ஸ்ரீ மாறன் அலங்காரம்–மூன்றாவது–சொல்லணியியலுரை—பகுதி-2 -சித்திரகவி.–ஸ்ரீ திருக்கருகைப் பெருமாள் கவிராயர்–

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

சித்திரகவி.

270.வல்லினமெல்லினமிடையினப்பாட்டே
நிரோட்டியமோட்டியமோட்டியநிரோட்டிய
மக்கரச்சுதகமதன்வருத்தனையே
வக்கிரவுத்திவினாவுத்தரமே
சக்கரபெந்தம்பதுமபெந்த
முரசபெந்தநாகபெந்த
மிரதபெந்தமாலைமாற்றே
கரந்துறைசெய்யுட்காதைகரப்பே
பிரிந்தெதிர்செய்யுட்பிறிதுபடுபாட்டே
சருப்பதோபத்திரங்கூடசதுர்த்தங்
கோமூத்திரிசுழிகுளந்திரிபங்கி
யெழுகூற்றிருக்கையொடிருபானுறும்
பழிதீர்மடக்குடைச்சித்திரப்பாவே.
(எ-ன்) இன்னுமம்மடக்கலங்காரங்களுட்படுவனவாஞ் சில மிறைக்கவி களுணர்த்துதனுதலிற்று.
மிறைக்கவியெனினுஞ் சித்திரப்பா வெனினு மொக்கும்.

(இ-ள்) வல்லினப்பாட்டு முதலாக எழுகூற்றிருக்கையீறாகச் சொன்ன விருபத்தாறும் முன்சொல்லிப்போந்த
சொல்லொடு மெழுத்தோடுங்கூடிய குற்றமற்ற சொல்லணியினுண் மடக்கின்பாற்படுஞ் சித்திரகவியா மென்றவாறு.

இதனுட் பாட்டென்பதனை மூன்றிடத்துங்கூட்டுக. எண்ணும்மை தொக்கு எண்ணேகார மிடையிட்டு வந்தன ; என்னை?
“எண்ணேகார மிடையிட்டுக்கொளினு, மெண்ணுக்குறித்தியலுமென்மனார்புலவர்” என்பதாகலின்.
இருபானாறும் என்னு மும்மை எச்சவும்மையாதலால் மாத்திரைச்சுருக்கமும், மாத்திரைவருத்தனையும்,
ஒற்றுப்பெயர்த்தலும், திரிபதாதியும், சதுரங்கபெந்தமும், கடகபெந்தமும் என்னு மித்தன்மை யனவெல்லா முரைத்துக்கொள்க

வல்லினப்பாட்டு

271.அவற்றுள்,
வல்லினமுழு துறல்வல்லினப்பாட்டே.
(எ-ன்) வைத்தமுறையானே வல்லினப்பாட்டாமா றுணர்-ற்று.

(இ-ள்) வல்லினவெழுத்தாறும்வந்து ஒழிந்தவினமிரண்டும் வாராதேபாடுவது வல்லினப்பாட்டா மென்றவாறு.

பொற்றொடிகற்சட்டகத்தைப்போக்கிப்புறத்திறுத்த
கற்புறத்தற்காட்சிக்கதிகொடுத்த–சிற்றடிப்போ
துச்சிப்பதிக்கத்தாகூற்றச்சுறுத்தாது
கச்சிப்பதிக்கத்தாகை. (767)

இதனுள் வல்லினவெழுத்தாறும்வந்து பிறவினவெழுத்துக்கள் வாராதது கண்டுகொள்க.

(இ-ள்) திருக்கச்சிப்பதிக்குக் கத்தனே ! என்னை யமன்வந் தச்ச முறுத்தாது, நீ பொன்னினாற்செய்த
தொடியினையுடையாள்கற்படிவத்தைப் போக்கி யவளைவிட்டுப் புறமாறினகற்பு மீட்டு மவளிடத்தெய்தவும்
பண்டைச்சரீரத்தினதழகெய்தவுங்கூட்டுஞ் சாபவிமோசனத்தைக் கொடுத்த சிறிய திருவடிகளாகிய
தாமரைப்போதை யென்சென்னியிலே சூடத் தருவாயாக, அதனோடும், அஞ்சாதேயென்னும் அபயத்தமுந் தருவாயாக வென்றவாறு.

அச்சமுறுத்தாது என்பது அச்சுறுத்தாதெனத் தொகுக்கும் வழித்தொகுத்தலென்னும்விகாரத்தானின்றது ;
“குணமாலையையச்சுறுத்த” வென்பதுபோலக் கொள்க. துறை – கடவுள்வணக்கம்.

மெல்லினப்பாட்டு

272.மெல்லினமுழுதுறன்மெல்லினப்பாட்டே.
(எ-ன்) மெல்லினப்பாட்டாமாறுணர்–ற்று.

(இ-ள்) மெல்லினவெழுத்தாறும்வரப்பாடுவது மெல்லினப்பாட்டா மென்றவாறு.

மனமேநினைஞானமன்னாமைமீன
மனமேனமெங்ஙனெனினங்ஙன்–முனமானா
னேமிமான்மாமானினிநீண்மனமான
நேமிமானன்னாமநீ. (768)
இது மெல்லினமாறினாலும்வந்த மெல்லினப்பாட்டு.

(இ-ள்) மனனே ! மீனமும் அன்னமும் ஆமையும் ஏனமும் எப்படியேயிருக்குமென்னி லப்படியே முன்னந் திருவவதாரமானவன்,
பூமிதேவியாகிய மான்போலும்விழியையுடையாளுக்குந் திருமகளாகிய பெண்ணுக்கும் அவர்கள்மனமெப்படி யப்படியான
ஞானமன்னன், சக்கரத்தையுடையான், அவனது நல்ல திருநாமங்களை யிடைவிடாது நீ நினைப்பாயாக வென்றவாறு.
எனவே அந்நினைவே யான்மலாபத்தைத் தருமென்பது கருத்து. துறை – இதுவுமது.

இடையினப்பாட்டு

273.இடையினமுழுதுறலிடையினப்பாட்டே.
(எ-ன்) இடையினப்பாட்டாமாறுணர்–ற்று.

(இ-ள்) இடையினமாறும்வரத்தொடுப்ப திடையினப்பாட்டா மென்றவாறு.

வேயாலலையால்வில்வேளாலயலவரால்
யாயாலுயிர்வாழ்வார்யாவரே–யோய்விலராய்
வாழ்வாருயிர்வழியேவாழ்வாரருளாள
ராழ்வாரருளிலரேயால். (769)
இஃது இடையினமாறும்வந்தபாட்டு.

(இ-ள்) ஒழிவில்லாதவாழ்வினையுடையார், உயிரின்கண்ணே நீங்காதுவாழும் வாழ்வினையுடையார்,
கிருபையை யாட்சியாகவுடையார், அவர்யாரெனில்? ஆழ்வாரென்னுந் திருநாமத்தையுடையார்
(எமக்குத்தாரு மார்புந் தரவேணுமென்னுங்) கிருபையிலர் ; ஆனபடியாலே தோழீ ! வேய்ங்குழல்முதலாகிய
பகைகளாற் புமான்களையெய்தாது தனியிருந்தவரு ளுயிர்வாழ்வா ரொருவருமில்லை யென்றவாறு.

முன்னிலை யெஞ்சிற்று. திணை – பெண்பாற்கூற்றுக்கைக்கிளை. துறை – மெலிவொடுகூறல்.

நிரோட்டியம்

274.இதழ்குவிந்தியையா தியல்வது நிரோட்டியம்.
(எ-ன்) வைத்தமுறையானே நிரோட்டியமாமா றுணர்-ற்று.

(இ-ள்) அதரமு மதரமுங் குவியாதுங் கூடாதும் நடப்பது நிரோட்டியமா மென்றவாறு. உம்மை யிரண்டிடத்துந் தொக்கன.

நாதனரங்கநகர்நாராயணனறைசேர்
சீதநளினத்தினிற்சிறந்த–காதற்
கனிநானிலக்கிழத்திகட்கினியகாந்தித்
தனிநாயகன்றாள்சரண். (770)
இது நிரோட்டியம்.

இதனுள் நறைசேர்சீதநளினத்தினிற்சிறந்தகாதற்கனி – திருமகள். நானிலக்கிழத்தி – பூமிதேவி.
கட்கினியகாந்தி – கண்ணிற்கு விருப்பத்தைத்தரு மழகு. துறை – கடவுள்வணக்கம்.

ஓட்டியம்

275.இதழ்குவிந்தியைந்தியல்வதுவேயோட்டியம்.
(எ-ன்) வைத்தமுறையானே யோட்டியமாமா றுணர்–ற்று.

(இ-ள்) அதரமுமதரமுங் குவிந்துங் கூடியு நடப்பதுவே யோட்டியமா மென்றவாறு.

குருகுகுருகுகுருகொடுகூடு
குருகுகுருகூருளுறுகோ. (771)
இஃது இதழ்குவிந்தவோட்டியம்.

(இ-ள்) மனனே ! சங்க சங்கொடுங் குருகென்றபறவைகள் குருகுகளோடுந் திரண்டியங்குங் குருகாபுரியுட்கோவை நினை யென்றவாறு.

மூன்றாமுருபின்மே லும்மை தொக்கு விரிந்தன. ஓடு இடைநிலைத்தீபகம். கோவை என்னு மிரண்டாவது இறுதியிற் றொக்கது.
உறு என்றது நினையென்றாயிற்று. மனனேயென்னு மெழுவாயுருபு முன்னிலையெச்சமாயிற்று.
பா – குறள்வெண்பா. துறை – கடவுள்வணக்கம்.

பம்மும்பம்மும்பம்முமம்மம்மமைமாமை
பம்முமம்மமும்மேமம்பாம். (772)
இஃது இதழியைந்தவோட்டியம்.

(இ-ள்) மை பம்மும் – (வலவனே யுனதுதேரைப்பின்னிட்டு விரைந்த) மேகம்,
(இதன்முன்சென்று தேர்வரும்வழிமேல்விழி வைத்த இல்லறக்கிழத்தியிருந்த நகரின்கட்) படியும்.
பம்மும்பம்மும் – அதனால், வான்மீன்கணங்களும் மறையும் ; இருள்செய்யும் என்றபடி.
(அங்ஙன மிருள்செய்யுமிடத்து) அம்மம்ம – ஐயோ ! ஐயோ ! மாமைபம்முமம்மமும்மேமம்பாம் – அழகியமுலை பசலைதழைவதாம் என்றவாறு.

எனவே என் சத்தியவசனமென்னாமென்பது பயனிலை. அடுக்கு அவலப்பொருணிலைக்கண்வந்தன.
பகுதி – பொருள்வயிற் பிரிதல். துறை – வலவனொடுகூறல். பா – இதுவுமது.

குருகுமடுவூடுகுழுமுகுருகூரு
ளொருபெருமானோவாமையூறு–முருகொழுகு
பூமாதுவாழும்புவிமாதுமேவுமொரு
கோமானுவா*வோதுகோ. (773)
இஃ திருவகையோட்டியமும்வந்த வோட்டியம்.

இதன்பொரு ளுரையிற்கொள்க. அவன்றிருவடிகளேகதியென்பது பயனிலை.
* உவா – நிறைவு.
துறை – கடவுள்வணக்கம்.

ஓட்டியநிரோட்டியம்

276.இருமையுமொன்றினுளிருவகைத்தாயுறும்
பெருமிதமோட்டியநிரோட்டியமெனப்பெறும்.
(எ-ன்) இதுவு மவ்வோட்டியநிரோட்டியங்கட் கோர் சிறப்பு விதிகூறுகின்றது.

(இ-ள்) ஓட்டியம், நிரோட்டியமென்னு மிரண்டுதன்மையு மொரு செய்யுளகத்தா யிரண்டுகூறுபாட்டானடை பெறுதலுறும்
பெருமையுடையது ஓட்டியநீரோட்டியமெனப் பெயர்பெறு மென்றவாறு. இரண்டுகூறு பாட்டானென்னுமவை மேற்காட்டுதும்.

மதிமடவார்வேலைவேய்மாரவேள்சோலை
பதிகுயிலோடேவன்பகைகூர்–விதியுங்
குறிதோநாகூராகுறிதுளவக்கோதை
முறிகூயருளேமுற. (714)
இஃது ஓட்டியமும் நிரோட்டியமும் முறைதடுமாறாது முறையே வந்தஓட்டியநிரோட்டியம்.

இதனுள், குறிதோ – ஓரொன்று குறியதுன்பத்தைச்செய்வதோ வென்க. ஓகாரம் எதிர்மறை. முறி – தளிர்.
ஒழிந்தபொரு ளுரையிற்கொள்க. திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – துயரறிவுறுத்தல்.

வதுவையொருபோதுவழுவாதுவாழும்
புதுவைவருமாதுருவம்பூணு–முதுமைபெறு
நாதனரங்கனையேநன்றறிந்தார்க்கேயடியேன்
றாதனெனநெஞ்சேதரி. (775)
இது முன்னடியிரண்டு மோட்டியமும் பின்னடியிரண்டு நிரோட்டியமு மாகவந்தவோட்டியநிரோட்டியம்.
இவ்விரண்டுதாரணமு மிங்ஙன மிரண்டு கூறுபாட்டான்வந்த வோட்டியநிரோட்டியம். இதன் பொருளுரையிற்கொள்க.
திணை – பாடாண். துறை – சமயவணக்கம். உறுமென்ற விதப்பினானே நிரோட்டியவோட்டியமுமுள. அவை வருமாறு :-

கற்றைச்சடையார்கயிலைக்கிரிகளைந்தான்
செற்றைக்கரங்கள்சிரங்கணிறைந்–தற்றழிய
வேவேவுமெவ்வுளுறுமேமமுறுபூமாது
கோவேமுழுதுமுறுகோ. (776)
இது முதலீரடியுந் தனிச்சொல்லும் நிரோட்டியமும் பின்னிரண்டடியு மோட்டியமுமாகவந்தநிரோட்டியவோட்டியம்.
இவற்றின் வேறுபாடு களெல்லாம் வந்தவழிக் கண்டுகொள்க. துறை – கடவுள்வாழ்த்து.

அக்கரச்சுதகம்

277.ஒருபொருள்பயந்தவொருதொடர்மொழியாய்
வருவதையோரெழுத்தாய்க்குறைவகுப்பிற்
சுருங்குபுபலபொருடோன்றுவதாய
வருங்கவியக்கரச்சுதகமாகும்.
(எ-ன்) வைத்தமுறையானே யக்கரச்சுதகமாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஒருபொருளைத் தருவதொருதொடர்மொழியாய்த் தொன்று தொட்டுவருவதைப் புவலனா லொரோ
வெழுத்தாகக்குறைத்துக்கூறுங் கூறுபாட்டாற் றொடர்ச்சொ லீரெழுத்துப்பதமு மோரெழுத்துப்பதமு மாகச் சுருக்கமெய்திப்
பலபொருடோன்றுவதாய அரியகவி அக்கரச் சுதகமாமென்றவாறு. சுதகம் – அழிவு.

ஒளிகொண்டபுத்தூருறைகோதைதீந்தேன்
றுளிகொண்டபூந்துளபத்தோன்றலாற்கீந்த
தளிகொண்டதையணிந்ததன்றதனைப்பற்றல்
களிவண்டிமிர்தேங்கமழ்வாசிகைசிகைகை. (777)
இஃது அக்கரச்சுதகம்.

(இ-ள்) கீர்த்தியைக் கைக்கொண்ட வில்லிபுத்தூருறையுங் கோதை சூடிக்கொடுத்தா ளினிய தேன்றுளிக்குஞ் செய்கையைக்
கைக்கொண்ட பூவோடுகூடிய துளவமாலிகையையுடைய பெரியோனுக் களித்ததுவு மதனைச் சூடியதும்
அதனைப் பற்றியதும் புலவீர்காள் ! கூறுங்காலத்துத் தேனையுண்டு களித்தலையுடைய
வண்டுக ளாரவாரிக்கும் வாசிகை சிகை கையா மென்றவாறு.

வாசிகை – மாலை. சிகை – திருக்குழற்கற்றை. கை – திருக்கை. இதனு ளவ்வாறுநின்ற கூறுபாடு கண்டுகொள்க.
திணை – பாடாண். துறை – வள்ளிவாழ்த்து.

அக்கரவருத்தனை

278.ஒருதொடர்மொழியீற்றோரெழுத்தினைப்பிரித்
தொருபொருடாவைத்தோரொன்றாக
மிக்கபல்பொருடாமேல்வைப்பனவே
யக்கரவருத்தனையாகுமென்ப.
(எ-ன்) வைத்தமுறையானே யக்கரவருத்தனையாமா றுணர்ற்று.

(இ-ள்) ஒருபொருடருவதொருதொடர்மொழியீற்றின் ஓரெழுத்தினைப் பிரித்துப் பிறிதொருபொருடரவைத் ததன்மேல்
ஒரோவெழுத்தாகப் பலபொருடோன்றவைப்பது அக்கரவருத்தனை யென்றுகூறுவர் பெரியோ ரென்றவாறு.

எந்தைதிருத்தாளெழுகங்கையீறுமா
விந்தமலராட்கிசைந்தவீறினுக்கு–முந்தெழுத்துஞ்
சித்தசனன்வாண்முதலுஞ்சேயிழையாய்சேர்த்தக்கா
லத்தமெழிலோலைப்பூவாம். (778)

இஃது அக்கரவருத்தனை. அப்படி யிதனுட்சேர்க்கும்படி யெப்படி யென்னில், எம்முடைய சுவாமியாகிய
ஸ்ரீமந்நாராயணன் றிருவடிகளிலெழுந்த கங்கையென்றதொடர் மொழியீற்றினின்ற ககரவைகாரத்தைப் பிரித்துக்
கையெனக்கொண்டு, அரவிந்தமலராட்கிசைந்த வீறென்பதனைத் தகையென்றாக்கி, அதற்குமுதலெழுத்தாகிய
தகரத்தைப்பிரித்துச்சேர்த்துத் தகையென்றாக்கி, சித்தசனன்-காமன் ;
அவனுடைய வாளாகிய கேதகையென்றதிற் ககரவேகாரத்தைப் பிரித்துச்சேர்த்துக் கேதகையென்றாக்கி
அத்தம், எழில், ஓலைப்பூ என முடிக்க. வீறு – அழகு. அதனைத் தகையெனக் கூட்டினமையுங் காண்க

வக்கிரவுத்தி

279.வெளிப்படைவிளியினும்வினாவினுமெய்ம்மை
யொளித்துமற்றொன்றினையுரைப்புழிமறித்து
நிரைத்தபன்மொழிதொறுமிசைதிரிநிலைத்தா
யுரைப்பதுதானேவக்கிரவுத்தி.
(எ-ன்) வைத்தமுறையானே வக்கிரவுத்தியாமா றுணர்-ற்று.

(இ-ள்) வெளிப்படையாகவிளிக்குமிடத்தும் வினாவுமிடத்தும் முன்னின்ற பொருண்மையை மறைத்துப் பிறிதொன்றாக
வெதிர்மொழி கொடுத்தவிடத்து மீட்டுந் தெளிவிப்பனவாய்நிரைத்த தொடர்மொழி தோறும்
அம்முன்னின்றவ ரிரட்டுற விசைதிரிநிலைத்தாயுரைப்பதே வக்கிரவுத்தியா மென்றவாறு.

வெளிப்படை யீரிடத்துங் கூட்டுக. இரட்டுற – சிலேடையாக. முன்னிலையோ ரெச்சமாக விரித்துரைக்கப்பட்டது.

ஏற்றமுறுமோதிமத்தாவென்றேன்விண்ணோர்க்
கின்னமுதன்றளித்தவன்பேரென்றான்வெற்பிற்
றோற்றமுறுமெகினவாகனத்தாவென்றேன்
றொன்மறையோன்பெயரென்றான்சுரந்துவிண்ணோர்
போற்றவருமன்னவாகனத்தாவென்றேன்
புரந்தரனார்பெயரென்றான்பொன்னேயென்னே
மாற்றமுறப்பகர்ந்தமகிழ்மாறற்கென்றன்
மையலுரைத்தெவ்வாறுமருவுவேனே.
இது வக்கிரவுத்தி.

(இ-ள்) பொன்னையொப்பாய் ! நமதுவீதியி லுலாப்போந்த மகிழ்மாறரைத் தொழுத யான், ஒருதலைபற்றிய
காதலாலே யேறுதற்குண்டான வோதிமத்தையுடையவனேயென்றேன் ;
அப்பொழுது மலையை மத்தாகவுடையவ னெனும்பெய ரென்பெயரன்று, திருப்பாற் கடலைக் கடைந்து இனிய வமிர்தத்தைத்
தேவர்களுண்ணும்படிக்குக் கொடுத்த திருமால்பெய ரென்றான். மீட்டும் வெள்ளிமலைபோன்று பிரகாசிக்கு மெகினவாகனத்தாவென்றேன் ;
அப்பொழுது அதற்கு மிமவானிடத்துப்பிறந்த அன்னம்போலுநடையையுடைய வுமையை வாமபாகத்திலுடைய சிவனது
அத்த னென்னும்பெயர் பழைய மறையையுடைய பிதாமகன்பெய ரென்றான்.
மீட்டும், சுரந்துவிண்ணோர் போற்றவருமன்னவாகனத்தாவென்றேன்; அதற்குந் திரண்டு தேவர்கள்போற்று மன்னவனே !
மேகத்தையுடையவனே யென்னு மிருபெயரும் புரந்தரனதுபெய ரென்றான் ; ஆகையா லென்னே?
யான் கொண்ட மையலை யவனொடுகூறி யவன்றிருமார்பைத் தழுவுவ தெவ்வா றென்றவாறு.

பொன்னேயென்றது தோழியை. திணை – பெண்பாற்கூற்றுப் பெருந்திணை. துறை – மெலிவொடுகூறல்.

அஞ்சக்கரனோவென்றேன்சங்
கரனாமென்றான்றனியாழி
மிஞ்சத்தரித்ததிருத்தேர்வெய்
யவனோவென்றேன்வெயிலென்றான்
செஞ்சொற்பரிதிவலம்பயில்விண்
டோவென்றேன்பொற்சிலம்பென்றான்
வஞ்சர்க்கிரங்காவரங்கனுக்கென்
மாலெப்படியேமொழிவேனே. (780)
இதுவுமது.

(இ-ள்) அழகிய சக்கரத்தையுடையானோவென்றேன் ; அப்பொழுது அஞ்சக்கரங்களையுடையவ னுருத்திரனா மென்றான்.
ஒப்பற்ற திருவாழியை வலது கையிற் றரித்தவனுமாய்த் திருமகளைச் சிந்திக்கிறவனுமாய்த்
திருமகளாற் சிந்திக்கப்பட்ட விருப்பத்தையுடையானோ வென்றேன் ; அப்பொழுது மது வெயிலோனென்றான்.
மீளவுஞ் செம்மையொடுகூடிய கீர்த்தியையுடைய பரிதியை வலதுகையிற்றரித்த விண்டுவோவென்றேன்;
அதற்கும் அது பொற்சிலம்பென்றான்; ஆகையால் வஞ்சத்தையுடையோரிடத்துக் கருணைசெய்யாத்
திருவரங்கேசனுக் கியான்கொண்ட காதலை யெப்படியேகூறுவே னென்றவாறு.

துறை – இதுவுமது. முன்னது வெளிப்படைவிளியினும் பின்னது வெளிப்படைவினாவினும் அடைவே வந்தவாறு காண்க.

வினாவுத்தரம்

280.துதித்திடுமொருபொருட்டொடர்ச்சொலைப்பிரித்து
மதிப்படவினாயவகைக்கெதிர்மொழியாய்
விதிப்படவுரைப்பதுவினாவுத்தரமே.
(எ-ன்) வைத்தமுறையானே வினாவுத்தரமாமா றுணர்-ற்று.

(இ-ள்) உலகம் புகழ்வதா மொருபொருளைக் காட்டு மொரு தொடர்மொழியினைப் பிரித்துப் பிரித்த பதந்தொறு
மனத்துட்கொள ஒருவர் வெளிப்படையாகவினாய பலவேறுவகைத்தாங்கூறுபாட்டிற்கு முன்னின்றவன்
மாற்றமில்லாதமுறையொடு மெதிர்மொழியாவுரைப்பது வினாவுத்தரமா மென்றவாறு.

வண்டுளபத்தான்றுயிலும்வாழ்வேதுதெள்ளமுதம்
பண்டுகடைநாட்டறியாய்ப்பற்றியதென்–முண்டமுனி
போசனமாய்க்கொண்டதெவன்போதிலானுக்குவந்த
வாசனமதென்னரவிந்தம். (781)
இது வினாவுத்தரம்.

இதனுள், போதிலான் – பிரமன். அவனாசனமென் னரவிந்தம் என உலகந்து திப்பனவாய ஒருபொருடருமொழியை
அரவு+இந்து+அம் எனப் பிரித்து, துளபத்தான்றுயிலும்வாழ்வு அரவு, அமுதம் பண்டுகடைநாட் டறியாய்ப்பற்றியது இந்து,
முண்டமுனிபோசனமாய்க்கொண்டது அம் என முறையே நிறுத்தி, போதிலானுக் குவந்த வாசனமதென் னரவிந்தமென்னச்
செவ்வனம்விரியாது அருமை தோன்ற விரித்துக்காட்டியது காண்க.
இது வாகைத்திணையுட் புலமைவென்றி.

சக்கரபெந்தம்

281.சக்கரத்துட்டடுமாறுதறானே
சக்கரபெந்தமெனச்சாற்றினரே.
(எ-ன்) வைத்தமுறையானே சக்கரபெந்தமாமா றுணர்-ற்று.

(இ-ள்) சக்கரத்தினுள் அக்கரந் தடுமாறப் பெந்திப்பது தானே சக்கரபெந்தமெனச் சாற்றினர் பெரியோ ரென்றவாறு.
பெந்தம் – சம்பந்தம்.

282.அதுவே,
நாலிருமூன்றிருநாலெனநாட்டுஞ்
சார்பினிலார்புனைதன்மையவாகும்.
(எ-ன்) இதுவும் சக்கரத்தினது கூறுபாடுணர்-ற்று.

(இ-ள்) அக் கூறப்பட்ட சக்கரம், நரலார் ஆறார் எட்டாரெனப் புனையப்பட்ட தன்மைகளை யுடையவா மென்றவாறு.

சக்கரமென்பது தேரினதுருள். ஆர் என்பது அதனதகத்துச் செறிக்கப்பட்ட கதிர். புனைதல் – செய்தமைத்தல்.

வானமாதியவானவா
வானவாமனுவானவா
வானவாமனமானவா
வானமானிறமானவா (782)
இது நாலாரச்சக்கரம்.

இதனுள், நடுவு வா வென்னு மெழுத்து நின்று எட்டாகியும், நாலார்மேலும் நாலு னகாரம்நின்று எட்டாகியும்,
சூட்டின்மேனின்ற எழுத்துப் பன்னிரண்டினுள் நாலுதிக்கினுநின்ற மகரஆகார மிரண்டும் வகர ஆகார மிரண்டும்
ஆக நாலும் எட்டாகியுந் தடுமாறி ஆக எ-ம் 32 எழுத்தாகி, சிந்தடிநான்கான்வந்த வஞ்சிவிருத்த மமைந்தவாறு காண்க.

(இ-ள்) வானாதியாய பஞ்சபூதமானவனே! தேவர்கள்விரும்பும் மனுகுலமானவனே!
பெருமையையுடைய வாமனரூபமானவனே! விசும்பினிடத்து மேகம்போலுநிற மாக்கஞ்செய்தவா ! என்றவாறு.
எனவே யென்னைக் காப்பாயாக வென்பது கருத்து. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

தேவாமோகூராதிதமகிபாமாமோக
பூவாளிஓஒபொருதலைக்க–வோவாது
துங்கமுரசாயதேதுன்பமெனும்பூமகட்கு
வெங்கனலாவானேன்விது. (783)
இதுவும் நாலாரச்சக்கரம்.

இதனுள், நடுவு தகரநின்று அதனைச்சூழ்ந்த குறட்டின்மேல் திருமலையென்னும்பெயர் நின்று ஆர் நாலினும்
நாலுநாலாகப் பதினாறெழுத்து நின்று சூட்டினமே லிருபத்தெட்டெழுத்து நின்று
ஆக எழுத்து நாற்பத்தொன்பதும் ஐம்பத்தஞ்சாக மாறாடின.
அவை மாறாடினவகை :- நடுவு தகரம் இரண்டாகவும்,
சூட்டின்மையங்களில் முதன்மையத்தில் து மூன்றாகவும்,
ஒழிந்தமையத்தில் தே பூக மூன்றும் ஆறாகவும் மாறாடினவாறு காண்க.

(இ-ள்) தேவா – சகலதேவன்மாருக்குந் தேவனே ! மோகூரா திருமோகூரானே !
திதமகிபா – உண்மைப்பொருளானமகிபனே !
மாமோக – பெரியபிராட்டியைமோகிக்கப்பட்டவனே ! பிராட்டியால் மோகிக்கப்பட்டவனே! எனினுமாம். என்னை?
“தடுமாறு தொழிற் பெயர்க் கிரண்டு மூன்றுங், கடிவரை யிலவே பொருள்வயி னான” என்பதனா னறிக.
பூவாளி ஓஒ பொருதலைக்க – காமன் மிகவும் பாணங்களாற் பொருது அறிவினதுநிலையைக் குலைக்க அதனோடும்.
ஓவாது – ஒழிவின்றியே. துங்கமுரசாயதேதுன்பமெனும்பூமகட்கு – காமனது வெற்றிமுரசான கடலே துன்பமதெனும்
பூமடந்தைபோல்வாளுக்கு அவற்றினோடும்,
வெங்கனலாவானேன்விது – குளிர்ந்தசந்திரனும் வெம்மையைச்செய்யுந் தழலாவானே னென்றவாறு.

பூவாளி – பூவைப்பாணமாகவுடைய காமன். இதனைப் பெந்திக்குமாறு :- இடதுபக்கத்துச்சூட்டின்மையத்துத்
தேவாவென்றெடுத்து மோகவென முடித்து, வலமாக அதற்கடுத்தசூட்டின்மையத்துப் பூவாளியென் றெடுத்து
ஓவாது என்று முடித்து இறுதிநின்ற துவ்வென்பது முதலாகச் சூட்டின்வலமேறி விதுவென முடிக்க.

இதனுள், ஓஒ வென்னு மோகார வளபெடை சிறப்பின்வந்தது. என்னை?
“தெளிவினேயுஞ்சிறப்பினோவு, மளபினெடுத்தவிசையவென்ப” என்பதனா னறிக.
“இசைகெடின்…. குறியே” என்பதனால் இரண்டு மாத்திரையான ஓகாரம் செய்யுட்கண் ணோசைசிதைந்தவிடத்து
மூன்று மாத்திரையாய் நீண்ட குறிக்குத் தனக்கினமாகிய குற்றெழுத்தினொடு நின்றதல்லது இரண்டெழுத்தல்லவென்ப தறிக.
திணை – பெண்பாற் கூற்றுக் கைக்கிளை. துறை – கண்டுகைசோர்தல்.

மாதவனேதென்னரங்கேசமான்மருளாகமிகு
போதனுமன்பிற்றொழுகேசவபுரைகூர்பவமே
வாதிதமாகுதற்கிங்கேயெனாருயிர்காபொதுவே
வேதநமாநமபோதநைவார்க்குள்ளமேதகவே. (784)
இஃது ஆறாரச்சக்கரம்.

இதனுள், நடுவு கே யென்னுமெழுத்து நின்று அதனைச்சூழ்ந்த குறட்டில் ஆறக்கரம்நின்று சூட்டிற் பதினெட்டெழுத்து நின்று
குறட்டுக்குஞ் சூட்டுக்கு நடு ஆராறில் ஆர்தோறும் ஏழெழுத்துநின்று ஏழெழுத்தில் நடுவெழுத்தாறும்
தென்குருகூர் என்னும் பேராகநின்று ஆக அறை அறுபத்தேழில் எழுத் தறுபத்தேழும் ஒற்றுள்பட ஒன்பதெழுத்து
மாறாடினமுறையாலேறி எழுபத்தாறாக நேரசைக்கலித்துறை நின்றவாறு காண்க.

நடுவிற் கே மூன்றாகவும், முதற்சூட்டின்மையத்து வே மூன்றாகவும், ஒழிந்தசூட்டின்மையத்துநின்ற
மா கு பொ மே வா ஐந்தும் ஒரோவொன்று இவ்விரண்டாகவும் நின்றன. இதனைப் பெந்திக்குமாறு :-
இடதுபாகத் திரண்டாஞ்சூட்டின்மையத்து மாதவனே யென்றெடுத்து நேரே மிகு என முடித்து,
அதற்கடுத்த மூன்றாஞ்சூட்டின் மையத்துப் போதன் என எடுத்து மே யென நேரே முடித்து,
நாலாஞ் சூட்டின்மையத்து வாதிதமாகுதற்கென எடுத்து, பொதுவே என முடித்து,
முடித்த வே நாலாமடிக்கு முதலெழுத்தாகப் பின்னும் மேதகவேயென அதனின்முடிக்க.

(இ-ள்) திருமகள்காந்தனே ! அழகிய அரங்கேசனே ! மேகம் போன்ற திருமேனியனே !
பெரிய பிரமனு மவன்முதலாங் கடவுளரு மன்பினோடுந்தொழுங் கேசவனே ! சகலான்மாக்களுக்கும் பொதுநின்றவனே !
என் றுன்னைநினைந்து மிகவுங்குழைவார்க் கிதயதாமரை யகத்தோனே ; வேதமுதல்வனே ;
நின்னைக்குறித்து நமாநம என்னா நின்றேன் ; அதற்குத்தகுவதாகவென்னாருயி ரின்னும் பொல்லாங்கை விளைக்கப்பட்ட
செனனத்தை யிவ்வுலகத்தெய்தாது இன்பமெய்துதற்கு என்னைக் காப்பாயாக வென்றவாறு.

போதனும் என்னு மும்மை எச்சவும்மை. இதனுள், இரண்டாமடியீறு தொடங்கி யொழிந்தன மாட்டுறுப்பாக நிகழ்ந்தன.
துறை -கடவுள்வணக்கம்.

தண்மதிநிகர்வதயங்கியவதனம்
பொன்னணிமுலைநிடதப்புரைவரைநிகர்
மடிசேர்தருதாமதபத்தர்க்கெட்டா
மாறன்றுடரிமலைதன்மின்போன்றொளிர்
தண்ணென்பொற்சுனைமன்னியமாமல
ரம்மடவார்மையுண்டாட்டமர்கண்ணே. (785)
இஃது எட்டாரச்சக்கரம்.

இதனுள், நடுவு தகரம் நின்று சூழ்ந்தகுறட்டில் வடமலையப்பன் என்னும் பெயர் நின்று
ஆர்மேல் நாற்பத்தெட்டெழுத்தாய்ச் சூட்டின் மேன் முப்பத்திரண்டாய்நின்றவாறு காண்க.
நடுநின்ற தகரம் நாலெழுத்தாய் முதற்சூட்டின்மையந்தொடங்கிநின்ற த பொ ம மா ம் ர் டா ர் எட்டும் பதினாறாய்,
குறட்டில் வடமலையப்பன் என்னும் எட்டும் பதினாறாய், பத்தொன்பதெழுத்து மாறாடி அறை எண்பத்தொன்பதினின்ற
எண்பத்தொன்பதுக்கு நூற்றெட்டெழுத்தால் ஆறடி நிலைமண்டிலவாசிரி யப்பாவாய் முற்றியது.

இதனுள், நிடதப்புரைவரைநிகர் – நிடதமாகியவுயர்ந்தமலையை யொத்த. மலைதன் – மலைதன்னில்.
மின்போன்றொளிர் – மின்னைப் போன் றொளிராநின்ற. தண்ணென்பொற்சுனை – குளிர்ந்த பொன்னோடு கூடிய சுனை.
மன்னியமாமலர் – நிலைபெற்ற நீலோற்பலம்போல்வ.
அம் மடவார்மையுண்டாட்டமர்கண் – அழகியமடவார் மையெழுதப்பட்டுக் களிப்போடுகூடிய கண்கள். உண்டாட்டு – களிப்பு.
நண்பனே ! பத்தரல்லாத தாமதத்தினைவிரும்புவோர்க் கெட்டா மாறன் றுடரிவெற்பிடந் தன்னி லெனக் கூட்டுக.
நண்பனே யென்னு முன்னிலை எச்சம். பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங்கூறல்.

சேடுறுதட்பச்சீரிமகிரிக்கைவிலின்
போர்பொருவீரபுராரிசெற்றத்தடர்த்
தின்பமதுறவமரியலருணிருதனேர்
முன்புமேத்தமராரிம்பர்நம்பாலுறு
சேர்மழைபோனிறத்திருவுறைமுதல்வன்
தாரிணைத்தாளெதிர்தாளுற்றுன்னெஞ்சே. (786)
இதுவும் எட்டாரச்சக்கரம்.

இதனுள், நடுவு ரி என்னு மெழுத்துநிற்க, குறட்டிற் சீராமராமசெயம்என்னும் ராமதோத்திரநின்று,
ஆர்மேற் குறட்டுடன் அஞ்சா மறையில்நின்றும் வலமாக,தருமமேகைதரும் என்னும் பழமொழி நின்று,
ஆர்மேல் நாற்பத்தெட்டெழுத்தாய்ச் சூட்டின்மேன் முப்பத்திரண்டெழுத்தாய் முதலடியின் முதலெழுத்தாகிய சே அஞ்சாமடிக்கு
முதலெழுத்தாய் ஆறாமடிக்கு நெஞ்சேயென்ன முடிந்தமொழிக்கீறாய் மூன்றெழுத்தாயவாறுங் காண்க.
இதனைப் பேந்திக்குமாறு :- தன் முன்னர்ச் சூட்டுமையத்துநின்றுஞ் சேடுறு என நோரோட்டிக் கைவிலின்
என அஞ்சாமாரின் முடித்து, வலமாக இரண்டாமார்தொடங்கி நாலாமார்வரைக்கும் லுறு என முடித்து,
மீட்டும் முதலடியிற் சே என்றவெழுத்தை யெடுத்துச் சேர்மழைதொடங்கி நெஞ்சேயெனச் சூட்டின் வலமாகச்சுற்றி முடிக்க.

(இ-ள்) நெஞ்சே – நெஞ்சமே ! சேடுறு…. விலின் – பெருமை யெய்துங் குளிர்ந்த சீர்பொருந்திய
விமவானென்னுங் கிரியைக் கைவில்லாக்கி அதனால், போர்…. அடர்த்து – திரிபுராதிகளுடன் போரைப் பொரும்
வீரத்தையுடைய புராரியென்னுஞ் சிவன் கைலையை யெடுத்தலைத்ததனாற் கோபித்து விரலையூன்றி மதுகையையழிப்ப வீடுபட்டு.
இன்பமது…. முன்பும் அவன் பாடிய பாட்டினுக்குருகி மீள வின்பமுறும்படி சமர்க்கு வேண்டு மாயுதமுதலிய வியல்பினை
யெல்லா மடர்த்த சிவன் றான்கொடுப்பவெய்திய மழைபோனிறநிருதன் சமர்க்கு நேர்பட்ட முதனாளுங்
கும்பகருணன்முதலியோர் பட்டபின்னும். எதிர்தாளுற்று – அவனெதிர்தரத் தானும் போர்க் கெதிரு முயற்சியையுற்று.
இம்பரேத்தமர் – இவ்வுலகின்கண்ணே யாவரு மேத்துந் தனதுபோரால். ஆர் – அவனதுயிரையுண்ணும்.
திருவுறை…… தாள் – திருமகள் விட்டுநீங்காத முதல்வனது தாமரைப்பூப் போன்ற இரண்டு திருவடிகளையும்.
உறுநம்பால் – மிக்க விருப்பத்தால். உன் – சேர். நினை – தியானத்தாற் கூடுவாயாக என்றவாறு.

இங்ஙனந் தியானிக்க வீடேறலா மென்பது பயன். அவனுயிரை என்பது சொல்லெச்சம்.
முன்பும் என்னும் உம்மை யெச்சமாதலாற் பின்னுமென்ப தாயிற்று. அமரால் மூன்றாவது தொக்குநின்று விரிந்தது.
ஆர் உண்ணும் என வினைத்தொகைவாய்பாடு செய்யுமென்னும் பெயரெச்சவாய்பாடாக விரிந்து
தன்னெச்சமான திருவுறைமுதல்வனென்னும் பெயர்கொண்டு முற்றியது. திணை – பாடாண். துறை – கடவுள் வணக்கம்.

பதுமபெந்தம்

283.எண்ணிரண்டிதழாய்க்கோணிருநான்கின்
கண்ணுறநடுவணப்பொகுட்டதுகாட்டிப்
பண்ணமைப்பதுவும்பதுமபெந்தம்.
(எ-ன்) வைத்தமுறையானே பதுமபெந்தமாமாறுணர்-ற்று.

(இ-ள்) ஒரு தாமரையை எட்டுக்கோணினு மிவ்விரண்டாகப் பதினாறிதழெழுதி நடுவே
யொரு பொகுட்டினையுங் காண்பதாக்கிச் செய்தமைப்பதும் பதுமபெந்தமா மென்றவாறு.
உம்மையான் மகாபதும பெந்தமு மொன்றுள.

மாறாமாலாலேமாறாமா
மாறாமாவேளேமாறாமா
மாறாமாகோவாமாறாமா
மாறாமாவாதேமாறாமா. (787)
இது பதுமபெந்தம்.

(இ-ள்) முதலடியீற்று மா – திருவன்னாள். மாறாமாலால் – நீங்காத மாலால். ஏமாறா – வருந்தும்படிக்கு.
(இரண்டாமடி) மாறாமாவேளேமாறாமாம் – மாயோன் றரப்பட்ட கரிய வேளம்பு மாற்றமாமாம்.
மூன்றாமடியில் மகரவொற்றைப்பிரித்து, ஆறாமா – ஆறுபோலவாம் ஐயோ என்றாக்கி,
(மூன்றாமடியி லிறுதியில் மா என்னும் எழுத்தைப்போட்டு) கோவாமாறா என்பதனைக் கூட்டி, கண்ணீர்தீராது
ஐயோவெனச் சேர்த்து, மூன்றாமடியினின்ற மாவை நாலாமடியின் முதன்மாவொடுங்கூட்டி,
மாமாறா என்றாக்கி, பெரிய மாறனே ; என்க.
மாவாதேமாறாமா – வண்டுகள் தேனையுண்ணவரும் தேன்றுளும்புந் தரமத்தனே யென்றவாறு.

பெரியமாறனே ! திருவன்னாள்வருந்தும்படிக்குக் கரிய வேளம்பு மாற்றமாகாநின்றன ; கண்ணீர் தீறாது ;
ஐயோ ! இனி எங்ஙனமுய்யு மென்னும் பயனிலைகூட்டி முடிக்க. மகாபதுமபெந்தம் வந்தவழிக் கண்டு கொள்க.
திணை – பெண்பாற் கைக்கிளை. துறை – கண்டுகைசோர்தல்.

இனிப் பதுமபெந்தத்தினுள் நடுவிற்பொகுட்டினின்ற மா என்ற எழுத்தொன்றும் எட்டெழுத்தாகவும்,
அதனைச்சூழ்ந்த நாற்கோணங்களினின்ற எட்டெழுத்தும் பதினாறாகவும்,
இடையிற்கோணாலினுநின்ற எழுத்தெட்டுந் திரிந்து மாறாடாதுநிற்கவும் பாடினவாறு காண்க.

முரசபெந்தம்

284.எழுதியவரிநாலினுண்முதலீறன
பழுதறமந்திரிச்செலவாய்ப்படர்ந்தய
லொழுகியுங்கீழ்மேற்றனதீற்றுற்றபின்
னறைதொறுமேனையவடைவேபாதியின்
முறைதடுமாறுதன்முரசபெந்தம்.
(எ-ன்) வைத்தமுறையானே முரசபெந்தமாமாறுணர்-ற்று.

(இ-ள்) நாலடியான்வரு மொருசெய்யுளை நாலுவரியாக வெழுதி
அவற்றுண் முதலடியுமீற்றடியுமாகியவிரண்டின்முதலடி கீழ்முன்றுவரியினும் மந்திரிச்செலவாகச் சென்று
நாலாமடியி லஞ்சாமறையி லேறி யந்தவார் மேனோக்கி மீள வப்படியே முதலடியீற்றின்முற்றியும்,
இறுதிவரியும் மந்திரிச்செலவாய் மேனோக்கி நாலாமடியுற் றஞ்சாமறையிலேறி யந்தவார் கீழ்நோக்கி
யவ்வண்ணமே யிறுதியடியீற்றின் முற்றியும்,
ஏனையிரண்டனுள் இரண்டாமடி முற்பாதியினின்றுங் கீழ் வலமாக மூன்றாமடியின்முதலே முற்றியும்,
மூன்றாமடி யிரண்டாமடிப்பிற்பாதியினின்றுழிநின்றுங் கீழிடமாக மூன்றாமடி யிறுதியின்முற்றியும்,
இரண்டடியும் முத லீறென்னும் முறைதடுமாறப் பாடுவது முரச பெந்தமா மென்றவாறு.

இங்ஙனம் மேல்வருஞ் செய்யுளை எழுதிக் கண்டுகொள்வது.

போதவானதுவாதரா
மாதவாதணவாதநா
நாதவாணதவாரவா
வேதவானதுவாரகா. (788)
இது முரசபெந்தம்.

(இ-ள்) போத – ஞானவானே ! வானதுவாதரா – வானவராதரிக்கப் பட்டவனே ! மாதவா – திருமகள்காந்தனே !
(மூன்றாமடி முதலீறாக) நா தணவாத நாத – நாவைவிட்டுநீங்காத வென் னாதனே !
வாண- உலகினைக் காக்கப்பட்டவனே! தவாரவா – அழிவில்லாத அராவையுடையவனே !
வான வேத துவாரகா – (எனப் பாடமாற்றுக) பரமபதமிடமாக நின்றும் பூமியில் வருதற்குப் பெருமையை
யுடைய வேதத்தை வாயிலாகவுடையவனே ! என்னைக் காப்பாயாக வென்றவாறு. துறை – கடவுள் வாழ்த்து.

நாகபெந்தம்

285.வரியரவிரண்டாய்வால்வயிறிரண்டாய்த்
தெரிமூலைநான்காய்ச்சிறந்துமும்மூன்றுட
னிலைபெறுமொருபானிருபானிறீஇத்
தலையிரண்டெழுத்தாய்ச்சார்தரச்சந்தியிற்
கவினுறுத்தெழுத்துக்கலந்துறுப்பாக
நவிலிருபாவேநாகபெந்தம்.
(எ-ன்) வைத்தமுறையானே நாகபெந்தமாமா றுணர்-ற்று.

(இ-ள்) வரியையுடையபாம்புக ளிரண்டாக, அவற்றிற்கு வாலிரண்டாக வயிறிரண்டாகத் தோன்றப்பட்ட
மூலைக ணான்காகச் சிறப்பெய்தி, வாலிரண்டி னிலைபெறுமெழுத் தொன்பதுடன்,
வயிறிரண்டி லெழுத்துப் பத்தாய், மூலைநான்கி லெழுத் திருபதாய்த் தலையிரண்டி லெழுத் திரண்டாய்ப் பொருந்த நிறுத்தி,
சந்திகளில் அழகுதருவனவா மெழுத்துக்க ளிரண்டிற்குங் கூடிநிற்பனவா முறுப்பாகப் புலவனாலுரைக்கப்படு
மிரண்டுபாவென்பது தானே நாகபெந்தமா மென்றவாறு.

நிறுத்தியென்பது மத்திமதீபம். மும்மூன் றொருபானிருபானென்பன நிரனிறை.
புலவனா லென்பது எச்சம். தெரிமூலை – தோன்றப்பட்ட மூலை.

மாறன்சடகோபன்வண்குருகூர்வாழ்பொருநை
யாறனளிமேயவன்னமே–யேறுத்
தமனாமாமாசரதன்றாண்மொழிதற்பாமன்
னெமர்யாயெமையாளிறை. (789)

அறமுமறமமைந்தவன்பென்பதுவும்
பெறனன்னலமதுண்மைபேரா–துறுபாற்கோர்
மானமனமேநினைமான்மாமேகத்தந்தமே
யேனமெமையாளியை. (790)
(இ-ள்) மாறனென்றுஞ் சடகோபனென்றுந் திருநாமத்தையுடையான்,
வளவிய குருகூரின்கண்வாழும் பொருநையாற்றையுடையவன்,
கிருபையோடு கூடிய அன்னத்தையேறு முத்தமன்,
நாவினால் திருமகளையுடைய பெரிய சரதனாம் மாயோன் றிருவடிகளைப்பாடும் பாவினையுடைய மன்னன்,
எம்மனோர்க்கு மாதா, எம்மையாளு மிறைவ னென்றவாறு. எனவே, யமனு மெம்மிடத்து வாரான் ;
எமக்குச் செனனமு மில்லை, சித்திப்பதும் முத்தியேயா மென்பது பயன்.

அறத்தினது பகுதியு மறத்தினாலமைவெய்திய அன்பென்று கூறப்படுவதும் நமக்குண்டாதலும்
நல்ல பேரின்பத்தையெய்துவ துண்மை யாக வது நம்மைவிட்டு நீங்கா தவற்றையுறும்பகுதிக்கு ஒப்பற்ற பெரிய மனனே !
காளமேகத்தினது அழகிய நிறமேவிய திருமாலை, ஏனமாக வடிவெடுத்தவனை,
எம்மையாளப்பட்டவனை நினைப்பாயாக வென்றவாறு.

ஆக வெண்பா விரண்டினால்
எழுத்து நூற்றொருபத்தெட்டும் அறை தொண்ணூற்றாறனுண் மாறாடி யடங்கினவாறு கண்டுகொள்க.
திணை – பாடாண். துறை – கடவுள்வணக்கம்.

இரதபெந்தம்

286.தேரெனமந்திரிச்செலவெனச்செய்யுளை
யேர்தரவடக்குவதிரதபெந்தம்
(எ-ன்) வைத்தமுறையானே இரதபெந்தமாமா றுணர்-ற்று.

(இ-ள்) சதுரங்கவறையுட் டேர்செல்வது எனவும், மந்திரி செல்வதெனவு மொருசெய்யுட்குண்டான
வெழுத்துக்களைத் தேரின தறைக்குநடுவே ஒரு திருநாமமாதல் ஒரு பழமொழியாத லழகுபெற்று நிற்க
விரதத்திலே பெந்திப்பது இரதபெந்தமா மென்றவாறு.

சதுரங்கவறையினுளென்பது சொல்லெச்சம். செய்யுளையென்பதாகு பெயர்.
அறைக்கு நடுவே திருநாமமாதல் பழமொழியாத னிற்க வென்பது ஏர்தர என்பதே ஞாபகமாக விரிந்தது.

நாராராராயநயனயணாவிண்ண்
ணாராமணாயனிலமாயவா–சீராய
நன்காநமநமநன்காநமநம
மன்காமன்றாதாய்நம. (791)
இஃது இரதபெந்தம்.

(இ-ள்) நாரார் – அன்பினையுடையார். ஆராய் அ நயன் – ஆராயப் பட்ட அந்தப் பேரின்பத்தினிடத்து.
அயணா – வியாபரிக்கப்பட்டவனே! விண் – ஆகாயமும். ஆராம் – மிகுந்த செலமும். மண் – நிலமும். ஆய் – ஆகி.
அனிலம் – காற்றும். ஆயவா – ஆனவனே ! சீராய – பொலிவினையுடைய நந்தகோபாலனே!
நன்காநமநம – நன்மையையுடையவனே ! உன்னை நமக்கரிக்கிறேன். நன்காநமநம – முன்னைப்போல வுரைக்க.
மன்காமன் – மகளி ராடவர்க் கரசனாகிய மன்மதன். தாதாய் – தந்தையே !
நம – உன்னை மீளவு மென தான்மாவைக் காத்தற்பொருட்டு நமக்கரிக்கிறே னென்றவாறு.

நார் – அன்பு. அ சுட்டு. நயன் – சுகம். அயணம் – வியாபாரம். ஆம் – செலம்.
மண்ணாய் என்பது மணாய் என இடைகுறைந்துவந்தது. ஆயவா – ஆனவனே. நன்கு – நன்மை. மன் – அரசன்.
தாதை என்னும் ஐகாரவீறு விளிக்கண் ஆயாயிற்று. நமநம நமநம என்பது இசைநிறையசைநிலை.
விண்ண் என்னு மொற்றளபெடை, வெண்பாவினது செப்பலோசைசிதைந்தவழி யோசையை நிறைத்தற்பொருட்டு வந்தது.
என்னை? “குன்றுமே லொற்றளபுங் கொள்” என்பதனா லறிக.
இதனுள் நடுவும் இருபக்கமும்நாராயணாயநமவென நின்றவாறு காண்க. துறை – கடவுள்வணக்கம்.

மாயவனேவேதமதியேவயநாக
பாயவனேதேநளினபாதாபராபரா
தூயவனேகாரணாபூரணாதோணிலமா
னாயகனேசீராகநாராயணாயநம. (792)
இதுவும் இரதபெந்தம்.

சீர் – திருமகள். தோள்நிலமான் – தோளிலிருக்கும் பூமிதேவி.
இதனுள், நடுவே நாராயணாயநமவென்னுந் திருநாமம் நின்றவாறு காண்க.

மாலைமாற்று

287.ஒருசெயுண்முதலீ றுரைக்கினுமஃதாய்
வருவதைமாலைமாற்றெனமொழிப.
(எ-ன்) வைத்தமுறையானே மாலைமாற்றாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஒருபாட்டையீறுமுதலாக வாசிக்கினு மப்பாட்டேயாகி வருவதனை மாலைமாற்றென்னுஞ்
சித்திரக்கவியென்றுகூறுவர் பெரியோ ரென்றவாறு.

லாமனாமானமா
பூமனாவானவா
வானவானாமபூ
மானமானாமவா (793)
இது மாலைமாற்று.

(இ-ள்) வாமனா – வாமனனேயென்று.
வானவாவானவானாம – தேவர்களால் விரும்பிச்சொல்லுவதாய பெரியதிருநாமத்தை யுடையவனே !
மான மா பூ – பெருமையையுடைய திருமகளுக்கும் பூமிதேவிக்கும். பூமானமனா – பூமானாகியமன்னனே !
மானாம – மாலாகிய திருநாமத்தை யுடையவனே! வா – என்முன்னேவந்துதோன்றுவா யென்றவாறு.

இஃ திரண்டுவிகற்பத்தான்வந்த வஞ்சித்துறை. துறை – இதுவுமது.

கரந்துறைசெய்யுள்

288.முதலொருசெய்யுண்முடித்ததனீற்றிற்
பதமதனிறுதியிற்பயிலெழுத்துத்தொடுத்
திடையிடையிட்டெதிரேறாய்முதலய
லடைதரப்பிறிதொருசெய்யுள்கரந்தங்
குறைவதுகரந்துறைசெய்யுளென்றுரைபெறும்.
(எ-ன்) வைத்தமுறையானே கரந்துறைசெய்யுளாமாறுணர்-ற்று.

(இ-ள்) முதலே யொருசெய்யுளை எழுதிமுடித்து, முடித்த விறுதிமொழியினீற்றெழுத்துத்தொடங்கி,
எதிரேறாக இடையிடையோரெழுத்தாக இடையிட்டு முதன்மொழிமுதலெழுத் தயலடைய முடிக்கப் பிறிதோர்
செய்யுளாக வதனகத்துக் கரந்துறைவது கரந்துறை செய்யுளென் றுரைக்கப்பெறு மென்றவாறு.

போர்வைவாயூராரலரளிபொருகாம
நீர்மையாழ்வாரயலணைதருமிக
வேர்தவாவாழ்தலாமயில்கைமுருகுகு
தார்தராமூதாமணிதகவுருவமும். (794)
இது கரந்துறைசெய்யுள்.

(இ-ள்) ஆரலரளி என்பதை அளியாரலரென மாற்றி, வண்டுக ளாரவாரிக்கப்பட்ட பூவாளியால் என்க.
பொருகாம – பொரவந்த காமனே ! நீர்மையாழ்வார் – நற்குணத்தையுடைய ஆழ்வார்.
மயில்கை – எமது மயில்போலுஞ்சாயலையுடையாள்கையில்.
மூதாவுருவமுமணிதக வாழ்தலாம் – பெருமையையுடையவா முருவங்களு மழகினது பெருமை யெய்த உயிர்வாழ்தலாம்படிக்கு.
ஏர்தவா முருகுகு தார்தரா – அழகு கெடாத தேனொழுகும் வகுளமாலிகையைத் தந்து.
வாயூர் – (ஊர்வாய் என மாறுக) எமதுபதியிடத்து. அயலணைதருமிக – அய லெம்மோடு மிக நட்புச்செய்யாநின்றாராதலால்.
போர்வை – உனதுபோரை யொழிவாயாக வென்றவாறு. இது மாட்டுறுப்பு. அப்படி யிதனுட் கரந்த செய்யுள் :-

முருகணிதாரார்
குருகையிலாழ்வார்
கருணையவாயார்
மருளிலராவார். என்பதாம். (37)
காதைகரப்பு

289.காதைகரப்பதுகாதைகரப்பே.
(எ-ன்) வைத்தமுறையானே காதைகரப்பாமாறுணர்-ற்று.

(இ-ள்) புலவராற்குறிக்கப்பட்ட செய்யுளுட் பிறிதொருசெய்யுட் குக்கூடுவதானவெழுத்துக்கள்புகுதாதே
தாங்குறித்த பழையசெய்யுட் கரந் தெழுத்துப் பிறக்கிக்கொள்ளலாம்படி பாடுவது
காதைகரப்பா மென்றவாறு.

கொல்யானைமூலமெனக்கூப்பிடமுன்காத்தானை
யெல்லாவுயிர்க்குமுயிரெனலாம்–புல்லாணித்
தோடார்நறுந்துளபத்தோண்மாலைக்கைதொழுதா
னாடானொருநாணமன். (795)
இது காதைகரப்பு.

இதனுட்போந்தசெய்யுள், “கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி, யெல்லா வுயிருந்தொழும்” என்பது.
இதனைப் பழம்பாட்டெனவே மேலன நவமாமென்றுணர்க. இவற்றை மாறாடுவாரு முளர்.

பிரிந்தெதிர்செய்யுள்

290.பிரிந்தெதிர்வனவேபிரிந்தெதிர்செய்யுள்.
(எ-ன்) வைத்தமுறையானே பிரிந்தெதிர்செய்யுளாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஒருசெய்யுள் முதலேமுடிந்தா லச்செய்யுளீற்றெழுத்துத் தொடங்கி யெதிரேறாகநடந்து
வேறோர்செய்யுளாக நிகழ்தல் பிரிந்தெதிர் செய்யுளா மென்றவாறு.

நீரநாகமா
தாரமாகமே
வாரமாகமா
ணாரணாககா. (786)
இது பிரிந்தெதிர்செய்யுள். இதனுள், பிரிந்தெதிர்செய்யுளாவது :-

காகணாரணா
மாகமாரவா
மேகமாரதா
மாகநாரநீ.
என்பதாம்.
இவற்றுள், முதலேநடந்தசெய்யுளின்பொருள் :- நீரநாக – நற்குணத்தனே ! அனந்தசயனத்தனே !
மா தாரமாக – திருமகளைப் பாரியாக. மேவாரமாக – பொருந்து மாரங்கிடக்கு மார்பனே !
மாணாரணாக – பெருமையையுடைய வேதசொரூபனே ! கா – என்னைக் காப்பாயாக வென்றவாறு.

எதிரேற்றின்பொருள்:-
மாகமாரவாம் – துறக்கத்துள்ளார்பெருக விரும்பும். நார – நற்குணத்தையுடையவனே !
மேகமாக – மேகத்தைப் போலுந் திருமேனியையுடையவனே ! மாரதா – சத்துருக்களை வெல்லு முழுத்தவீரனே !
நாரணா – நாராயணனென்னுந் திருநாமத்தனே ! நீ கண் – நினது சொருபரூபகுணவிபூதிகளை மயக்கமறவறிதற்கு
நீயே யெமக்கு ஞானக்கண்ணானதால். கா – எம்மைக் காப்பாயாக வென்றவாறு.

இவையிரண்டும் வஞ்சித்துறை. துறை – கடவுள்வாழ்த்து. அநுலோமப்பிரதிலோமமென்பது மிது.

பிறிதுபடுபாட்டு

291.பிறிதொன்றாதல்பிறிதுபடுபாட்டே.
(எ-ன்) முறையே பிறிதுபடுபாட்டாமா றுணர்-ற்-று.

(இ-ள்) பிறிதுபடுபாட்டென்பது ஒருசெய்யுளைத் தொடையு மடியும் வேறுபடவுரைத்தாலுஞ் சொல்லும் பொருளும்
வேறுபடாமற் பிறிதொருசெய்யுளாய் முடிவது என்றவாறு.

பார்மகளைத்தோயும்புயத்தாய்பதுமநறுந்
தார்மகளைநீங்காத்தகைசான்றவாகத்தா
யாரியனேயாரணத்தந்தியனேவாரி
வாரியுணாகணைமன்னா. (797)
இது பிறிதுபடுபாட்டு.

இது முதலே யொருவிகற்பத்தின்னிசைவெண்பா பின்னர்க் கலி விருத்தமாகநிகழ்ந்தவாறு காண்க.
தார் – பூ. ஆரியன் – பரமாசாரியன். வாரி – கடல். வாரி – மிகுதி.

சருப்பதோபத்திரம்

292.இருதிறத்தெழுதலுமெண்ணான்கெழுத்துடை
யொருசெய்யுளெண்ணெண்ணரங்கினுளொருங்கமைந்
தீரிருமுகத்தினுமாலைமாற்றாய்ச்
சார்தருமாறியுஞ்சருப்பதோபத்திரம்.
(எ-ன்) வைத்தமுறையானே சருப்பதோபத்திரமாமா றுணர்-ற்று.

(இ-ள்) எவ்வெட்டெழுத்தோரடியாய் நான்கடியாய்வரு மெண்ணான்கெழுத்து டையதொருசெய்யுளை
யறுபத்துநாலறையினி லிரண்டு கூறுபாட்டானெழுதவவற்றுண் முழுதுமடங்கி
நாலுமுகத்தினு முதல் முதலாகியு மீறு முதலாகியு மாலைமாற்றாகிவருமது சருப்பதோபத்திரமா மென்றவாறு.

இரண்டுகூறுபாடாவது நான்கடியும் மேனின்று கீழிழியவுங் கீழ் நின்று மேலேறவும் எழுதுவதாம்.
இது மாட்டுறுப்புப்பொருள்கோள்.

தேமாபூமாமாபூமாதே
மாதாகாவாவாகாதாமா
பூகாவாலாலாவாகாபூ
மாவாலாநீநீலாவாமா. (798)
இது சருப்பதோபத்திரம். இதனகத் தவ்வாறுநிகழ்ந்தமை கண்டு கொள்க.

(இ-ள்) தே மா பூ – தேனும் வண்டும் பொருந்திய பூவினிடத்து. மாமா – பெரிய திருமகளும்.
பூமாதேமாது – பூமிதேவியுமாகிய அழகு பொருந்தின மாதர்கள்.
ஆகாவாவாகா – (வா ஆகா வாகா எனப் பாட மாற்ற) வந்து தங்கு மார்பினையும் புயத்தினையு முடையவனே !
தாமா – துளவமாலிகையையுடையவனே !
பூகாவாலாலா – பூமியையெடுக்கப் பட்ட பிரளயத்தின்மே லாலிலையிற் றுயிலப்பட்டவனே!
பூமாவாலா – பொலிவினொடுங்கூடிய மிகுந்த பாலத்தன்மையோனே !
நீலா வாமா – நீலநிறத்தினனே ! வாமனரூபமானவனே !

மூன்றாமடியிலிறுதி வாகா நாலாமடியின் முந்தவந்த நீ என்னுமவற்றொடுங்கூட்டி,
நீ வா கா வெனச் சேர்த்து, நீ வந் தென்னைக் காப்பாயாக வென்றவாறு.

இதனுள், ஏமம் ஏம் என நின்றது. உம்மை வேற்றுமை பண்பு என்பன முதலிய தொகைகளும் ஒருமை பன்மை
மயக்க வழுவமைதியும் வந்து மாட்டுறுப்பாகப் பொருளுரைத்தவாறு காண்க.
ஆல் – பிரளயம். வா – வந்து. மாது – மாதர்கள். பூ – தாமரை. பூ – பொலிவு.

கூடசதுர்த்தம்

293.பாடலினாலாம்பதம்பொறிவரியிடைக்
கூடமுற்றதுவேகூடசதுர்த்தம்.
(எ-ன்) கூடசதுர்த்தமாமாறுணர் – ற்று.

(இ-ள்) நாலடியாய வொருசெய்யுளி னாலாம்பதம் ஏனைய மூன்று பதத்தையு மேனின்று கீழுங் கீழ்நின்று
மேலுமாக எழுதிமுடித்த வரிமூன்றி னிடைவரியின் மறைந்துநிற்பது கூடசதுர்த்தமா மென்றவாறு.

நாதாமானதாதூயதாருளா
ணீதானாவாசீராமனாமனா
போதாசீமானாதரவிராமா
தாதாதாணீவாமனாசீதரா. (799)
இது கூடசதுர்த்தம். இதனை யவ்வா றெழுதிக் கண்டுகொள்க.

(இ-ள்) நாதா மானதா – சுவாமியே ! என்மனத்திலுள்ளானே !
தூயதாருளா ணீதா னாவா – பவித்திரம்பொருந்தின தாமரையிலுள்ளாளாக, நீயாக என்னுடைய நாவிலேவந் துறைவீராக.
அதுவுமின்றி, சீராமனாமனா – சக்கரவர்த்திதிருமகனாகிய மன்னனே ! சீமான் – அழகுடையவனே!
ஆதரவிராமா – சகலரும்விரும்பு மிராமனே ! வாமனா சீதரா போதா – போதத்திலுள்ளானே !
வாமனனே ! சீதரனே ! தாதா தாணீ – உனது திருவடிகளைத் தருவாயாக வென்றவாறு.

துறை – இரண்டுங் கடவுள்வாழ்த்து.

கோமூத்திரி

294.கோமூத்திரநடைபெறல்கோமூத்திரி.
(எ-ன்) வைத்தமுறையானே கோமூத்திரியாமா றுணர்-ற்று.

(இ-ள்) நடைபெறுஞ் சேவினதுமூத்திரவொழுக்கம்போன்று நடப்பி னது கோமூத்திரியா மென்றவாறு.

அஃதாவது
ஒருசெய்யுளை இரண்டுவரியாக வெழுதி
மேலுங் கீழு மொன்றிடைவிட்டு வாசிக்கவு மச்செய்யுளாய் நடத்தல்.

மாயாமாயாநாதாமாவா
வேயாநாதாகோதாவேதா
காயாகாயாபோதாகாவா
பாயாமீதாபேதாபேதா. (800)
இது கோமூத்திரி. இதனை யவ்வாறெழுதிக் கண்டு கொள்க.

(இ-ள்) மாயாமாயா – அழியாத மாயையையுடையவனே ! நாதா – சுவாமியே ! மாவா – திருமகளையுடையவனே !
வேயாநாதா – வேய்ங்குழலிலுண்டாக்குங் கானத்தையுடையவனே ! கோதாவேதா – பசுவைக் காத்தளித்த வேதசொரூபனே !
காயாகாயா – காயாம்பூப் போலுந் திருமேனியையுடையவனே ! போதா – ஞானத்தையுடையவனே !
பேதாபேதா – பேதமும் அபேதமுமானவனே! பாயாமீதா – பரந்த பிரளயத்தின் மேலானவனே !
காவா – என்னைக் காக்க வருவாயாக வென்றவாறு. பா – கலிவிருத்தம். துறை – கடவுள்வாழ்த்து.

சுழிகுளம்

295.தெழித்தெழுநீர்குளத்தினுட்செறிந்ததைக்கொடு
சுழித்தடங்குவபோன்றடங்குதல்சுழிகுளம்.
(எ-ன்) சுழிகுளமாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஆரவாரித்தெழாநின்ற புனல் குளத்தினுட் டனதிடத் தடைந்ததியாதொன் றதனைக் கைக்கொண்டு
சுற்றி யுள்ளேயடங்குவது போலச் சுற்றிப் பாவினகத்துப் பொருளைக்கொண்டடங்குதல் சுழிகுளமா மென்றவாறு.

சதிதகனடனாடீ
திததிதிகாண்ஞானா
ததிதாகார்கண்ட
கதிகாகிளர்கான. (801)
இது சுழிகுளம். இஃ தவ்வாறாத லெழுதிக் கண்டுகொள்க.

(இ-ள்) தாளவொத்துக்குப்பொருந்தக் கூத்தாடாநின்றவனே ! உண்மையான காவற்றொழிலை யுனதாகக் கைக்கொண்டவனே !
தயிரைத் தாகித்துண்ட கண்டத்தையுடையவனே ! கிளர்ந்தகானத்தையுடையவனே !
நீயே கதி, காப்பாயாக வென்றவாறு. பா – வஞ்சித்துறை. துறை – இதுவுமது.

திரிபங்கி

296.நனியொருபாவாய்நடந்ததுதானே
தனிதனிமூன்றாஞ்சால்புறுபொருண்மையிற்
பகுப்பநிற்பதுதிரிபங்கியதாகும்.
(எ-ன்) திரிபங்கியாமா றுணர்-ற்று.

(இ-ள்) முதலே மிக்கதொருபாவாய்நடந்தவதுதானே பின்னர்க் குறைவுடைத்தாய்
மூன்றுபாலா மொழுக்கமுறும்படி பொருளினது தன்மையிற் பகுத்துக்காட்டநிற்பது திரிபங்கியென்பதா மென்றவாறு.

வாரிதிபார்மன்மதன்பூசல்பார்வெய்யமாமதிபா
ரூரலர்பாரன்னையிங்கேசல்பாருய்யுமாறிலைபார்
சோர்குழல்பார்பொன்னிறஞ்சேர்தல்பார்துய்யமான்மயல்பார்
நாரணனேதென்னரங்கேசனேதெய்வநாயகனே. (802)
இது திரிபங்கி. இதனை மூன்றாகப் பகுத்த பா வருமாறு :-

வாரிதிபார் மன்மதன்பூசல்பார் வெய்யமாமதிபார்
ஊரலர்பார் அன்னையிங்கேசல்பார் உய்யுமாறிலைபார்
சோர்குழல்பார் பொன்னிறஞ்சேர்தல்பார துய்யமான்மயல்பார்
நாரணனே. (1) தென்னரங்கேசனே. (2) தெய்வநாயகனே. (3)

எழுகூற்றிருக்கை

297.ஒன்றுமுதலாவோரேழீறாச்
சென்றவெண்ணீரேழ்நிலந்தொறுந்திரிதர
வெண்ணுவதொன்றாமெழுகூற்றிருக்கை.
(எ-ன்) இறுதிநின்ற வெழுகூற்றிருக்கையாமா றுணர்-ற்று.

(இ-ள்) செய்யுளகத்தெண்ணப்பட்ட ஒன்றென்னுமெண்ணொன்றுமுதலாக வோரேழீறாக நிகழ்ந்த
வெண்களைப் பதினாலுநிலந்தொறு மீளவெண்ணுவதொன்றாகு மெழுகூற்றிருக்கை யென்றவாறு.
செய்யுளகத்தென்பது சொல்லெச்சம்.

298.அவைதாம்,
இரதபெந்தத்தினிலிடையறையிரண்டாய்ச்
சரதமதுறநடைசார்தருபான்மையி
னொன்றுபன்னான்காயொருபன்னிரண்டாய்
நின்றயலேனவுநிலந்தொறுமுபயங்
குன்றுவதாய்த்தொகைகூடியொன்றிலிறும்.
(எ-ன்) இதுவு மதற் கோர் சிறப்புவிதி கூறுகின்றது.

(இ-ள்) அங்ஙன மெண்ணப்படு மெண்கடா மிரதத்திற் பெந்திக்கு மிடத்துமையத்திற்பத்தி யிரண்டுபத்தியாய்க் கீறி
வலமே யிடமே நடத்தலைத்தரும்பகுதியில் மையத்திலொன்று பன்னான்காகவு மதனயலிரு பத்தியி லிரண்டும்
பன்னிரண்டாகவும் ஒழிந்த மூன்றுமுதலிய வெண்ணும் பத்திதோறு மிரண்டுகுறைந் தேழென்னுந்தொகைபொருந்தி
முதலேநின்ற வொன்றில்வந்துமுடியு மென்றவாறு.

அயலென்பதனை முன்னும் பின்னுங் கூட்டுக. இரதபெந்தம் – தேரிலே எழுதிக் கூட்டுதல்.

299.இரட்டுறமொழிதலோடீறுதிரிந்தெண்
டிரட்டவும்பெறூஉந்தெரியுங்காலை.
(எ-ன்) இதுவு மவ்வெண்ணிற் கோர் ஒழிபுகூறுகின்றது. இரட்டுறல் – சிலேடை. ஈறுதிரிதல் – ஈற்றெழுத்து வேறொன்றாதல்.

ஒருதனித்திகிரியினிருவிசும்பொழுக்கத்
தொருஞான்றொருபகலொடியாவுழப்பிற்
பதமிரண்டுமிலாப்பாகுடையூர்தியின்
முந்நீர்வரைப்பினிருபால்வியப்பா
னொருபிணர்த்தடக்கையொன்றியவிருகவுண்
மும்மதநால்வாய்க்கரியுரிமுக்கட்
செம்மலினிருகணுமிமையாத்தேவர்க
ளொருபோழ்தகலாதொருவழிப்படநின்
றிருகையுங்கூப்பிமுப்போதினுமிறைஞ்ச
நான்முகமுதல்வனினசைஇயநல்கு
மைந்தருநீழலினறமுதனான்கினுண்
முந்தியமுப்பான்முழுநலமெதிர்கொள
விருமருங்கினுமின்னொருமருங்கரம்பைய
ரொருதிறத்திருபதநடநவின்றொழுக
மும்முரசானாமுன்றிலினிரட்டத்
தெம்முரண்முருக்கித்திசையவைநான்கினு
மைம்பொறியதனகத்தாறைந்தவித்துச்
செம்பொருணான்மறைதெற்றெனத்தேர்ந்த
முக்கோற்பகவர்முறைமுறைபிறழா

விருவினையொருங்குவென்றிறைநிலையிஃதென
வொருதலைபற்றினரிருமையுமுணர்ந்தோர்
முக்குணமவற்றுண்முற்குணனமைந்தவருட
னாலாங்கடவுள்வீற்றிருக்குநற்றிசைவரு
மிளங்கதிரகிலத்தின்னுயிரஞ்ச
வாழ்நாளறுதியில்வௌவுதற்கமைத்த
நமன்றிசையெழுதிறனிறும்பூதென்ன
வறுகாலஞ்சிறையளிக்குலநான்குளர்
முருகவிழ்நறுந்தார்முந்நூன்மார்பத்
திருபிறப்பாளனோரிடத்தெதிருபு
நலங்கிளரொருதனிமுதலெனநாடிப்
பொலங்கழலிரண்டையும்புலனுறுமேதகு
முப்பொறிகளினான்முயற்சியிற்போற்றலு
நாற்பொருள்பயக்கநற்கனிவாயினைத்திறந்
தேற்புடைச்செய்யுளைந்தினுக்கிலக்கணமென
வாறறியந்தணரருமறைப்பொருளா
லெழுகடற்புவனத்தெழுந்திறைவெளிவர
வறுசுவையினுளதிமதுரமுக்கியச்சுவை
யுறுபொருளைந்துடனுயர்தமிழ்மொழியா
னால்வகைப்பனுவன்மூவுலகமுமளந்தவ
னிருசெவிக்கமுதாமெனவினிதளித்த
வொருபேராண்மையினுயிர்கடாமனைத்தும்
பிறந்திறந்துழலுமப்பெரும்பிணிதவிர்த்தருள்
ஞானபூரணசுகோதயநாவீற
மானபூடணகுருகாபுரிவரோதய
மறுசமயத்தவர்மத்தமால்யானையைத்
தெறுமொருசிங்கமாந்திருப்பெரும்பூதூர்
வருமெதிராசனைமனமகிழ்ந்தாண்ட
விருசரணாம்புயத்தென்னையுமொன்றா
யருள்புரிந்தாண்டதற்காதிக்காலத்
திம்மாநிலத்தென்பொருட்டாற்
கைம்மாறெவனீகைக்கொண்டதுவே. (803)
இஃது, எழுகூற்றிருக்கை.

(இ-ள்)
(முந்நீர்… .. வியப்பான்) சமுத்திரத்தையெல்லையாக வுடையநிலத்தின்கண் ணுயர்
திணையிடத் தாண் பெண் ணென்னு மிரண்டு பாலு மதிக்கும்படிக்கு
(இருவிசும்பொழுக்கத்து) பெருமையையுடைய ஆகாசவீதியினிடத்து
(ஒருஞான்று…… வுழப்பின்) ஒருநாளின் கண் ணொருகணப்பொழுது மொழிவில்லாத முயற்சியோடும்
(ஒருதனி…. யூர்தியின்) ஒன்றென்னப்பட்ட ஒப்பற்றவுருளோடு தாளிரண்டு மில்லாதபாகனையுடைய தேரின்மீதே
(ஒருபிணர்…… செம்மலின்) ஒன்றாய சற்சரைவடிவினையுடைய பெரிய கையினையும்,
பெருகாது சிறுகாது தம்மி லொத்த புழையொடுகூடிய விரண்டு கரடத்தினையும், மூன்று மதத்தினையும்,
நான்ற வாயினையு முடைய யானையை யுரிக்கு முருத்திரனைப்போலச் சிவந்து,

(இருகணுமிமையாத்தேவர்கள்…… நாலாங்கடவுள் வீற்றிருக்கும் நற்றிசைவரு மிளங்கதிர்)
இரண்டுநயனமு மிமையாத வானோ ரொருகாலமும் விட்டுநீங்காது திரிவிதகரணங்களு மாத்மஞானத்துடனொருநெறிப்பட
விரண்டுகரங்களையுங்குவித்து மூன்று பொழுதுந் தலைவணக்கஞ்செய்ய, நான்குமுகங்களையுடைய பிரமனைப் போல
விரும்பியதெல்லாங்கொடுக்கு மைந்துவிருக்கமாகிய கற்பகாடவி நீழலிலே அறமுதலாய நாலுபொருள்களுள் முன்னேநின்ற
மூன்றுபாலுந் தம்மாலாய பெரியவின்பத்தைக் கைக்காள்வாயாகவென் றெதிர்கொண்டு நிற்ப,
விரண்டுபக்கமு மின்போன்றதொரு மருங்குலையுடைய வானவர் மகளிர் தாளமுங் கானமும் வாச்சியமு மபிநயமு
மொருகூறுபாடெய்த விரண்டுபதங்களினாலு நாடகத்தைநடித் தொழுகாநிற்ப, நாலுதிக்கிலுமுள்ள சத்துருக்கள்
மாறுபாட்டைக்கெடுத்து மூன்றுமுரசமும் நீங்காமல் முன்றிலின்கண் ணாரவாரிப்ப, செவியாதிய பொறியைந்தினுந்
தங்கப்பட்ட சத்தாதிக ளைந்தினையு மடக்கி யுண்மைப்பொருளைக்கூறு நாலுவேதத்தினையுந் தெளியவாராய்ந்த
முக்கோற்பகவராகி யெடுத்தசென னந்தோறு மிழைத்தமுறையே யடைவுதப்பாமல்வரு நல்வினை தீவினை யென்னு
மிரண்டையு மொக்கவென்று பரத்துவ சொரூபரூபகுணவிபூதி களினிலைமை யித்தன்மைத்தென
நிச்சயமாகவுட்கொண்டோ ரிம்மை மறுமை யிரண்டுந் தெளிந்தோர் சாத்துவிக ராசத தாமதமென்னுங் குண
மூன்றனுள் முற்குணங் குடிகொண்டோராகிய எதிகளுட னாற்பெருங் கடவுளென்னும் இந்திர னொரு பராக்கற
வீற்றிருக்குங் கிழக்கென்னு நல்லதிக்கினி லுதிக்கு மிளைய நாயிறு, உலகின்கண்ணுள்ள
இனியவுயிர்களஞ்சுவதாக அவரவர்வாழ்நாளற்ற அந்தியத்தி லுயிரை யுண்ணும்படிக்கு விதித்த நமன்றிக்கி லெழுந்த
கூறுபாடு ஆச்சரியமென்று, நினது திருமேனியிற் சுடர்ச்சோதியைக்கண் டுட்கொண் டதுவிளங்கும்படிக் குத்தர
கங்கையினின்றும் ஆறுதளையு மழகியசிறையையு முடைய வண்டின் சாதிநான்குங் குடையத் தேனையொழுக்கு
நறுவிதாந் தாமரைத்தாரும் முப்புரி நூலுங் கிடக்கு மார்பினையுடைய இருபிறப்பாளனாகிய மதுரகவி, யொருதானத் தெதிர்ந்து,
பேரானந்தந் தழையாநின்ற மூவரா மொருதனி முதலாகிய ஸ்ரீமந்நாராயணனென ஞானத்தா லுட்கொண்டு,
பொன்னாற் செய்த வீரக்கழலையுடைய நினது திருவடிகளிரண்டையுங் கட்புலனுறவும் பெருமையெய்திய
மனோவாக்குக்காயங்களின்முயற்சியாற் போற்றலும், அறமுதலிய நான்குபொருளும் பயப்பதாக நல்ல கனிபோன்ற
திருப்பவளத்தினைத் திறந்து, வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி மருட்பா வெனப் பெயர்
பொருந்துதலுடைய யாப்பைந்தினுக்கு மிலக்கண மென்று சொல்வதாக, ஆறங்கத்தையுந் தெளிந்த வந்தணர்க்குரியவா யறிதற்கரிய வா
நால்வேதப்பொருளினாற் பரமபதநாதனாகிய இறை கருடவாகனத் தேறி யெழுகடலுஞ்சூழ்ந்த பூலோகத்தில் வெளிவரும்படிக்குச்
சுவை யாறனுள்ளு மதிமதுரமென்னு முக்கியச்சுவை மிகுவதாக, ஐந்துபொருளொடுங்கூடிய தமிழ்மொழியால்,
திருவிருத்தம் திருவாசிரியம் திருவந்தாதி திருவாய்மொழி யென்னு நான்குகூறுபாடுடைய நாலுபிரபந்தங்களையு
முலகமூன்றுமளந்த வவன் றிருச்செவிகட்கு அமிர்தமென்று சொல்லும்படி யினிமையெய்தவூட்டிய வொப்பற்ற வரியசெயலொடு
முலகின்கண்ணுள்ளவுயிர்கள் யாவும் பிறந் திறந் தலம்வரு பிறப்பாகிய பெரியபிணியைத் தீர்த்துக் கிருபைசெய்த ஞானபூரணனே !
ஆனந்தத்திற்குப் பிறப்பிடமானவனே ! நாவீறுடையானே ! அபிமானபூஷணனே ! குருகைமாநகரிடத்துதித்த பலவரங்களு முதயமானவனே !
பரசமயிகளான மதயானைத்திரளை வெல்லும் ஒருசிங்கமான திருப்பெரும்பூதூரடிகளாகிய வெதிராசனைத் திருவுளமகிழ்ந்
தினிதாகவாண்ட இரண்டென்னுஞ் சரணதாமரையால் அறிவில்லாத என்னையும் ஒருபொருளாகக் கருணை
புரிந் தடிமைகொண்டதற் கிந்தப் பெரியநிலத்து முற்காலத் தெனது ஏதுவாக நீ கைக்கொண்ட
கைம்மா றியாதென்று சொல்லுவாயாக வென்றவாறு.

இதனுள் ஒருபகலென்றது கணப்பொழுதை ; “ஒருபகலுள்ளே யுருப்பவிர்” என்பதனா லறிக.
ஒடியா வுழப்பு-ஒழிவில்லா முயற்சி. பாகன் பாகுடையென அன்விகுதி கெட்டது. பிணர் – சற்சரைவடிவு.
செம்மல் – பெரியோன். இன் உவமஉருபு. நசைஇய – விரும்பப்பட்டன. முழுநலம் – பேரானந்தம்.
தெற்றென – தெளிய. பிறழாது – மாறாடாது. ஒருங்கு – ஒக்க. ஒரு தலை – நிச்சயம்.
இருமை – இம்மை மறுமை. முற்குணம் – சாத்துவிககுணம். நாலாங்கடவுள் – இந்திரன். அமைத்த – விதித்த.
இறும்பூது – ஆச்சரியம். உளர்தல் – குடைதல். அவிழ்த்தல் – ஒழுக்குதல். நலம் – ஆனந்தம்.
நாற்பொருள் – அறம் பொருள் இன்பம் வீடு.
உறுபொருளைந்துடன் என்பது “மிக்க விறைநிலையு மெய்யா முயிர்நிலையுந், தக்க நெறியுந் தடையாகித் –
தொக்கியலு, மூழ்வினையும் வாழ்வினையும்” என்னும் பொருளைந்துடன் என்றவாறு.
பேராண்மை – அரியசெயல். பொருட்டு – ஏது. கைம்மாறு – உபகாரங்கொண்டு உபகாரஞ்செய்கை. எவன் – யாதென்றவாறு.

முந்நீர்வரைப்பி னிருபால்வியப்பா னிருவிசும்பொழுக்கத்து ஒரு தனித்திகிரிப் பதமிரண்டுமிலாப் பாகுடையூர்தியின்
முக்கட்செம்மலி னாலாங்கடவுள்வீற்றிருக்கு நற்றிசைவரு மிளங்கதிர், நமன்றிசையெழு திறனிறும்பூதென்ன,
விருபிறப்பாளனோரிடத்தெதிருபு முதலெனநாடிப் போற்றலுங் கனிவாயினைத்திறந் தருமறைப்பொருளா லெழு
கடற்புவனத் தெழுந்திறைவெளிவர வுறுபொருளைந்துட னுயர்தமிழ்மொழியா னால் வகைப்பனுவல்
மூவுலகமுமளந்தவனிருசெவிக் கமிர்தாமெனவினி தளித்த பேராண்மையி னுயிர்கடாம் பிறந்திறந்துழலும்
பிணிதவிர்த்தருள் ஞானபூரண! நாவீற! குருகாபுரிவரோதய! எதிராசனையாண்ட விருசரணாம்புயத்
தென்னையு மொன்றா யருள்புரிந்தாண்டதற் கென்பொருட்டாற் கைம்மா றெவனீ கைக்கொண்டதுவே எனக் கூட்டுக.

பஞ்சாயுதங்களெனப்பாற்கடலான்பற்றியவைக்
கெஞ்சாதசாதிப்பேரிட்டெழுத–நெஞ்சே
கணக்காயர்புள்ளியிட்டகாலத்தேயோகம்
பிணக்காதவர்பேர்பெறும். (804)
இது மாத்திரைச்சுருக்கம்.

திலகநுதலாய்திலங்குறியென்னேவ
லலகெண்பொருட்பதத்திற்காதி–நிலவெழுத்தின்
புள்ளிபிரித்தாற்பொருணிலைமைத்தாமென்பார்
தெள்ளியநூல்கற்றோர்தெளிந்து. (805)
இது மாத்திரைப்பெருக்கம்.

இவற்றுள் (முன்னையது) * மாத்திரைச்சுருக்கமென்பது,
ஒரு பொருள் பயந்து நிற்கு மொருசொல்லாயினும் பலபொருள்பயந்து நிற்குந் தொடர்ச்
சொல்லாயினு முதலெழுத் தொருமாத்திரைகுறையப் பிறிதொரு பொருள்பயப்பதாயும் பலபொருள்
பயப்பதாயும் பாடுவது. அவ்வாறு அதனுள் வந்ததாவது : ஆயுதங்களுக்குச் சாதிப்பேர் ஏதிகள்,
அவற்றை எதிகளெனப் புள்ளியிட்டு, மாத்திரைகுறைய இருடிகள் பெயராய் எதிகளென நின்றவாறு காண்க.

மாத்திரைப்பெருக்கமாவது
முன்புபோலவருஞ்சொற்களுள் முதலெழுத் தொருமாத்திரையேறப் பிறிது பொருள் பயப்பது.
அவ்வாறு இதனுள் வந்ததாவது :- எண்ணென்பது எள்ளும், இதனைக் கருதென்னும் ஏவற்பொருளும்,
கெணிதமும் என்னும் மூன்றுபொருள்பயக்கும் பதத்தின் முதலெழுத்தாய எகரத்தை
யொருமாத்திரை பெருக்க ஏண் என்ன நிலையுடைமைப்பொருளைக் காட்டினவாறு காண்க.

*உம்மையான் விதந்தோதிய மாத்திரைச்சுருக்க முதலிய ஆறுக்கும்
இந்நூன் மூலப்பிரதியொன்றின்மட்டும் மூலசூத்திரங்கள் காணப்படுகின்றன.
அவையாவன :-

“மாத்திரைசுருங்கமறுபொருளுணர்த்துரை
மாத்திரைச்சுருக்கமெனவகுத்தனரே” (49)

“மாத்திரைபெருகமறுபொருளுணர்த்துரை
மாத்திரைப்பெருக்கமெனவகுத்தனரே” (50)

“ஒற்றினைப்பிரிக்கமற்றொருபொருளுணர்த்து
லொற்றுப்பெயர்த்தலென்றுரையுணர்த்தும்” (51)

“மூன்றெழுத்தொருமொழிமுதலீறிடையீ
றான்றபொருள்பிறவாந்திரிபதாதி” (52)

“சதுரங்கவறையிற்சதிர்பெறவமைப்பது
சதுரங்கபெந்தமென்றறைதருந்தன்மைய” (53)

“பெருவகன்றறையிற்பெந்திப்பதுவுங்
கருதுகிற்கடகபெந்தமாகும்” (54)
என்பனவாம

முந்துதனித்தன்மைமொழியையொடுபுணர்ந்திட்
டந்தமுதல்புள்ளியழிந்தக்காற்–செந்தேன்
வழிந்தமகிழ்த்தார்மாறன்வண்புலவீர்சொல்லி
யொழிந்தவற்றின்பேராயுறும். (806)
இதுவும் மாத்திரைப்பெருக்கம்.

இதனுள், தனித்தன்மையென்பது யான், அதனை என் எனத் திரித்து, அதனை யிரண்டாவதனைப் புணர்த்து,
எனையென்றாக்கிப் புள்ளியை யழிக்க ஏனையெனச் சொல்லியொழிந்தனவாயபொருளைக் காட்டினவாறு காண்க.
திணை….. துறை…..

ஓராழிவையத்து தயம்புரிந்து தினம்
பேராவிருடுணிக்கும்பெற்றியா–ரீராறு
தேசுற்றநாமஞ்சிறந்தோர்பரிதியொடு
மாசற்றெழுமாதவர். (807)
இஃது ஒற்றுப்பெயர்த்தல்.

இதனுள், மாதவர் என்றுநின்றது மகரவொற்றைப் பெயர்க்க ஆதவர் என நின்றவாறு காண்க.
முதலே நின்றமொழியின் முதலெழுத்தி லொற்றைப் பெயர்த்தலால் ஒற்றுப்பெயர்த்தலாயிற்று.
இதனுள் ஓராழி வையம் – ஒப்பற்ற சமுத்திரஞ் சூழ்ந்த பூமி எனவும், ஒற்றைவண்டி பூண்ட தேர் எனவும்,
பேராவிருடுணித்தல் – தன்னைநினைந்த அடியாரிடத்து எடுத்தசெனனந் தோறும்விட்டுநீங்காத அகவிருளையறுத்தல் எனவும்,
உலகத்தைவிட்டுநீங்காத அந்தகாரத்தையோட்டுதல் எனவும், ஈராறுநாமம் – கேசவாதி துவாதசநாமம் எனவும்,
தாதுருமுதலிய துவாதசாதித்தியநாமமெனவும், பரிதியொடும்-சக்கரத்தோடும் எனவும் விளக்கத்தோடும் எனவும்,
மாசற்று ஆசற்று எனவும் சிலேடைவாய் பாட்டான் வந்தன. திணை…… துறை…….

முந்தமாயன்பதியாய்முற்றியபேர்மூன்றெழுத்தில்
வந்தமுதலீறிசையாய்மற்றிடையீ–றந்தச்
சுதரிசனத்தான்றுணைத்தாள்சூழ்சிலம்புள்ளீடாய்
வதரிவரிதரியாமாம். (808)
இது திரிபதாதி. இதனுள் வதரியென்பது திருப்பதி.
அதனை முதலு மீறும் வரியாக்கி இடையு மீறுந் தரியாக்கி அவ்வாறாதல் கண்டு கொள்க.

எந்தையிராமற்கிமையோர்சரண்புகுத
முந்தநகரிமுதலெழுத்தில்லாநகரி
யுந்துதிரட்கிள்ளையிடையொற்றிலாக்கிள்ளைகடேர்
சிந்தமுழுதுமிழந்தான்றெசமுகனே. (809)
இஃது அக்கரச்சுதகத்தி லோர்பேதம்.

மானவனாமேவலாமாறனித்தமாமாலை
யான்தவபோதனுமாயாய்ந்தகோ–மானவடி
நாதனின்மேனன்கலன்பூணென்முனநீவந்தெவனொன்
றாதயமாவன்புலமாய. (810)
இது சதுரங்கபெந்தம். இதனுள் நாலுபக்கமும் மையங்களினானான்கு பதினாறறையிலும்
நடுவி னாலறையிலும்மாதவன் என்னுந் திருநாமம் நின்றவாறு கண்டுகொள்க.

(இ-ள்) ஒன்றாத யமா – சருவான்மாக்களோடும் பொருந்தாத நமனே ! மானவனா – மனுகுலங்காவலனாக.
மேவலாமாறன் – நங்கை யார்க்குங் காரியார்க்கும் புத்திரமோகந்தீரப் புத்திரனாம் மாறனென்னும் பிள்ளைத்திருநாமத்தையுடையவன்.
நித்தமாமாலை – அழிவில்லாத பெரிய பிராட்டியாருடன்கூடிய பெரியோனை. ஆன – தன்னிடத் தாக்கம்பெற்ற.
தவபோதனுமா – மெய்த்தவத்தினொடுங்கூடி ஞானவானுமாகி. ஆய்ந்த கோ – அவனேபரத்துவமென்றுதெளிந்த தெரிசனராசன்.
மானவடி – பெருமையையுடைய திருவடிகளை நாதனின்மேல் – எனது நாவினிடத்தும் அதற்குமேலான சிரத்தினிடத்தும்.
நன்கலன்பூண் – நல்ல ஆபரணமாகப் பூண்ட. என்முனநீவந்தெவன் – என்முன்னேவந்து நீ சாதிப்ப தெதுதான்? ஒன்றுமில்லை.
வன்புலமாய – என்னிடம் நீவருதற் கெளிய இடமன்று, வலியஇடமாகப்பட்டன ;
ஆதலா லுனக்கு வரப்போகா தென்றறிந்துகொள் என்றவாறு. மேல்-இடம்பற்றிய ஆகுபெயர்.
திணை – வாகை. துறை – அறிவன்வாகை.

கோலநிலமேலழகுகூடுநெடுவீடுறமா
மூலமெனச்சென்றுதவுமுன்னோனே–நீலமணி
வண்ணாவடமலையாமாதவாகஞ்சமலர்க்
கண்ணாசரணாகதி. (811)
இது கடகபெந்தம். நெடுவீடு – பரமபதம். திணை – பாடாண். துறை – கடவுள்வணக்கம்.

நாகநகராகநிதிநாகரிகராகநிறை
யேகநகராகியிணையில்லா–தாகநிகழ்
தென்னரங்கனாளாயசீராளராஞான
நன்னரங்கர்க்கேயடியேனான். (812)
இதுவும் கடகபெந்தம்.
ஆக மாத்திரைச்சுருக்கமுதற் கடகபெந்த மீறாகச் சித்திரகவி யாறு மடைவே காண்க.
திணை -…… துறை – சமயவணக்கம்.

சித்திரகவி முற்றும்.

சொல்லணியியலுரை முற்றும்

——-

தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்னகவிராயன்பேரைவரோதயனே.

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: