

தத்தே ராமானுஜார்ய: ப்ரதிகதக சிரோ வஜ்ரதண்டம் த்ரிதண்டம் என்றும் பேசப்பட்டதுண்டே,

அதுதான் வென்று பகை கெடுக்கு மென்றதற்கு விவரணம்.
அப்படிப்பட்ட கையில் வேலாகிய முக்கோலுக்கு மங்களாசாஸனம் செய்தது
முக்கோல் பிடித்த முனிக்கே மங்களாசாஸனம் செய்தபடியாம் என்றுணர்க….. 🙏🙏🙏🙏🙏

திருப்பாவை ஒவ்வொரு பாசுரத்திலும் …..
ஸ்வாமி எம்பெருமானாரைச்
சிந்திக்க வேண்டும் படியான சொற்றொடர்கள்
..
25 ஆம் பாசுரம்……

ஒருத்தி மகனாய்ப் பிறந்து…….

தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த கஞ்சன் கருத்தைப் பிழைப்பித்து
அவன் வயிற்றில் நெருப்பென்று நின்றவர் *ஸ்வாமி.

கம்ஸன் கண்ணனிடத்திலே
அனர்த்தம் விளைக்க வழிதேடியிருந்தது போல,
நம் ஸ்வாமி க்கு அனர்த்தம் விளைக்க வழிதேடியிருந்தவர் ஒருவர் ப்ரஸித்தர்.
அவருடைய கருத்தைப் பிழைப்பித்து (பிழைபடச்செய்து) ஓரிரவில் ஒளித்து வளர்ந்தவர் ஸ்வாமி………

விந்த்யாடவியெங்கே!
ஸத்யவிரத க்ஷேத்ரமெங்கே!…..
ஓரிரவில் அங்கு நின்றும் இங்கு வந்து சேர்ந்தவர் தம் ப்ர பாவங்களையெல்லாம் ஒளித்து வைத்திருந்தாரத்தனையன்றோ!
அன்னவர் ஆஸுரப்ரக்ருதிகளின் வயிற்றில் நெருப்பென்ன நின்றார்….

“பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹந:”….

” பாஷண்ட ஸாகர மஹாபடபாமுகாக்நி: என்று நெருப்பாகவேயன்றோ பேசப்பட்டார் ஸ்வாமி…

நெடுமாலே!….
வ்யாமோஹங் கொண்டவர்…
“அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம ஸ்யாமோஹத…. 🙏

26 ஆம் பாசுரம்……..

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்…………..

இதில் ஆலினிலையாய்!
என்ற விளி இன்சுவை மிக்கது..
ஆலின் இலையதன்மேல் பையவுயோகு துயில் கொண்ட பரம்பரன் கண்ணன்

ஆலின் நிலையாய்!
ஆலமரத்தின் நிலைமை போன்ற நிலைமையுடையவர் ஸ்வாமி…..
எம்பெருமான் பாஹுச்சாயா மவஷ்டப்தோ யஸ்ய லோகோ மஹாத்மந: என்கிறபடியே
தன் பஹுச்சாயையிலே ஒதுங்கினவர்களுக்கு நிழல் கொடுத்துத் தாபம் தீர்ப்பவன்..
ஸ்வாமி யோவென்னில் ப்ராப்தாநாம் பாதமூலம் ப்ரக்ருதி மதுரயாச்சாயயா தாபக்ருத் வ: என்றாற்போல
அடிபணிந்தார்க்குத் திருவடிநிழல் கொடுத்துத் தாபம் தணிப்பவர்.
இது தானே ஆலின் நிலைமை.

நூற்றந்தாதி தொடங்கும்போதே
பல்கலையோர் தாம் மன்னவந்த விராமானுசன் சரணாரவிந்தம் என்றன்றோ தொடங்கிற்று.
பல்கலையோர் தாம் மன்ன வந்த என்ற விசேஷணத்தை இராமானுசனுக்கு
ஆக்குவதுபோலவே அவருடைய சரணாரவிந்தத்திற்கும் ஆக்கலாமே.

ந்யக்ரோதோ பஹுபாத்வட: என்ற அமரகோசம்
ஆலமரத்திற்கு பஹுபாத் என்று பெயர் படித்தது.
உண்மையில் ஆலமரமானது மற்ற மரங்களைப் போலன்றிக்கே அபரிமிதமான பாதங்களை யுடைத்தாயிருக்கும்.
ஸ்வாமி க்கும் திருவடிகள் அபரிமிதங்கள். (சிஷ்யர்களே திருவடிகள்). இப்பாட்டில் சொன்ன சங்கம்

பெரும் பறை
பல்லாண்டிசைப்பார்
கோலவிளக்கு
கொடி
விதானம்
என்னுஞ்சொற்களை ஊன்றி நோக்கினால் இவையெல்லாம் ஸ்வாமியே என்னப் பொருந்தும்.

சங்கம்….
த்ருவனிடஞ்சென்ற பகவான் சங்கஸ்பர்ஸத்தினால் அவனை ஸர்வஜ்ஞனாக்கினதாகப் புராணங்கூறும்.
அதுபோல ஸ்வஸம்பந்தத்தாலே
ஆழ்வான் ஆண்டான் அனந்தாழ்வான்
எம்பார்
பிள்ளான் முதலானாரை ஸர்வஜ்ஞராக்கினவர் ஸ்வாமி…….

பறை…….
பகவத் குணங்களை எங்கும் பறைசாற்றினவராகையாலே தாமே பறை என்னத் தகுவர்……………

பல்லாண்டிசைப்பார்
பெரியாழ்வார் போலே எம்பெருமானுக்குத் தாம் பல்லாண்டு பாடினது மட்டுமின்றியே
பல்லாயிரவரைப் பாடுவிக்கவும் வல்லராயிருந்தார்.

கோலவிளக்கு…..
ஸ்ரீவைஷ்ணவ குலப்ரதீபமாயிருந்தவர்..

கொடி…….
ஸ்ரீமல்லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜ மென்று
பிறரைச்சொல்லும்போது ஸ்வாமி க்குச் சொல்லவேணுமோ?
விசிஷ்டாத்வைத ஸித்தாந்த விஜயத்வஜமென்க.

விதானம்……..
கண்ணன் வட மதுரையிலிருந்து திருவாய்ப்பாடிக் கெழுந்தருளும்போது
தொடுத்து மேல் விதானமாய பௌவநீரராவணை என்ற திருச்சந்தவிருத்தத்தின்படியே
விதானமாயிருந்தவர் ஆதிசேஷனான திருவனந்தாழ்வான்.
அவரேயன்றோ ஸ்வாமி யாக வடிவெடுத்தார்……. 🙏

27 ஆம் பாசுரம்……..

கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா…………..

யஜ்ஞமூர்த்தி போல்வாரான பல பல அத்வைதிகள் முதலிலே ஸ்வாமி யோடு எதிரம்பு கோப்பவர்களாய் (கூடாதவர்களாய்)
இருந்து பிறகு கூடினவர்களாய் ஸ்வாமி க்கு வெற்றியைத் தந்தார்கள்.
அவர்களை வெல்வதற்கு உறுப்பாயிருந்த சீர்களை உடையவர் ஸ்வாமி அந்தச் சீர்கள் எவையென்னில் ;
கேவலம் வைதுஷ்யம் மட்டுமல்ல;திவ்யமங்கள விக்ரஹ குணங்களும், திவ்யாத்ம குணங்களும் பல பல.
ஸ்வாமி யின் வடிவழகை சேவித்தமாத்திரத்திலேயே ஈடுபட்டவர்கள் பல பலர்.

கோவிந்தா……….
பசுக்களை மேய்ப்பதனாலே கண்ணன் கோவிந்தனாயினன்.;
ஸ்ரீஸூக்திகளும் கோ ஸப்தார்த்தமென்று கீழே காட்டினோமாகையாலே ஸகல ப்ரமாணங்களையும்
பிபேத்யல்பச்ருதாத் வேதி மாமயம் ப்ரதரிஷ்யதி என்னும்படியான
பீதியைப்போக்கி ரக்ஷித்தமையாலே ஸ்வாமியும்
கோவிந்தர்–பசுப்ராயர்களான நம்மைக் காத்தவரென்றுமாம். 🙏🙏

28 ஆம் பாசுரம்…….

கறவைகள் பின்சென்று……..

குறையொன்றுமில்லாத கோவிந்தா! உன்தன்னைப் பிறவிப் பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்..–என்னும்
வார்த்தை ஸ்வாமி எம்பெருமானாரை நோக்கி ஸ்ரீவைஷ்ணவ குலத்தவர்கள் யாவரும் சொல்லத் தக்கது.
ஞானம் அனுட்டானம் பரஸம்ருத்த்யேக ப்ரயோஜநத்வம் ஆகிய மூன்றும்
ஆசார்ய பீடஸ்தர்களுக்கு அவச்யாபேக்ஷிதங்கள்.
ஞானமிருந்து அனுஷ்டானமில்லையானாலும் பயனில்லை;
அனுஷ்டானமிருந்து ஞானமில்லையானாலும் பயனில்லை; இவையிரண்டுமிருக்கவேணுமென்பர்.
இவையிரண்டுமிருந்தாலுங்கூட, பரஸம்ருத்தியே பேறாயிருக்கையில்லையாகில் பயனில்லை;
இவை மூன்றும் நன்கு நிறையப்பெற்றவர் ஸ்வாமியே.

குறையில்லாத——
குறையொன்றில்லாத———–
குறையொன்றுமில்லாத——- என்று
யோஜித்து மேற்சொன்ன மூன்றாலும் குறையற்றிருப்பவர் ஸ்வாமியே என்று கொள்வது.

கூரத்தாழ்வான் ஸ்வாமி க் கிட்ட தனியனில் தயைகஸிந்தோ: என்று விசேஷணமிட்டது
பரஸம்ருத்த்யேக ப்ரயோஜநத்வத்தையே காட்டினபடி.
இத்தகைய பெருமை வாய்ந்த ஸ்வாமி நமக்கு குலகூடஸ்தராகித் திருவவதரிக்கப் பெற்றது
வாசாமகோசரமான நமது பெரும்பாக்கியமன்றோ.

த்வீபாந்தரங்களிற் பிறவாதே ஜம்பூத்வீபத்தில் பிறந்தது,
பசு பக்ஷி க்ருமி கீடாதி யோனிகளிற் பிறவாது மானிடப்பிறவியிற் பிறந்தது,
அதிலும் பகவத் பாகவத பக்தி முதலியவற்றுக்கு நிலமல்லாத மநுஷ்யவர்க்கத்தில் பிறவாதே ஆஸ்திக குடும்பத்தில் பிறந்தது
இவை எல்லாவற்றுக்கும் மேற்படவன்றோ ததநுபந்த மதாவலிப்தே என்று பேரறிவாளர் பேசும்படியான
பெருமை வாய்ந்த எம்பெருமானார் திருவடி ஸம்பந்தம் பெற்ற ஸ்ரீவைஷ்ணவஸந்தானத்திலே நாம் பிறக்கப்பெற்றது.
இந்த ஹர்ஷப்ரகர்ஷத்தைக் காட்டுவதாம் உன்தன்னைப் பிறவிப்பெறுந்தனை
புண்ணியம் யாமுடையோம் என்பது..

உன்தன்னை..–என்பதற்கு
உன் தன்னைக் கொண்டு என்று பொருள் கொள்வது மிகச் சிறக்கும்.
உன்தன்னால்.. என்றபடி.
(உருபு மயக்கம்)
ஸ ஹி வித்யாதஸ் தம் ஜநயதி தத் ச்ரேஷ்டம் ஜந்ம.. -என்கிறபடியே
நாங்கள் ச்ரேஷ்டமான வித்யாஜந்மத்தை தேவரீர் திருவருளாலன்றோ பெற்றிருக்கிறோம்.
யதீச்வர ஸரஸ்வதி ஸுபிதாசயாநாம் ஸதாம் வஹாமி சரணாம்புஜம் ப்ரணதிசாலிநா என்று
மஹாசார்யர்கள் ஆசைப்படுவதற்குறுப்பானார் திரளிலேயன்றோ ஜனித்திருக்கிறோமென்றவாறு.

ஸ்வாமி திருவம்சத்திலே நாம் பிறக்கப்பெற்றது
நம் குலவிளக்காக ஸ்வாமி அவதரிக்கப்பெற்றது ஆகிய இரண்டும் இங்கு விவக்ஷிதமென்கை. 🙏

29 ஆம் பாசுரம்…….

சித்தஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து……

எற்றைக்கு மேழேழ் பிறவிக்கு முன்றன்னோ டுற்றோமேயாவோம் உனக்கே நாமாட் செய்வோ மென்பது
நாமெல்லோரும் ஸ்வாமியை நோக்கிறே சொல்லத் தகுந்த வார்த்தை.

ஆழ்வார்கள் இருள் தருமா ஞாலத்துளினிப் பிறவியான் வேண்டேன் என்றும்
இயக்கறாத பற்பிறப்பிலென்னை மாற்றி யென்றும் ஆதலால் பிறவி வேண்டே னென்றும்
புனர்ஜன்மத்தை வெறுத்துப் பேசுவர்கள்.
நாம் அப்படி வெறுக்க வேண்டா; எத்தனை ஜன்மங்களும் யதேஷ்டமாக நேரட்டும்;
நேருகிற ஜன்மங்கள் தோறும் இப்போது நமக்கு வாய்த்திருப்பது போலவே
எம்பெருமானார் திவ்யஸூக்தி ஸுதைகளையே பருகும் பாக்கியம் வாய்த்திடுமானால் பிறவியில் வெறுப்பு நமக்கேதுக்கு?
ஒரு பிறப்பன்று, ஒன்பதினாயிரம் பிறப்பெடுப்போமாக. அதற்குச் சளைப்போமல்லோம்;
ஆனால் அப்பிறவிதோறும் உன்றன்னோடுற்றோமேயாவோம்….

இராமானுசனடியார் என்னும் விருதுக்கு லோபமின்றிக்கே யிருக்கக் கடவோம்.

உனக்கே நாமாட் செய்வோம்………
வடுக நம்பி
ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையரென்பர் என்கிற ஸ்ரீவசனபூஷண ஸூக்தியின்படியே
இருகரையராகாமே வடுகநம்பியைப்போலே ஸ்வாமிக்கே அடிமை செய்துகொண்டிருக்கக் கடவோம்.
ஆனால்
வாழி யெதிராசன் வாழி யெதிராசன், வாழி யெதிராசனென வாழ்த்துவார் தாளிணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை
என்று மாமுனிகள் அருளிச் செய்த படியே
நமக்குப் புனர்ஜன்மமின்றிக்கே முக்தி ஸாம்ராஜ்யம் ப்ராப்தமாய்விடுமானாலும்
ஏரார் முயல் விட்டுக் காக்கைப்பின் போவதே என்கிற திருமங்கையாழ்வார் அநுஸந்தானமேயாயிருக்கக் கடவோம்.

கையில் கனி யென்னக் கண்ணனைக் காட்டித் தரினும் உன்றன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்
என்ற அமுதனார் அநுஸந்தானமே உறைத்திருக்கக் கடவது நமக்கு…… 🙏🙏🙏🙏🙏🙏🙏

(ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி)
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

—————-

ஆங்காரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்காரரவு* என்ற
திருமழிசைப் பிரான் பாசுரத்தின் படியே (அஸ்தாநே பயஸங்கை) (
விரோதி வர்க்கங்கள் எம் பெருமாளுக்குத் தீங்கு செய்ய நெருங்கி வந்ததாக ப்ரமித்து) விஷாக்னியைக் கக்குகை
பரிவின் மிகுதியைக் காட்டுமதாகையாலே சொல்லிற்றென்க.

சேஷத்வத்தில் அக்ரேசரான
ஆதிசேஷன்…….

ஆதிசேஷ அவதாரமான
ஸ்வாமி எம்பெருமானார்..

சேஷவாஹனத்தில்
திருவீதி புறப்பாடு கண்டருள்கிறார்🙏

——————

ஸ்ரீமதே ராமானுஜாய நம:🙏

இன்று…….ஸ்வாமி எம்பெருமானார் வெள்ளை சாத்துப்படி……….🙏

சோழமண்டலத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தினை தலைநகராகக் கொண்டு வைணவத்வேஷம் கொண்டு
”இரண்டாம் குலோத்துங்க சோழன்’ (கி.பி 1070-1116) என்னும் மன்னன் ஆண்டு கொண்டிருந்தான்.
அவனது அமைச்சர்களில் நாலூரான் எனும் வைணவத்தினைச் சார்ந்த துர்மதி அமைச்சனும் இருந்தான்.
மன்னன் சிவாத் பரதரம் நாஸ்தி (சிவனுக்கு மேலான தெய்வமில்லை) என்று
அனைத்து மதத்தினைச் சார்ந்தவர்களையும் வலுக்கட்டாயபடுத்தியோ அல்லது
ஏதேனும் ஒரு உபாயத்தினை பின்பற்றியோ நிலைநாட்டிக் கொண்டிருந்தான்.

துர்மதி நாலூரான் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக் கொண்டான்.
வைணவத்தின் தலைவராகயிருக்கும் இராமானுஜர் ஒப்புக்கொண்டாலேயொழிய தாங்கள் நினைப்பதை
சாதிக்கவியலாது என்று அந்த துஷ்டனிடம் துர்போதனைச் செய்தான்.
வெறிகொண்ட மன்னன் திருவரங்கத்திற்கு தன் ஆட்களை அனுப்பி இராமானுஜரை அழைத்துவர ஏற்பாடுகளைச் செய்தான்.

திருவரங்கம் வந்து சேர்ந்த அவர்களிடம் சாமர்த்தியமாக பேசி உடையவரின் பரம சீடரானவரும் இராமானுஜரின்
சகோதரி புதல்வருமான நடாதுராழ்வான் உடையவரை அவர்கள் அழைத்து போவதற்கானக் காரணத்தினை யறிந்தார்.
மதிநுட்பம் வாய்ந்த அவர் இதனை உடையவரிடம் கூறாது கூரத்தாழ்வானிடம் ரகசியமாக தெரிவிக்கின்றார்.
இவரின் சமயோசித செயலைக் கண்ட கூரத்தாழ்வான் இவரை அன்போடு அணைத்து நீரன்றோ
*ப்ரிய பாகிநேயர் (பிரியமான மருமகன்) என்று உகக்கின்றார்.
இராமானுஜர் சோழ மன்னனின் சபைக்குச் சென்றால் தீங்கு நிச்சயம் என்று ஆழ்வானின் உள்ளுணர்வு உணர்த்துகின்றது.
அப்போதுதான் வடதிருக்காவிரிக்கு நீராட சென்றிருந்தார் இராமானுஜர்.

கூரத்தாழ்வான், அவரது காஷாயத்தினைத் தான் தரிக்கின்றார்
மடத்திலுள்ள மற்ற சீடர்களிடத்து இராமானுஜருக்கு ஆபத்து. உடனே அவரை அழைத்துக் கொண்டு
வெளிதேசம் சென்று விடுங்கள் என்று ஆணையிட்டு, மன்னனின் ஆட்களிடத்து தாம்தான் இராமானுஜர் என்று
நம்ப வைத்து மன்னனின் சபைக்கு (ஏறத்தாழ தனது 88வது வயதினில் – கி.பி 1097) நெஞ்சுரத்தோடு விரைகின்றார்
அப்போது அவர் தனியே செல்வது நல்லதல்ல எனக் கருதிய 100 வயதினைக் கடந்த பெரியநம்பியும்
தமது மகள் அத்துழாயுடன் அவரோடு செல்கின்றார்.

காவிரியில் நீராடித் திரும்பிய உடையவர் விவரமறிந்து அனலில் இட்ட புழு போன்று துடிக்கின்றார்.
மனம் வெம்பி கண்ணீர் உகுக்கின்றார். தாம் செல்ல எத்தனிக்கின்றார்.
அங்குள்ள சீடர்கள் இராமானுஜரை பலவாறு தேற்றுகின்றனர். இராமானுஜர் பெரியபெருமாளை ஸேவிக்கின்றார்.
பிரியாவிடை பெறுகின்றார். வெள்ளை ஆடைகளை காவிமேல் அணிந்து
எம்பார், முதலியாண்டான், நடாதூராழ்வான், பிள்ளான், வடுகநம்பி, கிடாம்பியாச்சான், வில்லிதாஸன் போன்ற
அந்தரங்கமான சீடர்களுடன் மேல் திசை நோக்கி பயணிக்கின்றார்.

தனது ஸபைக்கு வந்தது இராமானுஜர் அல்ல என்பதினை கேடுகெட்ட நாலூரான் சொல்ல,
வெறிகொண்ட அரசன் இராமானுஜரை எங்கிருந்தாலும் பிடித்து வர ஒரு சிறு வேகப்படையை அனுப்புகின்றான்.
இந்தப் படை இராமானுஜரை பின்தொடர்கின்றது. உடையவர் இரு கை நிறைய மணலை எடுக்கின்றார்.
கொடுமைசெய்யுங் கூற்றமும் என் கோலாடி குறுகப்பெறா, தடவரைத்தோள் சக்கரபாணீ! சார்ங்கவிற் சேவகனே! என்று
ஓதி அவர்கள் வருகின்ற வழியில் அம்மணலைத் தூவச் சொல்கின்றார்.
பின்தொடர்ந்த படை பின் வாங்கியது.
‘போகிற பார்ப்பார் மந்த்ரவாதம் பண்ணிப்போனார்கள்” என்றுஅரண்மனை அடைந்தது.
உடையவரும் சீடர்களும் அரங்கத்துள் உறையும் இன் துணைவனே வழித்துணையாக, த்வயம் அனுஸந்தித்தவாறே பயணிக்கின்றனர்.

இங்கு அரசனுக்கு வெறி இன்னும் மிகுகின்றது. கெடுவான் கேடு நினைப்பான் என்றவாறே ஒருவன்
ஒரு பெரிய பாவத்தினைப் பண்ணுவதற்கு முன் அவன் கெடுவான்.
அவன் புத்தி கெடும் அல்லது யாரேனும் கெடுப்பதற்கென்றே வந்து சேருவர்.
இங்கு நாலூரான் வந்து சேர்ந்தான்
கேடுகெட்ட அரசனுக்கு. கூரத்தாழ்வாரிடத்து சிவாத் பரதரம் நாஸ்தி என்று எழுதி கையொப்பமிடச் சொல்கின்றார்.
கூரத்தாழ்வார் அதனை மறுத்து கிண்டலாக வேறு விதமாக
த்ரோணமஸ்தி தத:பரம் (சிவம் என்ற அளவைவிட த்ரோணம் என்னும் அளவு பெரியது) என்றுஎழுதி கையொப்பமிடுகின்றார்.
பல பிரமாணங்களைக் காட்டி விஷ்ணுவே பரத்வம் என்று வாதிடுகின்றார்.
வெறியனுக்கு முன் வாதம் செய்து என்ன பயன்?
இவ்விரு வைணவர்களின் கண்களையும் பிடுங்கி குருடராய் ஆக்குங்கள் என்று கட்டளையிடுகின்றான்.
உன்னைப் போன்ற பகவத் துவேஷியைக் கண்ட கண்கள் எனக்கு இனி வேண்டாம். உன் ஆட்களும் என்னைத் தொடவேண்டாம் என்று
தன்னுடைய கைவிரல் நகங்களாலேயே தம்மிரு கண்களையும் பிடுங்கி வீசுகின்றார் மாவீரனாய் கூரத்தாழ்வான்.
பெரியநம்பியின் கண்களும் பறிபோய் குழியாயிற்று..

வயதான நம்பிகள் வலி தாளாது துடிதுடியாய் துடிக்கின்றார்.
எமக்குதவ இங்கு எவரும் இல்லையா? என்று அத்துழாய் அலறுகின்றார்.
அரசனின் பணிப்பெண் நாவல்கொடி அம்மாள் என்ற ஓரேயொரு பெண்மணி மட்டும் நடப்பது நடக்கட்டும் என்று
தைரியமாக அத்துழாயையும், தரிஸனம் இழந்து வைணவ தரிஸனத்தினைக் காப்பாற்றிய ஆழ்வானையும்,
பெரியநம்பியையும், கைப்பிடித்து, சபையை விட்டு எல்லோரும் வெளியேறுகின்றனர்.
ஸ்ரீரங்கம் நோக்கி பயணிக்கின்றனர்–🙏🙏🙏🙏

உலகமுண்ட பெருவாயா

கீழ்த் திருவாய்மொழியில் அபரிமித ஆர்த்தி உடன் பரம பதத் அளவும் கேட்கும் படி கூப்பிட்டார்..
அங்கனம் கூப்பிடச் செய்தேயும் திரு முகம் காட்டி அருளாமையாலே தளர்ந்து நோவு பட்ட ஆழ்வார்
திரு வேங்கட மலையிலே
நித்ய சூரிகளோடு நித்ய சம்சாரிகளோடு திர்யக்குகளோடு வாசி அற
எல்லாரும் வந்து ஒரு மிடறாக ஆஸ்ரயிக்கலாம் படி நித்ய சந்நிதி பண்ணி அருளி இருக்கும் படியை அனுசந்தித்து
*திருவேங்கடமுடையான் திருவடிகளிலே
பெரிய பிராட்டியார் முன்னிலையாக*
தம்முடைய அநந்ய கதித்வத்தை விண்ணப்பம் செய்து சரணம் புகுகிறார்🙏

தேச-கால -பிரகார -அதிகாரி -பல நியமங்கள் இல்லாத
விஷய நியமம் ஒன்றே உள்ளது சரணாகதிக்கு -அதாவது
சௌலப்யாதி குணங்கள் பூரணமாய் இருக்கிற இடமே விஷயமாகை
ஸ்வதஸ் ஸர்வஞ்ஞனான எம்பெருமானே சொல்லப் புகுந்தாலும் சொல்ல ஒண்ணாத குணங்கள்
பூர்த்தியாய் உள்ள அர்ச்சாவதாரத்தில் தலையான திரு மலையிலே சரணாகதி செய்து அருளுகிறார்
ஒன்பது பாட்டாலும் சரண்யன் படி சொல்லி

பத்தாம் பாட்டில் சரணம் புகுகிறார்🙏🙏

————

ந்யக்ரோத பீஜே வடவத் ப்ரணவே சப்தஜாலவத் !
ஸித்தே ததீயஸேஷத்வே ஸர்வாதாஸ் ஸம்பவந்திஹி !!🙏

ஆலம் விதையில் ஆலமரம் போலவும்

ப்ரணவத்தில் எல்லா சப்தங்கள் போலவும்

*பாகவத சேஷத்வம்
ஸித்திக்குமாயின்* (அதில் அடங்கிய) எல்லாப் பொருள்களும் கிடைத்தனவாகின்றன

நெடுமாற்கடிமை….

பகவத் சேஷத்வத்தின் எல்லைநிலமாகிய பாகவதசேஷத்வத்தைக் கொண்டாடுகிறார் ஆழ்வார்…..

அம்மணியாழ்வான் என்றொரு ஸ்ரீவைஷ்ணவர் பட்டரிடத்து தண்டன் சமர்ப்பித்து கேட்கின்றார்  
அடியேனுக்கு தஞ்சமாயிருப்பதொரு அர்த்தம் பிரஸாதித்தருள வேணும் என்று!……

பட்டர்
நெடுமாற்கடிமை’ என்ற பாசுரத்திற்கு அர்த்தம் கூறுகின்றார். 
மேலும், 
எம்பெருமானைப் பற்றி மட்டும் அறிந்தோமாயின் அந்த எம்பெருமானுக்கு அரைவயிறு மட்டும் நிரம்பியது போன்றதாகும். 
அவனது அடியார்களையும் அவர்களது வைபவங்களையும் உணர்ந்து அறிந்தோமாயின்
அந்த எம்பெருமானுக்கு முழுவயிறும் நிரம்பியது போன்றதாகும் என்று
பரம பாகவதோத்மர்களின் சிறப்பினைப் பற்றி விளக்குகின்றார்.🙏🙏🙏🙏

————–

கீழே -அறுக்கும் வினையாயின -திருவாய் மொழியில் -அவனைப் பெற வேணும் என்னும் மநோ இதமாய்ச் சென்றது –
அந்த மநோ ரதம் நிறைவேறாமையாலே கிலேசித்த படி சொல்லிற்று கீழ்த் திருவாய்மொழியில்
இத்தை அறிந்த எம்பெருமான் -ஆழ்வீர் எம்மைப் பெறாமையால் நீர் நோவு படுவது கிடக்கட்டும் –
உம்மைப் பெறாமல் இழவு பட்டுக் கிடப்பவன் நான் அன்றோ
உமக்கு ஒரு குறை உண்டோ
திரு நாட்டை விட்டு திருக் கண்ணபுரத்திலேநாம் சந்நிதி பண்ணி இருப்பது உமக்காக அன்றோ
இந்த சரீரத்தின் முடிவில் உம்முடைய அபேஷிதம் நிறைவேற்றக் கடவோம் -என்று சொல்லி சமாதானம் பண்ண
ஆழ்வாரும் சமாஹிதராய் அதனைச் சொல்லி மகிழ்கிறார் இத் திரு வாய் மொழியில்

மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -உயிரான பாசுரம்
சர்வேஸ்வரன் சர்வ ஜன சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு திருக் கண்ணபுரத்திலே கோயில் கொண்டு இரா நின்றான்
எல்லாரும் அவனை சென்று ஆஸ்ரயிங்கோள்
ஆஸ்ரயிக்கும் இடத்தில் அவன் திருவடிகளில் பக்தியை பண்ணுங்கோள்
பக்திக்கு உபகரணம் இல்லாதோர் பிரபத்தியைப் பண்ணுங்கோள்
அதற்கு உரிய அத்யவசாயம் இல்லாதார் உக்தி மாத்ரத்தை ஆகிலும் சொல்லுங்கோள்
அவ்வளவே கொண்டு அவன் தான் கை விடான்
ஆனபின்பு எல்லாரும் ஒக்க அவனை ஆஸ்ரயிங்கோள் -என்று
பரோபதேசமாக செல்கின்றது இப்பதிகம் –

மோஹித்துக் கிடந்தார் ஆகில் கிடக்கும் அத்தனை போக்கி
உணர்ந்தார் ஆகில் பிறர்க்கு ஹிதம் சொல்லி அல்லது நிற்க மாட்டார்-என்பர் நம்பிள்ளை
🙏🙏🙏🙏

————-

கூரத்தாழ்வானுக்கும் தத் ஸம்பந்திகளுக்கும் மோக்ஷம் நிச்சயம் என்ற அரங்கன் திரு வாக்கைக் கேட்டு இராமானுசர்
ஹரஷ ப்ரகர்ஷத்தாலே மேல் உத்தரீயத்தை ஆகாயத்தை நோக்கி வீசுதல்… 🙏

———

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்……..
அமுதனாருடைய எல்லை கடந்த ப்ராவண்யத்தை அறிந்த எம்பெருமானார்
‘நம்மேல் இவ்வளவு காதல் கொண்டிருக்கிற இவருடைய நெஞ்சை நாம்விட்டு நீங்கலாகாது, என்று கொண்டு
அமுதனாருடைய திருவுள்ளத்தை மிகவும் விரும்பியருள, அதனைக் கண்டு மகிழ்ந்து பேசுகிறார்.

இன்புற்றசீலத்து இராமானுசா…..
எத்தனையேனும் தண்ணியனான என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து – அது தன்னைப் பெறாப் பேறாக நினைத்து –
ஆநந்த நிர்பரராய் -எழுந்து அருளி இருக்கிற சௌசீல்யத்தை உடையவரே –
இப்படி இருக்கிற தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது-ஒரு கார்யம் உண்டு –
அது ஏது என்னில் –
ஐயார் கண்டமடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த –என்னுமா போலே -ஸ்ரீ திரு வாய் மொழி -2 9-3 – –
தோற்புரையே போமதன்றியிலே அஸ்த்திகதமாய் இன்று நலிய கடவ வியாதிகளுக்கு பாஜனமான சரீரங்கள் தோறும் –
ஜநிப்பது மரிப்பதாய் – அசங்க்யேய துக்கங்களை அனுபவித்து முடியிலும்
சர்வ காலத்திலும் -சர்வ தேசத்திலும் -தேவரீருக்கு அனந்யார்ஹ்ராய் இருக்கும் அவர்களுக்கே மாறுபாடுருவின
ஸ்நேஹத்தை உடையேனாய் இருக்கும்படியாக செய்து என்னை அவர்கள் திருவடிகளிலே அடிமையாம்படி பண்ணி யருள வேணும் .
இதுவே அடியேனுக்கு புருஷார்த்தம் -என்கிறார் அமுதனார்….

அங்கயல் பாய்வயல் தென்னரங்கன்……
இப்பிரபந்தத்தின் தொடக்கத்தில் “இராமாநுசன் சரணாவிந்தம் நாம் மன்னிவாழ” என்று
எம்பெருமானாருடைய திருவடித்தாமரைகளைப் பொருந்திவாழ்வதே தமக்குப் பரம புருஷார்த்தமாக அருளிச் செய்தவராகையாலே
அந்தப் புருஷார்த்தம் நமக்கு யாவஜ்ஜீவம் ஹித்திக்கும்படியாக -எல்லாச் செல்வங்களையும் அளிக்கவல்ல
பெரிய பிராட்டியாரைப் பிரார்த்திப்போமென்கிறார்-முடிவான இப்பாட்டில்.
ஸாமாந்ய ஸம்பத்தை அளிக்கவல்ல பிராட்டியே இந்த விசேஷ ஸம்பத்தையும் அளிக்கக் கடவள் என்றதாயிற்று.🙏🙏

———–

திருவவதார திருநக்ஷத்ரம்

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா |
தஸ்ய தாசரதே பாதௌ சிரஸா தாரயாம்யஹம் ||

மேஷே புனர்வசஸுதிநே தாசரத்யம்ஸ ஸம்பவம் |
யதீந்த்ரா பாதுகாபிக்யம் வந்தே தாசரதிம் குரும் ||

இராமபிரான் இவ்வுலகில் வந்து அவதரித்த சித்திரை புனர்வஸு நன்னாளில்
தாசரதியான (தசரதன் மகனான) அவன் அம்சமாக வந்துதித்து,
யதீந்த்ர பாதுகைகளாக போற்றப்படும் தாசரதிமஹாகுருவை (முதலியாண்டானை) வணங்குகிறேன்🙏

ஸ்ரீவைஷ்ணவசிரோபூஷா ஸ்ரிராமானுஜபாதுகா |
வாதூலகுலோத்தம்ஸ ஸ்ரீதாசரதிரேததாம் ||

“ஸ்ரீராமானுஜ பாதுகையை ஸ்ரீவைஷ்ணவர் யாவருக்கும் தலைக்கணியாய்த் திகழும்
வாதூலகுல திலகரான (தாசரதி) முதலியாண்டானின் புகழ் ஓங்குக என்பது மேற் தனியனின் பொருள் .

முதலியாண்டான் என்று நம் ஸம்பிரதாயத்தில் புகழ் பெற்றவரான தாசரதி மஹாகுரு
ஸ்வாமி எம்பெருமானாரின் (ஸ்ரீராமானுஜர்) ஸஹோதரியின் குமாரராக
பச்சைவாரணப் பெருமாள் கோவில் என்னும் ஊரில் அவதரித்தவர்.
இவ்வூர் தற்சமயம் பேட்டை” என்றே அழைக்கப்படுகிறது.
எதிராஜரான ஜகத்குரு இவரைத் திருதண்டமாக (முக்கோல்) மதித்திருந்தார்.
இவரோ, ஜகதாசார்யரான சுவாமியின் (ஸ்ரீராமானுஜர் பாதுகங்களாகவே (திருவடி நிலைகள்) தம்மை நினைத்திருந்தார்.
எம்பெருமானார் ஸன்யாஸ்ரமம் புகும்போது, நமது முதலியாண்டானைத் தவிர அனைத்தையும் துறந்தோம் என்று
அருளியதாக இவரது புகழ் பேசப்படுகிறது.

மொழியைக் கடக்கும் பெரும்புகழான் எனப்படும் கூரத்தாழ்வானும், தாசரதியும் (முதலியாண்டான்)
ஸ்வாமி ராமானுஜரை முதல் முன்னம் ஆச்ரயித்தவர்கள்.
ஆதலால் ஆழ்வான், ஆண்டான் என்று இவர்களைச் சேர்த்தே அழைப்பர் பெரியோர்.
இவர்களை ஸ்வாமியின் தண்டும் பவித்ரமுமாகச் சொல்வது வழக்கம்.

த்ரேதா யுகத்தில் பெருமாள் இராமபிரானாக வந்து அவதரித்தபோது, திருவனந்தாழ்வான் (ஆதிசேஷன்) இலக்குவனாக
வந்து பிறந்து அவனுக்கு எல்லா அடிமைகளும் செய்து மகிழ்வித்தான்.
அந்த கைங்கர்ய ரஸத்தைத் தான் முழுதும் பருகவேண்டும் என்று ஆசைகொண்ட பெருமாள்,
கலியுகத்தில், தானே அவர் (ஸ்ரீராமானுஜர்) சகோதரியின் புதல்வனாக வந்துதித்து,
தாசரதி என்ற பெயருடன் அவருக்கு அந்தரங்க கைங்கர்யங்களைச் செய்து மகிழ்வுற்றான்.
அதாவது, த்ரேதா யுகத்தில் இலக்குவனாக அவதரித்தான் திருவனந்தாழ்வான்;
இராமபிரானுக்கு அனைத்து கைங்கர்யங்களும் புரிந்தான். பின்னர் அவன் கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராக அவதரித்தான்.
அதேபோல், இராமனாக அவதரித்து, இலக்குவனிடம் கைங்கர்யங்கள் பெற்றுக்கொண்ட பெருமான் அதற்கு ப்ரதி உபகாரமாக,
கலியுகத்தில் ஸ்ரீராமானுஜருக்குக் கைங்கர்யங்கள் செய்ய, அவரது சகோதரி மகனாக அவதரித்தான்.

ஆக, இலக்குவனே ஸ்ரீராமானுஜர்;
இராமனே முதலியாண்டான்

இராமபிரான் முதலியாண்டான்
இருவர் அவதரித்ததும் சித்திரை மாதம் புனர்பூசம் நக்ஷத்ர மாகும்

ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீவைஷ்ணவ ஸ்வாமிகள் (முதல்வர்கள்), இவரை ஆண்டானாக (ஆளும் பிரானாக) மதித்ததினால்,
இவர் முதலியாண்டான் ஆனார்.
ஆனால் இவரோ, எதிராசருக்கும் அவர்களுக்கும் அடிமையாய் இருப்பதையே விரும்பினார்.
ஒரு சமயம் இராமானுசர் இவரைத் தனது ஆசார்யரான பெரியநம்பிகளின் குமாரத்தியான (மகள்) அத்துழாய்க்கு
சீதன வெள்ளாட்டியாக (பணிப்பெண்) அனுப்பினார்;
இவரும், அத்துழாயின் மாமியார் அகத்தில் ஒரு பணிப்பெண் செய்யும் அடிமைத் தொழில்களை மன நிறைவுடன் செய்தார்.
இராமானுசரிடம் இவர் கொண்ட ஆசார்ய பக்தி எவ்வளவு மேன்மையானது இதன் மூலம் தெரிகிறது.

யதிராஜருக்கும் முதலியாண்டானுக்கும் உள்ள உறவைக் காட்டும் ஒரு புகழ்வாய்ந்த ச்லோகம்:

அஜஹத்பாகிநேயத்வம் பாதுகாத்வம் த்ரிதண்டதாம் |
ஸம்ப்ராப்தோ யதிராஜஸ்ய குணைஸ்தத்ப்ரீதி ஹேதுபி: ||

மகிழ்விக்கும் ஆத்மகுண பூர்த்தியால்,
யதிராஜருக்கு விலகாத சகோதரி புத்ரர் என்ற உறவையும்
பாதுகை (திருவடி) ஆகையையும்,
த்ரிதண்டமாகையையும் (முக்கோல்) ஆகிய மூன்று நிலையினைப் பெற்றார் (முதலியாண்டான்).

மருமான் என்ற உறவு பிறவியால் வந்தாகிலும், தாய்மாமன் துற்வியானபோது அது தானே விலகிவிடவேண்டும்.
யதீந்த்ரரான ராமானுஜர் துறவியானபோது, தாசரதியான மருமானைத் துறக்கவில்லை.
முதலியாண்டானைத் தவிர அனைத்தையும் துறந்தோம் என்றதும் இவரது பாகவத குணங்களைப் போற்றி,
தனது த்ரிதண்டமாகவும் பாதுகையாகவும் மதித்தது இவர் உள்ளத் தூய்மையையும், அடிமையாய் (சேஷி) இருக்கும்
விருப்பத்தையும் பற்றியவையாதல் வேண்டும்.
மேல்கோட்டை என்று வழங்கப்படும் திருநாராயணபுரத்தில் முதலியாண்டான் திருவடிகளை விளக்கி (அலம்பி),
அந்த ஸ்ரீபாத தீர்த்தத்தைப் புருகிய அவ்வூரார் பலர் மனம் திருந்தி உடையவர் பக்கம் பக்தர்களானார்கள் என்னும்
விஷயம் முதலியாண்டானின் மனத் தூய்மையை புலப்படுத்தும்.🙏🙏

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: